********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

சென்ற வார செய்திகள் (23 ஆகஸ்ட் 2011)

Tuesday, August 23, 2011

மிஸ்டர் கழுகு: கஸ்டடியில் கக்குவாரா 'பொட்டு'!

தமான, குளிரான மாலை நேரத்தில் வந்தார் கழுகார். அதே விநாடி, நம் மொபைலுக்கு ஒரு  மெசேஜ். 
'பொட்டு சுரேஷ§க்கு ஒரு நாள் போலீஸ் கஸ்டடி!’ என்ற தகவலைச் சொன்னதுமே கழுகார்,
''அப்படியானால், அக்னி நட்சத்திரம்போல பொட்டு சுரேஷ§ம் மதுரை போலீஸ் கமிஷனர் கண்ணப்பனும் முதன்முறையாகச் சந்திக்கப்போகிறார்களா?'' என்றார்.
''இரண்டு பேருமே மதுரையில் இருப்பவர்கள்தானே... இதுவரை சந்தித்தது இல்லையா, என்ன?'' என்ற சந்தேகத்தைக் கிளப்பி, கழுகாரின் கச்சேரியைத் தொடங்கி வைத்தோம்.
''பொட்டு சுரேஷை கஸ்டடியில் எடுக்க எத்தனையோ தடவை முயற்சித்தது, மதுரை போலீஸ். ஆனால், ஒவ்வொரு முறையும் திறமையான வக்கீல்களை வைத்துத் தப்பி வந்தார் என்ற கவலை போலீஸாருக்கு இருந்தது. 'இது சிவில் மேட்டர்தானே’ என்று கஸ்டடிக்குப் போகாமல், ஒவ்வொரு முறையும் தப்பிய சுரேஷ§க்குச் சிக்கலைக் கொடுத்தது, ஆட்டோ டிரைவர் பாண்டியராஜன் கொலை வழக்கு. அது சம்பந்தமாக எஸ்ஸார் கோபி பல விஷயங்களை தனது கஸ்டடி வாக்குமூலமாகக் கொடுத்துவிட்டார். அதை உமது நிருபரும் விரிவாக எழுதி இருந்தாரே... 'சுரேஷ் சொன்னதால்தான் இந்தக் காரியத்தைச் செய்தோம்’ என்று எஸ்ஸார் கோபி சொன்னதாகச் சொல்கிறார்கள். அதை அடிப்படையாக வைத்து பாண்டியராஜன் கொலை வழக்கிலும் சுரேஷை சேர்த்துவிட்டது போலீஸ். இப்போது கஸ்டடி எடுக்கச் சரியான டைம் என்றும் குறித்தது...''
''உம்... சொல்லும்!''
''பாண்டியராஜன் கொலை எதற்காக, யாருக்காகச் செய்யப்பட்டது என்ப தைச் சுற்றித்தான் இந்த விசாரணைகள் இருக்கும். 'ஒரு கொலையை எப்படி சாலை விபத்துபோல ஆக்கினார்கள்?' என்பது குறித்தும், இதில் எந்தெந்த போலீஸ் அதிகாரிகள் ஆதர வாகச் செயல்பட்டார்கள் என்பதுபற்றியும் விசாரிப்பார்கள். அழகிரியில் ஆரம்பித்து லோக்கல் போலீஸ் வரை பலரையும் குறிவைத்து இந்த விசாரணை நடத்தப்பட உள்ளதாம்!''
''ஏதோ அக்னிநட்சத்திரம் என்றீரே?''
''மதுரைக் கமிஷனர் கண்ணப்பனுக்கும் பொட்டு சுரேஷ§க்கும் எப்போதும் ஆகாது என்று தி.மு.க-வினர் சொல்கிறார்கள். இந்த மோதல், கடந்த தேர்தலின்போதே ஏற்பட்டதாம். 'என்னுடைய வீட்டில் யாரோ வெடிகுண்டு வீசிவிட்டார்கள்’ என்று சொல்லித் தனக்கும் தனது வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு வாங்கினார், பொட்டு சுரேஷ். மதுரைக்கு கமிஷனராக வந்ததும் இந்த போலீஸ் பாதுகாப்பு நீட்டிப்புக்கான ஃபைல் கண்ணப்பனின் மேஜைக்கு வந்ததாம். அதில் எழுதப்பட்டு இருந்த காரணங்கள் அனைத்தையும் பேனாவால் அடித்த கமிஷனர், 'போலீஸ் பாதுகாப்பை ரத்து செய்யலாம்’ என்று நோட் போட்டாராம். இதைக் கேள்விப்பட்ட பொட்டு கடுப்பாக... யார் யார் மூலமோ எல்லாம் சொல்லி அனுப்பியும், எதற்குமே அசைந்து கொடுக்க வில்லையாம் கண்ணப்பன்!''
''அப்புறம்?''
''அப்புறம் ஒரு கண்டிஷன் போட்டுள்ளார் கமிஷனர். 'என்னிடம் நேரில் வந்து தனது தரப்பு கோரிக்கைகளைச் சொல்லச் சொல்லுங்கள்’ என்றா ராம் கண்ணப்பன். ஆனால், பொட்டு வரவே இல்லை யாம். 'நோ செக்யூரிட்டி’ என்பதே கடைசியில் முடிவானது. அதில் இருந்தே கண்ணப்பனை நேரில் பார்ப்பதைத் தவிர்த்து வந்தாராம் சுரேஷ். ஆனால், இப்போது கஸ்டடியில் இருக்கும்போது அவர் மேற்பார்வையில்தானே அனைத்தும் நடக்கும்...''
''அனைத்தும் என்றால்?''
'' 'எங்களுக்குத் தேவை வாக்குமூலம். அதை எப்படியும் வாங்குவோம்’ என்று போலீஸ் சொல் லும்.காலையில் நான் ஒரு அதிகாரியிடம் பேசிக் கொண்டு இருந்தபோது அவர் சொன்னார்... 'ஒரு மெயின் மேட்டரின் முக்கிய க்ளைமாக்ஸ் நெருங்கிக் கொண்டு இருக்கிறது’ என்று!''
''எந்தக் கைது நடவடிக்கைக்கும் நாங்கள் பயந்தவர்கள் அல்ல என்று அழகிரியும் அவரது மனைவியும் சொல்கிறார்களே?''
''நீர் இப்படிக் கேட்கிறீர். மதுரை ஆட்கள் வேறு மாதிரிச் சொல்கிறார்கள். பெங்களூருவைச் சேர்ந்த பிரபலத் தொழிலதிபரைப் பிடித்து, தமிழக ஆட்சி மேலிடத்தை அழகிரி தரப்பினர் நெருங்கிவிட்டதாகவே சில முக்கிய மனிதர்கள் சொல்கிறார்கள். 'எனக்கு ஒரு இடத்துல இருந்து இப்படி தகவல் வந்திருக்கு. அதனாலதான் அண்ணன் பயமில்லாம இருக்கார். நம்மையும் பயப்பட வேணாம்னு சொல்லிட்டார்’ என்கிறார்கள் சிலர் மதுரையில். 'முதல்வர் இந்த மாதிரியான மேட்டர்களில் ஆர்வம் காட்ட மாட்டார். அவர் மதுரையை மொத்தமாகத் துடைத்து எடுக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டார். அதை எதிர்கொள்ள முடியாதவர்கள்தான்... இதுபோன்ற தேவை இல்லாத வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள்’ என்று தென் மாவட்ட அமைச்சர் ஒருவர் சொன்னாராம்.  
திருச்சிப் பிரமுகரின் தம்பி ஒருவர்  கடந்த ஒரு மாத காலமாக ஊரிலேயே இல்லை. இந்தோனேஷியா பக்கம் போயிருப்பதாகப் பேச்சு. அங்கே இருந்து என்ன மூவ் செய்கிறார் என்பதை திருச்சி தி.மு.க. பிரமுகர்களிடம் கேட்டால், இதேபோல்தான் அங்கேயும் பேசிக்கொள்கிறார்கள். 'நாங்க அந்த அம்மாட்ட பேசி முடிச்சாச்சு. அதனால கவலைப்படாதீங்க’ என்கிறதாம் இந்தோனேஷியக் குரல்!''
''நெருப்பு இல்லாமல் புகையுமா?''
''நெருப்பே இல்லாமல் புகை மூட்டிவிடுகிறார்கள் என்று ஆளும் தரப்பு சொல்கிறது!''
''கிரானைட் குவாரி விவகாரங்களில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கும் தமிழகத் தொழில் துறை அமைச்சர் வேலுமணிக்கும் நேரடியாகவே மோதல் கிளம்பிவிட்டதே?''
''மதுரை பக்கம் டாமின் குவாரிகள், தனியார் பட்டா நில குவாரிகள் இரண்டிலும் நடந்து வரும் சட்ட விரோதச் செயல்களைத் தட்டிக்கேட்கும் நடவடிக்கையில் அமைச்சர் வேலுமணி இறங்கினார். 'மதுரைப் பக்கம் பல மலைகளைக் காணோம். ஒரு தொழில் அதிபர் பிளான் பண்ணி குவாரி எடுக்கிறதா சொல்லி கபளீகரம் செஞ்சுட்டார். அவரும் அழகிரி பெயரைத்தான் சொல்றார்’ என்று முதல்வரிடம் அமைச்சர் விவரிக்க... அவர் அதிர்ந்துபோனாராம். இதைத்தான் சட்டசபையிலும் வேலுமணி பட்டவர்த்தனமாகப் போட்டு உடைத்தார்.''
''அதைத்தான் அழகிரி தனது அறிக்கை மூலமாகப் பகிரங்கமாக மறுத்துவிட்டாரே?''
''அழகிரியின் பதிலைக் கேட்டு டென்ஷன் ஆனாராம், அமைச்சர் வேலுமணி. அதிகாரிகளைக் காய்ச்சி எடுத்துவிட்டாராம். தடதடவென ஆதாரங்கள் அமைச்சர் முன்பு வந்து விழுந்தன. ஐந்து நபர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, மதுரைப் பக்கம் ரெய்டு நடத்த சொல்லிவிட்டாராம். அவர்கள் அழகிரியின் நெருங்கிய நண்பர்கள் என்கிறது ஆளும் தரப்பு. விளையாட்டு தொடர்புடைய ஒரு குவாரியின் ஜாதகத்தை அதிகாரி ஒருவர் அமைச்சரிடம் காட்டி, ஏதோ ஆவண மோசடி நடந்திருப்பதாக ஆதாரத்துடன் சுட்டிக்காட்டினாராம். 'இதை முன்பே சொல்லியிருக்கக் கூடாதா? சட்டசபையில் இந்த ஆதாரத்தைக் காட்டி இருப்பேனே?' என்றாராம் அமைச்சர். முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் தொடர்புடைய குவாரிகளின் பின்னணி குறித்தும் முழு விவரங்களைச் சேகரித்துவிட்டாராம் அமைச்சர்.''
''இதையெல்லாம் வைத்து?''
''அபராதம் விதிப்பு, கைதுப் படலம் என்று கிரானைட் உரிமையாளர்கள் பலரும் மாட்டப் போகிறார்கள். பொறுத்திருந்து பாரும். பதிலுக்கு இவர்கள் அப்ரூபவர்களாக மாறினால் நல்லது என்று  ஆட்சி மேலிடம் நினைக்கிறதாம்!'' என்ற கழுகார்,
''சில செய்திகளைச் சொல்லி விடுகிறேன்... குறித்துக்கொள்ளும்!'' என்று துணுக்குச் செய்திகளைச் சிதறவிட்டார்.''திகார் ஜெயிலில் இருக்கும் மகள் கனிமொழியை நேரில் போய்ப் பார்க்க, தந்தை  கருணாநிதியின் மனம் துடிக்கிறது. 'மகளைப் பார்த்து எத்தனை நாளாச்சு’ என்று அம்மாவும் சொல்கிறார். ஆனால், குடும்ப உறவு ஒன்று தடுப்ப தாகச் சொல்கிறார்கள்!
''குடும்பப் பாசத்தைத் தடுக்க முடியுமா?''
''வக்கீல் சங்கரசுப்புவின் மகன் சதீஷ்குமாரின் மரணத்துக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறது சி.பி.ஐ. கோவை சிறையில் இருக்கும் கிரிமினல் ஒருவர்தான் இந்தக் கொலைக்கான பின்னணி என்று யாரோ சொல்ல... அங்கே முதல்கட்ட விசாரணைக்குப் போனது, சி.பி.ஐ. ஆனால், சம்பவத்துக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ரிட்டர்ன் ஆகிவிட்டார்களாம். ஹை-கோர்ட் துளைத்தெடுப்பதைப் பார்த்து நாளுக்கு நாள் சி.பி.ஐ. அதிகாரிகள் நடுக்கத்தில் இருக்கிறார்கள்...''
''உண்மை எப்போதும் தாமதமாகத்தான் தெரியவரும்!''
''இஃப்தார் நிகழ்ச்சியை முதல்வர் ஜெயலலிதா 26-ம் தேதி லீ மெரிடியன் ஹோட்டலில் நடத்துகிறார். விழாவுக்கு, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரையும் அழைக்கப்போகிறாராம். அநேகமாக அது வெற்றிக்கான விருந்தாகக்கூட இருக்கலாம்!''
பறந்தார் கழுகார்!
******************************************************************************

கழுகார் பதில்கள்

முருகேசன், திருவள்ளூர்
   ஓர் அரசாங்கத்துக்கு எதிராக 100 பேர் ஆர்ப்பாட்டம் நடத்துவது, 10 பேர் உண்ணாவிரதம் இருப்பது... இதனால் எல்லாம் பயன் இருக்குமா?
'பேட்டில் ஆஃப் அல்ஜீரியர்ஸ்’ படத்தில் ஒரு காட்சி வரும்...
எதிர்ப்பு இயக்கத்தின் தலைவர் மெஹூதியிடம், 'உங்களது இயக்கத்தால் அதிக பலம் பொருந்திய பிரெஞ்சு ராணுவத்தை தோற்கடிக்க முடியுமா?’ என்று ஒரு நிருபர் கேட்பார்.
'முடியாதுதான். ஆனால், வரலாற்றின் நியதியை நீண்ட காலத்துக்கு பிரெஞ்சு ராணுவத்தால் பின்னுக்குத் தள்ள முடியாது!’ என்று மெஹூதி சொல்வதாக அந்தக் காட்சி பேசும். அப்படித்தான், நோக்கத்தில் உண்மையும் உறுதியும் இருக்குமானால்... போராட்டக்காரர்களின் பலத்தினால் மட்டும் அல்ல, எதிரியின் பலவீனத்தி னாலும் வெற்றியைக் கைப்பற்றலாம்!
க.முத்துராமசுந்தரம், கழுகுமலை.
  அண்ணா ஹஜாரே சாதிப்பாரா?
தமிழகத்தில் காங்கிரஸை வீட்டுக்கு அனுப்பியவர் அண்ணாதுரை. அதை அகில இந்திய அளவில் அண்ணா ஹஜாரே தனது வாழ்க்கையில் சாதிக்க வாய்ப்பு உண்டு! ஆனால், வாழவிடுவார் களா... பார்க்கலாம்!
 கணேசமூர்த்தி, விருதாசலம்.
'ஓர் அரசை ஆட்சியில் அமர்த்தவோ, அகற்றவோ ஓட்டுப் போடுவதற்குத்தான் மக்களுக்கு உரிமை உண்டு. ஆனால், சட்டம் இயற்றுவதற்கு அதிகாரம் இல்லை!’ என்று கறாராகச் சொல்கிறாரே உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்?
சட்டத்தை நேரடியாக இயற்று வதற்கு பொதுமக்களுக்கு அதிகாரம் இல்லை என்பது உண்மை. ஆனால், எந்த மாதிரியான சட்டம் இயற்ற வேண்டும், அதன் சாராம்சம் எத்தகையதாக இருக்க வேண்டும் என்று ஆலோசனை சொல்வதற்கு மக்களுக்கு அதிகாரம் உண்டு அமைச்சரே!

அதற்காகத்தான் வெள்ளையர்களிடம் இருந்து போராடி சுதந்திரம் பெற்றோம் சிதம்பரத்தாரே... இல்லையென்றால், வெள்ளைக்காரனிடமே வேலை பார்த்து வெறும் கூலியை வாங்கிக்கொண்டு வயிறு கழுவி வாழ்ந்திருக்கலாமே!சட்டத்தை நேரடியாக இயற்று வதற்கு பொதுமக்களுக்கு அதிகாரம் இல்லை என்பது உண்மை. ஆனால், எந்த மாதிரியான சட்டம் இயற்ற வேண்டும், அதன் சாராம்சம் எத்தகையதாக இருக்க வேண்டும் என்று ஆலோசனை சொல்வதற்கு மக்களுக்கு அதிகாரம் உண்டு அமைச்சரே!
'விதியோடு நாம் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டோம்’ என்று சொல்லி மவுண்ட் பேட்டனுடன் கையெழுத்துப் போட்டது நேரு அல்ல. இந்திய மக்கள். கடந்த ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின உரையில் காந்தி, நேரு பெயரைக் கூடச் சொல்ல மறப்பவர்களுக்கு இதெல்லாம் ஞாபகம் இருக்குமா?
 பெ.வேலுமணி, நாராயணபாளையம்.
மானமுள்ள அரசியலுக்கு எது இலக்கணம்?
செய்த தவறை மான, அவமானம் பார்க்காமல் ஒப்புக்கொள்வதுதான்!
'அரசியின் கால் சிலம்பைத் திருடியவன்’ என்று காவலர்களால் தவறாகக் குற்றம் சாட்டப் பட்டான் கோவலன். அதை விற்க அலைந்து கொண்டிருப்பதாக அரண்மனைக்குத் தகவல் வந்தது. 'அவனைக் கொண்டு வருக’ என்பதற்குப் பதிலாகக் 'கொன்று வருக’ என ஆராயாமல் உத்தரவிட்டான் மன்னன் பாண்டியன் நெடுஞ்செழியன். 'தேரா மன்னா!’ என்று கொந்தளித்து மன்னன் செய்தது தவறு என்பதைத் தனது கால் சிலம்பின் தரத்தை வைத்து மெய்ப்பித்தாள் கண்ணகி.
உண்மையை உணர்ந்ததும்,  நீதி நெறி தவறியதற் காக 'யானோ மன்னன்? யானே கள்வன்’ என்றுஅரியணையில் இருந்து வீழ்ந்து உயிர்நீத்தான் பாண்டியன்.
இதைவிட வேறு என்ன இலக்கணம் வேண்டும்?
 பி.சூடாமணி, சாலி கிராமம்.
  கொல்கத்தா நீதிபதி சௌமித்ர சென், மாநிலங்கள் அவைக்கு வந்து விளக்கம் அளித்திருப்பது எதைக் காட்டுகிறது?
லோக்பால் சட்டத்துக்குள் நீதிபதிகளையும் நிச்சயம் சேர்க்க வேண்டும் என்பதைத்தான்!
சௌமித்ர மீதான குற்றச்சாட்டு, அவர் நீதிபதி யாக ஆவதற்கு முன்பு நடந்த விஷயத்தைப்பற்றியது. அப்படிப்பட்ட மனிதரை யார் நீதிபதி ஆக்கியது என்பதுதான் இன்றைய முக்கியக் கேள்வியே. மாநிலங்கள் அவையில் பேசிய முன்னாள் சட்ட அமைச்சர் அருண் ஜெட்லி,
'இந்தியாவில் நீதிபதிகள் நியமனம் செய்யும் நடைமுறையை மறுஆய்வு செய்ய வேண்டும். நீதிபதிகளைத் தேர்வு செய்ய தேசிய நீதித் துறை கமிஷன் என்ற அமைப்பை உருவாக்க வேண்டும்’ என்றார். நீதிபதிகள் நியமனத்தில் இறுக்கமான தன்மை வரவேண்டும். அதைச் செய்தால் மட்டுமே, சௌமித்ர சென்கள் குறைவார்கள்!
 ஈரோடு 'சாமி’, திருப்பூர்.
உண்மையில் தவறு யார் பக்கம்? நம் மீனவர்கள் மீதா? இலங்கைக் கடற்படையினர் மீதா? நம் மீதுதான் தவறு என்றால் இதற்குத் தீர்வுதான் என்ன?
இந்திய எல்லை, சர்வதேச எல்லை, இலங்கை எல்லை... இம்மூன்றும் நிர்ணயிக்கப்பட்டவைதான். ஆனால், அதற்கான அடையாளங்கள் கடல் பகுதியில் அடையாளப்படுத்தப்படவில்லை. இதுதான் அத்தனை துன்பங்களுக்கும் காரணம். இடம் மாறி, தவறுதலாக வரும் மீனவர்களைக் கண்டித்து உடனடியாக இலங்கைக் கடற்படை அனுப்பிவிடுமானால்... பிரச்னை இல்லை. ஆனால், அவர்களின் பல கோபங்களை தமிழக மீனவர்களைத் தாக்குவதன் மூலமாகத் தீர்த்துக் கொள்ள நினைக்கிறார்கள்.
இந்தியக் கடற்படை, சிங்கள மீனவனை அடித்துவிட்டால்... இலங்கை அரசு எப்படிக் கொந்தளிக்குமோ, அப்படி இந்திய அரசு செயல் பட்டால் மட்டுமே இதற்கு இறுதித் தீர்வு சாத்தியம்!
 அ.கி.வடிவேல், நத்தம் புதூர்.
  ஒரு ஜோக் சொல்லுங்கள்!
'அண்ணா ஹஜாரேவின் போராட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டுச் சதி இருக்கிறது. அதை மத்திய அரசு கண்டுபிடிக்க வேண்டும்!’ என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர் பாளர் ரஷித் ஆல்வி சொல்லி இருப்பதைப் பார்த்தால் சிரிப்புத்தானே வருகிறது!
 எம்.சம்பத், வேலாயுதம் பாளையம்.
  அப்ப, நேர்ல போய்த்தான் தீரணுமா..?
ஆமாம்... சட்டத்தை மதிப்பவராக இருந்தால்!
*******************************************************************************

காக்கையை விரட்டிச் செல்லக் கூடாது!

கொசு போனால் என்ன... இருந்தால் என்ன?
'தி.மு.க., அ.தி.மு.க. என இரு திரா விடக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து, அவர்களை ஆட்சியில்அமர்த்தியதற்காக மன்னிப்பு கேட் கிறேன்!’ என்கிறார் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ். இதைப்பற்றி சம்பந்தப்பட்ட இரு கட்சியினரும் என்ன நினைக்கிறார்கள்?

அ.தி.மு.க-வின் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளரும் சென்னை துறைமுகம் தொகுதி எம்.எல்.ஏ-வுமான பழ.கருப்பையாவிடம் பேசினோம்.
''அ.தி.மு.க. இனி பா.ம.க-வை சேர்த்துக் கொள்ளத் தயாராக இல்லை. தி.மு.க-வோ மூழ்கிக் கொண்டு இருக்கும் ஒரு கப்பல். வேறு என்ன வழி, பா.ம.க. தனித்துத்தானே நிற்க வேண்டும். இதில் என்ன வாய் வீச்சு? 2016-ல் ஆட்சிக்கு வரப் போவதாக கூச்சமே இல்லாமல் சொல்கிறார் ராமதாஸ். அடுத்த ஆண்டு நடக்கப்போகும் நடைப் பந்தயத்தில் வெல்லப்போவதாக கருணாநிதி சொன் னால் எப்படியோ... அப்படித்தான் இதுவும்!
தமிழ்நாட்டில், ஊருக்கு ஏழு கருணாநிதிகள் இருக்கிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ் நாடு வேட்டைக் காடாக இருந்தது. உலகம் கண்டும் கேட்டும் அறிந்திராத மாபெரும் ஊழலை தி.மு.க. அமைச்சர் ஆ.ராசா செய்திருக்கிறார். எவனும் சொத்து வைத்துக்கொள்ள முடியவில்லை; அடித்துப் பிடுங்கிக்கொண்டே இருந்தார்கள். மக்களே கொதித்தெழுந்து மாற்றத்தைக் கொண்டு வந்தார்கள். இதை பா.ம.க. போன்ற ஒரு கட்சி யின் தலைமையால் உய்த்து உணர்ந்து அறிய முடியவில்லை. எல்லாம் துடைத்தெறியப்பட்ட பிறகு, 'இது தி.மு.க. மீதான வெறுப்பால் வந்த தோல்வி’ என்று சொல்வதற்கு, என்ன ஆராய்ச்சி தேவைப்படுகிறது?

