24.7.11 தேதியிட்ட இதழின் கழுகார் பதில் பகுதியில், 'இனி என்னவாகும் செம்மொழி?’ என்ற கேள்விக்கு, 'இது கருணாநிதியின் குடும்ப சொத்து அல்ல. செம்மொழி வேறு, கனிமொழி வேறு என்பதை ஜெயலலிதா உணர வேண்டும்!’ என்று கழுகார் பதில் சொல்லி இருந்தார்.
இது தொடர்பாக, திராவிடச் சான்றோர் பேரவைத் தலைவர் சாமி.தியாகராஜன் எழுதியுள்ள கடிதம் இது.
அதன் விவரம்..
''செம்மொழி வேறு, கனிமொழி வேறுஎன்பதை கருணாநிதி முதலில் உணர்ந்தாரா? இந்தக் குழுவை அமைத்தது மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அல்ல. கருணாநிதிதான் அமைத்தார். ஐம்பெருங்குழு, எண்பேராயம் எனப் பெயரிட்டு இரண்டுக்கும் அவரே தலைவர் ஆனார். செம்மொழியாம் தமிழைக் கற்று, தமிழ் பொங்கி வழியும் தன் மகள் கனிமொழியை ஐம்பெருங்குழு அங்கத்தினர் ஆக்கினார். அதாவது, செம்மொழியும் கனிமொழியும் அவர் பார்வையில் ஒன்றே.
ஐம்பெருங்குழு என்பதன் அர்த்தம் தெரியுமா? 1. அரசனுக்குரிய ஆசான்(குரு), 2. அமைச்சர், 3. படைத் தலைவர், 4. தூதுவர், 5. ஒற்றர் ஆகி
யோரே ஐம்பெருங் குழுவினர். இங்கே பெரும் என்ற சொல் பெரிய, பெரும்பான்மை என்ற பொருளில் வராமல், 'பெருமைக்குரிய’ என்ற அர்த்தத்தில் கொள்ளப்படும். கருணாநிதி என்னும் அரசனுக்கு, கனிமொழி என்ன ஆசானா? அமைச்சரா? படைத் தலைவனா? தூதுவனா? ஒற்றனா?
எந்த வகையில் கனிமொழியைச் சேர்ப்பது? குடும்பம் என்ற வகையில்தானே சேர்க்கமுடியும்!
செம்மொழி ஆய்வு நிறுவனத்தைக் கருணாநிதி தனது குடும்ப சொத்தாகக் கருதியதால்தான், 'ஆய்வு’ என்றால் என்ன என்றே தெரியாத தி.மு.க. கவிஞர்களை உறுப்பினர் ஆக்கினார். தனது ஜால்ராக்களையே இணைத்தார். நல்ல வேளை, பேராசிரியர் வ.அய்.சுப்பிரமணியம் இந்த மொழிக் கொள்ளைக் கூட்டக் குழு கூடுவதற்கு முன்பே உயிர் துறந்துவிட்டார்.
செம்மொழி செய்தி மடல் 1-ல் தி.ஆ.2037. மாசி. பக்கம் 21-ல் 'தொல்காப்பியர் வாழ்ந்த காலம் கி.மு. நான்காம் நூற்றாண்டிற்கு முற்பட்ட தொன்மை உடையது என்பதில் சிறிதும் ஐயமில்லை...’ என்று பேராசிரியர் வெள்ளை வாரணன் முடிவு சொல்லி உள்ளார். கிறிஸ்து பிறப்பதற்கு நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே செம்மொழித் தமிழ் இலக்கணம் தோன்றிவிட்டது. அதாவது, இன்றைக்கு 2,400 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் செம்மொழியாக இருந்தது என்பதைத் தொல்காப்பியம் கொண்டு அறியலாம் என்பதாகும். தமிழைச் செம்மொழியாக அறிக்கேற்றம் செய்ய வேண்டும் என மைய அரசைக் கருணாநிதி கேட்டபோது, உலக அறிஞர்கள் ஒப்புக்கொண்டுள்ள 3,000 ஆண்டு தமிழ்ப் பழைமையை ஏற்காமல் இந்திய அரசு, 1,500 ஆண்டுகளுக்கு முன்புதான் தமிழ் செம்மொழித் தகுதியைப் பெறுகிறது. அதாவது, 1,500 ஆண்டுப் பழைமைதான் உடையது தமிழ் என வரையறை செய்கிறது.
கருணாநிதி என்ன செய்து இருக்க வேண்டும்? இந்திய அரசுடன் போராடி, தமிழின் உண்மையான பழைமையை நிலை நிறுத்தி இருக்க வேண்டாமா? மாறாக என்ன செய்தார். உலகத் தமிழறிஞர்கள் இந்திய அரசின் முடிவுக்குக் கண்டனம் தெரிவித்தும், கருணாநிதி மைய அரசின் முடிவினை ஏற்றுக்கொண்டுத் தமிழுக்குச் சிறுமை செய்தார்.
பாரதி வாக்கில் சொல்லப் போனால், 'சிறியோர் செய்கை செய்தார்’!’
0 comments:
Post a Comment