********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

சென்ற வார செய்திகள் (17 செப்டம்பர் 2011)

Saturday, September 17, 2011

மிஸ்டர் கழுகு: சுவாமி போட்ட ப.சி. வலை!

ழுகார் வந்ததுமே... ''டெல்லி...'' என்றோம் எதிர்பார்ப்புடன்!
 ''சற்றே பொறுத்திரும்!'' எனக்  கை அமர்த்திவிட்டு, ''ஒரு தி.மு.க. தொண் டர் இன்று அதிகாலையில் என்னிடம் சொல்லி வருத்தப்பட்ட ஒரு சம்பவத்தைச் சொல்லிவிட்டு, மற்ற விஷயங்களுக்குப் போகலாம்!'' என்று ஆரம்பித்தார்.

''புதுச்சேரியில் பெரும் தொழில் அதிபர் களில் ஒருவர் கேசவன். மணக்குள விநாயகர் என்ற பெயரில் ஏராளமான கல்வி நிறுவனங்கள் அவருக்கு உண்டு. பிள்ளைச் சாவடி கேசவன் என்றால்தான், அவரைத்
தெரியும். அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருந்தவர். தி.மு.க-வின் முக்கியப் பிரமுகர் பலருக்கும் புதுச்சேரிப் பக்கம் போனால், ரிசர்வ் பேங்க் அவர்தான். அண்ணாமலை ஹோட்டலில் அவர் பெயரைச் சொல்லி எவ்வளவும் அனுபவித்துக்கொள்ளலாம். அப்படிப்பட்ட மனிதர் புற்றுநோய் காரணமாக கடந்த வாரத்தில் இறந்துபோனார். புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் ஜானகிராமன் அங்கேயே வந்து உட்கார்ந்துவிட்டார். இன்னாள் முதல்வர் ரங்கசாமி மூன்று முறை அவரது வீட்டுக்கு வந்து அஞ்சலி செலுத்திச் சென்றார். இந்தத் தகவல் முன்னாள் அமைச்சர் துரைமுருகனுக்கு முதலில் சொல்லப்பட்டது. ஏனென்றால், அவர்தான் கேசவனுக்கு ஆத்மார்த்த நண்பர். அவரால் பல உதவிகளையும் பெற்றவர். 'கடலூரில் இருக்கிற பொன்முடியைப் பார்த்துட்டு, நான் அங்கே வர்றேன்’ என்று துரைமுருகன் சொன்னாராம். அவருடன் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனும், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவும் அப்போது புதுவையில்தான் இருந்துள்ளார்கள். அதே அண்ணாமலை ஹோட்டலில் தங்கி இளைப்பாறிவிட்டு கடலூர் சென்றார்கள். அவர்கள் வருவார்கள் எனக் கேசவனின் உடல் மூன்று மணி நேரம் வைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானவர்கள் காத்திருந் தார்கள். ஆனால் கடைசி நேரத்தில், 'நாங்க அவசரமாக சென்னைக்குப் போகணும்.’ என்று தகவல் மட்டும் சொல்லி அனுப்பிவிட்டார்கள். பலத்த ஏமாற்றத்துடன் உடல் எடுக்கப்பட்டது. சாலைக்கு அருகிலேயே கேசவன் வீடு என்பதால், புதுச்சேரி சாலையின் ஒரு பக்கம் கேசவனின் இறுதி ஊர்வலம் போய்க்கொண்டு இருந்தபோது, இன்னொரு பக்கமாக இவர்கள் மூவரும் பயணம் போய்க்கொண்டு இருந்தார்களாம். இதைச் சொன்ன தொண்டன், 'ஜெகத்தும் வேலுவும் இன்னொரு கட்சியில் இருந்து வந்தவர்கள். ஆனால், மாணவர் காலத்தில் இருந்து தி.மு.க-வில் இருந்த துரைமுருகன் இப்படி நடந்து கொள்ளலாமா? ஒரு பணக்காரத் தி.மு.க. பிரமுகருக்கே இந்த நிலைமை என்றால், ஏழைத் தொண்டன் செத்தால் எப்படி மதிப்பார்கள்?’ என்று குமுறிவிட்டார் தொண்டர்!'' என்று நிறுத்திய கழுகார், சிறிது இடைவெளிவிட்டு மறுபடியும் தொடங்கினார்...

''காங்கிரஸ் கட்சிக்கு கருணாநிதி இப்படி ஒரு ஷாக் கொடுப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. 'உள்ளாட்சித் தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை’ என்று திடீரென்று கருணாநிதி அறிக்கை வெளி வந்ததை காங்கிரஸ் தலைவர்கள் 'உண்மையா... உண்மையா?’ என்று கேட்டுக்கொண்டு இருந்தார்கள். 'எல்லாவற்றுக்கும் கட்சியின் பொதுக் குழு, செயற்குழு கூடி முடிவெடுக்கும்’ என்று சொல்லக்கூடிய கருணாநிதி, இந்தப் பெரிய முடிவை எப்படித் தன்னிச்சையாக வெளியிட்டார் என்பதையும் யோசிக்கத்தான் வேண்டி உள்ளது. ' ஒருவேளை சொல்லக்கூடிய அளவுக்கு வெற்றி கிடைத்தால் அந்தப் பெருமை காங்கிரஸுக்கு எதற்குப் போகவேண்டும்? ஒருவேளை தோல்வியைத் தழுவினால்..தனியாக நின்றது தி.மு.க. அதனால் தோற்றது.’ என்ற பிம்பத்தை உருவாக்க நினைக்கிறாராம் கருணாநிதி. அதனால்தான், இப்படி ஒரு முடிவு என்று சொல்கிறது காங்கிரஸ் தரப்பு. டெல்லி காங்கிரஸ் தலைமை மீதான கோபமே இதற்குக் காரணம் என்று சொல்கிறார்கள் தி.மு.க-வில்...''
''என்னவாம்?''
''ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் டெல்லி உரிய ஒத்துழைப்புகள் தரவில்லை என்பது தி.மு.க. தலைமை யின் வருத்தம். கருணாநிதிக்கு இப்போது ஒரே சிந்தனை, கனிமொழி வெளியில் வர வேண்டும் என்பதுதான். அதற்கான முஸ்தீபுகளைச் செய்ய காங்கிரஸ் முயற்சிக்கவில்லை என்றும் நினைக்கிறார். இதை கருணாநிதி சொன்னபோது, அழகிரி ஏற்றுக் கொண்டதாகவும் ஸ்டாலின் மட்டும் கருத்து வேறுபட்ட தாகவும் சொல்கிறார்கள். 'இங்கேயும் ஆட்சியை இழந்து டெல்லி காங்கிரஸ் நட்பையும் உதறணுமா?’ என்ற ரீதியில் யோசிக்கிறாராம் ஸ்டாலின்.''
''அவர் லண்டனில் இருந்து திரும்பிவிட்டாரே?''
''ஆம்! சட்டசபை கூட்டத்தொடர் முடிந்ததும் இவரும் லண்டனில் இருந்து வந்துவிட்டார் என்று தி.மு.க-விலேயே கிண்டல் அடிக்கிறார்கள். சென்னைக்கு வந்ததும் மறுநாளே மதுரைக்குச் சென்றார். அங்கு இருந்து பரமக்குடிக்குச் செல்லவும் திட்டமிட்டார். ஸ்டாலின் மதுரைக்கு வரும்போது, அழகிரி மதுரையில் இருக்க முடியாது அல்லவா? அதனால், அவர் வேறு ஊருக்குக் கிளம்பிப் போய்விட்டார். ஸ்டாலினைச் சந்திக்கலாமா கூடாதா என்று கட்சிப் பிரமுகர்களுக்கு மத்தியில் பெரும் குழப்பம். அந்த அளவுக்கு மீண்டும் மோதல் முற்றிக்கொண்டு இருக்கிறது...'' என்ற கழுகாரிடம், ''இப்போதாவது டெல்லி கதைக்கு வாரும்!'' என்றோம்!
''டெல்லிக் காட்சிகள் நிறைய மாறிக் கொண்டு இருக்கின்றன.கவனமாகக் கேளும். தயாநிதி மாறனை மையம் கொண்டு செப்டம்பர் முதல் வாரம் புயல் வீசும் என்று சொல்லி இருந்தேன் அல்லவா? தயாநிதி மாறன், 'ஸ்டெர்லிங்’ சிவசங்கரன், 'மேக்சிஸ்’ அனந்தகிருஷ்ணன் என்று பெருந்தலைகள் உள்ள சமாசாரம் இது என்பதால் கவனத்துடன் கையாள்கிறது சி.பி.ஐ. ஏர்செல் நிறுவனத்தை மேக்சிஸ் வசம் ஒப்படைக்க தயாநிதி கட்டாயப்படுத்தினாரா என்பதுதான் இதன் மையப்புள்ளி. மேக்சிஸ் நிறுவனத்தின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான ரால்ப் மார்ஷலுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி வைத்தது. அவரும் 12-ம் தேதி டெல்லிக்கு வந்தார். சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு முன்னால் ஆஜரானார். அவர் எந்த மாதிரியான வாக்குமூலங்களைக் கொடுத்துள்ளார் என்பதை அதிகாரிகள் வெளியே இன்னமும் அவிழ்க்கவில்லை. இதைத் தொடர்ந்து 14-ம்தேதி தயாநிதி மாறனை வரவழைத்தார்கள் சி.பி.ஐ. அதிகாரிகள். 'ஏர்செல் நிறுவனத்தை மேக்சிஸ் வாங்கியதில் என்னுடைய பங்கு எதுவும் இல்லை’ என்று அப்போது தயாநிதிமாறன் மறுத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் சுமார் 5 மணிநேரம் இந்த விசாரணை நடந்துள்ளது. 'இந்த விஷயத்தில் நாங்கள் ஒரு தெளிவான முடிவுக்கு வந்துவிட்டோம்’ என்று இப்போது அதிகாரிகள் சொல்ல ஆரம்பித்துள்ளார்கள்!''
''தயாநிதிமாறன் விவகாரத்தில் எங்களுக்கு ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என்று முதலில் சி.பி.ஐ. சொன்னதே?''
''நாங்கள் அப்படிச் சொல்லவே இல்லை, மீடியா தான் திருத்திச் சொல்லிவிட்டது என்று சி.பி.ஐ. தரப்பு வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் சுப்ரீம் கோர்ட்டில் சொல்லிவிட்டாரே! தங்கள் மீது எந்தப் பழியும் வந்துவிடக்கூடாது என்று சி.பி.ஐ. தனது கரத்தை இன்னும் இறுக்கிப் பிடிக்க ஆரம்பித்துள்ளது. இப்போது நான் உம்மிடம் பேசிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் கூட பாட்டியாலா கோர்ட்டில் சி.பி.ஐ. வழக்கறிஞர் யு.யு.லலித், தனது தரப்பு வாதங்களைக் கெட்டியாக வைத்துக் கொண்டுதான் இருக்கிறாராம். குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது செப்டம்பர் 15-ம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யத் தீர்மானிக்கப்பட்டது. அன்று காலையிலேயே புது மனுவுடன் சுப்பிரமணியன் சுவாமி என்ட்ரீ கொடுத்துவிட்டார். 'ப.சிதம்பரத்தையும் இதில் சேர்க்க வேண்டும்’ என்பதுதான் அவரது அஜென்டா. சுவாமியின் மனு ஏற்கப்பட்டு அதுவும் 26-ம் தேதி விசாரணைக்கு வரப்போகிறது. இனி மீடியாக்களிடம் இருந்து ப.சி-யும் தப்ப முடியாது!''
''அடுத்து நடந்ததையும் சொல்லும்!''
''டிராய் கொடுத்த அறிக்கையை எதிர்த்து சி.பி.ஐ. தனது வலுவான வாதங்களை வைத்து வருகிறது. டிராய் கொடுத்த அறிக்கையை தங்களுக்கு ஆதாரமாக வைத்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் வாதிட்டு வருகிறார்கள். இந்த வாரம் முழுக்க இதில் போய்விடும்! இதைக் கவனிப்பதற்காக வந்த டெல்லித் தொலைக்காட்சி நிருபர்  ஒருவரைப் பார்த்து, 'எங்களை எல்லாம் என்கொயரிக்கு அழைக்கிறதுக்கு முன்னாடியே காட்டினீங்களே! ஒருத்தர்ட்ட என்கொயரி நடந்து முடிஞ்சப்பிறகும் காட்ட மாட்டேன்றீங்களே!’ என்று கிண்டல் கலந்து சீறினாராம் கனிமொழி.வழக்கைத் தாண்டிய குடும்ப சுவாரஸ்யங்கள்தான் பாட்டியாலாவில் அதிகம் நடக்கிறது. டெல்லி பக்கமாக காதை கூர்தீட்டி வையும்!'' என்று கட்டளை போட்டபடி பறந்தார் கழுகார்.
படம்: கே.கார்த்திகேயன்
 
கேபிள் பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டது!
''சன் டி.வி. இருந்தா கேபிள் கொடு... இல்லைன்னா கேபிள் கனெக்ஷனே வேண்டாம்!'' - இப்படித் தமிழகம் முழுக்க மக்கள் மத்தியில் எதிர்ப்பு அலைகள் கிளம்ப... உளவுத் துறை மூலம் விஷயம் முதல்வரின் கவனத்துக்குப் போனது. 'கேபிள் பிரச்னைக்கு உடனடியாகத் தீர்வு காணவில்லை என்றால், அது உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சிக்குப் பாதகமாக அமையும்.’ என்று கூடுதலாக ஒரு தகவலையும் முதல்வரிடம் சொல்லி இருக்கிறார்கள்.
கேபிள் கார்ப்பரேஷன் சேர்மனை அழைத்த முதல்வர், 'கட்டண சேனல்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அரசு கேபிளில் எல்லா சேனல்களும் வர ஏற்பாடு பண்ணுங்க!’ என்றார். அதன் பிறகே, பேச்சுவார்த்தைக் குழுக்கள் அமைக்கப்பட்டன. கட்டண சேனல்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, அந்தக் குழு பேசத் தொடங்கிவிட்டது. முதலில், சோனி நிறுவனத்துடன் நடந்த பேச்சுவார்த்தை நல்லபடியாக முடிந்தது. அரசு கேபிளுடன் இணைந்து செயல்பட அவர்களுக்கு சம்மதம்.  பிறகு ஸ்டார் மற்றும் சன் குழுமத்தைச் சேர்ந்தவர்கள் பேச்சுவார்த்தைக்கு வந்தனர். ஆனால், அது  இன்னும் இழுபறியாகவே  இருக்கிறது. சேனல் தர சம்மதம்தான்... ஆனால், தொகை விஷயத்தில்தான் இழுபறி என்கிறது கோட்டை வட்டாரம்!
''வரும் 27-ம் தேதி கன்னியாகுமரியில் கேபிள் டி.வி. ஆபரேட்டர்களின் பொதுக் குழுக் கூட்டத்தை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். அதில் பல முக்கியமான முடிவுகளையும் எடுக்கப்போகிறோம்!'' என்று சகிலன் தரப்பில் பேச்சு. இதற்கு மத்தியில் டிடிஹெச் வசதிக்கு 30 சதவிகித வரி போட்டுள்ளது தமிழக அரசு. இது எதற்கான முஸ்தீபு என்றும் பேச ஆரம்பித்துள்ளார்கள் விவரமறிந்தவர்கள்.
விமான விவகாரத்தில் வி.ஐ.பி.!
பயணிகள் விமான நிறுவனம் அது. ஏற்கெனவே, அந்த நிறுவனம் சி.பி.ஐ-யின் கண்காணிப்பில் சிக்கி இருந்தது. தொடர்ந்து அந்த நிறுவனத்துக்கு இன்னொரு சிக்கல். எஸ்.பி.ஐ. வங்கியில் வாங்கிய  600 கோடி வாராக் கடனாக மாறியதைத் தொடர்ந்து, வங்கியின் அதிகாரிகளுக்கு சி.பி.ஐ. கிடுக்கிப்பிடி போட்டுள்ளது. கடந்த 13, 14, 15 ஆகிய தேதிகளில், சி.பி.ஐ. டி.எஸ்.பி. தலைமையிலான ஒரு டீம், சென்னை எக்மோரில் இருக்கும் அந்த வங்கியின் 'ஸ்ட்ரெஸ் அசெட் மேனேஜ்மென்ட்’ அலுவலகத்தில் வைத்து விசாரித்து வருகிறது. விசாரணையில் வங்கி அதிகாரிகள், 'அவர் சொல்லித்தான் எவ்வித செக்யூரிட்டியும் வாங்காமல் கடனைக் கொடுத்தோம். நாங்கள் என்ன செய்ய முடியும்?’ என்று சொன்னார்களாம். அவர் என்பது ஒரு மத்திய அமைச்சரை!
மத்திய அமைச்சருக்கு சிக்கல் வர வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் சி.பி.ஐ. வட்டாரத்தில்!
ஜெ.மீது 'டிராஃபிக்’ வழக்கு
'பொதுநல வழக்கு மன்னன்' டிராஃபிக் ராமசாமி சார்பில் அவரது வக்கீல் என்.ராஜாராம் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ஒரு வழக்கில், 'முதல்வர் ஜெயலலிதா மீது குற்றம் சாட்டி கடந்த 14 வருடங்களாக நடக்கும் சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூரு நீதிமன்றத்தில் க்ளைமாக்ஸை எட்டிவிட்டது. விரைவில் ஜெயலலிதா நேரில் ஆஜராக போகிறார். அப்போது, அவர் சாதாரண பிரஜையாகத்தான் நீதிமன்றத்தில் நிற்க வேண்டும். தமிழக முதல்வராக இருக்கக்கூடாது. எனவே, அவர் இப்போதே பதவி விலக வேண்டும். தீர்ப்பு அவருக்கு சாதகமாக வந்தால், மீண்டும் முதல்வர் பதவியில் அமரலாம்’ என்று சொல்லி இருக்கிறார்.
கண் கலங்கிய சசி
கடந்த வாரத்தில் இரண்டு நாட்கள் சசிகலா மன்னார்குடியில் உள்ள திவாகர் வீட்டில் தங்கி இருந்தாராம். ஊரில் இருந்தபோது, அவரது கண்கள் கலங்கி, நீர் வடிந்தபடியே காணப்பட்டதாம். பல வருடங்களுக்கு முன்பு, சசிகலா சென்ற கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளான போது, கண்ணில் காயப்பட்டார். அப்போது தொடங்கிய கண் பிரச்னை இப்போதும் தொடர்கிறதாம்.
இலவச லேப்டாப், மின்விசிறி, கிரைண்டர், மிக்ஸி, கறவை மாடுகள் என்று தேர்தல் அறிக்கையில் சொன்ன திட்டங்களை செப்டம்பர் 15-ம் தேதி திருவள்ளுரில் நடந்த அரசு விழாவில் தொடங்கி வைத்து இருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா.  எளிமையாக நடந்த இந்த விழாவில் பேசிய ஜெயலலிதா,  'தி.மு.க. ஆட்சியில் சட்டசபையில் வெளியிட்ட கொள்கை விளக்கக் குறிப்பில் இருந்த விஷயங்களை அப்படியே காப்பி அடித்து இப்போதைய கொள்கை விளக்கக் குறிப்பிலும் எழுதியிருக்கிறார்கள்’ கருணாநிதி வெளியிட்ட அறிக்கைக்கு பதிலடியாக, ''எனது முந்தைய ஆட்சிக் காலத்தில் 2005 - 2006-ம் ஆண்டு கொள்கை விளக்கக் குறிப்பில் இருந்த விஷயங்களைத்தான் அப்படியே ஈயடிச்சான் காப்பி அடித்தார் கருணாநிதி. வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக் கொள்வது கருணாநிதிக்கு வாடிக்கை!'' என்று சொல்லி பஞ்ச் வைத்தார், ஜெயலலிதா.
**********************************************************************************
கழுகார் பதில்கள்

