'தானே’ புயலுக்கா பதுங்குவார் கழுகார்? வானிலை அறிக்கை பற்றியெல்லாம் கொஞ்சமும் சட்டை பண்ணாமல் நம் முன் ஆஜரானார்!
''நடக்கிற நடப்பு தெரிந்தால் மந்திரிகள் எல்லோரும் கவர்னருக்குக் கோயில் கட்டிக் கும்பிடு வார்கள் போல!'' என்று புதிர் போட்டார்.
''மழை நேரத்தில் மத்தாப்பு கொளுத்தாமல் மேட்டருக்கு வாரும்'' என்றோம்!
''சசிப்பெயர்ச்சிக்குப் பிறகு, முதல்வர் ஜெயலலிதாவுக்கு முக்கியச் செய்திகள் அனைத்தும் உடனுக்குடன் போய்ச் சேர்ந்து விடுகின்றன. அவரும் உடனுக்குடன் முடிவுகள் எடுக்கிறார் என்கிறார்கள். அவராகப் பல விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருக்கிறார். அதில் முக்கியமானது அமைச்சர்களின் செயல்பாடு. 'மந்திரிகளில் சுணக்கம் காட்டுபவர்கள் யார்?’, 'யார் மூலமாக பதவிப் பட்டியலுக்குள் வந்தார்கள்?’ என்பது போன்ற தகவல்களை சேகரித்துக் கொண்ட முதல் வர், ஒரு பெரிய லிஸ்ட் தயாரித்து உள்ளார். அதில் சுமார் 14 மந்திரிகளின் பெயர் இருக்கிறது!''
''இரண்டு இதழுக்கு முன்பே 11 மந்திரிகளுக்குக் கிலி என்றீரே..?''
''ஆமாம்! அதன் தொடர்ச்சியான விசாரணைப் படலம்தான் இப்போது நடக்கிறது... சந்தேகப் பட்டியலும் நீள்கிறது. 'திறமை, விசுவாசம் இல்லாத மந்திரிகளை பிரித்து எடுத்த முதல்வர், 'இவர்களை உடனடியாக நீக்கிவிட்டு, புதிய அமைச்சர்களை நியமிக்க வேண்டும்’ என்ற முடிவுக்கு இரண்டு நாட்களுக்கு முன் வந்தார். அப்போது, பிரதமர் தமிழக சுற்றுப்பயணத்தில் இருந்தார். பிரதமர் சென்றபிறகு அமைச்சரவை மாற்றத்தை வைத்துக் கொள்ளலாம் என்றும் முதல்வர் முடிவெடுத்தார். இது முன்கூட்டி, ஒரு தகவலாக ராஜ்பவனுக்குப் பரிமாறப்பட்டது. கவர்னரும் முதல்வரும் போனில் பேசிக் கொண்டதாகவும் சொல்கிறார்கள். அப்போது, கவர்னர் ரோசையா ஓர் ஆலோசனை சொன்னாராம்!''
''அப்படியா?''
''அந்த ஆலோசனை பொருத்தமான லாஜிக்காக இருந்ததாம். 'அடிக்கடி அமைச்சரவையை மாற்றுவது நல்லதல்ல. சுமார் மூன்று மாதங்களுக் காவது இந்த முடிவைத் தள்ளி வையுங்கள். அடிக்கடி மந்திரிகளை மாற்றினால், அரசாங்கம் ஸ்திரத்தன்மையில் இல்லை என்று அர்த்தம்’ என்பதாகச் சொன்னாராம். இதனால் முதல்வர் ஆழ்ந்த யோசனையில் இருக்கிறாராம். '11 முதல் 15 அமைச்சர்கள் வரைக்கும் மாற்றம் செய்தே ஆகவேண்டும் என்பதில் அம்மா உறுதியா இருக்காங்க. கவர்னர் இப்படிச் சொன்னதால் யோசிக்கிறாங்க. எப்படியும் ஜனவரி பாதி வரைக்கும் மந்திரிசபை மாற்றம் தள்ளிப் போகலாம். ஆனா, கட்டுச்சோத்துக்குள் பெருச் சாளிகளை மூன்று மாதமெல்லாம் அம்மா தங்கவிட மாட்டாங்க’ என்று சொல்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்!''
''அமைச்சர்களில் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட் டையன், நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத் போன்ற ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவருமே பீதியில் உறைந்து போய் உள்ளனர். அதனால், நித்தியகண்டமாக உலவி வருகிறார்கள் மந்திரிகள்! இதற்கு மத்தியில் இன்னொரு அதிர்ச்சி கரமான சம்பவம். 'மந்திரிகளின் வீடுகளில் 'அன்-அஃபிஷியல்' ரெய்டுகள் நடக்கின்றன’ என்பதுதான் அந்தச் செய்தி!''
''மந்திரிகள் வீட்டிலேயே மாநில அரசின் ரெய்டா?''
''முழுசாகக் கேளும். சசிகலா ஆதரவு பெற்ற சில மந்திரிகள் வீட்டில் குறிப்பிட்ட நபர்கள் நுழைந்து, 'என்ன வைத்துள்ளீர்கள்?’ என்று விசாரணை நடத்தினார்களாம். 'நிலவரம் கலவரமாக இருப்ப தால் வீட்டில் இருப்பவர்களும் ரியாக்ஷன் காட் டாமல் பயபக்தியாக பதில் அளித்து அனுப்பி வைக்கிறார்கள்’ என்றும் சொல்கிறார்கள்.''
''யார் இந்த ரெய்டைச் செய்வது?''
''ஓய்வு பெற்ற ஒரு போலீஸ் அதிகாரி தனது பிரைவேட் டிடெக்டிவ் டீமை வைத்து இந்த ரெய்டைச் நடத்துகிறார் என்கிறார்கள்!''
''தோட்டத்தில் வேறு என்ன மாற்றங்களாம்?''
''சசிகலாவுக்கு என மாடியில் பிரத்யேகமாக ஒரு அறை இருந்ததாம். அந்த அறையை முழுமையாக துடைத்தெடுத்து மாற்றி விட்டார்களாம். அதில் அவரது அப்பா, அம்மா படம் இருந்ததாம். அதுவும்அப்புறப்படுத்தப்பட்டு விட்டதாம். அதேபோல் கொடநாடு பங்களாவிலும் அவருக்கு தனிஅறை இருந்தது. அதையும் மாற்றி விட்டார்கள். இம்மாதிரியான தகவல்கள் சுடச்சுட சசிகலா குரூப்புக்கு சென்று விடுவதுதான் ஜெயலலிதாவால் தடுக்க முடியாத காரியமாக இருக்கிறது!''
''இன்னுமா?''
''ம்... இதிகாச நாயகன் பெயரைக் கொண்ட ஒருவர் சசிகலாவின் நம்பிக்கைக்கு உரியவர். அவரை ஏனோ இன்னும் மாற்றாமலே வைத்திருக்கிறார்கள். விட்ட குறை தொட்ட குறையாக சில தகவல்களைத் தெரிந்து கொள்ளத்தான் இப்படி என்று கேள்வி. ஆனால், அரண்மனை ரகசியங்கள் வெளியே கசி கிறதே என்பது விசுவாசிகளின் கவலை. முழுக்க முழுக்க தனக்கு நம்பிக்கையான படையை உருவாக் குவதில் ஜெயலலிதாவுக்கு இன்னும் கொஞ்ச காலம் ஆகலாம்!'' என்ற கழுகார்,
''குலோத்துங்கனைப் பற்றி இப்போது அதிகமாகப் பேச ஆரம்பித்து உள்ளார்கள். நடராஜனின் சகோதரியான ஆண்டாளின் மகன் தான் இந்த குலோத்துங்கன். இவர்தான் மிடாஸ் நிறுவனத்தின் முக்கியஸ்தர்களில் ஒருவர். அரசாங்க டாஸ் மாக்கே இவருடைய கண் அசைவில்தான் நடந்தது. இப்போது குலோத்துங்கனுக்கு கல்தா கொடுக்கப் பட்டு உள்ளதால் சில ரகசியங்கள் மூடியைத் திறந்துகொண்டு காற்றில் கசிகின்றன!''
''மோப்பம் பிடித்ததை 'ஃபுல்'லாகச் சொல் லும்!'' என்று சிரித்தோம்.
'டாஸ்மாக் விற்பனைக்கென 14 நிறுவனங்களிடம் இருந்து சரக்கு கொள்முதல் செய்கின்றனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்புவரை விஜய் மல்லையாவின் கம்பெனியிடம் இருந்து அதிக அளவில் சரக்கு கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், தற்போது எஸ்.என்.ஜெ. டிஸ்லரி மற்றும் மிடாஸ் கோல்டன் டிஸ்லரி ஆகிய நிறுவனங்களிடம் இருந்துதான் அதிகக் கொள்முதல் நடக்கிறது. எந்த நிறுவனம் அதிகமான கமிஷன் தருகிறதோ, அந்த நிறுவனத்திடம் இருந்து அதிகக் கொள்முதல் நடக்கும் என்ற உலகறிந்த உண்மை, நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கமிஷன் பேரத்தில் சரிபட்டு வராத நிறுவனங்களின் சரக்குகளை கடைகளுக்கே அனுப்பாமல், 'உங்கள் சரக்குக்கு டிமாண்ட் இல்லை' என்று, கொள்முதல் செய்வதைக் குறைத்து விடுகிறார்கள். இதில் எஸ்.என்.ஜெ. என்பது கருணாநிதியின் ஆசீர்வாதம் பெற்ற சினிமா தயாரிப்பாளர் ஒருவருக்குத் தொடர்பானது என்கிறார்கள்.''
''அரசியல் கடந்தது அல்லவா வியாபாரம்!''
''ம்... தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக்கிற்கு 41 குடோன்கள் உள்ளன. இந்தக் குடோன்களில் குலோத்துங்கனின் ஆட்கள்தான் வேலை பார்க்கிறார் களாம். இவர்களுக்குத் தனியாக சிம் கார்டு கொடுக்கப் பட்டுள்ளதாம். சென்னையில் இருந்து இந்த நம்பர் களுக்கு அழைப்பு போகும். அந்தக் குறிப்பிட்ட நம்பரில் வரும் அழைப்பை மட்டும்தான் அவர்களும் அட்டண்ட் செய்வார்கள். எந்தக் கம்பெனியின் சரக்கை கடைக்கு அனுப்ப வேண்டும் என அந்த அழைப்பு சொல்கிறதோ, அந்தச் சரக்கு மட்டும்தான் கடைகளுக்கு அனுப்பப்படுமாம். அந்த அளவுக்கு குலோத்துங்கன் கொடி பறந்துள்ளது!''
''கேட்டாலே கிர்ரடிக்கிறது!''
''பார் ஏலம், டெண்டர் என டாஸ்மாக் தொடர்பாக எந்த விஷயமாக இருந்தாலும் குலோத்துங்கன் கவனத் திற்கு வராமல் எதுவும் நடக்காது. கிராமத்தில் உள்ள கடைகளில் விற்பனை சரியாக இல்லை என்று நகரத்துக்கு மாற்றுவதிலும் பணம் ஏராளமாய் விளையாடி இருக்கிறது. இதுபோக, ஒரே இடத்தில் தொடர்ந்து வேலை பார்ப்பவர்களை வேறு ஊருக்கு மாற்றுவேன் என்று மிரட்டி பணம் பறிப்பது போன்ற அடாவடிகளும் நடந்துள்ளனவாம். சசிகலாவின் பெயரைச் சொல்லி, டாஸ்மாக் பொதுமேலாளர் மற்றும் ஐந்து மண்டலங்களின் மேலாளர்களைக் கைக்குள் போட்டுக்கொண்டுதான், இந்த வேலைகள் அத்தனையும் நடந்ததாம். மிடாஸில் எக்ஸிகியூட்டிவாக வேலை பார்க்கும் மூவர், இன்னமும் இவர் சொல்லும் வேலைகளைத்தான் செய்து முடிக்கிறார்கள் என்கிறார்கள்!''
''சரி... விட்ட இடத்துக்கு வருவோம். மன்னார்குடி குடும்பத்தை கவனித்து வளர்ந்த அதிகாரிகள் வட்டத் தில் ஏதும் மாற்றம் உண்டா?''
''தோட்டக்கலைத் துறை தொட்டு சென்சிடிவ்வான சில அதிகாரிகளின் இடமாற்றங்களை கவனித் திருப்பீரே... போலீஸைப் பொறுத்தவரை ஒட்டிப் பிறக்காத குறையாக நண்பர்களாக இருந்து, சென்னையை ஆட்டிப் படைத்த இரு அதிகாரிகளும் கூர்ந்து கவனிக்கப்படுகிறார்கள். அதில் ஒருவர் உரிமை அதிகம் இல்லாத இடத்துக்கு மாற்றப்பட்டாலும்... இன்னொருவருக்கு உணவாக அளிக்கப்பட்டுள்ள இடம் வெயிட்டானதுதானாம். 'இந்த இரு அதிகாரிகளுமே இப்போதும் தி.மு.க. தரப்பினர் மீதான கரிசனத்தோடு இருப்பவர்கள்தான். போதாக்குறைக்கு மன்னார்குடி மகுடிக்குத் தக்கபடி ஆடுபவர்கள்தான்' என்று ரிப்போர்ட் கொடுத்திருக்கிறாராம் ஒரு திடீர் ஆலோசகர். எப்படியோ... தலைமைச் செயலகம் தொடங்கி வரிசையாக மாற்றம் எதிர்பார்க்கலாம். இந்த இடைவெளிக்குள், முதல்வரின் செயலாளர் உட்பட முக்கியப் பதவிகளைக் கைப்பற்றுவதில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு இடையில் பலத்த போட்டி! கார்டனில் இப்போது செல்வாக்கு பெற்றுள்ள புதிய லாபியைச் சேர்ந்தவர்கள், 'முதல்வரின் செயலாளர்களில் ஒருவரோ, இருவரோ மாற்றப் படலாம்’ என்று சொல்லப்படுகிறது. அந்த இடத்துக்கு யாரை நியமிப்பது என்பது குறித்து முதல்வர் தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறாராம். இதில் ஒரு அங்கமாக, முதல்வரை சந்தித்த ஒரு ஆலோசகர், 'கடந்த தி.மு.க. ஆட்சியில் சிறப்பாகச் செயல்பட்டு இந்த ஆட்சி வந்தவுடன் ஒதுக்கி வைக்கப்பட்டு இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை முக்கியமான பதவிகளில் நியமித்தால் நிர்வாகம் சிறப்பாக நடக்கும். ஆட்சிக்கு நல்ல பெயரும் கிடைக்கும்’ என்று எடுத்துக்கூறினாராம். முதல்வரும் இதை குறித்துக் கொண்டாராம்.''
''அதாவது...?''
''முதல்வரின் செயலாளர்களான ஷீலா ப்ரியா, ராம்மோகன்ராவ் ஆகிய இருவரில் யாராவது ஒருவருக்கு மாற்றம் உறுதி என்கிறார்கள். 'சசிகலா தரப்பு தலையீடு இல்லாமல் போன இந்த நேரத்தில், தாங்கள் நினைப்பதை எல்லாம் செய்ய இவர்கள் துடிக்கிறார்கள்’ என்றும் சொல்கிறார்கள். 'முதல்வரைச் சுற்றி நேர்மையான அதிகாரிகள் டீம் உருவாகி விடக்கூடாது’ என்பதிலும் 'பழம் தின்று கொட்டை போட்ட' அதிகாரிகள் சிலர் தெளிவாக இருக்கிறார்கள். முக்கியமான, வட இந்திய அதிகாரிகள் அனைவருமே திடீர் குஷியாக இருப்பதன் பின்னணியும் உன்னிப்பாக கவனிக்கத் தக்கது!''
''முதல்வர், இனிமேல்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்''
''தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளராக இருந்த சந்தோஷ்பாபு, தூக்கியடிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் இருந்தார். கார்டன் மாற்றத்துக்குப் பிறகு, சிலர் செய்த அரசியலால்தான், சந்தோஷ் பாபுவுக்கு தேவையில்லாமல் பிரச்னை வந்தது என்று மேலிடத்துக்கு எடுத்துச் சொல்லப்பட... கடந்த வாரமே அவர் தோட்டக்கலைத் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டார். விவசாயத் துறையின் கூடுதல் இயக்குநராக இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட பொன்னுச்சாமி, தோட்டக்கலைத் துறையிலும் பல 'காரியங்களை’ச் செய்துள்ளார் என, ஆதாரங்களுடன் மேலிடத்துக்குப் புகார்கள் போயிருக்கின்றன. அவற்றையெல்லாம் தீவிரமாக விசாரித்து, தனி ரிப்போர்ட் கொடுக்க வேண்டும் என்பதுதான், சந்தோஷ் பாபுவுக்குத் தரப்பட்டுள்ள முதல் அசைன்மென்ட்.''
''அப்படியா?''
''செய்தித் துறையில் பொருட்காட்சிப் பிரிவு துணை இயக்குநராக இருப்பவர் ரவீந்திரன். நடராஜனின் நெருக்கமான நண்பர் என்ற முத்திரை இவருக்கு உண்டு. இவர், 2011 டிசம்பருடன் ஓய்வு பெறுகிறார். இப்போது எட்டு துணை இயக்குநர்களில் ஒருவரை இந்தப் பதவிக்கு இடமாற்றல் செய்வதுதான் முறை. ஆனால், உதவி இயக்குநராக இருக்கும் ஒருவரை பதவி உயர்வு கொடுத்து இந்த இடத்துக்குக் கொண்டுவர தீவிரமாக முயற்சி நடக்கிறது. ஆண்டுதோறும் ஜூலையில்தான் வருடாந்திர பதவி உயர்வு தரப்படும். அடுத்த பதவி உயர்வுக்கு தகுதி வரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அடுத்த ஜூலையில் மீண்டும் பதவி உயர்வு வழங்கப்படும். செய்தித் துறையின் தொடக்கம் முதல் இருந்துவரும் விதிமுறையை அப்பட்டமாக மீறி, துறையின் முக்கிய அதிகாரி இதைச் செய்வதில் தீவிரமாக இருக்கிறார். வெளியேற்றப்பட்ட பழைய அதிகாரி ஒருவருடன் நெருக்கமாக இருந்து காரியங்களைச் சாதித்துக்கொண்டவராம் இந்த அதிகாரி. இப்போதும் அவர் தன் அத்துமீறலை நிறுத்த வில்லை என கோட்டையில் புழுங்குகிறார்கள்'' என்று சொல்லிவிட்டுப் புறப்படத் தயாரான கழுகார்,
''இரண்டு மந்திரிகள் பற்றி கொசுறுத்தகவல் சொல்கிறேன். பிளைவுட் சப்ளையரான பாடி பில்டர் ஒருவரை வைத்துக்கொண்டு, ஆம்னி பஸ் வேகத்தில் அவசரமாக வசூலை வாரிக் கட்டிக் கொண்டு இருக்கிறார் ஒரு மந்திரி. மந்திரிக்கு பயப்படாதவர்கள்கூட அந்த பாடிபில்டருக்குப் பயப்படுகிறார்களாம். இன்னொரு மந்திரி, 'நான் பணம் கொடுத்து மந்திரி ஆனவன். இருக்கப் போறது கொஞ்ச நாள்தான். விட்ட பணத்தையாவது எடுத்துட்டுப் போயிடுறேன்’ என்று, செல்லமாகக் கெஞ்சிக் கொண்டு இருக்கிறாராம்'' என்றபடியே பறந்தார் கழுகார்!
படம்: சு.குமரேசன்
**********************************************************************************கழுகார் பதில்கள்
சுரேந்திரன், கோவை.
வெகுஜன ஊடகங்களில் வரும் கட்டுரைகளை சில எழுத்தாளர்கள் கேவலமாக நினைக்கிறார்களே?
பத்திரிகையாளன், எழுத்தாளன் இருவருக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை என்பதை காபிரியேல் கார்ஸியா மார்குவேஸ் வார்த்தை மூலமாக அறியலாம்!
தென்அமெரிக்கக் கண்டத்தின் மனசாட்சி என்று வர்ணிக்கப்பட்ட அவரது எழுத்துக்கள் இன்றைய நவீன இலக்கியவாதிகளால் அதிகம் விரும்பிப் படிக்கப்படுவது. 'இதழியலில் ஒரு தவறான தகவல் மொத்தக் கட்டுரையையும் சிதைத்து விடும். ஆனால், புனைகதையில் ஒரு சரியான தகவல் மொத்தப் படைப்புக்கும் நம்பகத்தன்மையைக் கொடுத்து விடுகிறது. அதுதான் வித்தியாசம்’ என்று சொன்ன மார்குவேஸ், 'இதழியல்தான் என்னை யதார்த்தத்தோடு தொடர்ந்து தொடர்பு கொள்ள வைத்திருக்கிறது. நான் 10 தினசரிகளுக்கும் ஓர் இதழுக்கும் வாரந்தோறும் கட்டுரை எழுதுகிறேன். அது மிகவும் உபயோகமாக இருக்கிறது. அது எனது ஆயுதத்தை கூர்மையாக்கிக் கொள்ள உதவுகிறது’ என்று சொன்னார். வெகுஜன ஊடகங் களில் நிற்கமுடியாமல் தோற்று ஓடியவர்கள் வேண்டுமானால் அப்படி நினைக்கலாம்!
சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.
கருணாநிதி குடும்பத்தினர் - சசிகலா குடும்பத்தினர் ஒப்பிடுக!
இரண்டு தரப்புமே இடத்தைக் கொடுத்தால் மடத்தை பறித்துக் கொள்ளக் கூடியவர்கள் என்பதைத்தான் நேரடியாகவே பார்த்தோமே!
வி.ஜி சத்தியநாராயணன், நங்கநல்லூர்.
பாட்டாளி மக்கள் கட்சி ஆரம்பித்து மக்களுக்காகச் செய்த சாதனை என்ன?
வன்னியர்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவுக்குள் கொண்டுவந்து, கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில், ஒட்டுமொத்த மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களுக்கு 20 சதவிகித இடஒதுக்கீடு கிடைப்பதற்குக் காரணம், பா.ம.க. நடத்திய போராட்டங்கள்தான்.
இரா.வளன், புனல்வாசல்.
பிளவுக்கும் பிரிவுக்கும் என்ன வித்தியாசம்?
சசிகலா மட்டும் விலகுவது பிரிவு. அவருக்குப் பின்னால் சில எம்.எல்.ஏ-க்கள் திரண்டால் அது பிளவு!
ஆ.முத்தரசன், ஸ்ரீவைகுண்டம்.
