********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

சென்ற வார செய்திகள் (04 செப்டம்பர் 2011)

Saturday, September 3, 2011

மிஸ்டர் கழுகு: நாம தப்புப் பண்ணிட்டோம்..!

ழுகார் கையில் 'நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழுடன் வந்தார்.

''முதல்வர் தீராத மனப் போராட்டத்தில் இருக்கிறார். பேரறிவாளன், முருகன்,
சாந்தன் விவகாரம் தொடர்பாக முதல்வரிடம் இருந்து இன்னொரு அறிக்கை ஐந்து அல்லது ஆறாம் தேதி வரலாம். அது நீதிமன்ற நடவடிக்கைகளைப் பொறுத்ததாக இருக்குமாம்!'' என்று கழுகார் கடந்த இதழில் சொன்னதை நாம் எடுத்து வாசித்தோம். அவர் உடனே, 'நமது எம்.ஜி.ஆர்.’ பத்திரிகையை எடுத்துக் காட்டினார்.
'தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் அம்மூவரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும்...’ என்று ஜெயலலிதா கொண்டுவந்த தீர்மானம் கொட்டை எழுத்தில் இருந்தது!
கழுகாரே ஆரம்பித்தார்!
''மூவரின் மரண தண்டனையை ஜனாதி பதியே உறுதிப்படுத்திய பிறகு, மாநில முதல்வர் தலையிடுவதற்கான அதிகாரம் இல்லை என்று ஜெய லலிதா கடந்த 29-ம் தேதி சொன்னதைத் தொடர்ந்து, அவரது மனதில் நடந்த போராட்டங்களைத்தான் நான் உமக்கு விரிவாகச் சொன்னேன். 'எனக்கு அதிகாரம் இல்லைதான். ஆனால், அந்த மூன்று பேர்களது உயிரைக் காப்பதற்கு நம்மால் எதுவும் செய்ய வழி இல்லையா?’ என்று ஏக்கமான மனதுடன் கேட்டுக் கொண்டுதான் 'தனக்கு அதிகாரம் இல்லை’ என்ற முந்தைய தீர்மானத்தைப் படிப்பதற்கு சபைக்குள் ஜெயலலிதா வந்தார். அது தமிழ் உணர்வாளர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. உண்மையைச் சொன்னால், அன்றைய தினம் ஆளும் கட்சி உறுப்பினர்கள், அமைச்சர்கள் முகத்தில்கூட உற்சாகம் இல்லாமல்தான் சபையைவிட்டு வெளியே வந் தார்கள். இந்தச் செய்தி பரவி... தமிழகத்தின் பல இடங்களில் தூக்குத் தண்டனைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தவர்கள் மனதள வில், முதல்வருக்கு எதிராகக் கோபமானார்கள். அதை முதல்வர் கவனத்துக்கு தமிழக உளவுத் துறை அதிகாரி கள் மிகச் சரியாகக் கொண்டுபோய்ச் சேர்த்ததுதான் பெரிய விஷயம்!''
''அப்படியா?''
''ம்... அவர்கள் மட்டும் மறைத்து இருந்தால், முதல்வர் இரண்டாவது முடிவை எடுத்திருக்க மாட்டார். 'வைகோ, நெடுமாறன் கட்சி ஆட்கள் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் நடத்துறாங்க’ என்று சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சொல்லி இருந்தார்களாம் ஆரம்பத்தில். ஆனால், இது நாடு முழுவதும் பெரிய கிளர்ச்சியாக ஆனதை உணர்ந்தபோது, 'நாம தப்புப் பண்ணிட்டோம்’ என்று உண்மையில் வாய்விட்டுச் சொன்னாராம் முதல்வர். அதை அறிந்ததால்தான், திங்கள் கிழமை இரவில் 'முதல்வர் மனப் போராட் டத்தில் இருக்கிறார். அவர் மாறக்கூடும்’ என்ற தகவலை நான் உமக்குக் கோடிட்டுக் காட்டிச் சென்றேன். 'அதற்கு இரண்டொரு நாட்கள் கால அவகாசம் ஆகலாம்... நீதிமன்ற விவாதங்கள் எந்த திசையை நோக்கிப் போகிறது என்று முதல்வர் பார்க்கலாம்’ என்று நினைத்தேன். ஆனால், அனைவரையும் முந்திக்கொண்டு 'ரத்து செய்தாக வேண்டும்’ என்ற அறிக்கையை சபையில் வாசித்து மொத்தப் பேர் ஆதரவையும் அள்ளிவிட்டார் முதல்வர்!''
''அன்றுதானே சென்னை உயர் நீதிமன்றமும் எட்டு வாரங்கள் தடை விதித்தது!''
''நீதிமன்றத் தடைக்கு முன்னதாகவே சட்டசபையில் இருந்து தகவல் பறந்து வந்துவிட்டது. 'நீதிமன்றம் தடை விதித்த பின்னால், நாம் எடுக்கும் முடிவுகளால் பயன் இல்லை’ என்று முதல்வர் நினைத்தாராம். ஜெயலலிதாவைப் பொறுத்த வரை, அவர் முழுமையாக 'கன்வின்ஸ்’ ஆனால் மட்டும்தான் செயலில் இறங்குவார். இப்படி ஒரு சூழ்நிலையிலும் சில அதிகாரிகள் 'இதைக் கண்டுக்காமல் விடுவதுதான் நல்லது’ என்றார்களாம். ஆனால், 'இதில் அமைதியாக நான் இருந்தால், கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டி இருக்கும்’ என்று முதல்வர் தீர்க்கமாகச் சொன்னாராம். அதற்குப் பிறகுதான், அதிகாரிகள் அமைதியானார்கள். இதற்கிடையில் முதல்வரின் இ-மெயில் முகவரிக்கு ஏராளமான ஆவணங்கள் வந்து விழுந்துள்ளன. 'மாநில முதல்வர் என்ற அடிப்படையில், உங்களுக்கு இந்த விஷயத்தில் என்ன மாதிரியான அதிகாரங்கள் இருக்கின்றன’ என்பதை விளக்குவதாக அவை அமைந்திருந்தன. மொத்தத்தில், என்னுடைய சோர்ஸ் ஒருவர், 'இனி தமிழ், தமிழினம், ஈழத் தமிழர் பிரச்னையில் எந்த சமரசமும் அம்மா செய்ய மாட்டார். அடுத்து கச்சத் தீவுப் பிரச்னையைக் கையில் எடுக்கப்போகிறார்’ என்கிறார்!''
''அதை எடுத்தால், மத்திய அரசுக்கு பெரும் சிக்கல் ஆகுமே?''
''மாநிலத்தில் அசைக்க முடியாத செல்வாக்கை வைத்திருக்கும் ஒரு ஆட்சி, மக்களுக்குத் தேவையான விஷயங்களில் சமரசம் இல்லாமல் செல்கிறது என்று காட்ட நினைக்கிறார் ஜெயலலிதா. மத்திய அரசாங்கம் என்ன நினைத்தாலும் கவலை இல்லை என்பதுதான் இவரது எண்ணமாக இருக்கிறதாம். அவர்களைவிட இலங்கை அரசாங்கம் அதிகப்படியான கோபத்தை ஜெயலலிதா மீது பாய்ச்சக்கூடும். அந்த அரசாங்கத்தின் மீது ஜெயலலிதா விடுக்கும் ஐந்தாவது தாக்குதல் இது. பொருளாதாரத் தடை விதிக்கச் சொன்னது, போர்க் குற்றவாளியாக விசாரணை நடத்தச் சொன்னது, கோத்தபய ராஜபக்ஷேவை கண்டித்தது, கச்சத் தீவை மறுபடியும் வாங்கச் சொன்னது.... இந்த வரிசையில் மரண தண்டனைக்கு எதிராகக் கிளம்பி யதையும் சொல்லலாம். 'உண்ணாவிரதம் உட்கார்ந்த அங்கயற்கண்ணி, வடிவாம்பாள், சுஜாதா ஆகிய மூவருடன் உயிரைக் கொடுத்த செங்கொடி ஆகிய நான்கு பெண்கள்தான் அம்மாவின் மனதைக் கரைத்துவிட்டார்கள்’ என்று அ.தி.மு.க-வினர் உற்சாக மாகச் சொல்கிறார்கள்.''
''உள்ளாட்சித் தேர்தல் வேலைகளில் அ.தி.மு.க. ஜரூராக இறங்கிவிட்டதோ?'' - பேச்சின் திசையை மாற்றினோம்.
''ஆமாம். அக்டோபர் மாதம் தேர்தல் உறுதி என்கிறார்கள். அதற்காகவே கட்சியில் சில அதிரடி மாற்றங்களை செய்திருக்கிறார் ஜெயலலிதா. இதுவரை கட்சி ரீதியாக 45 மாவட்டங்கள் இருந்தன. அந்த எண்ணிக்கையை 52 ஆக உயர்த்திவிட்டார். சென்னை, காஞ்சிபுரம், திருப்பூர் போன்ற சில மாவட்டங்களைப் பிரித்து, புதிய மாவட்டச் செயலாளர்களை நியமித்துவிட்டார். அமைச்சர்கள் சின்னய்யா, ரமணா, டாக்டர் விஜய் போன்ற சிலருக்கு மாவட்டச் செயலாளர் பதவிகள் கிடைத்துள்ளன. இதேபோல், உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட கட்சிக்காரர்கள் விருப்ப மனு செய்யலாம் என்ற அறிவிப்பு வெளியிட்டதும், அ.தி.மு.க. முகாம் துள்ளலில் இருக்கிறது!''
''தி.மு.க. முகாம் எப்படி..?''
''பீதியில்தான் இருக்கிறார்கள். தினமும் காலையும் மாலையும் கருணாநிதி அறிவாலயம் வந்துவிடுகிறார். கட்சியின் முன்னாள் அமைச்சர்கள், முக்கியக் கட்சி நிர்வாகிகளைக் குறிவைத்து ஜெயலலிதா அரசு கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கி இருப்பதைச் சமாளிப்பது குறித்து ஆலோசனையில் மூழ்கிவிடுகிறாராம். சட்டரீதியாக இதனைத் தடுக்க நினைக்கிறார் கருணாநிதி. ஆனாலும், கைது நடவடிக்கைள் தொடரும் என்றுதான் சொல்கிறார்கள், தலைமைச் செயலகத்தில் உள்ள அ.தி.மு.க. விசுவாச அதிகாரிகள்!''
''அடுத்த கைது யாராம்?''
''பொன்முடியின் தோழர் எ.வ.வேலு வாக இருக்கலாம். திண்டுக்கல் மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமியின் ஜாதகமும் ஸ்கேன் செய்யப்பட்டு வருகிறது. மில்கள், கல்வி நிறுவனங்கள், நிலங்கள் என்று பத்திரப் பதிவுத் துறையில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. பெரியசாமியிடம் வேலை பார்த்த கீழ்மட்ட ஊழியர் கள் கோடிக்கணக்கில் சொத்து வாங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள். எந்நேரமும் அவை கிளப்பப்படலாம். இந்த நேரத்தில் தேவை இல்லாமல் ஒரு முன்னாள் தி.மு.க அமைச்சர், அ.தி. மு.க-வின் கோபப் பார்வையில் சிக்கியிருக்கிறார்.''
''சார் யார்?''
''கடந்த தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக இருந்தாரே... ராமச்சந்திரன்! எந்த வம்புதும்புக்கும் போகாதவர். செல்வாக்கு இல்லாத கதர்த் துறை அமைச்சராக இருந்தவர். நீலகிரி மாவட்ட தி.மு.க. செயலாளர். தற்போதைய அ.தி.மு.க. ஆட்சியில் உணவுத் துறை அமைச்சராக இருக்கும் புத்திசந்திரனும் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். அமைச்சர் புத்திசந்திரன் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகச் சொல்லி, உள்ளூர் தி.மு.க. கவுன்சிலர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டார். போதிய ஆவணம் இல்லாததால், அது தள்ளுபடியானது. வேண்டுமென்றே இப்படி ஒரு வழக்கைப் போட பின்னணியில் செயல்பட்டவர் 'முன்னாள்' ராமச்சந்திரன்தான் என்று முதல்வர் அலுவலகத்தில் தூபம் போடப்பட்டதாம். ஏற்கெனவே கொடநாடு எஸ்டேட்டுக்கு ஜெயலலிதா சென்றபோதெல்லாம், அங்கே குடைச்சல் கொடுத்துவந்த அந்த மாவட்ட தி.மு.க. மீது கடுப்பில் இருந்தார் ஜெயலலிதா. இப்போது புத்திசந்திரன் விவகாரமும் போய்ச் சேர, சடசடவென உத்தரவுகள் பறந்தனவாம்.''
''என்னவாம்..?''
''உளவுத் துறை அதிகாரிகள் நீலகிரியில் களம் இறங்கி இருக் கிறார்கள். கடந்த ஆட்சியில் மேட்டுப் பாளையம் அருகே பாக்குத் தோட்டம் ஒன்று அடிமாட்டு விலைக்குக் கை மாறியதில், குறிப்பிட்ட ஒரு தரகருக்குப் பேசியபடி பணம் தராமல் விரட்டி அடித்தார்களாம். பாதிக்கப்பட்ட தரகரைத் தேடுகிறார்கள். காரமடை அருகே திடீரென ரியல் எஸ்டேட் பிசினஸில் இறங்கியுள்ள சிலர்பற்றியும் ரகசிய விசாரணை நடக்கிறது. இதில் ஏதாவது ஒன்றில் ராமச்சந்திரனை சிக்கவைக்க அதிகாரிகள் தயாராகி வருகிறார்கள்...''
- பறந்தார் கழுகார்.
படம்: கே.கார்த்திகேயன்

வந்தாரய்யா... ரோசய்யா!
தமிழக கவர்னராக ரோசய்யா பதவியேற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா, சபாநாயகர் ஜெயக்குமார், அமைச்சர்கள், நீதிபதிகள் என பெரிய வி.ஐ.பி. பட்டாளமே கலந்துகொண்டது. ரோசய்யாவுக்கு வேண்டப்பட்ட ஆந்திர மாநில அமைச்சர் ஒருவரும் நிகழ்ச்சியைக் காண வந்திருந்தார். மேடைக்கு எதிரே முதல் வரிசை இருக்கையில் அவர் அமர்ந்துவிட்டார். இதைப் பார்த்து அதிர்ந்துபோன அதிகாரிகள், 'அது சபாநாயகருக்கானது’ என்று எவ்வளவோ சொல்லியும் நகர மறுத்துவிட்டார். 'ரோசய்யா பதவி ஏற்பதை நேருக்கு நேராகப் பார்க்க இந்த இருக்கைதான் வசதி' என்று சொல்லிவிட.... ஒரு கட்டத்தில், அங்கே வந்த சபாநாயகரே அவரிடம் கேட்டுக்கொண்டும் மனிதர் அசைந்துகொடுக்கவில்லை! அதன் பிறகு அந்தக் குறிப்பிட்ட சபாநாயகர் இருக்கைக்கு அருகே ஒரு பிளாஸ்டிக் சேர் போட்டு, அதில் அவரை உட்கார வைத்தனர். இதைப்போன்றே, நீதிபதிகளுக்கான இருக்கைகளில் ரோசய்யாவின் குடும்பத்தினர் உட்கார்ந்துவிட... நீதிபதிகளுக்கு பிளாஸ்டிக் சேர்களைப் போட்டு சமாளித்தனர், ராஜ்பவன் அதிகாரிகள்!
*******************************************************************************
கழுகார் பதில்கள்

எம்.சிவகுமார், வேதாரண்யம்.
 இந்த அரசின் 100 நாள் சாதனையாக எதை நினைக்கிறீர்கள்?
'ஜெயலலிதாவிடம் கொஞ்சம் மாறுதல் தெரிகிறது’ என்று பொதுமக்களிடம் நல்ல பெயர் வாங்க ஆரம்பித்திருப்பதே பெரிய சாதனை!
 வசந்த முருகன், மன்னார்குடி.
எம்.ஜி.ஆரை, எம்.ஆர்.ராதா சுட்டதற்கு உண்மை​யான காரணம் என்ன?
அது அவர்கள் இருவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்!
ஆனால், சிறையில் இருந்து வெளியே வந்த எம்.ஆர்.ராதா மலேசியாவில் பேசிய பேச்சைக் கேளுங்கள்...
'எம்.ஜி.ராமச்சந்திரனும் நானும் நண்பர்கள். அம்பது வருஷமா சிநேகிதம். ரெண்டு பேரும் தமாஷா சுட்டுக்கிட்டோம். ஏன் சுட்டுக்கக் கூடாதா? பொண்டாட்டியும் புருஷனும் அடிச்சுக்கலையா? அப்பனும் மவனும் வெட்டிக்கலையா? அதே மாதிரி ரெண்டு நண்பர்கள் அடிச்சிக்கிட்டோம். அவ்வளவுதான். கையில் கம்பிருந்தா கம்பை எடுத்து அடிச்சிக்குவோம். கத்தி இருந்தா, கத்தி எடுத்து அடிச்சிக்குவோம். ரிவால்வர் இருந்துச்சு... அந்த நேரத்துல. எடுத்து அடிச்சிக்கிட்டோம். அடிச்சதும் 'டப்பு... டப்பு’ன்னது. நிறுத்திப்புட்டோம். அதுல என்ன ஒருத்தரை ஒருத்தர் கொன்னு போடணும்னா சுட்டுக்கிட்டோம்? ரிவால்வரில் எட்டு தோட்டா இருக்கு. அப்படி விரோதமா இருந்தா, எட்டு தோட்டாவையும் பயன்படுத்தி இருப்போம். ஒரு தோட்டாதான் ஆச்சு. வெடிக்குதா வெடிக்கலையானு பார்த்தோம். அது வெடிச்சிருச்சு. இதெல்லாம் புரியாம ரொம்பப் பேர் தவறாப் பேசுறாங்க!’
 பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.
அடையாள உண்ணாவிரதம், ஒரு நாள் உண்ணாவிரதம், காலவரையற்ற உண்ணாவிரதம், சாகும் வரை உண்ணாவிரதம்.... என்ன வேறுபாடு?

முன்னது இரண்டும் கட்சிகள் நடத்துவது. மூன்றாவது, போராட்டக்காரர்கள் நடத்துவது. சாகும் வரை உண்ணாவிரதம் மட்டுமே தியாகிகள் நடத்துவது!
முன்னது இரண்டும் ஒப்புக்காக நடத்தப்படுவது. நிர்ப்பந்தமும் நெருக்கடியும் காலவரையற்ற உண்ணா​​விரதத்துக்குக் காரணமாக இருக்கிறது. எதைப் பற்றிய கவலையும் இல்லாமல், நோக்கம் நிறைவேறினால் மட்டுமே போதும் என்ற ஒரே இலக்கோடு நடத்தப்படுவைதான் தியாக நெருப்பில் நடப்பவை!
 மகேந்திரன், செய்யாறு.
அறிவை விருத்தி செய்ய என்ன செய்ய வேண்டும்?
'அதிகம் உற்று நோக்க வேண்டும். கொஞ்சமாவது துன்பப்பட வேண்டும். ஏராளமாக வாசிக்க வேண்டும்’ - என்று கெதே சொன்னது ஞாபகத்துக்கு வருகிறது.
'கண்டதும் கற்றால் பண்டிதன் ஆவான்’ என்கிறதே நம்முடைய பழந்தமிழர் மொழி!
 அய்யாறு வாசுதேவன், சென்னை-14.
மரண தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டால் சமூகத்தில் கொலைகள் சர்வசாதாரணமாக நடக்கும், கொலைபற்றிய பீதியிலேயே மக்கள் வாழ வேண்டி இருக்கும் என்கிறார்​களே?
அப்படியா?
மரண தண்டனை இப்போது நடைமுறையில்தானே இருக்கிறது. அதனால், நாட்டில் கொலையே நடக்கவில்லையா? கொலை, கொள்ளை பீதி இல்லாமல்தான் வாழ்கிறீர்களா? தண்டனைகளைக் கடுமைப்படுத்துவதால் மட்டுமே குற்றங்கள் குறைந்துவிடாது. குற்றவாளிகள் - காவல் துறை - ஆட்சியாளர்கள் - அதிகார வர்க்கம் இவற்றுக்குள் இருக்கும் நட்புறவுச் சங்கிலியை அறுப்பதன் மூலம்தான் குற்றங்​களைக் குறைக்க முடியும்!
 ஆர்.அஜிதா, கம்பம்.
'அ.தி.மு.க. அரசுபற்றி இப்போது கருத்துச் சொல்ல மாட்டேன். ஆறு மாதங்கள் பொறுத்திருக்க வேண்டும்’ என்று சொல்கிறாரே எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்த்?
இதெல்லாம் நொண்டிச் சாக்கு!
அதுவரைக்கும் ஜெயலலிதா என்ன செய்தாலும் ஏற்றுக்கொள்வாரா விஜயகாந்த்?
தி.மு.க-வினர் முதன்முதலாக ஆட்சிக்கு வந்தபோது, பெருந்தலைவர் காமராஜர், 'அவர்கள் இப்போதுதான் அதிகாரத்துக்கு வந்திருக்கிறார்கள். ஆட்சி என்றால் என்ன, எந்த ஃபைல் எங்கே இருக்கிறது, அதை எப்படிப் படிக்க வேண்டும் என்பதற்கு ஆறு மாதங்களாவது அவகாசம் தர வேண்டும். அதுவரை விமர்சிக்க மாட்டேன்’ என்று பெருந்தன்மையாகச் சொன்னார். அது புதிதாக ஆட்சிக்கு வந்தவர்களுக்குத்தான் பொருந்துமே தவிர... மூன்றாவது முறையாக முதல்வராகும் ஜெயலலிதாவுக்குப் பொருந்தாது.
அதைவிட முக்கியமாக, முதல் தடவை எதிர்க் கட்சித் தலைவர் பதவிக்கு வருபவர் ஆறு மாதங்களுக்கு சட்டமன்றத்துக்கு வரத் தேவை இல்லை என்று பெருந்தலைவர் காமராஜர் ஏதாவது சொல்லி வைத்தாரா என்று பழைய பேப்பரைப் பார்க்க வேண்டும்!
 நா.மைதிலி, சென்னை-45.
தற்போதைய தலைமைச் செயலகம் இடப்பற்றாக்குறையாக இருப்பதால்தானே இப்போதுள்ள அரசு முந்தைய ஆட்சிக் காலத்திலும் புதிய கட்டடம் கட்டலாம் எனத் திட்டமிட்டது. கருணாநிதி கட்டிய புதிய தலைமைச் செயலகத்தை அரசு அலுவலகங்களுக்குப் பயன்படுத்திக்கொண்டு... மத்திய சிறை இருந்த இடத்தில் மருத்துவமனையை விரிவாக்கம் செய்துகொள்ளலாமே?
நல்ல யோசனைதான்! அதைச் செய்யவிடாமல் தடுக்கும் 'ஈகோ’வை எங்கே கொண்டு​போய்​வைப்பது?
 முருகேசன், திருவள்ளூர்.
பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் தண்டனையைக் குறைக்கச் சொல்லி அறிக்கைவிடுத்த கருணாநிதி, 'இது கடிதம் அல்ல. கருணை மனு’ என்கிறாரே?
அவர் முதலமைச்சராக இருந்தபோது, இதே மூவரும் அனுப்பிய கருணை மனுவை வெறும் கடிதமாகத்​தான் பார்த்தார். இன்று இவரது கடிதத்​
தை கருணை மனுவாகப் பார்க்க வேண்டும் என்கிறார்.
வெறும் வார்த்தை ஜாலங்களில் ஓடுகிறது காலம்!

