********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

சென்ற வார செய்திகள் (01 அக்டோபர் 2011)

Friday, September 30, 2011களத்தில் கேப்டனின் தளபதிகள்!

தேர்தல் நிலவரத்தின் முன்னோட்டம்!
அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகிய அல்லது விலக்கிவிடப்பட்ட தே.மு.தி.க., மீண்டும் மக்களுடனும் தெய்வத்துடனும்
கூட்டணிவைத்து உள்ளாட்சித் தேர்தலில் களம் இறங்க முடிவு செய்தது. திடீர்த் திருப்பமாக மார்க்சிஸ்ட் தோழர்கள்  விஜயகாந்த்தோடு கை கோக்க... கூட்டணி பலம் கூடிவிட்டது. களத்தில் இருக்கும் விஜயகாந்த்தின் தளபதிகளான மேயர் வேட்பாளர்களின் ப்ளஸ், மைனஸ்கள்...
 தே.மு.தி.க. வேட்பாளர்கள்...
மதுரை - கா.கவியரசு : விஜயகாந்த்தின் சொந்த ஊரான மதுரையின் மாநகர் மாவட்ட தே.மு.தி.க. அவைத் தலைவர். வேட்பாளராக அறிவித்த கையோடு, ''எங்க தாத்தா காலத்துல இருந்தே மதுரை அப்படியேதான் இருக்கு. கீரைத்துறை ஏரியா குண்டும், குழியும், புழுதியுமாக்கிடக்கு. இதை எல்லாம் மாத்தணும்னா நாம ஜெயிக்கணும்!'' என்று சொல்லி அனுப்பி இருக்கிறாராம் விஜயகாந்த். 1988-ல் இருந்தே விஜயகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகியாக இருந்ததால், அவருடன் நல்ல நெருக்கம் உண்டு. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனுபவமும், கட்சியில் இவருக்கு எதிர் கோஷ்டி இல்லாததும் பலம். யாதவர் சமுதாயத்தினரும் இவருக்குக் கை கொடுக்கலாம்.
தூத்துக்குடி - ராஜேஸ்வரி : பி.எஸ்.சி., பட்டதாரியான ராஜேஸ்வரி, மாவட்டச் செயலாளர் சண்முகராஜாவின் மனைவி. கட்சியில் அடிப்படை உறுப்பினர் மட்டுமே. மேயருக்குப் போட்டியிட ஆறு பெண்கள் விண்ணப்பித்த நிலையில், 'மாவட்டச் செயலாளரின் மனைவி’ என்கிற தகுதியின் அடிப்படையில் ராஜேஸ்வரி தேர்வானார். தனித்துப் போட்டி என்கிற தர்ம சங்கடமான முடிவால் ஒவ்வொரு அரசியல் கட்சியும் திணறும் நிலையில், 'கூட்டணி பலத்தால் நாங்க வெற்றி பெறுவோம்’ என நம்பிக்கையோடு இவர் பேசி வருவதை மக்கள் ரசிக்கிறார்கள்.
சேலம் - ஏ.ஆர்.இளங்கோவன்: ஆத்தூர் ஆயர்பாடியை பூர்வீகமாகக்​கொண்டவர்.ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆரம்ப காலத்தில் இருந்து விஜயகாந்த்தின் தீவிர ரசிகர். விஜயகாந்த் ரசிகர் மன்றத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்திருக்கிறார். தே.மு.தி.க. துவங்கிய காலத்தில், சேலம் மாவட்​டத் தலைவராக இருந்தார். 2006 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். 2007 முதல், கட்சியின் மாநிலத் துணைச் செயலாளராக இருக்கிறார். அடிப்படையில் டூ-வீலர் மெக்கானிக்.  நாயுடு சமூகத்தைச் சார்ந்தவர். கோஷ்டி, கட்டப்பஞ்சாயத்து, ரவுடியிசம் கிடையாது என்பதெல்லாம் இவரது பலம். ஆனால், சேலம் மாநகராட்சி பகுதியைச் சார்ந்தவர் அல்ல என்பதுதான் பலவீனம்.
நெல்லை - கண்ணம்மாள்: பல குளறு​படிகளுக்கு மத்தியில் கடைசி நேரத்தில் வேட்பாளராகி இருக்கிறார் கண்ணம்மாள். ஏற்கெனவே சீதாலட்சுமி என்பவர் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்​கப்பட்டு அவரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இடையில் கம்னியூனிஸ்ட்களுடன் ஏற்பட்ட பேச்சு வார்த்தையில் நெல்லை மாநகராட்சியை இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு ஒதுக்கியது. ஆனால் எங்களுக்கு போட்டி இட விருப்பம் இல்லை என இந்திய கம்யூனிஸ்ட் ஒதுங்கிக் கொண்டது.
முதலில் அறிவிக்கப்பட்ட சீதாலட்சுமியையே வேட்பு மனுத் தாக்கல் செய்யுமாறு தே.மு.தி.க. நிர்வாகிகள் கேட்டுக் கொள்ள.. என்ன நினைத்தாரோ அவரும் தனக்கு ஸீட் வேண்டாம் என நகர்ந்து கொண்டார். அதன் பிறகுதான் கட்சியினருக்கு கொஞ்சமும் அறிமுகம் இல்லாத கண்ணம்மாள் வேட்பாளராகி இருக்கிறார். யாதவ சமுதாயத்தை சேர்ந்தவர். காம்ரேட்களின் ஒத்துழைப்பு இவருக்கு ஒரே பிளஸ்.
ஈரோடு - என்.எஸ்.சிவகுமார்: கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளராக இருக்கும் வி.சி.சந்திரகுமாரின் சிபாரிசின் பேரிலேயே சிவகுமாருக்கு ஸீட் கொடுத்து இருக்கிறார்களாம். மாவட்ட இளைஞர் அணிச் செயலாளராக இருந்தவர், குறுகிய காலத்திலேயே முன்னேறி கட்சியின் தெற்கு மாவட்டச் செயலாளராகி இருக்கிறார். கட்சிக்காக உழைத்த சீனியர்கள் இருக்கும்போது, இவருக்கு எப்படி ஸீட் கொடுக்கலாம் என்று அதிருப்தி அலைகள் வீசுகின்றன. ரியல் எஸ்டேட் தொழிலில் இருப்பதால் பணம் கொழிக்கிறது. அதைவைத்து எப்படியும் கரையேறிவிடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் சிவகுமார்.
திருப்பூர் - தினேஷ்குமார் : திருப்பூர் மாவட்டச் செயலாளராக இருக்கும் தினேஷ்குமார், வாட்டர் கம்பெனி நடத்தி வருகிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டவர்.  யாருடைய சிபாரிசும் இல்லாமல் விஜயகாந்த்தே  இவரது பெயரை டிக் அடித்ததாகச் சொல்கிறார்கள். ரொம்பவும் வேகமான அரசியல்வாதி என்று கட்சி வட்டாரத்தில் இவருக்குப் பெயர். கட்சி செல்வாக்கோடு, தொழில் நகரமான திருப்பூரில் மார்க்சிஸ்ட்களுக்கு இருக்கும் செல்வாக்கும் சேர்த்து தன்னை எப்படியும் கரை சேர்த்துவிடும் என்று நம்புகிறார்.
மார்க்ஸிஸ்ட் வேட்பாளர்கள்...
கோவை - சிவஞானம் : கூட்டணி முடிவின்படி தே.மு.தி.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்த பாண்டியன் மாற்றப்பட்டு, மார்க்சிஸ்ட் யு.கே.சிவஞானம் திடீர் மாப்பிள்ளையாகி இருக்கிறார். அடிப்படையில் ஒரு மில் தொழிலாளி. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வழியாகப் பொது வாழ்க்கைக்கு வந்தவர். மார்க்சிஸ்ட் கட்சியின் முழு நேரப் பணியாளர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கோவை மாவட்டச் செயலாளராகவும் இருக்கும் இவரது முயற்சியின் பேரில், தீண்டாமை சுவர்கள் சில தகர்க்கப்பட்டு இருக்கின்றன. தவிர, மக்கள் போராட்டங்களில் இவரது தலைதான் முன் வரிசையில் தெரியும்.
வேலூர்  - ஜி.லதா: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளராக குடியாத்தம் முன்னாள் எம்.எல்.ஏ-வான ஜி.லதாவுக்கு கட்சியில் மட்டும் இல்லாமல், பொதுமக்களிடமும் நல்ல அறிமுகம் உண்டு. மக்கள் பிரச்னைக்காக சாலையில் இறங்கிப் பல போராட்​டங்களை நடத்துபவர். எனினும், லதாவின் மிகப் பெரிய பின்னடைவு... தே.மு.தி.க. மற்றும் கம்யூனிஸ்ட் வாக்கு வங்கி வேலூரில் குறைவு என்பதுதான். மேலும், ஏற்கெனவே வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தே.மு.தி.க-வின் சத்தியவாணி மாற்றப்பட்டது அக்கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. லதா என்ற பெயருக்காக மட்டுமே இப்போது வாக்குகளை சேகரிப்பதில் கட்சி மும்முரமாக இருக்கிறது.
ஜூ.வி. டீம்
*************************************************************************
அனைத்துக் கட்சிக் கூட்ட 'கலகல'!

ள்ளாட்சித் தேர்தலையட்டி, அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டம் கடந்த 27-ம் தேதி சென்னையில் நடந்தது. பொதுத் தேர்தலைப்போல அல்லாமல், அனைத்துக் கட்சி​களையும் ஒரே நேரத்தில் கூட்டி ஆலோசித்தார் மாநிலத் தேர்தல் ஆணையர் சோ.அய்யர். அங்கீகரிக்கப்பட்ட 10 கட்சிகளில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைத் தவிர, மற்ற கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
அ.தி.மு.க-வின் சார்பில் வந்த அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் சட்டென்று, 'தேர்தல் நன்றாகவே நடக்கும்’ என நம்பிக்கை தெரிவித்துவிட்டு நடையைக் கட்டிவிட்டார்கள். அவர்களுக்கு பதிலாக செய்தி, சிறைத் துறை அமைச்சர் செந்தமிழன் கூட்டத்தில் பங்கேற்றார்.
தி.மு.க-வின் சார்பில் வந்திருந்த சட்டத் துறை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ஏற்கெனவே தேர்தல் ஆணையர் அய்யரைப்பற்றி அவரி​டமே கொடுத்த மனுவைப்​பற்றிக் குறிப்பிட்டதுடன், பல புகார்களையும் கூறினார். அந்தக் கட்சியின் சட்ட ஆலோசகர் ஜோதி அவ்வளவாகப் பேசவில்லை. கடந்த உள்ளாட்சித் தேர்தலில், தி.மு.க-வினர் முறைகேடு செய்ததாக உயர் நீதிமன்றத்தில் சூடான வாதங்​களை வைத்தவர் ஜோதி. கால மாற்றத்​தினால் அரசியல் சூழலில் இடம் மாறியவர், வெளியில் வந்து செய்தி​யாளர்களிடம் பேசும்போதும் அமைதியாகவே இருந்தார்.
பி.ஜே.பி-யின் மாநில அமைப்புச் செயலாளர் மோகனராஜுலு, ''சென்னை உட்பட பல இடங்களில் பூத் ஸ்லிப்புகள் தருவதில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடக்கின்றன. கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் இப்படித்தான் அரசு அலுவலர்கள் ஸ்லிப்புகள் தருவார்கள் என அறிவிக்கப்பட்டது. கடைசியில், கட்சிகளே ஸ்லிப் வழங்கலாம் என்று சொன்னார்கள். வாக்குப் பதிவுக்கு முன்னர் 15 நாட்களுக்கு முன்னர் ஸ்லிப் தருவதாக அதிகாரிகள் கூறுகிறார்கள். அப்படித் தந்தால், வாக்காளர்கள் ஸ்லிப்களைத் தொலைத்துவிட வாய்ப்பு உண்டு. எனவே, வாக்குப் பதிவுக்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன், பூத் ஸ்லிப் தந்தால்தான் சரியாக இருக்கும்...'' என்றார்.
மற்ற சில கட்சிகளும் இந்தக் கருத்தை வலியுறுத்த, ''சின்னம் இல்லாமல் வேண்டுமானால் அரசியல் கட்சிகள் பூத் ஸ்லிப் தரலாம்!'' என அய்யர் யோசனை சொல்ல, ''கட்சிகள் அவற்றைத் தருவதே அந்தந்தக் கட்சிக்கு வாக்குகளைக் கவர்வதற்காகத்தான். சின்னம் இல்லாத ஸ்லிப்புகளை தர வேண்டிய அவசியம் கட்சிகளுக்கு இல்லையே?'' என யாரும் அதை வரவேற்கவில்லை.
மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் கல்யாணசுந்தரம், மகளிர் அணி அமைப்பாளர் தமிழ்மதி ஆகியோர், ''தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களுக்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளைப் பல இடங்களில் மறுப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. பரமக்குடி பகுதியில் தலித் மக்கள் இன்னும் பய பீதியில் உள்ளனர். அங்கு சுதந்திரமாக வாக்களிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பல இடங்களில் தேர்தல் பணி அதிகாரிகளே விஷயம் தெரியாமல், மனுத் தாக்கல் செய்வோரைக் குழப்புகின்றனர்...'' என்றனர்.
காங்கிரஸ் தரப்பில் பேசிய பாலசுப்ரமணியன், ''கிராமங்களில் மிகவும் தொலைவான பகுதிகளுக்குச் சென்று வேலை முடித்துவிட்டு வீடு திரும்பும் மக்க​ளிடம் வாக்குக் கேட்க வசதியாக பிரசார நேரத்தை 10 மணிக்கு மேல் நீட்டிக்க வேண்டும்...'' என்றார்.
மார்க்சிஸ்ட் கட்சியின் கே.பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ., ''மகளிர், பட்டியல் சமூகத்தினருக்கான இட ஒதுக்கீட்டை முன்கூட்டியே பகிரங்கமாகத் தெரிவிக்காதது தவறு. பூத்தில் போய்ப் பார்த்துதான் அதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் எப்படி? அவசரத்தில் அள்ளித் தெளித்ததுபோல மாவட்​டங்களில் பணிகள் நடக்கின்றன. மாவட்டம்தோறும் இதுபோன்ற அனைத்துக் கட்சி ஆலோ​சனைக் கூட்டம் நடத்துவது அவசியம்!'' என்று அழுத்தமாகச் சொன்னார்.
பா.ம.க. தலைவர் கோ.க.மணி பேசிக்கொண்டேபோக, அதிக நேரம் ஆவதை சுட்டிக்காட்டினார் சோ.அய்யர். ''தேர்தலுக்கு எத்தனை நாள்களுக்கு முன்பு டாஸ்மாக் மதுக் கடைகளை மூடச் சொல்வீர்கள்?'' என மணி கேட்க, ''48 மணி நேரத்துக்கு முன்பே கடையை மூடிவிட வேண்டும்!'' என்றார் ஆணையர்.
உடனே, பி.ஜே.பி. மாநிலத் துணைத் தலைவர் டாக்டர் தமிழிசை குறுக்கிட்டு, ''நீங்கள் 'தண்ணி’ வேண்டாம் என்று சொல்கிறீர்கள். ஆனால், கடந்த சட்டமன்றத் தேர்தலில் பல இடங்களில் அதிகாரிகள் வேறு மாதிரி புரிந்துகொண்டார்களோ என்னவோ... வாக்காளர்களுக்கு தாகத்துக்கு நல்ல தண்ணீர்கூட வைக்கவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் அந்தக் குறை இருக்கக் கூடாது!'' என்று சொல்ல, கூட்டத்தில் சிரிப்பலைகள்!
அரசியல் கட்சிகள் சொன்ன கருத்துகளைக் கவனமாகக் கேட்டுக்கொண்ட மாநிலத் தேர்தல் ஆணையர் அய்யர், பலவற்றுக்கு உடனுக்குடன் பதில் சொன்னார். சில புகார்களை கவனமாகக் குறிப்பு எடுத்துக்கொண்டார்.
வெளியில் வந்த தி.மு.க-வின் ஆர்.எஸ்.பாரதி, ''தேர்தல் பணிகள் நியாயமாக நடக்கின்றன என்பது உண்மை​யானால், மனுத் தாக்கலுக்குப் பின்னரும் வாக்குப் பதிவுக்கு முன்பும் இதுபோல இன்னொரு கூட்டத்தை நடத்த வேண்டும்!'' என்று காட்டமாகச் சொன்னார்.
இரா.தமிழ்க்கனல்
நானும் அதே சாதிதான்!
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஃபெரோஸ்காந்தி, 'பா.ம.க. எம்.எல்.ஏ-வான குரு, வன்னியர் சங்கக் கொடியைக் கட்டிக்கொண்டு பிரசாரம் செய்கிறார்’ என்று கூட்டத்தில் சொல்லத் தொடங்கியதும்... பா.ம.க. தரப்பு அதைக் கடுமையாக எதிர்த்தது. ஆணையர் அய்யர் இரு தரப்பையும் சமாதானப்படுத்த... ''நானும் அதே சாதிக்காரன்தான்'' என ஃபெரோஸ் பேச முயன்றார். அதை அடுத்து, பா.ம.க. தலைவர் கோ.க.மணி, ஏ.கே.மூர்த்தி இருவரும் 'சரி பேசட்டும்’ என ஒப்புதல் கொடுப்பதுபோலச் சொல்ல, கறார் காட்டிய அய்யர், ''நீங்கள் பெருந்தன்மை காட்டலாம். இந்தக் கூட்டத்தில் தனி நபர் விமர்சனம் செய்யக் கூடாது!'' என மேற்கொண்டு எந்தப் பிரச்னையும் வராமல் முற்றுப்புள்ளி வைத்தார்.
**********************************************************************************
புதுவை ரங்கசாமிக்கு வந்துவிட்டார் புது வாரிசு!

இடைத்தேர்தல் கலாட்டா!
புதுச்சேரி அரசியல் என்றாலே பரபரப்புக்கும், காமெடிக்கும் குறைவிருக்காது. இதில் இடைத் தேர்தல் வேறு வந்துவிட்டால் கேட்கவா வேண்டும்!
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு ஜெயித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, இந்திரா நகர் தொகுதியை ராஜினாமா செய்தார். அங்குதான் இப்போது இடைத்தேர்தல். இதுபற்றி அறிவிக்கப்பட்ட நாள் தொடங்கி... வேட்பு மனுத் தாக்கல் இறுதி நாள் வரை... முதல்வரும், என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான என்.ரங்கசாமி, தனது கட்சியின் வேட்பாளரை யார் என்றே சொல்லாமல் இழுத்தடிக்க, புதுச்சேரி அரசியலில் ஏகப்பட்ட பரபரப்பு.
கடந்த தேர்தலில் அ.தி.மு.க., என்.ஆர்.காங்கிரஸ், தே.மு.தி.க., சி.பி.ஐ., சி.பி.எம். ஓர் அணியாகவும், காங்கிரஸ், தி.மு.க., பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் மறு அணியாகவும் களம் இறங்கினர். தேர்தல் முடிந்து ஜெயித்துவிட்ட சூட்டோடு, ரங்கசாமி அ.தி.மு.க-வை அலட்சியப்படுத்தினார்.  தமிழக முதல்வர் ஜெயலலிதா, ரங்கசாமிக்கு 'துரோகி’ பட்டம் சூட்டி அறிக்கைவிட்டு கூட்டணியை முறித்துவிட்டார். இப்போது என்.ஆர்.காங்கிரஸ் தனியாகவும், அ.தி.மு.க. தனியாகவும் தேர்தலில் குதித்து இருக் கின்றன. ஆனால், இந்த அணியில் சென்ற முறை இடம் பிடித்திருந்த தே.மு.தி.க., சி.பி.எம்., சி.பி.ஐ., ஆகிய கட்சிகள் தங்கள் ஆதரவு யாருக்கு என்று இதுவரை அறிவிக்கவில்லை. மறுபுறம் காங்கிரஸ், தி.மு.க. ஓர் அணியாக நின்றாலும், அதில் சென்ற முறை இருந்த பா.ம.க-வும், விடுதலைச் சிறுத்தைகளும் இப்போது மிஸ்ஸிங்.
ஆனால், தேர்தல் நாள் அறிவிக்கப் பட்டதுமே அழையா விருந்தாளியாக சம்மன் இல்லாமல் ஆஜரான டாக்டர் ராமதாஸ், புதுச்சேரி இடைத் தேர்தலில் பா.ம.க., என்.ஆர்.காங்கிரஸை ஆதரிக்கும் என்று அறிவித்தார். இதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாத ரங்கசாமி மௌனம் காப்பதால், 'தங்களது ஆதரவை ஏற்றுக்கொண்டாரா... இல்லையா?’ என்கிற குழப்பத்தில் இருக்கின்றனர் பா.ம.க-வினர்.
தேர்தல் அறிவிப்பு வெளியானதுமே, சுத்திக்கேணி பாஸ்கரை சட்டென்று வேட்பாளராக அறிவித்து அசத்திவிட்டது அ.தி.மு.க. அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் அன்பழகன் எம்.எல்.ஏ. உள்பட ஐந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்களைக் கொண்ட குழுவும் சுறுசுறுப்பாகத் தேர்தல் பணியைத்தொடங்கிவிட்டது. காங்கிரஸ் கட்சியும் சென்ற தேர்தலில் ரங்கசாமியை எதிர்த்துப் போட்டியிட்ட ஏ.கே.டி.ஆறுமுகத்தையே இந்த முறையும் வேட்பாளராக அறிவித்துவிட்டது. ஆனால், எந்தப் பரபரப்பும் இன்றி வழக்கம்போல சேலம் அப்பா பைத்தியம் சாமி சமாதிக்கும், புதுச்சேரிக்குமாகப் பயணப்பட்டுக்கொண்டு இருந்தார் ரங்கசாமி. பத்திரிகையாளர்கள் கேட்கும்போது, 'நேரம் வரும்போது வேட்பாளர் யார் என்று அறிவிப்பேன்...’ என்ற பதிலையே கூறி வந்தார். இந்நிலையில், வேட்பு மனுத் தாக்கலுக்கான கடைசி நேரத்தில் தன் அண்ணன் ஆதிகேசவனின் மகன் ஆ.தமிழ்ச்செல்வனை வேட்பாளராக அறிவித்தார் ரங்கசாமி. இதனால், குமைந்து கொந்தளிக்கிறார்கள் அக்கட்சிப் பிரமுகர்கள்.
சொந்தக் கட்சியினரும், காங்கிரஸில் இருந்து வெளியேறி, தனிக் கட்சி தொடங்கி ஆட்சியைப் பிடித்த ரங்கசாமிக்கு நெருக்கமான நட்பு வட்டார மும் அவர் மீது கடுமையான அதிருப்தியில் உள்ளனர். பெயரைக் குறிப்பிட வேண்டாம் என்ற நிபந்தனையுடன் நம்மிடம் பேசிய ரங்கசாமியின் நண்பர் ஒருவர், ''இப்போது பழைய ரங்கசாமி இல்லை. அவரிடத்தில் நிறைய மாறுதல்கள் வந்துவிட்டன. கடந்த 17 ஆண்டு காலமாக அவரோடு இருந்து வருபவர் என்.எஸ்.ஜே.ஜெயபால். கடந்த சட்டமன்றத் தேர் தல் அறிவிப்பு வந்ததுமே, காங்கிரஸ் கட்சியில் ரங்கசாமி முதல்வர் பொறுப்பில் இருந்து நீக்கியவுடன், அவருக்காக தனது சேர்மன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, என்.ஆர்.பேரவை என்கிற புது அமைப்பை உருவாக்கியவர் ஜெயபால். பழைய ரங்கசாமியாக இருந்திருந்தால், அவருக்கு ஸீட் கொடுத்திருக்க வேண்டும்; உறவினர்களுக்குக் கொடுத்திருக்க மாட்டார். அவரின் இந்த மாற்றம் அவர் இமேஜுக்கே நல்லதில்லை. எது எப்படி இருந்தாலும், தேர்தல் வெற்றி என்பது உறுதி செய்யப் பட்டதுதான். வாக்கு வித்தியாசம் வேண்டும் என்றால் சற்றுக் குறைவாக இருக்கும். இதுவே, ரங்கசாமிக்குப் பெரிய பின்னடைவுதான். சிங்கம்போல தனியாக அரசியலில் கம்பீரமாக வலம் வந்தவர் வாரிசு அரசியலினால் அசிங்கப்பட்டுவிட்டார்...'' என்றார் வருத்தத்தோடு.
சொந்தக் கட்சியினரே ரங்கசாமி மீது இப்படிக் கூற... காங்கிரஸ் கட்சியினரோ இந்தப் பிரச்னையை தங்களுக்கு ஆதரவான பிரசாரமாக மாற்றி, ''புதுவை காமராஜர் என்றும், தனக்கென்று குடும்பமோ, சொத்தோ இல்லை என்று அவர் கூறுவது உண்மை என்றால், ஏன் அண்ணன் மகனைக் களம் இறக்கினார்? உண்மையில், தனது அரசியல் வாரிசாக அண்ணன் மகனை அடையாளப்படுத்துகிறார் ரங்கசாமி. இதை புதுச்சேரி மக்கள் ஏற்க மாட்டார்கள்...'' என்று முழங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.
பார்ப்போம்... இடைத்தேர்தல் முடிவு எப்படி என்று!

