********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

சென்ற வார செய்திகள் (10 செப்டம்பர் 2011)

Friday, September 9, 2011

மிஸ்டர் கழுகு: பஞ்சர் ஆகிறதா ஸ்பெக்ட்ரம்?

''இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்றுதான்... உறவும் வரும் பிரிவும் வரும்

''கடந்த இதழுக்கு, 'கூட்டணியை உலுக்கும் உள்ளாட்சி நிலவரம்... விஜயகாந்த்தை கழற்றிவிட நினைக்கிறாரா ஜெ.?’ என்ற தலைப்பில் நான் கொடுத்த கவர் ஸ்டோரி, கிட்டத்தட்ட நடக்கத்
தொடங்கிவிட்டதாகவே தெரிகிறது. இந்த இரண்டு கட்சிகளுக்கும் இடையே இருக்கும் கொதிநிலை நாளுக்குநாள் கூடிக்கொண்டே போகிறது. 'தே.மு.தி.க. எங்களுக்கு அரசியல் பாலபாடம் நடத்த வேண்டாம்’ என்று சட்டசபையில் ஜெயலலிதா சீறியது... அந்தக் கட்சியின் மீதான கோபத்தை வெளிக்காட்டியிருக்கிறது!'' என்ற கழுகாரிடம்,வாழ்க்கை ஒன்றுதான்...'' - ஹம்மிங்கோடு வந்தார் கழுகார். அ.தி.மு.க. - தே.மு.தி.க. உரசல் பற்றிய செய்திகளோடு வருகிறார் என்பது நமக்குப் புரிந்துவிட்டது. 
''அவையில் என்னதான் நடந்தது?'' என்றோம்.
''தே.மு.தி.க. எம்.எல்.ஏ. அருண் சுப்பிரமணியம், புதன்கிழமை அன்று பேசினார். 'சிறையில் அடைக்கப்​பட்டு இருக்கும் தி.மு.க-வினர் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி சுகவாசம் அனுபவிக்க அனுமதிக்கக் கூடாது. சிறைவாசம் சுகவாசமாக மாறிவிடக்கூடாது’ என்று ஆட்சியாளர்கள் மீது ஒரு குற்றச்சாட்டை வைத்தார். அதாவது, கைதாகிறவர்களைக் கறாராக நீங்கள் கவனிக்கவில்லை என்பதுதான் அதனுடைய உட்பொருள். உடனே ஜெயலலிதா, 'எந்தக் கைதிக்கு அப்படி வசதி செய்து தரப்பட்டது என்று சொல்லுங்கள். நடவடிக்கை எடுக்கிறோம். பொத்தாம்பொதுவாகச் சொல்லக்கூடாது’ என்றார். அதற்கு விளக்கம் தராத தே.மு.தி.க. எம்.எல்.ஏ. அடுத்த சப்ஜெக்ட்டுக்குத் தாவினார்.  'திருத்தணி முருகன் கோயில் அறுபடை வீடுகளில் ஐந்தாவது வீடு...’ என்று சொல்லி அந்த இடத்தில் இருக்கும் பிரச்னையை அவர் சொல்லத் தொடங்க, உடனே ஜெயலலிதா எழுந்துவிட்டார். 'முதன்முறையாக இப்போதுதான் தே.மு.தி.க. அவைக்குள் நுழைந்து இருக்கிறார்கள். அதனாலேயே அவர்கள் எங்களுக்குப் பாலபாடம் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். இதேபோலதான் மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ. பேசும்போது, மேட்டூரில்தான் மேட்டூர் அணை இருக்கிறது என்றார். அறுபடை வீடுகளில் ஐந்தாவது வீடு திருத்தணி கோயில் என்பதெல்லாம் நீங்கள் சொல்லாவிட்டால் எங்களுக்குத் தெரியாதா?’ என்று கோபத்தைக் காட்டினார். இப்படியரு ரியாக்ஷன் வரும் என்று தே.மு.தி.க. கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை!''  
''கோபத்துக்குக் காரணம், உள்ளாட்சித் தேர்தல் இடஒதுக்கீடு பிரச்னைதானே?''

''10 மாநகராட்சிகளில் நான்கு மேயர்களைக் குறிவைத்துக் கோரிக்கை வைத்திருப்பதை, கடந்த இதழிலேயே உம்மிடம் சொல்லியிருக்கிறேன். நகராட்சித் தலைவர் பதவிகளில் 40-க்கும் மேற்பட்ட பதவிகளையும் அதோடு மொத்த இடங்களில் 30 சதவிகிதத்துக்கு அதிகமான இடங்களையும் தே.மு.தி.க. கேட்கிறதாம். 'சட்டசபைத் தேர்தலிலேயே குறைந்த இடங்களைத்தான் நாம் வாங்கி இருக்கிறோம். எப்படியாவது உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களை வாங்கிவிட வேண்டும்’ என்று தே.மு.தி.க. முன்னணியினரே சொல்லி வருகிறார்கள். ஆனால், அந்த அளவுக்குக் கொடுக்க முடியாது என்பதில் அ.தி.மு.க. விடாப்பிடியாக இருக்கிறது. எப்படியாவது தொகுதிப் பங்கீட்டை சீக்கிரமே முடித்துவிட வேண்டும் என்பதற்காகவே தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் இருந்து விருப்ப மனுவை முதன் முதலில் கேட்டது அ.தி.மு.க.! அதோடு கூட்டணிக் கட்சிகளுடன் பேசுவதற்காக அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், நத்தம் விசுவநாதன் அடங்கிய தொகுதிப் பங்கீட்டுக் குழுவையும் அமைத்துவிட்டார் ஜெயலலிதா. அ.தி.மு.க. ஒதுக்கும் இடங்களை வாங்கிக்கொண்டு தே.மு.தி.க. போட்டியிடுமா என்பது சந்தேகமே. சட்டசபைத் தேர்தலில் 41 இடங்கள் ஒதுக்கப்பட்டாலும், கேட்ட தொகுதிகள் கிடைக்காததால் கூட்டணிக் கட்சிக¬ளை எல்லாம் அழைத்துத் தனது அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தியதையும் அதன்பிறகு விடிய விடியப் பேச்சுவார்த்தை நடத்தித் தொகுதிகள் ஒதுக்கப்பட்டதையும் நினைத்துப் பார்க்க வேண்டும். அதனால் தே.மு.தி.க. என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பது இதுவரை சஸ்பென்ஸ்தான்!''

''ஓகோ!''
''கேப்டன் கோபத்தைக் காட்டினாலும் பண்ருட்டி ராமச்சந்திரன் அ.தி.மு.க-வோடு ஆதரவாகத்தான் போய்க்கொண்டு இருக்கிறார். 'பாலபாடம் நடத்த வேண்டாம்’ என்று ஜெயலலிதா அவையில் சொன்னதற்கு இரண்டு நாட்கள் முன்பு விளையாட்டுத் துறை மேம்பாட்டுக்கென பல்வேறு திட்டங்களை ஜெயலலிதா அவையில் அறிவித்தார். அதற்காக நன்றி தெரிவித்துப் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், 'அரசியலில் போட்டி இருக்கலாம், பொறாமை இருக்கக் கூடாது’ என்று அப்போது சொன்னதற்கு அர்த்தம் உண்டு என்கிறார்கள். ஒவ்வொரு நாளும் ஒரு மானிய கோரிக்கை மீது விவாதம் சட்டசபையில் நடந்து வருகிறது. இந்த விவாதத்தில் முதலில் எதிர்க்கட்சியான தே.மு.தி.க. உறுப்பினர்கள்தான் பேசுகிறார்கள். அவர்கள் பேசும்போது, ஜெயலலிதா அவையில் இருப்பதில்லை. பணிகள் காரணமாகத்தான் அவர் வெளியே செல்கிறார் என்று சொல்லப்பட்டாலும், தே.மு.தி.க. இதனை ரசிக்கவில்லை. மொத்தத்தில், உரசல் நாளுக்குநாள் அதிகமாகிறது!'' என்ற கழுகார் அடுத்த சமாசாரத்தை அவிழ்த்தார்...
''தி.மு.க-வின் முப்பெரும் விழா வழக்கமாக செப்டம்பர் 15-ம் தேதிதான் நடக்கும். இம்முறை செப்டம்பர் 18-ம் தேதி வேலூரில் நடக்கும் என்று அறிவித்து இருந்தார்கள். திடீரென தேதியும் இடமும் மாறி இருக்கிறது.  30-ம் தேதி சென்னையில் முப்பெரும் விழா நடக்கும் என்று தலைமைக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 15ம் தேதிதான் ஸ்பெக்ட்ரம் வழக்கில் மூன்றாவது குற்றப் பத்திரிகை தாக்கல் ஆகிறது. அந்த சமயத்தில் முப்பெரும் விழா நடத்துவதை தி.மு.க. விரும்பவில்லை. அன்றைய தினம் சி.பி.ஐ. ஏதாவது சொல்லிவிடக் கூடாது என்ற பயம் இருக்கிறது. மூன்றாவது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துவிட்டால் கனிமொழிக்கு ஜாமீன் கிடைப்பது எளிது என்று சில மூத்த வழக்கறிஞர்கள் கருணாநிதிக்குச் சொல்லி இருக்கிறார்கள். மகளும் இருந்தால் நல்லதுதானே என்றும் கருணாநிதி நினைக்கிறார். 15-ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் ஆகிவிட்டால், 30-ம் தேதிக்குள் கனிமொழிக்கு ஜாமீன் வாங்கி அழைத்து வந்துவிடலாம் என்று துடிக்கிறாராம் கருணாநிதி. அதற்காகத்தான் இந்த தள்ளி வைப்புகள்!''
''ஸ்பெக்ட்ரம் வழக்கு குறித்து பிரசாந்த் பூஷண் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனு பலத்த சர்ச்சையைக் கிளப்பி உள்ளதே?''
''ஸ்பெக்ட்ரம் வழக்கு கொஞ்சம் கொஞ்சமாக பஞ்சர் ஆகி வருவதாக டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் சொல்கின்றன. டெல்லி வட்டாரத்தில் பலமாகப் பேசப்படும் விஷயங்களை நான் உமக்குச் சொல்கிறேன். மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் எனப்படும் 'டிராய்’ சமீபத்தில் வெளியிட்ட அறிக்கைதான் இந்த சந்தேகங்களுக்கு அடிப்படைக் காரணம். '2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் மத்திய அரசுக்கு எந்தவிதமான இழப்பும் ஏற்படவில்லை’ என்று சொல்கிறது அந்த அறிக்கை. ஏலத்தில் விடாமல் முதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்று கொடுத்ததால் அரசுக்கு  1.75 லட்சம் கோடி இழப்பு என்று மத்திய கணக்குத் தணிக்கை அறிக்கை சொன்ன பிறகுதான் நாட்டில் இந்த விஷயம் தீயாய் கிளம்பியது. சி.பி.ஐ. இந்த விஷயத்தைக் கையில் எடுத்து விசாரித்தது. இதில் முகாந்திரம் இருப்பதாக நம்பிய பிரதமர், அன்றைய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசாவை ராஜினாமா செய்யச் சொன்னார். இதில் கலைஞர் டி.வி. சம்பந்தப்பட்டு இருப்பதாகச் சொல்லி, கனிமொழியும் கைதானார். தயாநிதி மாறன் மீது புகார் கிளம்பியது. அவரையும் ராஜினாமா செய்யச் சொன்னார் பிரதமர். 14 பேர் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். பாட்டியாலா கோர்ட்டுக்கு வந்து போய்க் கொண்டு இருக்கிறார்கள். நீதிபதி சைனி, குற்றச்சாட்டுகளை பதிவு செய்யும் காரியத்தில் மும்முரமாகி உள்ளார். இப்படிப்பட்ட நிலைமையில்தான் டிராய், 'ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் இழப்பு எதுவும் ஏற்படவில்லை’ என்று சொல்கிறது. ஆ.ராசா ஆதரவு வட்டாரத்தின் முகத்தில் இப்போதுதான் கொஞ்சம் சிரிப்பு மலர ஆரம்பித்துள்ளது!''
''டிராய்... தடுமாறுவது ஏன்?''
''எல்லாம் ப்ளாக் மெயில் பாலிடிக்ஸ்தான் என்று சொல்கிறார்கள் டெல்லி பத்திரிகையாளர்கள். பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அன்றைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஆகிய இருவர் மீதும் ஆ.ராசாவும் கனிமொழியும் சிறப்பு நீதிமன்றத்தில் வைத்த நேரடியான தாக்குதல்தான் டிராயின் இந்த வழுக்கலுக்குக் காரணமாம். 'அவர்கள் இருவருக்கும் தெரியாமல் நான் எதையும் செய்யவில்லை’ என்று ராசா சொன்னார். அதையே கனிமொழியும் சொன்னார். மன்​மோகன், சிதம்பரம் இப்போதைய தொலைத் தொடர்​புத் துறை அமைச்சர் கபில்சிபல் ஆகிய மூவரையும் சாட்சிகளாகச் சேர்க்க வேண்டும் என்று இவர்களது தரப்பு வழக்கறிஞர் சுஷில்குமார் சொல்லி மேலும் டென்ஷனை அதிகப்படுத்தினார். இதைத் தொடர்ந்துதான் காங்கிரஸ் மேலிடம் தனது சுருதியை மெள்ளக் குறைக்க ஆரம்பித்துள்ளதாம்...''
''ஆனால் சி.பி.ஐ.?''
''அரசாங்கம் தகவல்களை முறையாகக் கொடுத்து விசாரணைக்கு ஒத்துழைப்பும் தந்தால்தானே வழக்கை முறையாக நடத்த முடியும்? என்னதான் நேர்மையான அதிகாரிகள், வளைந்து கொடுக்காத அதிகாரிகள் இருந்தாலும் பெரிய இடத்துப் பொல்லாப்பை எவ்வளவு காலம்தான் சமாளிக்க முடியும்? இதை எல்லாம் வைத்துப் பார்த்தால் ஸ்பெக்ட்ரம், லேசாக கலர் மங்க ஆரம்பித்து இருப்பதாகவே சொல்கிறார்கள். இந்த நேரத்தில்தான் பிரசாந்த் பூஷண் மனுவும் தாக்கல் ஆகி உள்ளது. 'தயாநிதி மாறனின் பங்குகள் குறித்த முக்கியத்துவம் வாய்ந்த உண்மைகளை சி.பி.ஐ. கண்டு கொள்ளவில்லை. எனவே அவரிடம் முறையான விசாரணை நடத்துவதற்கு உத்தரவிடவேண்டும்’ என்று சொல்கிறது பிரசாந்த் பூஷணின் மனு. டிராய் கொடுத்த அறிக்கையை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கடந்த 6-ம் தேதி ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்துள்ளனர். அதாவது உள் குழப்பம் ஆரம்பம் ஆகிவிட்டது. இது இந்த வழக்கை ஊத்தி மூடுவதற்கான முஸ்தீபுகளாகத்தான் தெரிகிறது''
''உச்ச நீதிமன்றம் சும்மா இருக்காதே?''
''அவர்களது மேற்பார்வையில்தான் வழக்கே நடக்கிறது. எனவே அவர்களும் இதை உன்னிப்பாகத்தான் கவனிக்கிறார்கள். டிராய் அறிக்கை வெளியானதற்கு மறுநாள் சுப்ரீம் கோர்ட்டில் ஸ்வான் இயக்குநர் வினோத் மற்றும் யுனிடெக் நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்திரா ஆகியோரது ஜாமீன் மனுக்கள் விசாரணைக்கு வந்தன. நீதிபதிகள் சிங்வீ, டாட்டூ ஆகியோர் அடங்கிய பெஞ்ச்தான் இதை விசாரித்தது. வினோத், சஞ்சய் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி, 'ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எந்த இழப்பும் ஏற்படவில்லை என்று டிராய் சொல்லி இருக்கிறது’ என்பதை ஜாமீன் வழங்குவதற்கான ஆதாரமாகக் காட்டினார். அப்போது குறுக்கிட்ட சி.பி.ஐ. வக்கீலும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுமான ஹரீன் ரவால், 'டிராய் அறிக்கை, மத்திய அரசுத் துறைகளுக்கு இடையிலான தகவல் பரிமாற்றம்தான். அது ரகசியமானது’ என்றார். 'பத்திரிகையில் வெளியான பிறகு என்ன ரகசியம்? இந்த அறிக்கை பற்றி நாங்கள் விசாரிக்கிறோம்’ என்றார்கள் நீதிபதிகள். எனவே உச்ச நீதிமன்றம் சும்மா விடாது என்றே தெரிகிறது. ரகசியமான அறிக்கையை பத்திரிகைக்கு யார் லீக் பண்ணியிருக்க முடியும்.. என்பதும் தெரியாத ரகசியம் அல்ல!'' என்றபடி கழுகார் விட்டார் ஜூட்! 
ரேஸில் முந்தும் ஜூனியர்
காலியாக இருக்கும் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பதவி வளம் கொழிக்கும் அட்சயப் பாத்திரம் என்பதால், கடும் ரேஸ் நடக்கிறது.  கடந்த தி.மு.க. ஆட்சியில் சீனியர்களை நியமிக்கும் சம்பிரதாயம் காற்றில் விடப்பட்டது. இப்போதும் ஏழாவது இடத்தில் உள்ள ஜூனியர் ஒருவர் ரேஸில் முந்திவிட்டதாகச் சொல்கிறார்கள். 
சகாயம் முன் ஆஜராவாரா அழகிரி?

திருமங்கலம், சிவரக்கோட்டையில் அழகிரிக்குச் சொந்தமான தயா இன்ஜினீயரிங் கல்லூரி உள்ளது.  இந்தக் கல்லூரி அந்தப்பகுதியின் நீராதாரமான கரிசல்குளம் கண்மாயையும், கமண்டல நதியையும் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருப்பதாக விவசாயி ராமலிங்கம் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இது தொடர்பாக, கடந்த மாதம் 19-ம் தேதி வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தார்கள்.  ஆனாலும், 22-ந்தேதி கலெக்டர் சகாயம், மாவட்ட வருவாய் அதிகாரியோடு திடீரென மறுஆய்வு நடத்தியவர், கண்மாயின் 4-வது மடை இடித்து அடைக்கப்பட்டிருப்பதையும், நீராதாரப் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதையும் உறுதி செய்தார்.

இதைத் தொடர்ந்து 8-ந்தேதி, அழகிரிக்கும், காந்தி அழகிரிக்கும்  நோட்டீஸ் அனுப்பினார். 'நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தடுப்புச் சட்ட’த்தின் கீழ் அனுப்பப்பட்ட  நோட்டீஸில், வருகிற 16-ம் தேதி  காலை அழகிரியும், காந்தி அழகிரியும் கலெக்டர் அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் சகாயம் முன்னிலையில் அவர்கள் ஆஜராவார்களா?
*******************************************************************************
கழுகார் பதில்கள்

கனகவல்லி, சாத்தான்குளம்.

கண்ணுக்கு முன்னால் நடக்கும் கொடூரம் என்ன?

சோமாலியாவைத்தான் சொல்ல வேண்டும்!  சுமார் 40 லட்சம் பேர்  பஞ்சத் தால் பட்டினி கிடக்கிறார்கள். 'இப்படியே இது நீடித்தால் இன்னும் சில மாதங்களில் ஏழரை லட்சம் பேர் இறந்து போக நேரிடும்’ என்று சொல்லி இருக்கிறது ஐ.நா. அமைப்பு. உலகத்தின் சாட்சியாக அந்த மக்கள் உயிரை இழக்க இருக்கிறார்கள். 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடுவேன்’ என்ற வள்ளலார் வரிகளை உலக சமுதாயம் தனது உடலாய் போர்த்திக் கொள்ளப் போவது எப்போது?
 சிவா, திருச்சி.
'கைது செய்யப்படும் தி.மு.க. தலைவர்கள் யாரானாலும் அவர்களை சொந்த ஊரில் சிறை வைக்காமல்... வெளியூரில் சிறை வைக்கிறார்கள். இது அவர்களது அடிப்படை உரிமையைப் பறிக்கும் செயல்’ என்று ஜனாதிபதியிடம் தி.மு.க. முறையிட்டுள்ளதே?
இதில் அடிப்படை உரிமை என்ன பறி போகிறது எனத் தெரியவில்லை. தமிழ் நாட்டுக்குள்தானே வைக்கிறார்கள். பல நூறு கி.மீ.தாண்டி  திகாருக்குக் கொண்டு சென் றால்தான் தப்பு!
 வீரசேனன், துறையூர்.
'தமிழ் நாட்டை முதல் மாநிலமாக மாற்றுவதே என் கனவு’ என்கிறாரே முதல்வர்?
அது முதல்வரின் கனவு மட்டுமல்ல. மொத்த மக்களின் கனவும் அதுதான். மக்களால் கனவு மட்டுமே காண முடியும். முதல்வரால் அதை சாதித்தும் காட்ட முடியும்!
 சக்திவேல், மேட்டுப்பாளையம்.
கடாபியின் ஆதிக்கத்தில் இருந்து லிபியா முழுமை யாக விடுதலை பெறுமா?

