********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

சென்ற வார செய்திகள் (27 ஆகஸ்ட் 2011)

Friday, August 26, 2011

மிஸ்டர் கழுகு: ஜெ. டெரர் மார்க் லிஸ்ட்

''தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். ஆனால், தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என் பதை மாற்றி, தி.மு.க-வின் முழியைப் பிதுக்கியிருக் கிறார் ஜெயலலிதா!'' என்றார் கழுகார். 
''செய்திக்கு டிரெயிலர் கொடுப்பதில் உம்மை மிஞ்ச யாரும் இல்லை!''
என்றோம். சிறகுக்குள் இருந்த பஞ்சாங்கப் புத்தகத்தை சிரித்தபடி எடுத்துப் புரட்டிவிட்டுப் பேச ஆரம்பித்தார் கழுகார்.
''தை முதல்நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படும் என்று தி.மு.க. அரசு கொண்டு வந்த சட்டத்தை அதிரடியாக ரத்து செய்திருக்கிறார் ஜெ. புராணம், பஞ்சாங்கம், ஜோதிடம், ஆன்மிகம் என்று ஆத்திகத்தின் அரிச்சுவடியாக இருக்கும் ஜெ., தமிழ்ப் புத்தாண்டை மாற்றச் சட்டம் கொண்டு வந்ததில் ஆச்சர்யம் இல்லை. ஆனால், இந்தச் சட்டத்தை நிறைவேற்ற அவர் காட்டிய வேகம்தான் ஆச்சர்யம். பொதுவாக சட்டசபையில் ஒரு சட்டம் கொண்டுவரும் முன்பு, அந்தச் சட்டத்தின் மசோதா முதலில் அறிமுகம் செய்யப்படும். இரண்டு நாட்கள் கழித்து, அந்த மசோதா மீது ஆய்வு நடத்தி, விவாதம் நடக்கும். ஆனால், இந்த மசோதா கொண்டுவந்த அன்றைய தினமே ஆய்வுக்கு எடுத்து, அதிரடியாகச் சட்டம் நிறைவேற்றினார்கள். பட்ஜெட் கூட்டத் தொடரை தி.மு.க. புறக்கணித்து இருக்கும் நிலையில், எதிர்ப்பே இல்லாமல் சட்டத்தை நிறைவேற்ற இதுதான் நல்ல சான்ஸ் என்று அ.தி.மு.க. நினைத்ததுதான் அவசரத்தின் காரணமாம்!''
''ஓகோ!''
''அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் கடந்துவிட்டன. ஆகஸ்ட் 23-ம் தேதிதான் 100-வது நாள். ஆனால், அன்றைய தினம் 100-வது நாள் கொண்டாட்டத்தை நடத்தவில்லை. மறு நாள்தான் நடத்தினார்கள். என்ன காரணம் தெரியுமா? அன்றைய தினம் செவ்வாய்க் கிழமை. அந்த நாளில் நல்ல விஷயங்களை நடத்த சிலர் விரும்ப மாட்டார்கள். அதனால்தான்
செவ்வாய் தவிர்த்தாராம் அம்மையார். அடுத்த நாள், புதன் கிழமையில்தான் கொண்டாட்டம் நடந்தது. 'பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது’ என்பதால், புதனைத் தேர்வு செய்தார்போல. 100-வது நாளில் இரண்டு பூஜ்ஜியங்கள் வருகிறது. 101-வது நாளில் ஒரு பூஜ்ஜியம் என்பதும் இன்னொரு காரணமாம். ஆனால், தமிழ்ப் புத்தாண்டுச் சட்டம் கொண்டுவரப்பட்டது செவ்வாய்க் கிழமையில்தான்! அப்போது, '100-வது நாள் கொண்டாட்டம் நாளை சட்டசபையில் நடைபெறும்’ என்று சபா நாயகர் ஜெயக்குமார் அறிவித்தார். அப்போதே, பூனைக் குட்டி வெளியே வந்துவிட்டது...'' என்று சொல்லி... இடைவெளி விட்ட வருக்கு சுடச் சுட ஆவி பறக்க அவித்த கடலை வைத்தோம். ஸ்பூனில் எடுத்து வாயில் போட்டபடியே தொடர்ந்தார்.
''100-வது நாள் கொண்டாட்டத்துக்காக கோட்டை வாசலில் வாழை மரங்களைக் கட்டி இருந்தார்கள். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சட்ட சபைக்குள் நுழைந்தபோது இதமான நறுமணம். அமைச்சர்கள் வரிசையிலும் எதிர்க் கட்சித் தலைவர்கள் வரிசையிலும் பூங்கொத்து பாணியில் மலர்க் கூடைகள். ஜெ. மேஜையின் மீது இருந்த பூங்கொத்தில் இருந்து வந்த வாசத்தால் அவருக்குத் தொடர்ந்து இருமல் வர... உடனே அதை எடுக்கச் சொல்லிவிட்டார். இந்த சந்தோஷத் தினத்தில் ஜெ-வுக்கு ஒரு சோகம்!''
''அது என்ன?''
''அவை தொடங்குவதற்கு முன்பே வந்துவிட்டார் ஜெ. அவர் எதிரே இருந்த இருக்கைகள் அனைத்தும் காலியாக இருந்தன. தே.மு.தி.க. எம்.எல்.ஏ-க்களில் பண்ருட்டி ராமச்சந்திரன், அருண் பாண்டியன் தவிர மற்ற எல்லோரும் ஆப்சென்ட். எதிரே இருக்கைகள் காலியாக இருந்ததைப் பார்த்து கொஞ்சம் அதிர்ச்சி அடைந்தார். முகம் லேசாகச் சிவந்தது. சிறிது நேரத்தில் நார்மலாக ஆனார். தே.மு.தி.க-வினர் வராதது, அவருக்கு உள்ளுக்குள் எரிச்சலைக் கொடுத்திருக்கலாம். விஜயகாந்த்தின் பிறந்த நாளையட்டி கட்சி அலுவலகத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றதால், அந்த எம்.எல்.ஏ-க்கள் அங்கே போய்விட்டார்கள். அதனால்தான் சட்டசபைக்கு வரவில்லை.
100-வது நாள் கொண்டாட்டத்தை ஜெ. ஒரு நாள் தள்ளிக் கொண்டாடினால், விஜயகாந்த்தோ ஆகஸ்ட் 25-ம் தேதி பிறந்த நாளை ஒரு நாள் முன்கூட்டி, அதாவது 24-ம் தேதியே கொண் டாடினார். 100-வது நாள் கொண்டாட்டத்தை அடுத்த நாள் ஜெயலலிதா தள்ளிவைத்தது தவறா? இல்லை அந்த நாளில் தனது பிறந்த நாளை விஜயகாந்த் மாற்றியது தவறா? இதுதான் இப்போது கூட்டணிக்குள் நடக்கும் பட்டிமன்றம்!''
''சிக்கல்தான்...''
''அமைச்சர்கள் சிலருக்கும் இது சிக்கலான நேரம்தான். 100-வது நாளை வெற்றிகரமாகக் கடந்திருக்கும் ஜெ., தன் அமைச்சர்களின் செயல்பாடுகளைக் கண்காணித்து ஒவ்வொருவருக்கும் மதிப்பெண் பட்டியலையே தயாரித்து வைத்திருக்கிறாராம். மிக முக்கிய அதிகாரிகள் இருவர் மூலமாக மிக ரகசியமாக அமைச்சர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு இருக்கின்றன. துறை ரீதியான செயல்பாடு, மக்கள் நலனில் அக்கறை, தனிப்பட்ட ஆர்வம், ஆதரவுப் புள்ளிகளின் செயல்பாடு, சட்டமன்ற செயல்பாடு, தனிப்பட்ட ஒழுக்கம், கட்சி அக்கறை என ஏழு சமாசாரங்கள் ஒவ்வொரு அமைச்சரைச் சுற்றியும் விசாரிக்கப்பட்டு இருக்கிறது. இதில் வேதனையான விஷயம் என்னவென்றால், இந்தப் பரீட்சையில் ஐந்து அமைச்சர்கள் 100-க்கு 10 மதிப்பெண்களுக்கும் கீழே வாங்கி ஃபெயிலாம்!''
''அடப் பாவமே... யார் அந்த ஐவர்?''
''தலைமைச் செயலகத்தில் இந்தத் தகவலைத் திரட்டும்போது ஏகப்பட்ட தகவல்கள் கிடைத்தன. அதை அப்படியே உமது காதில் போட்டு வைக்கிறேன்!
வணிக வரித் துறை அமைச்சராக இருந்தபோது சரிவர செயல்படவில்லை என்பதால்தான், கோகுல இந்திராவை சுற்றுலாத் துறைக்கு மாற்றினார் ஜெ. ஆனாலும், 'கோகுல இந்திராவால் சுற்றுலாத் துறையைச் சரிவரக் கவனிக்க முடியவில்லை’ என ரிப்போர்ட் போயிருக்கிறது. 20 நாட்களுக்கு முன்னர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டத்துக்காக புதுக்கோட்டைக்குப் போயிருந்தபோது, கோயிலில் கும்ப மரியாதை வைத்து கோகுல இந்திராவுக்கு ராஜ வரவேற்பு கொடுக்கப்பட்ட தகவலும் மதிப்பெண் பட்டியலில் அவருக்கு மைனஸை உண்டாக்கிவிட்டது. மாவட்டச் செயலாளர் ஏற்பாடு செய்த வரவேற்புக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும் எனப் புலம்பி இருக்கிறார் கோகுல இந்திரா. அவர் விளக்கத்துக்கு கார்டன் வட்டாரம் எந்த அளவு காது கொடுக்கும் என்பது தெரியவில்லை.
அடுத்தவர், 'அக்ரி’ கிருஷ்ணமூர்த்தி. இவருக்கு எதிராக அ.தி.மு.க. புள்ளி ஒருவரே கொடுத்த நில அபகரிப்புப் புகார் குறித்து அம்மாவின் ஸ்பெஷல் அதிகாரிகள் விசாரித்து இருக்கிறார்கள். மாற்றுக் கட்சியினர் சிலர் உடனான நட்பு அமைச்சருக்கு இன்னமும் தொடர்வதாக கார்டனுக்குக் குவிந்த புகார் குறித்தும் விசாரணை நடந்தது. கட்சி அக்கறை, தனிப்பட்ட ஆர்வம், ஆதரவுப் புள்ளிகளின் செயல்பாடு ஆகிய மதிப்பெண் கட்டங்களில் மிகக் குறைவான மதிப்பெண்களே அக்ரிக்கு விழுந்தது.
கால்நடைத் துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி, துறை ரீதியான ஆர்வத்தில் ரொம்பவே பின்தங்கி இருப்பதாக நோட் போயிருக்கிறது. அறநிலையத் துறை அமைச்சர் சண்முகநாதனுக்கு, துறை ரீதியாகவும், தனிப்பட்ட செயல்பாட்டிலும் பின்தங்கிய மதிப்பெண்களாம்!
அம்மாவிடம் மிகுந்த செல்வாக்குப் பெற்றவராக வர்ணிக்கப்படும் மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பற்றியும் 'துறை ரீதியான செயல்பாடு சரியில்லை’ என நோட் போட்டு இருக்கும் ஸ்பெஷல் அதிகாரிகள், 'அவருக்கு மட்டும் இன்னமும் அவகாசம் தரலாம்’ என்று சிபாரிசு செய்திருக்கிறார்களாம். உடல்நலக் கோளாறால் இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கும் கருப்பசாமிக்கும் ஓய்வு கொடுக்க ஏற்பாடு நடக்கிறது. அதனால், கூட்டத் தொடர் முடிந்த உடனேயே அமைச்சர்களை மாற்றும் வைபோகம் அரங்கேறலாம்'' என்றபடி கழுகார் ஜூட்!
*******************************************************************************
கழுகார் பதில்கள்

மு.கல்யாணசுந்தரம், மேட்டுப்பாளையம்.
 'நான்’, 'எனது’, 'என் அரசு’ என்கிற வார்த்தைகள் ஜெயலலிதாவின் பேச்சில் அதிகமாகத் தெரிகிறதே?

 பல்லவ மன்னன், நெல்லை.இந்த மூன்று வார்த்தைகளையும் கூடுமான வரையில் தவிர்ப்பது நல்லது. 100 நாட்கள் கடந்த இந்தத் தருணத்தில், அவர் எடுக்கும் சபதங்களுள் ஒன்றாக இது இருக்கட்டும்!
நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை யாரும் 'முன்னாள் முதல்வர்’ என்று அழைப்பது இல்லையே ஏன்?
பாவம்... நல்ல மனுஷர்... எல்லாம் அவருடைய நல்லதுக்குத்தான்!
 ஜே.கதிரவன், பனையாண்டூர்.
அண்ணா ஹஜாரே கேட்கும் ஜன் லோக்பால் வந்தால், இந்தியாவில் ஊழல் குறைந்துவிடுமா என்ன?
குற்றவியல் தடுப்புச் சட்டம் இருப்பதால் குற்றங்கள் குறைந்துவிட்டதா, குண்டாஸ் ஆக்ட் இருப்பதால் கொலை - கொள்ளை குறைந்துவிட்டதா, தடா மற்றும் பொடா இருந்ததால் பயங்கரவாதம் குறைந்துவிட்டதா... என்றெல்லாம்கூட கேட்கலாமே..! அப்படி எல்லாம் பார்த்தால் எதையும் செய்ய முடியாது.
ஜன் லோக்பால்... என்பது ஊழலைக் குறைக்க, கொஞ்சமாவது பயமுறுத்தித் தடுக்கப் பயன்படும். அதற்காக, அப்படி ஒரு சட்டமே வேண்டாம் என்று மறுதலித்துவிடவும் முடியாது. அதில் இருந்து யாருக்கும் விதிவிலக்குத் தந்துவிடவும் கூடாது!
 எஸ்.ராஜகோபால், சென்னை-17.
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் நிரபராதிகள் என்று பிரபாகரனின் ஆதரவாளர்கள் சொல்வதைப் பார்த்தால், கார்த்திகேயன் தலைமையில் நடந்த தீவிர புலனாய்வையும் நமது பல நீதிமன்றங்களில் நடந்த விசாரணைகளையும் கொச்சைப்படுத்துவதுபோல் இல்லையா? ராஜீவ் கொலைகூட அவ்வளவு பெரிய விஷயம் இல்லை என்று நினைப்பதுபோல் உள்ளதே?
உங்கள் கேள்விக்கு எத்தனையோ பதில்கள் உண்டு. ஐந்தை மட்டும் சொல்​கிறேன்...
தூக்குத் தண்டனை வேண்டாம் என்று சொல்பவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் அல்ல. புலிகளைப் பயங்கரவாதிகள் என்று விமர்சிப்​பவர்களும் இதில் இருக்கிறார்கள்.
ராஜீவ் கொலையை நியாயப்படுத்தியோ அல்லது அவரது கொலை பெரிய விஷயம் அல்ல என்றோ யாரும் நினைக்கவில்லை. அப்படி நினைப்பது அந்தக் கொலை​யைவிடப் பயங்கரமானது.
ராஜீவ் கொலையில் பல்வேறு சந்தேகங்கள், இன்னும் கண்டுபிடிக்கப்படாத பகுதிகள் இருக்கின்றன. அதையும் முழுமையாக விசாரித்துவிட்டு இவர்கள் மூவர் குறித்தும் முடிவெடுக்க வேண்டும்.
உலகத்தின் 139 நாடுகளில் மரண தண்டனை தடை செய்யப்பட்டுள்ளது. இந்தியா மட்டும் இந்தச் செயலைச் செய்ய வேண்டாமே.
மனித உயிரை எந்தக் காரணத்தை முன்னிட்டும், அதாவது நீதியின் பெயரால்கூட பறிக்க வேண்டாமே?
 மு.பொன்குமார், தர்காஸ்.
புதிய தலைமைச் செயலகத்தை உயர் சிகிச்சைக்கான மருத்துவமனையாக முதல்வர் ஜெயலலிதா மாற்றிவிட்டாரே?
மாற்றிவிடவில்லை. உயர் மருத்துவமனையாக ஆக்குவேன் என்று அறிவித்திருக்கிறார். அவ்வளவே!
டெல்லியில் உள்ள 'எய்ம்ஸ்’ மருத்துவமனையைப்​போல அமைப்பேன் என்று சொல்வது பாராட்டத்தக்கது. ஆனால் அப்படி உருவாக்குவது எளிமை​யானது அல்ல. கோடிகளைக் கொட்டி கட்டடங்கள் கட்டப்படுகின்றன. திறப்பு விழாக்கள் நடத்தப்படுகின்றன. ஆனால் அடுத்த மாதமே உள்ளே நுழைய முடியாத அளவுக்கு சுகாதாரக் கேடுகள். எனவே, இந்த மருத்துவமனையை உலகத் தரமானதாக அமைப்பது மட்டும் அல்ல... தொடர்ந்து பராமரிப்பதே முக்கியமானது. அதைச் செய்தால்... தமிழக அரசை முழுமனதாகப் பாராட்டலாம்!
 எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.
அப்போது 'அப்பா’ என்று கலைஞரை அழைத்த அதே வாயால், இப்போது தரக்குறைவாக விமர்சிக்க சரத்குமாரால் எப்படி முடிகிறது?
அப்போதுக்கும் இப்போதுக்கும் இடையில் வந்த தேர்தல்தான் காரணம். இதற்குப் பெயர்தான் அரசியலப்பா!
 பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.
இலங்கை பிரச்னையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி செய்தது கண்துடைப்பு நாடகமா...? இன்றைய முதல்வர் செய்தது கண்துடைப்பு நாடகமா?
யாராக இருந்தாலும் ஒப்புக்குத் தீர்மானம் மட்டும் நிறைவேற்றிவிட்டு சும்மா இருந்தால், அது கண்துடைப்பு நாடகமாகத்தான் இருக்கும். தான் போட்ட தீர்மானத்தை நிறைவேற்றத் தீர்மானமாக உழைத்தால் மட்டுமே... அது கண்ணீர்த் துடைப்பாக மாறும்!
 இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.
நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் இப்போதைய அரசியல் கூட்டணியில் மாற்றம் ஏற்படுமா?
அ.தி.மு.க. கூட்டணியில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இல்லை. எதிர்பார்த்த இடங்கள் கிடைக்காமல் போனால், ஒருவேளை விஜயகாந்த் வேறு மாதிரி முடிவு எடுக்கலாம்!
தி.மு.க. கூட்டணியில் 'காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும்’ என்று குரல்கள் கேட்கின்றன. கட்சியின் செல்வாக்கை அறிந்துகொள்ள டெல்லி அம்மாதிரி ஒரு முடிவு எடுக்கவும் வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள். அப்படிப் பார்த்தால், கருணாநிதியுடன் திருமா மட்டும்தான் இருப்பார்.
ராமதாஸ் தனியாக நிற்பார். திருமாவைத் தன்னுடன் இணைத்துக்கொள்ளத் துடிக்கிறார். வைகோ தனியாக நிற்பார். ஆனால் பி.ஜே.பி. அவருக்கு தூண்டில் போட்டு வருகிறது.
அக்டோபர் 24-க்குள் அனைத்துத் தேர்தலும் முடிந்தாக வேண்டும். அதனால், செப்டம்பர் முதல் வாரத்திலேயே கட்சிகளுக்கு காய்ச்சல் ஆரம்பித்துவிடும்!  
 ஆர்.அஜிதா, கம்பம்.
'அண்ணா ஹஜாரேவை எனக்கு யாரென்றே தெரியாது’ என்கிறாரே டாக்டர் ராமதாஸ்?
ராஜ்ய சபா ஸீட் வைத்திருந்தால்தானே டெல்லியை உலுக்கும் அந்த மனிதரைத் தெரிந்திருக்கும்!
 கதிரேசன், காட்டுமன்னார்குடி.
ஸ்பெக்ட்ரம் வழக்கின் மூன்றாவது குற்றப் பத்திரிக்கை செப்டம்பர் 15-ம் தேதி தாக்கல் ஆகப்போகிறதாமே?
சி.பி.ஐ-க்கு வேறு தேதியே கிடைக்க​வில்​லையா? கருணாநிதியை நிம்மதியாக முப்​பெரும் விழா நடத்தவிடாமல் இப்படி படுத்தி எடுக்கிறார்களே?
******************************************************************************
என்னைப் பழிவாங்கத் துடிக்கிறார்கள்!

