********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

சென்ற வார செய்திகள் (26 நவம்பர் 2011)

Friday, November 25, 2011

மிஸ்டர் கழுகு: கனிமொழி வெளியே வந்தால்..

ழுகாரிடம் இருந்து ஒரு எஸ்.எம்.எஸ்.. அதில், '' ஏன் எனக்குச் சொல்லவில்லை?'' என்ற செல்லக் கோபம் இருந்தது. அவர் எதைக் கேட்கிறார் என்று புரியாமல், ''எதைச் சொல்கிறீர்?'' என்று பதில் கொடுக்கத்
தயாரானபோது, நம் முன்னால் 'சொய்ங்...’ என்று வந்து அமர்ந்தார் கழுகார்!
''ஃபேஸ்புக்கில் சும்மா நண்பர் ஒருவரின் ஸ்டேட்டஸ் பார்த்துப் புன்னகைத்தபோது,  திடீரென்றுwww.facebook.com/juniorvikatan என்ற ஐ.டி.யில் 'ஜூனியர் விகடன்’ வந்திருப்பதை தற்செயலாக நேற்றுத்தான் பார்த்தேன். பார்த்ததுமே 'லைக்’ கொடுத்தேன். ஜூ.வி வாசகர்கள்  உஷாரானவர்கள். அதற்குள் முந்திக்கொண்டு ஏராளமானோர் அங்கு சங்கமித்து விட்டார்களே. வெரி குட்... நியூஸ் அப்டேட்டும் பின்னுகிறீர் போல!'' என்று வாழ்த்துப் பா பாடிவிட்டு செய்திப்பா பாட ஆரம்பித்தார்!
''சென்னையின் பிரதானமான அண்ணா மேம்பாலத்துக்கு அருகில் சுமார் 200 கோடி சம்பந்தமான ஓர் இடத்தை, போயஸ் கார்டனுக்குள் அப்பாயின்ட்மென்ட் இல்லாமல் நுழையும் அதிகாரத்தைப் பெற்றிருக்கும் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்குத் தாரை வார்த்த சமாச்சாரம் பற்றி நான் ஏற்கெனவே சொல்லி இருந்தேன் ஞாபகம் இருக்கிறதா?'' என்று கேட்டார் கழுகார்!
''கருணாநிதி தனது முரசொலி இதழில் கட்டம் கட்டி செய்தி வெளியிட்டதை வைத்து நாம் உம்மிடம் கேட்டோம். நீரும் விளக்கமாகச் சொல்லி இருந்தீர்!''
''அந்த விஷயம் விபரீதமாக மாறி... இப்போது 'தோட்டக்கலை’ கிருஷ்ணமூர்த்திக்கே செக் வைக்கப்பட்டுவிட்டது!''
''ஏனாம்?''
'' 'அம்மாவின் கவனத்துக்குத் தடங்கல் இல்லாமல் ஒரு விஷயம் போய்ச் சேர்ந்தால்... நிச்சயம் நடவடிக்கை இருக்கும்’ என்பதற்கு இது ஓர் உதாரணம் என்கிறார்கள் கோட்டையில்!
பழைய டிரைவ் இன் உட்லண்ட்ஸ்... கருணாநிதி உருவாக்கிய செம்மொழிப் பூங்காவுக்கு எதிரே உள்ள 114 கிரவுண்ட் நிலத்தை வேளாண் தோட்டக்கலைச் சங்கத்துக்கு எம்.ஜி.ஆர். ஆட்சியில் கொடுத்தார்கள். முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு நெருக்கமானவராக இருந்தவராம் இந்த கிருஷ்ணமூர்த்தி. ஜெ.யின் தளபதிகளில் ஒருவராக அண்ணாச்சி இருந்தபோது, இவருக்கு தோட்டத்தின் அறிமுகமும் கிடைத்தது. அதன் மூலமாக செல்வாக்கை வளப்படுத்திக்கொண்டவர் இந்தக் கிருஷ்ணமூர்த்தி. அதனால் கருணாநிதி வட்டாரத்துக்கு ஆகாதவராகவும் ஆனார்.''
''ம்..!''
''செம்மொழிப் பூங்காவை கருணாநிதி உருவாக்கிய​போது இந்த இடத்தையும் அரசாங்கத்திடம் ஒப்படைக்கச் சொல்லி ஓலை அனுப்பினார். சென்னை மாவட்ட கலெக்டர் அனுப்பிய நோட்டீஸுக்கு கிருஷ்ணமூர்த்தி ஹை கோர்ட்டில் தடை வாங்கினார். 'சென்னை கலெக்டரே முடிவு செய்யலாம்’ என்றது கோர்ட். அதற்குள் ஆட்சி மாற்றம் நடந்தது. 'கிருஷ்ணமூர்த்திக்கு நிலத்தைக் கொடுக்கலாம்’ என்று கலெக்டர் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்துதான் கருணாநிதி போட்ட பாக்ஸும்... நான் சொன்ன நியூஸ¨ம். இந்த விஷயம் முதல்வர் கவனத்துக்குச் சென்றபோது, அவர் அதிகமாகக் கோபப்பட்டதாகச் சொல்கிறார்கள். 'ஏற்கெனவே எனக்கு இருக்கிற பிரச்னை போதாதா?’ என்று கொந்தளித்தாராம். முதல்வருக்கே சொல்லாமல் இது நடந்ததாகச் சொல்கிறார்கள். சென்னையைச் சேர்ந்த புவனேஸ்குமார் என்பவர் இது தொடர்பாக ஹைகோர்ட்டில் வழக்குப் போட க்ளைமாக்ஸ், கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக வந்தது. 'சென்னை மாவட்ட கலெக்டர் பிறப்பித்த உத்தரவை நில நிர்வாக கமிஷனர் ஸ்வரண் சிங் தடை செய்துவிட்டார்’ என்று அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் சொல்லி இருக்கிறார். கிருஷ்ணமூர்த்தி மேல் முறையீடு செய்திருந்தாலும், அவருக்கு வைக்கப்பட்ட மிகப் பெரிய செக் என்கிறது கோட்டை வட்டாரம்.''
''இது போயஸ் கார்டனுக்குள் உள்வீட்டுக் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்குமே?''
''நிச்சயம்! அதுபற்றி மேல் விவரங்கள் கிடைத்த​தும் கொடுக்​கிறேன். இப்போது, கோபாலபுரத்தின் உள்வீட்டுக் குழப்பங்களைச் சொல்கிறேன்... கேளும்!''
''சொல்லும்!''
''கனிமொழிக்கு பெயில் கிடைப்பதற்கான காலம் கனிந்து வருவதால், ராஜாத்தி அம்மாள் முகத்தில் சந்தோஷ ரேகைகள் லேசாகத் தென்பட ஆரம்பித்துள்ளன. ரிலையன்ஸ் கௌதம் ஜோஷி, ஹரி நாயர், சுரேந்திர பிபாரா, யுனிடெல் நிறுவனத்தைச் சேர்ந்த சஞ்சய் சந்திரா, ஸ்வான் நிறுவனத்தைச் சேர்ந்த வினோத் கோயங்கா ஆகிய ஐந்து பேருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் கொடுத்துள்ளது. ஸ்பெக்ட்ரம் வழக்கில் முதல் தடவையாக ஜாமீன் கதவு திறக்கப்பட்டுள்ளது. இதுதான் கனிமொழி தரப்புக்கான நம்பிக்கை. கனிமொழி தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு, சிறப்பு நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டு... டெல்லி உயர் நீதிமன்றத்தில் டிசம்பர் 1-ம் தேதி விசாரணைக்கு வரப்போகிறது. 'குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் கொடுத்துள்ளதால், கனிமொழிக்கும் கிடைக்கும்’ என்கிறார்கள். 'டிசம்பர் 1-ம் தேதி வரைக்கும் எதற்குத் தாமதிக்க வேண்டும். உடனடியாக விசாரியுங்களேன்’ என்று கடந்த 23-ம் தேதி மனு தாக்கல் செய்தார் கனிமொழி. அதற்கு நீதிமன்றம் என்ன முடிவெடுக்க இருக்கிறது என்று காத்திருப்போம். எப்படிப் பார்த்தாலும் டிசம்பர் முதல் வாரம் சிறைக் கதவுகள் திறக்கப்படலாம்!''
''அடுத்து..?''
''ராஜாத்தி அம்மாளிடம் சில கோரிக்கைகள் இருக்கின்றன. 'செய்யாத தப்புக்கு என் மகள் தண்டனை அனுபவிச்சுட்டு வர்றா. அவளுக்கு கட்சியில் ஏதாவது பதவி கொடுத்து அவளது கஷ்டத்துக்குப் பரிகாரம் செய்யணும்’ என்பது ராஜாத்தி அம்மாளின் கோரிக்கையாம்!''
''இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லும்!''
'' கனிமொழி தரப்பு சொல்லி வரும் விளக்கம்தான் அது. '200 கோடி ரூபாயை என் மகள் கையில் வாங்க​வில்லை. அதை மும்பைக்காரர்கள் கலைஞர் டி.வி.க்காக யாரிடம் கொடுத்தார்களோ... அவர்களைத்தான் கைது செய்யணும். ஆனால், கனிமொழியைக் கைது செய்தனர். தான் தப்பிக்க வேண்டும் என்பதற்காக கனிமொழி யாரையும் காட்டிக்கொடுக்கவில்லை. எனவே, அவர் கட்சிக்கும் கோபாலபுரம் குடும்பத்துக்கும் நன்மைதான் செய்திருக்கிறார். எனவே, கனிமொழிக்கு தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளர் பதவி தரவேண்டும்’ என்பது அவரது ஆதரவாளர்களின் கோரிக்கை. இப்படி ஒரு நெருக்கடி கருணாநிதிக்கும் கொடுக்கப்பட்டு வருகிறதாம்...''
''பதவி கொடுப்பாரா கருணாநிதி?''
''கருணாநிதியைக் கொடுக்கவிடுவார்களா என்று கேளும்! 'கனிமொழிக்கு இன்னொரு அதிகாரம் வாய்ந்த பதவியைக் கொடுக்க ஸ்டாலின், அழகிரி, செல்வி, தயாநிதி ஆகியோர் தயாராக இல்லை. அவர்கள் கடுமையான கோபத்தை இப்போதே காட்ட ஆரம்பித்துவிட்டார்கள்’ என்கிறது அறிவாலய வட்டாரம்!''
''ராஜாத்தி அம்மாள் ரியாக்ஷன்?''
''அது இப்போதே தெரிய ஆரம்பித்துவிட்டதே... ஒரு உதாரணத்தை மட்டும் சொல்கிறேன்!
முரசொலி மாறனுக்கு கடந்த 23-ம் தேதி நினைவு நாள். அன்றைய தினம் கருணாநிதி, காலையிலேயே முரசொலி அலுவலகத்துக்கு வந்துவிடுவார். அங்கே இருக்கும் மாறன் சிலைக்கு மாலை அணிவிப்பார். தி.மு.க. முன்னணியினரும் வருவார்கள். பிரத்யேகமாக ஷாமியானா பந்தல் போடுவார்கள். இரண்டு நாட்களுக்கு முன்னதாக சென்னை மாவட்டச் செயலாளர்கள் பெயர்களில் தனித்தனி அறிக்கைகள் வரும். தொண்டர்கள் எத்தனை மணிக்கு முரசொலி அலுவலகத்தில் கூட வேண்டும் என்று அதில் இருக்கும். இப்படி நான் சொன்னது எதுவும் கடந்த 23-ம் தேதி நடைபெறவில்லை. முரசொலியில் மட்டும் மாறனின் படத்தைப் போட்டு திராவிட இயக்கத் தீரர்கள் நினைவு நாள் என்று பாக்ஸ் கட்டிவிட்டார்கள். 'ஏன் இந்தச் சம்பிரதாயம் நடக்கவில்லை?’ என்று தி.மு.க. வட்டாரத்தில் பலமான வாதப்பிரதிவாதங்கள் தொடங்கிவிட்டன!''
''ஏனாம்?''
''குடும்பக் குழப்பத்தின் ரியாக்ஷன்தான் இது என்கிறார்கள். முரசொலி மாறன் படத்தை நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து, அதற்குப் பிரதமரும், சோனியாவும், துணை ஜனாதிபதியும், சபாநாயகர் மீரா குமாரும், அத்வானியும், பிரணாப் முகர்ஜியும் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். ஆனால், சென்னையில் கருணாநிதி அதைச் செய்யவில்லை என்றால்... பின்னணி இருக்காதா? 'கருணாநிதி இதில் கலந்துகொள்ளக் கூடாது என்று தடுத்துவிட்டார்கள்.’ என்கிறது ஒரு குரூப். 'இல்லை... தலைவருக்கு உடல் நிலை சரி இல்லை. அப்போலோவுக்குச் செல்லும் அளவுக்கு மோசமாக இருந்தது. அதனால்தான் இதில் கலந்துகொள்ளவில்லை’ என்கிறது இன்னொரு குரூப். 'தலைவர் வராவிட்டாலும், மற்றவர்களாவது நடத்தி இருக்கலாமே?’ என்ற கேள்விக்கு... யாரிடமும் பதிலே இல்லை! இதை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது கனிமொழி வந்ததும்... நிலவரம் மாறப்போகிறது!'' என்று சொல்லிவிட்டு நம்முடைய ரியாக்ஷனை எதிர்பார்க்காமல் பறந்தார் கழுகார்!
அட்டை மற்றும் படம்: சு.குமரேசன்
*********************************************************************************
கழுகார் பதில்கள்

ஐ.எஸ்.சீனிவாசன், சென்னை-82
   பால் விலையை உயர்த்திவிட்டார். பஸ் கட்டணத்தையும் அதிகமாக்கி விட்டார். இந்த உயர்வு தவிர்க்க முடியாததா?
  தவிர்க்க முடியாததுதான். ஆனால்... அதிகப்படியானது.
'2 ரூபாய் கூட்டினாலும் அதே எதிர்ப்புதான், 20 ரூபாய் கூட்டினாலும் அதே எதிர்ப்புதானே’ என்று ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள். அடுத்த தேர்தல், அதாவது நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கின்றனவே, அதற்குள் மக்கள் மறந்துவிடுவார்கள் என்று நினைக்கிறார்.
எந்த விலையையும் கூட்டாமல் நாட்டின் நிதி நிலைமையைக் கெடுத்தார் கருணாநிதி. எல்லாவற்றையும் கூடுதலாகவே கூட்டி மக்களுக்கு நிதி நெருக்கடி ஏற்படுத்துகிறார் ஜெயலலிதா. இரண்டு பேரின் 'பொருளாதார சிந்தனை’களும் ஆபத்தானவை!
 மணி சுதந்திர குமார், சென்னை-112
  அரசியலில் செல்வாக்கு  இல்லாத மன்மோகன்சிங் பிரதமராக தொடர்ந்து இருப்பது எதனால்? யாரால்?
காந்திய வழியில் நடப்பதால்! 'தீயது எதையும் பார்க்காதே’ என்றார் காந்தி. இவரும் ஆட்சியில் நடக்கும் தீயது எதையும் பார்ப்பது இல்லை. நான் காந்தி என்பது, மகாத்மா காந்தியை அல்ல... சோனியா காந்தியை!
 என்.சண்முகம், திருவண்ணாமலை
'ராமராஜ்யம் அமைப்போம்’ என்கிறாரே பா.ஜ.க. தலைவர் நிதின் கட்காரி?
  ராமராக யார் என்பதுதானே பிரச்னை?
 எம்.கல்யாண சுந்தரம், கோயம்புத்தூர்
  உத்தரப் பிரதேசத்தை நான்காகப் பிரிக்க மாயாவதி ஆசைப்படுவதின் நோக்கம்?
  அடுத்த ஆண்டு நடக்கப்போகும் உ.பி. மாநில சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற மாயாவதி கண்டுபிடித்திருக்கும் மாய வழி இது. பூர்வாஞ்சல், அவத் பிரதேசம், பஸ்சிம் பிரதேசம், புந்தேல்கண்ட் என நான்கு மாநிலமாகப் பிரிக்கும் யோசனையில் மக்கள் மயங்கிவிடுவார்கள் என அவர் நினைக்​கிறார். மற்ற கட்சிகள் இதை ஏற்கவும் முடியாமல், எதிர்க்கவும் முடியாமல் திணறுகின்றன. இந்தத் தீர்மானம் உ.பி. சட்டமன்றத்தில் நிறைவேறினாலும் நாடாளுமன்றத்தில் நிறைவேறுவது கஷ்டம்தான். ஆனால், மாயா​வதியின் வெற்றி எளிமையாகி இருக்கிறது!
 தி.முருகேசன், கோவில்பட்டி
  காவல் துறைதான் எல்லாக் குற்றவாளி​களையும் கைது செய்கிறது. விசாரிக்கிறது. பிறகு ஏன், நீதிமன்றக் காவல், காவல் துறைக் காவல் என்று பிரித்துச் சொல்கிறார்கள்?
  ஒருவரைக் கைது செய்து 24 மணி நேரம்தான் காவல் துறை வைத்திருக்க முடியும். இதற்கு காவல் துறைக் காவல் என்று பெயர். குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதும், நீதிபதிதான் அந்தக் குற்றவாளியை சிறைவைக்க உத்தரவிடுகிறார். இதற்கு நீதிமன்றக் காவல் என்று பெயர்.
காவல்துறை காவலில் எதுவும் நடக்க​லாம். நீதிமன்றக் காவலில் இருப்பவர் மீது எது நடந்தாலும்... பதில் சொல்லியாக வேண்டும்!
 பொன்விழி, அன்னூர்
பெரியார், அண்ணா இருவருக்கும் இடையே விரிசலை ஏற்படுத்திய விஷயம் என்ன?
  மணியம்மையை பெரியார் திருமணம் செய்துகொண்டதுதான் என்று அப்போது சொல்லப்பட்டது. ஆனால், மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு, 'மணியம்மை இல்லாவிட்டால் பெரியார் இவ்வளவு காலம் ஆரோக்கி யத்துடன் இருந்திருக்க முடியாது’ என்று அண்ணாவே ஒப்புக்கொண்டார். எனவே, அந்தக் காரணம் அடிபட்டு விட்டது.
பெரியாரின் அதிகமானக் கட்டுப்பாடுகளும் அண்ணாவுக்கு இருந்த தேர்தல் அரசியல் மீதான ஆர்வமும்தான் விரிசலுக்குக் காரணமானது. அதனால்தான் பெரியாரிடம் இருந்து பிரிந்து தனிக் கட்சி ஆரம்பித்த அண்ணா, 'தலைமை நாற்காலியை பெரியாருக்காக காலியாக வைத்திருக்கிறேன்’ என்றார். அதை விரிசல் என்பதை​விட, 'இடையில் ஏற்பட்ட சிறு தடங்கல்’ எனலாம்!
 நித்திலா செல்வராஜ், வில்லிவாக்கம்
  'மேற்கு வங்காளத்திற்கு வெண்ணெயும் தமிழகத்திற்கு சுண்ணாம்பும் தடவும் மத்திய அரசின் கண்ணோட்டம் கண்டிக்கத்தக்கது’ என்கிறாரே ஜெயலலிதா?
  மன்மோகனைவிட மம்தா மீது அம்மாவுக்கு என்ன கோபம் எனத் தெரியவில்லை. அதைப் பின்னர் கண்டுபிடிப்போம். ஆனால், இவ்வளவு பெரிய குற்றச்சாட்டை ஜெயலலிதா வைத்த பிறகும் பிரதமர் மௌனம் சாதிப்பது அதைவிடக் கண்டிக்கத்தக்கது!
 ஆர்.ஜேஸ்மின் ரமேஷ், கம்பம்
  'எலைட்’ ஐடியா நமக்கு வராமல் போச்சே என்று கருணாநிதி வருத்தப்பட்டு இருப்பாரா?
வருத்தம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு இல்லை. தமிழ் நாட்டில் சாராயக் கடைகளை 1970-களில் திறந்தவர் அவர். எம்.ஜி.ஆர். காலத்தில் அது, கள்ளுக் கடைகளாகத் தொடர்ந்தது. 'அதை அரசாங்கமே விற்றால் என்ன?’ என்று ஜெயலலிதா முடிவெடுத்து, 'டாஸ்மாக்’குக்கு உயிர் கொடுத்தார். அவர் செய்தபோது திட்டிய கருணாநிதி, தான் ஆட்சிக்கு வந்தபோதும் அதையே பின்பற்றினார். இப்போது வரப்போகிறது 'எலைட்’. 'திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சி’ என்று இதைச் சொல்லலாம்!
'குடியாட்சி’ என்பதற்கு இப்படி ஒரு விளக்கம் இருக்கிறது என்பதை உணர்த்திவிட்டார்கள் நமது முதல்வர்கள்!
 தி.தமிழினியன், விழுப்புரம்
  ஜாமீனில் வெளியே வந்த முன்னாள் அமைச்சர் பொன் முடியை வரவேற்க 100 கார்களுக்கு மேல் சென்றுள்ளதே?
கூட்டுறவு சங்கத்துக்குச் சொந்தமான நிலத்தை தன்னுடைய குடும்ப டிரஸ்ட்டுக்கு மாற்றியதாக ஒரு புகார்... பஞ்சமி நிலத்தை இன்னொருவர் பெயருக்கு வாங்கி தன்னுடைய வசதிக்குப் பயன்படுத்தியதாக ஒரு புகார்... விழுப்புரம் பேருந்து நிலையத்துக்குச் சொந்தமான இடத்தில் தளபதி திடல் உருவாக்கியதாக ஒரு புகார்... என எத்தனையோ 'எம்.ஏ.’ பட்டங்களைப் போலவே புகார்களும் குவிந்தன. இதில் ஜாமீனில்தான் வந்துள்ளார் பொன்முடி. காரும் டீசலும் கிடைத் தால்... அணிவகுக்க வேண்டியதுதானே!
 இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி
  வெளிநாட்டு வங்கிகளில் நம்மவர்கள் முடக்கிவைத்துள்ள கறுப்புப் பணம் குறித்து பிரான்ஸ் அரசு அளித்துள்ள தகவல்களில், இந்திய வருமான வரித் துறைக்கு ரூ 80 கோடி வருமானமாமே?
  பதுக்கிவைத்துள்ள பணத்தோடு ஒப்பிடும் போது, இந்த 80 கோடி வெறும் டிப்ஸ் சார்!

''அந்தக் கேசு... இந்தக் கேசு... கஞ்சாக் கேசு...!