ராமதாஸின் புத்திர பாசம்தான் அவரது அரசியல் குளறுபடிகளுக்குக் காரணம். ஒரு கட்சியோடு கூட்டணி பேசும்போது, முதல் நிபந்தனையாக தன் மகனை எந்த சிரமமும் இல்லாமல் மாநிலங்கள் அவை உறுப்பினர் ஆக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் நிலை என்றால், அந்தக் கட்சியை அழிக்க இந்த பலவீனம் ஒன்றே போதும்!திராவிடக் கட்சிகளோடு இதுவரை மாறி மாறிச் சேர்ந்ததற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று வேறு சொல்கிறார், ராமதாஸ். அவர் மன்னிப்பு கேட்பது என்றால், ஈழம் அழிவதற்குத் துணைபோன கருணாநிதியுடன் கைகோத்து நின்றதற்கு தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்!
நடந்து முடிந்த தேர்தலில், ஏறத்தாழ சாதி கட்சிகள் ஒடுக்கப்பட்டுவிட்டன. யானையின் மீது இருந்த ஒரு கொசு, 'யானையின் காதுக்குள், நான் போவதாக முடிவு செய்துவிட்டேன்...’ என்று சொன்னதாம். கொசு இருந்தால் என்ன, போனால் என்ன?'' - நையாண்டியாக முடித்தார், பழ. கருப்பையா.
தி.மு.க. கொள்கைப் பரப்புச் செயலாளரும் மாநிலங்கள் அவை தி.மு.க. குழுத் தலைவருமான திருச்சி சிவாவிடம் பேசினோம்.
''முதலில் ராமதாஸின் வார்த்தைகள் எந்த அளவுக்கு ஸ்திரத்தன்மை வாய்ந்தவை என்பதை எதிர்வரும் நாட்கள்தான் சொல்ல வேண்டும்.  தேர்தல் நேரங்களில் கட்சிகளுக்கு இடையில் வலுவான கொள்கை அடிப்படையில் கூட்டணி அமைப்பது எனும் நிலை மாறி, அப்போதைய முக்கியப் பிரச்னைகள் அடிப்படையில் கூட்டணி என மாறியதற்குப் பின்பு, இந்த இரண்டு காரணங் களுக்கும் உட்படாமல், வேறு சில காரணங்களின் அடிப்படையில் முடிவெடுக்கும் கட்சிகள், அரசிய லின் தரத்தை நீர்த்துப் போகச்செய்யும்.  இவருடைய கட்சி எந்த வரிசையில் என்பதைவிவரம் தெரிந்த தமிழக மக்களின் கருத்துக்கே விட்டுவிடுகிறேன். எந்த அரசியல் கட்சியும் ஆட்சிக்கு வர நினைப் பது அவரவர் உரிமை. அது நடைமுறையில் சாத் தியமா என்பதை அவர்களின் கடந்த காலச் செயல் பாடுகளும் நிகழ்கால நிலைப்பாடுகளும்தான் தீர்மானிக்கும்.
'லட்சியப் பயணம் போகும்போது, காகங்கள் நம் மீது எச்சமிடும். அதற்காக, காகத்தை விரட்டிக்கொண்டு செல்லக் கூடாது. அதை விரட்டுவதிலும் வீழ்த்துவதிலும் நமக்கு எந்தப் பெருமையும் இல்லை. காகத்துக்குத் தெரிந்ததும் புரிந்ததும் இவ்வளவுதான் என்று எச்சத்தைத் துடைத்தெறிந்துவிட்டு, பயணத்தை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்!’ என அண்ணா சொன்னதை நாங்கள் நினைத்துக் கொள்கிறோம்!'' என்றார் அர்த்தபுஷ்டியுடன் சிரித்தபடி.
இப்போ என்ன சொல்றீங்க?
இரா.தமிழ்க்கனல்
படங்கள்: என்.விவேக்

பேரறிவாளன் வேடத்தில் அதர்வா!

சினிமாவாகிறது நிஜம்

பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவரின் தூக்குத் தண்டனைக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்புக் குரல்கள் வலுத்து வரும் நிலையில்... பேரறிவாளன் வாழ்க்கை, 'பேரறிவாளன்’ என்ற தலைப்பிலேயே திரைப்படமாகத் தயாராகிறது. விளம்பரப் படங் களின் இயக்குநரான ரவி இன்பா வின் முதல் படமான இதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளி வருமாம்! 
மூவரின் கருணை மனு நிராகரிக் கப்பட்ட சூழலில், ''இப்படிப் படம் எடுப்பது, அந்தப் பரபரப்பை வணிகமாக பயன்படுத்திக் கொள் வதுபோல் ஆகாதா?'' என்ற கேள்வி யுடன் ரவி இன்பாவை சந்தித்தோம்.
''முதலில் ஒரு விஷயத்தைச் சொல்லி விடுகிறேன். கருணை மனு தள்ளுபடி செய்யப்பட்டது இப்போதுதான். ஆனால், எட்டு மாதங்களுக்கு முன்பே பேரறிவாளனுடன் பேசி கதையை முடிவு செய்தேன். மூன்று மாதங்களுக்கு முன்பே முழு திரைக்கதையையும் எழுதி விட்டேன். அப்போதே நடிகர் அதர்வாவுடன் பேச... அவரும் ஒப்புக்கொண்டார். படத்தின் வசனத்தை 'ரெட்டைச்சுழி’ இயக்குநர் தாமிரா எழுதுகிறார். அதனால், இது பரபரப்புக்காக எடுக்கப்படும் படம் அல்ல.
ஏற்கெனவே, 'தம்பை யனின் காடு’, 'ஆசை’ என மலைவாழ் மற்றும் அடித்தட்டு மக்களின் வாழ்வியலைக் குறும்படங் களாக எடுத்துள்ளேன். சில ஆண்டுகளுக்கு முன்பு பேரறிவாளனைப்பற்றிப் படித்தேன். அப்போதே அவர் மீது ஈடுபாடு ஏற்பட்டது.
சீமானுடன் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு வேலூர் சிறைக்குச் சென்று பேரறிவாளனை சந்தித்தேன். அவரது பேச்சு, எழுத்துகள், தமிழ் உணர்வு, ஒழுக்கம் போன்றவை என்னை உலுக்கிவிட்டன. எனவே, ஓர் ஆண்டுக்கு முன்பே அவரது கதையைத் திரைப் படமாக்க அவரிடம் சிரமப்பட்டு அனுமதி பெற்றேன். இதற்காக மாதம் இரு முறையாவது சிறைக்குச் சென்று அவரோடு விவாதித்தேன்.
திரைப்படம் என்றால் காதல் இல்லாமலா? அதுபற்றி அவரிடம் சொன்னபோது, அவர் கண்கள்துளிர்த்தன. அதற்கான காரணத்தை அவர் சொல்லவில்லை, நானே உணர்ந்து கொண்டேன். 19 வயதில் சிறைக்கு வந்து இன்று 40 வயது வரை கம்பிகளுக்குள்ளே தனது இளமையை இழந்தவர் அவர். ஆனாலும், அவர் எனக்காக காம்ப்ரமைஸ் ஆனார். 'படத்துக்குத் தேவையா னால் நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள்...’ என்றார். அவருக்கேற்ற காதலைத் தயார் செய்து வருகிறோம்.
கதை பெரிய ரகசியம் அல்ல... பேரறிவாளனின் வாழ்க்கைதான். ஆனால், க்ளைமாக்ஸ் கல் மனங் களையும் கரைத்துவிடும். ஜோலார் பேட்டையில் குயில்தாசன் - அற்புதம் அம்மாள் தம்பதியின் மகனாக எளிமை யான வாழ்க்கையை வாழ்ந்தவர் பேரறிவாளன். திராவிடப் பாரம்பரியம் கொண்ட குடும்பம். பெரியார் சிந்தனைகளை ஏற்றுக்கொண்ட குடும்பம்.
ஒரு முறை பேரறிவாளனிடம் கேட்டேன்... 'அண்ணே, நீங்கள் உண்மையிலே தப்பு செஞ்சீங்களா,இல்லையா?’ என்று. மனம் உவந்து, 'நான் தனி ஈழம் அமைய வேண்டும் என்ற கொள்கை கொண்டவன். பிரபாகரனை நேசிக்கிறேன். உண்மையான தமிழ் உணர்வு எனக்கு இருக்கிறது. பெரியாரின் கொள்கை பிடிக்கும். எலெக்ட்ரானிக் மெக்கானிக் படித்துள்ளேன். இந்தச் சூழலில், அவர்கள் கேட்டு நான் பேட்டரி வாங்கிக் கொடுத்தேன் என்றார்கள். அந்த 9 வோல்டேஜ் பேட்டரி சாதாரண பெட்டிக் கடையிலும் கிடைக்கிறது. இதை எல்லாம் முடிச்சுப்போட்டு என் மீது குற்றம்சாட்டி இருக்கிறார்கள். சத்தியமாக ராஜீவ் கொலைக்கும் எனக்கும் இதைத் தாண்டி எந்தத் தொடர்பும் இல்லை..!’ என்றார்.
பேட்டரிக்கு எல்லாம் கடையில் பில் தரமாட்டார்கள். ஆனால், சி.பி.ஐ. போலி பில் தயார் செய்து உள்ளது. பக்குவப்படாத 19 வயதில் அவரை அதிகாரிகள் பல நாட்கள் தூங்கவிடாமல் சித்ரவதை செய்து, மனநிலை தப்பச் செய்து, பொய்யான வாக்குமூலத்தை வாங்கி இருக்கிறார்கள். இதை எல்லாம் எனது படத்தில் கொண்டுவருகிறேன். அப்படியே பேரறிவாளன் தவறு செய்தவராகவே கருதினாலும், ஆயுள் தண்டனையான 14 ஆண்டுகளைக் கடந்து 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் அடைத்து, அவரது இளமையைப் பொசுக்கிய பின்பு இப்போது எதற்குத் தர வேண்டும் மரண தண்டனை? இதை நான் மட்டுமா சொல்கிறேன்... காந்தியவாதியான முன்னாள் நீதியரசர் கிருஷ்ணய்யர்கூட இதைத்தானே வலியுறுத்துகிறார்.
படத்தை இயக்கத் திட்டமிட்டபோது, 'அருமையான கமர்ஷியல் கதைகளுக்கே தயாரிப்பாளர்கள் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது... இதுபோன்ற சிக்கலான ஒரு கதைக்கு எந்த தயாரிப்பாளர் முன் வருவார்?’ என்று நினைத்தேன். ஆனால், பணம் மட்டும் அல்ல... என்னிடம் நல்ல மனமும், தமிழ் உணர்வும் அதைத் தாண்டிய மனித நேயமும் இருக்கிறது என்று ஒருவர் முன்வந்து இருக்கிறார். அவர் தனது பெயரை இப்போது வெளியிட வேண்டாமே என்கிறார். ஆனால், படப்பிடிப்பு துவங்கும்போது கண்டிப்பாகச் சொல்கிறேன்...'' என்கிறார் ரவி இன்பா!
டி.எல்.சஞ்சீவிகுமார்
********************************************************************
சைதை துரைசாமியுடன் மோதுகிறார் குஷ்பு

பரபரக்கும் சென்னை மேயர் தேர்தல்

'அக்டோபர் மாதத்துக்குள் உள்ளாட்சித் தேர்தலை தமிழகத்தில் நிச்சயம் நடத்தி முடிப்போம்...’ என அறிவித்து இருக்கிறார், முதல்வர் ஜெயலலிதா. சட்டமன்றத் தேர்தலில் அமைந்த அதே கூட்டணிக் கட்சிகளுடன் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளும் முடிவில் இப்போதே ஏரியா பிரிப்பதில் தீவிரமாகிவிட்டது அ.தி.மு.க. அதிலும் குறிப்பாக சென்னை மாநகராட்சியைக் கைப்பற்றியே தீருவது என்பதில் ஜெயலலிதா தீவிரமாக இருக்கிறார். இதுவரை நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் ஒருமுறைகூட சென்னை மாநகராட்சியை அ.தி.மு.க. கைப்பற்றியது கிடையாது. அதனால், செல்வாக்கான பிரமுகரை மேயர் வேட்பாளராக நிறுத்த அ.தி.மு.க. முடிவு செய்துள்ளது. இதில் முதல் நபராக இருப்பவர் சைதை துரைசாமி.
 கடந்த சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்ட சைதை துரைசாமி, மிகக் குறைவான வாக்குகளில்தான் தோற்றுப்போனார். அப்போதே அவரை மேயர் பதவிக்கு கார்டன் வட்டாரம் டிக் செய்துவிட்டதாகச் சொல்கிறார்கள் கட்சியின் சீனியர் புள்ளிகள்.
''கொளத்தூர் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை குளறுபடியால்தான் சைதை துரைசாமி தோற்கடிக்கப்பட்டார். அப்போதே துரைசாமியை கார்டனுக்கு வரச் சொன்னார் அம்மா. 'உடனேகோர்ட்டில் வழக்குப் போடுங்கள்’ எனச் சொல்லி துரைசாமியை தைரியப்படுத்தினார். ஐ.ஏ.எஸ். அகாடமி மூலமாக வருடம்தோறும் நூற்றுக்கணக்கான மாணவர்களின் தேர்ச்சிக்கு வழிவகுக்கும் துரைசாமிக்கு மக்களிடம் நல்ல பெயர் இருக்கிறது. கடந்த தேர்தலில் சைதாப்பேட்டை தொகுதிக்குத்தான் அவர் ஸீட் கேட்டார். ஆனால், 'ஸ்டாலினை எதிர்த்து ஜெயிக்க நீங்கள்தான் சரியான ஆள்’ என அம்மா சொன்னவுடன், உடனே சம்மதித்து கொளத்தூரில் களம் இறங்கினார். அதனாலேயே அம்மாவுக்கு துரைசாமி மீது நல்ல அபிப்பிராயம் உண்டு. அமைச்சர் கே.வி.ராமலிங்கம் ராஜ்யசபா உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததால், 'அந்தப் பதவி சைதை துரைசாமிக்கு கொடுக்கப்படலாம்’ என கட்சிக்குள் பேச்சுக் கிளம்பியது. ஆனால், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னரே ரபிஃபெர்னாடுக்குத்தான் அந்தப் பதவி என்பதை அம்மா உறுதி செய்து வைத்திருந்தார். அதேபோல் சைதையாருக்கும் மேயர் வாய்ப்பு நிச்சயம் கிட்டும்!'' எனச் சொல்கிறார்கள்.
அவர்களே தொடர்ந்து, ''சைதை துரைசாமியுடன் இன்னும் சிலருடைய பெயர்களும் கட்சிக்குள் பரபரப்பாக அடிபடுகிறது. கடந்த தேர்தலில் ஸீட் கொடுத்து பறிக்கப்பட்ட மதுசூதனன், ஆதிராஜாராம் ஆகியோரும் அம்மாவின் கருணைப் பார்வையில் இருக்கிறார்கள். ஆனால், இளைய தலைமுறை ஆட்களை நிறுத்தவேண்டும் என அம்மா நினைப்பதால் இளைஞர் பாசறை மாநிலச் செயலாளராக இருந்த டாக்டர் வெங்கடேஷ§க்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்கிற பேச்சும் இருக்கிறது. இதற்கிடையில், சபாநாயகர் ஜெயக்குமார், பாலகங்கா இருவரின் ஆதரவையும் பெற்ற பி.ஹெச்டி முடித்த இளைஞர் ஒருவரைப் பற்றிய விவரங்களை கார்டன் வட்டாரம் கலெக்ட் செய்து உள்ளதாம். மாநகராட்சியைப் பற்றிய நெளிவுசுளிவுகள் அனைத்தையும் அறிந்தவராம் இவர்! அதோடு, மகளிர் பிரதிநிதித்துவ அடிப்படையில் சிலர் திடீர் ராஜயோகத்தை எட்டினாலும் ஆச்சர்யம் இல்லை!'' என்கிறார்கள் பட்டியல் போட்டு.
தி.மு.க. தரப்பில் சென்னை மேயர் வேட்பாளருக்கு முதல் பெயராக அடிபடுபவர் நடிகை குஷ்பு. கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஸீட் மறுக்கப்பட்டபோதும் பிரசார வேலைகளில் அவர் தீவிரமாகச் சுழன்றது சாதகமான விஷயமாகப் பேசப்படுகிறது. சமீபத்தில் அரசுக்கு எதிராக நடந்த கண்டனக் கூட்டங்களில் குஷ்பு தைரியமாகப் பேசியதும் கருணாநிதியை யோசிக்க வைத்திருக்கிறது.
இதுகுறித்துப் பேசும் தி.மு.க. புள்ளிகள், ''குஷ்பு பெயர் அடிபடுவது உண்மைதான். ஆனால், இப்போது மேயராக இருக்கும் மா.சுப்ரமணியன் மீது எவ்விதக் குற்றச்சாட்டும் இல்லை. சென்னையின் வளர்ச்சிக்காக அவர் எந்த அளவுக்குத் தீவிரமாகச் சுழல்கிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். உள்ளாட்சித் தேர்தலில் ஜெயித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் எங்கள் இயக்கம் நிச்சயம் எல்லோரிடமும் எளிமையாகப் பழகும் தன்மை கொண்ட ஒருவரைத்தான் தேர்தலில் நிறுத்தும். அதனால் தளபதி ஸ்டாலினிடம் மிகுந்த நம்பிக்கையைப் பெற்று இருக்கும் மா.சுப்பிரமணியனுக்குத்தான் மறுபடியும் ஸீட்!'' என்கிறார்கள் உறுதியாக.
அதேநேரம் அ.தி.மு.க-வில் இருந்து தி.மு.க-வுக்கு வந்த சேகர்பாபுவின் பெயரும் தீவிரமாக அடிபடுகிறது. 'சென்னையின் சந்துபொந்துகளைக்கூட அறிந்து வைத் திருக்கும் ஆக்டிவான ஆளுப்பா’ என கருணாநிதியே பாராட்டி இருப்பதால், சைதை துரைசாமிக்கு சரியான போட்டியாக சேகர்பாபு நிறுத்தப்படலாம் என்கிறார்கள். ஸ்டாலினின் நெருங்கிய நண்பரும், கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆயிரம் விளக்குத் தொகுதியில் போட்டியிட்டவருமான முகமது அலி ஜின்னா, என்.வி.என்.சோமுவின் மகள் கனிமொழி ஆகியோரின் பெயர்களையும் சிலர் கிசுகிசுக்கிறார்கள்.
தி.மு.க-வின் கோட்டையாக இருந்த சென்னை இப்போது அ.தி.மு.க-வின் அசுரபல ஏரியாவாக மாறிவிட்டது. அதை மீட்க எதையும் செய்யும் பலத்துடன் தி.மு.க-வும், சென்னையைத் தக்கவைக்கும் முயற்சியில் அ.தி.மு.க-வும் இப்போதே தீவிரமாகிவிட்டன.
இரா.சரவணன்
**********************************************************************

13 பெண்களை சீரழித்து விட்டார்...

பள்ளித் தாளாளர் மீது அதிர்ச்சிப் புகார்

'பள்ளித் தாளாளர் ஒருவர், 13 பெண்களைப் பலாத்காரம் செய்துவிட்டார்’ என்ற புகா ரால் பரபரத்துக்கிடக்கிறது வேலூர். இங்கு சன்பீம் மெட்ரிக்குலேஷன் பள்ளி பிரபலமானது. இந்தப் பள்ளியின் தாளாளர் ஹரிகோபாலன் என்ற பேரறிவாளன் மீதுதான் அணைக்கட்டு பகுதியைச் சேர்ந்த செண்பகவள்ளி, பாலியல் புகார் கொடுத்து இருக்கிறார். 
செண்பகவள்ளியிடம் பேசினோம். ''நான் உட்பட 20 பேர் இந்தப் பகுதியில் மகளிர் சுய உதவிக்குழு நடத்துகிறோம். எனக்குத் திருமணம் ஆகவில்லை. சில ஆண்டுகளுக்கு முன், ஹரிகோபாலன் எனக்கு அறிமுகம் ஆனார். அவர், விடுதலைச் சிறுத்தைக் கட்சியில் மாநில அமைப்புச் செயலாளராக இருக் கிறார். 'எங்கள் குழு உறுப்பினர்களுக்கு அரசு வேலை வாங்கித் தருகிறேன்’ என்று அவர் சொன்னதால், அவரது பேச்சை நம்பினோம். சில மாதங்கள் பழகிய பிறகு, என்னைத் திருமணம் செய்துகொள்வதாகச் சொன்னார். நான் மறுத்துவிட்டேன். ஆனாலும், அவர் விடவில்லை.
சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டுக்கு ஒருமுறை அழைத்துச் சென்றார். அப்போது, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, என்னைப் பலாத்காரம் செய்துவிட்டார். மயக்கம் தெளிந்ததும் நான் கதறினேன். அவரோ, என்னை திருமணம் செய்துகொள்வதாக சமாதானப்படுத்தினார். ஆனால், இதேபோல் எங்கள் குழுவில் உள்ள 13 பெண்களையும் இப்படி சீரழித்து இருக்கிறார் என்பது பிறகுதான் தெரிந்தது. அதில் இரண்டு பேர் பள்ளி மாணவிகள். மற்றவர்கள் திருமணமானவர்கள். இதுபற்றி, அவரிடம் கேட்டபோது, 'உன் வேலையைப் பார். ஏதாவது தகராறு செய்தால், துண்டு துண்டாக வெட்டி வீசிவிடுவேன்’ என்று மிரட்டினார். மேலும், என்னை நிர்வாணமாக  படம் எடுத்து இருப்பதாகவும், அதை இன்டர்நெட்டில் வெளியிட்டு விடுவேன் என்றும் மிரட்டு கிறார். ஹரிகோபாலன் மீது, போலீஸ் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்!'' என்று தழுதழுத்தார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து, ஹரிகோபாலன் என்ற பேரறிவாளனிடம் பதில்கேட்டோம். ''சமுதாயத்தில் நல்ல நிலையில் இருக்கிறேன். அந்தப் பெண் யார் என்றே எனக்குத் தெரியாது. எனது பள்ளியில் 250-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இருக்கின்றனர். என்னிடம் விளக்கம் கேட்பதைவிட, எனது ஊழியர்களிடம் கேட்டுப் பாருங்கள். என் மீது புகார் கொடுத்து உள்ள செண்ப கவள்ளி மீதும் மானநஷ்ட வழக்குத் தொடரலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன். என்னுடைய வளர்ச்சியைப் பிடிக்காமல் தான், இப்படிப் புகார் செய்து இருக்கிறார். இந்த வழக்கை சட்டப்படி சந்திப் பேன்!'' என்றார்.
இந்தப் புகார் மனு மீது, போலீஸ் என்ன நடவடிக்கை எடுத்து இருக்கிறது என, வேலூர் எஸ்.பி. பாபுவிடம் கேட்டோம். '' செண்பகவள்ளி கொடுத்து உள்ள புகாரை காட்பாடி போலீ ஸார் விசாரித்து வருகின்றனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் ஹரிகோபாலன் என்ற பேரறிவாளன் மற்றும் அதே கட்சியின் மாநில ஆவணக் காப்பக பொதுச் செயலாளர் பிலிப் ஆகிய இருவர் மீதும், கற்பழிப்பு மற்றும் கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்து உள்ளோம். விசாரணை நடந்து வருகிறது'' என்றார்.
விசாரணை துரிதமாக நடக் கட்டும்!
கே.ஏ.சசிகுமார்
படங்கள்: ச.வெங்கடேசன்

மீதி சம்பளம் எங்கே?

