********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

சென்ற வார செய்திகள் (03 டிசம்பர் 2011)

Sunday, December 4, 2011

மிஸ்டர் கழுகு: ஏர்போர்ட் பூகம்பம்!

ழுகார் வந்ததும் நமது வணக்கத்தை ஏற்றபடி விஷயத்தைக் கொட்ட ஆரம்பித்தார்! 
''போயஸ் கார்டனில் இருந்து வெளியேற்றப்​
பட்டிருக்கிறார் ஓர் அலுவலர். காரணம் ஊழல் புகார்!'' - என்று அவர் குரல் உயர்த்திச் சொல்ல ஆரம்பித்ததே அமர்க்களமாக இருந்தது!
''தலைமைச் செயலகத்தில் செயல்படும் வேளாண்மைத் துறை​​யில் இருந்து டெபுடேஷனில் கார்டனுக்குச் சென்றவர் அவர்.   தாசில்தார் தொடங்கி பல்வேறு உயர் அதிகாரிகளுக்கு இடமாறுதல் பெற்றுத் தருவது போன்ற பல காரியங்களில் கரன்சி விளையாடியதாக அவர் மீது புகார் வந்ததும், அவர் கார்டனில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார். அமைச்சர்கள் குறிப்பிடும் நபர்களுக்குப்பதிலாக தமக்கு வசதியான ஆட்களிடம் பணம் பெற்றுக்​கொண்டாராம். முதல்வரின் பெயரைப் பயன்படுத்தி, முதல்வரின் பரிந்துரையின் பேரிலேயே நடை​பெறுவது போன்ற தோற்றத்தை உருவாக்குவதில் இவர் கில்லாடியாம். இதை சில அமைச்சர்களும் நம்பியதுதான் வேடிக்கை''
''எப்படிக் கண்டுபிடித்தார்களாம்?''
''ஒரு கட்டத்தில் சந்தேகம் வலுப்படவே, ஒரு அமைச்சர் நேரடியாக முதல்வரிடமே கேட்டு விட்டாராம். முதல்வரோ தாம் யாரையும் இந்த மாதிரி நியமனங்கள் வழங்கச் சொல்லவில்லை என்று சொன்னதோடு, தனது பெயரைத் தவறாக பயன்படுத்திய அவரை வரவழைத்து திட்டித் தீர்த்து விட்டாராம். 'கார்டனை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும்’ என்றும் உத்தரவு போட்டிருக்கிறார். துறை அதிகாரிகளிடம் உடனடியாக அவரை இடைநீக்கம் செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கவும் சொல்லி இருக்கிறார்''
''கார்டனில் உட்கார்ந்தா இப்படிப்​பட்ட காரியத்தைப் பார்த்​தார்? அவர் தைரியசாலிதான்!''
''விஷயம் இத்தோடு முடிய​வில்லை. மேலும் கேளும்! அவரை சஸ்பெண்ட் பண்ணுங்கள் என்று முதல்வர் உத்தரவிட்ட பிறகும், அவர் இன்னமும்  தலை​மைச் செயலகத்தில் வேலை பார்க்கிறார்.!''
''அந்த தைரியத்தை அவருக்கு யார் கொடுத்ததாம்?''
''முதல்வரின் அங்கீகரிக்கப்பட்ட செயலாளர்களில் ஒருவர்தான் இத்தகைய தைரியத்தைக் கொடுத்ததாகச் சொல்கிறார்கள்.  அந்தச் செயலாளர் இதில் தலையிட்டு, அந்த நபர் மீது ஒழுங்கு நடவடிக்கையோ, இடை நீக்கமோ செய்யப்படாதபடி பாதுகாத்து மீண்டும் தலை​மைச் செயலகத்தில் உள்ள வேறு ஒரு துறைக்கே திருப்பி அனுப்பிவிட்டார் என்​கிறார்கள். 'முதல்வர் இதை​யெல்லாம் ஞாபகம் வைத்துக் கேட்கவா போகிறார்?’ என்ற எண்ணத்தில் சில அதிகாரிகள் இப்படி ஆடுகிறார்கள்!''
''ம்''
''கவர்னர் மாளிகைக்கு முதல்வர் சென்றது திடீர் பரபரப்பைக் கிளப்பி விட்டது. மீண்டும் மந்திரி சபை மாற்றமா? என்று அமைச்சர்கள் அத்தனை பேரும் கலங்கிப் போனார்கள். ஆனால் முதல்வர் சென்றது சம்பிரதாயமான விஷயம்தான் என்கிறார்கள்?''
''என்னவாம்?''
''நவம்பர்கடைசியிலோ டிசம்பர் முதல் வாரத்திலோ சட்டசபை கூடியிருக்க வேண்டும். ஆனால், கவர்னர் உரையுடன் ஜனவரி மாதத்தில் சட்டசபையை நடத்திக் கொள்ளலாம் என்பதைச் சொல்வதற்காகத்தான் ஜெயலலிதா சென்றாராம். மறுநாள் கொடநாடு செல்லும் திட்டம் இருந்ததால், உடனடியாக கவர்​னரைச் சந்திக்கத் திட்டமிட்டாராம் முதல்வர்.
சட்டசபைக் கூட்டத் தொடரைத் தள்ளி வைப்பதற்கு இரண்டு காரணங்கள் சொல்கிறார்கள். ஒன்று, பஸ் மற்றும் பால் விலை உயர்வைக் கண்டித்து எதிர்க் கட்சிகள் போர்க்கோலம் பூணுவார்கள் என்பது முதலாவது. சபை கூடினால் கொடநாடு வாசம் தொடர முடியாது என்பது இரண்டாவது!''
''கொடநாடு பயணத்தைத்தான் முதல்வர் நிறுத்தி வைத்து விட்டாரே?''
''நிறுத்தி வைக்கவில்லை.... தள்ளிதான் வைத்திருக்கிறார் என்கிறார்கள். கடுமையாக மழை பெய்து வருவதால் கொடநாடு செல்லும் பாதைகளில் நிலச்சரிவு இருப்பதாகவும் அதனால் சில நாட்கள் கழித்துச் செல்லலாம் என்றும் சொல்கிறார்கள். டிசம்பர் 20, 21 தேதிகள் வாக்கில் அவர் கொடநாட்டில் இருப்பார். சனிப் பெயர்ச்சி பூஜைகள் சிறப்பாக நடக்கும்!'' என்ற கழுகார் அடுத்து தி.மு.க. வட்டாரத்துச் செய்திகளுக்குத் தாவினார்!
''கருணாநிதிக்கு இருந்த பெருங்கவலையே கனிமொழியின் சிறைவாசம்தான். அவருக்கு ஜாமீன் கிடைத்ததில் முழு திருப்தியை அடைந்துவிட்டார். ஆனால், கனிமொழி ஆதரவாளர்களும் அவரது தாயார் ராஜாத்தியம்மாளும் கட்சியில் ஏதாவது ஒரு பதவி கனிமொழிக்குக் கொடுத்தாக வேண்டும் என்று சொல்வதாக தி.மு.க. வட்டாரம் சொல்கிறது. தலைமைக் கழக முதன்மைச் செயலாளராக இருக்கும் ஆற்காடு வீராசாமியிடம் இருக்கும் அந்தப் பதவியைப் பெற்று கனிமொழிக்குத் தரப் போகிறார்கள். துணைப் பொதுச்செயலாளராக இருக்கும் சற்குண பாண்டியன் தனது பதவியைத் தானே முன்வந்து தரப் போகிறார் என்றெல்லாம் கட்சி வட்டாரத்தில் பேச்சு கிளம்பி உள்ளது''
''ஆற்காட்டார் என்ன சொன்னாராம்?''
''அவரது சகா ஒருவரிடம் விசாரித்தேன். 'நான் உங்களது விசுவாசியாகவே இருந்துவிட்டுப் போகிறேன்’ என்று ஆற்காட்டார் எப்போதோ சொல்லிவிட்டாராம். ஏற்கெனவே தனது பொருளாளர் பதவியை ஸ்டாலினுக்குத் தாரை வார்த்தவர். இப்போது கனிமொழிக்குக் கொடுக்கப் போகிறார்.''
''ஆற்காடு வீராசாமியோ, சற்குணபாண்டியனோ கருணாநிதி பேச்சைத் தட்டுபவர்கள் கிடையாது. ஆனால் இதை, ஸ்டாலினும் அழகிரியும் ஏற்பார்களா?''
''ஸ்டாலின் தரப்பில் சிறு மனவருத்தங்கள் இருப்​பதாகச் சொல்கிறார்கள். 'சிறையில் ஆறுமாத காலம் கஷ்டங்களை கனிமொழி அனுபவித்திருக்கிறார். அதற்காக கட்சியில் பெரிய பதவி கிடைக்குமா?’ என்று ஒரு நிருபர் கருணாநிதியிடம் கேட்டார். 'சிறையில் ஆறு மாதங்கள் இருந்தததற்கெல்லாம் பதவி தர முடியுமா? நான் சர்வாதிகாரி அல்ல. கட்சிதான் எந்த முடிவையும் செய்யும்’ என்று கருணாநிதி சொன்னார். 'முரசொலி’க்கு அனுப்பும் போது, அதில் முதல் வரியைக் கட் பண்ணி விட்டாராம் கருணாநிதி. இது ஸ்டாலின் தரப்பை வருத்தமடைய வைத்ததாகவும் கனிமொழி எப்போது வருகிறார், எந்தத் தேதிகளில் சென்னையில் தங்குகிறார் என்று தலைமைக் கழகம் அறிக்கை வெளியிட வேண்டுமா என்று கேள்விகள் எழுப்பியதாகவும் சொல்கிறார்கள்.!''
''இது முடிவுக்கு வராத கதை தானே?''
''ஆனால், சனிக்கிழமையன்று சென்னை விமான நிலையத்துக்கே கருணாநிதி வந்து கனிமொழியை வரவேற்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்​ளாராம் ராஜாத்தி அம்மாள். ஆனால், அவர் போகக் கூடாது என்று சிலர் தடுக்கவும் தொடங்கி இருக்கிறார்களாம்! வாசகர்கள் இதை வாசித்துக் கொண்டிருக்கும் போது, ஏர்போர்ட் நிலவரம் தெளிந்து, தெரிந்துவிடும்'' என்றபடி கழுகார் விட்டார் ஜூட்!
அட்டைப் படம்: எல்.ராஜேந்திரன்
 ''புழல் சிறை தானே... போகலாமே?''
முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குகள் பதிவு செய்து... ரெய்டுகளையும் நடத்தி வருகிறார்கள். இன்னும் இரண்டு வாரத்துக்குள் மீதி இருக்கும் மாஜிக்கள் வீட்டிலும் ரெய்டுகளை முடிக்க உத்தரவிட்டுள்ளாராம் முதல்வர். அதன்பிறகு கைது நடவடிக்கையையும் தொடங்குவார்களாம்.
பதற்றத்துடன் இந்த தகவலை ஒருவர் சொல்ல... 'புழல் சிறை தானே... போகலாமே? காற்றோட்டமாகத் தான் கட்டி இருக்கிறார்களாம்'' என்று கமென்ட் அடித்தாராம் சீனியர் மாஜி.
*********************************************************************************
கழுகார் பதில்கள்

ரேவதி, தஞ்சாவூர்
 கனிமொழி விஷயத்தில் ஊடகங்கள் நீதிபதிகளாக நடந்துகொண்டன என்று குற்றம் சாட்டுகிறாரே திராவிடர் கழகத் தலைவர் வீரமணி?
வீரமணி அறிக்கையிலேயே சில வரிகள் இருக்கின்றன!
'எத்தகைய பெரிய குற்றமாயினும் கூட, ஒருவரது வழக்கு விசாரணை முற்றாக முடிவடைந்து அவர்கள் தண்டிக்கப்படும் நிலை வந்தால் ஒழிய, அவர் நிரபராதி என்பதே சட்டத்தின் தத்துவம்’ என்று வீரமணி சொல்லும் விளக்கம் சரியா னதுதான். இது ஜெயலலி தாவுக்குப் பொருந்தாதா?
அவரைக் குற்றவாளியாக வீரமணி கருதும்போது, 'பகுத் தறிவு’ நிறம் மாறுவது ஏன்?
 இ.சிகாமணி, அத்ததூர்
பூமிதான இயக்கத் தலைவர் வினோபாவே இப்போது இருந்தால்?
நில மோசடி வழக்கு களைப் பார்த்து மயங்கி விழுந்திருப்பார்!
நிலம் வைத்திருப்பவர்கள் தாங்கள் வைத்திருக்கும் நிலத் தில் சிறு பங்கை நிலமற்ற ஏழைகளுக்கு தானமாகத் தர வேண்டும் என்ற எளிய கோரிக்கையைத்தான் வினோபாவே வைத்தார். கரடுமுரடான இந்தியப் பாதைகளை தனது காலால் நடந்து பண்படுத்தியவர் அவர். நிலப்பிரபுக்களைச் சந்தித்தார். அன்பாக அவர் களிடம் இருந்து நிலங்களைப் பெற்றார். தானமாகக் கொடுத்தார். இப்படிப்பட்ட நாட்டில்தான் அடித்துப் பிடுங்கும் விநோத பாபாக்கள் இன்று வலம் வருகிறார்கள்!
 ராகவன், புதுச்சேரி
  'சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டுக் கொள்கையை மாநில அரசுகள் அமல்படுத்துவது கட்டாயம் இல்லை’ என்கிறாரே மன்மோகன்சிங்?
கட்டாயம் இல்லாத கொள்கையை அமல்படுத்த ஏன் இவ்வளவு துடிக்க வேண்டும்? இவ்வளவு எதிர்ப்பு வரும் என்று மன்மோகன் எதிர்பார்க்கவில்லை. நாலாபுறமும் அடி விழவும், 'கட்டாயப்படுத்தவில்லை’ என்று  சொல்லித் தப்பிக்கப் பார்க்கிறார்.
பல லட்சம் பேரைப் பாதிக்கக்கூடிய அறிவிப்பை திடீரென்று  செய்ய ஒரு காரணம் சொல்லப்படுகிறது... ஊழலுக்கு எதிராக இந்தியா முழுவதும் எழுந்து வரும் அலையை மட்டுப்படுத்தி திசை திருப்பும் ஒரு தந்திரமாக இந்த அறிவிப்பை மத்திய அரசு செய்ததாகச் சொல்கிறார்கள். ஊழல், கறுப்புப் பணம் போன்ற விஷயங்களை விட்டுவிட்டு, சில்லறை வர்த்தகம் பற்றி எதிர்க் கட்சிகள் பேசுவது நல்லது என்று காங்கிரஸ் நினைக்கிறது.
கட்சிகள் மறக்கலாம்... மக்கள் மறக்க மாட்டார்கள்!
 பொன்னாபுரம் ப.சிவகுமார், திருப்பூர்-6
ஒரு எழுத்தாளன் எப்போது ஜெயிக்கிறான்?
எழுத்தாளர்களில் மூன்று வகை உண்டு என்பார்கள். சிலர் எரிநட்சத்திரங்கள். ஒளிர்ந்து விழுந்து உடனே மறைந்துவிடுவார்கள். சிலர் கிரகங்களைப் போல கொஞ்ச காலம் இருப்பர். சிலர் மட்டுமே நிலாக்கள். மறுபடி மறுபடி நினைவுகளாய் இருப்பார்கள்.
தமிழில் அப்படிச் சொல்லத்தக்க பரிபூர்ண நிலா, புதுமைப்பித்தன். 60 ஆண்களுக்கு முன் இறந்து போன அவர் படைத்த பாத்திரங்கள் இன்று வாசிக்கும்போதும் புதுமையாய் இருக்கின்றன. கடவுளும் கந்தசாமி பிள்ளையும், 'ஒருநாள் கழிந்தது’ முருகதாசர்... போன்றவர்கள் இன்னமும் இருக்கிறார்கள். எத்தனை காலம் ஆனாலும் எழுத்தாளன் உருவாக்கிய பாத்திரங்கள் அப்படியே வாழ்ந்தால், அந்த எழுத்தாளன் ஜெயிக் கிறான். சிலர் அவரது 'நினைவுப் பாதை’ நல்ல கதை என்பார்கள். சிலர், 'சில்பியின் நகரம்’ நல்ல கதை என்பார்கள். இலக்கிய ரசனை உள்ள வர்கள் அனைவருக்கும் அவரது ஏதாவது ஒரு கதை பிடித்திருக்கும். புதுமைப்பித்தனை வாசியுங்கள். வெல்லும் எழுத்தின் வேதம் புரியும்!
 நித்திலா செல்வராஜ், வில்லிவாக்கம்
சமீப காலமாக, கருணாநிதி அண்ணாவையும், ஜெயலலிதா எம்.ஜி.ஆரையும் மேற்கோள் காட்டிப் பேசுவதைக் காணோமே ஏன்?
தோற்றுப் போனார் கருணாநிதி. அதனால் தேவை இல்லை அண்ணா!
ஜெயித்துவிட்டார் ஜெயலலிதா. அதனால், இப்போதைக்கு எதற்கு எம்.ஜி.ஆர்?
அவர்கள் இருவரும் இவர்களுக்கு... தேர்தல் நேர ஊறுகாய் மட்டுமே!
 வி.எம்.எஸ்.எஸ்.ஜெயகாந்தன், தூத்துக்குடி
தமிழக அமைச்சர்களில் சிறப்பாகச் செயல்படுபவர் யார்?
செயல்பட்டால் ஏதாவது தப்பு வந்துவிடுமோ என்று பயந்து பலரும் சாந்தமாக இருப்பதாகத்தான் நான் கேள்விப்படுகிறேன்.
 எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்
அமெரிக்கா - எப்போது இந்தியாவின் நண்பன்? எப்போது எதிரி?
அவர்களிடம் கடன் வாங்கிக்கொண்டே இருந்து... எல்லாத் தொழில்களிலும் மார்க்கெட்டைத் திறந்து விட்டால்... நண்பன். இல்லையென்றால்... எதிரி.
 இரா.தியாகராஜன், நாகப்பட்டினம்
இந்தியா, இன்னும் எவ்வளவு காலம் வளரும் நாடாகவே இருக்கும்?
  இந்த நாட்டின் இயற்கை வளத்தையும் மனித வளத்தையும் படிக்காமல்... வெறுமனே வியாபாரக் கணக்குப் போடும் பொருளாதாரப் புலிகள் கையில் நாடு இருக்கும் வரை வளர்ந்த நாடாக ஆவது சந்தேகம்தான்.
 சூரியப்பிரகாஷ், மதுரை
கடந்த ஆட்சியில் துணைவேந்தர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாகச் சொல்கிறார்களே?
  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தைப் போலவே, அது தொடர்பாகவும் பிரத்யேகமான ரெய்டுகள் நடக்க இருக்கின்றன. முன்னாள் அமைச்சர் முதல் கல்வித் துறையைக் கவனித்த அதிகாரிகள் வரை இதில் சிக்கலாம்.
அதற்கு முன்னால், நெல்லை, மதுரை, தஞ்சை உள்ளிட்ட சில பல்கலைக்கழகங்கள் துணைவேந்தர் கள் இல்லாமல் சில மாதங்களாக இருக்கின்றன. அதை முதலில் கவனியுங்கள். இப்போதாவது நல்லவர்களாக நியமியுங்கள்!
 டி.ஜெய்சிங், கோயமுத்தூர்
'நான் வாயைத் திறந்தால், பலர் ஜெயிலுக்குப் போவார்கள்...’ என்கிறாரே ஆ.ராசா?
  'ராசா வாயைத் திறந்தால், அவர் வெளியே வரவே முடியாது’ என்று சிலர் சொல்கிறார்களே... அவர்களை உமக்குத் தெரியுமா?
 சுதந்திரன், கோவை
மூன்று தமிழர் தூக்கு விவகாரத்தில் 'தண்டனையைக் குறைக்க வேண்டும்’ என்று தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ததால் பயன் இருக்குமா?
பயன் இருக்குமா, இருக்காதா என்பதை உச்ச நீதிமன்றம் எடுக்கும் நடவடிக்கையைப் பொறுத்துத் தான் சொல்ல முடியும். ஆனால் இந்த விஷயத்தில் ஜெயலலிதா அடிப்பது, நான்காவது பல்டி!
'மாநில அரசு இதில் தலையிட முடியாது’ என்றார். 'தூக்கிலிடக் கூடாது’ என்று தீர்மானம் கொண்டுவந்தார். 'மூன்று பேர் தாக்கல் செய்த தண்டனைக் குறைப்பு மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்றார். இப்போது 'தண்டனையைக் குறைக்க வேண்டும்’ என்கிறார். இத்தகையை 'குழப்ப மனநிலை’ இரண்டு மாதங்களில் நான்கு முறை வந்துள்ளது. 'எண்ணித் துணிக கருமம்’ என்கிறது வள்ளுவம்!

பொய் கர்ப்பத்தை நிஜமாக்க, குழந்தைத் திருட்டு!