 உ.முத்துக்கிருஷ்ணன், விருதுநகர்.கடாபியின் ஆட்சியில் இருந்து லிபியா விடுபடுகிறது என்று சொல்லலாமே தவிர, விடுதலை பெறுகிறது என்று சொல்ல முடியாது. ஏனென்றால், அடுத்து அமெரிக்காவுக்கு அடங்கி இருக்கப் போகிறது லிபியா. அந்த நாட்டின் எண்ணெய் வர்த்தகத்தில் பெருமளவு முதலீடு செய்துள்ள நாடுகளில் முக்கியமானது சீனா. எனவே, அந்தப் பகுதி யில் இருந்து சீனாவை வெளியேற்றவே இந்த உள்நாட்டு யுத்தத்தை அமெரிக்கா பயன்படுத்திக் கொண்டது. அமெரிக்காவின் பிடியில் இருந்து லிபியாவால் விடுதலை பெற முடியாது!
'மதிய உணவுத்திட்டத்தை சென்னை உள்ளிட்ட சில இடங்களில் சில பள்ளிகளில் மட்டும்தான் காமராஜர் கொண்டுவந்தார்’ என்று முதல்வர் ஜெயலலிதா சொல்வது உண்மையா?
இல்லை. இது தவறான தகவல்! அரசு ஆவணங்களின்படி அந்தக் கால கட்டத்தில் இருந்த சுமார் 28 ஆயிரம் பள்ளிகளில் 27 ஆயிரம் பள்ளிகளில் மதிய உணவுத்திட்டம் அமலில் இருந்துள்ளது. ஜெயலலிதா, எந்த ஆதாரத்தையும் பார்க் காமல் பொத்தாம் பொதுவாகவே பதில் அளித்துள்ளார்.
 பா.சு.மணிவண்ணன், திருப்பூர்-4.
'ஊழலை ஒழிப்பதற்காக உருவாக்கப்படும் லோக்பால் அமைப்பே ஊழல் ஆகிவிடும்’ என்ற ராகுலின் பேச்சு பாராட்டுப் பெற்றுவிட்டதே?
காங்கிரஸில் இருக்கும் அவருக்குத் தானே காங்கிரஸ்காரர்களைப் பற்றி முழுமையாகத் தெரியும்!
அவரது பேச்சில் கவனிக்கத்தக்க ஒரு விஷயம் உண்டு. 'அரசுத் துறையின் கொள்முதலில் வெளிப்படையான தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும்’ என்று சொல்லி இருக்கிறார் ராகுல். அரசுப் பணத்தைக் கொள்ளை அடிப்பதில் இருக்கும் முக்கியமான வசதி, பொருட்கள் கொள்முதல் செய்யப்படுவதில்தான் நடக்கிறது. அதைத் தடுக்க வேண்டும் என்கிறார் ராகுல். காங்கிரஸின் அதீத அதிகாரம் பொருந்தியவர் அவரை விட வேறு யாரும் இல்லை. எனவே, இந்த ஒரு விஷயத்துக்காக அவர் போராடலாம். அண்ணா ஹஜாரேவைப் போல புகழ் மட்டுமல்ல, பயனும் கிடைக்கும்!
 என்.வி.சக்கரை, அத்தனூர்.
கருணாநிதி நடத்தும் கண்டனக் கூட்டங்களால் பெரிதாக என்ன நடந்துவிடப் போகிறது?
அரசியல்வாதிகள் தூங்கும்போதும் கால் ஆடிக் கொண்டே இருக்க வேண்டும் என்பார்கள். கருணாநிதி நடத்தும் கண்டனக் கூட்டங்கள் அப்படிப் பட்டவைதான்!
 வி.அபர்ணா பாரதி, சென்னை-112.
ரஜினி வாய்ஸ் வருமா?
அவரை நிம்மதியாக வாழ விடுங்கள்! இப்படி தூபம் போட்டுப் போட்டே நைந்து போன மனிதர்களில் அவரும் ஒருவர்!
 எஸ்.நடராஜ், காரைக்கால்.
நரேந்திர மோடிக்கு பிரதமர் ஆகும் வாய்ப்பு உள்ளதா?
அவரை டெல்லி அரசியலுக்கு வரவிடக்கூடாது என்பதில் சில பி.ஜே.பி. தலைவர்களே சதி செய்கிறார்கள். ஆனால், இன்றைய நிலையில் அந்தக் கட்சியில் இருக்கும் அகில இந்தியாவும் அறிந்த வேட்பாளர் மோடி மட்டும்தான்!
 கா.கதிரவன், தஞ்சை.
மனிதனுக்கும் விலங்குக்கும் பகுத்தறிவு மட்டும்தான் வித்தியாசமா?
இல்லை என்கிறார் ஸ்ரீஅரவிந்தர்!
'விலங்குகளிலும் பகுத்தறிவு உண்டு. ஆனால், மிருக உடலில் அது சரியாக வளர்ச்சி பெறுவது இல்லை. மனிதனுக்கும் விலங்குகளுக்கும் உள்ள உண்மையான வேறுபாடு அது அல்ல. மிருக நிலை என்பது உடலுக்கு முழுவதும் அடிமைப்பட்டுக் கிடப்பது ஆகும். உடலின் மீது வெற்றி, அக விடுதலைக்கான முயற்சி ஆகியவற்றில்தான் மனிதனின் மனிதத் தத்துவம் அடங்கி உள்ளது. இதுவே மிருக நிலைக்கும் மனிதத் தத்துவத்துக்கும் இடையே உள்ள உண்மையான வேறுபாடு’ என்கிறார் அரவிந்தர். 'எனது சிறைவாசம்’ என்ற அவரது புத்தகத்தை தனிமையில் வாசியுங்கள்!
 தி.அண்ணாமலை, திருப்புவனம்.
டாஸ்மாக் கடை வருமானம் இந்த ஆண்டில் சுமார் 15 ஆயிரம் கோடியைத் தாண்டும் என்று பெருமையுடன் சொல்கிறாரே அமைச்சர்?
இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது? 'ஒவ்வொரு திராட்சைக் கனியிலும் ஒரு பேய் உள்ளது’ என்கிறது குரான். பேய்களை உற்பத்தி செய்வதும் படரவிடுவதும் பெருமைப்படுவதும் அரசாங்கத்தின் வேலையா?

ஜெயிலில் வைத்துவிட்டு தேர்தல்...

பெயிலில் வருவாரா நேரு?
திரும்பிப் பார்க்க வைக்கும் திருச்சி மேற்கு!

லகம் முழுவதும் அக்டோபர் 26-ம் தேதி தீபாவளி. ஆனால், திருச்சி மேற்குத் தொகுதி மக்களுக்கோ முன்கூட்டியே அக்டோபர் 13-ம் தேதி தீபாவளி. ஆம். அன்றுதான் அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல்! தேர்தல் ஆணையத்தால்  தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து, வாக்காளர்களின் முகங்கள் மத்தாப்புபோல பிரகாசிக்கிறது. எப்படியும் தீபாவளி போனஸ் திகட்டத் திகட்டக் கிடைத்துவிடும் என்ற எதிர்பார்ப்பு அவர்களுக்கு. போட்டியிட விரும்பும் அரசியல் பிரமுகர்கள்தான் 'யாருக்கு ஸீட்?’ என்று திக்திக் இதயத்துடன் காத்திருக்கிறார்கள்! 
கடந்த சட்டமன்றத் தேர்தலில், போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த கே.என்.நேருவை எதிர்த்துப் போட்டியிட்டு, கிட்டத்தட்ட 7,000 வாக்குகள் வித்தியாசத்தில் அவரைத் தோற்கடித்த அ.தி.மு.க-வின் மரியம்பிச்சை, தமிழக  அமைச்சராக​வும் ஆனார். ஆனால், பதவி ஏற்ற சில நாட்களிலேயே அவர் விபத்தில் இறக்க... அதன் காரணமாக, இடைத்தேர்தலை சந்திக்கிறது இந்தத் தொகுதி. அவரை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோற்ற நேரு, கடலூர் சிறையில் இருக்கிறார்.
தி.மு.க-வைப் பொறுத்த வரையில், வேட்பாளர் ரேஸில் முதலில் இருப்பவர் கே.என்.​நேரு. ஒரு
தேர்தலில் தோல்வி கண்டால், அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவார் என்பது நேருவுக்கான தேர்தல் சென்டிமென்ட். 'கடந்த முறை மரியம்​பிச்சையை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோற்றவர் என்பதால், இம்முறை போட்டியிட்டால் அவர் கண்டிப்பாக வெற்றி பெறுவார். அவர் மாவட்டச் செயலாளராகவும் இருப்பதால், கண்டிப்​பாகப் போட்டியிட வேண்டும்’ என கட்சியினர் ஒருமித்த குரலில் சொல்​கிறார்கள். ஆனால், இந்த சென்டிமென்ட் இடைத்தேர்தலுக்குப் பொருந்துமா என்பதும் கேள்விக் குறிதான்!

அடுத்ததாக, தி.மு.க-வில் அடிபடும் பெயர் பரணிக்குமார். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு மிக வேண்டப்பட்டவர். இருந்தும், அவரது சில நடவடிக்கைகள் 
காரணமாக கட்சியில் இருந்து கொஞ்சம் காலம் தனிமைப்படுத்தப்பட்டார். இப்போதோ, பக்குவப்பட்ட மனிதராக மாறி தொகுதியை வலம் வருவதுடன், கட்சியின் நிகழ்ச்சிகளிலும் தவறாமல் ஆஜராகிவிடுகிறார். தொகுதிக்கு நன்கு அறிமுகமானவர் என்பதோடு, முன்பு எம்.எல்.ஏ-வாக இருந்திருக்கிறார் என்பதால், 'நேருவுக்கு ஸீட் இல்லை என்றால், அது பரணிக்குமாருக்குதான்!’ என்று கட்சிக்காரர்கள் அடித்துக் கூறுகிறார்கள்.

சிறையில் இருக்கும் நேருவை ஜாமீனில் எடுக்கும் முயற்சிகள் ஜரூராக நடக்கின்றன. 'கலைஞர் அறிவாலய’ வழக்கில் ஜாமீன் கிடைத்தாலும், அடுத்தடுத்து வழக்குகளைத் தயார் நிலையில் வைத்திருக்கிறது போலீஸ். எனவே, அவர் ஜாமீனில் வெளியே வருவது சந்தேகம்தான். அதையும் மீறி வெளியே வந்தால்​தான், போட்டியிடும் முடிவை எடுப்பார். 'ஒரு​வேளை சூழ்நிலைகள் சுமுகமாக இல்லாவிட்டால், இடைத்​தேர்தலை புறக்கணிக்கும் முடிவையும் தி.மு.க. எடுக்கலாம்’ என்றும் சொல்கிறார்கள் சில விவரப் புள்ளிகள்.
அ.தி.மு.க. முகாமில் என்ன நிலை? மரியம்பிச்சையின் மகன் ஆஷிக், முன்னாள் எம்.எல்.ஏ-வான ரத்தினவேல், முஸ்லிம் சமுதாயப் பிரமுகரான பிலால், கேபிள் தொழில் செய்யும் கவுன்சிலரான சீனிவாசன் ஆகியோர் ஸீட் கேட்பார்கள் என்பது அக்கட்சி வட்டாரத் தகவல். என்றாலும், அம்மாவின் ஆசீர்வாதம் பெறும் பாக்கியசாலி யார் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி! முஸ்லிம் பிரமுகர் ஒருவருக்கே ஸீட் கொடுக்கப்படும் என்றும் விவரமான வட்டாரத்தினர் சொல்கிறார்கள். எனவே ஆஷிக்கும், பிலாலும் ரேஸில் இருக்கிறார்கள். இதில் பிலால், கடந்த சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் தி.மு.க-வில் இருந்து அ.தி.மு.க-வுக்கு வந்து ஐக்கியமானவர். கடந்த தேர்தலின்போது முஸ்லிம் சமுதாய வாக்குகளை மரியம்பிச்சை பெறுவதற்கு பிலால் கடுமையாகவே வேலை செய்தார். 'ஆஷிக்குக்கு ஸீட் கிடைத்து வெற்றி பெறும்பட்சத்தில், இளம் வயது சட்டமன்ற உறுப்பினர் என்னும் பெயரைப் பெறுவார். புதுமை படைப்பதுதானே அம்மாவின் பாணி. அதனால், கண்டிப்பாக அவருக்குதான் ஸீட் உறுதி’ என்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.
கடந்த சட்டமன்றத் தேர்தலை புறக்கணித்த ம.தி.மு.க-வும், இந்த இடைத்தேர்தலில் போட்டி​யிடுவோம் என அறைகூவல் விட்டிருக்கிறது. ''சென்ற முறை அ.தி.மு.வி-ன் கூட்டணியில் இருந்து கடைசி நேரத்தில் வெளியேறி தேர்தலைத் தவிர்த்த காரணத்தினால், இம்முறை தொகுதியை ம.தி.மு.க-வுக்கு தாரை வார்த்து, அதன் மூலம் உள்ளாட்சித் தேர்தலில் ம.தி.மு.க-வை தங்கள் கூட்டணிக்கு அ.தி.மு.க. கொண்டு​வரும்!'' என்று ம.தி.மு.க. தரப்பில் இருந்தே ஒரு வித்தியாசக் கோணத்தைச் சொல்லிக் கிறுகிறுக்க வைக்கிறார்கள். ஆனால், 'அது சாத்தியமே இல்லை!’ என்று சத்தியம் செய்கிறார்கள் அ.தி.மு.க-வினர். கூட்டணியோ, தனித்தோ... ம.தி.மு.க. சார்பில் ரேஸில் இருப்பவர்கள் மூவர்தான். முன்னாள் எம்.எல்.ஏ-வும் மாவட்டச் செயலாளருமான மலர்மன்னன், மாவட்ட துணைச் செயலாளர் வெல்லமண்டி சோமு, வைகோவால் 'மாமா’ என அன்புடன் அழைக்கப்படும் ஷேக்​முகமது​வின் மகள் டாக்டர் ரொக்கையா ஆகியோர் லிஸ்டில் இருக்கிறார்கள்.
இதுவரையில் இடைத்தேர்தல் என்றாலே 'திருமங்கலம் ஃபார்முலா’தான் நம் அனைவரின் நினைவுக்கு வந்தது. இந்த இடைத்தேர்தலுக்குப் பிறகு 'திருச்சி ஃபார்முலா’ என்று சொல்லும் நிலை வராமல் இருந்தால் நலம்!

ஒரு செல்போன்... ஒரு கதை!

சலசலப்பில் நகரும் சட்டசபை

மிழக சட்டசபை வரலாற்றிலேயே முதன் முறையாக செல்போன் பறிமுதல் செய்யப்​பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது! 
ஒரே இடத்தில் இடம் ஒதுக்கப்​படாததைக் கண்டித்து சட்டசபையைப் புறக்கணித்த தி.மு.க., கொஞ்ச நாளிலேயே அந்த முடிவை மாற்றிக்கொண்டது. அதன் பிறகு, அவையில் ஆஜர் ஆன முதல் நாளே மோதல் உருவானது. 'பாடி லாங்வேஜ்’ மூலம் கிண்டல் செய்கிறார் என்று துரைமுருகன் மீது புகார் கிளம்ப... அவையில் இருந்து வெளிநடப்பு செய்த தி.மு.க-வினர், அடுத்த சில நாட்கள் சட்டசபையைப் புறக்கணித்தனர். ஒரு வார இடைவெளிக்கு பிறகு கடந்த 5-ம் தேதி அவர்கள் அவைக்கு வந்தபோது, அ.தி.மு.க. எம்.எல்.ஏ-வான வெற்றிவேல், 'கவன ஈர்ப்பு தீர்​மானம்’ என்ற பெயரில் ஆதாரங்களுடன் ஒரு புயலைக் கிளப்பினார்.
ஒரு செல்போன்!
''கோபாலபுர வீட்டின் பின்புறம் 780 சதுர அடி நீர்வழிப் பாதையை 1967-ம் ஆண்டே ஆக்கிரமித்​திருக்கிறார் கருணாநிதி. அந்த இடத்தை தனக்கு ஒதுக்குமாறு சென்னை மாநகராட்சியிடம் கோரினார் அவர்.  3,250 நிர்ணயம் செய்து நிபந்தனையுடன் அது கருணாநிதிக்கு வழங்கப்பட்டது. பிறகு அந்த 
இடம் திரும்பப் பெறப்பட்டு பணம் திருப்பி அளிக்கப்பட்டுவிட்டது. ஆனால், இடத்தை கருணாநிதி ஒப்படைக்கவில்லை. அந்த இடத்தில் நிரந்தரமாக ஷெட் போட்டு பயன்படுத்தி வருகிறார்!'' என்று முதல் குண்டை போட்ட வெற்றிவேல் அடுத்ததாக அறிவாலயம்பற்றிய அதிர்ச்சித் தகவலை சொன்னார்.

''10 ஆயிரம் சதுர மீட்டருக்கு அதிகமாக உள்ள இடத்தில் கட்டடம் கட்டும்போது, அந்த நிலத்தில் 10 சதவிகிதத்தை திறந்தவெளி நிலமாக பூங்கா அமைப்பதற்கு அரசுக்கு தானமாக அளிக்க வேண்டும் என்பது விதி. ஆனால், அண்ணா அறிவாலயத்தில் பொதுமக்கள் பயன்படுத்த பூங்கா இல்லை!'' என்றார்.
இதற்கு பதிலடி கொடுக்க துரைமுருகன் அனுமதி கேட்க... அனுமதி கிடைக்கவில்லை. இதனால், இரு தரப்புக்கும் இடையே கூச்சல்... குழப்பம். இந்த சமயத்தில், நடந்த பரபரப்பு விஷயங்களை தனது செல்போனில் படம் எடுத்ததாக மன்னார்குடி எம்.எல்.ஏ-வான டி.ஆர்.பி.ராஜா மீது புகார் கிளம்பியது. அமைச்​சர் செந்தில் பாலாஜி இதைப் பார்த்துவிட்டு சபாநாயகரிடம் சொன்னார். உடனே சபாநாயகர் ஜெயக்குமார், 'செல்போனை பறிமுதல் செய்யுங்கள்’ என்று உத்தரவிட்டார். ''செல்போனில் படம் எடுத்தது உரிமை மீறல். பறிமுதல் செய்யப்பட்ட செல்போனில் என்ன உள்ளது என்பதை அறிய உரிமைக் குழுவுக்கு அனுப்புகிறேன்!'' என்று சபாநாயகர் உத்தரவிட்டார்.
இதுபற்றி ராஜாவிடம் கேட்டபோது படம் எடுத்தது தொடர்பாக எதுவும் பேச மறுத்து​விட்டார். ''புதிய எம்.எல்.ஏ-வான எனக்கு சட்டசபையில் செல்போன் பயன்படுத்துவது பற்றிய விதிகள் இன்னும் முழுமையாகத் தெரிய​வில்லை. தொகுதி மக்களிடமிருந்து நிறைய மனுக்கள் இ-மெயிலில் எனக்கு வந்து கொண்டிருக்கிறது. அதைத்தான் பார்த்தேன். இன்டர்நெட் மூலம்தான் தொகுதி மக்களிடமிருந்து நிறைய புகார்கள் வருகின்றன. அவை நடக்கும் போது இ-மெயில் பயன்படுத்த சபாநாயகர் ஆவண செய்ய வேண்டும்!'' என்று சொன்னார்.
ஒரு கதை!
ஆதி திராவிடர் நலத் துறை மானிய கோரிக்கை பதில் உரையில் பேசிய அமைச்​சர் சுப்பிரமணியன், மண்வெட்டி கதை ஒன்றைச் சொன்னார். ''அடுத்தவர் நிலத்துக்கு ஆசைப்பட்டவர்கள் அடுத்தடுத்து அவர்களாகவே சிறைக்குச் செல்கிறார்கள். விவசாயி ஒருவன் வசதியாக வாழ விரும்பினான். அதற்காக கடவுளிடம் வரம் கேட்டான். கடவுள் ஓர் இரும்பு மண்வெட்டியைக் கொடுத்தார். அதைக்கொண்டு நிலத்தை தோண்டினான். மண் முழுவதும் இரும்பாக மாறியது. மீண்டும் விவசாயி கடவுளிடம் வரம் கேட்டான். கடவுள் வெள்ளி மண்வெட்டி கொடுக்க, அவன் வெட்ட... எல்லாம் வெள்ளியாக கிடைத்தன. பேராசைகொண்ட விவசாயி, மீண்டும் வரம் கேட்டான். தங்க மண்வெட்டியைக் கொடுத்தார் கடவுள். தங்கம் கிடைக்கும் ஆசையில் தோண்டிக்கொண்டே இருந்தான். பெரிய குழிதான் வந்தது. கடைசியில், அந்த மண்ணே அவனை மூடிவிட்டது. இதில் இரும்பு மண்வெட்டி ஸ்டாலின், வெள்ளி மண்வெட்டி அழகிரி, தங்க மண்வெட்டி திகார் ஜெயிலில் இருக்கும் கனிமொழி...'' என்று சூட்டைக் கிளப்பக் கொந்தளித்தார்கள் தி.மு.க. உறுப்பினர்கள்.
தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, ஜெ.அன்பழகன் ஆகியோர் இதை எதிர்த்து மறுப்பு தெரிவிக்க எழுந்தனர். ஆனால், அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், ஒரே கூச்சல்... குழப்பம். இந்த சமயத்தில், தி.மு.க. உறுப்பினர்கள் கையை நீட்டி ஏதோ பேசிக்கொண்டு இருந்தார்கள். தி.மு.க. எம்.எல்.ஏ-வான சிவசங்கர் விரலைக் காட்டிப் பேசுவதாக அமைச்சர் பன்னீர்செல்வம் சொல்ல... உடனே, சிவசங்கர் அவையில் இருந்தபடியே ஒரு வகையான செய்கை செய்தார். உடனடியாக அவரை அவையைவிட்டு வெளியேற்றினர். அப்போது அவர் சபை காவலர்களை அடித்ததாக புகார் கிளப்பினார் அமைச்சர் செங்கோட்டையன். ''காவலரிடம் புகார் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும்!'' என்று சபாநாயகர் சொன்னார். சிவசங்கரைத் தொடர்ந்து எதிர்ப்புக் கிளப்பிய தி.மு.க. உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்.
சிவசங்கரிடம் பேசினோம். ''நாங்கள் பேசுவதற்​குத்தான் அனுமதி கேட்டோம். அனுமதி தரவில்லை. மேலும், சபைக் காவலர்களை நான் தாக்கவில்லை. என் மீது சொல்லப்படும் புகாரை எதிர்கொள்வேன்!'' என்றார்.
மொத்தத்தில் சபைக்குள் தி.மு.க-வினரால் இருக்க முடியவும் இல்லை. ஆளும் கட்சியினர் இருக்க விடுவதும் இல்லை என்பது மாதிரித்தான் நகர்கிறது!
எம்.பரக்கத் அலி
***********************************************************************
கறுப்புப் பணத்தை ஒழிக்க...

வெளி நாட்டில் முடங்கிக் கிடக்கும் கறுப்புப் பணத்தையும்ஊழல் பணத்தையும் இந்தியாவுக்குக் கொண்டு​வரவேண்டும் என்று எதிர்க் கட்சிகள் மட்டுமின்றி அண்ணா ஹஜாரே போன்ற போராளிகளும் ஓங்கிக் குரல் கொடுத்து வருகிறார்கள். மத்திய அரசும் தன்னால் இயன்ற அளவுக்கு முயற்சி செய்வதாகச் சொல்கிறது.
கறுப்புப் பணத்தைக் கண்டுபிடிக்க எடுக்கும் முயற்சிகளில் அரசு ஈடுபடுவதைவிட, கறுப்புப் பணம் எப்படி உருவாகிறது என்பதை ஆராய்ந்து, அதைத் தடுப்பதுதான் முக்கியம். வணிகர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் திரைப்படக் கலைஞர்கள்தான் கறுப்புப் பணம் தோன்ற மூலகாரணம். அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளிடம் இருப்பது ஊழல் பணம், இதனை கறுப்புப் பணம் என்று சொல்ல முடியாது.
வருமான வரி அதிக அளவில் விதிக்கப்படுவதால்தான் கறுப்புப் பணம் அதிகரிக்கிறது. இன்றைய போட்டி நிறைந்த உலகத்தில் ஒவ்வொரு மனிதரும் மிகுந்த சிரமத்துடன்தான் பணம் சம்பாதிக்க வேண்டி இருக்கிறது. அப்படி சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பகுதியை வரியாகக் கொடுக்க யாருக்குமே மனம் வருவது இல்லை. அதனால் பணத்தைக் கணக்கில் மறைக்க நேர்கிறது.
பூவுக்கு வலி இல்லாமல் தேனீக்கள் தேன் எடுப்பதைப் போன்று வரி விதிக்கவேண்டும் என்று திருவள்ளுவர் கூறி இருக்கிறார். அதனால் வருமானத்தை மறைத்துக் காட்ட​வேண்டிய அவசியம் இல்லாதபடி, வரி விதிக்கப்பட்டால், கறுப்புப்​பண நடமாட்டம் பெருமளவு குறைந்துவிடும். அரசு ஆவன செய்யட்டும்!
சு.தண்டாயுதபாணி, ஈரோடு.
********************************************************************************
குண்டர் சட்டத்தில் தனசேகரன்...?

