தமிழக சட்டசபை நிகழ்ச்சிகளை, பார்வையாளர் மாடத்தில் இருந்து பார்த்து விட்டு, லஞ்ச் டயத்தில் பசியுடன் நம் அலுவலகத்தில் குதித்தார் கழுகார். மினி மீல்ஸை எடுத்துப் பிரித்து வைத்தோம். ரசனையுடன் ரசித்துச் சாப்பிட்டு முடித்தார்.
''தா.கிருட்டிணன் கொலை வழக்கு, மதுரை தினகரன் அலுவலக எரிப்பு வழக்குகளில் முக்கியக்
குற்றவாளிகள் தந்திரமாகத் தப்பித்து விட்டதாகவும், அவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என, மதுரை மக்கள் சார்பாகக் கோரிக்கை வைத்தாரே, திருமங்கலம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம்?'' என்று சப்ஜெக்டை நாமே எடுத்துக் கொடுத்தோம்!
''அதைத்தான் நானும் சொல்ல வந்தேன்!'' என்று பாக்கெட்டில் இருந்த குறிப்பு நோட்டை விறுவிறுவென பிரித்த கழுகார்,
''முத்துராமலிங்கம், இரண்டு சரவெடிகளைக் கொளுத்திப்போட்டார். தா.கிருட்டிணன் கொலை வழக்கு, தினகரன் பத்திரிகை அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்குகளில் முத்துராமலிங்கம் ஏன் ஆர்வம் காட்டுகிறார்? அவராக முன்வந்து பேசினாரா? அல்லது, வேறு ஏதாவது சக்தி அவரை பேசத் தூண்டியதா? இப்படி உயர் அதிகாரி கள் வட்டாரத்திலேயே சந்தேகப் பேச்சுகள் கிளம்பிவிட்டன. முதல்வர் ஜெயலலிதாவின் முன் அனுமதியை வாங்கிவிட்டுத்தான் முத்துராமலிங்கம் இப்படிப் பேசியதாகவும் சொல்கிறார்கள். கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் மதுரையில் ஜெயலலிதா பேசும்போது, 'அந்த இரண்டு வழக்குகளிலும் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கப்படும்' என்று சூளுரைத்தார். அதையடுத்து, வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் மனோஜ் பாண்டியனிடமும், முத்துராமலிங்கத்திடமும் அந்த வழக்குகள் தொடர்பான ஆவணங்களை சேகரித்துத் தரும்படி கேட்டிருந்தாராம். இவர்களும், 'முக்கியக் குற்றவாளிகள் எப்படித் தந்திரமாகத் தப்பினார்கள்’ என்பதை விளக்கினார்களாம். குறிப்பாக, தா.கி. கொலை விவகாரத்தில் முத்துராமலிங்கம் அப்போதே முனைப்பு காட்டியதைத் தடுக்க போலீஸார் போட்ட முட்டுக்கட்டைகளையும் உள்வாங்கிக்கொண்ட முதல்வர், போலீஸ் மானிய கோரிக்கை வரும்போது, இந்த வழக்குகள் தொடர்பாக சட்டமன்றத்தில் சாட்டையடி தருவதற்கு முன்னோட்டமாகவே முத்துராமலிங்கத்தைப் பேச வைத்ததாகச் சொல்கிறார்கள்!''
''தூசு தட்டத் தயாராகிவிட்டார்கள் என்று சொல்லும்!''
''இதற்கு முன்பாக தென் மாவட்ட தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவரைத் தூக்குவதற்கு வேகவேகமாகக் காய் நகர்த்துகிறார்கள். இவர் மூலம், வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனைகள், மர்மக் கொலைகள் உள்ளிட்ட பல பகீர் ரகசியங்கள் அம்பலத்துக்கு வரும் என்கிற எதிர்பார்ப்பில், சீக்ரெட் ஆபரேஷனில் இறங்கி இருக்கிறது போலீஸ். அ.தி.மு.க. வட்டத்திலும் எக்ஸுக்கு வலுவான தொடர்பு... கடந்த தேர்தலில் அ.தி.மு.க. வி.ஐ.பி. ஒருவரை எதிர்த்துப் போட்டியிட்டார். தன்னால் தாக்குப் பிடிக்க முடியாது எனப் புரிந்து, 'நான் ஜெயிச்சா என்ன, அண்ணன் ஜெயிச்சா என்ன?’ என்று சொல்லிட்டுப் படுத்துவிட்டார். எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க. வி.ஐ.பி. அவரை நன்கு கவனித்ததாகவும் சொல்கிறார்கள். 'ஒரு நிழல் பிரமுகர், தென் மாவட்ட தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் இருவர், ஒரு மாவட்டச் செயலாளர், வட மாவட்ட அமைச்சர் ஒருவர் ஆகிய இவர்களோடு இந்த எக்ஸ் எம்.எல்.ஏ-வும் சேர்ந்து கொண்டு அண்ணனுக்கே தெரியாமல் தனிக் கூட்டணி அமைத்து உள்ளார்கள். அதிகாரத்தால் வளைத்துச் சுருட்டியதை சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, மாலத் தீவு உள்ளிட்ட நாடுகளுக்குக் கொண்டுபோய்விட்டது இந்த அறுவர் கூட்டணி’ என்றும் சொல்கிறார்கள்!''