தூண்டிவிட்ட கூட்டணிக் கட்சிகள்!

முதல்வரின் தீர்மானம்..

'பேரறிவாளன் உட்பட மூன்று பேரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் மறுபரிசீலனை செய்து, அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும்’ என்ற முதல்வரின் தீர்மானத்துக்கு அவையில் எந்த எதிர்ப்புக் குரலும் இல்லை. காங்கிரஸ் உறுப்பினர் (ஒருவர் மட்டுமே அப்போது இருந்தார்!) இருந்தும் ஏகமன​தாக இந்தத் தீர்மானம் நிறைவேறியது.
இப்படி ஒரு தீர்மானம் வருவதற்கு, அ.தி.மு.க-வின் கூட்டணிக் கட்சிகள் தூண்டு​கோலாக செயல்பட்டன என்பதுதான் நிதர்சனம்!
சட்டப்பேரவையில் முதலில் இந்தப் பிரச்னையை அவையில் பதிவுசெய்தது, பா.ம.க-தான். இந்தவிவகாரத்தில் கடந்த 17-ம் தேதி பா.ம.க-வைச் சேர்ந்த கணேஷ்குமார், கலையரசு பேசத் தொடங்கினர். உடனே, அவைக் குறிப்பில் இருந்து அதை நீக்குவதாக அறிவித்தார் பேரவைத் தலைவர் ஜெயக்குமார். பேச வாய்ப்பு கிடைக்காததைக் கண்டித்து, பா.ம.க-வினர் வெளிநடப்பு செய்தனர். இதற்கிடையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இந்த விவகாரத்தைக் கையில் எடுத்தார். அவருக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. தனிநபர் தீர்மானமாகக் கொண்டுவர முயன்றார் கிருஷ்ணசாமி. அதுவும் முடியவில்லை.  ''முருகன் உட்பட்ட மூவரைப்பற்றிக் குறிப்பிட்டால்தானே பிரச்னை; பொதுப்படையாக 'மரண தண்டனைபற்றி விவாதம் நடத்த வேண்டும்’ என வாசகத்தை மாற்றினால் என்ன?'' என்று யோசித்தார் கிருஷ்ணசாமி. அதற்காக, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைத் திரட்டினார். இந்திய கம்யூனிஸ்ட், ஃபார்வர்ட் ப்ளாக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியன அவருடன் கைகோர்த்தன. மார்க்சிஸ்ட் கட்சியும் இதற்கு ஆதரவு அளித்தது குறிப்பிடத்தக்கது. சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானமாகக் கொண்டுவரும் இந்த முயற்சிக்கு ஆதரவு அளிக்குமாறு, எதிர்க் கட்சித் துணைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனிடம் கேட்டபோது, ''விஜயகாந்த்திடம் கேட்டுச் சொல்கிறேன்!'' என்று மட்டும் பதில் வந்ததாம். ஆனால், கடைசி வரை எந்தப் பதிலும் வரவே இல்லை.
 இருந்தாலும், கைவசம் இருக்கும் ஆதரவை வைத்துக்கொண்டு பேரவைத் தலைவரிடம் அனுமதிக்காகக் கொடுத்தார்கள். ''இதில் முதல்வரின் மனநிலை என்ன என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள்!'' என்று கிருஷ்ணசாமிக்கு சில உறுப்பி​னர்கள் ஆலோசனை சொன்னார்கள்.  அறிய முடியவில்லை. அந்தத் தீர்மானமும் விவாதத்​துக்கு எடுத்துக்கொள்ளப்​படவில்லை.
இந்த நிலையில், 26-ம் தேதி, மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, 3 பேர் பற்றி கிருஷ்ணசாமி பேச முயன்றார். குறுக்கிட்ட பேரவைத் தலைவர், அவர் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கினார். டாக்டரோ,  செங்கோட்டையன் உட்பட சில அமைச்சர்கள் தடுத்தும் எதிர்ப்பைக் காட்ட வெளி​நடப்புச் செய்தார்.
வார விடுமுறைக்குப் பிறகு, 29-ம் தேதி கூடிய பேரவையில், மூன்று பேர் விவகாரம்பற்றி அறிக்கை ஒன்றை வாசித்தார் முதல்வர். அதில், 'குடியரசுத் தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட பிறகு, அதே பொருளைப்பற்றி ஆளுநர் பரிசீலிக்க வேண்டும் என மாநில அரசு பரிந்துரை செய்ய முடியாது’ என 1991-ல் மத்திய அரசு உத்தரவு வெளியிட்டதை மையமாகக் கூறி, தனது 'இயலாமையைக்’ காட்டினார்.
தூக்குத் தண்டனையை எதிர்த்துத் தீர்மானம் கொண்டுவர முயன்றவர்​களுக்கு, இதனால் பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது. விதி எண் 110-ன்படி அறிக்கை வாசித்தால், அதன் மீது விவாதம் நடத்த முடியாது என்பது சட்டமன்ற விதி. பதில் கருத்து சொல்ல முடியாத நிலையில், அன்று மாலையில் சட்டமன்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி, ஃபார்வர்ட் ப்ளாக், தனியரசுவின் கொங்கு இளைஞர் பேரவை கட்சிகளின் எம்.எல்.ஏ-க்கள் கூடினார்கள். அப்போது, மூவரின் மரண தண்டனையைக் குறைக்​குமாறு அரசே ஒரு தீர்மானம் கொண்டுவர வேண்டும் என முதல்வரைக் கேட்டுக்கொள்ளும்கடிதம் ஒன்று தயாரிக்கப்பட்டது. மறுநாள் முதல்வர் சபைக்குள் வந்ததும், அவரிடம் இந்தக் கடிதத்தைக் கொடுக்க  முடிவு செய்யப்பட்டது.
மறுநாள் 30-ம் தேதி அவையில்   முதல்வர் அரசு கேபிள்பற்றி அறிக்கை தந்த பின்பு பா.ம.க-வின் கலையரசு எழுந்து, மூவரைப்பற்றிப் பேசத் தொடங்​கினார். அதே நேரத்தில் டாக்டர் கிருஷ்ணசாமியும் இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர்களும் எழுந்தனர். உடனே சபாநாயகர், ''இதுபற்றி முதலமைச்சர் ஒரு தீர்மானமே கொண்டுவர இருக்கிறார்!'' என்று சொன்னதும், எழுந்தவர்கள் அப்படியே திகைத்துப்போய் உட்கார்ந்தார்கள்.
''தமிழக மக்களின் உணர்வுகளுக்கும் தமிழ்​நாட்டில் உள்ள கட்சிகளின் கருத்துக்​களுக்கும் மதிப்பு அளிக்கும் வகையில், திருவாளர்கள் சாந்தன், முருகன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களை மறுபரிசீலனை செய்து அவர்களது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேதகு இந்தியக் குடியரசுத் தலைவரை இந்த சட்டப்பேரவை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது!'' என்ற வார்த்தைகளை குரல் உயர்த்திச் சொன்னார் முதல்வர். கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் அதன் பிறகு முதல்வரை வாழ்த்தியும் தீர்மானத்தை வரவேற்றும் பேசினார்கள்.
தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் இதுபோன்ற ஒரு தீர்மானம் இதுவரை நிறைவேற்றப்பட்டது இல்லை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்!

சி.பி.ஐ. பிடியில் 'உல்லாச' ரவீந்தர்

கலக்கத்தில் ஊழல் பேர்வழிகள்..

பெரும்பாலும் வருமான வரித் துறை யினர்தான் அதிரடி ரெய்டு களை நடத்துவார்கள். ஆனால், வருமானத் துறை அதிகாரி வீட்டிலேயே ரெய்டு நடத்தி, லஞ்சப் பணம் உட்பட கோடிக்கணக்கான மதிப்புள்ள ஆவணங்களைக் கொத்தாக அள்ளி இருக்கிறது சி.பி.ஐ. இது தொடர்பாக, வருமான வரித் துறை உயர் அதிகாரி மட்டும் இல்லாமல், இன்னும் பல அதிகாரிகளுக்குத் தரகர்களாகச் செயல்பட்ட ஹவாலா ஏஜென்ட் ஒருவரையும் கைது செய்து இருப்பது, வருமான வரித் துறை வட்டார ஊழல் அதிகாரிகள் இடையே கிலியை ஏற்படுத்தி இருக்கிறது!
கடந்த 15 நாட்களுக்கு முன்பு சி.பி.ஐ. உயர் அதிகாரி ஒருவருக்கு  சோர்ஸ் ஒருவர் பேசினார். அவர், 'சென்னை உட்பட முக்கிய நகரங்களில் இயங்கி வரும் எவ்ரான் எஜுகேஷனல் நிறுவனத்தின் சென்னை அலுவலகத்தில், வருமான வரித் துறையின் கம்பெனிகள் பிரிவு சிறப்பு கூடுதல் ஆணையர்  ரவீந்தர் ரெய்டு நடத்தினார். இதில்  116 கோடி அளவுக்கு அந்த நிறுவனம் வருமான வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கான ஆவணங்களை அள்ளி வந்த ரவீந்தர், அந்த நிறுவனத்துடன் பேரம் பேசி வருகிறார்...’ என்று கூறினார்.
ஆந்திராவில் படித்த ரவீந்தர் 91-ம் ஆண்டு ஐ.ஆர்.எஸ். பணியில் சேர்ந்து, 2005-ம் ஆண்டு சென்னை வருமான வரித் துறை அதிகாரியாக பொறுப்பு ஏற்றார். கடந்த 2010-ம் ஆண்டு முதலே இவர் மீது தொடர்ந்து புகார்கள் வந்தன. சி.பி.ஐ. விசாரித்தபோது, லஞ்சத் தொகையை கோடிகளில் மட்டுமே வாங்குவார்; அதுவும் உள்ளூரில் வாங்காமல், ஹைதராபாத், விசாகபட்டினம் ஆகிய ஊர்களில் இருக்கும் சிலரிடம் கொடுத்துவிடச் சொல்வார் என்று தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சி.பி.ஐ. அதிகாரிகள் ரவீந்தரைக் கண்காணித்தனர். ஆனால், போன் மற்றும் மொபைலில் பேசுவதைத் தவிர்ப்பது, புரோக்கர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்துவதுபோன்ற காரணங்களால், சி.பி.ஐ-யால் இவரை ஆதாரத்துடன் நெருங்க முடியவில்லை!
இந்த நிலையில்தான், எவ்ரான் நிறுவனத்தின் அதிபர் கிஷோர் குமாருடன் இவர் புரோக்கர் உத்தம்சந்த் சிங் மூலமாகப் பேச்சுவார்த்தை நடத்தும் தகவல் சி.பி.ஐ-க்கு தெரியவந்தது. உத்தம்சந்த் சிங்கை கடந்த 10 நாட்களுக்கு மேலாகக் கண்காணித்த சி.பி.ஐ., பணம் கைமாற இருப்பதை உறுதிப்படுத்திக்கொண்டது. சவுகார்பேட்டையில் இருக்கும் உத்தம்சந்த் சிங்கின் வீடு மற்றும் நுங்கம்பாக்கத்தில் இருக்கும் ரவீந்தர் வீடு மற்றும் ஆயகர் பவன் மூன்றாவது மாடியில் இருக்கும் அவரது அலுவலகம் ஆகிய இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டார்கள்.
எதிர்பார்த்ததுபோலவே, கடந்த 29-ம் தேதி இரவு சுமார் 8.30 மணி அளவில், ஒருவர் அட்டைப் பெட்டியோடு ரவீந்தரின் வீட்டுக்கு வந்தார். 10 நிமிட இடைவெளியில் உத்தம்சந்த் சிங்கும் வந்தார். வீட்டின் எதிர்ப்புறம் சி.பி.ஐ. அதிகாரிகள் மறைந்து இருந்தனர். சிறிது நேரத்தில் வீட்டுக்குள் புகுந்து, அதிகாரிகள் இருவரையும் தங்கள் கஸ்டடிக்குக் கொண்டுவந்தனர். அட்டைப் பெட்டியில்  50 லட்சம் ரொக்கம் இருந்தது. தொடர்ந்து ரவீந்தர் வீடு, ஹைதராபாத்தில் இருக்கும் அவரது இரண்டு வீடுகள், அவரது வங்கி லாக்கர், உத்தம்சந்த்தின் சவுகார்பேட்டை வீடு மற்றும் பெங்களூரு, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் இருக்கும் அவரது சகோதரிகளின் வீடுகள், எவ்ரான் நிறுவன உரிமையாளர் கிஷோர் குமார் வீடு, அலுவலகம் ஆகிய இடங்களில் அன்றைய தினம் இரவு தொடங்கி 30-ம் தேதி மதியம் வரை சி.பி.ஐ. அதிகாரிகள் சுமார் 100 பேர் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.
இதில் ரவீந்தரிடம் இருந்து, சுமார் இரண்டரைக் கிலோ தங்கம், வைர நகைகள், ரொக்கம் சுமார்
 60 லட்சம் மற்றும் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. உத்தம்சந்த் சிங் வீட்டில் இருந்து  48 லட்சம் கைப்பற்றப்பட்டது. ரவீந்தர், உத்தம்சந்த் சிங், கிஷோர் குமார் ஆகிய மூவரும் கைது செய்யப் பட்டனர்.
அதிகாரி ரவீந்தர், வருமான வரித் துறை அதிகாரிகள் வட்டாரத்தில், 'அடாவடி ரவீந்தர்’ என்றே அழைக்கப்படுவாராம். அவரைப்பற்றி பேசிய அதிகாரிகள் சிலர், ''மத்திய அரசு, வருமான வரித் துறையினர் அதிகாரிகள் மத்தியில் தேசிய அளவில் ஒரு ரகசியக் கண்காணிப்பை நடத்தியது. அதில், 80 பேர் மீது சந்தேகம் படர்ந்தது. அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். அந்தப் பட்டி யலில் ஒருவர் ரவீந்தர். இவரைத் தொடர்ந்து இன்னும் சில அதிகாரிகள் சிக்க இருக்கிறார்கள்...'' என்றார் கள்.
இதற்கிடையே, உல்லாசப் பேர்வழியான ரவீந்தருக்கு சினிமா துறையிலும் தொடர் புகள் இருப்பதாக சி.பி.ஐ. அதிகாரிகளுக்குத் தகவல் தெரிந்தது. விடுமுறை நாட்களை நடிகைகளுடன் உல்லாசமாகக் கழிப்பாராம். அதற்காகவே கோடிக்கணக்கில் பணம் செலவழித்து இருக்கிறாராம். அந்த விவகாரமும் தோண்டி எடுக்கப்படுவதால், அடுத்து வருவது, 'கிக்’ சமாசாரமாக இருக்கும் என்கிறார்கள்.
******************************************************************************

ஒரு மாணவர்... ஒரு கலவரம்!

செங்கல்பட்டு தகராறு

ரசு பஸ் டிரைவர் களுக்கும் சட்டக் கல்லூரி மாணவர் களுக்கும் இடையே, கடந்த 30-ம் தேதி ஏற்பட்ட மோதல், செங்கல்பட்டு நகரையே ஸ்தம்பிக்கவைத்தது.
அன்று காலை 10.15 மணிக்கு, தாம்பரத்தில் இருந்து வந்த ஒரு பஸ்ஸை, செங்கல்பட்டில் மாணவர்கள் மறித்தனர். திமுதிமுவென பஸ்ஸுக்குள் ஏறிய மாணவர்கள், டிரை வர் மற்றும் கண்டக்டரை சரமாரியாகத் தாக்கினர். இதைப் பார்த்து மிரண்டு போன பயணிகள், அலறி அடித்துக்கொண்டு இறங்கி ஓட... அடி தாங்க முடியாமல் டிரைவரும் கண்டக்டரும் அலறிக் கொண்டே அருகே இருந்த பஸ் டெப்போவுக்குள் ஓடினர். ஆனாலும், விரட்டிச் சென்ற மாணவர்கள், டெப் போவுக்கு உள்ளேயும் சென்று இருவரையும் அடித்துத் துவைத்தனர். தடுக்க முயன்ற போக்குவரத்துக் காவலர் களுக்கும் சரமாரியான அடி.
இந்த விஷயம் காட்டுத் தீயாகப் பரவியது. பஸ் நிலையத்தில் இருந்த அரசு பஸ் ஊழியர்கள் திரண்டு டெப்போவுக்கு வந்தனர். சட்டக் கல்லூரி மாணவர்கள் இருவரை இழுத்துச் சென்று, துவைத்து எடுத்தனர். தகவல் அறிந்து வழக்கம்போலவே லேட்டாக வந்தது, போலீஸ். கூடுதல் எஸ்.பி-யான பொன்னி, ஆர்.டி.ஓ. செல்லப்பா ஆகியோர் இரு பக்கமும் சமாதானம் பேசி, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தனர்.
ஆனால், அதற்குள் மாணவர்கள் சாலையில் உட்கார்ந்து மறியல் நடத்த முயன்றனர். அதனால் பொறுமை இழந்த பொன்னி, ''நான் யாருக்கும் பயப்பட மாட்டேன் புரியுதா? போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளெய்ன்ட் கொடுக்கச் சொன்னேன். கொடுத்தீங்களா? படிச்சவங்கதானே நீங்க... நடவடிக்கை எடுங்கன்னு சொல்றீங்களே, முதல்ல புகார் கொடுத்தீங்களா..? எல்லாரும் இங்கே இருக்கும் வரை நடவடிக்கை எடுக்க முடியாது. முதலில் புகார் கொடுங்கள். அதன் பிறகு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கேளுங்கள்...'' என்றார் காட்டமாக.
வெளியூர் சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு இந்த சம்பவத்தைப் பரிமாறி, ஆதரவு திரட்டும் முயற்சியில் இறங்கிய மாணவர்கள், புகார் கொடுக்காமலே கலைந்து சென்றனர். இப்போது இரு தரப்பிலும் புகார் வாங்கி, நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் இருக்கிறது காவல் துறை.
அடிதடியில் காயம் அடைந்த இரு தரப்பினரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு இருக்கிறார்கள்.
சிகிச்சையில் இருந்த சட்டக் கல்லூரி மாணவர் நாகராஜிடம் பேசினோம். ''காலையில் தாம்பரத்தில் பஸ் ஏறினேன். கூட்டம் அதிகமாக இருந்தது. படியில நின்றேன். மேல ஏறுப்பான்னு டிரைவர் சொன்னார். மேல ஏறினேன். பிறகு, அவர் என்கூட வாக்குவாதம் செய்தார். ஒரு கட்டத்தில், 'ஓவராப் பேசுற!’னு சொன்ன டிரைவர், வண்டியை ஆஃப் செய்துவிட்டு, என் கழுத்தைப் பிடிச்சிட்டார். பக்கத்தில் இருந்தவங்க, 'ஏன் சின்னப்புள்ளய அடிக் கிறீங்க!’னு கேட்டாங்க. 'லா காலேஜ் ஸ்டூடன்ட் மேல கை வெச்சிட்டீங்க... என்ன நடக்குதுன்னு பாருங்க’னு சொல்லியும் அவர் விடலை. அதனால் என் நண்பர்களிடம் நடந்ததைச் சொன்னேன்.
செங்கல்பட்டு டெப்போகிட்டே பஸ் வந்ததும் தட்டிக் கேட்க வந்த மாணவர்களை அடிச்சிட்டு, டெப்போக்குள்ளே போயிட்டாங்க. டிரைவர், கண்டக்டர்னு 50 பேர் வரை கூடிட்டாங்க. டிராஃபிக் போலீஸாரிடம் கம்புகளைக் கொடுத்து எங்களை அடிக்கவெச்சாங்க. என்கூட வந்த ரெண்டு பேருக்கு பலத்த அடி. அவங்க மீது நடவ டிக்கை எடுக்கும் வரை விட மாட்டோம்!'' என்று பொங்கினார்.
அதே வார்டில் சேர்க்கப்பட்டு உள்ள பஸ் டிரைவர் மூர்த்தி, ''தாம்பரத்தில் பஸ் எடுக்கும்போது, ரெண்டு பசங்க படியில் நின்னுக்கிட்டு இருந்தாங்க... அவங்களை மேல ஏறச் சொல்லிட்டு வண்டியை எடுத்துட்டேன். ஒருத்தன் மட்டும் மேலே ஏறினான். இன்னொருத்தன் ஏறலை. 'வழியில 36 ஸ்டாப்பிங் இருக்கு. உனக்கு மட்டும் ஸ்பெஷலா சொல்லணுமா, மேல ஏறுப்பா!’னு அவனோட தோள்ல கைவெச்சு சொன்னேன். பஸ்ஸில் இருந்த பயணிகளும் அந்தப் பசங்களை சத்தம் போட்டாங்க. அதுக்குப் பிறகுதான் மேலே ஏறுனாங்க. உடனே அந்தப் பையன், 'மச்சி... டிரைவர் என்மேல கை வெச்சுட்டாண்டா’னு செல்போன்ல நிறையப் பேர்கிட்ட தகவல் சொன்னாங்க. செங்கல்பட்டில் பஸ்ஸை நிறுத்தினேன். எல்லோரும் இறங்கினாங்க. அப்போ, சட்டக் கல்லூரிப் பசங்க கும்பலா வந்து டமால் டமால்னு பஸ்ஸைத் தட்டினாங்க. என்னையும் கண்டக்டரையும் அடிச்சாங்க... தடுக்க வந்த ஒருத்தரையும் பலமா அடிச்சாங்க. விட்டா போதும்னு அவர் ஓடிட்டார். அடிபட்டதில் என் கையைத் தூக்கக்கூட முடியல...'' என தழுதழுத் தார்.
அந்த பஸ்ஸில் வந்த சில பயணிகளிடம் பேசினோம். ''சின்னப் பிரச்னை என்றால்கூட மாணவர்கள் ரோட்டில் உட்கார்ந்து விடுகிறார்கள். இவங்க சண்டையில எங்களுக்கும் அடி விழுந்தது. இப்படியே போனால், சட்டக் கல்லூரி மாணவர் களுக்கு எதிராக மக்கள் போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டு விடும்!'' என்றனர்.
பொதுப் பிரச்னைகளுக்காக உணர்வுபூர்வமாக மாணவர்கள் திரளும்போது, மக்களின் கவனிப்பைப் பெறுவார்கள். கசப்பைப் பெற வேண்டாமே... யோசிக்க வேண்டிய நேரம் இது!