முதல் சவாலை ஆரம்பித்த விஜயகாந்த்
''அம்மாவுக்கு எதிராக கேப்டன் வாய் திறக்க மாட்டாரா?'' என்று ஏக்கப் பெருமூச்சுடன் இருந்த  தே.மு.தி.க-வினருக்கு உற்சாகம் கொடுப்பது மாதிரி உறுமித் தள்ளி விட்டார்   விஜய காந்த்!
அரசியலுக்காக இல்லாமல் பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு என மக்களின் அடிப்படைப்  பிரச்னைகளுக்காக விஜயகாந்த் கொந் தளிக்க ஆரம்பித்திருப்பது இந்த வாரத்தின் அதிர்ச்சித் திருப்பங்களில் ஒன்று. மதுரைக்கு கடந்த வாரம் சென்ற அவருக்காக வைக்கப்பட்ட கட் அவுட்டுகளை எடுக்கச் சொல்லி போலீஸ் மிரட்டியதைத் தொடர்ந்து அங்கேயே கர்ஜித்து விட்டுத்தான் வந்தார் விஜயகாந்த். முன்னோட்டம் சூடாக இருந்ததால், அவர் அறிவித்த உண்ணாவிரதப் பந்தலிலும் உஷ்ணம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு கட்டியம் கூறுவது மாதிரியே, உண்ணாவிரதம் இருக்க விஜயகாந்த்துக்கு சரியான இடமும் தரப்படவில்லை யாம்!
''மின்வாரிய அலுவலகத்துக்குப் பின்னால கூவம் ஓரத்துல உண்ணாவிரதம் இருக்க அனுமதி கொடுப்பாங்க. எந்த மக்களுக்காக போராட்டம் நடத்துறோமோ அவங்களுக்கே இது தெரியாது. அதனால கட்சி ஆபீஸுலயே உட்கார்றேன். கோயம்பேடு வழியா பஸ்சில போகிற பல்லாயிரம் பேர் அதைப் பார்த்தா போதும்’ என்று சொன்னாராம் விஜயகாந்த். கட்சி அலுவலக வாசலில் சாமியானா பந்தல் போட்டு விஜயகாந்த் உட்காரப் போறார் என்று தெரிந்ததும் அவரது கட்சியினர் அதிகாலை முதலே சாரை சாரையாக வர ஆரம்பித்தார்கள். பக்கத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன், பின்னால் பிரேமலதா சகிதமாக கருப்புக் கண்ணாடி போட்டு கேப்டன் உட்கார்ந்திருந்ததைப் பார்த்து அவரது கட்சித் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தார்கள்!
தே.மு.தி.க-வின் ஸ்டார் பேச்சாளர் எப்போதுமே பிரேமலதாதான். அவரது பேச்சில் அன்றும் அனல் தெறித்தது. '' அண்ணா தி.மு.க-வுடன் ஏன் கூட்டணி வைத்தோம் என்று நாம் வருத்தப்படும் அளவுக்கு இருக்கிறது அவர்களின் செயல்பாடு. இந்த ஆறு மாத காலத்தில் அவ்வளவு கூத்து நடந்துள்ளது. நடப்பது ஜெயலலிதா ஆட்சியா? இல்லை ஹிட்லர் ஆட்சியா?'' என்று அவர் சீறியபோது விஜயகாந்தே ரசித்துக் கைதட்டினார்.
பலத்த விசில் சத்தத்துக்கு மத்தியில் மைக் பிடித்தார் விஜயகாந்த். இத்தனை நாள் இருந்த அமைதிக்கு மொத்தமாக வெளுப்பதைப் போலவே இருந்தது!
''இத்தனை நாளும் நான் இந்த அம்மாவுக்கு பயந்துகிட்டு பேசாம இருக்கலை. ஆறு மாசம் டைம் குடுக்கிறேன்னு ஏற்கெனவே சொல்லி இருந்தேன். அதான் பேசலை. மத்தபடி இந்த விஜயகாந்துக்கு எந்த பயமும் இல்லை. கடந்த சட்டமன்றத் தேர்தல்ல எங்க தயவு இல்லாம ஜெயிச்சதா  அந்தம்மா சொல்லுது. தி.மு.க ஆட்சியில பெண்ணாகரம் இடைத்தேர்தல்ல உங்களால டெபாசிட் வாங்க முடிஞ்சதா? 12 இடத்துல இடைத்தேர்தல் நடந்தது. அதுல ஒண்ணுல கூட நீங்க ஜெயிக்கலையே. எங்ககூட கூட்டணி சேர்ந்ததுக்கு அப்புறம்தானே ஜெயிச்சீங்க. 'அரச கட்டளை’ படத்துல 'ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை’னு எம்.ஜி.ஆர் பாடுவார். அதே போலத்தான் நீங்க கேப்டன் டி.வி-யை காட்டலைன்னாலும் சரி... நாங்க முரசு கொட்டி வெளியில் வந்து முழங்குவோம். அவங்களை எதிர்த்து பேசுனா என் கட்சி எம்.எல்.ஏ-க்களை விலை குடுத்து வாங்கிடுவாங்கனு சில பேர் சொல்றாங்க. வர்றவங்களை தாராளமா கூட்டிட்டு போங்க. அதைப்பத்தி  கவலைப்பட மாட்டேன். நான் தொண்டர்களை நம்பி கட்சி நடத்துறவன். உங்க கட்சில இருந்து எத்தனை பேர் தி.மு.க-வுக்கு பிச்சிக்கிட்டு போனாங்கனு எங்களுக்கும் தெரியும். சவால் விட்டு சொல்றேன். அண்ணா தி.மு.க-வுக்கு சொல்றேன். தைரியம் இருந்தா ஆட்சிய கலைச்சிட்டு ஒரு வருஷம் கழிச்சி தனியா தேர்தலை வைங்க பார்ப்போம். ஒரு இடத்துலகூட ஜெயிக்க மாட்டீங்க. ஏன் ஒரு வருஷம்னு சொல்றேன் தெரியுமா? ஆறு மாசத்துல தேர்தல் வெச்சா போலீஸ் இவுங்க சொல்றதத்தான் கேக்கும். ஒரு வருஷம்னா கவர்னர் ஆட்சி வந்துரும்.
மக்களே!  எனக்கு பணம் சம்பாதிக்கணும்னு ஆசை இல்லை. எல்லாத்தையும் பார்த்துட்டேன். வானத்துலயும் சண்டை போட்டுட்டேன். பூமிக்கு அடியிலயும் சண்டை போட்டுட்டேன். நடுவுலயும் சண்டை போட்டுட்டேன். உங்களுக்கு சேவை செய்றதுதான் என் குறிக்கோள். விஜயகாந்துன்னு ஒருத்தன் இருந்தான். அவன் நல்லபடியா ஆண்டான்னு சரித்திரம் பேசுனா போதும்.  இப்ப நடக்குறது கேவலப்பட்ட ஆட்சி.  இன்னைக்குச் செத்தா நாளைக்கு பால்னு சொல்லுவாங்க. இனி தமிழ்நாட்டுல யாரும் செத்தா பாலுக்கு பதில் தண்ணிதான் ஊத்த முடியும். அந்த அளவுக்கு ரேட் ஏத்திட்டாங்க. ஏத்துறதை ஏத்திட்டு டி.வில, 'தாய்மார்களே கண்மணிகளே’னு அசோகவனம் சீதை மாதிரி டயலாக் விடுறாங்க. மத்திய அரசு நிதி குடுக்கலைன்னு சொல்றது சுத்தப் பொய். மம்தா பானர்ஜி மத்திய அரசைப் பார்த்து உங்க நிதி எனக்குத் தேவை இல்லைனு சொன்னாங்க. அந்தத் துணிச்சல் வேணும். இந்த அம்மாவை துணிச்சல்காரங்கன்னு சில பேர் சொல்லுவாங்க. தைரியம் இருந்தா உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னாடி விலை உயர்வை அறிவிச்சிருக்க வேண்டியதுதானே... இதான் இவங்க துணிச்சலோட லட்சணம்.
இப்படி நான் எதிர்த்து பேசுறதால என் மேல அந்தக் கேசு... இந்தக் கேசு... கஞ்சா கேசு... கறுப்பு பண கேசு... இப்படி என்னென்னமோ போடப் பார்ப்பாங்க. அதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்லை. தொண்டர்களே... நீங்க எல்லாரும் சிறை செல்லத் தயாரா இருங்க. இனி, தொடர்ந்து போராடுவோம்'' என ஆவேசத்துடன் முடிக்க... 'கேப்டன் கச்சேரிய ஆரம்பிச்சுட்டாரு டோய்’ என்று உற்சாகத்துடன் கலைந்தது தொண்டர் கூட்டம்!
- தி.கோபிவிஜய், படம்: பொன்.காசிராஜன்

இவர்கள் நாளைய மக்கள் நலப் பணியாளர்களா?

ரசுப் பள்ளிகளில், சிறப்பாசிரியர்களை தற்காலிகமாக நியமிப்பதாக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டுமே வேலை. அந்த நாட்களிலும் மூன்று மணி நேரம் மட்டுமே வேலை செய்தால் போதுமாம். இவர்களுக்கு ரூ.5,000 ஊதியம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
எதற்காக அரசு இப்படி ஒரு தொலை நோக்கு இல்லாத செயலை செய்யத் துணிகிறது? நிரந்தரம் இல்லாத பணியை அரசு உருவாக்குவது நியாயம்தானா? வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே வேலை என்றால் மற்ற நேரங்களில் அவர்கள் என்ன செய்வார்கள்? ஓய்வு நேரம் அதிகமாக இருக்கிறது என்பதால் கண்டிப்பாக அவர்கள் வேறு ஒரு தொழில் அல்லது வேலை செய்ய வேண்டிய சூழல் உண்டாகும். அதனால் அவர்களால் ஆசிரியர் தொழி லிலும் அக்கறையாக செயல்பட முடியாது.
இதெல்லாம் தாண்டி 5,000 ரூபாய் சம்பளம் என்பது இன்றைய நிலையில் வாழ்க்கை நடத்த சரியாக இருக்குமா? பன்னாட்டு நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் இதுபோன்ற வேலை வாய்ப்புகளைக் கொடுத்து இளைஞர் களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்குகிறது. இதனை ஒரு அரசும் செய்யலாமா? இந்த அரசு இப்படி ஒரு தேவையற்ற நியமனம் செய்தால், அடுத்து வரும் அரசு என்ன செய்யும் என்பதை சொல்லவும் வேண்டுமா? மீண்டும் ஒரு மக்கள் நலப் பணியாளர்களை உருவாக்க வேண்டாமே...
- ஆர்.நாகராஜன், சென்னை.

வளர்க்கிற கஷ்டம் ஒரு பொண்ணுக்குத்தாம்ல தெரியும்

உருகி நின்ற கூடங்குளம் பெண்கள்!
கூடங்குளம் போராட்டத்தை உலகமே உன்னிப்பாகக் கவனித்து வரும் வேளையில், அடுத்தகட்ட நகர்வாக பெண்கள் களத்தில் இறங்கி இருக்கிறார்கள். கூடங்குளத்தில் இருந்துவந்த 11 பெண்கள் சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து, 'கூடங்குளம் திட்டம் ஏன் வேண்டாம்?’ என்பதற்கு அழுத்தமான சில காரணங்களை முன்வைத்து இருக்கிறார்கள்.
சென்னைக்குள் நுழைந்த போராட்டக் குழுவைச் சேர்ந்த பெண்களை எழும்பூர் ரயில் நிலையத்தில் சுற்றி வளைத்த போலீஸார், 'நீங்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீட்டை முற்றுகைப் போராட்டம் நடத்தப் போவதாகத் தகவல் வந்துள்ளது’ என்று சொல்லி, அவர்களை எழும்பூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே அனைவரிடமும் பெயர், முகவரிகளை வாங்கிக்கொண்ட பின்னரும் காவலில் வைத்தனர். ஊடகங்களுக்குச் இந்தச் செய்தி பரவியதைத் தொடர்ந்தே, அவர்களை விடுவித்தனர்.
காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்த பெண்கள், கொளத்தூரில் உள்ள மகளிர் அமைப்புக்குச் சென்று, கூடங்குளம் தொடர்பான விவாதத்தில் பங்கேற்றனர். பிறகு கோவளத்துக்குச் சென்று அங்கி ருந்த மீனவ மக்களிடையே பிரசாரம் செய்தனர். அன்று முழுவதும் போலீஸார் அவர்களை நிழல் போன்று பின்தொடர்ந்தார்கள். அடுத்த நாள் நடந்த பத்திரிகையாளர் சந்திப்புக்கும் போலீஸார் ஆஜராகி இருந்தார்கள். ஆனால், அதைப்பற்றிக் கவலைப்படாமல் பத்திரிகையாளர் சந்திப்பில் தங்கு தடை இல்லாமல் பதில் சொன்னார்கள் பெண்கள்.
''கூடங்குளத்தில் அணு மின் நிலைய நிர்வா கத்தினர் பாதுகாப்பு சோதனை ஒத்திகை நடத்தி னார்களா?'' என்று ஒரு நிருபர் கேட்டதும், ''ஆம், அந்த ஒத்திகை நடத்தியதும்தான் எங்களுக்குப் பயம் வந்துச்சு. அணு மின் நிலையத்தில் இருந்து கதிர் வீச்சு வந்தால், துண்டை எடுத்து முகத்தை மூடிக்கிடணுமாம். வாயைத் திறக்கக் கூடாதாம். கதவு, ஜன்னல்கள் எல்லாத்தையும் மூடிக்கிடணுமாம். கதிர் வீச்சு மண், புல், தண்ணீர், பால் என எல்லாத்துலயும் கலந்திருக்கும்னு சொன்னாங்க. அதனால, அவங்க சொல்லும்வரை நாங்க எதையும் சாப்பிடக் கூடாது, 30 கிலோ மீட்டர் தள்ளி ஓடிரணும்னு சொன்னாங்க. அதுக்குப் பிறகுதான் இது எவ்வளவு பெரிய ஆபத்துன்னு எங்களுக்குத் தெரிய ஆரம்பிச்சது'' என்றார்கள்.
''மத்திய நிபுணர் குழு, கதிரியக்கத்தால் எந்தப் பாதிப்பும் இல்லை என்று சொல்லிவிட்டதே?'' என்று கேட்டதற்கு, ''அப்புறம் ஏம்ல அவிக பாதுகாப்பு ஒத்திகை நடத்துனாங்க?'' என்று நியாயமான கேள்வி கேட்டனர்.
எழும்பூர் காவல் நிலையத்தில் நடத்தப்பட்ட விசாரணை குறித்து, ''நாங்க என்னமோ கல்பாக்கம் அணு மின் நிலையத்துக்கு எதிரா இங்கும் மக்களைத் தூண்டிவிட்டுப் போராட்டம் நடத்த வந்ததாகவும், முதல்வர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த வந்ததாகவும் சொன்னாங்க. ஏம்ல... 11 பேர் எப்படிய்யா ஒரு முதலமைச்சர் வீட்டை முற்றுகையிட முடியும்? ரயில்வே ஸ்டேஷனில் அத்தனைப் பேர் முன்னாடி, எங்களை போலீஸ் மஃப்டியில சுத்தி வளைச்சாங்க. எங்களைக் கேவலமா நடத்துனாங்க. நாங்க என்ன தப்பான பொம்பளைங்களா?'' என்று வெடித்தனர்.
போராட்டத்துக்கு நிதி உதவி வழங்கப்படுவது தொடர்பான கேள்விக்கு, ''நாங்கதான் கொடுக்கிறோம். கூலி வேலை செஞ்சு கிடைக்கிற காசு, மீன் வித்த காசுன்னு எங்களால் முடிஞ்சதைக் கொடுக்கிறோம். எங்களுக்கு ஆதரவா கோவளத்தில் இருக்கிற மீனவர்கள், 'மீனவர்கள் தினமான’ கடந்த 21-ம் தேதி சென்னையில போராட்டம் நடத்துனாங்க'' என்றார்கள்.
''இந்தத் திட்டத்தால் ஏதாவது விபத்து நடந்தா நாங்க உடனடியா சாவோம். நீங்க கொஞ்சம் கொஞ்சமா இழுத்துகிட்டுச் சாவீங்க. கதிரியக்க பாதிப்பால ஒரு மாற்றுத் திறனாளி குழந்தை பிறந்துச்சுன்னா அதை வளர்க்கிற கஷ்டம் ஒரு பெண்ணுக்குத்தாம்ல தெரியும். அதனால், இந்த ஆபத்து பத்தி பெண்கள்கிட்ட பெண்களாகிய நாங்க பேசப் போறோம்...’ என்று உருகி நின்றார்கள்.
இவர்களுக்கு என்ன பதில் வைத்திருக்கிறது மத்திய அரசு?
ந.வினோத்குமார்
படம்: சொ.பாலசுப்பிரமணியம்

நீதிபதிக்காக ஒரு போராட்டம்!

ஆவேச நரிக்குறவர்கள்
'நரிக்குறவர் இன மக்களின் 60 ஆண்டு காலப் பிரச்னைக்கு நல்லதொரு தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜெயந்தியை இடமாற்றம் செய்யாதே!’ என்று சென்னையில் பெரும் போராட்டத்தையே நடத்திக் காட்டிவிட்டார்கள், நரிக்குறவர்கள்.
சென்னையை அடுத்த புறநகர்ப் பகுதியான திருமுல்லைவாயலில் இருக்கும் ஜெயா நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்கள் வசிக் கின்றன. திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பெயரில், குடி அமர்த்தப்பட்டவர்கள் இவர்கள். ஆனால், 'நரிக்குறவர் மக்கள் வசிக்கும் 1.83 ஏக்கர் இடம் எங்களுக்குச் சொந்தமானது. எனவே மேற்படி இடத்தில் சாலை, குடிநீர், மின்சார வசதி செய்து தரக்கூடாது. எந்த அரசு அதிகாரியும் உள்ளே நுழையக் கூடாது’ என்று 1994-ம் வருடம் அம்பத்தூர் முன்சீஃப் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார் பாலு. வருடக்கணக்கில் நடந்த வழக்கில், கடந்த 19-ம் தேதி நரிக்குறவர் மக்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. அந்த தீர்ப்பு கொடுத்த நீதிபதி ஜெயந்தி உடனே இட மாற்றம் செய்யப்பட்டார். அதை எதிர்த்துத்தான் போராட்டம்.
இதுகுறித்து ஜெயா நகர், நரிக்குறவர் சங்கத் தலைவி தனலட்சுமி, ''நியாயமாக, 'அரசு நிலத்தில் குடியிருக்கும் நரிக்குறவர் மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துதர எந்தத் தடையும் இல்லை’ என்று தீர்ப்பு வழங்கிய ஒரே காரணத்துக்காக, நீதிபதி ஜெயந்தியை எழும்பூர் 20-வது நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்துவிட்டனர். இதே நீதிமன்றத்தில் அவர் இருந்தால், 'மின்சாரம், சாலை, குடிநீர், பட்டா...’ என்று எங்களது அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றித் தந்துவிடுவார். அதனால் சிலர், திட்டமிட்டு நீதிபதியைப் பற்றி மொட்டைக் கடுதாசிகள் எழுதியும் அவதூறு பரப்பியும் இடமாற்றம் செய்ய வைத்துவிட்டனர். ஆகவே, நீதிபதி ஜெயந்தியை மீண்டும் அம்பத்தூர் நீதிமன்றத்துக்கு மாற்றும்வரை எங்கள் போராட் டம் ஓயாது'' என்று கொதித்தார்.
சென்னை உயர் நீதிமன்ற வாயிலில் முதல் நாள் போராட்டம் நடந்தது. அன்றிரவு மெரினா கடற்கரையிலேயே தூங்கி எழுந்த போராட்டக் குழு, மறு நாள் பஸ் மறியலில் இறங்கியதோடு, 20-வது நீதிமன்றம் முன்பு கோஷம் எழுப்பினர்.
நரிக்குறவர் சங்கத்தின் கவுரவத் தலைவர் ஜான் நம்மிடம், ''நில உச்சவரம்புச் சட்டத்தின் அடிப்படையில் ஏற்கெனவே இந்த இடம் முழுவதையும் அரசு கையகப்படுத்தியது. அதனால்தான், 25 வருடங்களுக்கு முன்பே இந்த இடத்தை நரிக்குறவர்களுக்காக ஒதுக்கினார் திருவள்ளூர் கலெக்டர். இந்தப் பிரச்னையில், வழக்கு தொடுத்திருந்த பாலுவும் இறந்துவிட்டார். ஆனால், பாலுவின் உறவினர்களும் பவர் ஏஜென்ட் என்று சொல்லிக்கொள்பவர்களும் ஜெயா நகர் மக்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் தொடர்ந்து தடை உத்தரவு வாங்கினர். இதனாலேயே அடிப்படை வசதிகள் எதுவும் இங்கு செய்துதரவில்லை. ஊசி மணி பாசி விற்பது, தெருவோரங்களில் கிடக்கும் இரும்புத் துண்டுகளைச் சேகரித்து விற்பது என்று சொற்ப வருமானத்தில் வாழ்க்கை நடத்தும் எங்கள் வாழ்க்கையில் சிலர் வில்லங்கம் செய்யப் பார்ப்பது தான் வேதனை!'' என்கிறார் ஆதங்கத்தோடு.
பாலுவின் பவர் ஏஜென்ட் சிவசுப்பிரமணியம், ''1.83 ஏக்கர் நிலம் எங்களுடையது என்பதற்கு ஆதார மாக எங்களிடம் பட்டா உள்ளது. ஆனால், அரசு நிலம் என்பதற்கான எந்த ஆதாரமும் அவர்களிடம் இல்லை. சர்ச்சைக்குரிய இந்தத் தீர்ப்பு குறித்தும் நாங்கள் பூந்தமல்லி நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்'' என்றார்.
பாலு தரப்பு வழக்கறிஞரான கிருஷ்ணமூர்த்தி மற்றும் அம்பத்தூர் பார் கவுன்சில் தலைவர் சங்கர் ஆகியோர், ''சிவில் உரிமையியல் சட்டம், நடைமுறைச் சட்டம்... என்று எதையுமே சரிவரக் கடைப்பிடிக்கவில்லை நீதிபதி. எனவே, நீதிபதி ஜெயந்தியை இடமாற்றம் செய்யக் கோரி கடந்த ஜூன் 20-ம் தேதியே நீதிமன்றப் புறக்கணிப்பு செய்தோம். கடந்த 16-ம் தேதியே எழும்பூர் 20-வது நீதிமன்றத்துக்கு அவரை இடமாற்றம் செய்ததாக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு 17-ம் தேதி அன்றே நீதிபதியின் கையிலும் கிடைத்துவிட்டது. ஆனால், பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட நீதிபதி ஜெயந்தி, அம்பத்தூர் முன்சீஃப் கோர்ட்டில் 19-ம் தேதி இப்படி ஒரு தீர்ப்பு அளித்திருக்கிறார். இந்த முரண்பாடுகள் குறித்தும் மாவட்ட நீதித் துறைக்கு தெரியப்படுத்தி உள்ளோம்'' என்றனர்.
ஆனால், அதே அம்பத்தூர் முன்சீஃப் நீதிமன்ற வளாக வழக்கறி ஞர்கள் சிலரோ, ''இங்குள்ள வழக்கறிஞர்களையே நீதிபதிக்கு எதிராகத் திருப்பிவிட்டனர் சிலர். இதனால், உப்புசப்பில்லாத விஷயங்களுக்கு எல்லாம் புறக்கணிப்பு செய்தார்கள். பணிமாற்றம் செய்யப்பட்ட ஒருவர் எப்படி தீர்ப்பு வழங்கலாம்? என்கிறார்கள். பணிமாற்றம் செய்யப்பட்ட ஒருவர், தான் ஏற்கெனவே கவனித்த பொறுப்புகளை முற்றாக விடுவித்துச் செல்லும்வரையில், விட்டுப் போன பணிகளைச் செய்வதற்கும் உரிய தீர்ப்புரைகளை வழங்குவதற்கும் அதிகாரம் உள்ளது. இது விஷயமாகக் கேள்வி கேட்பவர் களுக்கும் இந்தச் சட்ட நுணுக்கம் நன்றாகத் தெரியும்'' என்கிறார்கள் தெளிவாக.
த.கதிரவன்
************************************************************************
ராமதாஸா? வேல்முருகனா?

கடலூரில் அடங்காத கலகம்!
பாட்டாளி மக்கள் கட்சித் தலைமையை எதிர்த்து கேள்வி கேட்டதால்  பண்ருட்டி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வான வேல்முருகனை அக்கட்சியில் இருந்து நீக்கிவிட்டனர். இதனால், கட்சியின் கடலூர் மாவட்ட அலுவலகம் யாருக்கு சொந்தம் என்று வேல்முருகன் ஆதரவாளர்களுக்கும், ராமதாஸ் ஆதரவாளர்களுக்கும் கடும் போட்டி நிலவியது. 'வேல்முருகன் ஆதரவாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் கட்சி அலுவலகத்தை மீட்டுக் கொடுங்கள்’ என்று ராமதாஸின் ஆதர​வாளரான சண்முகம், காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனால், அந்த அலுவலகத்தைச் சீல்வைத்து, கடந்த 21.11.11 அன்று சப்-கலக்டர் கிரண் குராலாவிடம் சாவியைக் கொடுத்துவிட்டார் வட்டாட்சியர். அதன்படி அன்று சப்-கலெக்டரிடம் டாக்குமென்டுகளை ஒப்படைக்க வந்த ராமதாஸின் ஆதரவாளர்களும், வேல்முருகன் ஆதரவாளர்களும் பெருமளவில் குவிந்ததால் ஏக பரபரப்பு!
இந்நிலையில், ராஜேஸ்வரி, அமராவதி ஆகிய இருவர் வந்து, 'தனக்குத்தான் கட்சி அலுவலகம் சொந்தம்’ என்று மனு கொடுத்தனர். சப்-கலெக்டர் கிரண் குராலாவோ, ''யாருமே சரியான ஆதாரங்களை ஒப்படைக்கவில்லை. இந்த வழக்கை டிசம்பர் மாதம் 9-ம் தேதிக்குத் தள்ளிவைத்துவிட்டேன்'' என்று அறிவித்து விட்டார்.
இது தொடர்பாக ராமதாஸின் ஆதரவாளரான  சண்முகத்திடம் கேட்டோம். ''நாங்கள் கொடுத்திருக்கும் ஆவணங்கள் எல்லாமே டாக்டர் ஐயா பெயரில்தான் இருக்கின்றன. கட்சி அலுவலகமும் ஐயா பெயரில்தான் இருக்கிறது. நாங்கள் கொடுத்திருப்பது ஜெராக்ஸ் காப்பிதான். சப்-கலெக்டர் அசல் ஆவணத்தைக் கொடுங்கள் என்றார். அது அரசு அலுவலகத்தில் உள்ளது. அதை வாங்குவதற்காக அவகாசம் கேட்டிருக்கிறோம். இந்த அலுவலகத்தைக் கட்ட நாங்கள்தான் உழைத்தோம். சும்மா இருந்தவர்கள் இப்போது சொந்தம் கொண்டாடு கிறார்கள். ராஜேஸ்வரியும், அமராவதியும் கட்சி அலுவலகத்தை கைப்பற்றுவதற்காக வேல்​முருகனால் உருவாக்கப்பட்டவர்கள். சதி செய்து கட்சி அலுவலகத்தை கைபற்றிவிடலாம் என்று நினைக்​கிறார்கள் அது ஒருபோதும் முடியாது'' என்றார்.
வேல்முருகனின் ஆதரவாளரான கமலநாதனிடம் இதுபற்றி பேசினோம். ''இந்த இடம் கடலூர் நகராட்சிக்குத்தான் சொந்தம். ராஜேஸ்வரி என்பவர் நகராட்சியில் இருந்து லீஸுக்கு எடுத்திருந்தார். 2004-ல் இந்த இடத்தை வேல்முருகனின் அண்ணன் திருமால்வளவனுக்கு பவர் எழுதிக் கொடுத்திருக்கிறார். அந்த டாக்குமென்ட்டை சப்-கலெக்டரிடம் கொடுத்​துள்ளோம். வன்னியர் சங்கம் சார்பில் அரசுத் தேர்வுக்கு பயிற்சிப் பள்ளி அந்த இடத்தில் நடத்தி வருகிறோம். அதற்கு எவ்வளவு மாணவர்கள் வருகிறார்கள், எப்படி படிக்கிறார்கள் என்ற விவரங் களைக் கேட்டிருக்கிறார்கள். அதையும் எடுத்து வைத் துள்ளோம். ராமதாஸ்  தரப்பில் ஆஜரானவர்கள், உண்மையான டாக்குமென்ட்டைக் காட்டாமல், 'கட்சி அலுவலகத்தில் இருந்த டாக்குமென்ட்டை நாங்கள் எடுத்துக்கொண்டு போய்விட்டோம்’ என்று அவகாசம் கேட்டிருக்கிறார்கள். அவர்களிடம் உண்மையான டாக்குமென்ட் இருந்தால்தானே கொடுப்பது!'' என்றார்.
அமராவதியைச் சந்தித்தோம். ''கடந்த 25 வருடங்களுக்கு முன்னால் கடலூர்  நகராட்சியில் ராஜேஸ்வரி  கவுன்சிலராக இருந்தார். அப்போது அவர் கணவர் அந்த  இடத்தில் டெய்லர் கடை வைத்திருந்தார். ராஜேஸ்வரிதான் இந்த இடத்தில் இலவசமாக ஏழை மாணவர்களுக்காகத் தையல் பயிற்சி கொடுப்பதற்காக இடத்தை பவர் வாங்கியிருந்தார். பிறகு, எங்கள் அப்பா சீனுவாச படையாட்சியிடம்  5,000-த்துக்கு அந்த பவரை  கொடுத்திருந்தார். எங்க அப்பாவும் அந்த இடத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாணவர்களுக்கு இலவச​மாக நோட்டு புத்தகங்களை வழங்கிக்கொண்டு இருந்​தார். பிறகு முடியாததால் 'வன்னியர் சங்கம் சார்பில் ஏழை மாணவர்களுக்கு ஏதாவது செய்யுங்கள்’ என்று வேல்முருகனின் அண்ணன் திருமால்வளவனிடமே பவர் கொடுத்துவிட்டார். கட்சி அலுவலகத்தின் மின் இணைப்பு வேல்முருகன் பெயரில்தான் உள்ளது'' என்றார்.
ராஜேஸ்வரி தரப்போ, ''இந்த இடத்தை நகராட்​சி யிடம் இருந்து 99 வருடத்துக்கு லீசுக்கு எடுத்துள்ளோம். அது முடியும் வரை அது யாருக்கும் சொந்தம் இல்லை. 2004-ல் திருமால்வளவனுக்கு அனுபவச் சான்று உரிமையைக் கொடுத்திருப்பது உண்மைதான். ஆனால், லீஸ் எங்கள் பெயரில்தான் உள்ளது'' என்கிறார்கள்.
இதுகுறித்து வேல்முருகனிடம் பேசினோம்.
'' கட்சி அலுவலகத்துக்குச் சீல்வைத்து, அதில் படித்து வந்த மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கிவிட்டார்கள்.  அதற்கு நான் அடிபணிய மாட்டேன். சட்டப்படி என்ன நடக்கிறதோ அது நடக்கட்டும்.  அதில் படித்து வந்த மாணவர்கள் 1,200 பேரை தொடர்ந்து படிக்கவைக்க அரசு ஏற்பாடு செய்யட்டும்'' என்றார்.
க.பூபாலன், படங்கள்: எஸ்.தேவராஜன்

மானியத்தில் 'தரக் குளறுபடி'!

