********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

சென்ற வார செய்திகள் (19 அக்டோபர் 2011)

Tuesday, October 18, 2011

அக்கா சாம்பார், பால் மறந்துடாதீங்க!

உள்ளாட்சி சிப்ஸ்!
ராகு காலத்துக்கு முன் ஓட்டு!
 ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரிக்கு காலை சசிகலா சகிதம் ஓட்டுப் போட
வந்தார் முதல்வர் ஜெயலலிதா. கார்டனைவிட்டுக் கிளம்பும் வரை முதலில் கட்சி அலுவலகமா அல்லது ஓட்டுப் போடச் செல்வதா என்பதை ஜெயலலிதா சொல்லவில்லையாம். கார் வெளியேறியவுடன்தான், 'ராகு காலம் வந்துவிடப்போகிறது... முதலில் ஓட்டுப் போட்டுவிடலாம்’ என்றாராம்.
கல்லூரி வளாகத்துக்குள் முதல்வரின் கார் நுழைந்தவுடன், கல்லூரி வாயில் கதவுகள் சாத்தப்பட்டன. ஓட்டுப் போட்டுவிட்டு வெளியே வந்த ஜெயலலிதாவை, பத்திரி​கை​யாளர்கள் சூழ்ந்துகொண்டு ஆளாளுக்கு கேள்வி கேட்க, 'ஒன்று நீங்கள் பேசுங்கள்... இல்லை என்றால் என்னைப் பேசவிடுங்கள். எவ்வளவு நேரம்தான் பொறுமையாக இருப்பது?’ என்று கடுகடுத்தபடி கட்சியின் 40 ஆண்டு விழாவைக் கொண்டாட கட்சி அலுவலகம் சென்றார்!
சிடுசிடுத்த விஜயகாந்த்!

பாய்ந்து வந்த பரிதி!
சாலிகிராமத்தில் காலை 9.30 மணிக்கு மனைவி பிரேமலதா, மகன் சகிதம் ஓட்டுப் போட்டார் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த். வெளியே வந்த அவரிடம் பத்திரிகை கேமிரா​மேன்கள், கையை உயர்த்தி வெற்றி சின்னம் காட்டும்படி கேட்டார்கள். அவரும் கையை உயர்த்திக் காட்டி போஸ் கொடுத்தார். திரும்பவும் சில கேமிராமேன்கள், ஓட்டுப் போட்டதற்கு அடையாளமாக மை வைத்த ஒற்றை விரலை காட்டச் சொன்னார்கள். கடுப்பானவர், 'யூரின் போற மாதிரி எல்லாம் விரலை காட்டிக்கிட்டு இருக்க முடியாது...’ என்று சிடுசிடுத்துவிட்டு வேகமாக கிளம்பிச் சென்றார்!
சென்னையில் கடந்த தேர்தலைப் போன்று பெரிய அளவில் வன்முறைகள் நடக்காவிட்டாலும்,  மயிலாப்பூர், வண்ணாரப்​பேட்டை, புரசைவாக்கம் உட்பட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் உருட்டுக்கட்டைகள் சகிதம் கும்பல்கள் வன்முறையில் ஈடுபட்டன. 'அமைச்சர்கள் கோகுல இந்திரா, செந்தமிழன், எம்.எல்.ஏ-க்கள் கந்தன், வெற்றிவேல் உள்ளிட்டோர் தலைமையில் அடியாட்கள் வன்முறையில் ஈடுபட்டு கள்ள ஓட்டு போட்டார்கள்...’ என்று தி.மு.க. குற்றம்சாட்டியது.
மேயர் மா.சுப்ரமணியன், 'சென்னையில் சராசரியாக 200 வார்டுகளில் முறைகேடு நடந்துள்ளன. குறிப்பாக ஒன்பது வார்டுகளில் பெரும்பாலான வாக்குச்சாவடிகளை அ.தி.மு.க-வினர் கைப்பற்றி, மக்களை வெளியேற்றிவிட்டு கள்ள ஓட்டு போட்டனர். அந்த ஒன்பது வார்டுகளில் மறு தேர்தல் நடத்த வேண்டும்’ என்று தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு கொடுத்தார். இன்னொரு பக்கம், புரசைவாக்கத்தில் ஒரு வாக்குச்சாவடியை அ.தி.மு.க-வினர் கைப்பற்றி வன்முறையில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி சாலை மறியலில் ஈடுபட்டார். 'இவரைப் போயி, கட்சியைவிட்டு ஒதுங்கிட்டார். அ.தி.மு.க.வுக்குப் போகப் போறார்னு வதந்தி கிளப்புறாங்க’ என்று வருத்தப்பட்டார் ஒரு தி.மு.க. தொண்டர்!
மதுரையில் சுருண்ட வால்!
வழக்கமாகக் களேபரங்கள் அதிகம் நடக்கும் பகுதியான தென் மாவட்டங்களில் பெரிய அளவில் வன்முறை எதுவும் இல்லை. மேலூரில் மட்டும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ-வான சாமியின் காரை கடந்த 16-ம் தேதி அதிகாலை 3 மணி அளவில் தீயிட்டுக் கொளுத்திச் சென்றது ஒரு கும்பல். சாமியுடன் அரசியல் தகராறு காரணமாக ஏற்கெனவே தி.மு.க. வேட்பாளரான ராஜபாலனைக் கைது செய்து இருந்தது போலீஸ். இதில் ஆத்திரப்பட்டவர்கள் காரை எரித்து இருக்கலாம் என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்!
'ரகளை செய்தால், குண்டர் சட்டம் பாயும்'' என்று கலெக்டர் சகாயம் எச்சரித்து இருந்ததால், ரவுடிகள் எல்லாம் மதுரையில் வாலைச் சுருட்டிக்கொண்டார்கள். காலையில் 9.15 மணிக்கு மனைவி காந்தியுடன் வந்து ஓட்டுப் போட்ட அழகிரி, ''நான் எதுவும் சொல்வதாக இல்லை. எல்லாம் 21-ம் தேதிக்குப் பிறகு தெரியும்’ என்று, நிருபர்களின் கேள்விகளுக்கு மையமாக பதில் சொல்லிவிட்டுக் கிளம்பினார்.
சாம்பார், பால்... தடை!
அருப்புக்கோட்டை நகர அ.தி.மு.க. செயலாளர் கண்ணன், அந்த நகராட்சியின் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார். இவர், வக்காளர்களுக்கு சாம்பார் போணியும் பால் குக்கரும் பட்டுவாடா செய்தார் என்றார்கள். அதை ஒட்டி, ஓட்டுப் பதிவின்போது தெருமுனையின் நின்ற அவரது ஆதரவாளர்கள், 'அக்கா சாம்பார், பால் மறந்திடாதீங்க...’ என்று கேன்வாஸ் செய்தனர். இது தகராறில் முடிந்து, அந்தப் பகுதியில், 'சாம்பார், பால்’ என்று சொல்லத் தடை விதித்தார்கள் போலீஸார்!
ஜூ.வி. டீம்,
படங்கள்: சு.குமரேசன், கே.கார்த்திகேயன்
*********************************************************************************

வலி விரட்டும் ஊசி!

வந்தாச்சு வலி நிவாரணப் பிரிவு
லி வந்தால் முதலில் பொது மருத்துவரை அணுகி மருந்து, மாத்திரைகள் வாங்குவார்கள். அதற்குப் பிறகும் வலி தொடர்ந்தால், எலும்புக்கான சிறப்பு மருத்துவர் அல்லது பிசியோதெரபிஸ்ட்டைப் பார்த்து சிகிச்சை எடுப்பார்கள். ஒரு சில சமயங்களில் வலி வரும்போது, எந்த சிறப்பு மருத்துவரைப் பார்ப்பது என்றே தெரியாமல் விழிப்பார்கள்.

''வலி நிவாரணத்துக்கான தனி மருத்துவப் பிரிவு, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் 20 வருடங்களாகவே இருக்கின்றன. நமது நாட்டில் கொல்கத்தா, மும்பையில் மட்டும் சில ஆண்டுகளாக இயங்குகின்றன. சென்னையில் இப்போதுதான் தொடங்கப்பட்டு உள்ளது.இதற்கெல்லாம் நிவாரணமாக வந்துவிட்டது, வலி நிவாரணப் பிரிவு. அனைத்து வகையான வலிகளையும் நீக்குவதற்காக பிரத்தியேகப் பிரிவு வந்துவிட்டது. சென்னை, பெருங்குடி ஃலைப்லைன் மருத்துவமனையின் அனஸ்தீஷியா மற்றும் வலி நீக்கப்பிரிவு சீஃப் கன்சல்டன்ட் டாக்டர் ஜி.சத்யகுமாரிடம் பேசினோம்.
வலி குறித்து மக்கள் மத்தியில் போதுமான விழிப்பு உணர்வு இல்லை என்பதுதான் உண்மை. எதனால் வலி ஏற்படுகிறது என்பதைக் கண்டுபிடித்து, அதற்கேற்ப சிகிச்சை எடுத்துக்கொள்வது இல்லை. உதாரணமாக, முதுகுத் தண்டுவட டிஸ்க் நகர்தல், முதுகுத் தண்டுவட இணைப்பில் வலி, இடுப்பு எலும்பு மூட்டு வலி போன்ற காரணங்களால் முதுகு வலி ஏற்படுகிறது. மூன்றும் வெவ்வேறு பிரச்னைகள் என்றாலும், வலி ஒன்றுதான். எதனால் இந்த முதுகு வலி வந்தது என்ற காரணத்தைக் கண்டுபிடித்து, அதற்குரிய சிகிச்சை அளித்தால்தான், முதுகு வலி தீரும். ஆனால், முதுகு வலி என்றதும், காரணங்களைக் கண்டுகொள்ளாமல் சிகிச்சை பெற்றுக்கொள்பவர்கள்தான் அதிகம். பெல்ட் போடுவது, மாத்திரைகள், ஆயின்மென்ட் தொடங்கி அறுவை சிகிச்சை வரை எடுத்துக்கொண்டாலும் வலியில் இருந்து நிவாரணம் கிடைப்பது உறுதி இல்லை. இதுவே வலி நிவாரணத்துக்கான பிரத்தியேக மருத்துவரை சந்திக்கும்போது, முதலில் உண்மையான காரணத்தைக் கண்டறிந்து அதன் பிறகு சிகிச்சை அளிக்கப்படுவதால், வலியில் இருந்து கண்டிப்பாக விடுதலை பெற முடியும்.
இன்றைக்குப் பெரும்பாலான ஆண்களும் பெண்களும் முதுகு வலியினால் அவஸ்தைப்படுகிறார்கள். இதனைக் குணப்படுத்த நவீன சிகிச்சை முறைகள் பல வந்துவிட்டன. முதுகுத் தண்டுவடத்தில் டிஸ்க் வெளியே நகர்வதால், அந்த வழியாகச் செல்லும் நரம்புகளை எலும்பு அழுத்தும் சூழல் காரணமாக ஏற்படும் முதுகுவலியை, நெர்வ்ஸ் ரூட் பெயின் என்று சொல்வோம். முன்பு இந்த டிஸ்க்கை ஓப்பன் சர்ஜரி மூலம் அகற்றி சிகிச்சை அளித்தனர். ஒரு டிஸ்க்கை எடுப்பதால், பிரச்னை இல்லை. இதுவே மூன்று அல்லது நான்கு இடங்களில் டிஸ்க்கை எடுக்க வேண்டியது இருந்தால், முதுகெலும்பின் தொடர் நிலைத்தன்மை பாதிக்கப்படும். அதைத் தவிர்க்க உலோக ராடு வைத்து அறுவை சிகிச்சை செய்யப்படும். இது மேஜர் சர்ஜரியாகவும், என்டோஸ்கோபி மூலமும் செய்யப்படுகிறது.
அறுவை சிகிச்சை இன்றி வலி உள்ள பகுதியில் ஓசோன் நியூக்ளியேலைசிஸ் என்ற வாயுவை செலுத்தி முதுகு வலியைக் குணப்படுத்தும் முறையும் நடைமுறையில் உள்ளது. ஓசோன் சிகிச்சை காரணமாக நரம்புகளின் மீது எலும்பின் அழுத்தம் தடுக்கப்பட்டு, வலி குறைகிறது. இத்தகைய சிகிச்சை சென்னையிலும் சில இடங்களில் வழங்கப்படுகிறது.
முதுகு வலியைப் போக்க வலி நிவாரண மருத்துவத்தின் கோல்டன் ஸ்டாண்டர்டு சிகிச்சை என்றால், அது ரேடியோ ஃப்ரீக்வன்ஸி அபலேஷன்தான். இந்த முறையின்படி, எந்த இடத்தில் பாதிப்போ... அந்த இடத்தில், எக்ஸ்ரே அல்லது அல்ட்ரா சவுண்ட் உதவியுடன் சிறிய ஊசி செலுத்தப்பட்டு, நரம்புப் பகுதியின் மீது குறைந்த அளவு மின்சாரம் செலுத்தப்படும். அந்த மின்சாரம், நரம்பு திசுக்கள் மீது வெப்பத்தை ஏற்படுத்தி... நரம்புகளின் வலி உணர்வைக் கடத்தும் தன்மையை அழித்துவிடும். இதற்குத் தேவை சில நிமிடங்களே. சிகிச்சை பெற்று அன்றே வீடு திரும்பலாம். இதே முறையில் ஸ்டீராய்ட் ஊசி போட்டும் வலியைக் குறைக்க முடியும். ஸ்டீராய்ட் ஊசி போடுவதற்கான சிகிச்சைக் கட்டணம் குறைவு என்றாலும், ஆறு மாதங்கள் வரை மட்டுமே வலி இல்லாத நிலை இருக்கும். பின்னர் மீண்டும் ஊசி போட வேண்டும். ஆனால், ரேடியோ ஃப்ரீக்வன்ஸி அபலேஷனில் அந்தப் பிரச்னை இல்லை. நீண்ட காலம் முதுகு வலி இல்லாமல் இருக்கலாம். முதுகெலும்பு டிஸ்க் அகற்றுவதற்காகச் செய்யப்படும் அறுவை சிகிச்சைக் கட்டணத்தில் 20 சதவிகிதமே, இந்தச் சிகிச்சைக்கு ஆகிறது.
அதற்காக அனைத்து வகையான வலிகளையும் குணப்படுத்த முடியும் என்று சொல்ல முடியாது. உதாரணமாக, மூட்டு தேய்ந்து வருபவர்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே சரிசெய்ய முடியும். அப்படிப்பட்டவர்களை, தகுந்த ஸ்பெஷலிஸ்ட்களிடம் அனுப்பி வழி காட்டுவோம்...'' என்றார்.
வலி இல்லாத வாழ்க்கை, எத்தனை பேரானந்தம்!
பா.பிரவீன்குமார்

மிஸ்டர் கழுகு: துண்டுச் சீட்டு... துவண்ட முதல்வர்!

ழுகார் உள்ளே நுழைந்ததும், அவரது விரலைப் பார்த்தோம்!

''காலை 7 மணிக்கு முதல் ஆளாக சென்று ஓட்டுப் போட்டுவிட்டேன்'' என்றார் பெருமிதமாக.
''ஜனநாயகக் கடமையை ஆற்றுவதில் நீர் யாருக்கும் சளைத்தவர் அல்லவே!'' என்றோம்.
''சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி வாக்குச்சாவடிக்கு காலை 9.45 மணிக்கு வந்த முதல்வரின் முகம் கொஞ்சம் சோர் வாகத்தான் இருந்தது. 'வாக்குச் சாவடிகளில் கூட்டம் குறைவாக இருப்பதால், வாக்குப்பதிவு சதவிகிதம் குறைவாகவே இருக்கும்’ என்று அதிகாரி கள் மட்டத்தில் வந்த தகவலைக் கேட்டுத்தான் இந்தச் சோர்வு என்கிறார்கள். 'அதிகப்படியான வாக்குகள் வித்தியா சத்தில் ஜெயிக் கணும்னு அம்மா நினைக்கிறாங்க. அதனால் தான் வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகமாக வேணும்னு எதிர்பார்க்கிறாங்க’ என்று அ.தி.மு.க. பிரமுகர்கள் சொல்லிக்கொண்டார்கள். தனது வாக்கைப் பதிவு செய்துவிட்டு, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்தார் ஜெ.
அக்டோபர் 17-தான் அ.தி.மு.க. என்ற கட்சியை எம்.ஜி.ஆர். தொடங்கிய நாள். கட்சி ஆரம்பித்து 40 ஆண்டுகள் ஆகின்றன. அதற் கான விழாவுக்கு எத்தனை சந்தோஷமாக அவர் வந்திருக்க வேண்டும். ஆனால், அங்கும் சோர் வாகவே தென்பட்டார்.''
''வாக்கு சதவிகிதம் மட்டும்தான்காரணமா?''
''அதேதான்! தலைமை அலுவலகத்துக்குள் அவர் உள்ளே நுழையும்போது துண்டுச் சீட்டு ஒன்று அவருக்குத் தரப்பட்டது. வாக்குச் சதவிகிதம் குறித்த சீட்டு என்றார்கள். குறைவான வாக்குப்பதிவு, அ.தி.மு.க-வின் வெற்றியில் சரிவைத் தரலாம் என்று முதல்வர் நினைக்கிறார். அதுதான் அவரது முகத்தில் பளிச்சிட்டது. இந்த மனநிலையோடு அவர் கொடி ஏற்றியதாலோ என்னவோ, கயிறு சிக்கிக்கொண்டது... உடனடியாகக் கொடியும் பறக்கவில்லை. ஃபாரின் சாக்லேட்டை இறுக்கமான முகத்துடன் கொடுத்துவிட்டு உடனடியாக வண்டி ஏறிவிட்டார்.''
''யாரெல்லாம் வாங்கிக் கட்டிக்கொண்டார் களோ?''
''அதை அப்புறமாகக் கேட்டுச் சொல்கிறேன்! கருணாநிதி வழக்கம் போலத் தனது குடும்பத்துடன் வந்து வாக்கைப் பதிவு செய்தார். இந்தக் கூட்டத்தில் அவரது அக்கா சண்முகசுந்தரத்தம்மாள் மட்டுமே வரவில்லை. வயது முதிர்வு காரணமாக அவர் வரவில்லை!'' என்ற கழுகார்... டி.வி-யைப் பார்த்து சதவிகிதக் கணக்கைக் குறித்துக்கொண்டார்!
''கேபிள் டி.வி-யில் உள்ளூர் சேனல் ஒளிபரப்பு விவகாரத்தில் ஜெயலலிதா அரசு முழு அதிகாரத்தையும் கையில் எடுத்துக் கொண்டதாகவும், அதை மத்தியத் தகவல் ஒளிபரப்புத் துறை கண்மூடி மௌனமாக வேடிக்கை பார்ப்பதாக பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தி.மு.க. தரப்பில் புகார் அளிக்கப்பட்டதாம். பிரதமர் தூக்கத்தை களைந்துவிட, டெல்லி அதிகாரிகள் குழு, சில நாட்களுக்கு முன்பு தமிழகம் முழுக்க விசிட் அடித்து, கேபிள் டி.வி. ஆபரேட்டர்களிடம் 'நடப்பது என்ன?' என்கிற விவரங்களைக் கேட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள்.''
''போய் என்ன செய்வார்கள்?''
''பொறுத்திருந்து பாரும்! ஏதாவது திடீர் உத்தரவுகள் வரலாம். தமிழகம் முழுக்க கேபிள் டி.வி-யில் சுமார் 360 உள்ளூர் சேனல்கள் இயங்கி வந்தன. இரண்டு மாதங்களுக்கு முன், அவற்றை ஆர்.டி.ஓ-க்கள் மூலமாக நிறுத்தினார்கள் அல்லவா? அதிகாரத்தோடு தொடர்புடையவர்களுக்கும் சில கேபிள் பார்டடிகளுக்கும் ரகசிய சந்திப்புகள், பரிமாற்றங்கள்... இதெல்லாம் கனகச்சிதமாய் நடந்தேற... ஆங்காங்கே இப்போது மெள்ள மெள்ள உள்ளூர் சேனல்கள் மீண்டும் ஒளிபரப்பா
கின்றன.''
''அரசு கேபிள் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குநர் ஜெயராமன் ஐ.ஏ.எஸ். திடீரென ஏன் மாற்றப் பட்டார்?''