விறுவிறு போலீஸ்

''மாப்ள... நம்ம நாட்டாமை மேல எத்தனை கம்ப் ளெயின்ட் வரும்னு தெரி யுமா?'' - கே.கே.நகர் பகுதி தி.மு.க. செய லாளர் தனசேகரன் கைதுக்குப் பிறகு, ஏரியாவில் கூடும் உடன்பிறப்புகள் ஆளுக்கொரு எண்ணிக்கையைச் சொல்லிப் பந்தயம் வைக்காத குறைதான்! 
வடபழனி ஆற்காடு ரோட்டை சேர்ந்த பரமேஸ்வரி என்பவர் தனக்கு சொந்தமான வணிக வளாகத்தை அடமானமாக வைத்து ஒரு நிதி நிறுவனத்திடம் இருந்து கடன் வாங்கினார். பணத்தைத் திருப்பிச் செலுத் தாததால், அந்த வணிக வளாகத்தை ஏலம்விட முடிவு செய்தது, நிதி நிறுவனம். விவகாரம் நீதிமன்றத்துக்குப் போனது.
'சிவில் வழக்கு நிலுவையில் இருக்கும் போதே, நிதி நிறுவனத்தின் ஆதரவுடன், கே.கே.நகர் தனசேகரன் எனது வணிக வளாகத்தை அபகரிக்க முயன்றார். ரவுடி களை வைத்து மிரட்டினார்...’ என்று பரமேஸ்வரி கண்ணீர் புகார் கொடுத்தார். கடந்த 6-ம் தேதி, கே.கே.நகர் 12-வது செக்டர் பகுதியில் இருக்கும் தனசேகரன் வீட்டுக்குப்போன போலீஸார், அவரை அதிரடியாகக் கைது செய்தனர்.
கடந்த ஐந்து ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் தனசேகரன் நடத்திய திருவிளை யாடல்கள், முதலீடுகள்... போன்றவற்றை தோண்டத் தொடங்கியுள்ள போலீஸ், விரைவில் அவர் மீது குண்டர் சட்டத்தை பாய்ச்சும் முடிவில் இருக்கிறதாம்.
காவல் துறை அதிகாரி ஒருவரிடம் பேசிய போது, ''கடந்த சில ஆண்டுகளாக சென்னை மட்டும் இன்றி தமிழகத்தின் பல பகுதிகளிலும் வீடு, நிலம் தொடர்பான விவகாரங்களில் தனசேகரன் பேர் அடிபட்டது. ஆட்சி மாறிய சில நாட்களிலேயே இது தொடர்பான புகார்கள் எங்களிடம் ஏராளமாகக் குவிந்தன. ஆனால், இதை முன்கூட்டியே யூகித்துக்கொண்ட தனசேகரன், அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றினார். மேலும், புகார் கொடுப்பவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்தார். திருப்பூர், கோவை பகுதியைச் சேர்ந்த சில நிறுவனங்கள் தனசேகரனால் பாதிக்கப்பட்டது தெரிந்து, கடந்த மாதம் நாங்கள் விசாரணையில் குதித்தோம். ஆனால், எங்களுக்கு முன்பே திருப்பூர் சாம்ராஜ் நகர் பகுதியில் ஒரு வீட்டில் தங்கியபடி சம்பந்தப்பட்ட புள்ளிகளுக்கு செட்டில்மென்ட் முடித்துவிட்டார். ஒரு வர்த்தக நிறுவன வழக்கில் முன்ஜாமீன் கிடைத்ததும், இனி பெரிதாக எந்தத் தொந்தரவும் இருக்காது என்று நினைத்தார்.
ஆனால், பரமேஸ்வரி விவகாரத்தைச் சொல்லி வளைத்துவிட்டோம். தனசேகரனுக்கு ஆல் இன் ஆலாகச் செயல்பட்ட முருகேசன், கோவிந்தராஜ் ஆகியோருக்கு நாங்கள் கொடுத்த ட்ரீட்மென்ட்டில் பல திடுக்கிடும் சம்பவங்களைச் சொல்லி இருக்கிறார்கள். 2007-ல் கே.கே.நகர் வக்ஃபு போர்டு சுவரை 200 நபர்களுடன் போய் இடித்து ஆக்கிரமிக்க முயன்றது... முனுசாமி சாலையில் ஒரு வணிக வளாக ஆக்கிரமிப்பு... வேளச்சேரியில் பல கோடி மதிப்புள்ள நிலத்தின் உரிமையாளரை இருட்டறையில் வைத்த விவகாரம்... கே.கே.நகர் தி.மு.க. மகளிர் அணி நிர்வாகி பால்மலர் மரணம்.... போன்ற விவகாரங்களில், தனசேகரனுக்கு தொடர்பு இருக்கிறதா என விசாரித்து வருகிறோம். 'வாடகைக்கு இருக்கிறவங்க, வீட்டைக் காலி செய்ய மாட்டேங்குறாங்க...’ என வீட்டு உரிமையாளர்கள் பலர் கண்ணைக் கசக்கிக்கொண்டு தனசேகரனைத் தேடி வந்து இருக்கிறார்கள். அப்போது முறையான செட்டில்மென்ட் ஆனதா என்பதையும் விசாரிக்கிறோம். இப்படி 20-க்கும் மேற்பட்ட வீடுகள் கைமாறி உள்ளதாகத் தெரிகிறது'' என்றார். ராமாவரம் பகுதியில் உள்ள ஒரு பெண் வீட்டில் கூடிய விரைவில் சோதனை இருக்குமாம்.
தனசேகரன் சிறையில் இருப்பதால், அவரது வழக்கறிஞரை நாம் தொடர்பு கொண்டு, இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து கேட்டோம். ''ஜூ.வி.க்கு நாங்கள் பேச மாட்டோம்'' என்று அவர் பதில் அளித்தார்.
தனசேகரனின் ஆதரவாளர்கள் சிலரோ, ''தேர்தல் நேரத்தில் எங்க அண்ணன் கில்லி மாதிரி வேலை பார்ப்பார். தளபதிக்கு சென்னை யில் உள்ள நம்பிக்கையான ஆட் களில் அண்ணனும் ஒருத்தர். அப்படிப்பட்டவரை பொய் கேஸ் போட்டு வெளியே வர முடியாதபடி செய்வதுதான் ஆளும் கட்சியின் திட்டம். இதன் மூலம் உள்ளாட்சித் தேர்தலில், வெற்றி பெறலாம்னு கணக்குப் போடுறாங்க. தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் துளியும் உண்மை இல்லைன்னு நிரூபிச்சுட்டு, கூடிய சீக்கிரமே எங்க அண்ணன் புலிப் பாய்ச்சல்ல வெளியே வருவார்...'' என்று நம்பிக்கையோடு சொன்னார்கள்.
தி.கோபிவிஜய்

''எ.வ.வேலு மீது கை வைத்தால்...''

ஜெயலலிதாவை எச்சரிக்கும் திருவண்ணாமலை தி.மு.க.

திருவண்ணாமலை நகர தி.மு.க. ஆலோசனைக் கூட்டம், கடந்த 3-ம் தேதி மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. மாவட்டச் செயலாளர் எ.வ.வேலு தாமதமாக வந்து சேர்ந்ததும், தி.மு.க. உறுப்பினர்கள் தவிர, மற்ற அனைவரும் வெளியேற்றப்பட்டு, கதவு இழுத்து மூடப்பட்டது. உள்ளாட்சித் தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்துதான் ஆலோசனை நடத்தப்பட்டது. 
கூட்டத்தில் கலந்து கொண்ட தி.மு.க. முக்கியப் புள்ளிகள் சிலரிடம் பேசினோம். ''சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைப் போன்று உள்ளாட்சித் தேர்தலிலும் தோல்வி ஏற்பட்டு விடக்கூடாது. திருவண்ணாமலை நகராட்சியில் எல்லா வார்டுகளிலும் தி.மு.க. வெற்றி பெற வேண்டும். நகராட்சித் தலைவர் பதவியை தி.மு.க. மீண்டும் கைப்பற்றியே தீரவேண்டும்...'' என்று பலர் பேசினார்களாம்.
திருவண்ணாமலை நகராட்சித் தலைவராக இருக்கும் ஸ்ரீதரன், சற்று உணர்ச்சி வசப்பட்டு, ''உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத்தான், தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், நகர்மன்றத் தலைவர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் என ஒவ்வொருவராகக் கைது செய்து வருகிறார் ஜெயலலிதா. தி.மு.க-வினரை, எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் வாரன்ட் இல்லா மலும் போலீஸ் கைது செய்கிறது. கைதான பிறகுதான், அதற்கான காரணத்தைத் தேடி போலீஸார் அலைகின்றனர். அதேபோல், நமது மாவட்ட முன்னாள் உணவுத் துறை அமைச்சர் எ.வ.வேலுவை கைது செய்ய வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். நமது எம்.எல்.ஏ. வேலு மீது கை வைத்தால் இந்த மாவட்டமே கொந்தளிக்கும். ஜெயலலிதா அந்தச் சூழ்நிலையை உருவாக்க வேண்டாம். அப்படி ஏதாவது நடந்தால் நாம் வீட்டுக்கு ஒருவராக வந்து கைது நடவடிக்கையை முறியடிப்போம். அதைப் பார்த்து, தி.மு.க-வினர் மீது கைது நடவடிக்கை எடுக்கவே ஜெயலலிதா பயப்பட வேண்டும். அந்த அளவுக்கு நாம் எல்லோரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்.
சட்டமன்றத் தேர்தலில் நாம் பகுதி பகுதியாகச் சென்று வாக்கு சேகரித்து, திருவண்ணாமலை தொகுதியில் எப்படி வெற்றி பெற்றோமோ, அதேபோல் திருவண்ணாமலை நகராட்சியின் 39 வார்டுகளையும், தலைவர் பதவியையும் நாம் கைப்பற்ற வேண்டும். யார் தலைவர், யார் கவுன்சிலர் என்று பார்க்காமல் எல்லாரும் கடுமையாக உழைக்க வேண்டும். வெற்றிக் கனியைப் பறித்து, கலைஞர் கையில் சமர்ப்பிக்க வேண்டும். திருவண்ணாமலை தி.மு.க-வின் கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும்!'' என்று ஆவேசம் காட்டி இருக்கிறார்.
எ.வ.வேலு பேசத் தொடங்கும் முன், முன்னெச்சரிக் கையாகச் சுற்றி இருந்த ஆட்களை கவனித்துப் பார்த்தாராம். அருகில் இருந்த நிர்வாகிகளிடம், 'நிருபர்கள் அல்லது வெளி ஆட்கள், வேறு கட்சியினர் யாராவது இருக்கிறார்களா? அப்படி இருந்தால் அவர்களை உடனே வெளியே அனுப் புங்கள்...’ என்று கூறி உள்ளார். அப்படி யாரும் உள்ளே இல்லை என்பதை நன்றாக உறுதிப்படுத்திக்கொண்ட பிறகே பேசத் தொடங்கி உள்ளார்.
''மக்கள் செல்வாக்கு இருப்பவர்கள் மட்டும்தான் உள்ளாட்சித் தேர்தலில் விண்ணப்பிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, 'நான் இத்தனை ஆண்டுகளாகக் கட்சிக் காகப் பாடுபடுகிறேன், அதனால் எனக்கு வாய்ப்புக் கொடுங்கள்’ என்றோ, 'நானும் என் தந்தையும் தி.மு.க-வுக்காக சிறைக்குச் சென்றவர்கள்’ என்று சொல்லியோ யாரும் ஸீட் கேட்காதீர்கள். கஷ்டப்பட்டவர்களுக்கும் சிறைச்சாலை சென்றவர்களுக்கும் பொற்கிழி கொடுத்து கௌரவப்படுத்தி உள்ளோம். ரேஷனில் மண்ணெண்ணெய் கிடைப்பதில்லை, பொருட்கள் கிடைப்பதில்லை என்பதை எல்லாம் மக்களிடம் ஆழமாக எடுத்துக் கூறுங்கள். கல்வி கற்க முடியாமல் பிள்ளைகள் பட்ட கஷ்டங்களை மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். நமக்குள் போட்டி போட்டுக்கொண்டு, வெற்றி வாய்ப்பை இழந்துவிடக் கூடாது. கைது நடவடிக்கைகள் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள். தி.மு.க-வினர் மீது ஜெயலலிதா அரசு போடும் பொய் வழக்கே, அவர்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தப் போகிறது...'' என்று சுருக்கமாகவே பேசி அமர்ந்து விட்டாராம்.
'அடுத்து நாமதான் உள்ளே போகப் போறதுன்னு அண்ணனுக்குத் தெரிஞ்சிடுச்சு போல, அதான் ரொம்ப வும் எச்சரிக்கையா இருக்கார்...’ என்று, தி.மு.க. புள்ளிகள் சிலர் சிரித்தபடியே கலைந்து சென்றனர்.

நான் மாநகராட்சி மேயர் இல்லை, தி.மு.க. மேயர்!

வேலூர் லடாய்
மிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் வர இருக்கும் சூழலில், வேலூர் மாநகராட்சி மேயருக்கும் அ.தி.மு.க., தே.மு.தி.க. கவுன்சிலர் களுக்கும் இடையில் முட்டலும் மோதலும் உச்ச கட்டத்தில் இருக்கிறது. 
வேலூர் மாநகராட்சி 28-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் சண்முகம், ''வேலூர் மாநகராட்சியா மாறி ரெண்டு வருஷத்துக்கு மேல ஆகுது. கடந்த ஆண்டு தான் ஸ்டாலின் வந்து மாநகராட்சிக் கட்டடத்தைத் திறந்து வெச்சார். மேயராக இருக்கும் கார்த்திகேயன், தனது பணிகளை ஒழுங்காக செய்யாமல் தி.மு.க-வுக்கு விசுவாசியாகச் செயல்பட்டு வருகிறார். தி.மு.க. ஆட்சியில் இருந்தபோதும், மேயர் வேலூருக்கு உருப்படியாக எதுவுமே செய்யவில்லை. ஆட்சி மாறியதும் புதிய முதல்வரின் படத்தைத்தானே மேயர் அறையில் மாட்டவேண்டும்... அதுதானே நியாயம்! கடந்த மாதம் மாநகராட்சிக் கூட்டத்தில் நாங்களும் தே.மு.தி.க. உறுப்பினர்களும், 'ஏன் முதல்வர் படம் வைக்கவில்லை?’ என்று கேட்டதற்கு பதிலே சொல்லாமல் தட்டிக் கழித்தார். ஆனால், என்ன நடந்ததோ, திடீரென இரண்டு நாட்கள் மட்டும் அம்மாவின் படம் இருந்தது. இப்போது மீண்டும் அந்தப் படம் அகற்றப்பட்டுவிட்டது. அனைத்து அரசு அலுவலகங்களிலும் முதல்வரின் படம் இருக்க வேண்டும் என்பதுதான் சட்டம். அதை மாநகராட்சியின் மேயரே மீறலாமா?
அதோட, மாநகராட்சி முழுக்கக் குடிநீர் பிரச்னை, சாலை சீர்கேடுன்னு பல பிரச்னைகள் இருக்கிறது. அதை எல்லாம் சரிசெய்ய, ஒரு முறையாவது வேலூர் தொகுதி எம்.எல்.ஏ-வும் சுகாதாரத் துறை அமைச்சருமான டாக்டர் விஜய்யை இவர் சந்தித்து கோரிக்கை வைத்து இருக்கிறாரா?'' என்று கேட்டார் சூடாக.
தொடர்ந்து பேசிய தே.மு.தி.க. கவுன்சிலர் பால சுந்தரம், ''கடந்த வாரம் மாநகராட்சிக் கூட்டத்தில் 'பாதாள சாக்கடைத் திட்டம் முறையாகச் செயல்படாமல் இருப்பதற்கு என்னதான் தீர்வு?’ என்று கேட்டோம். அதற்கு அவர், 'உங்களது கட்சித் தலைவர்கூட செயல்படாமல்தான் உள்ளார். அதற்கு நாங்கள் ஏதாவது கேட்டோமா?’ என்று எக்குத்தப்பாகப் பேசுகிறார். 'ஏன் முதல்வர் படத்தை வைக்கவில்லை?’ என்று கேட்டால், 'நான் மாநகராட்சி மேயர்ங்கறது, அடுத்த விஷயம். முதலில், நான் தி.மு.க மேயர். எனக்கு விருப்பமான படத்தைத்தான் வைப்பேன்’னு அடாவடியா பேசறார்!'' என்றார் கோபமாக.
மேயர் கார்த்திகேயனை சந்தித்து விளக்கம் கேட்டோம். ''எனக்குப் பிடிச்ச சாமியைத்தான் நான் கும்பிடுவேன். அதுபோல என் அறையில் எனக்குப் பிடித்த தலைவர் படத்தைதான் வைப்பேன். மற்றபடி, மாநகராட்சிக் கட்டடத்தில் உள்ள பிற அறைகளில் தற்போதைய முதல்வரின் படத்தைத் தான் வைத்துள்ளேன். குறை சொல்பவர்கள் சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள். அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை...'' என்றார்.
'மேயரை ஏதாவது நில அபகரிப்பு வழக்குல உள்ளே தள்ளுனாத்தான் சரியா இருக்கும்’னு அ.தி.மு.க-வினர் இப்போது புகார்தாரர்களைத் தேடி அலைகிறார்களாம். அடப் போங்கப்பா!

பூ பூக்கும் சுடுகாடு!

அரங்கூர் அதிசயம்

சுடுகாடு என்றாலே குமட்டும் அளவுக்கு நாற்றம் வரும். ஆனால், அதை ஒரு பூஞ்சோலையாக மாற்றி இருக்கிறார் ஒருவர் என்று தகவல் கிடைக்கவே, விரைந்தோம். 
கடலூர் மாவட்டம் தொழுதூரில் இருந்து 8-வது கிலோமீட்டரில் உள்ள அரங்கூர் கிராமத்தில் நுழைந்தோம். ஊர்க்காரரான பாலா, ''எங்க ஊர் சுடுகாடு, முன்னே முள்வேலிக் காடா கிடந்துச்சு. அதனால யாருமே அந்தப் பக்கமே எட்டிப்பார்க்க மாட்டோம். ஆனா, அது இப்போ பூங்காவா மாறினதுக்குப் பிறகு, பூப்பறிக்க சின்னப் பசங்கள்ல இருந்து பெண்கள் வரைக்கும் பயப்படாமப் போறாங்க! அதுக்குக் காரணம், பெரியவர் அர்ச்சுனன்தான்!'' என்றவர், சுடுகாட்டுப் பாதையையும் நமக்குக் காட்டினார்.
சுடுகாட்டுக்குள் நுழைந்தோம். 100-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள், ஏராளமான தென்னை மரங்கள், நாவல், மாதுளை, சப்போட்டா, சீத்தா, பப்பாளி, பலா, தேக்கு, கொளஞ்சி, நெல்லி, எலுமிச்சை என்று வகை வகையான மரங்கள் வரவேற்றன. ஏராளமான பூஞ்செடிகள். செடிகளுக்கு களை எடுத்துக்கொண்டு இருந்த அர்ச்சுனனிடம் பேசி னோம். ''ஊர்ல யாராவது செத்துட்டா ஈமச் சடங்கில் கலந்துகிட்டு சுடுகாடு வரைக்கும் போறது வழக்கம். அப்படி போனப்பதான், முள்ளுக் காடா கிடந்த இந்த இடம் என் மனசை உறுத்திச்சு. இந்த இடத்துக்குள்ள வரவே யோசிப்பாங்க. 'நாம செத்தாலும் இங்கதானே வரணும்? இந்த இடத்தை மாத்திக் காட்டணும்’னு ஒரு நாள் முடிவெடுத்தேன். அதோட, பிணங்களை வரிசைப்படி புதைத்தால் நிறைய புதைக்க முடியும் என்பது தோன்றியது.
உடனே, என் பொண்டாட்டி பிள்ளைகளிடம், 'நம்ம ஊர் சுடுகாட்டை மாத்தப் போ றேன். குடும்பத்துக்குப் பணம் கொடுக்க முடியாது. நீங்க எனக்கு சோறு மட்டும் போட்டா போதும்’னு பேசி, சம்மதிக்க வெச்சேன். ஊர்க் காரங்ககிட்டயும் சம்மதம் வாங்கி, நான் சம்பாதிக்கிற பணத்துல மரக்கன்னு வாங்கி நட ஆரம்பிச்சு... சில வருஷத்துல இந்த இடமே தோப்பா
மாறிடுச்சி. ராத்திரி முழுக்க தண்ணி பாய்ச்சுற வேலை இருப்பதால் வீட்டுக்குப் போக முடியாமல், இங்கேயே தங்கிட்டேன். வாழைத் தார்களை அறுவடை செஞ்சு, வித்த பணத்தை ஊர் செலவுக்குப் பயன்படுத்தினாங்க. போன முறை இருந்த கலெக்டர் வந்து இந்த இடத்தைப் பார்த்துட்டு, என்னைப் பாராட்டிட்டுப் போனார். புது கலெக்டரம்மாவும் வந்து பார்த்தாங்க. இந்தப் பூங்காவுக்கு தண்ணி பாய்ச்ச வசதியா குழாய் போட்டு மோட்டார் வசதி செஞ்சு கொடுத்தா இன்னும் நிறைய வேலை செய்யமுடியும்!'' என்று சொன்னார்.
அவரது வேண்டுகோளை திட்டக்குடி எம்.எல்.ஏ. தமிழழகனிடம் தெரிவித்தோம். ''நிச்சயம் செய்கிறேன்...'' என உறுதி அளித்து இருக்கிறார்.
இது தமிழகத்தின் முன்மாதிரிச் சுடுகாடாக மலரட்டும்!

''இப்படி அல்பாயுசுல போயிட்டானே..''