என்.சண்முகம், சேலம்-1.
 டெல்லி உயர் நீதிமன்ற வளாகத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இருந்தால், குண்டு வெடிப்பு சம்பவம் தவிர்க்கப்பட்டு இருக்கும் என்று கருத்துள்ளதே?
அசம்பாவிதம் தடுக்கப்பட்டு இருக்கலாம்!
கண்காணிப்பு கேமரா மற்றும் ஸ்கேனர் இயந் திரங்கள் பொருத்தப்பட வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்ற பார் கவுன்சில் கோரிக்கை விடுத்து இருந்ததாம். ஏல நடைமுறையில் ஏற்பட்ட தாமதம் காரணமாக அந்தக் கருவிகள் இன்னமும் வந்து சேரவில்லை. டெல்லி போலீஸும் தங்களுக்குத் தேவையான சி.சி.டி.வி. கேமராக்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதை முடிவெடுக்க முடியாமல் நாட்களைக் கடத்தியது. இந்தக் காலதாமதமும் தான் இத்தனை உயிர்ப் பலிகளுக்குக் காரணம்!
ஏற்கெனவே மே 25-ம் தேதி இதே வளாகத்தில் குண்டு வெடித்தது. இப்போது இரண்டாம் முறை. 'உலகில் எங்குமே பயங்கரவாதிகள் ஒரே இடத்தை இரு முறை குறிவைத்துத் தாக்கியது இல்லை. இது இந்தியப் பாதுகாப்பு அமைப்பில் இருக்கும் படுகேவலமான கேலிக்கூத்து’ என்று டெல்லிப் பத்திரிகையாளர் ஒருவர் எழுதி உள்ளார். ஒரே இடத்தில் எத்தனை தடவை குண்டு வைத்தாலும் இவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள மாட்டார்கள் என்பது எல்லா பயங்கரவாத அமைப்புகளுக்கும் தெரிந்திருக்கிறது.
பிரதமரும் உள்துறை அமைச்சரும்  கணக்கில் கெட்டிக்காரர்களாக இருக்கலாம், ஆனால், காவலுக்குக் கெட்டிக்காரர்கள் இல்லை!
 மு.ரா.பாலாஜி, கோலார்தங்கவயல்.
'திருக்குறளின் நல்ல கருத்தைக் கேட்டுவிட்டு சபையைவிட்டு வெளியே வந்துவிடுகிறோம்’ என்கிறார்களே தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள்?
திருக்குறளின் நல்ல கருத்துகளைக் கேட்டு நடந்திருந்தால், எதிர்க் கட்சியாகும் நிலைமையே வந்திருக்காதே!
 வண்ணை கணேசன், சென்னை-110.
'மதுவிலக்கு கொண்டுவருவதுபற்றியும் மது விற்பனையைத் தடை செய்ய வேண்டும் என்றும் வாய் கிழியப் பேசுபவர்கள்தான், கள்ளச் சாராயம் காய்ச்சுகிறார்கள்’ என்று ஜெயலலிதா கூறி இருக்கிறாரே! யார் என்று தெரிகிறதா?
இதில் ரகசியம் என்ன இருக்கிறது? ராமதாஸைத்தான் சொல்கிறார் ஜெயலலிதா. இதே வார்த்தைகளைக் கருணாநிதி சொல்லி இருந்தால் ராமதாஸ் என்ன கர்ஜனை செய்திருப்பார்? ஜெயலலிதா சொன்னதைக் கேட்டும்... கேளாதவர் மாதிரி ஆகிவிட்டார். டாக்டரிடம்தான் எவ்வளவு மாற்றம்?
 ரேவதி ப்ரியன், ஈரோடு-1.
எதிர்த்துப் பேசிப் பதில் அளிக்க... எந்த எதிர்க் கட்சியும் இல்லாத சட்டசபை நிகழ்ச்சிகள்பற்றி..?
'எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது’ என்கிறார் முதல்வர். அவர் இதைத்தான் எதிர்பார்த்தார். அதுவே நடக்கிறது!
 பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.
இரும்பு மண்வெட்டி 'ஸ்டாலின்’, வெள்ளி மண்வெட்டி 'அழகிரி’, தங்க மண்வெட்டி 'கனிமொழி’... போன்ற கதைகளை அமைச்சர் பேசியது சரியா?
அமைச்சர் ந.சுப்பிரமணியம் தனது ஆதிதிராவிடர் நலத் துறையில் செயல்படுத்த எத்தனையோ ஆக்கபூர்வமான திட்டங்கள் இருக்கின்றன. இதுபோன்ற வெட்டிக் கதைகளை விடுத்து உருப்படியான காரியங்களில் ஈடுபடு வது மட்டுமே... அவரின் பொது வாழ்வுக்கு நல்லது!
 எஸ்.ஏ.காதர், விழுப்புரம்.
ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்து சாதித்தது என்ன?
அதை அவர்தான் சொல்லவேண்டும். ஆனால், அவர்தான் எதையும் வெளிப்படையாகப் பேசுவதே இல்லையே!
பேரறிவாளன், சாந்தன், முருகன் விஷயத்திலும் அவர் மௌனமே பதில். தூக்கு போட தேதி குறித்த செய்தியைக் கேள்விப் பட்டதும் ப.சிதம்பரத்துக்கு வைகோ போன் செய்திருக்கிறார். லைனுக்கு வரவில்லை ப.சி. காலை முதல் மாலை வரை பல தடவை முயற்சித்தும் ப.சி. பேசவில்லையாம். 'செய்தி உண்மையா? இல்லையா? என்பதையாவது கேட்டுச் சொல்லுங்கள்’ என்று உதவியாள ரிடம் சொல்ல... அதற்கு மட்டும் 'உண்மைதான்’ என்று பதில் சொல்லச் சொல்லி இருக்கிறார். இதை எனக்குச் சொன்ன ம.தி.மு.க. பிரமுகர் ஒருவர், 'புலிகளை ஆதரித்ததற்காக பொடாவில் கைதாகி சிறையில் இருந்து வெளியே வந்த வைகோவை, சிவகங்கை தொகுதி பிரசாரத்துக்கு அழைத்துச் செல்லக் காத்திருந்தவரும் இதே சிதம்பரம்தான்’ என்றார்.
அரசியலும் பதவிகளும்தான் மனிதர்களின் குணங் களைத் தீர்மானிக்கின்றன!
 சிங்கை டிஸார், விக்கிரமசிங்கபுரம்.
ஓட்டுக்குப் பணம் குற்றம்... ஓட்டுக்குப் பின் இலவசம் குற்றம் இல்லையா?
அது அதைவிடப் பெரிய குற்றம்தான்! ஓட்டுக்கு பணம், இரவில் தரப்படுகிறது. இலவசங் கள், பட்டப்பகலில் கிடைக்கின்றன. அது ஒரு கட்சியின், தனி மனிதர்களின் பணம். ஆனால் இலவசங்கள்... அரசாங்கத்தின், அனைத்து மக்க ளின் பணம்!
ஓட்டுக்கு பணம் வாங்குவதற்குச் சிலர் வெட்கப்படுகிறார்கள். ஆனால், டி.வி., மிக்ஸி கிடைத்ததைப் பெருமையாக நினைக்கிறார்கள். இரண்டுமே பாவங்கள்தான்!
 சுந்தரேசன், ஸ்ரீவைகுண்டம்.
தொடர்ந்து என்னைக் கவலைகள் வாட்டுகிறதே?
'கவலைகள் - பறவைகள். அவை உங்கள் தலைக்கு மேலே பறப்பதை உங்களால் தடுக்க முடியாது. ஆனால், உங்கள் தலையின் மேல் அவை கூடு கட்டவிடாமல் தடுக்க முடியும்’ என்கிறது சீனப் பழமொழி!
என்.சண்முகம், திருவண்ணாமலை.
இன்றைய நிலையில் துணிச்சலான தமிழகத் தலைவர் யார்?
தங்கபாலுதான்!
'நானும் எவ்வளவு நாள்தான் தலைவராவே நடிக்கிறது?’ எனத் தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டும், எவ்வளவு தைரியமான 'தலைவராக’ வலம் வருகிறார்! அவரைவிடத் துணிச்சலானவர் உண்டா சொல்லுங்கள்?
 விளக்கம்:
குரானில் இருப்பதாக, 'ஒவ்வொரு திராட்சைக் கனியிலும் ஒரு பேய் உள்ளது’ என்ற ஒரு வரியை 14.09.11 தேதியிட்ட இதழில் மேற்கோள் காட்டி இருந்தோம். அது குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுச் செயலாளர் ஆர்.ரஹ்மத் துல்லாஹ் நமக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். 'இப்படி ஒரு கருத்து குரானில் இல்லை. மதுவை திருக்குர் ஆன் முழுமையாகத் தடை செய்கிறது. அது மனிதனுக்குக் கேடு விளைவிக்கும் பொருள் என்றும் கூறுகிறது. பேய், பிசாசு போன்ற மூட நம்பிக்கைகளை இஸ்லாம் கடுமையாக எதிர்க் கிறது. எனவே, இதுபோன்ற தவறான கருத்தை விதைக்க வேண்டாம்’ என்று அக்கடிதத் தில் கூறப் பட்டுள்ளது.
குரானில் இதுபோன்ற வரி இருப்பதாக ஒரு புத்தகத்தில் இருந்த மேற்கோளைத்தான் பயன் படுத்தினோம். மற்றபடி எந்த உள்நோக்கமும் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்!

தேவை நிரந்தரக் கண்காணிப்பு!

டந்த 2001-ம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த இரட்டை கோபுரத் தாக்குதல் சம்பவம், உலகையே உலுக்கியது. அதன் பின்னர் சுதாரித்துக்கொண்ட அமெரிக்கா, பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரித்தது. அதனால், இன்று வரை அமெரிக்காவை தாக்குவதற்கு தீவிரவாதிகள் எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்டும், மிகப் பெரிய அளவிலான தாக்குதல் எதுவுமே நடத்த முடியவில்லை.
ஆனால் நம் இந்தியாவில், காஷ்மீர் தொடங்கி மும்பை, டெல்லி, அகமதாபாத், ஹைதராபாத் என்று குண்டு வெடிப்புகள் தொடர் கதை போன்று நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்ற சில நாட்கள் மட்டும் அந்த இடத்தில் காவல் பலப்படுத்தப்படும். அதன் பின் மீண்டும், 'பழைய குருடி கதவைத் திறடி’ கதைதான். நாட்டின் பாதுகாப்பில் காட்டப்படும் அலட்சியமே, தீவிரவாதிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கிறது.
தாக்குதல் நடந்தவுடன் விழித்துக்கொள்வதும், அதன் பின்னர் அடுத்த தாக்குதல் வரை தூங்கி வழிவதையும் அரசாங்கம் இனியாவது கைவிட வேண்டும். முக்கிய நகரங் களில், முக்கிய இடங்களில் எல்லாம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். மக்கள் அதிகமாகப் புழங்கும் பஸ், ரயில், விமான நிலையங்களில் கூடுதல் கண்காணிப்பு தேவை. 'இனி ஒரு குண்டுவெடிப்பு இந்தியாவில் நடத்தவிட மாட்டோம்’ என்ற உறுதியுடன் அரசும் அதிகாரிகளும் செயல்பட்டால் மட்டுமே... நம் நாட்டுக்கு விடிவு காலம்!
வி.பி.மகராசி, வள்ளியூர்.

விமானத் தயாரிப்பு தமிழனின் அகால மரணம்!

காஞ்சி சோகம்!
ரண்டாயிரம் பேருக்கு மேல் பயணிக்கும் 787 என்ற பயணிகள் விமானத்தை சமீபத்தில் அறிமுகம் செய்து, மார்தட்டிக் கொண்டது அமெரிக்கா. பல நாடுகளைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் சேர்ந்து உருவாக்கிய இந்த விமான வடிவமைப்பில், கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தில் முக்கியப் பங்கு ஆற்றியவர் ஒரு தமிழர். அவரது சாதனைக்காக அடுத்த மாதம் பாராட்டு விழா நடத்தத் திட்டம் இடப்பட்டு இருந்த நிலையில்... அவர் இன்று நம்மோடு இல்லை.
அவர் பெயர் மோகன்தாஸ் காந்தி சத்யசீலன்.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மின்பொறியாளர் சத்யசீலன் - அரசு மருத்துவமனை தலைமை செவிலியர் சவுதாமினி தம்பதியின் மூத்த மகன்தான் மோகன்தாஸ் காந்தி. கம்ப்யூட்டர் அறிவியலில் இளங்கலை படித்துவிட்டு, பெங்களுரூவில் சில ஆண்டுகள் வேலை செய்தார். அப்போதுதான், அமெரிக்காவின் பிரபல விமானத் தயாரிப்பு நிறுவனத்தில் கணிப்பொறி வல்லுனராகப் பணியாற்றும் வாய்ப்பு மோகன்தாஸுக்குக் கிடைத்தது. அந்த நிறுவனத்தில் படிப்படியாக முன்னேறி முக்கியப் பதவிக்கு வந்த மோகன்தாஸ், புதிதாக வடிவமைக்கத் திட்டமிட்டிருந்த 737 விமான வடிவமைப்புக்கு தலைமைப் பொறுப்பு ஏற்றார். இரண்டு ஆண்டுகள் கடுமையாக உழைத்து கடந்த ஜூலை மாதம் அந்த விமானம் விண்ணில் பறக்கவிடப்பட்டது. அதிகம் பேர் பயணிக்கும் விமானத்தை வடிவமைத்த பெருமையை அந்த நிறுவனத்துக்கு பெற்றுத் தந்தமைக்காக அவருக்கும் அவருடைய குழுவுக்கும் வரும் செப்டம்பர் மாதம் பாராட்டு விழா நடத்தத் திட்டம் இருந்தது. இந்த நேரத்தில்தான் ஒரு கோரவிபத்தில் சிக்கி உயிர் இழந்துவிட்டார் மோகன்தாஸ்.
கம்ப்யூட்டர் மீது மோகனுக்குக் காதல் இருந்தாலும் இயற்கையை ரசிப்பது அவரது முக்கியப் பொழுதுபோக்கு. விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் கடற்கரை, காடுகள், ஆறுகள் என நேரம் போவதே தெரியாமல் சுற்றுவார். அந்த இயற்கையின் காதலனுக்கு இயற்கையே எமன் ஆனதுதான் சோகம்.
கடந்த 9-ம் தேதி மாலை அமெரிக்காவில் அவரது அலுவலகத்தின் அருகில் இருந்த கடற்கரைக்கு நண்பருடன் சென்று இருக்கிறார். சூரியன் மறையும் காட்சியை ரசித்துப் படம் பிடித்தவேளையில், அந்த வழியாக படுவேகமாக வந்த மினி ட்ரக் வண்டி மோகன் மீது மோதியது. தூக்கி வீசப்பட்ட மோகனுக்கு தலையில் பலத்த அடி. ரத்தம் அதிகமாக வெளியேறி மயங்கிய அவரை, ஹெலிகாப்டரில் ஏற்றி மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்று உள்ளனர். ஆனால்... அதற்குள் காலன் முந்தி விட்டான்.
அவர் பணியாற்றிய நிறுவனம், வி.ஜ.பி-களுக்குத் தரும் தங்கள் நிறுவனத்தின் அடையாள பேட்ஜை மோகன் உடலுக்கு அணிவித்து சோகத்தையும் மரியாதையையும் வெளிப்படுத்தி இருக்கிறது. அமெரிக்காவில் இருந்து விமானத்தில் கொண்டு வரப்பட்ட மோகன்தாஸ் உடல், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் எதிரில் வானவில் நகரில் உள்ள அவரது வீட்டுக்கு கடந்த ஞாயிறு அன்று வந்து சேர்ந்தது.
மோகனின் பெரியப்பா மகன் கண்ணனிடம் பேசினோம். ''சிரிச்ச முகத்தோட இருப்பான். அதனாலயே, 'அழகர் குழந்தை’ன்னு செல்லமா கூப்பிடுவோம். எதுக்கும் கலங்க மாட்டான். எனக்குத் தெரிஞ்சு அவன் அடம்பிடிச்சது கம்ப்யூட்டர் வாங்க மட்டும்தான். ஆறு வருஷத்துக்கு முன்னால அமெரிக்கா போனான். எப்ப ஊருக்கு வந்தாலும் சொந்தக்காரங்க ஒருத்தரை விடாம தேடிப்போய் பார்த்து நலம் விசாரிப்பான். திரும்பப் போகும்போதும் எல்லாருக்கும் மறக்காம போன் செஞ்சு சொல்லிட்டுத்தான் போவான். இப்போ யாருகிட்டேயும் சொல்லாமப் போயிட்டானே...'' என்று கதறிய கண்ணனுக்கு அதன் பிறகு பேச முடியவில்லை.
மோகன்தாஸின் தந்தை சத்யசீலன் மிகவும் உடைந்து போன மனநிலையில் பேசினார். ''மோகன்தாஸ் காந்தி என்ற பேருக்கு ஏத்த மாதிரியே பொய் பேச மாட்டான். 30 வயசு ஆகிடுச்சு, பொண்ணு பார்க்கணும்னு சொன்னதும் சரின்னான். அங்கேயே யாரையாவது பார்த்து செட்டிலாக வேண்டியதுதானேன்னு கிண்டலா கேட்டதுக்கு வெட்கப்பட்டான். ஆறு மாசமா பொண்ணு தேடி, போன மாசம்தான் ஒரு ஜாதகம் அமைஞ்சது. பொண்ணு போட்டோவை மெயில்ல அனுப்புறேன்னு சொன்னதுக்கு நீயும் அம்மாவும் பார்த்தாப் போதும்னு சொன்னான். விமானத்துல புதுசா புதுசா கண்டுபிடிக்கணும்னு சொல்லிட்டே இருப்பான். எப்படியெல்லாம் வாழ்வான்னு கனவு கண்டேன்... இப்படி ஏமாத்திட்டானே!'' என்று கண்ணீர் விட்டார்.
விமானத் தயாரிப்பில் இன்னும் பல சாதனைகள் படைக்க வேண்டும் என ஆசைப்பட்ட ஒரு தமிழனின் கனவும் ஆசைகளும் அதற்குள் காற்றோடு காற்றாகக் கலந்து விட்டதே...

பந்தாடப்படும் மருத்துவ மாணவர்கள்!

புதுவை போராட்டம்
''சார்... நாங்க புதுச்சேரியில் இருந்து பேசுறோம். இங்கே இருக்கிற வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரியில் படிக்கிறோம். ஒரு பிரச்னை காரண மாக 150 மாணவர்களோட எதிர்காலமே கேள்விக் குறியாகி இருக்கிறது. நேரில் வரமுடியுமா?’ - இப்படி நமது ஜூ.வி. ஆக்ஷன் செல்லுக்கு (044-42890005) ஓர் அழைப்பு வந்ததும்... உடனே புறப்பட்டோம்.
நாம் அங்கு சென்ற சமயத்தில் மாணவர்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார்கள். என்ன தான் பிரச்னை? மருத்துவக் கல்லூரி மாணவர்களை சந்தித்தோம்.
''அரியூரில் இருக்கும் வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரியில இரண்டாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படிச்சிட்டு இருக்கோம். கல்லூரியில் போதிய உள்கட்டமைப்பு வசதி இல்லைன்னு சொல்லி, 2010-11 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்க மறுத்துட்டாங்க. கல்லூரி நிர்வாகமோ, 'விரைவில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் செஞ்சிடுறோம்’ என்று நீதிமன்றத்துக்குப் போனாங்க. நீதிமன்றம் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கொடுத்தது. எங்களுக்கு அட்மிஷன் கொடுத்துட்டாங்க. ஒரு வருஷம் முடிஞ்சும் மருத்துவக் கவுன்சில் சொன்ன உள்கட்ட மைப்பு வசதி எதையுமே கல்லூரி நிர்வாகம் செய்யவே இல்லை. கல்லூரியை மறு ஆய்வு செய்த மருத்துவக் கவுன்சில், எங்களை முதலாண்டுத் தேர்வு எழுத அனுமதிக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க. மறுபடியும் கல்லூரி சார்பாக இன்னொரு வழக்குப் போட்டு, எங்களைத் தேர்வு எழுதவெச்சாங்க. புதுவையில் இருக்கும் மற்ற ஏழு மருத்துவக் கல்லூரிக்கும் தேர்வு முடிவுகள் வந்துடுச்சு. ஆனா, எங்களுக்கு மட்டும் தேர்வு முடிவுகளை அறிவிக்காமல் நிறுத்திவைச்சு இருக் காங்க. கல்லூரி நிர்வாகம் சார்பாக பல்கலைக்கழகத்தில் கேட்டிருக்காங்க. 'நீதிமன்றத்தில் கேஸ் போட்டுத்தானே தேர்வு எழுதினீங்க. ரிசல்ட்டையும் அதன் மூலமே வாங்கிக்கோங்க’ன்னு சொல்லிட்டாங்களாம்.
நாங்க சேரும்போது கல்லூரியில் இப்படி ஒரு பிரச்னை இருப்பதே எங்களுக்குத் தெரியாது. தெரிஞ்சா இந்தப் பக்கமே வந்திருக்க மாட்டோம். கல்லூரி நிர்வாகம் எல்லாவற்றையும் மறைத்து அட்மிஷன் போட்டுட்டாங்க. இப்போ நாங்க முதலாம் ஆண்டு தேர்வு எழுதியதோடு அப்படியே இருக்கோம். மற்ற கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கிட்டாங்க.
நிர்வாகத்தைக் கேட்டால், 'வழக்கு நடக்கிறது... காத்திருங்க’ன்னு கூலா சொல்றாங்க. இப்படி ஒவ்வொரு வருஷமும் வழக்குப் போட்டுதான் நாங்க படிக்கணுமா... எல்லோருமே கடன் வாங்கித்தான் இங்கே சேர்ந்திருக்கோம். அரசு இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு ஒரு நல்ல முடிவை எடுக்கணும். அதுவரையில் நாங்கள் போராட்டத்தைக் கைவிடுவதாக இல்லை!'' என்றனர்.
மருத்துவக் கல்லூரி மாணவர் களுக்கு ஆதரவாக தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வரும் இந்திய மாணவர் சங்கத்தின் செயலாளர் ஆனந்திடம் பேசினோம். ''கல்லூரி நிர்வாகம் செஞ்ச தவறால் ஒட்டுமொத்த மாணவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி இருக்குது. மாணவர்களுக்கு ஸீட் ஒதுக்கிய அரசுக்கு இப்படி ஒரு பிரச்னை இருப்பது எப்படித் தெரியாமல் போனது? 'புதுவையை மிகச் சிறந்த கல்வி மாநிலமாக உருவாக்குவோம்’ன்னு ஒவ்வொரு இடத்திலும் பெருமையாக சொல்லிக் கொள் ளும் அரசாங்கம், உடனடியாக மாணவர்களின் பிரச்னையில் தலையிட்டு நல்ல முடிவை எடுக்கணும். அரசின் கவனக் குறைவினால்தான் இவ்வளவு பிரச்னைகளுமே வந்திருக்கு. மாணவர்களின் படிப்புக்கு உடனடியாக மாற்று ஏற்பாடு செய்யணும்; கல்லூரி நிர்வாகத்தின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கணும். இல்லைன்னா புதுவையில் உள்ள ஒட்டுமொத்தக் கல்லூரி மாணவர்களையும் திரட்டி நாங்கள் போராட்டத்தில் குதிப்போம்!'' என்று எச்சரித்தார்.
கல்லூரியின் துணை முதல்வர் ரத்னசாமியிடம் பேசியபோது, ''மாணவர்கள் வாழ்க்கைப் பிரச்னை என்பதால் நாங்களும் தேவையான முயற்சிக¬ளை எடுத்துக்கொண்டுதான் இருக்கோம். வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் இது சம்பந்தமாக வேறு எதுவும் சொல்வதற்கு இல்லை. கூடிய சீக்கிரமே நல்லது நடக்கும்!'' என்று மட்டும் சொன்னார்.
புதுவை அரசின் கல்வி அமைச்சர் கல்யாணசுந்தரத்திடம் இந்த விவகாரம் தொடர்பாகப் பேசினோம். ''நீங்க சொல்ற பிரச்னை என்னோட கவனத்துக்கும் வந்தது. கல்வி விஷயத்தில் எங்க அரசு ரொம்பவே கவனத்தோடும், அக்கறையோடும் செயல்பட்டு வருகிறது. சட்டசபையில் இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக பேசி மாணவர்களின் படிப்பு தொடர நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். இனி வரும் காலங்களில் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாத வகையில் கல்லூரிகளின் அனுமதி, மாணவர் சேர்க்கை போன்றவை கவனமாகக் கண்காணிக்கப்படும். அப்படி அனுமதி இல்லாமல் மாணவர்களை சேர்க்கும் கல்லூரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்...'' என்று நிதானமாகச் சொன்னார்.
உடனடியாக நடவடிக்கை எடுத்து மாணவர்களின் எதிர் காலத்துக்கு நல்ல வழி காட்ட வேண்டியது அரசின் கடமை!

காதல் ஜோடி மரணம்... காரணம் போலீஸ்?