'காணாமல் போன' மீனவர்களால் கலங்கும் சாமி!

'ஓட... ஓட... விரட்டுகிறார்களே!’ என்று வெளியே பகிரங்கமாகச் சொல்ல முடியாத நிலையில் தத்தளித்து வருகிறார் முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி! 
திருவொற்றியூர் கே.வி. குப்பத்தைச் சேர்ந்த மீனவர்கள் செல்லத்துரை, வேலு ஆகிய இருவரும் கடந்த 2006-ம் ஆண்டு மாயமானார்கள். ''சுனாமி நிவாரண நிதி பிரிப்பதில் என் கணவருக் கும், அப்போது அமைச்சராக இருந்த கே.பி.பி.சாமிக் கும் கடும் தகராறு ஏற்பட்டது. எனவே, அவர்தான் என் கணவரைக் கொலை செய்திருப்பார் என்று நினைக்கிறேன்...'' என, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் காணாமல் போன மீனவர் களின் மனைவிகள் தனித்தனியாக புகார் மனு கொடுத்தார்கள்.
இந்த விவகாரம் தொடர்பாக சாமியின் ஆதர வாளர்களான சுந்தரம், டைசன் ஆகியோரை போலீஸார் சமீபத்தில் கைது செய்தனர். 'செல்லத் துரை அடிக்கடி எங்ககிட்ட தகராறு செஞ்சார். அதனால், அவரை காரில் தூக்கிட்டுப்போய் புதுச்சேரி காலாப்பட்டுக்கு பக்கத்தில் அடிச்சு புதரில் வீசிட்டோம்’ என்று, இருவரும் வாக்குமூலம் கொடுத்திருப்பதாக போலீஸ் வட்டாரம் சொல்கிறது. அதில் 'கே.பி.பி.சாமி சொல்லித்தான் செஞ்சோம்...’ என்றும் அவர்கள் சொல்லி இருக்கிறார்களாம். இதையடுத்து, முன்னாள் அமைச்சர் சாமியும் அவரது சகோதரர்களும் கடுமையான போலீஸ் கண்காணிப்புக்கு வந்துவிட்டார்கள். 'போலீஸ் வலையில் 'சாமி மீன் சிக்குமா? சிக்காதா?’ என்பதே மீனவர்களின் லேட்டஸ்ட் எதிர்பார்ப்பு.
காணாமல்போன செல்லத்துரையின் மனைவி பிரேமாவதியிடம் பேசினோம். ''முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் கே.பி.பி.சாமி எங்க ஊர் பஞ்சாயத்துத் தலைவரா இருந்தார். அவர் பொறுப்பில் இருந்த போது, சுனாமி நிவாரண நிதியாக சுமார்  75 லட்சம் எங்க ஊருக்கு ஒதுக்கப்பட்டது. அதில்,
 40 லட்சம் மட்டும் செலவு செய்தார் சாமி. மீதிக்கு கணக்கு இல்லை. இதனால், கட்சிப் பாகுபாடு இல்லாமல் எல்லாக் கட்சிகளும் சாமிக்கு எதிராக் குரல் கொடுத்துச்சு. என் கணவர் செல்லத்துரை அ.தி.மு.க-காரர். அதனால், அவரும் சாமியின் மோசடியை அம்பலப்படுத்தத் தீவிரமா செயல்பட்டார். அடுத்த சில மாதங்களில் தி.மு.க ஆட்சியைப் பிடித்ததும், அமைச்சர் ஆகிவிட்டார் சாமி. அதன் பிறகு, சாமிக்கு எதிராகச் செயல்பட்ட 16 பேர் வீடுகளை யும் அவருடைய ஆதரவாளர்கள் அடிச்சு நொறுக்கினாங்க. சாமியின் தம்பி சங்கர் 40 அடியாட்களோட என் கணவரை மிரட்டி னார். சில வாரங்களில் என் கணவர் காணாமல் போய்ட்டார். அப்போ சிலர், 'சாமி ஆளுங்கதான் செல்லத்துரை கதையை முடிச் சிட்டாங்க’னு பேசினாங்க. பதறி அடிச்சிட்டுப்போய் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தேன். ஆனா, போலீஸ்காரங்க துரத்திவிட்டுட்டாங்க. இப்போ, அம்மா ஆட்சியில் கண்டிப்பா நடவடிக்கை எடுப்பாங்கன்னு நம்பித்தான் திரும்பவும் புகார் கொடுத்து இருக்கேன்...'' என்று சோகத்துடன் கூறினார்.
போலீஸ் உயர் அதிகாரி ஒருவர், ''முன்னாள் அமைச்சர் சாமியின் சகோதரர் சங்கர் குறித்து கிராம மக்கள் பல தகவல்களை எங்களிடம் சொல்லி இருக்கிறார்கள். அதை அலட்சியப்படுத்த முடியாது. மீனவர்கள் காணாமல்போன விவகாரம் மட்டுமல்ல, கே.வி. குப்பத்தைச் சேர்ந்த மேகவர்ணம் என்ற நபரை சில ஆண்டுகளுக்கு முன் சரமாரியாக வெட்டிய விவகாரம், விசாலாட்சி குப்பத்தைச் சார்ந்த இரண்டு பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டது, திருவொற்றி யூரில் அரசு அதிகாரி ஒருவருக்கு அவரது வீட்டுக்குள்ளேயே கிடைத்த பகீர் அனுபவம் ஆகியவை குறித்தும் தீவிரமாக விசாரித்து வருகிறோம். மேலும், கடந்த முறை தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற அடுத்த சில நாட்களில் இந்தப் பகுதிகளில் பல திடுக்கிடும் சம்பவங்கள் நடந்துள்ளன. இப்போதைக்கு அது குறித்து விளக்கமாகச் சொல்ல முடியாது. ஆனால், குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்...'' என்று மர்மப் புன்னகை செய்தார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்துப் பேச, முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமியை செல் போனில் தொடர்புகொண்டோம். ''கைதுக்குப் பயந்து நான் தலைமறைவாக இருப்பதாகச் சொல்வது உண்மை இல்லை. இப்போகூட என் வீட்டில் இருந்துதான் உங்ககிட்ட பேசிட்டு இருக்கேன். மீனவர்கள் காணாமல் போன விவகாரத்தில், எனக்கோ என் தம்பிகளுக்கோ தொடர்பு இல்லை. ஊர்த் தலைவராக நான் இருந்தப்ப, சுனாமி நிவாரண நிதியில் முறைகேடும் நடக்கவில்லை. அமைச்சர் பதவியில் இருந்து என்னைத் தூக்க அப்போ சில அரசியல் எதிரிகள் எனக்கு எதிராகச் சதி செய்தாங்க. அதை இப்போது கையில் எடுத்துள்ள அ.தி.மு.க. அரசு, போலீஸைத் தூண்டிவிட்டு என்னைப் பழிவாங்கத் துடிக்கிறது. என் ஊர் மக்கள் எனக்கு ஆதரவாக இருக்காங்க. எனவே, வழக்கை துணிவுடன் எதிர்கொள்வேன்...'' என்றார் நம்பிக்கையாக.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக கே.பி.பி. சாமியின் தம்பிகள் சங்கர், சொக்கலிங்கம் ஆகிய இருவரும், திருவள்ளூர் மாஜிஸ்திரேட் முன்பு கடந்த 23-ம் தேதி மாலை சரண் அடைந்தனர். இருவரும், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  
மாயமான மீனவர்கள் என்ன ஆனார்கள் என்பதற்கு முதலில் விடை கிடைக்கட்டும்!
தி.கோபிவிஜய்
படங்கள்: என்.விவேக்

மாதுவைத் துரத்திய மரணம்!

தர்மபுரி விநோதம்

றந்து விட்டதாக ஒருவரின் உடலைப் பார்த்து உறவினர்கள் எல்லாம் கூடி ஒப்பாரி வைத்து, கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டி, இறுதி ஊர்வலம் நடத்தி, குழிக்குள் உடலை வைத்து மண்ணைத் தள்ளும் நேரத்தில் உடல் அசைந்தால்... எப்படி இருக்கும்? இப்படி ஒரு சம்பவத்தைப் பார்த்து ஒரு பக்கம் அதிர்ச்சி... இன்னொரு பக்கம் அளவில்லா சந்தோஷம் என திகைப்பில் இருக்கிறது அந்தஊர்! 
தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள குருக்கலையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாது. சில ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, கருத்து வேறுபாடு காரணமாக மனைவியைப் பிரிந்து வாழ்ந் தார் மாது. சமீபத்தில், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில், கொட்டாளம் என்ற ஊரில் உள்ள குவாரியில் வேலை செய்தார். கடந்த 20-ம் தேதி, பாறைக்கு வெடி வைத்தபோது சிதறி வந்த கல் ஒன்று, அவரது தலையில் மோத... தடுமாறிய அவர் கால் இடறி, பாறை மீது விழுந்தார். அந்த இடத்திலேயே மயக்கமாகி, சுய நினைவை இழந்து விட்டார். குவாரியில் இருந்தவர்கள் அவரை, வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறார் கள்.
அதன் பிறகு நடந்ததை மாதுவின் அண்ணன் பெரிய பொன்னு விவரித் தார். ''ஆஸ்பத்திரியில் இருந்த என் தம்பி, 'இனி பிழைக்க மாட்டான்’னு டாக்டர் கள் சொல்லிட் டாங்க. தூக்கிட்டு வந்துட் டோம். வீட்டுக்கு வந்து பார்த்தப்ப, மாதுவுக்கு மூச்சு சுத்தமா இல்லை. உள்ளூரில் இருக்கிற பெரியவர் ஒருத்தர் கையைப் பிடிச்சுப் பார்த்துட்டு, 'முடிஞ்சிடுச்சு’னு சொல்லிட் டார். அதனால் சொந்தக்காரங்களுக்கு சொல்லிவிட்டு, ஆக வேண்டிய காரியத்தைப் பார்க்க ஆரம்பிச்சோம். சடங்குகள் முடிஞ்ச தும், பாடை கட்டி இடுகாட்டுக்குக் கொண்டு போனோம். இடுகாட்டில் நடத்த வேண்டிய சடங்குகள் முடிஞ்சதும், தம்பியோட உடலை குழிக்குள் இறக்கினோம். அழுதுகிட்டே நான்தான் தம்பியோட உடல் மேல் மண்ணைத் தள்ளினேன். மண் அவன் உடம்பு மேல விழுந்ததும், திடீர்னு உடம்பு அசைய ஆரம்பிச்சது... என்னைக் கையைப் பிடிச்சு மண் தள்ள வெச்ச ஆள், 'பேய் கிளம்பிடுச்சிடா’னு கத்திட்டு, கையில் இருந்த மண்வெட்டியைத் தூக்கி வீசிட்டு ஓடிட்டான். வந்திருந்த கூட்டமும் பதறி அடிச்சிட்டு ஓடிச்சு. நான் மட்டும் தைரியமாக் குழிக்குள்ள இறங்கிப் பார்த்தேன். மாது நல்லா மூச்சுவிடுறது தெரிஞ்சது. அதுக்குப் பிறகு, இன்னும் நாலைஞ்சு பேர் இறங்கி னாங்க. எல்லோருமா சேர்ந்து மாதுவை மேலே தூக்கினோம். மண்ணை எல்லாம் துடைச்சிட்டுப் பார்த்தா... நல்லா மூச்சு விட்டுட்டு இருந்தான். உடனே, ஆம்புலன்ஸுக்கு போன் போட்டோம். அவங்க வந்து பார்த்துட்டு, 'உயிரோட இருக்கிறவரை கொல்லப் பார்த்தீங் களே’னு திட்டினாங்க. இப்போ, தர்மபுரி அரசு ஆஸ்பத்திரி தீவிர சிகிச்சைப் பிரிவில் மாது இருக்கான். ஆனா, இன்னும் அவனுக்கு நினைவு திரும்பலை. கடவுள் புண்ணியத்தில் உயிர் பிழைச்சானே... அதுவே போதுங்க!'' என்கிறார் நெகிழ்ச்சியோடு இறந்து விட்டார் என்று, சடலத்தைக் கொடுத்து அனுப்பியதாக மாதுவின் உறவினர்கள் பலரும் குறை பட்டு கைநீட்டுவது வேலூர் சி.எம்.சி. மருத்துவ மனையைத்தான். எனவே, சி.எம்.சி. மருத்துவமனை பி.ஆர்.ஓ. துரை ஜாஸ்பரிடம் சம்ப வம் பற்றிக் கேட்டேம். ''எங்க ஹாஸ்பிடலில் அட்மிட் ஆன ஒருத்தர் இறந்து போயிருந்தா கண்டிப்பா டெத் சர்டிஃபிகேட் கொடுத்துத்தான் சடலத்தை வெளியில் அனுப்புவோம். நீங்க குறிப்பிடும் மாதுவை கடந்த 20-ம் தேதி மாலையில் அவசர சிகிச்சை பிரிவுக்குக் கொண்டு வந்து இருக்காங்க. முதல்உதவி செஞ்ச எங்க டாக்டர்கள், அவரோட நிலைமையை பரிசோதித்துவிட்டு, 'உயிர் பிழைக்க வாய்ப்பு ரொம்பவும் குறைவு, வேறு ஹாஸ்பிடலில் வேணும்னா போய்ப் பாருங்க’னு சொல்லி இருக்காங்க. அதன் பிறகு அவங்க நோயாளியை சீரியஸான நிலையில்தான் டிஸ்சார்ஜ் பண்ணி கூட்டிட்டுப் போயிருக்காங்க. இங்கு இருந்து கிளம்பிப் போன பிறகு, அவங்க என்ன முடிவு எடுத்தாங்கன்னு எங்களுக்குத் தெரியாது. அப்படி அவர் வெளியில் போன பிறகு நடக்கக்கூடிய சம்பவங்களுக்கு நாங்க எப்படிப் பொறுப்பாக முடியும்?'' என்று கேட்டார்.
கதைகளில் மட்டுமே கேள்விப்பட்டவை நிஜமாக நடந்திருக்கிறது என்று மக்கள் சந்தோஷப்பட்ட வேளையில், மருத்துவமனையில் இருந்த மாது, மூன்று நாட்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்துவிட்டார்
எஸ்.ராஜாசெல்லம், கே.ஏ.சசிக்குமார்
படங்கள்: க.தனசேகரன், ச.வெங்கடேசன்

கறார் கலெக்டர்... கடுப்பில் ஆசிரியர்கள்!

கடலூர் எஸ்.எம்.எஸ். போராட்டம்

குட் மார்னிங் தொடங்கி குட் நைட் வரை எஸ்.எம்.எஸ்.களிலேயே வாழ்பவர் களுக்கு  மத்தியில், எஸ்.எம்.எஸ். 
அனுப்பச் சொன்னதால் கோபித்துக்கொண்டு போராட் டத்தில் குதித்து இருக்கிறார்கள் கடலூர் மாவட்ட ஆசிரி யர்கள்.
கடலூர் மாவட்டத்துக்கு கலெக்டராக அமுதவல்லி பொறுப் பேற்றதும் பல அதிரடி மாற்றங்களைக் கொண்டுவந்தார். அரசுப் பள்ளிகளின் தரம் மற்றும் தேர்ச்சி விகிதத்தை உயர்த்த வேண்டும் என்பது அதில் ஒரு முக்கிய அம்சம். அனைத்துப் பள்ளி ஆசிரியர்களும் பள்ளிக்கு வந்து வருகைப் பதிவேட்டில் கையெழுத்துப் போட்டதும், தங்களது வருகையை உறுதிசெய்யும் வகையில் மாவட்டக் கல்வி அதிகாரிக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும் என்று கலெக்டர் உத்தரவு போட்டார். அதுதான் ஆசிரியர்களைக் கொந்தளிக்கவைத்திருக்கிறது.
ஆசிரியர்கள் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்யும் விதமாக, கடந்த 20-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு எதிரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் இருந்த தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலச் செயலாளர் அப்துல் மஜீத்திடம் பேசினோம்.
''உயர் கல்விப் பயிற்சி, மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணி, குழந்தைகள் வருகைப் பதிவுப் பணி, அலுவலகப் பணி என எல்லா வேலைகளையும் ஆசிரியர்களுக்குத்தான் கொடுக்கிறாங்க. பள்ளியோட தரத்தை உயர்த்தணும்னா, 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் நியமிக்கப்படணும். ஆனால், பல பள்ளிகளில்... பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி இடங்கள் காலியாகவே இருக்கிறது. ஓராசிரியர் பள்ளியில் ஆசிரியர் லீவு போட்டால், அந்த இடத்துக்கு வேறு ஓர் ஆசிரியரை அனுப்ப வேண்டும். இருக்கிற வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு, எஸ்.எம்.எஸ். மூலம் வருகைப் பதிவை பதிவு செய்ய வேண்டும் என்றால், பணியில் தடுமாற்றம் ஏற்படுகிறது. எங்களுடைய வருகையைக் கண்காணிக்க முதன்மைக் கல்வி அலுவலகத்தில் 20-க்கும் அதிகமான அலுவலர்கள் இருக்காங்க. அப்படி இருக்கும்போது, இந்த எஸ்.எம்.எஸ். திட்டம் தேவைதானா? பள்ளிக்கு வந்த பிறகு கையில் செல்போனுடன் திரியத்தான் வேண்டுமா? எஸ்.எம்.எஸ். சரியா டெலிவரி ஆச்சா இல்லையானு தேவை இல்லாத டென்ஷன் அனைத்து ஆசிரியர்களுக்கும் இருக்கும். அதனால், கலெக்டர் உடனடியாக இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும்!'' என்று எச்சரித்தார்.
ஆனால், பெற்றோர் ஆசிரியர் கழகங்களோ இந்தத் திட்டத்துக்குப் பெரும் வரவேற்பு கொடுக்கிறார்கள். பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் ராமசாமியை சந்தித்தோம். ''ஆசிரியர்களோட இந்தப் போராட் டத்தில் கொஞ்சம்கூட நியாயம் இல்லை. தனியார் நிறுவனங்களில் இந்தத் திட்டத்தை சிறப்பாகவே செயல்படுத்தி வருகிறார்கள். அப்படி இருக்கும்போது இவங்க மட்டும் ஏன் இதை ஏற்க மறுக்கணும்? கடமையை ஒழுங்காகச் செய்யும் எந்த ஆசிரியரும் இந்தத் திட்டத்தை எதிர்க்க மாட்டாங்க. பிள்ளை களோட நலனில் அக்கறையோடு கலெக்டர் கொண்டு வந்திருக்கும் இந்தத் திட்டத்தை எங்கள் சங்கம் இருகரம் கூப்பி வரவேற்கிறது. சிலரின் மிரட்டலுக்குப் பயந்து இந்தத் திட்டத்தை கலெக்டர் கைவிடக் கூடாது என்பதுதான் எங்களது வேண்டுகோள்...'' என்று கேட்டுக்கொண்டார்.
கலெக்டர் அமுதவல்லியிடம் இந்த விவகாரம் பற்றிப் பேசினோம். ''இந்த உத்தரவு ஆசிரியர்களுக்காக மட்டும் பிரத்யேகமாகப் போடப் படவில்லை. படிப்படியாக மாவட்டத்தில் உள்ள எல்லாத் துறைகளிலுமே இந்த முறையைச் செயல் படுத்தப் போறோம். இந்தத் திட்டத்தைக் கண்ணை மூடிக்கொண்டு எதிர்க் காமல், கொஞ்சம் நிதானமாக யோசித்துப் பார்த்து ஆசிரியர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும். இந்தத் திட்டத்துக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு நல்ல கல்வி கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தத் திட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறோம். எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் எஸ்.எம்.எஸ். திட்டம் தொடரும். அதேபோல, ஒவ்வொரு பள்ளிக்கும் நான் திடீர் ஆய்வு மேற் கொள்ளப்போகிறேன். அப்போது எஸ்.எம்.எஸ். அனுப்பாதவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப் போகிறேன்...'' என்றார் அழுத்தம் திருத்தமாக.
இரு தரப்பும் பேச்சு வார்த்தை நடத்திப் பிரச்னையைத் தீர்க்க வேண்டும் என்பதுதான் பொதுமக்கள் விருப்பம்.
க.பூபாலன்
படங்கள்: ஜெ.முருகன்

''என்னடா... ரொம்பத் துள்றீங்க?''