திருச்சியை உலுக்கிய விபத்து

ட்டாசு தொழிற்சாலைகள் நிறைந்த சிவகாசி வட்டாரத்தில் வெடி விபத்துகள் ஏற்பட்டு... அவ்வப்போது அதிர்ச்சி கொடுப் பது உண்டு. தற்போது திருச்சி மாவட்டம் லால்குடி பட்டாசு குடோனில் வெடி விபத்து ஏற்பட்டு மூன்று பேர் இறந்து போகவே, திகிலில் இருக்கிறார் கள் ஏரியாவாசிகள். 
லால்குடி, உமர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் குத்புதீன். கடந்த 40 ஆண்டு காலமாக பட்டாசு தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். தனக்கு சொந்தமான பெரிய திடலில் ஷெட்கள் அமைத்து பட்டாசுகளை தயார் செய்துவந்த அவர், அதே பகுதியிலேயே ஒரு குடோனும் வைத்திருந்தார். பட்டாசு தயாரிப்புக்கான மூலப்பொருட்களை கடந்த 6-ம் தேதி மாலை வேனில் கொண்டு வந்து இறக்கும்போதுதான் விபத்து!
சம்பவ இடத்துக்குச் சென்றோம். விபத்தில் குடோன் முற்றிலும் சிதைந்துபோய்க் கிடக்க... பட்டாசுகளில் எஞ்சியிருந்த காகிதக் குவியலில் நெருப்பு கணகணத்துக் கொண்டிருந்தது. பக்கத்திலேயே எலும்புக் கூடாக, அந்த வேன்.

விபத்தை நேரில் பார்த்த அழகம்மாள், ''இந்த ஏரியா ஆரம்ப காலத்துல தோப்பா இருந்தது. வீடுகளும் கிடையாது. அதனால அந்தக் காலத்துல இருந்தே குத்புதீன் இந்த இடத்துல பட்டாசு தயாரிக்குற தொழில் செஞ்சுகிட்டு இருந்தாரு. யானை வெடி, லட்சுமி வெடி தயாரிப்பார். பொண்ணுங்க, பசங்கன்னு 10 பேர் வேலை செஞ்சாங்க. அன்னிக்கு சாயந்திரம் 4 மணி இருக்கும், வேனை கொண்டுவந்து நிறுத்தி பொருட்களை இறக்கிக்கிட்டு இருந்தாங்க. என்ன நடந்துச்சுன்னு தெரியல. திடீர்னு குடோன் வெடிச்சுச் சிதற, வேன்  தீப்பிடிச்சு எரியுது. அக்கம்பக்கத்து வீடுகள்லேயும் ஓடுகள் பறந்துச்சு. உடம்பு எல்லாம் வெந்த நிலையில நிர்வாணமா குத்புதீன் ஓடி வர்றார். உடனே கட்டிக்க வேட்டி கொடுத்து, அவரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வெச்சோம். டிரைவர் கண்ணன் அந்த இடத்துலேயே இறந்து போயிட்டார். டிரைவருக்கு உதவியா செந்தில்குமார்ங்கிற பையன் வந்தார். அவருக்கும் பலமான காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் செத்துப் போயிட்டார். வேலை பார்க்குற சங்கர்ங்கிற பையனுக்கும் காயம். ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போன குத்புதீன் செத்துப் போயிட்டாருன்னு கொஞ்ச நேரத்துல தகவல் வந்துச்சு...'' என்று விவரித்தார்.
ஏரியாவைச் சேர்ந்த ஜெகதீசன், ''குத்புதீன் தொழில் ஆரம்பிச்சு நடத்திக்கிட்டு இருந்தப்பதான் இங்க வீடுகள் வர ஆரம்பிச்சது. எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாததால யாரும் எதுவும் சொல்றதில்லை. அக்கம் பக்கத்துல இருக்குற சின்னப் பசங்க யாரையும் கிட்டே விடமாட்டார். ரொம்ப ஜாக்கிரதையாத்தான் இருந்தார். சீஸன் டைம் மூணு மாசம் தான் தொழில் செய்வார். 'சுத்திலும் வீடுங்க வந்துடுச்சு. அதனால இந்த வருஷத்தோட தொழிலை விட்டுடலாம்னு இருக்கேன்’னு சொல்லிக்கிட்டு
இருந்தார். ஏரியாவை பிளாட் போட்டு வெச்சிருந்தார். ஆனா, அவர் எதிர்பார்த்த விலை கிடைக்கலை. அதுக்குள்ள இப்படி ஆயிடுச்சு...'' என்று வருத்தப்பட்டார்.

''நல்லவேளை. குடோன் வெடிச்சதுல ஏற்பட்ட தீ, அக்கம் பக்கத்துல இருக்குற வீடுகளுக்குப் பரவல. அப்படி நடந் திருந்தா... நினைச்சுப் பார்க்கவே பயமா இருக்குது...'' என்று சிலர் பதறினார்கள்.
இறந்துபோன வேன் டிரைவர் கண்ணனின் தம்பி இளவரசன், ''என் அண்ணன் பி.எஸ்.சி., வரைக்கும் படிச்சிருக்கான். நல்ல வேலை கிடைக்காததால, ஆட்டோ ஓட்டினான். இப்பத்தான் ஏழு மாசத்துக்கு முன்னாடி லோன் வாங்கி 'டாடா ஏஸ்’ வாங்கினான். மூணு வருஷத்துக்கு முன்னாடிதான் சாபிரான்னு ஒரு முஸ்லிம் பொண்ணை லவ் பண்ணி கல்யாணம் கட்டிக்கிட்டான். ரெண்டு வயசுல ஒரு பையன்கூட இருக்கான். நல்லா வாழணும்னு ஆசைப்பட்டவன், இப்படி அல்பாயுசுல போயிட்டானே...'' என்று கதறினார்.

விபத்து நடந்த இடத்தில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்த லால்குடி தாசில்தார் பாலாஜியிடம் பேசினோம். ''எல்லா அனுமதியும் முறைப்படி வாங்கித்தான் குத்புதீன் பட்டாசு தொழில் நடத்தி இருக்கிறார். பட்டாசு தயாரிப்புக்கு மூலப்பொருளான கந்தகம் அடங்கிய டிரம்மை இறக்கி வைக்கும்போதுதான் விபத்து நடந்துள்ளது. சம்பவம் நடந்த அன்று நல்ல வெயில். அதனால் கந்தகம் சூடாகியுள்ளது. டிரைவர் டிரம்மை இறக்கி வைக்கும்போது, கைதவறி கீழே விழுந்து வெடித்துள்ளது. கந்தகத் துகள்கள் இருவர் உடம்புலேயும் ஒட்டிக்கிச்சு. அதனால் தீயில், ரொம்பவே பாதிப்பு ஏற்பட்டு இருவரும் இறந்து போயிட்டாங்க...'' என்றார்.

'பட்டாசு தொழிற்சாலைக்கு திருமங்கலம் ரோடு, சிறுதையூர் என்ற முகவரியில் அனுமதி வாங்கிவிட்டு, உமர்நகர் பகுதியில் தொழில் நடத்தி வந்தார் குத்புதீன்’ என்றொரு குற்றச்சாட்டும் ஏரியாவில் உலா வருகிறது. அதுபற்றி தாசில்தாரிடம் கேட்டதற்கு, ''இரண்டுமே ஒரே முகவரிதான். திருமங்கலம் ரோடு, சிறுதையூரில்தான் தற்போது புதிதாக உமர் நகர் உருவாகி இருக்கிறது!'' என்று தெளிவுபடுத்தினார்.
லால்குடி இன்ஸ்பெக்டர் இளஞ்செழியனிடம் பேசியபோது, ''வெடி பொருட்களை கவனக்குறைவாகக் கையாண்டு விபத்து ஏற்படுத்துதல், அதன் காரணமாக ஏற்பட்ட காயம் மற்றும் மரணம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. பட்டாசு ஃபேக்டரியின் உரிமையாளரே விபத்தில் இறந்து விட்டதால், வழக்கும் முடிவுக்கு வந்துவிட்டது!'' என்றார்.
தீபாவளி நெருங்கும் நேரம் என்பதால், பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், இந்த சம்பவத்தை பாட மாக எடுத்துக்கொண்டு கவனமாக இருக் கட்டும்!

அமைச்சர்கள் போட்டி... ஆனந்தத்தில் ஒரத்தநாடு!

'பதவிக்கு வந்ததும் யார் அதிகம் சம்பாதிப்பது?’ என்கிற போட்டிதான் இன்றைய அரசியலில் சகஜமாக நடக்கும். ஆனால், இரண்டு கட்சிகளைச் சேர்ந்த அமைச்சர்களுக்கு நடுவில், 'யார் தொகு திக்கு அதிகம் நல்லது செய்வது?’ என்ற போட்டி நடந்து வருவதால், உற்சாகக் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர், ஒரத்த நாடு சட்டமன்றத் தொகுதி மக்கள்! 
கடந்த மூன்று முறை நடந்த சட்டமன்றத் தேர்தல்களிலும் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்று வருபவர், அ.தி.மு.க-வைச் சேர்ந்த வைத்திலிங்கம். தற்போது நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதி வாரியத் துறை அமைச்சர். நடப்பு தமிழக பட்ஜெட்டில்,  100 கோடி மதிப்பீட்டில் ஒரத்தநாட்டில் அரசு கால்நடைக் கல்லூரி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்தக் கல்லூரி அறிவிப்புக்கு முக்கியக் காரணமே, 'மத்திய தி.மு.க. அமைச்சர் பழனிமாணிக்கத்துக்கும், தமிழக அ.தி.மு.க. அமைச்சர் வைத்திலிங்கத்துக்கும் ஏற்பட்ட போட்டிதான்!’ என்று சொல்கிறார்கள் உள்ளூர் அரசியல் புள்ளிகள்.
'தஞ்சை மாவட்டத்தைப் பொறுத்த வரை, தி.மு.க-வுக்குப் பழனிமாணிக்கம்... அ.தி.மு.க-வுக்கு வைத்திலிங்கம். இந்த இருவரும்தான் மாவட்டத்தின் முக்கியப் புள்ளிகள். கடந்த அ.தி.மு.க ஆட்சியில் ஒரத்தநாட்டில் வெற்றிபெற்ற வைத்திலிங்கம், தமிழக வனத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். இந்தத் துறையின் மூலம் தனது தொகுதிக்குப் பெரிய அளவில் திட்டங்கள் எதுவும் கொண்டுவர முடியவில்லை. ஆனாலும், விவசாயிகளுக்கு வெள்ள நிவாரணத் தொகை முழுமையாகக் கிடைக்கச் செய்தார். அடுத்த சட்டமன்றத் தேர்தலிலும் வைத்திலிங்கம் ஜெயிக்க, இதுவே முக்கியக் காரணமாக இருந்தது. 2006-ல் தி.மு.க. தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றியபோது, எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்த காரணத்தால், வைத்திலிங்கம் தொகுதிக்கு எதுவுமே செய்ய முடியவில்லை. இந்த சமயத்தில் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினரான பழனிமாணிக்கம், மத்திய நிதித்துறை இணை அமைச்சராகவும் ஆனார். ஒரத்தநாட்டில் வைத்திலிங்கத்தின் செல்வாக்கை உடைக்க நினைத்த அவர், ஒரத்தநாடு மீது தனிகவனம் செலுத்தி... தொகுதி மேம்பாட்டு நிதியில் சுமார்  5 கோடியை ஒதுக்கி னார். பாரதிதாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கொண்டுவந்தார். அரசு பேருந்து பணிமனை ஒன்றையும் ஏற்படுத்திக் கொடுத்தார். இதன் மூலம் பழனிமாணிக்கத்துக்கு இங்கே ஆதரவு பெருகியது. அதை உடைக்கத்தான் வைத்திலிங்கம் இந்த முறை அமைச்சரானதும், முதல் பட்ஜெட்டிலேயே ஒரத்தநாட்டுக்கு அரசுக் கால் நடை மருத்துவக் கல்லூரியை அறிவிக்க வைத்தார்!'' என்று ஃபிளாஷ்பேக் வாசித்தனர்.

ஒரத்தநாடு தி.மு.க. ஒன்றியச் செயலாளர் தியாக.இளங்கோ நம்மிடம், ''மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பழனிமாணிக்கம்தான் கல்விக்காக அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க. வசம் இருந்தாலும், பாகுபாடு பார்க்காமல் உதவி செய்துவருகிறார். அருகில் தஞ்சாவூரில் மட்டுமே அரசு மகளிர் கல்லூரி இருக்கிறது. அதிலும் இடப்பற்றாக்குறை இருப்பதால், எங்கள் பகுதி மாணவிகள் மேற்படிப்புக்குக் கஷ்டப்பட்டார்கள். இதைக் கருத்தில்கொண்டே பல கோடி மதிப்பீட்டில் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியையும், அதற்கான கட்டடங்களையும் பழனிமாணிக்கம் அமைத்துக் கொடுத்தார். மாணவிகளின் வசதிக்காகப் பேருந்து பணிமனையும் கொண்டுவந்துள்ளார். பல கோடி மதிப்பீட்டில் கல்லணை கால்வாய் சீரமைக்கப்பட்டதும் மத்திய அமைச்சரின் சாதனைதான். வைத்திலிங்கம் எங்கள் செல்வாக்கைக் குறைக்கத்தான் அரசுக் கால்நடை கல்லூரி கொண்டுவந்தார் என்பது பற்றி நான் எதுவும் சொல்ல விரும் பவில்லை...' என்றார்.

வைத்திலிங்கத்தின் தீவிர ஆதரவளாரும் தஞ்சை மாவட்ட அ.தி.மு.க. மாண வரணிச் செயலாள ருமான காந்தி, 'தொடர்ந்து மூன்று முறை எம்.எல்-ஏவாகத் தேர்ந்தெடுத்த மக்களுக் காகத்தான் வைத்திலிங்கம் அரசு கால்நடைக் கல்லூரி கொண்டுவந்துள்ளார். திருநெல்வேலிக்கு செல்ல இருந்ததை, போராடித்தான் ஒரத்தநாட்டுக்குக் கொண்டு வந்தார். நடப்பு ஆண்டு முதல் இது இயங்குவது, கூடுதல் மகிழ்ச்சி. கீழத்தோட்டம் பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. இங்கே ஏற்கெனவே தமிழகத்திலேயே மிகப்பெரிய இரண்டு கால்நடைப் பண்ணைகள் செயல்பட்டன. நலிவுறும் நிலையில் இருந்த அவை, தற்போது மீண்டும் அரசுக் கால்நடை கல்லூரியின் மூலம் வளர்ச்சி பெறும்!' என்றார் மகிழ்ச்சியாக.

அமைச்சர் வைத்திலிங்கத்திடம் பேசினோம். 'தி.மு.க. ஆட்சியில் கொண்டுவந்தது, பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி. அது முழுமையான அரசுக் கல்லூரி அல்ல! ஆனால், தற்போது  100 கோடி மதிப்பீட்டில் அம்மா அறிவித்துள்ள அரசுக் கால்நடைக் கல்லூரிதான் முழுமையான அரசுக் கல்லூரி. ஒரத்தநாடு தொகுதியைப் பொறுத்த வரை நீதிமன்றம், தீயணைப்பு நிலையம், டி.எஸ்.பி. அலுவலகம், பைபாஸ் சாலை, பஸ் ஸ்டாண்ட் மற்றும் சர்வே கல்லூரி ஆகிய அனைத்து மக்கள் நலத்திட்டங்களும் அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டவைதான்!' என்றார் குஷியாக.
எதிர் அணியில் இருந்தாலும், இரண்டு கட்சி அமைச்சர்களாலும் ஒரத்தநாடு தொகுதிக்கு யோகம்தான்!

எங்ககிட்டே மோதாதே...

தங்கபாலுவை மிரட்டும் வாசன் கோஷ்டி

சேலத்தில் கடந்த வாரம், வட்டார, நகர, மாவட்டத் தலைவர் களை நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை திடீரென நியமனம் செய்திருக்கிறார் தமிழக காங்கிரஸ் மாநிலத் தலைவர் தங்கபாலு. இதைத் தொடர்ந்து, மீண்டும் ஆரம்பமாகி விட்டன காங்கிரஸ் களேபரங்கள்.
 'மாவட்டத் தலைவர்களை நீக்க தங்க பாலுவுக்கு என்ன தகுதி இருக்கிறது? அவரே ஒரு செல்லாக்காசு...’ என சீறுகிறது ஜி.கே.வாசன் கோஷ்டி. இது குறித்துப் பேசும் காங்கிரஸ் மாநிலச் செயலாளர் சுசீந்திரகுமார், ''ஒரு மாவட்டத் தலைவரை நீக்கவோ, புதிதாக நியமிக்கவோ மாநிலத் தலைவருக்கு எந்த அதிகாரமும் கிடையாது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்குத்தான் இந்த அதிகாரம் இருக்கிறது. அதேபோல வட்டார, நகர நிர்வாகிகளை நியமிக்க, அந்தந்த மாவட்டத் தலைவர்கள் ஊழியர் கூட்டம் போட்டு ஆட்களைத் தேர்வு 
செய்து மாநிலத் தலைவருக்கு அனுப்புவார்கள். அந்தப் பட்டியலை, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியிடம் ஒப்புதல் பெற்று மாநிலத் தலைவர் அறிவிப்பார். இதுதான் காங்கிரஸ் கட்சியில் இருக்கும் நடைமுறை. ஆனால், தங்கபாலு தன்னிச்சையாகச் செயல்பட்டு கட்சியை ஒழிக்க நினைக் கிறார்.

சமீபத்தில், சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் ஆர்.ஆர்.சேகரனை நீக்கிவிட்டு, தன் ஆதரவாளரான கோபாலை அந்தப் பதவியில் நியமித்து இருக்கிறார். கிழக்கு மாவட்டத் தலைவர் தேவதாஸையும் நீக்கிவிட்டு செல்வராஜ் என்பவரை நியமித்து இருக்கிறார். அதோடு தனக்கு வேண்டப்பட்ட நபர்களையே வட்டார, நகர நிர்வாகிகளாகவும் நியமனம் செய்திருக்கிறார். யார் இவர்? வட்டார, நகர நிர்வாகிகளை நீக்கு வதற்கும், நியமிப்பதற்கும் இவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? 'கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததற்கு நானே காரணம்’ என்று ஒப்புக்கொண்டு இவரே ராஜினாமா செய்துவிட்டார். பணிச்சுமை க £ரணமாக, தேசியத் தலைமை இன்னும் புதிய மாநிலத் 

தலைவரை நியமிக்காமல் இருக்கிறது. அதனால், தங்கபாலு தற்காலிகத் தலைவர்தான். இவர் கட்சியின் அன்றாடப் பணிகளை மட்டுமே கவனிக்க முடியும். மாவட்ட நிர்வாகிகளை நீக்குவதற்கும், நியமிப்பதற்கும் இவருக்கு அருகதை இல்லை.

இன்று வரை தன் வாழ்நாளில் தங்கபாலு ஒழுக்கத்தையும், நேர்மையையும் கடைப்பிடித்ததே இல்லை. சொந்த ஊரான பேளூரில் கூட்டுறவு சங்கத்தில் விற்பனையாளராக இருந்தபோது, சங்கத்தின் பணத்தைக் கையாடல் செய்து சிறைக்குப் போனவர்தான் இவர். அதேபோல, சேலம் மேற்கு மாவட்டத் தலைவராக நியமிக்கப்பட்ட கோபால், காங்கிரஸ் காரரே இல்லை. அவர் வி.ஏ.ஓ-வாக இருந்து யூனியன் சேர்மன் ஆனார். மூப்பனார் ஆதரவாளராகவும் பிறகு டாக்டர் செல்லக்குமார், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆதரவாளராக இருந்தார். பிறகு கட்சியைவிட்டு விலகி, அ.தி.மு.க-வில் சேர்ந்ததாகக்கூடச் சொன்னார்கள். இவரும், நெடுங்குளம் கூட்டுறவு சங்கத்தில் தலைவராக இருந்தார். அந்த சங்கத்தில்  4.50 கோடியைக் கையாடல் செய்ததில் இவருக்கும் பங்கு உண்டு என்று அப்போதே செய்தியும் வெளியானது. இப்படி இரண்டு கூட்டுறவு கிரிமினல்கள் சேர்ந்துகொண்டு காங்கிரஸை அழிக்க நினைக்கிறார்கள். இவர்களால் காங்கிரஸை அழிக்க முடியாது. தங்கபாலு எம்.பி. ஆனதும், காங்கிரஸ் மாநிலத் தலைவர் பதவிக்கு வந்ததும் எங்கள் தலைவர் ஜி.கே.வாசன் போட்ட பிச்சைதான். அந்த நன்றியை மறந்து எங்களிடமே மோதிப் பார்க்கிறார். வழக்கமாக இளங்கோவனின் ஆதரவாளர் களிடம் மட்டும் அடிக்கடி வம்பு செய்யும் இவர், தற்போது எங்களிடமும் முறைக்கத் தொடங்கி இருக்கிறார்.
அவருக்குத் தக்க பாடம் புகட்டி, அவரை அரசியலில் இருந்தே அனுப்புவோம். தொடர்ந்து சேலம்

மேற்கு மாவட்டத் தலைவராக ஆர்.ஆர்.சேகரனும், கிழக்கு மாவட்டத் தலைவராக தேவதாஸும் பொறுப்பில் செயல்படுவார்கள். தற்போது, என்னையும் கட்சியில் இருந்து நீக்கியதாகச் சொல்கிறார். நான் அன்னை சோனியாவால் நியமிக்கப்பட்டவன். 12 வருடங்களாக மாநிலச் செயலாளர் பதவியில் இருக்கிறேன். என்னை நீக்க அன்னைக்கு மட்டும்தான் அதிகாரம் உண்டு. என்னுடைய உழைப்பைப்பற்றி ஜி.கே.வாசனுக்கு நன்றாகத் தெரியும். தனக்கு அறிவு இல்லை என்பதை நிரூபிக்கவே இப்போது என்னை நீக்கியதாக தங்கபாலு சொல்லிக்கொண்டு இருக்கிறார்...'' என்று ஊசி வெடிகளைப்போல் வெடித்துத்தீர்த்தார்.

தங்கபாலுவின் விளக்கம் என்ன? ''யார் அந்த சுசீந்திரகுமார்? அவரைக் கட்சியைவிட்டே நீக்கிவிட்டோம். காங்கிரஸுக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. மேற்கொண்டு அவரைப்பற்றி எதுவும் கேட்காதீர்கள்!'' என்று கோபத்துடன் போனை துண்டித்தார்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் கோபால் என்ன சொல்கிறார்? '' சுசீந்திரகுமார் சொல்வதில் துளி கூட உண்மை கிடையாதுங்க. இவர் காங்கிரஸ் கட்சியின் விரோதி. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தலைவர் தங்கபாலு தோற்க முழு காரணம் இந்த துரோகிதான். இது சேலத்துல எல்லோருக்குமே தெரியும். காங்கிரஸ் என்பது எங்கள் ரத்தத்தோடு ஊறிப்போனது. ஆனா அந்த ஆளு காங்கிரஸ்காரனே கிடையாது. கா.கா.தே.கா.வில் (காந்தி காமராஜர் தேசிய காங்கிரஸ்) இருந்தபோது இந்திராகாந்தி படத்தை செருப்பால் அடித்து தீ வச்சிக் கொளுத்திய கொடூரன். நான் நெடுங்குளத்தில் கூட்டுறவு சொஸைட்டியில் தலைவராக இருந்தபோது தான் கையாடல் நடந்தது என்று சொல்லுவது சுத்தப் பொய். என்னுடைய பீரியடில் எந்தத் தவறும் நடக்கவில்லை!'' என்று உறுதியாக மறுத்தார்.

