''எதுவுமே புரியவில்லையே!'' என்றோம்!
''நான் வரிசையாகச் சொல்கிறேன். அப்போது உமக்குப் புரிவது மட்டுமல்ல... அதிர்ச்சியாகவும் இருக்கும்!'' என்று பீடிகையுடன் தொடங்கினார், கழுகார்!
''போயஸ் கார்டனில் எடுக்கப்பட்ட கல்தா நடவடிக்கைகளின் மர்ம முடிச்சுகள் இப்போது அவிழ ஆரம்பித்துள்ளன. 'சசிகலா, நடராஜன், இளவரசி ஆகிய மூவரின் தலைமையில் நடந்த மோதலின் முடிவுதான் இது’ என்று உள்விவகாரங்களை அறிந்தவர்கள் சொல்கிறார்கள். இதுவரை, 'அமைதி’ கேரக்டராக நாம் அறிந்து வைத்துள்ள இளவரசியைத்தான், முக்கிய காரணகர்த்தா என்று சொல்கிறார்கள்!''
''விளக்கமாகவே சொல்லும்!''
''கார்டனுக்குள் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி ஆகிய மூவர்தான் நிரந்தரமாக இருந்தவர்கள். சசிகலாவின் அண்ணன் ஜெயராமன் பல ஆண்டு களுக்கு முன்பே இறந்து போனார். அவரது மனைவி தான் இளவரசி. இவருக்கு மூன்று வாரிசுகள். அதில் மூத்தமகள் கிருஷ்ணப்ரியாவின் திருமணத்தை நடத்தி வைத்தவர் ஜெயலலிதா. 'ஜெயராமன் இறக்கும் போது அவரது இளம் மனைவியையும் மூன்று குழந்தைகளையும் விட்டுவிட்டுப் போனார். அன்று முதல் இன்று வரை அவர்களை நான்தான் பாதுகாத்து வருகிறேன். அதில் மூத்த மகளுக்கு நடக்கும் இந்தத் திருமணத்தை இன்று ஜெயராமன் ஸ்தானத்தில் இருந்து நடத்தி வைப்பதில் பெருமைப்படுகிறேன்’ என்று சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டார். அந்தளவுக்கு இளவரசி மீது ஜெயலலிதா பிரியமாக இருந்தார். இளவரசியை கார்டனுக்கு அழைத்து வந்து உரிய பாதுகாப்பையும் மரியாதையையும் வழங்கியவர் சசிகலாதான் என்றாலும் காலப் போக்கில் சசிகலா_ இளவரசி ஆகிய இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் முளைத்ததாகச் சொல்கிறார்கள்''
''அப்படியா?''
''அப்படித்தான் சொல்கிறார்கள். 'போயஸ் கார்டனின் மகாராணியான ஜெயலலிதாவுக்கு அடுத்த இளவரசி யார்?’ என்ற போட்டி காலப் போக்கில் தொடங்கியது. தொடர்ந்தது. வலுத்தது. அதன் க்ளைமாக்ஸ் காட்சிதான் சமீபத்தில் நடந்தது. 'சசிகலாவே நீக்கப்பட்டார். சொந்த பந்தங்கள் அனைவருமே நீக்கப்பட்டார்கள். ஆனால் இளவரசி மட்டும் தப்பித்தது எப்படி?’ என்ற கேள்விக்குப் பின்னால் இருக்கிறது இதற்கான சூட்சுமம்’ என்றும் இவர்கள் சொல்கிறார்கள்!''
''இளவரசியின் மருமகன் ராஜராஜனும் இளவரசி யின் சம்பந்தி கலியபெருமாளும் சேர்த்துத்தானே கல்தா கொடுக்கப்பட்டுள்ளார்கள்?''
''இதுதான் யாரும் எதிர்பாராத விஷயமாக முடிந்துவிட்டது!
ஒவ்வொரு காலகட்டத்திலும் தோட்டத்தில் யார் செல்வாக்கைப் பெறுவது என்று நடக்கும் போட்டி தான் அ.தி.மு.க.வின் சுவாரஸ்யமான விஷயம். ஆரம்பத்தில் அதில் கோலோச்சியது சசிகலாவின் குடும்பம். முதலில் சசிகலாவின் தம்பி திவாகரன், அதன்பிறகு சசிகலாவின் அக்கா வனிதாமணியின் மகன்கள் தினகரன், பாஸ்கரன், சுதாகரன் வந்தார் கள். சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனன், அவரது மகன் டாக்டர் வெங்கடேஷ் வந்தார்கள். சசிகலா வின் அண்ணன் விநோதகனின் மகன்களான மகாதேவனும் தங்கமணியும் அடுத்து வந்தார்கள். இவர்களில் ஒவ்வொருவர் களை எடுக்கப்பட்ட போதும் கல்தா கொடுக்கப்பட்ட போதும் சசிகலா அமைதியாகத்தான் இருந்தார். 'அம்மாவிடம் செல் வாக்காக இருந்த சசிகலாவால் ஏன் அதைத் தடுக்க முடியவில்லை. சசிகலா பேச்சைத்தான் ஜெயலலிதா கேட்பார் என்றால் அதற்கு ஏன் அவரால் தடை போட முடியவில்லை. காரணம், சசிகலாவை மீறி ஜெயலலிதாவிடம் போட்டுக் கொடுப்பதற்கு உள்ளே ஒரு சக்தி இருந்தது. அதுதான் இளவரசி’ என்று சொல்கிறார்கள்!''
''ம்!''
''சசிகலா குடும்பத்தினர் ஒவ்வொருவராக கழன்று கொண்டு வர எம்.நடராஜன் தனது நெருங்கிய சொந்தங்கள் ஒவ்வொருவராக உள்ளே நுழைத்துக் கொண்டு வந்தார். இதில் முக்கிய இடம் நடராஜனின் தம்பி எம். ராமச்சந்திரனுக்கு உண்டு. இன்னொரு தம்பி பழனிவேலுவும் கார்டனுக்குள் வலம் வந்தார். இவரது குடும்ப வழிப்பட்ட உறவுகளான குலோத்துங்கன், குமார், சரவணன், விஜயகுமார், குமாரவேலு ஆகியோரும் உள்ளே புகுந்து புறப்படுபவர்களாக இருந்திருக்கிறார்கள். இதில் ராமச்சந்திரன் தவிர மற்றவர்கள் சிறுசிறு காரியங்களைச் செய்து கொடுப்பவர்களாக வலம் வந்துள்ளார்கள். சசிகலா மற்றும் நடராஜன் குடும்பத்தினரது வருகை, விலகலுக்குப் பிறகுதான் இளவரசி தனது குடும்ப உறுப்பினர்களை மெல்ல உள்ளே அழைத்து வரத் திட்டமிடுகிறார்''
''யார் யார்?''
''ராவணனனே இளவரசி மூலமாகத்தான் அழைத்து வரப்பட்டவர் என்கிறார்கள். அவரது கணவர் ஜெய ராமனின் சித்தப்பா மருமகன் இந்த ராவணன். சசிகலாவுக்கும் இதே உறவு முறைதான் வரும். இளவரசியும் ராவணனும் பக்கத்து பக்கத்து ஊராம். திருச்சியில் இருந்த கலியபெருமாள், இளவரசியின் சம்பந்தி. ராஜராஜன், இளவரசியின் மருமகன். இவர்களுடன் இன்னொரு கேரக்டரும் செல்வாக்கு படைத்ததாக இருக்கிறது. அவர் பெயர் அசோகன். மிகமிகச் சமீப காலத்தில் மிதமிஞ்சிய செல்வாக்குப் படைத்தவர்களாக ராவணன், அசோகன் ஆகிய இருவரும் வளர்ந்ததற்கு இளவரசியின் உதவிகள்தான் காரணம் என்கிறார்கள். இளவரசிக்கு வடுகநாதன், கண்ணதாசன், அண்ணாதுரை ஆகிய மூன்று சகோதரர்கள். இதில், அண்ணா துரையைப் பற்றி உமது நிருபரே விளக்கமாக எழுதி இருந்தார். தஞ்சை அருகில் உள்ள கோட்டூர் பஞ்சாயத்து சேர்மன் பதவியில் இருக்கிறார் இந்த அண்ணாதுரை. அந்த பஞ்சாயத்தில் தி.மு.க. உறுப்பினர்களே அண்ணாதுரைக்கு சாதகமாக நடந்து கொண்ட செய்தி அப்போதே வெளியில் வந்துவிட்டது. தி.மு.க.வினரையும் வாங்கி வென்று காட்டும் அளவுக்கு பலம் உள்ளவராக வளர்ந்துவிட்டார் அண்ணாதுரை. இப்படி தனது குடும்ப ஆட்களை அதிகார மையங்களுக்குள் கொண்டு வரும் காரியத்தை கனகச்சிதமாகச் செய்து வந்தாராம் இளவரசி. ஸ்ரீரங்கம் தொகுதியில் தேர்தல் வேலைகள் பார்த்ததில் முக்கியப் பங்கு ராஜராஜனுக்கு உண்டு என்பதை அப்போதே நான் உமக்குச் சொல்லி இருக்கிறேன். 'அடுத்த வாரிசு’ என்ற ஸ்தானத்தில் ராவணன் அல்லது ராஜராஜனைக் கொண்டு வந்து உட்கார வைக்க முயற்சிகள் செய்யப்பட்டன என்றும் சொல்கிறார்கள். இந்த முயற்சிக்கு சசிகலா, நடராஜன் குடும்பத்தினர் தடையாக இருப்பார்களோ என்ற சந்தேக ரேகைகள் இந்த தரப்பினருக்கும் ஓடி இருக்கிறது. எனவே உள்ளடி வேலைகளை பார்க்க ஆரம்பித்தார்கள். ஆனால் அம்மா வைத்த வெடியில் இவர்களும் சேர்த்து காலியானது தான் சனிப்பெயர்ச்சியின் உச்சம்!
'சசிகலா, நடராஜன், இளவரசி ஆகிய முப்படைகளுக்கு மத்தியில் நடந்த தணியாத சண்டையில் மூன்று பக்கமும் இருந்த முக்கியமான அனைவரும் வீழ்த்தப்பட்டார்கள். அதில் இளவரசி மட்டும் தப்பித் தார். இளவரசியை அம்மா முழுமையாக நம்புகிறாரா அல்லது அந்த தரப்புச் செய்திகளை அறிந்து கொள்ள ஒரு ஆள் இருக்கட்டும் என்று வைத்திருக்கிறாரா எனத் தெரியவில்லை’ என்கிறார்கள். அதேபோல் சசிகலா மற்றும் இளவரசி ஆகிய இருவருக்கும் உதவியாக இருந்தவர் 'தோட்டக்கலை’ கிருஷ்ணமூர்த்தி. அவரும் விட்டு வைக்கப்பட்டு இருக்கிறார்!''
''அவரிடம் இருந்து தி.மு.க. அரசு பறித்த நிலத்தை இந்த ஆட்சியில் திரும்பக் கொடுத்து... மீண்டும் பறித்துக் கொண்ட கதையை நீர் ஏற்கனவே சொல்லி இருந்தீரே?''
''ஆமாம்! பல கோடி மதிப்பிலான அந்த இடம் 'தோட்டக்கலை’ கிருஷ்ணமூர்த்தியிடம் கொடுக்க மறுத்தார் முதல்வர் ஜெயலலிதா. அப்போதே சசிகலா_ ஜெ. இடையிலான மோதல் மெல்லத் துளிர்த்தது. 'பழைய மாதிரி காரியங்கள் செய்ய முடியாது’ என்பதை இந்த குரூப்புக்கு உணர்த்தியது அந்த மோதல். அது ஓட்ட வைக்க முடியாத மோதலாக மாறும் என்பதை யாரும் உணரவில்லை. இந்தப் பிரிவு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு போவதாகத் தான் எல்லோரும் சொல்கிறார்கள்!'' என்ற கழுகார் ''சசிகலா பற்றிய பிரத்யேக செய்திகளுடன் எனது அடுத்த விசிட் இரண்டு மணிநேரம் கழித்து இருக்கும்'' என்பதையும் சொல்லிவிட்டு விட்டார் ஜூட்!
ராவணனைப் பொறுத்தவரை கோவையில்தான் மெகா ரேஞ்சில் விளையாடினார் என்றாலும், தென் தமிழ்நாட்டில் ராஜபாளையத்தை தனது தலைமை இடமாகக் கொண்டு பகாசுரத்தனமாக விளையாடி வந்தாராம். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 12 தடவைக்கும் மேலாக அவர் அங்கே விசிட் அடித்ததையும், எம்.எல்.ஏ. ஒருவரும் உள்ளூர் தொழிலதிபரும் மாறி மாறி அவரைச் சந்தித்ததும் கண்காணிக்கப்பட்டு வந்தது. மூவருமாகச் சேர்ந்து, ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மூலம் மெகா பிளான் ஒன்றை சாதிக்கப் பார்ப்பதாக உளவுப் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
அந்த ஏரியாவைச் சேர்ந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும், ஒன்றியச் செய லாளர் முருகையா பாண்டியனும் இந்தத் திட்டத்துக்கு சிக்கல் உண்டாக்கலாம் என்று நினைத்த ராவணன்... இருவரையும் தனக்குச் சாதகமாக வளைத்துப் போடும் நோக்கோடு சிலரை தூது அனுப்ப ஏற்பாடு செய்தாராம். ஆனால், ''ராஜேந்திர பாலாஜியும், முருகையா பாண்டியனும் உங்கள் திசை பக்கம்கூடத் திரும்ப மாட்டார்கள். இருவருமே 'சேவல்' சின்னம் காலம்தொட்டு அம்மாவின் தீவிர விசுவாசிகள். அவர்களை இந்த கோல்மாலுக்குள் இழுக்க அணுகினால், நேராகப் போய் அம்மாவிடமே நம்மைப் போட்டுக் கொடுத்து விடுவார்கள்'' என்று ராவணனை சிலர் உஷார்படுத்த... அதன்பிறகு, அதே பகுதியைச் சேர்ந்த வேறொரு மந்திரியையும் தனது லாபிக்குள் வெற்றிகரமாகக் கொண்டு வந்தாராம் ராவணன்.
''சந்திரபாபு நாயுடு மூலம் தமிழக முதல்வரை 'கன்வின்ஸ்' செய்து, பல கோடி புராஜக்ட் ஒன்றை கைக்குள் கொண்டு வருவதுதான் திட்டம். நல்ல வேளை, அதற்குள் ராவணனை அம்மா வேட்டையாடி விட்டார்'' என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.
இதேபோல், தென் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் அ.தி.மு.க. செயலாளர் பதவியைக் கொடுப்பதற்கு ராவணனிடம் செலுத்தப்பட்ட நன்றிக்கடன் மலைக்க வைக்கிறதாம்.
திக்..திக்... திவாகரன்!
முதல்வரின் கண்காணிப்புப் படை தன்னை கவனிப்பது தெரியாமல், படு 'சுறுசுறுப்பாக' இயங்கியவர்களில் சசிகலா தம்பி திவாகரனும் ஒருவர். மந்திரிகளுக்கும் அதிகாரிகளுக்கும் மன்னார்குடியில் இருந்தபடியே உத்தரவு போட்டுக் கொண்டிருந்தார். அதிகாரிகளை தன் வீட்டுக்கே வரவழைத்தும் கெத்து காட்டிக் கொண்டிருந்தார். பதவி தொடர்பான இறங்குமுகத்தில் இருக்கும் போலீஸ் அதிகாரி சிவனாண்டி, அண்மையில் திருக்கொள்ளிக்காடு சனீஸ்வரன் கோவிலுக்கு விசிட் அடிக்க... தகவல் அறிந்ததும், வம்படியாக அவரை தன் வீட்டுக்கு வரவழைத்தாராம் திவாகரன். ''என்ன பிரச்னை உங்களுக்கு? எல்லாம் நான் பார்த்துக்கறேன்..'' என்று அவர் பாட்டுக்குச் சொல்ல... 'மன்னார்குடி சொன்னா கேட்டுக்கணும்' என்ற பொதுநியதிப்படி, சைலன்ட்டாக தலையசைத்துவிட்டுக் கிளம்பினாராம் சிவனாண்டி. இது, போயஸ் தோட்டத்துக்கு போய்ச்சேர... 'டிரான்ஸ்பர், சஸ்பெண்ட்' என்று சோதனைகள் தொடர்ந்ததாம்.
மிஸ்டர் கழுகு - 2: போன் செய்தார் சசிகலா?
சொன்ன வாக்குறுதிப்படி மீண்டும் ஆஜரானார் கழுகார்!
''சசிகலாவைப் பற்றிய செய்தி என்று சொன்னீரே? சசிகலா எப்படி இருக்கிறார்?''
''ஞாபகம் இருக்கிறது. எனது இரண்டாவது விஜயம் அதற்காகத்தானே!'' என்றவர் சொல்ல ஆரம்பித்தார்.
''இதே கேள்வியை சசிகலாவிடம் உறவுக்காரப் பெண்மணி ஒருமுறை கேட்டபோது, 'நெருப்புக்கு அருகில் இருப்பவரை சற்று தூரத்தில் இருந்து வேடிக்கை பார்க்கும் கண்களுக்குத் 'தகதக'வென ஜொலிப்பது போல தெரியும். ஆனால், நெருப்பின் உக்கிரத்தைத் தாங்கிக்கொண்டு அவர் படும் அவஸ்தை பற்றி தூரத்தில் இருப்பவர்களுக்குத் தெரியாது... புரியாது. அதுபோலத்தான் என் நிலையும்! அக்கா, நெருப்பு. நான் அவர் அருகில் இருக்கிறேன் என்றால், நான் படும் துயரங்கள் நிறைய!' என்று கண்களைத் துடைத்தபடி சொன்னாராம். அதையே இப்போதும் அவர் நினைத்துப் பார்க்கலாம்.
பல வருடங்களுக்கு முன்பு, மீனம்பாக்கம் அருகே ஜெயலலிதா - சசிகலா சென்ற கார் மீது லாரி மோதியது. அந்த விபத்தில் சசிகலாவின் கண்களில் படுகாயம். எவ்வளவோ சிகிச்சை எடுத்தும் பிரச்னை தீரவில்லை. வயது ஆக, ஆக கண்ணில் நீர் வழிய ஆரம்பித்தது. அதைத் துடைத்தபடிதான் சசிகலா எப்போதும் இருப்பார். ஒரு கட்டத்தில், அவருக்குச் சர்க்கரை நோயும் வந்துவிட்டது. திடீரென உடல் வீக் ஆகும். பழைய நிலைமைக்கு வர, இன்சுலின் ஊசி அடிக்கடி போடுவார். இன்று இந்த அவஸ்தைகள் அதிகமாகி விட்டனவாம். இத்தனை பிரளயம் நடந்தபோதுகூட சசிகலா தன் விதியை நினைத்தபடி, ஒரு சேரில் காலை மடக்கி தலை சாய்ந்தபடி அமர்ந்து இருந்தாராம். அந்தக் கோலத்தில் அவரைப் பார்த்தவர்களுக்கு என்னவோ போல் ஆகிவிட்டதாம். உடல்பாதிப்பால் அவர் அவ்வப்போது அவதிப்படுவது, சுற்றி இருப்பவர்களுக்குத் தெரியும். இந்தப் பிரச்னைகளுக்கு பிறகு, கவலையும் சேர்ந்துகொள்ள... உடல்நிலை இன்னும் மோசமாகி வருகிறதாம்.''
''போயஸ் கார்டனை விட்டு சசிகலா வெளியே போய் எட்டு நாட்கள் ஆகிவிட்டது. எங்கே தங்கி இருக்கிறாராம்?''
''வீட்டைவிட்டு வெளியேறும்போது முதல்வர் ஜெயலலிதா, 'வழக்கமாக நீ சென்னையில் தங்குகிற வீடுகளில் போய் இரு' என்று சொல்லி அனுப்பினாராம். அவர் சொன்ன வார்த்தையைத் தட்டாமல், ஜெயலலிதாவுக்கும் அவருக்கும் அறிமுகமான சில வீடுகளில்தான் தங்கினாராம். அந்த வீடுகளைச் சுற்றிலும் மஃப்டியிலும் யூனிஃபார்மிலும் போலீஸார் வட்டமடித்தபடி இருந்தார்களாம். அதைப் பார்த்துக் கண்ணீர் சிந்தினாராம் சசி. கொட்டிவாக்கத்தில் சசியின் அக்கா மகன் பாஸ்கரன் வீடு இருக்கிறது. அங்கேதான் பெரும்பாலான நாட்கள் தங்கியிருந்தார். தி.நகரில் உள்ள ஓர் உறவினர் வீட்டுக்குப் பகல் வேளையில் போய் வந்தார். இடையில் இரண்டு நாட்கள் புதுச்சேரிப் பக்கம் கிளம்பிப் போனார். டிசம்பர் 21 சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு திருநள்ளாறு போக நினைத்து, காரில் புறப்பட்டார். ஆனால், போகவில்லை எனத் தகவல்.''
''சசிகலா மனநிலை எப்படி இருக்கிறது?''
''சசிகலா நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சையில் போஸ்டர்கள் ஒட்ட ரெடியான தகவல் வந்து சேர, அதற்குத் தடை போட்டுக் கோபமாகத் திட்டினாராம். போஸ்டர்கள் ஒட்டப்படவில்லை. ஆங்காங்கே எதிர்ப்புப் போராட்டம் நடத்தத் தூண்டி சிலர் சமூகத் தலைவர்களிடம் கேன்வாஸ் செய்வதைக் கேள்விப்பட்டு, 'அது மாதிரி எது நடந்தாலும் நான் தூண்டிவிட்டதாக அக்காவிடம் வத்தி வைப்பார்கள். அக்காவின் கோபம் அதிகமாகும். பேசாமல் இருக்கச் சொல்லுங்கள். டிசம்பர் 30-ம் தேதியன்று நடக்கவுள்ள பொதுக்குழுவில் அக்காவின் மூட் என்னவென்று தெரிந்துவிடும்' என்று, அருகில் இருந்தவர்களிடம் திரும்பத் திரும்ப சொன்னாராம் சசிகலா.''
''சசிகலாவின் தம்பி திவாகரன் கைது ஆனதாக ஒரு தகவல் பரவியதே?''
''கடந்த டிசம்பர் 24-ம் தேதி மன்னார்குடியில் உள்ள அவரது செங்கமலத்தாயார் கல்லூரியில் இலக்கிய விருது வழங்கும் விழா நடந்தது. அந்த விழா முழுக்கவே திவாகரன் இருந்தார். பொதுவாக, கலகலப்பாகப் பேசுவார். ஆனால், அந்த விழாவில் வேறு எந்த அரசியலும் பேசாமல் சப்ஜெக்ட்டை மட்டும் இறுக்கமாகப் பேசிவிட்டு அமர்ந்ததைக் காண முடிந்தது. முன்னாள் எம்.எல்.ஏ-வான அம்பிகாபதி பேசும்போது மட்டும் குத்தலாகப் பேசினாராம். 'நம் ஊர்களில் டீக்கடைகளில் உட்கார்ந்து வம்படிக்கும் கும்பல், அவர் கைதாகி விட்டாராமே? போலீஸ் பிடிச்சுகிட்டுப் போய் விட்டதாமே? என்றெல்லாம் ஏராளமான வதந்தியைப் பரப்பி விடும். யாரும் நம்ப வேண்டாம். நிஜம் வேறு' என்று அவர் பேசியபோது, கரவொலி விண்ணைப் பிளந்தது. அம்பிகாபதியை உற்றுப் பார்த்துகொண்டு இருந்தார் திவாகரன், ரியாக்ஷன் எதுவும் காட்டாமலே!
அப்புறம், ஓர் அதிர்ச்சியான தகவல் தோட்டத்தை எட்டி உள்ளது. பெங்களூரு வழக்கு தொடர்பாக சட்டரீதியான தொடர்புகளைச் செய்ய டெல்லி மற்றும் தமிழக அதிகார மையங்கள் பலவற்றுக்கும் நெருக்கமானவராக வலம் வரும் புதுமை பாலு என்பவரும், தஞ்சாவூரில் பாரம்பரியக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பிரமுகரும் உதவி செய்ய முன்வந்ததாகவும், அவர்களை சசிகலாவின் உறவு வட்டாரத்தைச் சேர்ந்த ஒரு சிலர் மிரட்டி அனுப்பி விட்டதாகவும் தகவல் பரவி உள்ளது. 'அவர்களது உதவியை உதாசீனப்படுத்தியதன் பின்னணி அம்மாவுக்கு சிக்கல் ஆக்குவதற்காகவா?’ என்றும் சிலர் இப்போது கேட்கிறார்கள்!''
''இப்படி எல்லாமா செய்வார்கள்?''