நாகை முழுக்க வாரிசு பெண்களின் ஆட்சி!

''பெண்களுக்கு அதி காரம் கொடுக்க வேண்டியதுதான். அதுக்காக அத்த னையுமா கொடுப்பது?'' என்று கேட்கிறார்கள் நாகப்பட்டினம் மாவட் டத்தினர். அந்த மாவட்டத்தின் நான்கு நகராட்சிகளுமே பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 நாகப்பட்டினம், வேதாரண்யம், மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய நான்கு நகராட்சிகள் மாவட்டத்தில் உள்ளன. சீர்காழி தவிர மற்ற மூன்று நகராட்சிகளும் இதுவரை ஆண்களுக்கானதாக இருந்தது. அவற்றையும் இம்முறை பெண்களுக்காக மாற்றிவிட... முதலில் சோர்ந்துபோனார்கள் கட்சிக்காரர்கள். அதுக்காக சும்மா இருக்க முடியுமா?  தங்கள் ரத்த சொந்தங்களான பெண்களை வேட்பாளர்களாக்கி, வேலையைத் தொடங்கிவிட்டனர்.
மயிலாடுதுறை: தற்போது தி.மு.க-வின் லிங்கராஜன் நகர்மன்றத் தலைவராக இருக்கிறார். இது பெண்களுக்கான தொகுதியாக மாற்றப்பட்டுவிட்டதால், தி.மு.க. சார்பில் வழக்கறிஞர் சீனுவாசனின் மனைவி பவானிக்கு வாய்ப்பு தந்துள் ளனர். அ.தி.மு.க. தரப்பில் நகரச் செயலாளர் செந்தமிழனின் சகோதரி முல்லைநாயகி களத்தில். பா.ம.க. சார்பில் முன்னாள் மாவட்டச் செயலாளர் கொற்றவ மூர்த்தியின் மகளும், மாநில மகளிரணித் துணைச் செயலாளருமான வழக்கறிஞர் ரூபா. தே.மு.தி.க. சார்பில் நகரச் செயலாளர் பண்ணை பாலுவின் மனைவி அலமேலு நிற்கிறார்.
வேதாரண்யம்: மூன்று முறை தி.மு.க. எம்.எல்.ஏ-வாக இருந்த மா.மீனாட்சிசுந்தரம், தற்போதைய நகராட்சித் தலைவர். பெண்களுக்காக ஒதுக்கப்பட்டதால், தன் மனைவி முத்துலட்சுமியை வேட்பாளராக்கி இருக்கிறார். அ.தி.மு.க. சார்பில் வழக்கறிஞர் நமச்சிவாயத்தின் மனைவி மலர்க்கொடி. பா.ம.க. சார்பில் நகரச் செயலாளர் வீராசாமியின் மகள் வித்யா. தே.மு.தி.க. சார்பில் மாவட்டப் பொருளாளர் அனீஸ் பாண்டியனின் மனைவி செந்தாமரை.
நாகப்பட்டினம்: அ.தி.மு.க. நகரச் செயலாளர் சந்திரமோகன் சிட்டிங் சேர்மன். தற்போது அவர் மனைவி மஞ்சுளா வேட்பாளர்.  தி.மு.க. தரப்பில் நகரச் செயலாளர் பன்னீரின் மனைவி  தங்கப்பிள்ளை வேட்பாளர். தே.மு.தி.க. சார்பில் மாவட்டச் செயலாளர் கணேசனின் சகோதரி அனுராதாவும், ம.தி.மு.க. சார்பில் அதன் நகரச் செயலாளர் கனகசபை மகள் அபிராமியும் போட்டியில் இருக்கின்றனர்.
சீர்காழி: சீர்காழி நகர தி.மு.க. செயலாளர் பொன்முடியின் மனைவி சாந்தினி நகர் மன்றத் தலைவராக இருக்கிறார். 2001-ல் தி.மு.க. சார்பில் சீர்காழி சட்டமன்றத் தேர்தலில் போட்டி யிட்டுத் தோற்ற இறைஎழில் வேட்பாளர் ஆக்கப் பட்டுள்ளார். அ.தி.மு.க. சார்பில், சத்துணவு பணியாளராகப் பணியாற்றும் வளர்மதிக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. அவரது கணவர் சத்துணவு பணியாளர்கள் சங்கத்தின் அ.தி.மு.க. ஊழியர் சங்கத்தின் தலைவர். தே.மு.தி.க. சார்பில் மாவட்டப் பொறியாளர் அணி செயலாளர் ராஜ சேகரின் தாயார் மலர்க்கொடி, பா.ம.க சார்பில் இளைஞரணி பிரமுகர் சுரேஷின் மனைவி கற்பகம் ஆகியோர் களத்தில் இருக்கின்றனர்.
நேரடியாகவே வாரிசு அரசியல் கொடி கட்டிப் பறக்கிறது நாகையில்!

''மதுரைக்கே சுபிட்சம் வரும்...''

சென்டிமென்ட் கிளப்பும் திருநங்கை!
''ஆணுக்கான வீரமும் பெண்ணுக்கான ஈரமும் இருக்கு. யாருக்கும் பயப்படாம தப்பை போல்டா எதிர்த்துச் சொல்லு வோம்ல..!'' என்று சொல்லி பெரிய கட்சி வேட்பாளர்களையே மிரள வைக்கிறார் மதுரை மேயருக் காக சுயேச்சைக் கொடி தூக்கியிருக்கும் திருநங்கை பாரதி கண்ணம்மா.
உள்ளாட்சித் தேர்தலில் தமிழகத்திலேயே முதன் முறையாக அதுவும் மேயர் பதவிக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்திருக்கும் பாரதி கண்ணம்மா வயதில் ஆஃப் செஞ்சுரி போட்டவர். பி.ஏ., பொருளாதாரம் முடித்த இவர், பல தனியார் கம்பெனிகளில் வேலை பார்த்துக் கடைசியாக, வங்கி ஒன்றில் மேனேஜராக இருந்தவர். ஆண் உடைக்குள் ஒளிந்திருந்த பெண்ணாக வலம் வந்த இவர், 2004-க்கு பிறகு தன்னை திருநங்கையாக வெளிப்படுத்திக் கொண்டார். இப்போது மதுரை மேயர் தேர்தலில் களம் குதித்து இருப்ப வரை சந்தித்தோம்.
''திருநங்கைகளான கல்கிக்கும் ரோஸுக்கும் சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்புக் கொடுக்கிறோம்னு சொல்லி முக்கிய அரசியல் கட்சிகள் ஏமாத் திட்டாங்க. திருநங்கைகளை அரசியல் கட்சி களும் ஒதுக்கப்பட்ட இனமாகவே பார்க்கும் வரலாற்றை மாத்தி எழுதணும். பூனைக்கு யார் மணி கட்டுறது? அதை நானே செய்திருக்கிறேன். நாம் ஏன் அரசியல் கட்சிகளிடம் போய் கை ஏந்தி நிக்கணும்? நம்முடைய திறமையை நம்பி களத்தில் நிற்போம். அதன் பிறகு நம்மைத் தேடி அவர்களை வரவைப்போம்...'' என்று நம்பிக்கையோடு சொன்னார் பாரதி கண்ணம்மா.
''பெரிய பெரிய கட்சிகளே கூட்டணிக் குடைக்கு அலையும்போது நீங்க சுயேச்சையா நின்னு மேயராக முடியும்னு சொல்றது டூ மச் இல்லையா?'' என்று கேட்டதற்கு, ''எவ்வளவு பெரிய கட்சியா இருந்தாலும் ராஜாவை கூஜா ஆக்குறதும் கூஜாவை ராஜா ஆக்குறதும் மக்கள் கையிலதான் இருக்கு. 'நீங்க கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடலாமே?’ன்னு கூட சிலர் கேட்டாங்க. குறுகிய வட்டத்துக்குள் அடங்கிவிடும் கவுன்சிலர் பதவியை வெச்சிக்கிட்டு ஒட்டுமொத்த மதுரைக்கும் நல்லது செய்ய முடியாது. உறவுகள் இருந்தும் அநாதைகளாக விடப்பட்ட எங்களுக்கு குடும்பம் கிடையாது. பேரன் பேத்திகளுக்கு சொத்து சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. உறவுகளை இழந்த எங்களுக்கு நீங்கள்தான் சொந்தம்னு பிரசாரம் செய்வோம். எங்கள் மீது மக்க ளுக்கு அனுதாபம் இருக்கு. திருநங்கை தொட்டுக் கொடுத்த காரியம் நூற்றுக்கு நூறு சக்சஸ்னு ஒரு சென்டிமென்ட் இருக்கு! அதுபோல நான் மேயரானால் மதுரையே சுபிட்சம் அடையும்...'' நம்பிக்கையுடன் சொல்கிறார் பாரதி கண்ணம்மா!
நம்பிக்கை ஜெயிக்கட்டும்!
*********************************************************************************
எங்களைப் போலத்தான் பி.ஜே.பி.-யும்

கைகோத்த கொங்கு
கொங்கு நாடு முன்னேற்றக் கழகமும் உள்ளாட்சித் தேர்தலில் குதித்துவிட்டது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வோடு களம் கண்டு காலியானவர்கள் இந்த முறை பி.ஜே.பி-யோடு கைகுலுக்கி, 11 மாவட்டங்களில் போட்டியிட முடிவு செய்துவிட்டனர். ஆனால், கட்சியின் தலைமை நிர்வாகிகளிடம், 'யாரைக் கேட்டுக் கூட்டணியை முடிவு செய்தீர்கள்? நீங்க கைநீட்டுற கட்சிக்குப் பின்னாடி கையைக் கட்டிட்டு எடுபிடி வேலை பார்க்க நாங்க ஒண்ணும் அடிமைகள் இல்லை...’ என்று எதிர்ப்புக் குரல் கிளம்பியிருக்கிறது. இச்சூழலில், கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.
கூட்டணி உள்ளிட்ட விஷயங்களுக்கு பொதுக் குழுவைக் கூட்டி முடிவு எடுப்பதுதானே வழக்கம்?
''தவறாகச் சொல்கிறார்கள்... உள்ளாட்சித் தேர்தலில் எங்கள் கட்சியின் நிலைப்பாடு, கூட்டணி ஆகியவை பேசி முடிவு எடுக்கவே தனிக் குழு ஒன்றை அமைத்தோம். அந்தக் குழுவின் வழிகாட்டுதலின்படியே இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. கொ.மு.க. ஜனநாயக அமைப்பு. இங்கே, தலைவருக்கு இருக்கும் மரியாதைதான் கடைசித் தொண்டனுக்கும் இருக்கிறது.''
இந்தத் தேர்தலில் பி.ஜே.பி-யோடு கூட்டணியாமே?
''இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடலாம்னு அவங்க நினைச்சிருந்தாங்க. எங்க நிலையும் அப்படித்தான் இருந்துச்சு. இந்த நேரத்தில், 'ஒரே மாதிரியா நினைக்கிற நாம ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து களம் இறங்கினா என்ன?’னு தோணுச்சு. ரெண்டு தரப்பிலும் பேசுனோம். அதன்படிதான் இந்தக் கூட்டணி.''
கட்சி ஆரம்பித்ததும் தனித்துப் போட்டியிட்டீர்கள். இப்போது ஏன் தனியா நிற்க பயப்படுகிறீர்கள்?
''பயம், தயக்கம்னு பெரிய வார்த்தைகளைச் சொல்லாதீங்க. குழந்தை எழுந்து நடக்க ஆரம்பிச்ச மாதிரியேவா வாழ்க்கை முழுக்க நடைபோடுது? (செம உதாரணம் சார்!) காலம் மாற மாற அதுக்கேத்த மாதிரி மாறணும். அப்டேட் பண்ணிக்கலேன்னா அழிஞ்சு போயிடுவோம். தனியா நின்னு தமிழ்நாட்டையே கலக்குன மாதிரி இந்த உள்ளாட்சித் தேர்தலிலும் கலக்குவோம்.''
கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடக்கூட உங்கள் கட்சியில் ஆட்கள் சிக்கவில்லை என்கிறார்களே?
''என்ன இப்படி சொல்றீங்க... குவியும் விருப்ப மனுவில் இருந்து திறமையான ஆளை செலக்ட் பண்ணப் போராடுகிறோம். இந்த மாதிரி எதிர்மறையான செய்திகளை யார் கிளப்பிவிடுறது? துடிப்போட களம் இறங்குறோம்; ஜெயிப்போம். நையாண்டித்தனங்களுக்கு பதில் சொல்றதுக்கு சீக்கிரத்தில் டைம் வந்துடும் பாருங்க...'' - என்று அசராமல் தூள் கிளப்பினார் ஈஸ்வரன்.
பொதுச் செயலாளர் இப்படி சொன்னாலும், கொ.மு.க-வில் சர்வ காலமும் கட்சிக்கு எதிரான உள்ளடிகளை நிகழ்த்தும் டீம் ஒன்று அக்கட்சி வேட் பாளர்களை டேமேஜ் செய்யும் ரகசிய பிரசாரத்தில் இறங்கி இருக்கிறதாம். இதை முறியடிப்பதிலேயே முக்கால்வாசி நேரமும் போய்விடுகிறதாம் தலைமை நிர்வாகிகளுக்கு.
ஸ்... கட்சின்னு ஒண்ணை ஆரம்பிச்சுட்ட்டா எவ்வளவு இம்சைப்பட வேண்டி இருக்கு!

இது கொங்கு கலாட்டா!

ஊரு விட்டு ஊரு வந்து...
ஸீட் கிடைத்த உற்சாகத்தில் கிடுகிடுவென பிரசாரத்தை துவக்கினார் அந்த உடன்பிறப்பு. திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே இரவு பிரசாரத்தை முடித்த கையோடு, டாஸ்மாக் பிரசாதத்தை தனது சகாக்களுடன் உறிஞ்சத் தொடங்கினார் அவர். போதை தலைக்கு ஏறியதும் கழக கண்மணி ஒருவர், 'தலைவா, பக்கத்துல ஒரு கிராமத்தை விட்டுட்டோம். போற வழியில ஓட்டு வேட்டையாடிட்டு போயிடலாம்...’ என்று பொறுப்பாக எடுத்துக் கொடுத்துள்ளார். வேட்பாளரும் ஓகே, டன்’ என்று உற்சாகமாக படை பரிவாரங்களுடன் வண்டி கிளப்பிக் கொண்டு பல கி.மீட்டர் பறந்து ஒரு கிராமத்துக்கு சென்றார். அங்கு வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தவர்களை எழுப்பி, 'வோழ்ட்டு போழுங்கம்மா’ என்று மப்பில் குழறி வேட்டி அவிழ ஓட்டு வேட்டையாடி இருக்கிறார். கடைசியில் அது அவரது பஞ்சாயத்தே கிடையாது. எல்லை தாண்டி கோவை மாவட்டத்துக்கு வந்த அந்த வேட்பாளர் அண்ட் கோ முகங்களில் மக்கள் சோடா தெளித்து வழி அனுப்பி வைத்திருக்கிறார்கள்!
அடிங்க எசமான்... அடிங்க!
கடந்த சட்டமன்ற தேர்தலின்போது தர்மபுரியில் தனது வேட்பாளர் பாஸ்கரை விஜயகாந்த் அடித்ததாக ஒரு வீடியோ கிலி கிளப்பிய கூத்தை மறக்கமுடியாது. அடி விழுந்ததோ இல்லையோ... இலவசமாக கிடைத்த இந்த பக்கா பப்ளிசிட்டியில் கொத்து கொத்தாக ஓட்டு விழுந்து எம்.எல்.ஏ- ஆனார் பாஸ்கர். இப்போது அதே தர்மபுரியில் நகராட்சி தலைவர் பதவிக்கு தே.மு.தி.க. சார்பில் நிற்கிறார் டாக்டர் இளங்கோவன். இவரை உசுப்பேற்றும் ரசிக கண்மணிகள், 'நம்ம ஊரை பொறுத்தவரைக்கும் கேப்டன்கிட்ட அடி வாங்கினா வெற்றி நிச்சயம். எப்படியாவது கஷ்டப்பட்டு கேப்டன்கிட்ட ஒரு அடியாச்சும் வாங்கிடுங்க’ என்கிறார்களாம். போதாக்குறைக்கு கேப்டன் தர்மபுரிக்கு பிரசாரத்துக்கு வரும்போது அவரை எப்படி டென்ஷன் ஆக்கி, அடிக்கு அடிகோலுவது என்றெல்லாம் டஜன் கணக்கில் ஐடியாக்கள் கொடுத்ததில் கிலி கண்டு போயிருக்கிறாராம் டாக்டர்!
   ஓட்டு பெருசா? உசுரு பெருசா?                               
நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு மாலை வேளையில் பிரசாரத்துக்கு போகச் சொன்னால் வெடவெடக்கிறார்கள் வேட்பாளர்கள். காலையிலேயே தோட்ட வேலைக்கு போய்விடும் மக்கள், மாலை ஊர் திரும்பியதும் வீட்டை தாழிட்டுக் கொண்டு பதுங்கி விடுகிறார்கள். காரணம், யானை பயம். அதுவும் சமீப காலமாக இப்பகுதியில் யானைகளின் வழித்தடங்கள் பல அழிக்கப்பட்டதால் ஊருக்குள் சாதாரணமாக புகுந்துவிடுகின்றன யானைகள். சமீபத்தில் இந்த விஷயம் புரியாமல் ஓட்டு வேட்டையாட வந்த அ.தி.மு.க. குரூப் ஒன்றை வேட்டையாட யானைக்கூட்டம் துரத்தி இருக்கிறது. ஒருவழியாக பின்னங்கால் பிடறியில் இடற ஓடி வந்து உயிர் தப்பி இருக்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்! அதனால், உசுரு போன பிறகு ஓட்டு விழுந்தா என்ன? விழாட்டி என்ன?’ என்று பிரசாரத்துக்கு போகவே தயங்குகிறார்களாம் வேட்பாளர்கள்!   
அண்ணன் என்னடா... தம்பி என்னடா..?
பொங்கலூர் பழனிசாமியின் பங்காளி மகன்கள் பெரியசாமி, ஈஸ்வரன். தி.மு.க. பிரமுகர்கள். திருப்பூர் மாவட்டம், கிழக்கு சடையபாளையம் சிற்றூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட ஈஸ்வரன் முடிவு செய்தார். உடனே, கூடப்பிறந்த அண்ணன் நான் இருக்கும்போது இளையவன் எப்படி போட்டியிடலாம் என்று தம்பிக்கு போட்டியாக அதே பதவிக்கு களம் இறங்கி இருக்கிறார் அண்ணன் பெரியசாமி. இப்போது குடும்பத்துக்குள் சலசலப்பு. யாருக்கு ஓட்டு போடுவது என்று தெரியாமல் விழி பிதுங்குகிறார்கள் உள்ளூர் மக்கள்!
'இ மனுஷ§டு இம்சை தாங்கலேது’
சேலம் அ.தி.மு.க-வின் முக்கியப் பொறுப்பில் இருப்பவர் அவர். வாஸ்து, ஜோதிடம் என சென்டிமென்ட்டில் செம கில்லி. உதாரணத்துக்கு ஒரு விஷயம், சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு அவரது மனைவி ஒன்பது மாதம் கர்ப்பமாக இருந்தார். ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24  அன்றுதான் தனது குழந்தையும் பிறக்க வேண்டும் என்று டாக்டர்களையும் தனது மனைவியையும் பாடாய்படுத்தி ஊசி, மருந்து எல்லாம் போட்டு ரணகளமாக குழந்தையை பிரசவிக்க செய்தார் அவர். அந்த ரணத்தை இன்னமும் அவரது மனைவியே மறக்கவில்லை.
இப்போது அந்த பிரமுகர் தனது மனைவிக்கு கவுன்சிலர் ஸீட் வாங்கி கொடுத்துள்ள் நிலையில், அவர் ஜெயிக்க வேண்டும் என்று அடிக்கடி சிறப்பு பூஜை, புனஸ்காரங்களை நடத்தி வீட்டையே ரெண்டாக்கி விடுகிறாராம். போதாக்குறைக்கு அதிகாலை 4 மணிக்கே மனைவியை எழுப்பி, 'சாலு நித்தர... சால பைதுலு...’ (போதும் தூக்கம்? சீக்கிரம் கிளம்பு) என்று 6 மணிக்கே கிளப்பி விடுகிறாராம். இதனால், 'இ மனுஷ§டு இம்சை தாங்கலேது’ என்று சொந்த பந்தங்களிடம் புலம்பி வருகிறார் அவரது மனைவி!
''பரவாயில்லை நீங்க இருங்க...''
கோவை மாநகராட்சியின் அ.தி.மு.க. மேயர் வேட்பாளரான செ.ம.வேலுசாமி சமீபத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். அவருடன் அமைச்சர் வேலுமணி, கோவை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ-வான சேலஞ்சர் துரை உட்பட ஐந்து பேர் தேர்தல் அதிகாரியின் அறைக்குள் சென்றார்கள். உடனே, தேர்தல் அதிகாரி, 'நான்கு பேர் மட்டுமே உள்ளே வர அனுமதி. யாராவது ஒருவர் வெளியேற வேண்டும்’ என்றார். சேலஞ்சர் துரையும், அமைச்சர் வேலுமணியும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் மாற்றி ஒருவர், 'பரவாயில்ல... நீங்க இருங்க நான் போறேனுங்க...’ ஐந்து நிமிடங்களாக பேசிக் கொண்டே போக... வெறுத்துப் போனார் தேர்தல் அதிகாரி. ஒருவழியாக, சேலஞ்சர் துரை வெளியேறிவிட ரிலாக்ஸாக மனுத் தாக்கல் செய்தார் செ.ம.வேலுசாமி!