குழந்தைத் திருட்டு, கடத்தல் என தினமும் எத்தனையோ செய்திகளைக் கேள்விப்படுகிறோம். பணம் அல்லது பழிவாங்குதல்தான் முக்கியக் காரணமாக இருக்கும். ஆனால், அனுசுயாவின் கதை புதிது.
சென்னை காசிமேட்டைச் சேர்ந்தவர் லாரன்ஸ். வெல்டிங் தொழிலாளி. இவரது மனைவிதான் அனுசுயா. இவர்களுக்குத் திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. கடந்த 28-ம் தேதி ராயபுரத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அனுசுயா சென்றார். அப்போதுதான் குழந்தையை பிரசவித்த ஜனனி என்ற பெண்ணிடம் நர்ஸ் போலவே பேசி, 'தடுப்பூசி போட வேண்டும்’ என்று குழந்தையை எடுத்துச் சென்றார். மருத்துவமனையின் கீழ்த் தளத்திற்கு வந்து வெளியேற முயற்சித்தபோது, செக்யூரிட்டியிடம் முன்னுக்குப்பின் முரணாகிப் பேசி மாட்டிக் கொண்டார். உடனே போலீஸுக்குத் தகவல் சொல்லப்பட, அனுசுயாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை விசாரித்த இன்ஸ்பெக்டர் கந்தவேலிடம் பேசினோம்.
''சென்னையில் குழந்தையைக் கடத்தி விற்பதற்கு என்றே ஒரு கும்பல் இருக்கிறது. அந்தக் கும்பலை சேர்ந்த பெண்ணாக இருக்கும் என்று நினைத்துத்தான் அனுசுயாவிடம் விசாரணை நடத்தினோம். ஆனால், அனுசுயா நிலைமை பரிதாபம். உண்மையில் அப்பாவிப் பெண். சூழ்நிலை சந்தர்ப்பங்கள் நெருக்க... வேறு வழி இல்லாமல் குழந்தையைத் திருடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார். அவரது கதையைக் கேட்டபோது எங்களுக்கே மனசுக்குக் கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால், சட்டத்திற்கு காரணங்கள் எதுவும் தேவை இல்லை. அதனால், அவரை சிறையில் அடைத்தோம்.
அனுசுயாவுக்கு இரண்டு ஆண்டுகளாக குழந்தை பிறக்கவில்லை என்றதும், அவரது குடும்பத்தினர் மட்டும் இல்லாமல் அக்கம் பக்கத்தினரும் இவரிடம் கேள்வி மேல் கேள்வி தொந்தரவு செய்துள்ளார்கள். இதனை அவமானமாக நினைத்திருக்கிறார்.  குடும்பத்திலும் குழந்தை குறித்து அவ்வப்போது சண்டை வந்திருக்கிறது. ஒருகட்டத்தில் நெருக்கடி அதிகரிக்கவே... கணவனை விட்டுப் பிரிய வேண்டிய அளவுக்கு நிலைமை மோசமாயிருக்கிறது. கணவனைப் பிரிய மனம் இல்லாமல் கர்ப்பிணி போல நடிக்கத் திட்டமிட்டுள்ளார்.
அதன்படி, தான் ஒரு மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து கொண்டதாகவும், கர்ப்பம்தரித்து இருப்பதாகவும் கணவரிடம் பொய் கூறியுள்ளார். இதற்காக அருகில் இருக்கும் மருந்து கடை ரசீதுகள் சிலவற்றையும் கணவரி டம் காட்டினார். லாரன்ஸ் படிப்பு அறிவு இல்லாதவர் என்பதால் அப்படியே நம்பிவிட்டார். அனை வரையும் நம்பவைப்பதற்காக வயிற்றில் துணி கட்டிக்கொண்டு நடிக்கத் தொடங்கியுள்ளார். கணவர் விழுப்புரத்தில் பணிபுரிபவர் என்பதால் மாதம் ஒருமுறை மட்டுமே வீட்டுக்கு வந்துள்ளார். அதனால், வயிற்றில் துணி கட்டிக் கொண்டு நடித்ததை அறிய முடியவில்லை.
இப்படியே ஏழு மாதங்கள் கடந்ததும் பெண் வீட்டார் தண்டையார்பேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் வளைகாப்பு நடத்தி இருக்கிறார்கள். அப்போதும் யாருக்கும் சந்தேகம் வராமல்... வயிற்றில் துணியைக் கட்டிக் கொண்டே சமாளித்துள்ளார் அனுசுயா. அடுத்த இரண்டு மாதங்கள் கழிந்தது. அடிக்கடி டாக்டரிடம் சென்று பரிசோதனை செய்துக் கொள்வது போலவும் நடித்துள்ளார். இந்த நிலையில்தான் கடந்த வாரம் அனுசுயாவின் மாமியார், மாமனார் மற்றும் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் எல்லோரும் திருமண நிகழ்ச்சிக்காக மூன்று நாட்கள் வெளியூர் சென்றுவிட்டார்கள்.
அவர்கள் திரும்புவதற்குள் குழந்தையைக் காட்டியாக வேண்டும், இல்லை என்றால் குட்டு உடைந்து மொத்த வாழ்க்கையும் வீணாகிவிடும் என்பதால் குழந்தையைத் திருட திட்டமிட்டுள்ளார். காசிமேட்டில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்று இரண்டு நாட்கள் நோட்டம் விட்டுள்ளார். மூன்றாம் நாள் அங்கு சேலையூரைச் சேர்ந்த ஜனனி என்ற பெண்ணுக்குக் குழந்தை பிறந்துள்ளது. அவரது உறவினர் வெளியே சென்ற சூழலில் அங்கு சென்ற அனுசுயா, தடுப்பூசி போட வேண்டும் என்று ஜனனியிடம் சொல்லி குழந்தையை எடுத்துச் சென்றுள்ளார். ஆனால், பயத்திலும் பதற்றத்திலும் மருத்துவமனைக்கு வெளியே செல்ல முயன்றபோது செக்யூரிட்டியிடம் மாட்டிக் கொண்டார்.
அனுசுயாவின் கணவரிடம் விசாரித்ததில், அனுசுயாவை நாங்கள் சித்ரவதை செய்யவில்லை என்கிறார். அனுசுயாவும் தனது கணவரைப் பற்றி புகார் கூறவில்லை. ஆனால் கணவரை அவர் உயிருக்கு உயிராக விரும்புகிறார் என்பது மட்டும் தெரிந்தது...'' என்றார்.
அனுசுயாவின் கணவர் லாரன்ஸிடம் பேசினோம். மிகுந்த தயக்கத்துக்குப் பிறகு பேசியவர், ''ரொம்ப நொந்துபோய் இருக்கோங்க. குழந்தை இல்லாததால் அடிக்கடி சண்டை வந்தது  உண்மைதான். ஆனா, என்னைக்குமே அவளை நான் டார்ச்சர் செஞ்சது இல்லை. சொல்லப்போனா அவ குழந்தை மாதிரி... ரொம்பவும் அப்பாவி. ஆனா, ஒன்பது மாசம் நடிச்சி, குழந்தையைத் திருடுவான்னு நினைக்கவே இல்லை... நான் அவளை மன்னிச்சிட்டேங்க. எங்களுக்குக் குழந்தையே பிறக்கலைன்னாலும் சரிதான். அவ வெளியே வந்ததும் குழந்தை மாதிரி அவளைப் பார்த்துப்பேன்!'' என்கிறார்.
திருடவும் தூண்டுமோ, அன்பு?
டி.எல்.சஞ்சீவிகுமார்
************************************************************************
ஆள் மாறாட்டம் செய்து நில அபகரிப்பு!

அதிர்ச்சியில் சினிமா தயாரிப்பாளர் மனைவி
''சென்னை - அயனாவரத்தில் உள்ள 100 ரூபாய் கோடி மதிப்பிலான எங்கள் பரம்பரைச் சொத்தை அபகரித்துவிட்டார்கள்'' என்று புகார் கொடுத் துள்ளார் ஜெயந்தி கண்ணப்பன். இவர், சினிமா தயாரிப்பாளரான ஏஎல்.எஸ்.கண்ணப்பனின் மனைவி. சென்னை - கோபாலபுரம் ரத்னாசெட்டித் தெருவில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தோம்.
'1910-ம் ஆண்டு ராமநாதபுரம் கோர்ட் மூலம் 1,426 ஏக்கரை 5,076 ரூபாய்க்கு ஏலத்துக்கு எடுத்தார் என் மாமனாருடைய (ஏ.எல்.சீனிவாசன்) தாத்தா வெள்ளையப்பச் செட்டியார் என்கிற அழகப்பச் செட்டியார். கோர்ட் நடைமுறைகள் எல்லாம் முடிந்து, செங்கல்பட்டு கோர்ட்  மூலம் அந்த இடத்துக் கான பத்திரம் 1914-ம் ஆண்டு வெள்ளையப்பச் செட்டியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவருக்குப் பிறகு அவருடைய மகன் சாத்தப்பச் செட்டியார் அந்த இடத்தை நிர்வகித்தார். இவர்கள் இருவரின் காலத்திலேயே ஐ.சி.எப்., சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் போன்றவற்றுக்காக அரசுக்கு நிலம் கொடுத்து, அதற்கான ஈட்டுத் தொகை பெறப்பட்டுள்ளது. 
சாத்தப்பச் செட்டியாருக்கு கண்ணப்பன் (தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலத்தின் அப்பா), சீனிவாசன், முத்தையா (கண்ணதாசன்) என மூன்று மகன்கள். பிள்ளைகள் இன்னொரு வருடைய வீட்டில் வளர்ந்தால் பெரிய ஆளாக வருவார்கள் என்று ஜாதகம் சொன்னதால் கண்ணப்பனையும் கண்ணதாசனையும் காரைக்குடியில் உள்ள தன்னுடைய உறவினர்களுக்குத் தத்து கொடுத்து விட்டார், சாத்தப்பச் செட்டியார். செட்டிநாட்டு வழக்கப்படி, சுவீகாரம் போனவர்களுக்கு குடும்பச் சொத்தில் பங்கு கிடையாது. ஏனென்றால், அவர்கள் சுவீகாரம் பெற்ற குடும்பத்தின் பிள்ளைகளாகக் கருதப்படுவார்கள். அவர்களுடைய இன்ஷியல், குலதெய்வம் எல்லாம்கூட மாறிவிடும். எனவே, சாத்தப்பச் செட்டியாருக்குப் பிறகு அந்தச் சொத்து ஏஎல். சீனிவாசனுக்கும், அவருக்குப் பிறகு அவரு டைய மகனான ஏஎல்.எஸ். கண்ணப்பனுக்கும் வந்தது.
இப்படி பரம்பரை பரம்பரையாக வந்த சொத்தில், அரசு மற்றும் தனியார் சிலருக்குக் கொடுத்தது போக, 5.8 ஏக்கர் நிலம் தர்மராயர் பிள்ளை தண்ணீர்ப் பந்தல் என்ற பெயரிலும், 7.26  ஏக்கர் நிலம் வரதப்பை தண்ணீர்ப் பந்தல் என்ற பெயரிலும் அயனாவரத்தில் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த சொத்துகளுக்கான வில்லங்கச் சான்றிதழைப் பார்க்கும்போது, தர்மராயர் பிள்ளை தண்ணீர்ப் பந்தலானது ஹபிபுல்லா என்ப வரின் பெயரில் இருந்தது. அதிர்ச்சி அடைந்த நான், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் புகார் கொடுத்து இருக்கிறேன். என்னுடைய நிலம் எனக்குத் திரும்பக் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது' என்றார் ஜெயந்தி கண்ணப்பன்.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய ஜெயந்தி கண்ணப்பனின் வழக்கறிஞர் ஆனந்தன், 'போலி ஆவணங்கள் மூலம் விக்டர்ராஜ் என்பவர் தர்மராயர் தண்ணீர்ப் பந்தல் இடத்தை, 1 கோடியே 37 லட்சத்து 50 ஆயிரத்துக்கு ஹபிபுல்லாவிடம் விற்றுள்ளார். இந்த இடத்தில்தான் அயனாவரம் கே.2போலீஸ் ஸ்டேஷனும், பம்ப்பிங் ஸ்டேஷனும் இயங்கி வருகின்றன. 1914-ம் ஆண்டு முதல் உள்ள இந்த நிலத்துக்கான தாய்ப் பத்திரங்கள் அனைத்தும் எங்களிடம் உள்ளன. எனவே, நிச்சயம் எங்களுக்கு இடம் கிடைக்கும்''  என்றார்.
இந்த வழக்கை விசாரித்துவரும் அயனாவரம் கே.2 காவல் நிலை யத்தின் சட்டம் - ஒழுங்கு இன்ஸ் பெக்டர் கனகராஜிடம் பேசினோம். 'ஜெயந்தி கண்ணப்பன் கொடுத்த புகாரின் பேரில் நாங்கள் விசாரணை மேற்கொண்டோம். அவர் கொடுத் திருக்கும்  ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்தியபோது, எல்.கண்ணப்பன் என்பவர்தான் நிலத்தை விற்றதாக அறிந்தோம். அவர், 'வெள் ளையப்பச் செட்டியாருக்கு லெட்சுமணன் என்று இன்னொரு மகன் இருந்ததாகவும், அவருடைய பையன்தான் நான்’ என்று கூறினார். அத்துடன் ஏஎல்.எஸ்.கண்ணப்பனும் எல்.கண்ணப்பனும் ஒருவரே என்று ஆள் மாறாட்டம் செய்து, விக்டர்ராஜ் என்பவருக்கு இந்தச் சொத்தை விற்பதற்கான பவரைக் கொடுத்துள்ளார். அந்த விக்டர்ராஜ், ஹபிபுல்லாவிடம் சென்ற ஆண்டு இந்தச் சொத்தை விற்றுள்ளார்.
விக்டர்ராஜ், திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியைச் சேர்ந்தவர். அவரைக் கைது செய்து விசாரித்ததில், எல்.கண்ணப் பனிடம் போலி பவர் வாங்கி, இடத்தை விற்பனை செய்ததை ஒப்புக் கொண்டார். சொத்தை விற்பதற்கு பவர் கொடுத்த சிறுகூடல் பட்டியைச் சேர்ந்த எல்.கண்ணப்பனிடம் விசாரணை நடத்தினோம். 'என்னிடம் எந்த ஆவணங்களும் இல்லை. கையெழுத்து போடச் சொன்ன இடங் களில் போட்டேன். வேறு எதுவும் எனக்குத் தெரியாது’ என்றார். அவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம். ஹபிபுல்லாவைத் தேடி வருகிறோம். அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட முன் ஜாமீன் மனு தள்ளுபடியாகி விட்டது. அவரை விரைவில் கைது செய்து, வழக்கை முடித்துவிடுவோம்'' என்றார்.
நிலத்தை வாங்கியிருக்கும் ஹபிபுல்லாவின் சார்பில் பேசிய அவருடைய வக்கீல் முகமது இக்பால், '1892-ம் ஆண்டு முதல் இந்தச்சொத்துக்கான ஆவணங்கள் அனைத்தையும் சரிபார்த்து, லீகல் ஒப்பீனியன் கிடைத்த பிறகுதான் வாங்கி உள்ளோம். எல்லா ஆவணங்களின் நகல்களும் எங்களிடம் உள்ளன. இந்தப் பிரச்னை குறித்து முதல்வரிடம் மனு கொடுத்து இருக்கிறோம். எனது கட்சிக்காரர் ஹபிபுல்லா, ஹஜ் புனிதப்பயணமாக மெக்காவுக்குச் சென்றுள்ளார். அவர் பிரச்னைக்குரிய நிலத்தை உரியவரிடமே ஒப்படைப்பதற்குத் தயாராக இருக்கிறார். நிலத்துக்காக எல்.கண்ணப்பனிடம் கொடுத்த பணம் எங்களுக்குத் திரும்பக் கிடைத்ததும் நிலம் ஒப்படைக்கப்படும்'' என்றார்.
எல்.கண்ணப்பனின் வக்கீல் சாம்ராஜிடம் பேசியபோது, ''ஜெயந்தி கண்ணப்பன் கொடுத்திருப்பது முழுக்க முழுக்க பொய்ப்புகார். அவர் சொல்வது போல் வெள்ளையப்ப செட்டியாருக்கு சாத்தப்ப செட்டியார் மட்டும் மகன் கிடையாது. அவரை சேர்த்து காசி விஸ்வநாத செட்டியார், பழனியப்ப செட்டியார், லெட்சுமண செட்டியார் என மொத்தம் நான்கு மகன்கள். இதில் லெட்சுமண செட்டியாரின் மகன்தான் எல்.கண்ணப்பன். இவருக்கு சொத்தில் முழு உரிமை இருக்கிறது என்பதை கோர்ட்டில் நிரூபிப்போம்'' என்று சொன்னார்.
சி.காவேரி மாணிக்கம்
படங்கள்: வீ.நாகமணி,
சொ.பாலசுப்ரமணியன்,
ப.சரவணகுமார்       

கொடூரத்துக்குப் பெயர்தான் சாந்தி!

திருவண்ணாமலை திடுக்
ரு சிறுவனை, பணத்துக்காக கடத்திக் கொலை செய்யும் அளவுக்குத் துணிவாளா ஒரு பெண்?
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே வெளுக்கனந்தல் கிராமத்தைச் சேர்ந்த மத்திய ஆயுதப்படைக் காவலர் ராமகிருஷ் ணன். இவரது மனைவி பரிமளா. இவர்களின் மூத்த பையன் ராமச்சந்திரன், தனியார் பள்ளி விடுதியில் தங்கி எட்டாம் வகுப்பு படிக்கிறான். இளையவன் வினோத், வெளுக்கனந்தல் அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு மாணவன்.
கடந்த அக்டோபர் 20-ம் தேதி பள்ளிக்குச் சென்ற வினோத், இரவான பிறகும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோரும் உறவினர்களும், விடிய விடிய ஊர் முழுவதும் தேடியும் வினோத் கிடைக்கவில்லை. மறுநாள் ராமகிருஷ்ணனின் உறவினரான சம்பத் என்பவரை மொபைல் போனில் தொடர்புகொண்ட மர்ம நபர்கள், வினோத்தை விடுவிக்க 30 லட்சம் பணம் கேட்டுள்ளனர். அடுத்து, ராமகிருஷ்ணனின் மனைவி பரிமளாவின் மொபைல் எண்ணிலும் மர்ம நபர்கள் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இது குறித்து ராமகிருஷ்ணன் கலசபாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அப்போதே, இதே கிராமத்தைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுத் தலைவியான சாந்தி மீது சந்தேகம் எழுப்பினார்கள்.
போலீஸார் மொபைல் அழைப்புகளை ஆராய்ந்தபோது அவை சென்னை மற்றும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கோலாரில் இருந்து வந்தவை என்பது தெரிந்தது. இது தொடர்பாக சென்னையை சேர்ந்த பசுபதி மற்றும் சுபாஷ் ஆகிய இருவரைப் பிடித்து போலீஸார் விசாரித்தபோது, 'வினோத்தை சாந்தி கொலை செய்துவிட்டார்’ என்று அவர்கள் சொல்ல, போலீஸாருக்கே பெரும் அதிர்ச்சி.
சாந்தியைக் கைதுசெய்து விசாரித்தபோது, கொலை செய்ததை ஒப்புக்கொண்டு சிறுவனைப் புதைத்த இடத்தை அடையாளம் காட்டி அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார்.
வழக்கை விசாரித்த போலீஸாரிடம் பேசினோம். ''மகளிர் சுய உதவிக் குழுத் தலைவியாக இருக்கிறார் சாந்தி. இந்தக் குழுவுக்காக கிராமத்தில் பலரிடம் வசூல் செய்த சுமார் 10 லட்சம் ரூபாயை இவர் மோசடி செய்துள்ளார். பிரச்னை வந்தபோது பஞ்சாயத்து பேசி, சாந்தி கட்டி வரும் வீட்டைப் பிணையாக எழுதிக் கொடுத்துள்ளார். குறிப்பிட்ட நாளுக்குள் பணத்தைக் கட்டவில்லை என்றால், அந்த வீடு பறிபோகும் சூழல். அந்த வீட்டைக் காப்பாற்றத்தான் இப்படி ஒரு படுபாதகச் செயலைச் செய்துள்ளார் சாந்தி.
முதலில் கிராம நிர்வாக அலுவலர் ஒருவரின் மகனைத்தான் கடத்த திட்டமிட்டு இருந்தாராம். ஆனால், அது நடக்கவில்லை. சாந்தியின் இரண்டாவது மகனும் வினோத்தும் ஒரே வகுப்பில்தான் படிக்கிறார்கள். அதனால் தன் மகன் மூலம் வினோத்தை வரவழைத்து, அவர் கட்டி வரும் வீட்டுக்குஅருகிலேயே அடைத்துவைத்துள்ளார். பின்பு தனது தம்பி பிரசன்னாவின் நண்பர் களான சென்னையைச் சேர்ந்த சுபாஷ், பசுபதி ஆகியோர் மூலம் வினோத்தின் பெற்றோரிடம் பணம் கேட்டு மிரட்டி இருக்கிறார். ஆனால் குழந்தையின் பெற்றோர் போலீஸுக்குப் போனது தெரியவந்ததும், இனி பணம் கிடைக்காது. சிறுவனை வெளியேவிட்டால், தன்னைக் காட்டிக் கொடுத்துவிடுவான் என்று கத்தியால் சிறுவனின் கழுத்தை அறுத்து, வீட்டின் அருகிலேயே புதைத்துவிட்டாள்...'' என்றார்கள்!
மகன் கொலையான துக்கம் தாங்காமல் கதறி அழும் ராமகிருஷ்ணன், ''படுபாவி... நகை, பணம்னு திருடிட்டு இருந்தா. இப்ப என் குழந்தையையே பணத்துக்காக கொன்னுட்டாளே. மூணு பிள்ளையைப் பெத்தவளுக்கு என் புள்ளையோட கழுத்தை அறுக்க எப்படித்தான் மனசு வந்துச்சோ...'' என் கிறார் கண்ணீருடன்.
     வினோத்தின் அம்மா பரிமளா, ''எப்படியாச்சும் அவகிட்ட என் குழந்தையைத் திருப்பிக் கொடுத்துடச் சொல்லுங்க. அவளோட புள்ளையையும் நான் என் புள்ளை மாதிரிதானே பார்த்துக்கிட்டேன். என் கையாலேயே எத்தனை முறை அவனுக்கு சோறு ஊட்டி இருக்கேன்...'' என்று கதறுகிறார்.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய போளூர் டி.எஸ்.பி. பலுல்லா, ''குழந்தையின் பெற்றோர் கடைசி நேரத்தில்தான் சாந்தி மீது சந்தேகம் கிளப்பினார்கள். நாங்கள் உடனடியாக சாந்தி வீட்டுக்குப் போய் விசாரித்தோம். ஆனால், அதற்கு முன்பே சாந்தி அந்த சிறுவனைக் கொலை செய்துவிட்டார். பணம் மட்டும்தான் பிரச்னையா? அல்லது, கொலைக்கு வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா என்றும் விசாரித்து வருகிறோம்...'' என்றார்.
பண ஆசை இப்படிப்பட்ட கொடூரத்தையும் செய்யவைக்குமா?
கோ.செந்தில்குமார்
படங்கள்: பா.கந்தகுமார்

சட்டசபைக்குள் பிரபாகரன் படம் போட்ட சட்டையுடன் நுழைவேன்!

