மிஸ்டர் கழுகு: அந்த தேதி ஏன்?
''பரமக்குடி கலவரம் சட்டசபையிலும் எதிரொலித்தது. இந்த கலவரத்தைவிட அதற்காக ஜெயலலிதா காட்டிய ரியாக்ஷன்கள்தான் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் நடைபெற்ற விவாதத்துக்குப் பதில் அளித்த ஜெயலலிதா, 'இனக் கலவரம்’ என்று வர்ணித்ததைப் பலரும் ரசிக்கவில்லை. போலீஸுக்கும் தலித்களுக்கும் இடையே நடந்த மோதல் விவகாரத்தில் எழுந்த துப்பாக்கிச் சூட்டை எந்த மீடியாவும் சாதி கலவரம் என்றுகூட செய்தி போடவில்லை. ஆனால் ஜெயலலிதா, அதற்கு முந்தைய நாட்கள் நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்லி, அதனால்தான் கலவரம் நடந்திருக்கிறது. எனவே, இது சங்கிலித் தொடர் நிகழ்வுகள் என்று சட்டசபையில் சொன்னார். கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் பேசிய எதிர்க் கட்சியினர்கூட, 'இது சாதி கலவரம் இல்லை’ என்றார்கள். 'இது இனக் கலவரம் இல்லை என்றால், எங்களுக்கு அதில் மகிழ்ச்சிதான்’ என்று சொல்லிவிட்டு சுவரில் எழுதப்பட்ட விஷயத்தையும் ஜான்பாண்டியன் அஞ்சலி செலுத்த வந்ததை, 'படையெடுத்து’ என்று வர்ணித்ததையும் கேட்டுப் பலரும் பொறுக்க முடியாமல் இருந்தார்கள். புதிய தமிழகம் கிருஷ்ணசாமி மட்டும் வெளிநடப்பு செய்தார்.''
''ம்!''
''இந்தக் கலவரத்தைக் கண்டித்து அனைத்துக் கட்சித் தலைவர்கள் விட்ட அறிக்கையை எடுத்துப் பார்த்தாலே ஓர் ஒற்றுமை புரியும். 'ஆறு பேரைக் குருவி சுடுவதுபோல சுட்டுத் தள்ளுவதற்குக் காரணமே போலீஸ்தான்’ என்று சொல்லி இருக்கிறார்கள். 11-ம் தேதிதான் இம்மானுவேல் சேகரனின் நினைவு நாள். அதற்கு முன்பு 9-ம் தேதி கமுதியைச் சேர்ந்த மாணவர் பழனிக்குமார் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்துக்காக எந்த அசம்பாவிதமும் அரங்கேறாத நிலையில், 11-ம் தேதி இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளுக்கு அஞ்சலி செலுத்த வந்த ஜான்பாண்டியனுக்குத் தடை போட்டு அவரை போலீஸ் கைது செய்தது தேவை இல்லாத ஒன்று. போலீஸ் படையோடு ஜான்பாண்டியனை அஞ்சலி செலுத்த அனுமதித்து இருந்தால்,
இந்த அளவுக்கு விவகாரம் மோசம் ஆகியிருக்காது. போலீஸ் எடுத்த தன்னிச்சையான முடிவால் ஜான்பாண்டியன் கைதாக... அவரது ஆதரவாளர்கள் சாலை மறியலில் இறங்கி கலவரத்துக்கு விதை போட்டுவிட்டார்கள்’ என்றும் சொல்கிறார்கள்.
இம்மானுவேல் சேகரன் நினைவு நாளையட்டி விருதுநகர் எஸ்.பி. அலுவலகத்தில் தென் மண்டல ஐ.ஜி. ராஜேஸ் தாஸ் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், நெல்லை, தூத்துக்குடி, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் அதிகாரிகள் எல்லாம் கலந்துகொண்டார்கள். விருதுநகரில் இதற்காக 20 இடங்களில் செக் போஸ்ட்கள் எல்லாம் போடப்பட்டன. இத்தனை ஏற்பாடுகளையும் செய்த போலீஸ், ஜான்பாண்டியனை அனுமதிக்கக் கூடாது என்று ஏன் முடிவெடுக்க வேண்டும்?''
''மேலிடத்திடம் சொல்லாமலா இந்த முடிவை எடுத்திருப்பார்கள்?''
''சட்டசபையில் பேசிய ஜெயலலிதா எந்த இடத்தி லும் போலீஸைக் குறை கூறவே இல்லை. 'மாவட்டத்தில் நிலவிய சூழ்நிலையை உணர்ந்து ஜான்பாண்டியனை ராமநாதபுரத்தில் நுழையக் கூடாது என்று கலெக்டர் தடை விதித்தார்’ என்று போலீஸை விட்டுத்தராமல்... 'கலெக்டர்தான் முடிவு எடுத்தார்’ என்றும் சொன்னார் ஜெயலலிதா. இறந்தவர்கள் குடும்பங்களுக்குக் கொடுக் கப்பட்ட நிதியுதவியும் குறைவாக இருப்பதாகக் குறைபட்டுக்கொள்கிறார்கள். 'போலீஸ்காரர்கள் இறந்தால் ஐந்து லட்சம் கொடுக்கிறார்கள். இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் களுக்கு ஐந்து லட்சம் தரப்படுகிறது. இவ்வளவு பெரிய துப்பாக்கி சூடு நடத்திவிட்டு வெறும் ஒரு லட்சம் கொடுப்பதா?’ என்றும் சிலர் கொதிப்பு காட்டுகிறார்கள். அதோடு இன்னொரு கொதிப்பும் இருக்கிறது. இந்த கலவரத்துக்கு முதலில் மாவட்ட வருவாய் அலுவலர் விசாரணை செய்வார் என்று சொன்னார் ஜெயலலிதா. அதன் பிறகு உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டதால், ஓய்வு பெற்ற நீதிபதியைக்கொண்டு விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று சொல்லி இருக்கிறார். இதை எல்லாம் சட்டசபையில் சொல்லும்போது, இன்னொரு படபடப்பும் சேர்ந்துகொண்டது!''
''அது என்ன?''
''சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு கோர்ட் டில் அக்டோபர் 20-ம் தேதி ஜெயலலிதாவை ஆஜர் ஆகச் சொல்லி இருக்கிறது சுப்ரீம் கோர்ட். வாய்தா மேல் வாய்தா வாங்கி வழக்கை இழுத்தடித்துக்கொண்டு இருந்த ஜெயலலிதாவுக்கு கிடுக்கிப் பிடி போட்டது பெங்களூரு கோர்ட். வேறு வழி இல்லாமல், சுப்ரீம் கோர்ட்டுக்குப் போனார் ஜெயலலிதா. அங்கேயும் இப்போது கதவு மூடப்பட்டுவிட்டது. 'பெங்களூரு கோர்ட்டில் நிச்சயம் ஆஜர் ஆகத்தான் வேண்டும்’ என்று சொல்லி அதற்காக 'ஒரு தேதியை சொல்லுங்கள்’ என்று கடந்த வாரம் சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியது. இந்த நிலையில்தான் இந்த அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அக்டோபர் 20-ம் தேதியைத் தேர்வு செய்ததே ஜெயலலிதாதான் என்றும் சொல்கிறார்கள். இந்தத் தேதிக்குப் பின்னால் ஒரு செய்தி புதைந்துகிடக்கிறது. அக்டோபர் 24-ம் தேதிக்கு முன்னதாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும். பதவி ஏற்பு விழா. அதன் பிறகு துணை மேயர், துணைத் தலைவர் தேர்தல் எல்லாம் நடப்பதற்கு வசதி யாக அக்டோபர் 18-க்கு முன்பே தேர்தல் நடந்து முடிந்துவிடுமாம். அதை எல்லாம் மனதில்வைத்துத்தான், அதாவது உள்ளாட்சித் தேர்தல் பிரசார நேரத்தில் பெங்களூரு கோர்ட்டில் ஜெய லலிதா ஆஜர் ஆகாமல் பார்த்துக்கொண்டாராம். கோர்ட்டில் ஆஜர் ஆகும் செய்தி தேர்தலில் எதிரொலிக்காது என்கிற அளவுக்குக் கணக்குப் போட்டுக் காய் நகர்த்தி வருகிறார். இதை உணர்ந்து உயர் அதிகாரிகளும் தங்களது உழைப்பைக் கொஞ்சம் குறைத்துக்கொண்டுள்ளார்களாம்!''
''ஏனாம்?''
''2001-ல் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, டான்சி விவகாரத்தில் சிக்கி, பதவி விலக நேர்ந்தது. அந்தக் காலகட்டத்தில், தமிழக அரசின் உயர் அதிகாரிகள் 'கழுவுற நீரில் நழுவுகிற மாதிரி' நடந்து கொண்டார்கள். இப்போது, பெங்களூரு வழக்கு. இந்த வழக்கில் அடுத்து என்ன நடக்குமோ என்கிற பதைபதைப்பு அதிகாரிகள் மத்தியில் அதிகரித்துள்ளது. ஒருவேளை கோர்ட் தீர்ப்பு வேறு மாதிரி வந்தால், யார் புதிய முதல்வர் என்கிற அளவுக்கு லஞ்ச் டயத்தில் விவாதிக்கிறார்கள். இந்த வருட இறுதிக்குள் வழக்கில் தீர்ப்பு வந்துவிடும் என இவர்கள் நினைக்கிறார்கள். 'இப்போதெல்லாம் பெரும்பாலான நேரம் முதல்வர் சட்டரீதியான ஆலோசனைகளிலேயே பிஸியாக இருக்கிறார். எனவே, முக்கியமான அரசு ஃபைல்கள் முதல்வர் முடிவுக்காக காத்துக்கிடக்கின்றன’ என்றும் சொல்கிறார்கள்!'' என்றபடியே அடுத்த சப்ஜெக்ட்டை எடுத்தார் கழுகார்!
''நில அபகரிப்பு வழக்குகளை எதிர்கொள்வது தொடர்பாக தி.மு.க. வழக்கறிஞர்கள் கூட்டம் கருணாநிதி தலைமையில் சென்னையில் நடந்தது. 'எந்த ஆட்சி வந்தாலும் போலீஸ்காரர்கள் மாற மாட்டார்கள். அவர்களை சட்டரீதியாகத்தான் மடக்க வேண்டும். அதற்கு ஒரே ஆயுதம்... தகவல் அறியும் உரிமைச் சட்டம்தான்’ என்று இதில் சீறியிருக்கிறார் துரைமுருகன். அவரைத் தொடர்ந்து பேசிய ஆர்.எஸ்.பாரதி, 'நில அபகரிப்பு வழக்கில் விசாரணை அதிகாரியைப்பற்றி நூறுக்கு மேல் கேள்விகள் கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விளக்கம் கேட்க வேண்டும். அதிகாரி எப்போது சர்வீஸுக்கு வந்தார். அப்போது அவரின் சொத்து மதிப்பு என்ன? இப்போது சொத்து எவ்வளவு? துறை ரீதியாக இருக்கும் புகார்கள் என்னென்ன? அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரம் என்று கேள்விகள் கேட்டால்தான், அவர்களுக்குப் பயம் வரும்’ என்று அவரும் தூபம் போட்டுள்ளார். கடைசியில் பேசிய கருணாநிதிகூட 'தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்விகள் கேட்பதன் மூலம் நம்மை நோக்கி வரும் காவல் துறை அஞ்சி நடுங்க வேண்டும்’ என்றார். தகவல் அறியும் சட்டத்தில் கேட்கப்படும் மனுவுக்குக் கட்டணமாக எவ்வளவு கோர்ட் ஃபீஸ் ஸ்டாம்ப் ஒட்டுவது என்பதுபற்றி அங்கே வந்த மூத்த வழக்கறிஞர்களுக்கே தெரியவில்லையாம். அது தொடர்பாக அவர்களுக்குள்ளேயே குழப்பம் இருந்த தையும் பார்க்க முடிந்தது. 'பெண்களுக்கு இடஒதுக்கீடு கொடுப்பதுபோல எங்களுக்கு அரசியலில் பத்து சதவிகிதம் இடம் கொடுங்கள்!'' என்று வழக்கறிஞர் ஜோதி சொன்னபோது ஏகத்துக்குக் கைத்தட்டலாம்.''
''ஓஹோ!''
''ஆனால் ஒரு வக்கீல், நீதிபதிகளையும் கிண்டல் அடிக்கும் வார்த்தைகளைச் சொன்னதுதான் கூட்டத்தில் இருந்த பலருக்கும் எரிச்சலைக் கிளப்பி யது. 'இருக்கிற பிரச்னை போதாதுன்னு இப்படி எல்லாம் பேசணுமா?’ என்று முக்கியத் தலைவர்கள் முணுமுணுக்கும் அளவுக்கு இருந்ததாம் வக்கீல் பேச்சு.''
''அடுத்த விஷயம் சொல்லும்!''
''சஸ்பெண்ட் ஆகியிருக்கும் முன்னாள் உளவுத் துறை அதிகாரி ஜாஃபர் சேட் ரம்ஜான் தினத்தன்று, மண்டபத்தில் இருந்து சென்னை வந்தாராம். அவரது குடும்பத்தினருடன் கொண்டாடினாராம். வாழ்த்து சொல்லத் தொடர்புகொண்ட நண்பர்களுடன் அவ்வளவாகப் பேசவில்லையாம். இறுக்கமாகக் காணப் பட்டாராம். இந்த நேரத்தில் இன்னொரு சேதி சி.பி.ஐ. அதிகாரிகள் வட்டாரத்தைக் கலக்கிவிட்டது!''
''அதென்ன?''
''ஸ்பெக்ட்ரம் வழக்கில் அப்ரூவராக மாற இருந்த சாதிக்பாட்சா மர்மமான முறையில் இறந்துபோனார் அல்லவா? அவரின் குடும்பத்தினர்கூட அதை ஒரு கொலை என்கிற கோணத்தில் பார்க்க மறுக்கிறார்கள். வேறு யாரும் இந்த வழக்கில் ஆர்வம் காட்டாத சூழ்நிலையில், சி.பி.ஐ. தரப்பில் விசாரணையை மூட்டை கட்டிவைத்துவிட்டனர். 'இறந்துபோனதாக சொல்லப்பட்ட சாதிக்பாட்சா எப்படியோ தப்பிப்போய் துபாயில் உயிருடன் இருக்கிறார். ரம்ஜானைக் கொண்டாடினார்' என்கிற பகீர் தகவல் தமிழக போலீஸ் உளவுத் துறையிடம் யாரோ சொல்லி இருக்கிறார்கள். தகவல் சி.பி.ஐ-க்கும் போக, அவர்களும் குழப்பமாகிவிட்டனர். துபாயில் உள்ள சோர்ஸ்களைத் தொடர்புகொண்டு கிராஸ் செக் செய்வதில் பரபரப்பாக இருந்தார்கள். பிறகு இது இறக்கை கட்டிய வதந்திதான் என்றும் முடிவுக்கு வந்தார்களாம்!''
''போலீஸ் என்றதும்தான் ஞாபகம் வருகிறது. இளம் ஐ.பி.எஸ். அதிகாரி செந்தில்வேலன் திடீரென டம்மியான பதவிக்கு மாற்றப்பட்டுவிட்டாரே?''
''சென்னை அடையாறில் துணை கமிஷனராக இருந்தார். பரமக்குடிக்கு பந்தோபஸ்துக்காகப் போய், அங்கே கலவரத்தில் சிக்கிக் காயப்பட்டார். இந்த நேரத்தில் அவரை டம்மியான சென்னை போக்கு வரத்துப் பிரிவுக்கு மாற்றிவிட்டார்கள். காரணம் 'ராவண தாண்டவம்' என்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில். அவர் சொல்லிய ஒரு சட்ட மீறலை இவர் செய்யவில்லையாம். 'உன்னை மாற்றாமல் விட மாட்டேன்’ என்று அவர் உறுமியதாகவும்... இப்போது பரமக்குடியைவைத்துப் பரமபதம் ஆடிவிட்டதாகச் சொல்கிறார்கள்!''
''முதல்வருக்கு இது தெரியாதா?''
''அவருடைய பெயருக்கு முன்னால் 'அட்வான்ஸ்’ என்ற அடைமொழியும் கொடுக்கும் அளவுக்கு அவர் ஃபேமஸ் ஆனது உண்மை. ஆனால் இரண்டு வாரங்களுக்கு முன்னால் அவரைக் கூப்பிட்டு முதல்வர் கண்டித்ததாகவும் எனவே, அந்த டீம் சென்னையைவிட்டுப் பறந்து சென்றதாகவும் சொல் கிறார்கள். தற்காலிகமாக தனது ஜாகையை மேற்கு மண்டலம் பக்கம் மாற்றி இருக்கிறாராம். ஆனால், அவர் சொல்வது இன்னமும் நடக்கிறது என்பதற்கு உதாரணமாக செந்தில்வேலன் டிரான்ஸ்ஃபரை சொல்கிறார்கள்!''
''திருச்சி மேற்கு இடைத் தேர்தல் வேலைகள் தொடங்கிவிட்டனவா?''
''சந்தடியே இல்லாமல் சில நாட்களுக்கு முன்பு, அ.தி.மு.க-வின் இளைஞர் - இளம்பெண் பாசறையின் செயலாளர் பதவியில் செந்தில்நாதன் என்பவரை நியமித்து இருக்கிறார்கள் பார்த்தீரா?
போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு வைக்கப்பட்ட செக் இவர் என்கிறார்கள். அரவக்குறிச்சி தொகுதியில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக நிறுத்தப்பட்ட 29 வயதுக்காரர் இவர். பிரபல தொழில் அதிபரும் தி.மு.க. வேட்பாளருமான கே.சி.பழனிச்சாமியிடம் இரண்டாயிரத்து சொச்சம் ஓட்டில் தோற்றுப்போனார். ஏற்கெனவே கரூர் மாவட்டத்தில் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் செந்தில்பாலாஜிக்கும் செந்தில்நாதனுக்கும் பனிப் போர் உண்டு. ஸ்ரீரங்கத்தில் நன்றி சொல்ல முதல்வர் ஜெயலலிதா வந்தபோது அவருடன் காரில் இருந்த சசிகலா இந்த செந்தில்நாதனை அழைத்துப் பேசியதைக் கட்சிக்காரர்கள் கவனித்தனர். இவர் பெயரும் இப்போது திருச்சி இடைத்தேர்தல் வேட்பாளர் ரேஸில் சேர்ந்திருக்கிறது. இவருக்கு வாய்ப்பு கொடுக்க கட்சி மேலிடத்துக்கும் விருப்பமாம். லேட்டஸ்ட் நிலவரப்படி, மரியம்பிச்சை குடும்பத்தில் யாராவது ஒருவர், பேராசிரியர் சிராஜீதீன், அருள்ஜோதி, சீனிவாசன், எஸ்.ஐ. ஸ்ரீதர் ஆகியோர் ரேஸில் இருக்கிறார்கள். ஏற்கெனவே கட்சியில் பொறுப்பில் இருந்து புகார் வந்ததால், நீக்கப்பட்டவர்கள், சமீபத்தில் மாற்றுக் கட்சிகளில் இருந்து வந்தவர்கள்... ரேஸில் பின்னுக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்'' என்று சொல்லிவிட்டுப் பறக்கத் தயாரானவர், ''திருச்சியில் கே.என்.நேருவின் தம்பியான ராமஜெயத்தின் வலது கையாக இருந்தவர் வினோத். அவரை மையமாக வைத்துப் புகார்கள் புறப்படலாம்!'' என்ற பிட்டைப் போட்டுவிட்டுப் பறந்தார் கழுகார்!
*********************************************************************************
கழுகார் பதில்கள்
சுதந்திரன், காஞ்சிபுரம்.
புலமையாளர்கள் பலர் வறுமையாளர்களாக இருக்கிறார்களே?
'கலையானது தரித்திரத்தில் இருந்துதான் பிறக்கிறது. இது 95 சதவிகிதம் உண்மை’ என்றார் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். அவரே சொல்கிறார்...
'கூழுக்குக் கவி பாடினாள் ஒளவை. நாட்டுக்கு நலம் தரும் பாரதியாரின் ஆவேசக் கவிதைகள் வறுமையில்தான் பிறந்தன. என் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக, நான் பல தினங்கள் பட்டினி கிடந்திருக்கிறேன். அந்தக் காலத்தில்தான் என்னிடம் இருந்த கலை, ஆர்வத்துடன் வெளியே வந்தது. இன்று நான் உங்கள் முன் நின்று பேசுவதற்கு ஆளாக்கியது அந்த வறுமையான காலங்கள்தான்.’
எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.
சட்டமன்றத்தில் புகழ்த் துதிகளும், எம்.எல்.ஏ-க்களின் சாஷ்டாங்க நமஸ்காரக் காட்சிகளும் அன்றாடம் அரங்கேறுவதை கவனித்தீர்களா?
ஜெயலலிதா கண்டிக்க வேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்று. தேவையற்ற புகழ்ச்சியும் அவசியமற்ற பவ்யமும் அம்மையாரை மீண்டும் கவிழ்த்துவிடும் காரியங்கள்!
பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.
உலகில் அதிகாரம் மிக்க பெண்கள் பட்டியலில் சோனியாவுக்கு ஏழாவது இடமாமே...?
உண்மைதானே! சந்தேகம் இருந்தால், மன்மோகனிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளவும். 'வேலையே பார்க்காத சில அமைச்சர்களை என்னால் மாற்ற முடியவில்லை’ என்று அவர் புலம்புவது யாரால்?
எஸ்.ராஜகோபால், சென்னை-17.
தமிழகத் தலைவர்களிடம், குறிப்பாக... திராவிட இயக்கத்தினரிடம், ஒரு பிரச்னைபற்றிப் பேசும்போது, கண்ணீர் விடுவதும், அழுவதும், அளவுக்கு மீறி உணர்ச்சிவசப்படுவதும் தனிக் கலாசாரமாகவே இருக்கிறது. இது முதிர்ச்சி இன்மையைக் காட்டுவதுபோல் இல்லையா?
திராவிட இயக்கத்தினரிடம் மட்டும் அல்ல... தலைசிறந்த பேச்சாளர்கள் அத்தனை பேரும் அதிகம் உணர்ச்சிவசப்படுபவர்கள்தான். பாரதியின் பாடல்கள் தடை செய்யப்பட்டபோது, தீரர் சத்தியமூர்த்தி பேசிய பேச்சும் அப்படித்தான் இருந்தது. கம்யூனிஸ்ட்கள் நாடு முழுவதும் கைது செய்யப்பட்டபோது... 'ஏய் மீனாட்சி உனக்கு இது பொறுக்கவில்லையா? சொக்கநாதா உனக்கு இது பொறுக்கவில்லையா?’ என்று ஜீவானந்தம் மதுரையில் கர்ஜித்ததும் அப்படித்தான் இருந்திருக்கும். எனவே, இது திராவிட இயக்கத்தினருக்கு மட்டும் சொந்தமானது அல்ல. கிளிசரின் ஊற்றினாலே அழத் தெரியாதவர்கள் மத்தியில் மேடையில் சிலர் கண் கலங்குவது தவறான கலாசாரம் அல்ல. நமக்கு அவர்களது கருத்தின் மீது விமர்சனம் இருக்கலாம். ஆனால், கண்டிக்கத்தக்க அளவுக்கு கண்ணீர் பாவமானதா என்ன!
கோதை ஜெயராமன், மீஞ்சூர்.
இந்தியாவில் ஊழல் வளர்ந்தது யாரால்?
ஊழலை சமூகக் குற்றமாக நினைக்காத பொதுமக்களால்!
'அஞ்சு வருஷம் எம்.எல்.ஏ-வா இருந்தார்... நல்லா சம்பாதிச்சார்’ என்றுதான் நாமே சொல்கிறோம். 'அஞ்சு வருஷம் இருந்து தினமும் திருடினார்’ என்று சொல்வது இல்லையே!
இந்தப் பொறுப்பு உணர்வு அற்ற தன்மைதான் அனைத்துக்கும் காரணம். 'ஒரு சமூகம் தனக்குத் தகுதியான தலைவனை, தானே தேர்ந்தெடுக்கும்’ என்று சொல்வார்கள். எனவே, அனைத்து ஒழுங்கீனங்களுக்கும் பொதுமக்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்!
சீர்காழி சாமா, சீர்காழி.
