********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

சென்ற வார செய்திகள் (7 ஜனவரி 2012)

Friday, January 6, 2012

மிஸ்டர் கழுகு: பறிபோகும் மிடாஸ்?

''கிரேக்க இதிகாசங்களின் புகழ் பெற்ற மன்னன் பெயர் மிடாஸ். அவன் தொட்டது எல்லாம் துலங்கும் என்பார்கள். அவன் எதைத் தொட்டாலும் தங்கமாக மாறும். தனது மகளைத் தொடுவான். அவளும் தங்கமாக மாறிவிடுவாள்...'' என்று கழுகார் சொன்னதை இடைமறிக்காமல் கேட்டோம், வரலாற்றுப் பாடம் எடுப்பதன் பின்னணியில் நிகழ்காலப் பாடம் ஏதாவது இருக்கும் என்று தெரியாதா?
கழுகார் விஷயத்துக்கு வந்தார். ''அப்படிப் புதைய லாகக் கொட்டிக்கொண்டு இருக்க வேண்டும் என்ற நினைப்பில்தான் 'கோல்டன் மிடாஸ்’ என்று அந்த மதுபான ஆலைக்குப் பெயரையும் வைத்தார்கள்!'' கழுகார் நிகழ்காலத்துக்கு வந்ததும் நிமிர்ந்து உட்கார்ந்தோம்!
''முந்தைய அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் படப்பை பகுதியில் அமைக்கப்பட்ட மதுபான ஆலைதான் மிடாஸ். அதன் நிர்வாகப் பொறுப்பு வெளிப் படையாகவே சசிகலா வட்டாரத்துக்குச் சொந்த மானதாகஅமைக்கப்பட்டது. இந்த ஆலையில் தயாராகும் மதுபானங்களைத்தான் மதுக்கடைகளில் விற்க வேண்டும் என்பது ஊர் அறிந்த ரகசியம். அதுவரை தனியார் வசம் இருந்த கடைகளின் சில்லறை விற்பனையையும் அரசாங்கமே எடுத்தது. 'டாஸ்மாக்’ கடைகளாக அவை பச்சை வண்ணத்தில் மின்ன ஆரம்பித்தன. தமிழகத்தில் புதிதாக மதுபான ஆலைக்கு அனுமதி தருவதில் இருந்த ஏராளமான விதிமுறைகளைத் தளர்த்தி, மிடாஸுக்குப் பாதை திறந்தார்கள். 'மிடாஸ் சரக்குகள்தான் அதிகம் விற்பனை ஆகின்றன’ என்கிற அளவுக்கு புள்ளி விவரங்கள் திரட்டப்பட்டன. அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் வளமும் நலமுமாக அந்த நிறுவனம் வளர்ந்து செழித்தது. ஜெயலலிதா போய் கருணாநிதி வந்தார். 'அரசாங்கமே சாராயம் விற்பதா?’ என்று கேட்டவர், தனது ஆட்சியிலும் அதையே தொடர்ந்தார். அதைவிட ஆச்சர்யமாக, மிடாஸ் கம்பெனியில் இருந்து 'ஓரவஞ்சனை’ இல்லாமல் கருணாநிதியும் சரக்குகள் வாங்கினார். எனவே, மிடாஸ் நிறுவனத்தின் வருமானத்துக்கு எந்தத் தடங்கலும் இல்லை. ஆட்சி மாறினாலும் வரத்து குறையவில்லை. ஆனால், அதற்கு இப்போது சிக்கல் வரப்போவதாகச் சொல்கிறார்கள்.''
''ஆபரேஷன் சசிகலா ப்ராஜெக்ட்டின் அடுத்த ஆக்ஷன்  இதுதானா?''
''சசிகலா குடும்பத்துக்குப் பணம் வரும் பாதையை அடைக்கச் சிலர் திட்டம் இடுகிறார்கள். சொத்துக்கள், இடம், பணம் என நிறைய வைத்து இருந்தாலும் தொடர்ந்து பணம் கொட்டும் இடமாக இருப்பது இந்த மிடாஸ் ஆலைதானாம். அதை முடக்கிவிட்டால், அவர்களின் அடுத்த கட்ட நகர்வுகளை முழுமையாக முடக்கி விடலாம் என்பது திட்டமாம்!:''
''அது சாத்தியமா?''
''சாத்தியமா, இல்லையா என்பதற்கான பேச்சுக் கள் தான் இப்போது அதிகாரிகள் மட்டத்தில் மெள்ளத் துளிர்த்து இருக்கிறது. 'மிடாஸ் ஆலையை அரசாங்கமே எடுத்துக்கொண்டால் என்ன?’ என்ற ஒற்றைக் கேள்வியில்தான் இந்த விவாதம் தொடங்கியது. 'தமிழ்நாட்டில் இருக்கும் மதுபான ஆலைகள் அனைத்துமே தனியாருக்குச் சொந்த மானவை. அரசாங்கம் இதுவரை அந்தக் காரியத்தைச் செய்யவில்லை. இப்போது மிடாஸை எடுத்தால் அதற்கென ஒரு கார்ப்பரேஷனை உருவாக்கித்தான் நடத்த வேண்டும். அல்லது தனி அதிகாரியை நியமித்தும் நடத்தலாம்’ என்கிறார்கள். அல்லது மிடாஸ் நிறுவனத்தைக் கட்டாயப்படுத்தி வேறு ஒரு நிறுவனத்திடம்  விற்க வைக்கவும் முயற்சிப்பார்கள் என்கிறார்கள். மொத்தத்தில் சசிகலா உறவு வட்டாரத்தில் அது இயங்கக் கூடாது என்பது திட்டமாம். இது சசிகலாவின் சொந்தங்களுக்கு கடுமையான அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. 'ஏற்கெனவே பல இடங்களில் ரெய்டு என்ற பெயரால் அத்துமீறி நடந்துகொண்டார்கள். இப்போது நம்முடைய வாழ்க்கையையே அழிக்கப் பார்க்கிறார்கள்’ என்று புலம்பல்கள் கேட்க ஆரம்பித்து உள்ளன.''
''அதிகாரிகள் தரப்பு ரியாக்ஷன் என்னவாம்?’
''மிடாஸ் சாராய ஆலையை முடக்கச் சொல்லி முதலில் அதிகாரிகளிடம் கறார் காட்டப்பட்டதாம். ஆனால், டாஸ்மாக் கடைகளுக்கு மிடாஸ் சரக்குகள் ஒப்பந்த அடிப்படையில் வாங்கப்படுவதால், அதற்கான காலஅவகாசம் அதிகமாகும் என சொல்லப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து வழக்கறிஞர்களோடு ஆலோசித்த மேலிடம்,
'மிடாஸ் நிறுவனத்தை அரசு நிறுவனமாக ஏற்று நடத்தும் நடைமுறைகளைச் செய்யலாம்’ என்று  சொன்னதாம்.  'இதனால் அரசாங்கத்துக்குக் கெட்ட பெயர் ஏற்படுமே?’ எனச் சிலர் தயக்கமாகச் சொல்ல, 'அந்த உறவுகளுக்குப் பணம் காய்க்கும் மரமாக இருக்கும் மிடாஸ் நிறுவனத்தைப் பறித்தால்தான், அவர்கள் வேறு எந்தக் குதர்க்க வேலைகளிலும் ஈடுபடாமல் இருப்பார்கள்!’ எனப் பதில் சொல்லப்பட்டதாம். எனவே, அடுத்த கட்ட அதிரடிகள் இன்னும் சில நாட்களில் இருக்கலாம் என்கிறார்கள். கட்சியைவிட்டு நீக்கப்பட்ட மோகன் -தான் அதன் அத்தனை நிர்வாகங்களையும் பார்த்தார். கடந்த ஒரு வாரமாக அவரும் அந்தக் கம்பெனிப் பக்கமாக எட்டிப்பார்க்கவில்லையாம். நிர்வாக ரீதியான விஷயங்களை கார்த்திகேயன் என்பவர் பார்க்கிறாராம்.!''
''பார்ப்போம்!''
''மன்னார்குடி உறவு வட்டாரங்களிலேயே மிகுந்த நடுக்கத்தில் கிடப்பவர் கோவை ராவணன்தான். ஜாதக சம்பிரதாயங்களில் ரொம்பவே ஆர்வமாக இருந்த ராவணன், சில வாரங்களுக்கு முன்பு ஒரு சாமியாரை சந்தித்து இருக்கிறார். 'நாடாளும் யோகம் உமக்கு’ என வாக்குச் சொன்ன சாமியார் ஒரு மோதிரத்தையும் அவருக்கு அணிவித்து, 'பெரிய பதவியில் அமர்ந்த பின்னர் என்னை வந்து பார்த்து நன்றி சொல்’ என்றாராம். மோதிரத்தை மாட்டிக்கொண்டு வந்த அடுத்த இரண்டாவது நாளிலேயே அம்மாவின் அதிரடிகள் பாய... ராவணன் நொந்து போனாராம். 'இதனாலதான் எல்லா சிக்கலும்’ எனச் சொல்லி, சாமியார் அணிவித்த மோதிரத்தைக் கழற்றி வீசிய ராவணன் இப்போது நாட் ரீச் ஏரியாவில்!''
''இவர்கள் செய்த தவறுகளுக்கு அந்தச் சாமியார் என்ன செய்வார் பாவம்?''
''உறவு வட்டாரத்தில் ராவணனை 'ராணா’ எனச் சுருக்கி மரியாதையாக அழைப்பார்களாம். 'ராணான்னா அது ரஜினி இல்லண்ணே... நீங்க தாண்ணே’ என உசுப்பேற்றியே ராவணனை ஆனந்தத்தில் மிதக்க வைத்தனர் அவருடைய அடிவருடிகள். 'அண்ணன் ஆரம்பத்தில் முற்போக்குக் கொள்கை கொண்டவராகத்தான் இருந்தார். ஆனால், கார்டன் பக்கம் வந்ததும்தான் அவருக்கும் ஜோசியம், ஜாதகம்கிற வியாதி எல்லாம் தொத்திக்கிச்சு. அண்ணன் அமைதியா இருந்தாலும் அவருடைய உதவியாளரான மோகன் போட்ட ஆட்டத்துக்கு அளவே இல்லை. அண்ணன் பேரைச் சொல்லி பல அமைச்சர்களுக்கும் போன் போட்டு, 'வா... போ’ன்னு அவர் பண்ணிய அட்டகாசங்கள் அதிரடி ரகம். ஆனா, இப்பவும் அண்ணன் அந்த மோகனின் தவறுகளை உணராமல், அந்தச் சாமியாரையே திட்டிக்கிட்டு இருக்கார்!’ என்கிறார்கள் கோவை புள்ளிகள் சிலர். இதற்கிடையில், 'இப்பவும் சொல்றேன்... அவர் பேருக்கு நாடாளும் யோகம் இருக்கு’ என அந்த சாமியார் அள்ளிவிட, கோபத்தில் நையப்புடைத்திருக்கிறது உறவுத் தரப்பு.''
''ஏற்கெனவே மன்னார்குடி சாமியார் ஒருவர் அடி வாங்கினார். இப்போது இவரா?''
''போயஸ் கார்டனிலும் அமைச்சர்களின் பாதுகாவலர்களிலும் பல அதிரடி மாற்றங்களை ஜெ. செய்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். அமைச்சரவை மாற்றம் சில காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது என்பதையும் உமக்குச் சொல்லி இருந்தேன். ஆனால், மந்திரிகள்தான் தூக்கம் இல்லாமல் தவிக்கிறார்கள்.''
''இருக்கத்தானே செய்யும்!''
''நீக்கப்பட்ட பாதுகாவலர்களுக்குப் பதிலாக புதியவர்கள் வந்துவிட்டார்களாம். இவர்களில் பலரும் ஆஃப் தி ரெக்கார்டாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்களாம். அமைச்சர் பொறுப்பில் இருப்பவர்கள் தூங்கும் நேரத்தைத் தவிர்த்து இதர நேரங்களில் அவர்களுக்கு அருகிலேயே அந்த ஆட்கள் இருக்கிறார்கள். யாரைச் சந்திக்கிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்கிற விவரங்களை எல்லாம் கார்டனுக்கு தெளிவாகச் சொல்லத்தான் இந்த ஏற்பாடாம். ஓர் அமைச்சருக்கு ஓர் உதவியாளர் என மர்மமாகத் தொடரும் இந்த ஆட்களைப் பார்த்துத்தான் அமைச்சர்கள் ஆடிப் போயிருக்கிறார்கள்.''
''ஜெ.ஆட்சி என்றாலே மந்திரிகளுக்கு நித்ய கண்டம் பூர்ண ஆயுசுதானே?''
''அமைச்சரவையில் இருந்து கோகுல இந்திரா, பச்சைமால், பாப்பிரெட்டிப்பட்டி பழனியப்பன் மூவரும் நீக்கப்பட்டதாகவும், அவர்களுக்கு மாற்றாக கு.ப.கிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், பொள்ளாச்சி ஜெயராமன், அன்பழகன் ஆகியோர் நியமிக்கப்பட இருப்பதாகவும், கடந்த புதன்கிழமை, கோட்டை வட்டாரத்தில் வதந்தி பரவியது. இந்தச் செய்தி பரவும்போது ஆலங்குடியில் இலவச சைக்கிள் வழங்கும் விழாவில் இருந்தார் கு.ப.கிருஷ்ணன். அவருக்குப் பலரும் வாழ்த்துச் சொல்லத் தொடங்கி விட்டார்கள். ஒரு தொண்டர் உற்சாகத்தில், 'அம்மாவின் கருணைப் பார்வையால் அமைச்சராகி இருக்கும் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்’ எனச் சொல்லி மேடையிலேயே பொன்னாடை போர்த்தினாராம். இதற்கிடையில் நயினார் நாகேந்திரனின் ஆட்கள் வெடி வெடித்துக் கொண்டாடத் தொடங்கி விட்டார்கள். 'தயவுபண்ணி இப்படிப் பண்ணாதீங்க... அமைச்சரா ஆனாலும் சரி, ஆகலைன்னாலும் சரி... தயவுபண்ணி அமைதியா இருங்க’ எனக் கதறாத குறையாகத் தன் ஆதரவாளர்களிடம் புலம்பி இருக்கிறார் நயினார். அந்த அளவுக்கு உள்காய்ச்சல் அதிகம்!''
''கார்டன் நிலவரம்?''
''மூதாட்டி ஒருவர் கார்டனில் வலம் வர ஆரம்பித்து உள்ளாராம். முதல்வரின் சித்தி என்று இவருக்கு அடையாளம் சொல்கிறார்கள். அதேபோல் குஜராத் மாநிலத்தில் இருந்து சில அதிகாரிகள் டெபுட்டேஷனில் தமிழகம் வரப்போகிறார்கள். முக்கியத் திட்டங்களுக்கான ஆலோசகர்களாக இவர்கள் இருப்பார்களாம். தொடர்ச்சியாக பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளை முதல்வர் நடைமுறைப்படுத்துவதில் ஆர்வம் ஆவாராம். ஒரு வாரமாக, அரசு அறிவிப்புகள் அதிகமாக வருவதைப் பார்த்தீரா? 'சசிகலா குடும்பத்தின் பிரிவால் முதல்வர் எந்த சோர்வுக்கும் ஆளாகவில்லை. சுறுசுறுப்பாக செயல்படுகிறார்’ என்பதைக் காட்டுவதற்கான மூவ்தான் இவை என்றும் சொல்கிறார்கள்'' என்று சொல்லிவிட்டு எழுந்த கழுகார்... பறந்தார்!
படங்கள்: சு.குமரேசன், என்.விவேக்
 
தயாநிதிக்கு பிடி இறுகுகிறது!
அமைதியாக இருந்த பிரசாந்த் பூஷண் மீண்டும் கிளர்ந்து எழ ஆரம்பித்து விட்டார். ஸ்பெக்ட்ரம் வழக்கை எடுத்து உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்று பல்வேறு கைதுப் படலங்களுக்கு காரணமானவர் இவர். 5-ம் தேதி அன்று இரண்டு பூகம்ப மனுக்களை தாக்கல் செய்தார். ''ஸ்வான், யுனிடெக் ஆகிய இரண்டு நிறுவனங்கள் மீது கடுமையான பிரிவுகளைப் பயன்படுத்தி வழக்குத் தாக்கல் செய்யும் சி.பி.ஐ., எஸ்ஸார் மற்றும் லூப் நிறுவனங்களின் மீது அத்தகைய நடவடிக்கைகளை எடுக்கவில்லையே ஏன்? ஊழல் குற்றச்சாட்டுகளை வைக்காமல் சாதாரணப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்வது ஏன்?'' என்பது பிரசாந்த் பூஷணின் முதல் கேள்வி.
அடுத்தது தயாநிதி மாறனைப் பற்றி. ''தயாநிதி மாறன் மீது ஒரு எப்.ஐ.ஆரை மட்டும் பதிவு செய்துவிட்டு சி.பி.ஐ. தூங்குகிறது. அடுத்த கட்டமாக எதையுமே செய்யவில்லையே ஏன்?'' என்பது அவரது இரண்டாவது கேள்வி. இந்த இரண்டு மனுக்களும் நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகிய இருவர் முன் வந்தது. ''இந்த இரண்டு கேள்விக்கும் சி.பி.ஐ. என்ன பதில் சொல்கிறது என்பது பற்றி, மனு தாக்கல் செய்ய வேண்டும்'' என்று சொல்லி விசாரணையை ஜனவரி 20-ம் தேதிக்குத் தள்ளி வைத்தார்கள். ''தயாநிதிமாறன் விஷயத்தை கிடப்பில் போட்டுவிடலாம் என்று சி.பி.ஐ. நினைத்ததாகச் சொல்கிறார்கள். ஆனால், சுப்ரீம் கோர்ட் விவாதங்களைப் பார்த்தால் அவர் தலை தப்புவது சிக்கல்தான்'' என்று டெல்லியில் இருந்து குரல்கள் ஒலிக்க ஆரம்பித்துள்ளன!
தங்கையை வாழ்த்திய அண்ணன்கள்!
ஜனவரி 5. கனிமொழிக்குப் பிறந்த நாள். ஸ்பெக்ட்ரம் வழக்கின் விசாரணை நடந்து வருவதால் அவர் டெல்லியில் இருந்தாக வேண்டிய நெருக்கடி. மகனை மட்டும் டெல்லிக்கு அழைத்துச் சென்று, அவனோடு இருந்தார் கனிமொழி. காலையிலேயே கருணாநிதி வாழ்த்துச் சொன்னாராம். அடுத்தடுத்து, ஸ்டாலினும் அழகிரியும் பேசியது அவரை உற்சாகப்படுத்தி உள்ளது. காலையில் கோர்ட்டுக்குப் போனவர் மதியம் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டு மீண்டும் கோர்ட்டுக்குப் போனாராம். 'அமைதியாகவே கழித்து விட்டார் பிறந்தநாளை’ என்கிறார்கள். ஆனால், சென்னையின் தெருக்களில் போஸ்டர்கள் ஒட்டி அமர்க்களப்படுத்தி விட்டார்கள்!
*********************************************************************************