அரியலூர் அலறல்
ரியலூர் மாவட்டம் செந்துறை தாலுக்கா அலுவலகத்தில் பாதுகாப்புக்கு இருந்த பெண் போலீஸ் சரஸ்வதி கடந்த 8-ம் தேதி மர்மமான முறையில் இறந்துகிடக்க... இதை அறிந்து அதிர்ந்த அவரது காதலன் கார்த்திக், ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இந்த இரட்டை மரணத்தால், அதிர்ச்சியில் இருந்து இன்னமும் மீளவில்லை அரியலூர் காவல் துறை!
சரஸ்வதியின் சொந்த ஊரான தா.பழூர் அருகே உள்ள பனையடி கிராமத் துக்குச் சென்றோம். அவரது தம்பி சுரேஷ், ''அக்கா 2009-ல் இருந்து அரியலூர் ஆயுதப் படையில் போலீஸாக இருந்தார். போன வருஷம் எஸ்.ஐ. எக்ஸாம் எழுதப் போனப்போ... அதே பரீட் சைக்கு செந்துறை - மருவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக்கும் வந்தாராம். அவர் ஒரு கல்லூரியில் பேராசிரியரா இருந்திருக்கார். இருவருக்கும் மனம் ஒத்துப்போகவே, கல்யாணம் பண்ணிக்க முடிவு செஞ்சாங்க. ரெண்டு குடும்பமும் சம்மதிச்சு இரண்டு மாசத்தில் நிச்சய தார்த்தம் பண்ண இருந்தோம்.
போன 7-ம் தேதி அக்கா வேலையில் இருந்து வீட்டுக்கு வந்துச்சு. 'போன் வந்தா எடுக்காதடா... கொஞ்ச நாளா இவனுங்க எக்ஸ்ட்ரா டியூட்டி போட்டு சாகடிக்குறானுங்க’ன்னு சொல்லிச்சு. நான் எப்பவுமே அக்கா போனை எடுக்கமாட்டேன். மதியம் ஒரே நம்பர்ல இருந்து அடிக்கடி போன் வந்தது. வீட்டுக்கு வந்த சித்தப்பா பையன் அதைக் கேட்டு எடுத்துட்டான். சரஸ்வதிகூட வேலை செய்ற சுமதி அக்காதான் பேசுனுது. 'தம்பி... எங்க டி.எஸ்.பி-யான நாகராஜன் வந்திருக்கார். அவசரமா அக்காகிட்ட பேசணும். போனை கொடு’ன்னு சொல்ல... அவனும் கொடுத்துட்டான். ரொம்ப நேரமா பேசிட்டு, வேலைக்குப் போச்சு. கடைசியா, எனக்கு போன் பண்ணினப்போ... 'எல்லாத்தையும் பத்திரமா பார்த்துக்கடா’னு சொன்னுச்சு. இப்போ செத்துப் போயிட்டா... ஒரு பாவமும் செய்யாத எங்க அக்காவை டார்ச்சர் பண்ணி அநியாயமா சாகடிச் சிட்டாங்களே...'' என்று கதறினார்.
சரஸ்வதியின் அக்கா ராணி, ''7-ம் தேதி நான் அரியலூரில் தங்கச்சியைப் பார்த்தேன். புள்ளை எதையோ தொலைச்சதுபோல இருந் துச்சு. என்னம்மான்னு கேட்டேன். 'ஒரே டார்ச்சரா இருக்கு. சொல்லக் கேவலமா இருக்கு’ன்னு தயங்கிச்சு. நான் விடாம, 'என்னம்மா..? யாரும்மா?’ன்னு கேட்கவும், 'நான் காதலிக்கிற விஷயம் தெரிஞ்சதில் இருந்து எங்க டி.எஸ்.பி. நாகராஜனும், எஸ்.பி.எஸ்.ஐ-யான ராமமூர்த்தியும் ரொம்ப நாளா டார்ச்சர் பண்றாங்க. அதுக்காகவே நைட் டியூட்டியா போடுறாங்க. ஒரே ஒரு நாள் உன்னோட படுக்கணும். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கச் சொல்றாங்க. நேத்துக்கூட என்கூட வேலைபார்க்குற பச்சையம்மாள்கிட்டயும், என்கிட்டேயும் தனித்தனியா ரொம்ப நேரம் அசிங்க அசிங்கமாப் பேசினாங்க. இன்னிக்கு நைட்டு 10.30 மணிக்கு வருவோம்னு சொன்னானுங்க. அதனாலதான், வீட்டுக்கு வந்துட்டேன். இப்ப ஆபீஸில் இருந்து போன் வந்துச்சு. நான் போய் பார்த்துட்டு வர்றேன்’னு சொல்லிட்டுப் போச்சு. ஏழு மணி வரைக்கும் அங்கேயே காக்க வைச்சு, மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கினாங்களாம். அதை போன் பண்ணி சொன்ன தங்கச்சி, 'செந்துறைக்குப் போறேன். டியூட்டி போட்டிருக்காங்க’ன்னு சொல்லிச்சு. 'எதுவா இருந்தாலும் தைரியமா இரும்மா... நாங்க உன்னை நம்பித்தான் இருக்கோம்’னு சொன்னேன். மறுநாள் பார்த்தா... புள்ளை செத்துப் போச்சுன்னு சொல்றாங்க. ஆஸ்பத்திரியில் பிரேதப் பரிசோதனை செஞ்ச டாக்டர்களிடம் கேட்டோம். 'சரஸ்வதி வயிற்றில் கரைஞ்சும் கரையாத மாத்திரைகள் இருக்குது’ன்னு சொன்னாங்க. ஆனா போலீஸ்காரங்க, சரஸ்வதி மாரடைப்பால் செத்ததா சொல்றாங்க... மாரடைப்பு வர்ற வயசா சார் என் தங்கச்சிக்கு? அநியாயமா அவளை சாகடிச்சதும் இல்லாம, கார்த்திக்கையும் காவு வாங்கிட்டானுங்களே...'' என்று அழுது புரண்டார்.
எஸ்.பி.எஸ்.ஐ. ராமமூர்த்தி, சம்பவத்தன்று உடன் இருந்த போலீஸ் சுமதி, உடன் வேலை பார்த்த பச்சையம்மாள் ஆகியவர்கள் நம் சந்திப்பை எதிர்கொள்ளாமல் தவிர்த்தார்கள். அதனால் ஆயுதப் படை டி.எஸ்.பி-யான நாகராஜனிடம் குற்றச் சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டோம். ''நான் ஆறு மாசம் புதுக்கோட்டையில் பயிற்சி போயிட்டு வந்து ஒரு வாரம்தான் ஆகுது. அந்தப் பொண்ணையும் ஒரு வாரமாத்தான் தெரியும். சம்பவத்தன்னிக்கு முந்தின நாள் நைட்டு, அந்தப் பொண்ணு டியூட்டியில் ஏன் இல்லைன்னு கேட்டேன். அதுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துட்டு டியூட்டிக்குப் போச்சு. அவ்வளவுதான்... அந்தப் பொண்ணு செத்துப் போனதுக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உங்களுக்கு யாரோ தப்பா சொல்லி இருக்காங்க...'' என்றார் தடாலடியாக.
அரியலூர் எஸ்.பி-யான கண்ணப்பனிடம் பேசி னோம். ''சரஸ்வதியின் சாவு குறித்து உங்களுக்கு இருக்கிற சந்தேகங்கள் எங்களுக்கும் இருக்கு. முந்திய நாள் இரவு சரஸ்வதியை டி.எஸ்.பி. தனியா சந்திக்கலை. கூட அவரோட வேலை செய்தவங்க இருந்திருக்காங்க. சரஸ்வதிகிட்டேயும், இன்னொரு போலீஸ் பச்சையம்மாள்கிட்டேயும் லீவு போட்டதுக்காக மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கியிருக்கார். மத்தபடி அன்னிக்கு ஏதும் தப்பா நடந்திருக்க வாய்ப்பில்லை. ஆனா, அவங்களை டார்ச்சர் பண்ணியதா தகவல் கிடைச்சது. எல்லாத்தையும் தீவிரமா விசாரிச்சுட்டு இருக்கிறோம். போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்ட சரஸ்வதி உடல் பாகங்கள் சென்னைக்கு கெமிக்கல் டெஸ்ட்டுக்கு போயிருக்கு. ரிப்போட் கிடைச்ச பிறகுதான் மரணம் எப்படி நிகழ்ந்ததுன்னு சொல்ல முடியும்...'' என்றார்.
பாரபட்சம் இல்லாத பிரேதப் பரிசோதனை அறிக்கையும், நியாயமான விசாரணையும்தான் சரஸ்வதியின் மரணத்துக்கு நீதி கிடைக்கச் செய்யும்!

கைகூடுமா தஞ்சாவூர் நகராட்சி கனவு?

ஏக்கத்தில் அ.தி.மு.க.
'தஞ்சாவூர் நகராட்சியை அ.தி.மு.க. கைப் பற்றியதே இல்லை என்கிற சரித்திரத்தை இந்த உள்ளாட்சித் தேர்தல் மாற்றி எழுதுமா?’ என்பதுதான் அரசியல் புள்ளிகளின் லேட்டஸ்ட் பட்டிமன்றம்!
தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம், பட்டுக் கோட்டை மற்றும் தஞ்சாவூர் ஆகிய மூன்று நகராட்சிகள் உள்ளது. இதில், தஞ்சாவூர் நகராட்சியை அ.தி.மு.க. கைப்பற்றியதே இல்லை. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சி அபரிமித மாக வெற்றி பெற்று தமிழகத்தின் ஆட்சி அரியணையில் உட்கார்ந்து இருக்கும் நிலையில், இந்த முறையாவது தஞ்சாவூர் நகராட்சியை அ.தி.மு.க. கைப்பற்ற முடியுமா... முடியாதா? என்கிற கேள்வி தஞ்சாவூரில் பலமாக எதிரொலிக்கிறது.
'தஞ்சாவூர் நகரத்தில்,  முக்கிய அ.தி.மு.க. புள்ளிகள் விலை போய்விடுகிறார்கள்’ என்கிற குற்றச் சாட்டை முன் வைத்த ஒரு அ.தி.மு.க. பிரமுகர், 'பெயர் வேண்டாமே’ என்ற கோரிக் கையோடு பேச ஆரம்பித்தார். ''கட்சியின் நகரச் செயலாளராக இருக்கும் பண்டரிநாதன், ஆர்.எம்.வீரப்பனோடு 'எம்.ஜி.ஆர் கழக’த்துக்குச் சென்றவர். அந்தக் கட்சி பிரகாசிக் காததால், 10 வருஷம் கழித்து மீண்டும் அ.தி.மு.க-வில் இணைந்தார். கட்சிக்கு வந்த உடனே அவருக்கு தஞ்சாவூர் நகரச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. அவர் பொறுப்புக்கு வந்ததில் இருந்தே, அ.தி.மு.க தீவிரத் தொண்டர்களை ஆரம்பத்தில் இருந்தே புறக்கணித்து வருகிறார். அவருடைய ஆதரவாளர்களை மட்டுமே கட்சியில் முன்னிறுத் துகிறார். இவர் உபயதுல்லாவுக்கு ஆதரவாக ஓட்டு கேட்டபோது அம்மாவையும், சின்னம்மாவையும் விமர்சித்துப் பேசினார் என்பதும் குறிப் பிடத்தக்கது. 'கடந்த தேர்தலின்போது கட்சிக்கு எதிராகச் செயல்பட்டார்’ என அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்ட பூபதி என்பவர் இப்போது கவுன்சிலர் ஸீட் கேட்டு கட்சியில் விண்ணப்பித்து இருக்கிறார். எப்படி அவருக்கு விண்ணப்பம் கொடுக்கலாம்? தஞ்சாவூரில் காங்கிரஸ் கட்சிப் பிரமுகர் ஒருவருக்கு டாஸ்மாக் பார்கள் பல ஒதுக்கப் பட்டுள்ளன. அவரும் அ.தி.மு.க. நகரச் செயலாளரும் நெருங்கிய நண்பர்கள். அ.தி.மு.க-காரர்களுக்கு பார்கள் கிடைக்காமல் போனதற்கும் இதுதான் காரணம். பழைய பஸ் ஸ்டாண்டில் ஷெட் போடுவதற்கு தி.மு.க-வினருக்கு டெண்டர் ஒதுக்க பண்டரிநாதன் பரிந்துரை செய்துள்ளார். இப்படி எதிர்க்கட்சி பிரமுகர்களுடன் நட்பு பாராட்டும் ஒருவரால் எப்படிக் கட்சியை வளர்க்க முடியும்?
இப்போது ஆளும் கட்சி எங்க கட்சிதான். அதோடு, தஞ்சாவூர் எம்.எல்.ஏ-வும் எங்க கட்சிதான். ஆகவே, இந்த முறை எளிதாக தஞ்சாவூர் நகராட்சியைக் கைப்பற்ற முடியும். மொத்தம் 51 கவுன்சிலர்களில் தற்போது 16 அ.தி.மு.க. கவுன்சிலர்கள் உள்ளனர். ஆனால், தி.மு.க. ஆட்சியிலேயே ஜெயித்த அ.தி.மு.க. கவுன்சிலர்களையே இப்போது ஓரம்கட்ட முயற்சிகள் நடக்கின்றன. ஒவ்வொரு பகுதியிலும் கோஷ்டிகளை உருவாக்குகின்றனர். இதனால், ஸீட் கிடைக்காதவர்கள் சொந்தக் கட்சியையே தோற்கடிக்கும் முயற்சியில் இறங்குவார்கள். இப்படி உள்ளடி வேலைகள் நடக்கும்போது கட்சி எப்படி ஜெயிக்கும்?'' என்று ஆதங்கத் துடன் கேட்டனர்.
ஆனால், தஞ்சாவூர் அ.தி.மு.க. நகரச் செய லாளர் பண்டரிநாதனோ, ''என்னைப்பற்றிக் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானது. அ.தி.மு.க-வைவிட்டு நானாகவே வெளியேறினேன். பிறகு நானாகவே இணைந்தேன். என் ஆதரவாளர்கள் யாருக்கும் முன்னுரிமை கொடுக்கவில்லை. கட்சியைவிட்டு நீக்கப்பட்ட பூபதி மனு கொடுத்திருக்கிறார். ஸீட் கொடுக்க வில்லையே? அ.தி.மு.க-வினருக்கே டாஸ்மாக் பார் கொடுக்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ் பிரமுகருக்கும் எனக்கும் எந்தவித நேரடித் தொடர்பும் கிடையாது. தி.மு.க. ஆட்சிக்காலத்தில் பழைய பஸ் ஸ்டாண்டில் ஷெட் போடப்பட்டது. அதில் எனக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை. நிச்சயமாக இந்த முறை தஞ்சாவூர் நகராட்சியை அ.தி.மு.க. கைப்பற்றும் என்ப தில் சந்தேகமே இல்லை!'' என்றார்.
தி.மு.க-வின் பதிலடி என்ன?
''தஞ்சாவூர் தி.மு.க. கோட்டை. அதை உடைக்க முடியாது. எத்தகைய கடுமையான சூழ்நிலையிலும் தஞ்சாவூரை நாங்கள் இழந்ததே இல்லை. இப்போதும் தஞ்சை நகரத்தில் தி.மு.க. வலுவாகவே உள்ளது. நகராட்சிப் பகுதிகளில் அனைத்து மக்கள் நலத் திட்டங்களும் செயல்படுத்திக் கொடுத்துள்ளோம். ஜெயலலிதா நடத்திய உலகத் தமிழ் மாநாட்டின்போதுகூட தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க. வசம் இருந்தது. ஆனால், அன்றும் நகராட்சியை எங்கள் கட்சி இழந்தது இல்லை...'' என்று நம்பிக்கையுடன் சொல்கிறார், தஞ்சாவூர் தி.மு.க. நகராட்சித் தலைவர் தேன்மொழியின் கணவர் ஜெயபால்.
இரண்டு கட்சிகளும் முட்டிப் பார்க்கட்டும்... தீர்மானிக்கப் போவது பொதுமக்கள்தானே!

உள்ளாட்சிக்கு நாங்க ரெடி!

களம் இறங்கும் விஜய் ரசிகர்கள்
ர் ஊராகச் சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கி, ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார் நடிகர் விஜய். அரசியல் பற்றி விஜய் இன்னமும் தெளிவாக எந்த அறிவிப்பும் செய்யாத நிலையில், அவரது ரசிகர்கள் இப்போதே உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்துக் களம் இறங்கிவிட்டனர்!
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளிடம் பேசினோம். ''எத்தனை நாளைக்கு நாங்க அடுத்த கட்சிக்கே 'ஜே’ போட்டுட்டு இருக்க முடியும்? சட்ட மன்றத் தேர்தலில் எப்படியும் எங்களுக்கு நாலு ஸீட்டாவது கிடைக்கும்னு எதிர்பார்த்தோம். ஆனா, நடக்கலை. உள்ளாட்சித் தேர்தலிலும் அப்படி ஏமாந்து போக நாங்க தயாராக இல்லை. சேலம் மாவட்டத்தில் மொத்தம் எத்தனை ஊராட்சிகள் இருக்கின்றன? அதில் எந்த சாதியைச் சேர்ந்தவங்க தலைவராக இருக்காங்க? அந்த ஊராட்சியில் எங்களோட ரசிகர்கள் எவ்வளவு பேர் இருக்காங்க? என்ற புள்ளிவிவரங்களைக் கணக் கெடுத்தோம். எங்களோட கணக்குப்படி எப்படியும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் எங்க தனிப்பட்ட செல்வாக்கால ஜெயிக்க முடியும். இந்தப் பட்டியலை எங்க மாவட்டத் தலைவர் மூலமாக இளைய தளபதியின் அப்பா எஸ்.ஏ.சி. சார்கிட்ட கொடுத்து இருக்கோம். முதல்வர் ஜெயலலிதா அம்மாவிடமும் பேசி உள்ளாட்சித் தேர்தலில் கண்டிப்பா ஸீட் வாங்கச் சொல்லி இருக்கோம். அவரும் பேசுறதா சொல்லி இருக்கிறாராம். அப்படி கூட்டணியில் இடம் கிடைக்காத பட்சத்தில் தனித்துக் களம் இறங்க முடிவு செய்து இருக்கோம்.
சேலத்துக்கு எங்கள் இளைய தளபதி விஜய் நலத்திட்ட உதவிகளை வழங்க வந்தப்ப, சேலத்தின் ஒரு மூலையில் மக்கள் நடமாட்டமே இல்லாத இடத்தில் பொதுக்கூட்டம் போட்டோம். அந்தக் கூட்டத்துக்கு மக்கள் அதிக அளவில் வரமாட்டாங்கன்னுதான் நினைச் சோம். ஆனா கட்டுக்கடங்காத இளைஞர்களும், கைக்குழந்தைகளோடு குடும்பப் பெண்களும், முதியவர்களும் அங்கு வந்ததைப் பார்த்தப்பத்தான் எங்களுக்கே நம்பிக்கை வந்தது. அப்போது விஜய்யிடம், 'உள்ளாட்சித் தேர்தலில் நாம் நிற்கணும்’னு சொன்னோம். அதற்கு அவர் பதில் எதுவும் சொல்லாமல் புன்னகைத்தார். சிரிப்பும் சம்மதத்துக்கான அடையாளம்தானே... அதனால்தான் அன்று முதலே உள்ளாட்சித் தேர்தல் வேலைகளில் குதிச்சுட்டோம்...'' என்றனர் பரவசமாக.
சேலம் மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் பார்த்திபனை சந்தித்தோம். ''ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் எல்லோருமே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதில் உறுதியா இருக்காங்க. அவங்களோட கோரிக் கையை விஜய் சாரோட அப்பாகிட்ட நான் சொல்லிட்டேன். இனி தலைமை தான் முடிவு எடுக்கணும். ஒருவேளை, தலைமை அமைதியாக இருந்தாலும் உள்ளாட்சி தேர்தலில் நிர்வாகிகள் போட்டி இடுவதை எங்களால் தடுக்க முடியாது!'' என்றார் திடமாக.
ஒரு தடவை முடிவு பண்ணிட்டா விஜய் ரசிகர்களும் யார் பேச்சையும் கேட்க மாட்டார்களோ?

ஊதிய உயர்வு சாத்தியம் இல்லையா?

கொங்கு மண்டலப் போராட்டம்
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கூலி உயர்வு கேட்டு விசைத் தறியாளர்கள் ஆகஸ்ட் 3-ம் தேதி தொடங்கிய காலவரையற்ற வேலை நிறுத்தம், இன்னும் முடியவில்லை. இதுவரை ஐந்து கட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்தும் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளன!
தீபாவளி நெருங்கிவிட்ட நிலையில், 6 லட்சம் தொழிலாளர்களின் தொழிலும், பல கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தியும் பாதிப்பு அடைந்து உள்ளது. ஜவுளி உற்பத்தியாளர்கள், கூலியை உயர்த்தித் தர தொடர்ந்து மறுப்பு தெரிவிக்கும் நிலையில், ஆறாம் கட்டப் பேச்சுவார்த்தை 13-ம் தேதி நடக்க உள்ளது. 'அந்தப் பேச்சுவார்த்தையிலாவது தீர்வு கிடைக்குமா?’ என தொழிலாளர்கள் ஏங்கித் தவிக்கின்றனர்.
கூலி நெசவு நெய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் இரா.வேலுச்சாமியிடம் பேசினோம்.
''கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மொத்தம் இரண்டு லட்சம் விசைத்தறிகளும், 30,000 தறிக்கூடாரங்களும் இருக் குது. நாள் ஒன்றுக்கு 1 கோடியே 20 லட்சம் மீட்டர் துணி உற்பத்திசெய்யப்படுது. ஜவுளி உற்பத்தியாளர்கள், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை எங்களுக்கு ஊதிய உயர்வு தருவாங்க. 2008-ல்தான் கடைசியா ஊதிய உயர்வு வாங்கினோம். இந்த ஆண்டு ஆகஸ்ட் 28-ம் தேதியோடு மூன்றாண்டுகள் முடியுது. அதனால், ஊதிய உயர்வு வேணும்னு அவங்களுக்கு நோட்டீஸ் அனுப்பினோம். எவ்வித பதிலும் இல்லாததால், ஜூலை 25-ம் தேதி கோவை மற்றும் திருப்பூர் கலெக்டர்களிடம் மனு கொடுத்தோம். மேலும், ஆகஸ்ட் 9-ல் கோவையில் முதல் கட்டப் பேச்சுவார்த்தை நடந்துச்சு. ஆனா,உற்பத்தியாளர்கள் எங்க கோரிக்கையை ஏத்துக்கலை. ஆகவே, ஆகஸ்ட் 11-ல் சென்னைக்குப் போய் கைத்தறித் துறை அமைச்சர், ஊரக தொழில் துறை அமைச்சர், தொழில் துறை அமைச்சர்கள்கிட்ட கோரிக்கை களை முன்வைச்சோம். பிறகு ஆகஸ்ட் 17-ம் தேதி, இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை கோவையில் நடந்துச்சு. அதிலும் மாற்றம் இல்லை. எங்கபாடு பெரும்பாடா இருக்குன்னுதான் ஊதிய உயர்வு கேட்கிறோம். அதை ஜவுளி உற்பத்தியாளர்கள் மறுப்பது எந்த விதத்தில் நியாயம்? 13-ம் தேதி வேலை நிறுத்தத்தில் சொந்த விசைத்தறி உரிமையாளர்கள் சங்கமும் கலந்துகிடுது. எங்க வேலை நிறுத்தத்தால், ஒரு நாளைக்கு 36 கோடி மதிப்புக்கு உற்பத்தி பாதிக்குது... ஆனா, இதிலும் ஜவுளி உற்பத்தியாளர்கள் லாபம் பார்க்கிறாங்க. எங்க வேலை நிறுத்தத்தால் நூல் விலை இறங்கியிருக்கு. ஒட்டுமொத்தமா கொள்முதல் பண்ணிக் கிட்டாங்க. அதோட, வேலை நிறுத்தத்தால் துணிகளுக்கும் கெடுபிடி இருப்பதால், இவங்க ஸ்டாக் வெச்சிருந்த துணிகளை நல்ல விலைக்கு வித்து நல்ல லாபம் பார்க் குறாங்க. நாங்கதான் வேலையே இல்லாமத் தவிக்கிறோம்...'' என்றார் சோகமாக.
ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் கமிட்டி உறுப்பினர் ஈஸ்வரனிடம் பேசினோம். ''ஏற்கெனவே நூல் விலை அதிக அளவுக்கு உயர்ந்து, இப்போது குறைந்து உள்ளது. இதனால், எங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய முடியாத நிலையில் இருப்பதால், ஊதிய உயர்வு இப்போதைக்கு சாத்தியம் இல்லை!'' என்று சொன்னார்.
இரு தரப்பும் இறங்கி வந்தால்தான், உழைப்பாளிகளின் வயிறு நிறையும்!