மதுரை பிட்ஸ்

பெண்கள் பதவிக்கு ஆண் வேட்பாளர்! 
கடந்த இரண்டு முறையாகப் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த விருதுநகர் நகராட்சித் தலைவர் பதவி இம்முறை பொதுப் பிரிவாக மாற்றப்பட்டு... பிறகு என்ன நடந்ததோ மீண்டும் பெண்களுக்காக மாற்றப்பட்டுள்ளது. இதை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் பாலகிருஷ்ணசாமி, தொழிலதிபர் 'இதயம்’ முத்து ஆகியோர் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அக்டோபர் 10-ம் தேதி விசாரணைக்கு வரவிருக்கும் இந்த வழக்கில் ஆண்களுக்கு சாதகமாகத் தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கையில், ரவிக்குமார் என்பவர் வேட்பு மனுத் தாக்கல் செய்ய முயன்றார். ஆனால் உதவி தேர்தல் அலுவலர் தனலட்சுமி, மனுவை வாங்க மறுக்கவே, 'வாங்கியே தீரவேண்டும்’ என்று அடம் பிடித்தாரம் ரவிக்குமார். வேறு வழியில்லாமல் மனு வாங்கப்பட... சேர்மனாகவே ஆகிவிட்டது போன்ற வெற்றிக் களிப்புடன் சுற்றிக் கொண்டிருக்கிறார் ரவிக்குமார்!
தம்பியை தட்டிவைத்த அண்ணாச்சி!
கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனின் தம்பி கே.கே.எஸ்.எஸ்.வி.டி.சுப்பாராஜ். தொடர்ந்து இரண்டாவது முறையாக அருப்புக்கோட்டை யூனியன் சேர்மனாக இருக்கிறார். தி.மு.க. ஆட்சியில் நிழல் மந்திரியாக வலம் வந்த இவர் மீது, ஏகத்துக்கும் புகார்கள். இதனால் கட்சிக்குள் மட்டுமில்லாமல் அண்ணாச்சி குடும்பத்துக் குள்ளேயும் மனஸ்தாபம். இந்த முறையும் அவர் ஸீட் கேட்க, ''சும்மாவே... நீ சேர்மனா இருந்து என் பேரைக் கெடுத்துட்டதா தூத்துறாங்கப்பா. அதனால இந்த முறை நீ தேர்தலில் நிற்க வேண்டாம்...'' என்று தடா போட்டுவிட்டாராம். சுப்பாராஜிடம், ''ஏன் நிற்கவில்லை?'' என்று கேட்டால், ''புதியவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி விட்டேன். மத்தபடி எதுவுமில்லை தம்பி...'' என்று வழிகிறாராம். குடும்ப ஆதிக்கம் உடைந்துபோனதில் உடன் பிறப்புகள் உற்சாகமாக இருக்கிறார்கள்.
வடை போச்சே...
ராமேஸ்வரம் நகராட்சித் தலைவர் பதவிக்கு அ.தி.மு.க. வேட்பாளராக மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றத் துணைச் செயலாளர் கே.கே.அர்ச்சுனன் அறிவிக்கப்பட்டார். அடித்தது யோகம் என்று உடனடியாகக் களத்தில் இறங்கிய கே.கே.,  ஊர் முக்கியஸ்தர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டினார். இதற்காக வாங்கப்பட்ட சால்வை செலவு மட்டுமே ஒரு லகரத்தை தாண்டுமாம்! இது மட்டுமா? தினமும் 15 ஆட்டோக்களில் வார்டு வார்டாகச் சென்று ஆதரவு திரட்டி வந்தார். கைகூப்பி ஓட்டு கேட்கும் போஸ்டர்களையும் ஒட்டிவிட்டார்கள் கே.கே-யின் ஆதரவாளர்கள். இதற்கிடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை, இந்த அர்ச்சுனனுக்கு பதிலாக முன்னாள் சேர்மன் ஏ.அர்ச்சுனனை வேட்பாளராக மாற்றி அறிவித்து விட்டது தலைமை. அதிர்ச்சி அடைந்த முதல் அர்ச்சுனன், விட்டதைப் பிடிக்க இப்போது சென்னையில் முகாம் போட்டிருக்கிறார். இத்தனைக்கும் இவர் டாக்டர் வெங்கடேஷின் சிபாரிசாம்!
அண்ணா ஹஜாரேயும் ஓ.பி.எஸ். தம்பியும்
ஒரு காலத்தில் தான் ஆட்சி செய்த பெரியகுளம் நகர் மன்றத் தலைவர் பதவிக்கு தம்பி ஓ.ராஜாவை வேட்பாளராக அறிவிக்க வைத்திருக்கிறார் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். ராஜாவை எதிர்த்து முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் உறவினரான தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் செல்லப்பாண்டி நிற்பதால், பெரியகுளத்தில் அனல் பறக்கிறது. 'அதிகாரப் பேர்வழி’ என்ற அடைமொழிக்கு சொந்தக்காரரான ராஜா, வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்து அண்ணனை மிஞ்சி அநியாயத்துக்கு பவ்யம் காட்டுகிறார். ''நகர்மன்றத்தில் அண்ணா ஹஜாரே மாதிரி ஆட்சி நடத்துவேன்!'' என்று இவர் சொல்வதைக் கேட்டு மக்களே டெரர் ஆகிறார்கள்.
பணம் ரெடியா?
உள்ளாட்சியில் காங்கிரஸும், தி.மு.க-வும் தனித்துப் போட்டி என்கிறார்கள். ஆனால், சிவகங்கை மாவட்டத்தில் சில இடங்களில் இரண்டு கட்சியுமே உட்கார்ந்து பேசி, தொகுதிப் பங்கீடு செய்திருக்கின்றன. இந்த நிலையில் காரைக்குடி ஏரியாவில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தவர்களை அழைத்து ஒரு கூட்டம் போட்டார் கார்த்தி சிதம்பரம். அதில், ''சொந்த செல்வாக்கு இருக்கிறவங்களைத் தவிர மத்தவங்க யாரும் மெனக்கெடாதீங்க. சூரியனைத் தாங்கிக்குங்க, முடிஞ்சா இலையையும் கையில ஏந்திக்குங்க. தேவைப்பட்டால் அரிவாள் சுத்தியலையும் கையில எடுத்துக்குங்க. பணம் குடுக்க வேண்டிய கட்டாயம் வந்தால் அதையும் தாராளமா குடுங்க. போலீஸ் கேட்டா, 'நல்ல காரியத்துக்காக குறுக்கு வழியில போறது தப்பில்லைனு கிருஷ்ண பரமாத்மாவே மகாபாரதத்துல சொல்லியிருக்காரு’ன்னு சொல்லுங்க. நீங்க என்ன செய்வீங்களோ தெரியாது அதிகமான இடங்கள்ல ஜெயிச்சு மானத்தைக் காப்பாத்தணும்!'' என்று கிளாஸ் எடுத்தாராம்!
அண்ணனை எதிர்க்கும் தம்பி!
கடந்த மூன்று முறையாக கண்ணனேந்தல் ஊராட்சித் தலைவராக இருப்பவர் தி.மு.க-வின் ஜீவானந்தம். இப்போது இந்த ஊராட்சி மதுரை மாநகராட்சி எல்லைக்குள் வந்துவிட்டதால், ஜீவானந்தத்தையே மாமன்ற உறுப்பினர் பதவிக்கும் களம் இறக்கிவிட்டிருக்கிறது தி.மு.க. இதே வார்டில் போட்டியிட ஜீவானந்தத்தின் தம்பி முருகன் அ.தி.மு.க-வில் விருப்ப மனு கொடுக்கப்போய், அண்ணனை எதிர்த்து அவரையே நிறுத்திவிட்டார்கள். ''தொடர்ந்து மூன்று முறை என்னை ஜெயிக்கவைத்த உங்களுக்காக ஓயாது உழைத்து இருக்கிறேன். இம்முறையும் என்னை ஜெயிக்கவைத்தால் உங்களுக்காக மாடாக உழைத்து ஓடாகத் தேய்வேன்...'' என்று வசனம் பேசுகிறார் ஜீவானந்தம். ''கூடப்பொறந்த எங்களையே கை தூக்கிவிட நினைக்காத மனுஷனை நம்பி இந்த முறையும் நம்பி மோசம் போயிடாதீங்க மக்களே!'' என்று எசப்பாட்டுப் பாடுகிறார் தம்பி முருகன். மோத விட்டுட்டாங்களேப்பா...!

மிஸ்டர் கழுகு: எல்லாரையும் கழற்றிவிட்டது ஏன்?

கொட்டும் மழையில் குடை பிடித்த​படியே பறந்து வந்தார் கழுகார். குடையை மடக்கியதும், ''தண்ணீர்ப் பிரச்னை பெரும் பிரளயத்தைக் கிளப்பி​விட்டதே!'' என்றவரைப் புரியாமல் பார்த்தோம்.
கழுகாரே பேச ஆரம்பித்தார்... ''ஜெயலலிதாவிடம் கோபித்துக்கொண்டு விஜயகாந்த் பக்கம் கம்யூனிஸ்ட்கள் ஜாகை மாற்றிய கதையை நான் உமக்குச் சொன்னேன். போயஸ் கார்டனுக்குப் பேச்சுவார்த்தைக்குச் சென்ற அவர்களுக்கு கேட்ட மாநகராட்சிகள் கிடைக்கவில்லை. எதிர்பார்த்த நகராட்சிகள் தரப்படவில்லை என்பதைவிட... 'எங்களுக்குக் குடிக்கத் தண்ணீர்கூடக் கொடுக்கவில்லை’ என்று தோழர்கள் வருத்தப்பட்டனர். அதை நான் உமக்குச் சொன்னேன். 'குடிக்கத் தண்ணீர் தராத போயஸ் கார்டன்’ என்று தலைப்பிட்டு 'கம்யூனிஸ்ட் கேப்டன்’ கதை என்று நீர் வெளியிட்டீர். இந்தவிவகாரம் மற்றவர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியதைப்போலவே, முதல்வரையும் அதிரவைத்ததாம்!''
''அப்படியா?''
''இந்த செய்தியைப் பார்த்துவிட்டு கார்டன் ஊழியர்கள், செயலாளர்களிடம் அவர் கடுமையாகக் கோபப்பட்டாராம். 'நம்மிடம் பேச்சுவார்த்தைக்கு வந்தவர்களை இப்படியா அவமரியாதை செய்வீர்கள்?’ என்று கத்தித் தீர்த்துவிட்டாராம். அதற்கு ஊழியர்கள் ஒரு காரணம் சொல்லி இருக்கிறார்கள். கார்டனுக்குள் வருபவர்கள் முதலில் ஓர் அறையில் உட்காரவைக்கப்படுவார்கள். அங்குதான் அவர்களுக்கு தண்ணீர், ஸ்நாக்ஸ்,டிஃபன் போன்றவை வழங்கப்படும். அங்கு இருந்து முக்கிய சந்திப்புக்கான அறைக்கு அழைத்துச் செல்வார்கள். அங்குதான் பேச்சுவார்த்தைகள் நடக்கும். அந்த அறைக்குள் இந்த மாதிரியான பொருட்களை அனுமதிப்பது இல்லையாம். அந்த அடிப்படையில்தான் அவர்களுக்குத் தண்ணீர் தராமல்விட்டு இருப்பார்களே தவிர, மற்றபடி தண்ணீர் தரக் கூடாது என்ற எந்த உத்தரவும் போடப்படவில்லை என்று இப்போது விளக்கங்கள் சொல்கிறார்கள். 'பேச்சுவார்த்தைக்கு வந்தவர்களிடம் இதையே விளக்கமாகச் சொல்லி இருக்கலாமே... சொல்லி இருந்தால், அவர்கள் வெளியில் போய் வருத்தப்பட்டு இருக்க மாட்டார்களே’ என்று முதல்வர் ஆதங்கப்பட்டாராம். அதையும் நான் உமக்குச் சொல்லிவிட்டேன்!'' என்ற கழுகாரின் சிறகுகள் ஈரம் குறைந்து சடசடக்கத் தொடங்கின!
''கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் மொத்தமாக முடிந்தும்விட்டன; முறிந்தும்விட்டன. இந்திய கம்யூனிஸ்ட் மட்டுமாவது அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் பெறும் என்று அனைவரும் நினைத்தனர்.  ஆனால், அவர்களையும் ஜெயலலிதா தக்கவைக்க​வில்லை. 'இது ஏதோ திட்டமிட்ட செயலாகவே தெரிகிறது’ என்று கம்யூனிஸ்ட் தலைவர்கள் சொல்​வதை மறுப்பதற்கு இல்லை.''
''தா.பாண்டியனும் தாக்குப் பிடிக்க முடியாமல் போனதற்கு என்ன காரணம்?''
''திருப்பூர் மாநகராட்சியை எதிர்​பார்த்த அவர், கடைசிக் கட்டத்தில் அதை வலியுறுத்தவே இல்லை. 30 மாநகராட்சி வார்டுகளைக் கேட்டார். 10-தான் கிடைக்கும் என்றார்களாம். 58 பேரூராட்சி கவுன்சிலர் கேட்டார்கள். 20 தரப்படும் என்றார்களாம். பெரிய சிக்கல், மாவட்ட கவுன்சிலர்கள் விஷயத்தில்தான் நடந்துள்ளது. 19 இடங்களை இவர்கள் கேட்க.. அ.தி.மு.க. தரப்பு 7 இடங்கள்தான் தர முடியும் என்றதாம். 'நாங்கள் திருவாரூர் மாவட்டத்திலேயே 7 மாவட்ட கவுன்சிலர்களை வைத்துள்ளோம்’ என்றார்களாம். ஆனால், எதிலும் இறங்கி வருவதாகத் தெரியவில்லையாம். அதனால்தான், இதற்கு மேல் அவமானப்பட வேண்டாம் என்று கிளம்பிவிட்டார்கள்.''
''ஓஹோ!''
''அ.தி.மு.க. தரப்பில் கேட்டால் வேறு மாதிரி சொல்கிறார்கள். 'நாங்க கேட்டதைக் கொடுக்கலேன்னா... விஜயகாந்த் பக்கம் போய்விடுவோம்.’ என்று மிரட்டும் தொனியில் தா.பாண்டியன் பேசினார். ஆகவே, அமைதியான சூழ்நிலை எழவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் பேச வந்தவர்களுக்கு நாங்கள் உரிய மரியாதை கொடுத்தோம் என்கிறார்கள் இவர்கள். பரமக்குடி சம்பந்தமாக பேசிய அக்கட்சித் தலைவர் ஒருவர், 'இந்த துப்பாக்கிச் சூடு முதல்வரின் முதிர்ச்சியற்ற தன்மையைக் காட்டுகிறது’ என்றாராம். அதுதான் அந்தக் கட்சிக்குக் கல்தா கொடுக்கக் காரணமாம்!''
''விஜயகாந்த் விஷயத்துக்கு அ.தி.மு.க-வின் ரியாக்ஷன்?''
''அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த 100-வது நாள் விழாவை சட்டசபையில் கொண்டாடினார்கள். அந்த விழாவில் கலந்துகொண்டு விஜயகாந்த்தும் பேச வேண்டும் என்று அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமே போனில் பேசி அழைத்தாராம். 'வருகிறேன்’ என்று விஜயகாந்த்தும் சொன்னாராம். பிறகு, 'ஆட்சிக்கு வந்தா 100 நாள் ஆகும்... 200 நாள் ஆகும்... இதுக்கெல்லாமா விழா கொண்டாடுவாங்க’ என்று விஜயகாந்த் சொன்னதாக ஜெயலலிதாவுக்கு யாரோ சொல்லி இருக்கிறார்கள். இதைத்தான் அ.தி.மு.க. தரப்பும் தனது கோபத்துக்கான காரணமாகச் சொல்கிறது. மொத்தத்தில் சிறு சிறு வார்த்தைகளும், மனவருத்தங்களும் சேர்ந்து ஒரு கூட்டணிக்கு மூன்று மாதங்களுக்குள் முற்றுப்புள்ளி வைத்துவிட்டது!''
''உளவுத் துறை ஏ.டி.ஜி.பி-யாக இருந்த ராஜேந்திரன் திடீரென தூக்கி அடிக்கப்பட்டுள்ளாரே?''
''அவர் இவ்வளவு காலம் நீடித்ததே பெரிய விஷயம் என்றுதான் போலீஸ் வட்டாரம் பேசிக்​கொள்கிறது. கடந்த தி.மு.க. ஆட்சியில் சென்னை மாநகர கமிஷனராக இருந்த அவர், ஜெ. ஆட்சிக்கு வந்ததும் சிறைத் துறைக்கு மாற்றப்பட்டார். அதே நாளில் உளவுத் துறை ஏ.டி.ஜி.பி. என்ற அந்தஸ்தில் உட்காரவைக்கப்பட்டார். 'கருணாநிதிக்கு நெருக்கமாக இருந்தவரை உளவுத் துறை அதிகாரியாக ஜெயலலிதா எப்படி வைத்தார்?’ என்று பலரும் வியந்தனர். இத்தகைய சூழ்நிலையில் ராஜேந்திரன் கழற்றிவிடப்பட்டு உள்ளார்.''
''காரணம் சொல்லும்!''
''பரமக்குடி சம்பவத்தை வைத்தே இந்த  அதிரடி நடந்​துள்ளது. 'உளவுத் துறை ஒழுங்காகச் செயல்பட்டு தங்களுக்கு முறைப்படியான தகவலைச் சொல்லவில்லை’ என்று சட்டம் - ஒழுங்கு போலீஸ் புகார் சொன்னது. 'இந்த சம்பவத்துக்கு உளவுத் துறையா, சட்டம் - ஒழுங்கா... யார் காரணம் என்ற சர்ச்சையில் ராஜேந்திரன் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது சம்பந்தமான சரியான தகவல் எதுவும் முதலமைச்சருக்குச் சொல்லப்படவில்லை’ என்றும் சொல்கிறார்கள். பரமக்குடி, மதுரைக்கு வந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், இங்குள்ள கள நிலைமைகளை அறிந்துகொண்டு டெல்லி போனார். உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை சந்தித்து விலாவாரியான அறிக்கையைக் கொடுத்தார். 'சி.பி.ஐ. விசாரணை தேவை’ என்ற பஸ்வானின் கோரிக்கையை ப.சி. நிராகரித்தாலும், பஸ்வான் கொடுத்த கோரிக்கையின் நியாயத்தை மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் ஒப்புக்கொண்டார்களாம். இந்த நெருக்கடிக்கு ராஜேந்திரன்தான் காரணம் என்று முதல்வர் நினைக்கிறாராம்!''
''ராஜேந்திரனை மாற்றிய அன்றே... உளவுத் துறை டி.ஐ.ஜி-யாக பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்டு உள்ளாரே?''
''அவரை கார்டன் தனக்கு நம்பிக்கையானவராக நினைக்கிறது. அதனால்தான் அவரை நியமித்திருக்கிறார்கள். பொதுவாகவே 'அமைதியின் திருவுரு’ என்று சொல்லக்கூடியவர்களைத்தான் உளவுத் துறையில் போடுவார்கள். ஆனால், 'பெரிய ஸ்பீக்கர்’ ஆன பொன் மாணிக்கவேல் இந்த சேரில் எவ்வளவு நாளைக்கு இருப்பார் என்று இப்போதே தூபம் போட ஆரம்பித்துவிட்டார்கள்!'' என்று சொல்லிக் கிளம்பினார் கழுகார்.
லேசாக பின் நோக்கி வந்தவர், ''கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் கார்டனில் பேச்சுவார்த்தை நடந்ததைச் சொன்னேனே... அதில் ஒரு தகவல் மிஸ் ஆகிவிட்டது. பேச்சை நடுநாயகமாக இருந்து நடத்தியவர் சசிகலா!'' என்றவர் 'சொய்ங்’!
அட்டை மற்றும் படங்கள்: கே.கார்த்திகேயன், 'ப்ரீத்தி’ கார்த்திக்
 
அண்ணா, பார்த்து செய்ங்ணா!
விழுப்புரம் மாவட்ட வேட்பாளர் தேர்வில், அ.தி.மு.க-வைப் பொறுத்த வரை ஆயிரம் பொத்தல்கள். அமைச்சரின் சகோதரர் ஒருவர் தன் இஷ்டப்படி புகுந்து விளையாடிவிட்டார் என்று புலம்பல்கள். ''காலங்காலமாக அ.தி.மு.க-வில் இருக்​கிறவங்களை விட்டுட்டு... தி.மு.க-வில் இருந்து சைலன்ட்டாகத் தாவி வந்தவர்​களுக்கு ஸீட் கிடைச்சிருக்கு. ஒரு சாம்​பிளுக்கு, முண்டியம்பாக்கம் பகுதியில் 20 வருடங்களுக்கு மேலாகக் கட்சியின் தீவிர விசுவாசியாக இருக்கும் சேட்டு கணபதி குடும்பத்தில் யாருக்கும் ஸீட் கிடையாது. மாறாக, ஸ்டாலின் வருகை​யின்போது 'தளபதி... தளபதி' என்று ஓடி ஓடி பேனர் வைத்த ஒரு தி.மு.க. புள்ளியின் குடும்பத்துப் பெண்​மணிக்கு வெற்றிலைப்பாக்கு வைத்து வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள்!'' என்றும் புலம்புகிறார்கள்.
விழுப்புரம் மாவட்டத்தின் பரபரப்பான சந்திப்பில் பொன்முடியின் பேராதரவோடு குத்தகைக்கு நடந்து வந்த ஒரு மோட்டலை, இப்போது பேர் மாற்றி நடத்தும் தங்கள் கட்சிக் கோஷ்டியின் மீதும் லோக்கல் அ.தி.மு.க-வினரின் எரிச்சல் பார்வை விழுந்திருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான பல ஸீட் பேரங்கள் இந்த மோட்டல் சந்திப்பில் முடிவானதாகவும்... அதில் மாவட்டப் பெரும்புள்ளிகளின் விளையாட்டு இருப்பதாகவும் பொருமித் தள்ளுகிறார்கள்.
ஆரோவில் டு அமெரிக்கா!
புதுச்சேரி அருகே உள்ள ஆரோவில்லை சர்வதேச ஆன்மிக நகரம் என்று அழைப்பார்கள். ஆரோவில்லில் தங்கி இருந்த ரஷ்யாவை சேர்ந்த அலெக்ஸாண்டர் வயூகான் என்பவரையும், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சேகர் என்பவரையும் போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்து இருக்கிறார்கள்.  அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட மருந்துகளை ஆன்லைன் மூலம் ஆர்டர் எடுத்து அமெரிக்காவுக்கு சப்ளை செய்ததாக இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. கடந்த ஆறு வருடங்களில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்துகளை இவர்கள் விற்பனை செய்திருக்கிறார்களாம். புதுவைக்கு அருகே இருந்தாலும், தமிழக எல்லைக்குள் இருக்கும் ஆரோவில் நகரத்தில் எந்தவிதக் கட்டுப்பாடும், பாதுகாப்பும் இல்லாமல் இருப்பதாகப் புகார்கள். தமிழக அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பலப்படுத்தினால்தான் இதுபோன்ற சட்ட விரோதச் செயல்களை தடுக்க முடியும் என்கிறார்கள்.
சரணடைந்த மன்னன்!
மு.க.அழகிரியின் படைத் தளபதிகளில் எஞ்சி இருப்பவர் மதுரை துணை மேயர் மன்னன், புறநகர் மாவட்டச் செயலாளர் மூர்த்தி ஆகியோர் மட்டுமே. பல்வேறு சிறைகளில் இருக்கும் கழகஉடன்பிறப்புகளை அண்ணன் பார்க்கச் செல்லும்போதெல்லாம் பக்க பலமாகப் போனார்கள் இவர்கள். இந்த நிலையில், அரசு வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன் வீட்டில் சோடா பாட்டில் வீசிய வழக்கு மற்றும் 52-வது வார்டு இடைத்தேர்தல் மோதல் வழக்கு போன்றவற்றில் மன்னனைக் கைது செய்ய போலீஸ் தீவிரம் காட்டியது. 26-ம் தேதி காலையில் அவர் கைது செய்யப்பட்டுவிட்டதாகக்கூட வதந்தி பரவியது. ஆனால் நீண்ட காலமாக, தான் பயன்படுத்தி வந்த செல் நம்பரைக்கூட மாற்றிவிட்டு, பதுங்கி இருந்தார் மன்னன். இதற்கிடையே, இந்த இரு வழக்குகளிலும் முன்ஜாமீன் கேட்டு அவர் தொடர்ந்திருந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கீழ் நீதிமன்றத்தில் சரணடைந்து முன்ஜாமீன் பெறுமாறு உத்தரவிட்டது.
சரண் அடைவதற்கு முந்தைய நாளான 26-ம் தேதி மாலையில் நடந்த தி.மு.க. ஆலோசனைக் கூட்டத்துக்கு ரகசியமாக வந்த மன்னன், 'மதுரை மாநகராட்சியில் 90 வார்டுகள் வரை நாம் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது. காரணம், ஒவ்வொரு வார்டிலும்  1 கோடி முதல்
 3 கோடி வரைக்கும் திட்டப் பணிகளை நிறைவேற்றி இருக்கிறோம். 'தேர்தல் வேலை செய்தால் போலீஸார் கைது செய்துவிடுவார்கள்’ என்று கட்சியினர் பயப்பட வேண்டாம். ஜாமீனில் வந்துவிட்டு, வழக்கை நீதிமன்றத்தில் நடத்த வேண்டியது இருக்கும். மற்றபடி, எந்தப் பிரச்னையும் இல்லை. நாளைக்கு நான் ஜாமீன் பெறுவதற்காக நீதிமன்றத்தில் சரணடையப்போகிறேன். அதற்குள் புதிதாக ஒரு வழக்குப் போட்டு போலீஸார் என்னைக் கைது செய்யவும் வாய்ப்பு இருக்கிறது!' என்று பேசினார்.
மறுநாள் மதியம் ஒரு வழக்கிலும், மாலையில் மற்றொரு வழக்கிலும் சரண் அடைந்து, நிபந்தனை ஜாமீன் பெற்ற மன்னன், சுமார் 2 மணி நேரம் மதுரை மாவட்ட நீதிமன்றத்திலேயே இருந்தார். ஆனால், அவர் பயந்தபடி எந்தக் கைது நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்போதைக்கு மன்னன் தப்பி இருந்தாலும்கூட, தேர்தல் நெருக்கத்தில் எங்கு அடிதடி நடந்தாலும் முதலில் அவர்தான் கைது செய்யப்படுவார் என்கிறது போலீஸ் வட்டாரம்.