கழுகார் பதில்கள்

அ.அப்துல் ரஹ்மான், பாளை.
'லோக்பால் அமைப்புக்கு மன்மோகனைத் தலைவராக நியமிக்கலாம்’ என்று லாலு பிரசாத் சொல்வது நல்ல ஆலோசனையா?
  லொள்ளு ஆலோசனை! நண்டைச் சுட்டு நரியைக் காவலுக்கு வைப்பார்களா? தமிழகத் தெருக்களில் மன்மோகனுக்கு கறுப்புக் கொடி காட்டியதைக்கூட விட்டுவிடுங்கள். அமிர்தசரஸ் பொற்கோயிலுக்குள் அமைதி வழிபாடு நடத்த வந்த பிரதமரை நோக்கி சீக்கியர்கள் கறுப்புக் கொடி காட்டி தெரிவித்த எதிர்ப்பு, அவரது பொது வாழ்வின் கரும்புள்ளி. 'நாட்டில் எது நடந்தாலும் பரவாயில்லை, எனது பதவிக்கு ஆபத்து வரக் கூடாது’ என்று நினைக்கும் மன்மோகனை... நல்லவர் என்று எப்படிச் சொல்ல முடியும்?
 மு.காந்தி, விருதுநகர்.
இன்றைய நிலையில் இந்தியாவில் மாபெரும் ஊழல்வாதி என்ற பட்டத்தை யாருக்குத் தரலாம்?
அந்தப் பட்டத்தைக் கொடுக்க, ராஞ்சி சிறைக்குச் செல்ல வேண்டும். மதுகோடா அங்கேதான் இருக்கிறார். ஜார்கண்ட் மாநில முதலமைச்சராக இருந்த அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கைது செய்யப்பட்டார். வருமான வரித்துறை அவருக்கு அனுப்பிய தாக்கீதைப் படித்தால் தலை சுற்றுகிறது. 3,300 கோடி ரூபாய் அளவுக்குச் சொத்து சேர்த்ததாக அதிகாரப்பூர்வமாகக் கணக்கு காட்டுகிறது வருமான வரித்துறை. மதுகோடாவுக்குத் தராமல் வேறு யாருக்குத் தருவது அந்தப் பட்டத்தை?
 டி.மகராஜன், தஞ்சாவூர்.
ஸ்பெக்ட்ரம் வழக்கின் விசாரணை மந்தம் ஆனதுபோல் தெரிகிறதே?
நீதிமன்ற விசாரணை சூடாகவே செல்கிறது. ஒருவேளை சி.பி.ஐ.யின் விசாரணை மந்த நிலையை அடைந்திருக்கலாம்!
ஸ்பெக்ட்ரம் வழக்கின் உயிர், ஆ.ராசாவின் முன்னாள் உதவியாளர் ஆசீர்வாதம் ஆச்சாரியிடம்தான் இருக்கிறது. ஆச்சாரி மீது புகார் சொல்லி எம்.பி. ஒருவரது பெயரில் போலிக் கடிதம் தயாரித்துப் பரப்பிவிட்டு இருப்பதைப் பார்த்தால்... அவரைப் பார்த்து ஆ.ராசா தரப்பு பயத்தில் இருப்பது தெளிவாகத் தெரிகிறது!
 எஸ்.ஜெயராமன், சென்னை-2.
லோக்பால் மசோதாவுக்கு அரசியல் சட்ட அந்தஸ்துள்ள அங்கீகாரம் வழங்க முடியாமல் போனது ஏன்?
அரசியல் அமைப்புச் சட்ட அமைப்பாகத் தகுதி வழங்கும் மசோதா தோல்வி அடைந்து விட்டது. இந்தக் கைங்கர்யத்தைச் செய்ததில் பாரதிய ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கும்  பங்கு இருக்கிறது. இப்படி ஒரு சட்டம், அதுவும் முழுமையான அரசியல் சட்ட அங்கீகாரத்துடன் நிறைவேறிவிடக் கூடாது என்பதில் எல்லாக் கட்சிகளும் உஷாராக இருக்கின்றன. காங்கிரஸை எதிர்க்க அண்ணா ஹஜாரேவைப் பயன்படுத்திக்கொள்வது... அதே நேரத்தில் அண்ணா ஹஜாரேவின் நோக்கமும் முழுமையாக நிறைவேறி விடாமல் பார்த்துக்கொள்வது... என்ற சந்தர்ப்பவாதம்தான் இதனைத் தோற்கடித்தது!
 கணேஷ்குமார், மதுரை
  ஒரு காலத்தில் இந்தியை எதிர்த்து... அடுத்து இலங்கைத் தமிழரை ஆதரித்து... இப்போது முல்லைப் பெரியாறுக்காக என்று தீக்குளிப்பவர்களை நினைத்தால்..?
கொள்கை வேள்விக்கு தங்கள் தேகத்தையே விறகாக ஈந்தவர்கள் இவர்கள். ஆனால், இந்தத் தியாகங்கள் காலப்போக்கில் மறக்கடிக்கப்படும் என்பதுதான் உண்மை. சமீபத்தில் படித்த கட்டுரை ஒன்றில் எழுத்தாளர் ஜமாலன் குறிப்பிட்ட வரிகள் நினைவுக்கு வருகின்றன. 'வரலாற்றின் பெரும் நிகழ்வுகள் ஒரு சிறு நிகழ்வில் இருந்துதான் தொடங்குகிறது. அந்நிகழ்வுகள் சாமானியர்கள் எனப்படுபவர்களால் உருவாக்கி அதன் இறுதி எல்லையில் ஒரு சில தலைவர்களின் பெயருடன் வரலாறாக உருமாற்றப்படுகிறது.’
தி.இரா.காமராஜ், உடுமலைப்பேட்டை.
மின் கட்டணம் எப்போது உயரப்போகிறது?
கட்டண உயர்வு பற்றிய பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம், முக்கிய நகரங்களில் பிப்ரவரி மாதம் நடக்கும். நாட்டில் இருக்கும் மொத்தப் பேரும் திரண்டு வந்து எதிர்ப்பு காட்டினாலும், மார்ச் மாதம் கட்டணத்தை நிச்சயம் உயர்த்தி விடுவார்கள். இப்படிக் கருத்துக் கேட்க வேண்டும் என்பது ஒரு சம்பிரதாயம் மட்டுமே. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், தன் இஷ்டத்துக்கு கட்டணத்தை உயர்த்தலாம். எனவே, மின்சாரத்தைத் தொட்டால் அல்ல... கட்டணத்தை நினைத்தாலே 'ஷாக்’ அடிக்கும்!
 அ.சேகர், கிருஷ்ணகிரி.
  சமீபத்தில் உம்மை ஆச்சர்யப்பட வைத்த நிகழ்வு ஏதாவது உண்டா?
   அரசு ஊழியர்களை 'அம்மா’ கவனிப்பதுதான் அதிக ஆச்சர்யத்தை உண்டாக்குகிறது. சிறப்பாகப் பணிபுரிந்த அரசுப் பணியாளர்களுக்கு 'நல் ஆளுமை’ விருதும் 2 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை யும் வழங்கப் போவதாக அறிவித்தார். அடுத்த சில நாட்களிலேயே பொங்கல் போனஸையும் கொடுத்தார். அவருக்கு, இதுவரை கசந்தவர்கள் அவர்கள்தான். ஜெயலலிதாவிடம் ஏற்பட்ட மிகப் பெரிய மாற்றங்களில் இதுவும் ஒன்று!
 ஐயப்பன், சின்ன தாராபுரம்.
இரண்டு நாட்களுக்கு முன்னால் பிரதிபா பாட்டீல் சென்னைக்கு வந்து சென்றபோதுதான் இப்படி ஒரு ஜனாதிபதி இருக்கிறார் என்ற ஞாபகமே எனக்கு வந்தது. என்ன செய்கிறார் பிரதிபா?
பொதுவாகவே ஜனாதிபதிகள் டம்மியாகவே மதிக்கப்படுகிறார்கள். இதில் பிரதிபா, சூப்பர் டம்மியாகவே நடத்தப்படுகிறார். 'இது நம்முடைய தகுதிக்கு மீறிய பதவி’ என்று ஒருவர் நினைத்து விட்டால், பிரதிபா மாதிரிதான் அடக்கமாக இருப்பார்கள்.
ஆனால், ஒரு செய்தி அதிர்ச்சியைக் கொடுத்தது... 11 நாள் பயணமாக ஆந்திர மாநிலம் சென்றுள்ள இவருடைய வருகைக்காக மத்திய அரசும் மாநில அரசும் ரோடு போடுவது தொடங்கி மொத்தமாக செலவழித்துள்ள தொகை 50 கோடியாம்!
எனவே, பிரதிபா சும்மா இருக்கிறார் என்று நினைத்து விடாதீர்கள். நன்றாகவே செலவு வைக்கிறார்.
 இளங்கோ, சின்ன காஞ்சிபுரம்.
''பா.ம.க.வில், ஒன்றியத்துக்கு 50 ஆயிரம் பேரை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். அவர்களிடம், 'பா.ம.க.வுக்குத்தான் வோட்டுப் போடுவேன்’ என்று குல தெய்வத்திடம் சத்தியம் வாங்குங்கள்'' என்று ராமதாஸ் தனது கட்சித் தொண்டர்களுக்கு உத்தரவிட்டு உள்ளாரே?
  'பொதுமக்கள்தான் பா.ம.க.வுக்கு வோட்டுப் போடவில்லை’ என்று இதுவரை நினைத்திருந்தேன். ராமதாஸ் சொல்வதைப் பார்த்தால், அவரது கட்சிக்காரர்களே அவருக்கு வாக்களிக்கவில்லை போலும். அதனால்தான் சாமி சத்தியம் வாங்கச் சொல்கிறார்.!
 கந்தகணேசன், திருச்செந்தூர்.
   எத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தாலும் இயற்கைப் பேரழிவுகளைத் தடுக்க முடியவில்லையே?
மனிதனுக்கும் இயற்கையின் ஐம்பூதங் களுக்கும் இடையே நடக்கும் மோதல்தான் பல நூற்றாண்டுகளைக் கடந்தும் முற்றுப்பெறாத போர். இடி, மின்னல், புயல், வெள்ளம், நிலநடுக்கம், காட்டுத் தீ, சூறாவளி, சூறைப் புயல்கள்... எனக் கிளர்ந்து எழுபவை எல்லாம் ஏன்? காடுகளை அழித் ததால் வெள்ளப்பெருக்கின் கடுமை அதிகமாகியது. தொழில் வளர்ச்சி என்ற பெயரால் வாயுக்கள் அதிக அளவில் வெளிப்படுவதால் வெப்ப நிலை உயர்கிறது. இப்படி இயற்கையை மனிதன் கோபப்படுத்துவதைக் குறைக்க வேண்டும். பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டுபோய் தங்கவைப்பது, சோறு பொங்கித் தருவது போன்றவை மட்டுமே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அல்ல. இயற்கையை, இயற்கையோடு இயைந்த வாழ்க்கை யோடுதான் இனிதே ஆளவும் வாழவும் முடியும்!
 சரவணமுத்து, கயத்தாறு.
   சசிகலா இனி என்ன செய்ய வேண்டும்?
  இதுவரை செய்த எதையும் இனி செய்யாமல் இருக்க வேண்டும்!

அரிவாளுடன் வரும் மாணவர்கள்!

மாநிலக் கல்லூரி திகில்
சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ரத்தக் கலவரத்தை யாரும் மறந்திருக்க முடியாது. கடந்த புத்தாண்டு தினத்துக்கு மறுநாள், திரும்பவும் அப்படி ஒரு காட்சியை அரங்கேற்றினார்கள் சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள்!
மாநிலக் கல்லூரி மாணவர்களிடம் பேசினோம். ''வடசென்னை மாணவர்களுக்கும், மேற்கு சென்னை மாணவர்களுக்கும் இடையே நீண்ட நாட்களாகவே பிரச்னை இருந்து வருகிறது. வட சென்னை மாணவர்கள் 6-டி பஸ்ஸிலும், மேற்கு சென்னை மாணவர்கள் 27-எச் பஸ்ஸிலும் வருகின்ற னர். பஸ் தினக் கொண்டாட்டம், பெண்களை கிண்டல் செய்வது போன்றவற்றில்தான் பிரச்னை தொடங்குகிறது.
கடந்த 2-ம் தேதி மதியம் அம்பத்தூரைச் சேர்ந்த, விலங்கியல் துறை மாணவர் தனசேகரன் மற்றும் அரசியல்அறிவியல் துறை மாணவர் பிரசாத் ஆகியோர் கல்லூரி வாசலில் நின்று கொண்டு இருந்தனர். அப்போது, வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் கல்லூரி அருகே 6-டி பஸ்ஸில் இருந்தபடியே கிண்டல் செய்துள்ளனர். உடனே பஸ் மீது சில மாணவர்கள் கல் எறிய, கலவரம் ஆரம்பம் ஆனது. பஸ்ஸில் இருந்து இறங்கிய 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உருட்டுக்கட்டை, அரிவாளுடன் தனசேகரனையும் பிரசாத்தையும் துரத்தினர். இவர்களுக்கு ஆதரவாக இன்னும் சில மாணவர்களும் எதிர்த்தாக்குதல் நடத்த... கல்லூரி வளாகமே போர்க்களம் ஆனது. நல்லவேளையாக அரிவாளால் யாரும் வெட்டுப்படவில்லை. உருட்டுக் கட்டையால் தாக்கப்பட்டதால் ஐந்து மாணவர்கள் காயம் அடைந்தனர். கல்லூரி வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் பைக்குகள் அடித்து நொறுக்கப்பட்டன. 
இந்தக் கல்லூரிக்குள் பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தாதாக்கள் போலவே வலம் வருகி றார்கள்.அவர்கள் வைத்ததுதான் சட்டம். அதில் இரண்டு பேர் பையில் எப்போதும் அரிவாளை வைத்திருப்பார்கள். சிலர் சைக்கிள் ஸ்டாண்டில் அரிவாள்களை ஒளித்து வைத்துள்ளார்கள். எங்களுக்குக் கல்லூரிக்கு வரவே பயமாக இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் கலவரம் வெடிக்கலாம் என்ற சூழல்தான் கல்லூரியில் நிலவுகிறது. கடந்த டிசம்பர் 23-ம் தேதியும் ஒரு கலவரம் நடந்தது. அப்போது ஓரமாக நின்று வேடிக்கை பார்த்த நாகராஜன் என்ற மாணவரை அரிவாளால் வெட்டி விட் டார்கள்...'' என்றார்கள் அச்சத்துடன்.
இந்தக் கலவரம் குறித்து மாநிலக் கல்லூரியின் முதல்வர் ரகுராமனிடம் பேசினோம். ''கடந்த மாதம் நடந்த ஒரு கலவரத்தைத் தொடர்ந்து 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாணவர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டார்கள். ஆனாலும், ஒரு சில மாணவர்களின் தூண்டுதலால் குழுக்களாக கூடி மோதிக்கொள்கிறார்கள். இப்போது வன்முறையில் ஈடுபட்ட 15-க்கும் மேற்பட்ட மாணவர்களை சஸ்பெண்ட் செய்துள்ளோம். அவர்களின் பெற்றோர் களுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். போலீஸில் புகார் செய்ததின் பேரில், இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளார்கள்'' என்றார்.
கல்லூரிகளில் மாணவர்கள் இடையே மோதல் ஏற்படுவது சகஜம்தான். ஆனால், கூலிப்படையினருக்கு இணையாக கையில் அரிவாளோடு மாணவர்கள் துரத்தி துரத்தி வெட்டுவது சரிதானா? சுதந்திர இந்தியாவின் முதல் ராணுவத் தளபதியான ஃபீல்டு மார்ஷல் கரியப்பா துவங்கி நோபல் விஞ்ஞானி சந்திரசேகர், சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சர் ராஜாஜி வரை படித்த பிரசிடென்ஸி கல்லூரியின் இன்றைய நிலையை நினைத்தால் கவலையாக இருக்கிறது!
    - டி.எல்.சஞ்சீவிகுமார்
படங்கள் நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா, சென்னை
 இது தொடர்கதை!
 ஒரு மாதத்துக்கு முன்பு எழும்பூர் பஸ் ஸ்டாண்டில் நின்றுகொண்டு இருந்த 15-பி பஸ்ஸில் இருந்த மாணவர்கள் சிலரை, 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்று சேர்ந்து, உருட்டுக் கட்டை களால் தாக்கினார்கள். இதில் பயணிகள் பலரும் காயம் அடைந்து, அலறித் துடித்து ஓடினார்கள்.
 கடந்த டிசம்பர் 15-ம் தேதி ஒரு பெண்ணை கேலி செய்த விவகாரத்தில் நந்தனம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் மோதிக்கொண்டதில் ஒருவருக்கு கத்திக்குத்து விழுந்தது.
 அண்ணா ஹஜாரேவுக்கு ஆதரவாக சென்னையில் நடந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று கூறி... நந்தனம் கல்லூரி மாணவர்கள் இடையே நடந்த கலவரத்தில் சிக்கிய தணிகைவேல் என்ற மாணவர்... கூவத்தில் விழுந்து இறந்து போனார்.

பிட்ஸ்..

பேத்தி வீட்டில் நின்ற கருணாநிதி கார்!

'தானே’ புயல் தி.மு.க. தலைவர் கருணாநிதியையும் துள்ளி எழ வைத்துவிட்டது. கடந்த 4ம் தேதி சென்னையில் இருந்து கிளம்பிய கருணாநிதி, கடலூர் வரும் வழியில் மரக்காணம் அருகே பொதுமக்களிடம் குறைகள் கேட்டார். அங்கிருந்து புதுச்சேரி அண்ணாமலை ஓட்டலில் காலை டிஃபனை முடித்தார். அதன் பிறகு பாகூர் பகுதியில் புயல் சேதத்தைப் பார்வையிட்ட கருணாநிதி, பெரிய கங்கணாங்குப்பத்தில் மக்களை சந்திப்பார் என்று எதிர் பார்க்கப்பட்டது. மனுக்களோடு மக்கள் காத்திருக்க, கருணாநிதியின் வண்டியோ நிற்காமல் போனது. மக்கள் ஓடோடிப் போனாலும், கார் நிற்கவேவில்லை. அந்தக் கார் கடலூரில் இருக்கும் பேத்தி அதாவது மு.க.முத்துவின் மகள் தேன்மொழியின் வீட்டில் போய்தான் நின்றது. அங்கு ஓய்வு எடுக்க தொடங்கினார் கருணாநிதி.
ஆக, ஒரு நாள் கழிந்தது.
''புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்கள்!''
சென்னையில் இருந்து ஹெலிகாப்டரில் கடலூருக்கு வந்தார் முதல்வர் ஜெயலலிதா. ஹெலிகாப்டரில் இருந்தபடியே சில பகுதிகளைப் பார்வையிட்ட முதல்வர், மஞ்சகுப்பம் விளையாட்டுத்திடலில் இருந்து கார் மூலமாக நிவாரண நிதி கொடுப்பதற்காக சுப்ராயலு ரெட்டியார் மண்டபத்துக்கு வந்தார். பலருக்கும் நிதி உதவி வழங்கினார். ''உங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளைச் செய்வதற்கும் உங்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கும் இந்த அரசு இருக்கிறது. நீங்கள் அனைவரும் தைரியமாக இருங்கள். அனைவருக்கும் எனது புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்கள்'' என்று சொன்னார்.
நொந்து போய்க் கிடக்கும் மக்களுக்கு வாழ்த்துக்கள் எதற்காகவோ?''கொடுக்கிறாரோ இல்லையோ... நல்லா அடிக்கிறார்!''
'அடி உதவுவது போல் அண்ணன், தம்பி உதவ மாட்டார்கள்’ என்பதில் விஜய காந்த்துக்கு அசாத்திய நம்பிக்கை போல.
புயலால் சிதைந்து கிடக்கும் கடலூ ருக்கு கடந்த 3-ம் தேதி வருகை தந்தார் விஜயகாந்த்.  மிகவும் சேதம் அடைந்த புதுப் பாளையத்துக்கு காலை 10.45 மணிக்கு வந்தார். 
புதுப்பாளையம் மிகவும் குறுகலான பகுதி. விஜயகாந்த் நிவாரண உதவிகள் செய்ய வருகிறார் என்றதும் மக்கள் கூட்டம் குவிந்து நின்றது. காரில் இருந்து இறங்கிய விஜயகாந்த்தைப் பார்க்க தொண்டர்கள் முண்டியடித்துக் கொண்டு வர, கூட்டத்தில் பெரும் தள்ளுமுள்ளு. இதனை எதிர்பாராத பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து, கூட்டத்தில் இருந்து வெளியேற முயற்சிப்பதற்குள், சில பெண்கள் கீழே விழுந்தார்கள். விஜயகாந்தே லேசாகத் 'தட்டி’த் தான் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டி இருந்தது!
அடுத்து, திருச்சோபுரம் பகுதியில் என்ன நடந்தது என்பதை நேரில் பார்த்த நாளிதழ் நிருபர் ஒருவர் சொல்கிறார். ''புதுப் பாளையத்தில் இருந்து வந்தபோதே விஜயகாந்த் கோபமாக இருந்தார். நிருபர்கள் சில கேள்விகள் கேட்டார்கள். பக்கத்தில் இருந்த போட்டோகிராபர்கள் படம் பிடித்துக் கொண்டு இருந் தார்கள். அப்போது ஒரு தொண்டர் விஜயகாந்த அருகே மிகவும் நெருங்கிச் சென்றதும், கோபப்பட்டு அடித்தார்.  பக்கத்தில் நின்ற ஒரு நாளிதழ் நிருபர் மீதும் அது பட்டது.
உடனே நிருபர்கள், 'சார்...  அவர் நிருபர்’ என்று கத்தி னோம். உடனே அவர், 'நிருபரா இருந்தா ஐ.டி. கார்டை கழுத்தில் தொங்கவிட்டுட்டு வரணும். இப்படி வந்தா எப்படி? நான் என் கட்சிக்காரர்ன்னு நெனைச்சிட்டேன்’ என்றவர் கிளம்பிவிட்டார்'' என்று விவரித்தார்.
''ஏதோ கொடுக்கப்போகிறார்ன்னு ஆசையா வந்தோம்... ஆனா அடிக்கத்தான் செய்றார்'' என்று மக்கள் நொந்தபடி கலைந்து சென்றனர்!
பேரழிவைத் தடுக்க லிங்க பிரதிஷ்டை!
புதுச்சேரி மற்றும் கடலூர் மாவட்டத்தை நோக்கி பல்வேறு தொண்டு நிறுவனங்களின் நேசக் கரங்கள் நீண்டு கொண்டிருக்கும் வேளையில், நித்தியானந்தாவின் தியான பீடமும் களம் இறங்கியது. உணவு பொட்டலங்கள் மற்றும் துணிகளை சுவாமி நித்தியானந்தா வழங்கிக் கொண்டிருக்க, பொதுமக்கள் அனைவரும் அவரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிச் சென்றனர். இன்னொரு புறம் மருத்துவக் குழு ஒன்று, மக்களை பரிசோதித்து மருந்து மாத்திரைகளை வழங்கிக் கொண்டு இருந்தது.
சின்ன முதலியார்சாவடி, பெரிய முதலியார்சாவடி, பாக்கம், நல்லாத்தூர், வைத்திக்குப்பம், இடையார் பாளையம், குட்டியாங்குப்பம் உட்பட மொத்தம் பதினெட்டு கிராமங்களில் இவர்களின் சேவை நடந்தது. எதிர்காலத்தில் இது போன்ற இயற்கைப் பேரழிவுகள் வராமல் இருக்க, 12  சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்யப் போகிறார்களாம்.
நல்லது நடந்தால் சரி.

பகலில் கொலை... இரவில் கொள்ளை!

