********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

சென்ற வாரம்


மிஸ்டர் கழுகு: குஜராத் கப்பல்... கர்நாடகா காபி எஸ்டேட்!

மிழக சட்டசபை நிகழ்ச்சிகளை, பார்வையாளர் மாடத்தில் இருந்து பார்த்து விட்டு, லஞ்ச் டயத்தில் பசியுடன் நம் அலுவலகத்தில் குதித்தார் கழுகார். மினி மீல்ஸை எடுத்துப் பிரித்து வைத்தோம். ரசனையுடன் ரசித்துச் சாப்பிட்டு முடித்தார். 
''தா.கிருட்டிணன் கொலை வழக்கு, மதுரை தினகரன் அலுவலக எரிப்பு வழக்குகளில் முக்கியக் குற்றவாளிகள் தந்திரமாகத் தப்பித்து விட்டதாகவும், அவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என, மதுரை மக்கள் சார்பாகக் கோரிக்கை வைத்தாரே, திருமங்கலம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம்?'' என்று சப்ஜெக்டை நாமே எடுத்துக் கொடுத்தோம்!
''அதைத்தான் நானும் சொல்ல வந்தேன்!'' என்று பாக்கெட்டில் இருந்த குறிப்பு நோட்டை விறுவிறுவென பிரித்த கழுகார்,
''முத்துராமலிங்கம், இரண்டு சரவெடிகளைக் கொளுத்திப்போட்டார். தா.கிருட்டிணன் கொலை வழக்கு, தினகரன் பத்திரிகை அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்குகளில் முத்துராமலிங்கம் ஏன் ஆர்வம் காட்டுகிறார்? அவராக முன்வந்து பேசினாரா? அல்லது, வேறு ஏதாவது சக்தி அவரை பேசத் தூண்டியதா? இப்படி உயர் அதிகாரி கள் வட்டாரத்திலேயே சந்தேகப் பேச்சுகள் கிளம்பிவிட்டன. முதல்வர் ஜெயலலிதாவின் முன் அனுமதியை வாங்கிவிட்டுத்தான் முத்துராமலிங்கம் இப்படிப் பேசியதாகவும் சொல்கிறார்கள். கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் மதுரையில் ஜெயலலிதா பேசும்போது, 'அந்த இரண்டு வழக்குகளிலும் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கப்படும்' என்று சூளுரைத்தார். அதையடுத்து, வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் மனோஜ் பாண்டியனிடமும், முத்துராமலிங்கத்திடமும் அந்த வழக்குகள் தொடர்பான ஆவணங்களை சேகரித்துத் தரும்படி கேட்டிருந்தாராம். இவர்களும், 'முக்கியக் குற்றவாளிகள் எப்படித் தந்திரமாகத் தப்பினார்கள்’ என்பதை விளக்கினார்களாம். குறிப்பாக, தா.கி. கொலை விவகாரத்தில் முத்துராமலிங்கம் அப்போதே முனைப்பு காட்டியதைத் தடுக்க போலீஸார் போட்ட முட்டுக்கட்டைகளையும் உள்வாங்கிக்கொண்ட முதல்வர், போலீஸ் மானிய கோரிக்கை வரும்போது, இந்த வழக்குகள் தொடர்பாக சட்டமன்றத்தில் சாட்டையடி தருவதற்கு முன்னோட்டமாகவே முத்துராமலிங்கத்தைப் பேச வைத்ததாகச் சொல்கிறார்கள்!''
''தூசு தட்டத் தயாராகிவிட்டார்கள் என்று சொல்லும்!''
''இதற்கு முன்பாக தென் மாவட்ட தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவரைத் தூக்குவதற்கு வேகவேகமாகக் காய் நகர்த்துகிறார்கள். இவர் மூலம், வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனைகள், மர்மக் கொலைகள் உள்ளிட்ட பல பகீர் ரகசியங்கள் அம்பலத்துக்கு வரும் என்கிற எதிர்பார்ப்பில், சீக்ரெட் ஆபரேஷனில் இறங்கி இருக்கிறது போலீஸ். அ.தி.மு.க. வட்டத்திலும் எக்ஸுக்கு வலுவான தொடர்பு... கடந்த தேர்தலில் அ.தி.மு.க. வி.ஐ.பி. ஒருவரை எதிர்த்துப் போட்டியிட்டார். தன்னால் தாக்குப் பிடிக்க முடியாது எனப் புரிந்து, 'நான் ஜெயிச்சா என்ன, அண்ணன் ஜெயிச்சா என்ன?’ என்று சொல்லிட்டுப் படுத்துவிட்டார். எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க. வி.ஐ.பி. அவரை நன்கு கவனித்ததாகவும் சொல்கிறார்கள். 'ஒரு நிழல் பிரமுகர், தென் மாவட்ட தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் இருவர், ஒரு மாவட்டச் செயலாளர், வட மாவட்ட அமைச்சர் ஒருவர் ஆகிய இவர்களோடு இந்த எக்ஸ் எம்.எல்.ஏ-வும் சேர்ந்து கொண்டு அண்ணனுக்கே தெரியாமல் தனிக் கூட்டணி அமைத்து உள்ளார்கள். அதிகாரத்தால் வளைத்துச் சுருட்டியதை  சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, மாலத் தீவு உள்ளிட்ட நாடுகளுக்குக் கொண்டுபோய்விட்டது இந்த அறுவர் கூட்டணி’ என்றும் சொல்கிறார்கள்!''
''புது ஆக்ஷன் டீம்தான் போட வேண்டும்!''
'' 'மூணாறு பகுதியில் உள்ள ஒரு காட்டேஜ்தான் அறுவர் அணி அடிக்கடி சந்தித்துப் பேசும் இடம். பணம் கைமாறியதும், சென்டிமென்ட்டாக இங்கே உட்கார்ந்து பேசுவார்கள். டீல் முடிந்ததும், இதில் யாராவது இரண்டு பேர் மட்டும் திருவனந்தபுரம் வழியாக சம்பந்தப்பட்ட நாட்டுக்குப் பயணிப்பார்கள். அந்த இருவரில் ஒருவராக எக்ஸ் எம்.எல்.ஏ. கட்டாயம் இருப்பார். ஏனென்றால், அங்குள்ள வரவு செலவுகளைக் கண்காணித்துக்கொள்பவர் எக்ஸ். தேர்தல் முடிவுகள் வந்த நேரத்தில் இப்படி அவசரமாக ஹவாலா மூலம் சிங்கப்பூருக்கு பல கோடி போயிருக்கிறது’ என்றும் சொல்கிறார்கள். ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது அன்னியோன்னியமாக இருந்த இவர்கள் அத்தனை பேருமே இப்போது சிக்கலில் இருக்கிறார்கள். தங்களுக்கு எந்த பாதிப்பும் வரக் கூடாது என்று எக்ஸ் எம்.எல்.ஏ. உட்பட மூன்று பேர், கேரளாவில் அட்டிமாலி என்ற இடத்தில் இருக்கிற சக்கிகுளத்துக் காவு அம்மன் கோயிலில் விசேஷ பூஜை செய்தார்கள். பூஜையில் மந்திரிக்கப்பட்ட சிவப்புக் கயிறை மூவருமே கையில் கட்டி உள்ளனர். இப்போது கைதாகி சிறையில் இருக்கும் ஒருவர் கையிலும் அது இருக்கிறது!''
''புது சினிமா மாதிரி இருக்கே!''
''இந்த எக்ஸ் எம்.எல்.ஏ. அதிகாரத்தில் இருந்த போது, மலையோர கிராமத்தைச் சேர்ந்த பி.எட். மாணவி ஒருவரைச் சென்னைக்குக் கூட்டிப்போய் சகாக்களுக்கு விருந்தாக்கிவிட்டார். அப்போது நடந்த களேபரத்தில் மாணவிக்கு வலது கை உடைந்தேவிட்டது. அப்புறம் மாணவிக்கு வட நாட்டுப் பக்கம் வேலை வாங்கிக் கொடுத்து வாய் அடைச்சாராம். அதேபோல், சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த இரண்டு  பெண்களைக் கடத்திச் சென்ற விவகாரமும் இவர் மீது பாயுமாம். கூர்க் காபி எஸ்டேட், குஜராத் மார்வாடியிடம் வாங்கிய கப்பல் என எத்தனையோ கதைகளைச் சொல்கிறார்கள். கேட்டால் தலை சுத்துது!'' என்ற கழுகார், கொஞ்சம் ஆசுவாசம் ஆகி, மறுபடி ஆரம்பித்தார்...
''தலைமைச் செயலகத்தின் செய்தித் துறை பக்கம் எட்டிப்பார்த்தேன். அதிகாரிகள் பம்பரமாக சுழல்கிறார்கள். வருகிற 23-ம் தேதியன்று அ.தி.மு.க. அரசு பதவியேற்ற 100 நாள் விழாவைக் கொண்டாடு கிறார்களாம். சாதனைகளைப் பட்டியல் போட்டு மக்கள் மத்தியில் கொண்டுபோகும்படி முதல்வர் ஜெயலலிதா சொல்லி இருக்கிறாராம். குறிப்பாக, பத்திரிகையாளர் ஒய்வு ஊதியம்  5 ஆயிரத்தில் இருந்து  6 ஆயிரம் ஆனதும் பத்திரிகையாளர் இறந்தால், அவரது குடும்பத்துக்குக் கிடைக்கும் மாத உதவித் தொகை  2,500 என்பதை  3,000 என உயர்த்தியதையும் மறக்காமல் மீடியாக்காரர்களிடம் சொல்லும்படி முதல்வர் சொன்னதுதான் ஹைலைட் டான விஷயம். சாதனை விளம்பரங்கள், 'தமிழரசு' சிறப்பு வெளியீடு என்று ஏற்பாடுகளை தாம்தூம் என அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.''
''விழாக்கள் ஆடம்பரம் இல்லாமல் நடக் கட்டும்!''
''சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு நித்யானந்தாவை வரவழைத்தார்களாமே...''
''நித்யானந்தா ஆசிரமம் சார்பில் கொடுக்கப் பட்டிருந்த புகார் சம்பந்தமாக ஏற்கெனவே பலரிடம் விசாரித்து முடித்துவிட்டார்கள். இப்போது நித்யானந்தாவை வரவழைத்து நடந்த சம்பவங் களை முழுமையாகக் கேட்டு பதிவு செய்து கொண்டார்களாம். அடுத்து ரஞ்சிதாவிடமும் விசாரணை இருக்கலாம். நித்யானந்தாவை மிரட்டியதாகச் சொல்லப்படுபவர்கள் மீது கைது நடவடிக்கைகள் அதிரடியாக எடுக்கப்படலாம்...''
''ம்...''
''சென்னைப் புறநகரில் இருக்கும் மருந்து கம்பெனியை மூடிய விவகாரத்தை நான் உமக்குச் சொல்லி இருந்தேன்...'' என்று கழுகார் சொல்ல, குறுக்கிட்ட நாம்,
''நாங்களும் விரிவாகப் போட்டிருந்தோமே!'' என்றோம்.
''சரிதான்... அதைத் தொடர்ந்து, அந்தக் கம்பெனியைத் திறக்க முதல்வர் உத்தரவிட்டு இருக்கிறார். மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தைச் சேர்ந்த முக்கிய அதிகாரி ஒருவரை அழைத்த முதல்வர், 'அந்த மருந்து கம்பெனியை ஓப்பன் பண்ண அனுமதி கொடுத்திடுங்க. இனியாவது அவர்களை நாகரிகமாக நடந்துக்க சொல்லுங்க!’ என்று எச்சரிக்கும் தொனியில் சொல்லி அனுப்பி னாராம். அந்த அதிகாரியும் சம்பந்தப்பட்ட மருந்து கம்பெனி உரிமையாளரைக் கூப்பிட்டு, முதல்வரின் வார்த்தைகளை அப்படியே சொல்லி, கம்பெனியை திறக்க அனுமதி கடிதத்தையும் கொடுத்து அனுப்பி னாராம். இப்போது வழக்கம்போலசெயல்பட ஆரம்பித்துவிட்டதாம், அந்த மருந்து கம்பெனி'' என்ற தகவலோடு பேக்கப் ஆனார் கழுகார்!
படங்கள்: என்.விவேக், ஜெ.தான்யராஜு                
அங்காடித் தெருவில் ஐ.டி-யின் அதிரடி!
சென்னை சரவணா ஸ்டோர்ஸ், சரவணா செல்வரத்தினம் நிறுவனங்களுக்குச் சொந்தமான அனைத்துக் கடைகளிலும், கடந்த வியாழன்று வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் ரெய்டு நடத்தினார்கள். இது குறித்து பேசும் வருமான வரித்துறையினர்,''தீபாவளி விற்பனையைக் கணக்கிட்டு, இப்போதே பலகோடிகளைக் கொட்டி, குடோன்களில் மலை அளவு கணக்கில் இல்லாமல் ஸ்டாக் வைத்து இருப்பதாக போட்டியாளர்களிடம் இருந்து ஆதாரத்துடன் பல்வேறு புகார்கள் வந்தது. அதைத் தொடர்ந்தே இந்த ரெய்டு. கணக்கு வழக்குகள் சரியாக இல்லாமல் ஊழியர்கள் ரொம்பவே நெளிந்தார்கள். பல ஆவணங் களைக் கைப்பற்றியிருக்கிறோம்'' என்றார்கள்.
'அவுங்களுக்கு 50 கோடி அவுட்’ என்று போட்டியாளர்கள்  ஜாலி காட்ட... 'இங்க எப்ப வருவாங்களோ?’ என  இன்னும் சில பெரும்புள்ளிகள் கிலி பிடித்துக் கிடக்கிறார்கள்.
*******************************************************************************
கழுகார் பதில்கள்

ஆர்.ஜெயபிரகாஷ்பாண்டியன், தேவகோட்டை
தமிழக தலித் இயக்கங்கள் பற்றி தங்கள் கருத்து என்ன?
இந்தியாவில் இருக்கும் முக்கியமான தலித் சிந்தனையாளர்களில் ஒருவரான ஆனந்த் டெல்டும்ப்டே, 'அம்பேத்கருக்குப் பிந்தைய தலித் இயக்கங்கள்’ என்ற புத்தகம் எழுதி உள்ளார்.
ஆளும் வர்க்கத்தின் பிரித்தாளும் சூழ்ச்சி, தலித் இயக்கத்தில் ஒருங்கிணைந்த கொள்கையை உருவாக்குவதில் ஏற்பட்ட குறைபாடு, தலைவர்களிடம் உருவான குட்டி முதலாளித்துவ உணர்வுகள் ஆகிய மூன்றைத்தான் முக்கியமான காரணங்களாக அவர் சொல்கிறார். தமிழகத்தைப் பொறுத்தவரை...  மூன்றாவதாகச் சொன்ன காரணத்தை முதலாவதாகச் சொல்லலாம்!
'சுரண்டலற்ற, அநீதியற்ற, மோசடியில்லாத மனித சமூகத்தை உருவாக்குவதற்கு வழிவகை காணவேண்டும் என்ற அம்பேத்கரின் கனவு தற்போதைய தலித் இயக்கங்களில் அபூர்வமாகவே பிரதிபலிக்கிறது’ என்பதும் அவரது கணிப்பு!
 மு.கல்யாணசுந்தரம்,மேட்டுப்பாளையம்.
காங்கிரஸ் கட்சியை, சர்க்கஸ் கூடாரம் என்று மணிசங்கர் அய்யர் வர்ணித்துள்ளாரே?
 டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.  ஒரு சர்க்கஸுக்கு ஒன்றிரண்டு பஃபூன்கள் இருந்தால்தான் சந்தோஷமாக இருக்கும். எல்லாருமே பஃபூன்களாக இருந்தால் போர​டிக்கும்​தான்!
  இந்த ஐந்து ஆண்டு காலத்தில் ஜெயலலிதா மக்கள் மனதில் அசைக்க முடியாத சக்தியாக இடம் பிடித்துவிடுவாரா?
'தேர்தல் நேரத்தில் நான் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் ஒன்றரை ஆண்டுகளுக்குள் நிறைவேற்றிக் காட்டுவேன்.’ என்று, வெற்றி பெற்று வந்ததும் ஜெயலலிதா சொன்னார். அப்படிச் செய்தால், ஒன்றரை ஆண்டுகளுக்குள் அசைக்க முடியாத சக்தி​யாக ஆகிவிடுவார் அம்மையார்!
 சிபி கணேசன், செங்கொல்லை.
  இன்றைய சூழ்நிலையில் தி.மு.க-வுக்கு நண்பன் யார்?
  நல்ல வக்கீல்கள்!
 பஞ்ச் தர்மா, வெள்ளாளப்பட்டி.
முற்றும் துறந்தவர்கள்தான் அரசியலுக்கு வர வேண்டும் என்றால்?
அப்படி யாரையும் எதிர்பார்க்கமுடியாது. ஆசையை ஒழிக்க வேண்டும் என்று புத்தரே ஆசைப்பட்டதாகத்தான் சொல்வார்கள். 'குறைந்த​பட்ச யோக்கியவர்கள்’ வர வேண்டும் என்பதுதான் அனைவர் எதிர்பார்ப்பும். தன் மீது பழிச் சொல் வந்துவிடுமோ என்று பயப்படுபவர்கள், அரசி​யலுக்கு வர வேண்டும்!
 மல்லிகா அன்பழகன், சென்னை-78.
'என்னைப் பாதுகாத்துக்கொள்ள எனக்குத் தெரியும். நான் யாரையும் சார்ந்து இல்லை!’ என்று நீதிமன்ற வாதத்தில் ஆ.ராசா சொன்னது ஏன்?
பாட்டியாலா கோர்ட்டில் இருந்து யாருக்கோ பாடம் நடத்துகிறார் ஆ.ராசா. அவர் வைக்கும் வாதங்கள் உண்மையில் அர்த்தம் பொதிந்த​வைதான். அதற்கு பிரதமர், அன்றைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள்.
'அசாதாரணமான சூழ்நிலையில் குற்றம் சாட்டப்​பட்டவர், அடுத்தவர் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளை ஏற்க முடியாது!’ என்று இன்றைய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் சொல்வதெல்லாம் சொத்தையான வாதங்கள். அவர் மீதே ஆயிரம் குற்றச்சாட்டுகள் இருப்பதைப் பார்த்தால்... ஆ.ராசா சொல்ல வேண்டிய ரகசியங்கள் இன்னும் ஏராளம் இருக்கும்!
 உமரி.பொ.கணேசன், மும்பை-37.
அரசியல்வாதிகளின் அகராதியில் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றால் என்ன?
பகிரங்கமாகச் சொல்ல முடியாத காரணம் என்று அர்த்தம்!
வரதராஜன், வந்தவாசி.
இந்திய ஜனநாயகத்தின் இன்றைய நிலைமை என்ன?
தவறான பாதையில் போகிகிறது என்பதற்கு சமீபத்திய உதாரணம், ஷீலா மசூத்!
சுதந்திர தினத்துக்கு அடுத்த நாள் அண்ணா ஹஜாரே போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கப் புறப்பட்ட சமூகப் போராளி ஷீலாவை, அவரது காரில் வைத்தே சுட்டுக் கொன்றுவிட்டார்கள். மத்திய பிரதேசத்தில் சட்டத்துக்குப் புறம்பாக செயல்படும் சுரங்​கத்தை எதிர்த்துப் போராடிய காரணத்​தால் இவர் கொலை செய்யப்பட்டார் என்பது வெளிப்படையாகவே தெரிந்தாலும், 'கொலைக்கான காரணம் தெரியவில்லை’ என்று கை விரிக்கிறது, போலீஸ். இத்தனைக்கும் தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக போலீஸில் ஏற்கெனவே புகார் தெரிவித்து இருக்கிறார். காடு, நீர்நிலைகளையும் லஞ்சத்தில் இருந்து நாட்டையும் காப்பாற்றப் புறப்பட்ட ஷீலாவைக் காப்பாற்ற நம் ஜனநாயகத்தால் முடியவில்லை. இந்தியாவெங்கும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் துணை கொண்டு அநியாயத்தை எதிர்த்துப் போராடியவர்களில், 12-வது மரணம் ஷீலாவுடையது என்பது மேலும் அதிர்ச்சி!
 பொன்விழி, அன்னூர்.
எதிர்க் கட்சிகளும் யோக்கியம் இல்லை என்று பிரதமர் காட்டமாக பேசியுள்ளது பற்றி?
இது மன்மோகன் சொல்லித்தான் நமக்குத் தெரிய வேண்டுமா?
 கா.இராகவேந்திரன், இராஜபாளையம்.
மனித வாழ்க்கையில் 'அரசியல்’ என்ற ஒரு வார்த்தை இல்லாமல் வாழ முடியாதா?
சிறு பொய்யைச் சொல்லும் நண்பனை, 'ஏன்டா... சில்லி பாலிடிக்ஸ் பண்ற?’ என்கிறீர்கள். சொந்தத் தெருவில் பிரச்னை என்றால் 'லோக்கல் பாலிடிக்ஸ்ல மாட்டிக்கிட்டேன்’ என்கிறோம். மாமியார் மருமகன் சண்டையைக் கூட 'வீட்டுல ஒரே ஃபேமிலி பாலிடிக்ஸ் சார்...’ என்கிறோம். அரசியல் இல்லாமல் யாரும் வாழ முடியாது!
 மு.சங்கரபாண்டியன், வானரமுட்டி.
ஒரு தரமான படைப்பாளியின் நல்ல தகுதி எது?
சக படைப்பாளியின் எழுத்துகளை வாசிப்பதும், விமர்சிப்பதும், பாராட்டுவதும்!
 வானவராயன், குமரகிரி.
சமீபத்தில் உம்மைச் சிரிக்க வைத்த அரசியல்வாதி யார்?
வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை எப்போது பார்த்தாலும் சிரிப்பாகத்தான் இருக்​கிறது. ஐ.நா. சபைக்கு பேசப் போனவர் தான் படிக்க வேண்டியதை விட்டுவிட்டு இன்னொரு நாட்டு அமைச்சரது பேச்சைப் படித்தார். கடந்தவாரத்திலும் இலங்கை தொடர்பாக ஒரு அறிக்கையை இவர் தாக்கல் செய்ய வேண்டும். சபாநாயர் அழைத்தபிறகும் ரொம்ம்ம்ப நேரத்துக்கு அதையே தேடிக் கொண்டிருந்தார். 'சபையை அமைச்சர் அவமரியாதை செய்கிறார்’ என்று எதிர்க்​கட்சிகள் முழக்கமிடும் அளவுக்கு தேடிக் கொண்டே இருந்தார். இதேமாதிரி அடுத்த சம்பவம்...
'பாகிஸ்தானைச் சேர்ந்த கைதி ஒருவர் ராஜஸ்தான் சிறையில் இருக்கிறார். 80 வயதான அவரை விடுவிக்க வேண்டும்’ என்று ஒரு உறுப்பினர் கேட்டார். 'பாகிஸ்தான் சிறையில் இருக்கும் அவரை...’ என்று கிருஷ்ணா எதையோ சொல்ல ... குழம்பிப் போனார் கேள்வி கேட்டவர். மறுபடியும் அவர் கேட்க... இவர் சொன்னதையே திருப்பிச் சொல்ல கிடுகிடுத்துப் போனது சபை. மன்மோகன்தான் தலையிட்டு கிருஷ்ணா தலை​யைக் காப்பாற்றினார்.
இவரை விட இன்னொருவர் வேணுமா?
*******************************************************************************
''தமிழக அரசை சிக்கவைக்கவே மூன்று பேரைத் தூக்கிலிடுகிறார்கள்!''

