********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

சென்ற வார செய்திகள் (21 செப்டம்பர் 2011)

Tuesday, September 20, 2011மிஸ்டர் கழுகு: இது ரெய்டு வாரம்!

சுழலுது லஞ்ச ஒழிப்பு சாட்டை... தொடங்குது பினாமிகள் வேட்டை...
ழுகார் வருகைக்காகக் காத்திருந்தோம். செல்போன் சிணுங்கியது... ''கிரீன்வேஸ் சாலையில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலக
ஏரியாவில் இருக்கிறேன். அரை மணி நேரத்தில் வருவேன்!'' - சஸ்பென்ஸ் வைத்துத் தொடர்பைத் துண்டித்தார்.
சொன்னபடியே வந் தார். ''தி.மு.க. வி.ஐ.பி-கள் மீது போலீஸ் வழக்குப் பதிவு செய்வது எந்த அளவில் இருக்கிறது?'' என்று கேட்டுவிட்டு, அவரையே பார்த்தோம்.
''நில அபகரிப்புப் புகார் களின் பேரில் கைதானவர்கள் எண்ணிக்கை 100-க்கும் மேல். குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு டஜன் பேர் கம்பி எண்ணுகிறார்கள். இதைத் தொடர்ந்து, 'கருணாநிதி குடும்பத்தினர் நேரடியாக சம்பந்தப்பட்ட புகார்கள் என்னென்ன வந்திருக்கின்றன?’ என்று ஆட்சி மேலிடத்தினர் கேட்டார்களாம். போலீஸ் அதிகாரிகள் மிகப் பெரிய பட்டியலை வாசித்தார்களாம். கருணாநிதியின் மகள் செல்வியின் மருமகன் ஜோதிமணி பெயர் டிக் செய்யப்பட்டு உள்ளது. சென்னை தி.நகரில் ஒரு இடப் பிரச்னையில் பண மோசடி செய்ததாக வந்த புகாரை உடனே பதிவு செய்துவிட்டார்கள். மேலும் பலர் மீது இந்த ரீதியில் வழக்குகள் தொடருமாம்...''
''முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு அண்ட் பிரதர்ஸ் மீது லேட்டஸ்ட்டாக, வருமானத்துக்கு மேல் சொத்துக் குவிப்பு வழக்குப் போட்டு ரெய்டு நடத்தினார்களே... அடுத்து இந்த ரூட்டில் யார் மீது நடவடிக்கை?''
''ஜெயலலிதாவைத் தரக்குறைவாக விமர்சித்த தி.மு.க. பிரமுகர்கள் யார் யார் என ஒரு பட்டியல் ரெடியாகி இருக்கிறது. அதில், முன்னாள் அமைச்சர் நேரு பெயர்தான் முதலில் டிக் ஆனதாம். அடுத்து, பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஐ.பெரியசாமி, பொங்கலூர் பழனிச்சாமி, எ.வ.வேலு... இப்படி சீனியாரிட்டியின் பேரில் ரெய்டு நடக்குமாம். அடுத்து ஒவ்வொருத்தராக வரப்போகிறார்கள். உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம் சூடாக நடக்க ஆரம்பித்ததும், போலீஸாரின் இந்த ரெய்டும் அதிகமாக இருக்குமாம். அதன் முன்னோட்டமாக இந்த வாரத்தில் ரெய்டு காட்சிகள் அரங்கேறப்போகின்றன. மேலும், முன்னாள் மந்திரிகளின் பினாமிகள் பட்டியல் எடுக்கப்பட்டு உள்ளது. அவர்களது வீடுகளிலும் அதே நேரத்தில் ரெய்டுகள் இருக்குமாம். இதை அறிந்து பல பினாமி மனிதர்கள், வெளிநாடுகளுக்குத் தப்பி ஓடுகிறார்கள். இந்த நேரத்தில், இன்னொரு சர்ப்ரைஸும் நடந்ததாம்...''
''என்ன?''
''அந்தப் பட்டியலில் இல்லாத மும்மூர்த்திகள் மீதும்கூட வருமானத்துக்கு மேல் சொத்துக் குவித்ததாக வழக்குகள் பாயலாம்!''
''யார் அவர்கள்?''
''கடந்த தி.மு.க. ஆட்சியில் 'டிராலி பாய்ஸ்’ என்று வர்ணிக்கப்பட்ட போலீஸ்காரர்கள் பாண் டியன், வினோதன், கணேசன்... இந்த மூவர் பற்றி ஆட்சி மேலிடத்தில் இருந்து லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் மகேந்திரனுக்கு சில உத்தரவு வந்ததாம். 'ஹோடா முதல் ராஜவேல்' வரை ரகசிய பாஷை உச்சரிக்கப்பட்டதாம். 'பதவி உயர்வுகளில் ஏதாவது சலுகை காட்டப்பட்டதா? அவர்கள் சொல்லிப் போடப்பட்ட 'டிஸ்டர்ப்டு' டிரான்ஸ்ஃபர் விவரங்கள், நில, இட, அபார்ட்மென்ட் தொடர்பான கட்டப் பஞ்சாயத்துகளில் தலையீடு இருந்ததா?’ என்கிற பல்வேறு கோணங்களில் வந்து குவிந்த புகார்களை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் டீம் முழுவதுமாக ஸ்கேன் செய்து முடித்துவிட்டார்கள். ஒரு பல்கலைக்கழகத் துணைவேந்தரை மிரட்டிய விவகாரத்தின் பின்னணி விரைவில் வெளிவரலாம்.''
''இந்த மும்மூர்த்திகள் மீது ஆட்சியாளர்களுக்கு ஏன் திடீர் கோபம்?''
''கடந்த ஆட்சியில் அவர்கள் போட்ட தப்பு ஆட்டத்தால் டார்ச்சர்களைச் சந்தித்த அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் எல்லோரும் ஒர் அணியில் திரண்டு, தற்போதைய ஆட்சி மேலிடத்தின் காதில் விழும் அளவுக்குப் புலம்பி இருக்கிறார்கள். அதைத் தொடர்ந்துதான், இந்தப் பச்சைக் கொடி. ஆனால், மேலிடத்தின் உத்தரவைவைத்து லஞ்ச ஒழிப்புத் துறையின் முக்கிய அதிகாரி ஒருவர் எந்த அளவுக்கு முழுமையாகவும் சுறுசுறுப்பாகவும் நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பது புரியாத புதிராக இருக்கிறது. பொதுவாக, லஞ்ச புகார் விவகாரங்களில், லஞ்ச ஒழிப்புத் துறையின் உயர் அதிகாரிகள் மூன்று பேர் ஆலோசனை நடத்தி முடிவுகளை செயல்படுத்துகிறார்களாம். மேற்கு மண்டலத்தில் இருக்கும் ஒரு அதிகாரி, இந்த மூவருக்குள் பனிப் போர், மோதல் என்றெல்லாம் வதந்திகளைப் பரப்பி சிண்டு முடியும் வேலையைச் செய்துவருகிறாராம். இவரின் பேக்-கிரவுண்டில் இருக்கிறவர்கள் பற்றியும் ரகசிய விசாரணை நடக் கிறது.''
''அங்கேயும் பாலிடிக்ஸா? சரி... பெங்களூரு கோர்ட்டில் நடந்து வரும் சொத்துக் குவிப்பு வழக்கு என்ன ஆகும்?''
''தீர்ப்பு ஜெயலலிதாவுக்கு எதிராக இருக்கப் போவதாகவும், சசிகலா இடைக்கால முதல்வர் ஆகப் போகிறார் என்றெல்லாம் வதந்தி இறக்கை கட்டிப் பறக்கிறது. அந்த வழக்கு க்ளைமாக்ஸை எட்டவே பல மாதங்கள் ஆகலாம் என்று ஆளும் தரப்பு சொல்ல ஆரம்பித்துள்ளது. ஜெயலலிதா அக்டோபர் 20-ம் தேதி அங்கே  ஆஜரான பிறகு அவரிடம் கேள்விகள் கேட்கும் படலம் துவங்கும். பல நூறு கேள்விகள் அணிவகுத்து நிற்கும். இந்த சட்ட சம்பிரதாயங்கள் முடிவதற்கே பல மாதங்கள் ஆகும் என்று சொல்ல ஆரம்பித்துள்ளனர். பெங்களூரு என்றவுடன் இன்னொரு நியூஸ் ஞாபகம் வருகிறது...''
''சொல்லும்!''
''கடந்த மூன்று மாதங்களில் இரண்டு முறை பெங்களூரு தொழிலதிபர் ஒருவர் தமிழக எல்லையில் உள்ள அவரது கெஸ்ட் ஹவுஸில் இருந்து காரில் புறப்பட்டு, சென்னை வந்து தமிழகத்தின் உச்சத்தில் இருப்பவரை சந்தித்து பேசிவிட்டுப்போனாராம். என்ன பிசினஸ் பேச்சுவார்த்தையோ?'' என்று நிறுத்திய கழுகார்... ''ஹீரோ ஒருவருக்கும் பிரச்னை வரலாம்!'' என்றார்.
அடுத்து அவர் சொல்லப்போவதை உற்றுக் கவனித்தோம்!
''தமிழகத்தில் உள்ள நடிகர் கம்  அரசியல் தலைவர் சவாரி, ஊருடுவல் செய்வதில் கில்லாடி. அவர். சமீபத்தில் இலங்கைக்கு விசிட் சென்றார். அத்தோடு நிற்கவில்லையாம். வேறு சில நாடுகளுக்குப் பயணம் செய்துவிட்டு, இறுதியாக இத்தாலி நாட்டுக்கு அருகில் உள்ள சிசிலி தீவுக்குப் போய் வந்ததாக ஒரு தகவல். கறுப்புப் பண முதலீடு, ரியல் எஸ்டேட் பிசினஸ், நிலத்தில் முதலீடு... இப்படியான விஷயங்களுக்கும் சிசிலி தீவு பிரசித்திபெற்றது என்பது தெரியும். ஆனால், இந்தக் கில்லாடிக்கும் சிசிலிக்கும் என்ன லிங்க் என்று மத்திய உளவுத் துறையினர் என்று குடைந்துகொண்டு இருக்கிறார்கள்''
''எதற்காகப் போனாராம்?''
''அந்தக் கில்லாடி, இப்போது எதிர்க் கட்சிப் பிரமுகருடன் பாசப் பிணைப்பில் இருக்கிறாராம். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கியுள்ள அந்தப் பிரமுகர் தன்னிடம் உள்ள பெரும் தொகையை சிசிலி தீவுக்கு ஹவாலா முறையில் பணப் பரிமாற்றம் செய்ய ஏற்பாடு செய்தாராம். ஆனால், ஒரேயரு முறை, அந்த பணத்தை முதலீடு செய்பவர் நேரில் ஆஜராக வேண்டுமாம். அவரின் பினாமியாகத்தான் இந்த கில்லாடி சிசிலி தீவு சென்று வந்தாரா? அல்லது, இவரது பெயரிலேயே அந்தப்  பிரமுகர் முதலீடு எதுவும் செய்தாரா என்கிற கோணத்தில் உளவுத் துறை விசாரணை நடக்கிறது'' என்ற கழுகார், கூட்டணி வெட்டுக்குத்துகள் பக்கம் வந்தார்!
''தனது கூட்டணியில் இருக்கும் யாரையும் கலந்து ஆலோசனை செய்யாமல், மேயர் மற்றும் நகராட்சித் தலைவர் பதவிகளுக்கான வேட்பாளர்களை தன்னிச் சையாக அறிவித்தார் ஜெயலலிதா. தே.மு.தி.க. கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டம் பற்றி  உமது நிருபரே கடந்த இதழில் எழுதி இருந்தார்.  கூட்டணிக் கட்சிகளுடன் பேசுவதற்கு ஓ.பன்னீர்செல்வம், செங் கோட்டையன், நத்தம் விஸ்வநாதன் ஆகிய மூவரைக்கொண்ட குழு அமைத்திருந்தார் ஜெயலலிதா. ஆனால் அவர்கள் எந்தக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தவே இல்லை. ஆனால் வெள்ளிக்கிழமை, மாநகராட்சி மேயர் பட்டியல் வந்தது. அடுத்த நாள் நகராட்சிப் பட்டியலும் பாதி வந்தது. திங்கள் கிழமை அதையும் பூர்த்தி செய்தார். இதைக் கேள்விப்பட்டு விஜயகாந்த்தும் கம்யூனிஸ்ட்களும் வெலவெலத்துப்போனார்கள். அதன் பிறகுதான் கம்யூனிஸ்ட்களை மட்டும் அழைத்து அ.தி.மு.க. குழு பேசியது. 'அறிவிக்கப்பட்ட பட்டியல் இறுதி ஆனது அல்ல’ என்றும் அவர்கள் சொல்லி விட்டுப் போனார்கள். ஆனால், விஜயகாந்த் கட்சியை அழைக்கவே இல்லை!''
''ம்!''
''புதிய தமிழகத்தையும் அ.தி.மு.க. அழைக்கவில்லை. மனிதநேய மக்கள் கட்சிக்கும் அழைப்பு இல்லை. இதனால் கோபம் அடைந்த மார்க்சிஸ்ட் தலைமை, திங்கள் கிழமை காலையில் தொடங்கி மாலை வரை விவாதங்களில் மூழ்கியது. 'எங்களிடம் கேட்காமல் எப்படி இடங்களை அறிவிக்கலாம்?’ என்று மார்க்சிஸ்ட் தலைமை கேட்டதாகவும், 'சில இடங்களை உங்களுக்கு அம்மா விட்டுக்கொடுப்பார். பொறுத்திருங்கள்’ என்று குழுவினர் சொன்ன தாகவும், 'அறிவிக்கப்பட்ட அ.தி.மு.க. வேட்பாளர்கள் எங்களுக்காக இனி வேலை பார்ப்பார்களா?’ என்று திருப்பிக் கேட்டதாகவும் 'அம்மா சொன்னால், எல்லாமே சாத்தியம்தான்’ என்று அவர்கள் மறுமொழி சொன்னதாகவும் சொல்கிறார்கள். பேச்சு வார்த்தையில் இருந்த பன்னீர், செங்கோட் டையன், நத்தம் ஆகிய மூவரையும் திங்கள் கிழமை சென்னையில் காண வில்லை. 'தொகுதிக்குப் போயிட்டாங்க’ என்று தலைமைக் கழகத்தில் தகவல் சொல்கிறார்கள். இந்த நேரம் பார்த்து, பேரூராட்சித் தலைவர் பொறுப்புக்கான வேட்பாளர்களின் பட்டியலை ஜெயலலிதா அறிவித்தார். கம்யூனிஸ்ட்கள் இதைப் பார்த்து இன்னும் கலங்கினார்கள். திங்கள் கிழமை இரவு  நிலவரப்படி யாரையுமே கூட்டணிக்குள் வைத்துக் கொள்ளும் மன நிலையில் ஜெயலலிதா இல்லை!'' என்றபடி கிளம்பினார் கழுகார்!
படம்: கே.கார்த்திகேயன்
 
பரமக்குடி கலவரத்தைத் தூண்டியது இவர்களா?
பரமக்குடி கலவரத்தின் பின்னணி இதுதான் என்று வந்த ரகசிய செய்தியை உளவுத் துறை  கிராஸ் செக் செய்து வருகிறது. ''தற்போது தென் மண்டல ஐ.ஜி-யாக இருக்கும் ராஜேஷ் தாஸைப் பழிவாங்கும் வகையில் இந்த கலவரம் தூண்டிவிடப்பட்டது. கடந்த ஆட்சியில் ராஜேஷ் தாஸ், திருவள்ளுவர் மாவட்ட எஸ்.பி-யாக இருந்தபோது ஒரு போலீஸ் அதிகாரியால் கடுமையாக பழிவாங்கப்பட்டு ஓரம் கட்டப்பட்டார். ஒரு வழியாக இப்போதுதான் தென் மண்டல ஐ.ஜி-யாக செட்டில் ஆகி இருக்கிறார். அந்தப் பகை இப்போதும் தொடர்வதால் அவரைக் கவிழ்க்கும்படியாக இந்தச் சதித் திட்டம் தீட்டப்பட்டதாம். கலவரம் நடந்த சில நாட்களுக்கு முன் ஒரு மாவட்டத்தின் எஸ்.பி., ஓர் உயர் அதிகாரி, தலித் தலைவர் ஒருவர் ஆகிய மூவரும் களியக்காவிளையில் இருக்கும் ஒரு விருந்தினர் மாளிகையில் ரகசியமாக சந்தித்தார்கள். அங்குதான் கலவரத் திட்டம் உருவானது!'' என்கிறதாம் அந்த போலீஸ் நோட்!
  தேர்தல் அறிவிப்பு தாமதம் ஏன்?
உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு தாமதத்துக்கான காரணங்கள் என பல்வேறு கருத்துகள் வெளியாகின. உண்மைக் காரணம், உயர் நீதிமன்றம் விதித்திருந்த இடைக்காலத் தடைதான். கடந்த தி.மு.க. ஆட்சியில் எட்டு மாநகராட்சிகளுடன் அருகில் உள்ள நகராட்சிகள், ஊராட்சிகள், பேரூராட்சிகளை இணைத்து, இயந்திரகதியில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. உள்ளாட்சி மாற்றப்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்களின் கடும் எதிர்ப்புக்கு இடையிலும் இது நடந்து முடிந்தது. இதில், திருச்சியுடன் திருவெறும்பூர் நகராட்சியைச் சேர்த்ததை எதிர்த்த வழக்கில், தேர்தல் தேதியை அறிவிப்பதற்கு, உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இந்த வழக்கில் கடந்த 19-ம் தேதியன்று உத்தரவு வரலாம் என எதிர்பார்ப்பு நிலவியது. இதையட்டி, அன்று மாலையில் மாநிலத் தேர்தல் அதிகாரிகளின் கூட்டத்தை மாநிலத் தேர்தல் ஆணையர் சோ.அய்யர் கூட்டியிருந்தார். தேதி அறிவிப்புக்கு முன்பு, மாநிலத் தேர்தல் அதிகாரிகளான நகராட்சி நிர்வாக ஆணையர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர், பேரூராட்சிகள் துறை ஆணையர் ஆகியோரின் கூட்டத்தைக் கூட்டுவது வழக்கம். ஆனால், தமிழகமே எதிர்பார்த்த இந்த வழக்கு, 19-ம் தேதி பிற்பகல் 3.15 மணிக்கு விசாரணைக்கு வந்தபோது, மறுநாள் பிற்பகல் 3.15 மணிக்கு விசாரணையைத் தள்ளிவைத்தார் நீதிபதி கிருபாகரன். இதனால், மூன்று துறைகளின் ஆணையர் கூட்டமும் தள்ளிவைக்கப்பட்டது. மற்ற எல்லாரையும்விட தேர்தல் பணியில் உள்ளவர்கள்தான், இதில் மண்டை காய்ந்துபோனார்கள்!
 ஏர்போர்ட்டில் பாய்ந்த உளவு வேல்..!
சொத்துக் குவிப்பு வழக்குகளுக்கு நடுங்கி 'வெயிட்டான' சில வஸ்துக்களையும் ஆவணங்களையும் வெளிநாட்டில் பதுக்கும் வேலையில் சுறுசுறுப்பாக இறங்கியிருக்கிறார்களாம் சில 'முன்னாள்'கள்! இதை மோப்பம் பிடித்த தமிழக உளவுத் துறை, விமான நிலைங்களை கண் கொத்திப் பாம்பாக கண்காணிக்கத் தொடங்கியிருக்கிறது. சென்னை விமான நிலையத்தில் டிரான்ஸ்பரே இல்லாமல் பதினைந்து வருடத்துக்கு மேலாகப் பணி புரியும் மத்திய அரசு நபர் ஒருவரையும் தங்கள் உஷார் பார்வைக்குள் கொண்டு வந்திருக்கிறார்களாம். ''இவர் டியூட்டி நேரத்திலேயே தடுமாற்றமாக ஏர்போர்ட்டுக்குள் வளைய வருவதில் பிரசித்தமானவர். தனக்கு எதிராக துறை ரீதியாகப் புகார் எழும்போதெல்லாம், மத்திய உளவுப் பிரிவின் சிவ-விஷ்ணு அதிகாரி பெயரை இழுத்து தப்பிவிடுகிறார். இப்போது தி.மு.க-வைச் சேர்ந்த முக்கிய வி.ஐ.பி-க்கள் சிலர் இவரது பலவீனங்களைப் பயன்படுத்தி ஈஸியாக கைக்குள் போட்டுக்கொண்டு விட்டார்கள். இதனால், விமான நிலைய கெடுபிடிகளை மீறி வில்லங்கமான சில ஆவணங்கள் சத்தமில்லாமல் கடல் கடந்து பறந்து போவதாக சந்தேகப்படுகிறோம்!'' என்று தமிழக அரசு மேலிடத்துக்கு  'அலர்ட் நோட்' போட்டிருக்கிறார்களாம் உளவுப் பிரிவினர்.
**********************************************************************************
கழுகார் பதில்கள்

முனியசாமி, தஞ்சை.
 பிச்சைக்காரர்களுக்குக் காசு போடுவதுபற்றி எனக்கும் என் நண்பனுக்கும் தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் உண்டு. 'அவங்களுக்கு காசு போட்டு உழைக்கவிடாமல் கெடுக்கிறாய்’ என்கிறான் நண்பன். உங்கள் கருத்து என்ன?
'நான் ஒரு பிச்சைக்காரன்’ என்று சொல்லிக்கொண்ட யோகி ராம் சுரத் குமார் என்ன சொல்கிறார் என்று கேளுங்கள்...
'பாரத தேசத்தில் பிச்சை எடுப்பது என்பது சட்ட விரோதக் குற்றம் அல்ல. வேதங்களே பிச்சைக்காரர்களை அனுமதித்து உள்ளது. பெரும் ஞானாசிரியர்கள் பிச்சைக்காரர்கள் வடிவில்தான் வருவார்கள். ஆனால், ஞானாசிரியர்களைப் பிற பிச்சைக்காரர்களில் இருந்து பிரித்து அறிவது என்பது மிகவும் கடினம். நீங்கள் ஐரோப்பாவைப்போல இந்தியாவை மாற்ற விரும்பினால், பெரிய ஞானிகள் இங்கு தோன்ற மாட்டார்கள்.
நீங்கள் ஒரு வேளை உணவை ஒரு பிச்சைக்காரனுக்கு அளித்தால், அவன் அதனால் கோடீஸ்வரனாக ஆக மாட்டான். நீங்களும் உங்கள் செல்வத்தில் ஏதும் இழந்துவிட மாட்டீர்கள்!’
 கு.ராஜசேகர், மேலூர்.
'தனியாக நிற்கப்போகிறேன்!’ என்று கருணாநிதி அறிவித்திருப்பது அவரது தைரியத்தைத்தானே காட்டுகிறது?
காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலுவும் 'நாங்கள் தனியாகத்தான் நிற்கப்போகிறோம்’ என்கிறார். சேர்ந்து நின்றாலும் பிரயோஜனம் இல்லை என்பதை உணர்ந்ததால்தான், இந்த முடிவு. இதற்குக் காரணம், தைரியமோ, ராஜ தந்திரமோ அல்ல. இயலாமை, முடியாமை, போதாமை!
 ராஜாராம், நெல்லை.
கூடங்குளம் அணு மின் திட்டத்தை எதிர்த்து அப்பகுதி மக்களின் தொடர் உண்ணாவிரதம்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பொது மக்களின் சந்தேகங்கள் அனைத்தும் தீர்க்கப்பட்ட பிறகுதான், அடுத்த கட்ட முயற்சியை அந்த நிர்வாகமும் மாநில அரசும் செய்ய வேண்டும். மின்சாரம் தேவைதான். அதற்காக கண்ணை விற்றுச் சித்திரம் வாங்குவதைப்போல உயிர்ப் பலிகளைக் கொடுத்து மின்சாரம் தயாரிக்கலாமா?
 முருகேசன், திருவள்ளூர்.
'ஜான்பாண்டியனுக்கு அனுமதி கொடுத்திருந்தால் 7 உயிர்கள் போயிருக்காது’ என்கிறாரே கருணாநிதி?
இது உண்மைதான்! தூத்துக்குடியில் இருந்து கிளம்பிய ஜான்பாண்டியனுக்கு முன்னால் இரண்டு போலீஸ் ஜீப், பின்னால் இரண்டு போலீஸ் ஜீப்பைவிட்டு... அவரை இம்மானுவேல் சேகரன் நினைவகத்துக்கு அழைத்து வந்து மறுபடியும் தூத்துக்குடிக்குக் கொண்டு போய் விட்டிருந்தால்... இந்த துப்பாக்கிச் சூடு அவசியமா? ஆயிரக்கணக்கான போலீஸாரை பரமக்குடியில் குவிப்பதற்குப் பதிலாக 20 பேரை ஜான்பாண்டியனுடன் விட்டிருந்தால், இந்த விபரீதம் நடந்திருக்குமா? போலீஸ் அதிகாரிகள்தான் தவறான முடிவு எடுத்துவிட்டார்கள் என்று நினைத்தோம். ஆனால், முதல்வர் விடும் அறிக்கைகளைப் பார்த்தால், அவரும் அத்தனை சம்பவங்களுக்கும் பொறுப்பேற்கத்தான் வேண்டும்!
வணங்காமுடி, திருப்பூர்.
நில மோசடித் தடுப்புப் பிரிவையே ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கு தாக்கல் செய்துள்ளதே தி.மு.க.?
ஏன், காவல் துறையையே கலைத்துவிடலாம் என்று வழக்குப் போட்டிருக்கலாமே?
 சிவசுப்பிரமணியன், கும்பகோணம்.
நரேந்திர மோடியைப் புகழ்ந்து தள்ளுகிறதே அமெரிக்கா?
இந்தியாவின் அடுத்த பிரதமர் அவர்தான் என்று கண்டுபிடித்துள்ளது அமெரிக்கா. அந்த நாட்டின் நாடாளுமன்ற ஆய்வுக் குழு என்ற கட்சி சாரா அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் அடுத்த தேர்தலில் பிரதமர் வேட்பாளராக ராகுலும் மோடியும்தான் இருப்பார்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது. ராகுல் பெயரைச் சொல்வதால், மன்மோகன் ஆட்களுக்குப் பிடிக்கவில்லை. மோடி பெயரைச் சொல்வதால், சுஷ்மா சுவராஜ் மாதிரியான வட்டாரத்துக்குப் பிடிக்கவில்லை. மோடியின் மூன்று நாள் மெகா பட்ஜெட் உண்ணாவிரதம் அதற்கான ஆரம்பம்தான்!
 சுதா, கோவை.
முதல் சட்டசபைக் கூட்டத் தொடர்பற்றி?
கூட்டத் தொடர் நடந்த 33 நாட்களும் முதல்வர் சபைக்கு வந்தது பாராட்டத்தக்கது. பிரதான எதிர்க் கட்சியான தே.மு.தி.க. அதனது பாத்திரத்தைத் திறம்படச் செய்ய முயற்சிக்கக்கூட இல்லை. நொண்டிச் சாக்கு சொல்லி நேரம் கடத்துவதில்தான் குறியாக இருந்தது தி.மு.க. இடதுசாரித் தோழர்கள் செம ஜால்ரா தட்டினாலும், சில விஷயங்களை அரசின் கவனத்துக்குக் கொண்டுசெல்ல முனைந்தார்கள். காங்கிரஸ் கட்சி இருப்பதே தெரியவில்லை. பா.ம.க. குழுத் தலைவர் குருவைப் பார்க்க முடியவில்லை. டாக்டர் கிருஷ்ணசாமி, தனது தனித்தன்மையை நிரூபித்தார். தேர்ந்த சபாநாயகராக ஜெயக்குமார் உருவெடுத்து இருப்பதைப் பார்க்க முடிந்தது.
மொத்தமாகச் சொல்வதானால், புதியவர்களாக இருந்தாலும் அமைச்சர்களில் பலர் ஆச்சர்யப்​படவைத்​தார்கள். அனுபவஸ்தர்களாக இருந்தாலும் எதிர்க் கட்சித் தலைவர்கள் வருத்தப்படவே வைத்தார்கள்!
 அ.சம்பத், மதுரை.
பரமக்குடியில் நடந்தது சட்டம் - ஒழுங்குப் பிரச்னையா... சாதிப் பிரச்னையா?
சட்டம் - ஒழுங்குப் பிரச்னைதான். இரண்டு சமூகத்தினர் மோதலால் பரமக்குடியில் சாவுகள் நடக்கவில்லை. சாலை மறியல் செய்தவர்களை அமைதியாகக் கலைந்து போகச் செய்ய போலீஸுக்குத் தெரியாமல்போனதால் ஏற்பட்ட சாவுகள் அவை.
பொதுவாக சாதி மோதல்கள் ஏற்படும்போதுகூட, அதை வெளிப்படையாகச் சொல்ல மாட்டார்கள். பல இடங்களுக்கும் அது பரவிவிடக் கூடாது என்பதே நோக்கமாக இருக்கும். ஆனால், போலீஸைக் காப்பாற்றுவதற்காக 'இன் மோதல்’ என்ற தொனியில் முதலமைச்சர் சட்டமன்றத்தில் சொன்னது விபரீதமானது. அவரை வழிநடத்துபவர்களை நினைத்தால்... பயமாக இருக்கிறது!
 குமணன், கிருஷ்ணகிரி.
  'எந்த ஒரு பகுதியும் அரசினால் புறக்கணிக்கப்படும்போதுதான், அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்து வன்முறையில் இறங்குகிறார்கள். நக்சலைட்கள் உருவாகிறார்கள். எனவே, வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுப்போம்’ என்று பிரதமர் சொல்லி இருப்பது சரியான பாதைதானே?
சொன்னது சரியான விஷயம்தான். ஆனால், செயல் வேறு மாதிரி இருக்கிறதே!
டெல்லி விஞ்ஞான் பவன் மாநாட்டில் இப்படி அவர் சொன்ன நாள் அன்றே, நக்சலைட் வேட்டையில் ஈடுபடுத்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளை வேலைக்கு எடுப்பதில் சி.ஆர்.பி.எஃப். மும்முரம் ஆகி இருக்கிறது. நக்சலைட்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் எந்தெந்தத் திட்டம் கொண்டுவரப் போகிறோம் என்று அறிவிக்காமல்... சி.ஆர்.பி.எஃப் வீரர்களை அதிகப்படுத்தி வேட்டையில் இறக்கினால் என்ன அர்த்தம்?
பிரதமரின் சொல்லை நம்புவதா... செயலை நம்புவதா?
 முருகவாணன், அரக்கோணம்.
பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராக வரும் ஜெயலலிதாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிப்போம் என்று பெங்களூரு போலீஸ் கமிஷனர் ஜோதி பிரகாஷ் மிர்ஜி அறிவித்துள்ளாரே?
  ஜூலை 27-ம் தேதியே ஆஜராகி இருந்தால், ஒரு நாள் நியூஸோடு முடிந்திருக்கும். தேவை இல்லாமல் கர்நாடகா உயர் நீதிமன்றம், டெல்லி உச்ச நீதிமன்றம் என்று இழுத்து... ஊர், உலகம் அறிய கோர்ட் படியை மிதிக்கப்போகிறார் ஜெயலலிதா. சாமுண்டீஸ்வரி கோயிலுக்கெல்லாம் அவரும் சசிகலாவும் மட்டும்தான் வந்து போனார்கள். கோர்ட்டுக்கு வரும்போது எதற்கு இத்தனை செக்யூரிட்டி?

எங்களைப் புறக்கணித்தது ஏன்?

தி.மு.க-வை உலுக்கும் திருமா
'ள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி’ எனத் தி.மு.க-வும் காங்கிரஸும் போட்டி போட்டு அறிவித்துவிட்டன. ஈழத்தில் போர் நடந்தபோதும் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் ஃபெவிக்கால் பிணைப்பாக வலம் வந்த விடுதலைச் சிறுத்தைகளின் நிலைதான் இப்போது புதிர்!
தனித்துவிடப்பட்டிருக்கும் திருமாவளவனை சந்தித்தோம்.
''தி.மு.க. தனித்துப் போட்டியிடும் என எதிர்பார்த்தீர்களா?''
''இது எங்களை அதிரவைத்திருக்கும் அறிவிப்பு!  கூட்டணி அமைக்க பா.ம.க. தலைவர் ராமதாஸ் எங்களுக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்தார். 'தி.மு.க. கூட்டணியில் தொடர்கிறோம். எங்கள் கட்சி யின் ஆலோசனைக் குழுவில் ஆராய்ந்துதான் எந்த முடிவும் எடுப்போம்’ என நாங்கள் அறிவித்திருந்த நிலையில், தி.மு.க. திடீரென இப்படி அறிவித்து இருக் கிறது. பா.ம.க. உடன் நாங்கள் போய்விடுவோம் என நினைத்தார்களோ என்னவோ... தனித்துப் போட்டி யிடுவது குறித்து ஒப்புக்காகக்கூட எங்களிடம் சொல்லவே இல்லை. ஆனாலும், தேர்தல் வெற்றி மட்டுமே எங்களின் இலக்கு அல்ல என்பதை இந்த கணத்தில் எல்லோருக்கும் சொல்லிக்கொள்ள விரும்புகிறோம்!''
''ஈழ ஆதரவு நிலைப்பாட்டைக் கடந்தும் கூட்டணி தர்மத் துக்காகவே கடந்த தேர்தல்களில் தி.மு.க. அணியில் தொடர்ந்தது தவறு என உணர்கிறீர்களா?''
''கூட்டணி விஷயத்தில் அ.தி.மு.க-வால் ஏற்கெனவே முதுகில் குத்தப்பட்டவர்கள் நாங்கள். இப்போது தி.மு.க-வும் எங்களை இக்கட்டில் தள்ளி இருக்கிறது. வளரும் கட்சிகளைப் பெரிய கட்சிகள் எப்போதுமே இப்படித்தான் பார்ப்பார்கள். கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது அ.தி.மு.க. சார்பில் என்னிடம் பேசிய மிக முக்கியப் புள்ளி ஒருவர், 'தி.மு.க-வில் சிறுத்தைகளுக்கு 10 இடங்கள்தான் கொடுப்பார்கள். நாங்கள் 12-ல் இருந்து 14 வரை தருகிறோம். இது அம்மாவின் நேரடி அழைப்பு’ எனச் சொன்னார். ஆனால், தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து அங்கம் வகிக்கும் நிலையில், திடீர்த் தாவலை நடத்தி ஆதாயம் அடைய நாங்கள் விரும்பவில்லை. 'அணி தாவுபவர்கள்’ என்கிற அவப் பெயரையும் சுமக்க விரும்பவில்லை. தி.மு.க. கூட்டணியில் நீடித்ததற்காக அவர்கள் மீது பரப்பப்பட்ட பழியை நாங்களும் சுமந்தோம். கடந்த சட்டமன்றத் தேர்தலில் 10 தொகுதிகளை மட்டுமே ஒதுக்கியபோதும், பொறுமையோடு வாங்கிக் கொண்டோம். அ.தி.மு.க-வின் அழைப்புக்கு நாங்கள் நூல் அளவு சலனப்பட்டு இருந்தாலும், இன்றைக்கு 10-க்கும் குறையாத எம்.எல்.ஏ-க்களைப் பெற்று இருப்போம். கூட்டணி தர்மத்துக்காகவே தோல்வியை சுமந்தவர்கள் நாங்கள்!''
''தனித்துப் போட்டி என்கிற நிலையை தி.மு.க. ஏன் எடுத்தது?''
''நேற்றைக்கு அரசியலுக்கு வந்தவர்கள்கூட காங்கிரஸ் கட்சியின் தலையாய தலைவர்களைப்போல் மாறி தி.மு.க-வை விமர்சித்தார்கள். மூத்த தலைவர் என்றுகூட பார்க்காமல் எட்டுத் திசைகளிலும் கலைஞருக்கு எதிராக முழங்கினார்கள். அபார வாக்கு வங்கியை வைத்திருப்பவர்கள்போல், 'தி.மு.க. தயவு தேவை இல்லை’ என வாய்க்கு வந்தபடி சீண்டினார்கள். இந்த மன உளைச்சலில் கலைஞர் கொடுத்த பதிலடிதான் தனித்த முடிவு. ஆனால், காங்கிரஸைப் பழிவாங்க நினைத்த தி.மு.க. எங்களையும் அதில் சேர்த்தே சிக்கலில் தள்ளியது தான் ஜீரணிக்க முடியாதது!''
''பா.ம.க. உடன் தனி அணி அமைப்பதுதானே உங்களின் அடுத்த திட்டம்?''
''ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடவும், அண்ணல் அம்பேத்கரின் கருத்துகளைக் கொள் கையாக முன்னெடுக்கவும், தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒருவரை முதல்வராக முன்மொழியவும் பா.ம.க. என்கிற ஒரே கட்சிதான் தமிழகத்தில் இருக்கிறது. அந்தக் கட்சியின் அழைப்பை நாங்கள் மதிக்கிறோம். அதே நேரம் எங்கள் தரப்பில் இருந்தும் சில கருத்துகளை எடுத்துவைத்து இருக்கிறோம். பா.ம.க., சிறுத்தைகள் மட்டும் அல்லாது வைகோ தலைமையிலான ம.தி.மு.க. உள்ளிட்ட ஈழ ஆதரவுக் கட்சிகளையும், சிறு அமைப்புகளையும் ஒருங்கிணைத்து தமிழ்த் தேசிய முன்னணியாகக் கட்டமைக்க வேண்டும் எனச் சொன்னோம். உள்ளாட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியம் எல்லாம் வேலைக்கு ஆகுமா என சிலர் கேட்கலாம். ஆனால், உணர்வுப்பூர்வமான ஒருங்கிணைப்பின் துவக்கமாக இது அமையும் என்பது எங்களின் நம்பிக்கை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதே இந்தக் கோரிக்கையை நான் வலியுறுத்தினேன். ஆனால், சிறு கட்சியின் குரலாக அது சிதைந்துபோனது. அதனை மீட்டெடுக்க யார் முன்வந்தாலும் சிறுத்தைகள் அங்கே அணி வகுப்பார்கள். தங்கை செங்கொடி தீக்குளித்து இறந்த நிகழ்வுக்குப் போயிருந்தபோது, 'தமிழ்த் தேசிய அரசியலை யார் வேண்டுமானாலும் முன்னெடுங்கள். உங்கள் பின்னால் ஒரு லட்சம் அடிகள் பின்னே நிற்கவும் நான் தயார்’ எனச் சொன்னேன். ஆனால், அதற்குப் பதில் சொல்லத்தான் ஆள் இல்லை!''
''ஈழம் மற்றும் மூன்று பேர் தூக்கு விவகாரங்களில் கருணாநிதி செய்யத் தவறியதை ஜெயலலிதா செய்கிறார் என்கிறார்களே?''
''ஜெயலலிதா மன மாற்றம் அடைந்துவிட்டார் எனச் சொல்பவர்கள் அப்பாவிகள். அடிப்படை இந்துத் தீவிரவாதியாக விளங்கும் அவர் ஒருபோதும் ஈழம் என்கிற வார்த்தையை ஏற்றுக்கொள்ள மாட்டார். புலிகள் தீவிரமாகப் போராடிய காலங்களில் தொடர்ந்து அவர்களுக்கு எதிராகப் பழி பரப்பியும் தடை விதித்தும் ஜெயலலிதா நிகழ்த்திய கொடுமைகள் கொஞ்சநஞ்சமா? புலிகள் முற்றாக வீழ்த்தப்பட்டது தெரிந்து, இப்போது திடீர்க் கருணை காட்டுகிறார். மூன்று பேரைக் காப்பாற்றியதாகப் பெருமை பாராட்டும் அவர்தானே ஏழு பேரை பரமக்குடியில் சுட்டுக் கொன்றார்? பிணத்துக்குப் பொன்னாடை போர்த்தும் அவருடைய நாடகத்துக்குப் பெயர்தான் மன மாற்றமா? அவருடைய மன மாற்றம் உண்மையானதாக இருந்தால், தனித் தமிழ் ஈழத்தை வலியுறுத்தும் தீர்மானத்தை சட்டமன்றத்தில் இயற்றச் சொல்லுங்கள். அப்படி ஒன்று நிகழ்ந்தால், அம்மையாருக்குத் தலையாட்டும் மந்திரிகளைப்போல் நானும் மாறத் தயார்!''

அரசே தயாரிக்கலாமே!

சுற்றுச்சூழல் மோசமடைந்து காற்றும் நீரும் மாசடைந்து இருப்ப​தால்... இன்று வீடு தோறும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்பது அத்தியாவசியத் தேவையாகிவிட்டது. பயணம் செய்பவர்கள் அனைவருமே கையில் தண்ணீர் பாட்டிலுடன்தான் செல்கிறார்கள்.
மக்களின் அத்தியாவசியத் தேவையை வியாபார நோக்கில் கொள்ளை அடிக்கின்றன, சில தனியார் நிறுவனங்கள். செம்மையாக சுத்திகரிப்பு செய்யாத தண்ணீரை பாட்டிலில், பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்கிறார்கள். அதனால்,
பணம் கொடுத்து நோயை விலைக்கு வாங்கும் நிலையாக இருக்கிறது.
தண்ணீர் சுத்திகரிப்புத் தொழிற்சாலைகள் கொள்ளை லாபத்துடன் இயங்கி வருவதை அரசு அறியும். மக்களுக்கு அத்தியாவசியத் தேவையான நீரை, அரசே ஆலைகள் அமைத்து சுத்திகரித்து குறைந்த விலையில் வழங்கலாமே. இதன் மூலம் கிடைக்கும் லாபமும் மக்களுக்கே கிடைக்கும் அல்லவா?
டாஸ்மாக் சரக்குகள் மக்களுக்குப் போதுமான அளவில் கிடைக்க வேண்டும் என்று கவனம் எடுக்கும் அரசு, குடி தண்ணீர்ப் பிரச்னையையும் தீர்த்துவைக்க முன்வருமா? அரசே இதனைத் தயாரிக்கும்போது, தூய்மையான நீருக்கும் உத்தரவாதம் கிடைக்குமே!
- சுப.மோகன், சென்னை.

ரியல் எஸ்டேட் கொலையா?!

நடிகை விசித்ரா தந்தை மரணத்தில் மர்மம்
டிகை விசித்ராவின் தந்தையைக் கொலை செய்து, தாயைத் தாக்கி கொள்ளை அடித்துச் சென்ற செய்தி புறநகர் பகுதி மக்களுக்குப் பெரும் அதிர்ச்சி அளித்தது. 'நடந்த சம்பவம் கொள்ளையர் கைவரிசை கிடையாது. ரியல் எஸ்டேட் விவகாரத்தில் நடந்த கொலை...’ என்று சலசலப்பு கிளம்பவே விசாரணையில் இறங்கினோம்.
சென்னை முகப்பேரைச் சேர்ந்த வில்சன் - மேரி விஜயா தம்பதிக்கு ராஜி என்ற மகனும், நடிகை விசித்ரா, அனிதா, பப்பு என்ற மகள்களும் உள்ளனர். விசித்ரா புனேயிலும், ராஜி, அனிதா இருவரும் அமெரிக்காவிலும் வசித்து வருகின்றனர். பப்பு சிங்கப்பூரில் இருக்கிறார். வில்லியம்ஸ், மேரி விஜயா இருவரும் முகப்பேர் வீட்டில் இருக்கிறார்கள். தனது சொந்த ஊரான சுங்குவார்சத்திரம் அருகே உள்ள செல்லம்பட்டடை கிராமத்தில் ஆறு ஆண்டுகளுக்கு முன் இடம் வாங்கிய வில்லியம்ஸ், அதை பண்ணை வீடாக மாற்றி அமைத்து உள்ளார். மாதத்துக்கு இரண்டு முறை பண்ணை வீட்டுக்கு மனைவியுடன் வந்து தங்கிச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். பகலில் பண்ணை வீட்டில் இருந்தாலும், இரவில் பண்ணை வீட்டை ஒட்டியே இருக்கும் இன்னொரு சொந்த வீட்டில் தங்குவதுதான் வில்லியம்ஸின் வழக்கம் என்கின்றனர் அவரது உறவினர்கள். ஆனால், வழக்கத்துக்கு மாறாக இந்த முறை மட்டும் பண்ணை வீட்டில் தங்கியது ஏன் என்பதற்கு விடை தெரியவில்லை.
பாஸ்போர்ட் அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பின், ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து இருக்கிறார் வில்லியம்ஸ். சென்னையில் இருந்து மற்ற இடங்களுக்கும் தொழிலை விரிவாக்கும் யோசனையில் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கிய நேரத்தில்தான் இந்தக் கொலை சம்பவம் நடந்து இருக்கிறது.
கடந்த 12-ம் தேதி நள்ளிரவு கொலை செய்யப்பட்டு, ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்த வில்சன் உடலுக்கு உறவினர்கள் யாரும் பொறுப்பு ஏற்றுக் கையெழுத்து போடாததால், புதன் கிழமை மாலை வரை போஸ்ட்மார்ட்டம் செய்யப்படவில்லை. மாலை 3 மணிக்கு விசித்ராவின் கணவர் ஷாஜி, தங்கை அனிதா மற்றும் சில உறவினர்கள் வந்தனர். வில்சனின் மருமகன்கள் மட்டுமே அங்குமிங்கும் அலைந்து கொண்டு இருந்தனர். மகள் அனிதா காரில் இருந்து இறங்கவே இல்லை. விசித்ராவின் கணவர் ஷாஜியிடம் பேசினோம். ''மாமா என்ன தொழில் செய்தார் என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை. தனியாக இருந்து எதுக்கு கஷ்டப்படணும். அமெரிக்காவுக்கு வந்துடுங்கன்னு அவரோட மகன் ராஜி சொல்லிக்கிட்டே இருந்தார். அதுக்கு மறுத்துட்டே இருந்தவர், 'எல்லாத்தையும் செட்டில் பண்ணிட்டு வந்துடுறேன்’னு கொஞ்ச நாளைக்கு முன்னாலதான் சொல்லி இருக்கார். இன்னும் 10 நாளில் அமெரிக்காவுக்குப் போய் செட்டில் ஆவதற்கான ஏற்பாடு செஞ்சுக்கிட்டு இருந்தார். அதுக்குள்ள இப்படி நடந்துடுச்சு...'' என்று கண் கலங்கினார்.
வில்லியம்ஸின் குடும்ப நண்பர் முகார், ''தொழில் போட்டி காரணமாத்தான் கொலை நடந்திருக்கும் என்ற சந்தேகம் இருக்கிறது. வழக்கமாகப் பெரிய வீடுகளில் பக்காவாக பிளான் பண்ணித்தான் கொள்ளையடிக்கும் முயற்சியில் இறங்குவாங்க. எப்போதாவது மட்டுமே ஆட்கள் வந்து போகும் பண்ணை வீட்டில் பெருசா ஒண்ணும் கிடைக்காது என்பதை நல்லாவே தெரிஞ்சு வெச்சிருப்பாங்க.
ஆனா, இந்த விஷயத்தில் கணிசமா நகை, பணம் கிடைச்ச பிறகும் அவ்ளோ பெரிய வீட்டில் ஒரு இடம்கூட விடாமல் அங்குலம் அங்குலமாக எதையோ தேடி இருக்காங்க. சமையல் அறையில் இருக்குற பாத்திரங்களைக்கூட விடாமல் தேடியதுதான் சந்தேகமாக இருக்கிறது. ஏதோ ஒரு சொத்து டாக்குமென்ட்டை தேடி இருக்காங்கன்னு நினைக்கிறேன்...'' என்றார் ஆதங்கத்துடன்.
ஸ்ரீபெரும்புதூர் டி.எஸ்.பி-யான கஜேந்திர குமாரிடம் பேசி னோம். ''வில்லியம்ஸ் பெரிய அளவில் ரியல் எஸ்டேட் தொழில் செய்ததாகத் தெரியவில்லை...'' என்று சொல்ல,
காஞ்சிபுரம் எஸ்.பி-யான மனோகரன், ''இது முழுக்க முழுக்கப் பணத்துக்காக நடந்த கொலைதான்!'' என்றார்.
இந்நிலையில், பண்ணை வீட்டில் இருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஏலம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த வேலு, சுரேஷ் ஆகிய இருவரையும் கைது செய்த போலீஸ், கொள்ளை அடித்த பொருட்களை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்து இருக்கிறது. நகை, பணத்துடன் அவர்கள் பறித்துச் சென்ற செல்போன் இருவரையும் காட்டிக் கொடுத்து விட்டது என்கிறார்கள்.
ஆனால், புனேவில் இருந்து சென்னைக்கு வந்துவிட்ட விசித்ரா, சம்பவம் நடந்த பண்ணை வீட்டுப் பக்கம் எட்டிக்கூடப் பார்க்கவில்லையாம். தந்தை செய்துவந்த தொழில் பிடிக்க வில்லை என்பதால்தான் அவரது பிள்ளைகள் கோபமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். மருத்துவமனை சிகிச்சையில் இருக்கும் விசித்ராவின் தாயார் மேரி விஜயா இன்னமும் பேசக்கூடிய நிலையை எட்டவில்லை. அவர் வாய் திறந்தால்தான் உண்மைகள் வெளிவரும்!