'அரசியல் அமைப்புச் சட்டப்படி நாடாளுமன்றத்தில்தான் சட்டம் இயற்றப்பட வேண்டும். தெருவில் சட்டம் இயற்ற முடியாது’ என்கிறாரே தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி?
நாடாளுமன்றத்தில் தேவதூதர்கள் உட்கார்ந்து சட்டத்தை இயற்றிவிட முடியாது. தெருவோர மக்களால் தேர்ந்து எடுக்கப்படும் பிரதிநிதிதான், சட்டம் இயற்ற யோசனைகளை சொல்கிறார். அவரது வாக்கு இல்லாமல் சட்டம் நிறைவேறவும் முடியாது. 'லோக்பால்’ என்றாலே அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல அதிகாரிகளுக்கும் அலர்ஜியாக இருப்பது குரேஷியின் வார்த்தைகள் மூலமாகத் தெரிகிறது!
சுப்புவேதையா சித்திரவேலு, கருப்பம்புலம்.
'45 ஆண்டு காலமா சினிமாக்காரங்க கையில் நாட்டைக் கொடுத்துட்டோம்’ என்று சொல்லப்படும் விமர்சனத்தை ஏற்றுக் கொள்கிறீர்களா?
சினிமாவுக்குச் சம்பந்தம் இல்லாதவர் கையில் பல மாநிலங்கள் இருக்கிறது. அவர்கள் எல்லாம் நியாயமாக, உண்மையாக, ஊழல் இல்லாமல், மக்களுக்காக ஆட்சியை நடத்துகிறார்களா? இல்லையே. பொதுவாகவே அரசியல் என்பது இந்தியா முழுக்க பிசினஸாக மாறிவிட்டது. எனவே, சினிமாக்காரர்களிடம் மட்டும் கோளாறு இல்லை. கொள்கை பேசியவர்கள் கையில் ஆட்சி போனாலும் அப்படித்தான் இருந்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை, அண்ணாவும் கருணாநிதியும் தங்களது கொள்கையைப் பரப்பும் வழிமுறை யாக சினிமாவைத் தேர்ந்தெடுத்து உள்ளே நுழைந்தவர்கள். கட்சியின் பொருளாளராக இருந்த கருணாநிதிக்கு, முதல்வராக வழி அமைத்துக் கொடுத்தபிறகும் சினிமாவில் நடித்துக் கொண்டுதான் இருந்தார் எம்.ஜி.ஆர். ஆனால், கருணாநிதியால் அவர் உதாசீனப்படுத்தப்பட்டதால் உணர்ச்சி வசப்பட்டு வெளியேறவும், தனிக்கட்சி தொடங்கவும் எம்.ஜி.ஆர். நிர்பந்திக்கப்பட்டார். அ.தி.மு.க. தலைமையைக் கட்டமைக்க இப்போது, ஜெயலலிதாவைவிட வேறு தலைவர் இல்லை. காலம் தனக்குத் தேவையான தலைமையை தானே தேர்ந்து எடுத்துக் கொள்கிறது. அந்தத் தலைமை உண்மையாக அமைந்தால் தமிழகத்துக்கு நல்லது. சினிமாக்காரர் கூடாது, வக்கீல் வேண்டாம், தொழிலதிபர் வரக்கூடாது என்பதெல்லாம் நிபந்தனைகளாக இருக்க முடியாது. இவை விதண்டாவாதங்கள்!
சகாயராஜ், தூத்துக்குடி.
'இளைஞர்கள் அனைவரும் கணிதம் பயில முன்வர வேண்டும்’ என்று பிரதமர் மன்மோகன்சிங் அழைப்பு விடுத்துள்ளாரே?
விலைவாசி நித்தமும் கூடிக் கொண்டே இருந்தால் கஷ்டப்பட்டு குடும்பம் நடத்த கணக்குகளை போட்டுப் போட்டுப் பார்த்தாக வேண்டும் அல்லவா?
எஸ். ஆறுமுகம், வள்ளியூர்.
உளவுத்துறை அதிகாரியாக அம்ரேஷ் பூஜாரி நியமிக்கப்பட்டு உள்ளாரே?
உளவுத் துறைக்கும் இந்த ஆட்சிக்கும் அவ்வள வாக பொருத்தம் இல்லாதது போல் தெரிகிறது! ராஜேந்திரன் போனார். பொன்.மாணிக்கவேல் வந்தார். தாமரைக்கண்ணன் உட்கார்ந்தார். இப்போது அம்ரேஷ் வந்துள்ளார். ஒரு லாபி போய்... ஒடிசா லாபி வந்துவிட்டதாகவே அதிகாரிகள் தரப்பு கிண்டல் செய்கிறது.
தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி, உள்துறைச் செயலாளர் ரமேஷ்ராம் மிஸ்ரா, சென்னைக் கமிஷனர் திரிபாதி, உளவுத்துறை ஐ.ஜி-யாக அம்ரேஷ் பூஜாரி... என முக்கியப் பதவிகள் அனைத்தும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கே தாரை வார்க்கப்படுவது தகுதி அடிப்படையிலா? தற்காலிகமானதா? இது இன்னொரு அதிகார மையத்தை உருவாக்க அடித்தளம் அமைத்து விடக்கூடாது!
சிவசங்கரன், திண்டிவனம்.
பிரதமரைச் சந்திக்கச் சென்ற கருணாநிதி, தன்னுடன் கனிமொழியை அழைத்துச் சென்றது சரியா?
அந்தக் குறையை மட்டும் வைப்பானேன் என்று அப்பா நினைத்தால் தப்பா?
லவ்லி ராஜா, கரியாக்கவுண்டனூர்.
சசிகலாவை நீக்கியதால் அ.தி.மு.க. உடைய வாய்ப்பு உள்ளதா?
அப்படி நடக்கப் போவதாகச் சிலர் பீதியைக் கிளப்பி, மீண்டும் தோட்டத்துடன் நெருக்கமாக முடியுமா என்று துடிக்கிறார்கள்!
********************************************************************************** 'பதவி'க் கனவில் அ.தி.மு.க. நிர்வாகிகள்!
டெல்டா கலாட்டா!
'காலையில் எழுந்து பல் துலக்குவதைக்கூட திவாகரனின் அனுமதியைப் பெற்றே செய்வார்கள்’ என்று கிண்டலாகச் சொல்லும் அளவுக்கு, பெரும்பாலான அ.தி.மு.க. நிர்வாகிகள் அவரது தீவிர விசுவாசிகளாகவே இருந்தார்கள். 'திவாகரனால் கிடைத்த பதவி பறிக்கப்பட்டு விடுமோ..’ என்று இன்றைய நிர்வாகிகள் பலரும் கலங்கித் தவிக்க... 'அடுத்து தங்களுக்குதான் அந்தப் பதவி’ என்று பலரும் கனவில் மிதக்க... டெல்டாவில் ஏக கலாட்டா!
இன்றைய நிலையில் உள்ளே வரப்போவதும், வெளியே செல்லப்போவதும் யார் என்பது குறித்து அ.தி.மு.க-வினர் சிலரிடம் தகவல் சேகரித்தோம்.
தஞ்சை மாவட்டம்!
இங்கு, மாவட்ட அமைச்சராக இருப்பவர் வைத்திலிங்கம். இவர் முதல்வரால், 'டிக்’ அடிக்கப்பட்டவர். ஆனாலும் வீட்டுவசதி வாரியத்துக்கு அமைச்சரான பிறகு, சசிகலா குடும்பத்துக்கு ரொம்பவே வளைந்து கொடுத்தார். அதனால் நிச்சயம் அவர் பதவி நீக்கம் செய்யப்படுவார் என்று உறுதியாக நம்புகிறார்கள்.
வைத்திலிங்கம் நீக்கப்படும் பட்சத்தில் யாருக்கு மந்திரி பதவி? ''தஞ்சாவூர் தொகுதி எம்.எல்.ஏ-வும், தஞ்சை வடக்கு மாவட்டத்தின் செயலாளருமான ரெங்கசாமிக்குத்தான் யோகம்'' என்று ஒரு தரப்பினர் சொல்ல... வேறு சிலரோ... ''மாவட்டச் செயலாளராக இருந்த தங்கமுத்து, சசி அண்ட் கோ-வுக்கு வளைந்து கொடுக்கலை என்பதால்தான், அவரைத் தூக்கிவிட்டு தங்கள் விசுவாசியான ரெங்கசாமியை மாவட்டச் செயலாளர் ஆக்கினாங்க. அப்படியே இந்தத் தேர்தலில் ஸீட்டும் கொடுத்து எம்.எல்.ஏ-வாகவும் ஆக்கினாங்க. சசி குடும்பத்தின் தீவிர விசுவாசியான அவருக்கு நிச்சயமா பதவி கொடுக்க மாட்டாங்க. அவரோட மாவட்டச் செயலாளர் பதவிக்கும் ஆபத்து காத்திருக்கு. அதைப் பறித்து, கும்பகோணம் ராமநாதனுக்கோ, பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ-வான துரைக்கண்ணுவிடமோ அம்மா கொடுக்கப் போறாங்க. முன்னாள் மா.செ-வான பொன்.த.மனோகரனுக்கும் வாய்ப்பு கிடைக்கலாம்'' என்று மாவட்ட நிலவரத்தை அலசுகிறார்கள்.
வைத்திலிங்கம் பதவி பறிக்கப்பட்டால், அமைச்சர் யோகம் பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ துரைக்கண்ணுவுக்கு கிடைக்கலாம் என்பது கட்சிக்காரர்களின் கணிப்பு. தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்தும் வைத்திலிங்கம் அகற்றப்பட்டால், சீனியரான துரை.கோவிந்தராஜனுக்கோ முன்னாள் எம்.எல்.ஏ-வான தங்கமுத்துவுக்கோதான் பதவி கிடைக்கும் என்கிறார்கள்.
திருவாரூர் மாவட்டம்!
இங்கு மாவட்டச் செயலாளரும், உணவுத் துறை அமைச்சருமாக இருப்பவர் ஆர்.காமராஜ். இவரின் மன்னார்குடி பாசம் உலகறிந்தது. மன்னார்குடி தொகுதியை தி.மு.க-விடம் பறிகொடுத்த காரணத்துக்காக இவரை மந்திரி ஆக்காமல் வைத்திருந்தார் அம்மா. ஆனால், உள்ளாட்சித் தேர்தல் வெற்றிகளைக் காண்பித்து, இவருக்கு பதவி வாங்கிக் கொடுத்தது திவாகரன் வட்டாரம். அதனால், தற்போது ஜெ-வின் தீவிர கண்காணிப்பில் இருக்கும் இவரது பதவிகள் விரைவில் பறிக்கப்படலாம் என்கிறார்கள். மாவட்டத்தில் இருக்கும் ஒரே அ.தி.மு.க. எம்.எல்.ஏ. இவர் என்பதால், இவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டால், மாவட்டத்தின் பிரதிநிதித்துவமே பறிபோய்விடும்.
இவரது மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டால், முன்னாள் மாவட்டச் செயலாளர் எஸ்.காமராஜுக்குதான் அந்த வாய்ப்பு கிடைக்கும் என்கிறார்கள். அப்படி இல்லாத பட்சத்தில், காங்கிரஸில் இருந்து அ.தி.மு.க-வுக்கு கொண்டுவரப்பட்டு, கடந்த தேர்தலில் மன்னார்குடி தொகுதியில் ஸீட்டும் வழங்கப்பட்ட சிவ.ராஜமாணிக்கம் அல்லது திருவாரூர் நகரச் செயலாளர் ஆர்.டி.மூர்த்தி ஆகியோரில் ஒருவருக்கு கிடைக்கலாம். கருணாநிதியை எதிர்த்துப் போட்டியிட்ட குடவாசல் ராஜேந்திரன், மாவட்டப் பொருளாளர் பன்னீர்செல்வம் ஆகியோரின் பெயர்களும் பரபரப்பாக அடிபடுகிறது.
நாகை மாவட்டம்!
நாகப்பட்டினம் தொகுதியில் வென்ற ஜெயபால் மீன்வளத் துறை அமைச்சராக இருக்கிறார். அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்களில் மூவர்தான் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். அதில், ஜெயகுமாரை சபாநாயகர் ஆக்கிவிட்டு, ஜெயபாலை அமைச்சர் ஆக்கினார் ஜெயலலிதா. இன்னொருவர் குப்பன். அம்மா தயவில் அமைச்சராக ஆனாலும், ஏரியாவில் மன்னார்குடிக்காரர்களின் தயவு இல்லாமல் காலம் தள்ளமுடியாது என்பதால், அவர்களை அனுசரித்தே காலம் ஓட்டிவந்தார். ஆனாலும், 'குற்றச்சாட்டுக்கள் எதிலும் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதாலும், மீனவர்கள் மேல் ஜெ-வுக்கு உள்ள கரிசனத்தாலும் ஜெயபாலின் அமைச்சர் பதவிக்கு ஆபத்து எதுவும் இல்லை’ என்றே சொல்கிறார்கள் கட்சிக்காரர்கள்.
மாவட்ட அமைச்சருக்கு ஆபத்து இல்லை என்றாலும், மாவட்டச் செயலாளருக்கு தலைக்குமேல் கத்தி தொங்குகிறது. ''வடக்கு, தெற்குன்னு ரெண்டு மாவட்டமா இருந்ததை ஒண்ணாக்கி, அதுக்கு மாவட்டச் செயலாளரா ஓ.எஸ்.மணியனை கொண்டுவந்து உட்கார வைச்சவர் திவாகரன். அதற்கு விசுவாசமாகவே ஓ.எஸ்.மணியனும் நடந்துக் கிட்டார். அவரை மாத்தினாத்தான் திரும்பவும் கட்சி தன் கட்டுப்பாட்டுக்கு வரும்னு அம்மா முடிவு எடுத்திருக்காங்க. அதனால் கூடிய சீக்கிரம் முன்னாள் அமைச்சர் ஜீவானந்தத்தை மா.செ-வாக அறிவிக்கப் போகிறார்'' என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் விஜயபாலன், ரெங்கநாதன் ஆகியோரும்கூட மாவட்டச் செயலாளர் கனவில் இருக்கிறார்கள்.
டெல்டாவில் மாற்றம் வருவது உறுதி என்றே தெரிகிறது. அது பொதுக்குழுவுக்குப் பிறகு நடக் கும். அதுவரை நிர்வாகிகள் வயிற்றில் கடமுடாதான்!
- கரு.முத்து
படங்கள்: கே.குணசீலன்
யானைக்குப் பாசம்... காளைக்குத் தடை!
மத்திய அரசின் 'தமிழக' வஞ்சனை
அந்தக் குழுவின் மாநில நிறுவனர் பேராசிரியர் அம்பலத்தரசுவிடம் பேசினோம். '1960-ம் ஆண்டு மிருகவதை சட்டத்தின் கீழ் சிங்கம், புலி, சிறுத்தை, குரங்கு போன்ற வனவிலங்குகளை காட்சிப் பொருளாக வைத்து வித்தை காட்டுவதை மத்திய அரசு தடை செய்தது. இது முழுக்க முழுக்க வனவிலங்குகளை பாதுகாக்கும் வகையில் இயற்றப்பட்ட சட்டம். ஆனால் திடீரென கடந்த ஜூலை மாதம், 'ஜல்லிக்கட்டில் காளைகள் வதை செய்யப்படுகின்றன’ என்று தவறான வாதத்தை முன் வைத்து வனவிலங்குகள் வரிசையில் ஜல்லிக்கட்டு காளைகளையும் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முன்னாள் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் சேர்த்து உள்ளார். இதனால் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
ஆனால் காங்கிரஸ் ஆட்சி நடக்கும் கேரளாவில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில்யானைகளை வைத்து பல்வேறு வித்தைகள் காட்டப்படுகின்றன. இதற்காக யானைகள் பல வகைகளிலும் கொடுமைப் படுத்தப்படுகிறது. யானைகளை மிகவும் சித்ரவதை செய்துதான் பழக்கப்படுத்துகிறார்கள். அப்படி இருந்தாலும், பொது இடங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளின்போது யானைகளுக்கு மதம் பிடிப்பது அடிக்கடி நடக்கிறது. பாகன்களை மட்டு மின்றி பார்வையாளர்களை யும் யானைகள் வதம் செய்கின்றன. கண்ணில் தென்படுபவர்களை துதிக்கை யால் தூக்கி எறிவதும், கால்களால் மிதித்து துவம்சம் செய்வதும் வீடு, கடைகளை சேதப்படுத்துவதும் தொடர்ந்து நடக்கிறது.
ஜல்லிக்கட்டு காளைகளோடு ஒப்பிடும்போது யானைகள்தான் பாரம்பரியமிக்க, பாதுகாக்கப் படவேண்டிய விலங்கு. அப்படிப்பட்ட யானைகள் துன்புறுத்துவது குறித்து கொஞ்சமும் அக்கறை காட்டாத மத்திய அரசு, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை மட்டும் தடை செய்து காளைகளைக் காப்பாற்ற நினைப்பது என்ன நியாயம்?
கேரளாவுக்கு அந்த மாநிலத்தின் கலாசாரம் முக்கியம் என்றால் நம் தமிழ் நாட்டுக்கு தமிழர்களின் வீரக் கலாசாரம் முக்கியம் இல்லையா? இந்த ஓரவஞ்சனைக்கு காரணம் மத்திய அரசின் பல்வேறு துறைகளிலும் மலையாளிகளின் ஆதிக்கம் நிரம்பி வழிவதுதான். அந்த அதிகாரிகளின் ஆதரவு இருப்பதால்தான், இன்னமும் இந்த பட்டியலில் யானைகள் சேர்க்கப்படாமல் உள்ளது. முல்லைப் பெரியாறு அணை விவகாரத் தில் ஒன்று திரண்டு போரா டும் நம் தமிழக மக்கள் ஜல்லிக்கட்டுவிஷயத்திலும் மத்திய அரசுக்கு நமது எதிர்ப் பைப் பலமாக பதிவு செய்து, நமது பாரம்பரிய ஜல்லிக்கட்டு விளையாட்டை மீட்க வேண்டும்' என்று ஆதங்கப்பட்டார்.
இந்தக் குழுவின் மாநிலச் செயலாளர் ஒண்டிராஜ், 'இதெற் கெல்லாம் காரணம் தமிழ் நாட்டை சேர்ந்த நடிகையும், ராஜ்யசபா எம்.பி-யுமான ஹேம மாலினிதான். அவர்தான் ஜல்லிக்கட்டு விளையாட்டை மிருகவதை சட்டத்தின் கீழ் தடை செய்யவேண்டும் என்று மனு அளித்தார். மத்திய அமைச்சரும் ஹேமமாலினியை திருப்திபடுத்தும் வகையில் எவரையும் கலந்து ஆலோசிக்காமல் உடனடியாக தடை விதித்து ஆணை பிறப்பித்து விட்டார்.
ஏற்கெனவே தமிழ்நாட்டில் கருணாநிதி ஆட்சியில் 2009-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு தடை அவசர சட்டம் இயற்றி அதன் மூலம் ஜல்லிக்கட்டு நடத்த கடும் நிபந்தனைகள் விதித்தது மாநில அரசு. லட்சக் கணக்கான ரூபாய் டெபாசிட் தொகை கட்டினால்தான் அனுமதி கிடைக்கும் என்பதால் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத இக்கட்டான சூழ்நிலைதான் நிலவுகிறது. பல மாவட்டத்திலும் 300 இடங்களில் நடந்துகொண்டிருந்த ஜல்லிக்கட்டு, தற்போது 20 இடங்களில்கூட நடக்கவில்லை. ஆனால் அதையும் தடுக்கும் வகையில் அமைந்துள்ளது மத்திய அரசின் புதிய தடை உத்தரவு. ஆகவே தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மாதான், இந்த விவகாரத்தில் தலையிட்டு நமது பாரம்பரிய விளையாட்டைக் காப்பாற்றவேண்டும். தமிழர்களின் வீரத்தை உலகுக்கு அறிவிக்கும் ஒரே நிகழ்ச்சியும் தடைபடக்கூடாது'' என்று கோரிக்கை வைத்தார்.
இந்தக் குழுவினர் சமீபத்தில் டெல்லி சென்று தற்போதைய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் மற்றும் ராஜ்யசபா எம்.பி. சுதர்சன நாச்சியப்பன் ஆகியோரிடம் மனு கொடுத்து இருக்கிறார்கள். நல்லதே நடக்கும் என்று நம்பிக்கையோடு காத்துக் கிடக்கிறார்கள்.
தண்ணீர் என்றாலும் யானை என்றாலும் கேரளத்தின் பக்கம் நிற்கும் மத்திய அரசு, ஜல்லிக்கட்டு காளைகள் விஷயத்திலாவது தமிழர்கள் உணர்வை மதிக்க வேண்டும்!
- க.ராஜீவ்காந்தி
படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்
கூட்டணி என்றால் கன்னத்தில் அறைவேன்..
சுளீர் ராமதாஸ்
கடந்த 27-ம் தேதி தர்மபுரியில் நடந்த பா.ம.க. பொதுக்குழுவில் மைக் பிடித்த ராமதாஸ், ''தனித்தே செயல்பட்டு வந்த பா.ம.க. 1996-ம் ஆண்டுதான் கூட்டணிக்கு முடிவெடுத்து, தனது கொள்கையைக் குழிதோண்டி புதைத்தது. இதுதான் நாம் செய்த தவறு. செய்த தவறில் இருந்து பாடம் கற்றுக் கொண்டோம். இனி, 'திராவிடக் கட்சிகளோடு கூட்டணி சேரலாம்’ என்று எந்த பா.ம.க-காரன் சொன்னாலும், அவன் கன்னத்தில் பளார் என அறை விடுங்கள். யானையை நமது சின்னமாக வைத்திருந்தபோதுகூட ஒன்பது சதவிகிதத்துக்குக் குறையாத ஓட்டுவங்கி வைத்திருந்தோம். ஆனால், மாம் பழத்துக்கு மாறிய பிறகு கட்சியின் வளர்ச்சி சறுக்கு விளையாட்டாகி விட்டது. 'புதிய அரசியல்.. புதிய நம்பிக்கை’ என்று இப்போது நாம் புறப்பட்டிருப்பது சரிதான். ஆனால், அதற்காக நாம் செய்ய வேண்டிய காரியங்கள் நிறையவே இருக்கிறது.