''புது ஆக்ஷன் டீம்தான் போட வேண்டும்!''
'' 'மூணாறு பகுதியில் உள்ள ஒரு காட்டேஜ்தான் அறுவர் அணி அடிக்கடி சந்தித்துப் பேசும் இடம். பணம் கைமாறியதும், சென்டிமென்ட்டாக இங்கே உட்கார்ந்து பேசுவார்கள். டீல் முடிந்ததும், இதில் யாராவது இரண்டு பேர் மட்டும் திருவனந்தபுரம் வழியாக சம்பந்தப்பட்ட நாட்டுக்குப் பயணிப்பார்கள். அந்த இருவரில் ஒருவராக எக்ஸ் எம்.எல்.ஏ. கட்டாயம் இருப்பார். ஏனென்றால், அங்குள்ள வரவு செலவுகளைக் கண்காணித்துக்கொள்பவர் எக்ஸ். தேர்தல் முடிவுகள் வந்த நேரத்தில் இப்படி அவசரமாக ஹவாலா மூலம் சிங்கப்பூருக்கு பல கோடி போயிருக்கிறது’ என்றும் சொல்கிறார்கள். ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது அன்னியோன்னியமாக இருந்த இவர்கள் அத்தனை பேருமே இப்போது சிக்கலில் இருக்கிறார்கள். தங்களுக்கு எந்த பாதிப்பும் வரக் கூடாது என்று எக்ஸ் எம்.எல்.ஏ. உட்பட மூன்று பேர், கேரளாவில் அட்டிமாலி என்ற இடத்தில் இருக்கிற சக்கிகுளத்துக் காவு அம்மன் கோயிலில் விசேஷ பூஜை செய்தார்கள். பூஜையில் மந்திரிக்கப்பட்ட சிவப்புக் கயிறை மூவருமே கையில் கட்டி உள்ளனர். இப்போது கைதாகி சிறையில் இருக்கும் ஒருவர் கையிலும் அது இருக்கிறது!''
''புது சினிமா மாதிரி இருக்கே!''
''இந்த எக்ஸ் எம்.எல்.ஏ. அதிகாரத்தில் இருந்த போது, மலையோர கிராமத்தைச் சேர்ந்த பி.எட். மாணவி ஒருவரைச் சென்னைக்குக் கூட்டிப்போய் சகாக்களுக்கு விருந்தாக்கிவிட்டார். அப்போது நடந்த களேபரத்தில் மாணவிக்கு வலது கை உடைந்தேவிட்டது. அப்புறம் மாணவிக்கு வட நாட்டுப் பக்கம் வேலை வாங்கிக் கொடுத்து வாய் அடைச்சாராம். அதேபோல், சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களைக் கடத்திச் சென்ற விவகாரமும் இவர் மீது பாயுமாம். கூர்க் காபி எஸ்டேட், குஜராத் மார்வாடியிடம் வாங்கிய கப்பல் என எத்தனையோ கதைகளைச் சொல்கிறார்கள். கேட்டால் தலை சுத்துது!'' என்ற கழுகார், கொஞ்சம் ஆசுவாசம் ஆகி, மறுபடி ஆரம்பித்தார்...
''தலைமைச் செயலகத்தின் செய்தித் துறை பக்கம் எட்டிப்பார்த்தேன். அதிகாரிகள் பம்பரமாக சுழல்கிறார்கள். வருகிற 23-ம் தேதியன்று அ.தி.மு.க. அரசு பதவியேற்ற 100 நாள் விழாவைக் கொண்டாடு கிறார்களாம். சாதனைகளைப் பட்டியல் போட்டு மக்கள் மத்தியில் கொண்டுபோகும்படி முதல்வர் ஜெயலலிதா சொல்லி இருக்கிறாராம். குறிப்பாக, பத்திரிகையாளர் ஒய்வு ஊதியம் 5 ஆயிரத்தில் இருந்து 6 ஆயிரம் ஆனதும் பத்திரிகையாளர் இறந்தால், அவரது குடும்பத்துக்குக் கிடைக்கும் மாத உதவித் தொகை 2,500 என்பதை 3,000 என உயர்த்தியதையும் மறக்காமல் மீடியாக்காரர்களிடம் சொல்லும்படி முதல்வர் சொன்னதுதான் ஹைலைட் டான விஷயம். சாதனை விளம்பரங்கள், 'தமிழரசு' சிறப்பு வெளியீடு என்று ஏற்பாடுகளை தாம்தூம் என அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.''
