டவுசர் போட்டு தொழக்கூடாது என்பதற்கு என்ன குரான் ஹதிஸ் ஆதாரம் என்று கேட்பவர்கள் நாளை ஜட்டி போட்டு தொழலாம்! என கூறவும் தயங்க மாட்டார்கள்! இவர்களை நம்பி பள்ளிக்கு சென்று பின்
********************************************************************************************
நின்று தொழும் பெண்கள் நிலைதான் பரிதாபம்! இன்றைக்கு என்ன ஆதாரம் என்று கேட்கும் அண்ணனின் பக்தர்களுக்கு அன்று அந்நஜாத் பத்திரிகையில்
1987 ஜூன் மாத
இதழில் 28.27.28.,29,30,3132,33,34 பக்கங்களில் அவர் ஆண்களின் உடை பற்றி எழுதிய கட்டுரையை தருகிறோம்!1987 ஜூன் மாத
அன்று
அபூமுஹம்மத்(PJ)
ஆண்களின் ஆடைகள்
மனிதன் இயல்பிலேயே தனது மர்ம உறுப்புகளை மறைத்து வாழ்பவனாகவே படைக்கப்பட்டுள்ளான். இதனால் தான் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களும், மதங்களுக்கு அப்பாற்பட்ட நாத்திகர்களும் ஆடைகள் அணிந்து தங்கள் உடலின் பாகங்களை மறைத்து கொள்வதை நாம் காண்கிறோம். இது மனித இயல்பு என்பதை திருக்குர்ஆனும் நமக்கு எடுத்தோதுகின்றது,
ஆதம்(அலை) அவர்களும், அவர்களின் மனைவி ஹவ்வா(அலை) அவர்களும் தங்கள் உடல் உறுப்புக்கள் வெளியில் தெரியும்போது அவசர அவசரமாக, சுவனத்தில் இலைகளால் தங்கள் உடலின் முக்கிய பகுதிகளை மறைத்துக் கொள்ளத் துவங்கியதை திருக்குர்ஆனின் 7 :22 வசனம கூறுகிறது.
கணவன், மனைவி மட்டுமே இருந்த சந்தர்பத்தில் கூட தங்கள் உறுப்புக்களைப் பார்ப்பதற்கு வேறு மனிதர்கள் எவரும் இல்லை என்ற சந்தர்ப்பத்தில் கூட இறைவனிடமிருந்து உத்தரவு ஏதும் வராமலே தாங்களாகவே தங்கள் மறைவான பகுதிகளை அவர்கள் மறைத்துக் கொள்ளத் துவங்கினார்கள் என்பதிலிருந்து , ” இது மனிதனின் இயல்பு” என்று உணரலாம்.
மனிதன் எந்த அளவுக்குத் தன் உடலை மறைக்க வேண்டியது அவசியம்? எந்த வகையான ஆடைகளால் மறைக்க வேண்டும்? எந்த வகைத் துணிகளால் மறைக்க வேண்டும்? என்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. இஸ்லாம் விதிக்காத பல நிபந்தனைகளை தங்கள் இஷ்டத்திற்கு விதித்துக் கொண்டு, இஸ்லாத்திற்கு தவறான தோற்றத்தை ஏற்படுத்தி விட்டனர்.
“ஆண்களின் ஆடைகள்” எப்படி அமைய வேண்டும்? பெண்களின் ஆடைகள் எப்படி அமைய வேண்டும்? எப்படி அமையக் கூடாது என்பதைக் குர்ஆன், ஹதீஸ் வெளிச்சத்தில் நாம் காண்போம். முதலில் ஆண்களுக்கான ஆடைகளை நமது ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம்.
ஆண்களின் ஆடைகள்
ஆண்களுக்கு இஸ்லாம் ஆடை விஷயத்தில் சில தடைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்தத் தடைகளைத்தவிர வேறு எவ்விதமாக வேண்டுமானாலும் ஆடை அணிந்து கொள்ள இஸ்லாம் அனுமதிக்கின்றது. எனவே எந்தவிதமான ஆடைகள் தடுக்கப்பட்டுள்ளன என்ற விபரத்தை முதலில் காண்போம்.
