********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

சென்ற வார செய்திகள் (12 அக்டோபர் 2011)

Tuesday, October 11, 2011

உள்ளே இருக்க வேண்டியவங்க வெளியே இருக்காங்க!

திருச்சியில் ஸ்டாலின் திகுதிகு

திருச்சி மேற்குத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்
கே.என்.நேருவுக்காக வேட்பு மனு தாக்கல் செய்ய, செயல்வீரர்கள் கூட்டம் நடத்த என ஏற்கெனவே இரண்டு முறை திருச்சியில் சுற்றிச் சுழன்ற மு.க.ஸ்டாலின், அக்டோபர் 8-ம் தேதி மூன்றாவது முறையாக மாநகர வீதிகளில் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
நேருவுக்கான பிரசாரம் காரணமாக திருச்சி மேற்குத் தொகுதி கவுன்சிலர்களுக்கும் ஜாக்பாட். பிரசாரம் செய்யும் இடங்களில்எல்லாம் அந்தந்த வார்டில் போட்டியிடும் தி.மு.க. கவுன்​சிலர்​​களுக்​காகவும், திருச்சி மேயர் விஜயா ஜெயராஜுக்​காக​வும் பிரசாரம் செய்யவே, அவர்கள் உச்சி குளிர்ந்து போகிறார்கள்.
விடுமுறை தினம் என்பதால், தட்டில் காசு போடுவார்கள் என்ற நம்பிக்கையில் நண்டு சிண்டு​கள் எல்லாம் ஆரத்தி தட்டோடு நிற்கிறார்கள். ஸ்டாலின் வரும் வரையில் காத்திருக்கும் மக்களுக்குப் போரடிக்காமல் இருக்க, பேண்டு வாத்தியம் முழங்க, குத்தாட்டம் போடுகிறார்கள் தொண்டர்கள். பிரசார வேன் ஸ்பாட்டுக்கு வந்து சேர்ந்ததும், 'டமக்கு டமக்கு... டமக்கு டமக்கு...’ என்று பேண்டு வாத்தியம் உச்சகட்டத்தில் முழங்கி நிற்க... பேச்சை ஆரம்பிக்கிறார் ஸ்டாலின்.
''திருச்சி மேற்குத் தொகுதி இடைத் தேர்தல் என்பது ஆட்சியை மாற்ற வேண்டும் என்பதற்காக நடைபெறுகிற தேர்தல் அல்ல. ஆட்சியில் இருக்கும் ஜெயலலிதா தனது ஆணவப் போக்கை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக நடைபெறும் தேர்தல்!'' என்று ஆரம்பிக்கும்போதே... விசில் சத்தம் காதைப் பிளக்கிறது.
''இந்தத் தேர்தல் ஏன் வந்தது? ஏற்கெனவே இந்தத் தொகுதியில் தேர்தல் வந்தபோது, நீங்​கள் ஒருவரைத் தேர்ந்தெடுத்தீர்கள். அவர் அமைச்சராகவும் பொறுப்பேற்றார். எம்.எல்.ஏ-வாக பொறுப்​பேற்கச் சென்றபோது, ஏற்பட்ட விபத்தில் இறந்துபோனார். இடைத் தேர்தல் வருகிறது என்று தெரிந்ததும், தேர்தலில் தங்களை எதிர்க்க யாரும் இருக்கக் கூடாது என்று திட்டம் போட்டார் ஜெயலலிதா. அதனால் கழக நிர்வாகிகள், ஏற்கெனவே வேட்பாளராகப் போட்டியிட்ட கே.என்.​நேரு மீதெல்லாம் வழக்குகள் போட்டார். 'நேரு மீது போடப்பட்ட வழக்குகள் எல்லாம் பொய் வழக்குகளாகவே தோன்றுகிறது. அவரை ஜாமீனில் விடுகிறோம்’ என்று மதுரை நீதிமன்றம் சொன்னாலும், அவரை வெளியே வரவிடாமல், இன்னொரு பொய் வழக்கை வேண்டுமென்றே திணித்து, சிறையில் அடைக்கும் கொடுமை நடக்கிறது. எத்தனை வழக்குகள் போட்டாலும், எதிர்த்துக் கண்டிப்பாகப் போட்டியிடுவோம் என்றுதான் நேருவை திருச்சி மேற்குத் தொகுதி வேட்பாளராக தலைவர் நிறுத்தி இருக்கிறார்.
ஒரு காலத்தில் எனது ஆருயிர் நண்பர் அன்பில் பொய்யாமொழி இந்தத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, அகால மரணம் அடைந்ததன் காரணமாக இடைத் தேர்தல் வந்தது. அப்போது வேட்பாளராக பொய்யாமொழியின் சகோதரர் பெரியசாமியை தலைவர் நிறுத்தினார். அது போல் இப்போது ஜெயலலிதா என்ன செய்திருக்க வேண்டும்? இறந்துபோனவரின் குடும்பத்தில் இருந்து ஒருவரை வேட்பாளராக நிறுத்தி இருக்க வேண்டும். அல்லது, சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக நிறுத்தி இருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால், நமது தலைவர் அவர்கள் வேட்பாளரை நிறுத்தி இருக்க மாட்டார். அதுதான் தலைவரின் மாண்பு. ஆனால், ஜெயலலிதா இந்தத் தொகுதிக்கே சம்பந்தம் இல்லாத ஒருவரை நிறுத்தி இருக்கிறார். அதுவும் எப்படிப்பட்டவர்? பரஞ்சோதி மீது, அவர் கூடவே இருந்த ஒருவர் புகார் கூறி இருக்கிறார். (பரஞ்சோதியின் இரண்டாவது மனைவி என்று சொல்லிக்கொண்டு புகார் கிளப்பிய டாக்டர் ராணியைக் குறிப்பிடுகிறார்) அதுவும் சி.எம். தனிப் பிரிவுக்கே அந்த மனுவை அனுப்பி வைத்திருக்கிறார். எந்த நடவடிக்கையும் இல்லாததால், மதுரை உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்து இருக்கிறார். சிறையில் இருக்க வேண்டியவர்கள் எல்லாம் வெளியில் இருக்கிறார்கள். வெளியில் இருக்க வேண்டிய நமது வேட்பாளர் நேரு சிறையில் இருக்கிறார். ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து ஐந்து மாதங்கள்கூட ஆகவில்லை. அதற்குள் என்னென்ன அக்கிரமங்கள், அநியாயங்கள், அட்டூழியங்கள், அராஜகங்கள் நடைபெறுகின்றன. இதற்கெல்லாம் ஆளும் கட்சிக்கு ஜால்ரா போட்டுக்கொண்டு இருக்கும் காவல் துறை அதிகாரிகள் வரப்போகும் காலத்தில் பதில் சொல்லியாக வேண்டும். மிரட்டுவதற்காக நான் சொல்லவில்லை. நியாயத்தை எடுத்துச் சொல்​கிறேன்.
இந்த ஆட்சி வந்த இந்த ஐந்து மாத காலத்தில், ஏற்கெனவே கலைஞர் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றிய திட்டங்கள் எல்லாம் நிறுத்தப்பட்டு இருக்கின்றன. சமச்சீர்க் கல்வியில் நீதிமன்றம் சென்று நாம் வெற்றி பெற்றோம். கலைஞர் காப்பீட்டு திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம் போன்றவற்றைக் கிடப்பில் போட்டிருக்கிறார். ஜெயலலிதாவின் ஆணவப் போக்கைத் திருத்தக்கூடிய வாய்ப்பு திருச்சி மேற்குத் தொகுதியில் இருக்கும் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. சிறையில் இருந்து நமது கழக வேட்பாளர் வெற்றிபெற்றார் என்ற வரலாற்றையும் நீங்கள் உருவாக்க வேண்டும்'' என்று பேச்சை நிறைவு செய்ய... 'டம்... டம்... டம்... டம்...’ என்று மீண்டும் மேளதாளம் அலறுகிறது!
ஆர்.லோகநாதன்
படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்
********************************************************************************************
அட்ரஸ் மாறியிருக்கு... கொள்ளை மாறலை!

வைகோ அதிரடி

தேர்தல் களத்தில் இருக்கும் தனது தம்பிகளுக்காக அதிரடிப் பிரசாரத்தில் இறங்கி இருக்கிறார் வைகோ. 
அக்டோபர் 7-ம் தேதி, திருச்சி மாநகர வீதிகளில் அனல் பறக்கப் பிரசாரம் செய்தார் வைகோ. ''திருச்சியில் இருக்கும் காவிரியில் இருந்து எத்தனையோ நகரங்களுக்குக் குடிநீர் செல்​கிறது. ஆனால், திருச்சி வாழ் மக்களுக்கோ பல நேரங்​களில் குடிநீர் கிடைப்பது இல்லை. அதனை சரிசெய்ய... டபுள் லைன் பைப் போடுவேன் என்று சொல்லி இருக்கிறார் எங்கள் மேயர் வேட்பாளர் டாக்டர் ரொஹையா. இது நல்ல தொழில்நுட்ப ஐடியா ராஜா வேஷம் போட்ட ஆட்கள்தான் மாறி இருக்கிறார்களே தவிர, காட்சிகள் மாறவில்லை. மணல் கொள்ளை தொ​டர்ந்து நடைபெறுகிறது. கொள்​ளையில் ஈடுபட்டவர்​களின் அட்ரஸ்தான் மாறி இருக்கிறதே தவிர, கொள்ளை நடந்து கொண்டுதான் இருக்கிறது. இவற்றை எல்லாம் மக்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்​கிறார்கள்...'' என்று முழங்குகிறார்.
''பரமக்குடியில் நடந்தது நியாயப்படுத்த முடியாத துப்பாக்கி சூடு. ஆனால், பொதுச் சொத்தைக் காப்பாற்றத்தான் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக முதல்வர் சொன்னார். அண்ணா முதலமைச்சராக இருந்தபோது, பெரம்பலூரில் ரயில் பெட்டிகள் கொளுத்தப்பட்டன. 'போலீஸ் என்ன வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்ததா?’ என்ற கேள்வி எழுந்தபோது, 'ரயில் பெட்டி எரிக்கப்பட்டால், புதிய பெட்டிகளைத் தயார் செய்துவிடலாம். மாணவர் உயிர் போனால், அதைத் திரும்பக் கொண்டுவர முடியுமா?’ என்று உருக்கமாகக் கேட்டார் அண்ணா. அண்ணாவின் பெயரால் கட்சி நடத்திக்கொண்டு இருப்பவர்களுக்கு அந்த முதிர்ச்சி இல்லையே?
கூடங்குளம் அணு மின் நிலையத்தைத் திறக்கவே கூடாது என்று தீர்மானம் போடுவதாகச் சொன்ன ஜெயலலிதா, 'மக்களின் அச்சம் தீரும் வரையில் திறக்கக் கூடாது’ என்று தீர்மானம் போட்டிருக்கிறார். இது மக்களை ஏமாற்றும் நடவடிக்கை. அணு மின் நிலையம் நம் தலைக்கு மேலே இருக்கும் எமன். ஜப்பான்காரன், 'மின்சாரம் வேண்டாம். உயிரோடு இருந்தாப் போதும்’னு சொல்​றானே... ஜெர்மனிக்காரனும் இத்தாலிக்​காரனும் இருக்கிற அணு உலையெல்லாம் மூடப்போறதா சொல்றானே. தமிழ்நாட்டை சுடுகாடாக்கிட்டு இந்தியாவுக்கு மின்​சாரம் தேவையா?'' என்று சீறிவிட்டுக் கிளம்​பினார். கூட்டம் என்னவோ நன்றாகவே கூடு​கிறது. அதெல்லாம் ஓட்டாக மாறுமா?
ஆர்.லோகநாதன்
படம்: 'ப்ரீத்தி’ கார்த்திக்
 ''ஊழலற்ற நிர்வாகம் என்று சொல்லத் தகுதியுள்ள....''
ம.தி.மு.க-வினர் அனைத்து இடங்களிலும் ஒரு நோட்டீஸைக் கொடுத்து வருகிறார்கள்.அது வைகோவின் கையெழுத்தில் உள்ளது.
'அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை, லட்சியத்தில் உறுதி ஆகிய கோட்பாட்டுடன் 18 ஆண்டுகாலம் தன்னல நோக்கமின்றி அர்ப்பணிப்பு உணர்வுடன் தொண்டாற்றி வருகிறது ம.தி.மு.க. தமிழகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க இடைவிடாத அறப்போரில் ஈடுபட்டு வருகிறோம். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பங்கேற்காவிடினும் தமிழக மக்கள் நலன் காக்க அனைத்து முனைகளிலும் உரிமைக்குரல் எழுப்புவதோடு மக்கள் மன்றத்தில் உழைத்து வருகிறோம்.தாய்த்தமிழகத்தின் நலனுக்கும் உயர்வுக்கும் பாடுபட்டு வரும் எங்கள் இயக்கம் நேர்மையை நாணயத்தை இரு கண்களாக போற்றி வருகிறது. ஊழலற்ற உள்ளாட்சி நிர்வாகம் அமைந்திட உறுதி அளிக்கும் தகுதியுள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு உங்கள் ஆதரவை தாருங்கள்... என்று உங்கள் சகோதரன் வைகோ இருகரம் கூப்பி அன்புடன் வேண்டுகிறேன்’ என்ற பீடிகையுடன் அதை எழுதி உள்ள வைகோ, தமிழகத்தின் அனைத்துப் பிரச்னைகளிலும் தான் செய்துள்ள போராட்டங்களையும் பட்டியல் இட்டுள்ளார்!

'மறுமலர்ச்சி' பெறுமா இந்த நகராட்சிகள்?

உள்ளாட்சி ரிப்போர்ட்

புளியங்குடி:
மிழகத்தில் மொத்தம் 125 நகராட்சிகள் இருக்கின்றன. இதில் ம.தி.மு.க.வுக்குச் செல்வாக்கான நகராட்சிகளை மாவட்ட வாரியாக ஆய்வு செய்தோம்.  அவர்கள் குறி வைத்து வேலை பார்க்கும் சில நகராட்சிகளை வலம் வந்தோம்.
வைகோவின் சொந்த மாவட்டமான திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது இந்த நகராட்சி. ம.தி.மு.க. சார்பில் கடந்த முறை எம்.எல்.ஏ-வாக இருந்த சதன் திருமலைக்குமாரைக் களம் இறக்கி இருக்கிறார் வைகோ. எம்.எல்.ஏ-வாக இருந்தபோது நிறைவேற்றிய திட்டங்கள், மக்களுக்காகப் பல முறை சட்டமன்றத்தில் பேசியவை எல்லாம் இவருக்கு ப்ளஸ். அ.தி.மு.க-வின் சார்பில் நிற்கிறார் சங்கரபாண்டியன். கடந்த முறை அ.தி.மு.க. வசம் இருந்ததால், மக்களிடம் அதிருப்தி இருக்கிறது. தி.மு.க சார்பில் களம் இறங்கி இருக்கும் செல்வகுமார் வழக்கறிஞர். சி.பி.எம்., பி.ஜே.பி. உள்ளிட்ட கட்சிகளும் இரு சுயேச்சைகளும் பிரிக்கும் வாக்குகளால் இந்த நகராட்சியில் ஜெயம் யாருக்கு என்பதில் கடுமையான போட்டி!
பொள்ளாச்சி:
கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி நகராட்சி தங்கள் கைக்குள் வரும் என்று ம.தி.மு.க. மிகவும் நம்புகிறது. வைகோவுக்கு இந்தப் பகுதியில் எப்போதும் அமோகமான வரவேற்பு உண்டு. தொடர்ந்து இரண்டு முறை ம.தி.மு.க. வேட்பாளர் பொள்ளாச்சி நாடாளுமன்றத்தைக் கைப்பற்றி இருப்பதால், தங்கள் கழகத்துக்கு இங்கே வலுவான செல்வாக்கு இருப்ப தாக அடித்துச் சொல்கிறார்கள். பொள்ளாச்சி - கோவை அகல ரயில் பாதை கோரிக்கை, தென்னை விவசாயிகள் பிரச்னை உள்ளிட்ட பொள்ளாச்சி மக்களுக்கான பல விஷயங்களை மையமாக வைத்து அடிக்கடி போராட்டங்கள் நடத்தியதன் மூலம் ம.தி.மு.க-வினர் மக்களின் ஆதரவை பெற்று இருக்கிறார்கள். இவற்றையெல்லாம் தாண்டி இங்கே ம.தி.மு.க. வேட்பாளராகப் போட்டியிடும் செந்தில்குமார், நல்ல பெயர் சம்பாதித்து வைத்திருக்கிறார். 
கோபிச்செட்டிப் பாளையம்:
இங்கே ம.தி.மு.க. வேட் பாளராகப் போட்டியிடும் கீதா மகேந்திரன், ஓர் ஆசிரியை. இவரது கணவர் மகேந்திரன் வழக்கறிஞர். கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினராக இருக்கும் அவர், ஏற்கெனவே கடந்த 2001 சட்டசபைத் தேர்தலின்போது கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் போட்டியிட்டவர். பல தொழிற்சங்கங்களுக்கு வழக்கறிஞராக இருந்து பல பிரச்னைகளில் தலையிட்டு இருப்பதால், தொழிலாளர்களின் ஆதரவு இருக்கிறது. காங்கிரஸார் கண்டுகொள்ளாத கோரிக்கையான தியாகி லட்சுமண அய்யருக்கு சிலைவைக்கக் கோரிப் போராடியது ப்ளஸ். அ.தி.மு.க. வேட்பாளர் ரேணுகாதேவி மீது இருக்கும் அதிருப்தி, அறிமுகம் இல்லாத தி.மு.க. வேட்பாளர் போன்ற காரணங்களே, தன் மனைவியைக் கரை சேர்த்து விடும் என்று நம்புகிறார் மகேந்திரன்.
சத்தியமங்கலம்:
இங்கே ம.தி.மு.க. சார்பில் போட்டியிடும் சிவக்குமார், ஒரு காலத்தில் பி.ஜே.பி-யில் மாநிலப் பொறுப்பில் இருந்தவர்.புளியங்கோம்பை நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவேற்றக் கோரி பல போராட்டங்களில் ஈடுபட்டதன் மூலம் மக்களுக்கு நன்கு பரிச்சயமானவர். தி.மு.க. வேட்பாளர் வெங்கிடுசாமி, ம.தி.மு.க-வில் இருந்து சென்றவர், அ.தி.மு.க. வேட்பாளர் சுப்பிரமணியம் மக்களுக்கு பரிச்சயம் இல்லாதவர். இரண்டு கட்சியினரின் பிரசாரமும் மந்தமாகவே இருப்பதால், சிவக்குமாருக்கு வெற்றிவாய்ப்பு இருப்பதாக ம.தி.மு.க-வினர் நம்புகிறார்கள்.
குளித்தலை:
மூன்று நகராட்சிகளைக் கொண்ட கரூர் மாவட்டத்தில் குளித்தலையில் நிச்சய வெற்றியை எதிர்பார்க்கிறார்கள் ம.தி.மு.க-வினர். காரணம், இங்கே போட்டியிடும் பல்லவி ராஜா பலமான வேட்பாளர். ம.தி.மு.க. நகரச் செயலாளராக இருந்தாலும் கட்சி செல்வாக்கைவிட சொந்த செல்வாக்கு மிகுந்தவர். தொடர்ந்து மூன்று முறை இந்த நகராட்சியை இவரது குடும்பமே ஆட்சி செய்திருக்கிறது. இவரது அண்ணி ராணி மணிசேகர், இவரது மனைவி சகுந்தலா ஆகியோர் தலைவராக இருந்துள்ளனர். அந்த நேரத்தில் துணைத் தலைவர் பதவியை வகித்தது பல்லவி ராஜாதான் என்று பல்லவி பாடுகிறார்கள் ம.தி.மு.க-வினர். தி.மு.க. சார்பில் முன்னாள் நகரத் துணைச் செயலாளர் அமுத வேலும் அ.தி.மு.க-வில் நகரச் செயலாளர் சோமுரவியும் போட்டி போட்டாலும் சொந்த செல்வாக்கு, கட்சியினரின் உறுதுணையோடு வெற்றிக் கனியைப் பறிக்க முடியும் என்று நினைக்கிறார் பல்லவி ராஜா.
பூந்தமல்லி:
'பூவைப் பெரியார்’ என்று சொல்லப்படும் டி.ஆர்.ராஜரத் தினத்தின் மகன் டி.ஆர்.ஆர். செங்குட்டுவன் இங்கு வேட்பாளர்.  பூந்தமல்லி பெண்கள் உயர்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவராகவும் இருக்கிறார்.  பள்ளி மாணவிகளிடமும், அவர்களின் பெற்றோர்கள் மத்தியிலும் செங்குட்டுவனுக்கும் நல்ல பெயர் இருக்கிறது. அ.தி.மு.க., தி.மு.க. என மாறி மாறி வெற்றி பெற்றிருக்கும் இந்த நகராட்சியில் குடிநீர்ப் பிரச்னையும், சாலை வசதியும் இன்று வரை தீர்க்கப்படாத பிரச்னைகளாகவே இருக்கிறது. அந்த பிரச்னைகளைத் தீர்ப்பதாகச் சொல்லி மட்டுமே ஓட்டு வேட்டையாடிக்கொண்டு இருக்கிறார் செங்குட்டுவன். இவரின் தனிப்பட்ட செல்வாக்குதான் மற்ற வேட்பாளர்களுக்கு பெரும் சவால்!
ஆவடி:
ஆவடி ராணுவத் தளவாடங் கள், டாங்கர்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளின் யூனியன் தலைவராக இருக்கும் அந்திரிதாஸ்தான் வேட்பாளர். வழக்கறிஞர். பேச்சாளர்.  'பாதாள சாக்கடை’ என்ற வார்த்தை ஆவடி மக்களிடம் எரிச்சலை உண்டாக்கி இருக்கிறது. அதையே தனது முக்கிய பிரசாரமாக எடுத்திருக்கிறார் அந்திரிதாஸ். 'எனக்கும் உங்க பிரச்னை தெரியும். ஒரு தடவை வாய்ப்பு கொடுங்க. போர்க் கால அடிப்படையில் பாதாள சாக்கடைத் திட்டத்தை முடிச்சுக்காட்டுறேன்’ என்று மக்களிடம் மன்றாடிவருகிறார். நகராட்சித் தேர்தலில் ஏற்கெனவே இரண்டு முறை நின்று குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியவர் அந்திரிதாஸ்.
பெரம்பலூர்:
இங்கே ம.தி.மு.க. சார்பில் களம் இறங்கியிருப்பவர் துரைராஜ். ம.தி.மு.க.வில் இருந்து பலரை தி.மு.க-வினர் கொத்துக்கொத்தாக விலைக்கு வாங்கிய நேரத்தில், பெரம்பலூர் மாவட்டச் செயலாளரும் தி.மு.க-வுக்குப் போய்விட்டார். ஆனால், விடாப்பிடியாக ம.தி.மு.க-வில் இருப்பவர் இவர். 1996-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவை எதிர்த்து 80,000 ஓட்டு வாங்கியவர் என்பதால், பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார் வைகோவின் வேட்பாளர். அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் பிரசாரத்தைத் தொடங்கும் முன்பே, பெரம்பலூர் வீதிகளைக் கலக்கிக்கொண்டு இருக்கிறது மறுமலர்ச்சிப் பட்டாளம்.
ராமேஸ்வரம்:
இங்கே களம் இறங்கி யிருக்கும் ம.தி.மு.க. வேட்பாளர் கராத்தே பழனிச்சாமி, மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளராக இருக்கிறார். முக்குலத்தோராக இருந்தாலும், அனைத்து சமுதாயத்தினரிடமும் நல்ல பெயரை வாங்கியிருக்கிறார். சட்டமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட அனுபவமும், திறமையான அரசியல்வாதியாக இருந்தும் பதவியை இதுவரை வகித்தது இல்லை என்ற அனுதாபமும் இருக்கிறது. தி.மு.க., அ.தி.மு.க-வினர் பிரசாரத்தைத் தொடங்கும் முன்பே ராமேஸ்வரத்தை ஒரு வலம் வந்துவிட்ட கராத்தே பழனிச்சாமி  நம்பிக்கையோடு இருக்கிறார்.
திண்டுக்கல்:
இந்த மாவட்டத்தில் திண்டுக்கல், பழநி ஆகிய இரு நகராட்சிகளில் மட்டுமே களம் காண்கிறது ம.தி.மு.க. இதில் திண்டுக்கல் நகராட்சியை நம்பிக்கையோடு பார்க்கிறார்கள். காரணம், இங்கே போட்டியிடும் செல் வராகவன், கட்சியின் மாவட்டச் செயலாளர். நகரில் கணிசமாக வசிக்கும் நாயுடு சமுதாயத்தைச் சேர்ந்தவர். தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்கள் வலுவான நிலையில் இருந்தாலும் சமீபத்தில் வைகோ பிரசாரம் செய்ய வந்தபோதும் கூட்டம் அதிகமாக இருந்தது. அதன் பிறகு சுற்றிச் சுழன்று வருகிறார் செல்வராகவன்.
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆரணிதான் ம.தி.மு.க-வின் டார்கெட். காரணம், இங்கே வேட்பாளராகக் களம் இறங்கியிருப்பது மாவட்டச் செயலாளர் ராஜாவின் மனைவி சாந்தி. ஆரணி மக்களுக்கு நன்கு அறிமுகமானவர் ராஜா. 2001-ம் ஆண்டு ஆரணி சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டு 2-வது இடத்தைப் பிடித்தவர். அந்தத் தேர்தலில் தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் 3, 4-வது இடங்களைத்தான் பிடித்தது. இந்த முறை சாந்தியை வேட்பாளராக அறிவித்ததுமே, மற்ற கட்சிகள் கொஞ்சம் ஆடிப்போய்தான் இருக்கின்றன.
கோவில்பட்டி:
களம் இறங்கியிருக்கும் ம.தி.மு.க. வேட்பாளர் முப்பிடாதி, கிழக்கு ஒன்றியச் செயலாளர் பவுன் மாரியப்பனின் மனைவி. விவசாயம், இரு சக்கர வாகனங்கள் வாங்கி விற்பது போன்றவைதான் இவரது தொழில். அனைத்து கட்சி, சமுதாயத்தினரிடமும் நன்கு பழகுபவர். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் கவுன்சிலரான இவர், தலைவருக்கான மறைமுகத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மல்லிகாவுக்கு சமமான வாக்குகளைப் பெற்றுக் கடும் போட்டியைக் கொடுத்தவர். கடைசியில் குலுக்கல் முறையில் பதவி மல்லிகாவுக்குப் போனதால், வாய்ப்பை இழந்தார். அதனால், இம்முறை பம்பரமாக சுழன்றுவருகிறார்.
ஜூ.வி. டீம்
******************************************************************************************
நகராட்சித் தலைவர்... முந்துவது யார்?

11 நகரங்கள் பரபர ரிப்போர்ட்!

