தான் பங்கரவாத செயல்களில் ஈடுபட்டதற்கு எப்படி ஆர்.எஸ்.எஸ்சின் முழு ஆசீர்வாதமும் ஒத்துழைப்பும் இருந்தன, இனியும் இருக்கும் என்பதையும் அவர் இந்த பேட்டியிலே சொல்லியிருக்கிறார். இப்போது ஆர்.எஸ்.எஸ்சும் பி.ஜே.பியும் சேர்ந்து பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்தியிருக்கும் நரேந்திர மோடி எப்படி தன் இந்துத்துவ திட்டங்களுக்கு உதவிகள் செய்தார் என்பதையும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களின் ஒப்புதலுடன்தான் அந்த வெடிகுண்டு தாக்குதல்கள் ஏற்பாடு செய்யப் பட்டன என்பதையும் அசீமானந்தா இந்த பேட்டிகளில் சொல்லியிருக்கிறார்.
உடனே இதெல்லாம் பொய் என்று மறுக்கும் வேலையில் பி.ஜே.பியும் ஆர்.எஸ்.எஸ்-சும் இறங்கின. ஆனால் காரவான் இதழ் அசீமானந்தாவை பேட்டி கண்ட தங்களுடைய ஆசிரியர் குழுவைச் சேர்ந்த பத்திரிகையாளர் லீனா, அசீமானாந்தாவுடன் நடத்திய பேட்டியின் ஒலிப்பதிவுகளையே வெளியிட்டு விட்டது. (முழுக்க அவற்றைப் படிக்க விரும்புவோர் இந்த இணைய இணைப்புக்குச் செல்லலாம் : http://www.caravanmagazine.in/swami-asee- manand-interviews)
கேரளத்தில் பிறந்த லீனா கீதா ரெகுநாத் காரவான் இதழில் சேர்வதற்கு முன்னால், அரசு வழக்கறிஞராகவும், சிவில் வழக்கறிஞராகவும் பணியாற்றியவர். சட்டமும், முதுகலை ஆங்கில இலக்கியமும் படித்தவர். சட்டம் படிக்கும் காலத்திலேயே இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆகிய ஏடுகளுக்கு எழுதிவந்தார். 2011 டிசம்பரில் அசீமானந்தாவை பஞ்ச்குலா மாவட்ட நீதிமன்றத்தில் லீனா சந்தித்தார். தன்னை பத்திரிகையாளர் என்று அறிமுகம் செய்துகொண்டார். அவர் சட்டமும் படித்த வழக்கறிஞர் என்பதை அசீமானந்தாவிடம் சொன்னதும், அசீமானந்தா தன்னை அம்பாலா சிறைக்கே வந்து தனியே நேருக்கு நேர் சந்தித்து உரையாட அழைத்தார்.
அடுத்த இரு வருடங்களில் நான்கு முறை லீனா அசீமானந்தாவை சிறையில் சந்தித்து உரையாடினார். 2012 ஜனவரி 10, 2013 ஜூன் 22, 2014 ஜனவரி 9, 2014 ஜனவரி 17 ஆகிய நாட்களில் இந்த சந்திப்புகள் நிகழ்ந்தன. எல்லா சந்திப்புகளும் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் ஒன்பது மணி நேரம் 26 நிமிடம் இந்தப் பதிவுகள் உள்ளன.
அசீமானந்தாவின் முழு வாழ்க்கை பற்றிய குறிப்புகளும், அவர் தான் வேலை செய்துவந்த விதம் பற்றி தெரிவிக்கும் தகவல்களும் ஆர்.எஸ்.எஸ் எப்படி தொலை நோக்கு திட்டமிட்டு, படிப்படியாக காய் நகர்த்தி தன் இலக்குகளை அடைய முயற்சிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள மிகவும் உதவுபவை.
சமூக சேவை என்ற முகமூடியில் இயங்கி மக்களைத் திரட்டிக் கொள்வது ஒரு உத்தி. வெவ்வேறு அமைப்புகளில் தன் ஆட்களை அமரச் செய்து அந்தந்த முகமூடி மாட்டி நடமாடச் செய்வது இன்னொரு உத்தி. பின்னர் பொது திட்டத்துக்கு ஆங்காங்கே உள்ளவர்கள் தனியாகவே ஒரே வேலையை செய்யவைப்பது திட்டம். சதிகளில் யாரேனும் அம்பலமானால், அவர் தங்கள் இயக்கத்தில் இல்லை என்று மறுக்க வசதியாக முன்பே அவரை வேறு முகமூடியுடன் நடமாடவைப்பது மிக முக்கியமான உத்தி.