''ம்''''கேபிள் ஆபரேட்டர்களை அழைத்து ஆலோசனை எல்லாம் நடத்தி முன்னேற்றப் பாதையில் கொண்டுபோவதில்தான் தீவிரமாக இருந்தார் ஜெயராமன். அவருக்கும் சேர்மன் ராதாகிருஷ்ணனுக்கும் கருத்துவேறுபாடுகள். உள்ளூர் சேனல்களை மாவட்ட வாரியாக டெண்டர் விடலாம் என்றாராம் ஜெயராமன். ராதாகிருஷ்ணன் அதற்கு வேறு ஐடியாக்களைச் சொல்லி இருக்கிறார். 'இவர் முக்கிய சேனலுக்கு  வேண்டப்பட்டவர்' என்று ஆட்சி மேலிடத்திடம் யாரோ வத்திவைக்க... உடனே நிர்வாக இயக்குநர் பதவியில் இருந்து தூக்கியடிக்கப்பட்டாராம். மாவட்டத்துக்கு இவ்வளவு ரேட் என்று நிர்ணயித்து, அதை டி.டி-யாக அரசு கேபிள் பெயரில் கட்டிவிட்டு, உள்ளூர் சேனல்களை மீண்டும் இயக்கிக்கொள்ளச் சொல்லிவிட்டார்களாம். இதன் பின்னணியைச் சொல்லி கேபிள் ஆபரேட்டர்களில் நேர்மையான பலரும் அந்த மத்திய அதிகாரிகளிடம் புலம்பினார்களாம்...'’
''இதில் நடமாடிய விஷயங்களை மொத்தமாக  மத்திய அதிகாரிகள் சேகரித்து விட்டார்கள். கேபிள் ஆபரேட்டர்கள் நியமனம், உள்ளூர் சேனல் நடத்த அனுமதி... இந்த இரண்டு பிரிவுகளில் சுமார் 62 ஆயிரம் பேர் முன்பணம் கட்டிவிட்டுக் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு அடுத்த கட்டமாக 'இன்டர்வியூ' நடத்த வேண்டும். அதற்கு முன்பே, இத்தனை குழப்பங்கள்!''
''பணத்தைக் கட்டியவர்கள் சும்மா இருப்பார் களா?''
''ஆங்காங்கே உள்ள ஆர்.டி.ஓ-க்களிடம் வாதாடு கிறார்கள். ஒரு சிலர் கோர்ட் படி ஏறப்போகிறார்கள். கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் ஊழியர்களிடம் கேட்டால், 'உள்ளாட்சித் தேர்தல் நடக்கிற நேரத்தில் எந்த புதிய சிஸ்டத்தையும் அமல்படுத்த முடியாது. உள்ளூர் சேனல்களுக்கு இன்னும் அதிகாரப்பூர்வமாக அனுமதி கொடுக்கவில்லை. சோதனை ஒட்டம்தான் சில இடங்களில் தெரியும். நிறைய நடைமுறைகள் இருக்கின்றன. எல்லாம் முறைப்படி நடக்கும்' என்கிறார்கள்.''
''சரிதான்...''
''கேபிள் கார்ப்பரேஷனுக்கு மேனேஜர், சூபர் வைஸர்கள், ஊழியர்கள் என்று பல பிரிவுகளுக்கு ஆள் எடுக்க வேலைவாய்ப்புத் துறையிடம் கேட்டி ருக்கிறார்கள். அந்த நியமனங்களில் என்னென்ன நடக்கப்போகிறதோ?'' என்கிற கேள்வியைக் கேட்டுவிட்டு,
நிமிர்ந்த கழுகாருக்கு ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது. சிரித்தவர் தொடர்ந்தார்!
'' ஜெயலலிதா மேட்டரின் தொடர்ச்சிதான் இதுவும்! காவிரி நதி நீர் தொடர்பாக திடீரென்று தமிழக அரசு கூட்டிய கூட்டத்தையும் பெங்களூருவில்  ஜெயலலிதா ஆஜராக இருக்கும் சொத்துக் குவிப்பு வழக்கையும் சேர்த்து சிலர் முடிச்சுப் போட ஆரம்பித்துள்ளனர். தன்மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு கோர்ட்டில் 20ம் தேதி ஜெயலலிதா ஆஜர் ஆக இருக்கிறார்.
இந்த நிலையில் திடீரென்று, 17ம் தேதி கோட்டை யில் காவிரிப் பிரச்னை தொடர்பான அவசரக் கூட்டத்தைக் கூட்டினார். சென்னை மாநகராட்சித் தேர்தலில் ஓட்டுப் போட்டுவிட்டு அ.தி.மு.க. ஆண்டு விழாவுக்காக கட்சி அலுவலகத்துக்கு வந்தார் ஜெயலலிதா. அங்கிருந்து அவர் போயஸ் கார்டனுக்குப் போய் விடுவார் என்றுதான் அதிகாரிகள் எதிர்பார்த்தார்கள். தேர்தல் தினம் என்பதால் அரசு விடுமுறை. ஆனாலும், நேராக கோட்டைக்குச் சென்றார் முதல்வர்.
காவிரி நீர் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் என்று முக்கிய அமைச்சர்களுக்குச் செய்தி சொல்லப் பட்டது.  இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் ஒ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், தலைமைச் செயலாளர், பொதுப்பணித்துறை செயலாளர், காவிரி தொழில்நுட்ப குழுவின் தலைவர், அரசின் தலைமை வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன் உட்பட அதிகாரிகளும் வழக்கறிஞர்களும் கலந்து கொண் டார்கள். 'காவிரி நீர் தொடர்பான நடுவர் மன்றத்தின் உத்தரவு குறித்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனு 18ம் தேதி விசாரணைக்கு வருவதால்  இந்தக் கூட்டம்’ என்று சொல்லப்பட்டது.
'காவிரி நீர்ப் பிரச்னை தொடர்பாக கர்நாட காவுக்கும் தமிழகத்துக்கும் இடையே நீண்ட போராட்டம் நடந்து வரும் நிலையில், இப்போது கூட்டத்தை கூட்டியிருப்பதன் மூலம் கர்நாடகாவில் இயற்கையாக எதிர்ப்பு கிளம்பும். இந்த நிலையில் 'அங்கே எப்படி ஜெயலலிதா ஆஜர் ஆக முடியும்’ என்று கேள்வி எழுப்பி பெங்களூர் கோர்ட்டிற்கு ஜெயலலிதா போகாமல் இருக்க செய்யப்பட்ட ஏற்பாடா இது’ என்று கேள்விகள் எழுந்து நிற்கின்றன. '18ம் தேதி சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு முந்தைய தினம்தான் முடிவெடுப்பதா?’ என்றும் குற்றம் சொல்கின்றன எதிர்க்கட்சிகள். பார்ப்போம்.. க்ளைமாக்ஸ் எப்படி போகிறது என்று!''சொல்லிவிட்டுக் கிளம்பினார் கழுகார்!
படங்கள்: சு.குமரேசன்
************************************************************************

கழுகார் பதில்கள்

களியக்காவிளை எஸ்.அல் அமீன், துபாய்.
 அரசியல், பொது வாழ்க்கையில் இருந்து கருணாநிதி எப்போது ஓய்வு பெறுவார்?
ஓய்வு பெறப்போவது இல்லை என்று அவரே சொல்லிவிட்டாரே! 'என்னை முடக்கும் சக்தி இயற்கைக்கு மட்டும்தான் உண்டு’ என்று பல மாதங்களுக்கு முன்பே சொல்லிவிட்டார்... என்பதை அல் அமீனுக்கு மட்டும் அல்ல... அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் சேர்த்தே நினைவூட்டுகிறேன்!
 மு.மகேந்திரன், ஆத்தூர்.
  அ.தி.மு.க. தொடங்கி 40-வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறார்களே. அதை நினைக்கும்போது எது உங்களுக்கு ஞாபகத்துக்கு வருகிறது?

கட்சி தொடங்கிய ஆறாவது ஆண்டிலேயே ஆட்சியைப் பிடித்தார் எம்.ஜி.ஆர். ராஜாஜி மண்டபத்தில் பதவி ஏற்றுவிட்டு வெளியே வந்தவர் அண்ணா சாலை அருகில் நின்று பேசியதுதான் ஞாபகத்துக்கு வருகிறது...
''அங்கே நடந்தது அரசாங்கச் சடங்குதான். உங்கள் முன்னால் பதவி ஏற்பதைத்தான் பெருமையாக நினைக்கிறேன். உங்கள் கட்டளையை எதிர்பார்த்து நடக்கும் விழா இது. உங்களுக்கு ஒரு வாக்குறுதி தருகிறேன்.
மக்களின் எண்ணங்களை மக்களின் விருப்பங்களை சட்டமாக்கவும், மக்களின் தேவைகளை நிறைவேற்ற​வும்​தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட​மன்றம் இருக்கிறது. இதனை எங்களது உள்ளத்தில் இருத்தி, லஞ்சமற்ற, ஊழலற்ற ஆட்சியை நடத்துவோம் என்று கூறிக்கொள்கிறேன். இந்த உயர்ந்த லட்சியத்தை எங்கள் உயிரைக் கொடுத்தேனும், யார் தடுத்தாலும் அதை எதிர்த்து நிறைவேற்றுவோம் என்று அண்ணாவின் மேல் ஆணையிட்டுக் கூறுகிறேன்...'' என்றார் எம்.ஜி.ஆர்.
இன்று விழா கொண்டாடுபவர்கள் எடுக்க வேண்டிய உறுதிமொழி இதுதான்!
 எஸ்.தியாகராஜன், மதுரை-2.
தி.மு.க. கொள்கையும் மார்க்சிஸ்ட் கொள்கையும் ஒன்றே என்று கருணாநிதி கூறியது சரியா?
அடிப்படைக் கொள்கை முதல் அன்றாட நடைமுறை வரை இருவருமே வேறுபாடானவர்கள் என்பதே உண்மை.
சமூகத்தை 'வர்க்கமாக’ப் பார்ப்பவர்கள் கம்யூனிஸ்ட்கள். 'வர்ணங்களாக’ப் பிரிக்கப்பட்டு உள்ளதாகச் சொல்பவர்கள் திராவிட இயக்கத்தினர். சமூக மாற்றமா, பொருளாதார மேம்பாடா எதற்கு முதலில் முக்கியத்துவம் தர வேண்டியது என்ற விவாதங்கள் இரண்டு இயக்கங்களுக்கு மத்தியிலும் பலமாக நடந்த காலம் உண்டு. எனவே, இரண்டுக்கும் ஒரே கொள்கைதான் என்று கருணாநிதி சொல்வது, சும்மா மார்க்சிஸ்ட்களுக்கு வீசும் வலை மட்டும்தான். 'நான் பெரியாரையும் அண்ணாவையும் சந்திக்கவில்லை என்றால், கம்யூனிஸ்ட் கட்சியில்தான் சேர்ந்திருப்பேன்’ என்று கருணாநிதி அடிக்கடி சொல்வார். அதைப் போன்று இதுவும் ஒரு பம்மாத்து. அவ்வளவுதான்!
 த.சாந்தி, திருவாரூர்.
  காங்கிரஸ் ஒரு மூழ்கும் கப்பல் என்று பி.ஜே.பி. கூறியுள்ளதே?
அவர்கள் ஏற்கெனவே மூழ்கிய கப்பல்தானே!
98-ல் இருந்து 2004 வரையிலான ஆட்சியைப் பி.ஜே.பி. பறிகொடுத்ததால்தானே காங்கிரஸ் வந்தது. எனவே, காங்கிரஸைக் குறை சொல்வதைவிட... சொந்தக் கட்சியை ஸ்திரப்படுத்தும் காரியங்களைத்தான் அவர்கள் பார்க்க வேண்டும். 1990-ல் சோம்நாத்தில் இருந்து அத்வானி தொடங்கிய ரத யாத்திரைதான் அந்தக் கட்சியின் அபார வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தது. இப்போதும் அதே நம்பிக்கையில்தான் அத்வானி இருக்கிறார். ஆனால், 84 வயதில் கிளம்புவதுதான் நெருடலாக இருக்கிறது!
 சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.
அனைத்துக் கட்சிகளுக்கும் உள்ள ஒரே கொள்கை..?
உள்ளன்று வைத்துப் புறமொன்று பேசுவது!
 ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்.
'நாங்கள் காந்தியவாதிகள் அல்ல. தேவை இல்லாமல் விரோதத்தைத் தூண்டாதீர்கள்’ என்று அண்ணா ஹஜாரேவை, பால் தாக்கரே விமர்சித்துள்ளார். காந்தியவாதிகளின் பெருந்தன்மையை பால் தாக்கரே ஏற்க மறுக்கிறாரா அல்லது காந்தியவாதிகளைக் கோழைகள் என்று சொல்ல வருகிறாரா?
பொதுவாகவே பால் தாக்கரே போன்ற தீவிர இந்துத்துவா சிந்தனை கொண்டவர்களுக்கு, காந்தி என்றால் கசக்கும். பலதரப்பட்ட மதத்தவர் வாழும் இந்தியாவில் 'மத நல்லிணக்கமே சமூக குணமாக இருக்க வேண்டும்’ என்று நினைத்தவர் காந்தி. தனது வழிபாடுகளில் கீதைக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை குரானுக்கும் கொடுத்தவர் காந்தி. இதை பால் தாக்கரே ஏற்க மாட்டார்.
ஆனால் ஒன்று, காந்தி மட்டும் அல்ல... இன்னும் மிச்சம் இருக்கும் உண்மையான காந்தியவாதிகள் சிலர் உட்பட யாருமே கோழைகள் அல்ல!
 இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.
அத்வானி தொடங்கியுள்ள 38 நாள் ரதயாத்திரை அவரது பிரதமர் கனவை நனவாக்குமா?
பிரதமர் மன்மோகன் சிங், அமைச்சர்கள்  பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், கபில்சிபல், சல்மான் குர்ஷித் ஆகிய ஐவரும் சேர்ந்து அத்வானியை பிரதமர் ஆக்காமல் விட மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்!
 என்.சண்முகம், திருவண்ணாமலை.
  விஜயகாந்த், பிரேமலதா ஆகிய இருவரது பேச்சிலும் அனல் பறக்கிறதே?
ஏமாற்றப்பட்டவர்கள் பேச்சில் ஆத்திரமும் அனலும் அதிகமாகத்தான் இருக்கும். விஜயகாந்த்தைவிட பிரேமலதா இன்னும் அதிகமாக ஜெயலலிதாவை நம்பி இருப்பார் போல. அனல் கூடுதலாகவே இருக்கிறது!
மு.ரா.பாலாஜி, கோலார்தங்கவயல்.
அழகிரியின் அட்டாக் அரசியல், ஸ்டாலினின் அமைதி அரசியல்... இரண்டில் எது அரசியலுக்கு வொர்க்அவுட் ஆகும்?
அழகிரியின் அட்டாக் அரசியல், எதிர்க் கட்சியாக இருக்கும்போது  வொர்க்அவுட் ஆகாது.  ஸ்டாலினின் அமைதி அரசியல், எப்போதுமே வொர்க்அவுட் ஆகாது. ஒருவேளை இவை இரண்டும் கருணாநிதியிடம் வேண்டுமானால் வொர்க்அவுட் ஆகலாம்!

மருத்துவமனைக்குக் கட்டுப்பாடு இல்லையா?

பெரும்பாலான தனியார் மருத்துவமனை​களில் தற்போது ஒரு விநோதமான புதிய வகைக் கொள்ளை அரங்கேறி வருகிறது. அதாவது ஆஸ்பத்திரியில் அனுமதிக்​கப்பட்ட நோயாளிகளை, சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் டிஸ்சார்ஜ் செய்ய மறுக்கிறார்கள். விடுமுறை தினத்தில் டாக்டர்கள் வருவது இல்லை, வந்தாலும் அலுவலகப் பணியைப் பார்க்க மாட்டார்கள் என்று காரணம் சொல்லி, டிஸ்சார்ஜ் செய்வதை திங்கட்கிழமைக்குத் தள்ளிப் போடுகிறார்கள்.
உண்மையில் சனி, ஞாயிறு கிழமைகளில் டிஸ்சார்ஜ் செய்யப்​பட்டால்தான், நோயாளியை வீட்டுக்கு அழைத்துச் செல்வது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் எளிதாக இருக்கும் என்பதை மருத்துவமனைகள் கண்டுகொள்வதே இல்லை. நோயாளிகள் குணமான பின்னரும் டிஸ்சார்ஜுக்காக ஒரு சில நாட்கள் காத்திருக்க வேண்டியிருப்பதால், கூடுதல் பணம் செலவாவதுடன், தேவை இல்லாத அவஸ்தையும் அலைச்சலும் உண்டாகிறது.
டாக்டர்கள் ஞாயிறு வர மாட்டார்கள் என்பதை காரணமாகச் சொல்வது வெறும் ஒரு சாக்குதான், பணம் பறிக்கவே இப்படி நடந்துகொள்வது அப்பட்டமாகவே தெரிகிறது. பெரும்பாலும் மருத்துவமனைகள் 24 மணி நேரமும் இயங்குகின்றன. எந்த ஒரு நேரத்தில் நோயாளி வந்தாலும் அட்மிட் செய்துகொள்ளும் மருத்துவமனைகள், டாக்டர் இல்லை என்று வெளியே அனுப்புவது இல்லை. ஆனால், டிஸ்சார்ஜ் செய்ய மட்டும் டாக்டர்களுக்காகக் காத்திருக்கவைப்பது நியாயம்தானா?
- ராஜிராதா,  பெங்களூரு.