''விஷயம் அறிந்த வட்டாரங்களில் பேசுவதைத்தான் நான் சொல்கிறேன்... இன்னொன்றும் சொல்கிறார்கள்!
கடந்த 23-ம் தேதி மாலை போயஸ் கார்டன் வீட்டுக்கு சசிகலா தொடர்புகொண்டதாகவும் ஜெயலலிதா லைனுக்கு வந்ததாகவும் 'நானும் என்னோட சொந்தக்காரங்களும் உங்களுக்கு எந்த காலத்துலயும் துரோகம் நினைச்சது கிடையாது. ஏதோ கெட்ட நேரம் இப்படி நடந்துடுச்சு. இனி எந்த சூழ்நிலையிலும் உங்களுக்கு எங்களால் சங்கடம் வராது. நீங்க நல்லா இருந்தா, அதுவே எங்களுக்குப் போதும்..’ என்று சசிகலா சொன்னதாகச் சொல்கிறார்கள். இது உண்மையா, சசிகலா ஆதரவாளர்கள் விடும் கப்சாவா எனத் தெரியவில்லை!'' என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார் கழுகார்!
படங்கள்: சு.குமரேசன், வி.செந்தில்குமார்
ஜெயலலிதாவும் அழகிரியும்!
பிரதமர் வருகையின்போது வித்தியாசமான ஒரு காட்சி... முதல்வரும் தி.மு.க. புள்ளிகளும் நேருக்கு நேராக சந்தித்துக்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
விமான நிலையத்துக்கு முதல்வருக்கு முன்னதாக வந்து உட்கார்ந்தார்கள் மத்திய அமைச்சர்கள் அழகிரி, பழனி மாணிக்கம் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் தயாநிதி மாறன், டி.ஆர். பாலு ஆகியோர்.
முதல்வர் வந்துபோது அழகிரி உட்பட யாருமே எழுந்திருக்கவில்லை. அவர் பக்கம்கூட திரும்பி பார்க்காமல் முகத்தைத் திருப்பிவைத்துக்கொண்டார்கள். பிரதமர் வந்த பிறகு வரவேற்பைப் பெற்றுக்கொள்வதற்கான மேடையில் முதல்வரும் இருந்தார். வரிசையாக அனைவரும் சால்வை கொடுக்க வந்தார்கள்.
அழகிரி வந்து பூங்கொத்து கொடுத்துவிட்டு பிரதமர் கையைப் பலமாகக் குலுக்கியபடியே சில வினாடிகள் நின்று... ஜெயலலிதாவைப் பார்த்தார். முதல்வர் முகத்தில் கடுகடு ரியாக்ஷன்!
செய்தித் துறையின் ஓரவஞ்சனை!
பிரதமர் தமிழகம் வந்தபோது ஏர்போர்ட்டுக்கும், கவர்னர் மாளிகைக்கும், கணித மேதை ராமானுஜத்தின் பிறந்த நாள் விழாவுக்கும் பத்திரிகையாளர்களை அழைத்து செல்லும் பொறுப்பைத் தமிழ்நாடு அரசு செய்தித்துறைதான் ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சிகளுக்கு நாளிதழ்களைத் தவிர குறிப்பாக, பருவ இதழ்கள் எதற்கும் அதிகாரிகள் பாஸ் கொடுக்கவில்லை. ''கடந்த காலங்களில் எல்லாப் பத்திரிகைகளையும் சமமாகத்தான் நடத்தினார்கள். இந்தமுறை இப்படி பாரபட்சம் ஏன் காட்டப்படுகிறது?'' என்று பத்திரிகையாளர்கள் மத்தியில் விமர்சனம் எழுந்தது.
''பிரதமர் அலுவலகத்தில் இருந்தே, செய்தியாளர் அங்கீகார அட்டை உள்ளவர்களை மட்டும் அனுமதிக்கச் சொல்லி விட்டார்கள். இது, நாளிதழ்களுக்கு மட்டும்தான் உண்டு. எங்களால் என்ன செய்ய முடியும்?'' என்று செய்தித்துறை அதிகாரிகள் பதில் சொல்கிறார்கள்.
''பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கான அடையாள அட்டைகளை மத்திய தகவல் ஒளிபரப்பு துறையின் கீழ் இயங்கும் பி.ஐ.பி. அமைப்புதான் வழங்கும். அந்த அதிகாரத்தை தமிழக செய்தித்துறை எடுத்துக்கொண்டு பாரபட்சமாக செயல்படுகிறது'' என்று, பத்திரிகை வட்டாரத்தில் பலத்த விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.
பொன்னுசாமிக்கு கல்தா!
விவசாயத் துறை கூடுதல் இயக்குநர் பொன்னுசாமியை கடந்த வெள்ளிக்கிழமை மாலையில் சஸ்பெண்ட் செய்து விட்டார்கள்.
முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் டாமின் விவகாரத்தில் பெயர் பெற்ற அதன் முன்னாள் அதிகாரி தியானேஸ்வரனின் தம்பிதான், இந்த பொன்னுசாமி. சசிகலாவின் உறவு வட்டத்து உறுப்பினர்களில் ஒருவராக ஆன இவர்தான், விவசாய அமைச்சராக இருந்த செங்கோட்டையன் கண்ணில் விரலைவிட்டு ஆட்டி அவரை வேறு துறைக்கு மாற்றக் காரணம் ஆனவர். இவரது பதவிக்கு சிக்கல் வரப்போகிறது என்று ஏற்கெனவே கழுகார் சொல்லி இருந்தார்.
கடந்த 19-ந் தேதி சசிகலா உறவினர்களை ஜெ. நீக்கினார் என்றபோதும், அவரின் பெயரைச் சொல்லி விவசாயத் துறையில் கோலோச்சிய பொன்னுசாமி, மறுநாள் 20-ந்தேதி, அமைச்சரின் தனி அறையில், ஸ்பிரேயர் சப்ளையர்கள் சிலரை அழைத்துக்கொண்டுபோய், பேச்சுவார்த்தை நடத்தினாராம். அமைச்சர் தாமோதரனால் என்ன செய்ய முடியும்? நொந்துபோய் உட்கார்ந்து இருந்தார். ஒரு வாரத்தில் விமோசனம் கிடைத்து விட்டது. விரைவில் பொன்னுசாமியைக் கைது செய்து விசாரிக்கப் போகிறார்கள் என்பதுதான் லேட்டஸ்ட் தகவல்.
**********************************************************************************கழுகார் பதில்கள்
சு.ரங்கராஜன், காங்கேயம்
உத்தரப்பிரதேச மாநிலத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதே... மாயாவதிக்கு எதிர்காலம் இருக்குமா?
மாயாவதிக்கு எதிர்காலம் உண்டா என்பது உ.பி. மாநில மக்கள் மட்டும் சம்பந்தப்பட்ட கேள்வி. ஆனால், இந்தத் தேர்தலில் காங்கிரஸ் வென்றால் மட்டும்தான், ராகுல்காந்திக்கு எதிர்காலம் உண்டா என்பதைக் கணிக்க முடியும். 'பிரதமர் வேட்பாளராக’ காங்கிரஸ் நிறுத்தப்போகும் ராகுல் தன்னுடைய அரசியல் செல்வாக்கை, பிரசார வேகத்தை உ.பி.யில் நிரூபித்தாக வேண்டும். இந்த மாநிலத்தேர்தல் வெற்றியில்தான் அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவும் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலமும் அடங்கி இருக்கிறது.
உ.பி.யில் வெல்வது சாதாரண விஷயமும் அல்ல. மாயாவதி, முலாயம்சிங் யாதவ், காங்கிரஸ், பாரதிய ஜனதா ஆகிய நான்கு முனைப் போட்டி நடக்கிறது. என்ன ரிசல்ட் என்பதைக் காத்திருந்து கவனிப்போம்!
எஸ்.சுந்தரமகாலிங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர்
சசிகலா நீக்கப்பட்டதால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது ஆரிய திராவிட முன்னேற்றக் கழகமாக ஆகிவிட்டது என்று சிலர் விமர்சனம் செய்கிறார்களே?
சசிகலா, ஒன்றும் சர். பிட்டி. தியாகராயர் பேத்தி அல்ல. ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் பிரதிபலன் பார்க்காமல் இவர்களது ஆட்கள் உதவிகள் செய்ததும் இல்லை. அ.தி.மு.க.வில் இருக்கும் சூத்திரர்கள் அனைவரையும் நீக்கி விடவில்லை. சிலரை சூன்யக்காரர்கள் என்று உணர்ந்து நீக்கி உள்ளார்.
பொதுவாகவே ஒரு கருத்தைச் சொல்கிறேன்..
'திராவிடர்’ என்று இனப்பெயரால் இருந்த கழகத்தை 'திராவிட’ என்று இடப்பெயராக மாற்றிக்கொண்ட பின்னால் இத்தகைய விமர்சனங்கள் அர்த்தமற்றவை!
வி.ஜி. சத்தியநாராயணன், நங்கநல்லூர்
அ.தி.மு.க. ஆட்சியில் அரசியல் சாணக்கியர் யார்?
சொன்னால் அவருக்கு ஆபத்துகூட வரலாம். ஆனாலும் ஒரு க்ளூ மட்டும். அவர் ஒரு போலீஸ் அதிகாரி!
பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி
'ஆந்திர மாநில அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு வடை, பொங்கல், தண்ணீர் போன்றவை வழங்கப்படும்’ என்று அந்த மாநில போக்குவரத்து அதிகாரி ரெட்டியப்பா சொல்லி இருப்பதைக் கவனித்தீரா?
'எங்க பாக்கெட்ல மிச்சம் மீதி இருக்கிறதையும் பிடுங்காம இருந்தாப் போதும்’ என்கிறான் தமிழ்நாட்டுப் பயணி!
கே.எஸ். சம்பத்குமார், பெங்களூரு
அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா குடும்பத்தினர் நீக்கப்பட்டதால்,மக்களிடம் ஜெயலலிதாவின் செல்வாக்கு உயரும் எனக் கருதலாமா?
சசிகலா இருந்தவரை, சொல்ல ஒரு காரணம் இருந்தது. அவர் நீக்கப்பட்டு விட்டதால் இனி நல்லது, கெட்டது அனைத்துக்கும் ஜெயலலிதாதான் பொறுப்பேற்க வேண்டும். இனி, ஜெ. நடந்து கொள்ளும் முறையில்தான் செல்வாக்கு உயரும்!
ஜி.அர்ஜூனன், திருப்பூர்.7
சுமார் 11 கோடிப் பேர் பதிவு செய்துள்ள நிலையில் ஆதார் அடையாள அட்டைக்கு உள்துறை அமைச்சகம் மங்களம் பாடி விட்டதே?
இப்படி ஒரு வதந்தி எப்படிப் பரவியது என்றே தெரியவில்லை. தமிழகத்தில் அனைத்து மாவட்டத் தலைமை அஞ்சல் நிலையங்களிலும் இன்று வரை ஆதார் அடையாள அட்டைக்கான விண்ணப்பப் படிவம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த வார நிலவரப்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மட்டும் 30 ஆயிரத்து 996 பேர் இந்த அட்டைக்கு விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு அட்டைகள் தயாராகின்றன. மார்ச் மாதத்துக்குள் அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் இத்தகைய படிவத்தை வழங்க ஏற்பாடும் செய்து வருவதாக இதன் அதிகாரப் பொறுப்பில் இருப்பவர்கள் சொல்கிறார்கள். ஆனால், ஆதார் திட்டத்துக்கு மங்களம் பாடுவதாகச் செய்தி பரப்பிய நல்லவர் யார் எனத் தெரியவில்லை.
பொன்னாபுரம் ப.சிவகுமார்பிரபு, திருப்பூர். 6
பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் தினமும் தேனி, கம்பம், கூடலூர், போடி என்று கூடி முழக்கம் இட்ட பிறகும் மத்திய அரசு முல்லைப் பெரியாறு விவகாரத்தில் மௌனம் சாதிப்பது ஏன்?
இதற்கெல்லாம் மன்மோகன் அசைந்து கொடுக்க மாட்டார். அவரது பதவிக்கு ஆபத்து என்றால் மட்டும்தான் உஷாராகிச் செயல்படுவார். எனவே, காங்கிரஸ் அரசாங்கத்தை ஆதரிக்கும் கட்சிகள் அதற்கான ஆதரவை வாபஸ் பெறக் கடிதம் கொடுக்கட்டும். மறுநிமிடமே, மன்மோகன் வாயைத் திறப்பார். மக்கள் கூட்டமாகக் கூடி முழக்கம் செய்கிறார்கள் என்பதெல்லாம் அவருக்கு பெரிய விஷயம் அல்ல. அவர் மக்களைச் சந்திக்காமல் எம்.பி. ஆனவர். பிரதமரும் ஆனவர்!
நித்திலா செல்வராஜ், வில்லிவாக்கம்
தமிழ்நாட்டில் காமராஜர், ஓ.பன்னீர் செல்வம்... ஆகிய இரண்டு பேரைத் தவிர வேறு எந்த முதல்வரும் தமிழன் இல்லை என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளது உண்மையா?
அவர்கள், வன்னியர்களுக்காக கட்சி நடத்துகிறார்களா? அல்லது ஒட்டு மொத்தத் தமிழர்களுக்காகவும் கட்சி நடத்துகிறார்களா என்பதை முதலில் தெளிவுபடுத்த வேண்டும். அதன் பிறகு, இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லலாம்!
இரா.வளன், புனல்வாசல்
தமிழ்நாட்டு அரசியல் - கேரள மாநிலத்து அரசியல்... என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
அநியாயத்துக்கு ஒன்று சேர்கிறார்கள் அவர்கள். ஆனால், நியாயமான கோரிக்கைக்குக்கூட ஒன்று சேர மறுக்கிறார்கள் இவர்கள்.
உதயமூர்த்தி, சாத்தூர்
கட்சிக்கு அடிப்படை... தலைவனா? தொண்டனா?
தொண்டர்கள்தான் முக்கியம்! தன்னுடைய தோழன் சிவவர்மாவிடம், பகத்சிங் சொன்னதை நினைவுபடுத்த முடியும்.
'வைரங்கள் மாளிகையின் எழிலை அதிகரிக்கலாம். பார்ப்பவர் கண்ணுக்கு அது வியப்பையும் அளிக்கலாம். ஆனால், மாளிகையின் அஸ்திவாரமாக அவை ஆக முடியாது. மாளிகையை நீண்ட காலத்துக்கு நிறுத்திப் பிடிக்க அவற்றால் முடியாது. அஸ்திவாரத்துக்குள் விழுந்து கிடக்கும் சாதாரணக் கல்லுக்கு உள்ள முக்கியத்துவம் அந்த வைரத்துக்கு இல்லை’ என்றார் பகத்சிங். ஆனால், அந்தத் தொண்டன்தான் எல்லாக் கட்சியிலும் கண்ணீர் வடித்துக்கொண்டு இருக்கிறான்!
கோ.பாஸ்கர், இளங்கார்குடி
நிலஅபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து போன்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியில் வருபவர்கள் வெற்றிப் புன்னகையோடும் வீசும் கைகளோடும் வெளியே வருகிறார்களே... இவர்கள் என்ன புறநானுற்று வீரர்களா?
இங்கே எல்லாமே வீரம்தான். வரிப்புலியே வருக... சிங்கங்களே திரள்க... யுத்தத்துக்குத் தயாராகு... நாளை நாள் குறிக்கப்படும்.. களம் காண்போம் வா... என்று, எப்போதும் யுத்தம் நடக்கும் சூழல்தான் இருக்கிறது. வெளிநாட்டில் இருக்கிற ஒருவர் இந்த அறிக்கைகளைப் படித்தால், 'தமிழ்நாட்டில் ஏதோ ஒரு சண்டை நடக்கிறது’ என்று நினைத்து பயந்து போவார்கள்!
சிவராஜ் கண்ணன், வந்தவாசி
கட்சியைவிட்டு நீக்கப்பட்டதோடு நடவடிக்கை முடிந்துவிடுகிறதா?
இல்லை! ரெய்டு, ரெக்கவரி நடந்து கொண்டு இருக்கிறது!
*********************************************************************************''கட்சிப் பிரச்னை அல்ல... இனப் பிரச்னை!''
போயஸை விளாசிய சுப.வீ
''தலைப்பைப் பார்த்துவிட்டு 'இது என்ன விடுகதையா?’ என்று கேட்கிறார்கள். 'இல்லை.... இந்த நாட்டில் இருந்து விடுவிக்கப்பட வேண்டிய கதை’. பெரியாறு அணையிலே இருக்கிற நீர் நமக்கு வேண்டும் என்று கேட்கிறோம். தர மறுக்கிறார்கள். கூடங்குளத்திலே அணு உலை வேண்டாம் என்கிறோம். தந்தே தீருவோம் என்கிறார்கள்.
'சுண்ணாம்புக் காரையால் கட்டப்பட்டதால், பெரியாறு அணை பலவீனமானது’ என்று, அதை இடிப்பதற்கு காரணம் சொல்கிறார்கள். சிமென்ட் காரையை விடவும் சுண்ணாம்புக் காரை பலவீனமானதுதான். ஆனால், ஒரு உண்மை என்ன தெரியுமா? நாள் ஆக ஆக சிமென்ட் இளகும்; சுண்ணாம்பு இறுகும்.
'பூகம்பம் வந்தால் பெரியாறு அணை உடைந்துவிடும். எனவே, பக்கத்திலேயே இன்னொரு அணை கட்டப் போகிறோம்’ என்றும் ஒரு காரணம் சொல்கிறார்கள். அம்பத்தூர் பேருந்து நிலையத்துக்கு வரும் பூகம்பம் அம்பத்தூர் ரயில் நிலையத்துக்கு வராதா? நான்கூட இதுகாலம்வரை கேரளச் சகோதரர்களை புத்திசாலிகள் என்றல்லவா நினைத்திருந்தேன். சொல்லுகிற பொய்யைக்கூட பொருந்தச் சொல்லத் தெரியவில்லையே!
நெய்வேலியில் உற்பத்தி ஆகிற மின்சாரத்தை இன்றைக்கும் கர்நாடகா, கேரளாவுக்குப் பிரித்துக் கொடுக்கிறது மத்திய அரசு. மாநிலங் களுக்கு இடையே மின்சாரத்தைப் பகிர்ந்து அளிக்கும் உரிமை மத்திய அரசுக்கு இருக்கிறது என்றால், நீரைப் பகிர்ந்து அளிக்கும் உரிமை இல்லையா? இல்லை என்றால், நீ விலகிக் கொள். எங்கள் உரிமையை நாங்கள் காப்பாற்றிக் கொள் கிறோம்.
இந்தியாவின் மின்சாரத் தேவையில், வெறும் 2.7 சதவிகிதம் மட்டுமே அணு உலையில் இருந்து பெறப்படுகிறது. ஆனால், அதற்காக செலவழிக்கப்படும் தொகையோ மிகஅதிகம். அணு உலையால் வரும் ஆபத்துக்களோ அதை விடவும் அதிகம். ஆனால், 'கூடங்குளம் அணு உலை மிகவும் பாதுகாப்பனது. 6.5 ரிக்டர் வரை பூகம்பம் வந்தாலும் ஒன்றும் ஆகாது’ என்கி றார்கள். அப்படி என்றால் '6.6 ரிக்டர் அளவில் பூகம்பம் வந்தால், மக்கள் அழிந்து விடுவார்கள்’ என்றுதானே அர்த்தம்.
மத்திய அமைச்சர் நாராயணசாமியும் 'அது ரொம்பவும் பாதுகாப்பானது’ என்கிறார். அவ்வளவு பாதுகாப்பானது என்றால், இந்த அணு உலைக் கழிவுகளை எல்லாம் ஒரு பீப்பாயில் அடைத்து நாடாளுமன்றத்தின் நடுக்கூடத்தில் வைத்து விடலாமா? உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே... அணு உலை பாதுகாப்பானது அல்ல.
இதைத் தொடங்கிய ரஷ்யாவிலேயே இன்று அணு உலை கிடையாது. ஜெர்மனியில் அனைத்து அணு உலைகளும் மூடப்பட்டு விட்டன. ஐரோப்பிய நாடுகளிலும் இல்லை. தொழில் நுட்பம் மிகுந்த ஜப்பானின் புகுஷிமோ அணு உலை விபத்துக்குப் பிறகு ஏற்பட்ட கதிர் வீச்சின் பாதிப்பு இன்னும் பல தலைமுறைகளைப் பாதிக்கும் என்கிறார்கள். ஜப்பானை விடவா நமக்குத் தொழில் நுட்பம் தெரியும்?
அணையிலும் உலையிலும் இந்த விலை ஏற்றத்தை கொஞ்சம் மறந்துபோய் விட்டார்கள் நம் மக்கள். செம்மொழி நூலகம், புதிய தலைமைச் செயலகம், அண்ணா நூலகம் ஆகியவற்றை எல்லாம் இந்த அம்மையார் இழுத்து மூடியபோதும் தமிழனுக்குக் கோபம் வரவில்லை. 13,000 மக்கள் நலப்பணியாளர்களை தெருவில் நிறுத்திய போதும்கூட 'அது அவர்களது பிரச்னை’ என்றுதானே இருந்தான். எப்போது அவனுக்கு கோபம் வந்தது? காலையில் எழுந்து பால் வாங்கும்போதுதானே கை சுட்டது. பேருந்திலே ஏறி உட்காரும்போதுதானே இருக்கை சுட்டது. வாக்களித்த மக்களுக்கு விலையேற்றம், வரிச்சுமை, மின்வெட்டைத் தந்திருக்கிறது தமிழக அரசு. ஆனால், வாக்களிக்காத யானைகளுக்கு குதூகலம், கொண்டாட்டம், புத்துணர்வைத் தந்து இருக்கிறது.
'நான் ஆட்சிக்கு வந்த ஆறு வார காலத்திலேயே, தமிழகத்தை மின்வெட்டு இல்லாத மாநிலமாக்குவேன்’ என்றாரே அம்மையார். ஆறு மாத காலம் ஆகிவிட்டதே...! சென்னையில் இருப்பவர்கள் ஒருமணி நேர மின்வெட்டோடு தப்பித்தீர்கள். மற்ற நகரங்களில் தினமும் ஐந்து மணி நேரம். எந்தப் பத்திரிகையாவது இதைக் கேட்டதா? 'இந்த ஆட்சி மோசமான ஆட்சி’ என்று விஜயகாந்தே சொல்கிறார். இதிலிருந்து நமக்குப் புரிகிற ஒரே உண்மை.... விஜயகாந்துக்கே புரிந்து விட்டது என்றால், கடைசித் தமிழனுக்கும் புரிந்து விட்டது’ என்றல்லவா பொருள்!
கூடிக்கலந்து முடிவெடுக்கும் ஜனநாயகம் எல்லாம் அம்மையாருக்குத் தெரியாது. மக்கள் நலப்பணியாளர்களை வீட்டுக்கு அனுப்புவது என்றாலும் சசிகலாவை வெளியேற்றுவது என்றாலும் ஒரே நொடிக்குள் முடிவெடுப்பதுதான் அவரது ஜனநாயகம்.
அவர்களுக்குள் உண்மையான சண்டையா? அல்லது சண்டைக் காட்சியா? என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. அது அவர்களது உட்கட்சிப் பிரச்னை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், சசிகலாவை வெளியேற்றிவிட்டு போயஸ் தோட்டத்துக்குள் சோ வந்திருக்கிறாரே... அது கட்சிப் பிரச்னை அல்ல; இனப் பிரச்னை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்'' என்ற கர்ஜனையோடு பேச்சை முடித்தார் சுப.வீரபாண்டியன்!
- த.கதிரவன்
தற்கொலை அல்ல, கெளரவக் கொலை!
திசை திரும்பிய மாணவி மரணம்
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப் பூண்டியை அடுத்த பாதிரிவேடு கிராமத்தில் அரசினர் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் ப்ளஸ் டூ மாணவர்கள் ஐந்து பேரும், ப்ளஸ் ஒன் மாணவிகள் இருவரும் நட்போடு பழகி இருக்கிறார்கள். இந்த நட்பு அளவுக்கு மீறி, 'விபரீத’ எல்லைக்குள் நுழைந்திருக்கிறது. கடந்த 17-ம் தேதி சனிக்கிழமை பள்ளி விடுமுறை. ஸ்பெஷல் கிளாஸ் என்று பொய் சொல்லிவிட்டு பள்ளிக்கு வந்த ஏழு பேரும், எசகுபிசகான பாடம் படித்திருக்கிறார்கள். அதனை அவர்களில் ஒரு மாணவன் செல் போனில் படம் பிடித்தும் வைத்துள்ளான். பேச்சுவாக்கில், அந்தப் படங்களை சில மாணவர்களிடம் காட்டி இருக்கிறான். அது மற்றவர்களுக்கும் பரவிப் பரவி, இன்டர்நெட் வரை படம் போயேவிட்டது.
