சொர்க்கத்தில் ஒரு வசந்த மாளிகை!
ஒவ்வொரு விஷயத்திலும் நேர்வழியை இனங்காட்டி வளமான
அறிவுறுத்தலோடு வழிநடத்திப் பாதுகாக்கும் மகத்தான கருணையாளன்
அறிவுறுத்தலோடு வழிநடத்திப் பாதுகாக்கும் மகத்தான கருணையாளன்
அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்:
மாறாக, தமது இறைவனை அஞ்சியோருக்கு மாளிகைகளுக்கு மேல் எழுப்பப்பட்ட மாளிகைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும். இது அல்லாஹ்வின் வாக்குறுதி. அல்லாஹ் வாக்குறுதியை மீறமாட்டான் (அல்குர்ஆன்: 39:20)
முஸ்லீம்களின் பார்வையில் இவ்வுலகம் விரைவில் அழியக் கூடியதும் நிலையில்லாததுமாகும். ஒவ்வொரு முஸ்லீமும் இந்த உலகை, உலக வாழ்க்கையை இவ்வாறே மதீப்பீடு செய்ய வேண்டும் என இறைவனும், இறைத்தூதரும் நமக்கு கற்றுத் தருகிறார்கள்.
நிலையில்லா இவ்வுலகில் மனிதர்கள் பல்வேறு ஆசை களுடனும் கனவுகளுடனும் வாழ்கிறார்கள். பலர் தங்கள் ஆசையை அடைவதற்காக வெறும் முயற்சிகளை மேற்கொள்ளவும் செய்கிறார்கள்...
அவ்வாறு ஒவ்வொரு மனிதர்களும் விரும்பும் ஆசைகளுள் நமக்கென ஒரு வீட்டைக் கட்ட வேண்டும் என்பதும் ஒன்று என்பதை நாம் நன்கறிவோம்.
பலரும் எப்படியாவது இந்த உலகில் ஒரு வீட்டை (மாளிகையை) கட்டிவிட வேண்டும் என்ற வேட்கையோடு அலைகின்றனர். இந்த எண்ணத்தை நிறைவேற்றிட எண்ணிலடங்கா துன்பத்தை அடைகின்றனர். பலர் வெளி நாடுகளில் அவதிப்படுவதற்கான காரணங்களில் இந்த இலட்சியமும் ஒன்றே.
இவ்வுலகில் நமக்கு சொந்தமாக ஒரு மாளிகை இருப்பதின் மகிமையை நாம் உணர்வதால், அதற்காக எதையும் சந்திக்க, சுகிக்க தயாராக உள்ளோம். மார்க்க விதிகளை மீறாமல் ஒருவர் இவ்வாறு ஒரு இல்லத்தை எழுப்புகிறார் என்றால் அதை குற்றம் கூற முடியாது.
அழியும் இந்த உலகிலேயே நமக்கு சொந்தமாக ஒரு மாளிகை வேண்டுமெனில், நாம் என்றென்றும் தங்கக்கூடிய நிலையான மறுமையில் நமக்கென்று ஒரு மாளிகை வேண்டாமா? என்று சிந்திக்க வேண்டும்.
இவ்வுலகில் ஒருவர் சொந்த வீடு இல்லாமலேயே வாழ்ந்து மரணித்தும் விட்டார் எனில் அது ஒரு பிரச்சனை இல்லை. ஏனெனில் நாம் இங்கேயே நிரந்தரமாக தங்கப் போவதில்லை. ஆனால் மறுமையில் நமக்கென ஒரு மாளிகை இல்லையெனில் அது இவ்வுலகில் எற்படும் இழப்பை விட பெரும் இழப்பே.
எனவே இவ்வுலகில் ஒரு இல்லத்தைக் கட்ட வேண்டும் என்று ஆசைப்படுவதை விட சற்று அதிகமாகவே, இல்லை! மிகவும் அதிகமாகவே மறுமையில் ஒரு மாளிகையை எழுப்ப வேண்டும் என ஆசைப்பட வேண்டும்.