அரசு அமைப்புக்குள் ஊடுருவியிருக்கும் தங்கள் ஆட்களின் மூலம் தமக்குத் தேவையான திட்டங்களை நிறைவேற்றச் செய்ய ஆன்மீகப் போர்வையில் அரசுப் பணத்தைப் பயன்படுத்துவது தொடர்ந்து செய்யப்படும் உத்தி. குஜராத் சபரி கோவிலும் கன்யாகுமரி விவேகானந்தர் பாறை திட்டமும் இதற்கு உதாரணங்கள். பழங்குடி மக்களின் குழந்தைகளை வேறு மாநிலத்துக்கு அழைத்து சென்று மூளைச் சலவை செய்து இந்துத்துவ ஊழியர்களாக்குவது இன்னொரு உத்தி. இப்படிப் பல உத்திகளை சங்கப்பரிவாரம் தன் வெவ்வேறு அவதாரங்களின் மூலம் செய்துவருவதை அசீமானந்தாவின் வாழ்க்கையும் பேட்டியும் நமக்குத் தெளிவாக உணர்த்துகின்றன. இதை வெளிப்படுத்திய இந்த அரிய பணிக்காக நாம் லீனா கீதா ரெங்கநாத்துக்கும் காரவான் இதழுக்கும் அதன் ஆசிரியர் வினோத் கே.ஜோசுக்கும் மிகவும் கடமைப் பட்டுள்ளோம்.
போலி தேசபக்தியும் போலி தெய்வபக்தியும் எவ்வளவு ஆபத்தானவை என்பதற்கு சிறந்த அடையாளமாக அசீமானந்தாவின் இந்த ஒப்புதல் வாக்குமூலம் விளங்குகிறது. மெய்யாகவே சமூக சேவை செய்யும் எண்ணத்துடன், ஆர்.எஸ்.எஸ்சின் அசல் நோக்கங்களை அறியாமலே அதில் இணைந்திருப்போரின் கண்களையெல்லாம் இந்த நூல் விழிக்கச் செய்யவேண்டும் என்றும் விரும்புகிறேன்.
இதை தமிழில் வெளியிட்டு பலருக்கும் தெரியவைக்கும் முயற்சியை மேற்கொள்ளவேண்டும் என்று ஃபேஸ்புக்கின் வாயிலாக எனக்கு அறிமுகமாகி நண்பராகிய நரேன் ராஜகோபாலும் நானும் முடிவு செய்தோம். காரவான் இதழின் முறையான ஒப்புதலை நரேன் பெற்றார். அதற்கான ராயல்டி தொகையையும் இந்த சிறு பிரசுரத்தை வெளியிடுவதற்கான செலவையும் அவர் திரட்டியுள்ளார். மொழிபெயர்ப்புப் பணியை நான் பார்த்துக் கொண்டேன்.
நடக்கவிருக்கும் 2014 தேர்தல் இந்தியாவின் எதிர்காலத்தையே நிர்ணயிக்கப்போகும் முக்கியமான ஒரு திருப்புமுனை தேர்தல். அதில் எந்த விதத்திலும் மதவாத சக்திகள் ஆட்சி அதிகாரத்தை வசப்படுத்திவிடாமல் தடுக்க மக்களிடம் விழிப்பணர்வை ஏற்படுத்த எண்ணற்ற முயற்சிகள் தேவைப்படுகின்றன. அத்தகைய ஒரு முயற்சியாகவே நாங்கள் இந்த வெளியீட்டையும் பார்க்கிறோம். இந்தத் தேர்தலில் மதவாத சக்திகளும் அவர்களுக்குத் துணை போகும் சக்திகளும் அதிகாரம் பெறவிடாமல் தடுக்கப்பட்டுவிட்டால், அதுவே இந்த நூலுக்குக் கிடைக்கும் மிகப் பெரிய பரிசாகும்.
ஞாநி, சென்னை (மார்ச் 2014)
http://www.satyamargam.com/articles/common/2326-confessions-of-a-saffron-terrorist-blessed-by-narendra-modi-tamil.html
0 comments:
Post a Comment