கச்சத் தீவுக்கு இந்தியா சொந்தம் கொண்டாடக் கூடாது என்று எஸ்.எம்.கிருஷ்ணா கூறியிருப்பது குறித்து?
எஸ்.எம்.கிருஷ்ணாவின் மறதி அனைவரும் அறிந்ததே! தன்னை இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சராக அவர் நினைத்திருக்கலாம்!
லட்சுமி செங்குட்டுவன், வேலூர்(நாமக்கல்).
சிறையில் இருக்கும் தி.மு.க. பிரமுகர்களை அழகிரி சென்று பார்த்ததைக்கூட பண்ருட்டி ராமச்சந்திரன் பாய்ந்து தாக்குகிறாரே?
மத்திய கேபினெட் அமைச்சர் பதவியில் இருப்பவர் என்ற அடிப்படையில் அழகிரியை விமர்சிக்கலாமே தவிர... கட்சியின் முக்கியத் தலைவர் என்ற வகையில் அவர் சிறை சென்று பார்ப்பதில் தவறு ஏதும் இல்லை!
சங்கமித்ரா, மன்னார்குடி-1.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வரின் புகழைப் பாடுவதில் விஞ்சி நிற்பது இந்திய கம்யூனிஸ்ட்டா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டா?
இப்போதைக்கு... இந்திய கம்யூனிஸ்ட்!
ம.விஜய் ஆரோக்கியராஜ், கும்பகோணம்.
உங்களுக்கு அம்மா புத்தாண்டா? அய்யா புத்தாண்டா?
'குடி செய்வார்க்கு இல்லை பருவம்’ என்கிறார் வள்ளுவர்!
இரா.கல்யாணசுந்தரம், மதுரை.
தூக்குப் போடுவதை ஏன் அதிகாலையில் செய்கிறார்கள்?
அந்தக் குரூரத்தை இப்படி எல்லாம் யோசிக்க வேண்டாம்!
பல்லவ மன்னன், நெல்லை.
முதல்வரைப் பாராட்டி சீமான் நடை பயணம் கிளம்பியதும், பாராட்டு விழா நடத்தியதும் பற்றி..?
மூன்று தமிழர்களை முழுமையாக மீட்ட பிறகு, நிச்சயமாகச் செய்யலாம். காரியம் முடியாவிட்டால், பின்னோக்கி நடக்க முடியாது!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான முருகன், சாந்தன், பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை எதிர்த்துத் தமிழகமே கொந்தளிக்க... அவர்களை உடனடியாகத் தூக்கில் போட வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் உண்ணாவிரதம் நடந்தது. ராஜீவ் கொலை சம்பவத்தில் வெடிகுண்டு வெடித்தபோது, அவரோடு சேர்ந்து இறது போனவர்களின் குடும்பத்தினர்தான் இத்தகைய கோரிக்கையை வைத்துள்ளார்கள்.
'ராஜீவ் காந்தியோடு கொல்லப்பட்ட 15 தமிழ்க் குடும்பத்தினர் நீதி கேட்டு உண்ணாவிரதம்’ என்று அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே போலீஸுக்கு டென்ஷன். காரணம், இந்த உண்ணாவிரதத்துக்குப் பின்னணியாக இருந்தது காங்கிரஸ் கட்சி. தங்கபாலுவால் கட்டம் கட்டப்பட்ட ஜோதி ராமலிங்கம் மற்றும் திரவியம் ஆகியோர் இந்தக் குடும்பங்களை ஒருங்கிணைத்து, போராட்ட ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
சென்னை அண்ணா சாலை மின்சார வாரியத் தலைமை அலுவலகத்தின் பின்புற வாசல் அருகே நடந்த இந்த நிகழ்வில், இரு மேடைகள்! அந்தக் குடும்பத்தினருக்குப் பெரிய மேடையும், பக்கத்திலேயே காங்கிரஸ் பிரமுகர்களுக்கு சிறிய மேடையும் அமைக்கப்பட்டது.
இதில் பேசியவர்கள் வைகோ, திருமாவளவன், சீமான் ஆகியோரை வார்த்தைகளால் வறுத்தெடுத்தார்கள். முன்னாள் எம்.எல்.ஏ. ஞானசேகரன், ''கறுப்புப் பூனையோடு ஜெயலலிதா இப்போதும் வலம் வரக் காரணமே, 'விடுதலைப் புலிகளால் அவர் உயிருக்கு ஆபத்து’ என்ற நிலை இருந்ததுதான். எல்.டி.டி.ஈ-க்கு முதலில் தைரியத்தோடு தடை கேட்டவர் நீங்கள். உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்தே தீர வேண்டும்!'' என்றார் ஆவேசமாக.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ''ராஜீவும் அவரோடு இறந்தவர்களும் அநாதைகளா? ஜெயலலிதா ஆட்சிக்கு வர வேண்டும் என்று யாரும் ஓட்டுப் போடவில்லை. இன்னொருவர் வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் போட்டார்கள். 'போல்டான லேடி. அயன் லேடி, வீர மங்கை’ என்றெல்லாம் சொல்லப்படும் நீங்கள், தவறுக்குத் துணை போக மாட்டீர்கள் என்று நம்பினார்கள். முதல் நாள் சட்டசபையில் தைரியமாகப் பேசிவிட்டு, அடுத்த நாள் நீங்கள் பின்வாங்கியது ஏன்? உங்களை வாழ்த்தி அடிக்கும் எட்டு பிட்டு போஸ்டருக்கு மயங்கிவிட்டீர்களே?'' என்று முடித்தார்.
உண்ணாவிரதத்தில் பங்கேற்ற குடும்பத்தினரின் ரியாக்ஷன் என்ன என்று அறியச் சிலரிடம் பேசினோம். இன்ஸ்பெக்டர் ராஜகுருவின் மகள் பபிதா தேவி: '' சொந்த ஊரான நெல்லைக்குப் போயிட்டு சென்னை திரும்பிக்கொண்டு இருந்தோம். மே 22-ல் எங்களை வரவேற்க ரயில்வே ஸ்டேஷனுக்கு வருவதாக அப்பா சொல்லி இருந்தார். ரயிலில் வந்துகொண்டு இருந்தபோதே ராஜீவுடன் எங்கள் அப்பாவும் கொல்லப்பட்ட செய்தி வந்தது. மூன்று பேருக்கு மரண தண்டனை கூடாது என்கிறார்கள். பாதிக்கப்பட்ட எங்களுக்குத்தான் வலி தெரியும். மரணத்துக்கு மரணம் தீர்வாகாது என்பதை ஏற்றுக்கொள்கிறேன். உணர்ச்சிவசப்பட்டு ஆத்திரத்தில் கொலை செய்கிறவனுக்கு வேண்டுமானால், இதை ஏற்கலாம். ஆனால், திட்டம் போட்டு, ஒத்திகை பார்த்துக் காரியம் முடிக்கிறவனுக்கு நிச்சயம் தண்டனை வேண்டும்!''
சம்தானி பேகத்தின் மகள், அப்சரி பேகம்: ''எங்க அம்மா மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவி. அம்மாவின் உடலைப் பொட்டலமாகத்தான் கட்டிக் கொடுத்தாங்க. உடலைக்கூட அடையாளம் காண முடியவில்லை. உருக்குலைந்து இருந்தது. எங்க அம்மா என்பதற்கு ஒரே அடையாளம், கால் விரலில் இருந்த ஒரு வித்தியாசம் மட்டுமே. குற்றவாளிகள், அப்போதே தண்டிக்கப்பட்டு இருந்தால், இப்போது அவர்களுக்கு ஆதரவாக யாரும் போராட மாட்டார்கள். நியாயமாகப் பார்த்தால், எந்தத் தவறும் செய்யாத எங்களுக்குத்தான் அவர்கள் ஆதரவு தர வேண்டும்!''
ஐ.பி.எஸ். அதிகாரி முஹம்மது இக்பாலின் மகன் ஜாவித் இக்பால்: ''அப்ப நான் பிளஸ் டூ படித்துக் கொண்டிருந்தேன். யார், எவர் என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு ஆஸ்பத்திரியில் 15 உடல்களைப் போட்டிருந்தனர். ஆங்காங்கே சதைத் துண்டுகளாகத் தொங்கிய உடல்களை எல்லாம் புரட்டிப்போட்டு, அப்பாவைத் தேடி எடுத்தேன். அவர் முகம் பார்க்க முடியாத அளவுக்குச் சிதைந்திருந்தது. இரண்டு மாதத்துக்குத் தூக்கமே வரவில்லை. அப்பா இல்லாமல் இந்த இருபது ஆண்டுகளில் எங்கள் குடும்பத்துக்கு ஏற்பட்ட இழப்புகள் எவ்வளவு, தெரியுமா? போராடுகிறவர்களுக்கு, அந்த மூன்று பேரின் உயிர் பெருசுன்னா, எங்க அப்பா உயிரும் எங்களுக்குப் பெருசுங்க. அந்த மரணத்துக்கு நியாயம் கிடைத்தே தீர வேண்டும்! ''
எஸ்.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் எட்வர்ட் ஜோசப்பின் தம்பி ஜான் ஜோசப்: ''அண்ணன் இறந்ததும் இரண்டு பெண் குழந்தைகளை வளர்க்க எங்கள் அண்ணி பட்ட சிரமம் வார்த்தைகளில் சொல்ல முடியாதது! அண்ணன் போட்டிருந்த சஃபாரி சட்டை மட்டும்தான் கந்தல் கந்தலாகக் கிடைத்தது. அவருடைய உடலுக்குப் பக்கத்தில்தான் ராஜீவின் உடல் கிடந்தது என்று சொல்லி, துணி போட்டுக் கட்டி வைத்திருந்தார்கள். ரொம்பப் போராடி, நான் ராஜீவ் உடலையும் பார்த்தேன். ராஜீவின் குடும்பத்தினர்கூட பார்த்திருப்பார்களா என்று எனக்குத் தெரியாது. அதிர்ச்சியாக இருந்தது. நளினியை மன்னிக்க சோனியாவுக்குப் பெருந்தன்மை இருக்கலாம். எங்களிடம் அதை எதிர்பார்க்க வேண்டாம். மரண தண்டனையில் இருந்து அவர்களைத் தப்பிக்கவைக்க இப்போது போராடுகிறார்கள். ஆனால், எங்களுக்கு இந்த 20 ஆண்டு காலத்தில் ஆறுதல் சொல்லக்கூட ஒருவரும் வந்தது இல்லை!''
- எம்.பரக்கத் அலி
புலமையாளர்கள் பலர் வறுமையாளர்களாக இருக்கிறார்களே?
'கலையானது தரித்திரத்தில் இருந்துதான் பிறக்கிறது. இது 95 சதவிகிதம் உண்மை’ என்றார் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். அவரே சொல்கிறார்...
'கூழுக்குக் கவி பாடினாள் ஒளவை. நாட்டுக்கு நலம் தரும் பாரதியாரின் ஆவேசக் கவிதைகள் வறுமையில்தான் பிறந்தன. என் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக, நான் பல தினங்கள் பட்டினி கிடந்திருக்கிறேன். அந்தக் காலத்தில்தான் என்னிடம் இருந்த கலை, ஆர்வத்துடன் வெளியே வந்தது. இன்று நான் உங்கள் முன் நின்று பேசுவதற்கு ஆளாக்கியது அந்த வறுமையான காலங்கள்தான்.’
எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.
சட்டமன்றத்தில் புகழ்த் துதிகளும், எம்.எல்.ஏ-க்களின் சாஷ்டாங்க நமஸ்காரக் காட்சிகளும் அன்றாடம் அரங்கேறுவதை கவனித்தீர்களா?
பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.
உலகில் அதிகாரம் மிக்க பெண்கள் பட்டியலில் சோனியாவுக்கு ஏழாவது இடமாமே...?
உண்மைதானே! சந்தேகம் இருந்தால், மன்மோகனிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளவும். 'வேலையே பார்க்காத சில அமைச்சர்களை என்னால் மாற்ற முடியவில்லை’ என்று அவர் புலம்புவது யாரால்?
எஸ்.ராஜகோபால், சென்னை-17.
தமிழகத் தலைவர்களிடம், குறிப்பாக... திராவிட இயக்கத்தினரிடம், ஒரு பிரச்னைபற்றிப் பேசும்போது, கண்ணீர் விடுவதும், அழுவதும், அளவுக்கு மீறி உணர்ச்சிவசப்படுவதும் தனிக் கலாசாரமாகவே இருக்கிறது. இது முதிர்ச்சி இன்மையைக் காட்டுவதுபோல் இல்லையா?
திராவிட இயக்கத்தினரிடம் மட்டும் அல்ல... தலைசிறந்த பேச்சாளர்கள் அத்தனை பேரும் அதிகம் உணர்ச்சிவசப்படுபவர்கள்தான். பாரதியின் பாடல்கள் தடை செய்யப்பட்டபோது, தீரர் சத்தியமூர்த்தி பேசிய பேச்சும் அப்படித்தான் இருந்தது. கம்யூனிஸ்ட்கள் நாடு முழுவதும் கைது செய்யப்பட்டபோது... 'ஏய் மீனாட்சி உனக்கு இது பொறுக்கவில்லையா? சொக்கநாதா உனக்கு இது பொறுக்கவில்லையா?’ என்று ஜீவானந்தம் மதுரையில் கர்ஜித்ததும் அப்படித்தான் இருந்திருக்கும். எனவே, இது திராவிட இயக்கத்தினருக்கு மட்டும் சொந்தமானது அல்ல. கிளிசரின் ஊற்றினாலே அழத் தெரியாதவர்கள் மத்தியில் மேடையில் சிலர் கண் கலங்குவது தவறான கலாசாரம் அல்ல. நமக்கு அவர்களது கருத்தின் மீது விமர்சனம் இருக்கலாம். ஆனால், கண்டிக்கத்தக்க அளவுக்கு கண்ணீர் பாவமானதா என்ன!
கோதை ஜெயராமன், மீஞ்சூர்.
இந்தியாவில் ஊழல் வளர்ந்தது யாரால்?
ஊழலை சமூகக் குற்றமாக நினைக்காத பொதுமக்களால்!
'அஞ்சு வருஷம் எம்.எல்.ஏ-வா இருந்தார்... நல்லா சம்பாதிச்சார்’ என்றுதான் நாமே சொல்கிறோம். 'அஞ்சு வருஷம் இருந்து தினமும் திருடினார்’ என்று சொல்வது இல்லையே!
இந்தப் பொறுப்பு உணர்வு அற்ற தன்மைதான் அனைத்துக்கும் காரணம். 'ஒரு சமூகம் தனக்குத் தகுதியான தலைவனை, தானே தேர்ந்தெடுக்கும்’ என்று சொல்வார்கள். எனவே, அனைத்து ஒழுங்கீனங்களுக்கும் பொதுமக்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்!
சீர்காழி சாமா, சீர்காழி.
கச்சத் தீவுக்கு இந்தியா சொந்தம் கொண்டாடக் கூடாது என்று எஸ்.எம்.கிருஷ்ணா கூறியிருப்பது குறித்து?
எஸ்.எம்.கிருஷ்ணாவின் மறதி அனைவரும் அறிந்ததே! தன்னை இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சராக அவர் நினைத்திருக்கலாம்!
லட்சுமி செங்குட்டுவன், வேலூர்(நாமக்கல்).
சிறையில் இருக்கும் தி.மு.க. பிரமுகர்களை அழகிரி சென்று பார்த்ததைக்கூட பண்ருட்டி ராமச்சந்திரன் பாய்ந்து தாக்குகிறாரே?
மத்திய கேபினெட் அமைச்சர் பதவியில் இருப்பவர் என்ற அடிப்படையில் அழகிரியை விமர்சிக்கலாமே தவிர... கட்சியின் முக்கியத் தலைவர் என்ற வகையில் அவர் சிறை சென்று பார்ப்பதில் தவறு ஏதும் இல்லை!
சங்கமித்ரா, மன்னார்குடி-1.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வரின் புகழைப் பாடுவதில் விஞ்சி நிற்பது இந்திய கம்யூனிஸ்ட்டா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டா?
இப்போதைக்கு... இந்திய கம்யூனிஸ்ட்!
ம.விஜய் ஆரோக்கியராஜ், கும்பகோணம்.
உங்களுக்கு அம்மா புத்தாண்டா? அய்யா புத்தாண்டா?
'குடி செய்வார்க்கு இல்லை பருவம்’ என்கிறார் வள்ளுவர்!
இரா.கல்யாணசுந்தரம், மதுரை.
தூக்குப் போடுவதை ஏன் அதிகாலையில் செய்கிறார்கள்?
அந்தக் குரூரத்தை இப்படி எல்லாம் யோசிக்க வேண்டாம்!
பல்லவ மன்னன், நெல்லை.
முதல்வரைப் பாராட்டி சீமான் நடை பயணம் கிளம்பியதும், பாராட்டு விழா நடத்தியதும் பற்றி..?
மூன்று தமிழர்களை முழுமையாக மீட்ட பிறகு, நிச்சயமாகச் செய்யலாம். காரியம் முடியாவிட்டால், பின்னோக்கி நடக்க முடியாது!
*********************************************************************************
முதல்வரைக் கிண்டலடித்த இளங்கோவன்
'ராஜீவ் காந்தியோடு கொல்லப்பட்ட 15 தமிழ்க் குடும்பத்தினர் நீதி கேட்டு உண்ணாவிரதம்’ என்று அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே போலீஸுக்கு டென்ஷன். காரணம், இந்த உண்ணாவிரதத்துக்குப் பின்னணியாக இருந்தது காங்கிரஸ் கட்சி. தங்கபாலுவால் கட்டம் கட்டப்பட்ட ஜோதி ராமலிங்கம் மற்றும் திரவியம் ஆகியோர் இந்தக் குடும்பங்களை ஒருங்கிணைத்து, போராட்ட ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
சென்னை அண்ணா சாலை மின்சார வாரியத் தலைமை அலுவலகத்தின் பின்புற வாசல் அருகே நடந்த இந்த நிகழ்வில், இரு மேடைகள்! அந்தக் குடும்பத்தினருக்குப் பெரிய மேடையும், பக்கத்திலேயே காங்கிரஸ் பிரமுகர்களுக்கு சிறிய மேடையும் அமைக்கப்பட்டது.
இதில் பேசியவர்கள் வைகோ, திருமாவளவன், சீமான் ஆகியோரை வார்த்தைகளால் வறுத்தெடுத்தார்கள். முன்னாள் எம்.எல்.ஏ. ஞானசேகரன், ''கறுப்புப் பூனையோடு ஜெயலலிதா இப்போதும் வலம் வரக் காரணமே, 'விடுதலைப் புலிகளால் அவர் உயிருக்கு ஆபத்து’ என்ற நிலை இருந்ததுதான். எல்.டி.டி.ஈ-க்கு முதலில் தைரியத்தோடு தடை கேட்டவர் நீங்கள். உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்தே தீர வேண்டும்!'' என்றார் ஆவேசமாக.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ''ராஜீவும் அவரோடு இறந்தவர்களும் அநாதைகளா? ஜெயலலிதா ஆட்சிக்கு வர வேண்டும் என்று யாரும் ஓட்டுப் போடவில்லை. இன்னொருவர் வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் போட்டார்கள். 'போல்டான லேடி. அயன் லேடி, வீர மங்கை’ என்றெல்லாம் சொல்லப்படும் நீங்கள், தவறுக்குத் துணை போக மாட்டீர்கள் என்று நம்பினார்கள். முதல் நாள் சட்டசபையில் தைரியமாகப் பேசிவிட்டு, அடுத்த நாள் நீங்கள் பின்வாங்கியது ஏன்? உங்களை வாழ்த்தி அடிக்கும் எட்டு பிட்டு போஸ்டருக்கு மயங்கிவிட்டீர்களே?'' என்று முடித்தார்.
உண்ணாவிரதத்தில் பங்கேற்ற குடும்பத்தினரின் ரியாக்ஷன் என்ன என்று அறியச் சிலரிடம் பேசினோம். இன்ஸ்பெக்டர் ராஜகுருவின் மகள் பபிதா தேவி: '' சொந்த ஊரான நெல்லைக்குப் போயிட்டு சென்னை திரும்பிக்கொண்டு இருந்தோம். மே 22-ல் எங்களை வரவேற்க ரயில்வே ஸ்டேஷனுக்கு வருவதாக அப்பா சொல்லி இருந்தார். ரயிலில் வந்துகொண்டு இருந்தபோதே ராஜீவுடன் எங்கள் அப்பாவும் கொல்லப்பட்ட செய்தி வந்தது. மூன்று பேருக்கு மரண தண்டனை கூடாது என்கிறார்கள். பாதிக்கப்பட்ட எங்களுக்குத்தான் வலி தெரியும். மரணத்துக்கு மரணம் தீர்வாகாது என்பதை ஏற்றுக்கொள்கிறேன். உணர்ச்சிவசப்பட்டு ஆத்திரத்தில் கொலை செய்கிறவனுக்கு வேண்டுமானால், இதை ஏற்கலாம். ஆனால், திட்டம் போட்டு, ஒத்திகை பார்த்துக் காரியம் முடிக்கிறவனுக்கு நிச்சயம் தண்டனை வேண்டும்!''
சம்தானி பேகத்தின் மகள், அப்சரி பேகம்: ''எங்க அம்மா மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவி. அம்மாவின் உடலைப் பொட்டலமாகத்தான் கட்டிக் கொடுத்தாங்க. உடலைக்கூட அடையாளம் காண முடியவில்லை. உருக்குலைந்து இருந்தது. எங்க அம்மா என்பதற்கு ஒரே அடையாளம், கால் விரலில் இருந்த ஒரு வித்தியாசம் மட்டுமே. குற்றவாளிகள், அப்போதே தண்டிக்கப்பட்டு இருந்தால், இப்போது அவர்களுக்கு ஆதரவாக யாரும் போராட மாட்டார்கள். நியாயமாகப் பார்த்தால், எந்தத் தவறும் செய்யாத எங்களுக்குத்தான் அவர்கள் ஆதரவு தர வேண்டும்!''
ஐ.பி.எஸ். அதிகாரி முஹம்மது இக்பாலின் மகன் ஜாவித் இக்பால்: ''அப்ப நான் பிளஸ் டூ படித்துக் கொண்டிருந்தேன். யார், எவர் என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு ஆஸ்பத்திரியில் 15 உடல்களைப் போட்டிருந்தனர். ஆங்காங்கே சதைத் துண்டுகளாகத் தொங்கிய உடல்களை எல்லாம் புரட்டிப்போட்டு, அப்பாவைத் தேடி எடுத்தேன். அவர் முகம் பார்க்க முடியாத அளவுக்குச் சிதைந்திருந்தது. இரண்டு மாதத்துக்குத் தூக்கமே வரவில்லை. அப்பா இல்லாமல் இந்த இருபது ஆண்டுகளில் எங்கள் குடும்பத்துக்கு ஏற்பட்ட இழப்புகள் எவ்வளவு, தெரியுமா? போராடுகிறவர்களுக்கு, அந்த மூன்று பேரின் உயிர் பெருசுன்னா, எங்க அப்பா உயிரும் எங்களுக்குப் பெருசுங்க. அந்த மரணத்துக்கு நியாயம் கிடைத்தே தீர வேண்டும்! ''
எஸ்.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் எட்வர்ட் ஜோசப்பின் தம்பி ஜான் ஜோசப்: ''அண்ணன் இறந்ததும் இரண்டு பெண் குழந்தைகளை வளர்க்க எங்கள் அண்ணி பட்ட சிரமம் வார்த்தைகளில் சொல்ல முடியாதது! அண்ணன் போட்டிருந்த சஃபாரி சட்டை மட்டும்தான் கந்தல் கந்தலாகக் கிடைத்தது. அவருடைய உடலுக்குப் பக்கத்தில்தான் ராஜீவின் உடல் கிடந்தது என்று சொல்லி, துணி போட்டுக் கட்டி வைத்திருந்தார்கள். ரொம்பப் போராடி, நான் ராஜீவ் உடலையும் பார்த்தேன். ராஜீவின் குடும்பத்தினர்கூட பார்த்திருப்பார்களா என்று எனக்குத் தெரியாது. அதிர்ச்சியாக இருந்தது. நளினியை மன்னிக்க சோனியாவுக்குப் பெருந்தன்மை இருக்கலாம். எங்களிடம் அதை எதிர்பார்க்க வேண்டாம். மரண தண்டனையில் இருந்து அவர்களைத் தப்பிக்கவைக்க இப்போது போராடுகிறார்கள். ஆனால், எங்களுக்கு இந்த 20 ஆண்டு காலத்தில் ஆறுதல் சொல்லக்கூட ஒருவரும் வந்தது இல்லை!''