குமுறும் புதுவை எழுத்தாளர்கள்
'புதுச்சேரி கலை, பண்பாட்டுத் துறையினர், தகுதி வாய்ந்த எழுத்தாளர்களைப்புறக்கணிக்​ கிறார்கள்’ என்று குபீர் குற்றச்சாட்டுக் கிளம்பி யுள்ளது.  
புதுச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர்கள், தங்களது கையேட்டுப் பிரதியை புத்தகமாகக் கொண்டு வருவதற்கு, புதுச்சேரி அரசு  10,000 மானியம் வழங்கி வருகிறது. கலைப் பண்பாட்டுத் துறையால் நியமிக்கபட்ட குழுவினர், இந்தக் கையேட்டுப் பிரதியை ஆய்வு செய்து மானியம் கொடுப்பார்கள். தரம் இல்லை என்றால் மானியம் இல்லை என்பதுதான் நடைமுறை. கடந்த 2010-11 நிதியாண்டிற்கான மானியம் சில மாதங்களுக்கு முன்னர் கொடுக்கப்பட்டது. புதுச்சேரியைச் சேர்ந்த 103 எழுத்தாளர்களின் கையேட்டுப் பிரதிகளை 10 பேர் கொண்ட குழு மதிப்பீடு செய்தது. அதில் 83 பேருடைய படைப்புகள் தேர்வு செய்யப்பட்டது. 20 எழுத்தாளர்களின் படைப்பு தரம் இல்லை என்று ஒதுக்கப்பட்டது. புதுச்சேரியின் மூத்தஎழுத்தாளர்களான விசித்திரன், புதுவை சந்திரஹரி, மு.பாலசுப்பிரமணியன், அரிமதி தென்னகன், மு.சச்சிதானந்தம், லெனின் பாரதி ஆகியோரின் படைப்புகளும் தரம் இல்லாத பட்டியலுக்கு அனுப்பப்பட்டதே விவகாரமாக வெடித்துக் கிளம்பியிருக்கிறது. 
கலை, பண்பாட்டுத் துறையின் நிலை குறித்து நாடக எழுத்தாளர் மற்றும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான பா.முருகேசனிடம் பேசியபோது, ''மதிப்பீட்டுக் குழுவிலுள்ள 10 பேரில், பெரும்பாலானோர் மரபுக் கவிதை எழுத்தாளர்கள். அதனால் புதுக்கவிதை, ஹைக்கூ போன்றவற்றை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போயிருக்கலாம். தனி மனிதக் காழ்ப்புணர்ச்சியும் முக்கியக் காரணமாகத் தெரிகிறது'' என்றார்.
மானியம் மறுக்கப்பட்ட எழுத்தாளர்களில் ஒருவரான விசித்திரன், ''என்னுடைய 'தடுப்புச் சுவர்கள்’ என்ற சிறுகதை நூல், தமிழக அளவில் பரிசு பெற்ற நூல். அதற்கு இங்கு மானியம் மறுக்கப்பட்டு உள்ளது. இனி வரும் காலங்களிலாவது கட்டுரை, கவிதை, உரைநடை போன்ற துறையைச் சேர்ந்தவர்களுக்கும் சமமான இடம் ஒதுக்கவேண்டும். அப்போதுதான் இதுபோன்ற பிரச்னைகள் எழாது'' என்றார்.
எழுத்தாளர் அரிமதி தென்னகன்,''தேர்வுக் குழுவால் புதுக்கவிதைகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். தேர்வுக் குழுவில் நானும் ஒருவன். இருந்தும் என்னுடைய புத்தகம் தரம் இல்லை என்று மற்ற உறுப்பினர்கள் நிராகரித்து விட்டார்கள்'' என்று வருத்தப்பட்டார்.
தேர்வாளர் குழுவில் ஒருவரான புலவர் கல்லாடன் இந்தக் குற்றச்சாட்டு குறித்து, ''தரமான புத்தகம் என்றால் நிச்சயம் மானியம் கொடுக்கிறோம். இதில் பாகுபாடு எதுவும் பார்ப்பது இல்லை. நிராகரிக்கப்பட்டவை எல்லாமே தரம் அற்றவையே'' என்றார்.
இந்தப் பிரச்னை குறித்து துறையின் இயக்குன​ரான சந்தானகிருஷ்ணனிடம் கேட்டபோது, ''நான் இந்தத் துறைக்கு வந்து நான்கு மாதங்கள்தான் ஆகிறது. நான் வந்த பிறகு, என்னால முடிந்த வரைக்கும் துறையை மேம்படுத்தி இருக்கிறேன். தற்போதுள்ள குழு உறுப்பினர்கள் குறித்து மறுமதிப்பீடு செய்யப்பட்டு, தகுதி வாய்ந்த குழு அமைக்கப்படும். நான் விரைவில் ஓய்வு பெற உள்ளேன். அதனால் எனக்குப்பின், கலை மற்றும் எழுத்துத் துறை மீது ஆர்வம் உள்ளவர்கள் இந்தத் துறையின் இயக்குனர்களாக வரவேண்டும்'' என்றார் அழுத்தம்திருத்தமாக.   
நா.இள.அறவாழி, படங்கள்: ஜெ.முருகன்

ஸ்கூலுக்குப் போக விடமாட்டேங்குறாங்க..!'

வேதனையில் குழந்தை தொழிலாளர்கள்...
வம்பர் 14-ம் தேதி குழந்தைகள் தினம் என்பதால், பள்ளி மாணவ மாணவியர்களுக்கு கடந்த வாரம், எல்லா ஊர்களிலும் உள்ள திரையரங்குகளில் குழந்தை தொழிலாளர்களைப் பற்றிய திரைப்படம் அரசு சார்பில் திரையிடப்பட்டது. தமிழ்நாட்டிலேயே அதிக அளவு குழந்தை தொழிலாளர்கள் இருக்கும் வேலூர் மாவட்டத்தில் ஒரு ரவுண்ட் வந்தோம்.
வேலூர் கோட்டைப் பகுதிகளில் பிஸ்கெட், சிப்ஸ், பலூன் விற்பனையிலும், சி.எம்.சி. மருத்துவமனை எதிரே பழங்கள் விற்பனையிலும் பெரும்பாலும் 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியர்தான் இருந்தனர். அடுத்து ஜலகண்டேஸ்வரர் கோயில் பக்கம் போனோம். வெளியில் சூடம் விற்பனை முழுவதும் சிறுவர்கள் வசம்தான். பழம் விற்றுக்கொண்டிருந்த ஒரு சிறுவனிடம் பேச்சுக் கொடுத்தோம்.
''எனக்கு எட்டு வயசு ஆகுது. தினமும் 500 ரூபாய்க்கு நான் விற்கணும். அப்பத்தான் 50 ரூபா சம்பளம் கொடுப்பாங்க. இல்லைன்னா கிடையாது. காலையில் ஏழு மணிக்கு ஆரம்பிச்சா நைட்டு ஒன்பது மணிக்கு மேல ஆகிடும். மதியம் ரெண்டு புரோட்டா மட்டும்தான். அப்பாவும் அம்மாவும் கூலி வேலைக்குப் போறாங்க. ரெண்டு தங்கச்சிங்க இருக்காங்க. படிக்கணும்னு ஆசை இருக்கு. ஆனா, ஸ்கூலுக்குப் போக அப்பா விடமாடேங்குறாங்க'' என்று வருத்தப்பட்டான்.
குழந்தைத் தொழிலாளர் பிரச்னைக்காக தொடர்ந்து குரல் கொடுத்துவரும் அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏ-வான கலையரசுவிடம் பேசினோம். ''போன வாரம் வீட்டுக்குப் போயிட்டு இருந்தப்ப வழியில் ஒரு பட்டறையில் ஒன்பது வயதான சிறுவன், இரும்பு சுத்தியலால் அடித்துக்கொண்டு இருந்தான். பக்கத்திலேயே அவனுடைய முதலாளி வேடிக்கை பார்த்தபடி அவனை அதட்டிக்கொண்டு இருந்தார். உடனே இறங்கிப் போய் அந்த சிறுவனை மீட்டு அவங்க வீட்டில் கொண்டுபோய்விட்டு அறிவுரை சொல்லிட்டு வந்தேன். பூக்கூடையையும், சிப்ஸ் பாக்கெட்டையும் கையில்கொண்டு செல்லும் சிறுவர்கள் பள்ளிப் புத்தகங்களைக் கொண்டுசெல்லும் நிலை வரவேண்டும். கலெக்டர் மூலம் அதற்காக நடவடிக்கை எடுக்க முயற்சி எடுப்பேன்'' என்றார்.
வேலூர் மாவட்ட தொழிலாளர் நல ஆய்வாளர் குமாரிடம் பேசினோம். ''14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை மீட்டு, நேஷனல் ஸ்பெஷல் ஸ்கூலில் படிக்க வைக்கிறோம். இது மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள அமைப்பு ஆகும். சிறுவர்களை வேலைக்கு அமர்த்துபவர்களுக்கு நீதிமன்றத்தின் மூலம் தண்டனையும் வாங்கித் தருகிறோம். அதையும் மீறி சிலர் குழந்தைத் தொழிலாளர்களை ஊக்குவிக்கத்தான் செய்கிறார்கள். எங்களோட நடவடிக்கையை தீவிரப்படுத்த இருக்கிறோம்'' என்றார். சொன்னால் மட்டும் போதாது. செய்யுங்க சார்!
கே.ஏ.சசிகுமார், படங்கள்: ச.வெங்கடேசன்

முதல்வர் தொகுதியில் போலீஸ் நிலவரம் எப்பூடி?

மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் கலந்தாய்வு மாநாடு ஜெயலலிதா தலைமையில் சமீபத்தில் நடைபெற்றது. அப்போது, 'போக்குவரத்து ஒழுங்குப் பிரிவை பலப்படுத்தும் விதமாக ஐந்து மாவட்டங்களில் போக்குவரத்து காவல் துறையினருக்கு, காவல் நிலையங்கள் புதியதாக அமைத்துத் தரப்படும்’ என்று அறிவித்தார் தமிழக  முதல்வர். காவல் துறை மீது மிகுந்த அக்கறை கொண்ட முதல்வரின் ஸ்ரீரங்கம் தொகுதியில் காவல் நிலையங்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்று அறிய  அந்த ஏரியாவைச் சுற்றி வந்தோம்.
முதல்வரின் தொகுதியில் ஓர் உதவி ஆணையர் அலுவலகம், ஒரு சட்டம் ஒழுங்கு காவல் நிலையம், ஒரு போக்குவரத்து காவல் நிலையம், ஒரு அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகியவை உள்ளன. இதில் அனைத்து மகளிர் காவல் நிலையம் மட்டும் பொலிவோடும் கம்பீரமாகவும் காட்சியளிக்கிறது. மற்ற அனைத்துமே 'உவ்வே’ ரகம்.
முதலில், சட்டம் ஒழுங்கு காவல் நிலையம். சுதந்திரம் வாங்குவதற்கு முன்பே ராமநாத ரெட்டியார் என்பவரால் இனாமாக வழங்கப்பட்டதாம் இந்தக் காவல் நிலைய இடம்.  காவல் நிலையத்தை இனாமாகப் பெற்றால், அரசே பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதால் இனாமைப் புறக்கணித்துவிட்டு, ஒரு ரூபாய் வாடகை செலுத்தப்பட்டு வருகிறது. வருடத்தில் பாதி நாட்கள் திருவிழாக்களாலும், வி.ஐ.பி-களின் வருகையினாலும் திக்குமுக்காடும் காவல் நிலையங்களில் இதுவும் ஒன்று. இந்தப் பகுதியில் இருக்கும் கோயில்களுக்கு நாளன்றுக்கு 10,000 முதல் 15,000 பக்தர்கள் வந்து செல்கிறார்கள். ஆனால் நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்குரிய எண்ணிக்கையில் காவலர்கள் இல்லை. காவலர்களைவிட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்களை அதிக எண்ணிக் கையில் கொண்ட காவல் நிலையமாக இது இருக்கிறது! 
ஏரியாவில் தினம் தினம் நடைபெறும் நகைப் பறிப்புச் சம்பவங்கள் எகிறிக்கொண்டே செல்கிறது. 'வெளியூருக்குப் போவதாக இருந்தால் காவல்நிலையத்தில் தகவல் சொல்லுங்கள்’ என்பார்கள். ஆனால் மக்கள் அப்படிச் செய்வதே இல்லை. ஏனென்றால், அப்படிச் சொல்லப்படும் வீட்டில் இருந்து கண்டிப்பாக பொருட்கள் காணாமல் போகும் என்று பயந்து நடுங்குகிறார்கள். ஊருக்குள் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி அபேஸ் செய்யப்பட்டு வந்தாலும், அதைத் தடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை.
அடுத்து, போக்குவரத்துக் காவல் நிலையம். 1999-ம் ஆண்டு அப்போதைய மாநகர ஆணையர் திரிபாதி, திருவானைக்காவல் மெயின் ரோட்டில் உள்ள புறம்போக்கு நிலத்தில் குட்டியூண்டாக போக்குவரத்து காவல் உதவி மையம் அமைத்தார். இப்போது அதுதான், அதே இடத்தில் காவல் நிலையமாக வளர்ந்து நிற்கிறது. ஓர் உதவி ஆய்வாளர் மற்றும் 40-க்கும் மேற்பட்ட காவலர்கள் இருந்தாலும் பாதிப்பேர்தான் இங்கே பணியாற்றுகிறார்கள். மற்றவர்கள் அதிகாரிகளின் இல்லங்களில் எடுபிடி வேலை செய்துவருவதாக சொல்லப் படுகிறது. அதனால் நத்தை போன்று நகரும் போக்குவரத்தை மீதியிருக்கும் காவலர்களால் வேடிக்கைதான் பார்க்க முடிகிறது. இருக்கும் சிக்கல் போதாது என்று திருவரங்கம் காவல் நிலையத்தின் வாசலில் இருக்கும் பெரியார் சிலைக்கு பாதுகாப்பு கொடுக்கவும் செல்ல வேண்டிய நிலை. திருவானைக்காவல் தெற்கு வீதியில் இருந்து கோவிலின் 5-ம் பிரகாரத்தை நேரடியாக வந்தடையும் விதத்தில், பாதை அமைக்க வேண்டி பல்வேறு அமைப்புக்கள் மட்டுமின்றி போக்குவரத்து காவல் துறையும் கோரிக்கை வைத்தது. ஆனால் எதையும் காதில் வாங்காமல் காலம் தாழ்த்திவருகிறது, மாவட்ட நிர்வாகம். அதனால் பிரதோஷ தினங்களில் பக்தர்களின் அவஸ்தை சொல்லி மாளாது. அதனால் தானோ என்னவோ, உள்ளூர்வாசிகள் பிரதோஷ தினத்தன்று வீட்டுக்கு வெளியே எட்டிக்கூடப் பார்ப்பது இல்லை.
உதவி ஆணையர் அலுவலகம் எங்கே என்று கேட்டால், 'அப்படி ஒன்று இருக்கிறதா?’ என்று பதில்கேள்வி கேட்டு ஆச்சரியப்பட வைக்கிறார்கள் ஸ்ரீரங்கம் மக்கள். ஸ்ரீனிவாச நகர் ரயில்வே மேம்பாலத் துக்கு அடியில் ஒரு வாடகை கட்டிடத்தில் பரிதாப மாக இயங்குகிறது இந்த அலுவலகம். 'வரப்பட்டது... போகப்பட்டது’ என்று காவல் துறையில் ஒரு வார்த்தை பிரயோகம் உண்டு. அந்த சொல்லுக்கு இம்மியளவும் மாற்றில்லாத அலுவலகம். வி.ஐ.பி-கள் கோயிலுக்கு வந்தால் மட்டும்தான் காவலர்களும் தலை காட்டுவார்கள்.
சங்கர்ஜுவால் மாநகர ஆணை யராக இருந்தபோது, உலகத் தரத்திற்கு இணையாக மாநகரின் முக்கிய இடங்களிலும் நகரின் முக்கிய சோதனைச் சாவடிகளிலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டன. ஆனால் மாநகராட்சிக்கும் வர்த்தக நிறுவனங்களுக்கும் இடையில் வந்த மனக்கசப்பு காரணமாக, கேமராக்கள் இருந்தும் இல்லாதது போல் இருக்கின்றன.
காவல் நிலையங்களில் இருக்கும் குறைபாடுகள் குறித்து மாநகர ஆணையர் மாசானமுத்துவிடம் விளக்கம் கேட்டபோது, ''ஸ்ரீரங்கம் காவல் நிலையம் வாடகை கட்டடத்தில் இயங்கினாலும், எவ்விதமான வசதிக் குறைவும் கிடையாது. போக்குவரத்துக் காவல் நிலையத்துக்குத் தோதான இடத்தை மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டுப் பெறும் முயற்சியில் இருக்கிறோம். உதவி ஆணையர் அலுவலக செயல்பாடுகள் திருப்திகரமாகவே உள்ளது. காவலர்களும் போதிய எண்ணிக்கையில் இருக்கிறார்கள்'' என்றார்.
அப்படிப்போடு!
ப்ரீத்தி கார்த்திக்

மீனவர்களை விரட்டும் மின் நிலையங்கள்!

கடலோரத்தில் கண்ணீர் போராட்டம்!
வம்பர் 22-ம் தேதி உலக மீனவர் தினம். அதனை உலகெங்கும் மீனவர்கள் அனைவரும் உற்சாகமாகக் கொண்டாட, தமிழ்நாட்டில் மட்டும் கொண்டாட்டம் மிஸ்ஸிங்!
தங்களின் உரிமைகள் பாதிக்கப்படுவதைக் கண்டித்து நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மீனவர்கள் ஒன்றுகூடி மீனவர் தினத்தன்று ஆர்ப் பாட்டத்தில் இறங்கினார்கள். நாகை பேருந்து நிலையம் அருகேயுள்ள அவுரித்திடலில் நடைபெற்ற இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கடுமையான கண்டனக் கணைகளைத் தொடுத்தார்கள். மயிலாடுதுறை தே.மு.தி.க சட்டமன்ற உறுப்பினர் அருட்செல்வனும் போராட்டத்தில் கலந்துகொண்டு கணடன உரை ஆற்றினார்.
''ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு என்ன அவசியம்?'' என்ற கேள்வியோடு, போராட்டக் களத்தில் இருந்த வங்கக்கடல் மீன் தொழிலாளர் சங்கத்தின் ஆலோசகர் டாக்டர் குமரவேலு விடம் பேசினோம். ''கடலும், கடற்கரையும் கடலாளி வர்க்கமான மீனவர்களுக்கே சொந்தம். ஆனால், தற்போது நடந்துவரும் அத்தனைக் காரியங்களும் கடலில் இருந்தும் கடற்கரையில் இருந்தும் மீனவர்களை அப்புறப்படுத்தும் விதமாகவே இருக்கிறது. கூடங்குளம் அணு மின் நிலையத்தில் ஆரம்பித்து, நாகை மாவட்ட அனல் மின் நிலையங்கள் மற்றும் கடற்கரை ஒழுங்கு மண்டல அறிவிப்பாணை 2011 வரை அனைத்துமே மீனவன் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுகிறது. கரை இப்படி பறிபோகிறது என்றால்... கடலுக்குள் அதைவிட பெரிய ஆபத்து. மீன் பிடிக்கச் சென்றால், இலங்கை மீனவர்கள் மற்றும் ராணுவத்தினரால் நம் மீனவர்கள் தாக்கப்படுகிறார்கள்; கொலை செய்யப்படுகிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில், மீனவன் எப்படி மீனவர் தினத்தை சந்தோஷமாகக் கொண்டாட முடியும்? அதனால்தான், எங்கள் துயரத்தை உலகுக்கு வெளிக்காட்ட இப்படியரு கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம்'' என்றார்.
கடலோர செயல்பாட்டு கூட்டமைப்பின் அமைப்பாளர் ஜேசுரத்தினம்,  ''கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற மீனவன் கரை திரும்பாவிட்டால் அந்தக் குடும்பமே நிர்கதியாக நிற்கும். அவன் என்ன ஆனான் என்று தெரியாத நிலையில், அவனது குடும்பத்துக்கு அரசு உதவித் தொகை பெற வேண்டுமானால், ஒரு வருடம் காத்திருக்க வேண்டுமாம். அதுவரை அவன் குடும்பம் எப்படி வாழ்க்கை நடத்தும் என்பதை யோசிக்கவேண்டாமா? அதனால் அந்த காலத்தை ஒரு மாதமாக குறைக்க வேண்டும். நாகை மாவட்டத்தில் மட்டும், கடலோரத்தில் 13 அனல் மின் நிலையங்கள் தொடங்க அனுமதி கொடுத்து இருக்கிறார்கள். அவை செயல்படத் தொடங்கும்போது, 'அங்குள்ள மீனவன் எங்கே போவான்?’ என்று யாரும் யோசித்ததாகத் தெரியவில்லை. இது நாகை மாவட்ட மீனவர்களின் பிரச்னை என்றால்... இந்தியாவின் ஒட்டுமொத்த கடலோர மக்களையும் விரட்டியடிக்கிறது, கடற்கரை ஒழுங்கு மண்டல அறிவிப்பாணை 2011. அதில், கடற்கரையில் இருந்து 1,000 மீட்டர் தூரம் வரையில் யாரும் குடியிருப்புகளைக் கட்டக்கூடாது என்பது உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் இடம்பெற்றுள்ளன. அதை எதிர்க்கும் 'தேசிய மீனவர் பேரவை’ பல திருத்தங்களைச் செய்யச் சொல்லியும், அதைச் செய்யாமலே அறிவிப்பாணையைக் கொண்டுவரப் பார்க்கிறார்கள். இதுபோன்ற இடர்களை எல்லாம் எதிர்த்துப் போராடிக்கொண்டே இருக்கிறோம். மீனவர்களும் இப்போதுதான் நெருங்கி வரும் ஆபத்தை உணர்ந்து போராட்டக் களத்துக்குவருகிறார்கள். அவர்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் வரையில் தமிழகத்தில் மீனவர் தினமும் கிடையாது... கொண்டாட்டமும் கிடையாது'' என்று படபடத்தார். 
''மின் நிலையங்கள் வந்தால்தானே தமிழ்நாட் டின் மின் பற்றாக்குறை தீரும்? அதை எதிர்ப்பதால் தமிழகம் இருளில்தானே மூழ்கிக் கிடக்கும்?'' என்ற கேள்வியை நாம் முன் வைக்க...  ''மின்சாரம் தேவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதற்கு விலையாக மீனவனின் வாழ்வாதாரத்தை பறி கொடுக்க வேண்டுமா? அவனது உரிமைகள் மறுக்கப்பட வேண்டுமா? என்பதுதான் எங்கள் கேள்வி. கடலோ ரத்தில் அமையவுள்ள அனல் மின் நிலையங்களுக்காக சராசரியாக 20 கிலோ மீட்டருக்கு ஒரு துறைமுகம் வரப்போகிறது. அப்படி வந்தால்... துறைமுகமும், அனல் மின் நிலையமும் சேர்ந்து மொத்த கடலோரத்தையும் ஆக்கிரமித்து விடும். தனியார் நிறுவனங்கள் கடலை ஆக்கிரமித்துவிட்ட பிறகு, மீனவன் எங்கே போய் மீன் பிடிப்பான்? காந்தி கண்ட கிராம ராஜ்யம் கொண்டுவருவதாகச் சொல்லும் இவர்கள், உண்மையில் அந்தக் கிராமங்ங்களை அழிக்கத்தான் இப்படிப்பட்டத் திட்டங்களுக்கு அனுமதி வழங்கி இருக்கிறார்கள். இப்போது ஒரே ஒரு அனல் மின் நிலையம் மட்டும் இருக்கும்போதே மீனவர்கள் படும் பாடு சொல்லி முடியாது. 13 மின் நிலையங்கள் வந்தால், கடலோரக் கிராமங்கள் என்ன பாடுபடும் என்பதை ஆள்வோர் நடுநிலையோடு நினைத்துப் பார்க்கவேண்டும். மின் உற்பத்தி தேவைதான். சூரிய ஓளியில் மின்சாரம், காற்றாலை மூலம் மின்சாரம் என்று மாற்று வழிகள் எத்தனையோ இருக்க... இப்படி சுற்றுச்சூலை மாசுபடுத்தும் அனல் மின் நிலையங்களும், சுற்றுப்புற மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அணு மின் நிலையமும் தேவைதானா?'' என்று கொந்தளித்தார்.
இவர்களது குரல்களில் உள்ள நியாயம், மத்திய - மாநில அரசுகளின் காதுகளை எட்டுமா?
கரு.முத்து 

மாமியார், மருமகளுக்கு மட்டும்தான் பதவியா?