மாவீரர் நாள் கொண்டாட்டங்கள்
முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பிறகும், உலகத் தமிழினமே மாவீரர் தினத்தை எழுச்சியோடு கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு கனடா, லண்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற அன்னிய தேசங்களில்கூட மாவீரர் தினத்தைக் கொண்டாட அனுமதித்தனர். ஆனால், தமிழகத்தில் அதற்குத் தடை விதித்து, தமிழ் உணர்வாளர்களின் நெஞ்சில் நெருப்பை அள்ளிக் கொட்டி இருக்கிறது அ.தி.மு.க. அரசு!
கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் 'நாம் தமிழர்’ கட்சியின் தலைவர் சீமான் தலைமையில் பிரமாண்ட பொதுக் கூட்டம் நடத்தத் திட்டமிடப் பட்டு இருந்தது. தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்ததும், 'தடையை மீறி கூட்டத்தை நடத்திக் காட்டுவோம்’ என்று கட்சியினர் ஆவேசமாகவே, கடலூர் சூடானது.
ஆனால் சிக்கல் வரக் கூடாது என்று நினைத்தோ என்னவோ, கடலூர் சுப்புராயலு திருமண மண்ட பத்தில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தமிழ் ஈழப் போரில் உயிர் நீத்தவர்களுக்கு மெழுகுவத்தி ஏற்றி வீரவணக்கம் செலுத்திவிட்டுப் பேச ஆரம்பித் தார் சீமான். ''தமிழக அரசு எங்களை அடக்கி முடக்கிவிடலாம் என்று நினைக்கிறது. அது ஒருபோதும் நடக்காது. சர்வதேசத் தடைகளையே பார்த்தவன் நான். இந்தத் தடைகள் எல்லாம் நம்மை என்ன செய்யும்? நாங்கள் வீட்டைவிட்டு வெளியில் கிளம்பும்போது, வாய்க்கரிசியை வாயில் போட்டுக்கொண்டுதான் கிளம்புவோம். இந்தப் பூச்சாண்டிகளுக்கு எல்லாம் பயப்பட மாட்டோம்'' என்றதும் தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர். ''கண்டிப் பாக ஒரு நாள் நான் எம்.எல்.ஏ. ஆவேன். அப்போது சட்டசபைக்கு தலைவர் பிரபாகரன் படம் போட்ட சட்டையோடுதான் போவேன். அப்போது முடிந்தால், 'சட்டசபைக்கு சீமான் வரக் கூடாது’ என தமிழக அரசு தடை விதிக்கட்டும்'' என்று எதிர்காலக் கனவையும் சுட்டிக் காட்டினார்.
சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே உள்ள புலியூரில், விடுதலைப் புலிகள் பயிற்சி பெற்ற இடமும், வீர மரணம் அடைந்த போராளி பொன்னம்மானின் நினைவிடமும் இருக்கிறது. இங்கு, பெரியார் திராவிடர் கழகம் நடத்தும் மாவீரர் தினத்தில் தமிழ் உணர்வாளர்களைத் தாண்டி, பொதுமக்களும் குடும்பம் குடும்பமாக வந்து பொன்னம்மான் நினைவிடத்தில் மலர் தூவி, மெழுகுவத்தி ஏற்றி அஞ்சலி செலுத்துவது வழக்கம். இவ்வருட நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த பாடலாசிரியர் அறிவுமதியின் பேச்சில் செம காரம்! 
''உலக சூழ்ச்சிகளால் நாம் சுழியமாக மாற்றப் பட்டாலும், இந்தச் சுழியங்களுக்கு முன்னால், எம் தலைவர் மறுபடி யும் ஒன்றென வந்து நிற்பான். அப்போது சுழியங்கள் பத்தாகி, நூறாகி, லட்சமாகி, கோடியாகி ஒரு மகா சமுத்திரத்தின் வெற்றி விடுதலையை எம் தமிழினம் பெறும்.  நான் சங்க இலக்கியம் படித்திருக்கிறேன். புற நானூற்று வீரம் என்பது தமிழ் மன்னர்கள் தமிழ் மன்னரை அடித்த வரலாறுதானே தவிர, இன்னோர் இன எதிரியை ஒழித்த வரலாறு இல்லை. ஆனால், தமிழ் இன வரலாற்றில் முதன் முதலாக... எவன் என் இனத்தின் எதிரி என்று அடையாளம் கண்டு, அதற்குரிய படை கண்டு, அதற்குரிய உலகத்தின் அறங்களை ஏற்றுக்கொண்டுப் போராடிய தமிழினத் தலைவர் என்றால், அது எம் தலைவர் பிரபாகரன்தான். 'அவன் மிகச்சிறந்த வீரன். அவன் தரைப் படை கண்டான்; கடற்படை கண்டான்; வான்படை கண்டான்; கரும்புலி கண்டான்’ என்பது மட்டும்தான் பெரும்பகுதி மனிதர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. அவர் கற்றுக்கொடுத்த பண்பாடுகள் மிகவும் உயர்வானவை. அந்த இயக்கத்தைப் போல பண்பாட்டு இயக்கம் வேறு எதுவும் இல்லை. அந்தப் பண்பாட்டுத் தலைவரை உலகத்தின் வேறு எந்தத் தலைவரோடும் ஒப்பீடு செய்ய முடியாது.
அதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன்... கீழே கிடந்த சிங்களக் கொடியை எரித்திருக்கிறார் ஒரு புலிப் போராளி. அதைக் கேள்விப்பட்டு, 'புலிக் கொடி என்பது நம் இயக்கத்திற்கும் நம் தேசியத்திற்கும் எவ்வளவு உன்னதமானதோ... அதே போல, சிங்கள மக்களுக்கும், ராணுவத்துக்கும், அந்த நாட்டுக்கும் மதிக்கத்தக்க புனிதமான கொடி அது. அவர்களுக்கும் நமக்கும் உரிமைப் பங்கிடுவதில்தான் போராட்டமே தவிர... மனிதப் பண்பாட்டில் அவர்கள் எந்த இடத்திலும் நம்மைக் கேலி பேசத் துளியும் இடம் கொடுத்துவிடக் கூடாது. அந்தச் சிங்களக் கொடியைப் பார்த்ததும், அதை மதித்து உயரமான இடத்தில் வைத்திருக்க வேண்டும்’ என்று பாடம் நடத்தினார். இப்படி ஒரு பண்பாட்டை வளர்த்தவனா தீவிரவாதி?'' என்று கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தில் மாவீரர் நாள் கொண்டாட்டம் அடக்கியே வாசிக்கப்பட்டாலும், அண்டை மாநிலமான கர்நாடகத்தில் ஊர் தோறும் போஸ்டர்கள், மஞ்சள் சிவப்பு புலிக் கொடிகள், மாவீரர் தினக் கூட்டங்கள், தேவாலயங்களில் திருப்பலி, கோவில்களில் பூஜை, பள்ளி கல்லூரிகளில் இனிப்பு வழங்கி அசத்தி விட்டார்கள். அதோடு, '57-ம் அகவையில் அடியெடுத்துவைக்கும் தேசியத் தலைவர் பிரபாகரன் பல்லாண்டு வாழ்க’ என்று பிரமாண்ட ஃப்ளெக்ஸ் பேனர்கள் ஆங்காங்கே முளைத்து இருந்தன. 
வீ.கே.ரமேஷ், இரா.வினோத், க.பூபாலன்
படங்கள்: க.தனசேகரன், எம்.விஜயகுமார், ஜெ.முருகன், ஜஸ்டின்

சிவாஜி சிலைக்கு சிறை!

வேதனையில் திருச்சி ரசிகர்கள்
டிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கும் திருச்சிக்குமான உறவு பிரிக்க முடியாதது. அவரது பால்ய பருவம் திருச்சியில்தான் கழிந்தது.  திருச்சி பாலக்கரையில் இருக்கும் சிவாஜி வீடு இன்றும் கூட பராமரிக்கப்பட்டு வருகிறது. 'சிவாஜிக்கு திருச்சியில் சிலை வைக்க வேண்டும்’ என்பது இங்கு உள்ள ரசிகர்களின் நீண்டகாலக் கோரிக்கை. கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு, பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன. இடையில் என்ன நடந்ததோ... பணிகள் முழுமையடைந்த பின்னரும், திறப்பு விழா மட்டும் நடக்கவே இல்லை.
சிவாஜியின் தீவிர ரசிகரான ஆட்டோ ஓட்டுநர் நாகராஜன், ''பாலக்கரை பகுதியில் சிவாஜி​யோட வீடு இருப்பதால், இங்கேயே அவருக்கு சிலை அமைக்கணும்னு ரசிகர்கள் கோரிக்கை வைச்சோம். கடந்த தி.மு.க. ஆட்சியில் அமைச்சரா இருந்த நேரு, சட்டசபையில் பேசி சிலை அமைப்பதற்கு இடம் வாங்கித் தந்தார். ரசிகர் மன்றத்தின் செலவில் சிலை வடிவமைக்கப்பட்டு அந்த இடத்தில் நிறுவப்பட்டு விட்டது. ஆனால் 10 மாதங்களுக்கு மேல் ஆனபோதும் திறக்கப்படவில்லை.
புதர் மண்டிக்கிடந்த ரவுண்டா னாவில் சிலைவைக்க முடிவு செய்ததும், பணிகள் வேகவேகமாக நடந்தன. ரவுண்டானா சீரமைக்கப்பட்டு, வர்ணம் பூசி, பூச்செடிகளை நட்டு, சிலை அமைத்து... எல்லாப் பணிகளும் ஒரு மாதத்தில் ஜெட் வேகத்தில் நடந்தது. ஆனால், இப்போதோ நிலைமை தலைகீழ். ஆரம்பத்தில் கீற்றுக் கொட்டகை மூலம் மறைக்கப்பட்டு இருந்த சிவாஜியின் சிலை, இப்போது தகர கொட்டகை மூலம் வலுவாக மறைக்கப்பட்டு விட்டது. ரவுண்டானாவும் மீண்டும் புதர் மண்டிக்கிடக்கிறது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் கடந்து போகும் முக்கியச் சாலையில், சிவாஜியின் சிலை இப்படிக் கேட்பாரற்றுக் கிடப்பது வேதனையாக இருக்கிறது'' என்று ரொம்பவே வருத்தப்பட்டார்.
''சிலையைத் திறப்பதில் என்னதான் பிரச்னை?'' என்று அகில இந்திய சிவாஜி ரசிகர் மன்றத்தின் துணைத் தலைவர் சீனிவாசனிடம் கேட்டோம். ''பிரச்னை ஒண்ணும் இல்லீங்க. சட்டசபைக்கும் உள்ளாட்சிக்கும் அடுத்தடுத்து தேர்தல் வந்து விட்டதால், திறப்பு விழா கொஞ்சம் தாமதமாயிடுச்சு. எங்க மன்றத்தில் பேசி இருக்கோம். கூடிய சீக்கிரமே நல்ல செய்தி சொல்றேன்'' என்றார்.
மணி மண்டபம் என்றாலும், சிலை என்றாலும்... சிவாஜிக்கு சிக்கல்தானா?
ஆ.அலெக்ஸ் பாண்டியன்
படங்கள்: ர.அருண் பாண்டியன்

'அபாய' பாஸ்கர், 'பாம்புக்குட்டி' நாகேந்திரன்!

சிக்குவார்களா சேகர் கொலையாளிகள்?
திருச்சி மாநகர அ.தி.மு.க-வினரைக் கிடுகிடுக்க​வைத்த பொன்மலைப் பகுதிச் செயலாளர் கேபிள் சேகரின் கொலை விவகாரத்தில் அவரது அண்ணி பார்வதி, அண்ணன் மகன் தங்கமணி உட்பட நான்கு பேரை போலீஸ் கைது செய்​துள்ளனர்.
கொலைக்கான காரணம் என்னவாம்?
பெயர் சொல்ல விரும்பாத போலீஸார் சிலர் பேசினார்கள். ''ஒரு காலத்தில் பிரபல தாதாவும் பன்றிகளை வளர்த்து விற்பனை செய்து கோடிகளில் புரண்டவருமான பெரியசாமியின் மறைவுக்குப் பிறகு, அவரது தம்பி சேகர் சொத்துக்களை கைப்பற்றிக்கொண்டார். அண்ணன் குடும்பத்துக்கு மாதம் 15,000 ரூபாய் மட்டும் செலவுக்காகக் கொடுத்து வந்துள்ளார். சொத்துக்களைப் பிரித்துக் கேட்டும் மாதத் தொகையை அதிகரித்துக் கேட்டும், பெரியசாமியின் இரண்டு மனைவிகளும், அவர்களது பிள்ளைகளும் சேகரிடம் பல முறை பேசினார்கள். அதனால் கடுப்பான சேகர், தனது அண்ணன் குடும்பத்துக்கு மாதம்தோறும் வழங்கிவந்த பணத்தையும் கொடுக்க மறுத்துவிட்டாராம். தனது அப்பாவிடம் தொழிலைக் கற்றுக்கொண்டு, பன்றி விற்பனை மூலம் மாதம் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் காசு பார்க்கும் சித்தப்பா சேகர் தங்களை ஒரேயடியாகப் புறக்கணிப்பதைக் கண்டு கோபம் அடைந்துள்ளனர் பெரியசாமி குடும்பத்தினர்.
பெரியசாமியின் மகன்களின் ஒருவரான சிலம்​பரசன் அடிதடி வழக்குகளில் அடிக்கடி சிறைக்கு சென்று வருவார். சிறையில் அவருக்குக் கூலிப் படையைச் சேர்ந்த சிலரின் அறிமுகம் கிடைத்து இருக்கிறது. அவர்தான், 'அபாய’ பாஸ்கர், 'பாம்புக்குட்டி’ நாகேந்திரன் ஆகியோரைக்கொண்ட ஒரு குழுவை ஏற்படுத்தி, சேகரைச் சிதைக்க மாஸ்டர் பிளான் போட்டுள்ளார்.
இதில் 'அபாய’ பாஸ்கருக்கும் சேகருக்கும் ஏற்கெனவே முன் விரோதம் உண்டு. இரண்டு ஆண்டு​களுக்கு முன்பு செந்தணீர்புரம் ஏரியாவில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட மோதலில் பாஸ்கரின் அம்மாவையும் தம்பியையும், சேகரின் மைத்துனர் ஒருவர் கொலை செய்துவிட்டார். அப்போது வேறு வழக்கில் சிறையில் இருந்த பாஸ்கர், ஜாமீனில் வெளியே வந்து சேகரின் மைத்துனரைக் கொலை செய்துப் பழிதீர்த்தார்.
தனது மைத்துனரைக் கொலை செய்த பாஸ்கரை சாகடிக்க சேகர் திட்டமிட்டு உள்ளதாகக் கூறி பாஸ்கரை உசுப்பேற்றி, அவரைத் தனக்கு ஆதர​வாகத் திருப்பி இருக்கிறார் சிலம்பரசன். 'பாம்புக்​குட்டி’ நாகேந்திரன் கொலை செய்வதையே தொழிலாகக்கொண்டவன். இவர்கள்தான் சேகரைச் சிதைத்தவர்கள்... சிலம்பரசன் மற்றும் கூலிப் படையைச் சேர்ந்த இருவர் கோர்ட்டில் சரண்டராக... 'பாம்புக்குட்டி’ சேகர், 'அபாய’ பாஸ்கர் உள்ளிட்ட மற்ற கொலையாளிகளை போலீஸார் தேடி வருகிறார்கள்'' என்று சொன்னார்கள்.
பள்ளியில் படிக்கும் சேகரின் மகன், 'தன் அப்பா​வைக் கொன்ற கொலையாளிகளை விரை​வில் பழி வாங்குவேன்’ என்று சபதம் போட்டு இருக்கிறானாம். அதனால், இந்தப் பகுதியில் இன்னமும் வன்முறை நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று நடுங்குகிறார்கள் மக்கள்.
காவல் துறைதான் மக்களின் பயத்தைப் போக்கு​வதற்குத் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்!
அ.சாதிக்பாட்சா
படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்

லைசென்ஸ் இல்லாமல் நடக்கும் பார்கள்!

'பார்'...'பார்' கொள்ளை போகுது பார்!
''தமிழக அரசே எங்களால்தான் நடக்குது!'' - தமிழகக் 'குடி’மகன்கள் தலைநிமிர்ந்து சொல்லும் வாசகம் இது. அந்த அளவுக்கு டாஸ்மாக் மூலம் வருவாய் கொட்டுகிறது. இந்த நிலையில், பார் மூலம் வரவேண்டிய கோடிக்கணக்கான பணம், அரசுக்குப் போய்ச் சேருவது இல்லை எனும் அதிர்ச்சித் தகவல் தாக்குகிறது!
இதுபற்றிய விவரம் அறிந்தவர்கள் சொல்வது இதுதான்...
''ஒவ்வொரு டாஸ்மாக் கடையில் எவ்வளவு விற்பனை நடக்கிறதோ, அதை வைத்துத்தான் பாருக்கான டெண்டர் தொகையை நிர்ணயம் செய்வார்கள். ஒரு வருட விற்பனையில், இரண்டரை சதவிகிதத்தை பாருக்கான டெண்டர் தொகையாக நிர்ணயித்திருக்கிறார்கள். இந்த டெண்டர் எடுப்பதற்கு போட்டா போட்டி நடக்கும். அந்த அளவுக்கு 'பார்’ வருமானம் அதிகரித்து வருகிறது. சாதாரணமாக ஒரு பாரில் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் ரூபாய்க்கு வியாபாரம் நடந்தால், அனைத்து செலவுகளும் போக 5,000 ரூபாய் லாபம் கிடைக்கும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் 200 கடைகள் வரை இருக்கின்றன. அனைத்துக்கும் பார் டெண்டர்விடுவார்கள். டெண்டர் விடும்போது மூன்று மாதங்களுக்கான தொகையை டி.டி எடுத்துக் கொடுக்க வேண்டும். அடுத்த மாதத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் டெண்டர் தொகைக்கு டி.டி.£க கொடுக்க வேண்டும். தற்போது பார் டெண்டர் போகாத மற்ற கடைகளிலும் அனுமதி இல்லாத பார் நடந்து கொண்டுதான் இருக்​கின்றன. அதில் இருந்து வரும் வருவாயை ஆளுங்கட்சி தரப்பில் மாவட்டம் முதல் கிளை வரை பங்கு போட்டுக்கொள்வதோடு, அதிகாரிகளையும் கவனித்து விடுகிறார்கள். அடுத்த டெண்டர் வரை அதிகாரிகளும் வாயைத் திறப்பதே இல்லை. இந்த விவரம் தெரிந்து உயர் அதிகாரிகள் ரெய்டு வரும் பட்சத்தில், லைசென்ஸ் இல்லாத பார்களை மூடிவிட்டு பார் நடந்ததற்கான அறிகுறியே இல்லாமல் செய்து விடுகிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 181 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இவற்றில் 144 கடைகளில் மட்டுமே பார் நடத்துவதற்கான லைசென்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனால், எல்லாக் கடைகளிலும் பார் கனஜோராக நடக்கிறது.
இந்த விவரத்தை டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் சவுண்டையாவுக்குயாரோ புகாராக தட்டிவிட, கடந்த வாரத்தில் அவர், மதுக்கடைகளுக்கு திடீர் விசிட் அடித்தார்.  மாவட்ட கலெக்டர் மகேஸ்வரியுடன் கலந்தா​லோசித்து வேறு மாவட்டக் காவல் துறை உதவியோடு ரெய்டு செய்வது என முடிவு எடுத்தார். அதற்குள் இந்த விவரம் லைசென்ஸ் இல்லாமல் பார் நடத்துபவர்களுக்குத் தெரிந்துவிட்டது. அப்புறம் என்ன, வழக்கம்போல் பாரை மூடிவிட்டார்கள். இனி அதிகாரிகள் வந்தாலும் எதுவும் செய்ய முடியாது'' என்று சொல்லி பார்களில் நடக்கும் முறைகேடுகளைச் சொல்கிறார்கள்.
''நாகப்பட்டினம் மாவட்டத்தில் 143 கடைகள் இருக்கின்றன. ஆனால் வெறும் 23 பார்கள் மட்டுமே லைசென்ஸோடு இயங்குகின்றன. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 180 கடைகளில், லைசென்ஸ் பார்கள் 76 மட்டும்தான். திருநெல்வேலி மாவட்டத்தில் 248 கடைகள் அனைத்துக்கும் பார் லைசென்ஸ் உண்டு. தஞ்சாவூர் மாவட்டத்தில் 240 கடைகளுக்கு 160 பார்களுக்கு மட்டும்தான் லைசென்ஸ். திருவாரூர் மாவட்டத்தில் 148 கடைகளுக்கு 60 பார்களில்தான் லைசென்ஸ். தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் 200 கடைகளுக்கு 166 லைசென்ஸ் பார்கள்தான் உள்ளன. ஆனால், அனைத்துக் கடைகளிலும் கனஜோராக பார்கள் நடக்கின்றன.
இப்படி உதாரணத்துக்காக சில மாவட்டங்களைப் பற்றி மட்டும் சொல்லி இருக்கிறோம். எல்லா மாவட்ட நிலவரங்களையும் கணக்கு எடுத்தால்​தான் அரசுக்கு ஏற்படும் இழப்பு எவ்வளவு என்று தெரியும். பால் விலை உயர்வு, பஸ் டிக்கெட் கட்டண உயர்வு பற்றி சொல்லும் போது, 'அரசின் கஜானா காலியாக இருக்கிறது’ என முதல்​வர் காரணம் சொல்கிறார். இப்படி லைசென்ஸ் இல்லாமல் நடக்கும் பார்களைக் கவனித்தாலே போதும்... கஜானா நிரம்பி வழியும்'' என்றார்கள்.
இது குறித்து டாஸ்மாக் ஜெனரல் மேனேஜர் கணே​சனிடம் பேசினோம். ''முன்பைவிட இப்போது பார்களின் எண்ணிக் கையை அதிகரித்​திருக்கிறோம். கலால் துறை மற்றும் காவல் துறையுடன் இணைந்து அவ்வப்​போது கூட்டுத் தணிக்கையும் செய்துகொண்டுதான் இருக்​கிறோம். ஒரு சில இடங்களில் சட்ட விரோதமாக நடக்கும் பார்​களுக்கு சீல் வைத்துள்ளோம். இனியும் சட்டத்துக்கு புறம்பாக எங்கேனும் பார் வைத்திருந்தால், சட்டப்படி கடும் நடவடிக்கை எடுப்​போம்'' என்றார்.
பார்ப்போம்!
கரு.முத்து, வீ.மாணிக்கவாசகம், இரா.மோகன்,  சரவணபெருமாள்

கொத்தடிமைகளா நாங்கள்?

கொந்தளிக்கும் போக்குவரத்துக்கழக ஊழியர்கள்
'அரசாங்க வேலைன்னு நினைச்சுத் தான் பணத்தைக் கொடுத்து போக்கு வரத்துக் கழகத்தில் வேலைக்குச் சேர்ந்தோம். ஆனா, இங்கே கொத்தடி மைகளா எங்களை நடத்துறாங்க. சக தொழிலாளி ஒருத்தரைப் பலி கொடுத்துட்டு வேதனையில் தவிக்கிறோம்... உதவி செய்யுங்களேன்’ என்று, நமது ஜு.வி. ஆக்ஷன் செல்லில் (044-42890005) கண்ணீர்ப் புகார் ஒன்று பதிவாகி இருந்தது.
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அரசு போக்கு வரத்துக் கழக டெப்போவில்தான் பிரச்னை.
ஓட்டுனர் சையது காசிமிடம் பேசினோம். ''எங்க டெப்போவில் டிரைவரா இருந்த ஜேக்கப்புக்கு உடம்பு சரியில்லை. லீவு வேணும்னு மேனேஜர்கிட்ட கேட் டார். 'ஆள் நல்லாத்தானே இருக்கே. உனக்கு எதுக்கு லீவு? போய் வேலையைப் பார்...’னு மிரட்டி அனுப்பிட்டார். அவரும் வேற வழி இல்லாமல், கடுமை யான காய்ச்சலோட பஸ்ல உட்கார்ந்து வண்டியை ஸ்டார்ட் பண்ணியவர், திடீர்னு மயக்கம் வந்து ஸ்டீயரிங் மேலேயே சாய்ஞ்சிட்டார். நாங்க உடனே அவரை ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோனோம்.
பரிசோதனை செஞ்ச டாக்டர்கள், அவர் இறந்துட்டதா சொன்னாங்க. அவர் பஸ் ஓட்டிட்டுப் போயிட்டு இருக்கும்போது அப்படி மயக்கம் வந்திருந்தா, பயணிகள் நிலைமை என்ன ஆகியிருக்கும்னு கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. இன்னைக்கு ஜேக்கப் குடும்பம் நடுத்தெருவுல நிற்குது.
எங்களை மாதிரி டிரைவர் களை மனுஷ னாவே மதிக்க மாட்டேங்கிறாங்க. கொத்தடிமைகள் போலத்தான் நடத்துறாங்க. ஆள் பற்றாக்குறை இருப்பது உண்மைதான். புதிதாக ஆட்கள் நியமனம் செய்வதை விட்டுட்டு, ராத்திரி பகலா ஒரே ஆளை வேலை வாங்குவது எந்த விதத்தில் நியாயம்? தூக்கம் இல்லாமல் பஸ் ஓட்டினால், டிரைவருக்கு மட்டும் பிரச்னை அல்ல, பொதுமக்களுக்குத்தான் அதிகப் பாதிப்பு ஏற்படும்.
எங்களோட வேலை பார்த்த ஒருத்தர் செத்துப்போயிட்டார். அவரோட இறுதி சடங்குக்கு போகக்கூட லீவு கொடுக்கலை சார். இந்தக் கொடுமையை எங்கே போய் சொல்றது? வேற வழி இல்லாமத்தான் நாங்க விதியேன்னு வேலை பார்த்துட்டு இருக்கோம்'' என்று வேதனையில் வெடித்தார்.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு கவுந்தப்பாடி போக்கு வரத்துக் கழகத்தின் கிளை மேலாளர் ஆறுமுகத்திடம் விளக்கம் கேட்டோம்.
''அவங்க சொல்ற மாதிரி இங்கே எந்த தவறுகளும் நடக்கலைங்க. இறந்துபோன ஜேக்கப்புக்கு போன மாசம் இரண்டு நாட்கள் லீவு கொடுத்திருக்கோம். அவருக்கு வேற ஏதோ பிரச்னை இருந்திருக்கு. அதைக் கவனிக்காம விட்டுட்டார். அதனாலதான் இறந்துட்டார்.
ஆள் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. தேவைக்கு அதிகமான டிரைவர்கள் இருக்காங்க. யாருக்கும் ஓவர் டியூட்டி கொடுக்கிறது இல்லை'' என்று எல்லாவற்றையும் மறுத்தார்.
சட்ட திட்டங்கள் எல்லாம் சரி... சக மனிதன் மீதான அக்கறைதான்... இல்லை!
                - ச.ஆ.பாரதி
படங்கள்: செ.பாலநாகஅபிஷேக்,மு.கார்த்திகேயன்

ஆக்டிங் மேயர் செல்வராஜ்?