- எம்.பரக்கத் அலி
************************************************************************
''கண்ணை காட்டுனா, கொன்னு வீசிடுவானுங்க..''
ஷக்தி சிதம்பரத்தை மிரட்டினாரா வி.எஸ்.பாபு?
'' 'எந்திரன்’ படத்துக்கான செங்கல்பட்டு ஏரியாஉரிமையை சன் பிக்சர்ஸிடம் இருந்து 4 கோடிக்கு வாங்கினேன். படம் ரீலீஸுக்கு முன்னாடி என் ஆபீஸுக்கு வந்தார் தினகரன். 'நான் தி.மு.க. வட சென்னை மாவட்டச் செயலாளர் வி.எஸ்.பாபுவின் அண்ணன் மகன். சித்தப்பாவுக்கு சினிமா தொழில் செய்ய ஆசை. அவர் உங்களுடன் சேர்ந்து தொழில் பண்ண நினைக்கிறார். சித்தப்பாவுக்கு ஸ்டாலின் ரொம்பவும் நெருக்கம். அதனால் உங்க தொழிலுக்கும் ஒரு அரசியல் பாதுகாப்பு கிடைக்கும்’னு சொல்லி, பெரம்பூரில் இருக்குற வி.எஸ்.பாபு வீட்டுக்கு என்னை அழைச்சிட்டுப் போனார். வி.எஸ்.பாபு, 'தினகரன் தொழில் கத்துக்கணும். அதனால தியேட்டர் வரவு - செலவு பொறுப்பு எல்லாம் அவனே கவனிச்சிக்கட்டும்’னு சொன்னார். பெரிய மனுஷனா இருக்காரேன்னு நம்பி, சம்மதம் தெரிவிச்சேன். பார்ட்னர்ஷிப் 2 கோடியை, 10 நாளில் தர்றதாச் சொன்னாங்க. அடுத்து, ஆட்களுடன் வந்த தினகரன், 'ரிலீஸ் தேதி நெருங் குது. முறைப்படி ஒப்பந்தம் போட்டுக்கலாம்’னு வெறும் பேப்பரில் கையெழுத்து கேட்டாங்க. நான் மறுத்தேன்.
அதுக்கு அவங்க, 'உங்களுக்கு நம்பிக்கை இல்லைன்னா விட்டுடுங்க. எங்களுக்கு இது எல்லாம் சுண்டக்கா பிசினஸ். சித்தப்பாவுக்கு எத்தனை கப்பல் ஓடுது தெரியுமா? பல நாடுகளில் தொழில் பண்றார். கலெக்ஷன் பண்ணறதுக்குன்னே சொந்தமா ஹெலிகாப்டர் இருக்கு. ஜெ.அன்பழகன், அய்யப்பனை வளர்த்துவிட்ட மாதிரி உங்களை அவர் வளர்த்துவிட நெனைச்சார். உங்களுக்கு கொடுத்து வைக்கலை. ஆனா, ஒண்ணு... எங்களை மீறி எப்படி படத்தை ரிலீஸ் பண்றீங்கனு பார்த்துடலாம்’னு சொல்லி மிரட்டுனாங்க. வேற வழி இல்லாம நானும் என் மனைவியும் கையெழுத்து போட்டோம்.
இதுக்கு நடுவுல திருவள்ளூரில் என் சொந்தக்காரர் ஒருத்தரோட 5 கோடி மதிப்புள்ள சொத்து, 85 லட்சம் வங்கி அடமானத்துல இருந்தது. அதை மீட்டு விக்கணும்னு என்கிட்ட வந்தாங்க. இதை வி.எஸ்.பாபுகிட்ட சொன்னப்ப, அவரே 85 லட்சத்தை வங்கியில கட்டி சொத்தை மீட்டு, அவரே வாங்கிக்கொண்டார். மீதிப் பணத்தை கேட்டப்ப இழுத்தடிச்சாங்க.
படமும் ரிலீஸ் ஆன மூணு வாரத் துக்கு அப்புறம், தினகரன் எனக்கு போன் போட்டு 'கலெக்ஷன் கணக்கு பார்த்ததுல ஒன்றரை கோடி நஷ்டம். ஆளுக்கு 75 லட்சம்னு நஷ்டத்தைப் பிரிச்சிக்கலாம்’னு சொன்னார். 4 கோடி போட்டு படத்தை வாங்குனது நான். ஒரு பைசாகூட முதலீடு செய்யாம, மொத்த வசூலையும் எடுத்துக்கிட்டு, என்கிட்டயே நஷ்டம் வரும்னு சொன்னதை என்னால ஏத்துக்க முடியலை. என் சொந்தக்காரருக்கும் அவங்க பணம் தர வேண்டி இருந்தது. கிட்டத்தட்ட என் தரப்புல 10 கோடி நஷ்டம். இதனால, வி.எஸ்.பாபுகிட்ட வாக்குவாதம் செஞ்சேன்.
அப்பதான் அவர், 'என்னரொம்பத் துள்ளுற? 50 பேரை புழல் ஜெயில்ல இருந்து ஜாமீன்ல எடுத்து சோறு போட்டு வளர்த்துக்கிட்டு இருக்கேன். கண்ணை காட்டுனா, கொன்னு வீசிடுவானுங்க...’னு மிரட்டி அனுப்பிட்டார். அவங்க ஆளும் கட்சியா இருந்ததால் என்னால மேற்கொண்டு எதுவும் செய்ய முடியலை. ஆட்சி மாற்றம் வந்த பிறகு, எனக்கு சேர வேண்டிய பணத்தைக் கேட் டேன். செப்டம்பர் 4-ம் தேதி தினகரன், 'பெரம்பூர் ஆபீஸுக்கு வாங்க... பணம் கொடுக்குறோம்’னு சொன்னார்.
நான் போனப்ப தினகரன் உட்பட ஏழெட்டு பேர், 'எங்களுக்கு அரசியல் செல் வாக்கு போயிடுச்சுன்னு நினைச்சியா? சித்தப்பா, கார்த்தி சிதம்பரத்துக்கிட்ட பேசிட்டார். காங்கிரஸுக்குப் போகப்
போறோம்... எங்களை ஒண்ணும் பண்ண முடியாது’னு சொல்லி ஆபாசமாகத் திட்டி, அடிச்சி துரத்திட்டாங்க..'' என்று தழுதழுத்தார்!
இதுகுறித்து வி.எஸ்.பாபுவிடம் கேட்டோம். ''கடவுள் மீது சத்தியமாக, என் தாய், தந்தையர், குழந்தைகள் மீது சத்தியமாக நான் ஷக்தி சிதம்பரத்தை பார்த்ததுகூட கிடையாது. போனில் பேசியதும் கிடையாது. அவர் கறுப்பா? சிவப்பா என்றும் தெரியாது. அவர் சொல்லும் குற்றச்சாட்டு அபாண்டம். அவருக்கு மனசாட்சி இருந்தால், என் முகத்தைப் பார்த்து, 'உங்களை நான் பார்த்து இருக்கிறேன்’ என்று மட்டும் சொல்லச் சொல்லுங்கள். என் தொகுதியில் மக்கள் முன்பு நடுரோட்டில் தூக்குப் போட்டுத் தொங்குகிறேன். தினகரன் எனக்கு அண்ணன் மகன்தான். ஆனால், அவருடன் தொடர்பு வைத்துக் கொண்டது பற்றியும் எனக்கு தெரியாது. தினகரனிடம் நான் பேசியே பல ஆண்டுகள் ஆகிறது...'' என்றார்!
தினகரனிடம் பேசினோம். ''ஷக்தி சிதம்பரமும் நானும் 'எந்திரன்’ படத்தில் ஒப்பந்தம் போட்டது உண்மைதான். ஆனால், அவர்தான் என்னை ஏமாற்றி விட்டார். அதற்கு பின்பு வந்த 'காவலன்’ பட உரிமையை எனக்கு கொடுத்துவிட்டு, எனக்கே தெரியாமல் ஏழு பேரிடம் விற்றுள்ளார். அவர்தான் எனக்கு ஒரு கோடிக்கும் மேல் தர வேண்டி இருக் கிறது. அதை ஏமாற்றுவதற்காக இன்றுள்ள அரசியல் சூழலையும் சட்டத்தையும் தவறாக பயன் படுத்துகிறார். என்னிடம் அனைத்துக்குமே ஆதாரங்கள் உள்ளது. ஷக்தி சிதம்பரம் மீது தயாரிப்பாளர் சங்கத்திலும், போலீஸிலும் புகார் கொடுத்து இருக்கிறேன்...'' என்றார்!
யார் சொல்வதில் உண்மை இருக்கிறதோ தெரியவில்லை. கண்ணைக் கட்டுதே..!
*********************************************************************************
அண்ணனை அலைக்கழிக்காதீங்க...
போலீஸிடம் கண் கலங்கிய
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், தமிழகம் முழுவதும் நில மோசடி புகார்கள் பெறப்பட்டு துரிதமாக கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில், கொம்பையா மீண்டும் புகார் மனு கொடுத்தார். சுறுசுறுப்பாகக் களம் இறங்கியது நெல்லை போலீஸ். கடந்த 10-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு கருப்பசாமி பாண்டியனின் சொந்த ஊரான திருத்து கிராமத்துக்குள் போலீஸ் படை நுழைந்தது. கதவைத் தட்டும் சத்தம் கேட்டு எழுந்து வந்த கருப்பசாமி பாண்டியனின் மனைவியிடம், 'அண்ணாச்சி இருக் காங்களா? ஒரு கேஸ் விஷயமா கைது செய்ய வந்திருக்கோம்னு சொல்லுங்க’ என்று கூறி இருக்கிறது போலீஸ். அதிர்ந்து போன அவர், 'என் மகன் பாளையங்கோட்டையில் இருக்கான். அவனை வரச்சொல்றேன். அவன் வந்ததும் பேசிக்குங்க’ என்று சொல்லிவிட்டு கதவை அடைத்துக் கொண்டார். அதனால் போலீஸார் காத்திருந்தனர்.
சிறிது நேரத்தில், கருப்பசாமி பாண்டியனின் மகன் முத்துராமலிங்கம் வந்து சேர்ந்தார். போலீஸ் அதிகாரிகள் வழக்கு விவரத்தை அவரிடம் கூறினர். உடனே, வீட்டுக்குள் சென்று கருப்பசாமி பாண்டி யனை எழுப்பி தகவலைச் சொன்னார் மகன். இதற்குப் பிறகு, வழக்கறிஞரைத் தேடினார்கள். கட்சி வக்கீல்கள் அனைவரையும் சென்னைக்கு வருமாறு கட்சி மேலிடம் அழைப்பு விடுத்து இருந்ததால் யாருமே ஊரில் இல்லை. 'நாம் தமிழர்’ கட்சி யைச் சேர்ந்த சிவகுமார் என்ற வழக்கறிஞரை அழைத்து வந்தனர்.
அதன் பிறகு கருப்பசாமி பாண்டியன் மற்றும் அவரது அண்ணன் சங்கரசுப்பு இருவரை யும் கைது செய்து தாலுக்கா போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர் போலீஸார். இந்த விஷயம் நெல்லை மாவட்டம் முழுவதும் காட்டுத் தீயாகப் பரவவே, போலீஸ் ஸ்டேஷன் முன்பு தி.மு.க. தொண்டர்கள் குவியத் தொடங்கினர். வீட்டில் போதிய அவகாசம் கொடுக்கப்படாததால், ஸ்டேஷனிலேயே பல் துலக்கி முகம் கழுவினர். பிறகு, இருவரையும் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்த அழைத்துச் சென்றனர். அப்போது, ஸ்டேஷ னுக்கு முன் கூடியிருந்த நிருபர்களி டம் பேசிய கருப்பசாமி பாண்டியன், ''தி.மு.க-வினரை ஜெயிலுக்கு அனுப்பி விட்டு உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடிவு செய்து இருக்கிறார்கள். இதுபோன்ற கைதுகளால் தி.மு.க-வை அழித்துவிட முடியாது. எனது 38 வருட அரசியல் வாழ்க்கையில் என் மீது இதுபோன்ற புகார் இது வரை வந்தது இல்லை. எதையும் சட்டப்படி சந்திப்போம்...'' என படபடத்தார்.
பின்னர், சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, 'என்னை வெளியூர் சிறைக்குத்தான் கொண்டு போவீங்க. என்னை எந்த ஊர் சிறைக்குனாலும் அனுப்புங்க. அண்ணனுக்கு சுகர் அதிகமா இருக்கு. அதனால அவரை மட்டும் அலைக்கழிக்காதீங்க...’ என, போலீஸாரிடம் கண்கலங்கினார் கருப்பசாமி. அவரது வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட போலீஸார், சங்கரசுப்புவை பாளையங்கோட்டை சிறைக்கு அனுப்பினர். கருப்பசாமி பாண்டியன் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.
புகார் கொடுத்திருக்கும் கொம்பையாவிடம் பேசினோம். ''நடுவக்குறிச்சி கிராமத்தில் எனக்கு சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்தை 2008-ம் ஆண்டு, கருப்பசாமி பாண்டியனின் அண்ணன் மகள் சுந்தரி என்பவர் பெயருக்கு பத்திரப் பதிவு செஞ்சுட்டாங்க. போலி ஆவணங்கள் தயாரிச்சு இந்த மோசடி நடந் திருக்கு. அது தெரிஞ்சதும் நான் பதறிப் போயிட்டேன். பல கோடி ரூபாய் மதிப் புள்ள இடத்தை மீட்பதற்காக கருப்பசாமி பாண்டிய னிடம் பேச்சு வார்த்தைக்கு போனேன். ஆனால், அவரோ... 'நிலத்தை விட்டுக் கொடுக்க முடியாது. இந்த விவகாரத்தை இதோடு விடலைனா வெட்டி கொன்னுடுவோம்’னு மிரட்டினார். புகார் கொடுத்தேன். யாரும் கண்டுக்கலை. இப்போ, அ.தி.மு.க. ஆட்சியில் உடனே நடவடிக்கை எடுத்திருக்காங்க.. நிலத்தை மோசடி செஞ்சவங்களிடம் இருந்து மீட்க வழி கிடைச்சிருக்கு!'' என்றார் நம்பிக்கையுடன்.
போலீஸ் அதிகாரிகளிடம் பேசினோம். ''நெல்லை மாவட்டத்தில் நில அபகரிப்பு செய்து உள்ள தி.மு.க. புள்ளிகளின் பட்டியலை ஏற்கெனவே எடுத்து வைத்து இருந்தோம். உயர் அதிகாரிகள் அனுமதிக்காகக் காத்திருந்தோம். அனுமதி கிடைத்ததும் கைது செய்தோம். இந்த வழக்கில் தொடர்புடைய சுந்தரி, பரமசிவ அய்யப்பன் மற்றும் கல்லத்தியான் ஆகிய மூன்று பேரைத் தேடி வருகிறோம்...'' என்றார்கள்.
அடுத்த வழக்கு யார் மீதோ?
*********************************************************************************
சேர்மன் பதவிக்கு பிச்சாண்டி போட்டி?
திருவண்ணாமலை திகுதிகு
திருவண்ணாமலை நகராட்சி சேர்மனாக இப்போது, தி.மு.க-வின் ஸ்ரீதர் என்கிற திருமகன் பதவி வகிக்கிறார். மீண்டும் அவரே இந்தப் பதவிக்கு போட்டியிட விருப்ப மனு கொடுத்திருக்கும் நிலையில், தி.மு.க-வில் வேறு பலரும் இதற்காக விருப்ப மனு கொடுத்து வருகின்றனர். இதுதவிர, அ.தி.மு.க., தே.மு.தி.க., ம.தி.மு.க. மற்றும் பா.ம.க. போன்ற கட்சிகளும் இந்தத் தலைவர் பதவியைக் கைப்பற்றத் துடித்து வருகின்றன.
தி.மு.க-வைப் பொறுத்தவரை, 'சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் நாற்காலி, எம்.எல்.ஏ. ஸீட்களை பறிகொடுத்து விட்டோம். இழந்ததை மீண்டும் உள்ளாட்சித் தேர்தலில் பிடித்துக் காட்ட வேண்டும்’ என்ற முனைப்பு தெரிகிறது. தி.மு.க-வில் ஸீட் வாங்க, முன்னாள் அமைச்சர் கு.பிச்சாண்டி, ஸ்ரீதர் மற்றும் பிச்சாண்டியின் மைத்துனர் ஆர்.செல்வம் ஆகியோர் இடையே மும்முனைப் போட்டி நிலவுவதாகச் சொல்லப்படுகிறது.
தி.மு.க-வின் முக்கியப் புள்ளிகள் சிலர் நம்மிடம், ''சட்டமன்றத் தேர்தலில் தமிழக அளவில் தோல்வி அடைந்தாலும், திருவண்ணாமலை தொகுதியை எப்படியோ பாடுபட்டுப் பிடித்தோம். அதேபோல் உள்ளாட்சித் தேர்தலிலும் திருவண்ணாமலை நகராட்சியை கண்டிப்பாக மீண்டும் கைப்பற்றித் தக்க வைப்போம். அதற்காக சமீபத்தில் எம்.எல்.ஏ. வேலு, நகரத்தில் உள்ள தி.மு.க-வின் அனைத்து அணிகளையும் அழைத்துக் கூட்டம் போட்டார். அதில், 'எல்லோரும் எனக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்காதீர்கள். மக்களிடம் செல்வாக்கு உள்ளவர்கள் மட்டும் மனு செய்யுங்கள்’ என்றார். அதன்படி ஸ்ரீதர், தி.மு.க. நகரப் பொறுப்பாளர் கார்த்திக் வேல்மாறன், நகரமன்றத் துணைத் தலைவர் ஆர்.செல்வம் போன்றவர்கள் விருப்ப மனு கொடுத்து இருக்கின்றனர். இந்நிலையில், முன்னாள் அமைச்சரும் திருவண்ணாமலை தொகுதி எம்.எல்.ஏ-வுமான பிச்சாண்டியும் களத்தில் குதிக்கிறார் என்பது உடன்பிறப்பு களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு காலத்தில் திருவண்ணாமலையில் தி.மு.க. என்றாலே பிச்சாண்டி பெயர்தான் ஞாபகத்துக்கு வரும். இந்தத் தொகுதியை தி.மு.க-வின் கோட்டையாகவே வைத்திருந்தார். இந்தத் திருவண்ணாமலை நகராட்சியை வேற்று கட்சிக்கு விட்டுக் கொடுக்காமல் இருக்க வேண்டும் என்றால், அதற்கு சரியான ஆள் பிச்சாண்டிதான். எம்.எல்.ஏ. வேலு சொன்னது போல் பார்த்தாலும், மக்களிடம் செல்வாக்கு உள்ளவர் பிச்சாண்டிதான். எல்லோரையும் அரவணைத்துச் செல்லக்கூடியவர். யாரிடமும் வம்புக்கோ, கட்டப்பஞ்சாயத்துக்கோ போகாதவர். மேலும், ஸ்ரீதரின் வளர்ச்சி அதிகமாகி வருவதால், 'அவருக்கு வாய்ப்பு கிடைக்கக் கூடாது’ என மாவட்டச் செயலாளர் வேலு நினைக்கிறார்.
சிலர், 'அது எப்படி அமைச்சராக, எம்.எல்.ஏ-வாக இருந்த பிச்சாண்டி, நகரமன்றத் தலைவர் பதவிக்குப் போட்டி இடுவார்?’ என்றும் கேட்கின்றனர். ஆனால், இந்தத் திருவண்ணாமலையில் இதுபோல் நடப்பது ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன் தி.மு.க-வின் முதல் எம்.பி-யான தர்மலிங்கம்கூட நகரமன்றத் தலைவராகி இருக்கிறார். அதேபோல் தி.மு.க-வின் முருகையன் எம்.பி-யும் சேர்மனாக இருந்திருக்கிறார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜயராஜ்கூட எம்.எல்.ஏ-வாக இருந்து அதற்குப் பிறகுப் நகரமன்றத் தலைவராக இருந்தார். இதில் ஒன்றும் தவறில்லை. நீங்கள் வேண்டுமானால் பாருங்கள்... அவர் கூடிய சீக்கிரமே விருப்ப மனு கொடுப்பார்!'' என்றனர் உறுதியாக.
ஆனால், வேறு சில தி.மு.க. முக்கியப் புள்ளிகளோ, ''இந்த நகராட்சியை மீண்டும் தி.மு.க. வசம் ஆக்க வேண்டும் என்றால் அதற்கு தகுதியானவர், ஸ்ரீதர் மட்டும்தான். ஏற்கெனவே சட்டமன்றத் தேர்தலில் எ.வ.வேலு, ஒரு சாதியைப் பற்றி சில வார்த்தைகள் விமர்சனமாகக் கூற... அதுவே இந்தத் தொகுதியில் தி.மு.க-வின் பின்னடைவுக்குக் காரணமாக இருந்து விட்டது. அந்த கோபம் இன்னும் அவர்களிடம் தணியவில்லை. அதனால் அந்த இனத்தவரான ஸ்ரீதருக்கே மீண்டும் வாய்ப்பு கொடுக்க வேண்டும். பிச்சாண்டிக்கு வாய்ப்புக் கொடுத்தாலும் அவர் வெற்றி பெறுவது சற்று கடினம்தான்...'' என்றனர்.
இது குறித்து ஸ்ரீதரிடம் பேசியபோது, ''நான் விருப்ப மனு கொடுத்துள்ளேன். இதுவரை இரண்டு முறை நகரமன்றத் தலைவராக பதவி வகித்துள்ளேன். கண்டிப்பாகத் தலைமை இந்த முறையும் வாய்ப்பு கொடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது!'' என்று சொன்னார். இதுபற்றி பிச்சாண்டியிடம் பேச பல முறை முயற்சித்தும், அவரது உதவியாளர் நாகேஷிடம்தான் பேச முடிந்தது. ''அய்யா மீட்டிங்கில் இருக்கிறார், சென்னையில் இருக்கிறார்...'' என்றே தொடர்ந்து நமக்கு பதில் அளித்தார்.
எதிர் அணியைச் சேர்ந்தவர்கள் இன்னமும் களம் இறங்காத சூழலில், அதற்குள் தி.மு.க-வில் ஏற்பட்டுள்ள போட்டியைக் கண்டு மக்கள் ஆச்சர்யப் படுகிறார்கள்.
*********************************************************************************
ஐ வான்ட் ஃபேமிலி ஆன்ட்டி...!
புதுவை டி.வி. அதிர்ச்சி
இது பற்றி நமக்கு புகார் வரவே, லோக்கல் சேனலில் வேலை பார்க்கும் நபர் ஒருவரி டம் விசாரித்தோம். ''என்ன நண்பா... புதுசா சொல்றீங்க. இது வழக்கமா வருவதுதானே!'' என்று ஆரம்பித்து அவர் அடுத்தடுத்துச் சொன்ன அத்தனையும் அதிர்ச்சி ரகம். ''தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங் களிலும் சேர்த்து கிட்டத்தட்ட 60 லோக்கல் சேனல்கள் இருக்கலாம். ஆனால் புதுவையில் மட்டுமே 60-க்கும் மேற்பட்ட லோக்கல் சேனல்கள் இருக்கின்றன. இந்த சேனல்களுக்கு எந்த விதமான வரைமுறையோ, கட்டுப்பாடுகளோ கிடையாது.