இவ்வுலகில் வீட்டை கட்டுவதற்காக எடுக்கும் முயற்சி களை காட்டிலும் பன்மடங்கு அதிகமாக மறுமையின் மாளிகைக்காக முயற்சிக்க வேண்டும். ஏனெனில் அது என்ன சாதாரண மாளிகையா?
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
சொர்க்கவாசிகள் தங்களுக்கு மேலேயுள்ள சிறப்பு அறைகளில் வசிப்பவர்களை அடிவானில் கிழக்கிலிருந்தோ, மேற்கிலிருந்தோ பயணிக்கின்ற ஒளியுமிழும் நட்சத்திரத்தை பார்ப்பதைப் போன்று பார்ப்பார்கள். (அந்தஸ்தில்) தமக்கும் அவர்களுக்கும் இடையேயுள்ள ஏற்றத் தாழ்வைக் கண்டு (ஏக்கம் கொண்டு தான்) அப்படி பார்ப்பார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், அல்லாஹ்வின் தூதரே! அவை நபிமார்கள் தங்குமிடங்கள் தாமே? அவற்றை மற்றவர்கள் அடைய முடியாதல்லவா? என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இல்லை. என் உயிரை தன் கையில் வைத்திருப்பவன் மீதாணையாக! அங்கே தங்குபவர்கள் அல்லாஹ்வின் மீது (உறுதியான) நம்பிக்கை கொண்டு இறைத்தூதர்களை உண்மையாளர்கள் என ஏற்றுக் கொண்டவர்களே ஆவர் என பதிலளித்தார்கள். (அபூசயித் அல் குத்ரி (ரலி) புகாரி 3256)
மறுமையில் தனக்கென்று ஒரு மாளிகையை எழுப்ப விரும்புவர்களுக்கு பல வழிமுறைகளை நபிகளார் கற்றுத் தந்துள்ளார்கள். அவைகள், அல்லாஹ்விற்காக பள்ளி வாசல் கட்டுதல், இறைவனை அஞ்சுதல், உபரியான தொழுகைகள் மற்றும் பள்ளிவாலுடன் தொடர்பு போன்றவற்றை சரியாக நாம் செயல்படுத்தி வருவோமே யானால் அந்த மாளிகையை நாம் பெற்று விடலாம் என்பதையும் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
பள்ளிவாசல் கட்டுதல்
இவ்வுலகில் இறைவனுக்காக ஒரு இல்லத்தை எழுப்ப உதவினால் மறுமையில் நமக்காக ஒரு மாளிகையை இறைவன் எழுப்புகிறான்.
உஸ்மான் பின் அஃபான்(ரலி) அவர்கள் மஸ்ஜிதுந் நபவி பள்ளிவாசலை விரிவுப்படுத்திக் கட்ட எண்ணியபோது அது குறித்து மக்கள் அதிருப்தி தெரிவித்தனர். அப்போது உஸ்மான் (ரலி) அவர்கள், நீங்கள் மிக அதிகமாகவே பேசி விட்டீர்கள். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் யார் அல்லாஹ்வுக்காக பள்ளிவாசல் ஒன்றைக் கட்டுகிறாரோ அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டுகிறான் என்று கூறியதை செவியேற்று உள்ளேன் என்ற கூறினார்கள். (உபைதுல்லாஹ அல் கவ்ரானீ புகாரி 450, முஸ்லீம்926)
பள்ளிவாசல் பணி என்று வரும்போது கணக்குப் பார்க்காமல் நம்மால் முடிந்த பொருளாதாரத்தை அள்ளி வழங்கிட முன்வர வேண்டும். மறுமையில் நமக்குரிய மாளிகை எழுப்பப்பட நாம் வழங்கும் முன் பணம் என்று எண்ணி இச்செயலில் அதிகம் ஈடுபாடு கொள்ள வேண்டும்.