உடனே, தலைமை ஆசிரியர் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவி கள் அத்தனை பேரையும் பள்ளியை விட்டு நீக்கியுள்ளார். இந்த விவகாரத்தில் சிக்கியவர்களில் செதில்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த திலகவதியும் ஒருவர். அவர், 21-ம் தேதியன்று தனது வீட்டில் பிணமாக தொங்கினார். 'ஆபாசப் பட விவகாரத்தால்தான் மனமுடைந்து திலகவதி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு காரணமாக ஐந்து மாணவர்களையும் கைது செய்ய வேண்டும்’ என்று, மாணவியின் பெற்றோரோடு சேர்ந்துகொண்டு, ஏரியாவாசிகளும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். அதனால், தற்கொலைக்குத்தூண்டியதாக ஐந்து மாணவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்த பாதிரிவேடு போலீஸார், கங்கா, சுமன், கார்த்திக் என்ற மூன்று மாண வர்களைக் கைது செய்தார்கள். தங்கராசு மற்றும் செல்வகுமார் ஆகிய இருவரும் தலைமறைவாகி விட்டார்கள். இந்த நிலையில், வடக்கு மண்டல ஐ.ஜி-யான சைலேந்திரபாபு ஸ்பாட்டுக்கே வந்து விசாரணை நடத்த, திலகவதி மரணத்தில் திகில் திருப்பம்.
'திலகவதியை அவரது சித்தப்பா ஹரி கொலை செய்து விட்டார்’ என்று அறிவித்திருக்கும் பாதிரிவேடு போலீஸாரிடம் விசாரித்தோம். ''திலகவதியின் மரணம் பற்றி தகவல் அறிந்து நாங்கள் ஸ்பாட்டுக்குச் சென்றபோது, அவரது பிணம் கீழே இறக்கி வைக்கப்பட்டு இருந்தது. அப்போதே எங்களுக்கு சந்தேகம். ஸ்பாட்டுக்கு வந்து விசாரணை நடத்திய ஐ.ஜி. சைலேந்திரபாபு, 'இது தற்கொலையாகத் தெரியவில்லை. நன்றாக விசாரியுங்கள்’ என்று அறிவுறுத்திவிட்டுச் சென்றார். அதனையடுத்து திலகவதியின் உறவினர்களிடம் கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி. குமார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்த.... உண்மை வெளிவந்தது.
'குடும்பத்துக்கே பெரிய அவ மானத்தை ஏற்படுத்தி விட்டார் திலகவதி என்று, அண்ணி பத்மாவதி அழுதார். அதனால், இந்தக் களங்கத்தைத் துடைக்க எனக்கு வேறு வழி தெரியவில்லை. சம்பவத்தன்று அண்ணன் வீட்டுக்குச் சென்று திலகவதியிடம் விசாரித்தேன். ஏதேதோ சொல்லி மழுப்பினார். ஆத்திரத்தில் ஓங்கி அடித்தேன். மயங்கி விழுந்து விட்டார். வீட்டில் இருந்த புடவையால், கழுத்தை இறுக்கிக் கொலை செய்தேன். பின்னர், மின் விசிறியில் பிணத்தை தொங்கவிட்டுவிட்டு கிளம்பி வந்துவிட்டேன்’ என்று வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார் ஹரி. இந்தக்
கொலைக்கு உடந்தையாக இருந்த காரணத்தால் திலகவதியின் அம்மா பத்மாவதியையும் கைது செய்திருக்கிறோம்'' என்று சொன்னார்கள்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வராஜி டம் பேசினோம். ''இந்த ஐந்து மாணவர்களும் செய்த அடாவடி அதிகம். நான் இந்தப் பள்ளிக்கு வந்தே நான்கு மாதங்கள்தான் ஆகிறது. இந்த ஐந்து மாணவர்களையும் பலமுறை பள்ளியை விட்டு துரத்தி இருக்கிறேன். பின்னர், மன்னிப்புக் கடிதம் கொடுத்து சேர்ந்து விடுவார்கள். சரி... இன்னும் நாலு மாசத்துல ப்ளஸ் டூ முடிச்சுட்டுப் போயிடுவாங்க... வாழ்க்கையைக் கெடுக்க வேண்டாம் என்று நினைத்துதான் விட்டு வைத்தேன். ஆனால், அதற்குள் இப்படி நடந்து விட்டது'' என்றார் வருத்தமாக.
முதன்மைக் கல்வி அலுவலர் மோகன் குமாரை சந்தித்தோம். ''குறிப்பிட்ட ஐந்து மாணவர்களும் கடந்த ஆண்டும் இதேபோன்று ஒரு பாலியல் புகாரில் சிக்கினார்கள். அப்போதே டி.சி. கொடுத்தோம். பின்னர், மாணவர்களின் பெற்றோர் மன்னிப்புக் கேட்டதால் மீண்டும் பள்ளியில் சேர்த்தோம். திருந்தி விடுவார்கள் என்று நினைத்தோம், ஆனால், இந்த அளவுக்குக் கெட்டுப் போய், தீராத அவமானத்தை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். மாணவர்கள் செய்யும் தவறுகளை ஆசிரியர்கள் சுட்டிக் காட்டிய பிறகும், பெற்றோர் பொறுப்பு இல்லாமல் இருந்திருக்கிறார்கள். இனி, பள்ளிகளில் கண் காணிப்பை தீவிரப்படுத்துவோம்'' என்றார்.
இந்த விவகாரம், பருவ வயதில் குழந்தைகளை வைத்திருக்கும் ஒவ்வொரு பெற்றோருக்கும் பாடம்!
- பி.சுபாஷ் பாபு
வேலை வேண்டும்... மாநகராட்சி வேண்டாம்!
அலுமேலுரங்காபுர வேதனை
மனு நீதி நாளான கடந்த 19-ம் தேதி, வேலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு 50-க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டுவந்து புகார் கொடுத்தார்கள். அவர்களில் ஒருவரான ராதா நம்மிடம், ''விவசாயம்தான் எங்களுக்கு பிரதான தொழில். கூலி வேலையைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் தெரியாது. 2008-ம் ஆண்டு முதல் எங்கள் பகுதிகளைச் சேர்ந்த 900 பேர், மத்திய அரசின் 100 நாள் வேலைத் திட்டதில் சேர்ந்தோம். கூலியாக 45 ரூபாயில் ஆரம்பித்து 105 ரூபாய் வரைக்கும் கொடுத்தாங்க. ஆனால், கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு எங்கள் அனைவரையும் திடீரென நீக்கி விட்டார்கள். காரணம் கேட்டால், 'இதுவரையில் உங்கள் ஏரியா சத்துவாச்சேரி நகராட்சியில் இருந்தது. இப்போது மாநகராட்சி ஆகி விட்டதால், 100 நாள் வேலைத் திட்டம் இங்கு கிடையாது’ என்று சொல்கிறார்கள். இதை நம்பி இருக்கிற 900 பேரோட வாழ்க்கையைப் பறிச்சிட்டு, மாநகராட்சியா விரிவுபடுத்துறதுல என்ன நன்மை சார்?'' என்றார் கலங்கியபடி.
மக்களை கலெக்டர் அலுவலகத்துக்கு அழைத்து வந்த தி.மு.க-வைச் சேர்ந்த கவுன்சிலர் அருள், ''கடந்த நான்கு வருஷமா அந்தப் பகுதி மக்கள் எல்லோரும் இந்த 100 நாள் திட்டத்தினால் பயன் அடைந்தார்கள். கிடைக்கும் கூலியை வைச்சுகிட்டு குடும் பத்தின் எல்லா செலவு களையும் சமாளிச்சாங்க. இப்ப திடீரென வேலையை விட்டு நீக்கிட்டதால், அவங்க வேற வேலையை தேட முடியாமல் ரொம்பவும் கஷ்டப்படுறாங்க. இதுகுறித்து மேயர் கார்த்தியாயினியிடம் மனு கொடுத்தோம். நடவடிக்கை எடுப்பதாகச் சொன் னாங்க. ஆனால், இதுவரை இல்லை. அதனால்தான் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளோம். அவராவது நன்மை செய்வார் என்று நம்புகிறோம்'' என்றார்.
மேயர் கார்த்தியாயினியிடம் கேட்டபோது, ''மாநகராட்சியில் அலமேலுரங்காபுரத்தைச் சேர்த்த போதே 100 நாள் வேலைத் திட்டம் ரத்தாகிவிட்டது. இதை அவர்கள் என்னிடம் மனு கொடுத்தபோதே தெளிவாகச் சொல்லிவிட்டேன். என்னால் இதில் வேறு எதுவும் செய்ய முடியாது!'' என்றார் திட்ட வட்டமாக.
கலெக்டர் நாகராஜன், ''விதிமுறைப்படி மாநக ராட்சி பகுதிகளில் 100 நாள் வேலைத் திட்டத்தை அமல்படுத்த முடியாது. வேலை இழந்த பெண்கள், மகளிர் சுய உதவிக் குழு அமைத்து என்னிடம் வந்தால், வேலைக்கு ஏற்பாடு செய்கிறேன்'' என்றார்.
- கே.ஏ.சசிகுமார்
படங்கள்: ச.வெங்கடேசன்
''எங்கள் பிணத்தின் மீதுதான் தண்ணீர்க் குழாய் போகும்..''
கொந்தளிக்கும் கடலூர் விவசாயிகள்
என்னதான் நடந்தது என்று, பெருமாள் ஏரி நீர்ப் பாசன விவசாயிகள் சங்கச் செயலாளர் தானூர் சண்முகத்திடம் கேட்டோம். ''கடலூர் மாவட் டத்தில் வீராணம் ஏரிக்கு அடுத்த பெரியது, இந்த பெருமாள் ஏரிதான். இந்த ஏரியின் நீர்ப் பாசனத்தை நம்பித்தான் சுமார் 30 ஆயிரம் ஏக்கரில் விவசாயம் நடக்கிறது. நான்கு லட்சம் விவசாயத் தொழிலாளர் குடும்பங்கள் பிழைப்பு நடத்தி வருகிறோம். எங்கள் வாழ்வாதாரமாக இருக்கும் இந்த ஏரியில் இருந்து, தனியார் நிறுவனமான நாகர்ஜூனா ஆயில் கார்ப்பரேஷனுக்கு தண்ணீர் கொண்டு செல்லப் பார்க்கிறார்கள்.
ஏரியின் பல பகுதிகளில் 1,000 அடியில் 10 போர்வெல் போட்டு, நீர் எடுக்க அனுமதி கேட் டிருக்கிறார்கள். அவர்கள் தண்ணீரை உறிந்து எடுத்து விட்டால், நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு... கடல் நீர் உள்ளே புகுந்துவிடும். அப்புறம் 30 கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்திற்கு குடிக்கவும் தண்ணீர் கிடைக்காது.
நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்குள் கடல் நீர் உள்ளே புகுந்துவிடாமல் தடுப்பதே இந்த ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகள்தான். அதிலும் குழாய் போட்டு நீரை எடுத்துவிட்டால் அடுத்து நாங்கள் விவசாயம் செய்ய முடியாது... சாப்பிடவும் முடியாது'' என்று பதறினார்.
''விவசாயக் குடும்பங்களின் வயிற்றில் அடித்து ஒரு தனியார் நிறுவனத்துக்குத் தண்ணீர் எடுக்க அரசு அனுமதி கொடுத்தால், எங்கள் பிணத்தின் மீதுதான் அந்த தண்ணீர்க் குழாய் போகும்'' என்று கொதித்தார், சேத்தியாதோப்பு அணைக்கட்டு பாசன சங்க பொருளாளர் கோவிந்தராஜூலு.
இதுகுறித்து நாகர்ஜூனா ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி சத்திய சேகரிடம் விளக்கம் கேட்டோம். ''நாங்கள் அந்தப் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலம் இரண்டு ஏக்கரை குத்தகைக்குக் கேட்டு இருக்கிறோம். மற்ற படி அவர்கள் சொல்வது போன்று 1,000 அடியில் போர்வெல் போடுவதாக இல்லை'' என்றார்.
விவசாயிகளின் குற்றச்சாட்டு குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அமுதவல்லியிடம் பேசினோம். ''அந்த நிறுவனம் அனுமதி கேட்டு இருப்பது தொடர்பாக விவசாயிகளின் கருத்துகளைக் கேட்டு வருகிறோம். நிலத்தடி நீரை ஆய்வு செய்து பார்த்து விட்டுத்தான் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படும்'' என்று பட்டும் படாமலும் பேசினார்.
எந்த ஒரு முடிவாக இருந்தாலும் மக்களைப் பாதிக்காத வகையில் இருக்கட்டும்!
- க.பூபாலன், படங்கள்: எஸ்.தேவரஜன்
''நாங்க ஏழையாய் பிறந்தது தப்பா..?''
பரிதாபத்தில் வள்ளுவம்பாக்கம் மக்கள்
அப்படி என்ன பிரச்னை?
வள்ளுவம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த லட்சுமி நம்மிடம், ''எங்க ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பூர்வீகமா இந்தப் பகுதியில்தான் குடி இருக்கோம். எல்லோரும் கூலி வேலைக்குப் போறவங்க. எங்கள் காலனிக்கு எதிரே உள்ள இரண்டு ஏக்கர் நிலத்தை, ஆதி திராவிடர் நலத் துறையின் மூலம், எங்க ஆளுங்க 20 பேருக்குத் தந்தாங்க. நிலம் கிடைச்ச சந்தோஷத்துல அங்கே சின்ன சின்னக் குடிசை போட்டு குடி வந்தோம். பக்கத்தில் வேலி முட்கள் அதிகம் இருந்ததால், அந்த மரங்களை அப்புறபடுத்தி, சுத்தம் செஞ்சோம். அப்பத்தான் படியம் பாக்கம் அ.தி.மு.க. பிரமுகரான கங்கா தரன் எங்களை மிரட்டினார். 'இது எங்களுக்கு சொந்தமான சொத்து. அரசாங்கம் சொன்னா, உடனே வந்து உட்கார்ந்துடுவீங்களா? உடனே இங்கே இருந்து காலி பண்ணிட்டுப் போங்க’ன்னு மிரட்டினார். நாங்க அவர்கிட்ட, 'அரசாங்கம் எங்க மேல கருணைப்பட்டு நிலத்தைக் கொடுத்து இருக்காங்க. நாங்க எக்காரணத்தையும் கொண்டும் காலி பண்ண மாட்டோம்’னு தெளிவா சொல்லிட் டோம். நாங்க சொன்னதைக் கேட்டு கோபமாப் போனார்.
அடுத்துப் பேசிய வெங்கடேசன், ''அந்த நிலத்தை அரசாங்கம் எங்களுக்கு கொடுத்த சான்றிதழ்கள், உண்மையான பட்டா, பத்திரம் எல்லாம் இருந்தும், அந்த நிலம் எங்களுக்குத்தான் சொந்தம்னு ஒரு குடும்பமே எங்களுக்கு எதிரா இருக்காங்க. இப்பக்கூட போலீஸ் இந்தப் பகுதியில் பாதுகாப்புக்கு நிக்குது. அது எங்களைப் பாதுகாக்க இல்லை; கங்காதரன் தரப்பைப் பாதுகாக்கத்தான். அவங்ககூட சண்டை போட எங்களுக்கு செல்வாக்கும் இல்ல; அரசியல் பலமும் இல்ல! இந்த பிரச்னை ஆரம்பிச்சதில் இருந்து எங்களுக்கு குடிக்க தண்ணீர் சரியா வரலை. இடுகாட்டுக்குப் போகும் வழியில் இருந்த ஐந்து டியூப் லைட்களையும் எடுத்துட்டாங்க. அடிப்படை வசதிகளை எல்லாம் துண்டிச் சுட்டாங்க. நாஙக என்ன சார் பாவம் பண்ணினோம்?'' என்றார் ஆதங்கத்தோடு.
இது குறித்து ராணி பேட்டை டி.எஸ்.பி. லாவண் யாவிடம் பேசினோம். ''சம்பந்தபட்ட கங்காதரன் முன் ஜாமீன் வாங்கிட்டார். இருந்தாலும், நீதிமன்றத் தீர்ப்பு அந்தப் பகுதியைச் சேர்ந்த ஆதி திராவிடர் மக்களுக்கு சாதகமாக வந்துள்ளதால், அவர்கள் பயப்படத் தேவை இல்லை. அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கத்தான் காவலர்கள் இருக்கிறார்கள்'' என்றார்.
புகாரில் சிக்கியுள்ள கங்காதரன் தரப்பில் பேசினோம். ''அந்த பிரச்னை அப்போதே முடிஞ்சு போச்சுங்க. இப்ப அந்தப் பகுதி பக்கம் நாங்களும் சரி... கங்காதரனும் சரி... போறது இல்லை. அந்தப் பகுதி மக்களுக்கு உள்ள குறைபாடுகள் இன்னும் சில நாட்களில் தீர்க்கப்படும். அதுகுறித்து கடந்த பஞ்சாயத்துக் கூட்டத்திலேயே தீர்மானம் போட்டாச்சு'' என்று விளக்கம் கொடுத்தனர்.
தி.மு.க-வினர் மீது நில அபகரிப்புப் புகார் வந்தால், உடனே புயலெனப் பாயும் போலீஸார், இப்போது மட்டும் அமைதி காப்பது ஏனோ?
- கே.ஏ.சசிகுமார்
படங்கள்: ச.வெங்கடேசன்
''தீரவே தீராதா பேருந்து நிலைய விவகாரம்?''
கடுப்பில் கரூர் மக்கள்
''கரூர் பஸ் ஸ்டாண்ட் மூன்றரை ஏக்கரில் அமைந்துள்ளது. இங்கு தினசரி 600-க்கும் மேற்பட்ட புறநகர் பேருந்துகள், நூறுக்கும் மேற் பட்ட விரைவுப் போக்குவரத்துக்கழக பேருந்து கள், நகரப் பேருந்துகள் வந்து செல்கின்றன. பஸ் ஸ்டாண்டில் குறிப்பிட்ட அளவு பேருந்துகளை நிறுத்தவே இடம் இருப்பதால், பாதிக்கும் மேற்பட்ட பேருந்துகள் வழியிலேயே நிறுத்தப்படுகின்றன. அதனால் பேருந்து நிலையத்தில் கடும் இடநெருக்கடி ஏற்பட்டு, பயணிகள் சிக்கித் தவிக்கின்றனர். எனவேதான், பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்கிறோம்.
'பேருந்து நிலையத்தை மாற்றியாக வேண்டும்’ என்று போன ஆட்சிக்காலத்தில் கரூர் நகர்மன்றத்தில் ஒன்றுபட்டுக் குரல் கொடுத்தனர் தி.மு.க. கவுன்சிலர்கள். ஆனால், எங்கு பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்பதில் இரு பிரிவுகளாக நின்றனர். பேருந்து நிலையத்தை வெண்ணைமலை அருகே கொண்டுவர வேண்டும் என்று ஒரு தரப்பினர் சொல்ல... இன்னொரு தரப்போ, சுக்காலியூரில் அமைக்க வேண்டும் என்று குரல் கொடுத்தனர். தாந்தோன்றிமலை நகராட்சியிலும் இதே பிரச்னைதான். அதன் நகராட்சி தலைவராக இருந்த ரவி திருமாநிலையூரில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி மாநில அரசுக்கு அனுப்பி வைத்தார். எதுவுமே நடக்க வில்லை. பஸ் ஸ்டாண்ட் இங்கு வருகிறது; அங்கு வருகிறது என்று சொல்லி பொட்டல் காடுகளாக கிடந்த இடத்தின் விலையை அரசியல்வாதிகளும் நில புரோக்கர்களும் தாறுமாறாக ஏற்றிவிட்டதுதான் மிச்சம்'' என்று ஏகத்துக்கும் வருத்தம் காட்டினார்கள், கரூர்வாசிகள்.
தாந்தோன்றிமலை நகராட்சியின் முன்னாள் தலைவர் ரவியிடம் பேசியபோது, ''திருமாநிலையூரில் தான் பஸ் டிப்போ இருக்கிறது. அங்கே இருந்து பஸ் காலையில் கரூர் பஸ் ஸ்டாண்ட் செல்ல, இரவு ஹால்ட் ஆக என்று 10 கி.மீ பயணம் செய்ய வேண்டி இருக்கிறது. அதனால், மற்ற இடங்களில் பேருந்து நிலையம் அமைவதைவிட, திருமா நிலையூரில் அமைந்தால்தான் சரியாக இருக்கும் என்று தீர்மானம் நிறைவேற்றினோம். அதற்குள் ஆட்சி மாறிவிட்டது. இப்போது வந்திருக்கும் அ.தி.மு.க. அரசு எதையும் செய்வது போன்று தெரியவில்லை'' என்று தன் பங்குக்கு வருத்தம் காட்டினார்.
தற்போதைய நகர்மன்றத் தலைவர் 'தமிழ்நாடு’ செல்வராஜிடம் கேட்டபோது, ''பஸ் ஸ்டாண்டை இடம் மாற்றும் எண்ணம் இல்லை. இப்போதைக்கு பஸ் ஸ்டாண்டில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றி, அதனை விரிவாக்கம் செய்யப்போறோம்'' என்று சொன்னார்.
மக்களுக்கான பணிகள் தடங்கல் இல்லாமல் தொடரட்டும்!
- ஞா.அண்ணாமலை ராஜா
இலுப்பூர் மருத்துவமனைக்கு நல்ல நேரம்!
ஜூவீ. ஆக்ஷன்
இலுப்பூர் அரசு மருத்துவ மனையில், கட்டடங்களை மறைத்து காடாக வளர்ந்திருந்த முட்புதர்கள்தான் நம்மை வரவேற்றது. நம்மிடம் பேசிய ஷாஜகான், ''இலுப்பூரைச் சுத்தி இருக்குற 15 கிராமங் களுக்கு இதுதான் உயிரைக் காப்பாத்துற ஆஸ்பத்திரி. இங்க அஞ்சு டாக்டர்கள் பணியில் இருக்கணும். ஆனா, ரெண்டே பேருதான் இருக்காங்க. எக்ஸ்-ரே மெஷின் இருக்கு ஆனா எடுக்கத்தான் ஆள் இல்லை. ஸ்கேன் வசதி இல்லை. அதனாலேயே கர்ப்பிணிகள் யாராவது வந்தா, வேற ஆஸ்பத்திரிக்கு போங்கன்னு சொல்லிடுறாங்க. ராத்திரியில் எந்த கேஸ் வந்தாலும், புதுக்கோட்டைக்கோ இல்லைன்னா திருச்சிக்கோ போங்கன்னு அனுப்பிடுறாங்க. என்னைக்காவது அதிசயமா ஒரு ஆபரேஷன் செய்வாங்க. அந்த நேரத்துல கரன்ட் போயிடுச்சுன்னா அவ்வளவுதான்.
ஜெனரேட்டர் இருந்தாலும் அது இயங்காது. சுத்தி மண்டிக் கிடக்குற புதர்கள்ல இருந்து அப்பப்போபாம்புங்க ஆஸ்பத்திரிக்குள் வந்துடும். அந்த சமயத்துல வெளியே ஓடித்தான் உயிரைக் காப்பாத்திக்கணும். கிராமப்புறங்களில் இருக்குறவங்களுக்கு அரசு மருத்துவமனைகள்தான் ஒரே கதி. இது இவ்ளோ மோசமா இருந்தா... எங்கே தான் போவாங்க'' என்று ஆதங்கப்பட்டார்.
மருத்துவமனை ஊழியர் ஒருவரிடம் பேசினோம். ''தலைமை மருத்துவர் பொறுப்பில் ஒரு டாக்டர் இருந்தார். கொஞ்ச நாளா, அவரும் வர்றது இல்லை. துப்புரவுப் பணியாளர்கள் போதுமான அளவு இல்லை. இருக்கிறவங்களையும் வேற ஊருக்கு டெபுடேஷன்ல அனுப்பிடுறாங்க. மருத்துவமனையில் இருக்குற அலுவலகத்துல கடந்த ரெண்டு வருஷமாவே ஆள் இல்லை. மொத்தத்துல கட்டடங்களும், மருந்துகளும் மட்டும்தான் இருக்கு'' என்று பட்டியல் இட்டார்.