அரசியல் காரணம் சொல்லும் சீமான்
''வரலாறு படிப்பதற்கு மட்டும் அல்ல; படைப்பதற்கும்தான்!'' - என்று மாணவர் படைக்கு அழைப்பு விடுத்து, மாணவர்கள் படையைத் திரட்​டத் தயாராகிவிட்டார் சீமான். 
'நாம் தமிழர் கட்சி’யின் மாணவர் பா​சறையின் முதல் கலந்தாய்வுக் கூட்டம், கடந்த 15-ம் தேதி, சென்னை ஆதம்பாக்கத்தில் நடந்தது. பேரா​சிரியர் தீரன், சாகுல் ஹமீது, தடா சந்திரசேகர், கலைக்கோட்டுதயம் ஆகியோ​ருடன் சீமான் மேடையேற... மாணவர்கள் மத்தியில் பலத்த ஆரவாரம்!
நாம் தமிழர் கட்சியின் செயல்பாடுகளில் மாணவர்களின் பங்கு எப்படி இருக்க வேண்​டும்? அடுத்த இலக்கு என்ன என்பவை​பற்றி விரிவாக அலசப்பட்டது. இதில் பேசிய இளைஞர் பாசறையின் ஒருங்கிணைப்​பாளர்​களான இளமாறன், ராஜீவ்காந்தி ஆகியோரின் பேச்சுதான், வந்திருந்தவர்களை முறுக்கேறச் செய்தது.
முதலில் பேசிய இளமாறன், ''தமிழ்நாட்டில் இன்று எத்தனையோ கட்சிகள் உள்ளன. இவற்றில் எல்லாம் இணையாமல், 'நாம் தமிழர் கட்சி’யில் நான் ஏன் இணைந்தேன் தெரியுமா? சீமான் ஒரு நடிகர், இயக்குநர் என்ற கவர்ச்சியால் அல்ல. ஈழத்தில் நமது இனம் அழிக்கப்பட்ட சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. மற்ற கட்சிகள் தேர்தல் வந்ததும் சில அரசியல் கணக்கு வழக்குகளுக்காக 'கப்சிப்’ என்று அமைதியாகிவிட்டனர். சீமான் ஒருவர்தான், காங்கிரஸைக் கருவறுக்கத் தமிழகம் முழுவதும் சுற்றி வந்தார். தமிழர் நலனுக்காகப் போராட, இதுபோன்ற துணிச்சலான ஒரு தலைவனைத்தான் நான் எதிர்பார்த்தேன்... இணைந்தேன். தமிழகத்தில் விரைவில் நமது கட்சி, ஆட்சிக்கு வரும். துளித்துளியாய் இணைவோம், பெருங்கடலாகும் கனவோடு!'' என்று கைத்தட்டலை அள்ளினார்.
அடுத்துப் பேசிய ராஜீவ்காந்தி, ''21 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற நாம் அனுமதிக்கக் கூடாது. அப்சல் குரு என்ற பயங்கரவாதிக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டபோது, காங்கிரஸ் கட்சியின் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத், 'அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை விதித்தால்... காஷ்மீர் கலவர பூமியாகும்!’ என்றார். இன்னொரு காஷ்மீர் அமைச்​சரான ஃபரூக் அப்துல்லா, 'அப்சல் குருவைத் தூக்கில் போட்டுக்கொள்ளுங்கள். அதுபற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால், தண்டனை விதித்த நீதிபதியின் உயிரைப்பற்றியும், அதை நிறைவேற்றப்போகும் போலீஸாரின் உயிரைப்​பற்றியும்தான் கவலைப்படுகிறேன்!’ என்று கூறினார். அதே வார்த்தையைத்தான் இன்று நான் மத்திய அரசுக்குச் சொல்ல விரும்புகிறேன். சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற நினைப்பவர்களின் உயிரை நினைத்து நானும் கவலைப்படுகிறேன். காலம் காலமாக தமிழர் நலனுக்கு விரோதமாகச் செயல்படுகிறது காங்கிரஸ். பயங்கரவாதத்தை ஒழிப்போம், காங்கிரஸை வளர்ப்​போம் என்கிறார் தங்கபாலு. காங்கிரஸை ஒழித்தாலே, பயங்கரவாதம் ஒழிந்துவிடுமே!'' என்று முடிக்க... தொடர்ந்து விசில் மழை!
இறுதியாக மைக் பிடித்த சீமான், ''ஈழ விடுதலைக்​காகத் தீக்குளித்த முதல் தமிழன் அப்துல் ரஹூப்தான், நமது மாணவர் பாசறையின் உந்துசக்தி. கற்றவர்கள்தான் மற்றவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். அந்த அடிப்படையிலேயே தன்னலம் அற்றுப் பாடுபட உங்களை அழைக்கிறேன். விலகி நிற்பது பிரச்னைக்குத் தீர்வாகாது. 'மௌனமாக எப்போது ஒதுங்க நினைக்கிறோமோ... அது மரணத்துக்குச் சமம்’ என்பார் மார்ட்டின் லூதர் கிங். எனவே, தமிழர் நலன் மீது அக்கறை செலுத்தும் அரசைத் தீர்மானிக்க, மாபெரும் அரசியல் சக்தியாக உருவெடுப்போம்...'' என்று மாணவர் பாசறை நோக்கம் குறித்துப் பேசியவர், தொடர்ந்து காங்கிரஸை நோக்கி கர்ஜித்தார்...
''தூக்கு தண்டனை விதிக்க எட்டு ஆண்டுகள்... கருணை மனு மீது முடிவு எடுக்க 11 ஆண்டுகள்... இப்படி இத்தனை நாளும் காலம் தாழ்த்திவிட்டு, தற்போது தமிழக அரசை இக்கட்டில் ஆழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கில், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரைத் தூக்கிலிட முடிவு​எடுத்து இருக்கிறது இந்த காங்கிரஸ் அரசு. இலங்​கை அரசின் மீது போர்க் குற்ற விசாரணை நடத்த வேண்டி, தமிழக சட்டமன்றத்தில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, அனைத்து தமிழகக் கட்சிகளும் இதை வரவேற்றுப் பாராட்டி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். இந்த விவகாரத்தில் ஏற்பட்டுள்ள ஒற்றுமையை உடைக்கவே, நயவஞ்சக காங்கிரஸ் அரசு, மூவர் மீதான மனுக்களை நிராகரிக்க​வைத்து, தமிழக அரசுக்கு சிக்கலை உண்டு பண்ண நினைக்கிறது. உலக நாடுகளில் 135 நாடுகள் தூக்கு தண்டனையை ரத்து செய்துவிட்டன. தூக்கு தண்டனை அமலில் உள்ள 58 நாடுகளில் இந்தியா முதலாவதாக உள்ளது. நாம் ரத்து செய்தவர் பட்டியலில் இருக்க வேண்டிய நாடு. கொலைக்குக் கொலை தீர்வாகாது. தேசத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டுசெல்வதைத் தவிர, மற்ற எல்லா வேலை​களையும் காங்கிரஸ் செய்து வருகிறது. மானம் உள்ள காங்கிரஸ்காரன் துணிவு இருந்தால் என் கேள்விக்குப் பதில் சொல்லட்டும்... '65 ஆண்டுகள்  இந்தத் தேசத்தை ஆண்டார்களே... உடல்நிலை சரி இல்லாத உங்கள் அன்னை சிகிச்சைக்காக ஏன் அமெரிக்கா ஓடுகிறார்? இதுதான் இதுவரை நீங்கள் ஆற்றிய சாதனையின் லட்சணம்!'' என்று அவர் சிவக்க, பிழம்பாக ஆர்ப்பரித்தார்கள்இளைஞர்கள்.
தி.கோபிவிஜய்
படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்
*******************************************************************************
காவல் துறையின் களங்கம்!

மிழகத்தில் புதிய ஆட்சி அமைந்த பிறகு நில அபகரிப்புப் புகார், கொலை மிரட்டல் என்று ஏராளமான பழைய விஷயங்கள் உயிர்பெற்று எழுகின்றன. இதில் சம்பந்தப்பட்ட தி.மு.க-வினர் பலரும் தொடர்ந்து சிறை செல்கிறார்கள்.
இப்போது சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் எல்லாமே, கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் நிகழ்ந்தவை. 'அப்போதே புகார் கொடுக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்காமல் போலீஸார் வேடிக்கை பார்த்தார்கள். ஏனென்றால், அப்போது இருந்தது கருணாநிதி போலீஸ்’ என்றுதான் பலரும் குற்றம் சாட்டுகிறார்கள். ஆளும் கட்சிக்கு ஆதரவாக போலீஸ் செயல்பட்டு, புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பது எத்தனை பெரிய குற்றம்?
அப்படியானால், இந்த ஆட்சியில் இருப்பவர்கள் ஏதாவது தவறு செய்யும் பட்சத்தில், 'ஜெயலலிதா போலீஸ்’ நடவடிக்கை எடுக்காது என்பதுதானே அர்த்தம். தங்களுக்கு ஏற்படும் அநீதிகளுக்கும் கொடுமைகளுக்கும் நியாயம் கேட்பதற்காக ஒரு ஆட்சி மாற்றம் நிகழும் வரை அப்பாவி பொதுஜனங்கள் காத்திருக்கத்தான் வேண்டுமா?
காவல் துறைக்கு இப்படி ஒரு களங்கம் ஏற்பட லாமா? ஆளும் கட்சி போலீஸ், எதிர்க் கட்சி போலீஸ் என்று பிரித்துப் பார்க்காமல், 'மக்களின் நண்பன்’ என்ற நல்ல பெயரை நமது காவல் துறை எப்போது வாங்கப்போகிறது?
ஆர்.கே.தென்னரசு, தென்னம்புலம்.
*******************************************************************************
திருடா.. திருடா!

ஒரு 'பகீர்' ரிப்போர்ட்
டந்த 15-ம் தேதி சென்னை, ராஜா அண்ணாமலை புரத்தில் ஒரு வீட்டில் கொள்ளை. வெளியே இருந்து யாரும் வந்து கத்தியைக் காட்டி மிரட்டி, கொள்ளை அடிக்கவில்லை. பிறகு எப்படி? 
அபிராமபுரம் குற்றப்பிரிவு இன்ஸ் பெக்டர் வெங்கடேஷ்குமார் நடந்த சம்பவத்தை விவரிக்கிறார். ''வீட்டு உரிமையாளர் நிகில் கோயல்  அப்போது வீட்டில் இல்லை. பணி யாளர்கள், காவ லாளி உட்பட நான்கு பேர் மட்டுமே இருந் துள்ளார்கள். ஒடிசாவில் இருந்து ஒன்றரை மாதம் முன்பாக சமையல் வேலைக்குச் சேர்ந்த ராஜேஷ் என்பவர், வீட்டில் அனைவருக்கும் மிளகு முட்டை குருமாவும் சப்பாத்தியும் செய்து கொடுத்து இருக்கிறார். மிளகுத் தூளுடன் தூக்க மாத்திரைகளை பொடி செய்து குருமாவில் சேர்த்துள்ளார். இரவு உணவு சாப்பிட்ட நான்கு பேரும் மயக்க நிலைக்குச் சென்ற பிறகு வீட்டின் பீரோவில் இருந்த இரண்டு தங்கச் செயின் உட்பட சுமார் இரண்டு லட்சம் மதிப்புள்ள பொருட்களையும் கொள்ளை அடித்துச் சென்றுவிட்டார்...'' என்று சொன்னார்.
''இப்படி வீட்டில் வேலை செய்பவர்களே கொள்ளை அடித்தால், அப்புறம் யாரைத்தான் நம்புவது?'' என்று உயர் போலீஸ் அதிகாரியை சந்தித்துக் கேட்டோம்.
''யாரையும் நம்பாமல் இருப்பதுதான் நல்லது. ஒரு ஆண்டுக்கு முன்பு மாதவரம் புறநகர் பகுதியில், 'வீடு வாடகைக்கு விடப்படும்’ என்ற அறிவிப்பு போர்டை பார்த்து, கண்ணியமான தோற்றம் கொண்ட இளம் தம்பதி கைக்குழந்தையுடன் போனார்கள். மென்பொருள் துறையில் பணி புரிவதாகக் கூறியவர்கள், வீட்டை வாடகைக்குக் கேட்டுள்ளார்கள். வீடு பிடித்து இருப்பதாகச் சொல்லி, ஒரு லட்சம் அட்வான்ஸ் தொகையையும் உடனடியாகக் கொடுத்து விட்டார்கள். ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியான அந்த வீட்டு உரிமையாளருக்கு, அந்த இளம் தம்பதியை மிகவும் பிடித்துவிட்டது.
மறுநாள் காலை பழைய வீட்டில் இருந்து பொருட்களை ஏற்றி வரவேண்டும் என்று டெம் போவை அழைத்தார்கள். டெம்போவை வாசலில் நிற்கவைத்து, வீட்டில் பால் காய்ச்சி விசேஷம் நடத்தினார்கள். வீட்டு உரிமையாளர்களான வயதான தம்பதியரையும் அந்த விசேஷத்துக்கு அழைத்தவர்கள், காய்ச்சிய பாலைக் கொடுத்தார்கள். பாலை குடித்து மயங்கியவர்கள் எழுந்து பார்த்தால், வீட்டில் இருந்த 60 பவுன் நகை,  4.5 லட்சம் பணம், வெள்ளி பாத்திரங்கள், டி.வி. பீரோ, மரக் கட்டில் என வீட்டில் இருந்த பொருட்களில் ஒன்றைக்கூட விடாமல் வழித்து எடுத்து கொண்டுப் போய் விட்டார்கள்!
சமீபத்தில் சூளைமேட்டில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் கொலை செய்து, கொள்ளை அடிக்கப்பட்டது. கொலையைச் செய்தவர் மூன்று மாதங்களுக்கு முன்பு அங்கு வேலைக்குச் சேர்ந்த அவரது கார் டிரைவர்தான். முதல் நாள் இரவு அந்த டிரைவர் வீட்டுக்கு வந்து அவசர செலவுக்குப் பணம் கேட்டுள்ளார். உஷாராக இருந்த முதலாளி கதவைத் திறக்காமலேயே ஜன்னல் வழியாக பணம் கொடுத்து அனுப்பினார். மறுநாள் கட்டடத்தை மேற்பார்வை செய்வதற்காக திருவள்ளூர் சென்று விட்டு காரில் திரும்பும் வழியில் டிரைவர், தனது கூட்டாளிகளை வரவழைத்து முதலாளியைக் கொன்று, அவரிடம் இருந்த பணம், நகைகளைக் கொள்ளை அடித்துச் சென்று விட்டார்.
சில நாட்களுக்கு முன்பு சென்னையில் ஆங்காங்கே செவ்வாடை கட்டிக் கொண்ட பெண்கள் அடங்கிய கும்பல், சுமங்கலி பூஜை செய்கிறேன் என்று வீட்டில் இருந்த நகைகளை சொம்பில் போடச் சொல்லி, 'மயக்கத் தீர்த்தம்’ கொடுத்து நகைகளை கொள்ளை அடித்தார்கள். திருட்டு, கொலை, கொள்ளை குறித்து விழிப்பு உணர்வு அதிகமானாலும்கூட, அதில் இருந்து எல்லாம் வித்தியாசப்பட்டு, சந்தேகமே வராதபடி கொள்ளை அடிக்கப் புதுசு புதுசாக யோசிக்கிறார்கள் கொள்ளையர்கள்.
தாம்பரத்தில் ஒருவர் வீட்டு லோன் வேண்டி, தேசிய வங்கி ஒன்றுக்கு தொடர்ந்து அலைந்து இருக்கிறார். திடீரென அவரது மொபைல் எண்ணுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். வந்துள்ளது. அந்த தேசிய வங்கியின் போட்டி வங்கியான இன்னொரு தேசிய வங்கி பெயரில் வந்த அந்த எஸ்.எம்.எஸ்-ல் வீட்டுக்கே வந்து ஆவணங்களை சரிபார்த்து, டோர் டெலிவரியாக லோன் தரப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த எண்ணைத் தொடர்பு கொண்டு வரச் சொல்லி இருக்கிறார். மறுநாள் டிப்-டாப் ஆசாமிகள் இருவர் காரில் வந்து இறங்கினார்கள். ஆவணங்களை வாங்கி சரிபார்த்தார்கள். போட்டி வங்கியின் உள்ளேயே தங்களுக்கு ஆட்கள் இருப்பதாகச் சொன்னவர்கள், வட்டி குறைத்துத் தருவதாகவும் சொன்னார்கள். உடனடியாக 40 லட்சத்துக்கு மூன்று காசோலைகளை கொடுத்தவர்கள், முன்பணமாக  8 லட்சம் கேட்டு இருக்கிறார்கள். அவரும் உடனே அங்கே இங்கே என்று புரட்டிக் கொடுத்து உள்ளார். அப்புறம்தான் தெரிந்தது அவர்கள் ஏமாற்றுப் பேர்வழிகள் என்று!
தண்ணீர் கேன் போட வருபவர், வீட்டில் கொத்தனார் வேலை பார்த்தவர், காஸ் சிலிண்டர் கொண்டு வருபவர், கூரியர் கொண்டு வருபவர், வேலைக்காரர்கள், அவ்வளவு ஏன் சொந்தக் காரர்கள்கூட உங்கள் உயிருக்கும் உடைமைக்கும் ஆபத்தாக மாறலாம். அதனால்தான் சொன்னேன்... யாரையும் நம்பாமல் ஒவ்வொரு விஷயத்திலும் ஜாக்கிரதையாக இருந்தால் மட்டுமே உயிருக்கும் உடைமைக்கும் உத்தரவாதம் இருக்கும். யார் மீதாவது ஏதாவது சந்தேகம் தோன்றினால் உடனே காவல்துறைக்குத் தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்...'' என்று சொன்னார்.
உஷாரய்யா... உஷார்!
டி.எல்.சஞ்சீவிகுமார்
**********************************************************************
ஒயின் ஷாப் பார்ல உங்களைப் பத்தி பெருமையா பேசுனாங்க சாமீ!

வருகிறார் கருமாரியம்மன் பாரதிராஜா சுவாமிகள்!