உபரியான தொழுகைகள்
ஒரு நாளைக்கு கடமையான தொழுகைகள் தவிர உபரியாக 12 ரக்அத்கள் தொழுபவருக்கு சொர்க்கத்தில் ஒரு மாளிகையை இறைவன் தருகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
யார் ஒவ்வொரு நாளும் பன்னிரென்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுகிறாரோ அதற்காக அவருக்கு சொர்க்கத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படுகிறது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை நான் கேட்டதிலிருந்து அந்த பன்னிரென்டு ரக்அத்களை கை விட்டதேயில்லை. (உம்மு ஹபீபா (ரலி) முஸ்லீம் 1319)
கடமையான தொழுகைகளிலேயே அலட்சியமாக இருக்கும் நாம் இந்த செ;யதியை எப்போதும் நினைவில் நிறுத்தி கடமையான வணக்கங்களில் கவனம் செலுத்துவதோடு உபரியான தொழுகைகளிலும் ஆர்வம் செலுத்த வேண்டும்.
பள்ளிவாசலுடன் தொடர்பு
இறைவனை வணங்குவதற்காக பள்ளிவாசலுக்கு வரும் போதெல்லாம் மறுமையில் இறைவன் நமக்கான மாளிகையை தயார் செய்கிறான் என நபி(ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள்.
ஒருவர் பள்ளிவாசலுக்கு (வணங்குவதற்காக) சென்று வந்தால் அவர் ஒவ்வொரு முறை சென்று வரும்போது அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் அவருடைய மாளிகையை ஆயத்தப்படுகிறான். (அபூஹூரைரா(ரலி) புகாரி 662)
பள்ளிவாசலுடன் தொடர்பை அதிகமாக்கிக் கொள்வது ஏராளமான நன்மைகளை பெற்றுத் தருவதோடு மறுமை மாளிகை நம் வசமாவதற்கும் காரணமாக திகழ்கிறது.
இறைவனை அஞ்சுதல்
உலகில் வாழும் போது இறையச்சத்துடன் நடந்து கொள்பவர்களுக்கு மறுமையில் உயர்ந்த மாளிகைகளை தருவதாக இறைவன் வாக்களிக்கின்றான்.
தமது இறைவனை அஞ்சியோருக்கு மாளிகைகளுக்கு மேல் எழுப்பப்பட்ட மாளிகைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். இது அல்லாஹ்வின் வாக்குறுதி. அல்லாஹ் வாக்குறதியை மீற மாட்டான். (அல்குர்ஆன் 39 : 20)
பாவமான காரியங்களை நம்மில் பெரும்பாலோர் செய்து வருவதற்கு காரணம், அவர்களிடம் அல்லாஹ்வைப் பற்றிய இறையச்சமும், இறை பயமும் இல்லாதது தான் காரணம் என்பதை சொல்லி புரிய வேண்டியதில்லை. நம்மை உண்மை முஸ்லிமாக மாற்றக்கூடிய இறைபயத்தை இறைவனிடம் வேண்டிட வேண்டும்.
இவ்வுலகில் நாம் வசிப்பதற்காக நம்மால் கட்டப்படக்கூடிய வீடு, செங்கல், மணல், சிமெண்ட், ஜல்லி போன்ற பொருட்களை வைத்தே கட்டப்படுகிறது. யாரேனும் மிக அரிதாக டைல்ஸ், மார்பில்ஸ் பதித்துள்ள வீட்டை கட்டியிருப்பதை கண்டால் அதையே வியப்புடன் ஆசையுடன் பார்க்கிறோம். மறுமையில் இறைவன் வழங்கவிருக்கும் வீடு இவ்வுலகில் உள்ள வீட்டை போன்றதல்ல. முழுக்க முழுக்க முத்துக்களால் ஆன முத்து மாளிகை அது. அதோடு மனிதனின் ஆசைக்கேற்றவாறு கண்கவரும் வடிவமைப்பும் அதில் செய்யப்பட்டிருக்கும்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், இறைநம்பியாளருக்குச் சொர்க்கத்தில் ஒரு கூடாரம் உண்டு. அது நடுவில் துளையுள்ள (பிரம்மாண்டமான) முத்தால் ஆனதாகும். அதன் உயரம் அறுபது மைல்களாகும். அதில் இறைநம்பிக்கையாளக்குத் துணைவியர் பலர் இருப்பர். அவர்களிடம் இறைநம்பிக்கையாளர் சுற்றி வருவார். அவர்களில் ஒருவர் மற்றவரைப் பார்க்க முடியாது.(அபூமூசா அல் அஷ்அரி (ரலி) முஸ்லீம் 5458)
இப்படி ஒரு மாளிகையை எவ்வளவு பெரிய பணக்காரனாலும் கட்ட முடியாது என்பதை திட்ட வட்டமாக கூறலாம். மறுமையில் உள்ள அம்மாளிகையின் உயரம் அறுபது மைல் என நபிகளார் கூறியுள்ளார்கள்.