கழுகார் பதில்கள்

வரதராஜன், கோவை.
 முக்கிய அரசியல் கட்சியில் இருந்து முழுமையாக விலக நினைக்கும் எனக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
கண்ணதாசனின் 'வனவாசம்’ படியுங்கள்! ஓர் அரசியல் கட்சியில் இருந்து... தான் விலகிய கதையை விவரித்த கண்ணதாசன் அதன் கடைசி வரிகளை இப்படி வடித்தார்..
'அவன் நெஞ்சு நிம்மதி அடைந்தது! கண்மூடித்​தனமான அவனது அரசியல் வனவாசம் முடிந்து​விட்டது! காட்டுக் குரங்குகளிடம் இருந்து அவன் விடுதலை பெற்றுவிட்டான்! சின்னஞ் சிறிய கூண்டுக்குள்ளே முடங்கிக்கிடந்த அந்தப் பறவை, பரந்த வானத்தில் எழுந்து பறக்கத் துவங்கியது! சபலத்துக்கும் சலனத்துக்கும் ஆட்பட்ட கோழை மனிதர்களை 'தலைவர்’ என்று போற்றிப் பாடிய அவன் பாட்டு முடிந்துவிட்டது! சமுதாயத்தில் மூன்றாந்தர மனிதர்களோடு அவனுக்கு இருந்த உறவு அறுந்துவிட்டது! அர்த்தமில்லாமல் அவன் வளர்த்துக்கொண்டிருந்த வெறி தணிந்துவிட்டது! ஒரு நெடுஞ்சாலைக் கொள்ளைக் கூட்டத்திடம் இருந்து அந்த அப்பாவி மனிதன் தப்பி வெளியே வந்துவிட்டான். பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த பொருளற்ற கூட்டத்தில் இருந்து அவன் புதிய உலகத்துக்கு வந்துவிட்டான்!’ - இது வனவாசத்தின் கடைசிப் பக்கம். நீங்கள் முதல் பக்கத்தில் இருந்து படிக்க ஆரம்பியுங்கள்!
 சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.
சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலில் முக்கியக் கட்சிகள் தனித்துப் போட்டியிடாதது ஏன்?
கருணாநிதியும் ஜெயலலிதாவும் போட்டியிடும் தேர்தலில் தனியாக நிற்பார்களா என்ன? அது அவர்கள் உட்காரப்போகிற நாற்காலி என்பதால் ரிஸ்க் எடுக்க மாட்டார்கள். பல கட்சிக் கூட்டணியை கெஞ்சிக் கெஞ்சி அமைப்பார்கள். ஆனால், உள்ளாட்சித் தேர்தல்... யாரோ... எவரோ... தலை எழுத்து. அதனால்தான் இத்தகைய தனி அணி முடிவு!
வே.பாலமுருகன், கெஜல்நாயக்கன்பட்டி.
விஜயகாந்த் இனி எப்படி இருக்க வேண்டும்?
  இதுவரை எப்படி இருந்தாரோ... அப்படி இருக்கக் கூடாது. 'தனக்கு டயலாக் இருக்கிற அன்றைக்கு மட்டும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போவது மாதிரி, தான் பேச வேண்டிய அன்று மட்டும் சட்டமன்றத்துக்குச் சென்றார். மக்கள் தங்களது பிரதிநிதியாக தினமும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவரை அனுப்பி வைத்தார்கள். 'அம்மா’வைப் புகழ்வது மட்டும்தான் நடக்கிறது என்றால்... ஆளும் கட்சி அதைச் செய்யத்தான் செய்யும். அனைத்தையும் சகித்து... 'நாம் வருங்காலத்தில் இப்படி எல்லாம் நடந்துகொள்ளக் கூடாது’ என்ற வைராக்கியத்தை பெற்றுக்கொள்வதற்காவது விஜயகாந்த்துக்கு இந்த அனுபவம் பயன்படும்.
இதுவரை ஒரு கூட்டணிக்குக் கட்டுப்பட்டு இருந்தார். இப்போது அவர் சுதந்திரமாகச் செயல்படலாம். 'ரமணா’வை நிஜத்தில் நடத்திக் காட்டினால் ரகளையாகத்தானே இருக்கும்!
மு.கல்யாணசுந்தரம், மேட்டுப்பாளையம்.
எதற்கெடுத்தாலும் உண்ணாவிரதம் என்கிறார்களே... நாடு காந்திய வழிக்குத் திரும்பிவிட்டதா?
எந்த அறிவிப்பும்... ஷாமியானாவும்... போட்டோவுக்கு போஸ் இல்லாமலும்... நித்தமும் லட்சக்கணக்கான ஏழை மக்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்களே... அவர்களையும் காந்திய வழியில் செல்வதாகவா சொல்வீர்கள்? 'தாடி வைத்தவர் எல்லாம் தாகூர் அல்ல’ என்பார்கள். அதைப் போல உண்ணாவிரதம் இருப்பவர் எல்லாம் காந்திய வழி செல்பவர் அல்ல. காந்தியத்தின் சிறு பகுதிதான் உண்ணாவிரதம். 'உன்னுடைய லட்சியம் எவ்வளவு உயர்வானதாகக்கூட இருக்கலாம். ஆனால், அதை அடைவதற்கு நேர்மையான வழிமுறை வேண்டும்’ என்பதுதான் காந்தியத்தின் அடிப்படை. அதை எத்தனை பேர் பின்பற்றுகிறார்கள் எனப் பாருங்கள்!
 அம்மா ப்ரியன், சிந்தாமணி.
மறைந்த தலைவர்களின் நினைவு நாள் அல்லது பிறந்தநாள் ஊர்வலங்களில் கலவரம் வெடிப்பதற்கு யார் காரணம்?
நிச்சயமாக அந்தத் தலைவர்கள் காரணம் அல்ல! அந்தத் தலைவர்களுக்கு உண்மையில் அஞ்சலி செலுத்த வருபவர்களும் காரணமாக இருக்க மாட்டார்கள்! சுய வெறுப்பு, வேண்டாத கோபதாபங்கள் கொண்ட சில தனிமனிதர்கள் இந்தக் கலவரங்களுக்குக் காரணமாக இருக்கிறார்கள். இப்படிப்பட்ட பொதுமக்கள் இருப்பது கஷ்டம். போலீஸில் இருப்பது துரதிர்ஷ்டம்!
 சீர்காழி சாமா, தென்பாதி.
உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்துக்கு தி.மு.க. சார்பில் நடிகர் வடிவேலு வருவார் என்று எதிர்பார்க்கலாமா?
உமக்கென்ன, தென்பாதியில் ஹாயாக உட்கார்ந்து கேட்டுவிட்டீர்! அவஸ்தை அத்தனையும் வடிவேலுக்குத்தானே! விகடன் மாணவர் பயிற்சித் திட்டத்தில் பேச வந்த வடிவேலு, 'அந்தக் கடையை நான் எப்பவோ மூடிட்டு, லைட்டை ஆஃப் பண்ணிட்டு, ஷட்டரையும் க்ளோஸ் பண்ணிட்டேன்!’ என்று சொல்லிவிட்டார். எனவே, வடிவேலு வர மாட்டார். நம்பாதீர்கள்!
 தே.மணிவண்ணன், வடலூர்.
அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் நிறைய முறைகேடுகள் நடப்பதாகத் தகவல்கள் வருகின்றன. அதைத் தட்டிக் கேட்க ஆள் இல்லையா?
இதுவரையிலும் அரசுப் பணியாளர் தேர்வாணை​யத்தை லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை செய்ய முடியாது. ஆனால், ஒரு மாதத்துக்கு முன்பு, தேர்வாணையத்தையும் விசாரிக்கலாம் என்று கொண்டுவந்துவிட்டார்கள். இது முதல் நல்ல விஷயம்!
முதல் வழக்கு ஒன்று ஃபைல் ஆகி விசாரணையைத் தொடங்கிவிட்டார்கள். இது இரண்டாவது நல்ல விஷயம்!
தேர்வாணையத் தேர்வுகளை எழுதும் மாணவர்களே தங்களுக்குள் ஒரு சீக்ரெட் டீம் வைத்து, இம்மாதிரியான பணப் பரிமாற்றங்களைக் கண்​காணிக்க ஆரம்பித்துள்ளார்கள். இது மூன்றாவது முன்னேற்றம்!
 எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.
தமிழக காங்கிரஸ் - தே.மு.தி.க. ஐக்கியம் ஏற்படுமா?
அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் இது சாத்தியம் ஆகலாம்!
 எஸ்.தியாகராஜன், மதுரை-2.
இயந்திர வாக்குப்பதிவை முன்பு எதிர்த்த முதல்வர், இப்போது ஏற்றுக்கொண்டுவிட்டாரா?
அதெல்லாம் எதிர்க் கட்சியாக இருக்கும்போது! ஆளும் கட்சியாக இருக்கும்போது அந்தக் கவலை எல்லாம் எதற்கு?

''பிரச்னையைக் கிளப்புவது பிரணாப் முகர்ஜிதான்!

விழி பிதுங்க வைக்கும் பிரதமர் நாற்காலி
டெல்லி காங்கிரஸ் கட்சிக்குள் உச்ச கட்டப் பனிப் போர் நடக்கிறது.
2ஜி விவ​காரத்​தில் மத்திய அமைச்சர் ப.சிதம்​பரத்தின் தலை உருளத் தொடங்கிவிட்டது. 'அலைக்கற்றைக்கு விலை நிர்ணயித்ததில் சிதம்பரத்துக்கும் பங்கு உண்டு!’ என்று சொல்லி சில ஆவணங்களை நீதிமன்றத்தின் முன் வைத்திருக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி. இந்த நிலையில், மத்திய நிதித் துறை அமைச்சகத்தின் துணை இயக்குநரான பி.ஜி.எஸ்.ராவ் என்பவர் ஸ்பெக்ட்ரம் ஃபைலில், 'ஏலம் மூலம் விற்பனை செய்ய வேண்டும் என்று சிதம்பரம் வலியுறுத்தி இருந்தால், ஊழலே நடந்து இருக்காது' என்று குறிப்பிட்டு இருப்பது முக்கிய ஆதாரமாக இவர்கள் கையில் இருக்கிறது. இதையே காரணமாக வைத்து சிதம்பரத்தை ராஜினாமா செய்யச் சொல்லி பி.ஜே.பி. உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் போராடி வருகின்றன.
இந்த நிலவரம் குறித்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் ஒருவரிடம் பேசியபோது, ''பிரதமர் பதவியைக் குறிவைத்து குழி பறிப்பு வேலைகள் நடக்கின்றன. ராகுல் காந்தி அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில்தான் முன்னிலைப்படுத்தப்படுவார். அதன் பிறகு, எந்தத் தலைவராலும் முக்கியப் பதவிகளுக்கு வரவே முடியாது. அதை உணர்ந்து, இப்போதே பிரதமர் நாற்காலியில் உட்கார்ந்துவிட வேண்டும் என்று சிலர் துடிக்கிறார்கள். எந்த நேரமும் தனது பதவியை ராஜினாமா செய்ய பிரதமர் மன்மோகன் சிங் தயாராக இருக்கிறார். அப்படி ஒரு சூழ்நிலை வந்தால், யார் பிரதமர் என்பதில்தான் போட்டி. ராஜீவ் காந்தி காலத்தில் இருந்தே இன்னமும் பிரதமர் போட்டியில் இருக்கிறார் பிரணாப் முகர்ஜி. இவருக்கென்று ஒரு லாபி செயல்படுகிறது. அனைத்துத் துறைகளிலும் அவருக்காகப் புகுந்து விளையாடுகிறார் சோனியாவின் அரசியல் ஆலோசகரான அகமது படேல். ஆனால், பிரதமர் அலுவலகம், ப.சிதம்பரம் மற்றும் ஏ.கே. அந்தோணி ஆகியோரின் துறைகளுக்குள் அகமது பட்டேலால் மூக்கை நுழைக்க முடியவில்லை. அந்த அளவுக்கு அவர்கள் அகமது பட்டேலுக்கு செக்போஸ்ட் வைத்திருக்கிறார்கள்.
இன்னொரு பக்கம், சோனியாகாந்தி குடும்பம் சார்பில் பிரதமர் வேட்பாளராக ப.சிதம்பரத்தை முன்னிறுத்த நினைக்கிறார்கள். அதனால் ப.சிதம்பரத்தை பிரதமர் போட்டியில் இருந்து ஓரங்கட்டும் விதத்தில் ஸ்பெக்ட்ரம் ஊழலில் அவரை சம்பந்தப்படுத்த சிலர் சதி செய்கிறார்கள். டெல்லியில் இப்போது இதுதான் நடக்கிறது...'' என்றார்.
ப.சிதம்பரத்தின் ஆதரவாளரும் கடலூர் தொகுதி எம்.பி-யுமான கே.எஸ்.அழகிரியிடம் இது குறித்துப் பேசினோம்.
''சீதையைப் போன்று சிதம்பரம் தூய்மையானவர். சோனியாவுக்கும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் உற்ற துணையாக இருக்கிறார். சிதம்பரத்தைச் சிதைத்தால், அவர்கள் இருவரையும் சிதைத்துவிடலாம் என ஒரு தரப்பு கருதுகிறது. அமைச்சர் ப.சிதம்பரம் ஏதாவது முக்கிய முடிவு எடுக்க வேண்டும் என்றால், பிரணாப் முகர்ஜியின் அறைக்குப் போய் ஆலோசனை நடத்திவிட்டு வருவார். அந்த அளவுக்கு சீனியாரிட்டிக்கு மரியாதை கொடுப்பார். 2007-ல் வெளியுறவுத் துறை அமைச்சராக பிரணாப் முகர்ஜி இருந்தார். அப்போது, நிதி அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தார். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு சம்பந்தப்பட்ட சிறப்பு அதிகாரம்கொண்ட அமைச்சரவைக் குழுவின் தலைவர் பதவியில் பிரணாப் இருந்தார். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு கொள்கையில் அதன் விலை மற்றும் அனுமதி வழங்குவது என்பதில் ஒளிவு மறைவற்ற ஏல நடைமுறையைத் தொலைத் தொடர்பு அமைச்சகம் பின்பற்ற வேண்டும் என்று பிரணாப் சொன்னார். அதை ப.சிதம்பரமும் ஏற்றுக்கொண்டார். ஆனால், தொலைத் தொடர்புத் துறை அமைச்சகமோ, பழைய ஏல முறையைப் (பி.ஜே.பி. அரசு நடைமுறை) பின்பற்றும்படி ட்ராய் சொன்ன கருத்தையே ஏற்றுக்கொள்ளப்போவதாக கொள்கை முடிவு எடுத்துவிட்டது. இப்படித்தான், பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம் இருவரது கருத்தையும் தொலைத் தொடர்பு அமைச்சகம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு துறையின் கொள்கை முடிவில் இன்னொரு துறை அமைச்சர் தலையிட இயலாது என்பதுதான் நடைமுறை. இப்படி இருக்கும்போது, இப்போது சிதம்பரத்தை மட்டும் குற்றம் சாட்டுவதன் மர்மம் புரியவில்லை. சிதம்பரத்தை இப்போது குற்றம் சொல்பவர்கள், விலை நிர்ணயம் பற்றிய அமைச்சரவையின் குழுவின் தலைவர் பொறுப்பில் இருந்த பிரணாப் முகர்ஜி மீதும் குற்றம் சுமத்த வேண்டியதுதானே? யாராவது ஓர் அதிகாரி, 'பிரணாப் முகர்ஜி இன்னும் அழுத்தமாகத் தனது கருத்தைச் சொல்லி இருந்தால் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஊழலே நடந்திருக்காது’ என்று ஏதாவது ஒரு கோப்பில் எழுதி இருந்தால், 'பிரணாப் முகர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும்' என்று பி.ஜே.பி-யும் ஜெயலலிதாவும் கோரிக்கை வைப்பார்களா?
நிதித் துறையின் சாதாரண லெவலில் உள்ள ராவ் எழுதி இருப்பது, ஓர் ஆலோசனைதான். அரசுக் கோப்பில் ஆலோசனை எழுதும் அதிகாரம் படைத்தவரா அந்த அதிகாரி என்பதே கேள்விக்குறி. இவரின் ஆலோசனை என்பது நீதிமன்றம், விசாரணை அமைப்புகளின் ஆலோசனை போன்ற தரம் உடையது என்று கருத முடியாது. ஏனென்றால், ஸ்பெக்ட்ரம் வழக்கில் சி.ஏ.ஜி., நீதிமன்றம், சி.பி.ஐ. போன்ற எந்த அமைப்பும் ப.சிதம்பரத்தின் மீது எந்தக் குறையையும் கூறவில்லை. மாறாக, 2ஜி அனுமதி வழங்கப்பட்டதில் லஞ்சப் பணம் கை மாறி உள்ளதா? அதற்கான ஆதாரம் உள்ளதா என்பதைப் பற்றித்தான் விசாரணை நடந்து வருகிறது...'' என்றவரிடம், ''தமிழக முதல்வர் ஜெயலலிதாகூட ப.சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைக்கிறாரே?'' என்று கேட்டோம்.
''கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல் எறிகிற வேலையைத்தான் ஜெயலலிதா செய்கிறார். பெங்களூருவில் நடக்கும் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கே போகாமல் 10 வருடங்களாக இழுத்தடித்து வரும் அவர் சிதம்பரத்தைப்பற்றிக் கூறுவது எந்த வகையில் நியாயமோ?'' என்றார்.
கவுன்சிலர் லெவலில் இருந்து பிரதமர் பதவி வரை நடக்கிறதே காங்கிரஸ் போராட்டம்!

கிரேடு சிஸ்டம்... ஜாக்கிரதை!

மாநில பாடத் திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு அடுத்த கல்வி ஆண்டில் இருந்து கிரேடு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 'கல்வி கற்கும் மாணவர்கள் மதிப்பெண்களைப் பார்த்து மனம் வெறுத்துப்போகும் நிலை இனி இருக்காது. மனப்பாடம் செய்து மதிப்பெண்கள் பெறும் நிலையை மாற்றி விளையாட்டு, தனித்தன்மை போன்றவை யும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும். இதுதவிர ஒரு பருவத்தில் படித்த பாடத்தை ஆண்டு முழுவதும் ஞாபகம் வைத்துக்கொள்ளும் நிலையும் இல்லை’ என்று அரசு அறிவித்துள்ளது.
2 வகுப்புக்கும் இந்த மதிப்பெண் முறையை அரசு ஒழித்துக் கட்டினால்தான், மாணவர்கள் எவ்வித பயமும் இன்றி இந்த கிரேடு சிஸ்டத்தில் படிக்க முடியும். எதிர் காலத்தில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கு அகில இந்திய அளவில் பொதுத்தேர்வை சந்திக்க வேண்டிய சூழல் நம் மாணவர்களுக்கு ஏற்படும் என்பதால் அதனை சமாளிக் கும் விதமாக மாணவர்களின் திறமையை வெளிக் கொணர வேண்டும்.
இந்த கிரேடு முறையை ஒரு மாபெரும் பொறுப்பாக மாணவர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் பார்க்க வேண்டுமே தவிர, மதிப்பெண்களில் இருந்து தப்பிக்கும் விதமாக இருத்தல் கூடாது. அதனால் முறையான அறிவுறுத் தல்களையும் வழிகாட்டுதல்களையும் அரசு மேற்கொள்ள வேண்டும். இல்லை என்றால் ஏ1 என்றால் உயர்வானது, இ2 என்றால் மக்கு என்ற நிலை மீண்டும் ஏற்பட்டு கிரேடு சிஸ்டம் அறிமுகப்படுத்தியதற்கே அர்த்தம் இன்றிப் போய்விடும்.
எஸ்.சுரேஷ்குமார், திருச்சி.

சென்னைக்குள் ரவுண்ட் வரும் சி.பி.ஐ.!

