மாரடைப்பே தள்ளிப் போ...
கை கொடுக்கும் வாஸ்குலர் ஹெல்த் டிரீட்மென்ட்
வாய்ப்பு இருக்கிறதா... இல்லையா என்பதை 10 ஆண்டுகளுக்கு முன்பே அறிந்துகொள்ளும் வகையில் புதிய தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன என்பதைக் கேள்விப்பட்டு, சென்னை அண்ணாநகர் தம்பிரான் ஹார்ட் அண்டு வாஸ்குலார் இன்ஸ்டிடியூட் இதய நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் ரவிக்குமாரிடம் பேசினோம்.
''பிற நாடுகளைவிட நம் நாட்டில் மாரடைப்பு இளம் வயதினரை அதிக அளவில் பாதிக்கிறது. அதற்கு முக்கியக் காரணம் உணவு முறை மற்றும் வாழ்க்கைச் சூழல் ஆகும். 60 வயதான பிறகு உடலில் தென்படும் பாதிப்புகள், இப்போது 30 வயதிலேயே குறிப்பாக ஆண்களிடம் தெரியத் தொடங்குகிறது. இதயம் குறித்த விழிப்பு உணர்வு மக்களிடம் ஓரளவு ஏற்பட்டு இருந்தாலும், நெஞ்சு வலி அல்லது மாரடைப்பு ஏற்பட்ட பின்னரே மருத்துவரை நாடி வருகிறார்கள்.
மாரடைப்பு ஒருவருக்கு வரும் வாய்ப்பு இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள ஈ.சி.ஜி, எக்கோ, டிரெட் மில் போன்ற பரிசோதனைகள் உள்ளன. ஆனால் இத்தகையப் பரிசோதனை மூலம் ரத்தக் குழாயில் 60 சதவிகிதத்துக்கு மேல் அடைப்பு இருந்தால்தான் கண்டறிய முடியும். அதிலும் 20 முதல் 30 சதவிகிதம் பேருக்கு, அடைப்பு இருந்தால்கூட பாதிப்பைக் கண்டறிய முடிவது இல்லை. இந்தக் குறைபாட்டைத் தீர்க்கும் வகையில் அறிமுகமாகி இருக்கிறது, வாஸ்குலர் ஹெல்த் டிரீட்மென்ட்.
இதயம் பாதிக்கப்படுவதற்கு முன்பே, இதயத்துக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்த நாளங்கள்தான் முதலில் பாதிக்கப்படுகிறது. மனித உடலில் ஏறத்தாழ 72,000 ரத்த நாளங்கள் உள்ளன. இந்த ரத்த நாளங்களில் என்டோதீலியம் என்கிற மெல்லிய படலம் காணப்படும். இதில் கொழுப்பு படியத் தொடங்கினால், அந்தப் பகுதி சோர்வடைந்து, இயங்குவதில் தாமதம் உண்டாகும். இதயத்துக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்த நாளத்திலும் கொழுப்பு படிந்தால், ரத்தம் சீராகச் செல்லமுடியாமல் தடை ஏற்படும். இதுதான் மாரடைப்பு ஏற்படுவதற்கான முதல் நிலை.
இப்படி என்டோதீலியத்தில் கொழுப்பு படிவதை எஃப்.எம்.டி. டெஸ்ட் மூலம் தற்போது கண்டறியமுடியும். ரத்த நாளங்களை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்வதன் மூலம் பாதிப்பு கண்டறியப்படுகிறது. கொழுப்பு படிந்திருப்பது கண்டறியப்பட்டால், சோர்வு அடைந்திருக்கும் என்டோதீலியத்தை இயங்கச் செய்ய நைட்ரிக் ஆக்சைடு தேவைப்படும். அதனால் பாதிக்கப்பட்டவரை, நைட்ரிக் ஆக்சைடு அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளும்படி பரிந்துரைப்போம்.
என்டோதீலியத்தில் கொழுப்பு படியப் படிய, ரத்த நாளங்கள் விரிந்து சுருங்கும் தன்மையை இழக்கும். இதனால் இதயம் அதிக அழுத்தம் கொடுத்து, ரத்தத்தை பிற பாகங்களுக்குச் செலுத்த வேண்டிய நிலைக்கு ஆளாகும். இதன் காரணமாக இதயம் அதிக அழுத்தத்திற்கு ஆட்படும். மாரடைப்பு ஏற்படுவதற்கான அடுத்தகட்ட நிலை இது. இதனை 'ஆர்டீரியல் ஸ்டிஃப்னெஸ் டெஸ்ட்’ (கிக்ஷீtக்ஷீவீணீறீ ஷிtவீயீயீஸீமீss ஜிமீst) மூலம் கண்டறியலாம். இந்த குறைபாட்டினையும் நீக்குவதற்கு மருந்து, மாத்திரைகள், உணவு முறைகள் மற்றும் சரியான உடற்பயிற்சியே போதுமானது.