விழுப்புரம் 100 நாள் வேலை வில்லங்கம்

த்திய அரசின் 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தில் வெடித்துக் கிளம்பி இருக்கிறது சம்பளப்பிரச்னை! 
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள பனையபுரம் கிராமத்தில்தான் விவகாரம். விசாரணைக்குச் சென்றோம். அந்த கிராமத்தைச் சேர்ந்த கலியம்மாள், ''இந்த திட்டம் வந்த பிறகுதான், தினமும் மூணு வேளையும் நிம்மதியா சாப்பிடுறோம். ஒரு ஆளுக்கு 120 ரூபா கூலி தரணும்னு அரசாங்கம் சொல்லுது. எங்க ஊர்ல 65 ரூவாதான் தர்றாங்க. ஆனா, 120 ரூவாய்க்கி கைநாட்டு வாங்கிக்குறாங்க. ஆரம்பத்துல 20 ரூவா புடிச்சிக்கிட்டு 100 ரூவா கொடுத்தாங்க. இருவதுதான, போனா போய்த் தொலையட்டும்னு விட்டுட்டோம். இப்போ, என்னடான்னா பாதிப் பணத்தை எடுத்துக் கிறாங்க. ஏன் இப்படி பண்றீங்கன்னு யாராவது எதிர்த்துக் கேட்டா, அடுத்த நாள் வேலையில சேர்த்துக்க மாட்டாங்க. என்ன பண்றது? வேற வழியில்லாம வந்துக்கிட்டு இருக்கோம். பஞ்சாயத்துத் தலைவருங்க அவுங்க கைக் காசையா எடுத்துக் கொடுக்குறாங்க? அரசாங்கம் கொடுக்குற பணத்த எங்களுக்கு கொடுக்க வேண்டியது தான? எங்க உழைப்பை சுரண்டித் திங்குறது எந்த விதத்துல நியாயம்!'' என்று வேதனையில் வெடித்தார்.
ஊராட்சித் தலைவி காமாட்சியிடம் பேசி னோம் ''இதுல நாங்க ஒண்ணும் பணம் பாக்கல. கவர்மென்ட் கொடுக்கறத வாங்கி அப்படியே கொடுத் துர்றோம். மக்கள் வேலை செய்யுறதே இல்ல. பாதி நேரம் மரத் தடியில உட்கார்ந்துக் கிறாங்க. மக்களுக்கு வேலை கொடுக்கணும்னுதான் நாங்க கொடுத்துட்டு இருக்கோம். அவங்க குறைவான அளவு வேலை செய்றதால தான் நாங்களும் குறைவான சம்பளம் கொடுக்குறோம். இதுக்கு மேலயும் உங்களுக்கு 120 ரூபாய்தான் வேணும்னா நீங்க உயரதிகாரிங்களை பார்த்துக்கோங்கன்னு நானே சொல்லிட்டேன். இந்தப் பணத்தை எடுத்து என் குடும்பத்துக்கு செலவு பண்ன வேண்டிய அவசியம் எனக்கு இல்லை!'' என்று பொரிந்தார்.
விழுப்புரம் கலெக்டர் மணிமேகலையிடம் பேசினோம். ''நீங்க சொல்ற விஷயம் என் கவனத்துக்கு வரவே இல்லை. உடனே விசாரிக்கிறேன். யாரு தப்பு செஞ்சிருந்தாலும் நடவடிக்கை எடுப்பேன்!'' என்று உறுதி அளித்தார்.
அரசு நிர்ணயம் செய்த தொகையை குறைத்துக் கொடுக்கும் அதிகாரத்தை ஊராட்சித் தலைவருக்கு யார் கொடுத்ததோ?
               - அ.அச்சனந்தி
             படங்கள்: ஆ.நந்தகுமார்

கலெக்டருக்காக ஸ்பெஷல் டான்ஸ் நடந்ததா?

காரைக்கால் களேபரம்!

புதுவை அரசின் கலை பண்பாட்டுத் துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் புதுச்சேரி கலைவிழா நடைபெறும். அதில், நலிந்து வரும் கலைகளையும், இந்திய பண் பாட்டை பிரதிபலிக்கும் கலைகளையும் மேடை ஏற்றுவார்கள். அப்படி இந்த ஆண்டு காரைக்காலில் நடத்திய கலைவிழாவில், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஃபிராங்க்ளின் லால்டின்குமா, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தினார் என்று புகார் சொல்கிறார்கள் பொதுமக்கள். 
கடந்த 17-ம் தேதி காரைக்கால் ஆட்சியர் அலுவலகத்துக்கு வெளியே உள்ள காமராஜர் திடலில் தொடங்கியது கலைவிழா. அன்று சட்ட சபைக் கூட்டம் இருந்ததால், காரைக்கால் பகுதி எம்.எல்.ஏ-க்களில் பெரும்பாலோனோர் கிளம்பிவிட... கலை பண்பாட்டுத் துறை அமைச்சர் கல்யாணசுந்தரம் விழாவினைத் தொடங்கி வைத்தார். அன்று சில கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மறுநாள் 18-ம் தேதி மாலை 6 மணிக்கு அதே காமராஜர் திடலில் நிகழ்ச்சி தொடங்க வேண்டும். ஆர்வத்தோடு பொதுமக்கள் கூடியிருந்தார்கள். ஆனால், 7 மணி வரை நிகழ்ச்சிகள் தொடங்கவில்லை. அதே நேரத்தில், பக்கத்தில் இருந்த ஆட்சியர் அலுவலகத்தில் இசைக் கருவிகளின் சத்தம் ஒலிக்கவே, பொதுமக்களில் சிலர் அங்கே சென்று பார்த்திருக்கின்றனர். திடலில் நடக்க வேண்டிய கலை நிகழ்ச்சிகள், அங்கே ஆட்சியர் மற்றும் துணை ஆட்சியர், பயிற்சி ஆட்சியர் ஆகியோருக்காக ஸ்பெஷலாக தனியே நடந்துள்ளது.
''கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் கலெக்டரும் மற்ற அதிகாரிங்களும் அலுவலக வாசலில் நாற்காலிகளில் அமர்ந்து, மன்னர்கள் போல் நாட்டிய மங்கைகளை ஆடவிட்டு ரசித்துக்கொண்டிருந்தனர். பல மாநில அழகிகளும் ஆடை பறக்க சுழன்று சுழன்று ஆடினார்கள். மணிப்பூர் மாநில அழகிகள் ஆடிய ஆட்டம் அவர்களை ரொம்பவே கவர்ந்து விட, 'ஒன்ஸ்மோர்’ கேட்டு ரசித்தார்கள்.  கலை விழாவுக்கு வந்தவர்களை தனது அலுவலகத்துக்கு அழைத்து வந்து, ஆட வைப்பது என்ன நியாயம்? இது அதிகார துஷ்பிரயோகம்தானே?'' என்று ஆத்திரம் பொங்கச் சொல்கிறார், காரைக்கால் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் தேவ மணி.
இந்தக் குற்றச்சாட்டு குறித்து கலெக்டர் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு கேட்டோம். ஆட்சியரின் அலுவலக உதவி யாளர் லதா, ''இது இங்கே நடை முறையில் உள்ள வழக்கம்தான் சார். எனக்குத் தெரிந்து ஐந்து வருடமாக இப்படித்தான் நடக்கிறது. விழாவில் பங்கேற்க வரும் கலைஞர்கள் ஆட்சியர் அலுவலகம் வந்து, மரியாதை நிமித்தமாக ஆட்சியரை சந்தித்து, தங்கள் கலை நிகழ்ச்சிகளை சற்று நேரம் நிகழ்த்திக் காட்டுவார்கள். அவர்களுக்கு ஆட்சியர் சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செய்யப்படும். சென்ற ஆண்டு வரை இது அலுவலகத்தின் பின்புறம் நடந்தது. இந்த ஆண்டு அங்கே பராமரிப்பு வேலைகள் நடந்து வருவதால் முன்புறம் நடந்தது. அவ்வளவுதான்! இதை எதற்கு இப்போது பிரச்னை ஆக்குகிறார்கள் என்றுதான் தெரியவில்லை!'' என்று ஆட்சியர் சார்பில் பதிலளித்தார் லதா.
கரு.முத்து  

எனக்கு இன்னும் எத்தனை நாட்களோ?

வேலுவின் 'ஜெயில்' பாசம்!

டந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பாராட்டு விழா, வெற்றி விழா என்று திரும்பிய பக்கம் எல்லாம் தினமும் விழாக்கள் நடத்தப்பட்டன. ஆட்சி மாறியவுடன் சில மாதங்கள் அடங்கி இருந்த தி.மு.க-வுக்கு, சமச்சீர்க் கல்வி மூலம் விழா நடத்தும் வாய்ப்பு மீண்டும் கிடைத்து விட்டது. 
'சமச்சீர்க் கல்வி வெற்றி விழா’ என்ற பெயரில் தி.மு.க-வினர், தமிழகம் முழுவதும் விழா நடத்தி வருகிறார்கள். தி.மு.க. சார்பில் கடந்த 19-ம் தேதி வேலூரில் நடந்த விழாவில் பேசிய முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, ''ஜெர்மன் நாட்டில் உள்ள புகழ்பெற்ற ஜி.எம்.பி. நிறுவனம் மூலம் சரித்திரமே வியக்கும் அளவுக்கு சட்டமன்றக் கட்டடத்தை கட்டினார் கலைஞர். ஆனால், 360 வருடங்கள் பழைமையான, பழைய கட்டடத்துக்கே சென்று விட்டார்கள்.  புதிய கட்டடத்தில் மருத்துவமனை அமைக்கப் போகிறார்களாம். மருத்துவ மனைக்கு கட்டட அமைப்பு மிகவும் முக்கியம். புதிய சட்டமன்றக் கட்ட டத்தில் மருத்துவமனை எப்படி நடத்தப்போகிறார்கள் என்று தெரிய வில்லை. போயஸ் கார்டனில் இருந்து சட்டமன்றத்துக்குப் போகும் வழியில் உள்ள மேம்பாலங்கள் எல்லாம் கலைஞர் ஆட்சியில் கட்டியது தான். அதற்காக, மேம்பாலத்தில் போகாமல் இருக்கிறாரா ஜெயலலிதா? கடந்த ஆட்சியில் 80-க்கும் மேற்பட்ட சிறு அணைகள் கட்டப்பட்டன. அதை யெல்லாம் உடைக்க வேண்டியதுதானே? வள்ளுவன் படத்தை பாடப் புத்தகத் தில் இருந்து மறைக்கிறார்கள். வள்ளுவன் எங்களுக்கு மாமனா? மச்சானா? அல்லது தி.மு.க. நகரச் செயலாளரா? என்னதான் நினைத்துக் கொண்டு செயல்படுகிறார்கள் என்று தெரியவில்லை. தி.மு.க-வினர் மீது பொய் வழக்குகளை தொடர்ந்து போட்டு வருகிறார்கள். இந்தக் கூட்டத்துக்கு நான் வரும்போது வேலூர் சிறைச்சாலை வழியாகத்தான் வந்தேன். நான் உள்ளே போக இன்னும் எத்தனை நாட்கள் இருக்கிறது என்று தெரியவில்லை. நாங்கள் மறுபடியும் ஆட்சிக்கு வருவோம். அப்போது, அ.தி.மு.க-வினர் மீது வழக்குப் போடுவோம். அந்த வழக்கு, மிக மிக கேவலமாக இருக்கும். தி.மு.க-வினரை யாராலும் அழிக்க முடியாது என்று அண்ணா சொன்னது நினைவில் இல்லையா? எங்களை உரசிப் பார்க்க வேண்டாம் என்று எச்சரிக்கிறோம்!'' என்று உணர்ச்சிப் பிழம்பாக தகித்தார்.
'மாசத்துக்கு இப்படி ரெண்டு கூட்டம் போட்டாத்தான் நம்ம கட்சி இன்னும் இருக்கிறது தெரியுது!'' என்றபடியே கலைந்து சென்றனர் உடன்பிறப்புகள்.
கே.ஏ.சசிகுமார்
படம்: ச.வெங்கடேசன்

தொடர்கிறது 'கிட்னி' மரணம்!?

புதுக்கோட்டை திகில்... ஜூ.வி. ஆக்ஷன்

'புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் கிள்ளனூர் கிராமத்தில் மட்டுமே கடந்த இரண்டு வருடங்களுக்குள் 15-க்கும் மேற்பட்ட வர்கள் கிட்னி பாதிப்பால் மரணம் அடைந்து விட்டார்கள். இப்போதும் பலர் கிட்னி பாதிப்புக்கு சிகிச்சை எடுக்கிறார்கள். காரணம் புரியாத எங்க ளுக்கு உதவி கிடைக்குமா?’ - நமது ஆக்ஷன் செல் லுக்கு (044-42890005) இப்படியரு கதறல் குரல் வந்திருந்தது. 
உடனடியாக கிள்ளனூர் கிராமத்துக்குச் சென்று முருகானந்தம் என்பவரிடம் பேசினோம். ''ரெண்டு வருஷத்துக்கு முன்பு, சைவராசுங்கிறவருக்கு திடீர்னு ஜுரம் வந்துச்சி. புதுக்கோட்டை அரசாங்க ஆஸ்பத்திரியில வைத்தியம் பார்த்தும், சரியா கலை. அதுக்குப்பிறகு தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜுக்கு எழுதிக் குடுத்துட்டாங்க. அங்கதான் அவரோட கிட்னியில உப்பு உறைஞ்சிருக்குதுன்னு சொன்னாங்க. அங்கேயே மூணு மாசம் வைத்தியம் பாத்தாங்க. அப்பவும் சரியாகாம, கை காலெல்லாம் வீங்க ஆரம்பிச்சது. அதுக்கப்புறம் திருச்சியில இருக்குற கிட்னி ஸ்பெஷலிஸ்ட்கிட்ட போய் ஆறு மாசம் டயாலிசிஸ் பண்ணியும் அவர் இறந்துட்டார். அதே மாதிரி, முனியாண்டி என்பவருக்கும் பிரஷர். மருந்து மாத்திரை சாப்பிட்டார், அவருக்கும் கை காலெல்லாம் வீங்கி, திருச்சிக்கு கொண்டு போனாங்க. அவரும் இறந்துட்டார். அடுத்து ரவிச் சந்திரனுக்கும் கை காலெல்லாம் வீங்கிப் போச்சி. முடியலைன்னு ஆஸ்பிட்டல் கொண்டு போனாங்க. அப்பத்தான் அவருக்கும் ரெண்டு கிட்னியும் இயங்கலைன்னு டாக்டர்கள் சொன்னாங்க. அவரும் இறந்துட்டார். இப்படி கிட்டத்தட்ட 15 பேர், இதே பிரச்னை வந்து செத்துப் போயிட்டாங்க. அதுக்கபுறம் எங்க ஊருல யாருக்கு முடியாம போனாலும், அது கிட்னி ஃபெயிலியர்னு சொல்ற அளவுக்கு பாதிப்பு அதிகமாயிருச்சி. இறந்து போன எல்லோருமே 50 வயசுக்குள்ளதான். இப்பவும் எங்க கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி, சுப்பையா, மீனாள், வசந்தா, சித்திரவேல், காந்திநாதன், ராமராஜ், மட்டை கருப்பையான்னு எட்டு பேர் கிட்னி பாதிப்புக்காக திருச்சியிலயும், சென்னையிலயும் வைத்தியம் பாத்துக்கிட்டு இருக்காங்க. காரணம்தான் தெரியலை...'' என்றார் திகிலுடன்.
கிட்னி பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வரும் சுப்பையாவை பார்த்தோம். ''நான் நல்லாத்தான் இருந்தேன். திடீர்னு முகமெல்லாம் வீங்கிப் போச்சு. உடனே ஆஸ்பத்திரிக்கு போனேன். அங்க என்னோட ரத்தத்தை எடுத்து டெஸ்ட் பண்ணிப் பாத்துட்டு, 'உங்க கிட்னி பாதிக்கப்பட்டிருக்கு. உடனே டயாலிசிஸ் பண்ணணும்னு சொல்லிட்டாங்க. இப்ப அதான் பண்ணிக்கிட்டு இருக்கேன். என்னோட பொண்ணுக்கு கல்யாணம் செஞ்சி பார்க்க வேண்டிய கடமை இருக்குது, ஆனா, அதுக்குள்ள இப்படி ஆயிருச்சி!'' என்று வருத்தப்பட்டார்.
''ஒரு வருடத்துக்கு முன்பு தமிழ்நாடு அறிவியல் குழுவோடு, டெல்லியில் இருந்து வந்தவர்கள், இந்த ஊரில் இருந்து தண்ணீரை பரிசோதனைக்காக கொண்டு சென்றார்கள். ஆனால், அதுக்குப் பிறகு எந்தத் தகவலையும் எங்களுக்குத் தெரிவிக்க வில்லை. அதன்பிறகு எங்கள் கிராமத்தைச் சேர்ந்த சிலரே, நாங்கள் பயன்படுத்தும் குடிநீரை எடுத்து புதுக்கோட்டையில் பரிசோதனை செய்தார்கள். அதில் கால்சியம் அதிக அளவில் இருப்பதாகச் சொன்னார்கள்... ஆனால் அதைக் குறைக்க எந்த நடவடிக்கையும் யாரும் எடுக்கவில்லை...'' என்று அந்த கிராமத்தைச் சேர்ந்த பெரியவர் ஒருவர் சொன்னார்.
இந்த தகவல்களை எல்லாம் தொகுதியின் (கந்தர்வக்கோட்டை) எம்.எல்.ஏ-வும், ஆதிதிராவிட நலத் துறை அமைச்சருமான சுப்ரமணியனிடம் கூறினோம். ''அப்படியா?'' என பதறியவர், ''நாளையே அந்தக் கிராமத்துக்கு மருத்துவக் குழுவை அனுப்பி, இந்தப் பாதிப்பு எதனால் ஏற்படுகிறது என துல்லியமாக கண்டுபிடிக்க ஏற்பாடு செய்கிறேன்!'' என்றார். சொன்னது போலவே மாவட்ட ஆட்சியரான மகேஸ்வரியிடம் பேசி மறுநாளே 18 பேர் கொண்ட மருத்துவக் குழுவை அந்த கிராமத்துக்கு அனுப்பியும் வைத்தார். நாமும் அங்கே ஆஜரானோம். வந்த மருத்துவக் குழுவினர் வீடு வீடாகச் சென்று கிட்னி பாதிப்புக்கான அறிகுறிகளைக் கூறி, 'இப்படி எதாவது உங்களுக்கு இருக்கிறதா?’ என கேள்விக் கேட்டு அதை அப்படியே பதிவும் செய்து கொண்டனர். அதோடு மக்கள் பயன்படுத்தும் குடிநீரையும் பரிசோதனை செய்வதற்காக எடுத்துச் சென்றனர்.
நம்மை தொடர்பு கொண்ட அமைச்சர் சுப்ரமணியம், ''அங்கு வழங்கும் குடிநீரை பரிசோதனைக்காக எடுத்து வந்திருக்கிறார்கள். அதனை சென்னைக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். ரிசல்ட் வந்தபிறகு முறையான நடவடிக்கை எடுக்கப்படும். அதற்குள்ளாக அந்தக் கிராமத்தில் ஒரு மருத்துவ முகாம் நடத்தி, அத்தனைப் பேரையும் பரிசோதனை செய்யச் சொல்கிறேன். இந்த விஷயத்தை என்னுடைய கவனத்துக்கு கொண்டு வந்த ஜூ.வி-க்கு என்னுடைய நன்றி!'' என்றார்.
சொன்னது போலவே உடனடியாக நடவடிக்கை எடுத்தால், கிராமத்து மக்கள் என்றென்றும் நன்றி சொல்வார்கள்!
வீ.மாணிக்கவாசகம், படங்கள்: பா.காளிமுத்து

''வேண்டாம் கலை அரங்கம்...''

தஞ்சாவூர் கதறல்

''இட நெரிசலில் தவித்து வரும் தஞ்சாவூர் பேருந்து நிலையம் அருகே கட்டப்பட்டு வரும் நகராட்சி கலை அரங்கம் தேவையற்றது. இதை நிறுத்திவிட்டுப் பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்யவேண்டும்’ என கோரிக்கை வைக்கின்றனர் தஞ்சாவூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள். 
தஞ்சாவூர் ராஜா மிராசுதார் மருத்துவ மனைக்கு எதிரே தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்  1 கோடி செலவில் நகராட்சி கலையரங்கம் கட்டப்பட்டு வருகிறது. இதுகுறித்து சமூக சேவகரான அன்பரசன், ''தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் மக்கள் அதிகமாகக் கூடும் இடமாகும். இப்பகுதியில் அரசு கலையரங் கம் கட்டினால் நெருக்கடிதான் அதிகரிக்கும். முன்னர் அந்த இடத்தில் அரசு மருத்துவமனை புற நோயாளிகள் பிரிவு பயன்பாடு இல்லாமல் இருந்தது. அந்தக் கட்டடத்தை இடித்துவிட்டு தி.மு.க. ஆட்சியின் இறுதிக் காலத்தில் இங்கு கலையரங்கம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
ஏற்கெனவே தஞ்சாவூரில் மூன்று அரசு கலை அரங்கங்கள் உள்ளன. இவற்றில் சிவகங்கை பூங்கா அருகே பெத்தண்ணன் கலையரங்கம் பயன்பாடு இல்லாமல் கிடக் கிறது. அரண்மனையில் உள்ள சங்கீத மஹாலில் எப்போதாவதுதான் நிகழ்ச்சி நடக்கும். திலகர் திடலில் உள்ள பொதுக் கூட்ட மேடையில் மட்டும் அரசியல் கட்சிகளின் கூட்டங்கள் நடக்கின்றன. இதனால், நான்காவதாக ஒரு கலை அரங்கம் தேவையற்றது!'' என்றார்.
வழக்கறிஞர் செந்தில்குமார், ''ஏற்கெனவே பழைய பேருந்து நிலையம் பல்வேறு கட்சியினரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. இதன் அருகிலேயே நகரப் பேருந்து நிலையமும் உள்ளது. இரண்டு பேருந்து நிலையங்களுக்கும் இடையே சுரங்கப் பாதை அமைக்க கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சில வணிக நிறுவனங் களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் அந்தத் திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டனர். தற்போது கலையரங்கம் கட்டப்பட்டு வரும் இடத்தின் எதிரே அரசு மருத்துவமனையும் இருக்கிறது. இப்படி நாலாபுறமும் மக்கள் கூடும் இடத்தின் நடுவே கலையரங்கம் கட்டப்பட்டால், அது கூடுதல் சிரமங்களையே ஏற்படுத்தும். இதுகுறித்து முதலமைச்சர், மாவட்ட கலெக்டர் மற்றும் தஞ்சாவூர் தொகுதி எம்.எல்.ஏ. ஆகியோருக்கு புகார் மனு அனுப்பி உள்ளோம்...'' என்றார்.
தஞ்சாவூர் தொகுதி ஆளும் கட்சி எம்.எல்.ஏ-வான ரெங்கசாமி, ''தி.மு.க-வினர் தங்கள் தேவை களுக்கு ஏற்ப திட்டங்கள் தீட்டிக் கொண் டார்கள். இதில் இந்தக் கலை அரங்கமும் ஒன்று. தொலைநோக்குப் பார்வையுடன் மக்கள் நெருக்கடி அதிகம் உள்ள பழைய பேருந்து நிலையத்தை விரிவு படுத்துவதுதான் நல்லது. இதுகுறித்து கட்சி தலைமைக்கு தகவல் கொடுத் துள்ளேன். முதல்வர் நல்ல முடிவை எடுப்பார்...'' என்றார்.
சி.சுரேஷ்
படங்கள்: கே.குணசீலன்

அடாவடி மூவர்... அரவணைத்த வீரபாண்டியார்!