வன்னிய கிராமங்களில் குறைந்தபட்சம் 10-ம் வகுப்புக்கு மேல் படித்த இளைஞர்கள் அனை வரையும் கட்சியின் உறுப்பினர் ஆக்குங்கள். இது மாதிரி ஒன்றியத்துக்கு 12 ஆயிரம் பேர், சட்டமன்றத் தொகுதிக்கு 50 ஆயிரம் பேர், நாடாளுமன்றத் தொகுதிக்கு மூணு லட்சம் பேரை உறுப்பினராக சேருங்கள். புதிய உறுப்பினர்களை கட்சியில் சேர்க்குறப்போ, 'அப்பா, அம்மா, குலதெய்வத்தின் மேல் ஆணையாக, ஆயுள் முழுக்க பா.ம.க-வில் இருந்து கட்சி வளர்ச்சிக்காகப் பாடுபடுவேன்’ என்று ஒவ்வொருவரிடமும் சத்தியம் வாங்குங்கள்.
புதுசா சேரும் உறுப்பினர்களை, 'பாட்டாளி இளைஞர் சங்கம்’, 'பாட்டாளி இளம்பெண்கள் சங்கம்’, 'தமிழ்நாடு மாணவர்கள் சங்கம்’, 'வன்னியர் இளைஞர் படை’ என்று நான்கு பிரிவாகப் பிரிச்சு பயிற்சி தரணும். அவங்க ஒவ்வொருத்தரும் புதுசா 50 நபர்களை கட்சிக்கு உறுப்பினராக்கி விடணும். இதை எல்லாம் செஞ்சு காட்டுங்க.. அப்புறம் 2014-ல் தமிழ்நாட்டின் முதல்வர் நாற்காலியில் கண்டிப்பா பா.ம.க-வைச் சேர்ந்த ஒரு வன்னியன்தான் இருப் பான். இதை இன்றே சீரியஸாக எடுத்துக்கிட்டு,எல்லோரும் செயல்பட ஆரம்பியுங்க. இதுவரை ஆட்சிக்கு வந்த 30 முதலமைச்சர்களில் ஒருத்தர்கூட வன்னியர் இல்லைங்கிற ஆதங்கத்தைத் துடைக்க இதுதான் ஒரே வழி. அதற்கான முன்னோட்டமாக நமது பலத்தை ஜனவரி 8-ல் தர்மபுரியில் நம் சின்ன அய்யா தலைமையில் நடக்கும் கூட்டத்தில் வலுப்படுத்திக் காட்டுங்கள்'' என்று முழங்கினார்.
சேலம் பி.சி.சி., ஹாலில் 28-ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் பேசிய பேராசிரியர் செல்வக் குமார், ''ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் 50 ஆயிரம் வாக்காளர்களைச் சேர்த்தால் நமக்கு வெற்றி உறுதி. அதற்காக ஒவ்வொரு கிராமத்திலும் படித்த வன்னிய வாக்காளர்களைச் சேர்க்க வேண்டும். அவர்களுக்கு ஐயா வைத்திருக்கிற பட்டப்பெயர் முருகன். பத்து முருகன்களுக்கு ஒரு சூப்பர்வைசர். அவருக்கு ஐயா வைத்திருக்கும் பட்டப் பெயர் முருகேசன். இந்த முருகனுக்கும், முருகே சனுக்கும் தலைமையில் இருந்து துண்டறிக்கை அனுப்புவோம். அதைக் கிராம மக்களிடம் கொடுத்து படிக்கச் சொல்ல வேண்டும். படிக்கத் தெரி யாதவர்களுக்கு படித்துக் காட்ட வேண்டும். சூடு சொரணை வர்ற மாதிரிதான் அந்த துண்டறிக்கையில் வாசகங்கள் இருக்கும். அந்தத் துண்டறிக்கையை படித்தவன் உண்மை யான வன்னியனுக்குப் பிறந்திருந்தால், நம் கட்சியில் சேர்ந்துடுவான்'' என்று முன்னோட்டம் கொடுத்தார்.
அடுத்து மைக் பிடித்த ராமதாஸ். ''நாம் ஆதரவு தந்ததால்தான் இரண்டு திராவிடக் கட்சிகளும் இந்த நாட்டை குட்டிச்சுவர் ஆக்கிவிட்டார்கள். சின்னா பின்னமாக்கி விட்டார்கள். மதுவைக் கொடுத்து மகளிர் தாலியை அறுத்து விட்டார்கள். சினிமாவைக் கொடுத்து பண்பாட்டைக் கெடுத்து விட்டார்கள். இதை எல்லாம் களைய, நாம் தனியாக நிற்க வேண்டும் என்ற எண்ணம் பிறந்தது. இதற்கு பொதுமக்களிடம் இருந்தும், நம் வன்னியர்களிடம் இருந்தும் பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்த முடிவை 2009-ல் எடுத்திருந்தால் இன்று நாம்தான் ஆளுங்கட்சி அல்லது எதிர்கட்சியாக இருந்திருப்போம். 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும், 2016 சட்டமன்றத் தேர்தலிலும் நாம்தான் வெற்றி பெறுவோம். இதுதான் நம் இலக்கு'' என்று, பேச்சை நிறைவு செய்தார்.
'பென்னாகரம் தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலில் தொகுதிவாசிகளிடம் ரொம்பவே வளைய வந்தார் பண்ருட்டி வேல்முருகன். அவர் பா.ம.க-வில் இருந்து வெளியேறி புதுக்கட்சி கோஷம் எழுப்பி வரும் நிலை யில் பா.ம.க-வினர் யாரும் அவருக்குப் பின்னால் போய்விடக் கூடாது என்ற பயமே அய்யாவின் இந்த திடீர் சுற்றுப் பயணத்துக்கு காரணம்’ என்று கூட்டத்துக்கு வந்த பா.ம.க-வினர் சிலரே கமென்ட் அடித்தபடி கலைந்தனர்.
- எஸ்.ராஜாசெல்லம், வீ.கே.ரமேஷ்
படங்கள்: மகா.தமிழ்பிரபாகரன்
''எங்கள் கல்லூரி மாணவர் ஒவ்வொருவருக்கும் 35 லட்சம் ரூபாய்!''
கடந்த 21.12.2011 ஜூ.வி. இதழில் எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் இருக்கும் குறைபாடுகளை சுட்டிக்காட்டி, ஒரு கட்டுரை வெளியிட்டு இருந்தோம். ''மொக்கை காலேஜ்'' என்ற தலைப்பில் வெளியான அந்தக் கட்டுரைக்கு விளக்கம் அளித்து இருக்கிறார், அந்தக் கல்லூரியில் படிக்கும் மூன்றாம் ஆண்டு இயக்குதல் பிரிவைச் சேர்ந்த மாணவர் பேரவைத் தலைவர் அ.இன்னாசிப் பாண்டியன்.
''எம்.ஜி.ஆர். அரசு திரைப்படக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு 52 வருடங்களுக்கு மேலாகிறது. யூகிசேது, நாசர், ஆபாவாணன், ஆர்.கே.செல்வமணி, பி.சி.ஸ்ரீராம், அருண் பாண்டியன், சுஹாசினி மணிரத்னம், ஆர்.வி. உதயகுமார், தரணி, 'ஜெயம்’ ராஜா, 'ஈரம்’ அறிவழகன், இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் என்று கணக்கிட முடியாத பல கலைஞர்களையும், தொழில் நுட்பக் கலைஞர்களையும் இந்தக் கல்லூரி உருவாக்கியுள்ளது.
எங்கள் கல்லூரியில் குறைகள் இருக்கிறது என்பதை மறுப்பதற்கு இல்லை. அதேபோல், எங்கள் கல்லூரி மாணவர்களுக்கு இருக்கும் அதிநவீன வசதிகள் இந்தியாவில் எங்கும் இல்லை என்பதும் நூற்றுக்கு நூறு உண்மை. இங்கு பயிலும் ஒவ்வொரு மாணவருக்கும் அரசு 35 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவிடுகிறது. அரசின் கவனத்துக்கு எங்கள் கல்லூரியின் குறைபாடுகள் சென்று சில நன்மைகள் ஏற்படும் என்றாலும், நீங்கள் கொடுத்திருக்கும் தலைப்பு மாணவர்களிடையே பெரும் வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
மசூதி நிலத்தில் ஊழல் செய்தாரா முத்தவல்லி?
திருவண்ணாமலை போராட்டம்
ஆர்ப்பாட்டம் செய்திருக்கும் மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்த ஷபீர் அகமதுவை சந்தித்தோம். ''திருவண்ணாமலை மத்தலாங்குளத் தெருவில் இருக்கும் நவாப் சந்தாமியான் மசூதிக்கு சுமார் 300 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த மசூதிக்கு முத்தவல்லியாக 18 ஆண்டுகளாக இருக்கிறார் சையத்யாசின். இந்த மசூதிக்கு வரும் வருமானங்களுக்கு அவர் சரியான கணக்கு காட்டியது இல்லை. 'பொய்க் கணக்கு காட்டி ஊழல் செய்துள்ளார்’ என்று அரசு தணிக்கையாளர்களே சொல்லியுள்ளார்கள்.
மசூதிக்குச் சொந்தமான சுமார் 65 ஏக்கர் நிலம் எங்கே போனது என்றே தெரியவில்லை. வீட்டுமனை தருகிறேன் என்று சுமார் 150 பேரிடம் பணம் பெற்றுக்கொண்டு, அவர்களுக்கு அடிப்படை வசதிஇல்லாத மசூதி நிலத்தை வழங்கி ஏமாற்று வேலை செய்துள்ளார். தனியாக அவரை எதிர்த்துப் போராட முடியாது என்பதால், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் கண்டனப் போராட்டம் நடத்தி இருக்கிறோம்'' என்றார் காட்டமாக.
போராட்டத்தில் கலந்துகொண்ட த.மு.மு.க. மாநில துணை செயலாளர் கோவை செய்யது, ''சையத்யாசின் பல வருடங்களாக, அதே பதவியில் இருந்து பல முறைகேடுகளைச் செய்துள்ளார். மசூதிக்குச் சொந்தமான நிலங்களை எல்லாம் அவர் உடனே மீட்க வேண்டும். அவரை மாற்றிவிட்டு புதிய முத்தவல்லியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்'' என்றார் ஆவேசமாக.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து சையத்யாசினிடம் கேட்டோம். ''என் மீது இப்படி புகார் கிளம்புவதற்குக் காரணம், ஷபீர் அகமதுதான். அவர் தன் கட்சிக்காக, ஒரு வேன் வாங்க வேண்டும் என்று ஒரு பெரிய தொகையைக் கேட்டார். நான் தர மறுத்துவிட்டேன். மேலும் அவருக்கு வேண்டப்பட்டவர் தேர்தலில் நின்றபோது, ஆதரவு தரச் சொல்லி கேட்டார். நான் அ.தி.மு.க-வில் இருப்பதால் மறுத்துவிட்டேன். அதனால்தான் என் மீது அபாண்டமான பழிகளைச் சுமத்தி வருகிறார். நான் முத்தவல்லியாக இருந்தவரை, எந்தத் தவறும் நடந்ததில்லை. கடந்த வருடம் வரை அரசாங்க ஆடிட் செய்துள்ளேன். சில வருடங்களுக்கு முன் கணக்கில் சில தவறுகள் இருப்பதாகச் சொல்லி இருந்தார்கள். அதற்கும் நான் சரியான விளக்கம் சொல்லிவிட்டேன். நிலம் விற்பனை செய்யப்பட்டது எல்லாமே முறைப்படிதான் நடந்துள்ளது. இந்த மசூதி நிலத்தில் இருக்கும் ஆக்கிரமிப்புக்கள் எல்லாம் நான் முத்தவல்லியாக வருவதற்கு முன்பே நடந்தவை. அந்த ஆக்கிரமிப்புகளைத் திரும்பப் பெற கோர்ட்டில் கேஸ் நடந்து வருகிறது. நான் இந்த மசூதியை விட்டு போவதற்குள் மசூதி நிலங்களை கண்டிப்பாக திரும்ப பெற்றுவிடுவேன்'' என்று சொன்னார்.
நல்லது நடக்கும் என்றே காத்திருப்போம்!
- கோ.செந்தில்குமார்
படங்கள்: பா.கந்தகுமார்.
காட்டுக்குள் பள்ளிக்கூடமா?
பாகவெளி பதற்றம்
பாகவெளி ஊராட்சி மன்றத் தலைவி சிவகாமி ராமுவை சந்தித்தோம். ''எங்கள் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி தரம் உயர்த்தப்பட்டு, உயர்நிலைப் பள்ளியாக அறிவிக்கப்பட்டது. அப்போதைய ஊராட்சி மன்றத் தலைவரான மூர்த்தி, உயர்நிலைப் பள்ளிக்காக இடம் தேடினார். ஊருக்குள் முதலில் இடம் தேர்வானது. ஆனால் ஏனோ, 'அந்த இடம் கட்டடம் கட்டத் தகுதி அற்றது’ என்று கூறிவிட்டார். பிறகு, தன் செல்வாக்கைப் பயன்படுத்தி, ஊரில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இடத்தில், பள்ளிக்கான கட்டடம் கட்ட அனுமதி வாங்கிவிட்டார். அது, பக்கிரி மலை அடிவாரத்துக்கும் மகேந்திரவாடி கால்வாய் காடுவளர்ப்பு வனப்பகுதிக்கும் இடையில் உள்ள குவாரி புறம்போக்கு இடம்.
மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் சென்று வருவதற்குக் கொஞ்சமும் பாதுகாப்பு இல்லாத இடம். அதனால் ஊருக்குள்ளேயே தகுதியான இடத்தில் பள்ளிக் கட்டடம் கட்ட அனுமதி வழங்க வேண்டும். ஊருக்குள்ளேயே உயர்நிலைப் பள்ளிக்கூடம் அமைக்க கருணை உள்ளத்தோடு முதல்வர் அம்மா உத்தரவு இடுவார் என்று நம்புகிறோம்!'' என்றார்.
ஊர் நாட்டாமைகளான துளசிரங்கன், திருமால் இருவரும், ''பக்கிரிமலை அடிவாரத்தில் பள்ளிக்கான கட்டடம் கட்டுவதில் ஊர்க்காரர்கள் யாருக்குமே உடன்பாடு இல்லை. ஊருக்குள்ளேயே பள்ளிக் கட்டடம் கட்டுவதற்கு தனியார் ஒருவர் தன்னுடைய, சுமார் 70 லட்சம் மதிப்புள்ள 2 ஏக்கர் நிலத்தைபள்ளிக்கு நன்கொடையாக வழங்கவும் ஊர்க்கூட்டத்தில் உறுதி அளித்துள்ளார். எனவே, அரசு அதிகாரிகள் காட்டுப்பகுதிக்குள் பள்ளிக் கட்டடம் கட்டுவதை நிறுத்தி, ஊருக்குள் உயர்நிலைப் பள்ளிக் கட்டடம் அமைய துரித நடவடிக்கை எடுக்கக் கோருகிறோம்'' என்றனர்.
ஊராட்சியின் முன்னாள் தலைவர் பி.வி.மூர்த்தியிடம் பேசினோம். ''ஊருக்குள் உள்ள பொதுவான தோப்பு புறம்போக்கு இடத்தை சீர்படுத்தி பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு பூமி பூஜை போட்டோம். ஆனால், அந்த இடத்துக்குப் போகிற வழியில் உள்ள நிலத்துக்கு சொந்தக்காரர், நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து விட்டார். அதனால்தான், அங்கு கட்ட முடியவில்லை. மாற்று ஏற்பாடாக, பக்கிரிமலை அடிவாரத்தில் உள்ள இடத்தை தேர்வு செய்தோம். இந்த இடத்தை பாதுகாப்பற்றது என்று சொல்வது பொய் பிரசாரம். பாதுகாப்புக்காக பள்ளியைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்ட திட்டமிடப்பட்டு இருக்கிறது. மகேந்திரவாடி கால்வாய்க்கு குறுக்கே போக்குவரத்துக்காக சிறுபாலம் அமைத்துக் கொடுப்பதற்கும் அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். பாலம் அமைத்துவிட்டால் பாகவெளி சாலையில் இருந்து பள்ளிக்கு செல்வதற்கு எந்த சிரமமும் இருக்காது.!'' என்று சொன்னார்.
மக்களின் சந்தேகம் தீர்க்கப்பட்ட பின்னரே, பள்ளி கட்டப்பட வேண்டும்!
- ரியாஸ், படங்கள்: ச.வெங்கடேசன்
கிறிஸ்தவக் கல்லறைகளை இடித்தாரா அமைச்சர்?
செந்தில் பாலாஜிக்கு எதிராக பரபர குற்றச்சாட்டு
''என் மனைவியை இங்கேதான் அடக்கம் செய்தேன். அந்தக் கல்லறையையும் இடிச்சுட்டாங்க'' என்று, இடிக்கப்பட்ட கல்லறைகளை அழைத்துச் சென்று காட்டிய பாஸ்டர் மோசஸ் துரைக்கண், ''30 வருடங்களுக்கு மேலாக ஆர்.சி., சி.எஸ்.ஐ. பிரிவுகளைச் சேராத கிறிஸ்தவர்களுக்கு கரூரில் எங்கேயும் கல்லறைத் தோட்டம் இல்லை. எங்கள் வேண்டுகோளை ஏற்று, முதன்முதலில் பாலமாபுரத்தில் உள்ள இடுகாட்டில் அனுமதி கொடுத்து, அதனை 92-ல் ரத்து செய்தார்கள். அதன் பிறகு திருமாநிலையூரில் 25 சென்ட் இடம் கொடுத்து, அடக்கம் செய்யச் சொன்னார்கள். பின்பு, அந்த இடத்தையும் பறித்துக்கொண்டார்கள். கடைசியாக, 2001-ல் அப்போதைய ஆர்.டி.ஓ. வித்யா சங்கர், மூலக்காட்டனூர் ரயில்வே கேட் அருகே 40 சென்ட் இடத்தை எங்களுக்குக் கொடுத்தார். பாறைகள் அதிகமா இருக்கிற பகுதி என்றாலும், அதைப் பொருட்படுத்தாமல் இறந்தவர்களைப் புதைத்து, கல்லறை கட்டி வணங்கி வந்தோம். ஆனால், ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள இடம் என்று நகராட்சியினர் குப்பைகளை இங்கு கொட்டி வந்தார்கள். இங்கு குப்பைகள் கொட்டுவதைத் தடுக்குமாறு பலமுறை நகராட்சியில் கோரிக்கை வைத்தும், அதற்குத் தீர்வு இல்லை.
இந்நிலையில், டிசம்பர் 4-ம் தேதி இப்பகுதிக்கு கலெக்டர் ஷோபனாவுடன் வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, கல்லறைகளை இடித்து தரைமட்டமாக்க உத்தரவிட்டு இருக்கிறார். அடுத்தநாள் ஜே.சி.பி. இயந்திரத்துடன் வந்த ஊழியர்கள் கல்லறைகளை இடித்துத் தரைமட்டம் ஆக்கியதோடு, அந்த இடத்தில் குப்பைகளை கொட்டி விட்டும் சென்றனர். பக்கத்து ஊருக்கு இலவச ஆடு வழங்கும் நிகழ்ச்சிக்கு அமைச்சர் வந்தபோது, கல்லறைகளை இடித்ததற்காக நியாயம் கேட்கப் போனோம். எங்களைப் பார்க்க விரும்பவில்லை என கட்சிக்காரர்களிடம் சொல்லி அனுப்பினார். நிகழ்ச்சி முடிந்து காரில் போகும்போது, கல்ல றைகளை திருப்பிக் கட்டித்தரக் கோரி மனு கொடுத்தோம். அதைத் தட்டி விட்டு கார் கண்ணாடியை ஏற்றி விட்டு சட்டென கிளம்பி விட்டார்.
கலெக்டரிடம் நியாயம் கேட்கலாம் என்று போனால், 'மனுவை வாங்க முடியாது. குப்பை கொட்டுற இடத்துல யாரு உங்களை கல்லறை கட்ட சொன்னாங்க’ என்று, எங்களைத் துரத்தி விட்டார். முதலமைச்சரின் தனிப்பிரிவுக் கும் மனு கொடுத்து விட்டோம். எங்கள் பிரச்னையை காது கொடுத்துக் கேட்க யாருமே இல்லை'' என்று குமுறினார்.
இந்தப் பிரச்னையை கையில் எடுத்திருக்கும் தலித் வன்கொடுமை எதிர்ப்பு இயக்கத்தின் தலைவர் தலித் பாண்டியனிடம் பேசினோம். ''கல்ல றைக்கு பக்கத்தில் இருக்கும் நிலத்தை பிளாட் போட்டு விற்க ரொம்ப நாளாக அமைச்சரின் ஆட்கள் திட்டம் போட்டனர். அருகில் கல்லறை இருந்ததால், அந்த இடத்தை விலைக்கு யாரும் கேட்கவில்லை. அதனால், அமைச்சர்தான், சம்பளத்துக்கு ஆள் வைத்தும், நகராட்சி துப்புரவு பணியாளர்களிடம் சொல்லியும் குப்பை கொட்ட வைத்தார். போஸ்டர் ஒட்டி எங்கள் கண்டனத்தைத் தெரிவித்தாலும், அதை ஆள் விட்டுக் கிழிக்கிறார்.
தொகுதி மக்கள் பிரச்னையை காதில்கூட வாங்காமல் அமைச்சராக வலம் வரும் செந்தில் பாலாஜியையும், அதற்குத் துணை போன கலெக்டர் ஷோபனாவையும் கண்டித்தும், இடித்த கல்லறையை உரிய முறையில் அரசு செலவில் கட்டித்தர வலியுறுத்தியும் அனைத்து கிறிஸ்தவ அமைப்புகளையும் திரட்டி, சென்னையில் ஜனவரி 5-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். இதற்கு முதல்வர் செவி சாய்க்கவில்லை என்றால், டெல்லி சிறுபான்மை ஆணையம் முன்பு, சாகும்வரை பட்டினிப் போராட்டம் நடத்துவோம்'' என்றார் ஆவேசமாக.
கரூர் நகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரனிடம் பேசியபோது, ''எந்தக் கல்லறையையும் இடிக்கவில்லை. அந்தப் பகுதியில் குப்பைகளை அள்ளச் சொல்லி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனால், அங்கிருந்த குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தோம். நீங்கள் சொல்வது போல இதுவரை எங்களுக்கு எந்த மனுவும் வரவில்லை'' என்றார்.
கலெக்டர் ஷோபனாவிடம் பேசினால், ''குப்பைகளை எடுத்து அந்த இடத்தை சுத்தம்தான் செஞ்சோம். மத்தபடி எந்த கல்லறையையும் நாங்கள் இடிக்கவில்லை. கல்லறைகள் இடிக்கப்பட்டதாகச் சொல்வது உண்மை அல்ல'' என்றார் தடாலடியாக.