குப்பை... கழிவு நீர்... வியாதிகள்!

வேதனையில் வேலூர் மக்கள்!

'வேலூர் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்ட பகுதியாகவே இருப்பதால், இங்கு சுகாதாரச் சீர்கேடு தலைவிரித்து ஆடுகிறது!’ என்று ஜூ.வி. ஆக்ஷன் செல்லுக்கு (044-42890005) தொடர்ந்து பல புகார்கள். வேலூருக்கு ஒரு விசிட் அடித்தோம்.
கொணவட்டம் பகுதி மக்கள் நம்மைச் சூழ்ந்துகொண்டார்கள். ''இந்தப் பகுதியில் கூலித் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கிறோம். இறைச்சிக் கழிவுகளை சாலை ஓரத்திலேயே கொட்டி விடுகின்றனர். இதனால், இந்தப் பகுதி முழுக்கவும் துர்நாற்றம் வீசுவதோடு, பலவித நோய்கள் அடிக்கடி பரவுகின்றன. இந்தக் குறைபாடு நீக்கப்படாத காரணத்தால், பலருக்கும் தொற்று நோய்கள், தோல் வியாதிகள் வந்து அவஸ்தைப்படுகிறோம். மாநகராட்சியில் பல முறை மனு கொடுத்தும் எந்தப் பலனும் இல்லை. அடுத்ததாக கலெக்டரிடம் முறை யிட்டோம். அவரும் நடவடிக்கை எடுக்கவில்லை. எங்கள் ஊர்க்காரர்தான் சுகாதாரத் துறை அமைச்சர் என்று எதிர்பார்ப்புடன், அவரிடம் மனு கொடுத்தோம். அவரும் கண்டுகொள்ளவே இல்லை. நாங்கள் அரசிடம் வேறு எந்தக் கோரிக்கையும் வைக்கவில்லை, குப்பைகளை மட்டும் தினமும் அள்ளி னாலே போதும்...'' என்று ஆதங்கத்தைக் கொட்டினர்.

வேலூர் வசந்தபுரம் சுப்பிரமணிய ஐயர் தெருவைச் சேர்ந்த பீமாராவ், ''ராமநாயக்கன்பாளையம், கஸ்பா, வசந்தபுரம் பகுதிகளில் இருந்து வரும் கழிவு நீர், எங்கள் குடியிருப்பு பகுதிகளில் தேங்கி நிற்கிறது. மூன்று மாதங்களுக்கு முன்பு, மேயர் கார்த்திகேயனிடம் மனு கொடுத்தோம். மாநகராட்சி கமிஷனரிடம் பல முறை மனு கொடுத்தோம். எந்த பலனும் இல்லை. குடிநீர் மற்றும் சாலை வசதிக்காக ஒவ்வொரு வீட்டுக்கும்  5,500 வசூல் செய்கிறார்கள். ஆனால், சாலையும் போடவில்லை. குடிநீரும் வரவில்லை. அதற்குப் பதிலாக, எங்க ஏரியா முழுக்கக் கழிவு நீர்தான் தேங்கி நிற்கிறது. தெரு விளக்குகூட எங்கள் செலவில்தான் போட்டோம். அரசு எங்களுக்கு எந்த சலுகையும் தர வேண்டாம். இந்தக் கழிவு நீரை எங்கள் ஏரியாவுக்குள் பொங்கி வழியவிடாமல் தடுத்தாலே போதும்!'' என்று ஆவேசம் காட்டினார்.
அதே பகுதியில் வசிக்கும் கல்லூரி மாணவி ரேவதி, ''எங்கள் வீட்டுக்குப் பின்னால் தேங்கி இருக்கும் கழிவு நீரில் பாம்புகள் நெளிந்ததைப் பார்த்து அதிர்ந்துவிட்டேன். வீட்டின் பின்கதவை இப்போது நாங்கள் திறப்பதே இல்லை. நிலத்தடி நீரிலும் கழிவு நீர் கலந்து விட்டது. இந்த நீரை பயன்படுத்தினாலே உடலில் எரிச்சல் ஏற்படுகிறது. கொசு மற்றும் பன்றிகளின் தொல்லையும் தாங்க முடியவில்லை...'' என்று வருத்தப்பட்டார்.
அத்தனை பிரச்னைகளையும் வேலூர் கலெக்டர் நாகராஜனிடம் கூறினோம். ''மாநகராட்சி கமிஷனரிடம் இதுபற்றி கூறி உள்ளேன். அந்தப் பகுதி மக்களின் பிரச்னைகள் விரைவில் தீர்க்கப்படும்!'' என்று நம்பிக்கை தெரிவித்தார்.
அதிரடி நடவடிக்கைகள் அவசியம்!

பிள்ளையைக் காட்ட ரூ.1000...

திருவண்ணாமலை அரசு மருத்துவமனை அவலம்

திருவண்ணாமலை மக்களுக்கும், அங்கே கிரிவலம் வரும் பக்தர்களுக்கும் ஏதாவது அவசரம், ஆபத்து, விபத்து என்றால், உடனே அரசு மருத்துவமனைக்குத்தான் செல்வார்கள். ஆனால், அங்கு போனதுமே, 'உங்கள் உயிருக்கு ஆபத்து’ என்று சொல்லிப் பயமுறுத்தி, புதுச்சேரி ஜிப்மர் அல்லது வேலூர் சி.எம்.சி-க்கு அனுப்புவதைத்தான் தொடர்ந்து செய்து வருகிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள் மக்கள்!
நம்மிடம் பேசிய அயூப்கான், ''நாங்க நல்லவன்பாளையம் என்ற கிராமத்தில் வசிக்கிறோம். கடந்த 29-ம் தேதி காலை, எங்க அண்ணி ஜரீனா பேகம் திடீர்னு நெஞ்சு வலிக்குதுனு சொல்ல... திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்குத் தூக்கிட்டு வந்தோம். உள்ளே நுழைஞ்சதுமே, என்ன ஏதுனு கேட்காம, 'அம்பது குடுங்க, நூறு  குடுங்க’ன்னு ஒரே பிடுங்கல். அடுத்து டாக்டருங்க வந்து பார்த்துட்டு, 'பேஷன்ட்டுக்கு ஹார்ட் பிராப்ளம் சிவியரா இருக்கு. இங்கே பாக்க முடியாது. ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட் ஊர்ல இல்லே. அதனால, ஜிப்மருக்கோ, சி.எம்.சி-க்கோ கூட்டிட்டுப் போங்க’ன்னு விரட்டிட்டாங்க. வேற வழி இல்லாம, பாண்டிச்சேரிக்கு கார்  3,000-க்குப் பேசி, கூட்டிட்டுப் போனோம்.
அங்க ஒரு பைசாகூட செலவு இல்லாம ட்ரீட்​மென்ட் பாத்தாங்க. எல்லா டெஸ்ட்டும் எடுத்துட்டு, 'இது வெறும் வாயுப் பிரச்னைதான்’னு சொல்லி மாத்திரை, மருந்து எழுதிக் கொடுத்தாங்க. இப்படி ஒண்ணுமே இல்லாததுக்கு எங்களைப் பயமுறுத்தி, வீணாப் பணம் செலவழிக்க வெச்சு அலைக்கழிச்சுட்டாங்க. இந்த ஆஸ்பத்திரியில் இதுபோலத்தான் நிறையப் பேரை அலையவிடுறாங்க...''  என்றார் பரிதாபமாக.
தே.மு.தி.க. தொழிற்சங்கப் பேரவை மாவட்ட துணைத் தலைவர் தம்பிதுரை, ''என் மனைவி கலைவாணிக்குக் காலில் கட்டி இருந்தது. அதுக்கு ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றேன். அங்கே 'ஆபரேஷன் செய்யணும். அதிகப் பணம் செலவாகும்’ என்று சொன்னாங்க. நான் அரசாங்க மருத்துவமனைக்குப் போனேன். ஆனால், அங்கே ஏற்கெனவே நான் மருத்துவம் பார்த்த தனியார் மருத்துவமனை மருத்துவர்தான் பணியில் இருந்தார். என்னைப் பார்த்ததும், 'நீ தனியார்கிட்ட போய்ப் பார்... இல்லேன்னா, அரசாங்க மருத்துவமனையில் பார்த்துக்கோ’னு கோபமாக் கத்தினார். அதுக்குப் பிறகு அங்கே சிகிச்சை தரவே இல்லை. அதனால், வேற வழி இல்லாம இப்ப தனியார் மருத்துவமனையில்தான் சிகிச்சை பார்த்துக் கூட்டிட்டு வந்தேன்!'' என்றார் விரக்தியாக.
தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டத் தலைவர் பலராமன், ''இங்கே காசு கொடுத்தாத்தான், வேலை நடக்கும். கொஞ்ச நாளைக்கு முன்னாடி பக்கத்துக் கிராமத்தில் இருந்து ஒரு பெண் பிரசவத்துக்குவந்திருச்சு. அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதை, அந்தத் தாய் கண் விழிச்சுப் பார்த்ததும் கேட்டப்ப,  'காசு கொடுத்தாத்தான் காட்டுவோம்’னு போயிட்டாங்க. அப்புறம் கடன் வாங்கி,  1000 கொடுத்த பிறகுதான் பிள்ளையைக் காட்டி இருக்காங்க. ஓ.பி-யில் போதுமான டாக்டர்கள் இருப்பதே இல்லை. சவக்கிடங்கில் குளிரூட்டும் சாதனம் பழுதாகி இரண்டு வருஷங்களுக்கு மேலாகியும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் துர்நாற்றம் வெளியே வரை வீசுகிறது. உடலைப் பாதுகாக்க உறவினர்களே தனியாரிடம் இருந்து ஃப்ரீஸர் பாக்ஸ் வாங்கி வந்து அதில் வெச்சுக்கணுமாம்!'' என்று குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
இதுகுறித்து, சுகாதாரத் துறை இணை இயக்குநர் விஜயகுமாரிடம் கேட்டோம்.  ''எங்களால் ஆன சேவையை மக்களுக்குச் செஞ்சுட்டுத்தான் வர்றோம். குறைபாடுகள் ஏதாவது ஒன்று இரண்டு இருக்கத்தான் செய்யும். அதற்காகவே, அடிக்கடி மீட்டிங் போட்டுத் தப்பு செஞ்சவங்களைக் கண்டிக்கிறோம். இட மாறுதல் செய்கிறோம். இங்கே மருத்துவக் கல்லூரி விரைவில் வர இருக்கிறது. அது வந்ததும் இந்தக் குறைபாடுகள் அனைத்தும் களையப்பட்டுவிடும்!'' என்று சொன்னார்.
மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ராவிடமும் இந்தக் குறைபாடுகள் குறித்துப் பேசினோம். ''அங்கே பணம் கேட்கிறார்கள் என்று புகார் எனக்கும் வந்தது. உடனே அதிகாரிகளைக் கூப்பிட்டு, நடவடிக்கை எடுக்கச் சொல்லி விட்டேன். நானே விரைவில் அங்கே திடீர் விசிட் அடிக்க இருக்கிறேன். அப்போது குறைகளை எல்லாம் மக்களிடம் நேரில் விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்கிறேன்.'' என்று சொன்னார்.
இன்னும் எத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டுமோ?

இளவழகனை எதற்கு மாற்றினார்கள்?

ஒருங்கிணைந்த பெரம்பலூர் மாவட்டச் செயலாளராக இருந்த இளவழகனை மாற்றிவிட்டு, அரியலூர் மாவட்டச் செயலாளராக சிட்டிங் எம்.எல்.ஏ-வான துரை.மணிவேலையும், பெரம்பலூர் மாவட்டச் செயலாளராக மா.ரவிச்​சந்திரனையும் அறிவித்திருக்கிறது அ.தி.மு.க. தலைமை!
''இவரை முன்னாடியே மாத்தி இருந்தா, எங்களோட அரசியல் வாழ்க்கை நல்லா இருந்திருக்கும்...'' என ளவழகனால் ஓரங்கட்டப்பட்ட ரத்தத்தின் ரத்தங்கள் புலம்புகிறார்கள். அவர்களிடம் பேசியபோது, ''தனக்கு மேலிடத்தின் செல்வாக்கு இருப்பதாக எப்போதும் இளவழகன் சொல்​வார். அதனால், கீழ்மட்ட கட்சிக்காரர்களை மதிக்கவே மாட்டார். நாங்க வணக்கம்வெச்சா, பதிலுக்கு வணக்கம்கூட சொல்ல மாட்டார். பிடிக்காதவங்​களைக் கேவலமா பேசுவார். தன்னோட  நடவடிக்கையால், ஒருங்கிணைந்த மாவட்டம் முழுக்கத் தனக்கென ஒரு குழுவைவெச்சுக்கிட்டு, கட்சியை வளரவிடாமப் பண்ணிட்டார். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் சிலர் வேறு கட்சிக்குப் போயிட்டாங்க. முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் தில்லை காந்தி, ராஜேந்திரன், ஒன்றிய கவுன்​சிலர் அன்பழகன் ஆகியோர் அதில் முக்கியமானவங்க. நாங்க எத்தனையோ முறை புகார் அனுப்பி, கடைசியில், இப்போதான் மாற்றம் வந்திருக்கு...'' என்றார்கள் உற்சாகமாக.
கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து பல்வேறு பொறுப்புகளில் இருந்தவரும், ஜெ. அணியின் சார்பாக சேவல் சின்னத்தின் வேட்பாளராகவும் போட்டியிட்ட ஜெயங்கொண்டம் முன்னாள் சேர்மன் முத்தையாவிடம் பேசினோம். ''நான் 1976-ல் இருந்து 96 வரை ஜெயங்கொண்டம் ஒன்றியச் செயலாளர், அமைப்பாளர், சேர்மன் எனப் பதவிகளில் இருந்திருக்கேன். என் வளர்ச்சி பிடிக்காத இளவழகன் என்னைத் திட்டமிட்டே ஓரங்கட்டினார். நான் தொடர்ந்து ஜெயங்கொண்டம் தொகுதியில் எம்.எல்.ஏ. ஸீட் கேட்டுப் பணம் கட்டிக்கிட்டே இருக்கேன். ஒவ்வொரு முறையும் எனக்குக் கிடைக்கவிடாம செய்தார். இந்த முறையும் அவருக்கே ஸீட் வாங்கிட்டார். ஆனா, தமிழ்நாட்டில் பல இடங்களில் ஜெயிச்சும் இங்கே அவரோட தவறான அணுகுமுறையால் தோத்துட்டார்...'' என்றார்.
குற்றச்சாட்டுகள் குறித்து இளவழகனிடம் பேசினோம். ''என்னைப்பத்தியும் என்னுடைய அணுகுமுறைபத்தியும் உண்மையான கட்சிக்காரர்களைக் கேட்டால் தெரியும்... என் நிர்வாகத்தில்தான், உண்மையான கட்சித் தொண்டர்களை, அம்மாவின் விசுவாசிகளைத் தேடிப் பிடிச்சு, அம்மாவிடம் சொல்லி பதவிகளில் போட்டேன். விசுவாசம் இல்லாதவங்களை அம்மாவே கட்சியைவிட்டு தூக்கிட்டாங்க. அதில், என்னோட தலையீடு எதுவும் இல்லை. இப்போது நிர்வாக வசதிக்காக வருவாய் மாவட்டத்தின்படி, மாவட்டம் பிரிச்சிருக்காங்க. அதனால், பொறுப்பு மாத்தி இருக்காங்களே தவிர, வேறு ஒண்ணும் இல்லை. நிச்சயம் என்னை மீண்டும் கழகப் பணி செய்ய அம்மா ஆணையிடுவார். அதற்காகக் காத்திருக்கேன்...'' என்றார்.
அ.தி.மு.க-வின் கோஷ்டி கானத்தால் எதிர்க் கட்சி​களுக்கு​தான் கொண்​டாட்டம்!

'சாதி' சிறையில் சோழமன்னன் ராஜராஜன்!

''அளப்பரிய சாதனை செய்தவர்களை எல்லாம், 'சாதி’  வட்டத்துக்குள் அடைத்துவைத்துச் சிறுமைப்​படுத்துவதுவழக்கமாகி​விட்டது. அந்த வட்டத்துக்குள் தஞ்சை மாமன்னனையும் அடைத்து​விடாதீர்கள்!'' எனக் கோரிக்கை விடுத்துள்ளனர் தஞ்சைப் பகுதி சமூக ஆர்வலர்கள்!
தமிழகத்தின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்று, தஞ்சை பெரிய கோயில். மலைகளே இல்லாத தஞ்சை மண்ணில், முழுக்கவும் கற்களை மட்டுமே பயன்​படுத்திக் கட்டப்பட்ட இந்தக் கோயில், தமிழகக் கட்டடக் கலைக்கு ஓர் ஒப்பற்ற எடுத்துக்​காட்டு. சோழ மன்னன் ராஜராஜனால் கட்டப்பட்ட தஞ்சைப் பெரிய கோயில் 1,000 ஆண்டுகளைக் கடந்தும் இன்னும் கம்பீரம் குறையாமல் காட்சி தருகிறது. ராஜராஜனை சிறப்பிக்கும் வகையில் வருடம்தோறும் ஐப்பசி மாதம்தமிழக அரசினால்  'சதய விழா’ நடத்தப்பட்டு வருகிறது. இதில்தான் சிலர் ராஜராஜனின் பெருமைகளைச் சீர்​குலைக்கும் வகையில் சாதிய நோக்கத்துடன் செயல்​பட்​டதாகக் குற்றச்சாட்டு!
தமிழ்த் தாய் அறக்​கட்டளையின் பொதுச் செயலாளரான உடையார்​கோயில் குணா, ''சதய விழாவில் உலக அளவில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து கலந்துகொள்கிறார்கள். ஆனால், கடந்த சில வருடங்களாகவே தங்களது சுய லாபத்துக்காகவும், அரசி​யல் ஆதாயத்துக்காகவும் மிகவும் குறுகிய நோக்கத்தில் 'ராஜராஜன் தங்களது சாதிக்காரர்’ என விளம்பரப்​படுத்தி வருகின்றனர் சிலர். விழா நேரத்தில் சாதி அடையாளத்தோடு போஸ்டர் அடித்து ஊர்வலம் செல்கிறார்கள்.
ஒரு தமிழன் என்று ராஜராஜனை நினைத்து, அத்தனை தமிழர்களும்பெருமைப்பட வேண்டும். அதனால், அவருக்கு சாதிப் போர்வை எதற்காக? இதுபற்றி மாவட்ட ஆட்சியாளர், முதலமைச்சர் தனிப் பிரிவுக்கும் மனு அனுப்பி இருக்கிறோம். ராஜராஜ சோழனுக்கு அரசு விழா எடுக்கும் சமயம் அவரது பெருமையைக் குலைக்கும் விதமாக போஸ்டர் ஒட்டப்படுவதையும், ஊர்வலம் செல்வதையும் தடை செய்ய வேண்டும். இதற்காக, வழக்குத் தொடரவும் தயாராக இருக்கிறோம்!'' என்றார்.
தஞ்சாவூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாபு, ''ராஜராஜனை தற்போது ஐந்துக்கும் மேற்பட்ட சாதி சங்கங்கள், 'அவர் எங்கள் சாதிதான்!’ என்று உரிமை கொண்டாடி வருகின்றன. ஆளாளுக்கு ஏதாவது ஒன்றைக் கையில்வைத்துக்கொண்டு 'இதுதான் ஆதாரம்’ என்றும் சொல்கிறார்கள். இதே நிலை தொடர்ந்தால், தஞ்சையில் சமூக மோதலும், சாதிக் கலவரமும்கூட ஏற்படும் நிலை வரும். எனவே, சாதிக் கூட்டுக்குள் ராஜராஜனை அடைக்காமல் இருக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்!'' என்று கோரிக்கைவைத்தார்.
தஞ்சை மாவட்டக் கலெக்டர் பாஸ்கரிடம் விஷயத்தைச் சொன்னதும், ''ஒரு மன்னரை சாதிக்குள் கொண்டுசெல்வது சரியல்ல. இந்த வருடம் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்!'' என்றார்.

''தம்பி கல்லூரிக்காக சாலையைத் திருப்பினார் நேரு!''

