தேவாரம் குண்டு வெடிப்பில் திகில்
தேனி மாவட்டம், தேவாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகர பாண்டியன். பழைய இரும்பு வியாபாரி. சுற்றுப்புறக் கிராமங்களுக்கு, டிரை சைக்கிளில் சென்று பழைய இரும்புப் பொருட்களை வாங்கி, அவற்றை விற்றுப் பிழைப்பு நடத்தி
வருபவர். கடந்த 25-ம் தேதி, தன்னிடம் இருந்த கூம்பு வடிவ இரும்புக் குண்டை உடைத்துப் பார்க்க முயற்சித்தார். சுத்தியல்கொண்டு ஓங்கி அடித்தார். அந்தக் குண்டு, 'டமார்’ என பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. அதில், குணசேகர பாண்டியனும் அப்போது அந்தப் பகுதியைக் கடந்து சென்ற பவுன்தாய் என்ற பெண்ணும் உடல் சிதறி இறந்துபோனார்கள். பதறி அடித்து ஓடி வந்த தேவாரம் போலீஸார், வெடித்தது ராக்கெட் லாஞ்சர் என்பதை முதல் கட்ட விசாரணையில் கண்டுபிடித்து உள்ளனர். 'எதிரியின் விமானங்களை வீழ்த்த ராணுவத்தில் பயன்படுத்தும் ராக்கெட் லாஞ்சர் வெடி, தேனி மாவட்டக் கிராமத்துக்கு எப்படி வந்தது?’ என்ற கேள்விக்கு உடனே விடை கிடைக்கவில்லை. அதனால், குணசேகர பாண்டியன் எந்த வீட்டில் இந்தப் பொருளை வாங்கினார் என கிராமம் கிராமமாக, வீடு வீடாக விசாரிக்கும் பணியில் போலீஸார் முடுக்கிவிடப்பட்டு உள்ளனர்.
போலீஸ் அதிகாரிகளிடம் பேசினோம். ''இறந்த குணசேகர பாண்டியனுக்கு தன்னிடம் இருந்தது, ராக்கெட் லாஞ்சர் என்பது தெரியவில்லை. இதைப் பல மாதங்களாகத் தன் வீட்டில் வைத்துஇருந்தாராம். இதை உடைத்தால் செம்பு, அலுமினியம் கிடைக்கும் என நினைத்துத்தான், சுத்தியலால் அடித்து உடைக்க முயற்சி செய்து உள்ளார். வெடித்த பொருளின் உதிரி பாகத்தில் 112 ஓகே=2-98 என்ற குறியீடு இருந்தது. இந்தக் குறியீட்டைவைத்து விசாரித்ததில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூர் ராணுவ ஆயுதத் தயாரிப்பு மையத்தில் 98-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ராக்கெட் லாஞ்சர் என்பது தெரிய வந்தது. இந்த வகை ராக்கெட் லாஞ்சர்கள், கார்கில் போரில் பயன்படுத்தப்பட்டவை என்று ராணுவத்தினர் சொல்கிறார்கள். துப்பாக்கியில் இருந்து வெளியேறும் ராக்கெட் லாஞ்சர்கள், ஏதாவது ஒன்றின் மீது மோதினால் மட்டுமே வெடிக்கும். மரக்கிளை, சகதி, மணலில் விழுந்தால் வெடிக்காது. இதுபோன்ற வெடிக்காத லாஞ்சர்களை இந்திய எல்லை ஓரக் கிராமங்களில் வசிப்பவர்கள் எடுத்து, எடைக்குப் போட்டுவிடுவார்கள். இதை விற்பது சட்டப்படி குற்றம்.
இதனால் இப்போது எல்லையோரக் கிராமங்களில் போலீஸார் சோதனை நடத்தி வெடி பொருட்களைக் கைப்பற்றி வருகிறார்கள். தேவாரத்தில் வெடித்த ராக்கெட் லாஞ்சர், எல்லை ஓரக் கிராமங்களில் இருந்து தமிழகத்தில் உள்ள மாவோயிஸ்ட்களுக்கு வந்ததாக இருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கிறது. விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது!'' என்றார்கள்.
கியூ பிராஞ்ச் அதிகாரிகளிடம் பேசினோம். ''இந்தியாவில் இயங்கும் தீவிரவாதக் குழுக்களிடம் இருந்து கைப்பற்றப்படும் ஆயுதங்களை சோதனை செய்து பார்த்தபோது, அவை இந்திய ராணுவத்தில் தயாரிக்கப்பட்டவை என்பது தெரிய வந்தது. தீவிரவாதிகளுக்கு எப்படி, இந்திய ராணுவம் தயாரித்த ஆயுதம் கிடைக்கிறது என்பதை, எங்கள் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
போலீஸ் நிலையங்களைத் தாக்கும் தீவிரவாதிகள் சாதாரண துப்பாக்கிகளைக் கொள்ளை அடித்துச் செல்கின்றனர். ஆனால், நவீன ரக ஆயுதங்கள் எல்லாம் இந்திய எல்லையில் பாதுகாப்புப் பணியில் உள்ள துணை ராணுவப் படையினரிடம் விலைக்கு வாங்கியவை என்பதை, எங்கள் அதிகாரிகள் கண்டுபிடித்து உள்ளனர். துணை ராணுவத்தினர் ஏன் ஆயுதங்களை விற்கிறார்கள், விற்க முடியுமா, விற்கப்பட்ட ஆயுதங்களுக்கு எப்படிக் கணக்கு காட்டுகிறார்கள் என்று விசாரணை நடக்கிறது!'' என்ற அதிர்ச்சித் தகவலை சொன்னார்.
தேனி எஸ்.பி. பிரவின்குமார் அபினவ், ''பல கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. உண்மையை விரைவில் கண்டுபிடிப்போம்!'' என சுருக்கமாக முடித்துக்கொண்டார்.
இந்திய ராணுவத்தின் ஆயுதங்கள், தீவிரவாதிகள் கையில் சிக்கினால் என்ன நடக்கும் என்பதை நினைக்கவே அச்சமாக இருக்கிறது. அதிரடி நடவடிக்கைகள் தொடரட்டும்!
நன்றி: ஜூவி
நன்றி: ஜூவி
0 comments:
Post a Comment