காணாமல் போனது 1,000 கண்டுபிடிக்கப்பட்டது 23

கோவையில் நேபாள் சிறுமிகள்
புலியிடம் இருந்து தப்ப நினைத்து புதை மணலில் சிக்கிய கதையாகத்தான் இருக்கிறது நேபாள மக்களின் நிலை. பாதுகாப்பு என்று நினைத்து அவர்கள் மேற்கொண்ட முயற்சி இப்போது அவர்களை துயரக் கடலில் வீழ்த்திவிட்டது.
 நடந்தது இதுதான். நேபாளில்கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மன்னராட்சி வீழ்ந்து மக்கள் ஆட்சி மலர்ந்தது. அதைத் தொடர்ந்து அவ்வப்போது பல்வேறு கலவரங் கள் வெடித்துக் கிளம்பவே, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதனால் அங்கே பொதுஜனங்களுக்கு... குறிப்பாகப் பெண் குழந்தை களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவியது. திடீர் திடீரென ஏராளமான பெண் குழந்தைகள் காணாமல் போனார்கள். அதனால் தங்கள் குழந்தைகளை எப்படியாவது பத்திரமாகப் பாது காக்க வேண்டும் என்று விரும்பிய சிலர், தங்கள் பெண் குழந்தைகளை சில ஏஜென்ட்கள் மூலம் இந்தியாவுக்கு வேலை செய்வதற்காக அனுப்பி வைத்தனர். கலவரங்கள் அடங்கிய பிறகு, தங்கள் குழந்தைகளை அழைத்துக் கொள்ளலாம் என்று நினைத்து அந்த பாதுகாப்பு முயற்சி மேற்கொண்டார்கள்.
ஆனால், அடுத்து நடந்ததுதான் அதிர்ச்சி. ஆம், குழந்தைகள் இந்தியாவுக்கு வந்ததுமே, அவர்க ளுக்கும் பெற்றோர்களுக்குமான உறவு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இந்தியாவில் அவர்கள் எங்கு வாழ்கிறார்கள், எப்படி இருக்கிறார்கள் என்று தெரியாமல் தவித்தார்கள். ஏஜென்ட்கள் சரியான தகவல்கள் கொடுக்காமல் காலம் கடத்தினார்கள். இதனால் கொதித்துப்போன பெற்றோர், தங்கள் நாட்டு அரசிடம் இந்தப் பிரச்னையை வேதனையோடு தெரிவித்தார்கள். உடனே இதற்குத் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு, இந்திய அரசிடம் நேபாள அரசு கேட்டுக் கொண்டது.
இந்திய வெளியுறவுத் துறை தீவிரமாக விசாரணையைத் தொடங்கியது. தேடுதல் வேட்டை நடந்துகொண்டு இருந்த நேரத்தில்தான் கோவையில் உள்ள ஒரு தனியார் தொண்டு நிறுவனமான மைக்கேல் ஜாப் அநாதை இல்லத்தில் பல நேபாளியச் சிறுமிகள் இருப்பது கண்டறியப்பட்டது. சந்தேகத்தின் பேரில் குழந்தைகள் நலக் குழுவினர் அங்கு நடத்திய அதிரடி விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. குழந்தைகள் மீட்கப்பட்ட சம்பவம் பற்றி குழந்தைகள் நலக் குழுவின் தலைவர் ராஜனிடம் பேசினோம்.
''நேபாளில் இருந்து பாதுகாப்புக்காக என்று அழைத்து வரப் பட்ட சிறுமிகள் 23 பேர் அந்த அநாதை இல்லத்தில் கண்டுபிடிக்கப் பட்டார்கள். அவர்கள் மட்டுமின்றி அஸ்ஸாம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்ட 19 சிறுமிகளும் இங்கு இருந்தார்கள். அந்த அநாதை இல்லத்தில் அவர்கள் அனைவரையும் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்துள்ளார்கள். பலருக்குத் தங்கள் பெயர், ஊர், பெற்றோர் பற்றிய தகவல்களை சரியாக சொல்லவே முடியாதபடி மிரட்டப்பட்டு இருக்கிறார்கள்.
அதனால் அந்த அப்பாவிச் சிறுமிகள், தங்களைத் தாங்களே மறந்து அநாதைகளைப் போன்று வாழப் பழகி விட்டார்கள். மீட்கப்பட்ட பிள்ளைகள் அனைவருமே ஒன்பது முதல் 19 வயதுக்கு உட்பட்டவர்கள். அவர்களை யாரும் தொடர்பு கொள்ள முடியாதபடி ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தார்கள். இப்போது அந்தக் குழந்தைகளின் பெற்றோரைக் கண்டுபிடித்து, ஒப்படைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. குழந்தைகள் இங்கு எப்படி கொண்டுவரப்பட்டார்கள் என்பது பற்றிய விசாரணையும் நடக் கிறது. அந்த அநாதை இல்ல நிர்வாகிகள் டெல்லிக்கு தப்பி ஓடியதாகத் தெரிகிறது. தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கத் துணை நிற்போம். இத்தனை நாட்களும் யாரும் அற்ற அநாதைகள் என்று நினைத்த குழந்தைகளை தங்களின் தாய், தந்தையரைக் காணத் நேபாளத்துக்கு அனுப்பி இருக்கிறோம்...'' என்றார்.
நேபாளில் உள்ள பெற்றோர்களின் மனநிலை குறித்து அறிய இந்தியாவில் வாழும் நேபாளிகளின் உரிமைகளுக்குக் குரல் கொடுக்கும் மூல் ப்ரவாஹ் அகில் பாரத் நேபாளி எக்த சமாஜ் அமைப்பை தொடர்பு கொண்டு பேசினோம்.
''கோவையில் 23 குழந்தைகள் மீட்கப்பட்டதை அறிந்து நேபாளி யர்கள் மிகுந்த பரவசத்தில் இருக்கிறார்கள். மீட்கப்பட்டது தங்களு டைய குழந்தையாக இருக்காதா என்று அனைவரும் ஏக்கத்தோடு குழந்தைகளை எதிர்பார்த்து இருக் கிறார்கள். இனிமேல் தங்களுடைய குழந்தைகளைக் காணவே முடி யாது என்ற கவலையில் இருந்த அனைவருக்கும் இப்போது நம்பிக்கை வந்துவிட்டது. இதுவரை சுமார் 1,000 குழந்தைகள் நேபாளில் காணாமல் போயிருக்கிறார்கள். இந்திய அரசாங்கம், 23 குழந்தைகள் கண்டு பிடிக்கப்பட்டதுடன் தங்கள் தேடுதல் வேட்டையை நிறுத்திக் கொள்ளாமல், இதற்கான நெட்வொர்க் முழுமையும் கண்டுபிடித்து இந்தியாவில் இருக்கும் அத்தனை நேபாளிக் குழந்தைகளையும் மீட்க வேண்டும்!'' என்று கேட்டுக் கொண்டது.
நேபாளில் இருந்து கண்ணுக் கெட்டாத தூரத்தில் இருக்கும் கோவையில், அதுவும் ஒரு தொண்டு நிறுவனத்தில் 23 குழந்தைகள் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்றால் இந்தியாவெங்கும் எத்தனை இடங்களில் இன்னும் எத்தனை நேபாளிய குழந்தைகள் அடைக்கப் பட்டு இருப்பார்களோ?

சிங்காரித்து, மூக்கறுத்த கலெக்டர்கள்?

சீறிக் கிளம்பிய சிதம்பரம்
'தேதி கொடுக்காமல் சொந்த வீடாக இருந்தாலும் போகமாட்டார்; தேதி கொடுத்துவிட்டால்... எதிரி வீடாக இருந் தாலும் போகாமல் இருக்கமாட்டார்!’ - இதுதான் ப.சிதம்பரத்தின் பாலிசி. எதிலும் ஓர் ஒழுங்கைக் கடைப்பிடிக்கும் அவருக்கே இரண்டு கலெக்டர்கள் பெப்பே காட்டி இருக்கிறார்கள்!
மத்திய அரசின் நிதியில் இருந்து செயல் படுத்தப்படும் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யவும், கிராம மக்களின் தேவைகளைக் கண்காணிக்கவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் 'மாவட்ட விழிப்பு உணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு’ இருக்கிறது. அந்தந்தத் தொகுதியின் லோக் சபா உறுப்பினர்களே இதற்குத் தலைவர்; மாவட்ட கலெக்டர்கள் செயலாளர்கள். மற்ற தொகுதிகளில் எப்படியோ... ஆனால், சிவகங்கை தொகுதிக்குள் வரும் புதுக்கோட்டை, சிவகங்கை மாவட் டங்களில் இந்தக் குழுவின் கூட்டத்தைத் தவறாமல் நடத்தி வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம். கடந்த ஆட்சியில் இந்தக் கூட்டத்துக்காகத் திட்டக் குழு துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவையே சிவகங்கைக்கு அழைத்து வந்தார்.
அ.தி.மு.க. ஆட்சி வந்த பிறகு இந்தக் குழுவின் முதல் கூட்டம் செப்டம்பர் 12-ம் தேதி காலை 10 மணிக்கு புதுக்கோட்டையிலும், மதியம் 2 மணிக்கு சிவகங்கையிலும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதை நம்பி சரியாக காலை 10 மணிக்கு புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த ப.சிதம் பரம், கூட்ட அரங்கில் கலெக்டர் இல்லை என்றதுமே டென்ஷனாகிவிட்டார். ''அவசர அழைப்பால் கலெக்டர் சென்னை சென்று விட்டார்...'' என்று திட்ட அலுவலர் சொன்னதைக் காதில் வாங்காதவர், மினிட் புத்தகத்தை எடுத்து வரச் சொல்லி, ''இந்தக் கூட்டத் துக்கு நான் வந்ததை உறுதிப்படுத்தி விட்டுக் கிளம்பு கிறேன்!'' என்று குறிப் பிட்டு, தனது கையெழுத்தை அழுத்தமாகப் போட்டுவிட்டுப் போனார்.
இதேபோன்ற அனுபவம் சிவ கங்கையிலும் காத் திருந்தது. மதியம் 2 மணிக்கு வந்த அமைச்சரை பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றார் திட்ட அலுவலர் சக்திவேல். அதைக் கையில் வாங்காமலேயே கூட்ட அரங்குக் குள் சென்ற சிதம்பரம், ''கலெக்டர் இல்லாமல் கூட்டம் நடத்துவதில் அர்த்தம் இல்லை. கூட்டத்தை ஒத்திவையுங்கள்; கலெக்டருக்கு எந்தத் தேதி சௌகரியப்படுதோ... அந்தத் தேதியில் கூட்டத்தை வைத்துக்கொள்ளலாம்!'' என்று சொன்னவர் பிறகு மைக்கில், ''கலெக்டரிடம் முன்தேதி பெறப்பட்டுத்தான் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அப்படி இருந்தும் நேற்று இரவு எனது செயலரைத் தொடர்புகொண்டு, 'சென்னையில் நடக்கும் கூட்டத்துக்குச் செல்ல வேண்டும்’ என்று சொல்லி இருக்கிறார் கலெக்டர். 'கண்காணிப்புக் குழுக் கூட்டத்தை முடித்துவிட்டுச் செல்லுங் கள்’ என்று சொல்லியும் அவர் இங்கு வரவில்லை. இது நல்ல செயல் அல்ல; வருந்தத்தக்கது. இங்கு வந்தோருக்கு நன்றி சொல்லி மன வேதனையுடன் விடை பெறுகிறேன் என்பதைப் பதிவு செய்கிறேன்!'' என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.
இந்த சம்பவத்தால் கொந்தளித்த காங்கிரஸ் தொண்டர்கள், ''தலைவர் சிதம்பரத்தின் மீதுஜெயலலிதாவுக்கு ஆரம்பத்தில் இருந்தே தீராத கோபம் இருக்கு. கடந்த தேர்தலில் காங்கிரஸ் - அ.தி.மு.க. கூட்டணியைத் தடுத்ததும் தலைவர்தான்னு நினைக்கிறாங்க. அந்தக் கூட்டத்தில் கலந்துக்கக் கூடா துன்னு கலெக்டர்களுக்கு மேலிட உத்தரவு வந்ததுக்கு இதெல்லாம்தான் காரணம். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டிலேயே வருகிறார்கள். அப்படிப் பார்த்தால் சிதம்பரத்துக்கு, கலெக்டர்கள்தான் பயப்படணும். ஆனா, அவரை மதிக்காமல் இப்படி சிங்காரித்து மூக்கறுத்துவிட்டார்கள். மற்றவர்களாக இருந்தால் இந்நேரம் கலெக்டர்களை பந்தாடி இருப்பாங்க. ஆனா, நம்ம அமைச்சர் யாரிடமும் அப்படிக் கடுமை காட்டுவதில்லை. இதுதான் அதிகாரிகளுக்கு தொக்காப் போச்சு!'' என்கிறார்கள். அதேசமயம், கட்சியின் முக்கியப் பொறுப்பாளர்கள் சிலர், அரசு ஒப்பந்தங்கள் உள்ளிட்ட விஷயங்களில் தலையிட்டு இருப்பதால் தங்கள் தலைக்கு கத்தி வந்துவிடுமோ என்ற பயத்தில் இவ்விஷயத்தில் வாய் திறக்கவே பயப்படுகிறார்கள்!
சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராஜரத்தினத்திடம் பேசினோம். ''இது இந்திய ஆட்சிப் பணியில் இருப்பவர்கள் செய்யும் தகுதியான செயல் இல்லை. அரசியல் சார்பற்று மக்களால் மதிக்கக்கூடிய மரியாதைக்குரிய பொறுப்பு மிக்க பதவியில் இருக்கும் கலெக்டர்கள் அரசியல் சார்பற்று நடக்க வேண்டும். ஆளும் கட்சியில் இருந்து கூப்பிட்டதால் போனார்களா... கூப் பிடாமல் போனார்களா? அல்லது மிரட்டி அழைக்கப்பட்டார்களா என்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும், இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருக்கும் அமைச்சரை உள்ளூர் கலெக்டர்கள் உதாசீனப்படுத்தியது ஜீரணிக்க முடிய வில்லை...'' என்றார்.
''அமைச்சரது கூட்டத்தைத் திட்டமிட்டு புறக்கணிச் சதா சொல்கிறார்களே...'' என்று சிவகங்கை கலெக்டர் ராஜாராமனிடம் கேட்டதற்கு, சில நொடிகள் மௌனமாக இருந்தவர், ''அப்படி ஒன்றும் இல்லை. சென்னையில் அஃபீஷியல் புரோகிராம் இருந்ததால் போனேன்!'' என்று சொல்லிவிட்டு அவராகவே இணைப்பைத் துண்டித்துக்கொண்டார். புதுகை கலெக்டர் உமா மகேஸ்வரியோ, ''அமைச்சரது கூட்டத்தில் கலந்துக்கக் கூடாதுனு யாரும் எந்த நிர்ப்பந்தமும் கொடுக்கலை. ஒரே நேரத்தில் இரண்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டி இருந்ததால், என்ன செய்ய வேண்டுமோ அதை நிறைவாகச் செய்திருக்கிறேன்!'' என்றார். ''சென்னையில் அப்படி என்ன முக்கியக் கூட்டம்?'' என்று கேட்டதற்கு, ''அதெல்லாம் அஃபீஷியல் சார்...'' என்றவர், ''அமைச்சர் சிதம்பரம் இது குறித்து உங்களிடம் பேசினாரா?'' என்றதற்கும் அதே பதிலையே சொன்னார்.
இந்தப் புறக்கணிப்பு, அரசியல் ரீதியாக என்ன விளைவுகளை எழுப்புமோ?

'அம்மா'வுக்காக அம்மாவை எதிர்க்கும் இன்பத்தமிழன்!

ஸ்ரீவில்லிபுத்தூர் மோதல்
து வரை தந்தைக்கு எதிராக இருந்த இன்பத் தமிழனின் அரசியல், இப்போது தாய்க்கு எதிராகத் திரும்பி இருக்கிறது. இருவரும் எதிரெதிர் கட்சிகளில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட ஸீட் கேட்டு மல்லுக்கட்டுவதால் தாமரைக்கனி குடும்பத்தில் மீண்டும் அரசியல் சூறாவளி!
தி.மு.க-வுக்கு சென்ற இன்பத்தமிழன் திரும்பவும் அ.தி.மு.க-வுக்கு தாவினார். தாமரைக்கனியின் இளைய மகன் தங்கமாங்கனி, அவரது தாயார் வாசுகி ஆகியோர் தி.மு.க-வில் தொடர்கின்றனர். ஏற்கெனவே இவர்கள் குடும்பத்தில் கழக அரசியலால் ஏற்பட்ட கலகங்களை ஊரே அறியும். இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சித் தலைவர் பதவிக்கு மறைந்த தாமரைக்கனியின் மனைவி வாசுகியும் இரண்டாவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு தங்க மாங்கனியும் தி.மு.க-வில் ஸீட் கேட்டுப் பணம் கட்டி இருக்கிறார்கள். அதேபோல் அ.தி.மு.க-வில் ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியன் தலைவர் பதவியைக் குறி வைத்து, பிள்ளையார்குளம் வார்டு கவுன்சிலர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் பணம் கட்டியுள்ளார்.
இன்பத்தமிழன் அ.தி.மு.க-வில் மீண்டும் இணைந்த பின்பு அவருக்கு முக்கியப் பதவி எதுவும் தரப்படவில்லை. இன்பத்தமிழனுக்கு அ.தி.மு.க-வில் ஸீட் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும்... அவரது அம்மா வாசுகிக்கு தி.மு.க-வில் ஸீட் கொடுக்கப்படும் பட்சத்தில், அவரை எதிர்த்து தேர்தல்பணிகளை செய்தாக வேண்டும். அப்படிச் செய்தால்தான் இன்பத்தமிழன் அரசியலில் நிலைக்க முடியும். ஏனெனில், உள்ளாட்சித் தேர்தலில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி மற்றும் யூனியன் தலைவர் பதவிகளைக் கைப்பற்றுவதில் அ.தி.மு.க. முனைப்புடன் இருக்கிறது. அதனால் இன்பத்தமிழன், 'அம்மா’வுக்காக அவரது சொந்த அம்மாவை எதிர்த்து தேர்தல் வேலைகளை செய்யத் தயாராகி வருகிறார்...'' என்கிறார்கள் உள்ளூர் அ.தி.மு.க-வினர்!
ஆனால், அ.தி.மு.க-வின் இன்னொரு தரப்பி னரோ, ''ஸ்ரீவில்லிபுத்தூரைப் பொறுத்த வரை எம்.எல்.ஏ. மற்றும் நகராட்சித் தலைவர் பதவிகள் தாமரைக்கனி குடும்பம் வசம்தான் இதுவரை இருந்தன. ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி கடந்த சட்டசபை தேர்தலில் தனித் தொகுதியாக மாறி விட்டது. அதனால், நகராட்சி மற்றும் யூனியன் தலைவர் பதவிகளில் தங்கள் குடும்பம் ஆதிக்கம் செலுத்தினால்தான் அரசியலில் இருக்க முடியும் என்று அந்த குடும்பத்தினர் நினைக்கின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சித் தலைவர் பதவிக்கு ஆரம்பத்தில் வாசுகியை எதிர்த்து, இன்பத்தமிழனின் மனைவிக்கு ஸீட் கேட்பதாகத்தான் இருந்தது. ஆனால், அதை தவிர்த்துவிட்டு, இன்பத்தமிழன் மட்டும் பிள்ளையார்குளம் வார்டு கவுன்சிலர் பதவிக்கு ஸீட் கேட்டுள்ளார். இதில் இருந்தே தெரியவில்லையா இவர்களின் நாடகம்...'' என்கிறார்கள்!
இன்பத்தமிழனோ, ''உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர் அந்தந்த பகுதி களில் வசிப்பவராக இருக்க வேண்டும் என்பது விதி. நான் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை பஞ்சாயத்தில் வசிக்கிறேன். அதனால், ஸ்ரீவில்லிப்புத்தூர் யூனியனுக்கு உட்பட்ட வார்டு கவுன்சிலர் பதவியில் போட்டியிட ஸீட் கேட்டுள்ளேன். என் மனைவிக்கு அரசியல் ஆர்வம் கிடையாது என்பதால் நகராட்சித் தலைவர் பதவிக்கு அவர் ஸீட் கேட்டு விண்ணப்பிக்கவில்லை. ஆனால், என் அம்மா வாசுகி உட்பட தி.மு.க-வில் யார் நகராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டாலும் அவர்களை எதிர்த்துத் தோற்கடிப்பதே எனது லட்சியம்...'' என்றார்.
ஆரம்பிச்சுட்டாங்கப்பா...

உள்ளாட்சி வரை உறவு!