திகார் திகில் வாழ்க்கை!

கலில் கொடும் வெயில்... இரவில் கடும் குளிர் என மிரட்டுகிறது, திகார் கிளைமேட். இரண்டு நாட்கள் தங்கி இருந்ததிலேயே, பனியால் உதடுகள் வெடித்துவிட்டன.  வெயிலும் குளிரும் மாறி மாறி விரட்டி மிரட்டும் வித்தியாச​மான சீதோஷ்ணத்தை, தாக்குப் பிடிப்பது சிரமம்.
 அப்படி ஒரு கிளைமேட் நிலவும் திகாரில், கனிமொழி 150 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருக்கிறார். தி.மு.க-வின் சட்டப் போராட்டங்களாலும், அவரை இன்னமும் மீட்க முடியவில்லை. 'தீபாவளிக்காவது ஜாமீன் கிடைக்க வேண்டுமே?’ என்று ஏக்கத்துடன் பேசுகிறார் அவரது ஆதரவு தி.மு.க. தொண்டர்!
உயர்ந்த மதில் சுவர்கள், திரும்பிய திசை எங்கும் கண்காணிப்பு கோபுரங்கள், 'இப்படி ஒரு உலகமா?’ என்று கேட்கிற அளவுக்கு இயல்பைத் தொலைத்த சூழ்நிலைகொண்ட திகார் 6-வது எண் சிறையில் 8-வது வார்டில் இருக்கிறார் கனிமொழி.

ஆனால்... இன்று?கைது செய்யப்பட்டதும் கருணாநிதி வந்தார்; அழகிரி வந்தார்; ஸ்டாலின் வந்தார்; தி.மு.க-வின் மத்திய அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வந்தார்கள். தனக்காக இவ்வளவு பேர் இருக்கிறார்களா என்று அவரே கசிந்து உருகும் அளவுக்குத் திகாரிலும் பாட்டியாலாவிலும் தி.மு.க-வினர் கூட்டம் அலை மோதியது.
''தி.மு.க-வின் எம்.பி-க்கள்கூட அதிகமாக இங்கே எட்டிப் பார்ப்பது கிடையாது. ஹெலன் டேவிட்சன், ஜெயதுரை, வசந்தி ஸ்டான்லி, டி.கே.எஸ்.இளங்கோவன் மட்டும்தான் 10 நாட்களுக்கு ஒரு தடவை வருவாங்க. டி.ஆர். பாலு எப்போதாவது வருவார். மத்திய அமைச்சராக இருப்பதால், அழகிரியால் சிறைக்கு வர முடியாது. ஆனால், அண்ணன் என்கிற உறவு முறையைவைத்து அவர், ஆகஸ்ட் மாதம் சிறைக்கு வந்து பார்த்தார். அதன் பிறகு என்ன நடந்ததோ... அவரும் வருவதே இல்லை. குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரு சிலர் மட்டும்தான் கனிமொழியைப் பார்க்க வருகிறார்கள்'' என்கிறார்கள் சிறையில் பணிபுரியும் தமிழ் அதிகாரிகள்.
கைதிகளைப் பார்க்க வரும் பலரும் தவிப்போடு காத்திருப்பதும், சந்தித்து விட்டுத் திரும்பும்போதுதேம்பியபடிச் செல்வதும் அன்றாடக் காட்சிகள். கண்காணிப்புக் கோபுரத்தில் இருப்பவர்கள், அந்தக் கதறலையும் கண்காணிக்கிறார்கள்.
கனிமொழியே  சிறை அனுபவங்கள் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டால் எப்படி இருக்கும்? திகார் சென்றிருந்த நமக்கு அதற்கு நிகரான ஒரு வாய்ப்பு கிடைத்தது. அவரை அன்றாடம் நெருங்கிக் கவனிப்பவர்கள், நம்மிடம் விவரித்தார்கள்.
''சிறையில் கனிமொழி படித்து உறங்க, சிமென்ட் பெஞ்ச் போடப்பட்டு இருப்பதாகத் தமிழ்ப் பத்திரிகைகள் தொடர்ந்து எழுதுகின்றன. அது தவறு.  அறையில் பெஞ்ச்சே கிடையாது. வெறும் தரை மட்டும்தான். உட்காருவதற்கான திண்டுகூட கிடையாது. உறங்குவது, உட்காருவது எல்லாமே தரையில்தான். ஆரம்பத்தில் தரையில் உட்கார்ந்து பழக்கம் இல்லாத காரணத்தால், மிகவும் தடுமாறினார், சிரமப்பட்டார் கனிமொழி. தரையில் அமரத் தயங்கி, அறைக்குள் பெரும்பாலான நேரம் நடந்தபடியே இருப்பார்.
அவர் கைதாகி உள்ளே சென்ற நேரம், கடுமையான புழுக்கம் நிலவி​யது. வியர்த்துக் கொட்டிய நிலையில் கனிமொழியைப் பார்க்க பரிதாபமாக இருக்கும். தரை முழுக்கத் தண்ணீரைத் தெளித்து அறையின் புழுக்கத்தைக் குறைக்கப் போராடு வார். சில நேரங்களில் பெட்ஷீட்டை நனைத்து விரித்துக்கொள்வார். இப்போது, மழை பெய்யும்போது இன்னமும் சிரமப்படுகிறார். பூச்சிகள் நிறையவே வந்துவிடும். அதனை அத்தனை எளிதில் விரட்டிவிட முடியாது, சகித்துக்கொள்ளத்தான் வேண்டும். அவர் இப்போது எல்லாவற்றையும் சகித்துக்கொண்டார்.
சாப்பாடு விஷயத்தில் பெரிதாக அக்கறை காட்ட மாட்டார். சில நேரங்களில் வீட்டுச் சாப்பாடு, சிறை சாப்பாடு இரண்டையுமே தவிர்த்துவிடுவார். சிறையில் அவருக்கான ஒரே பொழுதுபோக்கு புத்தகங்கள்தான். எழுதுவதில் அவருக்கு ஆர்வம் இருந்தாலும், வைத்து எழுதுவதற்கான வசதி உள்ளே இல்லாததால் அவரால் எழுத முடிவது இல்லை. காலையில் 5.30 மணியில் இருந்து 6 மணிக்குள் எழுந்துவிடுவார், பகல் நேரத்தில் உறங்கவே மாட்டார்.
கொசுக்கடி, பூச்சி தொல்லையைக்கூட சமாளித்துக் கொள்ளும் கனிமொழியால் தண்ணீர்ப் பிரச்னை​யைத்தான் சகிக்க முடியவில்லை. ஏனென்றால் ஸ்கின் அலர்ஜி ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு, உள்ளே தண்ணீர் மோசமாக இருக்கிறது.
மொழிப் பிரச்னையால் பிற கைதிகளுடன் பேசுவது அவருக்குச் சாத்தியம் இல்லாமல் போய்விட்டது. உள்ளே இருக்கும் ஒரு சில தமிழ்க் கைதிகளுடன் அடிக்கடி உரையாடுவார். பெண் கைதிகளுடன் சேர்ந்து கைத்தொழில் சம்பந்தமான பயிற்சிகளை மேற்கொள்கிறார்.
சந்திக்க வருபவர்கள், பழங்கள், பலகாரங்கள் வாங்கி வந்தால், கனிவோடு தவிர்த்துவிடுவார். காரணம் பழங்களோ சாப்பாடோ வீணாகி விட்டால் அவற்றை அப்புறப்படுத்தக்கூட நாள் கணக்கில் காத்திருக்க வேண்டும். அதுவே கொசுப் பிரச்​னையைப் பெரிதாக்கி விடும் என்பதால்தான் அந்த எச்சரிக்கை!'' என்றார்கள்.
அவருக்குக்கு சிறை அதிகாரிகள் மத்தியில் மிகுந்த மரியாதை. 'சீக்கிரமே ஜாமீன் வாங்கிட்டுக் கிளம்புங்க...’ என அவ்வளவு ஆறுதலாகப் பேசுவார்களாம்.
''சரியான சட்ட நடவடிக்கைகளை முன்​னெடுத்து இருந்தால், நிச்சயம் கனிமொழியை இந்​நேரம் ஜாமீனில் எடுத்து இருக்கலாம் எனப் பிரபல வழக்கறிஞர்களே வெளிப்படையாகப் பேசுகிறார்கள்.
கலைஞர் டி.வி-க்காக வாங்கப்பட்ட  200 கோடிக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பதில் கனிமொழி உறுதியாக இருக்கிறார்.  தீவிர விசாரணை நடத்திய அதிகாரிகளுக்கும் அது நன்றாகவே தெரியும் என்று நம்புகிறார்.ஆனால், இதில் வேறு யாரையும் சுட்டிக்காட்டித் தப்பித்துக்கொள்ள கனிமொழி விரும்பவில்லை. கனிமொழியை ஒரு தோழியாகத்தான் எனக்குத் தெரியும். பாட்டியாலா கோர்ட்டில் அவரை நான் சந்தித்தபோது முதலில் கேட்டது அந்த  200 கோடி குறித்துத்தான். மெல்லிய சிரிப்போடு பேச்சைத் துவக்கிய கனி, '  200 கோடி வாங்கப்பட்டதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்னை இந்த வழக்கில் சிக்கவைத்தவர்களுக்கும் இது தெளிவாகவே தெரியும். என்னை விசாரித்தவர்களுக்கும் இது தெரியும். ஆனால், யாரை நோக்கியும் விரல் காட்டும் நிலையில் நான் இல்லை. திகார் சிறையைப்பற்றி நான் நிறைய கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனாலும் கைதாவதில் இருந்து தப்பித்துக்கொள்ள நான் விரும்பவில்லை. கட்சிக்காகவும் உறவுகளுக்காகவும் அந்த பாரத்தை நான் தாங்கிக்கொண்டேன். நான் தப்பிக்க நினைத்து இருந்தால், அந்த இடத்தில் வேறு ஒரு மனிதரை நிச்சயம் நிறுத்தி இருப்பார்கள். அதற்கெல்லாம் நான் காரணம் ஆகவில்லை என்கிற மனநிறைவே எனக்குப் போதும்’ எனச் சொன்னார். எப்போதும் இல்லாத அளவுக்கு கனியின் பேச்சில் அப்படி ஒரு நிதானமும் பக்குவமும் இருந்தது. 'உடலுக்கு ஏதும் பிரச்னை இல்லையே?’ எனக் கேட்டேன். 'உடம்புதான் கொஞ்சம் டல்லா இருக்கு. ஆனா, எதையும் தாங்குற அளவுக்கு மனசு தில்லா இருக்கு. யார் நல்லவங்கன்னு இந்த வயசுலேயே அடையாளம் கண்டுக்கிட்டேன். இந்த நிமிஷம் வரை கட்சிக்கும் தலைவருக்கும் உண்மையான விசுவாசத்தோடு இருக்கேன். எதையும் பேசாமல் நான் அமைதியாக இருப்பதற்கும் என்கிட்டே இருக்கிற உண்மைதான் காரணம்’ என்று சொன்னார். எந்த நேரத்திலும் வெடித்து வெளியே வரக்கூடிய அளவுக்கு கனியிடம் நியாயமான மனக் குமுறல் இருக்கிறது. ஆனால், அதை வெளிக்காட்டாத அளவுக்குப் பக்குவமான அரசியல்வாதியாக திகார் வாழ்க்கை அவரை மாற்றிவிட்டது!'' என்கிறார் அவரை சமீபத்தில் சந்தித்த பெண் பிரமுகர் ஒருவர்.
சரி, மொத்தத்தில் கனிமொழியின் தற்போதைய மனநிலை எப்படி இருக்கிறது? 24-ம் தேதி நிச்சயம் அவருக்கு ஜாமீன் கிடைத்துவிடுமா? வெளியே வரும் வாய்ப்பு உறுதியானால், கனிமொழியின் அடுத்த கட்ட நகர்வு எப்படி இருக்கும்?
அடுத்த இதழில்
_ டெல்லியில் இருந்து இரா.சரவணன்

இடம் மாறும் கோர்ட்!

பெங்களூரு வழக்கின் க்ளைமாக்ஸ்!

ப்ப்ப்பாடா.... பெங்களூரூ தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு ஒரு வழியாக அதன் உச்சகட்டத்தை எட்டிவிட்டது. இனி இந்த வழக்கில் அரங்கேறும் அதிரடி மாற்றங்கள்தான், 'ஜெயலலிதா, முதல்வராகத் தொடர்வாரா? மாட்டாரா?’ என்பதைத் தீர்மானிக்க இருக்கிறது! 
அனுமார் வாலைப்போல் கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாக நீண்ட இந்த வழக்கில், பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக அக்டோபர் 20-ம் தேதி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வருகிறார்.
1991-95-ம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதா, வருமானத்துக்கு அதிகமாக  66 கோடி சொத்து சேர்த்ததாக அவர் மீது  வழக்கு தொடரப்பட்டது. பிறகு அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டனர். பின்னர், உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.  
சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சசிகலா, இளவரசி இருவரும் கடந்த ஜூலை 20-ம் தேதி, பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். உடல் நலத்தைக் காரணம் காட்டி சுதாகரன் வரவில்லை.  பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி ஜெயலலிதாவும் ஆஜராகவில்லை.  கடைசியில், அரசுத் தரப்பு அட்வகேட் ஜெனரல் ஆச்சார்யாவின் அதிரடி வாதங்களால் வேறு வழி இல்லாமல், ஜெயலலிதாவின் பெங்களூரு நீதிமன்ற விஜயம் சாத்தியமாகப் போகிறது.
'எழுத்து மூலமாக விசாரிக்க வேண்டும். இல்லை என்றால், வீடியோ கான்ஃபெரன்சிங் மூலமாவது விசாரிக்க வேண்டும்’ என ஜெ. தரப்பு வழக்கறிஞர் எவ்வளவோ நீண்ட வாதங்களைப் புரிந்தும்... ''அக்டோபர் 20-ம் தேதி ஜெயலலிதா பெங்களூரு தனி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்!'' என உச்ச நீதிமன்றம் கறார் உத்தரவைப் பிறப்பித்துவிட்டது.
இதைத் தொடர்ந்து தனி நீதிமன்ற நீதிபதி மல்லிகார்ஜுனையா, 'இங்கு வரும் ஜெயலலிதாவுக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என கர்நாடக அரசைக் கேட்டுக்கொண்டார். எனவே, ஜெ-வின் பாதுகாப்புக்காக கர்நாடக அரசு, பெங்களூரு இணை கமிஷனர் மொகன் ஜி-யை நியமித்தது. தற்போது நீதிமன்றம் இயங்கும் சிட்டி சிவில் நீதிமன்றப் பகுதியில் ஏற்கெனவே போக்குவரத்துப் பிரச்னைகள் உண்டு. கூடவே மெட்ரோ ரயில் வேலைகளும் முழு வீச்சில் நடந்து வருகின்றன. அதோடு, இதே நீதிமன்றத்தில் கர்நாடக முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, குமாரசாமி ஆகியோரின் வழக்குகளும் நடைபெற்று வருகின்றன. எனவே, பாதுகாப்புப் பிரச்னைகள் ஏற்படலாம் என, தனி நீதிமன்றத்தைத் தற்காலிகமாக இடம் மாற்ற முடிவு செய்தனர்.
கடந்த 17-ம் தேதி, பாதுகாப்புப் பிரச்னைகளை விவாதிக்க, நீதிபதி மல்லிகார்ஜுனையா முன்னி​லையில் நீதிமன்றத்தில் ஆலோசனை நடந்தது. இதில், போலீஸ் தரப்பில் இணை கமிஷனர் மொகன் ஜி, அரசுத் தரப்பு வழக்கறிஞர் அட்வகேட் ஜெனரல் ஆச்சார்யா கலந்துகொண்டனர். அவர், ''ஜெயலலிதா ஆஜராவதற்கு இன்னும் இரண்டு நாட்கள்தான் இருக்கின்றன. அதற்குள்ளாக ஒரு முழு நீதிமன்ற செட்டப்பையே உருவாக்க வேண்டும். இது மிகப் பெரிய ஒரு சவால். எனவே, வழக்கு நடைபெறும் இடமாக பெங்களூரு மத்திய சிறை வளாகத்தையோ (இந்த இடம் விமான நிலையத்தில் இருந்து 70 கி.மீ தொலைவில் இருக்கிறது) அல்லது பெங்களூருவில் இருந்து 14 கி.மீ தொலைவில் இருக்கும் ஹெப்பாலில் (விமான நிலையத்தில் இருந்து 30 கி.மீ தொலைவில் இருக்கிறது.) உள்ள உயர் நீதிமன்றக் குடியிருப்பு வளாகத்துக்கோ மாற்றலாம். ஆனால், இதுவும் சிரமம். அதைவிட, சில ஆண்டுகளுக்கு முன்பாக முத்திரைத்தாள் மோசடி மன்னன் தெஹல்காவை பெங்களூரு மத்திய சிறை வளாகத்தில்தான் விசாரித்தோம். ஏற்கெனவே, அங்கே ஒரு நீதிமன்ற செட்டப் இருக்கிறது. எனவே, தமிழக முதல்வரை மத்திய சிறைச்சாலைக்கு வரவழைப்பது நல்லது!'' என ஆலோசனை தெரிவித்தார்.
போலீஸ் தரப்போ, அன்றைய தினம் மெட்ரோ ரயில் திட்டம் துவங்க இருப்பதால், முழுப் பாதுகாப்பையும் போக்குவரத்தையும் கட்டுக்குள் கொண்டுவரத் தேவையான பல கமாண்டோ காவலர்களையும் பணியில் அமர்த்த முடிவு செய்திருப்பதாக விளக்கம் அளித்தது.
எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்ட நீதிபதி மல்லிகார்ஜுனையா, ''பெங்களூரு மத்திய சிறைச்சாலை வளாகத்தில் இருக்கும் நீதிமன்றத்தில் காலை 11 மணிக்கு ஜெயலலிதா ஆஜராக வேண்டும்!'' என்று உத்தரவு போட்டிருக்கிறார்.
ஜெ. வருகைக்கான பாதை தயார். கோர்ட் கேட்கப் போகும் கேள்விக்கான அவரது விடை என்ன என்பதுதான் அடுத்து எழப் போகும் திருப்பம்!
இரா.வினோத்
படம்: சு.குமரேசன்
 வாட்டாள் கிளப்பும் பதற்றம்!
'சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராகும் ஜெயலலிதாவுக்கு எதிராக கண்டனப் பேரணி நடத்துவோம்’ என்று அறிவித்து மீண்டும் பரபரப்பு வட்டத்துக்குள் வந்திருக்கிறார், 'வாட்டாள்’ நாகராஜ். ''ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை வேகமாக நிறைவேற்றி, கர்நாடக மக்களுக்கு குடிநீர் பஞ்சத்தை ஏற்படுத்தப் பார்க்கிறார் ஜெயலலிதா. எனவே அவர் வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன். கண்டன பேரணி ஏர்போர்ட் வரைக்கும் நடத்தப் போகிறோம்'' என்கிறார் நாகராஜ்!
இதைத் தொடர்ந்து, கடந்த ஞாயிறன்று கர்நாடக அ.தி.மு.க. மாநிலக் குழு கூட்டத்தை பெங்களூரூவில் நடத்தினார்கள். அப்போது பேசிய கர்நாடக மாநில அ.தி.மு.க. செயலாளர் வா.புகழேந்தி, ''தன்னுடைய சொந்தத் தொகுதியான சாம்ராஜ் நகரில் டெபாஸிட் கூட வாங்க முடியாமல் தோத்துப் போனவர், வாட்டாள் நாகராஜ். அவரை கன்னட சகோதரர்களே நம்புவது இல்லை. எங்கள் அம்மாவுக்கு எதிராகப் பேசி ஆதாயம் தேடப் பார்க்கிறார். ஆயிரம் வாட்டாள் நாகராஜ் வந்தாலும் அம்மாவை அசைக்க முடியாது'' என்று பேசி இருக்கிறார்.  ஆக, பரபரப்பு காத்திருக்கிறது!