செஞ்சிலுவை சங்க விவகாரத்தில் கொந்தளிக்கும் கோவை
'இந்திய செஞ்சிலுவை சங்கம், பி.எஸ்.ஜி. குழுமத்தின் குடும்பச் சொத்தா?’ என்று வழக்கறிஞர் ஒருவர் எழுப்பியுள்ள கேள்விதான் இப்போது கோவை யின் சென்சேஷனல் டாபிக்.
கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் லோகநாதன், அரசுத் துறைகள் மற்றும் அதிகார மையங்களின் நடவடிக்கைகளை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அறிந்து கொள்வதில் ஆர்வம் நிரம்பியவர். சமீபத்தில் கோவை இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் நிர்வாக அமைப்பு மற்றும் நடவடிக்கைகள் குறித்த விவரங்களை அந்தச் சட்டத்தின் மூலம் திரட்டிய போதுதான், அதிர்ந்து போயிருக்கிறார். இனி லோகநாதன் பேசுகிறார்.
''உலகப் போர் நடந்த சமயம், காயம்பட்ட வீரர்களை களத்தில் இருந்து தூக்கிவந்து சிகிச்சை தருவதற்காக ஆரம்பிக்கப்பட்ட உன்னதமான சேவை அமைப்புதான், இந்திய செஞ்சிலுவை சங்கம்.போருக்குப் பிறகும் பல சேவைகளை மக்களுக்குச் செய்வதற்காக இந்த அமைப்பு தொடர்ந்து செயல்படுகிறது. நாடு முழுக்க இருப்பது போன்றே, கோவையிலும் இந்த அமைப்பு இருக்கிறது. இதில்  வருத்தம் என்னவென்றால், இந்த சங்கம் கோவையில் மிகப்பெரிய கல்வி நிறுவனங்களையும், மருத்துவ மனையையும் நடத்தும் பி.எஸ்.ஜி. குடும்பத்தின் சொத்தாகிவிட்டது என்பதுதான். கோவை இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் நிர்வாகிகள் பட்டியலை புரட்டிப் பார்த்தாலே இது புரியும். 1993 முதல் 2004 வரை இந்த சங்கத்தின் சேர்மனா, பி.எஸ்.ஜி. குடும்பத்தின் சந்திரகாந்தி கோவிந்தராஜூலு இருந்தாங்க. இந்த காலகட்டத்தில் செய லாளரா இருந்த அவங்க மருமகளான நந்தினி ரங்கசாமிதான் இப்போ சேர்மன் பதவியில இருக்காங்க.
நிர்வாகத்தில் முக்கியப் பொறுப்புகளில் இருந்தவங்களும் இப்போ இருக்கிறவங்களும் பெரும்பாலும் பி.எஸ்.ஜி-யோடு தொடர்புஉள்ளவங்கதான். முரளி என்பவர் பொருளாளர் பொறுப்பில் கிட்டத்தட்ட 14 வருஷமா இருக்கார். பொது  சேவையில் இருப்பவர்கள் அந்தப் பதவியை தன்னோட சொந்த வளர்ச்சிக்கு பயன்படுத்தக்கூடாது. ஆனா இங்கே நடந்திருக்கிற கதையே தனி. கோவை இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் சார்பா இரத்த தான முகாம்கள், கண் சிகிச்சை முகாம்கள் நிறைய நடந்திருக்கு. இதுல பெரும்பான்மையா பலன் அடைஞ்சது நந்தினி குடும்பத்துக்குச் சொந்தமான பி.எஸ்.ஜி. மருத்துவமனைதான். இதுதவிர விளையாட்டு, நடன போட்டிகள் எல்லாமே பி.எஸ்.ஜி. நிறுவனத்தின் கிருஷ்ணம்மாள் கல்லூரியிலே நடத்தப்பட்டிருக்கு.
2010-ல் ஹூண்டாய் சான்ட்ரோ காரை ரெஃப்கோ வங்கியிடம் லோன் மூலம், இந்திய செஞ்சிலுவை சங்கத்துக்காக வாங்கி னாங்க. அந்தக் கார் இப்போது யாருடைய பயன்பாட்டில் இருக்கிறது என்பது தெரிய வில்லை. இந்திய செஞ்சிலுவை சங்கத்தில் உறுப்பினராக விரும்புபவர்களை சாதி, மொழின்னு எந்த பாகுபாடும் இல்லாம சேர்க்கணும் என்பதுதான் விதி.  ஆனா, கோவை இந்திய செஞ்சிலுவை சங்கத்தில் உறுப்பினர் ஆவது பச்சைத் தண்ணியில நெய் எடுக்கிறதுக்கு சமம். அவ்வளவு சீக்கிரம் வெளி ஆட்கள் யாரையும் சேர்க்க மாட்டாங்க. இப்போதைய உறுப்பினர் லிஸ்டை எடுத்துப் பார்த்தா, பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரியோட தாளாளர், பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மேல்நிலைப் பள்ளியோட தலைமை ஆசிரியைன்னு அவங்க ஆட்களைத்தான் உறுப்பினராக்கி இருக்கிறாங்க.  இத்தனை லட்ச மக்கள் இருக்கிற கோவையில், இந்த இந்திய செஞ்சிலுவை சங்கத்தில் 700  உறுப்பினர்கள் கூட இல்லைங்கிறது கேவலமான விஷயம். கடந்த அஞ்சு வருஷத்தில 13 பேரைத்தான் புதிய உறுப்பினராக்கி இருக்காங்க. இந்த நிலைக்கு ஒரே காரணம் இந்த சங்கத்தை, தன் கையில வெச்சிருக்கிற பி.எஸ்.ஜி. குடும்பத்தின் கெடுபிடிதான். கோவை இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தலைவராக இருக்கும் கலெக்டர் கருணாகரன், இந்த விவகாரத்தை ஆராய்ந்து வெளிப்படையான நடவடிக்கை எடுத்து, சாமான் யனும் இந்த அமைப்பின் உறுப்பினராவதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கணும். இதில் நடந்திருக்கும் தவறுகளை ஜனாதிபதி வரையிலும் கொண்டு செல்லப் போகிறேன்'' என்று பொரிந்து தள்ளினார்.
செஞ்சிலுவை சங்கத்தின் சேர்மன் நந்தினியைத் தொடர்பு கொண்டோம். பூங்கோதை என்பவர்தான் பேசினார். நாம் கேள்விப்பட்ட ஒட்டுமொத்த குற்றச்சாட்டுகளையும் சொல்லி விளக்கம் கேட்டோம். ''மேடத்துக்கிட்ட இதைக் கொடுத்திடுறோம். மூன்று நாட்கள் டைம் கொடுங்க. மேடம் உங்களுக்கு விளக்கம் சொல்லுவாங்க'' என்று சொன்னார். நாம் காத்திருந்தும் பதில் இல்லை. அதனால் மீண்டும் தொடர்பு கொண்டோம். ''நந்தினி மேடம் இப்போ ரொம்பவும் பிஸியா இருக்காங்க. அதனால உங்ககிட்ட பேச முடியாது. நீங்க சொன்ன புகார்களுக்கு பதில் சொல்ல விருப்பம் இல்லைன்னு சொல்லிடச் சொன்னாங்க...'' என்று பூங்கோதையே நமக்குப் பதில் கொடுத்தார். நந்தினி இனிமேல் விளக்கம் கொடுத்தாலும் பிரசுரம் செய்ய நாம் தயாராகவே இருக்கிறோம்.
கோவை செஞ்சிலுவை சங்கத்தின் தலைவரான மாவட்ட ஆட்சியர் கருணாகரனிடம் பேசினோம். ''நீங்க சொல்லித்தான் இவ்வளவு பிரச்னை இருப்பது தெரிகிறது. உடனே விசாரிக்கிறேன்'' என்று சொன்னார்.
என்ன நடக்கிறதென்று பார்ப்போம்!
எஸ்.ஷக்தி, படங்கள்: வி.ராஜேஷ்.

மின் இணைப்பு துண்டிப்பு அபாயம்!

வாரியத்துடன் மல்லுக்கட்டும் விசைத்தறியாளர்கள்
சேலம் மாவட்டம் அம்மாபேட்டை, சங்ககிரி, இளம்பிள்ளை, வேம்படிதாளம் ஆகிய ஏரியாக்களில் ஏராளமான சிறு விசைத் தறிகள் இயங்கி வருகிறது. கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில், இந்தத் தறி உரிமையாளர்களுக்கு மின் விநியோகத்தில் சலுகை வழங்கப்பட்டது. அதாவது சிறு விசைத்தறி உரிமையாளர் ஒவ்வொருவருக்கும், ஒரு தறிக்கு மட்டும் மாதம் தோறும் முதல் 500 யூனிட் மின்சாரம் இலவசம். 500 முதல் 1000 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ஒரு ரூபாயும், அதற்கு மேல் பயன்படுத்தினால், கூடுதல் கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டது. இப்போது, அந்தத் தறி உரிமையாளர்களுக்கு மின் இணைப்பு தொடர்பாக புதிய பிரச்னை!
இளம்பிள்ளை பகுதி விசைத்தறி உரிமையாளரான பன்னீர்செல்வம், ''சிறு விசைத்தறி உரிமையாளர்களில் பெரும்பாலானவங்க ஏழைகள்தான். அதனால் விசைத்தறிக்கு அவங்க ளால தனிக்கூடம் அமைக்க முடியறதில்லை. அவங்க வசிக்கும் வீட்டின் ஒரு பகுதியிலேயே தறியை இயக்குறாங்க. ஆரம்பத்துல, விசைத்தறி இயக்குறதுக்கான மின் இணைப்புக்கு விண்ணப்பிச்சபோது, 'ஏற்கெனவே உங்க வீட்டு பயன்பாட்டுக்குன்னு ஒரு மின் இணைப்பு வைச்சிருக்கீங்க. ஒரு வீட்டுக்கு இரண்டு மின் இணைப்பு தர முடியாது. அதனால, ஏற்கெனவே வீட்டுக்கு வாங்கின மின் இணைப்பைத் துண்டிச்சுட்டு, விசைத்தறிக்கான இணைப்பு வாங்கிக்குங்க’ என்று சொல்லித்தான் புது இணைப்பு கொடுத்தாங்க. 'அப்ப வீட்டுப் பயன்பாட்டுக்கான மின்சாரத்துக்கு நாங்க என்ன பண்றது?’ன்னு கேட்டதுக்கு, 'அதை தறிக்கான இணைப்புல இருந்து எடுத்துக்கங்க’ன்னு சொன்னாங்க. அந்த சமயத்துல தறிகளுக்கு மானிய மின்சாரத் திட்டம் அமலுக்கு வரவில்லை. தொழில் பயன்பாட்டுக்கான மின்சாரக் கட்டணம், வீட்டு உபயோகத்துக்கான கட்டணத்தைவிட அதிகம். இருந்தாலும் வேற வழியில்லாம அதைத்தான் வீட்டுக்கும் பயன்படுத்த வேண்டிய சூழல். இரு இணைப்பு வைச்சுக்க அதிகாரிகள் அனுமதி மறுத்த நிலையில், வேறு வீடு கட்டவும் வசதி இல்லாததால், அதை சகிச்சுகிட்டோம்.
கடந்த ஆட்சியின்போது, தறிகளுக்கு மாதம்தோறும் 500 யூனிட் பயன்பாடு மட்டும் இலவசமாக வழங்கப்பட்டது. அதைக் காரணமா வச்சு, தறி இணைப்பில் இருந்து வீட்டுக்கு மின்சாரம் எடுக்கக் கூடாது என்று இப்போது அதிகாரிகள் எங்களை நெருக்க ஆரம்பிச்சுட்டாங்க. அடிக்கடி ரெய்டு வர்ற அதிகாரிங்க, மின் இணைப்பையே துண்டிச்சிடுவோம்னு மிரட்டிட்டுப் போறாங்க. அதனால, பலரும் எப்போ என்ன நடக்குமோன்னு பயத்துல இருக்காங்க'' என்றார் விளக்கமாக. 
இளம்பிள்ளை வட்டார நுகர்வோர் கவுன்சில் தலைவர் சின்னசாமி, ''தொழில் இணைப்பில் இருந்து வீட்டு உபயோகத்துக்கு மின்சாரம் எடுப்பது தவறு என்று அதிகாரிங்க சொல்றது சரிதான். ஆனா, வீட்டு உபயோகத்துக்கு வாங்கியிருந்த இணைப்பைத் துண்டிக்க வச்சதே அவங்கதானே? இப்போ பிரச்னை கிளம்பின பிறகு, 'இப்பவாச்சும் வீட்டு உபயோகத்துக்கு தனி கனெக்ஷன் தாங்க’ன்னு கேட்டா... 'ஒரு கட்டடத்தில் ஒரு இணைப்பு மட்டும்தான் தர முடியும்’ன்னு பிடிவாதமா சொல்றாங்க. நடைமுறையில் உள்ள விதிகளை அதிகாரிங்க கெட்டியா பிடிச்சுக்கிட்டு, எங்களை அலைய விடாம... தறி உள்ள கட்ட டத்திலேயே, வீட்டு பயன்பாட்டுக்காக ஒரு துணை இணைப்பை வழங்க மின்வாரியம் முன்வரணும். இதன் மூலம் கிடைக்கும் டெபாசிட் பணம் மற்றும் மாத பயன்பாட்டு கட்டணம் எல்லாமே ஒரு வகையில மின் வாரியத்துக்கு கூடுதல் வருவாயைத்தானே உண்டாக்கும்'' என்று கேள்வி எழுப்பினார். 
மின்வாரியத்தின் இந்த புதிய சவாலை எதிர்கொள்ள... சிறு விசைத்தறி உரிமையாளர்கள் அனைவரும் இணைந்து, தங்களது கோரிக்கையை  துண்டு பிரசுரங்களாக மக்கள் மத்தியில் விநியோகம் செய்து வருகின்றனர். அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசித்து வருகின் றனர். 
இந்த பிரச்னை குறித்து சேலம் அன்னதானப்பட்டி மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் மணிவண்ணனிடம் பேசியபோது, ''மாநிலம் முழுக்க மின் பற்றாக்குறை நிலவும் சூழலில், எங்கெல்லாம் மின்விரயம் அல்லது திருட்டு நடக்கிறது என்று தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம். மானியத் திட்டத்தில் விசைத்தறிக்குப் பெற்ற இணைப்பில், வீட்டுக்கு மின்சாரம் எடுத்தவர்களை அதிகாரிகள் கடுமையாக எச்சரிக்கைச் செய்தனர். இதனால் தறி உரிமையாளர்கள் மின் வாரிய அதிகாரிகளை எதிரியாகப் பார்க்கிறார்கள். வாரிய விதிகளை நாங்கள் நடைமுறைப்படுத்தித்தான் ஆகவேண்டும். அதேநேரம், ஒரே வீட்டில் இரு இணைப்பு கள் தொடர்பான கோரிக்கைகள் எங்களிடமும் வந்துள்ளது. அதை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளோம். விதி மாற்றம் செய்யும் அதிகாரம் மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்திடம்தான் உள்ளது. கோரிக்கைகளை பரிசீலித்து மேலிடம் அனுமதி வழங்கினால் மட்டுமே ஒரு வீட்டுக்கு இரட்டை இணைப்பு வழங்க சாத்தியம் இருக்கிறது'' என்று விளக்கம் அளித்தார்.
இந்தப் பிரச்னையை மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கவனத்துக்கும் கொண்டு சென்று இருக்கிறோம். விரைவில் தீர்வு கிடைக்கும் என்றே நம்புவோம்!
எஸ்.ராஜாசெல்லம்
படங்கள்: க.தனசேகரன்

ஸ்வீடனில் விவாதிக்கப்பட்ட உத்தப்புரம் விவகாரம்

இன்னமும் இருக்கிறது இரும்புச் சுவர்...
டுக்கப்பட்ட மக்களுக்கு எதிராகப் போராடும் மதுரை 'எவிடென்ஸ்’ அமைப்பின் செயல் இயக்குநர் கதிரும் திட்ட இயக்குநர் திலகமும் 15 நாள் பயணமாக ஸ்வீடன் மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்குச் சென்று வந்திருக் கிறார்கள். அங்கு நடந்த நிகழ்ச்சிகளில், இந்தி யாவில், குறிப்பாக தமிழகத்தில் நடக்கும் தீண்டாமை வன்கொடுமைகளைப் பதிவு செய்துவிட்டு வந்திருக்கிறார்கள்.
அவர்களிடம் பேசினோம். ''இந்தியாவில் இருந்து நாங்கள் இருவர் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தோம். ஸ்வீடனில் உள்ள மால்மோ நகரத்தில் 'ஸ்வாலோஸ்’ என்ற தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த கண்காட்சியில், கடந்த காலங்களில் 'எவிடென்ஸ்’ கடந்து வந்த பாதையில் 12 வழக்குகள் தொடர்பான ஆவணங்களைப் பார்வைக்கு வைத் திருந்தனர். எங்களைப்போன்ற மனித உரிமை ஆர்வலர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் எனப் பலதரப்பட்டவர்களும் கலந்துகொண்டார்கள். இந்தக் கண்காட்சியில் நடந்த கலந்துரையாடலில், 'கிட்டத்தட்ட 400 மில்லியன் எண்ணிக்கையில் இருக்கும் தாழ்த்தப்பட்ட சமூகம் 2,000 ஆண்டுகளாகவே அடக்குமுறைகளை எதிர்கொண்டு வருகிறது. வெவ்வேறு வடிவங்களில் பரவிக்கிடக்கும் அடக்குமுறைகளுக்கு எதிராக உலக அளவில் குரல் கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் இங்கு வந்திருக் கிறோம்’ என்று சொன்னேன்.
'எங்கள் நாட்டில் தாழ்த்தப் பட்டவரை சாதி இந்து தொட்டு விட்டால் 'தீட்டு’ என்பார்கள். அதுவே தாழ்த்தப்பட்டவர், சாதி இந்துவைத் தொட்டுவிட்டால் 'பாவம்’ என்பார்கள். அங்கே தொடுதல்கூட ஒரு பிரச்னையா இருக்கு’ன்னு சொல்லி உத்தப்புரம் விவகாரத்தை எடுத்துச் சொன்னேன். 'உத்தப்புரத்தில் மக்களைப் பாகுபடுத்திப் பார்க்கும் சுவரை இடித்தாலும், அங்குள்ள மக்களின் இதயத்தில் இருக்கும் இரும்புச் சுவரை தகர்ப்பது கஷ்டம். வன்கொடுமை செய்பவர்களும் பாதிக்கப்படுகிறவர்களும் கைகோத்தால்தான் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும்’ என்றேன்.
'ஆக்டிவிஸ்ட்னா எப்படி இருக்கணும்னு நினைக்கிறீங்க?’னு ஒரு பேராசிரியர் கேட்டார். களப் போராளி, (பத்திரிகையாளர்கள் மாதிரியான) புரொபஷனல் ஆக்டிவிஸ்ட், பாதிக்கப்பட்ட தரப்பில் இருந்து வருகிறவர்கள் என மூன்று விதமான ஆக்டிவிஸ்ட்பற்றி நான் சொன்ன விளக்கம் அவரை வியக்கவைத்தது. 'சிறுவயதில் உங்களைப் பாதித்த சம்பவம்..?’ என்று ஒரு மாணவர் கேட்டார். '1982-ல் நான் கிராமத்தில் உள்ள எனது நண்பனின் வீட்டுக்குப் போயிருந்தேன். அவனது அப்பா ஒரு துப்புரவுப் பணியாளர். அன்று தீபாவளி என்பதால் ஊரார் கொடுத்த பலகாரங்களை ஒரு கூடையில் வாங்கிக்கொண்டு வந்தார் நண்பனின் அப்பா. அதை நண்பன் ஆவலோடு எடுத்தபோது அவனது அத்தை மூங்கில் குச்சியால் தட்டி விட்டார். 'தானியங்களைத் தானமாக வாங்குவது சரி... சமைத்த உணவை வாங்குவது பிச்சை’ என்றார். அவர் அப்போது சொன்னது எனக்குள் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது. 1985-ல் கடலூர் மாவட்டத்தில் உள்ள எனது சொந்த கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை பலாத்காரம் செய்த ஒருவனுக்கு ஊர் பஞ்சாயத்தில் வெறும் 80 ரூபாய் அபராதம் போட்டு வழக்கை முடித்த சம்பவத்தையும் சொன்னேன். இறுதியாக, 'மனித உரிமைகளை ஐ.நா. கட்டடத்தில் மட்டுமே பார்க்காதீர்கள். சக மனிதன் தாக்கப்படும்போது அதை எதிர்த்து குரல் கொடுப்பதுதான் மனித உரிமை’ என்று நான் சொன்னபோது ஏகப்பட்ட கிளாப்ஸ்!'' என்றார் கதிர்.
தொடர்ந்து பேசிய திலகம், ''இரண்டாவது நாள் ஸ்வீடனில் உள்ள லூண்டு பல்கலைக்கழகத்தில் செமினார். 1991 மற்றும் 2001-ல் தமிழகத்தில் ஐந்து கிராமங்களில் தங்கி இருந்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட டென்மார்க் ஆய்வாளரான திருமதி ஆஷ், பன்னாட்டு கம்பெனிகள் வருவதால் இந்தியாவில் தாழ்த்தப் பட்ட சமூகத்து மக்கள் முன்னேறுவதுபோல் பேசி னார். அதை மறுத்து, கம்பெனிகள் வருகையால் காணாமல் போனவர்கள் குறித்த பட்டியலையும், பாதிக்கப்பட்டவர்கள் பற்றி யும் விளக்கம் கொடுத்தேன்'' என்றார்.
மீண்டும் பேசிய கதிர் ஒரு தகவலைச் சொன் னார். ''லண்டனில் உள்ள இன்டர்நேஷனல் பள்ளி  கலந்துரையாடலுக்குச் சென்றோம். அங்குள்ள மாணவர் கள் இந்தியாவின் சாதியக் கொடுமைகள் அனைத்தையும் தெரிந்து வைத்திருந்ததை, ஆச்சர்யமாகப் பார்த்தோம். நம்மூர் பள்ளிகளைப்போல் இல்லாமல், மாணவர்கள் அங்கே சர்வ சுதந்திரமாய் படிக்கிறார்கள். தவறு என்று தெரிந்தால் ஆசிரியர்களே மாணவர்களிடம் மன்னிப்புக் கேட்கும் மாண்பைக் கண்டு மிரண்டு போனோம். லண்டனில் மனித உரிமைகளுக்காகப் போராடும் வேறு சில களப் போராளிகளையும் சந்தித்துவிட்டு நாடு திரும்பினோம். லண்டனில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பையனும் சீக்கிய மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணும் காதல் திருமணம் செய்திருக்கிறார்கள். இதனால், அவர்களுக்கு வேலை கொடுத்திருந்த சீக்கியர் கம்பெனி, இருவரையும் வேலையில் இருந்து தூக்கிவிட்டது. இதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலரான மீனா வர்மா நீதிமன்றம் சென்றிருக்கிறார். லண்டன் மீடியாக்களில் இதுதான் இப்போது பரபரப்பு செய்தி'' என்றார்.
லண்டன் சென்றாலும் இந்தியர்கள் மாற மாட்டார்களோ?
குள.சண்முகசுந்தரம்
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி       

''சுதாகரன் திருமணத்திற்காக ஒரு பைசாகூட செலவு செய்யவில்லை!''