'கேப்டன் ஏன் இப்படி நடந்துக்கிறார்?’ - தே.மு.தி.க. எம்.எல்.ஏ-க்கள் திரும்பத் திரும்பத் தங்களுக்குள் கவலையோடு கேட்டுக் கொள்ளும் கேள்வி இதுதான்!
 'இன்னிக்கு சாயந்திரம் 6 மணிக்கு கேப்டன் தலைமையில் கட்சி ஆபீஸ்ல எம்.எல்.ஏ-க்கள் மீட்டிங் இருக்கு!’ என்று தே.மு.தி.க. எம்.எல்.ஏ-க்களுக்குக் கடந்த 12-ம் தேதி மதியம் தகவல் வர... கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு ஓடோடிச் சென்றனர். ஆனால், எம்.எல்.ஏ-க்கள் வருவதற்கு முன்பே விஜயகாந்த் வந்து அமர்ந்திருந்தார். அங்கே உள்ளே நடந்த விஷயங்களை, கூட்டத்தில் கலந்துகொண்ட எம்.எல்.ஏ-க்கள் சிலர் நம்மிடம் பகிர்ந்துகொண்டனர்.
''எப்போதும் சிரிச்ச முகத்தோட எல்லோரையும் வரவேற்கும் தலைவர் முகத்துல அன்னிக்குத் துளிகூட சந்தோஷம் இல்லை. முகத்தை ரொம்ப இறுக்கமா வெச்சிருந்தார். தன் வாட்ச்சைப் பார்த் துட்டே இருந்தவர் 6 மணி ஆனதுமே, 'யார் யார் வந்திருக்காங்க, யார் இன்னும் வரலை?’னு எதை யும் கேட்காம, தடதடன்னு பேச ஆரம்பிச்சார். அவைத் தலைவர் பண்ருட்டியார்கூட அப்போ வந்திருக்கவில்லை.
'இன்னிக்கு நான் சந்தோஷமா உங்களைக் கூப்பிட்டுப் பேசணும்னு வரச் சொல்லலை. உங்க பல பேரின் நடவடிக்கைகள் சரியில்லைன்னு எனக்கு ரிப்போர்ட் வந்திருக்கு. அதைப்பத்திப் பேசத் தான் கூப்பிட்டேன். ஓட்டு போட்ட மக்களுக்கு என்னென்ன பிரச்னைகள் இருக்குது, தொகுதிக்கு என்ன தேவைங்கிறதை விட்டுட்டு, அ.தி.மு.க. மந்திரிங்ககூடவும் எம்.எல்.ஏ-க்கள்கூடவுமே சுத்திட்டு இருக்கீங்க!
திருச்சி செந்தில் இருக்காரா... 'ஏம்ப்பா, நீங்க உங்க ஊரு அ.தி.மு.க-காரங்ககூட அதிகத் தொடர்புல இருக்கியாமே... எனக்கு ஆதாரத்தோட ரிப்போர்ட் கொடுத்திருக்காங்க!’ என்று விஜயகாந்த் கேட்க... பதில் சொல்ல செந்தில் எழுந்தார். 'நீங்க எதுவும் சமாளிக்க வேணாம். எல்லாம் எனக்குத் தெரியும். நான் சொல்றதை மட்டும் கேளுங்க, போதும். பல வருஷமா மன்றத்துல இருக்காரேன்னு எழும்பூர் நல்லதம்பிக்கு ஸீட் கொடுத்தேன். ஜெயிச்சு வந்ததும், நம்ம கட்சிக்காரங்க யாரையும் கண்டுக்கிறதே இல்லை. எப்பவும் அ.தி.மு.க-காரங்ககூடத்தான் சகவாசம். 'என்னதான்யா உங்க மனசுல நினைச்சிட்டு இருக்கீங்க?’ என்று கோபத்தில் தலைவர் கண்கள் சிவக்கும்போது, மாஃபா பாண்டியராஜன் லேட்டா உள்ளே நுழைஞ்சார். அவரைப் பார்த் ததும், '6 மணிக்கு மீட்டீங்னா, நீங்க எத்தனை மணிக்கு வருவீங்க? நாங்க வந்து உங்களுக்காக வெயிட் பண்ணணுமா? நானும் பார்த்துட்டுத்தான் இருக்கேன். நீங்க எல்லா விஷயத்துலயும் கொஞ்சம் அதிகமாகவே பண்ணிட்டு இருக்கீங்க. எல்லாத் தையும் நீங்களா முடிவு பண்ணிட்டா, அப்புறம் கட்சி எதுக்கு? நான் எதுக்கு இருக்கேன்? லேட்டா வந்ததால, உங்களுக்கு இன்னிக்குக் கூட்டத்துக்கு அனுமதி இல்ல. வெளியில போங்க!’ என்று சொல்ல... அவரும் மன்னிப்பு கேட்டுட்டு அங்கிருந்து வெளியேறிட்டார்.
'ஏ.கே.டி.ராஜா, திட்டக்குடி தமிழழகன், விருத் தாசலம் முத்துக்குமார், முருகேசன்... நீங்க நாலு பேரும் என்ன பண்ணிட்டு இருக்கீங்கன்னு எனக்குத் தெரியாதுன்னு நினைச்சிட்டீங்களா? உங்களோட சொந்த வேலைக்காக மந்திரிகளைப் பார்த்து இருக்கீங்க. பல வேலைகளுக்கு மந்திரிங்ககிட்ட சிபாரிசுக் கடிதம் வாங்கி இருக்கீங்க. நாம சட்டமன்றத் தேர்தல்ல மட்டும்தான் அ.தி.மு.க-வோட கூட்டணி வெச்சிருந்தோம். அந்தக் கட்சியோட நம்ம கட்சியைக் கொண்டுபோய் இணைச்சிடலை. நீங்க எல்லாம் தே.மு.தி.க. எம்.எல்.ஏ. மாதிரி நடக்காம... அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் மாதிரி இருக்கீங்க!
உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க-வை கடுமையா எதிர்க்கறதுனு முடிவு பண்ணிட்டேன். உண்மையான எதிர்க்கட்சியா தே.மு.தி.க. செயல்படணும். சட்டமன்றத்துல இனி யாராவது முதல்வரை 'அம்மா’னு சொன்னீங்கன்னா... நடக்குறதே வேற! கேள்வி கேட்டா, 'அரசு செய்யுமா?’ன்னு கேளுங்க. பேசத் தெரியாம உளறாதீங்க. 'தே.மு.தி.க. எம்.எல்.ஏ-க்கள் பேசக் கத்துக்கிட்டுச் சட்டமன்றத்துல பேசுங்க’ன்னு முதல்வர் சொல்றாங்களே... உங்களுக்கு வெட்கமா இல்லையா?
இனி உங்கள்ல யாராவது அ.தி.மு.க-காரங் களோட சுத்துறீங்க... அந்தக் கட்சி எம்.எல்.ஏ-க்கள், மந்திரிகளோட போய் விழாவுல கலந்துக் குறீங்கனு எனக்குத் தகவல் வந்துச்சுன்னா, என் நடவடிக்கை வேற மாதிரி இருக்கும். நான் திட்டுறதைப் பொறுத்துக்க முடியாம, நீங்க கட்சி மாறி அ.தி.மு.க-வுக்கே போனாலும் எனக்கு அதைப்பத்திக் கவலை இல்லை. நீங்க எல்லோரும் கட்சி மாறிப்போய் தி.மு.க-வுல எதிர்க் கட்சியா அமர்ந்தாலும் கவலைப்பட மாட்டேன். என்கூட இருந்தால் இப்படித்தான் இருக்கணும். நான் சொல்றதைத்தான் கேட்கணும்’ என்று பேசி முடித்தவர், அவரது உதவியாளரைக் கூப்பிட்டு, 'இன்னிக்கு யாரெல்லாம் கூட்டத்துக்கு வரலே? அவங்க லிஸ்ட்டை என்கிட்ட கொடுங்க. என்ன காரணத்தால வரலைன்னு விளக்கம் கொடுக்கச் சொல்லுங்க’ என்று படபடவெனப் பொரிந்துவிட்டு, யாரிடமும் நின்று ஒரு வார்த்தைகூட பேசாமல் அங்கிருந்து விருட்டுன்னு கிளம்பிட்டார்...'' என்று சொன்னார்கள்.
''அ.தி.மு.க-வை இனி கடுமையாக எதிர்த்தால் மட்டுமே தங்களுக்கு எதிர்காலம் இருக்குன்னு தலைவர் நினைக்கிறார். எதையும் கண்டுக்காம ஆளும் கட்சிக்கு ஜால்ரா அடிச்சிட்டே இருந் துட்டா, அடுத்த அஞ்சு வருஷத்துல கட்சியையே ஒண்ணும் இல்லாமப் பண்ணிடுவாங்கன்னு பயப்படறார். இதை எம்.எல்.ஏ-க்கள் புரிஞ்சுக்காம நடந்துக்குறாங்கன்னுதான் அவருக்கு வருத்தம். அந்தக் கோபத்தைத்தான் எம்.எல்.ஏ-க்கள்கிட்ட காட்டி இருக்கார்!'' என்கிறார்கள் விஜயகாந்த்துக்கு நெருக்கமானவர்கள்.
'உள்ளாட்சித் தேர்தல் வரைக்கும்தான் உறவு’ என்று இந்தப் பக்கம் விஜயகாந்த் முடிவெடுத்துவிட்டதாகவே தெரிகிறது. 'உள்ளாட்சித் தேர்தலுக்குக்கூட கூட்டணி யில் வெச்சிருக்கணுமா?’ என்று அந்தப் பக்கம் ஜெயலலிதா யோசிப்பதாகவும் தெரிகிறது!

குண்டடிபட்டவர்கள் எத்தனை பேர்?

மறைக்கிறதா போலீஸ்?
ரமக்குடி கலவரத்தின்போது நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் குண்டுக்காயம் பட்டவர்கள் எத்தனை பேர் என்பது இன்னும் மர்மமாக இருக்கிறது. அரசுத் தரப்பில் இந்த விவரம் மறைக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
தியாகி இம்மானுவேல் சேகரன் 54-வது நினைவு தினத்தன்று ஆறு பேரைப் பலிகொண்ட கோரத் தாண்டவத்துக்குப் பிறகு பரமக்குடியில் சகஜ நிலை திரும்பியிருக்கிறது. இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள், மதுரை, ராமநாதபுரம், பரமக்குடி, இளையான்குடி அரசு மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் எத்தனை பேர் குண்டடிபட்டவர்கள் என்கிற உண்மையான தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.
பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் வெளியிட்ட அறிக்கையிலோ... மறுநாள் சட்டசபையில் சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானத்தின்போது ஆற்றிய உரையிலோ... துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்கள் எத்தனை பேர் என்பதை முதல்வர் ஜெயலலிதா தெரிவிக்கவில்லை. 15 முதல் 20 பேர் துப்பாக்கி சூட்டில் காயமடைந்ததாக தலித் அமைப்புகள் கூறுகின்றன. போலீஸ் தரப்பில், குண்டடி பட்டவர்கள் எத்தனை பேர் என்பதை முழுமையாக விசாரிக்கக்கூட இல்லை என்கிறார்கள்.
உண்மையிலேயே, குண்டுக் காயம்பட்டவர்கள் எத்தனை பேர் என்று நாம் நேரடி விசாரணையில் இறங்கினோம்.
மதுரை அரசு மருத்துவமனையில் அட்மிட் ஆனவர்களில் 17 பேர் மட்டும் தொடர்ந்து சிகிச்சை​யில் இருக்கிறார்கள். ஏசு, செந்தில்குமார், தர்மராஜ், கலைமாறன், ஆறுமுகசாமி, சிங்கத்துரை, செந்தில்முருகன், சதுரகிரி, வி.பாண்டி, கே.பாண்டி, யோகராஜ், ராஜ்குமார், மாரிமுத்து, மாணிக்கம், சிவா, குமார், பாலகிருஷ்ணன் என்பது அவர்களின் பெயர்கள். தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களில் மதுரை அப்போலோவில் இருக்கும் ஜெயபிரசாந்த் பற்றிய விவரத்தை மட்டுமே பெற முடிந்தது. இதில் மாணிக்கம், பாலகிருஷ்ணன், சிவா, சதுரகிரி, ஏசு, கே.பாண்டி, யோகராஜ், மாரிமுத்து, ஜெயபிரசாந்த் என ஒன்பது பேர் துப்பாக்கி குண்டுக் காயங்களுடன்  இருக்கிறார்கள்.
இவர்களை தனித்தனியே சந்தித்தபோது ஆச்சர்யமான ஒரு தகவல். துப்பாக்கி சூட்டில் இறந்ததாக பத்திரிகைச் செய்திகளில் வந்த நயினார்கோவில் காச்சான் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் உயிரோடு இருக்கிறார். இவருக்கு நடு நெற்றியில் குண்டு பாய்ந்துள்ளது. அரசு மருத்துவமனையின் 101-வது வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் நடந்த 11-ம் தேதி இரவிலேயே அவருக்கு ஆபரேஷன் செய்து, தலைக்குள் இருந்த குண்டை அகற்றி​விட்டதாகவும், குண்டு மூளையைச் சென்றடையும் முன்பே நின்றுவிட்டதால் அவர் உயிர் பிழைத்து இருப்பதாகவும் டாக்டர்​கள் தெரிவித்தனர்.
'இவருக்கும் கலவரத்​துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. பரமக்குடி ஐந்து முக்கு சாலையில் டீக்கடை வெச்சிருக்கார். பிரச்​னையானதால் கடையை மூடிட்டுப் போக முயற்சித்தப்ப, போலீஸார் சுட அது அவரது நெற்றிப் பொட்டில் பாய்ந்​துள்ளது. தலையே வெடிச்சது மாதிரி கொதகொதனு ரத்தம் கொட்டிக்கிடந்ததைப் பார்த்ததும் ஊர்க்​காரங்க எல்லாம் அவர் செத்துட்டதா நினைச்​சுட்டாங்க. (நாளிதழ்களில் அவர் செத்துவிட்டதாகவே செய்தி வந்திருக்கிறது.) ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை அங்கே இருந்து, ராமேஸ்வரம் அரசு ஆஸ்பத்திரி ஆம்புலன்ஸில் மதுரைக்குக் கொண்டுவந்தோம். இங்கே இருந்த மருத்துவ ஊழியர்களும் அவர் செத்துட்டதா நினைச்சு, மார்ச்சுவரிக்குக் கொண்டுபோகச் சொல்லிட்டாங்க. அவருக்கு உயிர்த் துடிப்பு இருப்பதை விளக்கிய பிறகுதான், ஆபரேஷன் தியேட்டருக்குக் கொண்டுபோனாங்க...' என்றார் மாணிக்கத்தின் மைத்துனர் கிருஷ்ணன்.
சதுரகிரிக்கு இடது முழங்காலுக்குக் கீழும், மாரிமுத்துவுக்கு வலது தோள்பட்டையிலும், கே.பாண்டிக்கு வலது தொடையிலும், யோகராஜுக்கு வலது முழங்காலுக்குக் கீழும் குண்டடிக் காயங்கள் இருந்தன. ராமநாதபுரம் மாவட்டம் உடைச்சியார்வலசை சிவா, ஒரு வார்த்தைகூட பேச முடியாத அளவுக்கு வலியால் துடித்துக்கிடந்தார். அவரது வலது காலில் மூட்டுக்கு மேலே குண்டு இருப்பதாகத் தெரிவித்த டாக்டர்கள், விரைவில் அதனை அகற்றிவிடுவோம் என்றார்கள்.
எப்படிக் காயம் பட்டது என்று கேட்டபோது, 'நாங்கள் மறியலில் கலந்துகொள்ளவில்லை. திடீரென போலீஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் காயமடைந்துவிட்டோம். எங்களைப்போல இன்னும் நிறையப் பேர் காயம்பட்டார்கள். ஆனால், அரசு மருத்துவமனைக்கு வந்தால் கலவர வழக்கில் சேர்த்து விடுவார்கள் என்று அவர்​களை உறவினர்கள் வேறெங்கோ தனியார் மருத்துவ​மனைகளுக்கு அழைத்துச் சென்றுவிட்டார்கள்...' என்றனர்.
தலை, கை, கால் என உடல் முழுக்கக் காயங்களுடன் குப்புறப் படுத்திருந்தார் அனுமனேரியைச் சேர்ந்த தர்மராஜ். தனக்கு முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டு இருப்பதாகச் சொன்ன அவர், 'நான் எந்தக் கலவரத்திலும் ஈடுபடவில்லை, அஞ்சலி செலுத்தவும் செல்லவில்லை. என் குழந்தையை அழைத்து வருவதற்காக பஸ் நிலையத்துக்கு பைக்கில் சென்றேன். பிரச்னையாக இருந்ததால், மெதுவாகச் சென்றேன். திடீரென போலீஸார் கண்மூடித்தனமாகத் தாக்கினார்கள். கீழே விழுந்த பிறகும் சூழ்ந்துகொண்டு அடித்தார்கள்...' என்றார் கண்ணீரோடு.
எவிடென்ஸ் கதிரிடம் இதுபற்றி பேசியபோது, 'குண்டடி பட்டவர்களின் எண்ணிக்கை நிச்சயமாக 15 முதல் 20 வரை இருக்கும். துப்பாக்கி சூட்டில் பலர் பலியாகி இருப்பதால், சட்டப்படி போலீஸார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். ஆனால், பரமக்குடி கலவரத்தில் செத்தவர்கள் மீதே எஃப்.ஐ.ஆர். போட்டு இருக்கிறது போலீஸ். 'ஜான்பாண்டியன் ஆதரவாளர்கள் சுமார் 1,000 பேர் திட்டமிட்டுக் கலவரம் செய்தார்கள், குழுக்களாகத் தாக்குதல் நடத்தினார்கள், பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்தினார்கள், அதிகாரிகளைப் பணி செய்யவிடாமல் தடுத்துத் தாக்கினார்கள்’ என்றெல்லாம் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்திருக்கும் போலீஸ், ஆறு பேர் துப்பாக்கி சூட்டில் இறந்ததாகவும் பதிவு செய்யவில்லை. சந்தேக மரணம் என்றுதான் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
அதைவிட அதிர்ச்சியான தகவல் என்னவென்றால், துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டது பரமக்குடி தாசில்தார் சிவக்குமார் என்று போலீஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், சம்பவ இடத்தில் வருவாய்த் துறை அதிகாரிகள் யாருமே இல்லை என்பதே உண்மை. மேலும், முதலில் துப்பாக்கியால் சுட்டது ராமநாதபுரம் டி.ஐ.ஜி. சந்தீப் மிட்டலின் 'கன் மேன்’தான் என்கிறார்கள். அவர் தன் பிஸ்டலால் ஒருவரைச் சுட்ட பின்னரே, போலீஸார் அனைவரும் ஒரே நேரத்தில் குருவி சுடுவதைப்போல கூட்டத்தைப் பார்த்துச் சுட ஆரம்பித்தனர். காயம்பட்ட பெரும்பாலானவர்களுக்கு தலை, கழுத்து, முதுகில் குண்டு பாய்ந்திருப்பது அவர்களைக் கொல்ல வேண்டும் என்ற உள்நோக்கம் போலீஸுக்கு இருப்பதையே காட்டுகிறது.
அரசின் குரல் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக இல்லை. போலீஸாரின் அறிக்கையை அப்படியே படித்திருக்கிறார் ஜெயலலிதா. தமிழக அரசு அமைத்துள்ள விசாரணை கமிஷனின் முடிவு எப்படி இருக்கும் என்பதை இப்போதே என்னால் சொல்ல முடியும். அரசு வன்முறைக்கு எதிராக, அரசே எப்படி நீதி வழங்கும்? எனவே, சுப்ரீம் கோர்ட்டும் சி.பி.ஐ-யும் இணைந்து விசாரணை நடத்த வேண்டும். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஐந்து லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா இரண்டு லட்சமும் நிவாரணமாக வழங்குவதோடு, அந்தத் தொகையை போலீஸாரின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்துகொள்ள அரசு உத்தரவிட வேண்டும்!'' என்றார்.
சட்டசபையில் தொடர்ந்து பேச அனுமதி மறுக்கப்பட்ட புதிய தமிழகம் கிருஷ்ணசாமி மதுரை வந்திருந்தபோது, 'உண்மையைத் தெரிந்துகொள்ளாமல், போலீஸார் கொடுத்த அறிக்கையை அப்படியே படித்திருக்கிறார் ஜெயலலிதா. எங்களுக்குத் தேவை ஆடு, மாடு அல்ல... நீதி!' என்றார்.
துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்கள் எத்தனை பேர் என்று தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. ராஜேஷ் தாஸிடம் கேட்டோம். 'ஒரு ஐ.ஜி.கிட்டே இப்படிக் கேட்க உங்களுக்கு வெட்கமாக இல்லையா?' என்று திட்டி போனை கட் செய்துவிட்டார்.
அதிகாரி அவர்களே... அப்போ நாங்க யார்கிட்டே இதெல்லாம் கேட்கணும்? கோபம் குறைந்த பின்னால், அதையாவது சொல்லி உதவுங்கள்!
கே.கே.மகேஷ்
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஈ.ஜெ.நந்தகுமார்
 ''வேனைவிட்டு இறங்கினதும் சுட்டாங்க!''
மதுரை வழியாக வந்துகொண்டு இருந்தபோது துப்பாக்கியால் சுடப்பட்டவர் ஜெயப்பிரகாஷ். மதுரை அரசு மருத்துவமனையில் குண்டுக் காயத்துடன் அனுமதிக்கப்பட்ட இவரைப் பார்க்க வந்த வைகோவிடம், ''நாங்க பரமக்குடிக்குப் போறதுக்காக வந்தோம். எங்க வேனை போலீஸ் மறிச்சாங்க. இறங்கின உடனே சுட்டுட்டாங்க!'' என்று சொல்லிக் கதறினாராம். அவருக்கு ஸ்கேன் எடுப்பதற்காக டாக்டர்கள் எழுதிக் கொடுத்தார்கள். ஆனால் இரவு மறுபடியும் மருத்துவமனைக்கு வைகோ சென்று பார்க்கும் வரை ஸ்கேன் எடுக்கப்படவில்லையாம். உடனே மதுரை அப்போலோ மருத்துவமனைக்கு ஜெயப்பிரகாஷைக் கொண்டு சென்றுவிட்டார் வைகோ. ஜெயப்பிரகாஷ§க்கு முழு சிகிச்சைக்கும் பொறுப்பேற்றுக்கொண்டாராம் வைகோ!

''என்னோடு பேசிவந்தவர் செத்துக் கிடந்தார்!''