அட்டாக் ஆபரேஷன்!
சாணக்கியபுரியாம் டெல்லியின் சதிராட்டத்தில் இப்போது சிதம்பரமும் தயாநிதி மாறனும்தான் இருதலைக் கொள்ளி எறும்புகளாகத் துடிக்கிறார்கள். சிக்கலில் இருந்து சிதம்பரம் விடுபடுவதற்கான வாய்ப்பு இல்லை என்பதும், தயாநிதி மாறனை நோக்கியும் சி.பி.ஐ. பார்வை வலுக்கிறது என்பதும்தான் கடந்த இரண்டு மூன்று நாட்களாகத் தகிக்கும் நிலவரம்!
2ஜி அலைக்கற்றை தொடர்பான வழக்கு டெல்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சைனி முன் நடந்து வந்தாலும்... அந்த வழக்கின் வெளி விவகாரங்கள் அதிகமாக சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகின்றன. சுப்ரீம் கோர்ட்தான் இந்த வழக்கின் தட்ப வெப்ப நிலையைத் தீர்மானித்து வருகிறது. வழக்கின் ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்டை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. தாக்கல் செய்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த வாரம், ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். 'ஏலம் எடுக்கும் முறை வேண்டாம், முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற விதிமுறையைத் தொலைத் தொடர்புத் துறை பின்பற்றியபோது, நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் நினைத்து இருந்தால் அதனைத் தடுத்திருக்க முடியும்!’ என்று நிதி அமைச்சகத்தின் ரகசியக் கடிதம் ஒன்றைத் தனது மனுவுக்கான ஆதாரமாக சுவாமி கொண்டுவந்தார். ''மத்திய நிதி அமைச்சக அதிகாரியே ஒப்புக்கொண்டதைவைத்துப் பார்த்தால்... சிதம்பரத்துக்குத் தெரியாமல் எதுவும் நடந்து இருக்க வாய்ப்பு இல்லை. எனவே, இந்த வழக்கில் சிதம்பரத்தையும் சேர்த்து விசாரிக்க வேண்டும்!'' என்று சுவாமி சொன்னார். இதை மத்திய அரசு வழக்கறிஞர் பி.பி.ராவ் கடுமையாக எதிர்த்தார். ''எப்போது பாட்டியாலா கோர்ட்டில் இந்த வழக்கின் விசாரணை தொடங்கிவிட்டதோ... அப்போதே சுப்ரீம் கோர்ட்டுக்கு இது தொடர்பாக மேற்கொண்டு விசாரிக்க உரிமை இல்லை!'' என்று அவர் வாதிட்டார். ஆனால், இதை சுப்ரீம் கோர்ட் ஏற்கவில்லை. எனவே, மேற்கொண்டு அனல்பறக்கும் விவாதங்கள் கடந்த செவ்வாய், புதன்கிழமைகளில் நடந்தன.
இதில் சிதம்பரம், தயாநிதி மாறன் ஆகிய இருவரது தலைகளும் அதிகமாக உருட்டப்பட்டன. சுவாமியின் மனுவுடன் தனது மனுவையும் இணைத்துக் கொண்டார் பிரசாந்த் பூஷண். ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பான வழக்குகளைத் தொடர்ந்து போட்டு வருபவர் இவர்தான். ''முறையான பாதையில் சி.பி.ஐ. விசாரணை செல்லவில்லை. குற்றச்சாட்டு பதிவு செய்ய வேண்டிய பலரிடம் இன்னமும் விசாரணையே செய்யப்படவில்லை. இதில் இருந்து சி.பி.ஐ. விசாரணையில் நேர்மை இல்லை என்று தெரிகிறது. இந்த ஊழல் நடந்த காலகட்டத்தில் ஆ.ராசா தொலைத் தொடர்புத் துறையை கவனித்து வந்தார். அவர் தனக்கு வசதியாக எந்தெந்த விதிமுறைகளை மாற்றினாரோ, அதை நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் ஏற்றுக்கொண்டுள்ளார். இது உண்மைதான் என்பது நிதி அமைச்சகத்தின் குறிப்பில் இருந்து தெளிவாகத் தெரிகிறது. இன்னொரு முக்கியமான தவறையும் சிதம்பரம் செய்துள்ளார்.
உரிமம் பெற்ற நிறுவனங்கள் தங்களது சேவையைத் தொடங்குவதற்கு முன்பே, தங்களது பங்குகளை விற்பனை செய்வதற்கு சிதம்பரம் அனுமதி வழங்கி உள்ளார். ஆனாலும் அவர் மீது சி.பி.ஐ. இன்னமும் விசாரணையைத் தொடங்கவில்லை. அவரது சாட்சியம்கூடப் பதிவு செய்யப்படவில்லை. சி.பி.ஐ. அமைப்பின் உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதுதான் இதற்குக் காரணம்!'' என்று பொரிந்து தள்ளினார் பிரசாந்த் பூஷண்.
இதை கவனமாகக் கேட்டுக்கொண்டு இருந்த சி.பி.ஐ. வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் மெது வாக எழுந்து சீல் இட்ட ஒரு கவரை நீதிபதியிடம் கொடுத்தார். தயாநிதி மாறனின் தலைவிதி அதில் இருந்தது.
அதை நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வீ, ஏ.கே. கங்குலி ஆகிய இருவரும் படித்துக் கொண்டு இருக்கும்போதே வக்கீல் வேணுகோபால் தனது வாதங்களை வைக்கத் தொடங்கினார்.
''இந்த வழக்கில் தயாநிதி மாறனுக்கு உள்ள தொடர்பு குறித்த முதல் நிலை விசாரணை முடிந்துவிட்டது. அடுத்த சில நாட்களில் வழக்கு பதிவு செய்யப்படும். இதே வழக்கில் எஸ்ஸார் நிறுவனத்தின் மீது விசாரணை நடந்து வருகிறது. இது முடிய இன்னும் இரண்டு வாரங்கள் ஆகும். வழக்கில் தொடர்புடைய ஒவ்வொருவர் மீதும் வரிசையாக முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்வோம்...'' என்று சொன்னார். இது புதன்கிழமை நடந்த அதிரடித் திருப்பமாக ஆகிப் போனது.
சிதம்பரம் கதை என்ன ஆகும் என்று தீராத படபடப்பில் இருந்த மீடியாக்களுக்கு தயாநிதி மாறன் இரையை எடுத்துப் போட்டது சி.பி.ஐ...
''பிரசாந்த் பூஷண், சி.பி.ஐ-யின் நடவடிக்கைகள் தொடர்பாக பலத்த சந்தேகக் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்ததும், தங்களது நடவடிக்கையில் எந்த விதமான ஒளிவு மறைவும் இல்லை என்பதை விளக்கியாக வேண்டிய நெருக்கடி சி.பி.ஐ-க்கு வந்தது. தயாநிதி மாறன் மீது விரைவிலேயே எஃப்.ஐ.ஆர். போடப் போகிறோம் என்பதைச் சொல்வதன் மூலமாக, சுப்ரீம் கோர்ட் கோபத்தைக் கொஞ்சம் தணிக்கலாம் என்றும் சி.பி.ஐ. நினைத்து இருக்கலாம்...'' என்கிறார்கள். எப்படிப் பார்த்தாலும் இன்னும் நான்கைந்து நாட்களுக்குள் தயாநிதி மாறன் மீது முழுமையான எஃப்.ஐ.ஆரை சி.பி.ஐ. பதிவு செய்துவிடும் என்றே டெல்லியில் பேசப்படுகிறது.
ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு கைமாற்றிவிடுவதில் தயாநிதி மாறனின் பங்கு என்ன என்பதுதான் இந்த வழக்கின் சாராம்சம். ஏர்செல் நிறுவனத்தின் உரிமையாளராக இருந்த சிவசங்கரன், மேக்ஸிஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் ஆகியோரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வாக்குமூலங்களை வாங்கிவிட்டது. தயாநிதி மாறனிடமும் முதல் கட்ட விசாரணை நடந்து முடிந்துவிட்டது. எஃப்.ஐ.ஆர். பதிவு செய்த பிறகு அதிகாரப்பூர்வமாக தயாநிதி மாறனிடம் வாக்குமூலங்களை சி.பி.ஐ. வாங்கப்போகிறது. எனவே, அடுத்த பத்து நாட்களில் கிடுகிடு திருப்பங்கள் அரங்கேறலாம் என்பதே டெல்லி வட்டாரம் தரும் தகவல்!
இந்த விவாதங்கள் சுப்ரீம் கோர்ட்டில் நடந்து கொண்டிருக்கும் போது டெல்லியில் இருந்து சென்னை நோக்கி வந்த விமானத்தில் ஆறு பேரைக் கொண்ட சி.பி.ஐ. அதிகாரிகள் குழு வந்தது. 'எப்போதும் தயார் நிலையில் இருங்கள்’ என்று அவர்களுக்கு சி.பி.ஐ. மேலிடம் உத்தரவு இட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தயாநிதி மாறன் விஷயத்தில் சி.பி.ஐ. இப்போது திடீர் வேகம் எடுத்திருப்பதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. ப.சிதம்பரத்தைக் குறிவைத்து எதிர்க் கட்சிகளும் மீடியாக்களும் தாக்குதலைத் தொடங்கி உள்ளன. இது சோனியா, பிரதமர் மற்றும் மத்திய ஆட்சிக்கே பெரிய நெருக்கடியாக மாறி உள்ளது. இதைத் திசை திருப்புவதற்கு தயாநிதி அஸ்திரத்தை சி.பி.ஐ. விட்டிருக்கலாம் என்கிறார்கள். தயாநிதி மீது எஃப்.ஐ.ஆர்., விசாரணை, கைது என்று காட்சிகள் மாறினால், பிரதமர், சிதம்பரம் ஆகியோரைப்பற்றிப் பேசுவது குறையும் என்று நினைக்கிறார்கள்.
''தயாநிதி மாறன், ப.சிதம்பரம் ஆகிய தனி மனிதர்கள் எங்களுக்கு முக்கியம் அல்ல. இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைத்து சக்திகளும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும். அதுவரை நாங்கள் ஓய மாட்டோம்!'' என்று சுப்பிரமணியன் சுவாமியும் பிரசாந்த் பூஷணும் சொல்வதைப் பார்த்தால்... ப.சி-க்கும் தயாநிதி மாறனுக்கும் வந்திருப்பது சாதாரண சிக்கல் அல்ல!

ஆளும் கட்சியைத் திட்டினா வீட்டு வாசலுக்கு போலீஸ் வரும்!

மயிலையில் மெளனம் கலைத்த விஜயகாந்த்!
தேர்தல் பிரசாரம் தொடங்க எம்.ஜி.ஆருக்கு ராசியான இடம் மயிலை, மாங்கொல்லை. அதே சென்டிமென்ட்டைக் கையில் எடுத்து, உள்ளாட்சிப் பிரசாரத்துக்கு பிள்ளை​யார் சுழி போட்டார் விஜயகாந்த்.
கடந்த 27-ம் தேதி மயிலை மாங்கொல்லையில் தே.மு​.தி.க. உள்ளாட்சி வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டம். அ.தி.மு.க-வுக்கு எதிராக இதுவரை அடக்கி வாசித்த விஜயகாந்த், அனல் கக்குவார் என்ற எதிர்பார்ப்​பில் ஏகக் கூட்டம்.
முதலில் பேசிய மேயர் வேட்பாளர் வேல்முருகன், வாய்ப்பு கொடுத்த விஜயகாந்த், பிரேமலதாவை 'அம்மை அப்பனாக’ப் புளகாங்கிதப்பட விஜயகாந்த் முகத்தில் உற்சாகம் கரை புரண்டது.
அடுத்து வந்த பிரேமலதா, ''சுயநலம் இல்லாமல் ஆரம்பிக்​கப்பட்ட அரசியல் கட்சி, இன்று ஒட்டு​மொத்த சுயநலத்தின் உருவமாகக் காட்சி அளிக்கிறது. தி.மு.க. பிடியில் இருந்து தமிழக மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணிவைத்தோம். மக்களே, முரசு சின்னத்தில் நீங்கள் வாக்களித்தால், லஞ்சம் ஊழல் இல்லாத ஒரு சுத்தமான மாநகராட்சியை கேப்டன் உங்களுக்கு உருவாக்கித் தருவார். போட்ட கட்சிகளுக்கே ஓட்டு போட்டு நீங்கள் அனுபவித்தது போதும். நரகமாக இருக்கும் சென்னையை உண்மையான நகரமாக மாற்றும் சக்தி கேப்டன் ஒருவருக்கு மட்டுமே உண்டு. நானும் எனது முழு உழைப்பைக் கொடுத்து, இந்த இயக்கத்தை அனைத்து மட்டங்களிலும் ஆட்சி பீடத்தில் ஏற்றுவேன். எங்களைப் பார்த்து குடும்ப அரசியல் என்று சிலர் சொல்கிறார்கள். ஆட்சியில் இருந்துகொண்டு அதிகார துஷ்பிரயோகம் செய்வதற்குப் பெயர்தான் குடும்ப அரசியல். எனவே, யார் என்ன சொன்னாலும், அதைப்பற்றி நான் கவலைப்படப்போவது இல்லை. எனக்கு முன்பு பேசிய சிலர், ஒரே நாளில் கேப்டன் இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்தது பெரிய சாதனை என்றார்கள். ஒரு நாள் அல்ல... கேப்டன் நினைத்தால் ஒரு மணி நேரத்தில்கூட பெருங்கூட்டத்தைத் திரட்டுவார்...'' என்று முடிக்க விசில் சத்தம் எகிறியடித்தது.
விஜயகாந்த் மைக்கைப் பிடித்தார்.
''இன்னிக்கு நாட்டுல எல்லாருமே ஏமாத்துறாங்க. மக்களே... ஆட்சி, அதிகாரத்தை என்னிடம் கொடுத்துப் பாருங்க. உங்களைத் தங்கத் தட்டில் வைத்துப் பாதுகாப்பேன். இனி சம்பாதிச்சுப் புதுசா வீடு கட்டணும்கிற எண்ணமெல்லாம் எனக்குக் கிடையாது. எதை அனுபவிக்கணுமோ, எல்லாத்தையும் அனுபவிச்​சிட்டேன். பணத்தைப் பார்த்துட்டேன். புகழோட உச்சிக்குப் போனேன். இதுக்கு மேல என்ன வேணும்? இனி மக்கள்... மக்கள்தான் எனக்கு எல்லாமே. என்னால முடியாட்டி, என் புள்ளய நடிக்கவைச்சாவது, அவன் சம்பாதிக்கிறத உங்களுக்குச் செலவு பண்ணுவேன். இந்த விஜயகாந்த் சொன்னா சொன்னதுதான். அதுல மாற்றுக் கருத்தே கிடையாது. பல பிரச்னைகள் இருக்கு. ஆனா உங்களுக்கு நன்மைகள் வந்து சேரணும்கிறதுக்காகத்தான் நான் அமைதி காத்தேன். நான் எதைப் பத்தியும் பேசாம இருந்ததுக்குக் காரணம், உங்களுக்கு நல்லது நடக்கணும்னுதான். கடல் அலை சில நேரம் அமைதியா இருக்கும். பார்த்தா ஒரு பக்கம் சுனாமியா வரும். அது எப்ப வேணாலும் வெடிக்கும். அது போலத்தான் இந்த விஜயகாந்த் இருக்குற அமைதி. உடனே தன்னைக் கடல்னு சொல்லிக்கிறார்னு சில பேரு சொல்வாங்க. இது என் அமைதிக்கு ஒருசின்ன விளக்கம். அவ்வளவுதான். இந்த அரசாங்கத்தை ஏன் எதுக்குன்னு உங்களால் கேட்க முடியாது. ரொம்பக் கேட்டீங்கன்னா... உங்க வீட்டைச் சுத்தி 150 போலீஸ் வந்து நிக்கும். ஆனால், அவர்கள் தலை எழுத்தை நிர்ணயிப்பது ஓட்டு ஒன்றுதான். யார் யார் ஆட்சி பீடத்தில் இருந்துட்டு ஏமாத்துறாங்களோ, அவுங்களுக்கு ஓட்டின் மூலம் வேட்டு வைங்க. 'கண்ணை நம்பாதே... உன்னை ஏமாற்றும்’னு ஒரு எம்.ஜி.ஆர். பாடல் உண்டு. அந்த பாட்டுல, 'நன்றி மறவாத நல்ல மனம் வேண்டும். என்றும் அதுவே என் மூலதனம் ஆகும்’னு ஒரு வரி வரும். மக்களே எங்கள் வேட்பாளர் வேல்முருகனை நீங்கள் மேயராகத் தேர்ந்தெடுத்தால், நாங்கள் நன்றி மறக்க மாட்டோம். நான் போராடிப் போராடித்தான் இந்த இடத்துக்கு வந்துருக்கேன். அந்தப் போராட்டத்துக்கு கைகொடுத்தது நீங்கதான். நானும் என் மனைவியும் 'மரியாதை’ படத்துக்காக வெளிநாடு போனப்ப, 'இது மாதிரி அழகா, நம்ம நாடு எப்பங்க மாறும்?’னு கேட்டாங்க. 'கூடிய சீக்கிரம் மாறும். அந்த மாற்றத்தை மக்கள் ஏற்படுத்துவாங்க!’ன்னு சொன்னேன். உண்மைதான் மக்களே. நீங்கள் மனது வைத்தால், கண்டிப்பாக மாற்ற முடியும். மதுவை ஒழிப்பேன்னு சொன்னவர், டாஸ்மாக் ஊழியர்களுக்கு சங்கம் ஆரம்பிச்சிருக்கார். தமிழ்... தமிழர்னு சொல்லிட்டு சில பேர் ஏமாத்துவாங்க. எந்தத் தமிழன் உங்களை கொள்ளை அடிக்கச் சொன்னான்? தமிழர்களே... தமிழர்களே... நான் கட்டுமரம். அதில் ஏறி நீங்க பயணம் செய்யலாம். நான் கவிழ்ந்துவிட மாட்டேம்பாரு. அவர் கவிழ மாட்டார். ஏறுறவங்களை கவுத்துடுவார். நம்பாதீங்க... ஆளும் கட்சி உள்ளாட்சிக்கு வந்தாத்தான் எல்லாம் பண்ணுவாங்கன்னு நீங்க நினைச்சா... அது தப்பு. அதிகாரத்தை பிரிச்சுப் பிரிச்சு கொடுங்க. அப்பத்தான் எல்லாம் நல்லபடியா நடக்கும்...'' என்று முடித்தார்.
'பின்னி எடுக்கிறாரே...’ என்று கலகலத்தபடி நகர்ந்தது கூட்டம்!

''இடைத் தேர்தலில் நிற்க வேண்டாம் என்று நினைத்தார் தலைவர்!''

ஸ்டாலின் சொன்ன ரகசியம்!
திருச்சி மேற்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கே.என்.நேருவுக்காக கடந்த 23-ம் தேதி, வேட்பு மனுத் தாக்கல் செய்துவிட்டுப் போன கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின், அடுத்த சுற்றில் மீண்டும் 27-ம் தேதி திருச்சிக்கு வந்தார். மகாளய அமாவாசை தினமான அன்று, திருச்சி மேற்குத் தொ​குதி தி.மு.க. தலை​மைத் தேர்தல் அலுவலகத்​தைத் திறந்து​வைத்த ஸ்டாலின், கலைஞர் அறிவாலயத்தில் தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தையும் நடத்தி முடித்தார். அடுத்து, குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் தி.மு.க. நிர்வாகிகளை சந்தித்து ஆறுதல் சொன்ன பின்னரே சென்னைக்குப் புறப்பட்டார்.
ஈரோட்டைச் சேர்ந்த கருணாநிதி என்பவர் கொடுத்த நில அபகரிப்பு வழக்குத் தொடர்பாக, அதற்குமுந்தைய தினம் மாலை 6 மணியில் இருந்து கூட்டம் நடந்த அன்றைய தினம் மாலை 6 மணி வரையில் நேருவை போலீஸார் கஸ்டடி எடுத்து விசாரிக்க... அதுபற்றிய தொண்டர்களுக்கு எந்தக் கவலையும் தொற்றிக்கொள்ளாமல் கவனமாகப் பார்த்துக்கொண்டார் ஸ்டாலின்!
கலைஞர் அறிவாலயத்தில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில், ''சிறையில் இருந்தபடியே வெற்றி பெற்றவர் என்ற சரித்திரத்தை நேரு உருவாக்குவார். ஜெயலலிதா ஆட்சியின் குறைகளை சுட்டிக்காட்டுவதற்காக சட்டமன்றத்துக்கு அவர் கட்டாயம் செல்வார்!''  என்​றெல்லாம் கட்சி நிர்​வாகிகள் பேசியதை கவனித்துக்கொண்டே மைக் பிடித்தார் ஸ்டாலின்.
''தி.மு.க-வின் எத்தனையோ திருப்புமுனைகளுக்கு சான்​றாகத் திருச்சி மாவட்டம் இருந்திருக்கிறது. நமது கழகம் முதன் முதலில் 1957-ம் ஆண்டுதான் தேர்தல் களத்தில் நின்றது. தேர்தலில் நிற்பது என்ற முடிவை எடுத்தது இதே திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில்தான். வாக்குப் பெட்டிகளை வைத்து, தொண்டர்களின் கருத்துகளை எழுதிப்போடச் சொல்லி, அதன் பிறகே அண்ணா அந்த முடிவை எடுத்தார். அந்தத் தேர்தலில் குளித்தலை தொகுதியில் தலைவர் கலைஞர் முதன்முதலில் தேர்தலில் நின்று ஜெயித்தார். 'வெற்றியைக் கண்டு வெறிகொண்டு அலையாதே. தோல்வியைக் கண்டு துவண்டுவிடாதே’ என்று அண்ணா அன்றைக்கே சொன்னார். எனவே, நாம் கடந்த தேர்தலில் அடைந்த தோல்வியைக் கண்டு துவண்டுவிடக் கூடாது. இப்போது நடைபெறுவது ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல் அல்ல; ஆட்சியில் இருக்கும் ஜெயலலிதா தனது ஆணவத்தை நிறுத்திக்கொள்வதற்கான தேர்தல்தான். எனவே, திருப்பு முனையை இந்தத் தேர்தலிலும் ஏற்படுத்த வேண்டும்.
இந்த இடைத்தேர்தலில் 'போட்டியிடலாமா வேண்டாமா?’ என்றுகூட தலைவர் முதலில் நினைத்தார். இன்னும் சொல்லப்போனால், 'போட்டியிட வேண்டாம்’ என்றே விரும்பினார். அதற்குக் காரணம்... இந்தத் தொகுதியில் சட்டமன்றத் தேர்தலில் வென்று, அமைச்சராகப் பொறுப்பேற்ற மரியம்பிச்சை, எம்.எல்.ஏ. பதவிகூட ஏற்காத நிலையில், அகால மரணம் அடைந்ததுதான். இறந்த அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாரையாவது வேட்பாளராக நிறுத்தி இருந்தால், தலைவர் நிச்சயம் போட்டியில் இருந்து விலகி இருந்திருப்பார். சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்தைப் புறக்கணித்ததோடு மட்டும் இல்லாமல், சிறுபான்மைச் சமூகத்தையும் புறக்கணித்து, யாரோ ஒரு நபரை வேட்பாளராக நிறுத்தி இருக்கிறார் ஜெயலலிதா. அதனால்தான் தலைவர் கலைஞர், நாமும் நிற்போம் என்ற முடிவுக்கு வந்தார். ஆகவே, யாரை நிறுத்தலாம் என திருச்சி மாவட்டத்தில் இருக்கும் நிர்வாகிகளை அழைத்து தலைவர் கேட்டார். அத்தனை பேரும், சிறையில் இருக்கும் நேருவையே நிறுத்தலாம் என்றனர். அதன் பேரிலேயே அவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கிறார். அவருக்கு வாழ்த்துச் சொல்ல கடலூர் மத்திய சிறைக்குச் சென்றேன். அவரிடம் தலைவரின் முடிவைச் சொன்னபோது, 'நான் எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் சிறையில் இருக்கத் தயார். என்னை வேட்பாளராக அறிவித்ததே எத்தனையோ முறை எம்.எல்.ஏ-வாக இருந்ததற்கு சமம்!’ என்றார்.
இந்த இடைத்தேர்தலில் எ.வ.வேலு தலைமையில் 10 பேர் கொண்ட தேர்தல் பணிக் குழு நியமிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் எல்லாம் உங்கள் பாதுகாப்புக்காகத்தான். ஆற்ற வேண்டிய பணிகளை நீங்கள்தான் ஆற்ற வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தலைவிட திருச்சி தேர்தலில்தான் என்னை அதிகம் ஈடுபடுத்திக்கொள்ள விரும்புகிறேன். இந்த இடைத்தேர்தலில் நாம் நிச்சயம் வெற்றி பெற்றே தீர வேண்டும். அப்போதுதான் ஆளும் கட்சியின் அராஜகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியும். சிறையில் உள்ள நமது வேட்பாளர் வந்தாலும் வராவிட்டாலும், நாம்தான் வேட்பாளர் என அனைவரும் கருதி வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்போடு வேலை செய்யுங்கள்!'' என்று பேசி முடித்தபோது...
''செய்து காட்டுகிறோம்...'' என்று உற்சாகமாகச் சொன்னபடி கலைந்தது தொண்டர்கள் கூட்டம்!
ஆர்.லோகநாதன், படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்
 இனி, அம்மா ஃபார்முலா!
தி.மு.க-வின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்ற அதே நாள், அதே நேரத்தில்... திருச்சி ரோஷன் மஹாலில் அ.தி.மு.க-வின் செயல்வீரர்கள் கூட்டமும் நடந்தது. செந்தில் பாலாஜி, செல்லூர் ராஜு, கோகுல இந்திரா, சிவபதி, வைத்திலிங்கம் உள்ளிட்ட 12 அமைச்சர்கள் கலந்துகொண்ட அந்தக் கூட்டத்தில், ''இடைத்தேர்தல்களில் இதுவரையில் அழகிரி ஃபார்முலாதான் இருந்து வந்தது. இனிவரும் தேர்தல்களில் நேர்மையான அம்மா ஃபார்முலா மட்டும்தான் இருக்கும்...'' என்ற தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் உதயகுமாரின் பேச்சுக்கு செம அப்ளாஸ்!