இதுகுறித்து, அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விளக்கம் கேட்டோம். பதில் தருவதாகச் சொன்னவர், கட்டுரை அச்சேறும் வரை தரவே இல்லை. அவர் விளக்கம் சொன்னால் பிரசுரம் செய்யத் தயாராகவே இருக்கிறோம்!
- ஞா.அண்ணாமலை ராஜா
கொங்கு போலீஸ் கெட்டுப் போச்சுண்ணே!
டபுள் மீனிங்... டிரிபிள் மீனிங்!
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சட்டமன்றத் தொகுதியை கண்காணிக்கும் அதிகாரி அவர். அவரைப் பற்றி முதல்வருக்கு பக்கம் பக்கமாக புகார் அனுப்பி இருக்கிறார் ஒரு பெண். ஆதங்கமும், அழுகையும் புரண்டோடும் அந்தக் கடிதத்தின் சில வரிகள் இங்கே அப்படியே.
''பொது இடத்தில் என்னைப் பார்த்து, தானாகவே வலிய வந்து பேசினார். 'நீ என்ன ஜாதி?’னு கேட் டார். நான் சொன்னேன். உடனே 'அட! நம்ம ஜாதி. சரி... நான் யாருன்னு தெரியுமா? இந்த ஏரியாவே என்கன்ட்ரோல்தான்’ என்று சொன்னவர், வற்புறுத்தி என்னுடைய மொபைல் நம்பரை வாங்கிட்டுப் போனார். அதற்குப் பிறகு சும்மா சும்மா போன் பண்ணி தொந்தரவு கொடுத்துட்டே இருந்தார். 'என்னடா குட்டி எப்படி இருக்கே? எப்போ நம்ம ஆபீஸுக்கு வரப்போறே? உன்னைப் பார்க்கணும் போல இருக்குதுடா. நீ என் ஆபீஸுக்கு வந்துட்டுப் போறது தெரிஞ்சாலே ஊருக்குள்ளே உன்கிட்ட எவனும் வம்பு தும்பு பண்ண மாட்டான். என்னால உன்னைப் பார்க்காம இருக்க முடியலடா!’-னு ஆரம்பிச்சு எழுத முடியாத அளவுக்கு ரொம்பக் கேவலமா பேசுவார். இந்த ஒரு மாசத்தில் மட்டும் 42 தடவை போன் பண்ணியிருக்கார். திடீர்னு வீட்டுக்கு முன்னாடி வண்டியைக் கொண்டாந்து நிப்பாட்டிட்டு போன் பண்ணுவார் 'வெளியில வந்து நிற்காட்டியும் ஜன்னல் வழியாகப் பாரு. உன் முகத்தைப் பார்த்துட்டு சந்தோஷமா கிளம்பிடுறேன்’ அப்படின்னு டார்ச்சர் கொடுப்பார். என்ன பேசுனாலும் டபுள் மீனிங், டிரிபிள் மீனிங்காவே இருக் கும். அவர்கிட்டே இருந்து என்னை காப்பாத்துங்கம்மா'' என்று எழுதி அனுப்பி இருக்கிறார்.
முதல்வரின் தனிப்பிரிவுக்கு கடிதம் எழுதியது தெரியவந்ததும், அந்தப் பெண்ணுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரியின் தரப்பில் இருந்து கடும் நெருக்கடி வந்திருக்கிறது. அதனைச் சமாளிக்க முடியாமல் மூட்டை முடிச்சுகளோடு, தன் கணவர் பணிபுரியும் தீவு நோக்கி கடல் கடந்து பறந்து விட்டாராம் அந்தப் பெண்மணி.
மறுபடியும் முதல்ல இருந்து!
ஏக எதிர்பார்ப்புகளுக்கு இடையில் கோவைக்கு மாறி வந்தார் அந்த அதிகாரி. கள்ளச்சாராயம், திருட்டு லாட்டரி, பங்களா விபசாரம் போன்றவற்றை மனிதர் அழித் தொழிப்பார் என்று காவல்துறையே இவர் மேல் அளவுக்கு அதிகமான நம்பிக்கை வைத்தது. ஆனால், மனிதரோ தனது பழைய தோழியின் மயக்கத்தில் கரைந்து போனதுதான் கொடுமை. நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணி டம் பல வருடங்களாக மனதைப் பறிகொடுத்து பின் மீண்டவர், தற்போது மறுபடியும் பழைய நட்பை முதலில் இருந்து ஆரம்பித்திருக்கிறார்.
இரவு பகலாக போனிலே நட்பு பாராட்டிக் கொண்டிருந்தவர் சில நாட்களுக்கு முன், கார் அனுப்பி தோழியை கோவைக்கே வரவழைத்து விட்டாராம். கடுப்பாகிப் போன அந்தப் பெண்ணின் கணவர் இந்தக் கொடுமையை எல்லாம் விளக்கி முதல்வருக்குக் கடிதம் எழுதி விட்டார். இந்த விஷயத்தை ஸ்மெல் பண்ணிய அதிகாரி, கொங்கு மண்டலத்தில் ஆளும் கட்சியில் பெரும் செல்வாக்குடன் இருந்த நபரிடம் தஞ்சம் புகுந்தார். விளைவு முதல்வரின் தனிப்பிரிவுக்கு போன புகார்... அதிகாரியின் கைகளுக்கே வந்தது. ஆபத்பாந்தவன் இருந்த தைரியத்தில் தோழியின் கணவரை மிரட்டிப் பார்த்த அதிகாரிக்கு இப்போது செம ஷாக். காரணம், அந்த ஆபத்பாந்தனுக்கே அம்மா ஆப்பு வைத்து அனுப்பி விட்டதுதான். தோழியின் கணவர் மீண்டும் புகாரை தட்டிவிட்டு, நடவடிக்கைக்காக காத்திருக்கிறார்.
ஒய் திஸ் பண வெறி?
கோவை மாவட்டத்தில் பணிபுரியும் பெண் போலீஸ் அவர். 'சம்பளமே வாங்காமல் சேவையாக இந்தப் பணியை செய்கிறேன்’ என்று போஸ்டர் ஒட்டாத குறையாக படு பவ்யமாக, பாங்காக நடந்து கொள்பவர். ஆனால், சமீபத்தில் உளவுத்துறைக்கு இவரைப் பற்றி கன்னாபின்னா தகவல்கள் வந்து விழுந்திருக்கிறது. சற்றே அகழ்வாராய்ச்சி செய்தவர்கள், மிரண்டே போனார்களாம். தனது கவனத்துக்கு வந்து விழும் சிவில் பிரச்னைகளில் ஹைடெக்காக கட்டப்பஞ்சாயத்து பண்ணி, ஏகத் துக்கும் பணம் பண்ணுகிறாராம் மனுஷி. 'உங்க பிரச்னை முழுசும் மேடத்துக்கு தெரியும். இதுதான் ஃபீஸ். கொடுத்தீங் கன்னா வேலையை முடிச்சுக் கொடுத்துடுறோம்’ என்று இவருக்காக கேன்வாஸ் செய்து காரியத்தை நிறைவேற்றி கொடுக்க பெரிய புரோக்கர் டீமே இருக்கிறதாம். ராங் ரூட்டில் அம்மணி போவதைப் பார்த்து நொந்து போன கணவர், 'ஒய் திஸ் பண வெறி?’ என்று பலமுறை கேட்டும் இவர் மனம் மாறவும் இல்லை... பாதையை மாற்றவும் இல்லை. கட்டப்பஞ்சாயத்து மூலம் இவர் சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்கள் பற்றி நீளமான ரிப்போர்ட் ஒன்றை முதல்வருக்குத் தட்டி விட்டிருக்கிறது உளவுத்துறை.
கொங்கு மண்டலத்தில் இருந்து எட்டிப் பார்த்திருக்கும் மூன்று புகார்களுக்கும், காவல்துறையைக் கைகளில் வைத்திருக்கும் முதல்வர் என்ன பதில் சொல்லப் போகிறார்?
- எஸ்.ஷக்தி
வாழ்வை மாற்றிய விபத்து... வழி காட்டாத அதிகாரிகள்
அமைச்சர் முன் கதறிய மாற்றுத் திறனாளி
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் சார்பில் மாற்றுத் திறனாளிகள் விழா ராமநாதபுரத்தில் கொண்டாடப்பட்டது. கைத்தறித் துறை அமைச்சர் சுந்தர்ராஜன், மாவட்ட ஆட்சியர் அருண்ராய் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். விழாவின் இறுதியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். அப்போது விபத்தில் காலை இழந்த பெண் ஒருவர், ''கணவனையும், ஒரு காலையும் ஒருசேர இழந்துவிட்டு வாழ்க்கை நடத்த வழியில் லாமல் தவிக்கிறேன். அதிகாரிகளிடம் உதவி கேட்டுக் கடந்த ஐந்து வருடங்களாக அலைகிறேன். பேருக்கு விழா நடத்துறவங்க, உண்மையில் பாதிக்கப்பட்டவங்களுக்கு உதவி செய்யாமல் அலைக்கழிக்கிறார்கள்'' என்று கண்ணீர் விட்டுக் கதற, விழா மேடை பரபரப்பானது. அமைச்சரும், கலெக்டரும் அந்த பெண்ணின் குறை தீர உரிய நடவடிக்கை எடுப்பதாக மேடையிலேயே உறுதி அளித்தார்கள்.
அந்த மாற்றுத் திறனாளியான சுமதியை, அவரது சொந்த ஊரான கமுதியில் சந்தித்துப் பேசினோம்.''ஏழு வருடங்களுக்கு முன், சென்னையைச் சேர்ந்த லாரி டிரைவர் செல்வத்திற்கும் எனக்கும் திருமணம் நடந்தது. ஒரு மகன் பிறந்தான். குடும்ப வாழ்க்கை சந்தோஷமாத்தான் இருந்தது. ஒரு நாள் நாங்கள் மூவரும் டூ வீலரில் கோயிலுக்குப் போனோம். அப்போது எதிரே வந்த லாரி மோதியதில், என் கணவர் அந்த இடத்திலேயே இறந்துவிட்டார். காலில் பலத்த காயத்துடன் உயிர் பிழைத்த எனக்கு சென்னை மருத்துவமனையில் சிகிச்சை செஞ்சாங்க. எங்க அம்மா, அப்பா எல்லாம் சென்னை யில் தங்கியிருந்து என்னை கவனிக்க முடியாது என்பதால் மதுரை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தாங்க.
விபத்து நடந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு, விபத்தில் சிக்கிய என்னுடைய வலது காலின் முழங்கால் பகுதிவரை துண்டித்து எடுக்கப்பட்டது. இந்த சிகிச்சைக்கு இரண்டு லட்சம் ரூபாய் வரை செலவாச்சு. அதன் பிறகு நான் என் மகனுடன் கமுதிக்கே வந்துட்டேன். அப்பா கூலி வேலைக்குப் போறவர். இப்ப வயசும் ஆயிருச்சு. அதனால் குடும் பத்தில் தாங்கமுடியாத அளவுக்குக் கஷ்டம். எனக்கு ஏதாவது வருமானம் வேண்டும் என்பதற்காக மாற்றுத் திறனாளிகள் நல அதிகாரிகளிடம், பெட்டிக் கடை வைத்துப் பிழைப்பதற்காக உதவி கேட்டேன். கமுதியில் உள்ள வங்கியில் கேட்கச் சொன்னாங்க. அங்கே கேட்டபோது, 'மாற்றுத் திறனாளிகள் நலத்துறையில இருந்து எந்த தகவலும் வரவில்லை’ன்னு அனுப்பிட்டாங்க. மறுபடியும் அதிகாரிகளை சந்திச்சு மனு கொடுத்தேன், திரும்பவும் வங்கிக்குப் போகச் சொன்னாங்க. அப்பவும் கடன் கிடைக்கலை.
கடன் கிடைக்கவில்லை என்பதால் சத்துணவுத் திட்டத்தில வேலை கேட்டு மனு கொடுத்தேன். அதுவும் நடக்கலை. கடந்த அஞ்சு வருஷங்களா ஒரு காலை வச்சிக்கிட்டு 80 கிலோ மீட்டர் பஸ்ஸில் பயணம் செஞ்சு, எல்லா அதிகாரிகளிடமும் மனு கொடுத்தேன். எந்த அதிகாரியும் இரக்கம் காட்டவே இல்லை. அப்பத்தான் ராமநாதபுரத்தில் எங்கள் நலனுக்காக விழா கொண்டாடுவதாகவும், அதில் எனக்கு செயற்கை கால் கொடுப்பதாகவும் சொன்னாங்க. ஏழு வயசுப் பையனை வச்சிக்கிட்டு ஒரு காலோடு சிரமப்படும் எனக்கு அமைச் சர் மூலம் விடிவு பிறக்காதா என எண்ணித்தான் அந்த விழாவில் கண்ணீரோடு முறையிட்டேன்.
அமைச்சரும், கலெக்டரும் விரைவில் நடவடிக்கை எடுக்குறோம்னு சொல்லி செயற்கை கால் கொடுத்தாங்க. அந்த செயற்கை காலினை உடம்பில் இணைத்துக் கொள்ளும் வகையில் பெல்ட் எதுவும் இல்லை. அதனால அந்தக் காலை பயன்படுத்த முடியவில்லை'' என்றார்.
மாற்றுத் திறனாளி சுமதியின் முறையீடு குறித்து மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ராமகிருஷ்ணனிடம் கேட்டோம். ''சுமதிக்கு 2005-ம் ஆண்டு மாற்றுத் திறனாளி என்பதற்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது. 2007-ல் செயற்கை கால் வழங்கப்பட்டது. 2007-ல் லோன் கேட்ட போது கமுதியில் உள்ள வங்கிக்கு பரிந்துரை செய்தோம். வங்கி கொடுக்கும் தொகைக்கு நாங்கள் மானியத் தொகை வழங்க முடியுமே தவிர, முழு கடன் தொகையையும் வழங்க முடியாது. மேலும் அந்தக் கடன் தொகை கொடுப்பதற்காக வங்கி அதிகாரிகள் சுமதியை அணுகிய நேரத்தில் அவர் சென்னையில் இருந்ததால், கடன் கிடைக்கவில்லை. இப்போது அவர் மீண்டும் கடன் பெற விரும்பினால், தேவையான உதவிகள் செய்யப்படும். சத்துணவு வேலை பெறுவதற்கு அரசு விதிகள் இருக்கிறது. அதன்படிதான் நடவடிக்கை எடுக்க முடியும். தற்போது வழங்கப்பட்ட செயற்கைக் காலில் பெல்ட் இணைத்துத் தரத் தயாராக இருக்கிறேன்'' என்றார்.
உழைத்து வாழ வேண்டும் என உறுதியுடன் இருக்கும் சுமதிக்கு இனியாவது விடிவுகாலம் பிறக்கட்டும்!
- இரா.மோகன்
படங்கள்: உ.பாண்டி.
சசிகலாவை வெளியேற்றியது நிர்வாண சாமி சாபமா?
மன்னார்குடி குபீர்!
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருக்கிறது, சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகள் கோயில். இதற்கு ஐவர் சமாதி என்கிற பெயரும் உண்டு. மன்னார்குடி கண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் நிர்வாணமாக கடந்த இரண்டு வருடங்களாக இந்தக் கோயிலைச் சுற்றி அலைந்து வருகிறார். 40 வயதைத் தொடும் இவரிடம் ஏதோ சக்தி இருக்கிறது என்ற நம்பிக்கையில், சிலர் இவரிடம் ஆசி பெற்று வந்தார்கள். எப்போதும் நிர்வாணமாகத் திரிவதாலும், சிலரைப் பார்த்தவுடன் கெட்ட வார்த்தைகளால் திட்டுவதாலும் பரபரப்பு சாமியார் ஆனார்.
சமீபத்தில் நடந்த விஷயங்களை அவரது சிஷ்யக்கோடிகளே விவரிக்கிறார்கள். ''நவம்பர் 24-ம் தேதி அமாவாசை பூஜை செய்வதற்காக சசிகலாவின் தம்பி திவாகரன் இந்தக் கோயிலுக்கு வந்தார். வாயிலுக்குள் நுழைந்த திவாகரனையும், அவரது ஆட்களையும் கண்ட நிர்வாணச் சாமியார்,ஆவேசத்தோடு ஓடிவந்து... அவர்களை கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுத்தார். 'நீ நல்லவன் இல்லை. ஊரைக் கொள்ளை அடிக்கிறாய். கோயிலுக்குள் நுழைய உனக்கு எந்தத் தகுதியும் இல்லை. வெளியே போ...’ என கன்னாபின்னாவென்று திட்டினார். இதைச் சற்றும் எதிர்பாராத திவாகரன் அதிர்ச்சி அடைந்து, கோபத்துடன் காரில் ஏறிச் சென்றுவிட்டார்.
இந்த சம்பவம் நடந்த மறுநாள்... இருபதுக்கும் மேற்பட்ட போலீஸார் வந்து, நிர்வாணச் சாமியாரை வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்றார்கள். திவாகரனின் கட்டளைப்படியே இவை நடப்பதாகச் சிலர் சொன்னார்கள். அடுத்த சில நாட்களிலேயே, அ.தி.மு.க-வில் இருந்து சசிகலா குடும்பத்தையே நீக்கினார் ஜெயலலிதா. திவாகரன் செய்த தவறுக்கு அவரது குடும்பமே இன்று அதிகாரம் இழந்து நிற்கிறது. இதற்கெல்லாம் நிர்வாண சாமியாரின் சாபம்தான் காரணம். இப்போது அவரின் சக்தியைப் புரிந்துகொண்டு கடந்த 27-ம் தேதி அதிகாலையில் சாமியாரை விடுதலை செய்து விட்டனர்'' என்று சிலாகித்தனர்.
ஸ்ரீராஜராஜசேகர் சுவாமிகள் என்று இப்போது அழைக்கப்படும் இந்த ராஜ சேகரைச் சந்திக்க ஐவர் சமாதிக்குச் சென்றோம். கோயிலுக்கு எதிரே உள்ள குடிசையில் கூட்டம் அதிகமாக இருந்தது. ''இரவில், சுடுகாட்டில்தான் சாமி படுத்துக்கொள்வார். பிணங்கள் எரியும்போது பூஜைகள் செய்வார். அவர் உடம்பில் இருந்து சந்தனம், ஜவ்வாது மணம் வீசும். அவரிடம் ஆசி பெற்றால் குழந்தை வரம், திருமண யோகம் கிடைக்கிறது. யாருக்காவது கால் சரியில்லை என்றால் தன் காலில் கயிற்றைக் கட்டிக்கொள்வார். உடனே பக்தருக்கு கால் சரியாகிவிடும்'' என்று பரவசப்படுகிறார்கள் பக்தர்கள்.
மொட்டை அடிக்கப்பட்ட நிலையில், மிகவும் பலகீனமாக 'வழக்கம்போல்’ நிர்வாணமாக படுத்திருந்தார் ராஜசேகர். எச்சில் ஒழுகியபடி படுத்துக் கிடந்தவருக்கு, ஒருவர் விசிறிக் கொண்டிருந்தார். சிறிது நேரத்துக்குப் பிறகு கண் திறந்த சாமியாரை, வேட்டி கட்டிவிட்டு கைத்தாங்கலாக அழைத்து வந்தனர். தட்டுத் தடுமாறி நடந்தவர், கோயிலைச் சுற்றி வந்தார். யாருடனும் பேசவில்லை. பக்தர்கள் அவரை வணங்கி திருநீறு பெற்றுக் கொண்டனர். திடீரென கீழேவிழுந்து சுருண்டு படுத்துக்கொண்டார். அவரிடம் முனகல் சப்தம் மட்டும் கேட்டது. ''போலீஸ் அடிச்சாங்களா?'' என்று பேச்சு கொடுத்தோம். ''நான் பாவம், நான் பாவம், என்னை விட்டுடுங்க'' என்றார் பலகீனமான குரலில்.
''ஏன் திவாகரனைத் திட்டுனீங்க?'' என்றதும் முகத்தைத் திருப்பிக்கொண்டார். நீண்ட நேர மௌனத்துக்குப் பிறகு 'தெரியாது... எனக்கு ஒண்ணுதான், எல்லோரும் ஒண்ணுதான்’ என்று தட்டுத்தடுமாறி வார்த்தைகள் வந்தன. மீண்டும் குடிசைக்குள் போய் படுத்துக்கொண்டார்.
'திவாகரன் ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு உள்ளவர் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் ராஜசேகரை சிறையில் அடைக்கச் சொன்னார் என்று சொல்வது பொய்' என்றார்கள் திவாகரன் ஆட்கள்.
எது எப்படியோ... அ.தி.மு.க. அரசியல் விளையாட்டால் நிர்வாண சாமியாருக்கு இப்போது அமோக அறுவடை!
- சி.சுரேஷ், படங்கள்: கே.குணசீலன்
கல்லா கட்டிய 'பூசாரிகள்' பட்டியல்!
ஜெயலலிதாவின் அடுத்த களை எடுப்பு...!
ஐ.பி.எஸ்., மற்றும் எந்த ஒரு லெவல் போலீஸ் டிரான்ஸ்ஃபர் கேட்டு மன்னார்குடி வி.ஐ.பி-கள் யாரிடம் போனாலும், கடைசியாக எம்.நடராஜனின் தம்பியும் முன்னாள் போலீஸ் அதிகாரியுமான பழனி வேலுதான் முடித்துக் கொடுப்பார். இதே போன்று ஐ.ஏ.எஸ்., போன்ற துறை மாறுதல்கள் என்றால், சிறப்பு அமுலாக்க துறை அதிகாரியாக இருந்து நீக்கப்பட்ட பன்னீர்செல்வம் ஓகே., செய்துள்ளார்.
பொதுப்பணி, நெடுஞ்சாலை, தொழில், போக்குவரத்து ஆகிய நான்கு துறைகளின் நல்லது கெட் டது எல்லாமே, ராவணனின் கைங்கர்யமாக இருந்துள்ளது.
காரியம் வேண்டி வருகிறவர்கள், எடுத்த எடுப்பிலேயே பவர் பாயின்ட்களைச் சந்தித்துவிட முடியாது. முதலில், அவர்கள் ஏரியாவில் உள்ள பூசாரிகளைத்தான் நாட வேண்டும். அவர்களைப் பார்ப்பதற்கே தட்சணை கொடுக்க வேண்டும். பிறகுதான், பிசினஸ் பேசுவார்கள். (தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் வெறும் தட்சணையை மட்டும் கொடுத்துவிட்டு, அடுத்தகட்ட மூவ்மென்ட் இல்லாமல் ஏமாந்தவர்கள் ஏராளம்!) ஒருசில விஷயங்களில் இந்தப் பூசாரிகளே காரியத்தை முடித்துக் கொடுத்து விடுவார்கள். எல்லாம் முடிந்ததும், பவர் பாயின்ட் நடந்துபோகும் போதோ, காரில் ஏறும்போதோ, இந்த நபரைக் காட்டி ஏதோ சொல்வார்கள். அப்போது, சற்று தூரத்தில் நின்று கும்பிட்டு நன்றிக்கடனை செலுத்தவேண்டும். உட்கட்சி பூசலில் எதிரிகளை ஒழித்துக்கட்டுதல், கட்சி நிர்வாகப் பதவி, அரசாங்க டெண்டர், கான்ட்ராக்ட், உத்தியோக மாறுதல் என்று எந்த ஒரு காரியம் என்றாலும் கல்லா கட்டினால், காரியம் சுபமாகும்.
தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை பக்கம் இருந்து காரியம் ஆகவேண்டி வருகிறவர்களிடம் பணம் வசூல் செய்வதற்கான ஒரு கவுன்டர், சென்னை மியூசிக் அகடமி எதிரே உள்ள பிரபல ஒட்டலில் இயங்கி வந்ததாம். இந்தப் பூசாரிகள், ஒரு ஃப்ளோரையே வாடகைக்கு எடுத்து பிசினஸ் செய்திருக்கிறார்கள். சசிகலா மீதான நடவடிக்கைக்கு பிறகு, இப்போது ஊர்வாரியாக ஆட்டம் போட்ட பூசாரிகளைப் பற்றி வெளிப்படையாகப் பேச ஆரம்பித்துள்ளனர்.
சென்னை
ராவணவனுக்கு சென்னையில் இரண்டு பூசாரிகள். ஈரோட்டை தன் பெயருக்கு முன்னே வைத்திருக்கும் மூன்று எழுத்து நபர் ஒருவர். தமிழ்ப் பற்றுப் பெயரைக் கொண்டவர் இன்னொருவர். இவர்களுக்கு பூந்தமல்லி சாலையில் ஈகா தியேட்டர் அருகில் ஆபீஸ். அண்ணாநகரில் ஒரு பங்களாவை வாடகைக்குப் பிடித்து இருந்தார்கள். ராவணனின் கன்ட்ரோலில் இருந்த மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகள் தொடர்பான புகார்கள் வந்தால், அதுகுறித்து விசாரிக்க இந்தப் பூசாரிகள் போவார்கள்.
ஈரோடு நபர், முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் ஒருவரிடம் பி.ஏ-வாக இருந்தவர். அ.தி.மு.க-வை விட்டு தி.மு.க-வுக்கு தாவிய செல்வாக்கான பிரமுகரின் நிழலாகவும் இருந்தவர். யாரையும் ஒருமையில் பேசுவார். மந்திரிகளிடம் 'இதைச் செய்ய முடியுமா? முடியாதா?' என்று கட் அண்ட் ரைட்டாகப் பேசுவது ஈரோட்டுக்காரரின் ஸ்டைல். தமிழ் நபரின் மகனுக்கு பிரபல கல்லூரியில் ஸீட் வாங்கிக்கொடுத்தார் ஒரு பிரமுகர். அதற்கு கைமாறாக, ஏற்கனவே இருந்த மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்தவரை விரட்டிவிட்டு, அந்தப் பதவியில் தனக்கு வேண்டியரை உட்கார வைத்தாராம். இது போலவே, எம்.ஆர்., மற்றும் பழனிவேல் ஆகிய இருவருக்கும் ராசிபுரத்தை தன் பெயருக்கு முன்னே வைத்திருக்கும் சந்திரமானவர்தான் பூசாரி. ஒரே நேரத்தில் இருவருக்கு வரும் அத்தனை புரோகிராம்களையும் தெளிவாகக் கையாள்வாராம். மிடாஸ் மோகன் பெயரைச் சொல்லி நடமாடிய சாலிகிராமம் பிரதர்ஸ் பற்றியும் கதைகதையாகச் சொல்லுகிறார்கள்.
''முன்பு இவர்கள் மதுபானக் கடையில் வேலை பார்த்தார்கள். இன்று, சென்னையில் 40 பார்கள் இவர்கள் கஸ்டடியில். டாஸ்மாக் கடைகளுக்கு சரக்குகளை ஏற்றிப்போகும் வாகனங்கள் பெரும்பாலும் இவரது கண் அசைவில்தான் நடக்கிறது. போயஸ் கார்டனுக்குள் சர்வசாதாரணமாக போவதாகச் சொல்லி, மந்திரிகளிடமும் அதிகாரிகளிடமும், 'கார்டனுக்குள்ளேதான் இருக்கேன். வேணும்னா சாருகிட்டே பேசுறீங்களா?' என்று புரூடா விடுவார்களாம். எம்.ஜி.ஆர். காலத்து பிரமுகர் தி.நகர் கோ. சுவாமிநாதனுக்கு அறிவிக்கப்பட்ட கவுன்சிலர் ஸீட்டை மாற்றி அறிவிக்க வைத்தது, இந்த பிரதர்ஸின் உச்சபட்ச சாதனை.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் கல்குவாரி, மணல் அள்ளுதல் எல்லாமே இந்த பிரதர்ஸ் ஓகே சொன்னால்தான் நடக்கும். கால்நடைத் துறை அமைச்சர் சின்னையா, வேறுவழி இல்லாமல் இவர்கள் சொல்வதை அப்படியே கேட்டு வருகிறாராம். முன்பு ஒருமுறை, அ.தி.மு.க. பொதுக்குழு மேடையில், சசிகலாவுக்கு கட்சியில் பதவி தரவேண்டும் என்று முதலில் முழக்கமிட்டவர் வளர்மதி. இவரும் ராவணனைப் பிடித்துத்தான் மந்திரி பதவி பெற்றதாக கட்சிக்காரர்கள் சொல்கிறார்கள். தற்போது சென்னை மாநகராட்சியில் அ.தி.மு.க. சார்பில் கவுன்சிலர் பதவியைப் பெற்ற பெரும்பாலானவர்களிடம், 'பணம் கொடுத்தீர்களா? யாரிடம்? எவ்வளவு?' என்று ரகசிய விசாரணை நடைபெற்று வருகிறது.
திருச்சி
இன்ஜினீயர் கலியபெருமாள் பெயரைப் பயன்படுத்தும் பூசாரிகள் மூவர். ஒருவர், மாவட்ட அளவில் கட்சியில் பொறுப்பில் இருக்கிறார். மணிகண்டம் யூனியனில் 60 ஏக்கர் நிலம் கைமாறியதுக்கு இவர்தான் முக்கியக் காரணமாம். அடுத்தவர் குணமானவர், மூன்றாவது நபர் - முருகப்பெருமானது பெயரைக் கொண்ட சட்டம் தெரிந்தவர். இந்த மூம்மூர்த்திகள்தான் திருச்சியில் ஆட்சி நடத்தியவர்கள். கடந்த சட்டமன்றத் தேர்தல் சமயத்தில், ஐந்து கோடி ரூபாய் பஸ்ஸில் கடத்தி வரப்பட்ட போது, திருச்சியில் வைத்துப் பிடித்தார் ஆர்.டி.ஒ-வான சங்கீதா. பிறகு, முதல்வர் ஜெயலலிதா கையால் பரிசு பெற்றார். அப்பேற்பட்டவர் மனதை நோகடித்தவர்களும் இவர்கள்தான். மூன்று எழுத்துப் பிரமுகர் ஒருவரின் சகலை சட்டவிரோதமான முறையில் ஆற்று மணல் அள்ளினார். அவரது லாரியை மடக்கிப் பிடித்தாராம் சங்கீதா. அந்தச் சம்பவத்துக்குப் பிறகு, என்ன நடந்ததோ, திடீரென லாங் லீவில் போன சங்கீதா, இப்போதுதான் மீண்டும் டூட்டிக்கு திரும்பி இருக்கிறார்.
கலியபெருமாளின் வீடு கே.கே. நகரில் உள்ளது. முன்பு பள்ளம் மேடாகக் காட்சி அளித்த அவர் ஏரியாவின் ரோடு, இப்போது பளபளவென மின்னுகிறது. 'பொதுக் காரியங்களுக்குச் செலவு செய்யவேண்டிய பல லட்ச ரூபாய், தனி நபருக்காக வீணடிக்கப்பட்டது' என்கிறார்கள் கட்சிக்காரர்கள். திருச்சியில் ஒரு தியேட்டர், ஒரு திருமண மண்டபம் இரண்டின் பின்னணியையும் துருவிக்கொண்டு இருக்கிறார்கள். சமீபத்தில் அது கைமாறி இருக்கிறது. மன்னார்குடி வகையறாவின் சித்தப்பா மகள் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு பெண்மணி அடிக்கடி வந்துபோகிறாராம்.
கோவை
மேற்கு மண்டல சி.எம். என்றுதான் ராவணனை அழைப்பார்களாம். திருப்பூர் ஏரியாவில் சிவன் பெயரைக் கொண்ட ஒரு பிரமுகர்தான், இவருக்கு முக்கியமான பூசாரியாக செயல்பட்டு வந்தார். சமீபத்தில் சாயப்பட்டறை தொழிலில் ஏற்பட்ட சரிவைச் சரிக்கட்ட, மானியத்துடன் கூடிய உதவி அளிக்க அரசு தயாரானது. அப்படிக் கிடைக்கும் தொகையில், மூன்று சதவிகித கமிஷனை முன்கூட்டியே வசூலிக்கத் தயார் ஆனாராம் அந்தப் பிரமுகர். பேச்சுவார்த்தையில் இருந்தபோதே கல்தா வந்துவிட்டதால், பாதியில் நிற்கிறது விவகாரம்.
சென்னையில் பிரபல தொழிற்சாலைகளின் நிர்வாகத் தரப்பை அழைத்து, 'ஒவ்வொரு மாதமும் இரும்புக் கழிவுகளை (ஸ்க்ராப்) தாங்கள் சொல்லும் ஆட்களுக்குத்தான் தரவேண்டும்’ என்று உத்தரவு போட்டாராம் கோவைப் பிரமுகர். குறைந்த விலைக்கு ஸ்க்ராப் வாங்கி அதிக விலை வைத்து கைமாற்றி விடுவதிலேயே, அவருக்குப் பல கோடிகள் கொட்டியதாம். 'இப்படி ஒரு ரூட் எங்களுக்குத் தெரியவில்லையே?' என்று தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் ஒருவர் வாய் பிளக்கிறார்.
திருப்பூர் அருகேயுள்ள இரண்டெழுத்துப் பிரமுகர் , உடுமலைப்பேட்டையை சேர்ந்த மூன்று எழுத்துப் பிரமுகர் இருவரும் சமீபத்தில்தான் பதவியைப் பிடித்தார்கள். திருப்பூர் பிரமுகரிடம், 'மூன்று சி’ கொடுத்து கோட்டைப் பிரதிநிதியாக ஆனாராம் ஒருவர். ஆனால், போட்ட பணத்தை எடுப்பதற்குள், பதவி பறி போய்விடுமோ என்ற பீதியில் இருக்கிறார்.
இந்த மூன்று நகரங்களைத் தவிரவும், தமிழகம் முழுவதும் பூசாரிகளின் பட்டியல் தயாராகி விட்டது. 'இவர்கள் மீது கட்சி நடவடிக்கை எடுத்தால் மட்டும் போதாது... சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும் வேண்டும்’ என்று துடிக்கிறார்கள், ரத்தத்தின் ரத்தங்கள்.
அம்மாவின் ஆக்ஷன் எப்போது வேண்டுமானா லும் தொடங்கலாம்.
- ஆர்.பி.
ராவண 'ரீசார்ஜ்'!
பத்து தலைக்கு மேலே ஏவிவிட்டுக் கொழித்த ராவணனின் முக்கிய தலைகளில் அந்த 'ரீசார்ஜ்' சாமியை¬யும் குறிப்பாகச் சொல்கிறார்கள். விமானம் பறக்கும் ஏரியாவில் போக்குவரத்து பார்க்கும் இந்த ஆசாமி பற்றி மிஸ்டர் கழுகு ஏற்கெனவே சொல்லியிருக்கிறார். இப்போது வெளியாவது அதைவிட பகீர் தகவல். தமிழ்நாடு முழுக்க போக்குவரத்துத் துறைதான் என்றில்லாமல், வேறு பல துறைகளிலும் ஆகவேண்டிய காரியங்களை வஞ்சகமில்லாமல் முடித்துக் கொடுத்து வந்தாராம் இந்த 'ரீசார்ஜ்' பார்ட்டி. இவர் பிரமாண்ட லீலைகள் காதுக்கு வந்து இவருக்குக் கிடுக்கிப்பிடி போட உத்தரவிட்டாராம் அப்போதிருந்த உள்துறைச் செயலாளர். ராவண நிழலான இவரோ, தனக்கு வந்த அஸ்திரத்தைத் திருப்பிவிட... உள்துறைச் செயலாளர் மீதே ஆட்சி மேலிடத்துக்கு கசப்பை உண்டாக்கி... அவரையே தூக்கி அடிக்க வைத்தார்களாம். இவருடைய குடும்பத்தில் நடந்த ஒரு திருமணத்துக்கு, வெவ்வேறு 'ஷோ’க்களாக தனித்தனி ரிசப்ஷன்கள் நடத்தி... செட் செட்டாக பெரும்புள்ளிகளை வரவழைத்து... அவர்களிடம் கின்னஸ் ரேஞ்சுக்கு மொய் வசூல் நடத்தியதையும் சொல்லி வாய் பிளக்கிறார்கள் இந்தத் துறையில் இருப்பவர்கள். ''அம்மா இன்னும் இவரை எப்படித்தான் விட்டு வச்சிருக்காங்களோ'' என்றும் ஆச்சரியப்படுகிறார்கள்.
கல்தா... தொடரும் கல்தா...!
'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெ. ஜெயலலிதா அவர்களின் முக்கிய அறிவிப்பு’ என்று தினமும் நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையில் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. மாவட்டவாரியாக சசிகலா குடும்பத்தினரால் பதவிக்கு வந்த அத்தனை பேரின் பல்லையும் பிடுங்க ஆரம்பித்திருக்கிறார் ஜெயலலிதா.
''சசிகலா குடும்பத்தினரால் நியமிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்களைத்தான் முதலில் களை எடுக்கணும்னு அம்மா லிஸ்ட் கேட்டாங்க. ஆனா அதுக்குப்பிறகு என்ன நினைச்சாங்களோ தெரியல. 'ஒன்றியம், கிளை கழகம்னு அடி மட்டத்தில் அவுங்க போட்ட ஆட்களோட லிஸ்டு எனக்கு வேணும்’னு கேட்டாங்க. அந்த லிஸ்ட் மாவட்ட வாரியாக அம்மாவோட கைக்குப் போக ஆரம்பிச்சிருக்கு. அதை அம்மாவே படிச்சிப் பார்த்து அவுங்க எல்லோரையும் பொறுப்பில் இருந்து தூக்க ஆரம்பிச்சிட்டாங்க. அந்தப் பட்டியல்தான் இப்போ வந்துக்கிட்டு இருக்கு. இது முடிஞ்சதும் மாவட்டச் செயலாளர்களையும் மாத்திடுவாங்க'' என்று சொல்கிறார்கள் கார்டன் வட்டாரத்தோடு நெருக்கத்தில் இருப்பவர்கள்.
நீக்கப்பட்டவர்கள் பட்டியலில் உள்ளவர்களில் சிலரது 'சசி’மூலத்தைப் பார்ப்போம்.
ஈரோடு மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பொறுப்பில் இருக்கும் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ-வான ஆ.என்.கிட்டுசாமியின் கட்சிப் பதவி அவரிடம் இருந்து பிடுங்கப்பட்டிருக்கிறது. ''மொடக்குறிச்சி தொகுதியில் முன்னாள் அமைச்சரான பி.சி.ராமசாமியை ஓரம் கட்டிவிட்டு கிட்டுசாமிக்கு ஸீட் கொடுத்தது சாட்சாத் ராவணன்தான். உள்ளாட்சித் தேர்தலில் கட்சிக்காக உழைப்பவர்களுக்கு ஸீட் கொடுக்காமல் ராவணன் ஆசிர்வாதத்தோடு தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு ஸீட் வாங்கிக் கொடுத்தார். உள்ளாட்சி தேர்தலில் கட்சி அறிவித்த வேட்பாளருக்கு வேலை செய்யாமல் போட்டி வேட்பாளரை நிறுத்தி, கட்சி நிறுத்திய வேட்பாளரை தோற்கடிக்கவும் செய்தார் கிட்டுசாமி. அத்தனையும் அம்மா கவனத்துக்குப் போகவே, முடிந்தது கிட்டுசாமியின் கதை.
ராசிபுரம் தொகுதிச் செயலாளராக இருந்தவர் சந்திரசேகரன். திருச்சி கலியபெருமாளின் உறவினரான சீனிவாசன், நாமக்கல்லில் டி.எஸ்.பி-யாக இருந்தார். சீனிவாசன் மூலமாக நடராஜனின் சகோதரர் ராமச்சந்திரனுக்கு நெருக்கமாகிறார். பதவியும் தேடி வருகிறது. அந்த நெருக்கம்தான் இப்போது பதவியைப் பிடுங்கி இருக்கிறது' என்று சொல்கிறார்கள் விவரம் அறிந்த அ.தி.மு.க-வினர்.
-கே.ராஜாதிருவேங்கடம்
தளவாய்க்கு அடுத்த அடி!
குமரியை உலுக்கிய கார்டன் பூகம்பம்
கார்டனில் ஏற்பட்ட சசிப் பெயர்ச்சி பூகம்பம் கன்னியாகுமரி வரை எதிரொலிக்கிறது. குமரி மாவட்ட அ.தி.மு.க-வில் தவிர்க்க முடியாத சக்தியாக வலம் வந்த தளவாய்சுந்தரத்தை, அமைப்புச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கி இருப்பதுதான், லேட்டஸ்ட் டாக்.
தளவாய் சுந்தரத்தின் அரசியல் என்ட்ரியே படு சுவாரஸ்யமானது. கடந்த 1996-ம் ஆண்டு தமிழகத்தில் 69 சதவிகித இடஒதுக்கீட்டிற்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் விஜயன் வழக்குத் தொடுத்தார். உடனே ஆவேசப்பட்டு விஜயனைத் தாக்கிய விவகாரத்தில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர், இப்போது இளைஞரணியின் மாநிலச் செயலாளராக இருக்கும் ஆதிராஜாராம். அந்த நேரத்தில் ராஜ்யசபா தேர்தலுக்கு ராஜாராம் பெயரை அ.தி.மு.க தலைமை பரிந்துரைத்தது. 'வக்கீலை அடித்தவருக்குப் பதவியா?’ என்று வழக்கறிஞர் குழாம் டென்ஷனில் எகிறியது. அப்போது சென்னையில் வழக்கறிஞர் அணியில் மாவட்டப் பொறுப்பில் இருந்த தளவாய் சுந்தரம், அ.தி.மு.க. ஆதரவு வக்கீல்களைத் திரட்டி பதில் போராட்டம் நடத்திக்காட்டினார். உடனே ஆச்சர்யப்பட்ட கார்டன், யாருமே எதிர்பார்க்காத வகையில் அவரையே அ.தி.மு.க-வின் ராஜ்யசபா வேட்பாளராக அறிவித்தது. அதன்பிறகு கன்னியாகுமரி எம்.எல்.ஏ. ஆகி பொதுப்பணி, வருவாய், சுகாதாரம் ஆகிய முக்கியத் துறைகளில் அமைச்சராக இருந்தார்.
எதிர்க்கட்சியாக இருந்த போது ஜெ. பேரவை மாநிலச் செயலாளராக இருந்தவர், அதனைத் தொடர்ந்து அமைப்புச் செயலாளர் ஆனார். தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்தவருக்கு, கடந்த சட்டமன்றத் தேர்தலில் குமரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தரப்படவில்லை. அந்த அடியில் இருந்து மீளாதவருக்கு இப்போது மீண்டும் ஒரு அடி.
இது குறித்துப் பேசும் அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர், ''கடந்த தி.மு.க. ஆட்சியில் குமரி மாவட்ட அ.தி.மு.க-வின் தூண்களாக இருந்த மாவட்டப் பொருளாளர் கேட்சன், முன்னாள் மாவட்டச் செயலாளர் சுயம்புலிங்கம், நகரச் செயலாளர் எம்.எம்.பால்ராஜ் உள்பட முக்கியப் புள்ளிகள் எல்லாம் அ.தி.மு.க-வில் இருந்து விலகி தி.மு.க-வில் சேர்ந்துவிட்டனர். இதற்கெல்லாம் காரணம், தளவாயின் தவறான அணுகுமுறைகள்தான். தளவாயின் மனைவி ராஜலெட்சுமியும் வழக்கறிஞரே. இவருக்கும் ஜெயலலிதாவோடு நெருங்கிய நட்பு உண்டு. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ராஜலெட்சுமி நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டார். அதன்பிறகே தளவாயின் அரசியல் வாழ்க்கை மங்கத் தொடங்கியது. இப்போது சசிகலாவுக்கு ஆதரவாக இருந்த காரணத்தால்தான், இருந்த பதவியில் இருந்து நீக்கி இருக்கிறார்கள். இது டிரைலர்தான். விரைவில் இன்னும் பல பெரிய தலைகள் உருளும்' என்றார்கள்.
தளவாய் சுந்தரத்திடமே பேசினோம். ''அம்மா எடுத்த நடவடிக்கை இது. அதற்கு நான் கட்டுப்படுகிறேன். கடைசி சொட்டு ரத்தம் இருக்கும்வரை அம்மாவின் விசுவாசமிக்கத் தொண்டனாக இருப்பேன்' என்றார்.
அப்படிப்போடு!
- என்.சுவாமிநாதன், பி.கே.ராஜ்குமார்.
தோட்டத்திலே பாத்தி கட்டி..!
இப்போதும் தோட்டத்தில் பாத்தி கட்டி செல்வாக்காக தலையாட்டும் 'செடிகொடி' பிரமுகரைப் பற்றித்தான் அ.தி.மு.க-வில் பலருக்கும் ஆச்சரியம்! விமான நிலையத்துக்கும் உள்நகரத்துக்கும் சூப்பர் சர்வீஸ் விடுகிற இந்த பிரமுகர், முதல்வருக்காக பெங்களூரு கேஸில் வாதாடும் வழக்கறிஞர்களையே ஆட்டிப் படைத்து 'லா பாயின்ட்' ஐடியா கொடுப்பாராம். அரசு தொடர்பான வேறு சில வழக்குகளில் வாதாடுவதற்கு டெல்லி வக்கீல்களை அமர்த்துவதிலும் தலையிட்டு தன் விருப்பப்படியே காரியம் நடத்துவாராம். ''இவரோடு சேர்ந்தே வளையவரும் பழனி முருகன் பேர்கொண்ட ஆசாமியின் பாணியும் இதேபோன்றதுதான். இந்த 'செடிகொடி' பிரமுகர் தோட்டத்தோடு தொடர்பில் உள்ளவரையில், சின்னம்மா குரூப்பின் தொடர்பை அறுத்து எந்த பயனும் இல்லை. நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் என்ற கணக்காக, அவர்களுக்காக இவரே தோட்டத்தில் சாலாக்காக காரியங்கள் நடத்துவார்'' என்று எச்சரிக்கை மணி அடிக்கிறார்கள் அ.தி.மு.க-வின் வக்கீல் அணி புள்ளிகள் சிலர்!
