********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

சென்ற வார செய்திகள் (4 ஜனவரி 2012)

Tuesday, January 3, 2012

மிஸ்டர் கழுகு: ''அந்தப் பெயரை இங்கு சொல்ல மாட்டேன்!''

ழுகார் நம் அலுவலகத்துக்குள் நுழையும் போது தா.கி. மேட்டர் லே-அவுட் ஆகிக் கொண்டு இருந்தது. அதை அர்த்த புஷ்டியுடன் பார்த்த கழுகார்...

''தூசி தட்டி விட்டார்களா?'' என்று மெதுவான குரலில் சொல்லிக் கொண்​டார்!
''ஜெயலலிதாவின் 'ஆபரேஷன் மன்னார்குடி’ ஆக்ஷனின் எதிர்​வினைகள் எங்கெங்கோ கேட்க ஆரம்பித்​துள்ளன.  சசிகலா தரப்பினரால் பலன் அடைந்த அ.தி.மு.க-வினரை விடவும்  தென் மாவட்ட தி.மு.க. வட்டாரம்தான் இப்போது திகில் பிடித்துக் கிடக்கிறது என்கிறார்கள். வம்பு, வழக்குகளில் இருந்து தங்களை காத்துக்கொள்ள மன்னார்குடி வகையறாக்களுடன் இவர்கள் போட்டிருந்த டீலிங்குகள் இப்போது வெளிச்​சத்துக்கு வந்து கொண்டி​ருக்​கிறதாம்'' என்று செய்திகளைக் கொட்ட ஆரம்பித்தார் கழுகார்! 
''அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் தி.மு.க-வின் மதுரையின் குறுநில மன்னர்கள் மீது வழக்குகளைப் பாய்ச்சி சிறைக்குள் தள்ளினார். பல பேருக்கு குண்டர் பட்டத்தையும் சூட்டியது போலீஸ்! இவர்களில் பலரும் வழக்கு​களை உடைத்துக் கொண்டு, சர்வ சுதந்திரமாய் இப்போது வெளியில் வந்துவிட்டார்கள். யார் யாரை எல்லாம் ஒடுக்குவேன் என்று ஜெயலலிதா பெயர் வாசித்தாரோ... அவர்களையே காப்பாற்றிவிட மன்னார்குடி வகையறாக்கள் நடத்திய மலைக்க வைக்கும் பேரங்கள் இப்போது வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன.''
''சற்றே விளக்கிச் சொல்லலாமே...''
''குண்டர் தடுப்புச் சட்டத்தில் உள்ளே போனவர்கள் எல்லாம் வரிசையாய் வெளியில் வர ஆரம்பித்ததுமே, அந்த வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் அவசரமாய் சென்னைக்கு அனுப்பச் சொல்லி மதுரை போலீஸுக்கு உத்தரவு போயிருக்கிறது. ஒரு அதிகாரி இந்த ஆவணங்களை ஒரு நாள் முழுக்க கோர்ட்டில் காத்திருந்து கலெக்ட் செய்து உடனடியாக சென்னைக்கு அனுப்பினார். அவற்றைப் பார்த்த பிறகுதான், கீழ்மட்ட போலீஸார் சிலரது சித்து விளையாட்டுக்கள் வெட்ட வெளிச்சமானதாம். இதையடுத்து, சிறைத் துறையைக் கவனிக்கும் பொறுப்பில் இருந்த அதிகாரி ஒருவரது ஆலோசனையின் பேரில்   மதுரைக்கு இரண்டு ரிட்டையர்டு போலீஸ் டி.எஸ்.பி-க்கள் சென்றார்கள். 'ரெட் ஃபைல்’ ஒன்றை கார்டனுக்கு  சமர்ப்பித்தார்கள்''
''அதாவது..?''
''அதாவது... 'குண்டர் சட்டத்தில் சிக்கிய ஒருவரிடம் அவரது  சொத்துக்களில்  சரி பாதியை பேரமாக பேசி இருக்கிறார்கள்’ என்று அதில் சொல்லப்பட்டு இருந்ததாம். 'சிறைக்குள்ளேயே சகல வசதியுடன் இருந்துவிட்டு வெளியில் வந்திருக்கும் அவர், இப்போது ரொம்பவும் தெம்பாக இருக்கிறார். மதுரையின் பெரிய கான்ட்ராக்ட்டுகள் இப்போதும் இவரது பினாமிகளுக்கே வழங்கப்பட்டு வருகிறது. இது தெரிந்து விளக்கம் கேட்ட துறை அமைச்சரை மன்னார்குடி ஆட்கள் மிரட்டியுள்ளார்கள்’ என்றும் அந்த அறிக்​கையில் வருகிறதாம்.''
''சொல்லும்போதே அதிருதே...''
''தி.மு.க. வி.ஐ.பி. ஒருவரின் மருமகனையும்  போலீஸ் நடவடிக்கையில் இருந்து காப்பாற்றி இருக்கிறார்கள். இதே ரூட்டில், அழகிரிக்கு நெருக்கமாக இருந்த பலர், டீல் போட்டு தங்களைத் தற்காத்துக் கொண்டு விட்டதாகவும் தெரிகிறது. மதுரைக்குப் பக்கத்தில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் இருவரும் தி.மு.க. மாவட்டச் செயலாளர் ஒருவரும் இந்த லிஸ்டில்வருகிறார்கள். பினாமி நபர்களின் சிம் கார்டுகள் மூலமாக இவர்கள் அனைவரும் மன்னார்குடி தரப்பில் யார் யாருடன் பேசினார்கள் என்ற விவரத்தை எல்லாம் இந்த உளவுக் குழு பக்காவாகத் திரட்டி கார்டனுக்குத் தந்துள்ளதாம்.''
''அப்படியா!''
''சசிகலா உள்ளிட்டவர்களோடு வெளியேற்றப்​பட்டவர்களில் ஒருவர் மிடாஸ் மோகன். சசிகலாவுக்குச் சொந்தமான மிடாஸ் மதுபான ஆலையின் நிர்வாகி. போலீஸ் அதிகாரிகளை டிரான்ஸ்ஃபர் போடுவது தொடங்கி கான்ட்ராக்ட், கமிஷன் என, மிடாஸ் மோகனின் சக்தி பல தளங்களிலும் விளையாடி இருக்கிறது. ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு குறிவைத்து வளைக்கப்பட்ட பெரும் புள்ளிகள் சிலரைக் காப்பாற்றுவதாகச் சொல்லி, பேரங்களை முடித்து சொன்னபடியே சிலரைக் காப்பாற்றியும் இருக்கிறதாம். அரெஸ்ட் பட்டியலில் இருந்த சிலரின் பெயர்களை வெளியே கசியவிட்டு, தங்கள் காலடியில் வந்து விழவைத்து ரசித்தும் இருக்கிறது!''
''அப்போ ராவணனுக்கு அடுத்தபடியாக அம்மையாரின் அசாத்திய கோபம் இந்த மோகன் மீதுதானா..?''
''நிச்சயமாக! சசிகலாவின் உறவினர்கள் பிசினஸ் சம்பந்தமான எந்த வேலைக்கும் தங்களது சமூகத்தைச் சேர்ந்தவரைத் தவிர, வேறு யாரையும் நியமிக்க மாட்டார்கள். அதில் தப்பித் தவறி மிகுந்த நம்பிக்கை​யோடு மிடாஸ் நிறுவனத்துக்கு நியமிக்கப்பட்டவர் மோகன். 'கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதே மோகனை அணுகத் தொடங்கியது கட்சிக்காரர்கள் கூட்டம். ஆனாலும், அப்போதெல்லாம் அடக்கியே வாசித்தவர், சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. ஜெயித்த பிறகு ஒரேயடியாக மாறிப்போனார். அவரை நெருங்க நினைத்த மீடியேட்டர்கள் தரப்பு, அவருடைய மகனான சஞ்சய் மோகன் மூலமாக நினைத்ததை எல்லாம் சாதித்துக் கொண்டார்கள். கடந்த ஆட்சியில் பார்க் ஹோட்டலில் நடந்த ஒரு பிரச்னையில் அழகிரியின் மகன் துரை தயாநிதி பெயர் பரபரப்பாக அடிபட்டது. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடனேயே நிலுவையில் இருந்த அந்த வழக்கு தோண்டப்பட்டது. இதுதெரிந்து, சில காலம் வெளிநாட்டிலேயே தங்கி இருந்தார் துரை தயாநிதி. அ.தி.மு.க-வின் சக்தி மிகுந்த புள்ளிகள் பலரிடமும் அழகிரி தரப்பு பேசிப் பார்த்தது. ஆனால், யாரும் உதவ முன்வரவில்லை. இதற்கிடையில்தான் மிடாஸ் மோகனின் மகன் சஞ்சய் மூலமாகத் தூதுப் படலம் தொடங்கியதாம். தயாநிதிக்கு எந்தப் பிரச்னையும் வராது என்கிற உத்திரவாதம் சஞ்சய் மோகன் மூலமாகக் கொடுக்கப்பட்டது என்றும் சொல்கிறார்கள்.  அதன் பிறகே மதுரை மண்ணில் மறுபடி கால் வைத்தாராம் அழகிரியின் வாரிசு''
''ஆட்சி மாறினாலும் காட்சி மாறாது என்று இதைத்தான் சொல்கிறார்களா?''
'’உண்மைதான். கடந்த ஆட்சியில் துரை தயாநிதிக்கு தோஸ்தாக இருந்த பலரும், இந்த ஆட்சியில் சஞ்சய் மோகனின் வலது கரங்களாக வலம் வரத் தொடங்கினார்களாம். துரை தயாநிதியை வழக்கில் இருந்து காப்பாற்றியதைச் சொல்லியே, கைது பட்டியலில் இருந்த பலரிடமும் புகுந்து விளையாடி இருக்கிறது இந்த மீடியேட்டர்கள் தரப்பு. இதற்குப் பரிசாக சஞ்சய் மோகனை சகல விதத்திலும் கவனித்து இருக்கிறது மீடியேட்டர்கள் க்ரூப். மிடாஸ் மோகன் குறித்து விசாரிக்கத் தொடங்கிய போலீஸ், இப்போது சஞ்சய் - துரை தயாநிதி சகவாசம் குறித்த ஆதாரங்களையும் அள்ளி இருக்கிறது.''
''நீர் சொல்வதை வைத்துப் பார்த்தால் மதுரைப் பக்கம் அதிரடிகளை மீண்டும் பார்க்கலாம் போல!'' என்ற நாம், ''பொதுக்குழுத் தகவல் ஏதாவது உண்டா?'' என்று கழுகாரிடம் கேட்டோம்!
''பொதுக்குழு தேதி அறிவித்து விட்டாலும் அன்றைய தினம் உற்சாகமான மனநிலையில் ஏனோ முதல்வர் இல்லை. இறுக்கமான முகத்துடன்தான் இருந்தார். இதற்கான பேச்சு தயாரிக்கும் போதும் அப்படித்தான் இருந்துள்ளார். என்னென்ன பேச வேண்டும் என்பதை ஜெயலலிதாவே டிக்டேட் செய்துள்ளார். அதை கோர்வையாகச் சேர்த்து பேச்சு தயாரித்துக் கொடுத்தார்கள். அதில் ஒரு இடத்தில் சசிகலா பற்றி அவருடைய பெயரைக் குறிப்பிட்டு இருந்ததாம். 'இனிமேல் அந்தப் பெயரை எதற்காகவும் உச்சரிக்க மாட்டேன்’ என்று அழுத்தமாகச் சொன்னாராம் ஜெயலலிதா. அவரது தீர்க்கமான முடிவைப் பார்த்து சுற்றி இருப்பவர்களே பதறிப் போய் இருக்கிறார்கள்.''
''ஆனால் இன்னமும் நமது எம்.ஜி.ஆரில் சசிகலா பெயர் வருகிறதே... பப்ளிஷராக?''
''அதற்கும் மாற்று ஆளைத் தயார் செய்துவிட்டார் ஜெயலலிதா. நமது எம்.ஜி.ஆர். பத்திரிகைக்குப் புதிய ஆசிரியராகவும் பப்ளிஷராகவும் வரப் போகிறவர் கவிஞர் மருது அழகுராஜ். 'சித்திரகுப்தன்’ என்கிற பெயரில் தி.மு.க-வுக்கு எதிராக கவிமழை பொழிபவர் இந்த அழகுராஜ்தான். இந்தப் பதவி சட்டபூர்வமானது என்பதால், பூர்த்தி செய்யவேண்டிய சில சம்பிரதாயங்கள் இருக்கின்றன. அதில்தான் தாமதம்'' என்ற கழுகார்,
''இளவரசியின் சம்பந்தி திருச்சி கலியபெருமாள் சீக்கிரமே தன் மகனுக்கு பெரிய அளவில் திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து இருந்தாராம். அவர் வீட்டுக்குப் பெண் கொடுக்க போட்டி மேல் போட்டியாக கட்சிக்காரர்கள் பலரும் மொய்த்து இருக்கிறார்கள். கோட்டை மாவட்டத்தின் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளருக்கு அந்த அதிர்ஷ்டம் அடித்ததாம். அவருடைய மகளை கலியமூர்த்தி மகனுக்குப் பேசி முடிக்கப்பட்டது. ஆனால், இடையிலேயே துரத்தல் படலம் அரங்கேற... அதிர்ஷ்டமே அதிரடியாக மாறியதில், கல்யாண வேலை ஸ்டாப்.  கலங்கிப் போயிருக்கும் அந்த மாவட்டச் செயலாளர், கலியபெருமாள் கால் செய்தால்கூட அட்டென்ட் பண்ணாமல் எஸ்கேப் ஆகிறாராம்.!''
''இன்னும் யார் யாருக்கு என்ன குடைச்சல் வரப் போகிறதோ?''
''கல்தா படலம் துவங்கி மூன்று வாரங்கள் ஆகப்போகிறது. சசிகலா கோஷ்டி ஆதரவு அதிகாரிகளை இன்னும் மாற்றவில்லை என்று கோட்டை வட்டாரம் கவலைப்படுகிறது.  திருச்சி, கோவை, மதுரை போன்ற ஊர்களில் முக்கியப் பதவிகளில் இருக்கிறவர்கள், மன்னார்குடி வகையறாவின் ஆசி பெற்றவர்கள். பெரும்பாலான மந்திரிகளின் பி.ஏ, உதவியாளர்கள், டிரைவர்கள், தோட்டக்காரர்களும்கூட அந்த ரகத்தினர். இந்தப் பதவிகளுக்கான நியமனம் வந்தபோது, தகுந்த தகுதி இருந்தும் பின்னுக்குத் தள்ளப்பட்டவர்கள் புத்தாண்டு தினத்தன்று திருவல்லிக்கேணியில் உள்ள பழமையான லாட்ஜ் ஒன்றில் சந்தித்தார்களாம். முக்கியத் துறைகளில் கடந்த மாதங்களில் 'மன்னை' பெயரைச் சொல்லி தலை எடுத்து ஆடியவர்களின் பெயர் விவரங்களை லிஸ்ட் எடுத்துப் பேசினார்களாம். இந்தப் பட்டியல் இப்போது உளவுத்துறை தலைவர் மேஜைக்கும் போய் விட்டது!''
''ஓஹோ!''
''முதல்வரைச் சுற்றி திடீரென வேற்று மொழி வாசனை அதிகமாக அடிப்பதாகவும் ஒரு தகவல் மையம் கொண்டுள்ளது. முதல்வர் அலுவலகத்துக்கு அடிக்கடி வந்து போகும் வாய்ப்புள்ள முக்கிய அதிகாரிகளில் சிலர் அந்தப் பக்கத்து மாநில  மொழியிலேயே உரையாடிக் கொள்கிறார்களாம் . இந்த புது லாபியை பயன்படுத்தி, வெளியில் இருக்கும் சிலர் முக்கியப் பதவிகளை பிடிக்கத் தூண்டில் வீசி வருகிறார்களாம். குறிப்பாக, ஐ.பி.எஸ். அதிகாரிகளில் சீனியர் அதிகாரிகள் இருவர் டி.ஜி.பி. ஆபீஸில் முக்கியப் பதவியில் உட்காரப் பார்கிறார்களாம்'' என்றதோடு கழுகார் விட்டார் ஜூட்!
படங்கள்: சு.குமரேசன்
 வி.சி.க.வில் களையெடுப்பு!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் வரும் 7-ம் தேதி சென்னையில் நடக்கிறது. இதில், இப்போதுள்ள தலைமை நிர்வாகம், மாநில, மாவட்ட நிர்வாகிகள் விடுவிக்கப்பட்டு, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர். ஏற்கெனவே நடந்த இரண்டு மாநில செயற்குழுக்களிலும், மாநில நிர்வாகிகள் பற்றி கடுமையான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. ஆனால், அவற்றுக்கெல்லாம் கட்சித் தலைவர் திருமாவளவன் எந்த ரியாக்ஷனும் காட்டவில்லை. இந்நிலையில், கட்சிக்கு கெட்ட பெயரை உருவாக்கித் தந்தவர்களைக் களையெடுக்க வேண்டும் என்று கட்சித் தலைமைக்கு அதிக அளவில் கோரிக்கைகள் அனுப்பப்படுகின்றன. அதனால், பொதுக்குழுவில் என்ன நடக்குமோ என பரபரப்பில் இருக்கிறார்கள் விடுதலைச் சிறுத்தைகள்.
**********************************************************************************

கழுகார் பதில்கள்

எஸ். ரங்கசாமி, ஸ்ரீரங்கம். 
தேசிய கீதத்துக்கு இது 100-வது ஆண்டாமே?
அடிமை இந்தியர் ரத்தங்களில் சூடும் சொரணையும் ஏற்படுத்திய சக்தி, ரவீந்திரநாத் தாகூர் எழுதிய இந்தக் கவிதைக்கு உண்டு. 1911 டிசம்பர் 27-ம் தேதி இது, முதன்முதலாக இசைக்கப்பட்டது. கொல்கத்தாவில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்டது. வங்க மொழியில் எழுதிய தாகூரே, இதை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்தார். நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் தேசியகீதமாக இசைக்கப்பட்ட இந்தப் பாடலை, இந்தியாவின் தேசிய கீதமாகவும் நேருஜி ஏற்றுக் கொண்டார். தீவிரவாதிகளும் மிதவாதிகளும் சேர்ந்து இசைத்த கீதம் இது!
தாகூருக்கு இது 150-வது பிறந்த நாள் ஆண்டு. அவரின் பாடலுக்கு 100-வது ஆண்டு. அந்தப் புலமைக்குச் செய்வோம் புகழ் அஞ்சலி!
 சுரேஷ் பாலாஜி, திண்டிவனம்.
அண்ணா ஹஜாரே பற்றி தொடர்ந்து அவதூறு பரப்பு​வதிலேயே குறியாக இருக்கிறதே காங்கிரஸ்?
நேர்மையைப் பற்றி பேசுபவர்களுக்கு இதுதான் பரிசு என்றால், அண்ணா ஹஜாரே அதை தாங்கிக் கொண்டுதான் ஆகவேண்டும்!
'நாட்டின் கருவூலத்துக்குத் திருடர்களால் ஆபத்து இல்லை. கருவூலத்தைப் பாதுகாப்பவர்களால் தான் ஆபத்து. வெளியில் உள்ள எதிரிகளைவிட, உள்நாட்டில் உள்ள துரோகிகளால்தான் நாட்டுக்கு ஆபத்து உள்ளது’ என்று பகிரங்கமாகச் சொல்லும் அண்ணாவை இவர்களுக்கு எப்படிப் பிடிக்கும்?
'நான் ஊருக்குச் சென்று 35 வருடங்கள் ஆகிறது. ஊரில் குடும்பம் உள்ளது. ஆனால், அதையும் விட மேன்மையான குடும்பம் இந்த நாடு’ என்று வாழ்கிறார் அண்ணா ஹஜாரே. சுதந்திரக் கட்சியை சொந்தக் குடும்பக் கட்சியாக மாற்றிக் கொண்டவர்களுக்கு இதெல்லாம் பிடிக்குமா என்ன?
 கே.சந்திரசேகர், கம்பம்.
'முல்லைப் பெரியாறு பிரச்னையில் மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை’ என்கிறாரே ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி?
மத்திய அரசு உருப்படியாக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஒருவேளை கண்ணாடி முன்நின்று மன்மோகன் தனக்குத் தானே உத்தரவிட்டுக் கொண்டாரோ என்னவோ? கேரளாவில் இருந்து கொண்டு குழப்பத்தை ஏற்படுத்திய முதல்வர் உம்மன்சாண்டி, ஒரு காங்கிரஸ்காரர். அவரை இதுவரை வெளிப்படையாகக் கண்டித்தார்களா? இல்லையே..! அந்தோணி அவரது மாநிலத்துக்கு உண்மையாக இருக்கிறார் என்பது மட்டும் தெரிகிறது!
 அ.பழனியப்பன் தேவகோட்டை.
வி.என்.சுதாகரனின் வீடு, அலுவலகத்தில் பிடிபட்ட ஹெராயினை மீண்டும் ரசாயனப் பரிசோதனை செய்ய போதைப் பொருள் தடுப்பு சிறப்பு கோர்ட் உத்தவிட்டுள்ளதே?
வி.என். சுதாகரனின் திருமணத்துக்குச் செலவு செய்தது எவ்வளவு, அந்தப் பணம் எப்படிக் கிடைத்தது  என்ற வழக்கு 14 ஆண்டுகளாக முடியாமல் கிடக்கிறது. அவர் வீட்டில் எடுக்கப்​பட்ட ஹெராயின் ஒரிஜினலா என்ற வழக்கு 10 ஆண்டுகளாக நடக்கிறது. இவை எப்போது முடியும் என்றும் தெரியவில்லை. பொதுவாகவே இந்திய நீதி பரிபாலன முறையில் இப்படிப்பட்ட  கோளாறுகளுக்கும் இடம் இருக்கிறது என்பதைத் தவிர சொல்ல எதுவும் இல்லை!
 ஆர்.வசந்தகுமார், திருப்பூர்.
ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலில் மத்திய அரசுக்கு எதிராகப் பிரசாரம் செய்யப்போவதாக அண்ணா ஹஜாரே அறிவித்திருப்பது சரியா?
இது தவறு!
உதாரணத்துக்கு உ.பி.யை எடுத்துக் கொள்வோம். காங்கிரஸுக்கு எதிராக ஹஜாரே பேசினால் மாயாவதியை யோக்கியர் என்று சொல்வாரா? முலாயம்சிங் ஊழல் இல்லாதவரா? அவரது நண்பர்தானே அமர்சிங்? பா.ஜ.க. ஊழல் நிழல் படியாத கட்சியா? எனவே, ஹஜாரேவின் இத்தகைய முடிவுகள் தவறானதாகும். ஊழல் எதிர்ப்பு என்ற விரிந்த லட்சியத்தை காங்கிரஸ் எதிர்ப்பு என அவர் சுருக்கிக் கொள்ளக் கூடாது!
இந்திய மக்களின் விடுதலைக்குத்தான் மகாத்மா பாடுபட்டார். காங்கிரஸை ஆட்சியில் அமர்த்து​வதற்கு அல்ல. எனவேதான் காங்கிரஸ் ஆட்சியின் நடவடிக்கைகளில் இருந்து மகாத்மா தள்ளியே இருந்தார்.  அதேபோல கட்சி அரசியலில் இருந்து ஹஜாரே தள்ளி இருக்க வேண்டும்!
 மூ.பொன்குமார், சென்னை.44.
திராவிடக் கட்சிகளில் மேடைப் பேச்சாளர்கள் குறைந்துவிட்டார்களே?
கொள்கை குறைந்துபோய் விட்டதால் பேச்சாளர்களும் குறைந்து விட்டார்கள். 'மறக்கப்​பட்ட - ஆனால், மறக்க முடியாத மனிதர்கள்’ என்று திருச்சி செல்வேந்திரன் ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். அதில் குறிப்பிடப்படும் பேச்சாளர்களைப் பற்றிப் படித்தால் இன்றைய நிலைமை வருத்தமே தருகிறது!
 ஆர். ஜெயகோபால், ராஜபாளையம்
ஜெயலலிதா எடுத்த அதிரடி நடவடிக்கைகளால்அதிகம் வருத்தம் அடைந்தது சசிகலாவா? நடராஜனா?
இருவரும் இல்லை! 'இத்தகைய நடவடிக்கை களால் ஜெயலலிதாவின் செல்வாக்கு உயர்ந்து விடக்கூடாதே... அவர் திருந்திவிடக்​கூடாதே’  என்று நினைக்கும் கருணாநிதிதான் அதிக வருத்தம் அடைந்திருக்கக் கூடும்!
 முகேஷ், திருத்தணி.
'கடந்த ஏழு ஆண்டுகளில் ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் யாரும் தண்டனை அடையவில்லை’ என்று லோக்பால் விவாதங்களில் பேசிய தி.மு.க. உறுப்பினர் நாடாளுமன்றத்தில் சொல்லி இருக்கிறாரே?
ஆ.ராசாவுக்குத் தண்டனை தாருங்கள் என்று  இப்படி பகிரங்கமாகவா சொல்வது?
 ந. இராமசாமி, சொக்கநாதன்புதூர்.
மன்னார்குடி குடும்பத்தின் சொத்து விவரத்தை இன்னும் நீர் வெளியிடாதது ஏன்?
விவரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன. பொறுமை ப்ளீஸ்!

கே.பி.முனுசாமி, தங்கமணி, வளர்மதி.. இவர்களை ஏன் பேசச் சொன்னார் ஜெ.?