அரெஸ்ட் ரிப்போர்ட்

சேலம் மாவட்டத்தில் உள்ள தி.மு.க. கூடாரம் ஒட்டுமொத்தமாக, 'உள்ளே’ போய்க்கொண்டு இருக்கிறது. வீரபாண்டி ஆறுமுகத்தின் தம்பி மகன் பாரப்பட்டி சுரேஷ், ஆறுமுகத்தின் உதவியாளர் பூலாவரி சேகர், கவுன்சிலர் 'ஜிம்’ ராமு ஆகியோரையும் இப்போது கைது செய்திருக்கிறது போலீஸ். இவர்களுக்கும், தி.மு.க-வுக்கும் என்ன சம்பந்தம்? விசாரித்தால், விழிகள் விரிகின்றன. இந்த மூவரும் கடந்துவந்த பாதைகளைப் பார்ப்போம்! 
பாரப்பட்டி சுரேஷ்
''வீரபாண்டி ஆறுமுகத்தின் அப்பா சோலை கவுண்டரோட குடும்பம் ரொம்பப் பெருசு. ஆறுமுகத்தின் தம்பி கந்தசாமியின் மகன்தான் சுரேஷ். 2005-ம் ஆண்டு வரை அ.தி.மு.க-வின் தீவிர விசுவாசியாக இருந்தவர், 2006-ல் தி.மு.க. ஆட்சி வந்ததும் பெரியப்பா குடும்பத்தோடு ஒட்டிட்டார். தம்பி மகன் மீது உள்ள பாசத்தில் வீரபாண்டியாரும் ரொம்பவே சலுகை காட்டினார். கட்சியின் உறுப்பினராக சேர்ந்த கையோடு சுரேஷை பனமரத்துப்பட்டியில் உள்ளாட்சி தேர்தலில் நிற்க வைத்தார். ஜெயித்த சுரேஷ§க்குமாவட்டஊராட்சிக் குழு துணைத் தலைவர் பதவி கிடைத்தது.
அதன் பிறகு சுரேஷின் கை பலமாக ஓங்க ஆரம்பித்தது. தனக்கென ஒரு கூட்டத்தை வைத்துக்கொண்டு திரும்பிய பக்கம் எல்லாம் கட்டப் பஞ்சாயத்துகளில் ஈடுபட்டார். பெரியப்பாவின் பெயரைக் கெடுத்ததில் பாரப்பட்டி சுரேஷ§க்கு முக்கியமான பங்கு உண்டு. தி.மு.க. ஆட்சியில் இருந்த போதே, சேலத்தில் நடந்த ஆறு கொலை வழக்கில் சுரேஷ் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் இருக்கிறார். அங்கம்மாள் காலனி வழக்கு, பிரிமியர் ரோலர் மில்லை அபகரித்த புகார் ஆகியவற்றிலும் அவர் ஒரு குற்றவாளியாக சேர்க் கப்பட்டு இருக்கிறார். அந்த வழக்கு களில்தான் நீதிமன்ற உத்தரவுப்படி இப்போது சேலம் மத்திய குற்றப் பிரிவு போலீஸில் சரணடைந்து இருக்கிறார்!'' என்கிறார்கள் நடுநிலையான தி.மு.க-வினர்.
விசாரணை முடிந்து கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்ட பாரப்பட்டி சுரேஷை, பாலமோகன் ராஜ் என்பவர் கொடுத்த நில அபகரிப்பு புகாரில் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்திருக்கிறது போலீஸ்.
பூலாவரி சேகர்
வீரபாண்டி ஆறுமுகத்தின் பர்சனல் உதவியாளர் இவர். ஆறுமுகம் கைது செய்யப் பட்ட போது, காவல் நிலையத்துக்கு வெளியே ஜெயலலிதா போல் வேஷம் போட்டு அசிங்கமான சில சம்பவங்கள் அரங்கேறியதை ஜூ.வி. வெளிச்சம் போட்டுக்காட்டி இருந்தது. அப்படி வேஷம் போடக் காரணமாக இருந்தவர் சேகர்தான் என்று கைது செய்து இருக்கிறது போலீஸ்.
''வீரபாண்டியாரோட சொந்த ஊரைச் சேர்ந்தவர் சேகர். சேலம் தி.மு.க. ஆபீஸில் டீ வாங்கிக் கொடுத்துட்டு இருந்தாரு. 2006-ல் தி.மு.க. ஜெயிச்சதும், சேகர் சாதாரண டிரெஸ்ஸில் இருந்து சஃபாரிக்கு மாறிட்டார். அவரோட நடவடிக்கை களும் மாற ஆரம்பிச்சது. வீரபாண்டியாரோட குடும் பத்தைச் சேர்ந்தவங்களும் சேகர் மீது கருணை காட்ட, அமைச்சரோட உதவியாளராவே உயர்ந்துட்டார். அதே ஜோரில், தன் மனைவி வெண்ணிலாவுக்கு கவுன்சிலர் ஸீட் வாங்கினார். வெண்ணிலாதான் இப்போ வீரபாண்டி ஒன்றியத்தில் சேர்மன். கடந்த அஞ்சு வருஷத்தில் சேலத்தில் எந்த ஒப்பந்தம் வந்தாலும், சேகரோட தலையீடு இல்லாமல் முடியாது. பாதாள சாக்கடைத் திட்டத்துக்கு டெண்டர் விட்டதில் அமைச்சருக்கோ, அவரது மகன் ராஜாவுக்கோகூட தெரியாமல் சேகர் சில வேலைகளைச் செய்தார். இது எப்படியோ ராஜா காதுக்குப் போகவே, சேகரை வீட்டுக்கு வரவழைச்சுக் கடுமையா எச்சரிக்கை செஞ்சார். அப்படி இருந்தும் சேகரோட ஆட்டம் கொஞ்சமும் குறையலை. இன்னிக்கு சேகரோட சொத்து மதிப்பு என்னன்னு அவருக்கே தெரியாதுங்க... அவ்வளவு வளர்ச்சி!'' என்று வாயைப் பிளக்கிறார்கள் ஆரம்ப கால தி.மு.க. புள்ளிகள்.
'ஜிம்’ ராமு
செவ்வாய்பேட்டை ஏரியாவைச் சேர்ந்த 'ஜிம்’ ராமு கடந்த 2005 வரை அ.தி.மு.க-வில் இருந்தவர்.தி.மு.க. ஆட்சி வந்ததும் தனது அடிப்பொடிகள் புடை சூழ, வீரபாண்டி ஆறுமுகத்தின் காலில் விழுந்து தி.மு.க-வில் இணைந்து கொண்டார். அதைத் தொடர்ந்து, உள்ளாட்சித் தேர்தலில் சேலம் மாநகராட்சி 30-வது வார்டுக்கு தி.மு.க. சார்பில் போட்டியிட்டு கவுன்சிலரும் ஆனார். எப்போதும் சட்டை பட்டனைக் கழட்டி விட்ட நிலையில் கழுத்து முழுக்க நகைகளோடு வருவது ஜிம் ராமுவின் ஸ்டைல். சூரமங்கலம் ஏரியாவில் மாநகராட்சிக்குச் சொந்தமான இரண்டு மீன் கடைகளை மகாலட்சுமி என்பவர் ஏலம் எடுத்து இருந்தார். அந்தக் கடைகளுக்குள் அத்துமீறி நுழைந்து மகாலட்சுமியை மிரட்டி கடைகளைச் காலி செய்ய வைத்தார். அந்த அம்மா கொடுத்த புகாரில்தான் ஜிம் ராமு கைது செய்யப்பட்டு இருக்கிறார். இவரோடு சேர்த்து காங்கிரஸ் கட்சியின் உலகநம்பி, அண்மையில் அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் கவுன்சிலர் சித்தானந்தனும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
''கட்சிக்காக உண்மையாக உழைச்சவன் யாரையும் கடந்த அஞ்சு வருசத்தில் வீரபாண்டியார் கண்டுக்கலை. மரியாதையும் கொடுக்கலை. ரவுடிகளையும், பிளேடு, கத்திகளையும்தான் கூடவெச்சிட்டு இருந்தார். அவர் தப்பே செய்யலேன்னாலும், அவர் பேரை சொல்லி இவங்க செஞ்ச எந்தத் தப்பையும் அவர் தட்டிக் கேட்கலை. அதுக்கான தண்டனையைத்தான் இப்போ அனுபவிக்கிறார். கட்சியில் இதுபோன்ற ஆட்களை களை எடுக்காம விட்டுட்டாங்கன்னா, கண்டிப்பா கட்சி காணாமப் போயிடும். தி.மு.க. தலைமை சேலத்துப் பக்கம் முழுமையாக தலையைத் திருப்பினா மட்டும்தான் கட்சியைக் காப்பாத்தலாம்!'' என்று வருத்தப்பட்டார் முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவர்.
என்ன செய்யப் போகிறது அறிவாலயம்?
கே.ராஜாதிருவேங்கடம், வீ.கே.ரமேஷ்
படங்கள்: க.தனசேகரன்  

''ஏரியை அபகரித்தாரா, மோகன்ராஜ்?''

நில அபகரிப்புப் புகாரில் விஜயகாந்த் கட்சி எம்.எல்.ஏ.

டந்த இரண்டு மாதங்களாக, நில அபகரிப்புப் புகாரில் சகல கட்சிகளையும் சேர்ந்த அரசியல்வாதிகள் தொடர்ந்து கைது செய்யப் பட்டு வருகின்றனர். அந்த வரிசையில் இப்போது சிக்கி இருக்கி றார், தே.மு.தி.க-வின் சேலம் கிழக்கு மாவட் டச் செயலாளரும், சேலம் வடக்குத் தொகுதி எம்.எல்.ஏ-வுமான அழகாபுரம் மோகன்ராஜ்! 
'சேலம் ரெட்டியூர் இஸ்மாயில்கான் ஏரியை மோகன்ராஜ் தன் பெயரில் பட்டா போட்டுக்கொண்டார்’ என்பதுதான் குற்றச் சாட்டு. சேலம் போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்திருக்கும் தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்கத்தின் மாநிலத் தலைவர் பூமொழியை சந்தித்தோம்.
''ரெட்டியூர் பகுதியில் உள்ள மக்கள், தேர்தலுக்கு முன்பே இந்தத் தகவலை எங்களி டம் சொன்னார்கள். தேர்தல் சமயத்தில் இந்தப் பிரச்னையைக் கிளப்பினால் நடவ டிக்கை எடுக்க மாட்டார்கள் என்பதால், தக்க தருணத்தை எதிர்பார்த்துக்கொண்டு இருந்தோம். அதுமட்டும் அல்லாமல், 'ஒருவர் மீது வீணான குற்றச்சாட்டுகளைச் சொல்லக் கூடாது. அதற்கான சரியான ஆதாரங்களைத் திரட்டி, உண்மை என்ற பட்சத்தில் மட்டுமே புகார் கொடுக்க வேண்டும்’ என்று இருந்தோம். அந்த நிலம்பற்றிய ஆவணங்களை வருவாய்த் துறையிடம் பெற்று பார்த்த பிறகே, இவர், ஏரி நிலத்தை அபகரித்த தகவல் உண்மை என்று தெரிய வந்தது, அதனால் புகார் கொடுத்தோம்.
மாவட்ட வருவாய்த் துறையின் அனைத்து ஆவணங்களிலும் தற்போது வரை சர்வே எண்.39 - 1,2,3 ஆகிய நிலங்கள் அரசு ஏரிப் புறம்போக்கு நிலங்களாக இருந்து வருகின்றன. ஆனால், மோகன்ராஜ் போலியான ஆவணங்கள் தயார் செய்து, தன் தம்பி சுரேஷ்குமார் மேயராக இருந்தபோது, மாநகராட்சி யின் மூலம் அந்த ஏரி நிலத்தை தன் பெயரில் பட்டா நிலங்களாக மாற்றிக் கொண்டார். இவர் அரசு ஏரிப் புறம்போக்கு நிலத்தை அபகரித்து உள்ளது ஆதாரபூர்வமாகவே இருக்கிறது. இந்த நிலத்தின் மதிப்பு   30 கோடிக்கு மேல் இருக் கும். கடந்த சட்டமன்றத் தேர்தலின் வேட்பு மனுத் தாக்கலில், இந்த நிலம் தன்னுடையது என்று தவறான தகவல் கொடுத்து இந்திய தேர்தல் ஆணையத்தையும் ஏமாற்றி உள்ளார். அதனால் இவரது எம்.எல்.ஏ., பதவியை தேர்தல் ஆணையம் பறிக்க வேண்டும். இதுபற்றி முதல்வர் ஜெயலலிதாவுக்கும், தே.மு.தி.க. கட்சி தலைவர் விஜயகாந்த்துக்கும் புகார் அனுப்பி இருக் கிறேன். முதல்வரின் கூட்டணிக் கட்சி என்ற பாகுபாடு பார்க்காமல், உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். 'மக்கள் பணியாளர்கள் எப்படி மக்களிடம் நடந்துகொள்ள வேண்டும்’ என்று வகுப்பு நடத்தும் விஜயகாந்த், இந்த விஷயத்தை ஆராய்ந்து பார்த்து, உடனே மோகன்ராஜை கட்சியில் இருந்து நீக்க வேண்டும். அப்போதுதான் விஜயகாந்த் மீது மக்களுக்கு நல்ல மரியாதையும் நம்பிக்கை யும் வரும்!'' என்றார்.
பூமொழியின் புகார் களுக்கு எம்.எல்.ஏ-வான மோகன்ராஜிடம் விளக்கம் கேட்டோம். ''என் மீது பொய்ப் புகார் கொடுத்து உள்ள பூமொழி, மக்களுக்கு சேவை செய்கிறேன் என்று சொல்லி கட்டப்பஞ்சாயத்து செய்யக் கூடியவர். 'மிரட்டி பணம் வாங்குகிறார்’ என்று சூரமங்கலம் ஸ்டேஷனில்கூட இவர் மீது ஒரு கேஸ் நிலுவை யில் உள்ளது. அந்த நிலத்தை முறையாக, செவ் வாய்ப்பேட்டையைச் சேர்ந்த கோவர்த்தனன், வெங்கட், குப்பாயம்மாள் என்பவர்களிடம் இருந்து நான்கு பேர் சேர்ந்து வாங்கினோம். 4.11.89-ல் எங்களுக்கு பட்டா கிடைத்தது. 2000-ல் பத்திரமும் கொடுத்தார்கள். அந்த மூன்று பேரும் என்னிடமே நிலத்தை விற்று விட்டார்கள். அதற்கான முறையான ஆவணங்கள் என்னிடம் இருக்கின்றன. ஏரி நிலத்தை ஆக்கிரமிக்க எனக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது? அப்படித் தப்பு பண்ணி இருந்தால், வேட்புமனுத் தாக்கல் செய்யும்போது, கணக்கில் காட்டுவேனா? ஏதோ உள் நோக்கத்துக்காக இப்படி ஒரு புகாரைக் கொடுத்து இருக் கிறார்கள். சட்டப்படி சந்திக்கத் தயாராக இருக்கிறேன். என் மீது தவறு இருந்தால், தாராளமாக நடவ டிக்கை எடுக்கட்டும்!'' என்று பளிச்சென பதில் சொன்னார்.
விசாரணை ஆரம் பமாகி விட்டது. கூடிய சீக்கிரம் யார் சொல்வது உண்மை என்பது ஊருக்குத் தெரிந்துவிடும்!
வீ.கே.ரமேஷ்
படங்கள்: க.தனசேகரன்
*****************************************************************************

கடத்திக் கொல்லப்பட்டாரா பாண்டீஸ்வரி?

'பலாத்கார' வழக்கில் சிக்கப்போவது யார்?

நில அபகரிப்பு வழக்குகள் மதுரை தி.மு.க-வினரின் தூக்கத்தை நிரந்தரமாகக் கெடுத்துவிட்ட நிலையில், மாணவி பாண்டீஸ்வரி கொலை விவகாரமும், நீதிமன்றப் படியேறி அவர்களின் 'லப்-டப்’பை மேலும் எகிற வைத்திருக்கிறது! 
மதுரை சின்ன சொக்கிகுளத்தில் உள்ள ஆதி திராவிட விடுதி மாணவி பாண்டீஸ்வரி, கடந்த 9.7.10 அன்று மர்மமான முறையில் இறக்க, 'என் மகளைப் பலாத்காரப்படுத்திக் கொன்னுட்டாங்க’ என்று அவள் தந்தை சௌந்திரபாண்டியன் சந்தேகத்தைக் கிளப்பினார். அதைக் கண்டுகொள்ளாமல், மின்சாரம் தாக்கியே மாணவி இறந்ததாக வழக்கை முடித்தனர் போலீஸார். 'இனி போலீஸை நம்பிப் பயன் இல்லை’ என்றே நீதிமன்றத்துக்குப் போனார் சௌந்திரபாண்டியன். அவரைச் சந்தித்தோம்.
'பூசாரிப்பட்டி பாரதி நகர்தான் என் சொந்த ஊர். திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து குடும் பத்தைக் காப்பாத்துறேன். எங்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன். மூத்த மகள் பாண்டீஸ்வரி, மதுரை காக்கைப் பாடினியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படிச்சா. வயசுக்கு வந்த பிள்ளையை விடுதியில்விட எனக்கு மனசு வரலை. 'ஊரில் இருந்து ஸ்கூலுக்கு வர்றதுக்கே 1 மணி நேரம் ஆகிடும்ப்பா. 9-ம் வகுப்பில் 485 மார்க் எடுத்திட்டேன். 10-ம் வகுப்பிலும் அப்படி மார்க் எடுக்கணும்னா விடுதியில் இருந்தாத்தாம்பா முடியும்’னு அவ கெஞ்சியதால், விட்டுட்டேன்.
திடீரென்று எங்களைத் தொடர்பு கொண்ட விடுதி நிர்வாகம், 'உங்கள் மகள் பாண்டீஸ்வரி மோட்டார் அறையின் அருகே உள்ள இரும்பு பைப்பை எதிர்பாராதவிதமாக தொட்டதால், அவளை மின்சாரம் தாக்கிவிட்டது. மருத்துவ மனைக்குக் கொண்டுபோகும் முன்பே இறந்து விட்டாள்’னு சொன்னாங்க.
பதறிப்போய் ஓடினோம். மதுரை அரசு மருத்துவமனை பிரேதப்பரிசோதனைக் கூடத்தில் கிடந்தது என் மகள் உடல். அவளின் தொடை இடுக்கில் ரத்தக் காயம்... இடது கன்னத்திலும் நகக் கீறல்கள்... வலது மார்பிலும் ரத்தக் காயம்... அவளது ஸிம்மிஸ் கிழிஞ்சு இருந்தது. சுரிதார் பேன்ட் திருப்பிப் போடப்பட்டு இருந்தது. இதைப் பார்த்துவிட்டு என் மனைவி சத்தம்போட்டு கதற... இருதயமே வெடிச்சதுபோல், 'ஐயோ, என் புள்ளைய சீரழிச்சிட்டாங்களே’னு கூச்சல் போட்டேன். போலீஸார் மூலம் எங்களை உடனே அப்புறப்படுத்திட்டாங்க.
மறுநாள் காலையில் பிரேதப் பரிசோதனை முடிஞ்சதும், 'என் மகளைக் கெடுத்துட்டாங்க. சம்பந்தப்பட்டவங்க மீது நடவடிக்கை எடுக்கணும்’னு உடலை வாங்க மறுத்தேன். உடனே, அப்போதைய கலெக்டர் காமராஜ், ஆதி திராவிடர் நல அமைச்சர் தமிழரசி போன்றவர்கள் நேரில் வந்து எங்களைச் சமாதானப்படுத்தினாங்க. 'நீங்கள் நினைப்பதுபோல் எந்தச் சம்பவமும் நடக்கலை. உங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், தொகுப்பு வீடும் தர்றோம்’னு ஆறுதல் சொன்னாங்க.
சொன்னபடியே தொகுப்பு வீடு கட்டுவதற் கான பரிந்துரைக் கடிதத்தையும் அமைச்சர் கொடுத்தார். பிறகு, உள்ளூர் பஞ்சாயத்துத் தலைவர் மூலமாக என் மகள் உடலை எரிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தினாங்க. ஆனா, நான் மறுத்து புதைச்சிட்டேன். விடுதிக்குப் போய் என்ன நடந்ததுனு விசாரிச்சபோது, மிரட்டலுக்குப் பயந்து கூடப் படிச்ச புள்ளைங்க பேசவே மறுத்துட்டாங்க.
சம்பவம் நடந்தப்ப, விடுதிக்குப் பக்கத்தில் தி.மு.க. கட்சி அலுவலகம் இருந்துச்சு. இப்போ அதைக் காலி பண்ணிட்டாங்க. ஒரு ஆட்டோ ஸ்டாண்டும் இருக்கு. வெளியே போன என் பொண்ணு இவர்களால் கடத்தி பலாத்காரம் செய்யப்பட்டு இருக்கலாம். இந்த சந்தேகத்தை நான் சொன்னபிறகும், அதுபற்றி துளிகூட விசாரிக்கவில்லை!'' என்றார் குரல் கம்மி.
அவரது வழக்கறிஞர் வாஞ்சிநாதன், 'பாண்டீஸ்வரியின் நெஞ்சிலும், பிறப்புறுப்பு பக்கத்திலும் காயங்கள் இருந்திருக்கு. போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டிலும் இது இருக்கு. ஒருவேளை இரும்புப் பைப்பை தொட்டாலும், மின்சாரம் கையில்தான் காயப்படுத்தி இருக்கும்;  தலைமுடி கருகி இருக்கும். ஆனா, அப்படி எந்த அறிகுறியும் இல்லை. இதை எல்லாம் விசாரிக்காம அவசர அவசரமா வழக்கை முடிச்சுட்டாங்க. பாண்டீஸ்வரி இறந்தப்ப, அவரது பெற்றோரை சமாதானப்படுத்த அமைச்சரும், கலெக்டரும் ஏன் ரொம்பவும் ஆர்வம் காட்டினாங்க? இந்த சந்தேகங்களை நீதிமன்றத்தில் முறையிட்டோம். வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மாலா, 'டி.எஸ்.பி. அந்தஸ்தில் உள்ள நேர்மையான ஒரு அதிகாரியை நியமித்து, மாணவி பாண் டீஸ்வரி விவகாரத்தை மறுவிசாரணை நடத்தி, மூன்று மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று டி.ஜி.பி-க்கு உத்தரவிட்டு இருக்கிறார். நியாயம் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறோம்!'' என்றார்.
போலீஸ், தி.மு.க. இரு தரப்பிலும் சொல்லிவைத்ததுபோல், 'அப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை. வீடு, அரசு வேலை போன்ற வாக்குறுதிகள் நிறைவேறாத ஆத்திரத்தில் பிரச்னையைக் கிளப்புகிறார் சௌந்திரபாண்டியன்!' என்று பதில் சொல்கிறார்கள்.
பாண்டீஸ்வரி தந்தையின் சந்தேகம் ஊர்ஜிதமானால், அடுத்த சிக்கல் காத்திருக் கிறது!
கே.கே.மகேஷ்
படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்

டார்ச்சர் டாக்டர்... நடுங்கும் கவுன்சலர்கள்!