திருவண்ணாமலை 'திடுக்'
ன்மீக நகரமான திருவண்ணாமலையில் போலீஸ் ஸ்டேஷன் அருகிலேயே பட்டப்பகலில் நடந்து இருக்கும் ஒரு கொலை, ஏரியா மக்கள் மத்தியில் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
துரிஞ்சாபுரம் ஒன்றிய துணைத் தலைவராக சமீபத்தில் தேர்ந்து எடுக்கப்பட்டவர், 'ஊத்தாங்கல்’ துரை. இவர் தினமும் அண்ணாமலையார் கோயி லுக்கு வந்து செல்வது வழக்கம். கடந்த 4-ம் தேதி வழக்கம் போல் கோயிலுக்கு சென்றுவிட்டு, தனது டூ-வீலரில் திரும்பிச் சென்றார். திருமஞ்சனக் கோபுரம் அருகில் அவருக்கு எதிரே டூ-வீலரில் வந்த இருவர், அவரது வாகனத்தில் மோதுவது போல் வந்து நிலைகுலைய வைத்திருக்கிறார்கள். துரை ஒரு கணம் தடுமாறிச் சரிய... கண்ணிமைக்கும் நேரத்தில் அவரது கழுத்தைக் குறி பார்த்து அரிவாளை வீசி இருக்கிறார்கள். அதைத் தடுக்க முயற்சித்த துரையின் கையில் ஒரு வெட்டு. அடுத்து அவரது முகம், தலையில் சரமாரி வெட்டுப்பட சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரை விட்டார் துரை.
இந்தக் கொலை குறித்து, ''ஆன்மீக நகரமாக இருந்த திருவண்ணாமலை, பட்டப்பகலில் கொலை நடக்கும் அளவுக்கு கிரைம் சிட்டியாக மாறி இருக்கிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் திருவண்ணாமலை கோர்ட் முன்பு கூலித் தொழிலாளி, வெளுக்காநந்தலில் பள்ளி மாணவன், வேலாநந்தலில் கல்லூரி மாணவன், காவேரியாம்பூண்டியில் நர்சிங் கல்லூரி மாணவி, கீழ்அணைக்கரையில் சாராய வியாபாரி, வேங்கிக்காலில் ஒருவர் என்று ஆறு கொலைகள் நடந்துள்ளன. இப்போது பட்டப்பகலிலேயே கொலையைச் செய்யும் அளவுக்குக் குற்றவாளி களுக்கு தைரியம் வந்திருக் கிறது. அதுவும் மக்கள் நடமாட்டம் மிகுந்த கோயிலுக்கு அருகில் நடந்திருக்கிறது. இதையெல் லாம்விட கொடுமை... இந்தக் கொலை நடந்த இடத்தில் இருந்து 100 அடி தூரத்துக்குள்தான் டவுன் போலீஸ் ஸ்டேஷனே இருக்கிறது. பகலில் கொலை நடக்கும் திருவண்ணாமலையில் இரவுகளில் கொள்ளை நடக்கிறது. இப்படியே போனால் எங்கள் பாதுகாப்பு என்னாவது?'' என்று அச்சம் தெரிவித்தார்கள் பொதுமக்கள்.
துரையின் தொழில் பார்ட்னரான 'டிஷ்’ ரமேஷைச் சந்தித்தோம். ''துரைக்குத் தொழில் ரீதியாக யாரும் எதிரிகள் இருப்பதாகத் தெரியவில்லை. அவர் அரசியலில் இருப்பதால், அரசியல் எதிரிகள்தான் கொலை செய்திருக்க வேண்டும். அவர் அ.தி.மு.க-வில் இருந்தாலும், சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றிய துணைத் தலைவருக்கான போட்டியில், கட்சி அறிவித்த வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டுத்தான் வென்றார். அதில் நிறைய பேருடைய பகையை சம்பாதித்துக் கொண்டார். அந்த ஆத்திரத்தில் யாராவது கொலை செய்திருக் கலாம்'' என்றார்.
துரையின் வீட்டுக்குச் சென்றோம். அவரது மனைவி பேச முடியாத நிலையில் அழுது அரற்றிக்கொண்டிருக்க.... உறவினரான மணியிடம் பேசினோம். ''கொலை செய்யப்பட்ட துரை எனக்கு மாமா முறை. இந்தக் கொலை எதற்காக நடந்தது என்று எங்களுக்கு சரியாகத் தெரியவில்லை. அவர் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்வதால், தொழில் எதிரிகள் யாராவதுகூட கொலை செய்து இருக்கலாம். மூன்று வருடங்களுக்கு முன்பே துரையை கொலை செய்ய முயற்சி நடந்தது. ஆனால், அதில் இருந்து அவர் தப்பி விட்டார். அதன் பின்னரே சொந்த கிராமமான ஊத்தாங்கல்லில் இருந்து திருவண்ணாமலைக்கு வீட்டை மாற்றினார். எப்போதும் ஜாக்கிரதையாக காரில்தான் போய் வருவார். இன்றுதான் பைக்கில் வெளியே போனார். இப்படி அநியாயமாக கொலையாகி விட்டார்'' என்று கதறி அழுதார்.
அ.தி.மு.க-வின் முக்கியப் புள்ளி ஒருவரிடம் பேசியபோது, ''கட்சியில் கிளைச் செயலாளராக இருந்தார் துரை. உள்ளாட்சித் தேர்தலில் அம்மா அறிவித்த வேட்பாளரை எதிர்த்து நின்றதால், அவரை கட்சியில் இருந்து நீக்கிவிட்டார்கள். ஆறு வருடங்களுக்கு முன்பு நூக்காம்பட்டியில் ஜெகன்நாதன் என்ற அ.தி.மு.க. பிரமுகர் கொலை செய்யப்பட்டார். டெண்டர் தொடர்பான தகராறில் நடைபெற்ற அந்தக் கொலையில் துரைதான் முக்கியக் குற்றவாளி. அந்த கொலை கேஸ்கூட இன்னமும் நடந்துகொண்டு இருக்கிறது. இப்போது நடைபெற்ற கொலைக்கும், அந்த கொலைக்கும்கூட ஏதேனும் தொடர்பு இருக்கலாம். போலீஸார்தான் தீவிரமாக விசாரித்து உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்'' என்றார்.
திருவண்ணாமலை டவுன் டி.எஸ்.பி. ரமேஷ்பாபு விடம் கேட்டதற்கு, ''இந்தக் கொலை திட்டமிட்டு நடந்துள்ளது. கொலையைச் செய்தவர்கள் 20 முதல் 25 வயதுள்ள இளைஞர்கள். அவர்களைப் பிடிக்க நாங்கள் தீவிரமாக முயற்சித்து வருகிறோம். அரசியல் ரீதியாக நடந்த கொலையா... தொழில் தகராறில் நடந்த கொலையா... பழிக்கு பழியாக நடந்த கொலையா என்பது குறித்தும் பல கோணங்களில் விசாரித்து வருகிறோம். குற்றவாளிகளை விரைவில் பிடித்து விடுவோம்'' என்றார்.
கொலை எதற்காக நடந்தது என்பது கேள்விக்குறியாக இருந்தாலும், ஆன்மீக நகரத்தில் கொலை, கொள்ளைகள் சர்வ சாதாரணமாக நடந்து வருவதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது!
கோ.செந்தில்குமார்
படங்கள்: பா.கந்தகுமார்

''கட்டியாச்சு... ஆனா திறக்கலை!''

பட்டுக்கோட்டை பரிதாபம்
'தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது என்ற ஒரே காரணத்துக்காக சென்னையில் பூட் டியே கிடக்கிறது புதிய தலைமைச் செயலகம். பட்டுக்கோட்டையிலும் மக்கள் வரிப்பணத்தில் கட்டிய பல கட்டடங்கள் அதே காரணத்துக்காக பூட்டியே கிடக்கின்றன’ என்று ஜூ.வி. ஆக்ஷன் செல்லில் (044-42890005) ஒரு புகார்.
பட்டுக்கோட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வல ரான கருணானந்தம் நம்மிடம் பேசினார். ''இந்தப் பகுதிகளில் நெல்லுக்கு அடுத்தபடியாக தென்னை தான் முக்கிய விவசாயம். எனவே, தென்னை வணிக வளாகம் அமைக்க வேண்டும் என்பது எங்களின் பல வருடக் கோரிக்கை. எத்தனையோ போராட்டங்களுக்குப் பிறகு, கடந்த தி.மு.க. ஆட்சியில் நாலு கோடி ரூபாய் செலவில் பட்டுக்கோட்டையில் தென்னை வணிக வளாகம் கட்டி முடிக்கப்பட்டது. திறப்பு விழாவும் நடத்தப்பட்டது. ஆனால், இன்னமும் அது மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் பூட்டியே கிடக்கிறது.
பட்டுக்கோட்டை யூனியன் அலுவலகம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயத்தில் இருந்தது. நடவடிக்கை எடுக்கப் போராடினோம். அதனால் கடந்த ஆட்சியில் இரண்டு கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடம் கட்டப்பட்டது. அந்த யூனியன் அலுவலகமும் இன்னும் திறக்கப்படவில்லை.
பட்டுக்கோட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், இரண்டு கோடி செலவில் கட்டப்பட்ட புதிய கட்டடமும் இன் னும் பயன்பாட்டுக்கு வர வில்லை'' என்று பட்டியல் போட்டார்.
இதுகுறித்துப் பேசிய தி.மு.க. வழக்கறிஞரான இளையபாரதி, ''தென்னை வணிக வளாகம், ஒன்றிய அலுவலகம், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கான புதிய கட்டடம் எல்லாம் தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது என்ற ஒரே காரணத்துக்காக ஜெயலலிதா அரசு இவற்றை மூடி வைத் துள்ளது. அதுபோல், பட்டுக்கோட்டை நகரின் போக்குவரத்து நெரிசலைத் தீர்ப்பதற் காக கடந்த தி.மு.க. ஆட்சியில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புறவழிச் சாலை அமைக்கத் திட்டம் தீட்டப்பட்டது. அதற்கான பணிகள் நடந்தபோதே ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், புறவழிச் சாலை அமைக்கப்படுமா என்பதும் தெரியவில்லை. அதேபோல், பாதாள சாக்கடைத் திட்டமும் தி.மு.க. ஆட்சிக் காலத்தில்தான் தொடங்கப்பட்டது. அதனாலே, அதுவும் கிடப்பில் போடப்பட்டு விட்டது'' என்று கொதித்தார்.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு அ.தி.மு.க. தரப்பின் பதில் என்ன? பட்டுக்கோட்டை நகரமன்றத் தலைவரான ஜவகர் பாபுவைக் கேட்டோம். ''அனைத்து கட்டடங்களைப் பற்றியும் மேலிடத்துக்குத் தகவல் கொடுத்து இருக்கிறோம். தேதி முடிவு செய்யப்பட்டதும் திறப்பு விழா விரைவில் நடத்தப் படும். பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்கு நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புறவழிச் சாலை பணிகளும் தொடர்கின்றன. எதையும் புறக்கணிக்கும் திட்டம் இல்லை'' என்று விளக்கம் அளித்தார். 
'நாங்கள் என்ன பாவம் செய்தோம்’ என்று கட்டடங்கள் கண்ணீர் விட்டுக் கதறும் முன்பு திறந்துடுங்கப்பா!
- சி.சுரேஷ்
படங்கள்: கே.குணசீலன்

ரயிலை நிறுத்தினாரா டி.ஆர்.பாலு?

டெல்டா போராட்டம்
'தமிழகத்திலேயே மிகப் பழைமையான ரயில் பாதைகளில் திருவாரூர் டு காரைக்குடி மற்றும் திருத்துறைப்பூண்டி டு அகஸ்தியன்பள்ளி ரயில் பாதைகள் குறிப்பிடத்தக்கவை. அவை இரண்டையும் ரயில்வே அதிகாரிகள் புறக்கணிக்கிறார்கள்’ என்று டெல்டா கடற்கரைப் பகுதி மக்கள் டிசம்பர் 27-ம் தேதி கடையடைப்பு, போராட்டம் நடத்தினார்கள்.  
திருத்துறைப்பூண்டி நகர  ம.தி.மு.க. செயலாளர் கோவி.சேகர், 'மகாத்மா காந்தி தண்டி யாத்திரை நடத்தியபோது, ராஜாஜி உப்பு காய்ச்சிய இடம்தான் அகஸ்தியன்பள்ளி. அது, இந்தியாவிலேயே உப்பு காய்ச்சுவதில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. திருத்துறைப்பூண்டி அகஸ்தியன்பள்ளி வழித்தடத்தில் இயங்கி வந்த ரயிலை, 'அகல ரயில் பாதைப் பணிகள் மேற்கொள்ள வேண்டி இருக்கிறது’ என்று காரணம் சொல்லி ஏழு வருடங்களுக்கு முன்பு நிறுத்திவிட்டார்கள். அது போலவே, நூற்றாண்டு பழமை வாய்ந்தது திருவாரூர் டு காரைக்குடி ரயில்பாதை. இந்தப் பாதையில் 'போட் மெயில்’ என்ற பெயரில் ராமேஸ்வரம் வரையில் 100 ஆண்டு களுக்கு முன்பே ரயில் ஓடியது. பின்னர் கம்பன் எஸ்பிரஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட அந்த ரயிலும், அகல ரயில் பாதையைக் காரணம் காட்டி இரண்டு வருடங்களுக்கு முன்னர் நிறுத்தப்பட்டது. சென்னையில் இருந்து திருவாரூர் வரையில் அகல ரயில் பாதை அமைக்கப்பட்டது. ஆனால், திருவாரூர் டு காரைக்குடி ரயில் பாதையை மட்டும் அகலப்படுத்தவில்லை. இதையே காரணம் காட்டி கம்பன் எஸ்பிரஸ் ரயிலையும் திருவாரூரோடு நிறுத்திவிட்டனர். புதிதாக விடப்பட்ட சென்னை - மன்னார் குடி ரயில்பாதைக்காகத்தான் எங்கள் ரயில் பாதையை ரயில்வே நிலைக்குழு தலைவர் டி.ஆர்.பாலு நிறுத்தி விட்டார். அது எந்த விதத்தில் நியாயம்?'' என்று கொதித்தார்.
முத்துப்பேட்டை வர்த்தக சங்க பொருளாளர் முகைதீன்பிச்சை, ''ரயில் போக்குவரத்து நிறுத்தப் பட்டதால் பல கோடி ரூபாய் வர்த்தகம் தடைப்பட்டு நிற்கிறது. ஆயிரக்கணக்கான தொழிலா ளர்கள்வேலை இழந்து நிற்கின்றனர். ரயில்வே துறை சம்பந்தப்பட்ட அனைத்து பிரமுகர்களிடமும் மனு கொடுத்து விட்டோம். எந்த நடவடிக்கையும் இல்லை. அதனால் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, தலைஞாயிறு, வேதாரண்யம் பகுதிகளில் கடை அடைப்பு நடத்தி எங்கள் கோரிக்கையை வலியுறுத்தினோம். இனியும், எங்களுக்கான ரயில்பாதை கிடைக்காவிட்டால் போராட்டம் தீவிரம் அடையும்'' என்று எச்சரித்தார். 
மன்னார்குடி டு சென்னை புதிய ரயில் விடுவதற்குக் காரணமாக இருந்தவர்களில் முக்கியமானவர் டி.ஆர்.பாலு. அவரின் மகனும் தொகுதியின் எம்.எல்.ஏ-வுமான டி.ஆர்.பி.ராஜாவிடம் இந்த விவகாரம் குறித்துக் கேட்டபோது, 'மன்னை எக்ஸ்பிரஸ் எங்களின் 40 ஆண்டு காலப் போராட்டம். திருவாரூர் டு காரைக்குடி ரயில் பாதையை மாற்றி மன்னார்குடிக்கு தந்திருப்பதாக சிலர் நினைப்பது தவறான தகவல். அதற்கான வாய்ப்பே இல்லை. அப்பா ரயில்வே நிலைக்குழு தலைவர் மட்டும்தான்; அமைச்சர் கிடையாது. திருவாரூர் டு காரைக்குடி வழித்தடத்தில் கண்டிப்பாக ரயில் போக்குவரத்து தேவை. அதற்காக அப்பாவும் போராடி வருகிறார்'' என்றார்.
'அகல ரயில் பாதை அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட்டு, வேலை முடிந்ததும் ரயில் விடப்படும்’ என்று ரயில்வே அதிகாரிகள் சொன்னாலும், இதுவரை எந்தப் பணியும் ஆரம்பிக்கவே இல்லை என்பதுதான் வேதனை!
சி.சுரேஷ்
படங்கள் கே.குணசீலன்

''சரணாலயமும் போச்சு... ஏரியும் போச்சு''

வெள்ள அபாயத்தில் வடுவூர் கிராமங்கள்
'வடுவூர் பறவைகள் சரணாலயம் சீரழிந்து கிடக் கிறது. எங்க ஊருக்குப் பெருமையாக இருக்கும் என்று நாங்கள் போராடிப் பெற்ற சரணாலயத்தால், ஏரியும் பாழானதுதான் மிச்சம்’ என்று ஜூ.வி. ஆக்ஷன் செல்லில் (044-42890005) ஒரு வேதனைக் குரல்.
தஞ்சாவூரில் இருந்து மன்னார்குடி செல்லும் வழியில் இருக்கும் வடுவூருக்கு சென்றோம். அப்பகுதியைச் சேர்ந்த ஜி.இளங்கோவன் நம்மிடம், 'தமிழ் நாட்டிலேயே மூன்றாவது பெரிய ஏரி இது. இங்கே பறவைகள் வரத்து அதிகமாக இருந்ததால், சரணாலயம் அமைக்கணும்னு போராடினோம். 1992-ல் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சரணாலயத்தைக் கொண்டு வந்தாங்க. ஆனால் அதிகாரிகள் அலட்சியத்தால், இப்போ ஏரியும் போச்சு... சரணாலயமும் போச்சு. ஒரு நாளைக்கு 500 வண்டிகள் மணல் எடுக்கப்பட்ட ஏரி, இப்போது மணல் எடுக்கப்படாத காரணத்தால் வண்டல் மண் படிஞ்சு மேடாக¤ப¢ போச்சு.  இன்னும் ரெண்டு வருஷத்துக்குள்ள ஏரியை ஆழப்படுத்தலைன்னா ஊருக்குள்ளேயே வெள்ளம் வந்துடும்.
பறவைகள் சரணாலயத்துக்கான மண் திட்டுகள் ரொம்ப வும் குறைந்து போனதால், பறவைகள் வரத்து குறைஞ்சிடுச்சு. இப்போது நூற்றுக்கணக்கான பறவைகள்தான் வருகிறது. (சீசனில் 20,000 பறவைகள் வரை வந்து கொண்டிருந்தன.)சரணாலயம் அமைக்கும்போது போர் அமைச்சு, நீர்வரத்துக்கு வழி ஏற்படுத்துவோம்னு சொன்னாங்க. ஆனா அதை செய்யவே இல்லை. ஏரி முழுசும் ஆகாயத் தாமரைகள் வளர்ந் திடுச்சு. உடனடியா ஏரியை ஆழப்படுத்தினால் தான் சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும்' என்றார்.
பறவைகள் சரணாலயத்தின் வனக்குழு தலைவர் என்.இளங்கோவனிடம் பேசினோம். 'இந்த சரணாலயத்தின் மேம்பாட்டுக்காக பொதுப்பணித்துறை, வனத்துறை இரண்டி லுமே ஆண்டுதோறும் நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், பராமரித் ததாக பொய்க் கணக்கு எழுதி முறைகேடுகள் செய்கின்றனர். 'மணல் அள்ளினால் மீன் முட்டைகள் அழியும். அதனால் பறவைகளுக்கு உணவான மீன் உற்பத்தி பாதிக்கும்’ என்று சொல்லி தப்பிக்கப் பார்க்கிறார்கள். இப்போது சரியான கண்காணிப்பு இல்லாததால் பார்வையாளர் பகுதியில் சமூக விரோதிகளின் நடமாட்டமும் அதிகரித்து வருகிறது. உடனே ஏரியை ஆழப்படுத்தவில்லை என்றால் வெள்ள அபாயத்தில் இருந்து கிராமங்களைக் காப்பாற்ற முடியாது'' என்றார்.
நமது நிருபர்

வீரபாண்டியாரின் உருவத்தில் பெரியார்!

சேலம் செயற்குழு கலாட்டா..
சேலம் தனது கோட்டைதான் என்பதை எப்போதும் நிரூபித்துக்கொண்டே இருப் பார் வீரபாண்டி ஆறுமுகம். இந்த வாரத் திலும் அப்படி ஒரு சம்பவம்!
'ஜனவரி 3-ம் தேதி அவசர செயற்குழு கூட்டம் நடைபெறும்’ என்று சேலம் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளுக்கு திடீர் அழைப்பு. 'அ.தி.மு.க. அரசுக்கு எதிரான போராட்டங்கள் அறிவிக்கப் படுமோ..?’ என்ற எதிர்பார்ப்புடன் சென்றார்கள் நிர்வாகிகள். ஆனால், பொங்கல் விழாக் கொண்டாட்ட ஆலோசனை என்ற பெயரில் முழுக்க முழுக்க வீரபாண்டி ஆறுமுகத்தின் புகழ் பாடும் நிகழ்ச்சிதான் நடந்தது.
சேலம் கலைஞர் மாளிகையில் செயற்குழு கூட்டம் கூடியது. யாரும் எதிர்பார்க்காத வகையில் மேடை ஏறினார், கலைஞரின் நண்பரும் எழுத்தாளருமான வேங்கடசாமி. வீரபாண்டியாரின் 55 வருட பொதுநல சேவையைப் பாராட்டிப் புகழ் பாடும் பாடல் சி.டி-யை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில், வரவேற்புரை ஆற்றிய வீரபாண்டி ராஜா, ''என் தந்தை 55 வருடம்  பொது வாழ்க்கையில் இருக்கிறார். தமிழ்நாடு வியக்கும்(!) அளவுக்கு தமிழ் மக்களுக்குச் சேவை செய்து வருகிறார். இந்த ஒலிநாடாவை தயாரிப்பதில் 'சந்தனக்காடு’ இயக்குநர் வ.கௌதமனும், முன்னாள் மேயர் ரேகா பிரியதர்ஷினியும் பாடுபட்டு இருக் கிறார்கள்'' என்றார்.
அடுத்துப் பேசிய வேங்கடசாமி, ''பெரியார் பல்கலைக்கழகம், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனை, ஒருங்கிணைந்த நீதிமன்றம் எல்லாமே வீரபாண்டியாரின் பெயரைச் சொல்லும்'' என்று உருகினார்.
கள்ளக்குறிச்சி எம்.பி-யான ஆதிசங்கரோ, ''வீரபாண்டியாரின் உருவத்தில் நான் பெரியாரைக் காண்கிறேன்'' என்று இன்னும் ஒரு படி மேலே போனார்.
ராஜ்யசபா எம்.பி-யான கே.பி.ராமலிங்கம், ''எத்தனையோ கல்லடிகள், சொல்லடிகள் விழுந்தபோதும் கழகத்தைக் காப்பாற்றியவர்கள் கலைஞரும் வீரபாண்டியாரும். தமிழகத் திலேயே... ஏன், உலகத்திலேயே இந்த இயக்கத் துக்காக பெரும் தியாகம் செய்தவர்கள். இப்படிப்பட்ட தலைவனை எதிர்த்து எந்தக் கொம்பனாலும் மாவட்டச் செயலாளராக வர முடியாது. சேலம் தி.மு.க-வில் நிரந்தர மாவட்டச் செயலாளர் வீரபாண்டியார்தான். தி.மு.க. என்றால் வீரபாண்டியார். வீரபாண்டியார் என்றால் தி.மு.க.'' என்று யாருக்கோ பஞ்ச் கொடுத்தார். 
இறுதியாக மைக் பிடித்த வீரபாண்டி ஆறுமுகம், ''இன்று பலர் நான்தான் வருங்கால அமைச்சர்... நான்தான் அடுத்த மாவட்டச் செய லாளர் என்று சொல்லிட்டு இருக்காங்க. அப்படி சொன்னவர்கள் எல்லாம் உருப்படாமப் போய் இருக்காங்க. அதனால் பதவி பெறும் எண்ணங்களை விட்டுட்டு, மக்களுக்குச் சேவை செய்யுங்க. ஆதிசங்கர் என்னை பெரியாருக்கு ஒப்பிட்டுப் பேசினார். நான் இதை ஏத்துக்க முடியாது. வீரபாண்டி ஆறுமுகம் பாராட்டுகளையும் பதவிகளையும் புகழையும் விரும்பாதவன். கடந்த காலத்தில்கூட என்னிடம் தி.மு.க. நிர்வாகிகள் பலர் வந்து, 'உங்களுக்குப் பொன்விழா நடத்த வேண்டும்’ என்று கேட்டார்கள். நான் மறுத்துவிட்டேன். பிறகு, கட்சிக்கு அப்பாற் பட்டவர்கள், சேலம் மக்கள் சார்பில் விழா எடுக்க வேண்டும் என்று கேட்டதால்தான், வேறு வழி இல்லாமல் ஒப்புக்கொண்டேன்.
இன்று வெளியிடப்பட்ட ஒலி நாடாவை, என்னிடம் நேற்று இரவுதான் காண்பித்தார்கள். அதில் உள்ள பாடல்களைக் கேட்டேன். அதில் சில வரிகளை நீக்கவும் சொல்லி இருக்கிறேன். இந்தப் பாடல் சி.டி-யை ஒன்றிய, நகரச் செயலாளர்கள் வாங்கிச்செல் லுங்கள். பொங்கல் தினத்தன்று கழகக் கொடி ஏற்றும் இடங்களில் இந்த சி.டி-யை ஒலிப்பரப்பச் செய்யுங்கள்'' என்றார் நிறைவாக!
ஆரம்பம் முதல் இறுதி வரை உட்கார்ந்து கூட்டத்தை வேடிக்கை பார்த்துவிட்டுச் சென்றார் 'வீரபாண்டியாரின் கடும் எதிரி’யாகக் கருதப்படும் பனமரத்துப்பட்டி ராஜேந்திரன். தி.மு.க. உறுப்பினர்கள் சிலர், ''இந்தக் கூட்டம் வீரபாண்டியாரை எதிர்ப்பவர்களை மிரட்டுவதற் காகத்தான் நடத்தப்பட்டு இருக்கிறது. தனது பலத்தைக் காட்டுவதற்காகவே சேலம் மாவட்ட செயற்குழுவுக்கு சம்பந்தமே இல்லாத கள்ளக்குறிச்சி எம்.பி. ஆதிசங்கரையும், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த  கே.பி.ராமலிங்கத்தையும் அழைத்துப் பேச வைத்திருக்கிறார்'' என்றார்கள்.
அரசியல்ல இதெல்லாம்..!
வீ.கே.ரமேஷ்
படங்கள்: எம்.விஜயகுமார்

புகைக்குள் சிக்கிய மணியனூர்!