 மணப்பாறை:
ள்ளாட்சித் தேர்தல் உச்சகட்டத்தை நெருங்கி இருப்பதால், தமிழ்நாடு இப்போ செம ஹாட். தேர்தலுக்கே உரித்தான அத்தனை வம்புதும்பு, அமளி துமளிகளுடன் பிரசாரம் தூள் பறக்கிறது. இன்னும் 15 நாட்களில் பதவியில் அமர இருக்கும், சேர்மன் வேட்பாளர்களின் ஸ்கேன் ரிப்போர்ட் தொடர்கிறது.
அ.தி.மு.க. சார்பில் கட்சியின் மகளிரணி நகரப் பொறுப்பாளரான ராஜராஜேஸ்வரி போட்டியிடுகிறார். மூன்று முறை நகர்மன்ற கவுன்சிலராக இருந்தவர் என்பதால், மக்களிடம் பரவலாக அறியப்பட்டவர். கட்சியின் செல்வாக்கு மட்டுமே இவரது பலம். கடந்த சட்டசபைத் தேர்தலில் பக்கபலமாக இருந்த கூட்டணி கட்சிகள் தனித்து நிற்பதே இவரது வாக்கு வங்கிக்கு வேட்டு வைக்கிறது. தி.மு.க. சார்பில் கவுன்சிலராக இருக்கும் சாந்தா வேட்பாளராகி இருக்கிறார். இவரது இரண்டு மகன்களும் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்கள் என்பதால், கட்சியினர் ஓடியாடி வேலை செய்கிறார்கள். நகரத்தில் பெரும்பான்மையாக இருக்கும் நாயுடு சமூகத்தில் 'நாட்டாமை’ குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், ஜாதி செல்வாக்கு இவருக்கு ஆதரவாக உள்ளது. அதே நாயுடு சமூகத்தைச் சேர்ந்த தே.மு.தி.க. வேட்பாளரான வரலட்சுமி இவரது வாக்குகளை பங்கு போடலாம். இருப்பினும், மணப்பாறை சாந்தாவுக்கே சாதகமாக இருக்கிறது!
மேலூர்:
இங்கு வெற்றி-தோல்வியைத் தீர்மானிக்கும் சக்திகளில் முஸ்லிம்கள் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். சிட்டிங் சேர்மனான தமிழரசி தங்கஜெயபாலன், சொன்னதைச் செய்யாதவர் என்ற 'நற்பெயரை’ சம்பாதித்து வைத்திருப்பது தி.மு.க-வின் ஓட்டு வங்கிக்கு வேட்டு வைக்கிறது. இதை அறிந்துதானோ என்னவோ முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த முகமது யாசினை வேட்பாளராக நிறுத்தி இருக்கிறது தி.மு.க. ஆனாலும், உட்கட்சி குஸ்திகளை சமாளிக்க முடியாமல் திண்டாடுகிறது. அ.தி.மு.க. நகரச் செயலாளர் சரவணன், இங்கே சேர்மன் வேட்பாளர். இவருக்கு பலமே சிட்டிங் எம்.எல்.ஏ-வான சாமிதான். இவர், ''உங்களுக்கு வேண்டியதை நான் செய்து தருகிறேன்; என்னை ஜெயிக்க வைத்தது போல் சரவணனையும் ஜெயிக்க வையுங்கள்!'' என்று வீடுவீடாக ஏறி இறங்கி சரவணனுக்கு வரம் கொடுக்கிறார் சாமி. விஜயகாந்த்தை மட்டுமே நம்பிக் களத்தில் நிற்கும் ராஜாங்கத்துக்கு கம்யூனிஸ்ட்கள் முழுமனதாக ஆதரவு கொடுத்தால் மட்டுமே கட்டிய பணத்தைத் திரும்பி வாங்க முடியும்.
திருப்பத்தூர்:
சேர்மன் பதவிக்கு தி.மு.க., அ.தி.மு.க-வினரிடையே பலத்த போட்டி. ஆசிரியர் வேலையை உதறிவிட்டு 2001-ம் ஆண்டு தி.மு.க சார்பாக எம்.எல்.ஏ. தேர்தலில் நின்று தோற்றுப்போன அரசு, இப்போது சேர்மன் வேட்பாளர். மக்களிடையே நல்ல அறிமுகமும், நல்ல பெயரையும் சம்பாதித்து வைத்திருப்பது அவரது பலம். அ.தி.மு.க சார்பாக நிற்பவர் டி.டி.குமார் மக்களிடையே அறிமுகம் கிடையாது. இவரது தந்தை சுந்தரம் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் என்பதால், அவரது பெயரைச் சொல்லித்தான் ரத்தத்தின் ரத்தங்கள் ஓட்டு கேட்டு வருகிறார்கள். மற்ற கட்சிகள் துள்ளிக்கொண்டு இருந்தாலும், நெருக்கடியே இல்லாமல் அரசு சேர்மன் ஆவது நிச்சயம் என்று இப்போதே பட்டாசு வெடிக்கிறார்கள் உடன்பிறப்புகள்
பழநி:
தி.மு.க. சார்பில் நகரச் செயலாளர் வேலுமணியும், மார்க்சிஸ்ட் சார்பில் சிட்டிங் சேர்மன் ராஜமாணிக்கமும் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் நகரச் செயலாளர் மகுடீஸ்வரனும் மோதுகிறார்கள். மகுடீஸ்வரனை அ.தி.மு.க. வேட்பாளராக அறிவித்ததில் கட்சிக்குள் ஏகப்பட்ட புகைச்சல். இதனால், பழநியில் சிட்டிங் எம்.எல்.ஏ-வை கையில் வைத்திருந்தும் சேர்மனுக்கான போட்டியில் அ.தி.மு.க. நிலை ததிங்கிணத்தோம் போடுகிறது. பதவியில் இருந்தபோது மக்களுக்கு சேவை செய்து செல்வாக்கைப் பெருக்கிக் கொண்டு இருக்கும் தோழர் ராஜமாணிக்கத்துக்கு கூடுதல் பலமாக தே.மு.தி.க-வும் கைகொடுப்பதால் மீண்டும் அவரே முன் வரிசைக்கு முந்துகிறார். அதேநேரம், தி.மு.க-வுக்கு இங்கே வலுவான அடித்தளம் இருப்பதும் அக்கட்சி சார்பில் போட்டியிடும் வேலுமணி அறிமுகமான நபராக இருப்பதும் ராஜமாணிக்கத்தின் வெற்றிக்கு சவால் விடுகிறது. கருணாநிதிக்கும் கம்யூனிஸ்ட்களுக்கும் இடையிலான கடும் போட்டியில் யார் ஜெயித்தாலும் நூலிழையில்தான் வித்தியாசம் இருக்கும்.
தேனி:
அ.தி.மு.க. சார்பில் நகரச் செயலாளர் முருகேசன் நிறுத்தப்பட்டு இருக்கி றார். தி.மு.க-வில் ராமதாஸ் களத்தில் இருக்கிறார். தேனி நகராட்சியில் வெற்றி- தோல்வியைத் தீர்மானிக்கும் தேவேந்திர குல வேளாளர் வாக்குகள் பரமக்குடி விவகாரத்தை மையமாக வைத்து ஆளும் கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கிறது. இவர்கள் தி.மு.க பக்கம் சாய்வதை இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஜீவா தட்டிப் பறிக்கிறார். தே.மு.தி.க. வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி நம்பியுள்ள நாயுடு சமூக ஓட்டுகள், அமைச்சர் ஓ.பி.எஸ். பேச்சுக்குக் கட்டுப்பட்டு அ.தி.மு.க. பக்கம் மாறிவிட்டது. சிறுபான்மையாக உள்ள முக்குலத்து சமூகத்தைச் சேர்ந்த முருகேசனின் 'பதமான மனுஷன்யா’ என்ற முத்திரை அவரை சேர்மன் இருக்கைக்கு அழைத்து செல்லும் வாய்ப்பு உள்ளது.
நாகர்கோவில்:
பி.ஜே.பி-க்கு நம்பிக்கை தரும் நாகர்கோவிலில் மீனாதேவ் அக்கட்சியின் வேட்பாளராகி இருக்கிறார். ஏற்கெனவே ஒரு முறை சேர்மனாக இருந்ததால், மக்களிடம் அழுத்தமான அறிமுகமும் கூடவே நல்ல பெயரும் இருக்கிறது. அ.தி.மு.க. சார்பில் மாவட்ட மகளிரணி செயலாளரான டாரதி சாம்சன் போட்டியிடுகிறார். தனது பழுத்த 30 வருட அரசியல் அனுபவம் நிச்சயம் கைகொடுக்கும் என்பது இவரது நம்பிக்கை. தி.மு.க. மற்றும் தே.மு.தி.க. வேட்பாளர்களெல்லாம் சற்றுத் தள்ளியே நிற்க, ஆளும் கட்சிக்கும், பி.ஜே.பி-க்கும் இடையில் நடக்கும் யுத்தத்தில் மீனாதேவ் கரமே ஓங்கி உயர்ந்திருக்கிறது.
காஞ்சிபுரம்:
அ.தி.மு.க. வேட்பாளர் மைதிலி திருநாவுக்கரசு. மறைந்த முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசின் மனைவியான இவர் காஞ்சிபுரம் தொகுதியில் இடைத்தேர்தல் மூலம் எம்.எல்.ஏ-வாகவும் இருந்தார். இவருக்கு எதிராக தி.மு.க. வேட்பாளராகக் களம் இறங்கியிருக்கிறார், நகரச் செயலாளர் சேகர். கட்சிப் பாகுபாடின்றிப் பழகுவதும், மென்மையான குணமும் இவருக்கான பலம். ஆனால், தி.மு.க-வின் உட்கட்சிப் பூசல் இவரை வெகுவாக கலக்கமடைய வைத்திருக்கிறது. சில மைனஸ்கள் இருந்தாலும் அதிகப்படியான பிளஸ்கள் காரணமாக மைதிலியே இங்கே நாயகி!
கிருஷ்ணகிரி:
தி.மு.க. சார்பில் முன்னாள் நகரச் செயலாளர் கே.சி.கிருஷ்ணன் நிறுத்தப்பட்டு இருக்கிறார். தற்போதைய மாவட்ட வழக்கறிஞர் பிரிவு பொறுப்பாளர். ஆனாலும் மக்கள் மத்தியில் பெரிய அளவில் தன்னை பரிச்சயப்படுத்திக் கொண்டவர் இல்லை. இரண்டு முறை எம்.எல்.ஏ-வாகவும், கிருஷ்ணகிரி பிரிக்கப்படும் முன் ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்டச் செயலாளராகவும் இருந்த சின்னராசுவின் மகன் என்பது அ.தி.மு.க. தங்கமுத்துவின் பலம். தற்போது மாவட்ட மாணவரணிச் செயலாளராக உள்ள இவர், நகரவாசிகளுக்கு நன்கு அறிமுகமானவர். இதையெல்லாம்விட உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமியின் தொகுதிக்குள் இருக்கிறது கிருஷ்ணகிரி நகராட்சி. இங்கே வெற்றியடைந்தே தீரவேண்டும் என்பதற்காக பிரசாரத்தைக் கடுமையாக முடுக்கி விட்டுள்ளார் முனுசாமி. பெரிய கட்சிகளை எட்டிப்பிடிக்கும் வகையில் தே.மு.தி.க-வின் வேட்பாளர் பரந்தாமன் கடுமையாக உழைக்கிறார். ஆனாலும் கே.பி.முனுசாமியின் நம்பிக்கை வீண் போகாது.
சிவகாசி:
காங்கிரஸ் வேட்பாளர் அசோகன் ஏற்கெனவே நகராட்சி துணைத் தலைவராகப் பதவி வகித்தவர். தொழிலதிபர் என்பதால், லோக்கலில் நல்ல அறிமுகம் உண்டு. சிவகாசியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் செய்துகொடுத்த ரோடு மற்றும் குடிநீர் வசதி உள்பட பல வளர்ச்சித் திட்டப் பணிகள் அவருக்குக் கைகொடுக்கும். 'அரசன்’ அசோகன் மீது பெரிய அளவில் எந்த புகாரும் இல்லை. அ.தி.மு.க. சார்பில் சிவகாசியை சேர்ந்த டாக்டர் கதிரவன் போட்டியிடுகிறார். அ.தி.மு.க-வில் மருத்துவ அணியில் நிர்வாகியாக இருக்கும் கதிரவன் முதன் முறையாகத் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார். ஆளும் கட்சி வேட்பாளர் என்பதால், வெற்றி உறுதி என்று மிதப்பாக இருக்கிறார்கள். முக்குலத்தோர் உட்பட பிற சமுதாயத்தினர் ஓட்டு அ.தி.மு.க-வுக்கு அப்படியே கிடைக்கும் என்று நம்புகிறார்கள். என்ன கணக்கு போட்டாலும் காங்கிரஸ் வேட்பாளர் 'அரசன்’ அசோகனுக்கு வெற்றி வாய்ப்பு சாதகமாக இருக்கிறது.
சங்கரன்கோவில்:
தி.மு.க. வேட்பாளரான அன்புமணி, சங்கரன்கோவில் யூனியன் சிட்டிங் சேர்மன். ஆனாலும் இது அவருக்கு மைனஸானதுதான் கொடுமை. கடந்த முறை பல பொறுப்புகளில் இருந்த தி.மு.க. நிர்வாகிகள் மீது மக்களுக்கு இருக்கும் வெறுப்பு, அன்புமணி மீதும் படிந்து இருக்கிறது. 'சங்கரன்கோவில் நகராட்சியை தமிழகத்திலேயே முன்மாதிரியான நகராட்சியாக மாற்றும் திட்டங்கள் என்னிடம் இருக்கிறது. அதை நிறைவேற்ற ஒரு வாய்ப்பு கொடுங்கள்’ என்று அதிரடியாக வாக்கு சேகரிக்கிறார், அ.தி.மு.க. வேட்பாளரான முத்துச்செல்வி. வீடுகளில் விசைத்தறி அமைத்து இருப்பவர்களுக்கு வீட்டுவரியை குறைக்க நடவடிக்கை, போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தரத் தீர்வு, குடிநீர் பிரச்னைக்குத் தீர்வு என இவர் அளிக்கும் வாக்குறுதிகளுக்கு செம ரெஸ்பான்ஸ். ம.தி.மு.க-வின் ஜெயலட்சுமிக்கு அவரது கட்சியினர் தீவிரமாக வாக்குசேகரித்து வருகிறார்கள்.
ஆத்தூர்(சேலம்):
அ.தி.மு.க. சார்பில் சிட்டிங் கவுன்சிலரும், நகர மகளிரணி செயலாளருமான உமாராணி வேட்பாளராகி இருக்கிறார். உட்கட்சி அதிருப்தியாளர்களின் உள்நீச்சல் வேலைகள் உமாவுக்கு சறுக்கல் கொடுக்கிறது. தி.மு.க. சார்பில் டாக்டர் சிகாமணியின் மனைவி புனிதவதி களமிறங்கி இருக்கிறார். லோக்கல் தி.மு.க-வினருக்கு இவரை யாரென்றே தெரியாது. ஆனாலும் தலைமையின் முடிவை ஏற்று அவருக்காக உழைக்கிறார்கள். பாதகங்கள் குறைவாக இருப்பதால் தி.மு.க-வே வெற்றியை கைப்பற்றலாம்!
ஜூ.வி. டீம்.
*********************************************************************************
இழுபறியில் சேலம் மாநகராட்சி!

செல்வாக்கு இல்லாத வேட்பாளர்கள்... தீவிரம் காட்டாத கட்சிகள்

ணக்கத்துக்குரிய பதவியில் அமர சேலம் மாநகராட்​சியில் நடக்கும் கூத்துகளையும் அடாவடிகளையும் மக்கள் மந்திரப் புன்னகை​யோடு பார்த்து ரசித்துக் கொண்டு இருக்கிறார்கள். 
தி.மு.க-வின் முக்கியப் புள்ளிகள் பலரும் சிறையில் இருக்க, ஜாமீனில் வந்து சிகிச்சைக்காக சென்னை போன வீரபாண்டி ஆறுமுகம், இதுவரை சேலம் பக்கம் தலை வைத்துப் படுக்கவில்லை. தி.மு.க. வேட்பாளர் எஸ்.டி.கலையமுதனுக்காக தெருத்​தெருவாக அலைந்து ஓட்டு கேட்டுக் கொண்டிருப்பது சிட்டிங் மேயரான ரேகா பிரியதர்ஷினி மட்டும்தான். கலையமுதனுக்கு ஸீட் கொடுத்ததில் தி.மு.க-வில் பலருக்கும் உடன்பாடு இல்லை என்பதால் யாரும் எடுத்துக் கட்டிக்கொண்டு அவருக்காக வேலை பார்க்கவில்லை.
''சேலத்து மக்களோட நீண்ட நாள் கனவு, மேட்டூர் - சேலம் தனி கூட்டுக் குடிநீர் திட்டம்தான். எங்களுடைய கடந்தகால ஆட்சியில் அதைத் தொடங்கி விட்டோம். நான் மேயரானதும் அதை நிறைவேற்றிடுவேன். அ.தி.மு.க. வந்தால் இதை கலைஞர் கொண்டு வந்த திட்டம் என்பதற்காகவே முடக்கி விடுவார்கள். அதனால் சேலம் மக்களின் குடிநீர் பிரச்னை தீர எனக்கு ஓட்டுப் போடுங்க..'' என்று பிரசாரம் செய்கிறார் கலையமுதன்.
அ.தி.மு.க-வில் யார் யார் பெயரோ மேயர் வேட்பாளருக்கு அடிபட்டுக் கொண்டிருக்க... வழக்கம் போல யாருமே எதிர்பார்க்காத சவுண்டப்பனுக்கு வாய்ப்பு கொடுத்தார், ஜெயலலிதா. 'தி.மு.கவினரோடு தொடர்பில் இருப்பவர் சவுண்டப்பன். கடந்த ஆட்சி காலத்தில் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ராஜாவை வைத்து விழா எடுத்தார்’ என்று புகார்கள் தலைமைக்குப் போன பிறகும் ஜெயலலிதா முடிவில் எந்த மாற்றமும் இல்லை. அதனால் சேலத்தில் அ.தி.மு.க-வினரே சவுண்டப்பனிடம் இருந்து கொஞ்சம் தள்ளியே நிற்கிறார்கள்.
''24 மணி நேரமும் குடிநீர் கொடுக்க ஏற்பாடு செய்​வேன். ரவுடிகளை ஒழிப்பேன். தமிழ்நாட்டின் முன்மாதிரி மாநகராட்சியாக சேலத்தை மாற்றுவேன்!'' என்றெல்லாம் வாக்குறுதிகளை அள்ளித் தெளித்து கொண்டிருக்கிறார் சவுண்டப்பன். அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எம்.எல்.ஏ-க்கள் செல்​வராஜ், வெங்கடாஜலம், முன்னாள் அமைச்சர் பொன்னையனும் சவுண்டப்பனுக்காக வேலை பார்க்கிறார்கள். ''சவுண்டப்பன் என்ற தனிப்பட்ட நபருக்காக சேலத்தில் வாக்குகள் கிடையாது. அ.தி.மு.க-வுக்காக விழும் வாக்குகள்தான். அதே நேரத்தில் சவுண்டப்பன் மீதுள்ள கோபத்தில் அந்த வாக்குகளும் மாற வாய்ப்புகள் நிறையவே உள்ளது!'' என்று அவரது கட்சித் தொண்டர்களே வாக்குமூலம் தருகிறார்கள்.
தி.மு.க-வுக்கும், அ.தி.மு.க-வுக்கும் உள்ள மைனஸ்கள் தே.மு.தி.க-வுக்கும், பா.ம.க-வுக்கும்தான் பலமாகி இருக்கிறது.
தே.மு.தி.க. வேட்பாளரான ஏ.ஆர். இளங்கோவன் சேலத்துக்குப் புதுமுகம். விஜயகாந்த் ரசிகர் மன்றம் தொடங்கிய காலத்தில் இருந்தே உடன் இருப்பவர். வம்பு தும்புக்குப் போகாதவர். ''இரண்டு கட்சிகளும் மாறி மாறி உங்களை ஏமாத்திட்டுத்தான் இருக்காங்க. தயவுசெஞ்சு எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க. சேலத்தை எவரெஸ்ட் சிட்டியாக மாத்திக் காட்டுறேன்!'' என்று வீடு வீடாகப் போய் மக்களிடம் கெஞ்சி வருகிறார் இளங்கோவன். இளங்கோவன் சார்ந்திருக்கும் நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சேலத்தில் கணிசமான அளவுக்கு இருக்கிறார்கள் என்பதால், அவர்களின் பார்வை இளங்கோவனை நோக்கித் திரும்பி இருக்கிறது.
பா.ம.க. வேட்பாளர் அருள், கட்சி என்பதைத் தாண்டி சேலத்து மக்களுக்கு நன்கு அறிமுகமனவர். 'என்னை ஞாபகம் இருக்குங்களா..?’ என்று அருள் உருகி உருகி, கைப்படவே கடிதம் எழுதி சேலத்தில் மட்டும் 30,000 பேருக்கு அனுப்பி இருக்கிறாராம். வன்னியர்கள் அதிகம் உள்ள சேலத்தில் மேயர் வேட்பாளருக்குப் போட்டியிடும் ஒரே வன்னியர் என்பது அருளின் நம்பிக்கைகளில் ஒன்று. ''சேலத்தில் காளியம்மன் கோயில் தெருவில் மூணாம் நம்பர் வீட்டில் யார் இருக்காங்கன்னு கேட்டாக்கூட எனக்கு சொல்லத் தெரியும். அந்த அளவுக்கு சேலம் எனக்கு அறிமுகம். க்ளீன்- க்ரீன்- ஹெல்த்தி சிட்டியாக சேலத்தை மாத்திக் காட்டுவேன்!'' என்று உறுதியளிக்கிறார் நம்பிக்கையோடு.
இவர்களுக்கு மத்தியில், காங்கிரஸ் சார்பில்  களம் இறங்கியுள்ள தங்கபாலுவின் தீவிர ஆதரவாளர் விஜயவர்மன், ''டெல்லி, சண்டிகர் போல சேலத்தை மாத்திக் காட்டாம விடமாட்டேன்!'' என்று சபதம் செய்கிறார். இவர்களுக்கு இடையே வைகோவின் தியாகத்தைச் சொல்லி ஓட்டு கேட்டு வருகிறார், ம.தி.மு.க. வேட்பாளரான ராமச்சந்திரன்.
உள்ளாட்சித் தேர்தலில் தனி மனிதர்களின் செல்வாக்குதான் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் என்பார்கள். ஆனால் சேலத்தில் அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க. கட்சி வேட்பாளர்கள் யாருக்கும் அப்படி எந்த செல்வாக்கும் இல்லை. அதுமட்டும் போதாது என்று சொந்தக் கட்சியில் இருப்பவர்களே, வேட்பாளர்களுக்கு சூனியம் வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அதனால் முழுக்க முழுக்க இக்கட்டான சூழ்நிலையில் தவிக்கிறது சேலம்.
யார் ஜெயித்தாலும் அது சொற்ப வாக்கு வித்தியாசத்தில்தான் இருக்கும். யாருக்கு அதிர்ஷ்டம் இருக்கிறதோ?!
கே.ராஜாதிருவேங்கடம், வீ.கே.ரமேஷ்
படங்கள்: க.தனசேகரன்

முத்து மாநகர் யாருக்கு?