''குழந்தைகள் உயிரோடு விளையாடிய அரசியல்வாதிகள்!''

அண்ணா பிறந்த நாள் விழா களேபரம்...
ண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு நடந்த விழாவிலும் அடித்துக் கொள் கிறார்கள் கழகக் கண்மணிகள். நல்லவேளையாக இவர்களது அடிதடிகளுக்கு இடையே சுமார் 1,000 பள்ளிக் குழந்தைகள் சிக்கா மல் நூலிழையில் உயிர் தப்பி இருக்கிறார்கள்!
கடந்த 16-ம் தேதி அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.க. சார்பில் முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாநகராட்சி பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச நோட்டு, புத்தகங்கள் வழங்கும் விழா சென்னை கொருக்குப்பேட்டை யில் நடந்தது. விழா ஏற்பாடுகளை  சேகர்பாபு செய்து இருந்தார். அங்குதான் இந்த வன்முறை.
இது குறித்து சேகர்பாபுவிடம் பேசினோம். ''ஒவ்வொரு வருஷ மும் அந்தப் பகுதி ஏழைக் குழந்தைகளுக்கு இலவச நோட்டு, புத்தகங்கள், சீருடை மற்றும் எழுது பொருட்கள் கொடுப்பது என் வழக்கம். அதனால் போலீஸ் அனுமதி வாங்கி, தி.மு.க. சார்பாக கொருக்குப்பேட்டையில் உள்ள வேலன் திருமண மண்டபத்தில் அந்த நிகழ்ச்சியை நடத்தினேன்.
மண்டபத்துக்குள் சுமார் 1,000 குழந்தைகள் கூடி இருந்தார்கள். மண்டபத்துக்கு வெளியே இருக்கையில் பெற்றோர்கள் அமர்ந்து இருந்தார்கள். தி.மு.க. சார்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்த 100 தன்னார்வத் தொண்டர்கள் பணியில் இருந்தனர். மாலை 5 மணிக்கு பேராசிரியர் அன்பழகன் வந்தார். கூட்டம் அதிகமாக இருப்பதைப் பார்த்துவிட்டு, மேடையில் பேசிக் கொண்டிருந்தால், தாமதமாகி குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்று, உடனடியாக 10 குழந்தைகளுக்கு இலவசப் பொருட்களை விநியோகித்துவிட்டு கிளம்பிவிட்டார். தொடர்ந்து நான்கு கவுன்ட்டர்களில் குழந்தைகளை வரிசையில் வரவழைத்து பொருட்களை விநியோகித்தோம்.
திடீரென்று மண்டபத்துக்கு வெளியே 'டமால்’ என டியூப் லைட்கள் உடைத்து வெடிக்கும் சத்தம்.பெற்றோர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினார்கள். சுமார் 20 ரவுடிகள் கையில் இரும்புக் கம்பி, உருட்டுக் கட்டைகளுடன் கார்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினார்கள். எனது கார் உட்பட ஏராளமான கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன. அவர்கள் மண்டபத்தை நோக்கி முன்னேறியபோது, உடனடியாக எங்கள் ஆட்கள் மண்டபத்தின் கேட்டை உள் பக்கமாக பூட்டி விட்டனர்.
உடனடியாக நான் மைக்கில், 'அ.தி.மு.க-வினர் அடிதடியில் ஈடுபடுகிறார்கள். உள்ளே 1,000 குழந் தைகள் இருக்கும் நிலையில் நாம் எதிர்த்தாக்குதலில் ஈடுபடக்கூடாது. முதலில் குழந்தைகளை பாதுகாப்பாக அனுப்புவது நம் கடமை. என்ன நடந்தாலும் எல்லோரும் அமைதியாக இருங்கள்’ என்றேன். அதன்படி எல்லோரும் அமைதி காத்தார்கள். போலீ ஸார், பொது மக்கள் முன்னிலையில் அரா ஜகம் செய்த அ.தி.மு.க. ரவுடிகள் சென்ற பிறகே, குழந்தைகளை பாதுகாப்பாக நாங்கள் வெளியே அனுப் பினோம்.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ-வான வெற்றி வேல்தான் இந்த வன்முறைக் கும்பலை ஏவி இருக்கிறார். அவருடைய தொகுதியிலே நாங்கள் மக்கள் நலத் திட்டப் பணிகளை நடத்துவது அவருக்குப் பொறுக்கவில்லை. அவர்கள் போட்ட சதித் திட்டம் இதுதான் -  வன்முறை செய்தால் குழந்தைகள் சிதறி ஓடி... மிதிபட்டு இறப்பார்கள். உடனே, தி.மு.க-வினர் நடத்திய கூட்டத்தில் அலட்சியத்தால் குழந்தைகள் சாவு என்று கூறி, எங்களை போலீஸ் கைது செய்வார்கள் என்பதுதான். உண்மையில், நாங்களும் எதிர்த்தாக்குதல் நடத்தி இருந்தால், கடந்த காலத்தில் வெள்ள நிவாரணம் வழங்கியபோது நடந்த அசம்பாவிதம் போல ஏதேனும் நடந்து இருக்கும். ஆனால், அகிம்சையால் அதை நாங்கள் வென்றுவிட்டோம்.
இப்படி எல்லாம் செய்தால் முதல்வரிடம் நல்ல பெயர் வாங்கிவிடலாம் என்று நினைக்கிறார் வெற்றி வேல். ஆனால், முதல்வர் ஜெயலலிதாவை பற்றி நான் அறிந்ததைப் போல் யாரும் அறிந்து இருக்க மாட் டார்கள். கடந்த 28 ஆண்டுகளாக என் குடும்பத்தைவிட முதல்வரை தெய்வத்துக்கு இணையாக நேசித்தவன் நான். 2005-ம் ஆண்டு ஜெயலலிதாவே வெற்றிவேலை, 'ஒரு குடம் பாலில் கலந்த ஒரு சொட்டு விஷம்’ என்றார். இதுதான் அரசியல். எனவே, வெற்றிவேல் ஒழுங்காக நடந்துகொள்ள வேண்டும்!'' என்றார்.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ-வான வெற்றிவேலிடம் பேசினோம். ''சேகர்பாபு நடத்தும் நிகழ்ச்சியில் ஒரு சிறு மண்டபத்தில் குழந்தைகள் சரியான வசதிகள் இல்லாமல் நீண்ட நேரம் அடைத்து வைக்கப்பட்டு இருந்தார்கள். குழந்தைகள் மூச்சுத் திணறி பாதிக்கப்படும் அபாயம் இருந்தது. அதனால்தான், கூட்டத்துக்கு வந்த 'துணைப் பேராசிரியர்’ அன்பழகன் கோபித்துக் கொண்டு உடனே வெளியேறி விட்டார். என்னுடைய தொகுதியில் எனக்கு ஓட்டுப் போட்டு வெற்றி பெற வைத்த மக்களைக் காக்க வேண்டியது எனது கடமை. அதனால்தான், குழந்தைகளின் நிலையை அறிந்து, பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய கழகத் தொண்டர்களை அனுப்பினேன். ஆனால், அங்கு சேகர்பாபு மைக்கில் அ.தி.மு.க-வினரையும், முதல்வர் அம்மாவையும் அவதூறாகப் பேசிக் கொண்டு இருந்தார். இதை எங்கள் ஆட்கள் தட்டிக் கேட்டார்கள். இதைத் தொடர்ந்துதான் பிரச்னை ஏற்பட்டது. வன்முறையில் ஈடுபட்டதும் அவர்கள்தான்...'' என்றார்!
இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள பிரச்னைக்கு குழந்தைகளை பகடைக் காய்களாகப் பயன்படுத்துவது நியாயமா?

போன் பேசிக்கொண்டே ஊசி போட்டதால் மரணமா?

திருவண்ணாமலை திகுதிகு!
திருவண்ணாமலையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் கவனக்குறைவு காரணமாகக் குழந்தை ஒன்று இறந்து விட்டதாக எழுந்த புகார், பரபரப்புத் தீயைப் பற்ற வைத்துள்ளது.
குழந்தையின் தாய் மோகனப்பிரியாவை சந்தித் தோம். ''என் ஒன்றரை வயதுக் குழந்தை குருசரணுக்கு, போன 12-ம் தேதி காலைல பேதி ஆச்சு. டி.என்.கே. ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டு போனேன். டாக்டர் கார்த்திகேயன் சோதிச்சுப் பார்த்தார். ரெண்டு ஊசி போட்டு டிரிப்ஸ் ஏத்தினார். 'ஏன் டிரிப்ஸ் ஏத்துறீங்க?’ன்னு கேட்டதுக்கு சத்து இல்லைன்னு சொன்னார். மதியம் 3.30 மணிக்கு செக் பண்ணிட்டு, 'குழந்தை நல்லாத்தான் இருக்கு, இன்னும் ஒரு மணி நேரத்தில் டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்’னு சொன்னார். கொஞ்ச நேரத்தில் ஒரு நர்ஸ் மொபைல் போன் பேசிக்கிட்டே வந்தாங்க, போன் பேசிக்கிட்டே குழந்தை கையில் ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டு இருந்தபோதே, இன்னொரு ஊசி போட்டாங்க. போன் பேசிக்கிட்டே ஊசி போடுறீங்களேன்னு கேட்டேன். 'எனக்கு எல்லாம் தெரியும்’னு சொன்னாங்க. அவங்க ஊசி போட்டுட்டு போன கொஞ்ச நேரத்துல குழந்தைக்கு வாயிலயும் மூக்குலயும் நுரை வந்துடுச்சு. டாக்டர் வந்து பார்த்துட்டு குழந்தையோட நெஞ்சை அழுத்திப் பார்த்தார். பிறகு, 'போயிடுச்சு’னு சொல்லிட்டு அங்க இருந்து போயிட்டார். படுபாவிங்க என்னமோ ஊசியைப் போட்டு என் குழந்தையை அநியாயமாக் கொன்னுட்டாங்க...'' என்று கதறியவர், மேலும் பேச முடியாமல் மயங்கினார்.
குழந்தையின் தந்தை சுரேஷ், ''போன் பேசிக்கிட்டே வந்த நர்ஸ், வேற யாருக்கோ போட வேண்டிய ஊசிய குழந்தைக்குப் போட்டுட் டாங்க. டாக்டரும் வந்து பார்த்துட்டு ஊசி போட்ட நர்ஸை, எங்க முன்னாடியே அடி அடின்னு அடிச்சார். அதுக்கப்புறம் அந்த நர்ஸ் காணாமப் போயிட்டாங்க. அவங்க தப்பா சிகிச்சை கொடுக்கலைன்னா, டாக்டர் ஏன் அந்த நர்ஸை அடிக்கணும்? இந்த சம்பவம் நடந்ததும் கொஞ்ச நேரத்துக்கெல்லாம் திருவண்ணாமலை ஜி.ஹெச்-சில் இருந்து நாலைஞ்சு டாக்டர்களும்வந்துட்டாங்க. நாங்க புகார் கொடுக்காமலே போலீஸும் வந்துட்டாங்க. தனியார் ஆஸ்பத்திரியில குழந்தை இறந்ததுக்கு அரசாங்க டாக்டருங்க ஏன் வரணும்? அவங்களுக்கும் இந்த சம்பவத்துக்கும் என்ன சம்பந்தம்? குழந்தையை உடனே ஜி.ஹெச். கொண்டு போகச் சொல்லிட்டு அங்க போஸ்ட்மார்ட்டம் செய்யச் சொல்லிட்டாங்க. அரசாங்க டாக்டர் களும் தனியார் டாக்டர்களும் கூட்டா இருக்கற தால ஜி.ஹெச்-சில் போஸ்ட்மார்ட்டம் செஞ்சா சரியா இருக்காதுன்னு கலெக்டர்கிட்ட மனு கொடுத்தேன். அவரும் விசாரிச்சுட்டு 'போஸ்ட் மார்ட்டம் நடக்கும்போது கூடவே தாசில்தார் இருப்பார். போஸ்ட்மார்ட்டம் செய்யறத வீடியோ எடுப்பாங்க’ன்னு சொன்னார். இந்த ஆஸ்பத்திரியில இதுமாதிரி அஞ்சாறு பேர் இறந்திருக்கிறதா இப்பத்தான் சொல்றாங்க. தவறான சிகிச்சை செஞ்ச டாக்டர், நர்ஸ் ரெண்டு பேரையும் உடனே கைது செய்யணும்!'' என்று கதறினார்.
குழந்தை இறந்த சோகத்தில் மருத்துவமனை மீது கல்வீசி தாக்குதல் நடந்திருக்கிறது. இதுகுறித்து, டி.என்.கே. மருத்துவமனை டாக்டர் கார்த்திகேயனிடம் பேசினோம். ''சரியாகத்தான் சிகிச்சைஅளித்தோம். குழந்தைக்கு ஓவர்டோஸ் கூட கொடுக்கவில்லை...'' என்றார். ''நீங்கள் நர்ஸை அடித்ததாக குழந்தையின் தந்தை கூறுகிறாரே?'' என்று கேட்டதற்கு, ''நான் யாரையும் அடிக்கவில்லை. எங்கள் சிகிச்சையில் எந்த தவறும் நடக்கவில்லை. அந்த நர்ஸ் இங்கேதான் இருக்கிறார்...'' என்று சொன்னவர், அந்த நர்ஸை விசாரிக்க அனுமதிக்கவில்லை.
கலெக்டர் அன்சுல் மிஸ்ராவிடம் பேசினோம். ''குழந்தை இறந்ததில் சந்தேகம் இருக்கிறது என்று புகார் வந்தது. அதனால் தாசில்தார் முன்னிலையில் போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டு, அது வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. குழந்தையின் உடல் உறுப்புகளை ரசாயனப் பரிசோதனைக்காக அனுப்பி இருக்கிறார்கள், அந்த சோதனை முடிவு வந்ததும், குழந்தை இறந்ததற்கான முழுமையான காரணம் தெரியும். தவறு செய்திருப்பதாகத் தெரியவந்தால், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்...'' என்றார். ''குழந்தை இறந்ததும் அந்த மருத்துவமனைக்கு, அரசு மருத்துவமனை டாக்டர்கள் சிலர் வந்ததாகச் சொல்கிறார்களே...'' என்று கேட்டோம். ''விசாரிக்கச் சொல்லி இருக்கி றேன். அதிலும் உண்மை இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்!'' என்றார்.
இதற்கிடையில் கடந்த 14-ந் தேதி, டி.என்.கே. மருத்துவமனை தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து திருவண்ணாமலையில் உள்ள தனியார் மருத்துவமனை டாக்டர்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் செய்தனர். ஆபத்துக்கு உதவும் மருத்துவர்களையும் தனியார் மருத்துவமனைகளையும் தாக்குபவர் களிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என ஐ.எம்.ஏ. திருவண்ணாமலை கிளை சார்பாக கலெக்டரிடம் மனு கொடுத்து இருக்கிறார்கள்.
நர்ஸ் போன் பேசிக்கொண்டே வேறு ஒருவ ருக்குப் போடவேண்டிய ஊசியை மாற்றிப் போட்டாரா? அரசு மருத்துவர்கள் ஏன் வந்தார்கள்? என்ற கேள்விகளுக்கு விரைவில் விடை தெரியவேண்டும்!

''வேலூர் ஜெயிலில் துரைமுருகன்!''

ஆசைப்படுகிறார் அமைச்சர் விஜய்
வேலூர் அ.தி.மு.க. சார்பில் கடந்த 15-ம் தேதி நடந்த அண்ணா பிறந்த நாள் கூட்டத்தில், சுகாதாரத் துறை அமைச் சர் வி.எஸ்.விஜய் பேச்சில், அண்ணாவின் புகழ் ஊறுகாய்தான்; தி.மு.க.வைத் தாக்கி அவர் பேசியதுதான் சாப்பாடு, காரக் குழம்பு, பொரியல்!
''பெரியாரின் பகுத்தறிவும், ஈகையும், பேரறிஞர் அண்ணாவின் பண்பும் சேர்ந்து வளர்ந்த தி.மு.க. என்கிற கட்சி, கருணாநிதி என்ற மனிதரால் 'திருட்டு முன்னேற்ற கழக’மாக மாறி, இப்போது 'திகார் முன்னேற்ற கழக’மாக மாறிவிட்டது...'' என்று ஆரம்பித்த அமைச்சர் விஜய் தொடர்ந்து, ''ஸ்டாலினும், அழகிரியும் இப்போது என்ன செய்கி றார்கள் தெரியுமா? ஒவ்வொரு ஊராகச் சென்று சிறையில் இருக்கும் அவர்களது உடன்பிறப்புகளைப் பார்த்து வருகின் றனர். கருணாநிதி, 'நாங்கள் யாருடனும் கூட்டணி இல்லை, உள்ளாட்சித் தேர்தலில் தனித்து நிற்போம்’ என்கிறார். நீங்கள் தனியா நின்றாலும், கூட்டுப் போட்டு நின்றாலும் தோற்பது உறுதி. அவருடைய கழகத்தில் இருந்து பாதிக்கு மேற்பட்டோர் சிறைக்குச் சென்று விட்டனர். கருணாநிதி மட்டும்தான் மீதி... எல்லோரையும் இழந்து தனிமரமாக அவர் நிற்கின்ற காலம் விரைவில் வரும்.
வீரபாண்டி ஆறுமுகம், பொன்முடி, கே.என்.நேரு என்று கடந்த ஆட்சியில் கொள்ளை அடித்தவர்கள் எல்லோரும் இப்போது சிறையில். ஆனால், நமது மாவட்டத்தைச் சேர்ந்த துரைமுருகன் மட்டும் எப்படி இன்னும் உள்ளே போகாமல் இருக்கிறார்? அந்த வருத்தம் நமக்கும் வேண்டாம், அவருக்கும் வேண்டாம். விரைவில் வேலூர் மத்திய சிறையில் அவரை நாம் பார்க்கலாம். ஏனென்றால், அவர் சிறைக்குச் செல்வது நிச்சயம். சட்டசபையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற பொதுவான அறிவுகூட துரைமுருகனிடம் கிடையாது. இத்தனைக்கும் அவர் சென்ற முறை அமைச்சராக இருந்தவர்... கால்களை வேண்டும் என்றே ஆட்டுவது, மோச மாக சைகை செய்வது என்று அந்த மனிதரின் குணாதிசயத்தை என்ன வென்று சொல்வது?'' என்று பொளந்து கட்டி யவர் அடுத்து உள்ளூருக்கு வந்தார்.
''வேலூர் மாநகராட்சி நிலை இன்னும் கேவலமா இருக்கு. ரோடு முதல் ஆஸ்பத்திரி வசதி வரை சென்ற ஐந்து ஆண்டு காலமும் எல்லாம் கந்தலாகிப் போச்சு. இலவச கலர் டி.வி. கொடுத்து தங்களது குடும்பத்தின் வருமானத்தை வளர்த்துக் கொண்டவர்கள்தான் தி.மு.க-வினர். ஒன்று மட்டும் நிச்சயம், 'தேர்தலுக்கு முன்பு அ.தி.மு.க. என்ற கட்சி இனி தமிழகத்தில் இருக்காது’ என்று அழகிரி எப்போது சொன்னாரோ... அன்றே தி.மு.க-வுக்கு கெட்ட நேரம் துவங்கிவிட்டது. இனி அதை அழிக்க நாம் தேவை இல்லை. அவர் களாவே அழித்துவிடுவார்கள்!'' என்று சீறிப் படபடத்தார்.
'நம்ம அமைச்சர் சூப்பரப்பு’ என்று மெச்சிக் கொண்டு பூரிப்போடு கிளம்பினர் ரத்தத்தின் ரத்தங்கள்!

டாஸ்மாக் கடைக்குப் பூட்டு!

பொங்கி எழுந்த வேலூர் பெண்கள்
வேலூர் மாவட்டத்தில் டாஸ் மாக் கடை ஒன்றின் முன்பு பெண்களே திரண்டு வந்து முற்றுகைப் போராட்டம் நடத்தி, ஊழியர்களைக் கடைக்குள் வைத்துப் பூட்டிவிடவே, ஏரியாவெங்கும் செம பரபரப்பு.
வேலூர் மாவட்டம் மேல்மொண வூரில்தான் இந்த சம்பவம் அரங்கேறி யது. டாஸ்மாக் கடைக்கு அருகில் மளிகைக் கடை வைத்திருக்கும் விஜயாவிடம் பேசினோம். ''ரெண்டு வருஷமா இங்கே இருந்த டாஸ்மாக் கடையால் நாங்க படுற கஷ்டம் கொஞ்ச
நஞ்சம் இல்லைங்க. சாயங்காலம் 5 மணி ஆச்சுன்னா குடிச்சிட்டு ரோட்டுலயே உட்கார்ந்துக்குறாங்க. போற வர்ற பொம்பளைங்களை அசிங்க மாப் பேசுவானுங்க. விடிகாலம் 3 மணி வரைக்கும் பாட்டிலை வாங்கி வைச்சுக்கிட்டு ரோட்டுலயே உட்கார்ந்து குடிச்சிட்டு சத்தம் போட்டுக்கிட்டு இருப்பாங்க. ஒரு நாள் எங்க வீட்டுக்காரர், 'நடு ராத்திரியில ஏண்டா குடிச்சிட்டு சத்தம் போடுறீங்க’ன்னு கேட்டார். அதுக்கு அவரை அசிங்க அசிங்கமாத் திட்டித் துரத்திட்டாங்க.
எங்க பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை வேற இடத்துக்கு மாத்தச் சொல்லி போன வருஷமே கலெக்டர்கிட்ட மனு கொடுத்தோம். அவரும் நடவடிக்கை எடுக்கிறேன்னு சொல்லி இருந்தார். ஆனா எந்த நடவடிக்கையும் எடுக்கலை. போன வாரம் திரும்பவும் கலெக்டர்கிட்ட மனு கொடுத்தோம். ஆனா அவரும் மனு வாங்கியதோடு சரி.. கண்டுக்கவே இல்ல. அதனாலதான் நாங்க போராட்டத்தில் இறங் கினோம்...'' என்று சொன்னார்.
கடைக்கு வந்திருந்த சிவகாமி என்பவர் அருகில் நின்று கொண்டிருந்த குழந்தையைக் காட்டி, ''இந்தப் புள்ளைக்கு அஞ்சு வயதுதாங்க ஆகுது. போன வாரம் ஸ்கூலுக்குப் போயிட்டு திரும்பி வரும்போது டாஸ்மாக் எதிரே குடிச்சிட்டு பாட்டிலை ரோட்டிலேயே போட்டு உடைச்சிருக்கானுங்க. அந்த பாட்டில் குழந்தையோட காலில் ஏறிடுச்சி. இப்போ நடக்கவே முடியாம கஷ்டப்படுறா. அதனாலதான் கடைக்கு முன்னாடி ஆர்ப்பாட்டம் நடத்தினதோடு கடையையும் இழுத்து மூடினோம். கலெக்டர் அந்தக் கடையை வேற இடத்துக்கு மாத்தும் வரை எங்களோட போராட்டம் தொடர்ந்து நடக்கும்...'' என்றார்.
இந்தப் பிரச்னை தொடர்பாக வேலூர் மாவட்ட கலெக்டர் நாகராஜனிடம் பேசினோம். ''சம்பந்தப்பட்ட பகுதியில் இருந்து எந்த வித புகாரும் இதுவரை என்னுடைய பார்வைக்கு வரவில்லை. அவங்க புகாரை யார்கிட்டே கொடுத்தாங்கன்னும் தெரியல. இருந்தாலும் இந்த பிரச்னையை நான் உடனடியா விசாரிக்கிறேன். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அந்தக் கடை இருந்தால் நிச்சயமாக வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்...'' என்று உறுதியாகச் சொன்னார். சீக்கிரம் செய்யுங்க சார்..!

அறுவடைக்கு நேரமாச்சு... வாங்குமா அரசு?

அலறும் குறுவை விவசாயிகள்
''பல வருடங்களாகச் செய்யமுடியாத குறுவை சாகுபடியை இந்த வருடம் செய்தும், நொந்துபோய் கவலையில் இருக்கிறோம்...'' என்று அவலக்குரல் ஒன்று ஜூ.வி. ஆக்ஷன் செல்லுக்கு (044-42890005) வந்து சேரவே, விசா ரணைக்கு விரைந்தோம்.
 நாகை மாவட்டம், கீழ்வேளுர் தாலுக்கா பட்டமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி சந்திரசேகரன் இன்றைய நில வரம் குறித்து விளக்கமாகப் பேசினார். ''பல வருடங்களாக மேட்டூரில் தண்ணீர் திறப்பது காலதாமதம் ஆவதால், குறுவை சாகுபடி வெகுவாகக் குறைந்து விட்டது. பம்ப்செட் மூலம் விவசாயம் செய்கிறவர்கள் மட்டும் டெல்டா மாவட்டங்கள் முழுவதிலும் சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கர் வரை பயிர் செய்வார்கள். இந்த முறை மேட்டூர் அணை ஜூன் முதல் வாரத்திலேயே திறக்கப்பட்டதால், ஆற்றுப் பாசனம் மூலம் குறுவை சாகுபடி செய்பவர்களும் சந்தோஷமாகக் குறுவை நட்டார்கள். அதனால் இந்த முறை நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் சேர்த்து சுமார் நான்கு லட்சம் ஏக்கர் வரை குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பம்ப்செட் மூலம் நட்ட பயிர்கள் தற்போது அறுவடைக்குத் தயாராகிவிட்டது. ஆனால், அந்த நெல்லை வாங்குவதற்குத்தான் அரசாங்கம் ஆர்வம் காட்டவில்லை. அதனால் அந்த நெல்லை அடிமாட்டு விலைக்குக் கேட்கிறார்கள், வியாபாரிகள். அந்த விலை கட்டுப்படியாகாது என்றுதான், அறுவடைக்குத் தயாராக இருக்கும் என் வயலில் இன்னும் அறுவடை செய்யாமலே இருக்கிறேன்...'' என்றார்.
பட்டமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி ராம்தாஸ், ''அரசு சில இடங்களில் மட்டுமே நெல்லைக் கொள்முதல் செய்கிறது. ஆனால், அது போதுமானதாக இல்லை. பெரும்பாலான இடங்களில் இன்னும் கொள்முதல் மையங்களைத் திறக்கவே இல்லை. அதனால் தனியார் வியாபாரிகள் 60 கிலோ மூடையை  450-க்குக் கேட்கிறார்கள். அரசு கிலோவுக்கு  10 என்று நிர்ணயித்து இருப்பதுகூட எங்களுக்குக் கிடைக்கவில்லை.
விவசாயிகள் கொண்டு வரும் நெல்லையும் முழுமையாகக் கொள்முதல் செய்யாமல் ஒரு நாளைக்கு இவ்வளவுதான் என்று லிமிட் வைத்து கொள்முதல் செய்கிறார்கள். மேலும் ஈரப்பதம் 17 சதவிகிதம் வரைதான் கொள்முதல் செய்கிறார்கள். ஆனால், இந்த நாட்களில் அறுவடை செய்யப்படும் நெல்லில் குறைந்தது 22 சதவிகிதம் ஈரப்பதம் இருக்கத்தான் செய்யும். அதனால் நெல் கொள்முதலில் விவசாயிகளின் சிரமங்களைப் புரிந்துகொண்டு நடக்க வேண்டும்...'' என்று கோரிக்கைகளை வைத்தார்.
மேலும் பேசிய விவசாயிகள், ''கொள்முதல் நிலையங்கள் திறக்கட்டும் என்று அறு வடை செய்யாமல் காத்திருக்கிறார்கள், விவசாயிகள். அரசு பாராமுகம் காட்டிவரும் வேளையில், மழையும் பெய்து கெடுக்கிறது. ஆம், தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் அறுவடை செய்யவேண்டிய பயிர்கள் பல இடங்களில் தண்ணீரில் மூழ்கிக் கிடக்கிறது. ஆற்றுப்பாசனம் மூலம் பயிரிடப்பட்ட நெல்லும் விரைவில் அறுவடைக்கு வந்துவிடும். அதற்குள் அரசு ஆவண செய்யவேண்டும். இல்லை என்றால் விவசாயிகளுக்கு உற்பத்திச் செலவைவிட, அதை அறுவடை செய்து உலரவைக்கும் செலவு அதிகமாகிவிடும்...'' என்று அலறினார்கள்.
நாகை மாவட்ட கலெக்டர் முனுசாமியைத் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கினோம். ''அறுவடை தொடங்கிவிட்ட ஊர்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விட்டன. அறுவடை தொடங்காத ஊர்களில்தான் இன்னமும் திறக்கப்படவில்லை. விவசாயிகள் கொண்டுவரும் நெல் முழுவதும் நிச்சயமாகக் கொள்முதல் செய்யப்படும். ஆனால், 22 சதவிகிதம் ஈரப்பதத்துடன் நெல் கொள்முதல் செய்வது கடினம். அப்படிச் செய்தால் இருப்பு வைப்பது சிரமம். அதனால் விவசாயிகள் நெல்லை காயவைத்துத் தருவதுதான் எளிது, நல்லது. விவசாயிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியும் சொல்லிக் கொள்கிறேன். நீண்ட நாட்களாகவே கொள்முதல் நிலைய ஊழியர்கள் பணம் பிடித்தம் செய்கிறார்கள் என்று குற்றம் சாட்டி வந்தார்கள். அதற்குத் தீர்வு கண்டு விட்டோம். அதனால் இனி வரும் காலங்களில் விவசாயிகளிடம் கொள் முதல் செய்யப்படும் நெல்லுக்குப் பணமாகக் கொடுக்காமல் காசோலையாகக் கொடுக்க முடிவு செய்து இருக்கிறோம்...'' என்று விளக்கம் அளித் தார்.
இந்த நிலையில் காலத்துக்கு முந்தியே வடகிழக்குப் பருவமழை வெளுத்து வாங்கத் தொடங்கிவிட்டது. அதனால் குறுவை அறுவடையும் சம்பா மற்றும் தாளடி நடவுப் பணிகளும் பாதிக்கத் தொடங்கி விட்டன. இந்த பருவமழையில் டெல்டா மாவட்டங்கள் பாதிக்காமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு இப்போதே எடுக்க வேண்டும்.

வீடுகள் இடிக்கப்பட்டால்... தீக்குளிப்போம்!

பெரம்பலூர் ஆவேசம்
''கடந்த 48 ஆண்டுகளாக வரி கட்டி வருகிறோம். இப்போது எங்கள் வீடுகளை இடிக்கப் பார்க்கிறார்கள். எங்களை விரட்டி னால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை!'' என்று ஜூ.வி. ஆக்ஷன் செல்லில் (044-42890005) கதறி இருந்தனர், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் சொந்த ஊரான சத்திரமலை வேலூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கீழக்கணவாய் கிராம மக்கள்.
பெரம்பலூரில் இருந்து செட்டிக் குளம் செல்லும் சாலையில் 15 கி.மீ. தூரத்தில் உள்ள கீழக்கணவாய் கிராமத்துக்குச் சென்றோம். 'இந்த இடம் வனத் துறைக்கு சொந்தமானது. வீடுகளை காலி செய்யுங்கள், இடிக்கப் போகிறோம்’ என, வனத் துறை அதிகாரிகள், ஆர்.டி.ஓ., தாசில்தார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கடந்த 4-ம் தேதி, இந்த கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து இருப்பதால், கிராமமே பரபரப்பாக இருந்தது.
கனகராஜ் என்பவரிடம் பேசினோம். ''எங்க தாத்தா காலத்துல இருந்து இங்கதான் இருக்கோம். இப்போ 70 வீடுகள் இருக்குது, கிட்டத்தட்ட 500 பேர் இருக்கோம். எங்க ஊரைச் சுத்தி இரும்புக்குன்று மலை இருக்கு. கொஞ்ச வருஷத்துக்கு முன்னால, ஃபாரஸ்ட்காரங்க ஊருக்கு எந்த பாதிப்பும் இல்லாம மரம் வச்சிக்கிறோம்னு கேட்டாங்க. மரம் வைக்கிறது நல்லதுதானேன்னு நாங்களும் சம்மதிச்சோம். கொஞ்ச நாள் எங்க ஊர்ல இருந்த குமாரசாமி வீட்டுலதான் ஃபாரஸ்ட் ஆபீஸ் நடத்திக்கிட்டு இருந்தாங்க. மரம் சரியா வளரலைன்னு வீட்டை காலி பண்ணிட்டுப் போயிட்டாங்க. போன அ.தி.மு.க. ஆட்சியில, 'இது வனத் துறையோட இடம், அதனால காலி பண்ணுங்க’ன்னு ஒரு நோட்டீஸ் வந்துச்சு. அப்போ, ஆ.ராசா வனத் துறை இணை அமைச்சரா இருந்தார். அதனால, அவர்கிட்டே போய்ச் சொன்னோம். 'நான் பேசிக்கிறேன், கவலைப்படாம போங்க’ன்னு சொன்னார். அதுக்குப் பிறகு யாரும் வரலை. இப்போ, ஆட்சி மாறியதும் திரும்பவும் வந்துட்டாங்க. நிம்மதியா தூங்கக்கூட முடியல...'' என்று கண்ணீர் விட்டார்.
மண்வெட்டியுடன் வேலைக்குப் போய்க்கொண்டு இருந்த 90 வயதான முத்தை யனிடம் பேசினோம். ''எனக்கு விவரம் தெரிஞ்ச காலத்தில இருந்தே இங்கதான் இருக்கேன். இது எங்க ஊருக்கு சொந்தமான இடம்தான். ஃபாரஸ்ட்டுக்காரங்க இத்தன நாளா எங்க போனாங்க? இது இவங்களுக்கு சொந்தமான இடம்னா, நாங்க வீடு கட்டுனப்பவே தடுத்து இருக்க வேண்டியதுதானே? எங்க வீட்டை இடிச்சாங்கன்னா நாங்க குடும்பத்தோட தீக்குளிச்சு சாகுறதைத்தவிர எங்களுக்கு வேற வழி தெரியலை...'' என்று கண்ணீர் சிந்தினார்.
அதே ஊரில் வசிக்கும் செல்வக்குமார், ''எங்க வீடுகளுக்கு 63-ம் ஆண்டுல இருந்து வீட்டு வரி கட்டிக்கிட்டு இருக்கோம். எங்களுக்கு ரேஷன் கார்டு, ஓட்டர் ஐ.டி., கரன்ட் கொடுத்திருக்காங்க. ரோடு, தண்ணி டேங்க் வசதி செஞ்சு கொடுத் திருக்காங்க. ஆனா, இப்போ நாங்க வனத் துறை இடத்தை ஆக்கிரமிச்சு குடிசை போட்டுக்கிட்டதா சொல்றாங்க. எங்களுக்கு எல்லா வசதியும் செஞ்சு கொடுத்ததை மறைச்சு, இவங்க தப்பிக் கிறதுக்கு நாங்க கஷ்டப்பட்டு கட்டுன வீடுகளை இடிக்கப் பார்க்கிறாங்க. மூணு வருஷத் துக்கு முன்னால, ஃபாரஸ்ட் அதிகாரிங்க வந்து கல் நட்டுட்டுப் போனாங்க. அதுக்குப் பிறகு, நியாயம் கேட்டு மனு கொடுத்தாலும் வர்றவங்க கல்லைத்தான் பார்க்கிறாங்களே தவிர, மத்ததை கவனிக்க மாட்டங்கிறாங்க. 'இது, வனப்பகுதின்னா ரேஷன் கார்டு, ஓட்டர் ஐ.டி. எப்படி கொடுத்தீங்க’ன்னு தாசில்தார்கிட்ட கேட்டோம். 'ஃபாரஸ்ட் டிபார்ட்மென்ட் வீட்டை இடிச்சா, உங்க ரேஷன் கார்டு, ஓட்டர் ஐ.டி-களை பறிமுதல் செய்துடுவோம்’னு மிரட்டுகிறார். மூணு தலைமுறையா வாழ்ந்த வீடுகளை விட்டுட்டு நாங்க எங்கே போறது?'' என்றார்.
அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் மருதைராஜ், மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரனிடம் இந்தப் பிரச்னையைக் கூறி இருக்கிறார். அவர் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் முறையிட்டதால், வீடுகளை இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறதாம்.
இந்த விவகாரம் குறித்து, கலெக்டர் தாரேஸ் அகமதுவிடம் பேசினோம். ''பழைய ஃபைல்களை எடுத்துப் பார்க்கச் சொல்லி இருக்கிறேன். மக்கள் கஷ்டம் எனக்குப் புரிகிறது. ஆனால், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அத்துமீறக் கூடாது என்று கடுமையான சட்டம் இருக்கிறது. இந்த மக்கள் 63-ம் ஆண்டில் இருந்து வீட்டுவரி ரசீது வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். அதையும் விசாரிக்கச் சொல்கிறேன். ஏனென்றால், 1980-க்கு முன் தொடர்ந்து வீட்டுவரி செலுத்தி இருந்தால் இவர்களுக்கு நியாயம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது...''என்றார்.
நல்லதே நடக்கட்டும்!

ஏழு பேருக்காகத் துடிக்காதா தமிழகம்?

மனித உரிமைக்கான ஆவேசம்
''மூன்று பேரின் உயிர்களைக் காப்பாற்றத் தமிழகமே துடிக்கிறது, கொதிக்கிறது. மரண தண்டனைக்கு எதிரான இந்த ஒட்டுமொத்த ஆவேசத்தைப் பார்க்கையில் நெஞ்சுக்கு ஆறுதலாக இருக்கிறது. ஆனால், பரமக்குடியில் ஏழு பேர் கொல்லப்பட்டதற்கு எதிராக ஒரு சத்தத்தையும் காணோமே? அவர்கள் தலித்கள் என்பதால்தான் மௌனமோ?'' - 'எவிடன்ஸ்’ அமைப்பின் செயல் இயக்குநர் கதிர் கேட்கும் கேள்விகளுக்கு இன்னமும் பதில் இல்லை!
கோவை பிஷப் அப்பாசாமி கலை மற்றும் அறி வியல் கல்லூரியில், சமீபத்தில் 'மனித உரிமை மீறல்கள்’ குறித்து ஒரு கருத்தரங்கம் நடந்தது. இதில் சிறப்புரை ஆற்றினார் கதிர். ''இந்த உலகத்திலேயே முதல் மனித உரிமைப் போராளி யார் என்றால், அது இயேசுதான். சிலுவையில் அறையப்பட்டபோது, 'மரண தண்டனை என்னோடு முடியட்டும்!’ என்று உதிரம் வழியக் குரல் கொடுத்த புரட்சியாளன் அவர். ஆனாலும் திருந்தியதா சமூகம்? இல்லை. ஒரு நாட்டில் கலவரங்கள் இருக்கலாம், துப்பாக்கி சப்தம் கேட்கலாம். ஆனால், அங்கே நீதி இருக்க வேண்டும். காகத்தைச் சுட்டால்கூட கையில் விலங்கு மாட்ட ஃப்ளூக்ராஸ் வந்துவிட்ட தேசத்தில்... மனிதர்களை மளமளவென சுட்டுக் கொல்கிறது போலீஸ். இந்தப் பயங்கரவாதத்தைத் தட்டிக் கேட்க யாரும் இல்லை. பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகனின் உயிரைக் காப்பாற்றத் துடிக்கிறோம். ஆனால், பரமக்குடி சாவு களுக்கு மட்டும் ஏன் வாய் மூடி மௌனிக்கிறது தமிழகம்? இறந்தவர்கள் உதிரிகள் என்பதாலா? செத்தது தலித்கள்தானே என்பதாலா? மனித உரிமை மீறலுக்கு எதிரான இந்தப் போக்கு பெரும் வெட்கம்.
தலித் கர்ப்பிணிகளுக்கு மருத்துவமனையில் படுக்கை மறுக்கப்படுவதில் ஆரம்பித்து... சுடுகாடு வரை நீள்கிறது சாதி துவேஷம். தமிழ்நாட்டில் தலித் மீதான அத்துமீறல்கள் படம் எடுத்து ஆடும் மாவட்டங்களில் கொங்கு மண்டலத்துக்கு முக்கிய இடம் உண்டு. அன்னூர், சத்தியமங்கலம் பகுதிகளில் ஆதிக்க சமுதாயத்தினரின் தோட்டங்களில் தலித்கள் கூலி வேலை செய்கிறார்கள். இடைவேளையில் இவர்களுக்கு முதலாளி வீட்டில் இருந்து காபி வரும். அதைப் பார்த்தால் நெஞ்சு வெடித்துவிடும். முதலாளி யின் வீட்டு வாசலில் துண்டை இடுப்பில் செருகியபடி குத்துக்கால் வைத்து உட்கார்ந்திருப்பார் தொழிலாளி. கையில் இருக்கும் தேங்காய் சிரட்டையில் காபி ஊற்றப்படும். இதுதான் தினமும் நடக்கும் உபசாரம்.
பல பள்ளிகளில் தலித் மாணவர்களை 'மைனஸ்’ என்று சங்கேத வார்த்தையிலே நையாண்டித்தனம் செய்கிறார்கள். கூடவே, இந்தக் குழந்தைகளை மட்டும் 'துப்புரவு டீம்’ என்றாக்கி, பள்ளியின் டாய்லெட்டை சுத்தம் செய்ய வைப்பது, பள்ளியைக் கூட்டிப் பெருக்குவது போன்ற வேலைகளில் இறக்கி விடுகிறார்கள். அட இங்கு மட்டுமா... அரசிய லிலும் இதுதான் நடக்கிறது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஊருக்கு முந்தி ஆ.ராசாவை தூக்கி உள்ளே போட்டார்களே... அந்த ஊழல் சுழலில் அடிபடும் தனியார் நிறுவனப் பொறுப்பாளர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தார்கள்?
தமிழ்நாட்டில் மனித உரிமை பட்டவர்த் தனமாக மீறப்படும் மையங்களில் போலீஸ் ஸ்டேஷன் முக்கியமானது. கடந்த ஏழு ஆண்டுகளில் மட்டும் 76 லாக்-அப் சாவுகள் நடந்திருக்கின்றன. போலீஸ் நிலையங்களைக் கொலைக்கூடங்களாக மாற்றி சாதித்திருக்கும் தமிழ்நாடு போலீஸ்தான், இந்தி யாவிலேயே நான்காவது சிறந்த போலீஸ் என்று பட்டம் வாங்கி இருக்கிறது. 'அடித்துக் கேட்டால்தான் உண்மை வெளியே வரும்!’ என்று தன் செயலுக்கு நியாயம் கற்பிக்கிறது போலீஸ். அப்படியானால், குற்றவாளிகள் அத்தனை பேரும் ஒரே மாதிரிதானே ட்ரீட் செய்யப்பட வேண்டும்? பிக்பாக்கெட் வழக்கில் சந்தேகத்தில், பிடிபட்டவனிடம் உண்மையை வரவழைக்க அவனை உரித்துத் தொங்க விடுகிறது போலீஸ். சங்கரராமன் கொலை வழக்கில் கைதான ஜெயேந்திரரிடம் இப்படியா நடத்தினார்கள்? இங்கே சட்டத்தின் முன் எல்லோரும் பொதுவாக இல்லை.
அரபு நாடுகளில் 'கண்ணுக்கு கண்’ என்ற அளவில் தண்டனை இருந்தும் குற்றங்கள் குறைய வில்லையே... ஆக, தண்டனைகள் குற்றவாளியைத் திருத்தும் வகையில்தான் இருக்க வேண்டுமே தவிர, குற்றவாளியைத் 'தீர்க்கும்’ வகையில் இருக்கக் கூடாது. சுதந்திரம் பெற்ற பிறகு இதுவரையில் இந்தியாவில் தூக்கில் இடப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 3,000 என்று தகவல் வருகிறது. அரசாங்கமோ 100-க்குள் என்று கணக்குக் காட்டுகிறது. உலகில் பல நாடுகள் மரண தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுத்துக்கொண்டு இருக்கின்றன. நாமோ இன்னமும் தூக்குக் கயிற்றை தூக்கிப் பிடித்துக்கொண்டு தொங்கவிட ஆள் தேடிக்கொண்டு இருக்கிறோம்!
தற்போது, தேசத்தில் நடக்கும் நிகழ்வு களுக்கு வெறும் பார்வையாளர்களாக இருக்கும் இளைஞர்களாகிய நீங்கள்தான், நாளை பல நிகழ்வுகளை நிர்ணயிக்கப் போகிறவர்கள். கீதை, பைபிள் மற்றும் குர் ஆன் போன்றவை தெரி யாமல் இருந்தாலும், பரவாயில்லை... ஆனால், நாட்டின் அரசியல் சாசனத்தைத் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். அதுதான் உயிர்நாடி!'' என்று கதிர் ஆவேசப்பட்டார்.
அவரது பேச்சைக் கேட்டு புதிய மனிதர் களாக உற்சாகமாகக் கலைந்தது இளைஞர் பட்டாளம்!