சேலம் சோகம்
'சுற்றுச்சூழல் மாசுக¢கு மறு பெயர்தான் மணியனூர். இந்த நிலையை மாற்ற உதவுங் களேன்...’ என்று ஜூ.வி. ஆக்ஷன் செல்லில் (044-42890005) ஒரு குரல்.
மணியனூர் சுற்றுச்சூழல் விவகாரத்துக்காக உண்ணாவிரதப் போராட்டத்தில் இருந்த விழித் தெழும் இளைஞர்களின் சேவை மையத்தின் தலைவர் பாலசுப்பிரமணியத்தை சந்தித்தோம். ''சேலம் மாநகராட்சியின் 50-வது டிவிஷன் தான் மணியனூர். இங்கே 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கின்றன. பெரும்பாலும் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்குத் தேவை யான குடிநீர், சாலை போன்ற அடிப்படை வசதிகளை அரசு செய்து தரவில்லை. ஆனால், சேலம் மாநகரின் ஒட்டுமொத்தக் குப்பைகளையும் அழுகிப்போன கழிவுகளையும் இந்த ஏரியாவில்தான் கொட்டுகிறார்கள். அவ்வப்போது குப்பை மேட்டில் தீ வைத்துவிடுவதால், அதன் மூலம் பரவும் நச்சுப் புகைக் கொடுமை வேறு. பல நிறுவனங்கள் முறைகேடுகளாக இயங்கி, புகையைக் கக்குகின்றன. கலெக்டர் முதல் மேயர் வரை அனைவருக்கும் புகார் கொடுத்து விட்டோம். அந்த நிறுவனங்களை வரைமுறைப்படுத்தவும் குப்பையை அகற்றவும் யாரும் முன்வரவில்லை'' என்றார்.
அந்தப் பகுதியில் வசிக்கும் விஜய கீதா, ''குப்பைமேட்டில்தான் நாங்க குடியிருக்கோம். பக்கத்தில் இருக்கும் ஸ்டீல் ஃபேக்டரி மற்றும் சிமென்ட் ஃபேக்டரி புகை எங்களை மூச்சுமுட்டச் செய்கிறது. நிம்மதியா வாழணும்னா, வ¦ட¢டை மாத்திக்கிட்டு வேற ஏரியா வுக்குப் போறதைத் தவிர வேற வழியே எங்களுக்குத் தெரியலை. குப்பையோட துர்நாற்றம், ஃபேக்டரி புகை காரணமா இங்கே நிறையப் பேருக்கு புற்று நோய், நுரையீரல் வியாதி, இருமல், ஆஸ்துமா வந்தி டுச்சு. குழந்தைகள் அடிக்கடி மூச்சுவிட முடியாமல் திணறுவதைப் பார்த்தாலே, பரிதாபமா இருக்கும். திடீர்னு கண்ணீர் கொட்டிக்கிட்டே இருக்கும். இதை மூணு வருடங்களா, பலரிடமும் சொல்லிப் பார்த்துட்டோம். ஒரு பிரயோஜனமும் இல்லை.
எங்க டிவிஷன் துணை மேயர் நடேசனும் மேயர் சவுண்டப்பனும் ஓட்டுக் கேட்க வந்தபோது, இந்தப் பிரச்னையைச் சொன்னோம். 'நாங்கள் ஜெயித்தால், உங்கள் பிரச்னையை உடனே தீர்க்கிறேன்’ என்று இனிக்க இனிக்கப் பேசினார்கள். ஆனால் இப்போது திரும்பிப் பார்க்கக்கூட மறுக்கிறார்கள்'' என்றார் வேதனையாக.
சேலம் கலெக்டர் மகரபூஷணத்திடம் பேசினோம். ''இந்தப் பிரச்னை, கார்ப்பரேஷன் சம்பந்தப்பட்டது என்பதால், நாங்கள் எதுவும் செய்ய முடியாது. எங்களிடம் மனு கொடுத்து இருந்தால்கூட, அதை அப்படியே கார்ப்பரேஷனுக்கு அனுப்பி விடுவோம்'' என்றார். மாநகராட்சி மேயர் சவுண்டப்பனிடம் பேசினோம். ''என்னிடம் இது வரை ஆதாரப்பூர்வமாக எந்தப் புகாரும் வரவில்லை. அப்படி வந்தால், உடனே நடவடிக்கை எடுப்பேன்'' என்றார்.
மக்கள் கொடுத்த மனுக் கள் எல்லாம், 'மணியனூர்’ குப்பைத் தொட்டிக்குப் போயிருந்தாலும் பரவா யில்லை... உண்ணா விரதப் போராட்டம் நடத்துவதுகூடவா ஆட்சியாளர்களுக்குத் தெரியாது?
வீ.கே.ரமேஷ்
படங்கள்: க.தனசேகரன்

ஃபோர்ஜரி கையெழுத்து... சுருட்டப்பட்ட பணம்!

'ஊழல் அற்ற நிர்வாக த்தைக் கொடுக்க நான் எடுக்கும் முடிவுகளுக்கு நீங்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்’ என்று அ.தி.மு.க-வினருக்கு அன்புக் கட்டளை போடுகிறார் முதலமைச்சர். ஆனால், ஊராட்சித் தலைவரின் கையெழுத்தைப் போட்டு சுமார் 2.5 லட்சத்தை லபக்கியதாக சிவகங்கை அ.தி.மு.க. முன்னாள் ஊராட்சித் தலைவர் மீது அதிரடிப் புகார் பாய்ந்திருக்கிறது!
காரைக்குடி அருகில் உள்ள ஆலங்குடி ஊராட்சித் தலைவராக காங்கிரஸ் கட்சியின் கணேசமூர்த்தி இருக்கிறார். இதற்கு முன்பு அ.தி.மு.க-வைச் சேர்ந்த சரவணன், தலைவராக இருந்தார். இந்த ஊராட்சிக்காக காரைக்​குடியில் உள்ள பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் நான்கு வங்கிக் கணக்குகள் உள்ளன. கணேசமூர்த்தியிடம் சரவணன் ஊராட்சிக் கணக்குகளை ஒப்படைத்தபோது, மூன்று கணக்​குகளுக்கான 'செக்’ புத்தகங்களை மட்டும் கொடுத்துவிட்டு, 'திட்டப் பணிகளுக்காக பராமரிக்கப்படும் கணக்கு தொடர்பான 'செக்’ புத்தகத்தில் செக் லீஃப்கள் மீதம் இல்லை’ என்று சொல்லிவிட்டாராம். 
இந்த நிலையில்தான், திட்டப் பணிகளுக்கான வங்கிக் கணக்கில் இருந்து பழைய செக் லீஃப்களைப் பயன்படுத்தி டிசம்பர் 1-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை ஐந்து தவணைகளில் 2.44 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டு இருக்கிறது. தகவல் அறிந்து, 'நான் 'செக்’ கொடுக்கவே இல்லையே... பணம் எப்படி வழங்கப்பட்டது?’ என்று வங்கியில் விசாரித்தார் கணேசமூர்த்தி. பிறகு நடந்தவற்றை அவரே விவரிக்கிறார்.
  ''நான் கேட்டதும், பணம் வழங்கப்பட்டதற்கான செக்குகளை எடுத்துக் காட்டினார் மேனேஜர். 'இதில் உள்ள கையெழுத்து என்னுடையது இல்லையே’ என்று நான் சொன்னதும் வங்கியில் உள்ள என்னுடைய மாதிரிக் கையெழுத்தை எடுத்துப் பார்த்த மேனேஜர், 'ஆமா சார்... கையெழுத்து வித்தியாசமா இருக்கு. உங்க கிளார்க் வந்து கேட்டதால்தான் நம்பிக்கையின் பேரில் கொடுத்துட்டோம்’னு சொன்னார். ஊராட்சி கிளார்க் சித்ராவிடம் கேட்டதுக்கு, 'சரவணன், பணத்தை எடுத்துத்தரச் சொல்லி என்னை மிரட்டியதால் நான் எடுத்துக் குடுத்துட்டேன்’னு கதறுச்சு. அதை அப்படியே எழுதி வாங்கி வங்கி மேனேஜருக்கும் கலெக்டருக்கும் புகாரா எழுதிக் கொடுத்துட்டேன்.உடனே பயந்துபோன சித்ரா, டிசம்பர் 29-ம் தேதி விஷத்தைக் குடிச்சிருச்சு. ஆஸ்பத்​திரியில சித்ராகிட்ட விசாரணை நடத்திய பி.டி.ஓ., சரவணன் மேல போலீஸ்லேயும் புகார் செஞ்சுட்டார். இதையடுத்து, கையாடல் செய்யப்பட்ட மொத்த பணத்தையும் ஜனவரி 3-ம் தேதி சித்ரா மூலமாவே பேங்குல கட்டவெச்சுட்டார் சரவணன்'' என்றார் கணேச மூர்த்தி.
தொடர்ந்து பேசிய மாவட்ட காங்கிரஸ் செயலாளர் நாராயணன், ''சரவணன் ஆளும் கட்சிக்காரர் என்பதால், பிரச்னையை கமுக்கமா மூடி மறைக்கப் பாக்குறாங்க. பணத்தைக் கட்டிட்டா, பணத்தைக் களவாண்டது தப்பில்லைன்னு ஆகிருமா? நாங்க இந்தப் பிரச்னையை விடுறதா இல்லை. சனிக்கிழமைக்குள் சரவணனைக் கைது செய்யலைன்னா, மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்போறோம்''  என்று சீறினார்.
ஊராட்சி கிளார்க் சித்ராவை சந்தித்​தோம். ''சரவணன், 'உனக்கு எந்தப் பிரச்னையும் வராது; பணத்தை எடுத்துக் குடு’ன்னு சொன்னதால்தான் பணத்தை எடுத்துக் குடுத்தேன். கணேசமூர்த்திகிட்ட ஒரு வார்த்தைகூடக் கேட்காம செஞ்சது தப்புத்தான். அதான் மருந்தைக் குடிச்சு சாகப் போனேன். பணம் எடுத்த செக்குகளுக்கு பின்னாடி நான்தான் கையெழுத்துப் போட்டிருக்கேன். அதனால சரவணன் தரப்பில் இருந்து பணத்தை ரெடி பண்ணிக் குடுத்து என்னையவே கட்டவெச்சுட்டாங்க. இதுக்கு மேல என்னை எதுவும் கேக்காதீங்க சார்''  என்று கேவினார் சித்ரா.
குற்றம் சாட்டப்படும் சரவண​னிடம் பேசினோம். ''கணேசமூர்த்திக்கும் எனக்கும் அரசியல் பகை இருக்கு. இந்தத் தடவை அவர் என்னை எதிர்த்து வேட்பு மனு தாக்கல் செய்தபோது, ஏற்கெனவே ஒரு வழக்கில், அபராதம் கட்டி இருக்கும் விஷயத்தைக் காட்டாமல் மறைச்சுட்டார். அதனால், 'இவரது தேர்தல் வெற்றி செல்லாது’னு சிவகங்கை கோர்ட்ல வழக்கு தொடர்ந்து இருக்கிறோம். அதை மனசுல வெச்சுக்கிட்டு என் மீது அபாண்டப் பழி போட்டு அசிங்கப்படுத்தப் பார்க்கிறார். அதற்கு கிளார்க் சித்ராவை ஆயுதமாப் பயன்படுத்துறாங்க. இந்த விவகாரத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பேங்கில் பணத்தை திருப்பிக் கட்டியதும் நான் இல்லை'' என்றார்.
கல்லல் பி.டி.ஓ-வான முருகனோ, ''கணேசமூர்த்தியின் கையெழுத்தை சரவணன் போலியாகப் போட்டு பணம் எடுத்தது உண்மைதான். என்னுடைய ரிலீஸிங் ஆர்டர் இருந்தால் மட்டுமே எந்த செக்கிற்கும் பேங்கில் பணம் கொடுக்கணும். ஆனால், இந்த விவகாரத்தில் ரிலீஸிங் ஆர்டர் இல்லாமலேயே பணத்தைக் கொடுத்து பேங்க் ஊழியர்களும் உடந்தையாக இருந்திருக்காங்க. இது குறித்து கலெக்டருக்கு ரிப்போர்ட் அனுப்பிருக்கேன். போலீஸிலும் புகார் கொடுத்தாச்சு'' என்றார்.
வழக்கை விசாரிக்கும் திருப்பத்தூர் இன்ஸ்பெக்டர் சேதுவிடம் கேட்டதற்கு, ''புகார் தொடர்பாக மேல் நடவடிக்கை எடுப்பது குறித்து ஏ.பி.பி-யிடம் ஒப்பீனியன் கேட்டிருக்கிறேன். அதன் பிறகு சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்'' என்றார்.
குற்றம் மிகவும் நேர்த்தியாக, நுணுக்கமாகச் செய்யப்பட்டு இருக்கிறது. நடவடிக்கையும் கடுமையாக இருக்கட்டும்! 
  - குள.சண்முகசுந்தரம்
  படங்கள்: எஸ். சாய் தர்மராஜ்

''மக்கள் சக்திக்கு மிஞ்சியது எதுவும் இல்லை!''

தொடரும் கூடங்குளம் சீற்றம்
'முல்லைப் பெரியாறு விவகாரத்தால், கூடங்குளம் பிரச்னை மூழ்கி விட்டது’ என்ற பேச்சு பரவலாக எழுந்திருக்கும் நிலையில்... அந்தப் பேச்சுக்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக நடந்து முடிந்துள்ளது, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க மாநாடு. கன்னியாகுமரி அருகே உள்ள கோவளத்தில் கடந்த 29-ம் தேதி நடைபெற்ற மாநாட்டில் திரண்ட கூட்டம் எக்கச்சக்கம்!
அன்றைய தினம் காலையில் தொடங்கியது அறிவரங்கம். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த விஞ்ஞானிகள், அணு உலைகளால் ஏற்படும் ஆபத்துகளை புட்டுப்புட்டு வைக்க... அதைக் கேட்டு, கூடியிருந்த மக்களின் புருவங்கள் நெறிபட்டன. மாநாட்டுக்கு கட்டுக்கடங்காத கூட்டம் வந்திருந்ததால், பந்தல் முழுவதிலும் பெண்களை அமர வைத்துவிட்டு, ஆண்கள் அனைவரும் பந்தலுக்கு வெளியில் நின்றபடியே அரங்க நிகழ்வுகளுக்குக் காது கொடுத்தனர். இடிந்தகரை மக்களின் தொடர் போராட்டத்துக்கு ஆதரவுக்கரம் நீட்டிவரும் அத்தனை இயக்கங்களின் நிர்வாகிகளும் உரையாற்றிவிட்டு அமர, அதன் பின்னரே சிறப்பு விருந்தினர்கள் மைக் பிடித்தனர். இதையடுத்து, மாநாடு மேலும் சூடு பிடித்தது.
மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா பேசியபோது, ''நாராயணசாமி என்றொரு மத்திய அமைச்சர் இருக்கிறார். காமெடி நடிகர் வடிவேலு ஒரு திரைப்படத்தில் கவுன்சிலராக வருவாரே... அதுதான் ஞாபகத்துக்கு வருகிறது'' என்று கிண்டலுடன் தொடங்கியவர், ''கூடங்குளம் அணுஉலையைத் திறப்பதற்காக பல்வேறு அடக்குமுறைகளை, போராட்டக்காரர்களாகிய நம் மீது மத்திய அரசு திணிக்கிறது. போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் உதயகுமார் உட்பட  மூவாயிரத்துக்கும் அதிகமான பேர் மீது வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். இதற்கு அஞ்சுபவர்கள்  அல்ல நாம். உங்கள் போராட்டங்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி எப்போதும் உறுதுணையாக இருக்கும்'’ என்றார் உறு தியோடு.
அடுத்துப் பேசிய மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சோஷலிஸ்ட் யூனிட்டி சென்டர் ஆஃப் இந்தியா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தருண் மண்டல், ''நந்தி கிராமத்தில் டாடா நிறுவனத்துக்காக நிலம் கொடுக்க புத்ததேவ் பட்டாச்சார்யா அரசு முன்வந்தபோது, நாங்கள் மக்களைத் திரட்டி போராடினோம். எங்கள் போராட்டம் வென்றது. அந்தப் போராட்டத்தில் பார்த்த அதே எழுச்சியை, கூடங்குளத்தில் காண்கிறேன். கிராமம் கிராமாகச் சென்று உங்கள் போராட்டக் குழுவை வலுப்படுத்துங்கள். மக்கள் சக்திக்கு மிஞ்சிய சக்தி எதுவும் இல்லை. அரசு எத்தகைய அடக்குமுறைகளைக் கொண்டு வந்தாலும், நமது போராட்டம் வெற்றியை நோக்கித் தொடர வேண்டும்'’ என்று முழங்கினார்.
ம.தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பேச்சில், மத்திய மாநில அரசுகளுக்கான எச்சரிக்கையே மேலோங்கி இருந்தது. ''தமிழக முதல்வரிடம், 'போராட்டம் முடியும் வரை கூடங்குளம் திறக்கப்படாது’ என்று உத்தரவாதம் தந்தவர் மன்மோகன்சிங். அவரே ரஷ்யா சென்றதும், 'கூடங்குளம் திறக்கப்பட்டு விடும்’ எனச் சொல்கிறார் என்றால்..? யாரை ஏமாற்றுகிறார் பாரதப் பிரதமர்?  அல்லது, தமிழக முதல்வரை அவர் மதிக்கவில்லையா? அணு உலைகளைப் பற்றி பேச நாராயணசாமிக்கு என்ன தகுதி இருக்கிறது? இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் உதயகுமார் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இதற்கு விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு, நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். ஒருவேளை, தமிழக அரசு எடுக்கும் முடிவு இந்த மக்களுக்குப் பாதகமாக அமையும் என்றால், தமிழகம் முழுவதும் உள்ள மீனவர்களைத் திரட்டி முற்றுகைப்போர் நடத்துவோம்'’ என்று சீறினார்.
இதுவரை நெல்லை, தூத்துக்குடி மாவட்ட எல்லைகளுக்குள் இருந்த இந்தப் போராட்டம் இப்போது, கன்னியாகுமரி எல்லையைத் தொட் டுள்ளதைப் பார்த்தால் அணுஉலைக்கு எதிரான கொதிநிலை அவ்வளவு எளிதில் அடங்காது என்றுதான் தெரிகிறது!
- பி.கே.ராஜ்குமார்
படங்கள்: ரா.ராம்குமார்

''புயல் கொடுமையைவிட அதிகாரிகள் பண்றதுதான் அநியாயம்!''