அரக்கோணம்... அகோரம்!
சென்னை அருகே நடந்த ரயில் விபத்தில் 10 பேர் பலியானதைத் தொடர்ந்து, 'விபத்துக்குக் காரணம் தொழில்நுட்பக் கோளாறா? டிரைவரின் அலட்சியமா?’ என்பதில் சர்ச்சை!
மத்திய ரயில்வே துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள், 'ரயில் டிரைவர்தான் விபத்துக்குக் காரணம்’ என்று கூறி இருக்கிறார்கள். ஆனால், படுகாயங்களுடன் மருத்துவமனையில் இருக்கும் சென்னை பீச் ரயிலின் டிரைவர், 'பச்சை சிக்னல் இருந்ததால்தான் ரயிலை வேகமாக இயக்கினேன்’ என்கிறார். காரணம் எதுவாக இருந்தாலும், பலியாகி விட்டனர் 10 அப்பாவிகள்!
கடந்த 13-ம் தேதி இரவு 9.25 மணிக்கு அரக் கோணம் அருகே இருக்கும் சித்தேரி ரயில் நிலையத்தில் அரக்கோணம் - காட்பாடி பாசஞ்சர் ரயில் நின்றுகொண்டு இருந்தது. அப்போது, சென்னை பீச் ரயில் நிலையத்தில் இருந்து வேலூர் கன்டோன்மென்ட் செல்லும் மின்சார ரயில், அதிவேகத்தில் வந்து பாசஞ்சர் ரயில் மீது மோதி யது. ரயில் மோதப்போவதை அறிந்த பீச் ரயிலின் டிரைவர் ராஜ்குமார், 30 அடி தொலைவில் ரயிலில் இருந்து குதித்துவிட்டார். மோதிய வேகத்தில் பாசஞ்சர் ரயிலின் கடைசி மூன்று பெட்டிகளும், பீச் ரயிலின் இன்ஜின் மற்றும் இரு பெட்டிகளும் சுக்குநூறாகின. இதில் 10 பேர் உயிர் இழந்தார்கள். 86 பேர் காயம் அடைந்தனர். பாசஞ்சர் ரயிலில் கடைசிப் பெட்டியில் பயணித்த முனுசாமி என் பவர், அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். அவர், '' இந்த இரு ரயில் களும் கடந்த இரு மாதங்களாகவே ஒரு மணி நேரம் தாமதமாக வந்துகொண்டு இருந்தன. இது குறித்து பலமுறை ரயில்வே அதிகாரிகளிடம் சொல்லியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சம்பவத்தன்று பாசஞ்சர் ரயில் 1 மணி நேரம் 20 நிமிடங்கள் தாமதம். சித்தேரி ரயில் நிலையத்தில்
இருப்பது ஆட்டோ சிக்னல். அது சிவப்பு சிக்னல் காட்டியது. ஆனால், பின்னால் வந்த பீச் ரயிலுக்கு அந்தப் பகுதியில் எந்த சிக்னல் விழுந்தது என்று தெரியவில்லை. அந்த ரயில் வந்து மோதிய வேகத்தில் தூக்கி எறியப்பட்டேன். என் எதிரே அமர்ந்து பேசிக்கொண்டு வந்தவர் எனக்குப் பக்கத்திலேயே உடல் சிதைந்து இறந்துகிடந்தார். அவ்வளவுதான் எனக்கு நினைவில் இருக்கிறது...'' என்றார்.
சம்பவ இடத்தில் ஆய்வு நடத்திய ரயில்வே உயர் அதிகாரிகள் மற்றும் மத்திய ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி ஆகியோர், ''முதல் கட்ட விசார ணையில், சென்னை பீச் ரயிலை ஓட்டி வந்த டிரைவர் சிவப்பு சிக்னலைக் கவனிக்காமலும், முன் னால் இருந்த பாசஞ்சர் ரயில் ஒரு மணி நேரம் முன்பாகக் கிளம்பி இருக்கும் என்று கருதி யதாலும், இந்த விபத்து நடந்துள்ளது. ரயிலை சுமார் 96 கி.மீ. வேகத்தில் ஓட்டி வந்து இருக்கிறார். இது மனிதத் தவறுதான். தொழில்நுட்பக் கோளாறு இல்லை!'' என்று தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, ரயில்வே துறையில் பணிபுரியும் கம்ப்யூட்டர் தொழில்நுட்பப் பிரிவு அதிகாரிகள் மற்றும் ரயிலை இயக்கும் மோட்டார் மேன்கள் ஆகியோர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்பப் பிரிவுப் பணியாளர்கள், ''பெரும்பா லான ரயில்வே ஸ்டேஷன்களில் ஆட்டோ சிக்னல் கள் பொருத்தப்பட்டு உள்ளன. ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் இப்படித் தாமதமாக வந்தால், மேனுவலாகக் கண்காணித்து சிக்னலை மாற்றுவோம். ஆனால், மாதக்கணக்கில் ரயில்கள் தினமும் தாமத மாக வருவதால், கவனமாகக் கண்காணித்து சிக்ன லை இயக்கிக்கொண்டு இருந்தோம். நின்றுகொண்டு இருந்த பாசஞ்சர் ரயிலுக்கு முன்பாக சிவப்பு சிக்னல் இருந்தது. அதன் பின்னால் இருந்த சிக்ன லிலும் சிவப்புதான் காட்டிக்கொண்டு இருந்தது. பீச் ரயிலின் டிரைவர்தான் சிக்னலைக் கவனிக்காமல், அலட்சியமாக ரயிலை அதிவேகமாக ஓட்டி இருக்கி றார்!'' என்கிறார்கள்.
டிரைவர் ராஜ்குமார் கடந்த 94-ம் ஆண்டு தெற்கு ரயில்வேயில் மோட்டார் மேனாக பணியில் இணைந்தார். கடந்த 17 ஆண்டுகளில் அவர் மீது  குற்றச்சாட்டு என எதுவும் இல்லை. அவரது தம்பியான பழனியும் மோட்டார் மேன்தான்.  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் ராஜ்குமார், அவரது தம்பியிடம் தட்டுத்தடுமாறி பேசி இருக்கிறார். அதில், ''எனக்கு முன்பாக இருந்த இரு சிக்னல்களும் பச்சை விளக்குதான் காட்டின. அதேபோல் நான் 96 கி.மீ. வேகத்தில் ஓட்டினேன் என்பதும் தவறு. 80 கி.மீ. வேகத்தில்தான் ஓட்டினேன். சிறிது தூரம் சென்றவுடன்தான், முன்னால் இருந்த ரயிலின் கடைசிப் பெட்டியின் பின்பக்கம் சிவப்பு விளக்கு அணைந்து எரிந்துகொண்டு இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். பிரேக் பிடித்தால், மொத்த ரயிலும் கவிழ்ந்து நூற்றுக்கணக்கான மக்கள் இறப்பார்கள் என்பதால், வேறு வழி இல்லாமல் குதித்தேன்...'' என்று சொல்லி இருக்கிறார்.
ஒருவேளை அவர் மது அருந்தி இருந்தாரா என்ற சோதனையும் நடக்கிறது. விரைவில், விபத்துக்கான உண்மையான காரணம் தெரிந்துவிடும்; ஆனால், போன உயிர்கள் போனதுதான்!

''கூடங்குளம் வேண்டாம்!''

உக்கிரமாகும் உண்ணாவிரதம்!
'அணு சக்தி... அழிவு சக்தி!’ என்ற கோஷம் உலகம் முழுவதும் வலுத்து வரும் நிலையில்... நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில், ரஷ்யாவின் ஆதரவுடன் அணு உலைகள் அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. இதை எதிர்த்து, கொதித்தெழுந்து நெருப்பைக் கக்குகிறார்கள் மக்களும், மக்கள் இயக்கங்களும்!
ரஷ்ய அரசின் ஒத்துழைப்புடன்  13,500 கோடி முதலீட்டில் நடந்து வரும் இந்த அணு உலைகளின் மெகா திட்டத்தை நிறைவேற்றி, அதன் மூலம் இந்த ஆண்டுக்குள் 1,000 மெகாவாட் மின் உற்பத்தியைத் தொடங்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது. இதை எதிர்த்து போராடிய மக்களின் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போன்றவற்றை ஒடுக்க, காவல் துறை அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்ய... கொந்தளித்த மக்கள், நெல்லை மாவட்ட கலெக்டர் செல்வராஜை சந்தித்து தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். இருப்பினும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரை கிராமத்தில் 127 பேர் கடந்த 11-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். இந்தப் போராட்டத்துக்கு அரசியல் கட்சிகளின் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மாவட்ட நிர்வாகத்துக்குப் பெரும் தலைவலி!
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கும் 'அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமாரனிடம் பேசினோம். ''அணு சக்தியால் லாபத்தைவிடவும் இழப்பே அதிகம். 'நமக்கு மட்டும் அல்லாமல் வருங்கால சந்ததியையும் அழித்து ஒழிக்கக்கூடிய அணு உலையை இங்கே மட்டும் அல்ல, எங்கேயும் அமைக்க வேண்டாம்’ என்பதுதான் எங்களது நிலைப்பாடு. இந்த மக்களும், 'அணு உலையால் சாவதைவிடவும் பட்டினிகிடந்து அற வழியில் உயிரைவிடுவோம்’ என்பதில் பிடிவாதமாக இருக்கிறார்கள்!' என்றார்.
இதற்கிடையே, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ இடிந்தகரைக்கு வந்து மக்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். பால பிரஜாபதி அடிகள், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ-வான குமாரதாஸ் மற்றும் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம், உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளன. இது தவிர, அண்ணா ஹஜாரே, மேத்தா பட்கர் உள்ளிட்ட சமூகப் போராளிகளும் வருவார்கள் என்பதால், போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது.
இதனிடையே, 'அணு உலை அமைக்கும் பணி முடிவடையும் சமயத்தில், இத்தகைய போராட்டங்கள் நடத்துவது நியாயமா? இதற்காகச் செலவிட்ட பணம் இழப்பாகிவிடுமே?’ என அணு மின் நிலையத்தினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுபற்றி போராட்டக் குழுவைச் சேர்ந்தவரும், தமிழகம் - புதுவை மீனவ மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவருமான ஆண்டன் கோமஸிடம் கேட்டதற்கு, ''கோடிக்கணக்கில் செலவு செய்துவிட்டோம் என்பதற்காக நாமே சாவைத் தேடிக்கொள்ள முடியுமா? ஏற்கெனவே இந்தப் பகுதிகளில் நிறையப் பேருக்கு புற்றுநோய் இருப்பதாகப் பல்வேறு ஆய்வுகள் மூலம் தெரிய வந்திருக்கிறது. லட்சக்கணக்கில் செலவு செய்து மகளுக்குத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்த பிறகு, கடைசி நேரத்தில் மணமகனுக்கு எய்ட்ஸ் இருப்பது தெரிந்தால், 'இவ்வளவு செலவு செஞ்சுட்டோமே... பரவாயில்லை’னு விட்டு விடுவோமா?' என்று எதிர் கேள்வி கேட்டார்.
அணு சக்தித் துறையைத் தன் கையில் வைத்திருக்கும் பிரதமரின் காதுகளுக்கு எட்டுமா இந்த அபலை மக்களின் கூக்குரல்?
ஆண்டனிராஜ்
படங்கள்: எம்.உசேன், எல்.ராஜேந்திரன்
 ''எவ்வித ஆபத்தும் இல்லை...''
கூடங்குளம் அணு மின் திட்டத்தின் வளாக இயக்குநர் எம்.காசிநாத் பாலாஜியிடம் மக்கள் கூறும்புகார்கள் பற்றி கேட்டபோது, ''இந்தியாவில் செயல்படும் 6 அணு மின் நிலையங்களைப் போன்றுதான் கூடங்குளத்திலும் செயல்படப் போகிறது. எதிர்பாராத விபத்து, கதிர்வீச்சு போன்ற எதுவும் நடக்க வாய்ப்பு இல்லை. உலக அணு சக்தி கழகம் வகுத்துள்ள பாதுகாப்பு கோட்பாடுகளை இங்கே பின்பற்றுகிறோம். தற்போது பாதுகாப்பு அம்சங்களைப் பற்றிய சோதனைகளை வெற்றிகரமாக முடித்துவிட்டோம். இந்த சூழ்நிலையில் உள்ளூர் மக்களுக்கு சில சந்தேகங்கள் எழுந்துள்ளன. அவர்கள் தங்கள் வீடுகளைக் காலி செய்ய வேண்டுமோ என்றெல்லாம் குழப்பத்தில் இருக்கிறார்கள். அதுபோன்ற சூழ்நிலை எப்போதும் வராது.
உலகத்தில் எங்குமே இல்லாத விசேஷ பாதுகாப்பு ஏற்பாடு களாக,  40 மீட்டர் உயரத்தில் இயல்புநிலை குளிர்விப்பானை (ஹீட் எக்ஸ்சேஞ்சர்) வடிவமைத்து இருக்கிறோம். அதனால் கதிர் வீச்சு எந்தவகையிலும் வெளியேற வாய்ப்பே இல்லை. நிலநடுக்கம், சுனாமி போன்ற பேரழிவுகளை தாங்கக்கூடிய வகையில் கடல் மட்டத்தில் இருந்து ஏழரை மீட்டர் உயரத்தில் அணு மின் நிலைய கட்டடத்தை அமைத்துள்ளோம். அணு மின் நிலைய வளாகத்தின் ஒரு புறம் கடல் பகுதியை ஒட்டி வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக 500 மீட்டர் வரை மீன் பிடிக்க வேண்டாம். அதற்கு அப்பால் தாராளமாக மீன் பிடித்துக் கொள்ளலாம். இதுகூட, நாட்டின் பாதுகாப்பு நலன் கருதிதான். கதிர்வீச்சு பாதிப்பு குறித்து ஆராய, பாபா அணு மின் நிலைய சுற்றுச்சூழல் ஆய்வகம் ஒன்று கூடங்குளம் ஏரியாவில் 2004 முதல் இயங்கி வருவது மக்களுக்குத் தெரியும். அணு மின் நிலையம் துவங்கியபிறகும் அந்த ஆய்வகம் தொடர்ந்து இங்கேதான் இயங்கப் போகிறது. புற்றுநோய் வரும் என்பதெல்லாம் வெறும் வதந்தியே. இங்கே கதிர்வீச்சு வெளியே வரவே வராது எனும்போது எப்படி பாதிப்புகள் ஏற்படும்?'' என்று கேள்விகளை எழுப்பினார்.

அய்யரை விமர்சித்து அய்யரிடமே மனு!

உள்ளாட்சி... உள் காய்ச்சல் ஆரம்பம்
மிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலைச் சுற்றிவரத் தொடங்கிவிட்டன அரசியல் கட்சிகள்! அடுத்த மாதம் 24-ம் தேதியுடன் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் முடிவடைகிறது. அதற்கு முன்பு உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடித்தாக வேண்டும். 10 மாநகராட்சிகள், 125 நகராட்சிகள், 529 பேரூராட்சிகள், 12,524 ஊராட்சிகளுக்குத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதில் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சிகளின் தலைவர், மாநகராட்சி மேயர் மற்றும் இவற்றின் கவுன்சிலர்கள் என மொத்தம் 1,32,467 பதவி களுக்கு நேரடித் தேர்தலும், ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சிகளின் தலைவர்கள், ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சிகளின் துணைத் தலைவர் என 14,020 பதவிகளுக்கு மறைமுகத் தேர்தலும் நடத்தப்படுகிறது.
 கடந்த சட்டமன்றத் தேர்தலைவிட இந்த உள்ளாட்சித் தேர்தலில், 30 ஆயிரம் வாக்குச் சாவடிகள் கூடுதலாக (86,237) அமைக்கப்படுகின்றன. கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு தொகுதி வரையறை செய்யப்பட்டது போலவே... இந்தத் தேர்தலுக்கு முன்னதாக, பல உள்ளாட்சி அமைப்புகளின் எல்லைகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன.
நெல்லை, சேலம் தவிர்த்த மற்ற எட்டு மாநகராட்சி களுடன், அருகில் உள்ள மற்ற உள்ளாட்சி அமைப்புகள் இணைக்கப்பட்டு, விரிவாக்கப்பட்டு உள்ளன. முன்பு இருந்த பல வார்டுகள் இப்போது ஒன்றாக இணைந்துவிட்டன. இதனால், போட்டியிட யாருக்கு ஸீட் என்பதில் எல்லாக் கட்சிகளிலும் பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, புதிய மாற்றத்துக்கு ஏற்ப பெண்கள், பட்டியல் சமூகத்தினருக்கான இட ஒதுக்கீட்டையும் மாற்றி அமைக்க வேண்டிய நிலை. செப்டம்பர் இரண்டாவது வாரம் ஆகியும்,உள்ளாட்சி அமைப்புகளில் இந்த இட ஒதுக்கீட்டுப் பணி முடிவடையவில்லை. இதனால், தேர்தல் தேதி அறிவிப்பு தள்ளிக்கொண்டே போனது. தேதி அறிவிக்கப்படாவிட்டாலும், மற்ற பணிகள் ஜரூராக நடந்து வருகின்றன. சட்டமன்றத் தேர்தலைப்போலவே, இயந்திர வாக்குப் பதிவு முறையைச் செயல்படுத்தவும் ஆயத்தம் செய்யப்பட்டு வருகிறது. மத்திய அரசு ஊழியர்களை மைக்ரோ அப்சர்வர்களாக நியமிக்கவும், முதல் முறையாக மற்ற மாநிலங்களின் மாநிலத் தேர்தல் ஆணையர்களைத் தேர்தல் பார்வையாளர்களாக அழைக்கவும் ஆலோசனை நடந்து வருகிறது.
இந்த நிலையில், மாநிலத் தேர்தல் ஆணையர் சோ.அய்யர் மீது பாய்ந்து வருகிறது தி.மு.க. 'முந்தைய ஜெ. ஆட்சியில் டாஸ்மாக் அதிகாரியாக நியமிக்கப்பட்டு, சசிகலாவின் குடும்ப நிறுவனமான மிடாஸ் ஆலைக்கு அதிகக் கொள்முதல் ஆர்டர்கள் கொடுத்தவர்
சோ.அய்யர். அதனால்தான், கடந்த மார்ச்சிலேயே ஓய்வு பெற்றவரை, மாநிலத் தேர்தல் ஆணையராக நியமித்துள்ளனர். ஆகவே, மாநிலத் தேர்தல் ஆணையமே தேர்தலைச் சீர்குலைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது’ என்று 14 பாயின்ட்களாகப் புகார் தெரிவித்த தி.மு.க., 'நியாயமாகத் தேர்தலை நடத்துவதாக, எழுத்து மூலமாக உத்தரவாதம் தரவேண்டும்’ என்று சோ.அய்யரிடமே மனு கொடுத்தது.
அதுவும், கடந்த 8-ம் தேதி, தென் மாவட்ட அதிகாரிகளுடன் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் அய்யர் இருந்தபோது, தி.மு.க. தரப்பில் இருந்து, 'மறுநாள் மனு கொடுக்க வரவேண்டும்’ என்று கேட்டுள்ளனர். மறுநாள் சென்னையில் ஓணம் பண்டிகைக்காக உள்ளூர் விடுமுறை என்றபோதும், தி.மு.க-வினரை சந்திக்க சம்மதித்தார் அய்யர். சொன்னபடி மறுநாள், தி.மு.க-வின் வழக்கறிஞர் அணி செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைப்புச் செயலாளர் பெ.வீ.கல்யாணசுந்தரம், வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் கிரிராஜன், மாநிலத் தேர்தல் ஆணையத்தின் முன்னாள் வழக்கறிஞர் பரந்தாமன் ஆகியோர் 13 பக்கங்கள் கொண்ட புகார் மனுவை நேரில் தர, 'தன்னைத் திட்டும் மனுவை’ மறுப்பு ஏதும் சொல்லாமல் வாங்கிக்கொண்டார்!
இந்தத் தகவலை அறிந்த அ.தி.மு.க. வழக்கறிஞர்கள் அணியினர் கொந்தளித்தனர். தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக இருந்த துரைமுருகனின் உறவினர் முன்பு தேர்தல் ஆணையராக நியமிக்கப்படவில்லையா? அய்யர் என்ன தகுதி இல்லாத ஆளா? 96-ல் மதுரையிலும், 98-99ம் ஆண்டுகளில் கரூரிலும் கலெக்டராக இருந்தபோது, சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலை நடத்தியவர் அய்யர். உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் நகராட்சி நிர்வாகத் துறை, உள்ளாட்சித் துறைகளில் உயர் அதிகாரியாக இருந்தவர். அவர்கள் நியமித்த ஆணையர்களைவிட, அதிகத் தகுதியும் திறனும்கொண்டவர். தேர்தல் தேதிகூட அறிவிக்கப்படாத நிலையில், வேண்டுமென்றே பிரச்னை செய்கிறார்களே, பதில் நடவடிக்கையில் இறங்கலாமா?’ எனக் கட்சி மேலிடத்தில் கேட்டனர். கார்டனில் இருந்து, 'அவர்கள் தோல்வி பயத்தில் இருக்கிறார்கள். அமைதியாக உங்கள் வேலைகளைப் பாருங்கள்...’ என்று மட்டும் பதில் வந்ததாம்.
''இப்படி ஒரு மனு கொடுக்க தி.மு.க-வினருக்குக் கொஞ்சமாவது யோசனை வேண்டாமா? போன முறை சென்னை மாநகராட்சியில் நடந்த தி.மு.க-வினரின் வன்முறை வெறியாட்டத்தை உயர் நீதிமன்றமே கண்டித்து, 99 வார்டுகளுக்கு மறு தேர்தல் நடத்தியதை, மக்கள் மறந்திருப்பார்கள் என நினைக்கிறார்களா? டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நகராட்சித் தலைவர் தேர்தலில், 'கவுன்சிலர்களுக்குக் கண் தெரியவில்லை’ என அதிகாரியே அவர்களுக்காக ஓட்டு போட்டு, காலையில் சேர்மனைத் தேர்ந்தெடுத்தார்கள். காலையில் கண் தெரியவில்லை என்றவர்கள், மாலையில் நடந்த துணைத் தலைவர் தேர்தலில், 'மீண்டும் பார்வை பெற்று’ வாக்களித்தார்கள். ஊரே சிரித்த இந்த மோசடியை, உயர் நீதிமன்றத்துக்குக் கொண்டுபோய் அம்பலப்படுத்தியதை அடுத்து, அதிகாரி ஓட்டு போட்டு வெற்றி பெற்ற தலைவர் வேறு வழி இல்லாமல் பதவி விலகினார். இப்படி அவர்களின் கடந்த உள்ளாட்சித் தேர்தல் மோசடி களை சொல்லிக்கொண்டே போகலாம்...'' என்று ஆவேசப்படுகிறார்கள் அ.தி.மு.க. வழக்கறிஞர் அணி யினர்.
இந்த விவகாரம்பற்றி, சோ.அய்யரிடமே கேட்டோம். ''அவர்களுக்கு உரிய பதிலை அனுப்பிவிட்டேன். விதிமுறைகளின்படி தேர்தலை நடத்த பயனுள்ள யோசனைகளை யாரும் சொல்லலாம். என்னுடைய அதிகாரத்துக்கு உட்பட்ட நல்ல கருத்துகளை, கட்டாயம் முழுமையாக செயல்படுத்துவேன்...'' என்றார் சுருக்கமாக.
உள்ளாட்சித் தேர்தல்... உருப்படியாக நடந்தால் சரி!

அந்த ரூ.6 கோடி என்னாச்சு?