வன்னியர்களுக்கு எதிரான சதி!

இலவச ஆடு, மாடு திட்டத்தை எதிர்க்கும் குரு
''ஜெர்மனியில் இருந்து இங்கு வந்த ஆரியர்கள் ஆடு, மாடு மேய்த்த னர். அப்போது நமது மக்கள் ஆட்சி நடத்தினார்கள். இப்போது ஆரியர் அரசு நடத்திக்கொண்டு... நம்மை ஆடு, மாடுமேய்க்க வைக்கிறார்...'' - முதல்வர் ஜெயலலிதா மீதுதான் இப்படி அனல் கக்கியிருக்கிறார் பா.ம.க. எம்.எல்.ஏ-வான காடுவெட்டி குரு!
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சிங்கபுரத்தில் சமீபத்தில் வன்னியர் சங்கத்தின் முப்பெரும் விழா நடந்தது. முதலில் மாநில நிர்வாகி கள் காவல் துறையினரைக் கண்டித்துப் பேசி சூட்டைக் கிளப்ப... அதைத் தொடர்ந்து மைக்கைப் பிடித்தார் குரு. ''எங்களை சாதி வெறியர்கள் என்று சொல்கிறார்கள். ஆனால், நாங்கள் சாதி வெறியர்கள் அல்ல. இந்த மாவட்டத்தில் உள்ள அமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான் சாதி வெறி பிடித்து வன்னியர்களைப் புறக்கணிக் கிறார். வன்னியர் போலீஸ் அதிகாரிகள் அனை வரையும் வெகு தூரத்துக்கு பணி மாற்றம் செய்ய வைக்கிறார். முன்னாள் முதல்வரான கருணா நிதியும் இப்படித்தான் வன்னியர்களைப் பழிவாங்கினார்... இப்போது ஜெயலலிதாவும் ஆரம்பித்து இருக்கிறார். இந்த அம்மையார் இலவச ஆடு, மாடு வாங்கும் குடும்பத்தில் ஒருவரும் படிக்கக் கூடாது என்கிறார். இது வன்னியர்களைப் படித்தவர்களாக மாறுவதைத் தடுக்கும் சதிதான்...'' சாட்டையைச் சொடுக்கிய குரு டிராக் மாறி, ''மத்திய உள்துறை அமைச்சரான ப.சிதம்பரமும் சாதி வாரி கணக் கெடுப்பை எதிர்க்கிறார். உண்மையில், சாதிவாரி கணக்கெடுப்பின்போது இரண்டரை கோடி வன்னி யர்களும் தங்களை 'வன்னிய குல சத்திரியர்’ என்றுதான் பதிவு செய்ய வேண்டும். இடஒதுக்கீடு கிடைக்கக் காரணம் எங்கள் ஐயாதான். இன்னொரு இயேசு, முகமது நபி எப்படி நமக்குக் கிடைக்க மாட்டார்களோ, அதுபோல நமக்கு இன்னொரு ராமதாஸ் கிடைக்க மாட்டார்...'' என்று சொல்ல, கூட்டத்தில் விசிலோ விசில்!
''தமிழ்நாட்டை இரண்டாகப் பிரித்தால் வன்னியர்தான் வட தமிழ்நாட்டை ஆள்வார்கள். அதனால்தான் பிரிக்க மறுக்கிறார்கள். வன்னி யர்களை எப்போதும் ஓட்டுப் போடும் முட்டாள் களாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைக் கிறார்கள். போகட்டும்... வட தமிழ்நாட்டை அம்மா வும், தென் தமிழ்நாட்டை சின்ன அம்மாவும் அ.தி.மு.க. சார்பில் ஆளலாம். அதேபோல், தி.மு.க. ஆட்சியில் அமர்ந்தால் ஸ்டாலின், அழகிரியும் ஆளலாம்...'' என்று கிண்டலடித்த குரு, ''கேப்டன்... கேப்டன்னு சொல்கிறார்கள். 'கேப்டன் பிரபாகரன்’ படத்தில் வீரப்பனை இவர் பிடிப்பதைப்போல் நடித்ததால்தான் இவருக்கு இந்தப் பெயர் வந்ததாம்... நான் கேட்கிறேன், இவர் உண்மையில் கேப்டன் என்றால், எல்லையில் போய் பாகிஸ்தான் தீவிர வாதிகளை அழிக்க வேண்டியதானே?'' என்று பஞ்ச் வைத்தார் குரு.
கூட்டம் முடிந்ததும் 'வன்னியர் நிகர்நிலைப் பல்கலைக்கழகம்’ அமைக்க  2.60 லட்சம் வழங்கப்பட்டது. அதை வாங்கிக்கொண்ட குரு கோபத்துடன், ' 5 லட்சம் தருவதா சொன்னீங்க? அவ்வளவுதானா?’ என்று கடிந்தபடி கிளம்பினார்.

போராடினால் 'ரத்த' மரியாதை!

சேலம் பரபரப்பு
சேலத்தில்,  145 கோடி மதிப்பில் கட்டப்பட்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை, ஆட்சி மாற்றத்தால் செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டுவிட்டதாக, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் போராட்டம் நடத்தியது. அதற்கு போலீஸ் தடியால் பதில் சொல்ல... கலவர பூமியாக மாறி இருக்கிறது சேலம்!
தாக்கப்பட்ட இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் தலைவர் முத்துக்கண்ணன், ''கடந்த ஆட்சியில், 11 மாவட் டங்களில் இருந்து சுமார் ஒன்றரை கோடி மக்கள் பயன்படும் வகையில், இங்கு அதிநவீன வசதிகளோடு கட்டப் பட்டுள்ளது இந்த மருந்துவமனை. ஆனால், ஆட்சி மாறியதும் இந்த மருந்துவமனையை செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டுவிட்டார்கள். இதை செயல்படுத்த வலியுறுத்தியே போராட்டம் செய்ய இரண்டு நாட்களுக்கு முன்பே அனுமதி கேட்டோம். கொடுப்பதாகச் சொன்னவர்கள், கடைசியாக மறுத்துவிட்டனர்.
நாங்கள் திட்டமிட்டபடி, நகரின் ஆறு பகுதிகளில் இருந்து நடைபயணமாக வந்து சேலம் கலெக்டர் அலுவலகத்தின் முன் போராட்டம் செய்ய இருந்தோம். அதன்படி பயணத் தைத் தொடங்கினோம். மூன்று ரோட்டில் நடைபயணத்தை துவங்கும்போது, பள்ளப்பட்டி ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் தலைமையில் வந்த காவல் துறையினர் கண்மூடித்தனமாக 'என்ன? ஏது?’ என்று கேட்காமலேயே எங்களைத் தாக்கினார்கள்.
'டேய் முன்னாள் முதல்வராக இருந்தாலும் சரி, இன்னாள் முதல்வராக இருந்தாலும் சரி, பிரதமரே ஆனாலும், மக்களுக்கு இடையூறா நடந்தால் தொலைத்துவிடுவேன். காக்கி சட்டைக்கு அவ்வளவு அதிகாரம் இருக்கு’ என்று சொல்லிக்கொண்டே கடுமையாகத் தாக்கினார் இன்ஸ்பெக்டர். நாங்கள் ஜனநாயக முறைப்படி போராடுபவர்கள். அதனால் முறையாக எங்களைக் கைது செய்து வண்டியில் ஏறச்சொன்னால், நாங்களே ஏறியிருப்போம். அதைச் செய்யாமல், எங்கள் தோழர்கள் 18 பேரை ரத்தம் சொட்டச் சொட்ட அடித்து, கைது செய்து பள்ளப்பட்டி ஸ்டேஷனுக்குக் கொண்டுசென்றனர்.
ஸ்டேஷனில் எங்களுக்கு எந்த முதல் உதவியும் செய்யாமல் வாய்க்கு வந்தபடி கெட்ட வார்த் தைகளால், 'டேய், நீ மாநில தலை வர்னா பெரிய புடுங்கியா...’ என்று சொல்லி மிரட்டவும் செய்தார். மாலை 4.30 மணிக்குதான் எங்களை விடுவித்தார்கள். சேலம் அரசு மருத்துவ மனைக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சேரச் சென்றபோதும், அங்கேயும் எங்களை அனுமதிக்காமல் அலைக்கழித்தார் கள்...'' என்றார் வேதனையாக.
இதுபற்றி பள்ளப்பட்டி இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமாரிடம் விளக்கம் கேட்டோம். '' போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்படவே இல்லை. நாங்க பந்தோபஸ்துக்கு ஆறு பேர் மட்டுமே இருந்தோம். அவுங்க அறுபது பேருக்கு மேல இருந்தாங்க. அவர்களிடம் போன தும் நான் வணக்கம் சொல்லிட்டு மரியாதையோடதான் பேசி னேன். ஆனா அவர்களோ காவல் துறையை அசிங்கமாக பேச ஆரம்பிச்சாங்க. சாலை மறியலிலும் ஈடுபட்டாங்க. மக்களுக்காகத்தான் இவங்க போராடுறாங்க. அதே மக்களுக்கு சாலை மறியலில் ஈடுபட்டு சிரமத்தை ஏற்படுத்துவது எந்த வகையில நியாயம்னு சொல்லுங்க. யாராக இருந்தாலும் சட்டத்தை மதிக்கணும். மக்களின் கவனத்தை ஈர்க்க எவ்வளவோ போராட்டங்கள் இருக்கும் போது சாலை மறியலில் ஈடுபட்டு மக்களை வருத்துவது எந்த வகையில் நியாயம்னு சொல்லுங்க? பலமுறை எச்சரித்தும் அவர்கள் தொடர்ந்து மறியல் செய்ததால் லேசான தடியடி நடத்த வேண்டியதாக போய்டுச்சி. மற்றபடி நான் யாரையும் தப்பான வார்த்தைகளால் திட்ட வில்லை!'' என்று அடியோடு மறுத்தார்.
யோசிக்க வேண்டிய விசயம்தான்!

காதல் தம்பதியை பிரிக்கச் சொன்னாரா அமைச்சர்?

சர்ச்சையில் சண்முகவேலு
போலீஸ் ஸ்டேஷன் மற்றும் அரசு அலுவலங்களில் அ.தி.மு.க-வினர் தலையிடக் கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா உத்தரவு போட்டுள்ளார். இந்நிலையில், காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியைப் பிரிப்பதற்கு காவல் துறைக்கு உத்தரவு போட்டார் என்ற சர்ச்சையில் சிக்கி இருக்கிறார், ஊரகத் தொழில் துறை அமைச்சர் சண்முகவேலு.
ஒட்டன்சத்திரம் பகுதியில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருபவர் ரவிச்சந்திரன். மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மகுடீஸ்வரி. வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். காதலுக்கு இருவரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவிக்கவே, சமீபத்தில் பதிவுத் திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் திருமணத்தைத் தொடர்ந்துதான் ஏகப்பட்ட பிரச்னைகள்.
இதுகுறித்து ரவிச்சந்திரனிடம் பேசினோம். ''நான் ஒட்டன் சத்திரத்தில் நடத்திவந்த கம்ப்யூட்டர்சென்டருக்கு  மகுடீஸ்வரி அடிக்கடி வருவார். அப்போது எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக உயிருக்கு உயிராகக் காதலித்தோம். பெற்றோரின் சம்மதத்துடன்தான் திருமணம் செய்து கொள்ள எண்ணி, இரு தரப்பிலும் பேசினோம். ஆனால், சாதியைக் காரணம் காட்டி இரு தரப்பிலும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், வேறு வழி இல்லாமல் ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டோம்.
திருமணக் கோலத்துடன் திண்டுக்கல் எஸ்.பி. அலுவலகம் சென்று பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்தோம். எஸ்.பி., ஒட்டன்சத்திரம் மகளிர் ஸ்டேஷனுக்கு கூப்பிட்டு, பாதுகாப்பு கொடுக்கச் சொன்னார். மகளிர் ஸ்டேஷனில் விசாரித்து, நாங்கள் இரண்டு பேரும் மேஜர் என்பதால் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பிவிட்டர்கள். ஆனால், மகுடீஸ்வரி வீட்டில் எங்களைப் பிரிப்பதிலேயே குறியாக இருந்தார்கள்.
அவர்களுக்கு ஆதரவாக அ.தி.மு.க-வைச் சேர்ந்த ஒட்டன்சத்திரம் முன்னாள் ஒன்றியச் செயலாளர் முருகன், அரசப்பிள்ளைபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் சின்னு ஆகியோர் என்னைக் கடுமையாக மிரட்டினார்கள். அவர் களிடம் தப்பித்து நண்பர்களின் உதவியோடு நாங்கள், திராவிடர் கழகத் தோழர்களிடம் உதவி கேட்டுச் சென்றோம். அவர்கள் எங்களை கொளத்தூரில் இருக்கும் கொளத்தூர் மணி அண்ணனிடம் அழைத்துச் சென்றார்கள். அவர் எங்களுக்கு சுயமரியாதை முறையில் திருமணம் நடத்தினார். மேட்டூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தைப் பதிவு செய்து கொண்டோம். அதன் பிறகும் மிரட்டல் தொடர்ந்ததால், ஊருக்குச் செல்லாமல் மதுரை உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்தோம். நீதிமன்றமும் எங்களுக்கு பாதுகாப்பு தரச் சொல்லி ஒட்டன்சத்திரம் போலீஸுக்கு உத்தரவிட்டது. அதன் பின்புதான் ஊருக்குச் சென்றோம்.
போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று பாது காப்பு கேட்ட போது, இன்ஸ்பெக்டர் கண்டுகொள்ளவே இல்லை. அத்துடன், 'இதுல நான் எதுவும் பண்ண முடியாது. மடத்துக்குளம் அமைச்சர் போன் பண்ணி, 'எப்படியாவது பிரிச்சு விட்டுடு’னு சொல்றார். அதனால வேற ஊருல போயி பிழைச்சுக்கோங்க. என் தலையை உருட்டாதீங்க. இந்த ஊர்ல இருந்தா பிரச்னைதான்’னு சொன்னார். ஆனால், நாங்கள் எங்கேயும் போகாமல் நான்கு நாட்கள் ஊரில் தங்கி இருந்தோம். ஐந்தாவது நாள் மகுடீஸ்வரி வீட்டில் இருந்து ஐந்தாறு அடியாட்கள் வந்து அவளைத் தூக்கிட்டுப் போக முயற்சி செய்தார்கள். அங்கு இருந்து தப்பி, இப்போது தி.க. தோழர்கள் உதவியுடன் ஊர், ஊராக நாடோடி போல வாழ்ந்து வருகிறோம்...'' என்றார் பரிதாபமாக!
ஒட்டன்சத்திரம் இன்ஸ்பெக்டர் இளவரசுவோ, ''ரெண்டு தரப்பையும் விசாரிச்சு சமாதானம் பண்ணி அனுப்பிட்டேன். ஸ்டேஷனில் யாரும் அவங்களை மிரட்டலை. அமைச்சரும் இது சம்பந்தமா என்கிட்ட எதுவும் பேசலை. அவங்களை வந்து இங்கே வரச் சொல்லுங்க. கட்டாயம் பாதுகாப்பு கொடுக்கிறோம்...'' என்றார்.
அமைச்சர் சண்முகவேலுவிடம் பேசினோம். ''அது கட்சிக்காரரோட பொண்ணு. அவங்க அப்பா பேசினார். திண்டுக்கல்லா, ஒட்டன்சத்திரமான்னு ஞாபகம் இல்லை. போலீஸில் பேசி சட்டப்படி நடவடிக்கை எடுங்க. மைனராக இருந்தா பிரிச்சிடுங்க. மேஜர் என்றால் விட்டுடுங்கனு சொன்னேன். அவ்வளவுதான். கட்சிக்காரன் குழந்தையை பறிகொடுத்துட்டு, உதவி கேட்கிறான். செய்யாம இருக்க முடியுமா? அவனவன் பிள்ளை பாதிச்சுதுன்னா கேட்கத்தானே செய்வாங்க. அது சரி, நடந்தது நடந்து போச்சு... அந்தப் பெண்ணோட  தலை எழுத்து அவ்வளவுதான்னு நினைச்சுக்க வேண்டியதுதான்...'' என்றார்.
காதலுக்கு இதுதான் மரியாதையா?

புறக்கணித்த அமைச்சர்... திறந்துவைத்த எம்.பி.!

நாகர்கோவில் பஸ் ஸ்டாண்ட் மோதல்
நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தின் பணிகள் முடிவடை யாத நிலையில்... அதைத் திறக்க 'நீயா நானா?’ என இரண்டு கழகங்களும் மல்லுக்கட்ட... பகிரங்கமாக மோதல் வெடித்து முடிந்தது திறப்பு விழா!
நாகர்கோவில் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது அண்ணா பேருந்து நிலை யம். இதன் சீரமைப்புப் பணிகள் கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வந்தன.  1.29 கோடி செலவில் நடைபெற்ற பணிகள், மிக மந்தமாக நடைபெற்றதால், மக்கள் கடுமையாக சிரமப் பட்டனர். சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரி, அரசியல் கட்சிகளும், அமைப்பினரும் தொடர் போராட்டங்களை நடத்தினர்.
இந்த நிலையில், 'அமைச்சர் பச்சைமால் கடந்த 16-ம் தேதி, பேருந்து நிலையத்தைத் திறந்து வைப்பார்’ என திடீரென்று அறிவிக்கப்பட்டது. 'பணிகள் முழுமையாக முடிவடையாத நிலையில், திறந்து வைப்பது எப்படி சாத்தியமாகும்?’ என்று மக்கள் ஆச்சர்யமானார்கள். உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தன்னுடைய பதவிக் காலத்திலேயே பேருந்து நிலையத்தைத் திறந்து விடவேண்டும் என நகராட்சி தலைவரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அசோக் சாலமன் முயல்கிறார் என்று அ.தி.மு.க-வினர் பலமாகக் குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில், பேருந்து நிலையம் திறப்பு விழாவுக்கு காலை 8.30 மணியில் இருந்தே காங்கிரஸ் மற்றும் தி.மு.க-வினர் பெருமளவில் திரண்டனர். திறந்து வைக்கவேண்டிய அமைச்சர் பச்சைமால் மற்றும் கலெக்டர் மதுமதி ஆகியோர் விழாவைப் புறக்கணிப்பதாகத் தெரியவரவே, காங்கிரஸ் - தி.மு.க-வினர் தீவிர ஆலோசனை நடத்தினார்கள். விழா தள்ளிவைக்கப்படுமா என்று தொண்டர்கள் எதிர்பார்க்க, தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலன் டேவிட்சன் பேருந்து நிலையத்தை திறந்துவைத்துவிட்டார். இந்த அதிரடியைக் கொஞ்சமும் எதிர்பாராத ஆளும் கட்சி வட்டாரம் அதிர்ந்து போய்விட்டது.
உடனே ஆவேசமான அ.தி.மு.க. கவுன் சிலர்கள், பேருந்து நிலையத்தின் உள்ளே பேருந்துகளைச் செல்லவிடாமல் மறியல் செய்தனர். இதற்கு பதிலடியாக, தி.மு.க-வும், காங்கிரஸ்காரர்களும்பேருந்துகளை விடவேண்டும் என்று சாலை மறியலில் ஈடுபட்டனர். நிலைமை கைமீறிச் செல்வதை உணர்ந்த காவல் துறையினர், நாடாளுமன்ற உறுப்பி னர், நகராட்சித் தலைவர் உட்பட மறியலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து கொண்டுசென்ற பிறகே ஏரியாவில் பதற்றம் தணிந்தது. இதைக் கண்டு வெகுண்ட தி.மு.க-வினர், 'அமைச்சர் மற்றும் கலெக்டரின் புறக்கணிப்புக்கு நாகர்கோவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன்தான் காரணம்’ எனக் கொதித்தனர். ''திறப்பு விழாவில் ஏன் கலந்துகொள்ளவில்லை'' என்று அமைச்சர் பச்சை மாலிடம் கேட்டோம். ''என்னை போனில் தொடர்பு கொண்டுதான் விழாவுக்கு அழைத்தார்கள். பணிகள் முடிவடைந்துவிட்டதால், திறப்பு விழா நடத்தப் படுவதாகச் சொன்னார்கள். திறப்பு விழா தேதிக்கு முந்தைய நாள் இரவு, நான் சென்று பேருந்து நிலையத்தைப் பார்வையிட்டேன். பாதாள சாக்கடைகள் மூடபடவில்லை. பயணிகள் நிற்பதற்காக வசதிகள் செய்யப்படவில்லை. நிர்வாக அறைக்கான பணிகள்கூட முடிக்கப் படவில்லை. பேருந்துகள் உள்ளே செல்ல அனுமதித்தால் பயணிகளுக்குப் பாதுகாப்பில்லாத நிலை என்பதால், திறப்பு விழாவை பணிகள் முடிந்த பின் வைத்துக்கொள்ளலாம் என்று தகவல் அளித்தேன். ஆனால், அரசியல் காழ்ப்பு உணர்ச்சி காரணமாக மக்களைப்பற்றிச் சிந்திக்காமல், தாங்களாகவே இப்படி ஒரு செயலை எதிர்த்தரப்பினர் செய்து இருக்கிறார்கள்...'' என்றார் காட்டமாக.
தி.மு.க. எம்.பி-யான ஹெலன் டேவிட்சனிடம் பேசினோம். ''பேருந்து நிலையம் திறக்கப்படாததால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். வாகன நெரிசலும் அதிகமாகி விட்டது. இந்த நிலையில், பேருந்து நிலையம் அமைச்சரால் திறந்து வைக்கப்பட இருப்பதாகக்கூறி என்னையும் அழைத்தனர். நான் அங்கு சென்ற பின்புதான், அமைச்சர் மற்றும் அதிகாரிகள் விழாவைப் புறக்கணிக்கிறார்கள் என்பது தெரிய வந்தது. நகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டதன் பேரில் நானே பேருந்து நிலையத்தைத் திறந்து வைத்தேன். தொடர்ந்து அ.தி.மு.க-வினர் பேருந்துகளை உள்ளே செல்ல அனுமதிக்காததால், மக்கள் நலனைக் கருத்தில் கொண்டுஉடனடியாக மறியலில் ஈடுபட்டோம்...'' என்றார்.
அ.தி.மு.க-வினரின் ஒட்டுமொத்தக் கோபமும் நகர்மன்றத் தலைவர் அசோக் சாலமன் பக்கம் திரும்பி இருப்பதால், அவரிடம் பேசினோம். ''பேருந்து நிலைய தரைத் தளம் அமைப்பது மட்டுமே தனி டெண்டர். பயணிகள் இருப்பிடம் அமைப் பது தனி டெண்டர். தரைத்தளப் பணிகள் அமைப்பது முடிவுக்கு வந்ததை அடுத்து, நாங்கள் அமைச்சரிடம் கேட்டு அவரது ஒப்புதலின் பேரில்தான் 16-ம் தேதி திறப்பு விழா எனத் தேதி முடிவு செய்யப்பட்டது. அதன்பேரில்தான் அனைவருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. திடீரென அமைச்சர் மற்றும் கலெக்டர் ஆட்சியர் விழாவைப் புறக்கணித்தது ஏன் எனத் தெரியவில்லை. லோக்கல் அ.தி.மு.க-வினர்தான் அமைச்சரிடம் பேசி, குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அவர்களின் அரசியல் விளையாட்டை மக்களின் அத்தியாவசியத் தேவைகளிலும் நுழைப்பது தவறு!'' என்றார்.
பஸ் ஸ்டாண்ட் திறந்துவைக்கப்பட்ட அன்று அ.தி.மு.க-வினரால் மூடப்பட்டு, அதன்பின்னர் மீண்டும் திறக்கப்பட்டு என்று அரசியல் கட்சிகள் நடத்திவரும் ஈகோ விளையாட்டைப் பார்த்து வெறுத்துப் போய் நிற்கிறார்கள் குமரி மக்கள்!

ஜெ. டிக் அடித்த அந்த 10 பேர்

ன்று நிறைந்த வெள்ளிக்கிழமை... சுப முகூர்த்த நாளும்கூட. 10 மாநகராட்சிகளுக்கும் வேட்பாளர்களை அதிரடியாக அறிவித்து கூட்டணி தர்மத்துக்குக் கெட்ட நேரத்தை சுட்டிக் காட்டிவிட்டார் ஜெயலலிதா. 'எந்நேரமும் மாற்றத்துக்கு உட்பட்டது’ என்று அடிக் குறிப்பு இருந்தாலும், இந்த உள்ளாட்சித் தேர்தல் சர வெடிக்குத் திரி கிள்ளிப் போட்டிருக்கும் அ.தி.மு.க. மேயர் வேட்பாளர்களின் பரபர புரொஃபைல் இதோ...
சைதை துரைசாமி (சென்னை):
கடந்த சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்ட வர். 'மினிஸ்டர் கேண்டிடேட்’ என்று அ.தி.மு.க-வின் மூத்த புள்ளிகளே விளிக்கும் அளவுக்கு, ஜெயித்தால் மந்திரியாகும் யோகத்தில் இருந்தவர். சொற்ப வாக்குகளில் தோற்றார். அடுத்து அ.தி.மு.க-வின் கோட்டாவுக்கு வந்த ராஜ்யசபா எம்.பி. பதவி துரைசாமிக்குத்தான் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரபி பெர்னார்டுக்கு அதை வழங்கினார் முதல்வர். காரணம் வணக்கத்துக்குரிய, சிவப்பு விளக்கு சுழலும் காரில் துரைசாமியை அமர்த்த வேண்டும் என்ற எண்ணம்தானாம். இப்போதே மேயர் தோரணையில் மிதக்கிறார் சைதையார்.
கார்த்தியாயினி (வேலூர்):
வேலூர் அ.தி.மு.க-வினருக்கு சற்றும் அறிமுகம் இல்லாதவர். கணவர் அனுஷ்குமார், மாவட்ட மருத் துவர் அணி இணைச் செயலாளராக இருப்பதுதான் கட்சியில் கார்த்தியாயினியின் விசிட்டிங் கார்டு. வி.ஐ.டி. யுனிவர்சிட்டியில் பி.ஹெச்.டி. ஆய்வு செய்து வரும் கார்த்தியாயினி, வேட்பாளர் அவதாரம் எடுத்தது ஆரோக்கியமான விஷயம்தான். ஆனாலும் 'இதுவரை இந்த மாவட்டத்துல எங்க கட்சி சார்பா நடந்த எந்தக் கூட்டத்திலும் போராட்டத்திலும் இந்த அம்மாவை நாங்களே பார்த்தது இல்லை. எங்களுக்கே அறிமுகம் இல்லாத இவங்க,  வேலூர் மக்களை எப்படி இம்ப்ரெஸ் பண்ணுவாங்க?’ என்று புலம்புகிறார்கள் வேலூர் அ.தி.மு.க-வினர்.
சவுண்டப்பன் (சேலம்):
கடந்த 2001 முதல் 2006 வரை சேலம் மாநகராட்சி யின் துணை மேயராகவும், ஆறு மாத காலம் மேயராகவும் இருந்தவர் சவுண்டப்பன். சேலம் மேடை நாடக நடிகர்கள் சங்கத் தலைவராக இருக்கிறார். பெயரில்தான் சவுண்டு இருக்கிறது. ஆனால், கட்சியில் செம சைலன்ட் பார்ட்டி. மேயர் பொறுப்பு வரை வளர்ந்து இருந்தாலும், தனக்காக எந்த கோஷ்டியும் சேர்த்துக்கொள்ளாமல், எந்த கோஷ்டியிலும் இணைந்துவிடாமலும் இருப்பவர். கன்னட தேவாங்க செட்டியார் இனத்தை சேர்ந்தவர். சேலத்தில் குறைவான வார்டுகளில் மட்டுமே இவரது சமூகத்தினர் இருக்கிறார்கள். ஆனால், ஒட்டுமொத்தமாகக் கை ஓங்கி இருக்கும் வன்னியர்களை எப்படி வளைப்பார் என்பது புரியாத புதிர். இந்த நிலையில், 'கடந்த ஆட்சிக் காலத்தில் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ராஜாவை வைத்து சேலத்தில் விழா எடுத்தவர் சவுண்டப்பன்’ என்ற புகார் கார்டன் கதவைத் தட்டி இருக்கிறதாம்.
ஜெயா (திருச்சி):
மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கும் ஜெயா, மாநகர் மாவட்ட வழக்கறிஞர் அணிச் செய லாளர் ராஜேந்திரனின் மனைவி. 1984-ம் ஆண்டு முதல் கட்சி உறுப்பினர். ஆனாலும், இதுவரையில் எந்தப் பொறுப்பும் வகித்தது இல்லை. புதுமுகமான ஜெயா வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில், மேயர் ஸீட் எதிர்பார்த்துக் காத்திருந்த கட்சியின் சீனியர்கள் பலருக்கும் அதிர்ச்சி. புத்தூர் ஆபீஸர்ஸ் காலனியில் கால்நடைத் துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதியின் வீட்டுக்கு எதிரில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார். சிவபதியின் சிபாரிசின் பேரிலேயே ஜெயாவுக்கு ஸீட் கிடைத்தது என்றும் சொல்கிறார்கள். ஸீட் எதிர்பார்த்து ஏமாந்த பலரும், 'ஜெயாவை வேட்பாளர் ஆக்கினால் தோல்வி அடைந்துவிடுவோம்’ என்று தலைமைக்கு ஃபேக்ஸ் மேல் ஃபேக்ஸ் அனுப்பி வருகிறார்களாம். .
செ.ம.வேலுசாமி (கோவை):
கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன் கொடநாடு பங்களாவில் ஜெயலலிதா தங்கியிருந்தார். அவருக்குத் தேவையான பொருட்களை தினமும் சென்னைக்கும் கொடநாட்டுக்குமாக கொண்டுபோய்ப் சேர்க்கும் பொறுப்பு வேலுசாமிக்குத் தரப்பட்டு இருந்தது. ஆனால், இந்தப் போக்குவரத்தை ஒழுங்காக நிர்வகிக் காததால் டென்ஷனான ஜெயலலிதா, கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து இவரைத் தூக்கி எறிந்ததாகச் சொல்வார்கள். கடந்த சட்டமன்றத் தேர்தலில் சூலூர் தொகுதியில் இவருக்கு முதலில் ஸீட் வழங்கப்பட்டது. பிறகு அதைப் பறித்ததால், தே.மு.தி.க. கைக்கு தொகுதி போனது. இப்படிக் கட்சியில் தொடர் புறக்கணிப்புக்கு உள்ளாகி நொந்துகிடந்த இந்த மாஜி அமைச்சருக்கு ஒரு வழியாக இப்போது அங்கீகாரம் கிடைத்து இருக்கிறது.
மல்லிகா பரமசிவம் (ஈரோடு):
ஈரோடு மாநகர் மாவட்ட மகளிர் அணிச் செய லாளராக இருக்கும் மல்லிகா, கழகத்துக்குள் நுழைந்த குறுகிய காலத்திலேயே கட்சியில் உயர் பொறுப்பு கிடைத்துள்ளது. மேயர் வேட்பாளர் வாய்ப்பு என்ற விறுவிறு வளர்ச்சியைப் பெற்றிருப்பது லோக்கல் அ.தி.மு.க-வினரின் மண்டையைக் காய வைத்து இருக்கிறது. பொதுப் பணித் துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம் மற்றும் அமைச்சர் கோகுல இந்திராவின் மூலம் மல்லிகா ஸீட் வாங்கி இருக்கி றார் என்கிறார்கள். கடந்த சட்டமன்றத் தேர்தல் சமயத்திலும் இப்போதும் ஸீட் எதிர்பார்த்து ஏமாந்தவர்கள், மல்லிகாவுக்கு எதிராகப் 'பழைய விஷயங்களை’க் கிளறி எடுத்து தலைமைக்கு ஃபேக்ஸ் அனுப்பி இருக்கிறார்களாம். கூடவே தே.மு.தி.க-வும் ஈரோட்டை கேட்டு நச்சரிப்பது மல்லிகாவுக்கு கிலியைக் கிளப்பி இருக்கிறது.
விசாலாட்சி (திருப்பூர்):
மாநில மகளிர் அணித் துணைச் செயலாளர், தலைமை செயற்குழு உறுப்பினர், தலைமைக் கழகப் பேச்சாளர் என்று அ.தி.மு.க-வின் கட்சிப் பொறுப் பளவில் பல அவதாரங்களை எடுத்திருக்கும் விசாலாட்சியிடம் ஜெயலலிதாவுக்கு தனிக் கருணை உண்டு. காரணம் இரு முறை எம்.எல்.ஏ. டிக்கெட் வழங்கப்பட்டு... பிறகு இவரது கைகளில் இருந்து பறிக்கப்பட்டதுதான். தொடர் ஏமாற்றங்களைத் தாங்கிக்கொண்டு விடாப்பிடியாக விசுவாசியாக இருந்து வரும் விசாலாட்சிக்குத் தகுந்த கௌரவத்தை வழங்கி இருக்கிறது தலைமை. ஆனாலும் விசாலாட்சிக்கு ஒவ்வொரு முறை வாய்ப்பு கிடைக்கும்போதும் அதைத் தட்டிவிடுவதோடு மட்டுமின்றி இவரது தோல்வியில் சந்தோஷப்படும் லோக்கல் அ.தி.மு.க. புள்ளி, இந்த முறையும் விசாலாட்சியைக் கவிழ்ப்பதற்காக 'சாமி... சாமி!’ என்று பிரார்த்தனையில் இறங்கியிருக்கிறாராம்.
ராஜன் செல்லப்பா (மதுரை):
கட்சியில் பொறுப்பான பதவிகள் இல்லாத போதும்கூட மதுரைக்குள் செல்லப்பாவுக்குத் தனியான ஓர் ஆதரவு வட்டம் உண்டு. மத்திய தொகுதி இடைத் தேர்தலில் அவரைப் பின்வாங்கவைத்துவிட வேண்டும் என்பதற்காக அழகிரி பட்டாளம் துரத்தித் துரத்தி அடித்தது. அவருடைய தொழில்சம்பந்தப்பட்ட விவகாரங்களிலும் ஏகப்பட்ட இடைஞ்சல்கள். அத்தனைக்கும் ஈடுகொடுத்து கம்பாகக் களத்தில் நின்றார். எல்லாவற்றுக்கும் மேலாக மதுரையில் நடந்த ஹார்லிக்ஸ் திருட்டு விவகாரத்தைத் திரட்டிக் கொடுத்து ஜெயலலிதாவின் கவனத்தை ஈர்த்தவர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் மத்திய தொகுதி தே.மு.தி.க-வுக்கு ஒதுக்கப்பட்டதால், செல்லப்பாவின் வாய்ப்பு நழுவிப்போனது. அதனால்தான் இப்போது மேயர் வாய்ப்பு.
விஜிலா சத்தியானந்த் (திருநெல்வேலி):
அதிர்ஷ்டம் இருந்தால் அரசியலில் உயர்ந்த இடத்தை எட்ட முடியும் என்பதற்கு லேட்டஸ்ட் உதாரணம் இவரே. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தீவிர அரசியலுக்கு வந்த விஜிலாவுக்கு கட்சியின் மாநகர் மாவட்ட மகளிர் அணித் துணைச் செயலாளர் பொறுப்பு கொடுக்கப்பட்டது. நெல்லை அ.தி.மு.க-வில் கோஷ்டி அரசியல் தீவிரமாக இருந்த நிலையிலும் எதிலும் தலையிடாமல் இணக்கமாகச் செயல்பட்டதால், பொதுக் குழு உறுப்பினர் பதவியும் தேடி வந்தது. அமைச்சர்கள் ஓ.பி.எஸ்., கோகுல இந்திரா ஆகியோரின் தீவிர விசுவாசி. ஆனாலும், கட்சியில் நீண்ட காலம் செயல்பட்டு வந்த சிலர், இவரது வளர்ச்சியைப் பார்த்துப் பொறாமையிலும் அதிர்ச்சியிலும் உறைந்து போயிருக்கிறார்கள்.
சசிகலா புஷ்பா (தூத்துக்குடி):
அ.தி.மு.க-வில் மாநில இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையின் துணைச் செய லாளராக இருந்து வரும் இவருக்கு, கடந்த சட்டமன்றத் தேர்தலில் நெல்லை மாவட்டம், ராதாபுரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், இறுதியில் கூட்டணிக் கட்சியான தே.மு.தி.க-வுக்கு அந்தத் தொகுதி வழங்கப்பட்டுவிட்டதால் கடைசி நேரத்தில் போட்டியிடும் வாய்ப்பை இவர் இழக்க நேரிட்டது. அப்போது ஜெயலலிதா, 'உனக்கு மீண்டும் வாய்ப்பு தருகிறேன்’ என்று கூறியதை நிறைவேற்றிக் காட்டி இருக்கிறார்.  'சசிக்கு நெருக்கமாக இருப்பதும், மணல் வைகுண்டராஜனுக்கு உறவினராக இருப்பதுமே இந்த சசிகலாவுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு கிடைப்பதற்குக் காரணம்’ என்கிறார்கள். நெல்லையில் இலவசமாக ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தையும் சென்னையில் டீம் ஐ.ஏ.எஸ். அகடமியையும் இவர் நடத்தி வருகிறார் என்பது கூடுதல் தகுதி.

சி.பி.ஐ. குற்றப் பத்திரிகையிலும் குழப்பங்கள்!

போட்டு உடைக்கிறார் பிரணவ் சச்தேவா
சுப்பிரமணியன் சுவாமிக்கு இணையாக 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் போராடுகிறது பொது நலன் வழக்காடு மையம் என்ற அமைப்பு. சாந்தி பூஷண், அவர் மகன் பிரசாந்த் பூஷண் மற்றும் பிரணவ் சச்தேவா ஆகிய மூவர் இந்த மையத்தின் வழக்கறிஞர்கள். ஸ்பெக்ட்ரம் வழக்கு குறித்து எத்தனையோ வதந்திகள் பரவிக்கிடக்க... இன்றைய நிலவரம் அறிய பிரணவ் சச்தேவாவை சந்தித்தோம்!
''உச்ச நீதிமன்றத்தில் ஸ்பெக்ட்ரம் விசாரணை தொடர்பான நிலவர அறிக்கையைத் தாக்கல் செய் வதில், சி.பி.ஐ. குழப்பங்களைச் செய்வதாகச் சொல் கிறார்களே?''
''தயாநிதி மாறன் குறித்து கடந்த மே மாதக் கடைசியிலேயே எல்லாத் தகவல்களும் வந்துவிட்டன. பத்திரிகைகளில் வந்த செய்திகளோடு வேறு சில ஆவணங்களும் எங்களுக்குக் கிடைத்தன. கோடை விடுமுறைக்குப் பின்னர் ஜூலை 6-ம் தேதி நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ. இந்த விவகாரம் குறித்து தங்களது கருத்துக்களை முன்வைத்தது.
'சிவசங்கரனைக் கட்டாயப்படுத்தி மேக்சிஸ் நிறுவனத்துக்கு ஏர்செல் பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இப்போது ஆரம்ப கட்ட விசாரணையில் இருக்கிறது. மேலும் விசாரித்து வருகிறோம்’ என்றது சி.பி.ஐ. இதன் பின்னர் செப்டம்பர் 1-ம் தேதி, இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ., உச்ச நீதிமன்றத்துக்குத் தகவல் கொடுக்க வேண்டி இருந்தது. அப்போது சி.பி.ஐ. சார்பில் வேணுகோபால், 'தொடர்ந்து விசாரித்து வருகிறோம். தயாநிதி மாறன், சிவசங்கரனைக் கட்டாயப்படுத்தி மேக்சிஸுக்கு விற்பனை செய்தது நிரூபிக்கப்படவில்லை. இதே மாதிரி ஆதாயம் பெற்றதற்கான விவகாரம் குறித்துத் தொடர்ந்து புலனாய்வை மேற்கொண்டு வருகிறோம்’ என்றார். இதற்கிடையே மீடியாக்கள், 'மாறனுக்கு சி.பி.ஐ. கிளீன் சிட்(நீறீமீணீஸீ நீலீவீt சுத்தமானவர்)’ என்று ரிப்போர்ட்களை வெளியிட்டனர். நாங்கள் இந்த விவகாரத்தை விடுவதாக இல்லை.
அதனால், கடந்த 5-ம் தேதி மற்றொரு மனுவைத் தாக்கல் செய்தோம். அப்போது தயாநிதி மாறனுக்கு எதிராக இருக்கும் சம்பவங்களையும் ஆதாரங்களையும் விளக்கி, 'இவ்வளவு இருந்தும் சி.பி.ஐ. வழக்கைப் பதிவு செய்யாமல் இருப்பது ஏன்? தயாநிதி மாறனை விசாரிக்காமல் இருப்பது ஏன்?’ என்று கேள்விகளை எழுப்பினோம். அதனால் கடந்த 8-ம் தேதி சி.பி.ஐ-யின் வழக்கறிஞர்கே.கே.வேணுகோபால், இந்த விவகாரத்தை 2ஜி ஊழல் வழக்கைக் கண்காணிக்கும் உச்ச நீதிமன்ற பெஞ்ச் நீதிபதிகளிடம் பேசினார். 'பத்திரிகைகளில் தயாநிதி மாறனுக்கு கிளீன் சிட் கொடுக்கப்பட்டு உள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. நாங்கள் யாருக்கும் கிளீன் சிட் கொடுக்கவில்லை. இது விசாரணையில் இருக்கிறது. மேக்சிஸ் இயக்குநரான ரால்ஃப் மார்ஷல், ஏர்செல் கைமாறுவதற்கு முன்பே, அமைச்சராக இருந்த தயாநிதி மாறனோடு மொரீஷியஸில் தொடர்புகொண்டார். இந்தத் தொடர்புகளுக்குப் பின்னர்தான் ஏர்செல்லுக்கு உரிமங்கள் கொடுக்கப் பட்டன. சிவசங்கரனிடம் ஏர்செல் இருந்தபோது உரிமங்கள் கொடுப்பதில் தாமதம் செய்தனர்...’ என்று சி.பி.ஐ. தரப்பில் கூறிவிட்டு, 'ஆனால் அமைச் சராக இருந்த தயாநிதி மாறன், சிவசங்கரனை கட்டாயப்படுத்தி ஏர்செல்லை மேக்சிஸுக்கு விற்கவைத்த விவகாரத்தை சி.பி.ஐ-யால் நிரூபிக்க முடியவில்லை!’ என்றார்.
கடந்த ஜூன் மாதம் ஆதாரங்கள் இருப்பதாகச் சொன்னவர்கள் இப்போது மாற்றிச் சொன்னதால், நாங்கள் சி.பி.ஐ-யின் நேர்மை மீது சந்தேகம் எழுப்பி னோம். விரைவில் எஃப்.ஐ.ஆர். போட்டு குற்றப் பத்திரி கையும் தாக்கல் செய்வார்கள் என்றே நம்புகிறோம்.''
''தயாநிதி மாறன் மீதான குற்றச்சாட்டுக்கு என்னென்ன ஆதாரங்களைக் கொடுத்துள்ளீர்கள்?''
''2004 மார்ச் முதல் டிஷ்நெட் வயர்லெஸ் மற்றும் ஏர்செல் ஆகியவற்றுக்கு சிவா குரூப் உரிமை யாளர்களாக இருந்தனர். இவர்கள் பல்வேறு கட்டங் களில் ஸ்பெக்ட்ரம் கேட்டு விண்ணப்பித்தனர். 2004 மார்ச் மாதம் எட்டு ஏரியாக்களுக்கும் பின்னர் மேலும் ஆறு விண்ணப்பங்கள் என சுமார் 14 உரிமங்களுக்கு விண்ணப்பங்கள் போட்டு இருந்தனர். இது குறித்து இந்த நிறுவனத்தின் உரிமையாளர் சிவசங்கரன் தொலைத் தொடர்பு அமைச்சருக்கு பல முறை கடிதம் எழுதினார். அவர், 'தன்னைக் கட்டாயப்படுத்தி, மேக்சிஸ் நிறுவன உரிமையாளர் டி.அனந்த கிருஷ்ணனுக்கு விற்பனை செய்யப்பட்டது, அதுவும் குறைவான விலைக்கு விற்கப்பட்டது’ என்கிறார். இது உண்மைதானா என்பதை சி.பி.ஐ-தான் வெளியில் கொண்டுவர வேண்டும்!''
''உங்கள் மனு பெரும்பாலும் பத்திரிகைச் செய்திகளின் அடிப்படையில் இருக்கிறதே?''
''எங்களிடம் தொலைத் தொடர்புத் துறை சம்பந்தப்பட்ட ஃபைல்களின் நகல்கள், சிவசங் கரனுக்கும் மாறனுக்கும் இடையே நடந்த கடிதப் போக்குவரத்துகள், மேக்சிஸ் நிறுவனம் எப்படி ஏர்செல்லை வாங்கியது, அந்த டீல்கள், பத்திரிகைச் செய்திகள் போன்றவை உள்ளன. குறிப்பாக நீதிபதி சிவராஜ் பாட்டீல் அறிக்கையில் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. அவற்றையும் எடுத்துக் கொடுத்து உள்ளோம்.''
''டிராய் ரிப்போர்ட் மூலம் ஆ.ராசா தப்பித்துவிட முடியுமா?''
''சி.பி.ஐ. நேர்மையாக வழக்கை நிரூபிக்க முயற்சித்தால், இது முடியாது. ஏராளமான சாட்சியங்கள் இவர்களுக்கு எதிராக உள்ளன. அதனால் இந்த ஒரு ரிப்போர்ட் மூலம் அவர்கள் தப்புவார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால், வழக்கை 'வீக்' செய்ய இதுபோன்ற முயற்சிகள் நடக்கின்றன. குற்றப் பத்திரிகையிலும் ஏராளமான குழப்பங்கள். வாக்குமூலங்களும் ஒன்றுக்கு ஒன்று எதிராக உள்ளன. இதையெல்லாம் பார்க்கும்போது,  இந்த வழக்கு நிரூபிக்கப்படாமல்... ஊழல் விவகாரத்தை சிதறடிக்கும் முயற்சிகள் நடக்கலாம் என்றும் எண்ணத் தோன்றுகிறது!''