''கார்ப்பரேட் உலகுக்கு சங்கு ஊதுவோம்!''

வேர்ல்டு ஸ்ட்ரீட் முழுக்க வால் ஸ்ட்ரீட்!

ல்லரசு என்று தன்னைத்தானே மார் தட்டிக்​கொள்ளும் அமெரிக்கா, இத்தனை கால​மாகத் தனது நாட்டுக்குள் இருந்த 'இன்னொரு அமெரிக்கா’வை வெளிக்காட்டாமல் மறைத்தே வைத்தது. அந்த அமெரிக்கா நமக்கு அறிமுகம் இல்லாதது. வேலை அற்றவர்களும் ஏழை​களும் சூழ்ந்தது. வாஷிங்டன், சியாட்டில், சாக்ரோமண்டோ போன்ற நகரங்களின் ஒதுக்குப்புறங்களில், தேவாலயங்களின் பின்பகுதியில் கூடாரங்கள் அமைத்து வாழும் ஏழைகள் நிறைந்த அமெரிக்கா அது! 
அமெரிக்காவின் குடிமக்களில் கிட்டத்தட்ட 28 சதவிகிதம் பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழேதான் வாழ்கிறார்கள். வேலை இல்லாத் துயரம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் வேலையற்ற அமெரிக்கர்களின் எண்ணிக்கை ஐந்தில் இருந்து எட்டு சதவிகிதமாக உயர்ந்துள்ளது. வேலை இல்லாததால் வீட்டை இழந்து, காரையே வீடாக மாற்றிக்கொள்ளும் கலாசாரம் அங்கு உருவெடுத்துவருகிறது.
கடந்த 2007-08-ல் அங்கு பொருளாதார மந்த நிலை ஏற்பட்டது. அப்போது 1.5 லட்சம் பேருக்கு வேலை பறிபோனது. பண நெருக்கடியில் சிக்கி, கடன்களை அடைக்க முடியாமல் திணறிய 50 லட்சம் பேரின் வீடுகள் ஜப்தி செய்யப்பட்டன. அமெரிக்க அரசு மிகப் பெரிய பொருளாதார மீட்சி நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று அன்றைய அதிபர் புஷ் அறிவித்தார். அது தங்களை முழுமை​யாகக் காப்பாற்றும் என்று அவர்கள் நம்பிக்கையோடு எதிர்பார்த்தனர். ஆனால், தவறு இழைத்த நிதி நிறுவனங்களுக்கு 35 லட்சம் கோடி அரசுப் பணத்தை வாரி இறைத்ததே, அந்தப் 'பொருளாதார மீட்சி நடவடிக்கை’யாக அமைந்தது. இதனால் ஏழை, மத்தியதர மக்களுக்கு எந்த வித நன்மையும் கிடைக்கவில்லை.
அப்போதுதான், 'நம்மால் முடியும்... மாற்றம் நிச்சயம்’ என்று அறைகூவல் விடுத்த ஒபாமாவை நம்பினார்கள். அதுவும் ஏமாற்றத்திலேயே முடிந்தது. அமெரிக்கப் பாணியைப் பின்பற்றும் ஏனைய நாடுகளிலும் இதுதான் நிலை. மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்காத அரசாங்கங்கள், ஏற்கெனவே அவர்களுக்கு அளித்து வந்த கல்வி, சுகாதார மானியங்களையும் நிறுத்தத் தொடங்கின. ஒபாமா காலத்திலும் எந்த மாற்றங்களும் இல்லாமல் ஓடியது. இதுதான் கார்ப்பரேட் உலக தர்மமாக மாறியது!
பொறுத்துப் பொறுத்து ஏமாந்த மக்கள் கொந்தளித்து எழுந்தால் என்னவாகும்? அக்டோபர் 15-ம் தேதி, இந்தக் கேள்விக்கு பதில் கிடைத்தது. உலகப் பங்கு வர்த்தகத்தின் கோயிலாகக் கொண்டாடப்படும் 'வால் ஸ்ட்ரீட்’டை எதிர்த்து இந்த மக்கள் தங்களது போராட்டத்தைத் தொடங்கினார்கள். 'வால் ஸ்ட்ரீட்டை முடக்குவோம்’ என்ற இயக்கத்தை முதலில் சிறிய அளவில் தொடங்கினர். அது கடந்த சனிக்கிழமை அன்று உலகம் தழுவிய அளவுக்கு மாறியதுதான் அதிரடியான மாற்றம். அமெரிக்கா தொடங்கி ஆப்பிரிக்கா வரையிலான அனைத்துக் கண்டங்களிலும் 82 நாடுகளில், 951 நகரங்களில் நடந்தது போராட்டம். நியூயார்க்கின் டைம் சதுக்கம், லண்டனின் மன்ஹாட்டன் வீதி, இத்தாலியின் ரோம் சதுக்கம், ஸ்பெயினின் மாட்ரீட் வீதிகள், தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் பங்குச் சந்தை வீதி என்று எங்கெங்கும் போராட்டங்கள் நடக்கின்றன. அவர்கள் அனைவருக்கும் ஒரே இலக்கு... கார்ப்பரேட் உலகின் பேராசைக்கு முடிவு கட்டுவது!
'முதலாளித்துவத்தின் மரணமே, மக்களின் விடுதலை!’, 'பங்குச்சந்தைகளை முடமாக்குவோம்’, 'சர்வதேசச் செலாவணி நிதியத்தை இழுத்து மூடுவோம்’, 'கார்ப்பரேட் உலகுக்கு சங்கு ஊதுவோம்’, 'ஏழை - பணக்காரர் பிரிவினைக்கு முடிவுகட்டுவோம்’ என்று கோஷங்கள் விண்ணைப் பிளக்கின்றன. தன்னெழுச்சியுடனும் சமூக வலைத்தளங்கள் உதவியுடனும் ஒன்றுகூடும் மக்களை எந்த நாட்டு அரசாங்கத்தாலும் எதுவும் செய்ய முடியவில்லை.
உலகம் முழுக்கப் பரவும் இந்தப் போராட்டங்​களுக்கான காரணங்கள் நாட்டுக்கு நாடு மாறு​படுகின்றன. இந்தப் போராட்டக்காரர்கள் ஒரே இயக்கத்தின் கீழ் திரளவில்லை. ஆனால், இன்றைய முதலாளித்துவ உலகை மாற்ற 'புரட்சி மட்டுமே தீர்வு’ என்று அவர்கள் அத்தனை பேரும் ஒன்றிணைந்து, விண் அதிர முழங்குகிறார்கள்.
முதலாளித்துவம் எங்கு செழித்து உலகம் முழுமைக்கும் பரவியதோ, அங்கிருந்தே அதன் அழிவும் தொடங்குகிறது. மார்க்ஸ் சொன்னது போல, முதலாளித்துவம் தன் சவப்பெட்டிக்கான ஆணியைத் தானே தேர்ந்தெடுத்துக்கொண்டதுபோல் தோன்றுகிறது. இந்தப் போராட்டத்தின் தன்மையைப் பார்த்து அனைத்து நாட்டு அரசாங்கங்களும் பயம்கொள்ளத் தொடங்கி உள்ளன!
சமஸ்
 வீங்கினால் வெடிக்கும்!
சென்னையின் பிரபல ஆடிட்டர் எம்.ஆர். வெங்கடேஷிடம் இதுபற்றி கேட்டபோது, ''சின்ன தத்துவம்தான்... எது வீங்கினாலும் வெடிக்கும். பொருளாதாரத்துக்கும் இது பொருந்தும். துனிஷியாவில் தொடங்கிய மல்லிகைப் புரட்சியின் நீட்சியாகவே நான் இதைப் பார்க்கிறேன். உலகமயமாக்கலின் கொடூரத் தாக்குதலுக்கு மக்கள் பதில் அளிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்!'' என்றார்.

செய்தியும் சிந்தனையும் - டயல் செய்தால் ஆர்.நடராஜ் டி.ஜி.பி. (ஓய்வு) பேசுவார்!

அனல் பறக்கும் அணு மின் நிலையம் போராட்டம்

கூடங்குளம் வராதே!

கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூடக் கோரி மக்கள் நடத்தி வரும் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.   கன்னி யாகுமரி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை உட்பட கூடங்குளம் கிராமத்துக்குள் செல்லும் அனைத்துச் சாலைகளிலும் கற்களையும் மரங்களையும் போட்டுத் தடை செய்யப்பட்டது.  அணு உலைக்கு அருகிலேயே சாலையின் இருபுறமும் பந்தல் அமைத்து ஆயிரக்கணக்கான மக்கள் முற்றுகைப் போராட் டத்தில் குதித்தனர். இந்திய மற்றும் ரஷ்ய அணு சக்தி விஞ்ஞானிகள் வேலைக்குச் செல்லவும் இவர்கள் அனுமதிக்கவில்லை. 
நிலைமையை ஆய்வு செய்ய  தென் மண்டல ஐ.ஜி-யான ராஜேஸ்தாஸ்  வந்தபோது, முன்னே சென்ற போலீஸார் சாலையில் கிடந்த தடைகளை அகற்றி, வாகனம் செல்வதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தனர். மாவட்ட கலெக்டர் செல்வ ராஜ், வருவாய்த் துறையினர், காவல் துறை அதிகாரிகள் ஆகியோர் அணு மின் நிலைய அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினர். ஆனால், போராட்டக்காரர்களைச் சந்திக்க வரவில்லை.
போராட்டம் காரணமாக கூடங்குளம் மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால், அணு மின் நிலையத்தின் உள்ளே கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பணிகளைச் செய்து வரும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனால், நூற்றுக்கணக்கான இளை ஞர்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பினர்.
இந்த நிலையில்,  அணு உலையின் முன்பாக உண்ணாவிரதம் இருக்க முயன்ற மாற்றுத் திறனாளிகள் சிலரை மாவட்ட எஸ்.பி-யான விஜயேந்திர பிதரி அடித்துக் காயப்படுத்தியதாக செய்தி பரவவே, ஏரியா முழுக்க பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி நம்மிடம் பேசிய போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளரான சுப.உதயகுமாரன், ''எங்களின் போராட்டத்துக்கு ஆதரவாக 25 மாற்றுத் திறனாளிகள் உண்ணாவிரதம் இருந்தனர். நள்ளிரவில் அங்கு சென்ற காவல் துறை கண்காணிப்பாளர், அவர்களை லத்தியால் அடித்து ரத்தக் காயங்களை ஏற்படுத்தினார். அதோடு, உண்ணாவிரதப் பந்தலைப் பிரித்து எறிந்துவிட்டு,  அவமானமாகப் பேசி இருக்கிறார். கூடங்குளம் அணு மின் நிலையத்தில்  ஊழல் நடந்து இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. அதுபற்றியும் முழுமையாக விசாரிக்க வேண்டும். இங்கு பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் சொத்துக் கணக்கை ஆய்வு செய்தால், பல உண்மைகள் தெரியவரும். ஒரு பக்கம் உண்ணாவிரதம், இன்னொரு பக்கம் முற்றுகைப் போராட்டம் என ஒரு வாரத்துக்கும் மேலாக நாங்கள் போராடினாலும் இதுவரை அதிகாரிகள் யாரும் எங்களை வந்து சந்திக்கவில்லை. அணு உலையை அகற்றும் வரை எங்களது போராட்டம் ஓயாது!'' என்றார் தீர்க்கமாக.
இதனிடையே, போராட்டத்தை ஒடுக்க அணு மின் நிலையத்தினரும் மத்திய உளவுப் படையினரும் தீவிரம் காட்டுவதாக புகார் எழுந்திருக்கிறது. போராட்டக் குழுவைச் சேர்ந்த புஷ்பராயன், ''போராட்டக் குழுவைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு தொலைபேசி மிரட்டல்கள் வருகின்றன. உறவினர்கள் யாராவது அரசு வேலையில் இருந்தால், 'உன்னோட சொந்தக்காரன் போராட்டத்தில் இருந்து ஒதுங்கலேன்னா, உன்னோட வேலை காலியாயிரும்’ என மிரட்டுகிறார்கள்!'' என்றார் காட்டமாக.
கூடங்குளம் அணு மின் நிலைய இயக்குநர் காசிநாத் பாலாஜியிடம் பேசினோம். ''மக்களிடம் பல முறை நாங்கள் பாதுகாப்பு அம்சங்கள்பற்றி விளக்கி விட்டோம். ஆனால், திடீரென இப்போது அவர்களிடம் அச்சம் ஏற்பட என்ன காரணம் என்பது புரியவில்லை. இருந்தாலும், அவர்களின் அச்சத்தைப் போக்க வேண்டியது எங்களின் கடமை. இந்த அணு உலை உலகிலேயே வேறு எங்கும் இல்லாத அளவுக்கு பாதுகாப்பு அம்சங்களைக்கொண்டது என்பதைப் புரிய வைப்போம். மக்களின் முற்றுகைப் போராட்டம் காரணமாக எங்களை வேலைக்குச் செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டது. அதனால் கடந்த சில நாட்களாக எங்களுடைய பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. நமது அணு உலையில் செய்யப்பட்டு இருக்கும் அதிநவீனப் பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக, ஜப்பானின் அபுகுஷிமாவில் ஏற்பட்டது போன்ற ஆபத்து நிகழும் வாய்ப்பு கொஞ்சமும் இல்லை!'' என்றார் திட்டவட்டமாக.
என்னதான் சமாதானங்கள் சொல்லப்பட்டு வந்தாலும், போராட்டத்தின் வீரியம் குறைவதற்கான வாய்ப்பு தெரியவில்லை.  உள்ளாட்சித் தேர்தலுக்காக ஒரு நாள் இடைவெளிவிட்டுத் தொடரும் போராட்டம், மாநில அளவில் எடுத்துச் செல்லப்பட இருக்கிறதாம்!
ஆண்டனிராஜ்
படங்கள்: எல்.ராஜேந்திரன்

ஆக்கிரமிப்பு செய்தாரா அழகிரி?