ஒவ்வொரு சேனலும் போட்டி போட்டுக்கொண்டு மக்களைத் தங்கள் பக்கம் இழுப்பதற்காகப் புதுப்புது விஷயங்களைக் கையாள்கின்றன. அப்படித் தொடங்கப்பட்டதுதான் இதுவும். ஸ்க்ரோலிங்கில் யார் வேண்டுமானாலும் என்ன செய்தியை வேண்டு மானாலும் மெசேஜாக அனுப்பலாம். அதில் என்ன செய்தி வருகிறது என்பதை சென்சார் செய்யாமல் அப்படியே ஒளிபரப்பு செய்கிறார்கள். அதைத்தான் இளசுகள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இரண்டு நாளைக்கு முன்பு ஒரு சேனலில், 'ஐ ம் சரண். காலேஜ் ஸ்டூடண்ட். ஐ வான்ட் ஃபேமிலி ஆன்ட்டி’ என்று ஒரு ஸ்க்ரோலிங் ஓடியது. சில நொடிகளில் அதற்கு ஒரு பதில் வருகிறது. 'ஹாய் சரண் யுவர் நம்பர் ப்ளீஸ் - காமாட்சி’ என்று வருகிறது. ஆனால், இது போன்ற நிகழ்ச்சிகளில் நம்பரை லோக்கல் சேனல்கள் வெளியிடுவது இல்லை. அதனால் இந்த ஜொள்ளர் கள் புது டெக்னிக்கைக் கையாள்கிறார்கள். எண்ணில் நம்பர் அனுப்ப முடியாது என்பதால், ஆங்கில எழுத்தில் நம்பரை டைப் செய்து அனுப்பி விடுகிறார்கள். அந்த சரண், அவரது நம்பரை எழுத்தில் அனுப்ப, அதுவும் அப்படியே ஒளிபரப்பாகிறது.
இது மட்டுமில்லாமல் ஒரே பெண்ணை ஏழெட்டு பேர் போட்டி போட்டு ஆபாச வார்த் தைகளால் கொஞ்சு வதும் நடக்கிறது. இந்த ஸ்க்ரோலிங்கில் பேசு வதை டி.வி. சாட்டிங் என்று சொல்கிறார்கள். அவர்கள் நம்பர் கிடைக் கும் வரை நேருக்கு நேர் பேசிக்கொள்ள முடியாது. அதனால் டி.வி. மூலமாக மெசேஜ் அனுப்பித்தான் பேசு வார்கள். பொதுவாகவே இதில் யாரும் உண்மையான பெயரில் சாட் பண்ணுவது இல்லை. இந்த விஷயத்தில் பெண்கள் படுஉஷார். அவர்கள் எப்போதும் நம்பர் அனுப்புவது இல்லை.
ஆண்கள்தான் நம்பரை எழுத்துகள் மூலமாக டைப் பண்ணி அனுப்புவார்கள். உடனே பெண்கள் நம்பரைக் குறித்துக் கொள்வார்கள் என்றாலும் உடனே மெசேஜ் அனுப்ப மாட்டார்கள். காரணம் அவன் வேறு எந்தப் பெண்ணுடனாவது தொடர்ந்து சாட்டிங் செய்கிறானா என்பதைக் கவனித்து வருவார்கள். அதற்குப் பிறகே பேசத் தொடங்குவார்கள்.
எனக்குத் தெரிந்து இந்த மாதிரி லோக்கல் சேனல் சாட்டிங் மூலம் இரண்டு பேர் காதலர்களாக மாறி இருக்கிறார்கள். ஒரு ஜோடியின் திருமணத்தில் நடந்த விவகா ரத்தைச் சொல்கிறேன் கேளுங்கள். அந்தப் பையன் எவ்வளவோ முயற்சி பண்ணியும் கல்யாணத்துக்கு முன்னாடி அந்தப் பொண்ணு நெருங்கவே விடலை. அதனால யாருக்கும் தெரியாம கல்யாணத்துக்கு அவசரமா ஏற்பாடுகளை செஞ்சிருக்கான். கோயில்ல தாலி கட்டுற நேரத்துல இன்னொரு பொண்ணு வந்து நின்னுட்டா. அந்தப் பையன் பேய் அறைஞ்சவன் மாதிரி ஆயிட்டான். காரணம் என்ன தெரியுமா? அந்தப் பொண்ணு அவனோட பொண்டாட்டியாம். இப்படி யாரு என்னன்னு கூட தெரியாம பல பெண்கள் இந்த சாட்டிங்கில் சிக்கி ஏமாந்து வருகிறார்கள். இதுபோன்ற சீர்கேடுகளை அரசு உடனே தடுத்து நிறுத்தாவிட்டால், இன்னும் மோசமான வார்த்தைகள் சேனலில் வருவதைத் தடுக்கவே முடியாது...'' என்று நொந்து கொண்டார்.
புதுவை அரசின் உள்ளாட்சித்துறை அமைச்சர் என்.ஜி.பன்னீர்செல்வத்திடம் இந்த விவகாரம் குறித்துப் பேசினோம். ''தமிழ்நாட்டைப் போலவே இங்கும் லோக்கல் சேனல்களை முறைப்படுத்தத் திட்டமிட்டு இருக்கிறோம். வரும் 12-ம் தேதி நடைபெறவிருக்கும் சட்டசபை கூட்டத் தொடரில் இது பற்றி விவாதிக்க இருக்கிறோம். ஆனால், நீங்கள் குறிப்பிடும் சாட்டிங் பற்றி இதுவரை என் கவனத்துக்கு வரவே இல்ல. ஆனால், கேட்கவே அதிர்ச்சியாக இருக்கிறது. இந்த மாதிரியான வாசகங்கள் கண்டிப்பா இளைய தலைமுறையை ரொம்பவே பாதிக்கும். அதனால் நான் உடனடியாக அதிகாரிகளிடம் பேசி, அந்த எஸ்.எம்.எஸ். சாட்டிங் சேவையை லோக்கல் சேனலில் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்கிறேன்!'' என்று சொன்னார்.
சொன்னதை உடனே செய்யட்டும் அமைச்சர்.
*********************************************************************************
'வசூல்' கணேசனை மாத்துங்க...
விஜயகாந்த்துக்கு நாகை கோரிக்கை
நாகப்பட்டினம் நகரப் பொருளாளர் பிரபா என்ற பிரபாகரனை சந்தித்தோம். ''கடந்த 2006 சட்டமன்றத் தேர்தல் வரை மாவட்டத் தலைவருக்குத் தான் அதிக அதிகாரம் இருந்தது. அப்போது அக்கரைப்பேட்டை மதியழகன் மாவட்டத் தலைவராக இருந்தார். அவரையே நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதிக்கு வேட்பாளராகவும் கேப்டன் அறிவித்தார். எங்களின் கடுமையான உழைப்பால் அதிக வாக்குகள் மதியழகனுக்கு கிடைத்தது. இதனால்தான், இப்போதைய மீன்வளத் துறை அமைச்சர் ஜெயபால், அந்தத் தேர்தலில் தோற்றுவிட்டார். அப்படிப்பட்ட மதியழகனை, தேர்தலுக்குப் பிறகு தலைமைக்கு புகார் மேல் புகாராக அனுப்பி காலி செய்துவிட்டார்கள். காரணம், மாவட்டச் செய லாளர் கணேசனும், மாவட்டப் பொருளாளர் அனிஸ் பாண்டியனும்தான். மதியழகன் போனதும் அவருடைய ஆதரவாளர்களையும் நீக்கிக்கொண்டு இருக்கிறார் கணேசன்!'' என்று புலம்பினார்.
கீழையூர் ஒன்றியச் செயலாளர் ஆனந்தராஜ், கீவளூர் ஒன்றியச் செயலாளர் அழகன், பிறகு அதே ஒன்றியச் செயலாளராக வந்த ரஃபீக், திருமருகல் ஒன்றியச் செயலாளர் ரமேஷ் மற்றும் திட்டச்சேரி, நாகூர், நாகை ஆகிய ஒன்றியச் செயலாளர்களை பொறுப்பில் இருந்து நீக்கி இருக்கிறாராம் கணேசன். இதில் நாகூர் மற்றும் நாகப்பட்டினம் ஒன்றியச் செயலாளர்கள் தன் வீட்டில் புகுந்து ரகளை செய்ததாகவும், பெண்களை மானபங்கப்படுத்த முயன்றதாகவும், போலீஸில் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்க வைத்தாராம்.
நீக்கப்பட்ட ஒன்றியச் செயலாளர்கள் சார்பில் நம்மிடம் பேசினார் முன்னாள் கீழையூர் ஒன்றியச்செயலாளர் ஆனந்தராஜ். ''அவர் மட்டும்தான் கட்சி வேலை செய்யணும். மத்தவங்க செஞ்சா அதை ஏத்துக்க மாட்டார். கட்சி வேலைக்காக கேப்டன் கொடுத்த கம்ப்யூட் டரைக்கூட தன்னோட சி.டி கடையில்வெச்சு காசு சம்பாதிக்கிறார் கணே சன். தட்டிக்கேட்டா... எங்கள் மீது போலீஸில் பொய் புகார் கொடுத்தும், கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கியும் நடவடிக்கை எடுக்கிறார். எப்பவும்போல நாங்க இந்த வருடமும் கேப்டன் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்காக, அன்னதானம், பேரணி நடத்த போலீஸ்கிட்ட அனுமதி கேட்டோம். கணேசனோ, தானே வேறு நிகழ்ச்சியை ஏற்பாடு செஞ்சு, அதுக்குத்தான் அனுமதி தரணும்னு போலீஸ்கிட்ட சொல்லிட்டார். போலீஸும் எங்களுக்கு அனுமதி மறுத்துடுச்சு. அப்புறம் போராடி வேற ஒரு நாளில் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தினோம். இந்தத் தேர்தலில் வந்த பணத்தில்கூட கிட்டத்தட்ட 10 லட்சம் வரை இவர் சுருட்டிட்டார். அந்தப் பணத்தில் அவர் வாங்குன நகைகளை, ரசீதோட கேப்டனிடம் சொன்னோம். இப்படி பல தடவை தலைமை அலுவலகத்துக்கு புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் இல்லை. கேப்டனிடம் கடிதங்களைக் கொடுக்க வேண்டிய நபரை இவர் எப்படியோ மடக்கி வைத்திருக்கிறார். அதோடு, புதிதாகக் கட்சிக்கு வந்த ஆட்களிடம் பணம் வாங்கிட்டு கட்சிப் பதவி கொடுக்கிறார். வரும் உள்ளாட்சித் தேர்தலில் யார் யாருக்கு ஸீட் வேண்டும்னு தனியாக வசூல் வேட்டை செய்றார். இவர் மாவட்டச் செயலாளராக நீடித்தால், கூடிய சீக்கிரத்தில் கட்சியே காலியாகிவிடும்...'' என்று குற்றப் பத்திரிகை வாசித்தார்.
இதற்கு எல்லாம் விளக்கம் கேட்டு கணேசனை தொடர்புகொண்டோம். ''மதியழகனையோ, ஆனந்த ராஜ் உள்ளிட்ட ஒன்றியப் பொறுப்பாளர்களையோ நான் பதவியில் இருந்து நீக்க முடியுமா? அவரவர்களின் கட்சி நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்த கட்சித் தலைமை, அவர்களைப் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டது. அதற்காக என்னை எப்படிப் பொறுப்பாக்க முடியும்? குடி போதையில் வீடு தேடிவந்து வன்முறையில் இறங்குகிறவர்களையும், பொறுப்புக்கு வந்து பல ஆண்டுகள் ஆகியும் செயல்படாதவர்களையும் தலைமை கவனித்து நடவடிக்கை எடுத்துள்ளது. அவ்வளவுதான்... தேர்தல் பணத்தை முறையாகச் செலவழித்து, தலைமையிடம் கணக்கு ஒப்படைத்தாயிற்று. என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து சொல்லி வந்தாலும், அதில் எந்த உண்மையும் இல்லை என்பது தலைமைக்கு நன்றாகத் தெரியும்.
கேப்டன் பிறந்த நாள் பேரணியை எப்போது நடத்துவது, எப்படி நடத்துவது என்பதற்கு ஒரு வரைமுறை இல்லையா? பிறந்த நாளன்று நாகை நகரத்திலும், வேளாங்கன்னியிலும் விழாக்கள் நடந்திருக்கும்போது, பல நாட்கள் கழித்து நகரச் செயலாளர் மற்றும் மாவட்டச் செயலாளர் பெயரை எல்லாம் போடாமல், பேரணிக்கு நோட்டீஸ் அடித்தால், அதை மற்ற தொண்டர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? இதை எல்லாம்விட உங்களிடம் புகார் சொல்லும் யாரும் கட்சியால் அறிவிக்கப்பட்ட பதவிகளில் உள்ளவர்கள் இல்லை. தாங்கள் பொறுப்புக்கு வந்துவிட வேண்டும் என்று கருதி வேலை பார்க்கும் ஒரு சிலரின் கைப்பாவைகள்தான். மற்றபடி கட்சியைக் கட்டுப்பாடாக நடத்துவதில் கேப்டனின் வழியில் செம்மையாக சென்றுகொண்டு இருக்கி றோம்'' என்றார் பொறுமையாக.
இந்த உட்கட்சிப் பூசல், உள்ளாட்சித் தேர்தலில் என்னென்ன வேலைகளைக் காட்டப் போகிறதோ?
*********************************************************************************
ஜெயலலிதாவின் 'பழைய' உத்தரவு நிறைவேறுமா..?
பட்டாவுக்காக காத்திருக்கும் திருச்சி
இதுகுறித்து, ஸ்ரீரங்கம் 4-வது வார்டு கவுன்சிலர் விஜயலட்சுமி (ம.தி.மு.க.) நம்மிடம், ''எங்க ஏரியாவில் அண்ணா நகர், மொட்டக்கோபுரம், குறுக்குத் தெரு ஆகிய பகுதிகளில் 150 வீடுகளுக்கு, பட்டா இல்லை. இந்த வீடுகளில் வசிப்பவர்கள், ஏழைகளுக்கு இலவச நிலம் வழங்கும் திட்டத்தில் குடிசை மாற்று வாரியம் மூலமாக, நிலம் பெற்றவர்கள். 1989-ல் குடிசை மாற்று வாரியம் இந்த மக்களிடம் அக்ரிமென்ட் போட்டு, பணம் கூட வசூல் செய்து இருக்கின்றது. இதில், அண்ணா நகர் பகுதிக்கு தடையில்லாச் சான்று கிடைத்து 10 ஆண்டுகள் ஆகி றது. முதல்வர் அம்மாதான் எங்கள் தொகுதிக்கு இப்போது எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். அதனால், இந்தப் பிரச்னையில் தனிகவனம் செலுத்தி, பட்டா விரைவில் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்!'' என்று கோரிக்கை வைத்தார்.
பட்டா இல்லாமல் 2,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தவித்து வரும் திருச்சி கிழக்கு தொகுதிக்குச் சென்றோம். இந்திரா நகரைச் சேர்ந்த கதீஜா பீவி, ''இது பள்ளமான பகுதி என்பதால், மழைக் காலத்தில் வீடுகள் வெள்ளத்தில் மிதக்கும். எங்களுக்கு பட்டா இல்லாததால் குடிநீர், சாக்கடை, ரோடு போன்ற அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை...'' என்றார் பரிதாபமாக.
இந்தப் பிரச்னை குறித்து, திருச்சி கிழக்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ-வான மனோகரனிடம் பேசினோம். ''இது சம்பந்தமான மனுக்கள் எனக்கும் வந்து உள்ளன. எனது தொகுதியில், தகுதி உடைய எல்லாருக்கும் பட்டா வழங்குவதற்கான பட்டியல் தயாரிக்க தாசில்தாரிடம் பேசியுள்ளேன். அரசுப் பணியில் இருப்பவர்கள் தவிர, மற்ற எல்லாருக்கும் பட்டா விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்ரீரங்கம் தொகுதி மக்களுக்கும் பட்டா விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்!'' என்றார்.
காற்றுள்ள போதே தூற்றிக்கொண்டால் சரி.
*********************************************************************************
கூட்டணி குளறுபடி ஆரம்பம்!
காரைக்குடியில் சீறிய சிதம்பரம்
இது குறித்து நம்மிடம் பேசிய காங்கிரஸ் நிர்வாகி ஒருவர், ''புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயம் தொகுதியில் ஒரே ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ-வாக இருந்தார் ராம.சுப்புராம். சிதம்பரம் ஆதரவாளரான அவருக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்பட்டும், அ.தி.மு.க வேட்பாளரான வைரமுத்துவிடம் தோற்றுப்போனார். அறந்தாங்கி தொகுதியை திருநாவுக்கரசர் டெல்லிக்கே சென்று கேட்டுப் பெற்றார். அந்தத் தொகுதியையும் காங்கிரஸ் இழந்தது. அதனால், தற்போது வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தமது செல்வாக்கை நிரூபித்து விட வேண்டும் என்பதில் சிதம்பரம் உறுதியாக இருக்கிறார்.
கடந்த ஐந்து வருடங்களில் திருமயம் தொகுதியில் மட்டும் 1,200 பேருக்கு கல்விக் கடன் பெற்றுத் தந்ததோடு, பலருக்கு பிரதமரின் மருத்துவ உதவித் தொகையையும் வாங்கி தந்தார் சிதம்பரம். அப்படி இருந்தும், சட்டமன்றத் தேர்தலில் ஜொலிக்க முடியவில்லை. அதற்குக் காரணம்... மத்திய அரசின் திட்டங்களையும், காங்கிரஸ் மூலம் வாங்கித் தந்த கல்விக் கடன், மருத்துவ உதவிகளையும் மக்களிடத்தில் சரியாகக் கொண்டுபோய் சேர்க்கா ததுதான் என சிதம்பரம் நினைக்கிறார். அதனால், அவற்றை மக்களிடம் சரியான முறையில் சேர்க்கச் சொல்லி இருக்கிறார். இம்முறை எப்படியும் அதிக இடங்களில் காங்கிரஸ் ஜெயிக்க வேண்டும் என நினைக்கும் அவர், அதற்காக கார்த்தி சிதம்பரத்தைக் களத்தில் இறக்கியுள்ளார். கார்த்தியும் ஒவ்வொரு தொகுதியாகச் சென்று செல்வாக்கான நபர்களை நேரடியாகத் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
உள்ளாட்சித் தேர்தலில் கட்சி வேட்பாளர்களை எதிர்த்தே போட்டி வேட்பாளர்கள் களத்தில் நிற்பது பல இடங்களில் நடக்கத்தான் செய்யும். எனவே, உள்ளாட்சி வார்டுகள் கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கினாலும் பரவாயில்லை. ஏரியாவில் செல்வாக்கான தனது தரப்பு ஆட்களை நிற்கவைத்து ஜெயிக்க வைத்தே தீரவேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார். அதனால் கூட்டணியில் ஏதோ குளறுபடி இருக்கிறது...'' என்றார்.
ப.சிதம்பரத்தின் ஆதரவாளரும், முன்னாள் திருமயம் சட்டமன்ற உறுப்பினருமான ராம.சுப்புராமிடம் பேசினோம். ''இந்தத் தொகுதி மட்டும் இன்றி புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் மக்களுக்கான அத்தனை உதவிகளையும் பாரபட்சம் இன்றி காங்கிரஸ் செய்து கொடுத்திருக்கிறது. குறிப்பாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டங்களை அதிக அளவில் செயல்படுத்தி இருக்கிறோம். அதை வைத்தே வரும் உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களைப் பிடிப்போம். இதை வலியுறுத்தித்தான் தலைவரும் பேசி இருக்கிறார்...'' என்றார்.
*********************************************************************************
மின்சார வாரியத்தில் மருந்து வியாபாரம்!?
சேலம் பரபரப்பு
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நங்கவள்ளி ஒன்றியச் செயலாளர் குமாரை சந்தித்தோம். ''இந்த ஆபீஸில் நடக்குற கொள்ளைகள் எல்லை மீறிப் போயிட்டு இருக்குதுங்க. இதுகுறித்து பல தடவை புகார் செஞ்சும், யாரும் கண்டுக்கவே இல்லை. அதனால்தான், நோட்டீஸ் போட்டோம். புது இணைப்புக்கு அரசு நிர்ணயம் செஞ்சிருக்கும் தொகை 1,600. ஆனால், 3,200 கொடுத்தால்தான் இணைப்பு கொடுப்பாங்க. இல்லைன்னா... எவ்வளவு நாள் ஆனாலும் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி இழுத்தடிக்கிறாங்க. இதற்கு எல்லாம் காரணம் இங்கே இருக்கும் உதவி செயற் பொறியாளர் சித்துராஜும், உதவி பொறியாளர் பூங் கொடியும்தான்.
பூங்கொடியைப் பொறுத்த வரைக்கும் ஆபீஸுக்கு பார்ட் டைமாகத்தான் வராங்க. உடல் எடையைக் குறைப் பதற்கான மருந்து விற்கிற வேலையைத்தான் முழு நேரமா செய்றாங்க. வேறு வேலைன்னு யாராவது ஆபீஸுக்கு வந்தாலும், அவங்க தலையில் இந்த மருந்துகளைக் கட்டிவிட்டுடுறாங்க. இவங்க இரண்டு பேரால் பாதிக்கப் பட்டவர்களிடம் புகார்களை ஆதாரபூர்வமாக எழுதி வாங்கி இருக்கிறோம். சம்பந்தப் பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால்... அடுத்த கட்டமாக வீதிக்கு வந்து போராடப் போறோம்!'' என்று எச்சரித்தார்.
புகார் சொல்லப்படும் உதவி செயற் பொறியாளர் சித்துராஜுவை சந்தித்தோம். ''மின் இணைப்புக்குப் பதிவு செய்தவர்களுக்கு சீனியாரிட்டி வரிசையில் இணைப்புகளைக் கொடுத்து வருகிறோம். அரசு நிர்ணயித்துள்ள தொகையைத் தாண்டி அதிகமாக வசூலிப்பது இல்லை. மத்தபடி அவங்க சொல்லும் புகார் எதுவுமே உண்மை இல்லை. ஆட்கள் பற்றாக்குறையால் எங்களால் உடனுக்குடன் வேலைகளை முடிக்க முடியவில்லை. அதனால்தான் காலதாமதம் ஏற்படுகிறது...'' என்றார்.
உதவிப் பொறியாளர் பூங்கொடி என்ன சொல்கிறார்? ''நீங்களே பாருங்க... எட்டுப் பேர் வேலை பார்க்க வேண்டிய இடத்தில் மூணு பேரு வேலை பார்க்குறோம். எங்க ஆபீஸ்ல வேலை பார்க்கும் ஊழியர் ஒருத்தரோட உறவினர்தான் அவங்க சொல்ற மருந்தை விற்கிறாங்க. எங்க வீட்டில் இருக்கும் சிலருக்கு அந்த மருந்து தேவைப்படுவதால் நானும் வாங்கிட்டுப் போறேன். மத்தபடி நான் மருந்து விற்கிறது கிடையாது!'' என்றார்.
மின் வாரிய உயர் அதிகாரிகள் மட்டத்தில் பேசிய போது, ''எங்களுக்கும் இது தொடர்பாக புகார் வந்திருக்கிறது. விசாரிச்சிட்டு இருக்கோம். தவறு இருக்கும் பட்சத்தில் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்!'' என்றார்கள்.
பார்க்கலாம்.
*********************************************************************************
''வீரபாண்டியார் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால்..?''
சேலத்தில் பொங்கிய தி.மு.க.
குகை பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் முதலில் எழுந்தார். ''வீரபாண்டியாரை தொடர்ந்து ஒரு மாதத்துக்கும் மேலாக கோவை சிறையில் அடைத்து சித்ரவதை செய்கிறார்கள். தி.மு.க-வுக்கு இது சோதனைக் காலம். இந்த சோதனைக் காலத்தில் யார் உறுதியாக இருக்கிறார்களோ அவர்களுக்கே உள்ளாட்சித் தேர்தலில் நிற்க வாய்ப்பு கொடுக்க வேண்டும்!'' என்று ஒரு பிட்டை போட்டார்.
அடுத்து மேடைக்கு வந்த அஸ்தம்பட்டி நடேசன், ''கூடிய சீக்கிரம் நம்ம எல்லோரையுமே 'உள்ளே’ தூக்கிப் போடப் போறாங்க. ஆனா, அதைப் பத்தி கவலை வேண்டாம். உள்ளே இருந்துகிட்டே நாம வேட்புமனுத் தாக்கல் பண்ணலாம். நாம ஜெயிச்சுட்டா உடனே கார்ல போறோம். மக்களை சந்திக்கிறது இல்ல. அப்புறம் எப்படி உருப்படுவோம். சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நமக்கு ஓட்டு போடலைன்னு வருத்தப்பட்டு, ஓட்டு கேட்காம இருக்க வேண்டாம். நடந்ததை மறந்துட்டு வெட்கப்படாம மக்கள்கிட்ட போய் ஓட்டு கேட்கலாம்!'' என்று ஐடியா கொடுத்தார்.