பொதுக்குழு ரிப்போர்ட்!
''என்னை நம்பிக் கெட்டவர்கள் யாருமில்லை... நம்பாமல் கெட்ட​வர்கள்​தான் உண்டு!'' என்பது ஜெயலலிதா​வின் பிரபல முழக்கம். இப்போது, ''துரோகிகளுக்கு மன்னிப்பு இல்லை... அந்தத் துரோகிகளின் பேச்சைக் கேட்பவர்களுக்கும் மன்னிப்பு இல்லை'' என்ற புதிய கோஷத்தைக் முழங்கி, சாட்டையைச் சுழற்றத் தொடங்கி இருக்கிறார் ஜெ!
''நான் எடுத்த முடிவில் உறுதியாக இருக்கிறேன்'' என்பதை அடித்துச் சொல்லி, உண்மை விசுவாசிகளை உற்சாகப்படுத்துவதற்காகவே பொதுக்குழுவைக் கூட்டியது போல் இருந்தது. அ.தி.மு.க.வினர் மட்டுமல்ல அனைத்துக் கட்சிக்காரர்களும் ஆவலுடன் எதிர்பார்த்த அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம், கடந்த 30ம் தேதி சென்னையில் நடந்தது. சசிகலா மற்றும் அவரது உறவுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு 12 நாட்கள் கழித்து, இந்தக் கூட்டம் நடத்துவதால் கூடுதல் முக்கியத்துவம் கிடைத்தது.  1990ம் ஆண்டுக்குப் பிறகு சசிகலா இல்லாமல் ஜெயலலிதா கலந்து கொள்ளும் பொதுக்குழு இது (சசிகலா செயற்குழு உறுப்பினராக ஆவதற்கு முன்னால், ஜெ.வுடன் பொதுக்குழு அரங்கத்துக்கு வருவார். பின்னால், தனி அறையில் இருந்தபடி நிகழ்வுகளுக்குக் காது கொடுப்பார்!)
வானகரம் மண்டபத்தில் மதியம் 2 மணிக்குத்தான் கூட்டம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 1.40 க்கே ஜெயலலிதா ஆஜர். காரிலிருந்து இறங்கியவர், நேராக செயற்குழு கூட்டம் நடக்க இருந்த அறைக்குள் நுழைந்தார்.
அங்கே என்ன நடந்தது?
செயற்குழுவில் நடந்தவற்றை அதில் கலந்து கொண்ட நிர்வாகி ஒருவர் நமக்கு அப்படியே லைவ் ரிப்போர்ட் கொடுத்தார். ''இறுக்கமான முகத்தோடு​தான் அம்மா வந்தாங்க. செயற்குழு உறுப்பினர்களிடம் மினிட் புத்தகத்தில் கையெழுத்து வாங்கியதும், 'பொதுக்குழுவில் யாரெல்லாம் பேசப்போறாங்க?’ என்று, ஓ.பி.எஸ்.ஸைப் பார்த்து கேட்டார். அவர், செங்கோட்டையனைத் திரும்பிப் பார்க்க.. கையில் ஒரு லிஸ்ட்டை எடுத்துக் கொண்டு செங்கோட்டையன் ஓடினார். அந்த லிஸ்ட்டை ஒரு முறை  அம்மா பார்த்தாங்க. செங்கோட்டையன்கிட்ட பேனா வாங்கி, அந்த லிஸ்ட்டில் இருந்த பல பெயர்களை அடிச்சிட்டாங்க. அவங்க கையாலேயே, கே.பி.முனுசாமி, தங்கமணி, வளர்மதி ஆகியோர் பெயர்களை எழுதினாங்க. ' இவங்க பேசட்டும். நான் எதுக்கு சொல்றேன்னு உங்களுக்குப் புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்’ என்று, செங்கோட்டையனிடம் சொன்னதாகத் தெரியுது. செங்கோட்டையனும் வாய்மீது கை வைத்தபடியே தலையாட்டி விட்டு வந்து உட்கார்ந்தாரு. கே.பி.முனுசாமி, தங்கமணி, வளர்மதி ஆகிய மூன்று பேருக்குமே பொதுக்குழுவில் பேச அழைப்பார்கள் என்ற விஷயம் கடைசி வரை தெரியாதாம்.
முன்வரிசை அலர்ஜியில் மந்திரிகள்!
பொதுக்குழுவில் அன்வர் ராஜா, வளர்மதி, பி.எச்.பாண்டியன், சுலோசனா சம்பத், ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன், பொன்னையன், செங்கோட்டையன், விசாலாட்சி நெடுஞ்செழியன், செம்மலை, டாக்டர் வேணுகோபால் எம்.பி. ஆகியோர் மேடை ஏற்றப்பட்டிருந்தனர். இந்த அளவுக்கு நிர்வாகிகள் மேடையில் அமர வைக்கப்பட்டது கடந்த காலங்​களில் நடைபெறவில்லை. அமைச்சர்கள் முன்வரிசையில் அமரவில்லை. இரண்டு மூன்று வரிசைக்கு பின்னால்தான் அமர்ந்திருந்தார்கள். கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன்தான் பொதுக்குழுவை தொகுத்து வழங்குவது வழக்கம். ஆனால், இந்த முறை சென்னை மாநகராட்சி கவுன்சிலர் நூர்ஜஹானுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. கட்சியின் பேச்சாளரான நூர்ஜஹானுக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தது ஆச்சர்யம்தான்!
விஜயகாந்த்துக்கு கிடைத்த அர்ச்சனை!
யாருமே எதிர்பார்க்க நிலையில் விஜயகாந்த்தை வறுத்தெடுத்தார் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா. ''சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க.வின் தயவில்தான் நாம் ஜெயித்தோம் என்று, விஜயகாந்த் சொல்லிக் கொண்டிருக்கிறார். அது உண்மையில்லை. அவருடைய ஓட்டுகள் நமக்கு உதவவில்லை. அவருடைய சக்தியால் அம்மா ஜெயிக்கவில்லை. நம்மோடு அவர் சேர்ந்ததால்தான், நமது செல்வாக்கால்தான் அவர் எதிர்க்கட்சித் தலைவராக வந்து உட்கார முடிந்தது. இந்த உண்மை விஜயகாந்துக்குப் புரியவில்லை. விஜயகாந்த் மட்டுமல்ல... வேறு யாருடனுமே கூட்டணி சேராமல் அடுத்து வந்த உள்ளாட்சித் தேர்தலில் தனித்து நின்று 90 சதவீதத்துக்கும் அதிகமான உள்ளாட்சி இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றியிருக்கிறது. அந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட விஜயகாந்த் 2 நகராட்சிகளையும் 3 பேரூராட்சிகளையும் 5 மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களை மட்டுமே ஜெயிக்க முடிந்தது. தங்கள் தயவால்தான் ஜெயித்தோம் என்று மார்தட்டிக் கொள்ளும் விஜயகாந்த், ஏன் உள்ளாட்சித் தேர்தலில் இப்படி உதை வாங்கினார்? இந்த புள்ளிவிவரம் கூட புள்ளிவிவரப் புள்ளிக்குத் தெரியாமல் போனது ஏன்?'' என்று, அன்வர் ராஜா பேசிய போது ஏகத்துக்கும் கைதட்டல்.
''சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்பது அவருக்கு அம்மா பார்த்துக் கொடுத்த கொடை. அ.தி.மு.க. போட்ட பரிசு. எதிர்க்கட்சித் தலைவராக அவர் ஒழுங்காக வேலை பார்க்கட்டும். அதை விட்டுவிட்டு அம்மாவைச் சீண்டிப் பார்க்க வேண்டாம். இதற்கு மேல் விஜயகாந்த்தைப் பற்றி கருத்துச் சொல்ல நான் விரும்பவில்லை'' என்று முடித்தார் அன்வர் ராஜா.
விவரம் அறிந்த சில புள்ளிகள், ''விஜயகாந்த்தை இந்தளவுக்கு அன்வர் ராஜா போட்டு வாங்கியிருக்க வேண்டாம். நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அம்மா சில கணக்குகள் வச்சிருக்காங்க. என்னதான் விஜயகாந்த் எடக்கு மடக்காக போனாலும், தி.மு.க. பக்கம் அவர் போய்ச் சேர்ந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்காங்க'' என்று ஒரு கணக்கு சொன்னார்கள். 
பூசாரி தெய்வம் ஆகிவிட முடியாது..!
அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத் தலைவர் பி.எச். பாண்டியன்தான் வரவேற்புரையிலேயே சசிகலா விவகாரத்தைத் தொட்டு வைத்தார்.  ''வெளியேற்றப்பட்ட சசிகலா அண்ட் கோ, இப்போது நடக்கும் பெங்களூரு கோர்ட் விவகாரங்களில் உள்ளடி வேலை பார்த்து விடக் கூடாது என்பதில் படுஉஷாராக இருக்கிறார் அம்மா. அதுகுறித்த முக்கியமான சட்ட விவகாரங்களை பி.எச்.பாண்டியன் மற்றும் அவர் மகன் மனோஜ் பாண்டியன் மூலமாக அலசி வருகிறார். அந்த வகையில் அம்மாவின் லேட்டஸ்ட் மனப்போக்கை நன்றாக அறிந்துகொண்டுதான், சசிகலாவை ஓபனாகப் போட்டுத் தாக்கினார் பாண்டியன்'' என்பது இந்த துணிச்சல் பாய்ச்சலுக்கு சிலர் விளக்கம் அளித்தனர்.
எட்டு பர்சென்ட்.. எட்டு பர்சென்ட்..!
பி.எச்.பி-யைத் தொடர்ந்து கே.பி.முனுசாமியை பேச அழைக்க.. அதை சற்றும் எதிர்பார்க்காத முனுசாமி மிரண்டு போய் மேடைக்கு ஓடினார். ஜெ.வை பார்த்து வளைந்து கும்பிடு போட்ட முனுசாமியை ஜெ. எந்த ரியாக்ஷனும் காட்டாமல் பார்க்க... ''சாணத்தைப் பிடித்து அதைப் பிள்ளையாராக மாற்றுபவர் அம்மா. அதற்காகச் சாணம் தன்னையே கடவுளாக நினைத்துக் கொண்டால் எப்படி? அது வெறும் சாணம்தான் என்று புரிய வைக்க, ஒரேயடியாக அதை அம்மா வழித்துப் போட்டுவிடுவார். அம்மா அருகில் இருப்பவர்கள், 'நாங்களும் பிள்ளையார் பிடிக்கிறோம்’ என்று முயன்றால்... அதுவும் நடக்காது. அப்படி நினைக்கிறவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் போவார்கள். ஒன்றுக்கும் பயன்படாத பொருளாகி விடுவார்கள்'' என்று முனுசாமி பேசிக் கொண்டே போக.. கூட்டத்திலிருந்து யாரோ, ' எட்டு பர்சென்ட்... எட்டு பர்சென்ட்....’ என்று குரல் கொடுத்தார்கள். கத்தியது புரிந்ததோ, இல்லையோ... அமைதியாக இருக்கும்படி சைகை செய்தார் ஜெ.
''அமைச்சரின் சமீபத்திய செயல்பாடுகள் மீது விரக்தி அடைந்த ஒரு தொண்டர்தான் இப்படிக் குமுறினார்'' என்று காரணம் சொல்கிறார்கள். 
திருடனைக் கொட்டிய தேள்..
'அடுத்து அமைச்சர் தங்கமணி பேசுவார்..’ என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் சொல்ல.. தங்கமணியும் அதை எதிர்பார்க்கவில்லை.  ''என்னை யார் என்று எங்க பக்கத்து (வயல்?) காட்டுக்காரனுக்குக் கூடத் தெரியாது. அப்படிப்பட்டவனை அழைத்து வந்து எம்.எல்.ஏ. ஸீட் கொடுத்து, இன்று அமைச்சராக்கி அழகு பார்த்திருப்பவர் கருணை உள்ளம் கொண்ட அம்மா. அவர் சொன்னால் உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்கும் லட்சக்கணக்கான தொண்டர்களில் நானும் ஒருவன்'' என்று அவரும் பட படவென புகழ்ந்து தள்ளி விட்டு அமர்ந்து கொண்டார்.
''சசிகலா குடும்பத்தோடு தொடர்புடையவர்கள் என்று, தான் கருதும் சிலரையே பேச விட்டுப் பல்ஸ் பார்ப்பதற்காகத்தான் அம்மா இப்படி செஞ்சாங்க. திருடனுக்கு  தேள் கொட்டிய கதையா இவங்களும் பேசிட்டு வந்திருக்காங்க'' என்று சிரித்தார்  மூத்த அமைச்சர் ஒருவர்.
துரோகிகளுக்கு மன்னிப்பே கிடையாது!
பொதுக்குழுவில் ஜெயலலிதா நிகழ்த்திய பளீர் பேச்சு... 'நிஜமாகவே சசி கிரகணம் விலகியதா?' என்றகுழப்பத்தில் இருந்த விசுவாசிகளுக்கு வெளிச்சத்தை உண்டாக்கியது.  ''கட்சிக்காரர்கள் பலவிதம் உண்டு. தவறு செய்து கட்சியை விட்டு நீக்கப்படுகிறவர்கள், 'இது நமக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய தண்டனைதான்.  இனிமேல் அரசியல் வேண்டாம்’ என்று ஒதுங்கி விடுவார்கள். இன்னும் சிலர் வேறு கட்சிக்குத் தாவி அரசியலை தொடர்வார்கள். அது தவறில்லை. ஆனால் இன்னும் சிலர் இருக்கிறார்கள். துரோகம் செய்து விட்டு இந்தக் கட்சியில் இடமில்லை என்று நீக்கிய பிறகும் அந்தக் கட்சியைச் சார்ந்தவர்​களை விடாப்பிடியாக தொடர்புகொண்டு, 'நாங்கள் மீண்டும் உள்ளே வந்துவிடுவோம், மீண்டும் செல்வாக்​குடன் இருப்போம். இப்போது எங்களை பகைத்துக் கொண்டால் நாளை நாங்கள் மீண்டும் உள்ளே வந்து பழிவாங்குவோம். அதனால் எங்களைப் பகைத்​துக் கொள்ளாதீர்கள்' என்று சொல்பவர்கள் அவர்கள். கட்சித் தலைமையின் மீதே சந்தேகம் வருகின்ற அளவுக்குப் பேசுபவர்களுக்கு மன்னிப்பே கிடையாது.  அதுமட்டுமல்ல... அத்தகையவர்களுடைய பேச்சை  நம்பி, அதன்படி செயல்படுகின்ற கட்சிக்காரர்களுக்கும் மன்னிப்பு கிடையாது'' என்று ஜெயலலிதா ஆக்ரோஷமாக கர்ஜித்த போது.. கூட்டத்தில் ஆர்ப்பரிப்பு அடங்க நீண்ட நேரம் ஆனது.
சூடு பட்ட பூனை..
நன்றியுரை ஆற்ற செங்கோட்டையனை அழைத்த போது படு உற்சாகத்தோடு மைக் முன்பு வந்தார். சசிகலா குடும்பத்தினரால் அதிகம் காயம் பட்டவர் செங்கோட்டையன்தானே.. அது அவரின் பேச்சில் அப்பட்டமாக எதிரொலித்தது. ''அனுமானின் இதயத்தை பிளந்த போது ராமர்தான் இருந்தார். தொண்டர்களின் இதயத்தை பிளந்தால் அங்கே அம்மாதான் குடியிருப்பார். ஒவ்வொரு தொண்டனின் இதயத்துக்குள்ளும் இருக்கும் அம்மாவை யாரும் அசைத்துப் பார்க்க முடியாது. அந்த முயற்சிகூடத் தோற்றுப்போகும். அம்மா எடுக்கும் எந்த நடவடிக் கைக்கும் தொண்டர்கள் நாங்கள் அத்தனை பேரும் துணை இருப்போம்'' என்ற போது ஜெயலலிதா அவரை பார்த்து ஏதோ அர்த்த சிரிப்போடு புன்முறுவல் பூத்தபடி கைதட்டினாராம்.
முடிஞ்சது.. முடிஞ்சதுதான்..!
ஜெயலலிதாவின் ஆவேசப் பேச்சுக்குப் பின்னணி என்ன? கார்டன் வட்டாரத்தோடு தொடர்பு​டையவர் களிடம் விசாரித்தோம். கட்சியில் பதவிக்காகவும், சில காரியங்களை சாதித்துக் கொள்ளவும் சசிகலா குடும்பத்தாரிடம் பணம் கொடுத்தவர்கள், கொடுத்ததைத் திருப்பி கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள். 'இப்படி அம்மா அடிக்கடி சொல்லுவாங்க... திவாகரனை நீக்கிவிட்டு பாஸ்கரனை கொண்டு வந்தார்கள் அவரையும் நீக்கிவிட்டு தினகரனை பொறுப்புக்குக் கொண்டு வந்தார்கள். அதன்பிறகு அவரையும் ஒதுக்கி விட்டு டாக்டர் வெங்கடேஷ§க்கு பதவி கொடுத்தார். இப்படி எங்கள் மீது கடந்த காலங்களில் கோபம் இருந்தாலும் சின்னம்மாவின் மீது அம்மாவுக்கு எப்போதுமே பாசம் உண்டு. இப்படி நடப்பது தற்காலிகம்தான். வாடிக்கையானதுதான். மீண்டும் உள்ளே வருவோம். அப்போது உங்கள் வேலைகளை முடித்து கொடுப்போம்’  என்று பதில் வந்ததாம். இது ஆதாரபூர்வமாக அம்மாவோட கவனத்துக்கு போயிருக்கு. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கத்தான் அம்மா இப்படி  அதிரடியாகப் பேசி இருக்காங்க. அதாவது, மன்னார்குடியின் செல்வாக்கு என்று சொல்லி யாரும் இனி கோட்டையில் காரியம் சாதிக்க முடியாது. அப்படி அவர்களுக்கு உதவுகிற அதிகாரிகளுக்கும் தண்டனை உண்டு என்பதையும் சேர்த்தே இதன்மூலம் உணர்த்தி இருக்காங்க'' என்று சொல்கிறார்கள்.
சசி தரப்பினர் இதுவரை நடத்திய அதிரடி ஆட்டங்கள் குறித்து துப்பறிய பணிக்கப்பட்ட போலீஸ் அதிகாரிகளும் இதுவரை லேசான குழப்பத்திலேயே இருந்து வந்தனர். 'இனி அவர்களுக்கு நோ என்ட்ரி' என்று பொதுக்குழுவில் ஜெ. அடித்துப் பேசிய பிறகு, கொஞ்ச நஞ்ச சஞ்சலமும் நீங்கி முழு வேகத்தில் ரெய்டும், ரெக்கவரியும் நடத்தத் துவங்கி இருக்கிறார்களாம் இந்த அதிகாரிகள்.
கே.ராஜாதிருவேங்கடம், எம்.பரக்கத் அலி
படங்கள்: சு.குமரேசன்
*********************************************************************************
யார் அந்த எட்டு பேர்?

பந்தாடப்பட்டவர்கள் பட்டியல்
ஜெயலலிதாவின் களை எடுப்புகள் ஆரம்பித்து விட்டன. அ.தி.மு.க. பொதுக்குழு கூடிய அன்று ஜெயலலிதாவிடம் இருந்து ஒரு ஹாட் அறிக்கை. அதில்  எட்டுப் பேருக்கு கட்சியில் இருந்து கல்தா கொடுக்கப்பட்டு இருந்தது.
முதலில் மன்னார்குடி பகுதியில் இருந்து நீக்கப் பட்ட மூவர்!  திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் செயலாளராக இருந்த சிவா.ராஜமாணிக்கத்தை அ.தி.மு.க-வுக்கு அழைத்து வந்தவர் திவாகரன். கட்சியில் சீனியர் புள்ளிகள் நிறைய பேர் இருந் தாலும், திவாகரனின் செல்வாக்கால் கடந்த சட்டமன்றத் தேர்தலில் மன்னார்குடி அ.தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தமிழகம் முழுக்க அ.தி.மு.க. பெரும்பான்மையான வெற்றி பெற்றபோதிலும் மன்னார்குடியில் தோல்வியைத் தழுவியது கட்சி.
எம்.எல்.ஏ. பதவி கிடைக்கவில்லை என்றாலும் திவாகரனின் முக்கியப்புள்ளியாக ஒரு பி.ஏ. போன்று செயல்பட்டார். 'சிவா.ராஜமாணிக்கத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் அ.தி.மு.க-வினரால் மன்னார்குடி பகுதிக்குள் எதுவுமே செய்யமுடியாது’ என்ற நிலைமை கட்சிக்குள் இருந்தது. 'சசிகலா குடும்பம் நீக்கப்பட்டதும் தனக்கும் கல்தா உண்டு’ என்று உறுதியாகவே அவர் நம்பினார். ஆனால் கொஞ்சம் தாமதமாகத்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. இப்போதும் திவாகரன் வீட்டில்தான் இருக்கிறார் சிவா.ராஜமாணிக்கம்.
எந்த ஒரு காரியம்  என்றாலும் திவாகரன் பெயரைச் சொல்லி ஆரம்பிக்கும் அளவுக்கு விசுவாசமுள்ளவர் மன்னார்குடி அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளரான அசோகன். இவரும் இப்போது நீக்கப்பட்டு உள்ளார். 'கட்சியில் இருந்து நீக்கப்படும் அளவுக்கு நான் எந்தக் குற்றமும் செய்யலையே...’ என்று கண் கலங்கும் அசோகனிடம் பேசினோம். 'எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கியதில் இருந்து அ.தி.மு.க-வில்தான் எங்கள் குடும்பம் இருக்கிறது. கட்சி பிளவு பட்டபோதும் நான் அம்மாவுக்கு ஆதரவாகத் தான் இருந்தேன். இனியும் உயிருள்ளவரை அ.தி.மு.க-வில்தான் இருப்பேன். அம்மாவால் நீக்கப்பட்ட நபர்களுடன் நான் எந்தத் தொடர்பும் வைக்கவில்லை. சிலர் கொடுத்த தவறான தகவல்களால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனது விளக்கக் கடிதத்தை அம்மாவிடம் கொடுத்து இருக்கிறேன். திரும்பவும் என்னை கட்சியில் சேர்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது'' என்று சொல்லிக் காத்திருக்கிறார்.
கல்தா பட்டியலில் அடுத்தவர், மன்னார்குடி முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ-வான சீனிவாசன். கட்சி உடைந்த காலத்தில் தனக்கு ஆதரவாக இருந்த தன் மூலம் ஜெயலலிதாவின் கனிவுக்கு ஆளாகி, மன்னார்குடி எம்.எல்.ஏ-வாக ஆக்கப்பட்டார். திவாகரன் சிபாரிசின் மூலம் திருவாரூர் மாவட்ட அரசுத் தரப்பு வழக்கறிஞராகவும் செயல்பட்டார். இவரும் இப்போது, 'அம்மா அடிக்கவும் செய் வாங்க, அரவணைக்கவும் செய்வாங்க...’ என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.
ராவணனின் ஆளுகையின் கீழ் இருந்த கொங்கு மண்டலத்திலும் களையெடுப்பு உற்சவம் நடந்திருக்கிறது. ராவணனுடன் கல்லூரி காலத்தில் இருந்தே பழகி வரும் தமிழ்மணி கல்தா பட்டியலில் இருக்கிறார். அவர்களின் நட்பு, தொழில் பங்கு தாரர்களாக வளரவைத்தது. சசிகலாவின் ஆதரவைப் பெற்று, தான் வளர்ந்தபோது, தமிழ்மணிக்கும் முக்கிய வாய்ப்புகளைக் கொடுத்துக் கொண்டே வந்தார் ராவணன். மிடாஸ் சாராய ஆலையிலும் தமிழ்மணிக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. இவர்கள் இருவரும் இணைந்து எண்ணெய் நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார்கள்.  கொங்கு மண்டலம் தன் கட்டுப்பாட்டில் வந்த பிறகு, ராவணன் மூலவர் போல் மாறி பிரதானமாக அமர்ந்து கொள்ள, தமிழ்மணி உற்சவராகிப் போனார். உப உற்சவர்கள் பொறுப்பை விஜயகுமார், மோகன், விமல் ஆதித்தன் போன்ற ராவணனின் பரிவார கர்கள் எடுத்துக் கொண்டார்கள். இவர்களை எல்லாம் தாண்டினால்தான் அதிலும் குறிப்பாக தமிழ்மணியைக் கடந்தால்தான் ராவண தரிசனம் சாத்தியம்.
தங்களது அலைவரிசைக்கு ஒத்துவராத கழக நிர்வாகிகளுக்கு தயக்கமே இல்லாமல் ஃப்யூஸ் பிடுங்கி விடுவாராம் தமிழ்மணி. கடந்த சில மாதங்களுக்கு முன் ராவணனுக்கும் தமிழ்மணிக்கும் இடையில் சிறு விரிசல். அதனால் தொடர்ந்து வியாபார விஷயங்களை மட்டும் அவரை கவனிக்கச் சொல்லி பணித்தாராம் ராவணன். மனம் நொந்துபோன தமிழ்மணி, இப்போது நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் செட்டிலாகி இருப்பதாகத் தகவல்.
ஈரோடு மாவட்டம் காசிபாளையம் நகர ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர் பொறுப் பில் இருந்த மோகன் நீக்கப்பட்டு இருக்கிறார். இவர், முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் ஈஸ்வரமூர்த்தியின் உதவியாளராக இருந்தவர். ராவணனின் வளர்ச் சியைக் கண்டு அவரிடம் அடைக்கலமானார். இவரைக் கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்து... ட்ரிபிள் புரமோஷனில் பதவியை வாங்கியவர்கள் கோவை மண்டல அ.தி.மு.க-வில் கணிசம். 2001 சட்டமன்றத் தேர்தலுக்கு பின் ஈரோடு மாவட்டச் செயலாளர்களாக இருந்த முன்னாள் அமைச்சர் பி.சி.ராமசாமி, 'சிந்து’ ரவிச்சந்திரன் ஆகியோரின் பதவியைக் காவு வாங்கியது இவரது கைங்கர்யம்தான். ராவணனின் நிழலாக இருக்கும் தோரணையில் எம்.எல்.ஏ-க்கள் முதல் மினிஸ்டர் வரை கட்சி வி.ஐ.பி-களை 'ஏப்பா, வாப்பா’ என்று ஒருமையில் அழைப்பாராம்.
ராவணனின் ஆட்கள் நீக்கப்பட்ட அதிர்வலை அடங்கும் முன்பே, கோவையைக் கலக்கி எடுக்கிறது இன்னொரு தகவல். அது கோவை மாநகராட்சி துணை மேயரான சின்னதுரையிடம் கட்சித் தலைமை ராஜினாமா கடிதத்தை எழுதி வாங்கிவிட்டது என்பதுதான். இதேபோல் கிழக்கு மண்டல சேர்மனான ஜெயராமனின் தலையும் உருட்டப்படுகிறது.
துணை மேயர் சின்னதுரையிடம் கேட்டபோது, ''என்னை ஆகாத ஆளுங்க எங்க கட்சியில சில பேர் இருக்காங்க. அவங்களோட வேலைதான் இது. ஏற்கெனவே கட்சித் தலைமைக்கு, 'ராவணன் கூட இன்னமும் தொடர்பில் இருக்கிறார், அவரை அடிக்கடி சந்திக்கிறார்’ என்று என்னைப் பத்தி இல்லாததும், பொல்லாததுமாக ஃபேக்ஸ் கொடுத்தார்கள். தலைமையில இருந்து விசாரித்த போதே, என் நிலையை விளக்கிச் சொல்லி விட்டேன். கட்சியில் ராவணன் பெரிய பொறுப்பில் இருந்ததால், அவரை கட்சிக்காரர்கள் பார்க்கப் போனது யதார்த்தம்தானே? இப்போது நான் அவருடன் எந்தத் தொடர்பிலும் இல்லை. இந்தப் பதவி அம்மா போட்ட பிச்சை. இதை அவங்களே எடுத்துகிட்டாலும் தலைகுனிஞ்சு ஏத்துப்பேன். பிறக்கும்போது பதவியோடுதான் பிறந்தோமா?'' என்று புலம்பல் பதிலைச் சொல்கிறார்.
இதுவரை எப்படியோ, இனிமேலாவது ரத்தத்தின் ரத்தங்கள் நமது எம்.ஜி.ஆர். நாளிதழை ஒழுங்காகப் படிப்பார்கள்!
-  எஸ்.ஷக்தி, சி.சுரேஷ்
படங்கள்: கே.குணசீலன், தி.விஜய்
 
