மிஸ்டர் கழுகு: விஜயகாந்த்தை கழற்றிவிட நினைக்கிறாரா ஜெ.?
கூட்டணியை உலுக்கும் உள்ளாட்சி நிலவரம்!
நாம் முந்திக்கொண்டோம்.
''சில கேள்விகளை எழுதி வைத்திருக்கி றோம். அதற்கு முதலில் பதில் சொல்லி முடித்து விடும்!'' என்றோம்.
''உமது சித்தம்... எமது பாக்யம்!'' என்று சொல்லி விட்டுக் கேள்விகளை எதிர்கொள்ளத் தயார் ஆனார் கழுகார்!
''புதிய கவர்னர் ரோசய்யாவை, கருணாநிதி திடீரென்று சந்தித்தாரே! ஏதாவது விஷேசம் உண்டா?''
''ரோசய்யாவுக்கும் கருணாநிதிக்கும் சொல்லிக்கொள்வது மாதிரி நட்பெல்லாம் இல்லை. 'நாங்கள் நெடுநாளைய நண்பர்கள்’ என்று கருணாநிதி சொல்லிக்கொள்கிறார். போகட் டும்... மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கருணாநிதி சொன்னாலும், 'கவர்னரை தன் வசம் வைத்துக்கொள்வது நல்லது’ என்று கருணாநிதி நினைத்து, நடந்த காரியபூர்வமான சந்திப்புதான் இது என்கிறார்கள் தி.மு.க-வில். அன்பழகன், துரைமுருகன் ஆகியோருடன்தான் ரோசய்யாவை சந்தித்தார் கருணாநிதி. தான் எழுதிய புத்தகங்களை அவருக்குக் கொடுத்தார். பிறகு துரைமுருகனை வெளியே அனுப்பிவிட்டு இரண்டு நிமிஷம் ரோசய் யாவிடம் தனிமையில் பேசினாராம் கருணாநிதி.''
''அது என்னவாம்?''
''ஜெயலலிதாவின் சில செயல்பாடுகளைச் சொல்லி, கருணாநிதி வருந்தினாராம். 'நில மோசடின்னு சொல்லி கட்சிக்காரங்களைக் கைது செய்றாங்க. எல்லாரையும் குண்டாஸ்ல போடு றாங்க. என் குடும்பத்தையே பழிவாங்கணும்னு நினைக்கிறாங்க. சமச்சீர்க் கல்வி விஷயத்தில் தப்பான முடிவெடுத்து, உச்ச நீதிமன்றம் கண்டிச்ச பிறகு பின்வாங்கிட்டாங்க’ என்று கடகடவென கருணாநிதி கலங்கிவிட்டதாக தி.மு.க. வட்டாரம் சொல்கிறது. முகத்தில் எந்த பாவனையும் காட் டாமல் ரோசய்யா கேட்டுக்கொண்டாராம். அடுத்து, சொற்ப நிமிடங்களிலேயே வெளியே வந்துவிட்டார் கருணாநிதி!''
''இதுபற்றி என்ன நினைக்கிறாராம் ரோசய்யா!''
''இதெல்லாம் நமக்குத் தேவை இல்லாத விஷயம் என்று நினைப்பார்!
சென்னைக்கு வருவதற்கு முந்தைய நாள், ஆந்திரப் பத்திரிகையாளர் ஒருவர் ரோசய்யாவை சந்தித்துள்ளார். அப்போது, 'நான் அந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவி செய்வேன். அந்த மாநில அரசுக்கு உதவியாக இருப்பேன். நான் அரசியல்வாதி மாதிரி கருத்துச் சொல்லமாட்டேன். பப்ளிக் ஸ்பீக்கராக இருக்க மாட்டேன்’ என்று சொன்னாராம். இதை வைத்துப்பார்த்தால் ரோசய்யா... அடங்கிய சமர்த்தராகவே காலத்தை ஓட்டிவிடுவார் என்று நினைக்கிறேன். ஆனால், காங்கிரஸ் மேலிடம் என்ன நினைக்கிறதோ...''
''பர்னாலா உரிய மரியாதையுடன் அனுப்பி வைக்கப்பட்டாரா?''
''புதிய கவர்னர் வரும்போது முந்தைய கவர்னர் இருப்பது மரபு அல்லவாம்! எனவே, ரோசய்யா மாலையில் பதவி ஏற்கும் அன்று காலையில் பர்னாலா, அவரது மனைவி மற்றும் ஒரே ஒரு பாதுகாவலர் - ஆகிய மூவரும் ராஜ்பவனில் இருந்து பறந்துவிட்டனர். மகன்கள் நான்கைந்து நாட்களுக்கு முன்னதாகவே பொருட்களுடன் போய்விட்டனர். படாடோபமாக வழியனுப்பு விழாக்கள் நடக்காததில் பர்னாலா வருத்தப்பட்டதாகவும் சொல்கிறார்கள். ஜெயலலிதாவுக்கும், இவருக்கும் நட்பு சரியாக இல்லை என்பதும் விழா நடக்காததற்குக் காரணமாக இருக்கலாம். 'ஒட்டி உறவாடிய தி.மு.க-வாவது சிறு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கலாம்’ என்று பர்னாலா வருந்தியதாக வும் சொல்கிறார்கள்.''
''விழா கொண்டாடும் நிலைமையிலா இருக்கிறது தி.மு.க.?''
''அதனால்தான் சண்டிகர் போய் இறங்கிய மறுநாளே அங்கு உள்ள நிருபர்களை அழைத்து பார்ட்டி கொடுத்து பேசினாராம் பர்னாலா. அடுத்து வரப்போகும் பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர்களுள் ஒருவராக பர்னாலா இருக்கப் போகிறாராம். பிரகாஷ் சிங் பாதல் - காங்கிரஸ் ஒரு கூட்டணி அமைக்க, அதற்கு எதிராக பர்னாலா ஒரு கூட்டணியைத் தயார் செய்யத் தொடங்கிவிட்டார். முதல்வர் பாதல், அவரது மகனும் துணை முதல்வருமான சுக்பிர்சிங் பாதல் இருவரும்தான் இனி அவரது இலக்கு! 'இவ்வளவு ஆக்ரோஷமான மனிதர் இங்கே நடந்த பல விஷயங்களைக் கண்டும் காணாமல் மௌனியாக இருந்தது ஏன்?’ என்பதுதான் பலரது கேள்வி. கருணாநிதியுடனான நட்பு என்கிறார்கள் சிலர். பர்னாலாவின் மகனைச் சிலர் காரணம் சொல்கிறார்கள். மொத்தத்தில் பர்னாலா, வெறும் தலையாட்டி பொம்மையாகவே கடந்த ஐந்து ஆண்டுகளைக் கழித்துவிட்டுப் போய்விட்டார்!''
''திடீரென ஸ்டாலின் லண்டன் கிளம்பிவிட்டாரே?''
''மருத்துவ சிகிச்சைக்காக ஆண்டுக்கு ஒரு முறை லண்டன் சென்று வருவதைத் தனது வழக்கமாக வைத்துள்ளார் ஸ்டாலின். லண்டன் செல்வதற்கு முன்னதாக, இங்கு உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்று செக்-அப் செய்ததாகவும் சொல்கிறார்கள். எனவே, அவர் லண்டன் செல்வதில் ரகசியம் எதுவும் இல்லை! ஆனால், அதற்காக அவர் தேர்ந்தெடுத்த தேதிதான் தி.மு.க-வினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது!''
''என்ன?''
''சட்டமன்றத்துக்குள் போவதா வேண்டாமா என்று கட்சிக்குள் பெரும் பிரச்னை நடப்பது அனை வருக்கும் தெரியும். முதலில் போக மாட்டேன் என்றார்கள். ஒரு நாள் போனார்கள். மறுபடியும் பாய்காட் பண்ணினார்கள். மீண்டும் 5-ம் தேதி போகப் போவதாக ஸ்டாலின்தான் அறிவித்தார். சட்டமன்ற தி.மு.க. குழுத் தலைவர் அவர்தானே! அன்றைய தினம் அவர் இல்லாமல் லண்டன் போனது சரியா என்பதுதான் சில தி.மு.க. பிரமுகர்களின் கேள்வி!
'5-ம் தேதி, தான் லண்டனில் இருப்போம் என்பது முன்னதாகவே தீர்மானிக்கப்பட்டுவிட்டது. அப்படி இருக்கும்போது, அந்த நாளை ஏன் சொல்ல வேண்டும்?’ என்று சிலர் புலம்புகிறார்கள். 'தளபதி இருந்து எங்களை சபைக்கு அழைத்துச் சென் றால்தானே உற்சாகமாக இருக்கும்? சபைக்குள் என்ன முடிவு எடுப்பது என்பதையும் அவர் இருந்தால்தான் உடனடியாகச் சொல்லவும் முடியும்?’ என்பது இவர்களது கருத்து. மேலும், சபை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள கருணாநிதி விரும்புகிறார். ஆனால், அவரது வீல்சேருக்கு வழி இல்லாததால் அவரும் சைலன்ட் டாக இருக்க வேண்டிய நெருக்கடி. மொத்தத்தில் சபைக்கும் தி.மு.க-வுக்கும் ஒட்டவில்லை!''
''சேலம் தி.மு.க. பொதுக் கூட்டத்திலும் ஏதோ கசகசப்பாமே?''
''இத்தனை ஆண்டுகால தி.மு.க. வரலாற்றில் வீரபாண்டி ஆறுமுகம் இல்லாமல் ஒரு பிரமாண்டமான பொதுக் கூட்டத்தை அவரது எதிரிகள் சேர்ந்து நடத்திக் காட்டிவிட்டார்கள். பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன்தான் இதற்கு ஏற்பாடு. ஸ்டாலினின் முழு ஆசியுடன் நடந்த இந்தக் கூட்டத்துக்காக சேலம் போஸ் மைதானத்தில் எக்கச்சக்கமான கூட்டமாம்! இதற்கான ஆலோசனை நடந்தபோதே வீரபாண்டி ஆறுமுகம் ஆதரவு ஆட்கள் கடும் எதிர்ப்பு கிளப்பினார்களாம். 'அண்ணன், அடுத்த வாரம் ஜாமீனில் வெளியே வரப் போகிறார். அவர் வந்ததும் நடத்தலாம்’ என்று வெளிப்படையாகவே சொல்ல... எந்த முடிவும் எடுக்கப்படாமல் கூட்டம் கலைக்கப்பட்டது. சேலம் மாநகர் மாவட்டச் செயலாளர் கலையமுதன், சென்னை வந்து கருணாநிதியை சந்தித்து, 'தளபதி கலந்துகிடுற தேதியை மாத்தணும்’ என்று சொல்லி... வீரபாண்டி ஆறுமுகம் இல்லாத காரணத்தையும் அவர் சொன்னாராம். கடுப்பான கருணாநிதி, 'வீரபாண்டியார் இல்லேன்னா கூட்டமே நடத்தக் கூடாதா? நானே இல்லேன்னாக்கூட கட்சி இருக்கும். கூட்டம் நடக்கும்’ என்றாராம் கருணாநிதி. கலையமுதன் ஓடி வந்துவிட்டார். இதைத் தங்களுக்குக் கிடைத்த வெற்றியாக வீரபாண்டி ஆறுமுகத்தின் எதிர் கோஷ்டி பார்க்கிறது. 'மாவட்டக் கழகத்துக்குள் குழப்பம் ஏற்படுத்தும் இதுபோன்ற காரியங்களுக்கு தளபதி உதவி செய்வது சரியா?’ எனச் சிலர் கேட்க ஆரம்பித்துள்ளார்கள்! அதேபோல்...''
''சொல்லும், சொல்லும்!''
''மாநிலம் முழுவதும் தி.மு.க. பிரமுகர்கள் பல மாவட்டங்களில் கைதாகி வருகிறார்கள். எங்குமே நடக்காத காரியம், விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் நடந்தது. 'பொன்முடியை விடுதலை செய்’ என்று ஆங்காங்கே தி.மு.க-வினர் மறியல் செய்து கைதாவதுதான் அது. கனிமொழி முதல் எத்தனையோ பேர் கைதான போதெல்லாம் இதுபோல் மறியல் நடத்தாத உடன்பிறப்புகள், பொன்முடிக்காக மட்டும் நடத்துவது சரியா?’ என சிலர் கேட்க ஆரம்பித்த நிலையில்... 'விழுப்புரத்தில் நடந்தது மாதிரி எல்லா ஊர்லயும் நடக்கட்டும்’ என்று தூண்டி விடும் காரியத்தையும் ஸ்டாலின் செய்கிறாராம். 'மாநிலத் தலைமையின் அனுமதி இல்லாமல் ஆங்காங்கே ஆர்ப் பாட்டம் நடத்துவது தவறு என்று கண்டிக்காமல் தளபதியே இப்படிச் சொல்வது சரியா?’ என்றும் இவர்கள் கேட்கிறார்கள். மொத்தத்தில் கட்சி கலகலத்துக்கொண்டு இருப்பது தெரிகிறது!''
''உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. அணியில் விஜயகாந்த் இருப்பாரா?''
''இருக்க வேண்டும் என்றுதான் விஜயகாந்த் நினைக் கிறாராம். 10 மாநகராட்சியில் 4 இடங்களை தே.மு.தி.க. கேட்பதாக அ.தி.மு.க. தலைமைக் கழக வட்டாரத்தில் வலம் வருபவர்கள் சொல்ல ஆரம்பித்துள்ளனர். 'ஒரே ஒரு மாநகராட்சியை அம்மா விட்டுக்கொடுக்கலாம்!’ என்றும் இவர்கள் சொல்கிறார்கள். விஜயகாந்த் இதை ஏற்பாரா எனத் தெரியவில்லை. 'கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆளும் கட்சியாக ஆக வேண்டும் என்பதற்காக, கூட்டணிக் கட்சிகளுடன் அம்மா சமரசமாகப் போனார். இறங்கிச் சென்று தொகுதி களை விட்டுக்கொடுத்தார். இப்போது ஆளும் கட்சி ஆகிவிட்டதால், அவ்வளவு இறங்கிப் போகமாட்டார்...’ என்றும் அ.தி.மு.க. புள்ளிகள் சொல்கிறார்கள்.''
''விஜயகாந்த் என்ன நினைக்கிறார்?''
''ஜெ. ஆட்சியின் 100-வது நாள் விவாதத்தில் கலந்துகொண்ட பண்ருட்டி ராமச்சந்திரன், ஜெயலலி தாவை புகழ்ந்து தள்ளிவிட்டு, 'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை உணருங்கள்’ என்று சொன்னார். ஒன்றாக இருப்பதுதான் ரெண்டு பேருக்கும் நல்லது என்பது அவரது வாக்கு. இந்த விழா அன்றுகூட சபைக்கு விஜயகாந்த் வராதது, ஜெயலலிதாவுக்கு மனவருத்தம் கொடுத்துள்ளது. 'சபைக்கு வர விஜயகாந்த்துக்கு ஆர்வம் இல்லையா? அல்லது அவாய்ட் பண்ணுகிறாரா?’ என்று குழம்பிப் போயிருக்கிறார் ஜெயலலிதா. 'எந்த இடத்திலும் ஜெயலலிதாவைப் பாராட்டிப் பேசி கமிட் ஆகிவிடக் கூடாது’ என்று விஜயகாந்த் நினைப்பதாகவும் சொல்கிறார்கள். இப்போது இதுதான் கூட்டணியை உலுக்கி எடுக்கிறது!'' என்ற கழுகாரிடம்...
''நமது கேள்விகள் முடிந்தது. நீர் கொண்டுவந்ததை கொட்டும்'' என்றோம்!
''நான் கொண்டுவந்ததைத்தான் நீர் கேள்வியாகவே கேட்டு முடித்துவிட்டீரே!'' என்றபடிவிட்டார் ஜூட்!
=====================================================================
கழுகார் பதில்கள்
குலசேகரன், வள்ளியூர்.
மன்னர்களை வீழ்த்தியது எது?
அக்பர் இதற்கு நல்ல உதாரணம். பிறந்த பையனின் முகத்தைக் கூடப் பார்க்காமல் போர்க்களத்தில் இருந்தபடியே அக்பரின் பிறந்த நாளைக் கொண்டாடினார் அப்பா ஹுமாயூன். 'இவன் புகழ் கஸ்தூரி மணம் போல உலகம் முழுக்கப் பரவ வேண்டும்’ என்றார். அதைப் போலவே 69 ஆண்டுகள் வாழ்ந்த அக்பர், 49 ஆண்டுகள் மன்னராகவே இருந்தார். அவரை நொந்து நூலாக்கி மரணப்படுக்கையில் தள்ளியது ரெண்டு பேர். ஒருத்தி, அந்தப்புரத்தில் இருந்த மாஹம் அனாகா. தன் மகன் ஆதம்கானை வளர்க்க வேண்டும் என்பதற்காக அசைக்க முடியாத மாவீரனான பைராம்கான் பற்றி பொய்களைப் புனைந்து அக்பரிடம் இருந்து பிரித்தாள்.
இன்னோர் ஆள், அக்பரின் மகன் சலீம். 'அப்பாவின் ஆயுள் நீடிக்கிறதே’ என்று நித்தமும் புலம்பி, தனி அணி கட்டியவர் சலீம். இவர்கள் இருவரையும் சமாளிக்க முடியாமல் அக்பர் படுக்கையில் சரிந்தார். இதுதான் பல மன்னர்களுக்கும் நடந்தது!
மு.திருநாவுக்கரசு, ஸ்ரீவில்லிபுத்தூர்.
'நாங்கள் எதைச் செய்தாலும் அதைச் சீரழிப்பதே தி.மு.க-வின் வேலை’ என்கிறாரே ஜெ.?
'நாங்கள் எதைச் செய்தாலும் அதைச் சீரழிப்பதே அ.தி.மு.க-வின் வேலை’ என்கிறாரே மு.க. இவர்கள் ரெண்டு பேருக்குமே வேறு வேலையே இல்லையா?
ராஜேஷ், நாகர்கோவில்.
இலங்கையில் 30 ஆண்டுகளாக இருந்த அவசரகாலத் தடை சட்டத்தை ராஜபக்ஷே வாபஸ் வாங்கிவிட்டது நல்ல விஷயம்தானே?
இலங்கையில் அமைதி திரும்பிவிட்டது என்பதைக்காட்ட ராஜபக்ஷே நடத்தும் நாடகம் இது!
மட்டக்களப்பு மாவட்ட எம்.பி-யான சீனித்தம்பி யோகேஸ்வரன் கடந்த வாரம் தமிழகம் வந்திருந்தார். 'அவசர கால தடை சட்டத்தை வாபஸ் வாங்கிவிட்டு, பயங்கரவாத தடை சட்டத்தை ராஜபக்ஷே பலப்படுத்திவிட்டார்!’ என்று சொல்லிஇருக்கிறார். எனவே, சட்டத்தின் பெயர் மட்டுமே மாறியுள்ளது.
அதைவிட யோகேஸ்வரன் சொல்லியிருக்கும் இன்னொரு செய்தி அதிர்ச்சிக்கு உரியது. '50 ஆயிரம் வீடுகள் கட்ட இந்தியா பணம் கொடுத்தது. ஒன்றரை ஆண்டுகளில் ஆயிரம் வீடுகள் கூட கட்டித் தரப்படவில்லை’ என்றும் அவர் சொல்கிறார். இந்தியா இதையாவது தட்டிக்கேட்க வேண்டும்!
ஆர்.சண்முகநாதன், வந்தவாசி.
'பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட மூவர் குறித்து தமிழக சட்டசபை நிறைவேற்றிய தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது’ என்கிறாரே மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித்?
ஜெயலலிதா முன்மொழிந்து அனைத்துக் கட்சிகளும் வழிமொழிந்த தீர்மானம், குடியரசுத் தலைவருக்குத்தான். எனவே, அது ஏற்கத் தக்கதா இல்லையா என அவர்தான் தீர்மானிக்கவேண்டும். மேலும், ஒரு மாநில சட்டசபை ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தை உதாசீனப்படுத்தும் வகையில் ஓர் அமைச்சர், அதுவும் சட்ட அமைச்சர் கருத்துச் சொல்வது அபத்தமானது. ஜெயலலிதா மீதான எரிச்சல் மட்டுமே அவரது வார்த்தைகளில் தெரிகிறது!
ஆனந்தி, காரைக்கால்.
அண்ணா ஹஜாரே பற்றி, அருந்ததிராய் எழுதிய கட்டுரையைப் படித்தீரா?
ஊழலுக்கு எதிரான யுத்தம் தொடங்கியவர் என்கிற அடிப்படையில் ஹஜாரே ஏற்கத் தக்கவர்தான். ஆனால், அருந்ததி சொன்னதில் மிக முக்கியமான விமர்சனம் இருக்கிறது.
'அதிகாரம் கீழ்நிலை வரை பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பது காந்தியின் கொள்கை. ஆனால், ஹஜாரேயின் ஜன்லோக்பால் சட்டம், முற்றதிகாரம் கொண்ட கொடிய சட்டமாக இருக்கிறது. ஏற்கெனவே அதிகாரம் வாய்ந்த சிறு கும்பல் நாட்டை ஆள்கிறது. ஜன்லோக்பால் குழுவும் இரண்டாவது, அதிகாரம் வாய்ந்த கும்பலாகச் செயல்படப் போகிறது’ என்று குற்றம் சாட்டுகிறார்.
'காந்திய நெறி சார்ந்ததாக இச்சட்டம் வடிவமைக்கப்படவில்லை!’ என்று அருந்ததி சொல்வதற்கு அண்ணாவிடமிருந்து இதுவரை பதில் இல்லை!
க.முனுசாமி, திண்டுக்கல்.
ஸ்டாலின் என்ன செய்துகொண்டு இருக்கிறார்?
'கடந்த ஐந்தாண்டுகளில் அரசு நிகழ்ச்சிகளுக்குப் போனதுதான் எனது வேலை. இப்போது தி.மு.க. தோழர்களை சிறை சிறையாகப் போய்ப் பார்ப்பதுதான் எனது வேலை’ என்று உங்கள் ஊரில் தான் ஸ்டாலினே ஒப்புக் கொண்டுள்ளாரே!
குணசீலன், விருதுநகர்.
'தமிழகத்தின் அண்ணா ஹஜாரே!’ என்று நடிகர் விஜய்யை அவரது ரசிகர் மன்றத் தலைவர் 'வேலாயுதம்’ பட இசை வெளியீட்டு விழாவில் பேசியுள்ளாரே!
நல்லவேளை! இது அண்ணா ஹஜாரேவுக்கு தெரியாது! இதைக் கேள்விப்பட்டு அவருக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது!
வேதாச்சலம், திருச்செங்கோடு.
நிலப்பறிப்பு வழக்கு டல் அடிப்பது போல் தெரிகிறதே?
இதோ அடுத்து வரப்போகிறது, சொத்துக் குவிப்பு வழக்குகள்!
கலை அரசன், மேட்டுப்பாளையம்.
கிரிமினல்கள் தேர்தலில் போட்டியிடத் தடைவிதிக்கும் புதிய சட்டம் வரப் போகிறதாமே?
ஆமாம்! 'கிரிமினல்கள் இல்லாத அரசியல் _ சட்ட மசோதா’ என்று இதற்குப் பெயர். கிரிமினல் வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களது வேட்பு மனுக்களை இந்தச் சட்டத்தின் மூலம் தள்ளுபடி செய்து விடுவார்கள். இன்றைய நாடாளுமன்றத்திலேயே 162 எம்.பி-க்கள் மீது குற்றப்புகார்கள் இருக்கின்றன. இதை வைத்துப் பார்த்தால் வரவேற்க வேண்டிய சட்டம் இது. இன்னும் மூன்று வாரத்தில் தாக்கல் ஆகப் போகிறது.
வாசுகி, ராஜபாளையம்.
பணமா... குணமா... எது முக்கியம்?
'பணத்தால் அழகான நாயை விலைக்கு வாங்கலாம். ஆனால், அதன் வாலை பணத்தால் ஆட்டுவிக்க முடியாது’ என்பார்கள். நல்லவர்களைப் பார்த்தால் நாய் வாலை நளினமாக ஆட்டும். திருடர்களைப் பார்த்தால் வால் வெடைக்கும். எது முக்கியம் என்று தெரிகிறதா?
கரிகால் வளவன், கோவில்பட்டி.
கேரளாவில் முதலமைச்சரின் குறை தீர்ப்பு கால்சென்டருக்கு நல்ல வரவேற்பாமே?
முதல்வர் உம்மன் சாண்டியின் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கால் சென்டரை செப்டம்பர் 1-ம் தேதி திறந்தார்கள். முதல் நாளே 2.25 லட்சம் மக்கள் இந்தச் சேவைக்குள் நுழைந்தார்கள். இதை அரசு எதிர்பார்க்கவில்லை. அன்று மட்டுமே 4 ஆயிரம் புகார்கள் பதிவாகி உள்ளன. எல்லாப் புகார்களுக்கும் ஒரு மாதத்துக்குள் பதில் தர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார் உம்மன் சாண்டி. ஜெயலலிதாவும் இதை அமல்படுத்தலாம்!
பிரவீன்குமார், திண்டிவனம்.
அண்ணா ஹஜாரேவின் வாழ்க்கை படமாகிறதாமே?
வில்லன் யார் மன்மோகன் சிங்கா? ராகுல் காந்தியா?
******************************************************************************
பேச்சு கேசட்டுகளில் பெரியார் தாசன் கேசட் பல ஆண்டுகளுக்கு முன்பே பிரசித்தம். இரண்டு மணிநேரம் பேசிவிட்டு அரைமணி நேரம் இன்டர்வெல் விட்டுவிட்டு மீண்டும் இரண்டு மணிநேரம் பேசுவார். அப்படிப்பட்ட பேராசிரியர் பெரியார்தாசன், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலையில் 'தாயகம்’ வளாகத்துக்கு வந்து தன்னை ம.தி.மு.க-வில் இணைத்துக் கொண்டுவிட்டார்!
பரவசத்தில் இருந்த வைகோ, ''எனக்கு அதிக மகிழ்ச்சியாக இருந்தால் சரியாகப் பேச வராது. மூன்று நாட்களாக நான் அதிகமாகவே மகிழ்ச்சியாக இருக்கிறேன். திராவிட இயக்கத்தின் கருத்துக் களஞ்சியமாக இருக்கும் பேராசிரியர் வந்திருப்பது, நமக்கு 1,000 யானை பலம் கிடைத்ததைப்போல. இங்கே அவர் பேசியது ட்ரெய்லர்தான். மீதியை நெல்லை மாநாட்டில் கேட்கலாம்...'' என்று சுருக்கமாக முடித்ததும் கைதட்டல்களால் அதிர்ந்தது தாயகம்.
முன்னதாக தனது ஏற்புரையில், நையாண்டிகளுக்கு இடையில் பெரியார்தாசன் பேசப் பேச, சிரிப்பும் கைதட்டல்களுமாக அரங்கம் அமர்க்களப்பட்டது. அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்...
''திடீரென ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்தது ஏன்?''
''கட்சி அரசியலில் இதுவரை நான் பார்வையாளனாகத்தான் இருந்தேன். நீண்டகாலமாக தி.மு.க-வின் அனுதாபி. பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் விவகாரத்தில்... தூக்குப் போடப் போறான், பயிற்சி நடக்குது, இப்படித்தான் தூக்கு போடப் போறான்னு ஒரு பக்கம் செய்திகள்... '9-ம் தேதி தூக்கு, அதுக்கு யார் யாரை நியமிச்சு இருக்காங்க?’னு செய்திகள் வந்தபோது, பதைபதைப்பு. அந்த இறுக்கத்தைத் தளர்த்தினது, சட்டரீதியான முயற்சிகள்தான். வாழ்நாள் முழுதும் போராளியா இருந்த பாபா சாகேப் அம்பேத்கர், 'சட்டரீதியாக முறையாக செயல்பட்டால்தான் உரிமைகளை வென்றெடுக்க முடியும்’னு சொல்வார். சரியான அரசியல் நகர்வு இதுதான்னு நினைக்கிறேன். நீண்டகால நாடாளுமன்றவாதியான வைகோ இதைச் சாதிச்சுக் காட்டியிருக்கார். இதுதான் என்னை ம.தி.மு.க-வில் கொண்டுவந்து சேர்த்தது!
தேர்தலில் தோற்றால் 'யார் வீட்ல எழவோ, பாய் போட்டுட்டாங்க’னு போவதுதான் கட்சிகளுடைய வழக்கம். அ.தி.மு.க. தோற்றுவிட்டால் ஊட்டுக்குப் போயிடுவாங்க. தி.மு.க. தோத்துட்டா, பட்டிமன்றம், கவியரங்கம் நடத்துவாங்க. எரியும் மக்கள் பிரச்னைகளைக் கையில் எடுத்து செயல்பட மாட்டாங்க. ஆனா, ம.தி.மு.க. அப்படி இல்லை. இப்போ, அவங்ககிட்ட பதவி, அதிகாரம் எதுவும் இல்லை. ஆனாலும், திராவிட இயக்கப் பார்வையோட தமிழர் நலனுக்கான இயக்கமா நிக்குது. சிலர் தமிழ்த் தேசியம்னு பேசிகிட்டு, பெரியாரையும் பெரியார் இயக்கங்களையும் தமிழர் விரோதமா சித்திரிக்கிறாங்க. அப்படி இல்லைன்னு நிரூபிக்கிற இயக்கமா ம.தி.மு.க. இருக்கு. கலைஞரைப் பொறுத்தவரை, அதிகாரம் அவர் கையில் இருக்கும்போது... இலவசம், சில வேலைவாய்ப்புகளைத் தவிர, தமிழர்களின் பாதுகாப்புக்காக எதையும் அவர் செய்தது இல்லை. திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க அவர் என்ன செய்தார்? சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த அரசியல் கைதிகளை, 10 ஆண்டுகளுக்கும் மேலாக, சிறையிலேயே அடைத்துவைத்து இருந்ததை தடுத்தாரா? 12 ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டு, நிரபராதிகள் என விடுதலை செய்யப்பட்ட குணங்குடி அனீபா போன்றவர்களுக்கு என்ன நிவாரணம்? அவர்கள் இழந்த காலத்தைத் திருப்பித் தரமுடியுமா? இந்தப் பிரச்னையிலும், வாஞ்சையுடன் வைகோ குரல் கொடுக்கிறார். எனவேதான் ம.தி.மு.க.வில் இணைந்தேன்.''
''முதலில் தி.க-வில் இருந்தீர்கள். பிறகு புத்த மதம், பிறகு இஸ்லாமிய மதம்... என மாறிக்கொண்டே இருக்கிறீர்கள் என்று உங்களை விமர்சிக்கிறார்களே?''