கொந்தளிக்கும் சேலம் அ.தி.மு.க.
'சேலம் மாநகராட்சி அ.தி.மு.க. மேயர் சவுண்டப்பனைச் சுதந்திரமாக செயல்படவிடாமல், மாநகர் மாவட்டச் செயலாளர் எம்.கே.செல்வராஜ் ஆட்டுவிக்கிறார். செல்வராஜுக்கு முன்பு, கை கட்டி வாய் பொத்தி நிற்கிறார் சவுண்டப்பன்’ என்று ஜூ.வி. ஆக்ஷன் செல்லுக்கு (044-42890005) ஒரு புகார்!
இதுகுறித்து, கட்சித் தலைமைக்குப் புகார் அனுப்பி இருக்கும் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் பாபுவிடம் பேசி னோம். ''எங்க மாநகர் மாவட்டச் செயலாளராக இருக்கும் செல்வராஜுக்கு, அவரைத் தவிர வேற யாரும் கட்சியில் வளர்வது பிடிக்காது. இப்போ மாவட்டச் செயலாளர் பதவிக்கு மேயர் சவுண்டப்பனின் பெயர் அடிபடுது. அதனால், மேயர் மீது புகார் வரவேண்டும் என்பதற்காகவே, அவரை எந்த வேலையும் பார்க்க விடுவது இல்லை. தினமும் மேயரின் ஆபீஸ்ல போய் உட்கார்ந்துட்டு செல்வராஜ் அதிகாரம் பண்றார்.
உள்ளாட்சித் தேர்தல் சமயத்தில், 'கவுன்சிலர் ஸீட் வேணும்னா... மூணு லட்சம் கொடுங்க’ன்னு செல்வராஜ் என்கிட்டயே கேட்டார். 'பணம் கொடுத்து ஸீட் வாங்க வேண்டிய அவசியம் இல்லை’னுசொல்லிட்டேன். பணம் கொடுத்தவங் களுக்குத்தான் ஸீட் கொடுத்திருக்கார். நாங்க என்ன புகார் அனுப்பினாலும், மேலிடத்தில் இருக்கும் சிலரை சரிபண்ணி வெச்சுக்கிட்டு, எங்க புகார் அம்மாவோட கவனத்துக்கே போகாமத் தடுக்கிறார். செல்வராஜ் சொல்றதை மட்டுமே கேட்டுக்கிட்டு மேயர் இருந்தா, கண்டிப்பா இன்னும் எத்தனை மாசம் ஆனாலும் சேலத்துக்கு எந்த நல்லதும் பண்ண முடியாது. பகிரங்கமா நான் இப்படிப் புகார் சொல்வதால், என்னைப் பதவியில் இருந்து தூக்கினாலும் கவலை இல்லை''  என்று படபடப் பாகப் பேசினார்.
குற்றச்சாட்டு களுக்கு எம்.கே.செல்வராஜ் என்ன பதில் சொல்கிறார்?
''கட்சிக் காரங்க யாரா வது உதவி கேட்டு வந்தால், மேயரிடம் அழைத்துப் போவேன். அவங்க கேட்பதை செஞ்சு கொடுக்கச் சொல்வேன். மத்தபடி அவரோட வேலையில் நான் குறுக்கிடுவது கிடையாது. அவரோட வேலையை அவர் பார்க்கிறார். என்னோட வேலையை நான் பார்க்கிறேன். நீங்க வேணும்னா நான் எங்கே போறேன்... எங்கே வர்றேன்னு ரகசியமாக்கூட கண்காணிங்க'' என்று பொரிந்து தள்ளினார்.
மேயர் சவுண்டப்பனிடம் பேசியபோது, ''எங்க கட்சி யைப் பொறுத்தவரை, மாவட்டச் செயலாளருக்கே நான் ஹெட்மாஸ்டர் மாதிரி. அந்த அளவுக்கு கட்சியில் நான் சீனியர். மாவட்டச் செயலாளர் எல்லாம் என்னைக் கட்டுப்படுத்த முடியாது. ஏதாவது தப்பு நடந்தா, அம்மா பார்த்துட்டு சும்மா இருக்க மாட்டாங்க. எனக்கு இதுவரைக்கும் எந்த இடையூறும் கிடையாது'' என்றார் அமைதியாக.
நெருப்பு இல்லாமல் புகையுமா?
ம.சபரி
படங்கள்: க.தனசேகரன், ரா.மோகன்

''தேவிகுளம், பீர்மேட்டை இணையுங்கள்!''

கேரள எல்லையில் திடீர் போராட்டம்
கேரளத்தைப் பூர்வீகமாகக்கொண்ட சோஹன் ராய் இயக்கி இருக்கும் 'டேம் 999’ திரைப்படம், தமிழகத் தையே கொந்தளிக்கவைத்தது. அதனால், அந்தத் திரைப்படத்தை தமிழகத்தில் திரையிடத் தடை விதித்தது தமிழக அரசு.
இந்த நிலையில் தமிழ்த் தேசியச் சிந்தனையாளர்கள் ஒன்றிணைந்து, 'முல்லைப் பெரியாறு மீட்புக் குழு’ என்ற பெயரில் புதிதாக ஓர் இயக்கத்தை உருவாக்கி உள்ளனர். 'தமிழகத்துடன் முன்பு இணைந்து இருந்த தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை மீட்போம்’ என்று தென் மாவட்டங்களிலும், எல்லையோரக் கேரளக் கிராமங்களிலும் சுவரொட்டிகளை ஒட்டியும் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டும் பிரசாரத்தில் அவர்கள் இறங்கியுள்ளனர். முடங்கிக்கிடந்த தமிழ் உணர்வாளர்கள் திடுமெனத் திரண்டு எழுவதை அறிந்த கேரள உளவுத் துறை நிலைமையை மிகவும் சீரியஸாகக் கவனித்து வருகிறது.
முல்லைப் பெரியாறு மீட்புக் குழுவின் ஒருங் கிணைப்பாளர் ஈஸ்வரலிங்கா லிங்கவடிவேலு அடிகளாரைச் சந்தித்தோம். ''முல்லைப் பெரியாறு விவகாரத்தில், கேரள அரசியல் கட்சிகள் தொடர்ந்து பொய்ப் பிரசாரம் செய்து, தமிழர்களை முட்டா ளாக்கப் பார்க்கிறார்கள். 30 ஆண்டுகளாக அனுமன் வால் போல் நீண்டுகொண்டே இருக்கும் இந்த விவகா ரத்துக்கு ஒரே தீர்வு, தமிழகம் இழந்த தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை மீண்டும் தமிழகத்தோடு இணைப்பதுதான். இதுதான் தமிழ்த் தேசியச் சிந்தனையாளர்களின் முக்கியக் கோரிக்கை. இது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடும் தமிழ் உணர்வாளர்களை, கேரள அரசும் மத்திய அரசும் க்யூ பிராஞ்ச் மற்றும் ஐ.பி. போலீஸார் மூலம் அடக்கி, முடக்கிவைத்தது. தமிழகத்தை ஆண்ட திராவிடக் கட்சிகளும், தங்கள் உரிமைக்காக கேரள அரசை வலியுறுத்துவதில் போதிய கவனம் செலுத்த வில்லை. தமிழர்களை ஏமாற்றும் பம்மாத்துப் போராட்டங்களை நடத்தி, அவர்களிடம் இருக்கும் கொஞ்சநஞ்ச உணர்வுகளையும் மழுங்கடிக்கச் செய் தார்கள். இதன் விளைவாக நீதிமன்ற உத்தரவுகளைத் தூக்கி எறிவது, விஞ்ஞானிகள் கருத்தை ஏற்க மறுப்பது போன்ற அடாவடிச் செயல்களைச் செய்து வருகிறது கேரளா. இன்று அதை எல்லாம் தாண்டி, மத்தியில் தங்கள் கட்சி ஆட்சிதான் நடக்கிறது என்ற தைரியத்தில், திரைப்படத் தணிக்கைத் துறையைக் கையில் வைத்துக்கொண்டு, 'மொழி இன பாகுபாட்டை ஏற்படுத்தும்’ எனத் தெரிந்தும், 'டேம் 999’ படத்தை வெளியிட்டு உள்ளார்கள்.
முல்லைப் பெரியாறு அமைந் திருக்கும் இடுக்கி மாவட்டத்தில் தமிழர்கள் 84.4 விழுக்காடு வசிக் கிறார்கள். இருப்பினும், கேரளத்தை ஆளும் ஆட்சியாளர்கள், தமிழர் களை இரண் டாம் தரக் குடிமக்களாகவே நடத்துகிறார்கள். 'இடுக்கி, திருவனந்தபுரம், பாலக்காடு, எர்ணாகுளம், காசர்கோடுமாவட்டங்களில் உள்ள தமிழர்களுக்காக, தமிழ்ப் பள்ளிகளைத் துவக்க வேண்டும்’ என்பது மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படும்போது போடப்பட்ட ஒப்பந்தம். ஆனால், ஒப்பந்தத்தில் உள்ளபடி கேரள அரசு நடந்துகொள்ளவில்லை. தமிழர்கள் படிக்கும் பள்ளிகளில், ஆசிரியர்கள் பெயரளவிற்கே உள்ளனர். இடுக்கி மாவட்டத்தில் இருக்கும் செம்பகத்தொழு, உப்புக்காடு, பச்சமலை ஊர்களில் இருக்கும் பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாமல் பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன. ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு தமிழில் படிக்க வாய்ப்புகள் இல்லை. மலையாளத்தில் படித்தவர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பில் முன்னுரிமை என்று கேரள அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இந்தக் கொடுமை போதாது என, 1952-க்கு முன்பு கேரளாவில் இருந்தற்கான சான்றுகளைக் கொடுத்தால்தான் பட்டியல் இனத் தமிழர்களுக்கு சாதிச் சான்று, ரேசன் கார்டு தருகிறார்கள்.
நாங்கள் இந்த இயக்கத்தைத் தொடங்குவதற்கு முன்பு, மூணாறு, பீர்மேடு பகுதிகளில் உள்ள தமிழ் அமைப்புகளுடன் பேசினோம். 'ஈழத்தில் இருக்கும் தமிழர்களைப் போலத்தான் நாங்கள் இங்கு வாழ்கிறோம். ஈழ மக்களுக்காகப் போராடும் தமிழகக் கட்சிகள், பக்கத்து மாநிலத்தில் இருக்கும் எங்களுக்காகக் குரல் கொடுக்க மறுக்கிறது. எங்களை தமிழகத்தோடு சேர்க்கக் கோரி போராடும் உங்கள் இயக்கத்துக்கு முழு ஆதரவு தருகிறோம்’ என்று உறுதி கொடுத்து உள்ளனர்'' என்று வீராவேசமாகப் பேசினார்.
முல்லைப் பெரியாறு மீட்பு இயக்கத்தின் செய லாளர் தன்ராசு, ''கேரளத்தில் உள்ள கம்யூனிஸ்ட்கள் தோட்டத் தொழிலாளர்களாக இருக்கும் தமிழர்களை நமக்கு எதிராகத் திருப்பி விட்டுள்ளதைப்போல, அங்கு உள்ள தமிழர்களை கேரளத்துக்கு எதிராக நாங்கள் திருப்பிவிடுவோம். எங்கள் பிரசாரத்திற்கு இடுக்கி மாவட்டத்தில் வரவேற்பு கிடைத்துள்ளது'' என்றார் நம்பிக்கையாக.
தமிழகம் இந்த விவகாரத்தில் தொடர்ந்து கொதித்துக்கொண்டு இருக்கிறது. கேரளாவிலோ முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட வலியுறுத்தி, 1,000 நாட்களைத் தாண்டி தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது. நடவடிக்கை எடுக்கவேண்டிய மத்திய அரசோ... கள்ள மௌனம் சாதிக்கிறது!
இரா.முத்துநாகு

பக்கத்து வீடு... பாய்ந்த வழக்கு!

நில மோசடி வழக்குகளில் தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் சிறையில்அடைக்கப்பட்டு, பலர் ஜாமீனில்  வீடு திரும்பி விட்டனர். இந்த நிலையில், முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது ஒரு அபகரிப்புப் புகார் கிளம்பி இருக்கவே, டென்ஷனில் துடிக்கிறது தி.மு.க.
 கடந்த 29-ம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு  ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த 65 வயதான சேஷாத்திரி குமார் என்பவர் வந்து ஒரு புகார் கொடுத்தார்.
அந்தப் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் இதுதான்.
''ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள எங்களது குடும்ப இடத்தில் எனது பங்குக்குக் கிடைத்த இரண்டரை கிரவுண்டில் நான் வீடு கட்டி வசித்தேன். சில ஆண்டுகளுக்குப் பிறகு, 8-ஏ, சித்தரஞ்சன் சாலை, ஆழ்வார்பேட்டை என்ற முகவரியில் உள்ள அந்த வீட்டை தேவி பழனிச்சாமி என்பவருக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் என்று பேசி மாத வாடகைக்கு விட்டேன். இது தவிர மீதி உள்ள எனது குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான ஆறு கிரவுண்ட் இடத்தை மு.க.ஸ்டாலின் வாங்கி இருந்தார். அந்த இடத்தில் வீடு கட்டி ஸ்டாலின் குடிவந்ததில் இருந்து, எனது வீட்டையும் வாங்கி தனது வீட்டை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டார். அதற்காக என் வீட்டில் வாடகைக்கு குடியிருந்தவரை மிரட்டி, காலி செய்ய வைத்தனர். சுப்பா ரெட்டி, ராஜாசங்கர், ஸ்ரீனிவாசன் ஆகியோர் அடியாட்களுடன் வந்து, ஐதராபாத்தைச் சேர்ந்த வேணுகோபால் ரெட்டி என்பவருக்கு, 5.5 கோடி ரூபாய்க்கு என் வீட்டை நான் விற்றதாக, பத்திரப் பதிவு செய்து கொண்டனர். அந்தத் தொகையை டி.டி-யாகக் கொடுத்தார்கள். சில நாட்களுக்குப் பிறகு என் வீட்டுக்கு வந்த ஸ்ரீனிவாசன், ஒரு கோடியே 15 லட்சம் பணம் கொடுத்தார். அந்தப் பணமும் கணக்கில் வராத பணம் என்றும், இதை வெளியில் சொன்னால் மத்திய அமைச்சர் எஸ்.எஸ். பழனி மாணிக்கம் மூலமாக வருமான வரி சோதனை நடத்துவோம் என்றும் மிரட்டினார். அதோடு, எட்டு லட்சம் ரூபாயை தனக்கான கமிஷன் என்றும், அவரே எடுத்துக் கொண்டார். இப்போது அந்த வீடு, மாத வாடகை 20,000 ரூபாய் என்று ஸ்டாலின் மகன் உதயநிதி பெயருக்கு ஒப்பந்தம் செய்யப்​பட்டு, அதில் ஸ்டாலின் மகள் செந்தாமரை குடி இருக்கிறார்.
இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து சிலரிடம் பேசினேன். அந்த விஷயத்தைத்
தெரிந்துகொண்டதும், என் வீட்டுக்கு வருமான வரி அதிகாரிகளை அனுப்பி வைத்தார்கள். அவர்கள் என்​னிடம் வாக்குமூலம் எழுதி வாங்கி உள்ளனர். என் வீட்டை அதிகார துஷ்பிரயோகம் செய்து மிரட்டி தனது பினாமி பெயரில் எழுதி வாங்கியதுடன், என் வீட்டுக்கு வந்து கறுப்புப் பணத்தை வலுக்கட்டாயமாக கொடுத்து வருமான வரிச் சோதனை செய்ய வைத்து, எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வரும் வேணுகோபால் ரெட்டி, மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், ராஜா சங்கர், சுப்பா ரெட்டி, ஸ்ரீனிவாசன் ஆகியோர் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து, என் வீட்டை மீட்டுத் தருமாறும், எனக்கும் என் குடும்பத்தினரின் உயிருக்கும் பாதுகாப்பு தரும்படியும் மிக பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்''  என்று விளக்கி இருக்கிறார் சேஷாத்திரி குமார்.
இந்தப் புகார் குறித்து, மத்தியக் குற்றப் பிரிவு போலீஸ் அதிகாரிகள் விசாரித்து வந்தனர். இதற்கிடையில் இந்தப் புகாரில் உண்மை இருக்கிறதா? என்று விசாரிக்க உளவுத்துறையில் உள்ள நம்பிக்கையானஅதிகாரி ஒருவருக்கு தோட்டத்தில் இருந்து உத்தரவு வந்ததாம். புகார் கொடுத்து இருந்த சேஷாத்திரி குமாரை தனது அலுவலத்துக்கு வரவழைத்த அந்த உளவு அதிகாரி, குமாரிடம் சுமார் மூன்று மணி நேரம் விசாரித்து இருக்கிறார். அவர் வைத்து இருந்த ஆவணங்களைத் தீவிரமாக ஆராய்ந்து இருக்கிறார். அதன்பிறகுதான்,  1-ம் தேதி காலையில் புகார்தாரர் குமாரை விசாரணைக்கு அழைத்து இருக்கிறது, சென்னை மத்தியக் குற்றப் பிரிவு. அன்று காலை 10 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை குமாரிடம் வாக்குமூலம் வாங்கி இருக்கின்றனர். இதனால், எந்த நேரத்திலும் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படலாம் என்ற சூழ்நிலை ஏற்பட்டது. போலீஸ் அதிகாரிகள் ஒன்றுக்கு பல முறை, குமார் கொடுத்து இருந்த ஆவணங்களை ஆராய்ந்தனர். அதன் பிறகு, அன்று இரவு 8 மணிக்கு ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி, வேணுகோபால் ரெட்டி, சுப்பா ரெட்டி, ராஜா சங்கர், ஸ்ரீனிவாசன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த புகார் குறித்து விளக்கம் கேட்பதற்காக ஸ்டாலின், சுப்பா ரெட்டி, உதயநிதி ஸ்டாலின், ராஜா சங்கர் ஆகியோரைத் தொடர்பு கொண்டோம். சுப்பா ரெட்டி சார்பாக பேசிய அவரது மேலாளர் வாசுதேவன், ''குமார் என்பவர் யார் என்றே சுப்பா ரெட்டிக்குத் தெரியாது. இது வேண்டும் என்றே கிளப்பி விடப்படும் புகார்'' என்று சொன்னார். ஸ்டாலின் தரப்பு பதிலை அறிய அவரது இல்லத்துக்குத் தொடர்பு கொண்டோம். இந்தப் புகார் விவரங்களைக் கேட்டுக் கொண்ட அவரது உதவியாளர், ''தளபதி வெளியூர் சென்றிருப்பதால் அவரிடம் தகவல் சொல்கிறோம்'' என்றார்.''ஸ்டாலின் அல்லது உதயநிதி தரப்பு பதில் தேவை'' என்பதை, அவரிடம் பதிவு செய்துள்ளோம். ராஜா சங்கரின் தொடர்பு எண்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளன. அவர்களது பதில் கிடைத்ததும் முழுமையாக வெளியிடத் தயாராக இருக்கிறோம்!
எஸ்.கோபாலகிருஷ்ணன், படங்கள்: கே.கார்த்திகேயன்

'சால்வை' கேட்ட கனி... 'பட்டு' போர்த்திய தயா...