வாச்சாத்தி...

காட்டுக்குள் நடந்த காமவேட்டை... நின்று வென்ற நீதியின் சாட்டை..
ட்டப்பகலில் அநீதி நடந்ததாகவே இருந்தாலும் அதற்கு நீதி கிடைக்க எத்தனை தாமதங்கள் ஆகும் என்பதற்கு உதாரணம் வாச்சாத்தி. அவமானம், அடி வாங்கியது, பாலியல் பலாத்காரம் எல்லாம் சில நிமிடங்களில் நடந்து முடிந்திருக்கும். ஆனால் அந்த வேதனையைத் தாங்கி 20 ஆண்டுகள் இருந்த மக்களின் மனநிலையை என்னவென்று சொல்வது?
இன்று அந்தக் கிராமத்து மக்களுக்கு கிடைத்திருக்கும் தீர்ப்புக்குப் பின்னால் இருக்கும் வலிக்கு யார் என்ன பரிகாரம் காண்பது? குற்றவாளிகள் என்று சிலரைத் தண்டிப்பது மட்டுமே பரிகாரம் ஆகிவிடுமா? என்ற கேள்விகளுடன் வாச்சாத்தி வழக்கைப் பார்ப்போம்!
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுக் காவில் இருக்கும் ஒரு மலையடிவாரக் கிராமம் வாச்சாத்தி. கிராமத்தை ஒட்டியிருந்த சித்தேரி மலை களில் அன்றைய சூழலில் ஏராளமான சந்தனம் உள்ளிட்ட அரிய மரங்கள் அதிகம். அதிகாரிகள் சிலரின் துணையோடு மரக் கடத்தல் கும்பல் தொடர்ந்து அந்த மரங்களை வெட்டிக் கடத்தியது. மரங்களை வெட்டவும், ஓர் இடத்தில் சேகரிக்கவும் காடுகளைப்பற்றித் தெரிந்த ஆட்கள் அந்தக் கும்பலுக்குத் தேவைப்பட்டது. பொருளாதாரத்தில் நலிந்திருந்த வாச்சாத்தி கிராம மக்களுக்கு பண ஆசை காட்டி அந்தக் கடத்தல் புள்ளிகள் இந்தக் காரியத்தில் இறக்கிவிட்டுள்ளனர்.
ஒரு கட்டத்தில் இந்த விவகாரம் வெளிச் சத்துக்கு வர... முக்கியஸ்தர்கள் யாரும் சிக்கிவிடக் கூடாது என்று மொத்தக் குற்றங்களையும் வாச்சாத்தி கிராம மக்கள் மீது திணிக்க முயற்சித்தது அதிகார வர்க்கக்கும்பல். இதன் விளைவாக, கடந்த 1992-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் வனம், வருவாய் மற்றும் போலீஸ் துறைகளைச் சேர்ந்த 269 பேர் கொண்ட குழு வாச்சாத்திக்கு வந்து அதிரடி ரெய்டு நடத்தியது. தங்களைச் சுற்றி பின்னப்பட்ட சூழ்ச்சி வளையத்தைப்பற்றி மெதுவாகத் தெரிந்துகொண்ட கிராம மக்கள், ரெய்டுக்கு வந்த குழுவிடம் வாக்கு வாதம் செய்தனர். இதனால் வெகுண்ட அதிகாரிகள், அன்று ஒரு மிகப் பெரிய மனித உரிமை மீறலை அரங்கேற்றினார்கள். அது மனித சமூகத்தையே தலைகுனிய வைத்தது.
ரெய்டு என்ற பெயரில் வாச்சாத்தியையே சூறையாடியதோடு ஏரியில் பதுக்கிவைத்து இருந்த சந்தனக் கட்டைகளைப் பறிமுதல் செய்தனர். (இந்தக் கட்டைகள் அதிகாரிகளின் வஞ்சகத் திட்டத்தோடு அங்கே அடுக்கி வைத்தவை என்று பாதிக்கப்பட்ட தரப்பு கூறுகிறது). அதோடு நிற்காமல், பருவம் அடைந்த மற்றும் அடையாத 18 பெண்களை நள்ளிரவில் அந்த ஏரிக்கு தூக்கிச் சென்று, வார்த்தைகளில் சொல்ல முடியாத பாலியல் அராஜகத்தை வனத் துறையினர் அரங்கேற்றி யதாகவும் புகார் கிளம்பியது. இந்தக் கொடூரத்தை வருவாய் மற்றும் காவல் துறையினர் வெறுமனே கைகட்டி வேடிக்கை பார்த்ததாகவும் சாட்சியங்கள் தெரிவித்தன.
குரூரமான இந்த அத்துமீறல் சம்பவத்தை அதி காரிகள் தரப்பு மூடிமறைக்க நினைத்த நிலையில், கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் மூலம் இது வெளிச் சத்துக்கு வந்தது. ஆனாலும், வழக்குப் பதிவு செய்வதில் பல்வேறு முட்டுக்கட்டைகள் விழுந்தன. அன்று, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் நல ஆணைய தென் மண்டல ஆணையராக இருந்த பாமதி தலைமையிலான குழு, நேரடி விசாரணை நடத்தி அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட தரப்பு சி.பி.ஐ. விசாரணை வேண்டி உயர் நீதிமன்றத்தில் 1993-ல் மனு செய்ய... 1995-ம் ஆண்டு வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சி.பி.ஐ. விசாரணைக்குப் பின்,  269 பேர் கைதானர்கள். சி.பி.ஐ. மூலம் கோவையில் நடத்தப்பட்ட இந்த வழக்கு 1996-ம் ஆண்டில் கிருஷ்ணகிரி நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இறுதியாக 2008-ல், வழக்கு தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. தீவிரமாக நடந்து வந்த இந்த வழக்கைத் திசைதிருப்ப குற்றம் சாட்டப்பட்ட தரப்பு சட்ட உதவியோடு பல்வேறு தடைகளை ஏற்படுத்த முயன்றது. ஆனால், சில மாதங்களுக்கு முன்பு உயர் நீதிமன்றம் இந்த முயற்சிகளுக்குக் கண்டனம் தெரிவித்ததோடு, வழக்கை விரைவாக முடிக்கும்படியும் தர்மபுரி நீதிமன்றத்துக்கு அறிவுறுத்தியது.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் 54 பேர் தற்போது இறந்துவிட்ட நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த 29-ம் தேதி வழங்கப்பட்டது. காலை 11 மணிக்கு நீதிபதி குமரகுரு தீர்ப்பை வாசிக்கத் தொடங்கினார். குற்றம் சாட்டப்பட்டு இருந்த 269 பேரில் 54 பேர் ஏற்கெனவே இறந்து விட்டதால் மீதியுள்ள 215 பேரும் ஆஜராகி இருந்தனர். ஒவ்வொருவரும் கூண்டில் ஏறியதும், அவர்கள் குற்றவாளி என நீதிபதி அறிவித்தார். பின்னர், தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. வனத் துறையைச் சேர்ந்த அருணாச்சலம், ஆறுமுகம், ராஜகோபால், ராஜமாணிக்கம், கோவிந்தன், ரத்தினவேலு, வேடியப்பன், சிதம்பரம், பெருமாள், அழகிரி, காளியப்பன், ஜானகிராமன் ஆகிய 12 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது. பெரியநாயகம், பச்சையப்பன், ஆர்.ஜி. பெருமாள், பழனி, மாதையன் ஆகிய 5 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த 17 பேர் தவிர மற்ற அனைத்து குற்றவாளிகளுக்கும் ஓர் ஆண்டு முதல் 3 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்ட 17 பேரும் அன்றே சிறையில் அடைக்கப்பட்டனர். 18 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் அதில் சிலர் சிறுமிகள் என்றும்  நடந்த கொடுமையை நீதிமன்றம் உறுதிப்படுத்தி உள்ளது.
பாதிக்கப்பட்ட வாச்சாத்தி கிராமத்து மக்கள் அப்போது நீதிமன்ற வளாகத்தில் கூடி இருந்தார்கள். 'நீதி வென்றுவிட்டது’ என்று பலரும் கோஷங்கள் எழுப்பி னார்கள். 'இத்தனை வருஷம் கழிச்சாவது அந்தப் படுபாவிகளுக்குத் தண்டனை கிடைச்சதே’ என்று அவர்கள் சொல்லிக் கொண்டார்கள். பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவரான காந்திமதி, ''இன்னைக்கு இவுங்களுக்கு தண்டனை கிடைச்சிடுச்சின்னு அவுங்க குடும்பத்து பொம்பளைங்க எல்லாம் வெளியில நின்னு கத்தி கூச்சல் போடுறாங்களே.. 20 வருசத்துக்கு முன்னாடி எங்களைத் தூக்கிட்டு போய் அவனுங்க செஞ்ச சித்ர வதையில நாங்க எப்படி துடிச்சியிருப்போம். உங்க வீட்டுல யாருக்காவது இப்படி நடந்திருந்து தப்பு செஞ்சவனுக்கு தண்டனை கிடைச் சிருந்தா... நீங்க இப்படித்தான் கத்துவீங்களா?'' என்று ஆக்ரோஷமாக கேட்டார்.
இன்னும் சிலர், 'இது குறைந்த தண்டனை... இன்னும் கடுமையான தண்டனை கொடுத்திருக்க வேண்டும்’ என்று ஆதங்கப்பட்டார்கள். 'எங்கள் குடும்பத்துப் பெண்களையே இந்தப் பாவிகள் கெடுத் துட்டாங்க. அவங்களுக்கு 10 வருஷம், 7 வருஷம், 3 வருஷம்னு தண்டனை கொடுத்தா போதுமா? இவங்க திருந்திடுவாங்களா? இவங்களை ஆயுள் முழுக்க ஜெயில்ல வைக்கணும்’ என்று சொன்னார்கள்.
''தப்பு செய்தவங்க சிலர்தான். ஆனால் எல்லார்க்கும் தண்டனை கொடுத்துட்டாங்க!'' என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பினர் சொன் னார்கள். காலம் கடந்ததாக இருந்தாலும் வாச்சாத்தி மக்களுக்கு நீதி கிடைத்துள்ளது. இது போலீஸ், வனத் துறையினருக்கு பாடமாக அமைய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் கருத்து!
எஸ்.ராஜாசெல்லம்
படங்கள்: எம்.தமிழ்ச்செல்வன்                  
நியாயம் கிடைத்திருக்கிறது
வழக்கை தாக்கல் செய்திருந்த தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில தலைவர் சண்முகத்திடம் பேசினோம். '' வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு இது. இந்திய வரலாற்றிலேயே தப்பு செய்த அரசாங்க அதிகாரிகளுக்கு ஒட்டு மொத்தமாக தண்டனை கிடைத்திருப்பது இதுவே முதல் முறை. எங்களது 20 வருட போராட்டத்துக்கு நியாயம் கிடைத்திருக்கிறது. தப்பு செய்ய நினைக்கும் அதிகாரிகளுக்கு இந்த தீர்ப்பு ஒரு பாடமாக இருக்கும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பற்றி தீர்ப்பில் எதுவும் குறிப்பிடாமல் இருப்பதுதான் ஏமாற்றமாக இருக்கிறது!'' என்று சொன்னார்.
********************************************************************************
கண் துடைப்பு கமிஷனே, திரும்பி போ!

பரமக்குடி கமிஷனுக்கு எதிராகக் கறுப்புக்கொடி...
ரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்து 20 நாட்கள் ஆகிவிட்டாலும், சூடு இன்​னமும் தணியவில்லை. இது தொடர்பாக அமைக்கப்பட்ட  ஓய்வு பெற்ற நீதிபதி சம்பத் தலைமையிலான ஒரு நபர் விசாரணை கமிஷன் தனது விசாரணையைத் துவக்குவதற்காக, கடந்த 27-ம் தேதி ராமநாதபுரம் வந்தது.
துப்பாக்கி சூடு நடந்த இடமான பரமக்குடி ஐந்து முனை சந்திப்பு, இம்மானுவேல் சேகரனின் நினைவிடம் ஆகியவற்றை உள்ளூர் ஆர்.டி.ஓ-வுடன் ஆய்வு செய்தார் சம்பத்.  துப்பாக்கிச் சூட்டில் பலியான சடையனேரி முத்துக்குமார் வீட்டுக்கு முதலில் சென்ற நீதிபதி, தொடர்ந்து கீழக்கொடுமலுர் தீர்ப்புக்கனி, வீரம்பல் பன்னீர் ஆகியோர் வீடுகளுக்கும் சென்று விசாரணை நடத்தினார். அடுத்து மஞ்சூர் கிராமத்துக்குச் சென்ற விசாரணைக் குழுவுக்கு ஊர் எல்லையிலேயே கடும் எதிர்ப்பு. கறுப்புக் கொடிகளுடன் திரண்டிருந்த பொதுமக்கள், 'கண் துடைப்பு கமிஷனே வெளியே போ...’ என்று கோஷமிட்டார்கள். இதனால் அந்த ஊருக்குள் செல்ல முடியாமல் நீதிபதி ராமநாதபுரம் திரும்பிவிட்டார்.
எஞ்சிய கிராமங்களுக்கு மறுநாள் போகத் திட்டமிட்டு இருந்தார் சம்பத். ஆனால், மக்கள் கொந்தளிப்​புடன் இருப்பதாகவும்... போனால் பிரச்னைகள் வரலாம் என்றும் அதிகாரிகள் கூறியதால், மஞ்சூர், பல்லவராயனேந்தல், கனக்கனேந்தல் கிராமங்களுக்குச் செல்லும் திட்டம் கைவிடப்பட்டது.
இது குறித்து அதிகாரிகள் சிலரிடம் பேசியபோது, 'இது போன்ற எதிர்ப்புகள் வரலாம் என்று எதிர்பார்த்துத்​தான், நீதிபதி சம்பத்தின் பரமக்குடி பயணத்தை ரகசியமாக வைத்திருந்தோம். நீதிபதி முதலில் சென்ற கிராமங்களில் எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை. துப்பாக்கி சூட்டுக்கு இரு தினங்கள் முன்பாகக் கொலை செய்யப்பட்ட மாணவன் பழனிக்குமாரின் வீட்டுக்கும் நீதிபதி செல்ல இருப்பதாகத் தவறான தகவல் எப்படியோ பரவியது. அதனால் பள்ளப்பச்சேரி கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஊர் முழுக்கக் கறுப்புக் கொடி கட்டியதுடன், கைகளிலும் கறுப்புக் கொடி ஏந்திக் காத்திருந்தார்கள். இந்த கறுப்புக் கொடிப் போராட்டம் சில தனியார் தொலைக்காட்சிகளில் செய்தியாக ஓடத் தொடங்கவே, நீதிபதி சம்பத் குழுவினர் அடுத்தடுத்துச் செல்லவிருந்த கிராமத்தினரும் கறுப்புக் கொடி ஏந்திவிட்டார்கள்...'' என்று விளக்கம் சொன்னார்கள்.
அதைத் தொடர்ந்து மதுரைக்கு வந்த விசாரணைக் குழுவினர் மாட்டுத்​தாவணி அருகே இருக்கும் பிரீத்தி மருத்துவ மனைக்குச் சென்று, ஐ.பி.எஸ். அதிகாரியான செந்தில்வேலனிடம் விசாரணை நடத்தினார்கள். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கே.வலசை பாண்டி, எஸ்.அண்டக்குடி ஆறுமுகசாமி ஆகியோரும் வாயில் கறுப்புத் துணி கட்டி, 'சி.பி.ஐ. விசாரணை வேண்டும்’ என்ற பேனரை ஏந்தி உட்கார்ந்து இருந்தார்கள். இதைக் கேள்விப் பட்டதும், அரசு மருத்துவமனைக்குச் செல்லாமலேயே மதுரை சர்க்யூட் ஹவுஸுக்குத் திரும்பினார் நீதிபதி.
விசாரணைக் குழுவுக்கு எதிர்ப்புக் காட்டியவர்கள்,  'ஓய்வுபெற்ற நீதிபதி விசாரணை எதிர்ப்பு நடவடிக்கை குழு’வைச் சேர்ந்தவர்கள்தான். தேவேந்திர குல பண்பாட்டுக் கழகம், மள்ளர் கழகம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தியாகி இம்மானுவேல் சேகரன் பேரவை, எஸ்.ஸி., எஸ்.டி. அரசு ஊழியர் சங்கம், மக்கள் கண்காணிப்பகம் உட்பட 18 இயக்கங்கள் அடங்கிய இந்த எதிர்ப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சந்திரபோஸிடம் பேசினோம்.
'பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை மட்டுமே நீதிபதி சம்பத் கமிட்டி விசாரிக்கும் என்று அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பரமக்குடி சம்பவத்தோடு தொடர்புடைய, மதுரை, இளையான்குடி துப்பாக்கி சூடு சம்பவங்கள், பள்ளப்பச்சேரி மாணவர் கொலை சம்பவம், ஜான் பாண்டியன் கைது போன்றவை இதன் விசாரணை வரம்புக்குள் வரவில்லை. அதனால் இது முழுமையான விசாரணையாக இல்லை என்பதால்தான், இந்தக் கமிஷனை புறக்கணித்தோம். தொடர்ந்து புறக்கணிப்போம். அதே நேரத்தில், இந்த சம்பவத்துக்காக முழுக் காரணத்தையும் வெளிக்கொண்டு வரும் வகையில், மக்கள் பொது விசாரணைக் குழு என்ற பெயரில் ஒரு குழு அமைத்திருக்கிறோம். ஓய்வுபெற்ற நீதிபதிகள், போலீஸ் அதிகாரிகள், டாக்டர்களைக்கொண்ட இந்தக் குழு அக்டோபர் 22, 23 ஆகிய தேதிகளில் முழு விசாரணையை நடத்தி  இறுதி அறிக்கை வெளியிடப்படும்!'' என்றார்.
நீதிமன்றத்திலும் இந்த விசாரணை கமிஷனுக்கு தடை வாங்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன!

வாத்தியாரா இருந்தபோது எவ்வளவு இருந்தது?

பொன்முடி... ரெய்டு பார்ட் டூ!
ள்ளாட்சித் தேர்தலுக்கான வேலைகள் பரபரப்பாக நடக்கும் நிலையில், தி.மு.க. புள்ளிகள் மீதான நடவடிக்கைகளும் ஒரு புறம் ஜோராக நடக்கின்றன. கடந்த தி.மு.க. ஆட்சியில் உயர் கல்வித் துறை அமைச் சராக இருந்த பொன்முடி, நில அபகரிப்பு வழக்கில் கைதாகி சிறையில் இருக்கிறார். இந்த நிலையில், பொன்முடி மற்றும் அவரது உறவி னர்கள் வீடுகளில் கடந்த 27-ம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் அதிரடி சோதனை நடத்தி இருக்கிறார்கள்.
சென்னை, விழுப்புரம், திருச்சி, கடலூர், புதுச்சேரி ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் 15-க்கும் மேற்பட்ட படைகள் களம் இறங்கின. விழுப்புரத்தில் சண்முகாபுரம் திருப்பாழ்வார் காலனியில் உள்ள பொன்முடியின் வீடு, கிழக்கு பாண்டி ரோட்டில் பொன்முடியின் தம்பி டாக்டர் தியாகராஜனுக்கு சொந்தமான மரகதம் மருத்துவமனை, சிகா அறக்கட்டளையின் தலைவர் பேராசிரியர் மணிவண்ணன் வீடு போன்ற இடங்களில் அதிகாலை 7 மணி முதலே சோதனையைத் தொடங்கினர்.
அடுத்த சில நிமிடங்களில், தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் இந்த செய்தி காட்டுத் தீயாகப் பரவ...ஆதிசங்கர் எம்.பி. தலைமையில் பொன்முடியின் வீட்டை நோக்கி அவர்கள் படையெடுத்தனர். ஆனால், போலீஸார் தொண்டர்களை அந்தத் தெருவில் நுழையவிடாமல் தடுக்க... அ.தி.மு.க-வுக்கு எதிராக வும் ஜெயலலிதாவுக்கு எதிராகவும் கோஷமிட்டுக் கலைந்தனர்.
சென்னையில், மூத்த மகன் கவுதம சிகாமணி நடத்தி வரும் சூர்யா அறக்கட்டளை, பெசண்ட்மைன்ட் என்டர் பிரைசஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கும் சென்ற போலீஸ் படை, சல்லடையாக சோதனை போட்டு அங்கு இருந்து பல்வேறு ஆவணங்களை அள்ளிச் சென்றது.
பொன்முடியின் இளைய மகன் டாக்டர் அசோக்கின் சைதாப்பேட்டை வீட்டுக்கு, டி.எஸ்.பி-யான பொன்னுசாமி தலைமையில், அதே நேரத்தில் புகுந்தது இன்னொரு டீம். இது தவிர, கே.கே.நகரில்வசிக்கும் பொன்முடியின் சம்பந்தி பாலசுப்ரமணியம் வீடு, புதுச்சேரியில் வசிக்கும் பொன்முடியின் தம்பி டாக்டர் ராஜசிகாமணி வீடு போன்ற இடங்களையும் போலீஸ் விட்டுவைக்கவில்லை.
கடந்த ஆட்சியில் கவர்னர் மாளிகையின் நிழல் மனிதராக வர்ணிக்கப்பட்ட நஜிமுதீன் வீடு எத்திராஜ் சாலையில் உள்ளது. பொன் முடிக்கு நஜிமுதீனுடன் நெருக்கம் அதிகம். எனவே, அவரது வீடு, அலுவலகம் ஆகியவற்றில் அதே தினத்தில் சோதனை நடத்தப்பட்டது. நஜிமுதீனின் மேல் மட்டத் தொடர்புகளைப் பார்த்த போலீஸார், அங்கு இருந்து சில ஆவணங்களை அள்ளிச் சென்றனர்.
லஞ்ச ஒழிப்புத் துறையின் உயர் அதிகாரி ஒருவரிடம் சோதனை குறித்து பேசினோம்... ''பொன்முடி உறவினர்கள், நண்பர்கள் என அனைத்து இடங்களிலும் நடத்தப்பட்ட சோதனையின் முடிவில் பல ஆவணங்களையும், சி.டி., லேப்-டாப் உள்ளிட்ட பொருட்களையும் கைப்பற்றிக் கொண்டு வந்துள்ளோம். கடந்த மே மாதம் நடந்த தேர்தலின்போது, பொன்முடி பெயரில்  59,14,250 அசையா சொத்தும்,  48,79,704 அசையும் சொத்தும், அவரது மனைவி பெயரில்  3,36,26,940 அசையா சொத்தும்,  3,78,11,815 அசையும் சொத்தும் இருப்பதாக கணக்குக் காட்டப்பட்டு இருந்தது. பொன்முடிக்கு  6,69,532 கடனும், விசாலாட்சி பொன்முடிக்கு  11 லட்சம் கடன் இருப்பதாகவும் அதில் கூறப்பட்டு இருந்தது. விசாரணையின்போது இதைக் கருத்தில் எடுத்துக்கொள்வோம். மற்றபடி பொன்முடிக்கு எங்கெங்கு சொத்து உள்ளது, என்னென்ன முறைகேடுகள் நடந்தன என்பதை இப்போதைக்கு விரிவாகச் சொல்ல முடியாது. அவர் கல்லூரிப் பேராசிரியராக இருந்த காலம் முதல் இன்று வரையிலான சொத்துகளை ஆண்டு வாரியாக எழுதிவைத்துள்ளோம். அதைவைத்து விசாரணை நடத்துவோம்!'' என்றார்.
லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை குறித்து கருத்து கேட்க நஜிமுதீனைத் தொடர்புகொண்டோம், அவரது செல் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது.
பொன்முடியின் ஆதரவாளர்களோ, ''எங்க அண்ணன் அளவுக்கு ஜெயலலிதாவை யாரும் எதிர்த்துப் பேசி இருக்க மாட்டாங்க. தலைவர் கலைஞருக்கும் ஸ்டாலினுக்கும் நெருக்கமானவர் அவர். சோதனையின் மூலம் அவரை மிரட்டிப் பணியவைக்க முயலும் அ.தி.மு.க-வின் சதிக்கு அவர் அஞ்ச மாட்டார். தடைகளைத் தகர்த்து விட்டு விரைவில் வெளியே வருவார்!'' என்றார்கள் நம்பிக்கை யோடு.
தி.கோபிவிஜய், அற்புதராஜ்
படம்: சொ.பாலசுப்ரமணியன், ஜெ.முருகன்
அவருக்குத்தாங்க தெரியும்!
முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் வீட்டுக்குள் கடந்த 29-ம் தேதி அதிகாலையில் நுழைந்தது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸ். குன்றத்தூரில் உள்ள அவர் வீடு உட்பட அவரின் உறவினர்கள் 30 பேரின் வீடுகளிலும் ஒரே நேரத்தில் தோண்டித் துருவியது போலீஸ். ரெய்டின்போது அன்பரசன் வீட்டில் இல்லை. அதிகாரிகள் எடக்குமடக்காகக் கேட்ட கேள்விகளுக்கு, 'எல்லாம் அவருக்குத்தாங்க தெரியும்...’ என்று மட்டுமே பதில் சொன்னாராம் அன்பரசனின் மனைவி. அதிகாலையில் தொடங்கிய ரெய்டு பிற்பகல் வரை நீண்டுகொண்டே போனது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தார் என்ற குற்றச்சாட்டில் அன்பரசனைக் கைது செய்யத் திட்டம் தீட்டிக்கொண்டு இருக்கிறதாம் போலீஸ்.
*******************************************************************************
கரை வேட்டி சிறையில் கூடாது