தமிழர்களை மிரட்டும் சிங்கள மீனவர்கள்..

ழக்கமாக இலங்கைக் கடற்படையினர் தான் தமிழக மீனவர்கள் மீது வெறியாட்டம் ஆடுவார்கள். இப்போது, அந்தப் பணியை சிங்கள மீனவர்களும் செய்யத் தொடங்கிவிட்டனர். கோபத்துக்குக் காரணம், முதல்வர் ஜெயலலிதாவின் அறிக்கையாம்!
 இலங்கை அரசைக் கண்டித்து தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், இலங்கையில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது. இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷே, 'தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுகிறார்கள்’ என்ற ரீதியில் பேட்டி கொடுத்து டென்ஷனை ஏற்றினார். இந்தச் சூழலில், கடந்த 19-ம் தேதி, இரவு கடலில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த நாகை மீனவர்களிடம் சிங்கள மீனவர்கள் அடாவடியைக் காட்டி இருக்கிறார்கள்.
கடந்த 17-ம் தேதி காலை, அக்கரைப்பேட்டை யைச் சேர்ந்த செல்வராஜ், மோகன்ராஜ் உட்பட சுமார் 20 மீனவர்கள் இரண்டு விசைப் படகு களில் கடலுக்குச் சென்றனர். மூன்று நாட்கள் கடலில் தங்கி மீன் பிடித்துவிட்டு கடந்த 19-ம் தேதி மாலை வலையை இழுத்துக் கிளம்பத் தயாரானார்கள். அப்போது ஆறு ஃபைபர் படகுகளில் அங்கு வந்த சிங்கள மீனவர்கள், இரண்டு படகுகளையும் சூழ்ந்துகொண்டார்கள். தமிழக மீனவர்கள், 'என்ன? ஏது?’ என்று விசாரிப்பதற்குள், தங்கள் படகுகளில் இருந்து கற்களையும், இரும்புத் துண்டுகளையும் எடுத்து, தமிழக மீனவர்களின் விசைப் படகுகள் மீது வீசி சரமாரித் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். இதை எதிர்பார்க்காத தமிழக மீனவர்கள் உடனே படகுகளில் படுத்துக்கொண்டார்கள். இன்னும் சிலர் அறைகளுக்குள் புகுந்து பதுங்கிக் கொண்டார்கள். அதற்குப் பின்னும் ஆத்திரம் அடங்காத சிங்கள மீனவர்கள் கத்தி, இரும்பு ராடு, உருட்டுக் கட்டை போன்ற ஆயுதங்களை எடுத்துக்கொண்டு, தமிழக மீனவர்களின் படகுகளில் குதித்தார்கள்.
அதற்குப் பிறகு நடந்ததை மீனவர் வெங்க டேசன் நம்மிடம் சொன்னார். ''சரசரவென்று படகில் குதிச்சவங்க முதலில் எங்க வலைகளை எல்லாம் வெட்டி வீசினாங்க. ரவுடிங்க வெச்சிருக்கிற மாதிரி பெரிய அரிவாள் வெச் சிருந்தாங்க. அதை எங்க கழுத்தில் வெச்சு மிரட்டி, எங்க எல்லாத்தையும் படகின் ஓரமாக மண்டியிடவெச்சாங்க. 'ஏண்டா, என்ன திமிர் இருந்தா உங்க நாட்டு சட்டசபையில் எங்க ளுக்குப் பொருளாதாரத் தடை போடச் சொல்லி தீர்மானம் போடுவீங்க... அவ்வளவு தைரியம் வந்துருச்சா உங்களுக்கு? அப்பப்ப உங்களை இப்படிக் கவனிச்சாதான் ஒழுங்கா இருப்பீங்க’னு உடைஞ்ச தமிழ் கலந்த சிங்கள மொழியில் திட்டினாங்க.
அதோட நாங்க பிடிச்சுவெச்சிருந்த மீன்கள், ஜி.பி.எஸ். கருவி, வயர்லெஸ், செல்போன், டீசல் எல்லாத்தையும் பிடுங்கி அவங்களோட படகில் ஏத்திட்டானுங்க. ஒரு கட்டத்துல எனக்குக் கோபம் வந்து, 'நாங்க கஷ்டப்பட்டு பிடிச்ச மீன்களை இப்படிக் கொள்ளை அடிக்கிறீங்களே?’னு ஒருத்தன் சட்டையை எட்டிப் பிடிச்சிட்டேன். உடனே, இன்னொருத்தன் என்னை அரிவாளால் மண்டையில் வெட்டிட்டான். இதைத் தட்டிக் கேட்ட பாலையா என்பவரையும் கையில் வெட்டிட்டானுங்க. அதனால், நாங்க ரொம்ப பயந்து, உயிர் பிழைச்சாப் போதும்னு படகை எடுத்துக்கிட்டு வந்துட்டோம். சிங்களக் கடற்படைதான் எதிரின்னு பார்த்தா, இப்போ அந்த நாட்டு மீனவர் களும் எங்களைக் கொலை செய்யப் பார்க்கிறாங்க... இனி எந்தத் தைரியத்தில் கடலுக்குப் போவது?'' என்கிறார் பீதியுடன்!
தாக்குதலுக்கு உள்ளான இன்னொரு மீனவரான பழனிச்சாமி, ''உங்க சென்ட்ரல் கவர்மென்டே எங்க பக்கம்தான் தெரியுமா? நீங்க என்னடா ரொம்ப துள்றீங்கன்னு கேட்டு என்னை உருட்டுக் கட்டையால் ஒருத்தன் அடிச்சான்...'' என்கிறார்.
ரத்தம் வழியக் கரை திரும்பிய மீனவர்கள் உடனடியாக நாகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள். மீன்வளத் துறை அமைச்சர் ஜெயபால் மருத்துவமனைக்குச் சென்று மீனவர் களை சந்தித்து ஆறுதல் கூறினார். நம்மிடம் பேசிய அமைச்சர், ''யாருமே செய்யாத சாதனையாக சட்டசபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை முதல்வர் அவர்கள் கொண்டுவந்தார்கள். இலங்கை அரக்கர்களிடம் இருந்து தமிழர்களைக் காப்பாற்றுவதற்கான எல்லா முயற்சிகளையும் அம்மா செய்து வருகிறார்கள். அதிலும், மீனவர்கள் நலன் காக்க மிகவும் அக்கறை எடுக்கிறது இந்த அரசு. கச்சத் தீவை மீட்பதில் ஆரம்பித்து எல்லா விதமான மீனவர் பிரச்னைக்கும் விரைவில் நல்ல தீர்வுகள் எட்டப்படும்!'' என்றார்.
நம் மீனவர்களுக்கு என்றுதான் நிரந்தரத் தீர்வு கிட்டுமோ..?
கரு.முத்து
*********************************************************************
பொள்ளாச்சியில் மழை பெய்தால் திருச்சியில் வெள்ளம் வரும்!

நடுங்கும் மக்கள்... அலட்சிய அரசு!

வ்வளவோ பிரச்னைகளைக் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால், திருச்சி நகரில் இருக்கும் வயலூர் சாலை, பால் பண்ணை, தஞ்சாவூர் சாலைக் குடியிருப்பு மக்களின் பிரச்னை, விநோதமானது. அதாவது, பொள்ளாச்சிப் பக்கம் மழை பெய்தாலே... இங்குள்ள குடியிருப்புகள் நீரில் மூழ்கிவிடுமாம்! 
'இந்த ஏரியாவில் மழை அல்லது ஆற்றில் வெள்ளம் வந்தால்தானே திருச்சி பாதிக்கப்படும்? பொள்ளாச்சி மழை எப்படி திருச்சியை பாதிக்கும்?’ என்ற கேள்வியை ஏரியாக்களில் கேட்டோம். அம்மையப்ப நகரைச் சேர்ந்த சக்தி மகளிர் மன்றத்தினர் நம்மிடம், 'உய்ய கொண்டான் ஆறு, குடமுருட்டி ஆறு ரெண்டும்தான் எங்க பகுதிகளுக்கு எல்லை. 2005-ல் காவிரியில் வெள்ளம் வந்த பிறகு இந்த ஆறுகளால் எங்களுக்கு அவ்வப்போது தொந்தரவு ஏற்படுகிறது. வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்தக் கோரி போராட்டங்கள் நடத்தினோம். மூன்று வருடங்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்திய பிறகு, வாய்க்கால் கட்டி, இந்த ஆறுகளில் உபரியாக வரும் நீரை காவிரிக்குத் திருப்பிவிட 253 கோடியில் திட்டம் போட்டு பணிகளை ஆரம்பிச்சாங்க. இந்த திட்டம் 2009-ம் ஆண்டு ஜூலைக்குள் நிறைவடைந்து இருக்கணும்.
ஆனால், கடந்த ஆட்சியில் அதிகாரிகள் அலட்சியம் காட்டியதால் 30 சதவிகிதப் பணிகள்கூட இன்னும் முடியவில்லை. இந்த ஆட்சியிலாவது பணிகள் வேகமாக நடக்கும் என்று பார்த்தோம். ஆனால், தி.மு.க. அரசு கொண்டுவந்த திட்டம் என்பதால், இந்தத் திட்டத்தைக் கிடப்பில் போட்டுவிட்டார்கள். விபத்தில் மரியம்பிச்சை இறந்துவிட்டதால், எங்களால் யாரிடமும் போய் சொல்லவும் முடியவில்லை. பொள்ளாச்சிப் பக்கம் மழை பெஞ்சாலே, இங்கு இருக்கும் குடமுருட்டி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு எங்க வீடுகளுக்குள் தண்ணீர் வந்துவிடுகிறது...'' என்றனர்.
உய்யகொண்டான் மற்றும் குடமுருட்டி ஆற்றங்கரைகளைப் பார்வையிட்டோம். கரைகள் பலவீனமாகக் காட்சி அளித்தன. தண்ணீர் ஊருக்குள் புகாமல் இருக்க அடுக்கிவைக்கப்பட்டு இருந்த மணல் மூட்டைகளும் அப்புறப்படுத்தப்பட்டு இருந்தன. ஆற்றில் உடைப்பு ஏற்பட்டால், லிங்கம் நகர், ஃபாத்திமா நகர், எம்.எம். நகர், ஜானகி அம்மாள் காலனி, ஸ்ரீனிவாசா நகர், வயலூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகள் பாதிக்கப்படும்.
பொள்ளாச்சிக்கும் திருச்சிக்கும் என்ன தொடர்பு என்று நீர் நிலை ஆதாரத் துறையை சேர்ந்த அதிகாரி ஒருவரிடம் கேட்டோம். 'குடமுருட்டி ஆறு என்பது மற்ற ஆறுகளில் இருந்து வரும் உபரி நீர்தான். அது மேற்கண்ட குடியிருப்புப் பகுதிகள் வழியாகச் சென்று காவிரியில் கலந்துவிடும். உய்ய கொண்டான் ஆறு பேட்டைவாய்த்தலையில் துவங்கி காவிரியில் கலக்கிறது. கோரை ஆறு என்னும் இன்னொரு ஆறு பொள்ளாச்சியில் துவங்கி, திண்டுக்கல், மணப்பாறை வழியாகக் காவிரியில் கலக்கிறது. இந்த ஆறுகளைக் கட்டுப் படுத்தும் பகுதி கலெக்டர் அலுவலகத்துக்குப் பின்புறம் உள்ளது.
சில சமயங்களில் அங்கு இருக்கும் பணியாளர்கள் அலட்சியத்தால் 8,000 கன அடி கொள்ளளவுகொண்ட குடமுருட்டி ஆற்றில் 30 ஆயிரம் கன அடி வரைக்கும் தண்ணீர் வந்துவிடும். காரணம், பொள்ளாச்சியில் மழை பெய்து கோரை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால், அந்த தண்ணீரை குடமுருட்டி ஆற்றில் விடுவார்கள். இன்னொரு பக்கம் உய்யகொண்டான் ஆற்றிலும் அந்த தண்ணீர் புகுந்துவிடும். இதனால், இந்தப் பகுதிகளில் வெள்ளம் புகுந்துவிடும். ஒவ்வொரு வருஷமும் வெள்ளம் வரும்போது அதிகாரிகள் கண்துடைப்புக்காக மணல் மூட்டைகளை அடுக்கிவைப்பது வழக்கம். ஆனால், இதுவரை நிரந்தரத் தீர்வு காணப்படவில்லை. போதாக்குறைக்கு கடந்த ஆட்சியில் ஆரம்பித்த திட்டப் பணிகளையும் நிறுத்திவிட்டார்கள். வெள்ளத் தடுப்புக்குப் போடப்பட்டிருந்த மணல் மூட்டைகளையும் அப்புறப்படுத்திவிட்டார்கள். அரசுத் தரப்பில் விசாரித்தால், பணியைத் தொடர வேண்டாம் என்று வாய்மொழி உத்தரவு வந்ததாகச் சொல்கிறார்கள்.
தி.மு.க-வின் திட்டமாக இதை நினைக்காமல், திருச்சி மக்களை வெள்ள அபாயத்தில் இருந்து காக்கும் திட்டமாக இதைக் கருதி, முதல்வர் ஜெயலலிதா இது தொடர்பான பணிகளைத் துவக்க உத்தரவிட வேண்டும்...'' என்றார்!
காக்குமா அரசு?
- க. ராஜீவ்காந்தி

வில்லங்கம் செய்தாரா வீரகோபால்?

கோவை அரெஸ்ட்

'திருச்சியில் முன் னாள் தி.மு.க. அமைச்சர் நேருவைக் கைது செய்துவிட்டார்கள்!’ என்று தி.மு.க-வினர் கலங்கிய அதே நேரத்தில் கோவையில், மாநகர தி.மு.க. செயலாளரான வீரகோபாலையும் அலேக்காகத் தூக்கியது போலீஸ். வீரகோபால் கைதுக்கான காரணத்தை போலீஸ் வட்டாரத்தில் கேட்டோம். 
''வடவள்ளியைச் சேர்ந்த ரத்தினம் என்ற பெண் கொடுத்திருக்கும் புகாரின் பேரில் வீரகோபாலை அரெஸ்ட் செய்து இருக்கிறோம். 'விளாங்குறிச்சிப் பக்கம் உள்ள தங்களது குடும்ப சொத்தான சுமார் 2.25 ஏக்கர் நிலத்தை, தன் அண்ணன் சாந்தலிங்கம் (ரத்தினத்தின் அண்ணன்) உடன் சேர்ந்து போலியான ஆவணம் தயாரித்து வீரகோபால் ஏமாற்றியதாக அந்த அம்மா புகார் கொடுத்து இருக்கிறார்கள். இந்த மோசடி சம்பந்தமாகப் பேசியபோது, தனக்கு வீரகோபால் ஆட்கள் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர் புகாரில் தெரிவித்துள்ளார்...'' என்கிறார்கள்.
வீரகோபால் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் தரப்பில் பேசியவர்கள், ''வீரகோபால் எந்தப் போலி ஆவணத்தையும் தயாரிக்க வில்லை, யாரையும் மோசடி பண்ணவில்லை. குடும்பப் பிரச்னையால் உண்டான கோபத்தில் அந்த ரத்தினம் என்பவர், தேவையில்லாமல் வீரகோபால் பெயரையும் இழுத்து விட்டுள்ளார். ஏற்கெனவே இதே விவ காரம் சம்பந்தமாக நீதிமன் றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அத்துமீறி வீர கோபாலை போலீஸ் கைது செய்திருப்பது சட்ட விரோதம்...'' என்று பதில் சொன்னார்கள்.
இதில் இன்னொரு கோணமும் இருக்கிறது. அதாவது கோவை மாநகர தி.மு.க-வைப் பொறுத்த வரை மாஜி அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி ஓர் அணியாகவும் வீரகோபால் மற்றோர் அணியாகவும் இயங்கிவருகிறார்கள். வீரகோபாலின் வீட்டு மொட்டை மாடியில் காக்கா கக்கா போனால் கூட, 'இது பொங்கலூராரின் தூண்டுதல்...’ என்று ஸ்டேட்மென்ட் விடுப்பவர்கள் இந்த கைது விவகாரத்திலும் அதையே எதிரொலிக்கிறார்கள்.
''பொங்கலூர் சட்டமன்றத் தொகுதியின் மாஜி எம்.எல்.ஏ. மணி போன வாரம் ஒரு நிலமோசடி பிரச்னையில சிக்கினார். இந்த வழக்கில் பொங்கலூர் பழனிசாமியின் பெயரும் இருந்தது. அவர் கைதாகும் முன்னரே, வீரகோபாலை உள்ளே தள்ள வேண்டும் என்று பிளான் பண்ணியே இந்த வழக்கை ஜோடித்து இருக்கிறார்கள்!'' என்று புகை கக்குகிறார்கள். அப்படின்னா அடுத்து ?
எஸ்.ஷக்தி
படங்கள்: தி.விஜய்

ரேஷன் கடையில் அலமேலு!

சேலத்தில் நடக்கிறதா அடாவடி?