பெங்களூரு கோர்ட்டில் ஜெயலலிதா
ப்ப்ப்பாடா... ஒருவழியாக, 14 ஆண்டுகளாக இழுத்தடித்து வந்த சொத்துக் குவிப்பு வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து முடித்துவிட்டார் ஜெயலலிதா. வழக்கின் முடிவு எப்படி இருக்கும் என்பதுதான் இப்போதைய எதிர்பார்ப்பு.
கடந்த 22-ம் தேதி காலை தனி விமானம் மூலம் 9.50 மணிக்கு பெங்களூரு விமான நிலையத்தில்  தோழி சசிகலாவுடன் வந்து இறங்கிய ஜெயலலிதா, தயாராக இருந்த கேரவனில் சில நிமிடங்கள் ஓய்வு எடுத்தார். அதன் பிறகு 37 கார்கள் அணிவகுக்க தேசியக் கொடி பொருத்தப்பட்ட  காரில் உற்சாக மாகக் கிளம்பினார். சரியாக 10.40 மணிக்கு பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்துக்குள் நுழைந்தார். அடுத்து, சுதாகரன் தனது வழக்கறிஞர்களுடன் தோரணையாக கோர்ட்டுக்குள் நுழைந்தார். உடல் நிலை சரியில்லை என்று காரணம் காட்டி இளவரசி இரண்டு நாட்களும் ஆப்சென்ட்.
கடந்த முறை ஜெயலலிதா கோர்ட்டுக்கு வந்தபோது 3,500 போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட் டார்கள். இதற்காக  45 லட்சம் செலவானது. பாதுகாப்புக் கெடுபிடிகளும் அதிகம் என்று முணு முணுக்கப்பட்டது. அதனால், இந்த முறை அதிக எண்ணிக்கையில் போலீஸ் பாதுகாப்பு வேண்டாம் என்று ஜெயலலிதாவே  சொல்லிவிட்டாராம். அதனால், சுமார் 1,500 போலீஸார் மட்டுமே  பாதுகாப்பு பணியில் இருந்தார்கள். இந்த முறை ஜெயலலிதாவின் பாதுகாப்புக்காக,  30 லட்சம் மட்டுமே (!) செலவு செய்யப்பட்டதாக கர்நாடகக் காவல் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த முறை போலீஸ் கெடுபிடியால் கோர்ட்டுக்கு வர முடியாமல் கர்நாடக எல்லையிலேயே திருப்பி அனுப்பப்பட்ட தமிழக மந்திரிகள், உஷாராக இம்முறை முன்கூட்டியே பெங்களூருவில் ரூம் போட்டு செட்டிலாகி இருந்தனர். சென்னை மேயர் சைதை துரைசாமி ஏறிய விமானம் பெங்களூருவின் ஓவர் பனி மூட்டத்தால் தரை இறங்க முடியவில்லை. அதனால் அடுத்த விமானத்தைப் பிடித்து ஒரு வழியாக 1 மணிக்கு வந்து சேர்ந்தார். அவர் காரை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டதால், ஒரு கிலோ மீட்டர் நடந்து சென்றார்.
கோர்ட்டுக்குள் நடந்தது என்ன?
''252 சாட்சிகளின் அடிப்படையில் தயார் செய்யப் பட்ட மொத்த கேள்விகளின் எண்ணிக்கை 1,384.இதில் ஜெயலலிதாவிடம் கேட்கப்பட வேண்டிய கேள்விகள் 1,339. ஏற்கெனவே 567 கேள்விகள் கேட்கப்பட்டுவிட்டதால், மீதம் உள்ள கேள்விகளை காலை 11 மணிக்கு நீதிபதி மல்லிகார்ஜூனையா கேட்க ஆரம்பித்தார். ஜெயலலிதா தரப்பில் பி.குமாரும், அரசுத் தரப்பில் ஆச்சார்யாவும் ஆஜர் ஆனார்கள். அதற்கு முன்னதாக, ஜெயலலிதா விசிட்டர்ஸ் ஹாலில் நுழையும்போது, சுதாகரன் எழுந்து நின்று வணக்கம் சொன்னார். அப்போது ஜெயலலிதாவும் வணங்கியதால், சுதாகரன் முகத்தில் மகிழ்ச்சி ரேகை படர்ந்தது. ஐந்து நிமிடங்கள் முன்கூட்டியே கோர்ட் ஹாலுக்குள் நுழைந்தார் ஜெயலலிதா. அவர் அமர்வதற்கு கோர்ட் கொடுத் திருக்கும் சேர் மிகவும் சிறியதாக இருப்பதால், சென்னையில் இருந்தே ஒரு குஷன் சேரும், ஒரு ஸ்டீல் எஸ் டைப் சேரும் கொண்டுவந்தார்கள். ஆனால் குஷன் சேருக்கு நீதிமன்ற கிளர்க் அனுமதி மறுத்துவிட்டதால், ஸ்டீல் எஸ் டைப் சேரில் அமர்ந்தார். மர பெஞ்சில் சசிகலாவும் சுதாகரனும் அமர்ந்திருந்தனர்.
இரண்டே நாட்களில் எல்லா கேள்விகளையும் கேட்டுவிட வேண்டும் என்ற அவசரத்தில் நீதிபதி அடுக்கடுக்காகக் கேள்விகளை வீசினார். வங்கிக் கணக்குகளின் பணப் பரிவர்த்தனைகள், ஷேர் மார்க்கெட், சுதாகரன் திருமணச் செலவுகள் பற்றிய கேள்விகளுக்கு ஜெயலலிதா தயங்காமல் பதில் அளித்தார். பெரும்பாலான கேள்விகளுக்கு 'யெஸ், நோ, ஐ டோன்ட் நோ’ என்பதுதான் அவரது பதிலாக இருந்தது.  முதல் நாள் மாலை 5.20 மணி வரை 580 கேள்விகளுக்கு  ஜெயலலிதாவின் பதில்கள் பதிவு செய்யப்பட்டன. பேப்பர்களில் வேகமாகக் கையெழுத்துப் போட்டுவிட்டு சென்னைக்குப் பறந்தார்.
பாக்கி இருந்த 192 கேள்விகளுக்கு மறுநாள் பதில் அளித்தார். மதியம் 2 மணி வரை 160 கேள்விகள் கேட்கப்பட்டு இருந்ததால், 'உணவு இடைவேளை விடலாமா?’ என நீதிபதி கேட்டார். 'இன்னும் 30 கேள்விகள்தானே இருக்கின்றன. ஒரேயடியாக முடித்துவிடலாம். வேறு யாருக்காவது இதில் பிரச்னை இருக்கிறதா?’ என அரசுத் தரப்பு வக்கீல் ஆச்சார்யாவைப் பார்த்து ஜெயலலிதா கேட்க, அவரும் 'நோ பிராப்ளம்’ என்று சொல்லவே... தொடர்ந்து விசாரணை நடந்து முடிந்தது.
சொத்துக் குவிப்பு வழக்கைப் பொறுத்தவரை ஆபத்தானதாகக் கருதப் படுவது, சுதாகரனின் கல்யாண  சம்பவமும் வீட்டில் இருந்த வெள்ளி, தங்க நகை, புடவைகள், வாட்சுகள் மற்றும் காலணி கள்தான். எனவே அவை குறித்த கேள்விகளுக்கு ஜெயலலிதா பதற்றமாவார் என்றுஎதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ஷார்ப்பாகவே பதில் சொன்னார். அதுவும் 'சுதாகரனின் திருமணத்திற்காக ஆறு கோடி ரூபாய் செலவு செய்தீர்களா?’ என நீதிபதி கேட்டபோது, ''சுதாகரனின் திருமணத்திற்காக நான் ஒரு பைசாகூட செலவு செய்யவில்லை. மணப்பெண் வீட்டாரே எல்லாச் செலவு களையும் செய்தார்கள்'' என்று அழுத்தம் திருத்தமாகப் பதில் சொன்னார்.
'சுதாகரன் திருமணப் பத்திரிகையை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ் மானுக்கும், மாண்டலின் ஸ்ரீனிவாஸுக்கும் வெள்ளித் தட்டில் வைத்து, அந்தத் தட்டையும் பரிசாகக் கொடுத்தீர்களா?’ எனக் கேட்கப்பட்டது. 'அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது’ என்றார். 'சுதாகரன் திருமணத்தில் ஒரு மணி நேரம் ஏ.ஆர்.ரஹ்மான் இசைக் கச்சேரி நடத்தி இருக்கிறார். அதற்கு எவ்வளவு கொடுத்தீர்கள்?’ என்ற கேள்விக்கு, 'அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. மணப்பெண் வீட்டைச் சேர்ந்தவர்களும் கலைத் துறையில் இருப்பதால் அவர்கள் ஏற்பாடு செய்தார்கள்’ என்று விளக்கம் அளித்தார்.
ஸ்டேட் பேங்க் அக்கவுன்ட், கனரா பேங்க் அக்கவுன்ட், இந்தியன் பேங்க் அக்கவுன்ட்களில் நடைபெற்ற பணப் பரிவர்த்தனைகள் பற்றிய கேள்விகளுக்கு, 'என் அக்கவுன்ட்டில் நடந்த பரிவர்த்தனைகள் பற்றி மட்டும் எனக்குத் தெரியும். சசிகலா, இளவரசி, சுதாகரனின் கணக்குகளில் நடந்தது எதுவும் எனக்குத் தெரியாது என்றார். அதே போன்று சிக்னோ என்டர்பிரைசஸ், சசி என்டர்பிரைசஸ், ஜெ.ஜெ. என்டர்பிரைசஸ் ஆகிய கம்பெனிகளில் ஷேர் வாங்கியது, முதலீடு செய்தது போன்ற கேள்விகளுக்கும், 'நான் அதில் வெறும் சைலன்ட் பார்ட்னர். அதனால் அந்த நிறுவனங்களின் அன்றாட நடவடிக்கைகள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது’ என்றார். கேள்விகள் எல்லாவற்றுக்கும் பதில் அளித்து முடித்த நிலையில் நீதிபதி, 'உங்கள் மீது சாட்டப்பட்டு இருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?’ எனக் கேட்டார். உடனே தன் கைப்பட அங்கேயே அமர்ந்து இரண்டு பக்க ஸ்டேட்மென்ட் எழுதி ஸ்பெஷல் மனுவாக தாக்கல் செய்தார்.
அதில், '1991 - 96 காலத்தில் எனது தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி சிறப்பாக நடந்தது. அதன் பிறகு 1997-ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், எனது பேருக்கும் ஆட்சிக்கும் களங்கம் விளைவிக்க பல்வேறு வழிகளில் முயற்சித்தது. அந்த சமயத்தில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக என் மீது தமிழ்நாடு ஊழல் தடுப்புத் துறையில் ஒரு புகார் அளித்திருந்தார். அப்போதைய தி.மு.க. சட்ட அமைச்சர் மாதவன், ஆற்காடு வீராசாமி இருவரும் திட்டமிட்டு ஊழல் தடுப்புத் துறை அதிகாரி நல்லம்ம நாயுடுவை தங்கள் கைக்குள் போட்டுக்கொண்டு என் மீது சொத்துக் குவிப்பு வழக்கைப் புனைந்தனர். நல்லம்ம நாயுடு எங்கிருந்தோ கொண்டுவந்த பொருட்களை, நகைகளை எல்லாம் என் வீட்டில் எடுத்ததாகப் பொய் கூறியுள்ளார். அது மட்டும் இல்லாமல், தமிழ் உட்படப் பல மொழிகளில் நான் பிரபல நடிகையாக 120-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறேன். திரைப்படக் காட்சிகளுக்கு ஏற்ப புடவைகள், துணிகள், வாட்சுகள், காலணிகள் வாங்குவது வழக்கம். அப்படி நான் படங்களில் பயன்படுத்திய பொருட்களை ஷூட்டிங் முடிந்த பிறகு, என் மீதுள்ள அன்பால், எனக்கே திருப்பிக் கொடுத்துவிடுவார்கள். அவ்வாறு நான் நினைவுப் பொருட்களாக வைத்திருந்தவற்றையும் எனது சொத்துக் கணக்கில் சேர்த்துள்ளனர். எனது அறையில் இருந்த பெர்சனல் ஆல்பத்தை தி.மு.க-வின் குடும்பத் தொலைக்காட்சியில் காட்டி, என் பேருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவித்து உள்ளனர். நான் முதல்வராக பதவியேற்ற பிறகு எனது சம்பளத்தில் எதனையும் வாங்கவில்லை. வருமான வரித் துறையில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின்படி, போயஸ் கார்டனில் உள்ள '31ஏ’ எண் வீட்டை மட்டுமே வாங்கினேன். சசிகலா, இளவரசி, சுதாகரன் வாங்கிய சொத்துகளுக்கும் எனக்கும் ஒரு துளியும் சம்பந்தம் இல்லை. எனவே அரசியல் காழ்ப்பு உணர்ச்சியுடன் என்னைப் பழிவாங்கவே தி.மு.க. பொய்யாக வழக்கு தொடர்ந்து உள்ளது’ என ஆணித்தரமாக குறிப்பிட்டு இருந்தார்'' என்று உள்ளே நடந்தவற்றை விவரிக்கிறார்கள் உள்விவரங்கள் அறிந்தவர்கள்.
ஜெயலலிதாவின் 1,339 கேள்விகளும் 3.10 மணியுடன் முடிந்துவிட்டதால், பதில்களுக்கு ஒப்புதல் கையெழுத்து இட்டார். இதனைத் தொடர்ந்து சசிகலாவின் வழக்கறிஞர் சந்தானகோபாலன், ''சசிகலாவுக்கு ஆங்கிலம் தெரியாது. அவரிடம் ஆங்கிலத்தில் கேட்டால் பதில் சொல்லத் தெரியாது. எனவே, தமிழில் கேட்க வேண்டும்'' என்று கோரிக்கை வைத்தார். அதற்குப் பதில் சொல்லாமல் நீதிபதி மல்லிகார்ஜூனையா, வழக்கை நவம்பர் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். 'இனி இந்த வழக்கு, வழக்கம் போல பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் நடைபெறும்’ என்றும் உத்தரவிட்டார்.
விசாரணை முடிந்து வெளியே வந்த ஆச்சார்யா, ''ஜெயலலிதாவிடம் பதில்கள் பெறப்பட்டுவிட்டதால், இனி வழக்கு வேகமாகப் பயணிக்கும்'' என்று சொல்லிவிட்டுக் காரில் ஏறிப் பறந்தார்.
ஆக, தீர்ப்பு நெருங்குகிறது!
இரா.வினோத், படங்கள்: ஜஸ்டின்.

திகில் கிளப்பும் 'டேம் 999'

விஷயமா.. விஷமமா?
'பெரியாறு அணை உடைகிறது’ என்று கிராஃபிக்ஸ் செய்து காட்டி பயம் காட்டியவர்கள், இப்போது ஹாலிவுட் படத்தின் வடிவில் திகில் கிளப்பி இருக்கிறார்கள்.
வளைகுடா நாடுகளில் வசிக்கும் சில மலையாளிகள் சேர்ந்து  'டேம் 999’ என்ற ஆங்கிலத் திரைப்படத்தை தயாரித்து இருக்கிறார்கள். ஒரு பெரிய அணை உடைந்து, ஏராளமான மக்கள் தண்ணீரில் மூழ்கிச் சாவது போன்ற கொடூரமான காட்சிகள் இதில் இடம்பெற்று இருப்பதுதான் சிக்கலை உருவாக்கி இருக்கிறது.
வளைகுடா நாட்டில் வசிக்கும் மலையாளியும் இயக்குநருமான சோஹன்ராய், ''இந்தப் படத்தில் காட்டப்படும் அணையை ஒரு மலையாளி பார்த்தால், அவருக்கு இது முல்லைப் பெரியாறு அணையாகத் தோன்றும்'' என்று சொன்னதாக செய்தி வரவே, தமிழகம் கொந்தளித்தது. ''முல்லைப் பெரியாறு அணை உடைந்துவிடும் என்று கடந்த 30 ஆண்டுகளாக கேரளம் செய்துவரும் பிரசாரத்தை உச்ச நீதிமன்​றமே நிராகரித்துவிட்டது. ஏனென்றால், பெரியாறு அணை இருப்பது கடல் மட்டத்தில் இருந்து 2,889 மீட்டருக்கு மேல். இந்த அணை உடைந்தால் அழிந்துபோகும் எனக் கூறப்படும் குமுளி, கடல் மட்டத்திலிருந்து 3,350 மீட்டரிலும் பாம்பனாறு 3,750 மீட்டரிலும் ஏலப்பாறை 4,850 மீட்டரிலும் இருக்கின்றன. அணை உடையும் எனப் பேச்சுக்கு வைத்துக்கொண்டால்கூட, 2,000 மீட்டர் தாழ்வாக உள்ள அணை உடைந்தால் எப்படி அழிவு ஏற்படும்? அவர்களின் நோக்கமே, பெரியாறு அணையைக் காலி செய்துவிட்டு, புதிய அணை கட்டவேண்டும் என்பதுதான். அதற்காக, எப்படியாவது பீதியைக் கிளப்ப தொடர்ந்து குறுக்கு வழியில் செயல்படுகிறார்கள். அதன் ஒரு பகுதிதான் 'டேம்999’ படம்'' எனப் புள்ளிவிவரத்துடன் பொங்குகிறார்கள் தமிழகப் பொறியியல் அறிஞர்கள்.
இந்த செய்தி வெளியே கசிந்ததும், அதைக் கண்டித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ முதலில் அறிக்கை வெளியிட்டார். சென்னையில் முன்னோட்டக் காட்சி​யுடன் அறிமுக நிகழ்ச்சியும் நடப்பதாக அடுத்த தகவல் கசிந்தது.  22-ம் தேதி மாலை 4 மணிக்கு முன்னோட்டத் திரையிடல் நடப்பதாக இருந்த வடபழனி பிரசாத் ஸ்டுடியோவுக்கு ம.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்ட  நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர். உணர்ச்சிவசப்பட்ட சிலர் ஸ்டுடியோவுக்குள் புகுந்து படப்பெட்டியைத் தூக்கிப் போட்டனர். பிலிம் சுருள்களை வெளியே இழுத்துப் போட்டனர். நிலைமை சீரியஸாவதைக் கவனித்த போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து  புழல் சிறையில் அடைத்தனர். சென்னையில் தொடங்கிய எதிர்ப்பு, சில மணி நேரங்களில் தமிழகம் எங்கும் பற்றிப் படர்ந்தது. அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் ஒவ்வொருவராகக் கண்டனம் தெரிவித்தார்கள். படத்தை எங்கு திரையிட்டாலும் முற்றுகை இடுவோம் என்று தொல். திருமாவளவனும் சீமானும் அறிவித்தனர். உடனே, தமிழக திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்ட அனைத்து சங்கங்களுக்கும் வைகோ கடிதம் அனுப்பினார். இந்தப் படத்தை நீங்கள் திரையிடக் கூடாது என்றார். 'இந்தப் படத்தைத் தமிழகத்தில் திரையிடப்போவது இல்லை’ எனத் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தினர் பகிரங்கமாக அறிவித்தனர். அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்த பிறகு, தி.மு.க. தலைவர் கருணாநிதியும் ஒரு கண்டன அறிக்கையை வெளியிட்டார். உடனடியாக, முதல்வர் ஒரு அவசரக் கடிதத்தை பிரதமருக்கு அனுப்பினார். 'முல்லை பெரியாறு அணை குறித்து பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் 'டேம் 999’ திரைப்படத்தை தமிழ்நாட்டில் திரையிடத் தடை’ என ரத்தினச் சுருக்கமாக அறிவிப்பு வெளியிட்டார் தலைமைச் செயலாளர். 
தமிழக அரசின் தடை அறிவிப்பு வந்த பிறகு தான், கொதித்தெழுந்த தமிழகத்தின் கோபம் அடங்கியது.
இரா. தமிழ்க்கனல்
'அணை-999’
 ஆங்கிலத்தில் எடுக்கப்பட்ட 'டேம்-999’ படத்தை, தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் டப்பிங் செய்து இருக்கிறார்கள். தமிழில் 'அணை-999’ என்று பெயர். ஹீரோ, 'உன்னாலே உன்னாலே’ வினய். கதாநாயகியாக விமலா ராமனும் வில்லனாக ஆசிஷ் வித்யார்த்தியும் நடித்துள்ளனர். படத்தின் இயக்குனரான சோஹன் ராய்க்கு பூர்வீகம் கேரளா. சார்ஜாவில் வசிக்கும் புலம் பெயர்ந்த மலையாளியான சோஹன்ராய், ''நான் இயக்கி இருக்கும், 'அணை-999’ திரைப்படம் முல்லை பெரியாறு அணையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது அல்ல. 1975-ல் சீனாவின் பான்கியூ அணை உடைந்தது. அப்போது ஏற்பட்ட வெள்ளத்தின் சீற்றத்தால், 2,50,000 மக்கள் பலியானர்கள். கோரமான அந்த சம்பவம் என் மனதைப் பாதித்தது. அதனால் சீனாவில் நிகழ்ந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகவைத்தே இந்தப் படத்தை எடுத்து இருக்கிறேன். என் படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழகத் தலைவர்களுக்கு, படத்தைத் திரையிட்டுக் காட்டத் தயாராக இருக்கிறேன். மனம் புண்படும்படியான காட்சியோ, வசனமோ இருந்தால், அதை நீக்கவும் தயார். தமிழக மக்களின் உணர்வுகளை மிகவும் மதிக்கிறேன். முல்லை பெரியாறு அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் வரத்து இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய தனிப்பட்ட கருத்து. அதே நேரம் பழைய அணைக்கு மாற்றாக பெரிய அணை ஒன்று கட்டுவதே சரியான தீர்வு. அப்படிச் செய்தால், தமிழ்நாட்டுக்கு கூடுதலாக தண்ணீர் கிடைக்கும். கேரள மக்களின் வாழ்க்கையும் பாதுகாக்கப் படும்'' என்கிறார்.
- குணா

பூகம்பம் மட்டுமல்ல, சுனாமியையும் தாங்கும்!