திண்டுக்கல் பரிதாபம்

'நாங்க திண்டுக்கல் அரசு மருத்துவமனை யில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு ஆறுதல் சொல்லும் கவுன்சலர்களா இருக்கோம். எங்க டாக்டர் பண்ற டார்ச்சர் தாங்கவே முடியலை. யார்கிட்ட புகார் சொன்னாலும் நடவடிக்கை இல்லை. நீங்களாவது உதவி செய்யுங்கள்’ - என்று ஒரு பெண்ணின் அழுகைக் குரல் நமது ஜூ.வி. ஆக்ஷன் செல்லில் (04442890005) பதிவாகி இருக்க, விசாரணையில் இறங்கினோம். 
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத் தின் சார்பாக மாநிலம் முழுவதும் தலைமை மருத்துவமனைகளில் கூட்டு சிகிச்சை மையம் மூலமாக ஆன்டி ரெட்ரோ வைரல் தெரபி மையம் (ஏ.ஆர்.டி. மையம்) நிறுவப் பட்டு எய்ட்ஸ் நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்திக்கான சிகிச்சை வழங்கப்படுகிறது. இங்கு ஒரு மருத்துவர் மற்றும் ஆற்றுனர்கள் (கவுன்சலர்) பணியாற்றுவார்கள். திண்டுக்கல் மருத்துவமனையில் பணியாற்றும் ஆற்றுனர்களை மருத்துவர் கலாவதி டார்ச்சர் செய்கிறார் என்பதுதான் தற்போதைய பிரச்னை. இதுபற்றி பேசிய சில பெண் கவுன்சலர்கள், ''திண்டுக்கல் மாவட்டத்தில் 70 கவுன்சலர்கள் இருக்கோம். அதில், 50 பேருக்கு மேல் பெண்கள். எய்ட்ஸ் கிருமி களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மனசை தைரியப்படுத்துறதுதான் எங்களோட வேலை. எங்களுக்கு டாக்டர் கலாவதிதான் இன்சார்ஜ்.
அவங்க எங்களை நடத்துறவிதம் தாங்க முடியலை. 'வாடி, போடி, நாய், பேய்’னு பேசறதோட இல்லாம, அசிங்கமான கெட்ட வார்த்தைகளையும் பயன்படுத்துறாங்க. தெருச்சண்டை போடுற மாதிரி லேடி கவுன்சலர்களையும், ஜென்ட்ஸ் கவுன்சலர்களையும் இணைச்சு வெச்சு அசிங்கமாப் பேசுறாங்க. சில நோயாளிகள் எங்களை கவுன்சலர்னு சொல்லத் தெரியாம, டாக்டர்னு கூப்புடுவாங்க. அது கலாவதி டாக்டர் காதில் விழுந்தாப் போதும்... நாங்க தொலைஞ்சோம். பேஷன்ட் முன்னாடியே எங்களைக் கண்டபடி திட்டித் தீத்துடுவாங்க. இவங்க டார்ச்சர் தாங்க முடியாம ஒரு பொண்ணு, அமைச்சரில் இருந்து தலைமை மருத்துவர் வரைக்கும் புகார் கடிதம் போட்டுட்டு வேலையைவிட்டே போயிடுச்சு. குடும்ப சூழ்நிலையால் நாங்க வேலையை விடமுடியாம தவிக்கிறோம். மேல் அதிகாரிகள் யாருக்கு புகார் அனுப்பினாலும் அவங்களைக் கண்டிக்க மாட்டேங்குறாங்க!'' என்று புலம்பினார்கள்.
கலாவதியிடம் இந்தக் குற்றச்சாட்டுகள்பற்றி கேட்டபோது, ''நான் இதுக்கெல்லாம் பதில் பேச முடியாது. நீங்க உயர் அதிகாரிகள்கிட்ட கேட்டுக்கணும்!'' என்றார்.
திண்டுக்கல் மாவட்ட மக்கள் நலப்பணிகள் இணை  இயக்குநர் (பொறுப்பு) டாக்டர். ஜெயபாலிடம் பேசினோம். ''இதுபற்றி திட்ட இயக்குநருக்கு நிறைய புகார்கள் போயிருக்கின்றன. நானும் விசாரணை செய்து அறிக்கை அனுப்பிவிட்டேன். இனிமேல் திட்ட இயக்குநர்தான் முடிவு எடுக்க வேண்டும்!'' என்றார்.
நோயாளிகளுக்கு ஆறுதல் சொல்பவர்களுக்கு இனியாவது தேறுதல் கிடைக்குமா?
ஜி.பிரபு, படம்: வீ.சிவக்குமார்

நிறம் மாறும் ராமநாதபுரம்!

படை எடுக்கும் சாயப்பட்டறைகள்

திருப்பூர் பகுதியில் நீதிமன்றம் சாட் டையை சுழற்றிய காரணத்தால் நூற்றுக் கணக்கான சாயப் பட்டறைகள் இழுத்து மூடப்பட்டன. தற்போது அவர்கள் பார்வை, நீண்ட கடற்கரையைக் கொண்ட ராமநாதபுரம் மாவட்டத்தில் பதிந்து விட்டது. இங்குள்ள கடற்கரைப் பகுதிகளை ஒட்டிய ஆள் அரவமற்ற தோப்புகள், சாயப் பட்டறைகள் அமைக்க தோதான இடங்களாக இருப்பதால், மளமள வென சில இடங்களில் சாயப் பட்டறைகள் வரத் தொடங்கியுள்ளன. 
தொண்டி அருகே உள்ள தாமோதரன் பட்டினம் கிராமத்தில் ரகசியமாக ஒரு சாயப் பட்டறை இயங்கிவருவதாக குற்றம் சுமத்தும் அந்த ஊரின் முன்னாள் தலைவர் காளியப்பன், ''எங்க கிராமத்தில் மீன் பிடித் தொழில்தான் ஜீவனமே! இந்த நிலையில எங்க கிராமத்தில சாயப் பட்டறை புதுசா துவங்கி, அதோட கழிவு நீரை கடல்ல கலக்க விட்டு ருக்காங்க. அதன் கழிவால் அந்தப் பகுதி முழுக்கவே நிறம் மாறி, ஒருவித துர்நாற்றம்! இது நீடிச்சதுன்னா கடல் முழுக்கக் கழிவு நீர் பரவி... கடல்ல இருக்குற கொஞ்சம் நஞ்சம் மீன்களும் அழிஞ்சுரும். அதை நம்பி வாழும் நாங்களும் சாகவேண்டியதுதான்! அதனால சாயப் பட்டறையை எடுக்கச் சொல்லிக் கிராம மக்கள் ஒண்ணாப் போய்க் கேட்டோம். 'கழிவு நீரைக் கடல்ல விடல. தோப்புக்குள்ளேயே குட்டை அமைச்சு, அதுலதான் தேக்குறோம்’னு சொல்றாங்க. ஆனா, நீங்களே வந்து பாருங்க... கழிவு நீர் கடல்லதான் கலக்குது!'' என்றவர், அந்த இடத்துக்கே நம்மை அழைத்துச் சென்றார்.
அங்கே ஜெனரேட்டர் மூலம் சாயப் பட் டறை இயங்கியது. கழிவு நீர் பச்சை நிறத்தில் கொழகொழவென்று கடலை நோக்கி ஓடியது.
அந்தக் கிராமத்தின் பக்கிரிசாமி, ''பக்கத்து ஊரான பாசிப்பட்டினத்தில சாயப் பட்டறை வைக்கப் பாத்தப்ப... ஊர்க்காரங்க அதைத் தடுத்துட் டாங்க. எங்க கிராமத்தில யாருக்கும் தெரியாம வெச்சுட்டாங்க. ராத்திரி பகலா இயங்குது. 30 பேர் வேலை பாக்குறாங்க. கடலில் உப்பு நீர் எடுத்து, சாயப்பொடி கலந்து துணிகளைக் கலரா மாத்து றாங்க. அதில் வெளியாகும் கழிவு சாயத்தை சுத்தம் செய்யாமலே வெளியேத்த... கடற்கரை ஓரம் முழுதும் நுரையா மிதக்குது! அதில் கால் வைத்துக் கடலுக்குச் செல்லும் எங்க உடலில் அரிப்பு ஏற்படுது. உடனடியா இதை மூடணும்!'' என்றார்.
சாயப் பட்டறையில் விசாரணை செய்ய முயன்றபோது, அங்கே இருந்தவர்கள் பதில் சொல்ல மறுத்துவிட்டார்கள். அதனால் சாயப் பட்டறைக்கு இடம் கொடுத்த குருவாயூ ரனைத் தொடர்பு கொண்டபோது, ''ஊர்க் கூட்டம் போட்டு எங்க தோப்பில் இயங்கும் சாயப் பட்டறையை மூடச் சொன்னாங்க. நானும் விரைவில் அப்புறப் படுத்தி டுறேன்னு வாக்கு கொடுத்து இருக்கேன்!'' என்றார்.
இது குறித்து கலெக்டர் அருண்ராய், ''தாமோதரன்பட்டினம் சாய ஆலை பற்றி புகார் வந்திருக்கிறது. அங்கே சென்று சோதனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்!'' என்றார்.
ஆரம்பத்திலேயே இதுபோன்ற அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால், நொய்யல் ஆற்றுக்கு நேர்ந்த கதிதான் வங்கக் கடலுக்கும் ஏற்படும்!
இரா.மோகன்
படங்கள்: உ.பாண்டி

''நானே தூக்கில் ஏறும் கடைசி ஆளாக இருக்கட்டும்!''

ழப் படுகொலைகள் உண்​டாக்கிய துயரமே தமிழக மனங்​களில் ரணமாக வடியும் நிலையில், தூக்குக் கயிறு வடிவில் மீண்டும் துரத்தத் தொடங்கி இருக்கிறது துயரம். ராஜீவ் கொலை வழக்கில் சிக்கி வேலூர் சிறையில் இருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவரும் மரணத்தின் நிழலில் நிற்கிறார்கள். தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையைத் தளர்த்தக்கோரி இவர்கள் அனுப்பிய கருணை மனு குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டுவிட்டது. மூவரை​யும் காப்பாற்றக் கோரி கட்சி வேறு​​பாடுகளைக் கடந்து தமிழகம் முழுக்க உணர்வும் உருக்கமுமான போராட்​டங்கள் நடக்கின்றன. மரணத்தின் துரத்தலில் வாடும் அந்த மூவரின் மனப் போராட்டங்களையும் அறிய முடிவெடுத்​தோம். வழக்கறிஞர்கள் ராஜீவ் காந்தி, பாலாஜி மூலமாக கேள்விகளை அனுப்பி வைத்தோம். அதன் தொகுப்பு இங்கே... 
முதலில் பேரறிவாளன்...
''எந்த நேரத்திலும் தூக்கு அறிவிப்பு வரலாம் என்கிற நிலையை எப்படி எதிர்கொள்​கிறீர்கள்?''
''முதலில் எங்களுக்காகப் போராடும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறோம். தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே மரணத்தின் நிழலில்தான் நிற்கிறோம். கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டதில் மரண நிழல் எங்களைப் பெரிதாகசூழ்ந்திருக்கிறது. மக்களின் ஒருமித்த கைகோப்பு எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையையும் வெளிச்சத்தையும் உருவாக்கி இருக்கிறது. 19 வயதில் உள்ளே வந்தவன். 21 வருடங்கள் இந்தச் சிறையிலேயே பெருவலியோடு கழிகிறது. தூக்கு அறிவிப்பை இந்த வலியில் இருந்து விடுபடும் நாளாக எண்ணி என்னைத் தேற்றிக்கொள்ளும் நிலையில்தான் இருக்கிறேன்!''
''தமிழக மக்களிடம் நீங்கள் சொல்ல நினைக்கும் கருத்து?''
''அரசியல் பாகுபாடு பார்க்காமல் அனை​வரும் எங்களுக்காகப் போராடுவது எங்களின் கண்ணீரைத் துடைத்து இருக்கிறது. இன உணர்வு மட்டும் அல்லாது, மனிதநேயமும் ஒருசேர்ந்த போராட்டம் எங்களை சிலிர்க்க வைத்திருக்கிறது. பொதுமக்களும் அனைத்துத் தலைவர்களும் ஒரே அணியில் நின்று தூக்குத் தண்டனைக்கு எதிராகப் போராட வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம். அனைத்து அரசியல் தலைவர்களும் ஒருமித்த உணர்வோடு திரண்டு தமிழக முதல் அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்தால், நிச்சயம் அவர் எங்களின் விடிவுக்கு வழி செய்வார். அவருடைய குரல் எங்களுக்காக காத்திருக்கும் கயிறை நிச்சயம் அறுத்தெரியும்!''
''தமிழக முதல்வரிடம் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?''
''மிகுந்த அறிவும் ஆய்ந்தறியும் பேராற்றலும் கொண்டவர் நீங்கள். இந்த வழக்கில் இருக்கும் குளறுபடிகளை நிச்சயம் அறிந்திருப்பீர்கள். அம்மா, மரணம் கோரப்பசியோடு துரத்தும் இந்த நேரத்தில் மட்டும் அல்ல... 20.07.07 அன்றே  உங்களுக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன். 'வழக்கில் சிக்குபவர்களுக்கு வசதி இல்லை என்றால், அவர்களின் தரப்பு நியாயம் அம்பலம் ஏறாமல் போய்விடும். அத்தகைய குறைபாடு கொண்ட கட்டமைப்புதான் இன்றைக்கு நிலவுகிறது. என்ன தவறு செய்தோம் என்றே தெரியாமல் இத்தனை நாள் மரணத்தின் மடியில் படுத்துக் கிடப்பவனாகக் கேட்கிறேன்... தயவுசெய்து தூக்குத் தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுங்கள்!’ என அந்தக் கடிதத்தில் உங்களிடம் கோரிக்கை வைத்திருந்தேன். பிறருக்கு முன்னுதாரணமான சட்டத் திருத்தங்களைக் கொண்டுவருகிற சக்தி உங்களுக்கு மட்டுமே இருக்கிறது.மனசாட்சியின் கண்ணீர்க்குரலாகச் சொல்கிறேன்... எங்களுக்குத் தெரிந்து எதுவும் நடக்கவில்லை. சித்திரிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்காக இத்தனை வருடங்கள் வாடும் எங்களுக்காக உங்களின் ஒற்றைக் குரல் ஒலித்தால் போதும் அம்மா!''
''கருணை மனு நிராகரிக்கப்பட்ட உடன் மரணம் நெருங்கிவிட்டதாக நினைக்கிறீர்களா?''
''99-ம் ஆண்டு மனித உரிமை ஆர்வலர் ஹென்றி டிஃபேன் என்னைப் பார்க்க வந்தார். 'வெளியே வந்தால் என்ன செய்வீர்கள்?’ எனக் கேட்டார். 'தூக்குத் தண்டனைக்கு எதிராகப் போராடுவேன்’ எனச் சொன்னேன். காரணம், தூக்கு அறிவிக்கப்பட்ட ஒருவனின் ஒவ்வொரு நிமிஷமும் எத்தகையக் கொடூரமானது  என்பதை அனுபவப்பூர்வமாக அறிந்தவன் நான். வெளி உலகம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க இப்போது ஆசையாக இருக்கிறது. சிறு குழந்தையின் தவிப்பாக மனது ஏங்குகிறது. எங்​களுக்காகப் போராடும் மக்களை நேரில் பார்த்து கைகூப்பத் தோன்றுகிறது. ஆனால், ஏற்கெனவே பரப்பிய பழிகள் போதாது என 'சாத்தானின் படைகள்’ என்கிற புத்தகத்தை நான் அச்சடித்ததாக சிலர் இப்போது கிளப்பிவிடுகிறார்கள். அந்தப் புத்தகத்தை யார் உருவாக்கியது என்பது சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு நன்றாகத் தெரியும். அப்படி இருந்தும் என்னை இட்டுக்கட்டுவது ஏன்? ஜோடிக்கப்பட்ட இந்த வழக்கில் ஒருவேளை மரணம் எங்களை வென்றுவிட்டால், கயிற்றின் முன்னால் நின்று நான் சொல்ல நினைப்பது... தூக்குக்குப் பலியாகும் கடைசி ஆள் நானாக இருக்கட்டும் என்பதுதான்!''
அடுத்து முருகன்...
''தமிழகத்தில் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் உங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறதா?''
''மரணத்தைவிட மரணத்தின் நாளுக்காகக் காத்திருப்பது கொடுமையானது. அதை ஒவ்வொரு கணமும் அனுபவிக்கும் இந்த சூழலில், மக்களின் ஆதரவுதான் எங்​களை நம்பிக்கையோடு நிமிர வைக்கிறது! தனித்தனியான போராட்டங்களை முன்னெடுக்​காமல், எங்களுக்காக எல்லோரும் ஒருமித்து நிற்க வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை. இதர மாநிலங்களில் தண்ணீர் பிரச்னைக்குகூட அனைத்துக் கட்சிகளும் ஒன்றாகத் திரளுகின்றன. எங்களின் கண்ணீர் பிரச்னைக்கும் அதேபோல் அனைத்துக் கட்சிகளும் திரண்டு, முதல்வரிடம் கோரிக்கை வைக்க வேண்டும். மூன்று உயிர்களுக்காக மொத்த தமிழகமும் கைகோத்து நின்றதை காலக் கல்வெட்டு தமிழனின் உயர்ந்த உணர்வாகப் பதிவு செய்ய வேண்டும்!''
''தமிழக மக்களிடம் ஏதாவது சொல்ல விரும்பு​கிறீர்களா?''
''எங்கள் மீதான குற்றச்சாட்டுகளில் துளியும் உண்மை இல்லை. மரணத்துக்குப் பயந்து இந்த வார்த்தை​களைச் சொல்லவில்லை. எங்களின் கவனத்துக்குத் தெரியாமல் நடந்த சம்பவத்துக்கு இத்தனை வருட சிறைவாசமே பெரிய கொடுமை. ஒப்புதல் வாக்குமூலத்தில் நாங்களே பல விஷயங்களை ஒப்புக்கொண்டதாக விசாரணை அதிகாரிகள் சொல்கிறார்கள். ஆனால், ஒப்புதல் வாக்குமூலத்தை அவர்களே தயாரித்து எங்களை அதில் கையெழுத்துப் போடச் சொன்னார்கள். அதற்காக அவர்கள் செய்த சித்ரவதைகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது. மரணக் கொட்டடியின் நெருக்கடிகள் எங்களுக்குப் பழகிப்போனாலும், என்றைக்காவது ஒருநாள் வெளியே வருவோம் என்கிற நம்பிக்கை இருக்கிறது. உறவுகளின் உணர்வுகளால் அந்த நம்பிக்கைப் பலப்படுகிறது. ஒரே வார்த்தையில் எங்களின் உணர்வைச் சொல்வதானால்.... நன்றி!''
அடுத்து ம.தி.சாந்தன்...
''ராஜீவ் கொலை விசாரணையில் நிறைய குளறு​படிகள் நடந்ததாகச் சொல்கிறார்களே...?''
''கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத நாங்கள் குற்றவாளிகளாக நிற்கிறோம். இந்த வேதனையைக் கொஞ்சம் விளக்கமாகச் சொன்னால்தான் புரியும்.
கொழும்பு வழியாக வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொள்வது பாதுகாப்பானது அல்ல என்பதாலேயே நான் இந்தியாவுக்கு வந்தேன்.  இலங்கை அரசு தந்த உண்மையான பாஸ்போர்ட்டுடன் வந்தேன். அதை சி.பி.ஐ. கைப்பற்றி உள்ளது. ராஜீவ் போன்ற பெரிய தலைவரைக் கொல்ல வருபவன் தன்னைப் பற்றிய தகவலைச் சொல்லும் உண்மையான பாஸ்போர்ட்டுடன் வருவானா?
நான் சுமக்கும் மரண தண்டனைக்குப் பெயர் குழப்பமும் ஒரு காரணம். இந்த வழக்கில் கைதாகி விடுதலையான இரும்பொறை என்பவரை நான் ராஜீவ் இறப்பதற்கு முன்னர் சந்தித்ததாகவும், 15 ஆயிரம் பணம் கொடுத்ததாகவும், 'முக்கியமான ஒரு நபரைக் கொல்லப் போகிறோம்’ என்று சொன்னதாகவும் மரண தண்டனையை உறுதி செய்தபோது மாண்புமிகு நீதிபதி கே.டி.தாமஸ் அவர்கள் கூறுகிறார்.  ஆனால், மாண்புமிகு நீதிபதி வாத்வா அவர்கள் அது இறந்துபோன எதிரி திருச்சி சாந்தன் என்கிறார். இன்னொருவர் சொன்னதை நான் சொன்னதாகச் சொல்லி என்னைத் தூக்கில் நிறுத்தப் போகிறார்கள்.
'நானும் சிவராசனும் நளினியை மிரட்டி இந்த​சதிக்கு உடன்பட வைத்தோம்’ என்று நீதிபதி தாமஸ் சொல்கிறார்.  ஆனால், நீதிபதி வாத்வா, 'ராஜீவ் இறந்த அடுத்த நாள்தான்  நளினியை சாந்தன் அறிவார்’  என்கிறார்.
நான் புலிகள் அமைப்பின் உளவுப் பிரிவில் முக்கியமான ஆள் என்பதற்கு ஆதாரம் இருப்பதாக நீதிபதி தாமஸ் தீர்ப்பில் சொல்கிறார். இவை எதற்கும் ஆதாரம் இல்லை. விடுதலையான இரும்பொறையுடன் நான் சம்பந்தப்பட்டிருந்தேன் என்றோ, நளினியை மிரட்டினேன் என்றோ சி.பி.ஐ.கூடச் சொல்லவில்லை. ஒருவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை அவரிடம் கூறி அவரது பதிலை விசாரணை நீதிமன்றம் பதிவு செய்ய வேண்டும். ஆனால் என் விஷயத்தில் இது செய்யப்படவில்லையே.. எப்படி?
சிவராசனின் பணத்தை முதலில் காந்தன் என்பவர் கையாண்டார். அவரிடம் இருந்து நான் அந்தப் பொறுப்பினை எடுத்துக்கொண்டதாக நீதிபதி வாத்வா அவர்கள்  தீர்ப்பில் கூறுகிறார். சிவராசனின் பணத்தை நான் பாதுகாத்து கொடுத்ததாகவோ கையாண்டதாகவோ விசாரணை நீதிமன்றம் என்னிடம் கேட்டுப் பதிவு செய்யவில்லை.  இப்படி எல்லாம் குளறுபடிகள் நடந்தன. குளறுபடிகளே எங்களுக்கான முடிவுப் படிகளாக மாறிவிட்டன!''
''கருணை மனு நிராகரிக்கப்பட்டது தெரிந்த உடன் என்ன நினைத்தீர்கள்?''
''என் தந்தை ஆறுமுகம் தில்லையம்பலம் அவர்களின் நினைவு வந்தது. அவருக்கு இப்போது 70 வயது. இறுதிக்கட்டப் போருக்குப் பிறகு அவரிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை. அதற்கு முன்னர் அங்கு விவசாயம் செய்துகொண்டு இருந்தார். அவர் எப்படி இருக்கிறார் என்கிற கவலை என்னைப் பெரிதாக வருத்துகிறது. பெற்ற தகப்பன் இருக்கிறாரா இல்லையா என்பதை நினைத்து அழுவதா? நான் இருப்பேனா மாட்டேனா என்பதை நினைத்து அழுவதா? இந்த அப்பனும் மகனும் விதியெனும் கையில் சிக்கிய விளையாட்டுப் பொம்மைகளாய் அல்லாடுகிறோம்!''
இரா.சரவணன்
*********************************************************************

மூச்சுத் திணறும் மன்மோகன்!