எல்லோரும் பேசி முடித்த பிறகு மைக் பிடித்தார் கம்பம் செல்வேந்திரன். ''இந்தச் சூழ்நிலையில் வீர பாண்டியார் இல்லாததால், நெஞ்சம் கனத்துத்தான் போயிருக்கிறது. தமிழ் நாட்டுத் தேர்தல் களத் தில் நம்மை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றால், இந்த உள்ளாட்சித் தேர்தலில் அவசியம் நாம் வெற்றி பெற்றே தீரவேண்டும். இந்த அரசாங்கம் அவர்களைப் புதைக்கக்கூடிய குழியை, அவர்களே தோண்டுகிறார்கள். அதை நாம் நன்றாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஒருவரைக் கைது செய்யும்போது உச்ச நீதிமன்றம் சொன்ன விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் சட்ட அவமதிப்பு செய்து வருகிறது. வீரபாண்டியார் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் இந்த அரசாங்கம்தான் பொறுப்பு ஏற்க வேண்டும். இங்கு ஜனநாயக அரசா நடக்கிறது? உள்துறை அமைச்சர் சிதம்பரம் நினைத்தால் நம்மைக் காப்பாற்ற முடியும் என்றார்கள். 'இந்த ஆட்சி நன்றாக செயல்பட்டு வருகிறது’ என்று சர்டிஃபிகேட் கொடுக்கும் சிதம்பரமா நமக்கு உதவி செய்யப் போகிறார்? நம்மை காத்துக்கொள்ள நமக்கே தெரியும்...'' என்று காட்டமாகப் பேசினார்.
வீரபாண்டியார் சிறையில் இருந்து வெளியே வருவதற்குள் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர்களை முடிவு செய்துவிட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறார்கள், அவரது எதிர்ப்பாளர்கள். அதற்கு வீரபாண்டியார் தரப்பு விட்டுக்கொடுக்குமா அல்லது முட்டிக் கொண்டு நிற்குமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.
*********************************************************************************
எங்க அப்பா எம்.எல்.ஏ-டா
ஏற்காடு வில்லங்கம்
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள புங்கமடுவு மலை கிராமத்தை சேர்ந்தவர் மாது. இவர்தான் போலீஸில் புகார் கொடுத்தவர். மாதுவை சந்தித்தோம். ''எங்க வீட்டுக்காரர் பேரு வேடியப்பன். மூணு வருசத்துக்கு முன்னாடி நெஞ்சு வலி வந்து இறந்துட்டார். ரெண்டு குழந்தைகளை வெச்சிக்கிட்டு ரொம்பவும் கஷ்டப்படுறேன். எங்க வீட்டுக்காரரின் கூடப்பிறந்த அண்ணன் பரமசிவத்துக்கும் இரண்டு குழந்தைங்க இருங்காங்க. எங்களுக்கு இருக்கிற 6 ஏக்கர் நிலத்தை பாகம் பிரிக்காம, எல்லோருமே ஒண்ணா சேர்ந்துதான் விவசாயம் செஞ்சிட்டு இருக்கோம்.
எங்க நிலத்துக்குப் பக்கத்துல செந்தில்குமார் என்பவர் மூணு ஏக்கர் நிலம் வாங்கினார். எங்க நிலத்தைத் தாண்டித்தான் அவங்க நிலத்துக்குப் போக முடியும். அதனால எங்ககிட்ட வழித் தடம் கேட்டாங்க. பட்டாவுல எதுவும் வழித் தடம் கிடையாது. வழி இல்லாம எப்படி போவாங்கன்னு நாங்களும் வழித் தடம் விட்டோம். எங்க வீட்டுக்காரர் இறந்த பிறகு செந்தில்குமாரோட போக்கு ரொம்பவே மாறிப் போச்சு.
அடிக்கடி எங்க வீட்டுக்கு வந்து, 'உங்களுக்கு மூணு லட்சம் தரேன். மொத்த நிலத்தையும் கொடுத்துட்டு வேற எங்காவது போய் பொழைச்சிக்கோங்க’னு மிரட்ட ஆரம்பிச்சார். நாங்க சம்மதிக்கல. அதனால ஒரு நாள் அடி ஆட்களோட வந்து எங்க மாமனாரையும், மச்சாண்டாரையும் (கணவரின் அண்ணன்) அடி பின்னி எடுத்துட்டாங்க. ரெண்டு நாளைக்கு முன்னாடி ராத்திரி ஏழு மணி இருக்கும். 20 பேருக்கு மேல திடுதிப்புன்னு மூணு கார்ல வந்து இறங்குனாங்க. கையில ஆளாளுக்கு கத்தியும், கட்டையும் வெச்சிருந்தாங்க. அதைப் பார்த்து வீட்டுல இருந்தவங்க ஆளுக்கொரு பக்கமா சிதறி ஓடிட்டாங்க. என் 13 வயசுப் பையனை ஒருத்தன் கட்டையால அடிச்சதும், சுருண்டு விழுந்துட்டான்.
நான் மட்டும் வீட்டுக்குள்ள இருந்தேன். அப்போ ரெண்டு பேரு உள்ளே வந்தாங்க. வந்தவனுங்க என் கையைப் பின்பக்கமா இழுத்து பிடிச்சிக்கிட்டானுங்க. 'ஏண்டி.. நான் யார் தெரியுமா’ன்னு ஒருத்தன் கேட்டான். தெரியாதுன்னு தலையாட்டினேன். 'இந்தத் தொகுதி எம்.எல்.ஏ. பையனையே தெரியாம நீ எப்படி ஊருக்குள்ள இருக்குற?’னு ஆரம்பிச்சு அசிங்கமாத் திட்ட ஆரம்பிச்சிட்டான். என் உடம்புல கண்ட இடத்துல கையை வெச்சானுங்க. காதால கேட்க முடியாத அளவுக்கு கெட்ட வார்த் தைகளா பேசினாங்க. எம்.எல்.ஏ. பையன் மட்டும் என்னை பிடிச்சிக் கிட்டதும், கூட வந்தவன் பீரோவை திறந்து உள்ளே இருந்த நகையெல்லாம் எடுத்துக்கிட்டான்.
என்னை பிடிச்சிட்டு இருந்த எம்.எல்.ஏ. பையன், 'பசங்க கூப்பிட் டதும் நான் ஏதோ மலங்காட்டுல கருவாச்சியா இருப்பாள்னு நினைச்சிட்டு வந்தேன். நீ ஆளு அம்ச மாத்தான் இருக்கே’னு இடுப்புல கையை வெச்சான். அதுக்குள்ள வீட்டுல இருந்து தப்பிச்சு ஓடின எங்க மச்சாண்டாரு ஊருக்குள்ள போய் விசயத்தைச் சொல்லி ஆளுங்களை கூட்டிட்டு வந்துட்டார். சில பேரு தப்பிச்சு ஓடிட்டாங்க. ஏழு பேரு மட்டும் மாட்டிக்கிட்டானுங்க. எல்லோரையும் கட்டிப் போட்டுட்டு போலீஸ் ஸ்டேஷன்ல போய் சொன்னோம். அவுங்க வந்து கைது பண்ணிட்டாங்க...'' என்று மிரட்சி விலகாமல் சொன்னார்.
பரமசிவத்திடம் பேசினோம். ''நாங்க கட்டிப் போட்டதும், 'எங்க அப்பா எம்.எல்.ஏ-டா..! என்னை எவனும் எதுவும் பண்ண முடியாது... மரியாதையா என்கிட்ட மன்னிப்பு கேளுங்க. உங்களை உசிரோட விடுறேன்’னு மிரட்டினார். ஆனாலும் நாங்க விடலை. நாங்க இப்போ போலீஸ்ல புகார் செஞ்சதால, மறுபடியும் எங்களுக்கு தொல்லை கொடுப்பாங்க. எங்க குடும்பத்துல யாருக்காவது ஏதாவது ஆச்சுன்னா... அதுக்கு அந்த எம்.எல்.ஏ. பையன் சதீஷ்குமார்தான் பொறுப்பு!'' என்றார் இயலாமையோடு.
எம்.எல்.ஏ. மகன் உட்பட குற்றம் சாட்டப்பட்டவர்கள் 7 பேரை கைது செய்து ரிமாண்ட் செய்திருக்கிறது வாழப்பாடி போலீஸ். வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமாரிடம் பேசினோம். ''புகார் வந்ததும் ஸ்பாட்டுக்கு போய் சம்பந்தப்பட்டவர்களை கைது பண்ணிட்டோம். எம்.எல்.ஏ. பையன் என்பதால் நாங்கள் எந்த சலுகையும் காட்டவில்லை. தப்பு செஞ்சார்னு ஒரு ஊரே சொல்லுது. அதுக்கு மேல என்ன வேண்டி இருக்கு?'' என்று சொன்னார்.
ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ. பெருமாளிடம் பேசினோம். ''பக்கத்து நிலத்துல ஏதோ தகராறு நடந்து... அதுல ஏதோ சிக்கலாகி இருக்கு. இது முழுக்க முழுக்க தி.மு.க-வின் சதி. வேண்டும் என்றே என் மகனை சிக்க வெச்சிருக்காங்க. உள்ளாட்சித் தேர்தலை மனசுல வெச்சு, இப்படித் திட்டம் போட்டு மாட்டி விட்டிருக்காங்க. புகார் கொடுத்தவங்க தி.மு.க-வினராகத்தான் இருக்கும். தப்பு செஞ்சிருந்தா தாராளமா நடவடிக்கை எடுக்கட்டும். அதே நேரத்துல என் மகன் தப்பே செய்யாம, அவன் மீது நடவடிக்கை எடுத்திருந்தால்... நான் சும்மா இருக்க மாட்டேன்!'' என்று சீறினார்.
*********************************************************************************
டெல்லி வெடிகுண்டுக்குள் விஷம்?
தூத்துக்குடி பொறியாளர் மரண சந்தேகம்
ஆழ்வார்கற்குளத்தைச் சேர்ந்த பத்திரன், தூத்துக் குடி துறைமுகத்தில் கண்காணிப்புப் பொறியாளராக இருந்தார். கடந்த 7-ம் தேதி, ஒரு வழக்கு சம்பந்தமாக டெல்லி உயர் நீதிமன்றத்துக்குச் சென்றவர், அங்கு நடந்த குண்டு வெடிப்பில் சிக்கிப் பரிதாபமாக மரணம் அடைந்தார்!
தூத்துக்குடி துறைமுகத்தில் நிலக்கரியைக் கையாளும் பணியில் இருக்கும் ஏ.பி.ஜி.எல்.டி.ஏ. என்ற ஒப்பந்த நிறுவனம், மேலும் ஒரு வேலைக்காக விண்ணப்பித்து இருந்தது. ஆனால், 'ஏற்கெனவே ஒப்பந்தத்தில் இருக்கும் நிறுவனம், புதிய பணியை எடுக்க முடியாது’ என துறைமுக நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது. அதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அந்த நிறுவனம் வழக்கு தொடுத்தது. அந்த நிறுவனத்தின் வழக்கு விசார ணைக்காக பத்திரன் டெல்லி சென்றபோதுதான், குண்டுவெடிப்பில் சிக்கி உயிர் இழந்துவிட்டார்.
பத்திரனுக்கு ராணி என்கிற மனைவியும் பத்திரா விசுவேஸ்வரி என்கிற மகளும் பிரதீப் சந்தோஷ்குமார் என்கிற மகனும் இருக்கிறார்கள். பலியான பத்திரனின் உடல், கடந்த 10-ம் தேதி சொந்த ஊருக்குக் கொண்டு வரப்பட்டு தகனம் செய்யப்பட்டது. துயரத்தில் இருந்த ராணியால் நம்மிடம் பேசக்கூட முடியவில்லை. பத்திரா விசுவேஸ்வரியைத் தேற்றி, பேசவைத்தோம்.
''எங்க அப்பா எப்பவுமே வேலை வேலைன்னு இருப்பார். ஞாயிற்றுக் கிழமைகூட முழுசா வீட்ல இருக்க மாட்டார். ஒரு தடவை யாவது ஹார்பருக்குப் போயிட்டு வருவார். அவரோட திறமை மேலே நம்பிக்கை வைச்சுத்தான் அவரை டெல்லிக்கு அனுப்பி இருக்காங்க.
அவருக்கு சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால்ன்னு உடம்புல நிறைய பிரச்னைகள் இருக்குது. இதைஎல்லாம் கண்டுக்காமத்தான் டெல்லிக்குப் போனார். என் மகனுக்குக் கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுப்பார். பேரன்னா அவருக்கு அவ்வளவு உயிர். இப்போ அவனைக் கொஞ்சி விளையாட முடியாத இடத்துக்குப் போயிட்டாரே...'' என்றவரால், மேலும் பேச முடியவில்லை.
இந்த இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட சிலர், டெல்லி சம்பவம் பற்றி நம்மிடம் பேசினார்கள். ''வழக்கமா வெடிச்ச குண்டு மாதிரி இல்லாம, டெல்லியில வெடிச்ச குண்டு புதுசா இருக்குதுன்னு சொல்றாங்க. இந்தக் குண்டுகளுக்குள் விஷம் கலந்து வெடிக்க வைச்சாங்களாம். அதனால்தான் லேசா காயம்பட்டவங்க உடம்புலகூட அந்த விஷம் கலந்து, அவங்களைக் கொன்னுடுதாம். அப்படித்தான் இவரும் இறந்ததாச் சொல்றாங்க. ஏன்னா குண்டு வெடிப்பு நடந்ததும் இவருக்கு காயம் கொஞ்சம்தான். இவரைப் பார்த்த டாக்டர், 'மூணு மாசத்துல நீங்க எழுந்து நடந்திடுவீங்க’னுதான் சொல்லி இருக்கார். ஆனா, ஒரே நாள் ராத்திரியில் இறந்து போயிட்டார். அதிலும் துறைமுக நிர்வாகம், கப்பல் துறை அமைச்சகம்னு பல தரப்பில் இருந்தும் பிரஷர் போன பிறகுதான் இவரைத் தேடிக் கண்டுபிடுச்சு ட்ரீட்மென்ட் கொடுத்திருக்காங்க. அதுவரையிலும் கவனிப்பு மந்தமாத்தான் இருந்துச்சாம். அந்தக் குண்டுவெடிப்பு சம்பவத்தில், சதை பிய்ந்து சிதைந்த கால் வழியாக ரொம்பவும் ரத்தம் போனதால்தான், இவருக்கு புது ரத்தம் ஏற்றினார்களாம். ரத்தம் ஏற்றிய பிறகுதான் இறந்து போயிருக்கார். தீவிரவாதிகள் கோபத்துக்கு இந்த மாதிரி அப்பாவிகள் பாதிக்கப்படுவதுதான் வேதனை!'' என்றனர் வருத்தமாக.
துறைமுகப் பொறுப்புக்கழகத் தலைவர் சுப்பையாவிடம் பேசினோம். ''சம்பவத்தைக் கேள்விப்பட்டதுமே குடும்பத்தாரை டெல்லிக்கு அனுப்பிட்டு, அடுத்து நடப்பதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தோம். இருந்தாலும் அவர் இறந்துபோனது, எங்களுக்குப் பெரும் வருத்தம்தான். அவர் குடும்பத்தாருக்குச் சேரவேண்டிய எல்லா உதவிகளையும் செய்து வர்றோம். டெல்லி சர்க்கார், மத்திய அரசு ரெண்டும் சேர்ந்து 4 லட்சம் வழங்கி இருக்கு. எங்க நிர்வாகம் சார்பில் சுமார் 15 லட்சம் வரை அவரோட குடும்பத்தாருக்குக் கிடைக்கும். ஆனா, எத்தனை செஞ்சாலும் அவரது குடும்பத்தாருக்கு இது பேரிழப்புதான்...'' என்றார் கவலை பொதிந்த குரலில்.
என்று தணியுமோ இந்த வெடிகுண்டு வெறி?
*********************************************************************************
சக்சேனா, அய்யப்பன் கஸ்டடி சித்ரவதைகள்... கண்ணீர் காட்சிகள்...
நடந்ததைச் சொல்லியிருந்தா என்கவுன்ட்டர் நிச்சயம்!
சன் பிக்சர்ஸ் (முன்னாள்) அதிகாரி சக்சேனாவையும், சினிமா விநியோகஸ்தர் அய்யப்பனையும் நீதிபதி முன் ஆஜர்படுத்த அழைத்து வந்தனர்.
வீங்கிய கால்கள், அதில் வரி வரியாகத் தழும்புகளுடன் வேனில் இருந்து இறங்கிய அய்யப்பன், நடக்க முடியாமல் நொண்டி நொண்டி முன்னேற... முற்றிலுமாக கம்பீரம் தொலைத்து, வெலவெலத்து இருண்ட முகத்துடன் அவருக்குக் கைத்தாங்கலாக உடன் வந்தார் சக்சேனா. ஓடோடிப் போய் அய்யப்பனைச் சூழ்ந்துகொண்ட நிருபர்கள், 'எப்படிக் காயம் ஏற்பட்டது?’ என்று கேட்டதுதான் தாமதம்... இருவருமே கதறி அழ ஆரம்பித்தனர். பிறகு அவர்கள் சொன்னதைக் கண்டு, 'இப்படியும்கூட நடக்குமா?’ என்பதான திகைப்புடன் பார்த்தனர் நிருபர்கள்.
தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு அய்யப்பன் சில வார்த்தைகளை நிருபர்களிடம் சொன்னார். 'சி.பி.சி.ஐ.டி. போலீஸார் என்னைக் காவலில் எடுத்து விசாரித்தபோது, 'சன் குரூப் கலாநிதி மாறன் பற்றி உனக்கு என்ன தெரியும்? அவருக்கு எங்கெங்கே சொத்துகள் இருக்கு?’னு திரும்பத் திரும்பக் கேட்டாங்க. 'அவரைப்பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் இதுவரை அவரை நேரில்கூட பார்த்தது இல்லை’னு சொன்னேன். உடனே ஆத்திரத்தோடு போலீஸ்காரங்க கண்மூடித்தனமா அடிச்சாங்க. என்கவுன்ட்டர் நடக்கப்போகுதுன்னு மிரட்டுறாங்க’ என்று பீதியோடு சொன்னார்.
தங்களை போலீஸார் தாக்கியதாக நீதிபதியிடமும் இவர்கள் சொன்னார்கள். அவர் மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்!
சக்சேனா, அய்யப்பனின் வழக்கறிஞர் செந்தில்குமார் இந்த விவகாரத்தை மனித உரிமை ஆணையத்திடம் கொண்டுசென்றுள்ளார். அவரை சந்தித்தோம்.
''கடந்த இரண்டு மாத காலமாக சக்சேனாவையும் அய்யப்பனையும் திட்டமிட்டு வேண்டுமென்றே போலீஸார் மாறி மாறி வழக்குகள் போட்டு, தொடர்ந்து சிறையில்வைத்துச் சித்ரவதை செய்து வந்தனர். ஒரு வழக்கில் ஜாமீன் பெற்றால் இன்னொரு வழக்கில் கைது என்ற ரீதியில் அவர்களின் அத்துமீறல்கள் தொடர்ந்தன. இறுதியாக, 'தம்பிக்கோட்டை’ படம் தொடர்பான புகாரில் இருவரையும் கைது செய்து இருந்தார்கள். 'தம்பிக்கோட்டை’ தயாரிப்பாளர் படத்துக்காக 5 கோடி செலவுசெய்ததாகச் சொல்லி இருந்தார். ஆனால், செலவு குறித்து முறையான பில்கள் எதுவும் புகாருடன் இணைக்கவில்லை. இந்தப் பொய்ப் புகாருக்காக இருவரையும் ஏழு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று சி.பி.சி.ஐ.டி. கேட்டது. இறுதியில் 5-ம் தேதி காலை முதல் 7-ம் தேதி காலை வரை அதாவது இரண்டு நாட்களுக்கு மட்டும் அனுமதி கொடுத்த நீதிபதி, 'இந்த காலகட்டத்தில் கைதிகள் இருவரையும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தூங்க அனுமதிக்க வேண்டும். அவர்களின் வழக்கறிஞர்கள் சந்திக்கவும் அனுமதிக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார். கிண்டி சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில்தான் விசாரணை நடந்தது.
கடந்த 6-ம் தேதி மாலை எனது கட்சிக்காரர்களை நான் சந்திக்க வேண்டும் என்று டி.எஸ்.பி. ஜெயச்சந்திரனுக்கு போன் செய்தேன். அவரோ தொடர்ந்து மீட்டிங்... அது... இது... எனக் காரணம் சொல்லி என்னை சந்திக்க விடாமல் தடுத்து சதி செய்தார். இறுதியில் நீதிமன்ற உத்தரவு குறித்து நான் எச்சரிக்கை மெசேஜ் அனுப்பிய பிறகே, என்னால் உள்ளே நுழைய முடிந்தது. 'அய்யப்பனிடம் விசாரணை நடக்குது... சக்சேனாவை மட்டும் பார்க்க அனுமதிக்கிறோம்’ என்று அவர்கள் கூறியபோதே எனக்கு சந்தேகம். இருந்தாலும் எதையும் காட்டிக்கொள்ளாமல் சக்சேனாவை சந்தித்து, 'நேரத்துக்கு சாப்பாடு கொடுத்தார்களா? வேற ஏதாவது பிரச்னை இருக்கா?’னு கேட்டேன். 'ஒரு பிரச்னையும் இல்லை சார்’னு சக்சேனாகிட்ட இருந்து பதில் வந்தது. ஆனால் அவர் குரலில் வாட்டம் தெரிஞ்சது.
அடுத்த நாள் விசாரணை முடிந்து 20 போலீஸ் புடைசூழ ரெண்டு பேரையும் கோர்ட்டுக்கு அழைத்து வந்தார்கள். அய்யப்பன் தாங்கித் தாங்கி நடந்ததைப் பார்த்து அதிர்ச்சியான நான், 'என்ன நடந்தது அய்யப்பன்? பயப்படாமச் சொல்லுங்க’னு கேட்டேன். அருகில் இருந்த சி.பி.சி.ஐ.டி போலீஸார் அய்யப்பனின் கையை முறுக்கிப் பிடித்துக்கொண்டு இருந்தார்கள். அப்போதைக்கு அவர் என்னிடம் எதையும் சொல்லவில்லை.
'தம்பிக்கோட்டை’ வழக்கில் ஜாமீன் கிடைத்த காரணத்தால், மறுநாளான 8-ம் தேதி அவர்கள் இருவரும் சிறையில் இருந்து விடுதலையாகி, வெளியில் வர இருந்தனர். அன்று மாலை அவர்களை சந்திக்க நான் புழல் சிறைக்குச் சென்றபோது, என்னைப் பார்த்ததும் மொத்தக் காயங்களையும் காட்டி கண்ணீர்விட்டார் அய்யப்பன். 'நேத்து கோர்ட்டுல இதை நான் சொல்லி இருந்தா... திரும்பிக் கூட்டிட்டுப் போகும்போது என்கவுன்ட்டர்ல போட்டுருப்பாங்க...’ என்று அய்யப்பன் சொன்னார். வெள்ளைச் சட்டை அணிந்த 30 போலீஸார் ஷிஃப்ட் முறையில் அய்யப்பனை அடித்து இருக்கிறார்கள். கால் பகுதி முழுவதும் வரி வரியாகத் தழும்புகள். ஆங்காங்கே சதை பிய்ந்து தொங்கிக்கொண்டு இருந்தது. 'டாய்லெட் போகக்கூட உட்கார முடியலைண்ணா...’ என்று அழுதார்.
இந்த சூழலில் இருவரையும் நித்தியானந்தா வழக்கில் மீண்டும் கைது செய்யப்போவதாக எனக்குத் தகவல் கிடைத்தது. அதனால், 'இன்னும் கொஞ்ச நேரத்தில் உங்களைக் கோர்ட்டுக்குக் கூட்டிட்டு வருவாங்க. நீதிபதியிடமும் மீடியாக்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் தாக்கியதைப் பற்றித் தயங்காமல் சொல்லுங்கள்’ என்று சொல்லிவிட்டு நானும் கோர்ட்டுக்கு விரைந்தேன்.