சவால் விடும் சென்னை விஞ்ஞானிகள்
கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டங்​களைத் தொடர்ந்து, கல்பாக்​கத்தில் இருக்கும் சென்னை அணு மின் நிலையம் குறித்தும் ஏகப் பரபரப்பு. இதனால், கட்டுப்பாடுகள் நிறைந்த அணு மின் நிலையக் கதவுகள் கடந்த 22-ம் தேதி மீடியாவுக்காகத் திறந்தன. 'எந்தக் கேள்வியையும் எதிர்கொள்ளத் தயார்; அணு மின் நிலையத்தின் எந்தப் பகுதியையும் பார்வை இடலாம்’ என்றபடி அழைத்துச் சென்றார்கள் அதிகாரிகள்.
அணு உலை தொடர்பான சந்தேகங்களை இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி நிலைய இயக்​குனர் சேத்தல், சென்னை அணு மின் நிலையம் - பாவனி திட்டம் இயக்குனர் பிரபாத் குமார், சென்னை அணு மின் நிலையத்தின் இயக்குனர் ராமமூர்த்தி, அணு மின் நிலையத் தலைமை வடிமைப்​பாளர் மற்றும் பாதுகாப்பு இயக்குனர் செல்லப்பாண்டியன் ஆகியோரிடம் கேட்டோம்.
''எப்போது வேண்டுமானாலும் பூகம்பம் வரக்கூடிய 'நிலநடுக்கப் பகுதி - 3’ என்பதில் கல்பாக்கம் அணு உலை உள்ளது என்பது உண்மையா? ஒருவேளை பூகம்பம் ஏற்பட்டால், உலை சேதமாகி, கதிர் வீச்சு வெளியேறாதா?''
''நிலநடுக்கப் பகுதி 3-ல் கல்பாக்கம் உள்ளது என்பது உண்மை​தான். அணு உலையில் 30 சதவிகிதம் யுரேனியம், 70 சதவிகிதம் புளுட்டோனியம் கொண்டு வெப்பத்தை உருவாக்கித்தான் மின்சாரம் தயாரிக்கிறோம். பூகம்பம் ஏற்பட்டால் அணு உலை ஆட்டம் கண்டு, அதில் இருக்கும் திரவமோ வாயுவோ கசிந்து கதிர் வீச்சு பரவும் என்பதுதான் பலரது வாதம்.
ஆனால், அணு உலை இருக்கும் பகுதியில் நாங்கள் தொடர்ந்து செயற்கையாக, அதிகபட்ச ரிக்டர் அளவில் பூகம்ப அதிர்வுகளை ஏற்படுத்தி, அணு உலைக்குப் பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்துள்ளோம். அவ்வளவு உறுதியான கட்ட​மைப்புகளுடன் அணு உலை அமைக்கப்பட்டுள்ளது. மூன்று முதல் நான்கு ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டால், அணு உலை தானாகவே தனது இயக்கத்தை நிறுத்திக்கொண்டு பாதுகாப்பு நிலைக்குச் சென்றுவிடும். அதிர்வுகள் முழுமையாக அடங்கியதும், தானாக இயங்க ஆரம்பிக்கும். இதுவே ஆறு முதல் ஏழு ரிக்டர் அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டால், அணு உலை தானாக இயக்கத்தை நிறுத்திக்கொள்ளும். மீண்டும் நாங்கள்தான் அதனை இயக்க வேண்டும்.
இவ்வாறு அணு உலை தனது செயல்பாட்டை நிறுத்திக்கொள்ளும்போது உலையைக் குளிர்விக்க குளிர்சாதன டீசல் என்ஜின் தானாகவே இயங்கும். டீசல் என்ஜின் ஒருவேளை செயல்படாமல் போனால், 'தெர்மோஸ்போனிங்’ எனப்படும் நீராவித் தொழில்நுட்பம் மூலம் உலை குளிர்விக்கப்படும். அதுவும் செயல்படவில்லை என்றால், அவசரக் காலத் துளைகள் மூலம், உலை மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் தொழில்நுட்பம் உள்ளது. இதற்காக எப்போதும் 37.6 மில்லியன் லிட்டர் தண்ணீர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
பூகம்பம் மட்டும் அல்ல... சுனாமி வந்தாலும் அதையும் சமாளிக்கும் வகையில் மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அணு உலை உட்பட மின் நிலையத்தின் அனைத்து முக்கியப் பகுதிகளும் சுனாமி அலைகளால் பாதிக்கப்படாத உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால்தான், கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின்போது இந்த மின் நிலையத்துக்குப் பாதிப்பு ஏற்படவில்லை. அதன் பின்பு, 2005-ம் ஆண்டு ஜனவரி மாதம் அணு சக்தி ஒழுங்கு முறை வாரியம் மின் நிலையத்தை ஆய்வு செய்து எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று சான்று அளித்துள்ளது.
பூகம்பம், சுனாமி, சூறாவளி, புயல் என எந்த இடர்ப்பாடு ஏற்பட்டாலும் உடனடியாக இங்கு இருக்கும் மூன்று மைக்ரோ ஸ்டேஷன்களுக்கு முன்னதாகவே சிக்னல் கிடைத்துவிடும். இது தவிர, ஆன்லைன் நியூக்ளியர் எமர்ஜென்ஸி ரெஸ்பான்ஸ் சிஸ்டம் மூலமாக, கம்ப்யூட்டரில் 24 மணி நேரமும் அதிகாரிகள் வானிலை மற்றும் பேரிடர்களைக் கண்காணிப்பார்கள்.''
''அணு உலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் சுற்றுவட்டாரக் கிராம மக்களுக்கும் கதிர் வீச்சால் பாதிப்பு இல்லை என்பதை உறுதியாகக் கூற முடியுமா?''
''மனித உடலில் 250 மில்லி சீவர்ட் அளவுக்கு அணுக் கதிர் வீச்சு ஏற்பட்டால், விளைவு எதுவும் இருக்காது. 1,000 முதல் 3,000 மில்லி சீவர்ட் வரை கதிர் வீச்சு ஏற்பட்டால், குமட்டல், வாந்தி, நோய் எதிர்ப்பு சக்திக் குறைவு போன்றவை ஏற்படும். 4,500 முதல் 6,000 மில்லி சீவர்ட் வரை கதிர் வீச்சு ஏற்பட்டால், பாதிக்கப்பட்டவர்களில் பாதிப் பேர் 30 நாட்களில் இறக்க நேரிடலாம்... என்பது உண்மைதான்.
அணு சக்தி ஒழுங்கு முறை ஆணையம், அணு சக்தித் தொழில் முறை ஊழியர் ஓர் ஆண்டுக்கு 20 மில்லி சீவர்ட் வரை கதிர் வீச்சை உள்வாங்கலாம் என்று அனுமதித்துள்ளது. ஆனால், இங்கு உள்ள ஊழியர் ஓர் ஆண்டுக்கு 1.87 மில்லி சீவர்ட் மட்டுமே கதிர் வீச்சை உள்வாங்குகிறார். ஓர் ஊழியர் தொடர்ந்து 30 ஆண்டுகள் வேலை பார்த்தால்கூட பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய அளவுக்குக் கதிர்வீச்சு இருக்காது. மின் நிலையத்தின் 1.6 கி.மீட்டர் சுற்றுவட்டாரத்தில் 2010-ம் ஆண்டு எடுத்த ஆய்வின்படி 0.023 மில்லி சீவர்ட் கதிர்வீச்சு மட்டுமே இருந்தது. இதனால், பொது மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. ஏனெனில் தொலைக்காட்சி பார்க்கும்போதும் விமானப் பயணம் செய்யும்போதும் ஏற்படுகிற கதிர்வீச்சைவிட, இது குறைந்த அளவுதான்.
சென்னையைச் சேர்ந்த பிரபல ஆய்வு நிறுவனமான ஆஸ்பயர் மூலம் சுற்றுவட்டாரத்தில் உள்ள 22 கிராமங்களில் கேன்சர் உட்பட 15 வகையான நோய்களுக்கான மருத்துவ ஆய்வு நடத்தப்பட்டது. 25,164 பேரில் 22,345 பேரிடம் ரத்தப் பரிசோதனையும் நடத்தப்பட்டது. இதில் 0.22 சதவிகிதம் நபர்களுக்கு (48 பேர்) கேன்சர் இருப்பது தெரிய வந்தது. இது கேன்சரின் தேசிய சதவிகிதமான 4 முதல் 12 சதவிகிதத்துக்கும் குறைவே. இப்படி அனைத்து நோய்களிலும் தேசிய சதவிகிதத்தைவிட இங்கு மிகக் குறைவாகத்தான் இருக்கிறது. இதற்கான ஆதாரமும் எங்களிடம் உள்ளது.''
''கடலில் இருந்து பம்பிங் செய்யப்பட்ட நீர், அணு உலை செயல்பாட்டுக்குப் பயன்படுத்திய பிறகு கடலில் விடப்படுகிறது. இதனால் கடல் நீர் வெப்பமாகிறது; மீன் வளம் பாதிக்கப்படுகிறது என்பது உண்மையா?''
    ''ஒரு மணி நேரத்துக்கு 90 மில்லியன் லிட்டர் தண்ணீர், அணு உலை செயல்பாட்டுக்குப் பின்பு கடலில் விடப்படுகிறது. இந்தத் தண்ணீர் அதிகபட்சம் 7 டிகிரி செல்சியஸ் வரை மட்டுமே சூடாக இருக்கும். ஆனால், கல்பாக்கத்தில் இதுவரை இது 5 டிகிரியைத் தாண்டியது இல்லை. இந்தத் தண்ணீரையும் நேரடியாகக் கடலில் கலக்கவிடுவது இல்லை. ஒன்பது கி.மீட்டர் தொலைவுக்கு கால்வாய் வெட்டி அதன் வழியாகச் சென்றுதான் கடலில் கலக்கிறது. இதனால், கடலின் தட்பவெப்பம் மாறுவதற்கு சாத்தியம் இல்லை. மீன் வளம் குறித்துக் கேட்டீர்கள், உலையின் நீர் வெளியேறும் இடத்திலேயே எவ்வளவு மீன்கள் நீந்துகின்றன என்பதை நேரடியாக நீங்களே பாருங்கள். இதனால், மீன் வளம் பாதிக்கப்படுகிறது என்பதும் பொய். (அழைத்துச் சென்று காட்டியபோது, ஏராளமான மீன்கள் கூட்டம் கூட்டமாக இருந்தன)
இவை அனைத்துக்கும் மேலாக ஒரு விஷயம். இங்கு சுமார் 1,000 பேர் வேலை பார்க்கிறோம். எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது. பலர் வதந்தி பரப்புவதுபோல அணு மின் நிலையம் ஆபத்தானது என்றால், முதலில் பலியாகப்போவது நாங்கள்தான். ஆபத்து இருப்பது உண்மை என்றால், இங்கே வேலை பார்ப்போமா? நாட்டின் வளர்ச்சிக்கு யாரும் முட்டுக்கட்டை போட வேண்டாமே..!''
    - டி.எல்.சஞ்சீவிகுமார்
    படங்கள்: கே.கார்த்திகேயன்

ரெய்டு பண்ணிக்கோங்க... டீ சாப்பிடுறீங்களா..?

விஜிலென்ஸை வரவேற்ற துரைமுருகன்
சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள தனது வீட்டில் காலை 6 மணிக்கு, வழக்கம் போல உடற்பயிற்சிக்கு தயாரானார் தி.மு.க. முன்னாள் அமைச்சர் துரைமுருகன். அப்போது, வீட்டு வாசலில் இருந்த வாட்ச்மேன் பதட்டத்தோடு ஓடி வந்து, 'ஐயா போலீஸ்காரங்க வந்திருக்காங்க.. உங்களைப் பார்க்கணுமாம்’ என்று சொல்ல... 'வரச் சொல்லு’ என்று டீ சாப்பிடத் தொடங்கினார் துரைமுருகன்.
உள்ளே வந்த போலீஸ் டீமை தலைமை தாங்கி யவர், ''குட் மார்னிங் சார். என் பேர் முரளி. விஜிலன்ஸ் டி.எஸ்.பி. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக உங்க மேல் புகார் வந்திருக்கு. அதனால், உங்களுக்குச் சொந்தமான 11 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்துறோம். ப்ளீஸ் கோ-ஆப்ரேட் பண்ணுங்க..'' என்றார்.
''என் வீட்டுப் பக்கம் மட்டும் இன்னும் வராம இருக்கீங்களேன்னு யோசிச்சேன். ரெய்டு பண்ணி க்கோங்க... டீ சாப்பிடுறீங்களா..?'' என்று கூலாகவே கேட்டாராம் துரைமுருகன்.
''நோ.. தேங்க்ஸ் சார்...'' என்று சொல்லிவிட்டு துரைமுருகன் வீட்டைக் குடைய ஆரம்பித்தது லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ்.
ரெய்டு தொடங்கிய சற்று நேரத்தில் முன்னாள் மேயர் மா.சுப்ரமணியன் அங்கு வந்தார். வெளியில் இருந்த போலீஸார், உள்ளே இருந்த அதிகாரி​களுக்குத் தகவல் சொல்ல.. மா.சு. வீட்டுக்குள் அனுமதிக்கப்பட்டார். 11 மணி அளவில் பொன்முடி வர.. அவரையும் வீட்டுக்குள் அனுமதித்தார்கள். ரெய்டு முடியும் வரை இருவரும் வீட்டுக்குள்தான் இருந்தார்கள்.
வேலூர், காட்பாடி காந்தி நகரில் உள்ள துரைமுருகன் வீட்டில் டி.எஸ்.பி. பாலசுப்ரமணியன் தலை​மையில் ஒரு டீம் பிரித்து மேய்ந்தது. அப்போது துரைமுருகனின் மனைவி சாந்தலட்சுமியும், மகன் கதிர் ஆனந்த் மட்டுமே இருந்தனர். இன்னொரு பக்கம், துரைமுருகனின் தம்பி துரைசிங்கத்தின் வீடு, அவரது அருவி மினரல் வாட்டர் அலுவலகம், கேஷ் அண்டு கேரி அலுவலகம் ஆகியவற்றிலும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் புகுந்தனர். ஏலகிரியில் உள்ள பங்களா, கதிர் ஆனந்த் நடத்திவரும் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி ஆகியவற்றிலும் ரெய்டுகள் நடந்தன.
துரைமுருகனின் தம்பி துரைசிங்கம், ''நான் எதுவும் பேச மாட்டேன். அண்ணன்தான் பேசுவார்...'' என்று பத்திரிகையாளர்களிடம் நழுவிவிட்டார். ரெய்டு நடந்த துரைசிங்கம் வீட்டு முன்பு ஒரு தி.மு.க. தொண்டர், திருஷ்டி பூசணிக்காய் மீது கற்பூரம் ஏற்றி, ''எல்லாத் திருஷ்டியும் இதோடு போகட்டும்ணே..'' என்று ஓங்கி உடைத்தார்.
காட்பாடி காந்தி நகரில் உள்ள வீட்டில் போலீஸ் சோதனை நடத்தியபோது, சென்னையில் உள்ள வங்கி ஒன்றின் லாக்கர் சாவியைக் கைப்பற்றி இருக்கிறார்களாம். அந்த லாக்கரில் முக்கிய ஆவணங்கள் இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்​​கிறார்கள். துரைமுருகன் முன்னிலையில் அந்த லாக்கரைத் திறக்கத் திட்டமிட்டு இருக்கிறார்​களாம்.
சென்னை வீட்டில் ரெய்டு முடிய மாலை 4 மணி ஆனது. ரெய்டு முடித்து வெளியில் வந்த போலீஸ் அதிகாரிகள்,  நிருபர்களிடம் எதுவும் பேச மறுத்துவிட்டார்கள். ரெய்டு முடிந்த தகவலை மா.சுப்ரமணியன், கருணாநிதிக்குத் தெரிவித்தார். உடனே கருணாநிதி போனை துரைமுருகனிடம் கொடுக்கச் சொல்லிப் பேசினாராம். 'இதுக்கெல்லாம் நீ கவலைப்படாதே. காலையில இருந்து சரியா சாப்பிட்டு இருக்க மாட்ட... சாப்பிட்டுட்டு நல்லா ஓய்வெடு. நாளைக்கு வா... பார்த்துக்கலாம்..’ என்று ஆறுதல் சொன்னாராம்.
துரைமுருகனைத் தொடர்புகொண்டு பேசினோம். ''வந்தாங்க... வீட்டுல தேடினாங்க. எதுக்கு வந்தாங்க? என்னத்தை எடுத்துட்டுப் போனாங்கன்னு அவங்ககிட்டயே கேளுங்க. ஜெயலலிதாவோட ஆட்சியில இப்படி நடக்குறது புதுசா என்ன?'' என்றார் அலுப்பாக.
இதற்கிடையில் சில வாரங்களுக்கு முன்பு வேலூரில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் அமைச்சர் ஒருவர், 'சட்டத்துக்கு விரோதமாக துரைமுருகன் சேர்த்துள்ள சொத்துக்கள் அனைத்தும் கூடியவிரைவில் பறிமுதல் செய்யப்படும். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறோம்’ என்று பேசினாராம். அதனால் அமைச்சரின் பேச்சையும், நடந்துமுடிந்த ரெய்டையும் முடிச்சு போடும் துரைமுருகனின் ஆதரவாளர்கள், ''இந்த ரெய்டு நடவடிக்கைகளுக்கு பின்னணியாக இருந்து செயல்பட்டது அந்த அமைச்சர் தான். எத்தனை ரெய்டு நடத்தினாலும் எங்க அண்ணனை அசைக்க முடியாது'' என்கிறார்கள் கோபத்தோடு!
-கே.ராஜாதிருவேங்கடம், கே.ஏ.சசிகுமார்
படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், ச.வெங்கடேசன்

கோர்ட் இடமாற்றத்துக்குக் காரணம் ஆளும் கட்சியா?

பாட்டியாலா டு திகார் திருப்பம்
''அட என்னங்க... இந்த நாட்டில் என்ன நடக்குதுன்னே புரியலை...'' என்று சலித்துக் கொண்டவர் வேறு யாரும் அல்ல, ஆ.ராசாதான். டெல்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் நடக்கும் 2ஜி வழக்கின் விசாரணையை திகார் ஜெயில் வளாகத்துக்கு மாற்றும் உத்தரவு வந்த நேரத்தில்தான், டென்ஷனாகி இப்படிச் சொன்னார்.  
பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் சில வசதிக்குறைவு மற்றும் பாதுகாப்பு பிரச்னைகள் இருப்பதால், நீதிமன்றத்தை மாற்றுவதாக கடந்த 22-ம் தேதி ஓ.பி.சைனி உத்தரவு போட்டார்.  குற்றம் சாட்டப்பட்ட ஆ.ராசா உட்பட 14 பேரும் தங்கள் அதிருப்தியை உடனடியாகத் தெரிவித்தார்கள்.
இப்படி ஒரு அதிரடி மாற்றம் ஏற்படுவதற்குக் காரணம் சுக்ராம்தான். ஆம், கடந்த 19-ம் தேதி முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் சுக்ராமை ஒருவர் தாக்கினார். இதைப் பார்த்த  உளவுத்துறை அவசர அவசரமாக காரியத்தில் இறங்கி 2ஜி சிறப்பு நீதிமன்றத்தை மாற்ற வேண்டிய அவசியத்தை டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு சொன்னது. ஆனால், சிறப்பு நீதிமன்றத்தின் இடம் மாற்றத்தை, குற்றம் சாட்டப்பட்ட 14 பேரின் வழக்கறிஞர்களும் ஏற்றுக்கொள்ளாமல், மறுநாள் உயர் நீதிமன்ற பெஞ்சில் புகார் செய்தனர். உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எ.கே.சிக்ரி அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, சிறப்பு நீதிமன்றத்திற்கு தகுந்த இடத்தைத் தேடுவதற்கு ஒரு குழுவை அமைத்தார். டெல்லி உயர் நீதிமன்ற பதிவாளர் - ஜெனரல், பாட்டியாலா கோர்ட் கூடுதல் தலைமை பெருநகர் மாஜிஸ்திரேட், 2ஜி சிறப்பு நீதிமன்ற நீதிபதி சைனி மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோர் இந்தக் குழுவில் இடம் பெற்றனர். இதன்படி, பாட்டியாலா நீதிமன்ற வளாகத்திலேயே விசாலமாக உள்ள அரங்கு அல்லது அருகேயுள்ள விஞ்ஞான் பவன் மற்றும் இந்திய வர்த்தகச் சுற்றுலா நடக்கும் பிரகதி மைதான் ஆகிய இடங்களில் ஒன்றைத் தேர்வு செய்யும் ஆலோசனை இந்த குழுவுக்குச் சொல்லப்பட்டுள்ளது.
அரசு தரப்பும், குற்றம் சாட்டபட்டவர்கள் தரப்பும் இந்த விவகாரத்தை சீரியஸாக எடுத்துக் கொண்டதற்குக் காரணங்கள் உண்டு.
2ஜி வழக்கில் ஆளும் கட்சி சம்பந்தப்பட்டவர்கள் விவகாரம் நெருங்கி வருவதாலும் சுப்பிரமணிய சுவாமி போன்றவர்கள் அவ்வப்போது வந்து தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுப்பதும் ஆளும் கட்சியின் கண்ணை உறுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பாட்டியாலா கோர்ட்தான் வசதியாக உள்ளது.  அனைவருமே உறவினர்கள் தரும் உணவையே சாப்பிடுகிறார்கள். மேலும் இவர்கள் நீதிமன்ற அரங்கிற்குள்ளேயே உட்கார்ந்து அரட்டை அடிப்பதும்,  செல்போன் மூலம் இன்டர்நெட் பார்ப்பது, கம்பெனி சம்பந்தப்பட்ட ஃபைல்களைப் பார்ப்பது என்று பலரும் பிஸியாகவே இருக்கிறார்கள். ஆ.ராசாவை சந்திக்க தினமும் ஒரு டஜன் கட்சிக்காரர்களும் நெருங்கியவர்களும் வருகிறார்கள். இது எல்லாமே திகார் ஜெயில் வளாகத்தில் நடக்காது.
இவர்கள் சுதந்திரம் இந்த கோர்ட்டில் எந்த அளவுக்கு இருக்கிறது என்றால், கடந்த 23-ம் தேதி உச்ச நீதிமன்றம் யுனிடெக், ஸ்வான் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஐந்து பேர் களையும் ஜாமீனில் விடுதலை செய்தபோது நடந் ததை வைத்தே அறிந்துகொள்ளலாம். நீதிபதி சைனி இருக்கையில் அமர்ந்திருந்த நிலையிலும், குற்றம் சாட்டப்பட்டவர்களும் அவரது உறவினர் களும் பெரிய பெரிய சாக்லேட்களை மாற்றி மாற்றிக் கொடுத்தார்கள், ஒருவரை ஒருவர் கட்டி அணைத்துக்கொண்டு ஆர்ப்பரித்தனர். தாங்க முடியாத அளவுக்குப் போனதால், நீதிபதி கோபம் அடைந்து,  வழக்கறிஞர்களையும் குற்றம் சாட்டப்பட்டவர்களையும் தவிர அனைவரையும் வெளியேறும்படி உத்தரவு போட்டார். இதில் பத்திரிகையாளர்களும் வெளியேற்றப்பட்டனர். இதுவெல்லாம் திகார் ஜெயிலுக்குள் என்றால் நடக்காது.
டெல்லி திகார் ஜெயில் வளாக நீதிமன்றம், சீக்கிய தீவிரவாதிகளின் மிரட்டலுக்கு உள்ளான இந்திரா காந்தி கொலை வழக்கிற் காகவே தொடங்கப்பட்டது. இப்போது டெல்லி குண்டு வெடிப்பு வழக்கு கள் நடக்கிறது. அதனால் திகார் சிறை வளாகத்தில் விசாரணைகள் நடந்தால் சிறை பாதுகாப்பைக் கருதி பார்வையாளர்கள் மட்டுமல்ல பத்திரிகையாளர்களும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். வழக்கு வேகவேகமாக நடந்து விரைவில் தண்டனை அறிவித்து விடலாம். உறவினர்கள், நண்பர்கள், கட்சிக்காரர்கள் என்று யாரையும் பார்க்க முடியாமல், 'திகார் டு திகார்’ என்றே காலம் கழியலாம்.  இப்போது அவர்கள் அனைவரும்  டெல்லி நகருக்குள் 16 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து ரிலாக்ஸ் ஆகின்றனர். இது தடைபடும். அதனால்தான் அனை வருடைய வழக்கறிஞர்களும் தங்கள் வசதிக்குறைவைச் சொல்லி, வெற்றியும் பெற்றுவிட்டனர்.
மும்பையிலிருந்து வந்திருந்த பால்வா மற்றும் யுனிடெக் சார்பு வழக்கறிஞர்கள் அதிகம் உணர்ச்சிவசப்பட்டு,  ''சிறைச் சாலைக்குள் நீதிமன்றத்தை நடத்த வேண்டும் என்று சொல்வதற்கு இது ஒன்றும் தீவிரவாதிகள் அல்லது வெடி குண்டு சம்பந்தப்பட்ட வழக்கு அல்ல, ஊழல் வழக்குதான்'' ஆவேசமானார்கள்.  மற்ற வழக்கறிஞர்களும், ''இந்த கோர்ட்டில் அசௌகரியங்கள் இருப்பது உண்மைதான். அதற்காக நகரத்தின் அடுத்த முனைக்குக் கொண்டு போவது சரியல்ல. போக்குவரத்து நெரிசலில் ஒரு தடவை போய் வரவே மூன்று மணி நேரத்திற்கு மேலாகும். வழக்கறிஞர்களாகிய நாங்கள் இந்த ஒரு வழக்கை மட்டுமின்றி, மற்ற வழக்குகளிலும் ஆஜராகவேண்டும். அதனால் பாட்டியாலா கோர்ட்தான் எங்களுக்கு வசதி. உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்துக்கு அருகே இருந்தால்தான் எங்களுக்கு வந்து போக முடியும்'' என்று காரணங்களை அடுக்கினார்கள். அதை டெல்லி உயர் நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது.
புதிய நீதிமன்றம் அமைக்கப்படும் பட்சத்தில் அதில் மீடியாக்களுக்கு கண்டிப்பாக இடம் இருக்காது என்பதை மட்டும் இப்போதே சொல்கிறார்கள். அப்போதுதான் ஆளும் கட்சி சம்பந்தப்பட்ட விஷயத்தை குற்றம் சாட்டப்பட்டவர்கள் சொன் னாலும், மீடியாவில் வராது என்கிறார்கள். ஏதோ ஒரு மர்மத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது ஸ்பெக்ட்ரம்!
சரோஜ் கண்பத்   
படம்: கே.கார்த்திகேயன்
கனிமொழி  அவசரப்படுத்துவது ஏன்?
குற்றம் சாட்டப்பட்ட 5 பேருக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி மற்றும் ஹெச்.எல்.தத்தா ஆகியோர் அடங்கிய
பெஞ்ச் ஜாமீன் வழங்கியது. இந்த மனுக்களை இரண்டு நபர் பெஞ்ச் விசாரித்தாலும் நீதிபதி சிங்வி தீர்ப்பை எழுதவில்லை. நீதிபதி தத்தாதான் தீர்ப்பை எழுதினார். கருத்து மாறுபாடு இருக்கும் பட்சத்தில்தான் பெஞ்ச் நீதிபதிகள் தனித்தனியாக தீர்ப்பு எழுது வது வழக்கம். இந்த ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பில் நீதிபதி தத்தா கூறுகையில், ''ஒருவர் மீதான விசாரணை முழுமை பெறாதவரை அந்த நபர்களை பழி பாவம் அற்றவர்களாகவே கருதவேண்டும். விசாரணைக் குற்றவாளிகளை கால வரம்பின்றி சிறையில் வைத்திருப்பதும் அரசியல் சாசனத்தின் 21-வது பிரிவில் கொடுக்கப்பட்ட உரிமையை மறுப்பதாகும். வழக்கின் சாட்சியங்களை கலைப்பார்கள் என்று சி.பி.ஐ. சொல்லுவதற்கு பொருத்தமான காரணங்களை முன்வைக்கவில்லை. மிகப்பெரிய அளவில் பொருளாதாரக் குற்றங்கள் நடந்து இருக்கலாம். இது நாட்டின் பொருளாதாரத்திற்கு ஆபத்து தான். அதே சமயத்தில் வழக்கின் புலனாய்வு முடிந்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் ஜாமீனில் செல்ல தடை விதிக்க வேண்டியதில்லை. இவர்கள் ஜாமீனில் இருக்கும்போது வழக்கை சீர்குலைக்கும் முயற்சியாக சாட்சிகளுக்கு நேர்முகமாகவோ மறைமுகமாகவோ மிரட்டல்கள் விட்டால் சி.பி.ஐ. இவர்களது ஜாமீன்களை ரத்து செய்யவும் சி.பி.ஐ. கோரலாம்'' என்றார்.
இந்த தீர்ப்பு கொடுத்த நம்பிக்கை காரணமாக டிசம்பர் 1-ம் தேதி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒத்திவைக்கப்பட்டிருந்த விசாரணையை முன்கூட்டியே நடத்த கனிமொழி, சரத்குமார் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.  உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் மட்டும் இவர்கள் துரிதப்படுத்தவில்லை. திட்டமிட்டபடி டிசம்பர் 1-ம் தேதி விசாரணையைத் தொடங்கி, தீர்ப்பு கொடுக்க ஒரு வாரத் திற்கு மேல் ஆகி, அதன்பிறகு தள்ளுபடி செய்யப்பட்டால், உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் பெற தாமதமாகிவிடும். டிசம்பர் இறுதியில் குளிரின் தாக்கம் அதிகரிக்கும் என்பதுடன் கிறிஸ்துமஸ் விடுமுறை யும் தொடங்கிவிடும். அதனால்தான் அதற்குள் ஜாமீன் பெறவே இப்படி திடீர் நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள்.