சங்கீதா கையில் 'ஏரி' புகார்

நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் நேரு மீது, 'சுய லாபத்துக்காக தேசிய நெடுஞ்சாலையை ஏரியில் திருப்பிவிட்டார்’ என்று இன்னொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக விவசாயிகள் சங்கத்தின் மணிகண்டம் ஒன்றிய அமைப்பா​ளரான சின்னதுரை கொடுத்துள்ள புகாரின் பேரில்தான் இந்த வழக்கு. அவரிடம் பேசினோம். ''திருச்சியில் ரிங் ரோடு அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, நிலம் கையகப்படுத்தும் பணி 2007-ல் தொடங்கப்பட்டது. முதலில் போடப்பட்ட திட்டத்தின்படி நேருவின் தம்பி ராமஜெயத்துக்கு சொந்தமான கேர் பொறியியல் கல்லூரி வழியாகத்தான் சாலை செல்லும்படி இருந்தது. அதில் கல்லூரி இடம் அரை ஏக்கர் அடிபட்டது.
அதனால், மத்திய அரசு அதிகாரிகளைக் கைக்குள் போட்டுக்கொண்ட நேரு, சாலை முழுவதுமே மூன்று ஏரிகளுக்குள் போகிற மாதிரி புதிய ரூட் போட ஏற்பாடு செய்தார். இந்த மாறுதலால் 385 ஏக்கர் பரப்பளவுகொண்ட புங்கனூர் ஏரி, 187 ஏக்கர் பரப்பளவுகொண்ட கள்ளிக்குடி ஏரி, 240 ஏக்கர் பரப்பளவுகொண்ட கொத்தமங்கலம் ஏரிகளுக்குள் ரோடு செல்லும்படி இருந்தது.
'இந்த மூன்று ஏரிகளை நம்பித்தான் 400 ஹெக்டேர் சாகுபடி இருக்கு. இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்’ என்று 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச்சேர்ந்த விவசாயிகள் கடுமையா எதிர்த்தோம். ஆனால், அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றதால்... உயர் நீதிமன்றம் சென்றோம். கடந்த டிசம்பர் மாதமே விவசாயிகளுக்கு சாதகமாகத் தீர்ப்பு வந்தது. நேரு தரப்பினர் திரும்பவும் மேல் முறையீடு செஞ்சாங்க. ஆட்சி மாறிய நிலையில், பயந்து முறையீட்டை வாபஸ் வாங்கிவிட்டார்கள்.
வாபஸ் வாங்கிவிட்டாலும், செஞ்ச தப்பு இல்லைன்னு ஆயிடுமா? கல்லூரி கட்டுவதற்காக, புங்கனூர் ஏரியில் இருந்து ஆயிரக்கணக்கான டிப்பர் லாரிகளில் மணல் அள்ளினார்கள். இதையெல்லாம் குறிப்பிட்டு ஜீயபுரம் டி.எஸ்.பி. அழகேசனிடம் புகார்கொடுத்தேன். அது தொடர்பாகத்தான் இப்போது சோமரசம்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது!'' என்றார்.
இது தொடர்பாக 145-வது சட்ட விதியின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பிரிவின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகள் அனைத்தும், ஆர்.டி.ஓ-வால் விசாரிக்கப்பட்டு, அவர் தரும் அறிக்கையின் அடிப்படையில் குற்றவாளிகள் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்படுவது வழக்கம். அதனால் வழக்கு சம்பந்தமான ஆவணங்கள் ஆர்.டி.ஓ. சங்கீதாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளதாம்.
நேரு தரப்பு வக்கீலான பாஸ்கரிடம் இதுபற்றிக் கேட்டபோது, ''ஏரி நடுவில் தேசிய நெடுஞ்சாலை செல்லும்படி திட்டம் போட்டது அத்துறை அதிகாரிகள்தான். கல்லூரிக்காகத் திட்டப் பாதையை மாற்றி அமைக்கும்படி யாரும் அவர்களை நிர்ப்பந்திக்கவில்லை. ஏரியில் இருந்து மணல் அள்ளியதாகக் கூறப்படுவதும் தவறான குற்றச்சாட்டுகள்தான். அனைத்தையும் சட்டப்படி சந்திப்போம்!'' என்றார்.
ஏரி பூதத்திடம் இருந்து தப்புவாரா நேரு..?

மோட்டார் விகடன் சந்தா மேளா

********************************************************************************
''புத்திசந்திரனை பதவியில் இருந்து நீக்கவேண்டும்!''

நீலகிரி தி.மு.க. போர்க்கொடி

உணவுத் துறை அமைச்சர் புத்திசந்திரனுக்கு இது அஜீரணக் காலம். 'விதிகளை மீறினார்’ என்று அடுத் தடுத்த குற்றச்சாட்டுகளில் சிக்கி இருக்கிறார். நீலகிரி மாவட்டம், ஊட்டி தொகுதியின் ஆளும் கட்சி எம்.எல்.ஏ-வான புத்திசந்திரன், ஜெயலலிதா அரசு பதவியேற்றபோது, சுற்றுலாத் துறை அமைச்சரானார். அதன் பிறகு துறை மாற்றப்பட்டு, உணவுத் துறையை இப்போது கவனித்து வருகிறார்.
இவர் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில், ஊட்டி நகராட்சி கவுன்சிலரும், நீலகிரி மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளருமான முஸ்தபா, 'புத்திசந்திரனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்’ என்று வழக்கு தொடர்ந்துள்ளார்.
முஸ்தபாவிடம் பேசினோம். ''கடந்த ஜூன் 23-ம் தேதி அன்று நீலகிரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கப் பொது மேலாளருக்கு, புத்திசந்திரன் அதிகாரபூர்வக் கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறார். அதில் மூன்று பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்களுக்கு பால் பூத் ஒதுக்குமாறு கேட்டிருக்கிறார். பால் பூத் ஒதுக்கீடு விஷயத்தில் அமைச்சரின் தலையீடு இருந்த காரணத்தால், அதற்கான டெண்டரை நிறுத்தி வைத்ததாக ஒரு புகார் எழுந்தது. புத்திசந்திரனோட கடிதத்தை வைத்துப் பார்க்கும்போது, அது உண்மை என்று தெரிகிறது. தன்னுடைய துறையைத் தாண்டிய விஷயங்களில், விதிகளை மீறி இவர் மூக்கை நுழைக்கக் காரணம் என்ன? இப்படி சிபாரிசு செய்வதன் மூலமாக அமைச்சருக்கு, ஏதோ ஆதாயம் இருப்பதாகத் தொகுதி மக்களுக்கு சந்தேகம் வருகிறது. இதைத்தான் விசாரிக்க வேண்டும் என்று கேட்கிறோம்.
மேலும், தேர்தலில் நிற்பதற்கு முன், அரசு கான்ட்ராக்டராக இருந்தார் புத்திசந்திரன். அப்போது அவர் செய்த ஒரு பணிக்கு வழங்கப்படாமல் இருந்த,  3 லட்சத்தை, அமைச்சரான பிறகு அதிகாரிகளை நிர்பந்தித்து சாங்ஷன் பண்ணச் சொல்லி வாங்கியுள்ளார். இதைவிட முக்கியமான விஷயம், தேர்தல் கமிஷனிடம் தாக்கல் செய்த சொத்துப் பட்டியலில், தனக்கு வரவேண்டிய பணத்தைக் குறிப்பிடவே இல்லை. இது முழுக்க முழுக்க விதிமுறை மீறல். தேர்தல் கமிஷனை அவர் ஏமாற்றி இருக்கிறார் என்பதும் ஊர்ஜிதமாகிறது.
நீலகிரியில், பட்டுப்போன மரங்களை வெட்டுவதற்கு அனுமதி அளிக்கும் குழுவுக்கு, 'என்னுடைய அனுமதி இல்லாமல், மரம் வெட்ட அனுமதிக்கக் கூடாது’ என்று ஓர் உத்தரவை அமைச்சர் போட்டிருக்கிறாராம். இப்படி அமைச்சர் தொடர்ந்து விதிகளை மீறுவது அதிகாரத் துஷ்பிரயோகம் இல்லையா? இத்தனை குற்றச்சாட்டுகள் இருப்பதால், உடனடியாக புத்திசந்திரனை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று முதல்வருக்கும் மனு அனுப்பி இருக்கிறேன். புத்திசந்திரனுக்கு எதிராக நான் புகார் எழுப்பியதும், என்னை முடக்குவதற்காக நில அபகரிப்பு வழக்கை என் மீது பதிவு செய்தார்கள். ஆனால், அந்த குற்றச்சாட்டில் துளியும் உண்மை இல்லை என்பது நிரூபணமாகிவிட்டது!'' என்று ஒப்பித்தார்.
புத்திசந்திரனுக்கு எதிரான கான்ட்ராக்ட் பண நிலுவை விவகாரத்தை 'மக்கள் சட்ட மையம்’ என்ற அமைப்பின் தமிழ் மாநில இயக்குனரான வழக்கறிஞர் விஜயனும் கையில் எடுத்துள்ளார். அவர், ''மக்கள் பிரதிநிதியாக இருப்பவர்கள் சர்ச்சைகளுக்கும் தவறுகளுக்கும் அப்பாற்பட்டு இருக்க வேண்டும் என்பதற்காகவே தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சில விளக்கங்களைக் கேட்டேன். அதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், புத்திசந்திரன் அமைச்சரான பிறகே அந்த நிலுவைப் பணத்தைப் பெற்றது ஆதாரபூர்வமாக நிரூபணமாகி இருக்கிறது. இதை அவர் தேர்தல் கமிஷனிடமும் தெரிவிக்கவில்லை. அதனால், தப்பு செய்தவர் தண்டிக் கப்பட்டே தீரவேண்டும் என்பதற்காக, தேர்தல் கமிஷனுக்கு ஆதாரத்துடன் புகார் அனுப்ப இருக்கிறேன்...'' என்கிறார்.
குற்றச்சாட்டுகள் பற்றி அமைச்சர் புத்திசந்திர னிடம் விளக்கம் கேட்ட போது, ''மக்கள் பிரதி நிதியான என்னைத் தேடி தினமும் நூற்றுக் கணக்கான மக்கள் சிபாரிசுக் கடிதம் கேட்டு வர்றாங்க. நானும், 'பரிசீலனை செய்யவும்’னு சொல்லி எழுதிக் கொடுப்பேன். இந்தக் கடிதத்தை காட்டினால், சம்பந்தப்பட்ட துறையில் உடனே காரியம் நிறைவேறும் என்று அர்த்தம் இல்லை. கடிதத்தைக் கொண்டுசெல்பவருக்கு உரிய தகுதி இருந்தால் மட்டுமே, விதிமுறைகளுக்கு உட் பட்டு அவர் கோரிக்கை நிறைவேறும். இதைப் புரிந்து கொள்ளாமல் எதிர்க் கட்சிக்காரர்கள் கோர்ட்டுக்குப் போகிறார்கள். ஓர் அமைச்சரான நான் சிபாரிசுக் கடிதம்கூட கொடு க்கக் கூடாதுன்னு சொன்னா எப்படி?. அந்த கான்ட்ராக்ட் நிலுவைப் பண விவகாரத்தில் என் மீது எந்தத் தவறும் கிடையாது. முழுக்க முழுக்க சரியான தகவல்களையே கொடுத்திருக்கிறேன். இது தவிர, 'என்கிட்டே கேட்டுட்டு மரம் வெட்ட ஆர்டர் கொடுங்க’னு நான் உத்தரவு போட்டதாக் கிளப்பிவிடுறாங்க. நான் உத்தரவு போட்டதை அவர்கள் நிரூபிக்கத் தயாரா? தி.மு.க. ஆட்சியில் மக்களுக்குப் புல்லைகூடக் கிள்ளிப் போடலை. ஆனா இன்னிக்கு, மலை அளவுக்கு அம்மா நல்லது பண்றதைப் பொறுத்துக்க முடியாமப் புகையுறாங்க. அடிப்படை உண்மை இல்லாததால், நிச்சயமாக அவங்களோட புகார் கோர்ட்டிலே நிக்காது...'' என்று சொன்னார்.
புத்திசந்திரன் கணித்தபடியே முஸ்தபாவின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. ஆனாலும் சோர்ந்துபோகாத நீலகிரி தி.மு.க., இனி தலைமையின் வழிகாட்டுதல் பெற்று உச்ச நீதிமன்றத்துக்கு இந்த வழக்கை கொண்டுசெல்ல உத்தேசித்துள்ளதாம்!

எல்லை மீறுதே, 'குடி' மக்கள் சேட்டை!

சேலம் செவ்வாய்ப்பேட்டை அட்டகாசம்

'சேலம் செவ்வாய்பேட்டையில இருந்து பேசுறேங்க. இங்கே மாதா ஸ்கூல் பக்கத் திலேயே ஒரு டாஸ்மாக் கடை இருக்குதுங்க. அதுக்குப் பக்கத்துலயே ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒருவர் ரகசிய பார் நடத்திட்டு இருக்கார். பொம் பளைப் புள்ளைங்க ஸ்கூலுக்குப் போக முடியாதபடி குடிகாரனுங்க தொந்தரவு பண்றாங்க... நீங்கதான் விசாரிக்கணும்...’ என்று ஜூ.வி. ஆக்ஷன் செல்லில் (044-42890005) ஒரு குரல் ஒலிக்கவே, ஸ்பாட்டுக்கு விரைந்தோம்.
அந்தப் பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவரிடம் பேசினோம். ''இங்கே ஸ்கூலுக்குப் பக்கத்திலேயே டாஸ்மாக் கடை இருக்கிறதால, இந்தப் பக்கம் போயிட்டு வர்ற பிள்ளைகளுக்கு ரொம்பவும் இடைஞ்சலா இருக்குது. கிண்டலும் கேலியுமா வம்பு பண்ணிச் சிரிக்கிறாங்க. ஸ்கூல் வாசல்ல பெற்றோர்கள் காத்திருந்தா, அவங்களைப் பார்த்து அசிங்கமாப் பேசுறாங்க.
அந்தக் கடைக்குப் பக்கத்திலேயே ஆளும் கட்சியைச் சேர்ந்த கோவிந்தன் என்பவரின் பெட்டிக்கடை இருக்கு. அந்தக் கடையும் அனுமதி பெறாத ஒரு பார் போலத்தான் செயல்படுது. சரக்கை வாங்கிட்டு வந்து கோவிந்தன் கடைக்கு முன்னால நின்னுதான் குடிக்கிறாங்க. அதுக்குத் தேவையான எல்லாப் பொருட்களையும் கோவிந்தன் விற்பனை செய்றார். ஏரியாக்காரங்க கேட்டதுக்கு, 'கட்சியில பதவி வாங்குறதுக்கு நான் எவ்வளவு செலவு பண்ணி இருக்கேன் தெரியுமா? அதை எல்லாம் வேற எப்படி சம்பாதிக்கிறது? நீங்க எங்கே வேணும்னாலும் போய் புகார் பண்ணிக்கோங்க’னு பேசுறார். எப்படியாவது இந்த டாஸ்மாக் கடையை மாத் தணும்...'' என்று சொன்னார்.
புகார் சொல்லப்படும் கோவிந்தனைச் சந்திக்க நாம் அவர் கடைக்கு சென்றபோது, அங்கே நின்று சிலர் ஜாலியாகக் குடித்துக்கொண்டு இருந்தார்கள். அவர், ''இது லேபர்கள் அதிகம் உள்ள ஏரியாங்க. உழைக்கிறவங்க கஷ்டம் தெரியாம இருக்கத்தான் குடிக்கிறாங்க. அவங்களுக்கு சரக்குல கலக்க தண்ணீர் கேட்டாக் கொடுப்பேன். மத்தபடி நான் பார் மாதிரி எல்லாம் நடத்தலை. என்னோட வளர்ச்சி இந்த ஏரியாவுல இருக்கிற சிலருக்குப் பிடிக்கலை. அதனால இப்படிக் கிளப்பிவிடுறாங்க...'' என்று சொன்னார்.
சேலம் மாவட்ட ஆட்சியர் மகரபூஷணத் திடம் இந்த புகாரைக் கொண்டுபோனோம். ''எனக்கும் தகவல் வந்திருக்கு. அதிகாரிகளை அனுப்பி விசாரிக்கச் சொல்லி இருக்கேன். பள்ளிக்கூடத்துக்கு இடையூறாக டாஸ்மாக் இருப்பது உறுதியாகத் தெரிந்தால், நிச்சயமா அதை அங்கிருந்து மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
சீக்கிரம் செய்யுங்க!

எங்களுக்கு இடம் இல்லையா?

கொந்தளிக்கும் வன்னியர்கள்

'வன்னியர்களின் கோட்டை யாக இருந்துவரும் சேலத்தில், வன்னியர் சமுதாய மக்களை அரசு தொடர்ந்து புறக்கணிக்கிறது!’ என்ற ஆதங்கக் குரல் அ.தி.மு.க-வினர் மத்தியில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது.
இதுபற்றி நம்மிடம் பேசிய அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலர், ''சேலம் மாவட்டத்தில் வன்னி யர் சமுதாய மக்கள் அதிகம். இங்கே அமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியோ, கவுண்டர் இனத்தைச் சேர்ந்தவர். ஆளும் கட்சி மாவட்டச் செயலாளர்களிலும் வன்னி யர்கள் யாரும் கிடையாது. சேலம் நகரத்தில் அரசு உயர் அதிகாரி களான கலெக்டர், கமிஷனர், டி.சி., ஏசி., பி.ஆர்.ஓ என எந்த அரசு உயர் பதவியும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை. அதனால்தானோ என்னவோ, அமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி, வன்னியர் சமுதாய மக்களைத் தொடர்ந்து புறக்கணித்து வருகிறார். கீழ்மட்ட அளவில் கட்சிப் பதவிகளில் ஆரம்பித்து, பல டெண்டர்கள்வரையிலும் வன்னியர்களுக்கு வாய்ப்பு வழங்காமல் தட்டிக் கழித்துக்கொண்டே இருக்கிறார். அவருடைய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதை நாங்கள் தவறு சொல்லவில்லை. ஆனால், அதே நேரத்தில் மெஜாரிட்டியாக இருக்கும் சமுதாயத்தையும் அவர் கொஞ்சம் கண்டுகொள்ளவேண்டும், இல்லைங்களா?'' என்று ஆதங்கத்தோடு கேட்கிறார்கள்
வீர வன்னியர் பேரவை மாநிலப் பொதுச் செயலாளர் வேங்கை அய்யனாரோ, ''எங்க மாவட்டம் வன்னியர் பூமி என்பதால், இரண்டு திராவிடக் கட்சிகளுமே எப்போது ஆட்சிக்கு வந்தாலும் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களைத் தான் இங்கே அமைச்சர் ஆக்கு வாங்க. ஆனால், ஏதோ ஒரு விஷயத்தை மனதில் வைத்துக் கொண்டுதான், ஜெயலலிதா வேண்டும் என்றே சேலத்தில் கவுண் டர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை மந்திரி யாக்கி இருகிறார். அவரும் சேலத்தில் வன்னி யர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை ஒழித்துக் கட்டுவதில் மட்டுமே குறியாக இருக்கிறார். சேலத்தில் நில அபகரிப்பு என்ற அஸ்திரத்தைக்கூட குறிப்பாக வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையாகத்தான் நாங்கள் பார்க்கிறோம். வன்னியர்களுக்கு எதிரான போக்கை ஜெயலலிதா உடனடியாகக் கைவிட வேண்டும். இல்லை என்றால் வீதியில் இறங்கிப் போராடுவோம்!'' என்று கோபத்தில் வெடித்தார்.
நீண்ட முயற்சிக்கு பிறகு அமைச்சர் எடப்பாடி பழனி சாமியிடம் இந்த விவகாரங்கள் பற்றி பேசினோம். ''சேலம் மாவட் டம் வன்னியர் பெல்ட் என்று சொல்வதெல்லாம் மாயை. என்னைப் பொறுத்த வரை எல்லோருமே ஒன்று தான். சாதியை வைத்து பிழைப்பு நடத்த நினைக்கும் சிலர்தான் இது போன்ற விஷயங்களைச் சொல்லி மக்களைக் குழப்புகிறார்கள். அம்மா எனக்குக் கொடுத்திருக்கும் இந்த வாய்ப்பினை மக்களுக்கு முடிந்த வரை சேவை செய்யவே பயன்படுத்துகிறேன்.. எந்தக் காலத்திலும் சாதிய உணர்வுகளுக்குள் நான் போக மாட்டேன்...'' என்று தெளிவாக சொன்னார்.
ஆனாலும் புகார்கள் கார்டன் கதவையும் தட்டி விட்டது.

''தேன்மொழி என் அத்தை மகள்.. மன்னன் எனக்கு மச்சான்!''