''கருத்தாக்கங்களை மாற்றிக்கொள்வது தவறு இல்லை. காங்கிரஸை அழிக்கணும்னு சொன்ன பெரியார்தான், காந்திதேசம்னு பேரு வைக்கச் சொன்னார். 1,300 குறட்பாக்களில் இருக்கிற கருத்துகள்தான், 52 திரிபீடகங்களில் சொல்லப்பட்டு இருக்குதுனு பௌத்தத்துக்குப் போனேன். பிறகு, இறைவன் இருக்கிறானா, இல்லையானும் யோசிச்சப்ப, இறைவனே அருளியது குர்-ஆன், மனிதனின் வார்த்தைகள் இல்லைன்னு உணர்ந்தேன். இது என் சமயக் கருத்துகள். அரசியலைப் பொறுத்தவரை நான் திராவிட இயக்கத்தில்தானே இருக்கிறேன், கட்சி மாறுவது என்கிற பேச்சுக்கே இடம் இல்லை.''
''இன்னமும் மெட்ராஸ் பாஷையிலேயே மேடைகளில் பேசுகிறீர்களே?''
''நான் அடிக்கடி சொல்றதுண்டு... தஞ்சாவூரில் வாசல் வரை காவிரி வந்து பயிர் வைக்கச் சொல்லும். எங்க வட ஆற்காடு பகுதியில 600 அடி தோண்டினாத்தான் தண்ணி வரும். ஊருக்கு ஊர் வித்தியாசம் இருக்கு! உழைச்சுக் களைச்சுக் கிடக்கிறவன்ட்ட 'மண்வெட்டி இருக்கிறதா? பேருந்து போய்விட்டதா?’னு கேட்டா, மம்பட்டி கீது, பஸ் பூடுச்சுனுதான் சொல்வான். இது ஒன்றும் கேவலம் இல்லை. சிந்திச்சுப் பேசுறதுதான் நாகரிகம்னு இல்லை. உழைத்துக் களைத்த மக்களின் அடி உள்ளத்தில் இருந்து உணர்ச்சி வேகத்தோடு வருவது, வட ஆற்காடு வட்டார மொழி வழக்கு. இதுதான் என்னுடைய பாணி. எவ்வளவு உயர்வான கருத்தைச் சொன்னாலும், எங்கும் எப்போதும் எனக்கு இந்தத் தமிழ்தான் வசப்படுகிறது. எதுவாக இருந்தாலும் தமிழ் தமிழ்தானே!''
*******************************************************************************
ஊழல் அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்றம் விசாரணை தொடங்கிய ஆரம்ப கட்டத்திலேயே... அவர்களைப் பணிநீக்கம் செய்வதற்காக சட்டவிதி 311-ல் திருத்தம் கொண்டுவர, வல்லுனர் குழு மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கி இருக்கிறது.
இது ஒரு நல்ல ஆரம்பம் என்றாலும், நம் நாட்டில் அரசு ஊழியர்கள் மட்டுமே ஊழல் செய்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. அரசியல்வாதிகள் ஊழல் செய்வதே இல்லையா? அரசியல்வாதிகளுக்கு ஒரு சட்டம், அரசு ஊழியர்களுக்கு ஒரு சட்டம் என்பது நியாயம்தானா?
உண்மையிலேயே ஊழலை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்றால், இந்தச் சட்டத்தின் கீழ் அரசியல்வாதிகளையும் சேர்க்க வேண்டும். ஊழல் செய்த அரசு ஊழியர்கள் ஆரம்ப கட்டத்தில் டிஸ்மிஸ் செய்யப்படுவது போன்று, அரசியல்வாதிகளின் பதவியும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதும் பறிக்கப்பட வேண்டும். அரசியல்வாதிகளின் பதவியைப் பறிப்பதுடன் நின்றுவிடாமல், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அடுத்து தேர்தலில் நிற்கவும் வாய்ப்பு வழங்கக்கூடாது. மேலும் சிறிய ஊழல், பெரிய ஊழல் என்ற பாகுபாடு பார்க்காமல் ஊழல் செய்த அனைவருக்கும் தண்டனை நிச்சயம் கிடைக்க வேண்டும்.
அரசியல்வாதி, அரசு ஊழியர் இருவருக்குமே சட்டத்தின் மீது பயம் இருந்தால்தான், ஊழல் குறையும்.
- கே.ஆர்.திவ்யா,
வடகாடு, செம்போடை.
தமிழக சுகாதாரத் துறை அமைச்சராக, வேலூர் தொகுதி எம்.எல்.ஏ-வான டாக்டர் விஜய் பொறுப்பேற்றதும், ''நான் எங்கு சென்றாலும், வாரம்தோறும் சனிக்கிழமைகளில் தொகுதி மக்களைச் சந்தித்து, குறைகளைக் கேட்டறிவேன்!'' என்று உறுதி அளித்தார். அதுபோலவே பெரும்பாலான சனிக்கிழமைகளில் வேலூர் பொதுமக்களிடம் மனுக்களை வாங்கிவந்தார்.
கடந்த சனிக்கிழமை 3-ம் தேதி பொதுமக்களை சந்திக்கும் நிகழ்ச்சியை தள்ளிவைத்து, வேலூர் அரசு பென்ட்லண்ட் மருத்துவமனை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். நிகழ்ச்சிக்கு அமைச்சர் வந்தபோது, மருத்துவமனை டிரான்ஸ்ஃபார்மரில் பெயின்ட் அடித்துக்கொண்டிருந்த இருவர் மீது திடீரென மின்சாரம் பாயவே... ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார். இன்னொருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் இருக்கிறார்.
இது குறித்து வேலூர் மாநகராட்சி மேயர் கார்த்திகேயன்( தி.மு.க.) நம்மிடம் பேசினார். ''அமைச்சரின் கவனக்குறைவும், மக்கள் மேல் அக்கறை இல்லாததும்தான் இந்த விபத்துக்குக் காரணம். 'கடந்த சனிக் கிழமை வேலூர் நகர பகுதிகள் முழுதும் மின்சாரம் வழங்கப்பட மாட்டாது’ என மின்சார வாரியம் அறிவித்து இருந்தது. அன்றைய தினம் அமைச்சர் வேலூர் நகரத்தின் மையப் பகுதியில் உள்ள மருத்துவமனையில் ஜெனரேட்டர் வசதியை தொடங்கி வைக்க வந்தார். அவர் வருகையை முன்னிட்டு, மருத்துவமனை ஊழியர்கள் நெருக்கடி கொடுத்த காரணத்தால், மின்சார வாரியத்தினர் அந்த மருத்துவமனைக்கு மட்டும் மின்சாரம் கொடுத்திருக்கிறார்கள். அந்த நேரத்தில்தான், டிரான்ஸ்ஃபார்மரில் பெயின்ட் அடித்துக் கொண்டிருந்த கான்ட்ராக்ட் ஊழியர்களான பாஷா, சசிகுமாரை மின்சாரம் தாக்கியது. சம்பவ இடத்திலேயே பாஷா மரணமடைந்தார். சசிகுமார் நிலையும் பரிதாபமாகத்தான் உள்ளது.
அமைச்சர் முதல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வரை எல்லோருமே இதில் தவறு செய்து உள்ளனர். ஒவ்வொரு முறை அமைச்சர் வரும்போதும் பென்ட்லண்ட் மருத்துவ மனைக்குச் செல்வதை மட்டுமே வழக்கமாக வைத்துள்ளார். அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் செய்யவேண்டிய பணிகள் ஏராளமாக இருக்கின்றன. ஆனால், அங்கெல்லாம் அவர் போவது கிடையாது. கடந்த சனிக்கிழமை நடந்தது, தற்செயலான விபத்து என்று வருத்தம் தெரிவித்தால் மட்டும் போதாது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு நிவாரணத் தொகை அளிக்க வேண்டும். மனித உயிரின் மதிப்பு மருத்துவம் படித்த அவருக்குத் தெரியாதா?'' என்றார் காட்டமாக.
மரணம் அடைந்த பாஷாவின் வீடு சீனிவாச நகரில் உள்ளது. அங்கே சென்று, அவரது சகோதரர் சையது இப்ராஹீமைச் சந்தித்தோம்.
''எனது தம்பிக்குத் திருமணமாகி ஏழு வருடங்கள் ஆகின்றன. எங்களது பெரியப்பா வீட்டுத் திருமணம் தற்போது நடந்தது. அதற்காக வந்த எனது உறவினர்கள், இப்படி எனது தம்பியின் இறுதிச் சடங்கிலும் கலந்துகொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்பதை நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை! பாஷாவுக்கு மூன்று குழந் தைகள். வாடகை வீடுதான். அந்த கான்ட்ராக்ட்டில் மாதம்
3,500தான் சம்பளம் வாங்கினான். இப்போது அவரது மனைவியின் எதிர்காலமே கேள்விக்குறி ஆகிவிட்டது. சம்பவம் நடந்தபோது அனைத்துப் பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அந்த இடத்தில் மட்டும் அமைச்சரின் வருகைக்காக மின்சாரம் கொடுக்கப்பட்டதால்தானே இப்படி ஒரு உயிர் அநியாயமாகப் போய் விட்டது! என் தம்பியோடு வேலை செய்த சசிகுமாரும் கஷ்டத்தில் வாழ்பவர்தான். அவருக்கும் ஒரு பெண், இரண்டு ஆண் பிள்ளைகள் இருக்கிறார்கள். எங்களால் அழத்தான் முடியும். அதிகார வர்க்கத்திடம் சென்று மோதவா முடியும். பாஷா, சசிகுமார் குடும்பத்துக்கு அரசுதான் உதவ வேண்டும்!'' என்றார் உருக்கமும் வருத்தமுமாக.
அமைச்சர் விஜய்யிடம் இந்த சம்பவம் பற்றிக் கேட்டோம். ''இந்தச் சம்பவத்துக்கும் எனக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. நான் அந்த விபத்து நடந்த நேரத்தில் அந்த ஆஸ்பத்திரியில் இல்லை. இருந்தாலும் இது பற்றி முழுமையாக விசாரிக்கச் சொல்லி இருக்கிறேன். அரசு மருத்துவமனையை நவீனப்படுத்தும் நோக்கில் ஜெனரேட்டர் வசதியை தொடங்கி வைக்க வந்தபோது இந்தத் துயரச் சம்பவம் நடந்ததில் எனக்கும் வருத்தம்தான்...'' என்றார் சுருக்கமாக.
ஊர் முழுவதும் மின்சாரம் இல்லாத சூழலில், அரசு மருத்துவமனைக்கு மட்டும் மின்சாரம் தரச் சொன்னது யார்? எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் மின்சாரம் தர அனுமதித்தது யார்? - உடனே விசாரணை செய்து தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டால்தான், இனிமேல் இதுபோன்ற தவறுகள் நிகழாமல் இருக்கும்.
'தமிழகத்தில் இருக்கும் வழிப்பறிக் கொள் ளையர்கள் எல்லாம் ஆந்திராவுக்கு ஓடி விட்டார்கள்!’- அ.தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்ததும் முதல்வர் ஜெயலலிதா உதிர்த்த வார்த்தைகள் இவை. அப்படி என்றால் மணப்பாறை ஆந்திர மாநிலத்தில் இருக்கிறதா? என்று சந்தேகப்படுகிறார்கள் மக்கள். காரணம்... கடந்த சில தினங்களாக மணப்பாறை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து நடைபெறும் கொள்ளை சம்பவங்கள்தான்!
''ஆகஸ்ட் 25-ம் தேதி மஞ்சம்பட்டியைச் சேர்ந்த தலைமை ஆசிரியர் சேவியர் மார்ட்டின் வேலைக்குப் போயிட்டு சாயந்திரம் வீட்டுக்கு வர்றதுக்குள்ள, வீட்டுல இருந்த பத்து பவுன் நகையை அடிச்சுட்டுப் போயிட்டானுங்க. 27-ம் தேதி ராத்திரி ஆஞ்சநேயா நகர் ராமதாஸ் வீட்டுல கொள்ளை. அவர் நைட் ஷிப்ட் வேலைக்கும், அவர் மனைவி சென்னைக்கும் போயிருந்தாங்க. அப்ப வீட்டுக் குள்ள புகுந்து ஆறரை பவுன் நகையை எடுத்துட்டுப் போயிட்டானுங்க. அடுத்து வடக்கிப்பட்டி மகேஸ்வரன் வீட்டுல ஆட்கள் இருக்கும்போதே, பூட்டாம இருந்த கேட் வழியே உள்ளே நுழைஞ்சு, தூக்கத்துல இருந்தவங்க கழுத்துல போட்டிருந்த மூன்றரை பவுன் செயினை அறுத் துட்டுப் போயிட்டாங்க. சத்தம் கேட்டு எழுந்த மகேஸ்வரனுக்கு கட்டையால அடி. இத்தனைக்கும் ஆஞ்சநேயா நகர்ல கொள்ளை சம்பவம் நடந்த தகவல் கிடைச்சு, போலீஸ்காரங்க வடக்கிப்பட்டிக்கு ரவுண்ட்ஸ் வந்துட்டுப் போன பிறகுதான் இந்த சம்பவம்.
31-ம் தேதி மணப்பாறையில இருந்து குளித்தலைக்குப் போன முத்துலட்சுமிங்கிற வயசான பாட்டி, ஆண்டவர் கோயில் ஸ்டாப்ல இறங்கிய போது கழுத்தில் கிடந்த ஒன்பதரை பவுன் நகையைக் காணலை. யாரோ அறுத்துட்டாங்க. செப்டம்பர் 1-ம் தேதி இரவு, பன்னப்பட்டி வி.ஏ.ஓ. மனோகரன் வீட்டுல கொள்ளை. வீட்டுல இருந்த ஆட்களை மிரட்டி 10 பவுன் செயினை பறிச்சுட்டுப் போயிட்டானுங்க. மஞ்சம்பட்டி சந்தியாகு வீட்டுல, தனியா இருந்த அவரை கட்டிப்போட்டுட்டு
25 ஆயிரத்தைக் கொள்ளையடிச்சுட்டாங்க. அடுத்து ம.தி.மு.க. புறநகர் மாவட்ட துணைச் செயலாளரான 'தாமஸ்’ தங்கமணி வீட்டு கேட்டை உடைச்சுட்டு, உள்ளே நுழையப் பார்த்தாங்க. தற்செயலா அவங்க பார்த்து சத்தம் போட்டதால... திருட்டுப் பசங்க ஓடிட்டாங்க...'' என்று மணப்பாறைவாசிகள்அது வரை நடந்ததைப் பட்டிய லிட்டார்கள்.
பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான சந்தியாகு வீட்டுக்குச் சென்றோம். ''எல்லாரும் அன்னிக்கு வேளாங்கண்ணி மாதா கோயிலுக்குப் போயிட் டாங்க. நான் மட்டும் தனியா இருந்தேன். நாய் குரைக்குற சத்தம் கேட்டு எழுந்து பார்த்தா... டக் குன்னு யாரோ என் கண்ணுக்கு நேரா டார்ச் லைட்டை அடிச்சாங்க. கண்ணு தெரியாம தடுமாறினப்ப, ரெண்டு பேரு என் மேல விழுந்து கட்டிப் புரண்டானுங்க. நானும் எவ்வளவோ போராடிப் பார்த்தேன். முடியலை. என்னைக் கட்டிப் போட்டுட்டு, வீட்டையெல்லாம் புரட்டி எடுத்துட்டானுங்க. எதுவும் கிடைக்கலை. பணம் நகையெல்லாம் எங்கே வெச்சிருக்கேன்னு கேட்டு அடிச்சானுங்க. 'எங்ககிட்ட ஒண்ணும் இல்லைங்க’ன்னு சொல்லவும், 'ஏண்டா... உன் மருமகன் வெளிநாட்டுல வேலை செய்யுறான். மருமக நர்ஸா வேலை பார்க்குறா. வெளியில போகும்போது எல்லாரும் செயின், நகைன்னு போட்டுட்டுப் போறாங்க. கேட்டா ஒண்ணும் இல்லைன்னா சொல்ற?’ன்னு கேட்டுத் திரும்பவும் அடிச்சானுங்க. கடைசியில மாதா படத்துக்குப் பின்னாடி வெச்சிருந்த 25 ஆயிரம் பணத்தை எடுத்துட்டுப் போயிட் டானுங்க...'' என்று விவரித்தவர், ''வந்தது மொத்தம் மூணு பேர். அவனுங்க தொடர்ந்து ஆட்களையும், வீடுகளையும் கண்காணிச்சுத்தான் கொள்ளையடிக்க வர்றானுங்க. இல்லைன்னா என் மருமகன் வெளிநாட்டுல இருக்குற விஷயமெல்லாம் அவங்களுக்கு எப்படித் தெரியும்? அதுவும் கரெக்டா யாரும் வீட்டுல இல்லாத சமயம் பார்த்து வந்திருக்கானுங்க...'' என்று பதறினார்.
ம.தி.மு.க. பிரமுகர் தாமஸ் தங்கமணி வீட்டுக்குச் சென்றோம். அவர் மனைவி ஜோஸ்லின் மேரி, ''எங்க வீடு தனியா இருக்குது. வீட்டுக்கு வெளி யில எதையோ உடைக்கிற சத்தம் கேட்டு ஜன்னல் வழியா எட்டிப் பார்த்தா... மூணு பேரு கதவை உடைச்சுகிட்டு இருக்கானுங்க. உடனே அவரு, 'போலீ ஸுக்குப் போன் போடு. டேய் யாருடா நீங்க?’ன்னு சத்தம் போட்டாரு. மூணு பேரும் சட்டை எதுவும் போட்டிருக்கல. வெள்ளைக் கலர்ல டவுசர் மட்டும் போட்டிருந்தானுங்க. நாங்க சத்தம் போடவும், குனிஞ்சுகிட்டே சுவர் ஏறிக் குதிச்சுட்டானுங்க. ஆனா, ரொம்ப நேரமா அங்கேயே நின்னுட்டு இருந் தானுங்க. ஒரு வேளை நாங்க வெளியே வருவோம். தாக்கிட்டு கொள்ளையடிக்கலாம்னு நினைச்சானுங்களோ என்னவோ?'' என்றவர், ''இது வரைக்கும் நாலு தடவை எங்க வீட்டுல கொள்ளையடிக்க முயற்சி நடந்திருக்கு. முதல் தடவை மட்டும் ஜன்னலோரமா படுத்திருந்தப்ப மூன்றரை பவுன் தாலி செயினை அறுத்துட்டு ஓடிட்டானுங்க. மத்த தடவை எல்லாம் தப்பிச்சுட்டோம். இருந்தாலும் எப்ப கொள்ளைக்காரனுங்க திரும்பவும் வருவானுங்களோன்னு பயமா இருக்குது!''என்றார்.
மணப்பாறை இன்ஸ்பெக்டரான விஜய காண்டீபனிடம் பேசினோம். ''பெரும்பாலும் ஊரை விட்டு ஒதுக்குப்புறமாக தனியாக இருக்கும் வீடுகளிலோ, வீடுகளில் ஆட்கள் தனியாக இருக்கும்போதோதான் கொள்ளை சம்பவங்கள் நடக்கின்றன. அதனால் இரவு நேரங்களில் போலீஸ் ரோந்துகளை அதிகப்படுத்தி இருக்கிறோம். பழைய சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் பட்டியலை வைத்து ஆராய்ந்து வருகிறோம். பொதுமக்கள் பாதுகாப்புடன் இருப்பது எப்படி என்று நோட்டீஸ்களும் விநியோகித்து வருகிறோம். விரைவில் குற்றவாளிகளைப் பிடித்து விடுவோம்!'' என்று நம்பிக்கையுடன் சொன்னார்.
சீக்கிரம் செய்யுங்க சார். மக்கள் கதிகலங்கி போயிருக் காங்க!
நில அபகரிப்பு வழக்கில் திடீரென கைதாகி, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் நேரு. இந்தக் கைது நடவடிக்கையால், திட்ட மிட்டபடி நிச்சயதார்த்தம் நடக்குமா... நடக்காதா என்று கட்சிக்காரர்கள், குடும்பத்தார் மத்தியில் பெரும் குழப்பம் இருந்தது. ஆனால், 'நான் உள்ளே இருந்தாலும், திட்டமிட்டப்படி நிச்சயதார்த்தம் நடந்தே தீரவேண்டும்’ என நேரு கறாராக சொல்லி விட்டார்.
அதனால் கடலூர் மாவட்டத்தில் கட்சிக்காரர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கும் பொறுப்பு, முன்னாள் அமைச் சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் மூலம் சுமார் 100 பேர்களுக்கும் குறைவாகத்தான் அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டதாம். மேலும் எம்.ஆர்.கே-வின் எதிர்த் தரப்புகளுக்கு அழைப்பு வைக்கப்படவே இல்லையாம். 'இதில் கூடவா பாகுபாடு பார்ப்பது?’ என்று கட்சிக்காரர்கள் சிலர் குமுறி புகார் எழுப்ப... 'பிரச்னை பண்ணவேண்டாம்’ என்று சமாதானம் நடந்ததாம்.
'மகனின் நிச்சயதார்த்தத்துக்கு நேரு கலந்துகொள்ள வேண்டும்’ என வழக்கறிஞர் கள், திருச்சி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி கோகுல்தாஸ், நேருவுக்கு இடைக்கால பெயில் வழங்கி, 'செப்டம்பர் 1-ம் தேதி, மாலை 6 மணிக்குச் சென்றுவிட்டு 2-ம் தேதி மாலை 6 மணிக்குள் சிறைக்கு வந்துவிட வேண்டும்’ என உத்தரவிட்டார். குறிஞ்சிப்பாடியில் நேரு தங்குவதற்காக, ஒரு வீட்டை தயார் செய்து வைத்திருந்தார் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். ஆனால் நேரு அதை மறுத்துவிட்டு, 'சொந்த பந்தங்களுடனும், கட்சிக்காரர்களுடனும் இரவு தங்க விரும்பு கிறேன்’ என சொல்லிவிட்டு கல்யாண மண்டபத்திலேயே போலீஸ் பாதுகாப்புடன் படுத்துக்கொண்டார்.
செப்டம்பர் 2-ம் தேதி காலை 9.00 மணி உற்சாகமாகத் தொடங்கியது நிச்சயதார்த்த விழா. அழைப்பை எதிர்பார்க்காமல் கட்சிக் காரர்கள் உணர்வுபூர்வமாகத் திரள, திருச்சி மாவட்டத்தில் இருந்து வந்த நேருவின் சொந்தக்காரர்களும் குவிந்தனர். முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா, முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கு.பிச்சாண்டி மற்றும் மாஜி எம்.எல்.ஏ-க்கள் திரண்டு வந்தனர். எங்கெங்கும் கரை வேட்டி கள் தென்பட்டதால், திருமண நிச்சய தார்த்தம்போல் இல்லாமல், தி.மு.க. மாநாடு போலத்தான் இருந்தது.
மண்டபத்தின் பின் பக்கம் பிரமாண்ட பந்தல் அமைக்கப் பட்டு காலையும், மதியமும் தடபுடலாக விருந்து பரிமாறப் பட்டது. ஸ்டாலின் மனைவி துர்கா மற்றும் முன்னாள் அமைச்சர்கள் ரசித்து விருந்தை சுவைக்க, நேரு மட்டும் தன் இலை யில் உணவை சாப்பிடாமல் யோசிக்க... 'எதுக்கு கவலைப்படுறீங்க. எல்லாத்தையும் பார்த்துக் கொள்ளலாம். தலைவர் இருக்கிறார். தைரியமாக சாப்பிடுங்கள்...’ என்று உடன் இருந்த தொண்டர்கள் வற்புறுத்த ஒருவழியாக சாப்பிட்டு முடித்தார் நேரு!
பந்தலில் உட்கார்ந்திருந்த நேருவைப் பார்த்தவர்கள் எல்லாம் நலம் விசாரித்தார்கள். ஒரு கட்டத்தில் பக்கத்தில் இருந்த எம்.ஆர்.கே-விடம், சிறையில் படும் துன்பங்களை நேரு விவரித்துச்சொல்ல... அவரும், உடன் இருந்த நிர்வாகிகளும் நேருவுக்கு தைரியம் கொடுத்தனர்.
நேரு தன் மகன் அருணைக் கூப்பிட்டு, 'எல்லாத்தையும் பார்த்துக்கோ...’ என்று அடிக்கடி சொன்னார். நேரம் ஆக ஆக... அவர் குரலில் தடுமாற்றம்; முகமும் மாறிக்கொண்டே இருந்தது. 'அண்ணன் போஸ்டிங்கில் இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி... போலீஸ் பாதுகாப்போடுதான் எல்லாம் நடக்கிறது. இந்த விழாவைத் தடுக்கத்தான் ஜெயலலிதா ஒரு பொய் வழக்கை போட்டு அண்ணனை சிறையில் தள்ளினாங்க. அதான் அவர் மனசு உடைஞ்சு போயிட்டார், ஆனாலும் விழாவை சிறப்பா நடத்தி கலக்கிட்டார்...’ என புளகாங்கிதம் அடைந்தார்கள், அவரது தொண்டர்கள்.
மாலை 4 மணி ஆனதும், போலீஸ்காரர்கள், 'டைம் ஆகிடுச்சு சார். கிளம்பலாம்’ என்று நேருவிடம் சொன்னதும்... நேருவுக்கும், சொந்த பந்தங்களுக்கும் கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டது. அனைவரையும் சமாதானப் படுத்திவிட்டு, கையை அசைத்தபடியே போலீஸ் வேனில் ஏறி உட்கார்ந்த நேரு, 'யாரும் என் பின்னாடி வரவேண்டாம்...’ என்று தொண்டர்களுக்கு அன்புக் கட்டளை போட்டார். ஆனாலும், சிறை வரை சென்று வழியனுப்பிவிட்டுத்தான் வந்தார் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!
கடந்த 2-ம் தேதி சேலத்தில், 'சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு’ என்ற தலைப்பில் தி.மு.க. கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், வீரபாண்டி ஆறுமுகம் கோவை சிறையில் இருப்பதால் கலந்துகொள்ள முடியவில்லை! ஆனாலும், இந்த சந்தர்ப்பத்தை பலமாகப் பயன்படுத்தி, 'வீரபாண்டி ஆறுமுகம் இல்லாமலும் அசத்திக் காட்டுவோம்!’ என்கிறரீதியில், 'ஏ டு இஸட்’ ஒவ்வொரு பணியையும் பார்த்துப் பார்த்துச் செய்து, ஸ்டாலினுக்கு கேடயமும் வெற்றிவாளும் கொடுத்து வழி அனுப்பி இருக்கிறார், பனமரத்துப்பட்டி ராஜேந்திரன்!
சேலம் கோட்டை மைதானத்தில் மாலை 7 மணிக்கு தொடங்கியது கூட்டம். முதலில் மைக் பிடித்த மாநகரச் செயலாளர் கலையமுதன், ''தற்போது தமிழ்நாட்டில் காட்டுத் தர்பார் நடக்கிறது. தொடர்ந்து தி.மு.க. தலைவர்களைக் கைது செய்து வருகின்றனர். ஆனால், இதற்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம்...'' என்று அர்ச்சனையை ஆரம்பித்து வைத்தார்.
அடுத்துப் பேசிய வீரபாண்டி ராஜா, '' தி.மு.க-வை விட்டு எம்.ஜி.ஆர். போனபோது கலங்காமல் கட்சியைக் காத்தவர் கலைஞர். ஜன நாயகத்துக்காகப் பாடுபடுகிற கட்சி இது. தொண்டர்களின் உயிர் மூச்சு இருக்கும் வரை, எவனாலும் தி.மு.க-வை அழிக்க முடியாது!'' என்றார்.
பனமரத்துப்பட்டி ராஜேந்திரன், ''உழைப்பால், தியாகத்தால் வளர்ந்த கட்சிதான் தி.மு.க. ஜெய லலிதா முதலமைச்சராக இருந்தபோது சுனாமி ஏற்பட்டது. அதற்காக நிதியைத் திரட்டி கோட்டைக்குப் போய் கொடுத்து ஜனநாயக மரபையும் பண்பையும் காத்தார், நமது தளபதி. அதேபோல் 2006-11 தி.மு.க. ஆட்சியில் சட்டப் பேரவை கூட்டங்களில் அ.தி.மு.க. வெளிநடப்பு செய்தபோது ஓ.பி.எஸ்-ஸை சந்தித்து, சட்டப் பேரவைக் கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்து, ஜனநாயகத்தின் மாண்பைக் காத்தார், நமது தளபதி. அந்தத் தளபதியின் வழிகாட்டல்படி நாங்கள் என்றும் வழி நடப்போம்...'' என்று பேசிய அவர், மறந்தும்கூட வீரபாண்டியாரின் பெயரை உச்சரிக்கவில்லை!
செல்வகணபதி எம்.பி. பேசும்போது, ''பச்ச கலரு ஜிங்குச்சா, சிவப்பு கலரு ஜிங்குச்சாங்கற மாதிரி சட்ட சபையில் ஜனநாயகம் ஜிங்குச்சா போட்டுக்கிட்டு இருக்கு. சட்டசபையில் ஒவ்வொருத்தரும் 'அம்மா, அம்மா’ன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க. 'அம்மா, அம்மா’ன்னு சொல்லத்தான் ஆடு, மாடு தராய்ங்க போல!'' என்று காமெடியாகப் பேசினார்.
இறுதியாக மைக் பிடித்தார் ஸ்டாலின். ''இந்தக் கூட்டத்துக்கு எப்படியும் வீரபாண்டியார் வந்து விடுவார் என நேற்று வரை நினைத்தோம். ஜாமீன் கிடைத்தும், தொடர்ந்து அரசு விடுமுறை என்பதால், இந்த நிகழ்ச்சிக்கு அவர் வரமுடியவில்லை. கோவை சிறையில் இருந்தாலும், இந்தக் கூட்டத்தைப் பற்றித்தான் சிந்தித்துக்கொண்டு இருப்பார். நான் சேலத்துக்கு எத்தனையோ நிகழ்ச்சிகளுக்கு வந்திருக்கிறேன். அரசு விழாவுக்கு... கொடியேற்று விழாவுக்கு... திருமண நிகழ்ச்சிகளுக்கு என்று எல்லாம் வந்திருக்கிறேன். ஆனால், சேலத்தில் வீரபாண்டியார் இல்லாமல் எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற் றது கிடையாது. இதைப் பேசும்போது, நீங்கள் ஆர்ப்பரிப்பதைப் பார்த்து உங்கள் உள்ளங்களில் எப்படி வீரபாண்டியார் இருக்கிறார் என்பதை உணர்கிறேன்!
மக்களால் மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டதுதான் ஜனநாயகம். ஆனால், ஜெயலலிதாவுக்காக ஜெய லலிதாவே ஏற்படுத்தியதுதான் இன்றைய தமிழக அரசின் ஜனநாயகம். சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் என்று ஒருவர் இருக்கிறாரா என்பதே தெரியவில்லை. சட்டப் பேரவை வெளிநடப்பு என்பது ஜனநாயக மரபு. நாங்கள் வெளிநடப்பு செய்ய முடியாதவாறு மூலைக்கு ஒருவரை உட்கார வைத்து விடுகிறார்கள். ஒரே வரிசையில் இடம் கேட்டால்கூட தரவில்லை. சட்டசபைக் கேள்வி நேரத்தில்கூட கலைஞரைத் தரக்குறைவாகப் பேசுகிறார்கள்.