இவ்வுலகில் ஒரு மைல் நீளத்தில் உள்ள கட்டடமே மக்களால் அதிசயத்தோடு பார்க்கப்படுகிறது என்றால் அறுபது மைல் நீளமுள்ள மாளிகையை கற்பனை செய்து பாருங்கள். சந்தேகமற இது ஒரு வசந்த மாளிகையே.
மனிதனையும் தண்ணீரையும் பிரித்து பார்க்கவே முடியாது என்கிற அளவுக்கு மனிதனின் வாழ்க்கையில் தண்ணீர் பெரும் பங்கு வகிக்கின்றது. மனிதன் உயிர் வாழ அத்தியாவசிய தேவைகளில் தண்ணீரும் ஒன்றாகும்.
அது போல ஆறு, அருவி போன்றவைகளும் மனிதனுக்கு மிகுந்த விருப்பத்திற்குரியதாக இருக்கிறது. இதில குளிப்பது ஒரு வித சந்தோசத்தை அளிப்பதனாலே பல ஆயிரங்களை செலவு செய்து வெளியூருக்கும் வெளிநாட்டுக்கும் பயணம் புறப்பட்டேனும் இவற்றில் குளிக்க மனிதன் விரும்புகிறான்.
ஆனால் இறைவன் தரும் மாளிகையில் இவற்றிற்கும் பஞ்ச மில்லை. மாளிகையின் கீழே வசதியாக பல ஆறுகள் ஒடிக் கொண்டிருக்கும் என இறைவன் தெரிவிக்கிறான்.
நம்பிக்கைக் கொண்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும் சொர்க்கச்சோலைகளை அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவற்றின் கீழ்பகுதியில் ஆறுகள் ஒடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். நிலையான சொர்க்கச் சோலைகளில் தூய்மையான வசிப்பிடங்களும் உள்ளன. அல்லாஹ்வின் திருப்தி மிகப் பெரியது. இதுவே மகத்தான வெற்றி ( அல் குர்ஆன்: 9:72)
இவ்வுலகில் ஒரு வீட்டை கட்டி முடிக்க பெரும் சிரமங்களை அனுபவிக்க வேண்டியிருக்கிறது. இப்போதும் அது பலருக்கு பகல்கனவாகவே தோன்றுகிறது. ஆனால் மறுமையில் ஒரு இல்லத்தை மாளிகையை எழுப்ப இது போன்ற சிரமங்களை அனுபவிக்க வேண்டியதில்லை என்பதை மேற்கண்ட தகவல்களிலிருந்து அறிகிறோம்.
என் இறைவா சொர்க்கத்தில் உன்னிடம் எனக்கொரு வீட்டை எழுப்புவாயாக என்று ஃபிர்அவ்னின் மனைவி இறைவனிடம் பிரார்த்தனை புரிந்ததை அனைத்து முஃமின்களுக்கும் இறைவன் உதாரணமாக கூறுகிறான். (அல்குர்ஆன்: 66:11)
நாமும் இறைவனிடம் பிரார்த்தனை புரிவதோடு இறைவனும் இறைத் தூதரும் கற்றுத் தந்துள்ள மேற்கண்ட எளிய செயல்களை செய்தாலே அந்த மாளிகை நம்வசமாகும் என்பதை இந்நேரத்தில் கவனிக்க வேண்டும். இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி நிலையான மறுமையின் வசந்த மாளிகைக்கு சொந்தக்காரராக மாறுவோமாக.
நன்றி: டி.என்.டிஜே. - துபை
0 comments:
Post a Comment