பட்டாடைகள்
ஆண்களுக்கு பட்டாடைகள் அணிவதை நபி(ஸல்) அவர்கள் கடுமையாகக் கண்டித்துள்ளனர். கலப்பாக அணியவோ, தனிப்பட்டாகவோ எவ்விதத்திலும் ஆண்கள் பட்டாடைகளைப் பயன்படுத்த நபி(ஸல்) அவர்கள் அனுமதிக்கவில்லை.
“பட்டாடைகளை அணியாதீர்கள்! ஏனெனில் இவ்வுலகில் பட்டாடை அணிபவன் மறுமையில் அதை அணிய முடியாது” ஏன்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உமர்(ரழி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்
“யாருக்கு மறுமையில் நற்பாக்கியம் இல்லையோ அவன் தான் பட்டாடை அணிவான்” என்று நபி(ஸல்)கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு உமர்(ரழி)
நூல்கள் : புகாரி, முஸ்லிம்,அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா
நபி(ஸல்) அவர்களும், நபித்தோழர்களும் பட்டாடை அணிந்ததாக வந்துள்ள சில ஹதீதுகளின் அடிப்படையில் சிலர் பட்டாடை அனுமதிக்கப்பட்டுள்ளது என்று கூறுகின்றனர். இது ஏற்க இயலாத வாதமாகும். நபி(ஸல்) அவர்களும், நபித் தோழர்களில் சிலரும் பட்டாடை அணிந்துள்ளது உண்மைதான். ஆனால் இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் தான் இவ்வாறு அனுமதிக்கப்பட்டிருந்தது. பிறகு அது தடுக்கப்பட்டு விட்டது என்பதற்கு ஹதீஸ்களின் ஆதாரங்கள் உள்ளன. எனவே தடுக்கப்படுவதற்கு முன் அவர்கள் அணிந்திருந்ததாகவே கொள்ள வேண்டும்.
நபி(ஸல்) அவர்களுக்கு பட்டாடை ஒன்று அன்பளிப்புச் செய்யப்பட்டது. அதை அணிந்து நபி(ஸல்) அவர்கள் தொழுதார்கள். தொழுது முடித்தபின் வெறுப்புடன் கடுமையாகக் கழற்றினார்கள்.
“இது இறை அச்சமுடையோருக்கு கூடாத ஒன்றாகும்” என்றும் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உக்பா இப்னு ஆழிர்(ரழி) நூல் : முஸ்லிம்
இந்த ஹதீஸில் நபி(ஸல்) அவர்கள் தடை செய்வதற்குமுன் அவர்களே அணிந்திருக்கிறார்கள் என்பதையும், அதன் பின்னர்தான் தடுக்கப்பட்டது என்பதையும் தெளிவாக உணரலாம்.
நபி(ஸல்) அவர்கள் பட்டாடை அணிந்து தொழுதார்கள். பின் கழற்றி வைத்துவிட்டு “ஜிப்ரில்(அலை) அவர்கள் பட்டாடை அணிவதை விட்டும் எனக்குத் தடை உத்தரவு பிறப்பித்து விட்டார்கள்” என்று கூறினார்கள். அறிவிப்பவர் : ஜாபிர்(ரழி) நூல் : முஸ்லிம்
ஜிப்ரில்(அலை) அவர்கள் இறைவனின் கட்டளைப்படி தடுப்பதற்கு முன், அதை அணிவதற்கு அனுமதி இருந்துள்ளதை இதன் மூலம் அறியலாம். இந்த ஹதீஸ்களில் ஆண், பெண் என்று பேதப்படுத்தாமல் பொதுவாகவே தடை உள்ளது. ஆனாலும், இந்தத் தடை ஆண்களுக்கு மட்டுமே என்று தெளிவு படுத்தக் கூடிய ஹதீஸ்களை நாம் காண்போம்.