''நான் தவறு செய்யவில்லை''
அலறும் இளவரசியின் அண்ணன்! 
'என்னால் இயக்கத்துக்கு எந்த அவப்பெயரும் கிடையாது. எந்தத் துறை அதிகாரியிடமும் நான் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது இல்லை’ என்று கட்சிப் பொறுப்பில் இருந்து தூக்கப்பட்ட இளவரசியின் அண்ணன் அண்ணாதுரை, உருக்கமான கடிதம் ஒன்றை அ.தி.மு.க. தலைமைக்கு அனுப்பி இருக்கிறார்.
திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளராகவும், தற்போது நடந்த உள்ளாட்சி தேர்தலில் கோட்டூர் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவராகவும் தேர்ந்து எடுக்கப்பட்டவர் ஜி.கே.அண்ணாதுரை. சசிகலா குடும்பம் அதிரடியாக நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாவட்டம் தோறும் மன்னார்குடி ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்கிவருகிறார் ஜெயலலிதா. இதன் தொடர்ச்சியாகத்தான் அண்ணாதுரையிடம் இருந்த அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது.
உடனே அண்ணாதுரை தனது ஒன்றியக்குழுத் தலைவர் பதவியையும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி யையும் ராஜினாமா செய்து, விளக்கக் கடிதம் ஒன்றும் அ.தி.மு.க தலைமைக்கு அனுப்பி உள்ளார். அந்தக் கடிதத்தில், 'என்னை வாழ வைக்கும் எங்கள் குல தெய்வம் அம்மா அவர்களின் பொற்பாதம் தொட்டு எழுதும் பணிவான கடிதம். எம்.ஜி.ஆர் இயக்கத்தைத் தொடங்கிய காலம் முதல் பணியாற்றி வருகிறேன். எம்.ஜி.ஆர் மறைந்த அன்றைய தினமே தங்களது போயஸ் தோட்டத்துக்கு வந்தேன்.
இதய தெய்வம் அம்மாதான் கழகம் என்பதைத் தவிர வேறு சிந்தனை எனக்கு இல்லை. குடும்ப சூழ்நிலை காரணமாக போயஸ்கார்டனில் இருந்து 1991-ல் நான் ஊருக்கு வந்துவிட்டேன். கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக நீங்கள் அளித்த பிச்சையால், இயக்கத்தின் ஒன்றியச் செயலாளராக பணியாற்றி வந்தேன்.
தற்சமயம் ஒன்றியப் பொறுப்பில் இருந்து என்னை நீக்கி உள்ளீர்கள். சிரம் தாழ்ந்து அம்மாவின் ஆணையை ஏற்றுக்கொண்டு இயக்க பணியாற்றி வருகிறேன். தற்சமயம் கோட்டூர் ஒன்றியக்குழு பொறுப்பில் உள்ளேன். கட்சி ஆட்சி பொறுப்பில் இருந்தாலும், இல்லையென்றாலும் என்னால் இயக்கத்துக்கு எந்த அவப்பெயரும் கிடையாது. எந்தத் துறை அரசு அதிகாரியிடமும் நான் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது இல்லை.
புலானய்வுத் துறை அதிகாரிகள் மூலம் என்னைப்பற்றி விசாரணை செய்தால் உண்மை புரியும். இந்நிலையில் நான் பொறுப்பு வகிக்கும் ஒன்றியக்குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என திருவாரூர் மாவட்டச் செயலாளர் ஆர்.காமராஜ் என்னை கேட்டுக் கொண்டார். அதன்படி எனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பிக்கிறேன், அறியாமல் ஏதேனும் தவறு செய்து இருந்தால் என்னை மன்னிக்க வேண்டுகிறேன் - என்றும் உங்கள் காலடியில் உண்மைத் தொண்டன்' என்று எழுதி அண்ணாதுரை கையெழுத்து போட்டுள்ளார்.
'ஆரம்பத்தில் இருந்தே அண்ணாதுரைக்கும் திருவாரூர் மாவட்டச் செயலாளரும் உணவுத் துறை அமைச்சருமான ஆர்.காமராஜுக்கும் ஆகாது. கோட்டூர் அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் பதவிக்கு 'மன்னார்குடி’ ஆதரவோடு கடந்த ஒன்றரை வருடத்துக்கு முன் அண்ணாதுரை வந்தார். இதை ஆர்.காமராஜ் விரும்பவில்லை. இந்நிலையில் கோட்டூர் ஒன்றியத்திலும், முத்துப்பேட்டை ஒன்றியத்திலும் ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு இழுபறி வந்தது. அண்ணாதுரையை அடக்கி வைக்க நினைத்த ஆர்.காமராஜ்... கோட்டூர் கம்யூனிஸ்ட்டுக்கும், முத்துப்பேட்டை அ.தி.மு.க-வுக்கும் என்று ஒப்பந்தம் செய்து கொண்டனர். ஆனால் தன் அதிகார பலத்தோடு, தி.மு.க-வினரின் ஒத்துழைப்போடு கோட்டூர் ஒன்றியக்குழு தலைவரானார் அண்ணாதுரை. இதிலிருந்து நேரடியாக இருவரும் பகைத்துக் கொள்ள ஆரம்பித்தனர். சசிகலா குடும்பம் பற்றி ஆர்.காமராஜ் கொடுத்த புகார் அடிப்படையில்தான், திருவாரூர் முழுக்க ஜெயலலிதா நடவடிக்கை எடுத்து வருகிறார்’ என்கிறார்கள் உயர்மட்ட அ.தி.மு.க-வினர்.
திருவாரூர் முன்னாள் அ.தி.மு.க மாவட்டச் செயலாளரும், நீடாமங்கலம் அ.தி.மு.க ஒன்றியக் குழுத் தலைவருமான எஸ்.காமராஜிடமும் ராஜினாமா கடிதத்தை அ.தி.மு.க. மேலிடம் கேட்டு வாங்கியுள்ளதாக ஒரு தகவல் பரவிக் கிடக்கிறது.
- சி.சுரேஷ்

''தேம்பித் தேம்பி அழுகிறான்..''

தீராத பழவேற்காடு சோகம்
கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்போன சுந்தரபாண்டியன் குடும்பத்தைச் சேர்ந்த 22 பேர் ஒட்டுமொத்தமாகப் பலியான சம்பவத்தை 'பலிவேற்காடு’ என்ற தலைப்பில் வெளியிட்டு இருந் தோம். கரை ஒதுங்கிய பிணங்களை ஒவ்வொன்றாகப் பொறுக்கி எடுத்தபோது தோன்றிய அதிர்ச்சியும் அலறலும் இன்னும் நீங்காத நிலையில், 'இனி ஒருமுறை இதுபோன்ற தவறுகள் நிகழாமல் இருக்க என்ன பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்?’ என்ற கேள்வியோடு சிலரைச் சந்தித்தோம்.
'சென்னை சமூக சேவை’ சங்கத்தைச் சேர்ந்த கெவின் தாமஸ், ''சுற்றுலாத் துறையால் பழவேற்காடு பகுதி முறைப் படுத்தப்பட வேண்டும். கோட்டைக்குப்பம் பஞ்சாயத்தில் 'தோணிரேவு’ பகுதியில் அழகான போட் ஹவுஸ் ஏற்கெனவே இருக்கிறது. அங்கு ரெஸ்ட் ஹவுஸ், ஷாப்பிங் காம்ஃப்ளெக்ஸ், படகுத்துறை, கழிவறை என்று சகல வசதிகளும் இருக்கின்றன. ஐந்து வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட இதை ஏனோ பயன்பாட் டுக்கு கொண்டுவரவே இல்லை. இதனை தகுந்த பாதுகாப்பு ஏற்பாடு களுடன் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தால், இது பெரிய சுற்றுலா தலமாக அமையும்'' என்றார். 
அதே அமைப்பைச் சேர்ந்த ஆஜா மொய்தீன் பேசுகையில், ''சுனாமிக்குப் பிறகு அரசின் இயற்கைப் பேரிடர் மேலாண்மைத் துறையுடன் இணைந்து ஆபத்துக் காலங்களில் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்வது, பிறரைக் காப்பாற்றுவது, முதலுதவி செய்வது என்று 300 பேருக்குப் பயிற்சி தந்தோம். அதனை அடுத்து, பேரிடர் லட்சியக் குழு ஒன்றை உருவாக்கி கிராம மக்களுக்கு விழிப்புணர்வைஏற்படுத்த வேண்டும். பயிற்சி பெற்றவர்களுக்கு அடையாள அட்டை தந்து அவர்களையே பழவேற்காடு ஏரியில் படகோட்ட அனுமதிக்க வேண்டும் என்று அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தோம். அரசு நிதி ஒதுக்கினால், மேலும் நிறைய பேருக்குப் பயிற்சி அளிக்கத் தயாராக இருக்கிறோம். அரசு முழு கவனம் செலுத்தினால் மீனவர்களுக்கு மிகப்பெரிய வேலை வாய்ப்பாக இது உருவாகும்'' என்றார்உறுதியாக.
லைட் ஹவுஸ்  ஊராட்சித் தலைவர் கருணாகரன், ''அரங்கங்குப்பம், கூனங்குப்பம், வைரங்குப்பம், லைட் ஹவுஸ் என இங்குள்ள 15 மீனவ குப்பங்களில் 15 ஆயிரம் மக்கள் வாழ்கிறார்கள். கிழக்குக் கடற்கரைச் சாலை, வடக்குக் கடற்கரை சாலை என்று 15 மீனவக் குப்பங்களுக்கும் இணைப்புச் சாலைகள் அமைத்து பூங்கா, பார்க்கிங் வசதிகள் செய்யவேண்டும். மீனவர்கள் மட்டும்தான் சுற்றுலாப் பயணிகளை படகில் ஏற்றவேண்டும். அதுவும் 10 பேருக்கு மேல் கண்டிப்பாக அனுமதிக்கக்கூடாது. படகில் லைஃப் ஜாக்கெட், கயிறு உள்ளிட்ட பாதுகாப்புக் கருவிகள் இருக்க வேண்டும். முகத்துவாரம் பக்கம் போகக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கவேண்டும்.
முகத்துவாரம் அருகில் இருந்த எச்சரிக்கை போர்டு, மண் அரிப்பில் நகர்ந்து போய்விட்டது. புதிதாக ஒரு எச்சரிக்கை போர்டு வைக்க வேண்டும். அங்கு கடலோரக் காவல் படை இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், அப்படி யாரும் ரோந்து வருவதை நாங்கள் இதுவரை பார்த்தது இல்லை. படித்தவர்களாகப் பார்த்து கடலோரக் காவல் படையில் வேலை தருவதைவிட... நீச்சல் பற்றியும் கடல் பற்றியும் தெரிந்த மீனவர்களுக்கு வேலை தந்தால், ஆபத்து சமயங்களில் தைரியமாகச் செயல்படுவார்கள். இறந்து போன பிறகு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் தருவதைவிட, மீனவர்களுக்குப் போதிய வேலை வாய்ப்பை தந்தால், அநியாயமாக உயிர்கள் பலியாவதை தடுப்பார்கள்'' என்றார்.
இது ஒருபுறம் இருக்க... விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பவுல்ராஜ், ஜனோகர் சாமுவேல்,பால் தினகரன் ஆகிய மூன்று சிறுவர்களின் கதி என்ன என்பதை அறிய ஆர்.டி.ஓ. கந்தசாமியிடம் பேசினோம். ''மூவரையும், குழந்தைகள் பாதுகாப்பு சட்டப்படி அவர்களது உறவினர்கள் தத்தெடுத்துக் கொண்டார்கள். பவுல்ராஜ், அவரது அத்தை கிருஷ்ணவேணியின் பாதுகாப்பில் நெசப்பாக்கத்தில் இருக்கிறார். ஜனோகர் சாமுவேலுவும், பால் தினகரனும் அவர்களது மாமா ஞானசுந்தரம் காமராஜ் பாதுகாப்பில் திருவொற்றியூரில் இருக்கிறார்கள். குழந்தைகள் மூவரும் 'இவர்களோடு இருக்கிறோம்’ என்று சொன்ன பிறகுதான் சட்டப்படி தத்தெடுக்கும் முறைகள் மேற்கொள்ளப்பட்டது'' என்றார்.
வட்டாட்சியர் ராம பிரான், ''உறவினர்கள், போலீஸ், பொதுமக்கள் முன்னிலையில் சுந்தர பாண்டியனின் வீட்டைத் திறந்து குழந்தைகளின் சான்றிதழ்கள், ஷூ, ஆடைகள் போன்றவற்றை எடுத்தோம். நகை, பணம் என்று எதையும் எடுக்க வில்லை. உறவினர்களிடம் பேசி இதுகுறித்து முடிவெடுக்க உள்ளோம்'' என்றார்.
அத்தை வீட்டில் இருக்கும் ஏழாம் வகுப்பு படிக்கும் பவுல்ராஜிடம் பேசினோம். ''சுனாமி மாதிரி ஒரு அலை வந்ததும், படகு ஆடிச்சு. எல்லோரும் ஒரே பக்கமா போனோம். படகு சாய்ஞ்சிடுச்சி'' சொல்லி முடிக்கும்முன் கண்ணீர் வழிகிறது. பவுல்ராஜ் அத்தை கிருஷ்ணவேணி, ''சர்ச்ல பார்த்துப் பழகினவங்க யாராவது வந்தாலோ... இந்தச் சம்பவத்தைப் பத்தி பேசினாலோ அழ ஆரம்பிச்சிடுறான். ராத்திரியில், 'அம்மா... அம்மா’ன்னு தேம்பித் தேம்பி அழுகிறான். அழுது அழுது ரெண்டு நாளா சளி, இருமல்னு உடம்பு சரியில்லை. இன்னும் அந்தப் பாதிப்புல இருந்து விடுபடாததால், அவன் எதிரில் யாரையும் அழ வேண்டாம்னு சொல்லிட்டேன். ஆனா, எங்களாலேயே அழுகையை நிறுத்த முடியலை...''  என்று பெருங்குரலெடுத்து அழுகிறார்.
துடைக்க முடியாத துயரத்தைக் கண்ணீரால் தானே கழுவ முடியும்?
க.நாகப்பன்
படங்கள்: அ.ரஞ்சித்

உயிர் குடித்த புயல்!

விழுப்புரம் சோகம்
ங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி... அது புயலாக மாறி, கடந்த 30-ம் தேதி காலை புதுச்சேரிக்கும் கடலூருக்கும் இடையே கடலைக் கடந்தது. அந்த இரண்டு மாவட்டங்களிலும் பலத்த சேதங்களை ஏற்படுத்திய புயல், விழுப்புரத்தையும் விட்டு வைக்கவில்லை!
விழுப்புரம் மாவட்டத்தில் 29-ம் தேதி இரவு முதலே பலத்த மழை. அதனால் முதலில் சாலை ஓரங்களில் இருந்த மரங்கள் காற்றுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் விழுந்தன. புயலின் தாக்கத்தைத் தாங்க முடியாமல் குடிசை வீடுகளின் கூரைகள் பறந்தன. சாலை ஓரங்களிலும், ரயில் தண்ட வாளங்களிலும் மின்சார வயர்கள் அறுந்து விழ... மாவட்டம் முழுவதும் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது; ரயில்களும் ஆங் காங்கே நிறுத்தப்பட்டன. விழுப்புரத்தில் இருந்து பாண்டி செல்லும் தங்க நாற்கர சாலையும் துண்டிக்கப்பட்டதுதான் மிகப்பெரும் சோகம். பி.எஸ்.என்.எல். சேவையைத் தவிர மற்ற தனியார் தொலைபேசிகள் வேலை செய்யவே இல்லை.
மாவட்டத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டது மரக்காணம் முதல் கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள குப்பம் பகுதியை சேர்ந்தவர்கள்தான். சுமார் 135 கி.மீ. வேகத்தில் வீசிய காற்றினால் மரங்கள் வேரோடு சாய்ந்ததில், மரக்கோணத்தில் இருந்து திண்டிவனம், செஞ்சி செல்லும் சாலைகளில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்திரா நகர், காமராஜ் நகர், கோணவாயன் குப்பம் போன்ற பகுதிகளில் இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. எக்கியர் குப்பம், கைக்காணிக்குப்பம், முட்டுக்காடு குப்பம், பொதுக்குப்பம், வசவன் குப்பம், தோட்டகுப்பம், சின்ன முதலியார் சாவடி போன்ற 19 மீனவக் கிராமங்களில் கடல் நீர் புகுந்தது. உடனே இவர்கள் அனைவரும் சமுதாயக் கூடம், புயல் பாதுகாப்பு மையம் போன்ற பகுதிகளில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்ட னர். இப்பகுதிகளில் படகுகள், மீன்பிடி வலைகள் பலவற்றை புயல் அடித்துச் சென்று விட்டது.
கள்ளக்குறிச்சியிலும் பலத்த பாதிப்புதான். பைபாஸ் சாலை தொடங்கும் இடங்களில் மரங்கள் விழுந்ததால்... சேலம், சென்னை போன்ற பெரு நகரங்கள் செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டன. கள்ளக்குறிச்சி அருகே உள்ள ஆலத்தூரைச் சேர்ந்த விவசாயி குரூப் நாயுடு. இவரது வீடு அருகே உள்ள மாட்டுக் கொட்டகையில் மின்சார வயர் விழுந்து, மாடு உயிருக்காகக் கதற, உடனே பதறியடித்துச் சென்று காப்பாற்ற முயன்ற குரூப் நாயுடுவும் மின்சாரத்துக்குப் பலியானார்.
அதேபோல், கோட்டக்குப்பத்தில் சுகந்தி என்பவர் குடிசையில் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில், பக்கத்தில் இருந்த பெரிய மரம் முறிந்து விழுந்தது. தப்பிக்க வழியின்றி படுத்த இடத்திலேயே சுகந்தி பரிதாபமாக இறந்தார். இதேபோல ஆடு, மாடுகளும் கோழிகளும் ஏகத்துக்கும் உயிர் இழந்து போயின. 
உடனடியாகக் களம் இறங்கிய மாவட்ட ஆட்சியர் மணிமேகலை, சின்னமலை சாவடி உள்ளிட்ட கடற்கரைக் கிராமங்களுக்குச் சென்று பார்வையிட்டு, அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யச் சொல்லி அதிகாரிகளை முடுக்கி விட்டார். புயலின்போது தங்கள் கட்சியின் செயற்குழுவில் பங்கேற்க சென்னை சென்றிருந்த அமைச்சர் சி.வி.சண்முகம், மறுநாள் விழுப்புரம் வந்து ஆட்சியர் மணிமேகலையிடம் புயலின் சேதங்கள் குறித்தும் பாதுகாப்பு பணிகள் குறித்தும் தீவிர ஆலோசனை நடத்தினார்.
கோர தாண்டவம் ஆடிய 'தானே’ புயலால் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள இழப்புகள் எவ்வளவு என்று இதுவரை முழுமையாக கணக்கிட முடியாமல், அரசு அதிகாரிகள் கணக்கு எடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. வீடுகள், உடமைகள் இழந்து பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, உடனடித் தேவை ஆறுதல் அல்ல, முழுமையான நிவாரணம்.
அற்புதராஜ், படங்கள்: ஜெ.முருகன்
 கண்ணீரில் விவசாயிகள்...
கடற்கரை மாவட்டங்களை மட்டுமே சின்னா பின்னமாக்கும் புயல், இந்த முறை திருவண்ணா மலையையும் ஒரு வழி செய்து விட்டது. இங்கு அதிகம் பாதிக்கப்பட்டது விவசாயிகள்தான்!
''அறுவடைக்குத் தயாராக இருந்த நெல், கரும்பு, வாழை என்று அத்தனை பயிர்களும் கீழே சாய்ந்து விட்டன. ஆரணி அடுத்த கண்ணமங்கலம் பகுதியில் அதிகளவில் வாழை பயிரிடப்படுவது வழக்கம். இன்னும் சில தினங்களில் வாழைத் தார்கள் வெட்டப்பட இருந்த நேரத்தில், புயலால் அவை சாய்ந்துவிட்டன. அதேபோல் படவேடு பகுதியில் கரும்புகள் முறிந்து விழுந்துள்ளன. இனாம்காரியேந்தல் பகுதியில் சில விவசாய நிலங்களில் நீர் தேங்கி நின்றதால், வாழை பாதிக்கப் பட்டுள்ளது. மேல்செங்கம், கலசப்பாக்கம்  பகுதிகளில் சம்பங்கிப் பூக்கள் பயிரிடப் பட்டு இருந்தன. அவை அனைத்தும் ஒன்றுமில்லாமல் போய்விட்டன. இதையெல் லாம் அரசு அதிகாரிகள் உடனே வந்து பார்வை யிட்டு, எங்களுக்கு உரிய இழப்பீட்டை பெற்றுத்தர வேண்டும்'' என்றார், திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் பலராமன் கவலையோடு.
மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ராவிடம் பேசியபோது, ''அதிகாரிகள் பாதிப்பைக் கணக் கிட்டு வருகிறார்கள். அதை அரசுக்கு அனுப்பி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு பெற்று தருவோம்'' என்றார்.
கோ.செந்தில்குமார்
படங்கள்: பா.கந்தகுமார்

ரோட்டுக்கு வந்த கடல்!

சென்னை 'தானே' தாண்டவம்
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில், கடந்த 29-ம் தேதி இரவு முதலே 'தானே’ புயல் காரணமாக கடுமையான காற்று டன், தொடர் மழை கொட்டத் தொடங்கியது.  இரவு முழுவதும் நீடித்த பெருங்காற்று மற்றும் மழையின் வலுவைத் தெரிந்து கொண்ட சென்னை மக்கள், 'புயல் கரையைக் கடக்கட்டும்...’ என்று வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தார்கள். ஒரு சில சின்சியர் சிகாமணிகளைத் தவிர, சாலைகளில் யாருமே கிடையாது. வேறு வழியின்றி குடும்பம் குட்டியாக தவிர்க்க முடியாத பணிகளுக்காகக் கிளம்பியவர்கள்தான் ஏக அவஸ்தையை அனுபவித் தார்கள்.
எப்போதும் பரபரப்பாக இருக்கும் பீச் ரோடு, 30-ம் தேதி காலையில் இருந்தே  வெறிச்சோடிக் கிடந்தது. ராயபுரம், காசிமேடு, பட்டினப்பாக்கம் போன்ற கடற்கரையோர மீனவக் குடும்பங்கள் ஏற்கெனவே உஷார் படுத்தப்பட்டு இருந்தனர். துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 20-க்கும் மேற்பட்ட கப்பல்கள் கடலுக்குள் கொண்டு செல்லப்பட்டன. பல இடங்களில் முன்கூட்டியே மின்சாரம் நிறுத்தப்பட்டு இருந்தது. இப்படி பல்வேறு முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதும், புயல் அதன் வீரியத்தைக் காட்டி, வேதனைபட வைத்துவிட்டுத்தான் போனது.
சென்னையில் ஏற்பட்ட பாதிப்பு மட்டும் 200 கோடி ரூபாயைத் தாண்டும் என்கிறார்கள். புயல் அடித்து ஓய்ந்த பின்னர், சென்னை முழுவதும் வெள்ளக்காடாகத்தான் தெரிந்தது. நகரின் பல்வேறு பகுதிகளிலும் மரங்கள் முறிந்து விழுந்ததால், போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. மின்சார வயர்கள், டெலிபோன் கேபிள்கள் ஆங்காங்கே அறுந்து விழுந்தன. கடலோரப் பகுதிகளில் உள்ள பல வீடுகளுக்குள் நீர் புகுந்தது. பல மீனவர்கள் வீடுகளையும், வலைகளையும் இழந்து நிராதரவாக நிற்கின்றனர். கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல படகுகள், சாலைக்குத் தூக்கி வீசப்பட்டன. ஏற்கெனவே குண்டும் குழியுமாக காட்சி அளித்த சென்னை சாலைகளின் நிலை... இன்னும் மோசமாகிப் போனது. மெரீனா கடல் நீர், மெயின் ரோட்டைத் தாண்டியும் சீறி வந்ததைப் பார்த்த போது, 'இன்னொரு சுனாமியோ?’ என்று நெஞ்சில் பதைபதைப்பு ஏற்படாமல் இல்லை. 'இறுதி நேரத்தில் 'தானே’ புயல் திசை மாறியதால் தப்பித்தோம். இல்லையெனில் சென்னை நகரமே துவம்சம் ஆகி இருக்கும்’ என்று மக்கள் தங்களுக்குள் திகிலுடன் பேசிக்கொண்டனர். 
முதல்வர் ஜெயலலிதா மாநிலம் முழுவதற் கும் சேர்த்து உடனடி நிவாரணமாக 150 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார். 'இந்த நிவாரணத் தொகை நிச்சயம் போதாது’ என்று குரல் கொடுக்கும் தன்னார்வ அமைப் புகள், புயலின்போது கையாளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்த வேண்டும் என்றும் சீறுகின்றன.
புயல்களைச் சமாளிக்கும் அளவுக்கு எப்போது மாறப்போகிறதோ, சென்னை?
- தி.கோபிவிஜய்
படங்கள்: என்.விவேக்,
சொ.பாலசுப்ரமணியன்

எங்கே பணியாளர்கள்?

