120... 420...
'அரசை உலுக்கும் 'நில’ நடுக்கம்’ என்ற தலைப்பில், கடந்த 12.12.2010 தேதியிட்ட ஜூ.வி. இதழில் ஒரு கட்டுரை வெளியிட்டோம். அது, மூன்று இதழ்கள் ஒரு
மினி தொடராக வெளியிடப்பட்டது.
தமிழ் நாடு வீட்டு வசதி வாரியத்தின் சொத்துகள் கடந்த தி.மு.க. ஆட்சியில் தராதரம் இல்லாமல் எப்படி எல்லாம் தாரை வார்க்கப்பட்டன என்பதை அம்பலப்படுத்தியது அந்தக் கட்டுரைத் தொடர். சமூக ஆர்வலர்களில் ஒருவரான சென்னை கோபால கிருஷ்ணன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவல்களை அடிப்படையாகக்கொண்டு அவை எழுதப் பட்டன. ஆனால், இதுநாள் வரை கிணற்றில் போட்ட கல்லாக இருந்த இந்த விவகாரம் இப்போது பரபரப்பில்!
வீட்டு வசதி வாரியம் மூலம் முறைகேடாக நில ஒதுக்கீடு பெற்றது தொடர்பாக, கூடுதல் டி.ஜி.பி. ஜாஃபர்சேட், கருணாநிதியின் உதவியாளர் ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கர் உள்ளிட்ட பலரின் வீடுகளில், லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் புகுந்து புறப்பட்ட பிறகு, இந்த விவகாரத்தில் செம சூடு. சென்னையைச் சேர்ந்த ஏ.சங்கர் இது தொடர்பாக கடந்த 23-ம் தேதி எழுத்துபூர்வ புகார் ஒன்றைக் கொடுத்ததைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கையில் போலீஸ் இறங்கியது.
கடந்த 12-ம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி. திருநாவுக்கரசு தலைமையில் அமைக்கப்பட்ட தனிப் படைகள், அண்ணா நகரில் உள்ள ஜாஃபர் சேட் வீடு, அருகில் உள்ள கஸ்தூரி ராஜ் என்ற பொறியாளர் வீடு, மேற்கு மாம்பலத்தில் ஜெய்சங்கர் என்பவரின் அலுவல கம், எழும்பூரில் நஜ்முதீன் வீடு, வேப்பேரியில் உள்ள பர்னாஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட், திருவான்மியூரில் உள்ள ஜாஃபர் சேட் நண்பர் வீடு, தி.நகரில் உள்ள லேண்ட்மார்க் கன்ஸ்ட்ரக்ஷன் அலுவலகம், நந்தம்பாக்கம் துர்கா சங்கர் வீடு, பெரியகுளத்தில் உள்ள ஜாஃபர் சேட்டின் மாமனார் சலீம் வீடு என 9 இடங்களில் அதிரடி சோதனைகள் நடத்தி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்களுடன், லேப்டாப், சி.டி-க்கள் போன்றவற்றையும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அள்ளிச் சென்றிருப்பது, ஜாஃபர் ஜாதகத்தில் சறுக்கல் தொடங்கி இருப்பதன் அடையாளம்! 120, 420 ஆகிய பிரிவுகளின் கீழ் சதி மற்றும் சீட்டிங் குற்றச்சாட்டுகள் அவர் மீது பாய்ந்துள்ளன.
ஜாஃபரின் ஜாதகம்!
கடந்த தி.மு.க. ஆட்சியில்தான் ஜாஃபர் சேட், கருணாநிதிக்கு நெருக்கமானவராக வலம் வந்ததாகப் பலரும் நினைக்கிறார்கள். அது தவறு. 96-ம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதா பர்கூர் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் நிறுத்தப்பட்டார் சுகவனம். அவருக்கு ஆதரவாக பர்கூர் தொகுதியில் பிரசாரத்துக்கு சென்றார் கருணாநிதி. அப்போது தர்மபுரி மாவட்ட எஸ்.பி-யாகப் பணியாற்றியவர் ஜாஃபர்.