நேருவும் அவரது தம்பிமார்களும்!

சொத்துக்குவிப்பு வழக்கின் பார்ட் ஒன்!
தி.மு.க. பிரமு​கர்கள் மீதான நில அபகரிப்பு வழக்குகள், மாரத்தான் ஓட்டத்தைப்போல் நீள... அடுத்த ரேஸாக சொத்துக் குவிப்பு வழக்குகளை அதிரடியாக ஆரம்பித்து இருக்கிறது ஜெயலலிதாவின் அரசு. முதல் டார்கெட்... முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு!
அதற்கு அச்சாரமாக, கடந்த 16-ம் தேதி நேரு மற்றும் அவரது உறவினர்களுக்குச் சொந்தமான 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரால் அதிரடி ரெய்டுகள் நடத்தப்பட்டன. திருச்சி, சென்னை, கோவை மற்றும் திருப்பூரில் இருக்கும் நேரு மற்றும் அவரது சகோதரர்களுக்கு சொந்தமான வீடுகளிலும், அலுவலகங்களிலும் நடத்தப்பட்ட ரெய்டு, காலை 6.30 மணிக்கு ஆரம்பித்து மாலை 6 மணி வரை தொடர்ந்தது. 2006 மே மாதம் முதல் 2011 மே மாதம் வரையில், தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த கே.என்.நேரு, அவருடைய வருமானத்துக்கு அதிகமாக அசையும் மற்றும் அசையா சொத்துகளைச் சேர்த்துள்ளதாக, திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அதன் அடிப்படையில், நீதிமன்ற அனுமதியின் பேரில் இந்த ரெய்டுகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு பாயின்ட்டுக்கும் ஒரு டி.எஸ்.பி. தலைமையிலான படை சென்றது. இதற்காகப் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி-க்கள் வரவழைக்கப்பட்டனர். அனைத்து இடங்களிலும் நடைபெற்ற ரெய்டு​களை ஒருங்கிணைத்தவர் திருச்சி லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி​-யான அம்பிகாபதி. இவர்தான் இந்த வழக்கின் விசாரணை அதிகாரி.
''தமிழகம் முழுவதும் 13 இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் ஏராளமான சொத்து ஆவணங்கள், வங்கிக் கணக்குப் புத்தகங்கள், ரொக்கம், நகைகள், லாக்கர்களுக்கான சாவி போன்றவை சிக்கி உள்ளன. சென்னை, கோவை, திருப்பூரில் நடத்தப்பட்ட சோதனைகளில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் திருச்சிக்குக் கொண்டுவரப்பட்டு, விசாரணை அதிகாரியால் ஒருங்கிணைக்கப்படும். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், திருச்சி மேற்குத் தொகுதியில் போட்டியிட்ட நேரு தாக்கல் செய்த சொத்து விவரங்களுடன், தற்போது கிடைத்துள்ள ஆவணங்கள் சரிபார்க்கப்படும். அது மட்டும் இன்றி, எங்களுக்கு ஏற்கெனவே கிடைத்த ரகசியத் தகவல்களின்படி கிடைத்த விவரங்களுடன் இந்த ஆவணங்கள் சரிபார்க்கப்படும். அதன் அடிப்படையில், வருமானத்துக்கு அதிகமாக எவ்வளவு சொத்துகள் சேர்க்கப்பட்டு உள்ளன என்று விவரம் தயாரிக்கப்பட்டு, நேரு மற்றும் அவருடன் தொடர்பு உடையவர்களுடன் விசாரணை நடத்தப்படும்...'' என்கிறார்கள் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார்.
முந்தைய ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 2002-ம் ஆண்டு கே.என்.நேரு மீது திருச்சி நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. அ.தி.மு.க-வைச் சேர்ந்த வழக்கறிஞர் மலர்விழி என்பவர் நேருவின் சொத்துகள் குறித்த விவரங்களை முதல்வர் ஜெயலலிதாவுக்கு மனுவாக அனுப்பினார். அதன் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அப்போதைய லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி-யான சுரேஷ்குமார், புகார்தாரர் யார் என்று குறிப்பிடாமல் வழக்குப் பதிவு செய்ய, அதனைக் காரணம் காட்டி வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டது. அதை அடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்துக்குச் சென்ற மலர்விழி, 'தனது புகாரின் பேரிலேயே வழக்குத் தொடரப்பட்டது’ என்று மேல் முறையீடு செய்தார். விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கில், வேறு சில அமைச்சர்களின் சொத்துக் குவிப்பு வழக்குகளும் சேர்க்கப்பட்டு அது ஒரே வழக்கானது. விசாரணை நடந்து வந்த சூழ்நிலையில், ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. அதை அடுத்து, வழக்கின் போக்கில் சுணக்கம் ஏற்பட... இறுதியில் வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வரவும், கே.என்.நேரு, அவரது சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினர் பெயரில் இருக்கும் சொத்துகள் குறித்த விவரங் களைத் திரட்டி, முதல்வர் ஜெயலலிதாவின் கவனத் துக்கு அனுப்பிவைத்தார் அதே மலர்விழி. அந்த ஆவணங்களை அடிப்படையாகக்கொண்டே இந்த அதிரடியாம்!
நேருவுக்கு ராமஜெயம், மணிவண்ணன், ரவிச்சந்தி ரன் ஆகிய மூன்று சகோதர்கள். நேரு, அவரது மனைவி சாந்தா, ராமஜெயம் - லதா, மணிவண்ணன் - சங்கரி, ரவிச்சந்திரன் - ரம்யா ஆகியோர் பெயரில் எந்தெந்த இடங்களில் சொத்துகள் வாங்கப்பட்டுள்ளன என்று அந்த மனுவில் சொல்லப்பட்டு உள்ளதாம். சில சொத்துகள் வாங்கப்பட்டபோது நேருவின் மனைவி சாந்தா என்று குறிப்பிடாமல், லெட்சுமணன் மகள் சாந்தா என்று அவரது தந்தையின் பெயரைக் குறிப்பிட்டு வாங்கி உள்ளார்களாம்.
டி.வி.ஹெச். எனப்படும் ட்ரூ வேல்யூ ஹோம் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம், நேருவின் சகோதரர்கள் ரவிச்சந்திரன், மணிவண்ணன் மற்றும் நேருவின் மகன் அருண் ஆகிய மூவர் பெயரில் இயங்குகிறது. இது தவிர, டவர்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன் என்ற பெயரில் ரவிச்சந்திரன் ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார். ராமஜெயம் 'ஜனனி குரூப்ஸ்’ என்ற பெயரில் கிரானைட், கல் குவாரி என்று பல பிசினஸ்கள் செய்து வருகிறார். இந்தோனேசி யாவில் நிலக்கரி சுரங்கம் குத்தகைக்கு எடுத்துள்ளார். கேர் இன்ஜினீயரிங் காலேஜ் மற்றும் கேர் இன்டர்நேஷனல் ஸ்கூல் ஆகியவற்றை 'நாராயணா எஜுகேஷனல் டிரஸ்ட்’ பெயரில் நடத்தி வருகிறார்கள். அந்த டிரஸ்ட்டுக்கு ராமஜெயம் நிர்வாக இயக்குநர், நேரு குடும்பத்துப் பெண்கள் பலரும் உறுப்பினர்கள். இதெல்லாம் வெளியே தெரிந்த சொத்துகள். 'இந்த நிறுவனங்களின் பெயரில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் வளைக்கப்பட்டன’ என்பதற்கான ஆதாரங்களை, பத்திரப் பதிவு அலுவலகம் மூலம் திரட்டி இருக்கும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார், அந்த ஆவணங்கள் எங்கே பதுக்கிவைக்கப்பட்டு இருக் கின்றன என்பதற்காகத்தான் இந்த ரெய்டுகளை நடத்தினார்களாம்.
''நேரு குடும்பத்தினர் பெயரில் நேரடியாக வாங்கி உள்ள சொத்துகள் தவிர, ஏராளமான நிலங்களை பினாமி பெயர்களில் வாங்கிக் குவித்துள்ளனர். அவற்றுக்கான பவரை மட்டும் தங்கள் பெயரில் வைத்திருக்கிறார்கள். அந்த ஆவணங்கள் எங்கு இருக்கின்றன என்பதைத்தான் கண்டுபிடிக்க வேண்டும்!'' என்கிறார்கள் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார்.
நேரு மற்றும் அவரது சகோதரர்கள் வீடுகளைத் தவிர்த்து உறவினர்கள் தரப்பில் வினோத் வீட்டில் மட்டுமே ரெய்டு நடத்தப்பட்டது. காரணம், ராம ஜெயத்தின் நிறுவனக் கணக்கு வழக்குகளை கவனித்து வந்தவர் அவர். ரெய்டு நடத்தப்பட்ட அடுத்த நாளில் இருந்து வினோத் எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை. அவரது மொபைல் போன்கள் ஆஃப் செய்யப்பட்டு இருக்கின்றன. போலீஸ் கைது செய்துவிடும் என்று பயந்து தலைமறைவாக இருக் கிறாரா.... இல்லை, வினோத்தை வளைத்திருக்கும் போலீஸார் தங்கள் கஸ்டடியில்வைத்து விசாரித்து வருகிறார்களா என்று தெரியவில்லை என்கிறார்கள்.
வினோத்தை வளைப்பதன் மூலம், சொத்துக் குவிப்பு வழக்கில் அடுத்த திருப்பங்கள் அரங்கேறலாம்!
ஆர்.லோகநாதன்
படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்
 தேர்தல் கமிஷனுக்கு டெஸ்ட்!

திருச்சி மேற்கு தொகுதி இடைத் தேர்தலில் எதிர்பாராமல் வேட்பாளர் ஆக்கப்பட்டிருக்கிறார் நேரு. 'உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி’ என்று சொன்ன தி.மு.க., 'இடைத் தேர்தல் பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை’ என்றது. தேர்தலைப் புறக்கணிக்கும் மனநிலையில்தான் தி.மு.க. இருக்கிறது என்பதை இது காட்டியது. 'இடைத் தேர்தலில் போட்டியிட வேண்டாம்’ என்று தலைமைக்கு சொல்லியிருந்தார் நேரு. இந்த நிலையில் நேரு நிறுத்தப்பட்டதற்கு காரணங்கள் உண்டாம். நேருவை குறி வைத்து நிலமோசடி வழக்கு, ரெய்டு என்று அ.தி.மு.க. பாய்ச்சல் காட்டிக் கொண்டிருக்க... வேறு வழியில்லாமல்தான் நேருவை வேட்பாளராக அறிவித்தாராம் கருணாநிதி. ஏற்கெனவே அந்த தொகுதியில் நின்றவர், பலமான வேட்பாளர், பழிவாங்கும் அனுதாபம் இவை எல்லாம் சேர்ந்துதான் நேருவை வேட்பாளராக நிறுத்த காரணமாம்.
அ.தி.மு.க. வேட்பாளர் பரஞ்சோதிக்கு எதிராக அவரது இரண்டாவது மனைவி போர்க்கொடி தூக்கியிருக்கும் இந்த சமயத்தில் தேர்தல் புறக்கணிப்பு சரிவராது என்பது தி.மு.க. சீனியர்கள் கருத்தாம். இடைத் தேர்தலில் ஆளும் கட்சிதான் ஜெயிப்பது வழக்கம். இது தி.மு.க-வுக்கும் தெரியும். கடந்த சட்டசபைத் தேர்தலில் ரெய்டு நடத்தி பண பட்டுவாடாவை தடுத்த தேர்தல் கமிஷன் இடைத் தேர்தலில் ஆளும் கட்சியின் பண விநியோகத்தை எப்படி தடுக்கப் போகிறது என்பதை டெஸ்ட் செய்வோம் என்று சொல்லி களத்தில் குதித்ததாம் தி.மு.க.!

மெளனமானார் சின்னம்மா!

கண்ணீரில் ஈழ ஆதரவாளர்கள்
ழத்தில் போர் உக்கிரமாக நடந்த நேரம். ''உடல்நிலை சரியில்லாத நீங்கள் வெளியேறிவிடுங்கள். இனியும் இங்கே இருந்தால் உயிர் மிஞ்சாது!'' என் றார்கள் ஆசிரியை சின்னம் மாவிடம்.

''என் பேரப் பிள்ளைகள் இருக்கும் இடத்தில்தான் இறுதி வரை இருப்பேன். இந்த மண்ணைவிட்டு ஓடிப் போய்த்தான் என் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்றால், நான் இறப்பதே நல்லது!'' எனச் சொல்லி உறுதியாக நின்றார் சின்னம்மா. விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மாமியார்தான் இந்தச் சின்னம்மா!
கடந்த 6-ம் தேதி, 'சின்னம்மா இறந்து விட்டார்’ என்கிற தகவல் ஈழ ஆதரவு மக்கள் மத்தியில் அரசல்புரசலாகப் பரவியது. 'இது உண்மையா பொய்யா?’ எனப் புரியாமல் உலகத் தமிழர்கள் பலரும் வருத்தத்தில் மூழ்கினார்கள். ''அம்மா இறந்தது உண்மைதான். சிங்களப் பாதுகாப்பு முகாமில் இருந்து வற்புறுத்தி வெளியே கொண்டுவரப்பட்ட சின்னம்மா, சிங்கள உளவுப் புள்ளிகளுக்குத் தெரியாமல் மலேசியாவில் தங்க வைக்கப்பட்டார். அதனால்தான் இறப்புச் செய்தியை அறிவிக்க முடியாமல் போனது!'' என மதிவதனியின் உறவு வட்டாரம் சொல்ல, ஈழ ஆதரவாளர்கள் உறைந்துகிடக்கிறார்கள்.
''அண்ணிக்கு மட்டும் அல்ல... களத்தில் நின்ற எல்லோருக்குமே அன்னையாக விளங்கியவர் சின்னம்மா. போர் தீவிரமானபோது, பேரப் பிள்ளைகள் துவாரகா, பாலச்சந்திரன் ஆகியோரைப் பார்த்துக்கொண்டது சின்னம்மாதான். கடைசிக் கட்டப் போரில் நினைத்துப் பார்க்க முடியாத இழப்புக்கு ஆளான நிலையில், முக்கிய மான ஆட்களின் உதவி யோடு மலேசியாவில் தங்கவைக்கப்பட்டார் சின்னம்மா. எந்த நேரமும் பேரப்பிள்ளைகளின் ஞாபகம்தான் அவருக்கு. கடைசி இரண்டு வருடங் களாகத் தவறியும் அவர் வாய் திறக்கவில்லை. நினைத்துப் பார்க்க முடியாத இழப்பும் துயர மும் அவரை நிரந்தர ஊமையாக்கிவிட்டன.
ஆரம்ப கட்டப் போரி லேயே சின்னம்மாவை வெளிநாட்டுக்கு அனுப்ப முயற்சி நடந்தது. ஆனால், வெளிநாடுகளுக்குப் போக அவருக்கு விருப்பமே இல்லை. டென்மார்க்கில் வசிக்கும் மகள் அருணாதேவி, மகன் ஸ்ரீதரன் ஆகியோர் அழைத்தபோதும் சின்னம்மா அசைந்துகொடுக்கவில்லை. சின்னம்மாவின் மகன் பாலச்சந்திரன் இயக்கத்தில் இருந்தபோது இறந்தவர். அவர் நினைவாகத்தான் தன் மகனுக்கு பாலச்சந்திரன் எனப் பெயர் வைத்தார் தலைவர் பிரபாகரன். அதனால், பேரன் பாலச்சந்திரன் மீது சின்னம்மாவுக்கு மிகுந்த பிரியம். 85 வயதான சின்னம்மா கடைசி வரை பாலச்சந்திரனின் புகைப்படத்தைப் பார்த்தபடியே இருந்தார். பேரப் பிள்ளையின் ஏக்கத்திலேயே அம்மாவின் உயிர் பிரிந்துவிட்டது!'' என்கிறார்கள் மலேசியாவில் உள்ள ஆதரவுப் புள்ளிகள்.
கடைசிக் கட்டப் போரில் நிகழ்ந்த இக்கட்டுகள், துயரங்கள், உண்மைகள் ஆகியவற்றை அறிந்த சாட்சிகளில் சின்னம்மாவும் ஒருவர்!

ஜாமீனுக்கு அலையும் தி.மு.க... துரோகம் செய்த அ.தி.மு.க.

நெல்லையில் எழுந்த வைகோ அலை!
'சட்டமன்றத் தேர்தலை சந்திக்காததால் துவண்டு​கிடக்கிறது ம.தி.மு.க.’ எனத் தமிழக அரசியல் களம் எதிரொ​லித்துக்​கொண்டு இருந்த நிலையில், அவர்களை நோக்கிச் சாட்டையைச் சொடுக்கி இருக்கிறது ம.தி.மு.க-வின் நெல்லை திறந்தவெளி மாநாடு!
நெல்லை பொருட்காட்சி மைதானத்தில் ம.தி.மு.க-வின் சார்பில் 'பேரறிஞர் அண்ணாவின் 103-வது பிறந்த நாள் விழா திறந்தவெளி மாநாடு’ நடந்தது. மாநாட்டுக்காகத் தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்கள் குவிந்தனர். இவ்வளவு கூட்டம் வரும் என்பதை காவல் துறையினர் எதிர்பாராததால், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தத் தவித்துவிட்டனர். முதல் நாள் மாலை 4 மணிக்குத் தொடங்கிய மாநாட்டில் வைகோ பேசி முடித்தபோது நேரம், அதிகாலை மணி 2. இருந்தும் தொண்டர்கள் படுஉற்சாகமாக இருந்தது ஆச்சர்யம்.
நெல்லை மாவட்டச் செயலாளர் ப.அ.சரவணன், 'நம்பவைத்துக் கழுத்தை அறுத்த நயவஞ்சகத்துக்குத் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்’ என சூடாகப் பேச்சை ஆரம்பித்துவைத்தார். அவரைத் தொடர்ந்து பேசியவர்களும், கடந்த தேர்தலில் தங்களை அ.தி.மு.க ஏமாற்றிவிட்டதாக ஆவேசப்பட்டனர். இந்த இறுக்கமான சூழலில், மேடையில் இருந்த வைகோவுக்கு தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் ஜோயல், புலிக்குட்டி பொம்மையைப் பரிசளித்தார். அதனைக் கண்டதும் ஒட்டுமொத்தக் கூட்டமும் ஆர்ப்பரித்தது.
மாநாட்டின் தலைவர் பொறுப்பு நாஞ்சில் சம்பத்துக்குக் கொடுக்கப்பட்டதால்,நெகிழ்ந்து​போய் கண் கலங்​கினார். ''தி.மு.க. அதன் இயல்பை இழந்து ரொம்ப நாளாகிப்போயிருச்சு. அது இப்போ 'திகார் முன்னேற்றக் கழகம்’ என மாறிடுச்சு. அந்தக் கட்சியை சேர்ந்த பலரும் முன் ஜாமீன் தேடி அலையுறாங்க. அதேபோல், அ.தி.மு.க-வும் கடந்த தேர்தலில் நமக்குத் துரோகம் செஞ்சிருக்கு. தோழமைக்கு இலக்கணமான வைகோவை மதிக்காதவர்களின் கணக்கை 2016-ல் முடிப்போம்...'' என ஆக்ரோஷப்பட்டார்.
நள்ளிரவு 11.30 மணிக்கு பேசத் தொடங்கிய வைகோ, கூட்டணி தர்மத்துக்காகக் கடந்த ஐந்து ஆண்டுகள் பல விஷயங்களை வெளியே சொல்ல முடியாத நிலையில் இருந்ததை ஒப்புக்கொள்கிறேன். அ.தி.மு.க-வுடன் நாங்கள் கூட்டணி வைத்திருந்தபோது, எனக்கு மட்டும் அல்லாமல் எனது தோழர்களுக்கும் ஆயிரம் மனக் காயங்கள் ஏற்பட்டன. ஆனாலும், கூட்டணி தர்மத்துக்கு நேர்மையாகச் செயல்பட்டோம். அ.தி.மு.க-வினர் சட்டமன்றத்தில் இருந்து காரணமே இல்லாமல் வெளியேறியபோதுகூட, எங்கள் எம்.எல்.ஏ-க்களும் ஆதரவு கொடுத்து வெளியே வந்தார்கள். நாங்கள் நடத்திய எந்தப் போராட்டமாக இருந்தாலும், அவர்களையும் அழைத்து உரிய மரியாதை கொடுத்தோம்.
இந்தியாவிலேயே கூட்டணிக்கு இலக்கணமாகத் திகழ்ந்த ம.தி.மு.க., வீசி எறியும் ஸீட்டுக்காக மண்டியிடும் இயக்கம் அல்ல என்பதைக் கடந்த தேர்தலில் நிரூபித்தோம். நாம் பணம் வாங்கிவிட்டோம் என்றவர்கள், நாம் தேர்தலையே புறக்கணித்ததும் வாயடைத்துப் போய்விட்டனர். அதேபோல், ஸ்டெர்லைட் ஆலையிடம் இருந்து பணம் பெற்றோம் என்றார்கள். ஆனால், இன்று வரை அந்த ஆலைக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்துவது நாம்தான். கடந்த தேர்தலைப் புறக்கணித்த பிறகு மக்களிடம் நம் மீதான நம்பகத்தன்மை அதிகரித்து இருக்கிறது.
தமிழகத்தில் முல்லை பெரியாறு பிரச்னை, கூடங்குளம் அணு சக்தி விவகாரம், ஸ்டெர்லைட் சிக்கல் என மக்களை பாதிக்கும் அபாயம் சூழ்ந்திருக்கும் நிலையில் இந்த மாநாடு நடக்கிறது. தமிழக மக்களுக்கு ஏற்படும் பாதிப்பைத் தடுப்பது நமது கடமை. அதனை நாம் தொடர்ந்து செய்வோம்...'' என்று கர்ஜித்தார்.
இந்த மாநாட்டில் 'பேரறிவாளன், சாந்தன், முருகனின் தூக்குத் தண்டனையைக் குறைக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் மாநிலத்தின் உரிமையை நிலைநாட்டுவதில் இந்தியாவுக்கே வழிகாட்டியாகத் திகழ வேண்டும். கூடங்குளம் அணு உலையை மூட தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கச்சத் தீவை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும்’ என்பது உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மிகவும் பிரமாண்டமான முறையில் இந்த மாநாட்டை நடத்தி இருப்பதைப் பார்க்கையில், உள்ளாட்சித் தேர்தலில் ம.தி.மு.க. ஏதோ திட்டத்துடன் களம் இறங்கிவிட்டதாகவே தோன்றுகிறது!

கன்டெய்னருக்குள் ரூ.900 கோடி..

சத்துவாச்சாரியில் பக்... பக்...
ட்டைப் பாக்கெட்டில் ஆயிரம் ரூபாயை வைத்துக் கொண்டு பஸ்ஸில் ஏறினால் நமக்கு என்ன பதற்றம் இருக்கும்? பக்கத்தில் உரசுபவர் எல்லாம் பிக்பாக் கெட்டோ என்று நினைக்கத் தோன்றும். இதோ பாருங்கள்...  900 கோடியை வைத்துக் கொண்டு ஒரு கன்டெய்னர் எப்படி அலைந்துள்ளது என்று!
'மங்காத்தா’ படத்தில் கன்டெய் னர் லாரியில் 500 கோடி கொள்ளை அடிக்கப்படுவது போன்று ஒரு காட்சி வரும். அந்தப் பதற்றமும் சேர்ந்த மனநிலையில் படியுங்கள். கடந்த 13-ம் தேதி இரவு மைசூரில் இருந்து சென்னை ரிசர்வ் பேங்க்குக்கு  900 கோடிப் பணம், இரண்டு கன்டெய்னர் லாரிகளில் பெங்களூரு - சென்னை பைபாஸ் வழியாகக் கொண்டு செல்லப்பட்டன. அப்போது அந்த லாரிகளுக்குப் பாதுகாப்பாக வந்த எஸ்கார்ட் வாகனம், வேலூர் அருகே விபத்துக்கு உள்ளாகி... பரபரப்பானது!
இது, 'பணத்தைக் கொள்ளை அடிக்கத் திட்டமிட்டு சிலர் செய்த முயற்சியாகவும் இருக்கலாம்’ என்று சிலர் சந்தேகப்படும் நிலையில், இந்தச் சம்பவம் குறித்து விசாரணை செய்து வரும் வேலூர் வடக்குக் காவல் நிலையத்தில் விசாரித்தோம்.
''வழக்கமாக ரிசர்வ் பேங்க்குக்குப் பணம் கொண்டுசெல்வது, பெங்களுரு - சென்னை பைபாஸ் வழியாகத்தான். கடந்த 13-ம் தேதியும் நாசிக்கில் அச்சடிக்கப்பட்ட  900 கோடி கரன்சி நோட்டுகளை இரண்டு கன்டெய்னர் லாரிகள் மூலம் கொண்டுசென்றனர். சி.ஆர்.பி.எஃப் பாது காப்புப் படையோடு வண்டிகளுக்கு முன்பு டொ யோட்டோ இன்னோவோ காரிலும், பின்னால் மற்றொரு காரிலும் பலத்த பாதுகாப்போடு பணம் கிளம்பியது.
வேலூர் அருகே காலை சுமார் 2.45 மணிக்கு எல்.கே.எம். ஷெட் பகுதியில் பின்னால் வந்த ஒரு கார், கன்டெய்னர் வண்டிகளின் பாதுகாப்புக்குப் பின்னால் வந்த காரை மோதிவிட்டது. அந்தக் காரை முந்தும்போது, டிரைவர் தூக்கக் கலக்கத்தில் மோதி இருக்கிறார். ஆனால், இந்த விபத்து நடந்தது தெரியாமல் இரண்டு கன்டெய்னர் லாரிகளும், முன்னால் பாதுகாப்புக்குச் சென்ற எஸ்கார்டு வண்டியும் சென்னை நோக்கிச் சென்றன. விபத்து ஏற்பட்ட காரில் இருந்து முன்னால் சென்ற வண்டிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதும்தான், கன்டெய்னர் லாரிகளை சத்துவாச்சாரியில் நிறுத்தினர். அதன் பின்பு பாதுகாப்புக்கு சென்ற வண்டி, மீட்புப் பணிக்கு விரைந்து வந்தது. விபத்து நடந்த நேரம் அதிகாலை என்பதால், அதிகமாகக் கூட்டம் இல்லை. காரில் இருந்த டிரைவர் குமார் உட்பட மத்தியப் பாதுகாப்புப் படை வீரர்கள் ஐந்து பேருக்குப் பலத்த அடி. வந்தவாசியைச் சேர்ந்த பாதுகாப்பு வீரரான அமலதாஸ் மரணமடைந்துவிட்டார். காயம் அடைந்தவர்கள் சி.எம்.சி. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
சத்துவாச்சாரி காவல் நிலையம் மூலம் கன்டெய் னர் லாரிகளுக்கு 1-ம் தேதி முழுவதும் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. மற்றபடி அந்த லாரிகளுக்கு எந்தச் சேதமும் இல்லை. இந்த விபத்தில் சிக்கிய டிரைவர் குமார், பெங்களூருவை சேர்ந்தவர். அவரிடம் விசாரித்தபோது, 'தூக்கக் கலக்கத்தாலும், அதிவேகமாக முன்னால் ஒரு கார் ஓவர்டேக் ஆனதாலும்தான் என்ன செய்வதென்று தெரியாமல், இந்த விபத்து நடந்துவிட்டது’ என்றார். அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து இருக்கிறோம். சென்னை ரிசர்வ் பேங்க்குக்குத் தகவல் தெரிந்து, அதிகாரிகள் இங்கு வந்து, தகுந்த பாதுகாப்போடு லாரிகளை சென்னைக்கு அன்று இரவே கொண்டுசென்றுவிட்டனர். சி.எம்.சி-யில் சிகிச்சை பெற்று வந்த பாதுகாப்பு படைவீரர்களும் டிஸ்சார்ஜ் ஆகி சென்னை சென்றுவிட்டனர். இந்த விவகாரம், எங்கள் லிமிட்டில் வருவதால், தீவிர விசாரணை செய்து வருகிறோம். நல்ல வேளையாக, கன்டெய்னர் லாரி மீது எந்த வாகனமும் மோதவில்லை. அப்படி மோதி இருந்தால், மிகப் பெரிய விபத்து ஏற்பட்டு இருக்கும்.
விபத்துக்குள்ளான டொயோட்டோ இன்னோவோ காரை, வேலூர் ஆர்.டி.ஓ-விடம் காட்டிவிட்டு அந்த வாகனத்தையும் பாதுகாப்பு அதிகாரிகள் கொண்டு சென்றுவிட்டனர். எங்களைப் பொறுத்த வரை, இது சாதாரண மாக ஏற்பட்ட விபத்துதான் என்று விசார ணையில் தெரிய வந்துள்ளது. மற்றபடி, கன்டெய்னர் லாரிகளில் இருந்த பணத்தைக் கொள்ளையடிக்கப் போட்ட திட்டமாகத் தெரியவில்லை...'' என்றனர்.
கிருஷ்ணகிரி - வேலூர் பைபாஸ் சாலையில் அடிக்கடி பல விபத்துகள் நடந்துவரும் நிலையில், அதைத் தடுக்க போக்குவரத்துப் போலீஸார் தகுந்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும்!

சோனா சொல்லும் திகில் காட்சிகள்

நான் தம் அடிச்சிட்டு இருந்தேன். அப்ப...!
யாரிப்பாளர் சங்க மோதல்... பெப்ஸி பஞ்சாயத்து... இதை எல்லாம் தாண்டி கோலிவுட்டின் இன்றைய ஹாட் டாப்பிக், கவர்ச்சி நடிகை சோனா வுக்கும் படத் தயாரிப்பாளர் எஸ்.பி.பி.சரணுக்கும் இடையேயான 'ச்சீ... சீய்...’ லடாய்!
'கண்ட இடத்தில் கை வைத்துவிட்டார்!’ என்று சோனா போலீஸில் புகார் கொடுக்க... சரண் மீது மகளிர் வன்கொடுமைத் தடுப்புப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது போலீஸ்.
நெஞ்சு வலி என்று தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அட்மிட் ஆகி இருந்தார் சோனா. ''நான், டைரக்டர் வெங்கட் பிரபு, ஜெய், பிரேம்ஜி, வைபவ், அஸ்வின், சரண் எல்லோரும் ஃப்ரெண்ட்ஸ். எங்க டீம்லயே பேட் பாய் சரண்தான். அடிக்கடி அவன் என்னைக் கெட்ட வார்த்தையில் திட்டி, சீண்டிக்கிட்டே இருப்பான். 'கோவா’ ரிலீஸுக்கு ஒரு வாரம் முன்னாடி தேவி பிரசாத் தியேட்டர்ல 'சென்னை - 28’, 'சரோஜா’ படங்களை சேர்ந்து பார்க்க ஏற்பாடு செஞ்சு இருந்தோம். அப்பவும் சரண் என் மேலே கண்டபடி கையை வெச்சு ஆபாசமா பேசினான்.
எஸ்.பி.பி. சார் எவ்வளவு மரியாதையான மனுஷர். அவருக்குப் போய் இப்படி ஒரு பையன். 'கனிமொழி’ தயாரிப்பு, 'கோவா’ விநியோகம் எடுத்ததுனு எனக்கு சுமார் அஞ்சு கோடி நஷ்டம். அதனால, வெளியே போகாம வீட்டோட இருந்தேன். சின்ன விபத்துல கால் உடைஞ்சு ஸ்டிக் வெச்சு தான் நடக்கிறேன். தவிர, ஹார்ட் பிராப் ளம், ஹார் மோன் பிராப்ளம்னு எனக்கு நிறைய பிராப்ளம்ஸ்!
'மங்காத்தா’ படத்துக்கு முன்னமே வெங்கட் பிரபுவை எனக்கு ஒரு படம் பண்ணித் தரச் சொல்லி, ஒரு பெரிய அமவுன்ட் அட்வான்ஸா கொடுத்து இருந்தேன். 'மங்காத்தா’ மெகா ஹிட் கொடுத்ததால், அவர் பெரிய லெவலுக்கு கமிட் ஆகிட்டார். எனக்கு படம் பண்ணித் தர முடியாத சூழ்நிலை. அதனால, அட்வான்ஸைத் திருப்பிக் கேட்டேன். அவரும் தர்றதா சொன்னார்.
போன 14-ம் தேதி வெங்கட் பிரபு எனக்கு போன் போட்டு, 'மங்காத்தா’ சக்ஸஸுக்கு பார்ட்டி வெச்சிருக்கேன். பார்க் ஹோட் டல் பாஷாவுக்கு வந்துடு. அப் படியே உன் பணத்தையும் வாங்கிக்கோ’னு  சொன்னார். நான் அங்கே போனப்ப, வைபவ் வீட்டுக்கு பார்ட்டியை மாத்தி யாச்சுன்னாங்க. வைபவ் வீட்டில் அவனோட பேரண்ட்ஸுக்குத் தெரியாம ஃபர்ஸ்ட் ஃப்ளோர்ல பார்ட்டி நடந்தது.
நான் தம் அடிச்சுக்கிட்டே, வெங்கட் பிரபுகிட்ட பால் கனியில நின்னு பேசிட்டு இருந் தேன். அப்ப சரண் வந்தான். உடனே நான் வெங்கட்கிட்ட, 'இவனைக் கூப்பிட்டா என்னைக் கூப்பிடாதேனு எத்தனை முறை சொல்லி இருக்கேன்?’னு கேட்டேன். வெங்கட், 'இல்லை சோனா, அவன்கிட்ட பணம் வாங்கித்தான் உனக்கு தரப் போறேன். அதனாலதான் கூப்பிட்டேன்’னு சொன்னார்.
பார்ட்டியில் ஜெய், பிரேம்ஜி, வைபவ், அஸ்வின், சக்தி சரவணன், ரிங்கு எல்லோரும் கலந்துக்கிட்டாங்க. பார்ட்டி நடந்துட்டு இருக்கும்போதே திடீர்னு சரண் என்னைக் கண்டபடி அமுக்கினான். உடனே நான், 'பிரேம்...’னு கத்தினேன். அவன்தான் ஓடி வந்து சரண் கையைத் தட்டிவிட்டு என்னைக் காப்பாத்தினான்.
உடனே வெங்கட் ஓடி வந்து சரணோட சட்டை காலரை பிடிச்சு, கண்டபடி திட்டினான். 'போதையில பண்ணிட்டேன்... சாரி... சாரி’ன்னான். ஆனா, கொஞ்ச நேரத்துல சரண், 'ஏய் உன்னோட ரேட் என்னடி? ரேட்டைச் சொல்லுடி’ன்னான். அதுக்கு மேலே பொறுக்க முடியாம, பாண்டி பஜார் போலீஸ் ஸ்டேஷன் போய் புகார் கொடுத்துட்டேன்.
கிளாமர் ஆர்ட்டிஸ்ட்னா கேவலமாப் போச்சா... நாங்க உடம்பை காட்டித்தான் சம்பாதிக்கிறோமே தவிர, உடம்பை வித்து சம்பாதிக்கலை. எட்டு வருஷமாப் பழகின என் ஃப்ரெண்ட்ஸ் வெங்கட், வைபவ் எல்லாருமே இப்ப அப்படி எதுவுமே நடக்கலைனு பொய் பேசுறாங்க. நட்புக்குத் துரோகம் பண்றாங்க. எனக்கு வேண்டியது எல்லாம் ஒண்ணுதான். எல்லா பிரஸ்ஸையும் கூப்பிட்டு அவங்க முன்னாடி சரண், 'நான் அத்துமீறினது உண்மைதான். என்னை மன்னிச்சிடு’னு சொல்லணும். அதுவரைக்கும் நான் விட மாட்டேன்...'' பெருமூச்சுடன் கொதிக்கிறார் சோனா!
எஸ்.பி.பி. சரணோ, ''நான் சோனாவிடம் பிசினஸ்தான் பேசினேன். என்ன காரணத்துக்காக அவர் அப்படிச் சொல்கிறார் என்று தெரியவில்லை. ஒருவேளை பப்ளிசிட்டி தேடுவதற்காக இருக்கலாம். இதை நான் எங்கும் நிரூபிக்கத் தயார்...'' என்கிறார் சுருக்கமாக!
போலீஸ் தரப்பிலோ, ''அவங்களுக்குள்ளே நிறைய விஷயங்கள் சகஜம். இது வேற என்னமோ பணப் பிரச்னை. கொஞ்ச நாளில் சமாதானம் ஆகிடுவாங்க பாருங்க... இருந்தாலும் முறைப்படி நாங்க விசாரிச்சு வர்றோம்...'' என்கிறார்கள்!
சோனா என்பதால்தான், இதெல்லாம் நியூஸ் ஆகுது!
**********************************************************************************
சகாயம் சம்மன்... தப்பித்தாரா அழகிரி?

யா இன்ஜினீயரிங் கல்லூரி நில விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் அழகிரிக்கு, கலெக்டர் அனுப்பிய சம்மன், தமிழகத்தையே அதிரவைத்தது. 16-ம் தேதி கலெக்டருக்கு முன் அழகிரி ஆஜராவாரா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருந்தது.
இந்த நிலையில் 14-ம் தேதி, 'அந்த சம்மனை ரத்து செய்யவேண்டும்’ என்று அழகிரி சார்பில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அழகிரி தரப்பில் ஆஜரான வக்கீல் வீரகதிரவன், ''கலெக்டர் அனுப்பிய நோட்டீஸில் கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மனுதாரரிடம் எந்த விளக்கமும் கேட்காமல், குற்றத்தை ஊர்ஜிதப்படுத்தியதுபோல் தெரிவித் திருப்பது தவறு. சம்மனில் தேவை இல்லாத வாசகங் கள்இடம்பெற்று இருப்பதைப் பார்த்தால், இது விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீஸ்போன்று தெரியவில்லை. அரசியல் உள்நோக்கம் இருப்பதையே காட்டுகிறது. எனவே, இந்த நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும்!'' என்றார்.
அவரது வாதத்துக்கு எதிராக, 'கலெக்டர் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி உள்ளனர். அதன் பின்னரே மனுதாரரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது...' என்று அரசு கூடுதல் வழக்கறிஞர் செல்லப்பாண்டியன் அளித்த விளக்கம் ஏற்கப்படவில்லை. கடைசியில், 'இந்த நோட்டீஸை திரும்பப் பெற்று, முறைப்படி நோட்டீஸ் அனுப்புகிறீர்களா? அல்லது தேவை இல்லாத வாசகங்களை நீக்கிவிடுகிறீர்களா?’ என நீதிபதிகள் கேட்டனர். அதன் பிறகு சம்மன் திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டது. எந்தத் தேதியில் அழகிரி ஆஜராக வேண்டும் என்று கலெக்டர் உத்தரவு இட் டிருந்தாரோ, அதே நாளில் அந்த சம்மனை சகாயமே திரும்பப் பெறும்படிச் செய்துவிட்டார் அழகிரி.
இந்த சூழலில், 'எப்போது புதிய சம்மன் அனுப்பு வீர்கள்?' என்று கலெக்டரிடம் கேட்டோம். 'இப் போது பேட்டி எதுவும் வேண்டாமே?'' என்று தவிர்த்துவிட்டார்.
ஆனால் அவர் தரப்பில் பேசியவர்கள், '' நீதிமன்ற உத்தரவு அழகிரிக்கு தற்காலிக நிம்மதி மட்டும்தான்... மீண்டும் சம்மன் அனுப்பப்படும்!'' என்றார்கள்.
அழகிரி தரப்பில் பேசிய வழக்கறிஞர் வீரகதிரவன், ''இந்த கல்லூரி விவகாரத்தில் விவசாய நிலமோ, நீர் ஆதாரமோ ஆக்கிரமிக்கப்படவில்லை, பாசன மடை அடைக்கப்படவில்லை என்பதற்குத் தேவையான ஆதாரங்கள் எங்களிடம் இருக்கின்றன. இந்த வழக்கு அரசியல் உள்நோக்கம்கொண்டதுதான் என்பது விரைவில் தெரியவரும்...'' என்றார்.
இந்த பூகம்பத்தின் மையப் புள்ளியான விவசாயி ராமலிங்கமோ, 'ஆகஸ்ட் மாதம் கலெக்டர் சகாயத் திடம் மனு கொடுத்த பிறகுதான் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டேன். அவரும் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகே இதில் தலையிட்டார். அதனால் அரசியல் உள்நோக்கம் என்பது அர்த்தமற்ற பேச்சு. என் வழக்கு நிலுவையில் இருப்பதால், இதற்கு மேல் பேச விரும்ப வில்லை...' என்றார்.
அடுத்த சம்மன் எப்போதோ?
**********************************************************************************
''அரசு கேபிளால் நஷ்டம்தான்''

தி.மு.க. ஆட்சியை விமர்சிக்கும் தணிக்கை அறிக்கை
தி.மு.க. ஆட்சியில் நடந்த முறைகேடுகள் ஒவ்வொன்றாக வெளிச்சத்துக்கு வரத் தொடங்கி இருக்கின்றன. லேட்டஸ்ட், இந்திய தணிக்கைத் துறைத் தலைவரின் அறிக்கை!
மாநிலத்தின் நிதி நிலையையும், அங்குள்ள ஒவ்வொரு துறையும் செய்த செலவுகள்பற்றியும் ஆய்வு செய்து ஒவ்வோர் ஆண்டும் தணிக்கைத் துறை அறிக்கை வெளியிடும். அரசின் துறைகள், பொதுத் துறைகள், மாநில நிதி நிலை, வருவாய் வரவினங்கள், சிவில் போன்ற விஷயங்களைத் தனித் தனியாக ஆராய்ந்து அறிக்கை வெளியிடும்.
அரசு கேபிள் நிறுவனத்தைத் தொடங்கியது முந்தைய தி.மு.க. அரசு. இந்த நிறுவனத்தைத்தொடங்கியதால், அரசுக்கு  8.11 கோடி இழப்பு என்று சுட்டிக்காட்டி இருக்கிறது தணிக்கைத் துறையின் அறிக்கை. 'அரசின் முதலீடாக 25 கோடியும், கடனாக  36.35 கோடியும் பெற்று, எம்.எஸ்.ஓ. அந்தஸ்தோடு 2007-ல் தொடங்கப்பட்டது கேபிள் கார்ப்பரேஷன். இதன் திட்ட முதலீட்டுத் தொகையான  91.59 கோடியை எதிர்பார்க்கப்படுகிற இணைப்புகளைப் பெறுவதன் மூலம், நான்கு ஆண்டுகளில் மீட்கப்படும் என்று நிறுவனத்தின் திட்ட அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்கள். சுமங்கலி, ஹாத்வே போன்ற தனியார் எம்.எஸ்.ஓ. ஆபரேட்டர்களின் கட்டுப்பாட்டில் இருந்ததால், கேபிள் டி.வி. சேவைக்கு தமிழகத்தில் போட்டி நிறைந்த சூழல். இந்தச் சூழ்நிலையில், உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்களின் ஆதரவு மற்றும் மக்கள் விரும்பிப் பார்க்கும் சேனல்களை ஒளிபரப்புவதற்கான ஒப்பந்தத்தை முன்கூட்டியேஏற்படுத்தியிருக்க வேண்டியது அவசியம். அப்படிச் செய்யாமல், வணிக செயல்பாட்டினைத் தொடங்கியதால், கேபிள் கார்ப்பரேஷனின் செயல்பாடு மோசமாக அமைந்துவிட்டது...’ என்கிறது அந்த அறிக்கை.
'' 28.08 கோடியில் நான்கு டிஜிட்டல் ஹெட் எண்ட்ஸ்களை (digital head ends) வாங்கி, கோவை, தஞ்சாவூர், திருநெல்வேலி, வேலூர் ஆகிய இடங்களில் நிறுவப்பட்டன. அதோடு, இந்திய ரெயில்டெல் கழகத்திடம் இருந்து 821 கிலோ மீட்டர் நீளத்துக்கு டார்க் ஃபைபர் கேபிள் (dark fibre cable) இணைப்பை  2.05 கோடிக்குக் குத்தகைக்குப் பெற்றது. ஜீ.டி.வி., பி.பி.சி., ராஜ் டி.வி. போன்ற கட்டண சேனல்களின் விநியோக உரிமையை நிறுவனம் வாங்கியபோதும், மக்கள் அதிகம் விரும்பிப் பார்க்கும் சன், ஸ்டார், சோனி போன்ற சேனல் களின் ஒளிபரப்பு உரிமையை அரசு நிறுவனத்துக்குத் தர அந்த நிறுவனங் கள் மறுத்துவிட்டன. புழக்கத்தில் இருந்த அனலாக் சிஸ்டத்தைவிட (conventional analog system) விலை உயர்ந்த டிஜிட்டல் ஹெட்கள் உயர் ரகம் மற்றும் ஒளிபரப்பும் நிகழ்ச்சிகள் துல்லியமாகத் தெரியும் என்ற காரணத்தால் அவற்றை வாங்கியது அரசு நிறுவனம். இத்தகைய ஒளிபரப்புத்தன்மை ஹை டெஃப்னிஷன் செட் டாப் பாக்ஸ் மூலம் கண்டிஷனல் அக்சஸ் சிஸ்டம் உள்ள இடங்களில் மட்டுமே பெற முடியும். எனவே, இதற்கான முதலீடான  142.50 கோடியை திட்ட முதலீட்டில் சேர்த்திருக்க வேண்டும். ஆனால்,  13.75 கோடியை மட்டுமே சேர்த்திருக்கிறார்கள். இந்த முதலீட்டால் தங்களால் எப்போதுமே லாபத்தை ஈட்ட முடியாது என்று கடைசியில்தான் தீர்மானித்தது நிறுவனம்...’ என்று திட்டம் மற்றும் நடைமுறைப்படுத்துதலில் ஏற்பட்ட சறுக்கல்களைப் பட்டியல் போட்டு இருக்கிறது தணிக்கை அறிக்கை.
கேபிள் கார்ப்பரேஷன் ஈட்டிய வருவாய் என்ன என்பதையும் விவரித்​திருக்கிறது தணிக்கை அறிக்கை. '2008 ஆகஸ்ட்டில் 34,350 வாடிக்​கை​யாளர்களின் ஆதரவோடு வியா​பாரத்தைத் துவங்கிய நிறுவனம், 2010 அக்டோபரில் 55,705 வாடிக்கையாளர்களின் ஆதரவை மட்டுமே பெற முடிந்தது. மக்கள் விரும்பிப் பார்க்கும் சேனல்களைப் பெற முடியாததால், அதற்கு மேல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை உயர்த்திக்கொள்ள கேபிள் கார்ப்பரேஷனால் முடியவில்லை. 2010-11-ம் ஆண்டு வரையிலான மூன்று வருடங்களில்  241.21 கோடியை ஈட்ட முடியும் என மதிப்பிட்டு இருந்த நிறுவனம், 2008 ஆகஸ்ட் முதல் 2010 அக்டோபர் வரை  2.48 கோடியை மட்டுமே ஈட்ட முடிந்தது. அதோடு, உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்களிடம் இருந்து பெற வேண்டிய  95.50 லட்சத்தை நிறுவனத்தால் வசூலிக்க முடியவில்லை. கட்டண சேனல்களுக்கு  2.71 கோடி, ஃபைபர் கேபிளுக்குக் குத்தகைத் தொகை  2.16 கோடி சம்பளம், வாடகை போன்ற செலவுகளுக்கு  5.72 கோடி என மொத்தம் 10.59 கோடி செலவிடப்பட்டு இருக்கிறது. கேபிள் கார்ப்பரேஷனின் ஒட்டுமொத்தச் செயல்பாட்டால்  8.11 கோடி ரொக்க இழப்பைச் சந்தித்திருக்கிறது...’ என்கிறது தணிக்கை அறிக்கை.
டீ.டி.ஹெச்-க்கு வரி விதிப்புக்கும் இந்த தணிக்கை அறிக்கைக்குத் தொடர்பு இருக்கிறது. சட்டசபையின் கடைசி நாளில்தான் டீ.டி.ஹெச்-க்கு வரி விதிக்கும் சட்டம் நிறைவேறியது. அன்றைய தினம்தான் தணிக்கை அறிக்கையும் தாக்கல் ஆனது. கேபிள் கார்ப்பரேஷன் மூலம் மாதம்  70-க்கு கேபிள் டி.வி. ஒளிபரப்பை செப்டம்பர் 2-ம் தேதி தொடங்கியது அ.தி.மு.க. அரசு. சென்னை தவிர தமிழகம் முழுவதும் தொடங்கப்பட்ட இந்த ஒளிபரப்பில், சன் போன்ற முக்கியமான கட்டண சேனல்கள் வரவில்லை. 'சன் டி.வி. இருந்தால், கேபிள் கொடு. இல்லை லைனை எடு’ என்று மக்கள் கொந்தளித்தனர். அதே நேரம், கட்டண சேனல்களை அரசு கேபிளில் கொண்டுவருவதற்கு பேச்சுவார்த்தைகள் நடத்திக்கொண்டு இருந்தது அரசு. ஆனாலும், கேபிள் வழியாக  டி.வி. பார்த்துக்கொண்டு இருந்த பலரும் டீ.டி.ஹெச்-க்கு மாறத் தொடங்கினார்கள். இதை எப்படியாவது தடுக்க நினைத்தது அரசு. அப்போதுதான் தணிக்கை அறிக்கையில் உள்ள விஷயங்கள் அரசின் கவனத்துக்கு வந்தன. 'மகாராஷ்டிராவில் டீ.டி.ஹெச்-க்கு வரி விதிக்கப்படுவதுபோல, தமிழகத்திலும் வரி விதிக்க வேண்டும்’ என்று கேபிள் டி.வி. உரிமையாளர்களின் சங்கத் தலைவர் காயல் இளவரசு கடந்த வாரம் அறிக்கைவிட்டிருந்தார். இந்த விஷயங்களை வைத்துதான் டீ.டி.ஹெச்-க்கு வரி விதிக்கும் முடிவை அரசு எடுத்ததாம்!
**********************************************************************************
பரஞ்சோதி மீது பகீர்!