ஏக்கத்தில் வேலூர்
கராட்சியாக இருந்த வேலூரை மாநகராட்சியாக மாற்றியது முதல், குடிநீரில் ஆரம்பித்து பாதாள சாக்கடை வரையில் அடுக்கடுக்காகப் பிரச்னைகள். இவை எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிட்டுவிட்டது, மாநகராட்சியில் ஊழியர்கள் பற்றாக்குறை புகார்!
வேலூர் மாநகராட்சியின் காங்கிரஸ் கவுன்சிலரான சீனிவாசகாந்தி, ''ஒரு நல்ல நிர்வாகத்துக்கு அழகு, அது மக்களிடம் போதுமான வரவேற்பைப் பெற்று இருப்பதுதான். புகார் கூற வருபவர்களின் எண்ணிக்கை குறைந்தால்தான், நிர்வாகத்தின் செயல்திறன் நன்றாக இருப்பதாக அர்த்தம். ஆனால், தமிழகத்தில் உள்ள 10 மாநகராட்சிகளில், வேலூர் மாநகராட்சியில் மட்டும் ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பது வெட்கக்கேடானது. ஏற்கெனவே மாநகராட்சியில் குடிநீர், சாலை, மின்சாரம் ஆகியவற்றில் வசதி குறைபாடுகள் தொடர்பான புகார்கள் மக்களிடம் இருந்து குவிகிறது. இந்நிலையில் 48 வார்டுகளாக இருந்த மாநகராட்சியை விரிவாக்கம் செய்து, 60 வார்டுகளாக மாற்றி இருக்கிறார்கள். அது நல்ல விஷயம்தான். நகராட்சியாக வேலூர் இருந்தபோதே, துப்புரவுப் பணியாளர்கள் உட்பட இன்னபிற பணியாளர்களும் பற்றாக்குறையாகவே இருந்தார்கள். மாநகராட்சியாக மாற்றி மூன்று வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், பணியாளர்​களின் தேவையும் அதிகரித்தது. ஆனால், பணியிடங்கள் இன்றுவரை நிரப்பப்​படவில்லை.
இப்போதைய நிலையில் நான்கு மண்டலங்களுக்கு தலா ஒரு நிர்வாக அதிகாரி, தலா மூன்று ஜூனியர் இன்ஜினீயர்கள். தலா மூன்று வருவாய் அலுவலர்கள், தலா 10 பில் கலெக்டர்கள், தலா 10 துப்புரவுத் தொழிலாளர்கள், தலா 10 வொர்க் இன்ஜினியர்கள் என 60-க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் தேவை. ஆனால் இப்போது ஒவ்வொரு மண்டலத்திலும் 15 பேர் மட்டுமே இருக்கி றார்கள்.
விற்பனை வரி, குடிநீர் வரி போன்றவற்றை வசூல் செய்யக்கூட போதிய ஆட்கள் இல்லை. இன்னும் சொல்லப்போனால், கொசு மருந்து அடிப்பவர்களின் எண்ணிக்கைகூட, மாநகராட்சியில் குறைவுதான். மாநகராட்சி அலுவலகத்தில் 75 சதவிகித இருக்கைகள் காலியாகத்தான் இருக்கிறது. இந்த நிலைபற்றி ஒவ்வொரு மாமன்ற கூட்டத்திலும் புகார் கூறவே செய்கிறோம். ஆனால், நடவடிக்கைதான் எடுத்தபாடில்லை.'' என்று ஏகத்துக்கும் வருத்தப்​பட்டார்.
வேலூர் மாநகராட்சி மேயர் கார்த்தியாயினியிடம் புகார்கள் குறித்துக் கேட்டோம். ''பணியாளர்கள் பற்றாக்குறை குறித்து விரிவான அறிக்கையை அரசுக்கு அனுப்பி இருக்கிறோம்.  புத்தாண்டு முதல் அனைத்து பணி இடங்களும் கண்டிப்பாக நிரப்பப்படும்'' என்று நம்பிக்கை தெரிவித்தார்.
ஆங்கிலப் புத்தாண்டுதானே, மேடம்?
கே.ஏ.சசிகுமார், படங்கள்: ச.வெங்கடேசன்

''தலைமுறைக்கு இந்தப் புயல் போதும் சாமி..''

வேதனையில் நாகை விவசாயிகள்
ன்னதான் சாபமோ... நாகை மாவட்ட விவசாயிகள் தங்கள் விளைச்சலை ஒரு தடவை கூட முழுமையாக அறுவடை செய்ய முடிவதில்லை. 'தானே’ புயல் கடலூருக்கும் புதுச்சேரிக்கும் இடையே கரையேறினாலும், நாகை மாவட்டத்தையும் சிதைத்து விட்டுத்தான் போயிருக்கிறது. நாகை துறைமுகத்தில், 8-ம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டதில் இருந்தே பாதிப்பை உணரமுடியும்.
 நாகை மாவட்டம் முழுவதும் உஷார் படுத்தப்பட்டு இருந்தாலும் நல்லவேளையாக சீர்காழி தாலுக்கா தவிர மற்ற இடங்களில் பெரிய பாதிப்புக்கள் இல்லை. சீர்காழி ஒன்றியம், கொள்ளிடம் ஒன்றியம் ஆகிய இரண்டும்தான் புயலால் மிகக் கடுமையாக நிலைகுலைந்தன.
''இதுவரைக்கும் எத்தனையோ புயல் அடிச் சிருக்கு, சில புயல்கள் இந்த மாவட்டத்திலேயே கூட கரையேறி இருக்கு. அப்பல்லாம் கூட  இப்படி ஒரு வேகத்தைப் பார்த்ததில்லை. ஓடுபறக்குது, ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் பறக்குது, கீத்துக் கூரையெல்லாம் எங்கேயோ போய்க் கிடக்குது. உயரமான மரம் எல்லாம் பேயாட் டம் போட்டது. வலிமையான தேக்கு மரம்கூட, படார் படாருன்னு முறிச்சுக்கிட்டு விழுது. தென்னை மரங்கள் வீட்டு மேலயும், வீதியி லேயும் சிதறிக் கிடக்குது. வாகனங்கள் தலை குப்புறக் கிடக்குது, பண்டம் பாத்திர மெல்லாம் பறந்துபோய் விழுது. இப்படி ஒரு  கோரத்தாண்டவத்தை வார்த்தையால சொல்லவே முடியாது. இந்தத் தலைமுறைக்கு இந்தப் புயல் ஒண்ணு போதும் சாமி...'' என்று பெருமூச்சு விடுகிறார் ஆச்சாள்புரத்தைச் சேர்ந்த மோகன்.
தெருவெங்கும் மரங்கள், வீதியெங்கும் மின்கம்பங்கள் விழுந்து கிடக்க... மின்சாரம் முறையாகக் கிடைக்க பலநாட்கள் ஆகுமாம். குடிசை இழந்த சுமார் 1700 பேர், அரசின் நிவாரண முகாம்களில் தங்கி இருக்கிறார்கள். பொதுவான பாதிப்பு இப்படி இருக்க, விவசாயிகளின் நிலைமையோ பெரும் துயரத்தில் மூழ்கிக் கிடக்கிறது.
''இந்த வருஷம் தண்ணீர் முன்னாடியே வந்துட்டதால, ஆடியில சரியான பட்டத்துக்கு விதைபோட்டோம். அது வளரும்போது பருவ மழை பெய்ய ஆரம்பிச்சது. அது பயிருக்கு டானிக் மாதிரி உதவியா இருந்துச்சு. அதனால எந்த வருஷமும் இல்லாம இந்த வருஷம் பயிரெல்லாம் நல்லா விளைஞ்சு கதிர் நல்லா பால் பிடிச்சிருந்தது. இன்னும் ஒரு வாரத்தில் அறுத்துடலாம்னு ஆளெல்லாம் சொல்லி வச்சிருந்தேன். ஆனா பாழாப்போன புயல், 'இந்த வருஷம் மட்டும் உனக்கு என்னடா விளைச்சல்?’னு எல்லாத்தையும் புடுங்கிட்டுப் போயிடுச்சு'' என்று புலம்புகிறார் நல்லூர் விவசாயி வீரமணி.
மேட்டூர் அணை தாமதமாக திறந்தால் தை மாதம் மத்தியில்தான் நெல் அறுவடைக்கு வரும். ஐப்பசி, கார்த்திகை மாதத்துக்குள் மழையோ புயலோ வந்து பயிரை அழிக்கும். ஆனாலும் மிச்சம் இருக்கும் பயிருக்கு உரம் போட்டு வளர்த்து, ஒன்றுக்குப் பாதியாக நெல் அறுப்பார்கள் விவசாயிகள். ஆனால் இந்த ஆண்டு மார்கழியில் வந்த புயல் விளைந்து நின்ற வெள்ளாமையை வீணாக்கிவிட்டது. முற்றிய நெல்மணி களோடு பயிர் அப்படியே வயலுக்குள் விழுந்து தண்ணீருக்குள் முழ்கிக் கிடக்கிறது.
''இப்படி நன்கு முற்றிய கதிர் வயலுக்குள் பாய் விரித்தது போல் மடிந்து கிடப்பதைப் பார்க்க இதயமே வெடித்துவிடும் போலிருக்கிறது. ஒருவார காலத்துக்குள் அறுத்தால் ஒரு முப்பது சதவிகிதமாவது கைக்கு வருமென்றாலும் கூட அதை காலத்தில் அறுப்பதற்கு ஆட்கள் கிடைக்க மாட்டார்கள். அதனால் அதையும் கை சேர்க்க முடியாது. மொத்தத்தில் கைக்கு எட்டியதை வாய்க்கு எட்டாமல் செய்துவிட்டது இந்தப் புயல்'' என்று தன் வயலில் சரிந்து கிடந்த பயிரை கையில் அள்ளி எடுத்து கன்ணீர் சிந்துகிறார், ராமன்.
அடித்த காற்றின் வேகத்தில் பாதிக்கும் மேல் நெல்மணிகள் பிய்த்துக் கொண்டு போய்விட்டன. மீத முள்ளவைதான் வயலுக்குள் மூழ்கிக் கிடக்கின்றன. அதனால் ஏக்கர் ஒன்றுக்கு 15,000 ரூபாய் அளவுக்கு விவசாயிகளுக்கு நஷ்டம். கடந்த ஆண்டு பயிர் இன்சூரன்ஸ் செய்திருந்த இந்தப் பகுதி விவசாயிகள், அதில் இருந்து இழப்பீடு கிடைக்கவில்லை என்றதும் ஏமாந்து  போனார்கள். அதனால், இந்த ஆண்டு பிரிமியம் கட்டவில்லை. பயிரும் நன்றாக இருந்ததால் இன்சூரன்ஸ் தேவையை நினைத்தும் பார்க்கவில்லை. ஆனால் இப்போது மொத்தமாகப் போனதும், இன்சூரன்ஸ் செய்திருக்கலாமே என்று புலம்புகிறார்கள்.
''ஏக்கருக்கு 15,000 ரூபாய் இழப்பீடும், பயிர் இன்சூரன்ஸ் தேதியை இன்னும் பதினைந்து நாட்களுக்கு அதிகரிப்பதும் மட்டுமே இந்த நிலையில் அரசாங்கம் எங்களுக்குச் செய்ய வேண்டிய உதவி'' என்று வேதனையான மனநிலையில் சொல்கிறார்கள் விவசாயிகள்.
விவசாயிகளின் இந்த சோகம் குறித்தும் அவர்களின் வேண்டுகோள் குறித்தும் நாகை மாவட்ட ஆட்சியர் முனுசாமியிடம் பேசினோம். ''பாதிப்பின் முழு அளவையும் இன்னும் சரியாக மதிப்பிடவில்லை. உடனடியாக கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்பட்டு, அந்த வேலைகள் நடந்து வருகிறது. மாண்புமிகு மீன்வளத்துறை அமைச்சர், மயிலாடுதுறை எம்.பி-யான ஓ.எஸ்.மணியன் ஆகியோர் சேதப்பகுதிகளை பார்த்திருக்கிறார்கள். அதனால் பாதிப்புக்களின் முழு விவரங்களையும் அரசின் கவனத்துக்கு கொண்டுசென்று அரசின் வழிகாட்டல்படி நடப்போம். பயிர் இன்சூரன்ஸ் தேதி நீட்டிப்பு குறித்தும் அரசு மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
இயற்கை அழித்து விட்டது, அரசாவது கருணை காட்டட்டும்!
கரு.முத்து  

''பகவானைப் பட்டினி போடுகிறார்கள்..!''

சர்ச்சையில் ஸ்ரீரங்கம் கோயில்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் இணை ஆணையர் ஆகம விதி களுக்கு எதிராக செயல்படுவதாக சமீப காலமாக அடுக்கடுக்காக புகார்கள். கடந்த 19-ம் தேதி அன்று சசி குரூப்புக்கு கல்தா கொடுக்கப்பட்ட நிலையில், 21-ம் தேதி சனிப் பெயர்ச்சி அன்று மகாதேவன் தலைமையில் கோயிலின் வேணுகோபால் சன்னதியில் யாகம் நடந்ததாகவும், அதற்கு கோயிலின் இணை ஆணையர் ஜெயராமன் அனுமதி அளித்ததோடு, யாகத்திலும் பங்கு பெற்றார் என்பது முதல் பரபரப்பு. அடுத்து, கடந்த 29-ம் தேதி அன்று இரவோடு இரவாக பாரம்பரியம் மிக்க தன்வந்திரி சன்னதியில் உள்ள மண்டபம் இடிக்கப்படவே, இணை ஆணையருக்கு எதிரான குரல்கள் வலுத்து ஒலிக்கின்றன.
அகில பாரத இந்து மகா சபாவின் மண்ட லத் தலைவர் ராஜசேகர், 'பெருமை வாய்ந்த ஸ்ரீரங்கம் கோயிலுக்கு ஒரு நாத்திகரை இணை ஆணையராக நியமித்து, அதன் பொலிவையே கெடுத்துவிட்டது அறநிலையத் துறை. நிர்வாகத்தை மட்டும் கவனிக்க வேண்டிய இணை ஆணையர் ஆகம விதிகளையும் பாரம்பரிய விதிகளையும் மாற்றியதோடு, சமீப காலங்களில் பழமையான சன்னதிகளையும் இடிக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.
ராமானுஜர் காலத்துக்கு முந்தையதான தன்வந்திரி சன்னதி, முற்காலத்தில் பக்தர்களுக்கானமருத்துவமனையாக செயல் பட்டது. அதன் தனித்தன்மையே அதன் உயரம்தான். பேரிடர் காலங்களில் நோயாளிகளை மழை, வெள்ளம் பாதிக்காத வகையில் உயரமாக கட்டி இருந்தார்கள், நம் மன்னர்கள். இணை ஆணையரால் அந்த சின்னமே அழிக்கப்பட்டுவிட்டது. கேட்டால்... அந்த முன்புறம் செங்கல்லால் கட்டப்பட்டது என்கிறார். இதை இவர் எந்த ஆய்வாளர்களை வைத்து ஆராய்ந்தார்? 'காவல்துறை ஆணைப்படி இடிக்கிறேன்’ என்கிறார். கோயிலுக்கும் காவல் துறைக்கும் என்ன சம்பந்தம்? ஆகம விதிகளின்படி பெருமாள் கோயில்களில் யாகங்களே நடத்தக்கூடாது. ஆனால் இவரோ பணம் வாங்கிக்கொண்டு தனி நபர் யாகங்கள் மட்டுமல்ல... திதி கொடுக்கக்கூட அனுமதி வழங்குகிறார். கேட்டால், 'யாகங்கள் நடத்தப்படும் சன்னதிகள் தனி நபர்களுக்குச் சொந்தமானது. அறநிலையத் துறைக்கு சொந்தமானது அல்ல’ என்கிறார். அறநிலையத்துறைக்கு சொந்தமான ஒரு கோயிலின் உள்ளே அமைந்துள்ள சன்னதிகள் மட்டும் எப்படி தனி நபர்களுக்குச் சொந்தமாகும்? அது மட்டுமல்ல... நிர்வாகத்திலும் எக்கச்சக்க ஊழல்களும் முறைகேடுகளும்நடைபெற்று வருகின்றன. நாங்களும் எவ்வளவோ மனு போட்டுப் பார்த்துவிட்டோம். ஆனால் இன்னமும் விடிவு இல்லை. முறைகேடுகளுக்குக் காரணமான இணை ஆணையர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். முறைகேடுகளை விசாரிக்க ஒரு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்'' என்று ஆதங்கப்பட்டார்.
கோயில் ஆராய்ச்சியாளரும் மூத்த பக்தருமான கிருஷ்ண மாச்சாரி, 'இடிக்கப்பட்ட தன்வந்திரி சன்னதிக்கு கோபுரமே கிடையாது. நோயாளிகளின் சத்தத்தை கோபுர தேவதைகள் சகித்துக்கொள்ள மாட்டார்கள் என்பதால்தான், கோபுரமே இல்லாமல் கட்டப்பட்ட சன்னதி அது. அதனை இடித்து கோயிலின் பெருமையை பாழ்படுத்தி விட்டனர். நவக்கிரக பெயர்ச்சிகளுக்கும் பெருமாள் கோயில்களுக்கும் சம்பந்தம் கிடையாது. ஆனால் வசூல் நோக்கத்தில் நவக்கிரக யாகங்கள் நடத்தப்படுகின்றன. இவ்வாறு யாகங்கள் நடத்தும்போது, அந்த புகை படிந்து பாரம்பரியம் மிக்க 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வண்ண ஓவியங்கள் அழிந்துவிடும். 1991-ம் ஆண்டு தொல்லியல் துறை சட்டப்படி பழைமை வாய்ந்த கட்டடங்களை இடிக்கக்கூடாது. ஆனால் இவர் பொறுப்பேற்றது முதலே சக்கரத்தாழ்வார் சன்னதி, வெள்ளைக்கோபுர ராமர் சன்னதி, தொண்டரடிப்பொடி ஆழ்வார் சன்னதி, தற்போது தன்வந்திரி சன்னதி என வரிசையாக இடித்துக்கொண்டே வருகிறார். இது சட்டத்துக்கே புறம்பானது. வேளை தப்பிய வேளையில் பெருமாளுக்கு நைவேத்தியம் நடக்கிறது. இன்னும் கொடுமையாக புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு காலை 5 மணிக்கு நைவேத்தியம் செய்து விட்டு, பகல் முழுவதும் பகவானை பட்டினி போடுகிறார்கள். பக்தர்கள் கூட்டத்துக்காக விதிகளை மாற்றலாமா? பாரம்பரிய முறையான பஞ்சாங்கம் படிப்பதிலும் தலையிடுகிறார். புறப்பாட்டு நேரங்களை சரிவரக் கடைப்பிடிப்பது இல்லை. தகவல் உரிமை சட்டப்படி கேட்டால் ஆவணங்கள் இல்லை என்ற பதில்தான் வருகிறது. இவ்வாறு ஆகம விதிகள் மாற்றுவது மக்களுக்கு மட்டுமல்ல... ஆட்சியில் இருப்பவர்களுக்கே ஆபத்தாக முடியும்'' என்று எச்சரித்தார்.
இணை ஆணையர் ஜெயராமனிடம் புகார்கள் குறித்து கேட்டபோது, 'தன்வந்திரி சன்னதி இடிக்கப்பட்டதாக சொல்வது தவறு. அங்கு இருந்த செங்கல் தடுப்பைத்தான் எடுத்து இருக்கிறோம். வேணுகோபால் சன்னதியில் 21-ம் தேதி யாகம் நடந்தது, பத்திரிகைகள் மூலம்தான் எனக்கே தெரியும். பெருமாள் கோவில்களில் யாகம் செய்யக்கூடாது என்று எந்த ஆகம விதியிலும் இல்லை. இந்த கோவில் 21 ஏக்கர் பரப்பில் 54 உப சன்னதிகளுடன் அமைந்துள்ளது. என்னால் எல்லா இடத்துக்கும், எல்லா சன்னதிக்கும் சென்று கண்காணிப்பது இயலாத காரியம். ஆனால் தீங்கு செய்வதற்கோ, ஒருவரை அழிப்பதற்கோ இது போன்ற புனிதமான பெருமாள் கோயில்களைத் தேடி வர வேண்டிய அவசியமில்லை. அப்படி செய்தால், அவர்கள்தான் அழிந்துபோவார்கள்''  என்று விளக்கம் தந்தார்.
தனது சொந்த தொகுதியின் பெருமையான ஸ்ரீரங்கநாதர் கோயில் விவகாரங்களைத் தீர்த்துவைக்க முன்வருவாரா ஜெயலலிதா?
அ.சாதிக்பாட்சா, க.ராஜூவ்காந்தி
படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக், என்.ஜி.மணிகண்டன்

எம்.ஜி.ஆருக்கு திண்டுக்கல்... வைகோவுக்கு சங்கரன்கோவில்!

தொடங்கியது இடைத்தேர்தல் போர்!
டைத் தேர்தல் என்னும் அரசியல் யானை வருவதற்கு முன்பே மணியோசை கேட்கத் தொடங்கி இருக்கிறது, சங்கரன்கோவில் தொகுதியில். ம.தி.மு.க-வினர் இப்போதே பிரசாரக் களம் அமைத்து பம்பரமாக சுழன்று வரத் தொடங்கி விட்டார்கள்.
அமைச்சர் கருப்பசாமி மறைவை அடுத்து இடைத் தேர்தலை எதிர்பார்த்து காத்திருக் கும் சங்கரன்கோவில் தொகுதியில் ஒரு மாதத்துக்கு முன்பே ம.தி.மு.க சார்பில் பிரசார வேலைகள் துவங்கி விட்டன. 'குருவிகுளம், மேலநீலித நல்லூர் ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் வைகோ தலைமையில் மாநாடு போல நடத்தப்பட்டது. அப்போதே இடைத்தேர்தல் பணிகளை நாங்கள் தொடங்கி விட்டோம். இந்த தேர்தல் யுத்தத்தில் வெற்றி எங்களுக்குத்தான்’ என்று உறுதியான குரலில் பேசுகிறார்கள், ம.தி.மு.க-வினர்.
இவர்களின் துள்ளலைக் கண்டோ என்னவோ, ஆளுங்கட்சியான அ.தி.மு.க-வும் களத்தில் இறங்கி விட்டது. சங்கரன்கோவில் நகரில் நடந்த அக்கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். அத்துடன், கூட்டத்தில் பேசிய பலரும் ம.தி.மு.க-வை குறி வைத்து தாக்கினார்கள். இந்தத் தொகுதியின் பிரசார வேலைகளைக் கவனிக்கும் பொறுப்பு, அமைச்சரும் நெல்லை புறநகர் மாவட்ட அ.தி.மு.க செயலாளருமான செந்தூர் பாண்டியன் வசம் கொடுக்கப்பட்டுள்ளது.
இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாக சங்கரன்கோவில் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து மக்களுக்கும் அரசின் நலத் திட்டங்களை முழுமையாகக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதில் அ.தி.மு.க-வினர் தீவிரம் காட்டி வருகிறார்கள். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துக்கு மேலிடத்தில் இருந்து தொடர்ந்து பிரஷர் கொடுக்கப்படுவதாகவும் பேசப்படுகிறது. இதனால் சமூகநலத் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் இந்தத் தொகுதியின் அனைத்து கிராமங்களுக்கும் சென்று திருமண உதவித் தொகை, முதியோர் உதவித் தொகை, இலவச ஆடு, மாடு வழங்குவது, இலவச மிக்ஸி, ஃபேன் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கான பயனாளிகளைத் தேர்வு செய்து வருகின்றனர். இந்தப் பட்டியல் கிடைத்ததும் உடனே இலவசங்களைக் கொடுக்க இருக்கிறார்களாம்.
இதைச் சமாளிப்பதற்காக ம.தி.மு.க-வின் பிரசார பீரங்கியான நாஞ்சில் சம்பத் இந்தத் தொகுதிக்குள் தொடர்ந்து வலம் வரும் வகையில், சில தின இடைவெளிகளில் எட்டு பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடாகி இருக்கிறது. சங்கரன்கோவில் நகரத்தில் அவர் பங்கேற்ற முதல் கூட்டத்தில்,  ''ம.தி.மு.க-வைப் பொறுத்தவரை இது ஒரு அலட்சியப்படுத்த முடியாத அரண். தாண்ட முடியாத அகழி. அணைக்க முடியாத நெருப்பு. இந்த இடைத்தேர்தல் மூலம் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரிடம் இருந்து தமிழகத்தை விடுவிக்கும் வாய்ப்பு வாக்காளர்களாகிய உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. அதனைச் சரியாக நிறைவேற்றினால் வருங்காலத் தமிழகம் உங்களுக்கு நன்றி சொல்லும்.
ஜெயலலிதாவும் சரி, அ.தி.மு.க-வும் சரி வெல் லவே முடியாத சக்திகள் கிடையாது. நாங்கள் களத்தில் இருப்பதால் இந்தத் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் எந்த அளவுக்கு திண்டாடப் போகிறார், திணறப் போகிறார் என்பதை பார்க் கத்தானே போகிறீர்கள். அதனால் இளைஞர்கள் தன்னம்பிக்
கையோடு தேர்தல் வேலைகளைச் செய்ய வேண்டும். எம்.ஜி.ஆருக்குத் திண்டுக்கல் போல வைகோவுக்குச் சங்கரன்கோவில் என்பதை வரலாற்றில் பதிவு செய்யுங்கள். 18 வருடங்களாக தமிழனின் உரிமைக் காக தடையில்லாமல் போராடி வரும் ம.தி.மு.க-வின் அங்கீ காரம் வைகோவின் சொந்த தொகுதியான சங்கரன்கோவிலில் இருந்து தொடங்கட்டும்'' என ஆவேசப்பட்டவர், தொடர்ந்து பேசுகையில், 
''கருணாநிதி ஆட்சியில், அறிவிக்கப்பட்ட மின் வெட்டாக இருந்தது இப்போது அறிவிக்கப்படாத மின்வெட்டாக மாறி இருப்பதைத் தவிர எந்த முன்னேற்றமும் இல்லை. ஆறாவது வரை மட்டுமே படித்த காமராஜர் எட்டு அமைச்சர்களை வைத்துக் கொண்டு 6,000 பள்ளிகளையும் 56 கல்லூரிகளையும் திறந்தார். பல்வேறு அணைகளைக் கட்டினார். ஆனால் இப்போது 34 அமைச்சர்களை வைத்திருந்தும் அ.தி.மு.க அரசு திணறுகிறதே..'' என்றபோது கூட்டத் தில் பலத்த ஆரவாரம்.
பிற கட்சிகள் பரபரப்பாக செயல்படத் தொடங்கி விட்டதால் தி.மு.க சார்பிலும் செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. உள்ளூர் நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில், 'இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியை கைப்பற்றுவோம்’ என தீர்மானம் நிறைவேற்றியதைத் தவிர எந்த வேலையும் இதுவரை தொடங்கப்படவில்லை. டாக்டர் கிருஷ்ண சாமியின் புதிய தமிழகம் கட்சியினரும் இந்தத் தேர்தலில் தங்கள் பலத்தைக் காட்ட ஆயத்தமாகி வருகின்றனர். அதே சமயம், ஜான் பாண்டியனுக்கு பல்வேறு கிராமங்களில் ஆதரவாளர்கள் இருப்பதால் அவரது தலைமையிலான தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் வேட்பாளரை களம் இறக்குவது குறித்தும் ஆலோசனை நடக்கிறது. தி.மு.க-வை போலவே தே.மு.தி.க-வும் இதுவரை ஒதுங்கித்தான் இருக்கிறது.
மின்வெட்டு, விலைவாசி உயர்வு என்று ஆயிரம் பிரச்னைகள் இருந்தாலும் சங்கரன்கோவில் தொகுதி மக்களிடம் இப்போதே தேர்தல் ஜுரம் பற்றிக் கொண்டு இருப்பது என்னவோ நிஜம்.
ஆண்டனிராஜ்
படங்கள்: எல்.ராஜேந்திரன்