விதி சொல்லும் டோக்ரா!
றிவாலயத்தில் இப்போதெல்லாம் வக்கீல்கள் நடமாட்டம் அதிகம். உள்ளாட்சித் தேர்தல் வேலைகளுக்கு நடுவில் தி.மு.க. தலைவர் கருணாநிதி சதா காலமும் வழக்கறிஞர்கள் புடைசூழக் காணப்படுகிறார்!
100-க்கும் அதிகமான தி.மு.க. பிரமுகர்கள் தற்போது சிறையில் இருக்கிறார்கள். அவர்களது வழக்குகளின் தன்மையை அவ்வப்போது கேட்டுத் தெரிந்துகொள்ளும் கருணாநிதி, சிறைக்குப் பார்வை​யாளராகச் சென்று வரும் கட்சிப் பிரமுகர்களிடம், 'கொசுக்கடி, மூட்டைப்பூச்சிக் கடி, குடி நீரில் புழுக்கள் எல்லாம் உங்களை வாட்டி வதைக்கிறதா? இப்படி மனித உரிமை மீறல் இருந்தால், உடனே சொல்லுங்கள். மேலும், விசாரணைக் கைதிகளுக்கு நிறைய வசதிகள் உள்ளன. சிறை நூலகத்தில் புத்தகங்கள் கேட்டு வாங்கிப் படிக்கலாம். வாரப் பத்திரிகைகளை வெளியில் இருந்து வாங்கிக்​கொள்ளலாம். இப்படியான பாயின்ட்களை உள்ளே போய் சொல்லி அவர்களைப் பயன்படுத்திக்கொள்ளச் சொல்லுங்கள்' என்று சீரியஸாக ஆலோசனை சொன்னாராம். ஆனால், அப்படிச் சென்றவர்களோஏமாற்றத்துடன்சிறையில் இருந்து திரும்பி, சிறை அதிகாரிகள் போடும் கெடு​பிடிகளை தலைவரிடம் சொல்லி இருக்கிறார்கள். இதைக் கேட்டு நொந்துபோனாராம் கருணாநிதி.
சிறைக்கு அடிக்கடி சென்று வரும் வக்கீல் ஒருவர் நம்மிடம், ''அந்த அம்மா சென்னை சிறையில் இருந்தபோது, அவருக்கு முதல் வகுப்பு தரப்படவில்லை. இருந்தாலும், அவருக்குத் தேவை​யான கர்ச்சீப்புகள், பெட், பெட்ஷீட், பழங்கள், ரொட்டி போன்றவற்றை வெளியில் இருந்து கொண்டுவர அனுமதித்தார் அப்போதைய முதல்வர் கருணாநிதி. தனியாக பாத்ரூம்கூட மாற்றி அமைக்க அனுமதித்தார். ஆனால், கட்சியின் சீனியர் லீடர்கள் சிறையில் அனுபவிக்கும் கொடுமைகள் கொஞ்சம் நஞ்சம் அல்ல!'' என்று சோகமாக சொல்கிறார்.
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், அவசரமாக மனித உரிமை ஆணையம், ஜனாதிபதி, கவர்னர் ஆகியோருக்கு... சிறைகளில் நடக்கும் அத்துமீறல்கள் குறித்துப் புகார் அனுப்பி இருக்கிறார். அதில், 'சிறையில் உள்ள தி.மு.க-வினரைக் கடுமையான வார்த்தைகளால் திட்டுகிறார்கள். சுகாதாரமற்ற அறைகளில் அடைக்கிறார்கள். சரியான நேரத்​துக்கு உணவு தருவது இல்லை. உரிய நேரத்தில் உயிர் காக்கும் மருந்துகளை சாப்பிடவும் அனுமதிப்பது இல்லை. கறுப்பு - சிவப்பு பார்டருடன் கூடிய வேட்டியை அணியவிடுவது இல்லை. சிறையில் இருப்பவர்​களை பார்க்கப் போனால், சில இடங்களில் மறுக்கப்படுகிறது. இவற்றை வெளியே சொன்னால், கடுமையான விளைவு​களைச் சந்திக்க நேரிடும் என்று மிரட்டுகிறார்கள். தி.மு.க-வினரின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு வேண்டும்' என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தப் புகார்களை அடுத்து, சிறைத் துறையின் உயர் அதிகாரிகளை அழைத்து அமைச்சர் செந்தமிழன் ஆலோசனைக்கூட்டம் நடத்தினார். ''தமிழகத்தில் மொத்தம் உள்ள 134 சிறைச்சாலைகளில் சுமார் 14 ஆயிரம் விசாரணைக் கைதிகள் இருக்கிறார்கள். அவர்களில் சுமார் 100 பேர்தான் தி.மு.க-வினர். மற்றவர்கள் எப்போதும்போல அமைதியாக இருக்கிறார்கள். தி.மு.க. பிரமுகர்கள் ஒவ்வொரு​வருக்கும் ரத்த அழுத்தம், சுகர் என எல்லாப் பரிசோதனைகளும் அவ்வப்போது செய்யப்படுகின்றன. இவற்றுக்கு ஆதாரமாக ஆவணங்கள் உள்ளன. எதையாவது புகார் கிளப்பி அதிகாரிகளுக்கு பிரஷர் கொடுத்து, தனிப்பட்ட சலுகைளைப் பெற நினைக்​கிறார்கள் சில பிரமுகர்கள். அதெல்​லாம் நிறைவேறாது. பொறுத்திருந்து பாருங்கள்!'' என்று சொன்னார்  கோட்டை அதிகாரி ஒருவர்.
அவரே தொடர்ந்து, ''முன்பு ஜெயலலிதா 28 நாட்கள் சிறையில் இருந்தபோது, எந்த மாதிரியான கொசு கடித்ததோ... அதே கொசுதான் இப்போதும் தி.மு.க-வினரைக் கடிக்கிறது. எலி, பெருச்சாளி எல்லாம் சிறை அறைக்குள் வந்துபோவதாக ஜெயலலிதா அப்போது குற்றம் சாட்டினார். கலக்கமான அப்போதைய டெபுடி ஜெயிலர் ஒருவர், அப்படிப்பட்ட அந்த பிராணிகள் நுழையாமல் இருக்க வலை கட்டினார். இதைக் கேள்விப்பட்ட தி.மு.க. அரசு உடனே அந்த அதிகாரியை பாளையங்கோட்டைக்குத் தூக்கி​யடித்தது. இப்படி எங்கள் தலைவிக்கே கொடுமை செய்தவர்கள் இப்போது குற்றம் செய்துவிட்டுத்தானே வந்திருக்கிறார்கள்? சிறைச்சாலையை ஏதோ சொகுசு பங்களாபோல் நினைத்து வந்துவிட்டார்களா? இங்குள்ள யதார்த்தமான சூழ்நிலையைப் பார்த்து வாழப் பிடிக்காமல் முகம் சுளிக்கிறார்கள். உப்பைத் தின்றவன் தண்ணீரைக் குடித்துத்தான் ஆக வேண்டும்!'' என்றார். 
தற்போது தமிழக சிறைத் துறை தலைவராக இருக்கும் கூடுதல் டி.ஜி.பி-யான எஸ்.கே.டோக்ரா, தமிழக சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் மறுவாழ்வுக்காக 'உங்கள் நடத்தையை மாற்ற வேண்டுமானால், முதலில் மனதை மாற்றுங்கள்' என்கிற தலைப்பில் தொடர் போதனை நடத்துகிறார். சென்னை எழும்பூரில் உள்ள அவரது அலுவலகத்துக்கு நேரில் சென்று, தி.மு.க-வினரின் பகிரங்கக் குற்றச்சாட்டுக்கள்பற்றி விளக்கம் கேட்டோம்.
'ஒருவர் சிறைச்சாலைக்கு சிறைவாசியாக அனுமதிக்கப்படும் பட்சத்தில், அவரது சாதி, மதம், கட்சி ஆகியவற்றை இங்குள்ள அதிகாரிகள் யாரும் பார்ப்பது இல்லை. அனைவருக்கும் ஒரே மாதிரி சாப்பாடு, மருத்துவ வசதி  வழங்கப்​படுகின்றன. கைதிகளை ஒரே மாதிரி நடத்த வேண்டும் என்கிற விதியை அனைத்து அதிகாரிகளும் பின்பற்றுகிறார்கள். சிலர், 'கட்சிக் கரை வேட்டி கட்ட அனுமதிக்கப்படவில்லை’ என்று குறை சொல்கிறார்கள். சிறைத் துறை விதிகளின்படி, அரசியல் சின்னங்கள் எந்த விதத்​திலும் சிறைச்சாலைக்குள் பயன்படுத்த அனுமதி இல்லை. ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே இந்த விதிமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. காரணம், வெவ்வேறு கட்சிக்காரர்கள் சிறைக்குள் எந்த வகையிலும் மோதலில் ஈடுபட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான்.
மருத்துவ வசதியைப் பொறுத்த வரை, ஒவ்வொரு மத்திய சிறையிலும் பயிற்சி பெற்ற டாக்டர்கள் இருக்கிறார்கள். கைதிகளின் உடல்நிலையைப் பரிசோதித்து அவர்கள் அளிக்கும் சிகிச்சை தரமானதாகவே உள்ளது!' என்றார் எஸ்.கே.டோக்ரா.
ஆனால், மனித உரிமை ஆணையத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் தி.மு.க. உறுதியாக இருக்கிறது!

கார்டூனிஸ்ட் கைது... காரணம் என்ன?

மோடி!
ண்ணா ஹஜாரே கைது செய்யப்பட்டபோது, ''எதிர்ப்புகளே இருக்கக் கூடாது என்று இந்த அரசு நினைக்கிறது; அடிப்படை உரிமைகளைக்கூட மறுக்கிறது!'' என்றெல்லாம் பி.ஜே.பி-காரர்கள் கர்ஜித் தார்கள். ஆனால், அவர்களுக்கு எவ்வளவு சகிப்புத்தன்மை இருக்கிறது என்பதையும், ஜனநாயக மாண்புகளுக்கு அவர்கள் என்ன மரியாதை கொடுக்கிறார்கள் என்பதையும் அம்பலப்படுத்தி இருக்கிறது கேலிச்சித்திரக்காரர் ஹரிஷ் யாதவின் கைது!
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உண்ணாவிரதம் இருந்தபோது ஒவ்வொரு நாளும், பல்வேறு தொப்பிகளோடு தொண்டர்களுக்கு தரிசனம் கொடுத்தார். உண்ணாவிரதத்தில் மோடிக்கு வாழ்த்து தெரிவிக்க வந்தவர்களில் சையது இமாம் ஷாகித் சையதும் ஒருவர். மோடியின் தொப்பி ஆசையை அறிந்த அவர், இஸ்லாமியர்கள் அணியும் குல்லாவை மோடிக்கு அணிவிக்க முயன்றார். அதை ஏற்க மறுத்த மோடி, சால்வை அணிவிக்குமாறு கேட்டுக் கொள்ள, இமாமும் சால்வை அணிவித்தார்; மோடி ஏற்றுக் கொண்டார்.
'மோடி குல்லாவை ஏற்க மறுத்தது சரியா, தவறா?’ என்று தேசிய அளவில் பெரும் விவாதங்களை எழுப்பியது. மத நம்பிக்கைகள் ஒரு மனிதரின் தனிப்பட்ட உரிமை சார்ந்த விஷயம் என்கிற அடிப்படையில், இந்தச் சம்பவத்துக்குப் பெரிய முக்கியத்துவம் அளித்திருக்கத் தேவை இல்லை. ஆனால், சம்பவத்தில் இடம்பெற்றவர் மோடி என்பதால், சர்ச்சையானது.
மத்தியப் பிரதேசத்தின் முக்கியமான மாலைப் பத்திரிகைகளில் ஒன்று 'பிரபாத் கிரண்’. இந்தப் பத்திரிகை யின் கேலிச்சித்திரக்காரரான ஹரிஷ் யாதவ், இந்தச் சம்பவம் தொடர்பாக ஒரு கார்ட்டூன் வரைந்தார். 'இஸ்லாமியர்களிடம் இதுவரை வெறுப்பை மட்டுமே சம்பாதித்து இருக்கும் மோடிக்கு, அதில் இருந்து மீள இமாம் மூலம் ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதையும் மோடி பயன்படுத்தவில்லை’ என்பதே அந்தக் கேலிச் சித்திரம்...!
ஆனால், இந்தச் சாதாரண விமர்சனத்தைக்கூட மத்தியப் பிரதேசத்தை ஆளும் பி.ஜே.பி-யினரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. உடனடியாக  ஹரிஷ் யாதவைக் கைது செய்துவிட்டது அரசு. கைதுக்கு அரசு சொன்ன காரணம் இன்னும் வேடிக்கையானது. 'இஸ்லாமியர்களை இந்தக் கேலிச்சித்திரம் இழிவுபடுத்திவிட்டது. மத துவேஷத்தைப் பரப்பும் வகையில் அவர் செயல் பட்டார்’ என்று விளக்கம் அளித்திருக்கிறது அரசு. ஆனால், 'பிரபாத் கிரண்’ ஆசிரியர் பிரகாஷ் புரோஹித், ''வாசகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது அந்தக் கேலிச்சித்திரம். யாரோ ஒருவர் பெயரில் இந்தப் புகாரைப் பதிவு செய்து, பத்திரிகைகளை அச்சுறுத்தும் வகையில் கைது நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறது அரசு. இது அப்பட்டமான அத்துமீறல்!'' என்று மறுத்திருக்கிறார்.
இந்த சர்ச்சையைத் தொடர்ந்து ஹரீஷ் யாதவுக்கு ஆதரவாக, மீடியா திரண்டுள்ளதுதான் ஆதரவான விஷயம்.

கலங்கும் வீரப்பன் மகள்..

எங்களை ஏத்துக்கோங்கம்மா... ப்ளீஸ்!
வீரப்பனின் மகள்கள் இருவருமே காதலித்து ரகசியத் திருமணம் செய்துகொண்டதையும்... காதலர்களைப் பிரிக்க தாய் முத்துலட்சுமி முயற்சி செய்வதாகவும்... 28.8.11 தேதியிட்ட ஜூ.வி-யில் முதலில் எழுதி இருந்தோம்.
'நான் என் மகள்களை மிரட்டக் கிடையாது. என் மூத்த மகள் வித்யாராணியோடு தினமும் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன்...’ என்று நம்மிடம் சொல்லி இருந்தார் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி. இரண்டு மூன்று வாரங்கள் இந்த விஷயம் தொடர்பாக எந்த ரியாக்ஷனும் இல்லை!
இந்தச் சூழ்நிலையில், வித்யா​ராணியின் கணவர் மரியதீபக், 'என் மனைவி வித்யாராணியை அவரின் அம்மா முத்துலட்சுமி வெளியேவிட மறுக்கிறார். என் மனைவியை மீட்டு என்னிடம் ஒப்படைக்க வேண்டும்!’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்து, இந்த விஷயத்தை முழுமையாக வெளியில் கொண்டுவந்துவிட்டார்.
வழக்கு நீதிமன்றத்துக்குச் சென்றதால், போலீஸார் இதில் தீவிர விசாரணையில் இறங்கினார்கள். முத்துலட்சுமி வீட்டில் இருந்த வித்யாராணியை மீட்டு, கடந்த 28-ம் தேதி நீதிபதி முன்பு ஆஜர் செய்தது போலீஸ். ''எனக்கு எங்க அம்மா வீட்டில் இருக்க விருப்பம் இல்லை. நான் கணவர் மரியதீபக்கோடு வாழவே விரும்புகிறேன்!'' என்று நீதிபதியிடம் அவர் கண் கலங்கிச் சொன்னார். ''அவர் மேஜர். தனது வாழ்க்கையை முடிவு செய்யும் உரிமை அவருக்கு உண்டு. எனவே, அவர் விருப்பப்படி கணவர் மரியதீபக்குடன் செல்ல நீதிமன்றம் உத்தரவிடுகிறது!'' என தீர்ப்பு அளித்தார் நீதிபதி.
மரியதீபக்கின் கரங்​களை இறுகப் பற்றிய​படி நீதிமன்றத்தில்இருந்து வெளியே வந்தார் வித்யா​ராணி.
மரியதீபக் நம்மிடம் பேசினார். ''லயோலா கல்லூரியில் பி.பி.ஏ. ஃபைனல் இயர் படிச்சிட்டு இருந்தேன். அப்போ வித்யாராணி பெண்கள் கிறிஸ்துவக் கல்லூரியில் படிச்சிட்டு இருந்தாங்க. நான் தங்கி இருந்த மேன்ஷன்ல இருந்து பார்த்தா, அவங்க கல்லூரி விடுதி நல்லாத் தெரியும். இவ யாரு? எந்த ஊரு? எதுவுமே எனக்குத் தெரியாது. என்னோட மேன்ஷன்ல இருந்து வித்யாவைப் பார்த்த முதல் பார்வையிலேயே, இவதான் எனக்குன்னு பொறந்தவள்னு உள் மனசு சொல்லிடுச்சு. அந்த நிமிஷத்துல இருந்து அவளைக் காதலிக்க ஆரம்பிச்சேன். தினமும் அவ காலேஜ் வாசல்லயே தவம் கிடப்பேன். நான் அவளைப் பார்க்கிறேன் என்பது அவளுக்குத் தெரியவே ஆறு மாசம் ஆச்சு. அதற்குப் பிறகுதான் அவள் தயங்கி ஓகே சொன்னா.
தினமும் காலையில் தூங்கி எழுந்தால், வித்யாவோட முகத்துலதான் முழிப்பேன். ஜாடையிலேயே பேசிக்குவோம். வீரப்பன் அங்கிளோட பொண்ணுங்கிறது எனக்கு அதற்குப் பிறகுதான் தெரிஞ்சது. அதில், எனக்குப் பயமோ, வருத்தமோ கிடையாது. வீரப்பனின் மருமகன் நான் என்பதை ரொம்பவும் பெருமையாத்தான் எல்லோர்கிட்டயும் சொல்வேன்.
எங்க கல்யாணத்தை வித்யாவோட குடும்பம் ஏத்துக்க மாட்டாங்கனு நினைச்சு, முதல்ல எங்க வீட்டில் பேசி​னோம். அவங்க சம்மதிச்சாங்க. உடனே, ரிஜிஸ்டர் ஆபீஸ்ல கல்​யாணம் பண்ணிக்கிட்டோம். வித்யா எப்பவும்போல கல்லூரிக்குப் போனா. அவங்க அம்மாவுக்கு இந்த விஷயம் எப்படியோ தெரிய வர... மகளைக் கூப்பிட்டுப் பயங்கரமாத் திட்டி மிரட்டி இருக்காங்க. அம்மாவைச் சமாதானப்​படுத்தி என்னை அவங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறதா சொல்லிட்டு ஊருக்குக் கிளம்பிப் போனாள் வித்யா. போனவள் திரும்பி வரவே இல்லை...'' என்று சொல்லி தீபக் நிறுத்த...
வித்யாராணி தொடர்ந்தார். ''அம்மா​கிட்ட நான் எவ்வளவோ தூரம் எடுத்துச் சொல்லியும், அவங்க புரிஞ்சுக்கலை. 'நீ அவன்கூட இருந்தா, நல்லா இருக்க மாட்டே. அவனை விட்டுட்டு வந்துடு. உன்னை இங்கே இருந்து வெளியே விடவே மாட்டேன்’னு பிடிவாதமா சொல்லிட்டாங்க. வீட்டுல அம்மாவோட சொந்தக்காரங்க எல்லோரும் இருந்த​தால், என்னால் கிளம்பிப் போக முடியலை. தீபக்குக்கு போன் பண்ணி விஷயத்தைச் சொன்னேன். 'நீ எதுக்​கும் கவலைப்படாதே. நான் இருக்கேன்...’னு ஆறுதல் சொன்னார். நம்பிக்கையோட இருந்தேன். அதன்படி நீதிமன்றம் மூலமாக என்னை மீட்டுக் கொண்டுவந்துட்டார். எங்க அம்மாவை நான் தப்பு சொல்லக் கிடையாது. நான் நல்லா இருக்கணும்னு அவங்களும் நினைக்கிறாங்க. தீபக்கூட இருந்தால்தான் நான் நல்லா இருப்பேன்னு அவங்களுக்குப் புரியவைக்கணும். அதுக்குக் கொஞ்ச காலம் ஆகும். கண்டிப்பா அம்மா புரிஞ்சுக்குவாங்க. 'அப்பா உயிரோட இருந்தாலும், கண்டிப்​பா
இதைத்​தாம்மா பண்ணி இருப்பாங்க. அப்பா மாதிரியே தீபக் ரொம்ப நல்லவர்மா... எனக்கும் உங்களைவிட்டா யாரு இருக்காங்க, சொல்லுங்க? எங்களை ஏத்துக்கோங்கம்மா.. ப்ளீஸ்!’ நிச்சயமா இதை அப்படியே போடுங்க சார்... அம்மா ஜூ.வி. படிப்பாங்க. படிச்சிட்டு கண்டிப்பா எங்களைக் கூப்பிடுவாங்க...'' என்று கண் கலங்கினார்.
மரியதீபக்கின் வழக்கறிஞர் முனீஸ்வரன், ''நீதிமன்றத்தின் உத்தரவுப்​​படி மரியதீபக்குடன் வித்யா​ராணியைச் சேர்த்துவைத்து​விட்டோம். முத்துலட்சுமியும் இதில் வறட்டுக் கௌரவம் பார்க்காமல் பிள்ளைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். எல்லோரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்களோட ஆசை!'' என்று சொன் னார்.
முத்துலட்சுமியைத் தொடர்புகொண்டோம். ''இது சம்பந்தமா நான் எதுவும் பேசுற நிலையில இல்லைங்க...'' என்றார் வருத்தமாக!
காலம்... எல்லாக் காயங்களையும் ஆற்றட்டும்!

வேனுக்குள் துடித்த முத்துக்குமாரின் உயிர்...