“தங்கமும், பட்டும் என் சமுதாயத்தில் ஆண்களுக்கு ஹராமாக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு அனமதிக்கப்பட்டுள்ளன” என்று நபி(ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூமூஸா(ரழி) நூல்கள் : அஹ்மத், நஸயீ, திர்மிதீ, அபூதாவூத், ஹாகிம், தப்ரானி
நபி(ஸல்) அவர்கள் தன் வலது கரத்தில் ‘பட்டை’யும் இடது கரத்தில் தங்கத்தையும் எடுத்துக் கொண்டு “இவ்விரண்டும் என் உம்மத்தில் ஆண்களுக்கு ஹராமாக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டள்ளன” என்றும் கூறினார்கள். அறிவிப்பவர் : அலீ(ரழி)
நூல்கள் : அஹ்மத், அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா, இப்னுஹிப்பான்
குறைந்த அளவு அனுமதி உண்டு
“இரண்டு விரல்கள் அளவுக்கோ, மூன்று விரல்கள் அளவுக்கோ, நான்கு விரல்கள் அளவுக்கோ தவிர (அதைவிட அதிகமாக) ‘பட்டு’ அணிவதை நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளனர்”.
அறிவிப்பவர் : உமர்(ரழி) நூல்கள் : முஸ்லிம், அஹ்மத், திர்மிதீ, இப்னுமாஜா, நஸயீ, அபூதாவுத்
இந்த அளவுக்கு மட்டும் ஆண்கள் ‘பட்டு’ பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள்.
சிறங்கு உள்ளவர்கள்
சிரங்கு உள்ளவர்கள் மற்ற ஆடைகள் அணிவதால் உறுத்தல் ஏற்பட்டு மேலும் புண்ணாக்கி விடலாம் என்பதால் அவர்கள் ‘பட்டு’ அணியலாம். ‘பட்டு” உடலை உறுத்தாது என்பதே காரணம்.
“அப்துர்ரஹ்மான் இப்னு அவ்பு, ஜுபைர் இருவருக்கும் சிரங்கு இருந்த காரணத்தால் ‘பட்டு’அணிய நபி(ஸல்) அவர்கள் அனுமதி வழங்கினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ்(ரழி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூது, திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா.
பட்டு விரிப்புகள்
உட்காருவதற்கோ, படுத்துக் கொள்வதற்கோ ‘பட்டு’ விரிப்புக்கள் பயன்படுத்தக் கூடாது.
நபி(ஸல்) அவர்கள் “தங்கம், வெள்ளிப் பாத்திரங்களில் குடிப்பதையும் , அவற்றில் உண்ணுவதையும் , ‘பட்டு’ அணிவதையும், அதன் மீது அமர்வதையும் தடை செய்தனர்.
அறிவிப்பவர் : ஹுதைபா(ரழி) நூல் : புகாரி
‘பட்டு’ தவிர எந்தத் துணிகளையும் ஆண்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதி பெறுகிறார்கள். வேறு எந்த வகைத் துணியையும் நபி(ஸல்) அவர்கள் தடுக்கவில்லை.
கரண்டைக்குக் கீழே இறங்கக் கூடாது!
ஆண்கள் அணிகின்ற ஆடைகள் நபி(ஸல்) அவர்கள் வரையறுத்துக் காட்டிய அளவைவிட கீழே இறக்கக் கூடாது! “பெருமையின் காரணமாக எவன் தனது ஆடைகளை கீழிறங்கும்படி இழுத்துச் செல்கிறானோ அவனை அல்லாஹ் பார்க்க மாட்டான்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர்(ரழி)
நூல்கள் : முஸ்லிம், அஹ்மத், முஅத்தா, திர்மிதீ, நஸயீ
“முதல் ஹதீஸ் பொதுவாக ஆடையைக் கீழறங்கும்படி அணியக் கூடாது” என்பதை விளக்குகின்றது. “இரண்டாவது ஹதீஸ் கீழ் ஆடைகள் கரண்டைக் காலைவிட இறங்கக் கூடாது” என்று அளவை நிர்ணயம் செய்கின்றது. அவ்வாறு இறங்குவதைக் கண்டித்து இன்னும் பல நபிமொழிகள் உள்ளன.