திவாகரன் 3 ராவணன் 12
'காலம் காலமாக கட்சிக்காக உழைத்தவர்கள் எல்லாம் திக்குத் தெரியாமல் இருட்டுக்குள் கிடக்க... அ.தி.மு.க-வின் அதிகார மையங்களாக விளங்கிய ராவணன், திவாகரன் ஆகியோரின் பார்வை பட்டு திடீர் அமைச்சர்களாக அவதாரம் எடுத்தவர்களின் பட்டியல் முதல்வரின் பார்வைக்குப் போயிருக்கிறது’ என்று உளவுத்துறை வட்டாரத்தில் சுட்டிக் காட்டப்படும் லிஸ்ட் இதோ...
இவர்கள் திவாகரனின் கைப்பாவைகள்...
வைத்திலிங்கம் (வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை): டெல்டா மாவட்டத்தில் திவாகரனுக்கு ஆல் இன் ஆளாக இருப்பவர். திவாகரனின் தளபதி என்று கூட இவருக்கு பெயர் உண்டு.
ஆர். காமராஜ் (உணவுத் துறை): திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தைச் சேர்ந்த காமராஜுக்கு எம்.எல்.ஏ. ஸீட் வாங்கிக் கொடுத்து, அவரை அமைச்சர் ஆக்கியது வரை அத்தனையும் திவாகரன் லீலைதான். திவாகரனுக்காக எதையும் செய்யக் கூடியவர் என்கிறார்கள்.
கே.டி.ராஜேந்திரபாலாஜி (செய்தி மற்றும் சிறப்பு பணிகள் செயலாக்கத் துறை): நாடார்கள் நிரம்பிய சிவகாசி பகுதியில் மைனாரிட்டி சமுதாயத்தைச் சேர்ந்த ராஜேந்திர பாலாஜிக்கு சீட் கொடுத்து அவரை அமைச்சரவையிலும் இடம்பெற வைத்தது திவாகரன்தான். திவாகரன் கல்லூரிக்குத் தேவையான நூல்கள், நோட்டு புத்தகங்கள் எல்லாமே ராஜேந்திர பாலாஜியின் தயவால் பிரின்ட் ஆகிறதாம்.
இவங்க ராவணன் ஆளுங்க...
வி. செந்தில் பாலாஜி (போக்குவரத்துத் துறை)
மாவட்ட மாணவர் அணிச் செயலாளராக கரூரை வலம் வந்து கொண்டிருந்த செந்தில் பாலாஜிக்கு, ராவணன் தொடர்பு ஏற்பட்டதும் எம்.எல்.ஏ. ஸீட் கிடைத்தது. கட்சிக்காரர்களிடம் இருந்த அதிருப்தியையும் தாண்டி அவருக்கு பவர்ஃபுல்லான போக்குவரத்துத் துறையை செந்தில் பாலாஜிக்கு டிக் அடித்தது ராவணன்தான்.
அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி (வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை): ராவணனும், கிருஷ்ணமூர்த்தியும் ஒரே கல்லூரியில் படித்தவர்களாம். அக்ரி படிப்பை முடித்துவிட்டு வேளாண்மை துறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தியை கட்சிக்குள் கொண்டு வந்ததும், பதவி வாங்கிக் கொடுத்ததும் ராவணன்தானாம்.
செ.தாமோதரன் (வேளாண்மைத் துறை): கோவையில் எத்தனையோ சீனியர்கள் இருக்க அவர்களை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு தாமோதரன் அமைச்சர் ஆனார் என்றால், அதற்கு ஒரே காரணம், ராவணனிடம் அவர் காட்டிய பணிவுதானாம்.
எடப்பாடி கே.பழனிச்சாமி (நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை): கட்சியில் இறங்கு முகமாக இருந்த பழனிச்சாமியின் வாழ்க்கை, ராவணன் வருகைக்குப் பிறகுதான் மாறியது. சேலம் மாநகர் மாவட்டச் செயலாளராக இருக்கும் எம்.கே.செல்வராஜ் மூலமாக ராவணனின் தொடர்பு கிடைக்க... எது நடக்க வேண்டுமோ அதுவே நல்லபடியாக நடந்தது.
கே.வி.ராமலிங்கம் (பொதுப்பணித் துறை): 'கொங்கு மண்டலத்தில் எந்த மாவட்டத்தில் யார் அமைச்சராக இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டியது நான்தான். ஈரோட்டுக்கு நீதான் அமைச்சர். உனக்கு பொதுப்பணித் துறை. போய் வேலைகளைப் பார்’ என்று அட்வான்ஸாகவே சொல்லி அனுப்பினாராம், ராவணன்.
எஸ்.பி. வேலுமணி (தொழில்துறை): மாநிலத்தையே கையில் வைத்துக்கொள்ள நினைத்த ராவணன், தன் சொந்த மாவட்டத்தை விட்டுக் கொடுப்பாரா? கடந்த ஐந்து வருடங்களாக ராவணன் வீடே கதி என்று கிடந்ததால்தான், வேலுமணிக்கு அமைச்சர் பதவி.
பி. தங்கமணி (வருவாய்த் துறை): நாமக்கல் மாவட்டச் செயலாளரான தங்கமணிக்கு திருச்சி கலியபெருமாள் மூலமாகத்தான் ராவணன் தொடர்பு கிடைத்தது. 'நான் அம்மாவின் விசுவாசி’ என்று தங்கமணி சொல்லிக் கொண் டாலும், அவர் யாருடைய விசுவாசி என்பது அவரது மனசாட்சிக்கு நன்றாகவே தெரியும்.
எஸ்.கோகுல இந்திரா (சுற்றுலாத் துறை): டி.டி.வி.யின் ஆதரவாளரான கோகுல இந்தி ராவை ஜெயிக்க வைத்து அமைச்சராக்கியவர் ராவணன். இடையில் கோகுல இந்திரா மீது சில புகார்கள் கிளம்ப, ராவணன்தான் தலை யிட்டு அவரைச் சுற்றுலாத் துறைக்கு மாற்ற வைத்தாராம்.
எம்.எஸ்.எம்.ஆனந்தன் (இந்து அறநிலையத் துறை): ராவணனைக் கண்டால் அம்மாவுக்கு போடும் கும்பிடை விட இன்னும் சில டிகிரி அதிகமாக வளைந்து வணங்குவாராம் ஆனந்தன். இவர் அமைச்சர் ஆனதில் இருந்து கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள பல கோயில்களில் தினமும் ராவணன் பெயரில் அர்ச்சனைக்கு உத்தரவு போட்டிருக்கிறாராம்.
கே.பி.முனுசாமி (ஊரக வளர்ச்சித்துறை): எடப்பாடி பழனிசாமி மூலமாகத்தான் ராவண னுக்கு அறிமுகம் செய்து வைக்கப் படுகிறார் முனுசாமி. 'எந்த காலத் துலயும் நீங்க சொல்றதை நான் தட்ட மாட்டேன். எனக்கு எல்லாமே நீங்கதான்’ என்று முனுசாமி காட்டிய பணிவுதான் அவரை இந்த உயரத்துக்கு கொண்டு வந்திருக்கிறது!
சி.த.செல்லபாண்டியன் (தொழிலாளர் நலத்துறை): தென் மாவட்டத்தில் ராவணனுக்கு ஆதரவாக இருக்கும் ஒரே அமைச்சர் செல்லபாண்டியன். இவருக்காகவே எஸ்.பி. சண்முக நாதனை அமைச்சர் பதவியில் இருந்து தூக்கி விட்டு அந்த பொறுப்பை செல்லபாண்டியனுக்கு வாங்கி கொடுத்தார் ராவணன்.
பா.வளர்மதி ( சமூக நலத்துறை): முன்னாள் அமைச்சராக இருந்தும் கூட இந்த முறை அமைச்சரவையில் வளர்மதிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. 'நீங்க ராவணனை போய் பாருங்க..’ என்று சசி வட்டாரத்தில் நம்பிக்கைக்குரிய ஒருவர் சொல்ல.. ராவணனை சந்தித்திருக்கிறார். அடுத்த சில வாரங்களிலேயே அமைச்சராகி விட்டார் வளர்மதி.
கே.ராஜாதிருவேங்கடம்
செய்தியும் சிந்தனையும் - டயல் செய்தால் நாஞ்சில் சம்பத் பேசுவார்!
**********************************************************************************
''ரஜினியைப் பற்றி இளங்கோவனுக்கு என்ன தெரியும்?''
திசை மாறும் 'அண்ணா' புயல்!
ராகவேந்திரா மண்டபத்தை தற்போதுதான் முழுமையாக குளுகுளு வசதியுடன் நவீனமாக்கி இருக்கிறார். மண்டபத்தில் பின் பகுதியை, இதுவரை எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் வாடகைக்கு விடும் வழக்கம் இல்லை. ஆனால் முதன்முறையாக, ஹஜாரே ஆதரவாளர்களின் மூன்று நாள் உண்ணாவிரதத்துக்காக இலவசமாகக் கொடுத்து இருக்கிறார், ரஜினி.
பொதுவாகவே ராகவேந்திரா மண்டபத்தில் ஏதேனும் திருமணம் நடந்தால், அந்தப் பக்கம் எட்டிப்பார்க்காமல் தவிர்த்துவிடுவது ரஜினியின் வழக்கம். ஆனால், உண்ணாவிரதம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை 'இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம்’ ராகவேந்திரா மண்டபத்தில் செய்து வந்த 26-ம் தேதி மாலை திடீரென்று ஆஜரானார் ரஜினி. 'உங்களுக்குத் தேவையான வசதி இருக்கா... கம்ஃபர்டபிளா ஃபீல் பண்றீங்களா?’ என்று அன்போடு கேட்டு, ஏற்பாடுகளையும் பார்வையிட்டார். அதற்குள் கூட்டம் கூடிவிடவே எஸ்கேப் ஆகிவிட்டார் ரஜினி. உண்ணாவிரத அமைப்பாளர் ஜாகீர் ஹசைனிடம் பேசினோம்.
''பொது இடங்களில் உண்ணாவிரதம் இருக்க அரசாங்கம் அனுமதிப்பது இல்லை. அதனால்தான்,தனியாருக்குச் சொந்தமான இடத்தில் நாங்கள் உண்ணாவிரதம் இருக்க வேண்டி இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் டெல்லியில் ஹஜாரே உண்ணாவிரதம் இருந்தபோது, அடையாறு எல்.பி. சாலையில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் 13 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தோம். இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினி தானாகவே முன்வந்து அவருக்குச் சொந்தமான மண்டபத்தில் இடம் தந்து உதவி இருக்கிறார். அவருக்கு எங்களின் மனமார்ந்த நன்றி. ஊழலுக்கு எதிரான குருஷேத்திரத்தில் ரஜினி சாரும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது, எங்களுக்குப் பெருமையாக இருக்கிறது...'' என்று புன்னகை பூத்தார்.
''ரஜினி ஓர் அறிக்கை விட்டால், அவரது ரசிகர்கள் தமிழ்நாடு முழுக்க ஹஜாரேவுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருந்திருப்பார்களே...?''
''இதை ரஜினி சாரிடமே கேட்டோம். 'கொஞ்சம் கொஞ்சமாக போராட்டம் தீவிரமாகட்டும். அவசரம் வேண்டாம்’ என்ற்£ர். ரஜினி சொன்னார் என்பதற்காக, அவரது ரசிகர்கள் கண்மூடித்தனமாக எங்களை ஆதரிப்பதை விரும்ப வில்லை. ஊழலுக்கு எதிராக அவர்களே திரண்டு வரவேண்டும்.''
''உண்ணாவிரதத்தில் ரஜினி ஏன் கலந்து கொள்ளவில்லை?''
''உண்ணாவிரதத்தில் கலந்து கொள்கிற ஆர்வம் ரஜினி சாரிடம் இருக்கிறது. ஆனால் உடல்நிலை அடிக்கடி சரியில்லா மல் போவதால், அவரால் இருக்க முடிய வில்லை. உண்ணா நோன்புக்கு நிறைய சினிமா நடிகர்கள் எங்களைத் தேடிவந்து, ஆதரவைத் தெரிவிக்கிறார்கள். இந்தப் போராட்டம் தமிழகம் முழுவதும் பரபரப்பு அடைவதற்கு ரஜினிதான் முக்கியக் காரணம்'' என்றார்.
'ரஜினியின் ராகவேந்திரா கல்யாண மண்டபம், கறுப்புப் பணத்தில் கட்டப்பட்டதுதான்’ என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எகிறி இருப்பது ரஜினி ரசிகர்களை அதிக கோபம் கொள்ள வைத்துள்ளது. இதுகுறித்துக் கேட்க ரஜினி ரசிகர் மன்றப் பொறுப் பாளர் சுதாகரைத் தொடர்பு கொண்டோம். முதலில் என்ன விஷயம் என்று ஆர்வமாகக் கேட்டவர், கறுப்புப் பணம் தொடர்பான கேள்வி என்றதும், பதில் சொல்லாமல் தவிர்த்து விட்டார். சென்னை மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் ராமதாஸ், ''ரசிகர்கள் எல்லோரும் இளங்கோவன் மேலயும், காங்கிரஸ் மேலயும் கடுமையான கோபத்துல இருக்காங்க. இளங்கோவன் கொடும்பாவியை எரிக்கலாம்னு திட்டம் போட்டோம். ஆனா, 'அமைதியா இருங்க’ன்னு தலைமையில இருந்து உத்தரவு போட்டுட்டாங்க. ரஜினியைப் பற்றி இளங்கோவனுக்கு என்ன தெரியும்?'' என்று கொந்தளித்தார். இளங்கோவன் எங்கு சென்றாலும் எதிர்ப்புக் காட்ட ரஜினி ரசிகர்கள் தயாராகி வருகிறார்களாம். ரஜினி சும்மா இருந்தாலும் அவரை சும்மா இருக்க விடமாட்டார்கள் போல!
- எம். குணா
படங்கள்: சொ.பாலசுப்ரமணியம்
''முறையான கணக்கு இருக்கிறதா?''
ரஜினி விவகாரம் குறித்து நாகர்கோவிலில் நடந்த கூடங்குளம் அணு உலை ஆதரவுக் கூட்டத்துக்கு வந்திருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனிடம் கேட்டோம்.
''ரஜினி, தமிழ்த் திரையுலகின் ஈடு இணையற்ற மிகப் பெரிய நடிகர். சமீபத்தில் கூட அவர் நடிப்பில் வெளி வந்த, 'சிவாஜி’, 'எந்திரன்’ போன்ற படங்கள் பெரும் வெற்றி அடைந்து வசூலையும் வாரிக் குவித்திருக்கின்றன. இதற்கெல்லாம் முறையான வரவு, செலவுக் கணக்குகள் அந்தப் படங்கள் தொடர்புடையவர்கள் வசம் இருக்கிறதா? இதில் கறுப்புப் பணத்துக்குத் தொடர்பே இல்லையா என்பதுதான் என் கேள்வி. இதையெல்லாம் வருமானவரித் துறையினர்தான் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும். அப்படி கறுப்புப் பணம் பயன்படுத்தப்படவே இல்லை என்றால் அதை வரவேற்கும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்'' என்றார்.
- என்.சுவாமிநாதன்
கட்சியைக் கைப்பற்ற சதி செய்தாரா நடராஜன்?
எம்.என்.நண்பரின் ஷாக் பேட்டி!
''சசிகலாவின் சொந்தபந்தங்கள் கட்சியைவிட்டுத் துரத்தப்பட்டதில் கட்சிக்காரர்களுக்கும் மக்களுக்கும் எந்த வருத்தமும் இல்லை. கட்சிக்காரர்களுக்கு மிகுந்த நிம்மதி என்றுகூடச் சொல்லலாம். ராவணன், கலியபெருமாள் என்று கட்சிக்கு சம்பந்தமே இல்லாதவர்கள், பவர் சென்டர்களாக மாறி கட்சிக்காரர்களை எப்படி எல்லாம் ஆட்டுவித்தார்கள் என்பது கண்கூடு. வேட்பாளர்கள் தேர்வு தொடங்கி யார் அமைச்சராவது என்பது வரை அத்தனையும் அந்த பவர் சென்டர்களின் விருப்பப்படியே நடந்தது. இதைப் பார்த்துக் குமுறிய எம்.ஜி.ஆரின் பக்தர்கள் இன்றைக்கு நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள். ஆனால், அதேநேரம் இத்தனை காலம் ஜெயலலிதாவுக்கு எல்லாவிதத்திலும் உதவியாக இருந்த சசிகலா, இன்றைக்கு பலவிதமான பழிகளுக்கு ஆளாகி நிற்பதை ஏற்க முடியவில்லை. 'என் உடன்பிறவா சகோதரி’ என சசிகலாவை தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்திய முதல்வர் ஜெயலலிதா, 'அவரைத் துரத்தி அடித்தது ஏன்’ என்பதையும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்.
1990-ம் ஆண்டு லாரி மோதி விபத்துக்கு உள்ளான ஜெயலலிதா, ஐந்து மாதங்கள் யாரையுமே சந்திக்காமல் இருந்தார். அப்போது முதல் ஆளாக சென்று நான் அவரைச் சந்தித்தேன். அடுத்தநாள்,சுப்ரமணிய சுவாமியை போயஸ் கார்டனுக்கு அழைத்துச் சென்றேன். அப்போது, ஜெயலலிதாவுக்கு எந்த அளவுக்கு நிழலாக சசிகலா நின்றார் என்பது எனக்குத் தெரியும். 96-க்குப் பிறகு ஜெயலலிதாவும் சசிகலாவும் கைது செய்யப்பட்டபோது சசிகலாவை பிரித்து, ஜெயலலிதாவை சிக்க வைக்க எவ்வளவோ முயற்சி நடந்தது. அதற்கு சசிகலா சம்மதிக்கவே இல்லை. அதனால், திட்டமிட்டு பலவிதமான சிரமங்களுக்கு சசிகலா ஆளாக்கப்பட்டார். நானும் நடராஜனும் அப்போது மாறுவேடம் போட்டுக்கொண்டு சசிகலாவை சந்திக்கப் போனோம். அப்போது சசிகலா பேசிய வார்த்தைகள் இன்னமும் என் நினைவில் இருக்கின்றன. தனிப்பட்ட விதத்தில் ஒரு சுமைதாங்கியாக சசிகலா விளங்கியதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், தன்னுடைய சொந்தங்களை எல்லை மீறி வளர விட்டதுதான் அவர் செய்த மிகப் பெரிய தவறு. எதையும் கண்டுகொள்ளாதவராக அவர் இருந்ததற்கு காரணம், சமீபகாலமாக சசிகலாவின் உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டதுதான். ஒரு முறை திருச்சி கூட்டத்தில் பேசிய எம்.நடராஜன், 'கட்சிக்கு சம்பந்தமே இல்லாதவர்கள் பவர் சென்டர்களாக விளங்குகிறார்கள். அது என் தம்பியாக இருந்தாலும், கண்டிக்கத்தக்கது. ஜெயலலிதா இதனை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது’ எனப் பகிரங்கமாகச் சொன்னார். தன் உறவுக்காரர்கள் என்பதற்காக அவர் சப்பைக்கட்டு கட்டவில்லை. அவருடைய பேச்சு சசிகலா உறவினர்களிடத்தில் எவ்வளவு பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது என்பது எனக்குத்தான் தெரியும்.
இன்றைக்கு எந்தக் காரணமும் சொல்லாமல் சசிகலா, நடராஜன் உள்ளிட்ட உறவுகளை ஜெயலலிதா விலக்கி இருக்கிறார். பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு எப்படியும் குறைந்தபட்சத் தண்டனையாவது கிடைக்கும் எனச் சொல்லி, கட்சியைக் கைப்பற்ற நடராஜன் முயற்சித்ததாகவும், அதனால்தான் ஜெ. கோபமானார் என்றும் என்னென்னமோ செய்திகள் எல்லாம் அலை அடிக்கின்றன. நடராஜன் இத்தகைய எண்ணம் கொண்டவரல்ல என்பதற்கு ஒருசம்பவத்தைச் சொல்கி றேன். 91 - 96 காலகட்டத்தில் ஜெயலலிதாவுக்கும் அப்போதைய கவர்னராக இருந்த சென்னா ரெட்டிக்கும் பனிப்போர் இருந்தது. நடராஜனின் நண்பர் என்கிற முறையில் என்னைச் சந்திக்க விரும்பினார் சென்னா ரெட்டி. நான் போய்ப் பார்த்தபோது அவர் சொன்னது என்ன தெரியுமா? 'அ.தி.மு.க-வைக் கைப்பற்ற நடராஜனை தயார் ஆகச் சொல்லுங்கள். அவருக்கு வேண்டிய உதவிகளை நான் செய்து கொடுக்கிறேன். அந்தம்மா இனியும் முதல்வராக நீடிக்கக்கூடாது’ என்று சொன்னார் சென்னாரெட்டி. அப்போது, கைதாகி மருத்துவமனையில் இருந்த நடராஜனிடம் இந்த விஷயத்தைச் சொன்னேன். ஒரு நொடிகூட சலனம் காட்டாதவர், 'எனக்கு அதில் சம்மதமோ, விருப்பமோ இல்லை என கவர்னரிடம் சொல்லுங்கள்’ என, பொட்டில் அடித்த மாதிரி சொல்லிவிட்டார். 'கவர்னரே உதவுவதாகச் சொல்லும்போது நீங்கள் ஏன் மறுக்கிறீர்கள்?’ எனக் கேட்டேன். 'சி.எம். நாற்காலியைப் பிடிப்பது பெரிய விஷயம்தான். ஆனால், ஒரு துரோகியாக அதில் என்னால் எப்படி அமர முடியும். இன்றைய காலத்தை விடுங்கள்... நாளைய தலைமுறையும் வரலாறும் நம்மை எப்படி எல்லாம் தூற்றும்? எட்டப்பனின் வரிசையில் என்னையும் சேர்த்து விடக்கூடாது’ என்றார். 'துரோகிப் பட்டம் வரக்கூடாது என்பதற்காக தமிழ்நாட்டுக்கே துரோகம் செய்கிறீர்களே’ என, அப்போது ஆதங்கப்பட்டவன் நான். கட்சியைக் கைப்பற்றும் வாய்ப்பு வலியவந்து கதவைத் தட்டியபோதும் அதனை மறுத்த நடராஜன் இன்றைக்கு அந்த முயற்சியை ஆள் திரட்டிச் செய்திருப்பாரா என்பதுதான் என் கேள்வி.