கராட்சியாக இருந்து மாநகராட்சியாக உயர்ந்த பின்னர், தூத்துக்குடி சந்திக்கும் முதல் தேர்தல் இது. அதனால் வெல்பவருக்கு நகரின் முதல் மேயர் என்ற பெருமையும் கிடைக்கும். 
அ.தி.மு.க. வேட்பாளர் சசிகலா புஷ்பா, தி.மு.க. வேட்பாளர் பொன்.இனிதா, காங்கிரஸ் வேட்பாளர் சிந்தியா வயலட் லில்லி, ம.தி.மு.க. வேட்பாளர் பாத்திமா பாபு, தே.மு.தி.க. வேட்பாளர் ராஜேஸ்வரி, ஐ.ஜே.கே. வேட்பாளர் திலகவதி, பா.ம.க-வில் குரு ஷோபனா, புதிய தமிழகம் கட்சியில் ராஜலட்சுமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் சித்ரா, பகுஜன் சாமாஜ் சார்பில் தங்கம் என்று 12 பெண்கள், தூத்துக்​குடி மேயர் பதவியைக் கைப்பற்றக் களத்தில் போராடுகின்றனர்.
''ஆளும் கட்சியான எங்களால்தான் அனைத்துத் திட்டங்களையும் திறம்படச் செயல்படுத்த முடியும். உருப்படியான திட்டம் எதுவும் செயல்படுத்தப் படாமல் இந்த நகரமே, நாசமாகிக் கிடக்கிறது. உடனே எது தேவை? நிரந்தரத் தேவை எது? என்று திட்டம் வகுத்துச் செயல்படுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றால், அந்தக் கட்சியின் மாவட்டச் செயலாளர் பெரியசாமிக்கு அடங்கிய பிள்ளையாகத்தான் அவர் இருப்பார். ஆனால், நாங்கள் அம்மாவின் உத்தரவின் பேரில் மக்களுக்கு எந்நேரமும் உழைக்கத் தயாராக இருக்கிறோம். அதனால் எங்கள் பக்கம்தான் வெற்றி வாய்ப்பு!'' என்று நம்பிக்கையோடு பேசுகிறார் அ.தி.மு.க. வேட்பாளர் சசிகலா புஷ்பா.
இந்தத் தேர்தலில், 'தன் குடும்பத்தில் இருந்து யாரையும் வேட்பாளர் ஆக்கப் போவதில்லை’ என தி.மு.க-வின் மாவட்டச் செயலாளர் பெரியசாமி தீர்மானித்ததால்தான், கடந்த காலத்தில் வாய்ப்பு கிடைக்காமல் தவித்த பி.எஸ்.காசிராஜன் குடும்பத் தைச் சேர்ந்த பொன்.இனிதாவுக்கு வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. ''கடந்த தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்டு முழுமை பெறாமல் இருக்கும் பாதாள சாக்கடை, பக்கிள் ஓடை, நாலாவது பைப் லைன் ஆகிய திட்டங்களைத் தொடர்ந்து செயல் படுத்த வேண்டும் என்பதால், மக்கள் என்னைத்தான் மேயர் ஆக்குவார்கள்!'' என்கிறார் பொன்.இனிதா.
ம.தி.மு.க. வேட்பாளருக்கு விழும் ஓட்டுகளும், தே.மு.தி.க-வுக்கு விழும் ஓட்டுகளும் அ.தி.மு.க-வுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதுதான், எங்களுக்கு வெற்றிக் கனியை பறித்துத் தரப்போகிறது என்று காத்திருக்கிறது தி.மு.க.
எப்போதும் பல கோஷ்டிகளாகப் பிரிந்திருக்கும் காங்கிரஸ் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகி கள், இந்த தேர்தலில் ஒரே அணியில் திரண்டு நிற்பது பெரும் ஆச்சர்யம்தான். ஆனாலும், பிரசாரக் களத்தில் குறைவான நபர்களே இருப்ப​தால், சுறுசுறுப்பை இன்னமும் பார்க்க முடிய​வில்லை. இருந்தாலும், காங்கிரஸ் வேட்பாளர் மட்டுமே 'சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ நாடார்’ என்பதால், அதைக் கூடுதல் பலமாக நினைக்கிறார்கள். இங்கே காங்கிரஸுக்கு 13 சதவிகித ஓட்டு இருக்கிறது என நம்பிக்கையுடன் இருக்கும் காங்கிரஸார், 1996-ம் ஆண்டு ஏ.பி.சி.வி.சண்முகம் தனியாகப் போட்டியிட்டு 29,000 ஓட்டுகள் பெற்ற பழைய கணக்கைச் சுட்டிக் காட்டுகின்றனர். ''திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிடுவதை விரும்பும் நடுநிலையான மக்கள், காங்கிரஸைத்தான் ஆதரிப்பார்கள். சமூக ஓட்டுகளும் கைகொடுக்கும் என்பதால் வெற்றி எனக்கே!'' என்று நம்பிக்கையோடு சொல்கிறார், வேட்பாளர் சிந்தியா வயலட் லில்லி.
ஸ்டெர்லைட், கூடங்குளம் உள்ளிட்ட ஆலை​களுக்கு எதிராக வைகோ-வுடன் இணைந்து போராட்​டம் நடத்திய பாத்திமா பாபு, ம.தி.மு.க. வேட்பாளராகக் களத்தில் இருக்கிறார். பெரிய கட்சிகள் எல்லாமே நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்​களையே வேட்பாளர்களாக நிறுத்தி இருக்கும் நிலையில்... தூத்துக்குடி மாநகர மக்கள் தொகையில் நாடார் சமுதாயத்துக்கு அடுத்த இடத்தில் இருக்கும் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த பாத்திமா பாபுவை களத்தில் இறக்கியுள்ளார் வைகோ. நாடார் சமுதாய ஓட்டுகள் பிரிந்து போனால், மீனவ மக்களின் ஓட்டுகள் மூலம் பாத்திமா பாபு, மேயர் நாற்காலியை எளிதில் கைப்பற்றிவிடுவார் என்பது வைகோவின் கணக்கு. அது மட்டும் இல்லாமல், நாடார் சமுதாய ஓட்டு​களையும் பெறுவதற்காக மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ஜோயல், தீவிர பிரசாரத்தில் இறங்கி இருக்கிறார். 'சாதி, மத வேறுபாடு இல்லாமல் எல்லாத் தரப்பு மக்களின் உரிமைகளுக்காகவும் போராடுகிறவள். அனைத்து சமூக மக்களின் அன்பையும் பெற்றவள்.  நான் வெற்றி பெற்றாலும், தோற்றாலும் எப்போதும் போல் என் சேவையைத் தொடருவேன். என் மீது நம்பிக்கை வைப்பவர்கள் என்னை ஆதரிப்பார்கள்!'' என மனஉறுதியுடன் பேசுகிறார் பாத்திமா பாபு.
''கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 15,000 ஓட்டுகள் வாங்கி இருக்கிறோம். மாற்றத்தை விரும்​பும் மக்கள், தே.மு.தி.க-வைத்தான் மாற்று சக்தியாகக் கருதுகின்றனர். எனவே, நாங்கள்தான் வெற்றி பெறுவோம்...'' என அதீத நம்பிக்கையோடு காத்திருக்​கிறார், தே.மு.தி.க. வேட்பாளர் ராஜேஸ்வரி.
இப்போதைய நிலவரப்படி தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் கடுமையான போட்டி இருந்தாலும், ம.தி.மு.க. அதிக ஓட்டுகள் வாங்கும் நிலைமை இருக்​கிறது!
எஸ்.சரவணப்பெருமாள்
படங்கள்: ஏ.சிதம்பரம்

எப்படி இருக்கிறது பாப்பாபட்டி, கீரிப்பட்டி?

சர்ச்சைகள் இருந்தாலும் தேர்தல் நடக்கிறது

பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் - அமெரிக்க சேனல்கள் வரை அடிபட்ட தமிழகக் கிராமங்கள்! 'சட்டம் என்ன சொன் னாலும், பெரும்பான்மையாக நாங்கள் இருக்கும்போது எப்படி தாழ்த்தப்பட்டோருக்கு பிரசிடென்ட் பதவியை ஒதுக்கலாம்?' என்பதுதான் இங்கே 'பஞ்சாயத்து’. தேர்தல் புறக்கணிப்பு, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தேர்தல், வென்ற மறுநாளே ராஜினாமா போன்றவை, 1996 முதல் 2006 வரை இங்கே நடந்த ஜனநாயகக் கூத்துகள். மதுரை மாவட்ட ஆட்சியராக உதயச்சந்திரன் இருந்தபோது, அவரது பெரும் முயற்சியால் இந்த தேர்தல்கள் நடத்தப்பட்டன. இப்போது எப்படி இருக்கின்றன இந்தப் பஞ்சாயத்துகள்? 
'தலித் பஞ்சாயத்துத் தலைவர்களை ஏற்கமாட்டோம் என்று சொல்லி தேர்தலையே நடத்தவிடாமல் தடுத்தவர்கள் இப்போது அதே தலித் பிரமுகர்களுடன் கைகோத்து உற்சாகமாகத் தேர்தல் வேலைகளைப் பார்த்து வருகிறார்கள்’ என்ற நல்ல தகவல் கிடைத்த நிலையில்தான் அங்கு நாம் ஆஜரானோம். நிலைமையில் நல்ல மாறுதல் இருப்பதை உணர முடிந்தது!  
கீரிப்பட்டி...
இந்தப் பஞ்சாயத்தில் மொக்கக்காளை, அ.சுப்பன், ந.சுப்பன், சின்னன், பழனி, பால்சாமி என்று தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஆறு பேர் போட்டியிடுகிறார்கள். பெரும்பான்மை சமூகமான பிரமலைக் கள்ளர் மக்களின் வாக்குகளைப் பெறுபவர்களே தலைவராக முடியும். அதனால், அவர்களின் வீட்டுப் படி ஏறி இவர்கள் வாக்குக் கேட்கிறார்கள். ஆனால், கடந்த முறை தலைவராக இருந்த பால்சாமி, பழனி இருவரும் பிரசாரத்தில் ஆர்வம் இன்றி, வீட்டுக்குள் இருக்கிறார்கள்.
'மொக்க காளையை ஊர் வேட்பாளராகத் முன் கூட்டி தேர்வு செய்துவிட்டார்கள். இனிமேல் நான் பிரசாரம் செய்வது வீண் வேலை என்றுதான் வீட்டில் இருக் கிறேன்...' என்கிறார் பழனி. இவர் அ.தி.மு.க. கிளைச் செயலாளர்.
'சிட்டிங்’ தலைவரான பால்சாமி தரப்பில் பேசிய சி.பி.எம். மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லக்கண்ணு, 'பாப்பாபட்டி, கீரிப்பட்டி பிரச்னைக்காகப் பெரிய அளவில் போராட்டம் நடத்திய கட்சி மார்க்சிஸ்ட். 2006 தேர்தலில் ஊர்க்காரர் களுக்கு பயந்து யாரும் போட்டியிட மறுத்ததால், ஆதிதிராவிடர் காலனியில் கட்சியின் கிளையைத் தொடங்கி, அதன் செயலாள ரான பால்சாமியை வேட் பாளராக நிறுத்தினோம். வெற்றி பெற்றார். இந்த முறையும் அவருக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது. அவருக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்வதற்காக நான் கீரிப்பட்டிக்கு சென்றபோது, ராஜாக்கிளி, காசிமாயன், கிப்பிஸ் மொக்கை, ஒச்சப்பன் உள்பட 50 பேர் எங்களைத் தெருவுக்குள் நுழையவிடாமல் தடுத்து,  மிரட்டல் விடுத்தார்கள். இது தொடர்பாக போலீஸில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே, கலெக்டரிடமும் எஸ்.பி-யிடமும் புகார் செய்திருக்கிறோம்!' என்றார்.
இந்தப் புகார் பற்றி  ராஜாக்கிளியிடம் கேட்டபோது, 'அனைத்து வேட்பாளர்களும் எங்கள் தெருவுக்குள் வந்து  ஓட்டு கேட்கிறதை கலெக்டரே நேரில் வந்து பார்த்துவிட்டார். இங்கே ஜனநாயக முறைப்படிதான் தேர்தல் நடக்கிறது!'' என்றார்.
பாப்பாபட்டி...
ஆறு வேட்பாளர்கள் களத்தில்.  சிட்டிங் பஞ்சாயத்துத் தலைவர் பெரியகருப்பன், பேபி, தனிக்கொடி, செல்லக்கண்ணு, பாலுச்சாமி, முருகானந்தம் ஆகியோர் போட்டி இடுகிறார்கள். ''யாரை நிறுத்துவது என்று எங்களை கலந்தாலோசனை செய்யவில்லை. எனவே பாலுச்சாமி, முருகானந்தம் ஆகியோருக்குத்தான் எங்கள் ஆதரவு!'' என்று கள்ளர் சமுதாயத்தினர் முடிவு செய்திருக் கிறார்களாம். இரண்டு சமூகத்தினரும் ஒன்றாகச் சேர்ந்து வாக்குக் கேட்கச் செல்வது மகிழ்ச்சி ஏற்படுத்தும் முக்கியமான மாற்றம்!
பாலுச்சாமியைச் சந்தித்தோம். 'போன தேர்தல்ல போட்டி யிட்டுத் தோத்துட்டேன் சார். இந்தவாட்டி எனக்குத்தான் வெற்றி வாய்ப்பு இருக்கு!'' என்றார். முருகானந்தமோ, 'கள்ளர் சமுதாயத்தினரின் ஆதரவோடு நான் வெற்றி பெற்றுவிடுவேன்!'' என்றார். கள்ளர் சமூகத்தின் வாக்குகள் இவர்கள் இருவருக்கும் பிரிந்து விழப்போகின்றன என்பதுதான் ஊருக்குள் பேச்சு!
நாட்டார்மங்கலம்...
இங்கே இரண்டு வேட்பாளர்கள் மட்டுமே களத்தில். கடந்த முறை தலைவராக இருந்த கணேசன் இம்முறை போட்டியிடவில்லை. அவரை டம்மித் தலைவராக வைத்துக்கொண்டு ஒருவர் 'தேற்றி'விட்டார் என்று வருத்தப்பட்டு பிரமலைக் கள்ளர் சமுதாய மக்கள் இங்கே இரண்டுபட்டு நிற்கிறார்கள். ஒரு தரப்பு கடந்த முறை தோற்றவரான  சரஸ்வதியை ஆதரிக்கிறது. இன்னொரு தரப்பு  முத்தன் என்பவருக்காக  வேலை செய்கிறது.
கொட்டக்காச்சியேந்தல்
இங்கே, பஞ்சாயத்துத் தலைவர் பதவி தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டபோது, பெரும்பான்மை சமுதாயத்தினரான அகமுடையார்கள் 10 ஆண்டுகளாகத் தேர்தலைப் புறக்கணித்து வந்தனர். உள்ளூர் மக்களின் கோபத்துக்கு ஆளாக விரும்பாத தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர், 1996, 2001 தேர்தல்களில் போட்டியிட முன்வரவில்லை. அப்போதைய துணை முதல்வர் ஸ்டாலின் நேரடியாக அந்த கிராமத்துக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். அடுத்த உள்ளாட்சித் தேர்தலின்போது தலைவர் பதவி பொதுப் பிரிவுக்கு மாற்றப்படும் என்று அப்போது அதிகாரிகள் உறுதிமொழி கொடுத்தார்களாம். அதனால் கடந்த முறை ஊர் கூடி சோ.கருப்பனை போட்டியின்றித் தலைவராகத் தேர்வு செய்தார்கள்.  இப்போது சிட்டிங் தலைவர் சோ.கருப்பன், அழகர், மாரியப்பன், கருப்பன் என நான்கு வேட்பாளர்கள்!
'தொடர்ந்து இரண்டு முறை தனித் தொகுதியா இருக்கிற பஞ்சாயத்து, அடுத்து பொதுத் தொகுதியாகிவிடும்’ என்பதால், இந்த நான்கு பஞ்சாயத்து களிலும் பிரச்னை இல்லாமல் தேர் தலை நடத்தவே பெரும்பான்மை சமுதாயத்தினர் விரும்புகிறார்கள்.
இருந்தாலும், தேர்தலின்போதும் தேர்தலுக்குப் பிறகு பதவி ஏற்பு முடிகிற வரையும் இங்கே அதிகாரிகளின் கவனம் தேவை.
கே.கே.மகேஷ், எம்.கார்த்தி
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

கணக்குக் காட்டிய சொத்துதான் இருக்கு!

ரெய்டுக்கு விளக்கம் சொல்லும் சுரேஷ்ராஜன்!

ள்ளாட்சித் தேர்தல்கள் நெருங்கும் நிலையில்...  குமரி மாவட்டத்தைப் புரட்டிப் போட்டிருக்கிறது, அமைச்​சர் சுரேஷ்ராஜன் மற்றும் அவரது உறவினர் வீடுகளில் நடந்த அதிரடி ரெய்டுகள்! 
ஏற்கெனவே உதவி கலெக்டர் ஜனார்த்தனனை சாதிப் பெயரைச் சொல்லித் திட்டிய​தாகவும், மாவட்டப் பஞ்சாயத்துத் தலைவி அஜிதா மனோதங்கராஜுக்கு ஆதரவாக நிலப் பிரச்னையில் கட்டப்பஞ்சாயத்து செய்ததாகவும் சுரேஷ்​ராஜன் மீது வழக்குகள் நடைபெற்று வருகின்றன. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சி.பி.ஐ. விசாரணை கோரி வழக்கறிஞர் கிரினிவாச பிரசாத் தொடுத்த வழக்கில், சி.பி.ஐ-யிடம் விளக்கம் கேட்டு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த நிலையில்தான் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புக் காவல் துறையினர் இந்த அதிரடி ரெய்டை நடத்தினர்.
எப்படியாவது சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு ஈடுகட்டும் வகையில், உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்ற வேகத்தோடு செயல்பட்ட தி.மு.க-வினருக்கு இது மிகப் பெரிய சறுக்கல். காலை 6 மணிக்குத் தொடங்கிய சோதனை 10 மணி நேரம் நடந்தது. ராமவர்மபுரத்தில் சுரேஷ்ராஜனின் வீடு, பார்வதிபுரத்தில் அவரது மாமனார் துரைசாமியின் வீடு, நாகர்கோவிலில் அவரது தங்கை உமாவின் வீடு, கோணம் பகுதியில் அமைந்துள்ள மீன்வலைத் தொழிற்சாலை, திருநெல்வேலி பழமூரில் அமைந்​துள்ள இரும்புத் தொழிற்சாலை என பல்வேறு இடங்களில், நூறுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த அதிரடி சோதனை குறித்துக் கேள்விப்பட்டதும் தி.மு.க-வினர், ஹெலன் டேவிட்சன் எம்.பி. தலைமையில் சுரேஷ்​ராஜன் வீடு முன்பாகக் குவிந்தனர். பரபரப்பு உச்ச​கட்டத்தை அடைந்ததும், தி.மு.க-வினர் தடாலடியாக முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்துக் கோஷங்கள் எழுப்பி, ஆர்ப்பாட்டத்திலும் இறங்கினர். 'உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க-வை வீழ்த்த செய்யும் சதி இது!’ என்பதே அவர்களின் குற்றச்சாட்டுக் குரல்!
''தமிழ்நாடு முழுவதும் நில அபகரிப்பு வழக்குகளில் தி.மு.க. முன்​னாள் அமைச்சர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். ஆனால், சுரேஷ்ராஜன் மட்டும் நில மோசடி வழக்கு ஒன்றில் முன்ஜாமீன் பெற்று, கைது ஆகாமலேயே இருந்துவந்தார். அதனால்தான் இப்படிப் புது வழக்கு ஒன்றைப் போட்டு, அவரை எப்படியாவது கைது செய்ய முயல்கின்றனர்!'' என்றும் தி.மு.க-வினர் புலம்பித் தீர்த்தனர்.
இந்த சோதனையில் சுரேஷ்ராஜன் சம்பந்தப்பட்ட இல்லங்களில் இருந்து ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த ரெய்டு முடிவில் சுரேஷ்ராஜன் கைதாகலாம் என்ற பேச்சும் வலுவாகவே இருந்தது. அதனால், ரெய்டு நடத்திய அதிகாரிகள், அவரை விடுவித்துக் கிளம்பியதும் நிம்மதிப் பெருமூச்சுவிட்டனர் மொத்த தி.மு.க-வினரும்.
சுரேஷ்ராஜனிடம் பேசினோம். ''உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் நாங்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்த வேளையில்தான் இந்த ரெய்டு. தாங்கள் ஆட்சியில் இருக்கும் திமிரில் எங்களை மிரட்டிப் பார்க்கிறார்கள். இந்த மிரட்டலுக்கு எல்லாம் தி.மு.க-காரன் ஒரு நாளும் அஞ்ச மாட்டான். இத்தகைய மிரட்டல்களுக்கு, மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். என்னுடைய வீட்டில் ரெய்டு நடத்தி, அவர்கள் சாதித்தது என்ன? ஏற்கெனவே தேர்தலின்போது நான் கணக்குக் காட்டிய சொத்துகள்தான் என்னிடம் இருந்தது. மொத்தத்துக்கும் வருமான வரி சரியாகக் கட்டப்பட்டுள்ளது. அதற்கான ஆவணங்கள் இருக்கின்றன. ரெய்டு நடத்தியவர்கள், வெறுங்கையோடு திரும்பியதுதான் மிச்சம். வருகிற உள்ளாட்சித் தேர்தலில் ஜெயலலிதாவின் இந்த அலங்கோல ஆட்சிக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டியே தீருவார்கள். இந்தக் குமரி மாவட்டத்தில் அ.தி.மு.க. இருந்த இடம் தெரியாமல் போகப் போவது உறுதி!'' என்றார் ஆவேசமாக!
பி.கே.ராஜ்குமார்
படங்கள்: ரா.ராம்குமார்

ம.தி.மு.க. மேடையில் தி.க.சி.

நெக்ஸ்ட் பெஸ்ட்!

நெல்லை மாநகராட்சிக்கான ம.தி.மு.க. மேயர் வேட்பாளரை அறிமுகப்படுத்தும் கூட்டத்தில், பிரபல இலக்கிய விமர்சகரும் சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான தி.க.சிவசங்கரன் மேடை ஏறினார். மார்க்சிய சிந்தனையாளரான தி.க.சி. எப்படி அந்த மேடையில் ஏறினார்? 
ம.தி.மு.க. தேர்தல் பணிக் குழுச் செயலாளர் குட்டி என்கிற சண்முக சிதம்பரத் திடம் பேசினோம். ''ஊழலற்ற உள்ளாட்சி அமைப்புகள் இருந் தால்தான் அடித்தட்டு மக்கள் வரையிலும் அரசின் நலத் திட்டங்களைக்கொண்டு போக முடியும் என்பதில் வைகோ உறுதி​யாக இருக்கிறார். எங்கள் வேட்​பாளரை ஜெயிக்கவைத்தால், ஓய்வு பெற்ற அதிகாரிகள்கொண்ட குழுவை அமைத்து அவர்களின் ஆலோசனைப்படி மேயர் செயல்​படுவார். சுகாதாரத்தை மேம்படுத்த டாக்டர்கள் குழு, மாநகராட்​சிப் பள்ளிகளின் கல்வித்தரத்தைச் சீர்படுத்த ஓய்வு பெற்ற பேராசிரியர்கள், ஆசிரியர்கள் கொண்ட குழு அமைப்போம். இதனை மக்களுக்குப் புரியவைப்பதற்காகவே, பாளையங் கோட்டையில் நடந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டத்துக்கு சேவியர் கல்லூரியின் ஓய்வு பெற்ற பேராசிரியர் பெனடிக்ட் தலைமை வகித்தார். அதே போல் டவுனில் நடந்த கூட்டத்துக்கு இலக்கியவாதியான தி.க.சி-யை மேடையில் ஏற்றி​னோம்...'' என்றார் உற்சாகத்துடன்.
தி.க.சிவசங்கரனிடம் கேட்டதற்கு, ''வைகோ எனக்கு 25 ஆண்டு கால நண்பர் என்பதாலும் இது எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. தேர்தல் கிடையாது என்பதாலும் அரசியல் மேடை ஏறினேன். எனக்கு வேட்பாளர் மகேஸ்வரியை நன்கு தெரியும். அதோடு, கம்யூனிஸ்ட் கட்சிகள் இங்கே மேயர் தேர்தலில் போட்டியிடவில்லை. ஆகவேதான், 'நெக்ஸ்ட் பெஸ்ட்’ என்ற முறையில் ம.தி.மு.க-வுக்கு ஆதரவு கொடுத்தேன். தமிழர்​களின் வாழ்வாதாரப் பிரச்னை ஏற்படும்​போது எல்லாம் குரல் கொடுப்பவர் வைகோ. முருகன், சாந்தன், பேரறிவாளனின்தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்பதற்காக வழக்கறிஞர் ராம்ஜெத்மலானியை கூட்டி வந்து அவர் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்கு உரியவை!'' என்றார்.
ம.தி.மு.க-வின் மேயர் வேட்பாளரான மகேஸ்வரி நடராஜனை ஆதரித்து வரலாற்று ஆய்வாளரும் தமிழ் அறிஞருமான தொ.பரமசிவனும் வீடு வீடாகச் சென்று வாக்கு கேட்டு வருகிறார்.
 - ஆண்டனிராஜ்
படம்: எல்.ராஜேந்திரன்

கலகல ரவுண்ட்ஸ்!

காரைக்குடி நகராட்சி 22-வது வார்டு கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் சசிகுமார், ''என்னை ஜெயிக்க வைத்தால் ரேஷன் கார்டுக்கு ஒரு டி.வி.டி. பிளேயர் கொடுப்பேன்!'' என்று போட்டுத் தாக்குகிறார். அதோடு, டி.வி.டி. பிளேயர் ஒன்றின் மாடலையும் டிஸ்பிளே செய்து, ''இதுதான் நான் கொடுக்கப் போறது. எனக்கு ஓட்டு போடுறவங்க உங்க வீட்டு ரேஷன் கார்டு ஜெராக்ஸ் நகலைக் கொண்டாந்து கொடுங்க. தேர்தல் முடிந்ததும் பிளேயர் வீடு தேடி வரும்...'' என்று வாக்குறுதி கொடுக்கிறார். அப்புறம் என்ன... சசிகுமாரிடம் ரேஷன் கார்டு நகல்கள் மலையாகக் குவிகிறதாம்!சசிகுமாரும் டி.வி.டி. பிளேயரும் 
 ரொம்ப கொடுமை சார்..!
ராமேஸ்வரம் நகராட்சித் தலைவர் பதவிக்கு சுயேச் சையாகப் போட்டியிடும் சோலைகணேஷ் எம்.ஏ., எம்.ஃபில்., முடித்தவர். இங்குள்ள மாலை நேரக் கல்லூரி ஒன்றில் வேலை பார்த்தவர். அந்த அறிமுகத்தை வைத்துத் தேர்தலில் போட்டியிடக் கிளம்பி வந்தார்.  டெபாசிட் கட்டக்கூட போதிய பணம் இல்லாமல் திண்டாடிவிட்டார். டெபாசிட் தொகையில்  600  குறைவாக இருக்கவே, ''இப்போதைக்கு இதுதான் இருக்கு. மீதிப் பணத்தை அக்கவுன்ட்ல வெச்சிருக்குங்க. தேர்தலுக்குள்ள கொண்டாந்து கட்டிடுறேன்...'' என்று தைரியமாகச் சொன்னாராம் சோலை கணேஷ். அவரை ஒரு மாதிரியாகப் பார்த்த தேர்தல் அதிகாரி, முடியாது என்று சொல்லிவிட்டார். உடனே அங்கும் இங்கும் ஓடி அலைந்து பணத்தை புரட்டி வந்து கட்டிய சோலை கணேஷ், ''என்னிடம் காசு இல்லாமல் இருக்கலாம்; ஆனால், படிப்பு இருக்கு. என்னோடு போட்டியிடும் சக வேட்பாளர்கள் யாராவது நான் எழுதித் தரும் ஆங்கில வாக்கியத்தைப் படித்து சரியான அர்த்தம் சொல்லீட்டாங்கன்னா, இப்பவே போட்டியில் இருந்து விலகிக்கிடுறேன் மக்களே..!'' என்று சக வேட்பாளத் தோழர்களை வம்பு இழுத்துக் கொண்டு இருக்கிறார்!
 அசர வைக்கும் டீல்!
சிவகங்கை மாவட்டத்தில் நகராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ஒருவரும், அந்த நகரத்தின் தி.மு.க. செயலாளரும் இனப் பாசத்தில் நகமும் சதையுமாக இருக்கிறார்களாம்! வேட்பு மனு பரிசீலனையின்போது தி.மு.க. கவுன்சிலர் வேட்பாளர் ஒருவரின் வேட்பு மனு நிராகரிக்கக்கூடிய சூழலில் இருந்த தாம். பதறிப்போன நகரம், அ.தி.மு.க. சேர்மன் வேட்பாளருக்கு போனை போட்டு, ''அதெல்லாம் நமக்கு விழுற ஓட்டு. அவனோட மனுவை அதிகாரிகள் தோண்டித் தோண்டிப் பாக்கிறாங்க. நீங்க கொஞ்சம் கரெக்ட் பண்ணுங்க...'' என்று சொன்னாராம். அடுத்த நொடியே தேர்தல் அதிகாரிக்கு போன் போட்ட அ.தி.மு.க. சேர்மன் வேட்பாளர், ''அதை பெருசுபடுத்திக்க வேண்டாம்... லூஸ்ல விடுங்க!'' என்று ஆர்டர் போட, மறுப்பேதும் இல்லாமல் வேட்பு மனு ஏற்கப்பட்டது. தி.மு.க. கவுன்சிலர்கள் ஜெயிக்க வேண்டும் என்பதைவிட தனது இனத்தைச் சேர்ந்தவரான அ.தி.மு.க. சேர்மன் ஜெயிக்க வேண்டும் என்பதில் முனைப்போடு செயல்படுகிறாராம்! 
 பாக்யநாதன் சொன்ன ஏ, பி, சி-க்கள் யாரு?
மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் கடந்த 6-ம் தேதி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மேயர் வேட்பாளர் பாக்யநாதன், ''என்னால 25 லட்சத்துக்கு மேல செலவழிக்க முடியாதுன்னு ஏற்கெனவே சொல்லிட்டேன். செலவு அதைத் தாண்டிப் போயிரும் போலிருக்கு. ஆட்சியில இருக்கும்போது சம்பாதிச்ச 'ஏ, பி, சி’ எல்லாம் இருக்கீங்கல்ல... நீங்கள் எல்லாம் செலவு பண்ணித்தான் என்னை ஜெயிக்க வைக்க ணும்!'' என்று புலம்பித் தீர்த்துவிட்டாராம். ''கட்சிக்காரங்களுக்கு 'ஏ, பி.’னு பேரு வைக்க நீங்க யாரு?'' என்று கழகக் கண்மணிகள் சிலர் ஏகத்துக்கும் கரச்சல் பண்ணிவிட்டார்களாம். ஆமா, 'ஏ, பி, சி’னு பாக்யநாதன் யாரத்தாம்பா சொன்னாரு?
 எப்ப வந்து... எப்ப ஆரம்பிச்சு..?
எல்லோரும் வெற்றியை எதிர்பார்த்துப் பிரசாரம் செய்கிறார்கள். மதுரை மேயருக்கான பி.ஜே.பி. வேட்பாளர் டாக்டர் ராஜேந்திரன் டெல்லி 'வரவு’ வந்து சேராததால் பிரசாரத்துக்குப் போகவே பயப்படுகிறார். வேட்பாளர் பொதுமேடை நிகழ்ச்சிக்கு அழைப்பதற்காகக் கடந்த வாரம் ராஜேந்திரனை தொடர்புகொண்டதாம் ஓர் அமைப்பு. அதற்கு ராஜேந்திரன் தரப்பில் இருந்து பேசியவர்கள், ''எதுக்கு சார் வேட்பாளரை கூப்பிடுறீங்க?'' என்று தயக்கத்துடன் கேட்டார்களாம். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் விஷயத்தைச் சொன்னதும், ''அப்படினா சரி, நீங்கபாட்டுக்கு ஏரியாவுக்குள்ள பிரசாரம் கிரசாரம்னு கூப்பிட்டுறாதீங்க சார். ஏன்னா, டெல்லியில் இருந்து பணம் வந்த பின்னாடிதான் பிரசாரத்துல தூள் கௌப்புறதா இருக்காரு அண்ணன்!'' என்று சீரியஸாகச் சொன்னார் களாம்!
- ஜூ.வி. டீம்
************************************************************************
டெல்டா கலாட்டா!