சாப்பாட்டுக்கே கஷ்டப்படுறோம்..

வேதனையில் கோவை மீனவர்கள்

'நாங்க கோவையில இருந்து பேசுறோம். இங்கே 700-க்கும் அதிகமான மீனவர் குடும்பங்கள் இருக்கு. சில பிரச்னை களால் எங்களோட மீன்பிடித் தொழில் கொஞ்சம் கொஞ்சமா அழிஞ்சிட்டு வருது... எங்கள் வாழ்வுக்கு வழி சொல்வீர்களா?’ - இப்படி நமது ஜூ.வி. ஆக்ஷன் செல்லில் (044-42890005) ஒரு புகார் பதிவாகி இருந்தது. 
கோவையில் மீன்பிடித் தொழிலா? குழப்பத்தோடு புகார் செய்தவரை சந்தித்தோம்.
''என் பேர் ராமு. கோவையைச் சுற்றி எட்டு குளங்கள் இருக்குது. எங்க தாத்தா காலத்தில் இருந்தே நாங்க இந்தக் குளங்களில் மீன் பிடிக்கும் தொழிலை செய்து வர்றோம். ஒரு நாளைக்கு  400 வரைக்கும் வருமானம் வரும். ஆனா, இப்போ குளங்களில் ஆகாயத்தாமரை செடி கள் அளவுக்கு அதிகமாக வளர்ந்துடுச்சு. அதோடு, கழிவு நீரும் குளங்களில் அதிக அளவில் கலந்து, தண்ணி கெட்டுப் போச்சு. இதனால் மீன் பிடிக்கிற தொழில் ரொம்பவே பாதிக்கப்பட்டு இருக்கு. குளங்களை மேம்படுத்த அரசு நிதி ஒதுக்கியதாச் சொன்னாங்க. ஆனா, அதை யாரும் சுத்தப்படுத்தவே இல்லை. நாங்களும் மாநக ராட்சி அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்துட்டோம். யாரும் கண்டுக்கவே இல்லை. சில அதிகாரிகள் வந்து குளத்தை போட்டோ எடுப்பாங்க. நாங்களும் சரியாகிடும்னு காத்திருப்போம். ஆனா, எதுவுமே நடக்காது. இப்போ, முழுசாவே தொழில் செய்ய முடியாம சாப்பாட்டுக்கே கஷ்டப்படுறோம். வளர்ந்து நிற்கும் செடிக்கு நடுவில் வலை விரிச்சா அதை திரும்ப எடுக்குற துக்குள்ள நாங்க படுற கஷ்டம் எங்களுக்குத்தான் தெரியும். அரசாங்கம் மனசு வெச்சு இந்தக் குளங்களை தூர் வார உத்தரவிடணும்!'' என்று வேதனையோடு சொன்னார்.
மீனவர்களின் பிரச் னையை கோவை மாநகராட்சி ஆணையாளர் பொன்னு சாமியின் கவனத்துக்குக் கொண்டுபோனோம். ''குளங் களை தூர் வார மத்திய அரசு நிதி ஒதுக்கி இருக்கிறது. இப் போது உள்ளாட்சித் தேர்தல் நெருங்குவதால், தேர்தல் முடிந்ததும் நிச்சயம் இந்தப் பிரச்னை தீர்க்கப்படும். மீனவர்கள் கவலைப்பட வேண் டாம்!'' என்று உறுதி அளித்தார்.அதுவரை மீனவர்கள் வயிறும் காத்திருக்க வேண்டுமா?
******************************************************************************
மற்றும் சிலரில் பைந்தமிழ் பாரி!

மாஜி அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி யின் நீண்ட நாள் கவலை, 'தனது மகன் பைந்தமிழ் பாரிக்கு அரசியலில் ஒரு லிஃப்ட் கிடைக்கவில்லையே’ என்பதுதான். இப்போது அந்த குறையை தீர்த்துவைத்துள்ளது, ஜெயலலிதா அரசு. தி.மு.க. பிரபலங்கள் வரிசையில், நில மோசடி வழக்கில் பாரியும் இப்போது 'உள்ளே’! 
காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம். ''திருப்பூர் மாவட்டம் முருங்கப்பாளையம் தெற்கு திரு.வி.க. நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவருக்குச் சொந்தமாக பொங்கலூர் வேலம் பட்டியில் இருக்கும் 15.16 ஏக்கர் நிலத்தை, அப்போதையை பொங்கலூர் தொகுதி எம்.எல்.ஏ. மணியின் மகனான வெங்கடேஸ்வரன் பெயருக்கு 2008-ம் ஆண்டு  1.74 கோடிக்கு கிரயம் செய்வதாக ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள். இந்த ஒப்பந்தம் பொங்கலூர் பழனிசாமி முன்னிலையில், நடந்தபோது,   5 லட்சம் அட்வான்ஸ் கொடுத் திருக்கிறார்கள். மீதிக்கு கொடுத்த செக் பணம் இல்லாமல் திரும்பியிருக்கிறது.

இது சம்பந்தமாக மணியிடமும், பொங்கலூர் பழனிசாமியிடமும் வெங்கடேஷ் முறையிட்டுள்ளார். முதலில் பணத்தைத் தருவதாகச் சொன்னவர்கள் ஒரு கட்டத்தில், 'பணம் கொடுக்க முடியாது’ என்று சொல்லி விரட்டியதோடு மிரட்டவும் செய்திருக்கிறார்கள். இது சம்பந்தமாக அவிநாசிபாளையம் போலீஸில் புகார் கொடுத்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால் ஆட்சி மாறியதும் இப்போது மறுபடியும் வெங்கடேஷ் புகார் கொடுத்திருக்கார். அந்தப் புகாரில், 'மாஜி அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, மாஜி எம்.எல்.ஏ. மணி, அவரது மகன் வெங்கடேஸ்வரன் மற்றும் சிலரும் சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் சொல்லி இருக்கிறார். இதில் பொங்கலூரார் மகன் பைந்தமிழ் பாரியும் சம்பந்தப்பட்டு இருப்பதால் அவரை கைது செய்துள்ளோம்!'' என்றார்கள்.

இந்த வழக்கில் ஏற்கெனவே மணி அரெஸ்ட் ஆகி விட்டார். பொங்கலூர் பழனிசாமி முன்ஜாமீன் வாங்கிவிட்டார் என்ற நிலையில்தான், பாரியைக் கைது செய்து சேலம் சிறைக்கு அனுப்பி இருக்கிறது போலீஸ்.
பாரியிடம் பேசுவதற்கு அவகாசம் கிடைத்தது.  ''எந்த அடிப்படையும் இல்லாம என்னை கைது பண்றாங்க. புகாரில் அந்த வெங்கடேஷ் என் பெயரைக் கொடுக்கவே இல்லை. 'மற்றும் சிலர்’னு புகாரில் இருந்த வார்த்தையைப் பயன்படுத்தி என்னை இழுத்து விட்ருக்காங்க. ஜெயிலுக்கு போறதுல வருத்தமில்லை. ஆனா முழுக்க முழுக்க பொய்யான ஒரு வழக்கில் கைதாவதுதான் எரிச்சலாக இருக்கிறது. இப்படி எங்க கட்சிக்காரங்களை படுத்தி எடுக்குற சி.எம். லேடிக்கு பெங்களூருல வைக்கப் போறாங்க செக்..'' என்று ஆவேச மானார்.
பாரி மீதான இந்த கேஸ் டம்மி பீஸ் என்பதாலோ என்னவோ, வேறு ஏதாவது வழக்கிலும் அவரை அமுக்க நினைக்கிறது போலீஸ்!

''அமைச்சர் ஆவதைத் தடுக்கவா நில மோசடி புகார்?''

சிக்கலில் சோழன் பழனிச்சாமி

திரும்பிய பக்கம் எல் லாம், நில மோசடி புகார் குளவிகள் தி.மு.க- வினரைத் தாக்கிக் கொண்டிருக்க... சொந்தக் கட்சியினர் வைத்த சூனியத்தால், ஒரு அ.தி.மு.க. எம்.எல்.ஏ-வும் இந்த சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். 
காரைக்குடி தொகுதி எம்.எல்.ஏ-வாக இருப்பவர் சோழன் பழனிச்சாமி. சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. செய லாளராகவும் இருந்தவர். ரத்தத்தின் ரத்தங்களின் போட்டுக் கொடுக்கும் வித்தையால், சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு இவரது மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. இந்த நிலையில்தான், அவர் மீது நில அபகரிப்புப் புகார். காரைக்குடி அருகே அப்பளை என்ற கிராமத்தில் தன் மனைவி பஞ்சவர்ணத்தின் பெயரில் சுமார் 17.5 ஏக்கர் நிலத்தை, கடந்த 2003-ம் ஆண்டு பத்திரம் பதிந்தார் சோழன் பழனிச்சாமி. இது, அந்த கிராமத்தில் உள்ள அனைத்துக் குடிகளுக்கும் சொந்தமான சர்க்கார் புஞ்சை. இதை விற்றது செல்லாது என்று, அப்பளையில் வசிக்கும்
கருப்பையா என்பவர் கடந்த ஆண்டே உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட, அது நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில், சோழன் பழனிச்சாமி வசம் உள்ள அந்த நிலத்தை மீட்டுத் தரக்கோரி கடந்த 11.08.11-ல் மாவட்ட எஸ்.பி-யிடம் மனு கொடுத்தார் கருப்பையா. அப்புறம் நடந்ததை அவரே சொன்னார்...

''எஸ்.பி-யிடம் புகார் கொடுத்ததுமே பழனிச்சாமியோட ஆளுங்க புகாரை வாபஸ் வாங்கச் சொல்லி நெருக்கடி கொடுத் தாங்க. 'அதான், நிலத்தைத் 
திருப்பிக் கொடுத்துடுறோம்னு சொல்றாங்களேப்பா, புகாரை வாபஸ் வாங்கிடுவே’ன்னு ஊர்க்காரங்களும் சொன்னதால் வாபஸ் வாங்கினேன். ஆனால், ஒரு மாசம் ஆகியும் எதுவும் நடக்கலை. அதனால், மறுபடியும் எஸ்.பி-யிடம் புகார் கொடுத்துட்டு வெளிய வந்தபோது என்னை காரில் கடத்திட்டுப் போன அ.தி.மு.க-காரங்க, வெத்துப் பேப்பர்களில் மிரட்டிக் கையெழுத்து வாங்கிட்டாங்க. நான் கையெழுத்துப் போட்டுக் கொடுத்த வெத்துப் பேப்பர்களில் அவங்களாவே ஏதேதோ எழுதிட்டு, நான் புகாரை வாபஸ் வாங்கிட்டேன்னு கதை கட்டுறாங்க. அதனால்தான், 'என்னைய கடத்துனவங்க மேல் எஃப்.ஐ.ஆர். போட்டு நடவ டிக்கை எடுக்கணும்’னு உயர் நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்குப் போட்டுருக்கேன்!'' என்றார் கருப்பையா.

கருப்பையாவின் வழக்கறிஞர் ஜின்னா, ''பொது சொத்தை மீட்க புகார் கொடுத்த கருப்பையாவை, 'உனக்கு சம்பந்தம் இல்லாத நிலப் பிரச்னையில் எம்.எல்.ஏ-வை மிரட்டுறேன்னு உன் மேலயே கேஸ் 
போடட்டுமா?’னு போலீஸ்ல மிரட்டியிருக்காங்க. இடத்தைத் திருப்பிக் கொடுத்துடுறதா சொல்லி பேப்பர்களில் கையெ ழுத்து வாங்கிட்டு, அதை கருப்பை யாவுக்கு எதிராவே இப்பப் பயன்படுத்த ஆரம்பிச்சிருக்காங்க. இதை எல்லாம் நீதிமன்றத்தில் சொல்வோம்...'' என்றார்.

கருப்பையா தொடர்ந்துள்ள கிரிமினல் வழக்கில், 'தன்னையும் ஒரு தரப்பாகச் சேர்த்து விசாரிக்க வேண்டும்!’ என மனு போட்டிருக்கும் புலவர் பழனியப்பன் நம்மிடம், ''விசாரிச்சுப் பார்த்ததில், சோழன் பழனிச்சாமி அந்த நிலம் வாங்கியதில் எந்த முறைகேடும் செய்யலைனு தெரிஞ்சது. பிறகு ஏன் பிரச்னை வருதுன்னு பார்த்தப்பத்தான், சோழனின் வளர்ச்சியைப் பிடிக்காத அ.தி.மு.க. வி.ஐ.பி-க்கள் சிலரே இதன் பின்னணியில் இருக்காங்கன்னு தெரிஞ்சது. கருப்பையாவே எங்ககிட்ட இதை வெளிப்படையா சொல்லிட்டார். உண்மையைப் புரிஞ்சுக்கிட்டு புகாரை வாபஸ் வாங்கினவரை மறுபடியும் தூண்டிவிட்டு, 'நாங்க கருப்பையாவைக் கடத்தி, கத்தி முனையில் மிரட்டி வெள்ளைத் தாளில் கையெழுத்து வாங்கினதா’ பொய் புகார் கொடுக்க வெச்சிருக்காங்க. உண்மையில் என்ன நடந்துச்சுன்னு எனக்குத்தானே தெரியும். அதனால்தான், என்னையும் விசாரிக்கணும்னு மனு போட்டிருக்கேன்...'' என்றார்.

சோழன் பழனிச்சாமியிடம் பேசினோம். ''அனைத்து சாதியினருக்கும் அசைன்மென்ட் பட்டா கொடுக்கப்பட்ட அந்த இடத்தை நான் முறையாகக் கிரயம் வாங்கி இருக்கேன். அந்த இடம் பள்ளமா மேடான்னுகூட இதுவரைக்கும் எனக்குத் தெரியாது. இப்ப வரைக்கும் அதை ஊர்க்காரங்கதான் அனுபவிக்கிறாங்க. நான் எந்தத் தவறும் செய்யலை. என்ன நடந் தாலும் சத்தியம்னு ஒண்ணு இருக்குல்ல... அது ஜெயிக் கும்கிற நம்பிக்கையில முருகன் மேல பாரத்தைப் போட்டுட்டு அமைதியா இருக்கேன்...'' என்றார்.

மாவட்ட எஸ்.பி-யான பன்னீர்செல்வத்திடம் கேட்டால், ''முதல் நாள் என்னிடம் புகார் கொடுத்த கருப்பையா, மறுநாளே புகாரை வாபஸ் வாங்கிவிட்டார். பிறகு, கொஞ்ச நாள் கழித்து, அ.தி.மு.க-காரர்கள் தன்னைக் கடத்திவைத்து மிரட்டிக் கையெழுத்து வாங்கியதாக எங்களுக்கு அஞ்சலில் புகார் அனுப்பினார். அடுத்த நாளே, 'கடத்தல் புகாரை நான் அனுப்பவில்லை’ என்று கருப்பையா பேரில் ஒரு கடிதம் வந்தது. மொத்தத்தில் அவர்களுக்கு இடையே ஏதோ பிரச்னை. அதனால், இந்த விஷயத்தில் பொறுமையாக இருந்தோம். இப்போது விவகாரம் நீதிமன்றத்துக்குப் போய்விட்டதால் நீதிமன்றம் என்ன சொல்கிறதோ அதன்படி நடவடிக்கை எடுப்போம்...'' என்றார்.
''சோழன் பழனிச் சாமி, சசிகலா குடும் பத்தின் ராவணனின் ஆசி பெற்றவர். சட்ட மன்றக் கூட்டத் தொடர் முடிஞ்சதும் அமைச்சரவையில் மாற்றம் இருக்கலாம். அப்போது சோழனுக்கும் வாய்ப்புகள் வரலாம். இல்லாட்டி அவர் மறுபடியும் மாவட்டச் செயலாளராக ஆக்கப்படலாம்னு ஒரு பேச்சு ஓடுது. அப்படி ஏதாச்சும் நடந்துட்டா தங்களுக்கு ஆபத்தாகிப் போகும்னு நினைச்சு மாவட்ட அ.தி.மு.க. பொறுப்பாளர் ஒருத்தரும், அ.தி.மு.க. அமைச்சர் ஒருவரும் கூட்டுச்சேர்ந்து, சோழனுக்கு எதிரா இந்த விவகாரத்தை ஊதிப் பெருசாக்குறாங்க...'' - என்றும் சொல்கிறார்கள், சோழன் பழனிச்சாமி ஆதரவாளர்கள்.
கடைசியில் யார் தலை உருளப் போகி றதோ!

கட்டப் பஞ்சாயத்து செய்தாரா சுரேஷ்ராஜன்?

குமரி கொந்தளிப்பு!

நில அபகரிப்புப் புகார்களில், முன்னாள் தி.மு.க. அமைச்சர்கள் கைது செய்யப்படுவது 'சிந்துபாத்’ தொடர்கதை போல நீண்டுகொண்டே செல்கிறது. இதில் லேட்டஸ்ட்டாக சிக்கி இருப்பவர், சுரேஷ்ராஜன். தி.மு.க. ஆட்சியில் சுற்றுலா மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சராக இருந்தவர் சுரேஷ்ராஜன். குமரி மாவட்ட பஞ்சாயத்துத் தலைவி அஜிதாவுடன் சேர்ந்து, நில மோசடி செய்ததாக, சுரேஷ்ராஜன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. குமரி மாவட்ட தி.மு.க-வினர் மீதான இந்த முதல் நில மோசடி புகாரில், எந்த நேரமும் சுரேஷ்ராஜன் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு கிளம்பி இருப்பதால், கலக்கத்தில் இருக்கிறார்கள் உடன்பிறப்புகள். 
குமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அருகே உள்ள அனந்தன் நகரைச் சேர்ந் தவர் தயா பாக்கிய சிங். ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் இவர், குமரி மாவட்ட பஞ்சாயத்துத் தலைவி அஜிதாவிடம் இருந்து, 
வில்லுக்குறி பகுதியில் 10.43 ஏக்கர் நிலம் வாங்கினார். இவரிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு, அதே நிலத்தை இன்னொரு நபருக்கு அஜிதா விற்று விட்டார் என்பதுதான் குற்றச்சாட்டு. இந்த விவகாரத்தில்தான் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், தி.மு.க-வின் மாநில சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினர் ஜி.எம்.ஷா

உட்பட பலர், நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் வைத்து தயா பாக்கிய சிங்கிடம் கட்டப்பஞ்சாயத்து செய்தார்களாம். சுரேஷ்ராஜன், பத்திரப் பதிவுத் துறை அமைச்சராக இருந்ததால், அவரது ஆதரவுடனே நிலம் இன்னொரு நபருக்கு விற்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த அடிப்
படையில்தான் சுரேஷ்ராஜன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது, வழக்குப் பதிவு செய்துள்ளது போலீஸ்.

இது குறித்துப் பேசிய தயா பாக்கிய சிங், ''அஜிதாவோட உதவியாளர்தான் போனில் என்னிடம் முதலில் பேசினார். நல்ல பகுதியில் நிலம் இருந்ததால் அந்த நிலத்துக்கு 60 லட்சம் அட்வான்ஸ் கொடுத்தேன். ஆனால், அதில் 6.5 ஏக்கர் நிலம், தனியார் வனப்பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இருப்பது பின்னர்தான் எனக்குத் தெரியவந்தது. அந்த நிலத்துக்கு தடையில்லாச் சான்றிதழ் வாங்கிக் கொடுங்கள் என்று கேட்டேன். ஆனால், அதைத் தராமலேயே நிலத்தைப் பதிவு செய்யச் சொன்னார்கள். அதற்கு நான் சம்மதிக்கவில்லை. அதற்காக அமைச்சர் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் என்னை மிரட்டியதைக்கூடப் பொறுத்துக் கொண்டேன். ஆனால், எனக்கு விற்ற அதே நிலத்தை, அஜிதாவின் உதவியாளர் சரவண பிரசாத் என்பவர் பெயரிலும் பதிவு செய்து உள்ளனர். இந்த மோசடி குறித்து, தக்கலை போலீஸில் ஏற்கெனவே நான் புகார் செய்தேன். ஆனால், கடந்த ஆட்சியில் போலீ ஸார் அலட்சியம் செய்து விட்டனர். அதனால்தான், நீதிமன் றத்துக்குப் போனேன். இந்த மோசடி பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவு இட்டது. அதற்குப் பிறகுதான் போலீஸ் வழக்குப் பதிவு செய்து இருக்கிறது...'' என்றார்.
இந்தக் குற்றச்சாட்டு குறித்துப் பேச, சுரேஷ்ராஜனைத் தொடர்புகொள்ள பல வழிகளில் முயன்றோம். இயலவில்லை. அதனால், சுரேஷ்ராஜனின் வழக்கறிஞர் அசோகனிடம் பேசினோம். ''2010-ல் நடந்ததாகச் சொல்லப்படும் சம்பவத்துக்கு 2011-ல் வழக்குப் பதிவு செய்து இருப்பது வேடிக்கையாக இருக்கிறது. தயா பாக்கிய சிங் கொடுத்துள்ள புகாரில் உண்மை இருந்தால், அப்போதே அவர் சட்டப்படி நடவடிக்கை எடுத்து இருக்கலாம். இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். சட்டத்தை மீறி எதுவும் நடந்து விடாது என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது!'' என்றார். இந்த வழக்கில் தன்னைக் கைது செய்யக் கூடாது என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமீன் பெற்றுள்ளார் சுரேஷ்ராஜன்.

இந்த மோசடியில், முக்கியக் குற்றவாளியாகக் கூறப்படும் மாவட்ட பஞ்சாயத்துத் தலைவி அஜிதாவிடம் பேசினோம். '' அவருக்கு நான் வித்தது வெறும் 3.5 ஏக்கர் நிலம் மட்டும்தான். அதுபோக மீதி இருந்த 6.5 ஏக்கர் நிலத்தைத் தான் சரவண பிரசாத்துக்கு எழுதிக் குடுத்தேன். சட்ட விரோதமாக எதுவும் நான் செய்யலை. அப்படிச் செய்ய வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை!'' என்று சொன்னார்.
காவல்துறையின் விறுவிறு நடவடிக் கைகளைப் பார்த்தால், உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் நேரத்தில், தி.மு.க. முக்கியப் பிரமுகர்கள் யாருமே வெளியே இருக்கமாட்டார்களோ!

டெல்லி தாக்குதலில் வேலூர் பெண்ணா?