பர்கூரில் மதிய வேளையில் திறந்த வேனில் கருணாநிதி பிரசாரம் செய்ய, அப்போது ஒரு குடிகாரர்
வேகமாக கருணாநிதியை நோக்கி வந்தார். யாரும் கவனிக்காத சூழலில் அந்தக் குடிகாரரை கவனித்த ஜாஃபர் சேட் வேகமாக ஓடி வந்து அவரைத் தள்ளிவிட்டார். குடிகாரனின் மடியில் இருந்த கத்தி கைப்பற்றப்பட்டது. இந்த சம்பவம் கருணாநிதியின் கண்ணில் பளிச்செனப் பட்டது. அந்தத் தேர்தலில் தி.மு.க. அமோகமாக வென்று ஆட்சியைப் பிடித்தது. முதல்வரான கருணாநிதியிடம், 'உங்களுக்கு பாதுகாப்பு எஸ்.பி-யாக யாரை நியமிக்க வேண்டும் என டி.ஜி.பி. கேட்கிறார்!’ என்றார் சண்முகநாதன். சட்டென யோசித்த கருணாநிதி, 'பர்கூர் பிரசாரத்தில் ஒரு குடிகாரனை எஸ்.பி. ஒருத்தர் பிடிச்சுத் தள்ளினாரே... அவரைக் கூப்பிடுங்க’ என்றார். அடுத்த கணமே தகவல் சுகவனத்துக்குத் தெரிவிக்கப்பட்டது. தர்மபுரியில் இருந்து தலைமையிடத்துக்கு ஜாஃபர் வந்தது அப்படித்தான். அப்போதே கருணாநிதியிடம் ரொம்பவே நெருக்கமான ஜாஃபர், கருணாநிதியின் குடும்ப உறவுகளை சமாளிக்கவும் கற்றிருந்தார்.
அப்போதைய ஆட்சி மாறி (2001-ம் ஆண்டு) ஜெயலலிதா முதல்வர் ஆனபோது, கருணா நிதியை உடனடியாகக் கைது செய்ய முடிவு எடுக்கப்பட்டது. கருணாநிதியின் நிழலாக விளங்கிய ஜாஃபரிடம் கைது நடவடிக்கையை ஒப்படைக்கலாம் என முடிவானது. ஆனால், அவர் எப்படியும் முன்னெச்சரிக்கையாக கருணா நிதியை உஷாராக்கிவிடுவார் எனத் தயங்கி, முத்துக் கருப்பன், ஜார்ஜ், கிறிஸ் டோபர் நெல்சன், முகமது அலி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளே கைது விவகாரத்தில் களம் இறங்கினார்கள். இவர்கள் ஆலோசனை நடத்திக் கொண்டு இருந்தபோதே, கோபாலபுரத்துக்கு மொத்தத் தகவலும் போய்ச் சேர்ந்தது. அங்கே இருந்து சன் டி.வி-க் கும் தகவல் பறக்க, போலீஸ் படை போனபோது ஏக ரசாபாசம். கைதுத் தகவலை கருணாநிதிக்குக் கசிய விட்டதே ஜாஃபர்தான் எனப் பரபரப்பு கிளம்பியது. அடுத்த கணமே ஜாஃபர் ஒரு டம்மி போஸ்ட்டுக்குத் தூக்கி அடிக்கப்பட்டார். ஐந்து வருடக் காத்திருப்புக்குப் பிறகு, கடந்த தி.மு.க. ஆட்சியில் (2006-ம் ஆண்டு) திருச்சி ஐ.ஜி-யாக நியமிக்கப்பட்டார். முட்டை ரவி, மணல்மேடு சங்கர் உள்ளிட்ட தாதாக்களைச் சுட்ட பெருமையுடன் உளவுத் துறைக்கு அழைக்கப்பட்டார்.