சாமியார்களுக்குப் பஞ்சம் இல்லாத ஊர் திருவண்ணாமலை. இங்கு அவ்வப்போது கிளம்பும் திடீர் சாமியார்கள் வரிசையில் கருமாரியம்மன் பாரதிராஜா சுவாமிகள் அறிமுகமாகி... அரிதாரம் பூசி... அருள் வாக்கு சொல்ல ஆரம்பித்திருக்கிறார்.
திருவண்ணாமலை பக்கமுள்ள மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த பாரதிராஜாவுக்கு 17 வயது. கழுத்தில் ருத்ராட்ச மாலை. நெற்றியே தெரியாத அளவுக்கு குங்குமம். இடுப்பில் ஒரு மஞ்சள் நிறச் சேலையை வேட்டியாகக் கட்டி இருக்கிறார். கற்பூரத் தட்டுடன் வேப்ப மரத்தை பாரதிராஜா சுற்றி வர, கூடி நிற்கும் கூட்டம் கன்னத் தில் போட்டுக் கொள்கிறது. இவர்தான் பாரதிராஜா சுவாமிகள்.
கடந்த ஜூலை மாதத்தில் ஒரு நாள் வயக்காட்டுப் பக்கமிருந்த வேப்ப மரத்தடியில் நின்று கொண்டு இருந்தாராம் பாரதிராஜா. அப்போது மரத்தின் மீது இருந்து ஒரு பாம்பு பாரதிராஜாவின் கழுத்தில் மாலை போன்று விழுந்தததாம். அந்தப் பாம்பை கையில் பிடித்தபடியே சாமியாட ஆரம்பித்து விட்டாராம். விஷயம் கேள்விப்பட்டு கூட்டம் கூட, 'நான் கருமாரியம்மன் வந்திருக்கேன்டா. இனி இந்த உடம்புலதான் நான் தங்கியிருக்கப் போறேன்’ என்றபடியே தனது நாக்கினால் விபூதியைத் தொட்டு, பக்தர்கள் நெற்றியில் வைத்து விட... பரபரப்பு ராஜாவாகி விட்டார். உடனே தன் பெயரையும் கருமாரியம்மன் பாரதிராஜா சுவாமிகள் என மாற்றிக் கொண்டார். இதுதான் இவரது ரிஷிமூலம்.
கடந்த பௌர்ணமி தினத்தில் நாமும் சுவாமிகளை சந்திக்கப் போயிருந்தோம். ஏகப்பட்ட கூட்டத்துக்கு மத்தியில் அருள் வாக்குகளை அள்ளி விட்டுக் கொண்டிருந்தார் சுவாமிகள். சுவாமியிடம் வாக்கு கேட்பதற்கு டோக்கன் சிஸ்டமாம். ஒரு டோக்கனுக்கு  100 கட்டணம் வசூல் ஜோராக நடந்து கொண்டு இருந்தது.
விழுப்புரத்தில் இருந்து வந்திருந்த தேவராஜ், ''சுவாமி நான் டிராவல்ஸ் டிரைவரா இருக்கேன். எனக்கு ஊரை சுத்திக் கடனா இருக்குது. ஒரு நாள் போதையிலஇருந்தபோது, ஒயின் ஷாப்  பார்ல உங்களைப் பத்தி பெருமையா பேசிட்டு இருந்தாங்க. அதான் உங்களைத் தேடி வந்தேன்...'' என்று சுவாமியின் பாதத்தில் விழுந்தார்.
''நல்லதுடா... உன்னோட கடன் தொல்லை சீக்கிரமே தீரப் போகுது. உனக்கு சொந்தமா வீடு கட்டவும் யோகம் பொறக்கப் போகுதுடா...'' என்றபடியே நாக்கில் விபூதியைத் தொட்டு டிரைவர் நெற்றியில் வைத்தார் சுவாமிகள். டிரைவரும் புளகாங்கிதம் அடைந்து கிளம்பினார்.
அடுத்த டோக்கன் ஒரு பெண் பக்தை. அவர் கையோடு கொண்டு வந்திருந்த ஒரு குடம் பாலை, அப்படியே பாரதிராஜா தலையில் கொட்டி அபிஷே கம் செய்தார். தனக்குத் திருமணமாகிப் பல ஆண்டு களாகக் குழந்தைகள் இல்லை என உருகி வருந்த... பால் சொட்டச் சொட்ட நின்றிருந்த பாரதிராஜா, பச்சை நிறத்தில் ஏதோ ஓர் உருண்டையை எடுத்து அந்தப் பெண்ணின் வாயில் போட்டார். அத்தோடு சிறிது சர்க்கரையையும் போட்டு அப்படியே முழுங்கச் சொன்னார். அந்தப் பெண்ணும் முழுங்கி விட, ஓர் எலுமிச்சம் பழத்தை அந்தப் பெண்ணின்தலையில் வைத்து ஓங்கி அடிக்க... அந்த பழத்திலிருந்து வெளியேறிய சாறு பக்கத்திலிருந்த பக்தர்கள் கண்களில் தெறித்தது. அதைப் பற்றி கொஞ்சமும் கண்டுகொள்ளாமல், ''எல்லாம் சரியாகிடும். இன்னும் மூணு பௌர்ணமிக்கு வா...'' என்று சொல்லி அனுப்பினார்.
கூட்டம் கலைந்த பிறகு பாரதிராஜாவிடம் பேசினோம். ''சின்ன வயசுல இருந்தே சாமி மேல எனக்கு ரொம்பவும் இஷ்டம். பல வருஷங்களுக்கு முன்னாடி இருந்தே நான் சொல்றதெல்லாம் நடக்குதுன்னு நிறையப் பேர் சந்தோஷப்படுவாங்க. பத்தாவதோட ஸ்கூலுக்குப் போறதை நிறுத்திட்டு, எல்லோரையும் போல நானும் இயல்பாத்தான் இருந்தேன். எனக்குள்ள திடீர்னு ஆத்தா நுழைய ஆரம்பிச்சா. அந்த நேரத்தில் உச்சி முடியை யாரோ பிடிச்சு இழுக்கிற மாதிரி இருக்கும். கை, கால் எல்லாம் பயங்கரமா வலிக்கும். வாயைத் திறந்து பேசவே முடியாது. அதுக்குப் பிறகு என்ன நடக்கும்னே எனக்குத் தெரியாது. ஆத்தாதான் பேசிட்டு இருப்பா. ஆத்தா போடுற ரூட்டுல நான் போயிட்டே இருக்கேன்...'' என்று பவ்யமாகச் சொன்னவரிடம் இன்றைய அரசியல் பற்றி கேட்டோம்.
''எனக்கு கருணாநிதியும் மகன்தான்... ஜெயலலிதாவும் மகள்தான். ஆனா... கருணாநிதி நிறையப் பாவம் செஞ்சி இருக் கிறதால, அனுபவிக்கிறார்... எல்லாத்தையும் நான் இனிமே பாத்துக்கிடுவேன்!'' என்றவர் உஷாராகி அடுத்து அரசியல் பற்றி பேசவே மறுத்துவிட்டார்.
பாரதிராஜா சாமியின்  அப்பா செல்வராஜிடம் பேசினோம். ''எனக்கு ரெண்டு பசங்க, ஒரு பொண்ணு. பாரதிராஜா மூத்தவன். நான் தள்ளுவண்டியில கம்மங்கூழ் வியாபாரம் பண்ணிட்டு இருக்கேன். பாரதிராஜாவை நல்லபடியா படிக்க வெச்சி பெரிய போலீஸ் ஆபீஸராக்க ஆசைப்பட்டேன். அவனுக்கும் அதுதான் ஆசை. ஆனா என்ன பண்றது ஆத்தாவோட சித்தம் இப்படி இருக்கே..! கூழ் விற்கப் போறதுக்கு முன்னாடி தினமும் இங்கே உட்கார்ந்து டோக்கன் போட்டுக்கிட்டு இருக்கேன்!'' என்கிறார் கலங்கியபடியே.
ஆஹா... திருவண்ணாமலையிலிருந்து பரபரப்புக் கிளப்ப இன்னொரு சாமியார் ரெடி!
கோ.செந்தில்குமார்
படங்கள்: பா.கந்தகுமார்.
********************************************************************************
நேற்று துணை கமிஷனர், இன்று...?

புதுவை அதிர்ச்சி


பெயர், சாவீக் சக்ரவர்த்தி. வயது, 54. லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸில் பட்டம் பெற்றவர். 
காவல் துறையில் துணை கமிஷனராக வும் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் சீனியர் எடிட்டராகவும் வேலை பார்த்தவர். சிறந்த பத்திரிகையாளருக்கான உலகளா விய விருதை 2002-ல் பெற்றவர்! எதற்கு இவரைப் பற்றி இத்தனை விவரங்கள் என்கிறீர்களா? அடுத்த பாராவைப் படியுங்கள்!
இவர், கடந்த சில வாரங்களாக புதுச்சேரி தெற்கு புல்வார், தீயணைப்பு நிலையம் எதிரே நடை பாதையில் ஒரு அநாதை போன்று படுத்துக் கிடக்கிறார்!
அவரை சந்தித்தோம். நம்மை அருகில் உட்காரவைத்து, மிடுக்கான நுனி நாக்கு ஆங்கிலத்தில் பொளந்து கட்டினார்.
''கொல்கத்தாதான் நான் பிறந்த இடம். 6 வயசிலே டார்ஜிலிங் போர்டிங் ஸ்கூல்ல சேர்த்து விட்டாங்க. அடுத்து லண்டனில் படிச்சேன். பிறகு சொந்தமா பிசினஸ் செய்ய நண்பர் உதவியா இருந்தார். அப்ப கொல்கத்தாவுல மின்சாரப் பற்றாக்குறை இருந்த காரணத்துனால, எமர்ஜென்சி லைட்கள் விற்கத் தொடங்கினேன். விறுவிறுப்பா விற்பனையாச்சு. கோடிக்கணக்குல சம்பாதிக்க ஆரம்பிச்சேன். வருமான வரி கட்டும்போது லஞ்சம் கேட்டாங்க... வரி கட்டவும் லஞ்சமான்னு தலையில அடிச்சிக்கிட்டேன்.
என் நண்பன் ஒருத்தன், சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி தேர் வானான். அவன் என்னையும் அந்தத் தேர்வு எழுதும்படி சொல்ல... எழுதித் தேர்வாகி, பயிற்சி முடிச்சி, இந்தப் புதுச் சேரிலதான் 1983-ல் போலீஸ் பணியில் சேர்ந்தேன். வேலை நான் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால், அருணாசலப் பிரதேசத் துக்குப் போனேன். அப்புறம் டெல்லிக்கு டிரான்ஸ்ஃபர் கிடைக்க... அங்கே வி.ஐ.பி-களுக்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டேன். முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் அவர்களுக்குப் பாதுகாப்பு அதிகாரியா ஒரு வருஷம் இருந்து, அவரோட எல்லா மேடைப் பேச்சுகளையும் கேட்டு இருக்கேன்.
ஒரு முறை நடிகர் ராஜ்கபூருக்கு அவார்ட் கொடுத்தப்ப, அவர் மேடையிலேயே நெஞ்சு வலி வந்து கீழே விழுந்துட்டார். அவரை உடனே ஜனாதிபதியோட ஆம்புலன்ஸ்லேயே மருத்துவமனைக்கு அனுப்பி வெச்சு பிழைக்க வைச்சேன். அங்க இருந்தப்ப, என் குழந்தையைப் பார்க்க கொல்கத்தா போக லீவு கேட்டேன். கொடுக்கலை. சண்டை போட்டேன். அந்தப் பிரச்னையில் என்னை டிரான்ஸ்ஃபர் பண்ணிட்டாங்க. குற்றத் தடுப்புப் பிரிவில் வேலை பார்த்தேன். அப்பத்தான் 1989-ல் லண்டன் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ்ல படிக்க வாய்ப்பு கிடைச்சது. என்னோட கமிஷனர்கிட்ட படிக்க பர்மிஷன் கேட்டேன். தர மறுக்கவே... போலீஸ் வேலையை ராஜினாமா செஞ்சுட்டு, படிக்க லண்டன் போயிட்டேன். படிப்பு முடிஞ்சு இந்தியா வந்ததும், என் குடும்பத்துல பிரச்னைகள் அதிகமாகி, மனைவிகிட்டே இருந்து விவாகரத்து வாங்கிட்டேன். அப்புறம் இந்த சமூகத்தோட அவல நிலையை எழுத்து மூலமா சொல்ல நெனச்சி, பத்திரிகைகளுக்கு ஃப்ரீலான்சரா எழுத ஆரம்பிச்சேன். எக்னாமிக் டைம்ஸ்லயும் மேலும் பல பத்திரிகைகளிலும் எழுதினேன். 'சுதந்திரம்’ என்பது பற்றி நான் எழுதிய கட்டு ரைக்கு 2002-ம் ஆண்டு 'பாஸ்டியட் விருது’ லண்டனில் கிடைத்தது.
கடந்த ஆறு வருஷமா கோவாவில், என் தோழி யோட வீட்டுலதான் இருந்தேன். அங்கதான் என் முதல் புத்த கத்தை எழுத ஆரம்பிச்சேன். எங்களுக்குள் கருத்துவேறுபாடு காரணமா, அங்கிருந்து வெளியே வந்துட்டேன். இப்ப கடைசியாத்தான் புதுச்சேரி வந்தேன்! ஒரு நல்ல ஹோட்டல்ல தங்கி இருந்தப்ப, எனக்கும் ஹோட்டல் நிர்வாகிகளுக்கும் சின்னத் தகராறு. அதனால, இனி அங்க தங்கவேணாம்னு யோசிச்சேன். பிளாட்ஃபார்ம்ல இருந்த ஒரு சாது எனக்கு நண்பர் ஆனார்... அவர் கூடவே இங்க தங்க வந்துட்டேன்! இப்ப என்கிட்ட கொஞ்சம் காசு இருக்கு. இத வெச்சி சமாளிச்சுக்குவேன்.
நான் இந்த பிளாட் ஃபார்ம்ல படுத்துக் கிடந்தாலும், எப்பவும் நம்ம நாட்டைப் பத்தித்தான் யோசிக்கிறேன். நம் நாடே லஞ்ச ஊழல்ல ஊறிக்கிட்டு இருக்கு. இது ரொம்ப ஆபத்தானது. எதிர்காலத்தில் நம் நாட்டையே சீரழிச்சிரும். அண்ணா ஹஜாரே, ஒரு ஆர்மிக்காரர். அவர் இப்ப இந்த விஷயத்தில் தட்டிக்கேட்க ஆரம்பிச்சி இருக்கறது, ரொம்ப நல்ல விஷயம். இவருக்கு கிரண்பேடி மாதிரி ஆளுங்க சப்போர்ட் பண்றதும் எனக்குப் புடிச்சிருக்கு. மத்தியில இருக்குறவங்களோட அதிகாரத்தைக் குறைச்சிட்டு மக்களுக்கு அதிகாரங்களை வழங்கணும். இதன் மூலம்தான் இந்தியாவை ஒரு சிறந்த நாடாக முன்னேற்ற முடியும்!'' என்று சொன்னபடி திரும்பிப் படுத்தார்.
''இந்தியா முன்னேறிய வல்லரசு நாடாக மாறுவதற்கு என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்துக் கல்லூரி மாணவர்களுக்குப் பொருளாதார வகுப்பு எடுக்கத் தயாராக இருக்கிறேன், என்னை யாராவது பயன் படுத்திக் கொள்வார்களா?'' என்று ஏக்கத்துடன் கேட்கிறார்.
பதில் சொல்வது யாரோ?
நா.இள.அறவாழி
படங்கள்: எஸ்.தேவராஜன்
********************************************************************************
''கடலோரக் காவல்படையை பலப்படுத்துங்கள்!''

மீனவ மக்கள் கொந்தளிப்பு


ட்கள் பற்றாக்குறை மற்றும் அதிகாரிகளின் அலட்சியம் காரணமாகத் தமிழகத்தில் நாகப்பட்டினம் தொடங்கி கன்னியாகுமரி வரையிலான கடலோரப் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது என்று கடலோர மக்கள் மத்தியில் கவலை பெருகி வருகிறது. 'எதிர்காலத்தில் கடல் வழியாகத் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம்!’ என்று எச்சரிக்கைத் தகவல்கள் வரும் நிலையில், கடலோரப் பாதுகாப்பில் அதிகாரிகள் காட்டும் அலட்சியம் பெரும் ஆபத்தில் முடியும் என்கிறார்கள் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள்! 
கடல் வழியே வந்து மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பிறகுதான் மத்திய அரசு இந்தியக் கடலோரப் பாதுகாப்பில் கவனம் செலுத்தத் துவங்கியது. அப்போது நாகப்பட்டினம் முதல் கன்னியாகுமரி வரை கடலோரப் பாதுகாப்பு குழுமம் அமைக்கப்பட்டது. இதில் தலா இரண்டு படகுகளுடன் கூடிய 12 காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டன. படகு ஒன்றுக்கு மாதம்  5 லட்சம் பெட்ரோலுக்காக வழங்கப்படுகிறது. தவிர, படகுப் பராமரிப்பு செலவையும் மத்திய அரசே பார்த்துக்கொள்கிறது. பொதுமக்கள் மற்றும் மீனவர் கள் 1093 என்ற இலவச தொலைபேசி எண்ணுக்கு தொடர்புகொண்டு தகவல்கள் அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. 24 மணி நேரமும் ரோந்து சுற்றி கடல் வழியே வரும் தீவிரவாத ஆபத்தைத் தடுப்பது, நடுக்கடலில் மீனவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டால் அவர்களைக் காப்பாற்றுவது, மீனவர்கள் வெடிவைத்து மீன் பிடித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பணிகளைக் கடலோரப் பாதுகாப்புக் குழுமம் மேற்கொள்ள வேண்டும். இது குறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் 'பெயர் வேண்டாம்’ என்ற நிபந்தனையுடன் பேசினார்.
''கடலோரப் பாதுகாப்புக் குழுமத்துக்கு வழங்கப்பட்ட படகுகளை இயக்க தமிழகக் காவல் துறையில் ஆட்கள் இல்லை. அதனால், ஓய்வு பெற்ற இந்தியக் கடற்படை வீரர்களை நியமிக்க முடிவு செய்தார்கள். படகுகளை இயக்கவும், ரோந்து செல்லவும் மட்டும் ஒரு காவல் நிலையத்துக்கு ஒரு எஸ்.ஐ., இரண்டு தலைமைக் காவலர், நான்கு கிரேட் ஒன் காவலர்களை ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு எடுத்தார்கள். இவர்களுக்குப் பணி நிரந்தரம் கிடையாது. ஓர் ஆண்டு பணி நிறைவடைந்ததும், ரிட்டயர்டுமென்ட் ஆர்டர் கொடுத்துவிட்டு, மீண்டும் புதியதாகச் சேர்ப்பதுபோல கணக்குக் காட்டுகிறார்கள். சம்பளமும் குறைவு. இதனால், கடற்படையில் பணியாற்றிய ராணுவ வீரர்களுக்கு இந்தப் பணியில் ஆர்வம் இல்லை. இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் பாதியிலேயே பணியில் இருந்து விலகி சென்று விட்டார்கள். இதனால், 84 பேர் பணியாற்ற வேண்டிய இடத்தில் 23 பேர் மட்டுமே பணிபுரிகிறார்கள். இவர்கள் தவிர, ஒரு காவல் நிலையத்துக்கு ஒரு இன்ஸ்பெக்டர், மூன்று எஸ்.ஐ-க்கள், 42 காவலர்கள் இருக்க வேண்டும். ஆனால், தற்போது ஒரு காவல் நிலையத்துக்கு 10 பேர்கூட இல்லை.
வான் வழி மற்றும் தரை​வழியே வரும் தீவிரவாத சக்திகளை எளிதில் கண்டுபிடித்துவிடலாம். ஆனால், கடல் வழியே வரும் ஆபத்துகளைக் கண்டுபிடிப்பது கடினம். கடலோரக் காவல் குழுமத்தினர் விழிப்புடன் இருக்கிறார்களா என்பதை சோதிக்க நான்கு முறை தீவிரவாதத் தடுப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. இதில் மொத்தக் காவல் துறையும் ஈடுபடும். அதில் பல விஷயங்களில் அவர்கள் கோட்டைவிட்டார்கள். ஒத்திகையில் ஈடுபட்ட காவல் துறையினர் எளிதாகப் பல இடங்களுக்கு ஊடுருவிச் செல்ல முடிந்தது. இந்த லட்சணத்தில் நாடாளுமன்றத்தில் வரும் நிதி ஆண்டில் கோடிக்கணக்கில் இந்த குழுமத்துக்கு நிதி ஒதுக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 1,072 கி.மீட்டர் நீளமுள்ள தமிழகக் கடற்கரையில் 50 கி.மீட்டருக்கு ஒன்று வீதம் 20 காவல் நிலையங்களை அந்த நிதியில் நிறுவத் திட்டமிடப்பட்டு உள்ளது. கூடுதலாக 20 படகுகளையும் வாங்க இருக்கிறார்கள். இருக்கும் படகுகளை இயக்கவும், காவல் பணியை மேற்கொள்ளவுமே ஆள் இல்லாத நிலையில், கூடுதல் காவல் நிலையங்களுக்கு எங்கிருந்து ஆட்கள் வருவார்கள்? இந்தியக் கடற்படை மற்றும் கடலோரக் காவல் படை ரோந்து இருக்கும்போதே இலங்கை ராணுவம் நமது மீனவர்களைத் தாக்குகிறது. இந்த நிலையில், நமது கடலோரப் பாதுகாப்பு பலவீனமாக இருப்பது தெரிந்தால், இன்னும் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்...'' என்று அச்சத்துடன் சொல்லி முடித்தார் அவர்!
இது குறித்து தமிழக காவல் துறை டி.ஜி.பி. ராமானுஜத்திடம் பேசினோம். ''விரைவில் காலிப் பணி இடங்கள் நிரப்பப்படும். அதற்கான வேலைகள் நடக்கின்றன. மற்ற வேலைகளை அந்த குழுமத்தின் அதிகாரிகள்தான் செய்ய வேண்டும்...'' என்று மட்டும் சொன்னார்.
வீ.மாணிக்கவாசகம்
படங்கள்: பா.காளிமுத்து
*******************************************************************************
''கரந்தை தமிழ்ச் சங்கத்தை அரசு ஏற்கவேண்டும்!''