பிரதமர் மன்மோகன் சிங்கின் தலைப் பாகையை உலுக்கி எடுக்கிறார், கதர்த் தொப்பி அண்ணா ஹஜாரே. அவர் தொடங்கிய பட்டினிப் போராட்டம் அகில இந்தியாவையும் ஒன்று சேர்த்துவிட்டது! 
இரண்டாவது சுதந்திரம்?
இரண்டாம் கட்டப் போராட் டத்துக்கு ஹஜாரே தேதி குறித்த சமயத்தில் இருந்தே, 'அப்படி எல்லாம் உங்கள் இஷ்டப்படி அனுமதி வழங்க முடியாது!’ என்ற அரசு, முதல் அடியாக அனுமதி மறுத்தது. இரண்டாவது அடி யாக, ஜந்தர் மந்தர் பகுதியில் நுழையத் தடை விதித்தது. மூன்றா வதாக, ஏழு நாட்களுக்குள் போராட்டத்தை முடிக்க வேண் டும் என்று கெடுவைத்தது. இவற்றை மீறிய ஹஜாரேவை திகார் சிறையில் போட்டது. தான் கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களில் தன்னுடைய போராட்டத்தை, 'இரண்டாவது சுதந்திரப் போராட்டம்’ என்று வரையறுத்தார் ஹஜாரே. இப்போது நாடெங்கும் ஆர்ப்பரிக் கிறது ஹஜாரேவின் மந்திர வார்த்தைகளை!
ஹஜாரே கைது செய்யப் பட்டதுமே, மேதா பட்கர், சுவாமி அக்னிவேஷ், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் போன்றவர்கள் திகார் சிறையில் சந்தித்து ஆதரவுகளைத் தெரியப்படுத்தினர். தலைநகரில் பற்றிய தீ... நாடு முழுக்கப் பரவியது. மாநிலங்கள் தோறும் மெழுகுவத்திப் போராட்டம், உண்ணாவிரதம், கருத்தரங்கு, கண்டன ஆர்ப்பாட்டம் என தங்களின் எதிர்ப்புகளைப் பதிவு செய்தனர். இதில் திரையுலக நட்சத்திரங்களும் அடக்கம்.
லோக்பால் தொடர்பாக நடந்த முதற்கட்டப் போராட்டத்தில் கொஞ்சம் அடக்கி வாசித்தது அரசு. பாபா ராம்தேவின் போராட் டத்தின்போது தடியடி நடத்தியது. இப்போது, இரண்டாம் கட்டப் போராட்டத்தில், போராட்டம் தொடங்கும் முன்பே, ஹஜாரேவைக் கைது செய்தது.
அரசுக்கு எதிராக மக்கள் குமுறி எழுந்த காரணத்தால், ராம்லீலா மைதானத்தில் 21 நாட்கள் பட்டினிப் போராட்டம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. அப்போது விடுக்கப்பட்ட 22 நிபந்தனைகளில், ஆறு நிபந்தனைகளை ஹஜாரே குழுவினர் ஏற்றுக்கொள்ளவில்லை. நாடெங்கும் ஆதரவு பெருகுவதைக் கண்ட அரசு, 'பேச்சுவார்த்தைக்குத் தயார்!’ என்றது.
இந்த நிலையில் தகவல் அறியும் உரிமை சட்ட செயற்பாட்டாளரும், ஹஜாரே ஆதரவாளருமான ஷீலா மசூத் என்பவர் கொல்லப் பட்டார். இந்தப் போராட்டத்தில் இக்கொலை ஒரு முக்கியக் கரும் புள்ளி.
ஹஜாரேவின் பட்டினிப் போராட்டத்துக்கு பெரும் ஆதரவு இளைஞர்களிடம் கிடைத்து இருக்கிறது. ஆர்குட், ட்விட்டர், ஃபேஸ்புக், மின் அஞ்சல், குறுஞ்செய்தி எனத் தகவல் தொழில்நுட்பத்தின் அனைத்து
வாசல்கள் வழியாகவும் போராட்டத்தை ஒன்றிணைத்து வருகிறார்கள். மும்பை ஐ.ஐ.டி. மாணவர்கள், ஒரு நாள் உணவை ஒதுக்கி வைத்தனர். சென்னையிலும், கர்நாடகாவிலும் பேராசிரியர்கள் தங்களின் மாணவர்களை ஒன்று திரட்டிப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழகத்தில்
இரா.செழியன், தமிழருவி மணியன் போன்றோர் மக்களிடையே போராட்டத்தைத் தீவிரமாக்கிஇருக்கிறார்கள். கிட்டத்தட்ட அனைத்து எதிர்க் கட்சிகளும் ஹஜாரேவுக்கு ஆதரவு தெரிவிக்க, ஆகஸ்ட் 23-ல் ஒன்று திரண்டு இருக்கிறார்கள். 'லோக்பாலைக் கொண்டுவாருங்கள் அல்லது உங்கள் பதவியைவிட்டுக் கீழே இறங்குங்கள்!’ என்று அனைத்து அமைச்சர்களையும் நோக்கி குரல் கொடுக்கிறார் அண்ணா ஹஜாரே.
'அண்ணா’ மைதானக் காட்சிகள்...
மத்திய அரசுக்கு 15 நாட்கள் கெடுவோடு அண்ணா ஹஜாரே உண்ணாவிரத்தை தொடங்கி விட்டார். ராம் லீலா மைதானத்தில் பராமரிப்புப் பணி பாதிக்கும் மேல் முடிவடையடையாமல் சேரும் சகதியுமாகவே இன்னமும் காட்சியளிக்கிறது. இருப்பினும் மற்ற பகுதிகளில் பந்தல் அமைத்து அண்ணா ஆதரவாளர்கள் இந்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். பிரத்யேகமாகப் போடப் பட்டுள்ள மெத்தையில் ஓய்வு எடுத்தும், அவ்வப்போது உரையாற்றியும் வருகிறார் அண்ணா.  
அவரது மேடையில் இடைவிடாது இசை நிகழ்ச்சிகளுடன், அண்ணா புகழ் பாடும் ஆடல்... பாடல்களும் தொடர்ந்து நடக்கிறது. இதே மாதிரி ஆங்காங்கே பொது மக்களும் பல்வேறு அமைப்பினரும் தங்களுடைய போராட்டங்களை வெவ்வேறு வகைகளில் வேடிக்கை நிகழ்ச்சிகளோடு நடத்தி வருகின்றனர். இதில் ஆளும் காங்கிரஸைத் தாக்கி நடக்கும் வேடிக்கை நிகழ்ச்சிகள் ஏராளம். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் கபில் சிபல், ராகுல் காந்தி மற்றும் ப.சிதம்பரமும் கடுமையான தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். அதிலும், 'கபில் சிபலை அமைச்சர் பதவியிலிருந்து நீக்காமல் எங்களது போராட்டம் ஓயாது’ என்று உரக்கவே சொல்கிறார்கள்.
அண்ணா உண்ணாமல் அமைதியாக இருக்கிறார். அவ்வப்போது பேசுகிறார்... உறங்குகிறார்... ஓய்வெடுக்கிறார். ஆனால் அவரது ஆதரவாளர்கள் உணவுப் பண்டங்களை ஒரு பிடிபிடிக்கின்றனர். அதனால் மைதானத்தைச் சுற்றிலும் ஏராளமான கடைகள். பக்கோடா, சமோசா, ரசகுல்லா, பூரி மசாலா என்று வியாபாரம் வெகுஜோராக நடக்கிறது. உண்ணாவிரதப் பகுதி முழுக்க காந்தி குல்லாவாக காட்சியளிக்கிறது. 'நான் அண்ணா’ என்று  எழுதப்பட்ட குல்லாக்கள் பரபரப்பாக விற்பனை ஆகின்றன. முக்கிய கடைவீதிகள், தெருக்கள், குடியிருப்புப் பகுதிகள், பஸ்கள், ரயில்கள் எல்லாம் தேசியக் கொடியை ஏந்தியபடி அண்ணா நாமமும் ஊழலுக்கு எதிரான கோஷமும் எதிரொலிக்கிறது.      
நாடு முழுக்க உள்ள அரசு சார்பற்ற அமைப்புகளுக் கும் (என்.ஜி.ஓ-க்கள்) பொது மக்களுக்கும் அண்ணா அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று, சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களும் முதியவர்களும் பேரணியில் கலந்து கொண்டு அதிரவைக்கும் கோஷங்களோடு உணர்ச்சிபூர்வமாக நடந்து சென்றனர். இந்தியா கேட்டில் இருந்து சுமார் ஏழரைக் கிலோ மீட்டர் தூரம் கடந்து ராம்லீலா மைதானத்தை இந்த ஊர்வலம் அடைந்தது. 'லோக்பால் மசோதாவை நிறைவேற்று அல்லது ஆட்சியிலிருந்து வெளியேறு’ என்பது போன்ற கோஷங்களாக இருந்தன. அண்ணாவின் போராட்டம் பாகிஸ்தானில் கூட எதிரொலிப்பதுதான் ஆச்சர்யம்.
ஊர்வலத்தையும் உண்ணாவிரதப் போராட்டத் தையும் கண்ட ஆளும் கட்சிகள் மட்டுமல்ல எதிர்க் கட்சிகளும் கதிகலங்கி உள்ளனர். போராட்டக்காரர்கள் அடுத்தகட்டமாக பிரதமரின் வீடு, மத்திய அமைச்சர் கபில் சிபல் வீடு,  நாடாளுமன்ற எம்.பி-க்கள் வீடுகளிலும் முற்றுகைப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். நிலைமை சிக்கலாவதைத் தொடர்ந்து  அண்ணாவின் கோரிக்கைகளில் சிலவற்றை நிறைவேற்றியே தீரவேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகியுள்ளது அரசு.
இந்த விவகாரத்தில் உற்சாகமாக இருப்பது முக்கிய எதிர்க் கட்சியான பி.ஜே.பி.! அண்ணாவின் ஆதரவு அலை தங்களுக்கே சாதகமாக வந்து சேரும் என்று நம்பிக்கையில், 'ஊழல் அரசே வெளியேறு... ஆட்சியை கலைக்கவேண்டும்’ என்ற அளவுக்கு அத்வானியும் பேசத் தொடங்கிவிட்டார்.
வேறுவழியின்றி அண்ணா ஹஜாரேவுடன் பேச்சுவார்த்தை நடத்த இறங்கி வந்துள்ளது மத்திய அரசு.
இத்தனை ஆர்ப்பாட்டங்கள் நடக்கும் வேளையில்... லோக் பால் சட்டம் அரசியல் செய்யவே உதவும், மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்காது என்றும் பேச்சு உலவத் தொடங்கி விட்டது!
அண்ணாவின் கோரிக்கையும் மத்திய அரசின் பிடிவாதமும்!
ராம்லீலா மைதானம் நோக்கி மக்கள் திரண்டு வந்து கொண்டே இருக்கிறார்கள். மத்திய அமைச்சரவையில் இருந்து பேச்சுவார்த்தைக்காக எந்த ஓர் அழைப்பும் வராததை அடுத்து, கவலை தோய்ந்த முகத்துடன் தன் போராட்டத்தில் மூழ்கி இருந்தார் அண்ணா. அதற்குள்ளாக அண்ணாவின் எடை ஐந்து கிலோ குறைந்துவிட்டது. அப்போதுதான் மகாராஷ்டிராவின் 1977-ம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரியான யு.சி.சாரங்கியையும், நீண்ட காலமாக தன் உதவியாளராக இருந்து வரும் பாயுஜி மகாராஜையும் மீடியேட்டர்களாக மத்திய அரசு நியமித்திருக்கும் செய்தி கிடைக்க, அதிருப்தியடைந்தார் ஹஜாரே.
உடனே அண்ணாவின் ஆதரவாளர்கள், அமைச்சர் கபில் சிபலின் வீட்டின் முன்பு ஒன்று திரண்டு கோஷமிட்டார்கள். வன்முறை நிகழ்த்தப் படுவதற்கான வாய்ப்புகள் இருந்த சூழ்நிலை. எந்த நொடியிலும் அடக்கி வைக்கப்பட்டிருக்கும் கொந்தளிப்பை வெளிப்படுத்திவிடக்கூடாது என்பதில்தீவிரமாக இருந்தார்கள் அண்ணாவின் ஆதரவாளர்கள். 'ஊழலைக் களைவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் உரிய முறையில் மேற் கொள்ளப்படும்’ என்று தன் சவசவத்துப் போன வசனத்தையே மீண்டும் மீண்டும் உச்சரித்தார்  மன்மோகன் சிங்.
அரசு தரப்பு, அண்ணா தரப்பு என இரு சாரா ரும் உருவாக்கி இருக்கும் வரைவில், அரசின் நலனைக் கருத்தில் கொண்டு சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்கிறார் பிரதமர். ஆனால் அண்ணா அதற்கு உடன்படுவதாய் இல்லை.
ஒரு புறம் அண்ணா பிடிவாதத்துடன் இருக்க, இன்னொரு புறம் அரசு தரப்பு குழுவினர் முரண்டு பிடித்தார்கள். 'அண்ணாவுடன் நான் பேசத் தயாராக இருக்கிறேன். அவரின் குழுவினர் விலகி இருந்தால் இது சாத்தியப்படும்’ என்று மிரட்டல் தொனியில் அறிவித்தார் கபில் சிபல். அண்ணா குழுவினர் அதை எதிர்த்தார்கள். புதிய யோசனை களுடன் அரசு பேச்சுவார்த்தைக்கு முன் வர வேண் டும் என்றார்கள். தனியாகப் பேச தான் தயாராக இருந்தாலும் அது குழுவினரிடையே விரிசலை ஏற்படுத்திவிடக்கூடும் என்ற எண்ணத்தில் மௌனம் காத்த அண்ணா, 'அரசு தரப்பில் இருந்து யாருடனும் பேசத் தயார் இல்லை... நேரடியாக பிரதமரைச் சந்தித்துப் பேச விரும்புகிறேன்’ என்றார்.
இறங்கி வரலாமா இல்லை அப்படியே மௌன மாக இருக்கலாமா என்று யோசித்த பிரதமர், 'லோக்பால் தேவைதான். ஆனால் அதுவே ஊழலை ஒழிப்பதற்கான நிரந்தரத் தீர்வாகி விடாது.நீதித்துறையில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை விரைவில் விசாரித்து முடிக்க முடியும்’ என்று ஓர் அறிக்கை வெளியிட்டு அரைத்த மாவையே அரைத்தார்.
ஆனாலும் அண்ணா, 'பிரதமர் அல்லது ராகுல் காந்தியிடம் மட்டுமே நேரடியாக பேச்சு வார்த்தை’ என்பதில் தெளிவாக இருந்தார். மேலும், நீதித்துறையை லோக்பால் சட்டத்தின் கீழ் கொண்டு வருவதில் விலக்கு அளிக்கும் கருத்தில் தனக்கு உடன்பாடு இருப்பது போல அன்ணாவின் நிலை இருக்கிறது. 'நீதித்துறையை லோக்பால் சட்டத்தின் கீழ் கொண்டு வரக்கூடாது என்று சொன்னால் அதற்குத் தகுந்தபடி ஊழலுக்கு எதிராகக் கடுமையான சட்ட வரைவுகள் இருக்க வேண்டும்’ என்றும் தன் கருத்தை ஆழமாகப் பதித்திருக்கிறார் அண்ணா.
அதே தருணத்தில், பிரதமரிடமோ அல்லது ராகுல் காந்தியிடமோ பேச வாய்ப்புகள் இல்லாத போது மகாராஷ்டிரா முதல்வர் பிரித்விராஜ் சௌகானுடன் பேச்சுவார்த்தை நடத்த அண்ணா தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்கள் அவரது குழுவினர். மேலும் அண்ணாவை தாஜா செய்ய ஏற்கெனவே இருந்த இரண்டு மீடியேட்டர்களுடன் சேர்த்து ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரையும் மீடியேட்டராக வைக்க காங்கிரஸ் முயன்றது. இது தெரிந்தவுடன், 'அரசு தரப்பு அல்லாத மற்ற மீடியேட்டர்களுடன் லோக்பால் பற்றி விவாதிக்க தான் தயாராக இல்லை’ என்று அறுதியிட்டுக் கூறிவிட்டார் அண்ணா. அரசுக்கு இன்னொரு சறுக்கல்!
யார் இறங்கி வரப் போகிறார்கள் எனத் தெரியவில்லை. ஆனால் இந்தியா முழுக்க ஊழலுக்கு எதிரான போர் மூண்டுவிட்டது. அதில் இருந்து தற்காத்துக் கொள்ளும் ஆயுதம் தான் காங்கிரஸின் கைவசம் இல்லை!
சரோஜ் கண்பத், ந.வினோத்குமார்
படங்கள்: முகேஷ் 
ஒலிக்கும் அருந்ததி ராயின் எதிர்ப்புக் குரல்!
''மக்கள் ஆதரவு... மக்கள் ஆதரவு... என்கிறார்கள். இந்த 'மக்கள்’ கடந்த 10 ஆண்டுகளாக, ஆயுதப் படைகளுக்கு வழங்கிய சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி பட்டினிப் போராட்டம் மேற்கொண்டு வரும் இரோம் ஷர்மிளாவுக்கு ஆதரவளிக்கும் மக்கள் அல்ல. இந்த, 'மக்கள்’ பாஸ்கோ திட்டத்துக்கு எதிராக, கடந்த ஆறு வருடங்களாகப் போராடி வரும் ஜகத்சிங்பூர் மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் மக்கள் அல்ல. இந்த 'மக்கள்’ 'கங்கை ஆறு மாசுபட்டு வருகிறது அதனால், சுரங்கத் தொழிலைத் தடை செய்ய வேண்டும்!’ என்று கூறி பட்டினிப் போராட்டம் நடத்திச் செத்துப்போன சுவாமி நிகாமானந்த்துக்கு ஆதரவு அளித்தவர்கள் அல்ல. இந்த 'மக்கள்’ நியாம்கிரி மலையில் வேதாந்தா நிறுவனம் நடத்தி வருகிற சுரண்டலுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் பழங்குடியினருக்கு ஆதரவு அளிப்பவர்கள் அல்ல. இந்த 'மக்கள்’ கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராகத் தொடர் உண்ணாவிரதம் இருக்கும் மக்களுடன் நிற்பவர்கள் அல்ல. இந்த 'மக்கள்’ ஹரியானாவிலும், நொய்டாவிலும் தற்கொலை செய்து சாகும் விவசாயிகளின் நிலையைக் கண்டு மனம் கொதித்தவர்கள் அல்ல. இந்த 'மக்கள்’ நர்மதா அணையால் இடப்பெயர்வுக்கு உள்ளாகும் ஆதிவாசிகளின் நிலையை உணர்ந்தவர்கள் அல்ல. ஆனால், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மக்கள் ஆதரவு பெருகுகிறது என்கிறார்கள். உண்மையில் இது வெறும் நாடகப் பிரசாரம்!'' என்று காட்டத்தோடு வெடித்திருக்கிறார் அருந்ததி ராய்.

சம்பவாமி யுகே! யுகே!

கவிதை: வாலி
தேசப் பிதா - ஆனார்

ரோசப் பிதா!
       ...
ஸ்விஸ் வங்கிகளில்
ஸ்வாசிக்க வழியின்றி -
நீண்ட
நெடுங்காலம்...

லாக்கப் அனைய
லாக்கர் - உள்ளிருந்த
மூக்குக் கண்ணாடி
மூக்கர் -

கரன்சிக்
கத்தைகளிலிருந்து
குப்பென்று
குதித்தார்;
குதித்து - மகாராஷ்டிரத்தில்
உதித்தார்!
       ...
கைத்தடி இல்லை;
கைராட்டை இல்லை;
மெய்த்தடி ஏந்தி
மற்றுமொரு காந்தி!
       ...
அவர்தான்
'அண்ணா ஹஜாரே!’;
ஆனார்
அனைவரும் உஷாரே!
       ...
'லோக்பால் -
லோகத்துக்கு க்ஷேமமான பால்!’
அதைக் கறக்க
அண்ணா ஹஜாரே -
படுகிறார்
படாத பாடு;
காம்பில்
கைவைத்தாலே -
காலால் உதைக்கிறது
காங்கிரஸ் மாடு!
       ...
முனகுகிறார்
முகர்ஜி; அது -
முகர்ஜி முகர்வுக்கு
அலர்ஜி!
சினக்கிறார்
சிதம்பரம்; அது
சிதம்பரம் சவாலுக்கு
சிரமம் தரும்!
மருளுகிறார்
மன்மோகன்; அது-
மன்மோகன் மனதுக்கு
மற்றொரு DRAGON..!

இப்படி
இருக்கையில் -
குடியானவன்
குடிசையில்...
ரொட்டி சாப்பிடப் போய்விட்டார்
ராகுல்; எவரையுமே
ராகுல் சாடமாட்டார்; அவரது
நா COOL..!
       ...

இந்த நிலை.
இப்படியே நீடித்தால் -
என்று நிகழ்வது லோக்பால்?
என்று நிமிர்வது DOG வால்?
       ...
அண்ணா ஹஜாரே
உண்ணா விரதத்தில்;
அரசு -
அவ் -
உண்ணா விரதத்தை
எண்ணா விரதத்தில்!
       ...
அண்ணா ஹஜாரேயை
ஆராதிக்கிறது...
TWITTER - ஒரு
TUTOR என்று;
FACEBOOK - 'என்ன
GRACE LOOK!’ என்று!
       ...
ஒற்றை மனிதன் வடிவில்
ஒரு மெழுகுவத்தி; அவ்
ஒன்றின் பின்னே
ஒரு லட்சம் மெழுகுவத்தி!
இவற்றில்
இழியும் -
வெளிச்சம்
வெளிப்படுத்தாதா...
ஆர்புத்தி - ஊழலில்
அழுகு புத்தி என்று?
முக்காலும் ஊழலில்
முழுகு புத்தி என்று?
       ...
கண்ணன் மட்டுமல்ல;
காந்தியும் தான் -
சம்பவாமி யுகே! யுகே!
சம்பவங்களும் அதே! அதே!

''அந்தக் கட்டடத்துக்குள் நுழைய மாட்டேன்!''

சபதம் நிறைவேற்றிய ஜெயலலிதா!