“எவர் தனது ஆடையைப் பெருமையின் காரணமாக இழுத்தும் செல்கிறாரோ அவரைக் கியாமத் நாளில் அல்லாஹ் பார்க்கமாட்டான்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது, அபூபக்ரு(ரழி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! எனது கைலியின் ஒரு பகுதி கீழே இறங்கி விடுகின்றதே!” என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) “நீர் பெருமையின் காரணமாக அவ்வாறு செய்பவர் அல்ல” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர்(ரழி) நூல் : புகாரி.
முழங்காலைக் கட்டிக் கொண்டு அமர்ந்தால்…?
நபி(ஸல்) அவர்கள் உட்பட ஸஹாபாக்களும், மற்றும் அரபியரும் முழங்காலைக் கட்டிக் கொண்டு சர்வசாதாரணமாக அமர்ந்திருப்பார்கள். (இவ்வாறு அமர்வதை நம் தழிழகத்து முஸ்லிம் பெண்கள் ‘தரித்திரம்’ என்று தடுப்பர். அவர்களின் மார்க்க அறிவு அந்த அளவு இருக்கின்றது)
மர்மஸ்தானத்தை மறைக்கும் ஆடை எதுவும் உள்ளே அணியாமல் ஒரு போர்வையை மட்டும் போர்த்திக் கொண்டிருப்பவர்கள், முழங்காலைக் கட்டிக் கொண்டு உட்காருவதை நபி(ஸல்) தடுத்தனர். அவ்வாறு கட்டிக் கொண்டு உட்காருவதை நபி(ஸல்) தடுத்தனர். அவ்வாறு அமர்வதால் போர்வை விரியும் போது மர்மஸ்தானம் வெளியே தெரிய வாய்ப்புகள் அதிகம் உண்டு.
மேலும் உள்ளே மர்மஸ்தானத்தை மறைக்கும் ஆடைகள் அணியாமல் ஒரு போர்வையை மட்டும் போர்த்திக் கொண்டிருப்பவர்கள் கைகளையும் போர்வைக்குள் மறைத்துக் கொண்டு அணியக் கூடாது. காரணம் அவசரத் தேவைகளுக்காக கைகளை தீடிரென வெளியே எடுக்க நேர்ந்தால் போர்வை விலகி மர்மஸ்தானங்களை வெளியே தெரிய நேரிடும்.
“தன்னுடைய மர்மஸ்தானத்தின் மீது எந்த ஆடையுமின்றி எவரும் முழங்காலைகளைக் கட்டிக்கொண்டு அமர வேண்டாம்! (கைகள் உள்ளிருக்கும்படி) முற்றாகப் போர்த்திக் கொள்ளவும் வேண்டாம்” என் நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரழி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத்
மறைக்கப்பட வேண்டியவை
“ஆண்கள் தங்கள் தொப்புளிலிருந்து முழங்கால் வரை மறைக்க வேண்டும்” என்பதைத்தவிர மற்ற உறுப்புக்களை கட்டாயம் மறைக்க வேண்டியதில்லை. அதற்குரிய ஆதாரங்களைக் கீழே காண்போம்.