எதிர்பார்த்ததுபோல, அடுத்த வழக்கில் கைது செய்தார்கள். சன் டி.வி. நிர்வாகத்தை அச்சுறுத்தவும், கலாநிதி மாறனுக்குக் குடைச்சல் கொடுக்கவும் சில அரசியல் சக்திகள் தீவிர முயற்சியில் இறங்கி உள்ளனர். அவர்களின் கைத்தடிகளைப்போல சி.பி.சி.ஐ.டி. போலீஸ் நடந்துகொள்கிறது. போலீஸ் காவலுக்கு எடுத்து விசாரிக்கும்போது கைதிகளைத் தாக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் தெளிவான உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, இந்தத் தாக்குதலுக்குக் காரணமான சி.பி.சி.ஐ.டி-யின் டி.ஐ.ஜி-யான ஸ்ரீதர், டி.எஸ்.பி-யான ஜெயச்சந்திரன், இன்ஸ்பெக்டர் காசி உள்ளிட்ட போலீஸார் இதற்குப் பதில் சொல்லியே தீர வேண்டும். அவர்களைக் கூண்டில் ஏற்றாமல், நான் ஓய மாட்டேன்!'' என்று கொந்தளித்தார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து டி.ஐ.ஜி. ஸ்ரீதரிடம் கேட்டபோது, ''கலாநிதி மாறனை இந்த அய்யப்பன் நேரில் பார்த்தது இல்லை என்பது எங்களுக்கும் தெரியும். எனவே, விசாரணையின்போது நாங்கள் கலாநிதி மாறன் பெயரைச் சொல்லும்படி அய்யப்பனைக் கேட்கவில்லை...'' என்றார்.
''அப்படியானால் அய்யப்பனின் உடலில் காயங்கள் எப்படி ஏற்பட்டது?'' என்று கேட்டதற்கு, மௌனம் மட்டுமே நமக்குப் பதிலாகக் கிடைத்தது.
பொதுவாக 'போலீஸ் அடி'யில் 'காயம் வெளியில் தெரியாது’ என்பார்கள். ஆனால், அய்யப்பன் தரப்பு சொல்வதையும் அவர் காயங்களையும் பார்த்தால்.... என்ன நடக்கிறது? அடுத்து என்ன நடக்கப்போகிறது?
*********************************************************************************
கறுப்பு ஞாயிறு!
செல்போனில் வந்த செய்தி!
இரண்டு நாட்களுக்கு முன்பு பள்ளப்பச்சேரியைச் சேர்ந்த பழனிக்குமார் என்ற 16 வயது தலித் மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. குறிப்பிட்ட சமுதாயத் தலைவரைக் கிண்டல் செய்து சுவரில் எழுதியதாக கிளம்பிய விவகாரம் அது. 'நான் இப்படிச் செய்யவில்லை’ என்று அந்த இளைஞன் மறுத்த நிலையில் அந்த இளைஞன் கொலை செய்யப்பட்டதாகச் சொல்கிறார்கள். ஆனாலும் பரமக்குடி பகுதி அமைதியாகத்தான் இருந்தது. பல்வேறு அமைப்பினர் வரிசையாக அஞ்சலி செலுத்தி வந்தார்கள். ''இப்படியே முடிஞ்சிட்டா நிம்மதிதான்...'' என்று சொல்லிக்கொண்டு இருந்தார்கள் பத்திரிகையாளர்கள். ஆனால், வெயில் உச்சிக்கு வர வர... பதற்றம் தொற்ற ஆரம்பித்தது.
''ஜான்பாண்டியை அரெஸ்ட் பண்ணிட்டாங்களாம்!'' என்று செல்போனில் வந்த முதல் தகவல்தான் பரமக்குடியின் பீதியைத் தொடங்கிவைத்தது.
''அஞ்சலி செலுத்துறதுக்காக ஜான் பாண்டியன், பரமக்குடிக்குப் புறப்பட்டு வந்துட்டு இருக்கிறார். அவரை வல்லநாட்டில் வெச்சு போலீஸ் மடக்கிட்டாங்க. பரமக்குடிக்குப் போகக் கூடாதுனு தடுத்துட்டாங்க. நம்ம தலைவரைத் தடுக்கிறதுக்கு இவங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கு?'' என்று ஒருவர் சத்தம் போட ஆரம்பித்திருக்கிறார். அது சுற்றிலும் இருந்தவர்களையும் கோபம் கொள்ள வைத்திருக்கிறது. உடனே அவர்கள் பரமக்குடியின் மையப் பகுதியான ஐந்து முனைச் சாலைக்கு வந்து, மறியல் செய்ய ஆரம்பித்தார்கள். ஆரம்பத்தில் மிகச் சிலரே மறியலில் ஈடுபட்டதால், போலீஸார் கண்டுகொள்ளவில்லை. ''கொஞ்ச நேரத்துல கலைஞ்சிடுவாங்க...'' என்று போலீஸ் அதிகாரிகளே சொல்லிக்கொண்டார்கள்!
விழுந்த போலீஸ்காரரும் பாய்ந்து வந்த கல்லும்!
நகரின் மையப் பகுதியில் மறியல் நடந்ததால், அந்த இடம் மெள்ள ஸ்தம்பிக்க ஆரம்பித்தது. இம்மானுவேல் சேகரனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டுத் திரும்பியவர்களால், பரமக்குடியை விட்டு வெளியேற முடியாத சூழல் உருவானது. இதைத் தொடர்ந்து கூட்டம் ஒரே இடத்தில் குவிய ஆரம்பித்தது. சென்னை துணை கமிஷனர் செந்தில்வேலன், சிறப்புப் பாதுகாப்புப் பணிக்காக இங்கு வரவழைக்கப்பட்டு இருந்தார். மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தையில் இறங்கினார் அவர். போலீஸ் அதிகாரியிடம் பேசுவதற்காகப் பலரும் அவரை நோக்கி நகர்ந்து வர ஆரம்பித்தார்கள். அப்போது லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை சமாளிக்க முடியாமல் பரமக்குடி டி.எஸ்.பி. கணேசன் கீழே விழுந்தார். அப்போது எங்கோ இருந்து பறந்து வந்த ஒரு கல், கூட்டத்துக்குள் விழுந்தது. உடனேயே, ''லத்தி சார்ஜ்!'' என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
போலீஸார் லத்தியைச் சுழற்ற... அதைப் பார்த்து பலரும் தெறித்து ஓட... எதிர்த்து நின்று சிலர் கற்களை வீச... அந்த இடமே சில நிமிடங்களில் போர்க்களம் ஆனது. கண் மண் தெரியாமல் போலீஸ் லத்திகள் சுழன்றன. ஆனால் எதிரே பறந்து வந்த கற்களை போலீஸ் லத்திகளால் சமாளிக்க முடியவில்லை. அதுவரை அமைதியாகப் படம் எடுத்துக்கொண்டு இருந்த புகைப்படக்காரர்கள்... இதையும் படம் பிடிக்க ஆரம்பித்ததும்... தாக்குதல் படலம் இந்தப் பக்கமும் திரும்பியது. நமது புகைப்படக் கலைஞர் பாண்டியைத் தாக்கினார்கள். அவரது கேமராவை உடைத்தார்கள். மற்றும் சில போட்டோகிராபர்களின் பைக், கேமராக்களும் போராட்டக்காரர்களால் சேதப்படுத்தப்பட்டன.
சுட ஆரம்பித்தது போலீஸ்!
முதுகுளத்தூர் ரோடு, மதுரை ரோடு, ராமேஸ்வரம் ரோடு என்று மூன்று பக்கம் இருந்தும் மும்முனைத் தாக்குதல் நடந்துகொண்டு இருந்தது. இது நடக்கப் போவதை எதிர்பார்த்து வந்தது மாதிரி போலீஸார் பெரும் கம்புகளை மட்டுமல்ல... நிறைய சரளைக் கற்களையும் கொண்டு வந்து குவித்து வைத்திருந்தார்கள். எனவே, ரோட்டில் விழுந்தவை போராட்டக்காரர்களுக்கு இணையாக போலீஸ் கற்களும் இருந்தன. ரத்தம் கொட்டக் கொட்ட பலரும் ரோட்டில் ஓடிக் கொண்டு இருந்தார்கள். வீசப்பட்ட கல் மழையில் சிக்கி பலரும் சிதறினார்கள். இந்த நேரத்தில் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்கள் வந்து விழ ஆரம்பித்தன. அதிலிருந்து வீறிட்ட தீ எரியத் தொடங்கியது. காவல் துறையின் வஜ்ரா வாகனம் எரிய ஆரம்பித்தது. அடுத்து தீயணைப்பு வண்டி எரிந்தது. மேலும் சில வாகனங்கள் எரிக்கத் தொடங்கவே, அந்த இடமே எரியத் தொடங்கியது.
''கண்ணீர்ப் புகை குண்டு போட ஆரம்பித்தோம். அப்போதும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாத நிலையில், துப்பாக்கி சூடு நடத்தத் தொடங்கினோம்...'' என்கிறது போலீஸ். இம்மானுவேல் சேகரனுக்கு அஞ்சலி செலுத்த வந்தவர்கள் மட்டுமின்றி வேடிக்கை பார்க்க வந்தவர்கள் மீதும் குண்டுகள் பாய்ந்தன. சுமார் 15-க்கும் மேற்பட்டோர் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தார்கள். மூன்று பேர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார்கள். பயந்து ஓடியவர்கள் அவர்களுக்குள் மோதிக் கீழே விழுந்தும் பலர் காயமடைந்தனர். துப்பாக்கி சூடு நடந்த சிறிது நேரத்திலேயே 144 தடை உத்தரவு போடப்பட்டதால், மதியம் 1 மணிக்குப் பிறகு மயான அமைதிதான் அங்கு நிலவியது. அதற்குப் பிறகு, யாரும் அஞ்சலி செலுத்த வர முடியவில்லை. நிகழ்ச்சி ரத்தானது.
''பொதுவாக வானத்தை நோக்கி முதலில் போலீஸ் சுடும். அப்படியும் கூட்டம் கலையவில்லை என்றால் ஒரே ஒரு புல்லட்டை கும்பலை நோக்கிப் பயன்படுத்துவார்கள். ஆனால், தொடர்ச்சியாக புல்லட்டை பயன்படுத்த ஆரம்பித்தது போலீஸ்!'' என்று சொல்கிறார்கள் பொதுமக்கள். ஒரு வாரமாக போலீஸைக் குவித்து பரமக்குடியையே பீதிக்கு உள்ளாக்கிய போலீஸ், ஜான்பாண்டியன் ஊருக்குள் வந்தால் கலவரம் ஏற்படும் என்று சொல்வது நம்பும் படியாக இல்லை. 'ஜான்பாண்டியனை வல்லநாடு பகுதிக்குக் கொண்டு சென்று அலைக்கழித்து... என்கவுன்ட்டர் செய்யப் போகிறார்கள்’ என்றும் சிலர் கிளப்பினார்கள். பரமக்குடிக்கு செல்லத் தயாரானவர்களைக் கிராமம் கிராமமாகச் சென்று... பெயர் பட்டியலை போலீஸ் தயாரித்ததாகவும் சொல்லப்படுகிறது. 'கலவரம் நடக்காமல் தடுக்கத் திட்டமிட்டார்களா? அல்லது தேவையில்லாத பீதியைக் கிளப்பத் திட்டமிட்டார்களா?’ என்றும் சிலர் கேட்கிறார்கள்.
எரிந்த பைக்... உடைக்கப்பட்ட கேட்...
முதுகுளத்தூர் சாலையின் நடுவே பைக் உள்ளிட்ட வாகனங்களை மலைபோல் குவித்துத் தீ வைக்கப்பட்டு இருந்தது. மின் கம்பிகளும் சாலையில் அறுந்துகிடந்தன. அதேபோல, பொன்னையாபுரம் ரெயில்வே கேட் உடைக்கப்பட்டு ரோட்டின் குறுக்கே கிடந்தது. ஒரு கும்பலுக்கு நடுவே சிக்கிக்கொண்ட போலீஸார் சிலர் உயிருக்கு பயந்து, ஒரு கடைக்குள் புகுந்தனர். அந்தக் கடையின் ஷட்டரை உடைத்து அதற்குள் தீ வைக்க சிலர் தயாரானார்கள். பொன்னையாபுரம் பகுதியில் உள்ள மகளிர் காவல் நிலையத்தையும் சிலர் கைப்பற்றினார்கள். பணியில் இருந்த பெண் போலீஸார் உயிருக்குப் பயந்து ஓர் அறைக்குள் மொத்தமாகச் சென்று பதுங்கினார்கள். ஜென்ஸி என்ற காவலர் மட்டும் இவர்களிடம் சிக்கிக்கொள்ள... அவர் தாக்கப்பட்டார். இதற்குப் பிறகு போலீஸ் தாக்குதல் இன்னமும் அதிகமானது. தாக்குதலுக்குப் பயந்து மறைந்திருந்த மனிதர்களைக்கூட கொத்துக் கொத்தாக அள்ளி வந்து ரோட்டில் போட்டு அடிக்க ஆரம்பித்தார்கள். அந்தக் காட்சியை வீடியோ எடுத்தவர்களையும் போலீஸ்காரர் மிரட்டியதைப் பார்க்க முடிந்தது. வாரப் பத்திரிகை நிருபர் ஒருவர் அந்தக் காட்சியை படமெடுக்க முயல, அவரது கேமராவைப் பறித்து உடைத்தார்கள். கண்ணில் பார்ப்பவர்கள் எல்லாம் அதன் பிறகு அடித்துத் துரத்தப்பட்ட... இரண்டு மணிநேரம் கழித்துதான் கலவரம் ஒரு வழியாக அடங்கியது!
மதுரையில் எதிரொலி!
தென் மாவட்டங்களில் எங்கு கலவரம் மூண்டாலும் பட்டென்று மதுரையிலும் எதிரொலிப்பது வழக்கம். இம்முறையும் அப்படியே. பல்வேறு மாவட்டங்களில் இருந்து பரமக்குடி நோக்கிச் சென்ற வாகனங்களை அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களின் வழியே சலனம் இல்லாமல் அனுப்பிக்கொண்டு இருந்தார்கள் மதுரை மாவட்ட போலீஸார். பரமக்குடியில் கலவரம் மூண்ட 3 மணி நேரத்தில் மதுரையிலும் துப்பாக்கி சூடு நடந்தது.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து பரமக்குடி செல்லும் பாதையான ரிங் ரோட்டில் நடந்த இந்த சம்பவத்தில் பாட்டம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயபிரசாந்த், பாலகிருஷ்ணன் ஆகியோர் காயமடைந்தார்கள். ஜெயபிரசாந்த்துக்கு முதுகில் பாய்ந்த குண்டு நுரையீரலை லேசாகச் சேதப்படுத்திவிட்டு விலாப்பகுதியில் வந்து நின்றது. பாலகிருஷ்ணனுக்கு கையில் குண்டு பாய்ந்திருந்தது.
'சிவகங்கை மாவட்டம் பாட்டம் கிராமத்தில் இருந்து இரண்டு திறந்த வேன்களில் சுமார் 40 பேர் சிந்தாமணிக்கு வந்தார்கள். 'ஏன் அனுமதிக்கப்படாத வழித்தடத்தில் வந்தீர்கள்?’ என்று அவனியாபுரம் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் கேட்க, வாக்குவாதமானது. கடைசியில் அவர்களை ரிங் ரோடு வழியாகவே செல்ல அனுமதி அளித்துவிட்டோம். போனவர்கள், கொஞ்சம் முன்னால் போய்க்கொண்டு இருந்த தங்கள் ஊரைச் சேர்ந்தவர்களின் மூன்று கார்களில் மீண்டும் சிந்தாமணிக்குத் திரும்பினார்கள். வாகனங்களில் இருந்து இறங்கிய வேகத்தில் போலீஸாரைத் தாக்கினார்கள். பெண் போலீஸ் பாண்டியம்மாளைக்கூட விடவில்லை. பஸ் கண்ணாடிகளை உடைத்ததோடு ஒரு பஸ்ஸை எரிக்கவும் முயன்றார்கள். இன்ஸ்பெக்டரைத் தாக்க முயன்றதால்தான், வேறு வழி இன்றி அவர் துப்பாக்கியால் இரண்டு ரவுண்ட் சுட்டார்...' என்கிறார்கள் போலீஸ் தரப்பில்.
சம்பவ இடத்தில் முழங்கையில் ரத்தம் வழிய நின்றுகொண்டு இருந்த வெள்ளிராஜிடம் பேசினோம். 'நானும் பாட்டத்தில் இருந்து வந்தவன்தான். போலீஸ் சொல்றது சுத்தப் பொய். எங்களோடு காரில் வந்த போஸ் என்பவரை இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் அடிச்சதாலதான் பிரச்னை வந்தது. கும்பலாக வந்தவர்கள் அதுக்கு அப்புறம்தான் போலீஸைத் தாக்கி, பஸ் கண்ணாடியை உடைத்தார்கள். உண்மையிலேயே கூட்டத்தைக் கலைக்கணும்னு நினைச்சிருந்தா, வானத்தைப் பார்த்துத்தானே சார் சுடணும்? ஏன் ஆட்களைக் குறிவைக்கணும்?' என்றார் கோபத்தோடு.
ஜான்பாண்டியன் கைது செய்யப்பட்டது ஏன்?
பரமக்குடி கலவரத்துக்கு ஜான்பாண்டியன் கைது செய்யப்பட்டதுதான் காரணம் என்று சொல்லப்படும் நிலையில், அவரை ஏன் ராமநாதபுரம் மாவட்டத்துக்குள் அனுமதிக்கவில்லை என்று போலீஸாரிடம் கேட்டோம்.
''ஏற்கெனவே ஜான்பாண்டியன், 31.12.10 அன்று பள்ளப்பச்சேரி வந்தபோது கலவரம் மூண்டதால், அவர் ராமநாதபுரம் மாவட்டத்துக்குள் நுழைய நிரந்தரத் தடையே இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் ஜான்பாண்டியன் வந்தால் நிச்சயம் கலவரம் மூளும் என்பதால்தான், அவருக்கு மட்டும் தடை விதித்தோம்!'' என்றார்கள்.
ஜான்பாண்டியனிடம் பேசினோம். 'தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவிடத்துக்குத் தாழ்த்தப்பட்ட மக்கள் எழுச்சியோடு வருவது சிலருக்குப் பிடிக்கவில்லை. இந்த விழாவை மொத்தமாகத் தடை செய்ய வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், ஆண்டுதோறும் துப்பாக்கிச்சூடு நடத்துகிறார்கள். நான் ஒருவன் சென்றால் கலவரம் ஏற்படும் என்பது ஏற்க முடியாதது. எனக்கு மட்டும் தடை உத்தரவு போட்டது, தனி மனித சுதந்திரத்தைப் பறிக்கிற செயல். சம்பவம் நடந்தபோது, நான் போலீஸ் காவலில் இருந்தேன். தமிழகத்தின் உயர் அதிகாரிகள் அனைவரும் பரமக்குடியில் குழுமி இருந்தபோது, எதற்காக இந்த துப்பாக்கி சூடு என்று புரியவில்லை. இந்த விழாவைத் தடை செய்ய வேண்டும் என்ற நோக்கம் உள்ளவர்கள் காவல் துறையிலும் இருக்கிறார்களோ என்று சந்தேகமாக இருக்கிறது...'' என்றார்.
சுமார் ஒரு மாத காலமாக ஆலோசனை மற்றும் முஸ்தீபுகளுடன் ஆயிரக்கணக்கான போலீஸாரையும் குவித்த பிறகும் அமைதியாக ஒரு விழாவை நடத்த முடியாமல்... பழிச் சொல்லும் ஏழு உயிர்களை பலி வாங்கியும் இந்த குருபூஜை முடிந்திருக்கிறது!
*********************************************************************************
ஆ.ராசா தப்பித்து விடுவார்!
சொல்கிறார் அருண் ஷோரி
''இந்தப் புத்தகத்தில் என்ன விசேஷம்?''
''இது எனது 26-வது புத்தகம். என் மனைவி கடந்த 22 ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர். எனது மகன் 'செரிபரல் பால்ஸி’ எனும் உடல் மற்றும் மனநலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு இருக்கிறான். அவனுக்கு வயது 35. என் மனைவியும், மகனும் ஒவ்வொரு நாளும் எவ்வாறு துயரத்துக்கு ஆட்படுகிறார்கள்? இறைவன் என்பவன் யார்? எது உண்மையான மதம் என்பனவற்றை என் சொந்த அனுபவங்கள் மூலமாகத் தத்துவ விசாரணை நடத்தி இருக்கிறேன். என்னுடைய சொந்த சுமைகளை எழுத்தில் வடித்துவிட்டதாலேயே, இந்தப் புத்தகம் விசேஷமானது அல்ல. எழுத நினைத்தேன்... முடித்துவிட்டேன். இப்போது, அடுத்த புத்தகத்துக்காக யோசித்தாக வேண்டும். அவ்வளவுதான்!''
'' இப்படிப்பட்ட சூழ்நிலையில் 'கடவுள்’ என்பது பற்றி உங்களின் புரிதல் என்ன?''
''கடவுள் என்பவன் வலிமையானவன். எல்லாம் தெரிந்தவன். அநீதிகளை அழிப்பவன். செல்வத்தைக் கொடுப்பவன். மனித வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துபவன் என்று நாம் வடிவமைத்துவைத்து இருக்கும் நிலையில் இருந்து நான் கடவுளைப் பார்க்கவில்லை. சொல்லப்போனால், கடவுள் நமக்குத் தேவையே இல்லை. கடவுள் என்ற ஒன்றைத் தேடுவதைவிட்டு, நம் மனது என்ன சொல்கிறது என்பதைப் பின்பற்றி அன்றாடச் செயல்களைச் செய்து வந்தாலே போதுமானது. புத்தர் சொன்ன பாடமும் இதுதான்!''
''நீங்கள் பத்திரிகை ஆசிரியராக இருந்தவர். இன்றைய இதழியல் துறையில் பரவிவரும் 'பெய்டு நியூஸ்’ கலாசாரம் பற்றி உங்கள் கருத்து என்ன?''
''வெட்கத்துக்கு உரியது! நீதியின் தராசில் நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டிய பத்திரிகையாளர்கள் சிலர், ஊழலின் பக்கம் நிற்கிறார்கள். தனி நபர்களின் ஆசாபாசங்களுக்கு விலை போகிறார்கள். தனியார் நிறுவனங்கள் தரும் பங்குகளுக்கு, தங்களைத் தாரை வார்க்கிறார்கள். தங்கள் பத்திரிகைகளுக்கு விளம்பரம் கொடுத்தால், அந்த நிறுவனம் பற்றி பாசிட்டிவான ஸ்டோரிகள் செய்கிறார்கள். பேராசைகொள்பவர்கள்தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்!''
''வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் நீங்கள் அமைச்சராக இருந்தவர். அந்தத் தகுதியில் இதற்குப் பதில் சொல்லுங்கள்... இன்றைய அமைச்சர்கள் எப்படி?''
''ஐந்தாறு பேரைத் தவிர மற்ற எல்லோரும் மிக மோசம் என்பது என்னுடைய தனிப்பட்ட அபிப்பிராயம். ஏதோ ஓர் அதிர்ஷ்டத்தில் நாடாளுமன்றத்தில் உட்கார்ந்து இருக்கிறார்கள். அரசியலைத் தவிர்த்துவிட்டு வேறு எங்கேனும் சென்றால், இவர்களை மக்கள் மதிக்கவே மாட்டார்கள். அதனால்தான் சொல்கிறேன்... இன்றைக்கு இருக்கும் தேர்தல் முறை தவறானது. ஒரு பில்லியன் மக்களை வழிநடத்த ஏற்ற தலைவனைத் தேர்ந்தெடுப்பதில் நாம் இன்னும் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்.''
''2ஜி ஸ்பெக்ட்ரம் விசாரணைபற்றி?''