ட்சிக்கு வந்ததும், தி.மு.க. ஆட்சியில் கட்டிய புதிய தலைமைச் செயலகத்தைப் பயன்படுத்தாமல், பழைய கோட்டை யிலேயே ஆட்சியைத் தொடங்கினார் ஜெயலலிதா. அதோடு, புதிய தலைமைச் செயலகம் கட்டி யதில் முறைகேடுகள் நடந்தாகச் சொல்லி விசாரணை கமிஷனையும் நியமித்தார். இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குப் போடப்பட்ட நிலையில்தான், 'புதிய தலைமைச் செயலகம் நவீன மருத்துவமனையாக மாற்றப்படும்!’ என்று அறிவித்திருக்கிறார் ஜெயலலிதா. இந்த அறிவிப்புக்குப் பின்னால் நடந்த விஷயங்களைக் கோட்டை வட்டாரம் நிறையவே கிசுகிசுக்கிறது... 
மாறிய நீதிபதி அட்ரஸ்!
விசாரணை கமிஷனுக்காக நீதிபதி தங்கராஜ் நியமிக்கப் பட்டதுமே, 'டான்சி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலி தாவை விடுவித்தவர் தங்கராஜ். அவர் நடுநிலைமையோடு விசாரிக்க மாட்டார்!’ என்று பொது நல வழக்குப் போட் டார் பேராசிரியர் அன்பழகன். வேறு சிலரும் வழக்குப் போட்டார்கள். விசாரணை கமிஷன் தொடர்பாக அரசு வெளியிட்ட அரசு ஆணையில், நீதிபதி தங்கராஜ் முகவரி தவறாகக் குறிப்பிடப்பட்டது. அதாவது, நீதிமன்றப் பதிவாளர் அலுவலகத்தில் நீதிபதி தங்கராஜ் முகவரியை அதிகாரிகள் கேட்டபோது, நீதிபதி அல்லாத இன்னொரு தங்கராஜின் முகவரியைக் கொடுத்துவிட்டார்களாம். அதை அப்படியே அரசு ஆணையிலும் வெளியிட்டு விட்டார்களாம். அதன் பிறகுதான் இந்தத் தவறு திருத்தப்பட்டதாம்.
இந்த விஷயத்தைப் பொது நல வழக்குப் போட்டவர்கள் பிடித்துக்கொண்டதால், வழக்கில் அரசின் வாதம் வலு இழந்தது. ஆகவே, இந்த வழக்கில் விசாரணை முடிந்து, தீர்ப்பு தேதியை நீதிமன்றம் தள்ளி வைத்திருக்கும் நிலையில்தான், மருத்துவமனை அறிவிப்பு வெளியானது.
பழிக்குப் பழி அரசியல்!
புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக ஜெயலலிதா மாற்றியதற்கும், பழிக்குப் பழி அரசியல் ஃப்ளாஷ்பேக் உண்டு என்கிறார்கள். இதற்கு முன்பு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது சென்னைக்கு அருகே நிர்வாக நகரம் ஒன்றை அமைக்க, 2002 மே 8-ம் தேதி, 'மகாபலிபுரம் அருகே 2,000 ஏக்கர் பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும்.’ என்று அறிவித்தார். அதற்கான வேலைகள் தொடங்கிய சமயத்தில், 'தலைநகரைத் தாண்டி புதிய தலைமைச் செயலகம் அமைந்தால், மக்கள் சிரமப்படுவார்கள்!’ என்று எதிர்ப்பு கிளம்ப... திட்டத்தைக் கைவிட்டார். பிறகு ராணி மேரி கல்லூரியை இடித்துவிட்டு புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் அறிவிப்பை வெளியிட்டார். இதற்கு தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்தது. ராணி மேரி கல்லூரி மாணவிகளும் போராட்டத்தில் குதித் தனர். ஆகவே, சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா பலகலைக்கழகத்துக்குச் சொந்தமான இடத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் பணி தொடங்கியது. பூமி பூஜையில் ஜெயலலிதாவும் கலந்துகொண்டார். இந்தத் திட்டத்துக்கும் எதிராக, 'அடையாறு சுற்றுச்சூழல் பகுதி, அண்ணா பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமான இடங்கள் எல்லாம் பறிபோகின்றன!’ என்று சொல்லி வழக்குகள் போடப்பட்டன. ஆகவே, இந்தத் திட்டமும் கிடப்பில்போனது. தன்னுடைய மூன்று முயற்சிகளும் தி.மு.க-வால் தகர்க்கப்பட... கருணா நிதி கட்டிய தலைமைச் செயலகத்தை மூடி, பழிக்குப் பழி வாங்கியிருக்கிறார் ஜெயலலிதா... என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாகஇருக்கிறது.
ஜெயலலிதாவின் வைராக்கியம்!
புதிய தலைமைச் செயலகம் - சட்டசபை வளாகம் முழுமையாகக் கட்டி முடிப்பதற்கு முன்பே திறப்பு விழா நடத்தியது முந்தைய தி.மு.க. அரசு. எதிர்க் கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா கலந்துகொள்ள வேண்டும் என்று கடிதம் அனுப்பினர். ஜெயலலிதாவோ புறக்கணித்தார். ஆனாலும், எதிர்க் கட்சித் தலைவரின் பெயரை அழைப்பிதழிலும், கல்வெட்டிலும் போட வேண்டும் என்பது மரபு. அதை தி.மு.க. கடைப்பிடிக்கவில்லை. புதிய சட்டசபைக்குள் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் நுழைவதற்குத் தனிப் பாதையும், எதிர்க் கட்சித் தலைவர் நுழைவதற்கு வேறு பாதையும் அமைத்தனர். இவை ஜெயலலிதாவின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டன. புதிய சட்டசபை கட்டிய பிறகு, ஜெயலலிதா ஒரு முறைகூட அங்கே போய் கூட்டத்தொடரில் பங்கெடுக்கவில்லை. அந்த அளவுக்கு வைராக்கியத்தோடு இருந்தார். அதையே இப்போது செயலிலும் காட்டிவிட்டார்!
'மருத்துவமனை சாத்தியம் இல்லை’
'டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையைப் போல புதிய மருத்துவமனை அமையும்’ என்று சட்ட சபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். 'ஒரு மருத்துவமனையின் உள் கட்டமைப்பு வசதிகள் அதற்கெனப் பிரத்யேகமாக அமைக்கப்படும். ஆயிரக்கணக்கான படுக்கை அறைகளையும் ஏராளமான மருத்துவ உபகரணங்களையும் அறுவை சிகிச்சை மையங்களையும் கொண்டதாக அதைக் கட்டும்போதே அமைப்பார்கள். ஆனால், இது வெறுமனே அலுவலகங்கள் அமைப்பதற்காக மட்டுமே கட்டப்பட்டது. இந்தக் கட்டடத்தை வைத்து எப்படி மருத்துவமனை அமைக்க முடியும்?’ என்று அதிகாரிகள் மட்டத்தில் ஒரு பேச்சு கிளம்பி உள்ளது. 'மருத்துவமனை என்பது பயனுள்ள விஷயம்தான். ஆனால், அதை இந்தக் கட்டடத்தில் பண்ண முடியுமா என்பதும் சந்தேகம்தான்!’ என்றும் இவர்கள் சொல்ல ஆரம்பித்துள்ளார்கள்.
எம்.பரக்கத் அலி

இதைச் செய்தால், முதல்வர் பெயர் காலமெல்லாம் இருக்கும்!

தூக்கு தண்டனைக்கு எதிரான தமிழகம்!

'இப்போது நாம் வருத்தப்பட வேண்டியது கொடியவர்களின் தீமையைக் காட்டிலும், நல்லவர்கள் என்போரின் மௌனத்​​துக்காக!’ என்று உரக்க முழங்கியபடி, தூக்குத் தண்டனைக்கு எதிராக தமிழகத்தின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்​டங்களும் போராட்டங்களும் நடக்க ஆரம்பித்துள்ளன. இதனால், மௌனத்தை உடைக்க வேண்​டிய கட்டாயத்துக்கு ஆளாகி இருக்கிறது மத்திய அரசு! 
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன், ஆகியோரின் கருணை மனுக்களை சமீபத்தில் குடியரசுத் தலைவர் நிராகரிக்க... கட்சிப் பாகுபாடு இன்றி, அனைத்துத் தலைவர்களும் கண்டனக் குரல் கொடுத்து வருகின்றனர். தமிழகத்தில் எந்தப் போராட்டம் என்றாலும், அது பொதுவாக சென்னை அல்லது கோவையை மையம்கொண்டே ஆரம்பமாகும். ஆனால், இந்த முறை வீதிக்கு வந்து முதல் எதிர்ப்பைப் பதிவு செய்தது ஓசூர்வாசிகள்தான்.
காவல் துறையினர் அனுமதி மறுத்ததையும் மீறி, கடந்த 13-ம் தேதி, ஓசூர் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன் திரண்ட தமிழ் தேச பொதுவுடைமைக் கட்சியினர், ''20 ஆண்டுகளுக்கும் மேல் அநியாயமாக சிறையில் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்தவர்களை, இரக்கம் இல்லாமல் தூக்கில் இடுவதா? மத்திய அரசின் இந்த அராஜக முடிவை தமிழக அரசு, ஆளுநர் மூலம் முறியடிக்க வேண்டும்!'' என்று கொந்தளித்தனர்.
அன்று மாலையே மதுரை தலைமைத் தபால் நிலையம் அருகில் பெரும் கூட்டமாகத் திரண்ட தமிழீழ ஆதரவாளர்கள் கூட்டமைப்பு மற்றும் மதுரை மாவட்ட வழக்கறிஞர்கள், ''சாந்தன், முருகன், பேரறிவாளன் மட்டும் இன்றி, நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட அஃப்சல் குரு மற்றும் புல்லர், மகேந்திரநாத் தாஸ் ஆகியோர் மீதான தண்டனைகளையும் ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசு உடனடியாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்!'' என்று மதுரையைக் குலுங்க வைத்தனர்.
நாம் தமிழர் கட்சியும், பெரியார் திராவிடர் கழகமும்இணைந்து கடந்த 16-ம் தேதி, தி.நகர் முத்துரங்கன் சாலையில் நடத்திய பொதுக் கூட்டத்தில் பெருந்திரளாகக் கலந்துகொண்ட இளைஞர் கூட்டம், மத்திய அரசை வார்த்தைகளால் வறுத்​தெடுத்தது. தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகள், அரசியல் சார்பற்ற இயக்கங்கள், தமிழின உணர்வாளர்கள், பொதுமக்கள் அடுக்கடுக்காகப் போராட்டத்தில் குதிக்க... தமிழகத்தில் எழும் இந்த ஆவேச அலையை, உலக நாடுகளும் உற்று நோக்க ஆரம்பித்து இருக்கின்றன.
கடந்த 18-ம் தேதி, மே 17 இயக்கத்தின் சார்பில் சென்னையில் இருந்து வேலூர் சிறைக்கு மோட்டார் சைக்கிளில் பயணம் செல்லும் போராட்டம் நடந்தது. நடிகர் சத்யராஜ், இயக்குநர் மணிவண்ணன் ஆகியோர் பேரணியைத் தொடங்கிவைக்க... சுமார் 1,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, வழி நெடுகிலும் உள்ள கிராம மக்களிடம் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு ஆதரவு தேடியபடி சிறையை நோக்கி சீறிப் பாய்ந்தனர். இதைச் சற்றும் எதிர்பார்க்காத சிறைக் காவலர்கள் கொஞ்சம் ஆடிப்போனார்கள்.
கடந்த 19-ம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, சென்னை மெமோரியல் ஹால் முன்பு திரண்டு கண்டனக் குரல் கொடுத்தது. இதைத் தொடர்ந்து, கோவை குஜராத் சமாஜ் மண்டபத்தில் தூக்குத் தண்டனைக்கு எதிராக ஒரு கருத்தரங்கம் நடந்தது. உலக மனிதாபிமானக் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வுக்கு திரண்ட கூட்டத்தில் அந்த மண்டபமே பிதுங்கியது. நாம் தமிழர் கட்சியின்  தலைவர் சீமான், பெரியார் திராவிடர் கழகம் கு.இராம கிருஷ்ணன், தோழர் பாமரன், தோழர் பிரிட்டோ போன்றோர் கோவையைக் கிடுகிடுக்க வைத்தனர்.
கடந்த 20-ம் தேதி, சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் மரண தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து​கொண்டார் வைகோ. மக்கள் சக்தி கட்சி, மே 17 இயக்கம் உள்ளிட்ட பல அமைப்​புகள் ஒன்று திரண்டு நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், 'நிரபராதித் தமிழர்களை விடுதலை செய்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பனியன் அணிந்திருந்தனர். கொளத்தூர் மணி, ஓவியர் சந்தானம், பேராசிரியர் சரஸ்வதி, பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் ஆகியோருடன் மேடை ஏறிய வைகோ, மத்திய அரசுக்கு எதிராக முழங்கிவிட்டு, ''முதல்வர் அவர்களே... நீங்கள் மனது வைத்து இந்த மூன்று உயிர்களைக் காப்பாற்றினால், காலம் எல்லாம் இந்த தமிழ்ச் சமூகம் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கும். வரலாற்றில் உங்கள் பெயர் பொன் எழுத்துகளால் பொறிக்கப்படும்...'' என்று ஜெயலலிதாவுக்கு மனம் உருக கோரிக்கை வைத்தார்.
26 தமிழர் உயிர் பாதுகாப்புக் குழு அமைத்து அதில் 23 பேரின் உயிரைக் காப்பாற்றக் காரணமாக இருந்த பழ.நெடுமாறனை ஒருங்கிணைப்​பாளராகக்​கொண்டு 'மூன்று தமிழர்கள் உயிர் பாதுகாப்பு இயக்கம்’ என்ற புதிய அமைப்பு தொடங்கப்பட்டு உள்ளது. இதில், ம.தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள், தமிழ்த் தேசிய அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் பலரும் பாகுபாடு பார்க்காமல் ஒன்றிணைந்து உள்ளனர். சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் தூக்கினை ரத்து செய்யக் கோரி, 22-ம் தேதி, சென்னை எம்.ஜி.ஆர். நகரில் இந்த இயக்கத்தின் சார்பில் மாபெரும் கண்டனக் கூட்டம் நடந்தது. மேலும், 26-ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் மனிதச் சங்கிலி ஊர்வலம் நடத்தி, மத்திய அரசுடன் மல்லுக்கட்டப் போகிறது இந்த இயக்கம்.
மூன்று தமிழர்கள் உயிர் காப்பதை மட்டுமல்லாமல்... 'இனி யாருக்குமே மரண தண்டனை வேண்டாம்’ என்ற முழக்கத்துடன் தமிழகம் கொந்தளித்து வருகிறது!
தி.கோபிவிஜய்
படம்: சொ.பாலசுப்ரமணியன்

மின்னல் கைது யாருக்கு வைத்த குறி?

கைது மேளாவில் கலகலக்கும் மதுரை தி.மு.க.

மின்னல் கொடி - மு.க.அழகிரியின் அடிப்​பொடிகளில் ஒருவர். தி.மு.க. பொதுக்குழு உறுப்பினரான இவரும் இப்போது சிறைக்குப் போய்விட்டார். நில விவகாரம்தான் என்றாலும், வேறு சில வில்லங்க விவகாரங்களையும் தோண்டுவதால், பலர் கிலி பிடித்து ஓடுகிறார்கள்! 
மதுரை அருகில் உள்ள புதுத் தாமரைப்பட்டியைச் சேர்ந்தவர் முருகன். இவருக்கு சொந்தமான 1.84 ஏக்கர் இடத்தைப் போலி ஆவணங்கள் மூலம் விற்று மோசடி செய்ததாக மின்னல் கொடியை மடக்கிய போலீஸ், அவரின் தங்கை கணவர் நடராஜன், பத்திர எழுத்தர் விஜயகுமார், பொட்டுக்காரன் (இவர் வேற பொட்டு!) உள்ளிட்டோரையும் கைது செய்தது. கடந்த 20-ம் தேதி மின்னல் கொடி வீட்டை சல்லடை போட்ட போலீஸார், ஏகப்பட்ட ஆவணங்களை அள்ளிக்கொண்டு போயினர்.
மதுரையில் கந்து வட்டி மூலம் சம்பாதிப்பவர்களில் முக்கியமானவர் இந்த மின்னல் கொடிஎன்பார்கள். 2002-ல் ஜெயலலிதா கந்து வட்டி ஒழிப்புச் சட்டம் கொண்டுவந்தபோது, அதே புகாரில் சிக்கி, அப்போது சட்டம் - ஒழுங்கு துணை கமிஷனராக இருந்த அபின் தினேஷ் மொடக்கால் கைது செய்யப்பட்டவர். ''நிதிச் சிக்கலில் இருப்பவர்களைத் தேடிப் போய், கந்து வட்டிக்குப் பணம் கொடுப்பது. அதற்கு அடமானமாக அவர்களின் சொத்துகளை எழுதி வாங்கிக்​கொள்வது, அவர்களால் கட​னைக் கொடுக்க முடியாமல் போனால், அடமானச் சொத்தை அபேஸ் பண்ணிக்கொள்வது...  இதுதான் மின்னலின் ஸ்டைல்.'' என்று மதுரை போலீஸில் ஜாதகம் காட்டுகிறார்கள்.
கடந்த ஆட்சியில், பொட்டு சுரேஷ் மூலமாக அழகிரியிடம் செல்வாக்கான மின்னல் கொடிக்கு, பிற்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல வாரியத் தலைவர் பதவி கொடுக்கப்பட்டது. இவரின் தம்பி கல்யாணி, ரஜினி மன்றத்தில் இருந்து திமு.க. அனுதாபி ஆனவர். இவருக்கும் கந்து வட்டித் தொடர்புகள் உண்டு. கல்யாணியும் அழகிரியின் மகன் துரை தயாநிதியும் நெருக்கம்.
போலீஸ் தரப்பில் விசாரித்தபோது, ''மின்னல் கொடி வீட்டில் சில முக்கியமான ஆவணங்கள் கிடைச்சிருக்கு... விசாரணை நடக்கிறது. இவரோடு கூட்டணி வைத்த சினிமா ஃபைனான்சியர் ஒருத்தரும் சிக்குவார். குண்டர் சட்டத்தில் உள்ளே இருக்கிற நிழல் புள்ளி ஒருவருக்கு சொந்தமான மிகப் பெரிய தொகை மின்னல்கிட்ட ஃப்ளோட்டிங்கில் இருக்கிறதா சொல்றாங்க. மதுரையில் கைமாறிய ஒரு  தியேட்டர் விவகாரம் சம்பந்தமாவும் இப்போ விசாரிக்கிறோம்.
ஹைதராபாத் ஆசாமி ஒருவரை மின்னல் கொடி வகையறா தூக்கி வந்து அடித்ததாக ஒரு தகவல் இருக்கிறது. அந்த நபரை ஏன் அடித்தார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், 'சினிமா தியேட்டர்களுக்கு சவுண்ட் சிஸ்டம் அமைச்சுத் தர்றதா சொல்லி, அட்வான்ஸ் தொகையை வாங்கிட்டு ஏமாத்திட்டு ஓடிட்டதாக’ அவர் மீது வழக்கு போட்டுள்ளார்கள். அந்த ஆளுக்கும் சவுண்ட் சிஸ்டம் தொழிலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வேறு ஏதோ மேட்டருக்கு பழி வாங்கவே இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த ஹைதராபாத் ஆசாமியிடம் வாக்கு​மூலம் வாங்கினால்... சில வி.ஐ.பி. இளைஞர்கள் வரை எங்களது கைதுகள் போகலாம்'' என்று காதைக் கடிக்கிறார்கள் போலீஸில்!
அந்த இளைஞர் சாஃப்ட்வேர் இன்ஜினீயர் என்றும் அவரிடம் இருந்த ஒரு கேசட்டைக் கைப்பற்றத்தான் இந்தக் கவனிப்புகள் நடந்தது என்றும் சொல்கிறார்கள். அந்த கேசட்டில் இருந்த காட்சிகள்​பற்றியும் போலீஸார் சொல்ல மறுக்கிறார்கள்.
மதுரை எஸ்.பி-யான ஆஸ்ரா கர்க்கிடம் பேசினோம். ''மின்னல் கொடிக்கு ஏராளமான சொத்துக்கள் இருக்கின்றன. எல்லாமே கந்து வட்டியில் கிடைத்தது என்று நினைக்கிறோம். கந்து வட்டிப் பிரச்னைகள் தொடர்பா இன்னும் சிலரையும் குறிவைத்து இருக்கிறோம். சீக்கிரமே அவர்களும் மாட்டுவார்கள். மின்னல் கொடியிடம் வேறு சில விஷயங்கள் தொடர்பாகவும் விசாரிக்க வேண்டி இருக்கிறது. அதை முழுமையாக முடித்தால்,  வேறு வில்லங்கங்களும் வரும்.'' என்று சஸ்பென்ஸ் வைத்தார் எஸ்.பி.
''இன்னிக்கி யாருப்பா நியூஸ்ல..?'' என மக்கள் காமென்ட் அடிக்கும் அளவுக்குப் போய்விட்டது மதுரை தி.மு.க.!
குள.சண்முகசுந்தரம்
படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
 'பொட்டு’ பஞ்சாயத்துக்குப் போனதால் பிரச்னை!
அழகிரி பிறந்த நாளுக்கு மருத்துவ முகாம் நடத்திய டாக்டர் நவநீதகிருஷ்ணன் மற்றும் டாக்டர் சரவணமுத்து, இவரது மனைவி சங்கரி, திருச்சி மாவட்டப் பத்திரப் பதிவாளர் அண்ணாமலை உள்ளிட்டோரை 22-ம் தேதி மாலை, சொத்து மோசடி வழக்கில் கைது செய்திருக்கிறது போலீஸ். சங்கரியின் சகோதரி உறவுப் பெண்கள் மூன்று பேர் குடும்பத்துடன் வெளிநாட்டில் வசிக்கிறார்கள். அங்கு இருந்து அவர்கள் அனுப்பிய பணத்தில், மதுரையில் மருத்துவமனை ஒன்றைக் கட்டி இருக்கிறார் சரவண​முத்து. ஒரு கட்டத்தில், தங்களது பணத்தை மோசடி செய்துவிட்டதாகத் தெரிந்து, சகோதரிகள் மூவரும் சரவணமுத்து​வை சத்தம் போட, பதிலுக்கு அவர்கள் மீது பாய்ந்தாராம் சரவணமுத்து. இவருக்கு சப்போர்ட்டாக டாக்டர் நவநீத​கிருஷ்​ணன் வர, இந்தப் பஞ்சாயத்து 'பொட்டு’ சுரேஷ் அலுவலகத்துக்குப் போனது. அங்குவைத்து 'பொட்டு’ சுரேஷ், அப்போது பழங்காநத்தத்தில் சார்-பதிவாளராக இருந்த அண்ணாமலை, டாக்டர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் அந்தச் சகோதரிகளை மிரட்டி மருத்துவமனை உள்ளிட்ட சொத்துகளை சரவணமுத்து தரப்புக்கு மாற்றி எழுதி பத்திரம் பதிந்து இருக்கிறார்கள். கணேஷ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்திருக்கும் போலீஸ், இந்த வழக்கிலும் 'பொட்டு’வை முக்கியக் குற்றவாளியாகச் சேர்த்திருக்கிறது.

''நான் யாரையும் மிரட்டவில்லை!''