“உங்களில் எவரேனும் தன்னுடைய வேலைக்காரனுக்கோ, அடிமைக்கோ மணமுடிக்கும் காலம் வரும்போது தொப்புளுக்குக் கீழே உள்ள பகுதியையும், முழங்காலுக்கு மேலு உள்ள பகுதியையும் பார்க்க வேண்டாம்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்ரு இப்னு ஷுஐபு(ரழி) நூல் : அபூதாவூது
தனது ஆண் அடிமையின் தொப்புளுக்குக் கீழே உள்ள பகுதியை முழங்காலுக்கு மேலே உள்ள பகுதியைக் கூட பார்க்கக் கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டதிலிருந்து அந்தப் பகுதிகளை ஆண்கள் கட்டாயம் மறைக்க வேண்டும் என்பது தெளிவு.
குறிப்பாக தொடைப் பகுதியைக் கட்டாயம் மறைக்க வேண்டும் “அலியே! உன் இரு தொடைகளையும் நீ வெளிப் படுத்தாதே!” என்று நபி(ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் : அலி(ரழி) நூல்கள் : அபூதாவூது, இப்னுமாஜா
“மஃமர்(ரழி) என்பவரை நபி(ஸல்) அவர்கள் கடந்து செல்லும்போது அவரது இரு தொடைகளும் திறந்திருக்கக் கண்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் மஃமரே! உன் தொடைகளை மூடிக்கொள் ஏனெனில் இரு தொடைகளும் மறைக்கப் படவேண்டிய பகுதிகளாகும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : முஹம்மது இப்னு ஐஹ்ஷ்(ரழி) நூல் : அஹ்மத்
இதுபோன்ற கருத்துக்களைக் கொண்ட பல ஹதீஸ்கள் உள்ளன. எனவே ஆண்கள் தங்கள் தொப்புளிலிருந்து முழங்கால் வரை அவசியம் மறைக்கப் கடமைப் பட்டுள்ளனர். குறிப்பாகத் தொடை பகுதியை அவசியம் மறைக்க வேண்டும்.
இவ்வாறு மறைக்க வேண்டும் என்ற விதியிலிருந்து இல்லற நேரத்தில் மனைவியுடன் தனித்திருக்கும் நேரம் விலக்குப் பெறும். அந்த நேரத்தில் மறைக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
“அல்லாஹ்வின் தூதரே! எங்கள் மறைவான உறுப்புக்களை எந்த நேரத்தில் மறைக்க வேண்டும்? எந்த நேரத்தில் மறைக்காது விட்டு விடலாம்? என்று நான் கேட்டபோது நபி(ஸல்) அவர்கள் “உன் மனைவியிடமும் உன் அடிமைப் பெண்ணிடமும் தவிர மற்ற நேரங்களில் மறைவுப் பகுதிகளை மறைத்துக் கொள்!” என்றனர். எங்களில் எவரும் தனித்திருக்கும் போதுமா? என்று நான் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “(ஆம்! வெட்கப் படுவதற்கு அல்லாஹ் மிகவும் தகுதியானவன்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : பஹ்ல் இப்னு ஹகீம்(ரழி)
நூல்கள் : அபூதாவூது, திர்மிதீ, அஹ்மத், இப்னுமாஜா
இதுதவிர மற்ற நேரங்களில் மேற்குறிப்பிட்ட பகுதிகளை அவசியம் மறைத்தாக வேண்டும். ஒரு சில அறிஞர்கள் “இந்த அளவுகூட மறைக்க வேண்டியதில்லை; முன் துவாரம், பின் துவாரம் இவைகளை மறைத்துக் கொண்டால் போதுமானது” என்று கூறுகிறார்கள். அதற்கு ஆதாரமாகப் பின்வரும் ஹதீஸ்களை எடுத்து வைக்கின்றனர்.