நாங்கள் எதற்கும் அஞ்ச மாட்டோம். வீரபாண்டி யாரை கூப்பிட்டு, 'எத்தனை முறை சிறை சென்று இருக்கிறீர்கள்? உங்கள் மீது எத்தனை கேஸ் இருக்கிறது?’ என்று கேட்டுப் பாருங்கள், தெரியும்! இதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். நாங்கள் கொலை, கொள்ளை எல்லாம் செய்துவிட்டுச் சிறைக்குச் செல்லவில்லை. வீரபாண்டியார் மேல் கொடுத்தகேஸுக்கு முன்ஜாமீன் வாங்கிக் கொண்டு கோர்ட்டின் உத்தரவுப்படி விசாரணைக்கு ஒத்துழைத்தோம்! ஓடிப்போய் ஒளிந்து கொண் டாரா அவர்? விசாரணையை முடித்து வெளியே வரும்போது, 'இன்னொரு வழக்கில் உங்கள் மீது எஃப்.ஐ.ஆர்.’ என்று சொல்லி கைது செய்கி றார்கள். இது எந்த விதத்தில் நியாயம்? நாங்கள் மிசாவில் பார்க்காததா? இந்த பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது. அ.தி.மு.க-வினர் மீது ஆதாரங்களோடு புகார் செய்தால்கூட, காவல் துறை விசாரிப்பதில்லை. சேலத்தில் எம்.எல்.ஏ. வெங்கடாசலம் மிரட்டியதாக புகார் இருக்கிறது. ஜோலார்பேட்டையில் எம்.எல்.ஏ. வீரமணி மிரட்டியதாக புகார் கொடுத்திருக்கிறார்கள். அமைச்சர் சம்பத், எம்.எல்.ஏ. ராஜேந்திரன், சிவசுப்ரமணியன் உள்பட பல அ.தி.மு.க-வினர் மீது புகார் இருந்தும், இதுவரை போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவே இல்லை..!'' என்று பொங்கினார்.
'வீரபாண்டியார் இல்லாமலே அசத்திட்டாங்கப்பா...’ என்றபடி கலைந்தனர், உடன்பிறப்புகள்.
பணத் தகராறில் லாட்ஜ் உரிமையாளர் ஒருவர் மகனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த பிரமுகர் துப்பாக்கியால் சுட முயன்ற சம்பவம் ஈரோடு நகரை படபடக்க வைத்துள்ளது.
ஈரோடு நகரின் மையப்பகுதியில் அபிராமி தியேட்டருக்கு எதிரே லாட்ஜ் நடத்திவருகிறார் குருசாமி. இவர், பக்கத்துத் தெருவில் லாட்ஜ் நடத்தும் வைரவேல் என்பவரிடம், லாட்ஜை பவர் பத்திரத்தில் எழுதிக் கொடுத்து கடன் வாங்கி இருக்கிறார். இந்த கடனுக்கு வட்டி கொடுக்கப் போன குருசாமியிடம், 'பவர் பத்திரத்தில் எழுதிக் கொடுத்தபடி லாட்ஜை என் பெயருக்கு கிரயம் செய்து கொடுத்துவிடு’ என்று கேட்டுள்ளார், வைரவேல். இதனால் இருவருக்கும் இடையே லடாய் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த 2-ம் தேதி காலை குருசாமி லாட்ஜ்க்கு வந்திருக்கிறார் வைரவேல். அப்போது குருசாமியின் மகன் பிரகாஷ§ம் உடன் இருந் திருக்கிறார். கோபத்துடன் வந்த வைரவேல், 'கடன் வாங்கியதற்காக உடனே லாட்ஜை காலி செய்’ என்று தகராறு செய்யவே பிரச்னை முற்றியிருக்கிறது. திடீரென, வைரவேல் துப்பாக்கியை எடுத்து பிரகாஷின் நெற்றிப் பொட்டில் வைத்து மிரட்டி இருக்கிறார். பிரகாஷ் சுதாரித்துக் கொண்டு கையை தட்டி விட்டதால், லாட்ஜின் மேற்கூரையில் குண்டு பட்டிருக்கிறது. சம்பவம் கேள்விப்பட்டு ஆட்கள் திரண்டுவிடவே, வைரவேல் உடனடியாக பேலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
லாட்ஜ் உரிமையாளர் குருசாமியிடம் பேசியபோது, '' லாட்ஜை புதுப்பித்துக் கட்டுவதற்காக வங்கியில் லோன் வாங்கி இருந்தேன். இடையில் என் உடல்நிலை சரியில்லாமல் போனதால் பணத்தை திருப்பிக் கட்ட முடியவில்லை. இதனால் வங்கியில் இருந்து எனக்கு நெருக்கடி வந்தது. அப்போது என்ன செய்வது என்று தெரியாத நிலையில், வட்டிக்குப் பணம் கொடுக்கும் வைரவேலிடம் கடன் வாங்கினேன். அவரிடம்
1 கோடி கேட்டேன். அவரும் தருவதாக ஒப்புக்கொண்டு பவர் பத்திரத்தில் எழுதி வாங்கிக்கொண்டார். ஆனால் இது வரைக்கும் எனக்கு
5 லட்சம் மட்டும்தான் கொடுத்து இருக்கிறார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருப்பதை சாதக மாக்கிக் கொண்டு... மீதி பணத்தைத் தராமல் பத்துப் பதினஞ்சு அடியாட்களைக் கூட்டிவந்து லாட்ஜை காலி பண்ணச் சொல்லி மிரட்டினார்.
'பிரகாஷ் இன்டர்நேஷனல் லாட்ஜ்’ங்கிற போர்டை கழட்டிட்டு உள்ள இருந்த என் அப்பா படத்தையும் தூக்கிட்டுப் போயிட்டார். அவரை கைது பண்ணிட்டுப் போனதில் இருந்து, 'கேஸை வாபஸ் வாங்கலைன்னா... நீ முடிஞ்சடா’ன்னு வெவ்வேறு காயின் பாக்ஸ் போன்களில் இருந்து மிரட்டுறாங்க. எந்த நேரமும் அடியாட்களை வைத்துக்கொண்டு கட்டப்பஞ்சாயத்து செய்யும் இவரால் என் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். என் மகன் மயிரிழையில்தான் உயிர் பிழைச் சான்...'' என்று பதறினார். வைரவேல் மற்றும் அவரது கூட்டாளிகள் சிலரும் சிறையில் இருக்கும் நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளர் விநாயகமூர்த்தி, ''குருசாமி கடுமையான கடன் பிரச்னையில் சிக்கி பலரிடமும் கடன் வாங்கி இருக்கிறார். பல மாதங்களாக வட்டி கட்டாத நிலையில், அதைக் கேட்கப் போன சமயத்தில்தான் பிரச்னை செய்திருக்கிறார்கள். பாதுகாப்புக்காக அவர் கொண்டுபோன துப்பாக்கியால், கொலை செய்ய முயற்சி செய்ததாகச் சொல்லிவிட்டார்கள்!'' என்றார்.
காவல் துறை தீரவிசாரித்து நடவடிக்கை எடுக்கட்டும்!
சினிமாவை வைத்து அவ்வப்போது ஏதாவது பரபரப்பு கிளம்புவது உண்டு. சமீபத்திய விவகாரம், 'புலிவேசம்’ படம் சம்பந்தப்பட்டது. 'எங்களை இழிவுபடுத்துவது போல காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அதனால் அந்தக் காட்சிகளை உடனே நீக்க வேண்டும். அதுமட்டுமின்றி எங்களை இழிவுபடுத்தி யதற்காக பகிரங்க மன்னிப்பும் கேட்க வேண்டும்’ என்று கிளம்பி இருக்கிறார்கள், சேலம் பகுதியில் வசிக்கும் செட்டியார் இன மக்கள்.
இதுகுறித்து, ஆரிய வைஸ்ய முன்னேற்றப் பேரவை மாநிலத் தலைவரும், அனைத்து செட்டியார் நல முன்னேற்றப் பேரவையின் சேலம் மாவட்டத் தலைவருமான அரவிந்தன் நம்மிடம் பேசினார். ''யார் வம்புக்கும் போகாமல் அமைதியான முறையில் வியாபாரம் செய்து மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகிறோம். தான் உண்டு தங்கள் தொழில் உண்டு என்று வாழ்ந்து கொண்டிருக்கும் எங்களைச் சிலர் சீண்டிப் பார்க்கிறார்கள். சமீபத்தில் வெளியாகி இருக்கும் 'புலிவேசம்’ படத்தில் எங்கள் இன மக்களை மிகவும் கேவலமாகச் சித்திரித்து இருக்கின்றனர். அந்தப் படத்தில் வில்லனாக நடிக்கும் மன்சூர் அலிகான், 'பெண்களை கிட்னாப் செய்து செட்டியாருக்கு அனுப்பி வைடா’ என்று கூறுகிறார். மேலும், பெண்களை கிட்னாப் செய்யும் தொழிலுக்கு மீடியேட்டராக செட்டியார் என்று ஒருவரைக் காட்டுகிறார் கள். நாங்கள் பெண்களை தெய்வ மாக மதிக்கக் கூடியவர்கள். குறிப்பிட்டு எங்கள் இனத்தைச் சேர்ந்தவர் பெண்களைக் கடத்துவது போலக் காட்டுவது, எங்களுக்கு மிகுந்த மனவேதனை அளிப்பதாக இருக்கிறது. இப்படி காட்சிகளை அமைத்ததற்காக, இயக்குநர் பி.வாசு மற்றும் நடிகர் மன்சூர் அலிகான் இருவரும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால், தமிழகம் முழுவதும் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்!'' என்றார் காட்டமாக.
இந்த விவகாரம் குறித்து இயக்குநர் பி.வாசுவிடம் பேசினோம். ''திட்டமிட்டு அப்படிப்பட்ட காட்சிகளை நாங்கள் அமைக்கவும் இல்லை. வசனம் பேசவும் இல்லை. அந்தக் காட்சிகளில் ரைமிங் வரவேண்டும் என்பதற்காக செட்டியார் என்று மன்சூர் அலிகான் பேசினார். உண்மையில் யாரையும் புண்படுத்தும் நோக்கம் எங்களுக்குக் கிடையாது. இந்த வசனத்துக்காக, அவர்கள் வருத்தப்படுகிறார்கள் என்றால், அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அந்தக் காட்சிகளை நீக்குவது குறித்து, தயாரிப்பாளரிடம் பேசி விரைவில் முடிவு எடுக்கிறேன்...'' என்றார்.
இதுபற்றி, நடிகர் மன்சூர் அலிகானிடம் கேட்டோம். ''நான் அந்தப் படத்தில் நடித்து ஒன்றரை ஆண்டுகள் ஆகி விட்டது. என்ன வசனம் பேசினேன் என்று எனக்கு ஞாபகம் இல்லை...'' என்று சொன்னார்.
எப்படியோ, விவகாரம் சிக்கல் ஆகாமல் முடிந்தால் சரி.
'புலி அடித்துத் தப்பியவர்களும் உண்டு; புல் தடுக்கிச் சிக்கியவர்களும் உண்டு’ என்பார்களே... அதுபோல, படா படா வழக்குகளில் எல்லாம் எஸ்கேப் ஆன அழகிரியை, சோட்டா வழக்கில் வசமாகச் சிக்க வைத்துள்ளார்கள்!
சமீபத்திய சட்டமன்றத் தேர்தலின்போது, மேலூர் அருகில் உள்ள அம்பலக்காரன்பட்டி வல்லடிகாரர் கோயிலுக்கு அழகிரி தன் பரிவாரங்களுடன் வாக்கு சேகரிக்கச் சென்றார். அதைப் படம் பிடிக்கச் சென்ற மேலூர் தாசில்தார் காளிமுத்துவை அழகிரி ஆட்கள் தாக்க... தாசில்தார் புகாரின் பேரில் அழகிரி உள்ளிட்டவர்கள் மீது வழக்கு போடப்பட்டது. இதைப் பொய் வழக்கு ஆக்குவதற்காக, 'தன்னை யாரும் தாக்கவில்லை’ என்று காளிமுத்துவை பல்டி அடிக்க வைத்தார்கள். ஆனால், மேலூர் இன்ஸ்பெக்டர் மாடசாமியோ, ''தாசில்தார் தாக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன...'' என்று உறுதியாக நின்றதால், அவருக்கே துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு போடும் அளவுக்கு நிலைமை சீரியஸானது.
இந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி அழகிரி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், ''சம்பவம் நடந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதால், போலீஸார் இந்த வழக்கைத் தொடர்ந்து விசாரிக் கலாம்...'' என்றது உயர் நீதிமன்றம். இதை அடுத்து, சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ மூலம், மேலும் 17 நபர்களை அடையாளம் கண்டுபிடித்து, அவர்களையும் குற்றவாளிகளாகச் சேர்த்தது போலீஸ். முதல் குற்றவாளியான அழகிரி மத்திய அமைச்சராக இருப்பதால், அவர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வதற்கு மக்களவை சபாநாயகரிடம் அனுமதி வாங்க வேண்டும் என்று சொல்லப்பட்டதால், கடந்த ஜூலை 9-ம் தேதி அதற்கான கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பினார்கள். இந்த நிலையில்தான், ஆகஸ்ட் 24-ல் அதிரடியாக அழகிரி உள்ளிட்டவர்கள் மீது மேலூர் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
''அழகிரி மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வதற்கு மக்களவை சபாநாயகரின் அனுமதி கிடைத்துவிட்டதா?'' என்று போலீஸ் வட்டாரத்தில் கேட்டோம். ''அனுமதி கேட்டு கடிதம் அனுப்பி 45 நாட்களுக்கு மேலாகியும் டெல்லியில் இருந்து எந்த பதிலும் இல்லை. ஆகவே, சட்ட வல்லுநர்கள் மற்றும் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஆலோசனை செய்தபோது ஒரு தெளிவு கிடைத்தது. அதாவது மத்திய அமைச்சராக இருப்பவர், 'அரசு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்றபோது, பிரச்னை ஏற்பட்டிருந்தால் மட்டுமே சபாநாயகரின் அனுமதி வாங்க வேண்டும்!’ என்று சி.ஆர்.பி.சி. செக்ஷன் 197-ல் தெளிவாகச் சொல்லப்பட்டு உள்ளது. இது, தேர்தல் விவகாரம் என்பதால் அனுமதி தேவை இல்லை. அதனால்தான், அழகிரி மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது!'' என்கிறது போலீஸ்.
'தேர்தல் ஆணைய உத்தரவை மீறி வல்லடிக்காரர் கோயிலுக்கு 1.4.11-ல் முதலாவது எதிரி மு.க.அழகிரி தலைமையில் வாக்கு சேகரிக்கச் சென்ற 21 பேர், அங்கு இருந்த பொதுமக்களிடம் உதயசூரியனுக்கு வாக்கு அளிக்குமாறு கேட்டதை, முதலாவது சாட்சியான தாசில்தார் காளிமுத்து வீடியோவில் படம் எடுக்க உத்தரவிட்டார். அப்போது, முதலாவது எதிரியானவர் முதலாவது சாட்சியைப் பார்த்து, 'உன்னை யாருடா படம் எடுக்கச் சொன்னது?’ என்று ஆவேசமாகச் சத்தம் போட்டதுடன், 'அடிங்கடா இவனை!’ என்று மற்ற எதிரிகளைத் தூண்டிவிட்டார். உடனே மன்னன், ரகுபதி, திருஞானம் உள்ளிட்ட மற்ற மூன்று எதிரிகள் காளிமுத்துவைத் தாக்கி தலையிலும், இடது கை மோதிர விரலிலும் காயத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அப்போது 5 முதல் 21-ம் எதிரிகள் வரை தாசில்தார் உள்ளிட்டவர்களைத் தாக்க முற்பட்டும், வீடியோ கேம ராவைப் பறிக்க முற்பட்டும் இருக்கிறார்கள். எனவே, ஒன்று முதல் 21 வரையிலான எதிரிகள் அனைவருமே தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் புரிந்திருக்கிறார்கள்!’ - என்று போகிறது அழகிரி மீது தாக்கல் செய்யப்பட்டு இருக்கும் குற்றப் பத்திரிகை வாசகங்கள்.
சுமார் 150 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையில் 26 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். தாசில்தார் காளிமுத்து பல்டி அடித்துவிட்டாலும், அப்போது அவருடன் சென்றிருந்த துணை தாசில்தார் முத்துராமலிங்கம், லோக்கல் ஃபண்ட் ஆடிட்டர் சலீம், வருவாய் ஆய்வாளர் பூபாண்டி, வீடியோகிராபர் கண்ணன் உள்ளிட்டவர்கள் சம்பவம் நடந்ததை ஆணித்தரமாக உறுதிப்படுத்தி இருக்கிறார்களாம். 'சட்டவிரோதமாகக் கூடி கலகத்தை உருவாக்குதல், அரசு ஊழியரைப் பணி செய்யவிடாமல் தடுத்து அடித்தல், தடை உத்தரவை மீறுதல், முன்னால் இருந்துகொண்டு அடிக்கச் சொல்லி தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்தல்’ உள்ளிட்ட வலுவான செக்ஷன்களை அழகிரி மீது பாய்ச்சி இருக்கிறார்கள்.
இன்ஸ்பெக்டர் மாடசாமியிடம் பேசினோம். ''இந்த வழக்கின் தொடக்கத்தில் இருந்தே எனக்கு ஏகப்பட்ட இடையூறுகள், நெருக்கடிகள், மிரட்டல்கள் இருந்துச்சு. இப்பவும் என்னைப் பின்வாங்க வைப்பதற்காக மறைமுகமாக இடைஞ்சல்களைக் கொடுக்கிறார்கள். நான் எனது கடமையை செய்து முடித்துவிட்டேன். இனிமேல் தீர்ப்பு சொல்ல வேண்டியது நீதிமன்றம்தான்!'' என்றார்.'' எத்தனையோ பொய் வழக்குகளை எங்கள் மீது போட ஆளும் கட்சி திட்டமிட்டுள்ளது. அதில் இதுவும் ஒன்று. எல்லா வழக்குகளையும் நாங்கள் சந்திப்போம்!'' என்று அழகிரி தரப்பினர் சொல்கிறார்கள்.
அழகிரி தவிர மற்ற 17 பேருக்கும் அரெஸ்ட் வாரன்ட் பிறப்பிக்கப்பட்டதும், அனைவரும் நீதி மன்றத்தில் முன்ஜாமீன் வாங்கி இருக்கிறார்கள். இந்த வழக்கைக் காரணம் காட்டி அழகிரியின் அமைச்சர் பதவியை பறிக்க நினைக்கிறதாம், ஆளும் கட்சி!
நெல்லையில் மாநகரம், மாவட்டம் என இரண்டு அமைப்புகளாக இருந்த கட்சி நிர்வாகத்தை, கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் ஒரே அமைப்பாக மாற்றினார், ஜெயலலிதா. ஆனால், 'அதிகாரம் அனைத்தும் ஒரே இடத்தில் குவிந்து கிடக்காமல் பரவலாக்கினால்தான், உள்ளாட்சித் தேர்தலில் கட்சியினர் ஆர்வத்துடன் செயல் பட்டு வெற்றியை தேடிக் கொடுப்பார்கள்’ என மேலிடத்துக்கு கட்சியினர் தந்தி மேல் தந்தி அனுப்பினார்களாம்.
அதன் அடிப்படையில் தற்போது நெல்லை மாநகரம், நெல்லை புறநகர் வடக்கு மாவட்டம், நெல்லை புறநகர் தெற்கு மாவட்டம் என கட்சி நிர்வாகம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் வேளையில் அ.தி.மு.க-வில் புதிதாகப் பதவிகளை உருவாக்கி, பொறுப்புகளை அள்ளிக் கொடுத்துள்ளார் ஜெயலலிதா. வடக்கு மாவட்டச் செயலாளராக அமைச்சர் செந்தூர்பாண்டியனும், தெற்கு மாவட்டச் செயலாளராக பி.ஜி.ராஜேந்திரனும், நெல்லை மாநகரச் செயலாளராக நயினார் நாகேந்திரனும் நியமிக்கப்பட்டு உள்ளனர். 'தெற்கு மாவட் டத்துக்கு ராஜேந்திரன் நியமிக்கப்பட்டு உள்ளதால், தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் பூங்கோதை, முன்னாள் எம்.எல்.ஏ-வான அப்பாவு ஆகியோர் செல்வாக்காக இருந்த பகுதிகள் இனி அ.தி.மு.க-வின் கோட்டையாக மாறும்’ என ஆரூடம் சொல்கிறார்கள் கட்சியினர்.
ஆனால், நயினார் நாகேந்திரன் ஆதரவாளர்கள், ''மாநில ஜெ. பேரவை செயலாளர் பொறுப்பில் இருந்த நாகேந்திரனை அந்த பொறுப்பில் இருந்து விடுவித்து மாநகரச் செயலாளர் பதவி கொடுத்து இருக்கிறார்கள். அமைச்சரவையில் தனக்கு நிச்சயம் இடம் கிடைக்கும் என நம்பிக் கொண்டிருந்த நிலையில், இசக்கி சுப்பையா அமைச்சர் ஆக்கப்பட்டார். அவர் நீக்கப்பட்டதும் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என நம்பினார். ஆனால்,யாருமே எதிர்பார்க்காத வகையில் செந்தூர்பாண்டியன் அமைச்சர் ஆக்கப்பட்டார். இப்படி ஏமாற்றத்தில் இருந்த நாகேந்திரனுக்கு மாநில பொறுப்பில் இருந்து விடுவித்து, மாநகர பொறுப்பு கொடுத்ததில் வருத்தமே...'' என்றார்கள் அழுத்தமாக.
''முன்னாள் மாநகரச் செயலாளரானபாப்புலர் முத்தையா, அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்த ஐந்து வருடங்களிலும் வாரம்தோறும் சனிக்கிழமைகளில் தொடர்ச்சியாகப் பொதுக் கூட்டங்களை நடத்தியவர். அதனால் மீண்டும் தனக்கு பொறுப்பு கொடுக்கப்படும் என நம்பிக் கொண்டிருந்த நிலையில், அது கிடைக்காததால் அதிருப்தி அடைந்து உள்ளார்...' என்று சொன்னார்கள் முத்தையா ஆதரவாளர்கள்.
நயினார் நாகேந்திரனிடம் கேட்டதற்கு, ''இந்த பொறுப்பும் எனக்கு மகிழ்ச்சிதான். நெல்லை மேயர் தேர்தலில் வெற்றிக் கனியை பறித்து அம்மாவிடம் ஒப்படைப்பது மட்டுமே எனது நோக்கம்!'' என்றார் உற்சாகமாகவே.
முன்னாள் மாநகர செயலாளரான பாப்புலர் முத்தையா, ''பதவியைக் கொடுத்த அம்மா இப்போது எடுத்திருக்கிறார். அவரது செயல்களுக்கு பல காரணங்கள் இருக்கும். கடந்த ஆட்சியில் மாநகரம் முழுவதும் வாரந்தோறும் பொதுக்கூட்டங்களை நடத்தி கட்சி அமைப்புகளை பலமாக வைத்திருந்தேன். அந்த திருப்தி எனக்கு போதும்...'' என்று சொன் னார்.
அதிருப்தியாளர்களை சமாளிக்க என்ன செய்யப் போகிறார், ஜெயலலிதா?
வாய்தா மேல் வாய்தா வாங்கி சொத்துக் குவிப்பு வழக்கில் போக்குக் காட்டிக் கொண்டிருந்த ஜெயலலிதாவுக்கு கடைசியில் செக் வைத்துவிட்டது உச்ச நீதிமன்றம். 'சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் ஆக வேண்டும்’ என்று அதிரடி உத்தரவு இட்டிருக்கிறது.
ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கு பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. முன்பு தமிழகத்தில் நடந்து வந்த இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 2004-ம் ஆண்டு முதல் பெங்களூரு தனி நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது. 'வழக்கைத் தொடர உரிய அனுமதி பெறவில்லை, விசாரணை முழுமையும் ரத்து செய்ய வேண்டும், குற்றப்பத்திரிகையை மொழிபெயர்த்து தரவேண்டும், சாட்சி விசாரணை நடத்தக் கூடாது, குற்றப் பத்திரிகையில் தவறுகள்...’ என்று பல்வேறு காரணங்கள் காட்டி, வழக்கு இழுத்தடிக்கப்பட்டது.
சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்வர் ஆன நிலையில் பெங்களூரு நீதிமன்றம் கிடுக்கிப்பிடி போட ஆரம்பித்தது. 'வாக்குமூலத்தை பதிவு செய்ய ஜெயலலிதா நேரில் ஆஜர் ஆக வேண்டும்’ என்று கண்டிப்பு காட்டவே, உச்ச நீதிமன்றத்தை அணுகினார் ஜெயலலிதா.
கடந்த 5-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா சார்பில், ஹரிஷ் சால்வே ஆஜர் ஆனார். சீனியர் வழக்கறிஞரான இவர், உச்ச நீதிமன்றத்தில் அதிகம் கட்டணம் வாங்கும் வக்கீல்களில் ஒருவர் என்று சொல்லப்படுபவர். அம்பானி சகோதரர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னையில் ஆஜர் ஆகும் அளவுக்கு பிரபலமானவர். அதனால் தான் ஹரீஷ் சால்வேவை ஜெயலலிதாதான் ஓகே செய்தாராம். டெல்லியில் பிரபலமான தாஜ் மான்சிங் என்கிற நட்சத்திர ஹோட்டலில்தான் இவருடைய அலுவலகம் இயங்கிவருகிறது என்றால் பாருங்களேன்!
வழக்கு விசாரணைக்கு வந்ததுமே ஜெயலலிதாவின் மனுவைத் தள்ளுபடி செய்யும் மனநிலையில்தான் நீதிபதிகள் இருந்தார்களாம். 'இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள என்ன முகாந்திரம் இருக்கிறது? சீனியர் வழக்கறிஞரான உங்களுக்கு இது தெரியாதா?’ என்று நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, தீபக் வர்மா ஆகிய இருவரும் கேட்டுள்ளனர். 'குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 313-ன் படி குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆக வேண்டும். இது குற்றம் சாட்டபட்டவருக்கான உரிமையும் கூட. நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் ஆக வேண்டும் என்பது தொடர்ந்து நடைமுறையில் இருந்து வருகிறது’ என்றார்கள் நீதிபதிகள். உடனே ஹரீஷ் சால்வே, ''நீதிமன்றம் எழுப்பும் கேள்விகளை கொடுத்தால் அதற்கு உரிய பதில் கொடுக்க எனது கட்சிக்காரர் தயாராக இருக்கிறார்'' என்று பதில் அளித்தார். ''கேள்விகள் கேட்டு அதற்கு குற்றம் சாட்டப்பட்டவர் பதில் சொல்லும் போது அதை வைத்து துணைக் கேள்விகளை நீதிபதி கேட்பார். அதோடு குற்றம் சாட்டப்பட்டவர் உண்மையைத்தான் சொல்கிறாரா? என்பதை அவரது ரியாக்ஷனை வைத்தே நீதிபதி முடிவு எடுக்க முடியும். எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்கும்போது அதை நீதிமன்றத்தால் புரிந்து கொள்ளமுடியாது. நேரில் ஆஜர் ஆவதுதான் உங்களுக்கு நன்மையாக இருக்கும். இந்த நடைமுறையை மாற்றினால் அது பின்னால் வருகிற வழக்குகளுக்கு முன்னுதாரணம் ஆகிவிடும்!'' என்று நீதிபதிகள் கூறினார்கள்.
கடைசியில் பாதுகாப்பு பிரச்னையைக் கிளப்பினார் ஹரீஷ் சால்வே. அதற்கு, ''எந்த நாளில் பெங்களூரு கோர்ட்டில் ஜெயலலிதா ஆஜர் ஆவாரோ அந்த நாளில் கூடுதல் பாதுகாப்பை கொடுக்க சொல்கிறோம்'' என்று பதில் தந்தார்கள் நீதிபதிகள்.
மொத்தத்தில் ஹரீஷ் சால்வே வாதத்தைவிட நீதிபதிகள்தான் அதிகமாக கருத்து சொன்னார்கள். கடைசியில் ''பெங்களூரு நீதிமன்றத்தில் நடந்துவரும் வழக்கை மேலும் சில மாதங்கள் தாமதம் செய்யும் செயலாகவே இது தெரிகிறது. இதனால் ஜெயலலிதா பெங்களூரூ கோர்ட்டில் கட்டாயம் ஆஜர் ஆக வேண்டும். எப்போது ஆஜர் ஆவார் என்பதை 12-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும்!'' என்று உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு பற்றி சட்ட நிபுணர்கள் சிலரிடம் பேசிய போது, ''இந்த வழக்கில் இனியும் ஜெயலலிதா வாய்தா வாங்கிக் கொண்டிருக்க முடியாது. ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்து கொண்டு, சொத்து குவிப்பு வழக்கில் ஆஜர் ஆவதை ஜெயலலிதா விரும்பவில்லை. அப்படி அவர் ஆஜர் ஆகும் போது தேசிய சேனல்கள் வரையில் அது செய்தியாகும். அதை தவிர்க்க விரும்புகிறார். கேள்விகளை அனுப்பி அதற்கு பதில் சொல்வதாக இருந்தாலும், அவர் சொல்லும் பதில் உண்மையா என்பதை கோர்ட்டில் அவர் நேரில் வந்து சொல்லும் போதுதான் தெரியும். சம்பந்தப்பட்டவரின் முகபாவனைகளை நீதிபதி உற்று நோக்குவார். அதற்கெல்லாம் வாய்ப்பு இல்லாமல் போகக் கூடாது என்பதற்காகத்தான் நீதிமன்றத்தில் ஆஜர் ஆக சொல்கிறார்கள். இதில் இன்னொரு சிக்கலும் உண்டு. நேரில் ஆஜர் ஆகாமல் வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டால் இதையே ஒரு காரணமாக சொல்லி கேள்வி எழுப்ப முடியும். அதனால் வேறு வழியே இல்லை. ஜெயலலிதா ஆஜர் ஆகத்தான்வேண்டும்'' என்றார்கள்.
என்ன செய்யப்போகிறார் ஜெயலலிதா?
''தனக்கு அதிகாரம் இல்லை என்று யாரோ சொன் னதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு காலம் கடத்தாமல்... தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ள மூவரையும் காப்பாற்ற ஜெயலலிதா முன்வர வேண்டும்!'' என முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி கூறி இருக்கிறார்!