''விசாரணை நல்ல முறையில் நடக்கிறது. ஆனால், இது எங்கு முடியும் என்பது தெரியாது. பிரதமர், கபில்சிபல் போன்றவர்கள் சொல்வதைப் பின்பற்றினால், ஆ.ராசா எந்த தண்டனையும் இல்லாமல் தப்பித்துவிடுவார். அவர்கள் எல்லோரும் ஆ.ராசாவைக் காப்பற்றுவதற்காகவே செயல்படுகிறார்கள். நிதி அமைச்சரை இதற்கு உடந்தையாக இருக்கவைத்தார் ஆ.ராசா என்கிறார் பிரதமர். ஆ.ராசாவோ நிதி அமைச்சர் தன்னோடு இப்படி ஒரு வியாபாரத்தில் ஈடுபடுவதை பிரதமர் அங்கீகரித்தார் என்கிறார். இவர்கள் அனைவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் கைகாட்டுவது சி.பி.ஐ-யின் விசாரணைகளுக்கு உண்மையான தடைக்கற்களாக இருக்கின்றன.''
''லோக்பால் சட்டம் ஊழல் பிரச்னைக்குத் தீர்வாகுமா?''
''இல்லவே இல்லை. புதிய அமைப்புகள் தேவையே இல்லை. லஞ்சம் கொடுப்பதை நிறுத்திவிட்டால் லஞ்சம் வாங்குபவர்கள் இருக்க மாட்டார்கள். சட்டத்தில் சில மாற்றங்கள் கொண்டுவரலாம். உயர் அதிகாரிகளுக்கு என சிறப்பு நீதிமன்றங்களை, ஊழல் விசாரணைகளுக்காக ஏற்படுத்தலாம். தினந்தோறும் விசாரணை நடைபெற வேண்டும். பதவிக்கு ஏற்றாற்போல் தண்டனை முறைகள் இருக்க வேண்டும். கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் ஊழல் செய்தால் ஐந்து வருடம் சிறை. அதையே ஒரு மத்திய அமைச்சர் செய்தால் 15 வருடம் சிறை... என்றெல்லாம் தண்டனை விதிக்கப்பட வேண்டும். என்னைப் பொறுத்தவரை, சிறை வாசம் மட்டுமல்லாது ஊழல் வழக்கில் தொடர்புடையவர்கள் பொது வாழ்வில் ஈடுபடுவதையும் தடுக்க வேண்டும்.''
''நாடெங்கும் மரண தண்டனைக்கு எதிரான குரல்கள் எழும்புகின்றன. உங்கள் கருத்து என்ன?''
''நான் அதற்கு ஆதரவாளன். ஏனெனில், அவர்கள் கொலை செய்து இருக்கிறார்கள். நிச்சயம் மரண தண்டனை வேண்டும். மற்றவர்கள் என்ன கருத்து வைத்திருக்கிறார்கள் என்பதுபற்றி எனக்குக் கவலை இல்லை. நான் எனது கருத்தைச் சொல்கிறேன்!''
*********************************************************************************
தனக்கென வாழாத காந்திமதி!
காந்திமதியின் மறைவு குறித்து ராதாரவியிடம் பேசினோம்.
''அன்பு, பாசம், கோபம் எல்லாம் கலந்த கலவைதான் காந்திமதி அக்கா. 1984-ல் இலங்கைத் தமிழருக்கு ஆதரவாக நான், விஜயகாந்த், சந்திரசேகர், பாண்டியன் எல்லாரும் உண்ணாவிரதம் இருந்தோம். நாங்க கூப்பிடாமலே, தானே வலிய வந்து ஆர்வத்தோடு கலந்துக்கிட்டாங்க. அதுபோல ஊர்வலத்துக்கு நிறையப் பெண்களை அழைச்சுட்டு வந்தாங்க. எங்க வீடு ஏலத்துக்கு வந்துடுச்சுன்னு பேப்பர்ல செய்தியைப் பார்த்ததும் பதறியடிச்சுக்கிட்டு ஓடி வந்தாங்க. 'என்னா ரவி உன் நிலைமை இப்படி ஆயிடுச்சே...’னு அழுது புரண்டாங்க. அப்புறமா நிதானமாகி கையில கொண்டுவந்திருந்த அவங்க வீட்டுப் பத்திரத்தை என் கையில் கொடுத்து, 'இந்தா... இதை அடகுவைச்சு உன் வீட்டை மீட்டுக்கோ...’னு கதறுனாங்க.
தனக்குன்னு தனியா ஒரு குடும்பத்தை அவங்க உருவாக்கவே இல்லை. தம்பி பாலுவோட பசங்களைத்தான் தத்து எடுத்து வளர்த்தாங்க. ஒரு நாள் ராத்திரி 10 மணிக்கு இருக்கும். திடீர்னு சில பேர் என்கிட்டே ஓடி வந்து, 'காந்திமதி அக்கா ரோட்டுல படுத்துக்கிடக்கு...’னு கூக்குரல் போட்டாங்க. உடனே காரை எடுத்துட்டுக் கிளம்பினேன். க்வீன் மேரிஸ் காலேஜ் பிளாட்பாரத்து சிமென்ட் பெஞ்சுல அக்கா படுத்து இருந்தாங்க. 'என்னக்கா இது சின்னப்புள்ள மாதிரி... இங்கே வந்து படுத்துக் கிடக்கே?’னு கேட்டேன். 'ராத்திரி நேரம்னுகூட பார்க்காம என்னை வீட்டைவிட்டுத் துரத்திட்டாங்க ரவி...’னு அழுதாங்க. விஜயகாந்த், சந்திரசேகருக்கு எல்லாம் போன் செய்து வரவழைச்சு அக்காவை சமாதானம் செய்து வீட்டுக்கு அனுப்பிவெச்சேன்...'' என்று பழைய நினைவுகளை அசை போட்டுக் கலங்கினார், ராதாரவி.
தான், தனது வாழ்க்கை என்று பாராமல் உறவுகளுக்கு வெளிச்சம் தந்து தன்னையே தீய்த்துக்கொண்ட ஒரு நகைச்சுவை நடிகையின் நிஜ வாழ்க்கையில்தான் எத்தனை சோகம்!
*********************************************************************************
''டாஸ்மாக் கொள்கையில் அவர்கள் இருவருக்கும் ஒரே கொள்கை!''
இடிக்கும் ராமதாஸ்
''எல்லா மதங்களும், மது கூடாது என்றுதான் சொல்கிறது. காந்தியடிகள், ராஜாஜி, காமராஜர், அண்ணா போன்ற தலைவர்களும் 'மது வேண்டாம்’ என்றுதான் சொன்னார்கள். இவ்வளவு பேர் சொல்லியும் அற்ப வருமானத்துக்காக, அரசாங்கமே மக்களுக்கு மது விற்பனை செய்வதை எந்த வகையிலும் மன்னிக்க முடியாது. இதில் கொடுமையான விஷயம், மது பாட்டிலில் ,
'மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு’ என எழுதிவைத்து விற்பது. ஏழைத் தொழிலாளிகள், அவர்களின் குடும்பங்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை, மதுவின் மூலம் வரும் வருமானம்தான் முக்கியம் என மிகத் தவறான கொள்கையை கடைப்பிடிக்கிறது அரசாங்கம்.
கொலை, கொள்ளை, பலாத்காரம், விபத்துகள், ஆபாச வன்முறைகள், ஒழுக்கக் கேடுகள் என அதிகரிக்கும் கொடுமைகள் எல்லாவற்றுக்கும் அடிப்படைக் காரணமாக இருப்பது குடிதான். 'பாவங்களுக்கு எல்லாம் தாய் மது’ என இஸ்லாம் சொல்வது தமிழகத்தில் பட்டவர்த்தனமான உண்மை. 13 வயதுச் சிறுவன் முதல்கொண்டு பெரும்பான்மையான இளைஞர்கள் மதுப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகிறார்கள். சென்னையில் இரவு 8 மணியில் இருந்து டாஸ்மாக் கடைகளில் இளைஞர்கள் மது வாங்குவதற்காக ரேஷன் கடைகளில் நிற்பதைப்போல நிற்கிறார்கள். அண்மையில், திண்டுக்கல் மாவட்டத்தில் வகுப்பறையில் மூன்று மாணவர்கள் குடித்துக்கொண்டு இருந்ததாக செய்தித்தாள்களில் வந்திருக்கிறது. ஊர் ஊராக மது கூடாது எனச் சொல்லி வருபவன் நான். ஆனால், எனது சொந்தக் கிராமத்தில், இன்றைக்கும் கள்ளச் சாராயம் இருக்கிறது. போலீஸ் அதிகாரிகளிடம் சொல்வேன். ஒரு மாதம் இல்லாமல் இருக்கும், பிறகு வழக்கம்போல தொடரும்.
'ஆலைகள் செய்வோம்’ என்று பாரதி பாடினான். ஆனால், திராவிடக் கட்சிகளோ, 'சாராய ஆலைகளைச் செய்வோம்’ என்பதைக் கொள்கையாக வைத்துள்ளன போலும்!
கொஞ்சம் கொஞ்சமாக ஆட்களைக் கொல்லும் நஞ்சை, மாறி மாறி ஆட்சிக்கு வருபவர்கள் வாரி வழங்குகிறார்கள். வருங்கால சமுதாயம் மன்னிக்கமுடியாத செயல்களை, இவர்கள் செய் கிறார்கள். தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சிகளுக்கும் மது விலக்கைக் கொண்டுவருவதில் உண்மையான அக்கறை இல்லை. இருவருமே இதில் ஒற்றுமையாக இருக்கிறார்கள்.
அ.தி.மு.க. முக்கியஸ்தர் நடத்தும் மது ஆலையில்தான், முன்பு தி.மு.க. ஆட்சியிலும் அதிகமாகக் கொள்முதல் செய்தார்கள். அந்த ஆலையில் இரண்டு ஷிஃப்ட் இருந்த வேலை நேரம் இப்போது மூன்று ஷிஃப்ட்களாக அதிகரித்துள்ளதாம். இது போதாதென்று விஜய் மல்லையா போன்ற வெளியாரிடமும் வாங்கு கிறார்கள்.
கடந்த ஆட்சியின்போது, 44 சமய, சமுதாயத் தலைவர்களை அழைத்துக்கொண்டு கோட்டைக்குப் போய், அப்போதைய முதலமைச்சர் கலைஞரிடம், முழு மதுவிலக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தினேன். ஆனால், விற்பனை நேரத்தை மட்டும் இரவு 10 மணி வரை என ஒரு மணி நேரம் குறைத்தார்.
பக்கத்து மாநிலங்களில் மதுவிலக்கு இல்லாத போது, இங்கே மட்டும் கொண்டுவருவது கள்ளச் சாராயத்துக்கு வழி வகுக்கும் என வெட்டிச் சாக்கு சொல்கிறார்கள். குஜராத்தில் இன்று வரை பூரண மதுவிலக்கு நடைமுறையில் இருக்கிறது. சமூக, பொருளாதாரம் என பல துறைகளில் அந்த மாநிலம் முதன்மையாகத்தான் இருக்கிறது. இதைப் பார்த்து, மகாராஷ்டிர மாநில அரசு, மதுவைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
உண்மையிலேயே மதுவிலக்கில் அக்கறை இருக்கு மானால், சனி, ஞாயிறு இரண்டு நாட்களாவது கடையை மூடுங்கள். கள்ளச் சாராயம் காய்ச்சினால், ஆயுள் தண்டனை, விற்றால் 10 ஆண்டு சிறைத் தண்டனை என சட்டத் திருத்தம் கொண்டுவாருங்கள். இதே ஜெயலலிதா முன்பு முதலமைச்சராக இருந்தபோது, 'எந்தக் கிராமத்திலாவது கள்ளச் சாராயம் காய்ச்சுவது கண்டுபிடிக்கப்பட்டால், அந்தப் பகுதியின் சப் இன்ஸ்பெக்டரும் கிராம நிர்வாக அதிகாரியும் இடைநீக்கம் செய்யப்படுவார்கள்’ என்று சட்டம் கொண்டுவந்தார். ஊராட்சித் தலைவருக்குத் தெரியாமல், எந்த ஊரிலும் கள்ளச் சாராயம் காய்ச்ச முடியாது. இதனால், ஊராட்சித் தலைவரையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்கிறோம். பெண்களைக்கொண்ட மதுவிலக்கு கண்காணிப்புக் குழுவை ஒவ்வொரு கிராமத்திலும் அமைக்க வேண்டும். கள்ளச் சாராயத்தை ஒழிப்பதற்காக, இதை செய்யத் தயாரா?
குடியை ஒழிக்காமல் 10 மடங்கு போலீஸ் பலத்தைக் கூட்டினாலும், இங்கே சட்டம் ஒழுங்கைக் கட்டுப்படுத்த முடியாது. சமூக விரோதச் செயல்பாடுகள் நிற்காது. மதுவின் வருமானத்தைக்கொண்டுதான் இலவசங்கள் தருகிறார்கள். இலவசம் இருக்கும் வரை டாஸ்மாக் இருக்கும் என்றால், தமிழகத்தின் கதி என்ன ஆகும்? உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு டாஸ்மாக் கடைகளை இழுத்துப் பூட்டும் போராட்டம் நடத்தப் போகிறோம்'' என்கிறார் ராமதாஸ் கொந்தளிப்புடன்!
*********************************************************************************
நாராயணன் நல்லவர்... பாண்டியன் கெட்டவர்!
கவுன்சிலில் கதகளி
காலையில் இருந்தே காக்கிகள் மயம். சேம்பருக்குள் நுழைந்த அத்தனை தயாரிப்பாளர்களையும் தீவிரமாகச் சோதித்த பின்னரே உள்ளே அனுப்பினர். கார்களிலும், 'ஆயுதங்கள் இருக்கின்றனவா?’ என்று முழுமையாக அலசி ஆராய்ந்த பின்னரே அனுமதித்தனர். கவுன்சிலுக்கு வெளியே நின்ற பார்வையாளர்கள், 'அன்பு வேண்டுகோள், மது அருந்திவிட்டு வரும் உறுப்பினர்களுக்கு அனுமதி இல்லை! என்று வாசலில் இருந்த வாசகத்தைப் பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டார்கள்.
கேமரா கண்காணிப்பு
பொதுக் குழுக் கூட்டம் ஆரம்பித்ததும் தற்காலிகத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன், ''இங்கே கலவரத்தில் ஈடுபட வேண்டும் என்று யாராவது நினைத்தால், ஏமாந்துபோவீர்கள். கூட்டத்தில் இருப்பவர்கள் நடவடிக்கைகளை நான்கு கேமராக்கள் கூர்ந்து கவனித்துக்கொண்டு இருக்கின்றன. அது மட்டும் அல்ல... அரசு அதிகாரிகள் இரண்டு பேர் கூட்டத்தை நோட்டமிட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இதை எல்லாம் மனதில் வைத்துக்கொண்டு, ஒருத்தர் ஒருத்தராகப் பேசுங்கள்...'' என்று அழைப்பு விடுத்தார்.
அழைத்து வந்து அவமானமா?
மைக் பிடித்த சோலைராஜா, '' 'நீயும் நானும்’ படத்தை நான் தயாரித்து வந்தேன். அப்போது படப்பிடிப்பில் திடீர் என்று பெஃப்சி ஆட்கள் தகராறு பண்ணினாங்க. எனக்கு ஒண்ணுமே புரியலை. செயலாளர் சிவசக்தி பாண்டியனுக்கு போன் செஞ்சேன். கவுன்சிலுக்கு வரச் சொன்னார். வந்தேன். காலையில் இருந்து சாயங்காலம் வரைக்கும் சும்மாவே உட்கார்ந்து இருந்தேன். என்ன ஏதுன்னு ஒரு வார்த்தைகூட பேசலை. அப்புறம், 'நீயும் நானும்’ படத்தின் தென் ஆற்காடு, வட ஆற்காடு உரிமையைக் கேட்டார். மறுத்தேன். நான் வேறு வழி இன்றி சண்டை போட்ட தொழிலாளர்களுடன் சமரசம் செய்துகொண்டுதான் படத்தை முடித்தேன்...'' என்று சொன்னார். கவுன்சில் கூட்டத்தில் இருந்த பாண்டியன் இதைக் கேட்டு வெகுண்டு எழுந்து, ''என்னை அழைச்சுட்டு வந்து அவமானம் செய்றீங்களா..?'' என்று சந்திரசேகரை நோக்கி ஆட்காட்டி விரல் காட்டி எச்சரிக்கை செய்தார்.
ஹென்றி என்ட்ரி
அடுத்து எழுந்த ஹென்றி, ''இதுக்கு முன்னாடி பொறுப்பில் இருந்தவங்க கோடிக்கணக்கில் கொள்ளை அடிச்சு இருக்காங்க. அந்தப் பட்டியல் என்கிட்டே பத்திரமா இருக்கு. இந்த கவுன்சில் கூட்டம் என்னுடைய உயிருக்கு உத்தரவாதம் கொடுத்தால், ஒவ்வொண்ணாப் புட்டுப்புட்டு வைக்கிறேன்...'' என்று லிஸ்ட்டை எடுத்து வாசிக்க ஆரம்பிக்கவும், அவரை சிவசக்தி பாண்டியன் ஆதரவாளர்கள் சூழ்ந்துகொண்டு கூச்சல் போட்டு உட்காரவைத்தனர்.
செல்லாத செக்குகள்
அடுத்து பேசிய தயாரிப்பாளர் ஒருவர், ''நம்ம சங்கத்துல இருந்து 'செய்தி மலர்’னு ஒரு பத்திரிகை வருது. கடந்த மூணு வருஷத்துல அதுக்காக வந்த 80 செக்குகளை சங்கத்தோட பொருளாளர் ஹாஜா மொய்தீன் பயன்படுத்தவே இல்லை. செக்கோட மதிப்பு ஆறு மாசம்தான். அதுக்கு அப்புறம் காலாவதி ஆயிடும். இது எல்லாருக்கும் நல்லாவே தெரியும். அப்படி இருக்க... பொருளாளர் ஏன் அலட்சியமா இருந்தார்?'' என்று கேள்வி கேட்டார். அப்போது திடீரென்று எழுந்த மன்சூர் அலிகான், ''வாடா... போடா...'' என்ற ரீதியில் பேசத் தொடங்க, தடாலடித் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
நல்லவர், கெட்டவர்
இறுதியாகப் பேச வந்தார் எஸ்.ஏ.சி. ''தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உள்ளே ஊழல் நடக்கவில்லை. பாதிக்கப்பட்டு சங்கத்தை நம்பி முறையிட வந்த தயாரிப்பாளர்களிடம் வெளியில்வைத்து கட்டப்பஞ்சாயத்து செய்து ஏகப்பட்ட பணத்தை வாங்கி ஊழல் செய்து இருக்கிறார்கள். அதற்கான ஆதாரம் என் கையில் இருக்கிறது. முன்பு தலைவராக இருந்த ராம. நாராயணன் நல்லவர், அவர் நம்பிப் பொறுப்பை ஒப்படைத்து இருந்த செயலாளர் பாண்டியன்தான் கெட்டவர். ஏற்கெனவே பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்களை நான்தான் போலீஸில் புகார் கொடுக்கச் சொன்னேன். நஷ்டஈடும் வாங்கிக் கொடுத்தேன். அதனால் பாதிக்கப்பட்டு இருக்கும் தயாரிப்பாளர்கள் இப்போதே என்னோடு கமிஷனர் ஆபீஸ் வாருங்கள், புகார் கொடுக்கலாம்...'' என்று சொல்ல, கூட்டத்தில் அமளிதுமளி.
அடிதடியில் ஆரம்பித்து, போலீஸாரின் தடியடியில் முடியும் என்று எதிர்பார்த்த தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக் குழு கூட்டம், ஆவேசக் கூச்சலோடு முடிந்து போனது. இப்போது ஆளாளுக்கு நீதிமன்றம் செல்லும் முடிவில் இருப்பதால், தேர்தல் நடப்பது இன்னமும் இழுபறியில்தான் இருக்கிறது.
**********************************************************************************
செங்கொடியின் மரணம்! சீறி எழும் கேள்விகள்..
ப்ரேமா ரேவதி
செங்கொடியின் மரணச் செய்தியைக் கேட்டதும், ஆறாத இயலாமையின் இருள் சூழ்ந்துகொண்டுவிட்ட மனதில் எப்போதோ ஒரு காலத்தில் ஆழப் பதிந்துபோன
''இந்த பூமியின் தேசங்களில்
ஒளி வீசிடும் செங்கொடியே...''
என்ற பாடல் வரிகள் மீண்டும் மீண்டும் அலையாடின.
புரட்சிகரப் போராட்டத்தால் இந்த பூமியையே மாற்றிவிடும் ஒரு பெருங்கனவு, இன்று முள்ளாக உறுத்தும் ஒரு பழங்கனவாய், விடைகள் இல்லாத, திசை வழிகள் இல்லாத, நம்பிக்கைத் தரும் தலைமைகள் இல்லாத இந்தத் தனிமையான அரசியல் இரவில் துருத்திக்கொண்டு இருக்கும் வேதனை முகத்தில் அறைகிறது.
ஆயிரமாயிரம் வார்த்தைகள் செங்கொடி பற்றி எழுதப்பட்டுவிட்ட, எழுதப்பட்டுக்கொண்டு இருக்கும் இக்கணத்தில் நெஞ்சுருக்கும் இந்த இன்மையும், புகைப்படத்தில் தீர்க்கமாக ஒளிர்ந்துகொண்டு இருக்கும் அவள் விழிகள் கேட்கும் கேள்விகளும் அலைக்கழித்துக்கொண்டே இருக்கின்றன.
தொப்புள்கொடி, ரத்தபாசம் என்ற சொல்லாடல்களால் நிறைந்துபோயுள்ள தமிழ்த் தேசிய போராட்டச் சூழலில், செங்கொடியை, தொப்புள் கொடியின்றி, தாய்ப்பாலில் ரத்தமின்றி, பெரும் மனிதநேய அன்பில் உலகை மாற்றும் போராட்ட அறத்தோடு வளர்த்து ஆளாக்கி அவளின் ஒவ்வோர் அசைவையும் ரசித்துச் செதுக்கி, பெறாத தம் அன்பு மகளை தீக்கிரையாய்க் கொடுத்துவிட்டு, தணியாத வேதனையோடு இன்று நிற்கும் தோழர்கள் மகேஷுக்கும் ஜெஸ்ஸிக்கும் மற்ற மக்கள் மன்றத் தோழர்களுக்கும் ஆறுதல் சொல்லுவதற்கு வார்த்தைகள் ஏதும் இல்லை. இந்தத் துயரைக் கடக்கும் சக்தியை நீங்கள் ஏற்றுக்கொண்ட அரசியலும், போராட்டமும், வாழ்க்கையும், சுற்றி இருக்கும் அந்தக் குழந்தைகளும் மட்டுமே உங்களுக்குத் தர முடியும் என நம்புகிறேன்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு செங்கொடியின் இறுதி ஊர்வலத்திலும், இரங்கல் கூட்டத்திலும் நான் ஒன்றைப் பார்த்தேன். பற்பல பிரிவுகளான தமிழ்த் தேசிய அமைப்புகள், தலித் அமைப்புகள், இடதுசாரி அமைப்புகள் ஒரே இடத்தில் கூடி இருந்ததுதான் அது.
இப்படி ஒரு சாவு தேவைப்பட்டு இருக்கிறது ஒன்றாய்க் கூட. இப்படி ஒரு கோரிக்கை தேவைப்பட்டு இருக்கிறது நமக்கு காஞ்சி மக்கள் மன்றத்தின் வாயிலில் நுழைய. செங்கொடியை விதைத்தாகிவிட்டது. இனி இப்படி ஒரு சந்திப்பு நிகழுமா எனத் தெரியவில்லை.
தமிழ்த் தேசியவாதிகளுக்கு...
செங்கொடி, இருளர் இனத்தில் பிறந்தவள். தமிழகத்தின் ஆதிகுடிகளான இருளர்கள், அடிப்படை உரிமைகளைக்கூட இன்னும் நெடும் போராட்டங்களால் மட்டுமே பெற முயற்சித்துக்கொண்டு இருக்கும் தமிழ் மக்கள்.