போராடும் மாணவர்கள்
ஞ்சையின் வரலாற்றுப் பெருமைகளில் கரந்தை தமிழ்ச் சங்கமும் ஒன்று. ஆனால், பல்வேறு புகார்களில் சிக்கித் தவிக்கும் இச்சங்கம் மற்றும் இதன் கல்வி நிறுவனங்களை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும் என்று ஒரு வார காலம் உண்ணாவிரதம் மற்றும் கல்லூரிப் புறக் கணிப்பு போராட்டம் நடத்தி இருக்கிறார்கள் கல்லூரியின் மாணவர்கள். 
தஞ்சாவூர் அருகே கரந்தையில் 1911-ல் தமிழ் வேள் உமாமகேசுவரனாரால் துவங்கப்பட்டது கரந்தை தமிழ்ச் சங்கம். இதில் தொடக்கப் பள்ளிக் கூடம், உயர்நிலைப் பள்ளி மற்றும் கலைக் கல்லூரி ஆகியவை இயங்குகின்றன. 'கரந்தை தமிழ்ச் சங்கம் மற்றும் உமாமகேசுவரனார் அரசு உதவிபெறும் கலைக் கல்லூரி ஆகியவை ஊழல் முறைகேடுகளால் சீரழிந்துள்ளது. எனவே, அரசு இவற்றை ஏற்று நடத்துவதோடு விசாரணைக் குழு அமைக்க வேண்டும்!’ என்று இந்திய மாணவர் சங்கத்தினர் வலியுறுத்துகிறார்கள்.
அச்சங்கத்தின் மாநில துணைத் தலைவர் கரிகாலன், '1983-ல் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ராமநாதன் வந்தார். பின்னர் செயலாளர் பதவியை இறுகப் பற்றிக்கொண்டவர், சங்கத்தைத் தனது குடும்ப சொத்தாக மாற்றிவிட்டார். எந்தக் கட்சி ஆளும் கட்சியாக இருக்கிறதோ அந்தக் கட்சிக்காரராக மாறி தன்மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து  காப்பாற்றிக் கொள்வார்.
தஞ்சாவூரில் எட்டாவது உலகத் தமிழ் மாநாடு நடந்த போது, கரந்தை தமிழ்ச் சங்கக் கட்டடங்கள்கட்ட  45 லட்சத்தை ஜெயலலிதா வழங்கினார். அது முறையாகச் செலவு செய்யப்படவில்லை. பல கோடி மதிப்புடைய 57 சோழர் கால செப்பேடுகளை 30 லட்சத்துக்கு தமிழக அருங்காட்சியகத்துக்கு விற்றார்கள். அது என்ன ஆனது என்றே தெரியவில்லை.  தனது இடத்தை தன் மகன் சாமி நாதன் பெயருக்கு மாற்றி, அதையும் தமிழ்ச் சங்கத்துக்கு விற்றுப் பணம் பெற்றுக் கொண்டார். இப்படித் தொடர்ந்து முறை கேடுகளில் ஈடுபட்டதால், 1997-ல் தமிழ்ச் சங்கத்தை விட்டு அவர் வெறியேற்றப்பட்டார்.
ஆனால், ஆளும் கட்சியைப் பிடித்து மீண்டும் பொறுப்புக்கு வந்தார். பின்னர், கருணாநிதி நடத்திய உலகச் செம்மொழி மாநாட்டிலும் பணம் பெறலாம் எனமுயற்சித்தார்; முடியவில்லை. தற்போது மாணவர்களையும், பேராசிரியர்களையும் அவமானப்படுத்துவது, கல்லூரியை மோசமாகப் பராமரிப்பது என தமிழ்ச் சங்கத்தின் பெயரைக் கெடுத்துவருகிறார். தமிழக அரசே இந்தத் தமிழ்ச் சங்கத்தை ஏற்று நடத்த வேண்டும். நடைபெற்ற முறை கேடுகள் தொடர்பாக விசாரணையும் நடத்த வேண்டும்...' என்றார்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் களான நவராஜன் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தின் உறுப்பினர் பழனிவேல் ஆகியோர், 'கரந்தை உமாமகேசுவரனார் கலைக்கல்லூரி அரசு உதவி பெறுவது. தவிர, ஆண்டுதோறும் சுமார்  2 கோடி செமஸ்டர் கட்டணம் வருகிறது. ஊதியம் மற்றும் இதர செலவுகள் போக வருடத் துக்கு  1 கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கும். இவை எங்கே போகிறது? பாதுகாக்கப்பட்ட குடிநீர், போதிய கழிப்பறைகள், ஆய்வகம், விடுதிஎன எதுவும் கல்லூரிகள் இல்லை. ஆனால், தனியார் கல்லூரி போல மாணவர்களிடம்  பணம் வசூலிக்கிறார்கள். கல்லூரி ஆசிரியர்களுக்கும் போதுமான ஊதியம் கொடுப்பது இல்லை.
இங்கே பி.எட். கல்லூரியும் உண்டு. வருடத்துக்கு 100 மாணவர்கள் என  85 லட்சம் கிடைக்கிறது. இடைநிலை ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் மூலம்  1 கோடியே 35 லட்சம் வருகிறது. இவற்றுக் கும் கணக்கு கிடையாது. இப்போது அ.தி.மு.க. பிரமுகர்கள் சிலரது பெயரைச் சொல்லி ஆளும் கட்சி என மிரட்ட ஆரம்பித்துள்ளார்...' என்றார்கள்!
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து கரந்தை தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் ராமநாதனிடம் கேட்டோம். ''முறைகேடு என்பது எல்லாம் பொய்.  நிர்வாக விரோதப் போக்கில் ஈடுபட்ட சில ஆசிரியர்கள் சமீபத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள். அவர்கள்தான் மாணவர்களைப் போராட்டத்துக்குத் தூண்டி இருக்கிறார்கள். நான் 40 ஆண்டுகளாக இந்தச் சங்கத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வருகிறேன். அதற்காகக் குடும்ப அரசியல் செய்கிறேன் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. என் மகளும் மகனும் கல்லூரி சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட அனைவரின் ஒப்புதலுடனே பொறுப்புக்கு வந்துள்ளனர். சோழர் காலச் செப்பேடுகளை தனியாருக்குக் கொடுத்தால்தான் தவறு. நான் அரசுக்குத்தானே கொடுத்தேன். அதில் கிடைத்த  நிதி  30 லட்சமும் கணக்கில் காட்டப்பட்டு உள்ளது. ஆட்சி மாறியவுடன் கட்சி மாறிவிட்டேன் என்று கூறுவதும் தவறு. நான் அன்றும் இன்றும் என்றும் தி.மு.க-தான்...'' என்றார் உறுதியாக!
சி.சுரேஷ்
படங்கள்: கே.குணசீலன்
*******************************************************************************
'ஜாலி' ஆறுமுகம்... 'கேலி' ராஜா!

கோவை சிறையில் கும்மாள தி.மு.க.
தி.மு.க-வின் சீனியர் தலைகள் ஒவ்வொன் றாக கோவை மத்திய சிறைக்குள் இம்போர்ட் செய்யப்படுவதைப் பார்த்து அ.தி.மு.க. புள்ளிகள் துள்ளிக் குதிக்கிறார்கள். ஆனால், அ.தி.மு.க-வினர் சந்தோஷப்படும் அளவுக்குச் சிக்கல் எதுவும் இல்லை. சிறைக்குள் ராஜ மரியாதையுடன் அவர்கள் பவனி வருவதாகவே  தி.மு.க-வினர் சொல்லியதைக் கேள்விப்பட்டு விசாரணையில் இறங்கினோம். 
மாஜி அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், என்.கே.கே.பி.ராஜா, சிட்டிங் மேயர் குமார் முருகேஷ், சிட்டிங் எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன், சிட்டிங் மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் ஆனந்தன் மட்டு மின்றி, தி.மு.க-வின் மாவட்ட, மாநகர சீனியர் பொறுப்பாளர்களால் நிரம்பி வழிகிறது கோவை மத்திய சிறைச்சாலை. தி.மு.க-வின் கூடாரமாக மாறிப்போன கோவை மத்திய சிறையில் என்னதான் நடக்கிறது என்பதை சிறைச்சாலை ஊழியர் ஒருவரிடம் விசாரித்தோம்.
''கிட்டத்தட்ட 2,100 பேர் இந்த ஜெயில்ல இருக்காங்க. நில அபகரிப்பு விவகாரத்தில் கைதான தி.மு.க. புள்ளிகள் மட்டும் 14 பேர். வீரபாண்டி ஆறுமுகம், ராஜா, அன்பழகன், குமார் முருகேஷ் மாதிரி சிலருக்கு மட்டும் 'ஏ வகுப்பு’ கிடைச்சிருக்கு. இந்த பிளாக்ல டாய்லெட், பாத்ரூம், கட்டில், மெத்தை, டேபிள் ஃபேன் வசதியெல்லாம் இருக்கும். மற்ற புள்ளிங்களுக்கு இந்த அளவுக்கு வசதி இல்லாட்டியும் கூட ரொம்ப மோசமான 'செல்’லுல இருக்காங்கன்னு சொல்ல முடியாது.
வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்ட தி.மு.க. புள்ளிகளை பார்க்கிறதுக்கு தினமும் கொத்துக் கொத்தா ஆளுங்க வர்றாங்க. இவங்க கொண்டுவந்து தர்ற தின்பண்டங்களை வெச்சு உள்ளே ஒரு பலகாரக் கடையே ஓப்பன் பண்ணிடலாம் போல இருக் குது. சர்க்கரை நோய் இருக்கிறதால ஜிலேபி, லட்டு மாதிரியான அயிட்டங்களை ஆறுமுகம் தொடுறதில்லை. ஆனா எப்பவும் ஆப்பிளும் கையுமாவே இருக்கார். மேயர் குமார் முருகேஷ§ம், வீரபாண்டி ஆறுமுகமும் எப்போதும் உட்கார்ந்து அரசியல், கட்சி நிலவரம்னு பேசி ஜாலியடிச்சுட்டு இருக்கிறாங்க. இவங்க ரெண்டு பேரையும் விட அரசியல் மற்றும் பதவி விஷயத்தில் ஆனந்தன் ரொம்பவும் ஜூனியரா இருக்கிறதால அவர் தள்ளி உட்கார்ந்து கவனிச்சுட்டு இருக்கிறார். அதே நேரத்துல ஆறுமுகத்துக்கு வேளாவேளைக்கு மாத்திரை எடுத்துக் கொடுக்கிறதுல ஆரம்பிச்சு பல உதவிகளைப் பண்றது ஆனந்தன்தான். 'எம் பையனாட்டமா பார்த்துக்குறீயே ஆனந்தா!’னு அவரே  சில நேரம் உருகிடுறார்.
உள்ளே வந்தாலும் என்.கே.கே.பி.ராஜாவோட ஜாலி குறையலை. மனுஷன் எதுக்கும் கலங்குறதில்லை. சதா நக்கலும், நையாண்டித்தனமுமாத்தான் அங்கு நடமாடுகிறார். வீரபாண்டி ஆறுமுகம் கூடவே குமார் முருகேஷ் ஒட்டிட்டு இருக்கிறதைப் பார்த்துட்டு 'அண்ணே! மேயர்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கோங்கண்ணே!’னு கிண்டலடிச்சு காலி பண்றார்.
இவங்களுக்கெல்லாம் சாப்பாட் டுக்கும் குறைவில்லை. காலையில் பொங்கல் அல்லது ரவை உப்புமா. மத்தியானம் ஆச்சுன்னா சாதம், சாம்பார், ஒரு காய்கறி பொரியல் கொடுக்கிறாங்க. 'ஏ’ வகுப்பு ஆளுங்க அவங்களோட உடல்நிலையைக் காரணம் காட்டி சப்பாத்தியும், பாலும் கேட்கிறாங்க. இது தவிர வாரத்துல மூணு நாட்கள் சிக்கன் குழம்புடன் முட்டை கொடுக்கிறாங்க. ஜெயிலுக்குள்ளே ஒரு கட்டு பீடி, சிகரெட் எல்லாம்  200,  300 வரைக்கும் போகுது. இதைக் கேட்டு, 'அடேங்கப்பா... கோடீஸ்வரன்கூட இங்கே வந்தா ஓட்டாண்டியாயிடுவான் போல’ன்னு ஆச்சர்யப்பட்டு போனார் குமார் முருகேஷ்.
கொஞ்ச நாளைக்கு முன்னாடி ராத்திரி 8 மணிக்கு வீரபாண்டி ஆறுமுகத்தை சந்திச்ச ஒரு சிறை அதிகாரி, ஏதோ பார்சல் கொடுத்ததாகத் தகவல் சொல்றாங்க. அவர் அடைபட்டுக் கிடக்கிற அந்த பிளாக்கில் நுழையுறதுக்கு முன்னாடி, வருகைப் பதிவேட்டில் என்ட்ரி போடணுமாம். ஆனா, ஒரு அதிகாரி 'என்ட்ரி போட வேண்டாம்’னு சொல்லிட்டுப் போனதாவும் பிரச்னை வந்துச்சு. உடனே ஒரு ரெய்டு நடத்துனாங்க. ஆனா அதுக்குப் பிறகும் எதுவும் மாறலை. கூட்டிக் கழிச்சுப் பார்த்தா இந்த சிறைவாசம் ஒண்ணும் தி.மு.க. புள்ளிகளுக்கு பெரிய சங்கடமா தெரியலை... ஜாலி கேம்ப் மாதிரி இருக்காங்க...'' என்கிறார்.
கோவை மத்திய சிறை அதிகாரிகளிடம் நாம் கேள்விப்பட்ட தகவல்களைச் சொல்லி விளக்கம் கேட்டோம். ''ஏதோ பரபரப்பைக் கிளப்பணும்னு அவங்கவங்க மனசுக்கு தோணுறதைப் பேசுறாங்க. ஜெயிலுக்குள்ளே சட்டவிதிகளை மீறி எதுவுமே நடக்குறது இல்லை. 'ஏ’ வகுப்பு அனுமதி பெற்றவங்களுக்கு மட்டும் சில வசதிகளைச் செய்து கொடுக்கச் சொல்லி விதிமுறையில் இருக்குது. அதை விதி மீறிய செயல்னு சொன்னா எப்படி? நாங்க எல்லோரையும் கைதியாத்தான் பார்க்கிறோமே தவிர, யாரையும் விருந்தாளியாகப் பார்க்கிறது இல்லை. உள்ளே எந்தத் தவறும் நடக்கவே இல்லை!'' என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்கள்.
நிஜம் என்றே நம்புவோம்!
எஸ்.ஷக்தி. படங்கள்: தி.விஜய்
******************************************************************************
'ஏன்டா... இது உன் வீடுன்னு நினைச்சியா?'

கொலை செய்ததா கோபி போலீஸ்?




விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட லாரி டிரைவர், லாக் அப்பில் அடித்துக் கொல்லப்பட்டதாக புகார் கிளம்பவே, தகதகக்கிறது ஈரோடு மாவட்ட காவல் துறை!
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப் பாளையத்தில் உள்ள வண்டிப்பேட்டைப் பகுதியை சேர்ந்தவர் சலீம். இவரது பக்கத்து வீட்டில் கணேச மூர்த்தி - ஷீலா தம்பதி வசிக்கின்றனர். இந்த தம்பதிக்குள் அடிக்கடி சண்டை வருமாம். கடந்த வாரமும் இருவருக்கும் பலத்த சண்டை வர... பக்கத்து வீட்டில் இருந்த சலீம், சமாதானம் செய்யப் போயிருக்கிறார்.
'எங்க சண்டையில் தலையிட நீ யாருடா?’ என கணேசமூர்த்தி சொல்ல, சலீமும் பதில் வாதம் செய்து இருக்கிறார். வாக்குவாதம் முற்றி இருவருக்கும் அடிதடி வர... ஒரு கட்டத்தில் கத்தியால் கணேசமூர்த்தியை சலீம் குத்தி விட்டதாகச் சொல்கிறார்கள்.  கோபி அரசு மருத்துவமனையில்அட்மிட்டான கணேசமூர்த்தி, போலீஸாரிடம் புகார் கொடுக்கவே, கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டு சலீம் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு சலீமை பிணமாகத்தான் திருப்பிக் கொடுத்தது போலீஸ்.
சலீமின் மனைவி சாஷிதா நம்மிடம் கண்ணீ ரோடு பேசினார். ''அவரைக் கைது செய்ததும் நானும் பின்னாடியே போனேன். கோபி ஸ்டேஷனுக்குள் அவரைக் கொண்டுபோனதும், அவர் போட்டிருந்த ஆடைகளைக் கழற்றிட்டு ஜட்டியோட நிற்க வெச்சாங்க. இரண்டு குழந்தைகளோட நானும் உள்ளே போனேன். குழந்தைகளைப் பார்த்ததும் என் வீட்டுக்காரர் வேகமா வந்து அவங்களைத் தூக்கிட்டார். இதைப் பார்த்துட்டு ஓடி வந்த போலீஸ்காரங்க, 'ஏன்டா நாயே... இது உன் வீடுன்னு நினைச்சியா?’னு பூட்ஸ் காலால் எட்டிஉதைச்சாங்க. தடுமாறிக் கீழே விழுந்தவரை என் கண்ணு முன்னாடியே மூணு பேர் சேர்ந்து மிதிமிதின்னு மிதிச்சாங்க. 'அய்யா அவரை விட்ருங்க’னு கத்திப் பார்த்தேன். என்னை இழுத்து வெளியில் தள்ளிட்டாங்க. நெஞ்சு மேல் அவங்க மிதிச்சதால் அவர் இறந்துட்டார். கொஞ்ச நேரத்தில் அவரைத் தூக்கி ஜீப்பில் போட்டுட்டு எங்கேயோ போயிட்டாங்க. அப்புறமாத்தான் உங்க வீட்டுக்காரர் நெஞ்சு வலியில் இறந்துட்டார்னு எனக்குத் தகவல் சொன் னாங்க...'' என்று கதறினார்.
மாவட்ட எஸ்.பி. ஜெயச்சந்திரனிடம் பேசினோம். ''சலீமை விசாரணைக்காக அழைத்துக் கொண்டு வரும்போதே, நெஞ்சு வலிப்பதாகச் சொல்லி இருக்கார். உடனே அரசு மருத்துவமனைக்கு கொண்டுபோய் இருக்கிறார்கள். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், 'சலீம் இறந்துவிட்டதாகச்’ சொல்லி இருக்கிறார்கள். மற்றபடி நாங்கள் சலீமை கைது செய்யவோ, லாக் அப்புக்குக் கொண்டு போகவோ இல்லை. தேவை இல்லாமல் போலீஸ் மீது அவப் பெயரை உண்டாக்க ஏதேதோ சொல்கிறார்கள்!'' என்றார்.
சலீம் மரணத்தில் இருக்கும் மர்மத்தைக் கண்டு பிடிக்க, மனித உரிமை அமைப்புகளும், உண்மை அறியும் குழுவும் களம் இறங்கி இருக்கின்றன. மர்ம முடிச்சுகள் அவிழட்டும்!
கி.ச.திலீபன்
**********************************************************************
''கொழுக்கட்டை சாப்பிட வாங்க..''