இவ்வாறு கூறியதோடு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட தியாகு, புலவர் கலியபெருமாள் ஆகியோ ரின் தண்டனைகளை தான் குறைத்ததுபற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். யார் யாருக்கு இவர் தூக்குத் தண்டனைகளைக் குறைத்தார் என்பது இப்போது கேள்வி அல்ல. 'சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கு தூக்குத் தண்டனையைக் குறைக்க, இவர் அதிகாரத்தில் இருந்தபோது எதுவும் செய்யவில்லையே ஏன்?’ என்பதுதான் இப்போதைய கேள்வி. வழக்கம்போல இந்தக் கேள்விக்குப் பதில் கூறாமல் திசை திருப்பும் முயற்சியில் கருணாநிதி ஈடுபடுகிறார்.
26 தமிழர்கள் உயிர்காப்புக் குழுவின் தலைவராக இருந்து, இவர்களின் வழக்கை உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்து 22 பேரின் உயிர்களைக் காப்பாற்றுவதற்குக் காரணமாக இருந்தவர்களில் ஒருவன் என்கிற முறையில், சில உண்மைகளை எடுத்துக் கூற விரும்புகிறேன்.
உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், 19 பேரைக் குற்ற மற்றவர்கள் என விடுதலை செய்தது. ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ் ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது. நளினி, முருகன், சாந்தன், பேரறி வாளன் ஆகியோரின் மரண தண்டனையை உறுதி செய்தது.
விடுதலை செய்யப்பட்ட 19 பேரையும் உடன் அழைத்துக்கொண்டு, தமிழகம் முழுவதும் மரண தண்டனைக்கு எதிரான பேரணிகளை 22.6.99 முதல் 7.7.99 வரை நடத்துவது என முடிவு செய்தோம். அதற்கு இணங்க எங்கள் பேரணியைத் தொடங்கியபோது, அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி தடை விதித்தார். மரண தண்டனைக்கு, தான் எதிரானவன் என இப்போது கூறுபவர், அன்று மரண தண்டனை ஒழிப்புப் பிரசாரத்துக்கே தடைவிதித்தார்.
இந்தத் தடையை எதிர்த்து உடனடியாக நாங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தோம். அதன்பேரில், இந்தத் தடை செல்லாது என்றும், எங்கள் பிரசாரப் பயணத்துக்கு உடனடியாக அனுமதி வழங்கும் படி 30.6.99-ல் ஆணை பிறப்பித்தது நீதிமன்றம். அதன்படி, தமிழகம் முழுவதும் மரண தண்டனை ஒழிப்பு இயக்கத்தை வெற்றிகரமாக நடத்தினோம். 'ராஜீவ் கொலையாளிகள் எனக் குற்றம் சாட்டப்பட்டு, கீழ் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் குற்ற மற்றவர்கள் என விடுதலை செய்யப்பட்டது எப்படி? குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப் படாமல் போயிருந்தால் இந்த 22 பேரும் அல்லவா மரண தண்டனைக்கு உள்ளாகி உயிர் இழந்திருப்பார்கள்? அப்படியானால், இந்த நீதி பிழைபட்ட நீதி அல்லவா?’ என மக்கள் கேட்டனர்.
17.10.99 அன்று ஆளுநராக இருந்த செல்வி ஃபாத்திமா பீவி அவர்களிடம் நால்வரின் கருணை மனுவை அளித்தோம். ஆனால், அவர் 10 நாட்களில் 27.10.99 அன்று இம்மனுக்களை தள்ளுபடி செய்தார். உடனடியாக, கொச்சியில் இருந்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் அவர்களிடம் தொலைபேசி மூலம் இந்த விவரத்தைத் தெரிவித்தேன். அவரும், மற்றொரு நீதிபதியும் ஒன்றாக உட்கார்ந்து, உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே ஒரு தீர்ப்பு அளித்திருப்பதாகவும், அந்தத் தீர்ப்பின் அடிப் படையில் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யும்படியும் ஆலோசனை கூறினார். இப்போது நீதியரசராக உள்ளவரும், அன்று மூத்த வழக்கறிஞருமாகத் திகழ்ந்தவருமான கே.சந்துரு அவர்கள், எங்கள் மனுவின் மீது உயர் நீதி மன்றத்தில் வாதாடும்போது, 'அரசியல் சட்டப்படி கருணை மனுக்கள் மீது ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது, அமைச்சரவையின் பரிந்துரை எதுவோ... அதன்படி நடந்துகொள்ள வேண்டியதுதான் அவருடைய கடமை’ எனக் குறிப்பிட்டார்.
அரசுத் தரப்பு வழக்கறிஞர், 'இந்தியா சுதந்திரம் பெற்ற நாளில் இருந்து இதுவரை 200-க்கும் மேற்பட்ட மரண தண்டனைக் கைதிகளின் கருணை மனுக்களை ஆளுநர்களும், குடியரசுத் தலைவர்களும் தன்னிச்சையாகப் பரிசீலனை செய்து முடிவு எடுத்து இருக்கிறார்களே தவிர, அமைச்சரவைகளின் பரிந்துரைகளைக் கேட்டு முடிவு செய்யவில்லை’ என வாதாடினார்.
''இதுவரை நீங்கள் அரசியல் சட்டத்தை மீறி செயல்பட்டிருக்கலாம். ஆனால், இனிமேல் அவ்வாறு செய்ய அனுமதிக்கக் கூடாது என்பது தான் எங்கள் மனுவின் அடிப்படையாகும்’ என எங்கள் வழக்கறிஞர் கே.சந்துரு புரிந்த வாதத்தை ஏற்றுக்கொண்டு நீதியரசர் கே.கோவிந்தராசன் அவர்கள், 25.11.99 அன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பின்வரும் தீர்ப்பினை அளித்தார். 'அரசியல் சட்டத்தின் 161-வது பிரிவின்படி அமைச்சரவையின் ஆலோசனையைப் பெற்று ஆளுநர் கருணை மனுக்களின் மீது முடிவு எடுக்கவில்லை. எனவே, மனுக்களைத் தள்ளுபடி செய்து அவர் பிறப்பித்த ஆணை சட்டப்படி செல்லாதது ஆகும். எனவே, அந்த ஆணை ரத்து செய்யப்படுகிறது.’
சுதந்திர இந்திய வரலாற்றில் முதன் முறையாக இத்தகைய சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கப்பட்டு, கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்கும் அதிகாரம் அமைச்சரவைகளுக்கு உண்டு என்பது நிலைநாட்டப்பட்டது. தமிழ்நாட்டுக்கு மட்டும் அல்ல, இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும், இந்த உரிமையை உயர் நீதிமன்றத்தின் மூலம் நாங்கள் பெற்றுக்கொடுத்தோம். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, 52 ஆண்டுகாலமாக ஆளுநர்களும், குடியரசுத் தலைவர்களும் அமைச்சரவையின் ஆலோசனைகளைப் பெறாமல் செயல்பட்டு வந்ததற்கு இந்தத் தீர்ப்பு முற்றுப்புள்ளி வைத்தது. நான்கு தமிழர்கள் தொடர் பான இந்த வழக்கில், இத்தகைய சிறப்பான தீர்ப்பைப் பெற்று அமைச்சரவையின் அதிகாரத்தை மீட்டு, அன்றைய முதலமைச்சர் கருணாநிதி அவர்களிடம் ஒப்படைத்தோம்.
அத்துடன் நாங்கள் நிற்கவில்லை. 30.11.99 அன்று சென்னையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்ட பெரும் பேரணியை நடத்தி, 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கையெழுத்திட்ட கருணை மனுக்களை அன்றைய முதலமைச்சர் கருணாநிதி அவர்களிடம் நேரில் சந்தித்து அளித்தோம். ஆனாலும், இன்று மரண தண்டனைக்கு எதிராக நீட்டி முழக்குபவர், அவர் கையில் அதிகாரம் இருந்தும், அதைச் செய்வதற்கு முன்வரவில்லை.
நால்வரில் நளினிக்கு மட்டும் கருணை காட்ட அமைச்சரவை பரிந்துரை செய்வதற்கும், மற்ற மூவரின் கருணை மனுக்களை ஏற்க மறுப்பதற்கும் இவரே காரணமாக இருந்தார். நளினிக்கு இவர் கருணை காட்டியதில் பின்னணி உண்டு. முன்னாள் குடியரசுத் தலைவர் வி.வி.கிரி அவர்களின் மருமகளும், மனித உரிமை ஆர்வலருமான மோகினி கிரி அம்மையாரை சந்தித்து இந்த நால்வரின் மரண தண்டனை தொடர்பாக நான் பேசினேன். அதன் விளைவாக அவர் வேலூர் சிறையில் இந்த நால்வரையும் சந்தித்துப் பேசினார். அதிலும், படித்த பெண்ணான நளினியின் சந்திப்பு, அவர் உள்ளத்தை மிகவும் தொட்டது. திருமதி சோனியா காந்தி அவர்களிடம் நளினி குறித்து அவர் பேசி, அதன் விளைவாக சோனியா காந்தி, நளினிக்குக் கருணை காட்டும்படி குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதினார்.
சோனியா கருணை காட்டியதால்தான் நளினிக்கு கருணை காட்ட கருணாநிதி முடிவு எடுத்தார். அடுத்து, இந்த மூவரின் சார்பில் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்களை அனுப்பி வைத்தோம். மேலும், எங்கள் குழுவின் சார்பில் டெல்லிக்குச் சென்று வைகோ அவர்களின் உதவியுடன், பிரதமர் வாஜ்பாய் உட்பட மத்திய அமைச்சர்கள் பலரையும் சந்தித்து முறையிட்டோம்.
சட்டத் துறையின் அமைச்சர் ராம்ஜெத்மலானியை சந்தித்தபோது அவர் எங்களிடம், 'ஏன் உங்கள் முதலமைச்சரே இதைச் செய்யலாமே?’ என்று கேட்டார். என்ன காரணத்தினாலோ அவர் தயங்குவதாக நாங்கள் தெரிவித்தபோது, முதல்வர் கருணாநிதியிடம் அவரே எங்கள் முன்னிலையில் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார்.
'எதற்காகத் தயங்குகிறீர்கள் நான் உங்கள் பக்கம் இருக்கிறேன். தைரியமாகச் செய்யுங்கள்’ என்று ஜெத்மலானி கூறினார். ஆனால், கருணாநிதியோ, 'நீங்களே செய்யுங்கள்’ என்று கூறி பேச்சை முடித்துக் கொண்டார்.
ஈராக் அதிபர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்ட போதும், பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப் பட்ட சரன்தீப் சிங் என்பவரின் தண்டனையைக் குறைக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்து, தன்னை சிறந்த மனிதநேயராக காட்டிக்கொண்ட கருணாநிதி, இந்த மூவர் விஷயத்தில் கருணை காட்ட ஆட்சியில் இருந்தபோது இறுதி வரை முன் வரவே இல்லை.
அண்ணா நூற்றாண்டினை ஒட்டிப் பல்வேறு கொடிய குற்றங்களில் தண்டிக்கப்பட்ட ஆயுள் தண்டனைக் கைதிகள் உட்பட ஏராளமானவர்களை, 7 ஆண்டுகளில் விடுதலை செய்தார் கருணாநிதி. மதுரை மாநகராட்சி உறுப்பினராக இருந்த லீலா வதியை பட்டப்பகலில் படுகொலை செய்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தி.மு.க-வினரை 7 ஆண்டுகளில் விடுதலை செய்ய அவரால் முடிந்தது. ஆனால், ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, 20 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில் வாடும் ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ் ஆகிய மூவரை விடுதலை செய்யக்கூட கருணாநிதி முன்வரவில்லை. மரண தண்டனை பெற்றவர்களைத்தான் இவர் காப்பாற்ற முன்வரவில்லை. குறைந்தபட்சம், ஆயுள் தண்டனை பெற்ற இந்த மூவரையாவது விடுதலை செய்திருக்கலாம். அதையும் செய்யவில்லை. சோனியாவின் அதிருப்திக்கு ஆளாகிவிடக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காக, ராஜீவ் வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களுக்கு இறுதி வரை கருணை காட்ட அவர் முன்வரவில்லை என்பதுதான் உண்மை.
தற்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, அவர்கள் மூவர் தூக்குத் தண்டனை பிரச்னையில் கருணாநிதி இடைவிடாமல் சீண்டுவதற்குக் காரணமே, தான் செய்யத் தவறியதை ஜெயலலிதா செய்து அதன் விளைவாக, தமிழ் உணர்வாளர்கள் அனைவரின் பாராட்டுக்கும் நன்மதிப்புக்கும் ஆளாகிவிடக் கூடாது என்ற காரணத்தினால் அடிக்கடி அறிக்கை வெளியிட்டு குட்டையைக் குழப்ப முயற்சி செய்கிறார்!
திருச்சியில் கட்டப்பட்ட 'கலைஞர் அறி வாலய’த்தை வைத்தே பல்வேறு கைது நடவடிக்கைகள் அரங்கேறுவதுதான் ஆச்சர்யமானது. முன் னாள் அமைச்சர் நேருவை வளைத்து கடலூர் சிறையில் வைத்த போலீஸ், இப்போது அவரது தம்பி ராமஜெயத்தை வளைத் துள்ளது!
'கலைஞர் அறிவாலயம்’ கட்டு வதற்காக ஒரு ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தை தன்னிடம் இருந்து அடித்து, உதைத்து, மிரட்டி வாங்கியதாக துறையூரைச் சேர்ந்த டாக்டர் சீனிவாசன் புகார் கொடுத்தார். அதைத் தொடர்ந்துதான் இந்தக் கைது நடவடிக்கைகள். 'ராமஜெயம் வெளிநாட்டில் இருக்கிறார். அவர் வந்தவுடன் கைது செய்யப்படுவார்’ என்று போலீஸ் தரப்பில் சொல்லப் பட்டது. தற்போது அவரைக் கொச்சியில் கைது செய்திருக்கிறது போலீஸ்!
கடந்த 5-ம் தேதி அதிகாலையில் கொச்சியில் இருந்து மலேசியா செல்லும் விமானப் பயணிகள் பட்டியலில் ராமஜெயத்தின் பெயர் இடம் பெற்று இருந்தது. காலை 3.30 மணியளவில் விமானம் ஏறுவதற்காக ராமஜெயம் வர... அவரைக் குடியுரிமைப் பிரிவு அதிகாரிகள் தடுத்து நிறுத்தினார்கள். அங்கேயே வைத்து விசாரித்துவிட்டு நெடுமஞ்சேரி காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர். அவரை, திருச்சியில் இருந்து புறப்பட்டுச் சென்ற போலீஸ் டீம் கைது செய்து கொண்டு வந்திருக்கிறது.
நேரு குடும்பத்தினருக்கு எதிரான வழக்குகளில் ஆர்வத்துடன் பங்கேற்று வரும் அ.தி.மு.க-வைச் சேர்ந்த வழக்கறிஞரான மலர்விழியிடம் பேசினோம்.
''நேரு குடும்பத்தினர் மீது நான் தொடர்ந்த வழக்கால் என் மீது கோபமான நேரு, எங்கள் மீது பொய் வழக்குகள் போட்டு ரொம்பவே அலைக்கழித்தார். என் தங்கை வனிதாகூட சிறைக்குப் போனார். இதுபோன்ற தகவலைக் கேள்விப்பட்டு 2007 ஏப்ரலில், டாக்டர் சீனிவாசன் என்னைத் தேடி வந்தார். 'கலைஞர் அறிவாலயம் கட்டுறதுக்காக, பல கோடி மதிப்புள்ள என்னோட இடத்தை குறைஞ்ச விலைக்குக் கேட்டு நேரு தரப்பு என்னை மிரட்டினாங்க. நான் மறுத்தேன். வயசான என் அப்பா கிருஷ்ணசாமியை ராமஜெயம் அடிச்சார். அதனால பயந்துபோய் எழுதி கொடுக்கிறதுக்கு சம்மதித்தேன். 40 லட்சம் பணத்தைக் கொடுத்து, அக்ரிமென்ட் பத்திரத்தில் கையெழுத்து வாங்கினாங்க. ஊருக்கு காரில் கொண்டுபோய் விடறோம்னு சொல்லி, கூட வந்த துணை மேயர் அன்பழகன், மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் குடமுருட்டி சேகர் மற்றும் செரீஃப் மூணு பேரும் சேர்ந்து அந்தப் பணத்தையும் பறிச்சுகிட்டாங்க’னு சொன்னார். 'தி.மு.க. ஆட்சியில் நியாயம் கிடைக்காது. அதனால், நடந்த சம்பவங்களை உயிலா எழுதி ரெஜிஸ்டர் பண்ணலாம். அப்புறம் ஆட்சி மாறினதும் அதை எவிடென்ஸா பயன்படுத்தலாம்’னு ஐடியா கொடுத்தேன். இப்போது அந்த உயில் நீதிமன்ற கஸ்டடியில் இருக்கிறது. ராமஜெயத்துக்கு எதிரான முக்கியமான ஆதாரமாக அது இருக்கும்!'' என்றார்.
வையம்பட்டியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் சகோதரர்கள் மர்மமாக இறந்த விவகாரத்திலும், ராமஜெயத்தைக் குறிவைத்து சி.பி.சி.ஐ.டி. போலீஸார் விசாரித்துக்கொண்டு இருந்தனர். அது தொடர்பான வழக்கும் ராமஜெயத்தின் மீது பாய வாய்ப்பு இருக்கிறது!
சமீபத்தில், தமிழக விவசாயிகள் பிரிவின் மணிகண்டம் ஒன்றிய அமைப்பாளரான சின்னதுரைகொடுத்த புகாரின் பேரில், நேரு மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை திருச்சி ஆர்.டி.ஓ-வான சங்கீதா விசாரிக்கிறார். இதில் ராமஜெயத்தின் தலை பிரதானமாக உருட்டப்படும் என்கிறார்கள். நேரு தரப்பு வழக்கறிஞரான பாஸ்கரிடம் விளக்கம் கேட்டோம். ''உயிலில் எழுதி இருப்பதால் அதை உண்மைன்னு ஏத்துக்க முடியுமா? அக்ரிமென்ட் சமயத்தில் அதை எழுதி வெச்சவங்க, ஏன் ரெஜிஸ்ட்ரேஷனுக்குப் பிறகு எழுதலை? அக்ரிமென்ட் சமயத்தில் எழுதினதை, பின்னாடி பணம் பறிக்கலாம் என்ற எண்ணத்தில் திட்டமிட்டு செஞ்ச மோசடி வேலைன்னு சொல்லலாமே? ஏரி விஷயத்துலேயும், மத்திய அரசு திட்டத்தை மாத்தினாங்கனு சொல்றது ஏத்துக்குற மாதிரி இல்லை. ஏரியில் இருந்து மணல் அள்ளினாங்கன்னு சொல்றதும் தவறான குற்றச்சாட்டுகள்தான். எல்லாத்தையும் சட்டப்படி சந்திப்போம்!'' என்றார்.
ராமஜெயம் கொச்சியில் வளைக்கப்பட்ட அதே தினத்தில்தான், போலீஸ் கஸ்டடியில் எடுப்பது தொடர்பான விசாரணைக்காக, கடலூர் மத்தியச் சிறையில் இருந்து கே.என்.நேரு அழைத்து வரப்பட்டார். விசாரணைக்கு முன்பு வெளியே மரத்தடி நிழலில் நின்று கட்சிக்காரர்களுடன் பேசிக்கொண்டு இருந்தார் நேரு. அப்போது நிபந்தனை ஜாமீனில் இருக்கும் முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜாவும் நீதிமன்றத்தில் கையெழுத்துப் போடுவதற்காக வந்தார். ராமஜெயம் கைது செய்யப்பட்ட தகவல் வரவே, ''அவனை அப்பவே சரணடையச் சொன்னேன். கேக்கலை. இப்ப, 'வெளிநாட்டுக்கு தப்பிச்சுப் போகப் பாத்தான்’னு அடுத்தவங்க சொல்றாங்க, இது தேவையா?'' என்று நேரு வருத்தப்பட்டாராம்!
கலைஞர் அறிவாலயம் நிலம் கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் பெயரில் வாங்கப்பட்டு இருப்பதால், அவர் மீதும் வழக்குப் பாய வாய்ப்புள்ளதாகச் சொல்கிறார்கள்!
மரண வாசலில் இருந்து மீண்டு நிற்கும் மூவரில், சற்று வித்தியாசமானவர் சாந்தன். சாய்பாபாவின் தீவிர பக்தரான இவர், சாய் பக்தர்கள் குழாம் ஒன்றையே சிறையில் உருவாக்கிவிட்டார். சாந்த சொரூபியாக வலம் வரும் சாந்தன் பேசுவது ரொம்பவும் குறைவு. பெயர் மாற்றக் குழப்பத்தால் ராஜீவ் வழக்கில் சேர்க்கப்பட்டுவிட்டதாகச் சொல்லும் இவருக்கு, 'ஈழத்தில் இருக்கும் தாய், தந்தையர் உயிரோடு இருக்கிறார்களா? அவர்களின் கதி என்ன?’ என்றே தெரியவில்லை. அந்தத் துயரத்தை ஜூ.வி. வாயிலாகவும் வெளிப்படுத்தி இருந்தார்!
பல கட்ட முயற்சிகளுக்குப் பிறகு மிகவும் சிரமப்பட்டு, இலங்கையில் வசித்து வரும் சாந்தனின் தாயார் மகேஸ்வரி அம்மாளைக் கண்டுபிடித்துத் தொடர்புகொண்டோம். 'தமிழகத்தில் இருந்துபேசுகிறோம்...’ என்றவுடனே, அவர் குரலில் பரவசம் பரவ... திக்குமுக்காடிப் போனார். சட்டென்று அவருக்கு வார்த்தைகளும் வரவில்லை. பின்னர், தீராத அந்த சந்தோஷத்துடன் பேசினார்.
''எங்கட பிள்ளைக்காக எங்களால போராட முடியலை... உங்கட முதலமைச்சர் அம்மாவுக்கு நன்றியும் வணக்கமும். அங்க போராடற அத்தனை தமிழ்நாட்டு மக்களுக்கும் எங்கட நன்றியைத் தெரிவிச்சுக்கொள்றம். உங்க எல்லாரையும் தெய்வம் போல நாங்க நினைக்கிறம்!'' என்ற அவரிடம் சாந்தன் பற்றிக் கேட்டோம்!
''அய்யா, எங்கட பிள்ளை படிச்சுப்போட்டு... வெளிநாட்டுக்கு வேலைக்குப் போக ஆசைப்பட்டு அங்க வந்தார். பிள்ளைக்காக எங்கட சொந்தக் காணியை (நிலம்) ஈடு வெச்சு, பாஸ்போர்ட் எடுத்து, வெளிநாட்டுக்கு அனுப்பினம். ஆனா, அய்யா அங்க என்ன நடந்ததென்டே தெரியாது. எங்கட பிள்ளைய பிடிச்சுவச்சுக்கொண்டு, இவ்வளவு காலம் வெச்சிருக்கிறாங்கள். அவரை விட்டுடுவாங்கள் என்ற நம்பிக்கையிலதான் உறுதியோடு இருந்தம். ஆனா, திடீரென்டு இடிபோல செய்தி வந்தது அய்யா...'' தொடர்ந்து அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல், ''10 மாசம் சுமந்து பெத்த அந்தப் பிள்ளைய, 20 வருஷமா பார்க்காம இறக்கிறம் அய்யா... 20 வருஷத்தில இடையில ஒருமுறைகூட அவரைப் பார்க்க ஏலலை (இயலவில்லை)... வேலைக்காக வெளிக்கிட்டவர், (புறப்பட்டவர்) தன்னோட தம்பி ஆசையா கேட்ட பலூன் வாங்கித் தந்து போட்டுப் போனார். தங்கை மேல அவருக்கு ரொம்பப் பிரியம்... தங்கை சைக்கிள் ஓட்டி விழுந்துபோட்டால் என்டு சொல்லி, தானே அவளை ட்யூஷனுக்குக் கூட்டிக்கொண்டு போவார். அந்த அளவுக்குச் செல்லம்... புறப்பட்டுப் போனபோதுகூட, தங்கையின் கையப் பிடிச்சுக்கொண்டு, 'அம்மா பாவம்... நம்ம வெச்சுக்கொண்டு கஷ்டப்படுறாங்க. வெளிநாட்டுக்குப் போய் அண்ணன் உழைச்சு பணம் அனுப்புறன். தம்பியும் நீயும் கனக்கப் படிச்சு, டாக்டரா வரவேணும்’ என்டு கனக்க புத்திமதி சொல்லிக்கொண்டு போனார். அந்த பிள்ளையத்தான், பிடிச்சுப் போட்டுட்டாங்கள்... எங்களால் ஒண்டும் செய்ய முடியேல்ல. 20 வருடங்கள் ஓடிப்போயிட்டது... எங்கட பிள்ளை எப்படி இருக்கிறார்? அவருடைய தோற்றம் எப்படி இருக்குது? காணக் கொடுத்து வைக்கலையே, அய்யா... எங்கட குடும்பத்தைக் காப்பாத்துவார் என்டுதான் வெளிநாட்டு வேலைக்காக அனுப்பிச்சு வெச்சம். கடவுள் இப்படிச் செய்திட்டாரே?
என்ட கணவருக்கு 70 வயது. அவருக்கும் உடல் நிலை மோசம். ஒரு கண் பார்வை குறைஞ்சிட்டது. அவரையும் பார்த்துக்கொண்டு, என்ட பிள்ளையப் பார்க்க முடியாத நிலைமை... ரெண்டு பேராலயும் தூரப் பயணம் செய்யமுடியாது. வறுமை இன்னொரு பக்கம்... வயோதிக காலத்தில சரியான கஷ்டம், துன்பம் அய்யா! கிடைக்கிற கூலித்தொழிலைச் செய்து, கஷ்டப்பட்டுத்தான் ஜீவியம் பண்ணிக்கொண்டு இருக்கிறம்...
என்ட கணவர் கடுமையான வேலைகளைச் செஞ்சுதான் நாளாந்தம் செயல்பட்டுக்கொண்டு இருந்தவர். இந்தியா ஊடாக வெளிநாட்டுக்கு வேலைக்குப் போக வந்த பிள்ளைய, அங்க பிடிச்சுப் போட்டதில் இருந்தே மனுஷருக்கு உடம்பு போச்சுது. இடையில ஒரு முறை (2000, தி.மு.க. ஆட்சியில்) பிள்ளைக்கு கருணை மனு போட்டதில, நல்ல உத்தரவை நம்பிக்கையா எதிர்பார்த்தோம், ஆனா, அதில பெரிய ஏமாற்றம். அப்போது முதலே அவருக்கு உடம்பு பிரச்னையாகிப் போயிட்டது... தொடர்ந்து மருத்துவ சிகிச்சையால குணமாக்கிக்கொண்டு வாறம். இருந்தாலும் அவரால சகஜமா செயல்படமுடியாத நிலைமை... 20 வருஷமா விரதம் இருக்கிறதால, என்னுடைய உடம்பும் மோசமாயிட்டது. ஏற்கெனவே, எங்களுக்கு உடல்நலப் பிரச்னைகள். அதனால செயல்பட முடியலை... வந்து பார்க்க முடியலை.
இன்னும் கொஞ்ச காலம்தான் உயிரோட இருப்போமென்டு இருக்கிறம். எங்கட பிள்ளைய பார்க்கவேணும். அவருக்கு என்ட கையால சாப்பாடு கொடுக்க வேணும்... (அழுகை பீறிட்டவருக்கு மேற்கொண்டு பேச முடியவில்லை. அழுகையோடு தொடர்கிறார்) என்டைக்கு எங்கட பிள்ளைக்கு சாப்பாடு ஊட்டுவேனோ அன்றைக்குதான் மூணு வேளை சாப்பிடுவேன். அதுவரைக்கும் ஒரு வேளைச் சாப்பாடுதான்...எந்தப் பிழையும் செய்யாமல் மாட்டிக்கொண்ட என்ட பிள்ளை, எங்களுக்கு வேணும் அய்யா... வேணும்!'' என்று மனம் வெடித்து மீண்டும் அழத் தொடங்கியவரை, நம்மால் கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்த ஈழத் தமிழ் அப்பாவித் தாயின் ஓலத்துக்கு பலன் கிடைக்குமா?
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கடந்த 2-ம் தேதி இரவு நடந்தது, 'செங்கொடிக்கு வீரவணக்கம்’ பொதுக்கூட்டம்! கூட்டம் தொடங்கியதுமே மழையும் பெய்யத் தொடங்கியது. கொட்டும் மழையிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உணர்ச்சிப் பிழம்பாகக் கூடியிருந்தனர்!
முதலில் பேசிய பேராசிரியர் கல்யாணசுந்தரம், 'எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்துக்குப் பிறகு... இப்போதுதான் தமிழக அரசும், தமிழ் இன உணர்வாளர்களும் ஒன்றாக நிற்கின்றனர்...'' என ஆரம்பித்தவர், சட்டென்று டாப் கியருக்குச் சென்றார்.
'யார் கொலையாளிகள்? இலங்கைக்கு இந்திய அமைதிப்படையை அனுப்பி 12,500 தமிழர்களைக் கொன்ற கொலைகாரன் யார்? ஒருவரைக் கொலை செய்வதற்காகத் தன் உடலில் வெடிகுண்டை சுமந்துகொண்டு ஒருத்தி செல்கிறாள் என்றால், அவள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டு இருப்பாள்? ராஜீவ்காந்தியைக் கொலை செய்தவர்கள் இறந்துவிட்டார்கள். முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோர் அப்பாவிகள். அவர்கள் பாதிக்கப்படக்கூடாது. தமிழக அரசின் தீர்மானம் மத்திய அரசைப் பாதிக்காது எனச் சொல்கிறார்கள். அப்படியானால், மத்திய அரசின் சட்டங்கள் எங்களையும் பாதிக்காது.
கருணாநிதியை நம்பி 10 வருடங்கள் அவர் பின்னாலே ஓடினோம். ஐயா கருணாநிதி... நீங்கள் செய்த துரோகத்தை ராஜபக்ஷேவும் செய்யவில்லை. இந்திய அநீதிக்காக, முதல் கரும்புலியாக எங்கள் செங்கொடி மாறி இருக்கிறார். அவளது லட்சியத்தைத் தமிழர்கள் நாம் ஒன்றுபட்டு நிறைவேற்ற வேண்டும்!' என்று பொங்கினார்.
'நாம் தமிழர்’ கட்சியின் இளைஞர் பாசறை அமைப்பாளர் வழக்கறிஞர் ராசீவ்காந்தி, 'சட்டரீதியாக மூவரையும் காப்பாற்றப் போராடுகிறோம். ஒருவேளை, நமக்கு எதிராக வழக்கு முடியும் சூழ்நிலை வந்தால், மக்கள் எழுச்சியின் மூலம் அதைக் கண்டிப்பாக மாற்ற முடியும். தற்போது, தூக்குத் தண்டனையை நிறுத்திவைப்பது என்பது தற்காலிக ஓய்வுதானே ஒழிய... வெற்றி அல்ல. மாநில அரசை எதிர்த்து, மத்திய அரசு செயல்படுவது தவறான செயல். ஏழு கோடி தமிழர்களின் உணர்வுகளைத்தான் தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் எதிரொலித்து இருக்கிறார்!' என்றார்.