இருளர் மட்டும் இல்லை... இன்னும் பெரும்பான்மையான தமிழகப் பழங்குடிகள் மற்றும் நாடோடிகளின் நிலை இதுதான். தான் ஒரு பழங்குடிதான் என்பதை நிறுவ, சாதிச் சான்றிதழ் பெறும் போராட்டத்தைப் பல பத்தாண்டுகளாய்த் தமிழகப் பழங்குடிகள் நடத்தி வருகின்றனர். கல்வி, வேலைவாய்ப்பு, நலத் திட்ட உதவிகள் என எதைப் பெறுவதற்கும் தேவைப்படும் சாதிச் சான்றிதழ்களை இவர்கள் பெற, தோழர் கல்யாணி, காஞ்சி மக்கள் மன்றம் இன்னும் சில அமைப்புகளும் நிறுவனங்களும் போராடி வருகின்றனர். இதுபோன்ற ஏதாவது ஒரு போராட்டம், கோரிக்கை, தீர்மானம் தமிழ்த் தேசிய அரசியலில் முக்கியத்துவமாகக் கருதப்பட்டுள்ளதா? தமிழ்த் தேசிய அமைப்புகள் இதைச் சிந்தித்துப் பார்க்கும்படி, செங்கொடி தன் மரணத்தால் நம்மைக் கேட்கிறாள்.
ஒரு தலித் பெண், தமிழ்த் தேசியப் போராட்டமாகச் சித்திரிக்கப்படும் ஒரு பிரச்னையில் தன் உயிரை விட்டிருக்கிறாள். அவள் பிறந்த சமூகம், அவர்களைப்போன்ற ஏராளமான பழங்குடிகள், சாதி என்னும் வன்முறையால் அழுத்திவைக்கப்பட்டு இருக்கும் தலித்கள், ஆணாதிக்க அடக்குமுறையால், பண்பாட்டால், மொழியால் கட்டுண்டு சிதைக்கப்பட்டும் தம் ஆளுமைகளை மீட்டெடுக்கப் போராடிக்கொண்டு இருக்கும் பெண்கள்... இவர்கள் பொருட்டு தமிழ்த் தேசிய அமைப்புகள் என்ன செய்யப்போகின்றன?
தலித் அமைப்புகளுக்கு...
இழப்பதற்கு உண்மையிலேயே ஏதும் இல்லாத, அடங்க மறுக்க, அத்து மீற, திருப்பி அடிக்க என எல்லா வகையிலும் புரட்சிகரத் தன்மையோடு, புற நிலைகளும் அக நிலைகளும் ஒன்றிணைந்த புள்ளியில் வீறுகொண்டு எழுந்து, ஒரு மாற்றுப் பண்பாட்டை, மொழியை, சமூகத்தைப் படைக்கும் பேரெழுச்சியாய்த் தொடர்ந்த தலித் அரசியல் இன்று எதை நோக்கிச் சென்றுகொண்டு இருக்கிறது?
சாமானியர்களின் வீரத்தால், தியாகத்தால், அடக்குமுறைகளுக்கு எதிரான நிலைப்பாட்டால், ஒரு பெரும் அலையென எழுந்த தலித் அரசியல் வரலாறு, இன்று முன்வைக்கும் திட்டம் என்ன?
பிரச்னைகளுக்கு எதிரான தீவிரப் போராட்டங்களைத் தவிர்த்துவிட்டு, வெறும் ஆட்சி அதிகாரத்தில் பங்குபெற்று என்ன சாதித்துவிட முடியும் என்பதை வரலாறு நமக்கு ஏற்கெனவே காட்டிவிட்டது. ஆட்சிகள் மாற, மாறும் கொள்கைகள், சந்தர்ப்பவாத நிலைப்பாடுகள், நித்தமும் நிகழும் சாதிய வன்முறைகள் குறித்த பாராமுகம் நம்மைக் காலத்தின் முட்டுச் சந்துக்குள் நெருக்கித் தள்ளிக்கொண்டு இருக்கிறது.
சாதியால் வலிமையாகக் கட்டப்பட்டு இருக்கும் சமூகத்தில், ஒடுக்கப்பட்டோர்தான் முழுமையான ஒரு சமூக விடுதலையை வென்றெடுக்கும் போருக்குத் தலைமை தாங்க முடியும். அந்தப் போர் நாடாளுமன்றத்தின் திருத்தப்பட்ட தோட்டங்களிலோ, சட்டமன்றங்களின் பாதுகாப்பான கூடங்களிலோ மட்டும் நடக்க முடியாது என்பதை அம்பேத்கர் நமக்குக் கூறிப் பல வருடங்கள் ஆகின்றன.
செங்கொடி, அப்படி ஒரு போரின் அறிகுறி தெரியாமல் நீளும் பொழுதொன்றில் தன்னைக் களப் பலியாகக் கொடுத்துவிட்டாள். போரைத் தொடர நாம் என்ன செய்யப்போகிறோம்?
இடதுசாரிகளுக்கு...
செங்கொடி பிடித்து பூமியின் தெருக்களில் விடுதலையைப் பாடிய நாம் இப்போது என்ன செய்துகொண்டு இருக்கிறோம்? நம் கண் முன்னே எரிந்து விழுந்துவிட்டாள் செங்கொடி. நம் பதாகை எரிந்துகொண்டு இருக்கிறது தோழர்களே!
இன்னும் இன்னும் எத்தனை காலம் நடைமுறைச் சிக்கல்கள், சட்டப் பிரச்னைகள், இயக்கத்தைப் பாதுகாப்பது என்ற பெயரால் மாறி, மாறும் கூட்டணிகள் என உலுத்துப்போன பேச்சுகளால், செயல்களால், தீவிரப் போராட்டக் குணம்கொண்டு எழும் ஓர் இளைய தலைமுறையின் தேடல்களை, ஏமாற்றங்களை, நாம் பார்வையாளர்களாய்ப் பார்த்துக்கொண்டு இருக்கப்போகிறோம்?
வெறும் உணர்ச்சிகளால் விடுதலையை வென்றெடுக்க முடியாது. உண்மை. ஆனால், சிறு துளி உணர்ச்சியும் அற்ற ஓர் அமைப்பு எதையுமே வென்றெடுக்க முடியாது விடுதலையை விடுங்கள்.
மனித உரிமைகளையும், தேசிய இன உரிமைகளையும் காலில் போட்டு மிதிக்கக்கூடிய இறையாண்மையின், ஒருமைப்பாட்டின், சட்டத்தின் காவலர்களாய் வாழ, சி.பி.எம்-முக்கு வழிகாட்டுவது யார்? நிச்சயம் காரல் மார்க்ஸாக இருக்க முடியாது!
தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களின் அரசியலை, மொழி பண்பாடுபாற்பட்ட ஒரு புரட்சிகர அரசியலை, இடதுசாரிக் கட்சிகள் கையில் எடுக்காததும், இன்று ஏற்பட்டுள்ள அரசியல் வறட்சிக்கும் அதனூடாக நிகழ்ந்துவரும் செங்கொடி போன்றோரின் சாவுக்கும் ஒரு முக்கியக் காரணம். அவ்வப்போது ஏற்படும் பிரச்னைகளுக்கு அவ்வப்போது ஒரு பதில் சொல்வது புரட்சிகர அரசியல் இல்லை. ஏன், அது அரசியலே இல்லை.
வரலாற்றை மாற்றிப் பார்க்கவும் புரட்டிப் போடவும் அறைகூவி உதித்தது மார்க்ஸியம். இப்போது வரலாறு நம்மை கூவி அழைக்கிறது. அதைத் தன் உடலில் தீயிட்டு உரைத்திருக்கிறாள் செங்கொடி. இப்போதேனும் நாம் விழித்தெழாவிட்டால், செயல்படாவிட்டால், புரட்சிகர பதில்களைக் கண்டறியாவிட்டால், நாம் வரலாற்றில் குற்றவாளிகளாகப் பதியப் பெறுவோம். மார்க்ஸியத்தைக் கொன்று புதைத்த கொடூர சாபம் நம்மைப் பின்தொடரும்!
பெண்ணியவாதிகளுக்கு...
பிளவுகள் குறித்த இந்தக் கேள்விகள், பெண்ணியவாதிகளுக்கும் பொருந்தும். தமிழ்த் தேசிய அரசியலையும் அதன் தவிர்க்க முடியாத அண்ணணாக வரும் தமிழ்க் கற்பு, தாய்ப் பாசம், அதற்குத் தீனியாகத் தேவைப்படும் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணுடல் எல்லாவற்றின் மீதும் அருவருப்பு எனக்கும் இருக்கிறது. ஆனால், பல்லாயிரம் இளைஞர்களை, இளைஞிகளை இந்தப் போராட்டம் ஈர்ப்பதன் காரணத்தை நாம் சாதாரணமாகத் தள்ளிவிட முடியாது. அதனோடான உரையாடல் சங்கடமானதொன்றாக இருப்பினும் நிகழ்த்தப்பட வேண்டும். பல்வேறு நேரங்களில், உலகில் எங்கெங்கோ நிகழும் பிரச்னைகள் குறித்து அக்கறைகொள்ளும் நாம், நம்மைச் சுற்றி நடக்கும், நம்மோடு வாழும் ஏராளம் பேரை அசைக்கும் கேள்விகளைத் தவிர்த்துவிடுகிறோம்.
இவை எல்லாவற்றையும் ஏதோ எல்லாம் எனக்குத் தெரியும் என்ற ஆணவத்தால் எழுதவில்லை. எனக்கும் இப்படியான கேள்விகளுக்கு பதில் தெரியவில்லை. ஒருவேளை இது இப்படி இருந்திருந்தால் செங்கொடி இறந்திருக்க மாட்டாளோ, நம் போராட்டக் களம் தற்கொலைக் களமாக மாற வேண்டிய அவலம் நேர்ந்திருக்காதோ என்ற குற்ற உணர்ச்சியால், தவிப்பால் எழுந்த கேள்விகள்... கருத்துகள் இவை. துயருறவும், கண்ணீர் மல்கவும் முடியாத வீர அரசியலாக மட்டும் இது மாற்றப்படக் கூடாது. அன்பும், தைரியமும், தியாகமும், வீரமும், வேட்கையும், கண்ணீரும், உவகையும், நேசமும், இசையும், பாட்டும், போராட்டமும், நடனமும் என எல்லாமுமாக நம் இயக்கம் இருக்க வேண்டும்!
**********************************************************************************
சன் டி.வி. கேபிளை கபளீகரம் செய்கிறதா அரசு கேபிள்?
முற்றுகிறது மோதல்!
இந்நிலையில், 'அரசு கேபிள் டி.வி. தனக்கெனத் தனியாக கேபிள் பதிக்காமல், சன் டி.வி. குழுமத்துக்குச் சொந்தமான கேபிளில் தனது ஒளிபரப்பை நடத்தி வருகிறது’ என்று 'கல்' கேபிள் லிமிடெட் சார்பில் அதன் பொது மேலாளர் ராஜேஷ், சென்னை உயர் நீதிமன்றத்தின் படி ஏறி இருக்கிறார்.
''எங்களது நிறுவனம் எம்.எஸ்.ஓ. மூலம் தமிழகம் முழுவதும் கேபிள் டி.வி. வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த வியாபாரத்தில் எங்கள் நிறுவனம்தான் முன்னணியில் உள்ளது. கடந்த 1995-ம் ஆண்டு வகுக்கப்பட்ட கேபிள் ஒழுங்குமுறை சட்டத்தின்படி, நாங்கள் உரிய லைசென்ஸ் பெற்று, 12 ஆண்டுகளாக இந்தத் தொழிலை முறையாகச் செய்து வருகிறோம். எங்கள் நிறுவனத்தின் சார்பில் இதற்கெனத் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே அரசு அதிகாரிகளிடம் அனுமதி பெற்று கேபிள் வயர்களைப் பதித்துள்ளோம். அதற்கான கட்டணமும் எங்கள் நிறுவனத்தின் சார்பில் தவறாமல் செலுத்தப்பட்டு வருகிறது. இதுபோக 'டிராக்' வாடகை என்ற கட்டணத்தையும் அரசுக்கு செலுத்துகிறோம். கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் எங்கள் டி.வி. நிகழ்ச்சிகளைப் பொதுமக்களுக்கு ஒளிபரப்பி வருகிறோம். இந்த நடைமுறையில் நாங்கள் எந்த சட்டவிதிகளையும் மீறவில்லை.
கடந்த 2-ம் தேதி தொடங்கப்பட்ட தமிழக அரசு கேபிள் கார்ப்பரேஷன், தனக்கெனத் தனியாக எந்த கேபிளும் பதிக்காமல் அவசர அவசரமாக சேவையைத் தொடங்கி உள்ளது. அரசு கேபிள் தொடங்கியவுடன், கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற பல பகுதிகளில் எங்கள் நிறுவன கேபிள் வயர்களை ஆக்கிரமித்து... அந்தக் கேபிளில் அரசு கேபிள் உரிமம் பெற்ற சேனல்கள், சட்ட விரோதமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த சட்ட விரோத நடவடிக்கைகள் அனைத்தும் போலீஸ் துணையுடன் நடப்பதுதான் அதிர்ச்சி அளிக்கக்கூடிய விஷயம்.
எங்கள் கேபிளுக்கு நாங்கள் ஆண்டு வாடகை செலுத்தி வருகிறோம். அப்படி இருக்கும்போது, எந்த அடிப்படை வசதிகளும் முறையாக ஏற்படுத்தப்படாமல் தொடங்கப்பட்ட அரசு கேபிள் டி.வி., எங்களுக்கு சொந்தமான கேபிளைப் பயன்படுத்துவது பெரும் குற்றம். இது குறித்து சம்பந்தப்பட்டமாவட்ட கலெக்டர்கள், எஸ்.பி-களிடம் புகார் மனு கொடுத்தோம். ஆனால், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திருப்பூரில் பட்டாளம் சாலை, பழைய பஸ் நிலையம், மாரியம்மன் கோயில், குமரன் ஹோட்டல், ஈஸ்வரன் கோயில், நொய்யல் போன்ற இடங்களில் எங்கள் கேபிள்களை, அரசு கேபிள் நிறுவனம் கட் செய்து, அதில் தனது இணைப்பைக் கொடுத்துள்ளது. இதுபோல, கோவை, ஈரோடு எனத் தமிழகத்தின் பல பகுதிகளிலும் போலீஸ் உதவியுடன் அரசு கேபிள் அத்துமீறல் நடத்தி வருகிறது.
'அரசு கேபிளின் இந்தச் செயல் திருட்டுத்தனம் போன்றது’ என அதிகாரிகளிடம் எடுத்துச் சொல்லியும் இந்தக் குற்றம் தடுக்கப்படவில்லை என்பதை விளக்கி, கடந்த 7-ம் தேதி தமிழக உள்துறை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. ஆகியோரிடம் மனு கொடுத்தோம். ஆனால், அவர்களும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஜனநாயக நாட்டில் ஒவ்வொருவரும் சட்டப்படி வியாபாரம் செய்ய உரிமை உள்ளது. இப்படி சட்டப்படி நடக்கும் எங்கள் வியாபாரத்தைத் தடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் அரசு கேபிள் நிறுவனம் செயல்படுகிறது. இது இந்திய அரசியல் சட்டம் பிரிவு 19(1)க்கு எதிரானது. எனவே, எங்கள் கேபிள்களை சட்ட விரோதமாகப் பயன்படுத்த அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்குத் தடை விதிக்க வேண்டும். மேலும் நாங்கள் கொடுத்த புகார் மீது மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பி-கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்பது குறித்த அறிக்கை தாக்கல் செய்யவும் அவர்களுக்கு உத்தரவிட வேண்டும்!'' என்று அந்த மனுவில் குறிப்பிட்டு இருக்கிறார் ராஜேஷ்.
''அவர்கள்தான் அனுமதி வாங்கவில்லை!''
கடந்த 8-ம் தேதி இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி பால் வசந்தகுமார், ''அரசு கேபிள் நிறுவனத்துக்கு தனி கேபிள் இருக்கிறதா? ஒளிபரப்புக்கு எந்த கேபிள்களைப் பயன்படுத்துகிறீர்கள்?'' என்று அடுத்தடுத்துக் கேள்வி கேட்டு அரசுத் தரப்பைத் திணறவைத்தார். கடந்த 12-ம் தேதி நீதிமன்றத்தில் அரசு தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்தார்கள். ''நாங்கள் யாருடைய இணைப்பையும் துண்டித்தோ, கைப்பற்றியோ ஒளிபரப்பு வழங்கவில்லை. 'கல்' கேபிள் லிமிடெட் பல இடங்களில் முறையாக அனுமதி வாங்காமல் ஒளிபரப்பை செய்து வருகிறது. இந்த வழக்கு குறித்த விரிவான பதில் மனுவை மேலும் ஒரு வார காலத்துக்குள் தாக்கல் செய்கிறோம்...'' என்று அரசு விளக்கம் அளித்து இருக்கிறது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ஒரு வார காலத்துக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டிருக்கிறார். ஆக, அரசுக்கும் சன் டி.வி.க்குமான மோதல் நீதிமன்றத்தின் மூலமாக சூடு பிடித்துள்ளது!
கட்டணம் தர முடியாது!
பொதுமக்களுக்கும் கேபிள் டி.வி.ஆபரேட்டர்களுக்கும் பல இடங்களில் கொந்தளிப்பு ஏற்பட்டு வருகிறது.
கோவையைச் சேர்ந்த கேபிள் ஆபரேட்டர் மூர்த்தி, ''எங்க வாடிக்கையாளர்கள், 'சன் பேக்கேஜையும் சீக்கிரமே கொடுக்குறீங்களா... இல்லேன்னா டிஷ் வாங்கி மாட்டிக்கட்டுமா?’-னு கோபப்படுறாங்க. நிலைமை இப்படியே போயி ஆளாளுக்கு டிடிஹெச் வாங்கி மாட்டிட்டா, நாங்க என்ன சார் பண்றது? பல வீட்டுல, 'கட்டுன டெபாசிட்டைத் திருப்பிக் கொடுங்க. கிட்டத்தட்ட ஒரு மாசமா உருப்படியான சேனல்கள் எதுவும் தெரியலை. அதனால போன மாசத்துக்கு கேபிள் கட்டணம் தர முடியாது’னு சொல்றாங்க!'' என்று வேதனைப்பட்டார்.
தர்மபுரியைச் சேர்ந்த அரசு கேபிள் ஆபரேட்டரும், மாவட்ட கேபிள் ஆபரேட்டர் சங்கத்தின் தலைவருமான அருளரசு, ''கலெக்ஷனுக்காக எந்த வீட்டு முன்னால போய் நின்னாலும் 10, 15 லேடீஸ் வந்து சூழ்ந்துக்கிறாங்க. நீங்க பழையபடியே கொஞ்சம் கூடுதலா கட்டணம் வாங்கிக்கோங்க. எங்களுக்கு எல்லாச் சேனலும் வரணும். இல்லைன்னா, கேபிளைக் கழட்டிட்டுப் போங்க’ன்னு திட்டுறாங்க!'' என்கிறார்.
புதுக்கோட்டை ஜி.ஆர் கேபிள் உரிமையாளரான ஸ்ரீதர், ''மக்களுக்கு பதில் சொல்லி மாளலை, சார். 'எங்க சௌகரியத்துக்காகத்தான் டி.வி. பாக்குறோம். நீங்க கட்டாயப்படுத்தி வேற சேனலைப் பாக்கவைக்க முடியாது’னு சத்தம் போடுறாங்க... இப்படியே போனா, என்ன நடக்கப்போகுதோ?'' என்றார்.
அரசு கேபிளில் சன் டி.வி.!
நாகை மாவட்டத்தில் ஓர் ஆச்சர்யம். இங்கு அரசு கேபிள் துவக்கப்பட்டுவிட்டாலும், அதிலும் சன் டி.வி. வருகிறது. ''இது முழுக்க முழுக்க கிராமங்கள் அடங்கிய பகுதி. இங்கு உள்ள மக்கள், கேபிள் டி.வி. கனெக்ஷன் இருக்குதான்னு கேக்குறதையே, 'சன் டி.வி. இருக்கா?’னுதான் கேட்பாங்க. சன் டி.வி. இல்லாத கேபிள் கனெக்ஷனை அவங்களால் நினைச்சுக்கூட பார்க்க முடியாது. அதனால, அரசு கேபிளில் இணைஞ்சுட்டாலும், சன் டி.வி. இல்லாம கொடுக்குறது கிடையாது. சன் டைரக்ட்டில் இருந்து லிங்க் எடுத்துக் கொடுத்துட்டு இருக்கோம்!'' என்று சொன்னார் ஆபரேட்டர் ஒருவர்.
சிவகங்கை கேபிள் ஆபரேட்டர்கள், ''மக்கள் விரும்பிப் பார்க்கும் சேனல்கள் அரசு கேபிளில் இல்லை. கட்டண சேனல்களையும் சேர்த்து வழங்கினால், அரசு கேபிளில் இணைந்துகொள்ளத் தயார்னு கலெக்டரிடம் மனு கொடுத்தோம். ஆனால் அவரோ, 'உங்க சூழ்நிலை எனக்குப் புரிகிறது. ஆனால், அரசு உத்தரவை மீறி என்னால் எதுவும் செய்ய முடியாது’னு சொல்கிறார். 10 வருஷத்துக்கு முந்தி நாங்க எந்த டெக்னாலஜி மூலமா கேபிள் ஒளிபரப்பு செஞ்சோமோ, அந்த டெக்னாலஜி மூலமா அரசு கேபிள் ஒளிபரப்பப்படுவதால் தெளிவில்லாமல் இருக்கு. இதை எடுத்துச் சொன்னா, 'நீ தி.மு.க-காரன்; சன் டி.வி-க்கு சப்போர்ட்டாப் பேசுறே’னு சிக்கல்ல மாட்டிவிடுறாங்க. உண்மை என்னன்னா, சிவகங்கை கேபிள் ஆபரேட்டர்களில் 80 சதவிகிதம் பேர் அ.தி.மு.க-காரர்கள்தான்!'' என்று சொல்கிறார்கள்.
நிறுத்தப்பட்ட அரசு கேபிள்!
நெல்லையில் அரசு கேபிள் ஒளிபரப்பு தொடங்கப்பட்ட வேகத்திலேயே நிறுத்தப்பட்டது. தொடக்கத்திலேயே ஆபரேட்டர்களிடம் வரவேற்பு கிடைக்கவில்லை. இருந்தாலும் திட்டத்தைத் தொடங்கியாக வேண்டுமே! அதனால் அவசரகதியில் ஜங்ஷன் பகுதியைச் சேர்ந்த பரமசிவன் என்ற ஆபரேட்டரது இணைப்பு மூலம் கொடுக்கப்பட்டது. மதிய நேரத்தில் சீரியல் பார்க்க டி.வி. முன்பாக அமர்ந்த பெண்களுக்கு தாங்கள் விரும்பிய சேனல்கள் தெரியாததால் ஆபரேட்டரை போனில் வறுத்து எடுத்தனர். 'எல்லா சேனலும் கொடுக்க முடியலைன்னா, நாளைக்கே வேறு ஆபரேட்டரிடம் இணைப்பை பெறுவோம்...’ என்று சண்டைக்கு வந்ததால், அரசு கேபிள் இணைப்பைக் கொடுத்த ஒரே ஆபரேட்டரும் பணிந்துவிட்டார். இதனால் ஓரிரு மணி நேரத்திலேயே நெல்லையில் அரசு கேபிள் ஒளிபரப்பு நின்றுபோனது.
பேச்சு வார்த்தைக்கு இப்போதுதான் குழு!
கட்டண சேனல்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, அரசு கேபிளில் கட்டண சேனல்களைக் கொண்டு வர விலை நிர்ணயக் குழு ஒன்றை அமைத்திருக்கிறது அரசு. இந்த குழுவில் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் தலைவர், தமிழக அரசின் நிதித்துறை செயலாளர், தகவல் தொழில் நுட்பத்துறை செயலாளர், உள்துறை கூடுதல் செயலாளர், அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் ஆகிய ஐந்து பேரை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆறாவதாக இக்குழுவில் சிறப்பு அழைப்பாளர் ஒருவரும் இடம் பெறப் போகிறாராம். ''இதெல்லாம் அரசு கேபிளை தொடங்குவதற்கு முன்பே செஞ்சிருக்கணுமா இல்லையா..? 'சோறு ஆக்கி இலையில போட்டு வெச்சிட்டு குழம்பு வைக்கப் பருப்பு வாங்கக் கடைக்கு போன’தைப் போல இருக்குது!'' என்று புலம்புகிறார்கள் கேபிள் ஆபரேட்டர்கள்.
*********************************************************************************
0 comments:
Post a Comment