சிக்கலில் வீரப்பன் மகள்கள்

காதல் திருமணம் செய்து​கொள்​பவர்கள்கூட பெற்றோர்களாக மாறிய பிறகு, தங்கள் குழந்தைகளின் காதலுக்கு எதிர்ப்பு காட்டுவார்கள். அப்படிப்​​பட்ட பெற்றோர்​களின் வரிசையில் சேர்ந்திருக்​கிறார் சந்தன வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி. 
சந்தனக் கடத்தல் வீரப்​பனும் முத்துலட்சுமியும் காதலித்துத்தான் திருமணம் செய்துகொண்டார்கள். இவர்​களின் மகள்கள் வித்யாராணி, பிரபா விஜயலட்சுமி ஆகிய இருவரும் தற்போது கல்லூ​ரியில் படிக்கிறார்கள். இரண்டு பேருமே காதலித்து, பதிவுத் திருமணம் செய்து கொண்டார்கள் என்று அரசல் புரசலாக வந்த தகவலை விசாரித்தால்... ஆதாரம் காட்டி உறுதி செய்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். ''மூத்த பொண்ணு
வித்யாராணிக்கும் கிருஷ்ண கிரியைச் சேர்ந்த மரிய​தீபக் என்ற பையனுக்கும் உருவான நட்பு, காதலாக வளர்ந்தது. ரெண்டு பேரும் போன மார்ச் மாதம் சென்னை கோடம்பாக்கத்தில் பதிவுத் திருமணம் செஞ்சுக்கி டாங்க. அதே மாதிரி, சின்னப் பொண்ணு பிரபா சேலத்தில் பிளஸ் டூ படிக்கிறப்ப, கூடப் படிச்ச சண்முகராஜோடு நட்பாப் பழகியிருக்கு. இருவருமே கல்லூரிப் படிப்புக்கு சென்னை போனப்ப, காதலாகிடுச்சு. அவங்களும், சென்னையில் நடந்த ரெட்டைமலை சீனிவாசன் நினைவு நாள் விழாவில் பதிவுத் திருமணம் செஞ்சுக்கிட்டாங்க. தமிழ்த் தேசிய விடுதலை இயக்க நிறுவனர் தியாகு தலைமை யில் நக்சல்பாரிகள் இயக் கத்தைச் சேர்ந்த தர்மபுரி தமிழ்வாணன், கோவை ஈஸ்வரன், உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களான பாவேந்தன், ரஜினிகாந்த் மற்றும் கிருஷ்ணகிரியின் வழக்கறிஞர் யுவராஜ் ஆகியோர் பிரபா திருமணத்தை நடத்தி வெச் சாங்க...'' என்று சொல்​பவர் கள், வித்யா​ராணியின் பதிவுத்திருமணச் சான்றி​தழையும் காட்டினார்கள்.
தொடர்ந்து பேசிய​வர்கள், ''பொண்ணுங்க ரெண்டு பேரும் காதலிக்கிற விஷயம் முத்துலட்சுமிக்குமுன்பே தெரியும். ஆனா இவங்களோட காதலை ஏத்துக்கிற மனநிலை இல்லை. காரணம் பசங்க இரண்டு பேருமே வேற சாதி​யைச் சேர்ந்தவங்க. வித்யா ராணியின் கணவர் முதலியார் சமூகத்தில் இருந்து கிறிஸ்தவராக மாறின வர். பிரபாவின் கணவர் தலித்.
பொண்ணுங்ககிட்ட கெஞ்சிப் பார்த்தாங்க... மிரட்டிப் பார்த்தாங்க. ஆனா, பொண்ணுங்க ரெண்டு பேரும் அவங்க காதல்ல உறுதியா நின் னாங்க. எப்படியும் கல்யாணத்துக்கு அம்மா சம்மதிக்க மாட்டாங்கன்னுதான், முத்துலட்சுமிக்குத் தெரியாமலே பதிவுத் திருமணம் செஞ்சுட்டாங்க.
பொண்ணுங்க ரெண்டு பேரையும் முத்துலட்சுமி கடுமையாத் திட்டி இருக்காங்க. மூத்த பொண்ணு வித்யா ராணிக்கு அவங்க படிக்கிற கல்லூரி நிர்வாகம் மூலமா பல நெருக்கடிகளைக் கொடுத்துட்டு இருக் காங்க. அந்தப் பொண்ணோட கணவர் தீபக், தனக்கு ஏதாவது ஆபத்து வந்துடுமோனு பயந்து அடிக்கடி தங்கும் இடத்தை மாத்திக்கிட்டே இருக்கார்.
சின்னப் பொண்ணு பிரபாகிட்ட முத்துலட்சுமி வருத்தப்பட்டபோது, 'வீரப்பனோட பொண்ணு ஒரு தலித் பையனை கட்டிக்கிட்டான்னு வரலாறு சொல்லும். அந்தப் பெருமை எனக்குப் போதும்!’னு கறாராகப் பேசி அனுப்பிடுச்சி'' என்று சொல்கிறார்கள்.
வித்யா ராணி, பிரபா விஜயலட்சுமி இருவரையும் தொடர்பு கொள்ள பல வகைகளிலும் முயற்சி செய்தோம். நேரடியாக பேச விரும்பாதவர்கள், அவர்கள் சார்பில் சிலரை பேச வைத்தனர்.
''ஐ.ஏ.எஸ். ஆகணும்கிறது வித்யாவின் கனவு. ஆனா, அதற்கு அடிப்படைத் தகுதியான டிகிரியை முடிக்​​கக்​கூட விடாதபடி அம்மாவால் (முத்துலட்சுமி) பல தடைகள் வருது. இன்னும் எங்கேதான் ஓடி ஒளியுறதுனு தெரியலை...'' என்று வித்யாராணியிடம் தொடர்பில் இருக்கும் தோழி ஒருவர் சொன்னார்.
முத்துலட்சுமியிடம் பேசினோம். ''என் பெரிய பொண்ணு காலேஜ்ல படிச்சிட்டு இருக்கா. இன்​னிக்கு காலையிலகூட என்கூட பேசிட்டுத்தான் இருந்தா. சின்னப் பொண்ணு என்கூட சண்டை போட் டுட்டு, அவளை வளர்த்​தவங்க வீட்டுக்குப் போய் தங்கி இருக்கா. என் பொண்ணுங்களோட எதிர்காலத்தைப் பத்தி முடிவு எடுக்குற உரிமை எனக்குக் கிடையாதா? நான் ஜெயிலுக்குள் இருந்த சமயத்துல என் பொண்ணுங்ககிட்ட அடிக்கடி பேசி மனசைக் கலைச்சிருக்காங்க. இவங்க ரெண்டு பேரும் பொறந் ததுல இருந்தே அவர் (வீரப்பன்) காட்டுலதான் இருந்தார். இவங்களை வளர்த்து இந்த நிலைக்குக் கொண்டுவர நான் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பேன்னு எனக்குத்தான் தெரியும். புரியாத வயசுல புள்ளைங்க ஏதாவது தப்பு செஞ்சா,
அதை எடுத்துச் சொல்லி திருத்த வேண்டியது பெத்தவங்க கடமை. அதைத்தான் நான் செஞ்சேன். மத்தபடி நான் யாரையும் மிரட்டக் கிடையாது. இது என் பிள்ளைகளோட வாழ்க்கை!'' என்று உடைந்து அழுகிறார்.
எல்லா வருத்தங்களும் கடந்து வாழ்வு மலரட்டும்!
கே.ராஜாதிருவேங்கடம், எஸ்.ராஜாசெல்லம்
படங்கள்: எம்.விஜயகுமார்

1,380 கோடிக்கு அதிபதிகள் யார்?

'பாசி' மோசடியின் பகீர் பக்கம் வெளியில் வருமா?

மிகப் பெரிய அதிர்வை ஏற்படுத்திய நிதி மோசடி விவகாரங்களில் 'பாசி’ நிறுவனத்துக்குத் தனி இடம். விசாரித்து வரும் சி.பி.ஐ-யே 'அடேங்கப்பா!’ என்று மலைக்கும் அளவுக்கு, இதில் குவிந்து இருக்கும் கறுப்புப் பணம் அப்படி!
 ' 50 ஆயிரம் கொடுத்தால், மூன்றே மாதங்களில்  1 லட்சம் தருகிறோம்’ என்று சொல்லி பல நூறு கோடிகளைச் சுருட்டியதாகப் புகாருக்கு உள்ளான திருப்பூர் பாசி நிதி நிறுவன அதிபர்களான கமலவள்ளி, மோகன்ராஜ் மற்றும் கதிரவன் மூவரையும் சி.பி.ஐ. கைது செய்து விசாரித்து வருவது தெரிந்த செய்தி.
'முதலீட்டாளர்களை ஏமாற்றியது எப்படி? பணம் எங்கே?’ என்று இவர்களைத் துருவி வருகிறது சி.பி.ஐ.. இந்த நிலையில், 'கணக்கிலேயே காட்டாமல் பல கோடி ரூபாய் பணத்தை பாசியில் முதலீடு செய்த அரசியல்வாதிகள், தொழிலதிபர்களை வளைக்கும் திட்டத்தில் இருக்கிறது சி.பி.ஐ.!’ என்று கடந்த 21-08-11-ம் தேதியிட்ட ஜூ.வி-யில் குறிப்பிட்டோம். இப்படி சி.பி.ஐ-யின் கண்களை உறுத்தி இருப்பது, கோரப்படாமல் கிடக்கும் சுமார்  1,380 கோடி. அது என்ன 'கோரப்படாத பணம்’?
போலீஸ் உயர் அதிகாரிகள் சிலர் இதுபற்றி நம்மிடம் விளக்கினார்கள்...
''பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் 'பாசி’யில் முதலீடு செய்துள்ளார்கள். பாசி நிறுவனம் மோசடி செய்ததாகப் பரபரப்பு எழுந்ததும், முதலீட்டாளர்களிடம் இருந்து புகார்களைப் பெறுவதற்கான வசதி பல இடங்களில் செய்யப்பட்டது. குவிந்த புகார்களின் எண்ணிக்கை 10,300. அதன் மூலம் தெரிய வந்த மோசடித் தொகை,  220 கோடி. ஆனால், பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸார் முதல் இப்போது சி.பி.ஐ. வரைக்கும் பல கட்டங்களா£க விசாரித்த வகையில், மோசடித் தொகை, 1,500 கோடியைத் தொடும். அப்படிப் பார்த்தால்,  1,380 கோடிக்கு எந்தப் புகார்களும் வரவில்லை. இதுதான் சி.பி.ஐ-க்கே ஷாக். இப்படி கோரப்படாமல் கிடக்கிற இந்தப் பணத்தை, கறுப்புப் பணமாகத்தானே எடுத்துக்கொள்ள முடியும்? 'இந்த அளவுக்கு கறுப்புப் பணத்தை முதலீடு செய்தவர்கள் யார்? அரசியல்வாதிகளா? தொழில் அதிபர்​களா? சினிமாப் புள்ளிகளா?’ என்று சி.பி.ஐ. விசாரிக்கிறது. பிடிபட்ட மூவரிடமும் சி.பி.ஐ. கேட்கும் கேள்வி இதுதான்!'' என்கிறார்கள்.
அரசாங்கத்தை ஏமாற்றி 'பிளாக் மணி’ வைத்து இருந்தவர்களே இப்படி மோசடி நிறுவனங்களிடம் கொடுத்துச் சிக்கியது குறித்து பிரபல நிதி ஆலோசகர் நாகப்பனிடம் பேசினோம். ''இந்த மாதிரியான மோசடி நிறுவனங்கள் குறிவைப்பதே கறுப்புப் பணம் வைத்து இருப்பவர்களைத்தான். காரணம், பிளாக் மணியை முறைப்படி இயங்கும் எந்த முதலீட்டு நிறுவனத்திலும் முதலீடு செய்ய முடியாது. ஆனால், இந்த மாதிரியான நிறுவனங்களிடம் எந்த விதமான ஆவணத்தையும் ஒப்படைக்க வேண்டாம். அதனால்தான் இந்த ஏமாற்றுப் பேர்வழிகள், தங்களைவிடப் பெரிய மோசடிப் பேர்வழிகளிடம் இப்படிச் சிக்கிவிடுகிறார்கள். ஆனால், இதில் முறைப்படி ஆவணங்களைக் காட்டி பணத்தை இன்வெஸ்ட் செய்த அப்பாவிகளும் ஏமாந்ததுதான் கொடுமை. இந்த விஷயத்தில் மக்களிடம் விழிப்பு உணர்வு தேவை. ஒவ்வொரு ஊரிலுமே முதலீட்டாளர் நல சங்கம் உருவாக்க வேண்டும். அந்த ஊரில் இருக்​கும் முதலீட்டாளர்களின் பிரச்னைகளை, இந்த சங்கம் மூலம் தீர்த்துக்கொள்ளலாம்!'' என்று எச்சரிக்கை மணி அடித்தார்.
முறைப்படி முதலீடு செய்த சிலரும் போலீஸிடம் புகார் கொடுக்க அஞ்சியோ, ஏமாந்தது வெளியில தெரிந்தால் கேவலம் என்றோ புகார் கொடுக்காமல் இருக்கலாம். அவர்களுக்குப் பணம் திரும்பக் கிடைக்குமா? வழக்கறிஞர் ரமேஷிடம் இதைக் கேட்டபோது, ''சிக்கிய மோசடி நிறுவனத்திடம் இப்​போது பெரிய ரொக்கம் இருக்க வாய்ப்பு இல்லை. இருக்கும் பணத்தையும் போலீஸ் கைப்பற்றிவிடுவார்கள். மேலும், அந்த நிறுவனத்தின் பெயரிலும் அதை நடத்தியவர்களின் பெயரிலும் சொத்துகள் இருக்கும். அந்த நிறுவனத்துக்கு நிறையக் கடன்கள் வரவேண்டியும் இருக்கலாம். இவை அத்தனையையும் வசூலிக்க மற்றும் அந்த நிறுவனத்தை நடத்த என்று நீதிமன்றத்தின் மூலம் நிர்வாகி ஒருவர் நியமிக்கப்படுவார். அவர் மூலமாகவே பாதிக்கப்பட்டவர்களுக்குப் பணம் கிடைக்கும். மொத்தப் பணமும் உடனே கிடைக்கும் என சொல்ல முடியாது. பணம் கிடைக்கும் ஒவ்வொரு சமயத்திலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமமாக அவர் பிரித்துக் கொடுப்பார். காவல் துறையில் புகார் கொடுக்கச் சொல்வதன் காரணம், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கத்தான். காவல் துறையில் புகார் கொடுக்காவிட்டாலும், பணம் கிடைக்கும்... அதாவது, நீதிமன்றம் அமர்த்துகிற நிர்வாகியிடம், பணத்தைச் செலுத்தியதற்கான ஆவணங்களைச் சமர்ப்பிக்கும் பட்சத்தில்!'' என்று விளக்கினார்.
இதெல்லாம் ஒரு புறம் இருக்க, ''பாசியின் உண்மையான அதிபர்கள் கமலவள்ளி, மோகன்ராஜ் மற்றும் கதிரவன் அல்ல. இவர்களை டம்மி நிர்வாகிகளாக வெளியே காட்டிவிட்டு, திரைக்குப் பின்னால்தான் அதன் உண்மையான உரிமையாளர்கள் இருக்கிறார்கள். காரணம் என்னவென்றால், மிக சாதாரண மனிதர்களான கமலவள்ளி டீமை நம்பி ஆயிரம் கோடிகளில் நிச்சயம் முதலீடு வந்திருக்காது. எனவே, அந்த நிழல் அதிபர்களை சி.பி.ஐ. வெளியே கொண்டுவரவேண்டும்!'' என்றும் பேசப்படுகிறது.
கோவை மாநகர வழக்கறிஞர்கள் சிலர் மேற்கண்ட கோணத்தில் நீதிமன்றத்தில் ஒரு பொது நல மனுத் தாக்கல் செய்யத் தயாராகி வருகிறார்கள்.
எஸ்.ஷக்தி, வா.கார்த்திகேயன்
படங்கள்: தி.விஜய்

''செட்டி நாடு யாருக்குச் சொந்தம்?''

விளம்பரத்தால் வந்த சர்ச்சை!

சில தினங்களுக்கு முன்பு ஆங்கில நாளிதழ் ஒன்றில், 'டிரேட் மார்க் எச்சரிக்கை’ என ஒரு விளம்பரம் வெளி​யானது. அதில், 'ராஜா முத்தையா செட்டியார் அறக்கட்டளை மற்றும் கல்வி ஸ்தாபன டிரஸ்ட், செட்டிநாடு சிமென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட், செட்டிநாடு அகாடமியின் ஆராய்ச்சி மற்றும் செட்டிநாடு என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றின் முழுமையான உரிமையாளர்களான நாங்கள், 'செட்டிநாடு’ என்பதை டிரேட் மார்க் ஆகப் பயன்படுத்தி, பல்வேறு வணிகத்தையும், சேவையையும் நடத்தி வருகிறோம். பிரத்யேகமாக நாங்கள் பயன்படுத்தும் இந்த டிரேட் மார்க்கை, எந்த ஒரு தனி நபரோ அல்லது நிறுவனங்களோ பயன்படுத்தக் கூடாது. மீறி இதை யாரும் பயன்படுத்தினால், அது டிரேட்மார்க் சட்டம் 1999-ன்படி, தண்டனைக்கு உரிய குற்றம். அதனால் மற்றவர்கள் எங்களது டிரேட்மார்க்கைப் பயன்படுத்தினால், நாங்கள் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுப்போம்!’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த விளம்பரம்​தான் செட்டி நாடு குறித்த சர்ச்சைகளுக்கு அஸ்திவாரம் போட்​டுள்ளது!
'' செட்டி நாடு என்ற ஒரு வட்டாரத்தின் பெயரை ஒரு குடும்பத்தினர் தங்களது டிரேட் மார்க்காகப் பதிவு செய்துகொண்டு சொந்தம் கொண்டாடுவதா?'' என்று காரைக்குடி வட்டாரத்தில் இருந்து கொந்தளிப்புக் குரல்கள் எழுந்தன. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தமிழ்த் துறை தலைவர் பேராசிரியர் ஆறு.அழகப்பன் அதில் முக்கியமான ஒருவர். செட்டிமார்கள் வாழ்க்கை வரலாறு குறித்து ஆய்வுகள் நடத்தி, 'செட்டி நாடு ஊரும் பேரும்’ உள்ளிட்ட பல நூல்களை எழுதி இருக்கிறார். செட்டி நாடு பிராண்ட் சர்ச்சை குறித்து அவரிடம் பேசினோம்.
''ராமசாமி படையாச்சி, சுந்தரம் பிள்ளை என சொல்வது மாதிரி அழகப்பன் செட்டியார், சொக்கலிங்கம் செட்டியார் என்று சொல்வதும் ஓர் இனத்துக்கான அடையாளம். இப்போது செட்டி நாட்டுக்கு உரிமை கோருபவர்கள், நாளைக்கு, 'செட்டியார் என்ற சொல்லும் எங்களுக்கு மட்டுமே சொந்தமானது. அதை​யும் யாரும் பயன்படுத்தக் கூடாது!’ என்று சொன்னாலும் சொல்​வார்கள். கடலுக்கு மேற்கு, பிரான் மலைக்கு கிழக்கு, வைகைக்கு வடக்கு, வெள்ளாற்றுக்கு தெற்கு என இந்த நான்கு எல்லைக்குள் வரும் 96 ஊர்களை 'செட்டி நாடு’ என்று பாடுவார் முத்தப்ப செட்டியார். இன்றைக்கு அல்ல... 19-ம் நூற்றாண்டிலேயே அவர் இப்படி வெண்பா பாடி இருக்கிறார். ஆக, செட்டி நாடு என்பது தனிப்பட்ட ஓர் ஊரின் பெயர் அல்ல. 96 ஊர்களாக இருந்து இன்றைக்கு 76 ஊர்களாகிவிட்ட புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் செட்டியார்கள் வசிக்கும் பகுதிதான் செட்டி நாடு.
செட்டிமார்கள் நம்பிக்கையாகவும் நாணயமாகவும் இருப்பார்கள் என்பதற்காக, செட்டி நாடு என்ற பெயரில் வட்டிக் கடைகள், வங்கிகள், வர்த்தக நிறுவனங்களைத் தொடங்குகிறார்கள்.  செட்டிமார்கள் வாழும் பகுதிக்கு செட்டி நாடு என்று சொன்னாலும் அந்த ஊர்களில் வாழும் அனைத்துச் சாதிக்காரர்களுக்கும் செட்டி நாட்டுக்காரர்கள்தான். அப்படி இருக்கையில், 'செட்டி நாடு என்ற பெயர் எங்களுக்கு மட்டும் சொந்தமானது. அதை எங்களின் அனுமதி இன்றி யாரேனும் தங்களது நிறுவனங்களுக்குப் பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்’ என சொல்வது அபத்தமாக இருக்கிறது.
'செட்டி நாடு பிராண்ட்’-ல் எம்.ஏ.எம். தரப்பினர் நடத்தும் நிறுவனத்தைப்போன்று இன்னொருதரப்பினரும் ஆரம்பிக்கும் முயற்சியில் இருக்கிறார்கள் என நினைக்​கிறேன். அதைத் தடுக்கத்தான் இப்படி தவறான அட்வைஸ் கொடுத்து 'தலப்​பாக்கட்டு’ பிரியாணி கணக்காக நோட்டீஸ்விட்டு இருக்கிறார்கள். தமிழ்ப் பத்திரிகைகளில் இந்த விளம்பரம் வராததால், எங்கள் ஆட்கள் பலருக்கு இந்த விஷயம் இன்னும் தெரியவில்லை; தெரிந்தால் சும்மா இருக்க மாட்டார்கள். நகரத்தார் சங்கங்கள் வலுவாக இருக்கிற, கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு மாவட்டங்களில் இது மிகப் பெரிய தாக்கத்தை உண்டாக்கும். இது தொடர்பாக ஒருமித்த கருத்துடைய உணர்வாளர்களை ஒருமுகப்படுத்தி விரைவில் அடுத்த கட்டம்பற்றி முடிவெடுப்போம்!'' என்றார்.
இந்த சர்ச்சைக்கு விளக்கம் கேட்டு செட்டி நாடு குழுமத்தின் நிர்வாக இயக்குநர் எம்.ஏ.எம்.ஆர்.முத்தையாவைத் தொடர்புகொண்டோம். அவரது செகரெட்டரி ஜம்மா, '' உங்கள் கேள்விகளை மெயில் அனுப்புங்க. எங்க எம்.டி. பதில் அனுப்புவார்!'' என்று சொன்னார். அனுப்பினோம். எம்.ஏ.எம்.ஆர்.முத்தையா தரப்பில் இருந்து வந்த பதில் மெயிலின் சாரம்சம் இதுதான்.. '' கடந்த 100 ஆண்டு காலமாக பேங்க் ஆப் செட்டி நாடு தொடங்கிய காலத்திலிருந்தே 'செட்டி நாடு’ என்ற பெயரை நாங்கள்தான் பயன்படுத்தி வருகிறோம். அதை நாங்கள் டிரேட் மார்க் ஆகவும் பதிவு செய்திருக்கிறோம். சட்டப்படிதான் நாங்கள் டிரேட் மார்க்கைப் பயன்படுத்துகிறோம். ஆறு.அழகப்பனுக்கு இந்த சட்டப்படியான விஷயங்கள்கூட தெரியாதது ஆச்சர்யமாக இருக்கிறது. பஜாஜ், டாடா, பிர்லா போன்றவை ஒரு சாதியின் உட்பிரிவுகளின் பெயர்கள்தான். சாதியின் பெயர்களைத்தான் அவர்களும் டிரேட் மார்க் ஆகப் பயன்படுத்தி வருகிறார்கள். அதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே. அதைப்போலத்தான் செட்டி நாடு என்பதை நாங்கள் எங்களது டிரேட் மார்க் ஆக சட்டப்படி பதிவு செய்து பயன்படுத்தி வருகிறோம். எங்களது பெயரையும் புகழையும் கெடுக்க இப்படி ஒரு அவதூறைப் பரப்பி வருகிறார்கள்!'' என்கிறது அந்தக் கடிதம்.
இந்த சர்ச்சை இப்போதைக்கு ஓயாது!
குள.சண்முகசுந்தரம், கே.ராஜாதிருவேங்கடம்

********************************************************************************************

0 comments:

Post a Comment

Cricket

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010