மொத்த விஷயங்களையும் கேட்டு அப்படியே, தொகுதி எம்.எல்.ஏ-வான விஜயபாஸ்கர் கவனத்துக்கு கொண்டு சென்றோம். ''இன்னும் இரண்டு நாட்களில் ஒரு சில குறைகளைப் போக்கி விடுகிறேன். மற்ற குறைகளை அம்மாவின் கவனத்திற்கு கொண்டு சென்று விரை விலேயே சரி செய்கிறேன்'' என்றார். சொன்னது போலவே, இரண்டு நாட்களுக்குள் இரண்டு மருத்துவர்கள் புதிதாக பணியில் அமர்ந்து விட்டார்கள். சுற்றி கிடந்த முட்புதர்கள் அகற்றப்பட்டுவிட்டன. ஜெனரேட்டரும் சரி செய்யப்பட்டிருக்கிறது. நம்மை தொடர்புகொண்ட விஜயபாஸ்கர், ''இன்னும் ஒரே மாதத்தில் ஸ்கேன், எக்ஸ்ரே உள்ளிட்ட பிற வசதிகளையும் செய்து கொடுத்து விடுகிறேன்'' என்று உறுதியளித்தார்.
அப்படியே செய்யட்டும்!
- வீ.மாணிக்கவாசகம்
***********************************************************************************************************
திருச்சி கட்... திருவனந்தபுரம் ஓகே!
திசை மாறும் 'ஏர் இந்தியா' விவகாரம்
திருச்சியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேரடியாக துபாய், அபுதாபி, சிங்கப்பூர், மலேசியா மற்றும் இலங்கைக்கு விமான சேவைகள் நடைபெற்று வந்தன. இந்த ஊர்களுக்கு நியாயமான கட்டணத்தில் பொதுத் துறை நிறுவனமான 'ஏர் இந்தியா’ தினந்தோறும் விமானங்களை இயக்கி வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக திருச்சியில் இருந்து இயக்கி வந்த பல அயல்நாட்டு விமான சேவைகள் அவ்வப்போது நிறுத்தப்பட்டு வருவதுதான் பயணிகளைக் கவலையில் ஆழ்த்தி உள்ளது.
சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பின் திருச்சி மண்டலத் தலைவ ரான சுப்புவிடம் பேசினோம்.
'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்திற்கு திருச்சியில் மட்டும் ஆண்டிற்கு 110 கோடி ரூபாய்க்கு பிசினஸ் நடந்து வந்தது. திருச்சி வழியாக இந்த நிறுவனம் இயக்கிய அனைத்து விமானங்களிலும் இருக்கைகள் நிரம்பி, லாபகரமாகவே செயல்பட்டன. அப்படி இருந்தும் லாபகரமான வழித்தடங்களில் இயங்கிக் கொண்டிருந்த சில விமானங்களை முழுவதுமாக ரத்து செய்தும், சில வழித் தடங்களில் விமான சேவையைக் குறைத்தும் வருகின்றனர்.
திருச்சி - கோலாலம்பூர் தினசரி விமான சேவையும், திருச்சி - கொழும்பு தினசரி விமான சேவையும்முழுவதும் ரத்து செய்யப்பட்டுவிட்டது. திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு வாரம் 14 முறை இயங்கி வந்த விமான சர்வீஸில், ஐந்து சர்வீஸ் குறைக்கப்பட்டுள்ளது. திருச்சி - அபுதாபி விமான சேவை வாரம் ஒரு டிரிப் குறைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து சென்னைக்கு நடைபெற்று வந்த தினசரி விமான சேவை வாரம் ஐந்து டிரிப்பாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த ரூட்களில் பல நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்தால்தான் சீட் கிடைக்கும் என்ற நிலை இருக்கும்போது, இந்த சேவைகளை ரத்து செய்ததன் மர்மம் புரியவில்லை.
நியாயமான கட்டணத்தில் இயங்கிக் கொண்டிருந்த ஏர் இந்தியா விமானங் கள் ரத்து செய்யப்பட்டதால், பல தனியார் விமான நிறுவனங்கள் மிக அதிகக் கட்டணத்தை வசூலித்து இந்த வழித்தடங்களில் விமானங்களை இயக்கி, கொள்ளை லாபம் பார்க்கின்றனர். திருச்சி யில் இருந்து கோலாலம்பூர், சிங்கப்பூர் செல்ல இருவழி பயண கட்டணமாக 12 ஆயிரம் ரூபாயில் பயணம் செய்து வந்தவர்கள், தற்போது தனியார் விமானங்களில் ஒரு வழிப் பயணக் கட்டணமாக மட்டுமே 21 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டியுள்ளது. திருச்சியில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு அதிக விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் இயக்க வேண்டும் என்ற எங்கள் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல், இருந்த சேவைகளையும் பறித்து விட்டார்கள்' என்றார் வேதனையுடன்.
'லாபத்தில் இயங்கிய திருச்சி வழியான ரூட்களை கட் செய்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம், புதிதாக திருவனந்தபுரத்தில் இருந்து சிங்கப்பூருக்கு விமான சேவையை துவக்கி உள்ளது. அந்த விமானத் திற்குப் போதிய பயணிகள் இல்லாமல், நஷ்டத்தில் இயங்கினாலும் நிறுத்தாமல் இயக்குகிறார்கள். மேலும், பல புதிய அயல்நாட்டு பயண சேவைகளை திருவனந்தபுரத்தில் இருந்து துவக்கவும் திட்டம் வைத்துள்ளது.
தமிழக முதல்வரின் தொகுதி அமைந்துள்ள திருச்சி மாவட்டத்தில், சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து உள்ளார் முதல்வர். அதில், சிங்கப்பூரில் உள்ளதைப் போன்ற சென்டோசா பூங்கா திட்டமும் ஒன்று. திருச்சி மாவட்டத்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் முதல்வரின் எண்ணத்திற்கு எதிராகவே, ஏர் இந்தியா செயல்படுகிறது. 'தனியார் விமான நிறுவனங்கள் கொள்ளை லாபம் சம்பாதிக்க வசதியாக அவர்களிடம் பெரும் தொகையைப் பெற்றுக்கொண்டு விமான சேவைகளை ஏர் இந்தியா நிறுத்தியிருக்கலாமோ?’ என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது' என்று டென்ஷன் ஆகிறார்கள், திருச்சியில் உள்ள விமான பயண ஏற்பாட்டாளர்கள்.
இதுகுறித்து பேசுவதற்காக 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ நிறுவனத்தின் திருச்சி மண்டல மேலாளர் ராதாகிருஷ்ணனைத் தொடர்பு கொண் டோம். 'நான் பிஸியாக இருக்கிறேன். சிறிது நேரம் கழித்துப் பேசுங்கள்’ என்றவர், அதன்பிறகு பலமுறை அவரை தொடர்புகொண்டபோதும், அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் நலனுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கும் கேரள அரசை கண்டித்து ஒட்டுமொத்த தமிழகமும் போராடிக்கொண்டு இருக்கிறது. இந்த சமயத்தில், வான் வழி பயண சேவையில் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட பல விமான சேவைகள் சத்தமில்லாமல் நிறுத்தப்பட்டு, கேரளாவிற்கு திருப்பிவிடப்பட்டுள்ளது, பல கேள்விகளை எழுப்புகிறது.
மாநில அரசு உடனடியாக இந்த விவகாரத்தைக் கண்காணிக்க வேண்டும்!
- அ. சாதிக்பாட்சா
படங்கள்: என்.ஜி. மணிகண்டன்
சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டும்!
சேலத்தைக் கதறடிக்கும் கடிதம்
செல்வராஜின் லெட்டர்ஹெட்டில், 'அன்புடையீர் வணக்கம்! கழக பொதுச்செய லாளர் தமிழக முதல்வர் மாண்புமிகு இதய தெய்வம் அம்மா அவர்கள் 19.12.2012 அன்று வெளியிட்ட, சின்ன அம்மா சசிகலா உட்பட 14 பேரை கழகத்தை விட்டு நீக்கிய அறிக்கை, என் மனதை மிகவும் வேதனை அடைய வைத்தது. கழகத்துக்காகவும், மாண்புமிகு அம்மாஅவர்களுக்காகவும் மிகவும் உழைத்த இவர்களை மீண்டும் கழகத்தில் இணைத்துக் கொள்ள மாண்புமிகு அம்மா அவர்கள் பரிசீலிக்க வேண்டுகிறேன். இச்செய்தியை தங்களின் பத்திரிகையில் வெளியிட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்’ என்று எழுதி அனைத்து பத்திரிகை அலுவலகங்களுக்கும் அ.தி.மு.க. தலைமைக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது.
இப்படி ஒரு கடிதம் எழுதியது உண்மையா என்று செல்வராஜிடம் விசாரித்தோம். ''நான் இப்போது சென்னையில்தான் இருக்கிறேன். அப்படி ஒரு கடிதத்தை நான் எழுதவே இல்லை. யாரோ விஷமிகள் என்னுடைய பழைய லெட்டர் பேடைப் பயன்படுத்தி எழுதி, அதில், என்னைப் போலவே போலிக் கையெழுத்துப் போட்டு இருக்கிறார்கள். நான் அம்மாவை தெய்வமாக மதிக்கக் கூடியவன். இந்தக் கடிதத்தைப் பற்றி தலைமையிடமும், காவல் துறையிடமும் புகார் கொடுக்கப் போகிறேன்'' என்றவரிடம், ''நீங்கள் ராவணனின் விசுவாசியாமே?'' என்று கேட்டோம்.
''யூகத்தின் அடிப் படையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. சேலம் மட்டும் அல்ல தமிழ்நாடுமுழுவதும் இருக்கும் அனைத்து அ.தி.மு.க-வினரும் அம்மாவின் விசுவாசிகளே தவிர, மற்ற யாருடைய விசுவாசியாகவும் இருக்க மாட்டார்கள்'' என்றார்.
என்னதான் நடந்திருக்கும் என்று சேலம் அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் விசாரித்தோம். ''செல்வராஜ் சேலம் மாநகர் மாவட்டச் செயலாளராக இருப்பது அம்மாவின் உண்மை யான விசுவாசிகள் யாருக்குமே பிடிக்கவில்லை. ஏனென்றால் இவர் கலியபெருமாள், ராவணனின் தீவிர ஆதவராளர். கட்சியில் இருக்கும் உண்மையான விசுவாசிகளை மதிக்க மாட்டார். மேயர் முதற்கொண்டு எல்லா எம்.எல்.ஏ-க்களையும் ஒருமையில்தான் பேசுவார். இவரைப் பற்றி தலைமைக்குப் புகார் அனுப்பினாலும் வேஸ்ட். அனுப்பப்படும் புகார் கடிதம், இரண்டே நாளில் எப்படியோ அவர் கைக்கே வந்துவிடும். உடனே எழுதியவர்களை அழைத்து, அந்தக் கடிதத்தைப் படித்துக் காட்டி, 'என்னை எவனும் ஒண்ணும் செய்யவே முடியாது’ என்று சொல்லி கிழித்துப் போடுவார். சசிகலாவும் அவரது ஆட்களும் இருக்கும் வரை இவரை யாரும் எதுவும் செய்ய முடியவில்லை. அதனால் சசிகலா வெளியேறிய சூழ்நிலையில், இவரது உண்மை முகம் அம்மாவுக்குத் தெரியவேண்டும் என்பதற்காக இப்படி ஒரு கடிதத்தை யாராவது உண்மைத் தொண்டர் எழுதி இருக்கலாம்'' என்றார்கள்.
நல்லா சொல்றாங்கப்பா டீட்டெய்லு!
- வீ.கே.ரமேஷ்
படம்: எம்.விஜயகுமார்
டாஸ்மாக் தொல்லை தீர்ந்தது!
ஆக்ஷன் ஜூ.வி., அதிரடி கலெக்டர்!
சேலம் இளம்பிள்ளையைச் சேர்ந்த தமிழ்மணியை சந்தித்தோம். ''நான் இந்த வார்டு கவுன்சிலர். குருநாத சுவாமி கோயில் தெருவில் இருக்கும் டாஸ்மாக் கடைதான் எங்க ஏரியாவுக்குப் பெரிய பிரச்னை. அந்த கடைக்கு பார் இல்லை என்பதால், குடிக்க வர்றவங்க தெருவிலேயே உடகார்ந்து டுறாங்க. பக்கத்து வீட்டு வாசலிலும் உட்கார்ந்து குடிக்கிறாங்க. அந்தப் பக்கம் போகும் பெண்களைக் கிண்டல், கேலி செய்வது, பெண்கள் இருக்கும் நினைப்பே இல்லாமல் ரோட்டில் சிறுநீர் கழிப்பது என்று குடிகாரர்கள் பண்ணும் அட்டூழியத்துக்கு அளவே இல்லை. டாஸ்மாக் கடைக்கு அருகே குழந்தைகள் நல மருத்துவமனை இருக்கிறது, அங்கேயும் போய் பெண்களிடம் அத்துமீறி நடக்கிறார்கள்.
நாங்க போலீஸிடம் பல முறை புகார் கொடுத்துவிட்டோம். அவர்களும் ரவுண்ட்ஸ் வரும்போதுவிரட்டுகிறார்கள். ஆனால், அவர்கள் போனபிறகு மீண்டும் குடிகாரர்கள் வேலையைக் காட்டுகிறார்கள். நாங்கள் பேரூராட்சிக் கூட்டத்தில் இது குறித்துப் பேசி தீர்மானம் நிறைவேற்றி கலெக்டரிடம் அனுப்பி இருக்கிறோம். ஆனாலும் இதுவரை நடவடிக்கை இல்லை'' என்றார் வருத்தத்துடன். நாமும் அந்த டாஸ்மாக் கடைக்குச் சென்று பார்த்தோம். நூற்றுக்கும் மேற்பட்ட குடிமகன்கள் ரோட்டிலே குடித்துக் கொண்டும், ஆட்டம் போட்டு கொண்டும் இருந்தார்கள்.
நம்மிடம் பேசிய பெரியார் தி.க மாவட்ட அமைப்பாளர் முத்துமாணிக்கம், ''இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்காக மனு கொடுத்து இருக்கிறோம். நடவடிக்கை எடுக்கப் படவில்லை என்றால் மக்களை ஒன்று திரட்டி ஆர்ப்பாட்டமும், அதற்கு அடுத்து கடையை இழுத்து மூடும் போராட்டமும் நடத்த உள்ளோம்'' என்றார் ஆவேசமாக. அந்தப் பகுதி மக்களும் தங்கள் குறைகளை பதிவு செய்தார்கள்.
உடனே ஆட்சியர் மகரபூஷணத்திடம் இது குறித்துப் பேசினோம். அனைத்தையும் பொறுமையாகக் கேட்டவர், ''நாளையே அதிகாரிகளை அனுப்பி பார்வையிட்டு, மக்களிடம் கருத்து கேட்டு நடவடிக்கை எடுக்கிறேன்'' என்றார். சொன்னது போலவே அதிகாரிகளை அனுப்பி ஆய்வுசெய்த ஆட்சியர், டாஸ்மாக் கடையை மறுநாள் இரவே காலி செய்து வேறு இடத்துக்கு மாற்ற உத்தரவிட்டார்.
பல வருடங்களாகத் தீராமல் இருந்த பிரச்னையைத் தீர்த்துவைத்த ஜூ.வி-க்கு மக்கள் நன்றி தெரிவித்தார்கள். நாம் உடனடி நடவடிக்கை எடுத்த ஆட்சியர் மகரபூஷணத்திற்கு மக்கள் சார்பாக நன்றி சொன்னோம்.
''இது போன்ற மக்கள் பிரச்னையை என் கவனத்திற்கு கொண்டுவந்த ஜூ.வி-க்குத்தான் நன்றி'' என்றார்.
- ம.சபரி
படங்கள்: மகா.தமிழ்ப் பிரபாகரன்
புரளி கிளப்புகிறார்களா கேரள மாணவர்கள்?
சிக்கலாகிறது முல்லைப் பெரியாறு
முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழக மக்கள் பொங்கி எழுந்து போராடிக் கொண்டு இருந்தாலும், கேரளத்தவர்கள் மீது யாரும் தாக்குதல் நடத்துவது இல்லை. ஆனால், மலையாள லோக்கல் சேனல்கள் மற்றும் பத்திரிகைகளில் தொடர்ந்து, கேரளத்தவர்கள் அதிலும் குறிப்பாக மாணவர்கள் தாக்கப்படுவதாக செய்திகள் வந்துகொண்டே இருக்கிறது. யாருமே தாக்குதல் நடத்தாமல், எப்படி செய்தி வருகிறது என்று பலரும்மண்டையைப் பிய்த்துக் கொண்டு இருந்த நேரத்தில்தான், அப்படி செய்தியைப் பரப்புவது நாமக்கல் ஏரியாவில் தங்கிப் படிக்கும்(?) சில மலையாள மாணவர்கள்தான் என்ற விடை கிடைத்திருக்கிறது.
இரவு நேரங்களில் குடித்து விட்டு கும்மாளம் போடுபவர் கள், கேரளாவில் இயங்கும் லோக்கல் சேனல்களுக்குப் போன் செய்து, 'எங்களைத் தமிழர்கள் தாக்குகிறார்கள்’ என்ற பொய்யான தகவல்களைப் பரப்புகிறார்கள். உடனே, கேரள உள்ளூர் சேனல்ககளும் அதை உண்மை என்று நம்பி உடனுக்குடன் ஸ்க்ரோலிங் போடுகிறார்கள். உடனே அதைப் பார்த்து கேரளப் பத்திரிகைகளும் மாய்ந்து மாய்ந்து எழுதுகிறார்கள். இந்த செய்திகளைப் பார்த்தும், படித்தும் ஆத்திரம் அடையும் கேரள மக்கள், அந்தப் பகுதி தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள்.
இது பற்றி பேசும் கல்லூரி மாணவன் சலீம் மாலிக், ''நாமக்கல் மாவட்டத்தில் எந்தக் கேரள மாணவர்களையும், தமிழர்கள் தாக்கவில்லை. அவர்களிடம் நாங்கள் நட்புடன்தான் கல்லூரிகளில் பழகி வருகிறோம். இதுபோன்ற புரளியைக் கிளப்பி விட்டு, மாணவர்களின் ஒற்றுமையை சீர்குலைக்கப் பார்க்கிறார்கள். எங்கள் பெற்றோர் எங்களுக்கு ஒழுக்க நெறிகளை சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். அதனால், நாங்கள் ஒரு போதும் வன்முறையில் ஈடுபட மாட்டோம்'' என்று சொன்னார்.
சேலத்தை சார்ந்த தமிழ்நாடு மாணவர் கழகத்தின் உறுப்பினர் செந்தில்குமார், ''முல்லைப் பெரியாறு பிரச்னை தமிழர்களின் உரிமைப் பிரச்னை. அதனால் தமிழர்கள் நடத்தும் போராட்டம் கேரள அரசுக்கு எதிரானதே தவிர, கேரள மக்களுக்கு எதிரானது அல்ல. இங்கு படிக்கும் கேரள மாணவர்களை நாங்கள் நண்பர்களாகத்தான் பாவிக்கிறோம். அவர்களும் எங்களிடம் அன்பாகத்தான் பழகி வருகிறார்கள். யாரோ ஒரு சில கேரள மாணவர்கள் தமிழர்கள் எங்களைத் தாக்குகிறார்கள் என்று பொய்யான செய்திகளை கேரளாவில் உள்ள பத்திரிகைகளுக்கும், ஊடகங்களுக்கும் தொடர்ந்து கொடுத்து வருகிறார்கள்.
அவர்களில் சிலரை கேரள மாணவர்களே கண்டித்து வருகிறார்கள். ஆனாலும் சிலர் பொய்யான தகவலைக் கொடுக்கிறார்கள். இதை சரிவர விசாரிக்காமல் கேரளாவில் உள்ள பிரபல பத்திரிகைகளும், ஊடகங்களும் வெளியிடுகிறார்கள். அதனால் கேரள மக்களிடம் தமிழர்கள் மீது வெறுப்புணர்வு ஏற்படுகிறது. இந்தப் பத்திரிகைகளை வாசிக்கும் மலையாளிகள், கேர ளாவில் வசிக்கும் தமிழர்களைத் தாக்குகிறார்கள். ஆனால், இங்கு உரிமைக்காகப் போராடும் தமிழக மக்கள் மீது தமிழக காவல்துறையே தடியடி நடத்துகிறது. பல வழக்குகள் போட்டு சிறையில் தள்ளுகிறது. ஆனால், கேரளாவில் உள்ள மலையாளிகள் அணையை உடைக்க வந்தபோதும் தடுக்க வில்லை... எந்த வழக்கும் போடவில்லை. இது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. உலகம் முழுவதும் தமிழன் அடி வாங்குகிறான் என்பது உண்மைதான். அதனால் தமிழனை சொரணை கெட்டவன் என்று சொல்லலாமே தவிர, ஒருபோதும் நாகரிகம் அற்றவனாக யாரும் சொல்லிவிட முடியாது'' என்றார்.
சில மலையாள மாணவர்களிடம் நாம் விசாரித்தோம். ''தமிழ்நாட்டில் எங்களை யாரும் அடிக்கவில்லை. நாங்க ஃபிரெண்ட்ஸாத்தான் இருக்கோம். கேரளாவிலும் பொலிட்டிகல் ஆட்கள்தான் மக்களைத் தூண்டி விடுறாங்க. இங்கே நாங்க நல்ல பாதுகாப்பாகத்தான் இருக்கோம். தமிழ்நாட்டு மக்கள் வெரிகுட் பீப்புள்ஸ். சிலர் தப்பா தகவல் கொடுத்தாலும், நாங்க தடுத்து டுவோம்...'' என்றார்கள்.
நாமக்கல் மாவட்ட எஸ்.பி. பிரவேஷ்குமார், ''நாமக்கல்லில் படிக்கும் கேரள மாணவர்களை, தமிழர்கள் அட்டாக் செய்வதாக இரண்டு நாட்களாகவே ரூமர் பரவிக் கிடக்கிறது. இதுபற்றி கேரளாவில் இருந்தும், நமது கன்ட்ரோல் ரூமில் இருந்தும் கேட்டார்கள். இது போன்ற சம்பவம் எந்தப் பகுதியிலும் நடக்கவில்லை என்று தெளிவாகவே சொல்லி விட்டேன். இது முழுக்க முழுக்கப் பொய்'' என்றார்.
கல்விக் கண் திறக்கும் தமிழகம், எப்போதும் கேரள மாணவர்கள் மீது கை வைக்காது என்பதை கேரளம் புரிந்து கொள்ளட்டும்!
- வீ.கே.ரமேஷ்
படங்கள்: க.தனசேகரன்
''பாவம் பாக்காம தங்கச்சியைக் கொன்னுருங்க சார்..''
அண்ணனின் மரண வாக்குமூலம்
ராஜ்குமாரும் தனலெட்சுமியும் மதுரை மேலப்பொன்னகரத்தைச் சேர்ந்த நகைத் தொழிலாளி நடேசனின் பிள்ளைகள். 10 வருடங்களுக்கு முன்பு, காரைக்குடியைச் சேர்ந்த கணேசனுக்கும் தனலெட்சுமிக்கும் திருமணம் முடிந்தது. அதட்டிப் பேசாத கணவன், அழகான ஆண் குழந்தை என அமைதியாய் போய்க் கொண்டிருந்த அவர்களின் திருமண வாழ்க்கையில் ஆறு வருடங்களுக்கு முன் திடீரென புயல். மனநிலை தவறிப் போயிருக்கிறார், தனலெட்சுமி. வெளியில் தெரியாமல் வைத்தியம் நடந்திருக்கிறது. இந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஆசிட் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார்தனலெட்சுமி. உடனே மருத்துவமனையில் சேர்த்து உயிரைக் காப்பாற்றி இருக்கிறார்கள். 'சிகிச்சை மட்டும் போதாது. கவுன்சிலிங் கொடுக்க வேண்டும்’ என்று சொல்லப்பட்டதால், மதுரையில் உள்ள மனநல மருத்துவமனை ஒன்றில் நவம்பர் 30-ம் தேதி மனைவியை அட்மிட் செய்தார் கணேசன். தனலெட்சுமிக்குத் துணையாக மைத்துனர் ராஜ்குமாரை மருத்துவமனையில் இருக்க வைத்திருக்கிறார்.
சிகிச்சையும் கவுன்சிலிங்கும் முடிந்து டிஸ்சார்ஜ் ஆக இருந்த நேரத்தில் நடந்த பரிதாப சம்பவத்தை விளக்குகிறார், மதுரை மதிச்சியம் இன்ஸ்பெக்டர் குணசுந்தரம். ''தனலெட்சுமியை 18-ம் தேதி ராத்திரி டாக்டர் பாத்துட்டு 'நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ணலாம்’னு சொல்லியிருக்கார். ஆனா, ராஜ்குமார் என்ன நினைச்சாரோ, 'இன்னும் ரெண்டு நாளைக்கு இருக்கட்டும் சார், மச்சான் வந்ததும் அனுப்பலாம்’னு சொல்லி இருக்கார். டாக்டரும் பெருசா எடுத்துக்கலை. 20-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு, தனலெட்சுமி ரூமுக்குள்ள இருந்து புகை வந்திருக்கு. ஆஸ்பத்திரி ஊழியர்கள் பதறிப்போய் கதவை தட்டியிருக்காங்க; கதவு உள்பக்கம் பூட்டி இருந்திருக்கு.