இதற்கு அடுத்த நிலை, ரத்த நாளங்களின் தடிமனைக் கண்டறிவது. 30 வயதுள்ள ஒருவரின் ரத்த நாளத்தின் தடிமன் சாதாரணமாக 0.6 மில்லி மீட்டர் என்கிற அளவில் இருக்கும். 70 வயதைத் தொடும்போது, அதன் தடிமன் 1 மில்லி மீட்டர் ஆகிவிடும். இதனை வாஸ்குலர் ஏஜ் என்று சொல்வோம். ஆனால் இப்போது புகைப் பழக்கம், அதிகக் கொழுப்பு, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உடல் பருமன், அதிக மன அழுத்தம் போன்ற காரணங்களால் 30 வயதிலேயே ரத்த நாளங்கள் தடிக்கத் தொடங்குகிறது. அதாவது 30 வயதிலேயே ஒருவரின் ரத்த நாளம், கிட்டத்தட்ட 50 வயதான ஒருவரின் ரத்த நாளத்தைப் போல் தடிமனாகி விடுகிறது. இதனை இன்டிமோ மெடிக்கல் திக்னெஸ் டெஸ்ட் மூலம் கண்டறியலாம். ரத்த நாளங்களின் தடிமன் அதிகரிப்பதால் ரத்த நாளங்கள் சுருங்கி அடைப்புகள் உருவாகும். இதனால் எந்த நேரத்திலும் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டாகும். இதனை சி.டி ஸ்கேன் செய்வதன் மூலம் கண்டறியலாம்.
என்டோதீலியத்தில் கொழுப்பு படியத் தொடங்குவது முதல் ரத்த நாளங்களில் அடைப்புகள் உண்டாகி மாரடைப்பு ஏற்பட, கிட்டத்தட்ட ஐந்தில் இருந்து 10 ஆண்டுகள் வரை ஆகலாம். இதனை பல்வேறு பரிசோதனை கள் மூலம் அறிந்துகொண்டு, சிகிச்சை மேற்கொள்ளும் ஒட்டுமொத்த நடவடிக்கையைத் தான், வாஸ்குலர் ஹெல்த் டிரீட்மென்ட் என்று சொல்வோம். 30 வயதைத் தாண்டிய அனை வருமே இந்தப் பரிசோதனைகளை மேற்கொள்வது நல்லது. முன்னெச்சரிக்கையாக இந்தப் பரிசோதனைகள் செய்துகொண்டு, சிகிச்சை பெறுவதன் மூலம் மாரடைப்பு வராமலோ அல்லது முடிந்த வரைக்கும் தள்ளிப் போடவோ கண்டிப்பாக முடியும்'' என்றார்.
வருமுன் காக்கலாமே!
அ.லெனின்ஷா
************************************************************************பழசு இன்றும் புதுசு
நேற்றும் நமதே - 55: 29.6.88
பயங்கரமான ஒரு திருவிழா... 2,000-க்கும் மேற்பட்ட எருமைக் கடாக்களை ஒரே
திருச்சியில் இருந்து சுமார் 70 கிலோ மீட்டர் தூரத்தில் பாளையத்துக்கு அருகே உள்ள மேட்டுப்பட்டி கிராமம்... இங்கே உள்ள துர்க்கையம்மன் கோயிலில்தான் இந்தத் திருவிழா. ஜூன் மாதம் 16-ம் தேதி, விகடன் வாசகர் ஒருவர் நம்மை மேட்டுப்பட்டிக்கு அழைத்துச் சென்று காட்டினார்.
காலையில் இருந்தே லாரிகள், வேன்கள் மூலமாகவும், சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து வண்டி கட்டிக்கொண்டும் ஏராளமான பக்தர்கள் கூடியிருந்தனர். கிட்டத்தட்ட 30,000 பேருக்கு மேல் இருக்கும்.
ஏழு வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே நடக்கும் திருவிழா இது. ''சாமி அப்படித்தான் வரம் கொடுத்திருக்கு. ஏழு வருஷத்துக்கு ஒரு தரம்தான் நடத்தணும்'' என்று காரணம் சொன்னார் ஒருவர்.
புதிதாக முளைத்த கடைகள்... குட்டி சர்க்கஸ் கூடாரங்கள்... 'போட்டோ புடிக்கும் இடங்கள்’... என எங்கு பார்த்தாலும் திருவிழாக்கோலம்.
ஓர் இடத்தில் ஆயிரக்கணக்கான எருமைக் கடாக்கள் 'தங்களின் உயிர் இன்று பறிக்கப்படப்போகிறது’ என்பது தெரியாமல் நின்றுகொண்டும், நடந்துகொண்டும் இருந்தன. மேலும் மேலும், எருமைக் கடாக்கள் வந்துகொண்டே இருந்தன.
அன்று காலை 8 மணிக்கே எல்லாவிதமான ஏற்பாடுகளும் ஆரம்பமாகின...