''விழாக்கள் ஆடம்பரம் இல்லாமல் நடக் கட்டும்!''
''சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு நித்யானந்தாவை வரவழைத்தார்களாமே...''
''நித்யானந்தா ஆசிரமம் சார்பில் கொடுக்கப் பட்டிருந்த புகார் சம்பந்தமாக ஏற்கெனவே பலரிடம் விசாரித்து முடித்துவிட்டார்கள். இப்போது நித்யானந்தாவை வரவழைத்து நடந்த சம்பவங் களை முழுமையாகக் கேட்டு பதிவு செய்து கொண்டார்களாம். அடுத்து ரஞ்சிதாவிடமும் விசாரணை இருக்கலாம். நித்யானந்தாவை மிரட்டியதாகச் சொல்லப்படுபவர்கள் மீது கைது நடவடிக்கைகள் அதிரடியாக எடுக்கப்படலாம்...''
''ம்...''
''சென்னைப் புறநகரில் இருக்கும் மருந்து கம்பெனியை மூடிய விவகாரத்தை நான் உமக்குச் சொல்லி இருந்தேன்...'' என்று கழுகார் சொல்ல, குறுக்கிட்ட நாம்,
''நாங்களும் விரிவாகப் போட்டிருந்தோமே!'' என்றோம்.
''சரிதான்... அதைத் தொடர்ந்து, அந்தக் கம்பெனியைத் திறக்க முதல்வர் உத்தரவிட்டு இருக்கிறார். மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தைச் சேர்ந்த முக்கிய அதிகாரி ஒருவரை அழைத்த முதல்வர், 'அந்த மருந்து கம்பெனியை ஓப்பன் பண்ண அனுமதி கொடுத்திடுங்க. இனியாவது அவர்களை நாகரிகமாக நடந்துக்க சொல்லுங்க!’ என்று எச்சரிக்கும் தொனியில் சொல்லி அனுப்பி னாராம். அந்த அதிகாரியும் சம்பந்தப்பட்ட மருந்து கம்பெனி உரிமையாளரைக் கூப்பிட்டு, முதல்வரின் வார்த்தைகளை அப்படியே சொல்லி, கம்பெனியை திறக்க அனுமதி கடிதத்தையும் கொடுத்து அனுப்பி னாராம். இப்போது வழக்கம்போலசெயல்பட ஆரம்பித்துவிட்டதாம், அந்த மருந்து கம்பெனி'' என்ற தகவலோடு பேக்கப் ஆனார் கழுகார்!
படங்கள்: என்.விவேக், ஜெ.தான்யராஜு
அங்காடித் தெருவில் ஐ.டி-யின் அதிரடி!
சென்னை சரவணா ஸ்டோர்ஸ், சரவணா செல்வரத்தினம் நிறுவனங்களுக்குச் சொந்தமான அனைத்துக் கடைகளிலும், கடந்த வியாழன்று வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் ரெய்டு நடத்தினார்கள். இது குறித்து பேசும் வருமான வரித்துறையினர்,''தீபாவளி விற்பனையைக் கணக்கிட்டு, இப்போதே பலகோடிகளைக் கொட்டி, குடோன்களில் மலை அளவு கணக்கில் இல்லாமல் ஸ்டாக் வைத்து இருப்பதாக போட்டியாளர்களிடம் இருந்து ஆதாரத்துடன் பல்வேறு புகார்கள் வந்தது. அதைத் தொடர்ந்தே இந்த ரெய்டு. கணக்கு வழக்குகள் சரியாக இல்லாமல் ஊழியர்கள் ரொம்பவே நெளிந்தார்கள். பல ஆவணங் களைக் கைப்பற்றியிருக்கிறோம்'' என்றார்கள்.
'அவுங்களுக்கு 50 கோடி அவுட்’ என்று போட்டியாளர்கள் ஜாலி காட்ட... 'இங்க எப்ப வருவாங்களோ?’ என இன்னும் சில பெரும்புள்ளிகள் கிலி பிடித்துக் கிடக்கிறார்கள்.
நன்றி: ஜூவி
0 comments:
Post a Comment