யானைகளை வைத்து சிறப்பு பூஜையா?

முகாமுக்கு எதிராக வன ஆர்வலர்கள்
டந்த அ.தி.மு.க. ஆட்சியில் கோயில் யானைகளுக்கு முதுமலையில் நடத்தப்பட்ட புத்துணர்வு முகாமை யாராலும் மறந்திருக்க முடியாது. முகாமுக்குச் செல்ல லாரிகளில் ஏற மறுத்த யானைகளை அங்குசத்தால் குத்தியபோது 'அச்சச்சோ...’ எனவும், முகாமில் ராஜ கவனிப்பு வழங்கப்பட்டதும் 'அடடே!’ என்றும் மக்கள் ஆழ்ந்து கவனித்தார்கள். அடுத்து வந்த தி.மு.க. ஆட்சியில் முடக்கப்பட்ட இந்தத் திட்டம், இப்போது மீண்டும் தூசு தட்டப்படுகிறது. ஆரம்ப நிலையிலேயே, மீண்டும் கடும் எதிர்ப்பு!
கோயில் யானைகளுக்கு மீண்டும் புத்துணர்வு முகாம் நடத்துவதற்காக நீலகிரி மாவட்டம் மசினக்குடி மற்றும் தெப்பக்காடு பகுதிகளில், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் மற்றும் அதிகாரிகள் கடந்த 19-ம் தேதி ஆய்வை மேற்கொண்டனர். கலெக்டர் மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் முகாமை எந்த இடத்தில், எவ்வாறு நடத்தலாம் என்று ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள்.
இதுகுறித்து, 'தி நேச்சர் டிரஸ்ட்’ நிறுவனரான திருநாரணன், ''கோயில் யானைகளைப் பாவப்பட்ட உயிரினம் என்றுதான் சொல்லவேண்டும். காட்டில் சுதந்திரமாகத் திரிய வேண்டிய அந்த உயிர்களை சாமி சிலையைத் தூக்கவும், மணியடிக்கவும் வைத்து டார்ச்சர் பண்றாங்க. அந்த ஜீவன்களுக்கு சத்தான ஆகாரம், மருத்துவக் கவனிப்பு எல்லாம் வழங்க அரசாங்கம் நடத்துற புத்துணர்வு முகாம்களை மனசார வரவேற்கிறோம். ஆனால், அந்த முகாமை நடத்துவதற்கு தேர்வு செய்த இடம்தான் தவறு. யானைகள் இனப்பெருக்க முயற்சியை மேற்கொள்வதே இந்த வனப் பகுதிகளில்தான். அதோடு முதுமலை புலிகள் காப்பகமும் இங்கு இருக்கிறது. இப்படிப்பட்ட பகுதியில், கோயில் யானைகளுக்கு முகாம் நடத்துவது, நோய்த் தொற்றுக்குத்தான் வழி வகுக்கும்.
தமிழ்நாட்டில் உள்ள கோயில் யானைகளுக்கு கணிசமாக ஆஸ்துமா நோய் பாதிப்பு இருக்கிறது. யானைகளுக்குப் பழம், தேங்காய் கொடுக்கக் கூடாது என்று எழுதிப் போட்டிருந்தாலும்கூட, சர்க்கரைப் பொங்கல், முறுக்கு, மிக்சர் என்று கையில் கிடைத்ததை எல்லாம் மக்கள் கொடுக்கிறாங்க. அதனால், கோயில் யானைகளின் வயிற்றில் குடல் புழுக்கள் எக்கச்சக்கமா உருவாகிவிடும். பெரும்பாலான யானைகளுக்கு முதுகு, கால்களில் புண்கள் இருக்கின்றன. இப்படி நோய் பாதிப்புக்கு உள்ளான யானைகளைப் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியான முதுமலைக்குக் கொண்டுவந்தால், அவற்றின் மூச்சுக் காற்று, சாணம், சிறுநீர் மற்றும் எச்சில் மூலமாக நோய்க் கிருமிகள் பரவும். காட்டு யானைகள் உள்ளிட்ட அத்தனை வன விலங்குகளும் பாதிக்கப்படும். யானைகளை அங்கே ஓடும் மாயாற்றில் குளிக்கவைப்பது புத்துணர்வு முகாமில் முக்கியமான ஒரு நடவடிக்கை. அந்த யானைகள் குளிக்கும் நீரை, காட்டில் இருக்கும் மற்ற விலங்குகள் குடிப்பதாலும் பாதிப்புகள் ஏற்படும். முதுமலைப் பகுதியில் யானை, புலி, அரிய வகை சருகுமான் என்று ஆயிரக்கணக்கான விலங்குகள் இருக்கின்றன. நூறு யானைகளோட நலனுக்காக, இத்தனை விலங்குகளையும் அபாயத்துக்கு உள்ளாக்க வேண்டுமா? வனப் பின்னணி இல்லாத முக்கொம்பு போன்ற இடத்தில் முகாமை நடத்துவதுதான் சிறந்தது'' என்றார். 
யானைப் பாகன்கள் சிலரிடம் பேசியபோது, ''குளிர் காலத்தில் முதுமலைக்கு யானைகளைக் கொண்டுசெல்வதால் யானைகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. அதனால் திருச்சிக்கு அருகில் இருக்கும் வாத்தலை, திருநெல்வேலிக்கு அருகில் இருக்கும் களக்காடு போன்ற இடங்களில் நடத்தலாம்'' என்றனர்.
தமிழகப் பசுமை இயக்கத்தின் இணைச் செயலாளர் ஜெயச்சந்திரன், ''ஆஸ்துமா, டி.பி. உள்ளிட்ட பல நோய்களால் பாதிக்கப்பட்ட யானைகளுக்காக முதுமலையில் புத்துணர்வு முகாம் நடத்துவது, வனப் பாதுகாப்புக்கு விடப்படும் மிகப் பெரிய சவால். இந்த யானைகளிடம் இருந்து காட்டு விலங்குகளுக்கு மட்டுமின்றி, ஆதிவாசி மக்களுக்கும், தெப்பக்காட்டில் நிரந்தரமாக அமைந்திருக்கும் முகாமில் உள்ள யானைகளுக்கும் நோய்த் தொற்று ஏற்படும். எனவே, முதுமலைதான் என்று அரசாங்கம் முடிவு செய்துவிட்டால், நிச்சயம் உயர் நீதிமன்றம் சென்று தடை உத்தரவு வாங்குவோம்'' என்றார் உறுதியாக.
 
கோயில்களில் இருக்​கும் யானைகளுடன், மடங்​களுக்குச் சொந்தமான யா​னைகளும் முகாமில் கலந்துகொள்ள வேண்டும் என்று உத்தரவு வந்துள்ளதாம். காஞ்சி மடத்தைச் சேர்ந்த யானைகளை முகாமுக்கு அனுப்பாமல் தவிர்க்க, மடத்தில் உள்ள மூன்று யானைகளையும் கால்நடை மருத்துவரிடம் காட்டி, 'அவை காட்டுக்கு வரத் தகுதி இல்லாதவை’ என சான்று வாங்கி இருக்கிறதாம் ஜெயேந்திரர் தரப்பு. திருப்பனந்தாள் மடத்து யானை முகாமுக்கு வர வேண்டும் என்று உத்தரவு சென்றதாகவும், 'எங்களால் செலவு செய்து அனுப்ப இயலாது. வேண்டுமானால், அந்த செலவையும் அரசே ஏற்றுக்கொள்ளட்டும்’ என்று கூறி இருப்பதாகவும் சொல்கிறார்கள்.
இந்து அறநிலையத் துறை அமைச்சரான பரஞ்சோதியிடம் பேசியபோது, ''ஆய்வுப் பணிகள் குறித்து வெளிப்படையாக எதுவும் சொல்வதற்கு இல்லை. முதுமலையில் முகாம் நடத்துவதை ஆட்சேபித்து வரும் கருத்துகள் அம்மாவின் கனிவான கவனத்துக்குக் கொண்டுசெல்லப்படும்'' என்றார்.
புத்துணர்வு முகாமில் கலந்துகொள்ளும் யானைகளை வைத்து, 'வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை பெற சிறப்பு பூஜை’ நடத்த இருப்பதாகவும் ஒரு தகவல் தடதடக்கிறது! 
எஸ்.ஷக்தி, 'ப்ரீத்தி’ கார்த்திக்
படங்கள்: தி.விஜய்

புனிதவதிக்கு மீண்டும் சித்ரவதை!

சென்சாரில் கதறிய படம்
'காற்றுக்கென்ன வேலி’ படத்தின் மூலம் ஈழத்துப் பிரச்னையை சினிமாவாக எடுத்து அதிர்வலை களை ஏற்படுத்தியவர், புகழேந்தி தங்கராஜ். இப்போது அவர் எடுத்திருக்கும் 'உச்சி தனை முகர்ந்தால்’ படத்துக்கு சென்சாரில் ஏகப் பட்ட கத்திரி. அவரை சந்தித்தோம்!
''உலகத்தில் எந்தக் குழந்தைக்கும் நடக்கக் கூடாதது பதிமூணு வயசு புனிதவதிக்கு இலங்கை யில் நிகழ்ந்தது. ஏன் அந்த சிறுமிக்கு அப்படி ஒரு அநியாயம் நிகழ்ந்தது என்ற கேள்வியை படத்தில் அழுத்தமாக எழுப்பி இருந்தோம். ஆனால், அனுமதி வாங்குறதே பெரிய போராட்டமாகஇருந்தது.
காசி ஆனந்தனோட, 'ஆயிரம் மலைகளைத் தோளாக்கு... அடிமைக்கு விடுதலை நாளாக்கு’ என்று வரும் பாட்டின் இரண்டாவது வரியை எடுத்துவிட்டார்கள். அதுபோல் கதிர்மொழி எழுதிய பாடலில் இருந்த 'வரிப் புலி இனத்தை நரி நகம் கீறுமோ’ என்ற வரியையும் நீக்கிட்டாங்க.
'தமிழ்ச்செல்வன் அண்ணா வீர மரணம் அடைஞ்ச நேரம்’னு புனிதவதியோட அம்மா ஒரு வசனம் பேசுவாங்க. அதில் தமிழ்ச்செல்வன் பேரை எடுக்கச் சொன்னாங்க. அப்படி எடுத்தா, 'அண்ணா மரணம்னு வந்திடும். அது பெரிய கருத்துப் பிழை’ன்னு சொன்னதும் 'செல்வன் அண்ணா’னு போடச் சொன்னாங்க.   நடேசன் கேரக்டர்ல சத்யராஜ் பேசும்போது, 'ஒரு லட்சம் தமிழர்களை ஓட ஓட விரட்டிக் கொன்னது நட்பு நாடா? ஆயிரக்கணக்கான தமிழ்ப் பெண்களை கற்பழிச்சுக் கொன்ன நாடு நட்பு நாடா?’னு வசனம் பேசுவார். இதில், 'நட்பு நாடா?’ வார்த்தை சென் சார்ல கட் ஆகிடுச்சு.
சேனல் 4 வீடியோ காட்சிகளைப் பயன்படுத்தி இருந்தோம். அதைக் குறைக்கச் சொல்லிட்டாங்க. கூண்டுக்குள்ள கிளி இருக்கிற காட்சியையும் கட் பண்ணச் சொல்லிட்டாங்க. ஒன்றரை லட்சம் தமிழர்கள் கூண்டுக்குள் இருப்பதைப்பற்றி யாரும் கவலைப்படலை; கிளி கூண்டுக்குள் இருக்கிறதைப் பார்த்துக் கவலைப்படுறாங்க. இந்தப் படம் மூலம் கிடைக்கும் ஆதரவு, கேள்விகள் எல்லாமே பாதிக்கப்பட்ட, சீரழிக்கப்பட்ட, சிதைக்கப்பட்ட, சிறுமிகளுக்குக் கிடைக்கும் நியாயமா இருக்கும்'' என்றார்.
தமிழனுக்குத்தான் எத்தனை தடைகள்!
க.நாகப்பன்
படம்:   பா.காயத்ரி அகல்யா

வித்த பொருளுக்குக் கூடுதல் விலை கேட்கலாமா?

பஸ்ஸில் நடக்கும் பஞ்சாயத்து!
 பவுன் தங்க நகையை, 16-ம் தேதி வாங்குகிறார் முத்துசாமி. 20-ம் தேதி காலை, அவர் வீட்டுக் கதவைத் தட்டும் நகைக் கடை ஊழியர்கள், ''தங்கம் விலை இரண்டு மடங்கு ஏறிடுச்சுங்க. அதனால, 16-ம் தேதி நீங்க வாங்கிட்டுப்போன 5 பவுனுக்கு எக்ஸ்ட்ரா ரூ.30,000 குடுங்க'' என்று கேட்கிறார்கள். மிரண்டுபோன முத்துசாமி, ''என்னங்க அநியாயமா இருக்கு'' என்று அலறுகிறார். ''அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது,  இது எங்க முதலாளி உத்தரவு. 30,000 பணத்தைக் குடுத்துட்டு ரசீது வாங்கிக்கோ. இல்லேன்னா... நகையைக் குடு'' என்று மிரட்டுகின்றனர் ஊழியர்கள். வேறு வழி இல்லாமல் எக்ஸ்ட்ரா பணத்தைக் குடுத்து ரசீது வாங்கிக்கொள்கிறார் முத்துசாமி.
''முத்துசாமி போலீஸில் புகார் செய்து இருக்கலாமே... நீதிமன்றத்தில் முறையிட்டு இருக்கலாமே..'' என்று கேட்கலாம்.  ஆனால், அந்த முதலாளி ஜெயலலிதா என்கிறபோது, உங்களால் இந்த ஐடியாவெல்லாம் சொல்ல முடியுமா?
இப்போது நாட்டில் நடப்பது இப்படித்தான் இருக்கிறது!
பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பது உங்களுக்குத் தெரியும். முன்னதாகவே பணம் செலுத்தி மாதக் கட்டண அட்டை வாங்கியவர்களையும் இப்போது கூடுதல் கட்டணம் கேட்டு பாடாய்ப்படுத்தினால்எப்படி?
உள்ளூர் பஸ்களில் பயணம் செய்ய, மாதாந்திரப் பயணச் சீட்டு வாங்கிக்கொள்ளும் முறை, சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பெரு நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் 16-ம் தேதியில் இருந்து அடுத்த மாதம் 15-ம் தேதி வரை இந்தப் பயணச் சீட்டு செல்லுபடி ஆகும். ஏ.சி. பஸ் தவிர மற்ற எல்லா உள்ளூர் பஸ்களிலும் பயணம் செய்யலாம். சென்னையில் இந்த மாதாந்திரப் பயணச் சீட்டுக்கு ரூ. 600 வசூலிக்கப்பட்டது. கடந்த 16-ம் தேதி வரை பாஸ் வாங்கிய மக்கள் வழக்கம் போல பயணம் செய்து வந்தனர். இந்த நிலையில், கடந்த 17-ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடத்திய ஜெயலலிதா, கூட்டம் முடிந்த பிறகு சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், பஸ் கட்டணம், பால் விலை உயர்வு ஆகியவற்றை அறிவித்தார்.
இதில் சாமான்ய மக்களை அதிகம் அதிர்ச்சி அடையவைத்த விஷயம் ஒன்றும் இருந்தது. மாதாந்திரப் பயணச் சீட்டு ரூ. 600-க்கு வாங்கியவர்களிடம், 'நீங்கள் ஏற்கெனவே செலுத்திய கட்டணம் போதாது. மாதாந்திரக் கட்டணத்தை ரூ.1000-மாக உயர்த்திவிட்டோம். எனவே, இந்த மாதத்துக்கு மேலும் ரூ.340 செலுத்தினால்தான், இந்தப் பயணச் சீட்டை நீங்கள் பயன்படுத்த முடியும்’ என்று  அறிவிக்கப்பட்டுள்ளது. (நியாயப்படி பார்த்தால், அவர்கள் ரூ 400தானே வசூலிக்க வேண்டும். ஆனால் இந்த மாதத்துக்கு மட்டும் சலுகையாக 60 ரூபாய் குறைத்துள்ளார்களாம்.)  ''ஏற்கெனவே வித்த பொருளுக்குக் கூடுதல் விலை கேக்குறீங்களே, நியாயமா?'' என்று பயணிகள் கேட்டால், ''இது அரசு உத்தரவு'' என்று  பதில் வருகிறது.
தாம்பரம் பஸ் நிலையத்தில் பயணிகளுக்கும் போக்கு​வரத்து ஊழியர்களுக்கும் தகராறு நடந்தபோது, தனியார் இன்சூரன்ஸ் நிறுவன ஊழியர் ஒருவர், ''நாங்களும் தெரியாம உங்களுக்கு ஓட்டு போட்டுட்டோம். அதைத் திருப்பி வாங்கிக்கிறோம்னு சொன்னா, இந்த அம்மா முதல்வர் பதவியை ராஜினாமா செய்துடுவாங்களா?'' என்று ஆவேசமாகக் கேட்டார்.சென்னை, மதுரை உள்ளிட்ட பல இடங்களில் போக்குவரத்து ஊழியர்களுக்கும் பயணிகளுக்கும் தகராறு நடந்து வருகிறது.
விற்று முடித்த மாதாந்திர பயணச் சீட்டுக்குக் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை எதிர்த்தும், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்ட பயணிகளுக்கு நஷ்டஈடு வழங்கக் கோரியும் நீதிமன்றத் துக்குச் செல்லப் பலரும் தயாராகி வருகின்​றனர்.
இது சாத்தியமா என்று வழக்கறிஞர் 'யானை’ ராஜேந்திரனிடம் கேட்டோம். ''ஒரு பொருளை விற்று முடித்த பிறகு, அதற்கான கூடுதல் விலையை கேட்பது சட்ட விரோதம். பயணிகளுக்கு வழங்கப்​பட்டுள்ள மாதாந்திரப் பயணச் சீட்டில் 'கட்டண மாறுதலுக்கு உட்பட்டது’ என்று குறிப்பிட்டு இருந்தால் மட்டுமே, இந்தக் கூடுதல் தொகையை வசூலிக்க முடியும். ஆனால், அவ்வாறு அதில் குறிப்பு எதுவும் இல்லை. அதனால், அரசு இந்த விஷயத்தில் மறுபரிசீலனை செய்ய வேண்டும்'' என்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக, போக்குவரத்துக் கழகத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ள 'டிராஃபிக்’ ராமசாமி, '' ஒரு பொருளை விற்று முடித்த பிறகு அதற்கான கூடுதல் விலையைக் கேட்பது தவறு. மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்டு இருக்கும் பயணச் சீட்டில் உள்ள விதிமுறைகளையே நடத்துனரிடம் காட்டி வாதம் செய்யலாம். பயணம் செய்ய அனுமதிக்கவில்லை என்றால், போலீஸில் புகார் செய்யலாம். போலீஸிடம் செல்லப் பயமாக இருந்தால், என்னிடம் வரலாம். நான் அவர்களை உயர் நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்று, வழக்குத் தொடுத்து நியாயம் பெற்றுத் தருவேன். '' என்றார் ஆவேசமாக!
இது நியாயமா என்று சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாளர் இயக்குநர் பூபதியிடம் கேட்டோம். ''பாலுக்கு மட்டும் உயர்த்தப்பட்ட விலைதானே கொடுக்கிறார்கள். அதே போலத்தான் நாங்களும் 16, 17 ஆகிய தேதிகளுக்கு ரூ.60-ஐ கழித்துக்கொண்டு மீதி நாட்களுக்குத்தான் ரூ.340 கேட்கிறோம். கூடுதல் கட்டணத்தை வசூலிப்பதில் தவறு ஒன்றும் இல்லை'' என்றார்.
நடுத்தர மக்களுக்கான நியாயத்தை உயர் நீதிமன்றம்தான் வழங்க வேண்டும்!
எஸ்.கோபாலகிருஷ்ணன்

பரஞ்சோதியின் 'அரசியல்' தந்திரம்!

அம்பலப்படுத்துகிறார் டாக்டர் ராணி
'அமைச்சராக இருப்பவர் மீதே வழக்கா?’ என்று தமிழகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது பரஞ்சோதி விவகாரம்.
விஷயம் இதுதான்...
'கடந்த 2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்ட இப்போதைய அமைச்சர் பரஞ்சோதி, தேர்தல் செலவுகளுக்காக என்னிடம் இருந்து 60 சவரன் நகைகளை வாங்கினார். அந்த நகைகளுக்குப் பதிலாக ஒரு வீட்டு மனையைப் பதிவுசெய்து தருவதாகச் சொன்னார். ஆனால், வீட்டு மனையை தராமல், நகைக்கான பணத்தையும் திருப்பித் தராமல் மோசடி செய்துவிட்டார். அவர் மீது புகார் கொடுத்தால், காவல் நிலையத்தில் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்’ என்று பரஞ்சோதியின் இரண்டாவது மனைவி என்று சொல்லிக்கொள்ளும் டாக்டர் ராணி, திருச்சி ஜே.எம்.4 கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். அதனை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மாஜிஸ்திரேட் புஷ்ப​ராணி, 'திருச்சி அரசு மருத்துவமனை போலீஸார் இந்த புகாரைப் பதிவு செய்து விசாரணை நடத்தி, டிசம்பர் 9-ம் தேதிக்குள் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவு போட்டிருக்கிறார்.
திருச்சி மேற்குத் தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க. வேட்பாளர் பரஞ்சோதி என்று அறிவிப்பு வந்ததுமே, 'என்னை இரண்டாவது திருமணம் செய்துகொண்டு ஏமாற்றியவர் பரஞ்சோதி. அவரை தமிழக முதல்வர் ஜெயலலிதா மாற்றிவிட்டு வேறு ஒருவரை வேட்பாளராக்க வேண்டும்’ என்று  கிளம்பினார் ராணி. ஆனால், அவர் கிளப்பிய புகாரைக் கொஞ்சமும் சட்டை செய்யவில்லை ஜெயலலிதா. எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க-வின் கே.என்.நேருவை வீழ்த்தி வெற்றி கண்ட பின்னர் பரஞ்​சோதிக்கு கிடுகிடு ஏறுமுகம். திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பதவி, அமைச்சர் பதவி என்று அரசியலில் உச்சத்துக்குச் சென்றார். 
இடைத்தேர்தல் பிரசாரம் நடந்தபோதே, பரஞ்சோதி மீது நகை அபகரிப்புப் புகாரை திருச்சி போலீஸாருக்கு அனுப்பிவைத்தார். நடவடிக்கை இல்லை என்றதும், 'புகார் மீது நடவடிக்கை எடுக்க போலீஸார் மறுக்கிறார்கள்’ என்று மதுரை உயர் நீதிமன்றம் போனார். அதனைத் தள்ளுபடி செய்த மதுரை உயர் நீதிமன்றம், திருச்சி கோர்ட்டை நாடுமாறு அறிவுறுத்தியது. அதன்பேரில் திருச்சி ஜே.எம்.4 கோர்ட்டில் தாக்கல் செய்த மனு மீதுதான் இப்படி ஓர் அதிரடி உத்தரவு வந்திருக்கிறது. நீதிமன்ற உத்தரவின் பேரில் திருச்சி அரசு மருத்துவமனை போலீஸாரும் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.
டாக்டர் ராணியிடம் பேசினோம். ''கோர்ட் உத்தரவை மீடியாக்களுக்கு அளித்து வெளிவரச் செய்ததே பரஞ்சோதிதான். கோர்ட் உத்தரவு நவம்பர் 11-ம் தேதி வந்தது. போலீஸார் என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதைப் பார்த்துவிட்டு மீடியாக்களிடம் செல்லலாம் என்ற முடிவில் நானும் வழக்கறிஞரும் இருந்தோம். ஆனால், திடீரென 22-ம் தேதி பரஞ்சோதி தரப்பைச் சேர்ந்த வக்கீல் ஒருவரே மீடியாக்களுக்கு போன் செய்து தகவலை சொல்லி இருக்கிறார்.
பரஞ்சோதிக்கு எதிரான ஒரு செய்தியை எதற்காக அவரே பரப்ப வேண்டும் என்று உங்களுக்கு கேள்வி எழலாம். அதுதான், பரஞ்சோதியின் அரசியல் தந்திரம். பரஞ்சோதியை வேட்பாளராக அறிவித்ததும், நான் கிளப்பிய புகாருக்கு ஏன் முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்கவில்லை தெரியுமா? அவை தி.மு.க. சார்பு மீடியாக்களில் பெரிதாக ஃப்ளாஷ் ஆனதுதான். 'இவர்கள் சொல்லி நான் என்ன நடவடிக்கை எடுப்பது?’ என்று ஜெயலலிதா உறுதியாக இருந்தார். அவர் ஜெயித்ததும் மாவட்டச் செயலாளர் பொறுப்பு, அமைச்சர் பதவி எல்லாம் வழங்கி அழகு பார்த்தார். இந்து சமய அறநிலையத் துறையோடு சட்டம் மற்றும் சிறைத் துறையையும் ஒதுக்கினார். ஆனால், இப்போது பரஞ்சோதியிடம் இருந்து சட்டம் மற்றும் சிறைத் துறையை மாற்றும் முடிவுக்கு முதல்வர் வந்திருப்பதாக, நம்பகரமான வட்டாரத்தில் இருந்து அவருக்கு தகவல் வந்திருக்கிறது. அதனைக் கேட்டதும் கலங்கிப்போன பரஞ்சோதி போட்ட திட்டம்தான் இது. 11-ம் தேதி கோர்ட் உத்தரவு வந்து மீடியாக்கள் சரிவரக் கவனிக்காமல்விட்ட விவகாரத்தை, முதல்​வர் பெங்களூரூ நீதிமன்றத்தில் ஆஜராகும் 22-ம் தேதி வெளிவருமாறு பார்த்துக்கொண்டார். அவர் எதிர்பார்த்தது போலவே தி.மு.க. ஆதரவு மீடியாக்களில் இந்த செய்தி பரபரப்பாக வெளியானது. இந்த சமயத்தில் பரஞ்சோதியிடம் இருந்து சட்டம் மற்றும் சிறைத் துறையைப் பறித்தால், மீடியாக்கள் சொன்னதன் பேரிலேயே அவரது அதிகாரம் குறைக்கப்பட்டது என்ற பேச்சு எழும். அதன் காரணமாகவே முதல்வர் நடவடிக்கை எடுக்க மாட்டார் என்பது பரஞ்சோதியின் திட்டம்'' என்று சொல்கிறார் ராணி. 
அமைச்சர் பரஞ்சோதியின் கருத்தை அறிய அவரது செல்போனில் தொடர்புகொண்டோம். போனை எடுத்த அவரது உதவியாளர், ''அமைச்சர் இப்போது அம்மாவுடன் பெங்களூரு நீதிமன்றத்தில் இருக்கிறார். பிறகு பேசுங்களேன்'' என்றார். அதன் பின்னர் இரண்டு நாட்களாகத் தொடர்ந்து பலமுறை தொடர்புகொண்டும், ''அமைச்சர் மீட்டிங்கில் இருக்கிறார்... அவரே தொடர்புகொள்வார்'' என்றே பதில் கிடைத்தது. பரஞ்சோதியின் கருத்தை வெளியிட நாம் இப்போதும் தயாராகவே இருக்கிறோம்.
சட்டம் அதன் கடமையைச் செய்கிறதா என்று பார்ப்போம்!
ஆர்.லோகநாதன்
படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்

''சினேகன் கூட சுத்துறது நல்லதில்ல ஜமுனா!''