கருமாரியம்மன் முன்னால ஒரு தாலி...
ராஜகாளியம்மன் முன்னால ஒரு தாலி...
திருச்சி மேற்குத் தொகுதி இடைத் தேர்தல் களத் தில் இப்போதே அனல் பறக்கிறது. காரணம், அ.தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கும் பரஞ்சோதிக்கு எதிரான செக்ஸ் புகார்தான். எதிர்க் கட்சிகள் பலவீனமாக இருக்கும் சூழலில், 'எப்படியும் வெற்றி நமக்குத்தான்!’ என்று அவர் தெம்பாகச் சுற்றி வந்த நிலையில், பரஞ்சோதியின் இரண்டாவது மனைவி என்று சொல்லிக்கொண்டு அவருக்கு எதிராகக் கிளம்பி இருக்கிறார், டாக்டர் ராணி.
திருச்சி, குமரன் நகரில் இருக்கும் ராணியை அவரது இல்லத்தில் சந்தித்தோம். ''எனது முதல் கணவர் பெயர் ராய் தங்கப்பாண்டியன். நான்கு ஆண்டுகள் வாழ்ந்தோம். இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு, கருத்து வேற்றுமை காரணமாக விவாகரத்துப் பெற் றோம். இந்த நிலையில்தான், எனக்கு பரஞ்சோதியுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் எட்டரை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அவர் மெடிக்கல் போர்டு சேர்மனாக இருந்தார். ஓர் உதவிக்காக அவருக்கு போன் செய்தேன். உதவி செய்தவர், நான் விவாகரத்து ஆனவள் என்று தெரிந்துகொண்டார். அடிக்கடி போன் செய்து பேசினார். அவரது கனிவான பேச்சு, கணவனால் கைவிடப்பட்ட எனக்கு ஆறுதலாக இருந்தது. இதற்கிடையில், ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜெயித்து எம்.எல்.ஏ-வாகவும் ஆனார்.
'என் மனைவி கொடுமைக்காரி. அரசியல் கௌரவம் கருதியே வேதனையை வெளிக்காட்டாமல், வாழ்ந்துகொண்டு இருக்கிறேன். நம் இருவரது நிலையும் ஒன்றுதான். நாம் ஏன் சேர்ந்து வாழக் கூடாது? எம்.எல்.ஏ. பதவிக் காலம் முடிந்ததும் மனைவியை விவாகரத்து செய்கிறேன். எல்லா அரசு ஆவணங்களிலும் உன் பெயரைக் கொண்டுவருவேன்’ என்று மனம் உருகிச் சொன்னார். அதனால், முதல் மனைவியை விவாகரத்து செய்வதற்கு முன்னரே திருமணத்துக்கு சம்மதித்தேன்.
சென்னை கருமாரியம்மன் கோயிலில் தெய்வத்தை மட்டுமே சாட்சியாகக்கொண்டு 2008 நவம்பர் 10-ம் தேதி, என் கழுத்தில் தாலியைக் கட்டினார். ஆனால், தனது  இச்சையைத் தீர்ப்பதற்காகவே திருமணம் என்ற நாடகத்தை நடத்தினார் என்று பின்னரே தெரிந்துகொண்டேன். கடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில், என் வீட்டிலேயே தங்கி இருந்து தேர்தல் வேலைகளைப் பார்த்தார். அதன் பிறகு 'என்னை மாவட்டச் செயலாளராக அறிவிக்கும் வாய்ப்பு உள்ளது. அந்த சமயத்தில் நான் இங்கு இருப்பது நல்லதல்ல’ என்று சொல்லி முதல் மனைவி வீட்டுக்கே சென்றுவிட்டார்.
அதன் பிறகு ஓயாமல் செல்போனில் பேசி, 'நான் செய்தது தவறு!’ என்று சொல்லி ஆறுதல்படுத்தினார். ஆனால், அவரை மீண்டும் என் வீட்டுக்கு வருவதற்கு அனுமதிக்கவில்லை. அதோடு, எந்த விதமான அங்கீகாரமும் இல்லாமல் வாழ முடியாது என்றும் சொல்லிவிட்டேன். அதன் பின்னர் பேசிப் பேசியே என்னை சரிக்கட்டினார். 'போன முறை கட்டிய தாலி ராசி இல்லை. புதிய தாலி வாங்கிக் கட்டுகிறேன்!’ என்று சொல்லி திண்டுக்கலில் இருந்து பழனி செல்லும் வழியில் உள்ள தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில்வைத்து தாலி கட்டினார். இது நடந்தது 2010 பிப்ரவரி மாதம் 12-ம் தேதி. 'சாகும் வரையில் உன்னைப் பிரிந்து செல்ல மாட்டேன்’ என்று சத்தியம் செய்தவர், உறுதிமொழிப் பத்திரமும் எழுதிக் கொடுத்தார். மீண்டும், அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்து ஸ்ரீரங்கம் தொகுதிப் பொறுப்பாளராக நியமிக்கப்படும் வரையில் இருவரும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம். 'உங்கள் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு என்னை முறைப்படி மனைவியாக அறிவிக்கப்போவதாகச் சொன்னீர்களே... என்ன ஆயிற்று?’ என்று நான் கேட்கவும் என்னைவிட்டு விலகிப் போக ஆரம்பித்தார். 'எனக்குப் பொறுப்புகள் தேடி வரும் நேரம் இது. இனிமேல், உன் வீட்டில் வந்து தங்க முடியாது. அவ்வப்போது வந்துவிட்டு செல்கிறேன். அல்லது, நான் கூப்பிடும் இடத்துக்கு நீ வந்து செல்’ என்றார். இதை ஏற்றுக்கொள்ளாத நான், 'அம்மாவிடம் முறையிடுகிறேன்’ என்றேன். 'நான் அரசியல்வாதி. என்னை மீறி உன்னால் என்ன செய்ய முடியும்?’ என்று மிரட்டல் தொனியில் பேசினார். அம்மா ஸ்ரீரங்கம் வந்தபோது, இதுபற்றி விளக்கமாக எழுதி மனுக் கொடுத்தேன். போயஸ் கார்டனுக்கு நேரில் சென்றும் மனுக் கொடுத்தேன். சி.எம். தனிப் பிரிவுக்கும் அனுப்பி வைத்தேன். இந்நிலையில், அவர் வேட்பாளராக அறிவிக்கப்படவும், எனது மனுக்கள் அம்மாவின் பார்வைக்குப் போய்ச் சேரவில்லை என்று தெரிந்துகொண்டு மீடியாக்களிடம் வந்திருக்கிறேன்.
பரஞ்சோதியை வேட்பாளராக்கினால், அவர் ஜெயித்து எம்.எல்.ஏ-வாகி, ஏகப்பட்ட பேரின் வாழ்க் கையை நாசமாக்கிவிடுவார். அது கூடாது என்றுதான் போராடுகிறேன்!'' என்றார் ராணி.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு பரஞ்சோதியிடம் பேசினோம். ''ராணி சொல்வது முழுக்க முழுக்கக் கட்டுக்கதை. அதில் துளிக்கூட உண்மை இல்லை. எனக்கு ஒரே ஒரு மனைவி. அவள் பெயர் பரமேஸ்வரி. அவர் தவிர, எனது வாழ்க்கையில் எந்தப் பெண்ணுக்கும் இடம் இல்லை. டாக்டர் ராணி எங்கள் ஊரில் இருந்துள்ளார். அந்தப் பழக்கத்தில் அவர் வீட்டு கிரகப்பிரவேசத்துக்குச் சென்றுள்ளேன். அப்போது அவரது குடும்பத்துடன் நான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தில், நாங்கள் இருவர் மட்டும் இருப்பதை மட்டும் தனியாக எடுத்து, நாங்கள் திருமணம் செய்ததாக நாடகம் ஆடுகிறார். அவர் கொடுத்துள்ள டாக்குமென்ட்களும் ஃபோர்ஜரிதான். தி.மு.க-வினர் சிலரின் பின்னணியுடன் செய்யப்படும் வேலை இது. எனது புகழைக் கெடுக்க நினைக்கிறார்கள். அது நிறைவேறாது!'' என்று பதில் அளித்தார்.
'அம்மா கோர்ட்’ என்ன தீர்ப்பு அளிக்கப் போகிறதோ?
**********************************************************************************

********************************************************************************************

மிஸ்டர் கழுகு: இது ரெய்டு வாரம்!

சுழலுது லஞ்ச ஒழிப்பு சாட்டை... தொடங்குது பினாமிகள் வேட்டை...
ழுகார் வருகைக்காகக் காத்திருந்தோம். செல்போன் சிணுங்கியது... ''கிரீன்வேஸ் சாலையில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலக
ஏரியாவில் இருக்கிறேன். அரை மணி நேரத்தில் வருவேன்!'' - சஸ்பென்ஸ் வைத்துத் தொடர்பைத் துண்டித்தார்.
சொன்னபடியே வந் தார். ''தி.மு.க. வி.ஐ.பி-கள் மீது போலீஸ் வழக்குப் பதிவு செய்வது எந்த அளவில் இருக்கிறது?'' என்று கேட்டுவிட்டு, அவரையே பார்த்தோம்.
''நில அபகரிப்புப் புகார் களின் பேரில் கைதானவர்கள் எண்ணிக்கை 100-க்கும் மேல். குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு டஜன் பேர் கம்பி எண்ணுகிறார்கள். இதைத் தொடர்ந்து, 'கருணாநிதி குடும்பத்தினர் நேரடியாக சம்பந்தப்பட்ட புகார்கள் என்னென்ன வந்திருக்கின்றன?’ என்று ஆட்சி மேலிடத்தினர் கேட்டார்களாம். போலீஸ் அதிகாரிகள் மிகப் பெரிய பட்டியலை வாசித்தார்களாம். கருணாநிதியின் மகள் செல்வியின் மருமகன் ஜோதிமணி பெயர் டிக் செய்யப்பட்டு உள்ளது. சென்னை தி.நகரில் ஒரு இடப் பிரச்னையில் பண மோசடி செய்ததாக வந்த புகாரை உடனே பதிவு செய்துவிட்டார்கள். மேலும் பலர் மீது இந்த ரீதியில் வழக்குகள் தொடருமாம்...''
''முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு அண்ட் பிரதர்ஸ் மீது லேட்டஸ்ட்டாக, வருமானத்துக்கு மேல் சொத்துக் குவிப்பு வழக்குப் போட்டு ரெய்டு நடத்தினார்களே... அடுத்து இந்த ரூட்டில் யார் மீது நடவடிக்கை?''
''ஜெயலலிதாவைத் தரக்குறைவாக விமர்சித்த தி.மு.க. பிரமுகர்கள் யார் யார் என ஒரு பட்டியல் ரெடியாகி இருக்கிறது. அதில், முன்னாள் அமைச்சர் நேரு பெயர்தான் முதலில் டிக் ஆனதாம். அடுத்து, பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஐ.பெரியசாமி, பொங்கலூர் பழனிச்சாமி, எ.வ.வேலு... இப்படி சீனியாரிட்டியின் பேரில் ரெய்டு நடக்குமாம். அடுத்து ஒவ்வொருத்தராக வரப்போகிறார்கள். உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம் சூடாக நடக்க ஆரம்பித்ததும், போலீஸாரின் இந்த ரெய்டும் அதிகமாக இருக்குமாம். அதன் முன்னோட்டமாக இந்த வாரத்தில் ரெய்டு காட்சிகள் அரங்கேறப்போகின்றன. மேலும், முன்னாள் மந்திரிகளின் பினாமிகள் பட்டியல் எடுக்கப்பட்டு உள்ளது. அவர்களது வீடுகளிலும் அதே நேரத்தில் ரெய்டுகள் இருக்குமாம். இதை அறிந்து பல பினாமி மனிதர்கள், வெளிநாடுகளுக்குத் தப்பி ஓடுகிறார்கள். இந்த நேரத்தில், இன்னொரு சர்ப்ரைஸும் நடந்ததாம்...''
''என்ன?''
''அந்தப் பட்டியலில் இல்லாத மும்மூர்த்திகள் மீதும்கூட வருமானத்துக்கு மேல் சொத்துக் குவித்ததாக வழக்குகள் பாயலாம்!''
''யார் அவர்கள்?''
''கடந்த தி.மு.க. ஆட்சியில் 'டிராலி பாய்ஸ்’ என்று வர்ணிக்கப்பட்ட போலீஸ்காரர்கள் பாண் டியன், வினோதன், கணேசன்... இந்த மூவர் பற்றி ஆட்சி மேலிடத்தில் இருந்து லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் மகேந்திரனுக்கு சில உத்தரவு வந்ததாம். 'ஹோடா முதல் ராஜவேல்' வரை ரகசிய பாஷை உச்சரிக்கப்பட்டதாம். 'பதவி உயர்வுகளில் ஏதாவது சலுகை காட்டப்பட்டதா? அவர்கள் சொல்லிப் போடப்பட்ட 'டிஸ்டர்ப்டு' டிரான்ஸ்ஃபர் விவரங்கள், நில, இட, அபார்ட்மென்ட் தொடர்பான கட்டப் பஞ்சாயத்துகளில் தலையீடு இருந்ததா?’ என்கிற பல்வேறு கோணங்களில் வந்து குவிந்த புகார்களை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் டீம் முழுவதுமாக ஸ்கேன் செய்து முடித்துவிட்டார்கள். ஒரு பல்கலைக்கழகத் துணைவேந்தரை மிரட்டிய விவகாரத்தின் பின்னணி விரைவில் வெளிவரலாம்.''
''இந்த மும்மூர்த்திகள் மீது ஆட்சியாளர்களுக்கு ஏன் திடீர் கோபம்?''
''கடந்த ஆட்சியில் அவர்கள் போட்ட தப்பு ஆட்டத்தால் டார்ச்சர்களைச் சந்தித்த அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் எல்லோரும் ஒர் அணியில் திரண்டு, தற்போதைய ஆட்சி மேலிடத்தின் காதில் விழும் அளவுக்குப் புலம்பி இருக்கிறார்கள். அதைத் தொடர்ந்துதான், இந்தப் பச்சைக் கொடி. ஆனால், மேலிடத்தின் உத்தரவைவைத்து லஞ்ச ஒழிப்புத் துறையின் முக்கிய அதிகாரி ஒருவர் எந்த அளவுக்கு முழுமையாகவும் சுறுசுறுப்பாகவும் நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பது புரியாத புதிராக இருக்கிறது. பொதுவாக, லஞ்ச புகார் விவகாரங்களில், லஞ்ச ஒழிப்புத் துறையின் உயர் அதிகாரிகள் மூன்று பேர் ஆலோசனை நடத்தி முடிவுகளை செயல்படுத்துகிறார்களாம். மேற்கு மண்டலத்தில் இருக்கும் ஒரு அதிகாரி, இந்த மூவருக்குள் பனிப் போர், மோதல் என்றெல்லாம் வதந்திகளைப் பரப்பி சிண்டு முடியும் வேலையைச் செய்துவருகிறாராம். இவரின் பேக்-கிரவுண்டில் இருக்கிறவர்கள் பற்றியும் ரகசிய விசாரணை நடக் கிறது.''
''அங்கேயும் பாலிடிக்ஸா? சரி... பெங்களூரு கோர்ட்டில் நடந்து வரும் சொத்துக் குவிப்பு வழக்கு என்ன ஆகும்?''
''தீர்ப்பு ஜெயலலிதாவுக்கு எதிராக இருக்கப் போவதாகவும், சசிகலா இடைக்கால முதல்வர் ஆகப் போகிறார் என்றெல்லாம் வதந்தி இறக்கை கட்டிப் பறக்கிறது. அந்த வழக்கு க்ளைமாக்ஸை எட்டவே பல மாதங்கள் ஆகலாம் என்று ஆளும் தரப்பு சொல்ல ஆரம்பித்துள்ளது. ஜெயலலிதா அக்டோபர் 20-ம் தேதி அங்கே  ஆஜரான பிறகு அவரிடம் கேள்விகள் கேட்கும் படலம் துவங்கும். பல நூறு கேள்விகள் அணிவகுத்து நிற்கும். இந்த சட்ட சம்பிரதாயங்கள் முடிவதற்கே பல மாதங்கள் ஆகும் என்று சொல்ல ஆரம்பித்துள்ளனர். பெங்களூரு என்றவுடன் இன்னொரு நியூஸ் ஞாபகம் வருகிறது...''
''சொல்லும்!''
''கடந்த மூன்று மாதங்களில் இரண்டு முறை பெங்களூரு தொழிலதிபர் ஒருவர் தமிழக எல்லையில் உள்ள அவரது கெஸ்ட் ஹவுஸில் இருந்து காரில் புறப்பட்டு, சென்னை வந்து தமிழகத்தின் உச்சத்தில் இருப்பவரை சந்தித்து பேசிவிட்டுப்போனாராம். என்ன பிசினஸ் பேச்சுவார்த்தையோ?'' என்று நிறுத்திய கழுகார்... ''ஹீரோ ஒருவருக்கும் பிரச்னை வரலாம்!'' என்றார்.
அடுத்து அவர் சொல்லப்போவதை உற்றுக் கவனித்தோம்!
''தமிழகத்தில் உள்ள நடிகர் கம்  அரசியல் தலைவர் சவாரி, ஊருடுவல் செய்வதில் கில்லாடி. அவர். சமீபத்தில் இலங்கைக்கு விசிட் சென்றார். அத்தோடு நிற்கவில்லையாம். வேறு சில நாடுகளுக்குப் பயணம் செய்துவிட்டு, இறுதியாக இத்தாலி நாட்டுக்கு அருகில் உள்ள சிசிலி தீவுக்குப் போய் வந்ததாக ஒரு தகவல். கறுப்புப் பண முதலீடு, ரியல் எஸ்டேட் பிசினஸ், நிலத்தில் முதலீடு... இப்படியான விஷயங்களுக்கும் சிசிலி தீவு பிரசித்திபெற்றது என்பது தெரியும். ஆனால், இந்தக் கில்லாடிக்கும் சிசிலிக்கும் என்ன லிங்க் என்று மத்திய உளவுத் துறையினர் என்று குடைந்துகொண்டு இருக்கிறார்கள்''
''எதற்காகப் போனாராம்?''
''அந்தக் கில்லாடி, இப்போது எதிர்க் கட்சிப் பிரமுகருடன் பாசப் பிணைப்பில் இருக்கிறாராம். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கியுள்ள அந்தப் பிரமுகர் தன்னிடம் உள்ள பெரும் தொகையை சிசிலி தீவுக்கு ஹவாலா முறையில் பணப் பரிமாற்றம் செய்ய ஏற்பாடு செய்தாராம். ஆனால், ஒரேயரு முறை, அந்த பணத்தை முதலீடு செய்பவர் நேரில் ஆஜராக வேண்டுமாம். அவரின் பினாமியாகத்தான் இந்த கில்லாடி சிசிலி தீவு சென்று வந்தாரா? அல்லது, இவரது பெயரிலேயே அந்தப்  பிரமுகர் முதலீடு எதுவும் செய்தாரா என்கிற கோணத்தில் உளவுத் துறை விசாரணை நடக்கிறது'' என்ற கழுகார், கூட்டணி வெட்டுக்குத்துகள் பக்கம் வந்தார்!
''தனது கூட்டணியில் இருக்கும் யாரையும் கலந்து ஆலோசனை செய்யாமல், மேயர் மற்றும் நகராட்சித் தலைவர் பதவிகளுக்கான வேட்பாளர்களை தன்னிச் சையாக அறிவித்தார் ஜெயலலிதா. தே.மு.தி.க. கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டம் பற்றி  உமது நிருபரே கடந்த இதழில் எழுதி இருந்தார்.  கூட்டணிக் கட்சிகளுடன் பேசுவதற்கு ஓ.பன்னீர்செல்வம், செங் கோட்டையன், நத்தம் விஸ்வநாதன் ஆகிய மூவரைக்கொண்ட குழு அமைத்திருந்தார் ஜெயலலிதா. ஆனால் அவர்கள் எந்தக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தவே இல்லை. ஆனால் வெள்ளிக்கிழமை, மாநகராட்சி மேயர் பட்டியல் வந்தது. அடுத்த நாள் நகராட்சிப் பட்டியலும் பாதி வந்தது. திங்கள் கிழமை அதையும் பூர்த்தி செய்தார். இதைக் கேள்விப்பட்டு விஜயகாந்த்தும் கம்யூனிஸ்ட்களும் வெலவெலத்துப்போனார்கள். அதன் பிறகுதான் கம்யூனிஸ்ட்களை மட்டும் அழைத்து அ.தி.மு.க. குழு பேசியது. 'அறிவிக்கப்பட்ட பட்டியல் இறுதி ஆனது அல்ல’ என்றும் அவர்கள் சொல்லி விட்டுப் போனார்கள். ஆனால், விஜயகாந்த் கட்சியை அழைக்கவே இல்லை!''
''ம்!''
''புதிய தமிழகத்தையும் அ.தி.மு.க. அழைக்கவில்லை. மனிதநேய மக்கள் கட்சிக்கும் அழைப்பு இல்லை. இதனால் கோபம் அடைந்த மார்க்சிஸ்ட் தலைமை, திங்கள் கிழமை காலையில் தொடங்கி மாலை வரை விவாதங்களில் மூழ்கியது. 'எங்களிடம் கேட்காமல் எப்படி இடங்களை அறிவிக்கலாம்?’ என்று மார்க்சிஸ்ட் தலைமை கேட்டதாகவும், 'சில இடங்களை உங்களுக்கு அம்மா விட்டுக்கொடுப்பார். பொறுத்திருங்கள்’ என்று குழுவினர் சொன்ன தாகவும், 'அறிவிக்கப்பட்ட அ.தி.மு.க. வேட்பாளர்கள் எங்களுக்காக இனி வேலை பார்ப்பார்களா?’ என்று திருப்பிக் கேட்டதாகவும் 'அம்மா சொன்னால், எல்லாமே சாத்தியம்தான்’ என்று அவர்கள் மறுமொழி சொன்னதாகவும் சொல்கிறார்கள். பேச்சு வார்த்தையில் இருந்த பன்னீர், செங்கோட் டையன், நத்தம் ஆகிய மூவரையும் திங்கள் கிழமை சென்னையில் காண வில்லை. 'தொகுதிக்குப் போயிட்டாங்க’ என்று தலைமைக் கழகத்தில் தகவல் சொல்கிறார்கள். இந்த நேரம் பார்த்து, பேரூராட்சித் தலைவர் பொறுப்புக்கான வேட்பாளர்களின் பட்டியலை ஜெயலலிதா அறிவித்தார். கம்யூனிஸ்ட்கள் இதைப் பார்த்து இன்னும் கலங்கினார்கள். திங்கள் கிழமை இரவு  நிலவரப்படி யாரையுமே கூட்டணிக்குள் வைத்துக் கொள்ளும் மன நிலையில் ஜெயலலிதா இல்லை!'' என்றபடி கிளம்பினார் கழுகார்!
படம்: கே.கார்த்திகேயன்
 
பரமக்குடி கலவரத்தைத் தூண்டியது இவர்களா?
பரமக்குடி கலவரத்தின் பின்னணி இதுதான் என்று வந்த ரகசிய செய்தியை உளவுத் துறை  கிராஸ் செக் செய்து வருகிறது. ''தற்போது தென் மண்டல ஐ.ஜி-யாக இருக்கும் ராஜேஷ் தாஸைப் பழிவாங்கும் வகையில் இந்த கலவரம் தூண்டிவிடப்பட்டது. கடந்த ஆட்சியில் ராஜேஷ் தாஸ், திருவள்ளுவர் மாவட்ட எஸ்.பி-யாக இருந்தபோது ஒரு போலீஸ் அதிகாரியால் கடுமையாக பழிவாங்கப்பட்டு ஓரம் கட்டப்பட்டார். ஒரு வழியாக இப்போதுதான் தென் மண்டல ஐ.ஜி-யாக செட்டில் ஆகி இருக்கிறார். அந்தப் பகை இப்போதும் தொடர்வதால் அவரைக் கவிழ்க்கும்படியாக இந்தச் சதித் திட்டம் தீட்டப்பட்டதாம். கலவரம் நடந்த சில நாட்களுக்கு முன் ஒரு மாவட்டத்தின் எஸ்.பி., ஓர் உயர் அதிகாரி, தலித் தலைவர் ஒருவர் ஆகிய மூவரும் களியக்காவிளையில் இருக்கும் ஒரு விருந்தினர் மாளிகையில் ரகசியமாக சந்தித்தார்கள். அங்குதான் கலவரத் திட்டம் உருவானது!'' என்கிறதாம் அந்த போலீஸ் நோட்!
  தேர்தல் அறிவிப்பு தாமதம் ஏன்?
உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு தாமதத்துக்கான காரணங்கள் என பல்வேறு கருத்துகள் வெளியாகின. உண்மைக் காரணம், உயர் நீதிமன்றம் விதித்திருந்த இடைக்காலத் தடைதான். கடந்த தி.மு.க. ஆட்சியில் எட்டு மாநகராட்சிகளுடன் அருகில் உள்ள நகராட்சிகள், ஊராட்சிகள், பேரூராட்சிகளை இணைத்து, இயந்திரகதியில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. உள்ளாட்சி மாற்றப்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்களின் கடும் எதிர்ப்புக்கு இடையிலும் இது நடந்து முடிந்தது. இதில், திருச்சியுடன் திருவெறும்பூர் நகராட்சியைச் சேர்த்ததை எதிர்த்த வழக்கில், தேர்தல் தேதியை அறிவிப்பதற்கு, உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இந்த வழக்கில் கடந்த 19-ம் தேதியன்று உத்தரவு வரலாம் என எதிர்பார்ப்பு நிலவியது. இதையட்டி, அன்று மாலையில் மாநிலத் தேர்தல் அதிகாரிகளின் கூட்டத்தை மாநிலத் தேர்தல் ஆணையர் சோ.அய்யர் கூட்டியிருந்தார். தேதி அறிவிப்புக்கு முன்பு, மாநிலத் தேர்தல் அதிகாரிகளான நகராட்சி நிர்வாக ஆணையர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர், பேரூராட்சிகள் துறை ஆணையர் ஆகியோரின் கூட்டத்தைக் கூட்டுவது வழக்கம். ஆனால், தமிழகமே எதிர்பார்த்த இந்த வழக்கு, 19-ம் தேதி பிற்பகல் 3.15 மணிக்கு விசாரணைக்கு வந்தபோது, மறுநாள் பிற்பகல் 3.15 மணிக்கு விசாரணையைத் தள்ளிவைத்தார் நீதிபதி கிருபாகரன். இதனால், மூன்று துறைகளின் ஆணையர் கூட்டமும் தள்ளிவைக்கப்பட்டது. மற்ற எல்லாரையும்விட தேர்தல் பணியில் உள்ளவர்கள்தான், இதில் மண்டை காய்ந்துபோனார்கள்!
 ஏர்போர்ட்டில் பாய்ந்த உளவு வேல்..!
சொத்துக் குவிப்பு வழக்குகளுக்கு நடுங்கி 'வெயிட்டான' சில வஸ்துக்களையும் ஆவணங்களையும் வெளிநாட்டில் பதுக்கும் வேலையில் சுறுசுறுப்பாக இறங்கியிருக்கிறார்களாம் சில 'முன்னாள்'கள்! இதை மோப்பம் பிடித்த தமிழக உளவுத் துறை, விமான நிலைங்களை கண் கொத்திப் பாம்பாக கண்காணிக்கத் தொடங்கியிருக்கிறது. சென்னை விமான நிலையத்தில் டிரான்ஸ்பரே இல்லாமல் பதினைந்து வருடத்துக்கு மேலாகப் பணி புரியும் மத்திய அரசு நபர் ஒருவரையும் தங்கள் உஷார் பார்வைக்குள் கொண்டு வந்திருக்கிறார்களாம். ''இவர் டியூட்டி நேரத்திலேயே தடுமாற்றமாக ஏர்போர்ட்டுக்குள் வளைய வருவதில் பிரசித்தமானவர். தனக்கு எதிராக துறை ரீதியாகப் புகார் எழும்போதெல்லாம், மத்திய உளவுப் பிரிவின் சிவ-விஷ்ணு அதிகாரி பெயரை இழுத்து தப்பிவிடுகிறார். இப்போது தி.மு.க-வைச் சேர்ந்த முக்கிய வி.ஐ.பி-க்கள் சிலர் இவரது பலவீனங்களைப் பயன்படுத்தி ஈஸியாக கைக்குள் போட்டுக்கொண்டு விட்டார்கள். இதனால், விமான நிலைய கெடுபிடிகளை மீறி வில்லங்கமான சில ஆவணங்கள் சத்தமில்லாமல் கடல் கடந்து பறந்து போவதாக சந்தேகப்படுகிறோம்!'' என்று தமிழக அரசு மேலிடத்துக்கு  'அலர்ட் நோட்' போட்டிருக்கிறார்களாம் உளவுப் பிரிவினர்.
**********************************************************************************
கழுகார் பதில்கள்

முனியசாமி, தஞ்சை.
 பிச்சைக்காரர்களுக்குக் காசு போடுவதுபற்றி எனக்கும் என் நண்பனுக்கும் தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் உண்டு. 'அவங்களுக்கு காசு போட்டு உழைக்கவிடாமல் கெடுக்கிறாய்’ என்கிறான் நண்பன். உங்கள் கருத்து என்ன?
'நான் ஒரு பிச்சைக்காரன்’ என்று சொல்லிக்கொண்ட யோகி ராம் சுரத் குமார் என்ன சொல்கிறார் என்று கேளுங்கள்...
'பாரத தேசத்தில் பிச்சை எடுப்பது என்பது சட்ட விரோதக் குற்றம் அல்ல. வேதங்களே பிச்சைக்காரர்களை அனுமதித்து உள்ளது. பெரும் ஞானாசிரியர்கள் பிச்சைக்காரர்கள் வடிவில்தான் வருவார்கள். ஆனால், ஞானாசிரியர்களைப் பிற பிச்சைக்காரர்களில் இருந்து பிரித்து அறிவது என்பது மிகவும் கடினம். நீங்கள் ஐரோப்பாவைப்போல இந்தியாவை மாற்ற விரும்பினால், பெரிய ஞானிகள் இங்கு தோன்ற மாட்டார்கள்.
நீங்கள் ஒரு வேளை உணவை ஒரு பிச்சைக்காரனுக்கு அளித்தால், அவன் அதனால் கோடீஸ்வரனாக ஆக மாட்டான். நீங்களும் உங்கள் செல்வத்தில் ஏதும் இழந்துவிட மாட்டீர்கள்!’
 கு.ராஜசேகர், மேலூர்.
'தனியாக நிற்கப்போகிறேன்!’ என்று கருணாநிதி அறிவித்திருப்பது அவரது தைரியத்தைத்தானே காட்டுகிறது?
காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலுவும் 'நாங்கள் தனியாகத்தான் நிற்கப்போகிறோம்’ என்கிறார். சேர்ந்து நின்றாலும் பிரயோஜனம் இல்லை என்பதை உணர்ந்ததால்தான், இந்த முடிவு. இதற்குக் காரணம், தைரியமோ, ராஜ தந்திரமோ அல்ல. இயலாமை, முடியாமை, போதாமை!
 ராஜாராம், நெல்லை.
கூடங்குளம் அணு மின் திட்டத்தை எதிர்த்து அப்பகுதி மக்களின் தொடர் உண்ணாவிரதம்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பொது மக்களின் சந்தேகங்கள் அனைத்தும் தீர்க்கப்பட்ட பிறகுதான், அடுத்த கட்ட முயற்சியை அந்த நிர்வாகமும் மாநில அரசும் செய்ய வேண்டும். மின்சாரம் தேவைதான். அதற்காக கண்ணை விற்றுச் சித்திரம் வாங்குவதைப்போல உயிர்ப் பலிகளைக் கொடுத்து மின்சாரம் தயாரிக்கலாமா?
 முருகேசன், திருவள்ளூர்.
'ஜான்பாண்டியனுக்கு அனுமதி கொடுத்திருந்தால் 7 உயிர்கள் போயிருக்காது’ என்கிறாரே கருணாநிதி?
இது உண்மைதான்! தூத்துக்குடியில் இருந்து கிளம்பிய ஜான்பாண்டியனுக்கு முன்னால் இரண்டு போலீஸ் ஜீப், பின்னால் இரண்டு போலீஸ் ஜீப்பைவிட்டு... அவரை இம்மானுவேல் சேகரன் நினைவகத்துக்கு அழைத்து வந்து மறுபடியும் தூத்துக்குடிக்குக் கொண்டு போய் விட்டிருந்தால்... இந்த துப்பாக்கிச் சூடு அவசியமா? ஆயிரக்கணக்கான போலீஸாரை பரமக்குடியில் குவிப்பதற்குப் பதிலாக 20 பேரை ஜான்பாண்டியனுடன் விட்டிருந்தால், இந்த விபரீதம் நடந்திருக்குமா? போலீஸ் அதிகாரிகள்தான் தவறான முடிவு எடுத்துவிட்டார்கள் என்று நினைத்தோம். ஆனால், முதல்வர் விடும் அறிக்கைகளைப் பார்த்தால், அவரும் அத்தனை சம்பவங்களுக்கும் பொறுப்பேற்கத்தான் வேண்டும்!
வணங்காமுடி, திருப்பூர்.
நில மோசடித் தடுப்புப் பிரிவையே ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கு தாக்கல் செய்துள்ளதே தி.மு.க.?
ஏன், காவல் துறையையே கலைத்துவிடலாம் என்று வழக்குப் போட்டிருக்கலாமே?
 சிவசுப்பிரமணியன், கும்பகோணம்.
நரேந்திர மோடியைப் புகழ்ந்து தள்ளுகிறதே அமெரிக்கா?
இந்தியாவின் அடுத்த பிரதமர் அவர்தான் என்று கண்டுபிடித்துள்ளது அமெரிக்கா. அந்த நாட்டின் நாடாளுமன்ற ஆய்வுக் குழு என்ற கட்சி சாரா அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் அடுத்த தேர்தலில் பிரதமர் வேட்பாளராக ராகுலும் மோடியும்தான் இருப்பார்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது. ராகுல் பெயரைச் சொல்வதால், மன்மோகன் ஆட்களுக்குப் பிடிக்கவில்லை. மோடி பெயரைச் சொல்வதால், சுஷ்மா சுவராஜ் மாதிரியான வட்டாரத்துக்குப் பிடிக்கவில்லை. மோடியின் மூன்று நாள் மெகா பட்ஜெட் உண்ணாவிரதம் அதற்கான ஆரம்பம்தான்!
 சுதா, கோவை.
முதல் சட்டசபைக் கூட்டத் தொடர்பற்றி?
கூட்டத் தொடர் நடந்த 33 நாட்களும் முதல்வர் சபைக்கு வந்தது பாராட்டத்தக்கது. பிரதான எதிர்க் கட்சியான தே.மு.தி.க. அதனது பாத்திரத்தைத் திறம்படச் செய்ய முயற்சிக்கக்கூட இல்லை. நொண்டிச் சாக்கு சொல்லி நேரம் கடத்துவதில்தான் குறியாக இருந்தது தி.மு.க. இடதுசாரித் தோழர்கள் செம ஜால்ரா தட்டினாலும், சில விஷயங்களை அரசின் கவனத்துக்குக் கொண்டுசெல்ல முனைந்தார்கள். காங்கிரஸ் கட்சி இருப்பதே தெரியவில்லை. பா.ம.க. குழுத் தலைவர் குருவைப் பார்க்க முடியவில்லை. டாக்டர் கிருஷ்ணசாமி, தனது தனித்தன்மையை நிரூபித்தார். தேர்ந்த சபாநாயகராக ஜெயக்குமார் உருவெடுத்து இருப்பதைப் பார்க்க முடிந்தது.
மொத்தமாகச் சொல்வதானால், புதியவர்களாக இருந்தாலும் அமைச்சர்களில் பலர் ஆச்சர்யப்​படவைத்​தார்கள். அனுபவஸ்தர்களாக இருந்தாலும் எதிர்க் கட்சித் தலைவர்கள் வருத்தப்படவே வைத்தார்கள்!
 அ.சம்பத், மதுரை.
பரமக்குடியில் நடந்தது சட்டம் - ஒழுங்குப் பிரச்னையா... சாதிப் பிரச்னையா?
சட்டம் - ஒழுங்குப் பிரச்னைதான். இரண்டு சமூகத்தினர் மோதலால் பரமக்குடியில் சாவுகள் நடக்கவில்லை. சாலை மறியல் செய்தவர்களை அமைதியாகக் கலைந்து போகச் செய்ய போலீஸுக்குத் தெரியாமல்போனதால் ஏற்பட்ட சாவுகள் அவை.
பொதுவாக சாதி மோதல்கள் ஏற்படும்போதுகூட, அதை வெளிப்படையாகச் சொல்ல மாட்டார்கள். பல இடங்களுக்கும் அது பரவிவிடக் கூடாது என்பதே நோக்கமாக இருக்கும். ஆனால், போலீஸைக் காப்பாற்றுவதற்காக 'இன் மோதல்’ என்ற தொனியில் முதலமைச்சர் சட்டமன்றத்தில் சொன்னது விபரீதமானது. அவரை வழிநடத்துபவர்களை நினைத்தால்... பயமாக இருக்கிறது!
 குமணன், கிருஷ்ணகிரி.
  'எந்த ஒரு பகுதியும் அரசினால் புறக்கணிக்கப்படும்போதுதான், அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்து வன்முறையில் இறங்குகிறார்கள். நக்சலைட்கள் உருவாகிறார்கள். எனவே, வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுப்போம்’ என்று பிரதமர் சொல்லி இருப்பது சரியான பாதைதானே?
சொன்னது சரியான விஷயம்தான். ஆனால், செயல் வேறு மாதிரி இருக்கிறதே!
டெல்லி விஞ்ஞான் பவன் மாநாட்டில் இப்படி அவர் சொன்ன நாள் அன்றே, நக்சலைட் வேட்டையில் ஈடுபடுத்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளை வேலைக்கு எடுப்பதில் சி.ஆர்.பி.எஃப். மும்முரம் ஆகி இருக்கிறது. நக்சலைட்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் எந்தெந்தத் திட்டம் கொண்டுவரப் போகிறோம் என்று அறிவிக்காமல்... சி.ஆர்.பி.எஃப் வீரர்களை அதிகப்படுத்தி வேட்டையில் இறக்கினால் என்ன அர்த்தம்?
பிரதமரின் சொல்லை நம்புவதா... செயலை நம்புவதா?
 முருகவாணன், அரக்கோணம்.
பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராக வரும் ஜெயலலிதாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிப்போம் என்று பெங்களூரு போலீஸ் கமிஷனர் ஜோதி பிரகாஷ் மிர்ஜி அறிவித்துள்ளாரே?
  ஜூலை 27-ம் தேதியே ஆஜராகி இருந்தால், ஒரு நாள் நியூஸோடு முடிந்திருக்கும். தேவை இல்லாமல் கர்நாடகா உயர் நீதிமன்றம், டெல்லி உச்ச நீதிமன்றம் என்று இழுத்து... ஊர், உலகம் அறிய கோர்ட் படியை மிதிக்கப்போகிறார் ஜெயலலிதா. சாமுண்டீஸ்வரி கோயிலுக்கெல்லாம் அவரும் சசிகலாவும் மட்டும்தான் வந்து போனார்கள். கோர்ட்டுக்கு வரும்போது எதற்கு இத்தனை செக்யூரிட்டி?
**********************************************************************************

எங்களைப் புறக்கணித்தது ஏன்?