மதுரை பகீர் சீட்டிங்

'மதுரையைப் பசுமையாக்குவோம்’, 'ஒரு ரூபாயில் உதவும் உள்ளங்கள்’, 'மாநகராட்சிப் பள்ளி மாணவர்களைத் தொழிற்கல்வியில் சேர்ப்பது’ என்று சமூக சேவகராகத் தன்னை அடையாளம் காட்டிக்கொண்டவர் ஜெகதீசன். மதுரை மகாத்மா காந்தி நகரில் சிறுதொழில் முனைவோர் கூட்டமைப்பை நடத்தி வரும் இவர் மீது புகார் கொடுப்பதற்காக கமிஷனர், கலெக்டர் அலுவலகத்தில் தினமும் பல பெண்கள் வரிசையில் நிற்கிறார்கள்!
புதூரைச் சேர்ந்த லதாவிடம் பேசினோம். 'சுய தொழில் தொடங்குவதற்காக, சுவர்ண ஜெயந்தி சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் மாநகராட்சியில் கடன் வாங்க முயற்சித்தேன். அப்போது, ஒரு பெண் மூலம் அறிமுகமான ஜெகதீசன், 'இதெல்லாம் சாதாரண விஷயம்... உங்களுக்குத் தெரிஞ்சவங்களை அழைச்சிட்டு வாங்க. கடனும் வாங்கித் தாரேன், என்னோட இயக்கத்தில் மகளிர் குழுத் தலைவராவும் உங்களை நியமிக்கிறேன்’ என்று தோரணையாகச் சொன்னார். அதை நம்பி, 28 பெண்களைக் கூட்டிட்டு வந்தப்ப, 'விண்ணப்பம் மட்டும் கொடுத்தாப் போதாது. ஒவ்வொன்றுக்கும் 5,000 வேண்டும். திட்ட அறிக்கையைத் தயாரிக்க ஆடிட்டருக்கு தனியா  750 கொடுத்திடுங்க’ என்றார். 28 பேரிடம் தலா  5,750 வீதம்  1.61 லட்சம் வசூலித்துக் கொடுத்தேன். முதல் கட்டமா, 10 விண்ணப்பங்களை மட்டும் மாநகராட்சி அலுவலகத்தில் செந்தில் என்பவரிடம் கொடுக்கச் சொன்னார். கொடுத்தேன். கொஞ்ச நாள் கழித்து, 'விண்ணப்பங்களைப் பரிசீலித்து புதூரில் உள்ள கனரா, இந்தியன், ஐ.ஓ.பி. வங்கிகளுக்குப் பிரித்து அனுப்பி இருக்கிறார்கள். இனி, வங்கியை ஃபாலோ பண்ணுங்க. கடன் கிடைத்துவிடும்’ என்றார். ஏழு மாதங்களாக அலைந்தும் கடன் கிடைக்கவே இல்லை. இப்ப காசு கொடுத்த பெண்கள் என்கிட்ட சண்டைக்கு வர்றாங்க...' என்றபோது அழுதேவிட்டார்.
இதேபோல், முதியவரான அன்னத்தாயம்மாளும் ஒரு நபருக்கு 3,000 வீதம் 60 பேரிடம்  1 லட்சத்து 80 ஆயிரம் வசூல் பண்ணிக் கொடுத்துவிட்டு ஏமாந்து நிற்கிறார். கூட்டமாக நின்ற மற்ற பெண்கள், ''ஜெகதீசன் அலுவலகத்தில் திட்ட ஒருங்கிணைப்பாளராக இருந்த காமாட்சியிடம் கேளுங்கள், மேலும் பல விவரங்கள் கிடைக்கும்...'' என்றார்கள் கோரஸாக. காமாட்சியைத் தேடிக் கண்டுபிடித்தோம்.
'மாசம்  10,000 சம்பளம் தருவதாகச் சொன்னதால், அவரிடம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேலைக்குச் சேர்ந்தேன். 'மேயர் தேன்மொழி என் அத்தை மகள், துணை மேயர் மன்னன் எனக்கு மச்சான், கவுன்சிலர் போஸ்கூட எனக்கு மாமாதான், அக்ரி கணேசன் என் சொந்தப் பெரியப்பா பையன், மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டினும், தலைமைப் பொறியாளர் சக்திவேலும் எனக்கு உறவுதான், என் மனைவி ஸ்ரீலேகாவுக்குத் தோழிதான் காந்தி அழகிரி’ன்னு சொல்வார். அப்புறம்தான் தெரிஞ்சது, அவர்கள் எல்லாம் வெவ்வேறு சாதி என்று. கடன் கேட்டு விண்ணப்பித்த பல பெண்கள் அவரிடம் ஏமாற்றிவிட்டதாக சண்டை போடுவார்கள். கடைசியில், எனக்கே சம்பளம் கொடுக்கவில்லை. கேட்டபோது, 'சிறப்பான சேவையைப் பாராட்டி, எனது டிரஸ்ட்டுக்கு கார்த்தி சிதம்பரம்  250 கோடி ஒதுக்கி இருக்கிறார். சீக்கிரமே சம்பளத்தை மொத்தமாகொடுத்​துடுறேன்’ என்று ஒரு காசோ​லையைக் காட்டினார். அதைப் பார்த்ததும் எனக்கு தலையே சுற்றிவிட்டது. 'பட்டதாரியான என்னையே பைத்தியக்காரி ஆக்குறீங்களே?’னு சொன்னேன். உடனே, என்னை சாதியைச் சொல்லி அசிங்கமாகத் திட்டி, 'உனக்குத்தான் நான் அப்பாயின்ட்மென்ட் ஆர்டரே தரலியே... பிறகு எதுக்கு சம்பளம்?’னு கேட்டார். அடுத்த நாளே என்னையும், ஜெயபாரதி என்ற பெண்ணையும் வேலையைவிட்டு நீக்கிவிட்டதாகப் பத்திரிகையில் விளம்பரம் கொடுத்தார். இப்போது ஏமாந்த நாங்கள் எல்லாம் போலீஸில் புகார் கொடுத்தும், ஆதாரம் இல்லை என்று சொல்லி நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்கள்...'' என்றார் கோபமாக.
ஜெகதீசனை சந்தித்தோம். 'பூ கட்டுறது, பொம்மை செய்றது போன்ற குறுந் தொழில்கள் செய்பவர்கள், கந்து வட்டிக் கும்பலிடம் சிக்கிச் சீரழிவதைத் தடுக்க, 'மைக்ரோ கிரெடிட் குரூப்ஸ்’ என்ற பெயரில் வங்கிகளிடம் இருந்து கடன் பெற்று இவர்களுக்குக் கொடுக்கிறோம். தினசரி வியாபாரத்தில் இருந்து கடனை அடைக்க வேண்டும். இவர்களால் தினமும் வங்கிக்குச் செல்ல முடியாது என்பதால், நாங்களே இவர்களிடம் பணத்தை வசூலித்து வங்கியில் செலுத்திவிடுவோம். அதாவது, வங்கியும் இவர்களைப் பார்த்திருக்காது; அவர்களும் வங்கிக்குப் போக மாட்டார்கள். இப்படி எங்கள் அமைப்பில் சுமார் 48 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இவர்களைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பில் இருந்துகொண்டு தவறு செய்ததால்தான் ஜெயபாரதி, காமாட்சியை வேலையைவிட்டு நீக்கினேன். வங்கிக் கடனைத் தவிர மாநகராட்சியில் கடன் வாங்கிக் கொடுப்பதாக நான் ஒருபோதும் சொன்னது இல்லை. அதற்காக யாரிடமும் பணமும் வாங்கவில்லை. அப்படி வாங்கி இருந்தால் ஆதாரத்தைக் காட்டச் சொல்லுங்கள், பார்க்கலாம்!'' என்றார் ஒரே போடாக.
போலீஸ் தரப்பிலோ, 'கடன் வாங்க நேரடியாக வங்கிக்குப் போக வேண்டியதுதானே? எதற்காக இடைத்தரகரிடம் போக வேண்டும்? அதுவும் கொடுத்த பணத்துக்கு அவர்களிடம் ரசீதுகூட இல்லை. எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்?' என்கிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்ற மாநகராட்சி கமிஷனர் நடராஜனிடம் கேட்டபோது, 'எனக்கும் ஜெகதீசன்பற்றி ஏராளமான புகார்கள் வந்தன. ஜெகதீசன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்களிடம் விசாரணை நடத்த உத்தரவிட்டு இருக்கிறேன். புகார் ஊர்ஜிதமானால், கடுமையான நடவடிக்கை எடுப்பேன்!' என்றார்.

மிரட்டினாரா மேயரின் கணவர்?

நீள்கிறது மதுரைக் கைதுப் படலம்!

நித்தம் ஒரு தி.மு.க. புள்ளி கைதாகிச் சிறை செல் லும் நிலையில், அழகிரியின் அன்புக்குரிய தம்பிகளில் ஒருவரும், மேயர் தேன்மொழியின் கணவருமான கோபிநாதனை திருப்பூர் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸ் கைது செய்திருக்கிறது!
அவிநாசி போலீஸ் போட்டுள்ள எஃப்.ஐ.ஆர். என்ன சொல்கிறது?
''திருச்செங்கோட்டைச் சேர்ந்த மகாலிங்கம், சுப்ரமணியனுக்கு சொந்தமாக அவிநாசியில் 55.36 ஏக்கர் நிலம் இருக்கிறது. இதை விற்க 2006-ம் ஆண்டு பத்திரிகையில் விளம்பரம் கொடுத்தார்கள். இதைப் பார்த்துவிட்டு, திருச்செங்கோட்டைச் சேர்ந்த ஈஸ்வரன், குமார் ஆகிய இருவரும் நிலத்தை வாங்கப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஒரு ஏக்கர் நிலம்  8.2 லட்சம் என்று பேசி முடிவாகி உள்ளது. 2007-ல் இதை வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. கூடவே  1.3 கோடியை அட்வான்ஸாகவும் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், ஒப்பந்த காலமான 2007-ம் வருஷம் மார்ச் தாண்டி பல மாதங்களாகியும் நிலத்தை வாங்க அந்த இரண்டு பேரும் வரவில்லை. இந்நிலையில், 2008-ம் வருஷம் திடீரென ஒரு நாள் போன் போட்டு, 'வாங்க, அதை முடிச்சு செட்டில் பண்ணிடுறோம்’ என திருப்பூரில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு நில உரிமையாளர்களை வரவழைத்து உள்ளார்கள் அட்வான்ஸ் கொடுத்தவர்கள். நிலத்தை வாங்குபவர்களுக்கு சாதகமாக கோபிநாதன், அவரோட மருமகன் ரமேஷ், மதுரை மாநகராட்சி மண்டல தலைவர் வி.கே.குருசாமி, அவிநாசி தி.மு.க. செயலாளர் சாமிநாதன் ஆகிய நான்கு பேரும் அந்த ஹோட்டலில் இருந்துள்ளனர்.
மகாலிங்கம், சுப்ரமணியத்திடம், 'பழைய விலைக்கே நிலத்தைக் கொடு’ எனக் கேட்டார்கள். ஆனால், 'அன்னிக்கு ஏக்கர்  8 லட்சம், இன்னிக்கு  15 லட்சம். அதனால், இப்போ பழைய விலைக்கு கொடுத்து நட்டப்பட முடியாது’ என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனால், கோபிநாதன் குரூப் கொலை மிரட்டல் விடுத்துள்ளது. 45 சதவிகித இடத்தைப் பழைய விலைக்குப் பேசி டீலிங்கை முடித்துள்ளார்கள். இந்த வேலைக்காக ஏராளமான பணம் கைமாறியுள்ளது. மகாலிங்கமும் சுப்ரமணியனும் எங்களிடம் புகார் கொடுத்ததால், கோபிநாதன் உள்ளிட்டோரைக் கைது செய்தோம்...'' என்கிறது போலீஸ்.
மதுரை மேயர் தேன்மொழியின் கணவர் இவர். 'தேன்மொழியை நிழலாக வைத்துக்கொண்டு நிஜ மேயராக இருந்தவர்’ என்று இவரைச் சொல்வார்கள் மதுரை தி.மு.க-வினர்.
''கோபிநாதனின் பூர்வீகம் திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம். அங்கு இருந்து சிவகங்கை மாவட்டம் பழையனூருக்குக் குடிபெயர்ந்தது இந்தக் குடும்பம். மதுரை அண்ணா பஸ் நிலையத்தில் காடா (மண்ணெண்ணெய்) விளக்கை ஏற்றிவைத்து, அதன் வெளிச்சத்தில் தரைக் கடை பரப்பி, சேலைகளை ஏலம்விட்டார் கோபிநாதன். சேலை சாதாரண ரகமாக இருந்தாலும், 'இந்தப் படத்தில் அந்த நடிகை கட்டிய சேலை’ என்று சொல்லி அமோகமாக விற்றார். கிராமப்புறங்களில் தற்போது வழக்கொழிந்துபோய்விட்ட, 'குத்துச் சீட்டு’ இவரது உப தொழிலாக இருந்தது...'' என்கிறார்கள் மதுரை தி.மு.க-வினர்.
'துணி வியாபாரத்தைவிட அவருக்கு நல்ல வருமானத்தைக் கொடுத்தது, தி.மு.க-வின் முக்கியப் புள்ளிகளுக்குச் செய்த சேவைதான். அந்தப் புள்ளிகளின் ஆதரவோடு, 2001 உள்ளாட்சித் தேர்தலில் 42-வது வார்டு கவுன்சிலருக்குப் போட்டியிட முயன்றார். வாய்ப்பு மறுக்கப்பட்டது. இப்படி வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் எல்லாம் 'அழகிரி பேரவை’ சார்பில், தி.மு.க-வின் போட்டி வேட்பாளர்களாகக் களம் இறங்கினார்கள். அப்படித்தான் 'உதயசூரியனை’த் தோற்கடித்தார் கோபிநாதன். அப்போது, தெற்கு மண்டலத்தில் பெரும்பான்மையான வார்டுகளில் (அழகிரி) தி.மு.க-வே வென்றதால், இவருக்கு மண்டலத் தலைவர் பதவி கிட்டியது. அழகிரியின் படைத் தளபதிகளில் ஒருவராகவும் உயர்ந்தார். அடுத்து வந்த 2006 உள்ளாட்சித் தேர்தலின்போது, அது பெண்கள் வார்டாக மாறிப்போனது. அங்கு ஆக்டோவியா எஸ்தர் என்ற ஜெயக்குமாரி என்பவரைத்தான் வேட்பாளராக அறிவித்தது கட்சித் தலைமை. ஆனால், கடைசி நேரத்தில் அவரை மாற்றி தேன்மொழியைக் களத்துக்குக் கொண்டுவந்த கோபிநாதன், 3,000 ஓட்டு வித்தியாசத்தில் மனைவியை ஜெயிக்கவைத்தார். மேயர் பதவிக்கான நபராகக் கருதப்பட்ட ஆரப்பாளையம் சின்னம்மாள் எதிர்பாராத விதமாக தோற்றுப்போக, தேன்மொழிக்கு அடித்தது யோகம். அழகிரியின் ஆதரவில் மதுரையின் முதல் பெண் மேயராக உட்கார்ந்துவிட்டார். அதன் பிறகு இவரே மேயராக வலம் வந்தார்...'' என்று முன்கதைச் சுருக்கம் சொல்கிறார்கள்.
கோபிநாதன் கைதைத் தொடர்ந்து 'நிஜ’ மேயர் தேன்மொழியும் பயத்தில் இருக்கிறார்.

சி.பி.ஐ. நடத்தும் முப்பெரும் விழா!

செப்டம்பர் 15

ஸ்பெக்ட்ரம் புயல் மீண்டும் டெல்லியில் மையம்கொண்டு, பெரும் அதிர்வுகளை உருவாக்கக் காத்திருக்கிறது. செப்டம்பர் 15-ம் தேதி என அதற்குத் தேதியும் குறிக்கப்​பட்டுள்ளது!
ஸ்பெக்ட்ரம் விவகாரத்துக்கு முன்னோட்டங்கள் தேவை இல்லை. டெல்லி பாட்டியாலா சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நீதிபதி ஷைனி முன்பாக நடந்துவரும் இந்த ஸ்பெக்ட்ரம் வழக்கில், இது வரை இரண்டுகுற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 'மூன்றாவது குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்யும் வரை கைது செய்யப்​பட்ட யாருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது!’ என்று சி.பி.ஐ. தரப்பு இந்தச் சிறப்பு நீதிமன்றத்தில் வாதங்களை வைத்ததால், கைதான யாரும் இதுவரை வெளியில் வர முடியவில்லை. 'இவர்களை வெளியில் விடாமல் இன்னும் எத்தனை காலத்துக்கு உள்ளேயே வைத்திருக்கப்போகிறீர்கள்?’ என்று நீதிபதி ஷைனியே சி.பி.ஐ. தரப்பு வக்கீல்களிடம் கோபமாகக் கேட்டார். இதைத் தொடர்ந்து இதுவரை பதிவான இரண்டு குற்றப் பத்திரிகைகளை அடிப்படையாக​வைத்துக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யும் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன.
ஆ.ராசா, கனிமொழி, கலைஞர் டி.வி. சரத்குமார் உள்ளிட்ட அனைவரும் தங்கள் தரப்பு வாதங்களை நீதிபதி ஷைனி முன்னால் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்கள்.
கடந்த 25-ம் தேதி ஆ.ராசா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுஷில்குமார், சில அதிர்ச்சியான தகவல்களைச் சொல்லி நீதிமன்றத்தின் கவனத்தை முழுமையாகத் தங்கள் பக்கம் திருப்பினார்.
''ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் சதி மற்றும் மோசடி நடந்துள்ளதாக இந்த வழக்கு நடந்து வருகிறது. ஆனால், இதில் அரசுக்கு எந்த விதமான இழப்பும் ஏற்படவில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங், அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், தற்போதைய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில்சிபல் ஆகிய மூவரும் தெரிவித்து இருக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் இந்தத் தகவல் பதிவாகி உள்ளது. எனவே, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் ப.சிதம்பரம், கபில்சிபல் ஆகிய மூவரையும் இந்த நீதிமன்றத்துக்கு அழைத்து, சாட்சிகளாக விசாரிக்க வேண்டும். அவர்களுக்கு சம்மன் அனுப்ப வேண்டும்!'' என்று வழக்கறிஞர் சுஷில்குமார் சொன்ன தகவல், அங்கே இருந்த சி.பி.ஐ. தரப்பை மட்டும் அல்ல... செய்தி பரவியதும் பிரதமரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
 
''ஸ்பெக்ட்ரம் உரிமங்களைப் பெற்ற உடனேயே அதை வேறு நிறுவ​னங்களுக்கு விற்பனை செய்த​தாகப் புகார் சொல்லப்​பட்டுள்ளது. ஆனால், உரிமங்கள் விற்கப்​படவில்லை. அதிகபட்ச உச்சவரம்பான 74 சதவிகிதத்துக்கு உட்பட்டு சில நிறுவனங்கள் தங்களது பங்குகளை விற்றுள்ளன. அந்தப் பரிவர்த்தனைக்கும் மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அன்னிய முதலீடு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் தந்துள்ளது!'' என்று சொன்ன சுஷில்குமாரின் வாதங்கள், ப.சிதம்பரத்துக்கும் சிக்கலைக் கொடுத்துள்ளன.
அடுத்து தயாநிதி மாறன் மற்றும் அருண்ஷோரி​யையும் அவர் விட்டுவைக்கவில்லை. ''2003-ம் ஆண்டு மத்திய அமைச்சரவை நிறைவேற்றிய விதிமுறைகளைத்தான் ராசா பின்பற்றினார். ஆனால், அந்தக் காலகட்டத்தில் அமைச்சர்களாக இருந்த அருண்ஷோரி மற்றும் தயாநிதி மாறனை இதுவரை ஏன் கேள்வி கேட்கவில்லை? 2007-ம் ஆண்டு தயாநிதி மாறன் பதவி விலகும் முன்பு ஸ்வான் நிறுவனத்துக்கு உரிமம் வழங்கும் கோப்புகளில் கையெழுத்துப் போட்டு இருக்கிறார். அதை ராசா பதவிக்கு வந்ததும் வெளியில் சுட்டிக் காட்டி இருக்கிறார்!'' என்று சுஷில்குமார் சொல்வது, தயாநிதி மாறனை பெரும் சிக்கலுக்கு உள்ளாக்கி உள்ளது.
''சி.பி.ஐ. தனது ஆவணங்களை இந்த கோர்ட்டில் இன்னமும் தாக்கல் செய்யவில்லை. இந்த ஆதாரங்​களை உடனடியாகத் தாக்கல் செய்து... அதை எங்களுக்கும் தந்தால்தானே வழக்கை எதிர்கொள்ள முடியும்?'' என்றும் சுஷில்குமார் கேள்வி எழுப்பினார். இந்த ஆவணங்கள் அனைத்தையும் கேட்டு ராசா, ஒரு அவசர மனுவையும் தாக்கல் செய்தார். இது சி.பி.ஐ-க்கு ஒரு விதமான நெருக்கடியைக் கொடுத்துள்ளது. இது தொடர்பாக அவசர ஆலோசனை சி.பி.ஐ. அதிகாரிகள் மட்டத்தில் நடந்ததாகவும், அதைத் தொடர்ந்து செப்டம்பர் 15-ம் தேதி தங்களது மூன்றாவது குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்யலாம் என்று அவர்கள் முடிவு எடுத்ததாகவும் சொல்கிறார்கள்.
இதைத் தொடர்ந்து நீதிபதி ஷைனி முன் ஆஜரானார், சி.பி.ஐ. வழக்கறிஞர் கே.கே.வேணு​கோபால். ''இந்த வழக்கில் சி.பி.ஐ. தனது விசாரணையை முடித்துவிட்டது. தனது குற்றப் பத்திரிகையை செப்டம்பர் 15-ம் தேதி தாக்கல் செய்யும்!'' என்று அறிவித்து, புயல் சின்னத்தைக் காட்டி உள்ளார். அதற்கு முன்னதாக வருவாய்த் துறை மற்றும் அமலாக்கப் பிரிவினர் தங்களது குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்வார்கள் என்றும் வேணுகோபால் சொன்னார்.
''இந்தக் குற்றப் பத்திரிகையில் கைது செய்யப்பட்ட அனை​வரும் என்ன குற்றம் செய்தார்கள் என்பதை முழுமையாகக் கொண்டுவருவோம். இந்த மொத்த சதியிலும் ஒவ்வொருவருக்கும் என்ன பங்கு என்பதையும் சொல்வோம். இதற்காகச் செய்யப்பட பணப் பரிவர்த்தனைகள், எங்கு சொத்துகள் வாங்கப்பட்டுள்ளன என்பதையும் கொண்டு​​வருவோம்!'' என்று சி.பி.ஐ. அதிகாரிகள் சொல்கிறார்கள். ஆ.ராசா, கனிமொழி, சரத்குமார் குறித்த முழுமையான குற்றச்சாட்டுகள் வெளியில் வரலாம். மேலும், தயாநிதி மாறன் குறித்து ஏற்கெனவே தனது அறிக்கையில் சி.பி.ஐ. சில தகவல்களைச் சொல்லி இருந்தது. அதைத் தொடர்ந்து அவர் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். தொழில் அதிபர் சிவசங்கரன் இது தொடர்பாக விரிவான வாக்கு​மூலத்தை சி.பி.ஐ-யின் முன்பு பதிவு செய்துள்ளார். ''என்னுடைய ஏர்செல் நிறுவனம், தயாநிதி மாறனின் வற்புறுத்தலால்தான் மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்கப்பட்டது!'' என்பது இவரது குற்றச்சாட்டாக உள்ளது. இந்தப் புகாரை செப்டம்பர் 15-ம் தேதிய குற்றப் பத்திரிகையில் சேர்க்கப்போகிறார்களா அல்லது அது தனியாக வருமா என்பது தெரியவில்லை!
இப்படி மொத்தமும் தி.மு.க. பிரமுகர்களை மையம்கொண்டதாக அந்தக் குற்றப் பத்திரிகை இருக்கப்​போகிறது. பொதுவாக தி.மு.க. செப்டம்பர் 15-ம் தேதியை முப்​பெரும் விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடும். இந்த ஆண்டு சி.பி.ஐ-யும் சேர்ந்து 'கொண்டாடப்’போகிறது?!
சரோஜ் கண்பத்
தப்பியது கலைஞர் டி.வி.?
2ஜி வழக்கின் விசாரணை குறித்து அவ்வப்போது சி.பி.ஐ. தரப்பிலும் அமலாக்கப்பிரிவு தரப்பிலும் உச்ச நீதிமன்றத்துக்கு விசாரணை நிலவர அறிக்கை கொடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த 1-ம் தேதி மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் அளித்த அறிக்கையில், '2ஜி வழக்கில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களின் வெளிநாட்டு முதலீடுகள் பெருமளவில் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. சுமார் 200 வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் செய்யப்பட்டுள்ள முதலீடுகளை ஆய்வு செய்துவருகிறோம். இதில் சுமார்  7,800 கோடி முதல்
 9,000 கோடி வரை பணப்பட்டுவாடா நடந்திருக்கலாம்’ என்று அமலாக்கப் பிரிவின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. சைப்ரஸ், சேனல் ஐலேண்ட் போன்ற தீவுகளில் இருந்து பெரும்பாலான ஆவணங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதன்பிறகு 2000 முதல் 2004-ம் ஆண்டு வரையிலான பி.ஜே.பி. ஆட்சியில் பிரமோத் மகாஜன் மற்றும் அருண்ஷோரி காலத்திலும் பின்னர் தயாநிதி மாறன் அமைச்சராக இருந்த காலத்தில் நடந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்தும் சி.பி.ஐ. சார்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டது. இதில், 'மகாஜன் மற்றும் அருண்ஷோரி காலத்தில் அரசின் கொள்கைக்கு மாறாக ஸ்பெக்ட்ரம் அலைவரிசை சில கம்பெனிகளுக்கு அதிகப்படியாக ஒதுக்கப்பட்டது. அதனால் முழுமையாக விசாரணை நடத்தவேண்டும். தயாநிதி மாறன் அமைச்சராக இருந்தபோது ஏர்செல் நிறுவனத்துக்கு கால தாமதம் செய்து ஒதுக்கீடு செய்துள்ளார். ஆனால் இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகள் மூலம், அவர் கால தாமதம் செய்து ஏர்செல்லுக்கு ஸ்பெக்ட்ரம் கொடுத்துள்ளாரே தவிர, ஏர்செல் நிறுவனத்தைக் கட்டாயப்படுத்தி தனக்கு சாதகமான ஆதாயம் பெற்றதற்கான சாட்சியம் எங்களுக்கு கிடைக்கவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டது.
கலைஞர் டி.வி. பணத்தை வட்டியோடு திருப்பிக் கொடுத்த தாகக் கூறுவதை சி.பி.ஐ. தரப்பு ஏற்றுக்கொள்கிறது என்றும் அதனால் கலைஞர் டி.வி-க்கு உடனடியாக பிரச்னை ஏதும் இல்லை என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் ஷாகித் பால்வாவின் ஐந்து நிறுவனங்களின் சொத்துகளும், சில வீடுகள், நிலம், வணிகக் கட்டடங்கள் ஆகியவைகளோடு வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டு 2ஜி வழக்கில் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான், வரும் செப்டம்பர் 15-ம் தேதி அன்று சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தாக்கல் செய்ய இருக்கும் குற்றப் பத்திரிகை மேலும் சில புயல்களைக் கிளப்பும் என்றே தெரிகிறது.
'' 200 கோடி வந்தது கனிமொழிக்குச் சொல்லப்படவில்லை!''
கடந்த மே 20-ம் தேதி சிறையில் அடைக்கப்பட்ட கனிமொழிக்கு இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை. கிட்டத்தட்ட மூன்று மாதங்களாகத் தொடர்ந்து சிறையில் இருக்கிறார். இதனால் ஏற்பட்ட ஆவேசம், அவரது வழக்கறிஞர் மூலமாக வெடித்தது. ஆ.ராசாவின் வழக்கறிஞர் சுஷில்குமார்தான் கனிமொழிக்கும் வழக்கறிஞர். 'கனிமொழி மீது வழக்குத் தொடர்ந்து நடைபெறுமானால், பிரதமரையும் சாட்சிக் கூண்டில் ஏற்றி விசாரிக்க வேண்டும்’ என்று எச்சரிக்கை விடுத்துப் பேசினார் சுஷில்குமார்.
'கனிமொழியை இந்த வழக்கில் சேர்த்த சி.பி.ஐ., முறைப்படி அனுமதி பெறவில்லை. அவர் மாநிலங்களவை எம்.பி. ஆனால், அவரை சி.பி.ஐ. ஒரு தனிப்பட்ட நபராகவே கருதிக் கைது செய்துள்ளது. அவரைக் கைது செய்தது குறித்து முறைப்படி மாநிலங்களவைத் தலைவரிடம் அனுமதிகூட பெறவில்லை. கலைஞர் டி.வி-யில் 20 சதவிகிதப் பங்கு இருப்பது மட்டுமே அவர் செய்த குற்றம் தவிர, வேறு எந்தத் தவறும் அவர் செய்யவில்லை. ஆனால், அவர்தான் கலைஞர் டி.வி-க்கு மூளையாக இருந்தார் என்று சொல்லப்​படுவது தவறு. அந்த டி.வி. 10 சதவிகித வட்டிக்கு  200 கோடியைக் கடன் வாங்கிய விவகாரத்துக்கும் கனிமொழிக்கும் சம்பந்தம் இல்லை. அந்த விஷயம் அவருடைய கவனத்துக்கும் கொண்டுவரப்படவில்லை. இரண்டு பேரின் வாக்குமூலத்தின் அடிப்படையில், கனிமொழியை சி.பி.ஐ. கைது செய்துள்ளது. ஆனால், ஆவண சாட்சியங்கள் எதுவும் கனிமொழிக்கு எதிராக இல்லை!'' என்று சுஷில்குமார் வாதிட்டார். இந்த வாதங்களை உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டே இருந்தார் கனிமொழி!