நிறைவாகப் பேசிய சீமான், 'தமிழ் ஈழத்தைவிட தமிழகத்தில் சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள் என பிரபாகரன் என்னிடம் சொன்னார். அதற்கான சான்றுகளில், தோழர் செங்கொடியும் ஒருவர்.மூன்று பேரின் விடுதலை சாத்தியமில்லை என்றால்,தமிழ் ஈழத்தின் விடுதலை எப்படி சாத்தியமாகும்? இரண்டு ஆண்டுகளில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும். இந்தியாவை ஆளப்போவது யார் என்பதைத் தீர்மானிப்பது ஜெயலலிதாதான். அவரை உட்காரவைத்து, அனைத்துத் தொகுதிகளிலும் ஜெயிக்க வைப்பேன். கருணாநிதியும் மூவரையும் விடுதலை செய்யத் துடிக்கிறார். ஐயா... நீங்கள் கனிமொழியின் விடுதலையைப் பாருங்கள். மூன்று பேர் விடுதலையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்...' என கர்ஜித்தார்.
மழையும் ஓய்ந்தது!
முருகன், பேரறி வாளன், சாந்தன் ஆகிய மூன்று பேருக்கு விதிக்கப்பட்டு உள்ள மரண தண்டனைக்கு எதிராகத் தமிழகமே கொந்தளித்து இருக்கும் நிலையில்... டெல்லியில் இருந்தும் ஒரு குரல் ஆதரவாக ஒலிக்கிறது. அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர்... நாடாளுமன்றத் தாக்குதலில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, பிறகு நிரபராதி என விடுதலை செய்யப்பட்ட பேராசிரியர் எஸ்.கே.ஆர். கிலானி. அவரை சந்தித்தோம்.
''வெறும் வாக்குமூலங்களை வைத்தே இந்த மூன்று பேருக்கும் தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது. வாக்குமூலங்கள் எப்படிப் பெறப்படும் என்பது எல்லோரும் அறிந்ததுதான். இந்த மூன்று பேருமே முதன்மைக் குற்றவாளிகள் அல்ல. மரண தண்டனைக்கு எதிராக தமிழகத்தைப் போல இந்தியாவில் எந்த மாநிலமும் இப்படி எழுச்சியோடு போராடியதை நான் பார்க்கவில்லை. தமிழகத்தை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது. தமிழக மக்களுக்கு நன்றி சொல்லவும் போராட்டத்தில் என் பங்களிப்பைக் காட்டவுமே தமிழகம் வந்தேன்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைபட்டு மரணத்தை எதிர்நோக்கி இருப்பதால், மூவரும் விரக்தியில் மனம் உடைந்திருப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால், அவர்களைச் சந்தித்தபோது அந்த எண்ணம் தவிடுபொடியானது.
மரண தண்டனையை நிறைவேற்ற உயர் நீதிமன்றம் தடை விதித்து இருப்பது சந்தோஷமானசெய்தி. கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தாலும், தண்டனையைக் குறைக்கும் அதிகாரம் மாநில அரசாங்கத்துக்கும் உண்டு. மாநில அமைச்சரவை கூடி, தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோரி ஆளுநருக்குப் பரிந்துரை செய்ய முடியும் என்று இந்திய அரசியலைப்பு சட்டம் கூறுகிறது. அதன்படி, தண்டனையைக் குறைக்கச் சொல்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதற்கு பதிலாக, அமைச்சரவையைக் கூட்டி ஆளுநருக்குப் பரிந்துரை செய்து இருக்கலாம். இப்போதும் கூட அதற்கு அவகாசம் இருக்கிறது. தமிழக அரசுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், உயர் நீதிமன்றம் விதித்துள்ள எட்டு வாரத் தடை முடியும் முன்பே, மாநில ஆளுநருக்குப் பரிந்துரை செய்ய வேண்டும்...'' என்றார்.
தமிழக அரசு உடனே செயலில் இறங்கட்டும்!
- எம்.பரக்கத் அலி
மன்னர்களை வீழ்த்தியது எது?
அந்தப்புரமும் புத்திர பாசமும்!
இன்னோர் ஆள், அக்பரின் மகன் சலீம். 'அப்பாவின் ஆயுள் நீடிக்கிறதே’ என்று நித்தமும் புலம்பி, தனி அணி கட்டியவர் சலீம். இவர்கள் இருவரையும் சமாளிக்க முடியாமல் அக்பர் படுக்கையில் சரிந்தார். இதுதான் பல மன்னர்களுக்கும் நடந்தது!
மு.திருநாவுக்கரசு, ஸ்ரீவில்லிபுத்தூர்.
'நாங்கள் எதைச் செய்தாலும் அதைச் சீரழிப்பதே தி.மு.க-வின் வேலை’ என்கிறாரே ஜெ.?
'நாங்கள் எதைச் செய்தாலும் அதைச் சீரழிப்பதே அ.தி.மு.க-வின் வேலை’ என்கிறாரே மு.க. இவர்கள் ரெண்டு பேருக்குமே வேறு வேலையே இல்லையா?
ராஜேஷ், நாகர்கோவில்.
இலங்கையில் 30 ஆண்டுகளாக இருந்த அவசரகாலத் தடை சட்டத்தை ராஜபக்ஷே வாபஸ் வாங்கிவிட்டது நல்ல விஷயம்தானே?
இலங்கையில் அமைதி திரும்பிவிட்டது என்பதைக்காட்ட ராஜபக்ஷே நடத்தும் நாடகம் இது!
மட்டக்களப்பு மாவட்ட எம்.பி-யான சீனித்தம்பி யோகேஸ்வரன் கடந்த வாரம் தமிழகம் வந்திருந்தார். 'அவசர கால தடை சட்டத்தை வாபஸ் வாங்கிவிட்டு, பயங்கரவாத தடை சட்டத்தை ராஜபக்ஷே பலப்படுத்திவிட்டார்!’ என்று சொல்லிஇருக்கிறார். எனவே, சட்டத்தின் பெயர் மட்டுமே மாறியுள்ளது.
அதைவிட யோகேஸ்வரன் சொல்லியிருக்கும் இன்னொரு செய்தி அதிர்ச்சிக்கு உரியது. '50 ஆயிரம் வீடுகள் கட்ட இந்தியா பணம் கொடுத்தது. ஒன்றரை ஆண்டுகளில் ஆயிரம் வீடுகள் கூட கட்டித் தரப்படவில்லை’ என்றும் அவர் சொல்கிறார். இந்தியா இதையாவது தட்டிக்கேட்க வேண்டும்!
ஆர்.சண்முகநாதன், வந்தவாசி.
'பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட மூவர் குறித்து தமிழக சட்டசபை நிறைவேற்றிய தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது’ என்கிறாரே மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித்?
ஜெயலலிதா முன்மொழிந்து அனைத்துக் கட்சிகளும் வழிமொழிந்த தீர்மானம், குடியரசுத் தலைவருக்குத்தான். எனவே, அது ஏற்கத் தக்கதா இல்லையா என அவர்தான் தீர்மானிக்கவேண்டும். மேலும், ஒரு மாநில சட்டசபை ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தை உதாசீனப்படுத்தும் வகையில் ஓர் அமைச்சர், அதுவும் சட்ட அமைச்சர் கருத்துச் சொல்வது அபத்தமானது. ஜெயலலிதா மீதான எரிச்சல் மட்டுமே அவரது வார்த்தைகளில் தெரிகிறது!
ஆனந்தி, காரைக்கால்.
அண்ணா ஹஜாரே பற்றி, அருந்ததிராய் எழுதிய கட்டுரையைப் படித்தீரா?
ஊழலுக்கு எதிரான யுத்தம் தொடங்கியவர் என்கிற அடிப்படையில் ஹஜாரே ஏற்கத் தக்கவர்தான். ஆனால், அருந்ததி சொன்னதில் மிக முக்கியமான விமர்சனம் இருக்கிறது.
'அதிகாரம் கீழ்நிலை வரை பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பது காந்தியின் கொள்கை. ஆனால், ஹஜாரேயின் ஜன்லோக்பால் சட்டம், முற்றதிகாரம் கொண்ட கொடிய சட்டமாக இருக்கிறது. ஏற்கெனவே அதிகாரம் வாய்ந்த சிறு கும்பல் நாட்டை ஆள்கிறது. ஜன்லோக்பால் குழுவும் இரண்டாவது, அதிகாரம் வாய்ந்த கும்பலாகச் செயல்படப் போகிறது’ என்று குற்றம் சாட்டுகிறார்.
'காந்திய நெறி சார்ந்ததாக இச்சட்டம் வடிவமைக்கப்படவில்லை!’ என்று அருந்ததி சொல்வதற்கு அண்ணாவிடமிருந்து இதுவரை பதில் இல்லை!
க.முனுசாமி, திண்டுக்கல்.
ஸ்டாலின் என்ன செய்துகொண்டு இருக்கிறார்?
'கடந்த ஐந்தாண்டுகளில் அரசு நிகழ்ச்சிகளுக்குப் போனதுதான் எனது வேலை. இப்போது தி.மு.க. தோழர்களை சிறை சிறையாகப் போய்ப் பார்ப்பதுதான் எனது வேலை’ என்று உங்கள் ஊரில் தான் ஸ்டாலினே ஒப்புக் கொண்டுள்ளாரே!
குணசீலன், விருதுநகர்.
'தமிழகத்தின் அண்ணா ஹஜாரே!’ என்று நடிகர் விஜய்யை அவரது ரசிகர் மன்றத் தலைவர் 'வேலாயுதம்’ பட இசை வெளியீட்டு விழாவில் பேசியுள்ளாரே!
நல்லவேளை! இது அண்ணா ஹஜாரேவுக்கு தெரியாது! இதைக் கேள்விப்பட்டு அவருக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது!
வேதாச்சலம், திருச்செங்கோடு.
நிலப்பறிப்பு வழக்கு டல் அடிப்பது போல் தெரிகிறதே?
இதோ அடுத்து வரப்போகிறது, சொத்துக் குவிப்பு வழக்குகள்!
கலை அரசன், மேட்டுப்பாளையம்.
கிரிமினல்கள் தேர்தலில் போட்டியிடத் தடைவிதிக்கும் புதிய சட்டம் வரப் போகிறதாமே?
ஆமாம்! 'கிரிமினல்கள் இல்லாத அரசியல் _ சட்ட மசோதா’ என்று இதற்குப் பெயர். கிரிமினல் வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களது வேட்பு மனுக்களை இந்தச் சட்டத்தின் மூலம் தள்ளுபடி செய்து விடுவார்கள். இன்றைய நாடாளுமன்றத்திலேயே 162 எம்.பி-க்கள் மீது குற்றப்புகார்கள் இருக்கின்றன. இதை வைத்துப் பார்த்தால் வரவேற்க வேண்டிய சட்டம் இது. இன்னும் மூன்று வாரத்தில் தாக்கல் ஆகப் போகிறது.
வாசுகி, ராஜபாளையம்.
பணமா... குணமா... எது முக்கியம்?
'பணத்தால் அழகான நாயை விலைக்கு வாங்கலாம். ஆனால், அதன் வாலை பணத்தால் ஆட்டுவிக்க முடியாது’ என்பார்கள். நல்லவர்களைப் பார்த்தால் நாய் வாலை நளினமாக ஆட்டும். திருடர்களைப் பார்த்தால் வால் வெடைக்கும். எது முக்கியம் என்று தெரிகிறதா?
கரிகால் வளவன், கோவில்பட்டி.
கேரளாவில் முதலமைச்சரின் குறை தீர்ப்பு கால்சென்டருக்கு நல்ல வரவேற்பாமே?
முதல்வர் உம்மன் சாண்டியின் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கால் சென்டரை செப்டம்பர் 1-ம் தேதி திறந்தார்கள். முதல் நாளே 2.25 லட்சம் மக்கள் இந்தச் சேவைக்குள் நுழைந்தார்கள். இதை அரசு எதிர்பார்க்கவில்லை. அன்று மட்டுமே 4 ஆயிரம் புகார்கள் பதிவாகி உள்ளன. எல்லாப் புகார்களுக்கும் ஒரு மாதத்துக்குள் பதில் தர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார் உம்மன் சாண்டி. ஜெயலலிதாவும் இதை அமல்படுத்தலாம்!
பிரவீன்குமார், திண்டிவனம்.
அண்ணா ஹஜாரேவின் வாழ்க்கை படமாகிறதாமே?
வில்லன் யார் மன்மோகன் சிங்கா? ராகுல் காந்தியா?
******************************************************************************
பெரியார்தாசனின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்!
''கட்சி மாறுவது இல்லை... திராவிட இயக்கத்தில் இருக்கிறேன்!''
பரவசத்தில் இருந்த வைகோ, ''எனக்கு அதிக மகிழ்ச்சியாக இருந்தால் சரியாகப் பேச வராது. மூன்று நாட்களாக நான் அதிகமாகவே மகிழ்ச்சியாக இருக்கிறேன். திராவிட இயக்கத்தின் கருத்துக் களஞ்சியமாக இருக்கும் பேராசிரியர் வந்திருப்பது, நமக்கு 1,000 யானை பலம் கிடைத்ததைப்போல. இங்கே அவர் பேசியது ட்ரெய்லர்தான். மீதியை நெல்லை மாநாட்டில் கேட்கலாம்...'' என்று சுருக்கமாக முடித்ததும் கைதட்டல்களால் அதிர்ந்தது தாயகம்.
முன்னதாக தனது ஏற்புரையில், நையாண்டிகளுக்கு இடையில் பெரியார்தாசன் பேசப் பேச, சிரிப்பும் கைதட்டல்களுமாக அரங்கம் அமர்க்களப்பட்டது. அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்...
''திடீரென ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்தது ஏன்?''
''கட்சி அரசியலில் இதுவரை நான் பார்வையாளனாகத்தான் இருந்தேன். நீண்டகாலமாக தி.மு.க-வின் அனுதாபி. பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் விவகாரத்தில்... தூக்குப் போடப் போறான், பயிற்சி நடக்குது, இப்படித்தான் தூக்கு போடப் போறான்னு ஒரு பக்கம் செய்திகள்... '9-ம் தேதி தூக்கு, அதுக்கு யார் யாரை நியமிச்சு இருக்காங்க?’னு செய்திகள் வந்தபோது, பதைபதைப்பு. அந்த இறுக்கத்தைத் தளர்த்தினது, சட்டரீதியான முயற்சிகள்தான். வாழ்நாள் முழுதும் போராளியா இருந்த பாபா சாகேப் அம்பேத்கர், 'சட்டரீதியாக முறையாக செயல்பட்டால்தான் உரிமைகளை வென்றெடுக்க முடியும்’னு சொல்வார். சரியான அரசியல் நகர்வு இதுதான்னு நினைக்கிறேன். நீண்டகால நாடாளுமன்றவாதியான வைகோ இதைச் சாதிச்சுக் காட்டியிருக்கார். இதுதான் என்னை ம.தி.மு.க-வில் கொண்டுவந்து சேர்த்தது!
தேர்தலில் தோற்றால் 'யார் வீட்ல எழவோ, பாய் போட்டுட்டாங்க’னு போவதுதான் கட்சிகளுடைய வழக்கம். அ.தி.மு.க. தோற்றுவிட்டால் ஊட்டுக்குப் போயிடுவாங்க. தி.மு.க. தோத்துட்டா, பட்டிமன்றம், கவியரங்கம் நடத்துவாங்க. எரியும் மக்கள் பிரச்னைகளைக் கையில் எடுத்து செயல்பட மாட்டாங்க. ஆனா, ம.தி.மு.க. அப்படி இல்லை. இப்போ, அவங்ககிட்ட பதவி, அதிகாரம் எதுவும் இல்லை. ஆனாலும், திராவிட இயக்கப் பார்வையோட தமிழர் நலனுக்கான இயக்கமா நிக்குது. சிலர் தமிழ்த் தேசியம்னு பேசிகிட்டு, பெரியாரையும் பெரியார் இயக்கங்களையும் தமிழர் விரோதமா சித்திரிக்கிறாங்க. அப்படி இல்லைன்னு நிரூபிக்கிற இயக்கமா ம.தி.மு.க. இருக்கு. கலைஞரைப் பொறுத்தவரை, அதிகாரம் அவர் கையில் இருக்கும்போது... இலவசம், சில வேலைவாய்ப்புகளைத் தவிர, தமிழர்களின் பாதுகாப்புக்காக எதையும் அவர் செய்தது இல்லை. திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க அவர் என்ன செய்தார்? சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த அரசியல் கைதிகளை, 10 ஆண்டுகளுக்கும் மேலாக, சிறையிலேயே அடைத்துவைத்து இருந்ததை தடுத்தாரா? 12 ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டு, நிரபராதிகள் என விடுதலை செய்யப்பட்ட குணங்குடி அனீபா போன்றவர்களுக்கு என்ன நிவாரணம்? அவர்கள் இழந்த காலத்தைத் திருப்பித் தரமுடியுமா? இந்தப் பிரச்னையிலும், வாஞ்சையுடன் வைகோ குரல் கொடுக்கிறார். எனவேதான் ம.தி.மு.க.வில் இணைந்தேன்.''
''முதலில் தி.க-வில் இருந்தீர்கள். பிறகு புத்த மதம், பிறகு இஸ்லாமிய மதம்... என மாறிக்கொண்டே இருக்கிறீர்கள் என்று உங்களை விமர்சிக்கிறார்களே?''
''கருத்தாக்கங்களை மாற்றிக்கொள்வது தவறு இல்லை. காங்கிரஸை அழிக்கணும்னு சொன்ன பெரியார்தான், காந்திதேசம்னு பேரு வைக்கச் சொன்னார். 1,300 குறட்பாக்களில் இருக்கிற கருத்துகள்தான், 52 திரிபீடகங்களில் சொல்லப்பட்டு இருக்குதுனு பௌத்தத்துக்குப் போனேன். பிறகு, இறைவன் இருக்கிறானா, இல்லையானும் யோசிச்சப்ப, இறைவனே அருளியது குர்-ஆன், மனிதனின் வார்த்தைகள் இல்லைன்னு உணர்ந்தேன். இது என் சமயக் கருத்துகள். அரசியலைப் பொறுத்தவரை நான் திராவிட இயக்கத்தில்தானே இருக்கிறேன், கட்சி மாறுவது என்கிற பேச்சுக்கே இடம் இல்லை.''
''இன்னமும் மெட்ராஸ் பாஷையிலேயே மேடைகளில் பேசுகிறீர்களே?''
''நான் அடிக்கடி சொல்றதுண்டு... தஞ்சாவூரில் வாசல் வரை காவிரி வந்து பயிர் வைக்கச் சொல்லும். எங்க வட ஆற்காடு பகுதியில 600 அடி தோண்டினாத்தான் தண்ணி வரும். ஊருக்கு ஊர் வித்தியாசம் இருக்கு! உழைச்சுக் களைச்சுக் கிடக்கிறவன்ட்ட 'மண்வெட்டி இருக்கிறதா? பேருந்து போய்விட்டதா?’னு கேட்டா, மம்பட்டி கீது, பஸ் பூடுச்சுனுதான் சொல்வான். இது ஒன்றும் கேவலம் இல்லை. சிந்திச்சுப் பேசுறதுதான் நாகரிகம்னு இல்லை. உழைத்துக் களைத்த மக்களின் அடி உள்ளத்தில் இருந்து உணர்ச்சி வேகத்தோடு வருவது, வட ஆற்காடு வட்டார மொழி வழக்கு. இதுதான் என்னுடைய பாணி. எவ்வளவு உயர்வான கருத்தைச் சொன்னாலும், எங்கும் எப்போதும் எனக்கு இந்தத் தமிழ்தான் வசப்படுகிறது. எதுவாக இருந்தாலும் தமிழ் தமிழ்தானே!''
*******************************************************************************
ஆளுக்கு ஒரு நீதியா?
ஊழல் அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்றம் விசாரணை தொடங்கிய ஆரம்ப கட்டத்திலேயே... அவர்களைப் பணிநீக்கம் செய்வதற்காக சட்டவிதி 311-ல் திருத்தம் கொண்டுவர, வல்லுனர் குழு மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கி இருக்கிறது.
இது ஒரு நல்ல ஆரம்பம் என்றாலும், நம் நாட்டில் அரசு ஊழியர்கள் மட்டுமே ஊழல் செய்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. அரசியல்வாதிகள் ஊழல் செய்வதே இல்லையா? அரசியல்வாதிகளுக்கு ஒரு சட்டம், அரசு ஊழியர்களுக்கு ஒரு சட்டம் என்பது நியாயம்தானா?
உண்மையிலேயே ஊழலை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்றால், இந்தச் சட்டத்தின் கீழ் அரசியல்வாதிகளையும் சேர்க்க வேண்டும். ஊழல் செய்த அரசு ஊழியர்கள் ஆரம்ப கட்டத்தில் டிஸ்மிஸ் செய்யப்படுவது போன்று, அரசியல்வாதிகளின் பதவியும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதும் பறிக்கப்பட வேண்டும். அரசியல்வாதிகளின் பதவியைப் பறிப்பதுடன் நின்றுவிடாமல், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அடுத்து தேர்தலில் நிற்கவும் வாய்ப்பு வழங்கக்கூடாது. மேலும் சிறிய ஊழல், பெரிய ஊழல் என்ற பாகுபாடு பார்க்காமல் ஊழல் செய்த அனைவருக்கும் தண்டனை நிச்சயம் கிடைக்க வேண்டும்.
அரசியல்வாதி, அரசு ஊழியர் இருவருக்குமே சட்டத்தின் மீது பயம் இருந்தால்தான், ஊழல் குறையும்.
- கே.ஆர்.திவ்யா,
வடகாடு, செம்போடை.
*******************************************************************************
மருத்துவமனை விபத்துக்கு அமைச்சர் விஜய் காரணமா?
கடந்த சனிக்கிழமை 3-ம் தேதி பொதுமக்களை சந்திக்கும் நிகழ்ச்சியை தள்ளிவைத்து, வேலூர் அரசு பென்ட்லண்ட் மருத்துவமனை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். நிகழ்ச்சிக்கு அமைச்சர் வந்தபோது, மருத்துவமனை டிரான்ஸ்ஃபார்மரில் பெயின்ட் அடித்துக்கொண்டிருந்த இருவர் மீது திடீரென மின்சாரம் பாயவே... ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார். இன்னொருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் இருக்கிறார்.
இது குறித்து வேலூர் மாநகராட்சி மேயர் கார்த்திகேயன்( தி.மு.க.) நம்மிடம் பேசினார். ''அமைச்சரின் கவனக்குறைவும், மக்கள் மேல் அக்கறை இல்லாததும்தான் இந்த விபத்துக்குக் காரணம். 'கடந்த சனிக் கிழமை வேலூர் நகர பகுதிகள் முழுதும் மின்சாரம் வழங்கப்பட மாட்டாது’ என மின்சார வாரியம் அறிவித்து இருந்தது. அன்றைய தினம் அமைச்சர் வேலூர் நகரத்தின் மையப் பகுதியில் உள்ள மருத்துவமனையில் ஜெனரேட்டர் வசதியை தொடங்கி வைக்க வந்தார். அவர் வருகையை முன்னிட்டு, மருத்துவமனை ஊழியர்கள் நெருக்கடி கொடுத்த காரணத்தால், மின்சார வாரியத்தினர் அந்த மருத்துவமனைக்கு மட்டும் மின்சாரம் கொடுத்திருக்கிறார்கள். அந்த நேரத்தில்தான், டிரான்ஸ்ஃபார்மரில் பெயின்ட் அடித்துக் கொண்டிருந்த கான்ட்ராக்ட் ஊழியர்களான பாஷா, சசிகுமாரை மின்சாரம் தாக்கியது. சம்பவ இடத்திலேயே பாஷா மரணமடைந்தார். சசிகுமார் நிலையும் பரிதாபமாகத்தான் உள்ளது.
அமைச்சர் முதல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வரை எல்லோருமே இதில் தவறு செய்து உள்ளனர். ஒவ்வொரு முறை அமைச்சர் வரும்போதும் பென்ட்லண்ட் மருத்துவ மனைக்குச் செல்வதை மட்டுமே வழக்கமாக வைத்துள்ளார். அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் செய்யவேண்டிய பணிகள் ஏராளமாக இருக்கின்றன. ஆனால், அங்கெல்லாம் அவர் போவது கிடையாது. கடந்த சனிக்கிழமை நடந்தது, தற்செயலான விபத்து என்று வருத்தம் தெரிவித்தால் மட்டும் போதாது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு நிவாரணத் தொகை அளிக்க வேண்டும். மனித உயிரின் மதிப்பு மருத்துவம் படித்த அவருக்குத் தெரியாதா?'' என்றார் காட்டமாக.
மரணம் அடைந்த பாஷாவின் வீடு சீனிவாச நகரில் உள்ளது. அங்கே சென்று, அவரது சகோதரர் சையது இப்ராஹீமைச் சந்தித்தோம்.
''எனது தம்பிக்குத் திருமணமாகி ஏழு வருடங்கள் ஆகின்றன. எங்களது பெரியப்பா வீட்டுத் திருமணம் தற்போது நடந்தது. அதற்காக வந்த எனது உறவினர்கள், இப்படி எனது தம்பியின் இறுதிச் சடங்கிலும் கலந்துகொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்பதை நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை! பாஷாவுக்கு மூன்று குழந் தைகள். வாடகை வீடுதான். அந்த கான்ட்ராக்ட்டில் மாதம்
3,500தான் சம்பளம் வாங்கினான். இப்போது அவரது மனைவியின் எதிர்காலமே கேள்விக்குறி ஆகிவிட்டது. சம்பவம் நடந்தபோது அனைத்துப் பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அந்த இடத்தில் மட்டும் அமைச்சரின் வருகைக்காக மின்சாரம் கொடுக்கப்பட்டதால்தானே இப்படி ஒரு உயிர் அநியாயமாகப் போய் விட்டது! என் தம்பியோடு வேலை செய்த சசிகுமாரும் கஷ்டத்தில் வாழ்பவர்தான். அவருக்கும் ஒரு பெண், இரண்டு ஆண் பிள்ளைகள் இருக்கிறார்கள். எங்களால் அழத்தான் முடியும். அதிகார வர்க்கத்திடம் சென்று மோதவா முடியும். பாஷா, சசிகுமார் குடும்பத்துக்கு அரசுதான் உதவ வேண்டும்!'' என்றார் உருக்கமும் வருத்தமுமாக.
அமைச்சர் விஜய்யிடம் இந்த சம்பவம் பற்றிக் கேட்டோம். ''இந்தச் சம்பவத்துக்கும் எனக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. நான் அந்த விபத்து நடந்த நேரத்தில் அந்த ஆஸ்பத்திரியில் இல்லை. இருந்தாலும் இது பற்றி முழுமையாக விசாரிக்கச் சொல்லி இருக்கிறேன். அரசு மருத்துவமனையை நவீனப்படுத்தும் நோக்கில் ஜெனரேட்டர் வசதியை தொடங்கி வைக்க வந்தபோது இந்தத் துயரச் சம்பவம் நடந்ததில் எனக்கும் வருத்தம்தான்...'' என்றார் சுருக்கமாக.
ஊர் முழுவதும் மின்சாரம் இல்லாத சூழலில், அரசு மருத்துவமனைக்கு மட்டும் மின்சாரம் தரச் சொன்னது யார்? எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் மின்சாரம் தர அனுமதித்தது யார்? - உடனே விசாரணை செய்து தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டால்தான், இனிமேல் இதுபோன்ற தவறுகள் நிகழாமல் இருக்கும்.
******************************************************************************
மணப்பாறையை மிரட்டும் டவுசர் கொள்ளையர்கள்!
''ஆகஸ்ட் 25-ம் தேதி மஞ்சம்பட்டியைச் சேர்ந்த தலைமை ஆசிரியர் சேவியர் மார்ட்டின் வேலைக்குப் போயிட்டு சாயந்திரம் வீட்டுக்கு வர்றதுக்குள்ள, வீட்டுல இருந்த பத்து பவுன் நகையை அடிச்சுட்டுப் போயிட்டானுங்க. 27-ம் தேதி ராத்திரி ஆஞ்சநேயா நகர் ராமதாஸ் வீட்டுல கொள்ளை. அவர் நைட் ஷிப்ட் வேலைக்கும், அவர் மனைவி சென்னைக்கும் போயிருந்தாங்க. அப்ப வீட்டுக் குள்ள புகுந்து ஆறரை பவுன் நகையை எடுத்துட்டுப் போயிட்டானுங்க. அடுத்து வடக்கிப்பட்டி மகேஸ்வரன் வீட்டுல ஆட்கள் இருக்கும்போதே, பூட்டாம இருந்த கேட் வழியே உள்ளே நுழைஞ்சு, தூக்கத்துல இருந்தவங்க கழுத்துல போட்டிருந்த மூன்றரை பவுன் செயினை அறுத் துட்டுப் போயிட்டாங்க. சத்தம் கேட்டு எழுந்த மகேஸ்வரனுக்கு கட்டையால அடி. இத்தனைக்கும் ஆஞ்சநேயா நகர்ல கொள்ளை சம்பவம் நடந்த தகவல் கிடைச்சு, போலீஸ்காரங்க வடக்கிப்பட்டிக்கு ரவுண்ட்ஸ் வந்துட்டுப் போன பிறகுதான் இந்த சம்பவம்.
31-ம் தேதி மணப்பாறையில இருந்து குளித்தலைக்குப் போன முத்துலட்சுமிங்கிற வயசான பாட்டி, ஆண்டவர் கோயில் ஸ்டாப்ல இறங்கிய போது கழுத்தில் கிடந்த ஒன்பதரை பவுன் நகையைக் காணலை. யாரோ அறுத்துட்டாங்க. செப்டம்பர் 1-ம் தேதி இரவு, பன்னப்பட்டி வி.ஏ.ஓ. மனோகரன் வீட்டுல கொள்ளை. வீட்டுல இருந்த ஆட்களை மிரட்டி 10 பவுன் செயினை பறிச்சுட்டுப் போயிட்டானுங்க. மஞ்சம்பட்டி சந்தியாகு வீட்டுல, தனியா இருந்த அவரை கட்டிப்போட்டுட்டு
25 ஆயிரத்தைக் கொள்ளையடிச்சுட்டாங்க. அடுத்து ம.தி.மு.க. புறநகர் மாவட்ட துணைச் செயலாளரான 'தாமஸ்’ தங்கமணி வீட்டு கேட்டை உடைச்சுட்டு, உள்ளே நுழையப் பார்த்தாங்க. தற்செயலா அவங்க பார்த்து சத்தம் போட்டதால... திருட்டுப் பசங்க ஓடிட்டாங்க...'' என்று மணப்பாறைவாசிகள்அது வரை நடந்ததைப் பட்டிய லிட்டார்கள்.
பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான சந்தியாகு வீட்டுக்குச் சென்றோம். ''எல்லாரும் அன்னிக்கு வேளாங்கண்ணி மாதா கோயிலுக்குப் போயிட் டாங்க. நான் மட்டும் தனியா இருந்தேன். நாய் குரைக்குற சத்தம் கேட்டு எழுந்து பார்த்தா... டக் குன்னு யாரோ என் கண்ணுக்கு நேரா டார்ச் லைட்டை அடிச்சாங்க. கண்ணு தெரியாம தடுமாறினப்ப, ரெண்டு பேரு என் மேல விழுந்து கட்டிப் புரண்டானுங்க. நானும் எவ்வளவோ போராடிப் பார்த்தேன். முடியலை. என்னைக் கட்டிப் போட்டுட்டு, வீட்டையெல்லாம் புரட்டி எடுத்துட்டானுங்க. எதுவும் கிடைக்கலை. பணம் நகையெல்லாம் எங்கே வெச்சிருக்கேன்னு கேட்டு அடிச்சானுங்க. 'எங்ககிட்ட ஒண்ணும் இல்லைங்க’ன்னு சொல்லவும், 'ஏண்டா... உன் மருமகன் வெளிநாட்டுல வேலை செய்யுறான். மருமக நர்ஸா வேலை பார்க்குறா. வெளியில போகும்போது எல்லாரும் செயின், நகைன்னு போட்டுட்டுப் போறாங்க. கேட்டா ஒண்ணும் இல்லைன்னா சொல்ற?’ன்னு கேட்டுத் திரும்பவும் அடிச்சானுங்க. கடைசியில மாதா படத்துக்குப் பின்னாடி வெச்சிருந்த 25 ஆயிரம் பணத்தை எடுத்துட்டுப் போயிட் டானுங்க...'' என்று விவரித்தவர், ''வந்தது மொத்தம் மூணு பேர். அவனுங்க தொடர்ந்து ஆட்களையும், வீடுகளையும் கண்காணிச்சுத்தான் கொள்ளையடிக்க வர்றானுங்க. இல்லைன்னா என் மருமகன் வெளிநாட்டுல இருக்குற விஷயமெல்லாம் அவங்களுக்கு எப்படித் தெரியும்? அதுவும் கரெக்டா யாரும் வீட்டுல இல்லாத சமயம் பார்த்து வந்திருக்கானுங்க...'' என்று பதறினார்.
ம.தி.மு.க. பிரமுகர் தாமஸ் தங்கமணி வீட்டுக்குச் சென்றோம். அவர் மனைவி ஜோஸ்லின் மேரி, ''எங்க வீடு தனியா இருக்குது. வீட்டுக்கு வெளி யில எதையோ உடைக்கிற சத்தம் கேட்டு ஜன்னல் வழியா எட்டிப் பார்த்தா... மூணு பேரு கதவை உடைச்சுகிட்டு இருக்கானுங்க. உடனே அவரு, 'போலீ ஸுக்குப் போன் போடு. டேய் யாருடா நீங்க?’ன்னு சத்தம் போட்டாரு. மூணு பேரும் சட்டை எதுவும் போட்டிருக்கல. வெள்ளைக் கலர்ல டவுசர் மட்டும் போட்டிருந்தானுங்க. நாங்க சத்தம் போடவும், குனிஞ்சுகிட்டே சுவர் ஏறிக் குதிச்சுட்டானுங்க. ஆனா, ரொம்ப நேரமா அங்கேயே நின்னுட்டு இருந் தானுங்க. ஒரு வேளை நாங்க வெளியே வருவோம். தாக்கிட்டு கொள்ளையடிக்கலாம்னு நினைச்சானுங்களோ என்னவோ?'' என்றவர், ''இது வரைக்கும் நாலு தடவை எங்க வீட்டுல கொள்ளையடிக்க முயற்சி நடந்திருக்கு. முதல் தடவை மட்டும் ஜன்னலோரமா படுத்திருந்தப்ப மூன்றரை பவுன் தாலி செயினை அறுத்துட்டு ஓடிட்டானுங்க. மத்த தடவை எல்லாம் தப்பிச்சுட்டோம். இருந்தாலும் எப்ப கொள்ளைக்காரனுங்க திரும்பவும் வருவானுங்களோன்னு பயமா இருக்குது!''என்றார்.
மணப்பாறை இன்ஸ்பெக்டரான விஜய காண்டீபனிடம் பேசினோம். ''பெரும்பாலும் ஊரை விட்டு ஒதுக்குப்புறமாக தனியாக இருக்கும் வீடுகளிலோ, வீடுகளில் ஆட்கள் தனியாக இருக்கும்போதோதான் கொள்ளை சம்பவங்கள் நடக்கின்றன. அதனால் இரவு நேரங்களில் போலீஸ் ரோந்துகளை அதிகப்படுத்தி இருக்கிறோம். பழைய சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் பட்டியலை வைத்து ஆராய்ந்து வருகிறோம். பொதுமக்கள் பாதுகாப்புடன் இருப்பது எப்படி என்று நோட்டீஸ்களும் விநியோகித்து வருகிறோம். விரைவில் குற்றவாளிகளைப் பிடித்து விடுவோம்!'' என்று நம்பிக்கையுடன் சொன்னார்.
சீக்கிரம் செய்யுங்க சார். மக்கள் கதிகலங்கி போயிருக் காங்க!
*******************************************************************************
''யாரும் என் பின்னாடி வரவேண்டாம்..''
நேரு விழாவில் கண்ணீர் காட்சிகள்
தி.மு.க-வின் முன்னாள் போக்கு வரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு இப்போது கடலூர் சிறையில் இருக்கிறார். அவரது மகன் அருணுக்கும் தீபிகாவுக்கும்
(நேருவின் தங்கை உமா மகேஸ்வரியின் மகள் இவர்!) திருமண நிச்சயதார்த்தம் செப்டம்பர் 2-ம் தேதி நடக்கும் என்று முடிவான நிலையில்தான் இந்தக் கைது நடந்தது. ஆனால் திட்டமிட்டபடி நிச்சயதார்த்தம் நடந்தது. சிறையில் இருந்து வந்து நேருவும் இதில் கலந்து கொண்டார்!நில அபகரிப்பு வழக்கில் திடீரென கைதாகி, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் நேரு. இந்தக் கைது நடவடிக்கையால், திட்ட மிட்டபடி நிச்சயதார்த்தம் நடக்குமா... நடக்காதா என்று கட்சிக்காரர்கள், குடும்பத்தார் மத்தியில் பெரும் குழப்பம் இருந்தது. ஆனால், 'நான் உள்ளே இருந்தாலும், திட்டமிட்டப்படி நிச்சயதார்த்தம் நடந்தே தீரவேண்டும்’ என நேரு கறாராக சொல்லி விட்டார்.
அதனால் கடலூர் மாவட்டத்தில் கட்சிக்காரர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கும் பொறுப்பு, முன்னாள் அமைச் சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் மூலம் சுமார் 100 பேர்களுக்கும் குறைவாகத்தான் அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டதாம். மேலும் எம்.ஆர்.கே-வின் எதிர்த் தரப்புகளுக்கு அழைப்பு வைக்கப்படவே இல்லையாம். 'இதில் கூடவா பாகுபாடு பார்ப்பது?’ என்று கட்சிக்காரர்கள் சிலர் குமுறி புகார் எழுப்ப... 'பிரச்னை பண்ணவேண்டாம்’ என்று சமாதானம் நடந்ததாம்.
'மகனின் நிச்சயதார்த்தத்துக்கு நேரு கலந்துகொள்ள வேண்டும்’ என வழக்கறிஞர் கள், திருச்சி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி கோகுல்தாஸ், நேருவுக்கு இடைக்கால பெயில் வழங்கி, 'செப்டம்பர் 1-ம் தேதி, மாலை 6 மணிக்குச் சென்றுவிட்டு 2-ம் தேதி மாலை 6 மணிக்குள் சிறைக்கு வந்துவிட வேண்டும்’ என உத்தரவிட்டார். குறிஞ்சிப்பாடியில் நேரு தங்குவதற்காக, ஒரு வீட்டை தயார் செய்து வைத்திருந்தார் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். ஆனால் நேரு அதை மறுத்துவிட்டு, 'சொந்த பந்தங்களுடனும், கட்சிக்காரர்களுடனும் இரவு தங்க விரும்பு கிறேன்’ என சொல்லிவிட்டு கல்யாண மண்டபத்திலேயே போலீஸ் பாதுகாப்புடன் படுத்துக்கொண்டார்.
செப்டம்பர் 2-ம் தேதி காலை 9.00 மணி உற்சாகமாகத் தொடங்கியது நிச்சயதார்த்த விழா. அழைப்பை எதிர்பார்க்காமல் கட்சிக் காரர்கள் உணர்வுபூர்வமாகத் திரள, திருச்சி மாவட்டத்தில் இருந்து வந்த நேருவின் சொந்தக்காரர்களும் குவிந்தனர். முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா, முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கு.பிச்சாண்டி மற்றும் மாஜி எம்.எல்.ஏ-க்கள் திரண்டு வந்தனர். எங்கெங்கும் கரை வேட்டி கள் தென்பட்டதால், திருமண நிச்சய தார்த்தம்போல் இல்லாமல், தி.மு.க. மாநாடு போலத்தான் இருந்தது.
மண்டபத்தின் பின் பக்கம் பிரமாண்ட பந்தல் அமைக்கப் பட்டு காலையும், மதியமும் தடபுடலாக விருந்து பரிமாறப் பட்டது. ஸ்டாலின் மனைவி துர்கா மற்றும் முன்னாள் அமைச்சர்கள் ரசித்து விருந்தை சுவைக்க, நேரு மட்டும் தன் இலை யில் உணவை சாப்பிடாமல் யோசிக்க... 'எதுக்கு கவலைப்படுறீங்க. எல்லாத்தையும் பார்த்துக் கொள்ளலாம். தலைவர் இருக்கிறார். தைரியமாக சாப்பிடுங்கள்...’ என்று உடன் இருந்த தொண்டர்கள் வற்புறுத்த ஒருவழியாக சாப்பிட்டு முடித்தார் நேரு!
பந்தலில் உட்கார்ந்திருந்த நேருவைப் பார்த்தவர்கள் எல்லாம் நலம் விசாரித்தார்கள். ஒரு கட்டத்தில் பக்கத்தில் இருந்த எம்.ஆர்.கே-விடம், சிறையில் படும் துன்பங்களை நேரு விவரித்துச்சொல்ல... அவரும், உடன் இருந்த நிர்வாகிகளும் நேருவுக்கு தைரியம் கொடுத்தனர்.
நேரு தன் மகன் அருணைக் கூப்பிட்டு, 'எல்லாத்தையும் பார்த்துக்கோ...’ என்று அடிக்கடி சொன்னார். நேரம் ஆக ஆக... அவர் குரலில் தடுமாற்றம்; முகமும் மாறிக்கொண்டே இருந்தது. 'அண்ணன் போஸ்டிங்கில் இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி... போலீஸ் பாதுகாப்போடுதான் எல்லாம் நடக்கிறது. இந்த விழாவைத் தடுக்கத்தான் ஜெயலலிதா ஒரு பொய் வழக்கை போட்டு அண்ணனை சிறையில் தள்ளினாங்க. அதான் அவர் மனசு உடைஞ்சு போயிட்டார், ஆனாலும் விழாவை சிறப்பா நடத்தி கலக்கிட்டார்...’ என புளகாங்கிதம் அடைந்தார்கள், அவரது தொண்டர்கள்.
மாலை 4 மணி ஆனதும், போலீஸ்காரர்கள், 'டைம் ஆகிடுச்சு சார். கிளம்பலாம்’ என்று நேருவிடம் சொன்னதும்... நேருவுக்கும், சொந்த பந்தங்களுக்கும் கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டது. அனைவரையும் சமாதானப் படுத்திவிட்டு, கையை அசைத்தபடியே போலீஸ் வேனில் ஏறி உட்கார்ந்த நேரு, 'யாரும் என் பின்னாடி வரவேண்டாம்...’ என்று தொண்டர்களுக்கு அன்புக் கட்டளை போட்டார். ஆனாலும், சிறை வரை சென்று வழியனுப்பிவிட்டுத்தான் வந்தார் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!
******************************************************************************
''அம்மா.. அம்மான்னு சொல்லத்தான் ஆடு, மாடு தர்றாங்க!''
ஜெ.வை சீண்டிய செல்வகணபதி!
சேலம் கோட்டை மைதானத்தில் மாலை 7 மணிக்கு தொடங்கியது கூட்டம். முதலில் மைக் பிடித்த மாநகரச் செயலாளர் கலையமுதன், ''தற்போது தமிழ்நாட்டில் காட்டுத் தர்பார் நடக்கிறது. தொடர்ந்து தி.மு.க. தலைவர்களைக் கைது செய்து வருகின்றனர். ஆனால், இதற்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம்...'' என்று அர்ச்சனையை ஆரம்பித்து வைத்தார்.
அடுத்துப் பேசிய வீரபாண்டி ராஜா, '' தி.மு.க-வை விட்டு எம்.ஜி.ஆர். போனபோது கலங்காமல் கட்சியைக் காத்தவர் கலைஞர். ஜன நாயகத்துக்காகப் பாடுபடுகிற கட்சி இது. தொண்டர்களின் உயிர் மூச்சு இருக்கும் வரை, எவனாலும் தி.மு.க-வை அழிக்க முடியாது!'' என்றார்.
பனமரத்துப்பட்டி ராஜேந்திரன், ''உழைப்பால், தியாகத்தால் வளர்ந்த கட்சிதான் தி.மு.க. ஜெய லலிதா முதலமைச்சராக இருந்தபோது சுனாமி ஏற்பட்டது. அதற்காக நிதியைத் திரட்டி கோட்டைக்குப் போய் கொடுத்து ஜனநாயக மரபையும் பண்பையும் காத்தார், நமது தளபதி. அதேபோல் 2006-11 தி.மு.க. ஆட்சியில் சட்டப் பேரவை கூட்டங்களில் அ.தி.மு.க. வெளிநடப்பு செய்தபோது ஓ.பி.எஸ்-ஸை சந்தித்து, சட்டப் பேரவைக் கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்து, ஜனநாயகத்தின் மாண்பைக் காத்தார், நமது தளபதி. அந்தத் தளபதியின் வழிகாட்டல்படி நாங்கள் என்றும் வழி நடப்போம்...'' என்று பேசிய அவர், மறந்தும்கூட வீரபாண்டியாரின் பெயரை உச்சரிக்கவில்லை!
செல்வகணபதி எம்.பி. பேசும்போது, ''பச்ச கலரு ஜிங்குச்சா, சிவப்பு கலரு ஜிங்குச்சாங்கற மாதிரி சட்ட சபையில் ஜனநாயகம் ஜிங்குச்சா போட்டுக்கிட்டு இருக்கு. சட்டசபையில் ஒவ்வொருத்தரும் 'அம்மா, அம்மா’ன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க. 'அம்மா, அம்மா’ன்னு சொல்லத்தான் ஆடு, மாடு தராய்ங்க போல!'' என்று காமெடியாகப் பேசினார்.
இறுதியாக மைக் பிடித்தார் ஸ்டாலின். ''இந்தக் கூட்டத்துக்கு எப்படியும் வீரபாண்டியார் வந்து விடுவார் என நேற்று வரை நினைத்தோம். ஜாமீன் கிடைத்தும், தொடர்ந்து அரசு விடுமுறை என்பதால், இந்த நிகழ்ச்சிக்கு அவர் வரமுடியவில்லை. கோவை சிறையில் இருந்தாலும், இந்தக் கூட்டத்தைப் பற்றித்தான் சிந்தித்துக்கொண்டு இருப்பார். நான் சேலத்துக்கு எத்தனையோ நிகழ்ச்சிகளுக்கு வந்திருக்கிறேன். அரசு விழாவுக்கு... கொடியேற்று விழாவுக்கு... திருமண நிகழ்ச்சிகளுக்கு என்று எல்லாம் வந்திருக்கிறேன். ஆனால், சேலத்தில் வீரபாண்டியார் இல்லாமல் எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற் றது கிடையாது. இதைப் பேசும்போது, நீங்கள் ஆர்ப்பரிப்பதைப் பார்த்து உங்கள் உள்ளங்களில் எப்படி வீரபாண்டியார் இருக்கிறார் என்பதை உணர்கிறேன்!
மக்களால் மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டதுதான் ஜனநாயகம். ஆனால், ஜெயலலிதாவுக்காக ஜெய லலிதாவே ஏற்படுத்தியதுதான் இன்றைய தமிழக அரசின் ஜனநாயகம். சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் என்று ஒருவர் இருக்கிறாரா என்பதே தெரியவில்லை. சட்டப் பேரவை வெளிநடப்பு என்பது ஜனநாயக மரபு. நாங்கள் வெளிநடப்பு செய்ய முடியாதவாறு மூலைக்கு ஒருவரை உட்கார வைத்து விடுகிறார்கள். ஒரே வரிசையில் இடம் கேட்டால்கூட தரவில்லை. சட்டசபைக் கேள்வி நேரத்தில்கூட கலைஞரைத் தரக்குறைவாகப் பேசுகிறார்கள்.
நாங்கள் எதற்கும் அஞ்ச மாட்டோம். வீரபாண்டி யாரை கூப்பிட்டு, 'எத்தனை முறை சிறை சென்று இருக்கிறீர்கள்? உங்கள் மீது எத்தனை கேஸ் இருக்கிறது?’ என்று கேட்டுப் பாருங்கள், தெரியும்! இதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். நாங்கள் கொலை, கொள்ளை எல்லாம் செய்துவிட்டுச் சிறைக்குச் செல்லவில்லை. வீரபாண்டியார் மேல் கொடுத்தகேஸுக்கு முன்ஜாமீன் வாங்கிக் கொண்டு கோர்ட்டின் உத்தரவுப்படி விசாரணைக்கு ஒத்துழைத்தோம்! ஓடிப்போய் ஒளிந்து கொண் டாரா அவர்? விசாரணையை முடித்து வெளியே வரும்போது, 'இன்னொரு வழக்கில் உங்கள் மீது எஃப்.ஐ.ஆர்.’ என்று சொல்லி கைது செய்கி றார்கள். இது எந்த விதத்தில் நியாயம்? நாங்கள் மிசாவில் பார்க்காததா? இந்த பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது. அ.தி.மு.க-வினர் மீது ஆதாரங்களோடு புகார் செய்தால்கூட, காவல் துறை விசாரிப்பதில்லை. சேலத்தில் எம்.எல்.ஏ. வெங்கடாசலம் மிரட்டியதாக புகார் இருக்கிறது. ஜோலார்பேட்டையில் எம்.எல்.ஏ. வீரமணி மிரட்டியதாக புகார் கொடுத்திருக்கிறார்கள். அமைச்சர் சம்பத், எம்.எல்.ஏ. ராஜேந்திரன், சிவசுப்ரமணியன் உள்பட பல அ.தி.மு.க-வினர் மீது புகார் இருந்தும், இதுவரை போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவே இல்லை..!'' என்று பொங்கினார்.
'வீரபாண்டியார் இல்லாமலே அசத்திட்டாங்கப்பா...’ என்றபடி கலைந்தனர், உடன்பிறப்புகள்.
******************************************************************************
''கேஸை வாபஸ் வாங்கலைன்னா... நீ முடிஞ்ச..''
ஈரோடு திகில்
ஈரோடு நகரின் மையப்பகுதியில் அபிராமி தியேட்டருக்கு எதிரே லாட்ஜ் நடத்திவருகிறார் குருசாமி. இவர், பக்கத்துத் தெருவில் லாட்ஜ் நடத்தும் வைரவேல் என்பவரிடம், லாட்ஜை பவர் பத்திரத்தில் எழுதிக் கொடுத்து கடன் வாங்கி இருக்கிறார். இந்த கடனுக்கு வட்டி கொடுக்கப் போன குருசாமியிடம், 'பவர் பத்திரத்தில் எழுதிக் கொடுத்தபடி லாட்ஜை என் பெயருக்கு கிரயம் செய்து கொடுத்துவிடு’ என்று கேட்டுள்ளார், வைரவேல். இதனால் இருவருக்கும் இடையே லடாய் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த 2-ம் தேதி காலை குருசாமி லாட்ஜ்க்கு வந்திருக்கிறார் வைரவேல். அப்போது குருசாமியின் மகன் பிரகாஷ§ம் உடன் இருந் திருக்கிறார். கோபத்துடன் வந்த வைரவேல், 'கடன் வாங்கியதற்காக உடனே லாட்ஜை காலி செய்’ என்று தகராறு செய்யவே பிரச்னை முற்றியிருக்கிறது. திடீரென, வைரவேல் துப்பாக்கியை எடுத்து பிரகாஷின் நெற்றிப் பொட்டில் வைத்து மிரட்டி இருக்கிறார். பிரகாஷ் சுதாரித்துக் கொண்டு கையை தட்டி விட்டதால், லாட்ஜின் மேற்கூரையில் குண்டு பட்டிருக்கிறது. சம்பவம் கேள்விப்பட்டு ஆட்கள் திரண்டுவிடவே, வைரவேல் உடனடியாக பேலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
லாட்ஜ் உரிமையாளர் குருசாமியிடம் பேசியபோது, '' லாட்ஜை புதுப்பித்துக் கட்டுவதற்காக வங்கியில் லோன் வாங்கி இருந்தேன். இடையில் என் உடல்நிலை சரியில்லாமல் போனதால் பணத்தை திருப்பிக் கட்ட முடியவில்லை. இதனால் வங்கியில் இருந்து எனக்கு நெருக்கடி வந்தது. அப்போது என்ன செய்வது என்று தெரியாத நிலையில், வட்டிக்குப் பணம் கொடுக்கும் வைரவேலிடம் கடன் வாங்கினேன். அவரிடம்
1 கோடி கேட்டேன். அவரும் தருவதாக ஒப்புக்கொண்டு பவர் பத்திரத்தில் எழுதி வாங்கிக்கொண்டார். ஆனால் இது வரைக்கும் எனக்கு
5 லட்சம் மட்டும்தான் கொடுத்து இருக்கிறார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருப்பதை சாதக மாக்கிக் கொண்டு... மீதி பணத்தைத் தராமல் பத்துப் பதினஞ்சு அடியாட்களைக் கூட்டிவந்து லாட்ஜை காலி பண்ணச் சொல்லி மிரட்டினார்.
'பிரகாஷ் இன்டர்நேஷனல் லாட்ஜ்’ங்கிற போர்டை கழட்டிட்டு உள்ள இருந்த என் அப்பா படத்தையும் தூக்கிட்டுப் போயிட்டார். அவரை கைது பண்ணிட்டுப் போனதில் இருந்து, 'கேஸை வாபஸ் வாங்கலைன்னா... நீ முடிஞ்சடா’ன்னு வெவ்வேறு காயின் பாக்ஸ் போன்களில் இருந்து மிரட்டுறாங்க. எந்த நேரமும் அடியாட்களை வைத்துக்கொண்டு கட்டப்பஞ்சாயத்து செய்யும் இவரால் என் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். என் மகன் மயிரிழையில்தான் உயிர் பிழைச் சான்...'' என்று பதறினார். வைரவேல் மற்றும் அவரது கூட்டாளிகள் சிலரும் சிறையில் இருக்கும் நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளர் விநாயகமூர்த்தி, ''குருசாமி கடுமையான கடன் பிரச்னையில் சிக்கி பலரிடமும் கடன் வாங்கி இருக்கிறார். பல மாதங்களாக வட்டி கட்டாத நிலையில், அதைக் கேட்கப் போன சமயத்தில்தான் பிரச்னை செய்திருக்கிறார்கள். பாதுகாப்புக்காக அவர் கொண்டுபோன துப்பாக்கியால், கொலை செய்ய முயற்சி செய்ததாகச் சொல்லிவிட்டார்கள்!'' என்றார்.
காவல் துறை தீரவிசாரித்து நடவடிக்கை எடுக்கட்டும்!
******************************************************************************
செட்டியார் சர்ச்சையில் புலிவேசம்!
இதுகுறித்து, ஆரிய வைஸ்ய முன்னேற்றப் பேரவை மாநிலத் தலைவரும், அனைத்து செட்டியார் நல முன்னேற்றப் பேரவையின் சேலம் மாவட்டத் தலைவருமான அரவிந்தன் நம்மிடம் பேசினார். ''யார் வம்புக்கும் போகாமல் அமைதியான முறையில் வியாபாரம் செய்து மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகிறோம். தான் உண்டு தங்கள் தொழில் உண்டு என்று வாழ்ந்து கொண்டிருக்கும் எங்களைச் சிலர் சீண்டிப் பார்க்கிறார்கள். சமீபத்தில் வெளியாகி இருக்கும் 'புலிவேசம்’ படத்தில் எங்கள் இன மக்களை மிகவும் கேவலமாகச் சித்திரித்து இருக்கின்றனர். அந்தப் படத்தில் வில்லனாக நடிக்கும் மன்சூர் அலிகான், 'பெண்களை கிட்னாப் செய்து செட்டியாருக்கு அனுப்பி வைடா’ என்று கூறுகிறார். மேலும், பெண்களை கிட்னாப் செய்யும் தொழிலுக்கு மீடியேட்டராக செட்டியார் என்று ஒருவரைக் காட்டுகிறார் கள். நாங்கள் பெண்களை தெய்வ மாக மதிக்கக் கூடியவர்கள். குறிப்பிட்டு எங்கள் இனத்தைச் சேர்ந்தவர் பெண்களைக் கடத்துவது போலக் காட்டுவது, எங்களுக்கு மிகுந்த மனவேதனை அளிப்பதாக இருக்கிறது. இப்படி காட்சிகளை அமைத்ததற்காக, இயக்குநர் பி.வாசு மற்றும் நடிகர் மன்சூர் அலிகான் இருவரும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால், தமிழகம் முழுவதும் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்!'' என்றார் காட்டமாக.
இதுபற்றி, நடிகர் மன்சூர் அலிகானிடம் கேட்டோம். ''நான் அந்தப் படத்தில் நடித்து ஒன்றரை ஆண்டுகள் ஆகி விட்டது. என்ன வசனம் பேசினேன் என்று எனக்கு ஞாபகம் இல்லை...'' என்று சொன்னார்.
எப்படியோ, விவகாரம் சிக்கல் ஆகாமல் முடிந்தால் சரி.
******************************************************************************
சூடு பிடிக்கும் வல்லடிக்காரர் கோயில் வழக்கு!
என்ன சொல்லப் போகிறார் தாசில்தார்?
சமீபத்திய சட்டமன்றத் தேர்தலின்போது, மேலூர் அருகில் உள்ள அம்பலக்காரன்பட்டி வல்லடிகாரர் கோயிலுக்கு அழகிரி தன் பரிவாரங்களுடன் வாக்கு சேகரிக்கச் சென்றார். அதைப் படம் பிடிக்கச் சென்ற மேலூர் தாசில்தார் காளிமுத்துவை அழகிரி ஆட்கள் தாக்க... தாசில்தார் புகாரின் பேரில் அழகிரி உள்ளிட்டவர்கள் மீது வழக்கு போடப்பட்டது. இதைப் பொய் வழக்கு ஆக்குவதற்காக, 'தன்னை யாரும் தாக்கவில்லை’ என்று காளிமுத்துவை பல்டி அடிக்க வைத்தார்கள். ஆனால், மேலூர் இன்ஸ்பெக்டர் மாடசாமியோ, ''தாசில்தார் தாக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன...'' என்று உறுதியாக நின்றதால், அவருக்கே துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு போடும் அளவுக்கு நிலைமை சீரியஸானது.
இந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி அழகிரி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், ''சம்பவம் நடந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதால், போலீஸார் இந்த வழக்கைத் தொடர்ந்து விசாரிக் கலாம்...'' என்றது உயர் நீதிமன்றம். இதை அடுத்து, சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ மூலம், மேலும் 17 நபர்களை அடையாளம் கண்டுபிடித்து, அவர்களையும் குற்றவாளிகளாகச் சேர்த்தது போலீஸ். முதல் குற்றவாளியான அழகிரி மத்திய அமைச்சராக இருப்பதால், அவர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வதற்கு மக்களவை சபாநாயகரிடம் அனுமதி வாங்க வேண்டும் என்று சொல்லப்பட்டதால், கடந்த ஜூலை 9-ம் தேதி அதற்கான கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பினார்கள். இந்த நிலையில்தான், ஆகஸ்ட் 24-ல் அதிரடியாக அழகிரி உள்ளிட்டவர்கள் மீது மேலூர் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
''அழகிரி மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வதற்கு மக்களவை சபாநாயகரின் அனுமதி கிடைத்துவிட்டதா?'' என்று போலீஸ் வட்டாரத்தில் கேட்டோம். ''அனுமதி கேட்டு கடிதம் அனுப்பி 45 நாட்களுக்கு மேலாகியும் டெல்லியில் இருந்து எந்த பதிலும் இல்லை. ஆகவே, சட்ட வல்லுநர்கள் மற்றும் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஆலோசனை செய்தபோது ஒரு தெளிவு கிடைத்தது. அதாவது மத்திய அமைச்சராக இருப்பவர், 'அரசு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்றபோது, பிரச்னை ஏற்பட்டிருந்தால் மட்டுமே சபாநாயகரின் அனுமதி வாங்க வேண்டும்!’ என்று சி.ஆர்.பி.சி. செக்ஷன் 197-ல் தெளிவாகச் சொல்லப்பட்டு உள்ளது. இது, தேர்தல் விவகாரம் என்பதால் அனுமதி தேவை இல்லை. அதனால்தான், அழகிரி மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது!'' என்கிறது போலீஸ்.
'தேர்தல் ஆணைய உத்தரவை மீறி வல்லடிக்காரர் கோயிலுக்கு 1.4.11-ல் முதலாவது எதிரி மு.க.அழகிரி தலைமையில் வாக்கு சேகரிக்கச் சென்ற 21 பேர், அங்கு இருந்த பொதுமக்களிடம் உதயசூரியனுக்கு வாக்கு அளிக்குமாறு கேட்டதை, முதலாவது சாட்சியான தாசில்தார் காளிமுத்து வீடியோவில் படம் எடுக்க உத்தரவிட்டார். அப்போது, முதலாவது எதிரியானவர் முதலாவது சாட்சியைப் பார்த்து, 'உன்னை யாருடா படம் எடுக்கச் சொன்னது?’ என்று ஆவேசமாகச் சத்தம் போட்டதுடன், 'அடிங்கடா இவனை!’ என்று மற்ற எதிரிகளைத் தூண்டிவிட்டார். உடனே மன்னன், ரகுபதி, திருஞானம் உள்ளிட்ட மற்ற மூன்று எதிரிகள் காளிமுத்துவைத் தாக்கி தலையிலும், இடது கை மோதிர விரலிலும் காயத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அப்போது 5 முதல் 21-ம் எதிரிகள் வரை தாசில்தார் உள்ளிட்டவர்களைத் தாக்க முற்பட்டும், வீடியோ கேம ராவைப் பறிக்க முற்பட்டும் இருக்கிறார்கள். எனவே, ஒன்று முதல் 21 வரையிலான எதிரிகள் அனைவருமே தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் புரிந்திருக்கிறார்கள்!’ - என்று போகிறது அழகிரி மீது தாக்கல் செய்யப்பட்டு இருக்கும் குற்றப் பத்திரிகை வாசகங்கள்.