இதயம் இனித்த.. கணிகள் பனித்த டெல்லி!
னிமொழி விடுதலை ஆனதும், திகார் ஜெயில் நிர்வாகம் கொடுத்த ஒரு விளம்பரச் செய்தி கடந்த 30-ம் தேதி வெளியானது.
 'படியுங்கள்... படிக்கவும் வையுங்கள்’ என்கிற தலைப்பில் இந்த விளம்பரத்தை வெளியிட்டது ஜெயில் நிர்வாகம்.
'சிறை என்றால் நமக்கு நினைவுக்கு வருவது கிரிமினல்கள், திருடர்கள், மோசடிப்பேர்வழிகள். இவர்கள் ஒரு முறை வெளியே வந்துவிட்டால் மீண்டும் சிறைக்குத் திரும்ப விரும்புவது இல்லை. ஆனால் இவர்கள் வெளியே வருவதை வெளியே இருக்கும் சிலர் விரும்புவது இல்லை. அது தவறு. அவர்கள் வரமுடியாததற்குக் காரணம் கல்வி அறிவைப் பெறவில்லை, படிப்பறிவும் அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு உதவுங்கள். இதற்கான திட்டம் எங்களிடம் உள்ளது. படியுங் கள்... படிக்கவும் வையுங்கள்’ என்று விளம்பரம் கொடுத்தது. கனிமொழி விடுதலையான போது இந்த விளம் பரத்தைக் கொடுத்தது ஏன் என்பது புரியாத புதிர்தான்.
கனிமொழி விடுதலையானதில் எத்தனையோ பேருக்கு மகிழ்ச்சி இருக்கும். ஆனால் திகார் ஜெயிலில் இருக்கும் பெண் கைதிகளுக்கு கண்டிப்பாக முழு மகிழ்ச்சி இல்லை. திகாரில் சுமார் 470 பெண் கைதிகள் இருக்கிறார்கள். இந்தப் பெண் கைதி களுக்கு ஏழு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இருந்தால், குழந்தைகளும் சிறையில் இருக்கலாம். விசாரணைக் கைதிகளின் குழந்தைகளுக்கு என்றே தனியே சிறையில் காப்பகம் உண்டு. திகார் ஜெயிலுக்குள் இருக்கும் அத்தனை குழந்தைகளும் கனிமொழிக்கு நன்கு பழக்கம்.
தன்னைப் பார்க்கவரும் கட்சிக்காரர்கள் மூலம் க்ரையான் பென்சில்கள், சாக்லேட்டுகள், நோட்டுகள் வாங்கி அந்தக் குழந்தைகளுக்குக் கொடுப்பது கனிமொழியின் பழக்கம். இப்போது தாய்க்குலமும், குழந்தைகளும் தவியாய் தவிக்கிறார்கள். 'ஆன்ட்டி... ஆன்ட்டி’ என்று தன்னைச் சுற்றி வரும் குழந்தைகளை கனிமொழியும் மறக்கமுடியாமல் தவிக்கிறார். அதனால்தான் விடுதலையாகி தன்னுடைய பாராளுமன்ற உறுப்பினருக்கான ஸ்வர்ணஜெயந்தி இல்லத்திற்குப் போன கனிமொழி, 'இனிமே அந்தக் குழந்தைகளுக்கு பழமும் க்ரையானும் யார் வாங்கிக் கொடுப்பாங்க?’ என்று கணவர் அரவிந்தனிடம் கேட்டிருக்கிறார்.
193 நாட்கள் சிறை வாசம்.  திகாரில் ஜெயிலில் இருந்து கனிமொழியை அழைத்துவந்தது, அண்ணன் மு.க.அழகிரி. சிறையில் இருப்பவரை அதிலும் பெண்களை விடுதலை செய்யும்போது, அவரது ரத்த சம்பந்தப்பட்டவர்களிடம்தான் ஒப்படைப்பது வழக்கம். அதன்படி மு.க.அழகிரி, சிறைச்சாலை அலுவலகப் பதிவுகளில் கையெழுத்துப் போட்டார். கனிமொழி வெளியே வந்ததும் அழகிரி, டி.ஆர்.பாலு மற்றும் பல தி.மு.க. எம்.பி-க்களும் பூச்செண்டு கொடுத்தனர். முன்னாள் அமைச்சரான தயாநிதி மாறன்  பொன்னாடை போர்த்தினார். உடனே கனிமொழி, 'குளிருக்குத் தகுந்த மாதிரி சால்வையாவது கொடுத்திருக்கலாமே’ என்றார். உடனே தயாநிதி, 'இது பட்டு... பட்டுச் சால்வை’ என்றார் வழக்கான சிரிப்புடன்.
கனிமொழியை வரவேற்க சுமார் 25 கார்கள் சிறைக்குள் புகுந்தன. அழகிரியோடு தி.மு.க-வைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர்கள் ஜெகத்ரட்சகன், காந்திச் செல்வன், நெப்போலியன் ஆகியோரும் திகார் சிறைச்சாலைக்கு வந்தனர். மற்றொரு இணை அமைச்சரான பழனி மாணிக்கம் மட்டும் கனிமொழியின் வீட்டுக்கு வந்து நலம் விசாரித்தார். கனிமொழியை வெளியே அழைத்துவந்த அழகிரி, அடுத்து 'கலைஞர் டி.வி.’ சரத்குமாரையும் பூச்செண்டு கொடுத்து வரவேற்று அழைத்து வந்தார். கனிமொழி சிறையிலிருந்து விடுதலையான தும், ஒட்டுமொத்த மீடியாவும் திகார் சிறை வாசலில் திரண்டது. வழக்கமான கேட்டில் நேரடி ஒளிப்பரப்புக்காக திரண்டு நின்றனர். கிட்டத்தட்ட 20-க்கும் மேற்பட்ட நேரடித் தொலைக்காட்சி வாகனங்கள் காத்துக்கிடந்தன. ஆனால் அவர்கள் கண்ணில் சிக்கக்கூடாது என்பதில் கனிமொழி உறுதியாக இருந்தார். அவருக்கு திகார் சிறையின் இயக்குனர் ஜெனரல் உதவி செய்தார். அதனால் தொலைக்காட்சி மற்றும் பத்திரிகையாளர்கள் கண்ணில் படாமல் கனிமொழி வெளியே போகும் ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தார். 'கனிமொழி இரவு 8 மணிக்கு வெளியே வருவார்’ என்று செய்தி பரப்பி, அதற்கு முன்னதாகவே வெளியேற்றினார்கள். கனிமொழி யாருக்கும் தெரியாமல் வெளியேறிய பின்னர்தான், திகார் ஜெயில் அதிகாரி சுனில் குப்தா, வாசல் எண் 2 வழியாக கனிமொழி வெளியே சென்றதை உறுதி செய்தார்.
டெல்லி நார்த் அவென்யூ ஆர்.எல்.எம். மருத்து வமனை எதிரே உள்ளே ஸ்வர்ண ஜெயந்தி அடுக்கு மாடிக் குடியிருப்பில் கனிமொழி தங்கி இருக்கிறார். (சௌத் பிளாக்கில் இருந்த வீட்டில் இருந்து, இந்த வீட்டிற்கு சில மாதங்களுக்கு முன்புதான் மாறினார்!.) எந்தக் கைப்பையை ஜெயிலுக்குப் போகும்போது ஒப்படைத்துவிட்டுச் சென்றாரோ, அதே கைப்பையோடு வீடு திரும்பினார். கனிமொழியின் வருகைக்கு பலர் காத்திருந்தனர். பல வி.ஐ.பி-களிடம் இருந்து அழைப்பு வந்தவண்ணம் இருந்தது. முதல் அழைப்பு அழகிரியின் மனைவி மற்றும் மகனிடம் இருந்து. அடுத்த அழைப்பு, வெளியூருக்கு அவசரமாகச் சென்று கொண்டிருந்த ஸ்டாலினிடம் இருந்து வந்தது. வீடு திரும்பிய கனிமொழி, அண்ணன் அழகிரியை மறக்கவில்லை. கையெழுத்து இட்ட அண்ணனுக்கு நன்றி கூறுவதற்காக, அவரது வீட்டிற்கு உடனடியாக செல்ல விரும்பினார். ஆனால் அழகிரி, 'பரவாயில்லை. இப்போ வரவேண்டாம். ரெஸ்ட் எடுத்துட்டு மெதுவா வா’ என்று தடுத்துவிட்டார்.
கனிமொழியைக் காண இரவோடு இரவாக உடனடியாக வந்தவர், அவருடைய முன்னாள் மாநிலங்களவை நண்பரும், இன்னாள் மக்களவை உறுப்பினருமான சுப்ரீயா சாலே. சரத்பவாரின் மகள் இவர். இவருடன் அவரது கட்சியைச் சேர்ந்தவரும் முன்னாள் அமைச்சருமான பிரபுல் படேலும் வந்தார். பக்கத்து அடுக்குமாடியில் இருக்கும் ஆந்திரப் பெண் அமைச்சரும் என்.டிஆரின் மகளுமான புரந்தேஸ்வரியும் கனிமொழியை உடனடியாக வந்து பார்த்தார். இதே மாதிரி ஜெயந்தி நடராஜனும்  ஓடோடி வந்தார்.
இப்படி ஓவ்வொருவராக வந்து கொண்டிருக்க, சி.பி.ஐ-க்குப் பொறுப்பு வகிக்கும் மத்திய இணையமைச்சர் டி.நாராயணசாமி, மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் போன்றவர்களும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள். இவர்கள் எல்லோருமே சி.பி.ஐ. அல்லது நீதிமன்றத்தைக் குறை சொல்லவில்லை. 'உங்க கைதுக்குக் காரணம் இந்த மீடியாக்கள்தான். உயர் நீதிமன்றம் போட்ட அபராதத்திற்குப் (நீதிபதி பற்றிய செய்திக்காக, 'டைம்ஸ் ஆஃப் இண்டியா’விற்கு  100 கோடி அபராதம்) பின்னர் மீடியாக்கள் பரவாயில்லை’ என்று சொன்னார்களாம். ஆனால் கனி எல்லாவற்றையும் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டார், மௌனமாகவே இருந்தார்.
அவருடன் இருந்தவர்கள், 'கனிமொழிக்குத் தன்னைக் காயப்படுத்திய வர்கள் யார் என்று தெரியும். அவர்களைக் கனிமொழி நன்றாகவே அடையாளம் கண்டுகொண்டார். இப்போதைக்கு அவர் வாயைத் திறக்கவில்லை என்றாலும், விரைவில் மௌனம் கலைப்பார். அப்போது பலருக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது’ என்று சொல்கிறார்கள்.
சரோஜ் கண்பத்
படங்கள்: பங்கஜ்
ஆ.ராசா எப்போது?
2ஜி வழக்கு விவகாரத்தில் ஆ.ராசா, மற்றும் டெலிகாம் துறை செயலாளராக இருந்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சித்தார்த் பெஹூரா மட்டும்தான் இப்போது சிறையில் இருக்கிறார்கள். வியாழன் அன்று ஆர்.கே.சந்தோலியாவுக்கும் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் கொடுத்துவிட்டது. பெஹூராவின் ஜாமீன் மனு உயர் நீதிமன்றத்தில் விசாரணை முடிந்து, தீர்ப்புக்குத் தயாராக இருக்கிறது. இன்னமும் ஜாமீன் தாக்கல் செய்யாமல் தனியே இருக்கும் ஆ.ராசா, இந்த வாரம் ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம் என்று சொல்லப்படுகிறது.

எல்லையில் தொடங்கி டெல்லி வரை..!

சிக்கலாகிறது முல்லைப் பெரியாறு விவகாரம்
முல்லைப் பெரியாறு விவகாரம் காரண​மாக தமிழக - கேரள எல்லைப் பகுதிகளில் இறுக்கமான சூழல் நிலவுகிறது.
'டேம் 999’ படத்துக்கு எதிரான குரல்கள் தமிழகத்தில் வலுத்த நேரத்திலேயே, கேரள​வாசிகள் தமிழகத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். இடுக்கி மாவட்டத்தில் கடந்த 28-ம் தேதி அனைத்துக் கட்சியினரும், மறுநாள் பா.ஜ.க-வினரும் அடுத்தடுத்து பந்த் நடத்தினர். பா.ஜ.க-வினரின் பந்த் இடுக்கி மாவட்டத்தைத் தாண்டி மேலும் சில மாவட்டங்களிலும் வலுவாகவே எதிரொலித்தது. தமிழகத்தின் பதிவு எண் கொண்ட வாகனங்களைக் கண்டாலே, ஆவேசத்தோடு வழிமறித்து திருப்பி அனுப்பினர். இதற்கு சபரிமலை செல்லும் பக்தர்களும் தப்பவில்லை.
ஒரு கட்டம் வரை கேரளவாசிகளின் ஆர்ப்பாட்டங்​களைக் காவல்துறை கண்டுகொள்ளாமல் இருந்தது. அடுத்த கட்டமாக பிரதமர், ஜெயலலிதா, வைகோ ஆகியோரின் உருவப் பொம்மைகளை ஆங்காங்கே எரிக்கத் தொடங்கியதும்தான் போராட்டக்காரர்களை அன்போடு அதட்டி, விரட்ட ஆரம்பித்தனர். 'மரியட்டே மரியட்டே... வைகோ மரியட்டே’ என்று இவர்கள் முழங்கினார்கள். 
தமிழகத் தலைவர்கள் உருவப் பொம்மைகள் எரிக்கப்படுவதும், அவமதிக்கப்படுவதும்தெரிந்து, தமிழக எல்லையிலும் பதற்றம்எட்டிப் பார்த்தது. கட்சிக்காரர்கள் கூடி நின்று ஆவேசம் காட்ட ஆரம்பித்தனர். எல்லை மீறி இரண்டு மாநிலத்தி​னருக்கும் இடையில் கலவரம் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற பதற்றம் அதிகாரிகள் மத்தியில் ஏற்பட்டது. அதனால், போடியில் இருந்து மூணாறு செல்லும் பாதையான முந்தல் உள்ளிட்ட முக்கிய சோதனைச் சாவடிகளில் ஏகத்துக்கும் கெடுபிடி காட்டினார்கள் போலீஸார்.
இரண்டு மாநிலத்து மக்களிடையே பிரச்னையை உருவாக்கி இருக்கும் 'டேம் 999’ படத்தின் இயக்குனரான சோஹன் ராயிடம் பேசினோம். ''அடிப்படையில், 'டேம் 999’ ஒரு காதல் கதை. அந்தக் கோணத்தில் பார்த்தால் அணை உடைவதும் அழிவு ஏற்படுவதும் கண்ணுக்குத் தெரியாது. இந்த படத்தை முல்லை பெரியாறு விவகாரத்துடன் முடிச்சுப் போட்டுப் பார்ப்பதே தவறு.
'999’ என்ற எண்ணும் ஒரு பிரச்னை என்கிறார்கள். அதனை முல்லைப் பெரியாறு அணையின் ஒப்பந்தக் காலம் என்று தவறாக புரிந்துகொண்டார்கள். ஆனால் உண்மை அது இல்லை. கதைப்படி 9-9-2009 என்ற தேதியில்தான் அந்த அணை உடைகிறது. நான் தமிழ் மக்களின் உணர்வுகளை மிகவும் மதிக்கிறேன். அணை தொடர்பான பிரச்னைகளையும் தெளிவாகப் புரிந்துவைத்துள்ளேன். இந்தப் பிரச்னை மூலம் என் படத்துக்கு மிகப் பெரிய விளம்பரம் கிடைத்து இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், இந்த விளம்பரமும் அதனால் இரு மாநிலங்களிலும் எழுந்துள்ள பதட்டமும் எனக்கு உண்மையில் வேதனையாகத்தான் இருக்கிறது.
'இந்தியா என்றாலே சேரிகள்தான்’ என்று உலக அரங்கில் நம்மைக் கேவலப்படுத்திய 'ஸ்லம் டாக் மில்லியனர்’ படத்துக்குப் பதிலடி கொடுக்கவே இந்தப் படத்தை எடுத்தேன். இந்தியக் கலாசாரம், குடும்ப உறவுகளின் மேன்மை, வேதங்கள், இயற்கை அழகு என்று பல விஷயங்களை படத்தில் சொல்லி இருக்கிறேன். அதனால், மொழி, இனம், பாகுபாடு இல்லாமல் இந்தியர்கள் அனைவரும் கொண்டாட வேண்டிய படம் இது. ஆனால், இங்கு நடப்பதோ வேறு மாதிரி இருக்கிறது...'' என்றார்!
கடந்த நவம்பர் 30-ம் தேதி இரவு கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், கேரளா காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா மற்றும் அதிகாரிகள் சிலர் அணையைப் பார்வையிட்டனர். பின்னர், மீடியாக்களிடம் அவர்கள் பேசியபோது, ''அணையின் 17 மற்றும் 18 ஆகிய பிளாக்குகளில் தண்ணீர்க் கசிவு உள்ளது. இதனால், அணை உடைய வாய்ப்பு இருக்கிறது. கேரள மக்களின் உயிருக்கும் உடைமைகளுக்குப் பாதுகாப்பு இல்லை...'' என்றார்கள்.
ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த அணையின் பொறியாளர்களோ, ''நிலநடுக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படும் உப்புத் துறை என்ற இடம் இடுக்கி அணைக்கு தூரத்தில் உள்ளது. ஆனால், முல்லைப் பெரியாறு அணையோ உப்புத் துறையில் இருந்து 35 கி.மீ தொலைவில் உள்ளது. கேரள அரசியல்வாதிகளின் கூற்றுப்படி பார்த்தால் இடுக்கி அணைக்குத்தான் உடனடி ஆபத்து இருக்கிறது.
முல்லைப் பெரியாறு அணை 6.7 ரிக்டர் வரை பூகம்பத்தைத் தாங்கும் தன்மை உடையது. தவிர, 152 அடி உயரம்கொண்ட அணையில் நாம் 136 அடி மட்டுமே நீரைத் தேக்கிவைத்துள்ளோம். ஆனால், இடுக்கி அணையில் 555 அடிக்கு நீரைத் தேக்கிவைத்துள்ளனர். அந்த அணைக்குக் கீழ்தான் அதிக எண்ணிக்கையில் மக்கள் வசிக்கிறார்கள்.
அதனால், இடுக்கி அணையால்தான் கேரள மக்களுக்கு ஆபத்து அதிகம். அணையின் நீர்க்கசிவு என்பது அணைகளுக்கே உரிய அடிப்படை விஷயம். குறிப்பிட்ட சதவிகிதம் நீர்க்கசிவு இருந்தால்தான் அணையின் கட்டுமானம் ஆரோக்கியமாக இருப்பதாக அர்த்தம். இதை எல்லாம் புரிந்து கொள்ளாமல் அரசியல் செய்வதற்காகப் புரளி கிளப்புகிறார்கள் கேரள அரசியல்வாதிகள்...'' என்கிறார்கள்.
பி.ஜே.பி. மற்றும் இடதுசாரிகளிடம் எப்போதும் முட்டிக்கொண்டு நிற்கும் கேரள ஆளும் கட்சியான காங்கிரஸும், முல்லைப் பெரியாறு அணை விஷயத்தில் அந்தக் கட்சிகளுக்கு முழு ஆதரவு அளிப்பதுதான் ஆச்சர்யம். போதாக்குறைக்கு முல்லைப் பெரியாறு அணையை இடிக்க வலியுறுத்தி, வரும் 7-ம் தேதி உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்து உள்ளார் கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், தமிழகத்தில் வைகோ அதே தேதியில் முல்லைப் பெரியாறுக்கு ஆதரவாகப் பிரசாரத்தைத் தொடங்குகிறார். அதைத் தொடர்ந்து கம்பத்தில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும், 21-ம் தேதி கேரளாவுக்குச் செல்லும் சாலைகளில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாகவும் வைகோ அறிவித்து உள்ளார். டெல்லியில் தொல். திருமாவளவன், கணேசமூர்த்தி உள்ளிட்ட தமிழக எம்.பி.க்கள் இந்த விவகாரத்துக்காக அடையாளப் போராட்டம் நடத்தினார்கள். உடனே வயலார் ரவி உள்ளிட்ட கேரள மத்திய மந்திரிகள் அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து இருக்கிறார்கள்.
தமிழக முதல்வரும் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து, ஒரு குழு அமைத்து கேரள பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி  இந்தப் பிரச்னைக்கு சுமூகத் தீர்வு காணவேண்டும் என்பதுதான் பெரும்பாலான மக்களின் எண்ணம்.
என்ன செய்யப்போகிறார் ஜெயலலிதா?
எஸ்.ஷக்தி, சண்.சரவணக்குமார்
படங்கள்: வி.ராஜேஷ்
 கோவாவில் கொதித்த தமிழ் மாணவர்கள்!
முல்லைப் பெரியாறு விவகாரம், சமீபத்தில் கோவாவில் துவங்கிய சர்வதேச திரைப்பட விழாவிலும் பலத்த சலசலப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து நம்மிடம் பேசிய திரைப்படக் கல்லூரிகளைச் சார்ந்த தமிழ் மாணவர்கள், ''கடந்த நவம்பர் 23-ம் தேதியில் இருந்து கோவா மாநிலம், பனாஜியில் 42-வது பன்னாட்டுத் திரைப்பட விழா நடக்கிறது. இதில் பங்கேற்க பல நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் 8,000 பேர் வந்து இருக்கிறார்கள்.
கடந்த 29-ம் தேதி, விழா நடக்கும் வளாகத்தில் 'ஒரு தலை ராகம்’ ரவீந்தர்  தலைமையில் 30-க்கும் மேற்பட்ட மலையாளக் கலைஞர்கள் ஒன்று கூடி, முல்லைப் பெரியாறு அணையை இடிக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள்.
உடனே அதே இடத்தில் 50-க்கும் மேற்பட்ட தமிழ் மாணவர்கள் ஒன்று கூடி, 'முல்லைப் பெரியாறு அணையைக் காக்க வேண்டும். அன்பிற்குரிய கேரள மக்களே... உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்றுக் கொள்ளுங்கள்...’ என்றும் தொடர்ந்து கோஷம் எழுப்பினோம்...'' என்றார்கள்!
- தி.கோபிவிஜய்

''பஸ் கட்டண உயர்வு மர்மம் விரைவில் வெளிவரும்!''