சி.பி.ஐ. தவறு செய்தால், நான் விட மாட்டேன்!

சுவாமி 2 ஜி ஆவேசம்

2ஜிஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மூன்றாவது குற்றப் பத்திரிகையை செப்டம்பர் 15-ம் தேதி சி.பி.ஐ. தாக்கல் செய்யப்போகிறது. இந்த நிலையில், மத்திய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் முதல் கட்டமாக, கலைஞர் டி.வி-க்கு  214 கோடி கொடுத்த டிபி ரியாலிட்டி நிறுவனங்களின் சொத்துகளை முடக்கிக் கையகப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கிவிட்டார்கள். இதில் தொடர்புடைய மற்ற நிறுவனங்கள் மீதும் அடுத்தக் கட்ட நடவடிக்கை பாயும் என்கிறார்கள். கடந்த ஜூலை 6-ம் தேதி தொடங்கி இதுவரை 2ஜி விவகாரத்தில் எடுக்கப் பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை செப்டம்பர் 1-ம் தேதி சி.பி.ஐ தரப் பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்கள்.
 இந்த நிலையில், தனது அமெரிக்க சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு, ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இந்தியா திரும்பிவிட்டார். சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தோம்!
''உண்மையைச் சொல்லுங்கள்! ஸ்பெக்ட்ரம் வழக்கை கிடப்பில்போட உங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா? தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் உங்களை சந்தித்துப் பேசியதாக பரபரப்பு கிளம்பியுள்ளதே?''
''சென்னையில் டாக்டர் மோகன் காமேஷ்வரன் வீட்டுத் திருமண நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். அங்கே ஸ்டாலின் வந்தார். சம்பிரதாயத்துக்கு நான், 'ஹெள ஆர் யூ?' என்று கேட்க, அவரும், 'ஃபைன்' என்றார். இவ்வளவுதான் நடந்தது. வேறு எந்தப் பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. வழக்கு விசாரணை நீண்ட தூரம் போய்விட்டது. அதனால், இந்த நேரத்தில் என்னை யாரும் அணுக மாட்டார்கள். ஊழல் விவகாரத்தைத் தடுக்கவோ, கிடப்பில் போடவோ இனி யாராலும் முடியாது. ஆனால், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மாட்டியவர்களுக்கு கடைசியாக ஒரே ஒரு சான்ஸ் உண்டு. அவர்கள் அப்ரூவர் ஆகலாம். குற்றத்தில் உடந்தையாக இருந்தவர்கள், அப்ரூவர் ஆகி... பணம் எப்படி பெறப்பட்டது? யார் யாருக்கு கைமாறியது? என்று அனைத்து விவரங்களையும் தானாக முன்வந்து கோர்ட்டில் சொன்னால், தண்டனை குறையலாம்''
''டிபி ரியாலிட்டி நிறுவனத்தின் சொத்துகளை முடக்க அமலாக்கப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளார்களே?''
''ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் முதன்முதலாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்கிற வகையில் எனக்கு மகிழ்ச்சி. 2002-ல் கொண்டுவரப்பட்ட சட்டம் அது. சட்டவிரோதமாகப் பணம் கை மாறினால், அதன் மூலம் வாங்கப்பட்ட சொத்துகளைக் கைப்பற்ற, மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு. அந்த வகையில், கலைஞர் டி.வி-க்கு டிபி ரியாலிட்டி மூலம்  214 கோடி கைமாறி இருக்கிறது கலைஞர் டி.வி-யின் முதலீட்டுப் பணமே சில கோடிகள்தான். அப்படி இருக்கும்போது, இத்தனை கோடிகள் எதற்காகக் கை மாறியது? அந்தப் பணத்தை ஏதோ கடனாகப் பெற்றதாகச் சொல்லி, அவசரம் அவசரமாகத் திருப்பித் தந்து இருக்கிறார்கள் கலைஞர் டி.வி. தரப்பினர். செய்த குற்றத்தை மறைக்க நாடகம் போட்டு, மொத்தமாக மாட்டிக்கொண்டார்கள்.
மத்திய அமைச்சர் சிதம்பரத்திடம் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என வாதம் நடத்தப்போகிறேன். உச்ச நீதிமன்றம் எனக்குத் தனிப்பட்ட முறையில் ஸ்பெக்ட்ரம் வழக்கை நடத்த அனுமதி வழங்கியுள்ளது. ஆக, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இரண்டு வழக்குகள் நடக்கப்போகின்றன. சி.பி.ஐ. வழக்கு தனி. என்னுடைய வழக்கு தனி. நான், சி.பி.ஐ-யிடம் உள்ள ஆவணங்களைப் பெறலாம். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொடர்பு உள்ளவர்களிடம் நானும் குறுக்கு விசாரணை நடத்துவேன். ஊழல் விவகாரத்தில் ஆரம்பம் முதல் ஒவ்வொரு முறையும் சி.பி.ஐ. தானாகவே எந்த நடவடிக்கையும் எடுக்கவே இல்லை. அவர்களுக்கு எஜமானர் மத்திய அரசுதானே... அதனால், கொஞ்சம் மந்தமாகத்தான் செயல்பட்டார்கள். நான்தான் கோர்ட் மூலம் உத்தரவுகளைப் பெற்று சி.பி.ஐ-யை விரைவாகச் செயல்படவைத்தேன். வழக்கு விசாரணையில் எங்காவது சி.பி.ஐ. தவறு செய்தால், நான் விட மாட்டேன்.''
''சோனியா காந்தி பற்றி பேச்சே இல்லையே?''
''அதுதான் புதிராக இருக்கிறது. அவருக்கு வெளிநாட்டில் ஆபரேஷன் என்று மட்டும் தகவல் சொல்லப்பட்டது. வேறு எந்த விவரமும் வெளியிடப்படவில்லை. பிரதமருக்கு ஹார்ட் ஆபரேஷன் நடந்தபோது, தினமும் அவரது உடல்நிலை பற்றி ஆஸ்பத்திரி தகவல் வெளியிட்டது. வாஜ்பாய் அவரது முழங்காலில் ஆபரேஷன் செய்துகொண்டபோதும், தகவல்கள் வெளிவந்தன. ஆனால், சோனியா விஷயத்தில் இதுவரை எதுவுமே வெளியிடப்படவில்லை. போனில்கூட அவர் பேசவில்லை. வீடியோ கான்ஃபெரன்ஸ் வசதி எல்லாம் உள்ள இந்தக் காலத்தில் சோனியா ஏன் இதைப் பயன்படுத்தவில்லை என்பதுதான் புரியவில்லை.''
''ஊழலை எதிர்த்து நீங்கள் நடத்தும் சட்டப் போராட்டத்துக்கு அண்ணா ஹஜாரே ஆதரவு தருவாரா?''  
''ஊழலை ஒழிக்க மூன்று வகையான நடவடிக் கைகள் எடுக்கப்பட வேண்டும். ஒன்று, இரும்புப் பிடி சட்டம் இயற்ற வேண்டும். இதைத்தான் அண்ணா வலியுறுத்துகிறார். இரண்டாவது, ஊழலை ஒழிக்க ஏற்கெனவே உள்ள சட்டத்தை முடுக்கி வெற்றிகரமாக செயல்படுத்தவைக்க வேண்டும். இதைத்தான் நான் செய்கிறேன். மூன்றாவது, ஊழல் விஷயத்தில் மக்களின் அணுகுமுறை முற்றிலும் மாற வேண்டும். காசுக்காக ஆசைப்பட்டு குறுக்கு வழியில் போகிற மனோபாவம் மாறுவதற்கு ஆன்மிக மறுமலர்ச்சி வர வேண்டும். அப்போதுதான், ஊழல்கள், தவறுகள் செய்ய யாருக்கும் மனம் இடம்கொடுக்காது. இதை செய்ய நம் நாட்டில் உள்ள சாமியார்களும், சாதுக்களும் முன்வர வேண்டும்!''
****************************************************************************
அம்மா... இன்னொரு எம்.ஜி.ஆர். தான்!

விழுந்து வணங்கிய வேலூர்

டுக்களையும் வருத்தங்களையும் மட்டுமே சுமந்தவர்களின் முகங்களில் சட்டென வசந்தக் காற்று வீசினால் எப்படி இருக்கும்? சென்னை உயர் நீதிமன்றம், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் தூக்குத் தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்தபோது அப்படித்தான் இருந்தது. நீதிபதிகள் நாகப்பன், சத்யநாராயணா இருவரும் எட்டு வாரங்களுக்கு இடைக்காலத் தடை என அறிவித்ததும், நீதிமன்ற வளாகமே ஆரவாரித்தது. சீனியர் வழக்கறிஞர்கள் சிலர், ''இது நீதிமன்றம் என்பதை மறந்துவிட வேண்டாம்!'' எனக் கோபம் காட்ட, நீதிபதிகளே 'இது மக்களின் உணர்வு’ எனக் கை காட்டி அந்த ஆரவாரத்தை ரசித்தார்கள்.
வெற்றி முழக்கம், இனிப்புப் பகிர்வு, நன்றி அறிவிப்புகள் எனத் தமிழகம் முழுக்க ஆனந்தக் கொண்டாட்டம்.
இந்த இடைக்காலத் தடை உத்தரவு, மரண வாசலில் திக்திக் இதயத்தோடு நிற்கும் பேரறிவாளன்,முருகன், சாந்தன் மூவருக்கும் மறுஜென்ம நிறைவைக் கொடுத் திருக்கிறது. சிறைக் கண்காணிப்பாளர் அறிவுடைநம்பி, இந்த இடைக்காலத் தீர்ப்பு அறிவிப்பை முதலில் பேரறி வாளனிடம் சொல்லி இருக்கிறார். 'நிச்சயம் தடை கிடைச்சிடும்னு நம்பிக்கை இருந்துச்சு. உடனே, இதை முருகன், சாந்தன்கிட்டயும் சொல்லுங்க சார்!’ எனத் துள்ளி இருக்கிறார் அறிவு.
9-ம் தேதி தூக்கு என நாள் குறிக்கப்பட்டதுமே, மூன்று பேரும் உயர் பாதுகாப்புத் தொகுதியில் தனித் தனியாக அடைக்கப்பட்டார்கள். 50-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டார்கள். திடீரென 'ஏ கிளாஸ்’ உணவு மூவருக்கும் வழங்கப்பட்டது. மெடிக்கல் செக்கப், ஒயிட் அண்ட் ஒயிட் உடை எனத் தூக்குத் தண்டனையை நினைவுபடுத்தும் அனைத்து வேலைகளும் நடந்தபடியே இருந்தன. ''நீங்கள் இறந்த பிறகு, உங்கள் உடலை யாரிடம் ஒப்படைக்க வேண்டும்?'' என்கிற கேள்வியும் சிறைத் துறை வழக்கப்படி கேட்கப்பட்டது.
பேரறிவாளன் தனது தாய் அற்புதத்தம்மாளிடம் உடலை ஒப்படைக்கச் சொல்லி எழுதிக் கொடுத்தார். முருகனும் சாந்தனும் 'எங்களுக்காக எல்லாவிதப் போராட்டங்களையும் முன்னெடுக்கும் சீமான் அண்ணனிடம் ஒப்படையுங்கள்’ என எழுதிக் கொடுத்தார்கள்.
''போர்க் குற்றத்தைக் கண்டித்து சட்ட மன்றத்தில் தீர்மானம் இயற்றிய முதல்வர் நிச்சயம் நம் விஷயத்தில் தலையிட்டு, நல்ல தீர்வைக் கொடுப்பார்!'' என தூக்குத் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே பேரறி வாளன் சொல்லி வந்தாராம். இடைக்காலத் தடையோடு சட்டமன்றத்தில் தூக்குத் தண்ட னையைக் குறைக்க வலியுறுத்தும் தீர்மானமும் இயற்றப்பட, ''ஈழத்துக்கு எம்.ஜி.ஆர். எப்படி உதவினாரோ, அந்த அளவுக்கு முதல்வர் அம்மாவும் உதவுறாங்க. இன்னொரு எம்.ஜி.ஆர்-னா அது அம்மாதான்!'' எனக் கொண்டாடி இருக்கிறார் முருகன். சட்ட மன்றத் தீர்மானம், இடைக்காலத் தடை குறித்து சொல்லப்பட்ட பிறகுதான், சாந்த னின் முகத்தில் கொஞ்சம் புன்னகை.
நீதிமன்றத்தில் ராம் ஜெத்மலானி உள்ளிட்டோர் வாதாடி முடித்த பிறகு வைகோ எழுந்தார். ''மூன்று பேரையும் தனிமைச் சிறையில் இருந்து உடனடியாக விடுவிக்க வேண்டும்!'' எனச் சொல்ல, அதற்கும் உடனடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாம். ம.தி.மு.க. சட்டப் பிரிவுச் செயலாளர் தேவதாஸ் மூலமாக, வழக்கறிஞர்கள் காலின் கான்சிவேல்ஸ், சபரீசன் ஆகியோரை வேலூர் சிறைக்கு அனுப்பிவைத்தார் வைகோ. திருவள்ளூர் மாவட்டச் செயலாளரான செங்குட்டுவன், வழக்கறிஞர்கள் மொகித் சவுத்ரி, பாரி, மலர் ஆகியோரை சிறைக்கு அழைத்துப் போனார். பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவரையும் சந்தித்த வழக்கறிஞர்கள், ''தூக்குத் தண்டனைக்கு எதிரான விஷயமாகத்தான் இந்த வழக்கைக் கையில் எடுத்தோம். ஆனால், நீதிமன்றத்திலும் சாலைகளிலும் திரண்டு இருந்த மக்களின் ஏகோபித்த உணர்வைப் பார்த்து சிலிர்த்துப்போனோம். இந்த மூவருடைய தூக்குத் தண்டனைக்கு எதிராக ஒரு மாநிலமே கைகோத்து நிற்பது ஆச்சர்யமாக இருக்கிறது. இந்த வழக்கில் ஆஜரானதற்காகப் பெருமிதப்படுகிறோம்!'' எனச் சொல்ல, மூவருக்கும் கண் கலங்கிவிட்டது.
சிறைக்குள் மூவருடைய மனநிலையும் எப்படி இருந்தது என்பது குறித்து அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். ''தூக்கு நாள் நெருங்கியதை நினைத்து, அவர்கள் பயப்படவில்லை. ஆனாலும், தூக்குத் தண்டனைக்கான சம்பிரதாயங்களை நாங்கள் நடத்தியபோது, பதற்றமானார்கள். இதேபோன்ற சம்பிரதாயங்கள் இந்த மூவருக்கும் தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டபோதே ஒரு முறை நடத்தப்பட்டது. இதற்கிடையில் செங்கொடி தீக்குளித்து இறந்த செய்தி கேட்டு மூவரும் உடைந்துபோனார்கள். 'அந்தக் குடும்பத்துக்கு நாங்க என்ன செய்யப்போறோம்’ எனக் கலங்கிய பேரறிவாளனைத் தேற்றவே முடிய வில்லை. முருகனும் சாந்தனும், 'எங்களுக்காக இனியும் யாரும் சாக வேண்டாம். சீக்கிரமே எங்க கதையை முடிச்சிடுங்க சார்... எங்களுக்காக தீக்குளிச்ச தங்கச்சியோட முகத்தைக்கூட பார்க்க முடியாமப்போச்சே’ எனப் புலம்பினார்கள். இடைக்காலத் தீர்ப்பு, சட்டமன்றத் தீர்மானம் என இரட்டிப்பு சந்தோஷம் கிடைத்தும், செங்கொடி மரணத்தால் அந்த மூவரும் பெரிதாக மகிழவில்லை. பேரறிவாளனும் முருகனும் 'நன்றி தாயே’ என உரக்கக் குரல் எழுப்பினார்கள். மூன்று பேரும் ஒன்றாக அமர்ந்து முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதினார்கள். திங்கள் கிழமை தங்களை சந்திக்க வரும் சீமான் மூலமாக கடிதத்தை முதல்வர் கையில் சேர்க்கப்போகிறார்கள். நன்றிகளால் அந்தக் கடிதம் நிரம்பி இருக்கிறது!'' என்றார்கள் சிறைத் துறை அதிகாரிகள் சிலர்.
மூவரையும் சந்தித்துவிட்டுத் திரும்பிய வழக்கறிஞர்கள் சிலர், ''ராஜீவ் கொலை வழக்கில் சிக்கியவர்கள் 20 வருடங்களாக தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். தனிமைச் சிறையின் கொடுமையை முன்னுதாரணமாகக் காட்டியே குற்றவாளிகளுக்குத் தண்டனை குறைப்பு செய்யப்பட்ட சம்பவங்கள் நிறைய இருக்கின்றன. எட்டு வார காலத் தடைக்குப் பிறகு, நீதிமன்றத்தில் இந்த வாதத்தை  வலியுறுத்துவோம். அதேபோல், ஆயுள் தண்டனைக் கைதிகளாக இருக்கும் ராபர்ட் பயஸ், நளினி, ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர் 20 வருடங்களாக உள்ளே இருக்கிறார்கள். அப்படி என்றால், ஆயுள் தண்டனையின் கால அளவு எத்தனை வருடங்கள்? அடுத்த கட்ட சட்டப் போராட்டங்களில் இத்தகைய வாதங்களையும் எடுத்துவைப்போம்!'' என்கிறார்கள்.
இதற்கிடையில் இன்னும் சில உணர்வாளர்களோ, ''செப்டம்பர் 15-ம் தேதி அண்ணா பிறந்த நாளில், சிறைகளில் இருந்து யார் யாரை எல்லாம் விடுவிக்கலாம் என்கிற ஆய்வு நடக்கிறது. ராஜீவ் கொலை வழக்கில் சிக்கியவர்களின் பெயர்களும் பரிசீலனைப் பட்டியலில் இருக்கின்றன. போர்க் குற்றத்தை எதிர்த்தும், தூக்குத் தண்டனையைக் குறைக்கச் சொல்லியும் தீர்மானம் இயற்றிய முதல்வர் ஜெயலலிதா, ஆயுள் தண்டனையைக் கடந்தும் சிறையில் வாடுபவர்களை மீட்டால், அது காலத்துக்கும் மறவாத சாதனையாக இருக்கும்!'' என்கிறார்கள் நம்பிக்கையோடு.
ஆச்சர்ய மாற்றங்கள் தொடரும் என நம்புவோம்!