தமிழக போலீஸ் சர்வீஸில் உளவுத் துறை ஐ.ஜி-யாக அதிக நாட்கள் இருந்தவர் ஜாஃபர்தான்.அனைத்து மாநிலங்களிலும் உளவுத் துறைக்கு ஏ.டி.ஜி.பி. பதவியில் உள்ளவர்கள்தான் தலைவராக நியமிக்கப்படுவார்கள். அப்படி நியமிக்கப்பட்ட அனுப் ஜெய்ஸ்வால்பற்றியே கருணாநிதியிடம் போட்டுக்கொடுத்துத் தூக்கும் அளவுக்கு, தனது செல்வாக்கை வளர்த்துக்கொண்டார். ஜாஃபர் ஏ.டி.ஜி.பி-யாக பதவி உயர்வு பெறும் வரை அந்தப் பொறுப்பு காலியிடமாகவே வைக்கப் பட்டது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாதிக்குப் பாதி ஜெயிப்பதுகூட கஷ்டம் என துரைமுருகன் உள்ளிட்ட சீனியர் நிர்வாகிகள் சொன்னபோது, அவர்களின் முன்னால் ஜாஃபரை அழைத்தார் கருணாநிதி. 'எத்தனை ஸீட் ஜெயிப்போம்னு சொல்லுங்க?’ என கருணாநிதி கேட்க, 'சரியா 28 ஸீட் ஜெயிப்போம். குறிப்பா விருதுநகர் தொகுதியில் வைகோ தோற்பது உறுதி!’ எனச் சொன்னார். அமைச்சர்கள் கூட்டம் வாயடைத்துப்போனது. தேர்தல் முடிவு வெளியான நாளில் அத்தனை நிர்வாகிகளின் முன்னால் ஜாஃபரை, 'மிஸ்டர் 28...’ என அழைத்து கௌரவப்படுத்தினார்.
கணிப்பு விஷயத்தில் இவ்வளவு சரியாக இருந்த ஜாஃபருக்கு நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கணிப்பு கைகொடுக்கவில்லை. '119 ஸீட் உறுதி... 60 இடங்களில் இழுபறி’ என கடைசிக் கட்டக் கணிப்புகளை கருணாநிதியிடம் சொன்னார் ஜாஃபர். தேர்தல் முடிவுகள் வேறு விதமாக வெளியாக... மிக இறுக்கமான சூழலில் கருணாநிதியை சந்தித் தார் ஜாஃபர். 'என் கணிப்பு தவறாகிடுச்சு!’ என்பதை ஒப்புக்கொண்டார். தேர்தலில் தோல்வி அடைந்த நேரத்தில் கருணாநிதியின் வீட்டில் இருந்த போலீஸ் அதிகாரிகள் ஜாஃபரும் உளவுத் துறை எஸ்.பி.யான சந்திரசேகரும்தான்!
ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்ற உடன், அத்தனை போலீஸ் அதிகாரிகளும் வாழ்த்து தெரிவித்தார்கள். சந்திரசேகரும் ஜெயலலிதாவை சந்திக்கச் சென்றார். ஆனால், கடைசி வரை ஜாஃபர் சேட் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கவே இல்லை. எதிர் பார்த்ததுபோலவே மண்டபத்துக்கு ஜாஃபர் மாற்றப்பட்டார்.
இதில் ஒரு சுவாரஸ்யத் திருப்பம் என்ன தெரியுமா? ஐ.பி.எஸ். முடித்த உடன் முதல் பணியிடமாக ஜாஃபர் நியமிக்கப்பட்டதும் ராமநாதபுரம் மாவட்டத்தில்தான். உளவுத் துறையின் உச்ச புள்ளியாக மாறி, இப்போது அவர் தூக்கி வீசப்படும் இடமாகவும் அந்த மாவட்டமே அமைந்தது!