திருச்சியில் ஸ்டாலின் சஸ்பென்ஸ்..
திருச்சி மேற்குத் தொகுதி இடைத் தேர்தலின்போது, வேட்பாளர் கே.என்.​நேருவுக்காக திருச்சி​யில் சூறா​வளிப் பிரசாரம் செய்த தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், தோல்விக்குப் பிறகு நவம்பர் 30-ம் தேதி மீண்டும் திருச்சியில் ஆஜர்.
ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜெயல​​​​லிதாவை எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஆனந்தின் தம்பி சதீஷ்குமாருக்குத் திருமணம். அதற்கு மட்டும் வருவதற்கு சம்மதம் தெரிவித்து இருந்த ஸ்டாலின், திடீரென இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் மற்ற நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யச் சொன்னாராம். 
அன்றைய தினம் காலை வயலூரில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்துகொண்ட ஸ்டாலின், தி.மு.க. கொண்டு​வந்த திட்டங்களை ஜெயலலிதா நிறுத்திவிட்டதையும், பேருந்துக் கட்டணம் மற்றும் பால் விலையை உயர்த்தியதையும் கண்டித்துவிட்டு, ''மின் கட்டண உயர்வை நடைமுறைப்படுத்தினால் தி.மு.க. மாபெரும் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்தும்'' என்று குரல் உயர்த்தினார். அதன் பிறகு, கட்சி பிரமுகர்களின் கார்கள் புடைசூழ, கலைஞர் அறிவால​யத்தில் குழுமி இருந்த, உள்ளாட்சித் தேர்தலில் வென்ற தி.மு.க. பிரமுகர்களை சந்திக்கக் கிளம்பினார்.
அறிவாலயத்தில் குழுமி இருந்த கட்சியினரிடம் உரையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கட்சியினரை வரிசையில் நிற்கவைத்து சால்வைகளை வாங்கிக்கொண்டு வழியனுப்பிவைத்தார், ஸ்டாலின். 'வெற்றி பெற்றவர்களைப் பாராட்டி ஒரு வார்த்தைகூட பேசவில்லை. உள்ளாட்சி அமைப்புகளில் அவர்கள் எப்படிப் பணியாற்ற வேண்டும் என்று ஆலோசனை சொல்லவும் இல்லை’ என்று தொண்டர்களுக்கு மனதில் வருத்தம். அந்த ஒரு நிகழ்ச்சியில் மட்டும் ஸ்டாலினுக்கு கட்சிக்காரர்கள் கொடுத்த சால்வைகள் மட்டும் எட்டு மூட்டைகள் தேறியதாம்.
விழாவின்போது ஸ்டாலின் முன்னிலையில் மாற்றுக் கட்சியில் இருந்து ஒரு முக்கியப் பிரமுகர் தி.மு.க-வில் இணையப்போவதாக ஒரு தகவல் கசிந்தது. யார் அந்த முக்கியப் பிரமுகர் என்பதை அறிந்துகொள்ள பத்திரிகையாளர்கள் ரொம்பவே ஆர்வமாக இருந்தனர். அறிவாலயத்திற்கு வந்து தி.மு.க-வில் இணைந்த அந்த வி.ஐ.பி., பொன்னம்பட்டி பேரூராட்சித் தலைவரான மாலிக். இவருக்கு தி.மு.க-வில் போட்டியிட ஸீட் மறுக்கப்பட்டதால், சுயேட்சையாகப் போட்டியிட்டு அதிகாரபூர்வ தி.மு.க. வேட்பாளரை மண் கவ்வச் செய்தார். இவர் கவிஞர் சல்மாவின் கணவர்!
நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த ஸ்டாலினை சூழ்ந்துகொண்ட பத்திரிகையாளர்கள், ''நீண்ட சிறைவாசத்திற்குப் பிறகு ஜாமீனில் வெளிவந்திருக்கும் கனிமொழிக்கு கட்சியில் முக்கியப் பொறுப்பு வழங்கப்படுமா?'' என்று கேள்வி எழுப்ப... அதற்கு பதில் சொல்லாமல் காரில் ஏறிப் புறப்பட்டார்.
அடுத்ததாக தொண்டர்களுக்கு சாப்பாடு மேளா தொடங்கியது. 'அறிவாலயத்தில் அசைவம் சமைக்க அனுமதி இல்லை. ஆகவே, சைவ விருந்துதான்’ என நேரு மேடையிலேயே அறிவிக்க... 'உற்சாக’த்தில் இருந்த உடன்பிறப்புக்கள் சோர்ந்துபோனார்கள்.
மாலையில் திருவெறும்பூரில் விலைவாசி உயர்​வைக் கண்டித்து நடைபெற்ற கண்டனப் பொதுக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், ''போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் இயங்குவதால்​தான், பஸ் கட்டணத்தை உயர்த்தவேண்டிய கட்டாயத்துக்கு, தான் தள்ளப்பட்டதாகச் சொல்கிறார் ஜெயலலிதா. கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால் போக்குவரத்துக் கழகம் திவாலாகிவிடும் என்கிறார். அரசுப் பேருந்துகள் வாங்கும் அதே கட்டணத் தைத்தானே தனியார் பேருந்துகளும் வாங்குகிறார்கள். அவர்கள் தொழிலில் நஷ்டம் என்று மூடிவிட்டுச் சென்றுவிட்டார்களா..? தொடர்ந்து தொழிலை நடத்திக்கொண்டுதானே இருக்கிறார்கள்? பஸ் கட்டணத்தை திடீரென்று ஜெயலலிதா தாறுமாறாக உயர்த்தியதன் மர்மம் கூடிய விரைவில் வெளிவரும்!'' என்று சஸ்பென்ஸ் வைத்தார்.
அ.சாதிக்பாட்சா
படம்: ப்ரீத்தி கார்த்திக்

நிறைய்ய்ய்யப் பணம் இருக்கு!

ரெய்டில் வியர்க்கவைத்த பொங்கலூரார் பேத்தி
'ரெய்டு சம்பிரதாயம்’ பொங்​கலூர் பழனி​சாமியின் வீட்டிலும் நடந்தே​விட்டது. 'அடேங்கப்பா’ அளவில் அகப்படும் என்று பலரும் எதிர்பார்த்திருக்க, வெளியே வந்த போலீஸ் 'அடப் போங்கப்பா’ என்ற ரேஞ்சுக்கு அலுத்துக்கொண்டு சென்றார்கள்.
     கடந்த தி.மு.க. ஆட்சியில் ஊரகத் தொழில் துறை அமைச்சராக இருந்தவரும், கட்சியின் கோவை மாவட்டச் செயலாளருமான பொங்கலூர் பழனிசாமி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்துள்ளதாக வழக்கு. இதைத் தொடர்ந்து கடந்த 29-ம் தேதி காலை 6 மணிக்கு பொங்கலூர் பழனிசாமியின் வீட்டின் கதவைத் தட்டினார்கள் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார். கோவை, சிங்காநல்லூரில் உள்ள இவரது வீடு, சென்னை அரும்பாக்கம் வீடு, தாராபுரம் அருகே தோட்ட வீடு, சூலூர் அருகில் இருக்கும் இவரது பொறியியல் கல்லூரி உட்பட ஏழு இடங்களில் ஒரே நேரத்தில் ரெய்டு நடத்தப்பட்டது.
வீட்டுக்குள் போலீஸார் சோதனை செய்ய ஆரம்பித்ததும், அவரது பேத்தியான (டாக்டர் கோகுலின் ஐந்து வயது மகள்!)  தேன்மொழி, 'என்ன பண்றீங்க எங்க வீட்டுக்குள்ளே?’ என்று கேட்டாளாம். அதற்கு, 'உங்க வீட்டுல பணம் இருக்கான்னு தேடுறோம்’ என்று சிரித்துக் கொண்டே சொன்னார்களாம் போலீஸார். உடனே, 'ஓ... நிறைய்ய்ய்யப் பணம் இருக்கு. எனக்குத்தான் தெரியுமே’ என்று போலீஸாரை பாப்பா அழைத்துச் செல்ல... சில நிமிடங்கள் பொங்கலூர் பழனிசாமியின் குடும்பத்தினருக்கு வியர்த்துவிட்டது. கடைசியில், ஓர் அறைக்குச் சென்று அந்த குட்டிப் பாப்பா தனது உண்டியலை எடுத்து போலீஸாரிடம் கொடுக்க... போலீஸார் உட்பட எல்லோரும் சிரித்துவிட்டார்களாம்!
குண்டடம்அருகே பொங்கலூர் பழனிசாமி​யின் பூர்வீக வீட்டிலும் சோதனை நடந்தது. இங்கே தனியாக வசித்து வரும் பழனிசாமியின் அம்மா பழனியம்மாள், 'போலீஸுன்னு சொல்றீங்க. அதென்ன கலர் சட்டை போட்டு வந்திருக்கீங்க?’ என்று கேள்வி மேல் கேள்வி கேட்க, ஏதேதோ சொல்லிச் சமாளித்தார்களாம். இந்த வீட்டின் அருகில் இருக்கும் இவரது தென்னந்தோப்பையும் விடாமல் குடைந்துவிட்டுச் சென்றது போலீஸ்.
ஆனால், சொல்லிக்கொள்ளும்படியாக ரெய்டில் எதுவும் சிக்கவில்லை என்கிறார்கள். இதுபற்றி கோவை தி.மு.க-வினர், ''பொங்​கலூரார் பக்கா பிசினஸ்மேன். அதுக்கு அப்புறம்தான் அரசியல்வாதி. பணத்தை எங்கே போட்டா லாபம் வரும்னு தெரிஞ்ச மனுஷன். அதுக்கான கணக்கையும் சரியாவே வெச்சிருப்பார். இப்போகூட லஞ்ச ஒழிப்புத் துறையினர், கோடிக்கணக்கில் கணக்கில் காட்டாம வைச்சு இருக்கிறதா சொல்லி ரெய்டு வரலை. சுமார் 40 லட்சம் ரூபாய்தான் கணக்கு காட்டாம வெச்சு இருக்கிறதா தகவல் வந்து இருக்குது. அதுக்காகத்தான் இந்த ரெய்டு.
பழனிசாமியோட குடும்பத்தினர் நடத்தும் விஜயா மினரல் வாட்டர், மாரிஸ் சிமென்ட், நீலகிரி சிமென்ட், ஸ்ரீராம் புரமோட்டர்ஸ், அறக்கட்டளை மூலம் அவர் நடத்தும் பொறியியல் கல்லூரி அத்தனை நிறுவனங்களிலும் கணக்குகள் பக்காவா இருக்குதாம். ரெய்டுக்கு வந்த போலீஸாருக்கு முழுக்க முழுக்க ஏமாற்றம்னு சொல்ல முடியாது. சில ஆவணங்களும் கொஞ்சம் பணமும் கிடைச்சதாம். பதிவு நம்பர் ஒட்டப்படாத புது 'ஆடி’ கார் பத்தின தகவலையும் சேகரிச்சு இருக்காங்க. ஆனா, இதை எல்லாம் காட்டி அவரை கைது செய்றது சிரமம்தான்.
போலீஸ் சோதனை செய்யாத தொழில்கள் சிலவும் அவருக்கு இருக்கு. பெங்களூருவில் இருக்கிறதா சொல்லப்படுற சுரங்கத் தொழில் பத்தின விஷயங்களை போலீஸ் தோண்டப்போறதா பேசிக்கிறாங்க. இவர் மகன் பாரி ஏற்கெனவே சிக்கின நில விவகாரத்தை வைச்சு இவரையும் கைது செய்ய போலீஸ் சில திட்டங்களைப் போடுது. ஆனாலும், பொங்கலூரார் அவ்​வளவு லேசில் சிக்க மாட்டார்...'' என்​கிறார்கள்.
பொங்கலூர் பழனிசாமி​யோ, ''35 வருஷமாத் தொழில் பண்ணிட்டு இருக்​கேன். முறையான வருமான வரி கட்டுறேன். அரசியலை வைச்சு எதையும் நான் சம்பாதிக்கலை தம்பி. அரசியலுக்காக செலவழிச்சதுதான் அதிகம். என் கை சுத்தம். எப்ப வேணும்னாலும் என் வீட்ல போலீஸ் சோதனை போடலாம். மடியில கனம் இருந்தாத்தானே பயம்...'' என்று சிரிக்கிறார்.
   போலீஸாரோ, ''கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும்'' என்கிறார்கள்.
பார்க்கத்தானே போறோம்!
எஸ்.ஷக்தி, படங்கள்: தி.விஜய்

அழகிரியின் அலுவலகமும் போச்சு!

அ.தி.மு.க. அதிரடி ஆக்ஷன்
டந்த ஆட்சியில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி​யின் எம்.பி. அலுவலகத்துக்காகக் கொடுக்கப்பட்ட மாநகராட்சிக் கட்டடத்தை அதிரடியாய்ப் பறித்து, தி.மு.க-வினருக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்திருக்கிறார் மதுரை மேயர் ராஜன் செல்லப்பா!
அழகிரி மத்திய அமைச்சர் ஆனதுமே, பொது​மக்களிடம் மனுக்களை வாங்குவதற்காக மதுரையிலும் மேலூரிலும் அலுவலகங்கள் திறந்தார். மதுரையில் மேலமாசி வீதியில் மாநகராட்சியின் தெற்கு மண்டல அலுவலகத்தின் (இப்போது 4-ம் மண்டலம்) கீழ்த் தளத்தில் அழகிரியின் எம்.பி. அலுவலகம்திறக்கப்பட்டது. முந்தைய தி.மு.க. மேயர் தலைமையில் செயல்பட்ட மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் போட்டு, கட்டணம் இல்லாமல் இந்த இடத்தை ஒதுக்கிக் கொடுத்தார்கள். அதற்குத்தான் இப்போது வேட்டு.
கடந்த 30-ம் தேதி, மாமன்றத்தின் முதலாவது கூட்டம் நடந்தது. ''அஞ்சாநெஞ்சர் என தம்பட்டம் அடித்தவர்கள் எல்லாம் அஞ்சி ஓடிவிட்டதால், மதுரை மக்கள் அனைவரும் அஞ்சாநெஞ்சர்கள் ஆகிவிட்டனர்'' என்று அமர்க்களமாகவே கூட்டத்தைத் தொடங்கினார் மேயர். அதில் 25-வதாக வாசிக்கப்பட்டது ஒரு சிறப்புத் தீர்மானம். அதுதான் அழகிரியின் அலுவலகத்துக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை ரத்து செய்யும் தீர்மானம். இந்தத் தீர்மானத்தைப் படிப்பதற்கு முன்னதாகவே தி.மு.க. கவுன்சிலர்கள் 12 பேரும் வெளிநடப்பு செய்துவிட்டார்கள். பா.ம.க. மற்றும் சி.பி.எம். கவுன்சிலர்கள் உள்ளேயே இருக்க, அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 'ரத்து’ தீர்மானத்தை அமர்க்களமாய் நிறைவேற்றினார்கள்.
''மக்கள் பிரச்னைகள் எவ்வளவோ இருக்குது. இந்த மேட்டருக்கு இவ்வளவு அவசரம் காட்டுறாங்களே...'' என்றுதான் தி.மு.க. கவுன்சிலர்களால் மன்றத்துக்கு வெளியே ஆத்திரப்பட முடிந்தது. கூட்டத்தை முடித்துவிட்டுக் கிளம்பிய மேயர் ராஜன் செல்லப்​பாவிடம் பேசினோம். ''தமிழ்நாட்டில் எந்த ஊரிலும் உள்ளாட்சிக்கு சொந்தமான கட்டடத்தில் எம்.பி. அலுவலகம் இருப்பதாகத் தெரியவில்லை. எல்லோருமே சொந்தமாகத்தான் கட்டடம் பிடிச்சு ஆபீஸ் போட்டு இருக்காங்க. மதுரை​யில் மட்டும்தான் இந்த அநியாயம். கேபினெட் அமைச்சர்களின் பாராளுமன்ற அலுவலகத்துக்கான அனைத்துச் செலவுகளையும் மத்திய அரசே கவனித்துக்கொள்வதுதான் நடைமுறை. ஆனால், இவருக்கு எப்படி என்று தெரியவில்லை. மாநகராட்சிக்கு சொந்தமான கட்டடத்தை கட்டணம் இல்லாமல் அழகிரிக்கு ஒதுக்கிக் கொடுத்ததே பெரிய முறைகேடு. அன்றைக்கு அவர்கள் மெஜாரிட்டியாக இருந்ததால், தலைகால் புரியாமல் ஆடினார்கள். இப்போது நாங்கள் மெஜாரிட்டியாக இருக்கிறோம். ஆனால், அவங்க மாதிரி ஆட்டம் போடாமல் ஆக்கபூர்வமாகச் செயல்பட்டு, மக்கள் வரிப் பணத்தில் கட்டப்பட்ட கட்டடத்தை மக்கள் சேவைக்காகதிருப்பி எடுத்திருக்கிறோம்''என்றார்.
தி.மு.க. தரப்பில் இந்த விவகாரத்தை அதிர்ச்சி​யோடுதான் பார்க்கிறார்கள். இது குறித்து, நம்மிடம் பேசிய மாமன்ற எதிர்க் கட்சித் தலைவரும் மதுரை புறநகர் மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளருமான எம்.எல்.ராஜ், ''அண்ணனோட ஆபீஸை ரத்து செய்யும் தீர்மானத்தை கூட்டம் நடந்த அன்னைக்கு காலையில் அவசர அவசரமாக் கொண்டு வந்து குடுத்தாங்க. அதனால், பல பேருக்கு இந்த விஷயமே தெரியலை. மன்றத்தில் எங்களுக்குப் பேச வாய்ப்பு அளிக்காததைக் கண்டிச்சு நாங்க வெளிநடப்பு செஞ்ச நேரத்தில், இந்தத் தீர்மானத்தை நிறைவேத்தி இருக்காங்க. அண்ணனோட அலுவலகம் தொடர்ந்து செயல்பட்டு வருது. அதுக்காக 24 மணி நேரமும் திறந்தே வைக்க முடியுமா என்ன? மதுரையில் இருக்கிற எம்.எல்.ஏ-க்கள் அலுவலகங்களை எல்லாம் எந்நேரமும் திறந்தா வெச்சிருக்காங்க? செயல்படலைங்கிறது காரணம் இல்லைங்க... அண்ணனுக்கு ஏதாச்சும் இடைஞ்சல் குடுக்கணும் அவ்வளவுதான். அண்ணன் டெல்லியில இருக்கிறதால, இந்த விஷயத்தை உடனடியாத் தெரிவிக்க முடியலை. அவர் மதுரை திரும்பியதும் அடுத்து என்ன செய்யுறதுன்னு முடிவெடுப்போம்'' என்றார்.
விஷயத்தைக் கேள்விப்பட்டதும், ''அப்படியா?'' என்று மட்டும் சொன்னாராம் அழகிரி. தி.மு.க. வழக்
க​றிஞர்கள் சிலர் கோர்ட்  படி ஏறும் ஆலோசனையில் இருப்பதால், விவகாரம் இப்போதைக்கு ஓயாது!
- குள.சண்முகசுந்தரம்
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி     

வம்பில் மாட்டிய அன்பு!

சிக்கிட்டார் சினிமா ஃபைனான்சியர்
ந்தக் கட்சி ஆட் சிக்கு வந்தாலும் ஆளும் கட்சிக் காரர்களாகவே சிலர் இருப்பார்கள். அந்த ரகம் தான் அன்புச் செழியன். சினிமா வட் டாரத்தில் 'அன்பு’. இவரை டிசம்பர் 30-ம் தேதி கைது செய்தது மதுரை போலீஸ்! அன்புவின் நண்பர்கள் முரளி, ராமகிருஷ்ணனும் இப்போது போலீஸ் பிடியில்.
 ராமநாதபுரம் மாவட்டம், பம்மனேந் தல் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பு. ஒரு காலத்தில் மதுரை மாவட்ட அ.தி.மு.க. மாணவர் அணியில் இருந்தவர், சினிமா துறையில் கால் பதித்து ஃபைனான்ஸ் பண்ண ஆரம்பித்தார். இவரை, அ.தி.மு.க. ஆட்சியில் 'சசிகலாவுக்கு வேண்டப் பட்டவர்’ என்பார்கள். தி.மு.க. ஆட்சியில், 'அழகிரிக்கு வேண்டப்பட்டவர்’ என்பார்கள். இப்போது இவர் மதுரை, ராமநாதபுரம் மாவட்ட சினிமா விநியோ கஸ்தர்கள் சங்கத்தின் கௌரவத் தலைவராக இருக்கிறார்.
'சுந்தரா டிராவல்ஸ்’, 'மீசை மாதவன்’, 'எங்கள் ஆசான்’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவர் தங்கராஜ். 'மீசை மாதவன்’ படத்திற்காக 2004-ல் அன்புவிடம்  20 லட்சம் வட்டிக்கு வாங்கினாராம் தங்கராஜ். அதைத் திரும்ப வசூலிப்பது தொடர்பாக அன்புச் செழியன் கொடுத்த டார்ச்சர்களை மதுரை எஸ்.பி-யிடம் புகாராகக் கொடுத்திருக்கிறார் தங்க ராஜ். இதில்தான் அன்புவை போலீஸ் கைது செய்துள்ளது.
இது குறித்து நம்மிடம் பேசிய தங்கராஜ், ''நான் அன்புச் செழியனிடம் முறையாக வட்டி கட்டினேன். அந்தக் கடனுக்காக 2004-ல் என் சொத்துக்கள் எனச் சிலவற்றை அடமானமாகக் கொடுத்தேன். அவருடைய நெருக்கடி தாங்க முடியாமல், அடமானம் கொடுத்த சொத்துக்களை விற்று அந்தக் கடனையும் அடைத்தேன். இதன் பிறகு கேப்டன் விஜயகாந்தை வைத்து 'எங்கள் ஆசான்’ படத்தைத் தயாரித்து, மதுரை, ராமநாத புரம் ஏரியாவை 57 லட்சம் ரூபாய்க்கு ஒரு விநியோகஸ்தரிடம் பேசி 10 லட்சம் அட்வான்ஸ் வாங்கினேன். 2009-ம் வருஷம் ஜூலையில் படம் ரிலீஸ். அன்புச் செழியன், 'அந்த ஏரியா எனக்கு வேணும்; தரலைன்னா, படத்தை ரிலீஸ் பண்ண விட மாட்டேன்’னு தகராறு செய்தார். எப்பவோ நான் கொடுத்த லெட்டர் பேடில், நான் பணம் கொடுக்க வேண்டியதா அவங் களே எழுதிக்கிட்டு, கோர்ட்டுக்குப் போய்ப் படத்தை ரிலீஸ் செய்யவிடாமத் தடுத்துட் டாங்க. தொடர்ந்து அன்புச் செழியனின் ஆட்களே லேப்புக்குப் போய் ஒன்பது லட்சம் கட்டணத்தைக் கட்டிட்டு 'எங்கள் ஆசான்’ படத்தை மதுரை, ராமநாதபுரம் ஏரியாவில் ரிலீஸ் பண்ணிட்டாங்க.
படம் ரிலீஸாகி ஒரு மாசம் கழிச்சு அன்புச் செழியனை சந்திச்சு, 'எனக்கு சேர வேண்டிய 57 லட்சத்தை செட்டில் பண்ணுங்க’னு கேட்டேன். அதுக்கு என்னை அசிங்க மாகத் திட்டி அடிச்சுட்டார். உடனே, 15.5.2010 அன்று சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தேன். ஆனால், போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கலை. மதுரை போலீஸ்கிட்ட நியாயம் கிடைக்கும்னு சொன்னாங்க. அதனால், ஒரு மாசத்துக்கு முன்னாடி இங்கு புகார் கொடுத்தேன். இப்ப நடவடிக்கை எடுத்து இருக்காங்க.
29 வருஷமா சினிமாவில் இருக்கிற நான், அன்புச் செழியனிடம் 20 லட்சம் கடன் வாங்கி, சுமார் ஒண்ணே கால் கோடி ரூபாயை இழந்துட்டேன். மதுரை பீ.பீ.குளம் ஏரியாவில் 20 சென்ட் இடத்தையும், திருப்பாலையில் 18 சென்ட் இடத்தையும் அன்பு அபகரிச்சுட்டார். அந்தச் சொத்துக்களையும் எனக்கு வரவேண்டிய பணத்தையும் போலீஸ் மீட்டுக் கொடுக்கணும்'' என்றார்.
தங்கராஜ் சொல்வது உண்மையா என்பதை அறிய அன்புச் செழியனின்  வக்கீல் முருகனைச் சந்தித்தோம். ''அன்புச் செழியனிடம் வாங்கிய பணத்திற்காக, ஒரு வருடத்திற்கு முன்பே தங்கராஜ் தனது சொத்துக்களை விற்றுக் கடனை அடைத் தார். அதன் பிறகுதான், அவர் மீது கொடுத்திருந்த வழக்கை அன்புச் செழியன் வாபஸ் வாங்கினார். தங்கராஜின் புகாரில் நியாயம் இல்லை என்பதால் தான், சென்னை போலீஸ் இந்தப் புகாரைக் கண்டுகொள்ளவில்லை.
மதுரையிலும் இரண்டு மாதங்களுக்கு முன்பு போலீஸ் கமிஷனர் கண்ணப்பனிடம் தங்கராஜ் புகார் கொடுத்தார். போலீஸ் அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு அன்புச் செழியன் எழுத்துப் பூர்வமாகப் பதில் அளித்துவிட்டார். அதனால், புகாரைத் தள்ளுபடி செய்தது சிட்டி போலீஸ். ஆனால், அதே புகாரில் இப்போது ரூரல் போலீஸார் கைது செய்து உள்ளார்கள். எங்கள் மீது தவறு இல்லை என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன...'' என்றார்.
கூடுதல் எஸ்.பி-யான மயில்வாகனன், ''ஆதாரங்கள் இல்லாமல் நாங்கள் வழக்குப் போடுவது இல்லை. கொலை மிரட்டல், கூட்டுச் சதி, கந்து வட்டி டார்ச்சர் உள்ளிட்ட பிரிவுகளில் அன்புச் செழியன் மீது வழக்குப் பதிவு செய்து உள்ளோம். அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன'' என்றார்.
அன்பு மீது அடுத்தடுத்து புகார்கள் வரலாம் என்கிறது மதுரை போலீஸ்!
குள.சண்முகசுந்தரம்
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
 பாவம் அந்த ஹீரோ!
சில ஆண்டுகளுக்கு முன்பு தயாரித்த 'சதுரங்கம்’ படத்தை வெளியிட முடியாமல் தவித்தார், துரைராஜ். இவர் ஏற்கெனவே தயாரித்த 'கம்பீரம்’ படத்தை வாங்கி நஷ்டம் அடைந்த விநியோகஸ்தர்கள் பலர் பணம் கேட்டு நச்சரித்தார்கள்.
இவர் ஒரு ஹீரோவிடம் சென்று, 'நான் கேட்டால் அன்பு கடன் கொடுக்க மறுக்கிறார். நீங்கள் வந்தால் பணம் தருகிறேன் என்கிறார்’ என்று உதவி கேட்டார். உடனே அந்த ஹீரோவும் மதுரை சென்று பத்திரத்தில் கையெழுத்துப் போட்டார். 50 லட்சத்தை டேபிள் மீது எடுத்து வைத்த அன்பு, அதற்கான வட்டித் தொகை யுடன் 'கம்பீரம்’ படத்துக்கான நஷ்டஈடாக குறிப்பிட்ட தொகையையும் எடுத்துக் கொண்டு மீதி 25 லட்சத்தை ஹீரோவிடம் கொடுத்தார். உதவி செய்யப்போய் உபத் திரத்தில் மாட்டிய கதையாக அந்த ஹீரோ தனது கல்யாணம்வரை, வட்டி கட்டிக் கொண்டே இருந்தார்!