''கிருஷ்ண ஐயரின் வாசகத்துக்கு உயிர் கொடுங்கள்..!''

தமிழருவி மணியன்
கடிதம்

மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு... வணக்கம்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழவும், நீங்கள் முதல்வர் நாற்காலியில் மீண்டும் அமர்ந்து அரசின் அதிகார மையத்தில் பரிபாலனம் நடத்தவும் வாக்களித்த மக்களின் உணர்வுக்கு மதிப்பு அளித்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு தீர்மானங்களைச் சட்டமன்றத்தில் நிறைவேற்றியதற்காக முதலில் என் நெஞ்சார்ந்த நன்றி மலர்களைச் சமர்ப்பிக்கிறேன்.
ஈழத்தில் நடந்த இனப் படுகொலையில் இந்திய அரசுக்கு மிகப் பெரிய பங்கு உண்டு என்பது பொய்யின் நிழல் படாத நிஜம்.  மன்மோகன் அரசுக்கு மனம் நோகும் என்று தயங்காமல், சோனியா காங்கிரஸுக்குக் கோபம் கொப்பளிக்கும் என்று அஞ்சாமல், 'இலங்கையின் மீது பொருளா தாரத் தடை விதிக்க வேண்டும்’ என்று நீங்கள் ஒருமனதாக ஓர் அற்புதமான தீர்மானம் நிறைவேற வழி வகுத்ததன் மூலம், உலகத் தமிழர்களின் நெஞ்சங்களில் உயர்ந்த இடத்தை அடைந்தீர்கள்.
சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதோடு நின்றுவிடாமல், முதல்வர் என்கிற முறையில் பிரதமரை நேரில் சென்று சந்தித்தபோதும், ஈழத் தமிழருக்கு அரசியல் தீர்வு கிடைக்கவும், தமிழக மீனவர் மீது சிங்களர் நடத்தும் தாக்குதலைத் தடுக்கவும் உங்கள் கருத்துகளை அழுத்தமாகப்பதிவுசெய்து உங்கள் ஆளுமையை வெளிப்படுத்தினீர்கள். பல்லாண்டுகள் அகதி முகாம்களில் அல்லலுற்றுத் தவிக்கும் ஈழத் தமிழருக்கு, நலிவுற்ற தாயகத் தமிழருக்கு வழங்கப் படும் சலுகைகள் அனைத்தையும் வழங்கி இருண்டுகிடக்கும் அவர்களுடைய இல்லங்களில் ஓரளவு வெளிச்ச விளக்கை ஏற்றிவைத்தீர்கள்.
பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவருடைய கருணை மனு நம் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டதும், செப்டம்பர் 9-ம் நாள் அவர்கள் தூக்கிலிடப்படுவார்கள் என்று தேதி குறிக்கப்பட்டதும், அமைதியை நாடும் தமிழினம் மாநிலம் எங்கும் ஆர்ப்பரித்து எழுந்தது. மத்தியில் ஆள்வோரின் மரணப் பசிக்கு மூன்று உயிர்களை இரையாக்க நீங்கள் எந்த நிலையிலும் அனுமதிக்கலாகாது என்று ஒட்டுமொத்தத் தமிழினமும் ஓங்கிக் குரல் கொடுத்தது. இளைஞன் முத்துக்குமாரைப்போல் செங்கொடி என்ற இளம் சமூகப் போராளிப் பெண், மூவர் உயிரைக் காக்க தீரத்துடன் தீக்குளித்து நெருப்பில் வெந்து நீறானாள். அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் நீங்கள் முன்வந்து மூன்று பேரையும் காக்க வேண்டும் என்று கனிவுடன் கை கூப்பி வேண்டினர்.
'' 'பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் கருணை மனு ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்ட நிலையில், இதனை மாற்றுவதற்கு எந்தவித அதிகாரமும் மாநில முதலமைச்சர் என்ற முறையில் எனக்கு இல்லை’ என்று சட்டப்பேரவையில் நீங்கள் கை விரித்தபோது, தமிழகம் கலங்கித் தவித்தது. 'ஜனாதிபதியால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட பின்பு, மீண்டும் அதே பொருள் தொடர்பான கருணை மனுவை மாநில கவர்னர் பரிசீலிக்க வேண்டும் என்று மாநில அரசு கோர முடியாது’ என 1991-ல் மத்திய அரசு தெளிவுரை வழங்கி உள்ளது!'' என்று கூறி நீங்கள் இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றபோது, தமிழரின் நம்பிக்கை தளர்ந்துபோனது. ஆனால், சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையும், சட்டமன்றத்தில் நீங்கள் நிறைவேற்றிய இரண்டாவது தீர்மானமும் பாளம் பாளமாய் வெடித்துக்கிடந்த வறண்ட நிலத்தில் வான் மழை வந்து விழுந்ததுபோன்ற உணர்வை ஊட்டின. சட்டத்தின் சந்நிதானத்தில் விழி மூடிக்கிடந்த நீதி தேவதை முற்றாகத் தூங்கிவிடவில்லை. உங்களுடைய நெஞ்சத்தில் நிழலாடும் நியாய உணர்வும் நிறம் மாறவில்லை. மக்களின் விருப்பத்துக்கு நீங்கள் வளைந்து கொடுத்ததில் 'ஜனநாயகம்’ நிமிர்ந்துவிட்டது.
அறிவார்ந்த முதல்வரே... நீங்கள் சட்டம் படித்து ஒரு சிறந்த வழக்கறிஞராக சமுதாய வீதியில் வலம் வர பள்ளிப் பருவத்தில் கனவு கண்டதாக ஒரு நேர்காணலில் பதிவு செய்து இருக்கிறீர்கள். அந்தக் கனவு நிறைவேறி இருந்தால், நிச்சயம் நீங்கள் முதல்வராகி இருக்க முடியாது. முறை யாக நீங்கள் சட்டக் கல்லூரியில் சேர்ந்து படிக்காவிடினும், சட்டத்தின் கூறுகளைச் சரியாகப் புரிந்துகொள்ளும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. அரச மைப்புச் சட்டம், அநியாயமாக மனித உயிர் பறிக்கப்படலாகாது என்ற விழிப்பு உணர்வின் விளைவாக ஏற்படுத்திய பாதுகாப்புக் கவசம்தான், ஜனாதிபதிக்கும் ஆளுநருக்கும் வழங்கி இருக்கும் கருணை காட்டும் உரிமை. (ART.72, ART.161). உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் வழங்கிய தீர்ப்பில் (MARU RAM VS UNION OF INDIA, AIR 1980)'அரசமைப்புச் சட்டத்தின் 72-வது பிரிவும், 161-வது பிரிவும், மத்திய, மாநில அரசுகளால் செயற்படுத்தப்பட வேண்டும். ஜனாதிபதியோ, ஆளுநரோ தன்னிச்சையாகச் செயற்படுத்த முடியாது’ என்று தெளிவுபடுத்தி இருக்கிறது.
'ஜனாதிபதியால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட பின்பு, அதை மாற்றும் அதிகாரம் எனக்கு இல்லை’ என்று நீங்கள் சொல்கிறீர்கள்.  ஆனால், உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற பின்பும் சமூக அநீதிகளுக்கு எதிராக ஓயாமல் போராடி வரும் முதிர்ந்த போராளி வி.ஆர்.கிருஷ்ண ஐயர் உங்களுக்கு வரைந்த கடிதத்தின் வாசகங்களை உங்கள் நினைவில் நிறுத்த வேண்டுகிறேன்.
'ஜனாதிபதியால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ஆளுநர் அதே விவகாரத்தில் கருணை மனுவை அங்கீகரிப்பது முறையன்று. ஆனால், ஜனாதிபதியோ, ஆளுநரோ ஒருமுறை நிராகரித்த கருணை மனுவின் மீது மீண்டும் மறுபரிசீலனை செய்ய வாய்ப்பு உண்டு. மத்திய அரசின் உள்துறைச் செயலர் கருணை மனு நிராகரிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டி ஜனாதிபதிக்கு விண்ணப்பம் வைத்தால், அதை அவர் ஏற்றுத் தண்டனைக் குறைப்பை வழங்க முடியும். ஒரே ஒரு முறைதான் கருணை மனு மீது ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க முடியும் என்று அரசமைப்புச் சட்டம் கட்டுப்படுத்தவில்லை’ என்று கிருஷ்ண ஐயர் உங்களுக்குத் தெளிவுபட எழுதி இருக்கிறார். இப்போது மூவரின் மரணக் கயிறுகளை அறுத்து எறியும் கத்தி 'நம் தமிழர்’ ப.சிதம்பரத்தின் அமைச்சகத்திடம் இருக்கிறது. உள்துறை அமைச்சரை நிர்ப்பந்திக்கும் இடத்தில் மன்மோகன் இருக்கிறார். தமிழகத்தின் கொந்தளிப்பைப் பிரதமருக்கு மிகச் சரியாக உணர்த்திடும் ஆற்றல் உங்களுக்கு இருக்கிறது. அதனால், நல்ல முடிவு கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
'பரவலாக மக்களிடையே பெருக் கெடுக்கும் உணர்வுகளுக்கும், அபிப் ராயத்துக்கும் உரிய மதிப்பு அளித்துத் தண்டனைக் குறைப்பைத் தருவதில் தவறு இல்லை. குற்றம் சாட்டப்பட்டவர் மீது அனுதாபத்தையும், சட்டத்தின் மீது எதிர்ப்பு உணர்வையும் எழச் செய்யும் தண்டனையால் சமுதாயத்துக்கு நன்மையைவிட தீமையே வந்து சேரும்’ (LAW COMMISSION REPORT பக்கம் 328) என்று சட்ட கமிஷன் அறிக்கை சொல்கிறது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் மூவருக்கும் நியாயம் கிடைக்கும் என்று முழுமையாக நாங்கள் நம்புகிறோம். மதுமேத்தா - இந்திய அரசு வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், 'கருணை மனு எட்டு ஆண்டுகளுக்குப் பின்பு நிராகரிக்கப்பட்டதன் மூலம், குற்றம் இழைத்ததற்கான மரண தண்டனை பெற்ற கியாஸிராம் என்பவர் மரணத்தின் நிழலில் நீண்ட காலம் மன உளைச்சலோடு வாழ்வைக் கழித்திருக்கிறார்’ என்று சுட்டிக்காட்டி, அவருடைய மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியது. (MADU MEHTA VS UNION OF INDIA) உச்ச நீதிமன்றம் ஒருவருக்கு மரண தண்டனையை உறுதிசெய்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பும் தண்டனை நிறைவேற்றப்படாவிடில், அதை ஆயுள் தண்டனையாக மாற்றிய தீர்ப்புகள் பல உண்டு. நீதிமன்றத்தில் விவாதிக்கப்படும் வழக்கில், நீங்களோ, நானோ விமர்சனத்தில் இறங்க முடியாது. என் கடிதத்தின் நோக்கமும் அதுவன்று.
பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவரும் சிறைக் கம்பிகளில் இருந்து விடுபட, நீங்கள் உங்கள் அரசியல் ஆளுமையை உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் பயன்படுத்த வேண்டும். ராஜீவ் காந்தி படுகொலையில் இந்த மூவரின் பங்களிப்பு ஐயத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை. ஆனாலும், அவர்கள் மூவரும் 20 ஆண்டுகளுக்கு மேல் சிறைக்குள்ளேயே வாழ்வின் வசந்தமயமான இளமையை முற்றாக இழந்துவிட்டார்கள். ஆயுள் தண்டனையைவிடவும் கூடுதலாக அவர்கள் அனுபவித்துவிட்டார்கள். சட்டத்தின் நோக்கம் குற்றம் செய்தவரை திருத்துவதேயன்றி, தீர்த்துக் கட்டுவது அன்று.
முதல்வரே... நீங்கள் வைணவ சம்பிரதாயத்தில் ஆழ்ந்த நம்பிக்கைகொண்டவர். 'ஒரு மனிதன் வீதியில் அடிபட்டு விழுந்துகிடந்தால், விழுந்து கிடப்பவன் வேறு யாரும் அல்ல; அது நான்’ என்று உணர்பவனே வைணவன் என்கிறது இராமாநுஜ தரிசனம். சிலுவையில் அறைந்தவர்களுக்குப் பாவ மன்னிப்பு வேண்டிய பெருங்கருணையாளர் கர்த்தர் இயேசு. தன்னுடைய சிறிய தந்தை ஹம்ஸாவின் உடலைப் பிளந்து ஈரலைச் சுவைத்த ஹிந்தாவையும், அருமை மகள் ஜைனப்பை ஈட்டியால் குத்திய ஹப்பாரையும், கைபர் விருந்தில் நஞ்சு கலந்த யூதப் பெண்ணையும் மன்னித்த அருளாளர் நபிகளார். கோட்சேவையும் மன்னிக்கும் மனம்கொண்ட காந்தியின் பெயரில் கடை விரித்த நம் உள்ளூர் காங்கிரஸ்காரர்களுக்கு மட்டும் மன்னிக்கும் மனோபாவம் வாய்க்கவே இல்லை. 'சட்டம் கடமையைச் செய்யட்டும்’ என்று சொல்பவர்கள், சட்டம் ஒழுங்காக கடமையைச் செய்திருந்தால் பல சங்கடங்களுக்கு ஆளாகி இருப்பார்கள் என்பதை நான் அறிவேன். அவர்களோடு மட்டும் எந்தச் சூழலிலும் 'கை’கோத்துவிடாதீர்கள். தமிழின விரோதிகள் இன்று ஆதரிப்பாரற்று அரசியல் அனாதைகளாகிவிட்டனர். காங்கிரஸைத் தவிர அனைத்துக் கட்சிகளும் மூவர் விடுதலைக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பதைக் கவனியுங்கள். தூக்குத் தண்டனை இனி யாருக்கும் இருக்கலாகாது என்று முடிவெடுத்துச் செயற்படுங்கள். சரித்திரம் என்றும் உங்களுக்கு நீங்காத இடத்தைத் தேடித் தரும்.
'வாழ்க்கை புனிதமானது. அதை பறிப்பது அரக்கத்தனமானது’ என்ற கிருஷ்ண ஐயரின் அர்த்தமுள்ள வாசகத்துக்கு உயிர் கொடுங்கள். ஆட்சி மாற்றம் நிகழ வேண்டும் என்று எழுத்திலும் பேச்சிலும் கருத்து யுத்தம் நடத்தியவன் நான். அதற்காக, நீங்கள் முதல்வரானதும் போயஸ் தோட்டத்தில் பூங்கொத்துக் கொடுக்க வரிசையில் நான் வந்து நிற்கவில்லை. அது என் சுதர்மத்துக்கும் சுய மரியாதைக்கும் தகாது. மரண வாசலில் நிற்கும் மூவருக்கும் மறு வாழ்வு கொடுங்கள். தமிழர் கூட்டம் தன் நன்றி செலுத்த உங்கள் வாசல் தேடிப் பூங்கொத்துகளுடன் வந்து நிற்கும். அந்த வரிசையில் நிச்சயம் நானும் நிற்பேன்.

பொன்முடி 'கைது' எதற்காக?

திக்திக் உயர் கல்வி விவகாரம்...

''ஜெயலலிதாவின் டார்​கெட் லிஸ்ட்டில் பிரதான ஆள் முன்னாள் அமைச்சர் பொன்முடிதான்!'' என்பார்கள் போலீஸ் வட்டாரத்தில். ஆனாலும், தி.மு.க-வின் வி.ஐ.பி-க்கள் பலரும் சிறைக்கு அணிவகுப்பு நடத்திய நிலையில், பொன்முடி மட்டும் பந்தாவாக உலா வந்தது பலரையும் ஆச்சர்யப்படுத்தியது. 'சின்னம்மா ரூட்ல பேசி சமாதானம் ஆகியாச்சு’ என்றுகூட செய்தி பரவியது. இந்த செய்தி கார்ட​னுக்கும் கசிந்ததோ என்னவோ... கைது நடவடிக்கை பொன்முடி மீதும் பாய்ந்துவிட்டது.
பெரியாரால் அரசியலுக்கு இழுக்கப்பட்டு, தி.க-வின் நட்சத்திரப் பேச்சாளராக மாறிய முன்னாள் அமைச்சர் பொன்முடி, தற்போது 'தந்தை பெரியார் நகர்’ என்ற இடத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக கைதுக்கு ஆளாகி இருப்பதுதான் வேடிக்கை.
2007-ம் ஆண்டு விழுப்புரம் - திருச்சி தேசிய நெடுஞ்​சாலையில் உள்ள தந்தை பெரியார் நகரில், போக்கு​வரத்து ஊழியர்களுக்காக வீடு கட்டிக் கொடுக்க, இடம் தேர்வு செய்யப்பட்டது. அங்கே ஊழியர்களின் பி.எஃப். பணத்தில் இருந்து 393 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. அந்தக் குடியிருப்பில் பூங்கா, பள்ளிக்​கூடம், மைதானம் அமைக்க இடம் ஒதுக்கப்பட்டு, சமுதாய நலக்கூடமும் அமைக்கப்பட்டது. அந்த இடத்தை விற்கவோ, வாங்கவோ கூடாது. இருப்​பினும் அப்போதைய மதிப்பின்​படி சதுரஅடி  300 போகக்கூடிய நிலத்தை, வெறும்  100 கொடுத்து, சுமார் 60,000 சதுர அடிகளில் இருந்த பூங்கா, பள்ளி மைதானத்தை பொன்முடிக்குச் சொந்தமான 'சிகா அறக்கட்டளை’ வாங்கியதா£கத்தான் இந்தக் கைது.
கடந்த 31-ம் தேதி காலை 8 மணிக்கே, 'பொன்முடி கைது செய்யப்படப் போகிறார்’ என்ற செய்தி பரவ, விழுப்புரம் சண்முகாபுரம் காலனியில் உள்ள அவரது வீட்டின் முன்னால், தி.மு.க-வினர் குவியத் தொடங்கினர். மதிய நேரத்தில் இரண்டு டி.எஸ்.பி-க்கள், ஒரு இன்ஸ்பெக்டர், பொன்முடியின் வீட்டுக்குள் சென்றனர். பொன்முடி மற்றும் வழக்​கறிஞர்களுடன் வாக்குவாதம் நீண்ட நேரம் நடந்தது. அதன் பின்னரே, பொன்முடி போலீஸாருடன் கிளம்பினார்.
திண்டிவனம், ஜே.எம்-2  மாஜிஸ்திரேட் சந்தோஷ் முன்னிலையில் பொன்முடி ஆஜர்படுத்தப்பட, சேலம் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார் நீதிபதி. 'தனக்கு உடல்நிலை சரி இல்லை... கடலூர் சிறையில் அடைக்க வேண்டும் என்று பொன்முடி கேட்டுக்கொண்டதை, மாஜிஸ்திரேட்ஏற்றுக்கொண்டார். உடனே, கடலூர் மத்திய சிறைக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர். ஆனால், 'அங்கு இடம் இல்லை’ என சிறைக் கண்காணிப்பாளர் சொல்லி, அதற்​கான ஆதார லெட்ஜரையும் பொன்முடியிடம் காட்டி​னார். எப்படியாவது பொன்முடியை சேலம் மத்திய சிறைக்குக் கொண்டுசெல்ல வேண்டும் என்று ஏற்பாடுகள் நடந்தன.
ஆனால், பொன்முடி பிடிவாதமாக, 'நான் சேலம் செல்ல மாட்டேன், கடலூர் சிறையில்தான் இருப்பேன்’ என்று சொல்லி, தனது ஆதரவாளர்களுடன் சாலை மறியலில் இறங்கிவிட்டார். பேச்சுவார்த்தை இழுத்துக்​கொண்டே போகவே ஒரு கட்டத்தில் பொன்முடி, 'என்னை நாளைக்கு வேண்டுமானால் சேலம் சிறைக்குக் கொண்டு செல்லுங்கள். இன்று செல்ல என்னுடைய உடல் ஒத்துழைக்காது. எனவே, இன்று ஒரு நாளாவது இங்கே தங்குவதற்கு அனுமதி​யுங்கள்’ என்று கேட்டுக்கொண்டார். வேறு வழியின்றி, அவரை கடலூர் சிறையிலேயே அடைத்தனர்.
பொன்முடியின் மனைவி விசாலாட்சி நடக்கும் சம்பவங்​களைப்பார்த்து கலங்கிப்போய்அழுதார். 'நாங்க என்ன கல்யாணத்​துக்கா வந்திருக்கோம். இப்படி போட்டி போட்​டு போட்டோ எடுக்​குறீங்க...?’ என்று கடுகடுத்தார் பொன்முடி.
போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தபோது, ''பொன்முடி தலையிட்டு நெருக்கடி கொடுத்த காரணத்​தால்​​தான், 'பல கோடிகள் போகக்கூடிய நிலத்தை, குறைந்த விலைக்குக் கொடுத்துவிட்டார்கள்’ என்று குடியிருப்போர் நல சங்கத் தலைவர் நாராயணசாமி, நில அபகரிப்புத் தடுப்பு கமிட்டி போலீஸுக்கு மனு கொடுத்தார். அதன் பேரில், இரண்டு நாளைக்கு முன்னாடி சாந்தியை வரவழைத்து விசாரித்தோம். 'பொன்முடிதான் இந்த இடத்தை மிரட்டி வாங்கினார்’னு அந்த அம்மா சொன்னதும், அவரது வாக்குமூலத்தைவைத்து பொன்முடியைக் கைது செய்துள்ளோம்!'' என்றனர்.
கைது விஷயம் தெரிந்ததுமே ஸ்டாலினைத் தொடர்புகொள்ள நினைத்த பொன்முடி, ஒரு கட்டத்தில் என்ன நினைத்தாரோ... 'ஏற்கெனவே தளபதிகிட்ட போலீஸ் மூவ் பற்றி பேசிட்டேன். தலைவர்கிட்ட பேசலாம். ஆனால், அவர் சங்கடப்படுவார்...’ என்று தொடர்புகொள்வதை நிறுத்திக்கொண்டார். சண்முகநாதன் குடும்ப திருமண விழாவுக்கு வரும்போது பொன்முடியிடம் கட்சி விவகாரங்கள் குறித்துப் பேச கருணாநிதி நினைத்திருந்தாராம். இதற்கிடையிலேயே பொன்முடி வளைக்கப்பட, கருணாநிதிக்கு ஏக வருத்தம்.
உயர் கல்வித் துறையில் கருணாநிதி குடும்ப உறவு​களின் தலையீடுகள் இருந்ததாக, தற்போதைய உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன், கார்ட​னுக்கு விளக்கமாக எழுதி இருக்கிறார். அதனால், பெயர​ளவில் நில விவகாரத்தில் கைது செய்யப்பட்​டாலும் விசாரணை வேறு மாதிரியாகத்தான் இருக்குமாம்!