பதறவைக்கும் பரமக்குடி காட்சிகள்!
மிழகத்தையே உலுக்கி எடுத்துவிட்டது பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம். அதில் நிகழ்ந்த மரணங்கள், கேள்விப்படுகிறவரின் கண்களில் ரத்தம் கசிய வைப்பவை. இறந்துபோன சிலரது உறவுகளையும் சுற்றத் தாரையும் சந்தித்தோம்.
அந்தப் பெண் நிலை குத்திய பார்வையோடு உட்கார்ந்து இருக்க... கையில் வளைகாப்பு நடந்த அடையாளமாகக் கண்ணாடி வளையல்கள். இன்னோர் உயிரையும் சுமந்துகொண்டு இருக்கிறாள். ஆனால், அந்த உயிரைத் தந்த ஜெயபால் உயிரைக் காவல் துறை பறித்துவிட்டது. அவள் பெயர் காயத்ரி. திருமணமாகி ஓர் ஆண்டுதான் ஆகிறது. கலப்பு மணம் புரிந்த தம்பதி. பரமக்குடி - ராமநாதபுரம் சாலையில் உள்ள மஞ்ஞூரில் உள்ளது அவர்கள் வீடு. நிறைமாதக் கர்ப்பிணியாதலால் பரமக் குடியில் உள்ள தாய் வீட்டுக்குச் சென்றுவிட்ட மனைவியைப் பார்க்க பரமக்குடிக்கு வந்த ஜெயபாலுக்குதான் பரிசாகக் கிடைத்தது, துப்பாக்கிக் குண்டு!
எழுத்தாளர்கள், பத்திரிகையாளர் கள், சமூக ஆர்வலர்கள் அடங்கிய உணமை அறியும் குழுவில் ஒருவராக, ஜெயபாலின் உறவினர்களை  சந்தித்தோம்.
''எம் புள்ள அந்த போஸ்ட் மரத்துல பாதி இருப்பான். ஆயுதம் இல்லாம வந்தா, பத்து கான்ஸ்டபிள்னாலும் சமாளிப்பான். பாவிக, அவனைத் துப்பாக்கியால சுட்டு... அப்படியும் சாகலைன்னு, மிதிச்சுக் கொன்னுருக்காங்க. என் புள்ளய சாக் கடையில தூக்கிப் போடப்போனப்பத்தான் 'ஏன்டா இப்புடி பண்றீங்க?’ன்னு ஒருத்தர் கேட்டிருக்கார். அந்த வயசானவரையும் கொன்னுட்டாங்க...'' என்று அரற்றுகிறார் ஜெயபாலின் அப்பா பாண்டி.
''நான் ஒரு பழ வியாபாரிங்க. என் பொண்ணை ஸ்கூலுக்குப் போகையில பார்த்துட்டு, என்கிட்ட வந்து 'கல்யாணம் பண்ணிக்கிறேன்’னு கேட்டுச்சு. மொதல்ல முடியாதுன்னேன். அந்தப் புள்ள என் பொண்ணு மேல ரொம்ப ஈர்ப்பா இருந்ததைப் பார்த்துட்டு, 'வேற சாதின்னாலும் பரவால்ல’ன்னு ஒப்புக்கிட்டுக் கல்யாணம் பண்ணிவெச்சேன். என் பொண்ண நல்லா வெச்சுக்குச்சு. ஆனா, இப்படி அல்பாயுசுல அநியாயமாப் போகும்னு யாரு நெனச்சா!'' என்று கலங்கினார் காயத்ரியின் தாய்.
இத்தனை பேர் பேசினாலும், காயத்ரி மட்டும் எதுவும் பேசவில்லை. பள்ளியில் படிக்கும்போது தடகள விளையாட்டு வீராங்கனை! ''அரசு கொடுத்த ஒரு லட்சம் ரூபாயைவைத்துக்கொண்டு இந்தப் பெண் எத்தனை நாளைக்குக் காலம் தள்ள முடியும்? அரசு வேலை ஏதாவது கிடைக்காதா..?'' என்பது ஜெயபால் தரப்பின் கோரிக்கையாக இருக்கிறது.
ஜெயபால், புதிய தமிழகம் கட்சியின் உறுப்பின ராக இருந்தாலும், தீவிரமாக அரசியலில் ஈடுபடு பவர் கிடையாது. 'பரமக்குடி சென்றவரைக் காணவில்லை’ என்று அவரது செல்போனுக்குத் தொடர்புகொண்டபோது, ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருந் தது. குடும்பமே தவித்து நின்றிருக்கிறது. காலையில் தொலைக்காட்சியில் செய்திகளைப் பார்த்து, விஷயத்தைத் தெரிந்துகொண்டவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு ஓட, மாலை 5.30 மணி வரை முகத்தைப் பார்க்கவிடாமல் காவல் துறை அலைக்கழித்திருக்கிறது.
ஒரே பிள்ளையைப் பறிகொடுத்த ஜெயபாலின் தாய், எதுவுமே பேசாமல் வெறித்தபடி இருந்தார். இது மஞ்ஞூரில் நடந்த கதை. கனத்த மனதோடு, அடுத்த கிராமமான காக்கனேந்தல் போனோம்.
அங்கே இருந்து ஒரு திருமணத்துக்குச் சென்றவர், பிணமாய்த் திரும்பி வந்த சோகத்தை சுமந்துகொண்டு இருந்தது அந்த கிராமம்.
நண்பர் வீட்டுத் திருமணத்துக்குச் சென்ற வெள்ளைச்சாமியும் சின்னாளும் பரமக்குடிக்கு வரும்போது துப்பாக்கி சூடு நடக்கிறது. மறுநாள் காலை வரை இவர்கள் இருவரும் என்ன ஆனார்கள் என்பதே தெரியவில்லை. வெள்ளைச்சாமியின் பெயர் மட்டும் தொலைக்காட்சியில் இறந்தவர்கள் பட்டியலில் அறிவிக்கப்பட, சின்னாளின் கதி என்ன என்று கிராமமே தேடுகிறது. அவரும் இறந்துவிட்டதாக முடிவு செய்து குடும்பத்தினர் அழுதுகொண்டு இருந்த போது... பரமக்குடியில் இருந்து 25 கி.மீ. தூரம் நடந்தே தனது கிராமத்துக்கு வந்த 65 வயது சின்னாளைக் கண்டதும், கிராமமே சூழ்ந்துகொள்கிறது.
என்ன நடந்தது என்று சின்னாளிடம் கேட்டோம். ''ரெண்டு பேரும் பரமக்குடி வந்தப்போ, சாலை மறியல் நடந்துது. நாங்க அங்கே என்னன்னு புரியாமப் பார்த் துட்டே போனோம். எனக்கு பத்தடி முன்னால வெள்ளைச்சாமி போக... நான் பின்னால போனேன். திடீர்னு நான் பார்த்துக்கிட்டு இருக்குறப்பவே பெரிய கம்பால போலீஸ் அவரை அடிச்சுது. உடம்புல ஒரு இடம் விடலை. அத்தனை அடி..! நான் பயந்து போய் வாயடைச்சு நிக்க... என் காலிலும் போலீஸ் அடிச்சுது. நான் உடனே தலைதெறிக்க ஓடி, பக்கத்துல உள்ள கோயில் பக்கம் ஒளிஞ்சு நின்னு பார்த்தேன்.
வெள்ளைச்சாமியை ஆத்திரம் தீர்ற வரைக்கும் அடிச்சாங்க. வெள்ளைச்சாமியைத் துப்பாக்கியால சுடலை. அடிச்சேதான் கொன்னாங்க. என் கண்ணாலயே பார்த்தேன். அப்புறம் போலீஸே தூக்கிட்டுப் போய் ஒரு வண்டியில ஏத்துச்சு. நான் வெளிய வரப் போனேன். அப்போ அங்கே பக்கத்து வீட்டுல இருந்த ஒரு பொம்பளைப் புள்ள, 'அங்கே போகாதீங்க. உங்களையும் அடிச்சே கொன்னுடுவாங்க’ன்னு அவுங்க வீட்டுக்குள்ள கூப்பிட்டு வெச்சுருந்துச்சி. அந்தப் புள்ள இல்லேன்னா, நானும் அப்பவே செத்திருப்பேன். பஸ் ஓடலைங்கறதால மறுநாள் நடந்தே ஊருக்கு வந்தேன்...'' என்றார் திகிலாக.
அடுத்து இன்னொரு கிராமத்தின் துயரம் இது. காக்கனேந்தலில் இருந்து நயினார் கோவில் போகும் வழியில் இடதுபுறச் சாலையில் இருக்கிறது பல்லவராயனேந்தல். அங்கிருந்து தன் மகன் திருமணத்துக்கு, 11-ம் தேதி பரமக்குடியில் உள்ளவர்களுக்குப் பத்திரிகை வைக்கச் சென்றார் கணேசன். போன இடத்தில் துப்பாக்கி சூட்டுக்குப் பயந்து ஓடிய அவரது நெஞ்சுப் பகுதிக்குக் கீழே குண்டு பாய்ந்து இறந்துபோனார்.
அவர் குடும்பத்தார் நம்மிடம், ''அவர் இறந் தாலும் அந்த சோகத்தி லும், கல்யாணத்தை முடிச் சிட்டோம். நின்னுருச்சின்னா அந்தப் பொண்ணுக்கு மறுபடியும் கல்யாணங்கிறது கனவாப் போயிருமே... அவர் இருந்து நடத்திவெச்சிருக்க வேண்டிய கல்யாணம் இது. ஆனா...'' என்று மேற்கொண்டும் பேச முடியாமல் அழுதனர்.
அடுத்த உயிர்ப் பலி... வீரம்பல் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர். தன் மகளைப் பார்ப்பதற்காக பரமக்குடி வந்த பன்னீர், செப்டம்பர் 11-ம் தேதி காலை 11.30 மணிக்கு தன் மகள் ரெபெய்க்காளிடம், ''இங்க பதற்றமா இருக்கு. கவலைப்படாதே! வந்துடுறேன்...'' என்றிருக்கிறார். ஆனால், அதன் பின் கொஞ்சநேரத்தில் செல்போன் அணைந்து போக... தந்தையைக் காணாமல் இவர் தேட... இரவு 7.30 மணிவாக்கில் மீண்டும் செல்போன் ஆன் செய்யப்பட்டு... போலீஸ்காரர் ஒருவர்தான் பன்னீரின் பெயர், ஊர் என்று எல்லா விவரங்களையும் அவரது மகளிடம் கேட்டிருக்கிறார்.
ரெபெய்க்காள் நம்மிடம், ''எல்லா விவரத்தையும் கேட்டுட்டு, அப்பா இறந்த சேதியைக்கூட போலீஸ் சொல்லலை. அப்பாவின் நெற்றியில் குண்டு பாய்ந்த காயம் இருந்தது.. உடல் பூராவும் லத்தியால் அடிச்ச காயங்களும் இருந்துச்சு...'' என்று கேவினார்.
சடையனேரி கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமாரும் இந்த சம்பவத்தில் உயிர்விட்டவர். இவரது உடலைக் காட்டுகிறேன் என்று சிவகங்கை, இளையான்குடி, ராமநாதபுரம், மதுரை என்று குடும்பத்தினரை இழுத்தடித்திருக்கிறது போலீஸ். 11-ம் தேதி இம்மானுவேல் குருபூஜையில் கலந்துகொள்ள பரமக்குடி சென்றார் முத்துக்குமார்.  இவருடைய வலது பக்க விலாவில் குண்டு பாய்ந்து... போலீஸ் அவரை இளையான்குடி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றிருக்கிறது. அப்போதும் அவருக்கு உயிர் இருந்திருக்கிறது. முதலுதவி செய்யப்பட்டு மதுரைக்கு மாற்றப்பட்டார். அங்கே இரவு 9.30 மணி வரை உயிருடன் இருந்தவர், அதன் பின்தான் இறந்திருக்கிறார்.
அடுத்ததாக இறந்துபோன தீர்ப்புகனி, கீழக்கொடும்பளூரைச் சேர்ந்தவர். பரமக்குடிக்கு காலையில் இரு சக்கர வாகனத்தில் வந்தவர், துப்பாக்கிச் சூடு நடப்பதைப் பார்த்தவுடன் அப்படியே தனது வாகனத்தை அங்கேயே ஓர் இடத்தில் விட்டுவிட்டுக் கிளம்பி இருக்கிறார். நிலைமை ஓரளவு சரியானது போல் தெரிந்து, மாலை 4 மணிக்கு தன் வாகனத்தை எடுக்க வந்தவரைப் பிடித்துக்கொண்டது போலீஸ். அவரை அடித்து இழுத்துப் போனதைப் பார்த்ததாக அவருடைய பெரியப்பா எஸ்.பி.முனியாண்டி நம்மிடம் சொன்னார்.
''கை ரெண்டையும் பின்னாடி கட்டிவெச் சுட்டு, லத்தியால அடிச்சுக்கிட்டே போலீஸ் வண்டியில அவனை ஏத்துனதை நான் பார்த்தேன். அப்புறம் ஒரு தகவலும் இல்ல. மதுரையில் தீர்ப்புகனி உடல் இருப்பதாத் தகவல் தெரிஞ்சு போய்ப் பார்த்தப்போ, அவன் உடம்புல இருந்த துணி எல்லாம் காணோம். அவனோட பனியனை மட்டும் இடுப்பில் சுத்தியிருந்தாங்க. மண்டையில் அடிச்சு, பின்னந்தலையே பிளந்து இருந்துச்சு. குதிகாலில் சின்னதா ஒரு ரத்தக் காயம். குண்டு பாய்ஞ்ச அடையாளமே இல்லை!'' என்றார் சோகமாக.
''இந்தத் திட்டமிட்ட தாக்குதல் தேவைதானா?'' என்ற கேள்வியுடன் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அருண் ராயை சந்தித்தோம்.
''துப்பாக்கி சூடு நடந்தது எனக்குத் தெரியாது. நடந்து முடிந்தவுடன் தாசில்தார் எனக்குத் தகவல் சொன் னார். நான் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிடவில்லை. இந்த நிலைமையை வேறு மாதிரி கையாண்டிருக்கலாம் என்பதை விவாதரீதியாக ஒப்புக் கொள்கிறேன். ஆனால், துப்பாக்கிச் சூட்டின் பின்னால் சதி இருக் கிறது என்கிற சந்தேகம் தேவையற்றது. பரமக்குடி நகரின் பாதுகாப்புக்காகவே போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது!'' என்று மட்டும் சொன்னார்.
நடந்து முடிந்த துப்பாக்கி சூட்டின் முதல் தகவல் அறிக்கையில், தானே முதலில் சுட்டதாக ஒப்புக்கொண்டு இருக்கும் பரமக்குடி இன்ஸ்பெக்டர் சிவக்குமாரை சந்தித்தோம். ''விசாரணை கமிஷன் அமைத்த பின்னால், நான் எதுவும் பேசக் கூடாது!'' என்றார். ''மாவட்ட ஆட்சியர் இது குறித்துப் பேசுகிறார். நீங்கள் பேச மறுக்கிறீர்களே?'' என்று கேட்டபோது, ''அவர் சம்பவத்தோடு சம்பந்தப்படவில்லை. நான் நேரடியாக சம்பந்தப்பட்டு இருப்பதால் பேச முடியாது!'' என்றார் திட்டவட்டமாக. தனது முதல் தகவல் அறிக்கையில், 'சாலை மறியல் செய்தவர்கள் தாக்கியதில் தனக்குப் பலத்த காயம் பட்டதாகவும், அதன் காரணமாகவே துப்பாக்கி சூடு நடத்த வேண்டி வந்தது’ என்றும் தெரிவித்திருக்கிறார் சிவக்குமார்.
அரசாங்கம் அமைத்துள்ள விசாரணை அறிக்கை என்ன சொல்கிறது என்று பார்ப்போம்!

மின்சார அடுப்புக்கு முதல்ல கரன்ட் கொடுங்கம்மா...

கொடைக்கானல் கோரிக்கை
'கொடைக்கானல் மற்றும் நீலகிரி வாழ்மக்களின் தேவையைக் கணக்கில் கொண்டு இலவச மின் விசிறிக்கு பதிலாக மின் அடுப்பு வழங்கப்படும்!’ என்ற முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்புக்கு மலைவாழ் மக்களிடம் நல்ல வரவேற்பு. அதே நேரம், 'கரன்ட் இல்லாம இதை வெச்சு என்ன செய்றது?’ என்று ஆதங்கமும் அதிகம் இருப்ப தாகத் தகவல் கிடைக்கவே... விசாரணையில் இறங்கினோம்.
 நம்மிடம் பேசிய 'மக்கள் சிவில் உரிமைக் கழக’ மாநிலப் பொருளாளரும் இல்லத்தரசியுமான ஜெசிந்தா, ''கொடைக்கானலில் பெரும்பாலான நேரம் மேகங்கள் சூழ்ந்து இருப்பதால் பகலில்கூட வீடுகளில் மின் விளக்கு எரிந்தாக வேண்டும். அதே போல் குளிக்க, குடிக்க சுடுதண்ணீர் மட்டுமே பயன்படுத்தியாக வேண்டிய கட்டா யம். வனத்துறை நெருக்கடி, காலமாற்றம் ஆகிய வற்றால் பலரும் விறகு அடுப்பில் இருந்து வாட்டர் ஹீட்டருக்கு மாறிவிட்டனர். கொடைக்கானல் நகரத்தில் விடுதிகள் முழுவதிலும் ஏராளமான வாட்டர் ஹீட்டர்கள் பயன்படுத்தப்படுவதால், மக்களுக்குக் குறைந்த அழுத்த மின்சாரமே கிடைக்கிறது. குறிப் பாக காலை நேரத்தில் அனைத்து வீடுகளிலும் வாட்டர் ஹீட்டர் பயன் படுத்தப்படுவதால் விளக்குகள் எரியாது, கம்ப்யூட்டர் இயங்காது. கொடைக்கானலில் மின்சாரம் வந்த காலத்தில் இருந்து இந்தப் பிரச்னை இருக்கிறது. எங்கள் கோரிக் கையை எந்த அரசியல் கட்சியும் காது கொடுத்துக் கேட்கவில்லை...'' எனச் சொல்லி, வீட்டு விளக்கின் ஸ்விட்சைப் போட்டுக் காட்டினர். வழக்கமாய் டியூப் லைட் எரிவதற்கு முன்பு டப்... டப்... என்று கண் சிமிட்டுமே அப்படிக்கூட இல்லாமல் அமுக்கமாக இருந்தது. குண்டு பல்ப் போட்டார். அந்த 100 வாட்ஸ் பல்பு 20 வாட்ஸ் பல்பு போல மினுக்கியது.
அதைத் தொடர்ந்து பேசிய ஜெசிந்தா, ''குறைந்த வெளிச்சத்தில் பிள்ளைகள் கூர்ந்து படிப்பதால் இளம் வயதிலே பலருக்குப் பார்வைக் குறைபாடு ஏற்பட்டுள்ளது. இங்கு சூரிய வெளிச்சம் போதுமான அளவு கிடைப்பது இல்லை என்பதால், சோலார் அடுப்புகளையும் பயன் படுத்த முடியாது. இந்த நிலையில் இலவசமாக மின் அடுப்பு கொடுத்து விட்டால், கொடைக்கானலே இருள் நகராகிவிடும். எங்களது நிலையை அறிந்து மின் அடுப்பு கொடுக்க நினைக்கும் முதல்வர், முதலில் மின் அழுத்தக் குறைபாட்டை நீக்கும் நடவடிக்கைகளில் இறங்கவேண்டும்...'' என்று கோரிக்கை வைத்தார்.
கொடைக்கானல் ஒன்றிய கிராமங்களில் மின்சாரத்தின் நிலையை அறிய வில்பட்டி என்ற கிராமத்தில் நுழைந்தோம். அந்த ஊரைச் சேர்ந்த மைக்கேல், ''கொடைக்கானல் மேல் மலை பகுதியான கீழனவயல், கிளாவரை, கூக்காள், பள்ளங்கி கோம்பை மற்றும் கீழ் மலைப் பகுதியான பாச்சலூர், கே.சி.பட்டி, மணல்பட்டி, நல்லூர்க்காடு பகுதிகளில் கடுமையான மின் பற்றாக்குறை இருக்கிறது. கிராமங்களில் இருக்கும் சிங்கிள் பேஸ் இணைப்புகளை மூன்று பேஸ் இணைப்புகளாக மாற்றினால் இந்தக் குறை நீங்கும். மின் அழுத்தக் குறையை நீக்காமல் மின் அடுப்பு கொடுத்தால் இந்தத் திட்டம் பெரும் தோல்வியில்தான் முடியும்!'' என்று சொன்னார்.
பழங்குடி மக்கள் வசிக்கும் மூளையாறு கிராமத்துக்குப் போனோம். லீலாவதி என்பவர், ''கொடைக்கானல் மலையில் சுமார் 70 ஆதிவாசி கிராமங்கள் இருக்கின்றன. அதில் பளியர், புலையர் உட்பட நாங்கள் எல்லோரும் அரசாங்கம் இலவசமாகக் கட்டிக் கொடுத்த வீடுகளிலே குடி இருக்கிறோம். அதில் பெரும்பாலான வீடுகளில் மின் இணைப்பு இல்லை. சில ஊர்களுக்கு மொத்தமாகவே மின்சாரம் கிடையாது. போன தி.மு.க. ஆட்சியில் இலவச டி.வி. கொடுத்தாங்க, கரன்ட் இல்லாததால் அதை பயன்படுத்த முடியவில்லை. அம்மா கரன்ட் அடுப்பு கொடுக்கிறதுக்கு முன்னால எங்க வீடுகளுக்கு முதல்ல கரன்ட் கொடுக்கச் சொல்லுங்க...'' என்று சொன் னார்.
கொடைக்கானல் துணை மின் நிலைய அலுவலர் களை சந்தித்தோம் ''கொடைக்கானல் நகரம், ஒன்றியங்களில் மொத்தம் 28,605 மின் இணைப்புகள் உள்ளன. தொலைதூரக் கிராமங்களில் மின் அழுத்தக் குறைபாடு இருப்பது உண்மை. கீழ் மலை, மேல் மலை பகுதிகளில் 15 இடங்களில் மின் மாற்றிகள் (டிரான்ஸ்ஃபாமர்) அமைத்திடவும் மூன்று பேஸ் மின்சாரம் வழங்கவும்  60 லட்சத்துக்கு திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பி நிதிக்காகக் காத்திருக்கிறோம்...'' என்று சொன்னவர்கள், ''அரசு கொடுக்கும் மின் அடுப்பு 2,000 வாட்ஸ் திறன் கொண்டதாக இருக்கும் எனத் தெரிகிறது. இந்தப் பகுதியில் முதல் கட்டமாகக் குறைந் தது 5,000 மின் அடுப்புகள் கொடுத்தால், துணை மின் நிலையத்தில் 110 கிலோ வாட் மின்மாற்றிகளை உடனே 220 ஆக மாற்றவேண்டும். இல்லை என்றால் மின் அழுத்தக் குறைபாடு அதிகரித்து மின்மாற்றிகள் வெடித்து விடும்!'' என்று அச்சம் தெரிவித்தார்கள்.
இந்த விஷயத்தை மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கவனத்துக்கு கொண்டு சென்றோம் ''இந்த விவகாரத்தை அம்மாவின் கவனத்துக்கு கொண்டு சென்று தேவையான நடவடிக்கை எடுக்கி றேன்...'' என்று சுருக்கமாகச் சொன்னார்.
'திட்டங்களுக்காக மக்கள் இல்லை... மக்களுக்காகவே திட்டங்கள்’ என சொல்லியுள்ள முதல்வர் மலைப் பகுதி மக்களின் கோரிக்கை மீது உடனடி நடவடிக்கை எடுப்பார் என்றே நம்புவோம்.
********************************************************************************

********************************************************************************************

களத்தில் கேப்டனின் தளபதிகள்!

கொடைக்கானல் துணை மின் நிலைய அலுவலர் களை சந்தித்தோம் ''கொட&