தடாலடி சிவசேனா
விநாயகர் சதுர்த்தி வந்தால், காவல் துறையினருக்கு அடிவயிறு கலங்கும். இந்த ஆண்டு அரசியல்வாதி​களையும் கலவரப்படுத்தி இருக்கிறார், மதுரையில் இருக்கும் தமிழ் மாநில சிவசேனா கட்சியின் மாநிலத் தலைவர் திர​விய பாண்டியன்! அவரிடம் பேசினோம். 
''இந்து மதம் சகிப்புத் தன்மை கொண்டது. சிறுபான்மையினரின் ஓட்டு வங்கியைக் குறிவைத்து தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் நோன்புக் கஞ்சி குடிக்கிறார்கள். கிறிஸ்துமஸ் விழாக்களில் தொடர்ந்து கலந்துகொள்கிறார்கள். ஆனால், மதசார்பின்மை பேசும் இவர்கள், இந்துக்கள் பண்டி​கைகளில் கலந்துகொள்ள மறுப்பது ஏன்?
சிறுபான்மையினரின் ஆதரவு தேவை என்பதற்காக, இவர்கள் பெரும்பான்மையாக உள்ள இந்துக்களைத் தொடர்ந்து அவமானப்படுத்துகிறார்கள்.இனியும் இந்த அவலம் தொடரக் கூடாது என்பதற்காகவே இந்த வருஷம் விநாயகர் சதுர்த்திக்கு, 'கொழுக்கட்டை சாப்பிட வாங்க’ என அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் அழைத்து இருக்கிறோம்.
ஆகஸ்ட் 28-ம் தேதி சென்னையில் பார்த்தசாரதி கோயிலுக்கு அருகில் இருக்கும் கம்பன் திருமண மண்டபத்தில், தமிழ் மாநில சிவசேனா கட்சியின் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு ஏற்பாடு செய்து இருக்கிறோம். அப்போது விநாயகருக்கு 1008 கொழுக்கட்டைகள் படைத்து விழாவுக்கு வரும் அனைவருக்கும் கொடுக்கப் போகிறோம். ஜெயலலிதா, கருணாநிதி, வைகோ, தா.பாண்டியன், வீரமணி உள்ளிட்டோருக்கும் அழைப்பு அனுப்புவோம். அனைத்து மதத்தினரையும் இவர்கள் ஒன்றாகப் பாவிப்பது உண்மையானால், இவர்கள் அனைவரும் கொழுக்கட்டை சாப்பிட வர வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்களால் வரமுடியாமல் போனால், தங்கள் சார்பில் பிரதிநிதிகளையாவது அனுப்ப வேண்டும்!'' என்றார் திரவிய பாண்டியன்.
''உங்களையும் கொழுக்கட்டை சாப்பிட அழைக்கப் போகிறார்களாமே?'' என்று திராவிடக் கழகத்தின் மாநில நிர்வாகி ஒருவரிடம் கேட்டதற்கு, ''நாங்கள் இதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. தி.க-வுக்கு சாதி, மதம் கிடையாது. இதே பிரச்னையை ஐந்து வருடங்களுக்கு முன்பு ராமகோபாலன் கிளப்பினார். இப்போது, இவர் கிளப்புகிறார். இதை வைத்து மார்வாடிகளிடம் வசூல் செய்யாமல் இருந்தால் சரி...'' என்று கிண்டல் அடித்தார்.
கொழுக்கட்டை என்ன பிரச்னையைக் கிளப்பப் போகிறதோ?
குள.சண்முகசுந்தரம்
படம்: சொ.பாலசுப்ரமணியன்
*******************************************************************************
ஊழியர்களை மிரட்டுகிறாரா உமாசங்கர்?

கோ - ஆப்டெக்ஸ் கொந்தளிப்பு
நேர்மையானவர், நிர் வாகத் திறமையானவர் என பெயர் எடுத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் மீது 'ஊழியர்களைப் பழிவாங்கும் நோக்கத்தில் செயல் படுகிறார்’ என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது! 
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத் தின் நிர்வாக இயக்குநராக இருக் கிறார், உமாசங்கர். இவருக்கு எதிராகத்தான் ஊழியர் சங்கங்கள் தொடர் போராட்டங்கள் நடத்துகின்றன. நெல்லையில் நடந்த கோ-ஆப்டெக்ஸ் ஊழியர் சங்க செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் பேசினோம். ''ஆட்சியாளர்களின் ஊழலால் நலிவடைந்து  85 கோடி நஷ்டத்தில் இயங்கிய கோ-ஆப்டெக்ஸ், இப்போது லாபத்தில் செயல்படுகிறது. இதற்கு ஊழியர்களின் தன்னலம் இல்லாத உழைப்புதான் முக்கியக் காரணம். நஷ்டத்தில் இயங்கியபோது பதவி உயர்வு, ஈட்டிய விடுப்பு, கல்விக்கடன், வீடு கட்டும் லோன் என பல சலுகைகள் இல்லாமல் பணியாற்றினோம்.
இது எதையும் தெரிந்திராத உமாசங்கர், பொறுப்பு ஏற்றதும் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுக்கிறார். கடந்த வருட விற்பனை இலக்கு  200 கோடி. அதை இப்போது ஒரேயடியாக  800 கோடி ஆக்கிவிட்டார். 'இலக்கை அடையாத ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்!’ என மிரட்டுகிறார். கோ-ஆப்டெக்ஸில் கடந்த 27 வருடங்களாகப் புதிய ஆட்கள் யாரையுமே வேலைக்கு எடுக்கவில்லை. இப்போது மொத்தமே 881 நிரந்தரப் பணியாளர்கள்தான் இருக்கிறோம். ஒவ்வொரு கடைக்கும் செல்லும் உமாசங்கர், அங்குள்ள வயதானவர்களை வேறு இடத்துக்கு மாற்றுகிறார். 27 வருடமாக ஆட்கள் எடுக்கவில்லை என்றால், வயதானவர்கள்தானே இருப்பார்கள்? தற்காலிகப் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, தனியார் ஏஜென்ஸி மூலம் காலி இடங் களைப் பூர்த்தி செய்யவும் ஏற்பாடு நடக்கிறது. தனியார் ஆட்களால் ஏற்படும் வராக்கடன், இருப்புக் குறைவு போன்றவற்றுக்கு யார் பொறுப்பு?
இதைச் சுட்டிக்காட்டிய சங்க நிர்வாகியை மும்பைக்கு டிரான்ஸ்ஃபர் செய்தார். எதிர்த்துக் கேட்கும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறார். அதனால் சென்னையில் வாயிற் கூட்டம் நடத்தினோம். பயன் இல்லை. அதனால் அடுத்து, மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப் பாட்டம் நடத்த இருக்கிறோம். அதற்கும் சரியான பதில் கிடைக்காவிட்டால்... ஆகஸ்ட் 30-ல் சென்னையில் பட்டினிப் போராட்டம் நடத்துவோம்!'' என்றனர் காட்டமாக.
உமாசங்கரிடம் குற்றச்சாட்டு குறித்துக் கேட்டதற்கு, '' 800 கோடி இலக்கு என்பது எட்டக்கூடியதுதான்! தொடர்ந்து வறுமையில் வாடும் கைத்தறி நெசவாளர்கள்தான் எங்களுடைய எஜமானர்கள். அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது, இந்த நிறுவனத்தின் கடமை. அதற்கான திட்டங்களைச் செயல்படுத்தும்போது, இது மாதிரி சில குறுக்கீடுகள் வரத்தான் செய்யும்!
கோ-ஆப்டெக்ஸ் கடைகளில், வாடிக்கையாளர் களிடம் அன்பாக இருக்கவேண்டும். ஒரு சேலை கேட்டால், பத்து சேலைகளைப்பிரித்துக் காட்டவேண்டும். பார்ப்பதற்கு ஓரளவு டீஸன்ட் டாகவும் இருக்கவேண்டும். சில ஊழியர்கள் ஷேவ்கூட செய்யாமல் வருகிறார்கள். நிறையக் கடைகளுக்கு விசிட் அடித்து, எப்படி நடந்து கொள்ளவேண்டும் என அறிவுறுத்துகிறேன். தீபா வளிக்கு விற்பனையைப் பல கோடி உயர்த்த திட்டம் வைத்துள்ளேன். அதுதான் முக்கியம்!''என்றார்.
அதிகாரியும் ஊழியர்களும் ஒரே சிந்தனையுடன் இணைந்து செயல்பட்டால்தானே எதிர்பார்க்கும் வளர்ச்சி கிட்டும்!
ஆண்டனிராஜ்
படங்கள்: எல்.ராஜேந்திரன்
*******************************************************************************
''கொலைக் குற்றவாளிகளுக்கு நான் உதவி செய்யவில்லை!''

அருப்புக்கோட்டை வழக்கில் அண்ணாச்சி?
ருப்புக்கோட்டை ம.தி.மு.க. பிரமுகர் முருகன், 2008-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி இரவு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை  அருப்புக்கோட்டை தாலுக்கா போலீஸ் இன்ஸ்​பெக்டர் சின்னக்கண்ணு தலைமையிலான தனிப்படை விசாரித்தது. பல கட்ட விசாரணைகள் முடிந்து, தி.மு.க-வைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர் ஒருவரிடம்  விசாரிக்க முடிவு செய்தனர். ஆனால், அவர் அருகில் கூட நெருங்க முடியாமல் அப்போது தி.மு.க-வின் அரசியல் தலையீடு இருந்தது. ஆனாலும், இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பான ஆவணங்களை இன்ஸ்பெக்டர் சின்னக்கண்ணு சேகரித்துவிட்டார். இதைத் தொடர்ந்து சின்னக்கண்ணுவும்  சப்-இன்ஸ்பெக்டர் ராம்ராஜும் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டனர். ''முருகன் கொலை வழக்கின் முக்கிய ஆவணங்களை அழித்துவிட்டார்கள். வழக்கை திசை திருப்புவதற்காக, போலியான நபர்களை நீதிபதியிடம் ரகசிய வாக்குமூலம் கொடுக்க வைத்துவிட்டார்கள்!'' என்று பொதுமக்கள் மத்தியில் பல்வேறு வதந்திகள் பரவியது.
 இந்தப் பகுதியில் செல்வாக்குப் பெற்ற அமைச்​சராக இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்​சந்திரன் பெயரும் இதில் அடிபட்டது. ''இன்ஸ்பெக்டர் முருகேஷ் மூலமாக பல்வேறு காரியங்கள் நடந்தன!'' என்றும் சொன்னார்கள். இந்த நிலையில்  2009-ம் ஆண்டு இன்ஸ்பெக்டர் முருகேஷ் இடமாற்றம் செய்யப்பட்டார். முருகன் கொலை வழக்கும் சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு  மாற்றப்பட்டது. அதற்குப் பிறகு, கிணற்றில் போட்ட கல்லாக இருந்த விவகாரம் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு எக்ஸ்பிரஸ் வேகம் எடுத்து உள்ளது. இதைப் பற்றி காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம்.
''மதுரை ஆயுதப்படை பிரிவில் இப்போது இருக்கும் இன்ஸ்பெக்டர் சின்னக்கண்ணு,மதுரை கீரைத்துறை குற்றப்பிரிவில் இருக்கும் இன்ஸ்பெக்டர் முருகேஷ் ஆகிய இருவரையும், சென்னை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு கடந்த 3-ம் தேதி வரவழைத்துள்ளனர். டி.ஐ.ஜி. ஸ்ரீதர், எஸ்.பி. ராஜலட்சுமி ஆகியோர் கொண்ட தனிப்படை இவர்களை விசாரணை செய்துள்ளது!'' என்ற தகவல் போலீஸ் வட்டாரத்தில் பரவிக்​கிடக்கிறது.
''இன்ஸ்பெக்டர் முருகேஷிடம் கிடுக்கிப்​பிடி விசாரணை செய்யப்பட்டது. 'முருகன் கொலை சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் சின்னக்​கண்ணு ஒப்படைத்து விட்டுச் சென்ற 500 சாட்சிகளின் வாக்குமூலம் மற்றும் ஆவணங்கள் எங்கே? அதை ஏன் அழித்தீர்கள்?’ என்று துளைத்து எடுத்து விட்டார்கள். மதியம் 2 மணியில் இருந்து இரவு 8 மணி வரை இடை​விடாமல் நடந்த விசாரணையில், பதில் சொல்ல முடியாமல் ஒரு கட்டத்தில் முருகேஷ், 'என்னை மன்னிச்சிடுங்க...’ என்று கதறி இருக்கிறார். ஆனால், 'கொலை வழக்கு ஆவணங்களை அழிச்சதுக்காக, காக்கிச் சட்டையை கழற்ற வேண்டிவரும்’ என்று சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் எகிறிய பிறகுதான், முக்கியமான ஒருவரின் பெயரைச் குறிப்பிட்டார். அவருக்காகத்தான் இதை எல்லாம் செய்தேன்... என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார்'' என்றும் சொல்ல  ஆரம்பித்துள்ளார்கள் சிலர்.
இதுபற்றி முதலில் இன்ஸ்பெக்டர் சின்னக்​கண்ணுவிடம் பேசினோம். ''சென்னை சி.பி.சி.​ஐ.டி. தலைமை அலுவலகத்தில் டி.ஐ.ஜி. ஸ்ரீதர் தலைமையிலான டீம், என்னிடம் விசாரித்தனர். முருகன் கொலை வழக்கை எந்தக் கோணத்தில் விசாரித்தீர்கள், எத்தனை சாட்சிகளிடம் விசாரித்தீர்கள் போன்ற விவரங்களைக் கேட்டனர். 500 சாட்சிகளிடம் விசாரித்தது, முருகனின் மாமியார் வசந்தா, ம.தி.மு.க. கவுன்சிலர் கோவிந்தராஜ் உட்பட 4 பேர் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ரகசிய வாக்குமூலம் கொடுத்தது, இதன் அடிப்படையில் முக்கியக் குற்றவாளியை கைது செய்ய வேண்டியதுதான் பாக்கி என்ற நிலை இருந்தது என்பதை எல்லாம் நான் சொன்னேன். அன்றைய தி.மு.க. பிரமுகர் நெருக்கடி கொடுத்ததால், முக்கியக் குற்றவாளியை நெருங்க முடியாத நிலை இருந்தது. அந்த நேரத்தில்தான் நானும், சப்-இன்ஸ்பெக்டர் ராம்ராஜும் திடீரென இடமாற்றம் செய்யப்​பட்டோம். வழக்கு ஆவணங்களை, இன்ஸ்பெக்டர் முருகேஷிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றேன் என்ற விவரத்தைத் தெரிவித்தேன்...'' என்று தான் விசாரிக்கப்பட்ட சம்பவத்தை ஒப்புக்கொண்டார்  சின்னக்கண்ணு.
மதுரை கீரைத்துறையில் இப்போது இருக்கும் இன்ஸ்பெக்டர் முருகேஷிடம் பேசினோம். ''முருகன் கொலை வழக்கு தொடர்பாக எனக்குத் தெரிந்ததை சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளிடம் சொன்னேன். இந்த வழக்கைப் பொறுத்தவரை அப்போதைய,அருப்புக்​ கோட்டைதாலுக்​கா இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன்தான் விசார​​ணை நடத்தினார். நான் அவருக்கு உதவியாக இருந்தேன்...'' என்றவரிடம், ''முருகன் கொலை வழக்கில் முக்கிய ஆவணங்களை அழித்ததாக உங்கள் மீது குற்றம் சுமத்துகிறார்களே...'' என்று கேட்டதும் சுதாரித்துக் கொண்ட முருகேஷ்,
''நான் இப்போது பிஸியாக இருக்கி​றேன். பிறகு பேசுங்கள்!'' என்றுஇணைப்​ ​பைத் துண்டித்தார்.
குற்றம் சுமத்தப்படும் முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆரிடம் பேசினோம். ''முருகன் கொலைக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. ஆரம்பத்தில் இருந்தே எதிர்க்கட்சியினர் என் பெயரை இதில் இழுத்து விடுகின்றனர். அமைச்சர் என்ற முறையில் கட்சிக்காரர்கள் ஏதாவது உதவி கேட்டு வந்தால், செய்து தருவேன். கொலை வழக்கில் எல்லாம் சிபாரிசு செய்தது கிடையாது. முருகன் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு சாதகமாக எந்த உதவியும் செய்யவில்லை. ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, முருகன் கொலை வழக்கில் தி.மு.க-வினரை சிக்க வைப்பதற்கான மறைமுக வேலையில் இந்த அரசு இறங்கி உள்ளது. இதை, சட்ட ரீதியாக சந்திக்கத் தயாராக இருக்கிறேன்!'' என்று சொன்னார்.
பல ஆண்டுகளாக உறங்கிக் கொண்டிருந்த வழக்கில், உண்மை விழிக்கும் நேரம் வந்துவிட்டது.
எம்.கார்த்தி
படங்கள்: என்.ஜி.மணிகண்டன்
*******************************************************************************
''உள்ளாட்சித் தேர்தலுக்குள் உள்ளே போடணும்!''

சீறிய ஜெ.! சிலுப்பும் அறிவாலயம்!
நில அபகரிப்புப் புகார் என்ற பெயரில் தி.மு.க-வினரைக் கைது செய்து பழி தீர்த்து வருகிறார் ஜெயலலிதா’ என்று கருணாநிதி ஒரு பக்கம் வெடித்துக்கொண்டு இருக்க... 'அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும், பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக காவல் துறையில் புகார் கொடுத்தார்கள். காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கை தொடரும்...’ என்று பதில் கொடுத்திருக்கிறார் ஜெயலலிதா.
நில அபகரிப்பு புகார்களை விசாரிக்க தமிழகம் முழுக்க 25 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கவும், நில அபகரிப்புப் புகார் சிறப்புக் காவல் பிரிவும் தொடங்க உத்தரவு இட்டு இருக்கிறார்.
''உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் போது, யார் மீதெல்லாம் புகார் இருக்கிறதோ அவர்கள் அத்தனை பேரும் உள்ளே இருக்கணும்'' என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக போலீஸ் வட்டாரம் சொல்கிறது. அதை சட்டரீதியாகத் தடுக்க முடியுமா என்று தி.மு.க-வும் சிலுப்பிக் கொண்டு தயாராகி வருகிறது!
தமிழ்நாடு முழுக்க நில அபகரிப்பு தொடர்பாக இதுவரை வந்த புகார்கள் 2,800-ஐத் தாண்டிவிட்டன. பெரும்பாலும் தி.மு.க. தொடர்புடையவர்கள் மீதுதான் குற்றச்சாட்டு. கடந்த மூன்று மாதங்களில் கைதான தி.மு.க. வி.ஐ.பி-கள் பற்றிய ஓர் அலசல் இது. போலீஸ் போட்டுள்ள எஃப்.ஐ.ஆர். அடிப்படையில் இந்த தகவல்கள் திரட்டப்பட்டன!
ஜெயலலிதா கோபமும்... வீரபாண்டியார் கைதும்...
சேலத்தில் உள்ள பிரீமியர் ரோலர் ஃபிளவர் மில்லை மிரட்டி வாங்கியதாக அதன் உரிமையாளர் கொடுத்த புகாரில்தான், வீரபாண்டி ஆறுமுகம் மீது கொலை மிரட்டல், நிலத்தை அபகரித்தல் உட்பட பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி சேலம் மத்தியக் குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் மூன்று நாட்கள் அவரைக் கஸ்டடியில் வைத்து விசாரித்தது போலீஸ். அந்த சமயத்தில் வெளியில் இருந்த தி.மு.க-வினர் சிலர் பச்சை சேலை உடுத்திய ஒருவரை அசிங்கப்படுத்துவதைப்போன்று சில சம்பவங்களை அரங்கேற்றவே, கடுப்பானார் ஜெயலலிதா. தாசநாயக்கன்பட்டி பால மோகன்ராஜ் கொடுத்த நில அபகரிப்பு புகாரில் உடனடியாகக் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார் ஆறுமுகம். இன்னும் ஜாமீன் வாங்கவும் முடியாமல் திணறிக்கொண்டு இருக்கிறார்.
 ஆப்பு வைத்த அரவை மில் அதிபர்!
பெருந்துறையைச் சேர்ந்த கடலை அரவை மில் அதிபர் ராமசாமி, ஈரோட்டைச் சேர்ந்த பாலசுப்ரமணியத்திடம் ஆறு லட்ச ரூபாய் கடன் வாங்கி இருக்கிறார். 'அந்தக் கடனுக்காக, ஆறு கோடி ரூபாய் மதிப்புள்ள அவரது மில்லை என்.கே.கே.பி.ராஜாவுக்குக் கொடுக்க வேண்டும் என ஈரோடு மேயரான குமார் முருகேஷ் மிரட்டினார். வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி, அந்த அரவை மில்லை அபகரித்துக்கொண்டார்கள்!’ என்பதுதான் ராமசாமியின் புகார். தி.மு.க. ஆட்சியில் பயந்துகொண்டு இருந்த ராமசாமி, ஆட்சி மாறியதும் போலீஸில் புகார் கொடுக்க... கொலை மிரட்டல், நில அபகரிப்பு உட்படப் பல பிரிவுகளில் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ராஜாவையும், மேயர் குமார் முருகேஷையும் நள்ளிரவு நேரத்தில் வீடு புகுந்து கைது செய்தது ஈரோடு போலீஸ்.
கொலை மிரட்டல்.. ஆக்கிரமிப்பு.. மோசடி!
சென்னை, நொளம்பூரில் அண்ணாமலை அவென்யூ என்ற 20 ஏக்கர் நிலத்தில் 120 குடும்பங்கள் வசித்து வந்தன. கடந்த 2009-ம் ஆண்டு அப்போதைய வில்லிவாக்கம் தொகுதி எம்.எல்.ஏ-வான ரங்கநாதன், அவர்களை மிரட்டிக் காலி செய்யவைத்தார் என்பதுதான் புகார். பாதிக்கப்பட்ட 120 குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் ஒன்று கூடி ரங்கநாதன் மீது புகார் கொடுக்க, விடுமா போலீஸ்? கொலை மிரட்டல், ஆக்கிரமிப்பு, மோசடி செய்தல் என 10 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, ரங்கநாதனைத் தூக்கிவிட்டது. ரங்கநாதன் மீது ஏற்கெனவே நிலுவையில் இருந்த அத்தனை புகார்களும் தூசு தட்டப்படுகின்றன. இப்போது குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருக்கிறார் ரங்கநாதன்.
 