பாடலாசிரியர் மீது பலே புகார்
சினேகன் - தமிழ் சினிமா பாடலாசிரியர். ஏராளமான பாடல்களை எழுதியவர். இரண்டு வருடங்களுக்கு முன்பு 'யோகி’ என்ற படத்தில் நடிகராகவும் அரிதாரம் பூசினார். 'உயர்திரு 420’ என்ற படத்தில் நாயகனாகவும் நடித்தார். 'அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்...’ என்ற பாடலை 'பாண்டவர் பூமி’ படத்துக்காக எழுதிய சினேகன், தனது வாழ்க்கையிலும் இப்படி ஓர் எதிர்பாராத மாற்றம் வரும் என எதிர்பார்த்திருக்க மாட்டார். 'சினேகனின் பிடியில் இருக்கும் என் மனைவியை மீட்டுக் கொடுங்கள்’ என்று சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்திருக்கிறார் பிரபாகரன் என்ற தொழிலதிபர்!
என்ன நடந்தது?
மடிப்பாக்கத்தைச் சேர்ந்த பிரபாகரனிடம் பேசினோம். ''சில வருஷங்களுக்கு முன்னால் ஜமுனா கலாதேவியை லவ் பண்ணினேன்.அவளும் என்னை விரும்பினா. இரண்டு வீட்டிலும் எங்ககல்யாணத்துக்கு சம்மதிக்கலை. அதனால், வீட்டைவிட்டு வெளியில் வந்து கல்யாணம் பண்ணிட்​டோம். எங்களுக்கு அஞ்சு வயசில் ஒரு பொண்ணு இருக்கா. ஜமுனா நல்ல டான்ஸர். வேளச்சேரியிலும், கீழ்கட்டளையிலும் பெண்களுக்கான டான்ஸ் ஸ்கூல் நடத்துறாங்க. டான்ஸ் ஸ்கூலைத் திறந்துவைக்க சினிமா பாடலாசிரியர் கவிஞர் சினேகனைக் கூப்பிட்டிருந்தோம். அதுதான் நான் என் வாழ்க்கையில் செஞ்ச மிகப் பெரிய தப்பு.
'நீங்க நல்லா டான்ஸ் பண்றீங்க. சினிமாவில் நடன இயக்குனரா இருக்கலாமே? நீங்க விருப்பப்பட்டா, நான் நடிக்கும் 'உயர்திரு 420’ படத்தில் உங்களுக்கு சான்ஸ் வாங்கித் தர்றேன்’னு சொன்னார். ஜமுனா என்கிட்ட விஷயத்தைச் சொன்னா. 'உனக்கு விருப்பம்னா, தாராளமா செய்’னு சொல்லிட்டேன். அவளும் நடன இயக்குனரா மாறினா. சினிமாவுக்குப் போனதும் அவளோட நடவடிக்கைகள் மாற ஆரம்பிச்சது. எப்பவும் போனும் கையுமாவே இருந்தா. வீட்டுக்கு வந்தாலும் போன்... மெசேஜ்னு, எப்பவும் பேசிட்டே இருப்பா. அப்போகூட நான் அதை பெருசா எடுத்துக்கலை. சினேகனும் ஜமுனாவும் சேர்ந்து வெளியில் சுத்துறதை பலரும் பார்த்துட்டு என்கிட்ட சொன்னாங்க. அப்போதான் எனக்கு ஷாக்!
'சினேகன்கூட நீ சுத்திட்டு இருக்கிறது நல்லது இல்லை ஜமுனா... நமக்குக் குடும்பம் இருக்குது. நீ பண்றதெல்லாம் சரியான்னு யோசிச்சுப் பாரு’னு அட்வைஸ் செஞ்சேன். 'என்னைச் சந்தேகப்படுறீங்களா?’னு குதிச்சா. ஆனாலும் அவளோட நடவடிக்கைகள் மட்டும் மாறவே இல்லை. ஒரு கட்டத்தில், முழுக்க சினேகனோட கட்டுப்பாட்டுக்குள் அவ போயிட்டா. சினேகன் சொல்றதை மட்டும்தான் கேட்பா. நான் எது கேட்டாலும் எரிஞ்சு விழுவா. எங்களுக்குள் சண்டை அதிகமானதும் வீட்டைவிட்டுப் போயிட்டா.
குழந்தை மட்டும் என்னோடு இருந்தது. நான் வீட்டில் இல்லாத நேரமாப் பார்த்து, குழந்தையையும் தூக்கிட்டுப் போயிட்டாங்க. இப்போ ஜமுனாவும் என் குழந்தையும், சினேகனோட கட்டுப்பாட்டில்தான் இருக்காங்க. என் குடும்பத்தைச் சீரழிச்ச சினேகன் மேல் நடவடிக்கை எடுத்து என் மனைவியையும் குழந்தையையும் மீட்டுத்தரக் கோரிதான் கமிஷனர்கிட்ட புகார் கொடுத்திருக்கேன்'' என்று கலங்கினார்.
ஜமுனா கலாதேவியைத் தொடர்புகொண்டு பேசினோம். தனது கணவர் பிரபாகரனுக்கு எதிராகத்தான் அவர் பேசினார். ''அந்த ஆள் ஒரு சந்தேகப் பேர்வழிங்க. அவர்கூட வாழ்வதற்கு இனி வாய்ப்பே இல்லை. அதனால்தான், விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பிட்டேன். குழந்தையை என்கூட அனுப்பாம வெச்சிருந்தார். அதுபத்தியும் நான் போலீஸில் புகார் கொடுத்திருக்கேன். சினேகன் சாருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தேவை இல்லாம இதில் அவரையும் இழுத்து அசிங்கப்படுத்துறாரு. உண்மையான அன்பு இருக்கிற புருஷனா இருந்தா, இப்படி எல்லாம் பண்ணுவாரா சொல்லுங்க...'' என்று நம்மிடம் அழுதார்.
கவிஞர் சினேகனோ அவரது நண்பர்கள் வட்டாரத்தில், ''பிரபாகரனின் விருப்பத்தோடுதான் அவரது மனைவியை நான் நடித்த படத்தில் நடன இயக்குனராக அறிமுகப்படுத்தினேன். அந்தப் பெண் ஒரு நாள் மட்டும்தான் ஷ§ட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தார். கொஞ்ச நேரத்திலே பிரபாகரனும் பின்னாடியே வந்து சந்தேகப்பட்டு சண்டை போட்டார். அதனால் அந்தப் பெண்ணிடம், இனி வரக்கூடாது என்று சொல்லி  அனுப்பிவிட்டேன். மற்றபடி அவர்கள் குடும்ப பிரச்னை எனக்கு எதுவும் தெரியாது. நான் அவருடைய மனைவி, குழந்தைகளைக் கடத்தவில்லை. நான் விசாரிச்ச போது அந்தப் பெண், அவங்களோட அம்மா வீட்டில் இருப்பதாகத் தெரிந்தது.  நான் அந்தப் பெண்ணிடம் சுற்றியதாகச் சொல்வது அப்பட்​டமான பொய். அவர்களது குடும்ப பிரச்னையில் என்னை அசிங்கப்படுத்தியதற்காக பிரபாகரன் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி நானும் போலீஸில் புகார் தரப்போகிறேன்'' என்று சொல்லி வருகிறாராம்.
யார் சொல்வது உண்மையோ?
கே.ராஜாதிருவேங்கடம்

பழசு இன்றும் புதுசு

நேற்றும் நமதே- 58: 16.4.86
கிச்சாமி நாற்காலியில் வந்து உட்கார்​கிறான். உடனே மேற்படி நாற்காலி வெடிக்கிறது. இது சத்தியமாக சஸ்பென்ஸ் இல்லை.
அதே நாற்காலியின் அடியில் ஒரு சர்தார்ஜி பாம் வைப்பதை முதலில் சொல்லிவிடுகிறோம். அதன்பின் கிச்சாமி உள்ளே நுழைந்ததுமே, அந்த நாற்காலியில் உட்காரத்தான் நினைத்தான். அலமாரியில் இருக்கும் அவன் மனைவியின் போட்டோவை ஏனோ பார்க்க வேண்டும்போல தோன்றியது. அதைப் பார்த்துவிட்டு வந்து நாற்காலியில் உட்காரு​வதற்கு முன்... வாசலில் சைக்கிள் மணியோசை கேட்டதில்... பக்கத்து வீட்டுப் பால்காரன்... கிச்சாமி மெள்ள...
இது சஸ்பென்ஸ்!
இங்கிலீஷ் வார்த்தைக்கு ஈடாக மர்மம், திகில் என்றெல்லாம் சொல்லலாம். சஸ்பென்ஸ் என்பதன் நேர் அர்த்தம் Uneasy, Uncertainty...ஒத்திப்போடுவது, தீர்மானம் இல்லாமலிருப்பது. எதை ஒத்திப்போடுகிறோம்? எதிர்பார்த்த ஒரு விஷயத்தை, ஒரு நிகழ்ச்சியை, ஒரு பயங்கரத்தை. இதில் கிளைத்தெழுவது அடுத்தது என்ன என்கிற ஆர்வம்.
இப்போது தமிழில் எழுதுபவர்கள் பலர் சஸ்பென்ஸ் என்றால் என்ன என்று தெரியாது குருட்டாம்போக்கில் எழுதுகிறார்கள். ஏதோ தற்செயலாக சஸ்பென்ஸின் ஆதார விதிகளுக்குள் அவர்கள் எழுதுவது அமையும்போது, கதை பிழைக்கிறது.
ஆதார விதிகள் என்ன?
ஷெர்லக் ஹோம்ஸ் கதைகளைச் சிருஷ்டித்த ஆர்தர் கோனன்டாயிலைத் தெரிந்திருக்கலாம். அவருடைய 'செந்தலைச் சங்கம்’ என்கிற சிறுகதை... இந்தக் கதையில் 'சிவப்பான தலைமுடி இருப்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்’ என்று ஒரு வேலைவாய்ப்பு விளம்பரம் வருகிறது.இன்டர்வியூவுக்குப் போனால் ஏராளமான செந்தலையர்கள்... அவர்களில் ஒருத்தனே ஒருத்தனை மட்டும் அழைத்துப் போய் வேலை கொடுக்கிறார்கள். என்ன வேலை? நாள் முழுவதும் கலைக் களஞ்சியத்தைப் பிரதியெடுப்பது!
இந்தக் கதையில் சன்பென்ஸுக்கு உண்டான தேர்ந்த அம்சங்கள் அனைத்தும் உள்ளன. வாசகருக்கு ஒரு நிகழ்ச்சியின், ஒரு குற்றத்தின் ஒரு பகுதி மட்டும் காட்டப்படுகிறது. முதலில் சம்பந்தமே இல்லாத சம்பவங்கள். செந்தலை... வேலைவாய்ப்பு... கலைக் களஞ்சியம் இவற்றை எப்படிச் சம்பந்தப்படுத்தப்போகிறார்கள் என்கிற ஆர்வத்தைக் கிளப்புகிறது. சம்பவங்களுக்கு இடையில் தர்க்கரீதியான ஒரு தொடர்பு இருந்தால்கூட, அது முழுவதும் காட்டப்படுவது இல்லை. கடைசி வரை ஒத்திப்போடப்படுகிறது.
இந்த வகை சஸ்பென்ஸுக்கு 'ஐஸ் கட்டியின் முனை’ (Tip of the iceberg) என்று சொல்வார்கள். ஸ்டான்லி கார்டனரின் 'கடன் வாங்கிய செம்பட்டைத் தலைக்காரி’ ஒரு நல்ல உதாரணம். ஹிட்ச்காக்கின் அதிகம் தெரிந்த மனிதன்(The Man who knew too much) இவ்வகை சினிமாவின் சிறந்த உதாரணம்.
அடுத்த வகை - ஓப்பன் சஸ்பென்ஸ்! குற்றம் எப்படி நடந்தது. யார் செய்தார்கள் என்பதெல்லாம் ஒளித்துவைப்பது இல்லை. அதற்குப் பதிலாக, குற்றம் செய்தவன் எப்படி மாட்டிக்கொள்கிறான் என்பதுதான் சஸ்பென்ஸ். இதுவும் ஒருவிதமான லேசான ஒத்திவைப்புத்தான். குற்றவாளி மாட்டிக்கொண்டே ஆக வேண்டும் என்கிற சித்தாந்தத்தின் அடிப்படையில் ஏற்பட்ட கதைகள்... இதில்தான் கிச்சாமி​யின் நாற்காலிகளுக்கு நிறையவே இடம். 'டர்ட்டி ஹாரி’ என்கிற க்ளிண்ட் ஈஸ்ட்வுட் திரைப்படம் நல்ல உதாரணம். சேஸின் நாவல்கள் பலவும் இந்த 'ஒப்பன் சஸ்பென்ஸ்’ வகைதான். இந்த வகையில் சமீப கால உதாரணங்களில் லாரன்ஸ் ஸாண்டர்ஸ் என்பவரைக் குறிப்பிடலாம். இந்த வகை 'ஓப்பன் சஸ்பென்ஸ்’ நாவல்களில் குற்றவாளிகளின் மேல் அனுதாபம் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது.
மூன்றாவது வகை - 'குற்றத்தோடு பிரயாணம்’. இவ்வகைக் கதைகளில் ஒரு விதமான இயல்பும் உண்மைத்தனமும் அமைகிறது. இந்தக் காலத்தில் கொலை போன்ற குற்றங்கள் முன்னேற்பாடு இல்லாமல் ஒருவிதமான உணர்ச்சிபூர்வமான மூர்க்கத்தில் செய்யப்பட்டுவிடுகின்றன. இந்த ரீதியில் கதை ஆரம்பத்தில் பரம சாதுவாக இருப்பவன் சந்தர்ப்ப சூழ்நிலைகள் ஒவ்வொன்றாக சதி செய்ய... குற்றவாளியாகிறான். திருடுகிறான், கொள்ளையடிக்கிறான், ரேப்புகிறான்என்று நிகழ் வேகத்தில் கதையைச் சொல்லிக்கொண்டு போவது. இதில் ஆதாரச் சம்பவங்களில் யோக்கியம் இருந்தால், கதை சுவாரஸ்யமாகப் போகும்.
நான்காவது வகை - ஒரு குற்றத்தை ஏழெட்டுப் பேர் செய்ததாகச் சாத்தியக் கூறுகளைக் காட்டிவிட்டு, யார் செய்தார்கள் என்று கண்டுபிடிப்பது. பாதி வழியில் 'வாசகரே! உங்களுக்கு எல்லா க்ளூவும் கொடுத்தாகிவிட்டது. குற்றவாளி யார் என்று கண்டுபிடிக்க வேண்டியது உங்கள் சாமர்த்தியம்.’ இது அகதா கிறிஸ்டியின் ஸ்பெஷாலிட்டி.
நல்ல எழுத்தாளர்கள் சஸ்பென்ஸை அளவோடு பயன்படுத்துவார்கள். எதிர்​பார்ப்பும் திடுக்கிடலும் மாறி மாறி வரும். அலிஸ்டைர் மக்ளீன், கோல்டன் ராண்டேவு என்கிற நாவலின் (Golden Rendezvous)  அதி ஆரம்பத்தில் பேஸ்மேக்கர்கோல்ட் (Pacemaker Colt) என்கிற துப்பாக்கியை விவரமாக வர்ணிக்கிறார். அது எப்படித் தனிப்பட்ட கைவேலைக் கலைஞர்களால் ஒரு கலைப் பொருள்போல செய்யப்பட்ட துப்பாக்கி... எப்படி அதில் சுட்டு குண்டுபட்​டால் குண்டு சுழன்று சுழன்று உள்ளுக்குள் ரத்த மலர் பொங்கும் என்று ஆற அமர நிதானமாக வர்ணித்துவிட்டு... அடுத்த வரி ‘Such a gun was pointed at me!’  எதற்காகத் துப்பாக்கியை இவ்வளவு விவரமாக வர்ணிக்கிறான் என்கிற ஆர்வத்தைக் கிளப்பிவிட்டு உடனே கதையை டாப் கியருக்கு மாற்றுவது. இந்தத் திறமை மேனாட்டு பெஸ்ட் செல்லர் எழுத்தாளர்கள் அத்தனை பேருக்கும் கைவந்த கலை. சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் ப்ராங்க் ஸ்டாக்டன் என்கிற சிறுகதை எழுத்தாளர் எழுதிய 'லேடி ஆர் தி டைகர்?’ என்கிற ஒரே ஒரு கதை இன்னும் பேசப்படுகிறது.
ஸ்டாக்டன் இந்தக் கதையை 1882-ல் எழுதினார். நூறு வருஷம் கழித்துக்கூட இதன் முடிவை விவாதிப்பவர்கள் இருக்கிறார்கள். கதை என்ன என்று சொல்கிறேன்.
ரொம்ப நாள் முன்னால் ஒரு ராஜா இருந்தான். அவனுடைய தலைநகரில் ஒரு பெரிய ஸ்டேடியத்தில்தான் பொதுஜனக் கேளிக்கைகளும் தண்டனைகளும் நடக்கும். எல்லாரும் பார்த்து மகிழ்வார்கள்.
ராஜாவின் கவனத்தைக் கவரும் வகையில் ஒரு குற்றம் நிகழ்ந்துவிட்டால், குற்றவாளியை ஸ்டேடியம் நடுவில் கொண்டுவந்துவிடுவார்கள். எல்லாருக்கும் தகவல் சொல்லி ஜனங்கள் சூழ்ந்திருக்க, குற்றவாளிக்குத் தண்டனை அளிக்கப்படும். தண்டனை என்ன? ராஜா சைகை காட்ட, குற்றவாளிக்கு எதிரே அருகருகே இரண்டு கதவுகள் இருக்கும்... இரண்டும் ஒரே மாதிரி தோற்றம்கொண்டவை... அதில் ஒன்றைக் குற்றவாளி தன் இச்சைப்படி தேர்ந்தெடுத்துத் திறக்க வேண்டும். ஒரு கதவைத் திறந்தால், அதன் உள்ளிருக்கும் பசித்த புலி வெளிவந்து அவன் மேல் பாய்ந்து குத்திக் குதறித் தின்றுவிடும். மற்றொரு கதவைத் திறந்தால்... அவன் வயசுக்கும் தகுதிக்கும் ஏற்ப ஒரு பெண் - ராஜாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட அழகான பெண் - காத்திருப்பாள். அவளைக் குற்றவாளி உடனே கல்யாணம் செய்துகொள்ள வேண்டும். ராஜா காட்டும் நியாயம் இதுதான்!
ராஜாவுக்கு ஓர் அழகான பெண் இருந்தாள். அவள் (எப்போதும் போல!) அழகான ஏழை இளைஞனைக் காதலித்தாள். இந்தக் காதல் ராஜாவுக்குத் தெரிய வந்தது. உடனுக்குடன் அந்த இளைஞன் கைது செய்யப்பட்டான். தண்டனை? வழக்கம் போலத்தான்! இரண்டு கதவு - புலி அல்லது பெண். இந்த ஸ்பெஷல் கேஸுக்காக ராஜா பிரத்யேகமாக ஒரு புலியைத் தயார் செய்தார் - கோபம் அதிகமான, பசி அதிகமான புலி! அதே போல் பெண் விஷயத்திலும் பேட்டையிலேயே பெரிய அழகியைத் தேர்ந்தெடுத்தான் ராஜா. அதில் எல்லாம் பாரபட்சம் இல்லாதவன்.
தண்டனை நாள் வந்தது. காதலன் கொண்டுவரப்பட்டு நடுவே விடுவிக்கப்பட்டான். இரண்டு கதவில் ஒன்றைத் திறப்பதற்கு முன் ராஜாவுக்குத் தலைவணங்கிவிட்டு அருகில் உட்கார்ந்திருந்த ராஜகுமாரியைப் பரிதாபமாகப் பார்த்தான். ராஜகுமாரிக்கு மட்டும் எந்தக் கதவுக்குப் பின்னால் புலி, எதில் பெண் என்பது முன்பே தெரிந்திருந்தது. (ஒரு பெண்ணின் வைராக்கியமும் காவலர்களின் பொன் ஆசையும் அவளுக்கு அந்தத் தகவலைக் கொடுத்திருந்தன.)
ராஜகுமாரியைப் பரிதாபத்துடன் பார்த்த காதலன் கண்ணாலேயே 'எந்தக் கதவு?’ என்று கேட்டான். அதற்கு அவள் உடனே வலது கையைச் சற்றே உயர்த்தி வலது பக்கக் கதவைக் காட்டினாள். அது அவள் காதலனுக்கு மட்டும்தான் தெரிந்தது.
காதலன் உடனே விருவிருவென்று நடந்துபோய் எதிரே வலது பக்கக் கதவைத் தயக்கமே இல்லாமல் திறந்தான்.
வெளிவந்தது புலியா, பெண்ணா? புலி என்றால், தான் உயிரையே வைத்திருந்த காதலன் துடிதுடித்துச் செத்துப்போவதை எப்படி ராஜகுமாரியால் தாங்கிக்கொள்ள முடியும்? பெண் என்றால் மற்றொரு பெண்ணுடன் தன் காதலன் சுகித்து வாழ்வதை எப்படி அவளால் சகித்துக்கொள்ள முடியும்?
புலியா? பெண்ணா? எது?
நீங்கள்தான் சொல்லுங்களேன்..!

மிஸ்டர் மியாவ்: விஜய்யுடன் லட்சுமிராய்?

'விஜய்க்கு ஜோடியாக நடிக்கவைத்தால் பாதி சம்பளம் போதும்’ என்று பகிரங்கமாக அழைப்பு விடுகிறார் லட்சுமிராய்!
தனது பெயரைப் பயன்படுத்தி யாரிடமும் கடன் வாங்கக் கூடாது என்று இரண்டு 'யா’க்களுக்கும் கண்டிஷன் போட்டு இருக்கிறாராம், அப்பா ஸ்டார்!   
   
சிநேகனுக்குத் தீவிரமாகப் பெண் பார்த்து வந்தனர். கடத்தல் செய்தி வந்ததும், பெண் பார்க்கும் படலம் சட்டென்று நிறுத்தப்பட்டது! 
 
ஜாமீனில் வந்துள்ள அதிகாரியுடன் அம்பானி நடிகருக்கு  இருந்த நெருக்கம் உலகறியும். ஆனால் இப்போது தோஸ்த் பற்றி விசாரித்தாலே, காத தூரம் ஓடுகிறார் காமெடியாஸ்!

********************************************************************************************

0 comments:

Post a Comment

Cricket

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010