கோயிலுக்கு முன்னால் இருந்த ஆலமரத்தின் அடியில் சிலர் மண்வெட்டி சமாசாரங்களோடு குழி தோண்ட ஆரம்பிக்க... மண்டை ஓடுகள், கொம்புகள் என்று எலும்புக்கூடுகள் மயம்... கடந்த முறை (ஏழு ஆண்டுகளுக்கு முன்) நடந்த திருவிழாவில் புதைக்கப்பட்ட எருமை கடாக்களின் மிச்சங்கள்தான் இவை எல்லாம்!
ஆயிற்று! குழி ரெடி...
''ஒவ்வொரு தடவையும் கடா வெட்டறத்துக்கு முன்னாடி, குழியில் ஒரு எலுமிச்சம்பழமும் பூவும் வைப்பாங்க. அடுத்த தடவை தோண்டும்போதும் அது வெச்சமாதிரி அப்படியே இருக்கும்'' என்று பக்கத்தில் இருந்த ஒருவர் 'ரீல்’ சுற்றினார். நாம் விசாரித்தபோது அப்படி எதுவும் இந்த முறை எடுத்ததாக யாரும் சொல்லவில்லை.
மணி 10... கையில் நீளமான சவுக்குக் கட்டைகளையும் கம்புகளையும் ஏந்திக்கொண்டு பலர் (கிட்டத்தட்ட 200 பேர் இருக்கும்) அந்த இடத்தில் பிரசன்னமானார்கள், உடம்பில் சட்டை இல்லாமல். அவர்கள் இடுப்பில் அண்டர்வேர் அல்லது வேட்டியை மடித்துக் கட்டியிருந்தனர். ''ஆ... ஊ'' என்ற ஆரவாரம் வானை எட்டியது.
திடீரென ''தள்ளு... தள்ளு'' என்று காக்கிச் சட்டைகள் நம்மைத் தள்ள, அந்த சவுக்குக் கட்டை வைத்திருந்தவர்கள் மேளதாளத்துடன் கோயிலைச் சுற்றிக்கொண்டு ஓடி வந்தார்கள். சிலரின் கையில் கட்டைக்குப் பதில் நீளமான ஈட்டி.
(''திருவிழாவைப்பத்தி பேப்பர்ல எல்லாம் எழுதக் கூடாது. எழுதினா, அம்மா கோவிச்சுக்கும்... 'போட்டோ’ல்லாம் புடிக்கக் கூடாது.'' அங்கே அறிமுகமான ஒருவர் கண்களை உருட்டியவாறு நமக்குத் தந்த அட்வைஸ். அதனால், பயந்து பயந்து யாருக்கும் தெரியாமலேயே 'கிளிக்’க வேண்டியிருந்தது.)
நேரம் 11.45-ஐ நெருங்க, மேடை மாதிரி போடப்பட்டு இருந்த ஒன்றில் மாலை போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்த பூசாரி விபூதியை அள்ளி நாலாபுறமும் வீசினார்.
கீழே, கையில் நீ...ளமான அரிவாள் பளபளக்க, நான்கு பேர் ஒரே மாதிரியான ஜிகினா போன்ற உடை அணிந்து, தயாராய் இருந்தனர். (அரிவாளைத் தீட்டிக் கொடுக்க அருகிலேயே சாணை பிடிக்கும் வசதி வேறு!)
கூட்டத்தின் ஆரவாரம் அதிகரிக்க, கூச்சல்களுக்கு இடையே பரிதாபமாக விழித்துக்கொண்டு இருந்த சிறிய எருமைக் கடா ஒன்று கயிற்றால் கட்டி இழுத்து வரப்பட்டது. 'தரதர’வென்று இழுத்து வந்து குழிக்கு முன்னால் இருந்த வெட்டவெளியில் நிறுத்தப்பட்டு, நாலாப் பக்கங்களும் கயிற்றால் இழுக்கப்பட, திமிறி... பின் கால் தடுக்கிக் கீழே விழுந்தது. மீண்டும் எழுந்து திமிறியது அந்த எருமைக் கடா.
அரிவாள் ஏந்தியவர்களில் ஒருவர் தன் கையில் இருந்த நீளமான அரிவாளை ஓங்கி, திமிறிய அந்த ஜீவனின் கழுத்தில் பளீரென்று இறக்க... ஐயோ...! பார்த்துக்கொண்டு நின்ற நமக்கு உடல் பதறியது. அந்த அப்பாவி ஜீவன் வேதனையில் துடிக்க... மறுபடியும் அடுத்த வெட்டு... ரத்தம் சிவப்பாகப் பரவித் தரையை ஈரமாக்க, தலை துண்டாகித் தனியாக விழவும் 'ஹோ’வென்ற உற்சாகத்துடன் 'பக்தர் கும்பல்’ ஆரவாரம் செய்ய, தரையில் அந்த மிச்ச உடல் கடைசியாகத் துடித்துக்கொண்டு இருந்தது.
வெட்டப்பட்ட தலையைத் தன் தலையில் சுமந்துகொண்டு ஒரு பக்தர் குழியைச் சுற்றி வலம் வர, அவரின் முகம், உடல் எல்லாம் ரத்த மயம். சுற்றி முடித்துவிட்டு அந்தத் தலையைக் குழிக்குள் எறிய, தனியே துடித்த உடலையும் துடிப்பு அடங்குவதற்குள் அந்தக் குழிக்குள்ளேயே தள்ள... முதல் பலி முடிந்தது.