சர்ச்சையில் தயா சைபர் பார்க்

யா இன்ஜினீயரிங் கல்லூரிக்காகக் கண்மாய் மடையை ஆக்கிரமித்த பிரச்னையில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி மு.க.அழகிரிக்கு, மகாத்மாவின் சிந்தனைகளைச் சொல்லி நோட்டீஸ் அனுப்பினார் மதுரை கலெக்டர் சகாயம். அதற்கே இன்னும் முடிவு தெரியவில்லை. அதற்குள் அழகிரியை மையப்படுத்தி அடுத்த சர்ச்சை! 
கடந்த ஆட்சியில் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே 'தயா சைபர் பார்க்’ என்ற பிரமாண்டமான ஐ.டி. கட்டடத்தைக் கட்டினார் அழகிரி. அது முழுமையான செயல்பாட்டுக்கு வருவதற்குள் ஆட்சி மாறிவிட்டதால், காட்சிகளும் மாறிவிட்டன. அந்தக் கட்டடத்தின் அருகில் உள்ள தனியார் மற்றும் மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களைச் சேர்த்து காம்பவுண்ட் சுவர் எழுப்பப்பட்டு உள்ளதாக இப்போது புகார்!
சமீபத்தில் மதுரை கலெக்டர் சகாயம், மாநகராட்சி ஆணையருக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், 'தயா சைபர் பார்க் கட்டடம் கட்டப்பட்டுள்ள 1.20 ஏக்கர் நன்செய் நிலம் அழகிரி பெயரில் இருக்கிறது. இது தவிர, பட்டா மாறுதல் செய்யப்படாத மேலும் 14 சென்ட் தனியார் நன்செய் நிலமும், மாநகராட்சிக்கு சொந்தமான வண்டிப் பாதைப் புறம்போக்கு நிலம் 8 சென்ட்டும் வளைக்கப்பட்டு சுற்றுச் சுவர் கட்டப்பட்டு உள்ளது. வண்டிப் பாதைப் புறம்போக்கு நிலத்தை மாநகராட்சியில் இருந்து தனியாருக்குக் குத்தகை எதுவும் விடப்பட்டுள்ளதா என்பதைத் தெரிவிக்கவும். அப்படி இல்லாத பட்சத்தில் அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெளிவாகக் குறிப்பிட்டு இருக்கிறார் கலெக்டர்.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய மதுரை மாநகராட்சி ஆணையர் நடராஜன், ''நீங்கள் கேள்விப்பட்டது போன்று, 'தயா சைபர் பார்க்’ நிர்வாகத்தின் மேனேஜரிடம் இருந்து காசோலைகள் வந்தது உண்மை. அத்துடன் கட்டட வரைபடம் எதுவும் இணைக்கப்படாததால், திருப்பி அனுப்பிவிட்டோம். வண்டிப் பாதைப் புறம்போக்கு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு, அந்தக் கட்டடத்துக்கான டிரான்ஸ்ஃபார்மர் உள்ளிட்டவற்றை அங்கே நிறுவி இருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கிறது. அது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் எங்களுக்குப் பரிந்துரை செய்திருக்கிறார். முதலில், சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, கள ஆய்வு செய்வோம். அதற்கு முன்னதாக, கட்டடத்தின் சுற்றுச் சுவருக்குள் வரும் வண்டிப் பாதையை தயா நிறுவனத்துக்கு மாநகராட்சியில் இருந்து லீஸுக்கு ஒதுக்கிக் கொடுத்ததற்கானஒப்புதல் எதுவும் உள்ளதா என்பதையும் பார்க்க வேண்டும். அப்படி எதுவும் இல்லாதபட்சத்தில் ஆக்கிரமிப்பை அகற்றச் சொல்லி நோட்டீஸ் அனுப்புவோம். அவர்களே அகற்றிவிட்டால் நல்லது. இல்லாவிட்டால், நாங்கள் இடித்து அப்புறப்படுத்துவோம்!'' என்றார்.
'தயா சைபர் பார்க்’ தொடர்பான வழக்குகளில் ஆஜராகும் அழகிரியின் வழக்கறிஞரான வீர.கதிரவனிடம் விளக்கம் கேட்டோம். ''அந்தக் கட்டடத்தின் முகப்பில் ஒரு சிறிய பூங்கா இருக்கிறது. சுமார் இரண்டு சென்ட் அளவுள்ள அந்த இடத்தில், 'நிரந்தரக் கட்டுமானம் எதுவும் எழுப்பக் கூடாது’ என்ற நிபந்தனையுடன் பூங்கா அமைத்துக்கொள்ள, (முன்பிருந்த) மாநகராட்சி ஆணையர் ஒப்புதல் வழங்கி இருக்கிறார். மற்றபடி இவர்கள் சொல்வதுபோல் வேறு எந்த இடத்தையும் ஆக்கிரமிக்கவில்லை. மாநகராட்சியால் ஒப்புதல் அளிக்கப்பட்ட பிளானில் சிறு மாற்றம்கூட இல்லாமல், மொத்தக் கட்டடமும் கட்டப்பட்டு உள்ளது. மாநகராட்சிக்கு சொந்தமான எவ்வளவோ இடங்களை யார் யாரோ ஆக்கிரமித்து உள்ளார்கள். ஆனால், இவரை மட்டும் எதுக்காக சுத்திச் சுத்தி வர்றாங்கன்னே தெரியலை. எதுவாக இருந்தாலும் சட்டப்படி எதிர்கொள்வோம்!'' என்றார்.
இதற்கிடையில், 'தயா சைபர் பார்க்’ கட்டுமானப் பணிகளின்போது செலுத்தப்பட்ட மின் கட்டணம் தொடர்பாக, மின் வாரிய விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரித்துக்கொண்டு இருப்பதாக புதிதாக ஒரு குண்டை தூக்கிப் போடுகிறார்கள்!
குள.சண்முகசுந்தரம்
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மறு விசாரணைக்குப் போகுமா சங்கரராமன் வழக்கு?

சங்கடத்தில் சங்கர மடம்!

'நீங்கள் எவ்வளவு பெரிய உயரத்தில் இருந் தாலும், சட்டம் உங்களுக்கு ஒரு படி மேலே இருக்கும்.’ - சட்டத்தின் சிறப்பை உணர்த்தும் இந்த வார்தைகளுக்கு, சங்கர ராமன் கொலை வழக்கே சிறந்த உதாரணம்! 
'என் கணவர் சங்கரராமன் கொலை வழக்கை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவை நியமிக்க வேண்டும்!’ என்று நீதிமன்றப் படியேறி இருக்கிறார் அவர் மனைவி பத்மா. கூடவே, இந்தக் கொலை வழக்கை ஒட்டுமொத்தமாக மறு விசாரணை செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுக்க... சங்கடத்தில் ஆழ்ந்துள்ளது சங்கரமடம்.
தமிழகத்தை உலுக்கிய சங்கரராமன் கொலை வழக்கில், காஞ்சி மடத்தின் பீடாதிபதிகளான ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்படப் பலரும் கைது செய்யப்பட்டனர். உச்ச நீதிமன்றம் வரை சென்று ஜாமீன் வாங்கிய ஜெயேந்திரர் தரப்பு, 'வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும்’ என்று கோரியதால், புதுச்சேரியில் நடந்தது இந்த வழக்கு விசாரணை.
'76 சாட்சிகள் பல்டி அடித்தது... விசாரணை அதிகாரிக்கே கேஸ் டைரி கொடுக்காதது... நீதிபதியுடன் ஜெயேந்திரர் பேசியதாகப் பரபரப்பு...’ என அவ்வப்போது சர்ச்சைகள் கொடி கட்டிப் பறக்க, உண்மையான நீதி கிடைக்குமா என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுந்தது. இந்த நிலையில்தான், இப்படி ஒரு கிடுக்கிப்பிடி வழக்கைப் போட்டு நீதி தேடுகிறார் சங்கரராமன் மனைவி பத்மா. தற்போது தாக்கல் செய்துள்ள புதிய மனு குறித்து அவரிடம் கேட்க, ''இது குறித்துப் பேசும் மன நிலையில் நான் இல்லை. என் வழக்கறிஞரிடம் கேட்டுக்கொள்ளுங்கள்...'' என்று வருத்தம் தோய்ந்த குரலில் கூறினார்.
பத்மாவின் வழக்கறிஞர் மணிகண்டனிடம் பேசினோம். ''சங்கரராமன் கொலை வழக்கில் இதுநாள் வரை முக்கிய சாட்சிகள் ஒவ்வொருவராக பல்டி அடித்து வந்தனர். புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜரான அரசுத் தரப்பு வழக்கறிஞர்களும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு, தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் எனப் பெரிய அளவில் அக்கறை காட்டவில்லை. சாட்சிகளை சில குறிப்பிட்ட சக்திகள் கடுமையாக மிரட்டிப் பின் வாங்கச் செய்தன. அதிர்ச்சி அளிக்கும் ஒரு ஆடியோ டேப் ஊடகங்களில் வெளியானது. ஜெயேந்திரரும் அவரது பெண் உதவியாளரும் பேசியதாக அணுகுண்டை வீசின ஊடகங்கள். 'இன்னும் ஒரு வாரம் அல்லது 10 நாளில் மீதியைக் கொடுத்துடுறேன்’ என்றும் அந்த உரையாடல் நீண்டது. இந்த ஆடியோவின் உண்மைத்தன்மையைக் கண்டு பிடிக்கவும், பேரம் நடந்து இருந் தால்... சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், சட்ட உரிமை ஆர்வலர் சுந்தர்ராஜன் சென்னை உயர் நீதிமன் றத்தில் பொது நல வழக்கு ஒன்றைத் தாக் கல் செய்தார். இதைத் தொடர்ந்து, புதுவை நீதிமன்ற விசாரணைக்குத் தடை விதித்த நீதிபதி, ஆடியோ விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்தி எட்டு வாரங்களில் பதில் அளிக்குமாறு ஊழல் கண்காணிப்புப் பதிவாளருக்கு உத்தரவிட்டார். பதிவாளர் தலைமையில் நடந்த விசாரணை மீது எங்களுக்கு அவ்வளவாக நம்பிக்கை இல்லை. இது வெறும் கண்துடைப்பு நாடகமாகவே தெரிகிறது. இந்தக் கொலை வழக்கை நீர்த்துப்போகச் செய்வதற்காக இப்படி சகல விதத்திலும் சில சக்திகள் தொடர்ந்து திரைமறைவுக் காரியங்கள் செய்து வந்தனர்.
எனவேதான், நீதி தேடி புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளோம். சங்கரராமன் மனைவி பத்மாவுக்கும், அவரது குடும்பத்துக்கும் தகுந்தபாதுகாப்பு வழங்க வேண்டும். ஆடியோ விவகாரம் குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்றை நியமித்து, சம்பந்தப் பட்டவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து இருக்கிறோம். 'எங்களுக்குக் கடுமையான மிரட்டல் வந்தது. அதனால்தான் பல்டி அடித்தோம்!’ என்று இப்போது பல சாட்சிகள் மனசாட்சியுடன் கூறுகின்றனர். எனவே, இந்தக் கொலை வழக்கை  தொடக்கத்தில் இருந்து ஒட்டுமொத்தமாக மறு விசாரணை நடத்த வேண்டும். அப்போதுதான் நீதி வெல்லும். சட்டத்தைவிட தாங்கள் மேலானவர்கள் என்பது போல சர்வாதிகாரம் காட்டும் சக்திகள் யாராக இருந்தாலும் சரி... அவர்களுக்கு தண்டனை நிச்சயம்!'' என்று சூடு குறையாமல் பேசினார்.
'ஒரு கொலை வழக்கு மறு விசாரணை நடத்தப்பட சட்டத்தில் இடம் இருக்கிறதா?’ என்று மூத்த வழக்கறி ஞர் துரைசாமியிடம் கேட்டபோது, ''குஜராத் பெஸ்ட் பேக்கரி வழக்கு, தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு, மேலவளவு தலித்கள் மீதான வன்கொடுமைக் கொலை வழக்கு என மறு விசாரணைக்கு உதாரணமாக பல வழக்குகளைச் சொல்லலாம். எனவே, சங்கரராமன் கொலை வழக்கு மறு விசாரணை நடத்தப்பட அதிக வாய்ப்பு உள்ளது!'' என்றார்.
நீதிமன்றத்தின் அடுத்த கட்ட விசாரணைகள் எப்படிப் போகும் என்பதைப் பார்ப்போம்!
தி.கோபிவிஜய்
படம்: ச.இரா.ஸ்ரீதர்

அமெரிக்க சம்மன்... ஆடிப்போன ராஜபக்ஷே!

மெரிக்க நீதிமன்றத்தின் உத்தரவால் ஆட்டம் கண்டு போயிருக்கிறார் இலங்கை அதிபர் ராஜபக்ஷே! ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன், இலங்கை அரசின் போர்க் குற்றங்களை விசாரிக்க விசாரணைக் குழு ஒன்றை அமைத்தபோது, இலங்கையில் இருந்து உயிர் தப்பித்து வந்தவர்கள், அந்தக் குழுவிடம் தங்களது வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர். அதில் முக்கியமானவர் வத்சலாதேவி. புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதியாக இருந்த கர்னல் ரமேஷின் மனைவி இவர். 'என் கணவரின் கொலைக்குக் காரணமான ராஜபக்ஷேவைக் கைது செய்து விசாரிக்க வேண்டும்’ என்று நியூயார்க் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் இவர் வழக்குத் தொடர்ந்தார். இது தொடர்பான சம்மனை ராஜபக்ஷே வாங்கவில்லை.
 இந்தச் சூழ்நிலையில், டாக்டர் காசிப்பிள்ளை மனோகரன் என்பவர், 'என் உறவினர்களை சர்வதேசப் போர் விதிமுறைகளுக்கு மாறாக ராஜபக்ஷே உத்தரவுப்படி அவரது ராணுவத்தினர் கொன்று குவித்து இருக்கிறார்கள். அதனால், அவரிடம் விசாரணை நடத்தி, அவருக்கு தண்டனை வழங்க வேண்டும்.’ என்று அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அது தொடர்பாக, ராஜபக்ஷேவுக்கு நீதிமன்றம் மூலமாக சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அதிபர் தரப்பு சம்மனை வாங்காமல் திருப்பிவிட்டது.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பாதிக்கப்பட்டவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் புரூஸ் பெயின், ''நீதிமன்றத்தில் இருந்து எந்த உத்தரவு அனுப்பினாலும், அதை ராஜபக்ஷே அரசு மதிப்பதே கிடையாது. அந்த உத்தரவைப் பெற்றுக்கொள்வதும் கிடையாது. அதனால், இலங்கையில் இருந்து வெளிவரும் இரண்டு முன்னணிப் பத்திரிகைகள் மற்றும் 'தமிழ்நெட்’ இணையதளத்தின் முதல் பக்கத்தில் இந்த நீதிமன்ற உத்தரவை வெளியிட உத்தரவிட வேண்டும். அதையே ராஜபக்ஷேவுக்கு அனுப்பிய சம்மனாக அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும்!'' எனக் கேட்டுக்கொண்டார். விசாரித்த நீதிபதி கோடெல்லி, ராஜபக்ஷேவுக்கு அனுப்பிய சம்மனை இலங்கையில் இருந்து வெளிவரும் செய்தித்தாள்களிலும், இணையதளத்திலும் வெளியிட உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவின்படி அவை அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டன. அமெரிக்க நீதிமன்றத்தில் அவர் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு இந்த அறிவிப்பு மூலம் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
''ராஜபக்ஷே மீது இது போன்ற ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டு அவருக்கு சம்மன்கள் அனுப்பப்பட்டும், இப்போதுதான் முதல் முறையாக இப்படி ஓர் உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்து இருக்கிறது. இனி எல்லா வழக்குகளிலுமே இதையே முன் உதாரணமாகக் காட்டி ராஜபக்ஷேவுக்கு பகிரங்கமாக சம்மன் வெளியிடக் கோரப்போகிறோம். அவற்றுக்கு ராஜபக்ஷே பதில் சொல்லியே ஆக வேண்டும்!'' என்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள்.
அமெரிக்க நீதிமன்றம் போட்ட கிடுக்கிப்பிடி உத்தரவு, ராஜபக்ஷேவின் பதவிக்கே ஆப்பு வைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை!
கே.ராஜாதிருவேங்கடம்

'தேவையில்லாமல் என் பெயரை இழுக்கிறார்!''

க்டோபர் 12-ம் தேதியிட்ட ஜூ.வி. இதழில் வெளியான ஹென்றி டிஃபேன் குறித்த செய்தி தொடர்பாக மதுரை வழக்கறிஞர் ஆ.ஜான் வின்சென்ட் நமக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில், ''ஹென்றி டிஃபேன் எனது பெயரைத் தேவையின்றி கூறி இருக்கிறார். வல்லரசு என்ற இளம் வழக்கறிஞரை அடித்து வெளியேற்றியதை ஏதோ கையைப் பிடித்து அனுப்பி வைத்ததாக ஹென்றி சொல்வது உண்மை அல்ல. 'வல்லரசுவிடம் நீங்கள் மன்னிப்புக் கேட்பதே முறை’ என்று நான் சொன்னதற்காக, என்னிடம் கொடுத்திருந்த 25 வழக்குகளை திரும்பப் பெற்றுக் கொண்டது மக்கள் கண்காணிப்பகம். மனித உரிமைகள் பாதுகாப்பிலும் ஏக போகம் என்ற முன்னுரிமையிலும் நடக்கும் இப்போக்கை மாற்றுவது காலத்தின் அவசியம்!'' என்று கூறியுள்ளார்.

பலே புவனேஸ்வரி!

''தங்கம் தென்னரசு எனக்கு மாமா.. கே.ஆர்.பெரியகருப்பன் சொந்தம்!''