'எங்க ஏரியா ரேஷன் கடையில் ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒரு பெண், தினமும் வந்து அட்டகாசம் செய்கிறார். நீங்கள் நேரில் வந்தால், இன்னும் நிறையச் சொல் கிறோம்...’ என்று சேலத்தில் இருந்து ஒரு குரல் நம் ஆக்ஷன் செல் நம்பரில் (044-42890005) பதிவாகி இருந்தது. குரல் வந்த சேலம், நெத்திமேடு ஏரியாவுக்குச் சென்றோம். 
அ.தி.மு.க-வின் எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் 'சோடா’ மணி என்பவரை சந்தித்தோம். ''எங்க டிவிஷன் மிகவும் பெரியது என்பதால், ரேஷன் கடையை இரண்டாப் பிரிச்சிருக்காங்க. எங்க கட்சியில், மாநகர் மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவியாக இருக்கும் அலமேலு வைக்கிறதுதான் இந்த இரண்டு கடையிலுமே சட்டமாக இருக்கிறது. காலையில் கடை திறக்கும் முன்பே வந்துடுவாங்க. கடையைத் திறந்ததும் உள்ளே இருக்கிற சேரை இழுத்துப் போட்டு உட்கார்ந்துக்குவாங்க. ஒவ்வொரு நாளும் மக்க ளுக்கு எந்தப் பொருளை போடணும்னு முடிவு பண்றது அந்த அம்மாதான். ஆளும் கட்சி ஆள் என்பதால், ஊழியர்கள் அமைதியா இருக்காங்க. பொதுமக்கள் யாராவது வாயைத் திறந்தா, 'இந்த ஏரியா எம்.எல்.ஏ-வுக்கு என்ன பவரோ... அதே பவர் எனக்கும் இருக்கு. வாயைப் பொத்திட்டுப் போ’னு ஏக வசனத்தில் திட்டுவாங்க. அதனால், யாரும் வாயைத் திறப்பதே இல்லை. தினமும் ஏகப்பட்ட ரேஷன் பொருட்கள் இந்த அம்மாவின் துணையோட காணாமல் போகுது. தி.மு.க-காரங்க பிரச்னை பண்ணாம இருக்க, அவங்க வீட்டுக்கு ரேஷன் பொருளை அனுப்பிவெச்சிடுவாங்க. சர்க்கரை, அரிசி, கெரசின் எல்லாத்திலுயும் அளவு சரியாவே இருக்காது. அந்த அம்மா சொல்றதை ரேஷன் கடைக்காரர் கேட்கலைன்னா, உடனே தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அவங்களை மாத்திடுவாங்க!'' என்று புலம்பித் தீர்த்தார்.
பிற்பகல் நேரத்தில் அந்த ரேஷன் கடைக்குப் போனோம். அலமேலு அங்கு நடுநாயகமாக அமர்ந்திருந்தார். அவரிடம் பேசினோம். ''கட்சியில் பெரிய பொறுப்பு எனக்கு வந்துடக் கூடாதுனு என் வளர்ச்சி மீது பலருக்கும் பொறாமை. அதனால்தான் இப்படி ஏதாவது சொல்லுறாங்க. ரேஷன் கடையில் ஒழுங்காப் பொருள் கிடைக்கிறதில்லைனு கட்சிக் காரங்க பலரும் என்கிட்ட புகார் சொன்னாங்க. மாவட்ட அளவில் பொறுப்பில் இருக்கிற நான்தானே இதுபோல தப்புகளைத் தட்டிக் கேட்க முடியும். மத்தபடி அவங்க சொல்ற புகாரில் துளிகூட உண்மை கிடையாதுங்க. அம்மாவோட ஆட்சிக்குக் கெட்ட பேர் வர மாதிரி நான் நடந்துக்குவேனா, சொல்லுங்க?'' என்று பதில் கொடுத்தார்.
அந்த ரேஷன் கடை விற்பனையாளர் தானே முன்வந்து, ''நான் இந்தக் கடைக்கு வந்து ஒரு வாரம்தான் ஆகுது. எனக்கு இந்தப் பிரச்னைபற்றி எதுவும் தெரியாது!'' என்று விளக்கம் கொடுத்தார்.
ஓஹோ!
                      - ம.சபரி
படங்கள்: மோகன்

''கேரளாவின் குப்பைத் தொட்டியா தேனி?''

ஆக்ஷன் ஜூ.வி. - அதிரடி கலெக்டர்!

'நச்சுத்தன்மைகொண்ட மருத்துவக் கழிவுகள் மற்றும் மாமிசக் கழிவு களை, கேரளாவில் இருந்து லாரிகளில் டன் கணக்கில் ஏற்றி வந்து, தேனி மாவட்டத்தில் கொட்டுகிறார்கள். இந்தக் கழிவுகள் நோய்க் கிருமிகளைப் பரப்புவதுடன் எங்கள் பகுதி நிலத்தடி நீரையும் கெடுத்துவிட்டன. இதைத் தடுக்க வேண்டிய அதிகாரிகளும் மௌனமாக இருக்கிறார்கள்!’ என்று ஜூ.வி. ஆக்ஷன் செல் (044-42890005) அலறவே, பயண மானோம். 
மேகமலை அடிவாரத்தில் சீப்பாலக் கோட்டை பஞ்சாயத்துக்கு உட்பட்ட குக்கிராமம் கள்ளப்பட்டி. இந்த ஊருக்கு காமாட்சிபுரம் வழியாக நாம் நுழைந்தபோதே மாமிசக் கழிவுகளின் துர்நாற்றம் அடிவயிற்றைப் புரட்டியது. மூக்கில் துணியைக் கட்டிக்கொண்டுதான் கள்ளப்பட்டியை அடைந்தோம்.
சீப்பாலக்கோட்டை பஞ்சாயத்துத் துணைத் தலைவராக இருக்கும் முன்னாள் ராணுவ வீரர் ராஜாவை சந்தித்தோம். கழிவுகள் கொட்டப்பட்டுள்ள முந்திரித் தோப்புக்கு நம்மை அழைத்துச் சென்றார். சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் உள்ள தோப்பின் பெரும்பகுதிகளில் கழிவுகளைக் கொட்டி இருந்தனர். பெயரளவுக்குப் புதைக்கப்பட்டதை நாய், நரிகள் தோண்டி வெளியே வீசியிருந்தன. அழுகிய மாமிசங் களில் ஈ, கொசு, காக்கா, கழுகு என சகல ஜீவராசிகளும் மொய்த்தன.
''இந்த நிலங்களை கேரள மாநிலத்தைச் சேர்ந்த பாபுபால் என்பவர் 15 வருடங்களுக்கு முன்பு வாங்கி, முந்திரி விவசாயம் செய்தார். சீப்பாலக்கோட்டை, ஓடைப்பட்டி, காமாட்சிபுரம், அழகாபுரி பஞ்சாயத்தைச் சேர்ந்த பதினெட்டுப் பட்டி கிராம ஜனங்களுக்கும் நல்ல சம்பளத்துடன் வேலை கொடுத்தார். போன வருஷம் திடீரென எல்லோ ரையும் வேலைக்கு வர வேண்டாம் என்று சொல்லிவிட்டு கேரளாவில் இருந்து ஆட்களைக் கொண்டுவந்து தோட்டத்தைச் சுற்றி கம்பி வேலி போட்டார். அன்று முதல் தினமும் ராத்திரியில் இரண்டு லாரிகளில் கழிவுகளைக் கொண்டுவந்து கொட்டு கிறார்கள். விசாரித்ததில், 'க்ளீன் கேரளா’ என்ற திட்டத்தைக் கொண்டுவந்த கேரள அரசு, கழிவுகளைச் சேகரிப்பவர்கள் சுத்திகரிக்கவும் செய்ய வேண்டும் என சட்டம் போட்டு உள்ளது. சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கோடிக்கணக்கில் செலவாகும் என்பதால் டெண்டர் எடுத்தவர்கள் கழிவுகளை கேரள எல்லையோரம் உள்ள தமிழக, கர்நாடகப் பகுதிகளில் கொட்டிவிடுகிறார்கள். 2010 ஜனவரியில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில், 'பாபுபால் தோட்டத்தை மூட வேண்டும்’ என தீர்மானம் போட்டு கலெக்டருக்கு மனு கொடுத்தோம். விசாரணைக்கு வந்த அதிகாரிகள் பாபுபால் தந்த பணத்துக்கு மயங்கி, 'தோட்டத்தில் உள்ள பன்றிப் பண்ணைக்கு கேரளாவில் இருந்து காய்கறிக் கழிவுகளைத்தான் பாபுலால் கொண்டுவருகிறார். அதில் மருத்துவக் கழிவுகளோ, மாமிசக் கழிவுகளோ இல்லை’ என அறிக்கை கொடுத்துவிட்டார்கள்!'' என வேதனைப்பட்டார்.
இதே ஊரைச் சேர்ந்த தமிழ்செல்வி, ''புதைக்கப் பட்ட கழிவுகள் இப்போது நிலத்தடி நீருடன் கலந்து விட்டதால், கிணற்றுத் தண்ணீர் பிணவாடை அடிக்கிறது. வாயில் தண்ணீரைவைத்தாலே குமட்டிக் கொண்டு வருகிறது. தண்ணீர் கெட்டுப்போனதால் மாடு, கன்று வளர்க்க முடியவில்லை. இப்போது எங்களுக்கு சொறி, சிரங்கு, அரிப்பு, வயிற்று வலி என விதவிதமான சிக்கல்கள் வருகின்றன...'' என்று கண் கலங்கினார்.
நாம் பார்த்த விஷயங்களை அப்படியே தேனி கலெக்டர் பழனிசாமியின் கவனத்துக்குக் கொண்டுசென்றோம். நம்மிடம் இருந்த போட்டோ ஆதாரங்களையும் கொடுத்தோம். அதைப் பார்த்து அதிர்ந்தவர், கழிவு ஏற்றி வரும் லாரிகளை உடனே பிடிக்க போலீஸாருக்கு உத்தரவிட்டார். கடந்த 12-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு லாரியை மடக்கிய உத்தமபாளையம் டி.எஸ்.பி. ஸ்டான்லி, உடனே கலெக்டருக்கு தகவல் தெரிவித்தார். நம்மையும் உடன் அழைத்துச் சென்ற கலெக்டர், லாரியில் இருந்த கழிவுகளை இறக்கி சோதனையிட்டார். அதில் மாமிசக் கழிவுகள், பிளாஸ்டிக் பைகளில் சுற்றப்பட்ட மருத்துவக் கழிவுகளையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பாபுபால் முந்திரித் தோப்பினை முழுமையாக சுற்றிப் பார்த்து, அங்கே இருந்தபடியே மாசுக் கட்டுப்பாடு வாரியம், கால்நடைத் துறை, சுகாதாரத் துறை அதிகாரிகளைத் தோட்டத்துக்கு வரவழைத்து, ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
இரண்டு நாட்கள் கழித்து நம்மைத் தொடர்புகொண்ட கலெக்டர், ''நோய் பரப்பும் கழிவுகளை மாநிலம்விட்டு மாநிலத்துக்குக் கொண்டுவந்த பாபுபால் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து நோய் பரவாமல் இருக்க, பாபுபால் தோட்டத்தை சீல் வைத்து சுகாதாரத் துறை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. தோட்டம் முழுவதும் குளோரின், உப்புக் கரைசல் தெளித்து உள்ளோம். விவசாய நிலத்தை தவறான செயலுக்குப் பயன்படுத்தியதால், பாபுபால் பெயரில் உள்ள பட்டாவை ரத்து செய்வதற்கான பரிந்துரையும் அரசுக்கு அனுப்பி உள்ளோம்.
கேரளாவில் இருந்து தேனிக்கு வரும் குமுளி, கம்பம்மெட்டு, போடிமெட்டு வழிகளில் உள்ள சோதனைச் சாவடி களில் கண்காணிப்பை அதிகரிக்கவும் அறிவுறுத்தி உள்ளேன்....'' என சொன் னார்.
காவல் துறை, பாபுலாலைத் தேடிக் கொண்டு இருக்கிறது. மீண்டும் சுகாதாரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கி இருக் கிறார்கள் மக்கள்!
இரா.முத்துநாகு

தூக்கு?

அதிர்ச்சி அரசியல்... திகில் விவரங்கள்

''அம்மா, மிகுந்த அறிவும் ஆய்ந்தறியும் பேராற்றலும் கொண்டவர் நீங்கள். இந்த வழக்கில் இருக்கும் குளறுபடிகளை நீங்கள் நிச்சயம் அறிவீர்கள். என்ன தவறு செய்தோம் என்றே தெரியாமல் சாவின் மடியில் கிடப்பவனாகக் கேட்கிறேன்... தயவுசெய்து தூக்குத் தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுங்கள். இத்தனை வருடங்களாக வாடும் எங்களுக்காக உங்களின் ஒற்றைக் குரல் ஒலித்தால் போதும்!'' - கடந்த ஜூ.வி. இதழ் மூலமாக முதல்வர் ஜெயலலிதாவிடம் பேரறிவாளன் வைத்திருந்த கண்ணீர்க் கோரிக்கை இது. ஆனால், இந்தக் கண்ணீர் இன்னமும் அரசுத் தரப்பை அசைக்கவில்லை என்பதுதான் துயரம்! 
ஆம்; நடக்கக் கூடாது என நினைத்தது, நடந்தேவிட்டது. ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனைக்கு ஆளாகி வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவருடைய கருணை மனுக்களும் சமீபத்தில் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டன. இதையடுத்து மூவருக்கும் தூக்கு வேளை நெருங்கிவிட்டதாகப் பரபரப்புக் கிளம்ப, தமிழகம் முழுக்க உருக்கமான கோரிக்கைப் போராட்டங்கள் நடந்தன. இலங்கையின் போர்க் குற்றங்களைக் கண்டித்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றிய முதல்வர் ஜெயலலிதாவை நோக்கி கண்ணீர்க் கரங்கள் நீண்டன. சட்டமன்றக் கூட்டத் தொடர் நடக்கும் இந்த நேரத்தில் தூக்குத் தண்டனைக்கு எதிரான சட்ட வடிவத்தை ஜெயலலிதா இயற்றுவார் என்கிற எதிர்பார்ப்பும் நிலவியது.
ஆனால், அந்த நம்பிக்கையை தகர்க்கும் விதமாக, சிறைத் துறைக்கு கடிதம் ஒன்றை அனுப்பி அதிரவைத்திருக்கிறது தமிழக அரசு. கடந்த 25-ம் தேதி மாலை உள்துறைச் செயலாளர் ரமேஷ்ராம் மிஸ்ரா மூலமாக வேலூர் சிறைக் கண்காணிப்பாளருக்கு ஸ்பீட் போஸ்ட்டில் அனுப்பப்பட்ட அந்தக் கடிதத்தில், ''நடவடிக்கை எடுப்பதற்கான கடிதத்தை இத்துடன் இணைத்துள்ளேன். நடவடிக்கை எடுத்த பின் உடனடியாக அரசுக்கு அறிக்கை அனுப்பவும்!'' என மிகச் சுருக்கமான முறையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
மூவருடைய தூக்குத் தண்டனைக்கும் எதிராக நிச்சயம் தமிழக அரசு குரல் கொடுக்கும் என உறுதியாகப் பலரும் நம்பி இருந்த வேளையில், அதிர்ச்சிகரமான இந்த முடிவு எப்படி எடுக்கப்பட்டது?
இது குறித்துப் பேசும் அரசுத் துறையில் உள்ள உணர்வாளர்கள், ''கருணை மனு நிராகரிக்கப் பட்ட கடிதம், கடந்த 16-ம் தேதியே தமிழக அரசுக்கு வந்துவிட்டது. உடனே அரசுத் துறை செயலாளர்கள் அந்தக் கடிதம் குறித்து ஆலோசனை நடத்தி, முதல்வரிடம் தகவல் சொன்னார்கள். 'கூட்டத் தொடர் நடக்கும் இந்த நேரத்தில் இது குறித்து எந்த முடிவு எடுப்பதும் சரியில்லை. அதனால், கூட்டத் தொடர் முடிந்த பிறகு இதுபற்றிப் பேசலாம்!’ என்றார் முதல்வர். அதனால், இப்போதைக்கு இந்த விவகாரத்தில் பயப்பட வேண்டியது இல்லை என்கிற நிலை நிலவியது. இதற்கிடையில், கிருஷ்ணசாமி, சரத்குமார், ஜவாஹிருல்லா, தனியரசு உள்ளிட்ட எம்.எல்.ஏ-க்கள் பலரும் இந்த விவகாரம் குறித்து முதல்வரிடம் பேச முயற்சித்தார்கள். சீமான் மூலமாகவும் முதல்வருக்கு உருக்கமான கோரிக்கை வைக்க முடிவானது. 'முதல்வரை நேரடியாக சந்தித்து கோரிக்கை வைப்போம்’ என எம்.ஜி.ஆர். நகர் கூட்டத்தில் நெடுமாறன் பகிரங்கமாகவே அறிவித்தார். ஆனால், இதற்கிடையில் எங்கிருந்து உத்தரவு வந்ததோ... அரசுத் தரப்பு அதிகாரிகள் 25-ம் தேதி காலையில் இருந்தே பரபரப்பாக இந்த விவகாரம் குறித்துப் பேசத் தொடங்கினார்கள். முதல்வரின் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்த கருணை மனு நிராகரிக்கப்பட்ட ஃபைல் முதன்மைச் செயலாளர் சாரங்கியின் டேபிளுக்குக் கொண்டுவரப்பட்டது.
'இதில் நாம் ஒன்றும் செய்ய முடியாது. உடனே மத்திய அரசின் கடிதத்தை சிறைத் துறைக்கு அனுப்பிவிடுங்கள்’ எனச் சொல்லிவிட்டாராம் சாரங்கி. 'அரசு உத்தரவு வந்த ஏழு நாட்களுக்குள் தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவோம்’ என சிறைத் துறை அதிகாரி டோக்ரா ஏற்கெனவே அறிவித்திருக்கும் நிலையில், அரசுத் தரப்பின் இந்த வேகம் அனைவருக்கும் அதிர்ச்சி அளித்திருக்கிறது. 26-ம் தேதி காலையில் கடிதம் சிறைத் துறைக்குக் கிடைக்க, அடுத்த ஏழு தினங்களுக்குள் மூன்று பேருக்கும் தூக்குத் தண்டனையை அதிகாரிகள் நிறைவேற்றக் கூடும். இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக செயல்படாவிட்டாலும், அந்தக் கடிதத்தைக் கிடப்பில் போட்டு வைக்கலாம் என்பதுதான் முதல்வரின் எண்ணமாக இருந்தது. ஆனால், அதிகாரிகள் தரப்பில் சிலர் திட்டமிட்டு மத்திய அரசின் பெயரைச் சொல்லி இந்த விவகாரத்தை விரைவுபடுத்திவிட்டார் கள். முதல்வர் நல்லது செய்ய நினைத்தும் அதிகாரிகள் சிலரால் நிலைமை கைமீறிப் போய்விட்டது தமிழக அரசு கைவிரித்துவிட்ட நிலையில், முறைப்படியான சட்டப் போராட்டங்களால் மட்டுமே மூவருக்குமான தூக்குத் தண்டனையைத் தடுக்க முடியும். ஐந்து நாட்களுக்குள் சட்ட ரீதியான தடை உத்தரவை நீதிமன்றத்தில் பெற முடியாமல் போனால்... மூவருக்கும் எந்த நேரத் திலும் தூக்குக் கயிறு விழும்!'' என்கிறார்கள் ஆதங்கமாக.
அரசுத் தரப்பில் பேசும் அதிகாரிகளோ, ''கொலையானவர் முன்னாள் பிரதமர் என்கிற நிலையில் ஒரு மாநில அரசால் இந்த விவகாரத்தில் எதுவும் செய்ய முடியாது. கொலையாளியை நியாயப்படுத்தும் செயல்பாடாகக் கருதப்பட லாம் என்பதற்காகவே, முறைப்படி கடிதம் சிறைத் துறைக்கு அனுப்பப்பட்டது!'' என்கிறார்கள்.
இதற்கிடையில் சீமான் மூலமாக தூக்குத் தண்டனைக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பேரறிவாளன், முருகன் சாந்தன் மூவரின் சார்பில் பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானியை களம் இறக்கும் வேலைகள் தீவிரமாக நடக்கின்றன. வைகோ, நெடுமாறன் உள்ளிட்ட உணர்வாளர்கள் பலரும் ஒன்றுகூடி சட்டப் போராட்டம் நடத்தவும் தீவிர வேலைகள் நடக்கின்றன. 'தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பல விவகாரங்களில் நீதிமன்றம் மூலமாக தடை வாங்கிய பல தீர்ப்புகளை முன் உதாரணமாக வைத்து மூவருடைய உயிர்களையும் காப்பாற்ற முடியும்’ என்றும் உறுதியாக நம்புகிறார்கள்.
கைவிடப்பட்ட இந்த மூவரின் உயிரை அடுத் தடுத்த சட்டப் போராட்டங்களாவது மீட்டுக் கொடுக்குமா? கண்ணீரோடு காத்திருக்கிறார்கள், கவலைப்பட மட்டுமே தெரிந்த தமிழர்கள்!
இரா.சரவணன்

அரசு பிடித்த 'அண்ணா' வால்!