தீராத சோகத்தில் கடலூரும் புதுவையும்!
தானே புயல்... கடலூர் மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டுவிட்டது. நேற்று வரை தலை நிமிர்ந்து நடந்தவர்கள், இன்று சொந்த ஊரிலேயே அகதியாகிப்போன சோகத்தில் துடிக்கிறார்கள். குடிநீர் இல்லை... உணவு இல்லை... மின்சாரம் இல்லை... அடிப்படை வசதிகள்கூட இல்லாமல்... அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்று தெரியாமல் தவிக்கும் கடலூர் மக்கள் தங்களின் சோகங்களையும் சொல்ல முடியாத துயரத்தில் இருக்கிறார்கள்!  
பார்த்திபன், ஆட்டோ டிரைவர், வில்வ நகர்: ''புயலால் பாதித்த பகுதிகளைப் பார்க்கிறதுக்கு  தினமும் ஒரு கட்சித் தலைவர் வருகிறார் என்று பேப்பரில் நியூஸ் வருகிறது. ஆனால் உண்மையிலேயே  பாதிக்கப்பட்ட எங்களை யாரும் இதுவரை வந்து பார்க்கவே இல்லை. என்ன வேண்டும் என்று யாரும் கேட்கவே இல்லை. கட்சிக்காரர்களுடன் கூட்டமாக வந்து, ரோட்டைவிட்டுக் கீழே இறங்காமல் போட்டோவுக்கு போஸ் மட்டும் கொடுத்துவிட்டுப் போகிறார்கள். இன்னைக்கு வரைக்கும் எங்க பகுதியில் குடிக்கத் தண்ணி இல்லை, கரன்ட் இல்லை. வெட்கத்தைவிட்டுச் சொல்லணும்னா... வீட்டில் உள்ள பெண்கள் பாத்ரூம் போகக்கூட தண்ணி இல்லாமக் கஷ்டப்படுறாங்க. இதெல்லாம் இந்தத் தலைவர்களுக்குத் தெரியுமா?''
கலா, பெரிய கங்கணாங்குப்பம்:  ''நாங்க பணம் வேணும், பொருள் வேணும்னு கேட்கலைங்க... குடிக்கத் தண்ணிதான் கேட்கிறோம். வயிறு நிறையத் தண்ணி குடிச்சு ஒரு வாரமாச்சுங்க. கரன்ட் இல்லை. மெழுகுவர்த்தி வாங்கலாம்னு கடைக்குப் போனா, ஒரு ரூபாய்க்கு வித்த மெழுகுவர்த்தி ஏழு ரூபாய்க்கு வாங்க வேண்டி இருக்கு. எங்க குடிசை வீட்டைக் காத்து அடிச்சு சாய்ச்சிடுச்சு. அதனால குடும்பமே ரோட்லதான் படுக்கி​றோம். இருட்டுல என்ன வந்து கடிச்சாலும் தெரியாது. எங்க உயிருக்குப் பாதுகாப்பே இல்லை. வேட்டி தர்றோம், புடவை தர்றோம்னு சொல்றாங்க. ஆனா, இதுவரை யாரும் எட்டிப் பார்க்கலை. இந்த வழியா வந்த கலைஞர்கிட்ட எங்க குறையைச் சொல்ல நின்னுக்கிட்டு இருந்தோம். அவங்க கட்சிக்காரங்களும் போலீஸ்காரங்களும் 'தூரமா போ’ன்னு விரட்டி விட்டுட்டாங்க. எங்களை அடிச்சு விரட்டிட்டு, அப்பிடி யாரைத்தான் பார்க்கப் போறாங்களோ?''
கலைமாறன், மீனவர், தேவனாம்பட்டினம்:   ''இந்தப் புயலால் அதிகமா பாதிக்கப்​பட்டது எங்களைப் போல மீனவர்கள்தான். ஃபைபர் படகு​களை எல்லாம் புயல் வந்து ரோட்டுல போட்டுருச்சு. அதை நாங்க தூக்கப் பார்த்தா, படகு ஓட்டையாகி மொத்தமும் வீணாப் போயிடும். அதனால் பொக்லைன் வைச்சு அரசுதான் எடுத்துக் கொடுக்கணும். பெரிய படகை சரிசெய்ய ஐந்து லட்சம் ரூபாயும், சின்னப் படகுக்கு இரண்டு லட்சம் ரூபாயும் செலவாகும். இப்ப சொல்ற நிவாரணத் தொகை எல்லாம் போதாது. இதுதவிர, படகைச் சரி செய்யச் செலவாகும் ஒரு மாதத்துக்கு வேலையும் இருக்காது. சாப்பாட்டுக்கு என்ன செய்யப்போறோம்னே தெரியலை. இதுவரை எந்த அரசியல்வாதியும் வரலை... அதிகாரிகளும் வரலை. இனிமே யாராவது வந்தா, படகில் கட்டிவைக்கத்தான் போறோம்.''
துரை, வியாபாரி, தேவனாம்பட்டினம்: ''எங்க​கிட்ட இருந்த ஒரே ஒரு சொத்து... கூரை வீடுதான். அதுவும் புயலால பிச்சுக்கிச்சு. பொம்பளைப் பிள்ளைகளை வெச்சிக்கிட்டு அடுத்தவங்க வீட்ல போய்த் தங்கவே சங்கடமா இருக்குது. தெருவுல கல் வெச்சு சமைச்சு சாப்பிடுகிறோம். தண்ணி இல்லாம, கரன்ட் இல்லாம படுற வேதனை தாங்க முடியலைங்க. என்னென்ன நோய் வரப்போகுதோன்னு பயமா இருக்குங்க.''
பாஸ்கர், ஆசிரியர், கிளிஞ்சிக்குப்பம்: ''புயல் போய் ஒரு வாரம் ஆன பிறகும் இங்கே எந்த ஒரு சீரமைப்புப் பணியும் நடக்கலைங்க. அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகை, உடனே கிடைக்க ஏற்பாடு செய்யணும். அதுக்குப் பிறகு சேதத்தைக் கணக்கு எடுத்து, அதுக்கேத்த நஷ்டஈடு வழங்கணும். ஆனால்,  என்ன சேதம்னு பார்க்கக்​கூட யாரும் வரலை.''
பிரகாஷ், தொழிலதிபர், கடலூர்:    ''குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்டதும்,  பாதிக்கப்பட்ட இடத்தை பேரிடர் பகுதி என்று மத்திய அரசு அறிவித்தது. அதனால், உலகத்தில் உள்ள அனைத்துவிதத் தொண்டு நிறுவனங்களும் குஜராத் மக்களுக்கு உதவி செய்தார்கள். அதே போல் கடலூர் மாவட்டமும் மழை, வெள்ளம், புயல் என்று அடிக்கடி பாதிப்படைகிறது. இதையும் பேரிடர் மாவட்டமாக மத்திய அரசு அறிவிக்கவேண்டும். அப்போதுதான் எங்கள் துன்பம் தீரும்.''
சிலம்பரசன், விவசாயி, நத்தப்​பட்டு: ''இப்போ ஒரு ஏக்கர் நெல் நடவுச் செலவே பத்தாயிரத்தைத் தாண்டுது. ஆனா, அரசு அறிவித்துள்ள நிவா​ரணத் தொகையானது பயிர் வைக்கிற செலவுக்குக்கூட பத்தாது. இது எப்படி பாதிக்கப்பட்ட விவசாயி​களுக்கு நிவாரணமா இருக்கும்? நெல்லுக்கே இந்த லட்சணம்னா, முந்திரி, பலா, மா, தென்னைகளுக்குச் சொல்லவே வேண்டாம். முதலில், இப்போது அறிவித்திருக்கும் நிவாரணத் தொகையை இருமடங்காக உயர்த்தித் தர வேண்டும். மீண்டும் விவசாயம் செய்வதற்கு, அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.''
கௌரி, கோண்டூர்: ''எங்க ஊர்ல கூரை வீடுகள்தான் அதிகம். மழை வந்தாலும் சரி, வெள்ளம் வந்தாலும் சரி, அவதி எங்களுக்குத்தான். இந்தக் கூரை வீட்டை எல்லாம் மாத்தி, காரை வீடா கட்டிக்கொடுத்தா நிம்மதியா இருப்போம். இப்ப இடிஞ்சு விழுந்த வீட்டுக்கெல்லாம் 5,000  ரூபாய் நிவாரணம் கொடுத்திருக்கிறாங்க... அது எங்களுக்குப் பத்தவே பத்தாது. அந்த நிவாரணத் தொகையை உயர்த்தித் தரணும். இந்த ஊரு மணியக்காரர்கூட எங்களை எட்டிப் பார்க்கலை.''
விடிவே இல்லாத புயல்சேரி!
தானே புயலின் அகோரப் பசிக்கு ஆளான புதுச்சேரியில், ரேஷன் கார்டுக்கு 2000 ரூபாய் கொடுத்ததைத் தவிர, வேறு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், ஏரியா மக்களை சந்தித்துப் பேசினோம்.
ஜஸ்டீன் ஜெயராஜ், தனியார் நிறுவன மேலாளர்:  ''எங்க நிறுவனத்தில் மட்டும் இரண்டு கோடி ரூபாய்க்கு மேல சேதம். அடிச்ச பேய்க்காத்துல ஷெட் அப்படியே விழுந்துடுச்சு. மழை நீர் மெஷினுக்குள்ள போனதால, சரி பண்ண வெளியூர்ல இருந்துதான் ஆட்கள் வரணும். உற்பத்தியை ஆரம்பிக்க எப்படியும் இரண்டு மாதமாவது ஆகும். அதுவரைக்கும் வேலை பார்க்கிற 200 பேருக்கும் என்ன பதில் சொல்றதுன்னே தெரியலை. இந்த கிருமாம்பாக்கம் பகுதியில மட்டும் எங்களைப் போலவே 200 கம்பெனிகள் சேதம் அடைஞ்சிருக்கு. எல்லா நிறுவன வேலை ஆட்களுக்கும் பிரச்னைதான். அரசாங்கம் அறிவிச்ச நிவாரணத் தொகையில், ஒரு வாரம்கூட தாக்குப்பிடிக்க முடியாது. அதுக்கப்புறம் யார் கிட்டப் போய் கையேந்தி நிற்கிறதுன்னு தெரியலை. கம்பெனியை இன்சூரன்ஸ் பண்ணியிருக்கோம்... அவங்க இழப்பீட்டுத் தொகை கொடுக்கவும் பல மாசங்கள் ஆயிடும். கோடிக்கணக்கில் வரி செலுத்துற எங்களைப் போல நிறுவனங்களுக்கு முதலில் மின்சாரம் கொடுக்கணும். விரைவில் இன்சூரன்ஸ் பணம் கிடைக்க அரசு ஏற்பாடு செய்யணும்.''
சந்திரசேகர், விவசாயி, பாகூர்: ''எங்க ஊர் அழகா, ரம்மியமா ரெண்டு பக்கமும் மரங்களும் செடியுமா இருக்கும். இப்ப ஒண்ணுமே இல்லை. புயல் இங்கேதான் கரையைக் கடந்தது. அதனால நெல்லு, கரும்பு, வாழை, தென்னை, மல்லாட்டை, காய்கறின்னு எதுவுமே மிஞ்சலை. ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நாசமாப் போச்சு. ஆனாலும், விவசாய நிலங்களுக்கு நஷ்டஈடு எவ்வ​ளவுன்னு அறிவிக்கவே இல்லை. எங்கள் பகுதிக்கு மின்சாரம் வர, இன்னும் பத்து நாளாகும்னு சொல்றாங்க.
காங்கிரஸ் ஆட்சி இருந்தா, உடனே நிதி கிடைச்சிருக்கும். ரங்கசாமிக்கும் காங்கிரஸுக்கும் ஒத்துவரலை. அதனால நாங்கதான் பாதிக்கப்படுறோம். ஏக்கருக்கு 10,000 ரூபாயாவது நஷ்ட ஈடு கொடுக்கணும். இல்லைன்னா நாங்க உயிர் பிழைக்கவே முடியாது.''
ஆனந்தி மணிவண்ணன், பாகூர்:  ''புயல் எங்க வீட்டுக் கூரைகளை எல்லாம் பிச்சிக்கிட்டுப் போயிடிச்சு. ஓடி ஒளிய ஒரு கல் வீடுகூட இல்லாம ரோட்டு​லேயே எல்லாரும் கிடந்தோம். மழையில நனைஞ்சி சின்னப் பிள்ளைங்க எல்லாம் உடம்பு சரியில்லாம இருக்குதுங்க. சாப்பாடு இல்லாமலும், பெண்களுக்கு மாத்துத் துணி இல்லாமலும் தவிக்கிறோம். இதுவரைக்கும் எந்த ஒரு அதிகாரியும் சட்டமன்ற உறுப்பினரும் எங்களை வந்து பார்க்கவே இல்லை. முதல்வர் அறிவிச்சிருக்கும் 2000 ரூபாயில வீட்டை சரி பண்றதா, இல்லைன்னா சாப்பாட்டுக்கு வழி பண்றதான்னு தெரியலைங்க.  எங்களுக்கு வீடு கட்ட பணம் வேண்டாம். அரசே கட்டிக் கொடுத்தா கோடி புண்ணியமாப் போகும்.''
சந்துரு, நடைபாதை வியாபாரி:  ''சுனாமியை விட அதிகமான சேதத்தை இந்தப் புயல் புதுச்சேரிக்கு ஏற்படுத்தியிருக்கு. விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் பெருத்த நஷ்டம். அவங்களுக்கு இதுவரைக்கும் எந்த நிவாரணமும் அறிவிக்கப்படவே இல்லை. மின்சாரம் கொடுக்க முடியாம அரசு திண்டாடுறதுக்குக் காரணம் போதிய ஆட்கள் இல்லைங்கிறதுதான். முதலில் மின்துறை, பொதுப்பணித் துறை, வருவாய்த் துறை போன்ற துறைகளில் உள்ள காலி இடங்களை நிரப்பணும். பல இடங்களில் மக்கள் காட்டுவாசிங்க மாதிரி வாழ்ந்துட்டு இருக்காங்க. ஆனா, எம்.எல்.ஏ.வோ, அமைச்சரோ  எட்டிப்​பார்க்கவே இல்லை.''
முனுசாமி, கைவினைக் கலைஞர்:'மண்ண நம்பி பொழைக்கிற எங்க வாழ்க்​கை​யைப் புரட்டிப் போட்டிருச்சு இந்தப் புயல். ஆரோவில் பகுதியில் உலகத்தரம் வாய்ந்த மண்ணால் செய்யப்பட்டிருந்த கலைப் பொருட்கள் எல்லாமே சேதமாயிடுச்சு. எங்களைப் போல கலைஞர்களின் வீட்டுக் கொட்டகைகள் காத்துல போயிடுச்சு. வெள்ளத்தால எங்க கலைப்பொருட்கள் எதுக்கும் உதவாததா போயிடுச்சு.  புதுச்சேரியில் 2000 கைவினைக் கலைஞர்கள் இருக்கோம். எல்லாருமே மண்ணை மூலப்பொருளா வைச்சு கலைப்பொருள் செய்ற வங்கதான். எங்களுக்கு ஏற்பட்ட சேதத்தை கணக்கிட யாரும் வரலை.  புதுச்சேரி பேரிடர் மேலாண்மைத்துறை என்ன பண்ணுதுன்னு தெரியல. மாவட்டத் தொழில் மையம் மூலம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.''
க.பூபாலன், நா.இள.அறவாழி
படங்கள்: எஸ்.தேவராஜன்,   ஆ.நந்தகுமார்   
''விவசாயிகள் என்ன பிச்சைக்காரர்களா...?''
ஆவேச தங்கர் பச்சான்
 புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டக் கிராமங்களுக்கு முதல் ஆளாகப் பதறியடித்து சென்று,விவசாயிகளின் துயரத்தைப் பார்த்துத் துடித்தவர், சினிமா இயக்குநர் தங்கர்பச்சான். அந்த சோகங்களைக் கடந்த இதழில் நம்மிடம் பகிர்ந்துகொண்டார். கடந்த ஒரு வாரத்தில் அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து மீண்டும் அவரிடம் பேசினோம்.
'இது தனிப்பட்ட தங்கர்பச்சானின் கருத்து அல்ல. 'தானே’வால் தாளிக்கப்பட்ட மக்களின் உள்ளக் குமுறல். புயல் தாக்கி நான்கு நாட்களுக்குப் பிறகே அனைத்துக் கட்சித் தலைவர்களும் கடலூரை எட்டிப் பார்த்தனர். இடைத்தேர்தல் என்றால், ஆட்சியில் இருக்கும் கட்சியின் 30 அமைச்சர்களும், நாடாளு​மன்ற உறுப்பினர்களும் அந்தத் தொகுதியை சுற்றி மொய்க்​கிறீர்களே... அந்தப் பாசத்தை இப்போது காட்டி இருக்க வேண்டாமா? இதைவிட வேதனையான விஷயம்... அரசாங்க அதிகாரிகளுக்கே பாதிப்பின் முழு வீரியம் தெரியாததுதான்.
கடலூர், விழுப்புரம், நாகை மாவட்டங்களில் பெயரளவில் சில இடங்களுக்கு மட்டும் போய் ஆய்வு நடத்திவிட்டு, பாதிப்புகள் குறித்து பட்டியல் கொடுக்கிறார்கள். எந்த ஓர் அதிகாரியும் கிராமங்களில் உள்ள பாதிப்புகள் குறித்து கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஒட்டுமொத்த அதிகாரிகளும் முதல்வரை ஏமாற்றுகிறார்கள். புயலால் உழவனுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மிகக் கொடுமையானவை. கிராமத்தில் உள்ள மக்கள் இருக்கிறார்களா... செத்தார்களா என்றுகூடத் தெரியாத அளவுக்குத் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. எந்த அதிகாரியையும் நம்பாமல்... படை பரிவாரங்களை அழைத்துச் செல்லாமல், தனியே சென்று முதல்வர் ஆய்வு நடத்த வேண்டும். அப்போதுதான் உண்மை தெரியும்.
ஆய்வுக்குப் போன ஒரு வட மாநில அதிகாரி, 'முந்திரி என்பது ஒரு கிழங்கா?’ என்று கேட்டு இருக்கிறார். இதுதான் ஆய்வின் லட்சணம். சொந்தப் பிள்ளையை பாதுகாப்பது போல் மரங்களைக் கண்ணும் கருத்துமாக வளர்த்தான் விவசாயி. அத்தனையும் அழிந்து விட்டன. நான் ஆய்வு செய்த வரையில் 80 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஏக்கர் வரையில் முந்திரிக்குப் பாதிப்பு. கிட்டத்தட்ட 40 ஆயிரம் பலா மரங்கள் சரிந்து விட்டன. ஓர் ஆண்டுக்கு ஒரு ஏக்கர் முந்திரியில் இருந்து குறைந்தது 40 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். ஒரு பலா மரத்தில் இருந்து வருடத்துக்கு 3,000 ரூபாய் வரையில் வருமானம் கிடைக்கும். திரும்பவும் ஒரு பலா மரத்தை வளர்க்க வேண்டும் என்றால், 12 ஆண்டுகளாவது ஆகும். ஆனால், இந்த வருடத்துக்கு மட்டும் ஒரு ஏக்கருக்கு அரசாங்கம் 3,000 ரூபாய் கொடுக்கப்போவதாகச் சொல்கிறார்கள். எந்த விவசாயியும் இதை வாங்க மாட்டான். வாங்கவும் கூடாது. விவசாயிகள் என்ன பிச்சைக்​காரர்களா? உழவனைப் பாதுகாக்காமல் உணவைப் பாதுகாக்க முடியாது. 'பாதிக்கப்பட்ட எங்களுக்கு, முறையான தண்ணீர், இருப்பிட வசதி செய்து கொடுங்கள்... உடனடியாக எங்கள் விவசாயத்துக்குத் திட்டமிடுங்கள்... எங்கள் குழந்தைகளுக்கு காலையிலும் பள்ளியில் உணவு போடுங்கள்’ என்பதுதான் பாதிக்கப்பட்டவர்களின் எதிர்பார்ப்பு. அரசு இயந்திரம் இதைச் செய்யத் தவறினால், ஒட்டுமொத்த விவசாயிகளையும் ஒன்று திரட்டி மாபெரும் போராட்டம் நடத்துவேன். அது, நக்சல் பூமி என்பது நினைவில் இருக்கட்டும்!’.
- தி.கோபிவிஜய்

'போலாம் போ... ரைட்!'

சகஜ நிலைக்குத் திரும்பும் முல்லையோரக் கிராமங்கள்!
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தால், கலவர நிலையில் இருந்த தேனி - இடுக்கி எல்லையோரப் பகுதிகள், மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்புகின்றன. ஒரு மாதத்துக்கும் மேலாக இரு மாநிலங்களுக்கும் இடையே வாகனப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டதால், ஏகப்பட்ட நஷ்டம்.  
சின்னமனூர் வட்டாரக் காய்கறி மார்க்கெட் சங்கத் தலைவர் சங்கிலியிடம் பேசியபோது, ''கேரளாவுக்குக் காய்கறி, பழங்கள் அனைத்தும் கம்பம், சின்னமனூர், ஒட்டன்சத்திரம் பகுதிகளில் இருந்துதான் செல்லும். முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தைத் தொடர்ந்து, அனைத்து வியாபா ரிகளும் கேரளாவுக்குச் சரக்கு அனுப்புவதை நிறுத்தி​விட்டார்கள். அதனால், கம்பம்மெட்டு, ராமக்கல் மெட்டு, போடிமெட்டு, தேவாரம் பகுதிகள் வழியாக சிலர் கழுதைகளில் காய்கறி​களைக் கடத்திப்போன சம்பவங்கள் எல்லாம் நடந்தது. இப்போது, போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டதை அடுத்து, கேரள வியாபாரிகள் கம்பம், சின்னமனூர் பகுதிகளுக்கே வந்து பொருட்களை வாங்குகிறார்கள். என்னதான் வியாபாரம் நடந்தாலும், முல்லைப் பெரியாறு அணைக்கு நிரந்தரத் தீர்வு அளிக்கப்பட்டால்தான், வியாபாரிகளுக்குள் சுமூகமான உறவு நீடிக்கும்'' என்றார். 
கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் சங்கச் செயலாளர் ஓ.ஆர்.நாராயணன், ''வழித்தடங்களைத் திறந்துவிடுவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. கேரள மக்கள் நம் விவசாயிகளின் வலிகளைப் புரிந்து கொண்டால் போதும். அவர்களைக் காயப்படுத்துவதற்காக நாங்கள் போராட்டம் நடத்தவில்லை. தண்ணீருக்காகத்தான் நடத்தினோம். இனியும் அவர்கள் தவறான முடிவுகள் எடுத்தால், கேரளா தாங்காது'' என்று எச்சரிக்கை செய்தார்.
தேனி மாவட்டக் கலெக்டர் பழனிச்சாமியிடம் பேசினோம். ''இரண்டு மாநிலங்கள் சார்பாக, இரண்டு மாவட்டங்களில் உள்ள அரசு அதிகாரிகளும் குமுளியில் கூட்டம் போட்டுப் பேசினோம். அந்தக் கூட்டத்தில், வாகனங்களைப் பிரச்னை இல்லாமல் பாதுகாப்பாக அனுப்புவது குறித்தும் பயணிகள் பாதுகாப்பு பற்றியும் விவாதித்தோம். இரண்டுமாநிலங்களுக்கும் இடையே வாகனங்கள் இயக்கப்பட்டதால்... இரு தரப்பு மக்களும் பயன் அடைகிறார்கள்'' என்றார்.
இடுக்கி மாவட்ட கலெக்டர் தேவதாசன், ''இரண்டு மாவட்டங்களிலும் உள்ள நிர்வாகிகள் கலந்து பேசியதன் விளைவாக, 4-ம் தேதியில் இருந்து பஸ் போக்குவரத்து தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள், மாணவர்கள், விவசாயிகள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் பயன்அடைகிறார்கள். இங்கு வரும் பயணிகளுக்கு முழுமையான பாதுகாப்பும் வழங்கப்படும்'' என்றார் உறுதியாக.
இந்தநிலையில், தென்மாவட்ட வழக்கறிஞர்கள், குமுளி நோக்கிச் சென்று போராட்டம் செய்யப்போவதாக அறிவித்து பரபரப்பைக் கிளப்புகிறார்கள். இதுகுறித்துப் பேசும் தேனி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் முத்துராமலிங்கம், ''தென் தமிழகத்தில் உள்ள ஐந்து மாவட்ட வழக்கறிஞர்களும் இணைந்து, தேனியில் 12-ம் தேதி கேரள அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம்'' என்று அடுத்தக் கட்ட போராட்டத்துக்கும் திரி கொளுத்திப் போட்டார். நடிகர்_ நடிகையர் தேனி சென்று உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் அறிவித்து உள்ளார்கள். எனவே, பொங்கல் பண்டிகையை ஒட்டி மீண்டும் பதற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
தமிழகத்துக்கு நியாயம் கிடைக்கும் வரையில்... முல்லைப் பெரியாறு போராட் டம் முடியாது!
சண்.சரவணக்குமார்
படங்கள்: வீ.சிவக்குமார், சக்தி அருணகிரி
அணைக்காக இன்னும் ஓர் உயிர்
முல்லைப் பெரியாறுக்காக ஏற்கெனவே மூன்று பேர் உயிர்த் தியாகம் செய்துள்ள நிலையில், கடந்த 2-ம் தேதி மதியம் சின்னமனூரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துள்ளார். எட்டாவது வரையில் படித்துள்ள மணிகண்டன், 'முல்லைப் பெரியாறு’ விவகாரம் எல்லைகளில் கொளுந்துவிட்டு எரிந்தபோது தமிழகத்துக்கு வர முடியாமல் இடுக்கி - கட்டப்பனையில் உள்ள ஏலக்காய் எஸ்டேட்டில் தவித்துள்ளார். அப்போது, தமிழர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல்களை நேரில் பார்த்து மனம் உடைந்து போயிருக்கிறார். நிலைமை ஓரளவுக்கு சீரானதும் கடந்த 1-ம் தேதிதான் சின்னமனூருக்கு வந்தார். வந்ததில் இருந்தே, 'முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரளத்தினர் நம்மை நன்றாக ஏமாற்றுகிறார்கள்’ என்று புலம்பிக்கொண்டே இருந்தவர் திடீரென தற்கொலை முடிவை எடுத்துள்ளார்!