தி.மு.க-வை உலுக்கும் திருமா
'ள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி’ எனத் தி.மு.க-வும் காங்கிரஸும் போட்டி போட்டு அறிவித்துவிட்டன. ஈழத்தில் போர் நடந்தபோதும் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் ஃபெவிக்கால் பிணைப்பாக வலம் வந்த விடுதலைச் சிறுத்தைகளின் நிலைதான் இப்போது புதிர்!
தனித்துவிடப்பட்டிருக்கும் திருமாவளவனை சந்தித்தோம்.
''தி.மு.க. தனித்துப் போட்டியிடும் என எதிர்பார்த்தீர்களா?''
''இது எங்களை அதிரவைத்திருக்கும் அறிவிப்பு!  கூட்டணி அமைக்க பா.ம.க. தலைவர் ராமதாஸ் எங்களுக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்தார். 'தி.மு.க. கூட்டணியில் தொடர்கிறோம். எங்கள் கட்சி யின் ஆலோசனைக் குழுவில் ஆராய்ந்துதான் எந்த முடிவும் எடுப்போம்’ என நாங்கள் அறிவித்திருந்த நிலையில், தி.மு.க. திடீரென இப்படி அறிவித்து இருக் கிறது. பா.ம.க. உடன் நாங்கள் போய்விடுவோம் என நினைத்தார்களோ என்னவோ... தனித்துப் போட்டி யிடுவது குறித்து ஒப்புக்காகக்கூட எங்களிடம் சொல்லவே இல்லை. ஆனாலும், தேர்தல் வெற்றி மட்டுமே எங்களின் இலக்கு அல்ல என்பதை இந்த கணத்தில் எல்லோருக்கும் சொல்லிக்கொள்ள விரும்புகிறோம்!''
''ஈழ ஆதரவு நிலைப்பாட்டைக் கடந்தும் கூட்டணி தர்மத் துக்காகவே கடந்த தேர்தல்களில் தி.மு.க. அணியில் தொடர்ந்தது தவறு என உணர்கிறீர்களா?''
''கூட்டணி விஷயத்தில் அ.தி.மு.க-வால் ஏற்கெனவே முதுகில் குத்தப்பட்டவர்கள் நாங்கள். இப்போது தி.மு.க-வும் எங்களை இக்கட்டில் தள்ளி இருக்கிறது. வளரும் கட்சிகளைப் பெரிய கட்சிகள் எப்போதுமே இப்படித்தான் பார்ப்பார்கள். கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது அ.தி.மு.க. சார்பில் என்னிடம் பேசிய மிக முக்கியப் புள்ளி ஒருவர், 'தி.மு.க-வில் சிறுத்தைகளுக்கு 10 இடங்கள்தான் கொடுப்பார்கள். நாங்கள் 12-ல் இருந்து 14 வரை தருகிறோம். இது அம்மாவின் நேரடி அழைப்பு’ எனச் சொன்னார். ஆனால், தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து அங்கம் வகிக்கும் நிலையில், திடீர்த் தாவலை நடத்தி ஆதாயம் அடைய நாங்கள் விரும்பவில்லை. 'அணி தாவுபவர்கள்’ என்கிற அவப் பெயரையும் சுமக்க விரும்பவில்லை. தி.மு.க. கூட்டணியில் நீடித்ததற்காக அவர்கள் மீது பரப்பப்பட்ட பழியை நாங்களும் சுமந்தோம். கடந்த சட்டமன்றத் தேர்தலில் 10 தொகுதிகளை மட்டுமே ஒதுக்கியபோதும், பொறுமையோடு வாங்கிக் கொண்டோம். அ.தி.மு.க-வின் அழைப்புக்கு நாங்கள் நூல் அளவு சலனப்பட்டு இருந்தாலும், இன்றைக்கு 10-க்கும் குறையாத எம்.எல்.ஏ-க்களைப் பெற்று இருப்போம். கூட்டணி தர்மத்துக்காகவே தோல்வியை சுமந்தவர்கள் நாங்கள்!''
''தனித்துப் போட்டி என்கிற நிலையை தி.மு.க. ஏன் எடுத்தது?''
''நேற்றைக்கு அரசியலுக்கு வந்தவர்கள்கூட காங்கிரஸ் கட்சியின் தலையாய தலைவர்களைப்போல் மாறி தி.மு.க-வை விமர்சித்தார்கள். மூத்த தலைவர் என்றுகூட பார்க்காமல் எட்டுத் திசைகளிலும் கலைஞருக்கு எதிராக முழங்கினார்கள். அபார வாக்கு வங்கியை வைத்திருப்பவர்கள்போல், 'தி.மு.க. தயவு தேவை இல்லை’ என வாய்க்கு வந்தபடி சீண்டினார்கள். இந்த மன உளைச்சலில் கலைஞர் கொடுத்த பதிலடிதான் தனித்த முடிவு. ஆனால், காங்கிரஸைப் பழிவாங்க நினைத்த தி.மு.க. எங்களையும் அதில் சேர்த்தே சிக்கலில் தள்ளியது தான் ஜீரணிக்க முடியாதது!''
''பா.ம.க. உடன் தனி அணி அமைப்பதுதானே உங்களின் அடுத்த திட்டம்?''
''ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடவும், அண்ணல் அம்பேத்கரின் கருத்துகளைக் கொள் கையாக முன்னெடுக்கவும், தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒருவரை முதல்வராக முன்மொழியவும் பா.ம.க. என்கிற ஒரே கட்சிதான் தமிழகத்தில் இருக்கிறது. அந்தக் கட்சியின் அழைப்பை நாங்கள் மதிக்கிறோம். அதே நேரம் எங்கள் தரப்பில் இருந்தும் சில கருத்துகளை எடுத்துவைத்து இருக்கிறோம். பா.ம.க., சிறுத்தைகள் மட்டும் அல்லாது வைகோ தலைமையிலான ம.தி.மு.க. உள்ளிட்ட ஈழ ஆதரவுக் கட்சிகளையும், சிறு அமைப்புகளையும் ஒருங்கிணைத்து தமிழ்த் தேசிய முன்னணியாகக் கட்டமைக்க வேண்டும் எனச் சொன்னோம். உள்ளாட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியம் எல்லாம் வேலைக்கு ஆகுமா என சிலர் கேட்கலாம். ஆனால், உணர்வுப்பூர்வமான ஒருங்கிணைப்பின் துவக்கமாக இது அமையும் என்பது எங்களின் நம்பிக்கை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதே இந்தக் கோரிக்கையை நான் வலியுறுத்தினேன். ஆனால், சிறு கட்சியின் குரலாக அது சிதைந்துபோனது. அதனை மீட்டெடுக்க யார் முன்வந்தாலும் சிறுத்தைகள் அங்கே அணி வகுப்பார்கள். தங்கை செங்கொடி தீக்குளித்து இறந்த நிகழ்வுக்குப் போயிருந்தபோது, 'தமிழ்த் தேசிய அரசியலை யார் வேண்டுமானாலும் முன்னெடுங்கள். உங்கள் பின்னால் ஒரு லட்சம் அடிகள் பின்னே நிற்கவும் நான் தயார்’ எனச் சொன்னேன். ஆனால், அதற்குப் பதில் சொல்லத்தான் ஆள் இல்லை!''
''ஈழம் மற்றும் மூன்று பேர் தூக்கு விவகாரங்களில் கருணாநிதி செய்யத் தவறியதை ஜெயலலிதா செய்கிறார் என்கிறார்களே?''
''ஜெயலலிதா மன மாற்றம் அடைந்துவிட்டார் எனச் சொல்பவர்கள் அப்பாவிகள். அடிப்படை இந்துத் தீவிரவாதியாக விளங்கும் அவர் ஒருபோதும் ஈழம் என்கிற வார்த்தையை ஏற்றுக்கொள்ள மாட்டார். புலிகள் தீவிரமாகப் போராடிய காலங்களில் தொடர்ந்து அவர்களுக்கு எதிராகப் பழி பரப்பியும் தடை விதித்தும் ஜெயலலிதா நிகழ்த்திய கொடுமைகள் கொஞ்சநஞ்சமா? புலிகள் முற்றாக வீழ்த்தப்பட்டது தெரிந்து, இப்போது திடீர்க் கருணை காட்டுகிறார். மூன்று பேரைக் காப்பாற்றியதாகப் பெருமை பாராட்டும் அவர்தானே ஏழு பேரை பரமக்குடியில் சுட்டுக் கொன்றார்? பிணத்துக்குப் பொன்னாடை போர்த்தும் அவருடைய நாடகத்துக்குப் பெயர்தான் மன மாற்றமா? அவருடைய மன மாற்றம் உண்மையானதாக இருந்தால், தனித் தமிழ் ஈழத்தை வலியுறுத்தும் தீர்மானத்தை சட்டமன்றத்தில் இயற்றச் சொல்லுங்கள். அப்படி ஒன்று நிகழ்ந்தால், அம்மையாருக்குத் தலையாட்டும் மந்திரிகளைப்போல் நானும் மாறத் தயார்!''
**********************************************************************************
அரசே தயாரிக்கலாமே!

சுற்றுச்சூழல் மோசமடைந்து காற்றும் நீரும் மாசடைந்து இருப்ப​தால்... இன்று வீடு தோறும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்பது அத்தியாவசியத் தேவையாகிவிட்டது. பயணம் செய்பவர்கள் அனைவருமே கையில் தண்ணீர் பாட்டிலுடன்தான் செல்கிறார்கள்.
மக்களின் அத்தியாவசியத் தேவையை வியாபார நோக்கில் கொள்ளை அடிக்கின்றன, சில தனியார் நிறுவனங்கள். செம்மையாக சுத்திகரிப்பு செய்யாத தண்ணீரை பாட்டிலில், பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்கிறார்கள். அதனால்,
பணம் கொடுத்து நோயை விலைக்கு வாங்கும் நிலையாக இருக்கிறது.
தண்ணீர் சுத்திகரிப்புத் தொழிற்சாலைகள் கொள்ளை லாபத்துடன் இயங்கி வருவதை அரசு அறியும். மக்களுக்கு அத்தியாவசியத் தேவையான நீரை, அரசே ஆலைகள் அமைத்து சுத்திகரித்து குறைந்த விலையில் வழங்கலாமே. இதன் மூலம் கிடைக்கும் லாபமும் மக்களுக்கே கிடைக்கும் அல்லவா?
டாஸ்மாக் சரக்குகள் மக்களுக்குப் போதுமான அளவில் கிடைக்க வேண்டும் என்று கவனம் எடுக்கும் அரசு, குடி தண்ணீர்ப் பிரச்னையையும் தீர்த்துவைக்க முன்வருமா? அரசே இதனைத் தயாரிக்கும்போது, தூய்மையான நீருக்கும் உத்தரவாதம் கிடைக்குமே!
- சுப.மோகன், சென்னை.
**********************************************************************************
ரியல் எஸ்டேட் கொலையா?!

நடிகை விசித்ரா தந்தை மரணத்தில் மர்மம்
டிகை விசித்ராவின் தந்தையைக் கொலை செய்து, தாயைத் தாக்கி கொள்ளை அடித்துச் சென்ற செய்தி புறநகர் பகுதி மக்களுக்குப் பெரும் அதிர்ச்சி அளித்தது. 'நடந்த சம்பவம் கொள்ளையர் கைவரிசை கிடையாது. ரியல் எஸ்டேட் விவகாரத்தில் நடந்த கொலை...’ என்று சலசலப்பு கிளம்பவே விசாரணையில் இறங்கினோம்.
சென்னை முகப்பேரைச் சேர்ந்த வில்சன் - மேரி விஜயா தம்பதிக்கு ராஜி என்ற மகனும், நடிகை விசித்ரா, அனிதா, பப்பு என்ற மகள்களும் உள்ளனர். விசித்ரா புனேயிலும், ராஜி, அனிதா இருவரும் அமெரிக்காவிலும் வசித்து வருகின்றனர். பப்பு சிங்கப்பூரில் இருக்கிறார். வில்லியம்ஸ், மேரி விஜயா இருவரும் முகப்பேர் வீட்டில் இருக்கிறார்கள். தனது சொந்த ஊரான சுங்குவார்சத்திரம் அருகே உள்ள செல்லம்பட்டடை கிராமத்தில் ஆறு ஆண்டுகளுக்கு முன் இடம் வாங்கிய வில்லியம்ஸ், அதை பண்ணை வீடாக மாற்றி அமைத்து உள்ளார். மாதத்துக்கு இரண்டு முறை பண்ணை வீட்டுக்கு மனைவியுடன் வந்து தங்கிச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். பகலில் பண்ணை வீட்டில் இருந்தாலும், இரவில் பண்ணை வீட்டை ஒட்டியே இருக்கும் இன்னொரு சொந்த வீட்டில் தங்குவதுதான் வில்லியம்ஸின் வழக்கம் என்கின்றனர் அவரது உறவினர்கள். ஆனால், வழக்கத்துக்கு மாறாக இந்த முறை மட்டும் பண்ணை வீட்டில் தங்கியது ஏன் என்பதற்கு விடை தெரியவில்லை.
பாஸ்போர்ட் அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பின், ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து இருக்கிறார் வில்லியம்ஸ். சென்னையில் இருந்து மற்ற இடங்களுக்கும் தொழிலை விரிவாக்கும் யோசனையில் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கிய நேரத்தில்தான் இந்தக் கொலை சம்பவம் நடந்து இருக்கிறது.
கடந்த 12-ம் தேதி நள்ளிரவு கொலை செய்யப்பட்டு, ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்த வில்சன் உடலுக்கு உறவினர்கள் யாரும் பொறுப்பு ஏற்றுக் கையெழுத்து போடாததால், புதன் கிழமை மாலை வரை போஸ்ட்மார்ட்டம் செய்யப்படவில்லை. மாலை 3 மணிக்கு விசித்ராவின் கணவர் ஷாஜி, தங்கை அனிதா மற்றும் சில உறவினர்கள் வந்தனர். வில்சனின் மருமகன்கள் மட்டுமே அங்குமிங்கும் அலைந்து கொண்டு இருந்தனர். மகள் அனிதா காரில் இருந்து இறங்கவே இல்லை. விசித்ராவின் கணவர் ஷாஜியிடம் பேசினோம். ''மாமா என்ன தொழில் செய்தார் என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை. தனியாக இருந்து எதுக்கு கஷ்டப்படணும். அமெரிக்காவுக்கு வந்துடுங்கன்னு அவரோட மகன் ராஜி சொல்லிக்கிட்டே இருந்தார். அதுக்கு மறுத்துட்டே இருந்தவர், 'எல்லாத்தையும் செட்டில் பண்ணிட்டு வந்துடுறேன்’னு கொஞ்ச நாளைக்கு முன்னாலதான் சொல்லி இருக்கார். இன்னும் 10 நாளில் அமெரிக்காவுக்குப் போய் செட்டில் ஆவதற்கான ஏற்பாடு செஞ்சுக்கிட்டு இருந்தார். அதுக்குள்ள இப்படி நடந்துடுச்சு...'' என்று கண் கலங்கினார்.
வில்லியம்ஸின் குடும்ப நண்பர் முகார், ''தொழில் போட்டி காரணமாத்தான் கொலை நடந்திருக்கும் என்ற சந்தேகம் இருக்கிறது. வழக்கமாகப் பெரிய வீடுகளில் பக்காவாக பிளான் பண்ணித்தான் கொள்ளையடிக்கும் முயற்சியில் இறங்குவாங்க. எப்போதாவது மட்டுமே ஆட்கள் வந்து போகும் பண்ணை வீட்டில் பெருசா ஒண்ணும் கிடைக்காது என்பதை நல்லாவே தெரிஞ்சு வெச்சிருப்பாங்க.
ஆனா, இந்த விஷயத்தில் கணிசமா நகை, பணம் கிடைச்ச பிறகும் அவ்ளோ பெரிய வீட்டில் ஒரு இடம்கூட விடாமல் அங்குலம் அங்குலமாக எதையோ தேடி இருக்காங்க. சமையல் அறையில் இருக்குற பாத்திரங்களைக்கூட விடாமல் தேடியதுதான் சந்தேகமாக இருக்கிறது. ஏதோ ஒரு சொத்து டாக்குமென்ட்டை தேடி இருக்காங்கன்னு நினைக்கிறேன்...'' என்றார் ஆதங்கத்துடன்.
ஸ்ரீபெரும்புதூர் டி.எஸ்.பி-யான கஜேந்திர குமாரிடம் பேசி னோம். ''வில்லியம்ஸ் பெரிய அளவில் ரியல் எஸ்டேட் தொழில் செய்ததாகத் தெரியவில்லை...'' என்று சொல்ல,
காஞ்சிபுரம் எஸ்.பி-யான மனோகரன், ''இது முழுக்க முழுக்கப் பணத்துக்காக நடந்த கொலைதான்!'' என்றார்.
இந்நிலையில், பண்ணை வீட்டில் இருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஏலம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த வேலு, சுரேஷ் ஆகிய இருவரையும் கைது செய்த போலீஸ், கொள்ளை அடித்த பொருட்களை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்து இருக்கிறது. நகை, பணத்துடன் அவர்கள் பறித்துச் சென்ற செல்போன் இருவரையும் காட்டிக் கொடுத்து விட்டது என்கிறார்கள்.
ஆனால், புனேவில் இருந்து சென்னைக்கு வந்துவிட்ட விசித்ரா, சம்பவம் நடந்த பண்ணை வீட்டுப் பக்கம் எட்டிக்கூடப் பார்க்கவில்லையாம். தந்தை செய்துவந்த தொழில் பிடிக்க வில்லை என்பதால்தான் அவரது பிள்ளைகள் கோபமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். மருத்துவமனை சிகிச்சையில் இருக்கும் விசித்ராவின் தாயார் மேரி விஜயா இன்னமும் பேசக்கூடிய நிலையை எட்டவில்லை. அவர் வாய் திறந்தால்தான் உண்மைகள் வெளிவரும்!
**********************************************************************************
''குழந்தைகள் உயிரோடு விளையாடிய அரசியல்வாதிகள்!''

அண்ணா பிறந்த நாள் விழா களேபரம்...
ண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு நடந்த விழாவிலும் அடித்துக் கொள் கிறார்கள் கழகக் கண்மணிகள். நல்லவேளையாக இவர்களது அடிதடிகளுக்கு இடையே சுமார் 1,000 பள்ளிக் குழந்தைகள் சிக்கா மல் நூலிழையில் உயிர் தப்பி இருக்கிறார்கள்!
கடந்த 16-ம் தேதி அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.க. சார்பில் முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாநகராட்சி பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச நோட்டு, புத்தகங்கள் வழங்கும் விழா சென்னை கொருக்குப்பேட்டை யில் நடந்தது. விழா ஏற்பாடுகளை  சேகர்பாபு செய்து இருந்தார். அங்குதான் இந்த வன்முறை.
இது குறித்து சேகர்பாபுவிடம் பேசினோம். ''ஒவ்வொரு வருஷ மும் அந்தப் பகுதி ஏழைக் குழந்தைகளுக்கு இலவச நோட்டு, புத்தகங்கள், சீருடை மற்றும் எழுது பொருட்கள் கொடுப்பது என் வழக்கம். அதனால் போலீஸ் அனுமதி வாங்கி, தி.மு.க. சார்பாக கொருக்குப்பேட்டையில் உள்ள வேலன் திருமண மண்டபத்தில் அந்த நிகழ்ச்சியை நடத்தினேன்.
மண்டபத்துக்குள் சுமார் 1,000 குழந்தைகள் கூடி இருந்தார்கள். மண்டபத்துக்கு வெளியே இருக்கையில் பெற்றோர்கள் அமர்ந்து இருந்தார்கள். தி.மு.க. சார்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்த 100 தன்னார்வத் தொண்டர்கள் பணியில் இருந்தனர். மாலை 5 மணிக்கு பேராசிரியர் அன்பழகன் வந்தார். கூட்டம் அதிகமாக இருப்பதைப் பார்த்துவிட்டு, மேடையில் பேசிக் கொண்டிருந்தால், தாமதமாகி குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்று, உடனடியாக 10 குழந்தைகளுக்கு இலவசப் பொருட்களை விநியோகித்துவிட்டு கிளம்பிவிட்டார். தொடர்ந்து நான்கு கவுன்ட்டர்களில் குழந்தைகளை வரிசையில் வரவழைத்து பொருட்களை விநியோகித்தோம்.
திடீரென்று மண்டபத்துக்கு வெளியே 'டமால்’ என டியூப் லைட்கள் உடைத்து வெடிக்கும் சத்தம்.பெற்றோர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினார்கள். சுமார் 20 ரவுடிகள் கையில் இரும்புக் கம்பி, உருட்டுக் கட்டைகளுடன் கார்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினார்கள். எனது கார் உட்பட ஏராளமான கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன. அவர்கள் மண்டபத்தை நோக்கி முன்னேறியபோது, உடனடியாக எங்கள் ஆட்கள் மண்டபத்தின் கேட்டை உள் பக்கமாக பூட்டி விட்டனர்.
உடனடியாக நான் மைக்கில், 'அ.தி.மு.க-வினர் அடிதடியில் ஈடுபடுகிறார்கள். உள்ளே 1,000 குழந் தைகள் இருக்கும் நிலையில் நாம் எதிர்த்தாக்குதலில் ஈடுபடக்கூடாது. முதலில் குழந்தைகளை பாதுகாப்பாக அனுப்புவது நம் கடமை. என்ன நடந்தாலும் எல்லோரும் அமைதியாக இருங்கள்’ என்றேன். அதன்படி எல்லோரும் அமைதி காத்தார்கள். போலீ ஸார், பொது மக்கள் முன்னிலையில் அரா ஜகம் செய்த அ.தி.மு.க. ரவுடிகள் சென்ற பிறகே, குழந்தைகளை பாதுகாப்பாக நாங்கள் வெளியே அனுப் பினோம்.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ-வான வெற்றி வேல்தான் இந்த வன்முறைக் கும்பலை ஏவி இருக்கிறார். அவருடைய தொகுதியிலே நாங்கள் மக்கள் நலத் திட்டப் பணிகளை நடத்துவது அவருக்குப் பொறுக்கவில்லை. அவர்கள் போட்ட சதித் திட்டம் இதுதான் -  வன்முறை செய்தால் குழந்தைகள் சிதறி ஓடி... மிதிபட்டு இறப்பார்கள். உடனே, தி.மு.க-வினர் நடத்திய கூட்டத்தில் அலட்சியத்தால் குழந்தைகள் சாவு என்று கூறி, எங்களை போலீஸ் கைது செய்வார்கள் என்பதுதான். உண்மையில், நாங்களும் எதிர்த்தாக்குதல் நடத்தி இருந்தால், கடந்த காலத்தில் வெள்ள நிவாரணம் வழங்கியபோது நடந்த அசம்பாவிதம் போல ஏதேனும் நடந்து இருக்கும். ஆனால், அகிம்சையால் அதை நாங்கள் வென்றுவிட்டோம்.
இப்படி எல்லாம் செய்தால் முதல்வரிடம் நல்ல பெயர் வாங்கிவிடலாம் என்று நினைக்கிறார் வெற்றி வேல். ஆனால், முதல்வர் ஜெயலலிதாவை பற்றி நான் அறிந்ததைப் போல் யாரும் அறிந்து இருக்க மாட் டார்கள். கடந்த 28 ஆண்டுகளாக என் குடும்பத்தைவிட முதல்வரை தெய்வத்துக்கு இணையாக நேசித்தவன் நான். 2005-ம் ஆண்டு ஜெயலலிதாவே வெற்றிவேலை, 'ஒரு குடம் பாலில் கலந்த ஒரு சொட்டு விஷம்’ என்றார். இதுதான் அரசியல். எனவே, வெற்றிவேல் ஒழுங்காக நடந்துகொள்ள வேண்டும்!'' என்றார்.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ-வான வெற்றிவேலிடம் பேசினோம். ''சேகர்பாபு நடத்தும் நிகழ்ச்சியில் ஒரு சிறு மண்டபத்தில் குழந்தைகள் சரியான வசதிகள் இல்லாமல் நீண்ட நேரம் அடைத்து வைக்கப்பட்டு இருந்தார்கள். குழந்தைகள் மூச்சுத் திணறி பாதிக்கப்படும் அபாயம் இருந்தது. அதனால்தான், கூட்டத்துக்கு வந்த 'துணைப் பேராசிரியர்’ அன்பழகன் கோபித்துக் கொண்டு உடனே வெளியேறி விட்டார். என்னுடைய தொகுதியில் எனக்கு ஓட்டுப் போட்டு வெற்றி பெற வைத்த மக்களைக் காக்க வேண்டியது எனது கடமை. அதனால்தான், குழந்தைகளின் நிலையை அறிந்து, பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய கழகத் தொண்டர்களை அனுப்பினேன். ஆனால், அங்கு சேகர்பாபு மைக்கில் அ.தி.மு.க-வினரையும், முதல்வர் அம்மாவையும் அவதூறாகப் பேசிக் கொண்டு இருந்தார். இதை எங்கள் ஆட்கள் தட்டிக் கேட்டார்கள். இதைத் தொடர்ந்துதான் பிரச்னை ஏற்பட்டது. வன்முறையில் ஈடுபட்டதும் அவர்கள்தான்...'' என்றார்!
இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள பிரச்னைக்கு குழந்தைகளை பகடைக் காய்களாகப் பயன்படுத்துவது நியாயமா?
**********************************************************************************
போன் பேசிக்கொண்டே ஊசி போட்டதால் மரணமா?

திருவண்ணாமலை திகுதிகு!
திருவண்ணாமலையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் கவனக்குறைவு காரணமாகக் குழந்தை ஒன்று இறந்து விட்டதாக எழுந்த புகார், பரபரப்புத் தீயைப் பற்ற வைத்துள்ளது.
குழந்தையின் தாய் மோகனப்பிரியாவை சந்தித் தோம். ''என் ஒன்றரை வயதுக் குழந்தை குருசரணுக்கு, போன 12-ம் தேதி காலைல பேதி ஆச்சு. டி.என்.கே. ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டு போனேன். டாக்டர் கார்த்திகேயன் சோதிச்சுப் பார்த்தார். ரெண்டு ஊசி போட்டு டிரிப்ஸ் ஏத்தினார். 'ஏன் டிரிப்ஸ் ஏத்துறீங்க?’ன்னு கேட்டதுக்கு சத்து இல்லைன்னு சொன்னார். மதியம் 3.30 மணிக்கு செக் பண்ணிட்டு, 'குழந்தை நல்லாத்தான் இருக்கு, இன்னும் ஒரு மணி நேரத்தில் டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்’னு சொன்னார். கொஞ்ச நேரத்தில் ஒரு நர்ஸ் மொபைல் போன் பேசிக்கிட்டே வந்தாங்க, போன் பேசிக்கிட்டே குழந்தை கையில் ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டு இருந்தபோதே, இன்னொரு ஊசி போட்டாங்க. போன் பேசிக்கிட்டே ஊசி போடுறீங்களேன்னு கேட்டேன். 'எனக்கு எல்லாம் தெரியும்’னு சொன்னாங்க. அவங்க ஊசி போட்டுட்டு போன கொஞ்ச நேரத்துல குழந்தைக்கு வாயிலயும் மூக்குலயும் நுரை வந்துடுச்சு. டாக்டர் வந்து பார்த்துட்டு குழந்தையோட நெஞ்சை அழுத்திப் பார்த்தார். பிறகு, 'போயிடுச்சு’னு சொல்லிட்டு அங்க இருந்து போயிட்டார். படுபாவிங்க என்னமோ ஊசியைப் போட்டு என் குழந்தையை அநியாயமாக் கொன்னுட்டாங்க...'' என்று கதறியவர், மேலும் பேச முடியாமல் மயங்கினார்.
குழந்தையின் தந்தை சுரேஷ், ''போன் பேசிக்கிட்டே வந்த நர்ஸ், வேற யாருக்கோ போட வேண்டிய ஊசிய குழந்தைக்குப் போட்டுட் டாங்க. டாக்டரும் வந்து பார்த்துட்டு ஊசி போட்ட நர்ஸை, எங்க முன்னாடியே அடி அடின்னு அடிச்சார். அதுக்கப்புறம் அந்த நர்ஸ் காணாமப் போயிட்டாங்க. அவங்க தப்பா சிகிச்சை கொடுக்கலைன்னா, டாக்டர் ஏன் அந்த நர்ஸை அடிக்கணும்? இந்த சம்பவம் நடந்ததும் கொஞ்ச நேரத்துக்கெல்லாம் திருவண்ணாமலை ஜி.ஹெச்-சில் இருந்து நாலைஞ்சு டாக்டர்களும்வந்துட்டாங்க. நாங்க புகார் கொடுக்காமலே போலீஸும் வந்துட்டாங்க. தனியார் ஆஸ்பத்திரியில குழந்தை இறந்ததுக்கு அரசாங்க டாக்டருங்க ஏன் வரணும்? அவங்களுக்கும் இந்த சம்பவத்துக்கும் என்ன சம்பந்தம்? குழந்தையை உடனே ஜி.ஹெச். கொண்டு போகச் சொல்லிட்டு அங்க போஸ்ட்மார்ட்டம் செய்யச் சொல்லிட்டாங்க. அரசாங்க டாக்டர் களும் தனியார் டாக்டர்களும் கூட்டா இருக்கற தால ஜி.ஹெச்-சில் போஸ்ட்மார்ட்டம் செஞ்சா சரியா இருக்காதுன்னு கலெக்டர்கிட்ட மனு கொடுத்தேன். அவரும் விசாரிச்சுட்டு 'போஸ்ட் மார்ட்டம் நடக்கும்போது கூடவே தாசில்தார் இருப்பார். போஸ்ட்மார்ட்டம் செய்யறத வீடியோ எடுப்பாங்க’ன்னு சொன்னார். இந்த ஆஸ்பத்திரியில இதுமாதிரி அஞ்சாறு பேர் இறந்திருக்கிறதா இப்பத்தான் சொல்றாங்க. தவறான சிகிச்சை செஞ்ச டாக்டர், நர்ஸ் ரெண்டு பேரையும் உடனே கைது செய்யணும்!'' என்று கதறினார்.
குழந்தை இறந்த சோகத்தில் மருத்துவமனை மீது கல்வீசி தாக்குதல் நடந்திருக்கிறது. இதுகுறித்து, டி.என்.கே. மருத்துவமனை டாக்டர் கார்த்திகேயனிடம் பேசினோம். ''சரியாகத்தான் சிகிச்சைஅளித்தோம். குழந்தைக்கு ஓவர்டோஸ் கூட கொடுக்கவில்லை...'' என்றார். ''நீங்கள் நர்ஸை அடித்ததாக குழந்தையின் தந்தை கூறுகிறாரே?'' என்று கேட்டதற்கு, ''நான் யாரையும் அடிக்கவில்லை. எங்கள் சிகிச்சையில் எந்த தவறும் நடக்கவில்லை. அந்த நர்ஸ் இங்கேதான் இருக்கிறார்...'' என்று சொன்னவர், அந்த நர்ஸை விசாரிக்க அனுமதிக்கவில்லை.
கலெக்டர் அன்சுல் மிஸ்ராவிடம் பேசினோம். ''குழந்தை இறந்ததில் சந்தேகம் இருக்கிறது என்று புகார் வந்தது. அதனால் தாசில்தார் முன்னிலையில் போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டு, அது வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. குழந்தையின் உடல் உறுப்புகளை ரசாயனப் பரிசோதனைக்காக அனுப்பி இருக்கிறார்கள், அந்த சோதனை முடிவு வந்ததும், குழந்தை இறந்ததற்கான முழுமையான காரணம் தெரியும். தவறு செய்திருப்பதாகத் தெரியவந்தால், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்...'' என்றார். ''குழந்தை இறந்ததும் அந்த மருத்துவமனைக்கு, அரசு மருத்துவமனை டாக்டர்கள் சிலர் வந்ததாகச் சொல்கிறார்களே...'' என்று கேட்டோம். ''விசாரிக்கச் சொல்லி இருக்கி றேன். அதிலும் உண்மை இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்!'' என்றார்.
இதற்கிடையில் கடந்த 14-ந் தேதி, டி.என்.கே. மருத்துவமனை தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து திருவண்ணாமலையில் உள்ள தனியார் மருத்துவமனை டாக்டர்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் செய்தனர். ஆபத்துக்கு உதவும் மருத்துவர்களையும் தனியார் மருத்துவமனைகளையும் தாக்குபவர் களிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என ஐ.எம்.ஏ. திருவண்ணாமலை கிளை சார்பாக கலெக்டரிடம் மனு கொடுத்து இருக்கிறார்கள்.
நர்ஸ் போன் பேசிக்கொண்டே வேறு ஒருவ ருக்குப் போடவேண்டிய ஊசியை மாற்றிப் போட்டாரா? அரசு மருத்துவர்கள் ஏன் வந்தார்கள்? என்ற கேள்விகளுக்கு விரைவில் விடை தெரியவேண்டும்!
**********************************************************************************
''வேலூர் ஜெயிலில் துரைமுருகன்!''

ஆசைப்படுகிறார் அமைச்சர் விஜய்
வேலூர் அ.தி.மு.க. சார்பில் கடந்த 15-ம் தேதி நடந்த அண்ணா பிறந்த நாள் கூட்டத்தில், சுகாதாரத் துறை அமைச் சர் வி.எஸ்.விஜய் பேச்சில், அண்ணாவின் புகழ் ஊறுகாய்தான்; தி.மு.க.வைத் தாக்கி அவர் பேசியதுதான் சாப்பாடு, காரக் குழம்பு, பொரியல்!
''பெரியாரின் பகுத்தறிவும், ஈகையும், பேரறிஞர் அண்ணாவின் பண்பும் சேர்ந்து வளர்ந்த தி.மு.க. என்கிற கட்சி, கருணாநிதி என்ற மனிதரால் 'திருட்டு முன்னேற்ற கழக’மாக மாறி, இப்போது 'திகார் முன்னேற்ற கழக’மாக மாறிவிட்டது...'' என்று ஆரம்பித்த அமைச்சர் விஜய் தொடர்ந்து, ''ஸ்டாலினும், அழகிரியும் இப்போது என்ன செய்கி றார்கள் தெரியுமா? ஒவ்வொரு ஊராகச் சென்று சிறையில் இருக்கும் அவர்களது உடன்பிறப்புகளைப் பார்த்து வருகின் றனர். கருணாநிதி, 'நாங்கள் யாருடனும் கூட்டணி இல்லை, உள்ளாட்சித் தேர்தலில் தனித்து நிற்போம்’ என்கிறார். நீங்கள் தனியா நின்றாலும், கூட்டுப் போட்டு நின்றாலும் தோற்பது உறுதி. அவருடைய கழகத்தில் இருந்து பாதிக்கு மேற்பட்டோர் சிறைக்குச் சென்று விட்டனர். கருணாநிதி மட்டும்தான் மீதி... எல்லோரையும் இழந்து தனிமரமாக அவர் நிற்கின்ற காலம் விரைவில் வரும்.
வீரபாண்டி ஆறுமுகம், பொன்முடி, கே.என்.நேரு என்று கடந்த ஆட்சியில் கொள்ளை அடித்தவர்கள் எல்லோரும் இப்போது சிறையில். ஆனால், நமது மாவட்டத்தைச் சேர்ந்த துரைமுருகன் மட்டும் எப்படி இன்னும் உள்ளே போகாமல் இருக்கிறார்? அந்த வருத்தம் நமக்கும் வேண்டாம், அவருக்கும் வேண்டாம். விரைவில் வேலூர் மத்திய சிறையில் அவரை நாம் பார்க்கலாம். ஏனென்றால், அவர் சிறைக்குச் செல்வது நிச்சயம். சட்டசபையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற பொதுவான அறிவுகூட துரைமுருகனிடம் கிடையாது. இத்தனைக்கும் அவர் சென்ற முறை அமைச்சராக இருந்தவர்... கால்களை வேண்டும் என்றே ஆட்டுவது, மோச மாக சைகை செய்வது என்று அந்த மனிதரின் குணாதிசயத்தை என்ன வென்று சொல்வது?'' என்று பொளந்து கட்டி யவர் அடுத்து உள்ளூருக்கு வந்தார்.
''வேலூர் மாநகராட்சி நிலை இன்னும் கேவலமா இருக்கு. ரோடு முதல் ஆஸ்பத்திரி வசதி வரை சென்ற ஐந்து ஆண்டு காலமும் எல்லாம் கந்தலாகிப் போச்சு. இலவச கலர் டி.வி. கொடுத்து தங்களது குடும்பத்தின் வருமானத்தை வளர்த்துக் கொண்டவர்கள்தான் தி.மு.க-வினர். ஒன்று மட்டும் நிச்சயம், 'தேர்தலுக்கு முன்பு அ.தி.மு.க. என்ற கட்சி இனி தமிழகத்தில் இருக்காது’ என்று அழகிரி எப்போது சொன்னாரோ... அன்றே தி.மு.க-வுக்கு கெட்ட நேரம் துவங்கிவிட்டது. இனி அதை அழிக்க நாம் தேவை இல்லை. அவர் களாவே அழித்துவிடுவார்கள்!'' என்று சீறிப் படபடத்தார்.
'நம்ம அமைச்சர் சூப்பரப்பு’ என்று மெச்சிக் கொண்டு பூரிப்போடு கிளம்பினர் ரத்தத்தின் ரத்தங்கள்!
**********************************************************************************
டாஸ்மாக் கடைக்குப் பூட்டு!

பொங்கி எழுந்த வேலூர் பெண்கள்
வேலூர் மாவட்டத்தில் டாஸ் மாக் கடை ஒன்றின் முன்பு பெண்களே திரண்டு வந்து முற்றுகைப் போராட்டம் நடத்தி, ஊழியர்களைக் கடைக்குள் வைத்துப் பூட்டிவிடவே, ஏரியாவெங்கும் செம பரபரப்பு.
வேலூர் மாவட்டம் மேல்மொண வூரில்தான் இந்த சம்பவம் அரங்கேறி யது. டாஸ்மாக் கடைக்கு அருகில் மளிகைக் கடை வைத்திருக்கும் விஜயாவிடம் பேசினோம். ''ரெண்டு வருஷமா இங்கே இருந்த டாஸ்மாக் கடையால் நாங்க படுற கஷ்டம் கொஞ்ச
நஞ்சம் இல்லைங்க. சாயங்காலம் 5 மணி ஆச்சுன்னா குடிச்சிட்டு ரோட்டுலயே உட்கார்ந்துக்குறாங்க. போற வர்ற பொம்பளைங்களை அசிங்க மாப் பேசுவானுங்க. விடிகாலம் 3 மணி வரைக்கும் பாட்டிலை வாங்கி வைச்சுக்கிட்டு ரோட்டுலயே உட்கார்ந்து குடிச்சிட்டு சத்தம் போட்டுக்கிட்டு இருப்பாங்க. ஒரு நாள் எங்க வீட்டுக்காரர், 'நடு ராத்திரியில ஏண்டா குடிச்சிட்டு சத்தம் போடுறீங்க’ன்னு கேட்டார். அதுக்கு அவரை அசிங்க அசிங்கமாத் திட்டித் துரத்திட்டாங்க.
எங்க பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை வேற இடத்துக்கு மாத்தச் சொல்லி போன வருஷமே கலெக்டர்கிட்ட மனு கொடுத்தோம். அவரும் நடவடிக்கை எடுக்கிறேன்னு சொல்லி இருந்தார். ஆனா எந்த நடவடிக்கையும் எடுக்கலை. போன வாரம் திரும்பவும் கலெக்டர்கிட்ட மனு கொடுத்தோம். ஆனா அவரும் மனு வாங்கியதோடு சரி.. கண்டுக்கவே இல்ல. அதனாலதான் நாங்க போராட்டத்தில் இறங் கினோம்...'' என்று சொன்னார்.
கடைக்கு வந்திருந்த சிவகாமி என்பவர் அருகில் நின்று கொண்டிருந்த குழந்தையைக் காட்டி, ''இந்தப் புள்ளைக்கு அஞ்சு வயதுதாங்க ஆகுது. போன வாரம் ஸ்கூலுக்குப் போயிட்டு திரும்பி வரும்போது டாஸ்மாக் எதிரே குடிச்சிட்டு பாட்டிலை ரோட்டிலேயே போட்டு உடைச்சிருக்கானுங்க. அந்த பாட்டில் குழந்தையோட காலில் ஏறிடுச்சி. இப்போ நடக்கவே முடியாம கஷ்டப்படுறா. அதனாலதான் கடைக்கு முன்னாடி ஆர்ப்பாட்டம் நடத்தினதோடு கடையையும் இழுத்து மூடினோம். கலெக்டர் அந்தக் கடையை வேற இடத்துக்கு மாத்தும் வரை எங்களோட போராட்டம் தொடர்ந்து நடக்கும்...'' என்றார்.
இந்தப் பிரச்னை தொடர்பாக வேலூர் மாவட்ட கலெக்டர் நாகராஜனிடம் பேசினோம். ''சம்பந்தப்பட்ட பகுதியில் இருந்து எந்த வித புகாரும் இதுவரை என்னுடைய பார்வைக்கு வரவில்லை. அவங்க புகாரை யார்கிட்டே கொடுத்தாங்கன்னும் தெரியல. இருந்தாலும் இந்த பிரச்னையை நான் உடனடியா விசாரிக்கிறேன். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அந்தக் கடை இருந்தால் நிச்சயமாக வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்...'' என்று உறுதியாகச் சொன்னார். சீக்கிரம் செய்யுங்க சார்..!
**********************************************************************************
அறுவடைக்கு நேரமாச்சு... வாங்குமா அரசு?

அலறும் குறுவை விவசாயிகள்
''பல வருடங்களாகச் செய்யமுடியாத குறுவை சாகுபடியை இந்த வருடம் செய்தும், நொந்துபோய் கவலையில் இருக்கிறோம்...'' என்று அவலக்குரல் ஒன்று ஜூ.வி. ஆக்ஷன் செல்லுக்கு (044-42890005) வந்து சேரவே, விசா ரணைக்கு விரைந்தோம்.
 நாகை மாவட்டம், கீழ்வேளுர் தாலுக்கா பட்டமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி சந்திரசேகரன் இன்றைய நில வரம் குறித்து விளக்கமாகப் பேசினார். ''பல வருடங்களாக மேட்டூரில் தண்ணீர் திறப்பது காலதாமதம் ஆவதால், குறுவை சாகுபடி வெகுவாகக் குறைந்து விட்டது. பம்ப்செட் மூலம் விவசாயம் செய்கிறவர்கள் மட்டும் டெல்டா மாவட்டங்கள் முழுவதிலும் சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கர் வரை பயிர் செய்வார்கள். இந்த முறை மேட்டூர் அணை ஜூன் முதல் வாரத்திலேயே திறக்கப்பட்டதால், ஆற்றுப் பாசனம் மூலம் குறுவை சாகுபடி செய்பவர்களும் சந்தோஷமாகக் குறுவை நட்டார்கள். அதனால் இந்த முறை நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் சேர்த்து சுமார் நான்கு லட்சம் ஏக்கர் வரை குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பம்ப்செட் மூலம் நட்ட பயிர்கள் தற்போது அறுவடைக்குத் தயாராகிவிட்டது. ஆனால், அந்த நெல்லை வாங்குவதற்குத்தான் அரசாங்கம் ஆர்வம் காட்டவில்லை. அதனால் அந்த நெல்லை அடிமாட்டு விலைக்குக் கேட்கிறார்கள், வியாபாரிகள். அந்த விலை கட்டுப்படியாகாது என்றுதான், அறுவடைக்குத் தயாராக இருக்கும் என் வயலில் இன்னும் அறுவடை செய்யாமலே இருக்கிறேன்...'' என்றார்.
பட்டமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி ராம்தாஸ், ''அரசு சில இடங்களில் மட்டுமே நெல்லைக் கொள்முதல் செய்கிறது. ஆனால், அது போதுமானதாக இல்லை. பெரும்பாலான இடங்களில் இன்னும் கொள்முதல் மையங்களைத் திறக்கவே இல்லை. அதனால் தனியார் வியாபாரிகள் 60 கிலோ மூடையை  450-க்குக் கேட்கிறார்கள். அரசு கிலோவுக்கு  10 என்று நிர்ணயித்து இருப்பதுகூட எங்களுக்குக் கிடைக்கவில்லை.
விவசாயிகள் கொண்டு வரும் நெல்லையும் முழுமையாகக் கொள்முதல் செய்யாமல் ஒரு நாளைக்கு இவ்வளவுதான் என்று லிமிட் வைத்து கொள்முதல் செய்கிறார்கள். மேலும் ஈரப்பதம் 17 சதவிகிதம் வரைதான் கொள்முதல் செய்கிறார்கள். ஆனால், இந்த நாட்களில் அறுவடை செய்யப்படும் நெல்லில் குறைந்தது 22 சதவிகிதம் ஈரப்பதம் இருக்கத்தான் செய்யும். அதனால் நெல் கொள்முதலில் விவசாயிகளின் சிரமங்களைப் புரிந்துகொண்டு நடக்க வேண்டும்...'' என்று கோரிக்கைகளை வைத்தார்.
மேலும் பேசிய விவசாயிகள், ''கொள்முதல் நிலையங்கள் திறக்கட்டும் என்று அறு வடை செய்யாமல் காத்திருக்கிறார்கள், விவசாயிகள். அரசு பாராமுகம் காட்டிவரும் வேளையில், மழையும் பெய்து கெடுக்கிறது. ஆம், தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் அறுவடை செய்யவேண்டிய பயிர்கள் பல இடங்களில் தண்ணீரில் மூழ்கிக் கிடக்கிறது. ஆற்றுப்பாசனம் மூலம் பயிரிடப்பட்ட நெல்லும் விரைவில் அறுவடைக்கு வந்துவிடும். அதற்குள் அரசு ஆவண செய்யவேண்டும். இல்லை என்றால் விவசாயிகளுக்கு உற்பத்திச் செலவைவிட, அதை அறுவடை செய்து உலரவைக்கும் செலவு அதிகமாகிவிடும்...'' என்று அலறினார்கள்.
நாகை மாவட்ட கலெக்டர் முனுசாமியைத் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கினோம். ''அறுவடை தொடங்கிவிட்ட ஊர்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விட்டன. அறுவடை தொடங்காத ஊர்களில்தான் இன்னமும் திறக்கப்படவில்லை. விவசாயிகள் கொண்டுவரும் நெல் முழுவதும் நிச்சயமாகக் கொள்முதல் செய்யப்படும். ஆனால், 22 சதவிகிதம் ஈரப்பதத்துடன் நெல் கொள்முதல் செய்வது கடினம். அப்படிச் செய்தால் இருப்பு வைப்பது சிரமம். அதனால் விவசாயிகள் நெல்லை காயவைத்துத் தருவதுதான் எளிது, நல்லது. விவசாயிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியும் சொல்லிக் கொள்கிறேன். நீண்ட நாட்களாகவே கொள்முதல் நிலைய ஊழியர்கள் பணம் பிடித்தம் செய்கிறார்கள் என்று குற்றம் சாட்டி வந்தார்கள். அதற்குத் தீர்வு கண்டு விட்டோம். அதனால் இனி வரும் காலங்களில் விவசாயிகளிடம் கொள் முதல் செய்யப்படும் நெல்லுக்குப் பணமாகக் கொடுக்காமல் காசோலையாகக் கொடுக்க முடிவு செய்து இருக்கிறோம்...'' என்று விளக்கம் அளித் தார்.
இந்த நிலையில் காலத்துக்கு முந்தியே வடகிழக்குப் பருவமழை வெளுத்து வாங்கத் தொடங்கிவிட்டது. அதனால் குறுவை அறுவடையும் சம்பா மற்றும் தாளடி நடவுப் பணிகளும் பாதிக்கத் தொடங்கி விட்டன. இந்த பருவமழையில் டெல்டா மாவட்டங்கள் பாதிக்காமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு இப்போதே எடுக்க வேண்டும்.
**********************************************************************************
வீடுகள் இடிக்கப்பட்டால்... தீக்குளிப்போம்!