திருக்குறள் பிரசாரம்!  கரூர் மாவட்டம் பள்ளபட்டி பேருராட்சித் தலைவருக்கு நிற்கும் அ.தி.மு.க. வேட்பாளர் வழக்கறிஞர் சி.ஏ.சையது இப்ராஹிம், திருக்குறள் புத்தகம் சகிதம் வாக்காளர்களின் வீட்டுக் கதவைத் தட்டுகிறார். ''நான்தாங்க உங்க வீட்டுப்பிள்ளை சையது இப்ராஹிம். இந்த முறை அ.தி.மு.க. சார்பா நம்ம பேரூராட்சியில நிக்கிறேன். 'இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு’ என்ற குறளுக்கு, 'பொருளை நேர்மையான முறையில் தேடி, அதை உரிய முறையில் சேர்த்து, பாதுகாத்து, பாதுகாத்ததை உரிய வகையில் மக்களுக்கு வழங்கி, அவர்களின் தேவையை நிறைவு செய்வதே சிறந்த அரசு’ என்பதுதான் அர்த்தம். திருவள்ளுவர் சொல்லி இருக்கிற மாதிரி அம்மா சட்டமன்றத்தை நடத்துறாங்க. அதுபோல நம்ம பேரூராட்சியிலும் நடக்க நீங்க எனக்கு ஆதரவு தரணும்!'' என்கிறார். இவரது வித்தியாசமான பிரசாரத்தை மக்கள் நன்றாகவே ரசிக்கிறார்கள். 
 ஒரே ஒரு ஊரிலே... ஒரே ஒரு வேட்பாளர்! அரியலூர் மாவட்டம் கார்குடி ஊராட்சித் தலைவர் பதவிக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்ய யாரும் வரவில்லை. விசாரித்தால் வந்து விழும் தகவல்கள் தலை கிறுகிறுக்க வைக்கிறது. இந்த ஊராட்சியில் உடையார், வன்னியர் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் பெரும்பான்மையாகவும், ஒரே ஒரு எஸ்.டி.

இருளர் குடும்பமும் உள்ளது. கடந்த முறை அதிகாரிகள் செய்த குளறுபடியால் கார்குடி பஞ்சாயத்துத் தலைவர் பதவி எஸ்.டி-க்கு என்று அறிவிக்கப்படவே, இருளரான அமிர்தலிங்கத்தை பஞ்சாயத்துத் தலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள். அவர் மீதும் ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு டிஸ்மிஸ் செய்யப்பட... பி.டி.ஓ. கன்ட்ரோலில் பஞ்சாயத்து இருந்தது. மீண்டும் இந்த வருடமும் அதே ரிசர்வ் முறை தொடர... ஊரில் இருக்கும் ஒரே எஸ்.டி-யான அமிர்தலிங்கம் வேட்பு மனுத் தாக்கல் செய்ய வரவில்லை. அதனால், தேர்தல் இல்லை.
நாங்களும் பிளான் பண்ணுவோம்ல... மன்னார்குடி தி.மு.க. நகரச் செயலாளர் பூபாலன், தனது தீவிர விசுவாசியான சங்கர் என்பவரை 14-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கான தி.மு.க. வேட்பாளராகக் களமிறக்க நினைத்தார். இதற்கு தி.மு.க. மாவட்ட தலைமை மறுக்கவே, 'நானே அங்கு தி.மு.க. சார்பில் போட்டியிடுகிறேன்’ என்று ஸீட் கேட்டுப் பெற்று, வேட்பு மனுவும் தாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக சங்கரை மனுத் தாக்கல் செய்ய வைத்தார். வேட்பு மனு பரிசீலனையின்போது, 'எனது பெயர் ராஜ.பூபாலன். ஆனால் ஆர்.பூபாலன் என மனுவில் எழுதியுள்ளேன். எனவே, எனது வேட்பு மனுவை தகுதி நீக்கம் செய்யணும்!' என தன் வேட்பு மனுவை நிராகரிக்க வைத்தார். அப்புறம் என்ன? மாற்று தி.மு.க. வேட்பாளர் சங்கர் வார்டில் ஓட்டு கேட்டு வருகிறார். 
இங்கேயும் ஒரு தங்கபாலு! அரியலூர் நகராட்சியின் தலைவர் பதவிக்கு காங்கிரஸ் சார்பில் பாலகிருஷ்ணன் வேட் பாளராக அறிவிக்கப் பட்டு, வேட்பு மனுவும் தாக்கல் செய்தார். அவர் நகராட்சியில் நிறைய ஒப்பந்தப் பணிகளை எடுத்திருந்ததார். அதில் இன்னும் சில பணிகள் முடிக்கப்படவில்லை என்பதால் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 'என்னடா... இப்படியாகிப் போச்சு!’ என தலையில் கைவைத்த அவரின் முகத்தில் கொஞ்ச நேரத்தில் மலர்ச்சி. காரணம்... மாற்று வேட்பாளராக மனுத் தாக்கல் செய்தவரின் மனு ஏற்றுகொள்ளப்பட்டது. அந்த மாற்று வேட்பாளர் வேறு யாருமில்லை, பாலகிருஷ்ணனின் மனைவி உமா!
 கல்விப்பணி டு அரசியல் பணி! துறையூர் நகராட்சித் தலைவர் பதவிக்கு சுயேச்சையாகக் களமிறங்கி இருக்கும் மாலதி பற்றித்தான் ஏரியாவில் பரபர பேச்சு. தி.மு.க. தொடங்கப்பட்ட ஆரம்பகாலத்தில், மூன்று முறை எம்.எல்.ஏ-வாக இருந்த து.ப.அழகுமுத்துவின் மகள்தான் இவர். 25 வருடங்களாக மெட்ரிகுலேஷன் பள்ளி நடத்தி, அதன் தலைமை ஆசிரியராகவும் இருந்தவர். சமீபத்தில்தான் பள்ளியை நடத்த முடியாமல் மூடினார். ''இவங்க குடும்பத்துக்கு என்ன செல்வாக்கு இருக்குதுன்னு என் காதுபடவே சிலர் பேசினாங்க. அந்த செல்வாக்கை நிரூபிச்சுக் காட்டப் போறேன்!'' என்கிறார் மாலதி.
 அந்த ஒரு ஆளு யாருப்பா? வேதாரண்யம் ஒன்றியத்தில் உள்ளது கருப்பம்புலம் ஊராட்சி. அதுதான் முன்னாள் எம்.பி-யான பி.வி.ராஜேந்திரனின் ஊர். அங்கு ஊராட்சித் தலைவர் பதவிக்கு ஐந்து பேர் கடுமையாகப் போட்டியிட, அவர்களிடம் சமாதானம் பேசி  போட்டியின்றி சிங்காரவேலு என்பவரை தலைவராகத் தேர்ந்தெடுக்க வைத்துவிட்டார்கள், பி.வி.ஆர் குடும்பத்தினர். தலைவரைப் போலவே மற்ற உறுப்பினர்களையும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்க முயல, அதில் மட்டும் சின்னச் சறுக்கல். எட்டு வார்டுகளுக்கு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டும்... ஒரு வார்டில் மட்டும் உடன்பாடு எட்டப்படவில்லை. அதனால் ஒரே ஒரு வார்டு வாக்காளர்கள் மட்டுமே ஓட்டு போடப்போகிறார்கள்.
 சோறு போட்டு ஓட்டு கேட்டு... புதுக்கோட்டை மாவட்டம் பொன்ன மராவதி ஒன்றியத்தில் இருக்கும் கிராமம் திருக்களம்பூர். இங்கு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு கடந்த முறை புஷ்பம் என்பவர் காங்கிரஸ் சார்பில் ஸீட் கேட்டிருந்தார். ஆனால், அவருக்கு ஸீட் மறுக்கப்பட... சுயேச்சையாக நின்று வென்றார். இம்முறை என்ன நினைத்தார்களோ... கட்சியிலேயே வலிய வந்து ஸீட் கொடுத்தார்கள். ஆகவே, இம்முறை கண்டிப்பாக ஜெயித்தே ஆகவேண்டும் என எண்ணியவர், தன் மகளின் திருமணத்தையே சாக்காக வைத்து, இவர் போட்டியிடும் பகுதி முழுவதும் அழைப்பிதழ் கொடுத்து, திருமணத்தில் விருந்துபோட்டு அசத்தி விட்டாராம். உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணமாட்டாங்க என்று இப்போதே வெற்றிக் களிப்பில் இருக்கிறார், புஷ்பம்.

மிஸ்டர் கழுகு: சிதம்பரத்தை மறைக்கவா இந்த ரெய்டு?

''அந்த செய்தியைக் கேள்விப்பட்டதும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார் முதல்வர்!'' - உள்ளே வந்ததும் சொன்னார் கழுகார்! 
''அப்படி என்ன செய்தி?'' என்று நாம் ஆர்வமாக... ''பழைய செய்திதான். 'புதுச்சேரி கல்வி அமைச்சர் கல்யாணசுந்தரம் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதினார்’ என்ற செய்தி கிடைத்து... முதல் வருக்கு இந்தத் தகவலைச் சொன்னார்கள். 'ஒரு மந்திரி டென்த் எக்ஸாம் எழுதினாரா? இதுவரை இப்படிக் கேள்விப்பட்டதே இல்லையே’ என்று சொல்லிச் சொல்லிச் சிரித்தாராம். முழுமையாக விசாரிக்கவும் உத்தரவு போட்டுள்ளார். ஏற்கெனவே புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தன்னை மதிக்காத கோபமும் முதல்வருக்கு இருந்திருக்கலாம்...'' என்று நிறுத்தியவர், மேற்கொண்டு அதுதொடர்பான சில தகவல்களைச் சொன்னார்.
''புதுச்சேரி கல்வி அமைச்சர் கல்யாணசுந்தரம் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதினாரா என்பதை விசாரிக்க  ஜெயஸ்ரீ ரகுநந்தன் ஐ.ஏ.எஸ். தலைமையில் ஒரு உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு, விசாரணை தொடங்கியது. தேர்வுத் தாளில் உள்ள கையெழுத்தும், அமைச்சரின் கையெழுத்தும் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டு, அதில் மாறுதல் இருந்தது உடனே தெரிந்திருக் கிறது. அதனால், 'ஆள்மாறாட்டம் செய் ததுக்கான முகாந்திரம் இருப்பதாக’ உயர்மட்டக் குழு தன் அறிக்கையில் சொல்லி இருக் கிறதாம். அந்த அறிக்கையைத் தொடர்ந்து கடந்த சனி அன்று விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி குப்புசாமி, மாவட்ட எஸ்.பி. பாஸ்கரனிடம், ஆள் மாறாட்டப் புகாரைக் கொடுத்தார். விழுப்புரம் மாவட்டக் குற்றப்பிரிவு காவல் துறையினர்,  சதித் திட்டம், ஆள்மாறாட்டம் செய்தல், பொய்யான ஆவணம் தயாரித்தல் போன்ற பிரிவுகளின் கீழ் அமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்தனர். அன்றைய தினம் மேற்பார்வையாளராக ஆதவன் என்ற ஆசிரியர் இருந்துள்ளார். அவரிடம் போலீஸார் விசாரித்து வருகிறார்கள். திண்டிவனம் டி.இ.ஓ. அலுவலகத்தில் தேர்வுப் பிரிவு உதவியாளராகப் பணிபுரியும் ரஜினி என்பவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு பேரையும் கஸ்டடி எடுத்து விசாரணையை தொடங்கி விட்டது போலீஸ்!''
''முதல்வர் ரங்கசாமியின் ரியாக்ஷன் என்ன?''
''அமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள செய்தி வெளியான உடனே புதுச்சேரி  அரசியலில் அனல் பற்றிக் கொண்டது. 'அமைச்சர் கைதாவாரா? பதவி நீக்கம் செய்யப்படுவாரா?’ என்று அரசியல் மட்டத்தில் விவாதம் தொடங்கியது. ஆனால், முதல்வர் ரங்கசாமியோ வழக்கமான பாணியில் எந்த ரியாக்ஷனும் காட்டாமல் அமைதியாகவே இருக்கிறார்.
ரங்கசாமியை சந்தித்த ஒரு நிருபர் இதுபற்றிக் கேட்ட போது, 'அப்படியா? இது எதுவுமே எனக்குத் தெரியாதே! மந்திரி மேல வழக்குப் பதிவு செய்துருக்காங்கன்னு ரிட்டனா வந்தா பார்க்கலாம்’ என்றாராம்! 'நல்ல ஸ்டேட்... நல்ல சி.எம்.!’ என்று என்னிடம் வியந்தார் அந்த நிருபர்...''
''சரி... இந்த ஸ்டேட்டுக்கு வாரும்!''
''சென்னையில் நடந்ததைக் கேளும்! பகுஜன் சமாஜ் கட்சியை உருவாக்கிய கன்ஷிராமின் நினைவு நாள் நிகழ்ச்சி சென்னை தேவநேய பாவாணர் நூலகத்தில் கடந்த ஞாயிறு அன்று நடை பெற்றது. கன்ஷிராம் இந்தியில் எழுதிய புத்தகத்தை, 'ஜால்ராக்கள் யுகம்’ என்ற தலைப்பில் வெளியிட்டனர். அந்தக் கட்சியின் தமிழகத் தலைவராக இருந்த வடலூர் சாமித்துரை இதற்கான ஏற்பாட்டைச் செய்திருந்தார். 'புதிய பார்வை’  எம்.நடராஜனை அழைத்துப் புத்தகத்தை வெளியிட்டார். அதே விழாவில், 'கைப்புள்ள ஸ்டாலின்’ என்கிற புத்தகமும் வெளியிட்டனர். மதியம் 2 மணியில் இருந்து மாலை 5 மணி வரை இந்த நிகழ்ச்சிக்காக அரங்கம் புக் செய்யப்பட்டிருக்க... 4.30-க்கு மேல்தான் நடராஜன் வந்தார்!''
''அப்புறம்..?''
''மாலை 5 மணியில் இருந்து இரவு 9 மணி வரையில் இன்னொரு அமைப்பினர் 'மரண தண்டனையின் மரணம்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவுக்கு அரங்கத்தை புக் செய்திருந்தார்கள். தாமதமாக வந்த நடராஜன் அவர்களின் நேரத்தை எடுத்துக்கொள்ள... இரண்டாவது நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த முன்னாள் நீதிபதி பாஸ்கரன், தவறுதலாக நடராஜன் இருந்த மேடையில் ஏறி விட்டார். அவர் கையில் 'கைப்புள்ள ஸ்டாலின்’ புத்தகத்தைக் கொடுத்துவிட... என்ன நடக்கிறது என்றே நீதிபதிக்கு புரியவில்லை. விழாவில் ஏகத்துக்கும் அரசியல் நெடி வேறு வீசவே சங்கடத்தில் நெளிந்தார் பாஸ்கரன். வேறு வழியில்லாமல், அங்கிருந்து கிளம்பிப் பக்கத்தில் இருந்த அறைக்குப் போய்விட்டார். 'மரண தண்டனையின் மரணம்’ புத்தக வெளியீட்டுக் குழுவினர், அவரிடம் நிலைமையைச் சொன்னார்கள். அதோடு, இரண்டு பிரிவினருக்கும் வாய்த் தகராறும் முற்றியது...''
''இடையில் சிக்கிய நீதிபதிதான் பாவம்!''
''இந்தக் கூட்டத்தில் பேசிய எம்.நடராஜன் சொன்னதை உளவுத் துறை அதிகாரிகள் கவனித்தார்களோ இல்லையோ... நான் குறித்துக் கொண்டேன். 'பரமக்குடி துப்பாக்கிச் சூடு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. சென்னையைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி செந்தில்வேலனை பரமக்குடிக்கு அனுப்பி வைக்க என்ன காரணம்? அவரை அனுப்பியது யார்? அரசு அமைத்திருக்கும் விசாரணை கமிஷனால் எந்தப் பயனும் ஏற்படாது. உண்மையும் வெளிவராது. அந்த விவகாரத்தில், நான் சொன்னபிறகுதான் அதிகாரிகள் மாற்றப்பட்டனர். அரசு என் ஆலோசணையைக் கேட்க வேண்டும். அரசுக்கு எதிராகப் பேசுவதால், வழக்குப் பாய்ந்தாலும் அதை சந்திக்கத் தயார்’ என்று சரமாரியாக சரவெடிகளைக் கொளுத்தினார்!''
''எப்போதுமே அவர் ஃபயர் பிராண்ட்தானே...''
''சும்மா இருக்காமல் சுறுசுறுவென இருப்பவர் எம்.என். என்பது அனைவரும் அறிந்த சங்கதிதான்!'' என்று கழுகார் சொல்லிக் கொண்டிருக்கும் போது இந்த இதழுக்கான அட்டை தயாராகி நம் முன் வந்தது!
''தயாநிதிமாறன் வீட்டில் சோதனை நடந்து கொண்டிருந்த போது சுப்ரீம் கோர்ட்டில் ஸ்பெக்ட்ரம் தொடர்பான ப.சிதம்பரம் விவகாரத்தின் விசாரணை மும்முரமாக நடந்து கொண்டு இருந்தது.
இதைக் கிளறினார் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண். 'நான்கு மாதங்களுக்கு பின்னர் வழக்குப் பதிவு செய்து அதுவும் நேற்று எஃப்.ஐ.ஆர். போட்டு இன்று சோதனைக்குச் சென்றுள்ளனர். இதெல் லாம் வெறும் கண்துடைப்புக்காகவே நடக்கிறது’ என்றும் குற்றம் சாட்டினார் பூஷண். இதை சி.பி.ஐ. கண்டு கொள்ளாமல் அமைதியாகக் கேட்டுக் கொண்டது!''
''ஆனால் என்ன சொல்கிறார்கள் சி.பி.ஐ-யில்?''
''சி.பி.ஐ. அதிகாரி ஒருவரிடம் விசாரித்தேன். 'மாறன் சகோதரர்கள் சர்வதேச அளவில் செயல் படுபவர்கள். தொழில் நிறுவனங்களை வெளிப் படையாக நடத்துபவர்கள். புலன்விசாரணைக்கு ஒத்துழைக்காதவர்கள், நாட்டை விட்டு தப்பிப்
போகிறவர்கள், அல்லது சாட்சியங்களைக் கலைப் பவர்களாக இருந்தால்தான் உடனடியாகக் கைது செய்வோம். இவர்கள் விசாரணைக்கு ஒத்துழைத்து வருகிறார்கள். சி.பி.ஐ. ஏற்கெனவே இந்த வழக்கில் சாட்சியங்களைப் பெற்றுவிட்டது. இந்த சாட்சிகளும் உறுதியாக இருக்கின்றன. தயாநிதி மாறன் ஃபைலில் எழுதிய குறிப்புகளும் அவரது செயலாளராக இருந்த சஞ்சய் மூர்த்தி போன்றவர்களின் சாட்சியங்களும் எங்களுக்குப் பலமாக இருப்பதால் எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை’ என்கிறார்கள். இந்த ரெய்டுக்கு அரசியல் பின்னணியும் இருக்கிறது!''
''அதையும் சொல்லும்!''
''சுப்ரீம் கோர்ட்டில் அக்டோபர் 10-ம்தேதி ப.சிதம்பரம் சம்பந்தப்பட்ட வழக்குதான் விசாரணைக்கு வந்தது. 'ராசா என்ன குற்றம் செய்துள்ளாரோ அதைத்தான் ப.சிதம்பரமும் செய்துள்ளார். எனவே இவரையும் கைதுசெய்ய வேண்டும்’ என்கிறது சுவாமியின் மனு. எப்போது பிரதமரையும் சிதம்பரத்தையும் சேர்த்து ஆ.ராசா குற்றம் சொன்னாரோ அன்று முதல் சி.பி.ஐ. இந்த விவகாரத்தில் மெத்தனமாக நடக்க ஆரம்பித்தது. ஆனால் எதிர்க் கட்சிகளும் சுவாமியும் சிதம்பரத்தைச் சுற்றிச் சுற்றி அடிக்க ஆரம்பித்ததும்... வேறு வழியில்லாமல் திசை திருப்பும் காரியத்தைத் தொடங்கி விட்டார்கள் என்று டெல்லித் தகவல்கள் சொல்கின்றன. 'இன்று சிதம்பரம் பற்றி சுப்ரீம் கோர்ட் ஏதாவது உத்தரவு பாஸ் பண்ணக் கூடும் என்று சி.பி.ஐ. எதிர்பார்த்தது. எனவே அந்த நியூஸை கூல் பண்ணுவதற்காகத்தான் மாறன் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது’ என்றும் டெல்லி மீடியாக்கள் சொல்கின்றன. ஆனால் சுவாமி மனு மீது விசாரணை முடிந்து உத்தரவு போடும் கட்டம் நெருங்கிவிட்டது. அதுவரைக்கும் சிதம்பரத்தின் சிக்கலை அளவிட முடியாது'' என்று சொல்லிப் பறந்தார் கழுகார்!
படம்: 'ப்ரீத்தி’ கார்த்திக்
ஜெ. மீது நேரு வழக்கு!
திருச்சியில் திங்கள் கிழமை இரவு தி.மு.க. தேர்தல் பிரசாரக்கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, கே.என்.நேருவின் ஜாமீன் மனு மீதான விசாரணை நடந்து கொண்டிருந்தது. ''ஜாமீன் கிடைத்ததும் கடலூர் சிறைக்குச் சென்று கையெழுத்துப் போட்டுவிட்டுத்தான் செல்ல வேண்டும்!'' என்று போலீஸார் நேருவை அழைத்துச் சென்று விட்டார்கள். மேடையில் இருந்த கருணாநிதி, ஸ்டாலினுக்கு இந்தத் தகவல் சொல்லப்பட்டது.
மேடையில் பேசிய ஸ்டாலின், ''எனக்கு நம்பிக்கை இல்லை. கடலூருக்கு அழைத்துச் செல்லப்படும் நேரு மீது இன்று இரவே ஒரு வழக்குப் போடலாம். நேற்றுப் பிரசாரம் செய்ய வந்த ஜெயலலிதா, நேரு மீது அபாண்டமான புகார்களைச் சொல்லி இருக்கிறார். தேர்தல் முடிந்த பிறகு இது தொடர்பாக ஜெயலலிதா மீது நேரு வழக்குப் போடுவார்!'' என்று பிரகடனம் செய்தார்.

கழுகார் பதில்கள்

அபர்ணா, நீலகிரி.
   சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்றவர்களின் பட்டியலைப் பார்த்தீரா?
பொதுவாக, சமாதானத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு வெளியாகும்போது கூடவே சர்ச்சைகளும் வெளிவரும். ஆனால், இந்த ஆண்டு சமாதானத்துக்கான நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் லைபீரியாவின் அதிபர் எலென் ஜான்சன் சர்லீஃப், லைபீரியாவின் சமாதான ஆர்வலர் லெய்மா போவீ, ஏமன் மனித உரிமைப் போராளி தவ்க்கோல் கார்மன் ஆகிய மூவருமே விதிவிலக்குகள். இவர்கள் மாற்றுக் கருத்துக்கே இடம் இல்லாத புரட்சித் தலைவிகள்!
லெய்மா போவீ லைபீரியாவைச் சேர்ந்தவர். உள்நாட்டுப் போர் நடந்தபோது, வன்முறைக்கு எதிராகப் பெண்களை ஒன்று திரட்டியதில் இவருடைய பங்களிப்பு மகத்தானது. இவர் முன்னெடுத்த தாம்பத்ய வேலைநிறுத்தம் பிரசித்தி பெற்றது. ஆண்கள் வன்முறைப் பாதையில் செல்லாமல் தடுக்க, 'மனைவிகள்தாம்பத்தியத்தில் ஈடுபடக் கூடாது’ என்ற போராட்டத்தை அறிவித்து, அதை வன்முறைக்கு எதிராகத் திருப்பி வெற்றி கண்டவர் லெய்மா போவீ. உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பின் பெண்கள் அரசியலில் ஆர்வமாகப் பங்கேற்பதற்கும் தேர்தல்களில் போட்டி இடுவதற்கும் மாபெரும் உந்து சக்தியாக இருந்தவர்!
 வி.தமிழ்ப்பித்தன், நன்மங்கலம்.
  உள்ளாட்சித் தேர்தல் முடிவு எப்படி இருக்கும்?
சட்டமன்றத் தேர்தலைப் போல 'அமோகமாக' இருக்காது!
 மு.சங்கரபாண்டியன், வானரமுட்டி.
ஆட்சியாளர்களின் மறதிக்குச் சில உதாரணங்கள் தருக?
ஒன்று போதுமே... முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜெயலலிதா, பத்திரிகை​யாளர்களைப் பார்த்து, 'நமக்குள் ஒரு டீல் வைத்துக்கொள்வோம். வாரம் ஒரு முறை உங்களை நிச்சயம் கோட்டையில் சந்திப்பேன்’ என்றார். மூன்று வாரங்கள் அப்படி நடந்தன. அப்புறம் அதை மறந்தேபோனார் முதல்வர்!
 த.கவிதாசன், செம்மண்டலம்.
முதல் அமைச்சரின் தனிப் பிரிவுக்கு நான் மூன்று மனுக்களும் என் நண்பர்கள் மூன்று மனுக்களும் அனுப்பினோம். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. பதிலும் இல்லை. அப்புறம் எதற்காக இந்த தனிப் பிரிவு?