மன்மோகனைக் கடிக்காமல் விடாது!

''நான் செத்தாலும் அது பற்றி எனக்குக் கவலை இல்லை... என்னுடைய உள்ளுணர்வு, நான் குளுகோஸ் ஏற்றிக் கொள்வதைத் தவறு என்கிறது!'' தன்னுடைய பட்டினிப் போராட்டம் 10-வது நாளை நெருங்கும் நேரத்தில் அண்ணா ஹஜாரே சொன்ன வார்த்தைகள் இவை. சவரம் செய்யாமல் விட்டதால் முகத்தில் வளர்ந்திருக்கும் தாடி... ஒளி கம்மிய கண்கள்... நாடி தளர்ந்து வர... உடல் நலிவுற்றிருக்கிறது... இரண்டு சிறுநீரகங் களும் தங்களின் 'வேலை’யைக் காட்ட ஆரம்பித்துவிட்டன. ஆனால் இத்த னைக்குப் பிறகும் அந்த 74 வயது முதுமையின் ரேகைகளில் துளி அளவும் அச்சமில்லை!
 வைராக்கியம் வளர்ந்து கொண்டே வருகிறது. மக்கள் மனதில் விதைத்த தீரம் கூர் தீட்டப்படுகிறது. 'கொண்டு வா! அல்லது விலகிப் போ!’ - ஜனக் கூட்டத்தின் மத்தியில் ஜன்லோக்பால் தான், தற்போது 'ஜனகனமன!’
'என்னை மருத்துவமனைக்கு மாற்ற அரசு முயற்சிக்கிறது என நினைக்கிறேன். அப்படி ஏதேனும் நடந்தால் நீங்கள் அனைவரும் தடுக்க வேண்டும். ஆனால் வன்முறையில் இறங்கக் கூடாது!’ என்று தன் ஆதரவாளர்கள் இடையே போதித்திருக்கிறார் அண்ணா. ஏழாம் நாளின் முடிவில் அண்ணா தரப்புக் குழுவும், அரசு தரப்புக் குழுவும் பிரதமர் தலைமையில் இரவு 7.30 மணி அளவில் பேச்சு வார்த்தையில் ஈடுபட் டார்கள். என்ன பேசினார்கள், ஏது பேசினார்கள், யார் பேசினார்கள், யார் மௌனம் காத்தார்கள், யார் பேச விடாமல் தடுத்தார்கள் போன்ற விஷயங்கள் எதுவும் ஊடகங்களின் பார்வைக்கு வரவில்லை. அவர்களாகவே கூடுகிறார்கள், பேச்சு வார்த்தை என்ற பெயரில் நேரம் கடத்துகிறார்கள், வெளியே வருகிறார்கள்... அனைத்தும் சித்திரிக்கப்பட்ட நாடகக் காட்சிகள் போன்று இருக்கின்றன.
'பிரதமர் மற்றும் ராகுல் காந்தி யிடம்தான் பேசுவேன்’ என்று அண்ணா விதிக்கும் நிபந்தனைகளை அரசாங்கத்தால் ஏற்க முடியவில்லை. 'நீதித்துறையை லோக்பாலுக்குள் கொண்டு வர வேண்டும். கடுமையான சட்டங்கள் வேண்டும்’ என்று சொல்வதையும் மத்திய அரசு எரிச்சலுடன் பார்க்கிறது.
ஆனால் அவருடன் இருப்பவர்கள் சில கருத்து களை மாற்றிச் சொல்லி குழப்பம் விளைவிக்கவும் தொடங்கி இருக்கிறார்கள். 'அண்ணா ஹஜாரே  தூய்மையானவராக இருந்தாலும், அவர் குழுவில் உள்ள நபர்கள் எப்படிப்பட்டவர்கள்?’ என்பதும் கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது. 'லோக்பாலுக்குள் பிரதமரும் வேண்டாம், நீதித்துறையும் வேண்டாம்’ என்று சந்தோஷ் ஹெக்டே ஒரு புறம் சொல்ல, 'காங்கிரஸ் கட்சியின் அரசியலுக்கு நாங்கள் இரையாகிவிட்டோம்’ என்று அரவிந்த் கெஜ்ரிவால் கொந்தளிக்க, 'இந்தியாதான் அண்ணா... அண்ணா தான் இந்தியா’ என்று சொன்னதைத் தவிர வேறு எந்தக் கருத்தும் சொல்லாமல் மௌனித்துக் கிடக்கிறார் கிரண் பேடி. இதை எல்லாம் வைத்து, 'அண்ணா தரப்புக் குழுவுக்கு உள்ளேயே கருத்து ஒற்றுமை இல்லை’ என்று சிலர் சொல்லக் காரணமாக ஆகிவிட்டது!
ஏழாம் நாள் பேச்சு வார்த்தை முடிந்து வெளியே வந்ததும் அண்ணா தரப்பு குழுவினர் 'பேச்சு வார்த்தை சுமுகமாக இருந்தது, நிச்சயம் பழம் பறித்துவிடலாம்’ என்ற ரீதியில் மீடியாக்களுக்கு 'பைட்ஸ்’ வழங்கினார்கள். 'எழுத்துப் பூர்வமாக உறுதி அளித்தால் ஒழிய பட்டினிப் போராட்டத்தில் இருந்து பின்வாங்குவதாக இல்லை’ என்றார் கிரண் பேடி. இவர்கள் இப்படிச் சொல்ல, மறுபுறம் பிரணாப் முகர்ஜி, 'இப்போதுதான் பேச்சு வார்த்தை தொடங்கி இருக்கிறோம். இதற்குப் பிறகு கட்சியினரிடையே கலந்து பேசி, உயர்மட்டத் தலைவர்களுடன் பேசி, அரசு தரப்புக் குழுவுடன் பேசி...’ என்று இழுக்கிறார். 'பேசி முடிப்பதற்குள் அண்ணாவின் உயிர் போய்விடுமே, அதற்குப் பிறகேனும் முடிவு எடுப்பீர்களா?’ என்று ட்விட்டரில் தன் ஆதரவைத் தட்டும் ஐ.டி. இளைஞனின் கேள்விக்கு யாரிடம் இருந்தும் பதில் இல்லை.
கொதிப்புகள் அதிகரிக்கவே, தணிக்கும் விதமாய் அண்ணாவுக்குக் கடிதம் எழுதும் நிலைக்கு இறங்கி வந்தார் பிரதமர் மன்மோகன் சிங். 'உங்கள் உயிர் மீது எனக்கு மிகுந்த அக்கறை உள்ளது. லோக்சபாவில் இது பற்றிய விவாதத்துக்கு ஏற்பாடு செய்ய உத்தரவிட்டு இருக்கிறேன்’ என்று எழுதி இருக்கிறார் பிரதமர். இந்த நிலையில், ராகுல் காந்தி பிரதமரைச் சந்தித்து 'பொதுவான’ ஒரு லோக்பால் சட்டத்துக்கு அடித்தளம் இட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளாராம். கோரிக்கையா, மிரட்டலா என்பது அரசியல் அறிந்தவர்களுக்கு மட்டுமே  வெளிச்சம்.
ஒன்பதாம் நாள் இரவில் மீண்டும் பேச்சு வார்த்தை நடந்தது. ஆனால் அரசு தன் முரண்டுபிடித்தலை விட்டு வரவே இல்லை. அண்ணா தரப்புக் குழு தாங்கள் தயாரித்த வரைவைத்தான் சட்டமாக்க வேண்டும் என்று உறுதியாக நிற்க, நாடாளுமன்றத்தின் அனுமதி இல்லாமல், விவாதம் நடத்தாமல் அதைச் செயலாக்க முடியாது என்று மறுத்துவிட்டது அரசு. 'உங்களின் கருத்துகளை ஏற்றுக் கொள்கிறோம் என்று முதல் நாள் பேச்சு வார்த்தையில் சொன்னவர்கள், இன்று எங்களை ஏமாற்றிவிட்டார்கள்’ என்று வருந்தினார் பிரஷாந்த் பூஷண். 'மீண்டும் ஆரம்ப நிலைக்கே போகும் அல்லது அரசு தன் மனப்பாங்கை மாற்றிக் கொள்ளும் என்கிற கேள்விக்கே இடமில்லை’ என்று தன் ஆத்திரத்தை வெளிப்படுத்தினார் பிரணாப் முகர்ஜி.
'இந்தப் பிடிவாதத்தின் மூலம் அரசின் உண்மையான முகம் வெளிப்பட்டு இருக்கிறது’ என்கிறார் அண்ணா. ஆரம்பத்தில், 'அரசு தன்னை பலவந்தமாக மருத்துவமனைக்கு மாற்றினால் அதை அனுமதிக்காதீர்கள்’ என்றவர், இப்போது, 'அப்படி ஏதேனும் நிகழ்ந் தால் அவர்களைத் தடுக்காதீர்கள். உங்கள் எதிர்ப்பு அகிம்சை வழியில் இருக்கட்டும். வன்முறையில் இறங்காதீர்கள்’ என்று சொல்ல ஆரம்பித்துள்ளார் அவர். 'உயிர் மீது அவருக்குப் பயம் இல்லை. ஆனால் போராட்டத்தில் வன்முறை தலைதூக்கினால் அதைக் காரணமாகக் காட்டியே நோக்கத்தைச் சிதைத்துவிடுவார்கள்’ என்றும் அண்ணா நினைக்கிறார்.
இந்தப் பக்கம் அண்ணாவை ஊக்கப்படுத்தும் பி.ஜே.பி., அந்தப் பக்கம் அனைத்துக் கட்சி கூட்டத்தில், 'கடுமையான சட்டங்கள் ஏற்படுத்த வேண்டும்’ என்று பொத்தாம் பொதுவாக தன் நிலையைக் காட்டி இருக்கிறது. லோக்பால் சட்டத்தைக் கொண்டு வர பி.ஜே.பி-க்கும் விருப்பமில்லை என்பது இதிலிருந்தே தெரியும்.
'வாலைப் பிடித்துவிட்டோம்... எப்படியும் கடிக்கப் போகிறது...’ என்பது இப்போதுதான் அரசுக்கு உரைத்திருக்கிறது. 'ஊழல் வழக்குகளை விசாரிக்க கடுமையான, சுதந்திரமான அமைப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டியதன் தேவை எனக்கும் தெரியும். ஆனால் அதே சமயம் நாடாளுமன்றத்தின் அனுமதி இல்லாமல் அப்படி ஓர் அமைப்பைக் கொண்டு வர முடியாது!’ என்று கதறுகிறார் பிரதமர்.
'தான் தூய்மையானவர்... ஊழலுக்கு எதிரானவர்’ என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டிய கட்டத்தில் இருக்கிறார், மன்மோகன் சிங்.
ந.வினோத்குமார்
********************************************************************
அவர் 5 ஆண்டுகளில் செய்யாததை அம்மா 100 நாளில் செய்துவிட்டார்

விவரம் தரும் நத்தம் விஸ்வநாதன்

''கடந்த ஐந்து ஆண்டுகளாக சோத​னையில் குளித்து வேதனையில் வாழ்ந்துகொண்டு இருந்த தமிழ்நாட்டு மக்களை மீட்டு, அவர்கள் வாழ்வில் விளக்கேற்றி வைத்திருக்கிறார் எங்கள் அம்மா. தேர்தல் சமயத்தில் வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு, ஜெயித்து வந்ததும் மறந்துவிடுவது எங்கள் இயக்கம் அல்ல. சொன்னதை மட்டும் அல்ல... சொல்லாததையும் செய்து காட்டக்கூடியவர் எங்கள் புரட்சித் தலைவி அம்மா. இந்த 100 நாட்கள் ஆட்சியே அதற்கு ஓர் அத்தாட்சி. 
தி.மு.க. ஆட்சியில் இருந்த மின் வெட்டை, பொறுப்பேற்ற ஒரு மாதத்துக்குள்ளேயே கட்டுக்குள் கொண்டு வந்து குறைத்திருக்கிறோம். இரண்டு இடங்களில் மின்உற்பத்தி நிலையங்கள் பழுதாகி இருந்தன. அவற்றை உடனடியாக சரிசெய்து மின் உற்பத்தியை அதிகப்படுத்தி இருக்கிறோம். உடனடித் தேவை என்னவோ, அதை உடனுக்குடன் செய்கிறோம். படிப்படியாகச் செய்ய வேண்டிய வேலைகளையும் தொடங்கிவிட்டோம். கூடிய சீக்கிரமே மின்சார உற்பத்தியில் தன் நிகர் இல்லாத மாநிலமாக தமிழ​கத்தை மாற்றிக் காட்டு​வோம்.
விலை இல்லாத அரிசி மக்​களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. முதியோர் உதவித் தொகை  500-ல் இருந்து  1,000-மாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. படித்த ஏழைப் பெண்களின் திரு​மணத்துக்கு, திருமண உதவித் தொகை  25,000, தாலிக்கு நான்கு கிராம் தங்கம் கொடுக்கிறார் எங்கள் தங்கத் தலைவி. அரசுப் பணியில் இருக்கும் பெண்களுக்கு மகப்பேறு காலத்தில், ஆறு மாத கால சிறப்பு விடுப்பு கொடுக்கவும் உத்தரவிட்டு இருக்கிறார். செங்கல், ஜல்லி விலையைக் குறைத்து, கட்டுமானத் தொழிலாளிகளின் வயிற்றில் பால் வார்த்திருக்கிறார்.
தி.மு.க. ஆட்சியில் அபகரிக்கப்பட்ட  415 கோடி மதிப்புள்ள நிலங்கள் மீட்கப்பட்டு, அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க அம்மா எடுத்த நடவடிக்கைகளை அகில உலகமே பாராட்டுகிறது. ரவுடிகளும் கொள்ளையர்களும் தமிழகத்தைவிட்டே ஓட்டம் பிடித்துவிட்டார்கள். இது எல்லாம் புரட்சித் தலைவி அம்மாவால் மட்டுமே நிகழ்த்தக்கூடிய சாதனைகள். பிளஸ் டூ படிப்பவர்களுக்கு லேப் டாப் வழங்க எல்லா ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டுவிட்டன. தீர்க்கவே முடியாது என்று தி.மு.க. அரசு கண்டுகொள்ளாமல் இருந்த திருப்பூர் சாயப்பட்டறைப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண, 200 கோடியை வட்டி இல்லாத கடனாக வழங்க உத்தரவிட்டு இருக்கிறார். அனைவருக்கும் தரமான மருத்துவ சேவை கிடைக்க, புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஏழை எளிய மக்களுக்கும் உயர்தர மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில்,  உயர்தர  சிறப்பு மருத்துவமனையை உடனடியாகத் தொடங்க உத்தரவு இட்டிருக்கிறார். மீனவர்களின் நலன் காக்க, தக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றன. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்குத் தேவையான கட்டடங்களை உடனடியாகக் கட்டி முடித்து திறந்திருக்கிறோம். தேர்தல் வாக்குறுதியில் சொன்ன மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி ஆகியவற்றை அண்ணா பிறந்த நாளில் வழங்கத் தயாராகிக்கொண்டு இருக்கிறோம்.
ஈழத் தமிழர் பிரச்னையில் தி.மு.க. அரசு குளிர் காய்ந்துகொண்டு இருந்த நேரத்தில், இலங்கை அரசு மீது பொருளா தாரத் தடை விதிக்க வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றியது  அம்மாதான். தமிழகத்துக்கு வந்து அகதிகளாகத் தங்கி இருக்கும் ஈழ மக்களுக்கு, தாய் உள்ளத்தோடு உதவித் தொகையாக மாதம்  1,000 வழங்க ஆரம்பித்து இருக்கிறார்.
100 ஆண்டுகளில் செய்யக்கூடிய சாதனைகளை எல்லாம் எங்கள் அம்மா 100 நாட்களில் செய்து காட்டிவிட்டார்கள். மக்களின் நம்பிக்கை வீண் போகவில்லை.  
தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, கடந்த ஆட்சியில் பல எம்.எல்.ஏ-க்கள் தொகுதிக்கே போ​காமல் பயந்துகொண்டு இருந்தார்கள். காரணம், அந்த ஆட்சியின் லட்சணம் அப்படி. ஆனால், இன்று அம்மாவின் ஆட்சியில் நாங்கள் எல்லோரும் தலை நிமிர்ந்து தைரியமாகத் தொகுதிக்குள் போகிறோம். போகும் இடங்களில் எல்லாம் அம்மாவின் ஆட்சியை மனம் குளிர்ந்து மக்கள் பாராட்டுகிறார்கள். அதைக் காது குளிரக் கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது. மற்ற மாநிலங்களின் முதல்வர்கள் எல்லோரும், 'எங்கள் புரட்சித் தலைவி அம்மாவிடம் எப்படி நல்லாட்சி நடத்த வேண்டும்’ எனப் பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வளவு நல்லது நடந்தும் ஒரே ஒருவருக்கு மட்டும் அச்சம் இருக்கிறது. அந்த ஒருவர் யார் தெரியுமா? அவர்தான் கருணாநிதி. இனி எந்த ஜென்மத்திலும் ஆட்சிக்கு வர முடியாது என்பது அவருக்கே நன்றாகத் தெரியும். அந்த அச்ச உணர்வில்தான் அடங்கிக்கிடக்கிறார். அவர் ஐந்து ஆண்டுகளில் செய்யத் தவறியதை புரட்சித்தலைவி 100 நாட்களில் செய்து காட்டிவிட்டார். வரப்போகும் ஐந்து ஆண்டுகள் என்பது தமிழகத்தின் பொற்காலமாகத்தான் இருக்கும்!''