பெரம்பலூர் ஆவேசம்
''கடந்த 48 ஆண்டுகளாக வரி கட்டி வருகிறோம். இப்போது எங்கள் வீடுகளை இடிக்கப் பார்க்கிறார்கள். எங்களை விரட்டி னால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை!'' என்று ஜூ.வி. ஆக்ஷன் செல்லில் (044-42890005) கதறி இருந்தனர், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் சொந்த ஊரான சத்திரமலை வேலூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கீழக்கணவாய் கிராம மக்கள்.
பெரம்பலூரில் இருந்து செட்டிக் குளம் செல்லும் சாலையில் 15 கி.மீ. தூரத்தில் உள்ள கீழக்கணவாய் கிராமத்துக்குச் சென்றோம். 'இந்த இடம் வனத் துறைக்கு சொந்தமானது. வீடுகளை காலி செய்யுங்கள், இடிக்கப் போகிறோம்’ என, வனத் துறை அதிகாரிகள், ஆர்.டி.ஓ., தாசில்தார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கடந்த 4-ம் தேதி, இந்த கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து இருப்பதால், கிராமமே பரபரப்பாக இருந்தது.
கனகராஜ் என்பவரிடம் பேசினோம். ''எங்க தாத்தா காலத்துல இருந்து இங்கதான் இருக்கோம். இப்போ 70 வீடுகள் இருக்குது, கிட்டத்தட்ட 500 பேர் இருக்கோம். எங்க ஊரைச் சுத்தி இரும்புக்குன்று மலை இருக்கு. கொஞ்ச வருஷத்துக்கு முன்னால, ஃபாரஸ்ட்காரங்க ஊருக்கு எந்த பாதிப்பும் இல்லாம மரம் வச்சிக்கிறோம்னு கேட்டாங்க. மரம் வைக்கிறது நல்லதுதானேன்னு நாங்களும் சம்மதிச்சோம். கொஞ்ச நாள் எங்க ஊர்ல இருந்த குமாரசாமி வீட்டுலதான் ஃபாரஸ்ட் ஆபீஸ் நடத்திக்கிட்டு இருந்தாங்க. மரம் சரியா வளரலைன்னு வீட்டை காலி பண்ணிட்டுப் போயிட்டாங்க. போன அ.தி.மு.க. ஆட்சியில, 'இது வனத் துறையோட இடம், அதனால காலி பண்ணுங்க’ன்னு ஒரு நோட்டீஸ் வந்துச்சு. அப்போ, ஆ.ராசா வனத் துறை இணை அமைச்சரா இருந்தார். அதனால, அவர்கிட்டே போய்ச் சொன்னோம். 'நான் பேசிக்கிறேன், கவலைப்படாம போங்க’ன்னு சொன்னார். அதுக்குப் பிறகு யாரும் வரலை. இப்போ, ஆட்சி மாறியதும் திரும்பவும் வந்துட்டாங்க. நிம்மதியா தூங்கக்கூட முடியல...'' என்று கண்ணீர் விட்டார்.
மண்வெட்டியுடன் வேலைக்குப் போய்க்கொண்டு இருந்த 90 வயதான முத்தை யனிடம் பேசினோம். ''எனக்கு விவரம் தெரிஞ்ச காலத்தில இருந்தே இங்கதான் இருக்கேன். இது எங்க ஊருக்கு சொந்தமான இடம்தான். ஃபாரஸ்ட்டுக்காரங்க இத்தன நாளா எங்க போனாங்க? இது இவங்களுக்கு சொந்தமான இடம்னா, நாங்க வீடு கட்டுனப்பவே தடுத்து இருக்க வேண்டியதுதானே? எங்க வீட்டை இடிச்சாங்கன்னா நாங்க குடும்பத்தோட தீக்குளிச்சு சாகுறதைத்தவிர எங்களுக்கு வேற வழி தெரியலை...'' என்று கண்ணீர் சிந்தினார்.
அதே ஊரில் வசிக்கும் செல்வக்குமார், ''எங்க வீடுகளுக்கு 63-ம் ஆண்டுல இருந்து வீட்டு வரி கட்டிக்கிட்டு இருக்கோம். எங்களுக்கு ரேஷன் கார்டு, ஓட்டர் ஐ.டி., கரன்ட் கொடுத்திருக்காங்க. ரோடு, தண்ணி டேங்க் வசதி செஞ்சு கொடுத் திருக்காங்க. ஆனா, இப்போ நாங்க வனத் துறை இடத்தை ஆக்கிரமிச்சு குடிசை போட்டுக்கிட்டதா சொல்றாங்க. எங்களுக்கு எல்லா வசதியும் செஞ்சு கொடுத்ததை மறைச்சு, இவங்க தப்பிக் கிறதுக்கு நாங்க கஷ்டப்பட்டு கட்டுன வீடுகளை இடிக்கப் பார்க்கிறாங்க. மூணு வருஷத் துக்கு முன்னால, ஃபாரஸ்ட் அதிகாரிங்க வந்து கல் நட்டுட்டுப் போனாங்க. அதுக்குப் பிறகு, நியாயம் கேட்டு மனு கொடுத்தாலும் வர்றவங்க கல்லைத்தான் பார்க்கிறாங்களே தவிர, மத்ததை கவனிக்க மாட்டங்கிறாங்க. 'இது, வனப்பகுதின்னா ரேஷன் கார்டு, ஓட்டர் ஐ.டி. எப்படி கொடுத்தீங்க’ன்னு தாசில்தார்கிட்ட கேட்டோம். 'ஃபாரஸ்ட் டிபார்ட்மென்ட் வீட்டை இடிச்சா, உங்க ரேஷன் கார்டு, ஓட்டர் ஐ.டி-களை பறிமுதல் செய்துடுவோம்’னு மிரட்டுகிறார். மூணு தலைமுறையா வாழ்ந்த வீடுகளை விட்டுட்டு நாங்க எங்கே போறது?'' என்றார்.
அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் மருதைராஜ், மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரனிடம் இந்தப் பிரச்னையைக் கூறி இருக்கிறார். அவர் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் முறையிட்டதால், வீடுகளை இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறதாம்.
இந்த விவகாரம் குறித்து, கலெக்டர் தாரேஸ் அகமதுவிடம் பேசினோம். ''பழைய ஃபைல்களை எடுத்துப் பார்க்கச் சொல்லி இருக்கிறேன். மக்கள் கஷ்டம் எனக்குப் புரிகிறது. ஆனால், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அத்துமீறக் கூடாது என்று கடுமையான சட்டம் இருக்கிறது. இந்த மக்கள் 63-ம் ஆண்டில் இருந்து வீட்டுவரி ரசீது வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். அதையும் விசாரிக்கச் சொல்கிறேன். ஏனென்றால், 1980-க்கு முன் தொடர்ந்து வீட்டுவரி செலுத்தி இருந்தால் இவர்களுக்கு நியாயம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது...''என்றார்.
நல்லதே நடக்கட்டும்!
**********************************************************************************
ஏழு பேருக்காகத் துடிக்காதா தமிழகம்?

மனித உரிமைக்கான ஆவேசம்
''மூன்று பேரின் உயிர்களைக் காப்பாற்றத் தமிழகமே துடிக்கிறது, கொதிக்கிறது. மரண தண்டனைக்கு எதிரான இந்த ஒட்டுமொத்த ஆவேசத்தைப் பார்க்கையில் நெஞ்சுக்கு ஆறுதலாக இருக்கிறது. ஆனால், பரமக்குடியில் ஏழு பேர் கொல்லப்பட்டதற்கு எதிராக ஒரு சத்தத்தையும் காணோமே? அவர்கள் தலித்கள் என்பதால்தான் மௌனமோ?'' - 'எவிடன்ஸ்’ அமைப்பின் செயல் இயக்குநர் கதிர் கேட்கும் கேள்விகளுக்கு இன்னமும் பதில் இல்லை!
கோவை பிஷப் அப்பாசாமி கலை மற்றும் அறி வியல் கல்லூரியில், சமீபத்தில் 'மனித உரிமை மீறல்கள்’ குறித்து ஒரு கருத்தரங்கம் நடந்தது. இதில் சிறப்புரை ஆற்றினார் கதிர். ''இந்த உலகத்திலேயே முதல் மனித உரிமைப் போராளி யார் என்றால், அது இயேசுதான். சிலுவையில் அறையப்பட்டபோது, 'மரண தண்டனை என்னோடு முடியட்டும்!’ என்று உதிரம் வழியக் குரல் கொடுத்த புரட்சியாளன் அவர். ஆனாலும் திருந்தியதா சமூகம்? இல்லை. ஒரு நாட்டில் கலவரங்கள் இருக்கலாம், துப்பாக்கி சப்தம் கேட்கலாம். ஆனால், அங்கே நீதி இருக்க வேண்டும். காகத்தைச் சுட்டால்கூட கையில் விலங்கு மாட்ட ஃப்ளூக்ராஸ் வந்துவிட்ட தேசத்தில்... மனிதர்களை மளமளவென சுட்டுக் கொல்கிறது போலீஸ். இந்தப் பயங்கரவாதத்தைத் தட்டிக் கேட்க யாரும் இல்லை. பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகனின் உயிரைக் காப்பாற்றத் துடிக்கிறோம். ஆனால், பரமக்குடி சாவு களுக்கு மட்டும் ஏன் வாய் மூடி மௌனிக்கிறது தமிழகம்? இறந்தவர்கள் உதிரிகள் என்பதாலா? செத்தது தலித்கள்தானே என்பதாலா? மனித உரிமை மீறலுக்கு எதிரான இந்தப் போக்கு பெரும் வெட்கம்.
தலித் கர்ப்பிணிகளுக்கு மருத்துவமனையில் படுக்கை மறுக்கப்படுவதில் ஆரம்பித்து... சுடுகாடு வரை நீள்கிறது சாதி துவேஷம். தமிழ்நாட்டில் தலித் மீதான அத்துமீறல்கள் படம் எடுத்து ஆடும் மாவட்டங்களில் கொங்கு மண்டலத்துக்கு முக்கிய இடம் உண்டு. அன்னூர், சத்தியமங்கலம் பகுதிகளில் ஆதிக்க சமுதாயத்தினரின் தோட்டங்களில் தலித்கள் கூலி வேலை செய்கிறார்கள். இடைவேளையில் இவர்களுக்கு முதலாளி வீட்டில் இருந்து காபி வரும். அதைப் பார்த்தால் நெஞ்சு வெடித்துவிடும். முதலாளி யின் வீட்டு வாசலில் துண்டை இடுப்பில் செருகியபடி குத்துக்கால் வைத்து உட்கார்ந்திருப்பார் தொழிலாளி. கையில் இருக்கும் தேங்காய் சிரட்டையில் காபி ஊற்றப்படும். இதுதான் தினமும் நடக்கும் உபசாரம்.
பல பள்ளிகளில் தலித் மாணவர்களை 'மைனஸ்’ என்று சங்கேத வார்த்தையிலே நையாண்டித்தனம் செய்கிறார்கள். கூடவே, இந்தக் குழந்தைகளை மட்டும் 'துப்புரவு டீம்’ என்றாக்கி, பள்ளியின் டாய்லெட்டை சுத்தம் செய்ய வைப்பது, பள்ளியைக் கூட்டிப் பெருக்குவது போன்ற வேலைகளில் இறக்கி விடுகிறார்கள். அட இங்கு மட்டுமா... அரசிய லிலும் இதுதான் நடக்கிறது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஊருக்கு முந்தி ஆ.ராசாவை தூக்கி உள்ளே போட்டார்களே... அந்த ஊழல் சுழலில் அடிபடும் தனியார் நிறுவனப் பொறுப்பாளர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தார்கள்?
தமிழ்நாட்டில் மனித உரிமை பட்டவர்த் தனமாக மீறப்படும் மையங்களில் போலீஸ் ஸ்டேஷன் முக்கியமானது. கடந்த ஏழு ஆண்டுகளில் மட்டும் 76 லாக்-அப் சாவுகள் நடந்திருக்கின்றன. போலீஸ் நிலையங்களைக் கொலைக்கூடங்களாக மாற்றி சாதித்திருக்கும் தமிழ்நாடு போலீஸ்தான், இந்தி யாவிலேயே நான்காவது சிறந்த போலீஸ் என்று பட்டம் வாங்கி இருக்கிறது. 'அடித்துக் கேட்டால்தான் உண்மை வெளியே வரும்!’ என்று தன் செயலுக்கு நியாயம் கற்பிக்கிறது போலீஸ். அப்படியானால், குற்றவாளிகள் அத்தனை பேரும் ஒரே மாதிரிதானே ட்ரீட் செய்யப்பட வேண்டும்? பிக்பாக்கெட் வழக்கில் சந்தேகத்தில், பிடிபட்டவனிடம் உண்மையை வரவழைக்க அவனை உரித்துத் தொங்க விடுகிறது போலீஸ். சங்கரராமன் கொலை வழக்கில் கைதான ஜெயேந்திரரிடம் இப்படியா நடத்தினார்கள்? இங்கே சட்டத்தின் முன் எல்லோரும் பொதுவாக இல்லை.
அரபு நாடுகளில் 'கண்ணுக்கு கண்’ என்ற அளவில் தண்டனை இருந்தும் குற்றங்கள் குறைய வில்லையே... ஆக, தண்டனைகள் குற்றவாளியைத் திருத்தும் வகையில்தான் இருக்க வேண்டுமே தவிர, குற்றவாளியைத் 'தீர்க்கும்’ வகையில் இருக்கக் கூடாது. சுதந்திரம் பெற்ற பிறகு இதுவரையில் இந்தியாவில் தூக்கில் இடப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 3,000 என்று தகவல் வருகிறது. அரசாங்கமோ 100-க்குள் என்று கணக்குக் காட்டுகிறது. உலகில் பல நாடுகள் மரண தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுத்துக்கொண்டு இருக்கின்றன. நாமோ இன்னமும் தூக்குக் கயிற்றை தூக்கிப் பிடித்துக்கொண்டு தொங்கவிட ஆள் தேடிக்கொண்டு இருக்கிறோம்!
தற்போது, தேசத்தில் நடக்கும் நிகழ்வு களுக்கு வெறும் பார்வையாளர்களாக இருக்கும் இளைஞர்களாகிய நீங்கள்தான், நாளை பல நிகழ்வுகளை நிர்ணயிக்கப் போகிறவர்கள். கீதை, பைபிள் மற்றும் குர் ஆன் போன்றவை தெரி யாமல் இருந்தாலும், பரவாயில்லை... ஆனால், நாட்டின் அரசியல் சாசனத்தைத் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். அதுதான் உயிர்நாடி!'' என்று கதிர் ஆவேசப்பட்டார்.
அவரது பேச்சைக் கேட்டு புதிய மனிதர் களாக உற்சாகமாகக் கலைந்தது இளைஞர் பட்டாளம்!
**********************************************************************************
வன்னியர்களுக்கு எதிரான சதி!

இலவச ஆடு, மாடு திட்டத்தை எதிர்க்கும் குரு
''ஜெர்மனியில் இருந்து இங்கு வந்த ஆரியர்கள் ஆடு, மாடு மேய்த்த னர். அப்போது நமது மக்கள் ஆட்சி நடத்தினார்கள். இப்போது ஆரியர் அரசு நடத்திக்கொண்டு... நம்மை ஆடு, மாடுமேய்க்க வைக்கிறார்...'' - முதல்வர் ஜெயலலிதா மீதுதான் இப்படி அனல் கக்கியிருக்கிறார் பா.ம.க. எம்.எல்.ஏ-வான காடுவெட்டி குரு!
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சிங்கபுரத்தில் சமீபத்தில் வன்னியர் சங்கத்தின் முப்பெரும் விழா நடந்தது. முதலில் மாநில நிர்வாகி கள் காவல் துறையினரைக் கண்டித்துப் பேசி சூட்டைக் கிளப்ப... அதைத் தொடர்ந்து மைக்கைப் பிடித்தார் குரு. ''எங்களை சாதி வெறியர்கள் என்று சொல்கிறார்கள். ஆனால், நாங்கள் சாதி வெறியர்கள் அல்ல. இந்த மாவட்டத்தில் உள்ள அமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான் சாதி வெறி பிடித்து வன்னியர்களைப் புறக்கணிக் கிறார். வன்னியர் போலீஸ் அதிகாரிகள் அனை வரையும் வெகு தூரத்துக்கு பணி மாற்றம் செய்ய வைக்கிறார். முன்னாள் முதல்வரான கருணா நிதியும் இப்படித்தான் வன்னியர்களைப் பழிவாங்கினார்... இப்போது ஜெயலலிதாவும் ஆரம்பித்து இருக்கிறார். இந்த அம்மையார் இலவச ஆடு, மாடு வாங்கும் குடும்பத்தில் ஒருவரும் படிக்கக் கூடாது என்கிறார். இது வன்னியர்களைப் படித்தவர்களாக மாறுவதைத் தடுக்கும் சதிதான்...'' சாட்டையைச் சொடுக்கிய குரு டிராக் மாறி, ''மத்திய உள்துறை அமைச்சரான ப.சிதம்பரமும் சாதி வாரி கணக் கெடுப்பை எதிர்க்கிறார். உண்மையில், சாதிவாரி கணக்கெடுப்பின்போது இரண்டரை கோடி வன்னி யர்களும் தங்களை 'வன்னிய குல சத்திரியர்’ என்றுதான் பதிவு செய்ய வேண்டும். இடஒதுக்கீடு கிடைக்கக் காரணம் எங்கள் ஐயாதான். இன்னொரு இயேசு, முகமது நபி எப்படி நமக்குக் கிடைக்க மாட்டார்களோ, அதுபோல நமக்கு இன்னொரு ராமதாஸ் கிடைக்க மாட்டார்...'' என்று சொல்ல, கூட்டத்தில் விசிலோ விசில்!
''தமிழ்நாட்டை இரண்டாகப் பிரித்தால் வன்னியர்தான் வட தமிழ்நாட்டை ஆள்வார்கள். அதனால்தான் பிரிக்க மறுக்கிறார்கள். வன்னி யர்களை எப்போதும் ஓட்டுப் போடும் முட்டாள் களாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைக் கிறார்கள். போகட்டும்... வட தமிழ்நாட்டை அம்மா வும், தென் தமிழ்நாட்டை சின்ன அம்மாவும் அ.தி.மு.க. சார்பில் ஆளலாம். அதேபோல், தி.மு.க. ஆட்சியில் அமர்ந்தால் ஸ்டாலின், அழகிரியும் ஆளலாம்...'' என்று கிண்டலடித்த குரு, ''கேப்டன்... கேப்டன்னு சொல்கிறார்கள். 'கேப்டன் பிரபாகரன்’ படத்தில் வீரப்பனை இவர் பிடிப்பதைப்போல் நடித்ததால்தான் இவருக்கு இந்தப் பெயர் வந்ததாம்... நான் கேட்கிறேன், இவர் உண்மையில் கேப்டன் என்றால், எல்லையில் போய் பாகிஸ்தான் தீவிர வாதிகளை அழிக்க வேண்டியதானே?'' என்று பஞ்ச் வைத்தார் குரு.
கூட்டம் முடிந்ததும் 'வன்னியர் நிகர்நிலைப் பல்கலைக்கழகம்’ அமைக்க  2.60 லட்சம் வழங்கப்பட்டது. அதை வாங்கிக்கொண்ட குரு கோபத்துடன், ' 5 லட்சம் தருவதா சொன்னீங்க? அவ்வளவுதானா?’ என்று கடிந்தபடி கிளம்பினார்.
**********************************************************************************
போராடினால் 'ரத்த' மரியாதை!

சேலம் பரபரப்பு
சேலத்தில்,  145 கோடி மதிப்பில் கட்டப்பட்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை, ஆட்சி மாற்றத்தால் செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டுவிட்டதாக, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் போராட்டம் நடத்தியது. அதற்கு போலீஸ் தடியால் பதில் சொல்ல... கலவர பூமியாக மாறி இருக்கிறது சேலம்!
தாக்கப்பட்ட இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் தலைவர் முத்துக்கண்ணன், ''கடந்த ஆட்சியில், 11 மாவட் டங்களில் இருந்து சுமார் ஒன்றரை கோடி மக்கள் பயன்படும் வகையில், இங்கு அதிநவீன வசதிகளோடு கட்டப் பட்டுள்ளது இந்த மருந்துவமனை. ஆனால், ஆட்சி மாறியதும் இந்த மருந்துவமனையை செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டுவிட்டார்கள். இதை செயல்படுத்த வலியுறுத்தியே போராட்டம் செய்ய இரண்டு நாட்களுக்கு முன்பே அனுமதி கேட்டோம். கொடுப்பதாகச் சொன்னவர்கள், கடைசியாக மறுத்துவிட்டனர்.
நாங்கள் திட்டமிட்டபடி, நகரின் ஆறு பகுதிகளில் இருந்து நடைபயணமாக வந்து சேலம் கலெக்டர் அலுவலகத்தின் முன் போராட்டம் செய்ய இருந்தோம். அதன்படி பயணத் தைத் தொடங்கினோம். மூன்று ரோட்டில் நடைபயணத்தை துவங்கும்போது, பள்ளப்பட்டி ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் தலைமையில் வந்த காவல் துறையினர் கண்மூடித்தனமாக 'என்ன? ஏது?’ என்று கேட்காமலேயே எங்களைத் தாக்கினார்கள்.
'டேய் முன்னாள் முதல்வராக இருந்தாலும் சரி, இன்னாள் முதல்வராக இருந்தாலும் சரி, பிரதமரே ஆனாலும், மக்களுக்கு இடையூறா நடந்தால் தொலைத்துவிடுவேன். காக்கி சட்டைக்கு அவ்வளவு அதிகாரம் இருக்கு’ என்று சொல்லிக்கொண்டே கடுமையாகத் தாக்கினார் இன்ஸ்பெக்டர். நாங்கள் ஜனநாயக முறைப்படி போராடுபவர்கள். அதனால் முறையாக எங்களைக் கைது செய்து வண்டியில் ஏறச்சொன்னால், நாங்களே ஏறியிருப்போம். அதைச் செய்யாமல், எங்கள் தோழர்கள் 18 பேரை ரத்தம் சொட்டச் சொட்ட அடித்து, கைது செய்து பள்ளப்பட்டி ஸ்டேஷனுக்குக் கொண்டுசென்றனர்.
ஸ்டேஷனில் எங்களுக்கு எந்த முதல் உதவியும் செய்யாமல் வாய்க்கு வந்தபடி கெட்ட வார்த் தைகளால், 'டேய், நீ மாநில தலை வர்னா பெரிய புடுங்கியா...’ என்று சொல்லி மிரட்டவும் செய்தார். மாலை 4.30 மணிக்குதான் எங்களை விடுவித்தார்கள். சேலம் அரசு மருத்துவ மனைக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சேரச் சென்றபோதும், அங்கேயும் எங்களை அனுமதிக்காமல் அலைக்கழித்தார் கள்...'' என்றார் வேதனையாக.
இதுபற்றி பள்ளப்பட்டி இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமாரிடம் விளக்கம் கேட்டோம். '' போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்படவே இல்லை. நாங்க பந்தோபஸ்துக்கு ஆறு பேர் மட்டுமே இருந்தோம். அவுங்க அறுபது பேருக்கு மேல இருந்தாங்க. அவர்களிடம் போன தும் நான் வணக்கம் சொல்லிட்டு மரியாதையோடதான் பேசி னேன். ஆனா அவர்களோ காவல் துறையை அசிங்கமாக பேச ஆரம்பிச்சாங்க. சாலை மறியலிலும் ஈடுபட்டாங்க. மக்களுக்காகத்தான் இவங்க போராடுறாங்க. அதே மக்களுக்கு சாலை மறியலில் ஈடுபட்டு சிரமத்தை ஏற்படுத்துவது எந்த வகையில நியாயம்னு சொல்லுங்க. யாராக இருந்தாலும் சட்டத்தை மதிக்கணும். மக்களின் கவனத்தை ஈர்க்க எவ்வளவோ போராட்டங்கள் இருக்கும் போது சாலை மறியலில் ஈடுபட்டு மக்களை வருத்துவது எந்த வகையில் நியாயம்னு சொல்லுங்க? பலமுறை எச்சரித்தும் அவர்கள் தொடர்ந்து மறியல் செய்ததால் லேசான தடியடி நடத்த வேண்டியதாக போய்டுச்சி. மற்றபடி நான் யாரையும் தப்பான வார்த்தைகளால் திட்ட வில்லை!'' என்று அடியோடு மறுத்தார்.
யோசிக்க வேண்டிய விசயம்தான்!
**********************************************************************************
காதல் தம்பதியை பிரிக்கச் சொன்னாரா அமைச்சர்?

சர்ச்சையில் சண்முகவேலு
போலீஸ் ஸ்டேஷன் மற்றும் அரசு அலுவலங்களில் அ.தி.மு.க-வினர் தலையிடக் கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா உத்தரவு போட்டுள்ளார். இந்நிலையில், காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியைப் பிரிப்பதற்கு காவல் துறைக்கு உத்தரவு போட்டார் என்ற சர்ச்சையில் சிக்கி இருக்கிறார், ஊரகத் தொழில் துறை அமைச்சர் சண்முகவேலு.
ஒட்டன்சத்திரம் பகுதியில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருபவர் ரவிச்சந்திரன். மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மகுடீஸ்வரி. வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். காதலுக்கு இருவரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவிக்கவே, சமீபத்தில் பதிவுத் திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் திருமணத்தைத் தொடர்ந்துதான் ஏகப்பட்ட பிரச்னைகள்.
இதுகுறித்து ரவிச்சந்திரனிடம் பேசினோம். ''நான் ஒட்டன் சத்திரத்தில் நடத்திவந்த கம்ப்யூட்டர்சென்டருக்கு  மகுடீஸ்வரி அடிக்கடி வருவார். அப்போது எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக உயிருக்கு உயிராகக் காதலித்தோம். பெற்றோரின் சம்மதத்துடன்தான் திருமணம் செய்து கொள்ள எண்ணி, இரு தரப்பிலும் பேசினோம். ஆனால், சாதியைக் காரணம் காட்டி இரு தரப்பிலும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், வேறு வழி இல்லாமல் ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டோம்.
திருமணக் கோலத்துடன் திண்டுக்கல் எஸ்.பி. அலுவலகம் சென்று பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்தோம். எஸ்.பி., ஒட்டன்சத்திரம் மகளிர் ஸ்டேஷனுக்கு கூப்பிட்டு, பாதுகாப்பு கொடுக்கச் சொன்னார். மகளிர் ஸ்டேஷனில் விசாரித்து, நாங்கள் இரண்டு பேரும் மேஜர் என்பதால் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பிவிட்டர்கள். ஆனால், மகுடீஸ்வரி வீட்டில் எங்களைப் பிரிப்பதிலேயே குறியாக இருந்தார்கள்.
அவர்களுக்கு ஆதரவாக அ.தி.மு.க-வைச் சேர்ந்த ஒட்டன்சத்திரம் முன்னாள் ஒன்றியச் செயலாளர் முருகன், அரசப்பிள்ளைபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் சின்னு ஆகியோர் என்னைக் கடுமையாக மிரட்டினார்கள். அவர் களிடம் தப்பித்து நண்பர்களின் உதவியோடு நாங்கள், திராவிடர் கழகத் தோழர்களிடம் உதவி கேட்டுச் சென்றோம். அவர்கள் எங்களை கொளத்தூரில் இருக்கும் கொளத்தூர் மணி அண்ணனிடம் அழைத்துச் சென்றார்கள். அவர் எங்களுக்கு சுயமரியாதை முறையில் திருமணம் நடத்தினார். மேட்டூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தைப் பதிவு செய்து கொண்டோம். அதன் பிறகும் மிரட்டல் தொடர்ந்ததால், ஊருக்குச் செல்லாமல் மதுரை உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்தோம். நீதிமன்றமும் எங்களுக்கு பாதுகாப்பு தரச் சொல்லி ஒட்டன்சத்திரம் போலீஸுக்கு உத்தரவிட்டது. அதன் பின்புதான் ஊருக்குச் சென்றோம்.
போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று பாது காப்பு கேட்ட போது, இன்ஸ்பெக்டர் கண்டுகொள்ளவே இல்லை. அத்துடன், 'இதுல நான் எதுவும் பண்ண முடியாது. மடத்துக்குளம் அமைச்சர் போன் பண்ணி, 'எப்படியாவது பிரிச்சு விட்டுடு’னு சொல்றார். அதனால வேற ஊருல போயி பிழைச்சுக்கோங்க. என் தலையை உருட்டாதீங்க. இந்த ஊர்ல இருந்தா பிரச்னைதான்’னு சொன்னார். ஆனால், நாங்கள் எங்கேயும் போகாமல் நான்கு நாட்கள் ஊரில் தங்கி இருந்தோம். ஐந்தாவது நாள் மகுடீஸ்வரி வீட்டில் இருந்து ஐந்தாறு அடியாட்கள் வந்து அவளைத் தூக்கிட்டுப் போக முயற்சி செய்தார்கள். அங்கு இருந்து தப்பி, இப்போது தி.க. தோழர்கள் உதவியுடன் ஊர், ஊராக நாடோடி போல வாழ்ந்து வருகிறோம்...'' என்றார் பரிதாபமாக!
ஒட்டன்சத்திரம் இன்ஸ்பெக்டர் இளவரசுவோ, ''ரெண்டு தரப்பையும் விசாரிச்சு சமாதானம் பண்ணி அனுப்பிட்டேன். ஸ்டேஷனில் யாரும் அவங்களை மிரட்டலை. அமைச்சரும் இது சம்பந்தமா என்கிட்ட எதுவும் பேசலை. அவங்களை வந்து இங்கே வரச் சொல்லுங்க. கட்டாயம் பாதுகாப்பு கொடுக்கிறோம்...'' என்றார்.
அமைச்சர் சண்முகவேலுவிடம் பேசினோம். ''அது கட்சிக்காரரோட பொண்ணு. அவங்க அப்பா பேசினார். திண்டுக்கல்லா, ஒட்டன்சத்திரமான்னு ஞாபகம் இல்லை. போலீஸில் பேசி சட்டப்படி நடவடிக்கை எடுங்க. மைனராக இருந்தா பிரிச்சிடுங்க. மேஜர் என்றால் விட்டுடுங்கனு சொன்னேன். அவ்வளவுதான். கட்சிக்காரன் குழந்தையை பறிகொடுத்துட்டு, உதவி கேட்கிறான். செய்யாம இருக்க முடியுமா? அவனவன் பிள்ளை பாதிச்சுதுன்னா கேட்கத்தானே செய்வாங்க. அது சரி, நடந்தது நடந்து போச்சு... அந்தப் பெண்ணோட  தலை எழுத்து அவ்வளவுதான்னு நினைச்சுக்க வேண்டியதுதான்...'' என்றார்.
காதலுக்கு இதுதான் மரியாதையா?
**********************************************************************************
புறக்கணித்த அமைச்சர்... திறந்துவைத்த எம்.பி.!

நாகர்கோவில் பஸ் ஸ்டாண்ட் மோதல்
நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தின் பணிகள் முடிவடை யாத நிலையில்... அதைத் திறக்க 'நீயா நானா?’ என இரண்டு கழகங்களும் மல்லுக்கட்ட... பகிரங்கமாக மோதல் வெடித்து முடிந்தது திறப்பு விழா!
நாகர்கோவில் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது அண்ணா பேருந்து நிலை யம். இதன் சீரமைப்புப் பணிகள் கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வந்தன.  1.29 கோடி செலவில் நடைபெற்ற பணிகள், மிக மந்தமாக நடைபெற்றதால், மக்கள் கடுமையாக சிரமப் பட்டனர். சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரி, அரசியல் கட்சிகளும், அமைப்பினரும் தொடர் போராட்டங்களை நடத்தினர்.
இந்த நிலையில், 'அமைச்சர் பச்சைமால் கடந்த 16-ம் தேதி, பேருந்து நிலையத்தைத் திறந்து வைப்பார்’ என திடீரென்று அறிவிக்கப்பட்டது. 'பணிகள் முழுமையாக முடிவடையாத நிலையில், திறந்து வைப்பது எப்படி சாத்தியமாகும்?’ என்று மக்கள் ஆச்சர்யமானார்கள். உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தன்னுடைய பதவிக் காலத்திலேயே பேருந்து நிலையத்தைத் திறந்து விடவேண்டும் என நகராட்சி தலைவரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அசோக் சாலமன் முயல்கிறார் என்று அ.தி.மு.க-வினர் பலமாகக் குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில், பேருந்து நிலையம் திறப்பு விழாவுக்கு காலை 8.30 மணியில் இருந்தே காங்கிரஸ் மற்றும் தி.மு.க-வினர் பெருமளவில் திரண்டனர். திறந்து வைக்கவேண்டிய அமைச்சர் பச்சைமால் மற்றும் கலெக்டர் மதுமதி ஆகியோர் விழாவைப் புறக்கணிப்பதாகத் தெரியவரவே, காங்கிரஸ் - தி.மு.க-வினர் தீவிர ஆலோசனை நடத்தினார்கள். விழா தள்ளிவைக்கப்படுமா என்று தொண்டர்கள் எதிர்பார்க்க, தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலன் டேவிட்சன் பேருந்து நிலையத்தை திறந்துவைத்துவிட்டார். இந்த அதிரடியைக் கொஞ்சமும் எதிர்பாராத ஆளும் கட்சி வட்டாரம் அதிர்ந்து போய்விட்டது.
உடனே ஆவேசமான அ.தி.மு.க. கவுன் சிலர்கள், பேருந்து நிலையத்தின் உள்ளே பேருந்துகளைச் செல்லவிடாமல் மறியல் செய்தனர். இதற்கு பதிலடியாக, தி.மு.க-வும், காங்கிரஸ்காரர்களும்பேருந்துகளை விடவேண்டும் என்று சாலை மறியலில் ஈடுபட்டனர். நிலைமை கைமீறிச் செல்வதை உணர்ந்த காவல் துறையினர், நாடாளுமன்ற உறுப்பி னர், நகராட்சித் தலைவர் உட்பட மறியலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து கொண்டுசென்ற பிறகே ஏரியாவில் பதற்றம் தணிந்தது. இதைக் கண்டு வெகுண்ட தி.மு.க-வினர், 'அமைச்சர் மற்றும் கலெக்டரின் புறக்கணிப்புக்கு நாகர்கோவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன்தான் காரணம்’ எனக் கொதித்தனர். ''திறப்பு விழாவில் ஏன் கலந்துகொள்ளவில்லை'' என்று அமைச்சர் பச்சை மாலிடம் கேட்டோம். ''என்னை போனில் தொடர்பு கொண்டுதான் விழாவுக்கு அழைத்தார்கள். பணிகள் முடிவடைந்துவிட்டதால், திறப்பு விழா நடத்தப் படுவதாகச் சொன்னார்கள். திறப்பு விழா தேதிக்கு முந்தைய நாள் இரவு, நான் சென்று பேருந்து நிலையத்தைப் பார்வையிட்டேன். பாதாள சாக்கடைகள் மூடபடவில்லை. பயணிகள் நிற்பதற்காக வசதிகள் செய்யப்படவில்லை. நிர்வாக அறைக்கான பணிகள்கூட முடிக்கப் படவில்லை. பேருந்துகள் உள்ளே செல்ல அனுமதித்தால் பயணிகளுக்குப் பாதுகாப்பில்லாத நிலை என்பதால், திறப்பு விழாவை பணிகள் முடிந்த பின் வைத்துக்கொள்ளலாம் என்று தகவல் அளித்தேன். ஆனால், அரசியல் காழ்ப்பு உணர்ச்சி காரணமாக மக்களைப்பற்றிச் சிந்திக்காமல், தாங்களாகவே இப்படி ஒரு செயலை எதிர்த்தரப்பினர் செய்து இருக்கிறார்கள்...'' என்றார் காட்டமாக.
தி.மு.க. எம்.பி-யான ஹெலன் டேவிட்சனிடம் பேசினோம். ''பேருந்து நிலையம் திறக்கப்படாததால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். வாகன நெரிசலும் அதிகமாகி விட்டது. இந்த நிலையில், பேருந்து நிலையம் அமைச்சரால் திறந்து வைக்கப்பட இருப்பதாகக்கூறி என்னையும் அழைத்தனர். நான் அங்கு சென்ற பின்புதான், அமைச்சர் மற்றும் அதிகாரிகள் விழாவைப் புறக்கணிக்கிறார்கள் என்பது தெரிய வந்தது. நகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டதன் பேரில் நானே பேருந்து நிலையத்தைத் திறந்து வைத்தேன். தொடர்ந்து அ.தி.மு.க-வினர் பேருந்துகளை உள்ளே செல்ல அனுமதிக்காததால், மக்கள் நலனைக் கருத்தில் கொண்டுஉடனடியாக மறியலில் ஈடுபட்டோம்...'' என்றார்.
அ.தி.மு.க-வினரின் ஒட்டுமொத்தக் கோபமும் நகர்மன்றத் தலைவர் அசோக் சாலமன் பக்கம் திரும்பி இருப்பதால், அவரிடம் பேசினோம். ''பேருந்து நிலைய தரைத் தளம் அமைப்பது மட்டுமே தனி டெண்டர். பயணிகள் இருப்பிடம் அமைப் பது தனி டெண்டர். தரைத்தளப் பணிகள் அமைப்பது முடிவுக்கு வந்ததை அடுத்து, நாங்கள் அமைச்சரிடம் கேட்டு அவரது ஒப்புதலின் பேரில்தான் 16-ம் தேதி திறப்பு விழா எனத் தேதி முடிவு செய்யப்பட்டது. அதன்பேரில்தான் அனைவருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. திடீரென அமைச்சர் மற்றும் கலெக்டர் ஆட்சியர் விழாவைப் புறக்கணித்தது ஏன் எனத் தெரியவில்லை. லோக்கல் அ.தி.மு.க-வினர்தான் அமைச்சரிடம் பேசி, குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அவர்களின் அரசியல் விளையாட்டை மக்களின் அத்தியாவசியத் தேவைகளிலும் நுழைப்பது தவறு!'' என்றார்.
பஸ் ஸ்டாண்ட் திறந்துவைக்கப்பட்ட அன்று அ.தி.மு.க-வினரால் மூடப்பட்டு, அதன்பின்னர் மீண்டும் திறக்கப்பட்டு என்று அரசியல் கட்சிகள் நடத்திவரும் ஈகோ விளையாட்டைப் பார்த்து வெறுத்துப் போய் நிற்கிறார்கள் குமரி மக்கள்!
**********************************************************************************
ஜெ. டிக் அடித்த அந்த 10 பேர்

ன்று நிறைந்த வெள்ளிக்கிழமை... சுப முகூர்த்த நாளும்கூட. 10 மாநகராட்சிகளுக்கும் வேட்பாளர்களை அதிரடியாக அறிவித்து கூட்டணி தர்மத்துக்குக் கெட்ட நேரத்தை சுட்டிக் காட்டிவிட்டார் ஜெயலலிதா. 'எந்நேரமும் மாற்றத்துக்கு உட்பட்டது’ என்று அடிக் குறிப்பு இருந்தாலும், இந்த உள்ளாட்சித் தேர்தல் சர வெடிக்குத் திரி கிள்ளிப் போட்டிருக்கும் அ.தி.மு.க. மேயர் வேட்பாளர்களின் பரபர புரொஃபைல் இதோ...
சைதை துரைசாமி (சென்னை):
கடந்த சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்ட வர். 'மினிஸ்டர் கேண்டிடேட்’ என்று அ.தி.மு.க-வின் மூத்த புள்ளிகளே விளிக்கும் அளவுக்கு, ஜெயித்தால் மந்திரியாகும் யோகத்தில் இருந்தவர். சொற்ப வாக்குகளில் தோற்றார். அடுத்து அ.தி.மு.க-வின் கோட்டாவுக்கு வந்த ராஜ்யசபா எம்.பி. பதவி துரைசாமிக்குத்தான் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரபி பெர்னார்டுக்கு அதை வழங்கினார் முதல்வர். காரணம் வணக்கத்துக்குரிய, சிவப்பு விளக்கு சுழலும் காரில் துரைசாமியை அமர்த்த வேண்டும் என்ற எண்ணம்தானாம். இப்போதே மேயர் தோரணையில் மிதக்கிறார் சைதையார்.
கார்த்தியாயினி (வேலூர்):
வேலூர் அ.தி.மு.க-வினருக்கு சற்றும் அறிமுகம் இல்லாதவர். கணவர் அனுஷ்குமார், மாவட்ட மருத் துவர் அணி இணைச் செயலாளராக இருப்பதுதான் கட்சியில் கார்த்தியாயினியின் விசிட்டிங் கார்டு. வி.ஐ.டி. யுனிவர்சிட்டியில் பி.ஹெச்.டி. ஆய்வு செய்து வரும் கார்த்தியாயினி, வேட்பாளர் அவதாரம் எடுத்தது ஆரோக்கியமான விஷயம்தான். ஆனாலும் 'இதுவரை இந்த மாவட்டத்துல எங்க கட்சி சார்பா நடந்த எந்தக் கூட்டத்திலும் போராட்டத்திலும் இந்த அம்மாவை நாங்களே பார்த்தது இல்லை. எங்களுக்கே அறிமுகம் இல்லாத இவங்க,  வேலூர் மக்களை எப்படி இம்ப்ரெஸ் பண்ணுவாங்க?’ என்று புலம்புகிறார்கள் வேலூர் அ.தி.மு.க-வினர்.
சவுண்டப்பன் (சேலம்):
கடந்த 2001 முதல் 2006 வரை சேலம் மாநகராட்சி யின் துணை மேயராகவும், ஆறு மாத காலம் மேயராகவும் இருந்தவர் சவுண்டப்பன். சேலம் மேடை நாடக நடிகர்கள் சங்கத் தலைவராக இருக்கிறார். பெயரில்தான் சவுண்டு இருக்கிறது. ஆனால், கட்சியில் செம சைலன்ட் பார்ட்டி. மேயர் பொறுப்பு வரை வளர்ந்து இருந்தாலும், தனக்காக எந்த கோஷ்டியும் சேர்த்துக்கொள்ளாமல், எந்த கோஷ்டியிலும் இணைந்துவிடாமலும் இருப்பவர். கன்னட தேவாங்க செட்டியார் இனத்தை சேர்ந்தவர். சேலத்தில் குறைவான வார்டுகளில் மட்டுமே இவரது சமூகத்தினர் இருக்கிறார்கள். ஆனால், ஒட்டுமொத்தமாகக் கை ஓங்கி இருக்கும் வன்னியர்களை எப்படி வளைப்பார் என்பது புரியாத புதிர். இந்த நிலையில், 'கடந்த ஆட்சிக் காலத்தில் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ராஜாவை வைத்து சேலத்தில் விழா எடுத்தவர் சவுண்டப்பன்’ என்ற புகார் கார்டன் கதவைத் தட்டி இருக்கிறதாம்.
ஜெயா (திருச்சி):
மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கும் ஜெயா, மாநகர் மாவட்ட வழக்கறிஞர் அணிச் செய லாளர் ராஜேந்திரனின் மனைவி. 1984-ம் ஆண்டு முதல் கட்சி உறுப்பினர். ஆனாலும், இதுவரையில் எந்தப் பொறுப்பும் வகித்தது இல்லை. புதுமுகமான ஜெயா வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில், மேயர் ஸீட் எதிர்பார்த்துக் காத்திருந்த கட்சியின் சீனியர்கள் பலருக்கும் அதிர்ச்சி. புத்தூர் ஆபீஸர்ஸ் காலனியில் கால்நடைத் துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதியின் வீட்டுக்கு எதிரில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார். சிவபதியின் சிபாரிசின் பேரிலேயே ஜெயாவுக்கு ஸீட் கிடைத்தது என்றும் சொல்கிறார்கள். ஸீட் எதிர்பார்த்து ஏமாந்த பலரும், 'ஜெயாவை வேட்பாளர் ஆக்கினால் தோல்வி அடைந்துவிடுவோம்’ என்று தலைமைக்கு ஃபேக்ஸ் மேல் ஃபேக்ஸ் அனுப்பி வருகிறார்களாம். .
செ.ம.வேலுசாமி (கோவை):
கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன் கொடநாடு பங்களாவில் ஜெயலலிதா தங்கியிருந்தார். அவருக்குத் தேவையான பொருட்களை தினமும் சென்னைக்கும் கொடநாட்டுக்குமாக கொண்டுபோய்ப் சேர்க்கும் பொறுப்பு வேலுசாமிக்குத் தரப்பட்டு இருந்தது. ஆனால், இந்தப் போக்குவரத்தை ஒழுங்காக நிர்வகிக் காததால் டென்ஷனான ஜெயலலிதா, கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து இவரைத் தூக்கி எறிந்ததாகச் சொல்வார்கள். கடந்த சட்டமன்றத் தேர்தலில் சூலூர் தொகுதியில் இவருக்கு முதலில் ஸீட் வழங்கப்பட்டது. பிறகு அதைப் பறித்ததால், தே.மு.தி.க. கைக்கு தொகுதி போனது. இப்படிக் கட்சியில் தொடர் புறக்கணிப்புக்கு உள்ளாகி நொந்துகிடந்த இந்த மாஜி அமைச்சருக்கு ஒரு வழியாக இப்போது அங்கீகாரம் கிடைத்து இருக்கிறது.
மல்லிகா பரமசிவம் (ஈரோடு):
ஈரோடு மாநகர் மாவட்ட மகளிர் அணிச் செய லாளராக இருக்கும் மல்லிகா, கழகத்துக்குள் நுழைந்த குறுகிய காலத்திலேயே கட்சியில் உயர் பொறுப்பு கிடைத்துள்ளது. மேயர் வேட்பாளர் வாய்ப்பு என்ற விறுவிறு வளர்ச்சியைப் பெற்றிருப்பது லோக்கல் அ.தி.மு.க-வினரின் மண்டையைக் காய வைத்து இருக்கிறது. பொதுப் பணித் துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம் மற்றும் அமைச்சர் கோகுல இந்திராவின் மூலம் மல்லிகா ஸீட் வாங்கி இருக்கி றார் என்கிறார்கள். கடந்த சட்டமன்றத் தேர்தல் சமயத்திலும் இப்போதும் ஸீட் எதிர்பார்த்து ஏமாந்தவர்கள், மல்லிகாவுக்கு எதிராகப் 'பழைய விஷயங்களை’க் கிளறி எடுத்து தலைமைக்கு ஃபேக்ஸ் அனுப்பி இருக்கிறார்களாம். கூடவே தே.மு.தி.க-வும் ஈரோட்டை கேட்டு நச்சரிப்பது மல்லிகாவுக்கு கிலியைக் கிளப்பி இருக்கிறது.
விசாலாட்சி (திருப்பூர்):
மாநில மகளிர் அணித் துணைச் செயலாளர், தலைமை செயற்குழு உறுப்பினர், தலைமைக் கழகப் பேச்சாளர் என்று அ.தி.மு.க-வின் கட்சிப் பொறுப் பளவில் பல அவதாரங்களை எடுத்திருக்கும் விசாலாட்சியிடம் ஜெயலலிதாவுக்கு தனிக் கருணை உண்டு. காரணம் இரு முறை எம்.எல்.ஏ. டிக்கெட் வழங்கப்பட்டு... பிறகு இவரது கைகளில் இருந்து பறிக்கப்பட்டதுதான். தொடர் ஏமாற்றங்களைத் தாங்கிக்கொண்டு விடாப்பிடியாக விசுவாசியாக இருந்து வரும் விசாலாட்சிக்குத் தகுந்த கௌரவத்தை வழங்கி இருக்கிறது தலைமை. ஆனாலும் விசாலாட்சிக்கு ஒவ்வொரு முறை வாய்ப்பு கிடைக்கும்போதும் அதைத் தட்டிவிடுவதோடு மட்டுமின்றி இவரது தோல்வியில் சந்தோஷப்படும் லோக்கல் அ.தி.மு.க. புள்ளி, இந்த முறையும் விசாலாட்சியைக் கவிழ்ப்பதற்காக 'சாமி... சாமி!’ என்று பிரார்த்தனையில் இறங்கியிருக்கிறாராம்.
ராஜன் செல்லப்பா (மதுரை):
கட்சியில் பொறுப்பான பதவிகள் இல்லாத போதும்கூட மதுரைக்குள் செல்லப்பாவுக்குத் தனியான ஓர் ஆதரவு வட்டம் உண்டு. மத்திய தொகுதி இடைத் தேர்தலில் அவரைப் பின்வாங்கவைத்துவிட வேண்டும் என்பதற்காக அழகிரி பட்டாளம் துரத்தித் துரத்தி அடித்தது. அவருடைய தொழில்சம்பந்தப்பட்ட விவகாரங்களிலும் ஏகப்பட்ட இடைஞ்சல்கள். அத்தனைக்கும் ஈடுகொடுத்து கம்பாகக் களத்தில் நின்றார். எல்லாவற்றுக்கும் மேலாக மதுரையில் நடந்த ஹார்லிக்ஸ் திருட்டு விவகாரத்தைத் திரட்டிக் கொடுத்து ஜெயலலிதாவின் கவனத்தை ஈர்த்தவர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் மத்திய தொகுதி தே.மு.தி.க-வுக்கு ஒதுக்கப்பட்டதால், செல்லப்பாவின் வாய்ப்பு நழுவிப்போனது. அதனால்தான் இப்போது மேயர் வாய்ப்பு.
விஜிலா சத்தியானந்த் (திருநெல்வேலி):
அதிர்ஷ்டம் இருந்தால் அரசியலில் உயர்ந்த இடத்தை எட்ட முடியும் என்பதற்கு லேட்டஸ்ட் உதாரணம் இவரே. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தீவிர அரசியலுக்கு வந்த விஜிலாவுக்கு கட்சியின் மாநகர் மாவட்ட மகளிர் அணித் துணைச் செயலாளர் பொறுப்பு கொடுக்கப்பட்டது. நெல்லை அ.தி.மு.க-வில் கோஷ்டி அரசியல் தீவிரமாக இருந்த நிலையிலும் எதிலும் தலையிடாமல் இணக்கமாகச் செயல்பட்டதால், பொதுக் குழு உறுப்பினர் பதவியும் தேடி வந்தது. அமைச்சர்கள் ஓ.பி.எஸ்., கோகுல இந்திரா ஆகியோரின் தீவிர விசுவாசி. ஆனாலும், கட்சியில் நீண்ட காலம் செயல்பட்டு வந்த சிலர், இவரது வளர்ச்சியைப் பார்த்துப் பொறாமையிலும் அதிர்ச்சியிலும் உறைந்து போயிருக்கிறார்கள்.
சசிகலா புஷ்பா (தூத்துக்குடி):
அ.தி.மு.க-வில் மாநில இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையின் துணைச் செய லாளராக இருந்து வரும் இவருக்கு, கடந்த சட்டமன்றத் தேர்தலில் நெல்லை மாவட்டம், ராதாபுரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், இறுதியில் கூட்டணிக் கட்சியான தே.மு.தி.க-வுக்கு அந்தத் தொகுதி வழங்கப்பட்டுவிட்டதால் கடைசி நேரத்தில் போட்டியிடும் வாய்ப்பை இவர் இழக்க நேரிட்டது. அப்போது ஜெயலலிதா, 'உனக்கு மீண்டும் வாய்ப்பு தருகிறேன்’ என்று கூறியதை நிறைவேற்றிக் காட்டி இருக்கிறார்.  'சசிக்கு நெருக்கமாக இருப்பதும், மணல் வைகுண்டராஜனுக்கு உறவினராக இருப்பதுமே இந்த சசிகலாவுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு கிடைப்பதற்குக் காரணம்’ என்கிறார்கள். நெல்லையில் இலவசமாக ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தையும் சென்னையில் டீம் ஐ.ஏ.எஸ். அகடமியையும் இவர் நடத்தி வருகிறார் என்பது கூடுதல் தகுதி.
**********************************************************************************
சி.பி.ஐ. குற்றப் பத்திரிகையிலும் குழப்பங்கள்!