'இது சி.ஐ.டி.யு. கருத்து அல்ல’

டந்த 27-11-2011 தேதியிட்ட ஜூ.வி. இதழில் பேருந்துக் கட்டண உயர்வு பற்றிய கட்டுரை வெளியாகி இருந்தது. அது குறித்து சி.ஐ.டி.யு. பொதுச் செயலாளர் ஏ.பி. அன்பழகன் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், 'ஜூ.வி.யில் வெளியான கட்டுரைக்கும் சி.ஐ.டி.யு. அமைப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மக்களைப் பாதிக்கும் அனைத்து விஷயங்களிலும் மக்கள் நலனுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது சி.ஐ.டி.யு. அமைப்பு. எங்கள் அமைப்பு இந்தக் கட்டண உயர்வை வரவேற்பது போல கட்டுரை வெளியாகி உள்ளது. இது சி.ஐ.டி.யு-வின் கருத்து அல்ல’ என்று கூறியுள்ளார்.

செய்தியும் சிந்தனையும் - டயல் செய்தால் இயக்குநர் ரா.பார்த்திபன் பேசுவார்!

பற்றி எரிகிறது இருளர் பெண்கள் பாலியல் புகார்

பணம் வேண்டாம்... நியாயம் வேண்டும்!
ருளர் இனத்தைச் சேர்ந்த பெண்கள் நால்வர், திருக்கோவிலூர் போலீஸா ரால் பலாத்காரம் செய்யப் பட்டதாகக் கிளம்பி இருக்கும் விவகாரம் தமிழக அளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. பாதிக்கப்பட்ட நான்கு பெண்களுக்கும் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ஐந்து லட்சம் ரூபாய் வழங்க உத்தரவு இட்டிருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ''பணம் வேண்டாம். நியாயம்தான் வேண்டும்'' என்று போர்க் குரல்கள் எழுகின்றன!
திருக்கோவிலூர் அருகே உள்ள தி.மண்டபம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் காசி. இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த இவரை, 'ஒரு வழக்கு தொடர்பாக விசாரிக்க வேண்டும்’ என்று, கடந்த 22-ம் தேதி மதியம் போலீஸார் அழைத்துப் போனார்கள். மீண்டும் இரவு 8 மணிக்கு காசியின் வீட்டுக்கு வந்த போலீஸார், காசியின் அப்பா முருகன், அம்மா வள்ளி, மனைவி லட்சுமி, சகோதரிகள் ராதிகா, வைகேஸ்வரி, தம்பி வெள்ளிக் கண்ணு, தம்பி மனைவி கார்த்திகா ஆகிய ஏழு பேரையும் ஸ்டேஷனுக்குக் கொண்டு சென்றார்கள். விசாரணை முடிந்து வீட்டுக்கு அழைத்து வரும் வழியில், சங்கராபுரம் ரோட்டில் உள்ள தைலம் தோப்புக்குள் வண்டியை விட்டிருக்கிறார்கள். அங்கு, வள்ளி மற்றும் ஆண்களைத் தவிர்த்து மற்ற நான்கு பெண்களையும் கீழே இறங்கச் சொல்லி தோப்புக்குள் இழுத்துப் போய், நான்கு காவலர் களும் பலாத்காரம் செய்திருக்கிறார்கள். இதில் லட்சுமி மூன்று மாத கர்ப்பிணி என்பதுதான் பரிதாபம். அதை முறையிட்டும் காவலர்கள் கண்டு கொள்ளாமல் தங்கள் இச்சையை தீர்த்துக் கொண்டிருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று இருளர் பாதுகாப்பு சங்கத்தினரோடு சேர்ந்து, அரசியல் கட்சியினரும் போராடவே, விவகாரம் தமிழ கத்தைக் கிடுகிடுக்க வைத்தது. 
பாலியல் புகாரில் சிக்கிய திருக்கோவிலூர் காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐ. ராமநாதன், தலைமைக் காவலர் தனசேகர், போலீஸார் கார்த்திகேயன், பக்தவத்சலம் ஆகியோருடன் இன்ஸ்பெக்டர் ஸ்ரீனிவாசனும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார். அவர்கள் அந்த சரகத்திலேயே இருக்கக் கூடாது என்றும், பாதிக்கப்பட்ட பெண்கள் நால்வருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
அதன்படி, கடந்த 29 மற்றும் 30 ஆகிய தினங் களில் அந்த நான்கு பெண்களுக்கும் விழுப்புரம் மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பிறகு அவர்களை திருக்கோவிலூர் கோர்ட்டில் போலீஸார் ஆஜர்படுத்தினார்கள்.  அங்கே சி.பி.எம். கட்சியைச் சேர்ந்தவர்கள், 'அந்தப் பெண்களுக்காக நாங்கள்தான் போராட்டம் நடத்தினோம். எனவே, அவர்களை எங்களுடன்தான் அனுப்பி வைக்க வேண்டும்’ எனவும், பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்தவர்கள், 'எங்களுடன்தான் வரவேண்டும்’ எனவும் வாக்குவாதம் செய்தார்கள். அந்தப் பெண்களோ, 'நாங்கள் பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தினருடன்தான் செல்வோம்’ என்று உறுதியாகக் கூறியதால், சங்கத்தின் விழுப்புரம் வட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் வீட்டுக்கு அனுப்பப் பட்டனர்.
பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தின் திண்டிவனம் வட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபா கல்விமணியிடம் பேசினோம். ''பலரும் போராட்டம் நடத்தியதன் விளைவாக தற்போது வழக்கு சரியான திசையில் செல்கிறது. அந்தப் பெண்களுக்கு மருத்துவப் பரிசோதனை முடிந்திருக்கிறது. சம்பவம் நடந்தபோது அந்தப் பெண்கள் அணிந்திருந்த உடைகளையும், ஆய்வுக்காக கோர்ட்டில் சமர்ப்பித்து இருக்கிறோம். திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட காசி, தற்போது கடலூர் மத்தியச் சிறையில் இருக்கிறார். காசியை விடுதலை செய்யக் கோரியும், பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வலியுறுத்தியும், வரும் 7-ம் தேதி பழங்குடி மக்கள் முன்னணி தலைவர் சுடர்வொளி சுந்தரம் தலைமை யில் போராட இருக்கிறோம்'' என்றார்.
தி.மண்டபம் கிராமத்துக்குச் சென்று பாதிக்கப் பட்ட பெண்களிடம் திருக்கோவிலூர் மாஜிஸ்திரேட் முரளிதர கண்ணன் விசாரணை நடத்தி இருக்கிறார். அதன் பிறகு, 'இந்தப் பெண்களை யாரும் போட்டோ எடுக்கக் கூடாது. இனிமேல் போலீஸார் உட்பட எந்த அதிகாரிகளும், சம்பந்தப்பட்ட நான்கு பெண்களும் இந்த வழக்கு சம்பந்தமாக பேட்டி தரக்கூடாது’ என்று சொன்னார்.
''எங்களுக்குப் பணம் வேண்டாம்... நியாயம் தான் வேண்டும்'' என்று இருளர் மக்கள் கொந்தளிக் கிறார்கள்!
அற்புதராஜ்
படம்: ஜெ.முருகன்

10 ஆயிரம் எடுத்துத் தர 500 கமிஷன்!

லண்டனில் இருந்து ஏ.டி.எம். மோசடி?
போலி கார்டுகளைத் திணித்து ஏ.டி.எம். மெஷின் களில் பணத்தைத் திருடிய தில்லாலங்கடி கும்பல் ஒன்றை மடக்கிப் பிடித்திருக்கிறது மதுரை போலீஸ்!
தினமும் மதுரை நகரில் போலீ ஸார், 15 குழுக்களாக ரோந்துப் பணியில் இருக்கிறார்கள். 28-ம் தேதி அதிகாலை 3.30 மணியளவில், எஸ்.ஐ-யான லோகேஸ்வரி தலைமையில் ஒரு டீம் தல்லாகுளம் ஏரியாவில் ரோந்து சென்றது. அப்போது அங்கே ஸ்டேட் பேங்க் ஏ.டி.எம். சென்டரில் பணம் எடுத்துக்கொண்டு இருந்த நபர் ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகப்பட்ட லோகேஸ்வரி, அவரைப் பிடித்து விசாரிக்க, முன்னுக்குப் பின் முரணாக பதில் வந்தது. அந்த நபரின் கையில் 15 ஏ.டி.எம். கார்டுகள் இருந்ததால், விசாரணைக்காக தல்லாகுளம் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது தன்னிடம் இருந்த ஏ.டி.எம். கார்டுகளைத் தூக்கி வீச முயற்சி செய்திருக்கிறார் அந்த நபர். பிறகென்ன..? பூசையைப் போட்டு விசாரித்தது போலீஸ்.
''பிடிபட்டவன் பேரு கணேசன், ஆரல்வாய் மொழியைச் சேர்ந்தவன். கிரானைட் பிசினஸ் பண்றதாச் சொல்லிக்கிட்டு சென்னையை சுத்துறான். 10,000 ரூபாய்க்கு 500 ரூபாய் கமிஷன் வாங்கிக்கிட்டு, போலி ஏ.டி.எம். கார்டுகள் மூலமா பணத்தை எடுத்துக் குடுக்கிறதுதான் இவனோட வேலை. இவனை மாதிரி நிறையப் பேர் இந்தக் கும்பல்ல இருக்காங்க. சென்னையில் கெடுபிடிகள் அதிகமானதும் தென் மாவட்டங்களுக்குள் ஊடுருவிட்டாங்க. கணேசன் கொடுத்த தகவலை வைச்சு, விஜயகுமார், சையது அபுதாஹிர், பிரதாப், ஆனந்த் என்ற ரூபன் போன்ற வர்களைப் பிடிச்சுட்டோம்.
இதில் ரூபன் சிலோன்காரன். நாமக் கல் இலங்கை அகதி முகாமில் இருக்கிற இவனுக்கு, கனடா, லண்டனில் உள்ளவர் களோடு தொடர்பு இருக்குது. இவன் மூலமாத்தான் போலி கார்டுகள் இங்கே வருதுன்னு சந்தேகிக்கிறோம். இந்தக் கும்பலை லண்டனில் இருந்து ஒரு டீம் இயக்குது. கிரெடிட் கார்டு பர்சேஸ் பண்றப்ப 'ஸ்கிம்மர்’ கருவியின் மூலமா கார்டில் உள்ள டேட்டாக்களைத் திருடி, போலி கார்டுகளை தயாரிச்சுடுறாங்க. இன்டர்நேஷனல் நெட்வொர்க் லிங்க் உள்ள வங்கிகளின் ஏ.டி.எம். மெஷின் கள்தான் இவங்களோட இலக்கு. இங்கே கொள்ளை அடிக்கிற பணத்தில் கமிஷன்(!) போக மீதியை ஹவாலா மூலமா லண்டனுக்கு அனுப்புறாங்க. சென்னையில் மட்டுமே 50 லட்சத்துக்கு மேல் அடிச்சு இருக்காங்க. நவம்பர் 26-ம் தேதிதான் மதுரைக்கு வந்து இருக்காங்க. அதுக்குள் மதுரை, சிவகங்கை ஏரியாவில் லட்சக் கணக்கில் பணம் சுட்டுட்டாங்க'' என்கிறது போலீஸ்.
இந்தக் கும்பல் சிக்கிய மறுநாளே, மதுரையில் உள்ள அனைத்து வங்கி அதிகாரிகளையும் அழைத்து அவசர ஆலோசனை நடத்தினார் போலீஸ் கமிஷனர் கண்ணப்பன். ''கணேசன் இந்தத் தொழிலில் நாலைஞ்சு வருஷமா இருக்கானாம். இங்குள்ளவர்களின் ஏ.டி.எம். கார்டுகளைப் போலியாகத் தயாரித்து வெளிநாட்டில் பணத்தைத் திருடுவதும் அங்கு உள்ளவர்களின் கணக்குகளில் இருந்து இங்கே பணத்தைத் திருடுவதும்தான் இவங்க வேலை. இந்த கும்பலை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க இருக்கிறோம்'' என்றார் கமிஷனர்.
''பணம் பத்திரமா இருக்கணும்னா, பொதுமக்களும் ஏ.டி.எம். கார்டுகளை கவனமா யூஸ் பண்ணணும். பேங்குகளும் சிஸ்டத்தை மாத்தணும். எங்களுக்குக் கிடைத்திருக்கும் தகவல்களை சென்னையில் உள்ள ஸ்டேட் க்ரைம் ரெக்கார்ட் பீரோ மூலமா மற்ற மாநிலங்களுக்கும் ஷேர் பண்ணி இருக்கிறோம். இந்தக் கும்பலின் மாஸ்டர் பிரெயினைப் பிடிக்க, தேவைப்பட்டால் இந்தியத் தூதரகத்தின் மூலமாக லண்டன் போலீஸாரின் உதவி யையும் நாடுவோம்'' என்றார்.
குள.சண்முகசுந்தரம்
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
போலி கிரெடிட் கார்டு கும்பலை இயக்கும் சின்னாளபட்டி
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியைச் சேர்ந்த ராஜசேகர், ரவிசங்கர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தமிழ்நாடு முழுவதும் போலி கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி கைவரிசை காட்டுவதாக பகீர் தகவல் ஒன்றும் நம் காதுக்கு வந்தது. மலேசியா மற்றும் சிங்கப்பூரில் இருந்து சேலை வியாபாரிகள் மூலமாக தங்கள் கைக்கு வரும் போலி கார்டுகளை டிப்டாப் இளைஞர்களிடம் கொடுத்து அனுப்பி பொருட்களை பர்சேஸ் பண்ணுகின்றனராம். 30 சதவிகித கமிஷன் கிடைப்பதால் இந்தத் தொழிலை செய்ய கல்லூரி மாணவர்கள் போட்டி போடுகிறார்களாம். இவர்களுக்கு ஏதுவாக வெள்ளிக்கிழமை மாலை கிளம்பி, சனி, ஞாயிறுகளில் வேட்டையை முடித்துக்கொண்டு திரும்புகிறது இந்தக் கும்பல். ஒரு கார்டை ஒரு தடவைக்கு மேல் பயன்படுத்துவது இல்லை என்பதால், முதல் தடவையிலேயே வலுவாக வளைத்துவிடுவார்களாம். இவர்களைப்பற்றி உள்ளூர் போலீஸாருக்கும் தெரிந்தாலும், 'கவனிப்பு’கள் அவர்களது கைகளை கட்டிப் போட்டு இருக்கிறதாம். 'சின்னாளபட்டி பகுதியில் கடந்த இரண்டு வருடங்களில் பசையாய் வளர்ந்திருக்கும் திடீர் பணக்காரர்கள் சிலரது பூர்வீகத்தைத் தோண்டினாலே, கிரெடிட் கார்டு பூதங்களைக் கண்டுபிடித்து அமுக்கலாம்'' என்பது ஏரியாவாசிகளின் ஏக்கப் பெருமூச்சு!
- ஆர்.குமரேசன்

'டார்கெட்' 102... 'எஸ்கேப்' தீவிரவாதி!

திகில் கிளப்பும் தேடுதல் வேட்டை
டந்த வாரத்தில் ஒரு நாள். அதிகாலை நேரம். சென்னை தாம்பரத்தை அடுத்த சேலையூர் ராஜேஸ்வரி நகரில் உள்ள ஒரு வீட்டை நூற்றுக்கணக்கான போலீஸ்காரர்கள் அதிரடியாக முற்றுகை இட்டனர். டெல்லி போலீஸ், மத்திய உளவுப் பிரிவு மற்றும் சென்னை போலீஸ் கூட்டாக இந்த ஆபரேஷனில் இறங்கி இருந்தார்கள்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலர், தாம்பரம் ஏரியாவில் உள்ள பொறியியல் கல்லூரி களில் படிப்பதற்கு வசதியாக அந்த வீட்டை வாட கைக்கு எடுத்திருந்தனர். உள்ளே மாணவர்கள் அசந்து இருந்த நேரத்தில் அதிரடியாகப் புகுந்த போலீஸ் படையினர், அங்கே இருந்தவர்களை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்தனர். கல்லூரி மாணவர்களுடன் 'கெஸ்ட்' ஆகத் தங்கியிருந்த முகமது இஷ்ரத் கான் என்ற தீவிரவாதியையும், அவனை வீட்டில் தங்கவைத்த மாணவர் அப்துர் ரகுமானையும் வளைத்துப் பிடித்தனர். இருவரையும் அடுத்த கட்ட விசாரணைக்காக டெல்லிக்கு விமானம் மூலம் உடனே அழைத்துச் சென்றனர்.
இந்த போலீஸ் முற்றுகையில் தப்பிவிட்டவர் ஆசிப். இவரும் டெல்லி போலீஸாரால் தேடப்படும் தீவிரவாதி. பல்வேறு வெடிகுண்டு வழக்குகளில் தொடர்பு உடையவர். சேலையூரில் போலீஸ் வருவதற்கு சற்று முன்பாகத்தான், அந்த வீட்டில் இருந்த மாணவரிடம், 'அவசரமாகப் பணம் தேவைப்படுகிறது' என்று சொல்லி, ஏ.டி.எம். கார்டு வாங்கிக்கொண்டு வெளியில் போயிருக்கிறார். பணத்தை எடுத்துக்கொண்டு ஆசிப்  திரும்பி வருவதற்குள் போலீஸ் நுழைந்துவிட்டது. அதைக் கவனித்துவிட்ட ஆசிப், அங்கே இருந்து தப்பி விட்டார்.
இந்தியன் முஜாகிதீன் என்கிற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் ஆசிப், இஷ்ரத் மற்றும் அப்துர் ரகுமான். கடந்த ஆண்டு புனே நகரத்தில் உள்ள ஜெர்மன் பேக்கரியில் நடந்த குண்டு வெடிப்பில் 17 பேர் பலியானார்கள். அடுத்து ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடந்த பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் குண்டு வெடித்தது. மூன்றாவதாக, டெல்லி ஜாமியா மசூதி வாசலில் நிறுத்தி இருந்த காரில் குண்டு வெடித்தது. இந்த மூன்று சம்பவங்களையும் டெல்லி போலீஸார் விசாரித்து வந்த நேரத்தில்தான், டெல்லி ஆனந்த் விகார் பஸ் நிலையத்தில் ஒரு நபர் எதேச்சையாக சிக்கினார். அவரை 'ஸ்பெஷலாக’ விசாரித்ததில், தீவிரவாதக் கும்பலைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அவர்தான் தமிழகம், பீகார், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் பதுங்கியிருக்கும் ஏழு தீவிரவாதிகள் பற்றிய விவரங்களையும் கக்கினார். அதைத் தொடர்ந்து நடந்த போலீஸ் வேட்டையில் சென்னையில் இருவரையும், பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது ஆதில் என்பவரை டெல்லியிலும், மற்றும் மூவரை வெவ்வேறு ஊர்களிலும் அமுக்கினர். ஆசிப் மட்டும் தப்பிவிட்டார்.   
டெல்லியில் உள்ள போலீஸ் உயர் அதிகாரி ஒருவரிடம் இந்த விவகாரம் குறித்துப் பேசினோம். ''முஸ்லிம் தீவிரவாத அமைப்பினர் யாருமே தென் இந்தியாவில் காலூன்ற முடியவில்லை. அதை மாற்றுவதற்குத்தான் இஷ்ரத்திடம் அசைன்மென்ட் தரப்பட்டது. கர்நாடக மாநிலத்தில் இந்தியன் முஜாகிதீன், தமிழகத்தில் அல் - உம்மா, கேரளாவில் அல்-பஃதர் மற்றும் சிமி போன்ற அமைப்புகளில் இருக்கும் முக்கியஸ்தர்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவரும் வேலையைத்தான் இஷ்ரத் செய்து வந்திருக்கிறார். கர்நாடகாவில் இருந்து இளைஞர்களைத் தேர்ந்து எடுத்துத் தமிழகம் அனுப்புகிறார்கள். கேரளாவில் இருந்து பணம், ஆயுதம் வருகிறது. தமிழகத்தில் தங்கியிருந்து திட்டமிடுகிறார்கள்.
பெங்களூரு, உத்தரப்பிரதேசம், கேரளச் சிறைகளில் உள்ள தீவிரவாதிகளில் சிலர் பாகிஸ் தானில் உள்ள சிலருடன் தகவல் தொடர்பு வைத்திருந்ததைக் கண்டுபிடித்தோம். இவர்களை சிறைச்சாலைக்கு வந்து பார்க்கும் விசிட்டர்களில் கல்லூரி மாணவர்களும் இருந்ததுதான், எங்களுக்கு அதிர்ச்சி. ஏதோ பெரிய திட்டத்தை வரும் டிசம்பர் 6-ம் தேதியான பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளில் அரங்கேற்றப் போகிறார்கள் என்று சந்தேகப்பட்டோம். அன்று, பெங்களூருவில் பெரிய அளவில் தாக்குதல் நடத்தச் சதித் திட்டம் உருவாகி வருவதையும் தெரிந்துகொண்டு, அதை முறியடிக்கும் வகையில்தான் ஆறு தீவிரவாதிகளையும் பொறிவைத்துப் பிடித்தோம். இன்னும் எங்கள் தேடுதல் வேட்டை முடியவில்லை. முக்கியமான சிலரை நோக்கிச் சென்றுகொண்டு இருக்கிறோம்'' என்றார்.
சென்னையில் பிடிபடுவதற்கு மூன்று நாட்கள் முன்பு இஷ்ரத், ஆசிப், அப்துர் ரகுமான் மூவரும் பாரீஸ் கார்னர், மெரீனா பீச், ரங்கநாதன் தெரு என, பல இடங்களில் சுற்றினார்களாம். அண்ணா சாலை ரிச்சி தெருவில் உள்ள ஒரு எலெக்ட்ரானிக் கடையில் ஒரு லேப்-டாப் வாங்கி அப்துர் ரகுமானுக்குப் பரிசாகக் கொடுத்தார்களாம். இவர்கள் வந்துபோனது, சென்னை போலீஸாரின் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருக்கிறது. மூவரும் எதற்காக இந்த இடங்களுக்குச் சென்றார்கள்? வேறு ஏதாவது சதியை அரங்கேற்ற நோட்டம் பார்க்கச் சென்றார்களா என்றும் சென்னை போலீஸ் சந்தேகத்தைக் கிளப்பியது.
இதைத் தொடர்ந்து, சென்னையில் காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் மத்திய உளவுத் துறையினர் கலந்துகொண்ட ரகசியக் கூட்டம் நடந்துள்ளது. அந்தக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக, சென்னையில் 102 இடங்களை ஆபத்தான பகுதிகளாகத் தேர்வு செய்து அங்கே ரகசிய கேமராக்கள் பொருத்தவும், பாதுகாப்புக்காக மஃப்டியில் போலீஸாரை நியமிக்கவும் முடிவு எடுத்து இருக்கிறார்கள்.
தப்பிச் சென்ற ஆசிப் பிடிபடும் வரை தமிழக போலீஸ் திகிலில்தான் இருப்பார்கள்!
சூர்யா

விடுதலை செய்த பாக். கண்டுகொள்ளாத இந்தியா!