'மாஸ்டர் கீ’ எடுத்துவந்து கதவைத் திறந்து பாத்தா, ராஜ்குமார் தகதகன்னு தீயில எரிஞ்சுக்கிட்டு இருந்திருக்கார். தனலெட்சுமி எரிஞ்சு முடிஞ்சு கரிக்கட்டையாக் கெடந்திருக்கா. வெலவெலத்துப் போன ஆஸ்பத்திரி ஊழியர்கள், தீயை அணைச்சு சிகிச்சைக்குத் தூக்கிருக்காங்க. ஆனா, ராஜ்குமார் அடம்பிடிச்ச நேரத்தில நாங்க போயிட்டோம். அப்பவும், 'சார் தங்கச்சி செத்துட்டாளான்னு பாருங்க... இல்லாட்டி நீங்களே அவள கொன்னுருங்க’ன்னு சொல்லிக்கிட்டே இருந்தார். ராஜ்குமாரையும் காப்பாத்தமுடியலை. காலை 8.30 மணிக்கெல்லாம் ஜீவன் அடங்கிருச்சு.
மரணவாக்குமூலத்துல, 'மனநலம் பாதிச்ச தங்கச்சிய வெச்சுக்கிட்டு ஆறு வருஷமா எங்க குடும்பம் படாத பாடு பட்டுருச்சு. எனக்கு நிச்சயமான கலயாணமும் தடைபட்டுப் போச்சு. டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு போனாலும் என் தங்கச்சி நிம்மதியா இருக்குமான்னு சொல்ல முடியாது. அதனாலதான் இந்த முடிவுக்கு வந்தேன்’னு சொன்னார்.
தூக்க மாத்திரையைக் கொடுத்து தங்கச்சியை நல்லா தூங்க வெச்சுட்டு பெட்ரோலை ஊத்தி, தீ வெச்சுருக்கார். பாவம், அந்தப் பொண்ணு தூக்கத்துலயே எரிஞ்சு செத்துருச்சு. அதுக்குப் பின்னாடி தனக்கும் தீ வெச்சுக்கிட்டார். சத்தம் போட்டா யாராச்சும் வந்துகாப்பாத்திடுவாங்கன்னு சத்தமே போடாம கல்லு மாதிரி வேதனையை தாங்கியிருக்கார். சாதாரண மனிதர்களால் இப்படி இருக்கவே முடியாது. ராஜ்குமாருக்கும் மனநிலை சிக்கலாகத்தான் இருந்திருக்கணும்'' என்றார்.
தனலெட்சுமிக்கு சிகிச்சை அளித்த மனநல மருத்துவர் ராமசுப்பிரமணியனிடம் பேசினோம். ''தனலெட்சுமிக்கு சிஸோபெர்னியா (Schzophrenia)என்ற மனச்சிதைவு நோய் இருந்தது. இந்த நோய் இருக்கிறவங்களுக்கு தேவையற்ற சந்தேகங்கள் வரும். யாரோ தன்னை தாக்க வர்ற மாதிரியும், கொல்ல வர்ற மாதிரியும் கற்பனை பண்ணிக்கிட்டு, அதுக்கு முந்தி தாங்களே செத்துப்போக நெனப்பாங்க. அப்படித்தான் இந்தப் பொண்ணு மூணு தடவை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கு. இந்த வியாதியை சீக்கிரம் கண்டுபிடித்துவிட்டால், குணப்படுத்துவது எளிது. நோய் இருக்கிறவங்களுக்கு அதன் தாக்கம் தெரியாது. சுத்தி இருக்கிறவங்கதான் அதைக் கண்டுபிடிச்சு சிகிச்சைக்கு ஏற்பாடு பண்ணணும். ஆனா மனநோய் இருக்கிறது வெளியில் தெரிஞ்சா அவமானம், அசிங்கம்னு நெனச்சே பலரும் விஷயத்தை வெளியில் சொல்லாமல் மறைச்சிடுறாங்க. ஒரு சிலர் கோடாங்கி, குறின்னு போயிடுறாங்க.
சிகிச்சை முடிஞ்சு போனாலும் தங்கச்சியால நிம்மதியா குடும்பம் நடத்த முடியாதுன்னு ராஜ்குமாருக்கு ஒரு நெனப்பு. அதனாலதான், பெட்டி படுக்கை எல்லாம் கட்டி வெச்சுட்டு டிஸ்சார்ஜ் ஆகுற நேரம் இப்படி ஒரு முடிவு எடுத்துட்டார்...'' என்று பெருமூச்சு விட்டார்.
மனிதனின் மனதுக்குள் இன்னும் எத்தனை விசித்திரங்களோ?
- குள.சண்முகசுந்தரம்
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
''எங்க கோயில், உள்ளே வராதே!''
விரட்டப்படும் மதுரை அருந்ததியர்கள்
மதுரை-விருதுநகர் மாவட்ட எல்லையில் காரியாபட்டி அருகே அமைந்துள்ளது சுந்தரம்குண்டு கிராமம். இங்கு, ஓலைக்கூரையின் கீழ் சூலாயுதம் மட்டுமே இருந்த காளியம்மன் கோயிலை, கோபுரத்துடன் கூடிய ஆலயமாக எடுத்துக் கட்டி இருக்கிறார்கள் ஊர்க்காரர்கள். இதற்கு தங்களிடம் மட்டும் வரி வசூலிக்க மறுத்ததுடன், கும்பாபிஷேகத்திலும் கலந்துகொள்ள விடாமல் தடுக்கிறார்கள் என்று புலம்புகிறார்கள் அருந்ததியர் மக்கள். அந்தக் கிராமத்துக்குச் சென்றோம்.
அருந்ததியர் குடியிருப்பு முகப்பில் போலீஸ் வேன் நின்று கொண்டிருந்தது. தடையை மீறி யாராவது கோயிலுக்குச் சென்று அதனால் பிரச்னையாகி விடக்கூடாது என்பதற்காகத்தான் காவல். வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த மணிவண்ணனிடம் பேசினோம். 'மொத்தமே 300 குடும்பங்கள் உள்ள இந்தக் கிராமத்தில் நாயக்கர், முத்தரையர் சமூகம்தான் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். ஆரம்பத்தில் எங்கள் மக்களும் அதிகமாக இருந்தார்கள். பொதுக்கிணற்றில் நாங்கள் தண்ணீர் எடுக்க முடியாது போன்ற கடுமையான தீண்டாமைக் கொடுமைகள் இருந்ததால், பெரும்பாலானோர் வேறு ஊர்களுக்குக் குடிபெயர்ந்து விட்டார்கள். இப்போது இங்கு, எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மொத்தமே 15 குடும்பங்கள் தான்.
இரட்டைக் குவளை முறை இப்போதும் இங்கே நடைமுறையில் இருக்கிறது. பிரச்னை அதுவல்ல.எங்கள் குடியிருப்புக்கும், உயர் சாதியினரின் குடியிருப்புக்கும் இடையே இருக்கிற புறம்போக்கு நிலத்தில் காளியம்மன் கோயில் இருக்கிறது. அதுதான் ஊர்ப் பொதுக்கோயில். ஓலைக்கூரை கோயில் என்பதால், எல்லோரும் வெளியே நின்றுதான் சாமி கும்பிட முடியும். அதனால் பிரச்னை இல்லாமல் இருந்தது. சமீபத்தில், அந்தக் கூரைக் கோயிலை கோபுரத்துடன் கூடிய பெரிய ஆலயமாக எடுத்துக் கட்ட ஆரம்பித்தார்கள் உயர்சாதியினர். பிரச்னை வந்து விட்டது.
கோயில் கட்டுவதற்கு வரிவசூல் செய்யும் பொறுப்பை ஏற்றிருந்த நாட்டாமை ராமு நாயக்கர், காவல்காரர் தர்மராஜ் மூப்பர், கோயில் நிர்வாகிகள் பால்சாமி நாயக்கர், மணிநாயக்கர், ராமு ஆகியோர் தாழ்த்தப்பட்ட மக்களிடம் மட்டும் வரி கேட்கவில்லை. நாங்களே சென்று வரி கொடுத்தபோது, 'கீழ்சாதிக்காரங்ககிட்ட வரி வாங்க முடியாதுப்பா. இது ஊர்க்காரர்களின் முடிவு. இதுக்கு மேல பேச்சை வளர்க்காமப் போயிடுங்க. அப்புறம் விவகாரமாகிப் போயிடும்’ என்று எச்சரித்தார்கள். இன்னும் சிலரோ, 'அதிகமாப் பேசினா, வீட்டைக் கொளுத்திடுவோம்’ என்று மிரட்டினார்கள். உடனே, கலெக்டரிடமும், போலீஸிடமும் புகார் கொடுத்தோம். ஆனால், எதுவும் நடக்கவில்லை. காலம் காலமாக கும்பிட்டு வந்த காளியாத்தா கோயிலுக்கு கும்பாபிஷேகத்தன்று கூட எங்களைப் போக முடியாமல் செய்து விட்டார்கள்' என்றார் சோகத்துடன்.
'வெள்ளி, செவ்வாய் கரெக்டா சாமி கும்பிடப் போயிடுவேன். கோயில் புதுசாக் கட்டுறாங்கன்னு சொன்னதும், மேற்கு வங்காளத்தில் பணியில் இருக்கும் எல்லைப் பாதுகாப்புப்படை வீரரான என் கணவர், 'கண்டிப்பா வரி கொடு’ன்னு சொன்னார். அந்தக் காலத்துல வசதியில்லை. நாங்க வரி கொடுக்கலை. இப்ப நாங்களும் வசதியா இருக்கிறோம். வரி வாங்கினா என்ன சார் தப்பு?' என்று கேட்டார் அருந்ததியப் பெண்ணான அய்யம்மாள்.
தமிழ்ப் புலிகள் அமைப்பின் பொதுச் செயலாளர் நாகை.திருவள்ளுவனோ, 'உயர்சாதி மக்களை அழைத்து போலீஸார் விசாரித்தபோது, 'இரட்டைக்குவளை முறை இருப்பது உண்மைதான். இனிமேல் அந்த வழக்கத்தை விட்டுவிடுகிறோம். தாழ்த்தப்பட்ட மக்களிடம் நன்கொடை வேண்டுமானால் வாங்கிக் கொள்கிறோம். ஆனால், வரி வாங்குவது பற்றி ஊர்க்கூட்டம் நடத்தித்தான் முடிவெடுப்போம்’ என்று எழுதிக் கொடுத்து இருக்கிறார்கள். தீண்டாமைக் கொடுமை இருப்பதை ஒப்புக்கொண்ட பின்னரும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், இந்தப் பிரச்னையை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறோம். கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தவும் தீர்மானித்து இருக்கிறோம்'' என்றார் வேதனையுடன்.
கோயில் நிர்வாகிகளான பால்சாமி நாயக்கர், ராம் நாயக்கர் ஆகியோரிடம் பேசினோம். 'இது எங்கள் இரு சமுதாயத்தினருக்குப் பாத்தியப்பட்ட கோயில். கிராமங்களில் சாதிக்கொரு கோயில்இருப்பது யதார்த்தம்தானே? தாழ்த்தப்பட்ட மக்களிடம் வரி வசூலித்தால், அவர்களும் உரிமை கொண்டாட ஆரம்பித்துவிடுவார்கள். அவர்களுக்கு என்று தனியாக சோணையா கோயில் இருக்கிறபோது, எதற்காக எங்கள் கோயிலில் வந்து பிரச்னை செய்கிறார்கள்' என்று கேட்டார்கள்.
கலெக்டர் சகாயத்திடம் பேசினோம். 'இதுபற்றி விசாரிக்க ஆர்.டி.ஓ.வுக்கு உத்தரவு போட்டிருக்கிறேன். அங்கு சமத்துவமும், ஒற்றுமையும் நிலவ நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
கடவுளே வந்து சொன்னாலும், சாதிப் பிரச்னை ஓயாதோ?
- கே.கே.மகேஷ்
படங்கள்: பா.காளிமுத்து
சசிபாரதம்!
நட்பை சிதைத்த ஒரு குடும்பத்தின் கதை
சில பல பத்து ஆண்டுகளுக்கு முன்னால் இங்கிலீஷ் மருந்துக் கடைகள் சொற்பமாகவே இருக்கும் என்பதால், இந்த அடைமொழி சந்திரசேகரன் பிள்ளைக்கு அடையாளம் ஆனது. இந்த மன்னார்குடி பாரதத்தின் பிரதான பாத்திரமான சசிகலாவின் தாத்தா அவர்!
சந்திரசேகரன் பிள்ளையின் மகன் விவேகானந்தன் - கிருஷ்ணவேணி தம்பதிக்கு, சுந்தரவதனன், விநோதகன், ஜெயராமன், வனிதாமணி, சசிகலா, திவாகரன் என்று வந்த வாரிசுகளும், அவர்களது வாரிசுகளும்தான் கடந்த 30 ஆண்டு கால அ.தி.மு.க.வின்... அதன் மூலமாக தமிழக அரசியலை ஆட்டிப்படைக்கும் சக்திகளாக வலம் வந்தார்கள். பெரும் நெடுங்கதையின் முன்கதைச் சுருக்கம் இது!
1.பாசமலர் படலம்!
மூன்று பாசக்கார அண்ணன்களின் செல்லத் தங்கச்சியாக திருத்துறைப்பூண்டி வடக்குச் செட்டித் தெருவில் வலம் வந்த சசிகலா, பங்குனி மாச மகா மாரியம்மன் கோயில் உற்சவத்தில் முழு உற்சாகத்தோடு வலம் வருவார். அங்கிருந்த போர்டு ஹை ஸ்கூலில் சேர்த்தார்கள். படிப்போடு சேர்ந்து ஓட்டப் பந்தயத்திலும் பரிசுகள் வாங்கினார். பள்ளி மாணவர் மன்றத்திலும் அவரது பங்களிப்பு இருந்துள்ளது. பத்தாம் வகுப்பு வரைக்கும் படித்த அவர்... மேற்கொண்டு ஏனோ படிக்கவில்லை. ''பொம்பளப் பிள்ளை இவ்வளவு படிச்சா போதும்'' என்று கட்டுப்பாடு வீட்டுக்குள் விதிக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.
இதற்கிடையே விவேகானந்தனின் குடும்பமும் திருத்துறைப்பூண்டியில் இருந்து மன்னார்குடிக்கு இடம் பெயர்கிறது. ஆனாலும் அந்த மகா மாரியம்மன் கோயிலை சசிகலா மறக்கவில்லை. எல்லா விழாக்களிலும் பங்கேற்பார். அந்த நாட்களை உறவினர்களோடு கழிப்பார். அன்றைய தினம் உள்ளூர்க்காரர்கள் அனைவருடனும் பழைய கதைகளைச் சொல்லிப் பேசிக்கொண்டு இருப்பார். ஜெயலலிதாவே இந்தக் கோயிலுக்கு வந்திருக்கிறார். வெள்ளிக் கவசமும் சாத்தி இருக்கிறார். அந்த அளவுக்கு திருத்துறைப்பூண்டி சசிகலாவால் மறக்க முடியாத ஊர்.
இதைஅடுத்து, சசிகலா வாழ்க்கையில் முக்கியமான ஊர்... விளார். தஞ்சாவூரில் இருந்து 7 கி.மீ தூரத்தில் இருக்கிறது இது. இங்கு வாழ்ந்த மருதப்பன் என்பவரின் மகன்தான் நடராஜன். இயல்பிலேயே தமிழ் ஆர்வமும், அரசியல் ஈடுபாடும்கொண்ட இவர், தி.மு.க. மாணவர் இயக்கங்களில் தன்னை இணைத்துக்கொண்டவர். 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கெடுத்தவர். எல்.கணேசனின் முக்கிய சிஷ்யராக வலம் வந்தார். கருணாநிதி தமிழக முதல்வராக முதல் முறை ஆனபோது, செய்தி மக்கள் தொடர்புத் துறையில் ஏ.பி.ஆர்.ஓ-வாக நடராஜனை நியமித்தார். (அவரோடு ஏ.பி.ஆர்.ஓ-வாக நியமிக்கப்பட்டவர்தான் சமீபத்தில் திட்ட அமலாக்கத் துறை சிறப்பு அலுவலர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பன்னீர் செல்வம்.) தஞ்சை மாவட்ட தி.மு.க.வின் அன்றைய தளகர்த்தரான மன்னை நாராயணசாமி தலைமை ஏற்க, நடராஜன் - சசிகலா திருமணத்தையும் நடத்தி வைத்தார் கருணாநிதி.
கருணாநிதி, சசிகலா இருவரது வரலாற்றிலும் இருக்கும் முக்கியமான விநோதங்களில் இதுவும் ஒன்று!
2. அறிமுகப் படலம்!
நடராஜன் - சசிகலா தம்பதி சென்னையில் தங்கள் வாழ்க்கையைத் தொடர்ந்தார்கள். செய்தித் துறைக்காரர் என்பதால் தனக்கு ஆர்வமான தொழில் ஒன்றைத் தொடங்க நினைத்த நடராஜன், வீடியோ கடை ஆரம்பித்தார். 'வினோத் வீடியோ விஷன்’ என்று அதற்குப் பெயர் சூட்டினார் சசிகலா. தனது அண்ணன் விநோதகன் ஞாபகமாக இது இருக்கலாம். இதன் நிர்வாகத்தையும் சசிகலா கவனித்து வந்தார்.
1982 - அ.தி.மு.க.வுக்குள் ஜெயலலிதா அதிகாரப்பூர்வமாக உள்ளே நுழையும் காலம். கொள்கை பரப்புச் செயலாளர் பதவியையும் கொடுத்து, தினமும் தலைமைக் கழகம் வரலாம், 10 நாளைக்கு ஒரு முறை வெளியூர் டூர் போகலாம் என்று எம்.ஜி.ஆர். கிரீன் சிக்னல் காட்டிய நேரம் அது. ஜெயலலிதா தனது சுற்றுப்பயணம் அனைத்தையும் வீடியோவில் பதிவு செய்ய விரும்பினார். இதற்காகவே ஒரு படை அவர் பின்னால் செல்ல ஆரம்பித்தது. இந்தப் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள நடராஜன் நினைத்திருக்கிறார்.
அந்தக் காலகட்டத்தில் எம்.ஜி.ஆருடன் நிழலாக இருந்தவர் பத்திரிகையாளர் சோலை. அவருக்கு அறிமுகமான ரங்கராஜன் என்ற பொறியாளர் மூலமாக நடராஜன் தொடர்புகொண்டார். 'வினோத் வீடியோ விஷனு’க்கும் சில கூட்டங்களைப் பதிவு செய்து தர வாய்ப்புகள் தரப்பட்டன. இப்படித் தயாரான கேசட்டுக்களைக் கொடுப்பதற்காக, வேதா இல்லத்துக்குள் நுழைகிறார் சசிகலா. ''ஜெயலலிதாவுடன் சுற்றுப்பயணம் போய்விட்டு நாங்கள் வந்த அன்றுதான் முதன் முதலாக சசிகலாவும் அந்த வீட்டுக்குள் வந்தார். நாங்கள் நான்கைந்து பேர் இருந்தோம். எங்கள் அனைவருக்கும் ஆளுக்கு ஒரு பேனா பரிசளித்தார் சசிகலா'' என்கிறார் ஒரு பத்திரிகையாளர். வேதா இல்லத்துக்குள் அடிக்கடி போய்வருவது ஒரு பெண் என்பதால், வசதியாய் இருந்தது சசிகலாவுக்கு. அப்போது ஜெயலலிதாவைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்து வந்தவர் பிரேமா என்ற பெண். அவருக்கு இரண்டு வாரிசுகள். ஒரு மகனுக்கு பொறியியல் கல்லூரியில் இடம் வாங்கித் தர பிரேமா கேட்டதாகவும், அது ஜெயலலிதாவால் முடியவில்லை என்றும், பிரேமா கோபித்துக்கொண்டு கார்டனைவிட்டு வெளியேறியதாகவும் சொல்கிறார்கள்.
பிரேமா வெளியேறிய சில மாதங்களில் மருத்துவ சிகிச்சைக்காக கர்நாடக மாநிலம் ஜிண்டால் மருத்துவமனைக்கு ஜெயலலிதா சென்றுள்ளார். ஒரு நட்பு அடிப்படையில் மரியாதை நிமித்தமாக ஜெயலலிதாவைப் பார்க்க... பெங்களூரு செல்கிறார் சசிகலா. ''என்னைப் பார்க்கிறதுக்காக இவ்வளவு தூரம் வந்தீங்களா?'' என்று ஜெயலலிதா உருகுகிறார். ஒரு நட்புக்கான அடித்தளம் பெங்களூருவில் போடப்படுகிறது. இன்றைய பிளவுக்கு அடித்தளம் இட்டதும் அதே ஊர்தான்.
ஜெயலலிதா, சசிகலா இருவருக்குமே பெங்களூரு மறக்க முடியாது!
3. அடைக்கலப் படலம்!
'அம்முவுக்குத் துணையாக யாரை இருக்க வைப்பது?’ என்று தனக்கு அருகில் இருந்த சோலையிடம் எம்.ஜி.ஆர். கேட்டார். சசிகலாவின் பெயர் அப்போதுதான் முதன்முதலாக எம்.ஜி.ஆரிடம் சொல்லப்படுகிறது. இந்த ஆலோசனை நடக்கும்போது டி.ஜி.பி. மோகன்தாஸ் உடன் இருந்துள்ளார். போலீஸ் இன்ஸ்பெக்டர் தனுஷ் என்பவரை நடராஜனிடம் அனுப்பிக் கேட்டுள்ளார்கள். 'இது எதுக்கு சார் பெரிய இடத்து விவகாரம்?’ என்று நடராஜன் முதலில் மறுத்ததாகவும் கூறப்படுகிறது. 'சசிகலா என்றால் ஓகே’ என்று ஜெயலலிதாவும் சொன்னது... சசிகலா மனதையும் மாற்றியது.
''எம்.ஜி.ஆரின் ஆற்காடு தெரு வீட்டில் ஓரிரு முறை சசிகலாவையும் நான் பார்த்திருக்கிறேன்'' என்று வலம்புரிஜான் எழுதி இருக்கிறார். 'எம்.ஜி.ஆரின் ஸ்பையாக போயஸ் கார்டனுக்குள் அனுப்பி வைக்கப்பட்டவர்தான் சசிகலா’ என்று சொல்பவர்களும் உண்டு. எது காரணமாக இருந்தாலும் அடைக்கலப் படலம் அப்போதுதான் ஆரம்பம் ஆனது.
அடிக்கடி வந்து போன சசிகலா, ஒரு வாரம்... பத்து நாட்கள் எனத் தங்க ஆரம்பித்தார். 1984 தேர்தல் நேரத்தில் எம்.ஜி.ஆர். மருத்துவமனையில் இருந்ததால், பிரசாரம் முழுமையாக ஜெயலலிதாவை நம்பியே இருந்தது. 'எம்.ஜி.ஆரின் கதாநாயகி’ என்பதால் எல்லா இடங்களிலும் கூட்டம் கட்டி ஏற ஆரம்பித்தது. தனியாக பாதுகாப்புப் படை உருவாக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதும்... மன்னார்குடியில் இருந்து தனது தம்பி திவாகரனை அழைத்து வந்தார் சசிகலா. ஜெ. செல்லும் இடத்துக்கு எல்லாம் திவாகரன் போனார்.
அரசியல் ஆலோசனைகளுக்கு நடராஜன், பாதுகாப்புக்கு திவாகரன், தனி உதவிக்கு சசிகலா... என்ற மூவர் அணி போயஸ் கார்டனை மறைக்க ஆரம்பித்தது!
4. அனுசரணைப் படலம்!