''காரைக்குடியைச் சேர்ந்த புவனேஸ்​வரி, சில வருடங்களுக்கு முன்பு சென்னையிலும் காரைக்​குடியிலும் நாட்​டியப் பள்ளி​களைத் தொடங்கினார். பரதம் படிக்க வரும் குழந்தைகளின் குடும்பப் பின்னணியைத் தெரிந்து​கொண்டு, அதற்கேற்ப வலை விரித்தார். தி.மு.க. அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய வி.ஐ.பி-க்களோடு தானும் போஸ் கொடுக்கும் போட்டோக்களை அவர் காட்ட... வாயைப் பிளந்தவர்கள் அரசு வேலை, வங்கிக் கடன், கார் லோன் என அம்மணியைத் தேடி வந்தனர். 'அமைச்சர் தங்கம் தென்னரசு யாருங்குறீங்க? எங்க மாமா​தான். கவலைப்​படாதீங்க... உங்க பொண்​ணுக்கு அவர்கிட்ட சொல்லி டீச்சர் போஸ்டிங் வாங்​கிருவோம்!’ என்று சில அமைச்சர்கள் பெயரைச் சொல்லியே பல பேரைக் கவிழ்த்திருக்கிறார் புவ​னேஸ்​வரி...'' என்று சொல்லி, இவரைப் பிடித்து உள்ளே போட்டிருக்கிறது போலீஸ். காக்கிகள் இன்​னும் விவரமாகச் சொல்லும் திடுக் தில்லாலங்கடி இதுதான் - 
தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களின் பி.ஏ-க்களை இவர் சர்வ சாதாரணமாக சந்தித்துப் பேசுவார். அதைப் பார்த்தவர்கள், தமது வேலைகளை முடிக்க, அவர் கேட்ட தொகையை நகையாகவும் பணமாகவும் கொடுத்தார்கள். கடைசியில் அத்தனையையும் முழுங்கி ஏப்பம்விட்டவர், யாருக்குமே வேலை வாங்கித் தரவில்லை. ஆட்சி மாறியதுமே ரூட்டை மாற்றிய புவனேஸ்வரி, 'கல்வி அமைச்சர் சி.வி.சண்முகத்தை எனக்குத் தெரியும்’ என்று சொல்லி கடை விரித்திருக்கிறார். இதையும் நம்பி காரைக்குடியைச் சேர்ந்த மரகதம் என்பவர் தன் மகளின் டீச்சர் வேலைக்காக  1.25 லட்சத்தையும், ஏழு பவுன் நகையையும் கொடுத்து​விட்டுத் தவிக்கிறார்.
தூத்துக்குடி மாவட்டம் புதியமுத்தூரைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் கொடுத்த புகாரின் பெயரில், சென்னையில் லாட்ஜில் தங்கி இருந்த புவனேஸ்வரியை கடந்த 29-ம் தேதி கைது செய்தது மயிலாப்பூர் போலீஸ். மயிலாப்பூர் க்ரைம் இன்ஸ்பெக்டர் கருணாகரனிடம் பேசியபோது,''பாலமுருகனின் மாமா பொண்ணுக்கு தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி, மூணு லட்சம் ரூபாய் வாங்கியிருக்கிறார். அதோட, அந்தப் பொண்ணை தலைமைச் செயலகத்துல சும்மா கூட்டிக்​கொண்டு போய் உட்காரவெச்சு, வேலை கிடைச்சிட்டதா சொல்லி ரெண்டு மாசம் இவரே சம்பளம் கொடுத்திருக்கார். இதை நம்பி இன்னும் சிலர் பணத்தைக் கொண்டாந்து கொடுத்தாங்க. முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.ஆர்.பெரியகருப்பன், தமிழரசி ஆகியோரின் பெயர்களைச் சொல்லிப் பணம் வாங்கினதா ஏமாந்தவங்க சொல்றாங்க. ஆனா, அவங்களுக்கும் இவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. 'கபாலீஸ்வரர் கோயில் பகுதியில் அறநிலையத் துறைக்கு சொந்தமான வீடுகள் காலியா இருக்கு, அதை லீஸுக்கு எடுத்துத் தர்றேன்’னு சொல்லி போலியான லீஸ் டாக்குமென்ட்டுகளைக் காட்டி, தலைக்கு  70 ஆயிரம் வரைக்கும் வசூலிச்சிருக்கார். கலைப் பண்பாட்டுத் துறை இயக்குநரா இருந்த இறையன்பு ஐ.ஏ.எஸ்-ஸின் ரப்பர் ஸ்டாம்ப்பை டூப்ளிகேட்டாத் தயாரிச்சும் மோசடி பண்ணிருக்கார். இதுவரைக்கும் சென்னை மற்றும் காரைக்குடியில் மட்டும் இவர் மீது சுமார் 40 புகார்கள் பதி​வாகி இருக்கின்றன. இதை வெச்சுப் பார்த்தா, சுமார்  50 லட்சம் வரைக்கும் மோசடி பண்ணிருப்பார் போலிருக்கு!'' என்றார்.
''காரைக்குடி, தூத்துக்குடி, கோவை, திருச்சி, தஞ்சை, சென்னைனு பல ஊர்களில் கைவரிசை காட்டி இருக்கும் இந்த புவனேஸ்வரி, காரைக்​குடியைச் சேர்ந்த தனக்கு நெருக்கமான தி.மு.க. முக்கியப் புள்ளி ஒருத்தர்கிட்ட பெரிய தொகையை கொடுத்து இருக்கிறதாச் சொல்றாங்க. அதுக்கு ஈடா அந்த ஆளு இந்தம்மாவுக்கு சூடாமணிபுரத்தில் ஒரு பிளாட்டைத் தானமா எழுதிக் கொடுத்ததாவும் சொல்றாங்க. புவனேஸ்வரியிடம் பணத்தைத் திருப்பிக் கேட்டு வந்தவங்களை அந்த ஆளுதான் மிரட்டி அனுப்புறார். சென்னை ஈ.சி.ஆர். ரோட்ல ஒரு கோடி ரூபாய்க்கு புவனேஸ்வரி பிளாட் வாங்கிப் போட்டு இருக்கிறதா சொல்றது பத்தியும் விசாரிக்கிறோம்!'' என்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில்.
ஆனால் புவனேஸ்வரியோ, ''இவர்கள் சொல்வது எல்லாம் ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகள். நான் யார்கிட்டேயும் பணமும் வாங்கலை; யாரையும் மோசடியும் பண்ணலை!'' என்று மீடியாக்களிடம் தைரியமாகச் சொல்லிவிட்டுப் போனார்.
எத்தனையோ புவனேஸ்வரிகள் வந்துவிட்டார்​கள்... நம் ஆளுங்க திருந்தினால்தானே!
குள.சண்முகசுந்தரம்
படங்கள்: எஸ்.சாய் தர்மராஜ்

குப்பைத் தொட்டியில் ரூ.17 லட்சம்...

ஹால் டிக்கெட்டுக்குப் பின்னால் பாக்கிப் பணம்...
சந்தி சிரிக்கும் டி.என்.பி.எஸ்.சி.! 

இந்தத் தேர்வாணையத்தில் நடக்கும் தில்லு​முல்லுகள் பற்றி, ஜூ.வி. 10.7.2010 இதழிலேயே நாம் விரிவாக எழுதி இருந்தோம். அதையடுத்து, 5.10.2011-ம் தேதியிட்ட 'கழுகார் பதில்கள்’ பகுதியிலும், 'இதற்கான விசாரணையை லஞ்ச ஒழிப்புப் போலீஸார் தொடங்கிவிட்டார்கள்’ என்று எழுதி இருந்தோம். இப்போது நடந்திருக்கும் இந்த ரெய்டு, இதுவரை நாம் எழுப்பிய சந்தேகங்களை உறுதிப்படுத்தியது மாதிரியே அமைந்துள்ளது!தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்​தின் 80 ஆண்டு மதிப்பு, மரியாதை எல்லாம் கடந்த வாரம் ஒரே நாளில் உடைந்து நொறுங்கிப்போனது. லஞ்ச ஒழிப்பு போலீஸார் மொத்தமாகப் புகுந்து நடத்திய ரெய்டுகள், அரசுப் பதவிகளை நம்பி இருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்கள் மனதில் குழப்பத்தைக் குடி புகுத்தியது!
உதயச்சந்திரன் போட்ட பிள்ளையார் சுழி!
அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் செயலா​ளராக உதயச்சந்திரன் நியமிக்கப்பட்டார். அப்போது குரூப் 1 தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டன. தேர்வானவர்கள் பட்டியலை வெளியிடுவதற்கான ஃபைல் உதயச்சந்திரனின் மேஜைக்கு வந்தது. அவர், 'இது சரியான தேர்வுதானா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள சிலரது தேர்வுத் தாள்களை மட்டும் எனக்குத் தாருங்கள்’ என்று கேட்டார். அப்போது, தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், 'இதைக் கேட்பதற்கு உங்களுக்கு உரிமை இல்லை. தேர்வுக் கட்டுப்பாட்டாளர் பதவியில் இருக்கும் ஐ.ஏ.எஸ்-தான் இதைப் பார்க்க உரிமை படைத்தவர்’ என்றார்கள். உடனே உதயச்சந்திரன், 'நான் உறுதிப்​படுத்​திக்கொள்ள முடியாத எந்த கோப்பிலும் நான் கையெழுத்திட முடியாது’ என்று மறுக்க... அவரது கையெழுத்து இல்லாமலேயே பட்டியல் வெளியானது.
இதன் பிறகு உதயச்சந்திரனுக்கு எந்த ஃபைல்​களையும் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அனுப்பவில்லையாம். இதைத் தொடர்ந்து, உதயச்சந்திரன் விடுமுறை போட்டுவிட்டுப் போய்விட... அனைத்தும் தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கிக்குத் தெரியவந்து, அவரே உதயச்சந்திரனை அழைத்து விசாரணை நடத்தினார். இதற்கிடையில், தமிழக உளவுத் துறை போலீஸாரும் அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் குறித்து ரகசிய விசாரணை மேற்கொண்டனர். இவர்கள் பற்றிய ஏராளமான தகவல்கள் அரசல் புரசலாகக் கிடைத்ததோடு, தேர்வாணையத் தேர்வுகளில் ஏகப்பட்ட முறை​கேடுகள் நடந்திருப்பதும் தெரியவந்தது.
முதல்வரைத் தூண்டிய மகாராஷ்டிரா!
அந்த சமயத்தில், இந்தத் தேர்வு ஆணையத்தில் இருப்பவர்களின் வயிற்றில் புளி கரைத்தது. தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தரப்பில், முதல்வர் ஜெ-வைச் சந்திக்க நேரம் கேட்டனர். ஆனால், முதல்வரின் செயலாளர், கூடுதல் செயலாளரிடம் கடிதத்தை மட்டும் கொடுத்துவிட்டுத் திரும்பத்தான் முடிந்தது. கடைசி வரை, முதல்வரைச் சந்திக்க முடியவில்லை. ஆனால் இவர்கள், பதவிக் காலம் முடிந்தும் ஆளுநர் பொறுப்பில் நீடித்த பர்னாலாவையும் புதிய ஆளுநர் ரோசய்யாவையும் சந்தித்தனர்.
''இவர்களைக் கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் வழிமுறைகள் என்ன இருக்கின்றன?'' என்று சட்டத் துறையின் கருத்தை முதல்வர் கேட்டிருக்கிறார். 'அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தை ஊழல் தடுப்பு போலீஸின் கண்காணிப்புக்குள் கொண்டுவர முடியும்’ என்ற உத்தரவை முதன்​முறையாக மகாராஷ்டிரா மாநில அரசு சமீபத்தில் பிறப்பித்தது தெரிய வர... அதை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு, தமிழகத்திலும் அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தை ஊழல் தடுப்பு போலீஸின் கண்காணிப்பில் கொண்டுவர முதல்வர் ஒப்புதல் அளித்தார். அதன்படிதான் கடந்த மாதம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் தொடர்பான புகார்களை ஊழல் தடுப்புப் போலீஸ் விசாரிக்கத் தொடங்கியது.
ரெய்டுக்கு காரணமான இரண்டு சம்பவங்கள்!
சமீபத்தில் நடைபெற்ற, குரூப்-1, உதவி பல் மருத்துவர், மோட்டார் வாகன ஆய்வாளர் ஆகிய பணியிடங்களுக்கான தேர்வுகள் தொடர்பான ஆவணங்களை, ஊழல் தடுப்பு போலீஸார் முறைப்படி கேட்டனர். ஆனால், அரசியல் சாசன அந்தஸ்துகொண்ட தேர்வு ஆணையம், ''கேட்கிறவர்களுக்கு எல்லாம் விவரங்களைத் தர முடியாது!'' என மறுக்க... இதுதான் ரெய்டுக்கு அடிப்படைக் காரணம்.
இந்த நிலையில், நீதிபதிகள் தேர்வு தொடர்பான வழக்கு ஒன்றில், உச்ச நீதிமன்றத்தில் தமிழகத் தேர்வு ஆணையத் தரப்பில் ஆஜராகாமல் இழுத்தடித்தனர். இதைக் கண்டித்த உச்ச நீதிமன்றம், தேர்வு ஆணையச் செயலாளரை (உதயச்சந்திரன்) 17-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகும்படி கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது. அதற்கு ஆஜராகத் தேவை​யான கோப்புகளை உதயச்சந்திரன் கேட்க... ஆனால், தேர்வாணையத் தலைவர் செல்லமுத்து தர மறுத்ததுடன், உதயச்சந்திரனுக்குப் பதிலாக, சமீபத்தில் இணைச் செயலாளராக ஆக்கப்பட்ட ஜெரால்டு என்பவரை அனுப்ப முடிவெடுத்தார். 'செயலரை வரச் சொல்லி உச்ச நீதிமன்ற உத்தரவு. அவர் ஆஜராகாவிட்டால், பிரச்னை ஆகிவிடும்’ என்று இந்த விஷயத்தை தலைமைச் செயலாளரிடம் கொண்டுசென்றார் உதயச்சந்திரன்.
'அரசியல் சாசன அந்தஸ்து என்ற பெயரில், தேர்வு ஆணையம் அத்துமீறுவதை அனுமதிக்க முடியாது’ என்று முடிவெடுத்தது தமிழக அரசு. அதிரடியாக, கடந்த 14-ம் தேதி காலையில் தேர்வு ஆணைய அலுவலகத்திலும் அதன் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் வீடுகளிலும் அதிரடிச் சோதனையில் இறங்கியது!
22 டி.எஸ்.பி-க்கள், 100 போலீஸார்!
இதற்காக தமிழ்நாடு முழுவதும் இருந்து ஊழல் தடுப்பு போலீஸார் வரவழைக்கப்பட்டனர். இந்தச் சோதனையில், 22 டி.எஸ்.பி-க்கள், 100 போலீஸார் பல மாவட்டங்களில் இருந்து அவசரமாகச் சென்னைக்கு வரவழைக்கப்பட்டனர். ஒரே வழக்குக்​காக, ஒரே நாளில், 14 சந்தேக நபர்களின் இடங்களில் சோதனை நடத்தப்பட்டது, இதுதான் முதல் முறையாம்!
தேர்வு ஆணையத்தில்...
எல்லா இடங்களையும் போல, சென்னை எழும்பூர், கிரீம்ஸ் சாலையில் உள்ள தேர்வு ஆணைய அலுவலகத்​திலும் காலை 7 மணிக்குச் சோதனை தொடங்கியது. 7 தளக் கட்டடம் முழுவதும் சோதனைக்கு உள்ளானது.  உறுப்பினர்களின் அறைகள் உள்ள 2-வது, 3-வது தளங்களில் சல்லடை போட்டுத் தேடுதல் நடத்தப்பட்டது. வாய்மொழித் தேர்வு நடத்தப்படும் முதல் மாடி, சட்டப் பிரிவு அமைந்துள்ள 4-வது மாடி, விண்ணப்பப் பிரிவு உள்ள 5-வது மாடி, வினாத்தாள், மதிப்பீட்டுப் பணி நடக்கும் 6-வது மாடி என எதையும் விடாமல் சோதனை நடந்தது.
மதிப்பீட்டுப் பிரிவுக்குப் பொறுப்பான துணைச் செயலாளர் சுகுமாரிடம், குரூப்-1, பல் மருத்துவர், மோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வுகளுக்கான விடை, விடைத்தாள், மொத்த மதிப்பெண் பட்டியல், தனி நபர்களின் மதிப்பெண் பட்டியல் உட்பட பல ஆவணங்களைக் காட்டுமாறு கேட்டுள்ளனர். நேர்காணல் போன்ற வாய்மொழித் தேர்வுப் பிரிவுக்குப் பொறுப்பான இணைச் செயலாளர் ஜெரால்​டிடமும் ஒரு மணி நேரம் தீவிர விசாரணை. லீகல் செல்லுக்குப் பொறுப்பான கலாதேவியிடம் கேள்வி மேல் கேள்விகள் கேட்டனர்.
''நிர்வாகத்தில் செயலாளருக்கு அடுத்து முக்கியப் பொறுப்பு, இணைச் செயலாளருக்கு உண்டு. இந்தப் பதவியில் இருக்கும் ஜெரால்டு மீது, அரசுக்கும் ஊழல் தடுப்பு போலீஸுக்கும் பத்திரிகைகளுக்கும் ஏகப்பட்ட புகார்கள் குவிகின்றன. 'இவருக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வே சிக்கலாகலாம்!'' என்கிறார்கள், லஞ்ச ஒழிப்பு போலீஸார்.
ஆவணங்களைக் காட்ட முடியாது என்று முதலில் சமாளித்தார்களாம். ஒரு கட்டத்தில், ''ஒத்துழைப்பு தராவிட்டால் கைதுதான்!'' என்றதும்தான் ஆவணங்​களைத் தந்திருக்கிறார்கள்!
கைகொடுத்த 'கைது ஆணை’!
புழுதிவாக்கத்தில் உள்ள உறுப்பினர் ராம​சாமியின் வீட்டில் நுழைந்த அதிகாரிகளிடம் அவர் கடுமையாகத் தன் எதிர்ப்பைத் தெரிவித்தார். ''இந்த ஆணையம் என்பது அரசியல் சாசனப் பதவி. எங்கள் மீது புகார் இருந்தால்கூட, போலீஸ் விசாரிக்க ஒரு சட்டமும் இல்லை. வேண்டுமானால், அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டுவந்து எங்கள் மீது விசாரணை நடத்துங்கள்!'' என்று  சட்டம் பேசினாராம். போலீஸாரோ, ''கைது செய்து ரிமாண்ட் செய்யவேண்டி வரும்!'' என்றதும்தான் மனிதர் அசைந்துகொடுத்தாராம்.
எகிறிக் குதித்த மாஜி ஐ.ஜி.!
அடையாறு நேரு நகரில் குடியிருக்கும் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியின் தம்பி, இதன் உறுப்பினராக இருக்கிறார். அங்கு சோதித்தபோது, வீட்டில் இருந்த அந்த ஐ.ஜி., இரண்டு பைகளில் 17 லட்சத்தைக் கட்டி, சுவர் ஏறிக் குதித்து, பக்கத்து வீட்டு அருகில் இருந்த குப்பைத் தொட்டிக்குள் போட்டார். இது போன்ற நேரங்களில் தெரு முனையில் ஓரிரு போலீஸாரை நிறுத்திவைப்பது வழக்கம். அவர்களில் ஒருவர், இந்த தகவலை, சோதனை அதிகாரிகளிடம் தெரிவித்தார். இவரது வீட்டில் இருந்து மொத்தம்  26 லட்சம் கைப்பற்றப்பட்டதாம்.
29 மது பாட்டில்கள்!
''ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள ஓர் உறுப்பினரின் வீட்டில்,  7 லட்சம் கைப்பற்றப்​பட்டுள்ளது. போட்டித் தேர்வு எழுதி​யவர்களின் ஹால் டிக்கெட்களும் அவற்றில் யார் யார் எவ்வளவு பணம் கொடுத்துள்ளனர், எவ்வளவு பாக்கி என்கிற குறிப்புகளை எல்லாம் சோதனையில் கண்டுபிடித்தோம். இவர், தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் தங்கித்தான், பணப் பரிவர்த்தனைகளை செய்திருக்கிறார். இது தொடர்​பான ஆதாரங்களும் கிடைத்துள்ளன. இவரது வீட்டில் 29 மது பாட்டில்களும் எடுத்தோம்!'' என்கிறார்கள் சோதனை நடத்திய போலீஸார்.
4.5 கோடி சொத்து!
பல உறுப்பினர்களின் வீடுகளில் விடைத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஒருவரின் வீட்டில்  4.5 கோடிக்கு புதிதாகச் சொத்து வாங்கிய ஆவணம் கைப்பற்றப்பட்டது. இதைத் தவிர, ஏராளமான சொத்து ஆவணங்களும் சிக்கின. பலரும் அரசின் முன் அனுமதி பெறாமல் வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்ட ஆதாரங்களும் சிக்கியுள்ளன.
அடுத்து என்ன?
குற்றச்சாட்டுக்கு உள்ளான இந்த தலைவர் மற்றும் உறுப்பினர்களை பதவிநீக்கம் செய்யவேண்டும் என்றால், ஆளுநரிடம் மாநில அரசு முறைப்படி தெரிவிக்க வேண்டும். ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு எழுதி, அவர் உச்ச நீதிமன்றத்திடம் தகவல் தெரிவித்து, பதவிநீக்கம் நடைமுறைக்குக் கொண்டுவரப்படும். அதுவரை, தேர்வாணையத்தைக் கவனிக்க வல்லுநர் குழு ஒன்று அமைக்கப்படலாம் என்கிறார்கள். அதே சமயம், இன்னோர் ஆபத்தையும் சுட்டிக்காட்டுகிறார்கள்!
தேர்வாணைய மோசடிகளைக் காரணம் காட்டி, கடந்த ஆட்சிக் காலத்தைப் போல, தற்காலி​கமாக, அரசுப் பணி​யிடங்களுக்கான தேர்வுகள் நடத்தப் படா​மல் போகவும் வாய்ப்பு உண்டு என்ற அச்சமும் நிலவுகிறது.
அதிரடிக்குப் பேர்போன ஜெயலலிதா தலைமை​யிலான அரசின் அடுத்த கட்ட செயல்பாடுதான் இதற்குப் பதில் சொல்ல​வேண்டும்!
இரா.தமிழ்க்கனல்
படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்
''லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு செய்ய அதிகாரம் இல்லை!''
 இந்த ரெய்டு குறித்து அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் உயர் பொறுப்பில் இருப்பவரை சந்தித்துக் கேட்டபோது, வெளிப்படையாகப் பேட்டி தர மறுத்தார். எனினும் அவர் கூறியதன் சாராம்சம் இதுதான் -
''உதயச்சந்திரன் இங்கு செயலராக வந்தது முதல்தான் இந்தப் பிரச்னை ஏற்பட்டது!
ஆணையத்தில் இரு ஐ.ஏ.எஸ். அதிகாரி பணி​யிடங்கள் உள்ளன. ஒருவர், பொது நிர்வாகத்தைக் கவனித்துக்கொள்பவர். அவர் ஆணையச் செயலர். மற்றொருவர், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி. இவர் கேள்வித்தாள், தேர்வு நடைமுறைகளைக் கவனிப்பவர். செயலருக்குத் தேர்வுகளில் தலையிடவோ, அது தொடர்பான ஆவணங்களைப் பார்வையிடவோ ஆணைய விதிமுறையில் இடம் இல்லை. ஆணையம் சொல்வதைக் கேட்டுச் செயல்படுபவர் மட்டுமே. அவர் தேர்வு ஆணையத்தின் சூபர்வைஸர் கிடையாது. ஆனால் செயலரான உதயச்​சந்திரன், இந்த விதிமுறைகளில் தலையிட்டதே பிரச்​னைக்குக் காரணம். அவர் செயலர் பணியில் சேர்வதற்கு இரு தினங்களுக்கு முன் குரூப் 1 தேர்வு முடிவை இறுதி செய்தோம். இதை வெளியிடுவதற்கு முன், உறுப்​பினர்கள், செயலருக்கு சீலிடப்பட்ட கவரில் வைத்து அனுப்புவது வழக்கம். ஆனால், உறுப்பினர்கள் எவருக்கும் அந்த முடிவைத் தெரிவிக்கக் கூடாது என்று உதயச்சந்திரன் சொன்னார். அதே போல் தேர்வானவர்களின் விடைத்தாள்களை உடனடியாகப் பார்வையிட வேண்டும் என்றார். 'அவை ரகசியக் கோப்புகள். அவற்றைத் தனி ஒரு நபர் பார்க்க விதிமுறை இடம் தராது. தலைவர், 13 உறுப்​பினர்களை உள்ளடக்கிய கமிஷனுக்கு மட்டுமே அந்த அதிகாரம் உண்டு’ என்றோம். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர விவாதம் நடந்தது.
அதன் பிறகு கமிஷன் கூடி, 'அலுவலக ரீதியிலான எவ்விதக் கோப்புகளையும் அவர் பார்வைக்கு அனுப்பக் கூடாது’ என தீர்மானம் நிறைவேற்றி, அதை ஊழியர்களுக்கு சுற்றறிக்கையாக அனுப்பினோம். அதன் பிறகு, அவரின் காய் நகர்த்தல்கள்தான் ஆணையத்தின் புனிதத் தன்மைக்கே ஒரு சவாலாக அமைந்துவிட்டது!
இந்த ஆணையம், ஆளுநரின் கட்டுப்பாட்டில் வரும் தன்னிச்சையான ஓர் அமைப்பு. லஞ்ச ஒழிப்புத் துறையைச் சேர்ந்த ஓர் இன்ஸ்பெக்டரும், கான்ஸ்டபிளும் வந்து நினைத்த நேரத்தில் விசாரணை நடத்தினால், இதன் ரகசியத் தன்மை எப்படி காக்கப்படும்? இது தவறான அணுகுமுறை. அரசுக்கும் அறிவுறுத்தினோம். தலைமைச் செயலரையும், முதல்வரின் செயலரையும் நேரடியாகச் சந்தித்துக் கடிதங்கள் தந்தோம்.
'இங்கு குற்றங்கள் நடக்கின்றன. நடவடிக்கை எடுங்கள்’ என ஆளுநருக்குப் பரிந்துரை தரலாமே தவிர, தன்னிச்சையாக இப்படி நடவடிக்கை எடுத்திருக்கக் கூடாது. இது லட்சக்கணக்கானவர்களின் நம்பிக்கைக்கு எதிராக முடிந்திருக்கிறது. முதல்வரிடம் எங்கள் தரப்பு நியாயத்தை, கருத்தைச் சொல்ல காத்திருக்கிறோம். அவர் எங்களைச் சந்திக்க அனுமதி தருவார் என நம்புகிறோம்!'' என்றார் ஆணையத்தின் முக்கியப் புள்ளி.
- ம.கா.செந்தில்குமார்