பரிதாபத்தில் கலீல் சிஸ்டி
னிதர்களைத் திருத்துவதற்காக உருவாக்கப்பட்டதுதான், சிறைச்​சாலை. ஆனால், இன்று அது மனித துவேஷத்தைக் காட்டும் அகங்காரச் சின்னமாகிவிட்டது என்று மனித உரிமையாளர்கள் சொல்கிறார்கள். தங்கள் நாட்டுச் சிறையில் அடைபட்டவர்கள், என்றாவது ஒரு நாள் விடுதலைக் காற்றை சுவாசிக்கலாம். ஆனால் அன்னிய நாட்டுச் சிறையில் அடைப்பட்டவர்கள்?
போர்க் குற்றவாளிகள் மட்டுமின்றி, நூற்றுக்​கணக்கான அப்பாவிகள் அன்னிய நாட்டுச் சிறை​களில் இருக்கிறார்கள். அவர்கள் எதிர்காலம் என்னவென்று தெரியாமல் உள்ளேயே கிடந்து சாகிறார்கள். ஏனென்றால் சாதாரணக் குடிமகன்கள், அன்னிய நாட்டுச் சிறைக்குள் போய்விட்டால், அவர்களைக் காப்பாற்ற எந்த ஓர் அரசும் தீவிர முயற்சிகள் எடுப்பது இல்லை. நம் இந்தியாவும் இந்த விஷயத்தில் இரும்பு இதயம் படைத்ததுதான் என்பதற்கு ஓர் உதாரணம், டாக்டர் கலீல் சிஸ்டி.
சமீபத்தில் இந்திய பிரஸ் கவுன்சிலின் தலைவராகப் பொறுப்பேற்ற முன்னாள் நீதியரசர் மார்கண்டேய கட்ஜு இந்திய அரசுக்கு ஒரு கோரிக்கை விடுத்தார். ''அஜ்மிர் சிறையில் கடந்த 19 ஆண்டுகளாக இருக்கும் கலீல் சிஸ்டிக்கு தள்ளாத வயதாகிவிட்டது. அவரால் நடக்க இயலாது. இதய நோய், சர்க்கரை நோய் உட்பட பல நோய்கள் இருக்கின்றன. கராச்சியில் மருத்துவப் படிப்பை முடித்த அவர், ஸ்காட்லாந்தின் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் நச்சு நுண்மவியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்றவர். கராச்சி பல்கலைக்கழகத்தில் மைக்ரோபயாலஜி துறைத் தலைவர். தலைசிறந்த மருத்துவர். அவர் நீண்ட நாட்கள் வாழப்போவது இல்லை. அவரது இறுதிக் காலத்தை அவருடைய மனைவி மற்றும் மகளுடன் நிம்மதி​யாகக் கழிக்கட்டும். அவர் இந்திய சிறையில் இறந்துபோனால், தீராத அவப் பெயர் நமக்கு ஏற்படும். அதனால் அவரை கருணை அடிப்படையில் விடுவிக்க வேண்டும்...'' என்று கோரிக்கை வைத்து இருக்கிறார்.
இவர் இப்படிக் கேட்பது முதல் முறை அல்ல. பல மாதங்களுக்கு முன்பே பிரதமர், உள்துறை அமைச்சர், ராஜஸ்தான் மாநில ஆளுநர் ஆகியோருக்கு கலீல் சிஸ்டியை கருணை அடிப்படையில் விடுவிக்கும்படி கடிதம் எழுதி இருந்தார். ஆனால், அரசிடம் இருந்து எந்த சலனமும் இல்லை.
பாகிஸ்தான் மருத்துவரான கலீல் சிஸ்டி, தனது சகோதரருடன் இந்தியாவில் வசிக்கும் தாயைப் பார்க்க, கடந்த 92-ம் ஆண்டு அஜ்மிர் வந்தார். அப்போது அவரது சகோதரரின் மருமகன்களுக்கும்அவரது விரோதிகளுக்கும் ஏற்பட்ட சண்டையில் மரு​மகன் ஒருவர் துப்பாக்கியால் சுட முற்பட்டார். கலீல் சிஸ்டி அதைத் தடுக்க முயற்சிக்கும்போது, கை தவறிக் குண்டு பாய்ந்து ஒருவர் இறந்துவிட்டார். இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட கலீல் சிஸ்டி, சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 19 ஆண்டுகளாக நடந்த வழக்கு விசாரணைக்குப் பிறகு, கலீல் சிஸ்டி மற்றும் அவரது உறவினர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்த்து நீதிமன்றம்.
வயோதிகம் காரணமாக நடக்க முடியாத இவர், சமீபத்தில் தவறி விழுந்ததில் தோள்பட்டை எலும்பு முறிந்தது. தொடர்ந்து மாரடைப்பு ஏற்பட்டது. இப்போது அவர் அஜ்மிர் சிறையின் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். ஆனாலும் இறங்கி வரவில்லை மத்திய அரசு.
பாகிஸ்தான் மருத்துவருக்கு இந்திய அரசு இப்படி இன்னல் கொடுத்துக்கொண்டு இருக்க, பாகிஸ்தானோ இந்தியர் ஒருவருக்கு நன்னயம் செய்து இருக்கிறது. மார்கண்டேய கட்ஜு, கடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின்போது இந்தியா வந்திருந்த பாகிஸ்தான் பிரதமரிடம் பாகிஸ்தான் சிறையில் 27 ஆண்டுகளாக அடைக்கப்பட்டு இருக்கும் இந்தியரான கோபால்தாஸ் என்பவரைக் கருணை அடிப்படையில் விடுவிக்கும்படி கோரி இருந்தார். அதனை ஏற்று, பாகிஸ்தான் அரசு கடந்த ஏப்ரல் மாதம் அவரை விடுவித்தது. பஞ்சாப்பைச் சேர்ந்த கோபால்தாஸ் தனது உறவினரைப் பார்க்க ஜம்மு காஷ்மீர் சென்றபோது, தெரியாமல் எல்லைக் கோட்டைத் தாண்டியதற்காக பாகிஸ்தானின் சிறையில் அடைக்கப்பட்டவர்!
தற்போது ராஜஸ்தான் கவர்னரின் மேஜையில் கண்டுகொள்ளப்படாமல் காத்திருப்பது கலீல் சிஸ்டியின் கருணை மனு மட்டும் அல்ல, கொஞ்சம் கொஞ்சமாகப் போய்க்கொண்டு இருக்கும் அவரது உயிரும்கூட!
டி.எல்.சஞ்சீவிகுமார்                                               
எத்தனை கைதிகள்?
இப்போது 848 பாகிஸ்தானியர்கள் இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். 793 இந்தியர்கள் பாகிஸ்தான் சிறைகளில் உள்ளனர். இவர்களில் சுமார் 10 சதவிகிதம் பேர் மட்டுமே குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள். மற்றவர்கள் எல்லாம் தெரியாமல் கடலில் எல்லைத் தாண்டிய மீனவர்கள்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கிலாட் ஷாலிட் என்கிற இஸ்ரேலிய ராணுவ வீரரைக் கடத்திச் சென்று அடைத்துவைத்தது பாலஸ்தீனத்தில் இருக்கும் ஹமாஸ் இயக்கம். சமீபத்தில் அந்த ஒரே ஒரு வீரரை மீட்பதற்காக, தனது சிறையில் இருக்கும் 980 பாலஸ்தீனர்களை விடுவிக்க ஒப்புக்கொண்டு கையெழுத்து இட்டுள்ளது இஸ்ரேல். இஸ்ரேலுக்கு தனது மக்கள் மீது இருக்கும் அக்கறை... இந்தியாவுக்கு இல்லையே!

பழசு இன்றும் புதுசு

நேற்றும் நமதே - 60: 4.6.86
விடுதலைப் புலி இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கொரில்லா யுத்தத்தில் ஈடுபடும்போது சிங்கள ராணு​வத்​​​தினரிடம் சிக்கிக்கொண்டால், ஒரு சிறு தகவலைக்கூட அவர்களிடம் இருந்து கறந்துவிட முடியாது. காரணம், ஒவ்வொரு வீரரும் தன்கூடவே கொடிய விஷமான சயனைட் நிரப்பப்பட்ட சிறு குப்பி ஒன்றை வைத்திருக்கிறார். தப்ப முடியாத, நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டால், உடனே அந்தக் குப்பியைக் கடித்து விஷத்தை விழுங்கி உயிர்த் தியாகம் செய்துவிடுவார்கள்!
 இப்படி சயனைடை விழுங்கி இறந்தவர்கள் மட்டுமே இதுவரை 30 பேர் இருக்கும். ராணுவ மோதல்களில் உயிர்விட்டவர்கள் கணக்கு மிக மிக அதிகம். அவர்களுடைய இயக்கப் புத்தகத்தில் இந்த இளம் கொழுந்துகளின் புகைப்படங்களைப் பார்த்தபோது, நம் கைகள் நடுங்கின... உள்ளம் அழுதது. இந்த இழப்புகளை எல்லாம் தாங்கிக்கொண்டு தொடர்ந்து கடமையாற்றும் அந்த லட்சியவாதிகளை வர்ணிக்க வார்த்தைகளைத் தேட வேண்டும்.
விடுதலை இயக்கத்தில் பிரபாகரன் சேர்ந்தது ஏன்? அதற்கு என்ன பின்னணி?
பிரபாகரனே சொன்னார்...
''ஒரு நாள் என் அம்மாவிடம் ஒரு பெண்மணி பேசிக்கொண்டு இருந்தார். தனது மகள் திருமணத்துக்குப் பணம் திரட்டிக்கொண்டு இருந்தார் அந்தப் பெண்மணி என்பது புரிந்தது. அந்தப் பெண்மணியை உற்றுப் பார்த்தேன். அவரது கால்கள் முழுவதும் நெருப்பில் எரிந்து கருகிக்கிடந்தது. 1958-ல் நடந்த இனக் கலவரத்தில் அவர்களது குடும்பம் நாசமாக்கப்பட்ட கதையை அவர்கள் பேச்சில் இருந்து அறிந்தேன். என் இதயத்தில் அழுத்தமாகப் பதிந்துவிட்டது அந்த நெருப்பில் கருகிய கால்கள். அப்பொதெல்லாம் தமிழர்கள் படுகொலை செய்யப்படும் செய்திகள் வரும்... கூடிக் கூடிப் பேசுவோம். பாணந்துறையில் குருக்களைக் கொலை செய்ததைப்பற்றி ஊர் பீதியுடன் பேசியது... என் இதயத்தை இச்செய்திகள் தாக்கிச் சின்னாபின்னமாக்கும்.
நான் கடைக்குட்டி. வீட்டில் எல்லோருக்கும் செல்லப் பிள்ளை. வெளியே நடமாட விட மாட்டார்கள். புத்தகம்தான் துணை. நெப்போலியன், அலெக்ஸாந்தர். வீரசிவாஜி. நேதாஜி போன்றவர்களின் வரலாறுகளைப் படித்தவாறு இருப்பேன். வெளியே இருந்து என்னைத் தாக்கிய துயரச் செய்திகளும், இந்த வரலாறுகளைப் படிப்பதும் எனக்குள் மாற்றங்களைச் செய்தன.
வல்வெட்டித் துறையில் நிரந்தர ராணுவ முகாம் உண்டு. கள்ளக் குடியேற்றம், கள்ளக் கடத்தல் ஆகியவற்றைத் தடுப்பது இந்த ராணுவ முகாமின் நோக்கம் ஆனால். ராணுவத்தினர் அப்பாவிப் பொதுமக்களை அநாவசியமாகத் திடீரென்று தாக்குவார்கள். பொதுமக்கள் பாதிக்கப்பட்ட சம்பவங்களும் என் உள்ளத்தில் கொதிப்பை ஏற்படுத்தியது.
எனது இளமைப் பருவத்தில் சத்தியசீலன் போன்றோர், ஈழத் தமிழர் நிலை பற்றி எடுத்துரைக்க ஆரம்பித்து இருந்தனர். இன்று மேற்கு ஜெர்மனியில் அகதியாக இருக்கும் அவரைப் போன்றோர்தான் இம்மாதிரி இயக்கங்களின் முன்னோடி. தமிழ் ஈழம்தான் தமிழர் துயர் தீர ஒரே வழி என்ற கருத்துக்களைப் பள்ளிகளில் சில ஆசிரியர்கள் மெதுவாக எடுத்துச் சொல்வது உண்டு.''
பிரபாகரனின் குடும்பத்தை இலங்கை அரசு 'ஒரு கை’ பார்க்காமலா இருக்கும்? அவரது வீடு இடிக்கப்பட்டது. அப்பாவுக்கு பென்ஷன் மறுக்கப்பட்டது. நாடோடியாகத் திரிய வேண்டிய கதி ஏற்பட்டது.
போராட்ட வாழ்வின் நடுவே பிரபாகரன் திருமணம் புரிந்தார். மனைவி பெயர் மதிவதனி. தன் ஒரே குழந்தைக்கு 'சார்லஸ் ஆண்டனி’ என்று பெயர் சூட்டியிருக்கிறார் இதற்கு ஒரு காரணம் உண்டு. பிரபாகரனின் உயிர்த் தோழராக சார்லஸ் ஆண்டனி என்பவர் இருந்தார். தமிழர்களுக்காகப் போராடிய அந்த வீரரை இலங்கை ராணுவம் சூழ்ந்து நின்று சுட்டு வீழ்த்தியது. பிரபாகரன் கோபம்கொண்டார். ஆண்டனியின் உடையை அணிந்து, கையில் துப்பாக்கியோடும், கண்களில் தீப்பொறியோடும் பாய்ந்து வெளியே சென்று இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த 13 பேரை அழித்துப் பழிவாங்கினார். அவர் நினைவாகத்தான் குழந்தைக்குப் பெயர்.
பிரபாகரன் 'கொரில்லா’ பயிற்சியை க்யூபாவில் பெற்றதாகச் சொல்வார்கள். அதைப் பற்றிக் கேட்டபோது. ''அப்படிப்  பேசப்படுவது உண்மை அல்ல. புத்தகங்களைப் படித்து நானாகவே பயின்றேன். கற்பதன் மூலம் தெரிந்துகொள்வதைவிட சுற்றியிருக்கும் 'ஆபத்து’ நமக்கு அதிகப் பயிற்சியைக் கொடுக்கும். எனக்கு 'ஆபத்து’தான் குரு...'' என்று சொல்லி சிரித்தார். சாதாரண துப்பாக்கியில் இருந்து நவீன ஆயுதங்களை இயக்குவது வரை கை தேர்ந்தவர்.
பிரபாகரனுக்கு ஓவியம், கார்ட்டூன் வரை​வதில் ஆசை உண்டு. இயற்கைக் காட்சிகளும் வரைவாராம்.
''எங்கே, ஏதாவது படம் போடுங்களேன்...'' என்று கேட்டோம்.
ஸ்ரீலங்கா ராணுவத்தையே எதிர்த்துத் திணற​வைக்கும் பிரபாகரன் சற்றுத் தயக்கத்துடன். ''நீங்கள் எதிரே இருப்பதால், பயமாக இருக்கிறது'' என்றார் மதனைப் பார்த்து!
பிறகு சில படங்களைக் குட்டியாகப் போட்டுக் காண்பித்தார். எந்தப் படத்தையும் 'நீட்டாக’ முடித்துவிட்டுத்தான் தலையை நிமிர்த்தினார்.
ஒரு காலில் நிற்கும் கொக்கும் படத்தை ஒரு நிமிடம் எடுத்துக்கொண்டு போட்டார்.
''இந்தப் படத்தில் ஒரு தவறு இருக்கிறது'' என்றார் மதன்.
''என்ன?'' என்று ஆவலுடன் கேட்டார் பிரபாகரன்.
''கொக்கின் கால் இப்படி உட்பக்கமாக மடங்காது'' என்றார் மதன்.
''அப்படியா..?'' என்று சிரித்த பிரபாகரன், ''எத்தனையோ பிரச்னைகள்... இனிமேல் கரெக்டாகப் போடுவேன்...'' என்றார் மதன் போட்ட திருத்தப் படத்தைப் பார்த்தவாறு.
விடைபெற வேண்டிய நேரம் வந்தபோது, தமிழ் ஈழம் பற்றி மீண்டும் பேச்சு திரும்பியது. ''தமிழ் ஈழம் பெறும் நாளை நெருங்கிக்கொண்டு இருக்கிறோம். எங்களுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும் என்றால், ஈழத்தை அடைவது பெரிய விஷயம் அல்ல'' என்றார்.
தன்னைச் சிலர், 'இந்திய எதிரி’ என்று வர்ணிப்​பதைப்பற்றி குறிப்பிட்டு, அந்தக் குற்றச்சாட்டைத் திட்டவட்டமாக மறுத்தார் பிரபாகரன்.
''இந்திய ராணுவம் நடவடிக்கையில் இறங்குவதில் உள்ள சிரமம் எங்களுக்குப் புரிகிறது. அதனால், இந்தியாவை சர்வதேச நாடுகள் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடிய நிலைமை ஏற்படலாம். தனி ஈழம் அமைக்க சம்மதித்தால் அது தமிழ் இன நாடாக அமைந்து, இந்தியாவில் உள்ள தமிழ்நாடு பிரிவினை கோரும் கட்டம் வரலாம் என்று சில இந்தியத் தலைவர்கள் முன்பு கருதினார்கள். தனி ஈழம், தமிழ்நாட்டுப் பிரிவினையைத் தூண்டிவிடும் என்பது அபத்தம். இந்தியா என்ற மாபெரும் நாடு உலகத்துக்கே வழிகாட்டும் அற்புதமான நாடு. உலகமே வியக்கும் விதத்தில் இந்தியாவில் ஜனநாயக ஆட்சி நடக்கிறது. மக்கள் குரலுக்குத் தலை வணங்கும் ஆட்சி நடக்கிறது. சம உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பிரிவினை கோஷம் இனி இந்தியாவில் எழுவதற்கே வாய்ப்பு இல்லை...''
நமது நிருபர்

எனது இந்தியா

*

மிஸ்டர் மியாவ்

மைண்ட்ல பல்பு எரியலை...  மனசுல மணி அடிக்கலை!
''கண்ணாலச் சாப்பாடு எப்போ?'' என்று நேரடியாக த்ரிஷாவிடமே கேட்டோம்.
''எப்போ கல்யாணம்னு கேட்கிறவங்க வாயை அடைக்கிறதுக்காக என்னால் மேரேஜ் பண்ணிக்க முடியாது. கணவன் பற்றிய கனவுகள் சராசரி பொண்ணுங்க மனசுல எது மாதிரி இருக்குமோ, அதைவிட அதிகமாவே எனக்கும் இருக்கு. இதுவரைக்கும் யாரையும் பிடிக்கலை. பொண்ணுங்க டிரெஸ் வாங்குறதே பார்த்துப் பார்த்து எடுப்பாங்க. கலர் மேட்சிங்கே இப்படின்னா... ஹஸ்பெண்ட் மேட்சிங் எப்படிப் பார்க்கணும்? எனக்குப் பிடிச்சது எல்லாமே அவருக்கும் பிடிக்கணும். எனக்கு நாய்னா ரொம்ப ரொம்ப இஷ்டம். நாயே பிடிக்காதவர் எனக்கு கணவனா வந்தா, என் நிலைமையை நினைச்சுப் பாருங்க. பயங்கர டென்ஷன் ஆயிடுவேன். அதான்... நிதானமாப் பார்த்துக்கலாம்!'' என்று சிரிக்கிறார் மாமி!
 
அமலா பால் நோ... அரேஞ்டு மேரேஜ் யெஸ்!
அமலா பால் பிரச்னைதான் கோடம்பாக்கத்தில் ஹாட். டைரக்டர் விஜய் தன் புதிய பி.எம்.டபிள்யூ. காரில் அமலாவுடன் டெஸ்ட் டிரைவ் போனதாகவும், நிச்சய மோதிரம் மாற்றிக்கொண்டதாகவும் வதந்தி.
விஜய்யிடமே விளக்கம் கேட்டோம். ''அமலாபால் என்பெஸ்ட் ஃப்ரெண்ட். பி.எம்.டபிள்யூ கார் புக் செய்து இருந்தேன்.  டெஸ்ட் டிரைவ் பண்ண ஸ்பாட்டுக்கு காரை எடுத்துட்டு வந்தாங்க. அப்போ என்னோடு அமலா பால் இருந்ததால்,  ஃப்ரெண்ட்லியா ஒரு டிரைவ் போனோம்.  என் அம்மா - அப்பா மணிவிழாவுக்கு குடும்பத்​தோட அமலா வந்தாங்க. அவ்ளோதான். அமலா பால், எமி ஜாக்ஸன்,
அனுஷ்​கா எல்லோரும் எனக்கு பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ். ஆனா, அமலாவோட மட்டும் ஏன்தான் முடிச்சுப் போடுறாங்கன்னு தெரியலை. நான் காதலிச்சா... அதை எதுக்கு மறைக்கணும்? நிச்சயமா எனக்குக் காதல் கல்யாணம் கிடையாது. என் அம்மா அப்பா பார்க்கிற பொண்ணுதான்'' என்கிறார் விஜய் தெளிவாக!     

********************************************************************************************

0 comments:

Post a Comment

Cricket

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010