போயஸ் கார்டனில் இருக்கும்போது மட்டும் அல்ல... டெல்லி ராஜ்ய சபாவுக்குச் செல்லும்போதும் கூடவே சசிகலாவை அழைத்துச் செல்லும் அளவுக்கு இருவரும் நட்பு ஆனார்கள். ஜெயலலிதாவிடம் சொல்ல வேண்டியதை சசிகலா மூலமாகத்தான் சொல்லியாக வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டது. எம்.ஜி.ஆர். இறந்து உடல் ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டிருக்கும்போது வலதுகை அருகில் ஜானகி இருப்பார். தலை அருகே ஜெயலலிதா சோகமே உருவாக உட்கார்ந்திருப்பார். அவருக்குப் பின்னால் அந்த இடத்திலும் சசிகலா நிற்பார். அந்த அளவுக்கு நிழலாகத் தொடர ஆரம்பித்தார். எம்.ஜி.ஆரின் உடல் கொண்டு செல்லப்பட்ட ராணுவ வாகனத்தில் ஏறிய ஜெயலலிதா இறக்கிவிடப்பட்டார். அவமானப்படுத்தப்பட்ட தனி மனுஷியாக வேதா இல்லத்தைப் பூட்டிக்கொண்டு அழுத ஜெயலலிதாவுக்கு அன்று சசிகலாவும் நடராஜனும்தான் அனுசரணையாக இருந்தார்கள். 'உங்களோட பொலிடிக்கல் லைஃப் இனிமேல்தான் ஆரம்பமாகப்போகிறது’ என்று உற்சாகம் கொடுத்தார்கள். புதிய பொதுச்செயலாளர் தேர்வு, ஜானகி அணி - ஜெயலலிதா அணி எனக் கட்சி உடைவது, தலைமைக் கழக முற்றுகை, 1989 சட்டமன்றத் தேர்தல்... என ஜெயலலிதா பரபரப்பாகும் காலகட்டத்தில் இவர்கள் இருவரும் தொடர்ச்சியாக இருக்கிறார்கள்.
பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனித்து வந்த திவாகரனின் நடவடிக்கைகளில் ஒருவிதமான கோபம் ஜெயலலிதாவுக்கு வருகிறது. எனவே, அவரை விலக்க உத்தரவு இடுகிறார் ஜெயலலிதா. அதை ஏற்றுக்கொண்ட சசிகலா, தனது அக்காள் வனிதா மணியின் மூத்த மகனான தினகரனை அழைத்து வருகிறார். பாதுகாப்பு ஏற்பாடுகளை தினகரன் கவனிக்கத் தொடங்குகிறார். இதே காலகட்டத்தில் ஜெயலலிதாவுக்கும் - நடராஜனுக்குமான முரண்பாடுகள் துளிர்க்கின்றன. திருப்பூர் பிரமுகர் ஒருவரை கட்சியைவிட்டு ஜெயலலிதா நீக்கியதாகவும், 'அது தவறு’ என்று நடராஜன் வாதிட்டதாகவும் 'இது என்னோட அதிகாரம்’ என்று ஜெயலலிதா கூறியதாகவும் இதுவே இவர்கள் பிரிவுக்கு காரணம் என்று ஒரு தரப்பினரும்...
'ஜெயலலிதாவுக்கு அரசியல் ஆலோசனை அனைத்துமே நான்தான் செய்கிறேன். அவர் நான் சொன்னபடிதான் நடப்பார்’ என்று நடராஜன் எங்கோ சொன்னதாகவும் அது பிடிக்காமல் ஜெயலலிதா கோபித்ததாகவும் இன்னொரு தரப்பினர் சொல்கிறார்கள்.
'தம்பியை போகச் சொல்’ என்றபோதும் ஏற்றுக்கொண்டார் சசி. 'கணவன் வரக் கூடாது’ என்றதற்கும் தலையை ஆட்டினார் அவர். தன் குடும்பத்தினரைக்கூட புறந்தள்ளும் அளவுக்கு அழுத்தமானவரா அல்லது அரசியல் உள்நோக்கமா... சசிகலாவுக்கு எது தூக்கலாக இருந்தது?
5. ஆதிக்கப் படலம்!
சசிகலாவுக்குள் ஒரு பக்கா அரசியல்வாதி நாற்காலி போட்டு உட்கார்ந்து இருப்பதை 1991-96 காலகட்டம் நிரூபித்தது. சட்டமன்றத்துக்குள் முதல்வராக உள்ளே நுழைந்த ஜெயலலிதா தன்னுடன் சசிகலாவையும் அழைத்து வந்ததன் மூலம், 'அவரே எனக்கு எல்லாம்’ எனக் காட்டினார். வேதா இல்லத்தின் சுற்றுச்சுவர் உயர்த்திக் கட்டப்பட்டது மட்டும் அல்ல... உள்ளே நுழைய மந்திரிகள்கூட மணிக்கணக்காய் காத்திருக்க வேண்டிய காலம் தொடங்கியது. முக்கியமானவர்கள்கூட வீடுவரை வந்தும் இன்டர்காமில் பேசிவிட்டுச் செல்ல நிர்பந்திக்கப்பட்டார்கள். 'மேடம்’, 'சின்ன மேடம்’... பட்டப் பெயர்கள் முளைத்தன... சசிகலா சொல்வது, ஜெயலலிதாவின் கட்டளையாகக் கவனிக்கப்பட்டது. ஜெயலலிதாவிடம் சொல்ல சசிகலா மட்டுமே ஒரு வழிப் பாதையாக மாறியது. எனவே, வெளியே நடந்த நல்லதும் கெட்டதும் தெரியாமல் இருட்டறையில் ஜெயலலிதா வைக்கப்பட்டுள்ளார் என்பது... சென்னை தியாகராய நகர் தெற்கு போக் சாலையில் ஒரு நாள் காலையில்... சிவாஜி வீட்டுக்குள் ஜெயலலிதா போனபோது வெளிச்சத்துக்கு வந்தது.
''சிவாஜியின் மகள் வயிற்றுப் பேத்தி சத்தியலட்சுமியை சசிகலாவின் அக்காள் மகன் சுதாகரனுக்கு நிச்சயம் செய்திருக்கிறார்கள்'' என்று அறிக்கை வெளியாகி இருந்தால், சிவாஜி - சசிகலா என்ற இரண்டு குடும்பங் களின் பந்தமாக முடிந்திருக்கும். சுதாகரன் என்ற பெயருக்கு முன்னால் 'முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன்’ என்ற அடைமொழி தமிழ்நாட்டை அதிர்ச்சி அடையச் செய்தது. ஜெயலலிதாவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியும் மனுஷியாக இல்லாமல்... சசிகலாவின் விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் ஆளாக ஜெயலலிதா மாறிப்போனதை அது காட்டியது. அதற்குச் சில மாதங்களுக்கு முன்னர்தான் சுதாகரனின் அண்ணன் பாஸ்கரனின் திருமணம் தஞ்சையில் நடந்தது. 'என் உடன்பிறவா சகோதரி சசிகலா’ என்று குறிப்பிட்டு ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டதுகூட நட்பின் வெளிப்பாடாக ஏற்றுக்கொள்ளலாம். கும்பகோணம் மகாமகத்தில் இருவரும் மாறி மாறி நீர் ஊற்றிக்கொண்டதும், வளர்ப்பு மகன் தத்தெடுப்பும், 1995 செப்டம்பர் 7-ம் தேதி நடந்த 100 கோடி மதிப்பிலான திருமணமும், தஞ்சாவூரில் நடந்த உலகத் தமிழ் மாநாடும், முன் வரிசையில் ஜெயலலிதாவுக்கு சமமாக சசிகலா உட்கார்ந்து இருந்ததும், அரசாங்கச் செலவில் நடத்தப்பட்ட மாநாட்டுக்கு மந்திரிகள் வசூல் செய்து மன்னார்குடி உறவுகளுக்கு கப்பம் கட்டியதையும் பட்டியல் இட்டுப்பார்த்தால், சசிகலா குடும்ப முன்னேற்றக் கழகமாக அ.தி.மு.க. மாறிப்போனதை அப்பட்டமாக உணர்த்தியது.
வெளியில் இது பச்சையாக படமெடுத்து ஆடிக்கொண்டு இருந்தபோது ஜெயலலிதா இதை உணரவில்லை. அதுவரை தலையாட்டிப் பொம்மைகளாக வலம் வந்த எஸ்.டி. சோமசுந்தரம் போன்றவர்கள் மெள்ளப் புலம்ப ஆரம்பித்தார்கள். முக்கிய இலாகாக்களை வைத்திருந்த கண்ணப்பன், வேட்பாளர் தேர்வுகளில் புறக்கணிக்கப்பட்டார். 'அடுத்தும் நம்முடைய ஆட்சிதான். சொந்த செல்வாக்கு உள்ள நபர்களைத் தட்டிவைக்க வேண்டும்’ என்று சசிகலாவின் உள்வட்டாரம் முடிவெடுத்தது.
1996 தேர்தல் நெருக்கத்தில் அரசல்புரசலாக சில விஷயங்கள் ஜெயலலிதா கவனத்துக்கு போக ஆரம்பித்தன. அதற்குள் தேர்தல் முடிந்து, தோற்றுப்போனார். தனித்து நின்ற ஜெயலலிதாவுக்கு தனது சொந்தங்களை அழைத்து வந்து தைரியம் கூட்டி... வெற்றி பெறவைத்த சசிகலாவின் முயற்சிகள், அடுத்த ஐந்து ஆண்டுகளில் நடந்த பலத்த தோல்விக்கும் காரணமாக அமைந்தது. இதில் இருந்து ஜெயலலிதா பாடம் கற்றுக்கொண்டாரா?
6. வெளியேற்றும் படலம்!
மரண அடிக்கு என்ன காரணம் என்றே தெரியாத ஜெயலலிதா, அப்பாவி அ.தி.மு.க. தொண்டனிடம் ஒரு கோரிக்கை வைத்தார். 'தேர்தல் தோல்விக்கான காரணத்தைக் குறிப்பிட்டு எனக்கு எழுதுங்கள்’ என்று கட்டளை இட்டார். மளமளவென்று குவிந்த கடிதங்கள் அனைத்துமே 'சசிகலாதான் காரணம்’ என்று சொன்னது. ஜெயலலிதாவுக்கு வேறு வழி இல்லை. நான்கு பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டார். 'கட்சியா... சசிகலாவா... என்பதை நான் முடிவு செய்ய வேண்டும் என்று தொண்டர்கள் விரும்பினார்கள். கஷ்டமான காலகட்டங்களிலும் சோதனையான சூழ்நிலைகளிலும் உற்ற தோழியாக, உடன்பிறவா சகோதரியாக சசிகலா எனக்கு உறுதுணையாக இருந்தார் என்ற நன்றி உணர்வு எனக்கு இருந்தாலும், ஒரு சில தனிநபர்களைவிட கட்சியின் நலனும் எதிர்காலமுமே மிகமுக்கியம் என நான் கருதுகிறேன்’ என்பது அவரது அறிக்கையின் சாராம்சம். இந்த அறிக்கை வெளியிடும்போது சசிகலா சிறையில் இருந்தார். அவரை சிறைக்குச் சென்று சந்தித்துவிட்டு வந்துதான் இந்த அறிக்கை வெளியிட்டார். 'இது ஒரு நாடகம்’ என்று சிலர் பேசினார்கள். 'அரசன் பதவியையும் புகழையும் இழக்கும்போது, தளபதியைக் கைவிடுவது தவிர்க்க முடியாதது’ என்று முன்னாள் அமைச்சர் கே.ஏ.கிருஷ்ணசாமி சொன்னதை பலரும் வழிமொழிந்தார்கள். 'சுதாகரனும் என்னுடைய வளர்ப்பு மகன் அல்ல’ என்று அறிவித்தார்.
தோல்விக்கு என்ன காரணம் என்று எழுதச் சொன்ன ஜெயலலிதா, நான் எடுத்த நடவடிக்கை சரியா எனத் தொண்டனிடம் கேட்கவில்லை. ஏனென்றால், இந்த நடவடிக்கையை அவரே மனப்பூர்வமாக எடுக்கவில்லை என்பது 10-வது மாதமே தெரிந்தது!
7. மீண்டும் அன்புப் படலம்!
1996 - செப்டம்பரில் சசிகலாவை நீக்கி அறிக்கைவிட்ட ஜெயலலிதா, 1997 ஜூலை யில் அறிக்கை விடாமலேயே சசிகலாவை சேர்த்துக் கொண்டார்.
சசிகலா இந்தக் காலகட்டத்தில் நீதிமன்றக் காவலில் இருந்தார். உடல்நிலைக் கோளாறு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் இருந்தார். நீதிமன் றத்துக்கு ஆம்புலன்ஸில்தான் வந்தார். ஸ்ட்ரெக்சரில் கொண்டு வந்தார்கள். அதன் பிறகு, நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் கிடைத்தது. மருத்துவமனையில் இருந்து சசிகலா எங்கே போவார் என்று மீடியாக்கள் யோசித்தபோது... போயஸ் கார்டனில் வரவேற்க ஆரத்தித் தட்டு தயாராகிக்கொண்டு இருந்தது. வாசலுக்கு வந்து தன்னுடைய உடன்பிறவாத் தோழியை அழைத்துச் சென்றார் ஜெ. சசிகலாவை விமர்சித்தவர்கள் விக்கித்துப்போனார்கள். இந்த இடைவெளியில் கட்சி முக்கியஸ்தர்கள் வெளியேறி இருந்தார்கள்.... வெளியேற்றப்பட்டார்கள். அவர்கள் சசிகலாவை விரும்பாதவர்களாக இருந்தது தற்செயலானது அல்ல.
''ஒவ்வொருவருக்கும் தாய், கணவர், குழந்தை, நண்பர் என்று ஏதாவது ஒரு வடிவத்தில் உணர்வுப்பூர்வ பந்தம் தேவைப்படுகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல'' என்று ஜெயலலிதா சொன்னார். 'வழக்குகள், கைதுகள், புகார்கள் ஆகியவையும் இதற்குள் இருந்தது’ என்று போட்டி அ.தி.மு.க. விமர்சித்தது. ஆனால், எதைப்பற்றியும் ஜெயலலிதா கவலைப்படவில்லை. சசிகலாவுடனும் அவர்களது குடும்பத்தினருடனும் நெருங்க ஆரம்பித்தார். சசிகலாவின் கைது, சிறைவாசம் என்ற சென்டிமென்ட் கூடுதல் நெருக்கத்துக்கு காரணம் ஆனது.
சசிகலாவின் அண்ணன் ஜெயராமன் - இளவரசி தம்பதியின் மகள் கிருஷ்ணப்பிரியாவின் திருமணம் (2000 ஜூன்) கட்சிக்கு ஒரு விஷயத்தை மீண்டும் தெளிவுபடுத்தியது. ''எனக்கு வேண்டியவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக எந்தத் தவறும் செய்யாத திருமதி சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் கடந்த நான்கு ஆண்டுகளாக, சந்தித்து இருக்கும் அவமானங்கள், அவதூறுகள், துன்பங்கள், கொஞ்ச நஞ்சம் அல்ல. எனக்காகவும் இந்த இயக்கத்துக்காகவும் வாழ்கிற சசிகலாவுக்கும் அவரது குடும்பத்துக்கும் ஆதரவாக இருப்பதை என் கடமையாகக் கருதுகிறேன்!’ என்று அந்தத் திருமணத்தில்தான் பகிரங்கமாக அறிவித்தார். அடுத்து நடந்தது சசிகலாவின் அண்ணன் சுந்தவதனனின் மகன் டாக்டர் வெங்கடேஷ் திருமணம். 'என்னோடு துணையாக இருந்து எல்லா வகையிலும் எனக்கு உதவியாக இருந்ததற்காகவே சசிகலாவுக்கு இப்படி ஒரு தண்டனை’ என்று ஜெயலலிதா சொன்னபோது, சசிகலா விக்கி விக்கி அழுதார். 'டாக்டர் வெங்கடேஷ§க்கு நான் இயக்கத்தில் எந்தப் பொறுப்பும் வழங்கவில்லை. ஆனாலும் ஏராளமான மாணவர்களை இயக்கத்தில் சேர்த்தார்’ என்பதையும் ஜெயலலிதா கண்டுபிடித்துச் சொன்னார்.
இதற்கு இடைப்பட்ட காலத்தில் தினகரன், பெரியகுளம் நாடாளுமன்ற உறுப்பினராக ஆக்கப்பட்டு 'இவர்தான் அடுத்த வாரிசு’ என்று மகுடம் சூட்டப்பட்ட சம்பவங்களும் அரங்கேற ஆரம்பித்தன. மீண்டும் கார்டனுக்குள் குடும்பங்கள் சாரை சாரையாக உள்ளே வரத் தொடங்கின!
8. அர்ப்பணிப்புப் படலம்!
இரண்டாம் முறை ஜெயலலிதா முதலமைச்சராக ஆனபோது நடந்த இரண்டு மூன்று விஷயங்களை சசிகலாவே எப்படி சகித்துக்கொண்டார் என்று தெரியவில்லை. 'சின்ன எம்.ஜி.ஆர்’ என்று அழைத்துக்கொண்ட வி.என்.சுதாகரன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள். 'ராஜகுரு’ என்று அழைக்கப்பட்ட நடராஜனைச் சுற்றி நடந்த விஷயங்கள்.
தத்து எடுத்திருக்கவும் வேண்டாம். தலையில் அடித்திருக்கவும் வேண்டாம். லட்சக்கணக்கான ஜோசியர்களைப் பார்த்து விட்டார் சுதாகரன். அவருடைய ஜாதகத்தை இன்னும் யாராலும் கணிக்க முடியவில்லை. கஞ்சா வைத்திருந்ததாக அவரைக் கைது செய்ததற்குக்கூட காரணம் இருந்தது. அவரது அப்பா விவேகானந்தனும் உள்ளே போனார். நடராஜனை போலீஸ் வேவு பார்ப்பதற்குக் காரணம் இருந்தது. அவருக்கு அறிமுகமான குடும்பம் என்பதற்காக, செரீனாவும் அவரது அம்மாவும் ஜெயிலுக்குப் போனார்கள். உண்மையில் செரீனா 'கஞ்சா விற்பனையில்’ கைதானது ஏன் என போலீஸும் நடராஜனும் இதுவரைக்கும் காரணம் சொல்லவில்லை. ஆனால் 'கந்தசாமி’ என்ற பெயரில் ஆங்கில கேப்பிடல் லெட்டர்களில் கடிதம் எழுதிக்கொண்டே இருந்த ஆசாமிக்கு(!) மட்டும் எல்லாம் தெரிந்தது. இன்று பல்வேறு சிக்கல்களை வலிந்து போய் சப்பைக் கட்டும் கபில்சிபல்தான் அன்று வந்து, செரீனாவைக் காப்பாற்றினார். கபில்சிபலுக்கு 'கந்தசாமி’யும் உதவினார்.
இதன்பிறகு, சசிகலாவின் வளர்ச்சி ஏறுமுகம் ஆனது. என்.சசிகலா என்ற 'கணவர்’ இனிஷியலுடன் இருந்தவர் வி.கே.சசிகலா என்று தனது 'அப்பா’ இனிஷியலுக்கு மாறினார். நமது எம்.ஜி.ஆர். பத்திரிக்கையின் வெளியீட்டாளர் ஆனார். பொதுக் கூட்டங்களுக்கு மட்டும் வந்து முன்வரிசையை அலங்கரித்தவருக்கு செயற்குழு உறுப்பினர் பதவியும் தரப்பட்டது. அம்மாவுக்கு அடுத்து 'சின்னம்மா’ என்பது அ.தி.மு.க.வின் தலைவிதியாக மாறிப்போனது!
9. ஆக்கிரமிப்புப் படலம்!
சசிகலா குடும்பத்துக்காக கார்டனில் போட்ட மியூஸிக்கல் சேரில் டாக்டர் வெங்கடேஷ் உட்கார வைக்கப்பட்டார். அவருக்கு, மாநிலம் முழுக்க வலம் வரும் இளைஞர்கள் - இளம் பெண்கள் பாசறை பதவி கிடைத்தது. சென்னையின் தலைமை இடத்தில் உட்கார்ந்து கண்காணிப்பது போதாது என்று மாவட்ட எல்லைகளில் தனது ஆட்களை நியமிக்கத் திட்டமிட்டார் சசிகலா. கொங்கு மண்டலம் ராவணன் கைக்குப் போனது. திருச்சி மண்டலம் கலியபெருமாள் கைக்குத் தரப்பட்டது. ஏற்கெனவே டெல்டா மாவட்டங்களை திவாகரனே வைத்திருந்தார். தென் மாவட்டங்களால் தங்களது அதிகாரத்துக்கு எந்தச் சிக்கலும் இல்லை என்று இந்த வட்டாரம் நினைத்தது.
ஜெயலலிதாவுக்கு அருகில் யார் வர வேண்டும், அம்மாவை யார் யார் சந்திக்கலாம் என்பதை மட்டும் தீர்மானித்தவர்கள், 2005-2006க்குப் பிறகு கட்சியின் மாவட்ட, நகர நிர்வாகிகள் வரைக்கும் இன்னார்தான் இருக்க வேண்டும் என்று தீர்மானிக்க ஆரம்பித்தார்கள். அ.தி.மு.க.வில் இருக்கும் முக்கியமான கெட்ட பழக்கம், மொட்டைக் கடிதங்கள். இந்தக் கடிதங்கள்தான் பணம் காய்க்கும் மரங்களாக மாறியது. தலைமைக் கழகமோ, கார்டனோ, இங்கு வரும் கடிதங்கள் அனைத்தையும் ஜெயலலிதா பார்க்க முடியாது. அவருடைய நம்பிக்கைக்கு உரியவர்கள் என்று சசிகலாவின் ஆசீர்வாதத்துடன் நியமிக்கப்பட்டவர்கள் திருகல் வேலை பார்த்தார்கள். ராவணன், திவாகரன், டாக்டர் வெங்கடேஷைப் பிடிக்காதவர்கள் கட்சியில் இருக்க முடியாது என்ற நிலை உருவானது. இதன் உச்சகட்டம்தான், ஜெயலலிதாவுக்கே தெரியாமல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட விநோதம். 'எங்க கடமைக்கு லிஸ்ட்டை விட்டாச்சு. அம்மா அப்புறம் மாத்திட்டாங்க’ என்று சப்பைக் கட்டு கட்டிக் கணக்குக் காட்டுவதற்காக ஜெயலலிதாவையே தலை குனியவைத்தார்கள்.
வெற்றிக்குப் பிறகும் செல்வாக்கானவர்கள், அமைச்சர்களாக இருந்த முன்அனுபவம் பெற்றவர்களை விட்டுவிட்டு... முதல் தடவை எம்.எல்.ஏ. ஆனவர்கள் தலையில் பெரிய பெரிய துறைகளைக் கொண்டு போய்வைத்து அமைச்சர் ஆக்கினார்கள்.
இது எதையும் ஜெயலலிதா தட்டிக்கேட்கவில்லை. தட்டிக்கேட்க முடியாத நிலையில் இருந்தார் என்றே சொல்ல வேண்டும்!
10. அழிப்புப் படலம்!
தி.மு.க. அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் சம்பாதித்த கெட்ட பெயரை, சிலர் ஐந்து மாதங்களிலேயே இப்போது வாங்கித் தந்ததை ஜெயலலிதாவின் காதில் கொண்டுபோய்ச் சேர்த்தவர் டி.ஜி.பி. ராமானுஜம். தி.மு.க.வின் சரிவுக்கு, ஸ்பெக்ட்ரமும், கமிஷனும், குடும்ப ஆதிக்கமும், கான்ட்ராக்டர் லாபியும்தான் காரணம். 'இது நெகடிவ் வாக்குகள் அல்ல. அ.தி.மு.க. மீதான பாசிட்டிவ் வாக்குகள்’ என்று ஜெயலலிதா வெளியில் சொன்னாலும் உள்ளே உண்மை தெரியும் அவருக்கு. இன்னொரு சரிவை நம் கண்முன் பார்க்கக் கூடாது என்று அவர் நினைத்து, தயங்காமல் எடுத்த அல்ட்டிமேட் அதிரடி ஆயுதத்தில் சசிகலாவே இப்போது வெளியேற்றப்பட்டு உள்ளார்.
ஆனாலும் எல்லாருக்குள்ளும் ஒரு சந்தேகம் இன்னமும் இருக்கிறது.
'ஏம்ப்பா, சசிகலாவை உண்மையிலேயே நீக்கிட்டாங்களா என்ன? இல்லே, இதுவும் ஒரு நாடகமா?’ என்ற பேச்சு பிரபலமாகி வருகிறது.
அதையும் பார்க்கலாம்!
- ப.திருமாவேலன்
பலிவேற்காடு....
அதிகப்படியான பயணிகள்...
பழவேற்காடு மீண்டும் பலிவேற்காடு ஆகி இருக்கிறது. என்ன ஆறுதல் சொன்னாலும் தீர்க்க முடியாத சோகம் இது. இன்னும் இப்படிப்பட்ட அலட்சியங்களால் எத்தனை மனித உயிர்களைத் தொடர்ந்து பறி கொடுத்துக் கொண்டு இருக்கப் போகிறோம் நாம்!