குண்டர் தடுப்புச் சட்டத்தில் 'பொட்டு’ சுரேஷ்!
மதுரை மாவட்டத்தில் உள்ள வேங்கடசமுத்திரத்தைச் சேர்ந்த பாப்பா என்ற பெண்தான் பொட்டு சுரேஷ§க்கு முதல் கொட்டு வைத்தவர். 'எனக்கு சொந்தமான ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள 5.14 ஏக்கர் நிலத்தை, வெறும் 40 லட்சத்துக்கு பொட்டு சுரேஷ§ம், மதுரை மாநகர தி.மு.க. செயலாளர் தளபதியும் சேர்ந்து மிரட்டி எழுதி வாங்கிட்டாங்க!’ என்று புகார் கொடுத்தார். விசாரணைக்கு ஆஜராகும்படி இருவருக்கும் சம்மன் அனுப்பட்டது. இருவரும் எஸ்.பி. ஆபீஸுக்கு வர... ஏற்கெனவே போட்டுவைத்த திட்டப்படி இருவரையும் கைது செய்தது போலீஸ். ஆடிட்டர் அமர்நாத் என்பவரின் இடத்தை அபகரித்துக்கொண்டதாக பொட்டு மீது இன்னொரு வழக்கும் பதிவானது. உடனடியாக மதுரை கலெக்டர் சகாயம், 'பொது அமைதிக்கு பங்கம் ஏற்படக்கூடும் என்பதால், பொட்டு சுரேஷை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவலில்வைக்க உத்தரவிடுகிறேன்!’ என்று ஆணை பிறப்பிக்க... வெளியில் வர முடியாதபடி சுரேஷ§க்குக் கிடுக்கிப்பிடி போடப்பட்டது.
 மதுரை குலுங்க.. குலுங்க..!
தி.மு.க. ஆட்சிக் காலத்திலேயே ஆள் கடத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் சிக்கியவர் 'அட்டாக்’ பாண்டி. மதுரை திருமலை நாயக்கர் மஹாலுக்கு நேர் எதிராக இருக்கும், சுமார்  2 கோடி மதிப்புள்ள வீடு மற்றும் கடைகளை வாடகைக்கு எடுத்துவிட்டு, ஒப்பந்த காலம் முடிந்த பிறகும்கூட, அதைக் காலி செய்யாமல் ஆக்கிரமித்துக்கொண்டு மிரட்டு வதாகத்தான் 'அட்டாக்’ மீது புகார். இதேபோல கல்பனா என்ற பெண்ணும், வாடகைக்கு விட்ட தன்னுடைய வீட்டை 'அட்டாக்’ பாண்டி திருப்பித் தராமல் மிரட்டுவதாகப் புகார் கொடுக்கவே, நில ஆக்கிரமிப்பு, கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளைப் போட்டு அமுக்கிவிட்டது போலீஸ். வீடு, கடைகளை அபகரித்ததோடு, கொலை மிரட்டலும் விடுத்ததாக, தி.மு.க-வின் தலைமைச் செயற்குழு உறுப்பினரான மதுரை வி.கே.குருசாமி மீதும் புகார்கள் எழுந்தன. ஏற்கெனவே சில வழக்குகள் அவர் மீது இருக்கவே, குருசாமியையும் குண்டர் தடுப்புச் சட்டத்திலேயே கைது செய்துவிட்டது போலீஸ்.
திருமங்கலத்தை சேர்ந்த சிவனான்டி என்பவர், தன்னுடைய நிலத்தை எஸ்ஸார் கோபி அபகரித்துக்கொண்டதாக புகார் கொடுத்தார். அதைத் தொடர்ந்து ஆட்டோ டிரைவர் பாண்டியராஜனை காரை ஏற்றிக் கொலை செய்ததாக அதிரவைக்கும் வழக்கு என அடுத்தடுத்த புகார்களால் கோபியின் தலையும் உருள ஆரம்பித்தது. நில அபகரிப்பு, கொலை மிரட்டல் உள்ளிட்ட ஆறுக்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து தி.மு.க-வின் தலைமை செயற்குழு உறுப்பினரான கோபியை உள்ளே தள்ளிவிட்டது போலீஸ்.
 சேப்பாக்கம் டு திருப்பூர்
உடுமலை சீனிவாசனுக்குச் சொந்தமான ஜியான் பேப்பர் மில்லை மிரட்டி எழுதி வாங்கியதாக சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மீது புகார். இந்த வழக்கில் சன் டி.வி. சக்சேனா, அய்யப்பனும் சிக்க... எட்டுப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த அன்பழகனை எழுப்பிக் கைது செய்து, திருப்பூருக்குப் பறந்தது, போலீஸ். கண்டிஷன் பெயிலில் வெளியில் வந்த அன்பழகன், திருப்பூ ரில் தங்கி காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்து போட்டு வருகிறார்.
 நகராட்சித் தலைவர்களும் உள்ளே...
குளுகுளுப் பிரதேசமான கொடைக்கானல் நகராட்சித் தலைவராக இருப்பவர், தி.மு.க-வைச் சேர்ந்த முகமது இப்ராஹிம். இவர் மீதும் பண்ணை வீடு ஆக்கிரமிப்பு புகார். கொடைக்கானலில் ஜான் ரோஷன் என்பவர், 'எங்களுக்குச் சொந்தமான நான்கு ஏக்கர் பண்ணை வீட்டை இடிச்சிட்டு அபகரிச்சுட்டாங்க. திண்டுக்கல்லைச் சேர்ந்த தொழிலதிபருடன் சேர்ந்து முகமது இப்ராஹிம்தான் இதைச் செய்தார்.’ எனப் புகார் கொடுக்க... அதிரடி ஆக்ஷன்தான்.
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை நகராட்சித் தலைவரான கிருஷ்ணமூர்த்தி, தனது வீட்டின் பேரில் கட்டுமானப் பணிகளுக்காக  45 லட்சம் கடன் வாங்கினார். கடனைத் திருப்பி கேட்டு வங்கியில் இருந்து பல முறை நோட்டீஸ் அனுப்பியும் கிருஷ்ணமூர்த்தி கண்டுகொள்ளவே இல்லையாம். கடனைக் கேட்கப் போன வங்கி அதிகாரிகளையும் கிருஷ்ணமூர்த்தி மிரட்டவே, அவர்கள் போலீஸில் புகார் கொடுக்க... அப்புறம் என்ன? ஜெயில்தான்!
 கரூரைச் சேர்ந்த மறைந்த முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ-வான வாசுகியின் கணவர் முருகேசன், தம்பி ரவிக்குமார் இருவரும் நில அபகரிப்பு வழக்கில் கைதாகி இருக்கிறார்கள். தளவாய்பாளையத்தைச் சேர்ந்த பார்வதி என்பவருக்கு சொந்தமான நிலத்தை கிரயம் செய்துகொண்டு, பணம் கொடுக்காமல் கொலை மிரட்டல் விடுப்பதாக இவர்கள் இருவர் மீதும் புகார் கொடுக்கப்பட்டது.
திருப்பூர் அருகே முருகம்பாளையத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் கொடுத்த நில அபகரிப்பு புகாரின் பேரில் பொங்கலூர் தொகுதி தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ-வான மணி கைது செய்யப்பட்டதுதான் லேட்டஸ்ட்.
திருச்சி மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளரான குடமுருட்டி சேகர், காரில் கஞ்சா கடத்த முயன்றதாக கைது செய்யப்பட்டார். திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவாணன், குண்டர் தடுப்புச் சட்டத்தில் கம்பி எண்ணுகிறார். கடைகளைச் சேதப்படுத்தியது, பள்ளி மாணவன் விபத்தில் இறந்து போனதற்குக் காரணம் எனப் பல்வேறு வழக்குகள் கலைவாணன் மீது பாய்ந்து இருக்கிறது. முன்னாள் அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணன், கொலை முயற்சி வழக்கில் சிக்கியிருக்கிறார். தி.மு.க. நகரச் செயலாளரை கொலை செய்யத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்து, கைது செய்திருக்கிறது போலீஸ்.
''இத்தோடு முடியவில்லை... இன்னும் நிறை யவே இருக்கு. பார்க்கத்தானே போறீங்க..'' என்று கண் சிமிட்டிச் சிரிக்கிறார் காவல்துறை உயரதி காரி ஒருவர். தி.மு.க.வினர் வயிற்றில் இவை புளியைக் கரைக்க ஆரம்பித்துள்ளது!
கே.ராஜாதிருவேங்கடம்
**********************************************************************
ஊழலுக்கு எதிரான அண்ணா போராட்டம்

சிலிர்த்து எழுந்தது இந்தியா!
'இது இன்னொரு சுதந்திரப் போராட்டம்’ - அண்ணா ஹஜாரே உண்ணா​​விரதத்தைத் தொடங்கும் முன் தன் போராட்டத்தை இப்படி வர்ணித்தபோது, அவர் சற்று அதிகமாகவே பேசுவதாகக் கூறியவர்கள் உண்டு. ஆனால், நேர்மையாகச் செயல்படுபவர்களுக்கு இந்த நாடு எவ்வளவு மோசமான எதிரியாக மாறி இருக்கிறது என்பதையும், தங்கள் பதவி​களைக் காப்பாற்றிக்​கொள்ள நம்முடைய ஆட்சி​யாளர்கள் எந்த அளவுக்கு அடக்கு​முறை​களைப் பிரயோகிப்பார்கள் என்பதையும், அண்​ணாவின் கைது அவர்​களுக்குச் சொல்லி இருக்கும்! 
கடந்த இரு வாரங்​களாகவே டெல்லி ஆட்சி​யாளர்​களின் முழுக் கவனமும் அண்ணா மீதுதான் இருந்தது. போராட்டத்துக்கு ஏகப்பட்ட அலைக்கழிப்பு கொடுத்த பிறகு, 'மூன்று நாட்கள் மட்டுமே அனுமதி; 5,000 பேருக்கு மேல் கூடக் கூடாது; 100 வாகனங்களுக்கு மேல் நிறுத்தக் கூடாது’ என்று 22 நிபந்தனைகளை விதித்தது டெல்லி காவல் துறை. 'சாத்தியமே இல்லாத இந்த நிபந்தனைகளை ஏற்க முடியாது’ என்று அண்ணாவின் குழுவினர் அறிவித்ததையே சாக்காகச் சொல்லி, போராட்டத்துக்கு அனுமதி மறுத்தது. காவல் துறையின் அடாவடியான நிபந்தனைகளைக் குறிப்பிட்டு, பிரதமருக்கு அண்ணா கடிதம் எழுதியும் பிரயோஜனம் இல்லை.
உடனே அமைச்சர்களும் கட்சித் தலைவர்​களும் அண்ணாவுக்கு எதிராகக் களம் இறக்கப்பட்டனர். முதல் தாக்குதலை நடத்தியது அமைச்சர்கள் பிரணாப் - அம்பிகா - கபில் சிபல் அணி. அடுத்த தாக்குதலைத் தொடுத்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி, ''அண்ணாவே ஓர் ஊழல்வாதி'' என்று சொல்லிப் பார்த்தார். ஆனால், எதுவும் எடுபடவில்லை.
இதனிடையே, சுதந்திர தின விழாவில் பிரதமர் உரையும் அண்ணாவுக்கு நேரடியாகவே மிரட்டல் விடுத்தன. எந்த ஓர் அச்சுறுத்தலுக்கும் அண்ணா குழுவினர் அசரப்போவதில்லை என்று தெரிந்ததும், அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கினர் ஆட்சியாளர்கள். அதிகாலையிலேயே அண்ணா குழுவினரைச் சுற்றிவளைத்த போலீஸார், போராட்டத்துக்கு அனுமதி கேட்கப்பட்டு இருந்த ஜெயப்பிரகாஷ் நாராயண் பூங்கா மட்டும் அல்லாமல் ஷாஹீத் பூங்கா, ராஜ்காட், ஜவஹர்லால் நேரு மார்க், அருணா ஆசப் அலி மார்க், டெல்லி கேட், திலக் மார்க் என்று பிரதான இடங்கள் பலவற்றிலும் 144 தடை உத்தரவை அமல்படுத்தினர். மேலும், அண்ணா குழுவினரைக் கைதுசெய்து உடனடியாக சிறைக்குக் கொண்டுசெல்ல ஏதுவாக இரண்டு சிறப்பு நீதிபதிகளையும், உள்துறை முதன்மைச் செயலர் மூலம் கேட்டுப் பெற்றனர். இவ்வளவு முடிவுகளுக்கும் பின்னணியில் இருந்தவர் ராகுல் காந்தி. காலை 9 மணிக்குள் சிறைக்குள் அண்ணாவைத் தள்ளி​விட்டால், போராட்டத்தை முடக்கிவிடலாம் என்று திட்டமிட்டது அரசு. ஆனால், அண்ணாவோ நாட்டையே போராட்டக் களமாக்கினார்.
அண்ணாவின் போராட்டம் தொடங்கிய செய்தியைக் கேட்க ஆவலோடு இருந்த மக்கள், அவர் கைது செய்யப்பட்டதைக் கேட்டதும் கொந்தளித்தனர். டெல்லியில் காவல் துறைக் கட்டுப்பாடுகளையும் மீறி அலை அலையாகக் குவிந்தனர். மகாராஷ்டிரத்தில் மக்கள் கொந்தளித்தனர். மும்பையில் ஆசாத் மைதானத்தில் நடந்த கூட்டத்தில் மேதா பட்கர் பங்கேற்றார். அண்ணாவின் சொந்த ஊரான ராலேகான் சித்தியில் மக்கள் சாலையிலேயே நாள் முழுவதும் உட்கார்ந்திருந்தனர். உத்தரப்பிரதேசத் தலைநகர் லக்னோவில் காலையிலேயே ஆயிரக்கணக்கானோர் பிரமாண்டப் பேரணி நடத்தினர். ஆந்திரத்தில் மக்கள் பெரும் திரளாகக் கூடுவதை உணர்ந்த சந்திரபாபு நாயுடு, ஹைதராபாத்தில் தெலுங்கு தேசம் தலைமையில் பேரணியை அறிவித்தார். தமிழகத்தில் சென்னையில், 'ஊழலுக்கு எதிரான இந்தியா’ அமைப்பைச் சேர்ந்தவர்கள் கால வரையறையற்ற உண்ணாவிரதத்தில் இறங்கினர். காஷ்மீரில் தொடங்கி தமிழகம் வரை நாடு முழுவதும் மறியல்கள், பேரணிகள், உண்ணாவிரதங்கள்...
இதற்குள் நாடாளுமன்றத்தில் பிரளயமேஏற்பட்டு இருந்தது.  'அண்ணா கைது குறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று ஒட்டுமொத்த எதிர்க் கட்சிகளும் ஒரே குரலில் கூறின. மக்களவைக் கூடியதும் பிரதமர் அறிக்கை வாசித்தார். ''ஊழலை ஒழிக்க எந்த மாய மந்திரமும் நம்மிடம் இல்லை. அமைதியை நிலைநாட்ட போலீஸார் மிகக் குறைந்த அளவிலான நடவடிக்கையையே எடுத்துள்ளனர்'' என்று மன்மோகன் பேசியபோது அவை கொந்​தளித்தது. எதிர்க் கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜும், அத்வானியும் பிரதமரைக் கடுமையாகச் சாடினர். அவை ஒத்திவைக்கப்பட்டது. பிரதமர் மாநிலங்களவையிலும் தனது விளக்கத்தை அளித்தார். அங்கும் அவர் பேச்சை யாரும் பொருட்படுத்தவில்லை. 'அண்ணா கைதுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் மூன்று நாட்களுக்கு நாடாளுமன்றத்தைப் புறக்கணிக்க வேண்டும்’ என்று எதிர்க் கட்சிகளுக்கு அழைப்புவிடுத்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. ''இந்தக் கைது, அடிப்படை மனித உரிமையையே மீறும் செயல்!'' என்றார் குருதாஸ் தாஸ் குப்தா. அரசு எதிர்பார்க்காத வகையில் எதிர்க் கட்சிகள் அனைத்தும் ஓர் அணியில் நின்றன. அதனால் பெரும் சங்கடத்துக்கு உள்ளான அரசு, அண்ணாவை விடுவிப்பதாக அறிவித்தது. ஆனால், போராட்ட அனுமதி இல்லாமல் விடுதலையாக அவர் மறுத்தார். வேறு வழியின்றி அரசு இறங்கி வந்தது. டெல்லி ராம் லீலா மைதானத்தில் 15 நாட்கள் அனுமதியுடன் போராட்டத்தில் அமர்ந்தார் அண்ணா.
''என் உயிர் முக்கியம் இல்லை. இந்த நாடு ஊழலில் இருந்து விடுபட வேண்டும். அதுவரை போராடுவோம்!'' என்றார்.
''நீங்கள் எங்களுக்கு முக்கியம் அண்ணா!'' - மக்கள் முழக்கம் அதிர்கிறது!
சமஸ்
**********************************************************************
ராஜீவ் கொலையில் விலகாத மர்ம முடிச்சு!