இதற்குள், அடுத்த கடா தயாராய் இழுத்துக் கொண்டுவரப்பட, சுற்றி நின்ற பக்தர்கள் தங்கள் கையில் இருந்த சவுக்குக் கட்டையால் மாறி மாறி அதை அடித்தனர். நடக்க முடியாமல் அலறித் தள்ளாடிய அந்தக் கடாவை இழுத்துத் தரையில் தள்ளிக் கயிற்றால் இழுத்துத் தரையில் தள்ளிக் கயிற்றால் இழுத்துப் பிடிக்க... மறுபடியும் அரிவாள் மேலே சென்றது... மறுபடி கீழே ரத்தம் கொப்பளித்துத் தரையை நனைத்தது. மறுபடியும் தலை ஊர்வலம் - உடல் குழிக்குள் தள்ளப்பட்டது.
சில கடாக்கள் ஓரிரண்டு வெட்டுக்களிலேயே தங்கள் தலையை இழக்க, இன்னும் சில, 30 வெட்டு வெட்டிய பின்னரும் அப்படியே துண்டாகாமல் இருந்தன. ஒவ்வொரு முறையும் கடைசியாக அவை துடித்த துடிப்பு... நம்மால் வேதனையைத் தாங்க முடியவில்லை. நம் கால்கள் துவள ஆரம்பித்தன.
அந்தக் குழிக்குள்ளே உடல்களும் தலைகளும் தனித்தனியாகத் துடித்துக்கொண்டு இருந்த காட்சி கல் நெஞ்சர்களைக்கூட ஒரு கணம் கலங்கடிக்கும். ஆனால், பக்தர்கள் தங்கள் வேலையைக் கடமையாகச் செய்துகொண்டு இருந்தனர். பொதுமக்கள் பக்கம் இருந்து உப்புப் பொட்டலங்கள் குழியை நோக்கிப் பறந்தன. (வழக்கமாம்!)
சுமார் அரை மணி நேரம் ஆகியிருக்கும்... திடீரென, இழுத்துக்கொண்டு வரப்பட்ட ஒரு கடா திமிறிக்கொண்டு கூட்டத்துக்குள் புகுந்து ஓட, கூட்டம் அலறிக்கொண்டு ஒருவர் மேல் ஒருவர் விழுந்து குழந்தைகள் கால்களுக்குள் மிதிபட, அங்கே பெரிய கூச்சல் சில நிமிடங்களுக்கு. கடாவைத் துரத்திக்கொண்டு பக்தர்கள் ஓட, ஒரு பந்தலில் கடா புகுந்து ஓட, பந்தல் சரிந்து ஒரு பெண்ணின் கால் முறிந்தது. அவசர அவசரமாக அவரை வண்டியில் தூக்கிப் போட்டுக்கொண்டு சென்றார்கள். எப்படியாவது தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள நினைத்த அந்த ஜீவன், கடைசியாய் இவர்கள் கைகளில் சிக்க, தங்கள் வெறி எல்லாம் தீரும் வரை அதைச் சவுக்குக் கட்டைகளால் அடித்த பிறகு, பலியிடும் இடத்துக்குக் கொண்டுவரப்பட... கடைசியில் அந்தக் கடாவால் தப்ப முடியவில்லை!
இடையிடையே கடாக்களின் தலையை ரத்தம் சொட்டச் சொட்டச் சுமந்துகொண்டு ஆடியவர்கள், வேண்டும் என்றே பொதுமக்கள் பக்கம் வந்து அவர்களின் மேலே போட்டுவிடுவது போல் பயமுறுத்த, அலறிய பொதுமக்கள் ஒருவர் மேல் ஒருவர் விழுந்து பின்வாங்கினர். உற்சாகம் தலைக்கேற, மேலும் மேலும் அவர்கள் தலையைவைத்துப் பயமுறுத்துவதைச் சுற்றி நின்ற போலீஸ்காரர்கள் சிரித்துக்கொண்டு வேடிக்கை பார்த்தபடி இருந்தனர். (கண்ணாடி அணிந்த போலீஸ்காரர் ஒருவர் மீது ஒரு முறை ரத்த அபிஷேகம் நடக்க, அவர் பதறிக்கொண்டு யூனிஃபார்மை உதறியவாறு நின்றதைக் கண்டு பொதுமக்கள் சிரித்தார்கள்!)
நேரம் ஆக ஆக... அந்தக் குழிக்குள், வெட்டப்பட்ட தலைகளும் உடல்களும் விழுந்துகொண்டே இருந்தன.அந்த இடத்தில் மண்ணின் நிறமே காணாமல் போய், சிவப்பாக ரத்தக் குழம்பு தேங்கிப் போய்ப் பயங்கரத்தைத் தோற்றுவித்தது. வேக வேகமாக உயிர்கள் பறிபோய்க்கொண்டு இருந்தன.