 அம்பூரணி.ச.நாராயணன், பாளையங்கோட்டை.ஆயிரக்கணக்கான கடிதங்கள் அன்றாடம் அங்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. எனவே, நடவடிக்கையில் தாமதம் என்பதை சற்றே ஜீரணிக்கலாம். ஆனால், 'உங்கள் கடிதம் குறிப்பிட்ட துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது’ என்ற ஒரு பதிலாவது உடனே உங்களுக்கு வந்திருக்க வேண்டும்.  தனிப் பிரிவு சார்பில் சம்பந்தப்பட்ட துறைக்கு கடிதம் அனுப்பும்போது அதற்கு மிகச் சிறு மரியாதைகூடத் தரப்படுவது இல்லை என்பது இன்னொரு சோகம். இதை முதல்வர்தான் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்!
  எத்தனையோ மாநிலங்கள் பிரிக்கப்பட்டுவிட்டன. இதில் தெலுங்கானா பிரிப்பதற்கு மட்டும் மத்திய காங்கிரஸ் அரசு எதிர்ப்புத் தெரிவிக்க என்ன காரணம்?
'தெலுங்கானா’ தனி மாநிலம் ஆக்கப்பட்டால், 'ஆந்திர’ மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய பின்னடைவு ஏற்படும் என்ற அரசியல் எண்ணம்தான் இந்த எதிர்ப்புக்குக் காரணம்!
இதில் கவனிக்க வேண்டிய கழுத்தறுப்புக் காரியம் ஒன்று இருக்கிறது. 2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தனித் தெலுங்கானா அமைக்க ஆதரவு தருவோம்’ என்று சந்திர​சேகர ராவுக்கு வாக்குறுதி கொடுத்தவர் சோனியா. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் அவரது பிறந்த நாள் தினத்தில் 'தெலுங்கானா அமைவதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்படும்’ என்று வாக்குறுதி கொடுத்தது மத்திய அரசு. இது அந்தப் பகுதி மக்களை ஏமாற்றும் காரியம் அல்லவா?
 கோபாலகிருஷ்ணன், ஸ்ரீவில்லிபுத்தூர்.
தூக்குத் தண்டனைக் கைதிகள் பற்றி அடிக்கடி அறிக்கைவிடுகிறாரே கருணாநிதி?
எதிர்க் கட்சியாக இருக்கும்போது கருணாநிதியிடம் தமிழ் உணர்வு சற்றுத் தூக்கலாகவே பொங்கித் ததும்பும் என்பது தெரிந்ததுதானே!
 மு.திருநாவுக்கரசு, ராஜபாளையம்.
  மதத்தை சிலர் தங்களின் சுயநலத்துக்கும் அரசியல் லாபங்​களுக்கும் பயன்படுத்துகிறார்களே?
'இது மிகப் பெரிய தவறு என்றும்... மிக மோசமான விளைவுகளை உண்டாக்கும்!’ என்றும் கண்டிக்கிறார் ஸ்ரீஅரவிந்தர்.
'கலை, விஞ்ஞானம், ஒழுக்கம் போன்ற கலாசார வடிவங்​களையே மதமும் பிரதிபலிக்கிறது. உபயோகத்திலும் வழிமுறை​களிலும் அவை எல்லாம் மனிதனின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. அவனது உயர்ந்த ஆன்மிக வாழ்க்கையை வளமாக்கும் கருவிகளைத் தயார் செய்கின்றன. ஆனால், ஒழுக்கம், விஞ்ஞானம், அழகுணர்ச்சி போன்ற கலாசாரப் பிரிவுகள் தவறாகப் பயன்​படுத்தப்படலாம். அது போன்றே மதமும் தவறாகப் பயன்படுத்தப்படலாம். உண்மையில் பல நேரங்களில் மதம் தவறாகத்தான் பயன்படுத்தப்படுகிறது.
மிக உன்னதமான ஒன்று அழியும்போது, அது மிக மோசமான களங்கம் ஆகிறது. மதமும் அப்படியே. அதன் உயர்ந்த சாத்தியங்கள் தவ​றாகப் பயன்படுத்தப்பட்டால், அது மிக மோசமான முடிவுகளில் கொண்டு செல்லும்’ - என்​கிறார் அரவிந்தர். இந்த அபாயத்​தை நடுநிலையுடன் எடுத்துச் சொல்ல ஆட்​கள் அதிகம் இல்லை. 'அரசியல்' பண்ணத்தான் ஆயிரக்​கணக்கான தலை​வர்கள் இருக்​கிறார்கள்.
 பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.
அரசியலில் பொது எதிரியை வீழ்த்து​வதற்கு, ஒருமித்தக் கருத்​துள்ள கட்சிகள் கூட்டணி அமைப்பது ஆரோக்கியமான விஷயம்​தானே?
பொது எதிரியை வீழ்த்​திய பிறகு, கூட்டணிக் கட்சி​களைக் கழற்றி​விடுவதுதான் ஆரோக்கி​யமற்ற விஷயம்!
 சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.
உள்ளாட்சித் தேர்தலில் காங்கிர​ஸைவிட தே.மு.தி.க. அதிக வாக்குகள் பெற்றால்..?
தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு அடுத்து அதிக வாக்கு வங்கி வைத்திருக்கும் கட்சி என்பதை தே.மு.தி.க. தனிப்பட்ட முறையில் நிரூபித்துள்ளது. எனவே, காங்கிரஸைவிட அதிக வாக்குகளை அவர்கள் பெற்றால், அதில் ஆச்சர்யம் என்ன?
ஆனால்... ஒருவேளை அதிக வாக்குகளை காங்கிரஸ் வாங்கிவிட்டால், 'தனிப்பெரும் நம்பிக்கை நட்சத்​திரம்... தன்னிகரற்ற ராஜதந்திரி... அதிர்ஷ்டக் கொழுந்து’ என்றெல்லாம் தங்கபாலுவைக் கொண்​டாடலாம்!
 பா.சு.மணிவண்ணன், திருப்பூர்-4.
  'என் உயிரைப் பணயமாகவைத்து நடக்கும் போராட்டத்தில் நாம் நிச்சயம் வெல்வோம்’ என்கிறாரே கருணாநிதி?
நாட்டில் எந்தப் போராட்டமும் நடக்கவில்லை. தினமும் 10 போலீஸ்காரர்கள் மாஜி மந்திரிகள் வீட்டில் ரெய்டு போகிறார்கள். இது​வா அவருக்கு யுத்தமாகத் தெரிகிறது?!

தி.மு.க-வில் 'பரிதி' புரட்சி!

உள்கட்சி ஜனநாயகம் உணர 7 நாட்கள்!

''ராமாயணத்தில் இந்திரஜித்... மகாபாரதத்தில் அபிமன்யூ... எனக்கு பரிதி இளம்வழுதி!'' என்பார் கருணாநிதி. அதனால்தான், பரிதி இளம்வழுதிக்கு ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினர் பதவியைக் கொடுத்து அழகு பார்த்தார் கருணாநிதி. கட்சியின் துணைப் பொதுச் செயலாளரான பரிதி, மைக் பிடித்தால் அழவும் வைப்பார், சிரிக்கவும் வைப்பார். சென்னைத் தமிழும் வரும், கொள்கைத் தமிழும் வரும். தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனி ஒரு மனிதராக இருந்து அசுர பலத்தோடு இருந்த அ.தி.மு.க-வுடன் மோதியவர். அப்படிப்பட்ட பரிதி இளம்வழுதி, கடந்த சனிக்கிழமை காலையில் கதறிக் கதறி அழுதார். 
'இனியும் இந்தக் கட்சியில இருக்கக் கூடாது’ என்ற முடிவோடு பேனாவை எடுத்து, எழுதத் தொடங்கினார்.
''தாங்கள் எடுத்துள்ள நடவடிக்கையால், உள்கட்சி ஜன நாயகத்தில் எனது சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகிக்கொள்கிறேன். வாழ்க உள்கட்சி ஜனநாயகம்!''- மொத்தமே அந்தக் கடிதத்தில் இவ்வளவுதான் வார்த்தைகள். கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டுக்கும் அண்ணா அறிவாலயத்துக்கும் கடிதத்தை ஃபேக்ஸ் அனுப்பிவிட்டு, தனது பாலவாக்கம் வீட்டுக்குப் போய்விட்டார் பரிதி. பரபரப்பு பற்றிக்கொண்டது!
50 ஆண்டுகளாகக் கட்சியில் இருப்பவர். துணை சபாநாய கராகவும் அமைச்சராகவும் இருந்தவர். உள்கட்சி ஜனநாயகத்தின் அங்கமான பொதுக்குழு, செயற்குழு, உயர்மட்ட செயல் திட்டக் குழு அனைத்திலும் அங்கம் வகிப்பவர். அவருக்கே இந்தக் கதியா என்பதுதான் சாதாரணத் தொண்டனின் மனதில் எழுந்த கேள்வி!
கருணாநிதி, ஸ்டாலின் அல்லது தி.மு.க. ஆகிய மூன்றில், உள்கட்சி ஜனநாயகத்தைப் பரிதி இளம்வழுதிக்கு உணர்த்தியது எது? அக்டோபர் 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை நடந்த சம்பவங்களை தி.மு.க-வின் உள்வட்டங்களில் வலம் வருபவர்கள் அடுக்குகிறார்கள்.
செப்டம்பர்: 30 அறிவாலயத் தில் முப்பெரும் விழா நடக்கிறது. அந்தக் கூட்டத்துக்குச் சென்ற பரிதி இளம்வழுதி தன் கையில் இரண்டு கவர்களை எடுத்துச் செல்கிறார். ஒன்று, கருணா நிதிக்கு. இன்னொன்று, ஸ்டாலின் பெயர் இடப்பட்டு இருந்தது. கருணாநிதியிடம் அந்தக் காகி தத்தைக் கொடுத்த பரிதி, ''எழும்பூர் பகுதி 103-வது வட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் கே.எஸ்.எம்.நாதன், எழும்பூர் கு.வீராசாமி... இவங்க மூணு பேரும் எனக்குத் தொடர்ந்து தொந்தரவு கொடுக்கிறாங்க. எழும்பூர் தேர்தல்ல எனக்கு இவங்க சரியா வேலை பார்க்கலை. அதனால்தான் நான் தோற்றேன். இதெல்லாமே முடிஞ்சு போன சமாசாரம் தலைவரே... இப்ப கிருஷ்ணமூர்த்திக்கும் அவரோட ஆளுங்களுக்கும் கவுன்சிலர் ஸீட் கிடைக்கவிடாம நான் தடுத்துட்டேன்னு சொல்லி என்னோட ஆபீஸுக்கு அடியாட்களுடன் வந்து தகராறு பண்ணி இருக்காங்க. அப்ப என்னோட பி.ஏ-வான கஹாரி மட்டும் இருந்திருக்கார். வந்தவங்க சொன்ன வார்த்தைகளைக் காதால் கேட்க முடியாது. என் குடும்பத்துப் பெண்களை அசிங்கமாத் திட்டி இருக்காங்க...'' என்று சொல்லி ஒரு சி.டி-யையும் கருணாநிதியிடம் பரிதி இளம்வழுதி கொடுக்கிறார். அதை அமைதியாகக் கேட்டுக்கொண்ட கருணாநிதி, அருகில் இருந்த அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவனை அழைக் கிறார். ''இவங்க மூணு பேரையும் சஸ்பெண்ட் பண்ணுய்யா! பொதுச் செயலாளர்ட்ட சொல்லிட்டு முரசொலிக்கு கொடுத்துடு!'' என்று சொல்கிறார். இரவோடு இரவாக அறிக்கை தயாராகி கட்டம் கட்டிவிட்டார்கள்.
இந்த விழாவுக்கு ஸ்டாலின் வரவில்லை. அவருக்கு உடல் நலம் இல்லாமல், அப்போலோவில் சேர்க்கப்பட்டு இருந்தார். எனவே, ஸ்டாலின் பெயரிட்டு பரிதி எடுத்து வந்த கடிதத்தை அவரிடம் கொடுக்க முடியவில்லை. 'தளபதியைக் காலையில ஆஸ்பத்திரியில போய்ப் பார்த்துக் கொடுத்திருவோம்’ என்று நிம்மதியாக வீடு போய்ச் சேர்ந்தார் பரிதி.
அக்டோபர்: 1 - 'முரசொலி’யின் 5-வது பக்கத்தில் பேராசிரியர் அன்பழகன் பெயரில் அறிக்கை வெளி வந்தது. கிருஷ்ணமூர்த்தி, நாதன், வீராசாமி ஆகிய மூவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அறிவிப்பு அது. அதன் பிறகு அப்போலோ மருத்துவமனைக்கு ஸ்டாலினைப் பார்க்க பரிதி செல்கிறார். 'ரெஸ்ட்ல இருக்காங்க. இன் னிக்கு யாரையும் பார்க்க முடியாது’ என்ற தகவல் சொல்லப்படுகிறது. 'வந்தேன்னு சொல்லிடுங்க’ என்று திரும்புகிறார் பரிதி.
அக்டோபர்: 3, 4, 5 - மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய ஸ்டாலின், செனடாப் சாலையில் உள்ள தனது வீட்டில் இருக்கிறார். மூன்று நாட்களும் பரிதி அங்கு சென்றதாகவும், மூன்று நாட்களும் ஸ்டாலினை சந்திக்க அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
அக்டோபர்: 6 - ஸ்டாலினை சந்திக்கச் சென்ற பரிதி, கையில் ஒரு கடிதத்துடன் சென்றார். அன்றும் அவரை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை. 'இதைத் தளபதியிடம் கொடுத்துடுங்க’ என்று, கடிதத்தை கொடுத்துவிட்டு வந்துவிட்டார்.
அக்டோபர்: 7-  நீக்கிவைக்கப்பட்டு இருந்த மூவரையும் மறுபடியும் கட்சிக்குள் சேர்த்துக்கொள்ளும் அறிக்கை 'முரசொலி’ அலுவலகத்துக்கு வருகிறது.
அக்டோபர்: 8 -  'முரசொலி’யில் இந்த அறிக்கை பெட்டிச் செய்தியாக வருகிறது. அதைப் பார்த்த பரிதி பொங்கிப்போகிறார். 'நான் ஒரு குற்றச்சாட்டை வைக்கிறேன். தலைவர் உடனடியாக நீக்குகிறார். ஆனால், ஸ்டாலின், அந்த மூணு பேரையும் உடனே சேர்க்கச் சொன்னால், என்ன அர்த்தம்? என்னை அவர் ஒரு மனுஷனாகவே மதிக்கவில்லை என்பது தெரியுது. இனிமே இந்தப் பதவியில இருக்கிறதுல என்ன அர்த்தம்? துணைப் பொதுச் செயலாளர் பதவியில இருக்கிற எனக்கே இதுதான் மரியாதைன்னா, சாதாரணத் தொண்டன் நிலைமை என்னாவது?’ என்று பரிதி கொந்தளித்து, தனது பதவியை ராஜினாமா செய்யும் அறிக்கையை எழுதியதாகச் சொல்கிறார்கள்.
'பரிதிக்கு அவங்க பிரச்னை கொடுக்கிறாங்கன்னா... என்னிடம் சொல்லித்தானே நடவடிக்கை எடுக் கணும். நடவடிக்கை எடுத்து மூணு பேரை நீக்கி விட்டு என்னிடம் சொன்னால், எனக்கு என்ன மரியாதை இருக்கு?’ என்று ஸ்டாலின் கேட்டதாகச் சொல்கிறார்கள்.
'நான் தலைவரிடம் பிரச்னையைச் சொல்லத்தான் வந்தேன். அவர்தான் உடனடியாகக் கட்டம் கட்டி விட்டார். அதைத் தளபதியிடம் சொல்ல எனக்கு வாய்ப்பே தரப்படவில்லை’ என்று பரிதி தனது தரப்பு நியாயத்தைச் சொல்கிறார்.
'மேயர் தேர்தல் நடக்கும்போது மூன்று முக்கிய மான ஆட்களை நீக்கினால் கட்சிக்கு வீக் என்பது தெரியாதா?'' என்பது ஸ்டாலினின் எதிர்க் கேள்வி யாக உள்ளது.
''எதுவாக இருந்தாலும் மூன்று பேரையும் கட்சியை விட்டு நீக்கியது கருணாநிதியும் அன்பழகனும்தானே. அவர்கள் மீது ஸ்டாலினுக்கு வராத கோபம், பரிதி மீது ஏன் வர வேண்டும்?'' என்றும் சிலர் கேட்கி றார்கள். கருணாநிதியிடமும் ஸ்டாலின் இதுபற்றிக் கேட்டதாக ஒரு தகவல் இருக்கிறது.
''நான் டி.கே.எஸ்.இளங்கோவனிடம் 'இதுக்கு விளக்கம் கேளுய்யான்னுதான் சொன்னேன். சஸ்பெண்ட் செய்யச் சொல்லலை!'' என்று நழுவிக்கொண்டாராம் கருணாநிதி. இவை எல்லாம் சேர்ந்துதான் பரிதியின் ராஜினாமாவைத் துரிதப் படுத்தியது என்கிறார்கள்.
''ஏற்கெனவே 'ஸ்டாலின் தலைவராக ஆகும் போதே நமக்கெல்லாம் மரியாதை இருக்காது’ என்று சொல்லி வந்தவர் பரிதி. அவருக்கும் ஸ்டாலினுக்கும் பெரிய அளவில் நட்பு இல்லை. ஸ்டாலின் அவரை மதிக்கவும் மாட்டார். இவர் அதை வெளியில் சொல்லவும் மாட்டார். ஒரு காலத்தில் இளைஞர் அணியை உருவாக்குவதிலும் இளைஞர் அணிச் செயலாளராக ஸ்டாலினை முன் மொழிவதிலும் முன்னணியில் இருந்த வர் பரிதி. காலப் போக்கில் தனது தனித்தன்மையால் பேச்சாற்றலால் இவர் வளர்ந்தார். எப்போதும் யாருக்கும் அடங்கிப் போகும் ஆளாக பரிதி இருந்தது இல்லை. தலைவரை மட்டுமே மதிப்பார். இது ஸ்டாலின் வட்டாரத்துக்கு அவ்வளவாக பிடித்தம் இல்லாத விஷயங்கள். எப்படிப் பார்த்தாலும் அடுத்த முறை இவருக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி தரமாட்டார்கள் என்பதால் இவரே முந்திக் கொண்டார்...'' என்றும் விவரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.
ஸ்டாலின் - பரிதி மோதல் கருணாநிதி அறிந்ததுதான் என்பதால், இந்த ராஜினாமாவை அவரும் எதிர்பார்த்தே இருக்கிறார். வீரபாண்டி ஆறுமுகத்திடம் பேசிய கருணாநிதி, 'பரிதிகிட்ட பேசிச் சரிபண்ணு...’ என்று உத்தரவிட்டார். ஆனால், பரிதியை வீரபாண்டியாரால் பிடிக்க முடியவில்லை. ''தலைவர் இப்போது சூழ்நிலைக் கைதியாக இருக்கிறார். அவரை மீட்க வேண்டும்!'' என்று பரிதி ஆட்கள் சொல்ல ஆரம்பித்து உள் ளார்கள். மிகப் பெரிய அரசியல் தோல்விக்குப் பின்னால் தோன்றியிருக்கும் இந்த சலசலப்பு, கட்சித் தொண்டர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் பலரும் பரிதியிடம் தொடர்ந்து பேசி வருகிறார்கள். அதனால் விரைவில் பரிதி, புதிய திட்டங்களுடன் திடீர்ப் புரட்சியைத் தொடங்கலாம்!
ப.திருமாவேலன்

''வெறுப்பைச் சம்பாதித்துவிட்டார் ஜெ.!''

பாய்ச்சல் தொடங்கும் யுவராஜா

திராவிடக் கட்சிகளின் தோளில் ஏறியே தேர்தலைச் சந்தித்த காங்கிரஸ், நீண்ட காலத்துக்குப் பிறகு தனித்துப் போட்டியிடுகிறது. ராகுல் ஃபார்முலா வின்படி, இளைஞர் காங்கிரஸாருக்கு 40 சதவிகித இடங்கள் தரப்பட்டுள்ளன. பிரசார மும்முரத்தில் இருந்த இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் யுவராஜாவைச் சந்தித்தோம். 
''உங்கள் தலைவர் ராகுல், 'உள்ளாட்சித் தேர்தல்தான் நமது இலக்கு’ என்று சொன்னார். ஆனால், இந்தத் தேர்தலிலும் அறிவிக்கப்பட்ட வேட்பாளரே போட்டியிடாதது, ஸீட் கிடைக்கவில்லை என்றதும் சத்யமூர்த்தி பவனில் களேபரம் என்று காங்கிரஸ்காரர்களின் கலாட்டா தொடர்கிறதே?''
''சத்யமூர்த்தி பவன் தாக்கப்பட்டது தவறான முன்னுதாரணம். கண்டிக்கத்தக்கது. அதே சமயம், இந்த அளவுக்குப் பிரச்னை வர யார் காரணம்? ஏன் இது நடந்தது? சென்னையில் 114-வது வார்டுக்கு ஒருவரை வேட்பாளராக அறிவித்துவிட்டு, அவரும் மூன்று நாள் பிரசாரம் செய்துவிட்டார். அதன் பிறகு, மனுத் தாக்கல் முடிவதற்கான கடைசி நிமிடங்களில், வேட்பாளரை மாற்றியது ஏற்க முடியாத செயல். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதேபோல நடந்துள்ளது, வருத்தம் அளிக்கக்கூடியது.
திருச்சி வேட்பாளர் விவகாரத்தில், எங்களுக்கே குழப்பமாக இருக்கிறது. வேட்பாளரை அறிவிக்கும் முன்பு தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, அவரிடம் பேசினாரா என்பது சந்தேகமாக இருக்கிறது. ஆனாலும் அறிவிக்கப்பட்ட பிறகு அந்த வேட்பாளர் மனம் மாறியிருந்தால், அது வருத்தத்துக்கு உரியது. மூன்று வருடங்களுக்கு முன்பே மேயர் பதவியை வேண்டாம் என அவர் சொல்லியிருக்க வேண்டும். திருச்சியில் மூன்று பேர் மனுத் தாக்கல் செய்து இருந்தார்கள். இருவரை வேண்டாம் என சொல்லிவிட்டார்கள். மூன்றாவதாக இளைஞர் காங்கிரஸ்காரர் ஒருவர் இருந்தார். அவரையும் விட்டுவிட்டு, விருப்ப மனுவே தராத ஒருவரை, கடைசி நேரத்தில் அவசர அவசரமாக வேட்பாளராக அறிவித்தது ஏன் என்று புரியவில்லை. அங்கு நிறையப் பேர் போட்டியிடத் தயாராக இருந்தபோது ஏன் இப்படிச் செய்தார் என்பதற்கு தங்கபாலுதான் விளக்கம் சொல்ல வேண்டும்.''
''தி.மு.க-வில் தற்போதைய உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் செயல்பாடுகளைக் கடுமையாக எதிர்த்துப் பிரசாரம் செய்தீர்கள். ஆனால், தி.மு.க. தலைமை சிட்டிங் ஆட்களுக்கே அதிகமாக மீண்டும் வாய்ப்பு தந்துள்ளதே?''
''தி.மு.க. செய்த ஊழலின் எதிரொலியாகத்தான், சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி ஏற்பட்டது. அதிலும் குறிப்பாக உள்ளாட்சி தி.மு.க. பிரதிநிதிகள் மீது ஏகப்பட்ட புகார்கள். ஆனாலும் தவறு செய்தவர்களுக்கே மீண்டும் வாய்ப்பு அளித்திருப்பது தற்கொலைக்குச் சமம். அ.தி.மு.க-வும் கடந்த ஐந்து மாதங்களில் கெட்ட பெயரையே சம்பாதித்துள்ளது. 'தி.மு.க., அ.தி.மு.க. இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்’ என்று காமராஜர் சொன்னது, இப்போதைக்கும் பொருந்துகிறது.''
''அ.தி.மு.க-வின் ஆட்சி பற்றி?''
''மக்கள் விரோத அரசாகத்தான் நடந்துகொள்கிறார்கள். முதலில், சமச்சீர்க் கல்விக் குழப்பம். பட்ஜெட்டுக்கு முன்பாக,  4,500 கோடிக்கு பலவிதமான வரிகளை விதித்தது. சட்டம் ஒழுங்கைக் காப்பதற்கு முன்னுரிமை என்று ஆட்சியில் அமர்ந்தவுடன் சொன்னவர் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், பரமக்குடியில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை சட்டம் ஒழுங்கு நிலைமைக்கு உதாரணமாக எடுத்துக்கொள்ள முடியுமா?
மக்களை ஏமாற்றும் வகையில் முன்னுக்குப் பின் முரணாக நடந்துகொள்வதையும் குறிப்பிட்டாக வேண்டும். ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளை மரண தண்டனையில் இருந்து விடுவிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என சொல்லிவிட்டு, மறுநாளே அவர்கள் மூவரையும் தூக்கில் இடக் கூடாது என தீர்மானம் கொண்டுவருகிறார். கூடங்குளம் பிரச்னையிலும் இப்படித்தான், முதலில் பாதுகாப்பானது என சொல்லிவிட்டு... உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதால், 'மத்திய அரசுதான் பொறுப்பு. அங்கு பணிகளை நிறுத்திவைக்க வேண்டும்’ என தீர்மானம் போடுகிறார். இது போன்ற பிரச்னைகளால், புதிய அரசு மீது மக்கள் மத்தியில் பரவலாக வெறுப்பு நிலவுவதைப் பார்க்கமுடிகிறது.
இந்த ஐந்து மாதங்களாக ஆக்கபூர்வமான எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. அதிக இடங்களில் குடிநீர், சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்படாத நிலைமை கடந்த ஆட்சியைப் போலவேதான் நீடிக்கிறது. ஆனால், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக மத்திய அரசிடம் நிதி கேட்பது வேடிக்கையாக இருக்கிறது. கடந்த ஆட்சிக் காலத்தைவிட மோசமான அளவில் மின்சாரத் தட்டுப்பாடு தொடர்கிறது. எல்லா இடங்களிலும் மணல் திருட்டு பற்றி வரிசையாகப் புகார்களைக் கொட்டுகிறார்கள். அமைச்சர்களின் வேலைகளை அதிகாரிகளே கையில் எடுத்துக்கொண்டு சர்வ அதிகாரத்துடன் செயல்படுகிறார்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், இந்த ஆட்சி மீது மக்கள் வெறுப்பு அடையத் தொடங்கிவிட்டனர்.''
''உண்மையைச் சொல்லுங்கள். காங்கிரஸுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி?''
தி.மு.க-வின் ஊழலால், சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இந்த முறை காங்கிரஸ் தனியாகப் போட்டியிடுவது, எங்களுடைய பலத்தை நிரூபிப்பதற்கான வாய்ப்பு. தே.மு.தி.க., பொறுப்பான எதிர்க் கட்சியாகச் செயல்படும் என மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், கடந்த ஆறு மாதங்களாக மக்களுக்கு ஏமாற்றம்தான் மிச்சம். எனவே, திராவிடக் கட்சிகளுக்கு சரியான மாற்றாக காங்கிரஸ் கட்சிதான் இருக்க முடியும். காங்கிரஸின் பலவீனம் என்று சொல்லப்படும் கொங்கு வட்டாரத்தில், 11 ஊராட்சித் தலைவர்கள், போட்டியின்றித் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளனர். நாங்கள் நம்பிக்கையோடு இருக்கிறோம்!''
இரா. தமிழ்க்கனல்
படம்: சொ.பாலசுப்பிரமணியன்

அதிரவைக்கும் ஆட்டோ கட்டணம்!