ராயல் மீது பாயும் ராஜ்
ரு புறம், நில அபகரிப் பில் முன்னாள் மாண்பு மிகுக்கள் சிக்கித் தவிக்க... இன்னொரு புறம், அரசு கேபிள் ஜமாய்க்க... அடுத்து என்ன நிகழுமோ என்று தி.மு.க. திகிலடித்துக்கிடக்கிறது. இந்த நிலையில்... மதுரையில் பாதிக்கும் மேற்பட்ட கேபிள் நெட்வொர்க்கைத் தனது கட்டுக்குள் வைத்திருக்கும் ராயல் கேபிள் விஷன் மீது பாய்ந்திருக்கிறது புதுப் பிரச்னை!
மத்திய அமைச்சரான அழகிரி குடும்பத்துக்கு சொந்த மான 'ராயல் கேபிள் விஷன்’ 2008-ம் ஆண்டு முதல் ராஜ் டி.வி. மற்றும் ராஜ் டிஜிட்டல் ப்ளஸ் ஆகிய சேனல்களுக்கு சந்தாதாரராக மாறி, மதுரை யின் சில பகுதிகளில் ஒளி பரப்பிக்கொள்வதற்கான ஒப்பந்தம் போட்டது. ஆனால், பேசியபடி ராயல் கேபிள் விஷன், சந்தாத் தொகையைச் செலுத்தவில்லை என்று தொலைத் தொடர்பு வழக்கு கள் தீர்ப்பாயத்தில் வழக்குப் பதிவு செய்து இருக்கிறது ராஜ் டி.வி.
இது தொடர்பாக ராஜ் தொலைக்காட்சி நிறுவனத்தின் சீஃப் ஆபரேட்டிங் ஆபீஸர் வித்யாதர் நம்மிடம் பேசினார். ''கடந்த 15.3.2008 அன்று ராயல் கேபிள் விஷனும், ராஜ் டி.வி-யும் ஓர் ஒப்பந்தம் போட்டன. மாதா மாதம் சேவை வரி உட்பட  13,14,612 சந்தாத் தொகையாக ராஜ் டி.வி-க்கு செலுத்துவதாகச் சொன்னார்கள், ராயல் கேபிள் விஷன் நிறுவனத்தார். அதன்படி பிரதி மாதம் 15-ம் தேதி, சந்தாத் தொகையைச் செலுத்தி வர வேண்டும். ஆனால், செலுத்தவில்லை. 'ஒவ்வொரு மாதமும் சந்தாத் தொகை செலுத்த வேண்டும்’ என்பதை நினைவூட்டினோம். வாய் மொழியாகவும் கேட்டுப் பார்த்தோம். ஆனால், அப்போது தி.மு.க. ஆளும் கட்சியாக இருந்த காரணத்தால், ஏதேதோ சொல்லி மிரட்டினார்கள். சந்தா தர முடியாது என்றார்கள். சந்தாத் தொகையைக் கேட்டு ராஜ் டி.வி. நிறுவனத்தாரின் அலுவலர்கள் யாரேனும் சென்றால், தமிழகம் முழுக்க ராஜ் டி.வி. ஒளிபரப்புக்கு பங்கம் விளைவித்துவிடுவோம் என்ற ரீதியில் மிரட்டினார்கள்.
இப்படி, 2008-ம் ஆண்டு முதல் இப்போது வரை ராயல் கேபிள் விஷன் செலுத்தாமல்விட்ட சந்தாத் தொகை  5,12,52,318 ஆகும். நிலுவையில் உள்ள இந்தத் தொகைக்கு 18 சதவிகித வட்டியைக் கூட்டினால்,  6 கோடிக்கு மேல் செலுத்த வேண்டும். மேலும், சந்தாத் தொகையை செலுத்தாமல், தொடர்ந்து ராஜ் டி.வி. சேனலை மதுரையில் ராயல் கேபிள் விஷனின் கீழ் வரும் பகுதிகளில் ஒளிபரப்பிக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில், 29.7.2011 அன்று ராயல் கேபிள் விஷனிடம் இருந்து கடிதம் ஒன்று வந்தது. அதில், 'சந்தாத் தொகையைச் செலுத்தத் தேவை இல்லை என்ற அடிப்படையில்தான் ராஜ் டி.வி. சேனலை ஒளிபரப்ப ஒப்புக்கொண்டோம்’ என சொல்லப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து 8.8.2011 அன்று நாளிதழ்களில், 'இன்று முதல் அடுத்த 21 நாட்கள் மட்டுமே ராஜ் டி.வி. மதுரை யின் சில பகுதிகளில் ஒளிபரப்பாகும். அதற்குப் பிறகு ராஜ் டி.வி. சேனல் ஒளிபரப்புச் சேவை நிறுத்தப்படும்’ என ராயல் கேபிள் விஷன் அறிவித்திருந்தது. ஆனால், 21 நாட்கள் முடிந்த பின்னும், ராயல் கேபிள் விஷனின் கீழ் வரும் மதுரைப் பகுதிகளில் இன்று வரை ராஜ் டி.வி. ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
எங்களுடன் எந்த ஒரு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடாமல் ராயல் கேபிள் விஷன் எவ்வாறு நாளிதழ்களில் அப்படி அறிவிக்கலாம்? இது எந்த விதத்தில் நியாயம்? ஆகவே, 'எந்த ஒரு காரணத்தைக்கொண்டும் ராஜ் டி.வி. சிக்னலை ராயல் கேபிள் விஷன் நிறுத்தக் கூடாது. நிலுவைத் தொகையை தீர்ப்பாயத்தில் ராயல் கேபிள் விஷன் டெபாசிட் செய்ய வேண்டும். இந்த வழக்கை விசாரிக்க தனியாக ஓர் ஆணையரை நியமிக்க வேண்டும்’ என்று மூன்று கோரிக்கைகளை முன்வைத்து தீர்ப்பாயத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்து இருக்கிறோம். இன்று வரை ராயல் கேபிள் விஷனிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. வருகிற 29-ம் தேதி தீர்ப்பாயத்தில் வழக்கு விசாரணைக்கு வரப்போகிறது. நியாயத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்!'' என்று சொன்னார்.
ராஜ் டி.வி-யின் புகார் குறித்து விளக்கம் கேட்பதற்காக மதுரை ஆண்டாள்புரம் டி.பி.கே. ரோட்டில் உள்ள ராயல் கேபிள் விஷன் அலுவலகத்துக்குச் சென்றோம். வரவேற்பரையில் இருந்தவர், 'எங்கள் அதிகாரி ராஜ பிரபுவோ மற்ற பொறுப்பான ஆட்களோ இப்போது அலுவலகத்துக்கு வருவது இல்லை. சாதாரண ஊழியர்கள் மட்டும்தான் இப்போது இருக்கிறோம். அதனால், அந்தப் புகார்பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது...' என்றார் படபடப்போடு.
'அவர்களது செல்போன் நம்பரைக் கொடுங்கள், நாங்கள் பேசிக்கொள்கிறோம் அல்லது நீங்களே போன் போட்டுக் கொடுங்கள்...'' என்று கேட்டோம். 'நான் உள்ளே போய் பேசிவிட்டு, அவர் என்ன சொல்கிறார் என்பதைச் சொல்கிறேன்!' என்று உள்ளே போனவர் சில நிமிடங்களில் திரும்பி வந்து, 'எங்கள் மேலாளர் மகேஷிடம் பேசினேன். அவர் மேல் அதிகாரியிடம் பேசினாராம். 'எதுவும் பேச வேண்டாம். அவர்களுக்குக் கிடைத்த தகவலை வெளியிட்டுக் கொள்ளட்டும்’ என்று சொன்னார்' என்றவரிடம், 'சரி, உங்கள் பெயர் என்ன?' என்று கேட்டோம்.'சார், ப்ளீஸ் என் பெயர் வேண்டாமே...' என்று நழுவிக்கொண்டார்.
நமக்குப் பதில் சொல்லாவிட்டாலும், இம்மாதம் 29-ம் தேதி தொலைத் தொடர்பு தீர்ப்பாயத்தில் பதில் அளித்தாக வேண்டுமே...  என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்! இருப்பினும் ராயல் கேபிள் விஷன் சார்பில் எப்போது விளக்கம் அளித்தாலும் நாம் வெளியிடத் தயாராகவே இருக்கிறோம்!

டிராய் அறிக்கையை லீக் செய்தது யார்?

சீறிப் பாயும் சி.பி.ஐ.
ஸ்பெக்ட்ரம் 2ஜி வழக்கில் இன்னும் சில நாட்களில், டெல்லி சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி, 'யார் யார் மீது... என்னென்ன குற்றங்கள்?’ என்பதுபற்றிக் கூறி, குற்றப் பதிவு செய்ய இருக்கிறார். அதன் பிறகு, முறையான விசாரணை தொடங்கும்!
இதற்கு மத்தியில், திகார் சிறையில் இருப்பவர்கள் மனதில் லேசான சந்தோஷ ரேகைகள். 'குற்றப் பத்திரி கைகள் முழுமையாகத் தாக்கல் செய்து முடித்த பிறகு, ஜாமீனுக்கு முயற்சிக்கலாம்’ என்று சுப்ரீம் கோர்ட் ஏற்கெனவே சொன்னதுதான் காரணம். 'டிராய்’ என்று சொல்லப்படும் தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் சமீபத்தில் கொடுத்த அறிக்கையும் அவர்கள் மகிழ்ச்சிக்கு இன்னொரு காரணம்.
சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப் பட்டவர்களின் வழக்கறிஞர்கள், ''2ஜி ஸ்பெக்ட்ரம்ஒதுக்கீடுகளில் அரசுக்கு எவ்வளவு நஷ்டம் என்பதை, புலனாய்வு அமைப்பு, விஞ்ஞான முறையிலோ அல்லது தொழில்நுட்ப உதவியுடனோ உறுதி செய்ய வில்லை...'' என்ற வாதத்தை முன்வைத்தனர். இதற்குப் பதில் கொடுத்த சி.பி.ஐ., ''எங்களது கணக்குப்படி மொத்தம்  30 ஆயிரத்து 984 கோடி அரசாங்கத்துக்கு இழப்பு. இதில் முறையாக ஏலம் விடாததால் ஏற்பட்ட நஷ்டம்  22 ஆயிரம் கோடி. உரிமக் கட்டணத்தை உயர்த்தாததால் சுமார்  8 ஆயிரம் கோடி நஷ்டம். இது தொடர்பாக நாங்கள் டிராய் அமைப்பிடம் விளக்கம் கேட்டுள்ளோம். அவர்களது அறிக்கை கிடைத்ததும், தாக்கல் செய்வோம்!'' என்றது.
அப்படி சி.பி.ஐ. கேட்ட விவரங்களைத்தான் இப்போது டிராய், நிபுணர்கள் குழுவில் ஆய்வு நடத்தி கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி அறிக்கை அனுப்பியுள்ளது. டிராய் தலைவர் ஜே.எஸ்.சர்மா தனது ஆணையத்தின் செயலாளர் மூலமாக இதை சி.பி.ஐ-க்கு அனுப்பினார். இதில் உள்ள விவரங்கள்தான் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
டிராய் நிபுணர் குழு குறிப்பிடும் தகவல்கள் இனி... ''2001 முதல் 2008-ம் ஆண்டு வரையிலான ஸ்பெக்ட்ரம் மதிப்பீட்டில் 1,800 மெகாஹெட்ஸ் பேண்ட் அலைவரிசைக்குப் பல்வேறு வகையான கணக்கீடுகள் வருகின்றன. இது அனுமானத்தின் அடிப்படையில் இருப்பதால், இந்த ஆண்டுகளுக்கான ஸ்பெக்ட்ரம் மதிப்பீடுகளைத் துல்லியமாகக் கணக்கீடு செய்ய இயலாது என்று ரிப்போர்ட் கிடைத்துள்ளது. 'அலைவரிசை ஒதுக்கீடுகள் ஏலம் விடப்பட்டு இருந்தால்... அதன் மதிப்பு இவ்வளவு இருந்திருக்கும்’ என்று ஆரூடம் கூற முடியாது. இந்த மதிப்பீடுகளைப்பற்றிச் சொல்ல கடந்த காலத் தகவல்கள் முழுமையாக எங்களிடம் இல்லை. முந்தைய கால மதிப்புகள் பிந்தைய காலத்தில் இருந்த மதிப்புகள் எல்லாம் முறைப்படி இருக்கும்பட்சத்தில்தான், சந்தை நிலவரத்தைக் கணக்கிட முடியும்!
தொலைத் தொடர்பு சேவையால், பொதுமக்களின் வாங்கும் சக்திக்குத் தகுந்தவாறு தொலைபேசிகளின் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. இப்படிக் குறைந்த கட்டணங்களால் தொலைத் தொடர்பு வளர்ச்சியை அதிகரிக்கவும் சமுதாயத்தின் பல்வேறு தரப்பட்ட மக்களுக்குப் பயன் கிடைக்கும் வகையிலும் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. 1999 ஆண்டு வகுக்கப்பட்ட கொள்கையின்படி ஏலம் விடும் முறை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இருப்பினும் 1990 மற்றும் 2000 ஜூனில் பகிரங்க ஏலம் முறையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யச் சொல்லப்பட்டாலும், 2003 முதல் 2007 ஆகஸ்ட் வரை ஸ்பெக்ட்ரம் ஏலம்விட, எப்போதும் சிபாரிசு செய்யப்படவில்லை...'' என்று சொன்ன 'டிராய்’ மேலும், ''கிராமப்புறங்கள், சிறு நகரங்கள் போன்றவற்றில் தொலைத் தொடர்பு வளர்ச்சி ஏற்படுவதற்கும், பொது மக்களுக்குக் குறைந்த விலையில் தொலைத் தொடர்பு வசதிகள் கிடைக்கவும், புதிய டெலிகாம் ஆபரேட்டர்களுக்கும் பழைய ஆபரேட்டர்களுக்கும் சம நிலை வாய்ப்பு கொடுக்கும் நோக்கத்தோடு விலையை உயர்த்தாமல் இருக்கவும் டிராய் சிபாரிசுகளை செய்தது. இதோடு, தொலைத் தொடர்பு சேவையும் அலைவரிசை மதிப்பும் அரசுக்கு வருவாய் தேடித் தரும் ஆதாரமாகக் கருதக் கூடாது என்றும் டிராய் சொல்லிக்கொண்டு வந்தது. இதனால்தான், 2007 ஆகஸ்ட்டில் புதிய விண்ணப்பதாரர்களுக்கு நுழைவுக் கட்டணத்தை உயர்த்தவோ அல்லது ஸ்பெக்ட்ரம் உரிமத்தை ஏலத்தில்விடவோ சிபாரிசு செய்யவில்லை. 10 மெஹாஹெட்ஸுக்கும் மேல் கூடுதலாக ஸ்பெக்ட்ரம் பெற்றவர்களுக்குத்தான் கூடுதல் கட்டணம் வசூலிக்க சிபாரிசு செய்தோம்...'' என்றும் டிராய் சொல்கிறது.
சி.பி.ஐ. குற்றப் பத்திரிகையில் சொன்ன சுமார்  30 ஆயிரம் கோடி நஷ்டம் என்பதையும் அதன் இயக்குநர் ஏ.பி.சிங் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவில் சொன்ன வாக்குமூலத்தையும் கேலிக்கூத்தாக்கும் வகையில் இப்படி டிராய் ரிப்போர்ட் வந்துள்ளது. வழக்குக்குப் பக்கபலமாக சி.பி.ஐ. நம்பிய இந்த அறிக்கை இப்படி எதிராகத் திரும்பியது, கைதானவர்களுக்கு சாதகமாக மாறிவிட்டது!
சி.பி.ஐ-க்கு இந்த அறிக்கை கிடைத்த அடுத்த நாளே, பத்திரிகைகளுக்கும் லீக்-அவுட் செய்யப்பட்டது. இதையட்டி வந்த கேள்விகளால்தான் கடந்த 8-ம் தேதி சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் டிராயின் அறிக்கையைத் தாக்கல் செய்தது. இந்த அறிக்கையே இறுதி வரை இருக்குமா அல்லது சி.பி.ஐ. இழப்பீடுகளைக் கணக்கீடு செய்ய வேறு அளவுகோலுக்குத் தயாராகுமா என்பதும் தெரியவில்லை. ஆனால், இந்த ரிப்போர்ட்டை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டால், ஆ.ராசாவின் மீதான குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றாகக் குறையும். மீதம் இருக்கும் ஒரு குற்றச்சாட்டு, 'முதலில் வருவோர்க்கு முதல் முன்னுரிமை என்கிற கொள்கையை தனக்கு சாதகமான நிறுவனங்களுக்குப் பயன்படுத்திக்கொண்டார்’ என்பதாகவே மிஞ்சும்.
ஆனால், டிராய் ரிப்போர்ட் விவகாரத்தில் சில சந்தேகங்களும் உண்டு. அது உண்மையானால், இந்த டிராய் அறிக்கையும் எடுபடாது. ''அரசியல்வாதி களுக்கும் பெரிய நிறுவனங்களுக்கும் இதில் முழுக்க சம்பந்தம் உண்டு!'' என்று சொல்கிறவர்கள், ''நீரா ராடியா டேப் லீக் முதல் தற்போதைய டிராய் ரிப்போர்ட் லீக் அவுட் வரை ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவை...'' என்கின்றனர்.
''ஆரம்பத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களின் மோதல்கள் மற்றும் அரசியல் குடும்பங்களின் மோதலிலேயே ஊழல் விவகாரம் வெடித்தது. 2007-ல் ஏற்பட்ட கலைஞர் குடும்ப மோதல்கள், பின்னர் ரிலையன்ஸ்-டாடா மோதல்கள் எல்லாம் இதற்குக் காரணமாகின. இதில் ஆ.ராசா சிக்க, ரிலையன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மூன்று பேரையும் சி.பி.ஐ. கைது செய்தது. இதில் கோபம்கொண்ட இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள், 'பணத்தை வாங்கியவர்கள், கொடுத்தவர்கள் எல்லாம் வெளியே இருக்க... எங்களை மட்டும் சிக்கவைப்பதா?’ என்று கூறி, கலைஞர் டி.வி. மற்றும் ஷாகித் பால்வா நிறுவனங்களுக்கிடையே நடந்த பணப் பரிவர்த்தனையை லீக்-அவுட் செய்தன.
அதே கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் இப்போது டிராய் அறிக்கையையும் லீக்-அவுட் செய்துள்ளன. இதற்கு முக்கியக் காரணம், இந்த நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளும் 2ஜி வழக்கில் கைதாகி, நான்கைந்து மாதங்களாக ஆ.ராசா, கனிமொழி யோடு சிறையில் உள்ளனர். இவர்களுடைய ஜாமீன் மனுக்களும் பல முறை மறுக்கப்பட்டன. இப்போது சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வரப்படுகிறது. இந்த வழக்குகளுக்கு இந்த டிராய் அறிக்கை பலன் உள்ளதாக இருக்கவே இந்த ஏற்பாடுகள்!'' என்றும் சொல்லப்படுகிறது.
ஆனால், இந்த டிராய் அறிக்கை இறுதியானதா அல்லது மீண்டும் ஆ.ராசா மற்றும் அவரது அதிகாரிகளுக்குப் பிடி இறுக, இதில் எதிர்மறையாக டிராய் செயல்படுமா என்றும் தெரியவில்லை. ஆனால், சி.பி.ஐ., தற்போது ஏற்பட்டுள்ள களங்கத்தில் இருந்து மீளும் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது. அறிக்கை பெற்ற சி.பி.ஐ-யின் டி.ஐ.ஜி. சுரேஷ்குமார் பல்சானியா, டிராய்க்கு கடந்த 29-ம் தேதி பதில் கடிதம் அனுப்பினார். ''ஸ்பெக்ட்ரம் உரிமத்தின் மதிப்பு வரையறுக்கக்கூடியது அல்ல என்று சொல்வது அர்த்தமற்றது. முன்னாள் டிராய் தலைவர் நிர்பேந்திர மிஸ்ரா சி.பி.ஐ-க்குக் கொடுத்த வாக்குமூலத்திலும், 'ஏலம் முறையை யோசிக்கக் கூறி திரும்பத் திரும்ப சிபாரிசு செய்ததாக’ சொல்லியுள்ளார். உங்கள் அறிக்கையில் இதுபோன்ற உண்மையைத்தெரிவிக்காமல் இருப்பதை மீண்டும் பரிசீலனை செய்து அறிக்கை அனுப்புங்கள்...'' என்று அதில் கேட்டுள்ளார்.
டிராய் அறிக்கை குறித்து சி.பி.ஐ. தரப்பில், சிறப்பு நீதிமன்றத்திலும் சொல்லப்பட்டது. ''டிராய் பயனற்ற முறையில் அறிக்கை கொடுத்துள்ளது. மார்க்கெட் நிலவரத்துக்குத் தகுந்தவாறு ஸ்பெக்ட்ரம் உரிமத்தை ஏலம்விடவும் பல்முனை முறையில் ஏலம் விடவும், 2003 முதல் கிட்டத்தட்ட ஏழு முறை டிராய் ஆதரவாக இருந்துள்ளது. 2008 ஜூலை 16-ம் தேதி டிராய் சேர்மன் தொலைத் தொடர்புத் துறைக்கு எழுதிய கடிதத்தில், 'நுழைவுக் கட்டணத்தை மறு பரிசீலனை செய்ய இதுதான் சரியான நேரம்’ என்று எழுதியதோடு, 2007 சிபாரிசில்கூட சந்தை விலையில் நுழைவுக் கட்டணங்கள் இருக்க வேண்டியது பற்றியும் கூறப்பட்டுள்ளது!'' என்று சொல்லப்பட்டுள்ளது.
இதோடு, 2ஜி விவகாரத்தில் பொது நலன் வழக்கு தொடர்ந்தவர்களும் இந்த அறிக்கையை விமர்சிக்கின்றனர். ''டிராய், மத்திய அரசின் அமைப்பு. அதன் உறுப்பினர்களும் சேர்மனும் மத்திய அரசால் நியமிக்கப்படுபவர்கள். அதிலும், இப்போது இருக்கும் ஜே.எஸ்.சர்மா 2009-ல் ஆ.ராசா அமைச்சராக இருக்கும்போது நியமிக்கப்பட்டவர். இதனால் டிராய், 2ஜி குற்றவாளிகளுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் சாதகமாக இருப்பதில் ஆச்சர்யம் இல்லை!'' என்கின்றனர்.
அடுத்தது என்ன?

ஊழலை கிளறியதால் மாற்றப்பட்டாரா உமாசங்கர்?