ஒரு சின்ன ஆச்சரியம் - அவ்வளவு ரத்தம் இருந்தும், ஒரு காக்கைகூட வரவில்லை. ஒரு ஈ கூட அந்தப் பகுதியிலேயே இல்லை!
''அதெல்லாம் ஆத்தா மகிமை. ஈ, காக்கா கிட்ட அண்டாது. நாய், நரி எது நெருங்கினாலும் அப்படியே செத்து விழுந்திடும்'' என்று முதியவர் ஒருவர் விளக்கம் தந்தார்.
அரிவாளை அடிக்கடி மாற்றிக் கூர்மையாக்கித் தந்துகொண்டே இருந்தனர். கிட்டத்தட்ட 2,000 எருமைக் கடாக்கள் அன்று தங்களின் உயிர்களைப் பறிகொடுத்தன. குழி நிரம்பி, அதற்கு மேலும் மேலும் போட்டுக்கொண்டே இருக்க, கண்களுக்கு முன்னால் கடவுளின் பெயரால் உயிர்களைக் கொன்று குவித்தனர் உற்சாகத்துடன்.
யாராவது தலைப்பாகை அணிந்திருக்கக் கண்டால், உடனடியாக அந்தத் துண்டுகளைப் பறித்து, வெட்டிய கடாக்களுடன் குழிக்குள் எறிந்தனர்.
ஒரு மாத காலத்துக்கு இந்தக் குழியை மூடாமல் அப்படியே வைத்திருப்பார்களாம். அதற்குப் பின் மூடிவிடுவார்களாம்.
ஏழு ஆண்டுகளுக்குப் பின்தான், அந்தக் குழி, அன்று காலையில் நடந்தது போல் மறுபடி தோண்டப்படுமாம்.
காலையில் ஆரம்பித்த நிகழ்ச்சி, இரவு வரை தொடர்ந்தது. ரத்தக் குளியலில் நனைந்த கும்பல் ஆரவாரத்துடன் களைத்து ஓய்ந்தது.
இதே போன்று எருமைக் கடா வெட்டும் திருவிழாக்கள் இதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் நடக்குமாம். ஆனால், இவ்வளவு அதிக எண்ணிக்கையில் வெட்டப்படுவது இங்குதான்.
பாதுகாப்புக்கு வந்திருந்த மணப்பாறை இன்ஸ்பெக்டர் ஜெகவீரபாண்டியனைச் சந்தித்தோம்...
''ஏன் இம்மாதிரி நிகழ்ச்சிகளைத் தடை செய்வதில்லை?'' என்றோம்.
''யாருமே தடுக்க முயற்சிக்கலை... வழக்கமா மத்த இடங்கள்ல ஆடு, கோழி வெட்டுவாங்க. இங்கே எருமைக் கடா... அதுதான் வித்தியாசம்.'' என்றார்.
நாம் கேள்விப்பட்டதோ வேறு. கடந்த முறை அரசு இதைத் தடுத்துவிட்டதாம். ஆனால், போலீஸ் தடுப்பையும் மீறி 'நடத்தியே தீருவோம்’ என்று ஊர்க்காரர்கள் பிடிவாதம் பிடிக்கவும், வேறு வழி இல்லாமல் அனுமதித்துவிட்டார்களாம்.
அந்த இடத்தில் துடித்துக்கொண்டு ரத்த வெள்ளத்தில் மிதந்த அந்த அப்பாவி ஜீவன்கள் கண் முன் வந்து மனத்தை என்னவோ செய்தன...
கண்டிப்பாக, தான் படைத்த உயிர்களை எந்தக் கடவுளும் இப்படிப் பலி கேட்க மாட்டார்!
- து.கணேசன்
************************************************************************
கயிறே, என் கதை கேள்!
12 வருடக் காத்திருப்புக்குப் பதில் தரவேண்டியது யார்?
இந்த மனநிலையில்தான் எங்களின் 21 வருடங்கள் கழிந்தன. இளமை தொலைத்து - இல்லறம் இழந்து - உறவுகள் முகம் மறந்து - உற்ற துணைக்கு யாருமற்று இத்தனைக் காலங்களை எப்படிக் கடந்தோம் என்பது மிச்சம் இருக்கும் எங்கள் உயிருக்கே வெளிச்சமான வினா. ஆனால், இன்றைக்கு கம்பிகளுக்குப் பின்னால் நம்பிக்கையோடு நிற்கிறோம். அமாவாசை இருட்டில் ஆகாயமே மின்னல் வடிவில் தீக்குச்சி உரசியதைப்போல், எங்கள் விழிகளுக்கு முன்னால் வெளிச்சம் தெரிகிறது. சிறு சிறு கணங்களில் அந்த வெளிச்சம் மறைந்தாலும், திரி நீளமான வெடி விட்டுவிட்டுப் புகைவதைப்போல் இடைவெளிகள் கடந்தும், அந்த வெளிச்சம் எங்களின் விழிகளைப் பற்றிக்கொள்கிறது.