சசிகலாவும் அவருடைய உறவினர்களும் பணவெறி பிடித்தவர்கள், ஆட்சிக்குக் கெட்ட பெயர் உண்டாக்கும் அளவுக்குக் கொள்ளை அடிப்பவர்கள் என்பதைத் தெரிந்துகொள்ள அம்மையாருக்கு 20 வருடங்களுக்கும் மேல் ஆனதா? தன்னைச் சுற்றி தன் வீட்டிலேயே நடந்த இந்தத் தவறுகளைக் கண்டுபிடிக்க முதல்வருக்கு இத்தனை வருடங்கள் தேவைப்பட்டது என்றால், நாட்டில் நடக்கும் தவறுகளைக் கண்டுபிடிக்க அவருக்கு எத்தனை வருடங்கள் தேவைப்படும்!''
- நமது நிருபர்
''இனி, அணைகளே வேண்டாம்!''
கேரள ராவுன்னி காரம்
''சி.பி.ஐ., சி.பி.எம். ஆகிய இரண்டு கட்சிகள் நம் நாட்டில் இருக்கும் போது சி.பி.ஐ.(எம்.எல்), நக்சல்பாரி போன்ற இயக்கங்கள் நிறுவப்பட்டதற்கான அவசியம் என்ன என்று கருதுகிறீர்கள்?''
''1962 வரைக்கும் சி.பி.ஐ. மட்டும்தான் இருந்தது. நான் அப்போது சென்னையில் மின்சார வாரியத்தில் பணியில் இருந்தேன். அன்று பொதுவுடைமைக் கொள் கைகள், கோட்பாடுகள் பற்றி நல்ல புரிதல் இருந்தது. கட்சிக்குள் இருந்த கொள்கை ரீதியான குழப்பங்களின் விளைவுகளை எல்லாம் நாங்கள் தொழிற்சங்கத்தில் சந்தித்திருக்கிறோம். கம்யூனிஸ்ட் கொள்கைகள் பற்றி மக்களுக்குப் புரிதல் இருக்க வேண்டும் என்பதற்காக இங்கே 'தீக்கதிர்’ ஆரம்பிக்கப்பட்ட சமயம், கேரளாவில் 'சிந்தா’, ஆந்திராவில் 'ஜனசக்தி’, வங்கத்தில் 'கனஷக்தி’ என்று பத்திரிகைகள் தொடங்கப்பட்டன. சீனப் போருக்குப் பின், கொள்கை சார்ந்து கட்சிக்குள் பிரிவு ஏற்பட்டது. அப்போது தொடங்கப்பட்டதுதான் சி.பி.எம். அதன்பிறகு மார்க்சிஸ்ட் கொள்கைகளுடன் லெனினியப் பார்வைகளையும் சேர்த்துக்கொண்டு எம்.எல். இயக்கங்கள் பிறந்தன. நாடு சுதந்திரம் அடைந்து 60 வருடங்களில் சி.பி.ஐ., சி.பி.எம். ஆகிய இரண்டினாலும் எந்த ஒரு மேம்பாட்டையும் கொண்டு வரமுடியவில்லை. இன்று அவை கொள்கை அளவில் சீரழிந்து போய்விட்டன. கேரளாவில் ஒரு ஏரியா கமிட்டி கட்சி அலுவலகத்தின் மதிப்பு 15 லட்சம் ரூபாய். அந்தக் கட்சிகளுக்கு 4,000 கோடி ரூபாய் சொத்து இருக்கிறது என்று அரசே சொல்கிறது. என்றால், அவர்கள் உண்மையான கம்யூனிஸ்டுகள்தானா?''
''கம்யூனிஸ்ட்’ அச்சுதானந்தன், 'காங்கிரஸ்’ உம்மன் சாண்டி... உங்கள் பார்வையில் எப்படி?''
'' தத்துவார்த்த ரீதியாகச் சொன்னால் அச்சுதானந்தனும் ஒரு வலதுசாரிதான். தீவிர இடதுசாரி போன்ற ஒரு பிம்பம் அவர் மீது இருக்கிறது. ஆனால், ஊழல் இல்லாதவர். அதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். உம்மன் சாண்டியை எனக்கு அவரின் மாணவப் பருவத்தில் இருந்தே தெரியும். தனிமனித அளவில் அவர் நல்லவர். துரதிருஷ்டவசமாக, அவர் சார்ந்திருக்கும் கட்சியினால் அவர் மீதும் களங்கம் ஏற்படுகிறது. எந்தப் பிரச்னையாக இருந்தாலும் கேரள அரசியல்வாதிகள் ஓர்அணியில் நிற்கிறார்கள் என்பது எல்லாம் 'பாவ்லா’தான். 'என் கட்சிக்குச் சேர வேண்டிய நல்லபெயர் அவன் கட்சிக்கு போய்விடக்கூடாது’ என்ற எண்ணத்தில்தான் ஓடி வருகிறார்கள். மற்றபடி, பினராய் விஜயனோ, அச்சுதானந்தனோ, உம்மன் சாண்டியோ எல்லோருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்!''
''முல்லைப் பெரியாறு பிரச்னையில், தமிழகப் பெண்கள் மீது மலையாளிகள் தாக்குதல் நடத்தினார்கள். அதைக் கண்டித்து எந்தக் கேரள அரசியல்வாதியும் வாய் திறக்கவில்லையே?''
''அதை ஒப்புக்கொள்கிறேன். தமிழர்கள் தாக்கப்பட்டது போல மலையாளிகளும் தாக்கப்பட்டார்கள். இந்தத் தாக்குதல்களை இரண்டு பக்கத்தைச் சேர்ந்த ஊடகங்களும் திரைக்கதை, வசனங்கள், மசாலாக்கள் சேர்த்துச் சொல்லி விட்டன. தன்னைத் தாக்கியவனைத் திருப்பித் தாக்கிய விஷயம் தமிழன் _ மலையாளி சண்டையாக மாற்றப்பட்டு விட்டது. அவ்வளவுதான்!''
''முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் உங்களின் திட்டவட்டமான கருத்து என்ன?''
''என்னைக் கேட்டால் அணைகளே வேண்டாம் என்று சொல்வேன். கேரளாவில் மட்டும் 46 அணைகள் இருக்கின்றன. விவசாயத்துக்குப் பயன்பட வேண்டும் என்றுதான் இந்த அணைகளைக் கட்டினார்கள். ஆனால், இன்று அணை இருக்கிற பகுதிகளில் விவசாயம் செத்து விட்டது. சுற்றுச்சூழல் பிரச்னைகளின் அடிப்படையில் பார்த்தால் அணைகள் தேவை இல்லை. அணையை உடைக்க வேண்டுமோ அல்லது கூடாதோ, புதிய அணை தேவையோ அல்லது கூடாதோ, முடிவில் தமிழகத்துக்குத் தண்ணீர் தேவை. அதற்கு என்ன மாற்று வழிகள் என்பதைச் சிந்திக்க வேண்டும். ஆனால், இரண்டு மாநில அரசுகளும் இதுகுறித்துப் பேசுவதில்லை''.
''தமிழகத்தில் இருந்து, 'அணை உடைக்கப்பட்டால் இந்தியா உடையும்’ என்று குரல் எழுந்திருக்கிறதே...''
''இந்தப் பிரச்னையே தேர்தல் அவசரவாத அரசியல்தான். கேரள அரசியல்வாதிகள் சொல்கின்ற கருத்துக்கள் எல்லாம் கேரள மக்களின் கருத்துகள் அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதே சமயம், தமிழகத்தின் அரசியல்வாதிகள் மக்களை உணர்ச்சிவசப்பட வைக்கும் பேச்சுக்களைப் பேசக்கூடாது. அப்படியே ஒரு வேளை, அணை உடைக்கப்பட்டு, புதிய அணை கட்டிய பிறகு தமிழகத்துக்குத் தண்ணீர் தரமாட்டோம் என்று கேரள அரசு சொன்னால், அதை எதிர்த்து முதல் போராட்டம் கேரள மக்களிடத்தில் இருந்துதான் வெடிக்கும்!''
''இன்னமும் ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை கொண்டிருக்கிறீர்களா?''
''நம்பிக்கை கொண்டிருப்பது, ஆதரிப்பது மட்டுமல்ல... அதுதான் சரி!''
- ந.வினோத்குமார்
இந்த வருஷம் கூட்டம் குறைவு!
முல்லைப் பெரியாறு... சபரிமலை ரியாக்ஷன்
நேரடி ரிப்போர்ட்
''ஐயப்பன் சன்னதியில் இருக்கும் 18 படிகளையும் பெரும்கூட்டத்தோடுதான் கடந்து செல்லவேண்டி இருக்கும். அதிலும் 18-ம் படியில் காலை முழுமையாக வைப்பதற்குள்ளாகவே, மேலே நிற்கும் போலீஸார் நம்மைத் தூக்கிவிட்டு விடுவார்கள். ஆனால், இந்த வருடம் 18 படிகளையும் தனியரு ஆளாகவே நான் கடந்து சென்றேன்'' என்று ஆச்சர்யப்படுகிறார், சமீபத்தில் சபரிமலை சென்று வந்த நண்பர். நிலவரத்தை நேரில் அறிய, குமுளி வழிப்பாதையில் சென்று சபரிமலையை அடைந்தோம்.
நவம்பர் 16 முதல் ஜனவரி 20 வரையிலான நாட்கள் ஐயப்பன் கோயில் சீசன் என்பதால், எருமேலி சாலையில் கூட்டம் நிரம்பி வழியும். ரோட்டில் இருசக்கர வாகனம்கூட செல்ல முடி யாத அளவுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடந்து சென்று கொண்டு இருப்பார்கள். தங்க ளுடன் வந்த சக பக்தர்களைக் கூட்டத்தில் தொலைத்துவிட்டு, தேடும் அளவுக்குக் கூட்டம் கும்மி அடிக்கும். ஆனால் இப்போது..?
திருப்பூரில் இருந்து வந்திருக்கும் ரமேஷ் குழுவினர், ''சபரிமலைக்குக் கேரளத்துக்காரர்கள் அதிகம் வருவது இல்லை.. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா போன்ற மற்ற மாநில பக்தர்களும் மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடு வாழ் தமிழர்களும்தான் அதிக அளவில் வருவாங்க. இந்த வருஷம் கோயில் நடை திறந்ததும், கூட்டம் வழக்கம் போல் வந்தது. ஆனால், முல்லைப் பெரியாறு பிரச்னைதொடங்கி, கேரள எல்லையில் ஐயப்ப பக்தர்கள் கார் தாக்கப்பட்ட பிறகு நிலைமை தலைகீழ். சபரிமலைக்கு வரத் திட்டம் போட்டிருந்த பல பக்தர்களும் தங்களோட திட்டத்தை மாத்திக்கிட்டாங்க. பெரும்பாலான பக்தர்கள், அவரவர் ஊர்களிலேயே விரதத்தை முடித்துவிடுகிறார்கள். வழக்கமாக குமுளி வழியாக வரும் பக்தர்கள் கம்பம் அருகே இருக்கும் தம்மனம்பட்டி ஐயப்பன் கோயிலிலோ அல்லது ராயப்பன்பட்டி ஐயப்பன் சன்னதியிலோ விரதத்தை முடிக்கிறார்கள்'' என்று, நிலவரத்தைப் புட்டு புட்டு வைத்தனர்.
சாலையோரம் பாத்திரக் கடை வைத்திருக்கும் முகமது சலீம், ''இங்கு வரும் பக்தர்களை நம்பித்தான் நாங்கள் லட்சக்கணக்கில் பணம் செலுத்தி, கடை களை வாடகைக்கு எடுத்து இருக்கிறோம். ஆனால், இந்த ஆண்டு பக்தர்கள் வருகை முழுமையாகக் குறைந்துவிட்டது. எங்களுக்கு பக்தர்களைத் தாக்கும் எண்ணம் துளியும் இல்லை. இந்தப் பிரச்னையால், இங்கு 500-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்'' என்றார்.
நடைபாதை வியாபாரிகளோ, ''பம்பையில் இருந்து சன்னிதானம் வரை, நாங்கள் சிறுசிறு கடைகளை பிளாட்ஃபாரத்தில் வைத்திருக்கிறோம். இதை 30 வருடங்களாக செய்து வருகிறோம். பெரும்பாலும் வட மாநிலத்தவர்களும் தமிழர்களும்தான் அதிகம். இப்போது, முல்லைப் பெரியாறு பிரச்னை ஏற்பட்ட பிறகு, கேரள அரசு ஒருதலைப்பட்சமாக நடக்கிறது. மலையாளிகள் தவிர வேறு யாரும் நடைபாதையில் வியாபாரம் செய்யக்கூடாது என்று விரட்டுகின்றனர். பொருட்களைத் தூக்கி எறிந்தும் சேதப்படுத்தினார்கள். இவர்கள் தொல்லை தாங்க முடியாமல், வட மாநில வியாபாரிகள், மூட்டை முடிச்சுகளோடு சொந்த ஊருக்குச் சென்று விட்டார்கள். முல்லைப் பெரியாறு விவகாரம் முடிவுக்கு வந்தாலும், இவர்களது 'தமிழர் - மலையாளி’ என்ற பார்வை மாற நீண்ட காலம் ஆகும்'' என்றனர்.
பம்பையில் இருந்து நீலிமலை, அப்பாச்சிமேடு, சரங்குத்தி பகுதிகள் வழியே சபரிமலைக்குச் செல்லவேண்டும். இடைப்பட்ட ஐந்து கிலோமீட்டர் தூரமும் நடந்தேதான் செல்ல வேண்டும். வாகனப் போக்குவரத்து இல்லை. நடக்க முடியாதவர்கள் 'டோலி’ என்ற பல்லக்கில் செல்லலாம். கீழே இருந்து டோலி மூலம் மேலே ஒருவரை அழைத்துச் சென்று வர 1800 வசூலிக்கப்படுகிறது. பொருட்களை கோயிலுக்குக் கொண்டு செல்லக் கழுதைகளும் டிராக்டர்களும் பயன்படுத்தப்படுகிறது. பல்லக்குத் தூக்கிகள், துப்புரவு பணியாளர்கள், கழுதை ஓட்டிகள் என அனைவருமே தமிழர்கள். நிர்வாக அலுவலக ஊழியர்கள் அனைவரும் மலையாளிகள்.
சபரிமலைக்கு நாம் சென்றிருந்தபோது... மண்டல பூஜை முடிந்து, நடை சாத்தப்பட்டு இருந்தது. மறுபடியும் மூன்று நாட்கள் கழித்து 30-ம் தேதி நடை திறப்பதாக தேவஸ்தான அதிகாரிகள் சொன்னார்கள். நடை சாத்தப்பட்டு இருந்தாலும், கோயிலில் பக்தர்கள் தங்கி காத்திருந்து, ஐயப்பனை தரிசனம் செய்து விட்டுச் செல்வதுதான் வழக்கம். ஆனால், இந்த முறை பக்தர்கள் யாரையும் காணோம். வழக்கத்துக்கு மாறாக கோயில் முழுவதும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். அவர்களிடம் பேச்சுக் கொடுத்தோம்.
''நாங்கள் 140 பேர் வந்திருக்கிறோம். அதில் 90 பேர் தமிழர்கள். நாங்கள் கோயில் பாதுகாப்பில் ஈடுபட்டு இருக்கும் சமயங்களில் தமிழர்கள் - மலையாளிகள் பாகுபாடு பல சமயங்களில் நடப்பது உண்டு. கேரளத்து பக்தர்கள் எல்லாவற்றிலும் உரிமையோடு, நடந்து கொள்கிறார்கள். ஆனால், மற்ற மாநில பக்தர்கள், பயந்து ஒதுங்கியே தரிசனம் செய்துவிட்டுப் போகிறார்கள்'' என்றார்கள்.
சன்னிதானம், பம்பை, எருமேலி போன்ற இடங்களில் மூன்று வேளையும் அன்னதானம், மருத்துவ வசதிகள், ஆம்புலன்ஸ் சர்வீஸ் செய்து வரும் அகில பாரத ஐயப்பா சேவா சங்கத்துக்குச் சென்றோம். அதன் கேம்ப் ஆபீஸர் பாலன் நம்மிடம், ''இங்கு இருக்கிற மருத்துவர்கள், வாலண்டியர்கள் அனைவருமே சம்பளம் வாங்காமலே பணிபுரிகிறார்கள். ஐயப்பனுக்கு சேவை பண்ணுவதாக நினைத்து, மாலை போட்டு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு, இலவசமாக மூன்று வேளை சாப்பாடு, மருத்துவ உதவி, மூலிகை குடிநீர் கொடுக்கிறோம். இங்கு இருக்கும் பெரும்பான்மையோர் தமிழர்கள்தான். கோயிலுக்கு வருவதற்காக பக்தர்கள் கேரளாவுக்குள் நுழைந்து விட்டால், அவங்களுக்கு என்ன உதவி என்றாலும் செய்யக் காத்து இருக்கிறோம். மலைக்கு வரும் பக்தர்கள் பெரும்பாலோனர் தமிழர்கள்தான். எனவே, எந்தப் பிரச்னை என்றாலும் தாராளமாக எங்களை அணுகலாம்'' என்றார்.
வருடம் முழுவதும் கேரளாவுக்கு வரும் வருமானத்தை விட, சபரிமலை சீசன் நேரத்தில் கிடைக்கும் வருமானம் அதிகம். அந்த வருமானம் இந்த வருடம் குறைந்து இருப்பதால் வருத்தத்தில் இருக்கிறார்கள் சபரிமலை தேவஸ்தான அதிகாரிகள்.
ஐயப்பன் கோயில் மக்கள் தொடர்பு அலுவலர் முரளியிடம் பேசினோம். ''சென்ற ஆண்டை விட, இந்த ஆண்டு பக்தர்கள் வரத்து குறைவுதான். அதற்காகத்தான் கடந்த வாரம், 'ஐயப்ப பக்தர்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்கள் பயணம் பாதுகாப்பானதாக அமையும்’ என்று கேரள எல்லையில் சென்டை மேளம் முழங்க வரவேற்றோம். அவர்களை கனிவுடன் நடத்தினோம். மலேசியா, சிங்கப்பூரில் இருந்து எல்லாம் எனக்கு போனில் பேசுகிறார்கள். அவர்கள் எப்போதும் மதுரை ஏர்போர்ட் வந்து, குமுளி வழிப்பாதையில் சபரிமலை வருவார்கள். இந்த ஆண்டு நிலைமை மோசமாக இருப்பதால், திருவனந்தபுரம் ஏர்போர்ட்டில் இறங்கி வரச் சொல்கிறோம். ஒரு சிலரை செங்கோட்டை, பாலக்காடு பாதையில் வரச் சொல்கிறோம்'' என்றார்.
உடைந்து போன கண்ணாடியை ஒட்ட வைத்துப் பார்ப்பது போன்று, பிளவு இருக்கத்தான் செய்கிறது.
- சண்.சரவணக்குமார்
படங்கள்: வீ.சிவக்குமார்
''தண்ணி தராதவங்களுக்கு மீனு தர மாட்டோம்!''
முல்லைப் பெரியாறு போராட்டத்தில் ராமேஸ்வரம்!
ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் ராமேஸ் வரத்தில் பேச்சாளை எனப்படும் ஒரு வகை மீன்சீசன் தொடங்கும். இந்த மீன்தான் கேரளாவை மடக்கும் தூண்டில். அதாவது, அந்த மக்கள் விரும்பிச் சாப்பிடுவது பேச்சாளை மீனைத்தான். அதை, ராமேஸ்வரம் மக்கள் அனுப்பாமல் விட்டால் என்ன ஆகும்? கேரளாவுக்கான தனது எதிர்ப்பாக இதனைக் காட்ட முடிவெடுத்துள்ளார்கள்.
இதுகுறித்து, நம்மிடம் பேசினார் ராமநாதபுரம் மாவட்ட நாட்டுப்படகு மீனவர் நல உரிமைச் சங்கத் தலைவர் எஸ்.பி.ராயப்பன். ''நம்ம மாநிலத்துல பேச்சாளை மீனை அவ்வளவாக சாப்பிடுறதில்லை. மலையாளிங்க இதை விரும்பிச் சாப்பிடுவாங்க. அவங்க அதை 'மத்தி’னு சொல்லுவாங்க. நிறைய எண்ணெய் பிசுபிசுப்போட மளுமளுன்னு இருக்கும் பேச்சாளை மீனுக்கு கேரளாவில் ஏக டிமாண்ட். பேச்சாளை மீன் பெருக்கத்துக்கான தட்ப வெட்பம், ஜனவரி மாசம்தான். கேரள மலபார் கடற்கரையைவிட மன்னார் வளைகுடா - பாக் ஜலசந்தி கடல்ல ஜனவரி மாசம் மட்டும் டன் கணக்குல பேச்சாளை மீனுங்க கிடைக்கும். ஜனவரி மாசம் கேரளாவைச் சேர்ந்த மீன் கம்பெனிங்க இங்கேயே தங்கி, பெரிய அளவுக்கு பிசினஸ் செய்வாங்க. இந்தத் தடவை, அவங்களுக்கு மீனைக் கொடுக்காம பெரிய அளவுக்கு போராட்டம் பண்ணலாம்னு இருக்கோம். வேற்றுமைகள் மறந்து விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவ அமைப்புகள் ஒண்ணா சேர்ந்து, நமக்குத் தண்ணி தராத கேரளாவுக்கு மீனு தரமாட்டோம்னு உறுதியா நிற்கப் போறோம்'' என்றார் கொதிப்பாக!