மாசங்கரை எந்த ஆட்சியும் ஒழுங்காக ஒரு இடத்தில் இருக்க விடுவதில்லை. தி.மு.க. ஆட்சியில் பல்வேறு துறைகளுக்கு தூக்கி அடிக்கப்பட்டவருக்கு இப்போதைய அ.தி.மு.க. ஆட்சியிலும் அதே கதிதான்!
'டான்சி’யின் நிர்வாக இயக்குநராக கடந்த ஆட்சி முடியும் போது இருந்தார் உமாசங்கர். அரசுச் செயலர் அந்தஸ்தில் இருக்கும் அவரை ஜெ. ஆட்சி வந்ததும், கோ-ஆப்டெக்ஸ் எம்.டி-யாக நியமித்தார்கள். 106 நாட்கள் மட்டுமே முடிந்திருக்கும் நிலையில், கடந்த 11-ம் தேதி ஞாயிறு இரவில், நகர்ப்புற நில உச்சவரம்பு மற்றும் நிலவரிகள் துறை ஆணையராகத் திடீரென தூக்கியடித்துள்ளனர். இந்த முறை உமா சங்கரின் இடமாற்றத்துக்குக் காரணம் என்ன?
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களிடம் பேசினோம். ''உமாசங்கர் வந்தவுடனே சில அதிரடிகளைச் செய்தார். அதனால், ஊழியர்களுக்கும் அவருக்கும் இடையில் லேசாகப் பிரச்னைகள் ஏற்பட்டன. ஆனாலும், விதிமுறைகளின்படியும் கோ-ஆப்டெக்ஸ் வளர்ச்சிக்காகவும்தான் நடவடிக்கை எடுத்தார் என்பது தெரிய வந்ததால், நேர்மையான ஊழியர்கள் சமாதானம் அடைந்துவிட்டோம். கைத்தறி நெசவாளர்களின் மேம்பாட்டுக்காக நல்ல நோக்கத்தில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், ஒரு கட்டத்தில் ஊழல் பெருச்சாளிகளின் வசிப்பிடமாக மாறிவிட்டது. தட்டிக்கேட்க கதியற்று நீடித்துவந்த ஊழல், முறைகேடுகளை உமாசங்கர் வந்தவுடன், கையும் களவுமாகக் கண்டுபிடித்தார். இதைப் பொறுக்கமுடியாமல்தான் மாற்றி இருக்கிறார்கள்!'' என்றார்கள்.
கைத்தறி நெசவாளர் சங்கங்கள் தரப்பில் நம்மி டம் பேசியவர்கள், ''தமிழகத்தில் உள்ள 1,182 கைத்தறி நெசவாளர் சங்கங்களின் தாய் அமைப்பாக தொடங்கப்பட்டதுதான், கோ-ஆப்டெக்ஸ். இதை நம்பி, 2,30,000 குடும்பங்கள் வாழ்கின்றன. ஆண்டு முழுவதும் கைத்தறி நெசவாளர்களுக்கு வேலைவழங்க வேண்டியவர்கள், ஆறு மாதம்கூட வேலை தராமல் வஞ்சித்து வருகின்றனர். கைத்தறியில் நெய்து தரவேண்டிய துணியை, விசைத்தறிகளில் நெய்து வழங்கிவந்தனர். கைத்தறியில் நெய்யப்பட்ட துணியின் இரண்டு பக்கமும் விசை ஆணி குத்திய அடையாளம் இருக்கும். கைத்தறியில் ஆங்காங்கே லேசான பிசிறுகள் இருக்கும், சீரான அடர்த்தி இருக்காது. பளிச்செனத் தெரியக்கூடிய இந்த வித்தியாசங்களை உமாசங்கர் கண்டுபிடித்தார். விசைத்தறித் துணியை கைத்தறி எனப் பொய் சொல்லி, கோ-ஆப்டெக்ஸுக்கு கொடுத்துவந்தனர். மானியத்தைப் பெறுவதற்காக செய்யப்பட்ட மோசடியை உமாசங்கர் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தார். மேலும், கைத்தறி நெசவாளர்களுக்குக் கிடைக்கவேண்டிய தொகையை, போலி உறுப்பி னர்கள் மோசடியாகப் பெற்று வந்ததையும் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தார்...'' என்று மாற்றப்பட்டதற்குக் காரணம் சொன்னார்கள்.
கோ-ஆப்டெக்ஸ் அதிகாரிகள் சிலர், ''நூல் வழங்கும் கூட்டுறவு நூற்பாலைகளுக்கு நீண்ட காலமாக கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், சம்பந்தம் இல்லாமல் கடன் வழங்கிவந்தது. இப்படிக் கடன் பெற்ற இரண்டு கூட்டுறவு நூற்பாலைகள் நசிந்து போனதால்,  2 கோடி கடன் தொகை திரும்பக் கிடைக்காமல், கோ-ஆப்டெக்ஸுக்கு இழப்பு. ஆனாலும், தொடர்ந்து கூட்டுறவு நூற்பாலைகளுக்கு கடன் கொடுக்குமாறு அழுத்தம் கொடுத்தனர். 'அதற்கு ஒப்புக்கொண்டால், கோ-ஆப்டெக்ஸுக்கு மேலும் நஷ்டம் ஏற்படும்; நிதித்துறையின் ஒப்புதல் இல்லாமல் கொடுக்கமுடியாது’ என்று உமாசங்கர் மறுத்துவிட்டார். இதுதான் அவர் மீது கோபத்தை ஏற்படுத்தி இருக்கவேண்டும்!'' என்கிறார்கள்.
''கோ-ஆப்டெக்ஸுக்கு துணி நெய்து தருபவர் களுக்கு, அந்த நிறுவனமே தேவைப்பட்ட நூலையும் வாங்கித் தந்துவருகிறது. இலவச வேட்டி, சேலை, பள்ளி மாணவர் சீருடை மற்றும் விற்பனைத் துணிகளுக்கு என ஆண்டுதோறும்  400 கோடிக்கு நூல் கொள்முதல் செய்யப்படுகிறது. குறைவான விலைக்கு நூலைத் தரத் தயாராக இருக்கும் தரமான நூல் உற்பத்தியாளர்களை மோசடி அதிகாரிகள் டெண்டரில் இருந்து டெக்னிக்காக வெளியேற்றுவதைக் கண்டுபிடித்தார். நீண்டகாலமாக நடந்துவந்த முறைகேட்டுக்கு அதிகாரிகள் சிலரும் உடந்தையாக இருந்துள்ளனர். இப்படிக் கொள்முதல் செய்யப்பட்ட நூலில், தரமற்ற 184 டன் துணி நூலைக் கண்டுபிடித்த உமாசங்கர், அவற்றைத் திருப்பி அனுப்பச் சொன்னதுடன், அதே அளவு தரமான நூலை வழங்கவேண்டும் என்றும் அதிரடியாக உத்தரவு போட்டார். இதனால் அரசுக்கு  20 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்படும் என்று மதிப்பிட்டவர், கடந்த 5 ஆண்டுகளாக செய்யப்பட்ட கொள்முதல் பற்றி, லஞ்ச ஒழிப்பு போலீஸ் அல்லது சி.பி.சி.ஐ.டி. மூலமோ விசாரணை நடத்தவேண்டும் என அரசுக்குக் கடிதம் அனுப்பினார். இந்த நிலையில்தான், அவரை இடமாற்றம் செய்துள்ளனர்!'' என்றும் சொன்னார் கள்.
இதுபற்றி அரசு தரப்பில் சிலரிடம் பேசியபோது, ''உமாசங்கரை எதிர்த்து கோ ஆப்டெக்ஸ் ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தியதால்தான் மாற்றப்பட்டார், வேறு எதுவும் இல்லை!'' என்று சமாளித்தார்கள்.
கைத்தறித் துறை அமைச்சர் பி.வி. ரமணாவைத் தொடர்புகொண்டோம். ''ஐ.ஏ.எஸ். அதிகாரி இடமாற்றத்துக்கும் என்னுடைய லெவலுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?'' என்று பதில் கேள்வி கேட்டவர் வேறு எதுவும் சொல்ல மறுத்து விட்டார். ''எந்த வேலையைக் கொடுத்தாலும் அதை மகிழ்ச்சியுடன் செய்வேன்!'' என்பது உமாசங்கரின் பதில்.

பத்திரிகையாளரைப் புரட்டியெடுத்த காவலர்கள்!

காஷ்மீர் திகில்
காஷ்மீரில் போலீஸ்காரர்களால் ஒரு பத்திரிகையாளர் கண்மூடித்தனமாகத் தாக்கப்படவே... ஊடகங்கள் அதிர்ந்து நிற்கின்றன.
டேவிட் தேவதாஸ்... கடந்த 25 வருடங்களாக காஷ்மீர் பள்ளத்தாக்குகளில் சுற்றி அலைந்து தீவிரவாதத்தைத் தன் எழுத்துகளின் மூலம் பல்வேறு ஊடகங்களிலும் பதிவு செய்துவந்த சுதந்திரப் பத்திரிகையாளர். பல வருட ஆய்வுகளுக்குப் பிறகு காஷ்மீர் பள்ளத்தாக்கு குறித்து இவர் எழுதிய, 'எதிர்காலத்தைத் தேடி - காஷ்மீரின் கதை’ என்ற நூல்இன்றும் காஷ்மீர் தொடர்பான அரசியல், அறிவியல் ஆய்வு மேற்கொள்பவர்களுக்கு பரிந்துரைக்கப்படும்முக்கிய நூல்.
கடந்த 5-ம் தேதி இவர் போலீஸாரால் கார ணமே இன்றி தாக்கப்பட்டார்.  'என் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை’ என்று அச்சமும் வருத்தமும் தொனிக்க, தலைமை நீதிபதிக்கும், காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லாவுக்கும் அவர் கடிதம் எழுதி இருக்கிறார். அந்தக் கடிதத்தில் தனக்கு நேர்ந்த கதியை விளக்கி உள்ளார்.
''செப்டம்பர் 5, மாலை 6 மணி அளவில் ராம்பாக் பாலத்தை காரில் கடந்துகொண்டு இருந்தேன். போக்கு வரத்து நெரிசலால் வண்டி நகரமுடியாமல் இருந்தபோது எனக்குப் பின்னால் வந்துகொண்டு இருந்த காவலர்களின் மாருதி ஜிப்ஸி வண்டி என் வாகனத்தின் மீது மோதியது. அந்த வண்டிக்குப் பின்னால் தேசியக் கொடி பொருத்தப்பட்ட வெள்ளை நிற கார் ஒன்று. அதற்கும் பின்னால் இன்னொரு மாருதி ஜிப்ஸி. அவர்களை முன்னேறவிடாமல் என் வண்டி குறுக்கிடுவதாக நினைத்துக் கோபம்கொண்டார்கள். என் வண்டியை மோதி, இடது பக்கம் கட்டடித்து மிக வேகமாகச் சென்றார்கள்.
அடுத்த திருப்பம் ஒன்றில் போக்குவரத்து போலீஸார் என்னை நிறுத்தி விசாரித்தார்கள். அப்போது மறுபடி யும் அவர்கள் வந்தார்கள்.  என்னைத் தாக்கினார்கள்.   நான் ஒரு பத்திரிகையாளன் என்றேன். அதைக் கேட்டவுடனே, 'போலீஸ் ஸ்டேஷனில் உனக்குச் சரியான பாடம் கற்பிக்கிறோம்’ என்று சொல்லி மீண்டும் மீண்டும் தாக்கினார்கள்.  இந்த ஒரு நிகழ்வில் இருந்து, காஷ்மீரில் நீதிமன்றத்தின் உத்தரவுகள், சட்டத்தின் விதிகள், நடைமுறைகள் எல்லாம் எவ்வாறு போலீஸாரால் மீறப்படுகின்றன என்கிற நிதர்சன உண்மை என் முகத்தில் அறைந்தது!'' என்று அக்கடிதத்தில் கூறியுள்ளார்.
பத்திரிகையாளர் என்று சொன்னபிறகு அடிப்பவர் களை என்ன செய்வது?

பழசு இன்றும் புதுசு

நேற்றும் நமதே - 42: 3.9.86
ருபத்தோராம் நூற்றாண்டில் அடியெடுத்துவைப்பதா? இத்தனை காட்டு​மிராண்​டித்​தனத்​​துடனா?உசிலம்பட்டி​யைத் தொடர்ந்து நெஞ்சத்​தைப் பிழியும் (பெண்) சிசுக்களின் அபயக் குரல்கள் - குழந்தைகளைப் பிறந்தவுடனே கொல்லும் அசம்பாவிதங்கள் இன்னும் சில திசை​களில் ஒலிக்க, ஓடோடிச் சென்று பார்க்​கிறோம்.
 (உசிலம்பட்டி சுற்று வட்டாரத்தில் வரதட்சணைக் கொடுமைக்கு பயந்துகொண்டு, பெண் குழந்தை பிறந்தால் உடனே அதை சத்தம் போடாமல் தீர்த்துக்கட்டும் கொடுமை​யைப்பற்றி ஏற்கெனவே ஜூனியர் விகடன் 4.12.85 இதழில் ஒரு கவர் ஸ்டோரி வெளியிட்டோம்.)
தேனிப் பகுதி - வீரபாண்டியை அடுத்த கோட்டூர் கிராமம்... 'இதென்ன பெரிய காரியமா?’ என்ற அலட்சியத்தில் வழக்கம்போலவே சாதாரணித்திருந்தது.
எதிர்ப்பட்ட பாட்டியிடம் விசாரித்த​போது வித்தியாசமாக முறைத்தார். ''அதெல்​லாம் இப்ப கிடையாது... எங்க காலத்துக்கு முன்னாடி லேசுமாசா இருந்துச்சு. அவ்வளவுதான்...'' சொல்லிக்​கொண்டே போய்விட்டார்.
மற்றொரு கிழவியிடம் கேட்டபோது, ''ஐயையோ! நான் ஒண்ணுமே செய்​யலை...'' என்று சொல்லியபடியே விரைவாக நடந்துவிட்டார். ஊஹும்! சரிப்படாது, பேன்ட்டில் இருந்து கைலிக்​குள் புகுந்து, தோளில் ஒரு துண்டையும் போட்டுக்கொண்டோம். திண்ணையில் அமர்ந்து வெற்றிலை இடித்துக் கொண்டிருக்கும் முதியவருக்கு அருகே அமர்ந்தோம். சகஜமாக கொஞ்சம் நேரம் அரட்டை அடித்துவிட்டு மெதுவாக விசாரித்தோம்.
''இதெல்லாம் சாதாரணம்தான்பா... இப்போ போனாளே ஒரு கிழவி (நாம் இரண்டாவதாகச் சந்தித்தவர்) அவகூட நாலஞ்சு நாளைக்கு முன்னால தன் பேத்தியாளுக்குப் பெறந்த பொட்டப் புள்ளை​யைக் கொன்னா... இது நடக்காத வீடே கிடையாதுனு சொல்லலாம்.''
மேலும் விவரம் அறிய வேண்டும் என்பதற்காக ஊர்ப் பெண்களுக்குப் பிரசவம் பார்க்கும் பவானி என்ற பெண்மணியை அணுகினோம். பொன்னுச்சாமி ஆசிரியர் மற்றும் விவசாயி மாரிமுத்து ஆகியோரையும் சந்தித்தோம்.
''இந்த ஊரில் வீட்டுக்கு வீடு இந்தக் காரியம் நடக்கும்பா... வரதட்சணையா பவுனு, ரொக்கம் குடுத்துப் பொட்டப் புள்ளையை என்னத்தைக் கட்டிக் குடுக்கப் போறோமோன்னு பயந்துக்கிட்டே இப்படிச் செஞ்சிருதுக.
ராத்திரி புள்ளை பெறந்தா, காலைக்குள்ள செத்துக் கெடக்கும்... போயிப் பார்த்தா, ரத்தம் கசிஞ்சு இருக்கும். அல்லது நெல்லு மணி ஒட்டியிருக்கும். இம்புட்டு என்னதுக்கு... ஒண்ணு ரெண்டு புள்ளைகளுக்கு மேல குழந்தை பெறந்ததும் சாவுதுன்னாலே இப்படித்தான்னு வெச்சுக்கோங்களேன்... வெளியூர்க்காரங்க யாரும் கேட்டா, 'தெக்குஹ்தி நோயி’ல செத்துப் போச்சுனு சொல்லிருவாக.
படிக்கிற புள்ளைகளுக்கு எல்லாம் இங்க கல்யாணம் செஞ்சு வெச்சிருவாக. அவளுக மாசமா இருந்தாளுகன்னா, ரெண்டு மாசம் லீவைப் போட்டுட்டுக் குழந்தையைப் பெத்துக் கொன்னுட்டு மறுபடியும் பள்ளிக்கூடத்துக்குப் போயி​ருவாளுக, இதுமாதிரி எத்தனையோ நடந்திருக்கு...'' என்றார்கள்.
பால்வாடியில் வேலை செய்யும் சீனியம்மா, பிரசவத் தொழில் பார்க்கும் சின்னத்தாய், பெட்டிக்கடை வைத்திருக்கும் ராக்கம்மாள் ஆகியோ​ரையும் சந்தித்தோம்.
''கட்டுப்பாடு (குடும்பக் கட்டுப்பாடு) பண்ணிக்கிட்டாலோ அல்லது கழிச்சுக்கிட் டாலோ (அபார்ஷன்) உடம்பு கெட்டுப்போய் வேலை செய்ய முடியாதாம். அதனால யாரும் அப்படிச் செய்றதில்லை. 'குடும்பக் கட்டுப்பாடு செய்ய கோட்​டூரில் யாரும் வரமாட்​டாங்க’ங்கற விஷயம் மேலிடத்து வரைக்கும் தெரியுமாம். தொடர்ந்து பெறந்துச்​சுன்னா... பொண்ணா இருந்தாலும் சரி, ஆணா இருந்தாலும் சரி, கொன்னுருவாக.
பணக்காரங்க, படிச்சவங்க கூட இதைச் சாதாரணமா செய்வாங்க... கொஞ்ச நாளைக்கு முன்​னாடி இந்த ஊர் டாக்டர் ஒருத்தர்கூட தன் குழந்தையைக் கொன்னுருக்கார்...
இந்த ஊருப் பொம்பளைக இதை ரொம்ப சாதாரணமா எடுத்துக்குவாங்க. இடுப்பு வலிக்கிற நேரம் சங்குல நல்லெண்ணெய் எடுத்துட்டு ஓடைப் பக்கம் போயி அங்கனயே புள்ளையைப் பெத்து எருக்கம்பாலைப் புடிச்சுக் குடுத்துட்டு வீட்டுக்குத் திரும்புன தாய்மார்களும் இருக்காங்க...'' என்றார்கள். மற்றும் சிலரை சந்தித்தபோது, ''எங்க குழந்தைகளை நாங்களே கொன்னோம்...'' என்று ஒப்புக்​கொண்டார்கள்.
சிலர், ''பெறுவதற்கு எப்படி உரிமை இருக்கிறதோ அதுபோல் கொல்வதற்கும் உரிமை இருக்கிறது'' என்றும், மற்றும் சிலர், ''கொழந்தைக பட்டினியால துடிக்கும்போது வரமாட்டாங்க... இப்போ மட்டும் ஓடி வந்துருவாங்க!'' என்றெல்லாம் கோபத்துடன் கூச்சல் போட்டார்கள்.
இன்னொரு பெண்மணி, ''ஒரு புள்ளை இடுப்புல இருக்கு... இன்னொரு புள்ளை வக்கலிக்குது (சத்தியமாய் நமக்கு அர்த்தம் புரியவில்லை)... மூணாவதா வயித்துலயும் ஒண்ணுன்னா, புள்ளையப் பாலை யாருக்குன்னு பிரிச்சுக் குடுப்போம்? வேற வழியே இல்லாமத்தான்யா இப்படிச் செய்றோம்...'' என்று அழாக்குறையாக முறையிட்டார்.
இவர்கள் மீது கோபப்படுவதா அல்லது அனுதாபப்படுவதா என்று புரியாமலேயே இடிந்துபோய் வெளியேறுகிறோம்.
பூதிப்புரம் பகுதி வாழை​யாத்துப்பட்டியிலும் இதே கொடுஞ்செயல் நடை​பெறு​வதாகக் கேள்விப்​பட்டவுடனே புறப்பட்டுச் சென்றோம்.
மருத்துவச்சியாகப் பணிபுரியும் கும்மியம்மா என்பவரை சந்தித்தோம். ''எங்க ஊர்ல ஆம்​பளைப் புள்ளைன்னா அப்படிச் செய்ய மாட்டாக சாமி. ஆனா, பொட்டைப் புள்ளைன்னா செஞ்சிருவாக. புள்ளையை இழுத்துப் போட்டதும் என் கையாலேயே அப்படிச் செய்யச் சொல்லுவாக. எனக்குப் பாவமா இருக்கும். நீங்களே குடுங்கன்னு வந்துருவேன். இந்த ஊர்ல எல்லா வீட்டுலையும் செய்திருக்காக சாமி...'' என்று கூறினார்.
மொக்கச்சாமி, மாயழகன் என்ற கிருஷ்ணன் ஆகியோரை சந்தித்தோம். கோட்டூர் சங்கதிகள் அப்படியே இங்கும் நடைபெறுவதாகக் கூறினார்கள். 'இந்த விஷயம் ஒரு பொதுவான உண்மை. ஒவ்வொரு வீட்டிலும் நடக்கக் கூடியது’ என்பதை வலியுறுத்திக் கூறினார்கள். அவர்கள் கேட்ட விதம், 'எங்கே இந்த ஊரில் அப்படி நடக்காத ஒரு வீட்டைக் காட்டுங்கள் பார்க்கலாம்’ என்பதுபோலவே தோன்றியது.
''இது பன்னிரண்டு நாட்களுக்கு முன் குழந்தை இறந்த வீடு'', ''இது பதினெட்டு நாட்களுக்கு முன் குழந்தை இறந்த வீடு'' என்று சிலர் அறிமுகப்படுத்தினார்கள். வீட்டுக்காரர்களும் 'ஆமாம்’ என்று ஒப்புக்கொண்டார்கள்.
அரசு இதனைத் தொடர்ந்து அனுமதித்தால், அதை 'ஹிட்லா’ தனத்தைவிடக் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. மேன்மேலும் மௌனம் சாதிக்காமல், அட்லீஸ்ட் இதோ இதை வாசித்துக் கொண்டிருக்கும் இந்த விநாடிகளில், அங்கு நிகழும் கொலைகளையாவது தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டாமா?
ராணுவ ரகசியம்!
கோட்டூர் கிராமத்தில் பெண் குழந்தைகளை ஒட்டுமொத்தமாகக் கொலை செய்யும்போது - குழந்தை​களின் பிறப்பு இறப்பு - விகிதத்தில் மாறுபாடு இருக்க வேண்டுமே என்ற எண்ணத்தில் உரிய அதிகாரிகளைச் சந்தித்துக் கேட்டோம். அவர்கள் என்னவோ பெரிய ராணுவ ரகசியத்தைப் பாதுகாப்பதுபோல, ''மேலிடத்து உத்தரவு இல்லாமல் எந்த விவரமும் தரமுடியாது!'' என்று மறுத்துவிட்டார்கள். வெளியே வந்து, படித்த சிலரிடம் கேட்டபோது, இந்தக் கிராமத்தில் மாதத்துக்கு சராசரியாக 17 குழந்தைகள் பிறப்பதாகவும், அதில் 11 குழந்தைகள் 'இறந்துவிடுவதாகவும்’ தெரிவித்தார்கள்.
மேன்மேலும் விசாரித்தபோது, நமக்காக மற்றோர் அதிர்ச்சி தரும் உண்மை காத்துக் கொண்டிருந்தது. கொலை செய்யப்பட்ட பெண் குழந்தைபற்றி மேலிடத்துக்குத் தகவல் கொடுக்கும்போது 'ரீஸன்’ என்று கேட்டிருக்கும் பகுதியில் 'சோஷியல் காஸ்’ என்று எழுதி அனுப்புவார்களாம். ஒரு முறை ஆண் குழந்தை ஒன்று இவ்வாறு கொல்லப்பட்டபோது, அதுபோலவே 'சோஷியல் காஸ்’ என்று எழுதி அனுப்பி இருக்கிறார்கள். ஆனால், 'ஆண் குழந்தைகளுக்கு 'சோஷியல் காஸ்’ என்று காரணம் கொடுத்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்று திருப்பி அனுப்பிவிட்டார்களாம். ஆக மொத்தம், இந்த அரக்கத்தனமான கொலை நிகழ்ச்சிகள் மேலிடத்துக்குத் தெரிந்து, அவர்கள் நல்லாசியுடன்தான் நடந்து வருகின்றன நமது நாட்டில்!

மிஸ்டர் மியாவ்: சமந்தா 3

ஒரே சமயத்தில் மூன்று மொழிகளில் 'நீதானே எந்தன் பொன் வசந்தம்’ படத்தை இயக்குகிறார் கௌதம் மேனன். தமிழில் ஜீவா, தெலுங்கில் ராம், இந்தியில் ஆதித்யா ராஜ்கபூர். மூன்று மொழிகளிலும் முழி அழகி 'பாணா காத்தாடி’ சமந்தா!

 நினைத்தது கிடைக்கவில்லை என்றாலும் நினைக்காதது கிடைத்த சந்தோஷத்தில் இருக்கிறார், ஏ.எம்.ரத்னம். விஜய் படத்தைத் தயாரிக்கக் காத்திருந்தவருக்கு, கால்ஷீட்டை தானே முன்வந்து கொடுத்து இருக்கிறார் அஜீத்!
 சிம்புதேவன் இயக்கும் படத்தில், தேவர்களும் அசுரர்களும் பாற்கடல் கடைந்து அமிர்தம் எடுக்கும் இதிகாச நிகழ்ச்சியை லேட் டஸ்ட் ட்ரெண்ட்டில் உருவாக்கி வருகிறார் சிம்பு. புராணத்தில் தேவர்கள் வெற்றிபெற்றாலும், சினிமாவில் ஜெயிப்பது 'அசுர குல’ தனுஷ்!
மிஸ் மலர் வளையம்,  மிஸ்டர் வெற்றியுடன் வெறிகொண்டு வெளியே சுற்றுகிறார். 'இன்னும் நாலு காசு சம்பாதிக்கலை... செட்டில் ஆகலை... அதுக்குள் எதுக்குத் தாலிக் கயிறு?’ என்று மகளுக்கு மூக்கணாங்கயிறு போடுகிறாராம் தாய்க்குலம்!

அரசியல் என்றாலே நடிகையின் ஆத்துக்காரருக்கு அலர்ஜி. அப்படி இருந்தும் பெரியவர் உத்தரவு போட்டதால், நான்கெழுத்துத் தொலைக்காட்சியில் வேண்டா வெறுப்பாகத் தலையைக் காட்டினாராம்!

********************************************************************************************

0 comments:

Post a Comment

Puthiya Thalaimurai TV