'செப்டம்பர் - 9’ எனத் தூக்குக்கு நாள் குறிக்கப்பட்ட வேளையிலும், எங்கள் மூவருடைய மூச்சும் இயல்பாகத்தான் இருந்தது. தமிழ்நாடே ஆர்த்தெழும் வேளையில், எங்கள் கழுத்தை எந்தக் கயிற்றாலும் இறுக்க முடியாது என்கிற நம்பிக்கை பிறந்திருந்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில் மிகப் பரபரப்பான சூழலில், எங்களின் தூக்குத் தண்டனை குறித்த வழக்கு நடந்தது. மாபெரும் வழக்கறிஞர்களான ராம்ஜெத்மலானி, காலின் கான்சால்வேஸ் உள்ளிட் டவர்கள் நீதிப்பெருமான்கள் திரு.நாகப்பன், திரு.எம்.சத்திய நாராயணன் இருவரின் முன்னால் எங்களுக்காக நின்றார்கள். நீதிமன்றத்துக்கு வெளியே எங்களுக்காக தமிழ் உறவுகள் கணக்கிட முடியாத அளவுக்குக் கூடி இருந்ததை கம்பிகளுக்குள் இருந்தபடியே மனசால் பார்த்து சிலிர்த்தோம். எங்களுக்காகப் பேசிய மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி அய்யா அவர்கள், ''ராஜீவ் காந்தி கொலை வழக்கைப் பொறுத்தவரை நீதிமன்ற நடவடிக்கைகள் 1999-ம் வருடத்துடன் முடிந்துவிட்டன. மூன்று பேர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட கருணை மனுவை ஆளுநர் 10 நாட்களில் தள்ளுபடி செய்துவிட்டார். அதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. ஆளுநரின் உத்தரவை ரத்துசெய்த உயர் நீதிமன்றம் கருணை மனுக்களை மீண்டும் பரிசீலனை நடத்தும்படி உத்தரவிட்டது. அதையடுத்து, இரண்டாவது முறை கருணை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஐந்து மாதங்களில் அது குறித்த முடிவு எடுக்கப்பட்டது. பின்னர் மூன்று பேரும் 2000-ல் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினோம். 11 ஆண்டுகள் கழித்து 28.7.11 அன்று குடியரசுத் தலைவர் அந்த மனுக்களை நிராகரித்தார். இதற்கு இடைப்பட்ட காலத்தில் ஐந்து முறை குடியரசுத் தலைவருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டது. இத்தனை ஆண்டுகள் தாமதித்து கருணை மனுவை நிராகரித்து இருப்பது சட்டத்துக்குப் புறம்பானது. அரசியல் சாசனம் 21-ல் வழங்கப்பட்டுள்ள உரிமைகளுக்கு எதிரானது. இந்த இடைப்பட்ட காலத்தில் மூவரும் எத்தகைய துயரங் களுக்கு ஆளாகி இருப்பார்கள். அனுதினமும் மரண வேதனையில் துடித்து இருப்பார்கள். அதனால், குடியரசுத் தலைவரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்!'' என உரத்து முழங்க, எட்டு வார இடைக்காலத் தடை விதித்தது நீதிமன்றம்.
தூக்குக்குத் தயார் செய்யப்பட்ட பொம்மைகளைப் போல் (மனதளவில் தைரியம் இருந்தாலும் உடை, சாப்பாடு உள்ளிட்ட நடவடிக்கைகளில்) தனித் தனியே பிரித்து அமரவைக்கப்பட்டு இருந்த எங்களுக்கு இடைக்காலத் தடை குறித்த தகவல் வந்தது. தம்பி பேரறிவாளன், 'தமிழ் மக்கள் நம்மைக் காப்பாற்றிவிட்டனர் அண்ணா’ எனக் கைகளை உயர்த்திச் சொன்னான். சாந்தன் பேரமைதியோடு தொப்புள் கொடி உறவுகளுக்கு நன்றி பகர்ந்தார். எமக்காகப் போராடிய பெருமக்களை, உயிரையே எதிர்ப்புப் பத்திரமாக எழுதிக் கொடுத்த தங்கை செங்கொடியை, சட்டப் போராட்டம் நடத்திய உணர்வாளர்களை, குடும்பத்தில் ஒருவராக எம்மைப் பாவித்து உருகித் தவித்த தகையாளர்களை நேரில் பார்த்து நெஞ்சாரக் கட்டி அணைக்க முடியாத கம்பி வளையத்துக்குள் நாங்கள். கம்பிகளுக்குள் அடைபட்ட காரணத்துக்காக அன்றுதான் ஆதங்கப்பட்டோம். சென்னை உயர் நீதிமன்றத்தின் திசையில் எங்களால் கை கூப்பிக் கதறி அழ மட்டுமே முடிந்தது. சுருண்டு சோர்ந்திருந்த எங்கள் நரம்புகளில் நம்பிக்கை வெளிச்சத்தைப் பாய்ச்சிய பெருமக்களுக்கு நன்றிக்கடனாக நாங்கள் என்ன செய்யப்போகிறோம்?