எந்த மின் நிலையம் இந்தியாவுக்குத் தேவை?

ஏ.வி.எம். ஹாஜா
ண்மையில் தென் கொரியாவின் குவான்​கிஜு நகரில் நடந்தது ஒரு மாபெரும் மாநாடு. உலகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த பல விஞ்ஞானிகளும் சமூக ஆர்வலர்களும் அங்கே விவாதித்தது, எதிர்கால உலகத்துக்குத் தேவையான மாற்று (எரி)சக்தி பற்றி. குறிப்பாக, நீர் மற்றும் அனல் மின்உற்பத்தி நிலையங்கள் மூலம் கிடைக்கும் மின்சாரத்தின் தட்டுப்பாடு கூடிக்கொண்டே வரும் நிலையில்... சூரிய ஒளி உள்ளிட்ட வேறு என்னென்ன வகைகளில் மின்சாரத்தைப் பெறுவது கட்டுப்படியாகவும் சாத்தியமாகவும் இருக்கும் என்பதே விவாதத்தின் முக்கியப் பொருள்!
மலேசியாவைச் சேர்ந்த சமூக ஆர்வலரான ஏ.வி.எம். ஹாஜா, இந்த மாநாட்டில் கலந்துகொண்டஆராய்ச்சியாளர்களில் ஒருவர். 'சூரிய - காற்று - பூமி மறுசுழற்சி சக்திகள்' என்பது இவர் அங்கே சமர்ப்பித்த ஆய்வுரை. கூடங்குளம் உட்பட உலகின் பல பாகங்களிலும் அணு உலைகளுக்கு எதிராகக் கவலைகள் நிலவி வரும் நிலையில், இந்தியாவின் இப்போதைய வளர்ச்சி நிலை, எதிர்காலத் தேவைகள் மற்றும் மின்சார உற்பத்தியில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களை இந்தக் கட்டுரையில் அவர் விவாதித்து உள்ளார்.
அதன் சாராம்சம் இதுதான்...
''கதிரியக்கத்தை அணு உலைகள் உண்டாக்குவது குறித்து விழிப்பு உணர்வுப் பிரசாரங்கள் நடந்து வரும் அதே சமயம், தினந்தோறும் நம்மைச் சுற்றி இயற்கையான கதிரியக்கங்கள் நிகழ்ந்துகொண்டே இருப்பதையும் அறிய வேண்டும். காற்றில், மண்ணில், பாறைகளில்... ஏன் நம் உடம்பிலேயே கதிரியக்கப் பொட்டாசியம் இருக்கிறது. இன்னொரு மனிதன் அருகே நீங்கள் தூங்கும்போது கதிரியக்கம் 10 விழுக்காடு அதிகமாகிறது. விடுமுறையை நீங்கள் கடற்கரையில் கழிக்கும்போது, அங்கே இருந்து வெளியாகும் கதிரியக்கம், நீங்கள் தூங்கும்போது உருவாகும் கதிரியக்கத்தைவிட இரண்டு மடங்கு இருக்கும். ஒரு கிலோ நிலக்கரி சாம்பலில் மட்டும் 2000 Bq ( கதிரியக்க அளவு) இருக்கிறது.
இன்னொரு செய்தி - உலகில் இயற்கையாகவே அதிக கதிரியக்கம் உள்ள இடங்களில் கேரளா ஒன்றாக கூறப்பட்டுள்ளது. ஈரான் உள்ளிட்ட இந்தப் பகுதிகளில் ஒரு மனிதன் ஒரு வருடத்துக்குசராசரியாக 15 மில்லி சிவ்வெர்ட் அளவுக்கு காமா கதிரியக்கத் தாக்கத்துக்கு ஆளாகிறான்  என்று கணக்கிடப்பட்டு இருக்கிறது (ஆதாரம்: Natural Background Radiation) இது இயற்கை கதிரியக்க அளவைவிட எட்டு மடங்கு கூடுதலாகும்.
எது இருப்பினும், கதிர் வீச்சின் பயத்தோடு நாம் ஏன் வாழ வேண்டும்... அதனைத் தவிர்க்க முடியாதா? வேறு மின் நிலையங்கள் மூலமாக நம் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாதா என்ற எண்ணம் மிகச் சரியானதே!
இருப்பினும், இது செயலாக்கப்படுவதில் உள்ள யதார்த்தங்களையும் கவனித்தாக வேண்டும்.
1. அனல் மின் நிலையங்கள்: அனல் மின் நிலையங்கள் நிலக்கரி, இயற்கை எரிவாயு, டீசல் போன்ற எரிபொருட்களை உபயோகிப்பவை. இந்தியாவில், பூமிக்கு அடியில் 92 பில்லியன் டன் நிலக்கரி புதைந்து இருக்கிறது. 217 வருடங்களுக்குப் போதுமான தடை இல்லாத சப்ளை இது. ஆனால், பூமிக்கு அடியில் புதைந்திருக்கும் நிலக்கரியை எல்லா இடங்களிலும் தோண்டி  எடுக்க முடியாது. அப்படி எடுத்தால், காடுகள், கிராமங்கள், நகரங்கள் பல வகைகளிலும் பாதிக்கப்படும். வருடந்தோறும் 397 மில்லியன் டன் நிலக்கரியை இந்தியா வெட்டி எடுக்கிறது. ஆனாலும், நூற்றுக்கணக்கில் இருக்கும் அனல் மின் நிலையங்களுக்கு இது போதவில்லை. 37 மில்லியன் டன் இன்னும் தேவையாக இருக்கிறது. இதனாலேயே, இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதியும் செய்யப்படுகிறது.
உலகிலேயே நிலக்கரி உற்பத்தியில் மூன்றாவது இடத்தில் இருக்கும்  இந்தியாவுக்கே இந்த அளவுக்குப் பற்றாக்குறை. இந்த நிலையில்  இன்னும் 173 அனல் மின் நிலையங்களை இந்தியா கட்ட இருக்கிறது!
நிலக்கரி தோண்டி எடுத்ததில் இருந்து அது அனல் மின் நிலையங்களுக்கு சென்று சேரும் வரை... போகும் வழியெல்லாம் தூசியையும் சாம்பலையும் காற்று மண்டலத்தில் பரப்பிக்கொண்டே போகிறது. நிலக்கரி சுரங்கங்களில் வேலை செய்பவர்கள் மற்றும் அதன் அருகே வசிப்பவர்களின் ஆயுள் சரா​சரி​யாக 10 வருடங்கள் குறைவதாக 'இந்திய ஆரோக்கிய ஆய்வு'க் குழு கவலை தெரிவித்து இருக்கிறது. நிலக்கரியை மின்நிலையங்கள் எரிக்கும்போது 88% கரியமில வாயுவை அது காற்று மண்டலத்தில் கலக்கிறது. இதனால், அனல் மின் நிலையங்களில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரம் வரை வசிப்பவர்கள் நுரையீரல் நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். அணு உலைகளில் பயன்படும் யுரேனியத்தின் ஒரு கிலோ கிராம் எரிப்பு என்பது 5,000 டன் நிலக்கரி எரிப்புக்கு சமமான எரிசக்தியை அளிக்கிறது. 
2. நீர் மின் நிலையங்கள்: புகை கக்காத மின்உற்பத்தி என்றால் நீர் மின் நிலையத்தைச் சொல்லலாம். இந்தியாவில் 21.53% மின்சாரம் நீர் மின் நிலையங்களில் உற்பத்தி ஆகிறது. ஆனால், இவற்றை இன்னும் எத்தனை காலத்துக்கு, எந்த அளவுக்கு நம்பியிருக்க முடியும்? நீர் மின் நிலையங்களுக்கு ஆறுகள் தேவை; பெரும் அணைக்கட்டுகளும் தேவை. இந்தியாவின் பெரும்பான்மை ஆறுகள், பருவ கால மழையை நம்பி இருப்பவை. அணைக்கட்டுகளின் தண்ணீர் மட்டம் குறைந்தால், மின் உற்பத்தியில் தடை ஏற்படும். 
மேலும், புதிய அணைக்கட்டுகளை அமைப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுவதையும் கவனிக்க வேண்டும். புதிய அணைகளுக்கு இடம் கொடுத்துவிட்டு, தலைமுறை தலை​முறையாக அங்கு வாழும் மக்கள் இடம் பெயர வேண்டி வரும். வளமான காடுகள் இந்தத் திட்டங்களுக்காக அழிய வேண்டியிருக்கும். இதையெல்லாம்விட, நீர் மின் நிலையங்களைக் கட்டுவதற்கான செலவு மற்ற மின் நிலையங்களைவிட மூன்று மடங்கு கூடுதலானது!
3. காற்றாலை மின்சாரம்:  இந்தியாவில் இப்பொழுது காற்றாலைகள் 12,000 மெகா வாட்ஸ் மின்உற்பத்தி செய்கின்றன. காற்றாலைகள் மின் உற்பத்தியைத் தொ​டர்ச்​சி யாகக் கொடுக்க முடியாது.  'காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்’ என்ற பழமொழி இதற்கு நன்றாகவே பொருந்தும்.  அதோடு காற்றாலை அமைப்பதற்கு மற்ற மின் நிலையங்களைவிட நான்கு மடங்கு அதிகமான பரந்தவெளி தேவை. மகாராஷ்டிராவின் மேற்கு மலைத் தொடர் அருகே 194.66 ஹெக்டேர் நிலத்தில் 442 டர்பைன்களைக்கொண்டு 113 மெகா வாட்ஸ் மின் உற்பத்தி செய்யும் திட்டம் தயாரானது. அந்த இடம் பறவைகள் சரணாலயம் என்பதால், மக்கள் பெரும் எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். அந்தக் காற்றாலை அமைக்க மூன்று லட்சம் மரங்கள் வெட்டப்பட்டதும் கண்டனத்துக்கு ஆளானது.
4. சோலார் அல்லது  சூரிய மின் அமைப்புகள்: இவற்றுக்கும் பெரிய இடங்கள் தேவையாக இருக்கின்றன. இதை அமைப்பதற்கான செலவும் அதிகம். ஒரு மெகா வாட் உற்பத்தி செய்ய ஐந்து ஏக்கர் நிலம் தேவையாக இருக்கிறது. தொடர்ச்சியான மின் உற்பத்தியை சோலார் தகடுகளால் தர முடியாது. மேகமூட்டம், மழைக்காலம், இரவு போன்ற சமயங்களில் மின் உற்பத்தியை எதிர்பார்க்க முடியாது. பாலைவனங்கள் சூரிய சக்தி உற்பத்திக்கு உகந்த இடமாகக் கருதப்படுகிறது. அதே நேரத்தில் பாலைவனத்தில் காற்று கொண்டுவந்து கொட்டும் புழுதி மண், சோலார் தகடுகளை முற்றாக மூடிவிடும் என்பதால் பராமரிப்புச் செலவு அதிகரிக்கும்.
ஒரு பக்கம் மின்வெட்டால் பாதிக்கப்படுவர்களின் பரிதாபக் குரல்கள்; மறு பக்கம் மின் நிலையங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு. இந்தியா, தேவைக்கும் எதிர்ப்புக்கும் இடையிலான நிலையில் உள்ளது.  மின்சாரம் இல்லாத நாட்டில் எப்படி வெளிநாட்டு தொழிற்சாலைகள் இயங்க முடியும்?
அண்மையில்கூட ஜப்பான் வணிக வெளியுறவுக் கழகம் விடுத்த அறிக்கையில்... மின் உற்பத்தி நிலையைக் காட்டி, 'புதிய தொழிற்​கூடங்கள் அமைக்க இந்தியா சாதகம் இல்லாத நாடு’ என்று அறிவித்து இருக்கிறது. தென் கொரியாவும், தமிழ்நாட்டில் தொடர்ந்து தொழிற்சாலைகள் அமைப்பது சரிதானா என்று யோசிக்கிறது. இவற்றை எல்லாம் மனதில்கொண்டு பார்க்கும்போது... எப்படிப்​பட்ட மின் உற்பத்தி 'ஸ்ட்ராட்டஜி'யை இந்தியா மேற்கொள்ள வேண்டும் என்பதில் பாரபட்சமற்ற ஒரு திட்டமிடல் தேவையாக இருக்கிறது.
வளரும் நாடான இந்தியா ஒரே கூடைக்குள்ளேயே மின் உற்பத்திக்கான மொத்தத் தீர்வையும் வைத்திருந்தால், அது சிக்கலில் போய் முடியும்! அணு உலைகள் குறித்த எச்சரிக்கை உணர்வைக் காட்டும் அதே நேரத்தில், ஏதாவது ஒரு குறிப்பிட்ட வகை மின் உற்பத்தியை மட்டுமே எதிர்காலத்தில் நம்பி இருப்பது தொழில் முடக்க ஆபத்தைக் கொண்டுவந்து விடும். ஒரு வகை எரிபொருள் உற்பத்தி தடைபட்டாலும், மற்றொரு வழியில் மின் உற்பத்தி நடந்துகொண்டே இருக்க வேண்டும்.
தொழில் வளர்ச்சி அதிகரிக்கவும், வாழ்க்கைத் தரம் உயரவும் முக்கியக் காரணியாக இருப்பது... இருக்கப்போவது மின்சாரம்தான். இந்தியாவின் தேவையை தொலைநோக்கோடு பார்த்துக் கணக்கிட்டால், அனல் மின் நிலையங்கள் 50%,  நீர் மின் நிலையங்கள்  20%, அணு மின் நிலையங்கள் 15% மற்றும் மறுசுழற்சி மூலமாக மின் உற்பத்தி 15%  என்ற விகிதாசாரத்தில் இருந்தால்தான், இந்தியாவின் மின் உற்பத்தி தடையின்றி இருக்கும். 
இத்தகைய சீரான திட்டமிடுதலுடன் நாம் பயணம் செய்தால் மட்டுமே... வரும் காலம் வெளிச்சமாக இருக்கும்!

பலாச் சுமை

சென்னைக்கும் மன்னார்குடிக்கும் பறந்த கார்கள்... பைலட்டாக இவர்கள்!

தூக்கியடிக்கப்பட்ட போலீஸ் பின்னணி
காவல் துறையில் கருணாநிதி போலீஸ், ஜெயலலிதா போலீஸ் என்று இரண்டு பிரிவினர் உண்டு என்பது தெரியும். ஆனால், சசிகலாவுக்கும் தனியே, 'சின்னம்மா போலீஸ்’ என்று இருக்கிற விஷயம் தெரியுமா? அதனால்தான்,  21  அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டு உள்ளார்கள். 
அ.தி.மு.க. அரசில் புதிதாக ஒரு மந்திரி நியமிக்கப் பட்டதும், 'நான் பழனிவேல் ஐயா சிபாரிசு' என்ற அறிமுகத்துடன் ஒருவர் வருவார். 'நான் இன்னையில் இருந்து உங்களுக்கு செக்யூரிட்டி ஆபீஸர்' என்று சல்யூட் அடிப்பார். அடுத்த நிமிடம், அமைச்சரின் செல்போனுக்கு அழைப்பு வரும். மறுமுனையில் பேசியவரிடம், 'ஓகே சார்.. இதுவரை நானாக கேட்டு வாங்கினது போலவே இவர் பெயர் விவரங்களை இப்பவே முதல்வர் ஆபீஸுக்கு சிபாரிசு பண்ணிவிடுகிறேன்' என்று தலையாட்டுவார் அமைச்சர். இப்படித்தான் ஒவ்வோர் அமைச்சரிடமும் நடராஜனின் சகோதரர் பழனிவேல் மூலம் செக்யூரிட்டிஆபீஸர்கள் போய் ஒட்டிக்கொண்டனர். இவர்கள் முக்கால்வாசிப் பேர் மன்னார்குடி ஏரியாவைத் தங்களின் பூர்வீகமாகக் கொண்டவர்கள். இவர்கள் தங்களை, சசிகலாவின் உறவுக்காரர்கள் என்று சொல்லிக்கொண்டனர்.
பழனிவேல் ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரி என்பதால், அவருக்கு நன்கு தெரிந்த வேறு சிலரையும்கூட செக்யூரிட்டி ஆபீஸர்களாக சில அமைச்சர்களிடம் சேர்த்துவிட்டார். பொதுவாக, ஓர் அமைச்சருக்கு மூன்று பேர் வரை செக்யூரிட்டி ஆபீஸர்கள் இருக்கலாம். அவர்களில் ஒருவர் பழனிவேல் சேனல் மூலம் வந்தவர். மற்ற இருவர் அமைச்சரின் சாய்ஸ். ஆனால், வீட்டுவசதி வாரியத் துறை அமைச்சர் வைத்தியலிங்கம் தஞ்சாவூர்காரர் என்பதாலோ என்னவோ, அவருடைய மூன்று செக்யூரிட்டி ஆபீஸர்களும் மேற்படி சேனலில் வந்தவர்கள்.
'அம்மாதான் நமக்குச் செக் வைக்க இப்படி செக்யூரிட்டி ஆபீஸர் அனுப்பி இருக்கிறாரோ?' என்று அமைச்சர்கள் அப்போது பேசிக்கொண்டனர். அதனால், பழனிவேல் அனுப்பிய செக்யூரிட்டி ஆபீஸர்களைக் கண்டாலே, அமைச் சர்கள் கொஞ்சம் பயம் கலந்த மரியாதை காட்டுவார்கள். இந்த செக்யூரிட்டி ஆபீஸர்களுக்கு இடப் பட்ட பணி - அமைச்சரின் 24 மணி நேர நடவடிக்கைகளை உடனுக்குடன் பழனிவேல் சேனலுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பதுதான். இவர்கள் சொல்லும் தகவல்களை வைத்து, பழனிவேலு பக்கம் இருந்து அவ்வப்போது விசாரணை நடைபெறுவதும்... அமைச்சர்களை அலற வைப்பதும் நடக்குமாம்.
சசிகலா அண்டு கோ-வை கடந்த டிசம்பர் 15-ம் தேதி கட்சியைவிட்டு நீக்கிய பிறகு, இந்தச் சேனலில் வந்தவர்களின் பின்னணியை உளவுத்துறை போலீஸார் உன்னிப்பாகக் கவனித்து வந்தார்கள். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகும், இவர்கள் சேனலுடன் தொடர்பில் இருந்ததை செல்போன்கள் காட்டிக் கொடுத்து விட்டன. அதைத் தொடர்ந்துதான், அமைச்சர்களின் செக்யூரிட்டி ஆபீஸர்கள் 21 பேர் ஒரே நேரத்தில் கூண்டோடு மாற்றப்பட்டார்கள்.
அமைச்சர்கள் செங்கோட்டையன், நத்தம் விசுவ நாதன், சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, மாதவரம் மூர்த்தி, பழனியப்பன், பச்சைமால், சுந்தர்ராஜ், வைத்தியலிங்கம் உள்ளிட்ட 14 பேரின் பாது காவலர்களாகப் பணிபுரிந்தவர்களுக்கு முதல் கட்டமாக கல்தா தரப்பட்டதன் முழு விவரங்களும் தற்போது தெரிய வந்துள்ளது.  அமைச்சர் வைத்திய லிங்கத்திடம் பணி புரிந்த மூன்று பேருமே  மாற்றப்பட்டு உள்ளார்கள். பழனிவேல் சேனல் தவிர, அமைச்சர்களின் சுயவிருப்பத்தின் பேரில் செக்யூரிட்டி ஆபீஸர்களாக வந்தவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அவர்கள் அதே பணியில் தொடர்கிறார்கள்.
இந்த அதிரடி மாறுதல்கள் பற்றி டி.ஜி.பி. அலுவலக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ''மாற்றப்பட்ட அனைவரும் பழனிவேல் சேனலில் வந்தவர்கள் என்பதுதான் பிரச்னை. சசிகலா வின் பெயரைத் தெரிந்தோ, தெரியாமலோ பயன்படுத்தி வந்த போலீஸ் அதிகாரிகளின் பெயர்கள் லிஸ்ட் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், முதல் கட்டமாக 21 பேர் மாற்றப்பட்டு உள்ளனர். அவர்களில் சிலர் அப்பாவிகள். அன்றாட நிகழ்வுகளை இவர்கள் வெளியில் உள்ள சிலருக்குச் சொல்லி வந்திருக்கிறார்கள். குறிப்பிட்ட சிலர் மர்மமான காரியங்களிலும் ஈடுபட்டு வந்திருக் கிறார்கள். அடிக்கடி, சென்னையில் இருந்து மன்னார்குடி வரை காரில் பயணித்திருக்கிறார்கள். அந்தக் காரில் என்ன இருந்தது? இவர்கள் எதற்காக முன்ஸீட்டில் உட்கார்ந்தபடி பைலட் ஆகச் சென்றார்கள் என்பதும் புரியாத புதிராக இருக் கிறது. அவர்களின் உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்காமல் சென்றிருக்கிறார்கள். இந்த மாதிரியான நடவடிக்கைகளைக்  கண்டிக்கும் வகையில்தான், தற்போது அவர்களை மாற்றி இருக்கிறோம். அடுத்த கட்டமாக, அவர்களைப்பற்றி வந்துள்ள பெட்டிஷன்களைத் தீவிரமாக விசாரித்து வருகிறோம். அவர்களைக் கட்டாயப்படுத்திக்கூட சில செயல்களை யாராவது செய்ய வைத்து இருக்கலாம். அந்த விவகாரங்களை சம்பந்தப்பட்ட அதிகாரியே நேரில் வந்து சொல்லிவிட்டால் நல்லது'' என்றார்.
அடுத்தபடியாக இப்போது, மாவட்டங்களில் உள்ள 'சின்னம்மா போலீஸ்’ மாற்றப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நாகை மாவட்ட உளவுப்பிரிவு அதிகாரி, மன்னார்குடி டி.எஸ்.பி., மற்றும் இன்ஸ்பெக்டர், திருத்துறைப்பூண்டி, மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய ஊர்களில் பணிபுரிந்த டி.எஸ்.பி-கள் வேறு ஊர்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அடுத்த சில நாட்களில் திவாகரனுடன் தொடர்பில் இருந்து அவரால் பதவி மாற்றம் பெற்று வந்தவர்கள் டம்மியான பதவிகளுக்கு மாற்றப்படுவார்கள் என்று தெரிகிறது.
இதேபோல், சென்னை, கோவை, திருச்சி போன்ற ஊர்களிலும் தலையாட்டம் போட்ட போலீஸ் அதிகாரிகளை டம்மியான பதவிகளுக்கு மாற்றும் பணியில் மும்முரமாக இருக்கிறது டி.ஜி.பி. அலுவலக வட்டாரம்.
கனிஷ்கா 
யார் இந்த அதிகாரிகள்?
முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் பணியை ஸ்பெஷலாகக் கவனித்துக் கொள்வது செக்யூரிட்டி பிரிவு. முதல்வருக்கு மட்டும் கோர் செல் என்று அழைக்கப்படும் கமாண்டோக்கள் பாதுகாப்புப் பணியில் இருப்பார்கள். எஸ்.பி-யான சரவணன், இந்த கமாண்டோ படைக்குப் பொறுப்பு. மாநில மந்திரிகள் பாதுகாப்பு விவகாரத்தை எஸ்.பி-யான பாலசுப்பிரமணியன் கவனிக்கிறார். மாநில மந்திரிகளைப் போன்றே மத்திய மந்திரிகள், நீதிபதிகள், தூதரகங்கள், தமிழகம் தவிர வெளி மாநிலம் மற்றும் வெளி நாட்டில் இருந்து வரும் அதிமுக்கிய வி.ஐ.பி-கள்,  தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் உள்ள வி.ஐ.பி-கள் போன்றவர்களின் பாதுகாப்புக்காக மட்டுமே சுமார் 350 பேர் இருக்கிறார்கள். இவர்களில் சுமார் 100 பேர், தமிழக மந்திரிகளைப் பாதுகாக்கும் பணியில் இருக்கிறார்கள்.