'கொடியும் வேண்டாம்.. பேனரும் வேண்டாம்'

திருப்பூரில் நல்லதொரு ஆரம்பம்
மிழருவி மணியனின் காந்திய மக்கள் இயக்கம், தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுத முன்வந்துள்ளது. முக்கியக் கட்சி​களான அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் காங்கிரஸ் அல்லாத கட்சிகளை ஓரணியில் கொண்டு வந்து நிறுத்துவதோடு, முதல்வர் வேட்பாளராக வைகோவை முன்னிறுத்தவும் திட்டமிட்டு இருக்கிறார்கள். ஜனவரி 7-ம் தேதி திருப்பூரில் நடைபெற இருக்கும் கூட்டத்தில், இதனை வெளிப்படையாக அறிவிக்க இருப்பதால் ம.தி.மு.க-வினர் உற்சாகத்தின் உச்சியில் இருக்கிறார்கள்.
திருப்பூர் நகர ம.தி.மு.க-வினர்ஊரைக் கலக்கும் வகையில் வைகோவை வாழ்த்​தியும், வரவேற்றும் நூற்றுக்கணக்கான பேனர்களையும், கொடிகளையும் தயார் செய்த நேரத்தில்தான், முக்கிய நிர்வாகிகளுக்கு வைகோவிடமிருந்து போன். உற்சாகமாக செய்துவந்த ஆயத்த வேலைகளை எல்லாம் அப்படியே சுருட்டி வைத்துவிட்டு, எல்லோரும் அமைதியாகி விட்டார்கள்.
''ஏன் அமைதியாகி விட்டீர்கள்? வைகோ என்னதான் சொன்னார்?'' என்று திருப்பூர் நகர ம.தி.மு.க. பொருளாளரான 'புலி’ மணியிடம் கேட்டோம். ''நல்ல மனப்பான்மையோடு தமிழகத்தின் முக்கியக் கட்சிகளும், அமைப்புகளும் இணைந்து எங்கள் தலை வரைப் பிரதானப்படுத்துவது, எங்களை சிலிர்க்க வைக்கிறது. எங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தத்தான் பேனர், ஃப்ளக்ஸ், கொடி என்று ஆரவாரமாகத் தயார் ஆனோம். ஆனால் இதை எப்படியோ தெரிந்துகொண்ட தலைவர் போன் போட்டுப் பேசினார். 'நல்லாப் புரிஞ்சுக்கோங்க. நடக்கப்போறது நம்ம கழகத்தோட விழா இல்லை. தமிழ்நாட்டின் வருங்காலம் வளமாக்கப்பட வேண்டும் என்ற உந்துதல் காரணமாக, நல்ல பல அமைப்புகள் ஒன்று சேர்ந்து நிற்கப்போகும் உன்னதமான மேடை அது. என் மீது பற்று வைத்து, என்னை முன்னிலைப்படுத்த நினைப்பது அவர்களின் பெருந்தன்மை மற்றும் பெரும் நம்பிக்கை. அந்த அங்கீகாரத்தை நாம் அமைதியாக அணுக செய்யவேண்டுமே தவிர, ஆட்டம் பாட்டம் போட்டு கொண்டாடக் கூடாது. கட் அவுட், போஸ்டர் என்று அரசியல்வாதிகள் அலைவதை மக்கள் விரும்புவது இல்லை. போஸ்டர் அடித்தாலும், அடிக்கவில்லை என்றாலும் தனக்காக உண்மையாகச் செயல்படுவது யார் என்பது மக்களுக்குத் தெரியும். அதனால் நாமும் வழக்கமான அரசியல்வாதிகளைப் போன்று செயல்பட வேண்டாம். புதுமையா சிந்திப்போம், மக்கள் மனம் கோணாதபடி நடப்போம். முல்லைப் பெரியாறு விவகாரத்துக்காக கேரளா செல்லும் வழிகளை முற்றுகையிட்டோமே, அப்போது நம்ம கழகத்தோட கொடியோ, போஸ்டரோ ஒன்றுகூட கிடையாது. ஆனாலும் கண்கொள்ளா ஜனக்கூட்டம் திரண்டு நின்னுச்சே! அதுதான் எழுச்சி. கொடி, போஸ்டர் இல்லாம உணர்வுப்பூர்வமா மக்களை திரட்டுகிற சக்தி ம.தி.மு.க-வுக்கு மட்டும்தான் இருக்குது. அடக்கமா நடந்தாலும் அழுத்தமா சாதிக்கப் பிறந்தவங்கய்யா நாம’ என்று உணர்ச்சிகரமாகப் பேசினார். தலைவர் சொன்ன வார்த்தைகளில் இருந்த உண்மையையும், யதார்த்தத்தையும் புரிஞ்சுகிட்டோம்... அமைதியாயிட்டோம்'' என்று விளக்கம் கொடுத்தார்.
நல்ல அறிகுறிதான்.
எஸ்.ஷக்தி

''மலையைச் சுரண்டுறாங்க!''

ஈரோடு எக்குத்தப்பு
'எங்க ஊர் பக்கத்தில் இருக்கும் மலையை, கொஞ்சம் கொஞ்சமா சுரண்டிக்கிட்டு இருக்காங்க. கலெக்டர், எம்.எல்.ஏ-ன்னு பலருக்கும் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்​கையும் இல்லை. நீங்கள் தான் உதவ வேண்டும்’ என்று ஒரு  குரல் நமது ஆக்ஷன் செல்லில் (044-24890005) பதிவாகி இருந்தது.  
ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் இயங்கி வரும் மக்கள் மன்றத்தின் தலைவர் செல்லப்பன்தான் தகவல் தந்தவர். அவரிடம் பேசினோம். ''சென்னி​மலைக்கும் அரச்சலூருக்கும் நடுவில் முருங்கத்தொழுவு என்ற கிராமத்தை ஒட்டி மேற்குத்தலவு மலை இருக்கிறது. மரங்களும் செடிகளும் அடர்த்தியா இருக்கும் இந்த மலை, மணற்பாங்கானது. இங்கே மண் குவாரி அமைச்சு கடந்த ஆறு மாசமா சிலர் சுரண்டிக்கிட்டு இருக்காங்க. இப்படி மலையைச் சுரண்டறதுக்கு லைசென்ஸ் வச்சு இருக்காங்களான்னு தெரியலை. கேட்டா... 'இது பட்டா நிலம்’னு சொல்றாங்க. அந்தக் காலத்தில் ஆடு, மாடு மேய்க்குறதுக்காகமேய்ச்சல் நிலமாத்தான் இந்த மலையை குறிப்பிட்ட சிலருக்கு கொடுத்து இருக்காங்க. இப்படி ஒட்டுமொத்தமா மலையைச் சுரண்டுவதற்காக பட்டா யாருக்கும் தரவில்லை.
இதுபத்தி, குறை தீர்க்கும் கூட்டத்தில் ஊர் பொதுமக்கள் சார்பா கலெக்டரிடம் மனு கொடுத்தோம். அதுக்குப் பிறகு ரெண்டு மாசம் மண் எடுக்காம நிறுத்தி வச்சிருந்தாங்க. இப்போ திரும்பவும் வேலையை ஆரம்பிச்சுட்டாங்க. இதைக் கண்டிச்சு ஈரோட்டில், மக்கள் மன்றம் சார்பில் சமீபத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். வரும் ஜனவரி 22-ம் தேதி முதல் சென்னிமலை குமரன் சிலை முன்பு காலவரையற்ற உண்ணாவிரதம் போராட்டம் தொடங்கப் போறோம்'' என்று அடுத்தக்கட்ட திட்டங்களை எடுத்து வைத்தார்.
அவர் குறிப்பிட்ட மேற்குத்தலவு மலைக்குச் சென்று பார்த்தோம். சிலர் குவாரி அமைத்து மணல் எடுத்துக் கொண்டு இருந்ததைக் காண முடிந்தது. குவாரி நடத்துபவர்களிடம் லைசென்ஸ் குறித்து விசாரித்தபோது, முறைப்பையே பதிலாகத் தந்தார்கள்.
காங்கயம் தொகுதி எம்.எல்.ஏ-வான நடராஜிடம் இந்த விவகாரம் குறித்துக் கேட்டோம். ''கடந்த தி.மு.க. ஆட்சியில்தான் இப்படி மலையைச் சுரண்ட ஆரம்பிச்சாங்க. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடன் அதை தடுத்து நிறுத்தினோம். 'நாங்கள் மலையைச் சுரண்ட மாட்டோம். பட்டா பூமியில் மட்டும் மண் எடுத்துக்கொள்கிறோம்’ என்று அனுமதி கேட்டாங்க. இப்போ, திரும்பவும் மலையைச் சுரண்டுவதாகப் புகார் வருது. நானும் இது பத்தி கலெக்டர்கிட்ட பேசிட்டேன். கூடிய சீக்கிரமே உரிய நடவடிக்கை எடுத்து, மலை சுரண்டப்படுவதை தடுத்து நிறுத்துவோம்'' என்று உறுதி அளித்தார்.
'மலையைக் காணோம்!’ என்று முருங்கத்தொழுவு மக்கள் புகார் தரும் நிலை வருவதற்குள், நடவடிக்கை எடுங்க சார்!
கி.ச.திலீபன்

ஆண்டாள் மார்கழி 'பனி'ப்போர்!

ஸ்ரீவில்லிபுத்தூர் பரபர
'ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் நிர்வாகம் ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறது. தென்கலை பிரிவினரின் ஆதிக்கத்தால் வடகலை மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்’ என்ற குற்றச்சாட்டை எழுப்பி நீதிமன்றம் சென்றுள்ளார் வாசுதேவன்.
அவரை சந்தித்தோம். ''வைஷ்ணவ சம்பிரதாயப்படி நாங்கள் வடகலை சார்ந்தவர்கள். ஸ்ரீவில்லிபுத்தூரில் வடகலை சார்ந்த தாத்தாச்சாரியார் குடும்பங்கள் பத்தும், தென்கலை சார்ந்த குடும்பங்கள் ஆயிரக்கணக்கிலும் உள்ளன. என் அப்பாவின் தாத்தா வீரராகவ தாத்தாச்சாரியார் மதுரை நாயக்க மன்னருக்கு ராஜகுருவாக இருந்தவர். ஆண்டாள் கோயில் தர்மகர்த்தாவாக 40 ஆண்டுகள் இருந்தார். எனக்குத் தெரிந்து ஐந்து தலைமுறைகளுக்கும் மேல் ஆண்டாள் கோயில் திருமுக்குளம் கரையில் உள்ள எங்களுக்கு சொந்தமான உற்சவ மண்டபத்தில் மார்கழி மாதம் நடக்கும் எண்ணெய்க்காப்பு விழாவில், தாயாரை ஓய்வெடுக்கச் செய்து அமுது செய்விப்பதும், அம்மானை விளையாடுவதும் நடக்கும்.
தாயாரை பல்லக்கில் தூக்கிக்கொண்டு வரும்போது ஏற்படும் களைப்பைப் போக்கவும் ஓய்வு எடுப்பதும் இந்த மண்ட பத்தில்தான். பிறகு தீப ஆராதனை செய்து பூஜைகள் செய்து, பிரசாதம் அளித்து தாயாரை எடுத்துச் செல்வார்கள். 1987-ல் தென்கலை ஐயங்கார் சீனிவாசசாரி தக்காராக வந்த பிறகு இந்த வழக்கம் அடியோடு நிறுத்தப்பட்டது. 'எக்காரணம் கொண்டும் நடந்து கொண்டிருக்கும்வழக்கத்தை நிறுத்தக்கூடாது’ என்று ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட உரிமை இயல்  கோர்ட்டில் வழக்கு தொடுத்தோம். வழக்கு ஜவ்வு மாதிரி இழுக்கப்பட்டு 2003-ல், 'தாயாரை மண்டபத்துக்குள் கொண்டு போகலாம்’ என்று தீர்ப்பு வந்தது. ஆனால், தீர்ப்பை கோயில் நிர்வாகம் மதிக்கவில்லை. 'வடகலை நாமத்தை நீக்கினால் மண்டபத்துக்குள் கொண்டு வருகிறோம்’ என்று சொல்கிறார்கள். கல் மண்டபமாக இருந் தபோதே வடகலை நாமம் இருந்தது. 1980-ல் கட்டப்பட்ட இல்லத்துப் பிள்ளைமார் கல்யாண மண்டபத்துக்கு தாயாரை எடுத்துச் செல்லும் கோயில் நிர்வாகம், எங்கள் மண்டபத்துக்கு எடுத்துவர மறுப்பது ஏன்? கோர்ட் தீர்ப்பை மதிக்காமல் கோயில் நிர்வாகம் ஸ்ரீவில்லிபுத்தூர் சார்பு நீதிமன்றத்தில்   அப்பீல் செய்தது. ஆனால் சார்பு நீதிமன்றம்  2005-ல் கோயில் நிர்வாகத்தின் கோரிக்கையை தள்ளுபடி செய்தது. இதை அடுத்தும் அப்பீல் செய்ததில், சென்னை  உயர்நீதி மன்றம், 'கோர்ட் இதில் தலையிடாது. இந்துசமய அறநிலையத் துறை முடிவு எடுக்கும்’ என்று தீர்ப்பளித்தது. முதல்வருக்கு நாங்கள் கோரிக்கை மனு அனுப்பினோம். அப்போது இந்துசமய அறநிலையத் துறை, 'எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.  வடகலை குடும்பத்துக்குச் சொந்தமான விடாயத்தி மண்டபத்துக்கு தாயாரைத் தாராளமாக எடுத்து செல்லலாம்’ என்றது. ஆனால் நிர்வாகம் இதனையும் ஏற்கவில்லை. இரு முறை நீதிமன்றம் தீர்ப்பு கூறியும் அவமதித்ததற்காக கோயில் நிர்வாகம் மீது வழக்கு தொடுத்துள்ளோம். இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்கிறோம். ஆலயம் என்பது எல்லோருக்கும் பொதுவானது. எல்லா மக்களும் வழிபட வேண்டிய இடத்தை தனக்கு மட்டும் சொந்தமானது என்று சொல்ல எந்த சட்டத்திலும் இடமில்லாதபோது கோயில் நிர்வாகம் ஒரு தலைப்பட்சமாக நடந்துகொள்வது எந்த விதத்தில் நியாயம்? என்று கேட்கிறார்.
இதுகுறித்து கோயில் நிர்வாகத்தைச் சார்ந்த பன்னீர் செல்வத்திடம் பேசினோம். ''சம்பிரதாயப்படி தென்கலை நாமம் இருக்கும் மண்டபத்துக்கும், பொதுவான  மண்டபத் துக்கும் தாயாரை எடுத்துச் செல்வது வழக்கம். வடகலை சம்பிரதாய மண்டபத்துக்கு தாயாரை எடுத்துச் செல்ல மாட்டோம். 1987-ல் வடகலை விடாயத்தி மண்டபம் புதுப் பிக்கப்பட்ட போதுதான் வடகலை நாமம் பதிக்கப்பட்டது. இதனால்தான் தாயாரை மண்டபத்தில் அனுமதிக்கவில்லை. ஸ்ரீவில்லிபுத்தூர் உரிமையியல் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஒரு கிறிஸ்தவர். அவருக்கு வைணவச் சம்பிரதாயங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு, கீழ் கோர்ட் அளித்த தீர்ப்பை ரத்து செய்துவிட்டார். கோயிலுக்குள் கடைப்பிடிக்கும் ஆச்சாரம், சம்பிரதாயங்களை கோயிலுக்கு வெளியேயும் கடைப்பிடிக்கலாம் என்று சொல்லி இருக்கிறார்.  வடகலை சார்ந்தவர்களின் மண்ட பத்துக்கு எடுத்துச் சென்றால் அர்ச்சகர்கள், பட்டர்கள், தீர்த்தக்காரர்கள் எல்லாம் வரமாட்டோம் என்று எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். தீபாராதனை காட்டக்கூட அர்ச்சகர்கள் இல்லாமல் நாங்கள் விடாயத்தி மண்டபத்துக்கு தாயாரை அழைத்துச் செல்வதாக இல்லை. தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக இருக்கிறது. வடகலை நாமம் இருப்பதால் 1987-ல் நிறுத்தப்பட்டது, இனியும் தொடரும். வரும் ஜனவரி 8 முதல் 15 வரை எண்ணெய்க்காப்பு விழா வழக்கம்போல் நடைபெறும்'' என்றார்.

புயல்சேரி!

பேரமைதி காப்பதும், பிரளயமாக வெடிப்பதும் இயற்கையின் வழக்கம்தானே..? சுழற்றி அடித்த காற்று.. தலை கவிழ்ந்து, கிளை இழந்த மரங்கள்... உடைக்கப்பட்ட சாலைகள்... துடைத்து எறிந்தார் போல் காட்சி அளிக்கும் கிராமங்கள் என்று, 'தானே’ புயலால் கதறிக் கிடக்கிறது புதுச்சேரி. வேகம் எடுத்த காற்று... வேகமே காட்டாத அரசு என்று நேருக்கு மாறான நிகழ்வுகளால், பாதிப்புகள் பன்படங்கு ஆகிப்போனது உண்மை.
1910-ல் பாரதியும், அரவிந்தரும் ஒன்றாக இருந்தபோது மிகப்பெரிய புயல் ஒன்று புதுச்சேரி​யைப் புரட்டிப்போட்டதாகக் குறிப்பிட்டு இருக்கிறார் பாரதி. அதற்குப்பிறகு, 1952 மற்றும் 1967 ஆகிய ஆண்டுகளில் கடும் புயல் புதுச்சேரியைத் தாக்கி இருந்தாலும், 'தானே’தான் ஒரு நூற்றாண்டுக்குப் பின்பு பெருத்த சேதாரத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
புதுச்சேரியை புயல் தாக்கும் என்ற அறிவிப்பு வருவதும், அடுத்தடுத்த நாட்களில் அது, வலுவிழந்து விட்டதாகவோ அல்லது ஆந்திரப் பகுதிக்குச் செல்வதாகவோ செய்தி வருவதுதான் வழக்கம். அதனால், புயல் காரணமாக கடலோரப் பகுதிகளில் மட்டுமே சின்னச்சின்ன சேதங்கள் உண்டாகும்.
ஆனால், 135 கி.மீ வேகத்தில் வீசிய தானேவின் அகோர பசிக்கோ... மாளிகை, அடுக்குமாடிக் குடியிருப்பு, குடிசைப்பகுதி, மண்மேடு, கடலோரம், நகரம், விவசாய நிலம் என அனைத்தும் இரையாகிப் போனது. புயல் வேகத்தில் நிவாரணப் பணிகளில் ஈடுபடவேண்டிய அரசு... அத்தியாவசியத் தேவைகளான பால், தண்ணீர், மின்சாரம், சாலைப் போக்குவரத்து, தொலைத்தொடர்பு போன்றவற்றை சீர்செய்வதில் காட்டிய அசாத்திய மந்தம், மக்களிடை​யே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
புதுச்சேரியின் அனைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளிலும் ஜெனரேட்டர் இருந்தும், அதை இயக்க டீசல் இல்லாத காரணத்தால் குடிதண்ணீர் இல்லாமல் மக்கள் தவிக்கின்றனர். சாலைகளில் விழுந்த மரங்களை பொதுமக்களும், கீழ்நிலை அரசு ஊழியர்களும் வெட்டி போக்குவரத்துக்கு வழி ஏற்படுத்தினர். வெட்டிய மரக்குவியல்களை அகற்றுவதற்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத​தால், குப்பை நகராக மாறி இருக்கிறது புதுவை.
வானிலை ஆய்வு மையமும், ஊடகங்களும் இந்தப் புயலின் தாக்குதல் புதுச்சேரியை கடுமையாக பாதிக்கும் என்று மீண்டும் மீண்டும் சொல்லி வந்தாலும், அதைச் சற்றும் சட்டை செய்யவில்லை புதுச்சேரி அரசு. புயல் தாக்குவதற்கு சில மணி நேரத்துக்கு முன்னால்கூட, புதுச்சேரி கடற்கரை அருகேயுள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் உணவருந்திக்​கொண்டு இருந்தார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி. புதுச்சேரி காவல்துறை தலைவர் ஜிஜேந்திரகுமார் சர்மா, புயல் வருவது தெரிந்தும் அதற்கு முதல் நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு முதுமலைக்கு இன்பச் சுற்றுலா சென்றார். புயல் தாக்கிய பிறகும் அவர் திரும்பவில்லை. மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், புதுச்சேரி வருகிறார் என்ற தகவல் வந்தபிறகுதான் புதுச்சேரிக்கு ஓடிவந்தார்.
சேத மதிப்பைக்கூடச் சரியாக கணக்கிடவில்லை. இழப்பு 300 கோடி ரூபாய் என கலெக்டர் சொல்ல, 2 ஆயிரம் கோடி ரூபாய் என்று முதல்வர் சொல்ல, சுனாமியை விட அதிக இழப்பு என்று, எச்சரிக்கை உணர்வோடு தலைமைச் செயலாளர் கூறினார்.
புதுச்சேரியில் 17 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளது. 1,746 மீன்பிடி படகுகள் உடைந்து போயின. 700 தொழிற்சாலைகளுக்கு சிறிய அளவில் பாதிப்புகளும், 250 தொழிற்சாலைகளுக்குப் பெரிய அளவில் பாதிப்பும் ஏற்பட்டது.  தொழிற்சாலைகளில் மட்டும் சுமார் 800 கோடி ரூபாய் நஷ்டம் என அதன் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
அரசாங்கத்தின் திட்டமிடாத மந்தநிலைக்குக் காரணம் என்ன? என்று எதிர்கட்சியினரின் கருத்து அறிய முற்பட்டபோது, அவர்கள் கூறியது இன்னும் காமெடி. ''இயற்கை அன்னை வாரிவாரிக் கொடுப்​பாள் என்பது ரங்கசாமி விஷயத்தில் மட்டும் உண்மை. சுனாமி வழியாக ரங்கசாமிக்கு வாரிவாரிக் கொடுத்தாள் இயற்கை அன்னை. அதில் நடந்த முறைகேடுகள் குறித்த சி.பி.ஐ. விசாரணையே இன்னும் முடியாத நிலையில், 'தானே’ புயல் ரூபத்தில் மீண்டும் கொடுத்து இருக்கிறாள்'' என்று நக்கலாகக் கூறினார்கள். 
இந்த நிலையில்,'ரேஷன் கார்டுக்கு இரண்டாயிரம் ரூபாய்’ என, அறிவித்து மக்களுக்கு வாய்ப்பூட்டு போடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது அரசு. தனக்குத் தானே உதவி செய்து நிவாரணம் தேடிக் கொள்ள வேண்டியதுதான் என்று கலங்கிய மனத்துடன் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்கள் மக்கள்!
டி.கலைச்செல்வன், நா.இள.அறவாழி
இன்னொரு சுனாமி
சுனாமிக்குப் பிறகு மீண்டும் ஒரு பேரழி​வை சந்தித்துள்ளது, கடலூர் மாவட்டம். 'தானே’ புயல் தனது உக்கிர தாண்டவத்தால் மாவட்டத்தையே சின்னா​பின்னமாக்கி மக்களின் மனதில் ஆறாத வடுக்களை உண்டாக்கிச் சென்றுவிட்டது.