சுமார் 150 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையில் 26 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். தாசில்தார் காளிமுத்து பல்டி அடித்துவிட்டாலும், அப்போது அவருடன் சென்றிருந்த துணை தாசில்தார் முத்துராமலிங்கம், லோக்கல் ஃபண்ட் ஆடிட்டர் சலீம், வருவாய் ஆய்வாளர் பூபாண்டி, வீடியோகிராபர் கண்ணன் உள்ளிட்டவர்கள் சம்பவம் நடந்ததை ஆணித்தரமாக உறுதிப்படுத்தி இருக்கிறார்களாம். 'சட்டவிரோதமாகக் கூடி கலகத்தை உருவாக்குதல், அரசு ஊழியரைப் பணி செய்யவிடாமல் தடுத்து அடித்தல், தடை உத்தரவை மீறுதல், முன்னால் இருந்துகொண்டு அடிக்கச் சொல்லி தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்தல்’ உள்ளிட்ட வலுவான செக்ஷன்களை அழகிரி மீது பாய்ச்சி இருக்கிறார்கள்.
இன்ஸ்பெக்டர் மாடசாமியிடம் பேசினோம். ''இந்த வழக்கின் தொடக்கத்தில் இருந்தே எனக்கு ஏகப்பட்ட இடையூறுகள், நெருக்கடிகள், மிரட்டல்கள் இருந்துச்சு. இப்பவும் என்னைப் பின்வாங்க வைப்பதற்காக மறைமுகமாக இடைஞ்சல்களைக் கொடுக்கிறார்கள். நான் எனது கடமையை செய்து முடித்துவிட்டேன். இனிமேல் தீர்ப்பு சொல்ல வேண்டியது நீதிமன்றம்தான்!'' என்றார்.'' எத்தனையோ பொய் வழக்குகளை எங்கள் மீது போட ஆளும் கட்சி திட்டமிட்டுள்ளது. அதில் இதுவும் ஒன்று. எல்லா வழக்குகளையும் நாங்கள் சந்திப்போம்!'' என்று அழகிரி தரப்பினர் சொல்கிறார்கள்.
அழகிரி தவிர மற்ற 17 பேருக்கும் அரெஸ்ட் வாரன்ட் பிறப்பிக்கப்பட்டதும், அனைவரும் நீதி மன்றத்தில் முன்ஜாமீன் வாங்கி இருக்கிறார்கள். இந்த வழக்கைக் காரணம் காட்டி அழகிரியின் அமைச்சர் பதவியை பறிக்க நினைக்கிறதாம், ஆளும் கட்சி!
******************************************************************************
அதிர்ச்சியில் நயினார்... அதிருப்தியில் பாப்புலர்?
அதன் அடிப்படையில் தற்போது நெல்லை மாநகரம், நெல்லை புறநகர் வடக்கு மாவட்டம், நெல்லை புறநகர் தெற்கு மாவட்டம் என கட்சி நிர்வாகம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் வேளையில் அ.தி.மு.க-வில் புதிதாகப் பதவிகளை உருவாக்கி, பொறுப்புகளை அள்ளிக் கொடுத்துள்ளார் ஜெயலலிதா. வடக்கு மாவட்டச் செயலாளராக அமைச்சர் செந்தூர்பாண்டியனும், தெற்கு மாவட்டச் செயலாளராக பி.ஜி.ராஜேந்திரனும், நெல்லை மாநகரச் செயலாளராக நயினார் நாகேந்திரனும் நியமிக்கப்பட்டு உள்ளனர். 'தெற்கு மாவட் டத்துக்கு ராஜேந்திரன் நியமிக்கப்பட்டு உள்ளதால், தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் பூங்கோதை, முன்னாள் எம்.எல்.ஏ-வான அப்பாவு ஆகியோர் செல்வாக்காக இருந்த பகுதிகள் இனி அ.தி.மு.க-வின் கோட்டையாக மாறும்’ என ஆரூடம் சொல்கிறார்கள் கட்சியினர்.
ஆனால், நயினார் நாகேந்திரன் ஆதரவாளர்கள், ''மாநில ஜெ. பேரவை செயலாளர் பொறுப்பில் இருந்த நாகேந்திரனை அந்த பொறுப்பில் இருந்து விடுவித்து மாநகரச் செயலாளர் பதவி கொடுத்து இருக்கிறார்கள். அமைச்சரவையில் தனக்கு நிச்சயம் இடம் கிடைக்கும் என நம்பிக் கொண்டிருந்த நிலையில், இசக்கி சுப்பையா அமைச்சர் ஆக்கப்பட்டார். அவர் நீக்கப்பட்டதும் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என நம்பினார். ஆனால்,யாருமே எதிர்பார்க்காத வகையில் செந்தூர்பாண்டியன் அமைச்சர் ஆக்கப்பட்டார். இப்படி ஏமாற்றத்தில் இருந்த நாகேந்திரனுக்கு மாநில பொறுப்பில் இருந்து விடுவித்து, மாநகர பொறுப்பு கொடுத்ததில் வருத்தமே...'' என்றார்கள் அழுத்தமாக.
''முன்னாள் மாநகரச் செயலாளரானபாப்புலர் முத்தையா, அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்த ஐந்து வருடங்களிலும் வாரம்தோறும் சனிக்கிழமைகளில் தொடர்ச்சியாகப் பொதுக் கூட்டங்களை நடத்தியவர். அதனால் மீண்டும் தனக்கு பொறுப்பு கொடுக்கப்படும் என நம்பிக் கொண்டிருந்த நிலையில், அது கிடைக்காததால் அதிருப்தி அடைந்து உள்ளார்...' என்று சொன்னார்கள் முத்தையா ஆதரவாளர்கள்.
நயினார் நாகேந்திரனிடம் கேட்டதற்கு, ''இந்த பொறுப்பும் எனக்கு மகிழ்ச்சிதான். நெல்லை மேயர் தேர்தலில் வெற்றிக் கனியை பறித்து அம்மாவிடம் ஒப்படைப்பது மட்டுமே எனது நோக்கம்!'' என்றார் உற்சாகமாகவே.
முன்னாள் மாநகர செயலாளரான பாப்புலர் முத்தையா, ''பதவியைக் கொடுத்த அம்மா இப்போது எடுத்திருக்கிறார். அவரது செயல்களுக்கு பல காரணங்கள் இருக்கும். கடந்த ஆட்சியில் மாநகரம் முழுவதும் வாரந்தோறும் பொதுக்கூட்டங்களை நடத்தி கட்சி அமைப்புகளை பலமாக வைத்திருந்தேன். அந்த திருப்தி எனக்கு போதும்...'' என்று சொன் னார்.
அதிருப்தியாளர்களை சமாளிக்க என்ன செய்யப் போகிறார், ஜெயலலிதா?
*******************************************************************************
வாய்தா வாங்குவதற்கு முற்றுப்புள்ளி!
ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு டெல்லி காட்சிகள்
ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கு பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. முன்பு தமிழகத்தில் நடந்து வந்த இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 2004-ம் ஆண்டு முதல் பெங்களூரு தனி நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது. 'வழக்கைத் தொடர உரிய அனுமதி பெறவில்லை, விசாரணை முழுமையும் ரத்து செய்ய வேண்டும், குற்றப்பத்திரிகையை மொழிபெயர்த்து தரவேண்டும், சாட்சி விசாரணை நடத்தக் கூடாது, குற்றப் பத்திரிகையில் தவறுகள்...’ என்று பல்வேறு காரணங்கள் காட்டி, வழக்கு இழுத்தடிக்கப்பட்டது.
சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்வர் ஆன நிலையில் பெங்களூரு நீதிமன்றம் கிடுக்கிப்பிடி போட ஆரம்பித்தது. 'வாக்குமூலத்தை பதிவு செய்ய ஜெயலலிதா நேரில் ஆஜர் ஆக வேண்டும்’ என்று கண்டிப்பு காட்டவே, உச்ச நீதிமன்றத்தை அணுகினார் ஜெயலலிதா.
கடந்த 5-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா சார்பில், ஹரிஷ் சால்வே ஆஜர் ஆனார். சீனியர் வழக்கறிஞரான இவர், உச்ச நீதிமன்றத்தில் அதிகம் கட்டணம் வாங்கும் வக்கீல்களில் ஒருவர் என்று சொல்லப்படுபவர். அம்பானி சகோதரர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னையில் ஆஜர் ஆகும் அளவுக்கு பிரபலமானவர். அதனால் தான் ஹரீஷ் சால்வேவை ஜெயலலிதாதான் ஓகே செய்தாராம். டெல்லியில் பிரபலமான தாஜ் மான்சிங் என்கிற நட்சத்திர ஹோட்டலில்தான் இவருடைய அலுவலகம் இயங்கிவருகிறது என்றால் பாருங்களேன்!
வழக்கு விசாரணைக்கு வந்ததுமே ஜெயலலிதாவின் மனுவைத் தள்ளுபடி செய்யும் மனநிலையில்தான் நீதிபதிகள் இருந்தார்களாம். 'இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள என்ன முகாந்திரம் இருக்கிறது? சீனியர் வழக்கறிஞரான உங்களுக்கு இது தெரியாதா?’ என்று நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, தீபக் வர்மா ஆகிய இருவரும் கேட்டுள்ளனர். 'குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 313-ன் படி குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆக வேண்டும். இது குற்றம் சாட்டபட்டவருக்கான உரிமையும் கூட. நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் ஆக வேண்டும் என்பது தொடர்ந்து நடைமுறையில் இருந்து வருகிறது’ என்றார்கள் நீதிபதிகள். உடனே ஹரீஷ் சால்வே, ''நீதிமன்றம் எழுப்பும் கேள்விகளை கொடுத்தால் அதற்கு உரிய பதில் கொடுக்க எனது கட்சிக்காரர் தயாராக இருக்கிறார்'' என்று பதில் அளித்தார். ''கேள்விகள் கேட்டு அதற்கு குற்றம் சாட்டப்பட்டவர் பதில் சொல்லும் போது அதை வைத்து துணைக் கேள்விகளை நீதிபதி கேட்பார். அதோடு குற்றம் சாட்டப்பட்டவர் உண்மையைத்தான் சொல்கிறாரா? என்பதை அவரது ரியாக்ஷனை வைத்தே நீதிபதி முடிவு எடுக்க முடியும். எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்கும்போது அதை நீதிமன்றத்தால் புரிந்து கொள்ளமுடியாது. நேரில் ஆஜர் ஆவதுதான் உங்களுக்கு நன்மையாக இருக்கும். இந்த நடைமுறையை மாற்றினால் அது பின்னால் வருகிற வழக்குகளுக்கு முன்னுதாரணம் ஆகிவிடும்!'' என்று நீதிபதிகள் கூறினார்கள்.
கடைசியில் பாதுகாப்பு பிரச்னையைக் கிளப்பினார் ஹரீஷ் சால்வே. அதற்கு, ''எந்த நாளில் பெங்களூரு கோர்ட்டில் ஜெயலலிதா ஆஜர் ஆவாரோ அந்த நாளில் கூடுதல் பாதுகாப்பை கொடுக்க சொல்கிறோம்'' என்று பதில் தந்தார்கள் நீதிபதிகள்.
மொத்தத்தில் ஹரீஷ் சால்வே வாதத்தைவிட நீதிபதிகள்தான் அதிகமாக கருத்து சொன்னார்கள். கடைசியில் ''பெங்களூரு நீதிமன்றத்தில் நடந்துவரும் வழக்கை மேலும் சில மாதங்கள் தாமதம் செய்யும் செயலாகவே இது தெரிகிறது. இதனால் ஜெயலலிதா பெங்களூரூ கோர்ட்டில் கட்டாயம் ஆஜர் ஆக வேண்டும். எப்போது ஆஜர் ஆவார் என்பதை 12-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும்!'' என்று உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு பற்றி சட்ட நிபுணர்கள் சிலரிடம் பேசிய போது, ''இந்த வழக்கில் இனியும் ஜெயலலிதா வாய்தா வாங்கிக் கொண்டிருக்க முடியாது. ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்து கொண்டு, சொத்து குவிப்பு வழக்கில் ஆஜர் ஆவதை ஜெயலலிதா விரும்பவில்லை. அப்படி அவர் ஆஜர் ஆகும் போது தேசிய சேனல்கள் வரையில் அது செய்தியாகும். அதை தவிர்க்க விரும்புகிறார். கேள்விகளை அனுப்பி அதற்கு பதில் சொல்வதாக இருந்தாலும், அவர் சொல்லும் பதில் உண்மையா என்பதை கோர்ட்டில் அவர் நேரில் வந்து சொல்லும் போதுதான் தெரியும். சம்பந்தப்பட்டவரின் முகபாவனைகளை நீதிபதி உற்று நோக்குவார். அதற்கெல்லாம் வாய்ப்பு இல்லாமல் போகக் கூடாது என்பதற்காகத்தான் நீதிமன்றத்தில் ஆஜர் ஆக சொல்கிறார்கள். இதில் இன்னொரு சிக்கலும் உண்டு. நேரில் ஆஜர் ஆகாமல் வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டால் இதையே ஒரு காரணமாக சொல்லி கேள்வி எழுப்ப முடியும். அதனால் வேறு வழியே இல்லை. ஜெயலலிதா ஆஜர் ஆகத்தான்வேண்டும்'' என்றார்கள்.
என்ன செய்யப்போகிறார் ஜெயலலிதா?
*******************************************************************************
முதல்வராக இருந்தபோது என்ன செய்தார் கருணாநிதி?
பழ.நெடுமாறன்
இவ்வாறு கூறியதோடு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட தியாகு, புலவர் கலியபெருமாள் ஆகியோ ரின் தண்டனைகளை தான் குறைத்ததுபற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். யார் யாருக்கு இவர் தூக்குத் தண்டனைகளைக் குறைத்தார் என்பது இப்போது கேள்வி அல்ல. 'சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கு தூக்குத் தண்டனையைக் குறைக்க, இவர் அதிகாரத்தில் இருந்தபோது எதுவும் செய்யவில்லையே ஏன்?’ என்பதுதான் இப்போதைய கேள்வி. வழக்கம்போல இந்தக் கேள்விக்குப் பதில் கூறாமல் திசை திருப்பும் முயற்சியில் கருணாநிதி ஈடுபடுகிறார்.
26 தமிழர்கள் உயிர்காப்புக் குழுவின் தலைவராக இருந்து, இவர்களின் வழக்கை உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்து 22 பேரின் உயிர்களைக் காப்பாற்றுவதற்குக் காரணமாக இருந்தவர்களில் ஒருவன் என்கிற முறையில், சில உண்மைகளை எடுத்துக் கூற விரும்புகிறேன்.
உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், 19 பேரைக் குற்ற மற்றவர்கள் என விடுதலை செய்தது. ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ் ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது. நளினி, முருகன், சாந்தன், பேரறி வாளன் ஆகியோரின் மரண தண்டனையை உறுதி செய்தது.
விடுதலை செய்யப்பட்ட 19 பேரையும் உடன் அழைத்துக்கொண்டு, தமிழகம் முழுவதும் மரண தண்டனைக்கு எதிரான பேரணிகளை 22.6.99 முதல் 7.7.99 வரை நடத்துவது என முடிவு செய்தோம். அதற்கு இணங்க எங்கள் பேரணியைத் தொடங்கியபோது, அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி தடை விதித்தார். மரண தண்டனைக்கு, தான் எதிரானவன் என இப்போது கூறுபவர், அன்று மரண தண்டனை ஒழிப்புப் பிரசாரத்துக்கே தடைவிதித்தார்.
இந்தத் தடையை எதிர்த்து உடனடியாக நாங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தோம். அதன்பேரில், இந்தத் தடை செல்லாது என்றும், எங்கள் பிரசாரப் பயணத்துக்கு உடனடியாக அனுமதி வழங்கும் படி 30.6.99-ல் ஆணை பிறப்பித்தது நீதிமன்றம். அதன்படி, தமிழகம் முழுவதும் மரண தண்டனை ஒழிப்பு இயக்கத்தை வெற்றிகரமாக நடத்தினோம். 'ராஜீவ் கொலையாளிகள் எனக் குற்றம் சாட்டப்பட்டு, கீழ் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் குற்ற மற்றவர்கள் என விடுதலை செய்யப்பட்டது எப்படி? குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப் படாமல் போயிருந்தால் இந்த 22 பேரும் அல்லவா மரண தண்டனைக்கு உள்ளாகி உயிர் இழந்திருப்பார்கள்? அப்படியானால், இந்த நீதி பிழைபட்ட நீதி அல்லவா?’ என மக்கள் கேட்டனர்.
17.10.99 அன்று ஆளுநராக இருந்த செல்வி ஃபாத்திமா பீவி அவர்களிடம் நால்வரின் கருணை மனுவை அளித்தோம். ஆனால், அவர் 10 நாட்களில் 27.10.99 அன்று இம்மனுக்களை தள்ளுபடி செய்தார். உடனடியாக, கொச்சியில் இருந்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் அவர்களிடம் தொலைபேசி மூலம் இந்த விவரத்தைத் தெரிவித்தேன். அவரும், மற்றொரு நீதிபதியும் ஒன்றாக உட்கார்ந்து, உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே ஒரு தீர்ப்பு அளித்திருப்பதாகவும், அந்தத் தீர்ப்பின் அடிப் படையில் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யும்படியும் ஆலோசனை கூறினார். இப்போது நீதியரசராக உள்ளவரும், அன்று மூத்த வழக்கறிஞருமாகத் திகழ்ந்தவருமான கே.சந்துரு அவர்கள், எங்கள் மனுவின் மீது உயர் நீதி மன்றத்தில் வாதாடும்போது, 'அரசியல் சட்டப்படி கருணை மனுக்கள் மீது ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது, அமைச்சரவையின் பரிந்துரை எதுவோ... அதன்படி நடந்துகொள்ள வேண்டியதுதான் அவருடைய கடமை’ எனக் குறிப்பிட்டார்.
அரசுத் தரப்பு வழக்கறிஞர், 'இந்தியா சுதந்திரம் பெற்ற நாளில் இருந்து இதுவரை 200-க்கும் மேற்பட்ட மரண தண்டனைக் கைதிகளின் கருணை மனுக்களை ஆளுநர்களும், குடியரசுத் தலைவர்களும் தன்னிச்சையாகப் பரிசீலனை செய்து முடிவு எடுத்து இருக்கிறார்களே தவிர, அமைச்சரவைகளின் பரிந்துரைகளைக் கேட்டு முடிவு செய்யவில்லை’ என வாதாடினார்.
''இதுவரை நீங்கள் அரசியல் சட்டத்தை மீறி செயல்பட்டிருக்கலாம். ஆனால், இனிமேல் அவ்வாறு செய்ய அனுமதிக்கக் கூடாது என்பது தான் எங்கள் மனுவின் அடிப்படையாகும்’ என எங்கள் வழக்கறிஞர் கே.சந்துரு புரிந்த வாதத்தை ஏற்றுக்கொண்டு நீதியரசர் கே.கோவிந்தராசன் அவர்கள், 25.11.99 அன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பின்வரும் தீர்ப்பினை அளித்தார். 'அரசியல் சட்டத்தின் 161-வது பிரிவின்படி அமைச்சரவையின் ஆலோசனையைப் பெற்று ஆளுநர் கருணை மனுக்களின் மீது முடிவு எடுக்கவில்லை. எனவே, மனுக்களைத் தள்ளுபடி செய்து அவர் பிறப்பித்த ஆணை சட்டப்படி செல்லாதது ஆகும். எனவே, அந்த ஆணை ரத்து செய்யப்படுகிறது.’
சுதந்திர இந்திய வரலாற்றில் முதன் முறையாக இத்தகைய சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கப்பட்டு, கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்கும் அதிகாரம் அமைச்சரவைகளுக்கு உண்டு என்பது நிலைநாட்டப்பட்டது. தமிழ்நாட்டுக்கு மட்டும் அல்ல, இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும், இந்த உரிமையை உயர் நீதிமன்றத்தின் மூலம் நாங்கள் பெற்றுக்கொடுத்தோம். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, 52 ஆண்டுகாலமாக ஆளுநர்களும், குடியரசுத் தலைவர்களும் அமைச்சரவையின் ஆலோசனைகளைப் பெறாமல் செயல்பட்டு வந்ததற்கு இந்தத் தீர்ப்பு முற்றுப்புள்ளி வைத்தது. நான்கு தமிழர்கள் தொடர் பான இந்த வழக்கில், இத்தகைய சிறப்பான தீர்ப்பைப் பெற்று அமைச்சரவையின் அதிகாரத்தை மீட்டு, அன்றைய முதலமைச்சர் கருணாநிதி அவர்களிடம் ஒப்படைத்தோம்.
அத்துடன் நாங்கள் நிற்கவில்லை. 30.11.99 அன்று சென்னையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்ட பெரும் பேரணியை நடத்தி, 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கையெழுத்திட்ட கருணை மனுக்களை அன்றைய முதலமைச்சர் கருணாநிதி அவர்களிடம் நேரில் சந்தித்து அளித்தோம். ஆனாலும், இன்று மரண தண்டனைக்கு எதிராக நீட்டி முழக்குபவர், அவர் கையில் அதிகாரம் இருந்தும், அதைச் செய்வதற்கு முன்வரவில்லை.
நால்வரில் நளினிக்கு மட்டும் கருணை காட்ட அமைச்சரவை பரிந்துரை செய்வதற்கும், மற்ற மூவரின் கருணை மனுக்களை ஏற்க மறுப்பதற்கும் இவரே காரணமாக இருந்தார். நளினிக்கு இவர் கருணை காட்டியதில் பின்னணி உண்டு. முன்னாள் குடியரசுத் தலைவர் வி.வி.கிரி அவர்களின் மருமகளும், மனித உரிமை ஆர்வலருமான மோகினி கிரி அம்மையாரை சந்தித்து இந்த நால்வரின் மரண தண்டனை தொடர்பாக நான் பேசினேன். அதன் விளைவாக அவர் வேலூர் சிறையில் இந்த நால்வரையும் சந்தித்துப் பேசினார். அதிலும், படித்த பெண்ணான நளினியின் சந்திப்பு, அவர் உள்ளத்தை மிகவும் தொட்டது. திருமதி சோனியா காந்தி அவர்களிடம் நளினி குறித்து அவர் பேசி, அதன் விளைவாக சோனியா காந்தி, நளினிக்குக் கருணை காட்டும்படி குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதினார்.
சோனியா கருணை காட்டியதால்தான் நளினிக்கு கருணை காட்ட கருணாநிதி முடிவு எடுத்தார். அடுத்து, இந்த மூவரின் சார்பில் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்களை அனுப்பி வைத்தோம். மேலும், எங்கள் குழுவின் சார்பில் டெல்லிக்குச் சென்று வைகோ அவர்களின் உதவியுடன், பிரதமர் வாஜ்பாய் உட்பட மத்திய அமைச்சர்கள் பலரையும் சந்தித்து முறையிட்டோம்.
சட்டத் துறையின் அமைச்சர் ராம்ஜெத்மலானியை சந்தித்தபோது அவர் எங்களிடம், 'ஏன் உங்கள் முதலமைச்சரே இதைச் செய்யலாமே?’ என்று கேட்டார். என்ன காரணத்தினாலோ அவர் தயங்குவதாக நாங்கள் தெரிவித்தபோது, முதல்வர் கருணாநிதியிடம் அவரே எங்கள் முன்னிலையில் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார்.
'எதற்காகத் தயங்குகிறீர்கள் நான் உங்கள் பக்கம் இருக்கிறேன். தைரியமாகச் செய்யுங்கள்’ என்று ஜெத்மலானி கூறினார். ஆனால், கருணாநிதியோ, 'நீங்களே செய்யுங்கள்’ என்று கூறி பேச்சை முடித்துக் கொண்டார்.
ஈராக் அதிபர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்ட போதும், பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப் பட்ட சரன்தீப் சிங் என்பவரின் தண்டனையைக் குறைக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்து, தன்னை சிறந்த மனிதநேயராக காட்டிக்கொண்ட கருணாநிதி, இந்த மூவர் விஷயத்தில் கருணை காட்ட ஆட்சியில் இருந்தபோது இறுதி வரை முன் வரவே இல்லை.
அண்ணா நூற்றாண்டினை ஒட்டிப் பல்வேறு கொடிய குற்றங்களில் தண்டிக்கப்பட்ட ஆயுள் தண்டனைக் கைதிகள் உட்பட ஏராளமானவர்களை, 7 ஆண்டுகளில் விடுதலை செய்தார் கருணாநிதி. மதுரை மாநகராட்சி உறுப்பினராக இருந்த லீலா வதியை பட்டப்பகலில் படுகொலை செய்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தி.மு.க-வினரை 7 ஆண்டுகளில் விடுதலை செய்ய அவரால் முடிந்தது. ஆனால், ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, 20 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில் வாடும் ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ் ஆகிய மூவரை விடுதலை செய்யக்கூட கருணாநிதி முன்வரவில்லை. மரண தண்டனை பெற்றவர்களைத்தான் இவர் காப்பாற்ற முன்வரவில்லை. குறைந்தபட்சம், ஆயுள் தண்டனை பெற்ற இந்த மூவரையாவது விடுதலை செய்திருக்கலாம். அதையும் செய்யவில்லை. சோனியாவின் அதிருப்திக்கு ஆளாகிவிடக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காக, ராஜீவ் வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களுக்கு இறுதி வரை கருணை காட்ட அவர் முன்வரவில்லை என்பதுதான் உண்மை.
தற்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, அவர்கள் மூவர் தூக்குத் தண்டனை பிரச்னையில் கருணாநிதி இடைவிடாமல் சீண்டுவதற்குக் காரணமே, தான் செய்யத் தவறியதை ஜெயலலிதா செய்து அதன் விளைவாக, தமிழ் உணர்வாளர்கள் அனைவரின் பாராட்டுக்கும் நன்மதிப்புக்கும் ஆளாகிவிடக் கூடாது என்ற காரணத்தினால் அடிக்கடி அறிக்கை வெளியிட்டு குட்டையைக் குழப்ப முயற்சி செய்கிறார்!
******************************************************************************
அப்பவே அவனை சரணடையச் சொன்னேன்.. கேக்கலை!
தம்பி மீது கடுப்பான கே.என்.நேரு
'கலைஞர் அறிவாலயம்’ கட்டு வதற்காக ஒரு ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தை தன்னிடம் இருந்து அடித்து, உதைத்து, மிரட்டி வாங்கியதாக துறையூரைச் சேர்ந்த டாக்டர் சீனிவாசன் புகார் கொடுத்தார். அதைத் தொடர்ந்துதான் இந்தக் கைது நடவடிக்கைகள். 'ராமஜெயம் வெளிநாட்டில் இருக்கிறார். அவர் வந்தவுடன் கைது செய்யப்படுவார்’ என்று போலீஸ் தரப்பில் சொல்லப் பட்டது. தற்போது அவரைக் கொச்சியில் கைது செய்திருக்கிறது போலீஸ்!
கடந்த 5-ம் தேதி அதிகாலையில் கொச்சியில் இருந்து மலேசியா செல்லும் விமானப் பயணிகள் பட்டியலில் ராமஜெயத்தின் பெயர் இடம் பெற்று இருந்தது. காலை 3.30 மணியளவில் விமானம் ஏறுவதற்காக ராமஜெயம் வர... அவரைக் குடியுரிமைப் பிரிவு அதிகாரிகள் தடுத்து நிறுத்தினார்கள். அங்கேயே வைத்து விசாரித்துவிட்டு நெடுமஞ்சேரி காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர். அவரை, திருச்சியில் இருந்து புறப்பட்டுச் சென்ற போலீஸ் டீம் கைது செய்து கொண்டு வந்திருக்கிறது.
நேரு குடும்பத்தினருக்கு எதிரான வழக்குகளில் ஆர்வத்துடன் பங்கேற்று வரும் அ.தி.மு.க-வைச் சேர்ந்த வழக்கறிஞரான மலர்விழியிடம் பேசினோம்.
''நேரு குடும்பத்தினர் மீது நான் தொடர்ந்த வழக்கால் என் மீது கோபமான நேரு, எங்கள் மீது பொய் வழக்குகள் போட்டு ரொம்பவே அலைக்கழித்தார். என் தங்கை வனிதாகூட சிறைக்குப் போனார். இதுபோன்ற தகவலைக் கேள்விப்பட்டு 2007 ஏப்ரலில், டாக்டர் சீனிவாசன் என்னைத் தேடி வந்தார். 'கலைஞர் அறிவாலயம் கட்டுறதுக்காக, பல கோடி மதிப்புள்ள என்னோட இடத்தை குறைஞ்ச விலைக்குக் கேட்டு நேரு தரப்பு என்னை மிரட்டினாங்க. நான் மறுத்தேன். வயசான என் அப்பா கிருஷ்ணசாமியை ராமஜெயம் அடிச்சார். அதனால பயந்துபோய் எழுதி கொடுக்கிறதுக்கு சம்மதித்தேன். 40 லட்சம் பணத்தைக் கொடுத்து, அக்ரிமென்ட் பத்திரத்தில் கையெழுத்து வாங்கினாங்க. ஊருக்கு காரில் கொண்டுபோய் விடறோம்னு சொல்லி, கூட வந்த துணை மேயர் அன்பழகன், மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் குடமுருட்டி சேகர் மற்றும் செரீஃப் மூணு பேரும் சேர்ந்து அந்தப் பணத்தையும் பறிச்சுகிட்டாங்க’னு சொன்னார். 'தி.மு.க. ஆட்சியில் நியாயம் கிடைக்காது. அதனால், நடந்த சம்பவங்களை உயிலா எழுதி ரெஜிஸ்டர் பண்ணலாம். அப்புறம் ஆட்சி மாறினதும் அதை எவிடென்ஸா பயன்படுத்தலாம்’னு ஐடியா கொடுத்தேன். இப்போது அந்த உயில் நீதிமன்ற கஸ்டடியில் இருக்கிறது. ராமஜெயத்துக்கு எதிரான முக்கியமான ஆதாரமாக அது இருக்கும்!'' என்றார்.