ஏதாவது ஒரு விபத்து நடந்துவிட்டால், உடனே தீவிரமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதும், கட்டுப்பாடுகள், கெடுபிடிகள் விதிக்கவும் செய்வார்கள். ஆனால் அதெல்லாம் கொஞ்ச நாட்கள்தான். மீண்டும் எல்லாமே பழைய நிலைமைக்கு மாறிவிடும். ஏனென்றால் மனித உயிர்களுக்கு அவ்வளவுதான் மதிப்பு.
இதற்கு உதாரணம்தான் பழவேற்காடு சம்பவம். ஏற்கெனவே 1984-ம் ஆண்டு 8 பேரும் 1994-ம் ஆண்டு 29 பேரும் இதே ஏரியில் மூழ்கி இறந்துபோயிருக்கிறார்கள். ஆனாலும், படகில் செல்வதற்கு இங்கே எவ்விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் கிடையாது. கட்டுப்பாடுகள் விதிக்கவும் யாரும் இல்லை. அதனால்தான், கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடப் போன ஒரு குடும்பமே பழவேற்காடு ஏரியில் மூழ்கி பலியான சோகம் கடந்த கிறிஸ்துமஸ் நாளில் நிகழ்ந்தது.
திருநெல்வேலி மாவட்டம் சாத்தான்குளம் அருகில் உள்ள இட்டமொழிகிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரபாண்டியன். வறுமையின் பிடியில் சிக்கித் தவித்த இவர், பல வருடங்களுக்கு முன்பு பிழைப்புக்காக தலைநகர் சென்னை நோக்கி வந்தார். கும்மிடிப்பூண்டியில் குடியேறி, டெய்லராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கினார். அதோடு சின்னச் சின்ன வேலைகளைச் செய்தவர், ஒரு டிஃபன் கடையைத் துவக்கினார். கடுமையான உழைப்பின் பலனாக, பாண்டியன் ஹோட்டல், பல்பொருள் அங்காடி, ஐஸ்க்ரீம் பார்லர் என்று பேர் சொல்லும் அளவுக்கு உயர்ந்தார். மகன்கள் ஜெபதுரை, ஆசீர்வாதம், கனகராஜ், தங்கராஜ் மற்றும் மருமகள்கள், பேரக் குழந்தைகளுடன் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தவர்தான், இப்போது குடும்பத்துடன் பலியாகி இருக்கிறார்.
ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸை, வெளியே எங்காவது சென்று கொண்டாடுவதுதான் சுந்தர பாண்டியன் வழக்கம். இந்த முறை சென்னையில் வசிக்கும் மகள் பாக்கியமணியும், அவரது குடும்பத்தினரோடு வந்திருந்தார். கடையில் வேலை பார்த்த நசீரா பானு, 'என் கணவர் தமீம் அன்சாரி நன்றாகப் படகு ஓட்டுவார். குடும்பத்தோடு வந்தால், படகுச் சவாரி செய்து கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடலாம்’ என்று அழைப்பு விடுக்கவே, இன்னொரு ஊழியரான அனிதாவையும் அழைத்துக்கொண்டு போயிருக்கிறார். பழவேற்காடு ஏரியில் அன்சாரி படகுடன் தயாராகக் காத்திருக்க... அனைவரும் படகு சவாரி புறப்பட்டு இருக்கிறார்கள். பழவேற்காடு ஏரியை அடுத்த தீவில் சமைத்துச் சாப்பிட்டு ஓய்வெடுத்துவிட்டு, மதியம் 2.30 மணிக்குத் திரும்பியபோதுதான் அந்தத் துயரம்!
மீட்புப் பணியில் ஈடுபட்டு இருந்த மீனவர் மணி, ''ஒரு வாரமா கடலில் அதிகக் காற்றும் அலையும் இருக்கு. மீன் பிடிச்சுட்டு கரைக்குத் திரும்பிட்டு இருந்தோம். அப்பத்தான் ஒரு படகு ஏரியில் கவுந்து கிடக்குற தையும், படகுக் கயிறைப் பிடிச்சுக்கிட்டு மூணு குழந்தைங்க தொங்குறதையும் பார்த்« தாம். உடனே கடலில் குதிச்சு மூணு பேரை யும் காப்பாத்திட்டோம். ஆனா, பெரியவங்க யாரை யுமே எங்களால் காப்பாத்த முடியலை'' என்று வேதனைப்பட்டார்.
கடலில் இருந்து ஏரியை நோக்கி வந்தபோது, முகத்துவாரப் பகுதியில் ராட்சத அலையும் சுழலும் சேர்ந்து சுழற்றி அடிக்க... படகு ஒரு பக்கமாகச் சரிந்துள்ளது. உடனே படகில் இருந்தவர்கள் பயத்தில் ஒரே பக்கம் வந்து சேர, ஆட்களின் சுமை தாங்காமல் படகு கவிழ்ந்துவிட்டது. சுந்தரபாண்டியன் குடும்பத்தைச் சேர்ந்த 20 பேரும், கடை ஊழியர்கள் அனிதா மற்றும் நசீரா பானுவும் பரிதாபமாகப் பலியாகினர். காப்பாற்றப்பட்ட பால் தினகரன், ஜனோகர் சாமுவேல், பவுல்ராஜ் ஆகிய மூன்று சிறுவர்களும் சுந்தரபாண்டியனின் மூத்த மகன் ஜெபதுரையின் மகன்கள். படகை ஓட்டிய அன்சாரியும் தப்பி இருக்கிறார்.
மீனவரான மதன், ''ஒரு படகில் 12 பேருக்கு மேல் ஏற்றக் கூடாதுன்னு போலீஸ் சொல்லி இருக்கு. அதனால், எந்தப் படகோட்டியும் 12 பேருக்கு மேல ஏற்ற மாட்டாங்க. தெரிந்தவர்கள் என்பதால் அதிக ஆட்களை அன்சாரி ஏற்றி இருக்கார். 25 பேரை ஏற்றியதுதான் பிரச்னையே. இன்னொரு முக்கியமான தவறு... அது ஏரியில் மீன் பிடிக்கும் படகு. அதைக் கடலுக்குள் கொண்டுசெல்வதே ஆபத்து. அனுபவம் மிக்க படகோட்டிகள்கூட முகத்துவாரத்தில் படகு ஓட்ட முடியாமல் திணறுவார்கள். லைஃப் ஜாக்கெட், ரப்பர் டியூப் போன்ற பாதுகாப்புக் கருவிகள் எடுத்துச் செல்லாததால் யாரையும் காப்பாற்ற முடியவில்லை'' என்றார் வருத்தமாக.
அந்த ஏரியாவைச் சேர்ந்த பிரவீன் என்பவர், ''அன்சாரிக்கு வலிப்பு நோய் இருக்கு. சுழல்ல மாட்டிக்கிட்டப்ப வலிப்பு வந்ததான்னு தெரியல. 'இயற்கைப் பேரிடர் மேலாண்மை’ன்னு ஆபத்துக் காலத்தில் எப்படிக் காப்பாற்றுவது, முதலுதவி செய்யுறதுன்னு ஐந்து வருடங்கள் பயிற்சி எடுத்த இளைஞர்கள் இங்கே நிறைய இருக்கோம். மத்திய அரசு சான்றிதழ் பெற்ற எங்களை, வழிகாட்டியாக நியமிச்சு அடையாள அட்டை தரணும்னு கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தோம். அதை நிறைவேற்றி இருந்தால், இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் கவன மாகக் கண்காணித்து இருப்போம்'' என்றார்.
இது குறித்து வடக்கு மண்டல ஐ.ஜி. சைலேந்திரபாபுவிடம் பேசினோம். ''ஏரியில் மீன் பிடிக்கும் அன்சாரிக்கு கடலுக்குள் படகு செலுத்திய அனுபவம் இல்லை. முகத்துவாரத்தில் தண்ணீரின் ஆக்ரோஷத்தால் படகு சாய்ந்திருக்கிறது. நீச்சலடித்துத் தப்பிய அன்சாரி, தன் மனைவியைக்கூட காப்பாற்ற முயற்சிக்கவில்லை. இந்த விபத்துக்கு அன்சாரிதான் பொறுப்பு. அன்சாரியைக் கைது செய்த நாங்கள், மனைவியின் இறுதிச் சடங்குகளை அவர் முடிக்க வேண்டும் என்பதற்காக ஜாமீனில் விட்டு இருக்கிறோம். அன்சாரி மீது உரிய நடவடிக்கை எடுப்போம்'' என்றார்.
படகு ஓட்டுபவர் மீது நடவடிக்கை எடுப்பதால் மட்டும் இந்தப் பிரச்னை தீர்ந்துவிடாது. இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடக்கக் கூடாது. அதற்கான நடவடிக்கைகளை மூன்று மிகப் பெரிய இழப்புச் சம்பவங்கள் நடந்து முடிந்து விட்டபிறகாவது அரசாங்கம் எடுக்கவில்லை என்றால் மனித உயிர்கள் மலிந்து போய் விட்ட தாக அர்த்தம் ஏற்படும். கிளிஞ்சல்கள் தேடி குழந்தைகள் விளையாடும் கடல் பகுதியில், இனி ஒருமுறை மனித உடல்களைத் தேடும் கொடூரம் நிகழாமல் இருக்கட்டும். 6 மாதக் குழந்தையான ஜூலியட்டுடன் சேர்த்து அனைவருக்கும் அஞ்சலி!
- க.நாகப்பன், படங்கள்: அ.ரஞ்சித்
பிரதமருக்கு எதிர்ப்பு... திரும்பிய பக்கமெல்லாம் கறுப்பு!
'கணிதமேதை இராமானுஜத்தின் 125-வது பிறந்த நாள் விழாவுக்காக பிரதமர் தமிழகம் வருகிறார்’ என்ற அறிவிப்பு வெளியானதுமே எதிர்ப்புகள் கிளம்பின. 'முல்லைப் பெரியாறு விவகாரத்தில் மத்திய அரசின் போக்கைக் கண்டித்து கறுப்புக் கொடி காட்டுவோம்’ என்று விஜயகாந்த் முதலில் அறிவிக்க... காரைக்குடி செல்லும் பிரதமருக்கு கறுப்புக்கொடி காட்டுவோம் என்று வைகோ சொல்ல... சகல திசைகளில் இருந்தும் கண்டன ஏவுகனைகள் சீறிப் பறந்தன. ஆனால் எப்போதும் போல் அலட்டிக்கொள்ளாமல் வந்தார் என்றாலும், மக்களைப் பார்த்துக் கையசைக்கவும் முடியாத அளவுக்கு தமிழக நிலைமை சீரியஸ்.
26-ம் தேதி காலை 7 மணி முதலே, சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே ஆயிரக்கணக்கான தே.மு.தி.க. தொண்டர்கள் கறுப்புக் கொடியுடன் திரளத் தொடங்கினார்கள். குவிக்கப்பட்ட போலீ ஸார், சாலையை மறித்தபடி அரண் போன்று நின்று கொண்டார்கள். வாகனங்களை எல்லாம் வேறு ரூட்டில் திருப்பி அனுப்பவே... ஸ்தம்பித்து நின்றது சென்னை.
சரியாக 8.40-க்கு பனகல் மாளிகை அருகே சீறலுடன் வந்து நின்றது விஜயகாந்த் கார். கறுப்புச் சட்டை, கறுப்புக் கண்ணாடி சகிதம் காரில் இருந்து இறங்கிய விஜயகாந்தைப் பார்த்ததும், 'கேப்டன்... கேப்டன்...’ என்று தொண்டர்கள் கூட்டம், ஒட்டுமொத்தமாக அவரைச் சூழ்ந்துகொண்டது. கையில் கறுப்புக்கொடியை எடுத்த விஜயகாந்த், பிரதமர் தங்கி இருந்த கவர்னர் மாளிகையை நோக்கி வீறுநடை போட ஆரம்பித்தார். பிரதமர் மற்றும் மத்திய அரசுக்கு எதிரான கண்டனக் குரல்கள் எழுப்பியபடி அவருடன் சேர்ந்து கூட்டமும் முன்னேற... எதிர் முனையில் தயாராக காத்து நின்றது போலீஸ். சைதாப்பேட்டை சின்னமலை அருகே விஜயகாந்த் வந்ததும், 'உங்கள் அனைவரையும் கைது செய்கிறோம்’ என்றது போலீஸ். மாநகரப் பேருந்தில் ஏறி உட்கார்ந்துகொண்டார். 'யாரும் எந்தப் பிரச்னையும் பண்ணக் கூடாது’ என்று சொல்லி தொண்டர்களை சமாதானப்படுத்தினார் விஜயகாந்த்.
அடுத்த அரை மணி நேரத்தில் மெமோரியல் அரங்கம் முன்பு அரங்கேறியது, த.மு.மு.க. சார்பில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம். வழக்கமாக சிவப்புத் துண்டுடன் காட்சி தரும் த.மு.மு.க-வின் நிறுவனரான குணங்குடி அனீஃபா, கறுப்பு நிறத் துண்டுடன் வந்து நின்றார். நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்கவேண்டிய பொதுச்செயலாளர் ஹைதர் அலி, மன்மோகன் வருகை நெரிசலில் சிக்கிக்கொண்டதால், 10.30 மணிக்குத்தான் வந்து சேர்ந்தார். உடனே, பிரதம ருக்கு எதிரான இடி முழக்கத்தை ஆரம்பித்தார். 'அமெரிக்காவின் பாதங்களை நக்கும் ஆசாமிகளை நாம் தலைமை அமைச்சர்களாகப் பெற்று இருக்கிறோம்’ என மன்மோகனைச் சாடியவர், 'தமிழர்களுக்கு இறையாண்மை மீது நம்பிக்கை இருக் கிறது. இந்தியா எனும் தேசம் பல நாடுகளாகச் சிதறுண்டு போகும் நிலையை உருவாக்கி விட வேண்டாம். முல்லைப் பெரியாறுக்காக தேனியில் தொடங்கிய போராட்டத்தை, தமிழகம் முழுவதும் பரவவைத்துவிடாதீர்கள்’ என்று ஆக்ரோஷம் காட்டினார்.
அன்று, பிற்பகல் அழகப்பா பல்கலைக்கழக விழாவில் கலந்து கொள்வதற்காக, காரைக்குடி போனார் மன்மோகன். அங்கு, சென்னையை விட பலத்த எதிர்ப்பு. அண்ணா சிலை அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. குணசேகரன் தலைமையில் திரளான கூட்டம் கறுப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்த... பெரியார் சிலை அருகே, 'சலோ சலோ... டெல்லி சலோ’ என மன்மோகனுக்கு எதிராக கோஷமிட்டபடி கறுப்புக் கொடி ஊர்வலம் நடத்தினார் ம.தி.மு.க-வின் துணை பொதுச்செய லாளர் மல்லை சத்யா.
சத்யா பேசிய போது, ''காங்கிரஸ் எப்போதெல்லாம் மத்திய அரசை ஆள்கிறதோ... அப்போதெல்லாம் ஒட்டிப் பிறந்தாலும் ஒதுக்கியே வைக்கப்படும் இடது கையைப் போலத்தான் நம்மைப் பார்க்கிறது. முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரளாவுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை தமிழகத்துக்குக் கொடுக்க மறுக்கிறது மத்திய அரசு.
தேன் கூட்டைக் கலைத்துவிட்டது போல் தமிழனைத் தட்டி எழுப்பிவிட்டு இப்போது அவதிப்படுகிறது கேரளம். 'நீங்கள் நினைத்தால்தான் தமிழர்களை அமைதிப்படுத்த முடியும்’ என்று நேற்று முன்தினம் இரவு, தலைவர் வைகோவைத் தொடர்புகொண்டு அரை மணி நேரம் மன்றாடி இருக்கிறார் கேரளத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் வயலார் ரவி. மக்களை சந்திக்கப் பயந்துகொண்டு பிரதமர் வான் வழிப்பயணம் போனது, இந்தக் கறுப்புத் துண்டுக்கும் மக்கள் எழுச்சிக்கும் கிடைத்த மகத்தான வெற்றி'' என்றார்.
மன்மோகன் மறக்க முடியாத பயணம் இது!
- ஜூ.வி டீம்
படங்கள்: வி.செந்தில்குமார், எஸ்.சாய்தர்மராஜ்,
சொ.பாலசுப்ரமணியன்
செய்தியும் சிந்தனையும் - டயல் செய்தால் நாஞ்சில் சம்பத் பேசுவார்!
************************************************************************************************************
சி.பி.ஐ. விசாரணை போதாது!
'பரமக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தங்கள் வசம் உள்ள ஆவணங்கள், பதிவு செய்யப்பட்ட வழக்குகள், பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து பெறப்பட்ட புகார்கள் அனைத்தையும், பரமக்குடி போலீஸ் இன்ஸ் பெக்டர் இன்னும் 10 நாட்களுக்குள் மத்திய புலனாய்வுப் பிரிவு (சி.பி.ஐ.) இணை இயக்குனர் வசம் ஒப்படைக்க வேண்டும். அவர் புலன் விசாரணைக்காக தகுதியான அதிகாரியை நியமிப்பதோடு, அதனைக் கண்காணிப்பதற்காக மேல்நிலை அதிகாரி ஒருவரையும் நியமிக்க வேண்டும். இந்த விசாரணைக்கு தமிழக அரசின் உள்துறை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. உட்பட, வழக்கில் காட்டப்பட்டுள்ள அத்தனை அதிகாரிகளும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்'' என்பதுதான் தீர்ப்பின் சாராம்சம்.
இதுபற்றி நம்மிடம் பேசிய தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப் பொதுச் செயலாளர் சாமுவேல் ராஜ், ''தலித் மக்கள் வன்முறையில் ஈடுபட்டார்கள் என்று குற்றம் சாட்ட முடியாது. அப்படிச் செய்ய வேண்டும் என்று நினைத்து இருந்தால் அவர்கள் வரும் வழியில் எல்லாம் வன்முறையில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது போன்ற வாதங்களை வைத்தோம். இந்த வழக்கில் தமிழக அரசுதான் குற்றவாளி. குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களிடமே, விசா ரணையை ஒப்படைப்பது எப்படி சரியாக இருக்கும் என்று கேட்டோம். அதை ஏற்று இந்த நல்ல தீர்ப்பினை உயர் நீதிமன்றம் வழங்கி இருக்கிறது'' என்றார்.
அடுத்துப் பேசிய மூத்த வழக்கறிஞர் ரத்தினம், 'பரமக்குடி சம்பவம் ஓர் அரச வன்முறை என்பதற்கு ஏராளமான ஆதாரங் களை நீதிமன்றம் முன் வைத்தோம். அரசுத் தரப்பால் அதற்குப் பதில் அளிக்க முடியவில்லை. உள்துறைச் செயலாளர் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியனும், இந்தப் பிரச்னையில் அரசு நடுநிலை வகிப்பதாகச் சொல்லி விட்டார். சி.பி.ஐ. விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தர விட்டது சந்தோஷம்தான். ஆனால், சி.பி.ஐ-யிலும் சில கறுப்பு ஆடுகள் இருக்கின்றன. அதனால், நீதிமன்றத்தின் மேற்பார்வையில், சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி.) விசாரணை கேட்கும் முடிவில் இருக்கிறேன்' என்றார்.
நீதி வேண்டும், அதுவும் விரைவாக!
- இரா.மோகன், கே.கே.மகேஷ்
படங்கள்: பா.காளிமுத்து
ஸ்நேகிதனே... ஸ்நேகிதனே...!
முல்லைப் பெரியாறு விவகாரத்தில் நட்புக் கரம்
முல்லைப் பெரியாறு விவகாரத்தில், கேரளாவில் பேதமில்லாமல் அத்தனை கட்சியினரும் தமிழகத்துக்கு எதிராக முறுக்கிக்கொண்டனர். அதிலும், கேரள பி.ஜே.பி-யினர் துள்ளிக் குதித்து கடப்பாரை, கபடாக்களைக் கையில் ஏந்தி, 'அணையை உடைத்தே தீருவோம்’ என்று உக்கிரம் காட்டினார்கள். இந்த நிலையில், கடந்த ஞாயிறு அன்று திடீர் மாற்றம். ஆம்! தமிழ்நாடு மற்றும் கேரள மாநில பி.ஜே.பி-யினர் ஒன்றாக இணைந்து, 'நட்புச் சங்கிலி’ என்று ஒரு நெகிழ்ச்சிகரமான மனிதச் சங்கிலியை அரங்கேற்றி, 'அடடே’ போட வைத்தார்கள்.
கோவை மாவட்டத்தை ஒட்டிய கேரள எல்லைப் பகுதியான கோவிந்தாபுரத்தில் நடந்தபொதுக்கூட்டத்தில் இரண்டு மாநில நிர்வாகிகளும் உரையாற்றிவிட்டு பரபரவெனக் களம் இறங்கி கை பிடிக்கத் தொடங்கினார்கள். தமிழகப் பகுதிக்குள் கேரளத்தவர்களும் கேரள எல்லைக்குள் தமிழகத்தினரும் மாறி மாறி நின்று 'வி ஆர் பிரதர்ஸ்’ என்று முழங்கியபோது... தயக்கத்துடன் தள்ளி நின்று கவனித்த மக்கள் உற்சாகமாகக் கரவொலி எழுப்பினர்.
கேரள மாநில பி.ஜே.பி. தலைவரான முரளிதரனிடம் பேசியபோது ''கேரள மக்களின் பிரதிநிதியாக பேசுவதென்றால், எப்போதும் எங்களுக்கு தமிழர்களின் நட்பும் சகோதரத்துவமும் தேவை என்றுதான் சொல்வேன். இதே உணர்வுதான் தமிழர்களிடமும் இருக்கிறது. நடுவில் சில அரசியல்வாதிகள்தான் சென்சேஷனல் காரியங்களைச் செய்து குழப்புகிறார்கள். ஆளும் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை இழந்த கம்யூனிஸ்ட் கட்சியும், இந்த விஷயத்தில் செய்வது பிற்போக்கு அரசியல்... கற்கால அரசியல். இரண்டு கட்சிகளையும் 'இடைத்தேர்தல்’ என்ற பித்து பிடித்து ஆட்டுகிறது. 'நான் தமிழர்களுக்கு எதிரானவன்’ என்று காட்டினால்தான் கேரளவாசிகளின் ஓட்டு கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். இது தப்புக் கணக்கு. அதேபோல், 'கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படுவது இல்லை, சட்டம் ஒழுங்கு சீராக இருக்கிறது’ என்று கட்டுக்கதை சொல்கிறார், முதல்வர் உம்மன் சாண்டி. இவர்களின் முகத்திரையைக் கிழிக்கத்தான் பி.ஜே.பி. கிளர்ந்து எழுந்திருக்கிறது'' என்றார்.
இப்படி ஓர் உணர்வுபூர்வமான நட்புச் சங்கிலி நடப்பதற்கு சூத்ரதாரியாக இருந்தவர் பி.ஜே.பி-யின் அகில இந்திய வர்த்தக அணிச் செயலாளரான சேகர்.
- எஸ்.ஷக்தி
படங்கள்: கே.ஆர்.வெங்கடேஸ்வரன்
அரசியல் கட்சிகளின் 'ஜோக்பால்' ஆட்டம்!
இந்த மசோதாவின்படி, மத்தியில் லோக்பால் அமைப்பையும் மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைப்புகளையும் உருவாக்கினால், அவை பெயர் அளவிலான அமைப்புகளாகத்தான் இருக்கும். அரசு ஊழியர்கள் தொடங்கி, 10 லட்சத்துக்கு மேலாக வெளிநாட்டு நன்கொடைகளைப் பெறும் தொண்டு நிறுவனங்கள் வரை மக்கள் பணியில் ஈடுபட்டிருக்கும் பெரும்பாலான பிரிவினர், லோக்பால் விசாரணை வரம்புக்குள் வந்துள்ளனர். ஆனால், அரசியல்வாதிகளும் பெருநிறுவனங்களும் எஸ்கேப். முக்கியமாக லஞ்ச ஊழல் முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்தும் முதன்மை அமைப்பான மத்தியப் புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ.) நழுவிவிட்டது.
லோக்பால் வரம்புக்குள் பிரதமர் கொண்டுவரப்பட்டுள்ளார். ஆனால் வெளியுறவு, உள்நாட்டுப் பாதுகாப்பு, அணுசக்தி, விண்வெளி தொடர்பான பிரதமரின் நடவடிக்கைகளை லோக்பால் விசாரிக்க முடியாது. மேலும், பிரதமருக்கு எதிரான எந்த விசாரணையையும், லோக்பாலின் அனைத்து உறுப்பினர்கள் அடங்கிய முழுஅமர்வு மட்டுமே மேற்கொள்ள முடியும். அவர்களில் 75 சதவிகித உறுப்பினர்கள் ஆதரவு அளித்தால் மட்டுமே விசாரணைக்கு உத்தரவிட முடியும்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, லோக்பால் அமைப்பின் அதிகாரம் என்னவென்றால், கிட்டத்தட்ட ஓர் அஞ்சல்காரரின் நிலைதான். லோக்பால் தானாகவே விசாரணை நடத்தவோ, விசாரணை நடத்த ஆணையிடவோ முடியாது. மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சி.வி.சி.) அல்லது மத்தியப் புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ.) மூலம் விசாரிக்கப் பரிந்துரைக்க மட்டுமே முடியும். இந்த விசாரணைகளையும் மேற்பார்வையிட முடியுமே தவிர, வழிநடத்த முடியாது.