29-ம் தேதி நள்ளிரவு சீறத் தொடங்கிய காற்று, மறுநாள் காலை 7 மணி முதல் 9 மணி வரை 135 கிலோ மீட்டர் வேகத்தில் புயலாக மாறி சுழற்றி அடித்தது. அதில், கடலோர கிராமங்களான தேவனாம்பட்டினம், சிங்காரத்தோப்பு, தாழங்குடா, கில்லை போன்ற கிராமங்களுக்கு பலத்த சேதம். மாவட்டத்தைச் சிதைத்தது போதாது என்று, 2 குழந்தைகள் உட்பட 36 பேரை அள்ளி வாயில் போட்டுக்கொண்டது. மேலும் 15 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார்கள்.
'தானே’ ஆட்டுவித்ததில் உயர் மின் கோபுரங்களும், செல்போன் டவர்களும் அடியோடு சாய்ந்தது. பொதுமக்கள் மட்டும் அல்லாமல், மீட்புக் குழுவினரிடையே இருந்த தொடர்புகளும் முற்றிலும் துண்டிக்கப்பட்டதால், மாவட்டமே ஸ்தம்பித்து விட்டது. இதில் போலீசாரின் வயர்லெஸும் தப்பவில்லை. இதனால், மீட்புக்​குழுவினர் சீரமைப்பு பணியை ஆரம்பிக்கவே தாமதமானது.
'எங்களைக் காப்பாற்றுங்கள்’ என்று தீயணைப்பு வீரர்களிடம் கதறிய மக்களிடம், 'முதலில் எங்களைக் காப்பாற்றச் சொல்லுங்கள். அதன்பிறகு மக்களை நாங்கள் காப்பாற்றுகிறோம்’ என்ற கதறல் குரல் கேட்டது. காரணம், கடலூர் தீயணைப்பு நிலையமே புயலில் சிக்கியதுதான். மரம் விழுந்து சின்னாபின்னமான தங்களது அலுவலகத்தில் இருந்து தீயணைப்புத் துறை அதிகாரிகள் தப்பித்து வெளியே வந்து, அதன் பின்னரே மீட்பு நடவடிக்கைகளை ஆரம்பித்தனர். சாலைகளின் இருபுறங்களிலும் இருந்த மரங்கள் முறிந்து விழுந்தால், இடுபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடியவர்களை உடனடியாக ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்குப் போக முடியவில்லை. அதன் காரணமாகவே பாதிப்பேர் சிகிச்சை பெறமுடியாமல் சடலமாகிப் போனார்கள்.
மாவட்டம் முழுவதும் கம்பீரமாய் நின்று கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கான இரும்பு மின்கம்பங்களும் தானேவின் அதிரடிக்கு எதிர்த்து நிற்கமுடியாமல், தரையில் விழுந்தன. மின்கம்பிகள் அனைத்தும் அறுந்து விழுந்ததால், மாவட்டமே இருளில் மூழ்கியது. நான்கு நாட்களாகியும் இன்னமும் மின்சாரம் வந்தபாடில்லை. மின்சாரம் தடைபட்டதால், குடிநீருக்கும் வழியில்லை. மருத்துவமனைகளில் கூட நோயாளிகளைக் கவனிக்க முடியவில்லை. வீடு மற்றும் உடமைகளை இழந்த மக்கள் அனைவரும் பள்ளி மற்றும் கல்யாண மண்டபங்களில், ஒருவேளை சாப்பாட்டுகூட இல்லாமல், தொண்டு நிறுவனங்களிடம் கையேந்தும் நிலையில் இருக்கிறார்கள்.
மாவட்ட கலெக்டர் அமுதவல்லி, பேரிடர் குழு தலைவர் அபூர்வா ஆகியோரிடம் பேசியபோது, ''சீரமைப்புப் பணிகளை கவனிக்க, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான அபூர்வா, அமுதா, பிரபாகர ராவ், யத்தேந்திரநாத் சுவான், மணிவாசன் ஆகியோர் தலைமையில் 15 குழுக்களை அமைத்து இருக்கிறோம். ஒரு குழுவில் ஓர் ஆபீஸர், 100 பணியாளர்கள் என வெளிமாவட்டத்தில் இருந்து கொண்டு வந்திருக்கிறோம். முதற்கட்டமாக மின்சாரத்தை தட்டுப்பாடின்றி கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். சென்னை, தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி போன்ற இடங்களில் இருந்து 50 லாரி மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டுள்ளது. பால், மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. மின் கம்பங்களை சரி செய்யும் பணியை வெளி மாவட்டங்களில் இருந்து ஆட்களை வரவழைத்து துரித கதியில் செய்து வருகிறோம்... விரைவில் சரிசெய்துவிடுவோம்'' என்றனர்.
இந்தப் புயல் நெய்வேலியை பாலைவனமாக்கி இருக்கிறது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டி, நெய்வேலி அனல்மின் நிலையத்தில் லட்சக்கணக்கில் மரங்களை வளர்க்க ஆரம்பித்தனர். அதன் காரணமாக அந்த நிறுவனமே ஒரு சோலை போல் காட்சி அளிக்கும். ஆனால் இந்தப் புயலின் பாதிப்பால் சுமார் 10 லட்சம் மரங்கள் சாய்ந்து, தற்போது அந்த இடமே போர்க்களம் போன்று காட்சியளிக்கிறது. புயல் காரணமாக மின் உற்பத்தியிலும் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால், தமிழ்நாட்டில் ஏற்பட்டு வரும் மூன்று மணி நேர பவர்கட், இனி அதிகரித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
- க.பூபாலன்,   ராபின் மர்லர்
படங்கள்: ஜெ. முருகன், எஸ்.தேவராஜன்

'''இதிலிருந்து மீள 20 வருடம் ஆகும்!''
இயக்குநர் தங்கர்பச்சான், புயல் பாதித்த பூமிக்கு பதறி அடித்துக்கொண்டு ஓடி வந்தார். பண்ருட்டிக்கு அருகில் இருக்கும் பத்திரக்கோட்டையில் அவரை சந்தித்ததும், ''பாத்தீங்களா என் மண்ணையும், என் மக்கள் படும் கஷ்டங்களையும்? பொன்னு விளையுற மண்ணுங்க. இதப்போய் இயற்கை இப்படி நாசம் பண்ணிருச்சே'' என்று  கலங்கினார்.
''கடலூர் மாவட்டத்தில் புயல் தாக்கிய செய்தியை ஊடகங்களில் பார்த்து, வழக்கமான புயல் மழை என்று நினைத்துவிட்டேன். நேரில் வந்து பார்த்ததும், அதிர்ந்து விட்டேன். 40 வருடங்களுக்கு மேலான பலா மரங்களும், 100 வருடங்களுக்கு மேலான முந்திரி மரங்களும் அடியோடு சாய்ந்து விட்டன. இந்த மரங்கள் எல்லாம் நாட்கள் செல்ல செல்லத்தான் அதிகமாக மகசூலைத் தரும். முந்திரி ஆரம்பத்தில் ஐந்து கிலோ பத்து கிலோதான் கிடைக்கும். இருபது வருடங்கள் சென்றபிறகுதான் மூட்டைக்கணக்கில் கிடைக்கும். இப்போது 1,000 மரங்களில் ஒரு மரம்தான் உயிரோடு இருக்கின்றது. அதுவும் கிளைகள் எல்லாம் முறிந்த நிலையில் மொட்டை மரமாகத்தான் இருக்கிறது. குறைந்தது 40 ஆயிரம் ஏக்கரில் பலா மரம் இருக்கும். இப்போது ஒரு மரம்கூட கிடையாது. இது நெல், கரும்பு பயிர் போலக் கிடையாது. அடுத்த ஆறு மாதத்தில் அடுத்த அறுவடை என்று போகமுடியாது. இந்தத் தலைமுறையில் நட்டால், அடுத்த தலைமுறைக்குத்தான் விளைச்சல் கொடுக்கும். இந்த நிலையில் இருந்து இவர்கள் மீள குறைந்தது 20 வருடங்கள் ஆகும்.
கடந்த நான்கு நாட்களாக மின்சாரம் கிடையாது. சாப்பாடு கிடையாது. அப்படியே கிடைப்​​பதை சாப்பிட்டாலும், குடிப்பதற்கு ஒரு சொட்டு தண்ணீர் கிடையாது. ஊருக்கெல்லாம் மின்சாரமும், காய்களும், கனிகளும் இவன் மண்ணில் இருந்துதான் போகிறது. ஆனால் இவனுக்கு உதவி செய்யவோ இவர்களைப் பற்றி நினைத்துப் பார்க்கவோ பொதுமக்களுக்கும் அரசாங்கத்துக்கும் மனசு இல்லை. அரசு நிர்வாகம் அமைத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் ஐவர் குழு என்ன செய்து விட்டார்கள்? நான் வந்த இரண்டு நாட்களில் எந்த அதிகாரியும் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்க்க வரவில்லை.  இந்த மக்களைப் புறக்கணித்தால் இவர்களின் பாவம் இந்த அரசாங்கத்தை சும்மா விடாது. எனக்கு சாப்பாடு போட்டு அறிவையும் கொடுத்த இந்த மண்ணை இந்த நிலையில் என்னால் பார்க்க முடியவில்லை'' என்று உடைந்து குமுறினார்.
- ஜெ.முருகன்

''முந்திரியும் போச்சு.. பலாவும் போச்சு''
'தானே’ புயலால் ஏற்பட்ட பொருளாதார நஷ்டங்கள் குறித்துப் பேசுகிறார் முன்னாள் எம்.எல்.ஏ-வும் முந்திரி விவசாயியுமான வேல்முருகன்.  ''இந்த மாவட்டத்தில் சுமார் இரண்டு லட்சம் ஏக்கர் நெல், 50 ஆயிரம் ஏக்கர் முந்திரி, 10 ஆயிரம் ஏக்கர் வாழை, 10 ஆயிரம் ஏக்கர் பலா மரங்களும் மற்றும் மா மரங்கள் அடியோடு அழிந்து விட்டன. இங்கு விளைந்த முக்கனிகளும் அதே சுவையுடன் மறுபடியும் கிடைப்பதற்கு குறைந்தது 25 வருடங்களாவது ஆகும். ஆண்டாண்டு காலமாக ஒரு பிள்ளை போல் வளர்த்து வந்த பல அரிய வகை மரங்களும், 500 வகையான நோய் தீர்க்கும் மூலிகைகளும் முழுவதுமாக அழிந்துபோய் விட்டன. இங்கிருக்கும் மரங்கள் பெரும்பாலும் 50 முதல் 100 வருடங்களுக்கும் மேலான பழமை வாய்ந்தவை. அவை ஒன்றுகூட இந்த மாவட்டத்தில் இப்போது உயிரோடு இல்லை. மறு உற்பத்திக்கே இடமில்லாமல் மூங்கில்கள் அழிந்து விட்டன. 90 வயதைத் தாண்டிய பெரியவர்களுக்கே இந்தப் புயல் புதிதாக இருக்கிறது. இந்தப் புயலால் அனைத்து கல் வீடுகளுமே ஆட்டம் கண்டிருக்கிறது. மீண்டும் லேசான காற்றுடன் கூடிய மழை பெய்தாலே அனைத்து வீடுகளும் சரிந்து விடும் நிலையில் இருக்கின்றன. புயலால் ஏற்பட்ட இழப்பு எத்தனை ஆயிரம் கோடிகள் என்றே மதிப்பிட முடியாது.
சீரமைப்புப் பணிகளுக்காக அரசு நியமித்துள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு என்ன தெரியும்? முந்திரி, பலா என்றால் என்ன என்று தெரியுமா? ஒரு பொக்லைன் எந்திரத்தை எடுத்து வந்து சாலையில் கிடக்கும் இரண்டு மரங்களை ஓரமாக எடுத்துப் போட்டுவிட்டு இயல்பு நிலை திரும்பி விட்டது என்று சொல்கிறார்கள். எங்கள் மண்ணைப் பற்றியும் எங்கள் பகுதி முக்கனிகளைப் பற்றியும் தெரியாத இவர்கள் எப்படி மதிப்பிட்டு மத்திய, மாநில அரசிடம் இருந்து எங்களுக்கான நிவாரணத்தைப் பெற்றுத்தர முடியும்? தேர்தல் வந்தால் ஒரு வார்டுக்கே ஐந்து அமைச்சர்களைப் பொறுப்​பாளர்களாக நியமிப்பவர்கள், இவ்வளவு பெரிய மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு நான்கைந்து ஐ.ஏ.எஸ். ஆபீஸர்கள் போதுமா? ஏன் அனைத்து மாவட்ட கலெக்டர்களையும், அமைச்சர்களையும் அனுப்பி வைக்கக் கூடாதா..?'' என்று வெடித்தார்.

தலைவலியும் தமிழன் வலியும்!

வாலி

நாடாளுமன்றமா? நாடக அரங்கமா?

தமிழருவி மணியன்
'நேர்மையானவன் என்ற பெருமையை எப்படியாவது நீ பெற்றுவிட வேண்டும். அப்போதுதான் உன்னை அனைவரும் நம்புவார்கள். அதற்குப் பிறகு, அவசியத்துக்கேற்ப அடிக்கடி நீ பொய் பேச வேண்டும். அதையும் நீ அழகாகவும் எளிதாகவும் செய்தாக வேண்டும்’ என்று இத்தாலிய அரசியல் அறிஞன் மாக்கியவல்லி அறிவுறுத்தினான். நம் பிரதமர் வழங்கிய புத்தாண்டுச் செய்தியில், 'வலிமை மிக்க லோக்பால் சட்டம் பட்ஜெட் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும். ஊழலற்ற தூய்மையான நிர்வாகம் நாட்டு மக்களுக்கு வழங்கப்படும்’ என்று குறிப்பிட்டிருப்பதை வாசித்தபோது மாக்கியவல்லியின் வாசகம்தான் நினைவு மேடையில் நிழலாடியது.
நாடாளுமன்ற மக்களவையில் முன்வைக்கப்பட்ட லோக்பால் மசோதா, போதிய உணவின்றி எலும்பும் தோலுமாய் எழுந்து நிற்கும் ஏழை இந்தியரைப் போன்று - எந்த வலிமையும் இல்லாமல் ஏமாற்றும் நோக்குடன் - வடிவமைக்கப்பட்டது. 'அரசின் கட்டுப்பாட்டுக்கு உட்படாமல் சுயேச்சையாகவும், சுதந்திரமாகவும் இயங்கும் லோக்பால் அமைப்பு உதயமாக வேண்டும். ஊழல் கண்காணிப்பு ஆணை யமும், மத்தியப் புலனாய்வு அமைப்பின் ஊழல் தடுப்புத் துறையும் லோக்பாலில் இணைக்கப்பட வேண்டும். விசாரணை நடத்தவும், குற்ற வழக்கைப் பதிவு செய்யவும், தண்டனை தரவும் முழுமையான அதிகாரம் லோக்பாலிடம் இருக்க வேண்டும். பிரதமர், அமைச்சர்கள், அரசு ஊழியர்கள், நீதிபதிகள் அனைவரும் லோக்பால் வரம்புக்குள் வர வேண்டும். மாநிலங்களில் லோக்அயுக்தா அமைக்கப் பட வேண்டும்’ என்ற மக்களின் நியாயமான எதிர்பார்ப்புகளில் ஒன்று கூட முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.
லோக்பால் வரம்புக்குள் பிரதமர் வரக்கூடாது என்று லாலு பிரசாத்தும், முலாயம்சிங் யாதவும், மாயாவதியும், ஜெயலலிதாவும் விரும்புகின்றனர். என்றாவது ஒரு நாள் மொத்த மக்களின் ஆதரவில்அந்த நாற்காலியில் அமர்ந்துவிட முடியும் என்ற ஊமைக் கனவை உள்ளத்தில் சுமந்தபடி உலா வருபவர்கள் இவர்கள். அண்ணா ஹஜாரேவின் அழுத்தத்தால் சில நிபந்தனைகளுடன் இவர்களுடைய எதிர்ப்பையும் மீறி, பிரதமர் பதவி லோக்பால் வரம்புக்குள் வந்துவிட்டது. ஐந்து மாநிலங்களில் நடக்கவிருக்கும் தேர்தல்களில் பாரதிய ஜனதா இந்த ஆயுதத்தைப் பயன்படுத்த அனுமதிக்கலாகாது என்பதற்காகவே காங்கிரஸ், பிரதமரை லோக்பால் வளையத்தில் வேறு வழியின்றி நிறுத்தியது.
ராகுல் காந்தி தன்னுடைய அரசியல் வாழ்வில் வாய் திறந்து உருப்படியாக வழங்கிய ஒரேயரு ஆலோசனை, லோக்பால் அமைப்பு அரசியலமைப்புச் சட்டத்தின் அங்கமாக வேண்டும் என்று அழுத்த மாக வற்புறுத்தியதுதான். நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சாதாரணச் சட்டம் நிறைவேறச் சாதாரண பெரும்பான்மையே போதும். அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும். லோக்பால், அரசமைப்புச் சட்டத்திருத்தம் பெறாவிடில், ஓர் ஊழல் அரசு அதை வேறொரு சமயம் இன்னொரு சாதாரணச் சட்டத்தின் மூலம் குப்பைக் கூடையில் கொண்டு போய் போடுவதற்கு சகலவிதமான சாத்தியங்களும் உண்டு. அரியானாவிலும் பஞ்சாபிலும் நடைமுறையில் இருந்த லோக்அயுக்தா அமைப்பு, ஊழல் முதலமைச்சர்களின் உறக்கத்தைக் கெடுத்ததால் ஒரு மேலாணை (ordinance)  மூலம் குப்பைக்குப் போனதை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற வி.என்.கரே நினைவுபடுத்துகிறார்.
லோக்பால் அமைப்பு எளிதில் கலைக்கப்பட வாய்ப்பில்லாத அரசியலமைப்பின் அங்கமாக (Constitutional body) இருக்க நம் அரசியல்வாதிகள் அனுமதிப்பார்களா? 'பலவீனமான லோக் பால்’ என்ற பல்லவியுடன் பாரதிய ஜனதா 116வது அரசியல் சட்டத்திருத்த மசோதாவைப் பாடையில் படுக்க வைத்தது. பெரும்பான்மை இல்லாத காங்கிரஸ் கட்சியின் 12 உறுப்பினர்கள் வாக்களிக்கவே வரவில்லை. கூட்டணிக் கட்சிகளையும், பாரதிய ஜனதாவையும் உண்மையான உணர்வுடன் காங்கிரஸ் அணுகவில்லை. 'பாரதிய ஜனதாவால் லோக்பால் அரசமைப்புச் சட்டத்தின் அங்கமாகவில்லை’ என்ற பழியைச் சுமத்த இந்த மசோதா பயன்பட்டதே போதுமென்று காங்கிரஸ் பரிவாரம் பரவசம் கொண்டது. எப்போது வேண்டுமானாலும் எளிதில் தூக்கியெறியப்படக்கூடிய ஒரு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறுவதற்கு நள்ளிரவு வரை நடந்த நாடகக் காட்சிகளில் பங்கேற்ற நடிகர் திலகங்களின் ஆற்றல் அளவிடற்கரியது.
மத்தியப் புலனாய்வுத் துறையை எந்த நிலையிலும் தன் ஆளுகையிலிருந்து விடுவிக்க மன்மோகன் அரசு தயாராக இல்லை. ஊழல் வழக்குகளை விசாரிக்கும் முற்றுரிமை லோக்பாலிடம் இருக்கக் கூடாது என்பதில் அது மிகத்தெளிவாக உள்ளது. நீதிபதிகளும் லோக்பால் கண்காணிப்பில் இருப்பது தகாது என்ற முடிவில் அரசு திடமாக இருக்கிறது. இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது அவருக்கு மிக நெருக்கமான மனிதராக இருந்த லலித் நாராயண் மிஸ்ரா 1975-இல் படுகொலை செய்யப்பட்டார். 36 ஆண்டுகள் முடிந்த பின்பும் மர்மம் விலகவில்லை. குற்றவாளி என்று கைது செய்யப்பட்ட 27 வயது இளைஞனுக்கு இன்று 63 வயது முடிந்து விட்டது. 39 சாட்சிகளில் 31 பேர் கண்மூடி விட்டனர். விசாரணைப் படலத்தில் இதுவரை 22 நீதிபதிகள் ஈடுபட்டனர். ஒரு பயனுமில்லை. தகவல் தொழில்நுட்பத் துறை முன்னாள் அமைச்சர் சுக்ராம் மீது சுமத்தப்பட்ட ஊழல் வழக்கு 16 ஆண்டுகள் வெற்றிகரமாக நடந்து இன்று, டில்லி உயர் நீதிமன்றம் அவரைக் குற்றவாளி என்று தீர்ப்புரைத்தது. அவர், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறார். 85 வயதான சுக்ராம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரும்போது உயிரோடு இருப்பாரா? யார் அறிவார்? இன்று திகார் சிறையில் இருக்கும் ஆ.ராசா கதை என்னவாகும்? நல்ல நாடு; நல்ல ஆட்சி; நல்ல நாடாளுமன்றம்; மிக நல்ல வாக்காளர்கள்!
திரை மறைவில் எடுக்கப்பட்ட முடிவின்படி பகுஜன் சமாஜ் கட்சியும், முலாயம்சிங் கட்சியும் வெளிநடப்பில் ஈடுபட்டன. 'லோக்பால் மசோதா வலிமையாக இல்லை; கார்ப்பரேட் நிறுவனங்களைக்கண்டுகொள்ளவில்லை’ என்ற குற்றச்சாட்டுடன் இடதுசாரிகளும் வெளியேறினர். சிறுபான்மை ஆதரவில் மூச்சுத் திணறிய ஆளுங்கூட்டணி இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மக்களவையில் மசோதவை நிறைவேற்றி விட்டது. மசோதா நிறைவேற லோக்பால் அமைப்பில் இடஒதுக்கீடு வழங்கியாக வேண்டும் என்று லாலு அடம்பிடித்தார்; முலாயம் சிங் ஆர்ப்பரித்தார்; இளவரசர் ராகுல் மேசையைத் தட்டி ஆரவாரித்தார். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், பெண்கள் என்று 50 சதவிகிதம் இடஒதுக்கீடு செய்து அரசு சரித்திரம் படைத்தது. இந்த அரசுதான் லோக்பால் அரசியலமைப்புச் சட்டத்தின் ஓர் அங்கமாகத் திருத்தமசோதா கொண்டு வந்தது. ராகுல்தான் அரசியலமைப்புச் சட்ட அங்கீகாரம் லோக்பாலுக்கு அளிக்கப்பட வேண்டும் என்றார். மன்மோகனும் ராகுலும் உச்ச நீதிமன்றம், தேர்தல் கமிஷன், மத்தியத் தணிக்கைக்குழு, ஊழல் கண்காணிப்பு ஆணையம் போன்ற அரசியலமைப்புச் சட்ட அங்கங்களில் இட ஒதுக்கீடு அடிப்படையில் நியமனம் இருப்பதில்லை என்பதை ஏன் மறுத்து விட்டனர்? இதற்குப் பெயர்தான் 'வாக்கு வங்கி அரசியல்’.
போகட்டும். மக்களவையில் நிறைவேறிய மசோதா மாநிலங்களவையில் நுழைந்தது. மக்களவையில் நிறைவேற்றப்பட்ட லோக்பால் மசோதாவில் மாநிலங்களில் 'லோக்அயுக்தா’ அமைக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது. ஆனால், மாநிலங்களவையில் இந்த வாசகம் நீக்கப்பட வேண்டும் என்று பாரதிய ஜனதாவும், இடதுசாரிகளும், மாநிலக் கட்சிகளும் எதிர்ப்புக்குரல் எழுப்பின. கூட்டாட்சி அமைப்பையே இந்தக் குறிப்பு குழி தோண்டிப் புதைத்துவிடும் என்று காங்கிரசைத் தவிர எல்லாக் கட்சிகளும் எதிர்ப்புக் குரல் கொடுத்தன. அரசமைப்புச் சட்டத்தின் 253-வது பிரிவின் கீழ் லோக்அயுக்தா மாநிலங்களின் மீது திணிக்கப்படுவது தவறுதான். ஆனால், ஊழலற்ற நிர்வாகம் நடத்த விரும்பும் மாநில அரசுகள் தாமாகவே முன்வந்து லோக்அயுக்தாவை அமைத்துக் கொள்ள அனுமதிக்காமல் யார் தடுத்தது? புலியும் மானும் ஒரே நீரோடையில் ஒன்றாகச் சேர்ந்து நீர் அருந்த முடியுமா? ஏன் முடியாது? தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மாநிலங்களவையில் அந்த அதிசயத்தை அரங்கேற்றினவே!
மாநில ஊழல் கண்காணிப்பு ஆணையம், ஊழல் தடுப்புச் சட்டம் என்றெல்லாம் இருந்தும் கலைஞர் அரசும், ஜெயலலிதா அரசும் ஊழல் நடவடிக்கை களில் ஈடுபட்டத்தைத் தடுத்து நிறுத்த முடிந்ததா? கடந்த 40 ஆண்டுகளில் ஊழல் கறை படியாத திராவிடக் கட்சிகளின் களங்கமற்ற ஆட்சியை மக்கள் காண முடிந்ததா? லோக்அயுக்தா அமைப்புக்கு முதலமைச்சரை விசாரிக்கும் அதிகாரம் கூடாது என்று தம்பிதுரையும், மைத்ரேயனும் ஏன் ஓங்கிக் குரல் கொடுக்கின்றனர்? பீகார் முதல்வர் நிதிஷ்குமார், முதல்வரையும் விசாரணை வளையத்தில் உள்ளடக்கும் லோக்அயுக்தாவை அமைத்திருப்பதுபோல் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏன் அமைக்கவில்லை? மடியில் கனம் இல்லையென்றால் வழியில் பயம் எதற்கு? இரண்டு திராவிட கட்சிகளிலும் உள்ளவர்கள் விண்ணிலிருந்து மண்ணை நோக்கி இறங்கும் மழை நீரை விடத் தூய்மையானவர்களா? சீசரின் மனைவி சந்தேகத்துக்கு இடமளிக்காதபடி இருக்க வேண்டும் என்பதுதானே நல்ல அரசியலின் இலக்கணம்!
நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தார்மிக அச்சமும் கிடையாது. சமூக அச்சமும் கிடையாது. இவர்களால் நாட்டுக்கு எந்த நன்மையும் கிட்டாது. பொய் வேடம் புனைந்த இந்தப் போலி மனிதர்களால் நாடாளுமன்றம் நாடக மேடையானதுதான் பரிதாபம்.