1) “கைபர் போரின் போது, நபி(ஸல்) அவர்கள் தமது கைலியை தொடைப் பகுதியை விட்டும் நீக்க நேரிட்டது. அவர்களின் தொடையின் வெண்மைப் பகுதியை நான் கண்டேன்”
அறிவிப்பவர் : அனஸ்(ரழி) நூல்கள் : புகாரி, அஹ்மத்
2) “நபி(ஸல்) அவர்கள் ஈரமான ஒரு இடத்தில் முழங்கால்களைத் திறந்தவர்களாக இருந்தனர். உஸ்மான்(ரழி) அவர்கள் நுழைந்த போது அதை மூடிக் கொண்டனர்”
அறிவிப்பவர் : அபூமூஸா(ரழி) நூல் : புகாரி.
3) நான் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்த போது தன் முழங்கால் தெரியும் அளவுக்கு தன் ஆடையின் ஒரு பகுதியைத் தூக்கிப் பிடித்தவராக அபூபக்ரு(ரழி) அவர்கள் வந்தார்கள். அதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் “உங்கள் தோழர் ரொம்பவும் ஆத்திரத்துடன் வருகிறார்” என்று கூறினார்கள் . (இந்த ஹதீஸில் உமர்(ரழி) அவர்களுக்கும், அபூபக்ரு (ரழி) அவர்களுக்கும் ஏற்பட்ட ஒரு தகராறில் அபூபக்ரு(ரழி) அவர்கள் மிகவும் ஆத்திரத்துடன் நபி(ஸல்) அவர்களிடம் முறையிட வருவது கூறப்படுகிறது.
அறிவிப்பவர் : அபுத்தர்தா(ரழி) நூல்கள் : புகாரி, அஹ்மத்
4) ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் தொடைப் பகுதி வெளியில் தெரிந்த நிலையில் அமர்ந்திருந்தனர். அவர்களைக் காண அபூபக்ரு(ரழி) வந்த போதும், உமர்(ரழி) வந்த போதும் அப்படியே அமர்ந்திருந்தனர். உஸ்மான்(ரழி) வந்த போது மட்டும் தன் ஆடையைச் சரி செய்து கொண்டனர். இதைக் கண்ட ஆயிஷா(ரழி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! அபூபக்ரு(ரழி) வந்த போதும், உமர்(ரழி) வந்த போதும் சும்மா இருந்த நீங்கள் , உஸ்மான்(ரழி) வந்த போது மட்டும் ஆடையைச் சரி செய்து கொண்டீர்களே! (இது ஏன்?) என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் மலக்குகளே அவரைக் கண்டு வெட்கப்படும் போது நான் வெட்கப்பட வேண்டாமா?
அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா(ரழி) நூல் : அஹ்மத்
(இதே கருத்தில் முஸ்லிமிலும், பைஹகீயிலும் ஹதீஸ்கள் உண்டு)
இந்த ஹதீஸ்களை ஆதாரமாகக் கொண்டு சில அறிஞர்கள் “தொடைப் பகுதியை மறைக்க வேண்டியது அவசியமில்லை” என்கின்றனர். அவர்கள் எடுத்துக் காட்டுகின்ற ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானவை என்பதில் சந்தேகம் இல்லை, எனினும் நாம் முன்னர் எடுத்துக் காட்டிய ஹதீஸ்கள் வந்திருக்காவிட்டால் இந்தக் கருத்தை ஏற்கலாம்.
தொடையைத் திறந்திருப்பதை நபி(ஸல்) அவர்களே வன்மையாகக் கண்டித்துள்ளதால், இந்த ஹதீஸ்களில் கூறப்படுபவை தற்செயலாக திட்டமிடாமல் நடந்ததாகத்தான் கருத வேண்டும்.
அனஸ்(ரழி) அவர்கள் அறிவிக்கும் முதல் ஹதீஸில் கூறப்படுவது ‘கைபர்’ போரில் நடந்தது. போர்க்களத்தில் ஈடுபட்டிருக்கும்போது அவ்வாறு அவர்களை அறியாமல் விலகி இருக்கலாம்.
இரண்டாவது ஹதீஸில் ஈரமான இடத்தில் ஆடை நனைந்துவிடக்கூடாது என்று சற்று கைலியை உயர்த்தி இருந்த போது முழங்கால் தென்பட்டதாக தெளிவாகவே கூறப்பட்டுள்ளது.