''நீதி அரசர்களுக்கு நன்றி!''

உயர் நீதிமன்றத்தைக் கலக்கிய தமிழ் ஆர்வலர்கள்!

சென்னை உயர் நீதிமன்ற வரலாற்றில், ஒரு தீர்ப்புக்கு ஆதரவாக மக்கள் வெள்ளம் இப்படி ஆர்ப்பரித்து ஆனந்த தாண்டவம் ஆடி இருக்குமா என்பது சந்தேகம்!
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரைத் தூக்கிலிட எட்டு வாரங்கள் இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதும், சந்தோஷத்தில் முழக்கம் இட்டும் கதறி அழுதும், கொண்டாடினர் பொதுமக்கள்.
குடியரசுத் தலைவரால் கருணை மனு நிராகரிக் கப்பட்ட நிலையில் மூவரின் உயிரையும் காப்பாற்ற அனைத்துத் தமிழ் அமைப்புகளும் ஆர்ப்பாட்டம், போராட்டம் மூலம் வேண்டுகோள் விடுத்ததோடு, சட்ட ரீதியிலான நடவடிக்கைகளிலும் தீவிரம் காட்டினர். பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, கடந்த 30-ம் தேதி விசாரணைக்கு வந்தது.
காலை 9 மணி முதலே கோர்ட் ஹால் 4-ல் வழக்கறிஞர்களும், உணர் வாளர்களும் ஆர்வமுடன் திரளத் தொடங்கினர். மூத்த வழக்கறிஞர்கள் ராம் ஜெத்மலானி, காலின் கான்சிலேஸ், மோகித் சௌத்ரி, வைகை ஆகியோருடன் வைகோ நுழைய... அதன் பிறகு அந்த கோர்ட்டுக்குள் அசையக் கூட இடம் இல்லாத அளவுக்கு நெட்டித் தள்ளியது கூட்டம்.
10.30 மணியளவில் நீதியரசர்கள் நாகப்பன், சத்தியநாராயணன் ஆகியோர் தங்கள் இருக்கையில் வந்து அமர... எங்கும் நிசப்தம். தன் இருக்கையில் இருந்து எழுந்த ராம் ஜெத்மலானி, ''தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட கைதியின் கருணை மனு மீது முடிவு எடுக்க மிக நீண்ட கால தாமதம் ஆனதற்காக அந்தக் கைதியின் தண்டனையைக் குறைத்து சுப்ரீம் கோர்ட் பல தீர்ப்புகளை வழங்கியுள்ளது. இந்த வழக்கில் ஜனாதிபதி முடிவு எடுக்க 11 ஆண்டுகள் 4 மாதங்கள் கால தாமதம் ஆகியுள்ளது. இந்த 11 ஆண்டுகளும் அந்தக் கைதிகள் தவித்த தவிப்புகளை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது!'' என்றவர், தூக்குத் தண்டனை பெற்றவர்களின் கடைசி நிமிடத் தவிப்புகள் குறித்து நான் ஒரு புத்தகம் எழுதியுள்ளேன். படித்துப் பாருங்கள்... என நீதிபதிகளுக்கு தான் எழுதிய ஒரு புத்தகத்தை படிக்கக் கொடுத்தார். தொடர்ந்து, ''சின்னப்ப ரெட்டி என்பவர் வழக்கில் இரண்டரை ஆண்டுகள் கால தாமதம் ஆனதற்காக, தூக்குத் தண்டனையைக் குறைத்து இருக்கிறது நீதிமன்றம். வழக்கு விசாரணையை விரைவாக முடிக்க வேண்டும் என்பது அரசியல் அமைப்பின் சட்ட அடிப்படை உரிமைகளுள் ஒன்று. ஆனால், ஜனாதிபதிக்கு ஐந்து நினைவூட்டல் கடிதம் அனுப்பியும், 11 ஆண்டுகளாக முடிவு எடுக்கவில்லை. எனவே, இந்தக் கால தாமதத்தையே மூன்று பேரின் தண்டனையை ரத்து செய்ய முக்கியக் காரணமாக எடுத்து ரத்து செய்ய வேண்டும்!'' என்று பொரிந்து தள்ளினார் ஜெத்மலானி.
அடுத்து, சாந்தன், முருகன் ஆகியோருக் காக காலின் கான்சிலேஸ், வைகை ஆகியோர் தங்கள் வாதங்களை எடுத்துவைத்தனர். இறுதியில், ''மனுதாரர்களின் கருணை மனு மீது முடிவு எடுக்க 11 ஆண்டுகள் ஆனதால், சட்டக் கேள்வி எழுந்துள்ளது. எனவே, இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறோம். மூவரையும் எட்டு வாரங்கள் தூக்கிலிடக் கூடாது. அதற்குள் மத்திய, மாநில அரசுகள் இந்த மனுவுக்குப் பதில் அளிக்க வேண்டும்!'' என்று நீதியரசர்கள் தீர்ப்பு கூற... கோர்ட்டுக்குள் இருந்து வெளியே ஓடிய இளைஞர் ஒருவர், ''எட்டு வாரம் ஸ்டே!'' என்று திரண்டு இருந்த கூட்டத்தை நோக்கி பெருங்குரலில் கத்தினார். அவ்வளவுதான்... கைகளை உயர்த்தியபடி மொத்தக் கூட்டமும் போட்ட வெற்றிக் கூச்சல் காற்றைக் கிழித்தது. கட்டுக்கடங்காத சந்தோஷத்தில் பழ.நெடுமாறனை ஒரு கும்பல் அலேக்காக தூக்க முயல... 'வேண்டாம்ப்பா’ என சிரமப்பட்டுத் தடுத்தார். கண்ணீரைத் துடைத்தபடி வெளியே வந்த பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள், ''உங்களுக்கு நான் எப்படி நன்றி சொல்லப்போறேன்னு தெரியலை. ஒட்டுமொத்தத் தமிழக மக்களுக்கும் எங்க குடும்பம் காலமெல்லாம் நன்றிக்கடன் பட்டு இருக்கு. தாய்த் தமிழகம் எங்களைக் கைவிடாது!'' என்று கூட்டத்தைப் பார்த்துக் கை கூப்ப... ஆர்ப்பரித்தது கூட்டம்!
தி.கோபிவிஜய்
படங்கள்: வீ.நாகமணி
 ''வைகோவுக்கு நன்றி சொல்லுங்கள்!''
நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த ராம் ஜெத்மலானியிடம், ''ஐயா உங்களுக்கு தமிழர்கள் சார்பில் நன்றி!'' என்று மொத்தக் கூட்டமும் முழக்கமிட்டது. ''உங்கள் நன்றியை வைகோவுக்குச் சொல்லுங்கள். அவர்தான் என்னை இங்கு அழைத்து வந்தார். இதற்கான பெரிய இயக்கத்தை அவர் தமிழகத்தில் நடத்தி வருகிறார்...'' என்று சொன்னார். இந்த நேரத்தில் தமிழக சட்டசபையில் ஜெயலலிதா நிறைவேற்றிய தீர்மானம்பற்றி தகவல் வந்தது. ''முதல்வர் ஜெயலலிதா வரலாற்றுப் புகழ் பெற்றுவிட்டார். இந்தியாவில் எந்த மாநில சட்டமன்றத்திலும் இதுபோன்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இல்லை. இதனால் உச்சி மேல் வைத்து மெச்சும் பெருமையை முதல்வர் பெற்றுவிட்டார். தமிழ் கூரும் நல்லுலகம் அவருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளது!'' என்று உணர்ச்சி வசப்பட்டுச் சொன்னார் வைகோ!

போட்டுத் தாக்கும் வடிவேலு

எனக்கு எதிரா 'அந்த ஆளு' கிணறு வெட்டுறார்!

''முதல்வர் ஜெயலலிதாவின் அதிரடியால் அபகரிப்பு நிலங்களை மீட்கும் பணிகள் துரிதமாக நடக்கின்றன. வைகைப் புயலே சம்பந்தப்பட்ட நிலத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டார்!'' - சட்டமன்றத்தில் சரத்குமார் சொன்ன புகழார வார்த்தைகள் இவை.  சென்னை புறநகர் போலீஸாரும், இதே விஷயத்தை மீடியாக்களிடம் சாதனையாகச் சொன்​னார்கள்.
மலேசியாவில் இருந்து அரக்கப் பறக்க ஓடி வந்த வடிவேலுவோ, ''நான் யாருக்கும் நிலத்தைத் திருப்பிக் கொடுக்கலையே...'' என்று பதறினார். உண்மையில் இந்த நில விவகாரத்தில் என்னதான் நடக்கிறது?
வடிவேலுவின் வழக்கறிஞர் அழ​கு ராமனிடம் பேசினோம். ''சம்பந்தப்பட்ட அந்த இடம் இப்போது வடிவேலுவின் மகன் பெயரில் இருக்கிறது. நிலத்துக்கான வில்லங்க சான்றிதழைப் பார்த்தாலே, இது தெரியும். 2009-ல் இருந்து அந்த நில விவகாரம் குறித்த வழக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அப்படி இருக்க, திடீரென அந்த நிலத்தை வடிவேலு திருப்பிக் கொடுத்ததாகச் சொல்வது எப்படி சாத்தியம்? நீதிமன்றத்தில் வழக்கு நடக்கையில் நாங்களே நினைத்தாலும், நீதிமன்ற கவனத்துக்குத் தெரியாமல் நிலத்தைத் திருப்பிக் கொடுக்க முடியாது. அப்படியிருக்க, வடிவேலு நிலத்தைத் திருப்பிக் கொடுத்தாகப் புகார்தாரர் சொல்வதும், போலீஸ் அதனைச் சாதனையாக வெளியிடுவதும் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்!
பழனியப்பன் என்பவர் புறநகர் போலீ​ஸாரிடம் புகார் கொடுத்ததுமே, அது குறித்த எந்த விசாரணைக்கும் வடிவேலு தயாராக இருந்தார். போலீஸ் அதிகாரிகளைச் சந்திக்க தனது மேனேஜரை அனுப்பி வைத்தார். 'நாங்கள் கூப்பிடும்போது, நீங்கள் வந்தால் போதும்’ எனச் சொல்லி மேனேஜரை அனுப்பியவர்கள், அதன் பிறகு அழைக்கவே இல்லை. வடிவேலுவிடம் பெயரளவில்கூட எவ்வித விசாரணையும் நடத்தாமல், நிலம் திருப்பி ஒப்படைக்கப்பட்டதாகச் சொல்வது அர்த்தமற்றது. சம்பந்தப்பட்ட அந்த நிலத்தில் இரு காவலாளிகளை வடிவேலு நியமித்து இருந்தார். அவர்கள் இல்லாத நேரத்தில், பூட்டை உடைத்து வேறு பூட்டு போடப்பட்டு இருக்கிறது. இதனைத் தடுத்திருக்க வேண்டிய போலீஸ், வடிவேலுவின் காவலாளிகளையே கைது செய்தது. இப்போதும், அந்த நிலம் குறித்த எல்லா விவரங்களையும் போலீ​ஸாரிடம் சொல்ல நாங்கள் தயாராக இருக்கிறோம். உரிய விசாரணை நடத்தப்பட்டாலே, இதில் வடிவேலு அப்பாவி என்பது அப்பட்​டமாகத் தெரியும்!'' என்றார் அழுத்தமாக.
வடிவேலு நில விவகாரத்தை விசாரித்த உதவி ஆணையர் ரவீந்திரனிடம் இது குறித்துக் கேட்டோம். ''வடிவேலுவிடம் இருந்து நிலத்தை மீட்டுக் கொடுக்கும்படி புகார் கொடுத்தவர் பழனியப்பன். அவரே சில தினங்களில் எங்களிடத்தில் வந்து, 'வடிவேலு நிலத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டார்’ எனச் சொல்லி புகாரை வாபஸ் பெறுவதாகச் சொன்னார். புகார் கொடுத்தவரே சொன்ன பிறகு, நிலம் அவர் கைக்கு வந்துவிட்டதாகத்தானே அர்த்தம். பழனியப்பன் கொடுத்த புகார் இன்று வரை நிலுவையில்தான் இருக்கிறது. பழனியப்பன் அந்த நிலத்துக்குப் போட்ட பூட்டை வடிவேலுவின் காவலாளிகள் உடைத்து இருக்​கிறார்கள். அது குறித்து வந்த புகாரின் அடிப்படையில் தாம்பரம் போலீஸார் அவர்களைக் கைது செய்தார்கள்!'' என்றார் ரவீந்திரன்.
பழனியப்பனிடம் பேசினோம். ''நான் புகார் கொடுத்​ததுமே, போலீஸ் அதிகாரிகள் நியாயமாக விசாரணை நடத்தி​னார்கள். 'வடிவேலு வைத்திருப்பது போலி ஆவணம். நிலத்துக்கு அவர் உரிமை கோரினால், கைது செய்யப்​படுவார்’ எனச் சொல்லி போலீஸ்தான் எனக்கு நிலத்தை மீட்டுக் கொடுத்தது. நிலம் இப்போது என் பராமரிப்புக்கு வந்துவிட்டது!'' என்றார் பழனியப்பன்.
'புகார் கொடுத்தவரே முடிவு எடுத்தார்’ என்கிறது போலீஸ். 'போலீஸ்​தான் மீட்டுக் கொடுத்தது’ என்கிறார் புகார்தாரர்.
இதுபற்றி வடிவேலு என்ன சொல்கிறார்? ''சொல்றதுக்கு என்ன இருக்கு... 'உலகம்’ படம் விஷயமா பத்து நாளா மலேசியாவில் நான் தங்கி இருந்தப்பதான் இவ்வளவு மாயா​ஜாலங்கள் நடந்திருக்கு. நடக்கட்டும்ணே... இன்னும் என்ன வேணும்னாலும் நடக்கட்டும்ணே. இந்த விஷயத்திலே ஒண்ணு மட்டும் எனக்கு நல்லாத் தெரியுது... என்னையப் பிடிக்காத ஒரு முக்கியமான ஆளு இந்தப் பிரச்னைக்குப் பின்னால முழுமூச்சா இறங்கி கிணறு வெட்டுறார். அவரு எவ்வளவு வெட்டினாலும் அந்தக் கிணத்துல தண்ணி வரப்போறது இல்ல. என்னோட குல தெய்வம் அய்யனார் நல்லாப் புருவத்தை விரிச்சுவெச்சு முழிச்ச முழியாத்தான் இருக்கார். என்னைய ஏமாளியாக்கி நாலைஞ்சு வருஷமா நரக வேதனையில தள்ளின பாவிகளை அந்த அய்யனாரே பார்த்துப்பார்...'' என்றார் வேதனையாக.
வடிவேலுவின் காமெடிகள் சிரிக்கவைக்கும்... ஆனால், வடிவேலுவை வைத்து நடக்கும் காமெடிகள் கலங்கடிக்கின்றனவே!

ஜெயிக்குமா அரசு கேபிள்?

''செப்டம்பர் 2-ம் தேதி முதல் அரசு கேபிள் சேவை​யைத் தொடங்கும். மாதக் கட்ட​ணமாக  70 வசூலிக்கப்படும். அதில், 90 சேனல்கள் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. முதலில், இலவச சேனல்கள் ஒளிபரப்பாகும். கட்டண சேனல்களை ஒளிபரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது...'' என்று சட்டசபையில் அறிவித்தார் முதல்வர் ஜெயலலிதா!
அரசு கேபிள் டி.வி. தொடக்க விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்துகொண்டு இருக்கும் நிலையில், அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கோவை யுவராஜை சந்தித்தோம். ''முன்னாள் முதல்வர் கருணாநிதியால் தொடங்கப்பட்டு, அவராலேயே முடக்கிவைக்கப்​பட்ட திட்டம்தான் இது. அந்தத் திட்டத்துக்கு முதல்வர் ஜெயலலிதா உயிர் கொடுத்து இருக்கிறார். தமிழகத்தில் உள்ள 34,344 கேபிள் ஆபரேட்டர்கள் அரசு கேபிளுடன் இணைந்து பணியாற்ற ஒப்புதல் அளித்து இருக்கிறார்கள். கேபிள் ஆபரேட்டர்கள் வசூல் செய்யும் 70-ல்,  20 அரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டும்.  50 ஆபரேட்டருக்கு என நிர்ணயம் செய்து இருக்கிறார்கள். ஆனால், இது எங்களுக்குப் போதாது. அதனால், எங்களுக்குக் கொடுக்கும் மானியத்தை இன்னும் கொஞ்சம் உயர்த்திக் கொடுக்கச் சொல்லி, முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்போகிறோம். கூடிய சீக்கிரமே கட்டண சேனல்களைக் கொடுக்கவும் ஏற்பாடு செய்வதாக முதல்வர் சொல்லி இருக்கிறார். அது வரை ஏற்படும் சிரமங்களை பொதுமக்கள் கொஞ்சம் பொறுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் கட்டண சேனல்களைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும்!'' என்கிறார்.
20 ஆண்டுகளுக்கு மேலாக கேபிள் தொழில் செய்யும் பாலிமர் சேனலின் நிர்வாக இயக்குநர் கல்யாணசுந்தரத்திடம் பேசினோம். ''கேபிள் ஆபரேட்டருக்கு அரசு கொடுக்கும் தொகை மிகக் குறைவாக இருக்கிறது. அதை உயர்த்திக் கொடுக்க வேண்டும். சில சேனல்களைப் பார்த்துப் பார்த்து மக்கள் பழகிவிட்டனர். அவை இல்லை என்றால், பொதுமக்களிடம் அதிருப்தி வரும். அரசு கேபிளில் அவர்கள் எதிர்பார்க்கும் சேனல் வராதபோது, கூடுதல் விலை கொடுத்துக்கூட அந்த சேனல் வரும் டி.டிஹெச்-சுக்கு மக்கள் மாற வாய்ப்பு இருக்கிறது. அதனால், அரசு கேபிளில் கட்டண சேனல்களை உடனடியாகக் கொண்டுவர முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதுபோலவே, லோக்கல் சேனல்கள் இல்லாமலும் பொதுமக்கள் ரொம்பவே சிரமப்படுகிறார்கள். சில விஷயங்களை லோக்கல் சேனல்கள்தான் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க முடியும். ஏற்கெனவே, கேபிள் தொழிலில் இருப்பவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல், புதிதாகத் தொழிலுக்கு வருபவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இதை எல்லாம் கவனத்தில்வைத்து முதல்வர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மற்றபடி, அரசு கேபிளுக்கு நாங்கள் முழு அளவில் எங்களது ஒத்துழைப்பைக் கொடுப்போம்...'' என்கிறார்.
அரசு கேபிள் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் உடுமலை ராதா​கிருஷ்ணன் என்ன சொல்கிறார்?
''தற்போது பொதுமக்கள் பயன்படுத்தி வரும் கேபிள் இணைப்பிலேயே அரசு கேபிளை வழங்க எல்லா ஏற்பாடுகளையும் செய்து இருக்கிறோம். கேபிள் ஆபரேட்டர்கள் பெரும்பாலும் அரசு கேபிளுடன் இணைந்து இருக்கிறார்கள். தமிழகம் முழுக்க ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று அங்குள்ள கேபிள் ஆபரேட்டர்களை சந்திக்கப்போகிறேன். இதுவரை, அரசு கேபிளில் இணையாமல் இருக்கும் ஆபரேட்டர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களையும் எங்களோடு கைகோக்க முயற்சிப்பேன். கேபிளுக்கு அரசு நிர்ணயித்து இருக்கும் கட்டணம் மிகவும் குறைவானதுதான். ஏனென்றால், இதுவரை கேபிள் கட்டணம் மாதம் ஒன்றுக்கு அதிகபட்சமாக  280 வரைகூட சில இடங்களில் வசூல் செய்து இருக்கிறார்கள். அப்படி என்றால், இது எவ்வளவு குறைவு என்று பாருங்கள். நான் போகும் இடங்களில் எல்லாமே, பொதுமக்கள் சந்தோஷத்தோடு முதல்வரை வாழ்த்துகிறார்கள்.
' 70-க்கு கேபிள் கொடுப்பீங்களா?’ என ஆச்சர்யமாகக் கேட்கிறார்கள். கேபிள் தொழிலுக்கு இதுவரை இருந்த தடைகளை எல்லாம் தகர்த்துவிட்டு, எல்லோருக்கும் குறைந்த விலையில் கேபிள் சேவையைக் கொடுக்க முதல்வர் முடிவு எடுத்து இந்தத் திட்டத்தை அறிவித்திருக்கிறார். அதனால், மக்கள் நினைப்பது எல்லாம் நடக்கும்!'' என்றார் உற்சாகமாக.
''கட்டண சேனல்கள் இல்லாமல் இலவச சேனல்கள் மட்டும்  70-க்குக் கொடுப்பதாக அறிவித்திருக்கிறார்கள். இதே விலையில்தான் நாங்களே இலவச சேனல்களை ஏற்கெனவே கொடுத்து வந்தோம். கேபிளைப் பொறுத்த வரை, சன் டி.வி., கே.டி.வி., விஜய் டி.வி. மற்றும் காமெடி சேனல்கள் அவசியம் வேண்டும் என  மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இவை இல்லாமல், என்னதான் வேறு பல சேனல்களைக் கொடுத்தாலும் அது எதிர்பார்க்கும் வெற்றியைத் தராது!'' என்று பிரச்னைகளைப் பட்டியல் போட்டார்கள் கேபிள் ஆபரேட்டர்கள்.
அரசு எப்படி சமாளிக்கப்போகிறதோ?!

ஓர் உயிரின் கதறல்...

கவிதை: காசி ஆனந்தன்
*********************************************************************************

********************************************************************************************

0 comments:

Post a Comment

Cricket

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010