சென்னை நகரில் ஆட்டோ கட்டண நிர்ணயம், நீண்ட காலமாகத் தீர்க்கவே முடியாத ஒரு பிரச்னையாக இருந்து​வருகிறது! அவசரத் தேவைகளுக்காக நடுத்தட்டு மக்களுக்கும், மூத்த குடிமக்​களுக்கும் கை கொடுக்கும் ஆட்டோ, கட்டண விவகாரத்தில் வழிப்பறிக் கொள்ளையர் போலவே செயல்படுகிறது.
இப்போது பல ஆட்டோக்களில் மினிமம் என்று  50 வசூல் செய்கிறார்கள். இது எவ்வளவு பெரிய மோசடி? அதுவும் வெளியூரில் இருந்து ரயில் மற்றும் பஸ்ஸில் வரும் அப்பாவிப் பயணிகளிடம் ஆட்டோக்காரர்கள் கேட்கும் தொகை (மீட்டர் கட்டணத்தை விட மூன்று அல்லது நான்கு மடங்கு அதிகம்) இன்னொரு வயிற்றெரிச்சல் விவகாரம்! ஆட்டோவைத் தவிர்க்க முடியாததால், அவர்கள் கேட்கும் தொகையைக் கொடுத்துவிட்டுப் பயணம் செய்யவேண்டிய சூழல்.
பெட்ரோல் விலை உயர்வு, விலைவாசி ஏற்றம் போன்றவை ஆட்டோவுக்கும் பொருந்தும் என்றாலும்... ஒரு குறிப்பிட்ட தொலைவுக்குச் செல்ல நியாயமான கட்டணத்தை அரசாங்கம் நிர்ணயிக்க வேண்டும். ஆட்டோ ஓட்டுனர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று, பொது மக்கள் பாதிக்காத அளவுக்கு கட்டணங்களை அரசு நிர்ணயித்து, பொதுமக்களுக்கும் இதைத் தெரிவிக்க வேண்டும். 
ஆட்டோவில் எலெக்ட்ரானிக் மீட்டர்கள் பொருத்தப்பட்டு, அவை சரியாக இயங்க வேண்டும். கேபிள் டி.வி-யை நடைமுறைக்குக் கொண்டுவந்தது போன்று, ஆட்டோ விவ​காரத்திலும் அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது சாத்தியம்.
- எஸ்.ராமன், சென்னை-17
********************************************************************************
சி.பி.ஐ.-யின் நெக்ஸ்ட் லிஸ்ட்!

இரண்டு இதழ்களுக்கு முன்பே, 'சென்னையை வலம் வரும் சி.பி.ஐ. டீம்’ என்று நாம் அட்டைப் படக் கட்டுரையை வெளியிட்டு இருந்தோம். அதில், ''சி.பி.ஐ. அதிகாரிகள் சிலர் சென்னைக்குள் வந்திருக்கிறார்கள். அவர்களது அசைன்ட்மென்ட் என்ன என்பது அடுத்த வாரம் தெரிந்துவிடும்!'' என்றும் சொல்லி இருந்தோம். கடந்த 10-ம் தேதி காலை 8 மணிக்கு சி.பி.ஐ-யின் ரூட் தெரிந்துவிட்டது.புலி வருது.. புலி வருது... என்ற கதையாக பூச்​சாண்டி காண்பித்துக் கொண்டிருந்த சி.பி.ஐ. திடீர் வேகம் எடுத்தது திங்கட்கிழமை!
அடையாறு வட்டாரத்தில் உள்ள போட் கிளப் ஏரியாவில் சன். டி.வி. உரிமையாளர் கலாநிதி மாறன், அவரது சகோதரர் தயாநிதி மாறன் ஆகிய இருவரது வீடும் இருக்கிறது. இவர்களது வீட்டுக்குள் 13 சி.பி.ஐ. அதிகாரிகள் சென்றார்கள். அதேநேரத்தில் டெல்லியில் உள்ள தயாநிதி மாறன் வீட்டுக்கும் சென்றார்கள் அதிகாரிகள். சென்னைஎம்.ஆர்.சி. நகர் பகுதியில் சன் டி.வி-யின் பிரதான அலுவலகத்துக்கும் அதிகாரிகள் சென்றார்கள்.
இரண்டு புகார்களின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக சி.பி.ஐ. அதிகாரிகள் வட்டாரம் சொல்கிறது.
சி.பி.ஐ-யைத் தூண்டிய சிவசங்கரன்
தமிழகத் தொழில் அதிபர்களில் ஒருவரான சிவசங்கரன், தொடங்கிய நிறுவனம்தான் ஏர்செல். தயாநிதி மாறன் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது சிவசங்கரனுக்கும் இவருக்கும் மோதல் ஏற்பட்டது. அது தொடர்பான விவரங்களை சி.பி.ஐ-யில் வாக்குமூலமாக சிவசங்கரன் கொடுத்துள்ளார்.
''ஏர்செல் கம்பெனியின் சார்பாக 14 சர்க்கிள்களில் செயல்பட நாங்கள் கொடுத்த விண்ணப்பத்தை அவசியமற்ற காரணங்களைச் சொல்லி தயாநிதி மாறன் தாமதப்படுத்தினார். இது குறித்து 2005-ம் ஆண்டு தயாநிதிக்கு கடிதம் அனுப்பினேன். பலன் இல்லை. அதன்பிறகு என்னுடைய ஏர்செல் கம்பெனியை மலேசியாவைச் சேர்ந்த அனந்தகிருஷ்ணனின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்யச் சொல்லி எனக்கு நிர்ப்பந்தம் வந்தது. அதனால் வேறு வழியில்லாமல் ஏர்செல் கம்பெனியின் 74 சதவிகிதப் பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்துக்கு கைமாற்றினேன். என் கட்டுப்பாட்டில் ஏர்செல் இருந்தபோது வருடக்கணக்கில் முயன்றும் கிடைக்காத லைசென்ஸ், அனந்தகிருஷ்ணனின் கைக்கு ஏர்செல் சென்றதும் ஆறே மாதத்தில் கிடைத்தது.
இந்த உரிமங்களைக் கொடுத்த நான்கு மாதத்தில் சன் டைரக்ட் நிறுவனத்துக்கு  600 கோடி அளவிலான முதலீடுகள் சவுத் ஆசியா என்டர்டெயின்மென்ட் ஹோல்டிங் லிமிடெட் என்ற நிறுவனத்தின் மூலமாக கிடைத்துள்ளது. இதுவும் அனந்தகிருஷ்ணனின் நிறுவனம்தான். அதன்பிறகு இவர்களின் எஃப்.எம். என்ற நிறுவனத்தில் அனந்தகிருஷ்ணனின் மேக்சிஸ் நிறுவனம் சுமார்  100 கோடியை முதலீடு செய்துள்ளது. இவை அனைத்தும் உள்நோக்கம் கொண்ட பணப் பரிவர்த்தனைகள்!'' என்று தனது வாக்குமூலத்தில் சிவசங்கரன் கூறியிருப்பதாக சி.பி.ஐ. வட்டாரங்கள் செய்தியைக் கசிய விட்டன. இதுதொடர்பாக தயாநிதி மாறன் மற்றும் கலாநிதி மாறன் ஆகிய இருவரிடமும் அடிப்படை விசாரணைகள் நடந்து முடிந்தன. சுப்ரீம் கோர்ட்டில் ஆஜரான சி.பி.ஐ. வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலும், ''இது பற்றி சி.பி.ஐ. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது!'' என்று வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டார். எனவே பூர்வாங்க விசாரணையை முடுக்கிவிட வேண்டிய நிலை சி.பி.ஐ-க்கு ஏற்பட்டது. இது சி.பி.ஐ. கையில் இருக்கும் முதல் வழக்கு!
அடுத்த விவகாரம்... 'சுமார் 323 பி.எஸ்.என்.எல். இணைப்புகளை தயாநிதிமாறன், தனது போட் கிளப் வீட்டில் இருந்து சன் டி.வி. அலுவலகப் பயன்பாட்டுக்குப் பயன்படுத்த ரகசிய ஏற்பாடு செய்தார்’ என்பது.
''வீடியோ கான்பரன்சிங் போன்றவற்றுக்கும் அதிகளவிலான தகவல்களைப் பரிமாறிக் கொள்​ளவும் இவை பயன்படுத்தப்​பட்டன. பி.எஸ்.என்.எல் பொதுமேலாளரின் பெயரில் இந்த இணைப்புகள் பெறப்பட்டிருந்தாலும் தயாநிதிமாறன் வீட்டில்  இருந்து இவை சன் டி.வி-யின் ஒளிபரப்புக்கு பயன்படுத்தப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக இதுபற்றி புகார் வந்தது. 2007-ம் ஆண்டு இது தொடர்பாக நாங்கள் விசாரிக்க அனுமதி கோரியபோது தொலைத் தொடர்புத் துறை மறுத்துவிட்டது!'' என்று சி.பி.ஐ. அதிகாரிகள் சொல்கிறார்கள். 
இந்த இரண்டு புகார்களையும் தனித்தனியாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வந்தனர். இதற்காகவே இந்த ரெய்டுகள் நடந்துள்ளதாகச் சொல்லப்​படுகிறது. சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில், தயாநிதிமாறன், கலாநிதி மாறன்,  மேக்சிஸ் நிறுவனத்தின் அதிபரான அனந்த கிருஷ்ணன், மேக்சிஸ் குழுமத்தைச் சேர்ந்த 'ஆஸ்ட்ரோ’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரால்ஃப் மார்ஷல் ஆகியோர் மீதும் சன் டி.வி., மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ், ஆஸ்ட்ரோ நெட்வொர்க் ஆகிய மூன்று நிறுவனங்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன!'' என்று சி.பி.ஐ. அதிகாரிகள் சொல்கிறார்கள். ''குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யும் போதுதான் முழுவிவரங்களையும் சொல்வோம்!'' என்கிறார்கள்.
ரெய்டில் நடந்தது என்ன?
கடந்த 15 நாட்களாக தயாநிதிமாறன், அவரது மனைவி இருவரும் டெல்லியில்தான் தங்கி இருக்கிறார்கள். சி.பி.ஐ-யின் டெல்லி அதிகாரிகள் எழுப்பிய சந்தேகங்களுக்கு தயாநிதி அவ்வப்போது பதில் அளித்துவந்தாராம். அக்டோபர் 10-ம் தேதியன்று தயாவின் சென்னை வீட்டில் ரெய்டு நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் சென்றபோது, வாசலில் இருந்த செக்யூரிட்டிகள் அரை மணி நேரம் காக்க வைத்தனர். அதிகாரிகள் கோபக்குரல் எழுப்பியபிறகுதான், உள்ளே அனுமதித்தனர். அப்போது, தயாநிதிமாறனின் தாயார் மல்லிகா மற்றும் வேலைக்காரர்கள் ஒன்பது பேர் வீட்டில் இருந்தனர். ஆனால், கலாநிதி மாறன், அவரது மனைவி மற்றும் முரசொலி செல்வம் ஆகியோர் அவர்கள் வீட்டில் இருந்தார்கள். சி.பி.ஐ. அதிகாரிகள் உள்ளே நுழைந்ததும்,  முதல் வேலையாக அவர்களின் செல்போன்களை வாங்கிக்கொண்டனர். 'எந்த வழக்கில் இந்த ரெய்டு நடத்தப்படுகிறது’ என்பது போன்ற அடிப்படை விவரங்களை உயர் அதிகாரி ஒருவர் விரிவாக எடுத்துச் சொன்னதும், ஓகே சொன்னாராம் கலாநிதிமாறன். வீட்டில் இருந்த சின்னதும் பெரிசுமாக அனைத்து பொருட்களின் மதிப்புகளை குறிப்பெடுத்துக்கொள்வதில்தான் அதிகாரிகள் அதிக கவனம் செலுத்தினார்களாம்.
தண்ணீர் டாங்கில் குதித்த சி.பி.ஐ. அதிகாரி!
தயாநிதி மாறன் வீட்டை அங்குலம் அங்குலமாக ஒவ்வொரு பகுதிகளையும் பூதக்கண்ணாடி கொண்டு அதிகாரிகள் ஆராய்ந்தனர். ஒரு கட்டத்தில், மொட்டை மாடியில் உள்ள தண்ணீர் டாங்கின் உள்ளே சி.பி.ஐ. அதிகாரி ஒருவர் குதித்து அதன் சுவர்களை ஏதோ ஒரு கருவியால் ஸ்கேன் செய்து பார்த்துவிட்டு குறிப்பெடுத்தார். மாடியில் உள்ள மினி சைஸ் ஏர்செல் டவர் ஒன்றைச் சுற்றி நின்று சி.பி.ஐ. அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள். அதன்பிறகு அவரது வீட்டில் இருந்து குறிப்பிட்ட சில அதிகாரிகள் மட்டும் காரில் கிளம்பிச் சென்றார்கள். கொஞ்ச நேரத்தில் தொலைத் தொடர்புத் துறையின் டெக்னிக்கல் அதிகாரிகளைக் கேமரா சகிதம் அழைத்து வந்தனர். இவர்களும்  மாடியில் இருந்த ஏர்செல் டவரை மையமாக வைத்துதான் ஆய்வுகளை நடத்தினர்.
மு.க.தமிழரசு நடத்திய போராட்டம்
ரெய்டு தகவல் கேள்விப்பட்டு, தயாநிதி மாறன் வீட்டுக்கு ஒடிவந்தார், கருணாநிதியின் கடைசி மகன் மு.க. தமிழரசு. ஆனால், வாசல் கேட்டிலேயே அவரைத் தடுத்து நிறுத்தினர். அங்கே நின்றிருந்த தயாநிதி மாறனின் நண்பரான வீனஸ் வீர அரசு, சத்தம் போட்டு அழைத்து வீட்டுக்குள் இருந்த உயர் அதிகாரிகளை வாசலுக்கு வரவழைத்தார். 'இவர், தயாநிதியின் மாமா. உள்ளே இவரை அனுமதிக்க வேண்டும்' என்று வாதாடினார். அந்த அதிகாரி வேறு யாரிடமோ போனில் பேசிவிட்டு, 'சரி, அனுமதிக்கிறோம். செல்போனை எங்களிடம் கொடுக்கவேண்டும். ரெய்டு முடியும் வரையில் உள்ளேதான் இருக்கவேண்டும். வெளியே செல்ல அனுமதிக்க மாட்டோம். இந்த கட்டுப்பாட்டுக்கு ஒப்புக்கொண்டால், அனுமதிக்கிறோம்' என்றார். மு.க. தமிழரசு அதற்கு சம்மதிக்கவே, வீட்டுக்குள் அழைத்துச் செல்லப்பட்டார்.
தயாநிதிமாறனின் பிள்ளைகள் இருவரும் சேத்துப்பட்டில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கின்றனர். காலையில் அவர்கள் பள்ளிக்குக் கிளம்பிய பிறகுதான், சி.பி.ஐ. அதிகாரிகள் வந்தனர். மதிய வேளையில் அந்தக் குழந்தைகளுக்கு சாப்பாடு எடுத்துச் செல்லவேண்டியுள்ளது என்று வேலைக்காரர்கள் பலமுறை சொன்னபிறகே,  காரில் சாப்பாடு எடுத்துச் செல்ல அனுமதித்தனர். 'குறிப்பிட்ட நேரத்துக்குள் திரும்பி வந்துவிடவேண்டும். வழியில் யாரிடமும் இங்கு நடப்பதை சொல்லக்கூடாது' என்றெல்லாம் கார் டிரைவரிடம் சி.பி.ஐ. அதிகாரி ஒருவர் கறாராகச் சொல்லி அனுப்பினார்.
ஒன்பதாவது மாடி!
சன் டி.வி. அலுவலகத்தின் ஒன்பதாவது மாடியில்தான் சன் டைரக்ட் நிறுவனத்தின் அலுவலகம் செயல்படுகிறது. இங்கும் சி.பி.ஐ. அதிகாரிகள் சென்றார்கள். இதன் நிர்வாகப் பொறுப்பில் சுந்தரம் என்பவர் இருக்கிறார். அவரை சந்தித்தார்கள். ''தங்கள் கைவசம் பல ஆவணங்களின் ஜெராக்ஸ் பிரதிகளை சி.பி.ஐ. அதிகாரிகள் எடுத்து வந்தார்கள். அதன் ஒரிஜினல் ஆவணங்களைக் கேட்டு வாங்கிப் பார்த்தார்கள். அதில் முக்கியமான சிலவற்றை மட்டும் எடுத்துக் கொண்டார்கள்!'' என்றும் சொல்லப்படுகிறது. 2007-ம் ஆண்டு இந்த நிறுவனத்தில் செய்யப்பட்ட முதலீடுகள் சம்பந்தமான ஆவணங்கள் இவை!
சுனிதா ரெட்டி சிக்கிய கதை!
அப்போலோ மருத்துவமனையின் செயல் இயக்குநரான சுனிதா ரெட்டியின் அலுவலகம் மற்றும் வீடுகளிலும் சோதனை நடந்தது. அப்போலோ அதிபர் பிரதாப் சி.ரெட்டியின் மகள் இவர். சிவசங்கரனுக்குச் சொந்தமான ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளில் முக்கால்வாசியை மேக்சிஸ் நிறுவனமும், மீதி பங்குகளை சிந்தியா செக்யூரிட்டீஸ் அண்ட் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனமும் வைத்திருந்தன. இந்த சிந்தியா செக்யூரிட்டீஸ் நிறுவனத்துக்கு, அப்போலோ குழுமத்துக்கு தொடர்புகள் உண்டாம். ''சுனிதா ரெட்டியின் நிறுவனத்தை தனது கேடயமாக மேக்சிஸ் நிறுவனம் பயன்படுத்தியது.  இதற்காக சுனிதா ரெட்டிக்கு எவ்வளவு பணம் அல்லது வேறு சலுகைகள் தரப்பட்டன!'' என்று  சி.பி.ஐ-யின் கேள்வி எழுப்புகிறது. ''இதுதொடர்பாக, சுனிதா ரெட்டியிடம் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி நாங்கள் விசாரணை நடத்திவிட்டோம்!'' என்றும் அந்த அதிகாரிகள் சொல்கிறார்கள்.
அடுத்த நடவடிக்கை எப்போது?
போலீஸ் அதிகாரி ஒருவரிடம் இதுபற்றி கேட்டபோது, ''குறிப்பிட்ட இரண்டு வழக்குகள் சம்பந்தமாக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதற்கான ஆவணங்களைத் திரட்டியபிறகு அடுத்த கட்ட நடவடிக்கையைத் தொடங்குவோம்!'' என்று மையமாக நம்மிடம் சொல்லிச் சென்றார்கள்.  டெல்லியில் உள்ள சி.பி.ஐ. செய்தித் தொடர்பாளர் தாரிணி மிஸ்ரா, ''மாறன் சகோதரர்கள் வீடுகளில் சோதனை முடிந்த பிறகு உறுதியான ஆதாரங்களின் அடிப்படையில் சி.பி.ஐ. அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும்!'' என்கிறார்.
- ஆர்.பி.
படங்கள்: கே.கார்த்திகேயன், வி.செந்தில்குமார்
 சிவசங்கரனுக்கு அதிர்ச்சி!
மலேசியாவைச் சேர்ந்த அனந்த கிருஷ்ணனுக்கு எதிராக சிவசங்கரன் தொடுத்த புகார் ஒன்று சிங்கப்பூரில் பூமராங் ஆகியிருக்கிறது.
வர்த்தகம் சார்ந்த விஷயங்களில் எழும் பிரச்னைகளைக் களைவதற்காக சிங்கப்பூரில் செயல்படும் அமைப்பு ஆர்பிட்ரேஷன் பேனல், இந்த நடுவர் மன்றத்தில் சிவசங்கரனின் சிவா வென்ச்சர்ஸ் லிமிடெட், அனந்த கிருஷ்ணன் மீது கடந்த 2009-ம் ஆண்டு புகார் ஒன்றைக் கொடுத்திருந்தது. அதில், ''அனந்த கிருஷ்ணனின் மேக்சிஸ் நிறுவனம் தங்களுக்கு வாக்குறுதி கொடுத்தபடி, ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை பொதுமக்களுக்கு மூன்று ஆண்டுகளுக்குள்ளாக விற்பனை செய்யவில்லை. அடுத்ததாக ஏர்செல் கம்பெனியின் கணக்கு வழக்குகளில் தகிடுதத்தம் செய்து தங்களுக்கு (சிவா வென்ச்சர்ஸ் லிமிடெட்) வரவேண்டிய வருமானத்தையும் வராமல் செய்துவிட்டது!'' என்று குற்றம் சுமத்தியிருந்தது.
இந்தப் புகாரை விசாரித்த மூன்று நபர்கள் அடங்கிய சிங்கப்பூரின் நடுவர் மன்றம் சிவசங்கரனின் புகாரை தள்ளுபடி செய்ததோடு நீதிமன்றச் செலவுகளை ஈடுகட்ட அனந்த கிருஷ்ணனுக்கு  35
கோடி நஷ்ட ஈடு கொடுக்கவேண்டும் என்றும் தீர்ப்பு சொல்லியிருக்கிறது. இதை வைத்தே, ''சிவசங்கரன் அடிப்படை இல்லாத குற்றச்சாட்டுகளை தயாநிதி மாறன் மீது ஏதோ உள்நோக்கத்துடன் பகை தீர்த்துக்கொள்வதற்காக பொய்ப் புகார் கொடுத்திருக்கிறார் என்பது புரியவில்லையா? வழக்குகளை மிகத் தீவிரமாக ஆராய்ந்து நச் என்று தீர்ப்பு கொடுக்கும் சிங்கப்பூர் நீதிமன்றமே சிவசங்கரனின் முகத்திரையைக் கிழித்திருக்கிறது. இதை எங்கள் தரப்புக்கு பலமாக எடுத்துக்கொள்வோம்!'' என்கிறது தயாநிதி மாறன் தரப்பு.
வேல்ஸ்
**********************************************************************
ஜெயலலிதாவிடம் திரும்பிய கூடங்குளம் விவகாரம்!

பிரதமரின் 'கடித' பாலிடிக்ஸ்

கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிராக சுமார் 20 வருடங்களுக்கு மேலாக நடந்து​வரும் மக்கள் போராட்டம், அதன் இறுதிக் கட்டத்தைத் தொட்டேவிட்டது. ஜெயலலிதா எடுத்த முயற்சியின் பயனாக, கடந்த 6-ம் தேதி தமிழக அரசின் சார்பில் ஓ.பன்னீர்செல்வம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.வி.தங்கபாலு, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், அ.தி.மு.க. எம்.பி-க்கள் தம்பிதுரை, வா.மைத்ரேயன், பி.ஜே.பி. நிர்வாகி சரவணப் பெருமாள் மற்றும் போராட்டக் குழுவின் சார்பில் சுப.உதயகுமாரன் தலைமையில் வழக்​கறிஞர் சிவசுப்பிரமணியன், கடலோர மக்கள் கூட்டமைப்பின் தலைவர் புஷ்பராயன், தூத்துக்குடி மறைமாவட்ட பேராயர் இவோன் ஆம்புரோஸ், மீனவர் சங்க ஒருங்கிணைப்பாளர் ஆண்டன் கோமஸ் ஆகியோர் பிரதமரைச் சந்தித்தனர். 
பிரதமர் அலுவலகத்தில் நிகழ்ந்த பேச்சுவார்த்தை குறித்து சுப.உதயகுமாரன், ''நாங்கள் ஒரு குழுவாக இருந்தாலும், இரண்டு பிரிவுகளாகத்தான் பிரிந்து நின்றோம்...'' என்று பெருமூச்சுவிட்டபடி தொடர்ந்தார்.
''பிரதமர் வீட்டில் இருந்தே அணு சக்தித் துறையைச் சேர்ந்த ஸ்ரீகுமார் பானர்ஜி, எஸ்.கே.ஜெயின், தேசியப் பாதுகாப்பு அறிவுறுத்துனர் சிவசங்கர் மேனன் ஆகியோர் பிரதமருடன் சேர்ந்து வந்தார்கள். இந்தப் பேச்சுவார்த்தைக்கு அவர்கள் வருவதற்கான எந்த அவசியமும் இல்லை என்றாலும் வந்திருந்தார்கள்.
ஆரம்பத்தில், 'நம் நாட்டில் இருக்கும் அணு மின் நிலையங்கள் பாதுகாப்பானவை’ என்று சொன்னபிரதமர், எங்கள் கருத்துகளைக் கேட்டு முகம் சிவந்தார். '2008-ம் ஆண்டு ரஷ்யா மற்றும் இந்தியாவுக்கு இடையே ரகசிய ஒப்பந்தம் போடப் பட்டது. அதில் இந்தியா ஏற்படுத்தி இருக்கும் அணு விபத்து இழப்பீட்டுச் சட்டங்கள் எங்களுக்குப் பொருந்தாது என்று ரஷ்யா கூறி இருக்கிறதே... அது எப்படி?’ என்று கேட்டதற்கு பிரதமர் பதில் சொல்லவில்லை. 'இந்த ரஷ்யத் தொழில்நுட்பம், தோல்வியடைந்த தொழில்நுட்பம் என்று சொல்லி 25 குறைபாடுகளை ரஷ்யாவில் இருக்கும் ஓர் ஆய்வு நிறுவனமே சொல்லி இருக்கிறதே?’ என்று பல கேள்விகள் கேட்டோம். பிரதமரிடம் இருந்து பதிலே இல்லை...'' என்றார்.
அடுத்துப் பேசிய புஷ்பராயன், ''1988-ம் ஆண்டு இந்தத் திட்டத்தைத் தொடங்கும்போது மக்களிடம் கருத்துக் கேட்பது, சுற்றுச்சூழல் பற்றிய அறிக்கை சமர்ப்பிப்பது போன்ற எந்தத் தகவலையும் மக்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று சட்டம் இருப்பதாகச் சொன்னார்கள். அதே போல, அப்போது இருந்த கடலோர ஒழுங்காற்று மண்டல அறிக்கையின்படி, முதல் இரண்டு உலைகளைக் கட்டினார்கள். தற்போது, மேலும் நான்கு உலைகளைக் கட்ட ஆரம்பித்து இருக்கிறார்கள். 2011-ம் வருடத்திய கடலோர ஒழுங்காற்று மண்டல அறிக்கையின்படிதான் இவர்கள் செயல்பட வேண்டும். அப்படிப் பார்த்தால், இந்த நான்கு உலைகளைக் கட்ட முடியாது. அதை மீறி இவர்கள் செயல்படு​கிறார்​கள்!'' என்று  சொன்​னார்.
'இந்தத் திட்டத்தை நிரந்தரமாக நிறுத்துங்கள்’ என்கிறார்கள் போராட்டக் குழுவினர். 'மக்களின் பயத்தைப் போக்கும் வரை, இந்தத் திட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்​துங்கள்’ என்கிறது தமிழக அரசு. இனி செய்ய வேண்டியது எல்லாம் மத்திய அரசின் கையில்... மாநில அரசு போட்ட தீர்மானத் துக்கு மரியாதை இல்லாத வகையில், இந்த சந்திப்பு நிகழ்ந்த அடுத்த சில மணி நேரங்களிலேயே 'இந்தத் திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்’ என நம் முதல்வருக்கு கடிதம் எழுதியிருக்கிறார் பிரதமர்.
முதல்வரின் அடுத்த மூவ் என்னவோ?
ந.வினோத்குமார்
 சகுனி ஆட்டம்?
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பினரின் போராட்டத்தின்  பின்னணியில் அந்நிய சக்திகள் இருக்கலாம் என்றும் அந்த சக்திகள் கோடிக்கணக்கில் பணத்தை களம் இறக்கி இருப்பதாகவும், இந்திய அணு சக்தித் துறையினர் மத்தியப் புலனாய்வுத் துறையிடம் தெரிவித்து இருக்கின்றனர். இது குறித்து முதல் கட்ட விசாரணையைத் தொடங்கி இருப்பதாகப் புலனாய்வுத் துறை வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.  சுப.உதயகுமாரனிடம் கேட்டபோது, ''அணு சக்திக்கு எதிராகப் போராடும் அடித்தட்டு மக்களைக் கொச்சைப்படுத்தும் காரியம் இது. எங்கள் போராட்டத்துக்கான நிதி உள்ளூர் மக்களும் ஏழை மீனவர்களும் வழங்கிய கொடைதான். எந்த விசாரணையையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்...'' என்றார் காட்டமாக!