அரசியல் கட்சிகள் இடையே லோக்பால் தொடர்பாக ஒருமித்த கருத்து இல்லை என்பதுதான் உண்மை. 'இன்னும் வலுவான அமைப்பாக லோக்பால் உருவாக்கப்பட வேண்டும்’ என்று வெளியில் முழங்கும் கட்சிகள், இந்த மசோதாவைக் கண்டே நடுங்குகின்றன. குறிப்பாக, மாநிலக் கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன. மசோதா நிறைவேறினால், எல்லா மாநிலங்களிலும் லோக்ஆயுக்தா அமைப்பைக் கட்டாயம் உருவாக்க வேண்டும் என்பதால், மாநிலத்தில் தங்களுடைய ஊழல்களை, 'லோக்ஆயுக்தா’ அம்பலப்படுத்தி விடும் என்று நடுங்குகின்றன.
இந்தக் கூச்சல்களை ரசிக்கும் காங்கிரஸ் கட்சியும், இந்த மசோதா நிறைவேறாமல் போவதையே விரும்புகிறது. மசோதாவைத் தாக்கல் செய்தபோது, 'இப்படி ஒரு சட்டம் தேவை என்றால் வைத்துக்கொள்வதும், தேவை இல்லை என்றால் நிராகரிப்பதும் நம் (நாடாளுமன்றம்) கைகளில்தான் உள்ளது’ என்று நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளிப்படையாகப் பேசியதும், அண்ணா ஹஜாரேவின் போராட்டத்தை முடக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளும் அதைத்தான் காட்டுகிறது.
லோக்பால் மசோதாவில், 'மத்தியப் புலனாய்வு அமைப்பின் விசாரணையை லோக்பால் மேற்பார்வையிடலாம்’ என்று குறிப்பிடப்பட்டு இருப்பதே அந்த அமைப்பினர் இடையே அதிருப்தியை உருவாக்கி இருப்பதாக அரசு புரளியைக் கிளப்புகிறது. அதோடு, 'அண்ணா ஹஜாரேவின் போராட்டத்தில் வெளிநாட்டுச் சதி இருக்கிறது’ என்று உத்தரப் பிரதேச காங்கிரஸ் எம்.பி. பிரவீண் சிங் ஆரோன் குற்றம் சாட்டுவதையும் பார்த்தால், மீண்டும் ஓர் அழுகுணி ஆட்டத்துக்கு மன்மோகன் அரசு தயாராவது தெரிகிறது!
அண்ணா ஹஜாரே, இந்த மசோதவைப் பார்த்துக் கொந்தளித்து, 'வலுவான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி டிச. 27-ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டமும் சிறை நிரப்பும் போராட்டமும் தொடங்கும்’ என்று அறிவித்து இருக்கிறார்.
வெற்றி மக்களுக்கா அல்லது காங்கிரஸ் அரசுக்கா என்பது விரைவில் தெரிந்து விடும்!
- சமஸ்
முல்லை ஆத்துத் தண்ணீர் இல்லைன்னா...!
கொந்தளிக்கும் தென் மாவட்ட விவசாயிகள்
குமுளி பேருந்து நிலையத்தில் இருந்து 300 அடி தூரத்திலேயே ஆரம்பிக்கிறது தமிழக எல்லை. தேனி மாவட்டம் முழுக்கவே விவசாயத்தை நம்பித்தான் இருக்கிறார்கள். அந்த விவசாயிகளை நம்பித்தான் இந்த மாவட்டத்தில் ஒவ்வொரு தொழிலும் இருக்கிறது.
உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டியைச் சேர்ந்தவர் பிரபாகர். நெல், கரும்புகளை ஏக்கர் கணக்கில் விவசாயம் செய்பவர். ''கேரளாவில் தண்ணீர் வீணாப் போயிட்டு இருக்குன்னுதான், அந்தக் காலத்தில் பென்னி குக் ஒரு அணையைக் கட்டினார். அந்த அணையில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் நிரம்பும் தண்ணீரைப் பெரிய குழாய்கள் மூலமாக தேனி மாவட்டத்துப் பக்கம் திருப்பிவிட்டார். அதுவரை வானம் பார்த்த பூமியாக இருந்த தேனி மாவட்டம், அதன் பிறகு பசுமையாக மாறியது. இன்றைக்கு மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை, தேனி ஆகிய மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாக இருப்பது முல்லைப் பெரியாறு தண்ணீர்தான். கேரளாவைச் சேர்ந்தவங்க புதுசா ஒரு அணையைக் கட்டித் தண்ணீரைத் தடுத்துட்டா, நமக்குத் தண்ணீர் எப்படிங்க வரும்?
வருசத்துக்கு இரண்டு போகம் நெல் சாகுபடி செய்வோம். கரும்பும் போடுவோம். முல்லைப் பெரியாறு தண்ணி மட்டும் இல்லைன்னா என்ன ஆகும்னு நினைச்சுக்கூடப் பார்க்க முடியலை. அதனால் எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும், தாங்கிக்கத் தயாரா இருக்கோம். ஆனா, முல்லைப் பெரியாறை மட்டும் விட்டுக்கொடுக்க மாட்டோம்'' என்று கொந்தளித்தார்.
குச்சனூரைச் சேர்ந்த விவசாயி சீனிவாசன், ''எனக்கு இப்போ 80 வயசு ஆகுதுங்க. எங்களுக்கு விவரம்
தெரிஞ்ச காலத்தில் இருந்தே, நாங்க முல்லை ஆத்துத் தண்ணியை நம்பித்தான் விவசாயம் பண்ணிட்டு இருக்கோம். வைகோவைத் தவிர வேற யாரும் உணர்வுப்பூர்வமா இதுக்குப் போராடுறதா எனக்குத் தெரியல. அதுக்காக நான் வைகோ கட்சின்னு நினைக்காதீங்க. எம்.ஜி.ஆர். முதல்வரா வர்றதுக்கு முந்தி, 150 கனஅடி வரை தண்ணீர் தேக்கிவெச்சு இருந்தாங்க. எம்.ஜி.ஆர். முதல்வரான பிறகு, கேரள அரசு அவரோடு பேசி 136 அடியாக் குறைச்சாங்க. கேரளப் பாசத்தில் எம்.ஜி.ஆரும் அதுக்கு ஒப்புதல் கொடுத்துட்டார். இப்போ என்னடான்னா, சுப்ரீம் கோர்ட் உத்தரவைக்கூட மதிக்காம, கேரள அரசு என்ன ஆட்டம் போடுது. கேரள அரசோடு பேச்சுவார்த்தை நடத்தப் போன அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதாகிட்டப் பேசப் பயப்படுற மாதிரியே அங்கேயும் வாயே திறக்காமத் தலையாட்டிட்டு வந்திருக்கார். இந்தக் கொடுமையை எங்கே போய் சொல்றது?
அவங்க குடிக்கிற தண்ணியிலா நாங்க பங்கு கேட்குறோம்? வீணாக கடல்ல கலக்குற தண்ணீரை எந்தக் காலத்துலயோ ஒரு மவராசன் இந்தப் பக்கம் திருப்பிவிட்டுட்டுப் போயிருக்கான். அதைக் கொடுக்கக்கூட மலையாளிகளுக்கு மனசு இல்ல. அவங்க மலையாளிகளா இல்லை கொலையாளிகளான்னே தெரியலை...'' என்று ஆவேசமாகப் பேசினார்.
கம்பம் மற்றும் அதன் சுற்று வட்டாரக் கிராமங் களில் பன்னீர்த் திராட்சையை அதிக அளவில் சாகுபடி செய்கிறார்கள். சுருளிப்பட்டியைச் சேர்ந்த திராட்சை விவசாயிகள் சங்கத்தின் தலைவர் முகுந்தனிடம் பேசினோம். ''கையில அள்ளி முகம் சுழிக்காமக் குடிக்கிற அளவுக்கு நல்ல தண்ணீரைத்தான் திராட்சைக்குப் பயன்படுத்த முடியும். எங்க ஏரியாவில் இருக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு திராட்சைத் தோட்டங்கள்தான் வேலை கொடுக்குது. முல்லைப் பெரியாறு தண்ணீரை நம்பித்தான் என்னைப் போல படிச்சவன்கூட, வேலை தேடிப் போகாம ஊரிலேயே விவசாயம் பார்க்கிறோம்.
இந்தத் தண்ணி மட்டும் இல்லாமப் போயிட்டா, விவசாயம் அழிஞ்சுபோயிடும். ஆண்டாண்டு காலமாக இதையே நம்பி இருந்துட்டு இனிமே புதுசா ஒரு வேலைக்குப் போக யாராலும் முடியாது. தமிழக அரசு முல்லைப் பெரியாறு விசயத்தில் இன்னும் உரக்கக் குரல் கொடுக்கணும். எம் புருஷனும் கச்சேரிக்குப் போனான் என்ற கணக்காக போராட்டம் நடத்தும் கூட்டம் எங்களுக்குத் தேவை இல்லை. உண்மையான உணர்வோடு நாலு பேரு கிளம்பி வரட்டும். எவன் அணை மேல் கை வெச்சிடுறான்னு நாங்களும் பார்த்துடுறோம்'' என்று வார்த்தைகளில் கோபத்தைக் கொட்டினார்.
நேற்று... கர்நாடகாவில் காயப்பட்டோம். இன்று... கேரளாவில் ரத்தம் சிந்துகிறோம். நாளை?
- கே.ராஜாதிருவேங்கடம்
எனது இந்தியா!
புலியின் கேள்விகள்
வெள்ளைக்காரர்களுக்கு இந்தியா என்றாலே... முரட்டு யானையும், புலியும், பாம்பும்தான் அடையாளமாக இருக்கின்றன. அப்படித்தான் அவர்கள், அனுபவக் குறிப்புகளில் இந்தியாவைப்பற்றி எழுதி இருக்கிறார்கள். அதை வாசிக்கும் அயல்நாட்டுகாரர்களுக்கு இந்தியா என்பது நாகரிகமற்ற மனிதர்கள் வாழும் ஓர் அடர்ந்த காடு என்றுதான் தோன்றக்கூடும்.
இந்தியர்களை நல்வழிப்படுத்தி நாகரிகமடையச் செய்தது ஆங்கிலேய அரசு மட்டுமே என்ற பொய்யை இன்றும் திரும்பத் திரும்ப பிரிட்டிஷ் சரித்திரக் குறிப்புகள் கூறிக்கொண்டு இருக்கின்றன. உணவுக்காக வேட்டையாடுதல் என்பது தொல்குடிகளில் இருந்து தொடர்கிறது. ஆனால், வேட்டை எவ்வாறு பணம் படைத்தவர்களின் பொழுதுபோக்காக, வீரத்தை நிலைநாட்டும் சாகச விளையாட்டாக உருமாறியது? வன விலங்குகள் இன்று பன்னாட்டுச் சந்தைப் பொருள் ஆகியிருப்பது எதனால் என்பது நாம் அறிந்துகொள்ள வேண்டிய வரலாறு.
எந்தப் புலி, தேசிய விலங்காகப் பெருமையோடு இன்று அறியப்படுகிறதோ, அது நூற்றாண்டு காலமாக வேட்டையாடும் மனிதர்களிடம் இருந்து தப்பிப் பிழைக்க ஓடிய ஓட்டமும், பட்ட காயமும், அடைந்த வலியும் அறிவீர்களா? ஓடிய புலியின் கால் தடங்களுக்கு கீழே அறியப்படாத வரலாறு மறைந்துகிடக்கிறது. அதிகாரம், மனிதர்களை மட்டும் இல்லை, விலங்குகளைக்கூட தனது வாழ்விடத்தில் இருந்து துரத்தி அடிக்கிறது என்பதுதான் காலம் உணர்த்தும் உண்மை.
வரலாற்று வெளி எங்கும் ரத்தம் காயாத கால் தடங்களாக புலியின் மௌனமான கேள்விகள் பதிந்து இருக்கின்றன. காலம் மறந்த அந்தக் கேள்விகள் முக்கியமானவை. அதற்கு மனசாட்சியுள்ள மனிதன் பதில் சொல்லியே ஆக வேண்டும். உண்மையில், ஒவ்வொரு புலியும் மனிதனைப் பார்த்துக் கேட்க நினைப்பது, 'பசித்தால் மட்டுமே நாங்கள் வேட்டையாடுகிறோம். அதுவும் ஒரு மானையோ, முயலையோதான். நீங்களோ உங்கள் பொழுதுபோக்குக்காக வேட்டையாடுகிறீர்கள். ஒன்றிரண்டு இல்லை, ஒரே நேரத்தில் 40 மிருகங்களைக்கூடக் கொன்று உங்களை வீரனாக அடையாளம் காட்டிக்கொள்கிறீர்கள் என்றால், நம் இருவரில் யார் கொடூரமானவர்கள்? யார் ஆபத்தானவர்கள்?’
காலம் இந்தக் கேள்வியை நம் முன்னே அலையவிடுகிறது. பதில் தெரிந்தும் நாம் சொல்ல மறுக்கிறோம். புலிகளைப் பார்த்து மனிதன் பயந்து நடுங்கிய காலம் போய், மனிதர்களைக் கண்டு புலி அஞ்சி பதுங்கும் காலம் உருவாகிவிட்டது, ஓர் உயிரின் அழிவு மற்றொரு உயிருக்குக் கேளிக்கையாக மாறியிருக்கிறது. ஏராளமான பணம் சம்பாதிக்கும் ஒரு கள்ளத் தொழிலாக இன்று வேட்டை ஆடுவது மாறியிருக்கிறது. இந்த எதிர்நிலை எப்படி உருவானது? அதைச், சமூகம் ஏன் கண்டுகொள்வதே இல்லை?
இயற்கையை அழித்தொழிக்க முனைந்தது விலங்குகளை உணவாகக்கொள்ளும் ஆதிவாசிகள் இல்லை, அரசாண்ட மன்னர்களே. அடிமைப்பட்ட இந்தியாவின் முதல் பேரரசியாக இங்கிலாந்து ராணி பதவி ஏற்றார். அவருக்குப் பின், மூன்று இங்கிலாந்து மன்னர்கள் இந்தியாவை ஆட்சி செய்தார்கள். நான்காம் அரசராகப் பதவி ஏற்றவர் வேல்ஸ் இளவரசனும் விக்டோரியாவின் பேரனுமான ஐந்தாம் ஜார்ஜ். இவர், இந்தியாவுக்கு வந்து மன்னராக முடிசூடிக்கொள்ள விரும்பினார். இதற்காக, 40 நாட்கள் பயணமாக இந்தியா வந்து சேர்ந்தார். 1911 டிசம்பர் 12-ம் தேதி சிறப்பு தர்பார் ஏற்பாடு செய்யப்பட்டது. இளவரசர்கள், வைஸ்ராய்கள், குறுநில ஆளுநர்கள், ஐ.சி.எஸ். அலுவலர்கள், இந்தியப் பிரபுக்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் தர்பார் ஹாலில் கூடியிருந்தனர். புதிய மன்னரும் மகாராணியும் பட்டம் ஏற்றுக்கொண்டார்கள்.
தமிழ்நாட்டில்கூட பல இடங்களில், ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் பதவி ஏற்பதைக் கொண்டாடும் விதத்தில், சிலைகள், அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டன. சென்னையில் உள்ள பனகல் பூங்காவில் ஒரு காலத்தில் ஐந்தாம் ஜார்ஜின் மார்பளவு சிலை இருந்தது. ஐந்தாம் ஜார்ஜுக்கு, வேட்டையாடுவது மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. இளவரசராக இந்தியா வந்த நாட்களிலேயே, நேபாளத்தின் அடர்ந்த காடுகளுக்குள் வேட்டையாட வேண்டும் என்று வேல்ஸ் ஆசைப்பட்டார். காலரா நோய் பரவியிருந்த நேரம் என்பதால், அவரது விருப்பம் அப்போது நிறைவேறவில்லை. ஆகவே, மன்னர் ஆன உடனேயே, ஒரு பெரிய வேட்டையை நடத்த வேண்டும் என்று திட்டமிட்டார். இதை, நேபாள மன்னர் ரானா ஏற்பாடு செய்தார். இமயமலை அடிவாரத்தில் உள்ள தராய் பகுதியில் முகாம் அமைத்து வேட்டையாட ஏற்பாடு செய்யப்பட்டது. விசேஷ ரயிலில் நேபாள எல்லை வரை சென்ற மன்னர், அங்கிருந்து காரில் காட்டின் உள்ளே அமைக்கப்பட்ட முகாமுக்குப் போனார்.
இந்த வேட்டைக்காக 14,000 ஆட்கள், 300 யானைகள், டபுள் பேரல் மற்றும் சிங்கிள் பேரல் துப்பாக்கிகள் என்று விதவிதமான துப்பாக்கிகள் மன்னருடன் அனுப்பிவைக்கப்பட்டன. ஜந்தாம் ஜார்ஜ் மன்னர் வேட்டையாட வரப்போகிறார் என்பதால், நான்கு நாட்களுக்கு முன்பே, 20 தனிப் பிரிவுகள் காட்டுக்குப் போனது. புலிகளின் நடமாட்டம் எங்கு இருக்கிறது என்று அறிவதற்காக, எருமைக் கன்றுக்குட்டிகளை தண்ணீர் துறை அருகில் கட்டிப் போட்டனர். அதை அடிக்க புலி வருகிறதா என்று கண்காணித்தனர். எருமைக் கன்று கொல்லப்பட்டு இருந்த பகுதிகளை அடையாளப்படுத்திக்கொண்டனர். சில இடங்களில் கடுகு எண்ணையை ரப்பர் பந்துகளோடு சேர்ந்து புலி தண்ணீர் குடிக்க வரும் நீர்நிலையில் கலந்துவிடுவார்களாம். புலி, தண்ணீரைக் குடிக்கும்போது பிசுபிசுப்பு ஒட்டிக் கொள்ளவே முகத்தை காலால் துடைப்பது போல தடவித் தடவி கண்ணில் பிசுபிசுப்பு படும்படியாகச் செய்துவிடுமாம். அதன் பிறகு, அந்தப் புலியால் துல்லியமாக எதையும் பார்க்க முடியாது. உடனே அதை வேட்டையாடத் துவங்கிவிடுவார்களாம். இப்படி, புலியை அடையாளம்கொண்டு அதை எங்கே இருந்து சுற்றிவளைப்பது என்று திட்டமிட்டார்கள். புலி வேட்டைக்கு உகந்த காலம் ஜனவரி முதல் மார்ச் வரை. அந்தப்பருவத்தில்தான் புற்கள் செழித்து வளர்ந்து இருக்காது. புதர்களும் காய்ந்துபோயிருக்கும். ஆகவே, புலிகளை எளிதாக மடக்கிவிடலாம். ஒன்று, புதர்களுக்குத் தீ வைத்து புலி தப்பி ஓடும்போது அதைக் கொல்வது, அல்லது புலி பதுங்கி உள்ள இடத்தைச் சுற்றி யானைகளைக்கொண்டு ஒரு வளையம் போலாக்கி, நடுவில் புலியை ஓடவிட்டுக் கொல்வது. இந்த இரண்டில் எதை மன்னர் விரும்புகிறாரோ... அப்படி வேட்டையாடலாம் என்று முடிவு செய்துகொண்டார்கள்.
யானைகளை வைத்து வளைத்து நேரடியாக வேட்டையாடலாம் என்று மன்னர் முடிவு செய்தார். அதுதான் துணிச்சல் மிக்கதாக இருக்கும் என்றார். அதன்படி, முதல் நாள் 300 யானைகள் அழைத்துச் செல்லப்பட்டன. ஒரு யானையின் தங்க சிம்மாசனம் கொண்ட அம்பாரியில், ஐந்தாம் ஜார்ஜ் துப்பாக்கியோடு உட்கார்ந்துகொண்டார். 300 யானைகள், அதை ஓட்டிச் செல்லும் ஆட்கள், சிகாரி எனப்படும் வழிகாட்டிகள், உடல் வலிமைகொண்ட கிராமவாசிகள், வேட்டையாடிய புலியின் தோலை உரிக்க தனித் திறன்கொண்ட ஆதிவாசிகள், வேட்டையைப் படம் பிடிக்க புகைப்படக் கலைஞர் என ஒரு படையே புலி வேட்டைக்குப் புறப்பட்டது.
புலி பதுங்கி உள்ள இடத்தை 300 யானைகள் வளைத்துக்கொண்டன. புலி எங்கே போவது என்று தெரியாத சீற்றத்தில் பாய்ந்தது. யானை மீது இருந்த வீரர்கள் குத்தீட்டியால் புலியைத் துரத்தி மன்னர் முன்னால் போகும்படி செய்தார்கள். புலி ஆவேசமாகப் பாய்ந்தது. ஜந்தாம் ஜார்ஜ், தனது துப்பாக்கியால் புலியைச் சுட்டுக் கொன்றார். உடனே, கூட்டம் கைதட்டிப் பாராட்டியது. சுட்டுக் கொன்ற புலியோடு மன்னர் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இப்படியாக, ஐந்து நாட்கள் தொடர்ந்த வேட்டையில் 39 புலிகள், 18 காண்டா மிருகங்கள், 4 கரடிகள், 6 காட்டு எருதுகள் கொல்லப்பட்டன. இவை தவிர, பறவைகள், குழிமுயல்கள் மற்றும் மான்கள் ஆகியவை உணவுக்காக வேட்டையாடப்பட்டன.
புதிய மன்னரின் பதவியேற்பு, 39 புலிகளைக் கொன்று உற்சாகமாகத் தொடங்கியது. இந்தப் பணிக்கு தன்னோடு உதவியாக வந்த 14,000 பேருக்கும் மன்னர் சன்மானம் வழங்கினார். நேபாள மன்னருக்கு விசேஷ சலுகைகளும் பரிசுகளும் வழங்கப்பட்டன.
பதிலுக்கு, நேபாள மன்னர் யானை முதல் கிளி வரை 70 விதமான காட்டு மிருகங்களைக் கூண்டில் அடைத்து இங்கிலாந்தில் உள்ள மிருகக்காட்சி சாலைக்குப் பரிசாகக் கொடுத்தார். பிறந்த காடு தவிர வேறு ஒன்றும் அறியாத கரடியும், காண்டா மிருகமும், ஓநாயும் கப்பலில் பயணம் செய்து இங்கிலாந்தின் கண்காட்சிப் பொருளாக மாறின. அந்த ஊரின் குளிரும் உணவும் சேராமல் கொஞ்சம் கொஞ்சமாக செத்துப்போயின.
நினைவில் காடுள்ள மிருகத்தைப் பழக்க முடியாது என்பார்கள். அது உண்மைதான். மனிதர்கள்தான் நினைவுகளைத் தூர எறிந்துவிட்டு எந்த இழிநிலைக்கும் தன்னை ஒப்புக்கொடுத்துவிடுவார்கள். மிருகங்கள் அப்படி இல்லை. பட்டினி கிடந்து சாகுமே அன்றி, அது எளிதில் தன்னை விட்டுக்கொடுத்து விடாது. ஒரு மிருகம் பணிந்துபோகிறது என்பது மனிதன் மேல் உள்ள அன்பால் மட்டுமே, பயத்தால் இல்லை.
ஒரே வேட்டையில் இவ்வளவு புலிகளைக் கொன்ற சந்தோஷமோ என்னவோ, ஐந்தாம் ஜார்ஜ் அது வரை இந்தியாவின் தலைநகரமாக இருந்த கல்கத்தாவில் இருந்து மாறி, புதிய தலைநகரமாக டெல்லியை அறிவித்தார். பிரிட்டிஷ் கட்டடக் கலை நிபுணர் எட்வின் லூட்டியன்ஸிடம் புதிய தலைநகரம் அமைப்பது பற்றி அரசர் ஆலோசனை செய்தார். மனிதர்களின் சமாதிகள் இல்லாத வெற்று நிலமாக ஒரு பெரிய பரப்பளவு இருந்தால், அதில் ஒரு புதிய டெல்லி நகரை உருவாக்கிக் காட்டுகிறேன் என்றார் எட்வின் லூட்டியன்ஸ். அப்படித்தான் புது டெல்லி உருவானது!
0 comments:
Post a Comment