"அல்லாஹ் பெயரால் பதவி பிரமாணம் எடுத்தது அரசியல் சட்டப்படி செல்லும்" என அதற்கு எதிராக தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. வழக்கு தொடுத்தவர்மீது 1 லட்சம் அபராதமும் உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது.
2011 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4ம் தேதி ஜார்கண்ட் மாநில ஆளுநராக சையதுஅஹ்மது "அல்லாஹ் கே நாம் பர்" (அல்லாஹ் வின் திருப்பெயரால்) என்று கூறி பதவிபிரமாணம் செய்தார். அரசியல் சட்டப் பிரிவு 159ன் கீழ் அல்லாஹ் பெயரால் அவர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டது செல்லாது என்று அறிவிக்கக் கோரி கமல் நாயன் பிரபாகர் என்ற மாணவர் ஜார்கண்ட் மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவை ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
வழக்கு தொடுத்த அந்த மாணவர் சமூகங்களில் வேற்றுமையை ஏற்படுத்த முனைகிறார் என்றும் ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் குற்றம் சாட்டியது. ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மாணவர் கமல் நாயன் பிரபாகர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி மற்றும் எஸ்.ஜே. முகோ பாத்தியாயா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் மேல் முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர்.
அவர்களுடைய தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
"அரசியல் சட்டப் பிரிவு 159, ஒரு ஆளுநர் கடவுளின் பெயரால் அல்லது உளமாற உறுதி அளிக்கிறேன் என்று கூறிபதவிப் பிரமாணம் செய்ய வேண்டும் என்று அறிவிக்கிறது. ஜார்கண்ட் கவர்னராக சையது அஹ்மது 'அல்லாஹ் பெயரால்' பதவி பிரமாணம் ஏற்றுக் கொண்டிருக்கிறார். அவரது செயல் அரசியல் சட்டப் பிரிவு 159-ன் கீழ் எதிரானது அல்ல. அல்லாஹ் பெயரால் ஆளுநர் பதவி ஏற்றுக்கொண்டது அரசியல் சட்டப்படி செல்லத் தக்கதாகும்.
வழக்கு தொடர்ந்திருப்பவர் தீய எண்ணத்தோடு இந்த வழக்கைத் தொடர்ந்திருப்பதாக கருத இடம் இருக்கிறது. உலகம் முழுவதும் கடவுள் உருவமற்றவராகவே கருதப்படுகிறவர். அப்படி இருக்கும் போது ஒரு குறிப்பிட்ட உருவத்தின் பெயரால் ஆளுநர் பதவிப் பிரமாணம் ஏற்றிருக்க வேண்டும் என்று கூறுவது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. 159-வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள கடவுள் என்ற வார்த்தை ஒரு குறிப்பிட்ட கடவுள் வடிவங்களை மட்டும் கட்டுப்படுத்தாது. கடவுள் என்ற வார்த்தை அரசியல் சட்டப் பிரிவு 159-ல் மதசார்பற்ற முறையிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது.
வழக்கு தொடர்ந்திருப்பவர் கடவுள் என்ற வார்த்தையை ஒரு குறிப்பிட்ட கடவுள் அல்லது உருவத்துக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்று விவாதிப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. எனவே, இந்த வழக்கைத் தள்ளுபடி செய்கிறோம். கெட்ட நோக்கத்தோடு வழக்கு தொடரப்பட்டிருப்பதால் வழக்குதொடர்ந்திருப்பவர் 1லட்ச ரூபாய் செலவுத் தொகையாக வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடுகிறோம்."
இவ்வாறு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
0 comments:
Post a Comment