சீட்டிங் நடந்தது எப்படி?
வீட்டு வசதி வாரியத்தில் மனை கேட்டு ஜாஃபர் சேட் விண்ணப்பம் கொடுத்தபோது, 'அப்பழுக்கற்ற அரசு ஊழியர்’ என்கிற பிரிவில் இவருக்கு திருவான்மியூர் காமராஜர் நகரில் வீட்டு மனை எண் 540 ஒதுக்கப்படுவதாக வீட்டு வசதித் துறை 23.4.2008 அன்று உத்தரவிட்டது. ஆனால், இந்த மனையை ஏனோ அவர் வாங்கவில்லை. அதன் பிறகு அவர் மகள் ஜெனிஃபர் 'சமூக சேவகர்’ பிரிவில் மனை கேட்டு மனு கொடுக்கிறார். ஜெனிஃபருக்கு அதே 540 எண் கொண்ட மனையை ஒதுக்கீடு செய்வதாக 6.6.2008 தேதியிட்ட வீட்டு வசதித் துறையின் அரசு ஆணை தெரிவிக்கிறது. 4,756 சதுர அடிகொண்ட இந்த மனையின் மதிப்பு 1.15 கோடி. இதற்கான பணத்தையும் ஜெனிஃபர் கட்டுகிறார். ஆனால், 'மனை வேண்டாம்’ என்று சொல்லி பணத்தைத் திருப்பி வாங்கிவிடுகிறார். அதன் பிறகு அந்த மனை, ஜாஃபர் சேட்டின் மனைவி பர்வீன் பெயருக்கு மாற்றப்பட்டது. இது குறித்து கடந்த 15.12.2010 ஜூ.வி இதழில் விரிவாக எழுதி இருந்தோம்.
இந்த மனை எண் 540-க்கு சற்றுத் தள்ளி இருக்கும் மனை எண் 538. இது கருணாநிதி முதல்வராக இருந்த சமயத்தில் அவரிடம் செயலாளராக இருந்த ராஜ மாணிக்கத்தின் மகன் துர்கா சங்கருடையது. இவருக்கும் 'சமூக சேவகர்’ என்கிற பிரிவில்தான் மனை ஒதுக்கப்பட்டது. இதன் மதிப்பு 1.12 கோடி. இந்த இரண்டு மனைகளுக்கும் நடுவில் இன்னொருவருக்கு மனை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதன் மதிப்பு 1.15 கோடி. இந்த மூன்று பேரும் சேர்ந்துதான் தனியாக அபார்ட்மென்ட் கட்டும் வேலையில் இறங்கினார்கள். லேண்ட்மார்க் கன்ஸ்ட்ரக்ஷன் என்ற பெயரில் 12 அடுக்குமாடி வீடுகளை கட்டி விற்று, அதன் மூலம் சுமார் 20 கோடி ரூபாய் வரையில் லாபம் பார்ப்பதுதான் நோக்கம். இது அப்பட்டமான விதிமுறை மீறல் என்கிறது போலீஸ். இந்த அடிப்படையில்தான் ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கர், ஜாஃபரின் நண்பர் ஜெய்சங்கர், கவர்னர் மாளிகையில் பர்னாலாவுக்கு நெருக்கமாக இருக்கும் நஜ்முதீன் எழும்பூர் வீடு, வேப்பேரி அலுவலம், தி.நகர் லேண்ட்மார்க் கன்ஸ்ட்ரக்ஷன் ஆகிய இடங்களை குறி வைத்து ரெய்டு நடத்தியது போலீஸ்.