நேரு... அந்தப் பேருக்கே பொருத்தம் இல்லாதவர்!

மேற்கில் பொங்கிய ஜெ.!
திருச்சி மேற்குத் தொகுதியில் அ.தி.மு.க-வின் பெரும்​பாலான அமைச்சர்களும்

பல்வேறு மாவட்ட நிர்வாகி​களும் வேட்பாளர் பரஞ்சோதியின் வெற்றிக்காக உழைப்பது போதாதென்று அக்​டோபர் 9-ம் தேதி ஜெயலலிதாவும் திருச்சியில் ஆஜர்! 
முதல் ஸ்பாட்... திருச்சி மத்தியப் பேருந்து நிலையம். மாலை 3 மணியில் இருந்தே தொண்டர்கள் பெருந்திரளாகக் கூட ஆரம்பித்துவிட்டனர். தொண்​டர்களைக் கட்டிப்போட்டது கழகத்​தினரால் ஏற்பாடு செய்யப்​பட்டிருந்த ஆடல் பாடல் நிகழ்ச்சி. எம்.ஜி.ஆர். வேடம் அணிந்தவருடன் இரண்டு பெண்கள் சுற்றிச் சுற்றி ஆடிக்கொண்டு இருந்தார்கள். எம்.ஜி.ஆரும் அவர்களை துரத்திப் பிடித்து, கட்டி அணைத்து, கன்னத்தோடு கன்னம் இழைத்து... ரசிகர்களை மகிழ்வித்துக்கொண்டு இருந்தார். உற்சாகத்தோடு ஸ்பாட்டில் கூடி இருந்த விஜய் ரசிகர் மன்றத்தினர்  குத்தாட்டம் போட்டனர். எம்.ஜி.ஆரின் ஜோடிப் பெண்களின் ஆட்டத்துக்கு தக்கவாறு  100,  50 என்று அன்பளிப்புகளைக் கொடுத்து தங்களை விளம்பரப்படுத்தி, புளகாங்கிதப்படவும் தவறவில்லை பார்வையாளர்கள்.
தனி விமானம் மூலம் தோழி சசிகலா சகிதம் திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தார் ஜெயலலிதா. 4.30 முதல் 6 மணி வரை ராகு காலம் என்பதால், 6 மணிக்கு மேல்தான் பிரசாரத்தை ஆரம்பித்தார். அவர் பேச ஆரம்பிக்கும்போது நேரம் சரியாக 6.14. கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்துவிட்டே பேச ஆரம்பித்தார். கடந்த பொதுத் தேர்தலில் பயன்படுத்திய ஹைட்ராலிக் லிஃப்ட் வசதிகொண்ட வேனில்தான் இம்முறையும் பிரசாரம் செய்தார் ஜெயலலிதா.
ஜெயலலிதா முதல் ஸ்பாட்டில் பேசிக்கொண்டு இருக்கும்போதே, அடுத்த ஸ்பாட்டை நோக்கி விரைகிறது அமைச்சர் செங்கோட்டையனின் கார். மைக் சரியாக இருக்கிறதா... எக்கோ ஒலிக்கிறதா என்றெல்லாம் செக் செய்கிறார். ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், உடனடியாக அதனைச் சரிசெய்கிறார். ஸ்பாட்டில் எந்த இடத்தில் ஜெயலலிதா வேனை நிறுத்தி, பிரசாரம் செய்ய வேண்டும் என்பதையும் செங்கோட்டையனே தீர்மானிக்கிறார். கையில் ஓர் அட்டையுடன் இருக்கும் செங்கோட்டையனைப் பார்த்துவிட்டு, அந்த இடத்தில் சரியாக வேன் நிற்கிறது.
ஒவ்வொரு ஸ்பாட்டிலும், 'இளைஞர் பாசறை’பனி​யனுடன் இளைஞர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்​கிறார்கள். அவர்களைப் பாசறை​யின் மாநிலச் செயலாளரான செந்தில்நாதன் ஒருங்கிணைத்து பணிகளைச் செய்ய வைக்கிறார். பிரசார ஸ்பாட்டில் மன்னார்புரம் பை-பாஸ் சாலையில் இருந்து எடமலைப்பட்டி புதூர் வரை கிட்டத்தட்ட எட்டு கி.மீ. தூரம் ரோட்டில் இரு பக்கமும் கண்ணைப் பறிக்கிறது டியூப் லைட் அலங்காரம். மாணவரணி சார்பாக இதை ஏற்பாடு செய்திருந்தார் அமைச்சர் உதயகுமார். அதற்காக அம்மாவிடம் இருந்து பாராட்டு கிடைக்கும் என அவர் காத்திருக்க... ரிசல்ட் உல்ட்டா! 'ஏன் இப்படியெல்லாம் செய்றீங்க? பொதுமக்கள் நம்மளைப்பத்தி என்ன நினைப்பாங்க? எலெக்ஷன் கமிஷன்ல இதையெல்லாம் வேட்பாளரோட செலவுக் கணக்குலதானே சேர்ப்பாங்க. இதனால, பின்னாடி பிரச்னை வரும்னு தெரியாதா?’ என்று ஜெயலலிதாவிடம் இருந்து கடுமை​யான டோஸ் கிடைத்​ததாம்.
உளவுத் துறை டி.ஐ.ஜி-யாக பொறுப்பேற்று இருக்கும் பொன்.மாணிக்கவேல், பிரசார ரூட் முழுக்க இன்னோவா காரில் பின்தொடர்ந்தார். ஆனால், காரை விட்டு இறங்கவில்லை. 'இதுக்கு முன்னாடி இருந்த அதிகாரிங்க எல்லாம் ஆளும் கட்சிக்காரங்​களாவே செயல்பட்டு, அம்மா பின்னாடி ஓடுவாங்க. இவர் பரவாயில்லப்பா’ என்ற கமென்ட்டை போலீஸார் மத்தி​யில் இருந்தே கேட்க முடிந்தது.
ஆரம்பத்தில் மொத்தம் நான்கு ஸ்பாட்களில் மட்டும் ஜெயலலிதா பிரசாரம் செய்​வதாகத் திட்டமிடப்பட்டு இருந்தது. 'இடைத் தேர்தலில் அமைச்சர்கள் யார் யாரெல்லாம் வேலை செய்கிறார்கள். யார் யாரெல்லாம் பாவ்லா காட்டு​கிறார்கள்’ என்று ஃபீல்டில் இருக்கும் கீழ் மட்ட போலீஸார் கொடுத்த ரிப்போர்ட்டை மறைக்காமல் ஜெய​லலிதாவிடம் தெரிவித்தாராம் பொன்.மாணிக்கவேல். அதனையடுத்து, வேலை செய்யாத அமைச்சர்களுக்கு கடுமையான டோஸ் விட்ட ஜெயலலிதா, தொகுதி முழுக்க கவர் செய்து ஏழு இடங்களில் பிரசாரம் செய்யும்படி பிரசாரத் திட்டத்தை மாற்றி அமைக்க உத்தரவிட்டாராம்.
ஜெயலலிதா ஸ்பாட்டுக்கு வரும்போது, 'தங்கத் தாரகையே வருக... இந்த மண்ணின் தேவதையே வருக’ என்று பாடல் ஒலிக்க​விடப்படுகிறது. பாடல் முடிந்த பின்னரே பேசத் துவங்குகிறார் ஜெயலலிதா. ஒவ்வொரு ஸ்பாட்டிலும் ஒரே பேச்சுதான்.
''ஐந்து மாதங்களுக்கு முன்பு சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்றபோது உங்களிடையே வாக்குகேட்க வந்தேன். என்னுடைய வேண்டுகோளை ஏற்று அ.தி.மு.க-வுக்கு அமோக வெற்றியைத் தந்தீர்கள். உங்களின் அமோக ஆதரவோடு நானும் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டேன். இந்தத் தொகுதியில் போட்டியிட்ட மரியம்பிச்சையையும் வெற்றிபெறச் செய்தீர்கள். அவர் அமைச்ச​ராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார். துரதிருஷ்டவசமாக ஒரு சாலை விபத்தில் மரியம்பிச்சை மரணம் அடைந்ததால், இப்போது இந்தத் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் கழக வேட்பாளர் மு.பரஞ்சோதிக்கு வாக்கு கேட்பதற்காக வந்திருக்கிறேன். முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் ஒட்டுமொத்தத் தமிழகமும் தி.மு.க-வினரால் சூறையாடப்பட்டது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து இருந்தது. இதனை செப்பனிட்டு நான்​கே
மாதங்களில் தமிழகத்தை அமைதிப் பூங்காவாக மாற்றி​யுள்ளேன்...'' என்று ஆரம்பிக்கும் ஜெயலலிதாவின் பேச்சு போகப்போக சூடு பிடிக்கிறது.
''இடைத் தேர்தலில் தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு போட்டியிடுகிறார். அவர் பெயர்தான் நேரு. ஆனால், அந்தப் பெயருக்கு சற்றும் பொருத்தம் இல்லாதவர். நேர்மாறான வழியில் செயல்படக் கூடியவர். அதை நான் சொல்லி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில், அவருடைய நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்கள் நீங்கள். நேருவின் நேர்மையற்ற செயல்பாடுகளை நன்கு உணர்ந்தவர்கள். முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசில் அமைச்சராக இருந்துகொண்டு எந்த நன்மையையும் செய்யவில்லை. மாறாக உங்களுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான நிலங்களை பினாமி பெயரில் வாங்கிக் குவித்தவர். தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடன், பொதுமக்கள் மட்டுமின்றி, தி.மு.க-வின் தீவிர அனுதாபிகளே இவர் மீது நில அபகரிப்பு புகார்களை அளித்துள்ளனர்...'' என்று நேருவைப் போட்டுத் தாக்குபவர், அடுத்து கருணாநிதியை ஒரு பிடிபிடிக்கிறார்.
''நேருவைச் சொல்லி எந்தப் பயனும் இல்லை. அவர் வந்த வழி அப்படி. தன் தலைவர் கருணாநிதியின் வழியைப் பின்பற்றி இருக்கிறார். இந்த தருணத்தில் தி.மு.க-வின் தலைமையிடம் அமைந்துள்ள இடத்தை கருணாநிதி எப்படி அபகரித்தார் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.  தி.மு.க. தலைமையிடம் சென்னை அண்ணா சாலையில் சுமார் நான்கரை ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இந்த இடம் பெண்ணனூர் பேட்டை ஜமீனுக்கு சொந்தமானது. 1972-ம் ஆண்டு இந்த இடத்துக்கு சொத்து வரி கட்டவேண்டும் என்றும், நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் கூடுதல் நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்றும் அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஜமீன்தாரின் இளைய மகன் சுப்புரத்தின நாயுடு சென்னைக்கு வரவழைக்கப்பட்டார். இந்த இடத்தை தி.மு.க-வுக்கு கொடுக்கும்படியும், இல்லையெனில், எந்தவித இழப்பீடும் இன்றி, நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் இடம் கையகப்படுத்தப்படும் என்றும் மிரட்டப்பட்டார். இதனால், வேறு வழியின்றி அந்த இடம், தி.மு.க. அறக்கட்டளைக்கு 1972-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. இந்த பத்திரத்தில் ஜமீன்தார் குடும்பத்தில் பலர் கையெழுத்து இடவில்லை. ஜமீன் குடும்பத்தில் இருக்கும் 10 பேருக்கு பதிலாக சுப்புரத்தினம் மட்டும் கையெழுத்து போட்டு இருக்கிறார். ஆனால், அந்த இடத்துக்கான பத்திரத்தில் சுப்புரத்தினம் பெயர் இல்லை; அதை விற்க அவருக்கு அதிகாரமும் இல்லை. இதை நான் சொல்லவில்லை. சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆக, அந்தக் காலத்திலேயே கருணாநிதி நில அபகரிப்பில் கை தேர்ந்தவர் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்!'' என்று ஜெயலலிதா குரல் உயர்த்திச் சொல்ல... கூட்டத்தினர் 'ஹோ’வென ஆர்ப்பரிக்கிறார்கள்.
'நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும். இப்படைத் தோற்கின் எப்படை வெல்லும்?’ என்ற பாடல் ஒலிக்க... அடுத்த ஸ்பாட்டை நோக்கிச் செல்கிறார் ஜெயலலிதா!
ஆர்.லோகநாதன்
படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக், என்.ஜி.மணிகண்டன்

வந்தாச்சு நேரு.... ஜெயிப்பது யாரு?

ஜாமீன்

ன்றரை மாதங்களுக்குப் பிறகு ஒருவழியாக  வெளியே வர கே.என்.நேருவுக்கு சிறை வாசல் கதவைத் திறந்து விட்டுள்ளது நீதிமன்றம். ''தேர்தல் முடியும் வரை சிறைதான்!'' என்று நினைத்தவர்களுக்கு எதிர்மறையாக நீதிமன்றத்தின் மூலமாக அவர் வெளியே வர வாய்ப்புக் கிடைத்துள்ளது. 
இடைப்பட்ட இந்தக் காலத்தில் நடந்தவற்றை நம்மிடம் கூறி,  'நீதிமன்ற விதிகளை மீறி நேருவை சேட்ட விரோதக் காவலில் அடைத்து வைத்தார்கள்’ என்று வெடிக்கிறார் நேருவின் வழக்கறிஞர் பாஸ்கரன். அவரிடம் பேசினோம்.
''திருச்சி காஞ்சனா ஹோட்டல் விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் நேரு மீது போலீஸார் கடந்த ஜூன் மாதம் இறுதியில் வழக்குப் பதிவு செய்தார்கள். அவரை ஆகஸ்ட் 25-ம் தேதி வரை கைது செய்யக்கூடாது என்று நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கினோம். ஆனால், ஆகஸ்ட் 24-ம் தேதி அன்று திருச்சி அறிவாலயம் இடம் தொடர்பாக டாக்டர் சீனிவாசனிடம் புகாரை வலுக்கட்டாயமாகப் பெற்று நேருவை போலீஸ் கைது செய்தது.
அடுத்து ஈரோடு பிரமுகர் கருணாநிதி கொடுத்த நில அபகரிப்புப் புகாரில் போலியாக நேரு மீது வழக்குப் பதிவு செய்தார்கள். இத்தனைக்கும் அது கருணாநிதி குடும்பத்தினர் சொத்து தொடர்பான சிவில் வழக்கு. அந்த வழக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாகவே நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இத்தனை நாட்கள் நடந்த நீதிமன்ற விசாரணையில் நேருவின் பெயர் எங்குமே சொல்லப்படவில்லை. திடீரென்று இப்போது 'நேரு மிரட்டினார், அடித்தார்’ என்று வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தார்கள்.
அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சேதுராமன், சண்முகம் மற்றும் அந்த வழக்கில் எட்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட லோரன் மொரைஸ் ஆகியோரும் அடுத்தடுத்து செப்டம்பர் இறுதியில் ஜாமீனில் வெளியே வந்துவிட்டனர். ஆனால், செப்டம்பர் 30-ம் தேதி நேரு, ராமஜெயம், துணை மேயர் அன்பழகன் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் மட்டும் தள்ளுபடி செய்யப்பட்டன. மீண்டும் அக்டோபர் 4-ம் தேதி அன்று அனைத்து வழக்கிலும் நேரு, ராமஜெயம், அன்பழகன், எம்.எல்.ஏ. சவுந்திரபாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. பெரியசாமி, லட்சுமி சில்க்ஸ் உரிமையாளர் சுந்தர் ராஜிலு ஆகியோருக்கு நீதிமன்றம் ஜாமீன் அளித்தது. அக்டோபர் 5, 6 பண்டிகைக்கான அரசு விடுமுறை நாட்கள் என்பதால் 7-ம் தேதி அனைவரும் விடுதலையாக வேண்டும்.
ஆனால், நேரு வெளியே வரக்கூடாது; இடைத் தேர்தலுக்கு முன்னதாக தொகுதி மக்களைச் சந்திக்கக் கூடாது என்பதில் போலீஸார் உறுதியாக இருந்தார்கள். அதனால், அக்டோபர் 3-ம் தேதி லோரன் மொரைஸிடம் கொலை மிரட்டல் புகாரை வாங்கி, மீண்டும் நேருவை கைது செய்தது போலீஸ்.  
அப்போது நாங்கள், 'கைது செய்யப்பட்டு 24 மணி நேரத்தில் ரிமாண்ட் செய்யப்பட வேண்டும். ஆனால், 4-ம் தேதி நேரு உட்பட மூவர் கைது செய்யப்பட்டு, இரண்டு நாட்கள் கழித்து 7-ம் தேதி ஆஜர்படுத்தி இருக்கிறார்கள். இது சட்ட விரோதம், மனித உரிமைகளை மீறிய செயல்’ என்று வாதிட்டோம். இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், நேரு உள்ளிட்ட மூவரையும் ரிமாண்ட் செய்ய மறுத்து, 10-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டது.
அதன்படி மூவரையும் அன்றைய தினம் வெளியே விட்டு இருக்க வேண்டும். ஆனால், நீதிமன்ற உத்தரவையும் மீறி மூவரையும் சிறையில் அடைத்தார்கள். அன்றைய தினம் இரவாகிவிட்டதால் மறுநாள் 8-ம் தேதி நாங்கள் சம்பந்தப் பட்ட சிறைகளுக்கு சென்று அதிகாரிகளை சந்தித்து நீதிமன்ற உத்தரவுப்படி அவர்​களை வெளியே விடக் கோரினோம். ஆனால், சிறைத்துறை அதிகாரிகள் மறுத்து விட்டார்கள். எவ்வித நீதிமன்ற உத்தரவும் இல்லாமல் இரண்டு நாட்களுக்கு மேலாக மூவரையும் சட்ட விரோதக் காவலில் அடைத்து வைத்து இருக்கிறது போலீஸ். இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். இதை நாங்கள் சும்மா விட மாட்டோம். அதிகாரிகள் மீது வழக்கு தொடர்வோம்!'' என்றார்.
கடலூர் சிறையின் கண்காணிப்பாளர் சண்முக சுந்தரம், ''7-ம் தேதி அன்று எங்களிடம் பெயில் பத்திரம் கொடுத்து இருந்தால் நாங்கள் மூவரையும் விடுவித்து இருப்போம். அவர்கள் கொடுக்கவில்லை. 8, 9 முறையே சனி, ஞாயிறு. 10-ம் தேதிதான் கொடுத்தார்கள்...'' என்றார்!
இதற்கிடையே கடந்த 10-ம் தேதி இரவு நேருவை ஜாமீனில் விடுவித்தது நீதிமன்றம். அங்கிருந்து கடலூர் சிறைக்கு அவரை அழைத்துச் சென்று அங்கு கையெழுத்திட்ட பிறகுதான் திருச்சி திரும்ப முடியும்.
அதோடு அவரை விட்டுவிட்டால்  திருச்சி மேற்குத் தொகுதியில் 11-ம் தேதி பிரசாரத்தில்  நேரு கலந்து கொள்ளலாம்.  ஆனால் விரைவில் வேறு என்ன வழக்கில் கைது செய்யலாம் என்று தீராத யோசனையில் போலீஸ் இறங்கினால் சிக்கல்தான்!
டி.எல்.சஞ்சீவிகுமார், க.பூபாலன்
படங்கள்: ப்ரீத்தி கார்த்திக், என்.ஜி.மணிகண்டன்

'மொழி' பிரச்னையால் வென்றாரா எஸ்.ஏ.சி.?

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் விவகாரம்

ல மாதங்களாக கோலிவுட்டில் நடந்து வந்த குஸ்திமேளாவுக்கு முடிவு கட்டும் விதமாக, கடந்த 9-ம் தேதியன்று பிலிம் சேம்பரில் தமிழ் திரைப்படத் தயாரிப் பாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக் கான தேர்தல் நடந்தது. இந்த சங்கத்தில் இருக்கும் உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையே 774 பேர். இவர்களுக்குள் நடக்கும் வெட்டுக்குத்து நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போனது. இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதாக இருந்தது இந்தத் தேர்தல்! 
'அந்த’ 25 வாக்குகள்!
கேயார் தலைமையில் ஒரு குழுவும் எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமையில் ஒரு குழுவும் மோதிய தேர்தலுக்கான வாக்குப் பதிவு காலை 9 மணிக்கே தொடங்கியது. மதியம் 12 மணி வரை 200தயாரிப்பாளர்கள் மட்டுமே ஓட்டு போட்டார்கள். அதற்குப் பிறகு என்ன நடந்ததோ, மதியத்துக்குப் பிறகு மளமளவென வாக்குப் பதிவு நடந்தது. மாலை 6-30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை முடிவடைந்தது. பதிவான மொத்த வாக்குகள் 640. கேயாரைவிட 25 ஓட்டுகள் அதிகம் பெற்று எஸ்.ஏ.சந்திரசேகரன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இரண்டு செயலாளர் பதவிகளுக்கு எஸ்.ஏ.சி. அணியில் தேனப்பனும், கேயார் சார்பில் முரளிதரனும் ஜெயித்தனர். பொருளாளராக எஸ்.ஏ.சி அணியைச் சேர்ந்த கலைப்புலி தாணு ஜெயித்தார். துணைத் தலைவர்களாக கேயார் அணியைச் சேர்ந்த 'சத்யஜோதி’ தியாகராஜன், 'அம்மா கிரியேஷன்ஸ்’ சிவா ஆகியோர் வென்றனர்.
பவர் ஸ்டாரின் பவர்!
தேர்தலுக்கு முந்தைய 10 நாட்கள் தமிழ் தயாரிப்பாளர்கள் பட்டபாட்டை சொல்லி மாளாது. ஒவ்வொரு நாளும் வெவ்வேறு நம்பரில் இருந்து குறைந்தது 20 தடவையாவது போன் வரும். எடுத்து காதில் வைத்தால், 'நான் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் 'லத்திகா’ தயாரிப்பாளர் டாக்டர் சீனிவாசன் பேசுகிறேன்’ என்று ஆரம்பித்து, நீ...ண்ட நேரம் பேசி ஓட்டு கேட்பார். தேர்தல் நாளன்றும் பவ்யமாய் நின்றபடி வாக்குகள் கேட்டார் பவர் ஸ்டார். இத்தனை கடுமையான பிரசாரத்துக்குப் பிறகும் அன்னாருக்குக் கிடைத்த வாக்குகள் 11 மட்டுமே.
வழி மறித்த குஷ்பு
ஓட்டு போடுவதற்காக வரிசையில் கூலிங் கிளாஸும் புன்னகையுமாக நின்றார் குஷ்பு. பகல் 12 மணிக்கு மேல் வாக்களிக்க வந்த பாரதிராஜா, வரிசையில் நிற்காமல் நேரடியாக வாக்குச் சாவடி உள்ளே செல்ல முயன்றார். அப்போது பாரதிராஜாவை வழிமறித்த குஷ்பு, வரிசையில் நிற்கும்படி செல்லமாகச் சண்டை போட்டார். ஆனால், 'வழியை விடும்மா...’ என்றபடி குஷ்புவின் கைகளை விலக்கிவிட்டு உள்ளே சென்றார் பாரதிராஜா.
வழக்கமாக அணியும் ஜீன்ஸைத் தவிர்த்து வெள் ளுடை வேந்தராக வந்திருந்த பாரதிராஜா, ''30 வருஷத்துக்கு முன்னாடி தயாரிப்பாளர் சங்கத்துக்கு மொத்த உறுப்பினர்களே 22 பேர்தான். உறுப்பினர் எல்லார்கிட்டேயும் பேசி, பஞ்சு.அருணாசலம் என்னைத் தலைவராக்கினார். அப்போ சேம்பரே ஆள் இல்லாம வெறிச்சோடிக்கிடக்கும். இப்போ என்ன டான்னா, அரசியல் கட்சி ரேஞ்சுக்கு கூட்டம் என்ன... கெடுபிடி என்ன... போலீஸ் பந்தோபஸ்து என்ன...'' என்று கரகர குரலில் வியந்தார்.
எங்கே போனாங்க?
மதியத்துக்கு மேல்தான் உதயநிதி ஸ்டாலின் வந்து வாக்களித்துச் சென்றார். தயாநிதி அழகிரி கடைசி வரை வரவே இல்லை. பெரும்பாலானவர்கள் வெளி நாட்டிலும் படப்பிடிப்பிலும் இருப்பதால் வாக்களிக்க வர முடியவில்லை என்று சில தயாரிப்பாளர்கள் பேசிக்கொண்டு இருந்தார்கள்.
தேர்தலுக்கு முதல் நாளன்று, தமிழ் தயாரிப் பாளர்கள் - தெலுங்கு தயாரிப்பாளர்கள் என்று ஒரு பிரித்தாளும் விவகாரம் மளமளவெனப் பரவி யது. 'தலைவர் பதவிக்கு நிற்கும் கேயார், செயலர் பொறுப்புக்குப் போட்டியிடும் ஏ.எம்.ரத்னம் இருவரும் தெலுங்கர்கள் என்பதால், தமிழர்கள் அவர்களைப் புறக்கணிக்க வேண்டும்’ என்ற அஸ்திரம் வீசப் பட்டது. அதனால்தான் தோற்றுப்போனார் என்று சொல்லப்பட்ட கேயாரிடம் பேசினோம்.
''தோல்விக்கான காரணங்கள் ஆயிரம் இருக்குது. ஆனா, அதை ஆராய விரும்பவில்லை. இப்போது எங்கள் அணியைச் சேர்ந்தவர்களும் நிறையப் பேர் ஜெயித்து இருக்கிறார்கள். அனைவரும் சேர்ந்து தயாரிப்பாளர்களின் சுயமரியாதையை மீட்டுத்தந்து, தலைநிமிரச் செய்யவேண்டும்!'' என்றார்.
'ஊழலை ஒழிப்போம்’ என்று முழங்கிப் பதவிக்கு வந்திருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர் என்ன செய்யப் போகிறார் என்பதைத் தமிழ்த் திரையுலகமே கூர்ந்து கவனிக்கிறது.
எம்.குணா படங்கள்: வி.செந்தில்குமார்

செங்கோட்டையன் பதவி விலகவேண்டும்!