லோக்பாலுக்கு அதிகாரம்... அரசுக்கு லாலிபாப்!

நாராயணசாமி கிண்டல்!
புதுவையைப் புயல் புரட்டி எடுத்துக்​கொண்டிருந்த கடந்த 29-ம் தேதி, லோக்​பால் மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்து, கடும் சர்ச்சைப் புயலில் சிக்கிக்கொண்டு திணறினார், புதுவை நாடாளுமன்ற உறுப்பினர் நாராயணசாமி. லோக்பால் மசோதாவை நிறைவேற்ற முடியாமல், அடுத்த பட்ஜெட் கூட்டத்​தொடருக்குத் தள்ளி வைத்திருக்கும் நிலையில் நாராயணசாமியைச் சந்தித்தோம்.
''நாடாளுமன்றத்தில் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்தது, அண்ணா ஹஜாரேவின் போராட்டத்தை முறியடிக்கும் நோக்கத்தோடு நடத்தப்பட்ட நாடகமா?''
''பத்திரிகைகளின் கேள்விகளுக்குப் பதில் கூறக் கடமைப்பட்டு உள்ளோம். ஆனால், அண்​ணா ஹஜாரே பற்றி உங்களுடைய மதிப்பீடு​களையும் கருத்துக்களையும் எங்கள் மீது திணிக்காதீர்கள். அடிப்படை விவரத்தைத் தெரிந்து கொண்டால்தான், உங்கள் கருத்து எத்தகைய தவறு என்பது தெரியவரும். லோக்பால் பிரச்னையை அண்ணா ஹஜாரே தொடங்கியது 2011 ஏப்ரல் மாதம்தான். ஆனால், அதற்கு முன்பு என்ன நடந்தது என்பது முக்கியம். 2010-ல் காங்கிரஸ் மகாசபைக் கூட்டத்திலேயே சோனியாகாந்தி, 'ஊழலை அனுமதிக்க முடியாது’ என்றதோடு, லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற இருப்பது குறித்தும் பேசினார். இதன்படி, 2011 ஜனவரியிலேயே பிரணாப் முகர்ஜி தலைமையில் ஊழல்களுக்கு எதிரான அமைச்சரவைக் குழுவை பிரதமர் ஏற்படுத்தினார். இந்தக் குழுவில் ப.சிதம்பரம், கபில்சிபல், வீரப்பமொய்லி, சல்மான் குர்ஷித் போன்றவர்கள் இருந்தார்கள்.
ஏற்கெனவே, சட்டத் துறையில் லோக்பால் மசோதா தயாரிக்கப்பட்டு இருந்தது. 'அந்த மசோதாவை ஆய்வு செய்து முழுமையாக்க வேண்டும். தேர்தல் சீர்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும். நீதித்துறை மாற்றங்கள், அமைச்சர்களுக்குரிய அதிகாரம், அரசின் கொள்முதல் கொள்கையில் வெளிப்படைத்தன்மை, கனிமவளக் கொள்கை, ஊழல் வழக்குகளை விரைவுபடுத்த சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பது போன்றவை குறித்து இந்தக் குழு மார்ச் மாதம் இடைக்கால அறிக்கையைக் கொடுத்தது. அதனால், சமீபத்திய ஊழல் விவகாரங்களின் அடி ப்படையில்தான் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற அரசு முடிவு எடுத்தது என்று சொல்வது தவறு.
ஊழல் குறித்துத் தகவல் கொடுப்பவர்களுக்கான பாதுகாப்பு மசோதா, பொதுமக்கள் சேவை மற்றும் குறை தீர்ப்பு உரிமை மசோதா, நீதித் துறையின் தரம் மற்றும் பொறுப்பு குறித்த மசோதா, வெளிநாட்டினர் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் நிதிஉதவி, ஊழல் தடுப்பு மசோதா, அரசின் கொள்முதல் முறைப் படுத்துதல் மசோதா, தேர்தல் சீர்திருத்தம் போன்ற மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட உள்ளன. இதெல்லாம் அண்ணா ஹஜாரேவுக்காக எடுத்த முடிவுகள் அல்ல. ஆகஸ்ட் மாதம் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்வதற்கு முன்பு அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி, அவர்களது கருத்துகளைக் கேட்டோம். அண்ணா ஹஜாரே குழுவுடனும் பேசினோம். பின்னர் இந்த மசோதா, நிலைக்குழுவுக்குச் சென்றது. தனது அறிக்கையை நிலைக்குழு சமர்ப்பித்த பின்னரும், பிரதமர் அனைத்துக் கட்சிகளையும் அழைத்து கருத்துகளைக் கேட்டார். அந்தக் கருத்துகளின் அடிப்படையில்தான் இப்போது பாராளுமன்றத்தில் லோக்பால், லோக் ஆயுக்தா மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.''
''லோக்பாலுக்கு கீழ் சி.பி.ஐ-யைக் கொண்டு​வருவதில் என்ன பிரச்னை?''
''வினீத் நாராயணன் வழக்கின் தீர்ப்பில் 'ஒரு  புலன் விசாரணயை சி.பி.ஐ. மேற்கொள்ளும்போது சுப்ரீம் கோர்ட் உட்பட யாருமே தலையிட முடியாது’ என்று உச்ச நீதிமன்றம் சொன்னது. ஆனால், அவர்களுக்கு நிதி உதவியளிக்கவும் சி.பி.ஐ. சார்பில் நாடாளு​மன்றத்தில் பதில் அளிக்கவும் சி.பி.ஐ-க்குத் தேவையான அதிகாரிகளை நியமிக்கவும் அரசுக்கு அதிகாரம் இருப்பதையும் அந்தத் தீர்ப்பு உறுதி செய்தது.
சி.பி.ஐ-க்குத் தேவைப்படும் அதிகாரிகளை அனுப்பவோ, கொடுப்பதற்குப் பணமோ லோக்பால் அமைப்பிடம் கிடை​யாது. அரசுதான் இந்த அமைப்பை நடத்த பண வசதியை​யும் மற்ற ஏற்பாடுகளைச் செய்யும் நிலையில், இந்த அமைப்பை லோக்பாலிடம் ஒப்படைக்கச் சொல்வது எதற்காக? சி.பி.ஐ. குறித்து எதிர்க் கட்சிகள் ஒரே மாதிரியான கருத்தைக் கொண்டுவரும் நிலையில், செய்யவேண்டிய மாற்றங்களுக்கு நாங்களும் தயாராகவே இருக்கிறோம்.''
''உங்கள் இருக்கைக்கு வந்து ஆர்.ஜே.டி. உறுப்பினர் காகிதத்தைக் கிழித்தார். இப்படி நடக்கும் என்பதை எதிர்பார்த்துத்தான், நீங்கள் பின் வரிசையில் இருந்து மசோதாவை தாக்கல் செய்ததாகச் சொல்லப்படுகிறதே?''
''அது தவறு. நான் இணை அமைச்சர். கேபினெட் அமைச்சர்கள் உட்காரும் இடத்தில் நான் உட்காருவது இல்லை. அன்றைய தினம், இந்த இரு கட்சிகள் மட்டுமல்ல பி.ஜே.பி., இடதுசாரிகள் போன்ற கட்சிகளும்தான் பிரச்னை செய்தன. இவர்கள் சொல்லும் திருத்தங்களை எல்லாம் செய்துகொண்டே இருக்க முடியுமா? எல்லாக் கட்டுப்பாடுகளையும் லோக்பாலிடம் கொடுத்துவிட்டு அரசாங்கம் லாலிபாப் வைத்துக்கொள்ளவா முடியும்? லோக்பால் என்பது விசாரணைக் குழுதான். பேப்பர்களை அனுப்பும் போஸ்ட் ஆபீஸ் பணிதான். நீதிமன்றத்தின் பணிதான் முக்கியமானது. குற்றமா, இல்லையா என்பது குறித்து நீதிமன்றம்தான் சொல்லும். இந்த நிலையில், லோக்பால் மசோதாவால்தான் ஊழல் ஒழியப் போகிறது என்று சொல்ல முடியாது''.     
சரோஜ் கண்பத்

விகடன் விருதுகள் 2011

என் மகனைக் கடத்தியதால், பிறழ் சாட்சியம் அளித்தேன்!

தா.கி. கொலை வழக்கில் புதிய திகில்!
'மு.க.அழகிரியும் அவரது அடி யாட்களும் சேர்ந்து மதுரையில் தா.கிருட்டிண னை படுகொலை செய்த இடத்தின் அருகில் குடியிருக்கும் மிக...மிக முக்கியமான கண்ணால் கண்ட சாட்சியுமான நான் எங்கே, எப்பொழுது, யாரால், எப்படி மிரட்டப்பட்டேன் என்பதையும்... முன்பு, தங்களின் பொற்கால ஆட்சிக் காலத்தில் தைரியமாக கீழ்கோர்ட்டில், நான் பார்த்தவற்றையும் நடந்தவற் றையும் கூறினேன். பிறகு ஏன் மேல்கோர்ட்டில் கூறவில்லை என்பதை தங்களின் ஆணைக்கு இணங்க நீதியின் முன்பாக தைரியமாக, பயமில்லாமல் கூறி அழகிரி வகையறாக்களுக்குத் தகுந்த தண்டனையை பெற்றுத்தர உண்மையுடனும் உறுதியுடனும் நீதியின் பக்கம் நின்று செயல்படுவேன் என்று தங்களின் பொற்பாதங்களில் இந்தக் கடிதத்தை சமர்ப்பிக்கின்றேன்’ - தா.கிருட்டிணன் கொலை வழக்கின் முக்கிய சாட்சியான பிளம்பர் பிரபாகர், முதல்வர் ஜெயலலிதாவுக்கு இப்படி ஒரு கடிதத்தை எழுதி, மதுரை தி.மு.க. சர்க்கிளை அதிர விட்டிருக்கிறார்!
தா.கிருட்டிணன் கொலையை நேரில் பார்த்த ஒரே சாட்சியான பிரபாகரை, வழக்கில் 22-வது சாட்சி யாக சேர்த்திருந்தது போலீஸ். ஜெ. பேரவையின் வட்ட இணைச் செயலாளராக பிரபாகர் இருப்பதால், இவர் எந்தக் காலத்திலும் புரண்டு பேச மாட்டார் என மலை போல் நம்பியது போலீஸ். ஆனால், பிறழ் சாட்சியாகிப் போனார் பிரபாகர். இதற்கு நடுவில் தான் வழக்கு விசாரணை ஆந்திர மாநிலம் சித்தூர் கோர்ட்டுக்கு மாறியது. அதில் மிரண்டு போய்த்தான், பிறழ் சாட்சியம் அளித்து தன்னையும் தனது குடும்பத்தையும் தற்காத்துக் கொண்டதாக இப்போது வாய் திறக்கிறார் பிரபாகர்.
பிரபாகரை அவரது வீட்டில் சந்தித்தோம். ''மோட்டார் ரிப்பேர் பார்த்த பணத்தை வாங்குறதுக்காக அன்னைக்கு அதிகாலை 5 மணிக்கு கௌம்பிப் போனேன். போற வழியில, அந்த நேரத்துல நாலஞ்சு பேரு சீருல்லாம நின்னுக்கிட்டு இருந்தாங்க. பக்கத்தில யமாஹா பைக் ஒண்ணு ஹெட் லைட் எரிஞ்ச மேனிக்கு உறுமிக்கிட்டு இருந்துச்சு. கொஞ்சம் தள்ளி இன்னொரு பைக்கும் நின்னுச்சு. பக்கத்துல போனதும்தான் தெரிஞ்சுது... அவங்க அத்தனை பேரும் தி.மு.க.காரங்க. 'இவனுக எதுக்கு இந்த நேரத்துல இங்க நிக்குறானுங்க'ன்னு சந்தேகப் பட்டுக்கிட்டே, கொஞ்ச தூரம் தள்ளிப்போய் நின்னேன்.
அப்ப, ஒரு பெரியவர் அந்த வழியா நடந்து வந்தார். அவரைப் பார்த்து அவனுக கையெடுத்துகும்பிட்டானுங்க. பதிலுக்கு அவரும் கும்பிட்டார். கண் இமைக்கிற நேரத்தில அவரை நெருங்குனவங்க, சினிமா கணக்கா சட்டுபுட்டுனு அரிவாளை எடுத்து கழுத்தை அறுத்துப் போட்டுட்டு வண்டியை கௌப்பிட்டாய்ங்க. என்னையை கிராஸ் பண்ணுற சமயம், 'கெழவனை முடிச்சுட்டோம்னு அண்ணன்கிட்ட சொல்லிட்டுப் போயிருவோம்டா’னு ஒருத்தன் சொன்னது என் காதுல விழுந்துச்சு. அவங்க போனதுமே பதறிக்கிட்டு ஓடிப்போயி பார்த்தேன். வெட்டுப் பட்டுக்கிடந்தது 'தா'வன்னா கிருஷ்ணன்னு அப்பத்தான் தெரிஞ்சுது.  தொண்டைக்கும் நெஞ்சுக் குமா இழுத்துக்கிட்டு இருந்தவரை தூக்குறதுக்கு முயற்சி செஞ்சேன் என்னால முடியல.
அப்ப, எனக்குத் தெரிஞ்ச அந்த ஏரியா பால்காரர் வந்தாரு. 'அண்ணே... ஒரு கை போடுங்க; இவரை தூக்கிக் கொண்டுபோய் ஆஸ்பத்திரியில் சேர்த்துருவோம்’னு சொன்னேன். 'டேய்... என்ன காரியம் நடந்துருக்கு! நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்கே’ன்னு சொல்லி என்னைய அதட்டுனார். அப்புறம்தான் எனக்கே சீரியஸ்னஸ் தெரிஞ்சுது. அதுக்கப்புறம் அந்த இடத்துல நிக்காம வீட்டுக்கு வந்துட்டேன். விஷயம் தெரிஞ்சு என்கிட்ட வந்த போலீஸ்கிட்ட, 'நான் பார்த்ததை சொல்றேன். ஆனா, என்னைய சாட்சியாப் போடாதீங்க; எனக்கும் குடும்பம் குட்டி இருக்கு’ன்னு சொன்னேன். அதையும் மீறி என்னைய சாட்சியாக்கி ரகசிய வாக்குமூலம் கொடுக்க வெச்சாங்க. அதுல இருந்தே எனக்குப் பிரச்னைதான்'' என்று பழைய சம்பவங்களைச் சொன்னவர்... அடுத்து நடந்ததாக சில சம்பவங்களை விவரித்தார்.
    ''நான் சாட்சி சொல்லக்கூடாதுன்னு பல வழிகளிலும் மிரட்டுனவங்க, என்னோட கடைசிப் பையன் கபிலனைக் கடத்துற அளவுக்கு துணிஞ்சப்பத்தான் பதறித் துடிச்சிட்டேன். இது, தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னாடி நடந்தது. அப்ப கபிலனுக்கு மூன்றரை வயசு. வீட்டு வாசல்ல வெளையாடிக்கிட்டு இருந்தவன், திடீர்னு காணாமப் போயிட்டான். முதலில், தா.கி. வழக்கில் அழகிரிக்காக ஆஜரானவரும், ஆட்சி மாறியதும் அரசு வக்கீலாகவும் இருந்த மோகன்குமார் கொஞ்ச நேரத்தில எனக்கு போன் பண்ணி, 'உம் புள்ளயைத் தேட வேண்டாம்; பத்திரமா இருக்கான்’னு சொன்னார். ஒருநாள் முழுக்க நாங்க நெருப்புல விழுந்தாப்புல தவிச்சோம்.
     மறுநாள் காலையில, அவரே காருல என்னைய ஏத்திக்கிட்டு தி.மு.க. முக்கியப் புள்ளியோட வீட்டுக்கு போனார். தா.கி. வழக்குல சம்பந்தப்பட்ட அத்தனை பேரும் அங்க இருந்தாங்க. அழகிரிக்கு வேண்டப்பட்ட போலீஸ் உதவி கமிஷனர்கள் இரண்டு பேரும், ஒரு இன்ஸ்பெக்டரும்  இருந்தாங்க. அவங்க முன்னாடியே, 'மோகன்குமார் சொல்றபடி நடந்துக்க’னு முக்கியப் புள்ளி மிரட்டினார். 'நீங்க சொல்றதக் கேக்குறேன்; எம் புள்ளயக் குடுத்து ருங்க’னு கதறுனேன். அதுக்கப்புறம்தான் கபிலனைக் கண்ணுல காட்டுனாங்க.
அப்புறமும் என்னை விடலை. சித்தூர் கோர்ட்டுக்கு நான் சாட்சி சொல்லப் போறதுக்கு மூணு நாள் முன்கூட்டியே என்னையும் என் மனைவி மக்களையும் அவங்க கஸ்டடிக்குக் கொண்டு போயிட்டாங்க. எங்களை அவசரமா மதுரை ஏர்போர்ட்டுக்கு அழைச்சிட்டுப் போயி, சென்னைக்கு ஃபிளைட் ஏத்திட்டாங்க. சென்னை ஏர்போர்ட்டுல இன்ஸ்பெக்டர் ஒருவர்தான்  எங்களை ரிஸீவ் பண்ணி இம்பாலா ஹோட்டல்ல தங்க வெச்சார்.
அங்கருந்து சித்தூருக்கு ஏ.ஸி. கார்ல கூட்டிட்டுப் போயி, சித்தூர் கோர்ட்டுக்கு எதிர்லயே காஸ்ட்லி ஹோட்டல்ல தங்க வெச்சாங்க. அப்ப எங்களை சந்திச்ச மதுரை போலீஸ் ஆட்கள், 'இவனுக உங்க அம்மாவையே (ஜெயலலிதா) படாதபாடு படுத்துறானுங்க. உனக்கு எதுக்கு பொல்லாப்பு? பேசாம, 'எனக்கு எதுவும் தெரியாது’னு சொல்லிட்டுப் போயிக் கிட்டே இரு’ன்னாங்க. குடும்பத்தைக் பணயம் ஆக்கி மிரட்டுனதால, நானும் அவங்க சொன்னபடியே மனசாட்சியை ஒதுக்கி வெச்சிட்டு பிறழ் சாட்சியம் சொல் லிட்டு வந்துட்டேன். வரும்போதும் அதே மாதிரி ஃப்ளைட்ல எங்களை மதுரைக்கு அனுப்பி வெச்சாங்க. 
அத்தோட முடிஞ்சிடுச்சினுதான் நெனச்சேன். ஆனா, 'தா.கி. கொலை வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுப்போம்’னு அம்மா சொன்னதும்தான் எனக்கு புது தைரியமும் தெம்பும் வந்துச்சு. அப்புறம்தான் கடந்த ஜூலை மாதம் அம்மாவுக்குக் கடிதம் எழுதினேன். நான் எழுதுன கடிதம் உடனடியாக மதுரை போலீஸுக்கு வந்து, துணை கமிஷனர் திருநாவுக்கரசு, உதவிக் கமிஷனர் வெள்ளத்துரை அரசு வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் என்கிட்டயும் மனைவி மற்றும் மகனிடமும் விசாரிச்சாங்க. அம்மா ஆட்சியில் தா.கி. கொலை வழக்கை மறுவிசாரணை நடத்தினால், யாருக்கும் பயப்படாமல் கூண்டில் ஏறி உண்மையைச் சொல்வேன்'' என்றார்.
   இவரது அதிரடி குற்றச்சாட்டு குறித்து, அழகிரிக்காக ஆஜராகும் மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. வழக்கறிஞர் அணி செயலாளர் மோகன்குமாரிடம் கேட்டதற்கு, ''சித்தூர் கோர்ட்டில் வழக்கு நடந்த நேரத்தில் நான் அரசு வழக்கறிஞராக இருந்ததால், அந்த வழக்கை விட்டு ஒதுங்கி இருந்தேன். அந்த பிரபாகர் ஒரு டூப் மாஸ்டர். அந்தாளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவரை நான் எனது காரில் அழைத்துச் சென்றதாக சொல்வது, அவரது மகன் தொடர்பாக நான் போனில் பேசியதாகச் சொல்லி இருக்கும் விஷயங்கள் உள்பட அனைத்துமே அக்மார்க் பொய். அரசியல் உள்நோக்கத்துடன் எங்கள் மீது இப்படியரு புகார் கொடுக்க வைக்கப்பட்டிருக்கிறார் பிரபாகர். புகாரில் உண்மை இருக்கிறதா என்பதை போலீஸ் தாராளமாக விசாரித்துப் பார்க்கட்டும்'' என்று சொன்னார்.
மதுரை அரசு வழக்கறிஞரும் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. வழக்கறிஞர் அணி செயலாளருமான தமிழ்ச்செல்வனிடம் பேசினோம். ''தா.கி. கொலை வழக்கில் முக்கியமான 20 சாட்சிகளை விசாரிக்கவே இல்லை கோர்ட். 'அவர்கள் இருக்கும் இடம் தெரியவில்லை’ என்று வி.ஏ.ஓ. மூலமாக சான்றளிக்க வைத்து சித்தூர் கோர்ட்டை ஏமாற்றி இருக்கிறது, அப்போது வழக்கை கவனித்த போலீஸ். தா.கி-யின் மனைவி பத்மாவதி யையே கண்டுபிடிக்க முடியவில்லை என்று எழுதி இருக்காங்க! முக்கிய சாட்சியான பிரபாகரின் மனைவி, குழந்தைகள் கடத்தப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் சொன்னபடி நடந்தால் மட்டுமே தானும் தன்னுடைய குடும்பமும் பத்திரமாய் இருக்க முடியும் என்பதால் பிரபாகர் பிறழ்சாட்சியம் அளித்திருக்கிறார். தா.கி. வழக்கை ஆந்திர உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்வதற்கு இந்த ஒரு காரணமே போதுமானது'' என்று சொன்னார்.
போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக் கரசுவோ, ''தனக்கு எதுவும் தெரியாது என நீதிபதி முன்பாக சாட்சியம் அளித்துவிட்டு வந்து இப்போது, 'மிரட்டப்பட்டதால் தான் அப்படிச் சொன்னேன்’ என்கிறார் பிரபாகர். இதை வைத்துக் கொண்டு நடவடிக்கை எடுக்க முடியுமா என்பது குறித்து சட்ட நுணுக்கங்களைப் பார்க் கணும். விசாரணை ஆரம்ப நிலையில் இருப்பதால் இப்போதைக்கு இவ்வளவு தான் சொல்ல முடியும்'' என்கிறார்.
போலீஸ் வட்டாரத்திலோ, ''பிரபாகரின் மகனைக் கடத்தியவர்கள் மீதும் அதற்கு உடந்தையாக இருந்த போலீஸ் அதிகாரிகள் மீதும் கடத்தல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க லாம்’ என்று ஸ்டேட் பி.பி. ஒப்பீனியன் கொடுத்து ஒரு மாதத்துக்கு மேலாகி விட்டது. அதன் பேரில் நடவ டிக்கை எடுத்தால் அழகிரிக்கே பிரச்னை வரலாம். எங்கள் அதிகாரிகள் தயங்குவதுதான் எங்களுக்கும் புரியாத புதிராக இருக்கிறது'' என்கிறார்கள்.
ஆக, எட்டு ஆண்டுகளை கடந்தும் படபடத்துக் கொண்டே இருக்கிறது தா.கி. கொலை வழக்கு!
குள.சண்முகசுந்தரம்
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

தண்ணீருக்காக ரத்தத்தை தந்தார்கள்!