பழசு இன்றும் புதுசு

நேற்றும் நமதே - 17: 22.11.92
சிக்கிவிட்டான் 'செக்ஸ் வெறியன்’ நாகராஜ்!
தர்மபுரி மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் தன் மூன்றாவது மனைவியுடன் மறைந்து இருந்தபோது, அவனைக் கைது செய்தது கர்நாடக போலீஸ். தற்போது பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருக்​கிறான்.
நாகராஜ் பற்றி நாம் சேகரித்த புதிய தகவல்கள் -

கடந்த வருடம் நவம்பர் 12-ம் தேதி... ஆனைக்கல் காவல் நிலைய எல்லையில் ஆறு நாள் இடை​வெளியில் இரண்டு பெண்களின் சடலங்​கள் கண்​டெடுக்கப்​பட்டன. போஸ்ட்​மார்ட்டத்தில் அவர்கள் கற்பழிக்கப்​பட்டு கொலை செய்யப்​பட்டு இருப்பது தெரிந்தது.
கடந்த மாதம் 20-ம் தேதி நாகராஜ் கைது செய்யப்பட்டான். அதற்குப் பின்பு அவன் அளித்திருக்கும் ஒப்புதல் வாக்கு​மூலத்திலும், நாமே நேரடியாக பெங்களூர், கனகபுரா, ஆனைக்கல் ஆகிய இடங்களில் விசாரித்ததிலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
அந்த இருவருக்கும் ஒரே மாதிரி முக ஜாடை... இருவரும் சகோதரிகளாக இருக்கலாம் என்று முடிவெடுத்தது போலீஸ்!
இவர்கள் எந்தவித ஆயுதமும் இன்றி வெறும் துணியால், அதுவும் அந்தப் பெண்களின் துணியாலேயே கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டு இருந்தனர்... அதனால், இந்தக் கொலைகளை செய்தது நாகராஜாக இருக்கலாம் என்று நினைத்தார்கள்.
கர்நாடக போலீஸ் வழக்கை விசாரித்துக்கொண்டு இருந்தபோது அவர்களுக்கு ஒரு சின்ன 'டிப்ஸ்’. பெங்களூர் கெங்கரி கேட் காவல் நிலையத்தில், 'கனகபுராவைச் சேர்ந்த மூன்று பெண்களும் ஓர் ஆணும், பெங்களூரில் காணாமல் போய்விட்டனர்’ என்று ஒரு வழக்குப் பதிவான தகவல் கிடைத்தது. உடனடியாக ஆனைக்கல் போலீஸ் தீவிரமாகச் செயலில் இறங்கியது. புகார் கொடுத்தவர் கனகபுராவில் உள்ள அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ஹொன்னையா. அவரை அழைத்து இறந்த பெண்களின் சடலங்களின் புகைப்படங்களைக் காண்பித்தவுடன்... ஹொன்னையா அதிர்ச்சியில் மயக்கம் அடைந்துவிட்டார். இறந்த இருவரும் அவருடைய மகள்கள். அவர்கள் பெயர்கள் கௌரம்மா மற்றும் ஜெயம்மா!
போலீஸிடம் ஹொன்னையா சொன்னது - ''நவம்பர் மாதம் முதல் தேதியில் எங்கள் சொந்தக்காரர் கோவிந்தையாவுக்கு அறிமுகமானவர் என்று வாட்டசாட்டமான இளைஞர் ஒருவர் இங்கு வந்தார். அவர் ஒரு வாரம் இங்கு தங்கி இருந்தார். அந்த நேரத்தில் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து நன்கு பழகினார். நன்கு அறிமுகமான பின், 'நான் அநாதை, நீங்கள் விரும்பினால், உங்கள் மூன்றாவது மகள் ஹொன்னம்மா என்கிற ஒன்னியைத் திருமணம் செய்துகொள்கிறேன்’ என்று சொன்னார். அவன் நடத்தை எனக்குப் பிடித்ததால், மகள் ஒன்னியை அவனுக்குத் திருமணம் செய்துவைக்க முடிவெடுத்தேன். அடுத்த நாள் காலையிலேயே கனகபுராவில் ஒரு கோயிலில் திருமணம் நடைபெற்றது. அங்கேயே சப்-ரிஜிஸ்ட்ரார் அலுவலகத்தில் திருமணம் பதிவு செய்யப்பட்டது. மூன்று நாட்கள் இங்கேயே பொழுதைக் கழித்தான். பிறகு, 'எனது தூரத்து உறவினர் ஒருவர் பெங்களூரில் இருக்கிறார். அவர் வீட்டுக்கு அனைவரும் சென்று வருவோம்’ என்று மனைவி ஒன்னி மற்றும் எனது இரண்டு பெண்களுடன் பெங்களூருக்குக் கிளம்பினான். நானும் அவர்களுடன் போனேன். கலாசிபாளையம் பஸ் ஸ்டாண்டில் நாகராஜ் இறங்கியதும்... உடனடியாக ஒரு ஆட்டோவைப் பிடித்து, ஒன்னி, என் மற்ற இரு பெண்கள் கௌரம்மா, ஜெயம்மா ஆகியோரை மட்டும் ஏற்றிக்கொண்டு 'நீங்கள் வேறு ஆட்டோவைப் பிடித்து நேராக லக்க சந்திரா பஸ் ஸ்டாப்புக்கு வாருங்கள்... நாங்கள் அங்கு காத்திருக்கோம்’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டான்.
அதைத் தொடர்ந்து நானும் என் உறவினர்கள் சிலருடன் வேறு ஒரு ஆட்டோவில் பின்தொ​டர்ந்து, லக்க சந்திரா பஸ் ஸ்டாப்பில் பார்த்த​போது, நாகராஜும் என் மூன்று மகள்களும் அங்கு இல்லை. உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்தேன்!''
அதற்கு பின்பு நடந்த சம்பவங்களை நமக்கு ஆனைக்கல் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் சொல்ல ஆரம்பித்தார்.
''நாகராஜ் அந்தப் பெண்களை அழைத்துச் செல்லும்போது, தன் நண்பன் ராஜாவை சந்தித்திருக்கிறான். அவனிடம் தனக்குத் திருமணம் ஆன விஷயத்தை நாகராஜ் தெரிவித்தான். உடனே ராஜாவுக்கு, நாகராஜின் மைத்துனிகள் மீது ஆசை. நாகராஜும் அதற்கு உடன்பட்டான். தன் மனைவியை ஓர் இடத்தில் உட்காரவைத்துவிட்டு, மைத்துனிகளைத் தனி இடத்துக்குக் கடத்திப் போனான் நாகராஜ். அங்கு ராஜாவும் நாகராஜனும் இரு பெண்களையும் கற்பழித்துக் கொலை செய்தனர். பின்பு ராஜா மட்டும் தனியாகப் போய்விட்டான் (இப்போது ராஜா போலீஸ் காவலில்). நாகராஜ் தன் மனைவியிடம் திரும்பி வந்து, 'உங்க அக்கா ரெண்டு பேரையும் எங்க பாட்டி வீட்டுல விட்டுட்டு வந்துட்டேன். நாம சினிமாவுக்குப் போகலாம் வா...’ என்று கர்நாடக எல்லையான ஆனைக்கல்லில் இருந்து தமிழக எல்லையான ஓசூருக்கு அழைத்து வந்திருக்கிறான்... ஆனாலும், ஒன்னிக்கு சந்தேகம். நச்சரித்தாள். நாகராஜ் கோபமடைந்தான். 'ஆமாம்... உன் சகோதரிகளைக் கொலை செய்து​விட்டேன். நீ இதை யாரிடமாவது சொன்னால், உன்னையும் கொலை செய்துவிடுவேன்’ என்று மிரட்டி இருக்கிறான். அதிர்ந்துபோனாள் ஒன்னி. பின்பு என்ன செய்வது என்றே புரியாமல் பயந்து அமைதியாகி விட்டாள். ஓசூரில் ஒரு கைக்கடிகாரம் வாங்கிக்கொண்டு ஒன்னியை அருகில் உள்ள தளிக்கு அழைத்​துச் சென்று, அங்கே ஒரு பாறைக்கு அருகில் உள்ள குடிசையில் சில நாட்கள் தங்கவைத்​தான் நாகராஜ். ஒன்னி, எப்படித் தன் அப்பாவுக்குத் தகவல் தருவது என்று பெரும் குழப்பத்தில் இருக்க... நாட்கள் கடந்தன. இதற்கிடையில், இவர்கள் எங்கேயும் வெளியில் போகாமல் தொடர்ந்து அங்கேயே தங்கி இருந்ததால், அருகில் இருந்த குர்ரப்பா என்பவருக்கு சந்தேகம் வந்து ஒன்னியிடம் விசாரிக்க... ஒன்னி, எப்படியோ தைரியத்தை வர​வழைத்துக்கொண்டு அவரிடம் நடந்த சம்பவங்​களைச் சொன்னாள்.
குர்ரப்பா ரகசியமாக ஒன்னியின் தந்தைக்குத் தகவல் அனுப்பினார். உடனடியாக அவர் எங்களுக்குத் தகவல் கொடுத்தார். கடந்த மாதம் 20-ம் தேதியன்று இரவு சுமார் 11 மணிக்கு அந்த வீட்டை நாங்கள் சுற்றி வளைத்து நாகராஜை கைது செய்தோம்...''
நாகராஜ் கைது செய்யப்பட்டு அடுத்த நாளே நீதிமன்றத்தில் ரிமாண்ட் செய்யப்பட்டாலும், அவனை மீண்டும் விசாரணைக்காக நீதி​மன்ற உத்தரவுடன் அழைத்து வந்தது ஆனைக்கல் போலீஸ்.
விசாரணையில் நாகராஜ் எந்த விதத் தயக்கமும் பயமும் இல்லாமல், தான் செய்த கொலைகளை ஒப்புக்கொண்டான். அவன் சொல்​வதைப் பார்க்கும்போது, கிட்டத்தட்ட 70 பெண்களைக் கொடூரமாகக் கொன்றிருக்கலாம் என்று தெரிகிறது. பல கொலைகளை எப்படி எங்கே செய்தோம் என்பதையே மறந்து​விட்டான்.
நாகராஜ், தான் செய்த கொலைகளை அந்தந்த இடங்களுக்கு நேரடியாக போலீஸை அழைத்துச் சென்று எப்படிச் செய்தான் என்று நடித்துக் காட்டியதாகவும் சொல்லப்படுகிறது.
''நான் கொன்றுவிட்ட பின்புகூட சில பெண்களுடன் உடலுறவு​கொண்டேன்...'' என்று விசாரணையில் சொல்லி இருக்கிறான் நாகராஜ்.
நாகராஜின் குடும்பம் நன்றாக வாழ்ந்த குடும்பம். உள்ளூர்த் தகராறு ஒன்றில் ஊர்க்காரர்கள் அந்தக் குடும்பத்தை ஊரைவிட்டே ஒதுக்கி​வைத்து இருக்கிறார்கள். அப்போது பட்ட அவமானமும் விரக்தியும் நாகராஜை மிகவும் பாதித்து இருக்கிறது. அதன் பிறகுதான் அவன் நடவடிக்​கையில் முரட்டுத்தனம் சேர்ந்திருக்கிறது. பிற்பாடு கெட்ட நண்பர்களும் சேர்ந்துகொள்ள, பயங்கர ஆசாமியாக மாறிவிட்டான்.
வி.யுவராஜ்

கயிறே, என் கதை கேள்!

சதியை மறைத்த சிவராசன்! 