திகில் கிளப்பும் ஹுஜி(பி)

ந்தியாவில் குண்டுவெடிப்புகளை ஆங்காங்கே நிகழ்த்தி மிரட்டிவரும் தீவிரவாத இயக்கமான லஸ்கர்-​இ-தொய்பாவுக்கு அடுத்து, ஆபத்தான இயக்க மாக வளர்ந்துள்ளது, ஹுஜி(பி) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஹர்கத் உல் ஜிகாதி அல் இஸ்லாமி (வங்காள தேசம்). 
இதுவரை அகமதாபாத், ஐதராபாத் ஆகிய இடங்களில் குண்டு​வெடிப்பு கோர தாண்டவத்தை நடத்திய இந்த இயக்கம்தான் இப்போது டெல்லி உயர் நீதிமன்ற குண்டுவெடிப்பையும் திட்ட​மிட்டு நடத்தியதாக அறிவித்து உள்ளது. காஷ்மீரில் உள்ள சைபர் கஃபே மூலமாக பல்வேறு மீடியாக்களுக்கு இ-மெயிலில், 'தூக்குத் தண்டனைக் கைதியான அப்சல் குருவை தண்டனையில் இருந்து விடுவிக்க வேண்டும். இல்லாவிட்டால்... முக்கிய நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றம் மீது தாக்குதல் நடத்துவோம். அதற்கு முன்னோட்டமாகவே இதை செய்துள்ளோம்!' என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
யார் இந்த ஹுஜி(பி)...? எதற்காக குண்டு வைத்தார்கள்?

செப்டம்பர் 7-ம் தேதி அன்று வங்காள தேசத்தில் இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங் சுற்றுப்பயணத்தில் 
இருந்தார். அவர் அங்கே இருந்த நேரத்தில் டெல்லியில் குண்டுவெடிப்பு நடத்துவதன் மூலம் தங்கள் இயக்கத்துக்கு இந்தியாவிலும், வங்காளதேசத்திலும் முக்கிய கவனம் கிடைக்கும் என்பதை எதிர்பார்த்தே இந்தச் செயல் நடந்துள்ளது. ஹுஜி இயக்கத்தின் தலைவர் சபியுல்லா அக்தர். அவர் கடந்த 1995-ம் ஆண்டு முதல் பாகிஸ்தான் சிறையில் இருக்கிறார். அதனால் தலைவர் பொறுப்பை சவுகத்தும், பொதுச் செயலாளர் பதவியை சாகித் ஃபாரித் என்பவரும் தற்சமயம் கவனித்துவருகிறார்கள்.

'தெற்கு ஆசியாவில் இஸ்லாமிய புனிதப்போர் இயக்கம்’ என்று தங்களைத் தாங்களே ஹுஜி ஆட்கள் வர்ணித்துக்கொள்கிறார்கள். இந்த இயக்கத்தின் பூர்வீகமும் பாகிஸ்தான்தான். அங்கேயும் இதே பெயரில் ஒரு இயக்கம் இருந்து வருவதால், இது வங்காளதேசத்துப் பிரிவு என்பதைக் காட்டுவதற்காகவே (பி) என்று போட்டுக் கொள்கிறார்கள். 1990-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த இயக்கத்தின் பிரதான நோக்கம், 'வங்காள தேசத்தை முஸ்லிம் நாடாக மாற்றவேண்டும்’ என்பதுதான். காஷ்மீரை இந்தியாவிலிருந்து பிரித்து பாகிஸ்தானுடன் சேர்க்கவேண்டும் என்பதும் இவர்களது இன்னொரு கொள்கை. வங்காள​தேசத்தில் உள்ள சிட்டகாங் மாவட்டத்தில் இந்த இயக்கத்தினரின் தலைமையகம் இருக்கிறது. அதனை ஒட்டியுள்ள மலைப்பகுதிகளில் 6 பயிற்சி முகாம்களை நடத்தி வருகிறார்கள். சுமார் 15,000 பேர் இதன் உறுப்பினர்களாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த இயக்கத்தைச் சேர்ந்த 1,000 பேர் உளவாளிகளாக வெவ்வேறு நாடுகளில் ஊருடுவி இருக்கிறார்களாம்.
மேற்கு வங்காள மாநிலத்தில் சமீபத்தில் 150 இளைஞர்கள் காணாமல் போனார்கள். அதற்குக் காரணம் இந்த ஹுஜி இயக்கம் என்கிறார்கள். இளைஞர் களை வங்காள தேசத்துக்கு அழைத்துச்சென்று மூளைச் சலவை செய்து, 'ஸிலிப்பர் செல்' என்ற பெயரில் மீண்டும் அனுப்புகிறார்கள். இவர்கள்தான் வெடிகுண்டு சம்பவங்களின் பின்னணியில் செயல்படுபவர்களாம். சிலருக்கு மாத சம்பளமும் தரப்படுகிறது என்கிறார்கள்.

தென் இந்தியாவில் ஹுஜி இயக்கத்தின் கமாண்ட ராக செயல்பட்டவர் முகமது அப்துல் சாகத்
என்கிற பிலால். ஐதராபாத் குண்டுவெடிப்பு சம்பவத்தின்போது செல்போன் ரிமோட் கன்ட்ரோல் மூலம் வெடிக்க வைத்த சதிகாரராக இவரைத்தான் சொல்கிறது போலீஸ். இவரிடம் பயிற்சி பெற்ற ஆட்கள் பல்வேறு ஊர்களிலும் பதுங்கி இருக்கிறார்கள். இவர்களுக்கு ஆங்காங்கே பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது. பிலாலின் ஆட்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதை போலீஸார் தேடி வருகிறார்கள். ஐதராபாத்தில் குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் கண்டு எடுக்கப்பட்ட ஒரு செல்போன் - வேலூரைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவிக்குச் சொந்தமானது. வங்காளதேசத்தில் இருந்து வேலூருக்கு படிப்புக்காக வந்தவர் இவர். இங்கே வீடு எடுத்து தங்கியிருந்தபடி பி.ஏ. படித்துள்ளார். சம்பவம் நடந்தபோது அந்தப் பெண் ஐதராபாத்தில் இருந்தார் என்றும் சொல்லப்படுகிறது. 'அன்றைய தமிழக அமைச்சர் ஒருவருக்கு இந்தப் பெண் அறிமுகமானவர், அமைச்சரைப் பாராட்டி மேடையில் கவிதை வாசித்தவர்’ என்றும் தகவல்கள் வெளியாகின. போலீஸாரின் விசாரணை வளையத்தில் இருந்தஅந்தப் பெண் குறித்து வேறு எந்தத் தகவலும் வெளிவரவில்லை. அவர் டெல்லி நீதிமன்றத் தாக்குதலின் பின்னணியில் முக்கியமானவராக இருக்கலாம் என்ற சந்தேகம் உளவுத்துறைக்கு ஏற்பட்டு உள்ளது. அந்த சம்பவத்துக்குப் பிறகு, வேலூரில் மருத்துவ சிகிச்சை, படிப்பு என்று தங்கியிருந்த வங்கதேசத்து ஆட்கள் பற்றி ரகசிய சர்வே எடுக்கப்பட்டது. பெரும்பாலும் அங்கிருந்து வரும் சாதாரண பொதுமக்களுடன் கலந்து ஹுஜி இயக்கத்தினரும் ஊருடுவி வருவதை அறிந்து, கண்காணிப்பை அதிகப்படுத்தினர் நம் உளவுத் துறையினர். ஆனாலும், ஆங்காங்கே அசம்பாவிதங்கள் நடப்பதைத் தடுக்க முடியவில்லை. அதனால், 'டெல்லி குண்டுவெடிப்பு, இந்திய உளவுத் துறையின் ஃபெயிலியர்' என்று போலீஸ் உயர் அதிகாரிகள் சொல்கிறார்கள்.

டெல்லியில் உள்ள உளவுத் துறை அதிகாரி ஒருவரிடம் டெல்லி வெடிகுண்டு சம்பவம் பற்றிக் கேட்டோம்.
''ஹுஜி இயக்கம் என்று இ-மெயிலில் முதலில் வந்த தகவலை நாங்கள் சீரியஸாகக் கருதவில்லை. அந்த சைபர் கஃபேயில் இருந்த மூவரிடமும் விசாரித்து வருகிறோம். அவர்களிடம் இருந்து கிடைக்கும் தகவலைப் பொறுத்துதான் முடிவுக்கு வருவோம். ஏனென்றால், இதற்கு முன்பு சில சம்பவங்களில் ஒரு இயக்கம் நாசகார செயலைச் செய்துவிட்டு தப்பிப்பதற்காக வேறொரு இயக்கம் பெயரில் அறிக்கைவிட்டு குழப்ப முயற்சி செய்வார்கள். அந்த மாதிரி டெல்லி குண்டுவெடிப்பு சம்பவ சதிகாரர்களும் செய்தார்களா? என்று விசாரிக்கிறோம். எங்களைப் பொறுத்த வரையில், இந்த ஹுஜி இயக்கம் இந்தியாவில் அவ்வளவாக வளரவில்லை. உயர் நீதிமன்றம் போன்ற பொதுமக்கள் புழங்கும் இடங்களில் குண்டு வைப்பதற்கு பெரிய திறமைசாலிகள் தேவையில்லை, சாதாரணமானவர்களே போதும்! ஆனால், எந்த மாதிரி டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டது... என்ன கோரிக்கைக்காக இதைச் செய்தார்கள்? என்பதைத்தான் கவனித்து வருகிறோம்...'' என்கிறார்.
டெயில் பீஸ்: இந்தியன் முஜாகிதீன் என்ற அமைப்பின் பெயரிலும் டெல்லி தாக்குதலுக்கு பொறுப்பேற்று புதிய இ-மெயில் ஒன்று மீடியாக் களுக்கு வந்திருப்பது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

''மத்திய அமைச்சரவை விவாதித்ததா இல்லையா?''

தூக்கு விவகாரம்... புயல் கிளப்பும் 'தடா' சந்திரசேகர்

மிழகத்தைக் கொந்தளிக்க வைத்த தூக்குத் தண்டனை விவகாரம் எட்டு வார இடைக்காலத் தடையால் சற்றே ஆசுவாசம் ஆகியிருக்கிறது. பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவரும் தூக்குத் தண்டனையைக் குறைக்கவேண்டி,  குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலுக்கு மீண்டும்கருணை மனு அனுப்பி இருக்கிறார்கள். அடுத்தகட்ட சட்ட முன்னெடுப்புகள் குறித்து வழக்கறிஞர் 'தடா’ சந்திரசேகரிடம் பேசினோம். 
''இடைக்காலத் தடை எப்படி சாத்தியமானது?''
''மூவருக்குமான தூக்கு விவகாரத்தை கடந்த இரண்டு வருடங்களாகவே உச்ச நீதிமன்றத்தின் இளம் வழக்கறிஞர்கள் மூன்று பேர் மூலமாக ஆராய்ந்து வருகிறோம். சீக்கிரமே முடிவு வரப்போகிறது எனத் தெரிந்து மூத்த வழக்கறிஞர்களான பிரசாந்த் பூஷண், சாந்திபூஷண், அனில் தவான், ராஜீவ் தவான், காலின் கான்சிவேல்ஸ், மும்பை மோகித் சௌத்ரி, அந்தி அர்ஜுனா எனப் பலரிடமும் கலந்து ஆலோசித்தோம். பிரசாந்த் பூஷண், சாந்தி பூஷண் இருவரும் இதில் ஆஜராக ஒப்புக்கொண்ட நிலையில், அண்ணா ஹஜாரேவின் போராட்டம் தீவிரமாகிவிட்டது. அதனால், மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி, காலின் கான்சிவேல்ஸ், மோகித் சௌத்ரி ஆகியோர் வரவழைக்கப்பட்டார்கள். அவர்களின் அற்புதமான வாதம் இடைக்காலத் தடையைப் பெற்றுக் கொடுத்தது. எட்டு வாரத் தடை என்பது தூக்குத் தண்டனைக்கு விதிக்கப்பட்டது அல்ல. எங்கள் வழக்கில் மத்திய மாநில அரசுகள் தங்கள் தரப்பு கருத்தைத் தெரிவிப்பதற்கான அவகாசம்தான் இது!''
''மத்திய அரசு தூக்குத் தண்டனையை வலியுறுத்தி வாதாடினால், என்ன ஆகும்?''
''இத்தனை வருடங்களாக உளைச்சலில் தவிக்கும் மூன்று பேருக்கும் நீதிமன்றத் துக்கும் இடையேயான இந்த விவகாரத் தில் மத்திய அரசு எதையும் நிர்ப்பந்திக்க முடியாது. வழக்கு குறித்த உதவிகளை மட்டுமே செய்ய முடியும். அதேநேரம் 20 வருடங்கள் தனிமைச் சிறை, கருணை மனு முடிவுக்காக 11 வருடத் தாமதம் என நம் தரப்பில் வலுவான வாதங்களை வைக்க முடியும். சுனில் பத்ரா வழக்கில் தனிமைச் சிறையை அனுபவித்ததற்காகவே தண்டனைக் குறைப்பு செய்யப்பட்டது. பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவருமே மிக இளம் வயதில் சிறையில் சிக்கி, வாழ்வின் பெரும்பகுதியை தனிமைச் சிறையில் கழித்தவர்கள். அதனால், அவர்கள் சுமக்கும் கொடூர வேதனைக்கு நீதிமன்றம் நிச்சயம் விடிவு கொடுக்கும்!''
''முன்னாள் பிரதமரைக் கொலை செய்தவர்களுக்கு தண்டனைக் குறைப்பு நியாயம்தானா என்று காங்கிரஸ்காரர்கள் கேட்கிறார்களே?''
''தூக்குத் தண்டனைக் கைதிகளுக்குத் தண்டனைக் குறைப்பு செய்ய முடியுமா என ஐந்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் ஆராய்ந்தது. அதில், குற்றத்தின் தன்மைக்குள் ஒருபோதும் போக முடியாது என்பதை அப்பட்டமாகச் சொல்லி விட்டார்கள். அதனால், தூக்குத் தண்டனைக்கு ஆளானவர்களின் நியாயத்தை இனி நாம் பேச முடியாது. ஆனால், 'ஒவ்வொரு நாளையும் சாவின் விளிம்பில் கழித்தவர்கள் நிச்சயம் மனிதத் தன்மையை இழந்திருப்பார்கள். வெறும் காய்கறிக்குச் சமமானவர்களாகவே அவர்களைக் கருத முடியும். காய்கறிகளை வெட்டுவதால் எந்தப் பலனும் இல்லை!’ என தூக்குத் தண்டனைக் கைதிகளின் மனநிலைத் தவிப்பை அப்பட்டமாக அவர்கள் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். அதனால் சிறையில் தவிப்பவர்கள் தங்களின் மன வேதனையை நீதிமன்றத்திடம் சொல்ல வழி இருக்கிறது. கொலையானவர் ராஜீவ் என்பதால் அதற்கென தனி சட்டம் எல்லாம் கிடையாது. யாராக இருந்தாலும் 'ஓர் உயிர்’ என்று தான் கருதப்படும்!''
''குடியரசுத் தலைவரால் கருணை மனு மீண்டும் நிராகரிக்கப் பட்டால்?''
''பேரறிவாளனுக்கு அவருடைய தாய் அற்புதம் அம்மாளும், முருகனுக்கு  சீமானும், சாந்தனுக்கு நானும் காப்பாளர்களாக இருந்து கடந்த 29-ம் தேதியே ஜனாதி பதிக்கு இமெயில் மூலம் கருணை மனு அனுப்பினோம். அது குறித்து அவர் என்ன முடிவு வேண்டுமானாலும் எடுக்கட்டும். ஆனால், இதற்கு முன்னர் மூன்று பேரின் கருணை மனுக்களை அவர் நிராகரித்தது எப்படி? என்பதை வெளிப்படையாக விளக்க வேண்டும். மத்திய அமைச்சரவை கூடி ஒருமனதாக முடிவு எடுத்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பினால் தான், கருணை மனுக்களை அவர் நிராகரிக்க முடியும். ஆனால், மத்திய அமைச்சரவையில் அப்படி ஒரு கூட்டம் நடந்ததாகவே தகவல் இல்லை. கருணை மனு நிராகரிப்பில் எத்தகைய கலந்தாய்வுகள் நடத்தப்பட்டது என்பது குறித்து சென்ட்ரல் இன்ஃபர்மேஷன் கமிஷனரிடத்தில் நாங்கள் முறையிட்டு இருக்கிறோம். அதற்கான பதில் இப்போதுவரை வரவில்லை. ஒருவேளை அமைச்சரவை ஒப்புதலைப் பெற்றதாகச் சொன் னால், அன்றைய கூட்டத்தில் தி.மு.க-வைச் சார்ந்த மத்திய அமைச்சர்கள் இருந்தார்களா என்பதும் தெரிந்தாக வேண்டும்.
தமிழக கவர்னராக பாத்திமா பீவி இருந்த போது மூன்று பேரின் கருணை மனு நிரா கரிக்கப்பட்டது. அமைச்சரவையின் ஆலோசனை இன்றி, பாத்திமா பீவி முடிவு எடுத்தது தெரிந்து வழக்கு போடப்பட்டது.  அதனை விசாரித்த நீதிபதி கோவிந்தராஜன் 'அமைச்சரவை ஆலோ சனை பெற்ற பிறகே கவர்னர் முடிவு எடுக்க முடியும்’ எனச் சொன்னார். அதுவரை தூக்குத் தண்டனைக்கு எதிராகப் பேசிவந்த கலைஞர், உடனே அமைச்சரவையைக் கூட்டி மூன்று பேருக்கு தூக்குத் தண்டனை வழங்க பாத்திமா பீவிக்கு தீர்மானம் அனுப்பினார். அன்றைக்கு பாத்திமா பீவி தன்னிச்சையாக எடுத்த முடிவைத்தான் இன்றைக்கு பிரதிபா பாட்டீல் எடுத்திருக்கிறார். கருணை மனு விஷயத்தில் அவரை நிர்ப்பந்தித்த சக்திகளை அவர் அடையாளம் காட்டுவாரா?''

மண்ணுக்குள் இருக்கிறார் கணபதி ஸ்தபதியின் ஸ்ரீ ரங்கநாதர்!

மாநகரில் வள்ளுவர் கோட்டம், கடலில் வள்ளுவர் சிலை என காலத்தால் அழிக்க முடியாத கற்காவியங்களை உருவாக்கிய கலைச் சிற்பி கணபதி ஸ்தபதி கடந்த வாரத்தில் இறந்து போனார். எத்தனையோ எண்ணங்களை வடிவமைத்த அவருக்கும் நிறைவேறாத ஆசை ஒன்று உண்டு. அந்தக் கவலையுடன்தான் மறைந்து விட்டார். கணபதி ஸ்தபதி பல இரவு பகல்களைச் செலவு செய்து உருவாக்கிய ரங்கநாதர் சிலை, வெளிச்சத்துக்கு வராமல் பூமிக்குள் புதைந்து கிடப்பதுதான் இறுதிக் காலத்தில் அவரது பெருங்கவலையாக இருந்தது! 
கணபதி ஸ்தபதியின் வழக்கறிஞரும் சிற்பியுமான அரசு நம்மிடம் இது குறித்து விரிவாகப் பேசினார். ''இலங்கை அதிபராக இருந்த சந்திரிகா, கொழும்பு நகரில்  100 கோடியில் வைணவக் கோயில் ஒன்று கட்ட முடிவு எடுத்தார். மாமல்லபுரத்தில் உள்ள ஸ்தபதியின் சிற்ப கூடத்துக்கு சந்திரிகாவும் இலங்கை அரசின் கலைப் பண்பாட்டுத்துறை அமைச்சர் ஜெயக்கொடியும் 1998-ம் ஆண்டு வந்து அட்வான்ஸ் தொகை கொடுத்து 18 அடியில் ரங்கநாதர் சிலை உருவாக்கச் சொன்னார்கள்.
அதற்காக ஆந்திராவில் இருந்து துருக்கி என்கிற அபூர்வ நீல நிறக் கல்லை 26 டயர்கள் பொருத்திய பெரிய டிரக்டிரைலர் லாரியில் மகாபலிபுரம் கொண்டு வந்தார்கள். இரவு பகலாக நூற்றுக்கணக்கான சிற்பிகளை வைத்து 2001-ல் சிலை முடிக்கப்பட்டது. ஆனால், இலங்கையில் நடந்த அரசியல் மாற்றங்களால் சொன்னபடி சிலையை வாங்கவில்லை. 'சிலையை வாங்கிச் செல்லுங்கள்’ என்று இதுவரையில் 18 கடிதங்கள் எழுதியும், இலங்கை அரசு எந்த பதிலும் சொல்லவில்லை. இப்போது சிலையைப் பாதுகாக்கவே மாதம் ஒரு லட்சம் வரையில் செலவாகிறது. '30 நாட்களுக்குள் உரிய இழப்பீட்டை கொடுத்து சிலையை எடுத்துச் செல்க. இல்லையெனில் சிலை எங்களுக்கே சொந்தம்’ என்று அனுப்பிய நோட்டீஸுக்கும் பதில் வரவில்லை.
புத்த மதத்தின் தீவிர ஆதரவாளரான ராஜபக்ஷே ரங்கநாதர் சிலையை எடுத்துச் செல்ல விரும்பவில்லை என்பது புரிகிறது. மயன் போன்ற சிற்பக் கலைஞரான கணபதி உருவாக்கிய ரங்கநாதர், சிலை வடிவில் மணலுக் குள் கண் திறவாமல் இலங்கையை நோக்கி உறங்குகிறார். மரபுப்படி இது இலங்கைக்கு நல்லது அல்ல!'' என்றார் அரசு.
கணபதி ஸ்தபதியின் ஆசை நிறை வேறுமா?

எத்தனை தடவைதான் இப்படியே சொல்வீங்க...

சீறிய பெங்களூரு நீதிபதி...

பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நடக்கும் தமிழக முதல்வர் ஜெ-வின் சொத்துக் குவிப்பு வழக்கில், நாளுக்கு நாள் அனல் அதிகம் ஆகிறது! கூடிய சீக்கிரமே ஜெ. கோர்ட் படியேறும் காட்சி அரங்கேறப் போவதன் அறிகுறி, உச்ச நீதிமன்றம் வாயிலாகத் தென்பட்டது. அடுத்து அது பெங்களூரு நீதிமன்றத்திலும் தெரிந்தது. 
வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்த வழக்கு ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது பெங்களூரு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 13 ஆண்டுகளாக நடைபெற்று வந்தாலும், ஜெயலலிதா இதில் ஒருதடவை கூட ஆஜராகவில்லை. இதனால் நீதிபதி மல்லிகார்ஜுனய்யா கோபம் அடைந்ததைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 27-ம் தேதி சசிகலாவும், இளவரசியும் ஆஜரானர்கள். அப்போதும் சுதாகரனுக்குக் கையில் காயம் காரணமாக ஆஜராக வில்லை.
இந்த நிலையில்தான், இசட் பிளஸ் பாதுகாப்பில் ஜெ. இருப்பதால் கோர்ட்டில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என போடப்பட்ட இரண்டு மனுக்களையும் நீதிபதி தள்ளுபடி செய்தார். இதனால் ஜெ. தரப்பு சுப்ரீம் கோர்ட்டுக்குப் போனது. 'விலக்கு அளிக்க முடியாது. செப்டம்பர் 12-க்குள் ஆஜராகும் தேதியை நீங்களே சொல்லுங்கள்’ என சுப்ரீம் கோர்ட் டென்ஷன் காட்டியது. இதுபற்றி கடந்த இதழில் எழுதி இருந்தோம்!
கடந்த 6-ம் தேதி இந்த வழக்கு தனி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'ஜெயலலிதா முதல்வராக இருப்பதால் வேலைப் பளு அதிகமாக உள்ளது. சசிகலாவுக்கு கண் சிகிச்சை. இளவரசிக்கு சர்க்கரை நோய். சுதாகரனுக்கு கை எலும்பு முறிவு. இந்தக் காரணங்களால் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்’ என ஜெயலலிதா தரப்பில் வழக்கமான காரணங்கள் சொல்லப்பட... டென்ஷன் ஆனார் நீதிபதி மல்லிகார்ஜுனய்யா.
''ஜெயலலிதா முதல்வர் என்பதால் பரவாயில்லை. மற்ற மூவரும் இதையே காரணங்களாக எத்தனை முறைதான் சொல்வீர்கள்? வாய்தா வாங்குவீர்கள்? இதுபோன்ற காரணங்களை இனியும் நீதிமன்றம் ஏற்காது. இப்படியே செய்தால், இது கோர்ட்டை அவமதிக்கும் செயல் அல்லவா?'' எனக் கூறி, நான்கு மனுக்களையும் எடுத்து வேகமாகப் போட்டார் நீதிபதி. அவருக்கு  முன்னால் அமர்ந்து இருந்த எழுத்தர் மேசையில் வந்து அவை விழுந்தன.  ஜெ. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கந்தசாமி, ''சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு மனு மீதான விசாரணையை 12-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளதால், வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைக்கவேண்டும்...'' என புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இரண்டு வாரம் அவகாசம் தரமறுத்த நீதிமன்றம், தனது அடுத்த  விசாரனையை 14-ம் தேதிக்குத் தள்ளி வைத்தது!
சுப்ரீம் கோர்ட் முடிவைப் பொறுத்ததாக அமையும் பெங்களூரு கோர்ட் நடவடிக்கைகள்!

மார்ட்டினை வளைக்கும் லாட்டரி வலை!

சேலம்.. திருப்பூர்... எர்ணாகுளம்... பாலக்காடு... பூட்டான்...

'நாம நினைச்சதை சி.பி.ஐ. பண்ணிட்டிருக்கு!’ - புன்சிரிப்போடு இப்படி சொல்லி இருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. காரணம், லாட்டரி கிங் மார்ட்டினின் சொத்துகளை சி.பி.ஐ. ரெய்டு செய்திருப்பதுதான்!

 லாட்டரி 'விற்பனையில்’ ஜாக்பாட் மேல் ஜாக்பாட் அடித்துப் பெரும் கோடீஸ்வரனாகி இருப்பவர் சான்டி யாகோ மார்ட்டின். சில வருடங்களாக தி.மு.க-வினருடன் கூடிக்குலாவியதன் விளைவாக, ஜெயலலிதாவின் ஹிட் லிஸ்ட்டில் வலுவான இடத்தைப் பிடித்தார். விளைவு, நில மோசடி புகாரில் சேலம் சிறையில் இருக்கி றார். இந்நிலையில், அவரது சொத் துகளை சி.பி.ஐ. ரெய்டு செய்திருக்கும் 
நிலை யில்... 'வெறும் நிலமோசடி வழக்கோடு மட்டும் மார்ட்டின் ஃபைலை மூடிவிடாமல், இவருக்கும் கருணாநிதிக்குமான நெருக்கம் எவ்வளவு?’ என்பது உட்பட பல விஷயங் களை உள்ளடக்கி 'கருணாநிதி வித் மார்ட்டின்’ என்ற தலைப்பில், தாங்கள் தயாரித்து வைத்திருந்த ஃபைலை சி.பி.ஐ-யிடம் கொடுத் திருக்கிறதாம் தமிழக காவல் துறை.

விஷயத்தை விரிவாகப் பார்ப் போம்...
கடந்த 5-ம் தேதி காலையில் கோவை ஜி.என். மில் பகுதியில் உள்ள மார்ட்டினின் வீடு, காந்திபுரத்தில் உள்ள அவரது அலுவலகங்களை வளைத்தது கேரளாவில் இருந்து வந்த சி.பி.ஐ. டீம். ஒரு டி.எஸ்.பி. தலைமையில் இரண்டு இன்ஸ்பெக்டர்களின் கண்காணிப்பில் இந்த ரெய்டு நடந்தது. அரண்மனைபோன்ற மார்ட்டின் வீட்டைச் சுற்றிப் பெரும் சுற்றுச் சுவர் இருப்பதால், கட்டடத்துக்குள் சி.பி.ஐ-யின் நடமாட் டங்கள் எதுவும் மீடியாவின் கண்களுக்குச் சிக்கவில்லை.
கோவை போலீஸ் அதிகாரிகளிடம் இந்த ரெய்டு நடவடிக்கை குறித்துப் பேசியபோது, ''போன மாசம் 7-ம் தேதி எர்ணாகுளம் நீதிமன்றத்தில் கோடிக் கணக்கான மதிப்பிலான லாட்டரி ஊழல் விவகாரம் தொடர்பாக, மார்ட்டின் மற்றும் அவரது கூட்டாளி ஜான் கென்னடி மீது நான்கு வழக்குகளைத் தொடுத்தது சி.பி.ஐ. பூட்டான் மாநில லாட்டரிகளை கேரளாவில் விற்பனை செய்தது தொடர்பாக முதல் வழக்குப் பதிவானது. இரண்டாவது வழக்கு 2009-ல், பாலக்காட்டில் உள்ள மேகா டிஸ்ட்ரிபியூட்டர்ஸின் (இந்த நிறுவனத்தின் வழியாகத்தான் கேரளாவில் அமோகமாக லாட்டரி பிசினஸை நடத்தினார் மார்ட்டின்) குடோனில் நடந்த தீ விபத்து சம்பந்தமானது. மூன்றாவது வழக்கு, மற்ற மாநில லாட்டரிகளைப் போலியாக அச்சடித்து கேரளாவில் விற்றது சம்பந்தமானது. நாலாவது வழக்கில், போலி லாட்டரிச் சீட்டுகளை ஒரிஜினல் என்று சொல்லி வழங்கி லாட்டரி ஏஜென்ட்களையும், டீலர்களையும் ஏமாற்றியது...
பூட்டான் மாநில லாட்டரிகளை கேரளாவில் விற்பது தொடர்பாக மார்ட்டினுக்கு வழங்கப்பட்ட அனுமதியில், 'ஒவ்வொரு லாட்டரிச் சீட்டிலும் பூட்டான் மற்றும் கேரள அரசாங்கத்தின் லோகோவை சீல் அடித்திருக்க வேண்டும், பரிசு விழுந்தும் கோரப்படாத லாட்டரிச் சீட்டின் பணம் அரசின் நிவாரண நிதியில் சேர்க்க வேண்டும், லாட்டரிச் சீட்டுகளை அரசாங்க அச்சகத்தில்தான் அடிக்க வேண்டும்’ எனச் சொல்லி இருந்தது. ஆனால், இவை எதையுமே மதிக்கவில்லை. தமிழ்நாட்டில் உள்ள தனியார் அச்சகங்களில் லாட்டரிகளை அச்சடித்ததாக ஆதாரத்தோடு சொல்கிறது சி.பி.ஐ. ஒரே எண்ணில் பல டிக்கெட்டுகளை அடித்து விற்ற தாகவும், ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை மூலமாகவும் ஏகப்பட்ட கோடிகளை மார்ட்டின் டீம் சேர்த்திருக்கிறது எனக் குற்றம் சாட்டுகிறது. லாட்டரி விற்பனை தொடர்பாக அரசாங்கத்துக்குக் கட்டவேண்டிய வரிகளைக் கட்டாமலும் கோடிக்கணக்கில் ஏமாற்றி இருக்கிறார்கள். இந்த விவகாரங்கள் தொடர்பாகத்தான் கோவை, சென்னை, திருச்சி உள்ளிட்ட சுமார் 18 இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டு இருக்கிறது.
'ஆள்பவர்களுக்குத் தெரியாமல், போலி லாட்டரி களை, தமிழ்நாட்டில் மார்ட்டினால் அச்சடித்திருக்க முடியாது!’ என்பது சி.பி.ஐ-யின் வலுவான கருத்து. 'மாநில நிர்வாகத்தில் இருந்தவர்கள் மார்ட்டினுக்கு இந்த மோசடியில் உதவி செய்தார்களா? இதன் மூலமாக அவர்களுக்கு என்ன லாபம் கிடைத்தது?’ என்பது போன்ற கோணத்தில் அலசுகிறார்கள். நாங் களும் எந்தெந்த தி.மு.க. வி.ஐ.பி-களோடு மார்ட்டின் நெருக்கமாக இருந்தார் என்பது குறித்த ஃபைலை ரெடி செய்து சி.பி.ஐ-யிடம் கொடுத்துவிட்டோம். இதில், 'முன்னாள்' பெயர் முதலிடத்தில் இருக்கிறது. இதை அடிப்படையாக வைத்து மார்ட்டின் மீதான லாட்டரி மோசடி விஷயத்தில் 'முன்னாள்' இழுக்கப் படுவாரா? என்ற கேள்விக்கு சி.பி.ஐ-தான் பதில் சொல்ல வேண்டும். மேலும், சார்லஸ் ப்ரமோட்டர்ஸ், சார்லஸ் மாடுலர் ஹோம்ஸ், மார்ட்டின் ஸ்பின்னிங் மில்ஸ், மார்ட்டின் மல்டி ப்ராஜெக்ட்ஸ் என்பது உள்ளிட்ட சுமார் 35 கம்பெனிகளை மார்ட்டின் பதிவு செய்திருக்கும் விஷயங்களையும் இந்த ஃபைலில் குறிப்பிட்டிருக்கிறோம். அதில், பெரும்பாலான கம்பெனிகள் '54. மேட்டுப்பாளையம் ரோடு, ஜி.என். மில்ஸ், கோயம்புத்தூர்’ என்ற முகவரியில் பதிவு செய்யப்பட்டு இருப்பதை அண்டர் லைன் பண்ணி இருக்கிறது சி.பி.ஐ. தனது 'ரியல் எஸ்டேட்’ பிசினஸ்ஸுக்காக மார்ட்டின் இப்படிச் செய்து இருப்பாரோ...'' என்றும் சந்தேகம் கிளப்புகிறார்கள்.
மார்ட்டின் சிறையில் இருப்பதால், அவர் மனைவி லீமாரோஸிடம் விளக்கம் கேட்க முயன்றோம். அவர் வீட்டிலேயே இல்லை. மார்ட்டினின் நிறுவனங்களை நிர்வகிக்கும் பொறுப்பாளிகளோ, ''முழுக்க முழுக்க அரசியல்ரீதியான நடவடிக்கை இது. கேரளாவில் லாட்டரி விற்பனை செய்த விஷயத்திலோ, தமிழகத்தில் நிறுவனங்கள் நடத்திய வகையிலோ எந்தத் தவறும் நடக்கவில்லை. எல்லாமே சட்டத்துக்கு உட்பட்டு முறையாகத்தான் நடந்து வருகிறது. இந்தப் பிரச்னைகளை சட்டரீதியாக சமாளிப்போம்...'' என்கிறார்கள்.

அவர் என்ன தீவிரவாதியா..?

வீரபாண்டியார் மீண்டும் கைது... ஆவேச பிரபு

கோவை மத்திய சிறையில் 35 நாட் களாக அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு ஒரு வழியாக ஜாமீன் கிடைக்க... நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள் அவரது ஆதரவாளர்கள். ஆனால், அந்த மகிழ்ச்சி சில மணி நேரம் கூட நீடிக்கவில்லை. சிறையில் இருந்து வெளியே வந்தவரை, கோயம்புத்தூர் ஜுவல்லரி உரிமையாளர் கொடுத்த நில அபகரிப்புப் புகாரில் மீண்டும் கைது செய்திருக்கிறது போலீஸ். 
ஒரு சின்ன ப்ளாஷ்பேக்... சேலத்தை சேர்ந்த கோயம்புத்தூர் ஜுவல்லரி உரிமையாளர்களான ஸ்ரீநாத், பிரேம்ஆனந்த் ஆகியோரின் நிலம் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அங்கம்மாள் காலனிக்குச் செல்லும் வழியில் இருக்கிறது. அந்த நிலத்தைக் கேட்டு, அப்போது அமைச்சராக இருந்த வீரபாண்டி ஆறுமுகமும், அவர் மகன் ராஜா, தம்பி மகன் பாரப்பட்டி சுரேஷ் ஆகியோர் மிரட்டுவதாக நம்மிடம் கதறினார்கள். 'ஆபத்தில் சகோதரர்கள்... அதட்டினாரா அமைச்சர்?’ என்ற தலைப்பில் 15.10.08 தேதியிட்ட ஜூ.வி-யில் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. அந்தப் பிரச்னையில்தான் இப்போது கைதாகி இருக்கிறார் வீரபாண்டி ஆறுமுகம்.

பிரேம்ஆனந்திடம் பேசினோம். ''அப்போது, 'அமைச்சரே உங்க நிலத்து மேல ஆசைப்படுறார்... கொடுத்துட்டுப் போகாம சும்மா பேசிட்டு இருக்கீங்க...’ என்ற ரீதியில் ஒரு இன்ஸ்பெக்டர் தொடங்கி... பலரும் மிரட்டினாங்க. சேலத்துல தாசில்தாராக இருந்த ஸ்ரீரங்கநாதன் (வீரபாண்டி ஆறுமுகத்தோடு இவரும் நில அபகரிப்பு வழக்கில் கைதாகி இருக்கிறார்) கடைவீதியில் இருக்கும் எங்க கடையின் ஒரு பகுதி ஆக்கிரமிப்பில் இருப்பதாகச் சொல்லி இடித்தார். நான் ஆள் கடத்தியதாகச் சொல்லி என் மீது 
பொய் வழக்கு போட்டு கைது செய்தார்கள். ஆனால், வீரபாண்டி ஆறுமுகம் மீது போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால்தான் இப்போது புகார் கொடுத்து இருக்கிறேன்...'' என்று சொன்னார்.

கோவை சிறையில் இருந்து ஜாமீனில் வந்தவரை கைது செய்து 6-ம் தேதி இரவு சேலம் கொண்டு வந்தது போலீஸ். நீதிபதி வீட்டுக்கு முன்பாக வீரபாண்டி ஆறுமுகத்தின் துணைவி லீலாவதி, அவர் மகன் பிரபு, மகள்கள், மருமகள், பேத்திகள் என்று ஒட்டுமொத்தக் குடும்பமும் காத்திருந்தது. வேனில் இருந்து இறக்கப்பட்ட அவரை விறுவிறுவென நீதிபதி வீட்டுக்குள் கொண்டுபோய், திரும்பவும் அதே வேகத்தில் வேனுக்கு கொண்டு போனார்கள். ''அவர் அப்படி என்ன தப்பு பண்ணினார்... இப்படி இழுத்துட்டுப் போறீங்க...? அவர் என்ன தீவிரவாதியா?'' என்று கண்கள் சிவக்க ஆக்ரோஷமானார் ஆறுமுகத்தின் மகன் பிரபு. அதன் பிறகு போலீஸ் அதிகாரிகளிடம் வக்கீல்கள் ஏதோ பேச... அவரது குடும்ப உறுப்பினர்களை மட்டும் அருகில் சென்று பேச அனுமதித்தது போலீஸ்.
ஆறுமுகத்தை அருகில் பார்த்ததும் அவர் துணைவி லீலாவதிக்கு அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ''இப்போ எதுக்கு அழுவுற... தைரியமா இரு...'' என்று ஆறுமுகம் அன்போடு அதட்டினார். ''நீங்க கவலைப்படமா இருங்கப்பா... சீக்கிரமே உங்களை வெளியில கொண்டுவர எல்லா ஏற்பாடுகளையும் செஞ்சிட்டு இருக்கோம். நேரத்துக்கு சாப்பிடுங்க. மாத்திரைகளை மறந்திடாம சாப்பிடுங்க...'' என அப்பாவுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார் பிரபு.
''எல்லாருமே ரொம்பவும் உடைஞ்சு போயிருக்காங்க. ராஜாவையும் போலீஸ் தேடிட்டு இருக்குது. நீதான் எல்லோரையும் பார்த்துக்கணும். பேரன் எப்படி இருக்கான்? அவனையும் நல்லபடியா பார்த்துக்கோ...'' என்று பிரபுவிடம் சொன்னாராம் ஆறுமுகம்.
''கோவையில இருந்து சேலத்துக்கு நேராகக் கொண்டுவராமல், வேண்டும் என்றே ஏதேதோ ஊருக்கெல்லாம் போய் சுத்திட்டு ராத்திரியில் சேலத்துக்கு கொண்டு வந்தாங்க. மதியத்தில் இருந்து அவருக்கு ஒரு டீ கூட வாங்கிக் கொடுக்கலை, மாத்திரையும் போட விடலை. நடுராத்திரியில் வீட்டுக்குள் நுழைஞ்சு ஒவ்வொரு ரூமா டார்ச் அடிச்சுத் தேடுறாங்க. போர்வையை போத்தித் தூங்கிட்டு இருந்த ராஜா அண்ணனோட பொண்ணு போர்வையை விலக்கிப் பார்க்குறாங்க. என்ன அநியாயம்? இதுக்கெல்லாம் போலீஸ் பதில் சொல்லியேஆகணும்!'' என்று கொந்தளித்தார் பிரபு.
ஜாமீன், கைது என்று ஆடு புலி ஆட்டம் இன்னும் எத்தனை நாட்களுக்கோ?

அடுத்து அமுக்கப் போவது யாரை?

மதுரை குவாரிகள்...

''மேலூர் ஏரியா வில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியும், அவர் குடும்பத்தாரும் கிரானைட் கற்களை முறைகேடாக வெட்டி எடுத்து சம்பாதித்து இருக்கிறார்கள்!'' - இது, தொழில் துறை அமைச்சர் வேலுமணி சட்டமன்றத்தில் கொளுத்திப் போட்ட சரவெடி. இதற்கு உடனடியாக எதிர் ராக்கெட்டை வீசிய அழகிரி, ''என் பெயரிலோ, என் குடும்பத்தார் பெயரிலோ குவாரிகள் எதுவும் இல்லை. தவறான தகவலை வெளியிட்ட அமைச்சர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்!'' என்று கர்ஜித்தார். அந்தக் கர்ஜனைக்கு ஆக்ஷன் மூலமாக ரியாக்ஷன் காட்ட ஆரம்பித்துள்ளார், தமிழக அமைச்சர்! 
மேலூரை அடுத்துள்ள கீழையூர் மற்றும் கீழவளவு கிரானைட் குவாரிகள் இரண்டுக்கு மட்டும், கடந்த 4-ம் தேதி மாலை டாமின் அதிகாரிகள் புடைசூழ அதிரடி விசிட் அடித்தார் அமைச்சர் வேலுமணி. இந்தக் குவாரிகள், மு.க.அழகிரியின் மகன் 50 சதவிகித பங்குதாரராக இருந்து நடத்தி வந்த 'ஒலம்பஸ் கிரானைட்ஸு’க்குச் சொந்தமானவை என்று ஆளும் கட்சி வட்டாரம் சொல்கிறது. முதலில் கீழவளவு 'சக்கரை பீர் மலை’ குவாரியைப் பார்த்த அமைச்சர், அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாகக் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு இருப்பதையும், அனுமதி பெறாமலேயே தனியார் பட்டா நிலம் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களிலும் அத்துமீறி கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு இருப்பதையும் பார்த்துவிட்டு, ''நாங்கள் எதிர்பார்த்ததுக்கு மேலா கவே கொள்ளை நடந்திருக்கே!'' என்று கீழையூர் குவாரிக்குச் சென்றார். அங்கும் இதே நிலைதான்.
அமைச்சர் வேலுமணியிடம் பேசினோம். ''சட்ட மன்றத்தில் நான் சொன்ன கருத்துக்கு அழகிரி கண்டன அறிக்கை விட்டதுமே, மேலூர் பகுதியில் அழகிரி தரப்பினருக்குச் சொந்தமான சட்ட விரோத குவாரிகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி அம்மா அவர்கள் எனக்கு ஆணை இட்டார்கள். அதற்காகத்தான் வந்தேன். பிறகுதான் தெரிகிறது எவ்வளவு சுரண்டி இருக்கிறார்கள் என்று. இங்கு எடுக்கப்படும் கிரானைட் கல்லில் 10 சத விகிதத்தை மட்டும் கணக்கில் காட்டிவிட்டு, பாக்கி 90 சதவிகிதத்தைக் மறைத்துள்ளனர். இது அதிகாரப் புள்ளிகள் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், அதிகாரிகளும் கண்ணை மூடிக்கொண்டு இருந்திருக்கிறார்கள்.

அழகிரியின் மகன் துரை தயாநிதி பங்குதாரராக இருந்து நடத்தி வந்த ஒலம்பஸ் கிரானைட் 29.11.06 தொடங்கி 12.03.11 வரை கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததாக அதிகாரிகள் கணக்குச் சொல்கிறார்கள். ஆனால், அதுக்குப் பின்பும் கற்கள் வெட்டியிருக்காங்க. ஆட்சி மாறிய பிறகு சிக்கிக்கொள்வோம் என்ற பயத்தில், அழகிரி மகன் ஒலம்பஸ் கிரானைட் பங்குதாரர் பொறுப்பில்
இருந்து விலகி உள்ளார். ஆனால், ஒரு வருடத்துக்கு முன்னதாகவே அவர் அந்தப் பொறுப்பில் இருந்து விலகிவிட்டதாக இப்போது ஆவணங்களைத் தயார் செய்து இருக்கிறார்கள். மொத்தத்தில் நாங்கள் எதிர்பார்த்து வந்ததைவிடவும் அதிகமான ஆவணங்கள் எங்களுக்குக் கிடைத் திருக்கின்றன. அனைத்தையும் அம்மாவிடம் சமர்ப்பிப்போம். அப்புறம் பாருங்கள் என்ன நடக்கிறது என்று!'' என்றார்.