வையம்பட்டியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் சகோதரர்கள் மர்மமாக இறந்த விவகாரத்திலும், ராமஜெயத்தைக் குறிவைத்து சி.பி.சி.ஐ.டி. போலீஸார் விசாரித்துக்கொண்டு இருந்தனர். அது தொடர்பான வழக்கும் ராமஜெயத்தின் மீது பாய வாய்ப்பு இருக்கிறது!
சமீபத்தில், தமிழக விவசாயிகள் பிரிவின் மணிகண்டம் ஒன்றிய அமைப்பாளரான சின்னதுரைகொடுத்த புகாரின் பேரில், நேரு மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை திருச்சி ஆர்.டி.ஓ-வான சங்கீதா விசாரிக்கிறார். இதில் ராமஜெயத்தின் தலை பிரதானமாக உருட்டப்படும் என்கிறார்கள். நேரு தரப்பு வழக்கறிஞரான பாஸ்கரிடம் விளக்கம் கேட்டோம். ''உயிலில் எழுதி இருப்பதால் அதை உண்மைன்னு ஏத்துக்க முடியுமா? அக்ரிமென்ட் சமயத்தில் அதை எழுதி வெச்சவங்க, ஏன் ரெஜிஸ்ட்ரேஷனுக்குப் பிறகு எழுதலை? அக்ரிமென்ட் சமயத்தில் எழுதினதை, பின்னாடி பணம் பறிக்கலாம் என்ற எண்ணத்தில் திட்டமிட்டு செஞ்ச மோசடி வேலைன்னு சொல்லலாமே? ஏரி விஷயத்துலேயும், மத்திய அரசு திட்டத்தை மாத்தினாங்கனு சொல்றது ஏத்துக்குற மாதிரி இல்லை. ஏரியில் இருந்து மணல் அள்ளினாங்கன்னு சொல்றதும் தவறான குற்றச்சாட்டுகள்தான். எல்லாத்தையும் சட்டப்படி சந்திப்போம்!'' என்றார்.
ராமஜெயம் கொச்சியில் வளைக்கப்பட்ட அதே தினத்தில்தான், போலீஸ் கஸ்டடியில் எடுப்பது தொடர்பான விசாரணைக்காக, கடலூர் மத்தியச் சிறையில் இருந்து கே.என்.நேரு அழைத்து வரப்பட்டார். விசாரணைக்கு முன்பு வெளியே மரத்தடி நிழலில் நின்று கட்சிக்காரர்களுடன் பேசிக்கொண்டு இருந்தார் நேரு. அப்போது நிபந்தனை ஜாமீனில் இருக்கும் முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜாவும் நீதிமன்றத்தில் கையெழுத்துப் போடுவதற்காக வந்தார். ராமஜெயம் கைது செய்யப்பட்ட தகவல் வரவே, ''அவனை அப்பவே சரணடையச் சொன்னேன். கேக்கலை. இப்ப, 'வெளிநாட்டுக்கு தப்பிச்சுப் போகப் பாத்தான்’னு அடுத்தவங்க சொல்றாங்க, இது தேவையா?'' என்று நேரு வருத்தப்பட்டாராம்!
கலைஞர் அறிவாலயம் நிலம் கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் பெயரில் வாங்கப்பட்டு இருப்பதால், அவர் மீதும் வழக்குப் பாய வாய்ப்புள்ளதாகச் சொல்கிறார்கள்!
*******************************************************************************
''என்ட பிள்ளை வர்ற வரைக்கும் ஒரு வேளைச் சாப்பாடுதான்!''
20 வருட விரதத்தில் சாந்தனின் தாய்
பல கட்ட முயற்சிகளுக்குப் பிறகு மிகவும் சிரமப்பட்டு, இலங்கையில் வசித்து வரும் சாந்தனின் தாயார் மகேஸ்வரி அம்மாளைக் கண்டுபிடித்துத் தொடர்புகொண்டோம். 'தமிழகத்தில் இருந்துபேசுகிறோம்...’ என்றவுடனே, அவர் குரலில் பரவசம் பரவ... திக்குமுக்காடிப் போனார். சட்டென்று அவருக்கு வார்த்தைகளும் வரவில்லை. பின்னர், தீராத அந்த சந்தோஷத்துடன் பேசினார்.
''எங்கட பிள்ளைக்காக எங்களால போராட முடியலை... உங்கட முதலமைச்சர் அம்மாவுக்கு நன்றியும் வணக்கமும். அங்க போராடற அத்தனை தமிழ்நாட்டு மக்களுக்கும் எங்கட நன்றியைத் தெரிவிச்சுக்கொள்றம். உங்க எல்லாரையும் தெய்வம் போல நாங்க நினைக்கிறம்!'' என்ற அவரிடம் சாந்தன் பற்றிக் கேட்டோம்!
''அய்யா, எங்கட பிள்ளை படிச்சுப்போட்டு... வெளிநாட்டுக்கு வேலைக்குப் போக ஆசைப்பட்டு அங்க வந்தார். பிள்ளைக்காக எங்கட சொந்தக் காணியை (நிலம்) ஈடு வெச்சு, பாஸ்போர்ட் எடுத்து, வெளிநாட்டுக்கு அனுப்பினம். ஆனா, அய்யா அங்க என்ன நடந்ததென்டே தெரியாது. எங்கட பிள்ளைய பிடிச்சுவச்சுக்கொண்டு, இவ்வளவு காலம் வெச்சிருக்கிறாங்கள். அவரை விட்டுடுவாங்கள் என்ற நம்பிக்கையிலதான் உறுதியோடு இருந்தம். ஆனா, திடீரென்டு இடிபோல செய்தி வந்தது அய்யா...'' தொடர்ந்து அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல், ''10 மாசம் சுமந்து பெத்த அந்தப் பிள்ளைய, 20 வருஷமா பார்க்காம இறக்கிறம் அய்யா... 20 வருஷத்தில இடையில ஒருமுறைகூட அவரைப் பார்க்க ஏலலை (இயலவில்லை)... வேலைக்காக வெளிக்கிட்டவர், (புறப்பட்டவர்) தன்னோட தம்பி ஆசையா கேட்ட பலூன் வாங்கித் தந்து போட்டுப் போனார். தங்கை மேல அவருக்கு ரொம்பப் பிரியம்... தங்கை சைக்கிள் ஓட்டி விழுந்துபோட்டால் என்டு சொல்லி, தானே அவளை ட்யூஷனுக்குக் கூட்டிக்கொண்டு போவார். அந்த அளவுக்குச் செல்லம்... புறப்பட்டுப் போனபோதுகூட, தங்கையின் கையப் பிடிச்சுக்கொண்டு, 'அம்மா பாவம்... நம்ம வெச்சுக்கொண்டு கஷ்டப்படுறாங்க. வெளிநாட்டுக்குப் போய் அண்ணன் உழைச்சு பணம் அனுப்புறன். தம்பியும் நீயும் கனக்கப் படிச்சு, டாக்டரா வரவேணும்’ என்டு கனக்க புத்திமதி சொல்லிக்கொண்டு போனார். அந்த பிள்ளையத்தான், பிடிச்சுப் போட்டுட்டாங்கள்... எங்களால் ஒண்டும் செய்ய முடியேல்ல. 20 வருடங்கள் ஓடிப்போயிட்டது... எங்கட பிள்ளை எப்படி இருக்கிறார்? அவருடைய தோற்றம் எப்படி இருக்குது? காணக் கொடுத்து வைக்கலையே, அய்யா... எங்கட குடும்பத்தைக் காப்பாத்துவார் என்டுதான் வெளிநாட்டு வேலைக்காக அனுப்பிச்சு வெச்சம். கடவுள் இப்படிச் செய்திட்டாரே?
என்ட கணவருக்கு 70 வயது. அவருக்கும் உடல் நிலை மோசம். ஒரு கண் பார்வை குறைஞ்சிட்டது. அவரையும் பார்த்துக்கொண்டு, என்ட பிள்ளையப் பார்க்க முடியாத நிலைமை... ரெண்டு பேராலயும் தூரப் பயணம் செய்யமுடியாது. வறுமை இன்னொரு பக்கம்... வயோதிக காலத்தில சரியான கஷ்டம், துன்பம் அய்யா! கிடைக்கிற கூலித்தொழிலைச் செய்து, கஷ்டப்பட்டுத்தான் ஜீவியம் பண்ணிக்கொண்டு இருக்கிறம்...
என்ட கணவர் கடுமையான வேலைகளைச் செஞ்சுதான் நாளாந்தம் செயல்பட்டுக்கொண்டு இருந்தவர். இந்தியா ஊடாக வெளிநாட்டுக்கு வேலைக்குப் போக வந்த பிள்ளைய, அங்க பிடிச்சுப் போட்டதில் இருந்தே மனுஷருக்கு உடம்பு போச்சுது. இடையில ஒரு முறை (2000, தி.மு.க. ஆட்சியில்) பிள்ளைக்கு கருணை மனு போட்டதில, நல்ல உத்தரவை நம்பிக்கையா எதிர்பார்த்தோம், ஆனா, அதில பெரிய ஏமாற்றம். அப்போது முதலே அவருக்கு உடம்பு பிரச்னையாகிப் போயிட்டது... தொடர்ந்து மருத்துவ சிகிச்சையால குணமாக்கிக்கொண்டு வாறம். இருந்தாலும் அவரால சகஜமா செயல்படமுடியாத நிலைமை... 20 வருஷமா விரதம் இருக்கிறதால, என்னுடைய உடம்பும் மோசமாயிட்டது. ஏற்கெனவே, எங்களுக்கு உடல்நலப் பிரச்னைகள். அதனால செயல்பட முடியலை... வந்து பார்க்க முடியலை.
இன்னும் கொஞ்ச காலம்தான் உயிரோட இருப்போமென்டு இருக்கிறம். எங்கட பிள்ளைய பார்க்கவேணும். அவருக்கு என்ட கையால சாப்பாடு கொடுக்க வேணும்... (அழுகை பீறிட்டவருக்கு மேற்கொண்டு பேச முடியவில்லை. அழுகையோடு தொடர்கிறார்) என்டைக்கு எங்கட பிள்ளைக்கு சாப்பாடு ஊட்டுவேனோ அன்றைக்குதான் மூணு வேளை சாப்பிடுவேன். அதுவரைக்கும் ஒரு வேளைச் சாப்பாடுதான்...எந்தப் பிழையும் செய்யாமல் மாட்டிக்கொண்ட என்ட பிள்ளை, எங்களுக்கு வேணும் அய்யா... வேணும்!'' என்று மனம் வெடித்து மீண்டும் அழத் தொடங்கியவரை, நம்மால் கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்த ஈழத் தமிழ் அப்பாவித் தாயின் ஓலத்துக்கு பலன் கிடைக்குமா?
*******************************************************************************
நீங்கள் கனிமொழி விடுதலையைப் பாருங்கள்...
மன்னார்குடியில் சீறிய சீமான்
முதலில் பேசிய பேராசிரியர் கல்யாணசுந்தரம், 'எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்துக்குப் பிறகு... இப்போதுதான் தமிழக அரசும், தமிழ் இன உணர்வாளர்களும் ஒன்றாக நிற்கின்றனர்...'' என ஆரம்பித்தவர், சட்டென்று டாப் கியருக்குச் சென்றார்.
'யார் கொலையாளிகள்? இலங்கைக்கு இந்திய அமைதிப்படையை அனுப்பி 12,500 தமிழர்களைக் கொன்ற கொலைகாரன் யார்? ஒருவரைக் கொலை செய்வதற்காகத் தன் உடலில் வெடிகுண்டை சுமந்துகொண்டு ஒருத்தி செல்கிறாள் என்றால், அவள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டு இருப்பாள்? ராஜீவ்காந்தியைக் கொலை செய்தவர்கள் இறந்துவிட்டார்கள். முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோர் அப்பாவிகள். அவர்கள் பாதிக்கப்படக்கூடாது. தமிழக அரசின் தீர்மானம் மத்திய அரசைப் பாதிக்காது எனச் சொல்கிறார்கள். அப்படியானால், மத்திய அரசின் சட்டங்கள் எங்களையும் பாதிக்காது.
கருணாநிதியை நம்பி 10 வருடங்கள் அவர் பின்னாலே ஓடினோம். ஐயா கருணாநிதி... நீங்கள் செய்த துரோகத்தை ராஜபக்ஷேவும் செய்யவில்லை. இந்திய அநீதிக்காக, முதல் கரும்புலியாக எங்கள் செங்கொடி மாறி இருக்கிறார். அவளது லட்சியத்தைத் தமிழர்கள் நாம் ஒன்றுபட்டு நிறைவேற்ற வேண்டும்!' என்று பொங்கினார்.
'நாம் தமிழர்’ கட்சியின் இளைஞர் பாசறை அமைப்பாளர் வழக்கறிஞர் ராசீவ்காந்தி, 'சட்டரீதியாக மூவரையும் காப்பாற்றப் போராடுகிறோம். ஒருவேளை, நமக்கு எதிராக வழக்கு முடியும் சூழ்நிலை வந்தால், மக்கள் எழுச்சியின் மூலம் அதைக் கண்டிப்பாக மாற்ற முடியும். தற்போது, தூக்குத் தண்டனையை நிறுத்திவைப்பது என்பது தற்காலிக ஓய்வுதானே ஒழிய... வெற்றி அல்ல. மாநில அரசை எதிர்த்து, மத்திய அரசு செயல்படுவது தவறான செயல். ஏழு கோடி தமிழர்களின் உணர்வுகளைத்தான் தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் எதிரொலித்து இருக்கிறார்!' என்றார்.
நிறைவாகப் பேசிய சீமான், 'தமிழ் ஈழத்தைவிட தமிழகத்தில் சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள் என பிரபாகரன் என்னிடம் சொன்னார். அதற்கான சான்றுகளில், தோழர் செங்கொடியும் ஒருவர்.மூன்று பேரின் விடுதலை சாத்தியமில்லை என்றால்,தமிழ் ஈழத்தின் விடுதலை எப்படி சாத்தியமாகும்? இரண்டு ஆண்டுகளில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும். இந்தியாவை ஆளப்போவது யார் என்பதைத் தீர்மானிப்பது ஜெயலலிதாதான். அவரை உட்காரவைத்து, அனைத்துத் தொகுதிகளிலும் ஜெயிக்க வைப்பேன். கருணாநிதியும் மூவரையும் விடுதலை செய்யத் துடிக்கிறார். ஐயா... நீங்கள் கனிமொழியின் விடுதலையைப் பாருங்கள். மூன்று பேர் விடுதலையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்...' என கர்ஜித்தார்.
மழையும் ஓய்ந்தது!
*******************************************************************************
தண்டனையைக் குறைக்கும் அதிகாரம் மாநிலத்துக்கும் உண்டு!
சிறை மீண்ட கிலானி ஆவேசம்
''வெறும் வாக்குமூலங்களை வைத்தே இந்த மூன்று பேருக்கும் தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது. வாக்குமூலங்கள் எப்படிப் பெறப்படும் என்பது எல்லோரும் அறிந்ததுதான். இந்த மூன்று பேருமே முதன்மைக் குற்றவாளிகள் அல்ல. மரண தண்டனைக்கு எதிராக தமிழகத்தைப் போல இந்தியாவில் எந்த மாநிலமும் இப்படி எழுச்சியோடு போராடியதை நான் பார்க்கவில்லை. தமிழகத்தை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது. தமிழக மக்களுக்கு நன்றி சொல்லவும் போராட்டத்தில் என் பங்களிப்பைக் காட்டவுமே தமிழகம் வந்தேன்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைபட்டு மரணத்தை எதிர்நோக்கி இருப்பதால், மூவரும் விரக்தியில் மனம் உடைந்திருப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால், அவர்களைச் சந்தித்தபோது அந்த எண்ணம் தவிடுபொடியானது.
மரண தண்டனையை நிறைவேற்ற உயர் நீதிமன்றம் தடை விதித்து இருப்பது சந்தோஷமானசெய்தி. கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தாலும், தண்டனையைக் குறைக்கும் அதிகாரம் மாநில அரசாங்கத்துக்கும் உண்டு. மாநில அமைச்சரவை கூடி, தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோரி ஆளுநருக்குப் பரிந்துரை செய்ய முடியும் என்று இந்திய அரசியலைப்பு சட்டம் கூறுகிறது. அதன்படி, தண்டனையைக் குறைக்கச் சொல்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதற்கு பதிலாக, அமைச்சரவையைக் கூட்டி ஆளுநருக்குப் பரிந்துரை செய்து இருக்கலாம். இப்போதும் கூட அதற்கு அவகாசம் இருக்கிறது. தமிழக அரசுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், உயர் நீதிமன்றம் விதித்துள்ள எட்டு வாரத் தடை முடியும் முன்பே, மாநில ஆளுநருக்குப் பரிந்துரை செய்ய வேண்டும்...'' என்றார்.
தமிழக அரசு உடனே செயலில் இறங்கட்டும்!
- எம்.பரக்கத் அலி
*********************************************************************
கொடி வணக்கம்!
கவிதை: வாலி
*******************************************************************************
முக்கிய சேனல்கள் தெரியாததால் முணுமுணுப்பு...
பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு!
அனுராதா ரமணன், சேலம்
''என்னுடைய மகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டால், அடுத்து வீட்டில் பெரியதாக வேலை ஒன்றும் இல்லை. சன் டி.வி-தான் என்னுடைய ஒரே பொழுதுபோக்கு. காலை 10.30-க்கு 'மகள்’ சீரியலில் ஆரம்பித்து இரவு 10 மணிக்கு 'இதயம்’ சீரியல் வரை விடாமல் பார்ப்பேன். நடுவில் சன் செய்திகள் பார்த்து உலக நடப்புகளையும் தெரிந்து கொள்வேன். இப்போது அந்த சேனல் தெரியவில்லை. பைத்தியம் பிடித்த மாதிரி உள்ளது. எங்களிடம் 100 கூட வாங்கிக் கொள்ளட்டும். எங்களுக்கு பழையபடி அனைத்து சேனல்களும் தெரிய வேண்டும்.''
சூரிய கலா, சேலம்
''எங்கள் குழந்தைகள் டிஸ்கவரி சேனல், அனிமல் பிளானெட் சேனல்களை விரும்பிப் பார்ப்பார்கள். இந்த சேனல்கள் இப்போது ஒளிபரப்பு ஆவது இல்லை. நாங்கள் சன் டி.வி., சன் மியூசிக், ராஜ் டி.வி மற்றும் விஜய் டி.வி. சேனல் நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்ப்போம். மேலும், இந்த சேனல்களில் தான் புதிய தமிழ்ப் படங்கள் உட்பட நிறைய சினிமாக்கள் போடுவார்கள். ஆனால், இப்போது அதை எல்லாம் பார்க்க முடியவில்லை. மொழி புரியாத வெளி மாநிலச் சேனல்கள் மட்டுமே ஓடுகின்றன. இதை எல்லாம் பார்த்து என்ன பண்ணப் போறோம்?''
தேன்மொழி, கோவை
''கோயமுத்தூர்ல சில இடங்கள்ல எல்லாச் சேனலும் தெரியுது... சில இடங்கள்ல தெரிய மாட்டேங்குது. எங்களுக்கு அரசு கேபிள் நிறுவனம் வரணும்ங்கிறதுல மாற்றுக் கருத்து கிடையாது. ஆனா, அதுல எல்லா சேனலும் தெரியுற மாதிரி வழி பண்ணணும்...''
யசோதா, ஈரோடு.
''இங்க பல இடங்களில 'பே சேனல்கள்’ எதுவும் தெரியலை. இலவச சேனல்கள் எல்லாம் மொக்கை போடுதுங்க. எவ்வளவு நேரத்துக்கு இதையே பார்த்துக்கிட்டு இருக்க முடியும். ஒரு வாரமா எதைத் திருப்பினாலும் மொழி புரியாத அரபு சேனலும், சங்கரா சேனலும்தான் வருது. கட்டண சேனல்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, அனைத்து சேனல்களும் பார்க்க அரசு வழி பண்ணணும்.''
வள்ளி, கடலூர்.
''எவ்வளவு நேரம்தாங்க பொதிகையையே பார்த்துட்டு இருக்க முடியும்? அரசு கேபிள் நிறுவனம்... குறைந்த கட்டணம் என்பது எல்லாம் சரிதான். அதுக்காக பிடித்த விஷயங்களை பார்க்காம இருக்க முடியுமா? அவசரகதியில முடிவு எடுத்து இருக்காங்க. எல்லாச் சேனலும் பார்க்குற மாதிரி ஏற்பாடு செய்யணும்...''
மாலதி, கடலூர்.
''எங்க ஏரியாவுல சன் டி.வி., கே டி.வி., ஆதித்யா டி.வி., விஜய் டி.வி., சுட்டி டி.வி. எதுவுமே வரலை. வெறும் பொட்டியை வெச்சிக்கிட்டு என்னாங்க பண்ணுறது? முதல்வரம்மா நல்லது செய்யறேன்னு நினைச்சிட்டு இப்படி பண்ணிட்டாங்கனு நினைக்கிறேன். இதனால மக்கள் அதிருப்திதான் அடைவாங்க... பார்த்துக்கோங்க!''
ஜப்ரூல் ஹக், வேலூர்
''காலையில எழுந்த உடனே சி.என்.என், டைம்ஸ் நவ் சேனல், டிஸ்கவரி, நேஷனல் ஜியாகரபி சேனல்கள்தான் பார்ப்பேன். என் ரூம்ல நைட் 12 மணி வரைக்கும் எஸ்.எஸ். மியூசிக் ஓடிட்டு இருக்கும். இப்போ எதுவுமே இல்லை. வீட்டுக்கு போகவே கடுப்பா இருக்கு. டிஷ் வாங்கலாம்னு முடிவு பண்ணி இருக்கோம்...''
கனிமொழி, காட்பாடி
''ரெண்டு நாளா தென்றல், நாதஸ்வரம் பார்க்காம இருக்கேன். திருமதி செல்வத்துல செல்வம் என்ன ஆனார்னு தெரியலை. வெளியூர்ல இருக்குற ஃப்ரண்ட்ஸ்கிட்ட போன் போட்டு கேட்குறேன். அவங்களுக்கும் தெரியலையாம். இப்படி திடீர்னு நிறுத்திட்டா என்ன பண்ணுறது? எங்களுக்கு அரசு கேபிளே வேண்டாம். பழையபடி இருந்தா போதும்...''
கவிதா, வேலூர்
''இப்ப 70-க்கு ஹிந்தி, மலையாளம், தெலுங்கு... போதாக்குறைக்கு டி.டி-யின் அத்தனை மொழி சேனலும் வருது. இதை எல்லாம் யார் பார்க்குறது? வீட்டுல ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்துக்கிட்டு உர்ர்ன்னு உட்கார்ந்து இருக்கோம். அரசாங்கம் இதே கட்டணத்தில் பழையபடி எல்லா சேனலையும் கொண்டு வரணும். அதுலதான் முதல்வர் ஜெயலலிதாவின் சாமர்த்தியம் இருக்குது!''
குறிப்பு: திருச்சி, மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களில் அரசு கேபிள் டி.வி. தொடங்கப்பட்டாலும் இன்னும் நடைமுறைக்கு வராததால் மக்கள் நிம்மதியுடன் அனைத்து சேனல்களையும் பார்த்து வருகிறார்கள். பிள்ளையார் பிடிக்கப் போய் ஏதோ ஒன்றாக மாறிய கதையாகத்தான் நடக்கிறது.
******************************************************************************
''இவ்வளவுக்கு பிறகும் ரவுடியிஸம் குறையலையேப்பா!''
மதுரை மந்திரியின் மனக்குமுறல்!
வக்கீல் வீட்டில் சோடா பாட்டில் வீச்சு
மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. வழக்கறிஞர் அணிச் செயலாளரான தமிழ்ச்செல்வன், மாவட்ட நீதிமன்றத்தில் அரசு குற்றவியல் வழக்கறிஞரும்கூட! வழக்குகளில் சிக்கும் தி.மு.க-வினருக்கு முன்ஜாமீன் மற்றும் ஜாமீன் கொடுக்கும் விவகாரங்களில் கடுமை காட்டி மனுக்களை டிஸ்மிஸ் செய்ய வைப்பதால், இவர் மீது தி.மு.க-வினருக்கு ஆத்திரம் அதிகம் உண்டு! இந்த நிலையில், கடந்த 1-ம் தேதி தமிழ்ச்செல்வனை போனில் மிரட்டிய மர்ம நபர், ''மன்னன், ஜெயராமனுக்கு எதிரா நீ வழக்குப் போடப் போறியா? கையைக் காலை எடுத்துருவோம், ஜாக்கிரதை!'' என்று மிரட்டினாராம். அன்று இரவே தமிழ்ச்செல்வனின் வீட்டுக்குள் யாரோ சோடா பாட்டில்களை வீசிவிட்டு ஓடினார்கள். மன்னன், ஜெயராமன் தூண்டுதலின் பெயரில்தான் இந்தத் தாக்குதல் நடந்ததாக தமிழ்ச்செல்வனின் மனைவி புகார் கொடுக்க, இருவர் மீதும் எஃப்.ஐ.ஆர். போட்டு ஆட்களைத் தேடுகிறது போலீஸ்!
தமிழ்ச்செல்வனை நாம் சந்தித்தோம். ''மதுரை மேற்குத் தொகுதி இடைத்தேர்தலின்போது நடந்த மோதல் தொடர்பாகப் போடப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கேட்டு 20 நாளைக்கு முன்னாடி மாவட்டநீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் ஒரே நேரத்தில் ஜெயராமன் மனுத் தாக்கல் செய்தார். அதையே காரணம் காட்டி, மாவட்ட நீதிமன்றத்தில் அவரது மனுவை டிஸ்மிஸ் செய்ய வைத்தேன். தா.கி. வழக்கு உள்ளிட்ட மன்னன் சம்பந்தப்பட்ட சில விவகாரங்களும் சீக்கிரமே நீதிமன்றத்துக்கு வரப்போகுது. இதை எல்லாம் மனசில் வெச்சுக்கிட்டு என்னை மிரட்டிப் பார்க்கிறாங்க. போனில் மிரட்டல் வந்த அன்னிக்கி ராத்திரியே என் வீட்டு மாடியில் டமார் டமார்னு சத்தம் கேட்டுச்சு. அதிகாலையில் எந்திரிச்சு பார்த்தப்ப, சோடா பாட்டில் துண்டுகள் சிதறிக்கிடந்தன. ஜெயராமன் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கிற மாரியப்பன் என்பவரது டெலிபோனில் இருந்து தான் மிரட்டல் வந்துருக்குன்னு போலீஸ் கண்டு பிடிச்சுருக்கு...'' என்றார்.
தமிழ்ச்செல்வனின் வீட்டுக்கு வந்த அமைச்சர் செல்லூர் ராஜு, ''அம்மா இவ்வளவு தூரம் நடவடிக்கை எடுத்த பின்னாடியும் தி.மு.க-காரங்களோட ரவுடியிஸம் ஓயலை பாருங்கய்யா... இதை நாங்க சும்மா விடமாட்டோம்!'' என்றார்.
விளக்கம் கேட்பதற்காக முதலில் மன்னனை தொடர்புகொண்டோம். அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப். ஆகவே, மாநகர் மாவட்ட இளைஞர் அணிச் செயலாளரும், 4-ம் பகுதி செயலாளருமான ஜெயராமனிடம் பேசினோம். ''தேர்தல் வழக்கைத் தவிர என் மேல் வேறு எந்த வழக்கும் இல்லை. இருந்தும் புகாரைக் கிளப்பி இருக்காங்க. இதுக்கும் காரணம் இருக்கு. தமிழ்ச்செல்வன் தன் மனைவிக்கு மதுரை மேயர் ஸீட் கேட்கிறார். 'மேயர் பதவி ஆண்களுக்காக இருந்தால் எனக்கும், பெண்களுக்காக இருந்தா மன்னனின் மனைவிக்கும் கொடுக்கணும்’னு நாங்க எங்க கட்சியில் கேட்டு இருக்கோம். இதுக்கு முட்டுக்கட்டை போடுறதுக்காகவே சதிவலை பின்னுறாங்க. கடந்த 16 நாளா நான் கம்பத்தில் தங்கி இருக்கேன். ஒரே ஒரு நாள் மட்டும் மாவட்டக் கழகக் கூட்டத்துக்காக மதுரைக்கு வந்துட்டுப் போனேன்...'' என்று சொன்ன ஜெயராமன், ''அந்த மீனாட்சி சத்தியமா சொல்றேன்... தப்புன்னு தெரிஞ்சா சட்டையைப் பிடிச்சுக் கேட்டுருவோமே தவிர, இப்படி பேடித்தனமான வேலைக்கு எல்லாம் போகமாட்டோம்!'' என்று குமுறினார்.
மன்னன் மற்றும் ஜெயராமன் சார்பில் பேசிய வழக்கறிஞர் அன்புநிதி, ''தமிழ்ச்செல்வன் கையில்தான் மதுரைக் காவல் துறையையே இருக்கு. அப்படிப்பட்டவர், தனது வீட்டில் நடந்த தாக்குதல் குறித்து உடனடியாக புகார் கொடுக்காமல், மூன்று நாள் கழித்து கொடுத்திருப்பதன் மர்மம் என்ன? ஏற்கெனவே, தி.மு.க. ஆட்சியில், ஜெயலலிதாவுக்கு மிரட்டல் விடுத்ததாகச் சொல்லப்பட்ட வழக்கில், 'லோக்கல் போலீஸ் விசாரித்தால் உண்மை வராது’ என்று சி.பி.ஐ. விசாரணை கேட்டார்கள். அதுபோல், இந்த விவகாரத்திலும் புகார்தாரரே போலீஸ் வக்கீலாக இருப்பதால் உண்மையை மறைத்துவிடுவார்கள். அதனால், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக் கோரி நாங்களும் மனு செய்வோம். எங்களுக்கு உண்மையான குற்றவாளி யார் என்பது தெரியவேண்டும்...'' என்றார்.
இதுபற்றி, தமிழ்ச்செல்வனிடம் மீண்டும் பேசிய போது, ''அரசு வழக்கறிஞர் என்ற பதவியை அம்மா எனக்குக் கொடுத்ததே மிகப் பெரிய வரம். எங்கள் குடும்பத்தில் யாருக்கும் தேர்தலில் நிற்கும் ஐடியா இல்லாததால், நாங்கள் பொய் புகார் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. எனக்கு மிரட்டல் வந்த 10-வது நிமிடமே நான் போலீஸுக்குத் தகவல் தெரிவித்துவிட்டேன். அவர்கள் புலன்விசாரணை செய்து வழக்குப் போட அவகாசம் தேவைப்பட்டது. மற்றபடி குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது!'' என்றார்.
போலீஸ் கமிஷனர் கண்ணப்பனிடம் பேசினோம். ''விசாரணை நடக்கிறது. இதைத் தவிர இப்போதைக்கு எதுவும் சொல்வதற்கு இல்லை!'' என்று மட்டும் சொன்னார்.
*******************************************************************************
0 comments:
Post a Comment