தமிழ் மேல் ஏன் இந்தக் கொலைவெறி?

தூள் கிளப்பும் யாழ் பாட்டு
தாத்தா முதல் டாடா வரை 'கொலவெறி’க்கு அடிமையாக ஆகிவிட்டார்கள். தமிழ்நாட்டு தனுஷ் கொடி இன்று இந்தி வரை பறக்கக் காரணமும் இந்தக் 'கொலவெறி’ தான்!
இதேபாடலை எம்.ஜி.ஆர். பாடினால் எப்படி இருக்கும் ... சிவாஜி உச்சரித்தால் எப்படி இருக்கும் என்று உடான்ஸ் பாட்டுக்கள்  இணையத்தில் உலவும் வேளையில், யாழ்ப்பாணத்தில் இருந்து அழகுத் தமிழ் 'கொலைவெறிப் பாடல்’ ஒன்று வந்திருக்கிறது. தமிழ் உணர்வாளர்களும் புலம்பெயர் ஈழத் தமிழர்களும் இந்தப் பாடலால் உச்சி குளிர்ந்து கிடக்கிறார்கள்.
'என் தமிழ் மொழி மேல் உனக்கேன் இந்தக் கொலைவெறிடா’ என்று தொடங்கும் அந்தப் பாடலின் வரிகளே, சூட்டைக் கிளப்புகின்றன. இந்தப் பாடல் இணையதளத்தில் வெளியான மூன்று நாட்களுக்குள் 1.24 லட்சம் பேர் கேட்டு ரசித்திருக்​கிறார்கள்.
4.26 நிமிடங்கள் ஓடுகிறது இந்த வீடியோ பாடல். போர் முடிந்த ஈழத்தில், நொந்துகிடக்கும் தமிழ் மக்களின் நெஞ்சைத் தொடும் பாடலாக இது அமைந்திருக்கிறது. யாழ் நகரத்தின் வரவேற்பு வளைவு, நல்லூர் முருகன் கோயில், மரியாள் பேராலயம், யாழ்ப்பாணத்தின் மையத்தில் உள்ள தமிழ்ப் பெரியவர்களின் சிலைகள் ஆகியவற்றைக் காட்சிப்படுத்தி, தாய் மண்ணைத் தரிசிக்க முடியாத புலம்பெயர் தமிழர்களைப் பரவசத்தில் ஆழ்த்தி உள்ளது.
யாழ் நகரைச் சேர்ந்த மூன்று தமிழ் இளைஞர்கள் இந்தப் பாடலை உருவாக்கி இருக்கிறார்கள். இந்தப் பாடலை இயற்றி, பாடி, இசையமைத்த எஸ்.ஜெ.ஸ்டாலினுக்கு, உலக அளவில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. எஸ்.ஜெ.ஸ்டாலினிடம் பேசினோம்.
''இசையில் எனக்கு ஆர்வம் அதிகம். வீட்டிலேயே  ஸ்டுடியோ வைத்து, குறும்படங்கள், நாடகங்கள், வானொலி நிகழ்வுகளுக்காக நண்பர்களுடன் சேர்ந்து இசை அமைக்கிறோம். 'தனுஷ்’ பாடல் மெட்டில், பலரும் பலவிதமாக பாடல்களை உருவாக்கி இணைய தளங்களில் வெளியிட்டதைப் பார்த்தோம். என்னுடைய நீண்டகால ஆதங்கத்தை கலந்து நாங்களும் ஒரு பாடல் செய்தோம். இந்தப் பாடல் காட்சிக்கான ஒளிப்பதிவு, படத்தொகுப்புகளை என் நண்பர்கள் வர்ணன், அமலன் ஆகியோர் செய்தார்கள். 'கொலவெறி - யாழ்ப்பாணம் வெர்ஷன்’ என்று பெயரிட்டு, ஈழத்தமிழர் பார்வையிடும் சமூக இணையதளங்களில் பரீட்சார்த்த முயற்சியாக வெளியிட்டோம். நீண்டகாலமாகவே தமிழ்க் கலைப் படைப்புகளில் தமிழ்மொழிக் கொலையும் வேற்றுமொழிக் கலப்பும் நீடிப்பது கண்டு மனதில் பெரும் ஆதங்கம் இருந்துவந்தது. வேற்றுமொழிக் கலப்புடன் வரும் பாடல்களுக்கு மட்டுமில்லாமல் தனித் தமிழில் மட்டுமே இயற்றப்படும் பாடல்களுக்கும் மக்கள் வரவேற்பு அளிப்பார்கள் என்பதை இந்தப் பாடலுக்குக் கிடைத்த  அமோக வரவேற்பின் மூலம் அறியமுடிகிறது'' என்றார்.
தமிழுக்கு மரியாதை!
இரா. தமிழ்க்கனல்

தூங்காதே, இரவில் தூங்காதே!

உ.பி-யை மிரட்டிய கற்சிலை வதந்தி
பிள்ளையார் பால் குடிக்கிறார், மனிதர்களைத் தாக்கும் குரங்கு மனிதன், இயேசு கண்களில் இருந்து ரத்தம், தலை இல்லாத மனிதன் உலா போன்ற வரிசையில் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே ஹிட் ஆகிவிட்டது, கற்சிலை புரளி.
உலகெங்கும் சந்தோஷமாக புத்தாண்டு கொண்டாடிக் கொண்டு இருந்த நேரத்தில்,  உத்தரப் பிரதேசத்தில் மட்டும் சரசரவெனப் பரவியது ஒரு தகவல். 'கொஞ்ச நாட்களுக்கு இரவு நேரங்களில் மட்டும் தூங்கக் கூடாது. இரவில் பூகம்பம் வரப்போகிறது. விழித்து இருப்பவர்களை அந்தப் பூகம்பம் எதுவும் செய்யாது. ஆனால் தூங்கிக்கொண்டு இருப்பவர்களை மட்டும், பூமியைப் பிளந்து அப்படியே விழுங்கிவிடும்!’ என்பதுதான் அந்தத் தகவல்.
இதுகுறித்துப் பேசிய புறநகர் லக்னோவின் ஜானகிநகர்வாசியான தீப்தி சர்மா, ''தூங்கக் கூடாது... தூங்கினால் பூமி விழுங்கி விடும் என்று பரபரப்பாக பேசிக்கொண்டு இருந்தார்கள். அந்தப் புத்தாண்டு இரவில் உறவினர் ஒருவரிடம் இருந்து, 'கருங்கற்கள் நிறைந்த புயல், அன்று இரவில் தாக்க இருப்பதாகவும், தூங்குபவர்களை மட்டும் கல் மனிதனாக மாற்றிவிடும்’ என்று எனக்கு ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது. இதைத் தொடர்ந்து பலர் போன் செய்து, 'தூங்கிக்கொண்டு இருந்த பலர் கல்லாகி விட்டார்களாமே!’ என்று விசாரித்தார்கள்.
இதுபோன்ற விசாரணை வந்ததும், அதுவரை தைரியமாக தூங்கிக்கொண்டு இருந்தவர்கள்கூட விழித்துக்கொண்டார்கள். இது, புரளி என்பது தெரிந்தாலும், வீட்டில் உள்ள பெரியவர்கள் பயந்து, நம்ப ஆரம்பித்து விட்டார்கள். அதனால், அவர்களுடன் சேர்ந்து நானும் இரவுத் தூக்கத்தை இழக்க வேண்டியாகி விட்டது. இப்போது, இரவில் மைனஸ் இரண்டு டிகிரி அளவு குளிர் அடிக்கிறது.
வழக்கமாக குளிரில் முடங்கிக்கிடக்கும் போலீஸார், இரவெல்லாம் வேலை செய்ய வேண்டியதாகி விட்டது. பல இடங்களில் ரோந்து போய், பொதுமக்களுக்குப் புரியவைக்கப் படாதபாடு பட்டனர். ஆனால், போலீசாரின் இந்த விசாரணை காரணமாகவும், அதிரடி நடமாட்டம் காரணமாகவும் புரளிக்கு இன்னும் கூடுதல் புரமோஷன் கிடைத்ததே தவிர அடங்கவே இல்லை. இரவு முழுவதும் கண் விழித்துக்கிடந்த நாங்கள் காலையில் சூரியனைப் பார்த்த பிறகுதான் தூங்கினோம். இன்னமும் இரவில் பலரும் தூங்காமல்தான் இருக்கிறார்கள்'' என்று சலித்துக்கொண்டார்.
இந்தப் புரளியால் பாதிக்கப்பட்ட முக்கிய நகரங்களில் ஒன்றான அலகாபாத்தின் டி.ஐ.ஜி-யும்,தமிழருமான டி.பிரகாஷிடம் கேட்டோம். ''உ.பி. முழுவதும் பரவி இருந்த இந்தப் புரளி எங்கே இருந்து கிளம்பியது என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. உண்மையில் அந்த நாட்களில் இந்தியாவின் எந்த மூலையிலும் சிறிய அளவுகூட பூகம்பம் வரவில்லை. இதுபற்றி காவல் நிலையங்களுக்கும் பத்திரிகை அலுவலகங்களுக்கும் ஏராளமான விசாரிப்புகள். வதந்தியை முறியடிக்க பொது அறிவிப்பு முறை, வயர்லெஸ், எஸ்.எம்.எஸ். போன்றவற்றைப் பயன்படுத்தினோம். இதையும் மீறி பலரும் தூங்காமலேயே இரவைக் கழித்தார்கள் என்பதுதான் நிஜம்'' என்றார்.
இந்தப் புரளி, உ.பி-யை உலுக்கி எடுத்த அதே நேரம் அலிகாரிலும் ஒரு சலசலப்பு. இது குறித்துப் பேசிய பத்திரிகையாளரான குல்தீப் சிங், ''சாஸ்னி தாலுக்காவுக்கு அருகே ஒரு கிராமத்தில் நிலத்தடி நீருக்காக துளை போடப்பட்டது. அதனால், பூமியில் லேசான வெடிப்பு ஏற்பட்டது. அதை பூகம்பம் என்று மக்கள் பயந்து விட்டார்கள். அந்தப் பகுதியில் உள்ள வீடுகளின் கதவுகளில் பாதுகாப்புக்காக ஸ்வஸ்திக் சின்னங்களை வரையத் தொடங்கி விட்டார்கள். அப்படி வரையாவிட்டால் ஆபத்து என்று புரளி பரவியது. ஊரெல்லாம் அது பரவி, எல்லா இடங்களிலும் ஸ்வஸ்திக் சின்னங்கள்தான். இந்தப் புரளிக்கு, படித்தவர்களும் ஆட்படுகிறார்கள் என்பதுதான் வேதனை'' என்றார். புத்தாண்டு முதல் மூன்று நாட்களுக்கு ஆட்டிப் படைத்த இந்தப் புரளியால், உ.பி. வாசிகளுக்குக் 'குளிர்விட்டுப் போனது’தான் மிச்சம்!
ஆர்.ஷஃபிமுன்னா
படங்கள்: பவண்குமார்

திகிலில் மருத்துவர்கள்... சிக்கலில் நோயாளிகள்!

தூத்துக்குடி புயல்
டாக்டர்கள் மொத்தப் பேரையும் வீதிக்குக் கொண்டு நிறுத்தி விட்டது தூத்துக்குடிச்  சம்பவம்!
சிகிச்சையில், கர்ப்பிணி மனைவி இறந்து விட்டார் என்பதற்காக டாக்டரை கொலை செய்த சம்பவம்,  தமிழகம் முழுக்க பெரும்  அதிர்ச் சியை  ஏற்படுத்தி இருக்கிறது. இந்தக் கொலையைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் தொடர் போராட் டங்களை நடத்தி, 'எங்களுக்குப் பணி பாதுகாப்பு வேண்டும்’ என்கிறார்கள் டாக்டர்கள். மறுபக்கம், 'நோயாளிகளுக்கு சரியான சிகிச்சை வேண்டும்’ என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கத்தின் தூத்துக் குடி மாவட்டச் செயலாளரான டாக்டர் குமரன், ''மிகவும் சிக்கலான நிலையில் எங்களிடம் கொண்டு வரப்படும் எத்தனையோ உயிர்களை நாங்கள் காப்பாற்றுகிறோம். ஒவ்வொரு டாக்டரும் நோயாளி பிழைக்க வேண்டும் என்பதற்காகத்தான் சிகிச்சை செய்கிறார்களே தவிர, சாக வேண்டும் என்ற நோக்கத்தில் சிகிச்சை அளிப்பது கிடையாது. என்னதான் சிகிச்சை கொடுத்தாலும் அதையும் தாண்டி சில உயிர்களைக் காப்பாற்ற முடிவது இல்லை. அதற்கு எல்லாம் டாக்டர்களே பொறுப்பு என்றால், யாருமே மருத்துவம் பார்க்க முடியாது'' என்றார் ஆவேசமாக.
சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கப் பொதுச்செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத்திடம் பேசினோம். ''டாக்டர் கொலை செய்யப்பட்டது கொடூரமான, கண்டிக்கத்தக்க சம்பவம். கொலை மிரட்டல் குறித்து அந்த டாக்டர் புகார் கொடுத்தும் போலீஸ் அவருக்குப் பாதுகாப்பு வழங்கவில்லை. அலட்சியமாக இருந்த போலீஸார் மீது முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருத்துவர்களோ, மருத்துவ மனைகளோ தாக்கப்பட்டால், தக்க நடவடிக்கை எடுக்கும் வகையில் தமிழகத்தில் கடந்த 2008-ம் ஆண்டு மருத்துவமனை மற்றும் மருத்துவ மனை ஊழியர்கள் பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த சட்டத்தின்படி, தாக்குதல் நடத்தியவரை ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் கைது செய்யலாம். மூன்று ஆண்டுகள் முதல் எட்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கொடுக்கலாம்.
ஆனால், நிரந்தரப் பாதுகாப்பை இந்தச் சட்டத்தால் வழங்க முடியாது. நோயாளிகளுக்கு டாக்டர்கள் வழங்கும் தரமான, பொறுப் பான சிகிச்சை மட்டுமே அவர்களுக்கு மதிப்பைக் கொடுக்கும்.
இன்று, மருத்துவம் என்பது சேவை என்ற நிலையில் இருந்து இறங்கி, வணிகம் என்றாகி விட்டது. பல தனியார் மருத்துவமனைகளின் முறைகேடுகளை, பகற்கொள்ளையை மக்கள் கண்கூடாகப் பார்க்கிறார்கள். அரசு மருத்துவ மனைக்குச் சென்றால், அங்கும் தரமான சிகிச்சை இல்லை; மருந்துகள் இல்லை; டாக்டர்கள் இல்லை. இந்தக் கோபம்தான் டாக்டர்கள் மீது திரும்புகிறது.
கடந்த பி.ஜே.பி. ஆட்சியின் போது மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த சுஷ்மா சுவராஜ், 'அனைவருக்கும் மருத்துவச் சிகிச்சை அளிக்க வேண் டியது மத்திய அரசின் பொறுப்பு அல்ல’ என்று சொல்லி அதிர வைத்தார். சமூக ஆர்வலர்களின் கோரிக்கைகளுக்குப் பிறகு 2009-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தேசிய சுகாதார மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இப்போது வரை அது கிடப்பில் உள்ளது. அந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், ஒவ்வொரு குடிமகனுக்கும் சிகிச்சை அளிப்பது அரசின் கடமை ஆகிவிடும். தவறும்பட்சத்தில் பாதிக்கப்பட்டவர் மாவட்ட ஆட்சியர் மீது வழக்குத் தொடரலாம்.
ஆனால், ஒரு அரசியல் கட்சியாவது இந்தச் சட்டத்தை நிறைவேற்றக் கோரி போராட்டம் நடத்தியதுஉண்டா? குறைந்தபட்சம் கோரிக்கையாவது வைத்தது உண்டா? சுகாதாரத் துறையில் பல்வேறு ஏழை நாடுகளைவிட நாம் பின்தங்கி உள்ளோம். ஒட்டுமொத்த தேசிய உற்பத்தியில் ஆறு சதவிகிதம் சுகாதாரத்துக்கு ஒதுக்க வேண்டும் என்று உலகச் சுகாதார நிறுவனம் சொல்கிறது. ஆனால், நாம் ஒதுக்குவது 1.3 சதவிகிதம் மட்டுமே. ஆனால், சிறிய நாடான கியூபா 7.5 சதவிகிதம் நிதி ஒதுக்குகிறது.
இங்கிலாந்தில் ஒரு தனி நபரின் மருத்துவத்துக்காக அரசு 94 சதவிகிதம் நிதி செலவிடுகிறது; மீதம் ஆறு சதவிகிதம் மட்டுமே நோயாளி செலவிடுகிறார். அமெரிக்காவில் 56 சதவிகிதம் அரசும் மீதியை நோயாளிகளும் செலவிடுகின்றனர். டென்மார்க், நார்வே நாடுகளில் 90 சதவிகிதம் அரசே செலவிடுகிறது. ஆனால், இந்தியாவில் மருத்துவத்துக்காக 83 சதவிகிதத்தை நோயாளி செலவிடுகிறார். 17 சதவிகி தத்தை மட்டுமே அரசு செலவிடுகிறது. அரசு மருத் துவமனைகளைத் திறந்து வைக்க வராத பிரதமர், தனியார் மருத்துவ மனை திறப்பு விழாவுக்கு வருகிறார். கிராமப்புற வறுமைக்கு முக்கியக் காரணமாக, வரதட்சணை மற்றும் மருத்துவச் சிகிச்சைக்கான செலவு சுட்டிக்காட்டப்படுகிறது. நமது நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் மருத்துவச் செலவு செய்வதன் மூலம் லட்சக்கணக்கான மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே செல்கிறார்கள். அரசே மருத்துவச் செலவை ஏற்றுக்கொண்டால் மட்டுமே டாக்டர்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் நிரந்தரப் பாதுகாப்பு கிடைக்கும்'' என்கிறார்.
மருத்துவச் சிகிச்சை அளித்து பயனளிக்காததால் டாக்டரையே கொலை செய்வதும்... அதற்காக இவர்கள் யாருக்குமே சிகிச்சை அளிக்காமல் ஸ்டிரைக் செய்வதுமான நிலைமை இந்த நாட்டின் துரதிஷ்டங்களில் ஒன்று!
டி.எல்.சஞ்சீவிகுமார்,
இரா.முத்துநாகு, எஸ்.சரவணபெருமாள்
படங்கள்: ஏ.சிதம்பரம்
'போலீஸும் கண்டுக்கல!'
 கொலை செய்யப்பட்ட சேதுலெட்சுமி இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் தலைமை மருத்துவர்.தூத்துக்குடி காமராஜர் நகரில் சொந்த கிளினிக்கும் நடத்தி வந்தார். கடந்த 30-ம் தேதி ஆவுடையார்புரத்தைச் சேர்ந்த மகேஷ், அவரது மனைவி நித்யாவை சிகிச்சைக்காக இவரது மருத்துவமனையில் சேர்த்தார். சிகிச்சையில் நித்யா இறந்துபோனதை அடுத்தே, இப்படி ஒரு கோரச் சம்பவம்.
டாக்டர் சேதுலெட்சுமியின் கணவர் திருஞானசம்பந்தம், ''மகேஷ் எங்கள் மருத்துவமனைக்கு தொடர்ச்சியாக வருபவர் தான். அவரது மனைவியை இங்கு கொண்டு வந்தபோதே, அவரது நிலைமை சிக்கலாகத்தான் இருந்தது. உடல் வீங்கிப்போய்... வயிற்றுக்குள் குழந்தை இறந்து போயிருந்தது. அதனால், என் மனைவி, 'ஆபரேஷன் பண்ணித்தான் எடுக்கணும். தாயோட உயிருக்கும் ஆபத்து வரலாம். வேறு பெரிய மருத்துவமனைக்கு கொண்டுபோய்ப் பாருங்க’ன்னு சொல்லி இருக்காங்க. ஆனால் மகேஷ் கெஞ்சியதால், வேறு வழி இல்லாமல் ஆபரேஷன் செய்தார். அதன் பிறகு தாயின் நிமைமை ரொம்பவும் சீரியஸானது. வேறு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போன நேரத்தில் அந்தப் பெண் இறந்துவிட்டார். இதில் டாக்டர் மீது என்ன தவறு? மறுநாள், மகேஷ் என் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதுபற்றி, போலீஸில் புகார் கொடுத்தும் பாதுகாப்பு கொடுக்கவில்லை. கடைசியில், இப்படி அநியாயமாக கொலை செய்யப்பட்டு விட்டார்...'' என்றார் கண்ணீருடன்.
பணியில் அலட்சியம் காட்டியதற்காக இன்ஸ்பெக்டர் அன்னராஜ் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் இருவரும் இடமாற்றம் செய்யப்பட்டு இருக் கிறார்கள். மகேஷ் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர் களும் கைது செய்யப்பட்டு விட்டாலும், தமிழகம் முழுவதும் பிரச்னை பற்றி எரிகிறது.
 பரிதாப நோயாளிகள்
டாக்டர் சேதுலட்சுமி கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து கடந்த 4-ம் தேதி நடந்த டாக்டர்கள் போராட்டத்தால் அரசு மருத்துவமனைகள் ஸ்தம்பித்தன. மதுரை, கோவை, நெல்லை போன்ற அனைத்து தலைநகர அரசு மருத்துவமனைகளில் பிரசவவார்டு, அவசர சிகிச்சைப்பிரிவு, தீவிர சிகிச்சைப்பிரிவு வழக்கம்போல் இயங்கின. புற நோயாளிகள் பிரிவு மூடப்பட்டதால், நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமலும், மருந்து வாங்க முடியாமலும் அவதிப்பட்டார்கள். ஆனால், திரண்டுவந்த நோயாளிகளை பாதுகாப்புக்கு நின்ற போலீஸார் உடனடியாக அப்புறப்படுத்தியதால், பிரச்னை எதுவும் நடக்கவில்லை.
இதில் அதிகம் பாதிக்கப்பட்டது தேனி மாவட்டம் போடி தாலுக்கா மக்கள்தான். போடி தாலுக்காவில் குரங்கனி, கொட்டகுடி, போடிமெட்டு, அகமலை பஞ்சாயத்துகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களுக்கு சாலை வசதி கிடையாது. இவர்களுக்கு மருத்துவ வசதி சாதாரண நாட்களிலேயே எட்டாக்கனிதான். அதனால் மலைக் கிராம நோயாளிகள், ஒவ்வொரு வாரமும் புதன் கிழமைதான் போடி மருத்துவமனையில் மாத்திரை வாங்குவது வழக்கம். எந்த விவரமும் அறியாத இவர்கள் வழக்கம்போல் மருந்து வாங்குவதற்கு வந்து சேர்ந்தார்கள். ஆனால் டாக்டர்களுடன் சேர்ந்து மருந்தாளுனர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், எதுவுமே கிடைக்காமல் தவித்தார்கள். அவர்களை, 'அடுத்த வாரம் வாருங்கள்’ என்று விரட்டியடிக்க, 'ஒரு வாரம் மருந்து சாப்பிடாவிட்டால் ஏதாவது ஆயிடுமே?’ என்று பயத்தோடு விசாரித்தார்கள். அவர்களுக்குப் பதில் சொல்லத்தான் யாருக்கும் அக்கறை இல்லை.