அடுத்தடுத்தும் எமக்கான சட்டப் போராட்டங்கள் நீளுகிற நிலையில், எங்களைச் சந்திக்க வேலூருக்கு வந்தார் எமது உயிர் மீட்ட சக்தியான வர். நிமிடங்களை ஒதுக்கிக் கொடுக் கக்கூட அவகாசம் இல்லாமல், எந்நேர மும் பரபரப்பைக் கட்டிச் சுமக்கும் அந்தக் கடமையாளருக்கு எங்களைச் சந்திக்க எப்படி நேரம் கிடைத்ததோ? எங்களின் உயிர் மீது அவருக்கு அப்படி என்ன அக்கறையோ? சட்டத்தின் விதிகளைப் போல் அழுந்தப் படிந்த முக ரேகைகள் அவருடைய அறிவு முதிர்ச்சியின் அடையாளங்களாக இருந்தன. கை கூப்பிக் கும்பிடத் தோன்றியது.
''உங்களுக்கு எப்படி அய்யா நாங்கள் நன்றி செலுத்தப்போகிறோம்?'' - எங்களின் கண்ணீர் வழியே வழிந்தது கேள்வி. மெல்லிய புன்னகையில், ''கவலைப்படாதீர்கள்!'' என்றார் ஒற்றைக் கையை உயர்த்தி. இந்தியாவின் சட்ட ஜாம்பவான் அவரிடத்தில் நாங்கள் என்ன கேட்க முடியும்? அவர் கேட்ட விவரங்களை மட்டும் விரிவாகச் சொன்னோம். பேரறிவாளனை இரக்கத்தோடு ஏறிட்டார். சாந்தனின் அமைதியை நியாயத்துக்கான அடையாளமாக எண்ணினார். ''நான் இருக்கேன்'' என்கிற நம்பிக்கையை எங்களுக்கான பெரும் பரிசாகக் கொடுத்துவிட்டுப் போனார். சிறைக்கு வெளியே பத்திரிகையாளர்கள் சிலர் சந்தித்தபோது, ''சட்டம், நீதி, விசாரணை, விளக்கம் என்பதை எல்லாம் தாண்டி ஒருவரின் முகத்தைப் பார்த்தாலே அவர் குற்றவாளியா? இல்லையா? என்பதை என்னால் அடையாளம் கண்டுவிட முடியும். அந்த விதத்தில் முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரும் நிரபராதிகள் என என்னால் சொல்ல முடியும்!'' எனச் சொல்லி இருக்கிறார். அவர் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நாங்கள் கண்ணீரை மட்டுமே கைமாறாகக் கொடுக்க முடியும்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நாங்கள் கைது செய்யப்பட்டோம். கைதான நாள் முதல் கயிற்றின் நிழலில் கதறிக்கிடக்கும் இன்றைய நாள் வரை எமது வாழ்க்கை சோகச் சூறாவளியால் சூறையாடப்படுகிறது. விசாரணை என்கிற பெயரில் நாங்கள் சுமக்காத சித்ரவதைகள் இல்லை. உடலின் ஒவ்வோர் உறுப்பும் விசாரணை நடத்திய அதிகாரிகளிடத்தில் கை கூப்பிக் கதறின. பாதுகாப்பு என்கிற பெயரில் எமக்கு விதிக்கப்பட்ட கெடுபிடிகள், வாழ்வதற்கான ஆசையை அடியோடு வெறுக்கவைத்துவிட்டன. 20 வருடங்களுக்கும் மேலாக நாங்கள் தனிமைச் சிறையில்... தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டு 12 வருடங்களுக்கும் மேலாக, கயிறு எங்களோடு கபடி ஆடுகிறது. ஏற்கெனவே, பல தடவை தூக்குக்குத் தேதி குறிக்கப்பட்டு கண்ணியில் சிக்கிய காடைக் குருவிகளாக எங்களை நிறுத்திப் பார்த்திருக்கிறது விதி. (சட்ட விதி என நீங்கள் அர்த்தப்படுத்திக் கொண்டாலும் எமக்கு சரிதான். தீர்த்துக்கட்டுவதுதான் தீர்ப்பு என்கிற நிலையில் தலையெழுத்து என்கிற விதியும், சட்டம் என்கிற விதியும் எமக்கு ஒரே விதமாகத்தானே இருக் கின்றன!) பின்னர் கடைசி நேரத்தில் தடைஆணைப் பெறப்பட்டு, எங்களின் உயிர்கள் தப்பித்தன.
தூக்கா..? தண்டனை நீக்கா? என்கிற பட்டிமன்றத்தில் எங்களின் வாழ்க்கை அடிக்கடி படபடக்கிறது. சாவின் விளிம்புக்குப் போய்த் திரும்புகிற நிலையை எத்தனை முறைதான் எதிர்கொள்வது? பிராய்லர் கோழி அடுத்த நாள் வரை தன் உயிரை பத்திரப்படுத்திக் கொள்வதைப்போல், ஒவ்வொரு முறையும் பதுங்கித் தப்புகிறது எங்களின் உயிர். சட்டம் என்கிற கத்தி எங்களின் கழுத்துகளைக் குறிபார்த்தபடியே கூர் தீட்டப்படுகிறது. நிராகரிக்கப்படுவதைவிட காத்திருப்பில் இருப்பதுதான் நம் வாழ்க்கையை இன்னமும் கடினம் ஆக்குகிறது.