மாறாதைய்யா... மாறாது... மனமும் குணமும் மாறாது!
பாடும் பரிதி இளம்வழுதி
 ''ஜெயலலிதா திருந்திட்டார்னு சொல்றது சிலருக்கு ஆசையா இருக்கலாம். ஆனா, அது நிஜம் அல்ல!
மாற்றம் வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக, அ.தி.மு.க-வுக்கு மக்கள் வாக்களித்தார்கள். அந்தஅம்மாவை ஆட்சியில் அமரவைத்தார்கள். ஆனால், இந்த 100 நாள் ஆட்சியில் மக்கள் நினைத்த மாற்றம் எதுவுமே வரலை. 'ஏன்டா இவர்களுக்கு ஓட்டுப் போட்டோம்..?’ என்றுதான் மக்கள் வேதனைப்படுகிறார்கள். தெரியாத்தனமாப் போய் சிக்கிக்கிட்டமேனு மக்கள் ஒருத்தருக்​கொருத்தர் பேசிக்கிறாங்க!
சமச்சீர்க் கல்வியிலேயே ஜெயலலிதாவுக்கு வந்தது முதல் இடி. தலைவர் கலைஞர் அவரோட சொந்த லாபத்துக்காகக்காகவே சமச்சீர்க் கல்வியைக் கொண்டுவந்தாரா... என்ன? இல்லை. பணக்கார வீட்டுப் பையனுக்கு மெட்ரிக் ஸ்கூல்ல கிடைக்கிற கல்வி, சாதாரண ஏழைப் பையனுக்கும் கிடைக்கணும்கிறதுக்காகக் கொண்டுவந்த திட்டம்தான் சமச்சீர்க் கல்வி. அவரும் எடுத்தேன் கவிழ்த்தேன்னு ஒரே நாள்ல இந்த திட்டத்தைக் கொண்டுவரலை. ஆனா, இந்த அம்மா வந்த ஒரே நாள்ல சமச்சீர்க் கல்வி மோசம்னு எப்படிக் கண்டுபிடிச்சாங்க? எல்லாப் புத்தகத்தையும் ராத்திரியோட ராத்திரியாப் படிச்சாங்களா என்ன? 'கலைஞர் கையெழுத்துப் போட்டதா? கிடப்புல போடு’னு நினைச்சுத் திட்டம் தீட்டினாங்க. சென்னை கோர்ட்டும் கொட்டுச்சு. சுப்ரீம் கோர்ட்டும் கொட்டுச்சு. இதுல ஒரு நல்ல விஷயம் என்னன்னா, சமச்சீர்க் கல்வின்னா என்னன்னு தெரியாத குப்பனுக்கும் சுப்பனுக்கும்கூட அதைப்பத்தித் தெரியவெச்சிட்டாங்க. 'கலைஞர் கொண்டுவந்தது அருமையான திட்டம்’னு மக்கள் நினைக்கிறாங்க. அந்தத் திட்டத்துக்கு உயர் நீதிமன்றத்தின், உச்ச நீதிமன்றத்தின் நற்சாட்சிப் பத்திரத்தையும் வாங்கிக் கொடுத்துட்டாங்க. சமச்சீர்க் கல்விக் கொள்கையை மக்களுக்குக் கொண்டுபோய் சேர்த்ததுதான் அந்த அம்மையாரின் சாதனை!
தி.மு.க-வினரைப் பழி வாங்க வேண்டும் என்ற ஒரே கொள்கையை மட்டும் தனது லட்சியமாகக்கொண்டு 100 நாட்கள் ஆட்சி நடத்தி இருக்கிறார். நில அபகரிப்பு என்ற பெயரில் தி.மு.க-வினரை மட்டும் குறிவைத்துப் பொய்யான புகார்களில் தமிழகம் முழுக்கக் கைதுத் தாண்டவம் ஆடி இருக்கிறார். காவல் துறையைத் தனது ஏவல் துறையாகப் பயன்படுத்தி வருகிறார். கைது செய்யப்பட்ட தி.மு.க. தலைவர்கள் யாரும் நிலத்தை அபகரிக்கவில்லை. எல்லாமே பொய்யான புகார்கள்தான். தனக்குப் பிடிக்காதவர்களை உள்ளே தூக்கிப் போட ஜெயலலிதா கையில் எடுத்திருக்கும் அஸ்திரம்தான் நில அபகரிப்பு.
ராம் லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருக்கும் அண்ணா ஹஜாரேவை நாங்கள் வரவேற்கிறோம். அவரை சென்னைக்கு அழைத்து வந்து, 'தமிழக முதல்வரை லோக்பாலில் சேர்க்க வேண்டும்’ என உண்ணாவிரதம் இருக்கவைக்க வேண்டும். அப்படி அண்ணா ஹஜாரே உண்ணாவிரதம் உட்கார்ந்தால், அவரும் நில அபகரிப்பு புகாரில் கைது செய்யப்படுவார். ஒருவேளை, அதில் அவர் ஜாமீன் வாங்கிவிட்டால், அவர் மீது கஞ்சா வழக்குப் பதிவு செய்யப்படும். அண்ணா ஹஜாரேவாகவே இருந்தாலும், தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சியில் இதுதான் நிலைமை.
'கலைஞர் கட்டிய கட்டடத்தில் கட்டுமானப் பணியில் ஊழல் நடந்து இருக்கிறது... தரமானதாக இல்லை’ என்று பிதற்றிக்கொண்டு இருப்பவர் ஜெயலலிதா. இன்று அந்தக் கட்டடத்தில் அதிநவீன சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். அப்போது தரமில்லாத கட்டடத்தில் மருத்துவமனை கட்டி அங்கே படுத்திருக்கும் நோயாளிகள் எல்லோரும் சாகட்டும் என நினைக்கிறாரா? காழ்ப்பு உணர்ச்சியின் மொத்த உருவமாக நிற்கிறார் ஜெயலலிதா.
100 நாட்களில் தி.மு.க-வில் முக்கியமானவர்களைத் தூக்கி உள்ளேவைத்ததால், தி.மு.க-வை அழித்து​விடலாம் என்பது அந்த அம்மையார் போடும் கணக்கு. தி.மு.க-வை அழிக்க நினைத்து அழிந்துபோனவர்களின் பட்டியலில் ஜெயலலிதாவும் சேரப்போகிறார். 'எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்’ என்று சொல்வார்கள். இறைவனுக்கு சமமாக மதிக்க வேண்டிய ஆசிரியர்களை இன்று, 'கிழித்தல், மறைத்தல், ஒட்டல்’னு கேவலமான வேலைகளைச் செய்யவைத்துள்ளார். எந்த ஆசிரியராவது இந்த வேலையை சந்தோஷமாகச் செய்கிறாரா? மனசுக்குள் ஜெயலலிதாவை கரிச்சிக் கொட்டிட்டேதான் கிழிப்பாங்க. இதை எல்லாம் தன்னோட 100 நாள் சாதனைப் பட்டியலில் ஜெயலலிதா தாராளமாக சேர்த்துக்கொள்ளலாம்.
சென்னை மக்களுக்கு என்ன பிரச்னை இருக்கிறது என்று காரில் போனாலே தெரியாது... இந்த லட்சணத்தில் ஹெலிகாப்டரில் போய் சென்னையைச் சுத்தி பார்த்துட்டு பிரச்னைகளைத் தீர்க்கப்போகிறார்களாம். வேலை இல்லாத பட்டதாரிகளுக்கு மாதம்​தோறும் கலைஞர் அரசு கொடுத்து வந்த உதவித் தொகை 300 ரூபாயை நிறுத்திவிட்டார்கள். ஏழை மக்களின் உயிர் காக்கும் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை இழுத்து மூடிவிட்டார்கள். அதுக்கு மாற்றாகக் கொண்டுவந்த காப்பீட்டுத் திட்டம் உருப்படியானதா என்று இப்போது சொல்ல முடியாது. அமைச்சர்கள் யாரும் அவர்களுக்கு உரிய அதிகாரத்தைப் பயன்படுத்த முடியாது. தலை நிமிர்ந்து நிற்கும் அதிகாரம் எந்த அமைச்சருக்கும் கிடையாது. தூங்கப் போகும்போது அமைச்சராக இருப்பார். விடிஞ்சா அமைச்சரா இல்லையா என்பது அவருக்கே தெரியாது. இது எல்லாமே அம்மையாரின் சாதனைகள்தானே!
'மாறாதய்யா... மாறாது... மனமும், குணமும் மாறாது...
காட்டுப் புலியை வீட்டில் வெச்சாலும்
கறியும் சோறும் கலந்து வெச்சாலும்
மாறாதய்யா மாறாது’னு கண்ணதாசன் எழுதிய பாட்டுதான் எனக்கு ஜெயலலிதாவை நினைக்கும்போது எல்லாம் ஞாபகத்துக்கு வருகிறது!''
கே.ராஜாதிருவேங்கடம்

''பிணத்துக்கு பொட்டு வைத்ததுதான் புலனாய்வா?''

வெளுக்கிறார் திருச்சி வேலுசாமி

''ராஜீவ் கொலை வழக்கில் சந்திராசாமி தொடங்கி, பல பெருந்தலைகள் சம்பந்தப்பட்டு இருக்கின்றன. ஆனால், விசாரணை அதிகாரிகள் அந்தப் பெருந்தலைகளைத் தப்ப வைப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்!'' - காங்கிரஸ் பிரமுகரான திருச்சி வேலுசாமியின் தொடர் முழக்கம் இது. ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த ஜெயின் கமிஷன், பல்நோக்கு கண்காணிப்புக் குழுவை அமைத்ததற்கு முக்கியக் காரணமே வேலுசாமியின் அஃபிடவிட்தான். ஏழு தடவை அதில் விசாரிக்கப்பட்டவர் இவர். பேரறி வாளன், முருகன், சாந்தன் மூவருக்கும் எந்த நேரத்திலும் தூக்கு என்கிற நிலையில் நாம் வேலுசாமியை சந்தித்தோம். 
''ராஜீவ் கொலை வழக்கில், விசாரணை அதிகாரிகளின் குளறுபடிகளாக நீங்கள் எவற்றைச் சுட்டிக்காட்டுகிறீர்கள்?''
''குறிப்பிட்டுச் சொல்வது என்ன... விசாரணை அதிகாரிகள் செய்த அனைத்துமே திட்டமிட்ட குளறுபடிகள்தான். மகாத்மா காந்தியின் கொலை வழக்குடன் ராஜீவ் கொலை வழக்கை ஒப்பிட்டுப் பார்த்தால்தான், அதிகாரிகளின் குளறு படிகள் அப்பட்டமாகப் புரியும். மகாத்மா சுடப் பட்ட உடனேயே கோட்சேவை போலீஸ் வளைத்தது. கோட்சே கையில், 'இஸ்மாயில்’ எனப் பச்சை குத்தப்பட்டு இருந்தது. அதனால், 'மகாத்மாவைக் கொன்றது ஒரு முஸ்லிம்தான்!’ என அதிகாரிகள் அவசரப்பட்டு அறிவிக்கவில்லை.  அதிகாரிகளின் நுணுக்கமான புலனாய்வால், அந்த ஆபத்து தடுக்கப்பட்டது. ஆனால், ராஜீவ் கொலை வழக்கில் நடந்தது என்ன? மே 21-ம் தேதி இரவு ராஜீவ் கொலை நடந்தது. அடுத்த நாள் காலை 9 மணிக்குத்தான் விசாரணை தொடங்கியது. ஆனால், விசாரணை தொடங்கும் முன்னரே, 'ராஜீவைக் கொன்றது புலிகள்தான்’ என அறிவித்தார், அப்போதைய சட்ட அமைச்சர் சுப்பிரமணியன் சுவாமி. ராஜீவ் கொலை செய்யப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம்தான் சிவராசன், தணு, கோகிலவாணியின் முகங்களை அடையாளம் காட்டியது. அந்தப் படத்தில் தணுவின் நெற்றியில் பொட்டு இல்லை. ஆனால், இறந்துகிடந்த தணுவின் நெற்றியில் குங்குமப் பொட்டு இருந்தது. அது எப்படி? 'ராஜீவைக் கொலை செய்தவர் இந்து தமிழ்ப் பெண்’ எனக் காட்ட நடந்த சதிதான் அது. பிணத்தின் நெற்றியில் பொட்டு வைத்ததுதான் புலனாய்வா... அவர்கள், இன்னும் என்னவெல்லாம் செய்திருப்பார்கள்?''
''பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவருக்கும் ராஜீவ் கொலை விவகாரத்தில் துளியும் சம்பந்தம் இல்லை என்கிறீர்களா?''
''பேரறிவாளன், திராவிடர் கழகத்தில் இருந்த வர். கொலை நடந்து 20 நாட்கள் கழித்து ஜோலார் பேட்டைக்குப் போய் பேரறிவாளன் எங்கே என விசாரிக்கிறது போலீஸ். பேரறிவாளனின் தாய், 'அவனை நானே உங்களிடத்தில் அழைத்து வருகிறேன்’ எனச் சொன்னார். அதன்படியே, அடுத்த நாள் சென்னைக்கு வந்து பேரறிவாளனை சந்தித்தார். அப்போது அவர்களை வளைத்த போலீஸ், 'சாதாரண விசாரணை’ எனச் சொல்லி பேரறிவாளனை அழைத்துச் சென்றது. உண்மையிலேயே ராஜீவ் கொலையில் பேரறிவாளன் சம்பந்தப்பட்டு இருந்தால், வலிய வந்து போலீஸ் விசாரணையை எதிர்கொண்டு இருப்பாரா? பெற்ற தாயே அவரை போலீஸிடம் நிறுத்தி இருப்பாரா?
பேரறிவாளன் ஈழத்துக்குப் போய் பிரபா கரனை சந்தித்ததாகவும், 'சாத்தானின் படைகள்’ என்கிற புத்தகத்தைத் தயாரித்ததாகவும்  கற்பனைகளைப் பரப்பியே அவரைத் தூக்கு வரை நிறுத்திவிட்டார்கள்.
சாந்தன் விஷயத்தில் அவருடைய பெயரே அவருக்கு எதிரியாகிவிட்டது. திருச்சி சாந்தன் என்கிற குண்டு சாந்தன் இறந்துவிட்டார். பெயர்க் குழப்பத்தால் அவர் மீதான குற்றச்சாட்டுகளை எல்லாம் ம.தி.சாந்தன் மீது திணித்து, அவரையும் கயிறுக்கு முன்னால் நிறுத்திவிட்டார்கள். நளினியின் கணவர் என்பதாலேயே முருகனை வளைத்தார்கள். ஒரு பெண் குழந்தையின் தாய் என்பதால், நளினியின் தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப் பட்டது. ஒரு தாய்க்குக் காட்டும் கருணையை தந்தைக்குக் காட்டாத விந்தையை எங்கே போய்ச் சொல்வது?''
''ராஜீவ் கொலையில் சந்திராசாமிக்கு தொடர்பு இருப்பதாகத் தொடர்ந்து சொல்கிறீர்களே... எதைவைத்து?''
''பெல்ட் பாம் தயாரிக்க பேட்டரி வாங்கிக் கொடுத்ததாக பேரறிவாளன் கைதுக்குக் காரணம் சொல்கிறார்கள் அதிகாரிகள். பெங்களூரு ரெங்கநாத் என்பவர், 'பெல்ட் பாமை யாகத்தில் வைத்து சந்திராசாமி ஆசீர்வதித்தார். சம்பவத்தை முடித்துவிட்டு வரும் சிவராசனை பெங்களூர் வழியாக நேபாளம் அனுப்பிவைப்பதாகவும் சொல்லி இருக்கிறார்’ என தடா கோர்ட்டில் சாட்சியம் அளித்தார். உடனே ரெங்கநாத்தை விசாரிக்கச் சொல்லி கோர்ட் உத்தரவிட்டது. அப்போதைய விசாரணை அதிகாரி டேபிள் வெயிட்டால் ரெங்கநாத்தை அடித்து, 'உண்மையைச் சொல்லாதே’ என மிரட்டி இருக்கிறார்.  பல்நோக்கு கண்காணிப்புக் குழுவை அமைக்கச் சொன்ன ஜெயின் கமிஷன், அதில் முதல் ஆளாக விசாரிக்கச் சொன்னதே சந்திராசாமியைத்தான். 'இவருடைய நடவடிக்கைகள் சந்தேகத்துக்கு இடம் அளிப்பதாக இருக்கின்றன’ என ஜெயின் கமிஷன் பட்டவர்த்தனமாகச் சொன்ன பிறகும், அவரிடம் விசாரணை நடத்தப்படவே இல்லை. என்னிடம்கூட ஏழு முறை விசாரணை நடத்தினார்கள். 'ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும், அப்பாவி கள் தண்டிக்கப்படக் கூடாது’ என்பதுதான் நீதியின் நியதி. ஆனால், சந்தேகத் திமிங்கிலங்கள் வெளியே உலவ, அப்பாவிகள் தூக்கு மேடை முன் நிற்கிறார் கள்!''
''தூக்குத் தண்டனையை அரசு சீக்கிரமே நிறை வேற்ற முயல்வதாகச் சொல்லப்படுகிறதே?''
''ராஜீவ் கொலை யானபோது எடுக் கப்பட்ட வீடியோ பதிவு எம்.கே.நாராயணனிடம் கொடுக்கப்பட்டது. இன்று வரை மக்களின் பார்வைக்கு அந்த விவரங்கள் தெரிய வில்லை. கொலை நிகழ்ந்தபோது சந்திரா சாமி எங்கே இருந்தார் என்பதற்கு இன்று வரை பதில் இல்லை. ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்ட முக்கியப் புள்ளிகளை வளைக்க பல்நோக்கு கண்காணிப்புக் குழு இன்று வரை விசாரணை நடத்தி வருகிறது. நாளைக்கே ஒரு நபரை அந்தக் குழு குற்றவாளியாக நிறுத்தினால், அதற்கு சாட்சியாக இந்த மூவரில் ஒருவர் தேவைப்படலாம். இப்போது தூக்கில் போட்டு விட்டால், முக்கியக் குற்றவாளியை நிறுத்தும் போது செத்தவர்களை உயிரோடு கொண்டு வருவார்களா?''
இரா.சரவணன்
படம்: என்.விவேக்

தூக்குக் கயிறை வெட்டும் கத்தி முதல்வர் கையில்!