சர்ச்சைசாமி சந்திராசாமி!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்​டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேரின் கருணை மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில்... மூவரும் எப்போது வேண்டுமானாலும் தூக்கு மேடையில் நிறுத்தப்படலாம்! 
'மரண தண்டனையை பல்வேறு நாடுகள் ஒழித்துவிட்ட பிறகு, இந்தியா அதனைப் பின்​பற்ற வேண்டுமா?’ என்று மனித உரிமையாளர்கள் ஒரு பக்கம் கேட்​கிறார்கள். 'மூன்று தமிழர்கள் உயிரைப் பறிக்கலாமா?’ என்று தமிழின உணர்வாளர்கள் இன்னொரு பக்கம் கேட்கிறார்கள். இதற்கு மத்தியில் ஒரு குரல் வித்தியாசமாக ஒலிக்கிறது. ''ராஜீவ் கொலையின் உண்மைக் குற்றவாளிகள் வெளியில் இருக்கிறார்கள். அவர்களை விட்டுவிட்டு, கொலைச் சதியில் சம்பந்தம் இல்லாதவர்களை தூக்கு மேடைக்கு அனுப்புவது நியாயமா?’ என்பதுதான் அதிர்ச்சிக்​​குரிய முக்கியக் குரல்!
இவர்கள் அத்தனை பேரும் அடையாளம் சுட்டிச் சொல்வது சந்திராசாமி என்ற மனிதரை!
நேமி சந்த் ஜெயின் என்று அழைக்கப்படும் இவரை சந்திரா​சாமி என்றால்தான் அனை​வருக்கும் தெரியும். முன்​னாள் பிரதமர் நரசிம்மராவுக்கு மிக நெருக்கமான நண்பராகவும், ராஜீவ் கொலை நடந்த காலத்தில் இந்திய பிரதமராக இருந்த சந்திரசேகருக்கு நெருங்கிய சகா​வாக​வும் இருந்தார். உலகத்​தின் மிக முக்கியமான ஆயுத வியாபாரியாகச் சொல்லப்படும் கசோக்​கிக்கும் இவருக்கும் நெருங்​கிய தொடர்பு உண்டு. அரசி​யல் தலைவர்களை சதி வேலைகள் செய்து கவிழ்ப்​பதில் கைதேர்ந்தவர் இவர் என்பது வி.பி.சிங் விஷயத்தில் வெளிச்​சத்துக்கு வந்தது. காங்கிரஸில் இருந்து வெளியேறி ஆட்சியைப் பிடித்த வி.பி.சிங்கை எப்படிக் கவிழ்ப்பது என்று சிலர் திட்டமிட்டபோது, செயின் கீட்ஸ் தீவில் வி.பி.சிங் மகனுக்குச் சொத்துகள் இருப்பதாக ஆவணங்களைத் தயாரித்துத் தந்தது இந்த சந்திராசாமிதான். அந்த ஆவணங்கள் போலியானவை என்று நிரூபணம் ஆனபோது, சந்திராசாமி பெயர் டெல்லி மீடியாக்களில் அதிகம் அடிபட்டது. இப்படிப்பட்ட சர்ச்சைக்குரிய காரியங்களுக்கு சொந்தக்காரர் இந்த சந்திராசாமி!
இவர் மீது, அன்னியச் செலாவணியை மீறிய 12 குற்றச்சாட்டுகள் இருந்தன. அதில் மூன்றில் விடுதலை ஆகிவிட்டார். மீதி 9 வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே, அவர் எப்போது வெளிநாடு சென்றா லும் டெல்லி நீதிமன்றத்தின் அனுமதி பெற்றே செல்ல முடியும். 'சந்திராசாமியை வெளிநாடு செல்ல அனுமதித்தால், அவர் திரும்பி வர மாட்டார்!’ என்று பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸார் பதில் மனுத் தாக்கல் செய்வார்கள். குறிப்பிட்ட தொகையை டெபாஸிட்டாகக் கட்டிவிட்டு அவர் செல்லலாம் என்று நீதிமன்றமும் அனுமதிக்கும். இது கடந்த 20 ஆண்டுகளாக நடக்கும் வழக்கம்.
கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் 31-ம் தேதி, 'எனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல வேண்டும்!’ என்று அனுமதி கேட்டபோது, அமலாக்கத் துறை அதிர்ச்சிக்குரிய காரணத்தைச் சொன்னது. 'சந்திராசாமி வெளிநாடு போனால், திரும்ப மாட்டார். பல ஆதாரங்களை அழித்துவிடுவார். மேலும் அவர் மீது சி.பி.ஐ. வழக்கும் உள்ளது!’ என்றது. 'சி.பி.ஐ. வழக்குத் தொடருமா?’ என்று நீதிபதிகள் கேட்க, 'தொடரும்...’ என்று பதில் தந்தார்கள். ராஜீவ் கொலைச் சதியை விசாரித்த பல்நோக்குக் கண்காணிப்புப் புலனாய்வுப் பிரிவும் அப்போது மனுத் தாக்கல் செய்தது. அதில், 'ராஜீவ் கொலை வழக்கில் சந்திராசாமி சம்பந்தப்பட்டு உள்ளார். எனவே, அவர் வெளிநாடு செல்வதற்கு அனுமதி தரக் கூடாது’ என்று உறுதியாகச் சொன்னது. 'இதற்கு முன்னர் வெளிநாடு சென்றுவிட்டு அவர் திரும்பிவிட்டதாகச் சொல்கிறார். ஆனால், இம்முறை திரும்ப வருவாரா என நீதிமன்றத்துக்கு சந்தேகம் இருக்கிறது. உடல்நிலையைக் காரணமாகக் காட்டுவதால், அனுமதி அளிக்கலாம். 90 லட்சம் ரூபாயை டெபாஸிட்டாகச் செலுத்திவிட்டு, அவர் செல்லலாம்’ என்று நீதிமன்றம் சொல்ல... 'என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. ஆனால், என் சீடர்களிடம் வாங்கிச் செலுத்திவிடுவேன்!’ என்று சொன்னார் சந்திராசாமி. பணத்தை உடனடியாகக் கட்டிவிட்டு, வெளிநாடு சென்றார். சந்திராசாமி இதுவரை அமலாக்கத் துறைக்கு 65 கோடி வரை கட்ட வேண்டிய பாக்கி உள்ளதாக அத்துறையின் வக்கீல் நீதிமன்றத்தில் கூறினார். அப்படிப்பட்ட சந்திராசாமியை வளைக்காமல் இருக்கிறார்களே என்பதுதான் தமிழ் உணர்வாளர்களின் முக்கியக் கேள்வியாக இருக்கிறது!
ராஜீவ் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது. பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இதன் விசாரணை நடந்து, கைதான 26 பேருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அதில் 19 பேரின் தண்டனை விலக்கப்பட்டு, அவர்கள் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்கள். மூன்று பேருக்கு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. மற்ற நான்கு பேரின் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதில் நளினியின் கருணை மனு ஏற்கப்பட்டு, அவர் ஆயுள் தண்டனைக் கைதியாக புழல் சிறையில் இருக்கிறார்.
நீதிபதி ஜே.எஸ்.வர்மா தலைமையில் ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. ராஜீவுக்குத் தரப்பட்ட பாதுகாப்பில்ஏதாவது குளறுபடிகள் நடந்ததா, அதற்கு யார் குற்றவாளி என்பதை அந்த கமிஷன் விசாரித்தது. இதில் பல அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.
மூன்றாவதாக அமைக்கப்பட்டது நீதிபதி ஜெயின் கமிஷன். ராஜீவ் படுகொலை செய்யப்​பட்டதற்கான பின்னணிகள், அதில் சம்பந்தப்பட்டுள்ள நபர்கள் பற்றி இது விசாரித்தது. இந்த கமிஷனில்தான் பல்வேறு சர்ச்சைக்குரிய மனிதர்கள் தங்களது வாக்குமூலங்களைப் பதிவு செய்தார்கள்.
பல்வேறு வர்த்தகங்களில் சம்பந்தப்பட்ட பப்லு ஸ்ரீவத்சவா என்பவர் ஜெயின்கமிஷனிடம் அளித்த வாக்குமூலத்தில், ''ராஜீவ் கொலைச் செய்தி கேட்டதும்சந்திராசாமி மகிழ்ச்சியில் கூத்தாடினார். 'நரசிம்மராவைப் பிரதமராக்கப்போறேன்...’ என்று சொல்லிக்​கொண்டே, ராவ் வீட்டுக்கு போன் செய்து அரை மணி நேரத்துக்கு மேல் பேசிக்கொண்டு இருந்தார்...'' என்று வாக்குமூலம் கொடுத்தார். அரியானா மாநிலத்தைச் சேர்ந்த பி.ஜே.பி. பிரமுகர் ரமேஷ் தலால், 'சந்திராசாமிக்கு இந்த சதியில் பங்கு இருக்கிறது’ என்று சொன்னதாகவும், அதைத் தொடர்ந்து தன்னை சந்திராசாமி மிரட்டியதாகவும் 1995-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பேட்டி கொடுத்துள்ளார். சந்திராசாமியின் சந்தேகத்துக்கு உரிய நடவடிக்கைகள் தொடர்பாக, மகந்த் சேவா தாஸ் சிங் என்பவர் ஒரு வாக்குமூலம் கொடுத்தார். அவர், ஷாஹித் பெருமன் சிரோமணி அகாலிதள் அமைப்பின் தலைவர். இவை அனைத்தையுமே பதிவு செய்துள்ளது ஜெயின் கமிஷன்.
ஆனால், சந்திராசாமிக்கு எதிரான பல்வேறு ஆவணங்கள் திடீரென்று காணாமல்போன தகவல்களும் 97-ம் ஆண்டு அம்பலம் ஆனது. 89-ம் ஆண்டு முதல் ராஜீவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றிய அதிகாரிகளது அறிக்கையுடன் சந்திரா​சாமியின் தொலைபேசி உரையாடல்களை மறித்துக் கேட்கப்பட்ட செய்திகளின் ஆவணத் தொகுப்பும் காணாமல்போனது.
இவை அனைத்துக்கும் மேலாக பெங்களூ​ருவைச் சேர்ந்த ரங்கநாத் என்பவரது வாக்கு​மூலமும் சந்திராசாமியை நேரடியாகக் குற்றம் சாட்டி இருந்தது. ''பெங்களூருவில் இருந்து எங்களை சந்திராசாமி தப்பவைத்துவிடுவார். நேபாளத்துக்கு அழைத்துச் சென்றுவிடுவதாகவும் சொல்லி இருக்கிறார்’ என்று சிவராசன் தன்னிடம் சொன்னதாக ரங்கநாத், தனது வாக்குமூலத்தில் சொல்லி இருக்கிறார். சிவராசன் பெங்களூருவில் தங்குவதற்கு வீடு கொடுத்த ரங்கநாத், ராஜீவ் வழக்கில் 26-வது குற்றவாளியாக இருந்து தூக்குத் தண்டனை பெற்றவர். உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர்.
சென்னையில் இருந்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கார்மேகம், ஈழத்துக்குச் சென்று வந்துவிட்டு தனது அனுபவங்களை 'ஈழப் புலிகளுடன் ஒரு வாரம்’ என்ற தலைப்பில் தினமணியில் தொடராக எழுதினார். அவர் இலங்கை சென்றிருந்தபோது, நடிகை பமீலா அங்கு இருந்தது குறித்த தகவலைச் சொல்கிறார். மிஸ் கே.என்.சிங் என்ற பெயரில் பமீலா, ஈழப் பகுதிக்குள் சென்றிருந்தாராம். கொழும்பு சென்ற அவரை விமானப் படை விமானத்தில் சிங்கள அதிகாரிகள் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பிவைத்தனர். இந்திய அழகு ராணிப் போட்டியில் வென்ற இந்த பஞ்சாபிப் பெண் பிரிட்டனில் குடியிருந்தவர். ஆயுதத் தரகர் என்று டெல்லி மீடியாக்களால் அடையாளப்படுத்தப்படும் கஸோகியுடன் நெருக்கமாக இருந்தவர். அவரைப்பற்றி கொழும்பு பத்திரிகைகள் அப்போது என்ன எழுதியது என்று கார்மேகம் சொல்கிறார்....
'பிரபாகரனை எப்படியும் தேடிப் பிடித்துத் தருவேன் என்று சந்திராசாமி, இந்திய அரசிடம் சத்தியம் செய்து கொடுத்திருக்கிறாராம். எந்த வழியைக் கையாண்டாவது அதனை செய்து முடிப்பதாக அவர் சபதம் ஏற்றிருக்கிறாராம். அந்த சபதத்தை நிறைவேற்றத்தான், அவர் பமீலாவை இலங்கைக்கு அனுப்பி இருக்கிறார் என்று கொழும்பு நாளேட்டில் செய்தி வந்தது. பமீலா இப்போதும் சந்திராசாமியின் மக்கள் தொடர்பாளர்களில் ஒருவராக இருப்பதாகத் தெரிகிறது. பிரபாகரனை சந்திக்க ஈழப் புலிகள் அனுமதிக்கவில்லை!’ என்று அன்று கொழும்புவில் பரவிய தகவல்களை எழுதுகிறார்.
ஜெயின் கமிஷன் வாக்குமூலங்கள் முதல் கொழும்பு பத்திரிகைகள் வரைக்கும் சந்திராசாமியை நோக்கியே நீளும் நிலையில், அவரை விசாரிக்காமல் ராஜீவ் வழக்கின் விசாரணை முடிந்துவிட்டதாக எப்படிச் சொல்ல முடியும்?
ப.திருமாவேலன்
**********************************************************************
மறைத்துப் பேசுகிறார் முன்னாள் சி.பி.ஐ. அதிகாரி!

பாய்கிறார் பழ.நெடுமாறன்
'ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மரண தண்​டனைக் கைதிகள் மூவருக்குநீதி வழங்க வேண்டும்’ என்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம், பேரணி, பொதுக் கூட்டங்கள் என வரிசையாக உரிமை முழக்கங்கள் ஓங்கி ஒலிக்கிறது. ஏற்கெனவே, ராஜீவ் கொலை வழக்கில், பூந்தமல்லி தடா நீதிமன்றம் 26 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்க... அதை எதிர்த்து, உச்ச நீதிமன்றம் வரை சென்று 19 பேரை உயிருடன் மீட்டது,  '26 தமிழர் உயிர் காப்புக் குழு.’ அக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக செயல்​பட்ட பழ.நெடுமாறனிடம் சில கேள்விகளை முன்​வைத்தோம்! 
''இந்த விவகாரத்தில் நடந்தது, நடப்பது என்ன?''
''இந்த வழக்கை தடா நீதிமன்றத்தில் விசாரித்த முறையே அடிப்படையில் தவ​றானது. மகாத்மா காந்தி, இந்திரா காந்தி கொலை வழக்குகளில்கூட, ரகசியமாக அல்ல, பகிரங்கமாகத்தான் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால், இந்த வழக்கின் விசாரணையோ மூடுமந்திரத்தைப்போல பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடத்தப்பட்டது. விசாரணையில் பத்திரிகையாளர், பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. 26 தமிழர்களுக்காக வாதாட முன்வந்த வழக்கறிஞர்களும் மிரட்டப்பட்டனர்.
தடா நீதிமன்றத்தில் நான்கு ஆண்டுகளாக வழக்கை விசாரித்த நீதிபதி சித்திக் திடீரென மாற்றப்பட்டு, நவநீதம் நியமிக்கப்பட்டார். நான்கு ஆண்டு​களில் பதிவு செய்யப்பட்ட சாட்சியங்கள், குறுக்கு விசாரணைகள் மற்றும் ஆவணங்கள் அனைத்தையும் ஓர் ஆண்டு காலத்திலேயே படித்தறிந்து, 26 பேருக்கு அவர் தூக்குத் தண்டனையை விதித்தார். இது மனித முயற்சிகளுக்கு அப்பாற்பட்டது.  உச்ச நீதிமன்​றத்தின் மூன்று நீதிபதிகள் இதை விசாரித்து, 19 பேரை விடுதலை செய்தனர். மூன்று நபர்களின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகவும் குறைக்கப்பட்டது.  சிறந்த வழக்​கறிஞர் என்.நடராஜன் மூலம் உச்ச நீதிமன்றத்தில்மேல் முறை​யீடு செய்தோம். அப்படிச் செய்​திருக்​காவிட்டால், 26 தமிழர்​களின் உயிர்களும் பறிக்கப்பட்டு இருந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
'ராஜீவ் கொலை வழக்கில், தடா சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டியது செல்லாது’ என உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துவிட்டது. ஆனால், அதே தடா சட்டத்தின் கீழ் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், நான்கு பேரின் மரண தண்டனை உறுதிசெய்யப்பட்டது முரண்பாடானது அல்லவா? உச்ச நீதிமன்றத்தால் நான்கு பேரின் மரண தண்டனை உறுதிசெய்யப்பட்ட பிறகு, தமிழக ஆளுநருக்கு மனு அனுப்பப்பட்டு, அது தள்ளுபடி செய்யப்பட்டது. உடனே, 'தமிழர் உயிர்காப்புக் குழு’வின் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுத் தாக்கல் செய்து, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பைப் பெற்றோம். 'தமிழக அமைச்சரவையின் ஆலோசனையின்படியே ஆளுநர் முடிவெடுக்க முடியுமே தவிர, தன்னிச்சையாக முடிவெடுக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை’ என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. எதிர்காலத்தில் இந்தியாவில் எந்த மாநிலத்தின் ஆளுநரோ அல்லது குடியரசுத் தலைவரோ, கருணை மனுக்கள் மீது தன்னிச்சையாக முடிவெடுப்பதை இதன் மூலம் தடுத்து நிறுத்தினோம். எனவே, நான்கு பேரின் கருணை மனுக்கள் மீது முடிவெடுக்கும் அதிகாரத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதிக்குப் பெற்றுத் தந்தோம். ஆனால், அதை வைத்து அவர் எதுவுமே செய்யவில்லை.
'ராஜீவ் கொலை வழக்கில் அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சுகள் உள்ளன’ என்று ஜெயின் கமிஷன் கூறியுள்ளது. அதைத் தொடர்ந்து, பல்வேறு உளவு நிறுவனங்களின் அதிகாரிகளை  உள்ளடக்கிய பல்நோக்கு கண்காணிப்புக் குழு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அந்த அமைப்பு இன்னும் தன் விசாரணையை முடித்து அரசுக்கு அறிக்கை அளிக்கவில்லை என்பது முக்கியமானது. இப்போது, (நளினியின் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுவிட்டது) மூன்று பேரின் மரண தண்டனை ஒருவேளை நிறைவேற்றப்படுமானால், அதன் பிறகு இந்தக் கண்காணிப்புக் குழு தரும் அறிக்கையில், வேறு சிலர்தான் உண்மைக் குற்றவாளிகள் என சுட்டிக்​காட்டப்படுவார்கள். அப்போது, இழந்துபோன உயிர்களை மீட்க முடியுமா? அப்படி ஒரு நிலையை மனிதாபிமானம் உள்ள யாராலும் நினைத்துப் பார்க்க முடியுமா? எனவே, பல்நோக்குக் கண்காணிப்புக் குழுவின் அறிக்கை வெளியிடப்படும் வரை மூன்று தமிழர்களின் மரண தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும்.''
''நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள். சி.பி.ஐ. ரகோத்தமனோ, கண்காணிப்புக் குழு அமைக்கப்​பட்டதற்கு வேறு காரணம் என்கிறாரே?''
''எதற்காக அந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டது? 'இந்தக் கொலையில் வேறு பலருக்கும் தொடர்பு உண்டு; அவர்களைப்பற்றிய உண்மைகளைக் கண்டுபிடிக்க வேண்டும்’ என்பதற்காகத்தானே இந்தக் கண்காணிப்புக் குழுவை அமைத்தார்கள். அதை மறைத்தும் மழுப்பியும் பேசுகிறார் இந்த அதிகாரி!''
''மூவரின் உயிரைக் காக்க, சட்டரீதியான முயற்சிகள் என்ன? உங்கள் அடுத்தகட்டத் திட்டம்எது?'’
''மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். சட்ட முயற்சிகள்பற்றி இப்போது எதுவும் சொல்வதற்கு இல்லை. இந்த முயற்சிகள் ஒரு பக்கம் இருக்க... மரண தண்டனையை முற்றாக ஒழிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். அதற்கான மக்கள் இயக்கத்தை வலுப்படுத்துவோம்!''
இரா.தமிழ்க்கனல்
**********************************************************************
''சிவனேன்னு உட்கார்ந்து இருந்தவனைச் சீண்டிட்டாங்க!''