ராமேஸ்வரம் பகுதிகளில் இயங்கும் கேரள மீன் கம்பெனிகளைப் பற்றி முக்கியத் தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் கீழக்கரையைச் சேர்ந்த அபிராம் என்ற சமூக ஆர்வலர். ''கேரள மீன் கம்பெனிகளோட யூனிட்டுகள் ராமேஸ்வரம் மண்டபம் பகுதியில இருக் குது. மத்த நேரத்துல பரம சாதுவா இருப்பாங்க. பேச் சாளை சீசன் ஆரம்பிச் சதும்... அதகளம் பண்ண ஆரம்பிச்சிடுவாங்க. ராமேஸ்வரத்துல மதிய நேரத்தில் கிளம்பும்
கேரள லாரிகளுக்கு வேகக் கட்டுப்பாடே இருக்காது. ஏன்னா, இருட்டுறதுக்குள்ள திருவனந்தபுரம் மார்க்கெட் டுக்கு போய்ச் சேர்ற சரக் குக்கு கூடுதல் விலை கிடைக்கும். அதனால போக்குவரத்து விதிமுறைகள் எதையும் அவங்க மதிக்கிறதே இல்லை. சராசரியா ஏழு மணி நேரத்துல போற களியக்காவிளை, மார்த் தாண்டம் பகுதிகளுக்கு அஞ்சு மணி நேரத்துலேயே போயிடுவாங்க. பேச்சாளை மீனுகிட்ட இருந்து ஒருவித எண்ணெய்க் கழிவு வடிஞ்சுக்கிட்டே இருக்கும். அதனாலும் பல விபத்துகள் நடந்திருக்கு. கீழக்கரை, ஏர்வாடி, சாயல்குடி போன்ற கிழக்கு கடற்கரை சாலையில மட்டும் போன சீசன்ல மூணு ஆக்ஸிடெண்ட் நடந்து நாலு பேர் பலியாகிட்டாங்க. போன வருஷம் மண்டபம் கேம்ப் பக்கத்துல 108 ஆம்புலன்ஸ் மீதே ஒரு கேரள மீன் லாரி மோதிடுச்சு.
சாதாரணமாவே சீசன் நேரத்துல கிழக்குக் கடற் கரைச் சாலையோர கிராம மக்கள் எல்லாருமே, கேரளாவை சபிச்சுக்கிட்டுத்தான் இருப்பாங்க. அந்த அளவுக்கு அந்த மீன்வாடை படுத்தி எடுக்கும். இந்த மீனைச் சுற்றி, 'மணி ஈ’ என்ற ஒரு வகை ஈயும் இந்த சீசன்லதான் அதிகமாப் பெருகும். இந்த ஈயால வர்ற நோய்களைப் பத்தி தனிப்பட்டியலே போடலாம். அதனால் இந்த மீன் பிடிக்கிறதை தடை செய்யணும்னு பலமுறை மக்கள் போராட்டம் நடத்தியும் அரசாங்கம் கண்டுக்கவே இல்லை. தடை செய்யப்பட்ட இரட்டை மடிகளை வச்சுத்தான் பல மீனவர்கள் கேரளக்காரங்களுக்குப் பிடிச்சிக் கொடுக்குறாங்க. அதை சரியா கண்காணிச்சு தடை செஞ்சாலே கேரள மீன் கம்பெனிகள் யாரும் இங்கே வர மாட்டாங்க. இங்கே நம்ம கண்ணைக் குத்தி அடிமாட்டு விலைக்கு வாங்கிட்டுப் போற கேரளக் கம்பெனிகள்... அங்கே கொள்ளை லாபம் பார்க்குறாங்க. முல்லைப் பெரியாறு விவகாரத்துல நமக்கு எதிரா ஒண்ணு திரண்டு நிக்கிற பிரபல நடிகர் மோகன்லால் உள்ளிட்ட பல சினிமா நட்சத்திரங்களின் மீன் கம்பெனிகளோட சப் யூனிட்டுகள் இங்கேதான் இருக்கு. முல்லைப் பெரியாறு பிரச்னையை மையமா வச்சாவது கேரள முதலாளிகளுக்கு நம்ம மீனவர்கள் மீன் பிடிச்சுக் கொடுக்காம இருந்தா கேரள அரசுக்கு நம்ம வலியும்... வலிமையும் புரியும்!'' என்றார் கொந்தளிப்பாக.
முல்லைப் பெரியாறு போராட்டம் வெற்றி அடைய, பேச்சாளை மீனும் உதவி புரியட்டும்!
- ஆர்.சரண், படங்கள்: உ.பாண்டி
எனது இந்தியா!
நரி வேட்டை!
ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் வேட்டைக்கும் ஆதியில் நடைபெற்ற வனவாசிகளின் வேட்டைகளுக்கும் இடையில் என்ன வேறுபாடு என்ற கேள்வி வரக்கூடும். வனவாசிகள் தங்கள் அதிகாரத்தைக் காட்டிக்கொள்வதற்காக ஒரு போதும் வேட்டையாடவில்லை என்பதுதான் அதற்கான பதில். ஆங்கிலேயர்கள் அடர்ந்த காடு இல்லாத தேசத்தில் இருந்து வந்தவர்கள். அதிலும், புலி போன்ற வலிமை மிக்க மிருகம் அங்கே கிடையாது. ஆகவே, அவர்கள் புலியை வெறும் ஆட்கொல்லியாக மட்டுமே அடையாளம் கண்டார்கள். புலியைக் கொல்வதை சாதனை என்று கூறி விருது கொடுத்தார்கள். அந்த எண்ணம்தான் இந்திய விலங்குகளை அவர்கள் கொன்று குவிக்கக் காரணமாக இருந்தது.
இங்கிலாந்து கிராமங்களில் பல நூற்றாண்டுகளாக நரி வேட்டையாடுவது ஒரு பொழுதுபோக்கு. வேட்டை நாய்களை வைத்து நரிகளைத் துரத்தி வேட்டையாடுவார்கள். சில நேரங்களில், குதிரைகளில் சென்று துப்பாக்கியால் நரிகளைச் சுட்டுக் கொல்வதும் உண்டு. அது இயற்கையை அழிக்கும் செயல் என்று இங்கிலாந்து அரசு தடை விதித்தது. அவர்கள் நாட்டில் நரியைக் கொல்வதைத் தடை செய்த அரசு, இன்னொரு நாட்டில் காண்டா மிருகத்தைக் கொல்வதைக்கூட தவறாக நினைக்கவே இல்லை. அதுதான், பெரிய முரண்.
மனிதனைக் கொல்லும் இந்த மிருகங்களை ஏன் பாதுகாக்க வேண்டும்? மனிதன் தனது தேவைக்காக மிருகங்களைக் கொல்வதில் என்ன தவறு இருக்கிறது? என்ற கேள்விகள் நமக்குள் எப்போதும் இருக்கின்றன. மிருகம் எந்த மனிதனையும் இருப்பிடம் தேடிவந்து கொல்வது இல்லை. அவன் தனக்கு இடையூறு செய்கிறான் என்று உணரும்போதுதான், தாக்குகிறது. பசிதான் அதன் ஒரே காரணம். மனிதனும் பன்னெடுங்காலமாகவே முன்பு பசிக்காக விலங்குகளை வேட்டையாடி இருக்கிறான். அது ஒரு மானோ, முயலோ, காட்டெருதாகவோ இருக்கக்கூடும். அதிலும், சினையாக உள்ள விலங்குகளை வேட்டையாட மாட்டார்கள். விலங்குகளின் இனப்பெருக்கக் காலத்தில் வேட்டைக்கு செல்லவே மாட்டார்கள். வேட்டையாடிய மிருகங்களை ஊரே கூடி பகிர்ந்து உண்பார்கள். அதுதான் நடைமுறை.
காட்டில் புலி ஒரு மிருகத்தை வேட்டையாடி உண்ணும்போது, மீதமுள்ளதை 100 சிறு உயிர்கள் உணவாகப் பகிர்ந்துகொள்கின்றன. அதே செயல்பாடுதான் ஆதிமனிதர்களிடமும் இருந்தது. ஆனால், மன்னர் காலத்திலும் அதன் பின்பு ஆண்ட வெள்ளைக் காலனிய காலத்திலும்தான் பொழுது போக்கவும், வீரத்தை நிரூபிக்கவும் மிருகங்களை வேட்டையாடினர்.
ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் மட்டும் அல்ல... சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் வேட்டை தொடங்கி மொகலாயர்களின் வேட்டை வரை எவ்வளவோ சாகச சம்பவங்கள் சரித்திரத்தில் இருக்கின்றன. அந்த வேட்டையில், துணைக்குச் சென்ற சாமான்யர்கள் புலி தாக்கி இறந்து போயிருக்கிறார்கள். ஆனால், ஓர் அரசன்கூட பலி ஆனதில்லை. இந்தியாவில் பிரதானமாக வேட்டையாடப்பட்டது நான்கே விலங்குகள். புலி, யானை, காண்டாமிருகம் மற்றும் அரிய வகை மான்கள். இந்த நான்கிலும் காடுகளில் இன்று இருப்பது 20 சதவீதமே. மற்றவை, வேட்டையில் அழித்து ஒழிக்கப்பட்டுவிட்டன.
புலி இனத்தில் ராயல் பெங்கால், தெற்கத்திய சீனம், இந்தோசீனம், சுபத்திரன், சைபீரியஸ், பாலி, ஹாஸ்பின், ஜாவா ஆகிய எட்டு வகைகள் இருந்தன. இவற்றில் 1940-ல் பாலி, ஹாஸ்பின் ஆகிய இனங்களும், 1970-ல் ஜாவா இனமும் முற்றிலும் அழிந்துவிட்டன. இப்போது, நான்கு வகையான புலி இனங்களே இருக்கின்றன. இவற்றில், இந்தியாவில் உள்ள பிரதான வகை ராயல் பெங்கால் புலிகள், சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் இந்தியா முழுவதும் சேர்ந்து மொத்தம் 40,000-க்கும் மேற்பட்டவை இருந்தன. ஆங்கிலேய அதிகாரிகள் மற்றும் படித்த இந்திய அதிகாரிகளின் வேட்டையால் அது வெகுவாகக் குறைந்துவிட்டது. 1973-ல் நடத்திய கணக்கெடுப்புப்படி, இந்தியாவில் உள்ள மொத்தப் புலிகளின் எண்ணிக்கை 1,800. இப்போது 1,411 என்கிறார்கள். ஒரு முதிர்ந்த ஆண் புலியைக் கொல்வது அதன் வம்சத் தொடர்ச்சியை அழிப்பதாகும்.
மொகலாய மன்னர் ஜஹாங்கீர், தான் வேட்டையாடிய விலங்குளைப் பற்றிய பட்டியலை தனது நூலில் குறிப்பிட்டு உள்ளார். தனது 12 வயதில் தொடங்கி 48 வயதுக்குள் அவர் வேட்டையாடிய விலங்குகளின் எண்ணிக்கை 28,532. அவர், தனி ஆளாகக் கொன்ற மிருகங்களின் எண்ணிக்கை 17,167. இவற்றில் சிங்கம், கரடி, புலி, சிறுத்தை, மான், எருது, யானை என சகலமும் அடக்கம்.
ரேவா சமஸ்தானத்தின் ஒவ்வொரு ராஜாவும் எவ்வளவு காட்டு மிருகங்களை வேட்டையாடினார்கள் என்று ஒரு பட்டியல் இருக்கிறது. 1911-ல் ராஜா ரகுராஜ் சிங் கொன்ற புலிகளின் எண்ணிக்கை 91. சிறுத்தைகள் 7, யானைகள் 5. ராஜா பவதேவ் கொன்ற புலிகள் 121. சிறுத்தை 12, கரடி 4. ராஜா குலாப் சிங் தனது முதல் புலியை சுட்டபோது, அவருக்கு வயது 13. அவர் கொன்ற புலிகளின் எண்ணிக்கை 616. இவற்றில் ஆண் 327, பெண் புலிகள் 289. இவை தவிர, யானை மற்றும் கரடிகளின் எண்ணிக்கை 526. இப்படி தலைமுறைக்குத் தலைமுறை அழியும் புலிகளின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போகிறது.
புலிகளைப் போலவே, வெகுவாக அழிந்துபோன இன்னோர் இனம் காண்டா மிருகம். இதை வேட்டையாடியதைப்பற்றி பாபர் தனது நூலில் விரிவாக குறிப்பிட்டு உள்ளார். ஒரு காலத்தில் சிந்துச் சமவெளி முதல் வடக்கு பர்மா வரை பரவியிருந்த இந்தியக் காண்டா மிருகம், இன்று அசாம் மற்றும் மேற்கு வங்காளத்தில் உள்ள இரண்டு இடங்களிலும், நேபாளத்தின் சித்தவான் பள்ளத்தாக்குப் பகுதிகளிலும் மட்டுமே தென்படுகிறது.
இந்தியக் காண்டா மிருகம் தனித்த வகைமை கொண்டது. ஒற்றைக் கொம்புகொண்ட இதற்கு மோப்ப சக்தி அதிகம். ஆனால், பார்க்கும் திறன் குறைவு. பெரும்பாலும் தனித்து வாழக்கூடியது. ஆகவே, இதை எளிதாக வேட்டையாடினார்கள். காண்டா மிருகத்தின் கொம்பு அதிக ஆண்மைச் சக்தி தரக்கூடியது என்ற நம்பிக்கை அந்தக் காலத்தில் இருந்தே நிலவி வருகிறது. அதன் கொம்பை வெட்டி எடுப்பதற்காக காண்டா மிருக வேட்டை இன்றும் தொடர்கிறது.
1993-ம் ஆண்டு பூடான் இளவரசி 22 காண்டா மிருகங்களின் கொம்புகளை தைவானுக்கு கடத்திச் செல்ல முயற்சி செய்தபோது பிடிபட்டார். அவரிடம் நடத்திய சோதனையில் இதுபோல நூற்றுக்கணக்கான காண்டா மிருகங்களை, மின்சாரம் பாய்ச்சிக் கொன்று அதன் கொம்புகளை விற்றதை ஒப்புக்கொண்டார். ஒரு கொம்பின் விலை ஒன்றரை லட்சம் டாலர். தோலின் விலை 40 ஆயிரம் டாலர்.
1683 வரை பிரிட்டனில் பொதுமக்கள் யாரும் காண்டா மிருகத்தைப் பற்றி அறிந்திருக்கவில்லை. 1683-ம் ஆண்டுதான் மக்கள் பார்வைக்காக காண்டா மிருகம், அங்கே காட்சிக் கூண்டில் வைக்கப்பட்டது. உலகில் உள்ள காண்டா மிருகங்களில் பாதிக்கும் மேல் இந்தியாவில்தான் வசித்தன. ஆனால், தொடர்ந்த வேட்டையாடலில் காண்டா மிருகங்கள் பெருமளவு அழிந்துவிட்டன.
இந்தியாவின் ஒவ்வொரு காட்டுப் பகுதியிலும் ஒவ்வொரு விதமான விலங்குகளை வேட்டையாடுவது வழக்கமாக இருந்திருக்கிறது. இமயமலைப் பகுதியில் பனிச் சிறுத்தைகள், அஸ்ஸாமில் காண்டா மிருகம், நேபாளம் மற்றும் குவாலியர் பகுதியில் சிறுத்தை மற்றும் புலிகள் வேட்டையாடப் பட்டன. பறவைகள் அதிகம் வரும் பரத்பூர் பகுதிகளுக்குச் சென்றால், கறுப்பு வாத்துகளைக் கொன்று குவிக்கலாம். குஜராத் காடு களில் மான் வேட்டை, கிர் வனப் பகுதியில் சிங்கம், தெற்கே கேரளாவிலோ யானை வேட்டை சாத்தியம். இவை போக, கரடி, ஓநாய், மயில், காட்டுப்பன்றி, மிளா என்று இந்தியாவின் வன விலங்குகள் பெருமளவு, மன்னர்களாலும் காலனிய அதிகாரிகளின் சந்தோஷ விளையாட்டிலும் உயிரிழந்தன.
கர்ஸன் பிரபு வேட்டையாடிக் கொன்ற புலியின் முன்பு, தனது மனைவியோடு சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் மிகவும் பிரலபமானது. இறந்துபோன புலியின் தோலை பாடமாக்கி வைத்துக்கொள்வது, புலி வேட்டைக்காக தனியாக ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்குவது இவை எல்லாம் சென்ற நூற்றாண்டு உயர்குடிப் பிரபுக்களின் வழக்கம்.
அதிகாரிகளை வன வேட்டைக்கு அழைத்துப் போய் வருவதற்காக சிகாரி எனப்படும் வழிகாட்டிகள் இருந்தார்கள். இவர்கள் காட்டை, உள்ளங்கை ரேகை போல அறிந்தவர்கள். அவர்களின் துணை இல்லாமல் எந்த ஒரு வெள்ளைக்காரனும் வேட்டைக்குப் போய்விட முடியாது. சிகாரி செய்யும் உதவிக்கு பணமும், குடிப்பதற்கு மதுவும் கூலியாகத் தரப்பட்டது. இந்திய சிகாரிகளைப் போல காட்டு வாழ்வின் நுட்பங்களை அறிந்தவர்கள் உலகில் ஒருவரும் இல்லை என்று, வெள்ளைக்காரர்கள் பாராட்டி இருக்கின்றனர். ஆனால், விலங்குகளைக் கொல்வதை சிகாரிகள் விரும்புவது இல்லை. கொல்லப்பட்ட விலங்குகளின் முன்பு, 'தனது பாவத்தை மன்னிக்கும்படி சிகாரிகள் பிரார்த்தனை செய்கிறார்கள்’ என்று, ஆண்டர்சன் என்ற வேட்டையாடி எழுதி இருக்கிறார்.
வன வேட்டையின் வரலாறு குருதிக் கறை படிந்தது. அந்த நினைவுகள்தான், இந்தியன் என்றதும் வனவாசி என்று, வெள்ளைக்காரர்களை இன்றும் நினைக்கவைக்கிறது. கேளிக்கை என்று அறியப்பட்ட வேட்டையாடுதல், இயற்கையின் சம நிலையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எறும்பில் இருந்து புலி வரை அத்தனையும் ஒன்று சேர்ந்து வாழும்போதுதான் காடு முழுமையாகிறது. அதை மறந்து ஓர் இனம் அழிக்கப்பட்டால், அதனைச் சார்ந்து வாழும் உயிரினங்களும் மெள்ள அழிக்கப்பட்டு விடும்.
நகர்மயமாதல், புதிய தொழிற்சாலை அமைப்பது என்று கடந்த 100 வருடங்களில் நிறையக் காடுகள் காணாமல்போயிருக்கின்றன. அதன் விளைவுகளே, இன்று நாம் அனுபவிக்கும் வறட்சி மற்றும் இயற்கை மாறுபாடுகள், சீற்றங்கள். அந்த விளைவுகளின் ஆதார வேர்களை வரலாறு நமக்கு அடையாளம் காட்டுகிறது.
நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வந்த இந்தக் கானுயிர் கொலைகளைத் தடுக்க, 1991-ம் ஆண்டு நவம்பர் மாதம் வன வேட்டைத் தடுப்புச் சட்டம் அமலாகியது. அன்றோடு இந்திய வரலாற்றின் கரும்புள்ளி போல படிந்திருந்த வேட்டையாடுதல் அதிகாரபூர்வமாகத் தடை செய்யப்பட்டுவிட்டது என்றாலும், அலங்காரத்துக்காக மாட்டப்பட்டுள்ள மிருகங்களின் தலைகளும் பாடமாக்கப்பட்ட புலியின் உடலும் கடந்த காலத்தின் வன்முறையை நினைவுபடுத்திக்கொண்டுதான் இருக்கின்றன. மியூசிய சுவரில் மாட்டப்பட்டுள்ள புலியின் அசையாத கண்களில் அது கேட்க விரும்பிய கேள்வியும் உறைந்துபோய்தான் இருக்கிறது. அதைக் கவனிக்காதது போல நாம் கடந்துவிடுகிறோம் என்பதுதான் நிஜம்.
தொடரும் பயணம்..
மிஸ்டர் மியாவ்
''நவம்பர் 25-ம் தேதி 'டேம்-999’ ரிலீஸான பிறகுதான் முல்லைப் பெரியாறு பிரச்னை தீவிரமானது. அதனால் தமிழக - கேரள கலவரத்துக்குப் பிதாமகனே நீங்கள்தானே?'' என்றேன் இயக்குனர் ஷோகன் ராயிடம்.
''அப்படி எல்லாம் சொல்லக்கூடாது. வைகோ என் படத்தைப் பார்க்கவே இல்லை. அப்புறம் எப்படி அவர் பிராப்ளம் செய்யலாம்? அவராலத்தான் தமிழ்நாடு அரசு என்னோட 'டேம்-999’ படத்துக்குத் தடை போட்டிருக்கு. அணை உடைஞ்சா ஏற்படுற ஆபத்தைத்தான் காட்டினேன். மத்தபடி ரெண்டு மாநிலத்து கலவரத்துக்கு நான் காரணமில்ல சாமீ...'' என்று கழன்று கொண்டார்.
''மீண்டும் கமல் படத்தைத் தயாரிக்கப் போவது உண்மையா?'' ஆஸ்கார் ரவிச்சந்திரனிடம் கேட்டேன்.
''கமல் சார் என்னோட தயாரிப்பில் ஹீரோவா நடிக்கப் போறது உண்மைதான். நிச்சயமா நீங்க எதிர்பார்க்காத இன்ப அதிர்ச்சி அந்தப் படத்தில் காத்திருக்கு. முக்கியமான ஹாலிவுட் ஆர்ட்டிஸ்ட் ஒருத்தர் கமல்கூட நடிக்கிறார். டைரக்டர், ஹீரோயின், மியூஸிக், டெக்னிஷியன்ஸ் பத்தி புது வருஷத்துல அறிவிக்கப் போறேன். அதுவரைக்கும் பொறுத்துக்கோ... மியாவ்'' என்று புன்னகைத்தார்.
''உதயநிதியைவிட 'ஓகே., ஓகே.’ படத்தில் சந்தானம் அதிகக் காட்சியில் நடிக்கிறாராமே? அடுத்த கார்த்தி படமும் காமெடியா?'' டைரக்டர் ராஜேஷிடம் பேசினேன்.
''அப்படி இல்லையே. படத்தின் கதைப்படி ஹீரோ உதயநிதியின் நெருங்கிய நண்பர் கேரக்டரில் சந்தானம் நடிக்கிறார். யாரும் யாரையும் டாமினேட் செய்யவில்லை. இருவரும் சம அளவுள்ள காட்சிகளில் நடித்து காமெடியில் பட்டையைக் கிளப்பி இருக்கிறார்கள்.
கார்த்திக்கு ஹியூமர்சென்ஸ் நல்லாவே இருக்கு. அதுவும் 'சிறுத்தை’யில் கார்த்திக்கும், சந்தானத்துக்கும் கெமிஸ்டரி நல்லாவே இருந்துச்சு. அதனால அடுத்த படத்துல கார்த்தியோட சந்தானமும் காமெடியும் சத்தியமா உண்டு'' என்றார்.
0 comments:
Post a Comment