நான் ஓர் ஈழத் தமிழன். எமக்கு எனத் தனித்துவமான பேச்சுத் தமிழ் உண்டு. தமிழ்நாட்டுத் தமிழர்கள் பேச்சுத் தமிழில் பயன்படுத்துகிற பல சொற்களை நாம் பயன்படுத்த மாட்டோம். சொற்களைப் பயன் படுத்துவதில் இரு பிரதேசத் தமிழர்களுக்கும் பல வேறுபாடுகள் உண்டு. நான் தமிழ்நாட்டுக்கு வந்த ஆறு மாத காலத்துக்குள் இங்கு உள்ள பேச்சுத் தமிழ் எனக்குப் பரிச்சயம் ஆகியிருக்க வாய்ப்பு இல்லை. ஆனாலும், அரசுத் தரப்பு சித்திரிப்புகளில் சுமார் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் இலங்கைத் தமிழர் பயன்படுத்தாத, தமிழ்நாட்டில் வழக்கில் உள்ள சொற்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இதில் இருந்தே ஒப்புதல் வாக்குமூலம் என் சொல் படி எழுதப்படவில்லை என்பதும், அவர்களின் இஷ்டத்துக்குத் தகுந்தபடி எழுதப்பட்டது என்பதும் அப்பட்டமாகத் தெரியவரும். 'சொற்களின் பிரயோ கத்தைக்கூட அப்படியே பதிவு செய்வது அவசியமா?’ என யாரும் கேட்கலாம். நடந்தது சாதாரண நபரின் கொலை விவகாரம் அல்ல. இந்தியாவின் மிகப் பெரிய அரசியல் தலைவர். நாட்டையே உலுக்கிய வழக்கில் குற்றவாளியின் ஒப்புதல் வாக்கு மூலம் என்பது எந்த அளவுக்கு முக்கியமானது? ஒவ்வொரு வார்த்தையும் மிக நுணுக்கமாகவும், அச்சு அசலாகவும் பதிவு செய்யப்பட வேண்டும் அல்லவா? 'ஒப்புதல் வாக்குமூலம் ஓர் எதிரியால் சொல்லப் படும்போது எவ்வித மாற்றமும் இல்லாமல், அவரது சொந்தச் சொற்களில் உரைநடையில் அப்படியே பதிவு செய்யப்பட வேண்டும்’ என்பது தடா சட்டத்தின் 15-வது பிரிவின் விதியாகும். இதுபோல், எத்தனையோ விதிமுறை மீறல்கள்... கட்டுக்கதைகள்... தில்லுமுல்லுத் திணிப்புகள்!
ஒருவேளை மேற்சொன்ன அனைத்தும் ஏற்பதற்கு இல்லை என்று சொன்னால்கூட, அரசுத் தரப்பு காட்டிய குற்றச்சாட்டுகளுக்கு போதிய அளவு சாட்சியச் சான்றுகள் உள்ளனவா? அவை, உரிய முறையில் திறந்த மனதுடன், நடுநிலைமையுடன் பரிசீலிக்கப்பட்டனவா? காட்டிய நிரூபணங்கள் சட்டப்படியும், நியாயப்படியும், உண்மையின்படியும் ஏற்கத்தக்கனவா? இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லும் வல்லமை நெஞ்சுரம் படைத்த எவருக் கேனும் இருக்கிறதா?
இறுதியாக, எம் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட 26 பேரில் 19 பேர் விடுதலை செய்யப்பட்டார்கள். ராஜீவ் கொலை வழக்கு உரிய முறையில் விசாரிக்கப்படவில்லை என்பதற்கும், போகிற போக்கில் யாரை எல்லாமோ குற்றவாளிகளாகச் சித்திரித்தார்கள் என்பதற்கும் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைவிட வேறு உதாரணம் வேண்டியது இல்லை. குற்றச் சதியின் உறுப்பினர்களாக இருந்தார்கள் என்ற ஒரே காரணத்தை வைத்தே, நாங்கள் தண்டிக்கப்பட்டு இருக்கிறோம்.
விடுதலை செய்யப்பட்டவர்களுக்குச் சொல்லப் பட்ட தீர்ப்பு எங்களுக்கும் நூற்றுக்கு நூறு பொருந்தும். ஆனால், குற்றச் சதியின் உறுப்பினர்களாக நாங்கள் நிறுத்தப்பட்டதால், உச்ச நீதிமன்றத்தின் கருணைக் கதவுகள் எங்களுக்காகத் திறக்கவில்லை.
'இந்திரா காந்தி கொலை வழக்கில் ஹேகர் சிங் என்பவருக்கு வெளியார் தலையீடு காரணமாக மரண தண்டனை கொடுத்தேன்; அது எனது மனசாட்சியை இன்றைக்கும் உறுத்துகிறது!’ - முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியே மனசாட்சியின் முன்னால் மண்டியிட்டுச் சொன்ன வார்த்தைகள் இவை. அரசியலுக்கும் அதிகாரத்துக்கும் உச்ச நீதிமன்றம் என்கிற உயரிய கோபுரமே தப்ப முடியவில்லை என்கிறபோது, சாதாரண நபர்களாகிய எமக்கு எதிராக அதிகாரங்கள் விளையாடியதில் ஆச்சர்யம் இல்லை.
சரி, என் மீது அப்படி என்னதான் குற்றச்சாட்டு? சிவராசனுக்கும் எனக்குமான தொடர்புதான் புலனாய்வுப் புள்ளிகளின் கண்ணுக்குக் கிடைத்த முதல் பொறி. சிவராசனோடு பேசியதையோ, பழகியதையோ, நான் மறுக்கவில்லை. நம்மோடு பழகுபவர்களின் அத்தனை விதமான நகர்வுகளும் நமக்குத் தெரிந்தே நடக்கும் என நினைப்பது எப்படி சாத்தியமாகும்? சிவராசனுக்கும் எனக்கும் எப்படிப்பட்ட தொடர்பு? ராஜீவ் கொலை சம்பந்தமான அத்தனை விடயங்களையும் அவர் என்னிடம் பகிர்ந்துகொண்டாரா? அவர் ராஜீவைக் கொல்லப்போகிறார் என்பது எனக்குத் தெரியுமா... தெரியாதா? இப்படி எத்தனையோ கேள்விகள் 21 வருடங்களாக பதில் இல்லாமல் அலைகின்றன; என்னை அலைக்கழிக்கின்றன. சிவராசனுக்கும் எனக்குமான பழக்கம் எத்தகையது என்பதை இங்கே மனம் திறந்து உடைக்கப்போகிறேன். சாவின் தலைக் குள் வாய்விட்ட நிலையில் இருப்பவன் எதையும் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை.
அரசுத் தரப்பு தயாரிப்புகளில், 'எதிர் காலத்தில் நல்லெண்ண உறவினை வளர்க்க உதவும் என்பதி னால், ராஜீவ் காந்திக்கு எமது சார்பில் மாலை அணிவிக்க ஓர் இந்தியப் பெண் வேண்டும்’ என்று சிவராசன் என்னிடம் மார்ச் மாதம் கேட்டதாகவும், 'முயற்சி செய்கிறேன்’ என்று நான் கூறியதாகவும் எழுதப்பட்டு இருக்கிறது. நல்ல உறவினை வளர்க்க அவசியம் என்று சொல்லிக் கேட்கும்போது அதற்கு முயற்சி செய்கிறேன் என்று சொல்வதில் என்ன தவறு? நல்ல விடயத்துக்கு என்னால் உதவ முடியாது என்று தடாலடியாக பதில் சொல்வது முறையா? 'ராஜீவைக் கொல்வதற்கு உதவுங்கள்’ என சிவராசன் என்னிடம் கேட்டு, அதற்கு நான் உதவி இருந்தால்தானே தவறு? தனது உண்மையான திட்டம் எனக்குத் தெரிந்துவிடக் கூடாது என்பதில் சிவராசன் உறுதியாக இருந்தார் என்பதற்கு அரசுத் தரப்பு ஆவணங்களே சாட்சி. கொலைத் திட்டத்தை சிவராசன் என்னிடம் மறைத்து இருந்தாலும், நானே அதைச் சரியாக யூகித்து, 'முயற்சி செய்கிறேன்’ என்று சிவராசனுக்கு பதில் சொன்னதாகவும், அதில் இருந்தே அந்தத் திட்டத்தில் எனக்கு உடன்பாடு இருந்ததாக உறுதியாகத் தெரிவதாகவும் அதிகாரிகள் தரப்பு இப்போதும் வாதிடலாம். அப்படி எனக்கு (நல்லதோ கெட்டதோ) உடன்பாடு இருந்து இருந் தால், அந்த சம்பாஷணைக்குப் பிறகு நான் நளினி யிடம் இதுபற்றிப் பேசி இருப்பேனே... அந்தத் திட்டத்துக்கு நளினியின் சம்மதத்தைப் பெற்று இருப்பேனே... அதைப் பெருமிதமாக சிவராசனிடம் சொல்லி இருக்கலாமே... இப்படி ஏதாவது ஒரு சம்பவம் நிகழ்ந்ததாக அதிகாரிகள் தரப்பால் சொல்ல முடியுமா? என் பெயரில் அதிகாரிகள் இயற்றிய ஒப்புதல் வாக்குமூலத்தில்கூட இப்படிப்பட்ட சம்பவங்கள் ஜோடிக்கப்படவில்லையே... அவசர கதியில் கதாசிரியர்கள் (அதிகாரிகளைத்தான் சொல் கிறேன்!) மறந்து இருக்கலாம்.
ராஜீவ் கொலைத் திட்டத்தில் தனது உண்மையான செயல்பாடுகள் எனக்குத் தெரியக் கூடாது எனவும், என்னை நம்பவைத்து, தனது வேலைக்காகப் பயன் படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் சிவராசன் உறுதியாக இருந்தார். என்னுடைய வார்த்தைகளாக இதை நம்ப வேண்டியது இல்லை. என் வழக்கில் அரசுத் தரப்பு அடுக்கி இருக்கும் ஆவணங்களையும், விசாரணைக் குறிப்புகளையும் படித்தாலே, இது தெரியும்.
'7.5.91 வரை தனக்கும் சுபா, தணு தவிர வேறு யாருக்கும் எமது திட்டம் தெரியாது’ என்று சிவரா சன் அனுப்பிய செய்தியை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு, 'மேற்படி மூவரைத் தவிர, அந்தத் தேதி வரை வேறு யாருக்கும் தெரியாது’ என்று பக்கம் 357, 402 ஆகியவற்றில் உறுதிப்படுத்தி உள்ளது. இந்த இடத்தில் சிவராசன் என்னைப் பொய்யாக நம்பவைக்கச் சொன்னவை, செய்தவை உரிய பலனை அளித்துள்ளன என்பதனை அப்பட்டமாக உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.
21.05.91 அன்று (என்னை சந்தித்துவிட்டுப் போன பிறகு ) மாலை சுபாவும் தணுவும் தமது கொலைத் திட்டத்தைச் சொன்னதாகவும், 'கூட வந்தால் சந்தோஷப்படுவோம்’ என அவர்கள் கேட்க, அதற்கு நளினி உடன்பட்டதாகவும் அரசுத் தரப்பில் எழுதப்பட்டு உள்ளது. மேலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் பக்கங்கள் 356, 357 ஆகியவற்றில் 19.05.91 அன்று சிவராசனின் இலக்கு ராஜீவ் காந்திதான் என தான் உணர்ந்ததாகவும், தனக்கு ஒரு பீதி உணர்வு ஏற்பட்டதால், பொதுக் கூட்டத்துக்கு வர நளினி தயங்கியதாகவும் நீதிபதிகள் சொல்லி இருக்கி றார்கள். ஆனால், 21.05.91 அன்று மாலைதான் நளினி குற்றச் சதியின் (சுபா, தணு சொல்லி உடன்பட்டபோது) உறுப்பினர் ஆனார் என்றும் நீதிபதிகள் சொல்லி இருக்கிறார்கள். அரசுத் தரப்பின் இந்த வாதங்களே நளினி விவகாரத்தில் நான் தலையிடவில்லை என்பதற்கான சாட்சி. நளினியை எந்த இடத்திலும் நான் வற்புறுத்தியது இல்லை. அப்படி இருக்க இந்த வழக்கில் நான் எப்படி குற்றவாளி ஆக்கப்பட்டேன்?
ராஜீவ் காந்திக்கு மாலை அணிவிப்பதும், புகைப்படம் எடுப்பதும்தான் அவசியம் என எம்மை நம்பவைப்பதற்கு சிவராசன் எவ்வளவுஉறுதியாக இருந்தார் என்பதற்கு அரசுத் தரப்பு சாட்சியங்களே சான்றாக உள்ளன. 18.05.91 அன்று மெரினா கடற் கரையில் ராஜீவ் காந்தி மற்றும் ஜெயலலிதா ஆகியோர் பேசிய கூட்டத்துக்கு நான், நளினி, அரிபாபு ஆகியோர் போனதாகவும், அங்கு எடுத்த புகைப்படங்களை சிவராசன் கேட்டுப் பெற்றதாகவும், சிவராசனோடு நான் அங்கே நெருக்கமாகப் பேசி வலம் வந்ததாகவும் அரசுத் தரப்பில் சொல்லப்பட்டு உள்ளன.
7.5.91 அன்று சென்னை நந்தனத்தில் நடந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் பொதுக் கூட்டத் துக்கு சிவராசன், சுபா, தணுவுடன், நானும், நளினியும், அரிபாபுவும் கூடப் போனதாகவும், அங்கு மேடையில் ஏறி மாலை அணிவிக்கத் தவறியமைக்கும், போட்டோ எடுக்க முடியாமல் போனதற்கும் சிவராசன் என்னையும் நளினியையும் திட்டி எச்சரித்ததாகவும் அரசுத் தரப்பில் சான்றுகள் வைக்கப்பட்டு உள்ளன.
என்னிடமோ, புகைப்படக்காரர் அரிபாபுவிடமோ, சிவராசன் எந்த ரகசியத்தையும் சொல்லவில்லை என்பதற்கு ஒரே சாட்சி அரிபாபுவின் மரணம்தான். 'புகைப்படங்கள் முக்கியம்’ எனச் சொன்னதால்தான் அரிபாபு ஸ்ரீபெரும்புதூர் கூட்டத்தில் ராஜீவ் காந்தியை நெருங்கிப் போய் படம் எடுத்தார். தணுவின் உடலில் வெடிகுண்டு பொருத்தப்பட்டு இருப்பது தெரிந்தால், அரிபாபு எப்படி அந்த இடத்தில் முன்னேறி இருப்பார்? தணு, சுபாவுடன் எந்தச் சலனத்தையும் வெளிப்படுத்தாதவராக எப்படி உரையாடி இருப்பார்? எம்மை எப்படி நம்பவைத்துத் தனது வேலைகளுக்கு சிவராசன் பயன்படுத்தினாரோ... அதேபோல்தான் அரிபாபுவையும் பயன்படுத்தினார். 'யாருக்கும் தெரியக் கூடாது; அதே நேரம் திட்டமும் கச்சிதமாக நிறைவேற வேண்டும்’ என்பதில் மட்டுமே சிவராசன் உறுதியாக இருந்தார். குண்டுவெடிப்பு நிகழ இருந்த கடைசி நிமிடம் வரை அரிபாபுவுக்கு அப்படி ஒரு சம்பவம் நடக்கப்போவது தெரியாது. இந்த விடயத்தை அரசுத் தரப்புச் சான்றுகளே உறுதியாகச் சொல்கின்றன.
சிவராசனின் வார்த்தைகளுக்காக புகைப்படங் களை நல்லபடி எடுக்க வேண்டும் என நினைத்த அரிபாபு சிதறிக்கிடந்த காட்சி இன்றைக்கும் என்னை உலுக்குகிறது. அவர் எடுத்த புகைப்படங்கள்தான் ராஜீவ் கொலையை யார் செய்தது என்பதற்கான ஒரே சாட்சி. வாழைக் குருத்தாக வாழ்ந்திருக்க வேண்டிய அரிபாபு, சடலமாகக் கிடந்த கோலம் இன்றைக்கும் நெஞ்சை அறுக்கிறது.

மிஸ்டர் மியாவ்: பாவம் த்ரிஷா!

'படப்பிடிப்புக்குப் போகிறேன்’ என்று நயன்தாராவிடம் சொல்லிவிட்டு வெளிநாட்டில் மனைவி, குழந்தையோடு பிரபுதேவா குதூகலித் ததை யாரோ ஒரு புண்ணியவான் போட்டோ ஆதாரத்துடன் நயனுக்குச் சொல்லிவிட்டாராம். அதனால்தான், கொச்சினில் ருத்ரதாண்டவம் ஆடி பிரபுதேவாவை வீட்டில் இருந்து விரட்டினாராம் நயன்தாரா. 'இருவரும் சேர்ந்துவிட்டோம்...’ என்று இப்போது டூயட் பேட்டி தந்தாலும், உள்ளே எரிமலை கொதிக்கிறதாம்.
 தெலுங்கானா பிரச்னையால் ரொம்பவும் திண்டாடுபவர், நம்ம மாமி த்ரிஷாதான். ஹைதரா பாத் அருகில் அம்மணி கோடிக்கணக்கில் முதலீடு போட்டுக் கட்டி வரும் ஸ்டார் ஹோட்டல் பணிகள் போராட்டத்தால் தடைபட்டு நிற்கிறதாம்.

மறைந்த நடிகர் முரளி, டைரக்டர் பாலாவின் தீவிர ரசிகர். அவருடைய ஆசியோ என்னவோ... பாலாவின் அடுத்த பட ஹீரோ, முரளியின் வாரிசு அதர்வா. விக்ரம் நடிக்கும் 'ராஜபாட்டை’ படத்தை எடுத்து வரும் தயாரிப்பாளர் பிரசாத் படத்தைத் தயாரிக்கிறார்.  ராகவேந்திரா லாரன்ஸ் தயாரித்து இயக்கிய 'காஞ்சனா’ படத்தின் விநியோக உரிமையை மொத்தமாக வாங்கினார், ராம.நாராயணன். கோடி கோடியாகக் கோணிப்பையில் கரன்சி அள்ளியவர், இப்போது 'காஞ்சனா’வை அப்படியே கன்னடத்தில் ரீமேக் செய்து இயக்கப்போகிறாராம்.
 'கோவா’ படத்துக்குக் கொடுத்த பணத்தைத் திருப்பித் தரவில்லை என்று லதா ரஜினி மற்றும் சௌந்தர்யா மீது சைதை கோர்ட்டில் வழக்கு தொடுத்தார் ஃபைனான்ஷியர் சுசில்குப்தா. பணத்தை மொத்தமாக ரஜினி குடும்பம் கொடுத்த பிறகும் டாக்குமென்ட்டைத் தராமல் இழுத்தடித்தாராம். கடந்த 11-ம் தேதி குப்தாவை கைது செய்து புழல் சிறையில் அடைத்துவிட்டார்கள்.

மாமிக்கும்  மங்களத்துக்கும்  மகா சண்டை.  ''படத்தில் மட்டுமில்லே... நிஜத்திலும் நீ கால் கேர்ள்...'' என்று மாமி குரல் உயர்த்த, ''நான் உன்னை மாதிரிப் புதுப் பணக்காரி இல்லை... கர்நாடகா வந்து பார். நான் பூர்வீகப் பணக்காரி...'' என்று எகிறியதாம் மங்களம்.

********************************************************************************************

0 comments:

Post a Comment

Cricket

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010