'மூன்றாம் உலகப் போருக்கான யுத்தம் தண்ணீருக்காகத்தான் நடக்கும்’ என்பார்கள். இங்கே முல்லைப் பெரியாறுக்காக நடந்த யுத்தத்தில், 'இடிமுழக்கம்’ சேகர், சின்னமனூர் ராம மூர்த்தி, தேனி ஜெயபிரகாஷ் நாராயணன் ஆகிய மூவர் உயிரைத் துறந்து இருக்கிறார்கள். தேனியைச் சேர்ந்த பாலத்து ராஜா என்பவர் தீக்காயங்களோடு உயிருக்குப் போராடி வருகிறார்.
முல்லைப் பெரியாறு போராட்டக் களத்தில் முதன்முதலில் தற்கொலைக்கு முயன்றவர் தேனி யைச் சேர்ந்த பாலத்து ராஜா. மதுரை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அவர் இருக்க... அவரது மகன் மதுரை வீரன் நம்மிடம், ''மாணிக்கபுரம் கிராமத்தில் நடந்த முல்லைப் பெரியாறு மீட்புப் பேரணிக்குப் போனவர், வீட்டுக்கு வந்ததும் மண்ணெண்ணெய் ஊத்தி தீ வைச்சிக்கிட்டு, 'முல்லை பெரியாறு அணையை மீட்போம்’னு கத்திக்கிட்டே தெருவில் ஓடினார்... எப்படியாவது அப்பா பிழைச்சு வரணும்...'' என்றார் கண்ணீருடன்.
மறைந்த தேனி ஜெயபிரகாஷ் நாராயணன், வேன் டிரைவராக இருந்தவர். ஈழ யுத்தத்தின்போது, தேனி யில் காங்கிரஸ் கட்சிக்காரர்களுடன் மல்லுக்கட்டி கோபத்தை கக்கியவர். இப்போது இவரது வீடே மயான அமைதியில் துவண்டுக் கிடக்கிறது. அவரது சகோதரி சந்திரா, ''ஈழத்துப் பெண் ஒருத்தியைத்தான் கல்யாணம் செஞ்சுக்கு வேன்னு சொல்லிக்கிட்டு இருந்தான். தீக்குளிச்சு உயிருக்குப் போராடிக்கிட்டு இருந்தப்ப தலைவர் வைகோ, தினமும் போன் பண்ணி விசாரிச்சார். 'பொங்கலுக்குள் சரியாகி, என் வீட்டுக்கு சாப்பிட வரணும்’னு சொன்னார். ஆனா, எங்களை எல்லாம் விட்டுட்டுப் போயிட்டானே...'' என்று கதறினார். 
சீலையம்பட்டி 'இடிமுழக்கம்’ சேகர் 10 வருடங் களுக்கு முன்பு 'அறிவொளி’ இயக்கத்தில் இணைந்து, கிராமத்து முதியவர்களுக்கு கையெழுத்துப் போட கற்றுக்கொடுத்தவர். இவரது தம்பி வீராச்சாமி, ''அண்ணன் சின்ன வயசில் இருந்தே விஜயகாந்த் ரசிகர். விஜயகாந்த் கட்சி ஆரம்பித்ததும் தலைமைக் கழகப் பேச்சாளர் ஆனார். முல்லைப் பெரியாறுக் காக நடந்த 42 கூட்டங்களிலும் கட்சி பேதம் இல்லாம கலந்துக்கிட்டார். அவர் விஷம் குடிச்சு உயிருக்குப் போராடுன இறுதி நொடியில்கூட, 'என்னைக் காப்பாத்த வேண்டாம். நான் பிழைச்சா போராட்டங்கள் தோல்வி அடைஞ்சுடும்’ என்று சொன்னபடியே கண்ணை மூடினார்'' என்றார் உடைந்த குரலில்! 
சின்னமனூரைச் சேர்ந்த சி.ராமமூர்த்தி அப்பளம், சிப்ஸ் விற்பவர். பெற்றோரை இழந்த பின் கிடைத்த குடும்பச் சொத்தில் ஆதரவற்றோருக்கான அறக்கட்டளை ஒன்றை நடத்தி வந்தார். அவரது அக்கா செல்வி, ''திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு, அந்த அணையின் மகத்துவம் பற்றித் தெரியவில்லை என்று, சொந்தச் செலவில் நோட்டீஸ் அடித்து, விநியோகித்து வந்தான். போன வாரம் சின்னமனூரில் நடந்த பேரணியில் 'பென்னி குக்’ படத்தை கழுத்தில் மாட்டிக்கொண்டு, அரளி விதையை அரைச்சுக் குடிச்சு அந்த இடத்துலயே இறந்துட்டான்...'' என்று அடக்க மாட்டாமல் அழுதார்!
ராமமூர்த்தியின் அண்ணன் வேலுச்சாமி, ''அவன் சாகுறதுக்கு முன்னாடி ஒரு கடிதம் எழுதி பாக்கெட்டுல வெச்சிருக்கான். ஆனா, அதை இப்ப வரைக்கும் அரசாங்கம் வெளியிடலை... அதுல இருக்கிற மர்மம் என்ன? அரசு அதை ஏன் மூடி மறைக்கிறது?'' என்றார் கொந்தளிப்புடன்!
கோழைகள் எடுக்கும் துணிச்சலான முடிவு தற்கொலை என்பார்கள். இனியாவது தமிழர்கள் கோழைகள் இல்லை என்பதை மனதில் நிறுத்தி, இதுபோன்ற முடிவுகளைத் தவிர்க்கட்டும்!
- சண்.சரவணக்குமார்
படங்கள்: வீ.சிவக்குமார்,
சக்தி அருணகிரி
கடிதத்தில் இருப்பது என்ன?
ராமமூர்த்தியின் கடிதத்தில் என்னதான் இருக்கிறது என்பது குறித்து போலீஸ் தரப்பில் பேசினோம். 'எனது உயிரை மாய்த்துக் கொள்வதன் மூலமாவது முல்லைப் பெரியாறு விவகாரம் முடிவுக்கு வரட்டும்’ என்று தொடங்கும் கடிதத்தில், 'பெரியாறு அணையில் 142 அடி வரை நீரைத் தேக்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு சொன்னபோது, அப்போது முதல்வராக இருந்து தீர்ப்பை நிறைவேற்றாத ஜெயலலிதா முதல் குற்றவாளி. அவரைப் போலவே கருணாநிதியும் மெத்தனமாக இருந்தார். எனது மரணம் இவர்களது நாடகத்தை அம்பலப்படுத்தட்டும். அறவழிப்போராட்டம் நடத்தும் சின்னமனூர் மக்களே... இந்தக் கூட்டத்தில் நான் இறந்துவிடுவேன். எனது உடலை ஊர்வலமாக எடுத்துச் சென்று பெரியாறு அணையில் போடுங்கள். அப்போதாவது கேரள, தமிழக அரசியல்வாதிகளுக்கு புத்தி வரட்டும்’ என்று நீள்கிறதாம், அந்த நான்கு பக்கக் கடிதம்!
இரா.முத்துநாகு

மதப் பிரசாரம் செய்ததால் பந்தாடப்படுகிறாரா உமாசங்கர்?

ட்சி மாறும்போது அதிகாரிகள் மாற்றப்படுவது சகஜம்தான். ஆனால் ஆறு மாதங்களில் நான்கு முறை மாற்றம் என்றால்...? அப்படி ஒரு 'விளையாட்டுக்கு’ ஆளாகி இருப்பவர் வேறு யாருமல்ல... கடந்த ஆட்சியிலும் பந்தாடப்பட்ட உமாசங்கர் ஐ.ஏ.எஸ்.
அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் டான்சி நிறுவனத்​தில், பிறகு, கோ-ஆப்டெக்ஸில், மூன்றாவதாக நில உச்சவரம்பு ஆணையராக மாற்றப்பட்டார். இந்தக் கட்டுரை அச்சேறும் வரை, சென்னை மண்டல ஒழுங்கு நடவடிக்கை ஆணையர்!
கடந்த ஆட்சியில் வெளியிடப்பட்ட அரசு ஆணை ஒன்றுதான், இப்போதைய பிரச்னைக்குக் காரணம் என்கிறார்கள். அரசு கையகப்படுத்திய நிலம் என்று தெரியாமல், ஏமாந்து வாங்கி 'அறியாக்கிரயம்’ செய்தவர்களுக்கு பட்டா தரலாம் என்பதுதான் அந்த அரசு ஆணை. நில மோசடிக் குற்றவாளிகள்இதனைத் தவறாகப் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது என்பதை அறிந்து, 'இந்த ஆணையை ரத்துசெய்ய வேண்டும்’ என தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதினார், நில உச்சவரம்பு ஆணையராக இருந்த உமாசங்கர்.
இந்த நிலையில், அறியாக்கிரயம் பெற்றவர்கள் 500 பேர் பட்டா பெறுவதை நிறுத்தி வைக்குமாறு அமைச்சர் தரப்பில் இருந்து வாய்மொழியாக சொல்லப்பட்டதாம். ஆனால், உமாசங்கரோ எழுத்து மூலமாகத் தெரிவிக்க வேண்டும் அல்லது புதிதாக அரசு ஆணை வெளியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார். இதையடுத்துதான் இப்போதைய பதவிக்குத் தூக்கி அடிக்கப்பட்டார். இதற்கிடையில், உமாசங்கர் ஊர் ஊராகப் போய் கிறிஸ்தவ மதப் பிரசங்கம் செய்தது குறித்து சில மதவாதத் தலைவர்கள் புகார் சொன்னதுதான் மாற்றத்துக்குக் காரணம் என்றும் சொல்லப்படுகிறது.
இது பற்றி உமாசங்கரிடம் கேட்டதற்கு, ''என்னை வழிநடத்தும் இயேசு கிறிஸ்துவின் மகிமையை,  லட்சக்கணக்கான மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டியது, என்னுடைய கடமை. சமய உரிமை என்பது இந்திய அரசியல் சாசனம் ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கியுள்ள அடிப்படை உரிமை. என் வாழ்நாள் முழுவதும் இந்த தெய்வக் கடமையை இன்னும் வீச்சாக செய்துகொண்டே இருப்பேன். முறைப்படி விடுமுறையில்தான் வெளியூர் பிரசங்கங்களுக்குச் செல்கிறேன். வாகனம் உட்பட அரசின் எந்தப் பொருளையும் நான் அதற்காகப் பயன்படுத்துவது இல்லை. மேலும், திருவாரூரில் ஆட்சியராக இருந்தபோது, சமகால வரலாற்றில் முதல்முறையாக, தியாகராஜசுவாமி கோயில் குளத்தைத் தூர் வாரச் செய்தேன். குளத்தில் உயிரிழப்புகளைத்  தடுக்க, இரும்புத் தடுப்புகளை அமைக்க நடவடிக்கை எடுத்தேன். தேரோட்டம் உட்பட இந்துமத நிகழ்ச்சிகளை முன்னின்று செய்தேன். அப்போது என்னை குறிப்பிட்ட மதம் சார்பானவனாகப் பார்க்காதவர்கள், சமீபமாக மட்டும் வேறுபடுத்திப் பார்ப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை, எந்த ஐ.ஏ.எஸ். வேலையையும் செய்வேன்'' என்றார் புன்னகையுடன்.
இரா. தமிழ்க்கனல்

எனது இந்தியா!

நினைவுகள் அழிவதில்லை 
இந்தியாவுக்கு வெளியில் இருந்து கொண்டு இந்தியாவின் விதியை மாற்றியமைக்க முயற்சி செய்த மாபெரும் வீரர்கள் என்று இருவரைச் சொல்வேன். ஒருவர் ஜப்பானில் வாழ்ந்து கொண்டு இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய ராஷ் பிகாரி போஸ். இன்னொருவர் ஜெர்மனியில் வாழ்ந்த தமிழகத்தைச் சேர்ந்த செண்பகராமன் பிள்ளை. இருவருமே, இந்திய விடுதலை குறித்த பெருங்கனவுடன் செயல்பட்டவர்கள். இந்திய தேசிய ராணுவம் என்ற உடனேயே, நம் நினைவுக்கு வருவது நேதாஜிதான். ஆனால், அவர் ஐ.என்.ஏ.வை உருவாக்கவில்லை. அதன் தலைமைப் பொறுப்பை அவர் ஏற்றுக் கொண்டார். இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கியவர் ராஷ் பிகாரி போஸ்.  தேடப்படும் முக்கிய அரசியல் குற்றவாளிகள் பட்டியலை பிரிட்டிஷ் அரசு வைத்திருந்தது. அதில் உள்ள எவரைப்பற்றி தகவல் கொடுத்தாலோ அல்லது பிடித்துக் கொடுத்தாலோ நூறு ஏக்கர் நிலம் பரிசு தருவதாகவும் அறிவித்து இருந்தது.
அந்தப் பட்டியலில் முதல்பெயர்... ராஷ் பிகாரி போஸ்!  மேற்கு வங்காளத்தின் பர்தவான் மாவட்டத்தில் உள்ள கபால்டா எனும் கிராமத்தில் 1886-ம் ஆண்டு மே25-ம் தேதி பிறந்தவர். தமது 15-வது வயதில், சாரு சந்திரராய் என்பவர் தலைமையில் நடந்த 'சுஹ்ரித் சம்மேளம்’ என்ற புரட்சிகர இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். வங்காளத்தில் உள்ள புரட்சியாளர்களுடன் இணைந்துஆங்கிலயேர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராட முடிவு செய்தார் ராஷ் பிகாரி. அதன் ஒரு பகுதியாக, டெல்லியில் பிரம்மாண்டமான ஊர்வலம் நடத்தும் வைசிராயை வெடிகுண்டு வீசிக் கொல்ல முடிவு செய்யப்பட்டது. 1912-ம் ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி டெல்லி நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.
கல்கத்தாவில் இருந்து மாறி, புதிய தலைநகரமாக புதுடெல்லி உருவானதைக் கொண்டாடும் விதமாக, வைசிராய் ஹார்டிங் தன் மனைவியுடன் யானை மீது அம்பாரியில் அமர்ந்து, டெல்லியில் ஊர்வலம் வந்தார்.
காலை 11.45 மணிக்கு சாந்தினி சௌக் பகுதியில் உள்ள பஞ்சாப் வங்கியின் எதிரில் இருந்த கடிகார கோபுரம் ஒன்றின் மேல் இருந்து முக்காடு அணிந்த இரண்டு பெண் உருவங்கள், யானை மீது பவனி வரும் வைசிராயை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டு இருந்தன. யானை ஆடி அசைந்து வந்து கொண்டிருந்தது. 500 காவல் அதிகாரிகள், 2500 பாதுகாப்பு வீரர்கள் புடைசூழ வைசிராய் பெருமிதத்துடன், மக்களை வேடிக்கை பார்த்தபடியே வந்து கொண்டிருந்தார். கடிகார கோபுரத்தில் மறைந்திருந்த பெண், சிகரெட் டப்பா ஒன்றில் அடைக்கப்பட்ட வெடிகுண்டை யானையை நோக்கி வீசினாள். இன்னொரு பெண்,  ஒரு எறிகுண்டை கூட்டத்தை நோக்கி எறிந்தாள்.
அந்த வெடிகுண்டு யானையின் அம்பாரி மீது விழுந்து வெடித்தது. வைசிராய் தடுமாறி விழுந்தார். பாகன் அந்த இடத்திலேயே உடல் வெடித்துச் செத்தான். இரண்டு பெண்களும் தங்களது முக்காட்டை களைந்து விட்டு ஓடினார்கள். அவர்கள் ஆண்கள் என்பது அப்போதுதான் தெரிந்தது. ஒட்டுமொத்த டெல்லியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, பட்டப்பகலில் துணிச்சலாக வைசிராய் மீது வெடிகுண்டு வீசி, ஆங்கிலேயர்களின் சர்வாதிகாரத்துக்கு சவால் விட்ட அந்த இளைஞர்களில் ஒருவர்தான். ராஷ் பிகாரி போஸ்!
அவரோடு உடனிருந்து வெடிகுண்டு வீசியவர் பசந்த குமார் பிஸ்வாஸ். இந்தச் சம்பவம் பற்றி 'எனது இந்திய வருடங்கள்’ என்ற நூலில் வைசிராய் ஹார்டிங் விரிவாக குறிப்பிட்டு உள்ளார். 'பாதுகாப்பு கருதி ஊர்வலம் செல்லும் பாதையில் எந்த வீட்டின் மேலும், கட்டடங்களின் மேலும் ஆட்கள் நிற்கக்கூடாது என கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. சாந்தினி சௌக் பகுதியின் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் ஒரு காவலர் நிறுத்தப்பட்டிருந்தார். இதற்காகவே, 4000 காவலர்கள் அண்டை மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்டு இருந்தனர். சாந்தினி சௌக்-கின் நெரிசலான வணிகப் பகுதியில் யானை அசைந்தாடி வரும்போதுதான் ஒரு வெடிகுண்டு வீசப்பட்டது. அம்பாரியில் குண்டு பட்டதால் சரிந்து விழுந்து விட்டேன். என் மனைவி பயத்தில் அலறினாள். எனக்கு கண்ணை கட்டிக் கொண்டு மயக்கம் வந்தது. ஹீக் பிரேசர் என்ற காவல்அதிகாரி ஒரு குழந்தையை தூக்குவதைப் போல என்னைத் தூக்கிக் காரில் கிடத்தினார். பாதி மயக்கத்தில் என்ன நடந்தது என்றே தெரிந்து கொள்ள முடியவில்லை. என்னுடன் இருந்த உதவியாளருக்கு காது கேட்காமல் போய்விட்டது. எனக்கும் ஒரு காது கேட்கவே இல்லை. வலி தாங்க முடியாமல் நான் அழுதேன். என் மனைவியும் கண்ணீர் விட்டாள்.  வெடிகுண்டில் ஊசிகள், ஆணிகள் இருந்திருக்கக்கூடும் போல. அவை, என் உடலில் பாய்ந்து ஆழமான காயத்தை ஏற்படுத்தி இருந்தன. ஆறு மாதங்கள் தொடர்ந்து சிகிக்சை பெற்ற பிறகே, எனது உடல் தேறியது. என்னைக் கொல்லத் திட்டமிட்ட அந்த இந்தியனை தேடும் வேட்டை அப்போதும் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது’ என்று குறிப்பிட்டு உள்ளார்.
. 'டெல்லிச் சதி வழக்கு’ எனப்படும் இந்த வெடிகுண்டு வழக்கில் ராஷ் பிகாரி போஸை, போலீஸ் தேடியது. அவரைப் பிடிக்க, டேவிட் பேட்டர்சன் என்ற தலைமை காவல் அதிகாரி  தலைமையில்தனிப்பிரிவு அமைக்கப்பட்டது. அப்போது, ராஷ் பிகாரி போஸ் காட்டிலாகா அலுவலராக வேலை பார்த்து வந்தார். விடுமுறையில் இருந்த அவர், நடந்த சம்பவத்துக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்பது போல, டேராடூனில் உள்ள தனது அலுவலகத்துக்கு வேலைக்குச் செல்ல தொடங்கி விட்டார். ராஷ் பிகாரி போஸோடு துணை நின்றவர்களை காவல்துறை கைது செய்தது. அவரையும் பிடிக்க லாகூர் சென்றது. ஆனால், மாறுவேடத்தில் போலீஸை ஏமாற்றி தப்பி வங்காளத்துக்குள் சென்று விட்டார். நினைத்த நேரம் நினைத்த உருவம் எடுத்துக் கொள்ளும் மாயாவியைப் போல அவர் இருந்தார் என்று போலீஸ் குறிப்புகள் கூறுகின்றன. ஓடும் ரயிலில் போலீஸ் சுற்றி வளைத்த போது, துறவி போல மாறுவேடம் அணிந்து தப்பி இருக்கிறார். ஒரு முறை போலீஸ் உயர் அதிகாரியின் குதிரை வண்டி ஓட்டுபவனாக உருமாறிக்கொண்டு, கூடவே பயணம் செய்து தப்பிச் சென்று இருக்கிறார்.
இன்னொரு முறை, காவல்துறை அதிகாரிகள் தேடிவந்த போது செத்துப்போய் ஆவியாக அலையும் கிழவனைப் போல வேடம் போட்டு காவலர்களைப் பயமுறுத்தி தப்பியிருக்கிறார். மற்றொரு முறை, தன்னைப் பிடிக்க அலைந்து கொண்டிருந்த காவல்துறை அதிகாரியிடம், கைரேகை ஜோசியம் பார்ப்பவனைப் போலச் சென்று நாளை நிச்சயம் ராஷ் பிகாரி போஸை கைது செய்ய முடியும் என்று நம்பிக்கை ஊட்டி அவரது வாகனத்திலேயே தப்பிச் சென்று இருக்கிறார். இப்படி, ராஷ் பிகாரி போஸின் நிஜவாழ்வில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள் இன்றுவரை கதை கதையாகப் பேசப்பட்டு வருகின்றன.
இதன் உச்சத்தைப் போல, 1915-ம் ஆண்டு மே12-ம் தேதி, எஸ்.எஸ்.சனூகி மாரு என்ற  ஜப்பானிய கப்பலில் மகாகவி தாகூரின் செயலாளர் என்று கூறி, பிரிட்டிஷ் போலீசாரை ஏமாற்றித் தப்பித்து சிங்கப்பூர் சென்று அங்கிருந்து ஜப்பான் சென்றார் போஸ். பிரிட்டிஷ் போலீஸ் அங்கும் அவரைத் துரத்தியது.
அப்போது, ஜப்பானியப் பல்கலைக் கழகத்தில் கேரளாவில் இருந்து சில மாணவர்கள் மீன்வளத் துறையில் படித்துக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவரைப்போல ராஷ் பிகாரி போஸ் மாறுவேடம் அணிந்து கொண்டு, பல்கலைக் கழகத்துக்குள் சுற்றிக் கொண்டிருந்தார். அங்கும் சென்றது போலீஸ்படை. புத்த மதத்துறவி, வணிகர், தேநீர் கடை நடத்துபவர், கூலித் தொழிலாளி, நாடக நடிகர் எனப் பல வேடங்கள் போட்டு மூன்று வருடங்களுக்கு ஜப்பானிலேயே வாழ்ந்து கொண்டிருந்தார் போஸ். பத்து நாட்களுக்கு மேல் ஒரு இடத்தில் தங்கியிருக்க முடியாது. போலீஸ் சுற்றி வளைத்துவிடும். தப்பிப் போக வேண்டும். பிரிட்டிஷ் உளவாளிகள் பின்தொடர்ந்து கொண்டே இருந்தார்கள். அந்த நாட்களில், கேரளாவில் இருந்து மேல்படிப்புக்காக டோக்கியோ வந்திருந்த நாயர்சான் என்று அழைக்கபடும், ஏ.எம். நாயரின் அறிமுகம் கிடைத்தது. அவர், ராஷ் பிகாரி போஸ் ஒளிந்து கொள்ள பல உதவிகள் செய்திருக்கிறார். டோக்கியோவில் நகமுரயா என்ற உணவகம் பிரபலமானது. அந்த உணவகத்தை நடத்தி வந்தவர் சோம அய்சோ. அவரும் ராஷ் பிகாரி ஒளிந்து கொள்ள இடம் கொடுத்து உதவினார். அந்த நாட்களில் அய்சோவின் மகளோடு ராஷ் பிகாரிக்கு காதல் ஏற்பட்டது. ஜப்பானிய பெண்ணைத் திருமணம் செய்து கொண்டால், பிரிட்டிஷ் போலீஸ் துரத்துதலில் இருந்து தப்பி விடலாம் என்பதற்காக சோமஅய்சோவின் மகளை திருமணம் செய்து கொண்டு ஜப்பானிய பிரஜையாகி விட்டார் போஸ். 
அத்துடன், நகமுரயா உணவகத்தில் இந்திய உணவுகளை ராஷ் பிகாரி அறிமுகம் செய்து வைத்தார். இன்றும் கூட, டோக்கியோவில் இந்திய உணவுவகைகளை தயாரிக்கும் புகழ்பெற்ற உணவகமாக நகமுரயா விளங்குகிறது. 1942-ல் ராஷ் பிகாரி போஸ், ஜப்பானில் உள்ள இந்திய மாணவர்களில் சுதந்திர வேட்கை கொண்டவர்களை ஒன்றிணைத்து ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தார். அதில், இந்தியா விடுதலை பெறுவதற்கு பிரிட்டிஷை எதிர்க்கும் வலிமையான ராணுவம் தேவை என்று அறிவித்தார். அதற்கான முதற்படியாக  இந்திய சுதந்திர லீக் ஒன்றை உருவாக்கினார். அதற்கு, ஜப்பான் அரசு உதவி செய்தது. 
ஜப்பானியர்களால் யுத்த முனையில் பிடிக்கப்பட்டு கைதிகளாக இருந்த இந்தியர்கள் மற்றும் விடுதலை வேட்கை கொண்டவர்கள் அத்தனை பேரையும் ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டதுதான், இந்திய தேசிய ராணுவம். மோகன் சிங் துணையோடு அதற்கு தலைமை பொறுப்பு ஏற்க நேதாஜி அழைக்கப்பட்டார். நேதாஜியை, ராஷ் பிகாரி தேர்வு செய்ததற்கு முக்கியக் காரணம், அவரும் தன்னைப் போல ஒரு சாகசமிக்க போராளியாக இருக்கிறார் என்பதே!
சிங்கப்பூரில் நடந்த விழாவில், இந்திய தேசிய ராணுவத்தின் தலைமைப் பொறுப்பை நேதாஜி  ஏற்றுக் கொண்டார். 80,000க்கும் மேலான இந்தியர்கள் அதில் இணைந்தனர். அதில், பாதிக்கும் மேலாக தமிழர்கள் இருந்தார்கள். பெண்களுக்கான தனிப்பிரிவும் அந்தப் படையில் இருந்தது. நேதாஜியின் தலைமையில் இந்திய தேசிய ராணுவம் எழுச்சியோடு மணிப்பூரின் கொகிமா மற்றும்  இம்பாலாவை நோக்கிச் சென்றது. மறுபுறம், ஜப்பானிய கூட்டுப்படை அந்தமானைக் கைப்பற்றி, அங்கே தேசிய ராணுவத்தின் புதிய ஆட்சி நடைமுறைப்படுத்தப்படுவதாக அறிவித்தது. இதன் கவர்னர் ஜெனரலாக கர்னல் லோகநாதன் நியமிக்கப்பட்டார்.
ஜப்பானியப் படைகள் உடனிருந்தே சூழ்ச்சி செய்து பின்வாங்கியதால், நேதாஜியின் 'டெல்லியைக் கைப்பற்றுவோம்’ என்ற திட்டம் முறியடிக்கப்பட்டது. இந்திய தேசிய ராணுவத்தைச் சேர்ந்த பலர் பிரிட்டிஷ் ராணுவத்தால் கைது செய்யப்பட்டு டெல்லியில் ஒரேநாளில் தூக்கிலிடப்பட்டார்கள். பெருங்கனவு ஒன்று கண்முன்னே சிதைவுற்றதை ராஷ் பிகாரி போஸ் உணர்ந்தார்.
இரண்டாம் உலகப்போர் காலத்தில், டோக்கியோ மீது விமானங்கள் குண்டுமழை பொழிந்தன.  மனைவி மற்றும் பிள்ளைகளை பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி விட்டு அவர் மட்டும் டோக்கியோ நகரில் இருந்தார். ஜனவரி 21, 1945-ல் ராஷ் பிகாரி போஸும் மரணம் அடைந்தார்.
பிரிட்டிஷ் அரசுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கிய ராஷ் பிகாரி போஸின் சுதந்திரக்கனவு அவர் வாழ்நாளில் நிறைவேறவில்லை. ஆனால், அவர் உருவாக்கிய உத்வேகம் அயல் நாடுகளில் வாழும் இந்தியர்களை ஒன்றிணைத்தது. மலேசியா, பர்மா, சிங்கப்பூரில் இருந்த இந்தியர்களை ஒரே அணியில் திரளச் செய்தது. வலிமைமிக்க அந்த இணைப்புக்கு காரணமாக ராஷ் பிகாரி இருந்தார் என்பதே அவரது தனிச்சிறப்பு.
ராஷ் பிகாரி போஸ் போராடி ஒன்று சேர்ந்த அந்த இணைப்பு, இன்று சிதறடிக்கப்பட்டிருப்பதோடு ராஷ் பிகாரி போஸின் வரலாறும் இளம்தலைமுறையினர் அறிந்து கொள்ள முடியாமல் இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டது.
வரலாற்று நிகழ்வுகளை எளிதாகக் கடந்து போய் விடும் வெறும் தகவலாக மாற்றி வைத்திருப்​பதுதான் ஒருவன் தன்னை இந்தியனாக உணரமுடியாத நிலைக்கு முக்கிய காரணம்.
********************************************************************************************

0 comments:

Post a Comment

Cricket

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010