''வீட்டு மனை கேட்டு அரசுக்கு முதலில் ஜாஃபர் சேட் மகள் ஜெனிஃபர் விண்ணப்பித்த போது, அவர் கொடுத்த முகவரி ராஜா தெரு, கல்யாணி நகர், திருவான்மியூர். இந்த முகவரிக்கு போலீஸ் போனபோது அங்கே வெறும் காலியிடம்தான் இருந்தது. இதேபோல ஜாஃபர் சேட்டின் மனைவி பர்வீன் ஜாஃபர் அனுப்பிய விண்ணப்பத்தில், 6.சி பிளாக், 14-வது தெரு, அண்ணா நகர் என்ற முகவரி இருந்தது. அதாவது, இப்போது ரெய்டு நடந்த வீடு இதுதான். இந்த இரண்டு வீடுகள் இருக்கும்போதே ஜாஃபர் சேட், தி.மு.க. ஆட்சியில் வாலாஜா சாலையில் உள்ள அரசுக் குடியிருப்பில் இருந்து வந்தார். தனக்கோ அல்லது தன்னைச் சார்ந்து இருப்பவர்கள் பெயரிலோ வீடுகள் இருந்தால், அரசுக் குடியிருப்பு கிடையாது என்பது விதி. மகள் மற்றும் மனைவி பெயரில் வீடுகள் இருக்கும்போதே, அரசுக் குடியிருப்பை அவர் பயன்படுத்தியதும் விதிமீறல். இப்படி மூன்று இடங்களில் வீடுகள் இருந்தும், மீண்டும் புதிதாக வீட்டு மனை வாங்கியது அப்பட்டமான விதிமீறல்...'' என்றார்கள் அதிகாரிகள். இந்த மனைக்காகக் கட்டிய பணத்துக்கும் ஜாஃபர் முறையான கணக்குகளைக் காட்டியாக வேண் டும்!
அடுத்தடுத்த நாட்களில் ஜாஃபர் மீதான வழக்குகள் வரிசையாக அணி வகுக்கும்!
- நமது நிருபர்கள்
படங்கள்: எம்.உசேன், ச.இரா.ஸ்ரீதர்
''பாரபட்சம் இல்லாத நடவடிக்கை வேண்டும்!''
வீட்டு மனை வில்லங்கங்கள் அனைத்தையும் நீண்ட போரட்டத்துக்குப் பின் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தவர் ஃபேக்ட் இந்தியா அமைப்பின் உறுப்பினர் கோபால கிருஷ்ணன். அவரிடம் பேசினோம். ''ஜாஃபர் சேட்டை மட்டுமே குறிவைத்து நடவடிக்கை எடுப்பது சரி அல்ல. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., எம்.எல்.ஏ.க்கள், அரசியல்வாதிகள், நிதித் துறையினர் மீதும் நடவடிக்கை பாய வேண்டும். ஜாஃபரை மட்டும் பழி தீர்த்துக்கொள்ள இதனைப் பயன்படுத்திவிடக்கூடாது. கருணாநிதியிடம் பாதுகாப்பு அதிகாரிகளாக இருக்கும் பாண்டியன், கணேசன், விநோதன் ஆகியோரும் வீடுகளை வாங்கி ஜாயின்ட்வென்சர் மூலம் விற்றுக் கொள்ளை லாபம் பார்த்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 'தவறான தகவல்கள் கொடுத்து வீடோ அல்லது மனையோ வாங்கி இருப்பது பிறகு தெரிய வந்தால், நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று வீட்டு வசதி வாரிய ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கும். அதனால் முறைகேடாக வீடுகள், மனைகள் வாங்கிய அனைவரின் மீதும் பறிமுதல் நடவடிக்கை எடுக்க முடியும். ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கர், வீட்டு வசதி வாரியத்தில் வீடு வாங்கியபோது, அதை வருமான வரித் துறையிடம் காட்டி இருக்கிறார்களா என்பதைக் கண்டுபிடிப்பதற்காக அவருடைய ஐந்து வருட வருமான வரி ரிட்டர்ன்ஸைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டபோது தர மறுத்துவிட்டார்கள். இதையும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்!'' என்கிறார்.
0 comments:
Post a Comment