தழுதழுத்த தமிழருவி மணியன்

டந்த 22-ம் தேதி, சென்னை எம்.ஜி.ஆர். நகரில் 'மூன்று தமிழர்கள் உயிர்க் காப்பு இயக்கத்தின்’ சார்பில் நடந்த பொதுக் கூட்டம்... முன்பு நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்ட காலத்தையே அசை போடவைத்தது. அலை கடலெனத் திரண்டிருந்த கூட்டத்தின் முன், அடங்காத ஆவேசத்துடன் இயக்கத்தினர் பேசிய பேச்சுக்கு, பெரும் வீச்சு!
 தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் மணியரசன் எடுத்த எடுப்பிலேயே, ''காந்தி நம் தேசத் தந்தை என்று கூறிக்கொண்டு, அன்பு, அமைதி, சமாதானம் குறித்து வாய் கிழிய முழங்கும் மத்திய அரசே, தூக்குத் தண்டனையை உடனடியாக நீக்கு. 'பழிக்குப் பழி... ரத்த வெறி...’ என்ற போக்குடன் நீ தொடர்ந்து செயல்பட்டால், இந்தியாவின் தேசத் தந்தையாக கோட்சேவைப் பிரகடனம் செய். அசோகச் சக்கரத்தை அப்புறப்படுத்திவிட்டு தூக்குக் கயிறை வை!'' என்று சீற, கூட்டம் முறுக்கேறி நிமிர்ந்தது.
அடுத்துப் பேசிய தமிழருவி மணியன், ''தமிழினத்தின் உண்மை​யான தலைவர் பழ.நெடுமாறன்அவர்களே... தமிழினத்தின் உண்மையான தளபதி வைகோ அவர்களே...'' என்று புன்முறுவலுடன் ஆரம்பிக்க, தி.மு.க. மீதான முதல் அட்டாக்கை கரகோஷத்தோடு ரசித்தது கூட்டம். தொடர்ந்த மணியன், ''இன்று இனத்தைக் காட்டிக்கொடுப்பதுதான் காங்​கிரஸின் ஒரே அடையாளமாக இருக்கிறது. அந்தக் கட்சியை வேரோடும், வேரடி மண்ணோடும் அகற்றும் வரை யாரும் ஓயக் கூடாது. கடந்த தேர்தலில் பி.ஜேபி. போட்ட பிச்சையில் காங்கிரஸ் சார்பில் ஐந்து பேர் சட்டமன்றம் போனார்கள். வரும் உள்ளாட்சித் தேர்தலில் ஓர் இடத்தில்கூட காங்கிரஸ் ஜெயிக்கவில்லை என்ற சூழலை நீங்கள் உருவாக்கினால், உங்கள் மான உணர்வு உலகுக்கு உணர்த்தப்படும். ப.சிதம்பரம் குறித்து எனக்கு முன்பு சிலர் பேசினார்கள். விதி வசத்தாலும், வினைப் பயனாலும் தமிழனாக வந்து உதித்தவர் சிதம்பரம். உள்துறை அமைச்சராக இருக்கக்கூடிய தமிழன், மூன்று தமிழர்களின் உயிரைப் பறிப்பதற்கு பரிந்துரை செய்தால், 'அவர் உடம்பில் ஓடுவது தமிழ் ரத்தம்தானா?’ என்று சந்தேகமாக இருக்கிறது...'' எனக் கொந்தளித்தவர், ''தமிழக முதல்வர் அவர்களே... இந்த மூன்று தமிழர்களின் தூக்குக் கயிறை அறுத்து எறியும் கத்தி உங்களிடம்தான் இருக்கிறது. உங்களால் மட்டுமே இது முடியும்!'' என்ற கோரிக்கையுடன் முடித்தார்.
தண்டனைக்கு உள்ளான தமிழர்களுக்காக, கடந்த காலத்தில் நடத்திய சட்டப் போராட்டங்களைப் பட்டியலிட்டுப் பேசிய பழ.நெடுமாறன், ''விரைவில் நமது இயக்கத்தின் சார்பில் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து, பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் உயிர் காக்க வலியுறுத்துவோம்!'' என்றார்.
கடைசியாக மைக் பிடித்த வைகோ, ''சில நாட்களுக்கு முன்பு பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை சந்திக்க, வேலூர் சிறைக்குப் போனேன். மூவர் முகத்திலும் நான் எந்தக் கலக்கத்தையும் பார்க்கவில்லை. பதற்றம், பயம் இன்றி எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருந்தார்கள். ஏன் தெரியுமா? 'தாய்த் தமிழகம் தங்களைக் கைவிடாது, காப்பாற்றும்’ என்ற நம்பிக்கைதான் காரணம். உலகத் தமிழர்கள் அனைவரும் தற்போது முதல் அமைச்சரின் உரிமையை எதிர்பார்த்துக் காத்து இருக்கிறார்கள். 'முதல்வர் அவர்களே... மூவர் உயிரைக் காத்திடுக... வரலாற்றுச் சாதனை புரிந்திடுக... விதி 162-ஐ கையில் எடுங்கள்’ என்பதே அனைவரின் கோரிக்கை. இனி யாரிடத்தில் போய் நாங்கள் முறையிடுவோம்? 'கருணை மனுக்களை ஜனாதிபதி விரைவில் நிராகரிக்கப்போகிறார்’ என்று நம்பத் தகுந்த தகவல் வந்ததும், உடனடியாக டெல்லிக்கு ஓடினேன். பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து, 'மூன்று நிரபராதிகளைத் தூக்கிலிட முயலாதீர்கள்’ என மனு கொடுத்து மன்றாடினேன். ஆனால், அந்தக் கல்லுளிமங்கர் கண்டுகொள்ளவில்லை. அடுத்த சில நாட்களில் கருணை மனு நிராகரிக்கப்பட்டது. தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கோத்தபய ராஜபக்ஷே விமர்சிக்கிறான். மத்திய அரசே நீ இலங்கைத் தூதரை அழைத்துக் கண்டித்தாயா? அவன் யார் எங்கள் சட்டமன்றத் தீர்மானத்தை விமர்சிக்க? அது யாரோ ஒரு சிலரின் குரல் அல்ல... ஏழரைக் கோடி தமிழர்களின் குரல்!'' என்று முழங்கிய வைகோ, இறுதியாக, ''மூவர் உயிர் காக்கப்பட வேண்டும் என்ற காரணத்தால் அமைதியாக இருக்கிறோம். எதிர்மறையாகப் பேச விரும்பவில்லை. அவர்கள் உயிருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால்... அந்தச் சம்பவம் நடந்தது 1991. இது 2011. நினைவில் வைத்துக்கொள். அவர்களுக்கு ஆபத்து என்றால், இன்னும் நிறைய முத்துக்குமரன்கள் வருவார்கள். தீயை தங்கள் மேல் வைத்துக்கொள்ள அல்ல..! தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்காமல் இதே போக்குடன் நீ செயல்பட்டுக்கொண்டுஇருந்தால்... இந்தியா சுதந்திரம் அடைந்தது 1947... ஆனால், 2047-ல் தமிழ்நாடு உன்னோடு இருக்காது!'’ என்று கர்ஜிக்க... ஆர்ப்பரித்தது கூட்டம்!
தி.கோபிவிஜய்
படம்: ஜெ.தான்யராஜ்
''கௌரவத்தைக் கைவிடுங்க!''
மூவர் மீதான தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் குரல் கொடுக்கும், ராமதாஸ், திருமாவளவன், சீமான் ஆகியோர் எம்.ஜி.ஆர். நகர் கூட்டத்துக்கு வரவில்லை. அவர்கள் கட்சிப் பிரதிநிதிகள் மட்டும் வந்திருந்தனர். ''அனைத்துக் கட்சி சார்பில் நடக்கும் இதுபோன்ற நிகழ்வுக்கு வராமல் அப்படி என்ன கௌரவம் பார்க்கிறாங்களோ? இவங்களுக்கு உண்மையான அக்கறை இருந்தா, அடுத்த முறை புறக்கணிக்கக் கூடாது!'' என்று தமிழ் உணர்வாளர்கள் பேசிக்கொண்டனர்.

என்கூட வாக்கிங் வந்தவரையும் கைது பண்ணிட்டாங்க!

ஜெயலலிதாவின் அடுத்த விக்கெட் கே.​என்.நேரு! 
திருச்சி போலீஸாருக்கு ஆகஸ்ட் 25-ம் தேதி... 'அதிரடி வியாழன்’தான். அன்று காலை ஆரம்பித்து, திருச்சி தி.மு.க. மாவட்டச் செயலாளர் கே.என்.நேரு உள்ளிட்ட தி.மு.க. பிர​முகர்கள் வரிசையாகக் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்​பட்​டார்கள்!
என்னதான் வழக்கு?
கடந்த 2009-ம் ஆண்டு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே 'கலைஞர் அறிவாலயம்’ என்ற பெயரில் கட்சி அலுவலகம் திறக்கப்பட்டது. அதை, கட்சித் தலைவரும், அப்போதைய முதல்வருமான கருணாநிதி திறந்தார். அந்தக் கட்டடம் 20 ஆயிரம் சதுர அடிப் பரப்பளவில் அமைந்திருக்கிறது. அதில், ஓர் ஏக்கர் நிலம் துறையூரைச் சேர்ந்த டாக்டர் சீனிவாசன் என்பவரிடம் இருந்து வாங்கப்பட்டது. அந்த நிலத்தின் மதிப்பு பல கோடி பெறும். 'அந்த நிலத்தைக் குறைந்த விலைக்குக் கொடுக்குமாறு என்னிடம் கேட்டார்கள். மறுத்த என்னை அடித்து, உதைத்து, மிரட்டி, பத்திரத்தில் கையெழுத்துப்
போடவைத்தார்கள்...’ என்று சீனிவாசன் திருச்சி மத்திய குற்றப் பிரிவு போலீஸாரிடம் புகார் கொடுத்து இருந்தார். அது தொடர்பான வழக்கில்தான், கே.என்.நேரு, அவர் சகோதரர் ராமஜெயம், முன்னாள் எம்.எல்.ஏ-வான அன்பில் பெரியசாமி, லால்குடியின் இப்போதைய எம்.எல்.ஏ-வான சௌந்திரபாண்டியன், துணை மேயர் அன்பழகன் உட்பட 11 பேர் மீது கொலை மிரட்டல், கூட்டுச் சதி உள்ளிட்ட ஒன்பது பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காலையில் 6 மணிக்கு தில்லை நகரில் இருக்கும் நேருவின் வீட்டுக்கு நில மோசடிப் பிரிவு ஏ.சி-யான மாதவன் மற்றும் ஸ்ரீரங்கம் ஏ.சி. வீராசாமி தலைமையில் போலீஸார் சென்றனர். அவர்கள் சென்ற நேரத்தில் நேரு பாத்ரூமில் இருக்க... காத்திருந்தனர். குளித்துவிட்டு வெளியே வந்த நேருவிடம், ''கைது செய்ய வந்திருக்கிறோம்'' என்று அவர்கள் சொல்ல... ''அப்படியா... சரி, வாங்க'' என்று அதற்காகவே காத்திருந்ததுபோல் கிளம்பிவிட்டார். அவரை, கே.கே.நகரில் இருக்கும் போலீஸ் சமுதாயக் கூடத்துக்குக் கொண்டுசென்றனர். சற்று நேரத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. அன்பில் பெரியசாமியும், லட்சுமி சில்க்ஸ் சுந்தர்ராஜுலுவும் அங்கே கொண்டு​வரப்பட்டனர்.
எதைப்பற்றியும் அலட்டிக்கொள்ளாமல், அங்கு இருந்த பத்திரிகையாளர்களிடம் பேசிக்கொண்டு இருந்தார் நேரு. ''நாங்கள் யாரையும் மிரட்டி வலுக்கட்டாயமாக நிலத்தை வாங்கவில்லை. இது பொய் வழக்கு. இதை சட்டப்படி சந்திப்போம்...'' என்றார்.
லட்சுமி சில்க்ஸ் சுந்தர்ராஜுலு கைதுதான் பலருக்கும் ஆச்சர்யம். அதுபற்றி நேருவே, ''அவர் என்கூட தினமும் வாக்கிங் வருவார். அதான், அவரையும் அரெஸ்ட் பண்ணிட்டாங்க.'' என்று ஜாலியாக கமென்ட் அடித்தார். இதற்குள் கைதுத் தகவல் தெரிந்து தி.மு.க-வினர் திமுதிமுவெனக் கூட... நிருபர்கள், கட்சிக்காரர்கள் அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு, கைது செய்யப்பட்டவர்களிடம் போலீஸார் தனியே விசாரணை நடத்தினார்கள்.
பின்னர் மாஜிஸ்திரேட் வீட்டில் ஆஜர்படுத்து​வதற்காக நேரு உள்ளிட்டவர்களை வேனில் ஏற்ற... அதை மறித்து, தொண்டர்கள் வாசலில் அமர்ந்து தர்ணா செய்தார்கள். 'போலீஸ் அராஜகம் ஒழிக!’ என்று கோஷமும் போட்டனர். வேறு வழி இன்றி, ''அவங்களை கலைஞ்சு போகச் சொல்லுங்க...'' என்று நேருவிடமே போலீஸார் தஞ்சம் அடைந்தனர். கீழே இறங்கிய நேரு, ''எங்க விஷயத்தை நாங்க பார்த்துக்கிறோம். வீணா பிரச்னை பண்ணாதீங்க. போங்க... போங்க...'' என்று சத்தம் போட்டார். பின்னரே தொண்டர்கள் கூட்டம் வழிவிட... வேன் நகர்ந்தது. அப்போதும் விடாமல் காரிலும் பைக்கிலுமாக தொண்டர்கள் பின்தொடர... மீண்டும் வண்டியை நிறுத்தி ரோட்டில் இறங்கிக் கடுமையாக சத்தம் போட்டார் நேரு. ம்ஹூம்... தொண்டர்கள் கேட்பதாக இல்லை.
ஜே.எம். 4 மாஜிஸ்திரேட் புஷ்பராணி முன், அவர்களை ஆஜர்படுத்தியபோது, 'ரிமாண்ட் மெமோ’வைக் கொண்டுவரத் தவறிவிட்டனர் போலீஸார். அதைக் கொண்டுவரச் சொல்லி, மாஜிஸ்திரேட் உத்தரவிட, கிட்டத்தட்ட அரை மணி நேரம் அனைவரும் காத்திருந்தனர். அந்த இடைவெளியில், ''எப்போதும் போலீஸ்காரங்க என்கூட இருப்பாங்க. இப்போ நான் போலீஸ்காரங்ககூட இருக்கேன். அதுதான் வித்தியாசம்!'' என்று கிண்டலடித்தார் நேரு.
கடைசியில் ரிமாண்ட் மெமோ வர.... போலீஸார் அதை நேருவிடம் கொடுத்துக் கையெழுத்து வாங்கி, அங்கேயே தரையில் வைத்து அவசர அவசரமாகப் பூர்த்தி செய்தார்கள். 15 நாட்கள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட... கடலூர் மத்திய சிறை நோக்கி காவல்துறை வாகனம் விரைந்தது!
ஆர்.லோகநாதன்
படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்
நிச்சயதார்த்ததுக்கு முன்னால் கைது!
செப்டம்பர் 2-ம் தேதி நேருவின் வீட்டில் ஒரு விசேஷம் நடக்க இருக்கிறது. அவரது மகன் அருணின் கல்யாண நிச்சயதார்த்தம்தான் அது. சொந்த அக்கா மகளைத்தான் தனது வீட்டு மருமகளாகத் தேர்ந்தெடுத்துள்ளார் நேரு. இவர்களது குடும்பம் குறிஞ்சிப்பாடியில் இருக்கிறது. அங்குதான் நிச்சயதார்த்தம் நடத்துவதற்கும் ஏற்பாடு தடபுடலாக நடந்து வந்தது. அதற்குள் நேருவை கைது செய்தது குடும்பத்தினருக்கு வருத்தம் கொடுத்துள்ளது!

சத்திரப்பட்டி... ஊமச்சிகுளம்... அவனியாபுரம்..

பொட்டுவை சுத்திவிட்ட போலீஸ்!

டும் போராட்டத்துக்குப் பிறகு பொட்டு சுரேஷை ஒரு நாள் காவலில் விசாரித்துவிட்டு மீண்டும் பாளையங்கோட்டை சிறைக்கு வழியனுப்பியது, போலீஸ்! 
பொட்டு சுரேஷை கஸ்டடியில் எடுக்கப்போகிறார்கள் என்றதுமே மதுரை​யில் பல வெயிட்டான வட்டாரங்கள் கிடுகிடுத்தது. பொட்டு வாயில் இருந்து தங்களைப்பற்றி ஏதாவது ஏடாகூடமாக வாங்கிவிடுவார்களோ என்று கலவரமான புள்ளிகள், தங்கள் ஆதரவாளர்களான தளபதி உள்ளிட்டவர்களை உசுப்பி​விட்டு விசாரணை விவரங்களை உடனுக்குடன் தெரிவிக்கும்படி விரட்டி​னார்களாம். கட்டளையை ஏற்று கட்சியி​னரும் வக்கீல்களும் பம்பரமாகச் சுழன்றார்கள்.
22-ம் தேதி மாலையில் பொட்டு சுரேஷை கஸ்டடியில் எடுத்த போலீஸ், முதலில் அவரது குடும்பத்தினரைச் சந்திக்கவைத்து பொட்டுவின் படபடப்​பைக் குறைத்துவிட்டே விசாரணையைத் தொடங்கினார்கள். வழக்கமாக சத்திரப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில்தான் இதுபோன்ற விசாரணைகள் நடக்கும். ஆனால், பொட்டுவை சத்திரப்பட்டி, ஊமச்சிகுளம், அவனியாபுரம் என மூன்று மணி நேரத்துக்கு ஒரு ஸ்டேஷனில் மாற்றி மாற்றிவைத்து விசாரித்தார்கள். இது இல்லாமல் இன்னொரு ரகசிய இடத்திலும் விசாரணை நடந்ததாம்!
ஆட்சியில் இருந்தபோது 'ஐ.ஜி. லெவல் அதிகாரிகளையே அதிகாரம் போட்டு அழைக்கக்கூடியவர்’ என்று பெயர் எடுத்தவர் சுரேஷ். இப்போது, விசாரணையின்போது போலீஸாரிடம் மூச்சுக்கு முந்நூறு 'ஐயா’ போட்டு அநியாயத்துக்குப் பவ்யம் காட்டினாராம். இதை நம்மிடம் சொல்லிச் சிரித்த விசாரணை அதிகாரி ஒருவர், ''போலீஸ் அவ்வளவு லேசில் நம்மை விடாதுனு பொட்டுக்குத் தெரிஞ்சுபோச்சு. அதனால ரொம்ப முரண்டு பிடிக்காம உண்மைகளைச் சொல்லிட்டார். மெயின் ஸ்விட்சைப் பத்தி நாங்க எதுவுமே கேக்கலை... ஆனா, அவராவே எல்லாம் கொட்டிட்டாரு.
'அண்ணனுக்குத் தெரியாம நான் எதையும் செஞ்சதில்லை. அதனால்தான் அவர் என்னை முழுசா நம்பினார். அந்த நம்பிக்கைக்கு துரோகம் செய்யாம என்னால் முடிஞ்ச வரைக்கும் உண்மையா நடந்துக்கிட்டேன். எத்தனையோ பேரை என்னால முடிஞ்ச வரைக்கும் வளர்த்து​விட்டேன். இதெல்லாம் எஸ்ஸார் கோபி, அட்டாக் பாண்டி மாதிரியான ஆளுங்களுக்குச் சுத்தமாப் பிடிக்கலை. அண்ணன்கிட்ட இருந்து என்னையப் பிரிக்கணும்னு நெனைச்சாங்க. அதனால்தான் பிரச்னையே. எஸ்ஸாரும் அட்டாக்கும் தாங்கள் எந்தக் காரியத்தில் இறங்கினாலும் அதில் அழகிரி அண்ணனுக்கும் சம்பந்தம் இருப்பதுபோல் ஒரு தோற்றத்தை உருவாக்கி, அதன் மூலம் அவருகிட்ட நெருக்கத்தை வளர்த்து காரியம் சாதிச்சுக்கிட்டாங்க. அப்படித்தான் ஆட்டோ டிரைவர் பாண்டியராஜன் கொலையில் இப்ப என்னைய இழுத்துவிட்டிருக்காங்க. ஆனா, இந்தக் கொலைக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை’ன்னு பேசிக்கிட்டே போன பொட்டு, கொலை சம்பந்தமா நாங்க சில கேள்விகளைக் கேட்டதும் சைலன்ட் ஆகிட்டார்.
ஒரு ஸ்டேஜ்ல என்ன நெனச்சாரோ தெரியலை... 'நீங்க எதுக்காக என்னையத் துரத்தித் துரத்தி கேஸ் போடுறீங்கனு தெரியும். எனக்கு டார்ச்சர் குடுத்தா, அழகிரி அண்ணனைப்பத்தி சொல்லுவேன்னு எதிர்பார்க்கிறீங்க. அப்படி என்னதான் உங்களுக்குத் தெரியணும்?’னு படக்குன்னு மடக்கினார்'' என்றார்.
விசாரணை முடிந்து 23-ம் தேதி மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட நேரத்தில், சுரேஷின் நெற்றியில் வழக்கமாக ஜொலிக்கும் பிராண்டட் பொட்டு மிஸ்ஸிங். அப்போது, ''போலீஸ் அடிச்சாங்கனு சொல்லுங்கண்ணே...'' என்று வக்கீல் ஒருவர் ஐடியா கொடுக்க... ''அட, போய்யா...'' என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றவர், ''போலீஸ் என்னைத் துன்புறுத்தவில்லை... வெள்ளை தாள்களில் மட்டும் கையெழுத்து வாங்கிட்டாங்க!'' என்று அமைதியானார்.
பாண்டியராஜன் கொலை வழக்கின் விசாரணை அதிகாரியான அவனியா​புரம் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன், பொட்டுவின் காதில் அடிக்கடி எதையோ கிசுகிசுக்க... ஒப்புக்குச் சிரித்துக்கொண்டே இருந்தார் பொட்டு. தி.மு.க. கவுன்சிலர் ஒருவர் கொண்டுவந்து கொடுத்த பொட்டலத்தையும் பவ்யமாய் வாங்கி பொட்டுவிடம் கொடுத்தார் கஜேந்திரன்!
நாம், 'பொட்டலத்தில் என்ன?’ என்று விசாரணை போட்டதில், 'அண்ணனுக்கு சாக்லேட்டு(!?)’ என்றார் அந்த கவுன்சிலர்.
குள.சண்முகசுந்தரம்
படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

''நீதி மன்றம் தடை விதித்ததில் மகிழ்ச்சிதான்!''