மூன்றாவது ஹதீஸில் அபூபக்ரு(ரழி) அவர்கள் உமர்)ரழி) அவர்களுடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக கோபத்துடன் தங்கள் ஆடையின் ஒரு பகுதியைத் தூக்கியவர்களாக வந்தபோது அவர்களின் முழங்கால் தெரிந்துள்ளது.
நான்காவது ஹதீஸில் நபி(ஸல்) அவர்கள் தன் தொடைப் பகுதி வெளியில் தெரிவதை அறியாமலிருக்கலாம். சிலர் முன்னிலையில் சிலர் அதிகப்படியான வெட்க உணர்வுடன் இருப்பதை நான் சாதாரணமாகக் காணலாம். அந்த அடிப்படையில் உஸ்மான்(ரழி) அவர்கள் வந்த போது தனது ஆடைகளைச் சரி செய்திருக்கலாம். இவ்வாறு நாம் கருதவதற்குக் காரணம், நபி(ஸல்) அவர்கள் தொடையை மறைக்கும்படி பலமான உத்திரவு பிறப்பித்துள்ளதால், அவர்களே அந்த உத்திரவுக்கு மாற்றமாக நடந்திருக்க மாட்டார்கள் என்பது தான்.
நம்மை அறியாமல் தற்செயலாகத் தெரிந்து விட்டால் அதில் தவறில்லை என்று தான் இந்த ஹதீஸிகளிலிருந்து நாம் முடிவெடுக்க முடியும். “நிரந்தரமாக எப்பொதும் அப்படி இருக்கலாம்” என்று கூறுவோர் நாம் முன்னர் எடுத்துக் காட்டிய ஹதீஸ்களை நிராகரித்தவர்களாக ஆக நேரும்.
ஆண்களின் ஆடைகள் பற்றி மேலும் பல விதிகளை இனி காண்போம். (தொடரும்)
அந்நஜாத்: ஜுன், 1987 – ஷவ்வால், 1407
அன்றைக்கு தொளுகையல்லாத நேரத்திலேயே தொடை தெரியக்கூடாது என வரிந்து காட்டி விளக்கம கொடுக்கும் அண்ணன் இன்று தொடை தெரிய தொழுவதை தடுக்க முடியுமா எனக் கேட்பது தான் மார்கத்தில் விளையாடும் மாமனிதர் என்பதற்கு சான்று ! இவரை கண் மூடித்தனமாக பின் பற்றும் சகோதரர்கள் பின் வரும் குரான் ஹதீஸை விளங்கி, பி .ஜே .வை அல்லாஹ்வாக்காமல் தக்லீது எனும் வழிகேட்டில் இருந்து விலகி நேர் வழி பெறவேண்டும் .
'யூதர்களும் கிறிஸ்தவர்களும் அல்லாஹ்வை விட்டு விட்டு தங்கள் பாதிரிமார்களையும் , மத குருமார்களையும் கடவுளாக்கி கொண்டார்கள் " எனும் இறைவசனம் இறங்கிய போது கிறிஸ்தவத்தில் இருந்து இஸ்லாத்திற்கு வந்த சஹாபாக்கள் நாங்கள் அவ்வாறு செய்யவில்லையே யா ரசுலல்லாஹ் ! என்று சொன்ன போது உங்கள் மத குருமார்கள் ஒன்றை ஹராம் என்ற போது அதை விலக்கி ஹலால் என்ற போது அதை ஆகுமாக்கிக் கொண்டீர்கள் இல்லையா ? அதைத்தான் அல்லாஹ் "கடவுள் ஆக்கிக் கொண்டீர்கள்'' என குறிப்பிடுகிறான் . என நபி ஸல் கூறினார்கள் . [ஆதாரம் - புஹாரி
]
]
0 comments:
Post a Comment