போட்டு உடைக்கிறார் பிரணவ் சச்தேவா
சுப்பிரமணியன் சுவாமிக்கு இணையாக 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் போராடுகிறது பொது நலன் வழக்காடு மையம் என்ற அமைப்பு. சாந்தி பூஷண், அவர் மகன் பிரசாந்த் பூஷண் மற்றும் பிரணவ் சச்தேவா ஆகிய மூவர் இந்த மையத்தின் வழக்கறிஞர்கள். ஸ்பெக்ட்ரம் வழக்கு குறித்து எத்தனையோ வதந்திகள் பரவிக்கிடக்க... இன்றைய நிலவரம் அறிய பிரணவ் சச்தேவாவை சந்தித்தோம்!
''உச்ச நீதிமன்றத்தில் ஸ்பெக்ட்ரம் விசாரணை தொடர்பான நிலவர அறிக்கையைத் தாக்கல் செய் வதில், சி.பி.ஐ. குழப்பங்களைச் செய்வதாகச் சொல் கிறார்களே?''
''தயாநிதி மாறன் குறித்து கடந்த மே மாதக் கடைசியிலேயே எல்லாத் தகவல்களும் வந்துவிட்டன. பத்திரிகைகளில் வந்த செய்திகளோடு வேறு சில ஆவணங்களும் எங்களுக்குக் கிடைத்தன. கோடை விடுமுறைக்குப் பின்னர் ஜூலை 6-ம் தேதி நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ. இந்த விவகாரம் குறித்து தங்களது கருத்துக்களை முன்வைத்தது.
'சிவசங்கரனைக் கட்டாயப்படுத்தி மேக்சிஸ் நிறுவனத்துக்கு ஏர்செல் பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இப்போது ஆரம்ப கட்ட விசாரணையில் இருக்கிறது. மேலும் விசாரித்து வருகிறோம்’ என்றது சி.பி.ஐ. இதன் பின்னர் செப்டம்பர் 1-ம் தேதி, இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ., உச்ச நீதிமன்றத்துக்குத் தகவல் கொடுக்க வேண்டி இருந்தது. அப்போது சி.பி.ஐ. சார்பில் வேணுகோபால், 'தொடர்ந்து விசாரித்து வருகிறோம். தயாநிதி மாறன், சிவசங்கரனைக் கட்டாயப்படுத்தி மேக்சிஸுக்கு விற்பனை செய்தது நிரூபிக்கப்படவில்லை. இதே மாதிரி ஆதாயம் பெற்றதற்கான விவகாரம் குறித்துத் தொடர்ந்து புலனாய்வை மேற்கொண்டு வருகிறோம்’ என்றார். இதற்கிடையே மீடியாக்கள், 'மாறனுக்கு சி.பி.ஐ. கிளீன் சிட்(நீறீமீணீஸீ நீலீவீt சுத்தமானவர்)’ என்று ரிப்போர்ட்களை வெளியிட்டனர். நாங்கள் இந்த விவகாரத்தை விடுவதாக இல்லை.
அதனால், கடந்த 5-ம் தேதி மற்றொரு மனுவைத் தாக்கல் செய்தோம். அப்போது தயாநிதி மாறனுக்கு எதிராக இருக்கும் சம்பவங்களையும் ஆதாரங்களையும் விளக்கி, 'இவ்வளவு இருந்தும் சி.பி.ஐ. வழக்கைப் பதிவு செய்யாமல் இருப்பது ஏன்? தயாநிதி மாறனை விசாரிக்காமல் இருப்பது ஏன்?’ என்று கேள்விகளை எழுப்பினோம். அதனால் கடந்த 8-ம் தேதி சி.பி.ஐ-யின் வழக்கறிஞர்கே.கே.வேணுகோபால், இந்த விவகாரத்தை 2ஜி ஊழல் வழக்கைக் கண்காணிக்கும் உச்ச நீதிமன்ற பெஞ்ச் நீதிபதிகளிடம் பேசினார். 'பத்திரிகைகளில் தயாநிதி மாறனுக்கு கிளீன் சிட் கொடுக்கப்பட்டு உள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. நாங்கள் யாருக்கும் கிளீன் சிட் கொடுக்கவில்லை. இது விசாரணையில் இருக்கிறது. மேக்சிஸ் இயக்குநரான ரால்ஃப் மார்ஷல், ஏர்செல் கைமாறுவதற்கு முன்பே, அமைச்சராக இருந்த தயாநிதி மாறனோடு மொரீஷியஸில் தொடர்புகொண்டார். இந்தத் தொடர்புகளுக்குப் பின்னர்தான் ஏர்செல்லுக்கு உரிமங்கள் கொடுக்கப் பட்டன. சிவசங்கரனிடம் ஏர்செல் இருந்தபோது உரிமங்கள் கொடுப்பதில் தாமதம் செய்தனர்...’ என்று சி.பி.ஐ. தரப்பில் கூறிவிட்டு, 'ஆனால் அமைச் சராக இருந்த தயாநிதி மாறன், சிவசங்கரனை கட்டாயப்படுத்தி ஏர்செல்லை மேக்சிஸுக்கு விற்கவைத்த விவகாரத்தை சி.பி.ஐ-யால் நிரூபிக்க முடியவில்லை!’ என்றார்.
கடந்த ஜூன் மாதம் ஆதாரங்கள் இருப்பதாகச் சொன்னவர்கள் இப்போது மாற்றிச் சொன்னதால், நாங்கள் சி.பி.ஐ-யின் நேர்மை மீது சந்தேகம் எழுப்பி னோம். விரைவில் எஃப்.ஐ.ஆர். போட்டு குற்றப் பத்திரி கையும் தாக்கல் செய்வார்கள் என்றே நம்புகிறோம்.''
''தயாநிதி மாறன் மீதான குற்றச்சாட்டுக்கு என்னென்ன ஆதாரங்களைக் கொடுத்துள்ளீர்கள்?''
''2004 மார்ச் முதல் டிஷ்நெட் வயர்லெஸ் மற்றும் ஏர்செல் ஆகியவற்றுக்கு சிவா குரூப் உரிமை யாளர்களாக இருந்தனர். இவர்கள் பல்வேறு கட்டங் களில் ஸ்பெக்ட்ரம் கேட்டு விண்ணப்பித்தனர். 2004 மார்ச் மாதம் எட்டு ஏரியாக்களுக்கும் பின்னர் மேலும் ஆறு விண்ணப்பங்கள் என சுமார் 14 உரிமங்களுக்கு விண்ணப்பங்கள் போட்டு இருந்தனர். இது குறித்து இந்த நிறுவனத்தின் உரிமையாளர் சிவசங்கரன் தொலைத் தொடர்பு அமைச்சருக்கு பல முறை கடிதம் எழுதினார். அவர், 'தன்னைக் கட்டாயப்படுத்தி, மேக்சிஸ் நிறுவன உரிமையாளர் டி.அனந்த கிருஷ்ணனுக்கு விற்பனை செய்யப்பட்டது, அதுவும் குறைவான விலைக்கு விற்கப்பட்டது’ என்கிறார். இது உண்மைதானா என்பதை சி.பி.ஐ-தான் வெளியில் கொண்டுவர வேண்டும்!''
''உங்கள் மனு பெரும்பாலும் பத்திரிகைச் செய்திகளின் அடிப்படையில் இருக்கிறதே?''
''எங்களிடம் தொலைத் தொடர்புத் துறை சம்பந்தப்பட்ட ஃபைல்களின் நகல்கள், சிவசங் கரனுக்கும் மாறனுக்கும் இடையே நடந்த கடிதப் போக்குவரத்துகள், மேக்சிஸ் நிறுவனம் எப்படி ஏர்செல்லை வாங்கியது, அந்த டீல்கள், பத்திரிகைச் செய்திகள் போன்றவை உள்ளன. குறிப்பாக நீதிபதி சிவராஜ் பாட்டீல் அறிக்கையில் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. அவற்றையும் எடுத்துக் கொடுத்து உள்ளோம்.''
''டிராய் ரிப்போர்ட் மூலம் ஆ.ராசா தப்பித்துவிட முடியுமா?''
''சி.பி.ஐ. நேர்மையாக வழக்கை நிரூபிக்க முயற்சித்தால், இது முடியாது. ஏராளமான சாட்சியங்கள் இவர்களுக்கு எதிராக உள்ளன. அதனால் இந்த ஒரு ரிப்போர்ட் மூலம் அவர்கள் தப்புவார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால், வழக்கை 'வீக்' செய்ய இதுபோன்ற முயற்சிகள் நடக்கின்றன. குற்றப் பத்திரிகையிலும் ஏராளமான குழப்பங்கள். வாக்குமூலங்களும் ஒன்றுக்கு ஒன்று எதிராக உள்ளன. இதையெல்லாம் பார்க்கும்போது,  இந்த வழக்கு நிரூபிக்கப்படாமல்... ஊழல் விவகாரத்தை சிதறடிக்கும் முயற்சிகள் நடக்கலாம் என்றும் எண்ணத் தோன்றுகிறது!''
**********************************************************************************
நேருவும் அவரது தம்பிமார்களும்!

சொத்துக்குவிப்பு வழக்கின் பார்ட் ஒன்!
தி.மு.க. பிரமு​கர்கள் மீதான நில அபகரிப்பு வழக்குகள், மாரத்தான் ஓட்டத்தைப்போல் நீள... அடுத்த ரேஸாக சொத்துக் குவிப்பு வழக்குகளை அதிரடியாக ஆரம்பித்து இருக்கிறது ஜெயலலிதாவின் அரசு. முதல் டார்கெட்... முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு!
அதற்கு அச்சாரமாக, கடந்த 16-ம் தேதி நேரு மற்றும் அவரது உறவினர்களுக்குச் சொந்தமான 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரால் அதிரடி ரெய்டுகள் நடத்தப்பட்டன. திருச்சி, சென்னை, கோவை மற்றும் திருப்பூரில் இருக்கும் நேரு மற்றும் அவரது சகோதரர்களுக்கு சொந்தமான வீடுகளிலும், அலுவலகங்களிலும் நடத்தப்பட்ட ரெய்டு, காலை 6.30 மணிக்கு ஆரம்பித்து மாலை 6 மணி வரை தொடர்ந்தது. 2006 மே மாதம் முதல் 2011 மே மாதம் வரையில், தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த கே.என்.நேரு, அவருடைய வருமானத்துக்கு அதிகமாக அசையும் மற்றும் அசையா சொத்துகளைச் சேர்த்துள்ளதாக, திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அதன் அடிப்படையில், நீதிமன்ற அனுமதியின் பேரில் இந்த ரெய்டுகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு பாயின்ட்டுக்கும் ஒரு டி.எஸ்.பி. தலைமையிலான படை சென்றது. இதற்காகப் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி-க்கள் வரவழைக்கப்பட்டனர். அனைத்து இடங்களிலும் நடைபெற்ற ரெய்டு​களை ஒருங்கிணைத்தவர் திருச்சி லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி​-யான அம்பிகாபதி. இவர்தான் இந்த வழக்கின் விசாரணை அதிகாரி.
''தமிழகம் முழுவதும் 13 இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் ஏராளமான சொத்து ஆவணங்கள், வங்கிக் கணக்குப் புத்தகங்கள், ரொக்கம், நகைகள், லாக்கர்களுக்கான சாவி போன்றவை சிக்கி உள்ளன. சென்னை, கோவை, திருப்பூரில் நடத்தப்பட்ட சோதனைகளில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் திருச்சிக்குக் கொண்டுவரப்பட்டு, விசாரணை அதிகாரியால் ஒருங்கிணைக்கப்படும். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், திருச்சி மேற்குத் தொகுதியில் போட்டியிட்ட நேரு தாக்கல் செய்த சொத்து விவரங்களுடன், தற்போது கிடைத்துள்ள ஆவணங்கள் சரிபார்க்கப்படும். அது மட்டும் இன்றி, எங்களுக்கு ஏற்கெனவே கிடைத்த ரகசியத் தகவல்களின்படி கிடைத்த விவரங்களுடன் இந்த ஆவணங்கள் சரிபார்க்கப்படும். அதன் அடிப்படையில், வருமானத்துக்கு அதிகமாக எவ்வளவு சொத்துகள் சேர்க்கப்பட்டு உள்ளன என்று விவரம் தயாரிக்கப்பட்டு, நேரு மற்றும் அவருடன் தொடர்பு உடையவர்களுடன் விசாரணை நடத்தப்படும்...'' என்கிறார்கள் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார்.
முந்தைய ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 2002-ம் ஆண்டு கே.என்.நேரு மீது திருச்சி நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. அ.தி.மு.க-வைச் சேர்ந்த வழக்கறிஞர் மலர்விழி என்பவர் நேருவின் சொத்துகள் குறித்த விவரங்களை முதல்வர் ஜெயலலிதாவுக்கு மனுவாக அனுப்பினார். அதன் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அப்போதைய லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி-யான சுரேஷ்குமார், புகார்தாரர் யார் என்று குறிப்பிடாமல் வழக்குப் பதிவு செய்ய, அதனைக் காரணம் காட்டி வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டது. அதை அடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்துக்குச் சென்ற மலர்விழி, 'தனது புகாரின் பேரிலேயே வழக்குத் தொடரப்பட்டது’ என்று மேல் முறையீடு செய்தார். விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கில், வேறு சில அமைச்சர்களின் சொத்துக் குவிப்பு வழக்குகளும் சேர்க்கப்பட்டு அது ஒரே வழக்கானது. விசாரணை நடந்து வந்த சூழ்நிலையில், ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. அதை அடுத்து, வழக்கின் போக்கில் சுணக்கம் ஏற்பட... இறுதியில் வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வரவும், கே.என்.நேரு, அவரது சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினர் பெயரில் இருக்கும் சொத்துகள் குறித்த விவரங் களைத் திரட்டி, முதல்வர் ஜெயலலிதாவின் கவனத் துக்கு அனுப்பிவைத்தார் அதே மலர்விழி. அந்த ஆவணங்களை அடிப்படையாகக்கொண்டே இந்த அதிரடியாம்!
நேருவுக்கு ராமஜெயம், மணிவண்ணன், ரவிச்சந்தி ரன் ஆகிய மூன்று சகோதர்கள். நேரு, அவரது மனைவி சாந்தா, ராமஜெயம் - லதா, மணிவண்ணன் - சங்கரி, ரவிச்சந்திரன் - ரம்யா ஆகியோர் பெயரில் எந்தெந்த இடங்களில் சொத்துகள் வாங்கப்பட்டுள்ளன என்று அந்த மனுவில் சொல்லப்பட்டு உள்ளதாம். சில சொத்துகள் வாங்கப்பட்டபோது நேருவின் மனைவி சாந்தா என்று குறிப்பிடாமல், லெட்சுமணன் மகள் சாந்தா என்று அவரது தந்தையின் பெயரைக் குறிப்பிட்டு வாங்கி உள்ளார்களாம்.
டி.வி.ஹெச். எனப்படும் ட்ரூ வேல்யூ ஹோம் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம், நேருவின் சகோதரர்கள் ரவிச்சந்திரன், மணிவண்ணன் மற்றும் நேருவின் மகன் அருண் ஆகிய மூவர் பெயரில் இயங்குகிறது. இது தவிர, டவர்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன் என்ற பெயரில் ரவிச்சந்திரன் ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார். ராமஜெயம் 'ஜனனி குரூப்ஸ்’ என்ற பெயரில் கிரானைட், கல் குவாரி என்று பல பிசினஸ்கள் செய்து வருகிறார். இந்தோனேசி யாவில் நிலக்கரி சுரங்கம் குத்தகைக்கு எடுத்துள்ளார். கேர் இன்ஜினீயரிங் காலேஜ் மற்றும் கேர் இன்டர்நேஷனல் ஸ்கூல் ஆகியவற்றை 'நாராயணா எஜுகேஷனல் டிரஸ்ட்’ பெயரில் நடத்தி வருகிறார்கள். அந்த டிரஸ்ட்டுக்கு ராமஜெயம் நிர்வாக இயக்குநர், நேரு குடும்பத்துப் பெண்கள் பலரும் உறுப்பினர்கள். இதெல்லாம் வெளியே தெரிந்த சொத்துகள். 'இந்த நிறுவனங்களின் பெயரில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் வளைக்கப்பட்டன’ என்பதற்கான ஆதாரங்களை, பத்திரப் பதிவு அலுவலகம் மூலம் திரட்டி இருக்கும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார், அந்த ஆவணங்கள் எங்கே பதுக்கிவைக்கப்பட்டு இருக் கின்றன என்பதற்காகத்தான் இந்த ரெய்டுகளை நடத்தினார்களாம்.
''நேரு குடும்பத்தினர் பெயரில் நேரடியாக வாங்கி உள்ள சொத்துகள் தவிர, ஏராளமான நிலங்களை பினாமி பெயர்களில் வாங்கிக் குவித்துள்ளனர். அவற்றுக்கான பவரை மட்டும் தங்கள் பெயரில் வைத்திருக்கிறார்கள். அந்த ஆவணங்கள் எங்கு இருக்கின்றன என்பதைத்தான் கண்டுபிடிக்க வேண்டும்!'' என்கிறார்கள் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார்.
நேரு மற்றும் அவரது சகோதரர்கள் வீடுகளைத் தவிர்த்து உறவினர்கள் தரப்பில் வினோத் வீட்டில் மட்டுமே ரெய்டு நடத்தப்பட்டது. காரணம், ராம ஜெயத்தின் நிறுவனக் கணக்கு வழக்குகளை கவனித்து வந்தவர் அவர். ரெய்டு நடத்தப்பட்ட அடுத்த நாளில் இருந்து வினோத் எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை. அவரது மொபைல் போன்கள் ஆஃப் செய்யப்பட்டு இருக்கின்றன. போலீஸ் கைது செய்துவிடும் என்று பயந்து தலைமறைவாக இருக் கிறாரா.... இல்லை, வினோத்தை வளைத்திருக்கும் போலீஸார் தங்கள் கஸ்டடியில்வைத்து விசாரித்து வருகிறார்களா என்று தெரியவில்லை என்கிறார்கள்.
வினோத்தை வளைப்பதன் மூலம், சொத்துக் குவிப்பு வழக்கில் அடுத்த திருப்பங்கள் அரங்கேறலாம்!
ஆர்.லோகநாதன்
படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்
 தேர்தல் கமிஷனுக்கு டெஸ்ட்!

திருச்சி மேற்கு தொகுதி இடைத் தேர்தலில் எதிர்பாராமல் வேட்பாளர் ஆக்கப்பட்டிருக்கிறார் நேரு. 'உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி’ என்று சொன்ன தி.மு.க., 'இடைத் தேர்தல் பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை’ என்றது. தேர்தலைப் புறக்கணிக்கும் மனநிலையில்தான் தி.மு.க. இருக்கிறது என்பதை இது காட்டியது. 'இடைத் தேர்தலில் போட்டியிட வேண்டாம்’ என்று தலைமைக்கு சொல்லியிருந்தார் நேரு. இந்த நிலையில் நேரு நிறுத்தப்பட்டதற்கு காரணங்கள் உண்டாம். நேருவை குறி வைத்து நிலமோசடி வழக்கு, ரெய்டு என்று அ.தி.மு.க. பாய்ச்சல் காட்டிக் கொண்டிருக்க... வேறு வழியில்லாமல்தான் நேருவை வேட்பாளராக அறிவித்தாராம் கருணாநிதி. ஏற்கெனவே அந்த தொகுதியில் நின்றவர், பலமான வேட்பாளர், பழிவாங்கும் அனுதாபம் இவை எல்லாம் சேர்ந்துதான் நேருவை வேட்பாளராக நிறுத்த காரணமாம்.
அ.தி.மு.க. வேட்பாளர் பரஞ்சோதிக்கு எதிராக அவரது இரண்டாவது மனைவி போர்க்கொடி தூக்கியிருக்கும் இந்த சமயத்தில் தேர்தல் புறக்கணிப்பு சரிவராது என்பது தி.மு.க. சீனியர்கள் கருத்தாம். இடைத் தேர்தலில் ஆளும் கட்சிதான் ஜெயிப்பது வழக்கம். இது தி.மு.க-வுக்கும் தெரியும். கடந்த சட்டசபைத் தேர்தலில் ரெய்டு நடத்தி பண பட்டுவாடாவை தடுத்த தேர்தல் கமிஷன் இடைத் தேர்தலில் ஆளும் கட்சியின் பண விநியோகத்தை எப்படி தடுக்கப் போகிறது என்பதை டெஸ்ட் செய்வோம் என்று சொல்லி களத்தில் குதித்ததாம் தி.மு.க.!
**********************************************************************************
மெளனமானார் சின்னம்மா!

கண்ணீரில் ஈழ ஆதரவாளர்கள்
ழத்தில் போர் உக்கிரமாக நடந்த நேரம். ''உடல்நிலை சரியில்லாத நீங்கள் வெளியேறிவிடுங்கள். இனியும் இங்கே இருந்தால் உயிர் மிஞ்சாது!'' என் றார்கள் ஆசிரியை சின்னம் மாவிடம்.

''என் பேரப் பிள்ளைகள் இருக்கும் இடத்தில்தான் இறுதி வரை இருப்பேன். இந்த மண்ணைவிட்டு ஓடிப் போய்த்தான் என் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்றால், நான் இறப்பதே நல்லது!'' எனச் சொல்லி உறுதியாக நின்றார் சின்னம்மா. விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மாமியார்தான் இந்தச் சின்னம்மா!
கடந்த 6-ம் தேதி, 'சின்னம்மா இறந்து விட்டார்’ என்கிற தகவல் ஈழ ஆதரவு மக்கள் மத்தியில் அரசல்புரசலாகப் பரவியது. 'இது உண்மையா பொய்யா?’ எனப் புரியாமல் உலகத் தமிழர்கள் பலரும் வருத்தத்தில் மூழ்கினார்கள். ''அம்மா இறந்தது உண்மைதான். சிங்களப் பாதுகாப்பு முகாமில் இருந்து வற்புறுத்தி வெளியே கொண்டுவரப்பட்ட சின்னம்மா, சிங்கள உளவுப் புள்ளிகளுக்குத் தெரியாமல் மலேசியாவில் தங்க வைக்கப்பட்டார். அதனால்தான் இறப்புச் செய்தியை அறிவிக்க முடியாமல் போனது!'' என மதிவதனியின் உறவு வட்டாரம் சொல்ல, ஈழ ஆதரவாளர்கள் உறைந்துகிடக்கிறார்கள்.
''அண்ணிக்கு மட்டும் அல்ல... களத்தில் நின்ற எல்லோருக்குமே அன்னையாக விளங்கியவர் சின்னம்மா. போர் தீவிரமானபோது, பேரப் பிள்ளைகள் துவாரகா, பாலச்சந்திரன் ஆகியோரைப் பார்த்துக்கொண்டது சின்னம்மாதான். கடைசிக் கட்டப் போரில் நினைத்துப் பார்க்க முடியாத இழப்புக்கு ஆளான நிலையில், முக்கிய மான ஆட்களின் உதவி யோடு மலேசியாவில் தங்கவைக்கப்பட்டார் சின்னம்மா. எந்த நேரமும் பேரப்பிள்ளைகளின் ஞாபகம்தான் அவருக்கு. கடைசி இரண்டு வருடங் களாகத் தவறியும் அவர் வாய் திறக்கவில்லை. நினைத்துப் பார்க்க முடியாத இழப்பும் துயர மும் அவரை நிரந்தர ஊமையாக்கிவிட்டன.
ஆரம்ப கட்டப் போரி லேயே சின்னம்மாவை வெளிநாட்டுக்கு அனுப்ப முயற்சி நடந்தது. ஆனால், வெளிநாடுகளுக்குப் போக அவருக்கு விருப்பமே இல்லை. டென்மார்க்கில் வசிக்கும் மகள் அருணாதேவி, மகன் ஸ்ரீதரன் ஆகியோர் அழைத்தபோதும் சின்னம்மா அசைந்துகொடுக்கவில்லை. சின்னம்மாவின் மகன் பாலச்சந்திரன் இயக்கத்தில் இருந்தபோது இறந்தவர். அவர் நினைவாகத்தான் தன் மகனுக்கு பாலச்சந்திரன் எனப் பெயர் வைத்தார் தலைவர் பிரபாகரன். அதனால், பேரன் பாலச்சந்திரன் மீது சின்னம்மாவுக்கு மிகுந்த பிரியம். 85 வயதான சின்னம்மா கடைசி வரை பாலச்சந்திரனின் புகைப்படத்தைப் பார்த்தபடியே இருந்தார். பேரப் பிள்ளையின் ஏக்கத்திலேயே அம்மாவின் உயிர் பிரிந்துவிட்டது!'' என்கிறார்கள் மலேசியாவில் உள்ள ஆதரவுப் புள்ளிகள்.
கடைசிக் கட்டப் போரில் நிகழ்ந்த இக்கட்டுகள், துயரங்கள், உண்மைகள் ஆகியவற்றை அறிந்த சாட்சிகளில் சின்னம்மாவும் ஒருவர்!
**********************************************************************************
ஜாமீனுக்கு அலையும் தி.மு.க... துரோகம் செய்த அ.தி.மு.க.

நெல்லையில் எழுந்த வைகோ அலை!
'சட்டமன்றத் தேர்தலை சந்திக்காததால் துவண்டு​கிடக்கிறது ம.தி.மு.க.’ எனத் தமிழக அரசியல் களம் எதிரொ​லித்துக்​கொண்டு இருந்த நிலையில், அவர்களை நோக்கிச் சாட்டையைச் சொடுக்கி இருக்கிறது ம.தி.மு.க-வின் நெல்லை திறந்தவெளி மாநாடு!
நெல்லை பொருட்காட்சி மைதானத்தில் ம.தி.மு.க-வின் சார்பில் 'பேரறிஞர் அண்ணாவின் 103-வது பிறந்த நாள் விழா திறந்தவெளி மாநாடு’ நடந்தது. மாநாட்டுக்காகத் தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்கள் குவிந்தனர். இவ்வளவு கூட்டம் வரும் என்பதை காவல் துறையினர் எதிர்பாராததால், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தத் தவித்துவிட்டனர். முதல் நாள் மாலை 4 மணிக்குத் தொடங்கிய மாநாட்டில் வைகோ பேசி முடித்தபோது நேரம், அதிகாலை மணி 2. இருந்தும் தொண்டர்கள் படுஉற்சாகமாக இருந்தது ஆச்சர்யம்.
நெல்லை மாவட்டச் செயலாளர் ப.அ.சரவணன், 'நம்பவைத்துக் கழுத்தை அறுத்த நயவஞ்சகத்துக்குத் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்’ என சூடாகப் பேச்சை ஆரம்பித்துவைத்தார். அவரைத் தொடர்ந்து பேசியவர்களும், கடந்த தேர்தலில் தங்களை அ.தி.மு.க ஏமாற்றிவிட்டதாக ஆவேசப்பட்டனர். இந்த இறுக்கமான சூழலில், மேடையில் இருந்த வைகோவுக்கு தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் ஜோயல், புலிக்குட்டி பொம்மையைப் பரிசளித்தார். அதனைக் கண்டதும் ஒட்டுமொத்தக் கூட்டமும் ஆர்ப்பரித்தது.
மாநாட்டின் தலைவர் பொறுப்பு நாஞ்சில் சம்பத்துக்குக் கொடுக்கப்பட்டதால்,நெகிழ்ந்து​போய் கண் கலங்​கினார். ''தி.மு.க. அதன் இயல்பை இழந்து ரொம்ப நாளாகிப்போயிருச்சு. அது இப்போ 'திகார் முன்னேற்றக் கழகம்’ என மாறிடுச்சு. அந்தக் கட்சியை சேர்ந்த பலரும் முன் ஜாமீன் தேடி அலையுறாங்க. அதேபோல், அ.தி.மு.க-வும் கடந்த தேர்தலில் நமக்குத் துரோகம் செஞ்சிருக்கு. தோழமைக்கு இலக்கணமான வைகோவை மதிக்காதவர்களின் கணக்கை 2016-ல் முடிப்போம்...'' என ஆக்ரோஷப்பட்டார்.
நள்ளிரவு 11.30 மணிக்கு பேசத் தொடங்கிய வைகோ, கூட்டணி தர்மத்துக்காகக் கடந்த ஐந்து ஆண்டுகள் பல விஷயங்களை வெளியே சொல்ல முடியாத நிலையில் இருந்ததை ஒப்புக்கொள்கிறேன். அ.தி.மு.க-வுடன் நாங்கள் கூட்டணி வைத்திருந்தபோது, எனக்கு மட்டும் அல்லாமல் எனது தோழர்களுக்கும் ஆயிரம் மனக் காயங்கள் ஏற்பட்டன. ஆனாலும், கூட்டணி தர்மத்துக்கு நேர்மையாகச் செயல்பட்டோம். அ.தி.மு.க-வினர் சட்டமன்றத்தில் இருந்து காரணமே இல்லாமல் வெளியேறியபோதுகூட, எங்கள் எம்.எல்.ஏ-க்களும் ஆதரவு கொடுத்து வெளியே வந்தார்கள். நாங்கள் நடத்திய எந்தப் போராட்டமாக இருந்தாலும், அவர்களையும் அழைத்து உரிய மரியாதை கொடுத்தோம்.
இந்தியாவிலேயே கூட்டணிக்கு இலக்கணமாகத் திகழ்ந்த ம.தி.மு.க., வீசி எறியும் ஸீட்டுக்காக மண்டியிடும் இயக்கம் அல்ல என்பதைக் கடந்த தேர்தலில் நிரூபித்தோம். நாம் பணம் வாங்கிவிட்டோம் என்றவர்கள், நாம் தேர்தலையே புறக்கணித்ததும் வாயடைத்துப் போய்விட்டனர். அதேபோல், ஸ்டெர்லைட் ஆலையிடம் இருந்து பணம் பெற்றோம் என்றார்கள். ஆனால், இன்று வரை அந்த ஆலைக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்துவது நாம்தான். கடந்த தேர்தலைப் புறக்கணித்த பிறகு மக்களிடம் நம் மீதான நம்பகத்தன்மை அதிகரித்து இருக்கிறது.
தமிழகத்தில் முல்லை பெரியாறு பிரச்னை, கூடங்குளம் அணு சக்தி விவகாரம், ஸ்டெர்லைட் சிக்கல் என மக்களை பாதிக்கும் அபாயம் சூழ்ந்திருக்கும் நிலையில் இந்த மாநாடு நடக்கிறது. தமிழக மக்களுக்கு ஏற்படும் பாதிப்பைத் தடுப்பது நமது கடமை. அதனை நாம் தொடர்ந்து செய்வோம்...'' என்று கர்ஜித்தார்.
இந்த மாநாட்டில் 'பேரறிவாளன், சாந்தன், முருகனின் தூக்குத் தண்டனையைக் குறைக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் மாநிலத்தின் உரிமையை நிலைநாட்டுவதில் இந்தியாவுக்கே வழிகாட்டியாகத் திகழ வேண்டும். கூடங்குளம் அணு உலையை மூட தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கச்சத் தீவை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும்’ என்பது உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மிகவும் பிரமாண்டமான முறையில் இந்த மாநாட்டை நடத்தி இருப்பதைப் பார்க்கையில், உள்ளாட்சித் தேர்தலில் ம.தி.மு.க. ஏதோ திட்டத்துடன் களம் இறங்கிவிட்டதாகவே தோன்றுகிறது!
**********************************************************************************
கன்டெய்னருக்குள் ரூ.900 கோடி..

சத்துவாச்சாரியில் பக்... பக்...
ட்டைப் பாக்கெட்டில் ஆயிரம் ரூபாயை வைத்துக் கொண்டு பஸ்ஸில் ஏறினால் நமக்கு என்ன பதற்றம் இருக்கும்? பக்கத்தில் உரசுபவர் எல்லாம் பிக்பாக் கெட்டோ என்று நினைக்கத் தோன்றும். இதோ பாருங்கள்...  900 கோடியை வைத்துக் கொண்டு ஒரு கன்டெய்னர் எப்படி அலைந்துள்ளது என்று!
'மங்காத்தா’ படத்தில் கன்டெய் னர் லாரியில் 500 கோடி கொள்ளை அடிக்கப்படுவது போன்று ஒரு காட்சி வரும். அந்தப் பதற்றமும் சேர்ந்த மனநிலையில் படியுங்கள். கடந்த 13-ம் தேதி இரவு மைசூரில் இருந்து சென்னை ரிசர்வ் பேங்க்குக்கு  900 கோடிப் பணம், இரண்டு கன்டெய்னர் லாரிகளில் பெங்களூரு - சென்னை பைபாஸ் வழியாகக் கொண்டு செல்லப்பட்டன. அப்போது அந்த லாரிகளுக்குப் பாதுகாப்பாக வந்த எஸ்கார்ட் வாகனம், வேலூர் அருகே விபத்துக்கு உள்ளாகி... பரபரப்பானது!
இது, 'பணத்தைக் கொள்ளை அடிக்கத் திட்டமிட்டு சிலர் செய்த முயற்சியாகவும் இருக்கலாம்’ என்று சிலர் சந்தேகப்படும் நிலையில், இந்தச் சம்பவம் குறித்து விசாரணை செய்து வரும் வேலூர் வடக்குக் காவல் நிலையத்தில் விசாரித்தோம்.
''வழக்கமாக ரிசர்வ் பேங்க்குக்குப் பணம் கொண்டுசெல்வது, பெங்களுரு - சென்னை பைபாஸ் வழியாகத்தான். கடந்த 13-ம் தேதியும் நாசிக்கில் அச்சடிக்கப்பட்ட  900 கோடி கரன்சி நோட்டுகளை இரண்டு கன்டெய்னர் லாரிகள் மூலம் கொண்டுசென்றனர். சி.ஆர்.பி.எஃப் பாது காப்புப் படையோடு வண்டிகளுக்கு முன்பு டொ யோட்டோ இன்னோவோ காரிலும், பின்னால் மற்றொரு காரிலும் பலத்த பாதுகாப்போடு பணம் கிளம்பியது.
வேலூர் அருகே காலை சுமார் 2.45 மணிக்கு எல்.கே.எம். ஷெட் பகுதியில் பின்னால் வந்த ஒரு கார், கன்டெய்னர் வண்டிகளின் பாதுகாப்புக்குப் பின்னால் வந்த காரை மோதிவிட்டது. அந்தக் காரை முந்தும்போது, டிரைவர் தூக்கக் கலக்கத்தில் மோதி இருக்கிறார். ஆனால், இந்த விபத்து நடந்தது தெரியாமல் இரண்டு கன்டெய்னர் லாரிகளும், முன்னால் பாதுகாப்புக்குச் சென்ற எஸ்கார்டு வண்டியும் சென்னை நோக்கிச் சென்றன. விபத்து ஏற்பட்ட காரில் இருந்து முன்னால் சென்ற வண்டிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதும்தான், கன்டெய்னர் லாரிகளை சத்துவாச்சாரியில் நிறுத்தினர். அதன் பின்பு பாதுகாப்புக்கு சென்ற வண்டி, மீட்புப் பணிக்கு விரைந்து வந்தது. விபத்து நடந்த நேரம் அதிகாலை என்பதால், அதிகமாகக் கூட்டம் இல்லை. காரில் இருந்த டிரைவர் குமார் உட்பட மத்தியப் பாதுகாப்புப் படை வீரர்கள் ஐந்து பேருக்குப் பலத்த அடி. வந்தவாசியைச் சேர்ந்த பாதுகாப்பு வீரரான அமலதாஸ் மரணமடைந்துவிட்டார். காயம் அடைந்தவர்கள் சி.எம்.சி. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
சத்துவாச்சாரி காவல் நிலையம் மூலம் கன்டெய் னர் லாரிகளுக்கு 1-ம் தேதி முழுவதும் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. மற்றபடி அந்த லாரிகளுக்கு எந்தச் சேதமும் இல்லை. இந்த விபத்தில் சிக்கிய டிரைவர் குமார், பெங்களூருவை சேர்ந்தவர். அவரிடம் விசாரித்தபோது, 'தூக்கக் கலக்கத்தாலும், அதிவேகமாக முன்னால் ஒரு கார் ஓவர்டேக் ஆனதாலும்தான் என்ன செய்வதென்று தெரியாமல், இந்த விபத்து நடந்துவிட்டது’ என்றார். அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து இருக்கிறோம். சென்னை ரிசர்வ் பேங்க்குக்குத் தகவல் தெரிந்து, அதிகாரிகள் இங்கு வந்து, தகுந்த பாதுகாப்போடு லாரிகளை சென்னைக்கு அன்று இரவே கொண்டுசென்றுவிட்டனர். சி.எம்.சி-யில் சிகிச்சை பெற்று வந்த பாதுகாப்பு படைவீரர்களும் டிஸ்சார்ஜ் ஆகி சென்னை சென்றுவிட்டனர். இந்த விவகாரம், எங்கள் லிமிட்டில் வருவதால், தீவிர விசாரணை செய்து வருகிறோம். நல்ல வேளையாக, கன்டெய்னர் லாரி மீது எந்த வாகனமும் மோதவில்லை. அப்படி மோதி இருந்தால், மிகப் பெரிய விபத்து ஏற்பட்டு இருக்கும்.
விபத்துக்குள்ளான டொயோட்டோ இன்னோவோ காரை, வேலூர் ஆர்.டி.ஓ-விடம் காட்டிவிட்டு அந்த வாகனத்தையும் பாதுகாப்பு அதிகாரிகள் கொண்டு சென்றுவிட்டனர். எங்களைப் பொறுத்த வரை, இது சாதாரண மாக ஏற்பட்ட விபத்துதான் என்று விசார ணையில் தெரிய வந்துள்ளது. மற்றபடி, கன்டெய்னர் லாரிகளில் இருந்த பணத்தைக் கொள்ளையடிக்கப் போட்ட திட்டமாகத் தெரியவில்லை...'' என்றனர்.
கிருஷ்ணகிரி - வேலூர் பைபாஸ் சாலையில் அடிக்கடி பல விபத்துகள் நடந்துவரும் நிலையில், அதைத் தடுக்க போக்குவரத்துப் போலீஸார் தகுந்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும்!
**********************************************************************************
சோனா சொல்லும் திகில் காட்சிகள்

நான் தம் அடிச்சிட்டு இருந்தேன். அப்ப...!
யாரிப்பாளர் சங்க மோதல்... பெப்ஸி பஞ்சாயத்து... இதை எல்லாம் தாண்டி கோலிவுட்டின் இன்றைய ஹாட் டாப்பிக், கவர்ச்சி நடிகை சோனா வுக்கும் படத் தயாரிப்பாளர் எஸ்.பி.பி.சரணுக்கும் இடையேயான 'ச்சீ... சீய்...’ லடாய்!
'கண்ட இடத்தில் கை வைத்துவிட்டார்!’ என்று சோனா போலீஸில் புகார் கொடுக்க... சரண் மீது மகளிர் வன்கொடுமைத் தடுப்புப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது போலீஸ்.
நெஞ்சு வலி என்று தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அட்மிட் ஆகி இருந்தார் சோனா. ''நான், டைரக்டர் வெங்கட் பிரபு, ஜெய், பிரேம்ஜி, வைபவ், அஸ்வின், சரண் எல்லோரும் ஃப்ரெண்ட்ஸ். எங்க டீம்லயே பேட் பாய் சரண்தான். அடிக்கடி அவன் என்னைக் கெட்ட வார்த்தையில் திட்டி, சீண்டிக்கிட்டே இருப்பான். 'கோவா’ ரிலீஸுக்கு ஒரு வாரம் முன்னாடி தேவி பிரசாத் தியேட்டர்ல 'சென்னை - 28’, 'சரோஜா’ படங்களை சேர்ந்து பார்க்க ஏற்பாடு செஞ்சு இருந்தோம். அப்பவும் சரண் என் மேலே கண்டபடி கையை வெச்சு ஆபாசமா பேசினான்.
எஸ்.பி.பி. சார் எவ்வளவு மரியாதையான மனுஷர். அவருக்குப் போய் இப்படி ஒரு பையன். 'கனிமொழி’ தயாரிப்பு, 'கோவா’ விநியோகம் எடுத்ததுனு எனக்கு சுமார் அஞ்சு கோடி நஷ்டம். அதனால, வெளியே போகாம வீட்டோட இருந்தேன். சின்ன விபத்துல கால் உடைஞ்சு ஸ்டிக் வெச்சு தான் நடக்கிறேன். தவிர, ஹார்ட் பிராப் ளம், ஹார் மோன் பிராப்ளம்னு எனக்கு நிறைய பிராப்ளம்ஸ்!
'மங்காத்தா’ படத்துக்கு முன்னமே வெங்கட் பிரபுவை எனக்கு ஒரு படம் பண்ணித் தரச் சொல்லி, ஒரு பெரிய அமவுன்ட் அட்வான்ஸா கொடுத்து இருந்தேன். 'மங்காத்தா’ மெகா ஹிட் கொடுத்ததால், அவர் பெரிய லெவலுக்கு கமிட் ஆகிட்டார். எனக்கு படம் பண்ணித் தர முடியாத சூழ்நிலை. அதனால, அட்வான்ஸைத் திருப்பிக் கேட்டேன். அவரும் தர்றதா சொன்னார்.
போன 14-ம் தேதி வெங்கட் பிரபு எனக்கு போன் போட்டு, 'மங்காத்தா’ சக்ஸஸுக்கு பார்ட்டி வெச்சிருக்கேன். பார்க் ஹோட் டல் பாஷாவுக்கு வந்துடு. அப் படியே உன் பணத்தையும் வாங்கிக்கோ’னு  சொன்னார். நான் அங்கே போனப்ப, வைபவ் வீட்டுக்கு பார்ட்டியை மாத்தி யாச்சுன்னாங்க. வைபவ் வீட்டில் அவனோட பேரண்ட்ஸுக்குத் தெரியாம ஃபர்ஸ்ட் ஃப்ளோர்ல பார்ட்டி நடந்தது.
நான் தம் அடிச்சுக்கிட்டே, வெங்கட் பிரபுகிட்ட பால