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு மூன்று வருடங்களைக் காத்திருப்பிலேயே கடந்து இருந்தால்கூட, நிச்சயம் தூக்கை ரத்து செய்து தண்டனைக் குறைப்பு செய்ய முடியும். இதற்கு உதாரணமான பல சம்பவங்கள் இந்தியாவில் நடந்துள்ளன. ஆனால், 12 வருடங்களுக்கும் மேலாகக் காத்திருப்பிலேயே கழிகிற எங்களின் வாழ்க்கைக்கு மட்டும் எவரிடத்திலுமே பதில் இல்லாதுபோனது ஏன்? எமக்கான போராட்டங்கள் நிரந்தர விடுதலையை நோக்கி எமை அழைத்துச் செல்லும் என எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது நம்புகிறோம்; ஏங்குகிறோம். காரணம், கயிறைவிட 'காத்திருப்பு’தான் எங்களை அதிகம் இறுக்குகிறது!
*********************************************************************************
மிஸ்டர் மியாவ்: 'நள' ராஜன்!
கமல் நடித்து இயக்கும் 'விஸ்வரூபம்’ படத்தை 'ராஜபாட்டை’ பிரசாத் தயாரித்து வந்தார். இடையில் என்ன நடந்ததோ, தயாரிக்கும் பொறுப்பையும் கமலே எடுத்துக்கொண்டார். படத்தில் கமலுக்கு ஆன்ட்ரியா, பூஜா குமார் என்று இரண்டு ஜோடிகள்.
அந்தக் காலத்தில் 'வைதேகி காத்திருந்தாள்’, 'குங்குமச் சிமிழ்’, 'பயணங்கள் முடிவதில்லை’ போன்ற வெள்ளி விழாப் படங்களை இயக்கிய ஆர்.சுந்தர்ராஜன், இப்போது சமையல் தொழிலில் இறங்கிவிட்டார். சமீபத்தில் நடந்த பி.வாசு இல்ல கல்யாணத்தில், சமையல் பொறுப்பு சுந்தர்ராஜனுடையதுதான். நளன் அவதாரத்துக்கு நல்ல வரவேற்பாம்.
ஒன்லைன் கதையை மட்டும் கையில் வைத்துக்கொண்டு ஷூட்டிங் ஸ்பாட்டுக்குக் கிளம்பிவிடுவது டைரக்டர் பிரபு சாலமன் வழக்கம். அவரிடம் உதவி டைரக்டராக இருந்த ராமேஷ் ராமசாமியும், பிரபு போலவே ஒன்லைனை வைத்துக்கொண்டு 'செங்காடு’ படத்தை இயக்கி முடித்து இருக்கிறார்.
'ஊழலை ஒழிப்பேன்’ கோஷத்தோடு ஜெயித்தவர்கள் இப்போது மௌனமாக இருக்கிறார்கள். காரணம் கேட்டால், 'கமிஷனர் ஆபீஸில் கம்ப்ளைன்ட் கொடுத்தாச்சு... ஆனா...’ என்று இழுக்கிறார்கள்.
அந்தக் காலத்தில் 'வைதேகி காத்திருந்தாள்’, 'குங்குமச் சிமிழ்’, 'பயணங்கள் முடிவதில்லை’ போன்ற வெள்ளி விழாப் படங்களை இயக்கிய ஆர்.சுந்தர்ராஜன், இப்போது சமையல் தொழிலில் இறங்கிவிட்டார். சமீபத்தில் நடந்த பி.வாசு இல்ல கல்யாணத்தில், சமையல் பொறுப்பு சுந்தர்ராஜனுடையதுதான். நளன் அவதாரத்துக்கு நல்ல வரவேற்பாம்.
ஒன்லைன் கதையை மட்டும் கையில் வைத்துக்கொண்டு ஷூட்டிங் ஸ்பாட்டுக்குக் கிளம்பிவிடுவது டைரக்டர் பிரபு சாலமன் வழக்கம். அவரிடம் உதவி டைரக்டராக இருந்த ராமேஷ் ராமசாமியும், பிரபு போலவே ஒன்லைனை வைத்துக்கொண்டு 'செங்காடு’ படத்தை இயக்கி முடித்து இருக்கிறார்.
'ஊழலை ஒழிப்பேன்’ கோஷத்தோடு ஜெயித்தவர்கள் இப்போது மௌனமாக இருக்கிறார்கள். காரணம் கேட்டால், 'கமிஷனர் ஆபீஸில் கம்ப்ளைன்ட் கொடுத்தாச்சு... ஆனா...’ என்று இழுக்கிறார்கள்.
0 comments:
Post a Comment