மேலூர் பகுதியில் நடக்கும் கிரானைட் கொள்ளை குறித்து தொடந்து குரல் கொடுத்து வரும் மேலூர் வழக்கறிஞரான ஸ்டாலின், ''பட்டா நிலம்னு சொல்லி கண்மாய், புறம்போக்கு நிலங்கள் உள்ளிட்ட இடங்களையும் வளைச்சு தோண்டிட்டாங்க. டாமின் அதிகாரிகளும், அ.தி.மு.க., தி.மு.க. கட்சிக்காரங்களும் இதுக்கு முழுக்க முழுக்க உடந்தை. கடந்த அஞ்சு வருஷத்தில் குவாரி சம்பந்தமா அ.தி.மு.க-காரங்க யாராச்சும் மேடை ஏறிப் பேசி இருப்பாங்களா? இல்லை... அதுக்கு முந்திதான் தி.மு.க-காரங்க பேசி இருப்பாங்களா? தேர்தல் செலவுக்கு தொழில் அதிபர்களிடம் போற இவங்க எப்படி வாயைத் திறப்பாங்க? அமைச்சர் விசிட்டின்போதுகூட கிரானைட் அதிபர்களின் கைக்கூலிகள் சிலரும் அவரோட போயிருக்காங்க. அமைச்சர் வருவதை அதிகாரிகள் முன்கூட்டியே கிரானைட் கம்பெனிகளுக்கு தகவல் கொடுத்துட்டாங்க. அமைச்சரிடம் யார் என்ன புகார் சொல்கிறார்கள் என்பதை வீடியோ எடுக்குறதுக்காக, கிரானைட் கம்பெனி அதிபரால் அனுப்பி வைக்கப்பட்ட வீடியோகிராபரும் போட்டோகிராபரும் பக்காவா படம் பிடிச்சிருக்காங்க. இப்படி இருந்தா யாரு பயம் இல்லாம புகார் சொல்வாங்க?'' என்று ஆதங்கப்பட்டார்.
தி.மு.க. தரப்பிலோ, ''ஒலம்பஸ் கிரானைட் குவாரியில் கற்களை வெட்டி எடுத்தது அந்த மூன்றெழுத்து நிறுவனம் தான் கம்பெனி நிர்வாகத்துக்குத் தெரி யாமலேயே, அந்த கம்பெனியினர் முறை கேடாகக் கற்களை வெட்டி இருந்தால் யார் பொறுப்பாவது?'' என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
மதுரை ஏரியாவில் நடந்த கிரானைட் மோசடிகளைக் கண்டு பிடிக்க கில்லாடியான அதிகாரி களைத் தேர்தெடுத்து, ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குழுவினர் பூதக்கண்ணாடியை வைத்து அனைத்து குவாரிகளையும் ஸ்கேன் செய்து வருகிறார்கள். 'கடந்த ஐந்து வருடத்தில் சட்டவிரோதமாகக் கடத்தப் பட்ட கிரானைட் பாறைகள் தரை வழியாகவும், கடல் மார்க்கமாகவும் எங்கெங்கே எவ்வளவு சென்றுள்ளன?' என்பது தொடர்பான ஆவணங்களை அந்தந்த அரசு துறை அதிகாரிகளிடம் சேகரித்து வருகிறார்கள். மதுரை ஏரியாவில் கோலோச்சிய கனிம வளத் துறை துணை இயக்குநர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். இந்த அதிகாரியின் பூர்வாங்க விவரங்கள் அலசப்பட்டு வருகின்றன. விசாரணைக் குழுவினர் அடுத்த ஒரு வாரத்தில் தரப்போகும் அறிக்கையை வைத்து அடுத்தகட்ட  நடவடிக்கை இருக்கும்.

ஸ்டிரைக்... ஆனா இது ஸ்டிரைக் இல்லை!

கோலிவுட்டில் குஸ்திமேளா...

மிழ்நாட்டில் மூன்று வருஷத்துக்கு ஒருமுறை, சினிமாத்துறை ஸ்தம்பித்துப் போகும். 
'பெஃப்ஸி’ தொழிலாளர் ஸ்டிரைக்தான் இதற்குக் காரணம்.  அப்போதெல்லாம் தயாரிப்பாளர்கள் என்ன செய்வதென்று தெரியாமல்  தவிப்பார்கள்.  அந்த சோதனைக் காலம் இப்போதும் தமிழ்ச் சினிமாவைச் சூழ்ந்து நிற்கிறது!

பிரச்னையைத் தீர்த்துவைக்கும் பொறுப்பு தயாரிப் பாளர்கள் சங்கம் ப்ளஸ் பெஃப்ஸிக்கு இருக்கிறது. 
இரண்டு சங்கத்திலும் தலைவர் இல்லை என்பதால், இந்தப் பிரச்னையை இப்போது 'தென்னிந்திய ஃபிலிம் சேம்பர்’ பேசி வருகிறது. இது குறித்து தென்னிந் திய திரைப்பட வர்த்தக சபையின் செயலாளர் எல்.சுரேஷிடம் பேசினோம்.

''தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடத் தயாரிப்பாளர்களின் கூட்டம் ஃபிலிம் சேம்பரில் சமீபத்தில் நடந்தது. செப்டம்பர் 7-ம் தேதியில் இருந்து புதுப் படத்துக்கு பூஜை போடறது இல்லைன்னு முடிவு எடுத்திருக்கோம். அக்டோபர் 31--ம் தேதிக்குள் இப்போ நடக்குற படங்களோட படப்பிடிப்பு முடிவடையும். இப்போ திடீர்னு, 'பழைய சம்பளம் வாங்க மாட்டோம். புதுசா நாங்க நிர்ணயிக்கிற சம்பளத்தைக் கொடுத்தால்தான் வேலை செய்வோம்’னு பெஃப்ஸியில இருக்கும் ஆறு அமைப்புங்க அறிவிச்சு இருக்கு. மூணு வருஷத்துக்கு ஒரு தடவை சம்பளம் பத்திப் பேசறது வழக்கம். அதன்படி, ஜனவரி மாசமே பேசி முடிச்சிருக்கலாம். அப்போ ஆளும் கட்சிக்கு நெருக்கமா இருந்த தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணனும், பெஃப்ஸி தலைவர் வி.சி.குக நாதனும் பிரச்னையைத் தீர்த்திருக்கலாம்... ஏனோ செய்யலை!'' என்று ஆதங்கப்பட்டார்.
பெஃப்ஸி அமைப்பின் முன்னாள் தலைவர் வி.சி.குகநாதனிடம் கேட்டோம். ''ராம.நாராயணன் கட்சிக்காரர்... அதனால் அவர்கூட இருந்த நானும் தி.மு.க-னு முத்திரை குத்துறதை முதல்ல நிறுத்துங்க. உண்மையைச் சொல்லணும்னா, நான் எம்.ஜி.ஆர். ஆள்!'' என்ற பீடிகை போட்ட அவர், ''ஜனவரி மாசம் 14-ம் தேதி, நான் தலைவரா இருக்கும்போதே, பெஃப்ஸி தொழிலாளர்களின் சம்பளம்பற்றிய பிரச்னையை சேம்பர் அமைப்பில் பேசினேன். அப்போது, பெஃப்ஸியில இருக்குற எல்லா அமைப்புகளும் சம்பளத்தை உயர்த்திக் கேட்டாங்க. கடைசியில் டான்ஸர், ஸ்டன்ட், மகளிர், டிரைவர், கார்பென்ட்டர், சக நடிகர் என்கிற ஆறு அமைப்புகள் கோரிக்கைகளை ஒப்புக் கொண்டு கையெழுத்துப் போட்டாங்க. அதே ஜனவரியில், பெஃப்ஸி தொழிலாளர்கள் சம்பள உயர்வு சம்பந்தமாக தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பேசினேன். பிப்ரவரியில் பொதுக் குழு கூட்டி முடிவு எடுக்கறதாச் சொன்னாங்க. இந்நிலையில், சட்டசபைத் தேர்தல் தேதியை அறிவிச்சுட்டங்க. அதன் பிறகு பேசிக்கலாம்னு முடிவு செஞ்சாங்க.அதன்பிறகு பேசவே இல்லை. இதுதான் உண்மையில் நடந்துச்சு...'' என்றும் விளக்கினார்.      
இதற்கிடையில், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் செயலாளர் சிவா, ''நாங்கள் ஸ்டிரைக் செய்யவில்லை. tதமிழ்ப் படத் தயாரிப்பாளர்கள், நியாயமான புதிய சம்பளத்தை மனமுவந்து வழங்கி வருகிறார்கள். நாங்களும் ஷூட்டிங் சென்று கொண்டு இருக்கிறோம்...'' என்று அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
''சிவா சொல்வது வடிகட்டிய பொய். பெஃப்ஸி அமைப்பினர் சம்பளம் அதிகம் கேட்டுக் கெடுபிடி செய்வதுதான் உண்மை. முதலில் 12 மணி நேரம் வேலை பார்த்து வந்தார்கள். இடையில், 8 மணி நேரம்தான் வேலை செய்வோம் என்று அடம்பிடித்தார்கள். வழக்கமாக, மூன்று ஆண்டுக்கு ஒரு முறை 32 சதவிகிதம் சம்பளத்தைத்தான் உயர்த்திக் கேட்பார்கள். இப்போது தடாலடியாக 70 சதவிகிதம் அதிகமாகக் கேட்பது எந்த விதத்தில் நியாயம்? இந்த சம்பளப் பிரச்னையில் சின்னப் படங்களின் பட்ஜெட்  40 லட்சம், பெரிய படங்களின் பட்ஜெட்  1 கோடிக்கு மேல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுவிடும்...'' என்று கொந்தளித்தார், விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கலைப்புலி சேகரன்.
உண்மையில் கோடம்பாக்கத்தில் படப்பிடிப்புகள் நின்றுவிட்டதா என்பதுபற்றி விசாரித்தோம். ''தீபாவளி நெருங்கிவிட்டதால், படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெறுகிறது. அதிக சம்பளம் கேட்கும் பெஃப்ஸியிடம் சண்டைபோட யாருக்கும் நேரம் இல்லை. டைரக்டரும், தயாரிப்பாளரும் காலில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு ஓடிக்கொண்டு இருக்கிறார்கள். அதனால், பெஃப்ஸி அமைப்பினர் கேட்கிற சம்பளத்தைக் கொடுத்துவிட்டு 'நண்பன்’ 'விஸ்வரூபம்’ 'மாற்றான்’ படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். அதுதான் உண்மை!'' என்று சொன்னார் அந்தக் கோடம்பாக்கப் புள்ளி.

தல்லாகுளம் ஸ்டேஷனில் தாக்கப்பட்டாரா நிருபர்?

பொட்டு சுரேஷ் மீது புது வழக்கு!

'பொட்டு சுரேஷை குண்டர் சட்டத்தில் அடைத்தது சரியே...’ என குண்டர் தடுப்புக் காவலுக்கான ஆலோசனைக் குழுமம் தீர்ப்பு எழுதிய சற்று நேரத்தில், பொட்டு மீது புதிதாக இன்னொரு வழக்கு பாய்ந்துவிட்டது! 
'நவீன நெற்றிக்கண்’ என்ற பத்திரிகையின் 22.10.09-ம் தேதியிட்ட இதழில், 'தமிழகத்தின் இணை முதலமைச்சர் பொட்டு சுரேஷா?’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளி யானது. இதைத் தொடர்ந்து, 'அந்தப் பத்திரிகையின் மதுரை நிருபர் பாண்டியனும், ஆசிரியர் மணியும் பணம் கேட்டு, எனக்குக் கொலை மிரட்டல் விடுத்தார்கள்’ என்று 'பொட்டு’ சுரேஷ் அப்போது போலீஸில் புகார் கொடுத்தார். உடனே, ஐந்து செக்ஷன்களில் வழக்குப் பதிவு செய்தது போலீஸ். பாண்டியனை கைது செய்ய பார்த்திபன் என்ற எஸ்.ஐ. தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டது. மணி கைது செய்யப்பட்டு புழல் சிறைக்கு அனுப்பப்பட்டார். பாண்டியன் தலைமறை வானார். இவை அனைத்தும் தி.மு.க. ஆட்சியின்போது நடந்த விஷயங்கள்!
இப்போது, பாண்டியன் புகார் கொடுத்துள்ளார். தனக்கும் தனது குடும்பத்தாருக்கும் நடந்த சித்திரவதைகள் குறித்து இவர் கொடுத்த புகாரின் பேரில் பொட்டு சுரேஷ், அவர் தம்பி சரவணன், அப்போதைய மதுரை நுண்ணறிவுப் பிரிவு ஏ.சி-யான குமாரவேல், எஸ்.ஐ-யான பார்த்திபன் ஆகியோர் மீது, கொலை மிரட்டல், கொலை முயற்சி உள்ளிட்ட ஏழு செக்ஷன்களில் வழக்குப் பதிவு செய்திருக்கிறது எழுமலை போலீஸ்!

பாண்டியனை நாம் சந்தித்தோம். ''அப்போது அந்தச் செய்தி வெளி வந்ததுமே, என்னை போனில் தொடர்புகொண்ட ஐ.எஸ். ஏ.சி-யான குமாரவேல், 'அழகிரியையே இயக்குபவர் பொட்டு சுரேஷ். அவரைப்பத்தி தாறுமாறா செய்தி எழுதியிருக்கே... அவர் உன்னையும் உன் குடும்பத்தையும் சும்மா விடமாட் டார்’னு மிரட்டினார். இதை எங்களது ஆசிரியர் மணியிடம் சொல்லிவிட்டு தலைமறைவாகிவிட்டேன். அதனால், என் குடும்பத்தை டார்ச்சர் செய்தார்கள். என் மாமனார் கருப்பையாவை ராத்திரி ஒரு மணிக்கு தூக்கிட்டு வந்து தல்லாகுளம் ஸ்டேஷனில் உட்கார வெச்சுட்டாங்க. மறுநாள் காலையில் என் மைத்துனர் ஜெயபாண்டியனை தூக்குறதுக்காக எங்க கிராமத்துக்கு எஸ்.ஐ-யான பார்த்திபன் தலைமையில் 10 பேர் போனாங்க. அதில் நாலு பேர் மட்டும்தான் போலீஸ். மீதி ரவுடிகள். இவங்க மேல் சந்தேகப்பட்ட கிராம மக்கள், 10 பேரையும் பள்ளிக்கூடத்துக்குள்ள போட்டுப் பூட்டிட்டாங்க. அந்த நேரம் பார்த்து அந்த வழியா வந்த டி.ராமநாதபுரம் எஸ்.ஐ-யான பாண்டி, கூட்டத்தைப் பாத்துட்டு என்ன ஏதுன்னு விசாரிச்சப்பத்தான், போலீஸார் கூலிப் 
படையை கூட்டிட்டு வந்திருந்தது தெரிஞ்சது. கடைசியில், 'இனிமே இந்தப் பக்கமே வரமாட்டோம்’னு சொல்லி மன்னிப்புக் கேட்டதால, அந்தக் கூட்டத்தை கிராம மக்கள் விடுவிச்சாங்க. அந்த ஆத்திரத்தில், திருப்பூரில் இருந்த என் மூணு மைத்துனர்களை மதுரைக்கு தூக்கிட்டு வந்துட்டார் பார்த்திபன். வரும்போதே வேனுக்குள்ள வெச்சு மூணு பேரையும் கண் மூடித்தனமா தாக்கியிருக்காங்க. கடைசியா என் அப்பா, அம்மாவை கொடுமைப்படுத்த ஆரம்பிச்சாங்க. ஆஸ்துமா நோயாளி யான எங்க அப்பா, போலீஸ் டார்ச்சரில் மேலும் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகிட்டார். இப்படியே போலீஸை வெச்சு நாலு மாசம் எங்க குடும்பத்தைப் படுத்தி எடுத்துட்டார் பொட்டு.

நாலு மாசம் கழிச்சு எனக்கு முன்ஜாமீன் கொடுத்தாங்க.  தல்லாகுளம் ஸ்டேஷனில் தினமும் இரண்டு வேளை கையெழுத்து போடணும். ஜாமீன் கிடைச்ச நாலாவது நாள்னு நினைக்கிறேன்... ஸ்டேஷனுக்கு கையெழுத்துப் போடப் போயிருந்த என்னை மாடிக்கு வரச் சொன்னார் ஏ.சி-யான குமாரவேல். கால் மணி நேரத்தில், பொட்டு சுரேஷ§ம் அவர் தம்பி சரவணனும் அங்க வந்தாங்க. இருவரும் குமாரவேல் முன்னிலை யிலேயே கதவை சாத்திட்டு மூக்குல ரத்தம் வரும் அளவுக்கு என்னைத்தாக்கினாங்க. என்னை பொட்டு காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கச் சொன்னார் குமாரவேல். நான் முடியாதுன்னுட்டேன். அவங்க இருவரும் அங்கிருந்து போன பின்னாடி, 'இங்க நடந்ததை வெளியில் சொன்னீனா... இன்னும் 10 கேஸ் போடுவாங்க’னு மிரட்டிட்டு, வெள்ளைப் பேப்பர்களில் கையெழுத்து வாங்கிட்டு, என்னைய வெளியில்விட்டார் குமாரவேல்.
இதையெல்லாம் பார்த்து மனசு உடைஞ்சுபோன எங்க அப்பா அடுத்த இரண்டு மாசத்துலயே இறந்துட்டார். பொட்டு சுரேஷ், குமாரவேல், பார்த் திபன் இவங்க மூணு பேருதான் எங்க அப்பா சாவுக்குக் காரணம்னு அப்ப இதே எழுமலை போலீஸில் புகார் கொடுத்தேன். ஆனா, நடவடிக்கை எடுக்கலை. இந்த விஷயம் தெரிஞ்சு மறுபடியும் குமாரவேல் என்னை மிரட்டினார். இந்த விஷயத்தில் தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுத்து, பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும்!'' என்று கலங்கினார்.
பாண்டியனின் புகார் குறித்து ஏ.சி-யான குமார வேலிடம் பேசினோம். ''நிருபர் பாண்டியனை நான் முன்னப் பின்னப் பார்த்ததும் இல்லை. அவருடன் போனில் பேசியதும் இல்லை. உளவுத் துறை ஏ.சி-யாக இருந்தபோது நான் எந்த போலீஸ் ஸ்டேஷனுக்கும் போனதில்லை. அப்படி இருக்கையில், 'தல்லாகுளம் போலீஸ் ஸ்டேஷனில் என் கண் முன்னே பாண்டியனை பொட்டு சுரேஷ் தாக்கினார்’ என்று சொல்வது அபத்தமா இருக்கு. கண்டிஷன் பெயிலுக்கு வந்தவரை ஸ்டேஷனில் வைத்து அடிக்க முடியுமா? யாரும் அதை அனுமதிக்க மாட்டார்கள். எனது பெயரையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும் என்பதற்காக புகார் கொடுத்திருக்கிறார். இதைத் தவிர சொல்வதற்கு எதுவும் இல்லை...'' என்றார்.
மதுரை எஸ்.பி-யான ஆஸ்ரா கர்க், ''பாண்டி யன் புகார் கொடுத்து கிட்டத்தட்ட ஒரு மாதமாகி விட்டது. அவர் சொல்வது உண்மைதானா என்பதை அவரது சொந்த ஊர் வரைக்கும் சென்று விசாரித்து செக் பண்ணிய பிறகுதான், எஃப்.ஐ.ஆர். போட்டு இருக்கிறோம். குமாரவேல் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் மீது பாண்டியன் கூறி இருக்கும் புகார்கள் குறித்து விசாரித்துக்கொண்டு இருக்கிறோம்...'' என்றார்.

இடுகாட்டில் கொலையான பெண் நிருபர்கள்..

அதிர்ச்சியில் மெக்சிகோ!

நேர்மையான பத்திரிகையாளர்களை அடக்குவதற்கு ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வழிமுறையை ஆட்சியாளர்கள் கையில் எடுக்கிறார்கள். இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, பிரேசில் போன்ற நாடுகளிலும் அடிக்கடி பத்திரிகையாளர்கள் காணாமல் போவதும், கொல்லப்படுவதும் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இதுபோன்ற சம்பவங்களுக்குத் தீர்வு காணப்படாத நிலையில், அமெரிக்காவின் காலடியில் இருக்கும் மிகப்பெரிய நாடான மெக்ஸிகோவில், இரண்டு பெண் பத்திரிகை​யாளர்கள் கொல்லப்பட்டிருப்பது உலகெங்கும் பெரிய சலசலப்பை ஏற்படுத்​தியுள்ளது!
 மெக்ஸிகோ நாட்டின் தலைநகரான மெக்ஸிகோ சிட்டியின் இடுகாட்டுக்குப் பின்புறம் ஒரு பூங்காவில் அனா மர்ஸலா ஏர்ஸ், ரோக்கியோ கன்ஸ்லேஸ் என்ற இரண்டு பெண் பத்திரிகை​​யாளர்கள் கழுத்து நெரிக்கப்பட்டு, இறந்த நிலையில் கண்டு எடுக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் உடலில் துப்பாக்கியால் சுடப்பட்ட அடையாளங்களும் இருக்கின்றன.
இரண்டு பேருக்குமே 48 வயது. போதைப் பொருள் வியாபாரிகள் மற்றும் ஆட்சியாளர்​களை கடுமையான விமர்சனம் செய்யும், 'கான்ட்ரலினியா’ என்ற வார இதழில் நிருபர்​களாகப் பணியாற்றியவர்கள்.
''கொல்லப்பட்ட இரண்டு பெண்களில் ஒருவர் எங்கள் பத்திரிகையில் விளம்பரப் பிரிவில்தான் வேலை செய்தார். அரசை விமர்சனம் செய்யும் பத்திரிகை என்பதால் அரசு விளம்பரங்கள் எங்களுக்குக் கிடைப்பதில்லை. இருந்த போதும் எங்கள் பத்திரிகை தொடர்ந்து வெளிவருகிறது என்றால்... அதற்கு அவரது திறமை மூலம் கிடைக்கும் விளம்பர வருமானம்தான் முக்கியக் காரணம். விளம்பர வருமானம் நின்றுவிட்டால், பத்திரிகையை முடக்கிவிடலாம் என்ற எண்ணத்தில் இந்தக் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. அரசாங்​கத்தை மட்டுமின்றி, அதிகாரமும் செல்வமும் நிறைந்த ஊழல்வாதிகளைப் பற்றியும் நாங்கள் விமர்சிப்பதால் எங்கள் பத்திரிகை சந்திக்கும் வழக்குகளுக்கு அளவே கிடையாது. அதனால் இந்தக் கொலைக்கு யார் காரணம் என்பதை எங்களால் யூகிக்க முடியவில்லை...'' என்று அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் வருத்தத்துடன் சொல்கிறார்.
ஊர் எதுவானாலும், நாடு எதுவானாலும் அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவர்கள் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள்.

********************************************************************************************

0 comments:

Post a Comment

Cricket

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010