''கலைவாணர் உருவாக்கியதை சரத்குமார் அழித்துவிடக் கூடாது..''

நடிகர் சங்க கலாட்டா
கோலிவுட்டில் இப்போது பரபரப்பாக ஓடுவது, நடிகர் சங்கத்தின் அதிரடி ஆக்ஷன் படம்தான். சென்னை, அபிபுல்லா சாலையில் தென் இந்திய நடிகர் சங்கத்துக்குச் சொந்தமாக 18 கிரவுண்ட் நிலம் இருக்கிறது. நடிகர் சங்கத் தலைவராக கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் இருந்தபோது வாங்கப்பட்டது. அதற்குப் பிறகு, சிவாஜி கணேசன் சங்கத் தலைவரான நேரத்தில் சங்கத்துக்கு ஓர் அலுவலகம் கட்டப்பட்டது.
கடந்த சில வருடங்களாகவே, அந்த இடத்தில் சங்கத் துக்குப் பெரிய அளவில் கட்டடம் கட்ட வேண்டும் என்று நடிகர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்தபடி இருந்தது. இந்த நிலையில் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் போட்ட ஓர் ஒப்பந்தம், பல்வேறு அதிரடிகளைக் கிளப்பி இருக்கிறது.
தென் இந்திய நடிகர் சங்கம் மற்றும் சத்யம் தியேட் டர்ஸ் குழுமம் ஆகியோருக்கு இடையில், 'நடிகர் சங்க அலுவலகம் இருந்த இடத்தில் எட்டு மாடிக்கு ஷாப்பிங் மால், தியேட்டர்கள் கட்டுவது’ என்று ஒப்பந்தம் போடப்பட்டு இருக்கிறது. நடிகர் சங்கத்துக்கு அதே கட்டடத்தில் அலுவலகம் மற்றும் ஹால் தரவேண்டும் என்பதும் ஒப்பந்தத்தில் உண்டு. இதற்கு செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் அனுமதியும் வாங்கப்பட்டது. இந்த நிலையில் நடிகர் சங்கம் அமைந்துள்ள அபிபுல்லா சாலை குடியிருப்புவாசிகள், இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து கோர்ட்டுக்குப் போக... நடிகர் சங்க உறுப்பினர்கள் மத்தி யிலும் புகைச்சல்.
ஏரியாவாசிகளின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத் தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், 'நாங்கள் குடி இருக்கும் பகுதியில் வித்யோதயா பள்ளி, பாலமந்திர் அனாதை இல்லம், தனியார் மருத்துவமனை போன்றவை உள்ளன. காலை மற்றும் மாலை நேரங்களில் இங்கே கடுமையான நெரிசல் ஏற்படுகிறது. இந்த நிலையில், நடிகர் சங்க அலுவலகம் இருந்த இடத்தை இடித்துவிட்டு, எட்டு மாடியில் தியேட்டர் மற்றும் வணிக வளாகம் கட்டப் படுகிறது. குறுகலான அந்தச் சாலையில் அவ்வளவு பெரிய அடுக்குமாடிக் கட்டடம் கட்டுவது ஆபத்து. இதனால் அங்கு வசிக்கும் அனைவரும் பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டிவரும். எனவே, இந்த விவகாரத்தில் சி.எம்.டி.ஏ. தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவு இட வேண்டும்’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில், கடந்த மூன்றாம் தேதி 'முல்லைப் பெரியாறு போராட்டத்தில் தங்களது நிலைப்பாடு குறித்து ஆலோசிப்பதற்காக நடிகர் சங்க அவசர செயற்குழு கூடியது. அப்போது, நடிகர் சங்கம் போட்ட ஒப்பந்தத்துக்கு எதிராக, உறுப்பினர்கள் இடையே திடீரென கண்டனக் குரல்கள் எழும்ப... சங்கத் தலைவர் சரத்குமாரும், செயலாளர் ராதாரவியும் பெரும் திகைப்பில் ஆழ்ந்தனர்.
என்ன பிரச்னை? என்று செயற்குழு உறுப்பினர்கள் சிலரிடம் பேசினோம். ''சங்கத்துக்குப் புதிய கட்டடம் தேவை என்றால், கலைநிகழ்ச்சி, நன்கொடை வசூலித்து நாமே கட்டுவதுதான் சிறந்தது. 'தங்கத் தட்டில் தேங்காய் வைத்துக்கொண்டு அலைகிறீர்கள்’ என்று நடிகர் சங்கம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் எப்போதோ சொல்லியதுதான் நினைவுக்கு வருகிறது. ஆரம்பத்தில், தியேட்டர் வந்தால் சந்தோஷம் என்று நினைத்த எங்களுக்கே, இப்போது அந்த ஒப்பந்தம் தவறாகப் பயன்படுமோ என்ற ஐயம் எழுகிறது. அதைத்தான் அன்று நடந்த கூட்டத்தில் பிரதிபலித்தோம். நியமன உறுப்பினரான பூச்சி முருகன், 'நம்முடைய உரிமைகள் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டுவிடக் கூடாது. எனவே இந்த நடைமுறையைக் கண்காணிக்க மூத்த நடிகர் சோ தலைமையில், சிவக்குமார், ராஜேஷ் உள்ளிட் டவர்கள் அடங்கிய சிறப்புக் கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும்’ என்று கூட்டத்தில் பேசினார். ஒப்பந்த நகலை செயற்குழு உறுப்பினர்களிடம் காண்பிக்கவும் மறுக்கிறார்கள். அதை மூடிமறைக்க வேண்டிய அவசியம் என்ன? 200 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த நிலத்தை 30 ஆண்டுகளுக்கு லீஸுக்குக் கொடுத்துள்ளதாகக் கூறுகிறார்கள். 30 ஆண்டுகள் கழித்து அந்த இடம் நடிகர் சங்கதுக்குத்தான் கிடைக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? பொறுப்பில் உள்ள சிலர் தனிப்பட்ட முறையில் ஆதாயம் எதிர்பார்த்து சத்யம் தியேட்டருக்கு ஆதரவாக இருப்பதாகத் தகவல் வருகிறது. எனவே, ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு சங்கமே அங்கு கட்டடம் கட்ட முயற்சிக்க வேண்டும். அலுவலகம் தவிர திருமண மண்டபம், மருத்துவமனை என உறுப்பினர்களுக்குப் பயன் அளிக்கும் வகையில் அது அமைய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். கலைவாணர் உருவாக்கியதை சரத்குமார் அழித்துவிடக் கூடாது'' என்றார்கள்.
இந்த சலசலப்புகள் குறித்து நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரிடம் கருத்துக் கேட்டபோது, ''இந்த ஒப்பந்தத்தை பொதுக் குழு உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன்தான் நிறைவேற்றினோம். தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல்களை நீதிமன்றத்தில் முறைப்படி எதிர்கொள்வோம். மற்றபடி இந்த ஒப்பந்தம் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் நலனுக்கானதுதான். இதில் யாருக்கும் தனிப்பட்ட முறையில் எந்த ஆதாயமும் இல்லை... இதில் அரசியலும் இல்லை'' என்று மறுத்தார்.
ஆனால்... இந்த விவகாரம் அவ்வளவு சுலபத்தில் அடங்காது என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது!
தி.கோபிவிஜய்
படம்: சொ.பாலசுப்ரமணியன்

எனது இந்தியா!

கோட்டையில் விழுந்த குண்டு! 
இந்திய விடுதலைக்கு ஜெர்மனி துணை செய்யும் என்று நம்பிக் கெட்டவர்களில் நேதாஜிக்கு ஒரு முன்னோடி இருக்கிறார். அவர்... செண்பகராமன் பிள்ளை.
தமிழ்நாட்டைச் சேர்ந்த இவரின் வாழ்க்கை, எந்த ஒரு திரைப்படத்தை விடவும் அதிகத் திருப்புமுனைகளும் வியப்பும் கொண்டது. 'ஜெய்ஹிந்த் செண்பகராமன்’ என்றும் அழைக்கப்படும் செண்பகராமன் பிள்ளை, திருவனந்தபுரத்தில் பிறந்தவர். தந்தை சின்னசாமிப் பிள்ளை - தாய் நாகம்மாள். திருவனந்தபுரம் மன்னர் உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் படிவம் படித்துக்கொண்டு இருந்தபோது, 'ஸ்ரீபாரத மாதா வாலிபர் சங்கம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, இந்திய விடுதலைப் போராட்டக் களத்தில் இறங்கினார். 'ஜெய்ஹிந்த்’ என்ற முழக்கத்தை முதலில் எழுப்பியவர் செண்பகராமன்தான் என்கிறார்கள். அதுகுறித்து, ஆதாரபூர்வமான தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், 1933-ம் ஆண்டு வியன்னாவில் நடந்த மாநாடு ஒன்றில் செண்பகராமன் இந்த முழக்கத்தை முழங்கினார் என்ற குறிப்பு காணப்படுகிறது.
அவரது 17-வது வயதில், ஸ்ட்ரிக்ட்லேண்ட் என்ற விலங்கியல் ஆய்வாளரின் நட்பு கிடைத்தது. ஸ்ட்ரிக்ட்லேண்ட், இந்தியாவில் விலங்கினத் தொகுதி பற்றி ஆய்வில் இருந்தார். அவருடன் இத்தாலிக்குச் சென்ற செண்பகராமன், அங்கே சில ஆண்டுகள் கல்வி பயின்றிருக்கிறார். பிறகு, சுவிட்சர்லாந்து மற்றும் பெர்லின் பல்கலைக்கழகங்களில் படித்துப் பொறியியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்றார். ஜெர்மனியில் இருந்தபடியே அவர், 'இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கம்’ என்ற சர்வதேசக் குழுவை உருவாக்கிப் போராடினார். 'புரோஇந்தியா’ என்ற மாத இதழைத் தொடங்கினார். ஆங்கிலம் மற்றும் ஜெர்மனியில் அந்த இதழ் வெளியிடப்பட்டது. இந்தியாவில் உள்ள ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து 1915-ல் ஆப்கானிஸ்தானில் மாற்று அரசு ஒன்றை உருவாக்கினார்கள். இந்த அரசின் வெளிவிவகாரத் துறை அமைச்சராக செண்பகராமன் பிள்ளை நியமிக்கப்பட்டார்.
1918-ல் பிரிட்டிஷ் அரசின் நெருக்கடி காரணமாக, இந்த அரசுக்குக் கொடுத்த ஆதரவை ஜப்பான் திரும்பப் பெற்றது. ஆகவே, இந்தியாவின் தற்காலிக அரசு ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றப்பட்டது. 1914-ல் மூண்ட உலகப் போரின்போது ஜெர்மனி அரசு, 'எம்டன்’ என்ற பெயர் கொண்ட பெரிய யுத்தக் கப்பல் ஒன்றை கடல் தாக்குதலுக்குப் பயன்படுத்தியது. 1908-ம் ஆண்டு கட்டப்பட்ட எம்டன் கப்பல் 3,600 டன் எடை கொண்டது. அதன் வேகம் 25 நாட்டிக்கல் மைல். நிலக்கரிதான் அதற்கான எரிபொருள். 10 1/2 செ.மீ பீரங்கிகள் 10 கொண்டது. எதிரியின் கப்பல்களைக் குறிவைத்துச் சுடுவதில் தன்னிரகற்றது. இந்தக் கப்பலில் 360 கடல் வீரர்கள் இருந்தார்கள். இந்தக் கப்பல் பசிஃபிக் கடலில் 4,200 மைல்கள் தூரத்தை 14 நாட்களில் கடந்து சாதனை செய்து இருக்கிறது.
எம்டன் கப்பலின் கேப்டனாக இருந்தவர் கார்ல்பான் முல்லர். அவர், நிகரற்ற கடலோடி வீரர். புகைக்கூண்டு, புறவடிவம், அதன் நிறம் ஆகியவற்றை உருமாற்றிக்கொண்டு எதிரிகளைத் திணறடித்தது எம்டன். முதல் உலகப் போரில் 20 கப்பல்களை வீழ்த்தி இருக்கிறது எம்டன்.
அந்தக் கப்பல் செப்டம்பர் 21-ம் தேதியன்று சென்னைக்கு வந்தது. செப்டம்பர் 22-ம் தேதி, ஆங்கில அரசுக்குச் சொந்தமான இரு பெரிய எண்ணெய்க் கிடங்குகளின் மீதும், சென்னைத் துறைமுகத்தின் மீதும் பீரங்கித் தாக்குதல் நடத்தியது. இதில், 8,000 பவுண்ட் மதிப்புள்ள 34,600 கேலன் எண்ணெய் நாசமானது. பத்துக்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தார்கள்.
இந்தத் தாக்குதலில், புனித ஜார்ஜ் கோட்டைச் சுவரின் ஒரு பகுதி அடியோடு பெயர்ந்து விழுந்தது. கோட்டையை நோக்கி வீசப்பட்ட ஒரு குண்டு வெடிக்காமல் மண்ணில் புதைந்தது. அது இன்றும் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கிறது. எம்டன் ஏற்படுத்திய பீதியால், ஏராளமானோர் சென்னையைக் காலி செய்துவிட்டுப் பதறி ஓடினர். இந்தக் கப்பலில் செண்பகராமன் வரவில்லை. அவரது பெயர் அந்தக் கப்பலின் பெயர் பட்டியலில் இல்லை என்று ஒரு சாரார் கூறுகிறார்கள். ஆனால், அவர் அந்தக் கப்பலில் பயணம் செய்தார் என்று, அவரது மனைவி கூறியிருக்கிறார். பாதுகாப்பு கருதி வேறு பெயரில் அவர் பயணம் செய்திருக்கக்கூடும் என்றும் கருதுகிறார்கள்.
1933-ம் ஆண்டு பெர்லினில் வாழ்ந்த மணிப்பூரைச் சேர்ந்த லட்சுமிபாய் என்ற பெண்ணை, செண்பகராமன் திருமணம் செய்து​கொண்டார். முதல் உலகப் போருக்குப் பிறகு, ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சி உருவானது. செண்பகராமன், ஹிட்லருடன் நெருக்கமாகப் பழகி வந்தார். இந்தியா குறித்து ஹிட்லருக்குள் இருந்த ஆழமான வெறுப்பை உணர்ந்த செண்பகராமன், வெளிப்படையாகத் தனது எதிர்ப்பைத் தெரிவித்து இருக்கிறார். ஆகவே, நாஜிக்களின் நெருக்கடிக்கு ஆளானார்.
ஒரு விருந்தில் செண்பகராமன் சாப்பிட்ட உணவில் விஷம் கலக்கப்பட்டு இருந்தது. அதை அறியாமல் சாப்பிட்டுவிட்டு நோய்மையுற்ற இவர், சிகிக்சை பெற இத்தாலி சென்றார். தீவிர சிகிக்சை அளித்தும் செண்பகராமன் இறந்து போனார். அவருக்குத் தரப்பட்ட உணவில் யார் விஷம் கலந்தது? அல்லது அது ஒரு கட்டுக்கதையா என்பது தெளிவற்ற தகவலாகவே இன்றும் இருந்து வருகிறது.
1934-ம் ஆண்டு மே மாதம் 26-ம் தேதி செண்பகராமனின் உயிர் பிரிந்தது. தனது இறுதி விருப்பமாக, 'என்னுடைய சாம்பலை இந்தியாவுக்கு எடுத்துச் சென்று, எனது தாயாரின் சாம்பலைக் கரைத்த, கேரளாவில் உள்ள கரமனை ஆற்றில் கரைக்க வேண்டும். மீதியை நாஞ்சில் நாட்டு வயல்களில் தூவ வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.
ஆனால், அவரது மனைவி லட்சுமிபாயால் அதை எளிதாக நிறைவேற்ற முடியவில்லை. கணவனின் அஸ்தியைப் பாதுகாப்பாக வைத்திருந்தபோதும், லட்சுமி பாய் மீது நாஜி அரசு குற்றம் சுமத்தி அவரை மனநலக் காப்பத்தில் அடைத்தது. அவரைச் சித்ரவதைகள் செய்தது. கணவனின் அஸ்தியை வைத்துக்கொண்டு, லட்சுமிபாய் 30 வருடங்கள் போராடினார்.
முடிவில், அஸ்தியோடு இந்தியாவுக்கு வந்து சேர்ந்தார். மும்பையில் தங்கி இருந்த அவர், இந்திய அரசின் மரியாதையோடு அந்த அஸ்தி கரைக்கப்பட வேண்டும் என்பதற்காகப் போராடினார். அதுவும் எளிதாக நடக்கவில்லை. ஒரு கட்டத்தில், இந்திரா காந்திக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், இந்திரா ஒரு சிறுமியாக தனது வீட்டுக்கு வந்து போன நிகழ்வை நினைவுபடுத்தி, தனது கணவனின் இறுதி ஆசையை நிறைவேற்ற உதவும்படி கேட்டுக்கொண்டார்.
இந்திய அரசு சார்பில், செண்பகராமனின் அஸ்தியைக் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. 1966-ம் ஆண்டு, இந்தியாவின் போர்க் கப்பல் ஒன்றில் செண்பகராமனின் அஸ்தியை எடுத்துக் கொண்டு மும்பையில் இருந்து கொச்சிக்குப் பயணமானார் லட்சுமிபாய். செண்பகராமன் விரும்பியபடியே அவரது அஸ்தி கரமனை ஆற்றில் கரைக்கப்பட்டது. எந்த நதியின் நீரில் தனது தாயின் அஸ்தி கரைந்து போனதோ, அதே நதியில் செண்பகராமனும் கரைந்து போனார். ஆனால், அவர் விரும்பியபடி நாஞ்சில் நாட்டு வயல்களில் அந்த அஸ்தி தூவப்பட்டதா என்ற விவரம் தெரியவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு, தமிழக அரசு செண்பகராமனுக்கு சிலை வைத்துக் கொண்டாடி இருக்கிறது. 1972-ம் ஆண்டு லட்சுமி பாய் மும்பையில் காலமானார்.
செண்பகராமனோடு ஜெர்மனிக்குச் சென்ற அவரது அண்ணன் பத்மநாபன் என்ன ஆனார்? அவரது வாழ்க்கை எப்படி இருந்தது? என்ற விவரங்களை இன்றும் அறிந்து கொள்ள முடியவில்லை. செண்பகராமன் அஸ்தி யோடு 32 வருடங்கள் காத்திருந்த அவரது மனைவியின் வலி மிகுந்த போராட்டம் வரலாற்றின் பாதையில் அழியாத துயரமென மினுங்கிக்கொண்டே இருக்கிறது.
வரலாற்றில் ஆண் அடையும் துயரம் ஒரு விதம் என்றால், பெண் அடையும் துயரம் இன்னொரு விதம். அதன் நிகழ்கால சாட்சியைப் போலவே லட்சுமிபாய் இருந்தார். செண்பகராமனின் அஸ்தியைக் கரைத்த நாளில், லட்சுமிபாய் கதறி அழுதிருக்கிறார். அந்த அழுகை இறந்துபோன கணவனை நினைத்து அழுதது இல்லை. ஒருவரின் ஆசை நிறைவேறுவதற்கு எவ்வளவு தடைகள், போராட்டங்களைக் கடந்து வர வேண்டியிருக்கிறது. அதற்குள் எத்தனை அரசியல் நெருக்கடிகள், கெடுபிடிகள் இருக்கின்றன என்பதை நினைத்தே அழுதிருக்கிறார். வரலாற்றில் படிந்துபோன அந்த துயரக் குரலை உங்களால் செவி கொடுத்துக் கேட்க முடிந்தால், வரலாறு உயிருள்ளது என்பதை வலிமையாக உணர முடியும்.

********************************************************************************************

0 comments:

Post a Comment

Puthiya Thalaimurai TV