சொல்கிறார் சங்கரராமன் மனைவி
சிக்கலில் ஜெயேந்திரர்

ங்கரராமன் கொலை வழக் கில் சிக்கிய காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரருக்கு, அவ்வளவு எளிதில் தீர்ப்பு கிடைக்காதுபோல் தெரிகிறது! 
கடந்த 14.08.11 ஜூ.வி. இதழில், 'ஆடியோ சர்ச்சையில் ஜெயேந்திரர்?’ என்ற கட்டுரை வெளியிட்டு இருந்தோம். 'ஜெயேந்திரர் பேசியதாக ஒரு ஆடியோ வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு பாகங்களாக இருக்கும் அந்தப்பதிவில் ஒரு முதியவர், நடுத்தர வயதுக்காரர் மற்றும் ஒரு பெண் ஆகிய மூவரும் செல்போன் மூலம் கான்ஃபரன்ஸ் வசதியைப் பயன்படுத்தி உரையாடுகிறார்கள்’ என்று குறிப்பிட்ட அந்தக் கட்டுரையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமியின் விரிவான பேட்டியும் வெளிவந்திருந்தது.
இதுதொடர்பாக மனித உரிமை ஆர்வலரும் வழக்கறிஞருமான சுந்தரராஜன், சென்னை  உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த 25-ம் தேதி  விசாரித்த நீதிபதிசுகுணா, 'எட்டு வாரங்களுக்குள் பதில் அளிக்கவேண்டும்’ என உயர் நீதிமன்ற விஜெலென்ஸ் பதிவாளருக்கு உத்தரவிட்டதுடன், 'அதுவரை புதுச்சேரி நீதிமன்ற  விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கிறோம்’ என்றும் உத்தரவிட்டுள்ளது, திடுக்கிடும் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது!
வழக்கறிஞர் சுந்தரராஜனிடம் பேசினோம். ''சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பானவர்கள் பேசியதாக ஆடியோ ஒன்று பல மட்டங்களிலும் உலவி வருகிறது. அதில் வரும் குரல்கள், யாருடையவை என்பது பல்வேறு மட்டங்களில் சந்தேகங்களைக் கிளப்பியது. இதில் நீதித்துறை தொடர்பானவர்களது பெயரும் இருந்தது. அது உண்மையாக இருக்குமானால், நீதித் துறைக்குப் பெரும் களங்கம் ஏற்படும். மாறாக, இந்த ஆடியோ பொய்யாக தயாரிக்கப்பட்டு இருந்தால், அதுவும் நீதித் துறையின் பெயரைக் கெடுக்கும். எனவே, அதை வெளியிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக, மத்திய உளவுத் துறை, தொலைபேசி நிறுவனங்களின் உதவியையும் பெற்றுக்கொள்ளலாம். நானும் உதவத் தயார் என்று ஒரு புகாரை விஜிலென்ஸ் பதிவாளரிடம் கடந்த 18-ம் தேதி கொடுத்தேன். அவரோ, 'இது குறித்து ஏற்கெனவே தங்களுக்கு ஆடியோ வந்திருப்பதாகவும், நீதித் துறை அதிகாரி ஒருவர் இதுபற்றி விசாரிப்பதாகவும்’ கூறினார். ஆனால், யார் விசாரிக்கிறார்கள், என்னவகையான விசாரணை என்பதை வெளியிட மறுத்துவிட்டார். எந்தப் பலனும் கிடைக்கவில்லை என்பதால், வேறு வழிஇன்றி ரிட் மனுத் தாக்கல் செய்தோம். சட்டவிரோதப் பரிவர்த்தனை நடந்து இருந்தால், வரும் 5-ம் தேதி புதுச்சேரியில் வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில், அதன் கதி என்ன ஆகும் என்பது தெரியவில்லை. அதற்குள் நீதிக்கு ஏதும் நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காகவே நீதிமன்றத்தை நாடினோம்!'' என்றார்.
கொலை செய்யப்பட்ட  சங்கரராமனின் மனைவி பத்மாவை காஞ்சிபுரம் தெற்கு மாட வீதியில் உள்ள வீட்டில் சந்தித்துப் பேசினோம். ''என் கணவரைத் துள்ளத் துடிக்க கொன்றவர்கள், தங்கள் பண பலத்தால் தப்பித்து விடக்கூடாது என்று நினைத்தேன். ஆனால், நடந்தது வேறு. குற்றவாளிகளை நேரில் பார்த்த சாட்சியான நான், எனது மகள், மகன் மூவரும் உயிருக்குப் பயந்து பிறழ் சாட்சியாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. முதலில் நீதிமன்றத்தில் தெளிவாக குற்றவாளிகளை அடையாளம் காட்டினேன். நீதிமன்ற வளாகத்துக்குள் நான் தனியே இருந்தபோது, என் அருகே வந்த மூன்று பேர், 'ஏதாவது உளறினால் உன் குடும்பமே இருக்காது. உன் மகளையும், மகனையும் ஆசிட் டேங்கர் லாரியில் மூழ்க அடித்துவிடுவோம்’ என்று என்னை மிரட்டிவிட்டு நகர்ந்தனர். நான் நொந்து போனேன். ஏற்கெனவே, கணவரை இழந்துவிட்டேன். பிள்ளைகளின் எதிர்காலமாவது சிறப்பாக இருக்கட்டுமே என்றுதான் மூன்று பேருமே அடுத்த முறை ஆஜரானபோது குற்றவாளிகளை அடையாளம் காட்டவில்லை.
அன்றைய ஆட்சிக் காலத்தில் இருந்த உயிர் பயம் காரண மாக அப்படி ஒரு தவறை செய்துவிட்டோம். இப்போது அ.தி.மு.க. ஆட்சியில் பயம் இல்லை. இப்போது நீதிமன்றம், அந்த விசாரணைக்குத் தடை விதித்து இருக்கிறது என்பது மகிழ்ச்சியான விஷயம். அதே சமயம், மீண்டும் இந்த வழக்கை மறு விசாரணைக்கு எடுத்துக்கொண்டால், எந்தவித அச்சமும் இன்றி எங்கள் சாட்சிகளைப் பதிவு செய்வோம்!'' என்றார் உறுதியாக.
மடத்தின் தரப்பை அறிய முயன்றோம். இறுதிவரை எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. கடந்த முறை தொடர்பு கொண்ட போதும், அவர்கள் முறையான பதில் தராததை குறிப்பிட்டு இருந்தோம்.
இரண்டாவது மற்றும் நான்காவது குற்றவாளியான விஜயேந்திரர் மற்றும் அவரது தம்பி ரகு இருவர் தரப்பு வழக்கறிஞரான டி.லட்சுமண ரெட்டியைத் தொடர்பு கொண்டோம். ''விசாரணைக்கு தடை விதித்ததில் எங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. முக்கிய வழக்கில் எங்கள் தரப்பு கட்சிக்காரரின் மீதான குற்றச் சாட்டுக்களும் சாதாரணமானவை. அப்படியே விசாரணை தடை விதித்த நிலையில் நீதிமன்றம் மாற்றப்பட்டாலும், எந்த நீதிமன்றத்திலும் எங்கள் தரப்பு வாதத்தை வைக்கத் தயாராகவே இருக்கிறோம்!'' என்றார்.
நீதிமன்றம் வழங்கி உள்ள எட்டு வார அவ காசத்துக்குள், விஜிலென்ஸ் பதிவாளர் என்ன பதிலைத் தாக்கல் செய்யப்போகிறாரோ?
இரா.தமிழ்க்கனல், எஸ்.கிருபாகரன்
*****************************************************************************
எங்கள் ஆதரவு அண்ணா ஹஜாரேவுக்கே!

'அண்ணா ஹஜாரே... நானும் ஓர் அண்ணா ஹஜாரே!’ என்று புது வெள்ளம் பாய்ந்த வயல்போல, மனம் முழுக்கத் தங்கள் திடீர் தலைவனைப் போற்றி உச்சரிக் கிறார்கள் மக்கள். 'ஊழலை ஒழிக்க லோக்பால் தேவை’, 'அண்ணல்போல் அண்ணா வாழ்க!’, 'அண்ணா வழி... இளைஞர் வழி!’ என்று கைகளில் தேசியக் கொடிகள் ஏந்தி, தகவல் பலகைகளை ஏந்தி ஊரெங்கும் ஊர்வலம் நடக்கின்றன. இந்தக் கூட்டங்களில் நிரம்பி வழிவது இளைஞர் பட்டாளம்தான்! 
சென்னை... 153, எல்.பி. ரோடு என்ற முகவரியில் உள்ள 10 மாடி கட்டடம் ஒன்றில் அண்ணாவுக்கு ஆதரவாக முதியவர், இளையவர், ஆண், பெண் வித்தியாசம் இல்லாது பட்டினி கிடக்கிறார்கள். வெளியே அண்ணாவுக்கு ஆதரவான கோஷங்கள்... கைகளில் மெழுகு வத்திகள்... நெஞ்சு நிமிர்த்தி ஊழலுக்கு எதிராக ஊடகங்களில் தங்களது கருத்துகளைப் பதியவைக்கிறார்கள்.
மும்பையில் ஐ.ஐ.டி. மாணவர்கள் தங்களின் ஒரு நாள் உணவை ஒதுக்கித் தள்ளினார்கள். வேறு சில ஐ.ஐ.டி-க்களில் மதிய உண வையும், கர்நாடகாவில் பல மாணவர்கள் வகுப்புகளையும் புறக் கணிக்கிறார்கள். கலை, பொறியியல் என்று வித்தியாசம் இல்லாமல், நாடெங்கிலும் பரவலாகத் தங்கள் கல்லூரிகளில் ஊழலுக்கு எதிரான அமைப்புகளைத் தோற்றுவிக்கிறார்கள். பேருந்துகளிலும் ரயில்களிலும் லோக்பால் தொடர்பான கைப் பிரதிகளை விநியோகிக்கிறார்கள்; ஆர்குட்டில் கம்யூனிட்டி உருவாக்குகிறார்கள்; ட்விட்டரில் தட்டுகிறார்கள்; ஃபேஸ்புக்கில் கைகோக்கிறார்கள்... அண்ணாவின் எழுச்சி இந்த நிமிடம் வரை துவளவில்லை. காரணம், இளைஞர்களின் முடிவுறாத தொடர் ஆதரவுதான்!
சென்னையில் நிகழும் பட்டினிப் போராட்ட இடத்தில் எல்.சி.டி. தொலைக்காட்சியில் அண்ணாவின் போராட்டம் ஒளிபரப் பாகிக்கொண்டு இருக்கிறது. முதல் உதவிக்குத் தேவையான மருந்துகள் இருக்கின்றன. தேசபக்திப் பாடல்கள் இசைக்கப்படுகின்றன. அங்கு போராட் டத்தில் கலந்துகொண்டார்  ராசு பிள்ளை என்ற சுதந்திரப் போராட்ட தியாகி. 99 வயதிலும் பட்டினி விரதம் இருக்கும் அவரை ஆச்சர்யத்துடன் நாம் பார்க்க, ''வெள்ளையனே வெளி யேறு போராட்டத்தில் ஈடுபட்டவன். வெள்ளைக்காரங்கிட்ட இருந்து நாட்டை வாங்கிக் கொள்ளைக் காரங்கிட்ட கொடுத்துப் புட்டோம். வேறென்ன சொல்ல... போய்யா போ...'' என்று தன் ஆற்றாமையை வெளிப் படுத்தினார்.
சென்னை ஐ.ஐ.டி. மாணவர் சௌரப் என்பவர், ''ஆட்சியில் இருப்பவர்களை நாம்தானே தேர்ந் தெடுத்தோம்... இன்று அவர்களே நம்மை ஒடுக்குகிறார்கள் என்றால், அது என்ன ஜனநாயகம்? அது மட்டுமல்ல... கிரண்பேடி, அரவிந்த்
கெஜ்ரிவால் என அண்ணாவின் குழுவில் இருப்ப வர்களும் ஐ.ஐ.டி-யில் படித்தவர்கள்தான். அந்தப் பெருமையுடனும் சேர்ந்தே நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம்!'' என்றார்.
இன்னொரு மாணவரான விஜய், ''லோக்பால் வந்தால் ஊழல் மறையும் என்று சொல்ல முடியாது. ஆனால், நிச்சயமாகக் கட்டுக்குள் கொண்டுவந்துவிட முடியும். இந்தச் சட்டம் இருக்கும் தைரியத்தாலேயே 'நான் எதுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும்?’ என்று மக்கள் லஞ்சம் கொடுப்பதைத் தவிர்ப்பார்கள். ஒவ்வொருவரும் இப்படி இருந்தால், ஒரு கட்டத்தில் யாருமே லஞ்சம் வாங்க முடியாது. அந்தப் புள்ளியில் ஊழலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம்!'' என்றார்.
பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போராளிகளுக்கு உதவுவதற்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டு இருக்கும் சட்டம் படித்த மாணவி சவ்யாவின் கருத்து வேறு மாதிரி இருக்கிறது. ''இந்தப் போராட்டம் அண்ணா என்ற ஒருவரை மட்டும் முன்னிறுத்திய போராட்டம் அல்ல. ஊழலுக்கு எதிராக அவர் ஒரு பிராண்ட். எங்களுக்குள் இருக்கும் ஒரு போராளியை அவர் வெளியே கொண்டுவந்து இருக்கிறார். அதனால்தான், 'நானும் ஓர் அண்ணா’ என்று குர்தா, பைஜாமா, கதர்த் தொப்பி அணிந்து ஆதரவு தெரிவிக்கிறோம். இந்த முதிய வயதிலும் அவரால் முடியும் என்றால், இளைஞர்களாகிய எங்களால் ஏன் முடியாது? இந்தப் போராட்டம் ஒரு புதிய புரட்சி!'' என்றார்.
எம்.பி.ஏ. படிக்கும் மாணவியான பிரியா, ''அண்ணா எந்தப் பின்புலத்தில் இருந்து வந்தவர் என்பது முக்கியம் அல்ல. அவர் ஆர்.எஸ்.எஸ். ஆகவோ, இந்துத்வாவோ, பி.ஜே.பி-யாகவோ என்னவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். அவர் ஒரு நல்ல விஷயத்துக்குக் குரல் கொடுக்கிறார். இன்றுதான் நான் என்னை ஓர் இந்தியனாக உணர்ந்தேன். ஏனெனில், ஊழலுக்கு எதிரான எரிமலைக் குழம்பில் இப்போது நானும் ஒரு துளி...'' என்றார் அழுத்தமாக!
என்றென்றும் எரியட்டும் இந்தப் புனித நெருப்பு!
ந.வினோத் குமார்
படம்: ஜெ.தான்யராஜு

மறுக்கிறார்கள் அழகிரி குடும்பத்தினர்

டந்த 31.7.11, 10.8.11, 14.8.11 மற்றும் 17.8.11 ஆகிய தேதியிட்ட ஜூ.வி. இதழ்களில் தங்களைப் பற்றி வெளியான செய்திகளை உறுதியாக மறுத்து, மத்திய அமைச்சர் மு.க. அழகிரி, அவர் மனைவி காந்தி அழகிரி, மகன் துரை தயாநிதி மற்றும் மகள் கயல்விழி ஆகியோர் தங்கள் வழக்கறிஞர் வீர.கதிரவன் மூலமாக ஒரு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
''மதுரை- உத்தங்குடியில் காந்தி அழகிரி பெயரில் நிலம் வாங்கியதில் எந்தவிதமான முறைகேடும் நடக்கவில்லை. நிலத்தின் உரிமையாளரான மார்ட்டினிடம் இருந்து முறைப்படியான ஆவணங்களை சரிபார்த்த பின்பே அந்நிலம் வாங்கப்பட்டது. அது தொடர்பாக எழுந்த சிவில் வழக்குகள் மார்ட்டினுக்கு ஆதரவாகத் தள்ளுபடி செய்யப்பட்டது. அந்த நிலத்தை மார்ட்டின் வாங்கி 9 வருடங்களுக்குப் பிறகே, முறையான வழிமுறைகளில் காந்தி அழகிரி வாங்கினார். இந்த விவகாரத்தில் யாரிடமும் எந்தவிதமான மிரட்டலும் விடுக்கப்படவில்லை.
மற்றொரு கட்டுரையில் எனது கட்சிக்காரர்கள், இந்த நாட்டைவிட்டு தப்பிச் செல்ல முயற்சிப்பதுபோல வெளியான செய்தி, மக்கள் மத்தியில் அவர்களுக்கு உள்ள நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதாக உள்ளது. சம்பந்தப்பட்டவர்களின் வெளிநாட்டுப் பயணங்களை வேறு ஒரு பார்வையில் சித்தரிக்கும் இந்தத் தவறான தகவல் அரசியல் உள்நோக்கத்தோடு பரப்பப்பட்டது ஆகும்.
இதேபோல், 10.8.11 தேதியிட்ட இதழில் ஏராளமான சொத்துகளை எனது கட்சிக்காரர்கள் வாங்கி இருப்பதுபோலக் காட்டியுள்ள தகவலும் முற்றிலும் ஆதாரமற்றது. ஆட்சேபத்துக்குரியது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது என்ன கணக்கு தாக்கல் செய்யப்​பட்டதோ, அந்த சொத்துகள் மட்டுமே எங்கள் கட்சிக்காரருக்கு சொந்தமாக உள்ளன.
இதோடு, விஸ்வநாதன் என்பவரிடம் இருந்து பலவந்தமாக சொத்தைக் கைப்பற்றியதாக சுப்பிரமணியன் என்பவர் கூறியுள்ள குற்றச்சாட்டும் உறுதியாக மறுக்கப்படுகிறது. கற்பனையான அந்தக் குற்றச்சாட்டு எனது கட்சிக்காரர்களை அவதூறு செய்யும் நோக்கம்கொண்டது!'' என்று கூறியுள்ளார் வழக்கறிஞர் வீர.கதிரவன்.
மேற்குறிப்பிட்ட செய்திகளை வெளியிட்டதில் ஜூ.வி.க்கு எந்தவித உள்நோக்கமோ, யாருடைய நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் எண்ணமோ துளியும் கிடையாது. இருப்பினும், இதன் மூலம் யார் மனம் புண்பட்டிருந்தாலும் அதற்கு வருந்துகிறோம்!
- ஆசிரியர்

********************************************************************************************

0 comments:

Post a Comment

Cricket

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010