வாச்சாத்தி கூட்டத்தில் சீறிய சண்முகம்...

ர்மபுரி மாவட்டம், வாச்சாத்தி  வழக்கில், கடந்த செப்டம்பர் 29-ம் தேதி தர்மபுரி அமர்வு நீதிமன்றம், குற்றம் சுமத்தப்பட்ட 215 நபர்களுக்கும் தண்டனை வழங்கி, பரபரப்பை ஏற்படுத்தியது! 
19 ஆண்டுகள் வழக்கு நீண்ட இழுபறியில் கிடந்தும், பின்வாங்காமல் வாச்சாத்தி மக்களுக்காகப் போராடியது, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கமும்தான். இந்த வழக்கில்  ஆரம்பம் முதல் தீர்ப்பு வரை பல்வேறு சட்ட உதவிகளைச் செய்த வழக்கறிஞர்கள் என்.ஜி.ஆர்.பிரசாத், வைகை, சமிக்கிராஜி, இளங்கோ உள்ளிட்டவர்களைப் பாராட்ட கடந்த 7-ம் தேதி தர்மபுரி மாவட்டம் அரூரில் சி.பி.எம். சார்பில் ஒரு கூட்டம்! இதில் அ.தி.மு.க. அரசை விளாசித் தள்ளிவிட்டார், மலைவாழ் மக்கள் சங்கத் தலைவர் சண்முகம்.
''சம்பவம் நடந்தபோது ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. அரசு, '15-க்கும் மேற்பட்ட பெண் காவலர்கள்வாச்சாத்தி ரெய்டின்போது, பணியில் இருந்தனர். அப்படி இருக்க, 18 பெண்களை வனத் துறையினர் தூக்கிச் சென்று பலாத்காரம் செய்ததாகக் கூறுவது விநோதம்!’ என்று திரும்பத் திரும்பக் கூறியது. அன்றைய வனத் துறை அமைச்சரான செங்கோட்டையனும் அதையே கூறிவந்தார். மேலும் சட்டசபையில், 'வாச்சாத்தி கிராம மக்கள் அனைவருமே மரம் திருடுபவர்கள்’ என்றெல்லாம் அவதூறு பரப்பினார். ஆனால், 'திருடர்கள் அவர்கள் அல்ல; இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட அதிகாரிகள்தான்!’ என இன்று கோர்ட் தீர்ப்பு வந்திருக்கிறது. அப்படி என்றால், அ.தி.மு.க-வும் செங்கோட்டையனும் அரசியல் லாபத்துக்காக அன்று சொன்னவை எல்லாமே பொய்தானே! அன்று சட்டமன்றத்தில் பச்சைப் பொய்யை அவிழ்த்துவிட்ட அமைச்சர் செங்கோட்டையன் மீது இன்று நடவடிக்கை எடுக்க முன்வருமா அ.தி.மு.க. அரசு? தனது தவறுக்குப் பொறுப்பேற்று இன்று பதவியைப் துறப்பாரா அவர்?'' என்று சீறித் தள்ளினார்.
சண்முகத்தின் இந்தப் பேச்சுபற்றி வேளாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் பேசியபோது, ''நான் சட்டமன்றத்தில் அது போன்று பேசவே இல்லை. தோழர்கள், சமீபத்தில் அ.தி.மு.க-வுடனான தோழமையைக் கைவிட்டதால்தான் இப்படித் தவறாகப் பேசுவதாகக் கருதுகிறேன். மற்றபடி, இந்த விவகாரத்தில் கோர்ட் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. மேலும், இதே விவகாரம் தொடர்ந்து கோர்ட் நடவடிக்கைகளில் இருப்பதாகவும் தெரிகிறது. அதனால், மேற்கொண்டு நான் எந்தக் கருத்தையும் கூற விரும்பவில்லை!'' என்றார்.
- எஸ்.ராஜாசெல்லம்
படம்: எம்.தமிழ்ச்செல்வன்

கோவை வழக்கறிஞருக்கு போலீஸ் கவனிப்பு

ஷூ காலால் மிதி... ஹாக்கி பேட்டால் அடி!
றுபடியும் ஒரு வக்கீல் - போலீஸ் மோதல் விவகாரம் தமிழகத்தை சூடாக்கி உள்ளது. கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்தீஸ்​வரன் போலீஸ் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறார். கோவை கே.ஜி. மருத்துவமனையில் சிகிச்சை​யில் இருந்தவரை சந்தித்தோம். ''சிவில் வழக்கு ஒண்ணு நடத்திட்டு இருக்கேன். அன்றைக்கு என் கட்சிக்காரர் பரமேஸ்வரன் போன் செய்து, 'சார், துடியலூர் போலீஸ்ல எதிர் பார்ட்டி மருதபிள்ளை புகார் கொடுத்து இருக்காராம். விசாரணைக்குக் கூப்பி​டறாங்க. நீங்களும் வாங்களேன்’னார். அதனால, ஸ்டேஷனுக்குப் போனேன்.

 தாக்கியதாகப் புகாருக்கு உள்ளாகி சஸ்பெண்ட் ஆன போலீஸ் டீம் சார்பாக நம்மிடம் பேசிய அதிகாரிகள், ''ஆனந்தீஸ்வரன் ஓவராப் பேசியதால், 'என்ன சார் ரொம்பக் கத்துறீங்க?’ன்னு அந்த ஹெட்கான்ஸ்டபிள் கேட்டிருக்​கார். டென்ஷாகி இவர்தான் ஹெட்க​£ன்ஸ்​டபிளை அடிச்சாராம். அதுக்குப் பிறகு​தான் இவரை அடிச்சிருக்காங்க!'' என்றனர்.லேடி எஸ்.ஐ. ரேணுகாதேவி, 'உங்க க்ளையன்டை ரிமாண்ட் பண்ணப்​போறேன்’னு சொன்னாங்க. 'மேடம், இது சிவில் கேஸ். போலீஸ் தலையிடறதே தப்பு. நீங்க அரெஸ்ட் பண்றேன்னு சொல்றது சரியில்லை’ன்னேன். அப்ப ஹெட் கான்ஸ்டபிள் கோபாலகி​ருஷ்ணன் பொளேர்னு என்னை அடிச்சு, 'என்னடா, மேடத்தை எதிர்த்​துப் பேசறே?’னு மிரட்டினார். 'இவனை வெளியில விடக் கூடாது. அந்த ஹாக்கி பேட்டைத் எடுத்து வாங்க. அடிச்சு நொறுக்குனாத்தான் சரிப்படுவான்’னு ரேணுகா​தேவியும் ஆக்ரோஷமாக் கத்தினாங்க. ஹாக்கி ஸ்டிக்கை போலீஸ்காரங்க கொண்டு வந்ததும் ரேணுகாதேவி ஷூ காலால என் முதுகுல மிதிக்க, கோபாலகிருஷ்ணன் நெஞ்சுல மிதிச்சார். ஹாக்கி பேட்டால தலையில அடிக்க வந்தப்ப தடுத்தேன். அதனால ரெண்டு கையிலேயும் ரத்தம் கட்டுற அளவுக்கு அடி. கிட்டத்தட்ட எட்டுப் பேர் அரை மணி நேரம் அடிச்சு, மிதிச்சதுல இடது கால் எலும்பு நொறுங்கிடுச்சு. விஷயம் தெரிஞ்சு, அட்வகேட் நண்பருங்க குவிஞ்சதும், அந்த போலீஸ் டீம் எஸ்கேப் ஆயிருச்சு. இப்போ அந்த போலீஸ் டீமை சஸ்பெண்ட் செய்திருக்காங்க. கூடவே கொலை முயற்சி உள்ளிட்ட சில பிரிவுகள்ல வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. என்​னைத் தாக்கிய போலீஸ் டீமைக் கைது பண்ணணும்...'' என்றார் ஆவேசமாக.
கோவை வழக்கறிஞர்கள் அடுத்த கட்டப் போராட்டம் குறித்து ஆலோசனைகளில் இறங்கியுள்ளனர். பல மாவட்ட பார் கவுன்சில்களும் ஆதரவாகக் களம் இறங்குவதால், பிரச்னை வலுக்கிறது!
எஸ்.ஷக்தி, படங்கள்: தி.விஜய்

20 ஆண்டு சிறைக்குப் பிறகு இன்னொரு தண்டனை தேவையா?

உண்ணாவிரதத்தில் ஓவியர்கள்!

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூன்று பேருக்கான தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னையில் நடந்து வரும் தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தின் 17-வது நாள், பலரது கவனத்தை ஈர்த்தது!
ஓவியர் வீரசந்தானம் தலைமையில் ஓவியர்கள் ஜே.பி.கிருஷ்ணா,  சாம்.அடைக்கலசாமி, சிகாமணி, கென்னடி, அரஸ், சிற்பி சீனிவாசன், கவிஞர் இன்குலாப், தஞ்சை கவிராயர், வைகறை வாணன், ராஜேந்திர சோழன் மற்றும் இயக்குநர்கள் மணி வண்ணன், கௌதமன், புகழேந்தி தங்கராஜ், கவிதா பாரதி எனப் படைப்பாளிகள் படை திரண்டு வந்திருந்தனர்.
பழ.நெடுமாறன்  போராட்டத்தைத் தொடங்கி வைக்க... தொடர்ந்து தேனிசை செல்லப்பாவின் உணர்ச்சிமிகு பாடல்களால் அரங்கம் அதிர்ந்தது. முதலில் பேசிய தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்கட்சியின் மணியரசன், ''மூவருக்குத் தூக்குத் தண்டனை விதித்த நீதிபதிகளில் ஒருவரான கே.டி.தாமஸ், சமீபத்தில் 'ஏசியன் ஏஜ்’ பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். 'மரண தண்டனை என்பது அரசு நடத்தும் காட்டுமிராண்டித்தனமான ஒரு கொலையே தவிர, வேறு அல்ல’ என்பதுதான் அந்தக் கட்டுரையின் தலைப்பே. 'கெடு வாய்ப்பாக நான் அந்த வழக்கு விசாரணைக்குத் தலைமை ஏற்க வேண்டி வந்தது’ என்றும் எழுதி இருக்கிறார். அவர், மனசாட்சி உறுத்தி, 'மூவருக்கும் மரண தண்டனை வேண்டாம்’ என்று இப்போது சொல்லி இருக்கிறார். வழக்கின் விசாரணை அதிகாரியான வி.ஆர்.கார்த்திகேயன், 'மூவருக்கும் மரண தண்டனை விதிக்கக் கூடாது. நான் அன்றைக்கு என் கடமையைச் செய்தேன்’ என்று ஓர் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அதில் ஆயிரம் பொருள் இருக்கிறது. அதாவது, விசாரித்த அதிகாரியும் மரண தண்டனை வேண்டாம் என்கிறார். தீர்ப்பு அளித்த நீதிபதியும் வேண்டாம் என்கிறார். இதைவிட, அவர்களை விடுவிக்க வேறு என்ன வேண்டும்?
'இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு இருக்கிறார்கள். இதைக் காங்கிரஸ்காரர்கள் சத்தியமாகச் செய்திருக்க மாட்டார்கள். சத்தியமூர்த்தி பவன் போகும் காங்கிரஸ்காரர்கள் மாற்று உடை இல்லாமல் அங்கு போவது இல்லை. அந்த நிலையில் இருப்பவர்களுக்கு இது போல வழக்குப் போடுவதற்கு ஏது நேரம்? இது உளவுத் துறையின் சதி. இதை நாம் அனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும். இப்படி மனுத் தாக்கல் செய்வதன் மூலமாக, 'தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை. தமிழர்கள் ரவுடிகள்’ என்று சித்திரிக்க நினைக்கிறார்கள். எனவே, முதல்வர் அவர்கள் இதைப் புரிந்துகொண்டு முளையிலேயே இதைக் கிள்ளி எறிய வேண்டும்!'' என்றார்.
நிறைவாகப் பேசிய ஓவியர் வீரசந்தானம், ''ஓவியர்கள் கலகக் காரர்கள். விரைவில் தமிழகம் முழுவதும் உள்ள ஓவியர்களைத் திரட்டிப் போராட்டம் நடத்த இருக் கிறோம். 'தூக்குத் தண்டனை ஒழிக்கப்பட வேண்டும்' என்று பல ஆண்டுகளுக்கு முன்பே ராஜாஜி எழுதி இருக்கிறார். ராஜாஜி போட்ட கையெழுத்தால்தான் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட சி.ஏ.பாலன் விடுதலை ஆனார். ராஜாஜி எழுதிய சிறைக் குறிப்பு புத்தகம் ஒன்றில் உள்ள வரிகளை இங்கே வாசித்துக் காட்ட விரும்புகிறேன். 'நயினாமலைக் கோனானின் கருணை மனுவை மாகாண அரசாங்கம் நிராகரித்துவிட்டது. அரசாங் கத்தில் இந்தத் துறைக்கு யார் பொறுப்பு என்று தெரியவில்லை. அவர் யாராக இருந்தாலும் சரி... பொறுப்பற்றவர் மட்டும் அல்ல... உச்சகட்ட ஈவிரக்கமற்றவர் என்று எனக்குப் படுகிறது. மனித வாழ்வு விலை மதிக்க முடியாதது. பாவம்... அந்த இளைஞன் 20 ஆண்டுகளைச் சிறையிலேயே தொலைத்துவிட்டான்’ என்று எழுதி இருக்கிறார்.
இது போலத்தான் என் தம்பிமார்களும் 20 ஆண்டுகளைத் தொலைத்துவிட்டு நிற்கிறார்கள். இதற்கு மேலும் அவர்களுக்குத் தண்டனை கொடுப்பது, எந்த வகையில் நியாயம்? தமிழக முதல்வர் அம்மா அவர்கள் உடனடியாக அமைச் சரவையைக் கூட்டி, மூவர் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய ஒரு தீர்மானம் நிறைவேற்றி, அதை ஆளுநருக்கு அனுப்ப வேண்டும். பேரறிவாளன், சாந்தன், முருகன் விடுதலை ஆகி வெளிவரும் காலம் விரைவில் வரும்!'' என்றார் நம்பிக்கை பொங்க.
தி.கோபிவிஜய்
படங்கள்: வீ.நாகமணி

கயிறே, என் கதை கேள்!

அனுதின அலறல்கள்!

கைது செய்யப்பட்டபோது என் மனைவி நளினி, 50 கிலோ எடை இருந்தார். நான் 60 கிலோ. இரண்டு மாத கர்ப்பிணியாக 'மல்லிகை’யின் குரூர அறைகளுக்குள் அடி எடுத்துவைத்த நளினி, அடுத்த இரண்டு மாதங்கள் கழித்து ஜுடிஷியல் கஸ்டடியில் சிறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். அப்போது நளினியின் எடை எவ்வளவு தெரியுமா? வெறும் 35 கிலோ. 15 கிலோ எடையைக் குறைக்கிற அளவுக்கு சித்ரவதைகள் குரூரமாகவும் கொடுமையாகவும் இருந்தன. நான் சிறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டபோது, வெறும் 30 கிலோதான் இருந்தேன். பாதியாக என்னைக் கழித்து, வெறி தீர்த்திருந்தார்கள். வெறும் வார்த்தைகளுக்காக இதை நான் சொல்லவில்லை. ராஜீவ் வழக்கில் நாங்கள் வளைக்கப்பட்டபோது எவ்வளவு எடை இருந்தோம், சிறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டபோது எந்த அளவுக்கு எடை குறைக்கப்பட்டு இருந்தோம் என்பதற்கு அரசுத் தரப்பு குறிப்புகளே ஆதாரமாக இருக்கின்றன. பிரிசன் அட்மிஷன் ரெஜிஸ்டரில் எங்களின் எடை அளவு குறிக்கப்பட்டு உள்ளது. மல்லிகை விசாரணைகளுக்குப் பிறகு சப்பி எறியப்பட்ட மாங்கொட்டையாகத்தான் நாங்கள் சிறைக்குள் தள்ளப்பட்டோம். கைதுக்கு முன் நாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படமும், போலீஸ் காவலின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே, நாங்கள் எப்படி எல்லாம் சிதைக்கப்பட்டோம் என்பது புரியும்.
ராஜீவ் கொலை வழக்கில் நான் வளைக்கப்பட்டபோது, வாழைக்குருத்து வயது. கோபம் பொறுக்காத ஆவேசம் பொங்கி எழுகிற வயது. மல்லிகை அலுவலகத்தில் நடந்த கொடூரங்கள் என் வயதுக்குரிய கோபத்தையும் ஆவேசத்தையும் பொசுக்கிப் போட்டது. என்ன செய்தாலும் தாங்கிக்கொள்ளக்கூடிய சொரணையற்ற மனப் பக்குவத்தைப் பழகவைத்தது. 'கத்திக் கதறினாலும் யாருக்குமே கேட்காது’ என்கிற கையறு நிலையை என் நாடி நரம்புகள் பழகிக்கொண்டன. மரணத்தைவிடக் கொடூரமானது மரண பயம் என்பதை நினைத்து நினைத்து என் அனுதினங்கள் அலறத் தொடங்கின.
இரவானால், தூக்கம் வராது. அதிகாரிகள் கயிறோடு துரத்துவதைப்போல் இருக்கும். எங்கேயோ தப்பி ஓடுகிற என்னை சுலபமாக அதிகாரிகள் வளைத்து விடுவது போல் கனவு வரும். தூக்குக் கயிற்றின் முன்னால் என்னை நிறுத்தி அதிகாரிகள் கைகொட்டிச் சிரிப்பது கனவாக விரியும். கனவில்கூட துயரத்தின் துரத்தல்களையே அனுப வித்த அபாக்கியவான் நான். என் வடுக்களையும் வருத்தங்களையும் இங்கே இறக்கிவைக்கிற நேரத்தில், சிறு ஆறுதலை என் சிறகுகள் சுமப்பது போன்ற நிம்மதி!
சில தினங்களுக்கு முன் வேலூர் சிறையில் என்னைப் பார்க்க ஒருவர் வந்திருந்தார். மிக இளம் வயதுக்காரர். ''ஜூ.வி-யில் உங்களைப் பத்திப் படிச்சேண்ணா... தாங்க முடியலை. இப்படி எல்லாம் குரூரமா அதி காரிகள் செயல்பட்டதை நம்பவே முடியலை. இவ்வளவு சித்ரவதைகள் கடந்து நீங்க நிக்கிறதைப் பார்க்கிறப்ப, ஏதோ மறுஜென்மம் மாதிரி இருக்கு!'' என்றார் கலங்கிய கண்களோடு. நான் இறக்கிவைப்பது வெளியே சொல்லக்கூடிய துயரங்களை மட்டுமே. சொல்ல முடியாததை, எழுத்தில் வார்த்தால் இன்றைக்கும் ஈரக்குலையைத் துடிக்கவைக்கும் கோரங்கள் எத்தனையோ இருக்கின்றன. அவற்றைப் பற்றி நினைத் தாலே, என்னுடைய சிறு நிம்மதியும் சிதைந்துபோகும். ராஜீவ் கொலை வழக்கின் புலனாய்வின்போது மொத்தமாக 35 பேர் வரை தற்கொலை செய்து கொண்டனர். அதிகாரிகளின் சித்ரவதைகளுக்கு ஆளா வதைக் காட்டிலும் இறப்பதே மேல் என எண்ணியதால்தானே இத்தனை தற்கொலைகள்?
ஒவ்வொரு நாள் உறக்கத்திலும் எம்மை வருத்துகின்ற கேள்வி ஒன்று உண்டு. குற்றச் சதிக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்பது எங்களை விசாரித்த அதிகாரிகளுக்கு நன்றாகத் தெரியும். அப்படி இருந்தும் எங்களைச் சிக்கவைக்க அவர்கள் இவ்வளவு வெறித்தனம் காட்டியது ஏன்? எங்களைப் பலிகடாவாக்க அவர்கள் இந்த அளவுக்குப் போராடியது ஏன்? ராஜீவ் என்கிற மாபெரும் தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகள் யாரையும் பிடிக்க இயலாமல் போனது அவர்களுக்குப் பெருத்த அவமானமாகிவிட்டது. அவர்களின் தேடுதலுக்கு நாங்கள் தீனியாகிப்போனோம். அவர்களுடைய வெறித்தனமான விளையாட்டுக்கு எங்களின் முதுகுகள் தோதான களமாகிவிட்டன.
இந்த விவகாரத்தில் தடா வழக்கின் கீழ் போலீஸ் அதிகாரிகளால் தயார் செய்யப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்கள் இல்லை என்றால், யாரையும் ராஜீவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டில் தண்டித்திருக்க முடியாது. ஒப்புதல் வாக்குமூலங்கள் வாங்கப்பட்டப் பின்னணியை அறிந்தவர்களாகச் சொல்லுங்கள்... இந்த விவகாரத்தில் நாங்கள் பலிகடாவாக்கப்பட்டதை உங்களால் உணர முடிகிறதா? சித்ரவதைகளும் குரூரங்களும்தான் எங்களைக் குற்றவாளிகளாக நிற்கவைத்ததே தவிர, உண்மைகள் இல்லை. சாட்சி, ஆதாரம் என எங்களுக்கு எதிராக எதையுமே சமர்ப்பிக்க முடியாதவர்கள், எங்களின் ஒப்புதல் வாக்குமூலத்தை வைத்தே மரண நிழலில் எங்களை நிறுத்தினார்கள். அது எங்களின் ஒப்புதல் வாக்குமூலம் அல்ல... ஒப்புக்காக வாங்கப்பட்ட வாக்குமூலம். அதிகாரிகளின் அளவற்ற கற்பனைக் கதைகளுக்கு எங்களின் உயிர் விற்பனைப் பொருளானது.
சாட்சியங்கள், சான்றுகள், ஆவணங்கள் ஆகியவை இந்த வழக்குக்காகவே பொய்யாக உருவாக்கப்பட்டன. உதாரணமாக, இரண்டு சான்றுக் குறிப்புகளைச் சுட்டிக் காட்டுகிறேன்...
கிளாட் பெர்னாண்டஸ் என்பவர் ஒரு மருத்துவர். இவர் என்னை ஒரு போதும் பார்த்தது கிடையாது. ஆனால், எனக்கு ஒரு செயற்கைப் பல்லைக் கட்டியதாக அவர் சாட்சியத்தில் சொல்லி இருந்தார். எனக்கு அனைத்துப் பற்களுமே நல்ல நிலையில் இருக்கின்றன. இதுவரை நான் செயற்கைப் பல் கட்டிக் கொண்டது கிடையாது. இது பற்றி மேற்படி சாட்சியிடம் எனது இயற்கைப் பல்லைக் காட்டி விவரமாகக் குறுக்கு விசாரணை செய்துள்ளேன். எம்மிடம் நீதிபதி கேள்வி கேட்டபோதும் எனக்கு அந்த மருத்துவர், பிடுங்கியதாகச் சொல்லும் இடத்தில் எனது இயற்கைப் பல் இருப்பதைச் சுட்டிக் காட்டினேன். இன்றைக்கு வேண்டுமானாலும் அதிகாரி கள் என் பல்லைப் பரிசோதனை செய்து கொள்ளட்டும்.
திருநாவுக்கரசு என்பவர் கர்நாடகத் தடயவியல் (மருத்துவப் பிரிவில்) கல்லூரியின் பேராசிரியர். இவரும் ஒரு முன்னாள் மருத்துவ இயக்குநர்தான். இவர் தனது சாட்சியத்தில் பக்கம் 41-ல் (தானாக முன்வந்து) என் மனைவி நளினியை பெங்களூரு விக்டோரியா மருத்துவமனைக்கு அதிகாரிகள் அழைத்து வந்ததாகவும், அங்கு இறந்து கிடந்த சிவராசன், சுபா ஆகியோரை நளினி அடை யாளம் காட்டினார் எனவும் சாட்சியம் சொல்லி இருந்தார். பின்பு அரசுத் தரப்பு வழக்கறிஞரின் மறுவிசாரணையில் 'இந்தப் பெண்ணைத்தான் எஸ்.ஐ.டி-யினர் விக்டோரியா மருத்துவமனைக்கு அழைத்து வந்து அடையாளம் காட்டவைத்தனர்’ என என் மனைவி நளினியைச் சுட்டிக்காட்டி நீதிமன்றத்தில் அடையாளம் காட்டினார்.
ஆனால், 9.8.91-ல் இருந்து 1992 இறுதி வரை நானும் என் மனைவியும் செங்கல்பட்டு சிறையில் இருந்தோம். என் மனைவியைக் குறிப்பிட்ட காலத்தில் மேற்படி மருத்துவமனைக்கு யாரும் அழைத்துப் போகவும் இல்லை; யாரையும் அடையாளம் காட்டவும் இல்லை. இதனை இந்த வழக்கின் தலைமைப் புலனாய்வு அதிகாரியே குறுக்கு விசாரணையில் ஏற்றுக்கொண்டு உள்ளார். சிறையைவிட்டே வெளியே வராத நளினி, சிவராசன், சுபாவை அடையாளம் காட்டினார் என்றால், அதிகாரிகளின் ஜோடிப்புக்கு ஓர் அளவு இல்லையா?
மேஜர் சபர்வால் என்ற இந்திய ராணுவ அதிகாரி சொன்ன ஜோக் என்ன தெரியுமா?
- காயங்கள் ஆறாது

0 comments:

Post a Comment

Cricket

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010