கலகல துரைமுருகன்
துரைமுருகன் எப்போதும் நியூஸ் முருகன். அவர் பேசினால்தான் இதுவரை ஜாலியாக இருந்தது. இப்போது பேசாமலேயே அது நடந்துவிட்டது. சட்டசபைப் புறக்கணிப்புமுடிவைக் கைவிட்டு, கடந்த 16-ம் தேதியன்று தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் சட்டமன்றத்துக்குச் சென்றார்கள். இதை ஆளும் கட்சி உன்னிப்பாக கவனித்தது. ஆனால், அவையின் கண்ணியத்தை மீறும் வகையில், துரைமுருகன் அங்க அசைவுகளைக் காட்டுவதாக ஆளும் கட்சித் தரப்பில் புகார் சொல்லப்பட, அதற்கு விளக்கம் அளிக்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை என தி.மு.க-வினர் டென்ஷனாகி,அமளி​துமளியுடன் வெளிநடப்பு செய்தார்கள்.அன்று மாலையே கருணாநிதி தலைமையில் அறிவா​லயத்தில் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தைக் கூட்டி, 'பட்ஜெட் தொடரைப் புறக்கணிப்பது’ என்று இரண்டாவது முறையாக அறிவித்தார்கள். என்னதான் நடந்தது என்பதை அறிய  துரைமுருகனைச் சந்தித்தோம். 
''சட்டப்பேரவையில் என்னதான் நடந்தது?''
''எங்கள் கட்சியினருக்கு அவையில் ஒரே இடத்தில் இருக்கைகள் ஒதுக்கப்படாத பிரச்னை தீர்க்கப்​படாதபோதும், கடந்த திங்கள்கிழமையில் இருந்து அவைக்குச் செல்வது என்று முடிவெடுத்தோம். 'அவையில் என்ன பிரச்னையாக இருந்தா லும், அமைதியாக இருக்கவேண்டும்’ என தலைவர் கலைஞர் சொல்லி அனுப்பினார். கேள்வி நேரத்​தில் முந்தைய ஆட்சியைப்​பற்றி குறை சொல்லக்கூடாது எனும் மரபை மீறி, ஆளும் கட்சி உறுப்பினர்களும் அமைச்சரும் எங்கள் ஆட்சியைக் குற்றம் சாட்டினார் கள். நாங்களும் பொறுத்துக்கொண்டு இருந்தோம். ஒரு கட்டத்தில் எங்கள் கட்சியின் கொறடா சக்கரபாணி எழுந்து, 'மரபை மீறலாமா?’ எனக் கேட் டார். அவ்வளவுதான், ஆளும் கட்சியினர் மொத்தப் பேரும் எழுந்து, சொல்லக் கூடாத வார்த்தைகளைப் பேசினார்கள். நான் சுவாமி  விவேகானந்தர் போஸில் கைகளைக் கட்டிக்கொண்டு அமைதியாக உட்கார்ந்து இருந்தேன். திடீரென அமைச்சர் முனுசாமி எழுந்து, 'பாடி லாங்வேஜ்’ மூலம் நான் கேலி செய்வதாகச் சொன்னார். நான் திடுக்கிட்டுப் போனேன். கைகளை இந்தப் பக்கமோ அந்தப் பக்கமோ, மேலேயோ கீழேயோ தூக்காமல், ரெண்டு கைகளையும் கட்டிக்கிட்டு, சிவனேனு உட்கார்ந்து இருந்தவனை சீண்டினாங்க. சபாநாயகர் எல்லாத்தையும் பார்த்துட்டுத்தான் இருந்தார். முறைப்படி நான் அவர்கிட்ட, 'நீதிபதியின் ஆசனத்தில் இருக்கும் நீங்கள் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்க...’ என்று கேட்டேன். அவர் எதுவும் சொல்லாமல் சரத்குமாரை பேசச் சொன்னார். நான் எப்படி உட்கார்ந்திருப்பேன் என்பதைப் பார்க்கவே முடியாத இடத்தில் இருந்த சரத்குமாரை இதுபற்றி பேசவிட்டார் சபாநாயகர்.
இதற்கிடையில், அவைக்கு வந்திருந்த முதல்வர் ஜெயலலிதா, செயலாளர்கிட்ட ஏதோ பேசினார். உடனே சம்பந்தமே இல்லாமல், வளர்மதியைக் கூப்பிட்டுப் பேசச் சொன்னார்கள். அந்தம்மா, நடக்காத ஒன்றைப்பற்றி சொன்னார். அப்போது அனுமதி கேட்ட ஸ்டாலினுக்குப் பேச வாய்ப்பு தரப்படவில்லை. வார்த்தைகள் தடித்து, கைகலப்பில் முடிந்துவிடுமோ என பயம் ஏற்பட்டதால், நாங்கள் வெளிநடப்பு செய்தோம். ஆளும் கட்சி சொல்வதைப்போல, யாரையும் புண்படுத்தும்படி நான் அபிநயம் செய்திருந்தால், நான் பதவி விலகத் தயார். அப்படி நிரூபிக்கத் தவறினால் என்னைக் குற்றம் சாட்டிய அமைச்சர் முனுசாமி பதவி விலகத் தயாரா? என்று சவால் விட்டேன். இன்று வரை அவர்கள் தரப்பில் பதில் இல்லை! வாக்குவாதத்தின் இடையில், எந்த அமைச்சர் என்ன பேசினாரோ... தெரியவில்லை. ஒருவர், 'நாங்களும் திராவிடப் பாரம்பரியம்தான். எங்களுக்கும் இப்படி செய்யத் தெரியும்’ என்று ஒரு குரல் ஆளும்தரப்பில் இருந்து வந்தது. இதை எல்லாம் பார்த்தால், சிரிப்புதான் வருகிறது.''
''எட்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினர் நீங்கள். இப்போது சட்டப்பேரவை எப்படி நடக்கிறது?''
''ஜெயலலிதா ஏற்கெனவே முதல்வராக இருந்த​போதும், நான் எதிர்க் கட்சித் துணைத் தலைவராக இருந்திருக்கிறேன். அப்போதெல்லாம், ஒருவரை ஒருவர் பார்த்துப் பேசிக்கொள்வது, வணக்கம் செலுத்துவது, சிரிப்பது, ஜோக் அடிப்பது என அவையில் கலகலப்புக்குப் பஞ்சம் இருக்காது. அது எதுவுமே இப்போது இல்லை!
அவையை எதிர்க் கட்சி தொடர்ந்து புறக்கணிக்கிறது என்றால், முதல்வரோ அவைத் தலைவரோ அந்தக் கட்சியை அவைக்குள் வரவழைப்பது ஜனநாயக மரபு. எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது இப்படித்தான் ஒரு முறை அவையைப் புறக்கணித்தோம். உடனே, எம்.ஜி.ஆர்., அப்போதைய அமைச்சர் ராஜாராமை கலைஞரிடம் அனுப்பி பேசச் செய்தார். ஆனாலும் கலைஞர் புறக்கணிப்பில் உறுதியாக இருந்தார். தகவல் அறிந்த எம்.ஜி.ஆரே, கலைஞரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, 'நடந்தது எதுவாக இருந்தாலும், அதை மறந்துவிடுங்கள். நீங்கள் சட்டமன்றத்துக்கு புறப்பட்டு வருகிறீர்களா, இல்லை நான் அங்கு வரட்டுமா?’ என்றுகேட்டார். அப்போது கலைஞர், அரசினர் தோட்​டத்தில் இருந்த தி.மு.க. அலுவலகத்தில் உட்கார்ந்திருந்தார். முதல்வரே அழைத்துக் கேட்டதும் கலைஞரும் புறக்கணிப்பு முடிவைக் கைவிட்டார். கடந்த ஆட்சியின்போது, புதிய தலைமைச் செயலகத்தில் நடந்த சட்டமன்றக் கூட்டத்தில், அ.தி.மு.க-வினரும் இப்படி புறக்கணிப்பு செய்து, அவர்களின் அறையில் உட்கார்ந்துகொண்டார்கள். உடனே ஸ்டாலினை அனுப்பி, அவர்களை ஆறுதல்படுத்தி அவைக்கு அழைத்து வருமாறு கலைஞர் சொன்னார். ஓ.பன்னீர்செல்வமும் ஸ்டாலின் வந்து அழைத்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்ததுடன், அ.தி.மு.க-வினர் அனைவரும் மறுநாள் அவைக்கு வந்தார்கள். பல முறை இப்படி அவர்கள் வெளிநடப்பு செய்தபோது, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் வேண்டுகோள் விடுத்து, அவர்கள், அவை நடவடிக்கைகளில் பங்கேற்றும் உள்ளனர். ஆனால், இப்போதோ நாங்கள் இரண்டு முறை அவையைப் புறக்கணித்தபோதும், அதுபோல வேண்டுகோள் விடுத்ததாகத் தெரியவில்லை.  யாரும் கேள்வி கேட்கக் கூடாது, எதிர்த்துப் பேசக் கூடாது; நினைத்தபடி அவையை நடத்த வேண்டும் என்ற மனோநிலைதான் தெரிகிறது. இது மாறுமா எனத் தெரியவில்லை!''.
இரா. தமிழ்க்கனல்
படம்: பொன்.காசிராஜன்
*******************************************************************************
''எல்லாரும் ஒண்ணா நிக்கிறோம்... உன்னை மட்டும் காணலையே?''

வாய்விட்டு அழுத சசிகலா
வெற்றி உற்சாகத்தில் இருந்த போயஸ் கார்டனை சோகத்தில் உறையவைத்து விட்டது, சசிகலாவின் சகோதரி வனிதாமணியின் திடீர் மறைவு! 
திருச்சி கருமண்டபம் பகுதியில் வசித்து வந்த வனிதாவுக்கு, கடந்த 16-ம் தேதி அதிகாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லும் முன்னரே அவர் உயிர் பிரிந்துவிட்டது. தகவல் கார்டனுக்கு சொல்லப்பட, அவசரகதியில் கிளம்பி வந்தார் சசிகலா. தினகரன், பாஸ்கரன், சுதாகரன் ஆகியோரும் கண்ணீரோடு குழுமினர்.
மன்னார்குடியில் உள்ள சொந்த வீட்டுக்கு வனிதாவின் உடல் கொண்டுவரப்பட்டது. 'எந்த நேரத்திலும் முதல்வர் மன்னார்குடிக்கு வரலாம்’ என போலீஸுக்குத் தகவல் சொல்லப்பட, மன்னார்குடியே பாதுகாப்பு வளையத்துக்குள் வந்தது. ஆனால், சட்டமன்றக் கூட்டத் தொடர் நடப்பதால், முதல்வர் வரவில்லை. கட்சி எம்.எல்.ஏ-வான விஜயபாஸ்கர் உள்ளிட்ட சிலர் மட்டுமே வந்திருந்தார்கள். ஓ.எஸ்.மணியன் எம்.பி. மட்டும் இறுதி வரை அங்கேயே நின்று சம்பிரதாய சடங்குகளைச் செய்தார்.
17-ம் தேதி காலை மன்னார்குடி அருகில் உள்ள சுடுகாட்டில் மூத்த மகன் தினகரன் எரியூட்ட, வனிதாமணியின் உடல் தகனம் செய்யப்பட்டது.
மன்னார்குடி உறவினர்கள் சிலர், ''குடும்பத்தில் மூன்றாவது குழந்தையாகப் பிறந்தவர் வனிதாமணி. இவரது கணவர் விவேகானந்தன் ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குநராக இருந்து ஓய்வு பெற்றவர். தினகரன், பாஸ்கரன், சுதாகரன் மற்றும் சீதாதேவி என நான்கு வாரிசுகள். சுதாகரனை வளர்ப்பு மகனாகத் தத்தெடுத்துக்கொள்கிற அளவுக்கு வனிதா மீது ஜெயலலிதாவுக்கும் ஏகப் பிரியம். ஆனால், அந்த ஆடம்பரத் திருமணத்தால் ஆட்சி மாற்றம் ஏற்படுகிற அளவுக்கு சிக்கல் உருவானதும், அதன் பின்னர் அது சொத்து ரீதியான சிக்கலில் வெடித்தது. அதனால், சுதாகரனுக்கு எதிராகவே திரும்பினார் ஜெயலலிதா. இன்று வரை பெங்களூரு நீதிமன்றத்தில் நடக்கும் சொத்துக் குவிப்பு வழக்கில் சுதாகரனும் உள்ளார். இருந்தும், அவரோடு கார்டன் தரப்பு நெருங்கவே இல்லை. இதற்கிடையில், மகாதேவன், வெங்கடேஷ் என உறவுகளின் கைகள் வரிசையாக ஓங்கி, பின்னர் வழக்கம்போல வீழ்ந்தன. ஒவ்வொருவருடைய சரிவுக்கும் உறவுகளே காரணம் என சந்தேகம் கிளம்பியதால், அவர்களுக்கு இடையே கசப்பான சூழல் நிலவியது. ஆனால், வனிதாவின் மரணம்பற்றிக் கேள்விப்பட்டதும், திவாகரன், மகாதேவன், வெங்கடேஷ் என மொத்த உறவுகளும் ஒருசேர ஓடி வந்துவிட்டனர். வனிதாவின் உடல் அருகிலேயே அமர்ந்து அழுதபடி இருந்த சசிகலா, 'எல்லாரும் ஒண்ணா நிக்கிறோம்... உன்னை மட்டும் காணலையே?’ எனக் கதறி அழுதார். வனிதாவின் உடலைத் தகனம் செய்துவிட்டு வந்த உறவுகள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாகப் பேசிக்கொண்டார்கள். தாங்காத துக்கத்திலும் சசிகலாவுக்குக் கிடைத்த ஒரே ஆறுதல், உறவுகளின் ஒற்றுமைதான்!'' என்கிறார்கள்
இன்னும் சிலரோ, ''ஜெயலலிதாவின் நிழலாக சசிகலா விளங்கினாலும், அவருடைய சகோதரி வனிதாமணி, பெரிய அளவில் கார்டன் விவகாரங் களில் தலையிட மாட்டார். சசிகலா எத்தனையோ முறை வற்புறுத்தி அழைத்தபோதும், சென்னைக்கு வர வனிதாவுக்கு சம்மதம் இல்லை. மாறாக, வனிதாவின் மகன்கள் டி.டி.வி.தினகரன், பாஸ்கரன், சுதாகரன் ஆகியோர் கார்டனின் செல்வாக்குப் புள்ளிகளாக சுழற்சி முறையில் வலம் வந்தார்கள். ஒரு கட்டத்தில், குடும்ப உறவுகள் எல்லாம் நெல்லிக்கனி மூட்டையாகச் சிதற, அவர்களை ஒன்று சேர்க்க வனிதா பல முயற்சிகளை மேற்கொண்டார். அந்த முயற்சி சமீபத்தில்தான் வெற்றியை நோக்கி நகர்ந்தது. சசிகலாவின் உறவினர்கள் யாருமே இப்போது கட்சிப் பதவியில் இல்லை. இளைஞர் பாசறை செயலாளராக இருந்த வெங்கடேஷ் மீண்டும் பொறுப்புக்கு வரும் சூழலும் உருவானது. இதற்கிடையில், இது வரை உறவு வட்டாரத்தில் வெளியே அறிமுகம் ஆகாத யாரையாவது கார்டனுக்குள் கொண்டு வரலாம் என்றும் முடிவு எடுக்கப்பட்டது. அதில், வெளிநாட்டில் படிப்பவரான இளவரசியின் மகன் பெயரும் அடிபட்டது. ஆனால், அதெல்லாம் நடப்பதற்குள்ளேயே வனிதா கண் மூடிவிட்டார். அஞ்சலி செலுத்த வர முடியாவிட்டாலும், சீக்கிரமே மன்னார்குடிக்கு நேரில் வந்து வனிதாவின் குடும்பத்துக்கு ஜெயலலிதா ஆறுதல் சொல்வார். அப்போது உறவுகளின் எதிர்பார்ப்பையும் நிறைவேற்றிவைப்பார்!'' என்கிறார்கள் உறுதியாக.
சி.சுரேஷ்
படங்கள்: 'ப்ரீத்தி' கார்த்திக்,
கே.குணசீலன்
*******************************************************************************
போலீஸ் 'என்கவுன்ட்டர்'... நீதித் துறையின் 'மரண தண்டனை'

வெடிக்கும் வரவர ராவ்
ரு குற்றவாளியைத் திருத்தி, அவரை நல்ல மனிதராக மாற்ற முனைவதுதான் சிறைச்சாலைகளின் முதல் கடமை. ஆனால், இன்றும் அமல்படுத்தப்படும் தூக்கு தண்டனையோ, உலக நாகரிகத்தில் மிகவும் கொடுமையான ஒரு செயலாகவே இருக்கிறது. 'கொலை செய்தவனைக் காத்திருந்து கொலை செய்வதுதான், ஓர் அரசாங்கத்தின் தீர்ப்பா?’ என இந்த தண்டனைக்கு எதிராகப் பல்வேறு மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர் ஆந்திர மாநிலத்தின் வரவர ராவ். கவிஞரும் சிவப்புச் சிந்தனையாளருமான இவர், மரண தண்டனை குறித்தான தனது பார்வை​களை நம்மிடம் முன்வைக்கிறார்! 
''ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் மூன்று தமிழர்களுக்கு இப்போது அறிவிக்கப்பட்டு இருக்கிற மரண தண்டனை, இன அடிப்படையில் ஆனது என்றால், மத்தியில் அஃப்சல் குருவுக்கு வழங்கப்பட்டு இருக்கிற மரண தண்டனை மத அடிப்படையில் ஆனது. இன்றைக்கு இருக்கும் சட்டங்கள் எல்லாம் செல்வந்தர்களுக்கு சாதகமானதாகவே இருக்கின்றன. பணம் படைத்தவனுக்குத்தான் நீதி; கை ஏந்துபவனோ நிர்க்கதியில்தான். சமூகத்தின் கீழ்த் தட்டில் இருப்பவனைக் காக்க வேண்டிய சட்டமே, அவனை அழித்து ஒழிக்கும் முயற்சியில் இறங்குகிறது. இன்றைக்கு மரண தண்டனைக் கைதிகளைப் பாருங்கள்... அவர்கள் நசுக்கப்பட்ட இனத்தைச் சார்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள். மாறாக, ஒரு பணக்காரரை உங்களால் சுட்டிக் காட்ட முடியுமா? அல்லது இதுவரை எந்த ஒரு பணக்காரராவது தூக்கு மேடையில் ஏறி இருப்பாரா?
நமது சட்டங்கள் ஒரு வகையில் பண்ணையார் தத்துவத்தையே நியாயப்படுத்துகின்றன. ஒரு சிவில் வழக்கில், தனிநபர் ஒருவர் இன்னொரு தனிநபருடன் வாதாடலாம். ஆனால், கிரிமினல் வழக்குகளிலோ தனிநபர் ஒருவருக்கு எதிராக, அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதாடுவார். அதாவது, ஒவ்வொரு குற்ற வழக்கும் போலீஸாரால் பதிவு செய்யப்பட்டு, அரசு தனக்கு எதிரானவரை எதிர்க்க வழக்கறிஞர் ஒருவரை நியமிக்கிறது. வழக்கின் ஒவ்வொரு நகர்வையும் போலீஸார்தான் தீர்மானிக்கிறார்கள். வாக்குமூலங்கள் பெறுவதிலேயே எவ்வளவு வன்முறைகளைப் பிரயோகிக்கிறார்கள் என்பது நாம் அறிந்ததுதானே?
'அரிதிலும் அரிதான’ குற்றங்களில்தான் மரண தண்டனை வழங்கப்படுகிறது என்கிறார்கள். போலீஸாரால் என்கவுன்ட்டர் என்ற பெயரில் பலர் சாகடிக்கப்படுகிறார்களே... அதுவும்கூட 'அரிதிலும் அரிதானது’தானா? ஆக, சட்டத்துக்குப் புறம்பாக போலீஸார் கொலை செய்தால், அது என்கவுன்ட்டர்கள். அதையே நியாயப்படி செய்ய வேண்டும் என்றால், அதற்குப் பெயர் மரண தண்டனை. இதுதானா உங்கள் நீதி?
பண்டைய கிரேக்க, எகிப்திய நாடுகளில் இருந்த அடிமைகள் அந்த நாட்டின் குடிமகன்​களாக அங்கீகரிக்கப்படவில்லை. அவர்களின் உரிமையாளர்கள் மட்டுமே குடிகளாக அங்கீகரிக்கப்பட்டார்கள். உரிமையாளர்களுக்கு மட்டும்தான் சட்டம், நியாயம், தீர்ப்பு, நீதி எல்லாம்... அடிமைகளுக்கு எப்போதும் மரணம் ஒன்றுதான். தண்டனையாகவும், தீர்ப்பாகவும், நியாயமாகவும், நீதியாகவும் அவர்களுக்கே இருந்து வந்திருக்கிறது. இன்றைக்கு நிராகரிக்கப்பட்டு இருக்கிற கருணை மனுக்களைக் குறித்து நாம் எண்ணிப் பார்க்கையில், ஒரு வகையில் நாம் எல்லோரும் இந்த நாட்டின் அடிமைகள்தானோ? சாமான்யன் செய்த குற்றம் ஒன்றுக்கு மரண தண்டனை வழங்குவதன் மூலம் சட்டம் இன்னொரு குற்றம் செய்வது, எப்போதும் சமமாகாது; நீதியும் ஆகாது!'' என்று வேதனையோடும் கோபத்துடன் வெடித்தார் வர வர ராவ்.
'அரசாங்கம், கொலை செய்யக் கூடாது என்று சொல்கிறது. எப்படித் தெரியுமா? கொலை செய் வதன் மூலமாக!’ என்று தன் 'ஏழை படும் பாடு’ நாவலில் எழுதி இருக்கிறார் விக்டர் ஹியூகோ.
இந்திய அரசு... இப்போதாவது யோசிக்​கட்டும்!
ந.வினோத்குமார் 
வி.ஆர்.கிருஷ்ண ஐயர் முதல் நோம் சாம்ஸ்கி வரை!
நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ண ஐயர் சில நாட்களுக்கு முன்பு, முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் ஒன்று எழுதி இருக்கிறார். அதன் தமிழ் வடிவம்... ''உச்ச நீதிமன்றம் மூன்று இளைஞர்களை தூக்கிலிடப்போவதை அறிந்து கண்ணீர் விடுகிறேன். அநியாயமாக கொலை செய்யப்பட்ட ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா காந்தி உட்பட பலரும் இந்த மூவரின் தண்டனையைக் குறைக்க எவ்வளவோ செய்தார்கள். நானும்கூட இப்படி மன்றாடினேன். ஆனால், அனைத்தும் புறக்கணிப்பட்டன. கருணை உள்ளம் கொண்ட நீங்களே... அந்த மூவரைக் காப்பாற்றினால் இறைவன் உங்களுக்கு அருள் புரிவார். மனிதத்தின் பெயராலும், ஆழ்ந்த வருத்தத்தோடும் இவர்களின் உயிரைக் கருத்தில்கொண்டு தண்டனைக் குறைப்பு நடவடிக்கையை நீங்கள் மேற்கொள்ள வேண்டுகிறேன். இந்த மனிதநேய செயலுக்கு உலகம் முழுக்க உள்ள தமிழர்கள் உங்களுக்கு நன்றிக்கடன்பட்டவர்களாக இருப்பார்கள்!'' என்று தன் வேண்டுகோளைப் பதிவு செய்திருக்கிறார்.
வி.ஆர்.கிருஷ்ண ஐயரைத் தொடர்ந்து எழுத்தாளர் மகாஸ்வேதா தேவி போன்றோரும் மரண தண்டனைக்கு எதிராக அணி திரண்டு நிற்கிறார்கள். அந்த வரிசையில் அறிவுலக ஆளுமைகளில் முக்கியமானவரான நோம் சாம்ஸ்கி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதித்த மரண தண்டனைக்கு எதிரான மனித உரிமை ஆர்வலர்களின் அறிக்கையில் கையெழு த்திட்டு மரண தண்டனைக்கு எதிரான பணிகளுக்கு தன் ஆதரவை அளித்திருக்கிறார்!
*******************************************************************************

Cricket

 
இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010